Jeyamohan's Blog, page 1057
January 29, 2021
அஞ்சலி:டொமினிக் ஜீவா
ஈழத்தமிழ் எழுத்தாளரும் சிற்றிதழாளருமான டொமினிக் ஜீவா 28-1-2021 அன்று தன் 94 ஆவது அகவையில் மறைந்தார். ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். முற்போக்கு இலக்கியத்திற்காக மல்லிகை என்னும் மாத இதழை நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்தார்.
ஈழ இலக்கியத்தின் பல குறிப்பிடத்தக்க படைப்புக்கள் மல்லிகையில் வெளியாகியிருக்கின்றன. பல ஆண்டுகள் மல்லிகை எனக்கு தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தது. நான் வாசிக்கநேர்ந்தபோது அதன் பொற்காலம் முடிவுற்றுவிட்டிருந்தது. பெரும்பாலும் பயிற்சியற்ற தொடக்கநிலை எழுத்துக்களே அதில் வெளியாகிவந்தன.மல்லிகையில் ஜீவாவின் கேள்விபதில்கள் கூர்மையானவை.
ஜீவா எழுதிய தொடக்ககாலச் சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை என்று நண்பர்கள் சொல்கிறார்கள். நான் வாசித்தவகையில் அவை எளிமையான முற்போக்குக் கதைகளே. ஆனால் அவருடைய தன்வரலாற்றுக் குறிப்புகள் நேர்த்தியானவை. அவர் சென்னை வந்ததை ஒட்டி எழுதிய ஒரு கட்டுரையின் சுருக்கம் எழுபதுகளில் குமுதத்தில் வெளிவந்தது. அதன்வழியாகவே அவரை நான் அறிமுகம் செய்துகொண்டேன்.
ஜீவா எப்படி நினைவுகூரப்படுவார்? ஈழத்தி முற்போக்கு எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராக. சிற்றிதழ் இயக்கத்தின் விடாப்பிடியான முயற்சியின் உதாரணங்களில் ஒன்றான மல்லிகையின் நிறுவனர், ஆசிரியராக. முற்போக்கு எழுத்திற்கு களம் அமைத்துக்கொடுத்த ஆசிரியராக
ஆனால் அதற்கிணையாக அனுபவ முத்திரைகள், முப்பெரும் தலைநகரங்களில் முப்பதுநாட்கள் போன்ற அனுபவக்குறிப்புகள் வழியாகவும் அவர் நினைவுகூரப்படுவார். ஈழச்சமூகத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளில் ஒன்றில் பிறந்து ,முறையான கல்வி பெறாமல் ,தன் அறிவுத்தாகத்தையும் தன்மதிப்பையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு அந்த இடுங்கித்தேங்கிய சூழலுடன் போராடி தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆளுமை அவர். அவருடைய வாழ்க்கை அவ்வகையில் மிக ஈர்ப்பு அளிப்பது. சலிக்காத போராளியாக, மெய்யான கலகக்காரராக தன் காலகட்டத்தின் அடிப்படை இயல்பான மீறலை நிகழ்த்திக்கொண்டிருந்தவர் ஜீவா.
முன்னோடிக்கு அஞ்சலி
January 28, 2021
இலக்கியத்தின் நிலக்காட்சிகளை காண…
ராஜமகேந்திரபுரி [அரசப்பெருநகர்] இன்றைய ராஜமந்த்ரி. ஷண்முகவேல் ஓவியம் வண்ணக்கடல்அன்புள்ள ஜெ
தொடர்ச்சியாக தங்கள் தளத்தில் வெளிவரும் வெண்முரசு வினாக்கள் பகுதியை படித்து வருகிறேன். இன்றைய பகுதியில் சுபஸ்ரீ அவர்களின் நிலக்காட்சி தொடர்பான கேள்விக்கு தாங்கள் அளித்த பதிலை ஓட்டி என்னுள் தோன்றிய சிறு கேள்வியே இங்கு பகிர நினைப்பது.
இந்த கேள்வி பெரும்பாலும் அபத்தமானதாக இருக்கலாம்.இப்போதைக்கு எனக்கு தெரியவில்லை இது அபத்தமானதா என்று. ஏனென்றால் வெண்முரசை இன்னும் வாசிக்க தொடங்கவில்லை. நேற்று தான் இணையத்தில் முதற்கனலை பதிவு செய்தேன். முன்பு ஒருமுறை இணையத்தில் வாசிக்க முயன்றேன். ஆனால் அது சாத்தியப்படவில்லை. ஒரு புத்தகத்தை கையில் எடுத்து வாசிக்கும் போது உள்ள ஒருமை கூடவில்லை. ஆகவே விட்டுவிட்டேன்.
வெண்முரசின் நிலக்காட்சிகளுக்காக அக்கனவு எழுந்த நாளில் இருந்து இருபத்தைந்தாண்டு காலம் இந்திய நில பயணம் மேற்கொள்வதை கூறியிருந்தீர்கள். பின் அப்படி பயணம் ஏதும் செய்யாதவர் சற்று திகைப்போடு இப்படியும் இருக்குமா என சந்தேகம் கொள்ளும் நிலக்காட்சிகளை கூறி அவை உண்மையில் உள்ளவை. அங்கு செல்லாதவருக்கு அது திகைப்பாகத் தான் இருக்கும் என பதில் சொல்லியிருந்தீர்கள்.
என் கேள்வி என்னவெனில் வெண்முரசு வாசிக்கும் எத்தனை பேர் இந்திய நிலப்பயணத்தை மேற்கொண்டு இருப்பார்கள். அவ்வெண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கும் என்பது என் அபிப்பிராயம். இது தவறாக அரைவேக்காட்டுத்தனமாக கூட இருக்கலாம். இப்படி நிலக்காட்சிகளை நேரடியாக காணமல் போவதனால் ஒரு வாசகர் இழப்பது என ஏதேனும் உள்ளதா ? அப்படியெனில் அவை என்ன ?
இன்னொன்று இக்கடிதத்தை எழுத தொடங்குவதற்கு முன் வெண்முரசை ஓட்டி மட்டுமே இச்சந்தேகம் இருந்தது. இப்போது கடைசியாக படித்த தஸ்தாயெவ்ஸ்கின் குற்றமும் தண்டனையும் நாவலின் சித்திரங்கள் மனதில் எழுகின்றன. நாவல் முழுக்க ரஸ்கோல்னிகோவ் கடந்து செல்லும் காமென்னி பாலம் அதன் கீழ் ஒடும் நதி, தூரத்து தீவு, வாஸ்லென்ஸ்கி தெரு, வைக்கோல் போர் சந்தை என பல நிலக்காட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன.
அந்நாவல் உலகம் முழுக்க பல்லாயிரம் பேரால் வாசிக்கப்பட்டு அவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்றும் தொடர்ந்து வாசிக்கப்படுகிறது. அவர்களில் எத்தனை பேர் இரஷ்யாவை கண்டிருப்பர். எனினும் வாசிப்பவரில் அந்நாவல் இன்றியமையாத ஒரு தாக்கத்தை செலுத்துகிறது.
என் கேள்வியை இப்படி சுருக்கி கொள்கிறேன். ஒரு நாவலின் நிலக்காட்சிகளை நேரில் அறியாத வாசகர் மையமாக இழப்பது என ஏதேனும் உள்ளதா ? அப்படியெனில் நிலக்காட்சிகளை அறிவது எத்தனை அவசியமானது ?
இக்கடிதம் தகுதியானதா என்று தெரியவில்லை. தவறாயிருந்தால் மன்னிக்கவும் ஜெ.
அன்புடன்
சக்திவேல்
ஆஸ்டர்விட்ஸ் போர், போரும் அமைதியும் நாவலில் சித்தரிக்கப்பட்டது. ஓவியம் François Gérardஅன்புள்ள சக்திவேல்,
நீங்கள் ஒருபோதும் சென்றிராத நிலக்காட்சிகளை கனவில் கண்டதில்லையா? திகைப்பும் பிரமிப்பும் ஊட்டும் இடங்கள்? விசித்திரமான மலைகள், ஆறுகள்? எனக்கு அப்படி பல இடங்கள் கனவில் வருவதுண்டு
அவை எப்படி வருகின்றன? நாம் செல்லாத இடங்களை அத்தனை துல்லியமாக எப்படி கனவில் காணமுடிகிறது? அந்த துல்லியம் திகைக்கச்செய்வது. உண்மையில் ,கனவில் நாம் காணுமளவுக்கு அத்தனை கூர்மையாக நிஜமான நிலக்காட்சிகளை நேரில் காண்பதில்லை.
