Jeyamohan's Blog, page 1061
January 21, 2021
கே.ஜி.சங்கரப்பிள்ளை- கடிதம்
கே.ஜி.சங்கரப்பிள்ளைஅன்பு ஜெயமோகன்,
கே.ஜி.சங்கரப்பிள்ளை மீண்டும் பித்து பிடிக்க வைத்து விட்டார்.
காலில் எப்போதும் வழி எஞ்சுகிறது கவிதையின் அடர்த்தியில் இறுக்கம் இல்லை; நெருங்குபவனை ஆரத்தழுவிக் கொள்ளும் எளிமையே பொங்கி நிறைந்திருக்கிறது.
காலில் எப்போதும் வழி எஞ்சுகிறது எனும் சொற்றொடரே ஒரு தரிசனம். அத்தரிசனத்தில் கரைந்திருந்த நிமிடங்கள் அலாதியானவை. தரிசனத்தின் உள்ளடுக்குகளைக் குடைந்து செல்லும் பாக்கியம் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்குமே கிடைக்கிறது.
முழுமையைக் குறிக்கோளாகக் கொண்டு தவிக்கும் மனதின் ஆற்றாமையைச் சிறுசொடுக்கில் பதறச் செய்துவிட்ட கவிவரிகளைக் கொண்டாடத் தலைப்படுவது, மாபெரும் கொடுப்பினை. அகத்தளத்தில் முறுக்கியபடி மதர்த்திருக்கும் இறுமாப்புச்சட்டகங்களைக் கிழித்துச் சிதைத்த எதிரியும் கசப்பதில்லை முழுக்க என்பன போன்ற தெறிப்புகள்.
”போவது என்றால் என்னை நான் விடுவித்து எடுப்பதா அல்லது எல்லாம் என்னை விட்டு அகல்வதா” எனும் அக்னிச்சுடரில் நம் அகங்காரத்திமிர் திணறிச் செருமியே ஆக வேண்டும். ”நினைவோ கனவோ காயமோ காட்டுவதில்லை முழுக்க” எனும் தீட்சண்யத்தில் நெக்குருகி மெளனிப்பதைத் தவிர மாற்றில்லை.
எங்கு முழுக்க பெய்வேன் நான் என் மழையை என்ற சித்திரத்தின் ஊடாக என் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அப்பட்டமாக்கிய கே.ஜி.,சங்கரப்பிள்ளையின் பாதங்களில் நெடுக வீழ்கிறேன்.
சத்திவேல்,
கோபிசெட்டிபாளையம்.
தொப்பி, நாய்,வளைவு – கே.ஜி.சங்கரப்பிள்ளை கொலை,டால்ஸ்டாய்,முடி – கே.ஜி.சங்கரப்பிள்ளை வேதம்,இறந்தோர்,முள்ளம்பன்றி: கே.ஜி.சங்கரப்பிள்ளை வழி, சூரியன்,ராமன் : கே.ஜி.சங்கரப்பிள்ளை சுழல்,எலி,மேடை – கே.ஜி.சங்கரப்பிள்ளை புத்தன்,கழுகு,பலா – கே.ஜி.சங்கரப்பிள்ளை வீடு,விரல்,கஞ்சி – கே.ஜி.சங்கரப்பிள்ளை சோலை,பயம், உறக்கம்: கே.ஜி.சங்கரப்பிள்ளை காலியிடங்களும் கரிக்கலையங்களும்- கே.ஜி.சங்கரப்பிள்ளை வரக்கூடும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு- கே.ஜி.சங்கரப்பிள்ளை பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்வெண்முரசு- ஒரு வாசிப்பு
2020 டிசம்பரில் கடைசி வாரத்தில் ஒரு நாள், ராதா, வெண்முரசு நாவலின், அனைத்து நூல்களையும், அதாவது 26 புத்தகங்கள், கிட்டத்தட்ட 26000 பக்கங்களை வாசித்து முடித்தவர் என்ற பெருமையை அடைந்தார். அதை, எனது வலுக்கட்டாயத்தில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வாசக நண்பர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் , அவரது எண்ணங்களை எழுதச் சொல்ல, அதற்கும் , நன்றி நண்பர்களே என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர வேறு வார்த்தைகள் அவரிடமிருந்து இல்லை. ஆள் வைத்து எழுதும் அமெரிக்காவில் வசிக்கும், அவர் வைத்த ஆளாக, வாசகரான அவரைப் பற்றிய சில வரிகளும், வெண்முரசு பற்றிய அவரது பார்வையையும் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறேன்.
எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை சொன்னதுபோல, ஆயிரக்கணக்கான வாசகர்கள் , தான் வாசித்ததைப் பற்றி பேசாமல் / எழுதாமல், அவர்கள் போக்கில் வாசித்துக்கொண்டு மட்டும் இருப்பார்கள். அந்த வாசகர்களில் ஒருவர் ராதா.
எங்கள் வீட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஆகட்டும், எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் வந்த வெண்முரசு, மற்றும் மற்ற கதைகள், கட்டுரைகள் ஆகட்டும், எங்கள் இருவரில் யார் அதிகம் வாசித்திருப்பார்கள், என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாது. பொதுவாக எதையும் மனதில் வைத்துக் காரியத்தை சாதித்துவிட்டு அமைதியாக இருக்கும் இலட்சக்கணக்கான பேசாமடந்தைகளில், இவரும் ஒருவர். தான், வாசித்த விஷயங்களை , பொது இடத்திலும், நண்பர்களிடமும் பேசாததால், ஒரு நல்ல வாசகர் என்ற அடையாளத்தையும் தனக்கெனத் தேடிக்கொள்ளாதவர்.
மற்றபடி வீட்டிற்கு, நாங்கள் வாங்கி வரும் நூல்களில், வாசித்த பிறகு அவரது மதிப்பீடும், சிறு குறிப்புகளும், ஒரு வார்த்தையில், சிறு சிறு வாக்கியங்களாக எங்கள் உரையாடலில் வந்து செல்லும். விஷ்ணுபுரம் நாவலை வாசித்து முடித்து, kindle புத்தகத்தை மூடிவிட்டு, it is worth reading என்றார். என்னால் ஒன்று மட்டும் சொல்ல முடியும். அவருக்கு புனைவோ அபுனைவோ பிடிக்கவில்லை என்றால், அந்த நூலை தொடர்ந்து வாசிக்க மாட்டார்.
சுஜாதாவின், ‘எப்போதும் பெண்’ நாவலை மூன்று முறை வாசித்திருக்கிறார். உனக்குப் பிடித்த புத்தகம் ஒன்றைச் சொல் என்றால், இதையே சொல்வார். நாங்கள் வீட்டுக்கு வாங்கி வந்த புத்தகங்களில் பெரும்பாலும் அவரே முதலில் வாசித்திருப்பார். சில புத்தகங்களை சிலாகித்துப் பேசி, இதை வாசியுங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்று அவர் சொன்ன புத்தகங்கள் – சோ. தருமனின் , ‘சூழ்’, கே.வி. ஜெயஸ்ரீயின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’, பெருமாள் முருகனின் ‘கூளமாதாரி’, ஜெயகாந்தனின் ‘பாட்டிமார்களும் பேத்திமார்களும்’. ஜெயமோகனின் எழுத்துக்களை வாசிப்பதில் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டேன் என்று சொல்லும் இவர், இன்று அவரது தளத்தை தேடிச் சென்று வாசிக்கிறார்.
வாழ்க்கையில் வெறுமையே மிஞ்சும் என்பது ராதாவின் கருத்து. வெண்முரசு அந்த எண்ணத்தை உறுதிப்படுத்தியது என்று சொல்லும் இவர், வெண்முரசு , நம்பும்படியான நடைமுறை வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தவும் சிந்திக்கவும் வைக்கும் நாவல்” என்கிறார். “எந்த ஒரு கடினமான முடிவுகளுக்கு முன்னரும் கணவன் மனைவியிடம் ஒரு உரையாடல் இருக்கத்தானே செய்யும்? திரௌபதி , தான் தவறி விழுந்ததைப் பார்த்து சிரித்தாள் என்று கோப்பபடும் துரியோதனனை, நானும் அங்குதான் இருந்தேன். அவள் சிரிக்கவெல்லாம் இல்ல என்று பானுமதி சமாதானம் செய்வாள். ஒரு வேளை, பானுமதியின் பேச்சை துரியோதனன் நம்பியிருந்தால் பாரதப்போரே நிகழாமல் இருந்திருக்கும்” என்பார் ராதா.
“திரௌபதி துகில் உரியப்படும்பொழுது, அங்கிருக்கும் அரசிகள், இளவரசிகள், சேடிகள், தங்களது மேலாடைகளை உருவி, திரௌபதியின் மேல் போட்டுக் காப்பாற்றுவார்கள். அதுவும் துச்சாதனின் மனைவி அசலை, துரியோதனின் மகள் கிருஷ்ணை ஓடி வருவார்கள் பாருங்கள். அதுதானே சரி. தெய்வமா நேரில் வந்து உதவும்?” என்று அந்தக் காட்சியை வாசித்த நாட்களின் மாலையில் என்னிடம் சொல்லியிருக்கிறார்.
