Jeyamohan's Blog, page 1059

January 25, 2021

ம.நவீன் சிறுகதைகள்- கடிதம்

நவீன்

அன்புள்ள ஜெ,

சென்ற ஆண்டின் தொடக்கத்தில் நண்பரும் எழுத்தாளருமான சுனீல் கிருஷ்ணன் சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் மீதான வாசிப்பரங்கு ஒன்றை திட்டமிட்டிருந்தார். எதிர்பாராதவிதமான கொரோனா பரவலால் கடைசி நிமிடத்தில் அது ரத்தாகிவிட்டது. அவ்வரங்கிற்காக ம.நவீனின் சிறுகதைகள் சிலவற்றை வாசித்திருந்தேன். அக்கதைகள் என்னை மிகவும் கவர்ந்திருந்தன. ஒரு முக்கிய எழுத்தாளரின் வருகையாக அவை எனக்குத் தோன்றியது.

இப்போது அவர் 2020ல் எழுதிய எட்டு சிறுகதைகளையும் ஒருசேர வாசித்தபோது அவ்வெண்ணம் மேலும் உறுதிப்பட்டது. இரண்டு கூறுகளை மட்டும் இங்கே கவனப்படுத்த விரும்பிகிறேன்.

முதலாவது சிறுகதையின் சவாலை நேரடியாக எதிர்கொள்கிறார். எவ்வித நழுவல்களும் இல்லாமல் கதையின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுகிறார். எக்கதையும் அரைகுறையாக இல்லை. அனைத்து கதைகளும் வலுவான கதையம்சம் கொண்டவை. வெவ்வேறு களங்களை வாழ்க்கைத் தருணங்களை வாசகனுக்கு காட்டுபவை. அதேசமயம் அவை பொது உண்மைகளை நோக்கி நகர்ந்துவிடாமல் தனித்துவமான பார்வைகளை சென்றடைகின்றன. இவ்வகையான விதவிதமான கருக்களை கையாளும் போது அவை கலைரீதியாக முழுமை கொள்ளவைப்பது சாதாரண காரியமில்லை. அவ்விடர்களை வெவ்வேறு வகையில் கடக்கிறார். உதாரணமாக ’சியர்ஸ்’ கதை அவ்வன்னையின் மனவோட்டத்தை தொடர்வதன் மூலம் தன்னை முழுமைபடுத்திக் கொள்கிறது. அதே போல பல்வேறு வரலற்றுத் தகவலகள் ’கழுகு’ கதைக்கு ஆழத்தை சேர்க்கிறது.

இரண்டாவது இந்த எட்டு கதைகளின் மூலமாகவும் நவீன் என்னும் புனைவெழுத்தாளனுடன் அவன் ஆழ்மனத்துடன் நம்மால் உரையாட முடிகிறது. இவ்வம்சம் மிக முக்கியம் என நினைக்கிறேன். சிறந்த சிறுகதை என்பதைத் தாண்டி சிறந்த சிறுகதையாசிரியரின் கதை என்னும் இடத்திற்கு நகர்கின்றன. அப்படித்தான் உங்கள் அனைத்து படைப்புகளையும் நாங்கள் அணுகுகிறோம். அவற்றின் மூலமாக உங்கள் ஆழ்மனதை தொடர்கிறோம். அதனுடன் உரையாடுகிறோம். அதனால் தான் இத்தனை பரந்துபட்ட கதைகள் இருப்பினும் அவற்றில் ஒரு அறுபடாத் தொடர்ச்சியை உங்கள் வாசகர்களால் உணரமுடிகிறது. அத்தகைய ஒரு இடத்தை நவீனின் கதைகளும் அடைந்துவிட்டன எனச் சொல்லுவேன். ’பூனியான்’ கதையும் ’கன்னி’ கதையும் இரு எல்லைகள். ஆனால் இரண்டிற்கு அடியிலும் பொதுவாக இருக்கும் படைப்பாளியின் அகத்தை நம்மால் கண்டுகொள்ள முடிகிறது

இக்கதைகளில் மிகச்சிறந்ததாக நான் நினைப்பது ‘ராசன்’ கதை. எவ்வளவு விளக்கினாலும் விளக்கமுடியாத ஒரு இடத்தை கதை சென்றடைகிறது. எழுதப்பட்ட கதைக்கு நிகராகவே இன்னொரு கதையை வாசகன் மனதில் எழுதிக்கொள்ள வைக்கும் கதை.

ஒரு முக்கியமான எழுத்தாளர் நம் கண் முன்னே மெதுவாக உருப்பெறுதைக் காண்பது பெரும் பரவசத்தை அளிக்கிறது. அதை உங்களுடனும் சக வாசக நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகிறேன்.

நன்றி.

– பாலாஜி பிருத்விராஜ்

நவீன் கதைகளின் சுட்டிகள்:

கழுகு

உச்சை

சியர்ஸ்

ராசன்

கன்னி

பூனியான்

ஒலிப்பேழை

பட்சி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2021 10:31

சுகிசிவமும் சுப்ரமணியனும்- கடிதம்

சுகிசிவமும் சுப்ரமணியனும்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

சுப்ரமணியர் குறித்த ஒரு கடிதத்திற்கு தங்கள் கட்டுரை வடிவ பதில் மிக அருமை. கடவுள் உருவ வழிபாட்டின் பல்வேறு அம்சங்களை அலசி ஆராய்ந்து, கிட்டத்தட்ட ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை போலவே அமைந்திருந்தது.திரு. சுகிசுவம் அவர்கள் பக்தி மார்க்கத்தில் அடிப்படையிலும், ஒரு ஆன்மிக சொற்பொழிவாளர் எனும் அடிப்படையிலும் தன் கருத்தை தெரிவித்திருந்தாலும், தங்கள் பதிலை அவரின் உள்மனது மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் என்றே நினைக்கிறேன். கடவுள்களின் உருவ வழிபாடு பல்வேறு கால கட்டங்களில் பலவித மாற்றங்களை கொண்டிருந்தாலும், அவற்றை ஏற்றுக்கொள்வது என்பது மக்களின் மனநிலையை பொறுத்தே அமைந்திருக்கிறது என நினைக்கிறேன். உதாரணமாக ரவிவர்மாவின் கடவுள் ஓவியங்களை அவர்கள் மிக எளிதில் ஏற்றுக்கொண்டு அதிலிருந்து விலக மனமின்றியே இருக்கிறார்கள். அவரின் சரஸ்வதி ஓவியமும், முருகன் ஓவியமும் இதற்கு நல்ல சான்று. குழந்தை முருகனின் சிவகாசி ஓவியமும் மற்றொரு உதாரணம். எனவே மக்களின் மனநிலையே கடவுள் உருவ வழிபாட்டின் பரிணாம வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் கொள்ளலாமா?அன்புடன்இளம்பரிதி.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2021 10:31

கதாபாத்திரங்களின் உருமாற்றம்

 

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

வெண்முரசு கடிதங்களை தொடர்ந்து வாசித்துவருகிறேன். நான் இப்போதுதான் வெண்முரசு படிக்க ஆரம்பித்து கார்கடல் தாண்டி சென்றுகொண்டிருக்கிறேன். என் வாழ்நாளில் இத்தனை பக்கங்களை நான் வாசிப்பேன் என்று நினைக்கவே இல்லை. ஒரு நாவல் என்னை இத்தனை பக்கங்கள் வாசிக்கவைக்கும் என்றும் நினைத்ததில்லை. முழுவீச்சில் இந்நாவல் என்னை அடித்துச் செல்கிறது

இந்நாவலை வாசிக்கும்போது எனக்கு மிகமிக உதவியாக இருப்பவை இந்நாவலைப்பற்றி வந்த கடிதங்கள். இந்நாவல் தொடராக வந்தபோது கூடவே கடிதங்களும் வந்தன. ஆகவே அந்தக்கடிதங்களை ஒரு நாவலை வாசித்து முடித்ததுமே வாசிக்கமுடிந்தது. ஆனால் இன்றைக்கு அப்படி வாசிக்க முடியவில்லை. பின்னால் சென்று தேடித்தேடி வாசிக்கவேண்டியிருக்கிறது

இந்த கடிதங்களை எல்லாம் நாவல் வாரியாக பிரித்து தனித்தனியாக வெளியிட்டிருந்தால் அவை இன்னமும் உதவியாக இருக்கும். நல்ல கடிதங்களை தொகுத்து அவற்றை நூல் வடிவில் ஆக்கி அமேசானில்கூட வெளியிடலாம். ஒரு ஐம்பது அறுபது ரூபாய் விலை வைத்தால் நாவலுடன் சேர்த்தே வாங்கி கூடவே வாசிக்கலாம். பல கடிதங்கள் நாவலுக்கே டியூட்டோரியல் போல அமையும் அளவுக்கு முக்கியமானவை.

இந்நாவலை வாசிக்கத் தொடங்குவதற்கு முன்பாக எனக்கு சில சிக்கல்கள் இருந்தன. இதை வாசிக்கமுடியாது, கடினமான நடை, தனித்தமிழ் நடை என்று ஒரு தரப்பு சொல்லிக்கொண்டே இருந்தது. இன்னொரு தரப்பு மகாபாரதக் கதாபாத்திரங்களை கெடுத்துவிட்டார் என்று சொல்லிக்கொண்டே இருந்தது.

மகாபாரதக் கதாபாத்திரங்களைக் கெடுத்துவிட்டார் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் ஒன்றும் மூலமகாபாரதத்தை வாசித்தவர்கள் அல்ல. அவர்கள் டிவியில் மகாபாரதம் பார்த்தவர்கள். மூலமகாபாரதம் படித்து அதை ஒருவகை ஆசாரமாக எடுத்துக்கொண்டவர்களும் சிலர் இருக்கலாம். அவர்களுக்கு எந்தக்கேள்வியும் இருக்காது. அப்படியே எடுத்துக்கொள்பவர்கள்.

