Jeyamohan's Blog, page 1047

February 17, 2021

முதற்கனல் – வேள்விமுகம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வெண்முரசு படிக்க தொடங்கிய நாட்களில் இருந்து அதை பற்றி தோன்றும் போதெல்லாம் குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்வேன். உங்களுக்கு அனுப்பும் அளவு சரியானதா என்ற சந்தேகம் உண்டு.ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும். இது முதற்கனலின் வேள்வி முகம் பற்றி எழுதியது

முதற்கனல் வேள்விமுகத்துடன் தொடங்குகின்றது. இந்திய வேதமரபின் பின்னனியை மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு கதையாக சொல்கின்றார். புராணக்கதைகளில் கதை சொல்லும் முறையில் இதை பயன்படுத்துவார்கள். மானசாதேவியின் பார்வையில்  துவங்குகின்றது. முதலும் முடிவு மற்ற இருளை சொல்வதில் இருந்து துவங்குகின்றது. அது நாகமாக இருக்கின்றது, அதன் விழைவே பார்வையாக, பார்க்கும் கண்ணாக , சூரியனாக, சந்திரனாக மாறுகின்றது.

ஆசிரியர்  “‘இது நான்’ என சொல்லிக்கொண்டது. ‘இருக்கிறேன்’ என்று அறிந்தது. ‘இனி?’ என்று கேட்டுக்கொண்டது. அந்தச் சொற்கள் அதனுள் அகங்காரமாக மலர்ந்தபோது அதன் தலையில் படம் விரிய ஆரம்பித்தது. “. என சொல்கின்றார். இந்து தத்துவ மரபில் இந்த படிகள் சொல்லப்படும்.

விழைவு ஓளி தரக்கூடியது. ஒளியை காணும் சக்தியை தரக்கூடியது. வெண்முரசு முழுதும் மானுடர் பலரின் விழைவும் அது தரும் பார்வையும், ஒளியும் வந்து கொண்டே இருக்கின்றது.  உத்தரையின் விழைவு பரிட்சத்தாகின்றது, திரௌபதியின் விழைவு அதை பரிட்சத்தினை காக்கும் கருவியை தருகின்றது, பரிட்சத்தின் விழைவு ரிஷியின் பாம்பாகி , ரிஷிபுத்திரனின் சாபமாகி, பரிஷத்தின் முடிவுக்கு காரணமாகின்றது. ஜனமஜேயனின் விழைவு வேள்வியானது. ஆஸ்திகனின் விழைவு உலகினை முக்குணத்தின் சமநிலையை குலைக்கும் செயலை தடுத்தது.

வியாசன் விழைவை உலகின் ஒரு இருப்புகளில் ஒன்றாக காண்கின்றார். ஆசிரியர்  ““நீ இல்லையேல் என் காவியமில்லை. இம்மண்ணில் வாழ்வும் இன்பமும் இல்லை. உனது தர்மத்தை நீ செய்வாயாக. உன் குலம் முடிவிலாது பெருகட்டும். இவ்வுலகமெங்கும் காமமும் அகங்காரமும் பொலியச்செய்வாயாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என மகாவியாசர் ஆசீர்வதித்தார்.”  என தட்சனை வியாசன் வாழ்த்துகின்றார்.

ஆஸ்திகனின் குரலில் “ஜனமேஜயரே, உங்கள் நகரம் உயிரற்றதைப்போலக் கிடப்பதையே நான் கண்டேன். வீரம் இல்லாத காவலர்கள்… துடிப்பு இல்லாத பெண்கள்… துள்ளிக்குதிக்காத பிள்ளைகள்… இந்த நகரம் தோல்கிழிந்த பெருமுரசு போல எனக்குத் தோன்றியது. உங்களைத் தடுக்கவில்லை என்றால் இந்த உலகத்தையே இப்படி ஆக்கிவிடுவீர்கள் என்று அறிந்தேன். இந்தவேள்வியை நிறுத்த வேண்டியது என்கடமை என்று கொண்டேன்” என்றான்”  என ஆசிரியர் முக்குண சமநிலை அழிவினை சொல்கின்றார்.

சமகாலத்தில் கூட வெண்முரசில் ஜெயமோகன் சொல்லும்  ““நான் பிரம்மத்தின் இயல்பான சத்வ குணத்தை இங்கே நிலைநிறுத்த விரும்பினேன் ஆஸ்திகரே’ என்றார் ஜனமேஜயன். “அன்பும் அறமும் நன்மையும் நலமும் மட்டுமே மனுக்குலத்தில் வாழவேண்டுமென விழைந்தேன்” என ஹைப்பராக உலகத்தினை பார்க்கும் தரிசனம் பலருக்கு உண்டு. ஒரு மத்திய வர்க்க மனிதனின் விழைவு.

மாறாக உலகில் உள்ள இச்சையை ஆஸ்திகனின் குரலில்  “இச்சை தீமையல்ல மாமன்னரே! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்”  ஜெயமோகன் முன் வைக்கின்றார். துரியோதனனின் சமன்செய்யப்படாத இச்சை அழிவு சக்தியானது மகாபாரதம் காட்டுகின்றது.

முக்குண சமநிலையை பேணுவது தொடர்  செயல். நடந்து முடியும் செயல் அல்ல. நடந்து  கொண்டிருக்கும் வாழ்விலும்,அது எல்லா மானுடருக்கும் அவசியமாகின்றது..
ஏன் மகாபாரதம் சொல்லப்படுகின்றது என்பதையும் வெண்முரசு சொல்கிறது. முதற்கனலின் வேள்வி முகத்தில் அதற்கான பதில் உள்ளது.

உலகம் சத்வ குணத்தால் மட்டும் நிரம்ப வேண்டும் என்ற நோக்கத்தில் ஜனமஜேயன் சர்பசத்ரவேள்வி செய்கிறான். வேள்வி செய்யக்கூடியது, அதை செய்யும் வல்லமை உடைய வைசம்பாயனர் இருக்கின்றார். அவர் மன்னருக்கு வேத நெறிகளின் படி வேள்வி செய்விக்கின்றார்.  ஜனமஜேயன் தன்   உலக பார்வை கொண்டு உலகத்தினை நன்மை, தீமை என்ற கருப்பு வெள்ளையாக பார்க்கின்றார்.

அது முழுமையான பார்வை இல்லை, நல்லெண்ணத்தில், நல்ல நோக்கத்தில் இருந்தாலும் அது நன்மை செய்யாது ஒட்டு மொத்த மானுட வாழ்வையும், சமூகத்தினையும், அதன் இயக்கத்தினையும் புரிந்து கொள்ள இந்த பார்வை உதவாது, முழு பார்வை வளர்த்துக் கொள்ள மகாபாரதம் கேட்பது அவசியம்  என வேத வியாசர் மகாபாரதத்தை ஜனமஜேயன் அவையில் சொல்கின்றார்.   ஜனமஜேயன் அதை படிக்கவில்லை, கேட்கின்றார். இது இதிகாச மரபில் முக்கியமானது.

“செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து”   என வள்ளுவர் சொல்லுவார்.

உலகத்தினை உள்ளது உள்ளபடி அதன் உண்மைப் பொருளுடன்  காணும் பார்வையை மகாபாரதம் தரவல்லது என்ற நோக்கில் மகாபாரதம் துவங்குகின்றது

நிர்மல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2021 10:30

February 16, 2021

ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-2

ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்.-1 தொடர்ச்சி…

 

ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம் நாவலை இன்று வாசிக்கையில் தோன்றும் குறைபாடுகளை முன்னரே சுட்டிவிடுகிறேன். ஒன்று, அதன் வடிவம் இன்று இறுக்கமில்லாததாகவும், பல பகுதிகளை தள்ளிவிட்டு வாசிக்கலாமென்றும் தோன்றுகிறது.

இரண்டு, அதில் ஹென்றியின் பின்கதையாக வரும் அவன் அப்பா பற்றிய விஷயங்கள் ஒருவகையான ஃப்ளாஷ்பேக் போல உள்ளன.அவை நவீன புனைவு உத்திகளைக் கொண்டு குறைவாகச் சொல்லப்பட்டிருக்கலாம். ஹென்றி கிருஷ்ணராஜபுரத்துக்கு வந்ததும் கதை தொடங்கிவிடுகிறது. பின்னர் அவன் எங்கிருந்து வந்தான் என்பது ஒரு தகவலே ஒழிய புனைவு பின்னகரமுடியாது.

மூன்று, இந்நாவல் முன்வைக்கும் மையச்சிந்தனைகளை தொட்டுக்கொண்டு ஆழமான விவாதங்கள் நாவலுக்குள் நிகழவில்லை.அதற்கான வாய்ப்புகள் இந்நூலில் உள்ளன. ஆனால் அதை ஜெயகாந்தன் முன்னெடுக்கவில்லை. இந்நாவலின் சிந்தனைமையமும் தரிசனமையமும் சற்றே தொட்டு விடப்படுகின்றன. நாவல் என்பது ஆழ்ந்த விவாதங்களுக்கான களம்.

நான்கு, இந்நாவலில் ஹென்றி உட்பட எல்லா கதாபாத்திரங்களும் புகைப்படச் சித்திரங்களாகவே உள்ளனர். அவர்களுக்கு அகநகர்வே நிகழவில்லை. ஏனென்றால் அவர்கள் எந்த சிக்கலையும் சந்திக்கவில்லை.ஆகவே இன்றைய நிலையில் இந்நாவலை ஒரு குறுநாவல் என்றே சொல்லமுடியும்.

ஆனால் இந்நாவலை தமிழில் எழுதப்பட்ட சிறந்த  நவீனத்துவநாவல்களான ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே.சிலகுறிப்புகள் [சுந்தர ராமசாமி] தண்ணீர், பதினெட்டாவது அட்சக்கோடு [அசோகமித்திரன்] நித்யகன்னி [எம்.வி.வெங்கட்ராம்] நாளை மற்றுமொரு நாளே [ஜி.நாகராஜன்] போன்றவற்றின் வரிசையில் சேர்க்கமுடியாது.

அதேசமயம், இந்திய யதார்த்தவாதம் உருவாக்கிய ஏறத்தாழ இதேவகையான நாவல்களான பாரதிபுரம் [யு.ஆர்.அனந்தமூர்த்தி] போன்றவற்றின் வரிசையிலும் சேர்க்கமுடியாது.யதார்த்தவாத மரபில், அந்த வகையான நாவல்களின் முழுவீச்சையும் அடையாதுபோன ஓர் ஆக்கம் இது. அவ்வகையில் யதார்த்தவாத பெருநாவல்களின் அழகை அடைந்த படைப்பு என்றால் ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் இரண்டு நாவல்களையும் இணைத்து ஒரு நாவலாகக் கொண்டால் அதைச் சொல்லலாம்.அதில் கதைமாந்தரின் பரிணாமங்கள் அழகாக வெளிப்பட்டுள்ளன.

ஆனால் தமிழுக்கு ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம் மிக முக்கியமான நாவல். மூன்று காரணங்களால்.

ஒன்று, அன்றைய உலகத்தின் அகஅலைச்சலை, கண்டடைதலை தமிழில் இருந்து தொட்டுப்பார்த்த ஒரே நாவல் இதுதான்.

இரண்டு, அந்த முயற்சியில் அது முற்றிலும் இந்தியச்சூழலில் ஓர் இந்திய விடையை சென்றடைகிறது.

மூன்று, அதன் கட்டமைப்பில் அது தொட்டுச்செல்லும் பல நுண்புள்ளிகள் படிமங்களென விரிகையில் நம் முன் ஒர் அரிய கலையனுபவம் திகழ்கிறது.

இன்று வாசிக்கையில் இந்நாவலின் குறைகள் என தெரிபவை அன்றைய காலகட்டத்தின் எல்லா நாவல்களிலுமே பொதுவாகத் தெரிபவை. நடை, உத்தி எல்லாமே காலத்தில் பழையனவாகிவிடுகின்றன. அவற்றுக்காக படைப்பை வாசிப்பவர்கள் சமகால இலக்கியங்களை ரசிக்கும் தொடக்கக்காரர்களே.தேர்ந்த வாசகர்கள் இலக்கியப்படைப்பில் தேடுவது பண்பாடு, ஆன்மிகம் என்றெல்லாம் முகம்கொண்டு மானுடத்தினூடாக தொடர்ந்துவரும் ஒன்றை. அது இலக்கியத்தில் வெளிப்பாடு கொள்ளுவதை.

அதற்காகவே அவர்கள் பண்டைய இலக்கியம்வரை வாசிப்பை நீட்டிக்கொண்டுசெல்கிறார்கள். இன்றைய படைப்பின் கூறுமுறை நுட்பங்களை மொழியை நேற்றைய இலக்கியங்களில் அவர்கள் தேடுவதில்லை. மிகப்புதுமையான நடையும் கூறுமுறையும் கொண்ட எழுத்தாளர்கள்கூட அரைநூற்றாண்டுக்குப்பின் அன்றைய பொதுநடையின் ஒரு பகுதியாக, பொதுவான கூறுமுறையை கொண்டவர்களாக தெரிவது ஒரு பெரும் விந்தை. காலத்தால் நாம் அகலும்போது தனிப்பட்ட நடைவேறுபாடுகள் மழுங்கிவிடுகின்றன

அவ்வாறு பார்க்கையில் காலத்தை கடந்து பொருட்படுத்தும்படி இலக்கியத்தில் நிலைகொள்வன எவை? ஒன்றே ஒன்றுதான். ஆசிரியனின் உள்ளம் மேலெழுந்தமை. அது மொழியில் தன் தடத்தை பதித்திருந்தால் அது இலக்கியமே. தேர்ந்த வாசகன் காலம் உருவாக்கும் மங்கல்களை மழுங்கல்களை கடந்து சென்று அந்த உள்ளஎழுச்சியை சென்று தொடமுடியும்- இலக்கியப் பயிற்சியின் உச்சநிலை என்பது அதுவே.

அந்த உள்ள எழுச்சி எவ்வண்ணம் புனைவில் வெளிப்படுகிறது? ஒன்று, கதைமாந்தர்களாக. மனிதன் என நாம் எண்ணுவது மானுடம் ஒட்டுமொத்தமாக புனைந்தமைத்த ஒன்றே. தன் கனவில் ஒரு கண்ணியும் நடைமுறையில் மறுகண்ணியுமாக அதை புனைந்துகொண்டே இருக்கிறான். அக்கனவின் சரடு இருப்பது கலைஞர்களிடம்.

கலைஞர்கள் மானுடனை, தனிமனிதனை கற்பனைசெய்து முன்வைத்தபடியே இருக்கிறார்கள். அதிமானுடனை மட்டுமல்ல சாமானியனையும்கூட. இலட்சியமானுடனை மட்டுமல்ல அன்றாட மனிதர்களையும்கூட. மனிதன் என நாம் நினைப்பதெல்லாமே கதைசொல்லிகளால் உருவாக்கப்பட்டவை மட்டும்தான். அதற்கப்பால் நாம் மனிதனை அறிவதுமில்லை, உருவகித்துக்கொள்வதுமில்லை. விந்தையாக இருக்கலாம், இதுவே உண்மை என நம் சூழலை, நம் அகத்தை கூர்ந்தால் உணரலாம்.