துகில் உரிவு நிகழ்வுக்கு அப்புறம், “தங்களை அணுக வரும் கணவர்களை, பானுமதி, அசலை மற்றும் தாரை என்னைத் தொடாதே என்பார்கள். அதுதானே எந்த ஒரு பெண்ணும் செய்திருப்பாள். நாம் நினைத்துப் பார்க்காத பக்கங்களை / பார்வையை, வெண்முரசு தொட்டுச் சென்றிருக்கிறது” என்பதில் வெண்முரசு நாவலின் மேல் அவருக்குள்ள அபிப்ராயம். திரௌபதிக்கு, ஐந்து கணவர்கள் என்றாலும் பிடித்தமானவன் பீமனாகத்தான் இருக்க முடியும் என்பார். அவன்தான், ஒரு பெண்ணிற்கு பிடித்த கணவன் போல் நடந்துகொள்வான். அவளிடம் பிரியமாக , ஒரு தோழனாக நடந்துகொள்வான் என்று அவர்கள் ஒரு முறைக் காட்டில் பயணம் செய்தபொழுது, திரௌபதியின் குதிகாலை தன் மடி மீது எடுத்து வைத்து, ஒவ்வொரு முள்ளாக பிடுங்கி எடுத்ததைச் சொல்வார்.
பிரயாகை வாசிக்கும் பொழுது அவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள். இடும்ப வனத்தில், இடும்பியை எந்த வாதமும் இல்லாமல், தனது மருமகளாக ஏற்றுக்கொண்ட குந்தியை அவருக்குப் பிடித்திருந்தது.பீமனும், இடும்பியும், கடோத்கஜனும், மரங்களின் கிளைகளில் குடும்பமாக அவர்கள் தாவிச் செல்லும் காட்சி அவருக்கு மனதுக்கு நெருக்கமாக இருந்ததாக சொன்னார்.
இமைக்கணம் வாசிக்கும்பொழுது மட்டும், புரியவில்லை, அதைக் கடப்பதற்கு சிறிதே சிரமப்பட்டார். கீதையின் சாராம்சம் வரும் இந்த நாவலை ஒரு முறை வாசித்துவிட்டு புரிந்து கடக்கும் நாவல் அல்ல. தொடர்ந்து வாசித்து மற்ற நண்பர்களுடன் விவாதித்துப் புரிந்துகொள்வதே சரியான வழி. நானும் அவருடன் இணைவாசிப்பு செய்து , சின்ன சின்ன விளக்கங்கள் கொடுத்து முதல் வாசிப்பைக் கடக்க உதவினேன்.
கௌரவர்கள் கூட்டம் நடத்தும் சதிகளில் உவப்பு கொள்ளாத துரியோதனின் தம்பிகளில் குண்டாசி மற்றும் விகர்ணன், திருதராஷ்டிரனுக்கு சூதர் பெண்ணின் மூலம் பிறக்கும் யுயுத்ஸுடன் பிரியம் கொள்ளும் துரியோதனன் என்று கௌரவர்களின் வேறு முகங்களை, வெண்முரசு அடையாளப்படுத்துவதை, எங்கள் உரையாடலில் சொல்லிக்கொண்டே இருப்பார்.
துரியோதனன், போருக்கு செல்வதற்கு முன் தன் அன்னை காந்தாரியிடம், ஆசி வாங்க செல்வான். வெற்றியுடன் திரும்பி வா என்று சொல்லாமல் , அறம் ஜெயிக்கட்டும் என்று ஆசிர்வதிப்பாள். கௌரவர்களுக்கும் அறம் சார்ந்த சிந்தனை இருந்தது என்பது நாவல் முழுக்கச் சிதறிக் கிடக்கிறது என்பதைக் குறிப்பிட ராதா இதை எடுத்துக்காட்டாக சொல்வார்.
போர் நடக்கும் நாட்களை சொல்லும் நூல்களை வாசிக்கும் நாட்களில், “எல்லோருமே போர் வேண்டாம் என்றுதானே சொல்கிறார்கள், ஏன் இந்த இளைய யாதவர் மட்டும் , போர் நடந்தே ஆகவேண்டும் என்று இருக்கிறார் என்று அவரின் மேல் கோபமாக இருந்தார். இவர் நினைத்திருந்தால், போரை நிறுத்தியிருக்கலாம் ” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். போர் நடப்பது பிடிக்காமலேயே, குந்தி எப்பொழுது கர்ணனிடம் வந்து மற்ற மகன்களைக் கொல்லாதே என்று வரம் வாங்குவாள் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில், செந்நாவேங்கைக்கு அப்புறம் இருக்கும் மற்ற எட்டுப் புத்தகங்களை இருபது நாட்களில் , குறைந்தது நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் வாசித்து முடித்துவிட்டார்.
வாழ்வில் நம்மோடு தொடர்ந்து பயணம் செய்யும் கவலைகள், கோவிட்-19 பற்றிய சிந்தனை என்று எதுவும் இல்லாமல், ஒன்பது மாதங்கள் எப்படி சென்றது என்றே தெரியாமல், வெண்முரசுவின் வழியாக இன்னொரு உலகில் வைத்திருந்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, வாசகி ராதா தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்.
– வ.சௌந்தரராஜன்
கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் முதலாம் வெண்முரசு கூடுகை
ஓவியம்: ஷண்முகவேல்கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் வாயிலாக இம்மாதம் முதல் வெண்முரசு கூடுகை நிகழவுள்ளது. முதல் கூடுகையை இம்மாத இறுதி ஞாயிறன்று துவங்கவுள்ளோம்.
இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் முதல் நாவலான “முதற்கனல்“ – இன்
வேள்விமுகம்
பொற்கதவம்
எரியிதழ்
அணையாச்சிதை
மணிச்சங்கம்
எனும் ஐந்து பகுதிகளை முன்வைத்து கலந்துரையாடல் நிகழவுள்ளது. வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இக்கூடுகைக்கு வரவேற்கிறோம்.
நாள் : 31-01-21, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9:30
இடம் : தொண்டாமுத்தூர், கோவை.
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
நன்றி,
பணிவுடன்,
பூபதி துரைசாமி.
January 20, 2021
நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்
நவீன இந்தியாவின் சிற்பிகள் வாங்க
தமிழகத்தில் அரசியல்பேசுபவர்கள் மிகுதி, சினிமா சாப்பாடு ஆகியவற்றுக்குப் பின் இங்கே சாமானியர்கள் ஆர்வம்கொண்டுள்ளது அரசியல். ஆனால் அரசியலை உண்மையான சாராம்சத்துடன் பேச தேவையானது ஒரு வரலாற்றுப் பார்வை. அது சில இடதுசாரிகளுக்கு அன்றி எவரிடமும் இருப்பதில்லை. பத்தாண்டுகளுக்கு முந்தைய வரலாறுகூட தெரியாதவர்களே இங்கே அடிவயிற்றை எக்கி ஆங்காரமாக அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
[சில ஆண்டுகளுக்கு முன் திராவிட அரசியலின் எழுச்சியிலும், அண்ணாத்துரை தலைமைவகித்த திமுகவின் வெற்றியிலும் எம்.ஜி.ஆருக்கு உள்ள பங்கைப்பற்றி எழுதியபோது எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சியும் கொந்தளிப்பும் அடைந்து எழுதப்பட்ட பல கடிதங்கள் வந்தன. அவர்களுக்கு எந்த வரலாறும் தெரியவில்லை. ஆகவே கூலி இதழாளர்களை வைத்து எந்த வரலாற்றையும் எழுதி நிறுவிவிடலாமென்ற எண்ணம் அரசியலாளர்களுக்கு வருகிறது.
இந்த வரலாற்றழிப்பு இருமுனைகொண்ட கத்தி. நாளை இவர்கள் வரலாற்றையே அழிக்கும். தமிழகத்தில் காங்கிரஸின் வரலாற்றை பாடபுத்தகங்கள் உட்பட அனைத்திலும் அழித்து, கல்வித்துறையை ஊடுருவி தங்கள் சொந்தப் புனைவுவரலாற்றை நிறுவிய திராவிட இயக்கத்தவர்கள் இன்று இந்துத்துவர்கள் அதையே தாங்கள் செய்யும்போது “அய்யய்யோ வரலாறு! வரலாறு!” என்று பதறுகிறார்கள்]

இந்தியவரலாற்றின்மேல் பெருந்தாக்குதல் நிகழும் காலம் இது. இன்று முறையான, தரவுகள்செறிந்த வரலாறுகளுக்கான தேவை உள்ளது. ஆய்வுநூல்கள் அல்ல, பிரபல நூல்கள். எவரும் வாசிக்கத்தக்கவை. ராமச்சந்திர குகாவின் ‘காந்திக்குப் பின் இந்தியா’இரு தொகுதிகளும் ஆர்.பி.சாரதி மொழியாக்கத்தில் கிழக்கு பதிப்பக வெளியீடுகளாக வந்துள்ளன. தமிழில் முக்கியமான நூல்கள் அவை. பரவலாக படிக்கவும்பட்டன. அவ்வரிசையைச் சேர்ந்த நூல் ராமச்சந்திர குகாவின் ‘நவீன இந்தியவின் சிற்பிகள்’.தமிழில் வி.கிருஷ்ணமூர்த்தி சரளமாக மொழியாக்கம் செய்துள்ளார்.
ராமச்சந்திர குகா இந்தியாவின் வரலாற்றை உருவாக்கிய ஆளுமைகள் என 21 பேரை இதில் பட்டியலிடுகிறார். அதற்கு அவர் சில அளவுகோல்களை வைத்திருக்கிறார்.
