Jeyamohan's Blog, page 1063

January 16, 2021

இந்துமதமும் ஆசாரவாதமும்

ராம் மோகன் ராய்

அன்புள்ள ஜெமோ,

இந்த இணைப்பிலுள்ள தகவல்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன? கருத்து இல்லை என்ற கருத்தை சொல்லமாட்டீர்கள் என்றும் கொஞ்சம் புளிச்சமாவாக இருந்தாலும் பரிமாறுவீர்கள் என்றும் நினைக்கிறேன்

அன்புடன்

தேவ்ராஜ்

இந்து மதம் மைனஸ் பார்ப்பனீயம்

அன்புள்ள தேவ்ராஜ்

இதை இன்று காழ்ப்புடன் அடிவயிற்றை எக்கி கூச்சலிட்டுப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் – எல்லா தரப்பிலும். கொஞ்சம் நிதானமாக, கொஞ்சம் வரலாற்றுணர்வுடன் பேசமுடியுமா என்பதே நான் தொடர்ச்சியாக முயன்றுவருவது. ஒரு பத்துபேருக்கு அது சென்றுசேருமென ஒவ்வொரு முறையும் எண்ணிக்கொள்வேன். ஆகவே மீண்டும் முயல்கிறேன்

மேலே சொன்ன கட்டுரையிலுள்ள கருத்துக்கள், அவற்றை வலியுறுத்திப் பேசும் பழமைவாத- ஆசாரவாத குரல்கள் ஆகியவற்றை இந்துமதத்தின் மறுமலர்ச்சிக்காலம் முதல், அதாவது பதினெட்டாம்நூற்றாண்டின் இறுதி முதல், மிகக்கடுமையாக விமர்சித்துப் பேசிவந்திருக்கின்றனர் இந்து மெய்ஞானிகள். ராஜா ராம்மோகன் ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர்,விவேகானந்தர், வள்ளலார், சட்டம்பிசாமிகள், நாராயணகுரு என ஒரு நீண்ட மரபு அதற்கு உண்டு.

அவர்களில் நாராயணகுருவின் வழிவந்த நித்யசைதன்ய யதியின் மாணவன் நான். நித்யா குருகுலத்தில் வேதம் கற்பிக்கப்பட்டது, வேள்விகள் செய்யப்பட்டன. தலித் பூர்வீகம் கொண்ட துறவிகள் வேள்வி செய்திருக்கிறார்கள். அந்த மரபு இன்றும் தொடர்கிறது

ஆகவே இக்குரல்களை முற்றாக நிராகரிப்பதற்கும், மரபுவாதம் ஆசாரவாதம் ஆகியவற்றை நான் ஏற்க முடியாது என அறிவிப்பதற்கும் எனக்கு எந்த தடையும் இல்லை. இவர்களின் ஆசாரவாதம் மானுட அறத்தை மறுக்கும் என்றால் அதை கடுமையாக எதிர்ப்பதும் உண்டு. அதை எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன்

‘ஆனால்’ என்று சொல்லி இரண்டு விஷயங்களை மேலதிகமாகச் சுட்டி வருகிறேன். முதலில் ஆசாரவாதத்தின் வரலாற்று பங்களிப்பை சுட்டவிடும்புகிறேன். இரண்டாவதாக சமூகச்சூழலில் நாம் கொள்ளும் சில சாதியச்சூழ்ச்சிகளை.

மரபுவாதம் அல்லது ஆசாரவாதம் எல்லா மதங்களிலும் இருக்கும். இது ஒருவகை வண்டல். இதை எந்த மதமும் முற்றாக அகற்றிவிட முடியாது.

ஏனென்றால் மதம் என்பதே ஆன்மிகத்தேடலை, ஆன்மிகப்பயிற்சியை நிறுவனமாக ஆக்கி உறையவைக்கும் முயற்சி. எந்த மதமும் ‘நிலைத்த தன்மை’ யைத்தான் தன் இலக்காக ஆக்கியிருக்கும். பூமியில் மானுடம் உள்ளவரை இதுவே உண்மை என்றுதான் அது சொல்லும். தன் மெய்மையை மட்டுமல்ல அதற்குச் சம்பந்தமில்லாத ஆசாரங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றையும் காலம்கடந்த மெய் என்றே அது சொல்லும்

பௌத்தமதத்தவரிடம் சென்று சங்கம் என்ற அமைப்பு புத்தரால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது, ஆகவே இனிமேல் அது தேவையில்லை என்றும் தலாய் லாமா, தேரர் போன்றவர்களை புனிதமான தலைவர்களாக கொள்ளவேண்டாம் என்றும் சொல்லமுடியுமா? மறுப்பார்கள். அவை காலமுடிவு வரை நீடிக்கும் மாறாத அமைப்புக்கள் என்றே சொல்வார்கள். மன்னராட்சி ஒழிந்தபின் எதற்கு போப்பாண்டவர் என்னும் மதத்தலைமை மன்னர் என்று கேட்கமுடியுமா?

மதத்தின் உள்ளே அதை மாறாது தக்கவைக்கும் ஒர் இயல்பு, ஒரு பிடிவாதம் இருந்துகொண்டே இருக்கும். அந்த இயல்பால்தான் அது ஒரு தொடர்ச்சியை அடைகிறது. ஒரு நிறுவனமாக நீடிக்கிறது. அந்தப்பிடிவாதம் இல்லாத மதங்கள் அழிந்துவிடும். ஆகவே இன்றைக்கு ஒரு மதம் நெடுங்காலமகா இருந்து நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறதென்றாலே அதற்குள் மாறாமலிருக்கும் பிடிவாதம் ஒன்று செயல்படுகிறது என்றுதான் பொருள்.

அந்த இயல்புக்கு இரண்டு முகம் உண்டு.அதன் நன்மை என்னவென்றால் அதுதான் தொன்மையான மெய்நூல்களை, மெய்மையின் வெளிப்பாடான தொல்படிமங்களை அழியாது காப்பது, தலைமுறைகளுக்குக் கொண்டுசென்று சேர்ப்பது. கத்தோலிக்கத் திருச்சபை இல்லையேல் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து கிறிஸ்துவின் சொற்கள் வந்துசேர்ந்திருக்காது. மிக இறுக்கமான அமைப்பும், மிகப் பிடிவாதமான பயிற்சிகள் இருந்தமையால்தான் திபெத்தில் பௌத்த மூலநூல்களும்,ஞானமும் அழியாமல் நீடித்தன

இந்துமதத்தின் சாராம்சமாக இருக்கும் இந்த ஆசாரவாதமும் பழமைவாதமும்தான் சென்றகாலங்களில் மிகமிக எதிர்மறையான சூழல்களில்கூட இந்துமதத்தின் மெய்நூல்களை, தொல்படிமங்களை அழியாமல் பாதுகாத்தன.தங்கள் ஆசாரவாதத்தின் பொருட்டு எல்லா உலகியல்நன்மைகளையும் துறக்கவும், உயிர்கொடுக்கவும் சித்தமாக இருந்தவர்களால்தான் உலகமெய்ஞானத்தின் பொக்கிஷங்களாக இந்துமத எதிர்ப்பாளர்களால்கூட சொல்லப்படும் உபநிடதங்கள்கூட பேணி அடுத்த தலைமுறைக்கு அளிக்கப்பட்டன

இந்த பிடிவாதம், அனைத்து மாற்றங்களையும் எதிர்த்துநிற்கும் தன்மை கொண்டது. இதன் நற்கொடை என்பது ‘அடிப்படைகளைப் பேணிக்கொள்ளுதல்’ என்பதுதான். நடைமுறைப் பார்வை கொண்டவர்களுக்கு இதெல்லாம் அபத்தமானதாக, ஆபத்தானதாக தோன்றலாம். ஆனால் அவர்கள் அந்தந்தக் காலகட்டத்து தேவைக்கு ஏற்ப அப்போது உதவாதவை என தோன்றுவதை உடனே கைவிட்டுவிடுவார்கள். அவர்களால் எவையுமே பேணப்படாது

நடைமுறைநோக்கு கொண்டவர்கள் மட்டுமே மதங்களுக்குள் இருந்திருந்தால் அவ்வண்ணம் கைவிடப்பட்டவை அப்படியே அழிந்துபோகும். மீட்டெடுக்கவே முடியாது. மதத்துக்கு மட்டுமல்ல ஒரு பண்பாட்டுக்கு மட்டுமல்ல மானுட குலத்துக்கே அது பெரிய இழப்பு. மீளமுடியாத ஒருவழிப்பாதை. பார்த்துக்கொண்டே இருங்கள், நீங்கள் இளையவர் என்றால், ஐம்பதாண்டுகள் இன்னும் வாழ்வீர்கள் என்றால், ஜப்பானில் பௌத்தம் வெறும் வரலாற்றுச்சின்னமாக, வெறும் சுற்றுலாக்கவற்சியாக பொருளிழந்து போயிருப்பதை காண்பீர்கள்.கொரியாவில் ஏற்கனவே அப்படி ஆகிவிட்டது.

ஆசாரவாதிகள் எதையும் விடமாட்டார்கள். எதையும் மாற்ற மாட்டார்கள். ஏன் அப்படி இருக்கிறார்கள்? ஆசாரம் என்பதே மாறாச்சடங்குதான். அந்தப்பிடிவாதம் கொண்டவர்கள்தான் ஆசாரவாதிகள். அவர்களின் வழி அறிவார்ந்தது அல்ல. நடைமுறைநோக்கம் கொண்டதும் அல்ல. ஆராய்ந்து தெளிவது ஞானமார்க்கம். ஆசாரமார்க்கம் என்பது உறுதியாக கடைப்பிடிப்பது மட்டுமே. எது நன்று எது தீது என்று, எது தேவை எது தேவையில்லை என்று, தாங்களே மதிப்பிடும் அறிவார்ந்த அளவுகோல்கள் அவர்களுக்கு இல்லை. அவர்களுடையது சுருதிவாதம். முன்னோர்சொல், முன்செல்லும் வழிகாட்டியான ஆசிரியனின் சொல் ஆகிய இரண்டையும் முழுமையாக கடைப்பிடிப்பது அவர்களின் செயல்முறை. அவர்கள் சொல்லும் எல்லாமே அவர்களுக்கு மரபுதான்.

இத்தரப்பை மதத்தின் நிலைச்சக்தி [Static force] என்று நான் சொல்வதுண்டு. பகுப்பாய்வுசெய்யும், மாற்றங்களை உள்வாங்கிக்கொள்ளும் ஞானத்தின் வழிதான் செயல்சக்தி. [Dynamic force] இவ்விரு சக்திகள் நடுவே இருக்கும் முரணியக்கமே மெய்யான இயக்கவியலாக இருக்கமுடியும். நிலைச்சக்தி மட்டும் இருந்தால் ஒரு மதத்தின் எடை மிகுந்து அசைவின்மை உருவாகும். செயல்சக்தி மட்டுமென்றால் புகையென நிலையில்லாமல் பறந்து கலைந்து அழியநேரிடும்

எந்த தளத்திலும் என் பார்வை இதுவே. எண்பதுகளில் நான் நவீன இலக்கியத்திற்குள் வந்தபோது பொதுவாக அத்தனை நவீன இலக்கியவாதிகளுமே மரபான தமிழறிஞர்களுக்கு எதிரானவர்களாக இருந்தனர். அவர்களை கேலியும் கிண்டலும் செய்தனர். மரபான தமிழறிஞர்களை நையாண்டி செய்து அனைவருமே ஏதாவது கதை கவிதை எழுதியிருப்பார்கள்—புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி வரை.அதிலும் தனித்தமிழியக்கம் போன்றவை மிகவும் பழிக்கப்பட்டன. அவை தமிழ்ப் பழமைவாதம் என்று கணிக்கப்பட்டன.

அந்த தமிழ் அடிப்படைவாதத்திற்கு எதிரான போக்கு அன்று சிற்றிதழ்ச்சூழலில் வலுவாக இருந்தது. சிற்றிதழ், பதிப்பகப் பெயர்களே கூட யாத்ரா, க்ரியா என்றெல்லாம் வைக்கப்பட்டன. தமிழறிஞரான வைத்திலிங்கம்கூட பிரபஞ்சன் என்று பெயர்வைத்துக்கொண்டார்.

