ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு

எல்லா குழந்தையும் மேதைதான் என ஒரு சொற்றொடர் உண்டு. குழந்தை புத்தம் புதிய உலகிற்கு வந்து விழுகிறது. ஆனால் திகைப்பே இல்லாமல் ஒவ்வொன்றாகத் தொட்டு அடையாளப்படுத்தி அறிந்தபடியே செல்கிறது. மொழியின் உருவாக்கம் குறித்து ஆராய்ந்த நாம் சாம்ஸ்கி போன்றவர்கள் குழந்தை, மொழியை அடையும் விந்தையைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். குழந்தையின் சிந்தனையின் அமைப்பு நரம்புக் கட்டமைப்பாக அதன் மூளைக்கும் ஏற்கனவே உள்ளது. புற உலகம் அதற்குச் சொற்களையும் படிமங்களையும் மட்டுமே அளிக்கிறது. ஒரு மொழியின் புதிய சாத்தியங்கள், கவிஞர்களாலும் குழந்தைகளாலும்தான்.

இந்தச் சிறிய நூல் என் மகள் ஜெ. சைதன்யா பற்றிய தொடர்ந்த அவதானிப்புகளால் ஆனது. என் தணியாத பாசத்தால் ஈரமானது. என் கனவுகளால் ஒளியூட்டப்பட்டது. குழந்தை மனம் மெய்ஞானத்தைத் தொடும் சில கணங்கள் இதில் இருப்பதால் இது ஒரு பேரிலக்கியம்.

 

எழுத்தாளர் ஜெயமோகன் [முன்னுரையில்..]

 

தன் மகளின் குழந்தைமையை அருகிருந்து அவதானித்த ஒரு படைப்பாளித் தந்தையின் அனுபவ உரையாடல்களின் தொகுப்பாக, ‘ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு’ என்னும் நூல் தன்னறம் வாயிலாக மீள்பதிப்பு அடைகிறது. “தூய்மையான மனம் இயற்கையை எதிர்கொள்ளும்போது மொழி அழகிய படிமங்களாக மாறிவிடுகிறது. கவித்துவம் ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் மொழியில் உருவாகிக் கொண்டிருக்கிறது. மானுடஞானம் எவ்வாறு உருவாகிறது என்பதை குழந்தை மொழியைக் கற்றுக்கொள்ளும்போது உணரலாம்” என்னும் நித்ய சைதன்ய யதி அவர்களின் வார்த்தைகள் சுமந்துள்ள ஆழுள்ளத்தை, எழுத்தின்வழி அறியச்செய்கிற ஒரு வழிகாட்டிநூலாக இப்புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையும் மழலைஞானத்தின் வேர்களைப்பற்றி விவரிக்கிறது.

குழந்தைகள் சார்ந்தும் அவர்களில் மொழியும் அறிதலும் எவ்வாறு படிமம் கொள்கிறது என்பதுசார்ந்து அவதானிக்க விழைபவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் வாசித்துணர வேண்டிய புத்தகம் இது. வளர்ந்த பெரியவர்களுக்கு குழந்தைகளுலகை அறிமுகப்படுத்துகிற பலநூல்கள் இதுவரை தமிழ்ச்சூழலில் வந்திருக்கக்கூடும். ஆனால், அதைச் சொல்லவந்த முறைமையில் மரபின் உள்ளார்ந்த தன்மையைக் கருத்தில்கொண்டு தனிச்சிறந்த செறிவுமொழியில் துல்லிய அனுபவக்குறிப்புகளோடு வெளிப்படுத்திய முதல்நூல் என்றும் இதனைக் குறிப்பிடலாம். வடிவமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவுற்று அச்சுக்குச் சென்றிருக்கிற இப்புத்தகம், இவ்வருட சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியீடு அடைகிறது.

 

இப்படிக்கு,

தன்னறம் நூல்வெளி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2021 10:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.