அ. அவர்கள் சொந்தமான சிந்தனை கொண்டவர்களாக இருக்கவேண்டும். வெளியே இருந்தோ மரபிலிருந்தோ ஏதேனும் சிந்தனையை எடுத்து வைத்தவர்களாக இருக்கலாகாது
ஆ. அவர்கள் இந்தியாவின் பண்பாடு சிந்தனை ஆகியவற்றின் முன்னேற்றத்துக்கு நேரடியான பங்களிப்பு ஆற்றியிருக்கவேண்டும்
இ. அவர்களின் பங்களிப்பு கூடுமானவரை வட்டார தன்மைகொண்டதாக, சாதிமத எல்லைக்குள் நிற்பதாக அல்லாமல் அனைவருக்கும் உரியதாக இருக்கவேண்டும்
ராம் மோகன் ராய்இந்த அளவுகோல்களின்படி அவர் முதன்முதலில் தெரிவுசெய்பவர் ராஜா ராம்மோகன் ராய். தமிழில் ராம்மோகன் ராய் பற்றி ஒரு நல்ல வரலாற்றுநூல் இன்றுவரை எழுதப்படவில்லை, மொழியாக்கம் செய்யப்படவுமில்லை. ஆனால் தமிழ்ப்பண்பாட்டின் மறுமலர்ச்சியிலேயே ராம்மோகன் ராய் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. அவர் உருவாக்கிய பிரம்மசமாஜம் தமிழகத்திலும் ஏராளமான கிளைகளுடன் இயங்கியிருக்கிறது.
அதன் தமிழக ஆளுமையாக இருந்த பகடாலு நரசிம்மலு நாயிடு தமிழ் உரைநடையின் உருவாக்கத்திலும், இந்துமதச் சீர்திருத்தத்திலும், தமிழகத் தொழில்வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றியவர். பிரம்மசமாஜ வழிபாட்டுக்காக அவர் எழுதிய ஹிந்துபைபிள் என்ற நூலே இந்துமதத்தை அறிவார்ந்த கொள்கைகளைக்கொண்டு மட்டும் தொகுப்பதற்கான முதல் முயற்சி.[ஹிந்து பைபிள்]
ராம்மோகன் ராய் அவர்களின் பங்களிப்பை சுருக்கமாகச் சொல்லி அவருடைய குறிப்பிடத்தக்க கட்டுரைகளில் சிலவற்றை எடுத்து அளித்திருக்கிறார் ராமச்சந்திர குகா. இக்கட்டுரை காட்டும் ராம்மோகன் ராய் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அணுக்கமானவராகவும், இந்தியர்களுக்கும் பிரிட்டிஷாருக்குமான உரையாடலுக்கு உதவுபவராகவும் இருந்தவர். பலமொழி அறிஞர். பண்டைய நூல்களை ஆழ்ந்து கற்றவர். அவருடைய சொல்லுக்கு பிரிட்டிஷாரிடம் செல்வாக்கு இருந்தது. ஆகவே அன்று பிரிட்டிஷ்கல்வியால் படித்து மெலே வந்த உயர்வர்க்கமும் அவரை செவிகூர்ந்து கவனித்தது.
பிரிட்டிஷ் [ஐரோப்பியப்] பண்பாட்டின் ஆக்கபூர்வ அம்சமான தர்க்கபூர்வ அறிவியல்நோக்கு, பொதுச்சட்டங்கள், ஆசாரங்களுக்கு அப்பாற்பட்ட நவீன வாழ்க்கைமுறைகள், ஜனநாயகப்பண்புகள் ஆகியவற்றை இந்துமதத்திற்குள் கொண்டுவர முயல்கிறார் ராம்மோகன் ராய். இந்துமதத்தின் சாராம்சமாக உள்ளது பிரம்மம் என்னும் அருவமான இறை பற்றிய உருவகம் என்று எண்ணி, அதை ஐரோப்பாவின் அறிவொளிக்கால விழுமியங்களுடன் இணைத்து ஒரு புதிய இந்துக் கிளைமதத்தை நிறுவ முயல்கிறார்.
இந்நூலிலுள்ள ஒரு கட்டுரையில் பிரிட்டிஷார் இந்தியர்களுக்கான கல்வியை அளிக்கும் பொறுப்பை இங்கிருக்கும் பாரம்பரியக் கல்வியமைப்புகளுக்கு கொடுப்பதற்கு எடுத்த முடிவை மிகக்கடுமையாக கண்டித்து மன்றாடுகிறார் ராம்மோகன் ராய் . இந்துக்களுக்கு இன்று தேவை சம்ஸ்கிருதக் கல்வி அல்லது சாஸ்திரக்கல்வி அல்ல, அந்த யுகம் முடிவுற்றுவிட்டது, இந்தியர்களுக்கு ஆங்கிலேயரைப் போலவே அறிவியல்கல்வியே தேவை என வாதிடுகிறார். சம்ஸ்கிருதக் கல்வியால் இனி நடைமுறைப்பயன் ஏதுமில்லை என்றும், அது குடிகளை மேலும் பழமையிலேயே ஆழ்த்தும் என்றும் கூறுகிறார். அவருடைய சிந்தனையை வெவ்வேறு வகையில் பின்னர் வந்த சீர்திருத்தவாதிகள் அனைவருமே முன்வைத்திருக்கின்றனர்.
சையத் அகமது கான்இந்திய மறுமலர்ச்சிச் சிந்தனை என்பது ஒரே வரியில் ‘ஐரோப்பிய அறிவொளிக்கால விழுமியங்களை நோக்கி பழமையான பண்பாட்டை நகர்த்த முயல்தல் ’என்று சொல்லலாம். அந்த வகையில் ராம்மோகன் ராய் இந்தியமறுமலர்ச்சியின் முன்னோடி என்பது சரியே. ராம்மோகன் ராய் அவர்களின் இஸ்லாமிய வடிவம் என அலிகர் பல்கலையை நிறுவிய சையது அகமது கானை குறிப்பிடலாம். அவரும் ராம்மோகன் ராய் போலவே கல்வியாளர், பன்மொழி அறிஞர். இஸ்லாமிய சமூகம் மதம்சார்ந்த ஆசாரங்கள், மதகுருக்களின் ஆதிக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபடவேண்டும், நவீனக்கல்வி வழியாகவே அது இயலும் என்று சையத் அகமது கான் வாதிட்டார்
ஆனால் இதிலுள்ள கட்டுரைகளிலேயே பின்னர் உருவான எல்லா முரண்களின் விதைகளையும் காண்கிறோம். சையத் அகமது கான் பிரிட்டிஷ் ஆதரவாளர். ஆகவே காங்கிரஸை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறினால் இந்தியா எவரிடம் செல்லும்?’ என்று ஒரு கட்டுரையில் அவர் கேட்கிறார். இந்தியாவை முந்தைய காலகட்டத்து அரசர்களும் நவாபுகளும் ஆள்வார்கள் என்றால் பழைய இருண்டகாலத்துக்கே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும் என ஐயுறுகிறார்.
பிரிட்டிஷாரின் ஆட்சி அகலும் என்றால் பத்தான்கள் பாலையிலிருந்து வெட்டுக்கிளி போல வந்து இந்தியாவை சூறையாடுவார்கள், சிந்துவிலிருந்து கங்கைவரை ரத்த ஆறுதான் ஓடும் என்கிறார்.காங்கிரஸ் என்பது ஒரு இந்துமீட்புக் கட்சி என நினைக்கிறார். அந்த ஐயம் காந்தி வரும்வரை நீடித்தது. கிலாஃபத் போராட்டத்தை காந்தி ஆதரித்தது அதனால்தான். காந்தியின் போராட்டம் உச்சமடைந்தபோது அந்த ஐயத்தை வளர்த்து பிரிட்டிஷார் இந்தியாவை உடைத்தனர்.
ஃபுலேஇவ்விருவர் பேசிய தொனியும் மேலிருந்து மக்கள் என்னும் தொகுப்படையாளம் நோக்கியதாக இருந்தது.ஆனால் அந்த ஒட்டுமொத்தத்தில் உள்ளடங்கியிருந்த ஒடுக்கப்பட்ட, குரலற்ற மக்களின் உரிமைக்கான குரல்கள் பின்னர் எழத்தொடங்கின. அவர்களில் தலித் மக்களின் முதற்குரல் என்று சொல்லத்தக்க ஜோதிராவ் ஃபுலே முக்கியமானவர். தலித் மக்களின் கடைப்பட்ட நிலைமை, அவர்கள் உச்சபட்சமாகச் சுரண்டப்படுதல் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அவர்களின் வாழ்வுரிமை, கல்வி ஆகியவற்றுக்காக பேசுபவராக இருந்தார் ஃபுலே.
ஃபுலே எழுதிய குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு தலித் குடும்பம் கிராமத்தின் வாழ்க்கைச் சித்திரம் ஒன்றை மிகத்தேர்ந்த புனைவெழுத்தாளருக்கு நிகரான சொல்வன்மையுடன் எழுதுகிறார். குப்பைமேட்டில் புழுக்களைப்போன்ற வாழ்க்கை. அழுக்கு, நோய் என்ற அறிவுகூட இல்லை. சாவு ஒவ்வொரு கணமும். உழைப்பும் சுரண்டலுக்குட்பட்ட அடிமைத்தனமுமே வாழ்க்கை.
இக்குறிப்புகள் பெரும்பாலும் பிரிட்டிஷாரை நோக்கி செய்யப்பட்ட கோரிக்கைகள். ஃபுலே பிரிட்டிஷார்தான் இந்தியாவின் தலித் மக்களுக்கு காவல் என நினைக்கிறார். ஆனால் இந்த குறிப்புகள் காட்டும் சித்திரம் பிரிட்டிஷார் தலித் மக்களுக்காக எதையும் செய்யவில்லை, செய்யத்தயாராகவும் இல்லை என்பதே.