உண்மையில் தமிழ் அடிப்படைவாதம் அன்று கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. அது இலக்கணவாதம் பேசி அத்தனை நவீன இலக்கியங்களையும் நிராகரித்தது. பழமைப்பெருமை பேசி புதியன புகாதவாறு பார்த்துக்கொண்டது. ‘தமிழில் இல்லாதது இல்லை’ என்ற நிலைபாடு எல்லாவகையான புதிய திறப்புகளுக்கும் தடையாக அமைந்திருந்தது. கல்விக்கூடங்களில் தமிழ்ப்பழமைவாதிகள் இருந்து நவீன இலக்கியம் உள்ளே நுழையாதபடி பார்த்துக்கொண்டனர்.பழமையை புகழ்வதற்குப் பதிலாக பகுப்பு செய்து ஆராய்வதேகூட பிழை என எண்ணும் மடமையும் கொண்டிருந்தது. சுராவின் கட்டுரையில் சொல்வதுபோல ‘தமிழில் மிகமிகமிகச் சிறந்ததாக அல்லாமல் ஏதாவது கவிதை உண்டா?”என்ற நையாண்டி நவீன இலக்கியச்சூழலில் நிலவியது

ஆனால் நான் தனித்தமிழியக்கத்தை, தமிழ்ப்பழமைவாதத்தை, சொல்லப்போனால் தமிழ் அடிப்படைவாதத்தையேகூட தொடக்கம் முதலே ஆதரித்தேன். எனக்கு முறையான பழந்தமிழ்க்கல்வி இருந்தது ஒரு காரணம். ஆனால் அதைவிட தமிழ்போன்ற தொன்மையான மொழிச்சூழலில் அடிப்படைவாதம் இல்லையென்றால் அறிவும், நூல்களும் பேணப்படாமல் அழியும் என நினைத்தேன். தமிழ்ப்பற்று இல்லையேல் தமிழ் தன் தனியடையாளம் கெட்டு உருவழியும் என நம்பினேன். தமிழ்போன்ற தொன்மையான மொழியில் பெரும்பணிகள் நிகழவேண்டும் என்றால் மூர்க்கமான பற்று, வாழ்நாளையே கொடுக்கும் வெறி தேவை என்று நினைத்தேன். இன்றும் என் நிலைபாடு அதுவே.

வெறுமே தமிழ்வெறியை கக்கிக்கொண்டிருப்பவர்கள், எந்த பணியும் செய்யாதவர்கள் எண்ணிக்கையில் மிகுதிதான். அவர்களால் பயனில்லைதான். ஆனால் அந்த வேகம் இல்லாவிட்டால் தமிழ் வாழமுடியாது என்பதும் உண்மை. நவீன இலக்கியத்தின் தரப்புதான், ஆனால் எனக்கு மறுபக்கமாக வலுவான மொழிப்பழமைவாதம், அதன் பிடிவாதம் இருக்கவேண்டும் என நினைத்தேன், இன்றும் நினைக்கிறேன். இப்போதுகூட மொழிப்பழமைவாதிகளை எப்போதுமே ஏற்கும் ஒரு நிலைபாடு என்னிடமிருப்பதை நண்பர்கள் கண்டிருக்கலாம்.

அன்றுமுதல் தமிழியக்கத் தரப்புடன் நான் உரையாடிக்கொண்டே இருந்தேன். தனித்தமிழ் இதழ்கள் அன்று நிறைய வந்தன. அவற்றில் நிறைய எழுதினேன். என் மொழியிலும் கூடுமானவரை அயல்மொழி களைந்து தமிழ்ச்சொற்களை கையாண்டேன். தேவையென்றால் புதிய சொற்களை உருவாக்கிக்கொண்டேன். நான் மீட்டுக் கொண்டுவந்த, உருவாக்கிய சொற்களால் தமிழ் இலக்கியச் சூழல் உரையாடுவதை பின்பு கண்டேன். தமிழ் நவீன எழுத்தாளர்களில் முற்றிலும் தனித்தமிழில் கொற்றவை, வெண்முரசு போன்ற பெருநூல்களை நான் ஒருவனே எழுதியிருக்கிறேன்

இதுவே மதம் சார்ந்தும் என் நிலைபாடு. நிலைச்சக்தி அப்படித்தான் இருக்கும். அங்கே அது இருப்பதனால் ஒன்றும் ஆவதில்லை. அதைக்கொண்டு நான் மதத்தை அளவிடவில்லை. அந்த நிலைச்சக்தி ஒரு எதிர்விசையாகவே உள்ளது. செயல்சக்தியே இன்று மேலோங்கியிருக்கிறது.

இந்த தரப்பையே கேளுங்கள். இன்று இவர்கள் எவரைநோக்கிப் பேசுகிறார்களோ அந்த பிராமணசமூகம் இவர்கள் பேசுவதையா பின்பற்றுகிறது? அது பெண்களை பூட்டிவைக்கிறதா? விதவைகளை வாழாமல் தடுக்கிறதா? கலப்புமணங்களையே அது இயல்பாக ஏற்றுக்கொண்டு ஒரு தலைமுறை கடந்துவிட்டது.

இந்துமதத்தில் இந்த ஆசாரவாதிகள்தான் வழிகாட்டிகளா? இன்று இந்துமதம் வேதங்களை மொழியாக்கம் செய்து எல்லா மொழிகளிலும் பரப்பும் மாபெரும் அமைப்புக்களை கொண்டிருக்கிறது. இங்கே வேதங்களை மொழியாக்கம் செய்து மூலத்துடன் அச்சில்கொண்டுவந்தவர் ஜம்புநாதன் என்னும் அந்தணர்தான். இன்று ஊர் ஊராக சம்ஸ்கிருதப் பள்ளிகள் நடத்துகிறார்கள். சம்ஸ்கிருத திணிப்பு நடக்கிறது என்று நீங்களே இன்னொரு பக்கம் கூவுகிறீர்கள் இல்லையா?

இது ஒரு குரல், இருந்துகொண்டே இருக்கக்கூடிய ஒரு பிடிவாதம், அவ்வளவுதான். இந்த மதிப்பீடுகள் எங்கே இந்துமதத்தை கட்டுப்படுத்துகின்றன? உண்மையில் அது வலுவாக இல்லை என்பதே பலசமயம் என் மனக்குறை. இப்படி சிறுவட்டங்களுக்குள் தங்களுக்குள் முணுமுணுக்கிறார்கள். ஆனால் ஆலயவழிபாட்டில் ஆகமநெறிகள் சிதைக்கப்படுகின்றன. அங்கே போய் மாற்றங்கள், திரிபுகளுக்கு எதிராக இவர்கள் நின்றிருக்கவேண்டாமா? மாறக்கூடாதவை என நம்பும் விஷயங்களுக்காக இவர்கள் குரல்கொடுத்திருக்கவேண்டாமா?

வரலாறெங்கிலும் நிலைச்சக்தி செயல்சக்தி இரண்டும் மாறிமாறி ஓங்கியிருப்பதை காணலாம். கிபி ஐந்தாம் நூற்றாண்டுமுதல் மூன்று நூற்றாண்டுக்காலம் இந்துமதம் இந்தியநிலத்தின் வழிபாட்டுமுறைகளை எல்லாம் தொகுத்துக்கொண்டு பேரமைப்பாக எழுந்தபோது நிலைச்சக்திகளாகிய இவர்கள் மையமாக ஒலித்தனர். மையத்தொகுப்புக்கான இழுவிசையாக இருந்தனர்.

பின்னர் பக்திக்காலத்தில் இவர்களுக்கு எதிரான செயல்சக்தி மேலோங்கியது. பக்திகாலகட்ட கதைகளையே பாருங்கள், வேதபண்டிதர் அல்லது ஆசாரசீலர் அடையமுடியாத இறையருளை அவை ஏதுமற்ற வெறும் பக்தன், கீழ்க்குலத்தான் அடைந்ததைத்தான் அக்கதைகள் பேசும். சூத்திரசாதிகளின் [சிரமண ஜாதிகளின்] எழுச்சியே பக்தி இயக்கம். அதன் நாயகர்கள் அனைவரும் ஆசாரவாதத்திற்கு எதிரானவர்கள். வெவ்வேறு குலங்களை சார்ந்தவர்கள்.

இந்து மதம் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளான பன்னிரண்டு முதல் பதினெட்டு வரையிலான காலகட்டத்தில் இந்த நிலைச்சக்தியின் தரப்பு மீண்டும் ஓங்கியிருந்தது. அது தன்னை தக்கவைப்பதற்கான போர். மரபு அழியாமல் காக்கவேண்டிய சமர். அதை நடத்தவேண்டியவர்கள் இவர்கள். அதை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினர்.

பதினெட்டாம்நூற்றாண்டின் இறுதியில் இந்துமதச்சீர்திருத்த அலையாக செயல்சக்தி மேலெழுந்தது. இன்றுவரை அதுவே தொடர்கிறது. இந்துச் சீர்திருத்த அலை பல படிகள் கொண்டது. இந்துமதத்தை ஐரோப்பிய தாராளவாதச் சிந்தனைகளுடன் இணைத்து நவீனப்படுத்தும் ஒரு போக்கு [ராஜா ராம்மோகன் ராய் உதாரணம்] இந்துமதத்தின் அறிவார்ந்த மையத்தை மட்டுமே முன்வைக்கும் போக்கு [சுவாமி விவேகானந்தர் உதாரணம்] என இரு போக்குகள் ஆரம்பகாலத்தில் உருவாயின

அடுத்தபடியாக இந்துமதத்தில் இருந்து மெய்யியலை மட்டுமே எடுத்துக்கொண்டு மதஅடையாளங்களை கடந்து உலகளாவ முன்வைக்கும் போக்கு உருவாகியது. ஜித்து கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ முதல் இன்று ஜக்கி வாசுதேவ் வரை உதாரணம். ஆசாரவாதிகள் இந்த மூன்று மரபையுமே எதிர்ப்பார்கள். ஆனால் இது இப்படி நிகழ்கிறது என்பதே வரலாறு.

நான் இந்துமதத்தின் மெய்யியல்சாரம்சமே முதன்மையானது என நம்புபவன். ஞானமார்க்கத்தை தெரிவுசெய்தவன். வேதாந்தியான நாராயணகுருவின் வழிவந்தவன். இந்த செயல்சக்தியே இந்துமதத்தின் இன்றைய தேவை என நினைப்பவன். ஆனால் நிலைச்சகதி இருப்பதை கண்டு வெறுப்படையவில்லை

இரண்டாவதாக இந்த காணொளிகளில் உள்ள சாதியச் சூழ்ச்சிகளுக்கு வருகிறேன். மேலே காட்டிய காணொளிகளில் பேசுவதுபோலவே பேசும் தாத்தா பாட்டி அப்பா சித்தப்பாக்கள் பிராமணரல்லாதவர் இல்லங்களில் இல்லையா? அவர்கள்தானே நமது வீடுகள் தோறும் இருந்துகொண்டிருக்கிறார்கள்?

நான் ஈரோடு கோவை பகுதிகளில் பயணம்செய்கையில் ஒவ்வொரு ஊரிலும் இரட்டைக்குவளை முறை இருப்பதை பார்க்கிறேன். கண்ணாடிக்கோப்பையில் டீ கிடைக்காது. சிலர் குடித்துக்கொண்டிருப்பார்கள். கேட்டால் ‘அது தெரிஞ்சவங்களுக்கு’ என பதில்வரும். கோவையில் ஒரு நண்பர் நேற்று பேசும்போது அவர் கோவையின் புறநகர் டீக்கடையில் இரட்டைக்குவளை முறை இருப்பதைக் கண்ட அதிர்ச்சியை பதிவுசெய்தார்

சாதி என்பது மதத்தால் உருவாக்கப்பட்டது அல்ல. அது தொன்மையான இனக்குழு [tribe]க்களிலிருந்து உருவாகி வந்தது. இனக்குழுக்கள் திரண்டு சாதிகளாயின. சாதிகளுக்குள் துணைச்சாதிகாளாக கோத்திரங்களாக கூட்டங்களாக இனக்குழு  அடையாளங்களும் நீடிக்கின்றன.

