Jeyamohan's Blog, page 1062

January 19, 2021

முன்சுவடுகள்- கடிதம்

முன்சுவடுகள் வாங்க

இன்று முன் சுவடுகள் படி த்துமுடித்தேன். நீங்கள் வாசகனை      சலிப்படையச் செய்யக்       கூடாது என.   முடிவு     செய்து விட்டு எழுத துவங்குகிறீர்களா? என்ன. இக்கட்டுரைகளை வாசிக்கும் போது என் தன்னகங்காரம் புன்படுகிறது. எனது இலக்குகள், தியாகங்கள், அறிவு, எனது சிறுமைத்தனத்தை எண்ணி மனம் புழுங்குகிறேன்.

இவரலாற்று நூலில் நீங்கள் தொட்டுக் காட்டும் இடங்கள் வாழ்வின் சரி தவறுகள் ஒழுக்கவரையறைகள் போன்றவற்றை மீண்டும் ஒரு முறை பரிசீலனை  செய்ய வைக்கிறது

இன்று சுனில் பி இளயிடத்தின்  காந்தி பற்றிய ஒரு பேச்சை கேட்டேன். சில இடறல்கள் இருந்தாலும் ஒரு நல்ல உரையென்றுதான் தோன்றுகிறது.

அதில் இந்தியாவில் வரலாறு இல்லாமை பற்றி காந்தியிடம் ஒருவர் கேட்கிறார் அதற்கு காந்தி வரலாறு என்பதென்ன ஆண்களின் அதிகாரத்தின் வரலாறு தானே என்று சொன்னதாக குறிப்பிடுகிறார். சட்டென அது தானே உண்மை எனத் தோன்றியது நாம் படிக்கும் வரலாறு ஆண்களின் அதிகாரத்தின், அல்லது ஆணாக மாறிய பெண்ணின் வரலாறு என்பது எவ்வளவு பெரிய உண்மை. அக்கணங்களில் யோசித்துப் பார்த்தேன் இந்த பதினோரு வரலாற்று மனிதர்களுடைய     புத்தகங்களும் அதை அறிமுகப்படுத்தும் இக்கட்டுரைகள் எவ்வளவு அவசியமானவை!

இப்புத்தகத்தை மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு ஒரு கட்டுரை எழுத வேண்டும் முடிந்தால்  அவர்களின்  வரலாற்றையும்    படிக்க வேண்டும்.

மேலும் அவர் இப்பேச்சில் குறிப்பிடும் காந்தி தண்டியாத்திரையை   ரயில் நிலையங்கள்  உள்ள கிராமங்கள் வழியாக நடத்தியதின் நுட்பம். இந்தியாவில் முழுமையாக விவாசாயிகள் விளைச்சலுக்கு விலைகேட்டு போராடிய வரலாறு காந்தி இந்தியாவில் பங்க்கேற்று நடத்திய சம்பரான் இயக்க த்திலிருந்து தான்    துவங்குகிறது என்கிறார். நாராயணன் குரு காந்தி ஒப்பீடு எனக்கு சிந்திப்பதற்கு ஒரு புதிய கோணம். வள்ளத்தோள் குமரனாசன் இருவரின் கவிதை உரையாடல் இவர் பேச்சின் உச்சம்

அடி கண்ட ஆள்கு பரயாம்

கொண்ட ஆள்கு பரயான் பற்றத்தில்லா….

சில இடங்களில் கே கே எம் பேச்சு ஒருவேலை இப்படி த்தான் இருக்குமோ என்றளவு உணர்ச்சிகரமாக பேசினார். சமனிலை தவறாமல் கிட்டத்தட்ட ஒன்றறை மணி நேரம் இவர் பேசிய பேச்சை கேட்பவர்களுக்கு இது கண்டிப்பாக நேரத்தை வீணாக்கும் உரையென்று தோன்றாது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

கதிரேசன்

நாகை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2021 10:31

ஆடிப் பாவைகளும் நிழல்களும்

பூரிசிரவஸ் பாத்திரம் வளரும் போதே அதில் நான் உணர்ந்த ஒன்று அவன் பார்த்தனின் வார்ப்பு என்பது. ஒரு வகையில் பார்த்தனின் நிழல். காமம் அல்லாமல் காதலை உணர்ந்த நிழல். கர்ணனோடு ஒட்டி உறவாட வேண்டுமென்று ஏங்கிய அவன் நிழல். அன்னை மட்டுமல்லாமல் தான் விரும்பும் அனைத்துப் பெண்களாலும் விரும்பப்பட வேண்டுமென்று விழைந்த நிழல். துரியோதனனை மூத்தவனாகக் கண்டு அவன் அணைப்பில் இழைய வேண்டுமென்று ஏங்கிய நிழல்.

ஆடிப் பாவைகளும் நிழல்களும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2021 10:30

January 18, 2021

எழுத்தின் இருள்

அன்புள்ள் ஜெ

சமீபத்தில் ஓர் உரையிலும் ’நான் எழுத்தாளன், தத்துவஞானியோ மெய்ஞானியோ அல்ல’ என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்லும் தொனியில் எழுத்தாளனை ஒரு படி கீழாக வைக்கும் பார்வை உள்ளது. எழுத்தாளன் தத்துவஞானியை விட ஆன்மிகஞானியை விட கீழானவனா? எழுத்தாளன் தத்துவஞானியாகவோ மெய்ஞானியாகவோ ஆகமுடியாதா? இந்த வேறுபாட்டை நீங்கள் ஏன் சுட்டிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது என்றும் புரியவில்லை.

ஆர்.ரகுராமன்

 

அன்புள்ள ரகு,

இந்த வேறுபாடு நடைமுறையில் அழிந்துகொண்டே இருப்பதனால்தான் அதைச் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. எனக்கே அதை நித்யா கூர்மையாகச் சுட்டிக்காட்டும் வரை அதைப்பற்றிய தெளிவு இருக்கவில்லை.

’எழுத்தாளன் தீமையின் தரப்பிலிருந்து முற்றிலும் விலகமுடியாதவன்’என்ற ஒற்றைவரி உங்கள் கேள்விக்கு பதில். தத்துவஞானி தர்க்கத்தாலும் மெய்ஞானி உள்ளுணர்வாலும் தீமையின் தரப்பிலிருந்து முற்றிலும் விலக வாய்ப்புள்ளவர்கள். முழுமையான நேர்நிலையை அடைந்து கனிந்து நிறைவுகொள்ளும் பாதை அவர்களுடையது. இந்த வேறுபாடு மிகமிக முக்கியமானது.

இதை ஒரு சிறு உரையாடல்குழுவுக்குள் மட்டுமே நுட்பமாகப் பேசமுடியும். பொதுவெளியில் இதை பிழையாகப் புரிந்துகொள்வோர், அரைகுறையாகப் புரிந்துகொள்வோரே மிகுதி. அவர்களுடன் விவாதிக்கப்புகுந்தால் சொற்குப்பையே எஞ்சும். ஆகவே முதல்தள விளக்கத்தை மட்டுமே சொல்லலாம் என நினைக்கிறேன்.

எழுத்தாளன் இருளை தவிர்க்கமுடியாது. அவன் எத்தனை விழைவுடன் ஒளியை நாடினாலும் இருளின் தரப்பிலிருந்தே அதைப் பார்க்கமுடிகிறது. மகாபாரதத்திலேயே குறிப்பாகச் சொல்லப்பட்டதுதான் – வெண்முரசில் வியாசனைப் பற்றிய பகுதிகளில் விரிவாக பேசப்பட்டுள்ளது. காமகுரோதமோகங்களின் நடனமே கலையின் அடித்தளம். எழுத்தாளன் அங்கே நிலைகொள்பவன். வியாசனால் சுகன் ஆக முடியாது.

ஆனால் இதை சென்றநூற்றாண்டின் இலக்கியவிமர்சகர் சிலர்- குறிப்பாக பிரெஞ்சு விமர்சகர்கள்- மிக எளிமைப்படுத்தி முன்வைத்தனர். சொல்லப்போனால் கொச்சைப்படுத்தி முன்வைத்தனர். அவர்களில் முதன்மையானவர் சார்த்ர். எதை எடுத்துக்கொண்டாலும் அதன் எளிமையான, கொச்சையான வடிவம் விரைவில் பரவும். ஏனென்றால் அது எளியது, அதிர்ச்சியளிக்கும்படி வித்தியாசமாகவும் உள்ளது. ஆகவே எளிய உள்ளங்களால் உடனே ஏற்கப்படும்

நவீனத்துவ காலகட்டத்தில் கலை என்பதே தீமையின் வெளிப்பாடுதான் என்றும், தீயவனே கலைஞனாக இருக்கமுடியும் என்றும் சொல்லும் எல்லை வரை சென்றனர். தீமை என்பதை நோய் என்று உருமாற்றியும் கொண்டனர். எண்பதுகளில் இச்சிந்தனைகள் மலையாளத்தில் புகழ்பெற்றிருந்தன. வி.ராஜகிருஷ்ணன் எழுதிய ‘ரோகத்தின் பூக்கள்’ அன்று பெரிய கவற்சியை அளித்த கோட்பாட்டு நூல். அந்நூலால் மட்டுமே நோயாளிகளாக ஆன சிலரை எனக்கு தெரியும்.

கலைஞர்கள் தங்களை குடிகாரர்கள், பொறுக்கிகள், கெட்டவர்கள் என ‘முன்வைக்க ஆரம்பித்தது எழுபதுகளில் ஐரோப்பாவில் தொடங்கி உலகம் முழுக்க பரவியது. பல அப்பாவிகள் அந்த வேடத்தை மெய்யாகவே போட்டு போதையடிமைகளும் நோயாளிகளும் ஆனார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுத்தாளன் என்றால் புரட்சியாளன் என்ற வரையறை இருந்தது, அதை நம்பி அழிந்தவர்கள் பலர். அதன்பின் இந்த அன்னியன், கலகக்காரன், பொறுக்கி வேடம்.

இது ஒரு சிக்கலான நுட்பமான இடம். இங்கே ஒற்றைவரி மட்டையடிகள் மிக ஆபத்தானவை.இலக்கியத்தில் எல்லா விதிகளுக்கும் வலிமையான விதிவிலக்குகள் உண்டு. எல்லாமே நிகழ்ந்தபின் செய்யப்படும் அவதானிப்புகளே ஒழிய வழிகாட்டுநெறிகள் அல்ல. இலக்கியத்தில் எல்லாமே இயல்பானவைதான். இதையெல்லாம் கருத்திக்கொண்டு நான் செய்யும் இந்த அவதானிப்புகள் என் அகவய அறிந்தல்கள் மட்டுமெ.

