Jeyamohan's Blog, page 1052
February 7, 2021
விக்கிக்கு வாழ்த்துக்கள்
இணையத்தில் இன்று கோடிக்கணக்கானோர் தினமும் அணுகும் ஒரே நேர்மறை இணையதளம் எது என்றால் அது கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாதான் . மிகக் கறாராக இணையப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் பணியிடங்கள் கூட அனுமதிக்கும் ஒருசில இணைய தளங்களில் இதுவும் ஒன்று.
அந்த அளவு நம்பகத்தன்மையையும் பயன்பாட்டையும் அது தனக்கென உருவாக்கிக்கொண்டுள்ளது . ஆரம்பப் பள்ளி குழந்தைகள் கூட பயன்படுத்தும் அளவு எளிமையும் பாதுகாப்பும் உள்ள தளம் . இன்று பள்ளிகளில் கற்பிப்பதில் புத்தகங்களுக்கு இணையான துணைக்கருவி விக்கிபீடியா.
இருபது வருடங்களுக்கு முன் இந்த தளம் ஆரம்பிக்கப்பட்ட போது எனக்கே இது குறித்த அவநம்பிக்கை இருந்தது . என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவை பார்த்த்து பழகியோருக்கு அதே போன்ற தரமுள்ள ஒரு களஞ்சியத்தை எப்படி crowd sourcing முறையில் உருவாக்க முடியும் , யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்றால் அதன் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் , எல்லா துறைகளிலும் நிபுணர்களை கண்டுபிடிக்க முடியுமா என்றெல்லாம் .
இன்று அந்த சந்தேகங்கள் அனைத்துமே விலகிவிட்டன . இன்றைய நிலவரத்தில் மூன்று லட்சத்திற்கும் மேலானோர் விக்கியில் பதிவுகளை சேர்க்கவும் சரிபார்க்கவும் செய்கிறார்கள் – அதாவது மூன்று லட்சம் ஆசிரியர்கள் ! .ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 170 கோடி பயனர்கள் இந்த தளத்தை பயன்படுத்துகிறார்கள்.கூகுளில் நாம் இன்று எதை தேடினாலும் அது குறித்த ஒரு விக்கி பதிவு இருப்பதை காணலாம்.
முக்கியமாக மற்ற தளங்களை போல இது ஆங்கிலம் மட்டுமே கோலோச்சும் தளம் அல்ல . விக்கியில் பத்து சதவிகித பதிவுகள் மட்டுமே ஆங்கிலத்தில் உள்ளவை ஏனையவை பிற மொழி பதிவுகளே. கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட மொழிகளில் தற்சமயம் விக்கி பதிவுகள் இருக்கின்றன .விக்கியில் இருக்கும் பல ஆப்பிரிக்க மொழிகளில் மரபான சஞ்சிகைகளோ புத்தகங்களோ கூட கிடையாது , அவர்களின் ஒரே இணைய ஊடக வெளி விக்கி மட்டும்தான் .
எல்லா மொழிகளையும் சேர்த்து விக்கியில் ஒட்டுமொத்தமாக ஜந்தரை கோடி பதிவுகள் உள்ளன .பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தில் இருக்கும் பதிவுகள் மொத்தமே ஒன்றரை லட்சத்துக்கும் குறைவு தான் ஒப்பு நோக்க தமிழில் மட்டுமே 1 லட்சத்து முப்பதாயிரம் பதிவுகள் உள்ளன. விக்கியில் இருப்பது போன்ற விரிவும் விஸ்தீரணமும் மரபான கலைக்களஞ்சிய அமைப்பில் சாத்தியமே இல்லை.
இன்னொரு அற்புதமான விஷயம் இதன் உடனுக்குடன் புதுப்பிக்கப்படும் தன்மை .தமிழகத்தின் நடராஜன் டெஸ்ட் மாட்ச்களில் இந்தியா சார்பாக அறிமுகமாகிறார் என்று செய்தி வந்த ஒரிரு மணி நேரங்களில் அவரின் விக்கிபீடியா பதிவு புதுப்பிக்கப்படுகிறது .மேட்ச் தொடங்கி சிறிது நேரத்திலேயே அவரின் முதல் விக்கெட் யார் என்பது உட்பட புதுப்பிக்கப்படுகிறது , இதை சாத்தியமாக்கியிருப்பது crowd sourcing தான் .
Crowd sourcing என்னும் “மக்களின் கூட்டுப் பங்களிப்பு” அணுகுமுறையின் வெற்றிகரமான உதாரணம் என்று இதை சொல்லலாம் . உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் , எந்த நேரமானாலும் ,யாரும் இதில் எழுதலாம் , யாரும் அதை சரிபார்க்கலாம் , திருத்தலாம் , செப்பனிடலாம் என்றாகும் போதும் விக்கி தளம் ஒட்டுமொத்தமாக அசுரபலம் மிக்க authorship ஐ அடைகிறது .
ஆனால் இந்த ஆசிரியத்துவம் ஒற்றைப்படையானது அல்ல . எந்த ஒரு தனிப்பட்ட சமூகத்தின் , நாட்டின் , பண்பாட்டின் , மொழியின் , கருத்தியலின் தனிச்சொத்து அல்ல . அதில் எல்லோருடைய குரலும் முட்டி மோதி ஒரு புறவய தகவல் நம்பகத்தன்மையை வந்து அடையும் புள்ளி இருக்கிறது . அதையும் கூட யாரும், எப்போதும் மறுக்கலாம் தக்க தரவுகளுடன்.
இன்று இணையத்தில் மிக அதிகமான நம்பத்தன்மை கொண்ட ஒரு சேவை அல்லது பிராண்ட் என்றால் அது விக்கிபீடியா தான் . இதை தங்கள் சட்டைப் பையில் வாங்கிப்போட எத்தனையோ நிறுவனங்கள் முயன்றாலும் , இதை இறுதிவரை லாப நோக்கற்ற அமைப்பாகவே நடத்துவேன் என்று பிடிவாதமாக இருந்துவரும் விக்கி நிறுவனர் ‘ஜிம்போ’ ஜிம்மி வேல்ஸ் , இந்த நூற்றாண்டின் நாயகர்களில் ஒருவர்.
அதன் நம்பகத்தன்மைக்கு இரண்டு காரணங்களை சுட்டலாம் . ஒன்று இது லாப நோக்கற்றது எனவே லாபம் அதிகமாகவில்லையே என்ற பங்குதாரர் அழுத்தம் இல்லை .மற்றோன்று விளம்பரம் இல்லை , விளம்பரங்கள் வந்தால் மக்களை ஈர்க்க வேண்டும் என்ற அழுத்தம் வரும் பின் அதன் பொருட்டு பதிவுகளை சுவாரசியமாக்க வேண்டும் என்பதும் வரும் , மிகைகள் , பொய்கள், கவன ஈர்ப்புகள் ஊடுருவும்.
அவர் நினைத்ததிருந்தால் இதை ஏதோ ஒரு வகையில் monetise செய்து இன்னேரம் பல ஆயிரம் கோடிகளில் புரண்டு கொண்டிருந்திருக்கலாம் . ஆனால் இந்த தளம் லாப நோக்கற்றுதான் இயங்கும் என்பதில் அவர் ஆரம்பம் முதலே பிடிவாதமாக இருந்தார் . இன்றும் விக்கிபீடியா பவுண்டேஷன் அதை அவ்வாறே நடத்துகிறது
இணையம் ஆரம்பித்த புதிதில் அதன் பயன்பாடு குறித்தும் , சாத்தியங்கள் குறித்தும் எவ்வளவோ கனவு காணப்பட்டது . அதில் பல கனவுகள் நனவாகி உள்ளன ஆனால் அவை பல எதிர்மறை விளைவுகளையும் கூடவே உருவாக்கின . அப்படி எதுவுமே இல்லாத ,இணையத்தின் மொத்த லட்சியவாத நோக்கின் நேர்மறை விளைவுகளை மட்டுமே கொண்ட ஒரு சேவை என்றால் அது விக்கிபீடியாதான்.
பிழைத் தகவல்களும் , குறை தகவல்களும் , பொய் தகவல்களும் நம்மை மூழ்கடித்துக்கொண்டிருக்கும் இருளில் சிறு சுடராக எரிந்தபடி நமக்கு இன்னும் நம்பிக்கையூட்டியபடி இருப்பது விக்கி.
விக்கிபீடியாவில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக பங்களித்து வரும் , கொடையளித்து வரும் நண்பர்களுக்கு பாராட்டுககளும் , வாழ்த்துக்களும்.
கே.வீ kay.vee
இணையத்திலிருந்து
அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதம்
வணக்கம் சார்,
நலமாக இருக்கிறீர்களா?
2008ல் முதுகலை ஆங்கில இலக்கியம் சேர்ந்த நாளில் இருந்து புத்தக வாசிப்பு இல்லாமல் அன்றாட வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது.
நான் 2011ல் இருந்து உங்கள் தளத்தை வாசிக்கிறேன்.
என்னுடைய நண்பர்கள் மற்றவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைக்கும் போது “பய நிறைய book லாம் படிப்பான்” என்கிற ரீதியில் தான் இருக்கும்.
இதில் பலருக்கும் புத்தகம் படிப்பது ஏதோ நல்ல விசயம் தான் ஆனா என்னால முடியாது என்கிற வகை தான். பெரும்பாலான மாணவர்களுக்கு என் மீது பெரிய மரியாதை உண்டு. நான் தல, தளபதி ரசிகன் என்று அவர்கள் முன்னால் சென்று நின்றால் நிச்சியம் அந்த மரியாதை கிடைக்காது.
சொந்த பந்தங்கள் கொஞ்சம் “book படிக்கிறது எல்லாம் குறை” என்று தான் பேசுவார்கள். அவர்களின் பிள்ளைகள் பிறந்த நாளுக்கு எஸ். ரா எழுதிய சிறார் நாவலை பரிசாக கொடுத்து அவர்கள் மேல் ஒரு இடியை இறக்கி வைப்பது என் style.
வேலை செய்யும் இடத்தில் புத்தகம் வாசிக்க முடியுமா என்றால் சாத்தியம் இல்லை என்றே சொல்வேன். Staff Room ல் பெண் பேராசிரியர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்கள் அற்பமானவை. Canteen பக்கம் தான் அத்தனை சதி வேலைகளும் தொடங்கும். வகுப்பறையில் 20 நிமிடத்திற்கு மேல் அவனவன் திறன்பேசியை எடுத்து விளையாட ஆரம்பித்து விடுவான்கள். அங்கே கொஞ்சம் வாசிக்கலாம்.” LSRW Skills improve பண்ணனும். Reading is also essential. So Read something ” என்று சொல்லி விட்டு நான் கையில் வைத்திருக்கும் புத்தகத்தை வாசிக்க தொடங்குவேன்.
இதில் வழி தவறிய ஆடு சிக்கினால் அவனுடைய செல்பேசியை வாங்கி அ. முத்துலிங்கம் அய்யாவின் வலைதளத்தை திறந்து ஒரு கட்டுரையை எடுத்து வாசிக்க கொடுப்பேன். அதை வாசித்து விட்டான் என்றால் பின்னர் தொடர்ந்து வாசிப்பான் என்ற நம்பிக்கை தான்.
நூலகத்திற்கு செல்லும் நான்கு பேராசிரியர்களில் நானும் ஒருவன். என்னைத்தவிர யாரும் புத்தகம் பக்கம் போக மாட்டார்கள். நூலகத்திற்கு கடைசியாக இலக்கியம், பொது வாசிப்புக்கு புத்தகங்கள் வாங்கி சுமார் 10 வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன்.கல்லூரி என்பது பயிற்சி மையம் போல் தான் செயல்படுகிறது.
வீட்டில் வாசிக்க முடியுமா என்றால் நம் வீடுகளில் அதற்கான இடம் இல்லை. எந்நேரமும் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். நம் வீட்டில் நிறுத்தினால் பக்கத்து வீட்டில் ஓடுவது இங்கு கேட்கும். அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து கொஞ்சம் வாசிக்கலாம். பயணங்களின் போது செல்பேசியில் வாசிக்கலாம். ரயிலில் என்றால் புத்தகமும் வாசிக்கலாம். ஆனால் படித்து, வேலைக்கு போன பிறகு எதற்கு புத்தகம் படிக்க வேண்டும் என்று கேட்பவர்கள் அநேகம்.