புனைவெழுத்து என்பதே மனிதர்களை கற்பனை செய்வதற்கானதுதான். மெய்யான மனிதர்களை விட நம் முன் உயிர்த்துடிப்புடன் நிலைகொள்பவர்கள் புனைவிலெழுந்த மானுடரே. காலத்தில் நினைவுகூரப்படும் மானுடர் பெரும்பாலும் புனைவுக்கதாபாத்திரங்கள்தான். மெய்யான மானுடரைக்கூட நாம் புனைந்துகொண்டபின்னரே நமக்குள் நிலைகொள்கிறார்கள். புத்தரோ காந்தியோ பெரும் புனைவுகள்தான். அவ்வகையில் அவர்கள் கம்பனின் ராமனுக்கும் சுந்தர ராமசாமியின் ஜேஜேவுக்கும் நிகரானவர்கள்தான்.

ஆகவே எத்தனை மங்கலான மொழிச்சித்திரமாமாக நமக்கு கிடைத்தாலும் முதன்மையான கதைமாந்தரை ஒரு உருவாக்கிவிட்டது என்றால் ஒரு கதை மாபெரும் புனைவெழுத்தே. அவ்வகையில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த புனைவுக் கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் ஜெயகாந்தனின் ஓங்கூர் சாமியும், ஹென்றியுமே முதல் இடங்களில் வருவார்கள். இந்த ஒரு காரணத்தாலேயே ஒரு மனிதன் ஒரு வீடு ஓர் உலகம் முக்கியமான ஆக்கம்.

ஹென்றி இந்திய மொழிகளில் எழுதப்பட்ட பல முதன்மையான ஆளுமைகளில் ஒன்று. வனவாசியின் சத்யசரண் [விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய] ஓ.வி.விஜயனின் ரவி [கசாக்கின் இதிகாசம்] கசன்ஸகீஸின் சோர்பா [சோர்பா தி கிரீக்] தொடங்கி பல்வேறு உலக இலக்கியங்களின் நாயகர்களுடன் இணைத்து ஹென்றியைப் பற்றி ஆராயமுடியும்

அடுத்தபடியாக, கவித்துவத் தருணங்கள் இலக்கியத்தில் காலத்தால் மங்காமலிருக்கின்றன. கவித்துவம் என்பது வாழ்க்கைகுறித்த தரிசனத்தால் அமைவது. ஒட்டுமொத்தப் பார்வை, முழுமைப்பார்வை,சாராம்சமான பார்வை என தரிசனம் என்பதை வகுத்துக்கொள்ளலாம். அது மூன்றுவகைகளில் புனைவில் வெளிப்படுகிறது. நாடகீயத்தருணங்கள், உரைகள், படிமங்கள்

நாடகீயத் தருணங்கள் அவற்றில் முதன்மையானவை. இங்கே நான் மெல்லுணர்ச்சிகளைச் சொல்லவில்லை. நாடகீயத்தருணங்கள் உணர்வெழுச்சிகளால் ஆனவை. ஒரு கதைக்களத்தில் முதன்மைக் கதைமாந்தர் வெவ்வேறு மதிப்பீடுகளின் அடையாளங்களாக ஆகி மோதிக்கொள்கையில் அவை உருவாகின்றன. மகத்தான நாடகத்தருணங்கள் எல்லாமே விழுமியங்களின் மோதலும் கண்டடைதலும் கொண்டவை. உலக இலக்கியத்தின் பெரும்பகுதி அதுதான்.

உரை என்பது விசைகொண்ட உரைநடையால் ஆசிரியன் நேரடியாக வெளிப்படுத்தும் தரிசனம். நாடகீயத்தன்னுரை [ Dramatic monologue] ஆசிரியர் உரை என பலவகையில் அவை வெளிப்படுகின்றன. ஷேக்ஸ்பியரின் நாடகீயத்தன்னுரைகளும் சரி, தஸ்தயேவ்ஸ்கியின் நீண்ட பேருரைகளும் சரி, பெருந்தரிசனத்தின் வெளிப்பாடாக அமைகின்றன

இலக்கியத்தின் அடிப்படையாக அமைபவை படிமங்கள். தொன்மங்களிலிருந்து ஆழ்படிமங்களில் இருந்து அவை முளைத்தெழுகின்றன. மரபான படிமங்களின் மறுஆக்கமாகவோ, நவீனப்படிமமாகவோ அவை ஆகின்றன. ஹெர்மன் மெல்வில்லின் திமிங்கலம் போல. சுந்தர ராமசாமியின் புளியமரம்போல. அவை ஒருகட்டத்தில் இலக்கியத்தை கடந்து ஒரு நவீனத்தொன்மமாக நிலைகொள்கின்றன.

இக்கூறுகளைக்கொண்டே நேற்றைய இலக்கியத்தை மதிப்பிடவேண்டும். அவ்வகையில் பார்த்தால் அத்தனை குறைகளுடனும் ஹென்றி என்ற ஒற்றைக்கதாபாத்திரத்தின் ஒளியால் தமிழிலக்கியத்தில் அழிவில்லாமல் நிலைகொள்கிறது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். ஆனால் தமிழ் வாசக உளவியலில் ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கிய, அடுத்த தலைமுறையினரில் மேலும் தீவிரமாக நீடித்த, இந்நாவல் பற்றி விமர்சன ஆய்வுகள் அனேகமாக நிகழவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இந்நாவல் வெளிவந்து அரைநூற்றாண்டை நெருங்கப்போகிறது. இதைப்பற்றி எழுதப்பட்ட விமர்சனங்கள் அனேகமாக அனைத்தையுமே வாசித்துவிட்டேன். இந்நாவலை புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதவையாக நாவலில் உள்ள சில அடிப்படை அடையாளங்களைப் பற்றிய எந்தகுறிப்பும் எவர் எழுத்திலும் பதிவாகவில்லை. ஒரு நாவலை வாசிப்பதன் ஆதாரவிதிகளில் ஒன்று, அதன் கதைமாந்தர் குறியீடுகளும்கூட என உணர்வது. அந்த வாசிப்பே நிகழவில்லை

உதாரணமாக, நாவலின் தொடக்கத்திலேயே ஹென்றி சந்திக்கும் மூன்று கதாபாத்திரங்கள் வழியாக ஜெயகாந்தன் அவருடைய இந்தியதரிசனத்தை உருவாக்கிக் காட்டுகிறார். ஒருவன் தேவராஜன். அவன் அயன்ராண்டின் அட்லஸ் ஷ்ரக்ட் என்னும் நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறான்.ஹிப்பி யுகம் உச்சத்திலிருந்தபோது, அதற்கு நேர் எதிரான உலகப்பார்வையை முன்வைத்த நாவல் அது.எதையெல்லாம் ஹிப்பி இயக்கம் எதிர்த்ததோ அவையனைத்தையும் குவித்தால் அதுதான் அயன் ராண்ட் முன்வைத்த புறவயவாதம் [Objectivism] என்னும் தத்துவக் கொள்கை

அறிவார்ந்தவர்களே உலகைச்சமைப்பவர்கள், ஆகவே உலகு முதன்மையாக அவர்களுக்குரியது என்று வாதிடும் படைப்பு அட்லஸ் ஷ்ரக்ட். வெல்வது, படைப்பது இரண்டுமே அவர்களால் செய்யப்படுகின்றன.ஆகவே அவர்கள் அரசால், அல்லது பெருந்திரளின் கூட்டுச்சக்தியால் கட்டுப்படுத்தப்படலாகாது. தனிமனிதனின் படைப்பூக்கம் மற்றும் ஆற்றலின் மோதல்கள் வழியாக உருவாகும் ஓர் உலகை அயன் ராண்ட் கற்பனைசெய்தார்.

அட்லஸ் ஷ்ரக்ட் நாவலின் கதைநாயகன் ஹோவார்ட் ரோர்க்கின் ஆளுமைக்கு நேர் எதிரானவன் ஹென்றி. ஹோவார்ட் ரோர்க் உலகை உருவாக்க, வெல்ல, உரிமைகொள்ள முயல்பவன். படைப்புசக்தியும் அதன் விளைவான தன்முனைப்பும் கொண்ட ஆளுமை. மாறாக ஹென்றி உரிமையுணர்வே இல்லாதவன். எதையுமே உருவாக்க எண்ணாதவன். வெறுமே வாழ்க்கையில் ஒழுக விரும்புபவன்.தேவராஜன் அட்லஸ் ஷ்ரக்ட் நாவலை வாசித்துக்கொண்டிருக்கையில் ஹென்றியை சந்திக்கிறான்.

இந்தப்புள்ளி ஏன் நவீன இலக்கிய சூழலில் கவனிக்கப்படவில்லை என புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ் நவீன வாசிப்புச்சூழலில் அயன் ராண்ட் ஒருமுறைகூட ஓரிடத்தில்கூட குறிப்பிடப்பட்டதில்லை. அன்றைய தமிழிலக்கிய முன்னோடிகள் அவ்வாறு ஒருவர் எழுதிக்கொண்டிருப்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அத்துடன் அயன்ராண்டின் தத்துவத்திற்கு அன்றைய ஹிப்பிகளின் வாழ்க்கைப் பார்வைக்குமான முரண்பாட்டைப் பற்றியெல்லாம் அன்றைய சிற்றிதழ்ச்சூழலில் எவருமே எண்ணிப்பார்த்திருக்க மாட்டார்கள். நானறிந்து ஒருவரியும் எழுதப்படவில்லை. ஹிப்பிகள் குளிக்கமாட்டார்கள் என்பதற்கு அப்பால் தமிழிலக்கியத்தில் ஹிப்பிகள் பற்றிய குறிப்புகளே இல்லை.

இரண்டாவது கதாபாத்திரம் தேவராஜனின் வீட்டில் இருக்கும் கிழவர்.கால இடம் மறந்தவர். முதுமையில் வற்றி ஒடுங்கி ஒரு இருப்பு மட்டுமே ஆனவர். ஆனால் கனிந்தவர்.குழந்தைபோலவே ஆகிவிட்டவர். எவரிடமும் மனம் கனிந்து மட்டுமே பேசுபவர். அவ்வப்போது வண்டி வந்துவிட்டது என்று சொல்லி ‘எங்கோ’ கிளம்புகிறார்.தன் வாழ்வில் நிகழ்ந்த சில கொடிய இழப்புகளால் அவ்வண்ணம் சித்தம் உறைந்து முதுமையில் உறைந்தவர்.

தெளிவாகவே இந்தியப் பாரம்பரியத்தின் அடையாளமாகவே கிருஷ்ணராஜபுரத்தின் முதியவர் திகழ்கிறார். ஹென்றி அவரை அறிமுகம் செய்யும் போது தேவராஜன் “தாத்தா வந்திருப்பது யார்? உங்க அப்பாவா மகனா?”என்று கேலியாக கேட்க குழந்தைபோல மகிழ்ந்து “மா நயனாரா?” என்று அவர் கேட்கிறார். எந்த கதாபாத்திரமும் அறிமுகமாகும் இடத்தில் ஆசிரியனின் உள்ளக்கிடக்கை வெளிப்படும். அந்தக் கதாபாத்திரத்தை எதன் குறியீடாக முன்வைக்கிறான் என்பது தெரியவரும். ஜெயகாந்தன் இந்திய மரபை கனிந்த, இனிய, ஆனால் தேங்கிப்போன ஒன்றாகவே காண்கிறார்.

அயன் ரான்ட் வாசிக்கும் தலைமுறைக்கும், கனிந்து உறைந்த தலைமுறைக்கும் இடையே ஓர் ஊடாட்டம் என அக்கம்மா வருகிறாள். அக்காவும் அம்மாவும் ஆனவள். இளவயதிலேயே விதவை. ஆனால் உலகியல் துயரங்களின் வழியாகவே தன்னை ஓர் சக்திவடிவமாக ஆக்கிக்கொண்டவள். வாழ்நாள் முழுக்க அளித்துக்கொண்டே இருப்பவள். சீதை, திரௌபதி என நாமறிந்த பெருமகளிரின் நுண்கலவை. அவள் வாழ்வது ஒருவகையான காலமின்மையில்.

இம்மூன்று கதாபாத்திரங்களுக்கும் நடுவே கொண்டுநிறுத்தப்படுகிறான் ஹென்றி. சாலையில் வரும் லாரிக்கு கைகூட காட்டாமல் நடந்துகொண்டிருப்பவன். அவன் ஹிப்பியா என்ற கேள்விக்கு “இல்லை” என்று பதிலளிக்கிறான். அவனை பார்த்தால் காலண்டரில் இருக்கும் வெள்ளைக்காரனை [ஏசு] போலிருப்பதாக நவநீதம் கருதுகிறாள். கல்வியே கற்காதவன். ஆங்கிலமும் தமிழும் கொச்சையாகவே பேசுகிறான். அடித்தள மக்களுடன் இயல்பாக பழகுகிறான். அவன் அறிந்த வாழ்க்கையே அந்நிலையில் திகழ்வதுதான்

ஹென்றிகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறார்கள். ஊட்டி நித்யா குருகுலத்தில் நான் பல ஹென்றிகளை கண்டதுண்டு. சமீபத்தில் நண்பர் கதிரேசன் அவர் பார்த்த ஒரு ஹென்றியை பற்றி எழுதியிருந்தார். [வேறுவழிப் பயணம் ]  ஜெயகாந்தனின் ஹென்றியின் அதே தோற்றம் கொண்டிருந்தார் கதிரேசன் அறிமுகம் செய்த ஜான். அதே மனநிலைகள், அதே வாழ்க்கைப் பார்வை.

ஹென்றி ஒரு புனைவுக் கதாபாத்திரம் அல்ல. ஒரு வெற்றுக் கனவு அல்ல.  குறுகியவாழ்க்கை கொண்ட நமது நவீனத்துவ விமர்சகர்களும் வாசகர்களும் அப்படி அதை அடையாளப்படுத்தியது அவர்களின் பிரச்சினை. ஹென்றி என்றுமுள்ள ஓர் ஆளுமை. ஒரு மாபெரும் கருத்துநிலை. ஒரு தரிசனத்தின் மானுட வடிவம். சென்ற இருபதாண்டுகளில் நான் உலகமெங்கும் ஹென்றிகளை பார்த்தபடியே இருக்கிறேன். தமிழில் அவ்வண்ணம் ஒரு கதாபாத்திரம் எழுதப்பட்டது என்பது ஒரு இலக்கியப் பெருநிகழ்வு.

ஹென்றியின் கதாபாத்திரத்தை மிக இயல்பாகச் செதுக்கியிருக்கிறார் ஜெயகாந்தன். எவற்றுடன் அவனை அடையாளப்படுத்தவேண்டும், எவற்றுடன் விலக்கிக்கொள்ளவேண்டும் என்னும் தெளிவு அவருக்கிருக்கிறது. உதாரணமாக, அன்றைய ஹிப்பிகளின் முதன்மை இயல்பு போதைமயக்கம். கஞ்சா அவர்களின் மதமாகவே ஆகியிருந்த காலம் அது. ஹென்றியைச் சுற்றி குடியும் கஞ்சாவும் புழங்குகின்றன. ஆனால் அவன் அவற்றில் ஈடுபடுவதில்லை. தனக்கு போதை ஒத்துக்கொள்ளாது என்று மறுத்துவிடுகிறான். அப்பழக்கத்தை அவன் நிராகரிக்கவில்லை, தன் இயல்பு அல்ல என்று கொள்கிறான்.