வாழ்வியக்கத்தின் உண்மைகளை, இருத்தலின் சாரத்தை, பிரபஞ்சமெய்மையை மனிதமனம் எதிர்கொள்ளும்போது இருவகையான தன்னிலைகளை உணர்கிறது. அதை நேர்நிலை- எதிர்நிலை என அடையாளப்படுத்திக்கொள்ளலாம். நேர்நிலை என்பது ஒத்திசைவு, உச்சம்நோக்கிய விசை ஆகியவற்றைக் கொண்டது. நன்னம்பிக்கை, ஊக்கம், முழுதளிப்பு ஆகியவற்றை இயல்பாக கொண்டது

எதிர்நிலை என்பது பிரிந்து சிதறி பரவும் தன்மை கொண்டது. முரண்பாடுகளை அதிகம் உணர்வது. கொந்தளிப்பு போராட்டம் ஆகியவற்றை அடைவது. அழிவு -ஆக்கம் என முடிவிலாது ஓடும் முரணியக்கத்தை நாடுவது. அதன் உணர்வுநிலைகளும் அவ்வாறே எழுச்சியும் வீழ்ச்சியும் என மாறி மாறி அமைபவை.

மனிதர் அனைவரிலும் நேர்நிலையும் எதிர்நிலையும் உண்டு. ஆனால் தத்துவஞானிகள்,மெய்ஞானிகள் என்போர் நேர்நிலை ஓங்கியவர்கள். நேர்நிலையின் தரப்பிலிருந்தே அனைத்தையும் பார்ப்பவர்கள். மெல்லமெல்ல முழுமையான நேர்நிலை நோக்கிச் செல்பவர்கள்.

எழுத்தாளர்கள் நேர்நிலையை அறியும் திறன்கொண்டவர்கள், அதை தன் ஆக்கங்களில் மிகுந்த ஒளியுடன் முன்வைக்கக்கூடியவர்கள். வாசகர்கள் பல்லாயிரம்பேரை அவர்கள் நேர்நிலை நோக்கிச் செலுத்தக்கூடும்.  அந்தவாசகர்களில் பின்னர் தத்துவஞானியரும் மெய்ஞானியருமாக ஆகக்கூடியவர்களும் இருக்கலாம். ஆனால் எழுத்தாளர்கள் இறுதிவரை எதிர்நிலையிலேயே வேரூன்றியிருப்பார்கள். அதுவே அவர்களின் எல்லை.

எனவே எழுத்தாளர்கள் மானுட உள்ளத்தின் இருளை, இயற்கையில் உள்ளுறைந்திருக்கும் அறியமுடியாமையின் இருளை , பிரபஞ்சப்பேரிருளை  பார்த்துக்கொண்டேதான் இருப்பார்கள். ’தமோமுகர்’ என ஓர் உரையாடலில் நித்யா சொன்னார்.

காமகுரோதமோகத்தின் ஒரு நுண்துளி எங்கேனும் இருந்தால்கூட எழுத்தாளனின் உள்ளம் அதை தொட்டு எடுத்துக் காட்டிவிடுகிறது. அப்படியென்றால் அவன் எத்தனைபெரிய காமகுரோதமோகம் கொண்டவன். அவனுக்குள் இருக்கும் அந்த மாபெரும் கருவி எவ்வளவு குரூரமானது. அதை கையில் வைத்துக்கொண்டு அவன் எப்படி நேர்நிலையை அடையமுடியும்?

சமூகம் வரையறுக்கும் நோக்கில் எழுத்தாளன் சமநிலைகொண்ட, நிதானமான, உணர்வுகள்மேல் ஆட்சிகொண்ட, நல்லவனாக இருக்கமுடியாது. அவனுடைய உணர்வுகள்மேல் அவனுக்கு கட்டுப்பாடு இருக்காது. அவனுடைய எண்ணம் எப்போதுமே காமகுரோதமோகங்களை தொட்டு அறியவே முயலும். தனக்குத்தானேகூட அவன் காமகுரோதமோகங்களை ஒவ்வொரு அகழ்விலும் கண்டறிந்தபடியேதான் இருப்பான்.

கொஞ்சம் நாடகீயமாகச் சொல்வதாக இருந்தால்,  ‘எழுத்தாளன் என்பவன் குற்றங்களைச் செய்யத்தேவையில்லாத குற்றவாளி’எனலாம். அவன் செய்யவில்லை என்பதனால் அவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவன் அல்ல.

எழுத்தாளனின் இந்த உளநிலை சாமானியர்களுக்குப் புரிவதில்லை. அவர்கள் எழுத்தாளன் ‘நல்லவனாக’ இருக்கவேண்டும் என்றும் சமூகம் முன்வைக்கும் ஒழுக்கம், அரசியல்சரிநிலைகளை கடைப்பிடித்து ஒழுகவேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் எழுத்தாளனை அணுகி அறிபவர்கள்கூட அவன் உருவாக்கும் புனைவுலகின் உச்சங்களைக் கொண்டு அவனை நேர்நிலையானவன் என்று எண்ணி மயங்கக்கூடும். அதுகூடாது.

இதுதான் வேறுபாடு. ஆனால் இதை உடனே ’எழுத்தாளன் கெட்டவனாக இருக்கவேண்டும்’என சார்த்ர் போல வகுத்துக்கொள்ளலாகாது. எழுத்தாளனின் அக ஆழம் உணரும் தன்னிலையின் ஓர் இயல்பு மட்டும்தான் இது. நல்ல எழுத்தாளன் அதை தன் அகத்தின் ஆழத்தில் மட்டுமே நிறுத்திக்கொள்வான். தன் புனைவின் உலகில், தன் கதைமாந்தரின் உள்ளத்தின் ஆழத்தில் மட்டுமே அவ்விருளை வெளிப்படுத்தவும் அறிந்திருப்பான்

நேரடியாக தீயவர்களாக தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும், நேரடியாக தீமையை எழுதும் சிலபடைப்பாளிகள் ஐரோப்பாவில் கொண்டாடப்படுவதுண்டு. அவ்வாறு கொண்டாடப்படுவதே ஒரு பிரெஞ்சு மனநிலை என நினைக்கிறேன்- அதற்கு அமெரிக்காவிலும் ஆதரவு வட்டம் உண்டு. எழுபதுகளில் ஓங்கியிருந்த அந்த அலை எண்பதுகளுக்குப்பின் சற்று ஓய்ந்துவிட்டது.

இன்று முதிராவாசகர்களுக்கு உரிய மனநிலை அது. வாழ்க்கையை அறியாத நடுத்தரவர்க்கத்து ’பாதுகாக்கப்பட்ட மக்கள்’ அவ்வகை மனநிலையை கிளர்ச்சியுடன் தழுவிக்கொள்கிறார்கள். அதைப்பேசிப்பேசி பரவசமடைகிறார்கள்.ழெனேயை புனிதர் என்று சொன்ன  ‘ஜெண்டில்மேன்’சார்த்ரின் மனநிலையை என்னால் புன்னகையுடன் புரிந்துகொள்ளமுடிகிறது

ழெனே, அல்லது சேட் அல்லது பத்தாய் அல்லது புக்கோவ்ஸ்கி முன்வைக்கும் தீமைகளின் உலகம் நேரடியானது. ஆகவே அப்பாவித்தனமானது. சொல்லப்போனால் அந்த தீமைப்பரப்பை சராசரி மானுடன்கூட எளிதாகக் கையாளமுடியும். ஏனென்றால் தன் அகத்தை நோக்கித்திரும்பும் ஒருவன் முதன்முதலாகக் கண்டடைவது அதைத்தான். அதை கையாள்வதன் வழியாகவே அவன் தன் அடிப்படைச் சமநிலையை அடைந்திருக்கிறான்.

இப்படிச் சொல்கிறேனே, வாழ்நாளில் தொடர்ச்சியாக ஒருமாதம் தியானம் செய்த ஒருவனுக்கு இவர்கள் எதையும் புதிதாகக் காட்டுவதில்லை. கண்மூடி அமர்ந்து அகத்தை நோக்கினால் நாம் நமக்குள் காண்பது ழெனேக்களை புக்கோவ்ஸ்கிகளை வெட்கிநாணச்செய்யும்ம் காமகுரோதமோகங்களைத்தானே? அப்படி இல்லை, கண்மூடினாலும் கள்ளமற்ற வெள்ளையுள்ளத்தையே காண்கிறேன் என்பவர்கள் புனிதர்கள்.

ஆனால் பெரும்பாலும் எளியோர் தங்கள் சொந்த காமகுரோதமோகங்களை நேருக்குநேர் பார்த்திருப்பதில்லை. அதை ‘அன்றாடப்பண்பாடு’ என்னும் ஒரு பெரும்படலத்தால் மூடியே வைத்திருப்பார்கள். அதுவே உலகத்தில் புழங்குவதற்கு உகந்த தளம். ழெனேயோ புகோவ்ஸ்கியோ அந்த படலத்தை விலக்கி காட்டும்போது திகைப்பும் கிளர்ச்சியும் அடைபவர்கள் அவர்களே.

நான் நீண்ட தியான அனுபவங்களுக்குப்பின் – அத்தகைய தியான அனுபவங்கள் அளித்த என் ஆழம் பற்றிய அறிதல்களால் தற்கொலைமுனை வரை சென்று மீண்டபின்- இவர்களைப் படித்தபோது இவை ஒருவகை முதிரா எழுத்து என்ற எண்ணமும் சலிப்பும்தான் உருவானது. ஆனால் அதற்கப்பாலும் திகைப்பளித்த தீமையின் உருவங்கள் பேரிலக்கியங்களிலேயே இருந்தன. அவை எந்த பேரருளாலும் செரித்துக்கொள்ள முடியாத இரும்புக்குண்டுகள் என நின்றிருந்தன

தீயவனாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் எழுத்தாளன் சிறியவகை படைப்பாளி மட்டுமே. அதில் அனுதாபத்திற்குரிய ஒரு துடுக்குத்தனம் மட்டுமே உள்ளது. தல்ஸ்தோயோ, தஸ்தயேவ்ஸ்கியோ, தாமஸ் மன்னோ, ஐசக் பாஷவிஸ் சிங்கரோ தாராசங்கர் பானர்ஜியோ, பஷீரோ, சிவராம காரந்தோ அவர்களுக்கு பல படி மேலே நின்றிருப்பவர்கள். இவர்களைவிட பலமடங்கு வீச்சுடன் தீமையை தங்களுக்குள்ளும் கண்டறிந்தவர்கள் அவர்கள். அதை எழுத்தில் வெளிப்படுத்தியவர்கள். ஆனால் அந்த நஞ்சை கழுத்தில் நிறுத்திக்கொள்ளவும் கற்றிருப்பார்கள்

இரண்டுவகை தன்னிலைகளை உருவாக்கிக்கொள்வதன் வழியாக அவர்கள் அதை அடைகிறார்கள். ஒன்று, வரலாற்றை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் விரிவுகொள்கிறார்கள். அதன் ஒரு துளியென தன்னை நிறுத்திக்கொள்கிறார்கள்.. இரண்டு, தன்னை வெறும் சாட்சியாக வரையறைசெய்துகொள்கிறார்கள். அனைத்திலிருந்தும் இணையான விலக்கத்தை அடைகிறார்கள்.