புத்தக வாசிப்பு நுண்ணுணர்வு உடையவர்களாக நம்மை ஆக்கி விடுகிறது. இலக்கிய வாசகர்கள் கொஞ்சம் நொய்மையான உள்ளம் கொண்டவர்கள் என்று சமீபத்தில் நீங்கள் கூட எழுதியிருந்தீர்கள். எளிதில் அகம் காயப்பட்டு விடும். அதனால் புத்தக வாசிப்பு பற்றி அறியாத, புரியாத, பிடிக்காத நபர்களை தவிர்க்க ஆரம்பித்து விடுவோம்.
இலக்கிய வாசிப்பு வாழ்க்கைக்கு மட்டுமல்ல நான் பார்க்கும் வேலைக்குமான முதலீடு. ஆனால் இதை என் பெற்றோருக்கே என்னால் புரியவைக்க முடியவில்லை. இந்நிலையில் எனக்கு பெண் பார்க்கும் படலம் நடந்தது. என்னுடைய மாணவிகளில் சிலர் ”நீங்க புத்தகம் படிப்பீங்க அப்டிங்கிறதலாம் அங்க சொல்லாதீங்க” என்றெல்லாம் சொன்னார்கள். இதையே என்னுடைய தோழி ஒருத்தரும் சொன்னார்.
நானும் சரி என்று ’நல்ல பிள்ளையாக’ அவர்கள் சொன்னது போல் நடந்து கொண்டேன். பெண் பார்த்து நிச்சியமும் நடந்தது. எனக்கு பார்த்த பெண்ணின் புகைப்படம் வந்த போது பின்னணியில் ஒரு book shelf இருந்தது. பெண் பார்க்க போன அன்று பெண் தயக்கம் இன்றி என்னோடு பேசினாள். நான் சம்மதம் தெரிவித்து விட்டேன்.
நிச்சயம் முடிந்து பேசும் போது தான் புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா என்று கேட்டாள் நானும் மறைக்காமல் ஆமாம் என்று சொன்னேன். Favourite Writers என்றாள். அ.முத்துலிங்கம், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், கு. அழகிரிசாமி என்றேன்.
“ஜெயமோகனை எனக்கு பிடிக்காது, basically அவர் ஒரு காவி” என்றாள்.
குடியை கெடுத்துட்டாளே என்று நினைத்தேன். இருந்தாலும் இது போல நினைத்துக்கொண்டிருந்த பலர் உங்கள் வாசகர்கள் ஆன கதை உண்டு என்பதால் சரி பார்ப்போம் என்று நினைத்தேன்.
அடுத்த குண்டு. பெரியார் தான் அவளுடைய first love என்றாள். பெரியார் எழுதிய எதையாவது வாசித்து இருக்கிறாயா என்று கேட்டதற்கு pdf file வைத்திருக்கிறேன் என்றாள்.
பெண் Facebook addict. ஒரு அரசு நிறுவனத்தில் குமாஸ்தா வேலையில் இருக்கிறாள். பெண்பால் ’பால்வண்ணம்பிள்ளை’ தான். அவளுக்கு தெரிந்த அத்தனையும் முகப்புத்தகம் வழி தெரிந்து கொண்டது தான். அவள் வீட்டில் இருந்த எந்த இலக்கிய புத்தகமும் திறக்கப்படாமல் புதிதாக இருந்தது. பஷீரின் காதல் கடிதம் மட்டும் படித்ததாக சொன்னாள்.
பின்னர் 50 ஆயிரம் ரூபாய்க்கு முகூர்த்த பட்டுப்புடவை கேட்டாள். நிச்சய புடவையே 40 ஆயிரத்திற்கு கேட்ட போது “நேரம் ஆக வில்லை இதோடு நிறுத்தி விடுவோம்” என்று அம்மா சொன்னார்கள் நான் கேட்கவில்லை. வாங்கட்டும் என்று விட்டு விட்டேன்.
திருமணம் அல்ல இணையேற்பு விழா அழைப்பிதழ் என்று அடிக்க வேண்டும் என்று சொன்னாள். சரி என்று அடித்து நான் ஊரெல்லாம் கொடுத்து விட்டேன். ஆனால் அவர்கள் தரப்பில் திருமணத்திற்கு 2 வாரம் இருக்கும் வரை ஒரு பத்திரிக்கை கூட யாருக்கும் கொடுக்கவில்லை.
அய்யர் இல்லாமல் கல்யாணம் செய்ய வேண்டும் என்றாள். நான் வீட்டில் மல்லுகட்டிவிட்டு அதெல்லாம் சரிப்பட்டு வராது என்றேன். நான் வேலைக்கு போகிறேன் அதனால் வழக்கமான தாலிச்செயின் போட மாட்டேன் என்றாள். அதுவும் அவர்கள் சொல்லும் கடையில், அவர்கள் சொல்லும் தேதியில், அவர்கள் சொல்லும் நேரத்தில் வாங்கித்தர வேண்டும் என்றார்கள். இந்த தாலிச்செயின் விவகாரத்தில் அவர்கள் குடும்பத்தில் அத்தனை பேரும் ஒரே தொனியில் பேசினர்.
எனக்கு வெறுத்து விட்டது.”பெரியார் கொள்கை எல்லாம் பேசினாய், ஆனால் 50 ஆயிரம் ரூபாய்க்குத்தான் புடவை வாங்கி கல்யாணம் பண்ணனும்னு ஏன் நினைக்கிறே? தாலிச்செயின்ல என்ன design வேண்டிக்கிடக்கு? தங்கத்துல வாங்கி போடணும், அது எந்த ஊர்ல வாங்கினா என்ன?” என்று கேட்டேன்?
”ஒரு ரூமுக்குள்ள உக்காந்து ஜெயமோகன் படிச்சுட்டு இருக்கிற உங்களுக்கு இந்த உலகம் தெரியாது” என்று அவள் சொன்னாள். பேச்சு வளர்ந்து அந்த திருமணம் நின்று போனது.
அரசு வேலை பார்க்கும் பெண் என்பதால் வரதட்சிணை என்று எதுவும் கேட்க கூடாது என்று எங்கள் வீட்டில் சொல்லியிருந்தேன். எங்கள் சமுகத்தில் பையன் வீட்டு திருமணம் என்பதால் எங்களுக்கு நிறைய பண நஷ்டம்.
நான் யோசித்தேன். எங்கே தவறு செய்தேன்? ஏன் இப்படி நடந்தது? எத்தனை புத்தகம் படித்திருக்கிறேன்? எவ்வளவு புத்திசாலித்தனமாக பேசுகிறேன் எங்கே கோட்டை விட்டேன்?
How Much Should A Person Consume? என்கிற Guha எழுதிய புத்தகம் படித்ததில் இருந்து நான் செலவு செய்யும் விஷயத்தில் கவனமுள்ள ஒருவனாகவே இருந்து வந்திருக்கிறேன். சுற்றுப்புறச் சூழல் குறித்த கவனம் அந்த நூல் வாசித்த பிறகு வந்ததுதான். கல்யாண விஷயத்தில் one time expense என்று compromise செய்து கொண்டது என் தவறு. அதற்கான costly ஆன பாடம் படித்தாகி விட்டது.
6 மாதம் கழித்து மீண்டும் பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டேன். இந்த முறை தெளிவாக terms பேசி விட்டேன். பெண்ணிடம் பிடிகொடுக்காமல் busy யாக இருக்கிறேன் என்று திருமணம் வரை காலம் கடத்தினேன்.
பெண்ணிற்கு படிப்பு வாசனையே ஆகாது. முதுநிலை பொறியியல் படித்து சென்னையில் வேலை பார்த்திருக்கிறாள். ஆனால் எந்த பண்பாட்டு அறிமுகமும் கிடையாது.
அறிந்து கொள்வதுதான் பேரின்பம். அறிதல் மீது தாகம் இல்லாதவர்களோடு 5 நிமிடத்திற்கு மேல் பேச என்ன இருக்கிறது? எனக்கு திருமணத்திற்கு வந்த புத்தகப் பரிசுகளை கண்டு கொஞ்சம் அரண்டு தான் போனாள். உங்களுடைய அறம் வாசிக்க கொடுத்தேன். சோற்றுகணக்கு, யானை டாக்டர், கோட்டி எல்லாம் வாசித்தாள். பின்னர் மூங்கில் மூச்சு, இவன்தான் பாலா. அ. முத்துலிங்கம் அய்யாவின் தோற்றவர் வரலாறு கொடுத்தேன். அது அவ்வளவாக பிடிக்கவில்லை என்றாள். கடவுள் தொடங்கிய இடம் 4 அத்தியாயம் வாசித்திருக்கிறாள்.எதுவும் வாசிக்கவிட்டாலும் பரவாயில்லை ,நாம் வாசிக்கும் போது தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று தான் இருக்கிறது.
ஆனாலும் அவ்வப்போது ஏன் படிக்கிறேன் என்ற கேள்வி வந்து கொண்டே இருக்கிறது. என்னுடைய மாணவர் ஒருவரின் தந்தை எனக்கு உபதேசமாக “மனைவியிடம் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் பேசுங்கள், அது தான் பெண் பிள்ளைகள் எதிர்பார்ப்பது” என்றார். நானும் முயற்சி செய்தேன். அத்தனை போரடிக்கும் விஷயமாக அந்த உரையாடல் இருந்தது.
இலக்கிய வாசகனாக அன்றாட விஷயங்களை பேசுவதில், கேட்பதில் நேரத்தை செலவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. பின்னர் நீங்கள் எழுதிய நான்கு வேடங்கள் போன்ற கட்டுரைகள் ஞாபகம் வரும். உலகியல் வாழ்க்கையில் இதையெல்லாம் செய்தாக வேண்டும் என்று பொறுமையாக கேட்டுக்கொண்டிருப்பேன்.
பேச விஷயம் வேண்டும் என்பதற்காக சேர்ந்து தினம் ஒரு சினிமா பார்ப்பது அதை பற்றி பேசுவது அவ்வப்போது படித்த புத்தகம் பற்றியும் பேச்சு நடக்கும்.
எனது மனைவியின் அப்பா இலக்கிய வாசகர் அல்ல. Book of Facts, Science போன்ற தடிமனான பெரிய அட்டை போட்ட, வண்ண படங்கள் நிறைந்த பொதுஅறிவு புத்தகங்களை வாங்கி கொடுத்திருக்கிறார். அதெல்லாம் silver fish விளையாட மனைவி வீட்டில் இன்னும் இருக்கிறது.பொங்கல் பரிசாக மூங்கில் மூச்சு புத்தகத்தை அவரிடம் தள்ளி விட்டேன். வாசித்து விட்டு தன்னுடைய பால்ய கால ஞாபகங்கள் பல வற்றை எனது மனைவியிடம் சொல்லியிருக்கிறார்.
இலக்கிய வாசகனாக நான் ஒரு சராசரி செய்யும் எதையும் செய்வதில்லை. TV பார்ப்பதில்லை. செய்தித்தாளை 5 நிமிடத்திற்கு மேல் பொருட்படுத்துவதில்லை. 5 நிமிடத்திற்கு ஒரு முறை whatsapp பார்ப்பது இல்லை. Facebook வாரத்திற்கு ஒரு நாள் போனால் அதிகம். Cricket பத்தி ஒன்றும் தெரியாது. இப்படி இருப்பது மற்றவர்களை திகிலடைய செய்கிறது. ”அப்ப என்ன செய்வீங்க?” என்ற கேள்வி வரும். ”புத்தகம் படிப்பேன்” என்று சொன்னால் பாவம் பைத்தியம் என்பதாக தான் அந்த பதில் பார்வை இருக்கும்.
Ray Bradburyயின் Fahrenheit 451 நாவலை Francois Truffaut அதே பெயரில் சினிமாவாக எடுத்திருக்கிறார். அதில் புத்தக வாசகர்கள் ஆளுக்கொரு புத்தகத்தை மனப்பாடம் செய்து கொண்டு ஒரு குழுவாக காட்டிற்குள் சென்று வாழ்வதாக படம் முடியும்.
