C. Saravanakarthikeyan's Blog, page 8
March 27, 2019
தண்டனையும் குற்றமும்
நரேந்திர மோடியின் ஐந்தாண்டு சாதனைகளுள் ஒன்று முற்போக்கு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இந்துத்துவ உதிரி அமைப்புகளால் தயக்கமின்றி கொல்லப்படும் நிலையை உருவாக்கி வைத்திருப்பது.
பல மரணங்கள் ஒரே மாதிரி இவ்வகையில் நடத்தப்பட்டாலும் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்எம் கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலைகள் தேசத்தின் ஆன்மாவையும் அரசியல் சாசனத்தையும் உலுக்கிக் கேள்வி கேட்டவை.

இந்த நால்வரும் எப்படி இறந்தார்கள்? சாகுமளவு அப்படி என்ன பிழை செய்தார்கள்?
*
நீதிபரிபாலனம் 1
தண்டனை: நரேந்திர தபோல்கர் 20 ஆகஸ்ட் 2013 அன்று காலை 7:20 மணிக்கு தன் காலை நடைப்பயிற்சியில் இருந்த போது பைக்கில் வந்த “அடையாளம் தெரியாத இருவரால்” மிக அருகிலிருந்து நான்கு முறை சுடப்பட்டார். அதில் இரு குண்டுகள் அவர் தலையிலும் மார்பிலும் துளைக்க, அந்த இடத்திலேயே உயிரை விட்டார்.
குற்றம்: இரு முக்கியப் பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியது ஒன்று. அடுத்தது சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து நின்றது.
1989ல் மஹாராஷ்ட்ரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி (MANS) அமைப்பைத் தொடங்கி மூட நம்பிக்கைகளுக்கும், போலிச் சாமியார்களுக்கும் எதிராகப் பரப்புரை செய்தார். இந்தியப் பகுத்தறிவுச் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவராகக் கொஞ்ச காலம் பணியாற்றினார். மூட நம்பிக்கைகளைக் கண்டித்து அவற்றை அகற்ற 3,000-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள் நடத்தினார்; தொடர்பாய் பல நூல்கள் எழுதினார்.
2010ம் ஆண்டு முதல் மஹாராஷ்ட்த்தில் மூட நம்பிக்கைகள் மற்றும் பில்லி சூனிய எதிர்ப்புச் சட்டத்தைக்கொண்டு வரப்போராடினார் (Anti-Superstition and Black Magic Ordinance). நரபலியைத் தடை செய்யக்கோரும் அதற்கான வரைவை தன் MANS அமைப்பு மூலம் வடிவமைத்தார். பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் இதை இந்து மதத்திற்கு எதிரானது என எதிர்த்தன. ஆனால் அதில் கடவுள், மதம் பற்றி ஒரு சொல்லுமில்லை என்றார் தபோல்கர். அது எவருக்கும் எதிரானதல்ல, மாறாக எல்லோருக்குமானது என்றார்.
1980களில் பாபா ஆதவ்வின் ‘ஒரு கிராமம் ஒரு கிணறு’ என்ற சமூக நீதிப் போரில் பங்கேற்றார். விளிம்புநிலையிலுள்ள மனிதர்கள் பாதுகாப்போடும், கௌரவத்தோடும், வளத்தோடும் வாழ ‘பரிவர்தன்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 1990களில் தீண்டத்தகாதோருக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்துக் கடுமையாகப்போராடினார். மாரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு பாபாசாகேப் அம்பேத்கர் பெயர் சூட்டக்கோரினார்.
*
நீதிபரிபாலனம் 2
தண்டனை: கோவிந்த் பன்சாரே 16 ஃபிப்ரவரி 2015 அன்று காலை 9:25 மணிக்கு தன் காலை நடைப்பயிற்சியின் போது பைக்கில் வந்த “இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால்” மிக அருகிலிருந்து ஐந்து முறை சுடப்பட்டார். அதனால் பின்கழுத்திலும், நெஞ்சிலும் படுகாயமுற்றார். மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பின் கோமாலிருந்து நினைவு திரும்பியும் நான்கு நாட்கள் கழித்து உயிரை விட்டார். அவரோடு தலையில் தோட்டா வாங்கிய அவரது மனைவி பிழைத்துக் கொண்டார்.
குற்றம்: மூன்று முக்கிய விஷயங்கள் செய்தார் பன்சாரே. பொதுவுடைமைவாதியாக இருந்தார். பகுத்தறிவுவாதியாக இருந்தார். இந்துத்துவப் புரட்டுக்களை உடைத்தார்.
அடிப்படையில் பன்சாரே ஒரு கம்யூனிஸ்ட். பல தொழிற்சங்கங்களில், சேரி நலச் சங்கங்களில் பங்காற்றியவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தேசிய நிர்வாகியாக உயர்ந்தவர். சுங்க வரியை எதிர்த்தார். கோட்ஸே புனிதப்படுத்தப்படுவதை எதிர்த்தார்.
அவர் ஒரு பகுத்தறிவுவாதியாக இருந்தார். கலப்புத் திருமணங்களை ஆதரிக்குமொரு அமைப்பை நடத்தினார். ஆண் குழந்தைப் பிறப்பிற்காக நடத்தப்படும் புத்ரகாமெஷ்டி யக்ஞத்தை எதிர்த்தார். தபோல்கர் மறைவுக்குப் பின் MANS அமைப்பு அவர் வழியைப் பின்பற்றித் தன் செயல்பாடுகளைத் தொடர வேண்டுமென வலியுறுத்தினார் பன்சாரே.
சமூக அவலங்கள் குறித்து 21 புத்தகங்கள் எழுதியுள்ளார். அவற்றுள் முக்கியமானது ‘சிவாஜி யார்?’ என்ற நூல். சிவசேனா போன்ற கடசிகள் சிவாஜியை இந்து மதக் குறியீடாக ஆக்கி வைத்திருந்ததை எதிர்த்து அவர் மதச்சார்பற்றவராக இருந்தார், இஸ்லாமியரைத் தன் படையில் தளபதிகளாக நியமித்தார் எனத் தன் புத்தகத்தில் நிறுவினார். சிவாஜி பெண்களை மதித்தார், முக்கியப் பணிகளில் அமர்த்தினார் என்பதையும் சுட்டிக் காட்டினார். பல மொழிகளில் பெயர்க்கப்படு சுமார் ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்பனையான அந்நூல், சிவாஜி பற்றிய பிம்பத்தை நொறுக்கியது.
*
நீதிபரிபாலனம் 3
தண்டனை: 30 ஆகஸ்ட் 2015 அன்று காலை 8:40க்கு எம்எம் கல்புர்கியின் வீட்டுக்கு பைக்கில் வந்த “அடையாளம் தெரியாத இரண்டு பேர்” அவரது மாணவர்கள் என்று அவர் மனைவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்து மிக அருகில் கல்புர்கியை இரண்டு முறை சுட்டு விட்டுத் தப்பித்தனர். மார்பிலும் நெற்றியிலும் படுகாயத்துடன் மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்ட வழியிலேயே மரித்தார்.
குற்றம்: இரு விஷயங்கள்: மத நம்பிக்கைகளை, வரலாற்றுப் புரட்டுக்களை மறுத்தார்.
கல்புர்கி 103 புத்தகங்களும் 400க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதியவர். அவரது ‘மார்கா’ என்ற புத்தகத் தொகுதி புகழ்பெற்றது. அதன் நான்காம் பாகத்துக்கு சாஹித்ய அகாதமி விருது பெற்றார். ஹம்பியில் அமைந்துள்ள கன்னட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார். அங்கு பல இலக்கிய, வரலாற்று ஆய்வுகளுக்கு வித்திட்டார். கர்நாடக அரசு நடத்திய சமக்ர வசன சம்புடா என்ற இதழின் ஆசிரியர்.
மார்கா முதல் பாகத்தில் லிங்காயத் மதத்தின் நிறுவனரான பசவா மற்றும் அவரது குடும்பம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றதால் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். பசவேஸ்வராவின் இரண்டாம் மனைவியான நீலாம்பிகேவின் வசன கவிதைகளை ஆராய்ந்தவர் அவர்களுக்கு இடையேயான உறவு உடல்ரீதியானதல்ல என்றார். வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் பசவேஸ்வராவின் சகோதரி நகலாம்பிகேவுக்கும் செருப்புத் தைக்கும் தொழில் மேற்கொண்டிருந்த கவிஞரான தோஹரா காக்கயாவுக்கும் பிறந்த குழந்தை தான் சன்னபசவா என்றார். பல அழுத்தங்களுக்குப் பின் அக்கருத்துக்களைத் திரும்பப் பெற்றார். தன் குடும்பத்தின் பாதுகாப்புக்காக செய்வதாகவும் அது தன் அறிவுத் தற்கொலை என்றும் அறிவித்தார்.
2014ல் மூடநம்பிக்கைச் எதிர்ப்புச் சட்டம் பற்றி பெங்களூரில் நடந்த ஒரு கூட்டத்தில் யூஆர் அனந்தமூர்த்தியின் ‘நிர்வாண வழிபாடு ஏன் தவறானது?’ என்ற நூலிருந்து சிறுவயதில் சாமி தண்டிக்கிறதா என்பதைப் பரிசோதித்துப் பார்க்க அவர் கடவுள் சிலைகளின் மீது சிறுநீர் கழித்ததாய் எழுதியிருந்ததைக் குறிப்பிட்டது சர்ச்சையானது.