ஆனால் இந்தப்பிரச்சாரம் என்னைப்போல வாசிக்க நினைக்கிற சிலருக்கு ஆரம்பத்திலே தடையாக இருந்தது என்பதை இங்கே சொல்லியாகவேண்டும். உண்மையிலேயே பெரிய தடைதான். முதற்கனல் முடிந்து மழைப்பாடல் தொடங்கி முடிவதுவரை கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் மாற்றப்பட்டிருக்கின்றன என்று பார்ப்பதிலேயே மண்டை ஓடியது. ஒரு கட்டத்தில் இதென்ன, நமக்கு ஏன் இந்த வேலை என்று நினைத்து விட்டுவிட்டு மீண்டும் வாசித்து வந்தேன். இந்த அவஸ்தை ஏதும் இல்லாமல், அரைகுறைவாசிப்பின் மூளைச்சீக்கு இல்லாமல் வாசிப்பவர்கள் கொடுத்து வைப்பவர்கள்.

நான் இந்நாவலை கார்கடல் வரை வந்தபிறகுதான் இந்நாவலில் கதைமாந்தருக்கு என்ன ஆகிறது என்று பார்த்தேன். இது ஒரு பழையபாணி கதை அல்ல. இது ஒரு நவீன நாவல். நவீனநாவல் என்ற வடிவம் தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைவுள்ள கதாபாத்திரங்களை உருவாக்க முயலவில்லை.கதாபாத்திரங்களை ஜப்பானிய விசிறிபோல விரித்து பார்க்கவே முயல்கிறது. விரித்து விரித்து அகழ்ந்து அகழ்ந்து பார்க்கிறது. பழையநாவலுக்கும் புதியநாவலுக்குமுள்ள வேறுபாடு இதுதான்.

ஒரு மனிதன் உண்மையில் தனக்குள் பலராக இருக்கிறான். அவனை ஒருங்கிணைவுடன் தெரியச்செய்வது அவன் புழங்கும் சூழலும் அவனைப்பற்றிய மற்றவர்களின் பார்வையும்தான். அவன் ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ப மாறிக்கொண்டே இருக்கின்றான். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொருவகையில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான். வெவ்வேறு வகையில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறான்

அந்த பன்மையைத்தான் நவீனநாவல் முன்வைக்கும் என்று நினைக்கிறேன். வெண்முரசில் துரியோதனன், பீமன், யுதிஷ்டிரன், அர்ஜுனன், கர்ணன் என எல்லா கதாபாத்திரங்களும் தொடர்ச்சியாக விரிக்கப்படுகிறார்கள். பல PESONALITY களாக பலமுகங்களாக ஆக்கப்படுகிறார்கள்.வெவ்வேறு வகைகளில் அவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் PESONALITY  என்ற ஒன்றே இல்லையோ என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் விரித்து விரித்து ஆழம் வரை சொல்லப்படுகிறார்கள்

நாவல் முடியப்போகும் இடத்தில் மீண்டும் இந்த பெரிய கதாபாத்திரங்களெல்லாம் குவிந்து ஒரே PESONALITY யாக ஆவதை பார்க்கிறேன்.அதுவரை இருந்த எல்லா முகங்களும் அவர்கள்தான் என்று தெரிகிறது. அவர்களின் தோற்றங்கள் எல்லாமே அவர்களின் PESONALITY யின் வடிவங்கள்தான் என்று தெரிகிறது.விசிறி மீண்டும் இணைந்து ஒன்றாகிறது. ஜப்பானிய விசிறியில் படங்கள் இருக்கும். விரியும்போது அந்தப்படம் இன்னொரு படமாக ஆகும். இணையும்போது மீண்டும் முன்பிருந்த படமாக ஆகிவிடும்

இந்த விரிதலைத்தான் நான் ஆரம்பத்திலிருந்தே பார்த்தேன். அது மிகவும் துலக்கமாகத் தெரிவது துரியோதனனின் கதாபாத்திரத்தில்தான். துரியோதனன் நடுவே அவன் அப்பாவிடம் அடிவாங்கியதும், உடல்குறை அடைந்ததும், அவனுடைய அந்த இயந்திரத்தனம் முழுமையாகவே இல்லாமலாகிவிடுகிறது. அவன் மனிதனாகிறான். அவன் கருணைகொண்டவனாகவும் ஆகிறான். அதன்பின் வஞ்சத்தால் கருமையாகி மீண்டும் பழிகொண்ட கலியன் ஆகிறான்.

மாறிக்கொண்டே இருக்கும் துரியோதனன் போர் நெருங்கநெருங்க மீண்டும் ஒன்றாகிறான். ஒரே ஆளுமையாக ஆகிறான். ஒரு deity போல ஆகிவிடுகிறான். அவனை ஒரு கற்சிலையாகவே பார்க்கமுடிகிறது

ஆனால் சில கதாபாத்திரங்கள் அப்படி அல்ல. சகுனி, திருதராஷ்டிரர் போன்றவர்கள் மாறாத சிலைபோலவே தென்படுகிறார்கள். ஒரே உணர்வுநிலையும் ஒரே ஆளுமையும் உடையவர்கள். ஏனென்றால் அவர்களின் மனசுக்குள் கதை போகவில்லை. அவர்களை மற்றவர்கள் பார்க்கும் கோணத்திலேயே கதை சொல்லப்படுகிறது. ஆகவே யூனிட்டி இருக்கிறது. குந்தி போன்ற கதாபாத்திரங்களுக்குள் கதை போகவில்லை. ஆனால் அவர்களின் அக ஆழம் என்ன என்பதை சுட்டிக்காட்டி கதை நின்றுவிடுகிறது. சௌவீர மணிமுடியை குந்தி சூடிக்கொள்வதுதான் அவளுடைய மனசின் அந்தரங்கம். அந்தக் குந்திதான் மெய்யானவள். அவள்தான் மகாபாரதபோரையே நடத்திவைப்பவள்

அப்படிப்பார்த்தால் ஒரு கதாபாத்திரத்தின் மனசுக்குள் எந்த அளவுக்கு கதை செல்கிறதோ அந்த அளவுக்கு கதை அந்தக்கதாபாத்திரத்தை உடைத்து உடைத்து பரப்பிவிடுகிறது. பயம் தயக்கம் கொந்தளிப்பு என எல்லா உணர்ச்சிகளும் அவர்களுக்கு இருக்கின்றன. அவர்கள் வெவ்வேறு வகையில் வெளிப்பட்டபடியே இருக்கிறார்கள்

நாவலைப்பற்றி மகாபாரதத்தில் ஆழமான வாசிப்பு உடைய என் தாய்மாமாவிடம் பேசினேன். மகாபாரத மூலமே அப்படித்தான் அவர்களைக் காட்டுகிறது என்று சொன்னார். மகாபாரதக் கதாபாத்திரங்கள் எல்லாமே ஒவ்வொரு பர்வத்திலும் ஒவ்வொரு *யுடன் தான் இருக்கிறார்கள். கதாபாத்திர யூனிட்டி என்பது மகாபாரதத்தில் அனேகமாக இல்லை என்று அவர் சொன்னார்.

துகிலுரிதல் காட்சியில் அவ்வளவு வெறியோடு தென்பட்ட திரௌபதி அடுத்த பர்வத்தில் என் விதி இப்படி ஆயிற்றே என்று கிருஷ்ணனிடம் பரிதாபமான குடும்பப்பெண் மாதிரி கதறி அழுது புலம்புகிறாள். ஆனால் விராடபர்வத்தில் மறுபடியும் அரசியின் திமிரோடு இருக்கிறாள். அதன்பிறகு போர் பற்றிய பர்வங்களில் எல்லாம் அவள் என்ன நினைத்தாள் என்பதெல்லாம் மகாபாரதத்தில் இல்லை. ஒரு வீடு கிடைத்தால்போதும் என்று பாண்டவர்கள் சமரசம் செய்ய தயாராக இருந்தபோது துரியோதனன் ரத்த்தத்தால் தலைசீவுவேன் என்று சொன்ன அவள் என்ன சொன்னாள் என்பது மகாபாரத மூலத்தில் இல்லை. அவளுடைய குணச்சித்திரமே யூனிட்டியுடன் இல்லை என்று சொன்னார்.

அந்த யூனிட்டி என்பது கதாபாத்திரத்தை குறைத்து கொண்டுவருவது. எந்த கதாபாத்திரத்தையும் அதன் உச்ச அளவுக்கு ஆராய்ச்சி செய்தால் ஆழமாகச்சொன்னால் யூனிட்டிதான் இல்லாமலாகும் என்று தோன்றுகிறது. காந்தியைப்பற்றிய ஆராய்ச்சிகளைப் பார்க்கும்போது அப்படி நினைத்துக்கொண்டேன். ஆனால் இல்லாமலாவது அந்த கதாபாத்திரத்தின் external unity மட்டும்தான். அது இல்லாமலாகி ஆழமாக சொல்லப்படும்போது அதன் inner unity துலங்கிவருகிறது.

வெண்முரசு வாசிப்பின் அனுபவமே இந்த குணச்சித்திரங்களின் மாற்றமும் மாற்றமில்லாத சாரமும் என்னென்ன என்று பார்ப்பதுதான் என்று இப்போது நினைக்கிறேன்.

எஸ்.ஆர்.பிரபுராஜ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2021 10:30

January 24, 2021

பன்முகராமன்

அ.கா.பெருமாள் பற்றி அறிய அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க

அன்பு ஐயா.

 

தமிழ் தட்டச்சு சரிவர பழகிவருகிறேன் பிழை இருப்பின் பொறுத்துக்கொள்ளகவும்.
மகாபாரதத்தை இன்றய சூழலோடு பொருத்தி அணைத்து கதைமாந்தர்களின் அனைத்துப் கோணங்களையும் எடுத்துக்காட்டிய நிகழ்காவியமான வெண்முரசால் பயனடைந்த ஆயிரக்கணக்கான வாசகர்களில் ஒருவன் நான்.

இதுபோலவே இராமாயணத்தையும் புரிந்துகொள்ள விழைகிறேன். எனவே, ராமாயணத்தையும் அதன் கதாபாத்திரங்களின் வெவ்வேறு கோணங்களையும் தர்க்கரீதியான உறவுச்சிக்கல்களையும் புனைந்துள்ள தழுவல் நூல்கள் தமிழிலோ,அல்லது வேறு மொழிகளிலோ இருப்பின் அதை எனக்கு தெரிவிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இப்படிக்கு.
அரவிந்த்,
சென்னை


அன்புள்ள அர்விந்த்,

பொதுவாக மகாபாரதம் அளவுக்கு ராமாயணம் மீயுருவாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு ராமாயணத்தில் அத்தனை நாடகீய தருணங்கள், அறச்சிக்கல்கள் இல்லை என்பதே காரணமாக இருக்கலாம்.