அந்த விலக்கம் காரணமாக பெரும்படைப்பாளி தனக்கென ஒரு சமநிலை கொண்டிருப்பான். அவனுடைய ஆளுமை நிலைகொண்டிருக்கும். அவனுக்கு கயவன், கலகக்காரன், புரட்சிக்காரன் என்றெல்லாம் வேடங்கள் பூணவேண்டிய தேவையில்லை. அவ்வேடங்கள் அனைத்திலும் அவனுக்கு ஒவ்வாமையும் சலிப்புமே இருக்கும். அடையாளமற்ற ஒரு சாட்சியாகவே அவன் தன்னை நினைத்துக்கொள்வான்.

அவனுடைய நிலையழிவுகள், கொந்தளிப்புகள் அனைத்தும் புனைவுலகில் மட்டுமே வெளிப்படும். நேரடியாக அல்ல, பிறரில், பிறிதென. அதை அவ்வண்ணம் தன்னிலிருந்து அகற்றுவதெப்படி என்று அறிந்தவனே கலைஞன். அவ்வண்ணம் தன்னிலிருந்து அகற்றுவதன் பெயர்தான் கலை

ஒரு படைப்பாளியின் அகத்தை ஒரு படைப்பில் நேரடியாக உணரமுடிந்தால் அவன் எளிமையான படைப்பாளி என்று முடிவுசெய்யலாம். அதை தனக்கு வெளியே கொண்டுசெல்லும் ஆற்றலே பெரும்படைப்பாளிகளின் இயல்பு. அதை வரலாற்றில் மானுடப்பெருக்கில் அவன் விரித்துக் காட்டிவிடுகிறான். ஆகவே புனைவில் அது முற்றிலும் பிறிதொன்றாக மாறி, வரலாற்றில் இருந்தும் பண்பாட்டிலிருந்தும் வெளிப்படலாம். வெவ்வேறு மானுடரில் இருந்து வெளிப்படலாம். அந்நிலையிலேயே அது கலையென்று ஆகியிருப்பதாகப் பொருள்.

பெரும்படைப்பாளியின்  புனைவுலகில் அவன் கண்ட தீமையின் தூலங்கள் , அதாவது அனைவரும் அறிந்த தளங்கள் அனைத்தும், முழுமையாக வடிகட்டப்பட்டு அதன் கூர்முனை மட்டுமே வெளிப்பாடு கொண்டிருக்கும். தூலங்கள் மேல் சலிப்பு என்பது கலைஞனின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. ஓர் உடலுறவை திகட்டத்திகட்ட வர்ணிப்பவன் கலைஞன் அல்ல. அதில் ஓரு நுண்ணிய தருணம் சொல்லப்படவேண்டும் என்றால் அதை மட்டும் கூர்மையாக சொல்பவனே கலைஞன்.

ஆகவே சீரிய கலைப்படைப்பு என்பது தீமையின் தூலங்களை கண்டு கொந்தளிக்கும் எளிய வாசகர்களுக்குரியது அல்ல. நுண்முனைகளை மட்டுமே தேடும் சிறந்த வாசகர்களுக்கு மட்டுமே உரியது. பரபரப்பாகப் பேசப்படும் எழுத்துக்களுக்கும் பேரிலக்கியங்களுக்குமான வேறுபாடென்பது இதுதான்.

இங்குதான் சிக்கல் வருகிறது. படைப்பாளி தன் காமகுரோதமோகங்களை தன்னில் இருந்து அகற்றுவதில் கலையினூடாக வெற்றிபெறுகிறான். அவன் அகத்தில் இருந்து வெளியேறி அவை புனைவு என்னும் மாபெரும் மேடையில் ஆடிநிறைவுறுகின்றன. அவற்றுக்கு அப்பால் அவன் விடுதலைகொண்டவனாக, வெறும் சாட்சியாக நின்றிருக்கிறான். அந்நிலையில் அவன் நேர்நிலைகொண்டவனாக தோற்றமளிக்கிறான். அவனுக்கும் தத்துவஞானிக்கும் மெய்ஞானிக்கும் வேறுபாடே தெரிவதில்லை.

ஒரு தத்துவஞானியை விட, மெய்ஞானியை விட வாழ்க்கையின் உண்மைகளை பிரபஞ்சமெய்மைகளை எழுத்தாளன் மேலும் அழகாகச் சொல்லவும் முடியும். ஏனென்றால் அவன் மொழிவல்லுநன். ஆகவே அவன் தத்துவஞானியைவிட தத்துவஞானியாக, மெய்ஞானியைவிட நன்றாக வெளிப்படும் மெய்ஞானியாக தோற்றமளிக்கமுடியும்.

ஆனால் அவன் வேறு, அவன் எந்நிலையிலும் எதிர்விசைகளைச் சார்ந்தவன். அதையே மீளமீள வலியுறுத்துகிறேன்.தத்துவஞானியாக மெய்ஞானியாக அவன் தோற்றமளிக்கலாகாது, பிறர் அவ்வண்ணம் எண்ண இடமும் அளிக்கலாகாது. அது பிழையானது, தனக்குரியதல்லாத ஒன்றை கோருவது.

ஆகவே திரும்பத்திரும்பச் சொல்கிறேன். என்னைப்பற்றி மட்டுமல்ல எழுத்தாளர்களாகிய பிறரைப்பற்றியும். எழுத்தாளனாக வாழ்க்கை பற்றி, தத்துவம் பற்றி, மெய்ஞானம் பற்றிகூட பேசலாம். ஆனால் எழுத்தாளனாக நின்று மட்டுமே பேசவேண்டும்.

தத்துவஞானியை விட, மெய்ஞானியை  விட இலக்கியவாதி ஒரு படி குறைவானவனா? ஆமாம், ஐயமே இல்லாமல். அப்படியெல்லாம் இல்லை என எழுத்தாளன் தருக்கிக்கொள்ளலாம், ஆனால் அவன் எதிர்நிலையில் இருத்தல்கொண்டவன் என்பதனால் எந்நிலையிலும் அப்படித்தான். அது வியாசனுக்கும் கம்பனுக்கும்கூட பொருந்துவதே.

தத்துவஞானியிலும் மெய்ஞானியிலும் அமையும் நேர்நிலை நிறைவு ஒரு பெருங்கொடை. அதை தன் புனைவின் உச்சியில் கலைஞன் நிகழ்த்திக்காட்டிவிடமுடியும். காட்டியதுமே அவன் கீழிறங்கி தன்னியல்புக்கு மீளவும் வேண்டியிருக்கும்.

ஆகவேதான் தாந்தேக்கு செய்ண்ட் தாமஸ் அக்வீனாஸ் தேவைப்பட்டார். பாரதிக்கு நிவேதிதையும் அரவிந்தரும் தேவைப்பட்டனர். கலைஞன் சென்றமர ஞானியின் காலடி என்றும் தேவைப்படுகிறது.

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2021 10:35

கதைகள்- கடிதங்கள்

வணக்கம் ஜெ,

தவளையும் இளவரசனும்.

மனிதர்கள் எப்போதும் தன் ஆடி பாவைகளையே தேடி அடைகிறார்கள் அவர்களுடன் பொறுந்தி போகிறார்கள், பிறகு அதையே பேசி பேசி சலித்து பின் விலகி புதியவை அதே தனது வட்டத்திற்குள் தனது குணநலன்னுடன், தனது வாழ்க்கை வட்டத்துடன் ஒத்ததை அடைவார்கள் முடிவில்லா ஆட்டம் இது. இதில் இருந்து விலகி முற்றிலும் புதியவைகளை அடைபர்களும் உண்டு அவர்களே இந்த கதையில் வருபவர்கள். மீ தங்கள் இக்குழுவில் பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து சொல்வது நம்ம அதிர்ச்சியாக இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை வட்டம். புதிய மனிதனை நம் சந்திக்கையில் முதல் சொல்லிலேயே நான் உனக்கு சலைத்தவன் இல்லை என்று காட்டியாக வேண்டும் இல்லையெனில்  அவரே நம் மீது ஆதிக்கம் செலுத்துவார் இதுவே பெண்கள் வாழ்வில் நிகழ்கிறது. பொருத்தம் இல்லாதவைகள் இணையும் போதே வாழ்க்கை சுவைமிக்கதாக ஆகிறது.

வேட்டு.

புதிய புதிய தந்திரங்கள் உடன் ஆடுவதே வாழ்க்கை, வாழ்வும் சர்க்கஸ் கூடாரங்களில் இணையானது தான் போலும்..

ஏழுமலை.

 

அன்பு ஆசானுக்கு,

நலம், நலமறிய ஆவல். என்  முதல் வாசிப்பு அனுபவ கடிதம் இது.

சக்தி ரூபேண! – முந்தைய  இரு கதைகளைவிட வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை கொடுத்ததெனவேச் சொல்வேன்.

உழிச்சில் வைத்தியத்திற்கு  எல்லா வடிவப் பொம்மை உடல் தான் எத்தனை  பொருத்தவுடல். எல்லா சொல்கிறமாதிரி லட்சிய உடலல்லவா அது? உயிருள்ள தெய்வமல்லவா அவள் கொள்ளை அழகு பொம்மை உடல்.

ஸ்ரீ  பயப்படும்படியாக வைத்தியசாலையில் பொம்மை வடிவவுடலை தவறாக பயன்படுத்தவோ, திருடி போகவோ வாய்ப்புள்ளது என்னும்  நிலை தான் எத்தனை  கேவலமானமாக ஒன்றாக உள்ளது. “இங்குள்ள வழக்கம் அப்படி”  – எப்படியான நிலை இங்கே!?

எல்லா தொலைந்து போய் ஸ்ரீ எல்லாயிடங்களுக்கும் தேடிச் செல்லச் செல்ல, மனம் உண்மையாகவே பதைப்பதைக்கிறது. எல்லாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் திரும்பி வந்திடவேண்டுமென ஆசைகொள்கிறது. ஊரில் எத்தனைப்  பேருக்குத்தான் அவளைத் தெரிந்திருக்கிறது. காமத்திற்காக அவள் உடலை அனுபவித்து கொன்றச்  சிதைத்தாலும் எல்லாவுக்கு  என்றும்  அழிவில்லை. உயிருள்ள உணர்ச்சியாக தேவியானவள் அவள் சக்தி ரூபமாய் வேறு  வடிவத்தில் உறைந்திருக்கிறாள், உறைந்திருப்பாள் என்றும்!