*
நீதிபரிபாலனம் 4
தண்டனை: கௌரி லங்கேஷ் 5 செப்டெம்பர் 2017 அன்று இரவு 8 மணிக்கு வீடு திரும்பிப் பூட்டைத் திறந்து கொண்டிருந்த போது “மூன்று அடையாளம் தெரியாத நபர்களால்” ஏழு முறை சுடப்பட்டார். அதில் இருவர் பைக்கில் அவரைத் தொடர்ந்து வந்திருந்தனர். மூன்றாமவன் வீட்டின் அருகிலேயே காத்திருந்தவன். தலை, கழுத்து, மார்பு எனப் பாய்ந்த தோட்டாக்கள் அவ்விடத்திலேயே அவர் உயிரைப் பறித்தன.
குற்றம்: கௌரி தன் பத்திரிக்கையின் மூலம் வலதுசாரி அரசியலை எதிர்த்தார். நக்ஸல்களின் நியாயத்தைப் பேசினார். பிஜேபி கட்சியினரின் அட்டூழியங்களை வெளிக்கொணர்ந்தார். இந்து மதத்திலிருக்கும் சாதியத்தைக் கேள்வி கேட்டார்.
தன் தந்தையின் மறைவுக்குப் பின் அவர் நடத்தி வந்த லங்கேஷ் பத்ரிகே என்ற இதழுக்கு ஆசிரியரானார். 2005ல் அவர் நக்ஸல்களுக்கு ஆதரவாக வெளியிட்ட ஒரு கட்டுரையினால் அவரது சகோதரரின் எதிர்ப்புக்குள்ளாகி, கௌரி லங்கேஷ் பத்ரிகே என்ற கன்னட இதழைத்துவக்கினார். பிஜேபியின் எதிர்ப்பை மீறி 2014ல் அப்போதைய முதல்வர் சித்தராமய்யா நக்சல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆயுதங்களைக் கைவிட்டுச் சரணடையச் செய்யும் கமிட்டியில் கௌரியை உறுப்பினராக்கினார்.
தன் இதழில் கடும் வலதுசாரி, இந்துத்துவ எதிர்ப்புக் கட்டுரைகளை வெளியிட்டார். பாபாபூதன்கிரியிலிருந்த தர்கா ஒன்றை இந்துமயப்படுத்த முயன்ற சங்பரிவாரத்தை எதிர்த்தார். மங்களூரில் சாதிக் குழுக்களைத் தடை செய்யக்கோரும் போராட்டத்தில் பங்கேற்றார். “இந்து என்பது மதமே அல்ல; அது ஒரு அதிகாரப் படிநிலை, பெண்கள் அதில் இரண்டாம் தர ஜீவன்கள்” என்றார். “லிங்காயத்துகளை சிறுபான்மை மதமாக அங்கீகரிக்க வேண்டும், பசவண்ணாவைப் பின்பற்றுவோர் இந்துக்கள் அல்ல” என்றார்.
“பிற்படுத்தப்பட்டவரான பெருமாள்முருகன் மாதொருபாகன் நாவலில் தாய்மைக்காக ஒரு பெண் கணவன் தவிர்த்த வேறொருவனுடன் உறவு கொள்வதாகச் சொன்னதை எதிர்த்த வலதுசாரி அமைப்புகள் பிராமணரான எஸ்எல் பைரப்பா பர்வா நாவலில் அதே போன்ற நியோக முறையை எழுதிய போது ஏன் எதிர்க்கவில்லை? அதுவே பிராமணியம்” என கன்னட இலக்கிய மாநாட்டில் பேசியது பிராமணர்கள் எதிர்ப்புக்கு உள்ளானது. ஹாசன் மாவட்ட பிராமணர் சங்கம் அவரைக் கைது செய்யக் கோரியது.
பிஜேபிக்கு ஊடக ஆலோசகரானதால் 35 ஆண்டு நண்பர் பிரகாஷ் பெலவாடியுடன் உறவை முறித்துக் கொண்டார். சில பிஜேபி தலைவர்கள் ஒரு நகைக்கடைக்காரரை ஏமாற்றியது குறித்து புலனாய்வு செய்து எழுதப்பட்ட ஒரு கட்டுரையை அவர் தன் இதழில் வெளியிட்டார். அதற்காக அவர் மானநஷ்ட வழக்கைச் சந்திக்க நேர்ந்தது.
*
ஒரே மாதிரி நிகழ்ந்துள்ள இந்த நான்கு படுகொலைகளிலும் இன்னும் குற்றவாளிகள் முழுமையாகக் கண்டறியப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை. விசிக ரவிக்குமார் உட்பட இன்னும் பலரை இம்மாதிரி கொல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் பிடிபட்ட ஒருவன் வாக்குமூலம் அளித்தான். கருத்துரிமையை நசுக்குவதும், சிந்தனையாளர்களைக் கொல்வதும், அதிலிருந்து தப்பிப்பதும் இந்த ஆட்சியில் சுலபம் என லெட்டர்பேட் கட்சிகளுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது என்பது அவலமான, பாதுகாப்பற்ற சூழல்.
2019 மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மன் கீ பாரத் நிகழ்ச்சியில் இது தான் கடைசி உரை என்று மூக்குச் சிந்துவதிலிருந்து கும்பமேளாவில் துப்புரவுத் தொழிலாளர்களின் பாதங்களைக் கழுவுதல் வரை பிரதமர் மோடி தன் நாடகங்களைத் துவக்கி விட்டார். எழுத்தாளர்களுக்கு எதிரான இந்த அரசு மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் இந்த இழிநிலை மோசமடையவே செய்யும். சிந்திக்கும் ஒவ்வொருவரும், கருத்துரிமை விரும்பும் எல்லோரும் இதை மனதிலிருத்தி வாக்களிக்க வேண்டும்.
***
(மார்ச் 2019 உயிர்மை இதழில் வெளியானது)
Published on March 27, 2019 18:59
March 15, 2019
இளையராஜாவும் மனுஷ்ய புத்திரனும்
‘96' படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தியது போல் இப்புத்தகத்தில்* மனுஷ்ய புத்திரன் கவிதைகளை ஆங்காங்கே பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால் உள்ளடக்க ஆற்றொழுக்கு குலைந்து விடக்கூடாதென்பதற்காக தனியே தருகிறேன்.
1. வரும்வரை
போய் வா
எவ்வளவு நேரமானாலும்
இங்கேயேதான்
இருந்துகொண்டிருப்பேன்
2. இருப்பு
காணாமல்
போய்விட்டேன்
என்பதற்காக
இல்லாமலேயே
போய்விட்டேன்
என்றாகி விடுமா
சொல்?
3. வேறெங்கோ
நினைப்புகளில் துருவேறிவிட்டது
வெற்று ஏக்கங்களில் பெருமூச்சுகள்
காலத்தை அரித்துத் தின்னுகின்றன
வாழ்க்கை வேறெங்கோ
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
4. ஒரு பாதை, ஒரு பிரார்த்தனை
இருப்பதிலேயே
கடினமான பாதையைத்
தேர்வு செய்கிறேன்
இந்தப் பயணம் எந்தவிதத்திலும்
இலகுவாகிவிடக் கூடாது என்பதற்காக
கண்ணீர் மல்க
பிரார்த்தனை செய்கிறேன்
இவ்வளவு பிரயாசையுடன்
உன்னைத் தேடி வரும் நாளில்
நீ அங்கே இருக்கக் கூடாது என்பதற்காக
5. கேட்காததும் சொல்லாததும்
கேட்பாய்
கேட்பாய் என
சொல்லாதிருந்தவை
சொல்வாய்
சொல்வாய் என
கேட்காதிருந்தவை
வேறொன்றுமில்லை
இரகசியமென்றும்
இடைவெளியென்றும்
6. மீனாவின் சுயசரிதை
மீனாவாக வாழ்வது
எவ்வளவு கஷ்டமென்று
மீனாவுக்குத்தான் தெரியும்
என்றாள் மீனா
பிறகு எதையோ
யோசித்தவளாக
மீனாவாக வாழ்வதைக் கூட
சகித்துக் கொள்ளலாம்
மீனாவுக்காக வாழ்வது
அதைவிடத் துயரமானது
என்றாள் சிரித்துக்கொண்டே
7. அறியும் வழி
உன்னைப்
பற்றிக்கொள்ளவே
முடியாதென
புரிந்த நாளில்தான்
எனக்குத் தெரிந்தது
இவ்வளவு நாளும்
உன்னை
எவ்வளவு
பற்றிக் கொண்டிருந்தேன்
என்பது
இழக்கவே முடியாதது
எதுவென தெரிந்துகொள்ள
அதை
இவ்வளவு
இழக்க வேண்டுமா?
8. இதற்குத் தானா?
பார்க்காமலே
இருந்திருக்கலாம்
பார்த்ததும்
பாராததுபோல் போயிருக்கலாம்
பார்க்க வந்தது
உன்னையல்ல என்று சொல்லியிருக்கலாம்
பார்த்த பின்னே
பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்
பார்த்துப் பார்த்து ஏங்கவா
இவ்வளவு தூரம் வந்தது?
9. ஞாபகத்தின் மூன்று பருவங்கள்
முதலில்
உன்னை
நினைத்துக் கொண்டேன்
பிறகு
உன்னையே
நினைத்துக் கொண்டிருந்தேன்
இப்போது
உன்னையும்
நினைத்துக் கொள்கிறேன்
ஞாபகங்களுக்கு
எப்போதும் மூன்று பருவங்கள்.
10. போகத்தின் பிரார்த்தனைகள்
போகத்தின் பிரார்த்தனை
எப்போதும் இரண்டுதான்
என்னை அனுமதி
என்னை ஆட்கொள்
11. பிரயத்தனம்
கடைசியில்
ஒரு கண்ணாடிக் கோப்பை
கீழே விழுந்து
உடைவதற்குத்தானா
இத்தனை ஆயத்தம்
இத்தனை பதட்டம்
இத்தனை கண்ணீர்?