தமிழில் அவ்வாறு குறிப்பிடத்தக்க ராமாயண ஆய்வுகள் இல்லை. ஆனால் நாட்டார்மரபிலுள்ள வெவ்வேறு ராமன்களை ஆராயும் அ.கா.பெருமாளின் ராமன் எத்தனை ராமனடி என்ற நூல் மிக முக்கியமான ஒன்று.

ராமனின் வெவ்வேறு முகங்களை ஆராய்வது இந்திய நாட்டார் மரபு ராமனை எப்படி புரிந்துகொண்டிருக்கிறது என்பதற்கான சான்று. பொதுவாக எங்குமே ராமன் எதிர்மறைக் கோணத்தில் பார்க்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மகாபாரதக் கதாபாத்திரங்கள் அப்படி அல்ல. துரியோதனனை நாயகனாக்கி எழுதப்பட்ட நாட்டார் பாடல்களில் மகாபாரத கதைமாந்தர் மட்டுமல்ல கிருஷ்ணன்கூட எதிர்மறையாகக் காட்டப்பட்டதுண்டு.

ராமன் எதிர்மறையாகக் காட்டப்படுவது நவீன இலக்கியம் உருவானபின்னர்தான். அதற்குச் சிறந்த உதாரணம் குமாரன் ஆசான் எழுதிய ‘சிந்தாவிஷ்டயாய சீதா’ என்னும் மலையாள குறுங்காவியம். அது ராமனை ஆணாதிக்கப்போக்கு கொண்டவனாக காட்டுகிறது. ஆனால் அதுகூட உத்தர ராமாயணத்தின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லப்படுவதுண்டு

அ.கா.பெருமாளின் ராமன் எத்தனை ராமனடி நூல் இந்தப்பின்னணியில் மிக மிக முக்கியமான ஓர் ஆய்வு. நாட்டார் பிரதிகளில் ராமன் எப்படியெல்லாம் சித்தரிக்கப்படுகிறான் என்பதை அதில் காண்கிறோம்.அந்த மாறுபாடுகள் எதனால் எப்படி உருவாகின்றன என்று ஆராய்வதென்பது ஒரு முக்கியமான பண்பாட்டுப்பார்வையை அளிக்கும்

ராமன் நமக்கு இரண்டு மையப்படுத்தப்பட்ட ஆளுமைப்புனைவுகளின் வடிவம். ஒன்று, அவன் ‘நற்குணநாயகன்’. அப்படித்தான் அவனை வான்மீகி ராமாயணம் முன்வைக்கிறது. மானுடனுக்கு இயல்வதான அனைத்து நற்குணங்களும் கொண்டவன்- நல்ல மகனாக, நல்ல உடன்பிறந்தானாக, நல்ல கணவனாக, நல்ல வீரனாக, நல்ல காவலனாக, நல்ல அரசனாக திகழ்ந்தவன்.

ராமன் அடையும் சிக்கல்கள் எல்லாமே இந்த ஆளுமை உச்சத்தில் நிற்பவர் அடைவதே. அந்நிலையில் நின்றுகொண்டு அன்றாடவாழ்க்கையை எதிர்கொள்வதன் சிக்கல்கள் ஒருபக்கம். ஒர் உச்சநிலைக்கும் இன்னொரு உச்சநிலைக்குமான மோதல்கள் இன்னொருபக்கம். ராமனின் சரிவுகள் என சொல்லப்படுவன அனைத்தும் இரண்டாவது சிக்கலில் இருந்து எழுபவை

உதாரணமாக, அவன் மிகச்சிறந்த அரசன். ஆகவே குடிகளின் சொல்லுக்கு மதிப்பளித்து சீதையை காட்டுக்கு அனுப்புகிறான். அரசி ஐயத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறான். அது கணவன் என்னும் நிலையில் அவனை நெருக்கடிக்குள்ளாக்குகிறது. அதையே அவன் வீழ்ச்சி என்று சிந்தாவிஷ்டயாய சீதா பாடுகிறது

ராமன் வேதகாவலன். முனிவரின் புரவலன். அதன்பொருட்டு அவன் சம்புகனைக் கொல்கிறான். அது இன்னொரு கோணத்தில் குடிமக்களில் எளியவனைக் கொன்ற பழியாக ஆகிறது. போரில்கூட ராவணனிடம் இன்றுபோய் நாளை வா என்றவன் வாலியை மறைந்திருந்து கொல்கிறான். ஏனென்றால் வாலி குரங்கு. விலங்குகளுடன் செய்வது போர் அல்ல, வேட்டை. அதில் நெறிகளேதும் இல்லை. இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம்.

வான்மீகி ராமாயணத்தில் ராமனின் இத்தகைய விழுமியச்சிக்கல்கள் எளிமையாக நேரடியாகச் சொல்லப்படுகின்றன. இந்த சிக்கல்கள் அறம் என பேசும் எவருக்கும் உரியவை. இன்றுகூட ஒரு நல்ல ஆட்சியாளன் நல்ல தந்தையாக இல்லாமலிருக்க நேரிடும். நல்ல தந்தைகள் மோசமான ஆட்சியாளர்களாக ஆகக்கூடும். நல்ல படைவீரன் கருணையற்றவனாக இருக்க நேரிடும். கடமையும் மானுடஅறமும் முரண்படலாம். பாசமும் சமூக உணர்வும் முரண்படலாம். பேரிலக்கியங்கள் எப்போதுமே இந்த முரண்பாடுகளைப் பேசுபவையே

இவை விழுமிய முரண்பாடுகள் என்ற புரிதல் இல்லாமல் இவை ராமனின் முரண்பாடுகள் என்று எடுத்துக்கொண்டு பேசும் நவீன எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் உண்டு. அது ஒருவகை தத்துவநோக்கில்லாத உணர்ச்சிப்பார்வை, அல்லது முதிராநோக்கு. அக்கால விழுமியங்களை கருத்தில்கொண்டு ஒவ்வொன்றும் அதன் உச்சத்தில் இன்னொன்றை எப்படி மறுக்கின்றன என்பதை எடுத்து ஆராய்ந்தால் மட்டுமே ராமனை புரிந்துகொள்ள முடியும்.

பின்னாளில் நற்குணநாயகனாகிய ராமனை மேலும் உச்சப்படுத்தி ‘அறத்தின் மூர்த்தியானாக’ ஆக்கிக்கொண்டனர். அவன் அரசன். இந்தியாவில் பேரரசுகள் உருவாகி, அரசன் தெய்வவடிவமாக ஆகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அரசனின் இலட்சியவடிவமாக ராமன் மாறினான். அந்த ராமனையே நாம் கம்பராமாயணத்தில் காண்கிறோம்.

நாட்டார் கலைகளுக்கு ஓர் இரட்டைத்தன்மை உண்டு. அவை எவருக்காகச் சொல்லப்படுகின்றனவோ அவர்களின் ரசனை, அவர்களின் கருத்துநிலையை அவை பிரதிபலிக்கும். அப்படிப்பார்த்தால் நாட்டார்கலைகள் எல்லாமே பக்தி இயக்கத்தைச் சேர்ந்தவை, பக்தியை முன்வைப்பவை. அப்படித்தான் அவை ராமகதையைப் பாடுகின்றன.

ஆனால் அவற்றை பாடுபவர்கள் பெரும்பாலும் சமூகப்புறனடையாளர்கள், பாணர்கள் கூத்தர்கள் மண்டிகர்கள் போன்ற நாடோடிச் சாதியினர். அவர்களுக்கு இந்த மையச்சமூகம் மீது எதிர்ப்பும் விமர்சனமும் ஏளனமும் உண்டு. அவையும் நாட்டார்க்கலைகளில் வெளிப்படும். ஒரேசமயம் இந்த இரண்டு பார்வைகளின் இரண்டு உணர்வுநிலைகளின் கலவையாகவே நாட்டார்கலைகள் இருக்கும் .

தெருக்கூத்து போன்ற கலைகளில் கட்டியங்காரன், கோமாளி, குறவன் போன்ற கதாபாத்திரங்கள் வந்து சமூக அறங்களை, ஒழுக்கநெறிகளை ஏளனம் செய்வதை காணலாம். அவை புராணப்பாத்திரங்களையும்  தெய்வங்களையும்கூட கேலியும் விமர்சனமும் செய்வதுண்டு.

நிலப்பிரபுத்துவச் சூழலில் பார்வையாளர்களிலேயே இந்த புறனடை விமர்சனப்பார்வைக்கு ரசிகர்கள் உண்டு. சிறுவர்கள், இளைஞர்கள் போன்று மீறல்போக்கு கொண்டவர்களும் வேலையாட்கள் போன்ற அடிமைப்பட்டவர்களும் அதை ரசிப்பார்கள். பெண்களும் கூட அடிமைப்பட்டவர்களாகையால் அதை ரசிப்பதுண்டு. பல இடங்களில் நாட்டார்கலைகளில் இந்த கீழிருந்து எழும் பார்வை மிதமிஞ்சிப்போய் ஊர்த்தலைவர்கள், பூசாரிகள் கோபம்கொண்டு ஆட்டத்தை நிறுத்திய கதைகளும் உண்டு.

நாட்டார் கலைகளில் ராமன் இவ்விரு கோணங்களிலும் வெளிப்படுகிறான். நற்குணநாயகன் என்று அவனை முன்வைக்கும்போதே அந்த நற்குணங்கள் மீதான எள்ளலையும் நாட்டார்க்கலை முன்வைக்கும். ஏனென்றால் நாட்டார்கலையில் எப்போதுமே ஒரு துடுக்குத்தனம் [நேர்நிலைப் பொருளில், இதை பொறுக்கித்தனம் என்பேன்] உண்டு. அது ராமனுக்கு எதிராக முட்களை நீட்டிக்கொண்டே இருக்கும்.