ஆய்வாளர்களின் விளக்கம் இது. ஒரு நிலக்காட்சியில் நீங்கள் பலவற்றை கூர்ந்து பார்க்கிறீர்கள். அவை தர்க்கபூர்வமாக உங்களுக்கு தேவையானவை, நீங்கள் நினைவில் நிறுத்திக்கொள்பவை. இவற்றுக்குச் சமானமாகவே உங்கள் ஆழுள்ளமும் நிலக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. கண்கள் பார்ப்பவற்றில் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கமுடியாது. ஆகவே நடைமுறைக்குத் தேவையானவற்றை மட்டும் நினைவாக சேமித்துவிட்டு எஞ்சிய பெருந்தரவுகளை மூளை ஆழுள்ளத்திற்கு செலுத்திவிடுகிறது
அதாவது முக்கியமான தரவுகள் அல்ல, முக்கியமல்லாதவையே பெரும்பாலும் ஆழுள்ளத்திற்குச் செல்கின்றன. ஆழுள்ளம் மிகப்பிரம்மாண்டமானது. அது தகவல்களின் கிடங்கு. அங்கே அவை ஒன்றோடொன்று தன்னிச்சையாக இணைவுகொள்கின்றன. அதன்வழியாக குறியீட்டுப்பொருள் கொள்கின்றன. ஒரு அகன்ற நிலம் விடுதலை என்றோ பாதுகாப்பின்மை என்றோ தனிமை என்றோ உங்களுக்குள் பொருளேற்றம் செய்யப்பட்டிருக்கும்
கனவுகள் ஏதோ வகையில் துயில்கொள்ளும்போதிருக்கும் உணர்வுகளின் நீட்சிகள். அந்த உணர்வுகளுக்குரிய படிமங்களை ஆழுள்ளமென்னும் கிடங்கிலிருந்து கனவுகள் எடுத்துக் கொள்கின்றன. மேதை ஒருவன் கைபோனபோக்கில் எடுத்து இணைத்து ஓவியமொன்றை அமைப்பதுபோல.அது தற்செயல்களின் கலைடாஸ்கோப் கலை என்று தோன்றும். ஆனால் உண்மை அது அல்ல. அந்த இணைப்பை நிகழ்த்துவதில் உணர்வுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. அந்த உணர்வுகளுடன் இணைந்த நிலக்காட்சிகள் வருகின்றன. உள அழுத்தத்தில் இருப்பவர் உயர்ந்த பாறைகள் நிறைந்த விசித்திர நிலவெளியில் எவராலோ துரத்தப்பட்டு மூச்சுவாங்க ஓடுவதுபோல கனவு காண்கிறார்.
கனவில் இருக்கும் இந்த படைப்பூக்கநிலையே வாசிப்பதிலும் உள்ளது. நான் மீண்டும் மீண்டும் சொல்லிவருவதுபோல மொழிவழியாக ஒரு கனவை உருவாக்கிக்கொள்வதற்குப் பெயர்தான் இலக்கியவாசிப்பு. இலக்கியப்படைப்புகள் அவற்றைக்கொண்டு கற்பனைசெய்துகொள்ள தெரிந்தவர்களுக்காகவே எழுதப்படுகின்றன.புனைவுமொழி கற்பனையை தூண்டிவிடுகிறது.
நாம் தெரிந்த தகவல்களைக் கொண்டோ, அதன் அடிப்படையிலான தர்க்கத்தைக்கொண்டோ ஓர் இலக்கியப்படைப்பை வாசிப்பதில்லை. சொந்த அனுபவங்களைக்கொண்டுகூட இலக்கியப்படைப்பை வாசிப்பதில்லை. தகவல்களும் தர்க்கமும் அனுபவங்களும் எல்லாம் ஒரு சிறு துளி போதும். ஒரு தொடக்கம்தான் அவை. இலக்கியப்படைப்பு அவற்றை தூண்டி வளர்க்கிறது. கற்பனையில் முழுமையானதொரு வாழ்க்கைச்சித்திரத்தை உருவாக்குகிறது. நிலக்காட்சியை உருவாக்குகிறது
யசுநாரி கவபாத்தாவின் பனிநிலம் நாவலுக்கான சித்தரிப்பு ஓவியம்1978 ல், என் பதினாறாவது வயதில் நான் முதல்முறையாக ஒரு ருஷ்யநாவலை வாசித்தேன். ஒய்.எம்.சி.ஏ நூலகத்தில் எடுத்து வழியெங்கும் வாசித்துக்கொண்டே வந்தேன். மிகயீல் ஷோலக்கோவின் டான் நதி அமைதியாக ஓடுகிறது என்னும் நூலின் மலையாள வடிவம். எனக்கு அது அளித்த கனவை இப்போதும் நினைவுகூர்கிறேன். நான் அதுவரை பனிவெளியை சினிமாக்களில்கூட பார்த்ததில்லை- அன்றெல்லாம் சினிமா பார்ப்பதே மிக குறைவு. கல்லூரி வரும்வரை நான் பார்த்த சினிமாக்கள் முப்பதுக்கும் குறைவாகவே இருக்கும்.
பனிவெளியில் நான் நடந்தேன். என் உடல் நடுங்குவதுபோல குளிரை உணர்ந்தேன். மேலும் ஐந்தாண்டுகளுக்குப் பின் வீட்டைவிட்டு ஓடிப்போய் இமையப்பனியை பார்த்தேன். நான் அதை துல்லியமாக முன்னர் கண்டிருந்தேன். இப்போது நிறைய பனியை பார்த்துவிட்டேன். நான் அன்று கண்ட அதேவெளிதான். எவ்வகையிலும் வேறொன்று அல்ல.
அந்தப்பனிவெளியை எனக்குக் காட்டியது எது? அதை நான் நிறைய யோசித்திருக்கிறேன். ஸ்புட்னிக், சோவியத் லாண்ட் போன்ற அன்றைய இதழ்களில் வந்த சில வண்ணப்படங்களாக இருக்கலாம். குமுதம் அட்டையில் ஒரு துறவி எடுத்த பனிவெளியின் படம் ஒன்று வந்திருந்தது. அதில் ஒரு யாக் நின்றிருக்கும். உள்ளே ‘அட்டையில் கரடிவிடவில்லை’ என்று அந்த யாக் பற்றி எழுதியிருப்பார்கள். அந்தப்படமாக இருக்கலாம். ஏனென்றால் அதை பின்னர் நான் நினைவுகூர முடிந்தது
ஆனால் அவ்வளவுதான். அதுவே போதுமானதாக இருந்தது. அந்த எளிய புகைப்படங்களிலிருந்து கனவு கிளம்பி பெரும்பனிப்பாலையையே எனக்குக் காட்டியிருக்கிறது. அவ்வாறு நான் கல்கத்தாவின் தெருக்களில் அலைந்தேன். பதினெட்டாம் நூற்றாண்டின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கை கண்டேன். கடலடியில், நிலவில் ,செவ்வாய்கோளில் நின்றிருந்தேன். எல்லாமே சாத்தியம்தான்.
அங்கு சென்றிருந்தால்தான் காட்சியை காணமுடியுமென்றால் இலக்கியம் எதற்காக? அந்தக்கலையின் தேவையே இல்லையென்றாகிவிடுகிறதே. சரி, உண்மையான நிலக்காட்சிகளுக்குச் செல்லலாம். கற்பனையான நிலக்காட்சிகளுக்கு எப்படி வாசகன் செல்லமுடியும்? சென்ற நூற்றாண்டின் மாஸ்கோவை எப்படி நான் தல்ஸ்தோய் கதைகளில் பார்க்கமுடியும்? மூவாயிரமாண்டுகளுக்கு முந்தைய அஸ்தினபுரியை எப்படி பார்க்கமுடியும்? அயல்கோள்களின் நிலங்களை எப்படி பார்க்கமுடியும்?
இலக்கியம் இதழியல் அல்ல. அது யதார்த்தத்தை காட்டவில்லை. யதார்த்தம் அதற்கு மூலப்பொருட்களையே அளிக்கிறது. அதைக்கொண்டு இலக்கியம் தன் கற்பனையால் நிகர்வாழ்க்கை ஒன்றை உருவாக்கிக்கொள்கிறது. தன் கற்பனையால் அக்கற்பனையை தொடர்ந்து சென்று வாசகனும் நிகர்வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளுகிறான். அதற்கு அவனுக்கு துளியளவுக்கு செய்திகள்போதும். ஒரு தொடக்கமாக அமையத்தக்க காட்சியனுபவம்போதும். எப்படி கனவு துளியை பெருக்குகிறதோ அப்படி வாசிப்பெனும் கனவும் துளியை பெருஞ்சித்திரமாக ஆக்கும்
அப்படி ஆகாதவர் என்ன செய்வது? அது அடிக்கடி கேட்கப்படுகிறது. அது எதனால் நிகழ்கிறது? ஒன்று, தவறான நம்பிக்கைகளால். இரண்டு, தவறான வாசிப்புமுறையால். மூன்று. குறைவான முதலறிதல்கள் மற்றும் முதலனுபவங்களால்.
இலக்கியப்படைப்பு அளிப்பது ஒரு தகவல்தொகுப்பை என்றும், அதை தெரிந்துகொள்வதே வாசகனின் பணி என்றும் நம்பும் பலர் உண்டு. நம் கல்விமுறை அப்படித்தான் பயிற்றுகிறது.இந்த நம்பிக்கையால் இலக்கியத்தை ஒரு பாடபுத்தகம்போல, ஓர் அறிவியல் நூல் போல படிக்கிறார்கள். ஆகவே கற்பனை நிகழாமலாகிறது. அப்படி கற்பனைசெய்வது பிழை என நினைப்பவர்களும் உண்டு
இலக்கியப்படைப்பை படிக்கையில் உங்கள் கற்பனை விரியட்டும். சொற்களிலிருந்து நீங்கள் உங்களால் முடிந்த அளவுக்கு உச்சகட்ட கற்பனையைச் செய்துகொள்ளுங்கள். நிலங்களை, இடங்களை, மனிதர்களை, நிகழ்வுகளை. அக்கற்பனையில் கதையை உண்மையான வாழ்க்கையென நிலமென நிகழ்த்திக்கொள்ளுங்கள். வாசிக்கையிலேயே அது நிகழவேண்டும். கொஞ்சம் பயின்றால் அதன்பின் வாசிப்பதே மறந்து அந்தக் கற்பனைமட்டும் நிகழ்ந்தபடியே இருக்கும்.ஒரு கனவென நீங்கள் அந்தக்கதையை கண்டு, அதற்குள் இருப்பீர்கள். அதுவே உண்மையான இலக்கியவாசிப்பு.