சாதிகளின் மேல்கீழ் அடுக்குகளும் மதத்தால் உருவாக்கப்பட்டவை அல்ல. நிலஉரிமை, அரசியல் ஆதிக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நீண்டகால போராட்டம் வழியாக உருவாகி வந்தது அந்த அடுக்கு. அது மாறிக்கொண்டும் இருந்தது. நிலமும் அரசுரிமையும்பெற்ற சாதிகள் மேலே சென்றதும் இழந்த சாதிகள் கீழே தள்ளப்பட்டதும் பத்தொன்பதாம்நூற்றாண்டு வரை நிகழ்ந்துகொண்டிருந்தது.

சாதிகளின் அடுக்குமுறையை பேரரசுகள் உறுதிசெய்தன. அவற்றின் ஆட்சிக்கு அந்த அடுக்குமுறை தேவை. பேரரசுகள் சாதிகளின் அடுக்குமுறையை நிலைபெறச்செய்ய மதங்களை பயன்படுத்திக்கொண்டன. மதங்களின் பணி அந்த அடுக்குமுறைக்கு புனிதத்தன்மையை கற்பிப்பது, அவற்றை இறையாணையாக காட்டுவது மட்டுமே. அதற்கு அப்பால் சாதி என்பது ஒரு வேர்த்தொடர்ச்சி, குழுஅடையாளம்.

ஆகவேதான் எந்தச் சாதியானாலும் சாதிமேல் பற்றுடன் இருக்கிறது. சாதியடையாளத்தை விட மறுக்கிறது. சாதியால் ஒடுக்கப்பட்ட சாதிகூட தன் சாதிமேன்மைகளை கண்டுபிடிக்கிறது. கூடவே இன்னொரு சாதியை தன்னைவிடக் கீழே வைக்க முயல்கிறது. சாதி அடுக்குபோலவே சாதிக்குள்ளும் அடுக்குகள் உள்ளன. நீங்கள் கவுண்டர். கவுண்டர்களில் எந்தக்கூட்டம் மேல் எந்தகூட்டம் கீழ் என்று உங்களுக்கே தெரியும்.

ஆக, சாதிமேட்டிமைவாதம் நம்மிடம் பலமடங்கு உள்ளது. சாதி ஒடுக்குமுறையை நேரடியாகச் செய்பவர்கள் நாம். ஆனால் தந்திரமாக சாதியை கற்பித்தவன் பிராமணன், ஆகவே சாதி ஒடுக்குமுறைக்கு பிராமணனே காரணம் என கைகாட்டிவிட்டுத் தப்பித்துக்கொள்கிறோம். இது நம் ஆத்மாவை நாமே ஜேபடி செய்துகொள்வது. இதை திரும்பத்திரும்பச் சுட்டிக்காட்டுகிறேன்

தமிழ்நாட்டில் உண்மையில் சாதிப்பழமைவாதம், ஒடுக்குமுறை ஒழிய வேண்டுமென்றால் இதுபோல பிராமணர்களை கண்டுபிடித்து பலியாடுகளாக ஆக்குவதை கைவிட்டு நாம் நம்மை விமர்சிக்க பழகவேண்டும். அதற்கு நாம் நம் பழமைவாதத்தையும் மேட்டிமைவாதத்தையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.

அந்தக் கட்டுரையின் தலைப்பே பழியை திசைதிருப்பி தன்னை ஒளித்துக்கொள்ளும் சூழ்ச்சி என நான் சொல்வேன். நேர்மையாக நம்மை நாம் முன்வைப்போம் என்று அறைகூவுவேன்.

இன்றைய தேவை பிராமணவாதம் இல்லாத இந்துமதம் அல்ல. செயல்சக்தி ஓங்கிய இந்துமதம். இந்துமதத்தின் மெய்யியலை, ஞானத்தை முன்வைக்கும் இந்துமதம். ஆசாரவாதம் அடங்கி செயலற்றிருக்கும் இந்துமதம். அது உருவாகி மேலோங்கி வருகிறது என்பதும் கண்கூடு.

ஆசாரவாதத்தில் இருந்து வெளிவரவேண்டியவர்கள் பிராமணர்கள் மட்டுமல்ல. அத்தனை இந்துக்களும்தான். பிராமணர்களை விட சாதிவெறி உச்சத்திலிருக்கும் கவுண்டர்,நாடார், வன்னியர், தேவர் போன்ற இடைநிலைச் சாதியினர் முதன்மையாக.

ஜெ

நான் இந்துவா? இந்துமதத்தைக் காப்பது… தீட்டு,சபரிமலை, மதம் சவரக்கத்திமுனையில் நடப்பது இந்துத்துவ முத்திரை கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா? நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும் இந்துமதம்,சம்ஸ்கிருதம்,பிராமணர் கலாச்சார இந்து மனு இன்று மனு இறுதியாக…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2021 10:35

ஜெயமோகன் : இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் -தொகைநூல்

யமுனா ராஜேந்திரன் இவ்வாறு அறிவித்திருக்கிறார்

‘ஜெயமோகன் : இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்’ நூலுக்குக் கட்டுரைகள் அனுப்பிய நண்பர்களுக்கும், நூலை எதிர்பார்த்து ஆவலுடன் விசாரித்த நண்பர்களுக்கும் நற்செய்தி. நூலைத் தொகுத்து முடித்துவிட்டேன். தோழர். டிராட்ஸ்க்கி மருதுவின் அட்டை வடிவமைப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. நூல் விரைவில் உங்கள் கைகளில் இருக்கும். 650 பக்கங்கள். இடதுசாரி இலக்கிய விமர்சன மரபில் இந்த நூல் ஒரு மைல்கல்லாக இருக்கும்.

அப்படித்தான் நான் நினைக்கிறேன். என்னைப்பற்றி இணையவெளியில், சிற்றிதழ்ச்சூழலில் எழுதப்பட்டவற்றில் ஒருபகுதி இப்படி தொகுக்கப்பட்டிருக்கலாம். வே.மு.பொதியவெற்பன், மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார், கௌதம சித்தார்த்தன், ஜமாலன்,இரா. மோகன்ராஜன், பா.பிரபாகரன்,ந.ரவீந்திரன்,ந.முத்துமோகன்,சுகுணா திவாகர், தமிழ்நதி,விலாசினி,ஆர்.பி.ராஜநாயஹம்,ராஜகோபால் சுப்ரமணியம், க.காமராசன், மகேஷ் ராமநாதன், யமுனா ராஜேந்திரன் ஆகியோர் எழுதியிருப்பதாகவும் என்சிபிஎச் வெளியிடவிருப்பதாகவும் தெரிகிறது.தொகுப்பும் முன்னுரையும் பா.பிரபாகரன்,யமுனா ராஜேந்திரன்

ஆனால் நூல் அறிவிப்பு வந்து நெடுநாட்களாகின்றது. வெளிவருவதற்கு பிரசுரகர்த்தருக்கு நிதிச்சிக்கல்கள் இருக்கலாம். முன்விலைத்திட்டம் வெளியிடுவார்கள் என்றால் நம் நண்பர்கள் நூறுபிரதிகள் வரை வாங்கி உதவலாம்

நண்பர்களுக்கு இந்நூலை சிபாரிசு செய்கிறேன். ஏமாற்றாது. இதைப்போல அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, ராஜசங்கர் விஸ்வநாதன், சுரேஷ் வெங்கடாத்ரி, திருப்பூர் தீக்குச்சி, ஒத்திசைவு ராமசாமி, சுந்தர ராஜசோழன் வகையறா குழுவும் ஒரு ஐநூறு பக்க நூலை கொண்டுவரவேண்டும். அவர்களுக்கும் நண்பர்கள் ஆதரவு கொடுக்கலாம். இலக்கியத்திற்கு இதெல்லாம் ஒருவகையில் முக்கியமானவைதான்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2021 10:31

இலக்கியம்,யானைகள்- கடிதம்

Elephant Terrace

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் அமெரிக்க பயணத்தின் போது உங்களை இருமுறை சந்தித்திருக்கிறேன் என்று பலரிடம் பெருமையாகச் சொல்லித்திரியும் வாசகி நான்.

முதல் முறை (2015) ராலேயில் ராஜன் அவர்களின் வீட்டில் பார்த்த போது தங்களின் அறம், இன்றைய காந்தி, வெண்முரசு போன்ற படைப்புகளைப் பற்றி எனது கணவர் சிலாகித்து என்னிடம் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை அன்றி வேறேதும் நான் அறிந்திருக்கவில்லை. சொல்லப்போனால் அச்சமயத்தில் ஓரிரு சிறுகதைகள் மற்றும் வார இதழ்களைத் தவிர வேறெந்த வாசிப்பனுபவமும் என்னிடத்தில் இல்லை.

ஆனால் 2019-ல் சார்லட், வட கரோலினாவில் எங்கள் வீட்டில் காலை உணவருந்த தாங்கள் வரும் போது இன்றைய காந்தி, காடு, ரப்பர், பனிமனிதன் முக்கியமாக வெண்முரசு நூல்களை வாசிக்கத் தொடங்கி விட்டிருந்தேன். தங்களை சந்தித்ததை எண்ணி மகிழ்ந்தேன்.

தங்களின் கதைகளைப் வாசிக்கையில் இதற்கு என்ன அர்த்தம்? , எதை இங்கு மறைமுகமாக குறிப்பிடுகிறீர்கள்? என்றெல்லாம் நான் பெரிதாக யோசிப்பது/ Interpret செய்தது  கிடையாது. படித்து முடித்து மூடி வைத்து விடுவேன் ஆனால் சில கதாபாத்திரங்களுக்கு ஒரு முகத்தை கொடுத்து விடுவேன். பின் அக்கதைகளை  என் கணவரிடமும் குழந்தைகளுடனும் பகிர்ந்து கொள்ளும் போது அதன் வேறு கோணத்தைக் கண்டு வியப்படைவேன். சில சமயம் நண்பர்களிடம் பொதுவாகப் பேசிக் கொண்டிருக்கும் போதும் திரைப்படங்களைப் பார்க்கும் போதும் தங்கள் கதைகளும் ஒரு சில குறிப்பிட்ட வரிகளும் என் நினைவுக்கு வருவதுண்டு.

சமீபத்தில் டிஸ்னி தயாரிப்பில் வெளிவந்திருக்கும் “Mulan” திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அதில் போருக்குத் தயாராகும் வீரர்களையும் அவர்களின் கூடாரங்களையும்  அக்கணத்தை லேசாக்க அவர்கள் பேசும் அர்த்தமில்லா கேலிப் பேச்சுக்களையும், போர் தொடங்கியதும் படைத்தலைவன் எவ்வாறு படைகளுக்கு தாக்குதல் ஆணைகளைப் பிறப்பிக்கிறான் என்றும் காட்டியிருப்பார்கள். எனக்கு தங்களின் திசைதேர் வெள்ளம் கண்ணின் முன் விரிந்தது. என் கணவரும் வாசித்திருப்பதால் என் எண்ணத்தை அவரிடம் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருந்தது.

மிக சமீபத்தில் தான் தங்களின் நூறு கதைகளை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். நண்பர் ஒருவர் அமெரிக்க கடற்படையில் கொடுக்கப்படும் கடினமான பயிற்சியைப் பற்றி ” எவ்வளவு Tiredness இருக்குமுன்னா ஓடிக்கிட்டே இருக்கும் போது ஒருத்தன் கீழே விழுந்து அப்பிடியே தூங்கிருவான்” என்று கூற “ராஜன்” சிறுகதையின் பூதத்தான் நாயர் என் கண் முன்னே வந்து நின்றான்.

வெண்முரசு நூலில் நீங்கள் அனைத்து உயிரினங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள் ஆனால் யானைகளைப் பற்றி நீங்கள் பிற நூல்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். ராஜன் கதையைப் படிக்கும் போது எனக்கு “யானை டாக்டர்” மற்றும் வெண்முரசு நூல்களில் நீங்கள் குறிப்பிடும் அங்காரகன், சுபகம், சுப்ரதீகம், ஐராவதம் போன்ற பெயர்கள் என் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தன. யானைகளைப் பற்றிய டாக்குமெண்டரிகளைப் பார்க்கும் பொழுதும் யானைகளின் குணாதிசயங்களைப் பற்றி நீங்கள் எழுதியிருக்கும் வரிகளை நினைத்துக் கொள்வேன்.