ராமனை முன்னுதாரணமான அரசன் என்று முன்வைக்கும்போது நாட்டார்கலையில் ஒலிக்கும் புறனடையாளனின், அடித்தளத்தவனின் குரல் அவனை கேலிசெய்யவும் விமர்சனம் செய்யவும் இயல்பாக எழுகிறது. அரசன், ஆட்சி மீதான கசப்புகளும் எள்ளல்களும் அவன்மேல் படிகின்றன. அவையும் நட்டார்கலையின் ஓர் அம்சமாகவே வெளிப்படுகின்றன

நாட்டார்கலைகள் பொதுவாக உக்கிர அம்சத்தை முதன்மைப்படுத்துகின்றன. ஆகவே எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு அழுத்தம் வருகிறது. துரியோதனன், ராவணன் போன்றவர்கள் முக்கியமான கதைமாந்தர்களாக வெளிப்படுகிறார்கள். நாட்டார் அம்சம் மேலோங்கிய கதகளியிலும் இவ்வியல்பு உண்டு

இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று கலை சார்ந்தது. சற்றேனும் எதிர்மறைத்தன்மை கொண்ட கதாபாத்திரங்களுக்கே நாடகீயத்தன்மை மிகுதி. அவர்களே மேடையில் உக்கிரமாக வெளிப்பட முடியும். இரண்டு, நாட்டார் வழிபாட்டில் இருக்கும் தெய்வங்கள் பெரும்பாலும் உக்கிரமூர்த்திகளே. நாட்டார்கலைகளில் ராவணனும் துரியோதனனும் வெளிப்படுகையில் வேடம் முதற்கொண்டு அவர்களில் முனியாண்டி, அய்யனார், மாடன் உட்பட நாட்டார்தெய்வங்களின் சாயல் திகழ்கிறது.

ஆனால் ராமனில் உக்கிரம் இயல்வதல்ல. முழுக்கமுழுக்க சாத்விகமான கதாபாத்திரம். ஆகவே நாட்டார் கலைகளில் ராமன் அவ்வளவு சுவாரசியமான கதாபாத்திரம் அல்ல. ராமன் மாறுதல்கள் அற்ற ஒற்றை ஆளுமை. உக்கிரவெளிப்பாடு அற்றவன். ஒரு அசைவற்ற தெய்வ முகம். அந்த வகையில் வெளிப்படும் கதாபாத்திரத்தை அவ்வப்போது சீண்டி சுவாரசியப்படுத்த நாட்டார்கலை முயல்கிறது.

நான் பார்த்த ஒரு தோல்பாவைக்கூத்தில் உச்சிக்குடும்பன் ராமன் சிறுவனாக இருந்த காலம் முதல் பட்டாபிஷேகம் வரை வருகிறான். ராமனை நையாண்டி செய்துகொண்டே இருக்கிறான். ராமன் வில்லை ஒடிக்கும்போது “ஏ, அது ஆளுவச்சு முன்னாடியே ஒடிச்சு வச்சிருந்ததுல்லா?”என்கிறான்.

ராமன் அவசரத்திற்கு உச்சிக்குடும்பனிடம் ஒருபைசா கடன்வாங்கிவிடுகிறான். விடாது தொடர்ந்து அந்த ஒருபைசாவை திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறான் உச்சிக்குடும்பன். என்ன வேடிக்கை என்றால் நல்லரசனும் கொடைவள்ளலுமாகிய ராமன் அந்த ஒரு பைசாவை திரும்பக் கொடுக்கவே இல்லை. அந்தக்கோரிக்கை ராமனின் காதில் விழவே இல்லை. அனுமார், லட்சுமணன், விபீஷணன், பரதன் போன்ற அடுத்தகட்ட தலைவர்களால் உச்சிக்குடும்பன் துரத்திவிடப்படுகிறான். ஏழை சொல் அம்பலம் ஏறவே இல்லை.

ராமன் எத்தனை ராமனடி நாட்டார் மரபு ராமகதையில் உருவாக்கும் நுட்பமான வேறுபாடுகளைப்பற்றி பேசும் ஆக்கம். அதே பார்வையில் நம் செவ்வியல்படைப்புக்கள், பின்னர் வந்த நவீன ஆக்கங்கள் ராமனின் கதையில் உருவாக்கிய நிறபேதங்களைப்பற்றியும் ஆராயலாம்.

ஜெ

அ.கா.பெருமாள்- மக்களைக் கலைப்படுத்துதல்- சுரேஷ் பிரதீப் அ.கா.பெருமாள் ‘வயக்காட்டு இசக்கி’ அ.கா.பெருமாள்:குமரி பண்டைய கழிப்பறைத் தொழில்நுட்பம், அ.கா.பெருமாள் அ.கா.பெருமாள் 60-நிகழ்ச்சி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2021 10:33

நாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்

எனது சிறு வயதில், எங்கள் ஊரில் சுடலைமாடன் சாமி கொண்டாடி ஆராசனை வந்து ஆடுகிறபொழுது அதைப் பார்க்கும் எனக்குள் அந்தரங்கமானதொரு மெய்சிலிர்ப்பு, அதிர்வு, அச்சம், பக்தியுணர்வு இருக்கும். அவர் திரும்பினால் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து நிற்பேன். 2020இல் சுடலைமாடன் ஆராசனை வந்து ஆடுகிறபொழுது, தார்ரோட்டில் எதிரே பேருந்து வருகிறது. எனக்கு அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. சில விஷயங்கள் சூழலுக்கு ஏற்றவாறுதான் மாறுகிறது. இப்பொழுது பெருநகரங்களில் சிறுதெய்வக் கோவில்களில் திருவிழா நடந்து, பால்குடம் எடுத்து, வேலாயுதம் சூலாயுதம் வைத்துக்கொண்டு சாலையில் நடந்து செல்கிறபொழுது அவர்கள் மீது அனுதாபம்தான் ஏற்படுகிறது.

நேர்காணல்: நாஞ்சில் நாடன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2021 10:31

உப்புவேலி- கடிதம்

உப்புவேலி உப்புவேலி – தன்னறம் நூல்வெளி

அன்பின் ஜெ,

நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பள்ளியில் காந்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு காந்தியின் வாழ்க்கை பற்றி ஒரு புத்தகத்தை கொடுத்தார்கள். அதை படித்து அதனுடன் வந்த கேள்விகளுக்கு பதில் எழுதி அனுப்பினால் சான்றிதழும் காந்தியின் படத்துடன் உள்ள அஞ்சலட்டையும் தந்தார்கள். அந்த வயதில் என்னை கவர்ந்தது அவருடைய சத்தியம் பற்றிய குறிப்பு. சற்றே வளர்ந்தபோது அஹிம்சை, புலால் உண்ணாமை முதலியன. ஆனால், கல்லூரியின்போது அவரை முழுவதுமாக பிடிக்காமல் போனது. அதுவும் இந்த கிழம் பகத் சிங்கும் நேதாஜியும் சுதந்திரத்திற்கு போராடும்போது கடற்கரையில் போய் உப்பு காய்ச்சுகிறது, எல்லாம் நாட்டின் தலையெழுத்து என்னும் எண்ணம்.

பிறகு, மெல்ல மெல்ல முதிர, இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது ஒருவர் உப்பினை காய்ச்சினால், ஏதோ இருக்கும், அதுவும் நான் மிகவும் விரும்பிய வியாசர் விருந்து புத்தகத்தை எழுதிய ராஜாஜியும், என் ஆதர்சமான காமராஜரும் வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சியிருக்கிறார்கள். ஏதோ இருக்கிறது என தேடும்போது, வழமைகளில் ஒன்றான உங்கள் தளத்தில் தேடினேன். அப்போது கிடைத்ததுதான் உப்புவேலி என்னும் புத்தகம்.

புத்தகத்தின் ஆசிரியர் ராய் மாக்ஸம், தேயிலை தோட்டாக்காரர், கலைப்பொருள் கண்காட்சி வைத்திருந்தவர், லண்டன் நூலகத்தில் ஆவணகாப்பாளராக பணிபுரிந்திருக்கிறார். தமிழில் சிறில் அலெக்ஸ் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

தெருவோரம் இருக்கும் ஒரு சிறிய கடையில் இருபத்தைந்து பவுண்டுகளுக்கு வாங்கிய “ஒரு இந்திய அதிகாரியின் புலம்பல்களை நியாபகங்களும்” என்ற புத்தகத்தில் இருந்த அடிக்குறிப்பை வைத்து ஒரு மாபெரும் வேலியை தேடத்தொடங்குகிறார். முதலில் புத்தகங்களிலும் ஆவணங்களிலும், வரைபடங்களிலும்… அதற்காக அவர் கடும் உழைப்பினை அளித்துள்ளார், நம் நாட்டின் வரலாற்றாளர்கள் பலரும் (பலரும் என்ன, அனைவரும்) தவறவிட்ட ஒன்றினைப்பற்றி..

ராபர்ட் கிளைவ் அடித்த கொள்ளை, அவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தின் “பெரியவர்களை” லஞ்சம் மூலம் தன்பக்கம் வைத்துக்கொள்வது, கம்பெனி முகலாய மன்னரை பெயரளவில் வைத்து பொம்மை ஆட்சி நடத்தியது என வரலாற்று நிகழ்ச்சிகளுடன் புத்தகம் துவங்குகிறது. தனக்கும் தன நண்பர்களுக்குமான ‘பிரத்யேகமான கம்பெனி’யை நிறுவி கொள்ளையை மேலும் வலுப்படுத்துகிறார். இங்கிலாந்தில் அவரது சொத்துமதிப்பு கடும் விமர்சனத்திற்குள்ளாகிறது. வயிற்றுவலியால் அவதிப்பட்டு 49வது வயதில் தற்கொலை என முடிகிறது அவரது வாழ்க்கை. திரும்பிப்பார்த்தால் 32வது வயதில் பெரும் பணக்காரரான ஒருவர் பதினேழு ஆண்டுகளில் இறந்துவிடுகிறார்.

இன்றும் ஆங்கிலேயர்களால் ‘இந்தியாவின் கிளைவ்’ (Clive of India) என அழைக்கப்படும் ஒருவர் தனிநபராக சேர்த்த செல்வமே இவ்வளவு என்றால், மொத்த கம்பெனி, இங்கிலாந்து அரசு, நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. மற்றொரு உதாரணமாக கிளைவின் சகஊழியர் வருடத்திற்கு நான்கு லட்ச ருபாய் வீதம் உப்பு வரியையும் சேர்த்து அறுவது லட்சரூபாயை தன நாட்டிற்கு கொண்டுசெல்கிறார். இங்கிலாந்தின் தனிநபர்களும், கம்பெனியும் இங்கிருந்து கொண்டுசென்ற பணத்தை இங்கிலாந்தில் செலவு செய்கின்றனர், இங்கே ஏற்பட்டிருக்கவேண்டிய வேலைவாய்ப்புகள் வெளிநாட்டில் உருவாயின.