பொறுப்பின்மை பற்றின்மை ஆகிய இரு இயல்புகளும் ஹென்றியிடமிருக்கின்றனவா? அப்படி தோன்றும். ஆனால் செல்வத்தில் பற்றில்லாமல் இருக்கும் ஹென்றி தந்தைமேல் பெரும்பற்றுடன் இருக்கிறான். அவன் கிருஷ்ணராஜபுரம் வந்ததே அந்தப் பற்றினால்தான். பொறுப்பில்லாமல் இருப்பவனாக தோன்றினாலும் நாகரீகங்களை, பிறருடைய உள்ளங்களை அவன் எப்போதும் கருத்தில்கொள்கிறான்.கிழங்கு விற்கும் பெண்ணை தன் இல்லத்தின் திறப்புவிழாவுக்கு அழைக்கிறான். தேவராஜனுடன் தங்காமல் தன்னுடன் தங்கும்படி துரைக்கண்ணு கேட்டுக்கொண்டபோது தேவராஜனின் மனம் சோர்வடையக்கூடாது என்று நினைக்கிறான்.

ஆனால் உலகியலில் அவன் ஈடுபடவில்லை. திருமண உறவை விரும்பவில்லை. சொத்துக்களை பேணிக்கொள்ளவும் எண்ணவில்லை. ஒவ்வொரு கணத்திலும் முழுமையாக ஈடுபட்டு அதில் திகழ்ந்து நிறைவடையவே அவன் விரும்புகிறான். அவனுடைய அந்த இயல்பே அவனை பிற அனைவரிடமிருந்தும் வேறுபடுத்தி நிறுத்துகிறது. அவன் கிருஷ்ணராஜபுரத்தில் நிலைகொள்வானா? நிலைகொள்ளலாம், சென்றுவிடலாம். அவர்களிடம் ஓர் ஆழமான உளப்பதிவாக அவன் எஞ்சலாம்.

ஹென்றி என்பது ஜெர்மானிய-டியூட்டானிக் வேர்கள் கொண்ட சொல். அதன்பொருள் ’இல்லத்தலைவன்‘ அல்லது ‘இடத்தை ஆள்பவன்’. தற்செயலாகவோ திட்டமிட்டோ இப்பெயர் அமைந்துள்ளது ஹென்றிக்கு. அவன் அங்கிருந்து செல்லாமல் அந்த இடத்தின் தலைவனாக அமையலாம். அல்லது வீடு போல உலகமே அவனுடைய இடமென்றும் ஆகலாம்.

இந்நாவலில் ஒரு குறிப்பிடத்தக்க படிமத்தை ஜெயகாந்தன் பயன்படுத்துகிறார், நிர்வாணம். முதல்நாள் லாரியில் வரும்போதே ஹென்றி குளிக்கும் பெண்ணின் நிர்வாணத்தை பார்க்கிறான். அதை கூர்ந்து பார்க்கலாகாது எனறு துரைக்கண்ணு கண்டிக்கும்போது அவன் அதேபோல அனைத்துக் காட்சிகளையும் கூர்ந்து பார்ப்பதை அவன் சொல்கிறான். அவன் இயற்கையையும் நிர்வாணமாகவே பார்க்கிறான், ஆகவே நிர்வாணத்தை இயற்கையாகப் பார்க்கும் உரிமையும் தகுதியும் அவனுக்கு இருக்கிறது

தேவராஜனின் தோட்டத்தில் கிணற்றில் நிர்வாணமாக நீராடுகிறான் ஹென்றி. அவனுக்கு முற்றிலும் புதியவனாகிய தேவராஜன் முன் நிர்வாணமாக நிற்க தடையே இல்லை. தேவராஜன் அந்த விடுபட்ட நிலையைப் புரிந்துகொள்கிறான். அந்த அகநிர்வாணநிலைதான் அவன் மொழியில் வெளிப்படுகிறது. அவன் கல்வியே கற்காதவன், நாளிதழ்கள்கூட படிக்கமுடியாதவன் என்பதை சொல்லும் ஜெயகாந்தன் உணர்த்துவது அந்த ‘தூய’ நிலையைத்தான்

நிர்வாணமாக அலையும் பித்தியாகிய பேபி ஹென்றியின் மொழியை புரிந்துகொள்வது, அவன் சொற்களுக்குப் பணிவது, அவன் அளித்த ஆடையை அணிந்துகொள்வது அந்த நிர்வாணமான மொழியால்தான். அகநிர்வாணமே அவர்களை இணைக்கிறது. அதில் சற்றும் பாலியல் சாயல் இல்லை. அவனுக்கு அவள் வெறும் குழந்தைதான். அவன் போட்ட பெயர்தான் பேபி.

பேபியில் மெல்ல குவியும் நாவல் அவள் அவனைவிட்டு விலகுவதில் முடிகிறது. அவனுக்காக ஊரே கூடியிருக்கையில் அவள் விலகிச் செல்கிறாள். அவள் வருவதற்காக என்றும் திறந்திருக்கும் அவன் இல்லம் என்று நாவல் நிறையும்போது அந்த வீடு என்றென்றைக்குமான ஒரு காத்திருப்பாகவே திகழப்போகிறது என்றும், ஹென்றியின் வாழ்வின் பொருளும் அதுதான் என்றும் வாசகன் உணரமுடியும்

அந்த முடிவின் வசீகரமான மர்மத்தை விளக்கி அழிக்க விமர்சகன் முயலக்கூடாது என்று சொல்லிக்கொள்கிறேன். பேபியின் கதாபாத்திரத்தை நான் எப்படி வகுத்துக்கொள்கிறேன் என்று என்னை கேட்டுக்கொள்கிறேன். திரும்பத்திரும்ப அவளுடைய அழகை, அரசமகளுக்குரிய நிமிர்வை, அவளிடமிருக்கும் தெய்வத்தன்மையை ஜெயகாந்தன் சுட்டிக்காட்டுகிறார். அவள் துரைக்கண்ணுவுக்கு புளியம்பழங்களை ‘பிரசாதமாக’ அளிக்கிறாள். ஒரு தெய்வவிக்ரகம் அவள். ஆலயத்தின் ஐம்பொன்சிலைகளுக்குரிய நிர்வாணம் அவளுடையது.

கதையின் தொடக்கத்திலேயே ஹென்றிக்கு தரிசனம் தரும் பேபி சமணமரபில் தீர்த்தங்காரர்களுக்கு வழிகாட்டியும் காவலுமான யக்ஷிகளைப்போன்ற ஒருத்தி. அல்லது தாந்தேக்கு வழிகாட்டும் பியாட்ரீஸ் போன்ற ஒரு தேவதை. அவன் வாழ்க்கையில் அவள் தோன்றுமிடம் முக்கியமானது. அவன் வீடுகட்ட செங்கல் கொண்டுவந்து வைக்கும்போது அவள் வருகிறாள். வரவில்லை, நிலவொளியில்  ‘தோன்றுகிறாள்’. வீடுமுடிந்து குடியேறும்போது கிளம்பிவிடுகிறாள். அலைந்தவனை அமையச் செய்யவந்த தெய்வமா அவள்?

பியாட்ரீஸும் தாந்தேயும். ஓவியம் Giovanni di Paolo

அலைபவனை வழிகாட்டி அழைத்துச் செல்லும் தேவதை. இந்தப் படிமம்தான் ஐரோப்பிய மரபில் எத்தனை தொன்மையானது. தாந்தேவின் பியாட்ரீஸ் ஆழமாக நவீன இலக்கியத்திற்குள் வந்த ஒரு படிமம். தஸ்த்யேவ்ஸ்கி தொடங்கி பெரும்படைப்பாளிகள் அனைவரிடமும் அதன் மறுவடிவங்கள் உள்ளன. தேடுபவன், அலைபவன் தன் அறிவுச்சிடுக்குகளுக்குள் உணர்வுக்கொந்தளிப்புகளுக்குள் நின்றபடி கள்ளமற்ற சிரிப்புடன் ஒளிரும் துருவவிண்மீன் போன்ற நிலைத்தன்மையுடன் ஒரு தேவதையை காண்கிறான். அவனுக்குள் இருந்து அவள் எழுகிறாள்

இன்னொரு கோணத்தில் பார்த்தால் அலையும் தனியன், துயருற்ற மெய்யுசாவி என்பவன் கிறித்தவ மதிப்பீடுகளிலிருந்து திரண்டவன். அந்த தேவதை கிரேக்க – பேகன் தொன்மங்களிலிருந்து வந்த தெய்வம். அறிவின் தெய்வமான சோஃபியா, அல்லது கருணையின் தெய்வமான பீய்ட்டி. அவள்தான் ஷிவாகோவின் லாரா.  செகாலின் பெல்லா.

The Flying Lovers, Bella and Marc Chagall. மார்க் செகால், பறக்கும் காதலர்கள்.

பித்தி என்னும் இக்கதாபாத்திரத்தை நீலகண்டப்பறவையைத் தேடி நாவலில் வரும் மணீந்திரநாதுடன் ஒப்பிட்டுக்கொள்ள தோன்றியது. பித்தர்களுக்கு இருக்கும் நிமிர்வு எங்கிருந்து? ஒவ்வொருவர் மேலும் இச்சமூகம் ஏற்றிவைக்கும் எதுவும் அவர்கள்மேல் இல்லை. அதிகாரம், ஒழுக்கம், அரசு, தெய்வம் எதுவும். அது அவர்களை அரசர்களாக அரசியராக ஆக்குகிறது. பேபி சுண்ணாம்பு அரைக்கும் பெண்கள் அனைவருக்கும் அள்ளி அள்ளி தண்ணீர் கொண்டு கொடுக்கும் காட்சி மணீந்திரநாத் யானைமேல் வரும் காட்சிக்கு நிகரானது. என்னவென்றே சொல்லமுடியாத ஒரு நெகிழ்வை அளித்த அழியாச் சித்திரம் அது.

பேபி அந்த வீட்டில் விளக்கு ஏற்றிக்கொண்டுவருவது வரை உடனிருக்கிறாள். கோலம்போடும்போது உதவுகிறாள். அனைவரும் வந்து வீடு உயிர்பெறும்போது அனைவரையும் விழுந்து கும்பிட்டுவிட்டு விலகிச் செல்கிறாள். இன்னமும்கூட அவள் உள்ளம் என்ன என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஒளியாக அங்கே தன்னை நிறுத்திவிட்டு செல்கிறாள் திருமகள் என நினைத்த்துக்கொண்டேன்.

[மேலும்]

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- வாங்க

வேறுவழிப் பயணம் வேறுவழிப் பயணம்- கடிதங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2021 10:35

மதார் கவிதை வெளியீட்டு விழா – கடிதங்கள்

 

நெல்லையில்…

அன்பின் ஜெ,

வணக்கம்.

இதற்குமுன் உங்களுடைய உரைகளை சென்னையில் கேட்டதுண்டு. அண்ணன் அகரமுதல்வனின் ஏற்பாட்டில் தனிப்பேச்சிலும் ஒன்றிரண்டு முறை கேட்டதுண்டு. ஆனால், சொந்த ஊரில், அதுவும் மேடையில் உங்களுக்கருகில் அமர்ந்து நீங்கள் பேசுவதைக் கேட்பதென்பது உண்மையிலேயே உள்ளத்துவகை தான்.

புத்தக வெளியீடு என்பதால், வழக்கமாய் நீங்கள் பேசுவதைக் காட்டிலும் சிக்கனமாகவே முடித்துக்கொண்டீர்கள். ஆனால், காலையில் நீங்கள் திருக்குறுங்குடி சென்று வந்ததன் புத்துணர்ச்சி உங்கள் முகத்திலும் பேச்சிலும் நன்றாகவே வெளிப்பட்டது. முகத்தில் பொலிவு கூடியிருந்தது.

இவ்வளவு கூட்டத்தை நானுமே எதிர்ப்பார்க்கவில்லை. அதிலும் முப்பது வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம். அநேக பேர் உங்களை நோக்கி வந்துக்கொண்டிருக்கும் ஆரம்பநிலை வாசகர்களும் கூட. நீங்கள் சொன்னதுபோல விரைவில் திருநெல்வேலியில் ஒரு முழுநாள் அரங்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், என்னுடைய பேச்சில் நான் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களைக் குறிப்பிட்டுச் சொல்லி ஆற்றுப்படுத்தியமைக்கு நன்றி. இனிவரும் காலங்களில் நிச்சயம் கடைப்பிடிக்கிறேன்.

எழுத்தாளர்கள் லஷ்மி மணிவண்ணன், போகன் சங்கர், ராயகிரி சங்கர் ஆகியோரையும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

நன்றி ஜெ.

அன்புடன்

பிகு

அன்புள்ள ஜெ

நெல்லையில் உங்கள் உரையை கேட்டது சிறப்பான அனுபவமாக இருந்தது. சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் நடந்து முடிந்த விழா. அனைவருமே சிறப்பாகப் பேசினார்கள். உங்கள் உரையின் யூடியூப் வடிவம் வெளியாகுமென நினைக்கிறேன்

நெல்லையில் ஒரு வாசகர் சந்திப்பை நடத்தவேண்டுமென சொன்னீர்கள். அது அவசியமானது. இங்கே உங்கள் வாசகர்கள் பலர் உள்ளனர். அதை நேரிலும் கண்டீர்கள். சந்திக்க ஆவலுடனிருக்கிறோம்

விஜயகுமார்

அன்பு ஜெ,

நெல்லைப் பயணம், உங்களுடனான முதல் சந்திப்பு, மதார் என்ற புதிய நண்பரின் முதல் கவிதை நூல் வெளியீட்டு விழா பற்றி் என் நினைவுகளை எழுதியிருக்கிறேன்.

இந்த ஜனவரியிலிருந்தே ஜெ –வைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. ஜெ தன் வாசகர்களுடன் உரையாடும் கடிதங்களை நுணுகி கவனித்து எனக்கானவைகளை நான் கோர்த்துக் கொள்வதுண்டு. அப்படி ஒரு வாசகர் கடிதத்தில் “கடிதத்தை விட நேரில் சந்தித்துப் பேசும்போது தான் இன்னும் அணுக்கமாக உரையாட முடியும்” என்ற வரியை எனக்கானதாக எடுத்துக் கொண்டு சந்திக்கும் தருணத்தை எதிர் நோக்கியிருந்தேன். அப்படி ஒரு வாய்ப்பாக அமைந்தது தான் இந்த நெல்லைப் பயணம்.

ஏழு மணிக்கெல்லாம் திருவில்லிபுத்துலிருந்து கிளம்பி ராஜபாளையம் வந்து அங்கிருந்து திருநெல்வேலிக்கு பேருந்தில் ஏறினேன். இரண்டாவது முறையாக நெல்லைக்குச் செல்கிறேன். முதல் முறை பணி நிமித்தமாக மண்டலத் தலைவரை சந்திக்கச் சென்றபோது வெயில் தகித்துக் கொண்டிருந்தது. எப்பொழுதும் நான் செல்லும் தென்காசி பயணப்பாதையென்பது மலைகளை அதன் பசுமையை குளிர் தென்றலை தருவிக்கக்கூடியது. ஆனால் நெல்லையின் பயணப்பாதை அப்படியல்லவே. அது மலை தன் எச்சங்களை() விட்டுச் சென்றது போல சிறு குன்றுகளை, மரங்களே இல்லாத சாலையைக் கொண்டது. சாலை விரிவாக்கப் பணியின்போது மரங்களை வெட்டி விட்டதாகச் சொன்னார்கள். மரங்களற்ற சாலை பரிதாபத்திற்குரியது.