இவ்வளவு சிறப்பாக யானைகளைப் பற்றி எப்பிடி எழுதுகிறீர்கள்? யானைகளை அருகிருந்து நோக்கிய/பழகிய அனுபவம் உண்டோ? இதைப் பற்றி ஏற்கனவே தாங்கள் வாசகர்களிடம் பகிர்ந்து கொண்ட விவரங்கள் இருந்தால் அப்பக்கங்களை எனக்கு  சுட்டிக் காட்டுங்களேன்.

– நிர்மலா கணேஷ்

 

அன்புள்ள நிர்மலா,

நீங்கள் வாசிக்க ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி. வாசிப்பு பலபடிகளாலானது. முதலில் நாம் கதையையும், செய்திகளையும்தான் படிக்கிறோம்.மெல்ல மெல்ல அக்கதை உணர்த்துவதென்ன, அச்செய்திகள் மேலும் செலுத்துவது எங்கு என்று ஆராய ஆரம்பிக்கிறோம். ஒரு கட்டத்தில் கதையை விட அக்கதையை ஒட்டி நாம் செல்லும் பயணமே முக்கியமாக ஆகிறது. நாம் இலக்கியவாசகர்களாக ஆவது அப்படித்தான். தொடர்ச்சியான வாசிப்பும், வாசிப்பு குறித்த உரையாடல்களும் அந்த விரிவை உருவாக்குவன.

நான் யானைகள் சூழ்ந்த திருவரம்பு – திற்பரப்பு பகுதிகளில் இளமையை கழித்தவன். பல யானைகளை தனிப்பட்ட முறையில் அறிந்தவன். இப்போதுகூட அப்பகுதிகளில் சாதாரணமாக யானைகளை பார்க்கலாம் – வளர்ப்புயானைகளை. அடர்காடுகளில் காட்டுயானைகள் உண்டு. என் அப்பாவும் ஒரு ’யானைக்கோட்டி’தான். மலையாளிகளுக்கு பொதுவாக மூன்றுவகை ‘பிராந்துகள்’ [பைத்தியங்கள்] உண்டு என்பார்கள். யானைப்பிராந்து, களிப்பிராந்து [கதகளிப் பிராந்து], சத்யப்பிராந்து [விருந்துச்சாப்பாடு பைத்தியம்]. என் அப்பா மூன்று பைத்தியங்களால் ஆனவர். எனக்கும் கொஞ்சம் தந்திருக்கிறார்

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2021 10:31

சிதையும் கனவுகள்

ஓவியம்: ஷண்முகவேல்

மூன்று தொடர்தோல்விகளால் ஆன பூரிசிரவஸைப்பார்க்கும்போது பெரிய வருத்தம் தோன்றும் கணமே, தோல்விகளை பழகிக்கொள்ளும் அவனின் அகவல்லமையும் அதிசயக்கவைக்கிறது. இதுவும் வாழ்க்கைதான் என்று பாடம் நடத்துக்கின்றது. கண்ணீரும் உவகையும் கலந்து செய்யப்பட்ட சிற்றம்.

சிதையும் கனவுகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2021 10:30

பொன்மகள் வந்தாள்

நண்பர் ஒருவர் இந்த இணைப்பை அனுப்பியிருந்தார்

https://m.facebook.com/story.php?story_fbid=844251189479807&id=100016848009690

இந்தப்படம் ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 73 அத்தியாயத்துக்கு திரௌபதியை ஷண்முகவேல் வரைந்தது. அதை லட்சுமியின் வடிவமாக கிளப்பி விட்டு தைப்பொங்கலில் [தை புத்தாண்டில்] ஒரு கல்ட் ஆக மாறிவிட்டது

பின்னூட்டங்களில் அது என்ன படம் என்று சொல்லப்பட்ட பின்னரும் மக்கள் பொருட்படுத்துவதாக இல்லை. ஏன் என்று யோசித்தேன், ஒன்றுதான் தெரிந்தது. கருப்புலட்சுமி!

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2021 06:44

January 15, 2021

அகமறியும் ஒளி

பார்வை என்பது என்ன? ஒளிவழியாக அகப்புலன் தொடர்புறுதல். அவ்வளவுதான். அது இல்லையேல் ஒலி. அது இல்லையேல் தொடுகை. மானுட அறிதல் என்பது புலன்களை நம்பி இல்லை. அது உள்ளிருந்து அனைத்தையும் அறிந்துகொண்டிருக்கும் ஒன்றின் கூர்மையையும், நிதானத்தையும் நம்பியே உள்ளது. பார்வையிழந்த ஒருவருடைய உலகம் நுண்ணிய தகவல்களால் மட்டுமே நாமறிவதில் இருந்து வேறுபட்டது.

பிறவியிலேயே பார்வையிழந்த ஒருவர் ஒருபோதும் இந்த வேறுபாட்டை அறிய முடியாது. ஆனால் பார்வை இருந்து பின் அதை இழந்து பலவருடங்கள் வாழ்ந்து மீண்டும் பார்வையை அடைந்த ஒருவர் ஒளியில்லா உலகையும், ஒளியுலகையும் ஒருங்கே அறிந்தவர். இங்கிருந்து அங்கே சென்றால் அவருக்கு என்ன ஆகிறது? கொஞ்ச நாளுக்கு மட்டும் ஓர் எளிய தடுமாற்றம், அவ்வளவுதான். உள்ளே இருப்பவர் ஒலியை நோக்கி திரும்பிக் கொள்கிறார். அவர் மீண்டும் ஒளிக்கு வரும்போது? அதே போன்ற ஒரு திசை திருப்பம். அத்துடன் சரி.

அந்த அனுபவத்தின் நுட்பங்களுக்குள் செல்லும் நூல் தேனி சீருடையான் எழுதிய ‘நிறங்களின் உலகம்’. இது ஒரு சுய சரிதை நாவல். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குறிப்பிடத் தக்க எழுத்தாளர்களில் ஒருவரான தேனி சீருடையான் ’கடை’ என்ற நாவல் மூலம் கவனிக்கப் பட்டவர். உழைப்பாளராக வாழ்ந்து எழுதுபவர் தேனி சீருடையான். தேனி பேருந்து நிலையம் முன்பு தள்ளுவண்டியில் பழங்கள் விற்றுக் கொண்டிருந்தார். இப்போது கடை வைத்திருக்கிறார்.

தேனியில் ஒரு சிறு வணிக குடும்பத்தில் பிறந்தவர் பாண்டி. அப்பா ஒரு வறுகடலை விற்பனை நிலயத்தில் வேலை பார்க்கிறார். ஐம்பதுகளில் தமிழகம் கடுமையான வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. நடுத்தரக் குடும்பங்களே உணவுக்கும், உடைக்கும் அல்லாடிய காலகட்டத்தில் பொரிகடலை வறுத்து கூலியாக கொஞ்சம் சில்லறை மட்டுமே ஈட்டும் குடும்பத்தின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. இந்த நாவலின் ஆரம்ப கட்ட அத்தியாயங்களில் வரும் உக்கிரமான வறுமைச் சித்தரிப்பு சமீபத்தில் எந்தத் தமிழ் நாவலிலும் வந்ததில்லை.

பெரும்பாலான நாட்களில் கம்பு கேழ்வரகு கூழ்தான். என்றோ ஒருநாள் அரிசிச் சமையல். அன்றைக்கு எங்களுக்கு இரண்டு கொண்டாட்டம் என்கிறான் பாண்டி. அரிசி கொதித்ததும் மணக்க மணக்க கஞ்சித் தண்ணி உப்பு போட்டு குடிப்பது. அதன்பின் சோற்றில் புளிக் கரைசல் விட்டு சாப்பிடுவது. அரிசிச் சோற்றுக்கு எந்த தொடு கறியும் தேவையில்லை. சும்மாவே சாப்பிட்டு விடலாம். அரிசி கொதிக்கும் மணம் எழும்போது தெருவே பொறாமையாக பார்ப்பதுபோல பெருமிதமாக இருக்கும் என்கிறான்.

சாப்பாடு மட்டுமே பிரச்சினையாக இருக்கிறது. வயிறு நிறைய எதையாவது  உண்பது மட்டுமே பெரும் கனவு. இந்நூலின் வறுமைச் சித்திரங்களில் உள்ள இன்னொரு குறிப்பிடத் தக்க பிரச்சினை இடம் தொடர்பானது. புனைகதையில் எப்போதும் வந்திராத இச்சிக்கல் உண்மையான வாழ்வனுபவம் மூலம் மட்டுமே பதிவாவது. எல்லா ஏழைப் பிள்ளைகளுக்கும் பாலுறவைப் பற்றி தெரிந்திருக்கிறது. மிகச்சிறிய ஓரறை வீடுகளில் சேர்ந்து தூங்கும்போது அவர்கள் அனைவருமே அப்பாவும்,  அம்மாவும் உடலுறவு கொள்வதைப் பார்த்திருக்கிறார்கள். நாளெல்லாம் இல்லாமையின்  எரிச்சலில் மோதிக் கொண்டே இருக்கும் பாண்டியின் அப்பாவும், அம்மாவும் இரவில் உறவு கொள்வது அவனுக்கு பிடித்திருக்கிறது.

இலவசக் கல்வி இருப்பதனால் ஆரம்பப் பள்ளிக்குச் செல்கிறான் பாண்டி. ஆனால் திடீரென்று கொஞ்சம், கொஞ்சமாக கண் தெரியாமலாகிறது. ஆரம்பத்தில் எவருக்குமே அது புரியவில்லை. பள்ளியில் தான் எழுதுவதை தப்பாக கிறுக்கி வைத்ததற்காக ஆசிரியர் அடிக்கிறார். சாலையில் எங்கே சென்றாலும் பல இடங்களில் முட்டிக் கொண்டே இருக்கிறான்.

எண்ணை வாங்கி விட்டு திரும்பும்போது இட்லி விற்கும் பக்கத்து வீட்டுக்காரி பொன்னம்மக்கா மீது மோதி இட்டிலி மாவு சிந்தி விடுகிறது. அவள் மூர்க்கமாக அடிக்கிறாள். அந்த அடியை வாங்கிக் கொண்டு கீழே சிதறிய எண்ணைப் புட்டியை பொறுக்குவதிலேயே குறியாக இருக்கிறான் அவன். கதறியபடி வீடு திரும்புகிறான். பக்கத்து வீட்டுக்காரி வந்து நஷ்ட ஈடுக்காக சத்தம் போடும் போது அம்மாவும் அடிக்கிறாள். அப்போதுதான் தனக்கு சுத்தமாகக் கண்ணே தெரியவில்லை என்பதை பாண்டி சொல்கிறான்.

அம்மா அதிர்ச்சி அடைந்து போகிறாள். பொன்னம்மக்கா  கூட கழிவிரக்கத்துடன் ஐயோ என் புள்ளைய அடிச்சிட்டேனே என்று கட்டிக் கொள்கிறாள். மகனை மார்போடணைத்து அம்மா அழுகிறாள். உள்ளூர்  வைத்தியரிடம் காட்டி சில மருந்துகள் விட்டுப் பார்க்கிறார்கள். அதற்குமேல் சிகிழ்ச்சை செய்ய வசதியுமில்லை, நேரமும் இல்லை. பூசாரியிடம் கொண்டு சென்று காட்டி குறி கேட்கிறார்கள். நாலு வார விரதம் சொல்கிறார். நாலு வாரமாகியும் கண் திறக்கவில்லை. உன் பக்கத்து வீட்டுக்காரி சுத்தமில்லாம குறுக்கே வந்து சாமியை தடுத்துட்டா என்கிறார் பூசாரி.

பாண்டியின் படிப்பு நிற்கிறது. வீட்டிலேயே கிடைப்பதைத் தின்று விட்டு உட்கார்ந்திருக்கிறான். உடன் படித்த மாணவர்களைச் சந்திக்கும்போது என்ன சொல்லித் தந்தார்கள் என்று  ஏக்கத்துடன் கேட்டுக் கொள்கிறான். அம்மா, அப்பாவிடம் காசு வாங்கி வருவதற்கு அனுப்புகிறாள். திரும்பும் வழியில் கால்தடுக்கி சில்லறைகள் சிதறி விழுகின்றன. தரையெல்லாம் துழாவி சில்லறைகளைப் பொறுக்குகிறான். ஒரு காசு தவறி விடுகிறது. ‘அந்த மனுஷன் தீயில வெந்து சம்பாரிச்சா நீ தொலைச்சுட்டா வாரே’ என்று அடி விழுகிறது. கண் தெரியாமைக்காக ஒரு சிறு சலுகையைக் கூடக் கொடுக்க முடியாத வறுமை.