உப்பின் வரி எவ்வாறெல்லாம் விதிக்கலாம், ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தின் அளவு, கால்நடைகளுக்கு உப்பின் அவசியம், அந்த காலகட்டத்தில் ஏழை இந்திய குடும்பத்தின் சராசரி வருமானம், என பல விவாதங்கள் கம்பெனிக்குள் நடக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான தங்கள் ஒரு குடும்பத்தின் உப்புக்கான செலவு அக்குடும்பத்தின் இரண்டுமாத சம்பளத்திற்கு சமானம்  என்பதே.

கம்பெனியின் வருமானத்தை பெருமளவு பாதித்த எல்லைக்கு அப்பாலிருந்து கொண்டுவரப்பட்ட உப்பை கட்டுக்குள் கொண்டுவரவே இந்த உப்புவேலியினை அமைக்க முடிவாகிறது.

கஸ்டம்ஸ் என்னும் வார்த்தையின் கஷ்டம், பல்வேறு வார்த்தைகளின் கலப்பில் புதர்வேலி பற்றி தேடுதல் என ஆராய்ச்சியை ராய் தொடர்கிறார். சில நண்பர்களின் உதவி மற்றும் பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி Royal Geographical Soceity-யில் அவருக்கு வரைபடம் கிடைக்கிறது.

ஆங்கிலேயரின் வார்த்தைகளிலேயே அந்த புதர்வேலி எவ்வளவு பெரிய அபத்தம் என கூறுகிறார். சுங்கத்துறையில் வேலைசெய்த உள்ளூர் அதிகாரிகளுக்கு சம்பளம் எதுவும் தராததால் வாழ்வாதாரத்திற்கு, அரசிடம் கட்டுப்பாடில்லாத வழிகளுக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். மிரட்டல், சண்டை, குறைந்த காலத்தில் அதிகமாக பணம் சுருட்டுதல் என பல சீர்கேடான வழிகளுக்கு தள்ளப்படுகிறார்கள். இளநிலை சுங்க அதிகாரிகள் செய்த அட்டூழியங்களை பலநிலைகளில் விளக்குகிறார், ஆனால் ஒருமுறை கூட உப்போ சர்க்கரையோ பிடிபடுவதில்லை எனவும் ஒரு அலுவலர் குறிப்பிடுகிறார்.

வாரிசில்லா கொள்கையினை (Doctrine of Lapse) வைத்து பல சிற்றரசுகளை பறித்துக்கொள்வது போன்ற கம்பெனியின் புதிய சட்டங்களையும், சுங்ககாவலர் ரோந்து செய்யும்போது தன்னுடைய காலடி தவிர மற்ற காலடிகளுக்கு பொறுப்பாக வேண்டும் என்பன போன்ற கடுமையான நடவடிக்கைகளும், 1770ம் ஆண்டின் பஞ்சமும், கம்பெனியின் கடுமையான நிலவரிவசூலினால் உழவு செய்தவர்கள் கடத்தல்காரர்கள் ஆனதும் மனதை உலுக்கிவிடுகின்றன.

பிறகு அவருக்கு உதவும் தோழி, தோழியின் மருமகன் சந்தோஷ் அவர்களின் உணவு, குடும்பம் என ஒருபக்கமும், தேடுதல் மறுபக்கமும் என நூல் செல்கிறது. கடைசியில் நகைமுரணாக பர்மத்லைனை காணப்போகும்முன் பிரித்தானியா பிஸ்கெட்டுகளை சாப்பிடுகிறார். கடைசியில் வளர்ச்சிக்காகவும் புதிய சாலைகளுக்காகவும் அழிக்கப்பட்டு மீதமிருக்கும் மேடான இடத்தினை ஒருவர் உப்புவேலியின் மிச்சம் என அவருக்கு காட்டுகிறார்.

வேலிக்காக பயன்பட்ட மரங்கள், அவற்றின் குணங்கள், இந்தியாவில் உப்பினை பயன்படுத்தும் அளவு, உப்புக்குறைபாட்டினால் வரும் உடல்நலக்கேடுகள், பல்வேறு ஆங்கிலேய அதிகாரிகளின் மனநிலை, அவர்கள் வேலைசெய்தவிதம், குற்றபரம்பரைகளின் பின்னணி, என பல தகவல்களை கொண்டுருக்கும் அற்புதமான புத்தகம்.

இந்த புத்தகத்திற்காக ராய் மாக்ஸம் அளித்துள்ள உழைப்பு அளவிடமுடியாதது. ஆனால் கடைசியில், உப்புவேலியின் மிச்சங்களை கண்டபிறகு, அவருக்கு மகிழ்ச்சிக்கு பதிலாக வருத்தமும் சோகமுமே அவரின் மனதை ஆக்கிரமிக்கின்றன.

புத்தகத்தை படித்து முடித்ததும் என் மனது வெறுமையாக இருந்தது. ஒரு சாதாரண உப்பு, சோடியம் குளோரைடு என பள்ளிகளில் நாம் படித்து, அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது, இந்திய வரலாற்றில் எவ்வளவு முக்கியமான கொள்ளைகளில் இடம்பெற்றிருக்கிறது எனவும், அதே உப்பினால் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் அரையாடை கிழவர் நாட்டு மக்களின் உள்ளத்தையும், வாழ்க்கையையும் தொட்டார் எனவும் அறிந்துகொள்ள முடிந்தது.

 

அன்புடன்,

கோ வீரராகவன்.

உப்புவேலி, இலக்கிய முன்னோடிகள் -கடிதங்கள் உப்புவேலி -கேசவமணி உப்புவேலி பற்றி பாவண்ணன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2021 10:31

வாசிப்பு பற்றிய உரைகள்- கடிதங்கள்

இனிய ஜெ சார்,

நீங்கள் நாகர்கோவிலில் ஒரு கல்லூரியில் ஆற்றிய உரையில் அமெரிக்காவின் வாசிப்பு வெறியைப் பற்றி சொல்லியிருந்தீர்கள். அது தொடர்பான ஒரு செய்தி:

கடந்த ஆண்டு திரைப்படங்களுக்கு செல்வதை காட்டிலும் அதிகமாக அமெரிக்கர்கள் நூலகங்களுக்கு தான் சென்றுள்ளனர்:

https://lithub.com/in-2019-more-americans-went-to-the-library-than-to-the-movies-yes-really/

அன்புடன்
கிருஷ்ணன ரவிக்குமார்.

அன்புள்ள கிருஷ்ணன் ரவிக்குமார்

நன்றி

அமெரிக்காவின் வாசிப்புக்கு ஐரோப்பாவின் வாசிப்பு நிகரானது. பிரிட்டனில் எத்தனைபேர் நூல்களுடன் தென்படுகிறர்கள் என்று பார்த்தேன். மெட்ரோவில் பார்த்தே எந்த எந்த நூல்கள்  ‘ட்ரெண்டிங்’கில் இருக்கின்றன என்று சொல்லிவிடமுடியும்

ஜெ

அன்புள்ள ஜெ

நீங்கள் வாசிப்பு பற்றி எழுதிய கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். மார்த்தாண்டம் கல்லூரியிலும் நாகர்கோயில் கல்லூரியிலும் வாசிப்பைப் பற்றி பேசுகிறீர்கள். மிக தர்க்கபூர்வமாக, மிக உணர்ச்சிகரமாக, கொஞ்சம் சீண்டும்படியாக பேசுகிறீர்கள். ஆனால் உண்மையில் இந்த வகையான பேச்சுக்களால் ஏதாவது பயனிருக்கிறதா? எவராவது மேற்கொண்டு படிக்க ஆரம்பிக்கிறார்களா?’

நான் முப்பத்தாண்டுகளாக கல்லூரியில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவன். நான் நூல்களை அறிமுகம்செய்து கொண்டே இருந்தேன். ஆனால் ஒருவர்கூட தொடர்ந்துபோய் நூல்களை வாசித்ததில்லை. என் வாழ்க்கை அந்தவகையில் மிகப்பெரிய வீணடிப்புதான்.

ஏன் வாசிக்க மாட்டேன் என்கிறார்கள்? வாசிப்பு ஒரு பழக்கம். சைக்கிள் ஓட்டுவதுபோல. அதை சின்னவயசிலேயே கற்றுக்கொடுத்தால் மேற்கொண்டு வாசிக்கமுடியும். நாம் காணும் மாணவர்கள் அப்படி அல்ல. அவர்கள் வளரும் சூழலில் வாசிப்புக்கே இடமில்லை. அவர்கள் கல்லூரிக்கு வரும்போதே மனம் ஒரு பாதையில் போய்விடுகிறது. மேற்கொண்டு வாசிப்பதே இல்லை

நான் திராவிட இயக்க ஆதரவாளன். ஆனால் வெளிப்படையாகச் சொல்கிறேனே. பிராமணர்கள் தவிர பிற சாதியினருக்கு வாசிக்கும் வழக்கம் மிகமிகக்குறைவு. அவர்களின் வீடுகளில் அந்த கலாச்சாரம் இல்லை. அவர்கள் வாசிப்புக்கு எதிரானவர்களும்கூட. அவர்களுக்கு வம்புச்சண்டைகளில் ஈடுபாடுண்டு, ஆனால் ஒரு புத்தகத்தை வாசிக்கமுடியாது

எஞ்சியிருக்கும் பிராமணர்களும் போய்விட்டால் தமிழகத்தில் புத்தகம் வாசிக்க ஆளிருக்காது

எம்.சென்னியப்பன்

அன்புள்ள சென்னியப்பன்,

கல்லூரிக்குச் சென்றுபேசுவதைப்போல வீண்வேலை வேறில்லை. இரண்டு காரணங்களுக்காகச் செல்லலாம். கொஞ்சம் பணம் கிடைக்கும். எழுத்தாளன் என்னும் அங்கீகாரம் கிடைப்பதாக எண்ணிக்கொள்ளலாம். ஆனால் அவையிரண்டுமே எனக்கு மிக அதிகமாக வேறிடங்களில் கிடைக்கின்றன. நான் செல்ல நேர்வது பெரும்பாலும் நண்பர்களுக்காக.