பிரிட்டிஷாருக்கு இந்தியாவை ஆள உயர்குடிகளின் ஆதரவு தேவையாக இருந்தது. நிர்வாகத்தில் பிராமணர்களும் நிலவுரிமையில் பிராமணரல்லாத சாதியினரும் அவர்களுடன் நின்றாகவேண்டும். ஒவ்வொரு ஊரிலும் உயர்சாதி நிலப்பிரபுக்களை உருவாக்கி, அவர்களிடம் மொத்த நிலவுரிமையையும் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தையும் அளித்து, அவர்களை தங்களுக்கு விசுவாசமாக வைத்திருப்பதே பிரிட்டிஷாரின் ஆட்சிமுறை. அந்த உள்ளூர் பிரபுக்களின் கொடிய சுரண்டல், அடிமைமுறை பற்றித்தான் ஃபுலே சொல்கிறார், பிரிட்டிஷாரிடம் முறையிடுகிறார்.
பிரிட்டிஷாரின் ஆட்சியின் அடித்தளமே அந்த சுரண்டல் நிலப்பிரபுக்களால் ஆனது என்பதை ஃபுலே உணர்ந்ததாக தெரியவில்லை. கிராமங்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சென்று பார்க்கவேண்டும் என்று ஃபுலே கெஞ்சிக்கொண்டே இருக்கிறார். ஆங்கிலேயருக்கு ராணுவத்திலும் வெளியிலும் சில வகையான வேலைகளுக்கு தாழ்த்தப்பட்டவர் தேவைப்பட்டனர். அவர்களுக்கு அவ்வாய்ப்பை அளித்தனர். அவ்வாய்ப்பு பெற்றவர்கள் சாதியமைப்பின் அடக்குமுறையில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் தங்கள் குலத்தவருக்காக குரலெழுப்பினர்.
அவ்வாறு இந்தியாவில் தலித் குரல் எழ பிரிட்டிஷார் வழிவகுத்தனர்.ஆனால் அம்மக்களுக்காக எதையும் செய்யவில்லை. சட்டபூர்வமாகவும், நிர்வாக அடிப்படையிலும். தீண்டாமை ஒழிப்புக்குக்கூட எதையும் செய்யவில்லை. இந்திய தலித் வாழ்க்கையில் மெய்யான மாற்றங்கள் உருவாகத் தொடங்கியது மேலும் அரைநூற்றாண்டுக்குப்பின் தேசிய எழுச்சி உருவானபின்னர்தான்.
இன்னொரு ஒடுக்கப்பட்ட வர்க்கம் பெண்கள். அவர்களுக்காகக் குரல்கொடுத்த தாராபாய் ஷிண்டேயின் வாழ்க்கையையும் குறிப்புகளையும் குகா அளிக்கிறார். ஆனால் தாராபாய் ஷிண்டே சேவை என எதையும் செய்யவில்லை. அவருடைய எழுத்துக்களை பெண்களோ அக்கால செயல்வீரர்களோ படிக்கவுமில்லை. அவருடைய குறிப்புகள் ஒரே ஒரு நூலை ஆங்கிலத்தில் எழுதினார், அவ்வளவுதான்.எனில் எப்படி அவர் தாராபாய் ஷிண்டேயை தேர்வுசெய்தார்? பெண்ணுக்காகப் பேசிய முதல் பெண்நிலைவாதி என அவர் தாராபாய் ஷிண்டேயை மதிப்பிடுகிறார்
தாராபாய் ஷிண்டேதாராபாய் ஷிண்டே அன்றைய பெண்களின் கீழ்நிலையை விரிவாக சித்தரிக்கிறார். கல்வியறிவு உலகப்பழக்கம் ஆகியவை பெண்ணுக்கு மறுக்கப்படுகின்றன. அதன்பின் அவளுக்கு கல்வியறிவுக்கோ உலகப்பழக்கத்திற்கோ தகுதி இல்லை என்பது திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டப்படுகிறது. தாராபாயின் எழுத்துக்கள் கூர்மையான அங்கதமும் சீற்றமும் கொண்டவை. இந்திய ஆண்கள் மட்டும் அப்படி என்ன கல்வியறிவும் உலகியல்திறனும் கொண்டவர்களா என்ற கேள்வியை அன்றைய சூழலில் வைத்துப்பார்த்தால் உண்மை என்றே உணரலாம்
குகா இந்திய மறுமலர்ச்சியின் சிந்தனைவிதைகளை உருவாக்கியவர்கள் என இந்நால்வரையும் காட்டி அவற்றை முளைக்கவைத்தவர்கள் என இருவரை எடுத்துச்சொல்கிறார். கோபாலகிருஷ்ண கோகலே, பாலகங்காரதர திலகர். ஒருவருக்கொருவர் மாறுபடுபவர்கள். பின்னாளில் காங்கிரஸில் உருவான மிதவாதி, தீவிரவாதி என்னும் பிரிவினைக்கு ஆதாரமான கொள்கைகளை உருவாக்கியவர்கள்.
இவர்களில் கோகலே அடிப்படையில் ஆசிரியர். பிரிட்டிஷ் ஆட்சியின் நலம்நாடும் நோக்கு மேல் நம்பிக்கை கொண்டவர். பிரிட்டிஷ் ஆட்சியின் கல்விக்கொடை, நிர்வாக உருவாக்கம் ஆகியவை சிறப்பானவை என நம்பியவர்.அதேசமயம் பிரிட்டிஷ் ஆட்சி ஒடுக்குமுறைத்தன்மை கொண்டது என்று எண்ணினார்.
கோகலேகோகலேக்கு ஐரோப்பாவின் ஜனநாயக விழுமியங்கள் மேல் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. இந்தியாவில் கல்வி பரவலாக ஆகி, அந்த ஜனநாயக விழுமியங்கள் அறிமுகமாகி, மெல்லமெல்ல இந்தியர்களே இந்தியாவை ஆளும்நிலை வரவேண்டும் என நினைத்தார். ஜனநாயகத்துக்கான போராட்டம் என்பது ஜனநாயகமுறைப்படியே நடக்கவேண்டுமென நம்பினார்.
கோகலே இளம் மாணவர்களிடையே நிகழ்த்திய உரை ஒன்றை குகா எடுத்து அளித்திருக்கிறார். அதில் ஐரோப்பாவின் சிறப்பு என்ன என்பதை சுட்டிக்காட்டுகிறார். அங்கே மாபெரும் கல்விநிலையங்கள் உருவாகி கல்வி பரவலாக அளிக்கப்படுகிறது. அங்கிருந்து சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், தலைவர்கள் உருவாகிறார்கள். ஆனால் அதைவிட முக்கியமானது தன் ஜனநாயக உரிமை, தன் ஜனநாயகக் கடமை ஆகியவற்றை உணர்ந்த சாதாரணக்குடிமகன் உருவாகி வந்திருக்கிறான். அவனே எதிர்காலக்குடிமகன் என்கிறார். கோகலே உருவாக்க விரும்பிய மாற்றம் என்பது இதுதான்
திலகர்நேர்மாறாக திலகர் பாரம்பரியத்தை நோக்கி திரும்பினார். எல்லா விழுமியங்களும் இங்கு ஏற்கனவே இருந்தன, அவை அழிக்கப்பட்டன, அவற்றை மீட்கவேண்டும் என்னும் பழமைவாத நோக்கு கொண்டிருந்தார். பழைய இந்துமுறைகளைப் பயன்படுத்தி இந்துக்களை ஒருங்கிணைக்க முயன்றார், அதன்பொருட்டே அவர் பிள்ளையார் ஊர்வலம் என்னும் திருவிழாவை உருவாக்கினார்.
இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து உடனே விடுதலைபெறவேண்டும், இந்தியர்களுக்கு தங்கள் பொற்காலத்தை மீட்டெடுக்கும் தகுதி உண்டு என நினைத்தார். சுதந்திரம் எனது பிறப்புரிமை என முழக்கமிட்டவர் பர்மாவில் ஏழாண்டுகள் சிறைவாசம் முடிந்து மீண்டபோது சற்றுமென்மையாகி நிபந்தனைக்குட்பட்ட தன்னாட்சிக்காக குரலெழுப்பினார்
திலகரின் கட்டுரைகள் இங்கே அளிக்கப்பட்டிருப்பவை ஒரு பழமைவாத தலைவரையே காட்டுகின்றன. ஐரோப்பா இருநூறாண்டுகளாக அடைந்த மறுமலர்ச்சியைப்பற்றிய எந்தச் சிந்தனையும் திலகரிடம் இல்லை. ஜனநாயகம், மானுட சமத்துவம், மனித உரிமைகள் ஆகியவற்றை அவர் ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தொழில், வணிகம் ஆகியவற்றில் ஐரோப்பா அடைந்த வெற்றிகளைக்கூட அவர் புரிந்துகொள்ளவில்லை. அவர் சாதிமேட்டிமைவாதம், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றை ஆசாரம் பேணுவதன் பகுதியாக ஏற்றுக்கொள்பவராகவே தெரிகிறார்.