இப்படி இந்தப் பயண வழி புதிதில்லை எனினும் பேருந்தில் செல்வது இதுவே முதல் முறை. அதுவும் இம்முறை பனிக்காலம் முடியாமல் தீவிரமாக பொழிந்து இந்த சுடு நிலத்தை குளிர்வித்துக் கொண்டிருக்கும் ஒரு காலத்தில் செல்வது இனிமையாகவே இருந்தது. பயணப்பாதை இராஜபாளையம், முதுகுடி, முறம்பு, கரிவலம்வந்தநல்லூர், சங்கரங்கோவில், மானூர் ஆகியவற்றைக் கடந்து வண்ணாரப்பேட்டையை அடைந்தது. அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ரேடியன் பயிற்சி மையத்தை அடைந்தேன்.

இளைஞர்களின் கூட்டம் வழி நெடுக இருந்தது. தொகுத்து வழங்குபவர்கள் பரபரப்பாக எதையோ எழுதிக் கொண்டும், தங்களுக்குள் விவாத்துக் கொண்டும் இருந்தனர். விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கான தோரணை கொண்டவர்கள் தீவிரமாக தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தனர். மதரின் நண்பர்கள் புத்தகங்கள் விற்றுக் கொண்டிருந்தனர். அதற்கருகில் ஒருவர் சமச்சீர் கல்வி புத்தகத்தை வைத்துக் கொண்டு கிடைக்கும் நேரத்தில் படித்தும் கொண்டிருந்தார். சில பெரியவர்கள் பெரிய விசயங்களைப் பேசும் தோரணை கொண்டு குழுமியிருந்தனர். நான் உள்ளே சென்று ஓரமாகப் போய் உட்கார்ந்து கொண்டேன். முகம் முழுக்க புன்னையோடு ஜெ -வுக்காக காத்திருந்தேன்.

ஒரு வாரமாகவே இதே சிந்தனையில் புன்னகைத்துக் கொண்டே தான் இருந்தேன். ஜெ வந்துவிட்ட அறிகுறியை அரங்கின் பரபரப்பு காணித்தபோதெ அவர் உள் நுழைந்திருந்தார். நான் பார்த்த எந்த புகைப்படத்தையும் காணொளியை விடவும் அவர் அழகாக குழந்தை போல் இருந்தார். அதை இதுவரை நான் பார்த்த எந்தப் புகைப்படமும் படம் பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கவிதை வெளியீட்டு விழாவின் சம்பிரதாயங்களாக ஜெ நூலை வெளியிட்டு அதை லஷ்மி மணிவண்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மிகவும் எளிமையான ஒரு மனிதராக லஷ்மி மணிவண்ணன் அவர்கள் தென்பட்டார்கள். மதார் என்ற ஒரு இளம் கவிஞருக்கு அவர் ஆற்றியிருப்பதென்பது அலப்பறிய செயல். புத்தகத்தையுமே அவர் லஷ்மி மணிவண்ணன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்ததிலிருந்து அதை அறியலாம்.

மதார் அவர்கள் ஏற்புரை வழங்கும்போது கவிதைகளைத் தேர்வு செய்து பிரசூரிப்பதற்கு அவர் எடுத்துக் கொண்ட சிரத்தைகளை சொன்னபோது மேலும் எனக்கு அவரின் மேல் மதிப்பு கூடியது. அற்புதமான மனிதரை சந்தித்த மகிழ்ச்சி எனக்கு. இவர்களின் முயற்சிக்கு ஒரு உந்துகோலாக ஜெ இந்த நூலை வெளியிட்டு உரையாடி மதார் அவர்களை பாராட்டியது இன்னும் சிறப்பு.

ஜெ வின் உரையை நேரில் கேட்பது மிகவும் இனிமையாக இருந்தது. பொதுவாகவே நூலை வெளியிட்டுவிட்டு அந்த நூலைப்பற்றியே பெரும்பாலானவர்கள் பேசுவார்கள். ஆனால் பார்வையாளர்கள் பெரும்பாலும் அதைப் படித்திராதவர்களாகவே இருப்பார்கள். அவர்களை நூலை நோக்கிச் செலுத்தும் ஒரு பேச்சாகவே ஜெ இதைத் துவக்கினார்.

காலை ஆறு மணிக்கெல்லாம் ஆரம்பித்திருந்த அவரின் பயணப்பாதையில் அவருக்கு மிகவும் விருப்பமான திருக்கனங்குடி ஆலயத்திற்கு சென்று வந்ததைப் பகிர்ந்து கொண்டார். அங்கு பெண்பாற் கவிஞரான ஆண்டாள், ஆண்பால் கவிஞரான நம்மாழ்வார், தத்துவார்த்தவாதியான இராமனுஜருக்கான சிலை இருக்கிறது. அருகிலேயே அவர் தங்கிய வெட்டாற்றுப்பாறையில் உள்ள ஆலயத்திற்கு சென்று வழிபட்டதைப் பகிரும்போது ஒரு தத்துவ ஞானியைச் சுற்றி ஒரு ஆறு வலம் வரும் அந்தக் காட்சியைச் சொல்லும்போதே சிலிர்த்தது.

இது தவிரவும் பீர் முகம்மது என்ற கவிஞருக்கான தர்க்கா என கவிஞர்களுக்கு கோயில்கள் சமைத்திருப்பதைக் கண்டு ஒரு முறை அவர் கூட்டி வந்த பிரிடிஷ் எழுத்தாளர் ஒருவர் ஆச்சரியப்பட்டுப் போனதை விவரித்தார். இப்படி கவிதையைக் கொண்டாடிய மரபு நம்மிடம் உள்ளது. இன்றைய கவிதையான மதார் மற்றும் அவர் போன்ற இன்றைய கவிஞர்களின் கவிதையைப் பற்றிச் சொல்லும்போது “UNBEARABLE LIGHTNESS” தாங்கிக் கொள்வதற்கு முடியாத எடையின்மை, இனிய எடையின்மை, பறந்தலையும் தன்மை என்று கூறினார். இதை ”இசை” போன்றவர்களின் கவிஞர்களுடன் ஒப்பிடுகிறார்.

அதற்கு முந்தைய தலைமுறை கவிஞர்களான ஆத்மாநாம், சுகுமார் போன்றவர்களின் எடை அதிகம். ஆத்மாநாம் அவர்களை ”துயர் நிறம்பிய எடை பொருந்திய குண்டு” என்று சித்தரித்தபோதே முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் சித்திரத்தை எங்களுக்கு கடத்தி விட்டிருந்தார். அங்கிருந்து மதார் அவர்களின் கவிதை மற்றும் இன்றைய தலைமுறைக் கவிஞர்களின் எடையற்ற தன்மையை விளங்க வைத்த போதே மதார் அவர்களின் கவிதை நூலுக்கான வாசல் எனக்கு திறந்து கொண்டது. “எய்துவது என்பது கவிதையில் அரிதானது” அது மதாரின் கவிதைகளில் நிறைய காணக்கிடப்பதாகவும் அதன் நிறைவை செரிவை எடுத்தியம்பி முடிக்கும்போதே கவிதையைக் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து உந்திவிட்டது.

பின்னும் லஷ்மி மணிவண்ணன் அவர்கள் பேசும்போதும் அவரின் கவிதைகளை சிலாகித்தார். மத சாதி இன அடையாலங்கலன்றி ஒரு எழுத்தாளன், கவிஞன் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறி அவரை பாராட்டி மகிழ்ந்தமர்ந்தார். “பிகு” என்ற நண்பரும் பல நல்ல கவிஞர்களுடன் மதாரின் கவிதைகளை ஒப்பிட்டும் அவர் சிலாகித்த அவரின் கவிதைகளையும் எடுத்தியம்பினார். சரளமாக பேசும் தன்மையவரானாலும் முதல் முறை இலக்கிய கூட்டத்தில் பேசுவதாதலால் காகிதத்தில் அச்சடித்து எடுத்து வந்திருந்தது அவரின் ஈடுபாட்டைக் காட்டியது.

இந்த நாளின் பேச்சுக்காக எங்கெங்கோ இருந்து தேடி செறிவான் ஒரு பேச்சுக்கான உரையைத் தயாரித்திருந்தார். போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் இலக்கிய ஈடுபாடு கொண்டிருப்பது மன நிறைவான விடயம். அதன்பின் ஏற்புரை வழங்கிய மதார் நன்றிப் பெருக்கோடு மிகுந்திருந்ததை உணர முடிந்தது. தேவதேவனையும், லஷ்மி மணிவண்ணன் அவர்களையும், அவரின் நண்பரான சீனிவாச கோபாலனையும் நினைவு கூர்ந்து அவர்களுடனான கவிதைத் தருணங்களை சிலாகித்தார். அனைவருக்கும் நன்றி கூறி ஏற்புரையை முடித்தார்.

எனக்கு நண்பர்கள் மிக மிகக் குறைவு. ஆனால் நண்பர்கள் அதிகம் இருப்பவர்களைக் கண்டு மகிழ்ச்சியடைவேன். மதாருக்கு நல்ல மற்றும் நிறைய நண்பர்கள் அமைந்திருப்பதில் மகிழ்ச்சி. மதார் ஒரு கிராம நிர்வாக அலுவலராக இருந்து கொண்டும் கவிஞராக கவிதைத் தருணங்களில் திழைத்திருப்பதில் பெருமையும் கூட.

தேனீர் இடைவேளையிலும், கூட்டம் முடிந்தபோதும் ஜெ –வைச் சுற்றி நிறைய பேர் குழுமிவிட்டார்கள். எனக்கும் சில தருணங்கள் கிடைத்தது. அதன்பின் அவர் பலருடன் உரையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் அவர் புத்தகத்தை சிலாகிப்பவர்களிடம் “ஓ அப்படியா. நானா எழுதினேன்” என்பவரைப் போலவே பாராட்டுகளை நெளிந்தே வாங்கிக் கொள்கிறார். அருகே தயக்கத்துடன் வரும் வாசகர் ஒவ்வொருவரையும் தோளோடு தோள் நிறுத்தி ஒரு தோழனைப் போல பரவசப்படுத்திவிடுகிறார். அன்போடு ஒரு குழந்தையைப் போல பாசமாக அனைவரிடமும் பேசி வழி அனுப்புகிறார்.

அதன் பின் அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று அவரை சந்தித்தி்ருந்தோம். அங்கு ஜெ –வை வேறொரு பரிமாணமாகப் பார்த்தேன் எனலாம். அவரும் போகன் சங்கர் அவர்களும் மிகவும் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்தனர். சிரித்துக் கொண்டே தான் இருந்தோம். ஜெ –வின் பயணத்தில் எப்போதும் உடனிருக்கும் நண்பர்களைக் கலாய்த்து தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தார். பயணங்களில் ஒவ்வொரு மனிதரையும் உன்னிப்பாக கவனிக்கிறார் ஆனால் இவரைப் பற்றி யாரேனும் சொல்லிக் கேட்க வேண்டுமே என்ற அவா எழுந்தது எனக்கு. அவரின் கண்கள் நிகழ்வுகளைப் படம் பிடிப்பவையாக இருப்பது போலவும், சற்று கூர்ந்து பார்த்தாரேயானால் எண்ணத்தின் ஆழம் வரை பயணித்து விடுவார் என்ற பயமும் வந்து சேர்ந்தது.

மதுரைக்குப் பல வழி என்ற பழமொழியைப் போல பேச்சு சுற்றி வந்து நிற்கும் புள்ளி இங்கு இலக்கியமாக இருந்தது. பிறழ்வெழுத்தில் தொடங்கி, தஸ்தாவஸ்கி டால்ஸ்டாய் ஒப்பீட்டில் வந்து நின்றது பேச்சு. போகன் ஆவர்கள் மிகவும் நகைச்சுவையானவர். முதலில் அவரைப் பார்த்தபோது ரொம்ப கராரானவர் பேசமாட்டார் என்று தவறாக நினைத்துவிட்டேன். மிகவும் எதார்த்தமான நகைச்சுவைவாதியாகத் தெரிந்தார். அடுத்தமுறை அவரிடம் நண்ராகப் பேசவேண்டும். ஏனென்றால் இந்த முறை நான் ஒரு பிரமிப்பு நிலையில் வேறொன்றாக இருந்தேன்.

அவர் தான் தஸ்தாவெஸ்கியை ஆரம்பித்தார். ஜெ, டால்ஸ்டாய் எவ்வாறெல்லாம் நிலைத்து நிற்கிறார் என்று ஒரு ஒப்பீட்டை ஆரம்பித்து டால்ஸ்டாயை நிறுத்தும் போது செறிவாக இருந்தது. இடையில் “ஆன்மீகத்தில் ஒளியையே ஏன் சென்றடைய வேண்டும்” என்ற என்னுடைய சந்தேகத்திற்கான பதிலை அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இடையிலிருந்து நானே கண்டு கொண்டேன்.

பிரியும் தருவாயில் தான் மதார் அவர்களிடம் பேசினேன். புத்தகம் வாங்கியிருக்கிறேன். படித்துவிட்டு எழுதுகிறேன் என்று நான் கூறினேன். அவர் தளத்தில் எழுதும் இரம்யா தானே நீங்க என்றார். தளத்தைத் தொடர்ந்து வாசித்து வரும் ஒவ்வொரு நல்ல வாசகரும் கண்டடைய அந்தத் தளத்தில் ஒரு துளியாய் இருப்பதில் மகிழ்ச்சி எனக்கு. லஷ்மி மணிவண்ணன் அவர்களும் காலையில் பார்த்தபோது என்னை அடையாளங்கண்டு பாராட்டி மேலும் எழுத ஊக்குவித்தார். அதற்கு காரணமான ஜெ –க்கு நன்றிகள்.

இறுதியில் மதாரிடம் வேலை, தேர்வு என்ற உலகாயதங்களைப் பேசி விடைபெற்றோம். ஜெ –வுடன் ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. வீட்டிற்கு சென்றதும் எதிர்பாராத விதமாக மதார் அவர்கள் நிகழ்ச்சியின் புகைப்படங்களை அனுப்பியபோது ஜெ –வுடன் எடுத்த ஒரு அருமையான புகைப்படம் இருந்தது கண்டு மகிழ்வுற்றேன். அவருக்கு நன்றி. சில புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். “உவப்ப தலைக்கூடி உள்ளப் பிரிதல்” போல அனைவரும் கலைந்து சென்றோம். திரும்பிச் செல்லும் வழியெல்லாம் என் முதல் சந்திப்பை சிலாகித்திருந்தேன். எழுதி முடிக்கையில் தான் அந்த பிரமிப்பிலிருந்து வெளி வருகிறேன். மிகச் சில தருணங்களை எழுத்திற்கும் அளிக்காமல் நினைவடுக்கின் ஆழத்திற்குள் புதைக்கிறேன். நினைவுகளை மீட்டும்போது அதை சிலாகித்திருப்பேன்.