வறுமையின் சித்திரங்கள் இந்த நூலின் பக்கங்களை அதிரச் செய்கின்றன. வறுமை தாங்க முடியாமல் மனிதர்கள் மூர்க்கம் கொண்டு கூண்டில் அடைபட்ட பசித்த மிருகங்கள் போல ஒருவரை ஒருவர் கடித்துக் கிழித்துக் கொள்கிறார்கள். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தீராத சண்டை. வெறிகொண்ட அப்பா நல்லுசெட்டி விறகு கம்பால் அம்மாவை கொலை வெறியுடன் அடித்து போடுகிறார். வறுமை தாளாமல் அம்மா தன் அண்ணாவிடம் உதவி கேட்க அவரது ஊருக்குச் செல்கிறாள். எதிரே கிழிசலாடையுடன் வரும் அண்ணி அவள் ஏன் வந்தாள் என்பதை ஊகித்துக் கொண்டு துடைப்பத்தால் அடித்து துரத்துகிறாள்.

அப்பாவின் தங்கையின் வீட்டு விசேஷத்துக்கு எதுவுமே கொடுப்பதற்கில்லாமல் வீட்டில் கழனித் தண்ணி வைத்திருக்கும் பழைய பாத்திரத்தை நன்றாக துலக்கி மாமன் சீராக கொண்டு சென்று கொடுத்து விட்டு வந்து விடுகிறார்கள். அவள் இவர்கள் வீட்டு விசேஷத்துக்கு மொய் எழுதியவள். பழைய பாத்திரத்தை கண்டு வெறி கொண்ட அத்தை அதைக் கொண்டு வந்து இவர்கள் வீட்டு முன்னால் சாணியைக் கரைத்து வைத்து வசை பாடி விட்டுச் செல்கிறாள்.

சுமை நிறைந்த வாழ்க்கையின் ஒருகட்டத்தில் நல்லுசெட்டி காணாமல் போகிறார். அவருக்கு அது ஓர் இளைப்பாறல். ஆனால் கண் தெரியாத குழந்தைகளுடன் அம்மா நடுத்தெருவில் நிற்கிறாள்.   பசியுடன் போராடும்போது பக்க்கத்து வீட்டு வள்ளியக்கா வந்து இருட்டோடு இருட்டாக ஏதோ ரகசியம் பேசுகிறாள் ”அய்யய்யோ எனக்கு வேணாந்தாயீ..அடுத்தவனுக்கு முந்தாணி விரிச்சு வகுறு வளக்குறத விட பட்டினி கெடந்து செத்துப் போறது மேலு” என்கிறாள் அம்மா.

அந்த நிலையில்தான் தூரத்து உறவான சுப்பு மாமா வருகிறார். அரசாங்கத்தில் கண் தெரியாத குழந்தைகளை எடுத்து படிக்க வைக்க ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது என்று சொல்கிறார். அம்மா தொலைதூரமான திருச்சி வரை குழந்தையை தனியே அனுப்ப சம்மதிக்கவில்லை. சுப்பு மாமா பேசிப்பேசி சம்மதிக்கவைக்கிறார்.பாண்டியின் வாழ்க்கையில் ஓரு புதிய ஏடு புரள்கிறது.

விழியிழந்தவர்களுக்கான அந்த விடுதியில் மெல்ல, மெல்ல சூழலுடன் பாண்டி இணைகிறான். அங்கே சுவையில்லாத உணவுதான் என்றாலும் வயிறு நிறைய சோறு கொடுக்கிறார்கள். ஊரில் அம்மாவும், தங்கையும் பட்டினி கிடப்பார்கள் என்பதுதான் பாண்டியை உள்ள்ளூரக் கண்ணீர் விட வைக்கிறது. கல்வி அறிமுகமாகிறது. பிரெய்லி எழுத்துக்களை வாசிக்கவும், எழுதவும் கற்றுக் கொள்கிறான். இலக்கியங்களில் அறிமுகம் ஏற்படுகிறது

பள்ளி இறுதிவரை விழியிழந்தவனாக பிரெய்லி முறைப்படி கற்று தேர்ச்சி அடைகிறான் பாண்டி. ஐநூறுக்கு நாநூற்று இருபத்தொரு மதிப்பெண். அக்காலத்தில் அது ஒரு சாதனை. மாநிலத்திலேயே பார்வையற்றவர்களில் அவன்தான் முதலிடம். பள்ளி முதல்வர்  அவனை கல்லூரியில் சேர்க்க ஆசைப் படுகிறார். ஆனால் பணமில்லை. ஆசிரியர் பயிற்சிக்குச் சேர அன்று சட்ட அனுமதி இல்லை

மனம் உடைந்த பாண்டி தற்கொலை செய்து கொண்டால் என்ன என்ற எண்ணத்தை அடைகிறான். ஆனால் மறுகணமே ஏன் சாகவேண்டும் என்ற வீராப்பு எழுகிறது. சாவதில் அர்த்தமே இல்லை, வாழ்க்கை கண் முன்னால் நிற்கிறது. நான் ஏன் சாகணும் என்ற கேள்வி நீலநிற சுவாலையாய் பிரக்ஞையில் எரிகிறது. ஒன்றுக்கும் முடியாவிட்டால்  அப்பா வறுக்கும் கடலையைத் தெருவில் கூவி விற்பது என்று முடிவெடுத்து தன்னம்பிக்கையுடன் எழும் பாண்டியில் நாவல் முழுமை கொள்கிறது

***

பாண்டியின் கதை ச.தமிழ்ச்செல்வன் தேனி சீருடையானை எடுத்த பேட்டி-உரையாடல் வழியாக மேலும் விரிகிறது. 1970 ஊர்திரும்பி தேனியில் இருக்கிறான் கருப்பையா. இலக்கிய ஆர்வமும் தமிழார்வமும் உருவாகி விட்டிருக்கின்றன.  அப்போது நாடார் பள்ளியில் இலவச கண்சிகிழ்ச்சை முகாம் நடக்கிறது என்று அறிவிப்பு சொல்லி ஒரு வண்டி செல்கிறது. அங்கே செல்கிறான். மிக எளிமையான ஓர் அறுவை சிகிழ்ச்சை மூலம் பார்வை திரும்பக் கிடைக்கிறது.

கருப்பையாவின் வாழ்க்கையின் உச்ச கட்ட அபத்தம் அங்கே  நிகழ்கிறது அவன் விழி தெரியாதவனாக இருந்திருந்தால் அவனுக்கு ஊனமுற்றோர் தகுதியில் அரசு வேலையோ, உதவியோ கிடைத்திருக்கும். ஆனால் அவன் பார்வையுள்ளவன். பார்வையற்றோர் பள்ளி அளித்த பள்ளிச் சான்றிதழை சாதாரண வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியாது என்று மறுத்து சென்னை பார்வையற்றோர் வேலை வாய்ப்பகத்துக்குப் போ என்கிறார்கள்.  அங்கே போனால் உனக்குத்தான் பார்வை இருக்கிறதே இங்கே பதிவு செய்ய மாட்டோம் என்கிறார்கள். அவனுடைய பதினொரு வருடக் கல்வி, மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எல்லாமே அரசு விதிகளின்படி பயனற்று போகின்றன

சான்றிதழ்களை தூக்கி வீசி விட்டு கருப்பையா தேனி பேருந்து நிலையத்தில் கடலை விற்கச் சென்றான். பேருந்து நிலயம் முன்னால் ஒரு குடையை குச்சியில் கட்டி வைத்து நட்டு அமர்ந்துகொண்டு பழங்கள் விற்கிறான்.   அந்தச் சூழலையும் தன்னுடைய நம்பிக்கை ஒன்றினாலேயே எதிர் கொள்கிறான் கருப்பையா. மெல்ல, மெல்ல குடும்பத்தில் பட்டினி மறைந்தது. சிறுவணிகனாக ஆரம்பித்து எழுத்தாளனாக எழுகிறான்.

கருப்பையாயின் வாழ்க்கையின் கடைசி அபத்தம் அவரது அம்மாவின் மரணம். அவரது அப்பாவுக்கு 1986ல் தாடையில் புற்றுநோய் கண்டது. மதுரை ஆஸ்பத்திரியில் அவரைச் சோதித்து விட்டு  ஆறுமாதமே தாங்குவார் என்று சொல்லி விட்டார்கள். அதைக்கேட்டு மனமுடைந்த அம்மா தற்கொலை செய்துகொள்கிறாள். ஆனால் அப்பாவுக்கு அறுவை சிகிழ்ச்சை மூலம் தாடையையே  எடுத்துவிட்டு அவர் 16 வருடம் நலமாக வாழ்ந்தார். வாழ்நாளெல்லாம் பசியால் பரிதவித்த அம்மா மகன் மூன்று வேளை சோறு போடும் நிலைக்கு வருவதைப் பார்க்காமல் இறந்தார்.

**

பாண்டியின் கண்ணில்லா உலகின் நுண்ணிய சித்திரங்களே இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகின்றன. அவன் கால்கள் தரையை வருடிக் கொண்டே இருக்கின்றன. செல்லுமிடம் முழுக்கக் கால்களால் தொட்டறியப் படுகிறது. கால்களின் தொடுகை நுட்பமாக ஒவ்வொரு இடத்தையும் அவனுக்குக் காட்டிக் கொடுக்கிறது. செவிகளால் அவன் உலகை கவனித்துக் கொண்டே இருக்கிறான்.

ஆர்வமூட்டும் இன்னொரு விஷயம் நிறங்களை பாண்டி உணரும் விதம். பாண்டியின் பார்வை நரம்புகளும் விழித் திரையும் நன்றாகவே இருக்கின்றன. விழி ஆடியில்தான் சிறிய சிக்கல். ஆகவே அவனால் வெளியே உள்ள ஒளியசைவுகளை உணர முடியும். அத்துடன் அவன் நினைவில் நிறங்கள் இருக்கின்றன. அவன் அகப்புலன் அறியும் அதிர்வுகளை அவன் நிறங்களாக உணர்கிறான். குரல்கள் மஞ்சளாகவும், பச்சையாகவும் ஒலிக்கின்றன. சிலநினைவுகள் சிவப்பாக இருக்கின்றன. பேருந்துகள் நீலமாக ஒலி விட்டுச் செல்கின்றன. ஏன் வாசனைக்குக் கூட சிலசமயம் நிறமிருக்கிறது.

விழியிழந்தோர் பள்ளியில் ஒருவரை ஒருவர் தொட்டும் வருடியும் குழந்தைகள் அறிகின்றன. பார்வையுள்ளவர்களின் உலகில் உடற்தீண்டல் விலக்கப் பட்டிருப்பதனால் இருக்கும் தடைகள் இங்கே இல்லை. மிக எளிதாக குழந்தைகள் காமம் நோக்கிச் செல்கின்றன. ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் மாறி மாறி பாலுறுப்புகளை வருடி மகிழ்கின்றன. அதனூடாக ஆழமான உடல் தொடர்பை அடைகின்றன. இன்னும் நுட்பமான ஒரு இடம் அக்குழந்தைகளுக்குச் சிரங்கு வருவது. அந்த நோயை அது வருடவும் சொறியவும் வாய்ப்பளிக்கிறது என்பதனாலேயே அவை ஆனந்தமாக அனுபவிக்கின்றனவா என்ற எண்ணம் ஏற்படுகிறது.

தேனி சீருடையானின் இந்நாவலை ஒரு கலைப்படைப்பு என்று சொல்லிவிட முடியாது.சீரான நுட்பமான தகவல்களை அளிப்பதில் ஆசிரியரின் நடை வெற்றிபெறவில்லை. உணர்ச்சி மீதூறும்போது செயற்கையான மேடைப்பேச்சு நடை வந்துவிடுகிறது. இந்நூலை இன்னமும் கச்சிதமாக சுருக்கியிருக்கலாம். குணச்சித்திரங்களை இன்னமும் தெளிவாக்கியிருக்கலாம். ஆனாலும் உண்மையின் உதிரவாசனையால் முக்கியமான ஒரு தமிழ்நூலாக உள்ளது இது.