திலகரின் கட்டுரைக் குறிப்புகள் காட்டுவது அவருடைய பங்களிப்பு பிரிட்டிஷ் ஆட்சியின் கல்விமுறையாலும், அன்று ஓங்கியிருந்த மதப்பிரச்சார அலையாலும் இந்தியாவின் மரபுமேல், இந்தியவரலாற்றின்மேல் இந்தியாவின் சாமானியர்களுக்கு உருவாகியிருந்த ஐயத்தையும் அவநம்பிக்கையும் அகற்றி தன்னம்பிக்கையையும் இந்தியா என்னும் தேசம் மற்றும் பண்பாடு பற்றிய உணர்வையும் உருவாக்க திலகரால் முடிந்தது என்பதே. அதற்காக அவர் விமர்சனமில்லாத பழமை வழிபாட்டை மேற்கொள்கிறார்
தமிழகத்தின் சீர்திருத்தவாதிகளான பாரதியும் வ.உ.சிதம்பரம் பிள்ளை வ.வே.சு.அய்யர் போன்றவர்கள் திலகரை தலைமையாக ஏற்றனர் என்றாலும் அவர்கள் திலகரின் ஆசாரவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியப் பண்பாடு சார்ந்த பெருமிதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டனர், விமர்சன நோக்குடன் மரபை அணுகினர். பெண்ணுரிமை, மானுட சமத்துவம் ஆகியவற்றையே முன்னிறுத்தினர்.
இந்நூல் அடுத்து காந்தியை நோக்கிச் செல்கிறது.ஐநூறு பக்கமுள்ள இந்நூலின் முதல் இருநூறு பக்கங்களுக்குள் குகா இந்தியாவின் எழுச்சியை உருவாக்கிய அடிப்படையான கருத்துநிலைகளை முழுமையாகவே அடையாளப்படுத்திவிட்டார். இத்தெரிவை நிகழ்த்தி, சுருக்கமான குறிப்புகள் வழியாக இந்த சித்திரத்தையும் அளித்திருப்பது இந்நூலை தமிழில் சமீபத்தில் வந்த சிறந்த அரசியல்வரலாற்று நூல்களில் ஒன்றாக ஆக்குகிறது. அரசியலின் அடிப்படைகளை, இந்தியாவின் பண்பாட்டு மறுமலர்ச்சி மற்றும் அரசியல் உருவாக்கத்தின் பரிணாமத்தை அறியவிரும்புபவர்களுக்கான அரிய ஆவணம் இது
[மேலும்]
இரவுமழை- கடிதங்கள்
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் தளத்தில் சுகதகுமாரியின் ‘ராத்ரி மழா’ கவிதை கேட்டேன். உங்கள் மொழிபெயர்ப்பையும் வாசித்தேன். உண்மையில் உருகி விட்டேன். மீண்டும் மீண்டும் கேட்டும் வாசித்துக் கொண்டுமிருக்கிறேன்.
விம்மும் விசும்பும் அந்த இளம் பித்தியும், நோய் படுக்கையின் துயரமும், காலையானவுடன் முகம் துடைத்து, ரகசியப் புன்னகையோடு திரும்பிச் செல்லும் இரவு மழையின் நாட்டியமுமென கவிதை பித்துக் கொள்ள வைக்கிறது.
சித்ராவின் குரலினிமையும், ‘நடுங்கி’ என்ற இடத்தில் ஒரு நொடி கேட்கும் அந்தத் தாளமும் தலையைச் சுழல வைக்கின்றன.
அம்மைக்கு வணக்கமும் அஞ்சலியும்.
அன்புடன்
கல்பனா .
அஞ்சலி- சுகதகுமாரிஅன்புள்ள ஜெ
இந்த ஆண்டு டிசம்பர் முழுக்க அஞ்சலிகள்தான். இத்தனை அஞ்சலிகள் எழுதநேர்வதை கவனிக்கிறோமா? இதையும் ஒரு நியூநார்மல்சி என்று எடுத்துக்கொண்டு சென்றுகொண்டே இருக்கிறோம் இல்லையா?
சுகதகுமாரியை நான் முன்பு வாசித்ததில்லை. நீங்கள் எழுதிய அஞ்சலிக்கட்டுரையும் அதனுடன் இணைந்துள்ள கவிதையும் என் மனதை மிகவும் கசக்கி பிழிந்தன. அது ஒரு பெண்மனக்கவிதை. பெண்ணின் தவிப்பும் தனிமையும் உள்ள கவிதை.
சுகதகுமாரி எவ்வளவுபெரிய ஆளுமை. எவ்வளவு புகழ் பெருமை அங்கீகாரம். எவ்வளவு சாதித்திருக்கிறார். ஆனாலும் அந்த நோய்ப்படுக்கையின் தனிமை பயங்கரமாக இருக்கிறது. என்னைப்போன்ற ஒரு சாதாரணப்பெண்ணுக்கு என்ன வாழ்க்கையின் முடிவு அமையப்போகிறது?
ஆனால் அந்த கவிதை அந்த துயரத்தை பதிவுசெய்வது அல்ல. அந்தத் துயரத்தை கடந்துசெல்வதுதான். அந்த துயரத்தை கவிதை வழியாக அவர்கள் வென்றுவிட்டார்கள். அதுதான் உச்சநிலை.
அற்புதமான கவிதை. சித்ரா அதைச் சொல்லியிருக்கும் விதமும் அழகானது. பாடல்வடிவும் அழகானது
எஸ்.சித்ரா
அணுக்கம்- கடிதம்
கோடை மழை
சென்னைவாசியான ஒரு சிறு தொழில் முனைவோனின் வழக்கமான நாள் தான் இன்றும். எப்போதும் போலவே இன்றும் சரக்கு வரத் தாமதம். எனது வாடிக்கையாளர்களின் தொடர் அழைப்புக்களால் அலைக்கழிந்து இருந்தேன். காத்திருப்பின் கடுப்பில் எதிரே இருந்த உணவகத்தில் நுழைந்து ஒரு காபி சொல்லிவிட்டு உங்கள் வலைத்தளத்தில் நுழைந்தேன்.
“கோடைமழை” யை பார்த்ததும் உடனே ஆர்வமாகிவிட்டது. சவேரியார் குன்று வேளிமலை என்று உங்கள் அக்கம்பக்கத்தைப் பற்றி படிக்கப்போகிறோம் என்று புரிந்தது . மெதுவாய் வாசிக்கத் தொடங்கினேன்.
“இரவில் வானில் தழல் கொடி”
“மழை மழை என எல்லா இலைகளும் அசைந்தன . ஆனால் மழை வரவில்லை. கொடித்துணிகள் தவித்தது தான் மிச்சம்.”
இவ்வார்த்தைகள் உங்களுக்கு உருவாவது எவ்விதம்? இவை போல் எத்தனையெத்தனை கட்டுரைகளில் விஸ்தரிப்புக்கள், விவரணைகள். உங்கள் கதைகளை தாண்டி எப்போதும் இவை போன்ற வரிகளே என்னோடு எப்போதும் கூட வருகின்றன.
நின்று திரும்ப திரும்ப வாசித்தேன். எனது நெருக்கடி மனநிலை சட்டென விலகியது. இது எத்தனையாவது முறையாக(உங்கள் எழுத்துக்களால்) எனக்கு நிகழ்கிறது? தெரியவில்லை. எப்போதுமே அடித்து பிடித்து ஓடும் வாழ்வைகொண்டு, நேரக்கணக்கு எதுவும் இல்லாமல் சுற்றும் எனக்கு, மனைவியை அழைத்துவர ரயில் நிலையத்தில் காத்திருக்கையில், வாடிக்கையாளர்களை சந்திக்க செல்லும் இடைவெளியில் உங்கள் கட்டுரைகளை படிக்கையில் என் மனதை மலர வைக்க இந்த வர்ணனைகள் போதுமானதாக இருக்கிறது.
உங்கள் அன்றாடத்தை எழுதும் போது அது என் போன்றவர்களுக்கு தரிசனமாக மாறுவதை நீங்கள் உணர்ந்து இருக்கறீர்களா?
வருடத்தின் ஒன்பது மாதங்கள் மெட்றாஸின் தகிப்பில் வசிக்கும் எனக்கு உங்கள் பார்வதி புரமும், வேளிமலையும் அங்கு பெய்யும் மழையும் மிகவும் பரிச்சயம். ஒரே ஒரு முறை நாகர் கோயிலுக்கு ரயில் பிடித்து பார்வதி புரத்திலும் பறக்கையிலும் சுற்றியிருக்கிறேன். பறக்கை என்ற சிற்றூரில் லஷ்மி மணிவண்ணன் நடத்திய அரங்கில் உங்களோடு காலை முதல் மாலை வரை இருந்தது பிரமிப்பை அளித்தது. அது போன்றஒரு நிறைவை நான் மிகவும் அரிதாகவே அடைந்திருக்கிறேன்.
சென்னையில் உங்கள் ஒவ்வொரு சந்திப்பிலும் உங்களுடன் அணுக்கமாக (ஆனால் நீங்கள் அறியாமல்) இருந்துவிட்டு வீடு திரும்புகையில் அதையே அசை போட்டுகொண்டு திரும்பி இருக்கிறேன்.
உங்கள் சொல்லாடல்களை, மேற்கோள்களை என் மனைவியிடமோ நண்பரிடமோ நினைவு கூறாமல் ஒருநாளும் கழிவதில்லை.
ரயிலில் ஈரோடு செல்லும்போது நீங்கள் என்னுடன் தற்செயலாக பயணப்பட்டால் எப்படி உங்களுடன் பேசுவது என்று என் மனது ஒத்திகை பார்ப்பதை நினைத்து சிரித்து இருக்கிறேன். ரயில் பயணத்தில் உங்களை எரிச்சல் படுத்தாமல் பயணிப்பது எப்படி என்பது எனக்கு தெரியும் என்றும் பெருமைபட்டிருக்கிறேன்.