கல்லூரிகளில் என் பேச்சைக்கேட்டு நூல்களை வாசிக்க ஆரம்பித்த, நான் சொன்னவற்றைப் பற்றி எதையாவது மேலே யோசித்த, ஒருவரைக்கூட சென்ற பத்தாண்டுகளில் நான் சந்தித்ததில்லை. கேள்விப்பட்டதுமில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை.

நான் எப்போதுமே  மண்ணாந்தைவிழிகளையே எனக்கு முன்னால் பார்க்கிறேன். கிராமக்கல்லூரிகளில் மட்டுமல்ல மிக உயர்ந்த தர கல்லூரிகளில்கூட. ஒருமுறைகூட, ஒரு மாணவரைக்கூட, ஏற்கனவே கொஞ்சம் வாசித்தவர் என்று பார்க்கநேரிட்டதில்லை. பல உரைகளில் அந்த அவைபற்றிய என் அவநம்பிக்கையை சொல்லிவிட்டே ஆரம்பிப்பேன்.

உயர்தர கல்லூரிகளில் ஒன்றுமே தெரியாத மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவாளிகள் என்னும் மாயையில் ஒருவகை அலட்சியத்துடன் அமர்ந்திருப்பார்கள். கிராமக்கல்லூரிகளில் அக்கறையே இல்லாமல் இருப்பார்கள். இவ்வளவுதான் வேறுபாடு

இங்குள்ள பிரச்சினை இளமையிலேயே அளிக்கப்படும் தீவிர மனப்பாடக் கல்வி. அத்துடன் வாசிப்பு மற்றும் அறிவியக்கம் மீதான ஆழமான அவநம்பிக்கையும் ஏளனமும் உடைய சூழல். நீங்கள் சமூக ஊடகங்களில் உலவுபவர் என்றால் பாருங்கள். எத்தனை லட்சம்பேர் அங்கே இரவுபகலாக அரட்டை அடிக்கிறார்கள். ஒரு புத்தகத்தை எவரேனும் குறிப்பிடுவது எத்தனைமுறை நிகழ்கிறது?

ஆனால் வாசிப்புக்கு, சிந்தனைக்கு எதிராக எத்தனை வசைகள், ஏளனங்கள் நாள்தோறும் எழுகின்றன. யாராவது ஓர் எழுத்தாளனை எவராவது வசைபாடிவிட்டால் எத்தனை பேர் ஆவலாக எழுந்துவந்து கூடி கும்மியடித்து மகிழ்கிறார்கள். இதுதான் சூழல்.

இச்சூழலில் இருந்து எழுந்துவரும் லட்சத்தில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அவரிடம் நீ லட்சத்தில் ஒருவன், அந்தப்பொறுப்பு உனக்கு தேவை என்கிறேன். ஆயிரம்பேர் அவனிடம் ’நீ ஒன்றும் அரிதானவன் அல்ல. நாங்கள் படிக்கமாட்டோம், எதையும் தெரிந்துகொள்ள மாட்டோம். ஆனால் ஜனநாயகக் கொள்கைப்படி நீயும் நானும் சமமே’ என்று சொல்லி அவனைக் கீழிறக்க முயல்கிறார்கள். பலர் இதனாலெயே படிப்பதை நிறுத்திவிடுகிறார்கள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2021 10:31

ஓநாயின் வழி

அதே பசித்து பசித்து உணவைத் தேடி பாலையெங்கும் அலையும் ஓநாய். அதை சகுனி பார்க்கும் போது, அது பசியால் இறந்து விடும் நிலையில் தான் இருக்கும். அது உயிர் வாழ்கிறதா என்று கண்டு வந்து சொல்லுமாறு தன் வேட்டைத் துணைவனுக்கு உத்தரவிட்டு பீஷ்மருக்கு விடை கொடுக்க வருவான் சகுனி. அதன் பிறகு அந்த ஓநாய் உயிர் வாழ்ந்ததா என்பதை ஜெ எங்குமே சொல்லியிருக்க மாட்டார்.

ஓநாயின் வழி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2021 10:30

January 23, 2021

தலையணை ஞானம்

உலக இலக்கியத்தில் ஆர்வமூட்டும் ஓர் தனித்தன்மையைக் காண்கிறோம்- எப்போது புனைவு அச்சு வடிவில் உருவானதோ, எப்போது உரைநடை இலக்கியம் தோன்றியதோ, உடனே தோன்றிவிட்டது பகடி எழுதது. கிட்டத்தட்ட பைபிளுக்கு நிகராக நான் படிக்கும் நூல்களில் ஒன்று பி.ஜி.வோட்ஹவுஸ் தொகுத்த ‘நூறாண்டு நகைச்சுவை’ என்னும் கதைத் தொகுதி. அதில் 1800கள் முதல் நூறாண்டுகள் எழுதப்பட்ட சிறந்த நகைச்சுவை, பகடி கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 1940ல் வெளிவந்த நூல் அது.

பஞ்ச் என்னும் நகைச்சுவை இதழில் வெளிவந்தவை இத்தொகுதியில் உள்ள பெரும்பாலான கதைகள். அன்றைய அறிவியக்க எழுதது, கற்பனாவாத எழுதது எல்லாமே கொஞ்சம் பழையனவாகி தெரிய ,இவை இன்றும் புதியவையாக உள்ளன. ஏனென்றால் பகடியில்தான் மொழியின் அரிய இயல்கைகள் சில வெளிப்படுகின்றன. என்றும் என் அன்புக்குரிய பகடி எழுத்தாளர் ஸக்கி.

ஏன் பகடி முதலிலேயே தோன்றிவிட்டது? சில சமூகவியல் காரணங்களை சொல்லலாம். உரைநடை எழுதது உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தில் பிரபுக்களின் அவையில் இலக்கியம் வாசிக்கப்பட்டு ரசிக்கப்பட்டது. உரைநடை நூல்கள் வெளிவந்ததுமே நேராக அங்கேதான் சென்றன, அவர்கள்தான் வாங்கிப்படித்தனர். அவர்களை மகிழ்விப்பதற்குரிய வேடிக்கைக் கதைகள், அறிவார்ந்த பகடிகள் அன்று விற்றன. ஆகவே அவை எழுதப்பட்டன.

உண்மை, உரைநடையின் முதற்பெரும் பயன் என்பது கருததுப்பிரச்சாரமாகவே இருந்தது. மக்களிடம் நேரடியாகப் பேச அச்சும் உரைநடையும் உதவின. ஆகவே ஜனநாயகத்தின் ஊடகமாக அது அமைந்தது. அன்று புகழ்பெற்றிருந்த நூல்கள் பெரும்பாலும் சுருக்கமான கருத்துப்பிரச்சார வெளியீடுகளே. ஆனால் அடுத்தபடியாக பகடி இருந்துகொண்டிருந்தது. சொல்லப்போனால் மக்களிடையே கருததுப்பிரச்சாரமும் உயர்மட்டவாசகர் நடுவே பகடியும் புகழ்பெற்றிருந்தன.

இந்தியாவில் அச்சு வடிவில் உரைநடை வந்தபோது மூன்றுவகை நூல்கள் வெளிவந்தன. ஒன்று, செவ்விலக்கியங்கள் மற்றும் மதநூல்கள். அவை இங்கே பிரபுக்களிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு வெளியிடப்பட்டன. மக்களிடையே பிரபலமாக இருந்தவை மலிவுவிலையில் வெளியிடப்பட்ட நாட்டார் படைப்புக்கள். சித்தர்பாடல்கள் கூட அன்று நாட்டார்மரபிலேயே இருந்தன. பின்னர் புனைகதைகள் வரத்தொடங்கியபோதுகூட வினோதரசமஞ்சரி போன்ற அரைநாட்டார் ஆக்கங்களே வந்தன.

நவீனத்தன்மை கொண்ட புனைவுகள் வரத்தொடங்கிய 1800களின் இறுதியில் ஆங்கில எழுத்தை ஒட்டியே இங்கும் புனைவுகள் எழுதப்பட்டன. பெரும்பாலும் தழுவல்கள். ரெயினால்ட்ஸ் அன்று புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர். அவருடைய அரண்மனை மர்மக்கதைகள் அப்படியே தழுவப்பட்டன. ஷெர்லக் ஹோம்ஸ் பாணி துப்பறியும் கதைகள் தழுவப்பட்டன.

அன்று நீதிமன்றம், போலீஸ் ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சியால் அறிமுகமாகி மக்களின் வாழ்க்கையை பாதிக்க ஆரம்பித்திருந்தன. மக்கள் மிகுந்த ஆர்வததுடன் நீதிமன்ற விசாரணை, போலீஸ் துப்பறிதல் ஆகியவற்றை கவனித்தனர். ஆகவே அவை சார்ந்த நூல்கள் பரபரப்பாக விற்றன. வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஜே.ஆர்.ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்களின் புனைவுகள் அந்த வரிசையில் வருபவை. இந்தியாவில் கருததுப்பிரச்சார எழுதது என்பது 1900த்தின் தொடக்கத்தில் காங்கிரசின் செயல்பாடுகள் வீச்சுகொண்டபோதுதான் தொடங்கியது.

அந்த ஆரம்பகாலத்திலேயே இங்கே பகடி எழுதது வந்துவிட்டது. ஆனந்தவிகடன் என்ற இதழ் பகடிக்காகவே வெளியிடப்பட்டது. அதைத்தான் பின்னர் எஸ்.எஸ்.வாசன் வாங்கி குடும்ப இதழாக மாற்றி நட்த்தினார். ஆனந்த விகடன் பஞ்ச் இதழின் பாணியில் அமைந்த இதழ். அதைப்போல பல வேடிக்கை இதழ்கள் அன்று வெளிவந்தன.

அக்காலகட்டத்தின் எழுத்தாளர்களில் பலர் வேடிக்கைவிளையாட்டு என எழுதியவர்க்ள். முக்கியமானவர் எஸ்.வி.வி. கல்கியின் நடையே பகடியம்சம் கொண்டதுதான். அவரை தொடர்ந்து எழுதிய தேவன் போன்றவர்களும் பகடியாளர்களே. தேவனின் துப்பறியும் சாம்பு தமிழின் குறிப்பிட்த்தக்க பகடிக் கதாபாத்திரம்- ஆங்கில முன்மாதிரிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஏ.கே. பட்டுசாமியின் காஸ்டபிள் கந்தசாமி அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த ஒரு துப்பறியும் பகடி கதாபாத்திரம். துப்பறியும்கதை தொடங்கியதுமே அதன் பகடி வடிவமும் வந்துவிட்டதை நினைவுகொள்ளவேண்டும்.