12. கடைசிக் கணத்தில்
ஓரடி எடுத்து வைத்தால்
போதும்
தொட்டு அழிக்கவும்
கசக்கி எறியவும்
அவ்வளவு அருகில்தான் இருக்கிறது
எல்லாம்
எல்லாவற்றையும் மாற்றிவிடும்
அந்தக்கடைசிக் கணத்தில்
மனமின்றித் திரும்பிப்போகையில்
ஆயிரம் ஆயிரம் இருண்ட நட்சத்திரங்கள்
பிரகாசித்து
கூட நடக்கத் தொடங்குகின்றன
13. விடை பெறுதலுக்கென்று
விடை பெறுதலுக்கு என்று
விசேஷமான
ஒரு சொல்லோ
முத்தமோ
தனியாக இல்லை
மனிதர்கள்
அவ்வளவு நிராதரவாய்
படிக்கட்டுகளில் அமர்ந்து
அழுகிறார்கள்
14. இதற்குப் பிறகு
இதை வருத்தம் என்றால்
இதை வேதனை என்றால்
இதை தண்டனை என்றால்
இதைச் சித்திரவதை என்றால்
இதைக் கருணையற்ற செயல் என்றால்
இது மன்னிக்க முடியாதது என்றால்
இதற்குப் பின்னே வர இருப்பதற்கு
எப்படி உன்னை ஆயத்தப்படுத்திக்கொள்வாய்
என்னதான் அதற்குப் பெயரிடுவாய்
15. அன்பின் சின்னம்
ஒரு அன்பில்
கடைசியாக மிஞ்சுகிறது
ஒரு அன்பின் சின்னம்
மட்டும்
[நீராலானது (2001), கடவுளுடன் பிராத்தித்திருத்தல் (2006), இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் (2010), பசித்த பொழுது (2011), சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013) மற்றும் தித்திக்காதே (2016) தொகுப்புகளில் இருக்கும் கவிதைகள். வெளியீடு உயிர்மை.]
* - '96: தனிப்பெருங்காதல்' நூலின் பின்னிணைப்பு
Published on March 15, 2019 03:55
March 2, 2019
Let the cat out of the bag
இது என் இரண்டாம் சிறுகதைத் தொகுதி. ஒன்பதென்பது போதுமான எண்ணிக்கையா எனத் தெரியவில்லை. போன தொகுப்பில் பதினோரு கதைகளிருந்தன. எண்ணிக்கை பொருட்டில்லை என எண்ணிக் கொள்கிறேன். (இதில் பல கதைகள் நீளமானவை.)
இவற்றில் முதலிரண்டு கதைகளும் நெடுங்காலம் முன் எழுதியவை. ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ என் முதல் சிறுகதை. சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன் எழுதியது. அப்போது குமுதம் நடத்திய ஒரு சிறுகதைப்போட்டிக்கும் பின் ஆனந்த விகடனுக்கும் அனுப்பிய நினைவு. குமுதத்தில் ஜெயிக்கவில்லை. ‘தொடர்ந்து எழுதவும்’ என்று ஒரு துண்டுச் சீட்டு விகடனிலிருந்து வந்தது. அக்கதையைத் திருத்திச் சேர்த்திருக்கிறேன்.

‘மியாவ்’ சிறுகதை ‘சகா: சில குறிப்புகள்’ என்ற தலைப்பில் சுமார் பத்தாண்டுகள் முன் சாரு நிவேதிதாவின் ‘ராஸலீலா’, ‘காமரூபக் கதைகள்’ நாவல்களின் உந்துதலில் அதே பாணியில் என் வலைதளத்தில் எழுதிய குறுங்கதைகளின் செம்மையூட்டிய வடிவம்.
மற்ற ஏழு கதைகளும் 2017 மத்தி முதல் 2018 மத்தி வரையிலான ஓராண்டில் எழுதப் பெற்றவை. இதே காலகட்டத்தில் தான் ‘ஆப்பிளுக்கு முன்’ நாவலையும் எழுதினேன். அந்த ஒரு வருட இடைவெளியை படைப்பூக்கம் வெடித்துப்பொங்கிய காலமென்பேன்.
இவற்றில் அதிகம் கவனிக்கப்பட்ட கதை ‘நான்காம் தோட்டா’. காந்தியின் இரண்டாம் கொலையாளியைத் தேடிப் போகும் கதை. ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல் எழுதியதன் பக்கவிளைவாய் உருவானதே இக்கதை. ஆனந்த விகடன் இதழில் வெளியான என் முதல் மற்றும் (இப்போதைக்கு) ஒரே கதை அது. பிற்பாடு பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் பேசும் போது அக்கதையைக் குறிப்பிட்டுப் பேசி இருக்கிறார்கள். இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) வாசகர் வட்டம் தங்கள் வாராந்திரக் கூட்டத்தில் அக்கதையை வாசித்து விவாதித்தார்கள். தொகுப்பின் தலைப்பாகவும் தகுதி பெற்றதே. (ஆனாலும் எல்லாக் கதைகளுக்குமான பொருத்தப்பாடு கருதியும், ‘இறுதி இரவு’ என்ற தலைப்பின் சாயை தவிர்க்கவும் அதைத் தலைப்பாக்கும் நினைப்பைக் கைவிட்டேன்.)
‘பெட்டை’ கதை தினமணி - எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. அப்பரிசு விழாவில் உரையாடுகையில் சிவசங்கரியும், நடுவர்களில் ஒருவரான மாலனும் ‘பெட்டை’ நல்ல சிறுகதை என்றாலும் அதன் எதிர்மறை முடிவு தான் அதற்கு முதல் பரிசு தராததற்குக் காரணம் என்று என்னிடம் சொன்னார்கள். (அதாவது பெண்களைத் தவறான முடிவை நோக்கி வழிநடத்தக்கூடும் என்பதால்.)
இவற்றில் ‘காமத் தாழி’, ‘அணங்கு’ இரண்டும் இரு பிரபல வெகுஜன வார இதழ்கள் கேட்டதன் பேரில் எழுதியவை. சில காரணங்களால் அவற்றில் வெளியாகவில்லை.
‘காமத்தாழி’ பற்றி இதழ் குழுவினர் சொன்ன கருத்து: “தனிப்பட்ட முறையில் எனக்கு கதை பிடித்திருந்தது. Couple swapping என்ற விஷயத்தை நீங்கள் அதிர்ச்சி மதிப்புக்காக மட்டும் கதையின் பேசுபொருளாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை கதையின் முடிவு உணர்த்தியது. எழுத்து நடை சுவாரஸ்யமாக இருந்ததோடு பல இடங்களில் நிறுத்தி ரசித்து அசைபோடத்தக்க புதுமையான சொற்களும் வரிகளும் இருந்தன. முடிவும் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருந்தது. எங்கள் அணியில் கதையைப் படித்த மற்ற இருவரும் இதே கருத்தையே சொன்னார்கள். ஆனால் ஒரு வெகுஜன இதழில் Couple swapping-ஐக் கையாளும் கதையை வெளியிடுவதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை என்பது ஆசிரியர் குழுவின் கருத்து. எனவே இந்தக் கதையை வெளியிட முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”
‘அணங்கு’ நிராகரிக்கப்படக் காரணம் அதன் புனைவுத்தன்மை குறைந்ததன்மை. அது திட்டமிட்டு, ப்ரக்ஞைப்பூர்வமாகச் செய்ததே. அதாவது உண்மைச் சம்பவங்களையே காட்சிப்படுத்தி இருப்பேன். ஒரு பிரச்சனையை அது நிகழும் காலத்திலேயே அப்படி புனைவாக்கும் போது ‘இது தெரிந்த விஷயம் தானே!’ என்கிற பார்வை வரத் தான் செய்யும். எதிர்காலத்தில் அது பரவலாய் மறதிக்குள்ளாகும் போது அதே கதையை வாசகன் வேறு மாதிரி எதிர்கொள்வான் எனத் தோன்றுகிறது. தவிர, என் வரையில் அக்கதையின் மய்யம் ‘நங்கேலி’ என்ற தொன்மத்தை மீட்டுருவாக்கம் செய்திருப்பது. அதை எத்தனை பேர் கவனித்துப் புரிந்து கொண்டார்கள் என்பது தெளிவில்லை.
சில கதைகள் சமூக வலைதளங்களில் நிகழும் ஆண் - பெண் உறவுச் சிக்கல்களைப் பேசுகின்றன. ஆதியில் அபுனைவாய்த் திட்டமிடப்பட்டு பின் கதாரூபம் கொண்டன. இரண்டும் அடுத்தடுத்த வாரங்களில் காமதேனு, குங்குமம் இதழ்களில் வெளியாகின.
‘நீதிக்கதை’ நானெழுதிய ஒரே த்ரில்லர் கதை. ப்ளூவேல் கேம் அடிப்படையிலானது. சுஜாதாவின் ‘பாலம்’, ‘விளிம்பு’ சிறுகதைகளை, ‘ஆ…!’ நாவலை இதற்கு முன்னோடி எனலாம். இப்போது ஓராண்டு கழித்து வாசிக்கையிலும் எனக்கு மிகப்பிடித்திருந்தது.
இக்கதைகள் அனைத்திலும் பெண்களே மையப்பாத்திரம். அவர்தம் குரலே இவற்றில் ஓங்கியும் சன்னமாகவும் ஒலிக்கின்றன. தவிர, இவற்றில் பெரும்பாலான கதைகள் காமத்தை, அதன் அரசியலை மையப்படுத்திய கதைகள். ஆக, இவை யோனியின் குரல். Vaginal Monologues போல் Voice of Pussy. பூனைக்குட்டியின் கிசுகிசுப்பு. மியாவ்!
