இமைக்கணம் என்னும் மெய்நிகரி

Surreal என்றொரு சொல் உண்டு. மெய்நிகரி எனச் சொல்லலாம். ஸ்பானிய நடிகர், ஓவியர் என பன்முகத் திறமை கொண்ட சால்வடார் டாலி மெய்நிகரியத்தின் (surrealism) முக்கியமான ஆளுமை. அவரது கரையும் காலம் என்ற புகழ்பெற்ற ஓவியம், என்னால் ரசிக்க இயன்ற சென்ற நூற்றாண்டின் வெகு சில ஐரோப்பிய ஓவியங்களுள் ஒன்று. (எனது ஓவிய அறிதல் அவ்வளவு தான்!!) உண்மையில் அந்த ஓவியத்தின் பெயர் ‘Persistence of Memory’ – நினைவுகளின் நிலைத்தன்மை என்பதே. ஆனால் அதில் அவர் ஒழுகி ஓடும் கடிகாரங்களை வரைந்திருப்பதால் கரையும் காலம் என பெயரிட்டு விட்டார்கள் போல. இமைக்கணத்தை வாசிக்கத் துவங்குகையில் மனம் இயல்பாக இந்த ஓவியத்தையும், மெய்நிகரியத்தையுமே எண்ணியது. சொல்லிவைத்தாற்போன்று நாவலின் முதல் அத்தியாயமே காலம் என்பதன் தோற்றம் குறித்தே!!

உலகின் ஒவ்வொரு மதமும், அதன் ஆதார தத்துவங்களும் அவற்றுக்கே உரித்தான பிரபஞ்சத் தோற்றங்களைக் குறித்த பார்வையைக் கொண்டிருப்பவையே. இந்திய ஞான மரபின் ஆறு தரிசனங்களும் அவற்றுக்கே உரித்தான பிரபஞ்சத் தோற்றம் பற்றிய கருத்துருக்கள் கொண்டவையே. மிகச் சிறய மாறுபாடுகள் இருப்பினும், அவை அனைத்தும் துவங்குவது காலமிலியான, முடிவிலியான, குணமிலியான அது, அது என தன்னை உணர்ந்த தன்னுணர்வால் பிறந்ததே இப்புடவி என்பதே. ஆதியில் அது இருந்தது எனத்துவங்கும் ரிக் வேதப் பாடலான சிருஷ்டி கீதம் நமது ஞான மரபின் இப்பார்வையை பறைசாற்றும்.

இதையே தியானிகன் “நாங்கள் ஊழ்கத்தில்உயிர்துளித்து உளம்திரட்டி உடல்கோத்து எழுபவர்கள். முட்டைக்குள் இருக்கும் துளிக்கடலில் ஓர்சிற்றலையென மகத்தில் நாங்கள் நிகழ்கிறோம். நான் என உணர்ந்து, இது என அறிந்து, அது எனகண்டதும் உண்ணத் தொடங்குகிறோம்” என்கிறது.

இத்தகைய கருதுகோள்கள் நிறுவப்பட்டிருக்கும் காலத்தில் நிறுவப்பட இயலாதவை. இந்த அறிதல்கள் நிகழ்பவை ஒரு நீண்ட தொடர் சிந்தனைக் கண்ணியின் ஒரு, ஒரேயொரு மகத்தான கணத்தில். அக்கணத்தில் நாமறிந்தவை அனைத்தும் ஒரே நொடியில், முற்றிலும் வேறு பொருள் கொண்டுவிடும். வெண்முரசின் பல பகுதிகளைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு திறவுச்சொல் எழுந்து வரும் கணம், ஒரு அபாரமான கவிதை திறந்து கொள்ளும் கணம், நம் அணுக்கத்தினரை நெருக்கமாக அணுகியுணரும் கணம் என நாமே பலமுறை இதை உணர்ந்திருப்போம். இக்கணம் நாம் அறிந்த காலத்தில் காலத்தில் இருப்பதல்ல. ஆயினும் மெய்யான இந்த காலத்திற்கு நிகரான பிறிதொன்று. மாறிலிகளால் ஆன மெய்நிகரி. இதுவே அறிதலின் கணம். இளைய யாதவர் கூறும் தட்டும் வாயிலும், திறக்கும் கணமும் ஒருங்கமைந்த தருணம். அதுவே இமைக்கணம்.