இது தமிழில் மட்டும் நிகழவில்லை. மலையாளத்திலும் உரைநடை எழுத்தின் தொடக்க்கால முன்மாதிரிகளில் பகடி முக்கியமானது. சஞ்சயன் என்றபெயரில் எழுதிய மாணிக்கோத்து ராமுண்ணி நாயர் முக்கியமான பகடி எழுத்தாளர். அன்று ஈ.வி.கிருஷ்ணபிள்ளை, எம்.என்.கோவிந்தப்பிள்ளை போன்று பல புகழ்பெற்ற பகடியாளர்கள் இருந்தனர். மலையாள தொடக்க்கால நாவல்களில் முக்கியமானது ’விருதன்சங்கு’ ஒரு துப்பறியும் பகடிக்கதை. எழுதியவர் காராட்டு அச்சுத மேனன். அவருடைய கொள்ளுப்பேரன்தான் மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவரான பிரகாஷ் காராட்டு. இவையும் ஆங்கில பஞ்ச் இதழ் எழுததுக்களின் தொடர்ச்சியாக உருவானவை

தமிழின் அக்காலப் பகடி எழுத்தின் மிகச்சிறந்த ஆக்கம் என்பது பண்டித நடேச சாஸ்திரி எழுதிய தலையணை மந்திரோபதேசம். 1901ல் எழுதப்பட்ட சிறிய நாவல் இது. அன்று நாவல் என்றபெயரே இல்லை. ஹாஸ்யகிரந்தம் என்றுதான் அறிமுகமாகியிருக்கிறது. அன்று இது புகழ்பெற்ற நூல். 1950களில்கூட இந்நூல் விரும்பிப் படிக்கப்பட்டது என்று க.நா.சு குறிப்பிடுகிறார்.

image description

இதன் ஆசிரியர் நடேச சாஸ்திரி 1859ல் பிறந்தவர். 1906ல் மறைந்தார் தஞ்சைமாவட்டத்தில் பிறந்தவர். அங்கே மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தபின் கும்பகோணம் கல்லூரியில் புகுமுக படிப்பை முடிததுவிட்டு சென்னை மாநிலக்கல்லூரியில் பி.ஏ. பட்டம்பெற்றார். பட்டம்பெறுவதற்கு முன்னரே நாகலட்சுமியை மண்ந்தார். 1881ல் இந்திய சாசன- சிற்ப காப்பகத்தில் ஊழியராகச் சேர்ந்தார்.

தொல்லியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த நடேச சாஸ்திரி தென்னிந்திய சிற்பக்கலைகளை ஆராய்ந்து ஆவணப்படுத்திய இ.பி.ஹாவல் அவர்களின் நெருக்கமான உதவியாளராக இருந்தார். தென்னகம் முழுக்க பயணம் செய்தார். இவருக்கு பதினெட்டு மொழிகள் தெரியும் என்றும் தென்னக கல்வெட்டுகள் மற்றும் சுவடிகளை ஒப்பிட்டு ஆராய்வதில் மிகப்பெரிய பங்களிப்பாற்றினார் என்றும் இவருடைய வாழ்க்கைக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

ஆங்கில ஆட்சியாளர்களின் கீழ் பல வேலைகளைப் பார்த்த நடேச சாஸ்திரி பதிவுத்துறை பொதுக் கண்காணிப்பாளர் பதவியை அடைந்தார். 1906, ஏப்ரல் 11 ஆம் தேதியில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் நடந்த திருவிழாவில் கலந்துகொண்டார். அப்போது போடப்பட்ட அதிர்வெடியை கேட்டு அஞ்சி ஓடிய குதிரை இவரை உதைதது கீழே தள்ளியதனால் உயிரிழந்தார். அப்போது இவருக்கு வயது நாற்பத்தேழு.

தீனதயாளு, கோமளம் குமரியானது, திக்கற்ற இருகுழந்தைகள், மதிகெட்ட மனைவி, மாமிகொலுவிருக்கை போன்ற நூல்களையும் எழுதியிருக்கிறார். தக்காணதது மத்யகால கதைகள், நான்கு பக்கிரிகளின் கதை, தென்னிந்திய நாட்டுப்புறக் கதைகள் போன்ற நாட்டார்கதைகளை தொகுத்திருக்கிறார். வடமொழியிலிருந்து சாகுந்தலம், குமாரசம்பவம், ரகுவம்சம் போன்றவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறார்.

தலையணை மந்திரோபதேசத்தின் அமைப்பே ஆர்வமூட்டுவது.ராம்பிரசாத் என்ற குமாஸ்தாவுக்கு அவன் மனைவி அம்மணிபாய் 36 அத்தியாயங்களிலாக அளிக்கும் ‘அர்ச்சனைகள்’தான் இந்த நூல். ராம்பிரசாத் பெரும்பாலும் வாயே திறப்பதில்லை. அவ்வப்போது ஓரிரு சொற்கள் முனகுவதுடன் சரி. அம்மணிபாய் பொரிந்துகொட்டுகிறாள். கணவனின் ‘துப்புகெட்ட’ தன்மையை குத்திக்காட்டி, தன்னுடைய பொறுப்பையும் கஷ்டங்களையும் விரிததுரைதது, அங்கலாய்தது முடிக்கிறாள். ராமபிரசாத் அதை ஒருவகை தாலாட்டாக கேட்டுக்கொண்டு அப்படியே தூங்கிவிடுகிறான். இந்த இல்லறமென்னும் நல்லறத்தின் சித்திரமே இச்சிறியநூல்.

மந்திரோபதேசம் என்பது ஆன்மிகவழியில் முக்கியமானது. சீடனை உணர்ந்து அவனுக்கு வாழ்நாளெல்லாம் உடனிருக்கும் மந்திரத்தை செவியில் சொல்லி வழிகாட்டுவது அது. தலையணை மந்திரம் என மனைவி கணவனிடம் படுக்கையில் சொல்லும் முணுமுணுப்புகளை பிறர் பழிப்பதுண்டு. அதை ஒரு மந்திரோபதேசமாக நடேச சாஸ்திரி காட்டுகிறார். அம்மணிபாய் மிக ஆக்ரோஷமானவள். பேச ஆரம்பித்தால் நிறுததுவதே இல்லை. அவளுடைய எல்லா கருததுக்களும் ஒற்றைப்படையானவை. அதில் அவளுடைய பார்வை மட்டுமே உள்ளது,

அவள் ஒரு புனைவுலகை உருவாக்கி அங்கு நின்றே எல்லாவற்றையும் சொல்கிறாள். அதற்கும் உண்மைக்கும் தொடர்பில்லை. கணவன் ஒரு தத்தி, கூறுகெட்டவன், மனைவியை மதிக்காதவன், ஊதாரி, குழந்தைகள்மேல் அன்பில்லாதவன், ஊருக்கு இளைத்தவன் என்பதில் அம்மணிபாய்க்கு சந்தேகமே இல்லை. அதை சுட்டிக்காட்டி வசைபாடினால் அவனை சீர்திருத்தமுடியும் என்று நினைக்கிறாள்—அல்லது அது அவள் பாவனை. ராமபிரசாத் இடிவாங்கிக்கொண்டே இருக்கிறான்

அம்மணிபாயின் இந்த இயல்புக்கான காரணம் நூலில் தொடக்கத்திலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. அம்மணிபாய்க்கு சிறுவயதிலேயே நோய்கண்டு தலைமுடி உதிர்ந்துவிடுகிறது. ஒரு கால் கோணல். ஒரு கண்ணும் பார்வையில்லாதது. அழகும் ஆரோக்கியமும் இல்லாதவள். அவள் கணவன் ராமபிரசாத் அழகன், ஆரோக்கியமானவன். அம்மணிபாயின் பதற்றம் அங்கிருந்துதான் தொடங்குகிறது. ஒருவகையில் பரிதாபமான ஒரு வாழ்க்கை அம்மணிபாயுடையது.

அம்மணிபாயின் அப்பா சங்கரப்பிரசாத் செல்வந்தர். அவள் அவருக்கு ஒரே மகள். ராமபிரசாத் வறுமையான குடும்பத்தில் பிறந்தவன். சங்கரபிரசாத்தின் மகளை கொடுக்க அவர் முன்வந்ததும் ராமபிரசாத்தின் அப்பா வரதப்பிரசாத் பெரும் களிப்புடன் திருமணததுக்கு வாக்கு கொடுததுவிட்டான். அப்படித்தான் அம்மணிபாய் ராமபிரசாததுக்கு வாழ்க்கைப்பட்டள்.

இந்த தலையணை மந்திரங்கள் எப்படி ஆசிரியருக்கு தெரிந்தன? “தலையணையில் தலைவைத்தபடியே அம்மணிபாய் இவ்வுபதேசங்களை வாய்மலர்ந்தருளியபடியால் இக்கிரந்த்தத்துக்கு தலையணை மந்திரோபதேசம் என்று பெயரிடப்பட்டது. அச்சமயமன்றி மற்றவேளைகளிலும் இம்மாதுசிரோமணி செய்த உபதேசங்கள் வெகு சிலாக்கியமானவை. ஆகையால் அவைகளையும் இவ்வுபதேசங்களுடன் சேர்தது உலகத்திற்கு விளங்கச்செய்தோம்” என்று ஆசிரியர் சொல்கிறார்

“ஆனால் எழுதமட்டும் யோக்கியதை எப்படி வந்தது என்று கேட்டாலோ நாம் அதே சேலத்தில் ராமபிரசாத்தினுடைய அடுத்த வீட்டில் வெகுநாள் வரையில் வசித்தோமாகையினாலும், அம்மணியம்மாள் செய்த பிரசங்கங்கள் விசேஷமாய் நான்கு வீடுகள் மட்டுமே கேட்கும்படியான பிர்சங்கங்களாகையாலும் , அவைகளில் பலவற்றை நாமே நேரில் கேட்டிருக்கிறோமையாலும் நாமிவைகளை முற்றிலும் அறிந்துகொள்ளும் பாக்கியம் பெற்றோம்” என்கிறார். நான்குவீடுகளுக்கு கேட்கும் படுக்கையறை மந்திரம் இது!