இரம்யா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2021 10:32

விக்கி- கடிதங்கள் 2

விக்கிக்கு வாழ்த்துக்கள்

அன்புள்ள ஜெ,

விக்கிபீடியா துவங்கப்பட்ட காலத்திலிருந்தே அதை நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஏறக்குறைய தினமும். ஆனால் இதுவரை அதில் எதுவும் எழுதியதில்லை. அந்த அளவுக்கு இன்னும் நான் எதிலும் தேர்ச்சி பெறவில்லை!

Crowd sourcing-ன் மிகச் சிறந்த எடுத்துகாட்டு விக்கிபீடியா என்றே நினைக்கிறேன்.

இதற்க்கிணையாகவே Citizen Science Projects-களையும் கூறுவேன். தனக்குப் பிடித்த துறையில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் அத்துறை சார்ந்த சில சிறு வேலைகளை செய்யும் வாய்ப்பை இவை அளிக்கின்றன. அந்த துறைக்கான பட்டப்படிப்பு எதுவும் தேவையில்லை. ஆர்வம் மட்டுமே வேண்டும். ஓரு வானியல் எடுத்துக்காட்டு : GalaxyZoo. இதில் பல லட்சம் galaxy-களின் படங்களை தொகுத்து வைத்திருக்கிறார்கள். நம் வேலை அந்த படங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து, அவர்கள் கேட்கும் சில எளிய கேள்விகளுக்கு விடை கூறுவதும், அவற்றில் ஏதேனும் வித்தியாசமாகத் தெரிந்தால் அவற்றை சுட்டிக் காட்டுவதும்தான். நம்மை விட அனுபவம் மிக்கவர்களுடனும், சில நேரங்களில் ஆராய்ச்சியாளர்கள் உடனும் உரையாடி மேலும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இத்தகைய projects மருத்துவம், உயிரியல், வரலாறு மற்றும் இன்னும் பல துறைகளிலும் இருக்கின்றன. zooniverse.org என்ற தளத்தில் இவற்றை பார்க்கலாம். விருப்பப்பட்ட துறையில் இல்லாதவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் இவற்றில் பங்கேற்கலாம்

Zooniverse : https://www.zooniverse.org/

GalaxyZoo  : https://www.zooniverse.org/projects/zookeeper/galaxy-zoo/

Citizen Science Projects : https://en.wikipedia.org/wiki/Citizen_science

நன்றி

கார்த்திகேயன்

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கிப்பிடியா ஒரு பயனற்ற இடம். தகவல்கள் பிழையானவை. தானியங்கி மொழியாக்கத்தால் செய்யப்பட்ட பக்கங்கள் அபத்தமான மொழிநடை கொண்டவை. விக்கிப்பீடியாவில் பொறுப்புவகிப்பதாக நினைக்கும் கும்பல்கள் வேறுஎவராவது பதிவுபோட்டால் அதை போய் தனித்தமிழாக்குகிறேன் என்று சீரழிப்பார்கள். இந்த தானியங்கி மொழியாக்கத்தை சரியாக எழுத அவர்களுக்கு துப்பில்லை. விக்கிப்பீடியா ஒரு பெரிய வரப்பிரசாதம். ஆனால் இந்த கும்பல் அதைச் சீரழித்துவிட்டது

ஆங்கில விக்கிப்பீடியா ஒரு பெரிய அறிவுக்களஞ்சியம். கூடுமானவரை ஆங்கில விக்கியை நம்புவதே சரியானது.

செல்வக்குமார் எம்

 

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கிப்பீடியாவை பற்றிய ஆழமான கசப்பு எனக்கு இருக்கிறது. தனித்தமிழ் என்றபேரில் வாசிப்பில்லா மொண்ணைக்கூட்டத்தால் சீரழிக்கப்பட்ட நடை. கட்சியரசியலை புகுத்தி தகவல்களைச் சீரழித்துள்ளார்கள். மிகப்பெரிய வாய்ப்பை தமிழ் அரைவேக்காடுகள் சீரழித்துவிட்டன

அதில் வரலாறு உட்பட எல்லாவற்றிலும் பிழைகள். வேண்டுமென்றே சேர்க்கப்பட்ட பிழைகள்தான் அதிகமும். ஆனால் சினிமாச்செய்திகளில் பிழை கிடையாது. எனேன்றால் அதற்குத்தான் அதிகமானவர்கள் வருகிறார்கள். பிழை இருந்தால் உடனே சுட்டிக்காட்டப்படுகிறது. மற்றவற்றில் எந்த பிழை இருந்தாலும் யாருக்கும் ஒரு பொருட்டே இல்லை.

ஏன் தமிழ் விக்கிப்பீடியா தோற்கிறது என்றால் ஆங்கிலத்தில்   அது கல்விக்கு பயன்படுகிறது. அங்கே அறிவுக்கு ஒரு மதிப்பு உள்ளது. தமிழில் அப்படி அல்ல. இங்கே அரசியல், சாதிக்காழ்ப்புகளே அறிவுக்குமேலே எழுந்து நிற்கின்றன

முத்து மணிமாறன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2021 10:31

கதைசொல்லிகள்-கடிதம்

மதிப்பிற்குரிய ஜெ,

தமிழ் சிறுகதைகள் இப்போது யூ-டூபில் பரவலாக கேட்க கிடைக்கின்றன. ஒலி வடிவ கதைகளில் உள்ள ஒரு மிகப் பெரிய அனுகூலம் – வேறு வேலை செய்து கொண்டே கேட்கலாம் – பயணத்தில், காலை மாலை நடைகளில், சமையல் செய்து கொண்டே…

1) பவா செல்லதுரை மிகவும் பிரபலம். இவர் கதை படிப்பதில்லை – படித்ததை தான் உள்வாங்கியவாறு சொல்கிறார். பெரும்பாலும் கதையில் இருந்து விலகுவதில்லை – ஆனால் எல்லா கதைகளிலும் இடது சாரி பார்வையை (கதாசிரியர் சொல்லாததையும்) கலந்து சொல்கிறார் என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக சொல்லப்படுகிறது.

2)”இலக்கிய ஒலி” சே.சிவகுமார் – இவர் ஒரு கலவை. சில நேரங்களில் கதை படிப்பார், சில நேரங்களில் கதை சொல்லுவார். சில நேரங்களில் கதை பற்றிய தன் கருத்துக்களை மட்டும் சொல்வார்.

3) இப்படிப்பட்ட ஒரு சூழலில், தீபிகா அருண் என்பவர்  “கதை ஓசை” மூலம் தமிழுக்கு ஒரு தொழில் முறை (professional ) கதை சொல்லி-யாக வந்திருக்கிறார். தெளிவான ஏற்ற இறக்கங்களுடன் கூடிய  உச்சரிப்பு, கதாபாத்திரங்களுக்கும், கதை சூழ்நிலைக்கும் ஏற்ப குரல் நடிப்பு என்று மிக சிறப்பாக கதைகளை பதிவு செய்கிறார். உங்கள் வலை பக்கத்தில் இவரை பற்றி ஒரு பதிவு வந்தால் இன்னும் பலருக்கும் சென்று சேர்வார். உங்கள் பதிப்பு உரிமைகளில் ஏதும் தடை இல்லை என்றால், அறம் கதை தொகுதியை ஒலி வடிவில் தீபிகா மூலமாக வெளியிடலாம் – இந்த கதைகள் 10 மடங்கு பேருக்கு சென்று சேரும்.

நன்றி
ஸ்ரீராம்.

அன்புள்ள ஸ்ரீராம்

பொதுவாக என் கதைகளுக்கு ஒலிவடிவம் சார்ந்த கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. ஒலிநூல்களுக்கான ஒப்பந்தங்களை சிலர் கேட்கையில் நான் தயங்குவது ஒன்றினால்தான். அந்த ஒப்பந்தங்களைக்கொண்டு அந்த கதைகளை அவர்கள் முடக்கிவிடுகிறார்கள். அவர்கள் வெளியிடும் ஒலிநூல்களை மிகச்சிலர் கேட்கிறார்கள். அவர்கள் அளிக்கும் காப்புரிமை நகைப்புக்கிடமாகுமளவுக்குச் சிறியது. அச்சிறிய தொகைக்காக கதைகள் பரவுவதை நான் கட்டுப்படுத்த விரும்பவில்லை

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2021 10:31

வெண்முரசின் குந்தி

கணவன் இறப்பிற்கு பின்பு கணவனின் மூத்தவராகிய கண்ணில்லாத திருதராஸ்டிரமன்னனிடம் தானும் குழந்தைகளும் அடைக்களாமாகி அண்டிவாழும் ஏழைத்தாய் குந்தி. யாதவர்களின்பெரும் தலைவனாக விளங்கும் தனது அண்ணன் மகன் கண்ணனிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தனது பிள்ளைகளுக்காக உதவியை வேண்டும் பாசமிகுந்த அத்தை. மகாபாரம் காட்டும் குந்தியின் ஒரு விளக்கப்படம் இது.

வெண்முரசின் குந்தி.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2021 10:30

கி.ரா குறித்து கோவையில் பேசுகிறேன்

கி.ராஜநாராயணனின் ‘மிச்சக் கதைகள்’ நூல் வெளியீட்டுவிழா 21-2-2021 அன்று கோவையில் நிகழ்கிறது. அதில் நான் கலந்துகொண்டு பேசுகிறேன்.

இடம்  -சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி பள்ளி

நாள் – 21-2-2021 ஞாயிற்றுக்கிழமை

பொழுது- காலை 10 மணி

பேசுவோர். நாஞ்சில்நாடன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பா.விஜய் ஆனந்த், கிரா பிரபி, புதுவை இளவேனில்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2021 10:30

February 15, 2021

ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்.

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- வாங்க

1972ல் எனக்கு பத்துவயது இருந்தபோது எழுதப்பட்டது ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். அது வெளிவந்தபோது தமிழ்ச்சூழலில் என்ன விவாதம் எழுந்தது என்று நான் ஜெயகாந்தனிடம் ஒருமுறை கேட்டேன்.

மீசையை நீவியபடி “நடந்த விவாதம் ஒண்ணுதான். அதிலே உலகத்துக்கு முன்னாடி ஓர் வேணும், ஒருண்ணு தப்பா எழுதியிருக்குன்னு… நான் புக்கா வந்தப்ப முன்னுரையையிலே பதில் சொன்னேன்”

நான் சிரித்து “ஏத்துகிட்டாங்களா?”என்றேன்.

“இலக்கணம் பின்னாலே திரும்பிப்பாத்துட்டு நடக்கிற வியாதி கொண்டது. முன்னாடி நின்னு பேசினா அது கவனிக்காது” என்றார்

ஜெயகாந்தன் இந்த நாவலில் ஏன் ஓர் என்று எழுதவில்லை? ஜெயகாந்தன் முறையாக தமிழ்கற்றவர். பழந்தமிழிலக்கியம் ஆழப்பயின்றவர். இந்த இலக்கணம் அவருக்குத்தெரியாதா என்ன? அவர் சொல்ல விரும்புவது ’ஓர்’ உலகத்தை அல்ல ’ஒரு’ உலகத்தை.ஓர் என்ற உச்சரிப்பு The அல்லது A அல்லது One என்னும் குறிப்பை அளிக்கிறது. அவர் விரும்பியது …and one என்னும் குறிப்பை. ஒரு மனிதன், ஒருவீடு அதோடு ஒரு சாதாரணமான இயல்பான உலகம்.

ஓருலகம் என்ற கருத்து உணர்ச்சிகரமாக பேசப்பட்ட காலம் அது. ஓருலகக் கனவை கண்ட கம்யூனிஸ்டு கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்தான் அவர். அந்த சொல் அவரையும் கொந்தளிப்படையச் செய்திருந்தது. ஆனால் அந்நாவலில் முதலில் மனிதன், அதன்பின் வீடு, அப்பால் உலகம் என அவர் காட்டவிரும்பினார். அந்த உலகுக்கு அழுத்தம் விழலாகாது என்று நினைத்தார். மனிதர்களால் வீடுகளாலான உலகம் அது, அவ்வளவுதான்.

1974 லேயே இந்நாவல் எனக்கு அறிமுகமாகிவிட்டது. அன்று முழுக்கோடு பள்ளியில் ஆசிரியராக வந்த ரூபன் என்னும் இளைஞர் ஜெயகாந்தனின் தீவிரவாசகர்.மாலை மைதானத்தில் பாட்மிண்டன் விளையாடுவார்கள்.அதன்பின் ஆவேசமாக அவர் ஜெயகாந்தனைப் பற்றிபேசுவார். என் அம்மாவுக்கு ஜெயகாந்தனை அவ்வளவாக பிடிக்காது. ஜெயகாந்தனை நான் அந்த ஆசிரியர் சொற்கள் வழியாகவே சரியாக அறிமுகம்செய்துகொண்டேன்

அவர் அளித்து ஜெயகாந்தனின் நாவல்களை வாசித்தேன். ஆறாம் வகுப்பில் ஜெயகாந்தனை ஆழ்ந்து படித்திருந்த என்னை அதன்பின் என் ஆசிரியர்கள் அறிமுகம்செய்துகொண்டனர். அவர்களில் பலர் அன்று ஜெயகாந்தனின் பக்தர்கள். நான் வாசித்த ஜெயகாந்தன் நாவல்களில் என்னை பிடித்து ஆட்கொண்ட நாவல் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். பலவாரக்காலம் என்னை காய்ச்சல்கொண்டவன் போல அது அலையச் செய்திருக்கிறது.

நான் என்னை ஹென்றியாக உணரவைத்தது அது. நான் ஒரு நாடோடியாகவேண்டும், ஊரைவிட்டு கிளம்பிவிடவேண்டும், அறியாத ஊர்களுக்குச் சென்று குடியேறவேண்டும் என்றெல்லாம் கனவுகள் கண்டேன். பின்னர் கிளம்பியதற்கு தொடக்கப்புள்ளியும் அந்நாவல்தான்.அன்றிருந்த அந்த ‘காய்ச்சலை’ இன்றைய தலைமுறை உணரமுடியுமா? அந்த வரலாற்றுப்புலத்தைச் சொன்னால் அவர்களுக்கு தெரிவித்துவிடமுடியுமா?

இன்று முற்றிலும் அழிந்துவிட்ட ஒன்று என்றால் சாகச உணர்வுதான். சாகசம் என்றால் தேவையான ‘கிட்’களுடன் மலையேறுவதையோ கடலில் பாய்வதையோ சொல்லவில்லை. அவற்றுக்குப் பின்னால் வாழ்க்கையை தெளிவாகத் திட்டமிட்டு அமைத்துக்கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. இது வேறொன்று, வாழ்க்கையை காற்றுக்கு விட்டுவிட்டு இறங்கிச் செல்வது. அந்த மனநிலை எழுபதுகளில் எங்குமிருந்தது. ஹென்றி அதன் அடையாளம்.