ஆனால் செயற்கையாக முயன்று கற்பனைசெய்யப்போனால் சம்பந்தமில்லாத கற்பனைகளுக்குச் செல்வீர்கள். அது பிழையான வாசிப்பு. தன்னியல்பாக கற்பனை விரியவையுங்கள். உதாரணமாக, பனிவெளியில் சூரியன் செக்கச்சிவந்த கனிபோல் எழும் காட்சியை நீங்கள் தல்ஸ்தோய் நாவலில் வாசித்தால் நீங்களறிந்த சூரிய உதயத்துடன் இணைந்து அக்காட்சி இயல்பாக விரியவேண்டும். செயற்கையாக செய்யப்போனால் சூரியன் உதயமாவதற்கு ஏதாவது அர்த்தம் கற்பிப்பீர்கள். அல்லது வேறெதையாவது எண்ணிக்கொள்வீர்கள்.
செவ்வாய் கிரகத்தின் நிலம். Gregory Benford எழுதிய The Martian Race என்னும் அறிவியல்புனைவுக்கான சித்தரிப்புதவறான வாசிப்புமுறை என்பது இலக்கியப்படைப்பை ஓர் ஆய்வாளனாகவோ மாணவனாகவோ தன்னை நிறுத்திக்கொண்டு வாசிப்பது. ஆய்வாளர்களும் மாணவர்களும் பெரும்பாலும் இலக்கிய அனுபவம் அடைவதில்லை என்பதற்குக் காரணம் இதுவே. ஆய்வாளரோ மாணவரோ அல்லாதவர் அந்தப் பாவனையில் வாசித்தால் அதைவிட அசட்டுத்தனம் வேறில்லை.
வாசகன் படைப்பாளியின் இணைப்படைப்பாளி. படைப்பாளி சொல்லில் அளிப்பதை மீண்டும் காட்சியாக ஆக்கவேண்டியது வாசகனின் வேலை. அவன் அதற்கு மறுத்துவிட்டால் ஆசிரியன் சொன்னவை வெறும் சொற்களாக, வெறும் செய்திகளகா நின்றிருக்கும். வாசகன் எழுத்தாளனுடன் இணையாக எழுந்து கற்பனையில் திளைக்கவேண்டியவன், அதற்காகவே புனைவுகள் எழுதப்படுகின்றன.
அரிதாக நமக்கு சிலவிஷயங்கள் பற்றிய போதிய தகவல்களும், சொந்த அனுபவங்களும் குறைவாக இருக்கும். நான் யூரி பலாயன் எழுதிய தூந்திரப்பிரதேச கதைகளை வாசித்தபோது அவ்வாறு உணர்ந்தேன். அதற்கு தூந்திரப்பிரதேசம் பற்றிய கொஞ்சம் புகைப்படங்களை தேடிப் பார்த்தேன். கொஞ்சம் செய்திகளை வாசித்துக்கொண்டேன்.
பிமல் மித்ராவின் கல்கத்தா- காட்சி சித்தரிப்புஐரோப்பாவின் பழங்காலம் சார்ந்த படைப்புக்களை வாசிப்பதற்கு அக்கால ஓவியங்களுடன் ஓர் அறிமுகமிருப்பது மிகப்பெரிய உதவியை அளிக்கிறது. நம் கற்பனையை தூண்டி மிகவிரிவான சித்திரத்தை அளிக்கிறது. உலகின் செவ்வியல் படைப்புகளுக்கு மிகச்சிறந்த ஓவியச்சித்தரிப்புகள் வந்துள்ளன. ஓரளவு திரைக்காட்சிகளையும் இணைத்துக்கொள்ளலாம். இவ்வாறு நம்முள் ஒரு அனுபவத்தளத்தை உருவாக்கிக்கொண்டால் நம் கற்பனையில் விரிவாக ஆக்கிக்கொள்ளலாம்
இலக்கியம் ஒரு கனவு. மொழிவழிக்கனவு. மொழியை கனவாக ஆக்குவது வாசகனின் கையிலிருக்கிறது. அதன்பெயர்தான் வாசிப்பு, அதற்கு நாம் முயன்றால் போதும்
ஜெ
தாகூர், நவீன இந்தியச் சிற்பியா?
அன்புள்ள ஜெயமோகன்
நலம்தானே. உங்கள் கட்டுரைகள் மநுஸ்மிருதி மற்றும் எழுத்தாளனின் இருள் இரண்டும் நல்ல தெளிவையும் ஒரு திறப்பையும் கொடுத்தது. [எழுத்தின் இருள்,மனு இன்று ]
ராமச்சந்திர குஹாவின் புத்தகத்தை பற்றிய கட்டுரையை படித்தேன். ரபீந்திரநாத் தாகூரை நமது தேசத்தின் சிற்பிகளில் ஒருவராக காண்கிறார். இது சரி என்றே படுகிறது. எனது தலைமுறையிலும் (எனக்கு 46 வயது ) எனக்கு சற்று முன் பிறந்தவர் கணிசமான பலருக்கு ரவீந்தர் அல்லது ரவீந்திரநாத் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கும்.
அவரது சிறுகதைககள் சிலவற்றை என் கல்லூரி நாட்களில் படித்திருக்கிறேன். அதில் அவர் ஒரு “எக்ஸிஸ்டனிலிஸ்ட்” போலவே தோற்ற்றம் அழிக்கிறார். அவரை பற்றி அதிகம் படிக்காமல் போனதற்கு ஒருகாரணம் அந்நாட்களில் கூட இருந்த வங்காளிகளின் மேட்டிமை பேச்சு. “What Bengal thinks today India will think tomorrow” வகையறா பேச்சுக்கள். மலையாளிகளே பரவாயில்லை என்று தோன்றும். நன் படித்த ஒரே வங்காள நாவல் ஆரோக்கியநிகேதனம் (நீங்கள் சிபாரிசு செய்தது).
தாகூர் பற்றி முடிந்தால் ஒரு கட்டுரை எழுத முடியுமா.
அன்புடன்
பரத்
அன்புள்ள பரத்
தாகூர் பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு யூ.ஆர்.அனந்தமூர்த்தி என்னை அழைத்தார். தாகூரின் மொத்தப்படைப்புகளிலும் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் வரவுள்ளன, தமிழில் அதற்கான பொதுத்தொகுப்பாளராக நான் செயல்பட முடியுமா என்று கேட்டார். நான் ஒப்புக்கொண்டேன். அந்த முயற்சி நிகழாதுபோயிற்று.
தாகூரின் கட்டுரைத்தொகுதியை அப்போது வாசித்தேன். அதையொட்டி ஒரு கட்டுரை எழுதி பாதியில் நிறுத்திவிட்டேன். முடிக்கவேண்டும்.
என் கணிப்பில் தாகூரின் நாடகங்களே முதன்மையான படைப்புகள். கவிதையும் புனைவும் இணைபவை அவை.அடுத்தபடியாக அவருடைய சிறுகதைகள். அவை இந்திய மொழிகளனைத்திலும் பெரும் செல்வாக்கு செலுத்தியவை. ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா இருவரிலும் அச்செல்வாக்கைக் காணலாம். தாகூரின் கோரா தான் இந்தியமொழிகளில் எழுதப்பட்டவற்றில் நாவல் என்னும் வடிவில் அடையப்பட்ட முதல் வெற்றி. முன்னோடிப் படைப்பு என்ற தகுதியை மட்டுமே கொண்டவை அதுவரை வந்த படைப்புகள். கோரா என்றும் வாழும் ஒரு செவ்வியல் படைப்பு.
அடுத்தபடியாக அவருடைய கவிதைகள். அவை மொழியாக்கத்தில் நிறைய விடுபட்டே நமக்கு கிடைக்கின்றன. தமிழ், ஆங்கில மொழியாக்கங்களில் தாகூர் சரியாக வெளிப்படுவதில்லை. சம்ஸ்கிருதத்திற்கு அணுக்கமான மலையாளத்தில் தாகூரின் கவிதைகளின் சொல்லழகை காணமுடிகிறது. அவருடைய இசைப்பாடல்கள் மிக அருமையானவை என வங்காளிகள் சொல்வதுண்டு.அவர்கள் பாடிக்கேட்டபோது அப்படித்தான் தோன்றியது.
தாகூரின் கவனிக்கப்படாத எழுத்துக்கள் அவருடைய பயணக்கட்டுரைகள். அவர் ஓர் உலகப்பயணி. மிகநுணுக்கமான காட்சிச்சித்தரிப்புகள் அவருடைய பயணக்கட்டுரைகளில் உள்ளன. நூறாண்டுகளுக்கு முன் சாதாரணமாக எவரும் பயணம் செய்யாத அரேபியப் பழங்குடிகளுடனெல்லாம் சென்று தங்கி எழுதியிருக்கிறார். பயணம் உருவாக்கும் உள எழுச்சியை கவித்துவத்தால் தொட முடிந்த அரிதான சிலரில் ஒருவர் தாகூர். உலக இலக்கியத்திலேயேகூட அவ்வகையில் அவருடன் ஒப்பிட சிலரே உள்ளனர்
தாகூர் இந்தியாவின் இலக்கியமுன்னோடிகளில் ஒருவர். ஒரு மாபெரும் வழிகாட்டி.