இங்கு புத்தகம் வாசிப்பவர்கள் அப்படி தனிமையிலேயே இருக்க முடியும். ஏனென்றால் அற்பத்தனத்தை, சராசரி ரசனை உள்ளவர்களை சகித்து கொள்ளும் மனநிலையை நாம் இழந்து இருப்போம். இணைமனம், Kindred Spirit அனைவருக்கும் அமைவதில்லை. Necessary Evil ஆக உலகியல் கடமைகளை ஒழுங்காக செய்து கொண்டு இலக்கியம் வழி வாழும் வாழ்க்கையை பிறர் அறியாமல் தொடர வேண்டியது தான்.
மிக்க அன்புடன்
—
பி. கு
சார், இந்த கடிதத்தை தளத்தில் வெளியிடும் பட்சத்தில் இந்த முறை என்னுடைய பெயரை நீக்கி விடுங்கள்.
மிக்க நன்றி.
அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள் அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள் அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள் அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்தத்துவம் பயில
ஹிரியண்ணாஇனிய ஜெயம்
Archive இல் தமிழில் வாசிக்கக் கிடைக்கும் முக்கியமான சில தத்துவ அறிமுக நூல்களை இங்கே தொகுத்திருக்கிறேன். எழுபதுகளில் தமிழில் மேற்படிப்பாக தத்துவம் எல்லாம் மாணவர்கள் கற்கவேண்டும் என்று ஒரு கனவு அரசாங்கத்தில் எவருக்கோ இருந்திருக்கிறது. அநேகமாக அது தத்துவப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்களாக இருக்கலாம். அவர்தான் இத்தகு தத்துவ பாட திட்ட குழுக்களின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
முதல் சுட்டி வழியே உலக தத்துவங்களை இரு பாக நூல்கள் கொண்டு அறிமுகம் செய்து கொள்ளலாம்.இரண்டாம் சுட்டி கொண்டு, இரு பாகங்கள் கொண்ட நூல்கள் வழியே வேதம் முதல் உபநிஷத், கீதை, பௌத்தம், சமணம், ஆறு தரிசனங்கள் தொடர்ந்து பிற்கால வேதாந்தம் வரை அறிமுகம் செய்து கொள்ளலாம். மூன்றாம் சுட்டி வழியே அத்வைதத்தின் ஆழ அகலம் அறியலாம்.
ராதாகிருஷ்ணன் தலைமை எனில் ஹிரியண்ணா தொடர்ந்து இந்த நூல்களின் உருவாக்கத்தின் ஆசிரியர்கள் தேர்வு சரியாகவே இருக்கும் . எனவே பிழைகள் அற்ற தத்துவக் கல்வியே இந்த நூல்கள் நல்கும் என நம்பலாம்.ஆங்காங்கே சில அத்தியாயங்கள் வாசித்துப் பார்த்தேன். (தத்துவத்தின் கலை சொற்கள் மீது அடிப்படை பரிச்சயம் தெளிந்த பின்), இடறலற்ற வாசிப்பு அளிக்கும் நூல்கள்.
மார்க்சிய பார்வை கொண்ட ஆய்வுகள் பிற சார்புகள் கூடிய தத்துவ நூல்களுக்கு வெளியே, செவ்வியல் இந்திய தத்துவங்களை அறியவோ பயிலவோ வாசகர் தேடும் பட்சம் தமிழில் ஐந்து நூல்களுக்கு மேல் கிடைக்காது. இனியும் தமிழில் அத்தகு நூல்கள் பதிப்பில் கிடைக்க வாய்ப்பு குறைவே. ஆகவே இந்த சுட்டிகளின் நூல்கள் இன்றைய தேதியில் முக்கியமான நூல்கள் என்றாகின்றன. தத்துவ, வரலாற்று இலக்கியப் பகைப்புலம் வழியே இந்திய பண்பாட்டை அணுக விரும்பும், தமிழ் மட்டுமே அறிந்த வாசகர்களுக்கு இந்த தத்துவ அறிமுக நூல்கள் பெரிய வாயில்.
கடலூர் சீனு
இந்திய தத்துவம் கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருளியல் வரலாறு : தொகுதி 2 அத்வைத தத்துவம்- டாக்டர் ராதாகிருஷ்ணன்இமைக்கணம் – கர்ணனுக்கான கீதை
நான் வாழ்ந்த வாழ்வெல்லாம் வெறும் எதிர்க்குரல் மட்டுமே.இனிஎழும் போரும் அவ்வாறே. எனில் இருத்தலுக்கென்ன பொருள்?’ – என்ற தன்னிரக்கத்தில் பிறக்கிறது கர்ணனின் வினா.
“தன் வாழ்வு தான் பிறந்த கணத்திலேயே முடிவு செய்யப்பட்டுவிட்டிருக்க, தான் செயலாற்றி விளையப்போவது என்ன? எதற்கு செயலாற்ற வேண்டும்? தன்னை மீறிய விசைகளால் தான் இழுத்துச் செல்லப்படுகையில் மானுடன் ஆற்றக் கூடுவது தான் என்ன?” என தொடர்ச்சியாக வினாக்களை அடுக்கும் கர்ணன் முன் இளைய யாதவர் அவன் வாழ்வின் மாற்றுச் சாத்தியம் ஒன்றைக் காட்டுகிறார்.
கர்ணன் மட்டும் யாரென்பதை அறிவித்திருந்தால் இந்த பாரத யுத்தமே நடந்திருக்காது, தேனாறும், பாலாறும் ஓடியிருக்கும் என மகாபாரதம் அறிந்த ஒவ்வொருவரும் கண்டிருந்த பொன்னொளிர் பகற்கனவே அது. அவ்வாறு ஓடிய பிறகு என்ன நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதையும் சற்று மேலதிகமாக விவரிக்கிறது வெண்முரசு. கர்ணன் விரும்பியிருந்தால் அவ்வாழ்வை அவர் தேர்ந்தெடுக்க இயலும் எனவும் கூறுகிறார் இளையயாதவர். இருப்பினும் அவன் வேண்டாம் என்கிறான். வேண்டாம் என்றவனிடம் இனி வரப்போகும் கோரம் என்ன என்பதையும் காட்டுகிறார். இருப்பினும், இவ்வாழ்வே போதும் என மீள்கிறான் கர்ணன். அதன் பிறகு அவனுக்கான அறிதலை அவனுக்கு அளிக்கிறார் அவர்.
இத்தருணத்தில் சில கேள்விகளை நாம் எழுப்பிக் கொள்வதன் மூலம் இவ்வறிதல்களை இன்னும் சற்று நெருங்கிச் செல்ல இயலும்.
1, கர்ணனுக்கு ஏன் இந்த பொன்னொளிர் மாற்று வாழ்வு காட்டப்பட வேண்டும்?
அவ்வாழ்வை அவன் ஏன் தேர்ந்தெடுக்காது ஒழிய வேண்டும்?அவனுக்கு அவர் அளிக்கும் அறிதல்கள் அவனை எவ்விதம் முழுமை நோக்கிச் செலுத்துகின்றன?பொன்னொளிர்மாற்று வாழ்வு:கர்ணனின் துயர் என்பது அவனது வாழ்வு அவன் பிறந்த கணத்திலேயே சிறுமையும், இழப்புகளும், தாழ்வும், நிறைவின்மையும் நிறைந்த ஒன்றாக முடிவு செய்யப்பட்டு விட்டது என்பது. எனவே அவனே விரும்பியது போன்று அவனது பிறப்பு அனைவராலும் அறிந்து, ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதைக் காட்டும் ஒன்றாக காட்டப்படுகிறது. அது அவனே எண்ணியிருந்தது போல முன்பின் நிகரில்லாத ஒரு பெருவாழ்வாகவே அமைகிறது. இந்த எண்ணம், முக்கியமாக கிந்தூரத்திடம் அவன் தோற்ற கணத்தில் இருந்து அவனிடம் இருந்து கொண்டே இருப்பது தான்.
இன்னும் சொல்லப்போனால் இத்தகைய ஒரு வாழ்வுச் சாத்தியம் அவனுக்கு வெய்யோனின் இறுதியில் நாகங்களின் காவலன் நாகபாசனால் அளிக்கப்பட்டது தான். அப்போது கூட அவன் தன்னறத்தாலும், அவனுள் ஒடுக்கப்பட்டோர், சிறுமைக்காளானோர் மீது இருந்த பெருங்கருணையாலும் அவ்வாழ்வைத் துறந்து அஸ்வசேனனை கையில் எடுக்கிறான். இதோ இங்கே இளையயாதவர் அவனது மாற்று வாழ்வின் முழுச் சாத்தியங்களையும் அவன் முன் காட்டுகிறார். இப்போதும் அவன் அதை வேண்டாம் என்றே மறுக்கிறான்.
ஏன்மறுக்கிறான்?அப்படி ஒரு வாழ்வை அவன் ஏன் தேர்ந்தெடுக்கவில்லை? மூச்சுலகில் ஒரு கட்டத்தில் தனக்கு வர வேண்டிய அன்னமும், நீரும் தனது கொடி வழி முற்றழிவதால் வாராது போய்விடுவதாலா? இல்லை, தனது புகழ் இம்மண்ணில் இல்லாது போய், மன்னர் நிரையில் வெறும் பெயராக எஞ்சி, இறுதியில் அனைவரின் கருத்தில் இருந்தும் மறைந்து போவதாலா? இவற்றைக் காரணம் எனக் கொள்வது, கர்ணன் என்னும் அதிமானுடனை எனது கீழ்மைக்கு இழுப்பது போன்றது தான். நிச்சயம் இந்த காரணங்கள் இருக்க இயலாது. கர்ணனின் இப்போதைய வாழ்வுக்கும், அவனுக்குக் காட்டப்பட்ட வாழ்வுக்கும் இருந்த ஒற்றுமை என்ன?
துயர். ஆம், கர்ணனின் இப்போதைய வாழ்வில் வெளிப்படையாக அவனைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் அவனது துயர், காட்டப்பட்ட வாழ்வில் மெளனமாக, வெளித்தெரியாமல் தொடர்ந்து வருகிறது. அங்கும் அவனை வாட்டுவது துயரே. அதுவே அவனை நிறைவின்மைக்குள்ளும் தள்ளுகிறது. உண்மையில் அந்த வாழ்வில் வசுக்ஷேணரின் ஒரு செயல் தான் இருவாழ்விலும் அவருடைய துயர் என்ன என்பதையே கர்ணனுக்கே உணர்த்துகிறது. அது துறந்து செல்கையிலும் அவர் கரந்து கொண்டு சென்ற குண்டலங்கள்.
அவை அவரது பிறப்பு தான். அவர் குந்தியின் மூத்த மகன், எனவே பாண்டுவின் முதல் மைந்தன், எனவே குருவம்சத்தவன், மூத்தவன் அவனே ஆதலால் அஸ்தினபுரியின் பட்டத்து இளவரசன், எனவே தன் தம்பியர் நூற்று ஐவருக்கும் அவனே பொறுப்பானவன் என்று அந்த துயரை நீட்டலாம் (இதைத்தான் கணிகர் வெய்யோனில் ‘நீரும் ஒரு பீஷ்மர் அல்லவா’ எனக் குறிப்பிடுகிறார்) அந்த குண்டலங்களை அவர் மூச்சுலகிற்கும் கொண்டு செல்கிறார். அது அவரிடம் இருக்கும் வரை அவர் தத்தளித்துக் கொண்டே தான் இருக்கிறார்.
அவரிடம் மூச்சுலகின் நற்காலமான சுகாலன், “நீங்கள் காம்பு கனிந்து உதிரவில்லை” என்கிறான். எனவே அவர் அங்கும் துயர் கொண்டிருக்கிறார் என்றும், களம் கொண்டு செல்லும் அம்புகள் முற்றொழியாமல் பாசறை திரும்புபவர்களுக்கு போர் ஓய்வதில்லை என்றும் சொல்கிறான். அவருடைய முதல் பிழை ஊடு மட்டுமே கொண்ட அவரது ஊழ். அதையே எதிர்த்து நின்றிருந்தால் அவர் ஆவநாழி ஓய்ந்திருக்கக் கூடும் என்கிறான். இருவாழ்விலும் அவர் கண்டதும், கொண்டதும் துயரே. எனவே தான் ஆவநாழி ஒழியச் சாத்தியமான இவ்வாழ்வே இயன்றது என அவர் தேர்ந்தெடுக்கிறார்.