பெண் பிறப்புறுப்பை ‘Pussy’ எனக் குறிப்பது பெண்களைப் போகப் பொருளாகக் கருதும் ஓர் ஆணாதிக்கப் போக்கின் அடையாளம். அதற்கு நேரெதிர் நின்று அந்த உறுப்புக்கு ஒரு மனமும் குரலும் உண்டு என்றே இதன் கணிசமான கதைகள் பேசுகின்றன.
அதனால் தான் தொகுப்பின் முக்கியக் கதை அல்ல என்ற போதும் அதன் தலைப்பை நூலுக்கு வைத்திருக்கிறேன். இத்தொகுப்பின் பெரும்பாலான சிறுகதைகளை ‘மியாவ்’ என்ற தலைப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாய் நம்புகிறேன்.
என் ஆரம்ப காலப் புனைவெழுத்துக்களுக்கு உந்துதலாய் இருந்தவர் சாரு நிவேதிதா. ‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதை நூலை 2010ல் வெளியிட்டது அவர் தான். ஆர். அபிலாஷ் ‘இறுதி இரவு’ நூல் வெளியீட்டு உரையில் சாரு நிவேதிதாவின் நீட்சி என்பதாக என் எழுத்தைக் குறிப்பிட்டார். 2017 சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி தினமலர் நாளேட்டுக்கு சாரு நிவேதிதா அளித்த பேட்டியில் ‘இறுதி இரவு’ சிறுகதைத் தொகுப்பைப் பரிந்துரை செய்திருந்தார். இத்தொகுப்பில் இருக்கும் சில கதைகளும் அவரது புனைவுலகத்துக்கு நெருக்கமானவை. அதனால் இத்தொகுப்பை அவருக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். நன்றியறிதலும் முன்னோடிக்கான மரியாதையும் இஃது.
என் அம்மா, மனையாள், மகன்கள், செல்பேசியிலேயே மொத்தத் தொகுதிக்கும் பிழை திருத்தம் பார்த்துக் கொடுத்த சௌம்யா, கதைகளை வெளியிட்ட இதழ்கள், ஐஐஎஸ்சி வாசகர் வட்டம், புத்தகமாய்க்கொணரும் உயிர்மை பதிப்பகத்தார், நூலின் அட்டையை வடிவமைத்த மீனம்மா கயல், வாங்கவிருக்கும் வாசகர்கள் - அனைவருக்கும் அன்பு.
கனடிய விஞ்ஞானப் புனைவெழுத்தாளரான ராபர்ட் சாயர் “A short story is the shortest distance between two points; a novel is the scenic route.” என்கிறார். நான் அடிப்படையில் ஒரு பொறியாளன் என்பதாலோ என்னவோ நேர்வழியே எப்போதுமென் விருப்பம். Efficiency!
ஒரு நாவல் முடித்து விட்டேன். இன்னொன்று தொடங்கி இருக்கிறேன். ஆனாலும் சிறுகதைகள் எழுதுவதே எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. அதன் சவால் தான் வசீகரமாய் இழுக்கிறது. குறைந்தது பத்து சிறுகதைகளுக்கான விரிவடைந்த கருக்கள் மனதில் சூல் கொண்டிருக்கின்றன. எழுதித் தீர்க்கத் தான் நேரம் வாய்க்கவில்லை.
இடையே பெங்களூர் வாசகசாலை குழுவினர் என் ‘கருப்பு மாளிகை’ சிறுகதையை எடுத்து விவாதித்ததும் எனது சிறுகதைக் கடமைகளை நினைவூட்டியது எனலாம்.
சிறுகதை எழுத்தாளன் என்றே எதிர்காலத்தில் நான் அறியப்படுவேன் என்பதாய்த் தோன்றுகிறது. அதற்கான இரண்டாம் அடியாய் இது இருக்கும் என நம்புகிறேன்.
சி.சரவணகார்த்திகேயன்
டிசம்பர் 18, 2018
*
('மியாவ்' சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை)
Published on March 02, 2019 07:06
January 8, 2019
தனிப்பெருந்துணை
மணி ரத்னத்தின் ‘நாயகன்’. தமிழில் எனக்கு மிகப் பிடித்த படம். தமிழில் ஏதேனும் ஒரு படம் பற்றி நான் ஒரு நூல் எழுதுவதாய் இருந்தால் அது ‘நாயகன்’ குறித்தே இருக்குமென நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போது ஓர் இளம் இயக்குநரின் முதல் படம் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறேன் என்பது எனக்கே ஆச்சரியம் தான்!
எழுத்தாளர் முகில் தான் தன்னையறியாமல் இப்புத்தகத்துக்கான விதையை இட்டது.

நவம்பர் மத்தியில் ஒரு நாள் ‘96’ படம் பற்றிய என் தொடர் ஃபேஸ்புக் பதிவுகளைப் பார்த்து விட்டு “இது 96 குறித்த உங்களது 95-வது ஸ்டேட்டஸ். இன்னும் ஒன்றுடன் முடித்துக் கொள்ளவும்.” என்று விளையாட்டாய்க் கமெண்ட் செய்திருந்தார். அப்போது வரையில் ‘96’ படம் பற்றி சிறிதும் பெரிதுமாய் சுமார் 25 பதிவுகள் எழுதி இருப்பேன்.
அவர் சொன்னதும் தான் உண்மையிலேயே ‘96’ பற்றி 96 பதிவுகள் எழுதி அவற்றைத் தொகுத்து நூலாக்கினால் என்ன எனத் தோன்றியது. மறுநாள் மனுஷ்ய புத்திரனிடம் உயிர்மையில் இப்புத்தகம் சாத்தியமா என ஃபேஸ்புக் சாட்டில் கேட்டேன். மறுகணம் “கொண்டு வரலாம். தயார் செய்யுங்கள்” என்று பதில் வந்து விழுந்தது. ஆனால் பிறகு ஒரு கட்டத்தில் எனக்கே நூலளவுக்கு எழுத முடியுமா எனத் தயக்கமெழ, வேண்டாம் என அவரிடம் பேசினேன். ஆனால் நூலளவும் சந்தேகமின்றி “இது கலாசாரப் பதிவு. கொண்டு வந்தே ஆக வேண்டும்.” எனப் பிடிவாதம் காட்டி கொண்டு வந்தும் விட்டார்.
நான் முன்பு நினைத்ததை விட இரு மடங்கு பெரிதாய் வந்திருக்கிறது. ஆச்சரியம்!
2019 சென்னை புத்தகக் காட்சிக்குக் கொண்டு வந்திருக்க வேண்டிய என் இரண்டாம் நாவலை அப்படியே அந்தரத்தில் விடுத்து இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரே காரணம் தான். இதை எழுதப் பிடித்திருக்கிறது. இதை எழுதுகையில் சந்தோஷமாய் இருக்கிறேன். இதுவரை நான் எழுதியவற்றில் மிகச்சுகமனுபவித்து எழுதியதிதுவே.
மற்ற யாவற்றிலும் எழுதுகையில் ஒரு பிரசவ வலி இருந்து கொண்டே இருக்கும்; இதில் மனதிலிருப்பதை எழுதினால் போதுமானதாய் இருந்தது. வாசிப்பின்பம் என்று சொல்வது போல் எழுத்தின்பம் என்றும் ஒன்றிருப்பதை முதல் முறை உணர்கிறேன்.
திரைப்படக் கலைஞர்கள் பற்றி தமிழில் ஏராளம் நூல்களுண்டு. அவற்றில் சிறப்பான சில ஆக்கங்களும் உண்டு (உடனடியாய் நினைவுக்கு வருபவை ஆர்.ஆர். சீனிவாசன் தொகுத்த ‘ஜான் ஆபிரகாம்: கலகக்காரனின் திரைக்கதை’ மற்றும் பரத்வாஜ் ரங்கனின் ‘மணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல்’). சினிமாக்காரர்களால் எழுதப்பட்ட நல்ல நூல்களும் உண்டு (உதா: இளையராஜாவின் ‘யாருக்கு யார் எழுதுவது?’ மிஷ்கினின் திரைக்கதைகள்). திரைப்படம் எடுப்பது பற்றியும் நூல்கள் உண்டு (உதா: சுஜாதாவின் ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’). திரைப்பட வரலாற்று நூல்கள் இருக்கின்றன (உதா: தியடோர் பாஸ்கரன் எழுதியவை, தனஞ்செயனின் PRIDE OF TAMIL CINEMA). திரைப்பட விமர்சனங்களின் தொகுப்பு நூல்கள் ஏராளம் (நானே ஒன்று எழுதியிருக்கிறேன்).
ஆனால் குறிப்பிட்ட ஒரு திரைப்படம் குறித்து மட்டும் ரசனை சார்ந்து தனியே முழு நூல் எழுதப்பட்டிருக்கிறதா என்றால் எனக்குத் தெரிந்து ஒரே ஒரு புத்தகம் தான் தென்படுகிறது: எஸ்.ராமகிருஷ்ணனின் ‘பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள்’.
ஆனால் அது ஒரு தமிழ் படத்துக்குரியது அல்ல. ஆக, தமிழில் தமிழ்த் திரைப்படம் ஒன்று பற்றி தனி நூல் ஏதும் வந்த தடயமில்லை. அவ்வகையில் இது முதல் நூல்.