ஜெ
தாகூரின் கோரா அனந்தமூர்த்தி, பைரப்பா, தாகூர் வம்சவிருட்சாவும் கோராவும் -சுசித்ரா கோரா- கடிதம்- கண்ணன் தண்டபாணிவாலொடுக்கம்
அன்புள்ள ஜெ,
இன்று வேறெந்த தளத்தைவிடவும் உங்கள் தளத்தில்தான் கடிதங்கள் வெளியாகின்றன. கடிதங்கள் எழுதியே பலர் எழுத்தாளர்களும் ஆகிவிட்டார்கள். நான் உங்களுக்கு எட்டு கடிதங்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன். என் கடிதங்களுக்கு நீங்கள் ஒருசில வரிகளில் பதிலளித்திருக்கிறீர்கள். ஆனால் எதையும் பிரசுரிக்கவில்லை. அக்கடிதங்களில் பார்வையா மொழியா என்ன பிரச்சினை என்று அறிய ஆவலாக இருக்கிறேன்
எம்.ஆர்.சுந்தர்ராஜன்
அன்புள்ள சுந்தர் ராஜன்
உங்கள் முதல் கடிதம் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றி என நினைக்கிறேன். அதன்பின் நீங்கள் அனுப்பிய எல்லா கடிதங்களும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் போன்றவற்றில் நீங்கள் பார்த்த சீரியல்களைப் பற்றி. கடைசியாக இரண்டு கடிதங்கள் பிக்பாஸ் பற்றி, திரையரங்கில் நூறுசதவீதம் ஆட்களை அனுமதிப்பது பற்றி.
ஆரம்பம் முதலே ஒரு கொள்கையை வைத்திருக்கிறேன். இந்த தளத்திற்கு கொஞ்சபேர் தவறாமல் வந்து வாசிக்கிறார்கள் என்றால் அதற்குக்காரணம் இங்கே பிற எல்லா இடங்களிலும் இருக்கும் அரட்டை – விவாதம் ஆகியவற்றுக்கு அப்பால் சில புதிய விஷயங்கள் பேசப்படுகின்றன என்பதுதான். தமிழகத்தில் எப்போதுமே மூன்றுவிஷயங்கள்தான் ஆவேசமாகப் பேசப்படும். முறையே சினிமா, சாப்பாடு, அரசியல்.
சினிமா பற்றிய எல்லா பேச்சுமே சினிமாபற்றிய மோகத்தை மட்டுமே வெளிப்படுத்துபவை. பொழுதுபோக்குக்காக மட்டுமே சினிமா பார்க்கப்படுகிறது. சாப்பாடும் அப்படியே. வெறும் மோகம்.ஆகவே எப்போதுமே வெறும் அரட்டையாகவே அது நிகழ்கிறது. எத்தனை சீரியலும் சினிமாவும் பார்த்தாலும் எவரும் அறிவார்ந்து எதையும் அடைவதில்லை. அந்த சீரியலை, சினிமாவை தொடர்ந்துசென்றுகூட எதையும் வாசித்து தெரிந்துகொள்வதில்லை.
சினிமாவே ஆனாலும்கூட ஒரு திட்டத்துடன் தொடர்ச்சியாக முழுமையாக சினிமாக்களைப் பார்ப்பவர்களுக்குத்தான் அதனால் பயனுண்டு. உதாரணமாக ஒருவர் ஹோலோகாஸ்ட் படங்களில் சிறந்த ஐம்பதை தேர்வுசெய்து ,ஐம்பதையும் தொடர்ந்து பார்த்து, கூடவே தேவையான செய்திகளையும் பின்னணிவரலாற்றையும் வாசித்தறிந்து, தன் கருத்துக்களை தொடர்ச்சியாக குறிப்புகளாக எழுதிவைத்துக்கொண்டு, அதன்பின் தொகுத்துக்கொண்டு யோசித்தால்தான் சினிமாவால் பயன். அங்கிங்காக ஆர்வம் போனபோக்கில் பார்க்கும் படங்கள் வெறும் உதிரிக்காட்சிகளாக நினைவில் நிழலாடும், அவ்வளவுதான்
அதோடு, காட்சியூடகம் பெருவணிகம். ஆகவே மிகப்பெரிய விளம்பரம் செய்யப்படுகிறது. பொதுப்பரபரப்பு உருவாக்கப்படுகிறது. உலகமே அதனால் அடித்துச்செல்லப்படும். பொதுக்கருத்து உருவாகி வரும். அதனுடன் தானும் மிதந்து ஒழுகி பரவசமடைவது, விவாதிப்பது அறிவுச்செயல்பாடு அல்ல. கேம் ஆஃப் த்ரோன்ஸ் வந்தபோது உலகமே அதைப்பற்றிப் பேசியது. இப்போது அந்தப்பேச்சு எங்கே? அதற்கு என்ன இடம்?
இங்கே அரசியல் எப்போதுமே உறுதியான கட்சிகட்டல். பெரும்பாலும் மதம், சாதி சார்ந்துதான் அந்நிலைபாடு எடுக்கப்படுகிறது. அது ஒருவகை மந்தைமனநிலை. எடுத்துக்கொண்ட தரப்பின் எல்லாவற்றையும் எல்லாவகையிலும் நியாயப்படுத்துவது. கண்மூடித்தனமான தலைமைவழிபாடு. பரவசமான நாயக வழிபாடு. அங்கே விவாதம் என்பது ஒருவகை ஆணவநிறைவு, ஒருவகை நாவரிப்பு தீர்த்தல். அதனால் பயன் ஏதுமில்லை. அரசியலே இப்போது அரசியல் வசை, அரசியல் நையாண்டியாக மாறிவிட்டது.
ஆகவே இந்த சினிமா, சாப்பாடு, அரசியல் அரட்டைகளுக்கு இடமளிக்கவேண்டாம் என்பது என் எண்ணம். தவிர்க்கவே முடியாதபோது மட்டுமே குறிப்பிடத்தக்க சினிமாக்கள் பற்றி எழுதுகிறேன். அதுவும் வேறு எவராவது எழுதியிருக்கிறார்களா என்று தேடிப்பார்த்து இல்லையென்றால் மட்டும் எழுதுகிறேன். கட்சியரசியல் பற்றி எதுவுமே பேசுவதில்லை. சமூக ஊடகங்களில் முழுக்கமுழுக்க நிறைந்திருப்பவை இவைதானே. அதற்கு வெளியே ஓர் இடம், அதுவே இந்தத் தளத்தின் நோக்கம்
அயலூர் நாய் போல வாலை கவட்டைக்குள் வைத்து, ஒருகண் முன்னால் ஒரு கண் பின்னால் பார்க்க, அப்படியே பாந்தமாக நடந்து இந்த சந்தடியை கடந்துவிட முயல்கிறேன். அவ்வப்போது கல்லடிகள் பட்டாலும் கால்கள் நடுவே சென்றுவிடுவது இயல்கிறது.
ஜெ
ராஜாம்பாள்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ.,
ராஜாம்பாள் பருப்பதிப்பைக் கீழ்க்கண்ட தளத்தில் படித்துக்கொண்டிருக்கிறேன்.
http://www.tamilvu.org/library/nationalized/pdf/74-rangarajan.j.r/raajaambaal.pdf
ஒரு சந்தேகம்.. பின்வருவது ராமண்ணா சொல்லும் வசனம்:
“ஜோஸ்யம் பார்ப்பதே மகாபாவம், அப்படியிருக்க உள்ளதை இல்லையென்று ஜோசியர்கள் சொல்வார்களாகில் அதற்கு மேற்படட பாவம் உலகத்திலேயே கிடையாது”
ராமண்ணா, பணம் பறிப்பதற்காகப் பாவக்கணக்கை அதிகமாக்கிக் காட்டியிருக்கலாம்.. ஆனாலும் “ஜோஸ்யம் பார்ப்பது பாவம்” என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. நேரமிருப்பின் இது குறித்து விளக்க முடியுமா ?
பி.கு: “பறையர் வீடடில் கூட சாப்பிடுகிறான் ‘ என்பது “கண்ட கண்ட இடங்களில் சாப்பிடுகிறான்” என்று மறுபதிப்பில் மாற்றப்பட்டுள்ளது. பொதுப்புத்திக்குக் கொஞ்சம் தாமதாக வந்திருக்கிறது.
நன்றி
ரத்தன்
அன்புள்ள ரத்தன்,
சோதிடம் பார்ப்பது பாவம் என்பது பக்திமரபின் பொதுநம்பிக்கை. இறைவனிடம் முற்றாக தங்களை ஒப்படைப்பவர்கள் சோதிடம் பார்க்கக்கூடாது
பொதுவாக சோதிடர்களே அதிகம் சோதிடம் பார்க்கவேண்டாம், சோதிடம் பார்ப்பது பாவம் என்று சொல்லி தங்கள் வாடிக்கையாளர்கள் வேறெங்கும் செல்லாமல் பார்த்துக்கொள்வதுண்டு. ராமண்ணா அதை ஒரு வியாபார உத்தியாகவே சொல்கிறார்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களின் ‘ராஜாம்பாள்’ கட்டுரை வாசித்தேன். ஆங்கிலேயே ஆட்சியில் இருந்த ஊழல் பிரமிக்க வைக்கிறது. ஒரு சொற்பொழிவிலும் நீங்கள் அதனை சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். தாங்கள் நாடாள ஊழலினை பெரிதும் ஊக்குவித்து வந்திருக்கின்றனர் ஆங்கிலேயர்கள். அதனை இங்குள்ள மேட்டிமை வர்கத்தினர் மிகவும் பயன்படுத்தி உள்ளனர்.
கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டது போல, இவ்வகையான ஊழலின் மேல் எந்தஒரு குற்ற உணர்வே இல்லாத ஒரு சமூகமாக நாம் இருந்திருக்கிறோம். அல்லது அதனை எதிர்க்கவோ யாரும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். ஊழலும் ஒரு படிமமாக மாறியதோ என்றே எனக்கு தோன்றுகிறது. ஒரு சமூகத்தில் ஒரு விஷயம் படிமமாக மாறுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்றே நினைக்கிறேன். அது எதுவாயினும். அது மக்களின் அன்றாடத்தில் ஆழமாக சென்று விட்டு படிமமாகிறது. நாம் இன்று கொண்டாடும் பல்வேறு நல்ல விஷயங்களும் சரி, தெய்வங்களும் சரி படிமமாகவோ ஆழ்படிமமாகவோ மாறியே இன்று நம்மிடம் இருக்கிறது.
அப்படி இருக்க ‘ஊழல்’ என்ற படிமத்தை உடைக்க அதை நம் அன்றாடங்களில் இருந்து நீக்க வேண்டும். மக்களிடம் குற்ற உணர்வு இல்லாத வரையில் அது அப்படியே தான் இருக்கும். இன்றும் நாம் அப்படியே தான் வாழ்கிறோம். ஆனால் இன்று அதை விட ஒரு படி கீழே போய், ஊழல் செய்த அதிகாரியோ/அரசியல்வாதியோ கைதான செய்தியைப் பார்த்து மகிழ்ச்சியடையும் நாம், ஓட்டுக்கு காசு கொடுத்தால் வரிசையில் நிற்கிறோம். இது என்றுமுள்ள மனநிலையே ஆனாலும், ‘ஊழல்’ படிமத்தில் இருந்து ‘ஆழ்படிமமாக’ மாற இது வழி வகுக்கும்.
இதனை எப்போதும் ஒரு அசட்டு விவாதமாக, “அவன் கொடுக்கிறான், நான் வாங்குறேன்”, “ஊரு உலகத்துல நடக்காததா”, என்று நம்மிடம் ‘ஊழல்’ மீது வரும் குற்ற உணர்வை திசை திருப்பி நமக்கு நாமே ஒரு சமாதானம் தேடிக்கொள்கிறோம். இது மிகவும் அபாயகரமானது. ‘மேலும் கீழும்’, ‘கீழும் மேலும்’ காரணம் சொல்லி இத்தீயை நாம் வளர்த்துக் கொண்டு தான் உள்ளோம்.
நான் பலமுறை யோசிப்பது உண்டு. ஏன் இப்படி களை மட்டும் இவ்வளவு வேகமாக பரவி விடுகிறது என்று. அது பார்த்தீனியம் போன்ற பூண்டானாளும் சரி. அதன் வீரியம் பயனுள்ள/அறமுள்ளவற்றை விட பலமடங்கு அதிகமாக உள்ளது. அல்லது உலகில் மனிதன் பயன் கொள்ளும் செயல்கள் மிகவும் சொற்பமானவையே. அதனால் தான் அவன் சாதாரணமாக அறமில்லாவற்றை நாடிவிடுகிறானோ என்னவோ.
இவ்வளவும் இருக்க அன்பும், அறமும் இல்லாமல் இருந்தால் எதுவுமே நிலைத்திருக்காது. அப்படி நிலைத்திருந்தாலும் பொருளற்று இருக்கும். அப்பொருளின் மதிப்பினாலேயே அறம் என்றும் நிலைத்து நிற்கிறது. சமூகத்தில் அறமுள்ளோர் இருப்பதாலே ஒரு சமன் நிலை ஏற்படுகிறது. தங்களின் ‘அறம்’ சிறுகதை தொகுப்பில், போன்றோர்கள் இருப்பதால்தான் நம்மில் அந்த நம்பிக்கை என்றும் அணையாமல் உள்ளது. அவர்களைப் போலும் அவர்கள் செய்த செயலைப் போலும் நாம் நம் சமூகத்தில் ஆழ்படிமமாக மாற்றுவோம் என்றால் அன்று அறம் உச்சத்தில் நிலைத்து நிற்கும்.
‘தஸ்தயேவ்ஸ்கி’யின் ‘கேலிக்குரிய மனிதனின் கனவு’ சிறுகதையில் வருவது போல, அவன் ஒரு புதிய உலகிற்கு போய் அங்குள்ளவர்களை(அறமோடு வாழ்ந்தவர்களை) மாற்றி அனைத்து குற்றமும் செய்ய வைக்கிறான். ஏனோ அவர்கள் தாங்கள் முன்னோர்கள் எப்படி இருந்தார்கள் என்பதனை ஏற்காமலும், அதனை கேலிசெய்தும் வாழ்கின்றனர். எதுவானாலும் அது படிமமாக மாறினால் சமூகத்தில் வேரூன்றி கிளை விடுகிறது. அதனை அன்பினால் மட்டுமே சமன் செய்ய முடியும்.
அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி
நீலம் எழுதும் வழி

அன்புள்ள ஜெமோ,
நீங்கள் நீலத்தை எந்த மனநிலையில் எழுதுகிறீர்கள்? ஒருபுறம் இரு தனி உயிர்களின் உணர்வுகள். மறுபறம் ஒரு மக்கள் கூட்டத்தின் கதை. எப்படி கூடுவிட்டு கூடு பாய்கிறீர்கள்? அந்த வித்தை எனக்கும் கற்று தந்தால் உருப்படுவேன். பெரும்பாலும் காலையில் முதல் வேலையாக படிக்கிறேன். உடனை கனவு தான். உள்ளேவேறு ஒரு வாழ்வு ஓடுகிறதே.
முதல் பகுதியில் நீங்களே ராதையாகாமல் அந்த உணர்வுகளை எழுத முடியாது. நான் ராதை ஆகாமல் அதைப் படிக்க முடியாது. ராதையின் அனைத்து பகுதிகளையும் உணரத் தான் முடிகிறது. அதை மற்ற பகுதிகளைப் போல பகுத்தறிய முடிவதில்லை. அவ்வாறு பகுத்தறிய முற்பட்டால் தூக்கம் கெடுவதைத் தவிர வேறெதுவும் நடப்பதில்லை
மாறாக புத்தியை ஏறக் கட்டிவிட்டு உணர்வால் மட்டும் படித்தால், என்னில் எங்கோ ஓர் இயைின் அசைவை, அது தன் முயற்சியில்லாமல் தானாக அசையும் உணர்வைப் பெறுகிறேன். உணர்ந்ததை வார்த்தைகளாக்கவும் முடிந்ததில்லை.
உண்மையில் ராதையின் பகுதிகள் எனது புத்திக்கு விடப்படும் சவால். என் மனம் புத்தியை விஞ்சும் இடம். இது எவ்வகை எழுத்து? இதுவரை இப்படி ஒரு வகையை இதற்கு முன் நீங்கள் எழுதியிருக்கிறீர்களா? நீங்கள் படித்தவற்றில் இதே வகையைச் சேர்ந்த ஓர் எழுத்தைச் சுட்ட இயலுமா?
நீலத்தை பல முறை பல விதங்களில் படிக்கலாம். இது போல் தமிழ் பெண்ணின் அனைத்து அழகுகளும் வெளிப்படும் மொழியாட்சியை சமீபத்தில் (என் வாசிப்பு அனுபவத்தில்) கண்டதில்லை. எதுகையும் மோனையும் பொருளோடு தழுவும் ஓர் எழுத்தைப் படித்ததில்லை. எத்தனை வார்த்தைகள், எத்தனை அர்த்தங்கள்?! இதோ இவ்வரி,
“நீரும் நிலமும் ஆகி நின்றது உரு. மேலே காற்றும் ஒளியும் வானும் ஒன்றாகி நின்றது அரு. நடுவே கைக்குழல் கொண்டு ககனம் அளந்தது திரு தழுவும் தரு.”
இதை எவ்வாறு வாசிப்பது? அருவமும், உருவமும் இணைந்து வருவது தான் தரு என்றா அல்லது அருவும் உருவும் இணைந்த தருவின் துளியை ஆள்வதால் மொத்த கானகத்தையே அளக்கிறான் என்றா அல்லது அருவையும் உருவையும் இணைப்பது தான் தரு என்றா அல்லது அருவும் உருவும ஒன்றேயான தரு ஆதலால் தன்னைத் தழுவிய திருவோடு, பெரும் படையையும் அளக்கிறான் என்றா!