கர்ணனின்அறிதலும், முழுமையும்கர்ணனிடம் இளைய யாதவர் துயர்கள் மூன்று வகை என்கிறார்.
அ) ஆதிதெய்வீகம் – இறப்பு, நோய், முதுமை.
ஆ) ஆதிபௌதிகம் – இழப்பு, வலி
இ) ஆதிமானுஷீகம்
விலங்குகளுக்கும், சிற்றுயிர்களுக்கும் முதலிரண்டு வகை துயர்களே உள்ளன. அவை அத்துயர் குறித்து எண்ணுவதுமில்லை, எனவே வளர்ப்பதும் இல்லை. அமைந்திருத்தல் மற்றும் முரண் கொள்ளாதிருத்தல் வாயிலாக இத்துயரைக் கடந்தும் செல்கின்றன. மானுடரும் அவ்வாறே!! மானுடர்களுக்கு இந்த மூன்றாவது துயரும் உள்ளது. உண்மையில் மானுடம் அடையும் அனைத்துத் துயர்களும் இந்த மூன்றாவது வகையில் அடக்கி விட இயலும்.
இவை மானுடம் அடைந்த பகுத்தறிவால் உருவாகின்றவை. எனவே இவற்றில் ஆதாரம் அறியாமையே. இத்துயரை வெல்ல வழி அறிதல் மட்டுமே. கர்ணன் தான் கொண்ட பிறப்பால் அடைந்த சிறுமை, இழப்பு என்னும் துயர் ஆதி தெய்வீகத் துயர் என மயங்குகிறான். இந்த எண்ணம் அவனிடம் வெண்முகில் நகரம் நாவலில், காம்பில்யப் போருக்கு முன் அவன் பூரிசிரவசிடம் பேசுகையிலேயே வெளிப்பட்டிருக்கிறது. எனவே தான் அவன் துயருக்கு வேதாந்தம், மானுடம் கடந்த ஞானம் என்ன பதில் சொல்கிறது என்ற வினாவுடன் துவங்குகிறான்.
இளைய யாதவர் மிகச் சரியாக சாமானியனின் துயருக்கு ஞானியின் அறிதலில் விடை தேடுவது தவறு என அவனுக்குச் சுட்டுகிறார். ஆம், அவன் கொண்ட துயர்கள் அனைத்தும் இயல் வாழ்வில் தானே. அதைத் தாண்டிய மெய்மையின் பாதையில் அவன் செல்லவும் இல்லை, அதைக் குறித்த தேடலும் அவனிடம் இல்லை. தவறுகளும், கீழ்மைகளும் மானுட வாழ்வின் கணங்கள். அவை முடிவிலா சுழலின் கண்ணிகள் என்பதைத் தவிர அவற்றின் பொருளையும், இலக்குகளையும், விளைவுகளையும் மானுடன் எண்ணுவது தேவையற்றது.
பாஞ்சாலியை சிறுமை செய்த கணத்துக்காக இத்தனை காலம் தன் வாழ்வை அழித்துக் கொண்டிருக்கும் அவனிடம், அந்த நிகழ்வால் தான் இத்தனை பெரிய பேரழிவை நிகழ்த்தவிருக்கும் போர் விளைந்துள்ளது என வெம்பி நிற்கும் அவனிடம் “நிகழும் நன்றுக்கு பொறுப்பேற்பதே ஆணவம். தீதுக்கு பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம்” என இடித்துரைக்கிறார் பீலிவிழியன். இதற்காகவே அவனுக்கு அந்த பொன்னொளிர் மாற்று வாழ்வு காட்டப்படுகிறது.
அங்கும் இத்தகையதோர் பேரழிவு நிகழ்கிறது. என்ன… சற்றுத் தாமதமாக, சிறுகச் சிறுக நிகழ்கிறது. மூச்சுலகில் பரிதவிக்கும் வாசுக்ஷேணரிடம் சுகாலன் அவ்வாறு கொல்லப்படுபர்களெல்லாம் அவன் கொன்றிருக்க வேண்டியவர்கள் என்கிறான். சாமானியத் தளத்தில் அவன் எதிர்கொள்ளும் களத்தின் செயல் வழிகளை அவனுக்கு விளக்குகிறார் இளைய யாதவர்.
தனக்கான செயல்வழியும், இலக்கையும் அறிந்து ஆற்றுவதே தன்னறம் என்பதை புரிய வைக்கிறார். தன்னறம் அறிக்கையிலேயே, அதை ஆற்றுகையிலேயே முழுவிசையும் நிகழ முடியும் என்பதை உணர்த்துகிறார். தனக்குரிய களத்தில், தனக்குரிய அறிதலை அடைவதன் மூலம் துயரிலிருந்து விடுதலை அடைந்வதே மானுட வாழ்வின் ஒழுக்கு என அறிவிக்கிறார். ஏனென்றால் மானுடனுக்கு ஆதிமானுஷீகத் துயரும் அருளப்பட்டுள்ளது. அதை அறிந்து, அறுத்து எறிவதே வாழ்வு. விடுதலையைத் தரும் அறிதலைத் தேடி கதவுகளைத் தட்டுவதே மானுடன் செய்யக்கூடுவது. எனவே செயலாற்றுக என உரைக்கிறார்.
இழப்பதனால், வீழ்வதனால் எவரும் தோற்பதில்லை, முழுமையாக வெளிப்படமையாலே தோற்கிறார்கள். எனவே தனக்கான செயல்வழியும், இலக்குமாகும் தன்னறத்தை அறிந்து, அதில் தன் முழுவிசையையும் வெளிப்படுத்துமாறு அவனை அறைகூவுகிறார். அவனை எதிர்த்து நிற்கும் அனைத்து எதிர்விசைகளும் அவனது ஆற்றலைக் கோரியே அப்பேருரு கொண்டிருக்கின்றன என அவனுக்கு உணர்த்துகிறார்.
அவ்வாழ்விலும் துயரும், அழிவும், மகிழ்வும் என இருக்கும் சுழலைக் காணும் கர்ணன் முன், இவ்வாழ்வின் கோரத்தையும் காட்டுகிறார் இளைய யாதவர். கர்ணன் கையால் மடிந்த தன் புதல்வர்களில் தன் ஆழமறிந்த பேருடலன் மீது வீழ்ந்து கதறுகிறாள் அவன் அன்னை. அனைவரும் மடிந்த களத்தில், துரியன் வெல்கிறான், கர்ணனின் முழு விசையின் வெளிப்பாட்டால். மடிந்து கொண்டிருக்கும் கர்ணனிடம் நம்மவன் ஒருவன் அரசனாவான் என்றும், வெற்றியும், தோல்வியும் நமதே என்றும் உரைக்கிறான் துரியன். இவ்விடத்தில் மீளும் கர்ணனிடம் அவர் கூறும் அறிதல்களில் முக்கியமான ஒன்று
“நீங்கள் காப்பவருக்காக எதிரியைக் கொல்கிறீர்கள் என்றால் கடமையைச் செயதவராகிறீர். நீங்களும் கொல்லப்படக்கூடும் களம் என்றால் அறத்தையே இழைத்தவராகிறீர். ஒரு கணமும் திரும்பி எண்ணி வருந்தமாட்டீர் என்றால் நற்செயலையே இயற்றுகிறீர்கள்” என்பது.
இவையே கர்ணனை மீண்டும் செயல் வீரனாக்குகிறது. அவனுடைய பிறப்பின் காரணத்தால் அவன் கொண்ட குழப்பங்கள் அனைத்திற்கும் விடையாகிறது. தான் காக்க வேண்டிய துரியனுக்காக களம் நின்று தன் கடமையைச் செய்கிறான் கர்ணன். தன் முழுவிசையும் வெளிப்பட்டு வென்றால், தோற்பது பாண்டவர்கள் மட்டுமல்ல,
‘அழிக்கப்படுகையில், கைவிடப்படுகையில், சிறுமை கொள்கையில் பிறிதொன்றை நோக்கி உதவிகோருபவன் தன்னையறியாதவன். அழைக்கப்படாத தெய்வமொன்று இருண்ட ஆலயத்தில் துயருடன் அவனுக்காகக் காத்திருக்கிறது. தோற்றீர்கள் எனில் வெல்க! வீழ்ந்தீர்கள் எனில் எழுக! அடக்கப்பட்டிருந்தால் ஆள்க! சிறுமைப் படுத்தப்பட்டிருந்தால் விரிக! அதற்குரிய இயலறிவே உங்களுக்கானது, தனியறிவு அதற்கு உகந்ததல்ல. கூரியது என்றாலும் ஒளியைக் கொண்டு காலில் தைத்த முல்லை அகழ்ந்தெடுக்கவியலாது.’
என சாமானியருக்கும், அடிமைப் படுத்தப்பட்டோருக்கும், கைவிடப்பட்டோருக்கும், அனைத்து மானுடருக்குமான மீட்சியின் வழியைக் கூறும் வேதமுடிபும் தான். அத்தகையோர் மீது கொண்ட பெருங்கருணை தானேஅவனை வஞ்சம் சூடச் செய்தது. தனக்கும், தன்னைப் போன்றோருக்கும் கூட விடுதலைக்கும், மீட்புக்கும் வழி கூறிய இக்கொள்கை வெல்வதே அவனது செயல் வழி, அதுவே அவனது இலக்கு, அதுவே அவனது தன்னறம்.
எனவே தான் தானும் மடியும் களத்தில், தன் தம்பியர் நால்வரையும் கொல்வதில்லை என்றும், தன் பிம்பமான அர்ஜுனன் மீது நாகபாசத்தை ஒரு தடவை மட்டுமே எய்வேன் என்றும் குந்திக்கு வரமளித்து அறத்தையே இயற்றுகிறான். தன்னறம் உணர்ந்து அதற்காகவே அவ்வரங்களை அளித்ததால் திரும்பி நோக்கினாலும் ஒரு கணம் கூட வருந்தாத நற்செயலையே செய்கிறான். தான் வெல்வதற்குச் சாத்தியங்களாக இருந்த இக்கவசத்தையும், தன் பிறப்பு என்னும் குண்டலத்தையும் முற்றாகத் துறக்கிறான், அவற்றையும் அளிக்கிறான். கொடைவள்ளல் அல்லவா அவன்!! தருமத்தையே செய்து முழுமையடைகிறான்!!! உச்சத்தின் உச்சமாக புடவிப்பேருருவனுக்கே கொடையளித்து தன் கலம் ஒழிகிறான்!!! நிறைவடைகிறான்.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்
February 6, 2021
யூமா வாசுகிக்கு வாழ்த்து
தன்னறம் இலக்கிய விருதின் முதல் விருது, எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அளிக்கப்படுவதில் நிறைகூர்ந்த உவகையடைகிறோம். இந்த விருது, தமிழ்ச்சூழலில் அவருடைய இத்தனைக்கால படைப்புமுகத்திற்காக வழங்கப்படுகிறது. பொதுவாக, இலக்கியச்சூழலில் ஒருசில படைப்பாளிகளே அடுத்த தலைமுறைக்கான ஆசிரியர்களாக எழும் அகத்தகுதி உடையவர்களாக மாறிநிற்கிறார்கள்.
அப்படி ஒரு வரிசையை நாம் உருவாக்கிக் கொண்டால், அதில் தவிர்க்கமுடியாத படைப்பாளியாக யூமா வாசுகி தனித்துநிற்பார். காலம் அவருக்காக அளிக்கக் காத்திருக்கும் உயரங்களை நாங்களறியோம்; ஆனால், இவ்விருதின் வழியாக நாங்கள் அவருக்குச் சொல்வது ஒன்றே ஒன்றுதான். இத்தனை படைப்புகளை படைத்தபின்பும் தனக்குள் வாழும் குழந்தைமையைத் தொலைத்துவிடாத அந்த தூயமனதை நாங்களும் வழிதொடர முயல்கிறோம் என்பதே அது.