[ நிறங்களின் உலகம், தேனி சீருடையான், அகரம் வெளியீடு மனை எண்1, நிர்மலா நகர் தஞ்சாவூர் 613007 ]

http://www.muthukamalam.com/muthukamalam_adaiyalam3.htm

[மறுபிரசுரம். முதற்பிரசுரம் ஜன் 5 -2010 ]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2021 10:35

தொ.பரமசிவம்,வைணவம்

அஞ்சலி- தொ.பரமசிவன்

திரு ஜெயமோகன்,

உங்கள் படைப்புக்களை பல காலமாக வாசித்துக் கொண்டிருக்கும்  ஒரு வாசகி.

தொ. பரமசிவம்  அவர்களைப்பற்றி அவர்கள் ஆய்வுகளைப்பற்றிய கலந்துரையாடலில் , தொ .பரமசிவத்தின் ஆய்வுகளை நீங்கள் புறந்தள்ளியதாக பேசப்பட்டது. நீங்கள் மிகவும் வைணவத்தோடு சார்ந்து  பேசுவதாக ஆட்சேபிக்கப்பட்டது.

இதைப்பற்றி உங்களுடைய கருத்து அறிய அவா.

சுஜா

 

அன்புள்ள சுஜா,

அறிவுச்சூழலில் நுழைபவர்கள் தங்களைச் சுற்றி எதையுமே தெரிந்துகொள்ளாமல், முழுக்கமுழுக்க உலகியலில் மூழ்கி வாழ்பவர்களைப் பார்க்கிறார்கள். அவர்கள் மேல் ஒருவகை விலக்கம் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த சாமானியர்கள் ஆபத்தற்றவர்கள். அவர்கள் தங்களுக்கு இயல்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

ஆபத்தானவர்கள் எதையுமே பொருட்படுத்தும்படி வாசிக்காமல் அங்கே இங்கே அரட்டைகளில் கேள்விப்பட்டவை, வம்புகள் ஆகியவற்றை மட்டுமே கொண்டு அபிப்பிராயங்களை உருவாக்கிக்கொண்டு எல்லா அறிவார்ந்த விவாதங்களிலும் வந்து அமரும் வெட்டிகள்தான். இவர்கள் முகநூல் வந்தபின் பெருகிவிட்டார்கள்.

இவர்களை தவிர்க்கவே முடியாது. ஏனென்றால் எந்த ஒரு தளத்திலும் நாம் கொஞ்சம் இலக்கிய ஆர்வம்கொண்டவர்கள் வரட்டுமே என நினைப்போம். இவர்கள் வந்துவிடுவார்கள். சரி, பேசட்டுமே என நினைப்போம். எல்லா நேரத்தையும் ஆக்ரமித்து இவர்களே பேசிக்கொண்டிருப்பார்கள்.

எங்கள் விஷ்ணுபுரம் அமைப்புக்களில் ஈவிரக்கமில்லாமல் இவர்களை தவிர்க்க முயல்கிறோம். ஏனென்றால் இந்த வெட்டிகள் உருவாக்கும் திசைதிரும்பலும் அழிவும் சாதாரணமானவை அல்ல. இவர்களுக்கு இலக்கியம்- அறிவியக்கம் சார்ந்து எதுவுமே தெரியாது. எந்த எழுத்தாளையும் , எந்த நூலையும் ஆழமாக படித்திருக்க மாட்டார்கள். எந்த இலக்கியவிவாதத்தையும் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால் அதற்கான ஆர்வமும் பொறுமையும் பயிற்சியும் இவர்களுக்கு இருக்காது

ஆனால் அறிவுஜீவி- இலக்கியவாசகன் – இலக்கியவாதி என்ற தோற்றங்கள் இவர்களுக்கு தேவையாகின்றன. ஆகவே அரைகுறைச்செய்திகளை கேட்டு சேமித்துக்கொள்கிறார்கள். வம்புகள் வழியாக கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்தக் கருத்துக்களை மிகுந்த தன்னம்பிக்கையுடன் எல்லா இடங்களிலும் வந்து சொல்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கையும் மிகுதி

இந்தக் கருத்துக்கள் பெரும்பாலும் மிக மேலோட்டமானவை. சம்பந்தமே அற்றவை. சமகால வம்புகளில் இருந்து இவை வருகின்றன என்பதனால் பெரும்பாலும் எதிர்மறைத்தன்மை கொண்டவை. அரசியல் கசப்பு, தனிப்பட்ட காழ்ப்புகளின் விளைவான திரிபுகள். பெரும்பாலும் கீழ்த்தரமான வெறுப்புப் பிரச்சாரங்கள்.

தொடக்ககால வாசகர்களிடம் இவை மிகப்பெரிய திரிபுகளை உருவாக்கி விடுகின்றன. ஆரம்பமே கசப்பும் கோணலும் கொண்டதாக ஆகிவிடுகிறது. வலுவான தொடர் வாசிப்பும் தனிப்பட்ட தேடலும் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்பும் இல்லாவிட்டால் அவர்கள் அந்த வளையத்திலிருந்து மீள்வது மிகக்கடினம்

உங்கள் குழுவில் நீங்கள் சொல்லும் அக்கருத்தைச் சொன்னவர் எவராயினும் கீழ்த்தர வம்பர், இலக்கியச் சூழலில் உலவும் போலி. அவரை முற்றாகவே விட்டு விலகுங்கள். அவருடன் எவ்வகையிலும் ஓர் விவாதத்தை, உரையாடலை நிகழ்த்த வேண்டியதில்லை. குழுமங்கள் அனைத்திலும் அவரை முழுமையாக தவிர்த்துவிடுங்கள். ஒரு வைரஸ் அவர்.

ஏனென்றால் அவர் சொல்வது ஒரு பிழைபுரிதலோ, ஒரு மாறான கோணமோ அல்ல. அடிப்படையே தெரியாத உளறல். அதை அத்தனை தன்னம்பிக்கையுடன் சொல்பவர் மிகப்பெரிய அழிவுச்சக்தி.

அந்த மண்டை இந்த ஒன்றாம் வாய்ப்பாட்டுப் புரிதலை எப்படி வந்தடைந்தது என்பது மிகத்தெளிவு.தொ.பரமசிவன் பெரியாரியர் என்று சொல்லப்படுபவர். அவர் அழகர்கோயில் என்ற நூலை எழுதியிருக்கிறார். ஆகவே அவர் அதில் பெருமாளை திட்டியிருப்பார். நான் இந்து மத ஆதரவாளன். விஷ்ணுபுரம் என்ற நாவலை எழுதியிருக்கிறேன். ஆகவே எனக்கு தொ.பரமசிவனை பிடிக்காது. நான் அவரை திட்டுகிறேன்– இவ்வளவுதான் இவர்களின் கணக்குவழக்குகள். எல்லா விவாதங்களிலும் இந்த ஆக மொண்ணையான ஒரு குரல் மேலெழுந்து வந்துவிடுகிறது.

தொ.பரமசிவனுக்கும் எனக்கும் நட்பும் கருத்துமுரண்பாடும் எப்போதும் இருந்துள்ளது. அதை தொடர்ச்சியாக நான் என் தளத்தில் பதிவுசெய்து வந்திருக்கிறேன். எனக்கு வைணவம் குறித்த ஆய்வுகளில் அவர் உதவியிருக்கிறார். வைணவத்தின் பரிவாரதேவதைகள், வைணவத்துடன் ஒட்டிய நாட்டார் தெய்வங்கள் பற்றிய ஆய்வில் அவர் ஒர் அறிஞர். தமிழ் வைணவத்தின்மேல் ஆழமான பற்றும் பயிற்சியும் கொண்டவர்.

அவருடைய  ‘அழகர்கோயில்’ நூல் அவருடைய முனைவர் ஆய்வேடு. அது தமிழுக்கு முக்கியமானது. அதை இணையவெளியில் தொடர்ச்சியாக முன்வைத்து வருபவன் நான். ஏனென்றால் இங்கே நம் நிலப்பிரபுத்துவ சமூகமே கோயில்களை மையமாக்கி கட்டமைக்கப்பட்டது. நில உரிமை, சாதிப்படிநிலை இரண்டுமே கோயில்களை அடிப்படையாகக் கொண்டவை.

தமிழக வரலாற்றில் கோயில்களை மையமாகக்கொண்டு நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் குறைவு. சுசீந்திரம் பேராலயம் பற்றி டாக்டர் கே.கே.பிள்ளையின் ஆய்வு அவ்வகையில் ஒரு முன்னோடி பெருமுயற்சி. சுசீந்திரம் கோயிலை ஒட்டிய நிலவுரிமை முறையை விரிவாக ஆராய்வது அது. அடுத்தபடியாக தொ.பரமசிவனின் அழகர்கோயில் குறித்த நூலும், அ.கா.பெருமாள் அவர்களின் திருவட்டாறு, பறக்கை கோயில்கள் பற்றிய நூல்களும் முக்கியமானவை.

இதுவே இருபதாண்டுகளாக நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் கருத்து. யோசித்துப்பாருங்கள், ஒருவன் இருபதாண்டுகளாக ஒரு கருத்தை முன்வைக்கிறான். அதை என்னவென்றே தெரியாமல், அதற்கு நேர் எதிராக எதையோ கருத்து என சில முட்டாள்கள் பேசுகிறார்கள், அதைச்சார்ந்து அறிமுகவாசகராகிய நீங்கள் கடிதம் எழுதுகிறீர்கள். நான் மறுபடியும் ஆரம்பத்திலிருந்தே விளக்கவேண்டியிருக்கிறது. இத்தகைய ஒரு அபத்தச்சூழல் வேறெங்காவது உண்டா?

தொ.பரமசிவனின் ஆய்வுகள் மேல் எனக்கு உள்ள விமர்சனங்களையும் எழுதியிருக்கிறேன். அவருடைய பிற்கால நூல்கள் உதிரிப் பண்பாட்டுச் செய்திகளால் ஆனவை. அவற்றில் நாட்டாரியல் ஆய்வுக்கான முறைமைகள் [மெதடாலஜி] கடைப்பிடிக்கப்படவில்லை. நாட்டாரியல் ஆய்வில் சில அடிப்படை முறைமைகள் உண்டு. தரவுகள் திரட்டப்பட்ட இடம், காலம்,அளித்த நபரின் அடையாளம் ஆகியவற்றுடன் மட்டுமே தரவுகள் பதிவுசெய்யப்படவேண்டும். அவை ஒன்றுக்கு மேற்பட்ட தரப்புகளிடம் ஒப்பிடப்படவேண்டும். முறையான ஆவணப்பதிவு தேவை. இவை எதுவும அவர் ஆய்வுகளில் இருப்பதில்லை.

நாட்டாரியல் சார்ந்து வரலாற்று- பண்பாட்டு முடிவுகளுக்கு வருவதற்கும் ஒரு ஆய்வுமுறைமை உண்டு. தரவுகள் பிற இலக்கியத்தரவுகளுடன், தொல்லியல் சான்றுகளுடன் முறையாக ஒப்பிடப்படவேண்டும்.ஒட்டுமொத்த பெருஞ்சித்திரத்துடன் உள்ள ஒப்பீடும் மாறுபாடும் விளக்கப்படவேண்டும். தொ.பரமசிவம் அதையும் முறையாகச் செய்பவர் அல்ல. அவருடையவை ஆய்வுகள் அல்ல. களத்தில் கண்ட செய்திகளை தான் புரிந்துகொண்ட வகையில்  தன் கருத்துக்களுடன் சேர்த்து சிறுகுறிப்புகளாகப் பதிவுசெய்து வைக்கும் முயற்சிகள் மட்டுமே.

அவருடைய அரசியல் தரப்புகளுக்கு ஏற்ப கருத்துக்களை ஓங்கிச் சொன்னார். அவருடைய அரசியல் தரப்புகள் என் அக்கறைக்கு உரியவை அல்ல. அவை அவருடைய நம்பிக்கைகள். அவற்றுக்கும் அறிவியக்கத்துக்கும் சம்பந்தமில்லை. அந்த அரசியல் கருத்துக்களுக்காக அவர் தரவுகளை கையாண்டதை நான் அதற்குரிய கவனத்துடன் கருத்தில் கொள்வேன்.இத்தனை நாட்களில் அவருடைய அரசியலை எதிர்த்து ஒருசொல்கூட பேசியதில்லை. அவருடைய ஆய்வுகளிலுள்ள முறைமையின்மையின் பிழைகளை பற்றி மட்டுமே பேசியிருக்கிறேன்.