சன் டிவியில் தீபாவளிக்குப் ஒளிபரப்பு செய்து விட்டார்கள் என்றாலும் இதை எழுதிக் கொண்டிருக்கும் நாளில் பெங்களூரில் இன்னும் ‘96’ படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையிலும் ‘பதேர் பாஞ்சாலி’ போல் என்றோ வெளியான படம், Cult Classic என்று நிறுவப்பட்ட படம் பற்றிய நூல் என்பதாக அல்லாமல் சமகாலப் படத்தைப் பற்றியது என்ற வகையிலும் இந்தப் புத்தகத்தை முக்கியமானதாகக் கருதுகிறேன்.
இந்த நூலை ஏன் எழுதினேன்? ராம், ஜானு பற்றி படம் பார்த்த எல்லோருக்கும் ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. அவர்கள் என்ன செய்திருக்கலாம் என்ற அங்கலாய்ப்பு இருக்கிறது. அல்லது அவர்களைப் பற்றிய கண்ணீர் மல்கல் இருக்கிறது. எனக்கும் அப்படிக் கலவையான கருத்துக்கள் இருக்கின்றன. அதைப் பதிவு செய்ய வேண்டும் என நினைத்தேன். ஓர் அற்புதப்படத்தைக் கொண்டாட வேண்டும் என விரும்பினேன்.
பெண் தன்னைக் காதலிக்கவில்லை எனில் அவளுக்குக் கத்திக்குத்தோ அமிலவீச்சோ பரிசளிக்கும் சமூகத்தில், தான் காதலிக்கும் பெண்ணுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்றறிந்ததும் மறுவார்த்தை பேசாமல் ஒதுங்கிக் கொண்டு, வேறொரு திருமணமும் செய்து கொள்ளாமல் வாழும் அரியனை நாயகனாகக் கொண்டுள்ள ‘96’ மாதிரி காதல் படங்கள் விவாதிக்கப்பட வேண்டியவை. அதையே ஆவணப்படுத்த முயன்றுள்ளேன்.
இது சினிமா விமர்சன (Film Criticism) நூல் அல்ல; சினிமா மதிப்பீடு (Film Appreciation). இன்னும் சொன்னால் ‘96’ படத்துடனான எனது அனுபவங்கள்; அதைப் பற்றிய என் புரிதல்கள்; அதில் நான் ரசித்த அழகியல்கள். மேற்கே Companion நூல்கள் உண்டு. ஒரு பொருளுக்கு அல்லது படைப்புக்குத் துணை நூல். அதை மேலும் நன்றாகப் புரிந்து கொள்ளவும், இன்னும் அதிகம் ரசிக்கவும் அல்லது பயன்படுத்தவும் உதவி செய்வது. இப்புத்தகத்தை அவ்வகையாகவும் காணலாம். அதாவது ‘96’ன் தனிப்பெருந்துணை!
இந்நூலுக்குத் தலைப்பளித்தது நண்பன் இரா. இராஜராஜன். அட்டை வடிவமைத்தது மீனம்மா கயல். பிரதியை வாசித்துக் கருத்துரைத்து, பிழை திருத்தியது சௌம்யா. இந்நூல் வருவதில் அதிக ஆர்வம் காட்டியவர் சக ’96’ பட வெறியரான பா. ராகவன். சில நண்பர்கள் என்னுடன் இந்தப் படம் பற்றித் தீவிரமாய் விவாதித்திருக்கிறார்கள். எப்போதும் போல் உற்சாகமூட்டி ஒத்துழைத்தது என் மனைவி ந. பார்வதி யமுனா. என் அம்மைக்கும் பிள்ளைகட்கும் அதில் பங்குண்டு. அனைவருக்கும் என் பிரியங்கள்.
அட்டை வடிவமைக்க உயர்துல்லியப் படங்கள் நல்கிய கோபி பிரச்சன்னாவுக்கும் நூலாக்கத்தில் உழைத்த செல்வி முதலான உயிர்மை குழுவினருக்கும் என் நன்றி. (பல தவணைகளில் பிழை திருத்தங்களும் மாற்றங்களும் சொல்லியும் சலிக்காமல் செய்து கொடுத்த உயிர்மையின் இரா.வேல்முருகன் அவர்களுக்குப் பிரத்யேக நன்றி.)
இதை எழுதி முடிக்கையில் ஒரு முழுநீளத் திரைக்கதையில் பணியாற்றிய உணர்வு எழுகிறது. அவ்வளவு தூரம் இதோடு ராமாய் ஜானுவாய்ப் பயணம் செய்து விட்டேன்.
என் அபிப்பிராயத்தில் தமிழ் சினிமா வரலாற்றின் ஒரு முக்கியமான காதல் படம் ‘96’.
நான் சொல்லும் சில விஷயங்களை இயக்குநர் யோசிக்காமலும் இருந்திருக்கலாம். ஆனால் ராமும் ஜானுவும் இப்போது ரசிகர் சொத்து. அவர்களை எப்படியும் நாம் புரிந்து கொள்ளலாம். அதில் தடை சொல்லப் படைப்பாளிக்குமே உரிமையில்லை.
சொல்லப் போனால் இயக்குநரே கருவி தான். ராமும் ஜானுவும் அவரது விரல் வழி கணிணியிலோ, தாள்களிலோ, இறுதியில் டிஜிட்டல் ஹார்ட் டிஸ்க்களில் இறங்கித் தம் அபிலாஷைகளை இதில் பூர்த்தி செய்து கொண்டதாய்த்தான் எண்ண வேண்டி இருக்கிறது. ஆதாம் ஏவாள் போல் ராமும் ஜானகியும் மொத்த மானுடத்தின் சின்னம்!
படம் பற்றிய அத்தனையையும் எழுதித் தீர்த்து விட்டேனா எனத் தெரியவில்லை. இப்போதைக்கு நிறுத்தி வைக்கிறேன். பிரிவுகள் இல்லாமல் என்ன பெரிய காதல்!
பெங்களூரு மஹாநகரம்
பாரதி பிறந்த நாள், 2018
*
('96: தனிப்பெருங்காதல்' நூலுக்கு எழுதிய முன்னுரை)
Published on January 08, 2019 04:50
December 24, 2018
விஷ்ணுபுரம் விழா - 2018: சில குறிப்புகள்
1) விஷ்ணுபுரம் விழா - 2018 கடந்த வார இறுதி இரு தினங்கள் கோவை ஆர்எஸ் புரத்தின் ராஜஸ்தானி சங் அரங்கில் (நாயுடு ஹால் அருகே) நடந்தது. எனக்கு விருந்தினராக அழைப்பு இருந்தது. எழுத்தாளர் அமர்வு ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். சென்ற முறையே கலந்து கொண்டிருக்க வேண்டியது. 'ஆப்பிளுக்கு முன்' முறித்துப் போட்டு விட்டது. அதனால் இம்முறை எதுவென்றாலும் ஒத்திப் போட்டு விட்டு இதற்குப் போய் விடலாம் என்று தீர்மானித்திருந்தேன்.
2) ஆண்டாண்டுகளாய் எதிர்பார்த்திருந்த ஆசானுடனான முதல் சந்திப்பு இப்படியா இருக்க வேண்டும்! வெண்பொங்கல் நக்கிய எச்சில் கையுடன் பந்தியிலிருந்து பாதி எழுந்து நின்று அவருக்கு அரை வணக்கம் சொன்னபடி!
3) விஷ்ணுபுரம் விழாவில் சந்தித்த சிலர் (ஃபேஸ்புக்கில்) புகைப்படத்தில் பார்த்ததை விட நேரில் நான் இளமையாகத் தெரிவதாகச் சொன்னார்கள். புகைக்கும் நெருப்புக்கும் வித்தியாசம் உண்டல்லவா!
4) விழாவின் முதல் அமர்வில் நானும் கலைச்செல்வி என்பவரும் வாசகர் கேள்விகளை எதிர்கொண்டோம். செல்வேந்திரன் ஒருங்கிணைத்து நடத்தினார். விஷ்ணுபுரம் எழுத்தாளர் அமர்வுகள் பற்றி ஜெயமோகன் எழுதியிருந்தது: "எழுத்தாளர் சந்திப்பு என்பது அந்த எழுத்தாளரின் எழுத்தாளுமையை வாசகர்முன் வைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. அந்த எழுத்தாளர் மீதான மதிப்பில் இருந்தே அது தொடங்குகிறது. எழுத்தாளரின் படைப்புகளை, ஆளுமையை பல கோணங்களிலான கேள்விகள் வழியாக வெளிப்படுத்துவதே அதன் செயல்முறை." பெரும்பாலும் அப்படித்தான் நடந்தது.

5) இணையத்தில் ரைட்டர் என்றாலே சிஎஸ்கே தான் என விஷ்ணுபுரத்தார் என் பற்றிய அறிமுகக் குறிப்பில் சொன்னார்கள். அநியாயம்! அடுத்து தமிழில் எவனும் ரைட்டர் என்று க்ளெய்ம் செய்யத் துணிவானா?
6) என் எழுத்துக்களின் பாலியல் உள்ளடக்கம் வயதுக்கோளாறு என்று சிவாசக்தி (ர.சு.நல்லபெருமாள் மகள்) குறிப்பிட்டார். நான் ஒப்புக் கொண்டு அந்தக் கோளாறு எத்தனை வயது வரை தொடரும் என்று தான் தெரியவில்லை என்றேன்.
7) "I engineer my writing" என்று நான் சொன்னதற்கு விஷால் ராஜா "வாசகர்களை உத்தேசித்து எழுதினால் தானே அப்படிச் செய்ய வேண்டி இருக்கும்?" எனக் கேட்டார். நான் ஒப்புக் கொண்டு "ஆனால் அது ஒரே ஒரு வாசகனுக்காக. அது நான் தான்." என்றேன். (ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் நடந்த அந்த அமர்வில் கணிசமான நேரம் அந்த 'Engineering' என்ற சொல்லைச் சுற்றியே அமைந்தது. என் எழுத்து தானாகவே நிகழ்ந்ததாய் நினைவே இல்லை என்பது தான் என் பதிலின் சாரம்.)