அம்மணியம்மாளில் மொழிநடைக்குச் சான்று. “பார்த்தீர்களா பார்த்தீர்களா? உமக்கு எங்கேயாவது போகவேண்டுமென்றிருந்தால் அப்போது இப்படி யோசிக்கிறீர்களா? நான் வெளிக்கிளம்பவேண்டும் என்று ஒரு கேள்வி வாயைத்திறந்து கேட்டுவிட்டால் செலவென்ன பிடிக்கும் என்று அதட்டிக்கேட்கிறீர்கள். நீங்கள் தைப்பூசததுக்கு ஒரு ஆள் புறப்பட்டுப்போய் பதது ரூபாய் செலவிட்டு கூட பதது ரூபாய் பணம் கடன் செய்து வந்தீர்களே…” இப்படியே போகும் நடை “சாப்பாட்டில் ருசிபார்தது சாப்பிடப்பட்டவன் ஆம்பிள்ளையா? போட்டதை பசுப்போல் சாப்பிடப்பட்டவந்தான் யோக்கியன்” என்ற வகையான ஆழ்ந்த கருததுக்களையும் வெளிப்படுததுகிறது

கௌடபிராமண குடும்பத்தில் நிகழ்கிறது இக்கதை. அவர்களின் ஆசாரங்கள், அன்றைய கொண்டாட்டங்கள், அன்றைய புறவுலக நிகழ்ச்சிகள் போன்ற பலசெய்திகளை சொல்கிறது. அம்மணிபாய் மேலும் இரு துளைகள் காதுகுத்தி நகைபோட ஆசைப்படுகிறாள். அதற்கு லெப்பைப்பெண்கள் அடுக்கடுக்காக காதுகுத்தி ஏகப்பட்ட நகை போடவில்லையா என்ற கேள்வி. ராமபிரசாதுக்கு பஜனை பாகவத கோஷ்டியில் ருசி. அது சூதாட்டம் போல வாழ்க்கையை கெடுப்பது என்பது அம்மணியம்மாளின் கருதது

அம்மணிபாய் சீக்கிரமே இறந்துவிடுகிறாள். ராமபிரசாத் உண்மையில் அம்மணியம்மாளின் அந்த சொற்தாண்டவத்தை ரசிக்கிறான். அவள் இறந்தபின்னர் அது தெளிவாக தெரியவருகிறது. அவள்குரல் அவனுக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது. இளவயதிலேயே மனைவியை இழந்தாலும் அம்மணிபாயின் இடத்தில் இன்னொருவரை வைக்க அவன் மனம் இடம்தரவில்லை. ஆகவே அவன் மறுமணம் செய்யாமல் குழந்தைகளை வளர்த்தான் என்று இச்சிறு நாவல் முடிகிறது

அன்றாடக் குடும்ப வாழ்க்கை மீதான பகடி இந்நாவல். ஒவ்வொருநாளும் சிறுசிறு விஷயங்களால் வாழ்க்கை அலைக்கழிவதன் சித்திரம். எஸ்.வி.வி. பின்னாளில் இவ்வகையில் மேலும் எழுதியிருக்கிறார். அவருடைய தாசில்தார் கதைகளுக்குச் சமானமானது இது. குறிப்பாக எஸ்.வி.வியின் பால்கணக்கு என்ற கதை இந்நாவலின் நீட்சி என்றே தோன்றும்.

இந்நாவலை தமிழின் பகடி எழுத்தின் தொடக்கப்புள்ளி என்று சொல்ல்லாம். இன்றைய வாசிப்பிலும் வாய்விட்டுச் சிரிக்கவைக்கும் பல இடங்கள் உள்ளன. அதோடு இந்த இடிதாங்கிவாழ்க்கை இன்றும் அப்படியே நீடிக்கின்றது என்னும் மெய்யுணர்வு மேலும் சிரிப்பூட்டுகிறது

[தலையணை மந்திரோபதேசம், தமிழினி பிரசுரம்]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2021 10:35

சிறுகதையின் திருப்பம்- கடிதம்

சிறுகதையின் திருப்பம்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

சிறுகதையின் திருப்பம் பற்றிய உங்கள் விரிவான   பதிலுக்கு நன்றி. நண்பர் ஒருவர் அண்மையில் தந்திருந்த அசோமித்திரன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்) தற்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள்  சொன்னது போல  இறுதித் திருப்பம் சிறப்பாக அமைந்த  மற்றும் உருவகத்தன்மை கொண்ட சிறு கதைகளை அவர் எழுதிருக்கிறார்.

சிறுகதையின் இறுதித் திருப்பம், முத்தாய்ப்பு, உருவகத்தன்மை என்பவை குறித்து நீங்கள் எழுதியவற்றைப் பற்றி சிந்தித்துப்பார்த்தேன். இதனால் நீங்கள் எழுதிய சிறு கதை , குறு  நாவல் தொகுப்புகள், மற்றும் அறம் சிறுகதைகள் என்பவற்றில் சிலவற்றை எடுத்து  இன்னொரு மீள்வாசிப்பின் மூலம் இதனைப் புரிந்து கொள்ள முயல்கிறேன். இவை என்னுடைய  புரிந்து கொள்ளல் ஆதலினால் தவறுகளும் இருக்கக் கூடும்.

உங்களது ‘யானை டாக்டர்’, ‘மடம்’ , ‘பத்ம வியூகம்’ போன்ற கதைகளில் வலுவான  ஒரு முடிவு வருகிறது. இதில் ‘யானை டாக்டர்’ தரும் தாக்கம் வலிமையானது, சிறுகதையின் முடிவுக்குப் பின்னே தொடராக   சிந்தனையைத் தூண்டுவது, அதிலும் இங்கே அவுஸ்திரேலியாவில் ஏராளமான காட்டு விலங்குகள் அண்மையில் தீக்கிரையான சூழலில் இதனை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நல்ல முத்தாய்ப்புடன் முடிந்த கதையாக யானை டாக்டரைக் கருதலாம். ‘மாடன் மோட்சம்’, ‘மடம்’  போல நகைச்சுவையான ஒட்டத்தில் எழுதப் பட்டிருந்தாலும் மாடன் மோட்சத்தில் உருவகத் தன்மை உண்டு.  அவை  இரண்டுமே ஒரு திருப்பத்தையடைகின்றன.

‘மடம்’, ‘மாடன் மோட்சம்’, ‘பத்ம வியூகம்’ போன்றவற்றை நாடமாக்க கூடிய அளவுக்கு காட்சிகளைக் கொண்டிருப்பன. அவை நாடகமாக்கப் பட்டாலும் அவற்றின் உச்சத்தை அடையும் என்று தோன்றுகிறது. பத்ம வியூகம், பாரதக் கதையை இன்றைய போர்ச் சூழலுக்கு அர்த்தம் தரும் வகையில் மீள் வார்ப்பு செய்யப்பட்டுள்ளதாயும்  நிறைந்த கற்பனை வீச்சினைக் கொண்டதாயுமுள்ளது. அறம் சிறுகதையில் வரும் திருப்பம் எதிர்பாரா வலிமையான திருப்பம். தார் வீதியில் நடுவெயிலில் பிடிவாதத்துடன் அமர்ந்த அந்த தாயின் முடிவு சற்றிலும் எதிர் பாரா வகையில் கதையின்  திசையை மாற்றுகிறது. வாசகர்கள் அந்த எழுத்தாளரின்  தற்கொலையை பெரும்பாலும் ஊகித்திருக்கும் நிலையில்  அந்த ஊகத்தைப் பொய்யாக்குகிறது இந்த திருப்பம்.

அறம், தாயார் பாதம் இரண்டும் ஒருவர் இன்னொருவருக்கு முன்  நிகழ்ந்ததை சொல்லும்  கதைகளாக விரிகின்றன. தாயார் பாதத்தில் வரும் திருப்பம் தாத்தாவின் முற் கோபம்  பாட்டியின்  வாழ்நாள் முழுதுமாக அவரை மாற்றி விடுவதை காட்டுகிறது. நூறு நாற்காலிகளில் வரும்  கடைநிலை சமூகத்தின் பிரதிநிதியான காப்பன் இறுதியில் தாயின் இறப்புடன் அடையும் உத்வேகமே திருப்பமாகிறது. இக்கதை உங்கள் நாவலான ஏழாம்  உலகத்தைப்போல மனதை ரணமாக்குகிறது.

ஓலைச் சிலுவை ஒரு காலகட்டத்தை பிரதிபலிப்பதாக இருந்தாலும் கூர்மையாக அவதானித்தால் அதிலுள்ள  நுட்பங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. தகப்பன் மரணப்  படுக்கையில் கிடக்கிறான் என்று தெரிந்தும் அதை புரிந்து கொள்ள முடியாமல்  ஆஸ்பத்திரி வாசலில் வேப்பம் பழங்களை பொறுக்கி அடுக்கி விளையாடும் மகன் சிறுவன். பசியின் கோரத்தைக் காட்டும் ஒரு இடம், சோறுண்பதாக கனவு கண்டு சப்புக் கொட்டும் சிறுமி.  உதாரணத்துக்கு இந்த  இரண்டும். இதில் வரும் முத்தாய்ப்பான முடிவு மிஷனரி சார்மவல் இந்துப் பெண்ணுக்கு கொடுத்த குருவாயூரப்பன் படமும், டேனியேலுக்கு கொடுத்த ஓலை  சிலுவையுமே என்று தோன்றுகிறது.

டார்த்தீனியம் ஒரு உருவகக்  கதையாகப் படுகிறது,  அது அடையும் திருப்பம் படிப்படியானது. ஒரு அமைப்பின் பெரிய வீழ்ச்சியை சுட்டுவதாக கொள்ளலாமோ என்று தோன்றுகிறது. எல்லா கதைகளிலுமே   பொதுவாக காணப்படும் திருப்பம் அல்லது முரணை,  கூர்மையாகவும்  உச்சமாகவும் கொண்டு செல்லும் உத்திகளும், அதற்கான வடிவங்களும் , மொழி நடையும்  கதைகளின்  வீச்சை உயர்த்தி விடுகின்றன. வாழ்த்துக்களுடன் விடை பெறுகிறேன்.

அன்புடன்

யோகன்

கன்பரா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2021 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.