இமைக்கணத்தில் விரியும் மெய்மைத் தேடலின் பரிணாமம்:

முஞ்சவான் மலையில் தவம் இயற்றும் யமனை சந்திக்கச் செல்லும் நாரதர் முன், அவன் காவலுக்கு நிறுத்திய யமகணங்கள் விலங்குகளாக, அவரின் தோற்றங்களாக, அவர் அறிந்த தேவர்களாக, முத்தெய்வங்களாக இறுதியாக கால வடிவாக தோன்றி தடுக்கின்றன. விலங்குகளை நான் என்றும், தன் தோற்றங்களை தேவர்கள் என்றும், தானறிந்த தேவர்களை தெய்வம் என்றும், முத்தெய்வங்களை பிரம்மம் என்றும், பெருங்காலத்தை அகாலம் என்றும் நுண் சொல் உரைத்து வெல்கிறார் நாரதர். இந்த இரு பாராக்களில் மானுட ஞான மரபின் (இந்திய ஞான மரபு என்றும் சொல்லலாம்) பரிணாமத்தின் கோட்டுச் சித்திரத்தை அளிக்கிறார் ஜெ.

மானுடன் ‘நான்’ என தன்னுணர்வு கொண்டு சூழலை உசாவத் துவங்கிய போதே ஞானத்தின், அறிதலின் முதல் பெரும் பாய்ச்சல் நிகழ்கிறது. நான் என உணரத் துவங்கிய பிறகு சூழ இருந்த ‘நான்களை’ உசாவத் துவங்கிய காலத்திலேயே, மானிட எல்லைக்கு மீறிய பண்புகளைக் கொண்ட தேவர்கள் உருவாகின்றனர். ஒவ்வொன்றையும் தேவர்கள் ஆக்கி அவர்கள் சூழ இருக்கையில், அவர்களை அறிந்து கடக்க முத்தொழில்களையும் செய்யும் தெய்வங்கள் உருவாயினர். இருந்தும் மானிட அறிதல் தெய்வங்களையும் மீரியவற்றை எண்ணுகையில் பிரம்மம் பிறக்கிறதுநான் என்னும் தன்னுணர்வு முதல் பிரம்மம் வரை அனைத்தும் அளவைக்கு உட்பட்டவையே. வரையறுக்கப்படக் கூடியவையே. இவையனைத்தும் காலத்தில் நின்றாடுபவையே. எனவே காலத்தையும் கடக்க எண்ணிய மனதின் முன் விரிந்ததே அகாலமென்னும் முடிவிலி.

நான் என்னும் தன்னுணர்வே தியானிகனையும், பிரபாவனையும் மெய்யுசாவத் தூண்டுகிறது. இறப்பு என்பது நிற்கையில், காலம் என்பதும் பொருளற்றுப் போகையில் உயிர் என்பதன் இருப்பும் பொருளிழந்து இன்மை என்றாகிறது. நான் என்ற தன்னுணர்வே ‘இது’, ‘இங்கு’, ‘இருக்கிறேன்’, ‘அது’ என்பனவற்றுக்கு பொருள் அளிக்கிறது. அந்த தன்னுணர்வே முதல் அசைவை உருவாக்குகிறது. அந்த சிறகசைவே காலத்தேங்கலை அசைக்கிறது. அந்த சிறகசைவை வைத்து உருவாகும் காலத்தை வெண்முரசு ‘தயங்கியபடி பிரிவின்மையில் இருந்து முக்காலம் சொட்டி வடிந்து’ வந்ததாக கவித்துவமாகச் சொல்கிறது.

இந்த அறிதல்களையே இளைய யாதவர் விலங்கு நிலையில் இருந்து மானுடரை விடுதலை செய்தது எனக் கூறுகிறார். இருப்பு என்பதை உணர ஒட்டு மொத்த உயிர்க்குலமே இணைந்து, வேண்டி அடைந்த இறப்பு என்னும் அமுது இயல்பாகவே இறப்பு, பிறப்பு என்னும் இருமையை உருவாக்கி விடுகிறது.  இறப்புக்கும், பிறப்புக்கும் இடையேயான முடிவிலா இச்சுழலில் பிறந்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணமும் இருப்பை உணர்வதற்காகவே இறப்பைத் தேடி துயர் கொள்கின்றன. இச்செயல் அளிக்கும் பொருளின்மை, இறப்பு – பிறப்பு, துயர் – இன்பம், இருள்- ஒளி, தளை – விடுதலை என்ற இந்த இருபால் பிரிவு இரண்டையும் அறிந்து கடக்க உதவுவதே வேதமுடிபின் அறிதலாகிய தன் அறிதல் என்கிறார் இளைய யாதவர். இயல்பாகவே இந்த அறிதலின் அடிப்படை இறப்பு இல்லாதாகையில் இருப்பும் இன்மையாகிறது என்பதே. எனவே தான் இருப்பையும், இன்மையையும் இணைத்ததாக, அவற்றை ஒன்றாக அறிவாதாக எழுவதே எதிர்காலத்தில் வரும் கல்கி எனும் பேரறிவு என்கிறார் இளைய யாதவர்.