உங்களுடன் இது வரை ஒரு வார்த்தை கூட பேசாமல், உங்களை எனக்கு மிகவும் அணுக்கமானவராக நான் நினைத்து கொள்வது ஒரு புதிர் தான். ஆனால் இதை போல் எத்தனை வாசகர்கள் தங்களது உளநிலையை எந்தவித தங்குதடையுமின்றி உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதையும் அறிகிறேன்.
பலமுறை இதை உங்களிடம் எழுதி விடவேண்டும் என்று நினைத்து, ஆனால் தயங்கி விடுவேன். இன்று எழுதிவிட்டேன்.
நன்றி
மிக்க அன்புடன்
சண்முகம் ஜி
அன்புள்ள சண்முகம்
பொதுவாக எழுத்தின் வேலை என்பது அருகமையச் செய்வதுதான். எழுத்தாளர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு என்பது வாசகனுடன் அணுக்கமாகப் பேசுவது. ஒரு கட்டத்தில் எழுத்தாளனின் சிக்கல்களும் தோல்விகளும்கூட தெரியும் அளவுக்கு. அந்த அணுக்கத்திலிருந்து நம்மால் விடுபடமுடியவில்லை
அந்த அணுக்கம் எனக்கு என்னை கவர்ந்த ஆசிரியர்களுடன் உண்டு. அதே அணுக்கத்தை என் வாசகர்களிடமும் உணர்கிறேன். நான் நாட்குறிப்புகளையும் வெளியிடுவது என்னுடன் அணுக்கமாக இருப்பவர்களுக்கு அவை உதவும் என்னும் எண்ணத்தால்தான்
ஜெ
தோழர் மெஸ்கள்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
உண்மையிலேயே தோழர்களின் கள்ளமற்ற தன்மையை கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். இந்த கபடுசூதான வாழ்க்கையில் யமுனா ராஜேந்திரன் போன்ற வெள்ளந்தி மனிதர்கள் அவசியம் தேவை. அந்த அறுநூறு பக்க நூலை நான் கண்டிப்பாக வாங்கி வாசிப்பேன்.
உங்கள் தளத்தில் நிகலாய் ஒஸ்திரோவ்ஸ்கி பற்றிய கட்டுரைக்கு வந்த இரண்டாம் கடிதத்தைப் பாருங்கள்.என்ன ஒரு களங்கமில்லாத நம்பிக்கை. இந்த நம்பிக்கை சாதாரணமானதா என்ன? உருகும் உண்மைகள்- கடிதங்கள்
இந்த வெள்ளந்தி மனிதர்களிடம் சண்டை வந்தால்கூட எப்படி இருக்கும்? இதோ புலியூர் முருகேசன் என்பவரின் முகநூல் குறிப்பு
‘பாக்களத்தம்மா’ நாவலின் ‘நன்றிகள்’ பக்கத்தில் ‘என் பெயர் ஏன் அவருக்குக் கீழே இருக்கிறது? அவரை விட நான் கீழானவனா?’ என நீங்கள் கேட்டது, இன்றைய நாளில், என் 51 வருட வாழ்வில் எதிர்கொண்ட வன்மமான அவதூறு.
நல்லது தோழர்களே! பெயர்களை அடுக்குவதில் இப்படியெல்லாம் உள் அரசியலைக் கண்டு பிடிக்கும் உங்களின் காழ்ப்புணர்ச்சிக்கு என் வணக்கம்.
ஆனால், நான் உங்களுக்காக எழுத வரவில்லை. என் எழுத்தும், வாழ்வும் சமரசமற்றது. என்னை ‘நன்றி நவிலலில்’ தூற்றும் நீங்கள் ஒருபோதும் என் காத்திரமான வாழ்வின் ஓரத்தில் கூட வந்து நிற்க முடியாது.
நான் மீண்டும் சொல்கிறேன். இறந்தாலும், இருந்தாலும் சமரசமற்ற சிவப்பாகத்தான் இருப்பேன்.
தோழர் புலியூர் முருகேசன்
அந்த பெயர்ச்சண்டையும் சரி அதற்கு அளிக்கப்பட்ட கண்ணீர்மல்கிய மறுப்பும் சரி கிளாஸிக். இவர்கள் நாம் போற்றிப்பாதுகாக்க வேண்டியவர்கள்
ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஜெ
எங்க ஊரிலே நாங்களும் பெரிய தலைக்கட்டுதான்
பார்க்க படம் இணைப்பு
நவீன்
மலேசியா
அன்புள்ள நவீன்,
ஆயிரந்தான் இருந்தாலும் நம் ஆள் ஒரு தோழர். தோழர் யமுனா ராஜேந்திரன். உங்கள் ஆளைப்போன்ற ஒரு அடிமடையனின் எதிரியாக இருப்பதெல்லாம் போன ஜென்மத்து பாவத்தின் விளைவு. என்ன பிரச்சினை என்றால் இந்த ஜென்மத்தில் இவர் எடுத்த காரியத்தை முடிக்கவில்லை என்றால் அடுத்த ஜென்மத்திலும் உங்கள் கூடவே வருவார். யமுனா ராஜேந்திரன் என்ன இருந்தாலும் ஆவேசமான உழைப்பாளி. எதையும் மிச்சம்வைத்துச் செல்லமாட்டார்.
ஜெ
வெண்முரசு- தேவை புதியவாசிப்பு- ஆர்.பாஸ்கர்
வெண்முரசை வாசிக்கும்போது ஒன்று தோன்றிக்கொண்டே இருந்தது, அதை வாசிக்க ஒரு குறிப்பிட்ட மனப்பயிற்சி தேவையாகிறது. எல்லா படைப்பையும் வாசிப்பதற்கு அதற்கான மனப்பயிற்சி தேவை. ஆனால் வெண்முரசு, கொற்றவை போன்றவற்றை வாசிப்பதற்கு தனிச்சிறப்பான ஒரு மனநிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
வெண்முரசு- தேவை புதியவாசிப்பு- ஆர்.பாஸ்கர்January 19, 2021
லலிதா என்ற யானை
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி G.R.சுவாமிநாதன் அவர்கள் யானை பராமரிப்பு மற்றும் வளர்ப்பு தொடர்பாக அளித்த தீர்ப்பு வித்தியாசமானதாகவும், மிக முக்கியமான ஒன்றாகவும் தோன்றியது. விலங்கு உலகை பற்றியும், விலங்கிற்கும் மனிதனிற்கும் உள்ள உறவை பற்றியும் தொடர்ச்சியாக எழுதி வரும் தங்களின் கவனத்திற்கு இத்தீர்ப்பை தெரிவிக்க விழைகிறேன்.
(கடந்த செப்டெம்பரில் நமது கர்நாடகா வனப்பயணத்தை முடித்து திரும்புகையில், பண்ணாரி அருகே பாதையின் ஓரத்தில் நின்ற ஒரு குட்டி யானையை கண்டதும் நீங்கள் அடைந்த பரவசமும், குழந்தைக்குரிய குதூகலமும், அதை முழுதும் காண துடித்த உங்கள் ஆர்வமும் நினைவில் எழுகிறது)
“லலிதா” என்ற யானையை ஷேக் முகமது என்பவர் 08.05.2000ல் குஞ்சு முகமது என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளார் பின்பு 2002ல் உரிமையாளர் உரிமைமாற்றம் வேண்டி விண்ணப்பித்துள்ளார். இப்போது வனவிலங்குகச் சட்டத்தின் சிக்கல்களல அதை கிடப்பில் போட்டுவிட்டனர். சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு அந்த விண்ணப்பத்தை நிராகரித்து உள்ளார்கள் அதிகாரிகள். நிராகரிப்பு உத்தரவுக்கு எதிராக முகமது உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
ஜி.ஆர்.சுவாமிநாதன்அரசு தரப்பிலிருந்து மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவாக விளக்கியுள்ளார்கள். யானையை காட்டிலாகா பாதுகாப்பில் விடும்படி ஆணையிடப்பட்டுள்ளது.சட்டத்தின் வரையறை படி அரசு செய்தது சரியானதே. ஆனால் அனைத்து தருணங்களிலும் சட்ட விதிகள் சரியான முடிவெடுப்பதற்கு உகந்ததாய் இல்லை. சில நேரங்களில் ஒரு நல்ல தீர்வுக்காக விதிமுறைகளை தாண்டி யோசித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது.
தீர்ப்பின் ஆரம்பத்திலேயே இதை குறிப்பிடும் நீதிபதி , ‘out of box’ சிந்தனை என்பதின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் வலியுறுத்துகிறார். நமது அரசு அலுவலக செயல்பாட்டில் ஊழலை காட்டிலும் முக்கிய பிரச்னை என்பது இதுதான். விளைவு எவ்வாறாயினும் அதை பற்றி கருத்தில்கொள்ளாமல் வெறும் காலகாலமாக பின்பற்றும் நடைமுறைகளையும், சட்ட விதிகளின் அடிப்படையிலும் கண்மூடித்தனமாக செயல்படுவதினால் பல நேரங்களில் பலருக்கு பெரும் பாதிப்புதான் ஏற்படுகிறது.