தொ.பரமசிவனின் ஆய்வுகளிலுள்ள இந்த முறைமையின்மை, அது உருவாக்கும் பிழையான புரிதல்களையே சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதேசமயம் அவரை ஓர் களஆய்வாளர் என்று கொண்டால் இன்னொரு ஆய்வாளருக்கு, இலக்கியவாதிகளுக்கு  உதவியான ஏராளமான செய்திகளை சொல்லிச்செல்பவர் என்றவகையில் அவர் முக்கியமானவரும்கூட. இதுவே அவரைப்பற்றிய என் தரப்பு. இதையே பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒரு காலத்தில் அவரிடமே நேரில் விவாதித்ததும் உண்டு. என் கட்டுரைகளில் நீங்கள் அதை படிக்கலாம்.

தமிழில் இந்த மொண்ணைக்கும்பல் சூழ்ந்திருக்க எதையாவது சிந்திப்பதும் எழுதுவதும்தான் எத்தனை பெரிய சவாலாக ஆகிவிட்டிருக்கிறது

ஜெ

தொ.ப – ஒரு வினா தொ.பரமசிவம் குறித்து… மரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் 2
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2021 10:35

கற்றல்- ஒரு கடிதம்

ன்பு ஆசிரியருக்கு,

தங்கள் அன்பை என்றும் மறவா மாணவி இந்த ஆசிரியர் தினநாளில் தங்களுக்கு குரு வணக்கங்களைத் தெரிவித்துக்கொண்டு எழுதுவது.

தங்களின் வெண்முரசுவை தாங்கள் நினைத்ததைப் போலவே தங்களின் வாழ்நாளில் எழுதிமுடித்து சாதித்துவிட்டீர்கள். ஆண்டவனின் அனுக்கிரகம் பெற்ற ஒருவரை நான் ஆசானாக அடைந்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

எத்தனை பிரச்சனைகள் இடையூறுகள் வந்தாலும் அதை மனதுக்குள் புகுத்திக் கொள்ளாமல் எடுத்த காரியத்தில் மட்டும் கவனம் கொண்டு அதைச் செவ்வனே செய்து முடிப்பதை தங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் அதற்கு பயிற்சியும் பக்குவமும் தேவைப்படுகிறது.

வெண்முரசுவில் கிராதம் முடித்து மாமலர் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இடையிடையே மற்ற சிறிய வாசிப்புக்களும் உண்டு. பணிமாறுதல் வேலைப்பளு மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் விஷ்ணுபுர விழாவிற்கு நேரடியாக வந்து தங்கள் பாதம் பணியும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் மானசீகமாக தங்களின் ஆசீரைப் பெற்றபிறகே எனது ஒவ்வொரு நாளும் தொடங்குகிறது.

தங்களுக்கு எழுதவேண்டும் எழுதவேண்டும் என்ற என் ஆசை இன்றுதான் நீண்டநாட்களுக்குப் பிறகு நிறைவேறியுள்ளது. அதற்கு இந்த ஆசிரியர்தினம் மகத்தான உதவி புரிந்துள்ளது. இதை நான் என்றும் மறக்கமாட்டேன்.

அருண்மொழி அக்கா, சைதன்யா தங்கை மற்றும் தம்பி அஜிதன் ஆகியோரின் நலத்தை விசாரித்ததாகச் சொல்லவும். தங்களின் உடல்நலத்தையும் நன்கு கவனித்துக்கொள்ளவும்.

இங்கு எங்கள் சார் ஓய்வு பெற்று ஒரு வருடம் ஆகிவிட்டது. என் பையன் இந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். இன்று காலைதான் அவன் கேட்டான், ‘ எப்படிம்மா காலையில் நாலரைக்கு எழுந்திருச்சி படிக்கிறீங்க; கீழே போய் வீட்டு வேலை பார்க்கிறீங்க; ஆஃபீஸ்க்கும் போய் வேலை பார்த்துட்டு வர்றீங்க; வீட்டுக்கு வந்தும் மறுபடி வேலை பார்க்கிறீங்க; புள்ளைங்களுக்கும் சொல்லிக்குடுத்துக்குறீங்க; அப்புறம் பதினோரு மணி வரைக்கும் படிக்கிறீங்க; எனக்கு ஒம்போது மணிக்கு எழுந்திருப்பதே கஷ்டமா இருக்கேம்மா” என்று.

நான் சொன்னேன், “கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் இதெல்லாம் எல்லோராலும் சாத்தியம்டா” என்று. அப்போது எனக்கு உங்கள் ஞாபகம் வந்துவிட்டது. எப்படி அசுரன்போல் வாசிப்பவர் நீங்கள்! சளைக்காமல்  எழுதுபவர் நீங்கள் என்று! ஆனால் அப்போது எனக்கு இன்றே உங்களுக்கு கடிதம் எழுத நேரம் அமையும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. அனைத்தும் ஆண்டவனின் பிராப்தம் போல.

ஆம். நல் எண்ணங்களை, நல் விருப்பங்களை நிச்சயம் ஆண்டவன் அங்கீகரிப்பான்; அவன் நம்மை கவனித்துக்கொண்டேயிருக்கிறான்; நமது காரியங்களை தராசில் நிறுத்துக்கொண்டேயிருக்கிறான் என்பது உண்மையே. ஆகையால் கிருஷ்ணன் கூறியிருப்பதுபோல, “கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே!” என்பதை மட்டுமே நம் தாரகமந்திரமாகக் கொள்ளவேண்டும் என்று இச்சமயம் மீண்டுமொருமுறை எனக்கு நானே கூறிக்கொள்கிறேன்.

என் எண்ணங்களும் என் விருப்பங்களும் ஒவ்வொன்றாக நிறைவேறிவருவது மூலமாகவும் நடந்துகொண்டிருப்பது மூலமாகவும் அல்லது நான் சறுக்கிவிழுவதன்மூலமாகவும் என்னை நானே சீர்தூக்கிப் பார்த்துக்கொள்கிறேன். இவ்வாறு பரிசோதனை செய்துகொள்வதையே முதன்முதலில் எனக்கு இலக்கியம்தான் கற்றுக்கொடுத்துள்ளது. ஆம். நான் காந்தியின் “சத்தியசோதனை”யை என் சிறுவயதிலேயே வாசித்துள்ளேன். ஆனால் பாதிபுத்தகத்திற்கு மேல் அந்த வயதில் என்னால் தாண்ட இயலவில்லை. ஆனால் மனதில் அவரைப்போல கட்டுப்பாடோடும் ஒழுக்கத்தோடும் நேர்மையோடும் பொய் சொல்லாமலும் இருக்கவேண்டும் என்று மட்டுமே புரிந்துகொண்டு அதன்படி நடந்துகொள்ள முயன்றேன். அது வழிநடத்திய பாதைதான் தங்களிடம் கொண்டுவந்து சேர்த்துள்ளது.

இதுபோல ஒவ்வொரு காரியங்களிலும் அது என்னை எங்கு கொண்டு செல்கிறது என்ற முடிவுப்புள்ளியைக் கவனித்தால் அங்கு முதலாவதாக நிற்பது நல் எண்ணங்களும் நற்செயல்களுமே. எங்கேனும் நான் சறுக்கியிருப்பேனென்றால் அங்கு நான் நிதானத்தை இழந்து அவசரப்பட்டு வார்த்தையை விட்டிருப்பேன். அது என் முன்கோபத்தால் நிகழ்ந்திருக்கும். ஆகையால் ஒரு உயர்வான செயலில் ஒரு முடிவு நிகழுமென்றால் அதற்கு ஆரம்ப சிந்தனை மிக முக்கியம். அதனோடு அது கடந்து வரும் பாதையில் கொள்ளப்படும் பொறுமையும் நிதானமிழக்காமையும் இன்னும் அவசியம்.

இன்னும் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் சமீபத்தில் நிறைவேறிய இரண்டு விஷயங்களைச் சொல்வேன். எனக்கு சிறுவயதிலிருந்தே குருகுலக்கல்வி மீது ஒரு ஆசை. அல்லது இப்படியும் சொல்லலாம். அதாவது மேரி கியூரி போல வீட்டிலிருந்தே கல்வியறிவைப் பெறுவது. இன்னொன்று நான் கற்றுக்கொண்டதை சிறுகுழந்தைகளுக்குக் கற்றுத்தருவது. அதாவது இப்பொழுதுதான் படிக்க பேச கற்றுக்கொள்ளும் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்துக்குள் என வைத்துக்கொள்ளுங்களேன்.

இந்த இரண்டும் நான் மேரி கியூரியைப் பற்றியும் தாமஸ் ஆல்வா எடிசனையும் பற்றித் தெரிந்துகொண்டபிறகு என் உள்ளத்தில் எழுந்து பற்றிக்கொண்ட பெரு நெருப்புகள்.

என் தேடல் எனக்குத்தெரிந்த வரையில் சுரேஷைக் கண்டடைய வைத்தது. சுரேஷால் தங்களிடம் ஆற்றுப்படுத்தப்பட்டேன். அதற்கு என் வாசிப்பு முக்கியக்காரணமாக இருந்தது. ஆனால் அது இலக்கிய வழி என்று அறியாமலே உட்புகுந்தேன்.

கொற்றவை, காடு, பின்தொடரும் நிழலின் குரல், வெண்முரசு, அன்னா கரீனினா, விஷ்ணுபுரம், ஆரோக்கிய நிகேதனம், தோட்டி மகன், செம்மீன், போரும் அமைதியும், குற்றமும் தண்டனையும், கரமசேவ் சகோதரர்கள், அசடன், மண்ணும் மனிதரும் என பெரும் நாவல்களை வாசிக்கவைத்தது. விட்ட சத்தியசோதனையை நன்கு புரிந்து  வாசித்தேன்.

இவற்றையெல்லாம் வாசிக்க வாசிக்க தாகம் அதிகமாகிக்கொண்டிருக்கிறதே தவிர அந்த வாசிப்புதாகம் குறைவதாய்த் தெரியவில்லை. இப்படி என் வாசிப்பை அங்கீகரித்து மகிழ்ச்சியடைந்த கடவுள் அத்தோடு நிற்கவில்லை. இன்னும் இன்னமுமாய் எனக்கு ஆசிரியர்களைத் தேடி நான் கண்டடைந்து கற்றுக்கொள்ளும்வண்ணமாய் வைத்திருக்கிறார். பால்மணம் மாறா மூன்று அரிச்சுவடிக் குழந்தைகளை நான் கற்றுத்தரும்வண்ணமாய்க் கொடுத்திருக்கிறார். இவையெல்லாம் இந்த கொரோனாவால் என் வாழ்வில் நிகழ்ந்த நன்மைகள்.

இதனால்தான் ஒரு நிகழ்கின்ற நிகழ்வு நன்மையானது அல்லது அது தீமையானது என்று  அறுதியிட்டுக் கூறமுடிவதில்லை. ஒருவருக்கு ஒரு சொல்லோ செயலோ நன்மையை விளைவிக்கலாம். அல்லது மீளவியலா கடுந்துயரத்தை வீசிவிட்டுச் செல்லலாம். அதனால் ஆரம்ப சிந்தனையில் உள்ள நல்நோக்கு ஒன்றே இலக்காகக்கொண்டு சிற்றடிகளாக வைத்து நடக்க ஆரம்பித்தாலே போதும். கடவுள் போக வேண்டிய இடத்துக்கு கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவார்.

இந்த நம்பிக்கை மட்டுமே என்றும் என் மூலதனம். உங்களைப்போல என் கடமையை மட்டும் செவ்வனே நான் செய்துவிடுவதால் அனைத்துப் பொறுப்புகளும் அவர்தலைமேல் சென்றுவிடுகின்றன. முடிவை அவர் பார்த்துக்கொள்வார். அதனால் நான் எதற்கும் அஞ்சுவதில்லை. மடியில் கனம் இருந்தால்தானே பயம். அனைத்தையும் அவன் எனக்குத் தருகிறான். நான் பெற்றுக்கொண்டதை அடுத்தவருக்கு தானமாகத் தந்துவிடுகிறேன். பின் யாருக்காக எதற்கு பயப்படவேண்டும்?

சமீபத்தில் நான் தேடிக்கண்டடைந்த என் ஹிந்தி ஆசிரியர் வகுப்பின் ஆரம்பத்திலும் முடிவிலும் தவறாமல் சொல்வது பின்வருமாறு:

ஒன்று: நீ சந்திக்கும் ஒவ்வொருவரும் உனக்கு ஆசான் போல.