ஒவ்வொரு பகுதியிலும் இவ்வாறு ஏதேனும் ஓரிரு வரிகள் தங்கி தூக்கமழிக்கும். அவை புலப்பட்டவுடன் அதை மையமாக வைத்து ஒரு மீள்வாசிப்ப செய்தால் வேறு ஒன்று தட்டுப்படும். அப்போது முடிவு செய்வேன், இனிமேல் மனதால் படிக்க வேண்டும் என்று. பிரசவ வைராக்கியம் போன்று புத்தி மீண்டும் எழுந்து முன் வரும், அடுத்த அத்தியாயம் வந்த உடன்.
அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து
அன்புள்ள் அருணாச்சலம்,
நீலம் எழுத தொடங்கியது முதல் ஒரு உச்சமனநிலையில்தான் இருந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இந்த நாட்களில்தான் மிக அதிகமாக வேலையும் செய்கிறேன். நாலைந்து சினிமாக்கள். கட்டுரைகள். இதற்குமேல் சில நாவல்கள் வாசித்தேன். கூடவே சினிமா படப்பிடிப்பிலும் கலந்துகொண்டென். இந்த ஒரு மாதத்தில் எட்டு பயணங்கள். ஒவ்வொருநாளும் சந்திப்புகள், நிகழ்ச்சிகள். பெரும்பாலும் விடுதியறைகளில் வைத்து எழுதப்பட்டது நீலம். இரண்டே நாட்கள்தான் வீட்டில்
நீலம் நேரடியாக எழுதப்படும் நேரம் ஒருநாளில் ஒருமணி அளவுதான். சிலசமயம் இரண்டுமணிநேரம். எஞ்சிய நேரம் முழுக்க அந்த உச்சத்தில் இருந்து இறங்கத்தான் முயல்வேன். வேலைசெய்து பேசி சிரித்து அலைந்து கொண்டிருந்தாலொழிய மனதை அடுக்கி நிறுத்தமுடியாது. அது ஏழு குதிரை இழுக்கும் ரதத்தை கடிவாளம் பிடித்து நிறுத்துவதுபோல. அதே விசையுடன் வேறு திசை நோக்கிச் செலுத்தவேண்டியதுதான்
ஜெ
Friday, September 19, 2014 நீலம் எழுதும் வழி
January 27, 2021
சென்னையில் பேசுகிறேன்
இந்த நோய்த்தொற்று காட்டித்தந்த உண்மை, மனிதர்கள் எத்தனை முக்கியம் என்றுதான். உறவுகள் நட்புகள் மட்டுமல்ல; நம்மைச்சுற்றியிருக்கும் மானுடம் எவ்வளவு நமக்கு தேவைப்படுகிறது என்று.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின் ஒருமாதம்கூட முகங்கள் இன்றி இருக்கமுடியவில்லை. வெறுமே முகங்களைப் பார்க்கவே நடைசெல்ல ஆரம்பித்துவிட்டேன். ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்ட அன்றே பயணம் கிளம்பிவிட்டேன். தொற்று எப்படியும் வரும் என தெரியும், வரட்டும் என்னைச் சுற்றி முகங்கள் நிறைந்திருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
எழுதுவது நடக்கிறது. ஆனால் பேசும்போது எழுதும்போது இல்லாத ஒன்று அமைகிறது. நம் சொல்லை பெறுபவர்கள் கண்முன் இருக்கிறார்கள். அவர்கள் நாம் உருவகித்துக்கொள்ளக்கூடியவர்கள் அல்ல. எதிர்காலம் அல்ல. அவர்கள் முகங்களென விரிந்திருக்கும் திரளின் ஒரு துளி
சென்னையில் பேசி ஓராண்டுக்குமேல் ஆகிறது. சென்ற 2019 டிசம்பரில் பேசியது. மீண்டும் ஒரு பேச்சு. மேடைப்பேச்சே மறந்துவிட்டது போலிருக்கிறது. மீட்டுக்கொள்ளவேண்டும்
வரும் ஜனவரி 31 அன்று சென்னையில் பேசுகிறேன். நண்பர்கள் வருக
ஜெ
செந்தில்குமார்i
ரா. செந்தில்குமார் எழுதிய ‘இசூமியின் நறுமணம்’சிறுகதைத் தொகுப்பு வெளியீடு.
நூல் அறிமுகவுரை
அகரமுதல்வன், கவிஞர் சாம்ராஜ், லீனா மணிமேகலை
நூல் வெளியீடு, சிறப்புரை ஜெயமோகன்
தொகுப்புரை –கவிதா ரவீந்திரன்
ஏற்புரை- ரா. செந்தில்குமார்
நாள் 31-1-2021 மாலை 5 மணி
இடம் :; நிவேதனம் அரங்கம், 234 வி.எம்.தெரு
மயிலாப்பூர் [யெல்லோ பேஜஸ் பேருந்து நிறுத்தம் அருகே]
சென்னை
தொடர்புக்கு 9042461472
ரா.செந்தில்குமார், ஒரு தொடக்கம்
சமணத்தில் இந்திரன்
அன்புள்ள ஜெயமோகன்,
குறள் குறித்து நாம் முன்னரும் பேசியிருக்கிறோம். நீங்கள் சிங்கப்பூர் வந்திருந்தபோது குறள் குறித்து சொன்னவை எல்லாம் இப்போதும் சொல் மாறாமல் நினைவில் உள்ளன.
குறிப்பாக “தொட்டனைத்தூறும் மணற்கேணி” குறளுக்கு பல உரை நூல்களும் நேரடியான பொருளைத்தாம் தருகின்றன. தோண்டத் தோண்ட ஊறும் மணற்கேணியைப் போல கற்கக் கற்க அறிவு பெருகும் என்ற இந்த விளக்கத்தைத்தான் நான் அதுவரை கேட்டும், வாசித்தும் வந்தேன். இக்குறள் குறித்து நீங்கள் மேலதிகமாக ஒன்றைச் சுட்டினீர்கள். ஏன் மணற்கேணி என்ற உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான விளக்கமாக நீங்கள் சொன்னது: மணற்கேணி ஒன்றுதான் தோண்டுவதை நிறுத்திவிட்டால் மீண்டும் மூடிவிடும். இக்குறளின் நேரடியான பொருளைக் காட்டிலும் நீங்கள் கொடுத்த இக்குறிப்பு இந்தக் குறளின் கவித்துவ ஆழத்தைச் சுட்டி அதன் அர்த்தத்தைப் பன்மடங்கு என்னுள் அதிகரிக்கச்செய்தது.
கடவுள் வாழ்த்துப் பகுதியில் முதல் குறளில் ஆதிநாதர் சுட்டப்படுவது போலவே நீத்தார் பெருமை அதிகாரத்தின், “ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி” என்ற குறளில் “அகல்விசும்புளார் கோமான் இந்திரன்” என்று வருகிறது. “இந்திரன்” என்று இங்கே சுட்டப்படுபவரும் சமணர் தானா அல்லது இந்துபுராணங்களில் வரும் தேவேந்திரனா?
மிக்க அன்புடன்,
கணேஷ் பாபு
சிங்கப்பூர்
அன்புள்ள கணேஷ் பாபு,
இன்றைய சூழலில் ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வைதிக- அவைதிக மதங்களின் வளர்ச்சியை ஒருவகை முரணியக்கமாகப் புரிந்துகொள்வதே தெளிவை அளிக்கும். முரண்பட்டும், உரையாடியும் வளர்ந்தவை. அவற்றை வேறுவேறு போக்குகள் என்றோ முற்றாக மறுப்பவை என்றோ கொண்டால் நாம் அறிவு உருவாக்கும் அறியாமையைச் சென்றடைவோம்.
இன்று நம் சூழலில் இருவகை போக்குகள் உள்ளன. முதற்தரப்பு, வேறுபாடுகளையும் முரண்களையும் மழுங்கடித்து எல்லாமே ஒன்றுதான் என்று சொல்லும் ஒரு போக்கு. அதன் உச்சியில் தற்பற்றும் எதிர்வெறுப்பும் கொண்டு நின்றிருப்பவர்கள் தங்கள் தரப்பே அந்த ஒற்றைப்பரப்பின் உச்சம் என்றும், உண்மையானது என்றும், மற்றதெல்லாம் திரிபுகள் அல்லது பிழைகள் என்றும் வாதிடுவார்கள்.
இன்னொரு தரப்பு,முரண்பாடுகளை மட்டும் கண்டடைந்து இங்கே ஒவ்வொரு சிந்தனையும் ஒவ்வொரு பண்பாட்டுக்கூறும் ஒன்றோடொன்று போரிட்டு அழிக்கமுற்பட்டது, கொன்றுகுவிக்க துடித்தது என்று நிறுவும் போக்கு. இது மார்க்ஸியர்களின் அரசியல்பார்வையை ஒட்டியது, பிறரால் கடன்கொள்ளப்பட்டது
இதில் எதைக் கைக்கொண்டாலும் நாம் மரபைப் புரிந்துகொள்வதில் எதிர்மறை அணுகுமுறையை சென்றடைகிறோம். எதிர்தரப்பை உருவாக்கி அரசியல்செய்வதற்கு உதவுமே ஒழிய மெய்யை சென்றடைய எவ்வகையிலும் வழிகோலாது.