உலகமெங்கும் ஹிப்பி இயக்கம் பற்றி எரிந்து பரவிக்கொண்டிருந்த காலம் அது. அத்தகைய இயக்கம் எப்படி குமரிமாவட்டத்தில், முழுக்கோடு என்னும் சிற்றூர் வரை வரமுடியும்? அதுதான் உலகம் ஒன்றாக ஆரம்பித்த காலம் என நினைவுகொள்க. உலகளாவிய செய்தி ஊடகங்கள் வலுப்பெற்றன. உலகத்தை காட்டும் சினிமா ஒரு பேரலையாக எழுந்தது. முழுக்கோடு என்னும் சிற்றூரில் நான் ருஷ்ய, அமெரிக்க இதழ்களை வாசித்துக்கொண்டிருந்தேன். [அவற்றை அன்று இலவசமாகவே தபாலில் பெறமுடியும்]

ஹிப்பிகள் சினிமாக்களில் இடம்பெற்றனர். ஹிப்பி ஸ்டைல் என்னும் தலைமயிர்ப்பாணி அறிமுகமாகியது. இலக்கியத்தில் ஹிப்பிகளின் உளநிலைகளை, கொள்கைகளைப் பேசும் படைப்புக்கள் உருவாகி வந்தன. மலையாளத்தில் எம்.முகுந்தன், காக்கநாடன் போன்றவர்கள் அந்த இயக்கத்தின் இலக்கிய முகங்கள். அத்தனைக்கும் அப்பால் கோவளம் ஹிப்பிகளின் மையங்களில் ஒன்றாக உருத்திரண்டு வந்தது. ஹிப்பிகளால் கண்டெடுக்கப்பட்ட ஒதுக்குபுறமான கடற்கரை அது.

அவர்கள் கன்யாகுமரிக்கும் அவ்வப்போது வந்தனர். அங்கிருந்து திற்பரப்புக்கும்.ஆகவே திருவரம்பு சாலையில் மாதத்தில் ஒரு சில ஹிப்பிகளை நேரில் பார்க்கவும் வாய்ப்பிருந்தது.

பெட்டிக்கடையில் அமர்ந்திருக்கையில் ஒரு ஹிப்பி வந்து ‘எ பண்டில் ஆப் பீடி ப்ளீஸ்’ என்பார்.

“வேர் ஆர் யூ ஃப்ரம்?” என்பேன்.

‘கேலிஃபோர்னீயா, யுஎஸ்” என்ற குழறும் குரல்.

“ஆர் யூ என் அமெரிக்கன்?” என்று கேட்பேன். நான் ஆங்கிலம் பேசுவதை ஊரார் வியந்து பார்ப்பார்கள். கரடிநாயரின் மகன் ஆள் சூட்டிகை.

“நோ, நோ கண்ட்ரி ஃபர் எ மேன்”.

இந்தியா வந்தபின் அவர்கள் இந்தியாவுக்கான ஆங்கிலத்தையும் உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். அவர் புன்னகைத்து கிளம்பிச்செல்வார்.

“வைக்கோல் புதரு மாதிரில்லாவே தலை இருக்கு?”

“பாம்பு பூரான் கேறி இருந்தாக்கூட தெரியாது”

“செரியான கஞ்சாப்பார்ட்டி. கண்ணப்பாரு, மெதந்துல்லாவே கெடக்கு”

“சிவகணமாக்கும் கேட்டேரா, வாய்மீறி பேசப்பிடாது”

அந்தச் சழக்குகள் நடுவே நான் அந்த ஆப்த வாக்கியத்தில் மெய்சிலித்துக்கொண்டு அமர்ந்திருப்பேன். நாடற்றவன். மனிதனுக்கு நாடே தேவையில்லை. நாடில்லா மனிதன். ஹிப்பிகள் தங்களை மேன் என்னும் சொல்லால் அன்றி அடையாளப்படுத்திக்கொள்வதில்லை. வெறும் மனிதன். “கேன் யூ ஸ்பேர் டென் ருப்பீஸ் ஃபர் எ மேன்?”. மனிதனல்ல, மானுடன்!

ஆச்சரியமாக இருக்கிறது ஏறத்தாழ அந்தக்காலகட்டத்தில்தான் ‘மனிதன்’ என்ற சொல் அத்தனை புழக்கத்திற்கு வந்தது. முன்பு அச்சொல்லுக்கு இருந்த வரையறைகள் மாறிக்கொண்டிருந்ததன் அடையாளம் அது. சினிமாப்பெயர்களிலேயே மனிதன், உயர்ந்த மனிதன், அவன்தான் மனிதன், ஏழாவது மனிதன்,மனிதனும் தெய்வமாகலாம், மனிதன் மாறவில்லை…

ஹிப்பி இயக்கத்தை உருவாக்கிய அடிப்படை உணர்வுகள் உலகளாவியவை. அவற்றை மூன்று புள்ளிகளாகத் தொகுப்பேன்.ஒன்று நாற்பதுகளில் நிகழ்ந்த உலகப்போர், அதன் அழிவுகளும் நினைவுகளும். அது அன்றுவரை மனித இனம் கொண்டிருந்த விழுமியங்கள் பலவற்றை மாற்றியது. பொதுக்கல்வி, உலகளாவிய வணிகம், தொழிற்புரட்சி ஆகியவற்றால் உலகம் முன்னேற்றமடைகிறது என்ற ஆணித்தரமான நம்பிக்கை மழுங்கியது. அது உருவாக்கிய சோர்வு மானுட சிந்தனையில் அழுத்தமாக பரவியது.

இரண்டாவது, ஐம்பதுகளுக்குப்பின் உயிர்பெற்ற ஊடகப்பெருக்கம் உலகை ஒவ்வொருவருக்கும் காட்ட ஆரம்பித்தது. நிலப்பிரபுத்துவகால வாழ்க்கையில் இயல்பான சிறுவட்டத்திற்குள் வாழ்ந்து நிறைவடைந்தவர்களின் அடுத்த தலைமுறை ‘உலகம்’ என்று கனவுகாண ஆரம்பித்தது. எழுபதுகளின் சினிமாக்களிலேயே  “உலகம்” என பெரும்பரவசத்துடன் அறியாநாடுகளைப் பற்றி எழுதப்பட்ட பாட்டுகள் எத்தனை என்று பாருங்கள். “உலகம் அழகு கலைகளின் சுரங்கம்” என்ற எண்ணம் மக்களை ஆட்கொண்டிருந்தது. “காலை ஜப்பானில் காபி! மாலை நியூயார்க்கில் காபரே! இரவில் தாய்லாந்தில் ஜாலி!இனிமேல் நமக்கென்ன வேலி? இங்கும் எங்கும் நம்முலகம்! உலகம் நமது பாக்கெட்டிலே!வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே!” என்ற திரைவரிகள் அன்றைய மனநிலையின் மிகச்சரியான வெளிப்பாடுகள்.

மூன்றாவதாக புரட்சி என்னும் எண்ணம். எழுபதுகள் புரட்சியின் காலகட்டம். மக்களின் உள்ளம் வரலாற்றின் அடுத்தகட்டம் நோக்கி நகர்ந்துவிட்டது- ஆனால் அரசுகளும் சமூகமும் அசைவற்று பின்னால் நின்றிருந்தன. ஒன்று நிலப்பிரபுத்துவம், அல்லது நிலப்பிரபுக்களே முதலாளித்துவ ஆட்சியாளர்களாக மாறிய போலி ஜனநாயகம். அதற்கு எதிரான கிளர்ச்சி உலகின் பெரும்பாலான நாடுகளில் உருவாகியது. இந்தியாவில் நக்சலைட் எழுச்சி. அது தோற்கடிக்கப்பட்டது. பொதுத்தளத்தில் அது சோர்வை உருவாக்கினாலும் பண்பாட்டுத்துறையில் ஒரு கட்டற்ற பாய்ச்சலை நிகழ்த்தியது

அச்சூழலை நாம் தமிழகத்தின் சிற்றிதழ் சார்ந்த நவீன இலக்கியத்தில் மிகக்குறைவாகவே காணமுடிகிறது. லா.ச.ரா, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன் முதல் வண்ணநிலவன்,வண்ணதாசன் வரையிலான எழுத்து குடும்ப- பாலியல் சிக்கல்களுக்குள் சுழன்றுகொண்டிருப்பதையே காணமுடிகிறது. அவர்கள் உலகத்தை எதிர்கொள்ளவே இல்லை. சொல்லப்போனால் அவர்கள் சமகாலத்துக்கு வரவே இல்லை. அவர்கள் எழுதியதெல்லாமே அவர்களின் இளமைக்காலத்து வாழ்க்கையை, முப்பது நாற்பதாண்டுகள் முந்தைய உலகை

ஆனால் ஆச்சரியமாக அன்றைய எழுத்தாளர்களில் அந்த காலகட்டத்தின் அத்தனை தத்துவ – ஆன்மிகச் சிக்கல்களும் வெளிப்பட்ட படைப்புக்கள் ஜெயகாந்தனால் எழுதப்பட்டவை. இன்று யோசிக்கையில் ஜெயகாந்தனின் எழுத்து இல்லையேல் தமிழிலக்கியம் சமகால உலகச்சிக்கல்களை எதிர்கொண்டமைக்கான தடையங்களே எழுத்தில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஜெயகாந்தன் வணிக இதழ்களில் எழுதியமையால் சிற்றிதழ்ச்சூழலில் நிராகரிக்கப்பட்டார் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. உண்மை அதுவல்ல, அவர் எழுத்திலிருந்த உலகம்தான் சிற்றறைகளுக்குள் வரலாறோ சமகாலமோ இன்றி சுருண்டுகொண்ட சிற்றிதழ்சார் இலக்கியவாதிகளை மிரளவும் விலகவும் வைத்தது

அன்று பொதுவாசகர்களும் வாசித்த நவீன இலக்கியம் என ஜெயகாந்தனின் ஆக்கங்களைச் சொல்லமுடியும். ஜெயகாந்தனின் புனைவுலகில் மூன்று படைப்புக்கள் அக்காலகட்டத்தின் உலகளாவிய தத்துவ-அறவியல் சிக்கல்களை நேரடியாகப் பேசுவன. ஒருநடிகை நாடகம் பார்க்கிறாள், பாரிஸுக்கு போ, ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்.

இன்று வாசகர் கவனிக்கலாம். அன்று உருவாகி வந்த பெண்விடுதலை நோக்கின் தொடக்கத்தை, அவர்கள் மரபை மறுத்தும் ஏற்றும் அலைக்கழிந்ததை நாம் ’சிலநேரங்களில் சிலமனிதர்கள்’ நாவலில் காணலாம். அன்று கருத்தளவில் இருந்த சுதந்திரமான மாற்றுக்குடும்ப வாழ்க்கையின் சித்திரம் ’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலில் இருந்தது. அன்று கலை- தனிவாழ்வு சார்ந்த விழுமியங்களில் மரபுக்கும் புதியதலைமுறைக்குமான மோதலை, அதன் விளைவான தந்தைமகன் பூசலை, ‘பாரிஸுக்குப் போ’ அளவுக்குச் சொன்ன இன்னொரு நாவல் தமிழில் இல்லை.

இவற்றில் அன்றைய உலகின் வேட்கைகளில் ஒன்றான கட்டின்றி அலைதல், பொறுப்பில்லாமலிருத்தல், தன் வாழ்வை தானே கண்டடைதல் என்னும் கனவை நேரடியாக எழுதிக்காட்டிய ஆக்கம் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். ஆகவேதான் அது என்னை அந்த வயதில் மாதக்கணக்கில் நிலைகொள்ளாமல் கொப்பளிக்கச் செய்தது.என்னை ஹென்றியாக உருவகித்துக்கொண்டேன். கண்கள்மேல் விழும் முடியை ஒதுக்காமல் தலையை தூக்கி பார்க்கும் ஹென்றி. அந்த மனிதனை மிகஅருகே பார்த்தேன். அவன் நான்தான்.

பின்னர் இந்நாவலை எண்பத்தொன்பதில் மீண்டும் வாசித்தேன். அப்போது எனக்கான இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கிக் கொண்டுவிட்டிருந்தேன். எண்பதுகளின் நவீன இலக்கியம் என்பது நவீனத்துவ அழகியலில் வேரூன்றியது.வடிவ ஒருமை அதன் மிக முக்கியமான அளவுகோல்.க.நா.சு திரும்பத்திரும்ப முன்வைத்தது கச்சிதமான வடிவம் என்னும் பார்வையை மட்டுமே. மிகையற்ற யதார்த்தச் சித்தரிப்பு, அணிகளற்ற சுருக்கமான மொழி, குறைத்துக்கூறி உணர்த்தும் கதையமைப்பு ஆகியவை அதன் நிபந்தனைகள். அன்றைய வாசிப்பில் என் மனதில் ஜெயகாந்தன் மிகவும் பின்னடைவுகொண்டார்.

ஹென்றி என்ற ஆளுமையை ஜெயகாந்தன் புனைகிறார், அவன் ஒரு யதார்த்தமல்ல கனவுதான் என நினைத்தேன். ‘கனவு’ என்ற சொல்லையே சுந்தர ராமசாமி எதிர்மறையாக பயன்படுத்தியிருந்த காலம். ‘யதார்த்தத்தின் மேல் கனவின் திரையை விரித்த கலைஞன்’ என்று அவர் தி.ஜானகிராமனை மதிப்பிடும்போது யுதார்த்தமே புனைவின் சாரம் என்றும் கனவு என்பது ஒருவகை பிசுக்கு என்றும் அவர் எண்ணுவது தெரியும். ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலின் கனவுதான் என்னை இளமையில் பெரிதும் கவர்ந்தது, அக்கனவையே அதன் முதன்மைக்குறைபாடாக கருதலானேன்

வடிவம் என்றவகையில் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஒரு நாவலாக ஆகவில்லை என்று தோன்றியது. நாவலுக்குரியவகையில் அது தான் எழுப்பிக்கொண்ட வினாக்களை விரித்துக்கொண்டு ஒரு விவாத வடிவமாக ஆகவில்லை. ஒரு முழுவாழ்க்கைச் சூழலை உருவாக்கவில்லை. அது அங்குமிங்கும் தொட்டுக்கொண்டு விரிந்த ஒரு குறுநாவலன்றி வேறல்ல என்று மதிப்பிட்டேன்.என் மனதில் அன்று பெருநாவல் என்னும் இலட்சியவடிவம் இருந்தது.

மொழிநடை மற்றும் கூறுமுறை என்றவகையில் வாசகனுக்கு எதையும் விட்டுவைக்காமல் அனைத்தையும் சொல்லிவிட்ட படைப்பு என்றும் ஜெயகாந்தனின் நாவல்களை நான் மதிப்பிட்டேன்.ஜெயகாந்தனின் கதைகள் அனைத்தைப்பற்றியும் இந்த விமர்சனங்கள் இருந்தன. இக்கருத்துக்களை நான் விரிவாக அல்லவென்றாலும் ஓரளவு எழுதியிருக்கிறேன்.