சிவராஜ்

பின்குறிப்பு: கதைகளின் ஊடுருவலாக நரம்புப் புள்ளிகள் அழுத்தம், வியர்வை வெளியேற்ற வழிகள், உழிச்சில் வைத்தியமுறை, பாகன் மத மந்திரங்கள், தைலவகைகள், ஆன்மீக கதைகள் (நிறைய விடுபட்டிருக்கலாம் குறிப்பிட இங்கு – 3 கதை மறுவாசிப்புகள்  தேவை எனக்கு :-)) என அநேக தகவல்களையும், நல்ல தமிழ்வார்த்தைகளையும்  தொடர்ந்து எங்களுக்கு கற்றுக்கொடுத்து  வருவதற்கு நன்றிகள் பல.

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் இவ்வருடம் ஜூன் மாதம் 22ம் தேதியன்று உள்நாடடுக் கடித உறையில் எழுதிய கடிதத்தின் நகல் இது.

நான் உங்களின் புதிய வாசகன். நவம்பர் 2019 முதற்கொண்டு உங்கள் தளத்தை வாசித்து வருகிறேன். மகாபாரதம் வாசிக்கவே வந்தேன். வெண்முரசு முழுவதும் வாசிததேன். மீண்டும் மீள் வாசிப்பு செய்தல் வேண்டும். இக்கடிதமானது ஆமை சிறுகதை குறித்து மட்டுமே. முதல் முறையாக நூறு நாற்கலிகள் வாசித்த போது எனக்குத் தோனறியது என்னவென்றால் காப்பானின் (தர்மபாலின்) தாய் போன்ற கதாபாத்திரத்தை யாராவது உலக இலக்கியத்தில் எழுதி இருப்பார்களா என்ற ஐயம் தான். நான் அறிந்த வரையில் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றியது. உலக இலக்கியம் குறித்து எழுதும் அளவுக்கு நான் வாசிப்பு அனுபவம்  கொண்டவனல்ல.  நான் வாசித்த வரையில் தமிழில் யாரும் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை தங்கள் எழுத்தில் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. | நீங்களே மீண்டும் ஆமைக் காரி மூலம் நிகரான கதாபாத்திரத்தை படைத்துள்ளீர்கள்.

ஆமைக்காரி எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட சூழலில் தன் பிள்ளைக்காக போராடி வாழ்வது மிக அற்புதமாக சொல்லப்பட்டுள்ளது கதையின் கடைசி வரிகள் கதையின் கருவினை மிகச் சுருக்கமாக சொல்லி முடிகிறது. |(ஆமைக்க சக்தி அதாக்கும் மக்கா அதுக்கு வேகமில்லை ஆனா விட்டுக் குடுக்காத பிடிவாதம் உண்டு) பனையின் பயன்களையும், கொரம்பை எனும் சொல்லையும் கதை பனையில்லா பகுதி மக்களுக்கு  அறிமுகப்படுத்தி மிக நல்ல வாசிப்பபவனுபவத்தை  வழங்குகிறது.

நூறு நாற்காலிகள் மற்றும் ஆமை கதாபாத்திரத்தை நாம் வெண்முரசு நாவல் தொகையிலும் காணலாம். நீர்க்கோலம் நாவலில் பேரரசி தமயந்தி சேதி நாட்டு அல்லங்காடி வீதிகளில் பிச்சியாக பெருச்சாளிகளுடன் உணவு தேடி இரவுகளில் அலைந்த போது ஊழின் பெருவலி கண்முன் நிகழ்ந்தது. தேவயானிக்கு நிகரான பேரரசி ஒரு நாயாடிக் குறவர் பெண்மணியின் வாழ்க்கையை வாழ நேர்ந்த சூழ்நிலையை உணரும் போது வாழ்வின் நிலையின்மையும், வெறுமையும் விளங்கியது. நல்ல சிறுகதைக்கு நன்றி.

என்றென்றும் நன்றியுடன்
V. தேவதாஸ்

100. வரம் [சிறுகதை] 99. முதலாமன் [சிறுகதை] 98. அருகே கடல் [சிறுகதை] 97. புழுக்கச்சோறு [சிறுகதை] 96.  நெடுந்தூரம் [சிறுகதை] 95. எரிமருள் [சிறுகதை] 94. மலைவிளிம்பில் [சிறுகதை] 93. அமுதம் [சிறுகதை] 92. தீவண்டி [சிறுகதை] 91. பீடம் [சிறுகதை] 90. சிந்தே [சிறுகதை] 89. சாவி [சிறுகதை] 88. கழுமாடன் [சிறுகதை] 87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை] 86. தூவக்காளி [சிறுகதை] 85. சிறகு [சிறுகதை] 84. வண்ணம் [சிறுகதை] 83. ஆபகந்தி [சிறுகதை] 82. ஆமை [சிறுகதை] 81. கணக்கு [சிறுகதை] 80. சுக்ரர் [சிறுகதை] 79. அருள் [சிறுகதை] 78. ஏழாவது [சிறுகதை] 77. மணிபல்லவம் [சிறுகதை] 76. மூத்தோள் [சிறுகதை] 75. அன்னம் [சிறுகதை] 74. மலையரசி [சிறுகதை] 73. குமிழி [சிறுகதை] 72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை] 71. செய்தி [சிறுகதை] 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1 69. ஆகாயம் [சிறுகதை] 68. ராஜன் [சிறுகதை] 67. தேனீ [சிறுகதை] 66. முதுநாவல்[சிறுகதை] 65. இணைவு [சிறுகதை] 64. கரு [குறுநாவல்]- பகுதி 1 64. கரு [குறுநாவல்]- பகுதி 2 63. ‘பிறசண்டு’ [சிறுகதை] 62. நிழல்காகம் [சிறுகதை] 61. லாசர் [சிறுகதை] 60. தேவி [சிறுகதை] 59. சிவம் [சிறுகதை] 58. முத்தங்கள் [சிறுகதை] 57. கூடு [சிறுகதை] 56. சீட்டு [சிறுகதை] 55. போழ்வு [சிறுகதை] 54. நஞ்சு [சிறுகதை] 53. பலிக்கல் [சிறுகதை] 52. காக்காய்ப்பொன் [சிறுகதை] 51. லீலை [சிறுகதை] 50. ஐந்து நெருப்பு[ சிறுகதை] 49. கரவு [சிறுகதை] 48. நற்றுணை [சிறுகதை] 47. இறைவன் [சிறுகதை] 46. மலைகளின் உரையாடல் [சிறுகதை] 45. முதல் ஆறு [சிறுகதை] 44. பிடி [சிறுகதை] 43.. கைமுக்கு [சிறுகதை] 42. உலகெலாம் [சிறுகதை] 41. மாயப்பொன் [சிறுகதை] 40. ஆழி [சிறுகதை] 39. வனவாசம் [சிறுகதை] 38. மதுரம் [சிறுகதை] 37. ஓநாயின் மூக்கு [சிறுகதை] 36. வான்நெசவு [சிறுகதை] 35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை] 34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] 33. வான்கீழ் [சிறுகதை] 32. எழுகதிர் [சிறுகதை] 31. நகைமுகன் [சிறுகதை] 30. ஏகம் [சிறுகதை] 29. ஆட்டக்கதை [சிறுகதை] 28. குருவி [சிறுகதை] 27. சூழ்திரு [சிறுகதை] 26. லூப் [சிறுகதை] 25. அனலுக்குமேல் [சிறுகதை] 24. பெயர்நூறான் [சிறுகதை] 23. இடம் [சிறுகதை] 22. சுற்றுகள் [சிறுகதை] 21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை] 20. வேரில் திகழ்வது [சிறுகதை] 19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] 18. தங்கத்தின் மணம் [சிறுகதை] 17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை] 16. ஏதேன் [சிறுகதை] 15. மொழி [சிறுகதை] 14. ஆடகம் [சிறுகதை] 13. கோட்டை [சிறுகதை] 12. விலங்கு [சிறுகதை] 11. துளி [சிறுகதை] 10. வேட்டு [சிறுகதை] 9. அங்கி [சிறுகதை] 8. தவளையும் இளவரசனும் [சிறுகதை] 7. பூனை [சிறுகதை] 6. வருக்கை [சிறுகதை] 5. “ஆனையில்லா!” [சிறுகதை] 4. யா தேவி! [சிறுகதை] 3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை] 2. சக்தி ரூபேண! [சிறுகதை] 1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2021 10:33

பழுவேட்டையர் கதைகள்

அன்புள்ள ஜெ,

வண்ணதாசன் விருது விழா சமயத்தில் நாஞ்சில்நாடன் பேசும் போது சொன்னார் தமிழ் இலக்கியவாதிகளின் உயிர் மிக சன்னமானது சைக்கிள் டயர் வெச்சு எத்தி கொன்னா கூட போயிரும் . அதிலிருந்து உருவாகி வந்தது தான் இந்த பழுவேட்டையர் கிடாரம் கொண்டான் கதைகள். கும்பமுனி தவசு பிள்ளையின் வேறு நீட்சி என சொல்லலாம். உங்க மனநிலைக்கு இது உதவக்கூடும் என்பதால் இவற்றில் சிலவற்றை அனுப்புகிறேன்.

பழுவேட்டையர் கதைகள் 

https://padhaakai.com/2017/02/12/the-nine/

https://padhaakai.com/2017/07/30/the-ideal-literary-reader/

https://suneelwrites.blogspot.com/2020/03/blog-post_17.html

https://suneelwrites.blogspot.com/2019/08/blog-post.html

http://kanali.in/maperum-novel-kuraitheerppu-mukaam/

https://padhaakai.com/2017/05/28/so-what/

அன்புள்ள சுனில்

இலக்கியத்திற்குள் இலக்கியத்தைப் பகடிசெய்யும் கதைமாந்தர்கள் நவீன இலக்கியத்தின் சிறந்த உருவகங்களில் ஒன்று. வழக்கம்போல புதுமைப்பித்தனே வழிகாட்டி. இலக்கிய மம்மநாயனார் புராணம் உட்பட.

அது இலக்கியத்தை கொஞ்சம் எளிதாகப் பார்த்துக்கொள்ள வாசகர்களுக்கு உதவுகிறது. கும்பமுனிக்கு ஜீவா வரைந்தளித்த ஓவியம் ஒரு முகம் அளித்தது. அதைப்போல ஒரு முகம் பழுவேட்டரையருக்கும் அமையலாம்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2021 10:31

நீலம்- வாசிப்பனுபவம்- மரபின் மைந்தன் முத்தையா.