ஒரு படைப்பாளியின் குரலிலேயே அவர் கடந்துவந்த வாழ்வுப்பாதை குறித்தும் வழிநினைவுகள் குறித்தும் அறியநேர்வது என்பது, அவரை விரும்புகிற எல்லா வாசிப்புமனங்களுக்கும் பெருநிறைவை அளிக்கக்கூடிய ஒன்று. இக்காணொலி, தமிழெழுத்தாளர் யூமா வாசுகி அவர்கள் தன்னுடைய வாழ்வுக்கதையை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் அனுபவநினைவுகளின் சிறுதொகுப்பு.
ஓர் எளிய படைப்புமனம் தன் வேரின் மெளனத்தை மொழிபெயர்க்க முயல்கையில், வார்த்தைகளில் கோர்வைகூடல் தவறிப்போகலாம். ஆனால், உண்மையைச் சுமந்திருக்கும் ஒரு இருதயம் தன்னைத் தத்தளித்தே வெளிப்படுத்திக் கொள்கிறது.
தமிழ் எழுத்துலகத்தைத் தனது கள்ளமின்மையாலும் கருணையாலும் மொழிப்படுத்திய ஒரு முன்னோடிக் கலைஞனின் வாழ்வுரையாடல் இது. இதைக் காட்சிப்படுத்தும் வாய்ப்பு தன்னறத்திற்கு நிகழ்ந்தை காலவாய்ப்பு என்றே கருதுகிறோம்.
தன்னறம்
புதிரும் புனைவும்
ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள் குறித்து வசித்துக் கொண்டிருந்தபோது, அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து உலக அரங்குக்கு கொண்டு வந்த எர்னஸ்ட் போவிஸ் மாதர்ஸ் [Edward Powys Mathers ]குறித்த சுட்டி கிடைத்தது. சுவாரஸ்யமான ஆளுமை. புதிர் விளையாட்டுக்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். குறுக்கெழுத்துப் புதிர்களை உருவாக்குவதில் உலக அளவில் சிறந்த நிபுணர்களில் ஒருவர்.
நாவலாசிரியரும் கூட. இவர் எழுதிய கெய்ன் தாடை எலும்பு [Cain’s Jawbone] ஒரு துப்பறியும் நாவல். நாவலின் (கலைந்து கிடக்கும்) இறுதி நூறு பக்கங்களை வாசகர்களே அதன் உட்குறிப்புகளை கொண்டு துப்பறிந்து சரியாக அடுக்குவதன் வழியே, குற்றம் செய்தவர் எவர் என்பது துலங்கி வருமாம். பல்வேறு காம்பினேஷன் களை உருவாக்கும் இந்த புதிருக்கு ஒரே ஒரு (காம்பினேஷன்) விடை மட்டுமே உண்டு. பதிப்பகம் வாசகர்களுக்கு பரிசுகள் அறிவித்தும் 1934 இல் வெளியான இந்த நாவலுக்கு இதுவரை மூன்று பேர் மட்டுமே சரியான விடை சொல்லி இருக்கிறார்களாம்.
ரூபிக் க்யூப் புதிரை வித விதமாக திருக்கலாம். வித விதமான காம்பினேஷன்கள் கிடைக்கும். ஆனால் ஒரே ஒரு காம்பினேஷன் மட்டுமே அந்த புதிரின் தீர்வாக இருக்கும். அது போன்ற நாவல். (ரூபிக் புதிர் என்றோ ரூபிக் என்பவரால் 1974 இல் கண்டுபிடிக்க பட்டது)
தமிழில் இந்த நாவல் குறித்து பின்நவீன எழுத்தாளர்கள் எவரும் பேசி நான் கேட்டதில்லை. இத்தகு நான் லீலியர் வடிவமும், வெகுஜன வாசிப்பு கலாச்சாரத்தோடு இனம்காணப்படும் துப்பறியும் வகைமையும், வாசகனை பங்கு பெற அழைக்கும் அதன் விளையாட்டும் என எல்லாவகையிலும் அவர்களுக்கு உவப்பான நாவல் . சுவாரஸ்யமான கேளிக்கை விளையாட்டு வாசிப்பு என்றாலும் சுஜாதா கூட இது குறித்து எழுதியது போல தெரியவில்லை. ஈரோடு கிருஷ்ணன் இத்தகு விஷயங்களில் தொடர் ஈடுபாடு கொண்டவர். அவரும் இந்த நூல் குறித்து சொன்ன நினைவில்லை.
நீங்கள் இந்தப் புனைவை வாசித்ததுண்டா? இந்த வகைமையில் இந்த ஒரே ஒரு நாவல் மட்டுமே இருக்கிறது என்று இணையக் குறிப்புகள் சொல்வது மெய்யா? அந்த அளவு வடிவ ரீதியாக யூனிக் ஆன புனைவா இது?
கடலூர் சீனு
அன்புள்ள சீனு
இந்நாவல் பற்றி தொண்ணூறுகளில் மலையாளத்தில் சில பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் பேசினார்கள். நான் அப்போது இதைப்பற்றி கேலியாக எழுதியிருக்கிறேன். ஒரு சர்ஜன் ஆபரேஷன் செய்வதற்கு முன்னால் கத்திகளை தூக்கிப்போட்டு விளையாடுவார், அதைப்பார்த்து நர்ஸ் பேஷண்டிடம் ‘ரொம்ப திறமையான டாக்டர்’ என்று சொல்வார். மதன் இப்படி ஒரு கார்ட்டூன் வரைந்திருந்தார். அந்த கார்ட்டூனை மேற்கோள்காட்டி கிண்டல் செய்திருந்தேன்
பொதுவாக எழுவாய் பயனிலை இல்லாமல் எழுதுவது, பலபக்கங்கள் பத்தி பிரிக்காமல் எழுதுவது, ஓர் எழுத்து இல்லாமல் எழுதுவது, ஒரே சொற்றொடரில் எழுதுவது போன்ற சோதனைகள் தொண்ணூறுகளில் கொஞ்சம் நடந்தன. அவற்றை இங்கே சிலர் மெய்சிலிர்த்து பின்பற்ற முயன்றனர். எம்.ஜி.சுரேஷ் அவ்வாறு கொஞ்சம் முயற்சிகள் தமிழில் செய்து பார்த்தார்.இன்றும் அந்த மயக்கம் சிற்றிதழ் எழுத்தாளர்களில் சிலரிடம் உண்டு.
ஆச்சரியம் என்னவென்றால் சென்ற ஆண்டு ஒரு மலையாள எழுத்தாளர் இம்மாதிரி ஒன்றைச் செய்து எனக்கு அந்நூலை நேரில் அளித்தார். அதாவது அந்நூலில் ம என்ற எழுத்தே இல்லை. எப்படி எழுதினீர்கள் என்று கேட்டேன். தன்பாட்டுக்கு எழுதியபின் கம்ப்யூட்டர் சேர்ச் உதவியுடன் ம என்னும் எழுத்துள்ள வார்த்தைகளை கண்டுபிடித்து சமானமான வார்த்தைகளை போட்டார், அதற்காக சொற்றொடர்களை மாற்றிக்கொண்டார். மாற்றுச்சொற்களையும் கூகிள் உதவியுடன் கண்டுபிடித்தார். ஒரேநாள் வேலை. இது ஐம்பதாண்டுகளுக்கு முன் இலக்கிய உத்திச்சோதனை!
இலக்கியம் என்னும் கலைக்கே எதிரானவை இவை என்பது என் எண்ணம். இலக்கியம் மூளையுடன் ஆடும் விளையாட்டு அல்ல. அது கற்பனையுடன் கொள்ளும் உறவாடல். வாழ்க்கைக்கு நிகராக இன்னொரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளுதல். இலக்கியத்தை ஒருவகை மொழித்திறமையாக, வடிவத்திறமையாக ஆக்கிக்கொள்வதன் வழியாகவே இவ்வகையான எழுத்துக்கள் உருவாகின்றன.
ஆனால் உலகம் முழுக்க இலக்கியத்தில் இவ்வகை வடிவங்கள் உண்டு. இவை எப்படி உருவாகின்றன என்றால், ஒரு மொழியில் இலக்கியப்பெருக்கம் நிகழ்ந்து இலக்கியம் ஒரு தனித்த பெரிய அறிவுத்துறையாக ஆகிவிடும்போது அதில் தொழில்திறனாளர்கள் உருவாகிவிடுகிறார்கள். அத்திறனை ரசிக்கும் ஓர் அறிவார்ந்த கூட்டமும் உருவாகிவிடுகிறது. அவர்களுக்காக திறன்வெளிப்பாடு மட்டுமே கொண்ட படைப்புக்களும் உருவாகின்றன
அந்த திறன் மொழித்திறன், வடிவத்திறன் என இருவகைப்படும். மொழித்திறன் ஆங்கிலத்தில் pun,rhyme, limerick போன்ற பலவகைகளில் வெளிப்படும். இங்கே தமிழில் இரட்டுற மொழிதல் மொழித்திறனின் மிகச்சிறந்த வெளிப்பாடு. எங்களூர் செய்குத்தம்பிப் பாவலர் அதில் மிகத்தேர்ச்சி கொண்டவர். அவருக்கு யாரோ ‘துருக்கனுக்கு ராமன் துணை’ என்ற ஈற்றடியை கொடுத்தார்கள். அவர் முந்தைய வரியில் நுனியை மடக்கி ‘பரத லட்சுமண சத்- துருக்கனுக்கு ராமன் துணை’ என முடித்தாராம். இது மொழித்திறன்.நாகபந்தம், ரதபந்தம் போன்றவை வடிவத்திறன். கோலத்தில் சுருக்கெழுத்துபோல எழுத்துக்களை அமைத்துச் செய்யப்படும் விளையாட்டுக்கள் இவை.
இலக்கியத்தை அப்படி ஓர் திறன்விளையாட்டாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்றால் இலக்கியத்தின் இயல்பான பணிகள் முக்கியமல்ல என்று தோன்றும் அறிவுச்சூழல் அமையவேண்டும். ஒரு சமூகத்தில் பண்பாட்டுவிவாதம், தத்துவ விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தால் இலக்கியம் அதை பிரதிபலிக்கும். சமூகமாற்றம், அரசியல்மாற்றம் போன்றவை இலக்கியத்தை ஆட்டிப்படைக்கும். அந்த வகையான மாற்றங்களுக்கான முயற்சிகள் ஏதுமில்லாமல் அச்சூழலே வெறுமையாக இருந்தால்தான் இலக்கியங்கள் சோர்வுறத்தொடங்கும். அங்கே இலக்கியவிளையாட்டு ஆரம்பமாகும்
ஆனால் இலக்கியவிளையாட்டு நிகழும் காலகட்டம் அந்தச் சமூகத்திற்கும் பண்பாட்டுக்கும் சோர்வுக் காலகட்டம் அல்ல. அப்பண்பாடும் சமூகமும் வளர்ச்சியடைந்து, தன்னிறைவடைந்து, செழிப்பிலிருந்து உருவாகும் ஒருவகையான மெத்தனத்தை அடைந்துவிட்ட காலம் அது. சாப்பிட்டுவிட்டு மெத்தையில் படுத்து நறுமணத் தாம்பூலம் போட்டு சொகுசாக அமர்ந்திருக்கும் காலம். அப்போது கொந்தளிப்புகள் இல்லை, தேடல்கள் இல்லை, எனவே விளையாட்டையே உள்ளம் விரும்பும்.இன்று ஐரோப்பா பெரும்பாலும் அப்படி இருக்கிறது.
என்னுடைய அவதானிப்பு ஒன்று உண்டு,எப்போதெல்லாம் இசை மறுமலர்ச்சியும் வளர்ச்சியும் அடைகின்றதோ அப்போதெல்லாம் இலக்கியம் தேக்கமடைந்து இத்தகைய இலக்கியவிளையாட்டுக்களாக ஆகிவிடுகிறது. சமூகம் பொருளியல் வளர்ச்சி அடைந்து, நிலையான ஆட்சியில் நிறைவான வாழ்க்கையை அடையும்போதே இசை மறுமலர்ச்சி அடைகிறது. ஆனால் அப்போது இலக்கியத்தில் புதிய அலைகள் நிகழ்வதில்லை.