8) என் அமர்வில் ஓரிடத்தில் நான் ஒரு தீவிர உடன்பிறப்பு எனக் கேள்விப்படுவதாக ஜெயமோகன் குறிப்பிட்டார். மறுத்து விட்டேன். திராவிடச் சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவன் என்றாலும் 'மங்காத்தா' ஆட்ட விதிகள் அப்படியானவை.
9) என் அமர்வை இயல்பாக, எளிமையாகவே எதிர்கொண்டேன். எல்லோரும் பயமுறுத்தி அனுப்பியது போல் மிரட்டல் கேள்விகள் ஏதுமில்லை. (இறுதி வரியில் திருப்பம் வைப்பது பற்றிய ஜெயமோகனின் கேள்வி ஒன்றுக்கு மட்டும் சரணடைந்தேன்.) வழமை போல் எது உண்மையோ அதைப் பதிலாக அளித்தேன், எந்த அலங்காரமும் இன்றி. I really enjoyed the session. (பார்வையாளர்களுக்கு எப்படி இருந்தது என்பதை அவர்களே சொல்ல வேண்டும்.)
10) ஒரு புத்தகமும் (எனக்கு வாய்த்தது தேவதேவனின் 'நுனிக்கொம்பர் நாரைகள்' கவிதைத் தொகுதி), வல்லிய பூங்கொத்தும், நல்ல சால்வையொன்றும் எழுத்தாள விருந்தினர்களுக்குப் பரிசாய் அளித்தார்கள்.
11) பெரும்பாலும் முதல் தினத்தின் எல்லா எழுத்தாளர் அமர்வுகளுமே சுவாரஸ்யமாக அமைந்தன. அது நான் எதிர்பாராதது. இந்த எழுத்தாளர் அமர்வுகளின் format முக்கியக் காரணம் எனத் தோன்றுகிறது. இது உரை அல்ல; உரையாடல். அதனால் வெவ்வேறு கோணங்களில், திசைகளில் பேச்சு திரும்பிக் கொண்டே இருக்கும் என்பதால் ஒரே இடத்தில் இருத்தி பார்வையாளர் கழுத்தில் கத்தி வைக்க எழுத்தாளருக்கு வாய்ப்பு குறைவு.
12) நிறைவான அனுபவம், நான் எதிர்பார்த்ததை விடவும். என் அமர்வு மட்டுமின்றி பெரும்பாலும் எல்லா எழுத்தாளர் அமர்வுகளையும் ரசித்தேன். முதல் நாளின் நட்சத்திரப் பேச்சாளர் சந்தேகமின்றி கவிஞர் சாம்ராஜ் தான். He is so spontaneous. குரலும் உச்சரிப்பும் கம்பீரம். பொறாமைப்படுமளவு ஜெயமோகனை Quote செய்கிறார்.
13) தமிழ்ச்சூழலில் ஒரே இடத்தில் சுமார் 200-300 பேர் இவ்வளவு தேர்ந்த வாசகர்கள் கூடுவது பேராச்சரியம். நான் கண்ட வேறெந்த வாசகக் கூட்டத்தை விடவும் இவர்கள் நல்ல வாசிப்பும் அதை விவாதிக்கும் திறனும் உடையவர்கள். அவர்களின் கேள்விகளில் அது புலப்படுகிறது. ஜெயமோகன் அசாத்தியமான ஒரு விஷயத்தைச் சாதித்திருக்கிறார்.
14) ஒரே இடத்தில் இத்தனை முதல் தர தமிழ் எழுத்தாளர்களைக் காண்பதும் அதிசயம் தான். (இத்தனைக்கும் குடி கிடையாது!) ஜெயமோகன், ஸ்டாலின் ராஜாங்கம், தேவகாந்தன், சுனில் கிருஷ்ணன், கவிதா சொர்ணவல்லி, லீனா மணிமேகலை, சரவணன் சந்திரன், நரன், எம். கோபாலகிருஷ்ணன், கோகுல்பிரசாத், தமிழினி வசந்த குமார், கேஜே அஷோக் குமார், விஷால் ராஜா, சுரேஷ் பிரதீப், கார்த்திகைப் பாண்டியன், வெண்பா கீதாயன், கடலூர் சீனு, கேஎன் செந்தில் ஆகியோரைச் சந்தித்து உரையாட முடிந்தது. நாஞ்சில் நாடன், ராஜ் கௌதமன், கோவை ஞானி, தேவதேவன், தேவி பாரதி, சு.வேணுகோபால்,கவிஞர் புவியரசு, லக்ஷ்மி மணிவண்ணன், சுதந்திரவல்லி, அனிதா அக்னிஹோத்ரி, மதுபால், சாம்ராஜ், கலைச்செல்வி, ஜான் சுந்தர், விஜயா வேலாயுதம் ஆகியோரைப் பார்க்க மட்டும் முடிந்தது. பெரும்பாலும் ஜெயமோகனுக்காக வந்தவர்கள். ஜெயமோகனை நிச்சயமாய் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று சொல்ல முடியும்.
15) பொதுவாக ஜெயமோகன் ஒரு ராணுவ ஒழுங்குடன் விவாதத்தைக் கட்டுப்படுத்தி, தணிக்கை செய்து, வழிநடத்திச் செல்வார் என்பதாக முந்தைய விழாக்களின் வாய் மொழிக் கதைகள் வழிக் கேட்டிருந்தேன். முன்பு எப்படியோ இந்த முறை அப்படி ஏதும் நான் பார்க்கவே இல்லை. வாசகர்கள் அவர்களாகவே கேள்வி கேட்டார்கள். அதில் ஜெயமோகன் குறுக்கிடவில்லை. சில சமயம் கேள்விகள் தெளிவற்று இருக்கும் போது அதை விளக்கினார், ஒன்று விரித்துச் சொல்வார் அல்லது சுருக்கி உரைப்பார் (அந்த இடங்களில் எல்லாம் அசத்தினார்!) ஓரிரு இடங்களில் கேள்வியை அனாவசியமாய் பீடிகை எல்லாம் போட்டு நீட்டி முழக்கிய போது வெட்டினார். அது வேறு வழியில்லை. அதைக் கட்டுப்படுத்தல் அல்லது தணிக்கை செய்தல் என்று கொள்ள முடியாது. (முற்காலக் கதைகள் உண்மை எனில் ஒருவேளை வாசகர் வட்டம் இம்முறை தானே சரியாய்ச் செய்யும் முதிர்ச்சி பெற்று விட்டதோ என்னவோ!) சொல்லப் போனால் ஜெயமோகன் அப்படி அமைதியாய் ஒதுங்கி நின்றது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இது அவர் ஏற்பாடு செய்யும் விழா என்ற தோரணையை நான் காணவே இல்லை. ஞாயிறு மாலை நடந்த விருது மேடையில் கூட அப்படித்தான்!
16) ஆனால் பெரும்பாலும் வாசகர் கேள்விகளில் ஒரு ஜெயமோகனின் விமர்சன பேட்டர்ன் இருந்தது. அவர் எழுத்தாளர்கள் பற்றி எழுதிய குறிப்புகளை மையமாய் வைத்து பல வாசகர்கள், அதே திசையில் மேற்கொண்டு தம் கருத்துக்களை உருவாக்கிக் கொண்டிருக்கலாம். அவ்வகையில் பக்ஷிராஜன் ஆன்மாவுடன் ஐக்கியமாகி விட்ட புள்ளினங்களின் ஆன்மாக்கள் ஒரே ராட்சச ராஜாளியாய்க் கிளம்பி வருவதைப் போல் தான் விஷ்ணுபுரம் விழாவின் எழுத்தாளர் அமர்வுகளில் வரும் பெரும்பாலான வாசகர் கேள்விகளைப் பார்க்கிறேன். பக்ஷிராஜன் ஜெயமோகன்.
17) விஷ்ணுபுரம் விழாவின் முதல் நாளின் இறுதி நிகழ்வாக ஓர் இலக்கிய விநாடி வினா வைத்தார்கள். ஒரு கேள்விக்கு விடை சொன்னாலும் ஒரு புத்தகம் பரிசு. அரங்கில் ஐம்பது பேருக்கு மேல் இருந்தார்கள். போட்டியின் முடிவில் எல்லோரும் ஆளுக்கொரு நூல் வாங்கி விட்டார்கள். என்னையும் வெண்பாவையும் தவிர.
18) விஷ்ணுபுரத்தார் எனக்கு ஏற்பாடு செய்திருந்த விடுதி அறையில் கூடுதலாய்த் தங்கிக் கொள்ள எழுத்தாளர் தேவிபாரதியின் உறவினர் எனச் சொல்லி ஒருவரை அனுப்பினார்கள் முதல் நாள் இரவு. அறுபது வயதுக்காரர். நரைத்த குறுந்தாடி, தடித்த கண்ணாடி. இலங்கைத் தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அதனால் எனக்குப் புரிதலில் சிரமங்கள் இருந்தன. என்னை அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றாலும் பெரிய மனதுடன் மன்னித்தேன். பிறகு உறங்கத் தயாராகிப் படுத்து விட்டோம். எதற்கும் இருக்கட்டுமே எனப் பெயர் விசாரித்தேன். "தேவகாந்தன்" என்றார். நான் ஜெர்க் ஆகி படுக்கையிலிருந்து எழுந்து கொண்டு "கனவுச்சிறை எழுதிய தேவகாந்தனா?" என்றேன். ஆமோதிப்பாய்த் தலையாட்டி, "கலிங்கு என்று அதன் தொடர்ச்சி இந்த ஆண்டு வந்திருக்கிறது." என்றார்.