மீண்டும் ஜெயகாந்தனை கண்டடைந்தது தொண்ணூறுகளின் இறுதியில். அன்று நவீனத்துவத்தின் எல்லைகளைக் கண்முன் காணத்தொடங்கிவிட்டிருந்தேன். ஓர் எல்லையில் கோட்பாடுகளின் மூலம். இன்னொரு எல்லையில் என் சொந்தப் புனைவினூடாக. அமைப்புவாதம் பின்அமைப்புவாதம் பின்நவீனத்துவம் சார்ந்த விவாதங்கள் தமிழில் உருவாயின. அவற்றை பின்னர் நித்யசைதன்ய யதியின் குருநிலையிலிருந்து விரிவாக அறிந்துகொண்டேன். டி.ஆர்.நாகராஜ், சச்சிதானந்தன் போன்றவர்களிடம் விவாதித்தேன். அவற்றை பேட்டிகளாக வெளியிட்டேன். பின்நவீனத்துவம் சார்ந்து தமிழில் உருவான குழப்பங்களுக்கு ஆழமான தெளிவான விடைகளாக அமைந்தவை அந்தப் பேட்டிகள்

இணையாகவே சில புனைகதைகள் எனக்கு நவீனத்துவத்தின் எல்லைகளை காட்டின. ஒன்று, கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸின் நூறாண்டுகால தனிமை. தொண்ணூறுகளில் அதை வாசிக்காமல் கேரளத்தில் நடமாடமுடியாது என்ற அளவு புகழ்பெற்றிருந்தது. இன்னொன்று யுவான் ருல்போவின் பெட்ரோ பரோமா. விமர்சகர் எம்.கிருஷ்ணன் நாயரால் திரும்பத்திரும்ப முன்வைக்கப்பட்ட நாவல் அது.கூடவே போர்ஹெஸின் சிறுகதைகள். மலையாள எழுத்தாளர் சேது அவற்றுக்காக ஆவேசமாக வாதிட்டதுடன் அவற்றை முன்மாதிரியாகக்கொண்டு கதைகளும் எழுதிக்கொண்டிருந்தார்.

ஆனால் அதற்கு முன்னரே செவ்வியல் நாவல்களின் மாண்பை நவீனத்துவம் அடையவில்லை என்ற எண்ணம் எனக்கிருந்தது. நான் தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, அலெக்ஸி தல்ஸ்தோய், மக்ஸீம் கார்க்கி, ஷோலக்கோவ் போன்றவர்கள் எழுதிய  ருஷ்யப்பெருநாவல்களை முன்னரே வாசித்திருந்தேன். தாமஸ் மன்னின் புடன்புரூக்ஸ், மேஜிக் மௌண்டெய்ன் ஆகியவற்றை தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வாசித்தேன். சுபமங்களாவில் தாமஸ் மன் பற்றி விரிவான ஒரு கட்டுரையும் எழுதினேன். ஜார்ஜ் எலியட், ஹெர்மன் மெல்வில், செர்வாண்டிஸ் ஆகியவர்களையும் வாசித்து விமர்சனக்குறிப்புகள் எழுதினேன்.

பெருநாவல்கள் மானுடப்பிரச்சினைகளை கையாள்கையில் நவீனத்துவநாவல்கள அவற்றை மிகச்சிறிய தனிமனிதச் சிக்கல்களாக ஆக்கிவிடுகின்றன என்னும் உணர்வு எனக்கு வலுவாக உருவாகத் தொடங்கியது.மனிதனின் அகச்சிக்கல்களைச் சொல்ல நவீனத்துவம் வலியுறுத்தும் வடிவஒருமை, தர்க்கபூர்வத்தன்மை, உணர்ச்சிகளை வெளிக்காட்டாத கூறுமுறை, அணிகளற்ற வெற்றுநடை ஆகியவை மிகப்பெரிய தடைகள் என்று தோன்றியது.

இந்நோக்கிலேயே நவீனத்துவத்திற்கு முந்தைய யதார்த்தவாதத்தின் பேரிலக்கியங்களான இந்திய நாவல்களை தொடர்ச்சியாக தமிழில் அறிமுகம் செய்து எழுதினேன். அக்னிநதி, நீலகண்டப்பறவையைத்தேடி, மண்ணும் மனிதரும், சதுரங்கக்குதிரை போன்றவற்றை முன்னுதாரண ஆக்கங்களாக முன்வைத்தேன். அவை தமிழில் முன்னரே வெளிவந்து பெரும்பாலும் கவனிக்கப்படாதவை. அவற்றைப்பற்றிய என் கட்டுரைகளே தமிழ்ச்சூழலின் முதல் எதிர்வினைகள். அவை அதற்குப்பின் பரவலாக வாசிக்கப்பட்டன, அவை பார்வைகளையே மாற்றியமைத்தன.

நவீனத்துவர்கள் செய்த பெரும்பிழை என்னவென்றால் அவர்களுக்கு என ஒரு மாறா வடிவஇலக்கணத்தை அமைத்துக்கொண்டு , பின்னர் அதற்குள் சொல்லத்தக்க வாழ்க்கையை மட்டுமே பேசுவதற்கு எடுத்துக்கொண்டதுதான்.ஒரு துளிக்குள் வாழ்க்கையைச் சித்தரிப்பது அவர்களின் அழகியல். ஆகவே ஒரு துளிக்குள் சிக்கும் வாழ்க்கையையே அவர்கள் சொல்லத் தலைப்பட்டனர்.

இந்தியச் சூழலின் மிகப்பெரிய அகநெருக்கடி ஆன்மிகம் சார்ந்தது. ஆன்மிகத்திற்கும் மதநெறிகளுக்குமான மோதல், அன்றாடத்திற்கும் தொன்மையான மெய்யறிதல்களுக்குமான மோதல் என நாம் உணரும் ஆன்மிகச் சிக்கல்கள் மிக ஆழமானவை. நம்மேல் அலையென வந்து மோதுபவை. நம்முடைய நவீன மேற்கத்திய கல்வியின் தர்க்கத்தால் ஒரு சித்தரை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஒரு துறவியின் கட்டற்ற தன்மையை வகுத்துக்கொள்ள முடியவில்லை.

நவீனத்துவம் வரலாற்றை பொருட்படுத்தவில்லை, அதன் மையம் தனிமனிதன் மட்டுமே. அதற்கு பண்பாட்டின் பரிணாமமும் ஒட்டுமொத்தச் சித்திரமும் முக்கியமல்ல. ஆகவே அது செவ்வியலை கருத்தில்கொள்ளவில்லை. அதற்கு புறவய ஆய்வில் நம்பிக்கை இல்லை. ஆகவே பிற அறிவுத்துறைகளுடன் எந்த உறவையும் கொள்ளவில்லை. அதன் ஆர்வம் மனிதனின் அகத்தை ஆராயும் உளவியலில் மட்டுமே குவிந்தது.தமிழ் நவீனத்துவ எழுத்தாளர்கள் எவருமே வரலாற்றை பயின்றவர்கள் அல்ல. இலக்கியத்திற்கு அப்பால் எந்த ஆர்வமும் உடையவர்கள் அல்ல.

ஆனால் தொண்ணூறுகளில் தமிழ்வாழ்க்கையை எதிர்கொள்ளநேர்ந்த எனக்கு வரலாறு முக்கியமானதாக இருந்தது. நான் வரலாற்றை, வரலாற்றெழுத்தின் வெவ்வேறு வழிகளை பயின்றேன்.டி.டி.கோசாம்பி குறித்த என் நீண்ட கட்டுரையை நான் 1988 ல் கல்குதிரைக்கு அளித்தபோது கோணங்கி திகைப்படைந்தார். அதை இலக்கியவாதி ஏன் எழுதவேண்டுமென அவருக்கு அன்று புரியவில்லை. டி.டி.கோசாம்பி பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல்கட்டுரை அது. அது பின்னர் சுபமங்களாவில் 1992ல் பிரசுரமாகியது.

தொண்ணூறுகளில் நிலைமை மாறத்தொடங்கியது. காலச்சுவடில் பி.கே.பாலகிருஷ்ணனின் கேரளவரலாற்றின் மீதான மாற்றுப்பார்வை கொண்ட நூலின் சுருக்கத்தை நான் பிரசுரித்தேன். நாட்டாரியல், மானுடவியல் போன்றவற்றுடன் இலக்கியத்துக்கு உள்ள உறவு துலங்கி வந்தது. பிறதுறைகளை கருத்தில்கொண்டு இலக்கியம் எழுதப்படவேண்டும் என்னும் எண்ணமே நவீனத்துவத்தை கடந்துசெல்வதாக அமைந்தது. செவ்வியல் நோக்கிய கூர்நோக்கு உருவாகியது.

நவீனத்துவத்திலிருந்து வெளியேறுவதென்பது  இந்திய இலக்கியம் தன் சவால்களை சந்திப்பதற்கு இன்றியமையாதது என்று தோன்றியது. ஆனால் அதற்கு மேலையிலக்கியம் நவீனத்துவத்தில் இருந்து வெளியேறி உருவாக்கிக் கொண்ட பின்நவீனத்துவ எழுத்துமுறை முன்னுதாரணம் அல்ல. அவர்களின் வரலாற்று- பண்பாட்டுச் சிக்கல்கள் வேறுவகையானவை. அவர்கள் நவீனத்துவத்தின் இறுக்கமான புனைகதை வடிவை உடைத்து அதை ஒரு புதிர்விளையாட்டாக மாற்றிக்கொண்டனர். நவீனத்துவத்திற்குரிய செறிவான சரளமான நடை என்பதை மீறி சிக்கலான, விளையாட்டான, அணிகள் கொண்ட நடையை உருவாக்கிக் கொண்டனர். நவீனத்துவம் முன்வைத்த கறாரான தத்துவத்தன்மையை மறுத்து உள்ளீடின்மையையோ அல்லது உன்னதத்தையோ சென்றடையமுற்பட்டனர்.

இங்கே அவற்றை அப்படியே பின்பற்றலாகாது என்பது என் எண்ணமாக இருந்தது. இங்குள்ள சிக்கல் இன்னமும் வலுவாக நீடிக்கும் பண்பாட்டு மரபு, இன்னும்கூட எழுதப்படாத மாபெரும் வரலாற்றுப்பின்னணி, இன்னும் நிலைகொள்ளும் தொன்மங்கள். அவற்றை அறியவும் ஆராயவும் நான் கண்டடைந்த வழி விஷ்ணுபுரம் போன்ற இணையான மாற்றுவரலாற்றையும் தொன்மங்களையும் உருவாக்கிக் கொள்வது.அல்லது கொற்றவை, வெண்முரசு போல செவ்வியலாக்கங்களை திரும்ப எழுதுவது.

அது ஒரு முக்கியமான பின்நவீனத்துவ நகர்வு. அதற்கான மீபுனைவு [Metafiction] வடிவம் அல்லது கிளைபிரிந்து விரியும் வடிவற்ற வடிவம் ஏற்கனவே மரபில் இருந்தது. அதை புதியபுனைவு வடிவமாக மாற்றிக்கொள்ள முயன்றேன்.அது ஓர் இலக்கிய பணியாக இதுகாறும் நீடிக்கிறது. இம்முயற்சிகளை தொண்ணூறுகளிலேயெ தொடங்கினேன். நாவல் கோட்பாடு என்னும் நூல் அந்தச் சிந்தனைகளின் வெளிப்பாடு. 1997ல் விஷ்ணுபுரம் வெளிவந்தது. 1998ல் பின் தொடரும் நிழலின்குரல்.

அதையொட்டி சொல்புதிது தொடங்கிய போது நவீனத்துவச் சிந்தனைகளை கடப்பதே அதன் இலக்காக இருந்தது. அன்று தானும் நவீனத்துவச்சிந்தனைகளில் இருந்து வெளிவரும் திமிறலில் வேதசகாயகுமார் இருந்தார். அவரே முன்பு முன்வைத்த பல மதிப்பீடுகளிலிருந்து முன்னகர்ந்துகொண்டிருந்தார். குறிப்பாக அவர் பார்வையில் கு.ப.ரா, மௌனி, லா.ச.ரா  போன்றவர்கள் செயற்கையாக மிகைப்படுத்தப்பட்டவர்கள் என்னும் சித்திரம் உருவாகி வந்தது. தி.ஜானகிராமன் நாவல்களை அவர் நிராகரித்தார். முன்பு அவர் கருத்தில் கொள்ளாத ஜெயகாந்தனையும், கு.அழகிரிசாமியையும் அணுகினார். அன்று தொடர்ந்து விவாதித்துக்கொண்டிருந்தோம்.

இந்த விவாதங்களின் வழியாக நவீனத்துவத்திற்கு அப்பால் என்னும் தேடலின் பகுதிகளாகவே சொல்புதிது செவ்விலக்கிய ஆய்வுகளையும் வரலாற்று ஆய்வுகளையும் வெளியிட்டது. ஆன்மிக, தத்துவ கட்டுரைகளையும் மொழியாக்கங்களையும் வெளியிட்டது. அன்றுவரை தமிழ் நவீன இலக்கியம் பொருட்டாகவே நினைக்காத அறிவியல்புனைவுகளுக்காக ஒரு மலர் வெளியிட்டது. தமிழிசை, நாட்டாரியல் பற்றிய கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

அந்த விவாதங்களின்போதுதான் ஜெயகாந்தனை மறுபடியும் வாசித்தேன். தொண்ணூற்றியொன்பதில். ஜெயகாந்தனை நவீனத்தமிழிலக்கியம் சரியாக எதிர்கொள்ளவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. நவீனத்துவத்தின் வடிவ இலக்கணத்தை வைத்து அவரை ஒருசாரார் நிராகரித்தனர். அவர் தொட்டுப்பேசிய அக்காலத்தின் மையச்சிக்கல்களுடன் எந்த உறவும் இல்லாமல் குடும்பம்- ஆண்பெண் உறவு சார்ந்த சிக்கல்களில் மட்டுமே உழன்ற நவீன இலக்கியவிமர்சகர்கள் மற்றும் எழுத்தாளர்களாலும் அவர் ஆக்கங்களை அணுகமுடியவில்லை. அவர் பேரிதழ்களில் எழுதியது அவரை வணிக எழுத்தாளராக முத்திரை குத்த எளிதாக இருந்தது

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை இவ்வாறு பத்தாண்டு இடைவெளியில் 1978 முதல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். 2020ல் நேற்று ஒரே இரவில் மீண்டும் வாசித்தேன். இந்த வாசிப்பு நான்காவது. 1999 ல் உருவான மதிப்பீடே ‘ஜெயகாந்தனின் முற்போக்கு அழகியல்’ என்னும் கட்டுரையில் உள்ளது.அது பெரிதும் மாறிவிடவில்லை. ஆனால் மேலதிகமான சில விமர்சனங்களும் சில கண்டடைதல்களும் இன்று உள்ளன

[மேலும்]

ஜெகே- ஒரு மனிதன் ஒரு வீடு ஓரு உலகம்-கிரிதரன் ராஜகோபாலன் ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1 ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2021 10:35

இசை திறக்கும் புதிய வாசல்கள்


காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை வாங்க

அன்புள்ள ஜெ

சென்ற ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்த சில நூல்கள் தொடர்ந்துவந்த கொரோனா அலை காரணமாக கவனிக்கப்படாமல் போயினவா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. பொதுவாக இங்கே புத்தகங்களைப் பற்றி ஆசிரியர்கள்தான் அதிகமாகப்பேசவேண்டியிருக்கிறது. அவற்றை கவனிப்புக்குக் கொண்டுவரவேண்டியிருக்கிறது. அதைக் கடந்து கவனிக்கப்படும் புத்தகங்கள் சிலவே உள்ளன. பொதுவாக வாசிப்புக்கு எளிமையான, சீண்டும்தன்மை கொண்ட புத்தகங்களே அதிகமாக கவனிக்கப்படுகின்றனவா என்ற எண்ணமும் எனக்கு இருக்கிறது.சில புத்தகங்களைப் பற்றி எழுத நினைப்பேன். ஆனால் உடனே எழுதினால்தான் உண்டு.