அதேசமயம் இலக்கியத்தில் இது சோர்வுக்காலகட்டம் என்று ஒரேயடியாகச் சொல்லிவிடவும் முடியாது. புதிய இலக்கியங்கள், பேரிலக்கியங்கள் உருவாகாது. ஆனால் இலக்கணநூல்களும் உரைநூல்களும் பெருகும். அகராதிகள் போன்றவை உருவாகும். பெரிய தொகைநூல்கள் வெளிவரும். அதாவது அறிவுச்செயல்பாடு பலமடங்காக வளரும். அவ்வகையில் பார்த்தால் அது ஓர் அடித்தளக்கட்டுமானம் நிகழும் காலகட்டமும்கூட.அதிலிருந்து அடுத்த படைப்பூக்கக் காலகட்டம் வருமென்றால் வலுவானதாக இருக்கும்.
இப்படி ஒரு வளர்ச்சிப்போக்கை உருவகிக்கலாம். நாட்டாரிலக்கியம் அல்லது பழங்குடி இலக்கியம் -> பண்படாச் செவ்விலக்கியம்-> பேரிலக்கியமரபு-> இலக்கியப்பெருக்கம், இலக்கணநூல்கள், உரைநூல்கள்-> இலக்கியவிளையாட்டு நூல்கள்.
தமிழகத்தில் அப்படிப்பட்ட இரு காலகட்டங்கள் பிற்காலச் சோழர்காலம் மற்றும் நாயக்கர் ஆட்சிக்காலம். சோழர் ஆட்சிக்காலத்தில் தோன்றி நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிறைவடைந்த கலம்பகம் முதலிய சிற்றிலக்கியங்கள் எல்லாமே அடிப்படையில் இலக்கியவிளையாட்டுத் தன்மை கொண்டவைதான். அவற்றில் காவியச்சுவை உண்டு, ஆனால் அக்காவியச்சுவை அசலானது அல்ல. அது ஏற்கனவே எழுதப்பட்ட காவியங்களிலிருந்து திரட்டி உருவாக்கப்பட்டது. அவை பெரும்பாலும் சொற்சுவையால், விளையாட்டால் நிலைகொள்பவை.
அவை புலவர் நுகரும் அழகியல் கொண்டவை. செவ்வியலிசை கேட்பதுபோல. இலக்கண வரம்புக்குள் நின்றுகொண்டு ஏற்கனவே உருவாக்கப்பட்ட அழகியல்களை நுண்மையாக்கம் செய்து விளையாடி ரசிப்பது அது. ஓர் அவையில் ஒருவர் அந்த திறனை நிகழ்த்த மற்றவர்கள் ‘ஆகா!’ போட்டு சுவைப்பார்கள்.
அந்தப்போக்கின் உச்சமே பின்னர் வந்த இரட்டுறமொழிதல் போன்ற கவிதைமொழிகள். ஈற்றடி கொடுத்து எழுதுவது, முதலடிகொடுத்து எழுதுவது போன்று கவிதைத்திறன் வெளிப்படும் ஆக்கங்கள். பாரதி காலம் வரை அவையே கவிதைத்துறையில் ஒருவரின் சிறப்பை வகுத்தளிப்பவையாக இருந்தன
இந்த காலகட்டத்தில் தமிழில் இன்னும் சிக்கலான வடிவவிளையாட்டுக்கள் கொண்ட கவிதைகள் வெளிவந்தன. சொல்லால் ஆன விளையாட்டுக்கள் கொண்டவை மடக்கு, யமகம் எனப்பட்டன. இன்னொருவகை கவிதைகள் சித்திரங்களுடன் இணைந்தவை. பெரிய கோலங்களாக போடப்படுபவை. இவை சித்திரகவிதை எனப்பட்டன. நீங்கள் சொல்லும் நாவலுக்கு மிக அணுக்கமானவை இவை. நாகபந்தம், ரதபந்தம் என இவற்றில் பலவகை உண்டு. வடிவங்களின் சாத்தியக்கூறுகளையும் சொல்லிணைவுகளின் சாத்தியக்கூறுகளையும் வைத்து விளையாடுபவை.
வடிவங்களின் சாத்தியக்கூறுகளை வைத்து விளையாடிய கலைஞர் என்று எய்ஷர் [M. C. Escher sollapp] என்னும் ஓவியர் கருதப்படுகிறார். அங்கே அது தொழில்திறன் மட்டும் அல்ல, கண்ணின் எல்லைகளை மயங்கச்செய்து காட்சி என்பது என்ன என்ற கேள்வியைச் சென்று தொடுவதனால் அது ஓவியக்கலையும் ஆகிறது. அற்புத உலகில் ஆலீஸ் நாவலுக்கு ஏய்ஷர் வரைந்த ஓவியங்களுடன் ஒரு பதிப்பு உண்டு. அது குழந்தைக்கதையும் ஓவியத்திலுள்ள குழந்தைத்தன்மையும் கலந்த ஒரு பெரும்படைப்பு.Alice in Wonderland (with illustrations by M.C. Escher)
லூயி கரோல், ஏய்ஷர் ஆகியோரின் வடிவம்சார்ந்த உணர்வுகளைக்கொண்டு கோடெலின் கணிதம், பாக்கின் இசை ஆகியவற்றை இணைத்து வடிவம் என்பதன் ஆன்மிக உள்ளடக்கம் நோக்கிச் செல்லும் ஒரு பெருஞ்செவ்வியல் நூல் உண்டு. Gödel, Escher, Bach: An Eternal Golden Braid .நித்யாவுக்கு பிடித்தமான நூல்களில் ஒன்று அது. அவருடைய உரைகளில் அடிக்கடி குறிப்பிடப்படும். குறுக்கெழுத்துக்களில் நித்யாவுக்கு ஆர்வமுண்டு.
சித்திரகவிதைகளை நான் நிறையவே பார்த்திருக்கிறேன். ஒருமுறைகூட அவற்றை புரிந்துகொள்ள முயன்றதில்லை. வடிவச்சோதனை மட்டுமே செய்யும் எந்தப்படைப்பையும் படித்ததில்லை. ஒருமுறைகூட குறுக்கெழுத்துப்போட்டியை போட்டுப் பார்த்ததில்லை
ஏன் என்று என்னிடம் பலர் கேட்டிருக்கிறார்கள். நான் சொல்லும் பதில் இதுதான். ஒரு பக்தனிடம் அவனுடைய இஷ்டதெய்வத்தின் மீதான தோத்திரத்தை இவ்வண்ணம் கூறுபோட்டு எழுத்தெண்ணி விளையாடச்சொன்னால் செய்வாரா? ஒரு யோகியிடம் அவருடைய மூலமந்திரத்தை இப்படி விளையாட்டுக்கு வைக்கச்சொன்னால் என்ன சொல்வார்?
இலக்கியம் எனக்கு அப்படித்தான். எனக்கு மொழிமீதான பித்து அதிலிருக்கும் கனவுத்தன்மையால்தான் வரவேண்டும். ஒரு சொல் அடுக்கடுக்காக கனவையும் கற்பனையையும் உணர்வெழுச்சிகளையும் உருவாக்கவேண்டும். அந்நிலையை சற்று குறைக்கும் எதையும் நான் செய்வதில்லை.
அதேபோல எனக்கு தத்துவத்தில் ஆர்வமுண்டு, ஆனால் மெய்மையை நோக்கிச் செல்லாமல் வெறுமே தர்க்கவிளையாட்டாக, பண்டிதப்பிரகடனமாக அது ஆகும் கணமே விலகிவிடுவேன். அது என் மெய்மைநாட்டத்தையே அழித்துவிடும் என எண்ணுவேன்
என்றென்றும் ஆழத்தில் ஒரு சிறுவனாக இருக்கவே விரும்புகிறேன். கள்ளமின்மை அளிக்கும் வியப்பை பரவசத்தை தக்கவைத்துக்கொள்ளவே முயல்கிறேன்.
ஜெ
எண்ணும்பொழுது- கடிதங்கள்
அன்பு ஜெயமோகன்,
வணக்கம். எண்ணும்பொழுது கதைக்கான கடிதங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். வாசக நண்பர்களின் எழுத்தாள நுட்பம் பெருமை கொள்ள வைக்கிறது. பல நேரங்களில் அக்கடிதங்களை திரும்ப வாசிக்கவும் வைக்கிறது. மேலும், அவை குறிப்பிடப்படவேண்டிய இலக்கியப்பிரதிகளாகவும் தோற்றம் கொள்கின்றன.
சமீபத்தில் எண்ணும்பொழுது கதையைக் குறித்து விஜய் ரெங்கராஜ் எனும் வாசகர் எழுதி இருந்த கடிதம் நுட்பமானது. அவரின் ”நிகழ்காலத்தில் ஆண் கவித்தன்மையோடு உள்ளான். அவள் எதிர்துருவம். இருவேறு துருவங்களைச் சேர்த்து வைத்திருப்பது காமம் ஒன்றே. சுடச்சுடவே பொன் மேலும் சுடரும். காதல், காமத்தால் சுட்டால் ஒழிய ஒளிராது. தங்கம் வெளிறியே போகும். எப்போது அவர்கள் காமமின்றி பிரிய நேர்கிறதோ அப்பொழுதே அவர்கள் எண்ணத்தொடங்கிவிடுவார்கள்; அப்பொழுதே நிரந்திர பிரிவு தொடக்கம்” எனும் வரிகளின் தீர்க்கம் அகலா வியப்பாய் என்னில் மிதந்தபடி இருக்கிறது.
ஆர்.கிருஷ்ணகுமாரின் கடிதம் எளிமையானது. எனினும் அவரின் “எண்ணும்பொழுது சிறுகதை என் பாட்டி அடிக்கடி சொல்லும் ஒரு சொலவடையை நினைவூட்டியது. அளந்து வாங்கணும், அளக்காம கொடுக்கணும். அன்பு, பாசம், கடமை, தியாகம் எதையுமே அளக்காமல், எண்ணாமல் , செய்பவர்கள்தான் உண்மையில் அதில் மகிழ்ச்சியும் நிறைவும் அடையமுடியும். அதை எண்ண ஆரம்பித்தால் கசப்பும் வருத்தமும்தான் மிஞ்சும்” எனும் வரிகள் அழுத்தமானவை. [எண்ணும்பொழுது- கடிதங்கள்]
சத்திவேல்,
கோபிசெட்டிபாளையம்.
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் எழுத்துக்களை பல வருடங்களாக வாசித்து வருகிறேன்.
உங்களின் புனைவுகளில் என்னை மிக கவர்ந்த அம்சம், ஆண் பெண் உரையாடல் (குறிப்பாக காதலர்கள், தம்பதிகள் இடையேயான உரையாடல்).
“எண்ணும்பொழுது” அவ்வகையில் நல்ல உரையாடலை கொண்ட சிறுகதை.
நன்றி.
ராஜசேகரன்
அன்புள்ள ஜெ
எண்ணும்பொழுது கதையைப் பற்றிய ஒரு புதிய கோணத்தை ஒவ்வொரு கடிதங்களும் உருவாக்குகின்றன. கதைகளைப் பற்றிய இத்தனை ஆழமான விவாதங்கள் வேறெங்கும் நிகழ்கின்றனவா என்று தெரியவில்லை.
எண்ணும்பொழுதுகதையில் உள்ள இரு கதைகளும் இரண்டு வேறு காலங்களில் நிகழ்கின்றன என்று விஜய் என்னும் வாசகர்கடிதம் சொன்னது வியப்பை அளித்தது. உண்மைதான். ஒருகதை நிகழ்காலத்தில் உள்ளது. இன்னொன்று கதைகளுக்குரிய என்றென்றைக்குமான காலத்தில் உள்ளது. அல்லது அகக்காலத்தில் உள்ளது
நிகழ்காலத்தில் அவர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினையை அந்த கதைக்காலத்தில் கொண்டுசென்று வைத்து சொல்லிப்பார்த்துக்கொள்கிறார்கள்
ஆர்.சந்திரகுமார்
எண்ணும்பொழுது- கடிதங்கள்-5 எண்ணும்பொழுது- கடிதங்கள்-4 எண்ணும்பொழுது- கடிதங்கள்-3 எண்ணும்பொழுது- கடிதங்கள்-2 எண்ணும்பொழுது- கடிதங்கள் -1மாலா சின்ஹா- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?