இந்துமதம் என நாம் இன்றுசொல்லும் அறுமதத்தொகையும் மறுபக்கம் சமணம் பௌத்தம் போன்ற சிரமணமதங்களும் ஒன்றையொன்று கடுமையாக மறுத்து இயங்கின. அடிப்படையான தத்துவ வேறுபாடுகள், தரிசன முரண்பாடுகள் அவற்றுக்கிடையே இருந்தன. இந்துமதத்தின் தரிசன உச்சமாகிய வேதாந்தத்தின் சாரம் முழுமுதல்வாதம் என்று வரையறுக்கத்தக்கது. அந்த முழுமுதல்பொருள் என்பது பிரம்மம். சமணமும் பௌத்தமும் அத்தகைய முதன்மை விழுப்பொருளை மறுப்பவை. ஆகவே முற்றிலும் வேதாந்தத்திற்கு எதிர்நிலைகொண்ட தரிசனங்கள்
சமணத்துக்கும் பௌத்ததிற்கும் நடுவேகூட அப்படி எதிர்நிலைகள் உண்டு. சமணத்தின் சாரமான தரிசனங்களில் சர்வாத்மவாதம் ஒன்று. அனைத்துக்கும் சாரமுண்டு என்பது அந்த தரிசனம். பௌத்ததிற்கு அனாத்மவாதமே முதன்மைதரிசனம். எதிலும் சாரமில்லை என்பது அது.
பௌத்ததிலேயே ஆரம்பகால தேரவாத பௌத்ததில் சர்வாஸ்திவாதம் என்று ஒன்று உண்டு. அனைத்திருப்புவாதம். எல்லா பொருளும் இருக்கின்றன என்பது அது. அபிதர்ம மரபு எனப்படுகிறது. பிற்கால மகாயான பௌத்ததின் யோகாசார மரபில் அதை மறுத்து சூனியவாதமும் விக்ஞானவாதமும் எழுந்தன. பொருட்களென இருப்பு கொள்பவை பிரக்ஞைநிலைகளே என்று அவை கூறின
இந்துமரபிலேயே வேதங்களை முதனூலாகக் கொண்டவை உண்டு. அப்படிக் கொள்ளாத சாங்கியம், நியாயம், சார்வாகம் போன்ற பிரிவுகளும் உண்டு.
இப்படி பிரிந்து பிரிந்து கிளைகிளையாகப் பெருகி ஒன்றையொன்று மறுக்கும் இந்திய சிந்தனைமரபுகள் அனைத்தும் அடிக்கட்டுமானமாக ஒரே தொன்மக்கட்டமைப்பையும் தொல்படிமக் கட்டமைப்பையும்தான் கொண்டுள்ளன. இந்துமதத்தின் தொன்மங்கள், படிமங்கள் ஆகியவை பௌத்தம், சமணம் ஆகியவற்றுக்கும் பொதுவானவை. ஒரே விளைநிலத்தில் விளைந்த வெவ்வேறு பயிர்கள் இவை.
புத்த ஜாதகக் கதைகள் என்று சொல்லப்படும் கதைத் தொகுதி புத்தரின் பிறவிக்கதைகள் என மொத்த இந்துப்புராணங்களையே உள்ளிழுத்துக்கொள்கிறது. சமணத்தின் தொன்மங்களில் அடிப்படையானவை இந்து மரபு சார்ந்தவையே. அவர்களின் சிற்பங்களிலும் தெய்வஉருவகங்களிலும் இந்து மரபு அப்படியே தொடர்கிறது
பௌத்த மரபில் தாராதேவி வேத தெய்வமான வாக்தேவியின் இன்னொரு வடிவம். காலதேவர் அப்படியே சமணத்தில் பெருந்தெய்வமாக இருக்கிறார். பௌத்தத்தில் காலதேவர் முக்கியமான தெய்வம். திபெத்திய பௌத்தத்தில் காலதேவன் இல்லாத மடாலயம் இல்லை.போதிசத்வர்களில் இந்திரனின் செல்வாக்கு மிகுதி. இந்திரனின் கையிலிருக்கும் வஜ்ரமும் தாமரையும்தான் போதிசத்வ வஜ்ரபாணியும் போதிசத்வ பத்மபாணியுமாக மாறின
இந்திரன் சமண மதத்தில் முக்கியமான ஒரு துணைத்தெய்வம். ஏறத்தாழ இந்து மதத்திலுள்ள அதே வடிவில்தான் சமணத்தில் அவர் வருகிறார். புலனின்பங்கள், உலகின்பங்கள் ஆகியவற்றின் அடையாளம். ஆற்றலின் குறியீடு.சமணர்களின் நூல்களில் இந்திரன் சக்கரன் என்றும் விண்ணவர்தலைவன் என்றும் சொல்லப்படுகிறான். அரிதாக சிலநூல்களில் மாரன் என்பதும் இந்திரன் என்பதும் ஒரேபொருளில் மாறிமாறி பயன்படுத்தப்படுகிறது
சமண மதத்தில் இந்திரனின் இடமென்ன? ஓர் உதாரணம், சமணமதத்தின் நிறுவனரான வர்த்தமான மகாவீரர் பிறந்ததும் தீர்த்தங்காரரின் பிறப்பை அறிவித்தவன் இந்திரன். விண்ணில் இந்திரனின் வெண்குடை தோன்றியது. இந்திரன் அவரை பால்நீராட்டு செய்து முக்குடை வானில் திகழ அவர் அன்னையிடம் ஒப்படைத்தான். இதுதான் இந்திரனின் பணி. சமண தீர்த்தங்காரர்களை அடையாளம் காட்டுவது இந்திரன்.
சமண தீர்தங்காரர்களின் வாழ்க்கையின் ஐந்து மங்கல நிகழ்வுகளில் இந்திரன் முன்னிலைச்சான்றாக இடம்பெறுகிறான். ஏனென்றால் இந்திரன் அறத்தின் தெய்வம். சௌதர்மேந்திரன் என இந்திரன் சொல்லப்படுகிறான். தீத்தங்காரர்களின் வாழ்வில் சவன் கல்யாணம் [விண்ணிறங்கு மங்கலம்] ஜன்ம கல்யாணம் [பிறப்பு மங்கலம்] தீட்சா கல்யாணம் [மெய்தொடங்கு மங்கலம்] கேவலஞான கல்யாணம் [மெய்யறிதல் மங்கலம்] மோட்ச கல்யாணம் [வீடுபேறு மங்கலம்] என ஐந்து மங்கலக் கொண்டாட்டங்கள் உண்டு. ஐந்துக்கும் இந்திரனே முதல்வன்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி
[ஐம்புலன்களையும் அணைத்துவிட்டவனின் ஆற்றலுக்கு அகன்றவிண்ணில் வாழ்பவர்களின் தலைவனாகிய இந்திரனே தகுதிகொண்ட சான்று]
என்றகுறளின் பொருள் மிக எளிமையாக இதுதான்.பிற்காலத்தில் அகலிகை கதையுடன் இக்குறளை தொடர்புபடுத்தி ஐந்தவித்தான் என்பது கௌதம முனிவரை குறிக்கிறது என உரை எழுதிக்கொண்டனர். கௌதமன் ஐம்புலன்களையும் அடக்கியவர் அல்ல என்பது அகலிகை கதையிலேயே உள்ள செய்தி.
ஆனால் இந்திரன் சமணர்களால் வழிபடப்படும் தெய்வம் அல்ல. அவர்களுக்கு தேவர்கள் உண்டு. ஆனால் தேவர்களை அவர்கள் வழிபடுவதோ வேள்விகள் செய்வதோ இல்லை.அவர்களுக்கு ஆத்மாக்களின் நிலைகள் நான்கு. அதை கதிகள் என்கிறார்கள். திரியக்குகள் [அஃறிணைகள்] மனிதன், நரகர் [கீழ்தெய்வங்கள்] தேவர்.
தேவர்கள் நான்கு நிலை வைமானிகர் [வானில் வாழ்வோர். விண்ணிலுள்ள பதினாறு உலகங்களில் வாழும் தேவர்] ஜ்யோதிஷர் [ஒளியுடலர். சூரியன் சந்திரன் விண்மீன்கள் என ஒளியே உடலானவர்கள்] ஃபவனவாசிகள் [விண்ணிலுள்ள தனியுலகுகளில் வாழ்வோர்.இதில் வைகுண்டம் கைலாசம் எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்வதுண்டு] வ்யாந்தர்கள் [விண்ணிலும் மண்ணிலும் தோன்றி வாழ்வோர். யட்சிகளைப்போல]. இந்நால்வரும் வாழும் உலகமே அகல்விசும்பு. இந்நால்வருக்கும் ஒரு தலைவன், அவனே இந்திரன்.
வேதகாலம் முதல் இந்தியாவின் வெவ்வேறு குடிகளிடம் தோன்றிய தெய்வங்களும் ஆசாரங்களும் தரிசனங்களும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டபடியே இருக்கின்றன. அவை ஒரு பெரும்பரப்பாக மாறி இந்துத் தொன்மவியலாக, இந்து மெய்யியலாக உருக்கொண்டன. அந்த பெருந்தொகையிலிருந்து கிளைத்து அதன் பிற கிளைகளுடன் முரண்கொண்டு உரையாடி வளர்ந்தவையே சமணமும் பௌத்தமும்
ஜெ
அமெரிக்காவில் ஃபாஸிசம்
https://anightatthegarden.com/
A NIGHT AT THE GARDEN: Press Kit
பொதுவாக நான் இணையத்தில் செயற்கை அறிவின் வழியே பிரத்யேகமாக அது பரிந்துரைக்கும் எதையுமே சொடுக்கிப் பார்ப்பதில்லை. விதிவிலக்காக அது பரிந்துரைத்த இந்த தளம் சென்று பார்த்தேன். (1957 இல் வெளியான பாசிச எதிர்ப்பு கருப்பு வெள்ளை நார்வேஜியன் திரைப்படம் seven lives குறித்து நான் வாசித்த வகையில் இந்த சுட்டி பரிந்துரைக்கப் பட்டிருக்க கூடும்).