வெண்முரசு நாவல் வரிசையில் கிருஷ்ணார்ப்பணமாய் மலர்ந்திருக்கும் நாவல் நீலம்.ஆயிரம் ஆயிரம் மயிற் பீலிகள் கண்களாய் விரிய கண்ணனைக் கண்டது போன்ற அனுபவத்தை இந்த நாவல் ஏற்படுத்துகிறது.மகாபாரதத்திலும் பாகவதத்திலும் நடமாடக் கூடிய ஒவ்வொரு பாத்திரத்தையும் அதன் விஸ்வரூப நெருக்கத்தில் விவரிப்பது வெண்முரசு நாவல்களின் தனித்தன்மை என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.அப்படி சில விஸ்வரூபங்கள் நீலம் நாவலிலும் வெளிப்படுகின்றன. கண்ணனுக்கு  ஒன்பதாண்டுகள் முன்னேயே பிறந்து கண்ணன் பித்துகொண்டு அவனைக் குழந்தைப்பருவம் முதல் கொஞ்சி எடுத்து அவனுக்கு எல்லாமுமாய் இருந்த ராதை இந்த நாவலின் முதன்மைப் பாத்திரம். நீலம்- வாசிப்பனுபவம்- மரபின் மைந்தன் முத்தையா. ———————————————————————————————– Feeling Blue- Remitha Satheesh
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2021 10:30

January 17, 2021

தமிழ் வணிக எழுத்தின் தேவை

தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு

அன்புள்ள ஜெ

உங்கள் வலைப்பதிவில் பல பதிவுகளில் பொழுது போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளைக்  கடந்து  இலக்கிய வாசிப்பிற்கு வருவது  பற்றி நீங்களும், பிறரும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

வாசிப்புத்தேடல் உள்ளவர்களைப் பொறுத்த அளவில் (என்னைப்போல் குறைவான வாசிப்பு உள்ளவர்களுக்கும் ) அது உண்மைதான். தேடல் உள்ளது. தொடர்கிறது. முன்பு விழுந்து விழுந்து படித்த பல படைப்புகள், மற்றும் சில எழுத்தாளர்கள் பக்கமே போக நாட்டமில்லை.

இப்பதிவுகளில் சுஜாதா, பாலகுமாரன் பெயர்கள் அடிக்கடி (எள்ளலாக ) சுட்டிக்காண்பிக்கப் படுவதைப் பார்த்திருக்கிறேன்.ஏற்கனவே படித்துக் கடந்து வந்தவர்கள் சரி. இது புதிய வாசகர்கள் இவ்வகை எழுத்தாளர்கள் அனைவரையும்  முற்றிலும் ஒதுக்கி வைக்கத்  தூண்டுவது அல்லவா.

வித்தியாசமான நடைகளின் வாசிப்பனுபவம்  , மற்றும் சில குறிப்பிட்ட நல்ல அம்சங்களை ரசிப்பது, இவையோடு ஒப்பீட்டு  அனுபவத்துக்கும் உதவுமே. (தேர்ந்து எடுத்த படைப்புகள் மூலம் ). உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம்.

சில (சுஜாதா ) உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

1. சுஜாதா ஒரு ஆணாதிக்கவாதி எழுத்தாளர் என்பதான அபிப்பிராயம் முன்பு உலவியதுண்டு. அவர் எழுதிய “ஓடாதே” எனும் நாவல் படித்திருக்கிறேன். புதிதாகக் கல்யாணம் ஆகி தேனிலவுக்குப் புறப்படும் ஒரு தம்பதியில் கணவன் ஒரு சராசரி இளைஞன். மனைவி மிகுந்த தன்னம்பிக்கை மிகுந்த இளம்பெண். முழுக்க அவைளை சுற்றிச் சுழலும் நாவல். அவர்கள் பயண ஆரம்பத்தில் இருந்து எதிர் கொள்ளும் எதிர் பாராத சிக்கலான பிரச்சனைகளைத் தன் அசட்டுக் கணவனையும் அரவணைத்துக்கொண்டே சாதுர்யமாக சமாளிப்பது பற்றிய மிக வித்தியாசமான நாவல். கணேஷ், வஸந்த் இறுதியில் கொஞ்சமாக வருவார்கள்.

2. சுஜாதாவின் “வைரங்கள்” எனும் நாவலில்  ஒரு அத்தியாயத்தில் பிரச்சினையில் தவிக்கும் ஒரு ஏழைத்  தம்பதியோடு பயணப்படும் அவர்களின் காது கேளாத  ஊமைக்குழந்தையின் பார்வையில் அந்த அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும். பல வருடங்களுக்கு முன் வாசித்தது. அப்போது என் மனதை மிகவும் சலனப்படுத்தியது. இப்போதும்  மனதின் முலையில் இருக்கிறது.

பொழுது போக்கு எழுத்தாளர்கள் என வகைப் படுத்தப்பட்டவர்களின் படைப்புகளில் வாசிக்கத்தகுந்தவற்றை (குறைந்ததாயினும்) சுட்டிக் காட்டுவதும் பரந்த இலக்கிய வாசிப்பின் ஒரு பகுதி ஆகாதா.

அன்புடன்

ரமேஷ் கிருஷ்ணன்

அன்புள்ள ரமேஷ்கிருஷ்ணன்,

நான் இலக்கியத்திற்குள் நுழைந்தபோது பொழுதுபோக்கு எழுத்து அல்லது வணிக எழுத்து அல்லது பொதுவாசிப்பு எழுத்து என்பது இலக்கியச் சூழலில் கிட்டத்தட்ட தீண்டத்தகாத ஒன்றாக ஒதுக்கப்பட்டிருந்தது. அது புதுமைப்பித்தன், க.நா.சு முதல் சுந்தர ராமசாமி வரை மூன்று தலைமுறைகளாக முதிர்ந்து வந்த பார்வை. அதன் தீவிரம் உச்சத்திலிருந்தபோது நான் எழுதவந்தேன்

எண்பதுகளின் இறுதியில் வணிக எழுத்தை நிராகரிக்கும்போக்கு உச்சத்திலிருந்தமைக்கு ஒரு காரணமும் இருந்தது. இன்று வணிக எழுத்தாளர்களை எவரும் இலக்கியமேதைகள் என்று சொல்வதில்லை. ஆனால் அன்று அகிலன் ஞானபீட விருது பெற்றிருந்தார். கோவி.மணிசேகரன் ஞானபீடம் தவிர எல்லா விருதுகளையும் பெற்றிருந்தார். அவர்களே இலக்கியத்தின் உச்சங்கள் என அவ்வாசகர்கள் நம்பினர்.

ஐம்பது அறுபதுகளில் தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன் போன்ற இலக்கியவாதிகள் வணிக இதழ்களில் எழுத வாய்ப்பளிக்கப்பட்டனர். ஆனால் அன்றைய வணிக இலக்கிய நட்சத்திரங்களுக்கு முன் அவர்கள் ஒளி குன்றிப்போனார்கள்

பெரிய இதழ்களில் வாய்ப்பு கிடைத்தாலும் அங்குள்ள வாசகர்களிடம் இலக்கியமேதைகளால்கூட உரையாட முடியாது என்று நிரூபணமாயிற்று. அந்த வாசகன் அவனுக்கு பழகிய சுவையை அவர்களிடம் எதிர்பார்க்கிறான். அவனுக்குப் பிடித்ததுபோல இலக்கிய எழுத்தாளன் எழுதவேண்டுமென கோருகிறான். இலக்கிய ஆசிரியன் உருவாக்கும் உலகுக்குள் கொஞ்சம் முயற்சி எடுத்து நுழைய அவனால் இயலவில்லை

இக்காரணத்தால் வணிக இலக்கியம் என்பது முற்றிலும் வேறு, அதற்கும் இலக்கியத்திற்கும் தொடர்பே இருக்கவியலாது என்னும் எண்ணம் உறுதிப்பட்டது. சுந்தர ராமசாமிகூட தொடக்கத்தில் கல்கியில் எழுதியிருக்கிறார். ஆனால் எண்பதுகளில் வணிக எழுத்துடன் எந்த தொடர்பையும் வைத்துக்கொள்ளக்கூடாது, எவ்வகையிலும் அதனுடன் சமரசம் செய்துகொள்ளக்கூடாது, இலக்கியம் தூயவடிவிலேயே முன்வைக்கப்படவேண்டும் என்னும் கருத்து ஓங்கியிருந்தது.அதன் முன்னணிக்குரலாக அவர் திகழ்ந்தார்.

வணிக எழுத்தை வாசிப்பவர்கள் வேறொரு அறிவுப்புலத்தில் இருக்கிறார்கள், அவர்களை அங்கிருந்து இலக்கியத்தின் அறிவுப்புலத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்று சுந்தர ராமசாமியின் தலைமுறை நம்பியது. அதற்கு முதலில் தாங்கள் வாசித்துக்கொண்டிருப்பவை இலக்கியங்கள் அல்ல என்று அந்த வாசகர்கள் உணரவேண்டும். இலக்கியம் என இன்னொன்று உள்ளது என அவர்கள் தெளிவடையவேண்டும். அப்போதுதான் அவர்கள் வணிக எழுத்தின் புலத்திலிருந்து இலக்கியப்புலத்திற்கு வரமுடியும்.

ஆகவே வணிக எழுத்தின் புலத்தை ஒட்டுமொத்தமாகவே நிராகரிக்கும் போக்கு உருவாகியது. அதை முற்றிலும் ஒதுக்கி அதற்கு மாறாக இலக்கியத்தை முன்வைக்கும் நிலைபாடு எடுக்கப்பட்டது. சுந்தர ராம்சாமி, பிரமிள், வெங்கட் சாமிநாதன், வேதசகாயகுமார் என அன்று எழுதிக்கொண்டிருந்த அத்தனை விமர்சகர்களும் இதில் ஒரே நிலைபாடுகொண்டிருந்தனர்

வணிக எழுத்து மிகப்பெருவாரியாக வாசிக்கப்பட்டது. ஒருசெயல் பெரும் எண்ணிக்கையில் செய்யப்படும்போது அதற்கு  ‘பெருந்திரள் மனநிலை’ என ஒன்று உருவாகிவிடுகிறது. பெருந்திரள் தன்னை தொகுத்துக்கொண்டே செல்லும் தன்மைகொண்டது. தொகுக்கத் தொகுக்க அது ஆற்றல்மிக்கதாக ஆகும். காலப்போக்கில் ஒற்றை உருவாக அது மாறிவிடும். ஒருவரை கொண்டாடுவதென்றால் அத்தனைபேரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும்.பல்லாயிரம்பேர் கொண்டாடும் ஒருவரை எவரும் மறுக்கமுடியாது.