19) இரண்டு நாட்களும் யாராவது சரவணன் சந்திரனுக்கான பாராட்டுக்களை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கான வசைகளை அவர் பெற்றாரா எனத் தெரியவில்லை.
20) லீனா மணிமேகலையின் கவிதையில் சத்தம் அதிகம் இருக்கிறது, அடுக்குகள் இல்லை என்ற குற்றச்சாட்டு பற்றி ஜெயமோகன் கேள்வி எழுப்பியது அவரது கவிதையின் கலைத்தன்மை பற்றியது மட்டுமே; அதன் உள்ளடக்கம் பெண்ணியக்குரலாக இருப்பது பற்றியே இல்லை. ஆனால் "பெண்கள் எழுதினாலே உங்களுக்குச் சத்தமாகத் தெரிகிறது" என்பதாக எடுத்துக் கொண்டு லீனா பதிலளித்து, நீண்ட விவாதமானது. (இத்தனைக்கும் அது வாசகர் கருத்து தான், தன்னுடையதல்ல என்று தெளிவுபடுத்தினார் ஜெயமோகன்.) லீனா கட்டுரை எழுதியிருந்தால் இக்கேள்வியே வந்திருக்காது. அது கவிதை என்பதால் தான் அதன் கலாப்பூர்வத்தை எடைபோட முயல்கிறார் ஜெயமோகன் (அல்லது வாசகர்கள்). நூறு வருட தமிழ் நவீனக் கவிதை விமர்சன மரபு அடிப்படையிலானது அவ்வினா. ஒருகட்டத்தில் சத்தம் பற்றி, "சாதாரணமா ஒரு விஷயத்தைச் சொன்னா கேட்கலைனா நாலு அறை விட்டுத்தான் ஆகனும்" என்றார் லீனா. ஜெயமோகன் சொல்ல வந்ததே இதைத் தான். "நாலு அறை விடுவது கவிதையா?" என்கிறார்.
21) ஜெயமோகனின் உயிரியல் வாரிசுகளைக் காண முடிந்தது. அஜிதன் அழகன். 'ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு' நூலில் பார்த்த குழந்தை ("நாளைக்கு நான் பெரிய பொண்ணா ஆயி, மெபெட்டிலே ரொம்ம்ம்ப வேகமாப் போறப்ப நீ எனக்கு ஏன் சிவப்பு சுடிதார் வாங்கித் தரல்லே?") வளர்ந்து நிற்கிறாள். நம்பவே முடியவில்லை. வாழ்க!
22) "You are never completely understood as an artist." என்று தன் உரையாடலில் வங்காள எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி சொன்னது ஒரு திறப்பு. அவர் பேச்சு நன்றாக இருந்தது. தமிழில் ஒரு சொல்லும் தெரியாது என்றாலும் அவர் இரண்டு நாளும் மிகப் பொறுமையாக, இணக்கமாக இருந்தார். இன்னொரு பக்கம் மதுபால் தன் முழுப் பேச்சையும் மலையாளத்திலேயே நிகழ்த்தினார். நான் பாதியில் எழுந்து சென்ற ஒரே அமர்வு அது மட்டுமே. குத்துமதிப்பாய் மலையாளம் புரிந்தது என்றாலும் என்னவோ உள்ளூர அதில் மெல்லிசாய் offend ஆனேன் போலிருக்கிறது.
23) சில சமயம் எழுத்தாளனைப் பேச வைப்பது வன்முறை. ராஜ் கௌதமன் அரங்கு ஓர் அசம்பாவிதம் என்றே சொல்ல வேண்டும். அவரது பிரதியிலிருக்கும் தர்க்கமும் கோர்வையும் பேச்சில் இல்லை. "ஏன் சொல்றேன்னா, இன்னிக்குத் தண்ணி பாட்டில் பத்து ரூவாய்க்கு விக்குது" என்ற ரீதியில் தான் பேசினார். அது தான் அவரது இயல்பு என்பதைக் கொஞ்சம் நேரத்திலேயே உணர்ந்து கொள்ள முடிந்தது. அது அவரது வெள்ளந்தித்தன்மையிலிருந்து வருகிறது என்பது புரியும் போது இதைச் சொல்லச் சங்கடமாகவும் இருக்கிறது. விருது வாங்கிய பின் ஆற்றிய ஏற்புரை சற்றுப் பரவாயில்லை.
24) முதலிரவுக் கட்டிலில் பூக்கள் தொங்க விடுவது போல் மேடையின் பக்கவாடில் பலூன்கள் கட்டுவதைத் தவிர்க்கலாம். குழந்தை வாசகர்களும் நடமாடுவதால் இலக்கிய விழாவா பர்த்டே பார்ட்டியா எனக் குழப்பம் வந்து விடுகிறது.
25) 'ஆப்பிளுக்கு முன்' நாவலை நிறையப் பேர் (அவர்களில் சிலர் நான் விரும்பும் / மதிக்கும் படைப்பாளிகள்) வாசித்திருந்தார்கள் என்பது ஆச்சரியம். எல்லோருக்கும் அது பற்றிய நல்லபிப்பிராயம் இருக்கிறது.
26) ஓர் ஆணென்றும் பாராமல் வளைத்து வளைத்து எடுத்திருக்கும் விஷ்ணுபுரம் புகைப்படக்காரருக்கு நன்றி! (புகைப்படங்களில் எனக்குத் தொப்பை தெரிவதாகத் தோழிமார்கள் சொல்கிறார்கள். அடக்க ஒடுக்கமாய் அமர்ந்திருக்கும் போது அர்னால்டுக்கே லேசாய் தொப்பை இருப்பது போல் காட்சிப்பிழை தோன்றும் என்பதை மறக்க வேண்டாம்.)
27) விஷ்ணுபுரம் விழாவின் நோக்கங்களை இவ்வாறு தொகுத்துக் கொள்கிறேன்: 1) தமிழின் முக்கியப் படைப்பாளிக்கு விருதளித்து அடையாளப்படுத்துவது. 2) அவர் பற்றி ஜெயமோகன் மற்றும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினரின் கருத்துக்களைக் கட்டுரைத் தொகுதியாக வெளியிடுவது. 3) அவர் பற்றி ஒரு குறும்படம் வெளியிடுவது. 4) தமிழில் சாதித்த மூத்த எழுத்தாளர்கள் மற்றும் நம்பிக்கையூட்டும் இளம் எழுத்தாளர்களுக்கு வாசகர்களுடன் உரையாடல் அமர்வு ஏற்பாடு செய்வது. 5) பிற இந்திய மொழிகளின் முக்கியமான எழுத்தாளர்களைத் தமிழில் மொழிபெயர்த்து, அவர்களை விழாவுக்கு அழைத்து அவர்களுக்கும் வாசகர்களுடனான விவாத அமர்வு நடத்துவது. 6) அப்படி மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளை அடுத்த ஆண்டில் தொகுப்பு நூலாக வெளியிடுவது. 7) இந்தச் செயல்பாடுகளின் வழியாக வாசக வட்ட அங்கத்தினரின் வாசிப்பை விரிவாக்கி, விமர்சன நோக்கைக் கூர்படுத்துவது. இம்மாதிரியான பிரம்மாண்ட இலக்கிய இயக்கச் செயல்பாட்டுக்கு இந்திய அளவில் கூட வேறு முன்னோடி இருக்கிறதா என்பது சந்தேகமே!
28) உணவும் உபசரிப்பும் உச்சம். விருந்துபுரம்; விருந்தோம்பல்புரம். பயணச்சீட்டு, தங்கும் விடுதி, போக்குவரத்து என அத்தனை ஏற்பாடுகளும் கச்சிதம். அரங்கசாமி, செல்வேந்திரன், மீனாம்பிகை, ஸ்ரீனிவாசன், சசிகுமார் உள்ளிட்ட விஷ்ணுபுரம் நண்பர்களின் அன்புக்கு நன்றி. அழைத்த / வாய்ப்பளித்த ஜெயமோகனுக்குப் பிரியங்கள்.
29) அடுத்த ஆண்டும் வர விரும்புகிறேன். பார்ப்போம்! (இப்படி எல்லாம் கேலி செய்தால் ரெட் கார்ட் போட்டு விடுவார்கள் என்று வெளியாட்கள் பயமுறுத்துகிறார்கள். அப்படி நடந்தால் போக வேண்டிய கடமை இரு மடங்காகிறது.)
30) இன்றைய செல்ஃபி சூழ், செல்ஃபோன் சூழ் உலகில் இவ்விரு தினங்களில் ஜெயமோகனுடன் ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை என்பது இந்தப் பின்னிரவில் தான் உறைக்கிறது. :-)
*
Published on December 24, 2018 05:51
December 21, 2018
ஆப்பிளுக்கு முன் - ஒரு மின்னஞ்சல்
அன்பின் சரவணகார்த்திகேயன் அவர்களுக்கு,
நான் இதற்கு முன், என் உற்ற தோழி ஒருத்திக்கு, என் அம்மாக்கு, "அவனுக்கு" (அப்புறம் எனக்கு) மட்டும் தான் கடிதம் எழுதி இருக்கேன். உங்களுக்கு இப்போ எழுதுவதில் காரணமோ அல்லது காரியமா பெருசா எதுவும் இல்லை. ஏதோ உங்க கிட்ட கேட்கணும் போல இருக்கு, அதான் எழுதறேன். அவ்வளவு தான். Before going into this, let me also get this straight - எனக்கு காந்தி பற்றியும் சரி காமம் பற்றியும் சரி முழுமையான புரிதல் நிச்சயம் இல்லை. ஏன், அடிப்படை புரிதல் கூட ரொம்ப ரொம்ப கம்மி தான்.