7 நிமிட க்ளாஸிக் ஆவணம். 1939 இல் அமெரிக்காவில் ஜெர்மனியின் பாசிச கருத்தியலை ஏற்று ஒழுகும் இனவெறிக் கூட்டத்தின் மாநாடு. 20,000 பேர் கூடிய மாநாடு. எனில் இதன் ஐம்பது மடங்கு வெளியே பொது மனதில் பொது ஜனம் என்று அமைந்திருக்கும்.
கூட்ட நிர்வாகம், மேடை அமைப்பு, ஒளி ஒலி என பாசிசத்தின் பிரும்மாண்ட வசீகரம். இன்றைய ட்ரம்ப் கொள்கைகள் எதுவோ அதை அன்று முழங்குகிறார் ஒருவர். மொத்த கூட்டத்திலிருந்து ஒரே ஒருவர்(க்ரீன் பால்) மேடைக்கு ஓடி வந்து அதை எதிர்க்கிறார். அவரை அடித்து உதைத்து அரை நிர்வாணமாக்கி தூக்கி வெளியே எறிகிறார்கள்.
அக இருளில் இருந்து திரட்டி எடுத்த பின்னணி இசை. கச்சிதமான எடிட்டிங் வழியே உலகே மறந்து போன இருள்தருணம் ஒன்றின் ஆவணம் மீண்டும் கண்டடையப்பட்டு அரங்கம் கண்டிருக்கிறது. A night at the garden எனும் இந்த 7 நிமிட வலிமையான ஆவணப் படத்தின் இயக்குனர் மார்ஷல் க்யூரி. அவரது நேர்காணலுடன் அவரது படம் உயர் தரத்தில் இந்த தளத்தில் இருக்கிறது.
மொத்த கூட்டத்தின் எதிராக ஒருவன் என்பதே மனம் பொங்க வைக்கும் அம்சம் என்றாலும், அந்த ஒருவன் சின்னாபின்னம் ஆகும் போது கூட்டத்தில் ஒரு சிறுவன் அதைக் காளியாட்டமாக கொண்டாடும் காட்சி இந்த ஆவணத்தை வரலாற்று ஆவணம் எனும் தளத்திலிருந்து மனிதர்கள் அவர்களின் அகம் குறித்த ஆவணம் என்று உயர்த்தி விடுகிறது. எத்தனையோ ஹாலோகாஸ்ட் படங்கள் மத்தியில் இந்த 7 நிமிட உண்மை ஆவணம் அந்த உண்மையின் தீவிரம் கொண்டே அவற்றை விஞ்சி நிற்கிறது. ஆகவே உங்கள் பார்வைக்கும்.
கடலூர் சீனு
அன்புள்ள சீனு,
எனக்கு ஆச்சரியம்தான். ஹிட்லருக்கு அமெரிக்காவில் 1939ல் இத்தனை ஆதரவு இருந்தது திகைப்பளிக்கிறது.
அமெரிக்கா, ஐரோப்பா இரு நிலங்களிலும் நான் பயணம் செய்தவரை நேரடியாக உணர்ந்த ஒன்று உண்டு, அங்கே நிறவெறி, இனவெறி,கிறித்தவ மதவெறி ஆகிய மூன்றும் எப்போதும் உண்டு. அவை என்றும் இருக்கும். அவை மூன்றும் இன்று ஒன்றாக உள்ளன, சமயங்களில் கிறித்தவ மதவெறி தாராளவாதச் சிந்தனை என்றபெயரில் முதல் இரண்டை எதிர்ப்பதும் உண்டு.
அறிவியல்புனைகதைகள் சித்தரிக்கும் ஒரு தொலைதூர எதிர்காலத்தில்தான் அது இல்லாமலாக வாய்ப்பு. அடிப்படையான நோய்க்கிருமிகள் உடலிலேயே இருப்பதுபோல என்று சொல்லலாம். ஐரோப்பாவின் ஆயிரமாண்டுக்கால வரலாற்றில், அமெரிக்காவின் முந்நூறாண்டுக்கால வரலாற்றில் அவை மிகப்பெரிய செயல்விசைகளாக இருந்துள்ளன. பொதுவாக இங்கிருந்து அங்கே குடியேறி, ஒரு மண்ணுலகசொர்க்கத்திற்கு வந்துவிட்டோம் என நினைக்கும் நியோஅமெரிக்கர்கள் நியோஐரோப்பியர்களுக்கு மட்டும் அது தெரியாது
இந்நாடுகளில் இருக்கும் ஜனநாயகம் என்பது அந்த அடிப்படை விசைகளின் மீதான அறிவின் வெற்றி.ஆனால் அது தொடர்ச்சியாக அறிவியக்கத்தால் நிலைநிறுத்தப்படவேண்டும். அறிவின் தரப்பு போராடிக்கொண்டேதான் இருக்கவேண்டும். அதன் ஆற்றல் கொஞ்சம் தளர்ந்தால் அடிப்படைவிசைகள் மேலெழுந்துவிடும். நோயெதிர்ப்புசக்தி குறைந்தால் கிருமிகள் மேலெழுவது போல.
இந்தியா போன்ற கீழைநாடுகளுக்கு மதஅடிப்படைவாதமும், இனவாதமும் இதேபோன்று அடிப்படைவிசைகள். ஒவ்வொருகணமும் அறிவியக்கம் அவற்றுக்கு எதிரான ஜனநாயகப்போராட்டத்தில் இருக்கவேண்டும். எங்கே சிக்கல் வருகிறதென்றால் ஜனநாயகத்தரப்பு என்றபேரில் மறுபக்கமும் இனவாதமும் அடிப்படைவாதமும் முன்னிறுத்தப்படும்போதுதான். அடிப்படைவாதங்களுக்கு இடையேயான போராக, இனவாதங்களுக்கு இடையேயான போராக அரசியல்களம் மாறிவிடும்போதுதான். அங்குதான் ஒருவகையான கையறுநிலை உருவாகிறது.
ஜெ
தொல்பழங்காலம்- கடிதங்கள்
கண்டப்பருந்து சிலை
கற்காலத்து மழை-6
அன்புள்ள ஜெ
கண்டப்பருந்து என்ற இந்த வடிவத்தை நான் விரிஞ்சிபுரம் ஆலயத்தில் பார்த்தேன். நீங்கள் சொல்லும்படி பார்த்தால் கற்காலம் முதல் தொடங்கி பிற்கால வைணவம் வரை இந்த வடிவம் இருந்துள்ளது
எஸ்.அசோகன்
ஆம்பூர்
அன்புள்ள ஜெ
நீங்கள் செய்யும் தொல்லியல் பயணங்கள் எனக்கு தொல்லியலையும் அதன் வழியாக இந்தியாவின் பண்பாட்டுப் பரிணாமத்தையும் வளர்ச்சியையும் உள்வாங்கிக்கொள்ள உதவியாக உள்ளன. நான் வரலாற்று நூல்களை வாசிப்பவன் அல்ல. வாசிக்கமுனைந்தபோதெல்லாம் அவற்றைவாசிக்கத்தக்க பொறுமை எனக்கு குறைவுதான் என்றும் உணர்ந்திருக்கிறேன்.இப்போது இந்தப் பயணக்கட்டுரைகள் பயண அனுபவங்களுடன் கலந்து அளிக்கும் சரித்திரத்தகவல்கள்தான் என்னையறியாமலேயே எனக்கு ஒரு வரலாற்றுப்புரிதலை அளித்திருக்கின்றன
குறிப்பாக வரலாற்றுப் பரிணாமம். இதை புரிந்துகொள்ள நம் பள்ளிப்பாடங்கள் உதவாது. வெவ்வேறுசக்திகள் மோதியும் இணைந்தும் வரலாறு எப்படி முன்னகர்ந்து வந்துள்ளது என்ற சித்திரம் மிகமிக ஆச்சரியமளிப்பது. நம்மையறியாமலேயே எங்கோ ஓரிடத்தில் நமக்கு அந்தப்புரிதல் வந்துவிடுகிறது. அதன்பின் நாமே யோசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்
கே.என்.தண்டபாணி
அன்புள்ள ஜெ
உங்கள் வரலாற்றுக்கு முந்தையக காலகட்டம் பற்றிய பயணங்கள் ஆச்சரியமானவை. குமரிக்கல் பற்றிய கட்டுரை எனக்கு பெரிய திறப்பு. நான் இன்றைக்கு இருப்பது கல்கத்தாவில். ஆனால் என் இளமைப்பருவம் அங்கேதான். அந்தக்கல்லை பலமுறை பார்த்திருக்கிறேன். ஏதோ ராஜா நட்டது என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அந்தக்கல்லின் வயது தமிழைவிட தொன்மையானது என்னும்போது திகைப்பு ஏற்படுகிறது. கப் மார்க்ஸ் பற்றியெல்லாம் படிக்கப்படிக்க ஒரு பெரிய மலைப்பும் ஆர்வமும் ஏற்படுகிறது
எஸ்.சிவராஜ் சுப்ரமணியம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