அப்படித்தான் அரசியலில் தலைவர்களும் சினிமாவில் நாயகர்களும் உருவாகிறார்கள். பன்முக சுவைகள் பலவகைப்போக்குகள் உள்முரண்பாடுகள் உள்விவாதங்கள் பெருந்திரள்சூழலில் உருவாவதில்லை. ஒரு காலகட்டத்திற்கு ஓரிரு நட்சத்திரங்கள் எழுந்து ஒளிர்வார்கள். எண்பதுகளில் சுஜாதா ,பாலகுமாரன்.

அவ்வாறு எழுபது எண்பதுகளில் வணிக எழுத்து ஒற்றைப்பேரமைப்பாக ஆகிவிட்டிருந்தது. பல கதையாசிரியர்கள் வழியாக ஒரே உள்ளம் அத்தனை கதைகளையும் எழுதுவதுபோல. அதை வாசிப்பவர்களும் ஒட்டுமொத்தமாக ஒற்றை வாசகமனம்தான். உண்மையில் அந்த ஒற்றை வாசகமனம்தான் முதலில் உருவாகிறது. பல்லாயிரம் மனிதர்களின் மனங்கள் இணைந்த அந்த பேருருவ மனம் ஒரு தெய்வம்போல. அது எழுத்தாளனிடம் ஆணையிடுகிறது, அது கோருவதை அவன் எழுதியாகவேண்டும்.

இலக்கியவாதி அந்தப் பேருருவனிடம் சென்று உரையாடமுற்படுகிறான். அதை தன்னை நோக்கி இழுக்க முயல்கிறான், அது முடிவதில்லை. அழகிரிசாமி அதில் அடைந்த தோல்வியெல்லாம் மிகப்பரிதாபகரமானவை.ஆகவேதான் அந்தப் பேருருவனை அப்படியே விட்டுவிலகி வந்துவிடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. அந்த ராட்சதனுடன் தனிமனிதர் போரிடவே முடியாது. கலாச்சார இயக்கங்களால் மட்டுமே அவனை எதிர்க்கமுடியும்.

நான் இலக்கியத்திற்குள் நுழைந்தபோது இலக்கியத்திற்குரிய அந்த வேகத்தை முன்னோடிகளிடமிருந்து பெற்றுக்கொண்டேன். அதற்குமுன்பு பிரபல ஊடகங்களில் கிட்டத்தட்ட நூறுகதைகள் வரை எழுதியிருந்தேன். பின்னர் பேரிதழ்களை முழுக்க நிராகரித்து சிற்றிதழ்களில் மட்டும் எழுதலானேன். என் முதல்தொகுதியின் முன்னுரையிலேயே அதை குறிப்பிட்டிருந்தேன்.வணிக எழுத்தை இடதுகாலால் எற்றித்தள்ளுவேன் என்று ஒருவகை அறைகூவலாக. அதை அன்று சுஜாதா அவருடைய மதிப்புரையில் மெல்லிய கிண்டலுடன் குறிப்பிட்டிருந்தார்

ஆனால் இலக்கியவிமர்சனம் எழுதியபோது வணிகஎழுத்து என்னும் புலத்தில் உருவான குறிப்பிடத்தக்க ஆக்கங்களை சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஜெயகாந்தன் பொதுவான இதழ்களில் எழுதியமையாலேயே இலக்கியவாதிகளால் ஒதுக்கப்பட்டார். அவர் தமிழின் முதன்மை இலக்கியவாதிகளில் ஒருவர் என நான் திரும்பத்திரும்ப எழுதினேன். சுஜாதாவின் சிறுகதைகள் நாடகங்கள் பற்றி குறிப்பிட்டேன்

வணிக எழுத்தின் புலத்திற்குள் வெளியான முக்கியமான நூல்களின் பட்டியலையும் என் விமர்சனச்செயல்பாட்டின் ஒரு பகுதியாக வெளியிட்டிருக்கிறேன். அவற்றை சிற்றிதழ்சார்ந்த உலகில் கவனிக்கவைக்க என்னால் முடியவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். அப்பட்டியல் அப்படியேதான் இருக்கிறது

ஆனால் ஒன்றை வலியுறுத்தவிரும்புகிறேன். வணிக எழுத்தின் களத்திற்குள் சுவாரசியமான படைப்புக்கள் உண்டு. அவற்றை அவ்வப்போது நான் சுட்டிக்காட்டி எழுதுவதுமுண்டு. ஆனால் அவை வணிகப்படைப்பு என்னும் பொது இயல்புக்குள் வருகின்றனவே ஒழிய இலக்கியத்திற்குள் வரவில்லை. வணிக எழுத்தில் சுவராசியமான புதிய களம் உடையவை, சில நல்ல வாழ்க்கைத்தருணங்கள் கொண்டவை உண்டு. ஆனால் ஒட்டுமொத்தமான இயல்பை நான் மேலே சொன்ன ஒற்றைப்பேருருக்கொண்ட வாசகனே தீர்மானிக்கிறான்.

தமிழ்ச் சிற்றிதழ்ச்சூழலில் ஒரு  ‘சோனித்தனம்’ குடியேற அந்த சிற்றிதழ்சார்ந்த ‘இலக்கியப்பிடிவாதம்’ வழிவகுத்தது. ஒரு குறிப்பிட்டவகை எழுத்து, ஒரு குறிப்பிட்டவகை மனநிலை மட்டுமே இலக்கியம் என்னும் புரிதல் இங்கே உருவானது. இன்றைக்கும் பல மொக்கைகள் இலக்கியம் என்றால் அது தன்வரலாற்றுக்குறிப்பு மட்டுமே என நம்பிக்கொண்டிருக்கின்றன. எழுத்தை எழுத்தாளனின் வாழ்க்கையாகவே பார்க்கின்றன.

நேரடி வாழ்வனுபவங்களை யதார்த்தமாக எழுதுவது மட்டுமே இலக்கியம் என்று எண்ணிக்கொண்ட விமர்சகர்களும் பலர் உண்டு. ஆகவே எந்தப்படைப்பையும் அப்படைப்பாளியின் தனிப்பட்ட அனுபவ உலகுக்கு நெருக்கமாக உள்ளதா என்று பார்த்து மதிப்பிட்டனர். அப்படைப்பு அந்த அனுபவங்களின் புறவுலகுக்கு எந்த அளவுக்கு அணுக்கமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு யதார்த்தமானது என்று கணித்தனர்.

’யதார்த்தம்’ என்பதும் ’கலை’ என்பதும் சமமான சொற்களாக புழங்கலாயின. யதார்த்தம் என்பது ‘நம்பக’மானதாக இருக்கவேண்டும் என்ற பிடிவாதம் நோயுற்ற சிற்றிதழ் வாசகர்களிடையே இருந்தது. அதாவது இலக்கியம் என்பது வாசிப்பவரும் ஏற்கனவே அறிந்து, உண்மைதானா என்று பரிசீலித்து ஏற்கத்தக்கதாக இருக்கவேண்டும் என நம்பப்பட்டது

கொஞ்சம் கற்பனை இருந்தால்கூட ‘கற்பனையானது’ என்று சொல்லி படைப்பு நிராகரிக்கப்பட்டது. கொஞ்சம் உணர்வுவெளிப்பாடு இருந்தால்கூட ‘செண்டிமெண்டல்’ என விலக்கப்பட்டது. அதாவது இலக்கியத்திலிருந்து இலக்கியச்செயல்பாட்டின் அடிப்படையான கற்பனையையும் உணர்ச்சிகரத்தையும் அகற்றும் முயற்சி நடைபெற்றது.

இதன் விளைவாக மிகமிக சுவாரசியமற்ற தட்டையான யதார்த்தச்சித்தரிப்புகள் இலக்கியத் தகுதி பெற்றன. உணர்ச்சிகள், காட்சிநுட்பங்கள், மொழிவளம், வடிவக்கட்டமைப்பு, நாடகீய உச்சங்கள், சிந்தனைகள், தரிசனங்கள் என இலக்கியத்துக்கு இன்றியமையாதவை என உலகமெங்கும் கருதப்பட்ட எந்த இயல்பும் அற்றவை அவை. அவ்வாறு எண்பது தொண்ணூறுகளில் கொண்டாடப்பட்ட வெற்று யதார்த்தச் சித்திரங்கள் பல உண்டு.

இதை நிராகரித்தாகவேண்டிய சூழல் எண்பதுகளின் இறுதியில் நான் எழுதவந்தபோது இருந்தது. இலக்கியம் என்பது பலவகையான எழுத்துமுறைகள் கொண்டது. யதார்த்தவாதம் அதில் ஒருவகை அழகியல் மட்டுமே. புறவயமான யதார்த்ததுடன் அணுக்கமாக நிலைகொள்ளும் இயல்புவாதம் அதைவிட குறுகலான ஓர் அழகியல்முறை. அந்த இடுங்கின பாதை மட்டுமே இலக்கியத்தின் வழியாக இருக்கவேண்டியதில்லை என்று நாங்கள் சொன்னோம்

துப்பறியும்கதை, பேய்க்கதை, மாயாஜாலக்கதை, சாகசக்கதை என இலக்கியம் எல்லா கதைவடிவங்களையும் கொள்ளலாம். உலக இலக்கியத்தில் இதில் ஒவ்வொன்றிலும் செவ்வியல் படைப்புக்கள் உள்ளன என்று நாங்கள் சொல்லவேண்டியிருந்தது. யதார்த்தவாதம் மட்டுமல்ல கற்பனாவாதம், மிகைபுனைவு, மாயயதார்த்தம் எல்லாமே கலைதான் என்று சொன்னோம்.அக்காலத்தில் பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலா ஏன் ஒரு கிளாஸிக் என்று நான் ஒரு கட்டுரை எழுதியது நினைவுள்ளது. ஓர் உரையின் எழுத்துவடிவம் அது.

ஆகவே ‘யதார்த்தவாதம் செத்துவிட்டது’ என்று ஓங்கிக் குரல்கொடுத்தோம். இலக்கியப்பெறுமதி என்பது படைப்பின் யதார்த்தமதிப்பில் இல்லை, அது உருவாக்கும் வாழ்க்கைத்தருணங்களின் நுட்பம், சிந்தனைகளின் ஆழம், தரிசனங்களின் முழுமை ஆகியவற்றில் உள்ளது. ஆழம் என்பது அதுதானே ஒழிய வாசகன் பார்த்து ‘ஓக்கே’ சொல்லும் புறவய யதார்த்தம் அல்ல என்று வாதிட்டோம்.