குருதியின் சதுரங்கம் ஒரு சுவையான பதிவு. ராகமாலிகா இசைக்குள் பல ராகங்கள் போல மாலா சின்ஹா மூலம் பல முகங்களை, இனங்களை, இடங்களை கலைடாஸ்கோப் சுழற்றி காண்பித்து விட்டீர்கள்.
அறுபதுகளின் சினிமா டைட்டில் கார்டுகளில் முதலில் மாலா சின்ஹா பெயர்தான் வரும். அப்புறம்தான் தர்மேந்திராவின் பெயர். மதன்மோகன் இசையில் ‘ஆப் கி நஸ்ரோ னே சம்ஜா’ மனசை வசியம் செய்யும் பாடல். மாலா சின்ஹா தர்மேந்திராவுடன் இணைந்து நடித்த இன்னொரு படம் ‘ஆங்க்கேன்’. பாம்பே ரவி இசை. மலையாளியான ரவி தில்லியில் பிறந்து பாலிவுட் சென்று பல அற்புத பாடல்களை தந்தவர். ‘ஆங்க்கேன்’ படத்தில் மாலா சின்ஹா ஒரு ஜப்பானிய பெண்ணாக வருவார்.
”பீம்பளாசி ராகம்” , நீலம்” – இந்த இரண்டுக்கும் ஏதேனும் தொடர்புண்டா தெரியவில்லை. ”கில்தேன் ஹை குல் யஹான்” ஷர்மிலி படத்தில் ராக்கி நீல சேலையுடன் பாடுகிறார். இதன் தமிழ் பதிப்பு ”ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே” என்ற பாடல். மேரா சாயா படத்தில் ”நைனோ மேன் பதரா சாயே” சாதனா நீல சேலை. அப்படியே பீம்பளாஸ் நூல் பிடித்துக்கொண்டு ”லகான்” வரை சென்று நிறுத்துவது வழக்கம். ”லகான்” ஏ.ஆர்.ரகுமானின் ”இஸ்லியே ராதா ஜலே” ஒரு மாயாஜாலம். இந்த பாடலின் சாரம் ”கண்ணனும் ராதையும்”.
எனக்கு கர்நாடக சங்கீத பின்னணியெல்லாம் எதுவும் கிடையாது. என் குடும்பத்தில் கர்நாடக சங்கீதம் என்றால் கிலோ எத்தனை என்பார்கள். பீம்பளாசிக்கும் ஆபேரிக்கும் உள்ள பாலத்தை இசைப்பயணம் தொகுதியில் நீல சேலையணிந்து எடுத்துரைத்தவர் சாருலதா மணி அவர்கள். தியாகராஜர் ”நகுமோ” என ஆபேரியில் புலம்புவது நீல வண்ண ராமனின் விக்ரஹத்தை தொலைத்துவிட்டு.
மாலா சின்ஹா ரசிகன் என்பதால் நானொரு வயதான கிழவன் என நினைக்க வேண்டாம். இசைக்கு மொழியோ வயதோ தடையில்லை என்பதால், மொசார்ட், பீத்தோவன், பாக், ஷுபர்ட், தியாகராஜர் என முன்னூறு வருடங்கள் பின்னோக்கி செல்லும்பொழுது வழியில் மாலா சின்ஹா, சாதனா, வஹீதா ரெஹ்மான், ஷர்மிளா தாகூர் என பலரை சந்திக்கும்படி நேர்கிறது.
நீங்கள் அற்புதமான பழைய பாடல்களை பற்றி பதிவிடும்பொழுது , எதிர்வினை எதுவும் வரவில்லையே என கவலை வேண்டாம். நீங்கள் பரிந்துரைக்கும் பாடல்களுக்கு பல ரசிகர்கள் உண்டென நம்புகிறேன். Monday Morning Blues என்பார்கள். திங்கள் காலை பீம்பளாசி ராகம் கேட்ட பின்பு மனம் சுழன்று கொண்டே இருக்கிறது. தலைக்கு மேலே ஆயிரம் வேலை. அலுவலக அல்லலுக்குள் நுழைய வேண்டும்.
குரங்கின் மூளைக்குள் எலக்ட்ரானிக் சிப் செலுத்தி வீடியோ கேம் விளையாட செய்து விட்டார்கள். Schubert’s Unfinished Symphony யை A.I (செயற்கை நுண்ணறிவு) முடித்து விட்டதாம்.
மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
ராஜா.
டிஜிட்டல் மாயை- கடிதம்
Joan Miró. Femmeஇனிய ஜெயம்
புதுவை நண்பர் தாமரைக்கண்ணன் அழைத்திருந்தார். புதுவை வெண்முரசு கூடுகையை zoom வழியே நடத்திப் பார்க்க ஒரு வெள்ளோட்டம் செய்து பார்ப்போமா என வினவினார். செய்யுங்கள் நான் வந்து கலந்து கொள்வது குறித்து பின்னர் தெரிவிக்கிறேன் என்றேன். எனது எதிர்பார்ப்பு வேறு. இதோ அடுத்த வாரம் சிறிய கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய அரசு தளர்வு கொண்டு வந்து விட்டது. இன்னும் சில நாட்கள் அனைத்தையும் விட்ட இடத்திலிருந்து துவங்கி விட முடியும். அதற்குள் ஏன் இத்தனை பதற்றம்?
உண்மையில் இத்தகு சூம் சந்திப்புகளில் பிறர் ஈடுபடுவதில் எனக்கு எந்த புகாரும் இல்லை. என்னை அதில் ஈடுபடுத்திக்கொள்ள சற்றே தயக்கம். சுருங்க சொன்னால் எனது மனிதார்த்த அம்சத்தில் கொஞ்சத்தை இந்த டிஜிட்டல் மாயை சுரண்டி மழுங்கடிப்பதை இன்னும் கொஞ்ச நாளேனும் தள்ளிப்போடுவோமே என்றொரு நப்பாசைதான்.
இனிய ஜெயம் ஒரே ஒரு அற்ப மாயை போதும் ஆயுளுக்கும் அதிலிருந்து வெளியேற விடாமல் நம்மை தளைத்து வைக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. நான் முதலில் சென்று விழுந்த மாயை சினிமா. எல்லா நெல்லைவாசிகளையும் போல என் குடும்பமும் சினிமா பைத்தியம். நான் பிறப்பதற்கு முன்பே எனக்கு படம் காட்ட வந்த ப்ரொஜெக்டர் எனக்காக காத்திருந்தது. அப்பா ஆபரேட்டர் அறைக்கு சென்று ப்ரொஜெக்டர் இயங்கும் முறையை பயின்று, தனக்கே தனக்கு என லேத்தில் அமர்ந்து எளிய ப்ரொஜெக்டர் ஒன்றை செய்து வைத்திருந்தார். சுரைக்காய் அளவில் பல்பு மாட்டி( மின்சாரம் சும்மா பிய்த்துக்கொண்டு பறக்கும்) மேலே உள்ள ரீலில் உள்ள பிலிமை இழுத்து ஒளி பாயும் சிறிய செவ்வகம் வழியே இழுத்து கீழே உள்ள ரீலில் மாற்றுவார். கீழே உள்ள ரீல் கத்திரி சாணை பிடிக்கும் பெடல் வைத்த சக்கரத்தில் இணைந்து இருக்கும். பெடலை மிதித்தால் சக்கரம் சுழலும். படச் சுருள் சரியாக 24 பிரேம் காட்டும் வண்ணம் ஒரு பல் சக்கரம் வழியே சுழலும். பத்து நிமிடம் ஐம்பது அங்குலத்தில் நீள் வட்டமாக அழுக்கு மஞ்சள் வண்ணத்தில் மௌனப்படம் பார்க்கலாம்.
அப்பா பார்த்து சலித்து கைவிட்டிருந்த ப்ரொஜக்டரை எனக்கு விளையாட்டு காட்ட அவ்வப்போது ஓட்டிக் காட்டுவார். மூர் மார்க்கெட்டில் சேகரித்த நாடோடி மன்னன் சண்டை காட்சி ஒன்றும் சாப்ளின் எலைட் க்ளாஸ் படத்தின் சில காட்சிகளும் திரும்ப திருப்ப ஓடும். அங்கிருந்து சினிமா தியேட்டர். பஜாரில் எங்கள் கடைக்கு எதிரே உள்ள திரையரங்கின் முதலாளி அப்பாவின் நண்பர். (இப்போது அந்த முதலாளி மகன் எனக்கு நெருங்கிய நண்பன்) என் பால்யத்தின் பெரும்பாலான மாலைகளை அந்த அரங்கின் ஆபரேட்டர் அறையில்தான் கழித்திருக்கிறேன். ஆம் சினிமா பாரடைஸோவின் அதே சிறுவனின் அதே பால்யம். அங்கே துவங்கியது என் சினிமா பைத்தியம். அது வெறும் பகல் கனவினை கையாளும் கேளிக்கை என்று புரிய கால்நூற்றாண்டு ஆனது. அங்கிருந்து ஹாலிவூட். அது வேறு விதமான கேளிக்கை. ஹாலிவுட்டுக்கும் கலைக்கும் உள்ள தொலைவு, ஷஷாங்க் ரிடம்ப்ஷனுக்கும், தி மான் எஸ்கேப்ட் கும் உள்ள தொலைவு என்பதை உணர மேலும் பத்து ஆண்டு பிடித்தது. என்னை பிடித்து ஆட்டிய மாயையில் இருந்து கலை போதம் அடைய இத்தனை நாள் தேவையாக இருந்தது.
என்னை அடிப்படையாக கொண்ட எளிய உதாரணம் இது. போதமே அடையாத மாயையில் உழலும் சமூகம் இது. இதன் அடுத்த படியே சைபர் வெளி உருவாக்கும் தோற்றநிலை மெய்மை எனும் மாயையில் விழும் மனம். நான் எப்படி ப்ரொஜக்டர் வைத்து விளையாடி, ப்ரொஜெக்டர் அரங்கில் விளையாடி வளர்ந்தேனோ அப்படித்தான் 2000 கு பிறகான குழந்தை இந்த டிஜிட்டல் மாயை உலகில் கண்விழித்து விளையாடி வளருகிறது. அது பிறக்கும்போதே மனிதார்த்தம் என்பதை உணரும் உணர் கொம்பை ஒடித்துக்கொண்டே பிறக்கிறது.
மனிதார்த்தம் என்பதை மெய்நிகர் மாயை எந்த அளவு இடம் பெயர்க்கும் என்றால் அது மாயை என்பதையே மறந்து, அது நமது மனிதார்த்தத்தின் ஒரு பகுதி என்று நாம் நம்பிக் கொண்டிருப்போம். உதாரணமாக நமது தொலைபேசி உரையாடல். ஒரு மூளை இல்லாத பொறி மறுபதிப்பு செய்து அளிக்கும் ஒன்று அது. இன்று நமது மூளைக்குள் அந்த போதம் மழுங்கடிக்கப்பட்டு விட்டது. ஏதேனும் தூர தேசத்தில் இருந்து வரும் அழைப்பு இரு வினாடிகள் இடைவெளி விட்டு விட்டு கேட்கும்போது மட்டுமே நமது மூளை சற்றேனும் அதை உணரும். மற்றபடி அந்த மாயையை நாம் எப்போதோ மனிதார்த்தம் என்று நம்ப துவங்கி விட்டோம். இந்தப் புள்ளி அதை மையம் கொண்டே இன்றைய மொத்த டிஜிட்டல் உலகும் இயங்குகிறது.
இருபத்தி ஐந்து வருடத்துக்கு முன்பான lkg குழந்தை கட்டை விரலை பயன்படுத்தும் நுட்பத்தை விட இன்றைய lkg குழந்தை பயன்படுத்தும் நுட்பம் ஆழமானது. மொபைல் வழியே தோற்ற நிலை மெய்மை உலகு அடுத்த தலைமுறை மூளை அமைப்பை வடிவமைக்கத் துவங்கி விட்டது.