மற்றொன்று: நீ கற்றதை அடுத்தவருக்கு கற்றுக்கொடுக்கும்போது நீ கற்றது இருமடங்காகிறது.

இவ்வாறு  கற்றலும் கற்பித்தலும் செவ்வனே நிகழ்ந்துவருகிறது. இதன் முடிவு எவ்வாறாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்றால் நல்லது என நினைத்து நான் செய்யும் செயல்கள் அல்லது சொல்லும் சொற்கள் பலருக்கு வெறுப்பைத் தோற்றுவிப்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன். அவை எனக்கு மிகுந்த வியப்பைத் தருகின்றன. தொழில்நுட்பமும்  விஞ்ஞானமும் வளர்ச்சியடைந்துள்ள இந்த நவீன உலகில் மானுட மனமும் பெற்றுள்ள அசுர வளர்ச்சியைப் பார்த்து நான் மலைத்துப் போகிறேன்!!

இருந்தாலும் எனக்கென நானே உருவாக்கிக்கொண்ட ஒரு குருகுலம். எனக்கென ஆசிரியர்கள்; எனக்கென மாணவர்கள். நல் மாணவியைப் பெற்ற மகிழ்ச்சியை என் ஆசிரியர்கள் குரலில் காண்கிறேன். நற்குணங்களையும் தவறில்லாமல் மொழிகளைப் பேசவும் கற்கவும் என்னிடம் பழகிக்கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்ப்பதில் நான் பேரானந்தம் அடைகிறேன். ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் சந்திக்கும் மூவருக்கு கற்றுத் தருவார்கள். அதுவும் நற்பண்புகளோடு சரியானவைகளை! இதுதான் இன்றையத் தேவை. இவையே என் சொத்தும் சுகமும். இந்த மகிழ்ச்சியை இந்த நன்னாளில் தங்களிடம் பகிர்ந்துகொள்ளவே எழுத ஆரம்பித்திருக்கிறேன் என எழுதி முடிக்கையிலேதான் எனக்கே தெரிகிறது.

நிஜமாகச் சொல்கிறேன். இரண்டே வரிகளில் தங்களுக்கு ஆசிரியர்தின வாழ்த்துக்கள் கூற மட்டுமே இந்த அலைபேசியை எடுத்தேன். அது இப்படி  வந்து முடிந்துள்ளது. இவ்வாறுதான் என் வாழ்க்கையும் சென்றுகொண்டிருக்கிறது. நான் சொல்ல விழைந்ததை சரியாக தங்களிடம் சேர்ப்பித்துவிட்டேனா என்பது தெரியவில்லை.

மீண்டும் தங்களுக்கு வணக்கங்கள் கூறிக்கொண்டு ஆசீர்களைப் பெற்றுக்கொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன்.

இப்படிக்கு,

உங்கள் அன்பு மாணவி,

கிறிஸ்டி.

 

அன்புள்ள கிறிஸ்டி

தாமதமான கடிதம்

வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகையான மகிழ்ச்சிகள் வழியாக செல்வோம். ஒவ்வொன்றும் அதன் எல்லையை அடைந்ததும் பொருளிழக்கின்றன. கடைசிவரை தொடரும் மகிழ்ச்சி என்பது கற்றல்தான்

இதை எழுதும்போது இன்று திரிவிக்ரமன் தம்பி அவர்களின் நூலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். குமரிமாவட்ட நாட்டாரியல் அறிஞர், மலையாள எழுத்தாளர். என் இல்லத்தின் அருகே வாழ்ந்தார். மறைந்து பத்தாண்டுகளாகின்றன. வயதுமுதுமையில்கூட மிகுந்த ஆர்வத்துடன் வாசித்துக்கொண்டிருப்பார். ஒரு சிறு தகவலுக்காக உடல்நலமின்றி இருக்கையிலும் நீண்ட பயணம் மேற்கொள்வார்

“படிக்கிறேன், கற்பிக்கிறேன். அதுதான் வாழ்க்கையில் எஞ்சும் மகிழ்ச்சி’ என்று நான் ஒருமுறை சாலையில் அவரை சந்திக்கும்போது சொன்னார். அப்போது புத்தன்கடை என்ற ஊரில் ஏதோ ஏட்டுச்சுவடியை தேடிச் சென்றுகொண்டிருந்தார்

பெரிய ஆசிரியர்கள் நமக்குக் கற்பிப்பது அதையே

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2021 10:31

மொழியிலாக் கலை- கடிதம்

அருகர்களின் பாதை 7 – ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ்

அன்புள்ள ஆசிரியருக்கு

புனேவில் இருக்கும் எங்களுக்கு சென்ற வாரம் கித்ராப்பூரை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது. உங்களுடைய அருகர்களின் பாதை புத்தகத்தின் வழியாக கோபேஸ்வர் கோவில் மேலும் அதன் சிற்பக்கலை பற்றியும் அறிந்துகொண்டு பயணப்பட்டோம். சிறிதும் ஏமாற்றம் இல்லாமல் எங்களை முழுதாய் ஆக்கிரமித்தது அந்த சிற்பக்கோவில்.

முக்கியமாக இக்கோவிலில் எங்களை வியப்பில் ஆழ்த்தியவரை பற்றி உங்களுடன் பகிரவே இந்த கடிதம்.

அவர் பெயர் சந்தீப் , அங்கு கோவிலை சுத்தப்படுத்தும் பணியில் உள்ளார், இவருக்கு பேசும்பொழுது மொழி அதிகம் ஓசையாக வருகிறது, ஆனால் புரிந்து கொள்ள முடிகிறது. உள் மண்டபத்தின் பெரும் பகுதி இருளாக இருந்ததால் பல சிற்பங்கள் எங்கள் கண்களுக்கு புலப்படவில்லை. எங்களை பார்த்து வந்த அவர் ஆலயத்தின் உள்மண்டபத்தில் பல தூண்களில் உள்ள சிற்பங்களின் விவரத்தை மிக நேர்த்தியாக விளக்கினார். சப்தமாதா, ராமர் ,ஹனுமான் மற்றும் பஞ்ச தந்திர கதையில் வரும் முயல் ஆமை இவைகளின் சிற்பங்கள் உள்மண்டபத்தில் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. இவர் எடுத்துரைக்கவிட்டால் நாங்கள் நிச்சயம் இச்சிற்பங்களைத் தவற விட்டிருப்போம்.

சந்தீப் மன்மதன் கதையில் வரும் ராஜுவை நிறைய நினைவு கூர்ந்தார்.மன்மதனில் வரும் கண் தெரியாத நாயகன் கோவிலின் சிற்பங்களின் அழகை கால் நகம் தொட்டு கண் பார்வை வரை விவரிக்கும் காட்சி வந்து சென்றது.இவர்களுக்கான ஒற்றுமை புறக்கண்ணை விடுத்து அகக்கண்ணில் நோக்கும் கூர்மை.ஐம்புலன்களின் மூலம் நோக்கும் புற நோக்கினை விடுத்து உண்மையான அக தரிசனத்தை வெளிப்படுத்துவதன் மூலம் இருவருமே ஒன்று படுகிறார்கள். ஓசையாக வெளிப்பட்டாலும் மொழியின் சாராம்சத்தை எங்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தில் மிளிர்ந்தார்.

“அவனுக்கு அந்தச்சிலைளைப்பற்றி தெரிந்தவற்றை பலநூறு பக்கங்கள் கொண்ட ஒருநூலாக எழுதிவிடலாமென தோன்றியது. கிருஷ்ணன் அந்த ஐயங்காரை நினைத்துக் கொண்டான். மூளை நிறைய சிற்பசாஸ்திர ஞானத்துடன் குடும்பத்தாலும் ஊராலும் உதாசீனப்படுத்தப்பட்டு இந்த கோயிலில் வந்து அமர்ந்திருப்பார் போல. கோயிலில் அலைந்த பிச்சைக்காரக்குழந்தையில் அனைத்தையும் ஏற்றிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் ஒருவகையில் தகுதியான சீடனுக்குத்தான் வித்தையை கொடுத்திருக்கிறார்”.மன்மதன் [சிறுகதை]

கதையில்வருவதை போலவே தகுதியான சீடனுக்கு தான் அந்த யாரோ ஒருவர் விளக்கியிருப்பரோ என்று மனம் மகிழ்ந்தது. உங்கள் கதையின் நாயகனை கண்டுபிடித்த சந்தோஷம் என்னையும் எழுத உந்தியது.

சிற்பங்களை அவர் விவரித்த அழகினை தாண்டி குறிப்பிட வேண்டிய மற்றொன்று அவரின் புகைப்படம் எடுக்கும் திறமை, எங்கள் போனை வாங்கி பல இடங்களில் நிற்கவைத்து கோவிலின் சிற்ப அழகுடன் எங்களையும் இணைத்து அவர் எடுத்த விதத்திலிருந்தே தெரிந்தது அவர் இந்த கோவிலை எந்த அளவிற்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்று.

மீண்டும் கரும்புத்தோட்டங்களுடன் நிறைவான பயணம்.

அன்புடன்

இந்து & கோபால்

புனே

 

அன்புள்ள இந்து,

நாங்கள் செல்லும் பயணங்களில் அவ்வப்போது இவ்வாறு சரித்திரங்களுடன் தங்களைப் பிணைத்துக்கொண்ட மனிதர்களைப் பார்க்கிறோம். சிலர் வழிகாட்டிகளாக பணிபுரிகிறார்கள். மிக விரும்பி, ஈடுபாட்டுடன் இடங்களைச் சுட்டி அவற்றின் கலையையும் வரலாற்றையும் விளக்குபவர்கள் உண்டு.

ஆதிச்சநல்லூர் சிதம்பரம் ஓர் உதாரணம். சித்ரதுர்க்கா, ஹாத்திகும்பா, பிம்பேட்கா குகைகள் போன்ற பல ஊர்களில் மிக அருமையான வழிகாட்டிகள் அமைந்திருக்கிறார்கள். பொதுவாக ஆரம்பத்தில் வழிகாட்டிகளை தவிர்ப்போம். ஏனென்றால் எங்கள் நோக்கம் சுற்றுலா அல்ல என்று அவர்களுக்கு புரியவைக்க முடியாது. ஒரு தொகை பேசியபின் சரசரவென்று ஒப்பித்து சுருக்கமான வழி வழியாக திரும்பக்கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். அந்தப்பயணத்தையே குலைத்துவிடுவார்கள். ஆகவே நாமே சுற்றுலா வழிகாட்டுநூலை வைத்துக்கொண்டு பார்ப்பதே உகந்தது என்பது எங்கள் எண்ணமாக இருந்தது

ஆனால் பல அனுபவங்களுக்குப்பின் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டோம். ஏனென்றால்  சுற்றுலா வழிகாட்டிகளிலேயே இப்படி முத்துக்கள் அமைவதுண்டு. ஆகவே இப்போதெல்லாம் ஒரு வாய்ப்பு கொடுத்துப்பார்ப்பதுண்டு. இந்த மனிதரையே நீங்கள் பைசாவுக்காக வந்து தொந்தரவு செய்பவர் என விரட்டிவிட்டிருக்க வாய்ப்பு உண்டு அல்லவா? பலர் அப்படிச் செய்பவர்கள் தான். ஆனால்  இவர் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு முகமாக ஆகிவிட்டார்

ஜெ

மன்மதன் [சிறுகதை]

அருகர்களின் பாதை வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2021 10:31

ஒரே ராகம்

வெண்முகில் நகரத்தில் பூரிசிரவஸ் காந்தாரியைப் பார்க்கச் செல்லும் ஒரு இடம் வரும். அப்போது கிருஷ்ணன் காந்தாரியின் மடி மீது காலைப் போட்டுக் கொண்டு குழல் இசைத்துக் கொண்டிருப்பான். அங்கே இருக்கும் அனைத்து மகளிரும் அதைக் கேட்டு மயங்கி போய் இருப்பர். முதலில் சற்று அசட்டையாகக் கேட்கத் துவங்கும் பூரிசிரவசுக்கு முதலில் வரும் எண்ணம் அவன் இத்தனை நேரமும் ஒரே ராகத்தைத் தான் இசைத்துக் கொண்டிருக்கிறான் என்பது தான்.

ஒரே ராகம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2021 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.