இன்னொன்றையும் இங்கே சொல்லவேண்டும். வணிகஎழுத்துக்கு எதிரான ஒட்டுமொத்த நிராகரிப்பு நிகழும்போதுகூட தமிழ்ச்சிற்றிதழ்ச் சூழல் ஆண்பெண் உறவு சார்ந்த மென்கிளுகிளுப்பை எழுதுவதில் தமிழ் வணிக எழுத்தின் அதே மனநிலையையே கொண்டிருந்தது.

இங்கே அதிகமாக வாசிக்கப்பட்டது, வாசிக்கப்படுவது, ஆண்பெண் சரசமாடுவதைப்பற்றிய எழுத்துதான். காதல்கள், கள்ள உறவுகள், பாலியல் மீறல்கள். குபரா முதல் ஜானகிராமன் வழியாக வண்ணநிலவன் வரை. இன்றும்கூட அதுவே மைய ஓட்டம்.அவற்றின் ஆழமின்மையும் மேலோட்டமான ஜிலுஜிலுப்பும் எவருக்கும் ஒவ்வாமையை அளிக்கவில்லை. அவற்றை ‘நுட்பமான’ இலக்கியப்படைப்புக்கள் என்று கொண்டாட தயக்கமும் இல்லை. விமர்சகராக சுந்தர ராமசாமிதான் இதை கடுமையாகச் சுட்டிக்காட்டிவந்தார்.

இந்தப் பின்னணியிலேயே என்னுடைய படுகை, மாடன் மோட்சம், மண், மூன்று சரித்திரக்கதைகள், பாடலிபுத்திரம், ரதம், ஆயிரங்கால் மண்டபம் போன்ற கதைகள் வெளிவந்தன. அவை எல்லாமே கற்பனையை விரித்து, புறவயமான நம்பகத்தன்மையை உதறி ,எழுதப்பட்டவை. அன்று கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் எல்லாருமே அப்படித்தான் எழுதினோம்.

எழுத்தாளன் தான் தன் தனிவாழ்வில் அனுபவித்து அறிந்ததை மட்டுமே எழுதவேண்டும் என்ற அசட்டுத்தனமான ஒரு நம்பிக்கை இலக்கியச் சூழலில் இருந்தமையால் தமிழ்வாழ்வின் பல தளங்கள் தொடப்படவே இல்லை.  கற்பனையின் துணைகொண்டு வேறுவேறு உலகங்களை படைப்பது, ஆராய்ச்சி செய்து எழுதுவது எதுவும் ஏற்கப்படவில்லை. அச்சூழலில்தான் முழுக்கமுழுக்க கற்பனைப்படைப்பான விஷ்ணுபுரம் வந்து இலக்கியத்தில் மைய இடம் பெற்றது. வரலாற்றையே அது கற்பனையால் உருவாக்கியது.

இலக்கியம் என்பது சூம்பிப்போன தன்வயக்குறிப்பு அல்ல, அது பண்பாட்டின்மீதான ஒட்டுமொத்தவிமர்சனம், பண்பாட்டை மறு ஆக்கம் செய்யும் முயற்சி, வரலாற்றுக்கு இணையான மறுவரலாற்றை உருவாக்கும் மாபெரும் அறிவுச்செயல்பாடு என்று நிறுவியதில் விஷ்ணுபுரத்திற்கு பெரும்பங்கு உண்டு. தன்னறிதலும் விரிவான ஆராய்ச்சியும் கற்பனையும் வடிவபோதமும் இணையும் ஒருபுள்ளியிலேயே பெரிய படைப்புக்கள் உருவாகமுடியும் என அது காட்டியது. பின்னர் வந்த ஜோ.டி.குரூசின் ஆழிசூழ் உலகு, சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் போன்ற நாவல்களின் வழியை உருவாக்கியது விஷ்ணுபுரம்தான்.

இச்சூழலில் எல்லாவகையான புனைவுமுறைகளையும் பரிசீலிக்கும்போது தமிழில் அந்த புனைவுமுறையில் முன்னர் என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்று ஆராயவேண்டியிருந்தது. அவ்வாறுதான் வணிக எழுத்துநோக்கி கவனம் சென்றது. அப்படிப் பார்க்கையில் முன்னோடியான புதுமைப்பித்தன் எல்லாவகை கதைகளையும் எழுதியிருந்தமை தெரியவந்தது. பின்னர் அவ்வகைமைகள் வணிக எழுத்துக்கே சென்றன, இலக்கியம் தெரிந்த யதார்த்தம் என்ற அசட்டு இடுங்கலுக்குள் சிக்கிக் கொண்டது

வணிக இலக்கியத்திலேயே தமிழ்வாழ்க்கையின் பல்வேறு களங்கள் பேசப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றச் சூழலில் ஒரு நாவல் என்றால் அது பிவி.ஆர் எழுதிய மிலாட் மட்டுமே. பஞ்சாப் பிரச்சினை பின்னணியில் ஒரு நாவல் என்றால் வாசந்தி எழுதிய மௌனப்புயல் மட்டுமே. இலக்கிய எழுத்து என்பது ஒருவகையில் கற்பனைத்திறனும் ஆராய்ச்சிக்கான அறிவும் இல்லாதவர்கள் எழுதும் தோற்றுப்போன புனைவுகள் என்ற நிலையே உருவாகிவிட்டது. பலவீனத்தையே பலமாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

வணிக எழுத்தில் கற்பனை என்பது வாசகனை சுவாரசியப்படுத்த மட்டுமே பயன்பட்டது. ஆகவே கற்பனை என்பதே வாசகனை சுவாரசியப்படுத்த ‘பொய்’ சொல்வது என்ற எண்ணம் இலக்கியச் சூழலில் உருவானது. ஆனால் கற்பனை என்பது அன்றாடம் கடந்த, ஆழ்மன உண்மைகளைச் சொல்வதற்கான வழிமுறை என்பதே இலக்கியத்தின் அடிப்படைக்கொள்கை.

உதாரணம் புதுமைப்பித்தனின்  ‘கபாடபுரம்’ ‘பிரம்மராக்ஷஸ்’ போன்ற கதைகள். சுந்தரராமசாமி உட்பட புகழ்பெற்ற புதுமைப்பித்தன் ரசிகர்கள் அவற்றை புதுமைப்பித்தன் ‘எழுதிப்பார்த்த’ கதைகள் என்றே நினைத்தனர். அவர்கள் அவருடைய சாதனைகளாக கருதிய கதைகள் சாபவிமோசனம், மனித இயந்திரம் போன்றவையே.  கபாடபுரம் புதுமைப்பித்தனின் சாதனை ,மறு எல்லையில் செல்லம்மாள் இன்னொரு சாதனை என தமிழில் சொல்லி ஒருவகையில் நிலைநிறுத்திய விமர்சகன் நான்.

ஆனால் கபாடபுரத்தின் புனைவுநீட்சி சிற்றிதழ்சார் இலக்கியத்தில் நிகழவில்லை. அது வணிக எழுத்திலேயே நிகழ்ந்தது. கண்ணதாசன் உட்பட பலர் குமரிக்கண்டம் போன்றவற்றை எழுதினர். ஆனால் வெறும் கேளிக்கையெழுத்தாகவே எழுதினர். மீண்டும் கபாடபுரத்தின் நீட்சி இலக்கியத்தில் நிகழ்ந்தது கொற்றவை வழியாகத்தான்.

இந்த நீட்சிக்காக, வணிக எழுத்தை ஆராயவேண்டியிருந்தது. பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டாலும்கூட வணிக எழுத்தின் களம் மிகப்பெரிதாக இருந்தமையால் அவர்களுக்கு புதியபுதிய களங்கள் தேவை என்னும் நிலை இருந்தது. ஆகவே வரலாறு, உளவியல்சிக்கல்கள் என பல தளங்களில் புனைவுகளை அவர்கள் எழுதினர். ஸ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா ஒரு வணிக எழுத்து. ஆனால் ஒரு பெரும்நாவலுக்குரிய கருவும் களமும் கொண்டது. பி.வி.ஆர் எழுதிய கூந்தலிலே ஒருமலர் இலக்கியப்படைப்பாக ஆகவில்லை. ஆனால் எந்த சிற்றிதழ் இலக்கியத்திலும் இல்லாத களமும், கற்பனைவீச்சும் உள்ளது

இன்னும்கூட தமிழ்ச் சிற்றிதழ்சார் எழுத்தில் முன்னோடிகள் உருவாக்கிய குறுகல் உள்ளது. புதியகளங்களை நாடுவது, அவற்றில் புதிய உளநிகழ்வுகளையும் உணர்வுமுடிச்சுகளையும் கற்பனையால் உருவாக்குவது, தத்துவதரிசனங்களை நிகழ்த்துவது, வரலாற்றில் ஊடுருவுவது, பண்பாட்டை விரித்துரைப்பது இங்கே நடைபெறவில்லை. ஆகவே சிற்றிதழ்சார் எழுத்தில் ஒருவகையான சலிப்பூட்டும் தன்மை இன்றும் நீடிக்கிறது. இன்றுகூட நேற்றைய வணிக எழுத்தை சிற்றிதழ் சார்ந்த படைப்பாளிகள் கவனித்தால் வீச்சுடன் மேலே செல்லமுடியும்.

உதாரணமாக, சித்தர்களின் உலகம் தமிழ்ச்சூழலுக்கே உரிய ஒரு மாயவெளி. ஆலயச்சிற்பங்களின் மர்மங்கள் இன்னொரு வெளி. இந்திரா சௌந்தரராஜன் இவற்றை வணிகப்புனைவாக எழுதியிருக்கிறார். ஏன் ஒரு படைப்பாளி அவற்றை ஆழமான மெய்யியல் உசாவல்கள் கொண்ட ஒரு நாவலாக எழுதக்கூடாது? ஏன் தன் கொல்லைப்புறத்தில் நிகழ்பவற்றை மட்டுமே எழுதவேண்டும்?

ஜெ

இருவகை எழுத்து

பாலகுமாரனும் வணிக இலக்கியமும்

விற்பனையும் இலக்கியமும்

எல்லாமே இலக்கியம்தானே சார்?

வணிக எழுத்து தேவையா?


இலக்கியமும் அல்லாததும்


கேளிக்கை எழுத்தாளர்- சீரிய எழுத்தாளர்

வணிக எழுத்து ஒரு கடிதம்

இலக்கியமும் அல்லாததும்

வணிக எழுத்து- இலக்கியம்

அன்றைய எழுத்தாளர்களும் இன்றைய எழுத்தாளர்களும்

சாதாரண வாசிப்பில் இருந்து இலக்கியவாசிப்புக்கு

வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்

சிறிய இலக்கியம் பெரிய இலக்கியம்

சல்லாபமும் இலக்கியமும்

பகற்கனவின் பாதையில்
ஆழமும் அலைகளும்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 17, 2021 10:35

உருகும் உண்மைகள்- கடிதங்கள்

உண்மை எவ்வாறு உருக்கி வார்க்கப்பட்டது?