 

இமைக்கணம் – இன்றிலிருந்து என்றைக்கும்

 

இமைக்கணத்தின் முதல் அத்தியாயம் துவங்குவதே மீறலில் தான். மரணம் ஒழிந்த பூமி. தன் கொலைஞனை துணிந்து நோக்கும் புழு. மண்ணில் வாழ விழையும் மீன். நெருப்பை விரும்பி அணையும் குருவி. மரணமின்மை அனைத்தையும் பொருளற்றதாக்கி விடுகின்றது. நாளடைவில் இருப்புக்கும், இன்மைக்கும் வேறுபாடு இன்றி அனைத்தும் ஜடமாகி அமைந்து விடுகின்றன. இலக்கில்லாத, முறைப்படுத்தப்படாத மீறலின் விளைவு அது. இன்மையில் இருக்கும் உலகில் இருப்பை உணர்ந்த இருவர் அத்தேங்கலை அசைக்கின்றனர். மீறலை இயல்புக்கு மீட்பதே அவர்கள் தவம். துறந்து, உள்ளொடுங்கி, தனித்து, ஒறுத்து, கடந்து அறியும் மெய்மை அனைவருக்கும் சாத்தியமான ஒன்று அல்ல. அவ்வழி அனைவருக்குமானதும் அல்ல. அது மீறலே, இயல்பு அல்ல. இதற்கு நேர் எதிராக அடைந்து, விரிந்து, சூழ இருந்து, வேட்டு, வாழும் இன்பத்திலேயே (மாயையிலேயே) உழல்வதும் மீறலே, இயல்பு அன்று. ஒவ்வொருவரும் இயல்பில் இருந்து மெய்மையை அறிவதே மீட்சி. அதுவே ஒவ்வொரு மானுடனுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இயல்பில் இருந்து மெய்மையை அடையும் வழியையே வேதமுடிபு உசாவுகிறது. மாயையில் வாழ்ந்து அதன் திரையை அறுத்தெறிந்து, முழுமையாக வாழ்ந்து முடிந்த ஒருவரே அவ்வழியை மானுடருக்கு உரைக்க இயலும். இதுவே ராமன் செய்யாமல் விட்டது. அதையே கிருஷ்ணன் செய்கிறார். எனவே யமன் தன் கேள்விகளை கிருஷ்ணனின் அருகமர்ந்து கேட்கிறார்.

 

இமைக்கணம் என்னும் உபநிடதம்:

 

இமைக்கணம் முதன்மையாக நாவல். அதில் பயின்று வருபவை ஞானத்தேடலின் விளைவான தத்துவங்கள். இருப்பினும் இது தத்துவ நூல் அல்ல, நாவல் தான். ஒரு வகையில் நமது உபநிஷத்துகளின் நாவலாக்கப்பட்ட வடிவம் எனலாம். நசிகேதன் யமனிடம் கேட்ட கேள்விகள் தானே கடோபநிடதத்தின் வடிவம். அவன் யமனைச் சந்திப்பதற்கு ஒரு கதை இருந்தது. கிட்டத்தட்ட அனைத்து உபநிடதங்களும் இத்தகைய கதைகளை உள்ளடக்கிய தத்துவ விவாதங்களாகவே அமைந்திருக்கின்றன. உபநிடதம் என்பதன் பொருள் அருகமர்தல். இந்த உபநிஷத்துக்களின் அமைப்பே ஏதோ ஒரு தொல் வியாசரை கீதையை அத்தகைய ஒரு நாடகீயத் தருணத்தில் சென்று பொருத்த வைத்ததன் உந்துவிசையாக இருந்திருக்கலாம்.