இந்த வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு அரசு செயல்பட்டுள்ளது அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டால் அதனால் ஏற்படும் விளைவு மற்றும் பாதிப்பு என்ன என்பதை நீதிபதி ஆராய்கிறார். பொதுவாக வழக்காடுபவர்களின் நலன் தான் தீர்ப்பிற்கு அடிப்படையாக அமையும். ஆனால் குழந்தை தன் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று தாயோ, தந்தையோ அல்லது மற்ற உறவினர்களோ கேட்கும் வழக்குகளில் மட்டும் வழக்கில் உள்ள நபர்களைவிட வழக்கில் சம்பந்தப்பட்ட குழந்தையின் நலனையே நீதிமன்றம் கருத்தில் கொள்ளும்.
தன்னுடைய தரப்பை, நலனை முன்வைக்க முடியாத, ஆனால் வழக்கின் முடிவால் பாதிக்கப்படக்கூடிய, குழந்தையை போலவே இங்கு லலிதாவும் உள்ளதாக நீதிபதி கருதுகிறார். எனவே லலிதாவின் நலனே இவ்வழக்கை தீர்மானிக்கவேண்டிய காரணி என்றெண்ணி நீதிபதி, யாருக்கும் தெரிவிக்காமல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன்புதூர் என்ற கிராமத்திற்கு நேரில் சென்று அங்கு லலிதாவை காண்கிறார்.
அங்கு லலிதாவிற்கு தேவையான உணவு வழங்கப்பட்டிருந்தது. அவரை மிகவும் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் படுத்திய விஷயம், லலிதா சங்கலியால் கட்டப்படவில்லை என்பது . உடலில் காயங்கள் ஏதுமில்லை, நல்ல உடல்நலத்துடனும் மகிழ்வுடனும் லலிதா காணப்பட்டாள். இவரே உணவளிக்கிறார், லலிதா இவரிடம் தனது அன்பை வெளிப்படுத்துகிறது. சில கோவில் மற்றும் தர்காவில் நடக்கும் விழாக்களில் லலிதாவை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது அவளின் கண்ணியத்தை, கம்பீரத்தை எவ்வகையிலும் குறைப்பதில்லை என்று நீதிபதி கருதுகிறார்.
இருபது ஆண்டு காலம் ஒரு குறிப்பிட்ட சூழலில் இருந்து, குறிப்பிட்ட நபர்களிடம் நெருங்கி பழகி வாழ்ந்து வரும் லலிதாவை, அனைத்திலிருந்தும் பிரித்து வனத்துறையின் முகாமுக்கு அனுப்பினால் லலிதா அடையும் மனத்துயரையும், அதன் உளவியல் பாதிப்புகளையும் நீதிபதி கருத்தில்கொண்டு லலிதாவை மனுதாரருடனேயே, இப்போது இருக்கும் இடத்திலேயே இருந்துகொள்ள அனுமதிக்கிறார்.
அவர் இந்த முடிவை வருவதற்கு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் கொடுக்காத தெளிவை புகழ் பெற்ற ஜெர்மனிய இயற்கை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் Peter Wohlleben அவர்களின் “The Inner Life of Animals” என்ற புத்தகம் மூலம் தான் அடைந்ததாக நீதிபதி குறிப்பிடுகிறார். யானை நுண்ணுணர்வு மிக்கதும், தான் என்ற அறிதல் உடையதும் ஆகும் என்றும்; அவை mirror testல் தேர்வடைந்ததையும் சுட்டிக்காட்டும் நீதிபதி Peter Wohlleben அவர்கள் பலவருட நேரடி அனுபவத்தில் கண்டடைந்து கூறிய உண்மையை ஆப்த வாக்கியமாக எடுத்துகொள்கிறார்.
அது நீங்கள் தொடர்ச்சியாக எப்பொழுதும் சொல்லிக்கொண்டு வரும்,கருத்துதான் “மனிதனுக்கு உள்ள அத்தனை உணர்வுகளும் விலங்குகளுக்கும் உள்ளன. அன்பு, சோகம், இரக்கம் போன்ற மனிதனின் உணர்வுகள் விலங்குகளிடமும் நிறைந்துள்ளன.”
வி.எஸ்.செந்தில்குமார்
அன்புள்ள செந்தில்,
ஓர் அழகான சிறுகதைபோன்ற நிகழ்வு. உண்மையிலேயே நெகிழ்ச்சியை உருவாக்கியது. இந்த நாளே அழகானதாக ஆகிவிட்டது
பலவகையிலும் முக்கியமான தீர்ப்பு இது. இந்தியாவில் விலங்குகள் பற்றிய சட்டங்கள் எல்லாமே பிரிட்டிஷ் சட்டத்தின் அடியொற்றி அமைந்தவை. பிரிட்டிஷ் சட்டம் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவின் அறவுணர்ச்சியும் தத்துவநோக்கும் கொண்டது. மானுடஉரிமைகள் மானுட சமத்துவம் பற்றிய அதன் நோக்கு உலகவரலாற்றின் சாதனைகளில் ஒன்று. முந்நூறாண்டுகள் நீண்ட ஐரோப்பிய மறுமலர்ச்சியின் கொடை அது. பல்வேறு தத்துவஞானிகள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்த சமூகநோக்கின் விளைவு.
ஆனால் இயற்கைபற்றி, விலங்குகள், உயிர்க்குலங்கள் பற்றி அதன் பார்வை கிறிஸ்தவ மதத் தரிசனமாகிய ’மனிதமைய வாதத்’தை ஒட்டியது. மனிதனின் நலனும் மனிதனின் வசதியுமே எப்போதும் கருத்தில்கொள்ளப்பட்டன. ஹெகல் முதல் ரஸ்ஸல் வரையிலான அத்தனை தத்துவஞானிகளும் இக்கோணத்தில் ஒரே நிலைபாட்டையே கொண்டிருந்தனர். இப்போது இயற்கை பேணப்படவேண்டும், விலங்குகள் பேணப்படவேண்டும், உயிர்ச்சமநிலை பேணப்படவேண்டும் என்று ஐரோப்பா சொல்வதுகூட அது மனிதவாழ்க்கைக்கு இன்றியமையாதது என்னும் கோணத்திலேயே.
ஆனால் அந்த எண்ணத்தை அவர்கள் வந்தடைவதற்குள்ளாகவே ஐரோப்பாவின் பல்லுயிர்பெருக்க நிலையை திரும்ப கொண்டுவராதபடி அழித்துவிட்டார்கள். ஊனுண்ணிகள், நச்சுயிர்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. இன்றுகூட ஐரோப்பாவில் பல இடங்களில் வேட்டையாடுவது அனுமதிக்கப்பட்டிருப்பதை நேரில் கண்டேன். இன்றும் ஆப்ரிக்காவிலும் கீழைநாடுகளிலும் பெருமளவில் இயற்கையை அழிப்பதில் ஐரோப்பிய அமெரிக்க அகழ்வு நிறுவனங்கள் பெரும்பங்காற்றுகின்றன. ஆப்ரிக்கநாடுகளில் வேட்டையை சட்டபூர்வமாக்கி, அதை பயன்படுத்தி வேட்டையாடிக்களிப்பவர்களும் அவர்களே.
ஐரோப்பிய மறுமலர்ச்சியின் விளைகனி மார்க்ஸியம். பலவகையிலும் அது ஐரோப்பிய முதலீட்டியத்தின் எதிர்நகல். ஆகவே அது சென்ற இடங்களிலெல்லாம் இயற்கையை முற்றாக அழித்தது. மனிதனுக்காக இயற்கை, இயற்கையை மனிதன் வென்று நுகரவேண்டும் என்னும் பார்வை மார்க்ஸியத்தின் உள்ளுறை. மார்க்ஸிய இலக்கியங்களே இயற்கைமீதான மனிதனின் ‘வெற்றி’யை பாடுபவைதான். ருஷ்யா உலகின் மாபெரும் இயற்கையழிவை தன் நிலத்தில், குறிப்பாக சைபீரியாவில் நிகழ்த்தியது. அதன் விலையை உலகு அளிக்கவிருக்கிறது. சீனா இன்று உலகிலேயே வனவிலங்குகள் அழிப்பு, இயற்கை அழிப்பு ஆகியவற்றில் முதலிடத்திலுள்ளது.
விலங்குகளை ஆளுமைகளாக பார்க்கும் பார்வை ஐரோப்பாவுக்கு இன்னமும் அயலானதே. ஜேன் குடால், டேவிட் அட்டன்பரோ போன்ற அறியப்பட்ட ஆளுமைகள் சிலரே அந்த பொதுப்புரிதலுக்கு எதிராக விலங்குகளின் ஆளுமையை பொதுவெளியில் தொடர்ந்து முன்வைக்கிறார்கள். ஐரோப்பாவின் எண்ணங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன என்பது உண்மை. ஆனால் விலங்குகள் ஆன்மாவற்றவை என்ற மதக்கற்பிதமே பொதுப்புத்தியில் ஓங்கி நிலைகொள்கிறது.
இந்தியமரபு தொல்காலம் முதலே விலங்குகளும் ஆத்மா கொண்டவை, ஊழிலும் பிறவிச்சுழலிலும் இருப்பவை, உணர்வுகளும் எண்ணங்களும் கொண்டவை, நன்று தீது அறிந்தவை, மெய்ஞானத்தைக்கூட அடையும் தகுதி கொண்டவை என்று சொல்லிவந்திருக்கிறது. மனிதர்களின் இருப்பும் விலங்குகளின் இருப்பும் வேறுவேறல்ல என்றுதான் இந்திய மதங்கள் நான்கும் சொல்கின்றன. ஆனால் அந்த உணர்வு நம் சட்டங்களில் பிரதிபலிக்கவில்லை. இந்தத் தீர்ப்பு அந்த தொன்மையான தரிசனத்தை முன்வைக்கிறது. அந்த யானையும் இந்தியாவின் ஒரு குடிமகனுக்கு நிகரான வாழ்வுரிமை கொண்டது, அதன் நலனையும் இந்தியச் சட்டம் கருத்தில் கொண்டாகவேண்டும் என்று இந்தத் தீர்ப்பு குறிப்பிடுகிறது
இது ஒரு மிகமுக்கியமான முன்னகர்வு என நினைக்கிறேன். இதிலிருந்து இன்னும் பல புதிய வழிகள் கிளைக்கக்கூடும். இந்த நிலம் இங்கே வாழும் மனிதர்களுக்கு மட்டும் முற்றுரிமைகொண்டது அல்ல. இதை தங்கள் நலனுக்காக என்னசெய்யவும் மனிதர்களுக்கு உரிமை இல்லை. இங்குவாழும் அனைத்து உயிர்களுக்கும் இந்நிலம் மீது இணையான உரிமை உண்டு. இன்றேகூட வனவிலங்குகளின் எண்ணிக்கையை எடுக்கிறோம், அவற்றின் பாதுகாப்புக்கு அரசு பொறுப்பேற்கிறது, அவற்றின் வாழ்வுரிமையை அரசு உறுதியளிக்கிறது.
[ஒவ்வொரு வனவிலங்கின் சாவும் போஸ்ட்மார்ட்டம் செய்யப்படவேண்டும் என்ற கொள்கையை கொண்டுவந்த யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை நினைத்துக்கொள்கிறேன். வளர்ப்பு யானை மகிழ்ச்சியாக இருக்கிறதா என்பதும் முக்கியமானது என்று அவர் வாதாடி புத்துணர்ச்சிமுகாம்களை அறிமுகம் செய்தார். அவரே இந்த தீர்ப்புக்கான முன்னோடி]
நாளை குடிமகன் என்ற சொல்லுக்கான இலக்கணத்தையே நாளை நாம் மாற்றிக்கொள்ள நேரலாம். இங்குள்ள ஒவ்வொரு உயிரினமும் வாழ்வுரிமை கொண்டதே, அவற்றை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்பதனால் அவை ஒருவகை குடியுரிமையும் கொண்டவையே என்று ஒரு பரந்துபட்ட சிந்தனைக்கு நாம் நாளை சென்று சேரக்கூடும். விலங்குகளும் குடிகளே என்று நாம் சட்டம் வகுக்கும் காலமும் வரலாம். அதை நோக்கிய தீர்க்கதரிசனம் கொண்ட காலடி இந்த தீர்ப்பு.
மிகமுக்கியமான தீர்ப்பு. அதில் குழந்தையின் உரிமையையும் யானையின் உரிமையையும் ஒப்பிட்டிருக்கும் இடம் கவித்துவமானது
ஜெ
கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்புநினைவின் இசை
சினிமாவுடன் எந்த உணர்வுரீதியான தொடர்பும் கொள்ளக்கூடாது; அதற்கு நான் அந்நியன், விருந்தாளி மட்டுமே என்று எனக்கு நானே எப்போதும் சொல்லிக்கொள்வேன். அதன் எந்தக்கொண்டாட்டத்திலும் நான் இல்லை. அதன் வெற்றிதோல்விகளை கருத்தில்கொள்வதில்லை. அதில் உண்மையான நண்பர்கள் உண்டு, ஆனால் தொழில்முறையாக எந்த நட்பையும் பேணிக்கொள்வதில்லை.
ஆனால் நான் சினிமாவுக்கு வந்து 16 ஆண்டுகளாகின்றன. 2004ல் கஸ்தூரிமான் படத்துக்காக லோகியால் அழைத்துவரப்பட்டேன். இந்த நாட்களில் ஆண்டுதோறும் படங்களுக்கு எழுதியிருக்கிறேன். படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் எதையுமே செய்யவில்லை என்றாலும் சினிமா என்னை உள்ளே வைத்திருக்கிறது
அதற்கு முதன்மைக்காரணம் ஒரு கருவை கதைக்கட்டமைப்பாக மாற்றும் என் திறமை, அதிலிருக்கும் விரைவு. ஆனால் அதற்கப்பால் நல்லூழும்தான். ஏனென்றால் சினிமாவின் பல்லாயிரம் இணைவுக்கணக்குகளில் ஊழின் ஆடல் மிகுதி.
பதினைந்து ஆண்டுகள் நீளமான காலகட்டம். அறியாமலேயே கடந்தகால நினைவுகளைச் சேர்த்துவிடுகிறது. நிகழ்காலம் பெரிய ஈர்ப்பெல்லாம் உருவாக்குவதில்லை. நான் எழுதிய மூன்று படங்களின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. நான் இங்கே வீட்டில் அமர்ந்திருக்கிறேன். ஆனால் கடந்தகாலம் பெரும் உணர்ச்சிக்கொந்தளிப்புடன் வந்து அறைகிறது.
கடந்தகாலத்தை நிலைநிறுத்துவனவற்றில் சினிமாப்பாடல்களுக்கு இருக்கும் ஆற்றல் அளவிறந்தது. இசை காலத்தால் பழையதாவதில்லை, சொல்லப்போனால் நினைவுகளைச் சேர்த்துக்கொண்டு மேலும் ஆற்றல் மிக்கதாக ஆகிறது. காட்சிகள் அந்தக்காலத்தை கல்லில் பொறித்தவை போல அழியாமல் நிறுத்துகின்றன.
தற்செயலாக யூடியூபில் கஸ்தூரிமான் பாடல்களைப் பார்த்தேன். எத்தனைபேர் அதன் மெல்லிசை மெட்டுக்களில் மனம்தோய்ந்திருக்கிறார்கள் என்று எண்ணி வியப்படைந்தேன். அந்தப்பாடல்கள் வெளிவந்தபோது எந்த சலனத்தையும் உருவாக்கவில்லை. அது ஏ.ஆர்.ரஹ்மானின் பொற்காலம். இசையின் திசை வெகுவாக மாறிவிட்டிருந்தது.
அதோடு கஸ்தூரிமான் ஒரு தோல்விப்படம். அது வெளியான அன்றே புயல்சின்னம் உருவாகியது. தொடர்ச்சியாக நான்கு புயல்சின்னங்கள். அது ரிலீஸான ஒரு திரையரங்கே இடிந்துவிழுந்தது. அவ்வளவுதான், படம் எழவே இல்லை. தோல்வியடைந்த படத்தின் பாடல்கள் அப்படியே மறக்கப்பட்டுவிடுகின்றன.
இன்றும் அந்த மெல்லிசைமெட்டுக்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது வியப்படையச் செய்கிறது. அன்று கேட்கலியோ கேட்கலியோ பாட்டின் மெட்டு என் செல்பேசியின் அழைப்போசையாக நெடுங்காலம் இருந்திருக்கிறது.எனக்கு பிடித்த பாடல் அது. ஒரு பொற்காலம் பிறக்கும் லோகிக்குப் பிடித்தபாடலாக இருந்தது.
கோபிசெட்டிப்பாளையம் ஊரில் தங்கினோம். அமராவதி அணையருகே செட். அங்கேயே பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற்றது. நான் முழுமையாகவே நின்று ஈடுபட்ட படப்பிடிப்பு. லொக்கேஷன் பார்ப்பது முதல் ஷாட் பிரிப்பது வரை கவனித்தேன். டப்பிங்கில் ஈடுபட்டேன். படம் காகிதத்தில் இருந்து திரையரங்கு வருவதுவரை முழுமையாக உடனிருந்தேன்.
இளையராஜாவை நான் அணுகியறிந்த காலம் அது. இசையமைக்கையில் அவருடனேயே இருந்தேன். அவர் இசைக்குறிப்புகளை எழுதுவது, அவற்றை பாடிப்பதிவுசெய்வது, பாடகர்களுக்கும் இசைக்கலைஞர்களுக்கும் சொல்லிக்கொடுப்பது, பதிவுசெய்து இசைசேர்த்து ஒருங்கிணைப்பது அனைத்தையும் அருகிருந்து கண்டேன்.
’இந்த நாள் முதல் இளவேனில்’ என்ற வரியை பாடகருக்குச் சொல்லிக்கொடுக்க இளையராஜா முக்கால்மணிநேரம் எடுத்துக்கொண்டார். திருத்திக்கொண்டே இருந்தார். அதில் என்னதான் எதிர்பார்த்தார், எது அமைந்தது என்று எனக்குப் புரியவேயில்லை. இன்று கேட்கையில் அந்த வரியே இளையராஜா குரலில்தான் ஒலிக்கிறது.
நானறியா ஒரு கலையுலகில் முழுவிசையுடன் நுழைந்த நாட்கள் அவை. லோகியும் நானும் சென்னை விஜய்பார்க்கிலும் பின்பு வளசரவாக்கத்தில் ஒரு வீட்டிலும் இணைந்து தங்கியிருந்தோம். அவருடன் அணுக்கமாகி பேசிப்பேசி இரவுகளை கழித்தேன். அவருடைய அனுபவங்கள் ஒவ்வொன்று அரிதானவை. லோகி தடைகளே அற்ற மனிதர். முற்றிலும் வெளிப்படையானவர்.
நினைவுகள் பெருகிவந்து அறைகின்றன.பாடல்கள் சிலசமயம் காலத்தை கரைத்தழித்துவிடுகின்றன.
லோகி நினைவில்… அழியாச்சித்திரங்கள்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