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

இங்கிலாந்தில் இன்னும் கோவிட் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கின்றன.மிக தேவையின்றி வெளியே போக முடியாது, கூடாது. விண்வெளி கப்பலில் பயணம் செய்வதாக நினைத்துக்கொள்வேன். உள்ளேயே எல்லாம் – உடற்பயிற்சி, உணவு, கேளிக்கை, வேடிக்கைப்பார்த்தல்..ஆனால் கப்பலின் உள்ளேயே எல்லாம்; வெளியே போக முடியாது…

தங்களது சமீபத்திய “உண்மை எவ்வாறு வார்க்கப்பட்டது?” வீரம் விளைந்தது நாவலைப்பற்றிய கட்டுரையைப் படித்தேன்.

முதிரா இளைஞனின் கற்பனாவாதத்தன்மை கொண்ட படைப்பு என்று நீங்கள் குறிப்பிட்டது மிகச்சரி.

இந்த நாவலை, என் பதின்ம வயதில் வாசித்திருக்கிறேன். பாவெல் கர்ச்சாகின்! அடேயப்பா, என்னென்ன கிளர்ச்சிகள் இதைப்படித்தபோது!

80களின் ஆரம்பத்தில் தாராபுரம் எனும் கிராமமும் இல்லாத, நகரமும் இல்லாத (ஆப்டிக்கல்ஸ் கிடையாது ஆனால் நான்கு தியேட்டர்கள் உண்டு) புழுதிகாற்று வீசி அடிக்கும் “டவுனில்” வாழ்ந்திருந்த போது இந்த நாவலை வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது – பாவெல் என் உடனடி கதாநாயகனாக மாறிப்போனார்.

தாராபுரம் சுப்பிரமணியர் கோவிலுக்கு எதிர் சாரியில், புது காவல் நிலையத்திற்கு அருகில் இருந்த தபால் நிலையத்தை ஜெர்மானிய பாஸிஸ படைகள் சூழ்ந்துகொண்டபோது நான் உள்ளிருந்து தபால் நிலைய அக்காக்களை ஓர் அறையில் பத்திரமாக அடைத்துவிட்டு சப் மெஷின்களுடனும் என்னிடமிருந்த ஓரிரு எறி குண்டுகளைக் கொண்டும்  வீரத்துடன் போரிட்டேன். ஒரு நாள் கழித்து அலை அலையாய் ஆர்ப்பரித்து வந்த செம்படை பாஸிசிட்டுகளை அழித்தொழிக்கும் வரை தபால் நிலையத்தை நானொருவனாகவே அரணாக தாங்கி நின்றேன். எல்லாம் முடிந்த பின்  செம்படை கமாண்டர் வஸ்கோவ் குதிரையிலிருந்து குதித்து வந்து என் தலையை செல்லமாக தட்டிவிட்டு, “அடேயப்பா..ம்! பெரிய ஆள்தான் நீர்..தோழர்! இந்தா, இதை வைத்துக்கொள் என்னருமை குமார்..!” என்று என்னிடம் இரு பிஸ்கோத்துகளையும் புது சப்பாத்துகளையும் அளித்துவிட்டு புகையிலை பொட்டலத்தை பிரிக்கும்போது வீட்டு வேலைக்கார கமலா பாட்டி எழுப்பிவிட்டு விட்டார்.

அந்த பதின்ம வயதில், பாவெலின் தோழி/காதலி (இரண்டாவது பாகத்தில் இவர் திருமணம் ஆன சீமாட்டியாக ரயிலில் பாவெலைச்சந்திப்பார்), ரயில்வே ஷெட்டில் வேலை செய்த அண்ணன் ஆர்த்தியோமும் அதன் பின் அந்த “தோழர்” ஷூஹ்ராய் (இவர் பாவெலுக்கு குத்துச்சண்டையும் சொல்லித்தருவார்) இவர்கள்தாம் மனதில் நின்றிருந்தார்கள்.

பாவெல் போரில் முதன் முறையாக ஒரு போலிஷ் வீரரரை குத்திக்கொல்வதும் நினைவிலிருக்கிறது…ஆனால் நூலில் இருந்த வேறு எந்த சோஷலிஸ பிரச்சாரமும் நினைவிலில் இல்லை. ஏனெனில் ஒரு நீங்கள் குறிப்பிட்டது போல் காலம் செல்லச்செல்ல இந்நாவலுக்கு மதிப்பே இல்லை.–வெறும் அதிகாரவர்க்கம் விரும்பியபடி எழுதி வைக்கப்பட்ட எழுத்து.

இந்த நாவலைப் படித்து ஓரிரு வருடங்களுக்குப்பின் திண்டுக்கல் புனித மேரி மேல்நிலைப்பள்ளியை ஒட்டிய நியு செஞ்சுரி புக் ஹவுஸில்தான் “அதிகாலையின் அமைதியில்” எனும் நூலைப் படித்தேன். பாவெலுக்குப்பின் வஸ்கோவ் என் கதாநாயகனாக மாறிப்போனார் (என்னது முப்பது வயது கதாநாயகனா…சரி, பரவாயில்லை என்றெல்லாம் நினைத்திருக்கிறேன்!).

அந்த நாவலில் அந்த விமான எதிர்ப்பு படை பெண்களில் ஒருவர், தான் பாவெலைச் சந்தித்திருப்பதாக சொல்லும் போது “ஆகா, நம்ம பாவெல்!” என்று உற்சாகமானேன்!

அதிலும் கூட “பாவெல், எளிமையானவன். எங்களிடம் சாதாரணமாக பழகினான். தேநீர் கொடுத்து உபசரித்தான்” என்றெல்லாம் ஒருவர் சொல்லும் போது இன்னொருவர் அந்த பிம்பத்தை உடைத்துவிடுவார்! “ அவர் பாவெல் இல்லை; பெயர் ஒஸ்திராவ்ஸ்கி. அவருக்கு பாரிச வாய்வு; கண்கள் தெரியாது; எங்கள் பள்ளியிலிருந்து கடிதங்கள் எழுதினோம்!”

யுத்தத்தில் போர் வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதற்காக, அவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதற்காக, இன்னும் கொடூரமாகச் சொல்லவேண்டுமெனில் திரும்பி வராத பயணத்திற்கு அவர்களை செலுத்த பல கதாநாயகர்கள், சாகசகாரர்கள் தேவைப்படுகிறார்கள்.

அண்டார்ட்டிக்கா தென் துருவத்தை அடையச்சென்ற பயணத்தில் உயிரிழந்த கேப்டன் ராபர்ட் பால்கன் ஸ்காட் பற்றிய சித்திரங்கள் முதல் உலகப்போர் சமயத்தில் பிரிட்டிஷ் போர் வீரர்களுக்கு மத்தியில் பரப்பப்பட்டன.

ஸ்காட்டின் மனைவிக்கு யுத்த (சகதி) களத்திலிருந்து ஏராளமான பிரிட்டிஷ் போர் வீரர்களிடமிருந்து கடிதங்கள் வந்தன. நாட்டிற்காக உயிர் கொடுத்த ஸ்காட்டின் தியாகம் அவர்களுக்கு பெரும் உத்வேகத்தையும் தன்னம்பிக்கையும் கொடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

இன்று திரும்பிப்பார்க்கையில் இது போன்ற படைப்புகள் நிச்சயம் “customise” செய்யப்படாமல் வெளி வந்திருக்க சாத்தியமே இல்லை என்பது தெரிகிறது.

சிவா கிருஷ்ணமூர்த்தி

[image error]

திரு ஜெமோ

பாவல் கர்ச்சாக்கின் நேற்றும் இன்றும் மட்டுமல்ல நாளைக்கும் ஒவ்வொரு கம்யூனிஸ்டுக்கும் ஆதர்சமாகவே இருப்பான். ஏனென்றால் கம்யூனிசம் தோல்வி அடையாது. கம்யூனிசத்தில் பின்னடைவு உண்டு, வீழ்ச்சி கிடையாது. ஏனென்றால் அது அறிவியல்

இன்று நிகலாய் ஒஸ்திரோவ்ஸ்கிய் ரஷ்யாவில் தூற்றப்படலாம். உக்ரேனில் அவர் தேசத்துரோகி என்று பழிக்கப்படலாம். ஒரு நல்ல கம்யூனிஸ்டு தேசத்துரோகி மதத்துரோகி இனத்துரோகியாகத்தான் இருக்கமுடியும். அவன் கம்யூனிசத்துக்கு மட்டுமே விசுவாசமானவனாக இருப்பான்

இன்று துரோகியான பெத்லியூரா போன்றவர்கள் கொண்டாடப்படலாம். ஆனால் ஒரு நாளை வரும். அன்று பெத்லியூராவின் சிலைகளும் நினைவிடங்களும் இடித்து அழிக்கப்படும். அங்கே மீண்டும் நிகலாய் ஒஸ்திரோவ்ஸ்கிய் பொலிவுடன் இடம்பெறுவார். அப்போதும் வீரம் விளைந்தது வாசிக்கப்படும்.

ஆர். ராஜ்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 17, 2021 10:34

ரா.செந்தில்குமார், ஒரு தொடக்கம்

செந்தில்குமார்i

நெடுங்காலம் நல்ல வாசகராக இருந்து, தயக்கத்துடன் எழுதத்தொடங்கி,சில தன்வாழ்க்கைச் சித்தரிப்புகளையும் நினைவுகிளர்தல்களையும் எழுதி, எழுத்தில் நுண்ணுணர்வால் துழாவிக்கொண்டே இருந்து, சட்டென்று ஒரு கதைவழியாக தன்னை கண்டடைந்து தன் எழுத்தை அமைத்துக்கொள்வது பொதுவாக எழுதத்தொடங்குப்வர்களின் பாதை. அத்தகைய ஒரு திறப்புக்கணம் ரா.செந்தில்குமாரின் ’இசூமியின் நறுமணம்’என்னும் கதை.

தொடர்ந்து எழுதிய ரா.செந்தில்குமார்  ‘இசூமியின் நறுமணம்’ என்றபேரிலேயே ஒரு சிறுகதைத்தொகுதியை வெளியிடவிருக்கிறார். அதற்கு நாஞ்சில்நாடன் எழுதிய முன்னுரை

எல்லை நீத்த தமிழ் படைப்புக்களம்  
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 17, 2021 10:32

கோட்டை

இந்த எல்லை நாடு, வீடு, தனிமனிதன் என்று இடத்துக்கிடம் வரையறுக்கப் படும் தோறும் மானுடம் தன் கர்மங்களை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டும், நுண்மையாக்கிக் கொண்டும், விரிவாக்கிக் கொண்டும் செல்கிறது.

கோட்டை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 17, 2021 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.