இமைக்கணத்தில் பாரத பெருமானுடர்கள் சுமந்தலைந்த கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும் விரிவாக வருகின்றன. அவரவர் வினாக்களுக்கு உகந்த விடைகள் அளிக்கப்படுகின்றன. இந்த விடைகள் முக்கியமாக கீதையையும், உபநிஷத்துக்கள் மற்றும் பிரம்மசூத்திரத்தையும் சார்ந்து இருக்கின்றன.  இந்த விடைகள், அவை சுட்டி நிற்கும் அறிவு மிகக் கூரான மொழியில், சிறிய சொற்றொடர்களுடன், இரண்டு முதல் ஐந்து வரிகளுக்குள் வருமாறு, ஒரு சூத்திர வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏனெனில் இவை வாசகரின் கவனத்தைக் கோருபவை, அவர்கள் மனதில் இருத்த வேண்டியவை. இந்த நாவலின் வடிவம் இந்த அறிவை வாசகர்கள் என்றென்றைக்கும் தங்களுக்குரிய அறிதல்களாக மாற்றி வைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே கேள்விகள், அவற்றுக்கு பதில்களைக் கொண்ட ஒரு இமைக்கணக் காட்சிகள், இக்காட்சிகளையும், கேட்பவரின் வாழ்கணங்களையும் உள்ளடக்கிய விரிவான பதில்கள் என்பதாக அமைந்திருக்கின்றது. இந்த காகிதச் சூத்திரங்கள் அறிவாக வேண்டுமென்றால் அவை பதிலிறுக்கும் வினாக்கள் வாசகரிடம் இருக்க வேண்டும். சாதாரண வாழ்வில் இருந்து அவற்றை வந்தடைபவர்கள் மிகக் குறைவு. அப்படி அவ்வினாக்களுக்கு வந்திருந்தாலும் அவற்றை முறையாகத் தொகுத்து, சொல்லாக்கி, மொழியிலாக்குபவர்கள் இன்னும் குறைவே. மாறாக இக்கேள்விகளைச் சுமந்தலையும் பாத்திரங்கள் என்றால், வாசகரும் அவர்களோடேயே வாழ்ந்திருப்பதால் அவர்களுக்கும் இவ்வினாக்கள் பொருள் அளிப்பவையாகவே இருக்கும். எனவே இந்த அறிதல்களை நினைவு கூர்கையில் அவை முளைத்த வினாக்களும், அவ்வினாக்கள் வேர்கொண்ட வாழ்வும் அறிபவன் கூடவே நினைவுக்கு வரும். அவ்வாழ்வும், வினாக்களும் இவ்வறிதல்களைக் கால மாற்றங்களுக்கு ஏற்பவும், அறிபவரின் தொடர் அறிதல்களுக்கு ஏற்பவும் மெருகூட்டிக்கொண்டே செல்லும். இறுதியாக மெய்மையை அடையவும் கூடும்.

எனவே வெறும் சூத்திரங்களில் உளம் கொள்ளாது, அவற்றின் வேர்களான வினாக்களை உளம் கொள்ள வேண்டும். அங்கருக்கு, பீஷ்மருக்கு, சிகண்டிக்கு அளிக்கப்பட்டவை எவை?, ஏன் அவை அவர்களுக்கு அளிக்கப்பட்டன? போன்றவற்றை ஆராய வேண்டும். அப்படிச் செய்து தொகுத்துக் கொண்டால் மட்டுமே இவ்வறிவும், இந்த நாவலும் நமக்கு திறந்து கொள்ளும். இந்த காரணங்களால் தான் கீதை என்னும் பெருநூல் ஒரு பெருங்கதையாடலில் மிகப் பொருத்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கே அர்ச்சுனன் ஒருவனுக்கு உரைக்கப்பட்டதாக வந்தவற்றை விரிவாக்கி, மிகப் பொருத்தமான கதை மாந்தர்களுக்கு, அவர்களுக்குத் தேவையான மெய்மையாக உரைக்கப்படுவதாக எழுதுவது என்பது ஜெ வின் மேதமை. வெண்முரசு என்னும் மரத்தின் தீஞ்சுவைக் கனி என இமைக்கணத்தைச் சொன்னால் அது மிகையன்று!!!

அன்புடன்,

 

அருணாச்சலம் மகராஜன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2021 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.