இந்தத் தலைமுறையில் இந்த டிஜிட்டல் மாயை எதை மறைக்கும்? ஒரு எளிய உதாரணம் தருகிறேன். தனிமனித வாதம். நுகர்வு கலாச்சாரம் இந்த இரண்டின் கலவையான காலம் இந்த டிஜிட்டல் மாயையால் நிலை நிற்கும் ஒன்று. நமது மொபைலில் டேட்டா தீர்ந்து போனால் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்கிறோம். முகவரை நேரில் கண்டு புதுப்பிக்கும் நிலையை விட இருபது சதவீதம் லாபம்.
ஒரு பெரிய நிறுவனம். அதன் இந்திய ஏஜென்சி. அதிலிருந்து பொருள் வாங்கும் மாநில ஏஜென்சி. அதிலிருந்து பொருளை வாங்கும் மாவட்ட ஏஜென்சி. அங்கிருந்து நகர ஏஜென்சி. அங்கிருந்து நமது தெருமுனை பெட்டிக்கடை. ஒரு பெட்டிக்கடையில் காசு கொடுத்து நாம் செய்யும் ரீசார்ஜ் இந்த வரிசையின் படி உள்நாட்டு பொருளாதார சுழற்சியை அதன் ஸ்தரத்தன்மையை நிர்வகிக்கும் ஒன்று. அந்த சுழற்சியை அறுத்தே நுகர்வோன் அடையும் லாபம் நிகழ்கிறது. ஜட்டி முதல் மொபைல் tv வரை டிஜிட்டல் உலகு வழியே நுகர்வோன் அடையும் லாபம் இறுதியாக அந்த பெட்டிக்கடைக்காரனை கொல்வதில் சென்று முடியும். அதை இந்த டிஜிட்டல் பதப்படுத்திய மூளைகள் ஒரு போதும் உணராது. பத்து ரூபாய்க்கு காப்பி குடித்து விட்டு பெட்டிக்கடையில் டிஜிட்டலில் பணம் செலுத்தி விட்டு செல்வது தனிமனிதன் என ஒரு நுகர்வோரின் லாபம் மட்டுமே. கடந்த ஆறு மாதங்களாக 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இல்லை என்பது அவனது காவனத்துக்கே வராது. அதான் நாலு 500 ரூபா atm ல வருதே அப்புறம் என்ன? என்றும் வினவும் மேதையே இன்றைய டிஜிட்டலன்.
இப்படிப் பல்வேறு கண்ணிகளில் ஆதிக்கம் செலுத்தும் இந்த நெடிய வரிசையில் ஒரு நுகர்வோனுக்கு லாபமோ நட்டமோ எங்கும் ஒரே ஒரு மனித பொறுப்பும் கிடையாது டிஜிட்டல் செய்திகள் மட்டுமே வழிநடத்தும். கடலூரில் ஏர் செல் டீலர் இறுதி நாளில் காசு கட்டிய ரீசார்ஜ் கூப்பன்கள் இரண்டு லட்சம் ரூபாய். அன்று மதியம் ஏர் செல் திவால். மொத்த காசும் நாமம். கடந்த இரு வருடங்களில் டிஜிட்டல் செய்திகளில் மட்டுமே இயங்கி சென்று எய்திய நிலை இது. அடிப்படை ஒன்றுதான் டிஜிட்டல் மாயையை அது மாயை என்பதையே நாம் மறந்து அதனுடன் புழங்கிகொண்டிருக்கிறோம் என்பதே இதன் மையம்.
பல்வேறு உள்ளோட்டங்கள் அடங்கிய இந்த மாயைக்கடலின் ஒரு அலையே இலக்கியத்திலும் வீசுகிறது. எல்லாமே எழுத்துதான் அது புத்தகத்தில் இருந்தால் என்ன டிஜிட்டலில் இருந்தால் என்ன என்று 2000 ஐ சேர்ந்த குழந்தை சொல்லலாம். அதற்க்கு முந்தியவர் சொல்கிரார் எனில் இந்த டிஜிட்டல் மாயையில் அவர் தன்னை இழந்துவிட்டார் என்றே பொருள். எல்லாமே எழுத்துதான். புத்தகத்தில் கிண்டியில் மொபைலில் எதில் படித்தாலும் அதே இலக்கிய அனுபவம்தான். நான் மறுக்க வில்லை (நான் கிண்டிலிலும் வாசிப்பவன்) ஆனால் எதை இழக்கிறோம் என்றால், புத்தகம் எனும் “மேலதிக” அனுபவத்தை. விஷ்ணுபுரம் புத்தகத்தைnநெஞ்சில் போட்டபடி நான் கனவு கண்ட நாட்கள் என் பொக்கிஷ தினங்கள் என்று இன்று உணர்கிறேன். கிண்டிலை நெஞ்சில் போட்டு கனவு காண இருக்கும் தடையை நீக்க அதற்க்கு புத்தகம் போலவே அட்டை (செம்மணி வளையல்) போட்டு வைத்திருக்கிறேன். இந்த மேலதிக ஒன்று அது ஒன்றும் அவ்வளவு முக்கியம் இல்லை என்று சொல்லும் ஒருவர் உயர் தளத்தில் இலக்கியம் என்றல்ல எந்த கலைக்குமே தேவையற்றவர். மேலதிகமான ஒன்றுதான் எக்கலைக்கும் ஆணி வேர். அதன் ஒரு பகுதியே புத்தகம்.
இந்த மேலதிகம் எனும் அம்சம் பெரிதும் மனிதார்த்தம் எனும் நிலையுடன் தொடர்பு கொண்டது. ஆகவேதான் இந்த மேலதிக அம்சத்தை அது சார்ந்த உணர்வுகளை மழுங்கடிக்கும் மெய்நிகர் உலகில் கேள்விகளே இன்றி சென்று விழும் நிலையை நான் ஐயத்துடன் பார்க்கிறேன்.
இந்த உள்ளிருப்பு சூழலில் கொரானா வைவிட வேகமாக இந்த டிஜிட்டல் மாயை பரவுகிறது. அதன் பிடிக்குள் சிக்காதவரிகளையும் அதன் பிடிக்குள் கொண்டு வர அரசு முயலுகிறது. உதாரணமாக என் பெரியம்மா நேரில் சென்று பணம் கட்டி துவங்கிய ஒன்று, அது நின்று போக இணைய பரிவர்த்தனை வழியாக மட்டுமே பணத்தை திரும்ப பெற முடியும் எனும் நிலையை நிர்வாகம் அவர் தலையில் சுமத்தியது.
இப்படி கொரானா போல பரவும் டிஜிட்டல் மாயையே zoom மீட்டிங் எனும் பெயரில் இலக்கியத்தயும் ( குறைந்த பட்சம் நுண்ணறிவு செயல்படும் ஒரே களம்) இப்போது வந்து கெளவி இருக்கிறது. மக்கள் அடித்துப் புடைத்து இலக்கிய காளனை நிலை நிறுத்த zoom இல் குவிவது பார்க்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது. இதன் இணை செயல்பாடாக இலக்கியத்தில் மட்டுமே பெற இயன்ற மேலதிக ஒன்றை அது சார்ந்த போதத்தை இழக்கப்போகிறோம் என்பதும் உண்மை.
எனக்கு இலக்கியம் என்பது கதைகளை பிரித்து அடுக்கும் ஒரு இன்டலெக்சுவல் விவாதம் மட்டுமே அல்ல அது மேலதிகங்களால் ஆனது. தேவதேவனின் ஒட்டு மொத்த இருப்பு அதனுடன் இணைந்ததே அவரது ஒரு சொல். ஒரு மூளையற்ற கணிப்பொறி அசட்டு சட்டகத்துக்குள் காட்டும் தேவ தேவனின் துண்டு அதனுடன் பேச எனக்கு என்ன இருக்கிறது? உத்வேகம் கொண்டு பேசுகையில் யுவன் சந்திரசேகர் கை முத்திரைகளை கண்ட ஒருவனுக்கு அந்த மேலதிக யுவன் இல்லாத யுவனுடனான இலக்கிய அமர்வு எதற்கு ? ஜெயமோகனின் கண்கள், அவர் கட்டை விரலை மடித்து பிற விரல்களால் உள்ளங்கைக்குள் பொதிந்து பிடிக்கும் முத்திரை, உரையாடலை சட்டென இடைவெட்டி எழும் நகைச்சுவை இத்தனையும் கொண்டதுதான் ஜெயமோகனுடனான இலக்கிய சந்தப்பு. ஜெயமோகன் உத்வேகம் கொண்டு வினாக்களுடன் திரிந்த காலத்தில் இப்போ கொரானா இதோ இந்த செவ்வகத்தில் தெரியும் குரு நித்யாவுடன் உரையாடிக்கொள் என்று புற சூழல் சொன்னால் அவர் ஒப்புக்கொள்வாரா.? டிஜிட்டல் சதுரம் வழியே அடைய முடியாதது அந்த மேலதிகம். அந்த மேலதிகம் அதுவே சாராம்சம் கொண்டது.
செயற்கை அறிவு மனித குலத்தை வழிநடத்துமா எனில் வழிநடத்தும். மூளை மழுங்கிய மனித குளத்தை நிச்சயம் செயற்கை அறிவே வழிநடத்தும். அப்படி வழிநடத்தும் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக மேலதிகம் என்பதில் உறையும் சாராம்சம் உள்ளிட்ட மனிதார்த்த பண்புகளை கொஞ்சம் கொஞ்சமாக அது அழிக்கும்.
அதற்க்கு எதிரான கூருணர்வு கொஞ்சமேனும் எஞ்சி இருக்க வேண்டிய இலக்கியக் களத்தில் ai ஊடுருவுவதை ஐயத்துடன் தான் பார்க்கிறேன். நான் எனக்கான இலக்கிய சந்திப்பை எப்படி வகுத்துக் கொள்வது என்பதை கொரானா வரையறுப்பதை என்னால் இக் கணம் வரை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மாறும். எல்லாம் நலம் மீளும். நண்பர்களுடன் நேரில் இலக்கியம் பேசுவேன். நம்புகிறேன். இந்த நம்பிக்கையும் இன்றைய சூழலில் மேலதிகமான ஒன்றுதான்.
கடலூர் சீனு
அன்புள்ள சீனு,
நான் அப்படி சட்டென்று டிஜிட்டல் மாயை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் இந்த டிஜிட்டல் உலகு அளித்திருக்கும் கொடைகளும் அளப்பரியவை. ஒரு மாபெரும் நூலகத்தையே செல்பேசி வடிவில் கையில் கொண்டுசெல்ல முடிகிறது. தேடியவை அக்கணமே சிக்குகுகின்றன. நினைத்த கணத்தில் கம்பராமாயணம் படிக்கமுடியும், எங்கும் என்பது ஒரு வரம்
அதைவிட தொடர்ச்சியாக வாசகர்களுடனும் நண்பர்களுடனும் நிகழும் இந்த உரையாடல். இவ்வாறு உள்ளங்கள் ஒற்றைச்சொல்வெளியாக ஆகமுடியும் என சென்ற காலங்களில் நினைத்ததே இல்லை
டிஜிட்டல் மாயை என எதைச் சொல்வேன் என்றால் நாம் இணையவெளியில் போடும் தகவல்களைத்தான். இவை நிரந்தரமானவை, அழிவதில்லை என நினைக்கிறோம். இந்த தளம் வெளிவரத்தொடங்கி பத்தாண்டுகளாகின்றன. இதில் இணைப்பு தரப்பட்டிருந்த கணிசமான வலைப்பூ எழுத்துக்கள் மறைந்துவிட்டன
ஜெ
அறமாகி வந்தவன்
வேதவேள்விகளின் கர்மகாண்டத்தை கிருஷ்ணன் தடுக்கிறார். பயன்கருதி செய்யும் பலிபூசைகள் தேவை இல்லை என்கிறார். ஒவ்வொருவரும் அவரவர் செயல்களின் விளைவுகளைத்தான் அனுபவிக்கிறார்கள். ஆகவே நல்லசெயல் நல்ல விளைவை உருவாக்கும் என்று சொல்கிறார்
அறமாகி வந்தவன்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers


