தோழமைத் திருட்டு

அன்புள்ள ஜெ

உங்களுக்காக இந்த தகவல். இது தமிழ்மணி சிவக்குமார் என்னும் இடதுசாரி எழுத்தாளரின் பொதுவெளிப் பதிவு இது. இவர் பகத் சிங் எழுத்துக்களை “கேளாத செவிகள் கேட்கட்டும்” என்ற பெயரில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். அச்சில் வந்து புகழ்பெற்ற அந்நூலையும், வேறுசில கட்டுரைகளையும் திருடி அப்படியே பாரதி புத்தகாலயம் நூலாக வெளியிட்டிருக்கிறது. பாரதி புத்தகாலயம் மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியால் நடத்தப்படுவது. அந்த திருட்டு நூல்  ‘விடுதலைப் பாதையில் பகத்சிங்’ என்ற பேரில் நூலாக வெளிவந்தது.

தமிழ்மணி சிவக்குமார் இது தன் நூலின் திருட்டு என நிரூபித்தார். அவருடைய நூலில் இருந்த சிறு எழுத்துப்பிழைகள், சொற்பிழைகள் எல்லாமே அப்படியே பாரதி புத்தகாலய நூலில் இருந்தன. அவரே சொந்தக்கருத்துக்களாக சிலவற்றையும் பகத்சிங் வார்த்தைகளாகச் சேர்த்திருந்திருக்கிறார். அவையும் அப்படியே திருட்டு நூலில் இருந்திருக்கின்றன. பகத்சிங்கின் மூலத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கக்கூட இல்லை.

இதை நீதிமன்றத்தில் நிரூபித்து நூலுக்கு தடைவாங்கினார் ஆசிரியர். ஆனால் அதன்பின்னரும் பாரதி புத்தகாலயம் அதே நூலை அப்படியே இரண்டாம்பதிப்பாகக் கொண்டுவந்து விற்றுக்கொண்டிருக்கிறது. இனி நீதிமன்ற ஆணை மீறப்பட்டதற்காக இன்னொருமுறை நீதிமன்றம் செல்லவேண்டும் என்ற நிலை.

ஆகவே வாசகர்களிடம் இதை முன்வைத்து இந்நூலை அவர் எழுதியிருக்கிறார்.

என்.ராமகிருஷ்ணன்

அன்புள்ள என்.ராமகிருஷ்ணன்,

இது இடதுசாரிகளுக்குப் புதியது அல்ல. அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றே. அவர்கள் எதையும் செய்யலாம், நியாயப்படுத்தலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் பதிப்பகமான நியூ செஞ்சுரி பதிப்பகம் வளர்மதி, பிரபஞ்சன் உட்பட சிலருடைய நாடகங்களை அவர்கள் அறியாமல், உரிமையேதும் வாங்காமல் , நூலாக வெளியிட்டு கல்லூரியில் பாடமாக ஆக்கியது. பல பதிப்புகள் கொண்டுவந்த பின்னரே ஆசிரியர்களுக்கு அச்செயல் தெரியவந்தது. அவர்கள் நீதிமன்றம் செல்வோம் என மிரட்டினர். நல்லக்கண்ணு ‘பஞ்சாயத்து’ செய்துவைத்தார். ஒரு சிறுதொகை தர ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அதுவும் தரப்படாமல் நூல் மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டது. இதை வளர்மதி எழுதியதாக நினைவு

இடதுசாரிகளுக்கு பெரிய அளவில் எங்கும் கைவைக்க இங்கே வாய்ப்பில்லை.ஆகவே பிச்சைக்காரனின் சட்டியிலிருந்து எடுக்கிறார்கள். சுஜாதாவின் ‘வந்தவன்’ என்னும் நாடகத்தில் ஏழை ஓட்டல்காரரிடம் இலவச உணவையும் வாங்கி உண்டுவிட்டு, கத்தியைக் காத்தி நூறு ரூபாயை திருடிக்கொண்டு செல்லும் இளைஞன் சொல்வான். “என் நிலைமைக்கு என்னால் உன்னைப்போன்ற அப்பாவியிடம்தான் திருட முடியும். என்னை மன்னித்துவிடு”

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 28, 2021 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.