சென்ற ஆண்டு பத்துநூல்கள் வெளியீட்டுவிழாவில் நீங்கள் பேசிய உரையில் தமிழுக்கு ஒரு முதன்மையான படைப்பாளியை அறிமுகம் செய்யும் பெருமிதத்துடன் கிரிதரன் ராஜகோபாலனின் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை சிறுகதைத் தொகுதியை குறிப்பிடுவதாகச் சொன்னீர்கள். அப்போதே அந்தத் தொகுதியை வாங்கினேன். வாசித்து சில குறிப்புகளும் எடுத்தேன். ஆனால் எழுதவில்லை. அதன்பிறகு கொரோனா வந்தது. பல சிக்கல்கள். அப்படியே தட்டித்தட்டிப் போனது. இன்றைக்கு எழுதவேண்டும் என்ற எண்ணம் வந்தததற்குக் காரணம் சென்னை புத்தகக் கண்காட்சி பற்றிய அறிவிப்புதான்.

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை என்ற தொகுதியில் அந்தக்கதை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நான் இளைஞனாக இருக்கும்போது போனி எம் பாடலான ‘பை த ரிவர்ஸ் ஆஃப் பாபிலோன்’ பாட்டை அதன் மெட்டுக்காக கேட்டிருக்கிறேன். ஆனால் பதினேழாண்டுகள் அன்னியப் பனிநிலத்திலே வாழும்போது சிலசமயம் How shall we sing God’s song in a foreign land? If I forget you, O Jerusalem! என்ற வரி நினைவுக்கு வந்தால் மனசு அப்படியே கொந்தளித்துவிடும். அந்த கொந்தளிப்பை அடையவைத்த கதை அது.

நுணுக்கமான இசைத்தகவல்களாலும் வரலாற்றுச்செய்திகளாலும் பின்னப்பட்ட கதை. பிரஞ்சு இசையமைப்பாளர் ஆலிவர் மெஸ்ஸையனின் “க்வார்டட் ஃபார் தி எண்ட் ஆஃப் டைம்” இந்தக்கதையின் மையப்பேசுபொருள்.  1940 ஆம் ஆண்டு ஜெர்மானிய வதைமுகாமில் எழுதப்பட்ட இந்த இசைக்கோவை கைதிகள் முன்னிலையில்  ஆலிவரின்  பியானோவில் அரங்கேற்றம் ஆனது.அந்த நிகழ்வின் கதைவடிவம்.

இசை பெரும்பாலும் துக்கத்தையே பேசுகிறது. இனிய இசை துயருடையது என்கிறார் பாரதி.ஆனால் துக்கத்தின் உச்சத்தில் இசை இன்னொன்றாக மாறிவிடுகிறது. கடவுளுக்கும் விதிக்கும் அறைகூவலாக வெளிப்படுகிறது. அந்த மாயத்தை இந்தக்கதையில் கிரிதரன் எழுதிக்காட்டியிருக்கிறார்.

மேற்கத்திய கிளாஸிக் இசை பற்றி தமிழ் புனைகதை உலகில் அனேகமாக ஒன்றுமே எழுதப்பட்டதில்லை. ஏனென்றால் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களுக்கு அதைப்பற்றி தெரியாது.வெறுமே பெயர்களை எழுதி வைத்திருக்கும் சில உண்டு.மேற்கத்திய கிளாஸிக் இசை பற்றிய அறிவும் வரலாற்றறிவும் கொண்டு எழுதப்பட்ட கதைகள் இந்த தொகுதியில் உள்ளன. கொஞ்சம் விக்கிப்பீடியாவின் உதவிகொண்டு வாசித்தாலேபோதும் மிகப்பெரிய புதிய உலகத்தை திறந்து தருகின்றன. தமிழில் மிகப்புதிய அனுபவமாக அமையும் கதைகள் இவை. இப்படிப்பட்ட கதைகள் தமிழில் இதற்குமுன் எழுதப்பட்டதில்லை. அத்தகைய முற்றிலும் புதிய ஒரு நகர்வு தமிழிலே நடக்கும்போது நாம் அதை உரிய முயற்சியுடன் அங்கீகரிக்கவேண்டும்.

இசையமைப்பாளர் ராபர்ட் ஷூமான் மற்றும் அவரது மனைவி க்ளாரா ஷூமானின் வாழ்க்கையை ஒட்டி அமைந்த இருள்முனகும்பாதை என்னும் கதையும் தமிழில் இசை சார்ந்து எழுதப்பட்ட கதைகளில் ஒரு கிளாஸிக் படைப்பு என்று சொல்லமுடியும். நாம் சங்கீதம் பற்றி எழுதும்போது அதை தூய்மை என்பதுடன் சம்பந்தப்படுத்திக் கொள்கிறோம். தமிழில் தி.ஜா முதல் எம்.யுவன் வரை எழுதிய அனைவருமே இதே கோணத்தில்தான் எழுதியிருக்கிறார்கள். அது நம் இசை பக்தியுடன் சம்பந்தப்பட்டது என்பதனால்தான். உருக்கமான தூய்மையான ஒன்றுதான் இங்கே இசையுடன் சம்பந்தப்படுத்தப்படுகிறது.

நாம் இசையை சரித்திரத்துடனும் அடக்குமுறையுடனும் எதிர்ப்புடனும் இருத்தலின் நெருக்கடிகளுடனும் இணைத்து இலக்கியமாக ஆக்கியதில்லை. அது இந்தக் கதைகளில் காணக்கிடைக்கிறது. இருள்முனகும்பாதை இசைமேதையின் வாழ்க்கையின் சித்திரம். ஆனால் அதைவிட இசையை லௌகீக உலகம் மொழிவழியாகச் சென்று தொடும் சந்தர்ப்பங்களின் கதை என நான் நினைத்தேன்

அறிவியல் கதையான பல் கலனும் யாம் அணிவோம் அழகான மொழிநடை கொண்டது. ஒரு எதிர்காலத்தில் மனித இருப்பின் பொருளே மாறிப்போனபின்னர் எழும் தத்தளிப்பைச் சொல்லும் கதை இது. இத்தொகுப்பின் முக்கியமான கதை.

ஆனால் சங்கீதத்தினூடாக ஆழ்ந்த சரித்திர தரிசனங்களை அளிக்கும் இத்தொகுதியிலுள்ள கதைகள் தமிழுக்கு முற்றிலும் புதிய வரவுகள். தமிழிலக்கியத்தில் சமீபகாலத்தில் புதியவாசல் என்று ஏதாவது திறந்திருக்கிறது என்றால் அது இந்தக்கதைகளிலேதான்.

ராஜசேகர்

ஆகப் பெரிதின் அறிவிப்புகள் – ரா.கிரிதரனின் புனைவிசை – நம்பி கிருஷ்ணன்

 

———————————————————நூலாசிரியர்கள் Bala  பாலசுப்ரமணியம் முத்துசாமிஇன்றைய காந்திகள்

 

பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி விஜயராகவன்தேரையின் வாய்விஜயராகவன்தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

 

ஸ்ரீனிவாசன்

கூண்டுக்குள் பெண்கள்

 ஸ்ரீனிவாசன்

 

நரேந்திரன்

இந்தக்கதையை சரியாகச் சொல்வோம்

நரேந்திரன்நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

 

சா.ராம்குமார்

அகதி

 ராம்குமார்’அகதி’ ராம்குமார் முன்னுரை

 

சுசித்ரா

ஒளி

 

 சுசித்ராபொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

 

காளிப்ரசாத்

 தம்மம் தந்தவன்

காளிப்ரசாத்

 

கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

 

ராஜகோபாலன்ஆட்டத்தின் ஐந்து விதிகள் ராஜகோபாலன்ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2021 10:34

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்,அமெரிக்கா- கடிதம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – கடிதம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – மேலும்…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நலம் அறிய ஆவல்.

கடந்த ஒரு வருடமாக, நான் வேலை செய்யும் நிறுவனத்தின் பொருட்டு, வேலைக்கு ஆள் எடுப்பதற்காக நேர்முகம் செய்யாத வாரமே இல்லை என்று சொல்லலாம், அந்த நேர்முகங்களில் கலந்துகொள்பவர்கள், சமீபத்தில் பட்டம் வாங்கிவிட்டு வேலை தேடும் இளைஞர்களிலிருந்து எட்டு வருட அனுபவம் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களும் அடக்கம். அவர்களிடம் நான் கேட்கும் கேள்விகளில், இவற்றில் ஒன்றாக இருக்கும்.  உங்களை நான் ஏன் இந்த வேலைக்கு எடுக்கவேண்டும்? மற்றவர்களிடம் இருந்து எப்படி நீங்கள் வேறுபட்டு இருக்கிறீர்கள்?  நீங்கள் வந்ததும் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கலாம்? நீங்கள் இதுவரை செய்த வேலைக்கும், எங்கள் நிறுவன வேலைக்கும் என்ன சம்பந்தம் ?

இந்தக் கேள்விக்கான பதிலில், அவர்கள் எங்கள் நிறுவனத்தின் தளத்தைப் பார்த்திருந்தாலோ, அதன் மூலம் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருள் பயன்பாட்டை அறிந்திருந்தாலோ பதில் தெளிவானதாக இருக்கும். அவர்கள் அப்படி ஆராய்ச்சி செய்யவில்லை என்று பட்டவர்த்தனமாக தெரியும் பட்சத்தில், எங்கள் தளத்திற்கு சென்று பார்த்தீர்களா என்று நேரடியாக கேட்டால், ‘நேரம் இல்லை’ என்ற ஒரு பொதுவான பதில் வரும்.  முக்கால்வாசி பேர் சரியாக தன்னைத் தயார் செய்துகொள்ளாமல்தான் வருவார்கள்.

நான் வேலைக்கு ஆள் எடுக்கும் நேர்முகங்களின் அனுபவங்கள் இப்படி இருக்க, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் (அமெரிக்கா) இணைய வரும்  நண்பர்களுடனான, எனது முதல் தொலைபேசி அழைப்பின் அனுபவம் வேறு விதமாக இருக்கும். ‘ஹலோ’ சொல்லி முடித்த அடுத்த கணமே, தளத்தில் வரும் கட்டுரைகள் , கதைகளில் அவர்களுக்கான விருப்பம், ஜெயமோகனை எப்பொழுதிலிருந்து வாசிக்கிறார்கள் , வெண்முரசு நாவல் வரிசை வாசிப்பில் எங்கு இருக்கிறார்கள் என்று நான் கேட்காமல் எல்லாவற்றையும் மூச்சுவிடாமல் ஒப்பித்துவிடுவார்கள்.

ஐந்து நிமிடங்களில், ஜெயமோகனின் எழுத்துக்களால் உருவான தொப்புள்கொடி உறவு எனக்கும், புதிய நண்பருக்கும் உருவாகி இருக்கும். உங்களைத்தான் அப்படி வாசித்து வருகிறார்கள் என்று கொஞ்சம் என்னைப் பற்றியும் குழுவைப் பற்றியும் சொல்லலாம் என்று வாயெடுத்தால், உங்களைத்தான் தெரியுமே தளத்தில் உங்கள் கடிதங்களை வாசித்திருக்கிறோம் என்பார்கள். சங்கப் பாடல்களுக்கு இசை அமைத்தாரே, அவர்தானே என்று ராஜன் சோமசுந்தரத்தைப் பற்றி நான் அறியாத விஷயங்களை சொல்வார்கள். வேணு தயாநிதியை, எனக்கு முன்னரே அறிமுகமானவர்களாக இருப்பார்கள். பழனி ஜோதியா, அந்த கி.ரா.நிகழ்வில் குறுந்தாடி வைச்சுக்கிட்டுப் பாடினாரே, அவர்தானே, நன்றாகப் பாடினார் என்பார்கள். எல்லாவற்றையும்விட ‘எனக்கு அவ்வளவாக பேசவராது, எனக்கு ஒன்றுமே தெரியாது’ என்ற பொய்களையும் அவிழ்த்து விடுவார்கள்.

அவர்கள் அவையடக்கம் என்ற வகையில் சொல்கிறார்கள் என்றாலும், அதை பொய் என்று அறியமுடியதவனா நான் என்று அடுத்து வெண்முரசிலிருந்து ஏதாவது ஒரு துண்டை எடுத்துப் போட்டால் போதும். அவர்களின் பேச்சாற்றலும், விவாதப் பக்குவமும் தெரிந்துவிடும். அம்பைக்கு, படகு ஓட்டுவானே ஒரு குகன் அவன் பேரு .. பேரு.. என்று நான் திணருவேன்.  ‘ஒரு தெய்வம் இறங்கிச்சென்று பிறிதொரு தெய்வம் வந்து படகிலேறியதுபோல் நிருதன் உணர்ந்தான்’ என்று அடிக்கோடிட்டு, அம்பை பற்றி சிலாகித்து பேச ஆரம்பித்துவிடுவார்கள்.  இளைய யாதவனின் துவாரகை என்ன ஒரு அழகு என்று நான் சொன்னால், ‘கல்பொருசிறுநுரையில் நீர்க்குமுழி போல் அது அழிவதை வாசிக்க மனது கனமாகிவிட்டது’ என்பார்கள்.

தளத்தில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) தகவல் வந்ததும், 25 உறுப்பினர்கள் இருந்த குழு 44 உறுப்பினர்கள் உள்ள குழுவாக பேருறு எடுத்து உள்ளது. இனியுமே இரண்டு அல்லது மூன்று நண்பர்கள் எனது தொலைபேசிக்காக காத்திருக்கிறார்கள்.  25 சதம் நண்பர்கள் வெண்முரசை முழுதும் வாசித்து முடித்தவர்கள், என்பது எனது தனிப்பட்ட புரிதல். புதிய நண்பர்கள் வந்து சேர்ந்ததும், அவர்களை அறிமுகம் செய்துகொள்ளும் வண்ணம், ஜனவரி 9-ஆம் தேதி ஒரு இணைய நிகழ்வு நடத்தினோம். பிப்ரவரி மாதம் முதல் , ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை இணைய நிகழ்வு நடத்தலாம் என உள்ளோம். இப்போதைய எண்ணத்தின்படி ஒரு மாதம் வெண்முரசு உரையாடல், மறுமாதம் வேறு நூல் / தத்துவம் / காந்தி பற்றிய உரையாடல் என இருக்கட்டும் என்று உள்ளோம்.

பிப்ரவரி 20, வெண்முரசு நாவல் வரிசையின் முதல் உரையாடல் நடக்க இருக்கிறது. ஜமீலா கணேஷன், ஷங்கர் ப்ரதாப், கிஷொர், முதற்கனல் நூலிலிருந்து அவர்கள் கண்டடைந்ததை உரையாட உள்ளார்கள். வரவிருக்கும் உரையாடல்களுக்கு வடிவைக் கொடுக்கவிருக்கும் சோதனை ஓட்டமாகவே இதை நடத்துகிறோம்.

கலையையும் இலக்கியத்தையும் வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டு, முன்னின்று நடத்தும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்காவிலும் இருக்கிறது என்று இதன் மூலம் அறிந்துகொண்ட நண்பர்கள், ஆர்வம் இருப்பின் vishunupuramusa@gmail.com –க்குத் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2021 10:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.