ஆப்பிளுக்கு முன் படிக்க நேர்ந்தது. வாழ்த்துக்கள். நல்ல படைப்பு. காந்தி எனக்கு புதுசு இல்ல. But I have never ventured beyond the contours of Gandhian economics and political thoughts (வேறுப்பாடுகலும் மரியாதையும் நிறைய உண்டு). அப்டி இருக்கற அப்போ, உங்க புனைவின் (புனைவாக மட்டும் பார்க்க கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துது) மூலம், I came to know about another facet of Gandhi ன்னு தான் சொல்லணும். Sex, Gender, sexuality இப்டி எதை பற்றியும் புரிதல் மறுக்க படர இந்த sexist தமிழ் சமூகத்துல வளர்க்கப்பட்ட சாதாரண பெண் நான். அதனால் தானோ என்னமோ காமம், பாலுணர்வு போன்ற விஷயங்களில் காந்தி எப்படி பட்டவராக இருந்து இருப்பார் என்று அரசல் புரசலாகக் கேள்விப்பட்டு இருந்தாலும், அதை பற்றி படிக்க சிரத்தை எடுத்துக் கொண்டதே இல்லை. And then, I read your book.
ஒரு வருடம் முன்பு வரையில், காமம் என்பது ஒரு அடிப்படை தேவையாகத் தான் இருக்கும் என்ற எண்ணம் இருந்துது. என்னைப் பொறுத்த வரையில், காமம் ஒரு உடல், உளம், உளவியல் சார்ந்த ஒரு தேவையாவே இருந்துது. ஒரு சராசரி பெண்ணாக, என்னால் உடலற்ற ஒரு உறவை (a romantic relationship devoid of physical propinquity) கற்பனை செய்து கூட பார்க்க முடியாமல் இருந்துது தான். ஆனாலும், ஏனோ என்னால் மநுவுடன், you know, I was able to relate. இந்த எடத்துல, உங்க கிட்ட கொஞ்சம் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன். எனக்கு 25 வயசு ஆகுது and I am still a virgin. Ever since my late teens, I have fantasized the idea of sex and I have heard my friends saying how the whole thing is awesome as such. அதை - அதாவது அந்த உணர்வை - including showing your naked self to someone which being the highest form of acceptance of your own body and soul - எவ்வாறு பிரம்மச்சரியம் என்ற அடிப்படையில் மறுக்க முடியும்? காந்திய விடுங்க, அந்த வயசுக்கு மநுக்கு அது எப்படி சாத்தியமாகும்? இந்த கட்டத்தில், மநுவிற்கும் பாபாவிற்கும் நடந்த உரையாடல் முக்கியமானதாக கருதுகிறேன். மநுவை பொறுத்த வரையில் பிரம்மச்சரியம் பற்றியோ, காந்தியின் யாகத்தை பற்றியோ, ஏன் காந்தி கூறியப் படி - அவர் பிரம்மச்சரிய பரிசோதனைகளைக் கைவிட்டதால் தான் மக்களின் மனதை மாற்றும் சக்தி அவருக்கு இல்லாமல் போனது - அதைப் பற்றியோ பெரிதாக கவலை இருந்ததாக தெரியவில்லை . அவளின் தேவை அன்பாகத் தான் இருந்தது. காந்தியின் மீதான ஈர்ப்பு தான் அவளின் உந்துதலாக இருந்தது. என் புரிதல் என்னவென்றால் - For her, what was important is being with Gandhi, loving him in her own way and masking it by calling him, her mother. ஒருவர் மீது ஒருத்தி காதல் பற்று (அத எந்த எழவுனாலும் கூப்டுக்கோங்க) வைத்து விட்டால், அவளால் அவனை மீறி உடலளவில் (உடலளவில் கூட) வேறு எவரையும் நினைக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை என்று எடுத்து கொள்ளலாமா?
இதையே - அதாவது ஒருவர் மீது ஒருத்தி காதல் பற்று வைத்து விட்டால், அவளால் அவனை மீறி உடலளவில் (உடலளவில் கூட) வேறு எவரையும் நினைக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை - இந்த hypothesis, 96 ராம் க்குமே பொருந்தும் தானே? அவனுக்கு ஜானு மீதான ஈர்ப்பு தானே அவன் மற்ற பெண்ணோடு உடலுறவு மறுத்ததற்கு காரணம்? காந்தியின் மநு and 96 ராம் - Is it okay to draw parallels between them?
மநு யாரையாவது திருமணம் செய்துக் கொண்டால் உடலுறவு வைத்து கொண்டால், அவள் காந்தியின் மீது வைத்த காதல் இல்லை என்று ஆகிவிடுமா? ராம் இன்னொரு பெண்ணிடம் உடலுறவு வைத்து கொண்டால் தான் அவன் ஜானுவின் மீது வைத்த காதல் பொய்யாகி விடுமா?
எனக்கு ஒருவன் மீது அலாதி ஈர்ப்பு / காதல், அவனை தாண்டி என்னால் சிந்திக்கக்கூட முடிந்ததில்லை. கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. Even after he said no to me. இது பரவசமாகவும், பாரமாகவும், பயமாகவும் இருக்கிறது. ஆனால், இது எதார்த்தம் ஆகாது தானே? இல்லை, இயல்பாகவே இப்படி தான் இருக்குமா?
இப்படிக்கு,
இனியா
*
டியர் இனியா,
இன்றைய இளம் பெண்கள் காந்தி பற்றிய ஒரு நாவலைப் பொறுமையாகப் படிக்கிறார்கள் என்பதே ஆச்சரியம் தான். அதற்கு முதலில் வாழ்த்துக்கள்.
முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கிக் கொள்வோம். இது ஒரு நாவல் தான்; வரலாறு அல்ல. காந்தி எப்படி இவ்விஷயத்தைப் பார்த்தார் என்பதற்கு அவரது எழுத்துக்களிலேயே தரவுகள் உண்டு. நாவல் அதை எடுத்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அதைக் கேள்வி கேட்கிறது. ஆனால் மநு இதை எப்படி எதிர்கொண்டிருப்பாள் என்பதற்குப் போதுமான நேரடித் தரவுகள் இல்லை. மநு காந்தி பற்றிய எழுதிய நூல்களில் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பேசப்படவே இல்லை. மநுவின் டைரிகள் குஜராத்தியில் இருக்கின்றன. அவை இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. (அவற்றில் நான்கைந்து கடிதங்களை மட்டும் இந்தியா டுடே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.) ஆக, அதில் ஒரு புனைவுக்கான சாத்தியம் இருப்பதை உணர்ந்ததால் தான் இதை நாவலாக எழுதினேன். நாவலில் மநுவின் எண்ணங்கள் பெரும்பாலும் என் புரிதல். தர்க்கம் மீறாத என் விருப்பம் என்றும் சொல்லாம். ஆக, எனது இந்தப் புனைவுச் சட்டகத்திலிருந்தே நான் உங்கள் கேள்விகளை எதிர்கொள்ள முயல்கிறேன். அதனால் இதில் நான் சொல்வது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல; ஒரு கோணம்.
காமம் / உடல் சாராத எதிர்பாலின உறவு என்பது மிக அரிதானது என்றாலும் சாத்தியமே. அது காமமற்ற உறவு என்று சொல்வதை விட காமத்தைக் கடந்த உறவு எனச் சொல்லலாம். இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் தான் நாம் காந்தி மநு உறவைப் பார்க்க வேண்டும். நீங்கள் புரிந்து கொண்டது சரியே. மநுவுக்கு காந்தியுடன் இருப்பதும், அவரது அன்புமே முக்கியம். அவரது பிரம்மச்சரியப் பரிசோதனைகள் அதற்கான பாதை அல்லது சாக்கு மட்டுமே. அதில் அவர் வெல்ல வேண்டும் என அவள் விரும்பி இருந்தால் அது அவரது மகிழ்ச்சிக்கும், திருப்திக்கும், நிம்மதிக்கும் தான். மற்றபடி, நேரடியாய் அவளுக்கு அந்தப் பரிசோதனைகள் மீது நம்பிக்கை இருந்தது என்பதற்கு நம்மிடம் ஆதாரங்கள் ஏதுமில்லை. அது ஒரு வகையில் காதல் தான். ஆனால் மநு அப்போது பதின்மங்களில் இருந்த பெண். அதனால் அதை ஓர் ஈர்ப்பு எனக் கொள்ளலாம். கண்மூடித்தனப் பிரியம். அது பலருக்கும் எதிர்பாலினத்தின் மீது வருவது தான். ஆனால் இங்கே அவள் தன்னையே அவரிடம் ஒப்புவிக்குமளவு இறங்கினாள் என்பது தான் அவளைத் தனித்துவம் ஆக்குகிறது. அது ஒரு சரணடைதல் தான். கண்ணனிடம் மீராவும் ஆண்டாளும் சரணடைந்தது போல்.
மநுவுடனான உங்கள் '96' ராம் பாத்திர ஒப்பீடு Brilliant! எனக்கு இதற்கு முன் இது தோன்றவில்லை. எனக்கு '96' பிடித்துப் போனதுக்குக் கூட இந்த விஷயமே உள்ளூர ஒரு காரணமாய் செயல்பட்டிருக்கலாம்.
உங்கள் அடுத்த கேள்வி இன்னொரு பெண்ணிடம் / ஆணிடம் உடலுறவு வைத்து கொண்டால் அவன் / அவள் கொண்ட காதல் பொய்யாகி விடுமா என்பது. ஆகாது. இரண்டும் வேறு. காதலையும் உடலுறவையும் ஒன்றெனவே ஆக்கி வைத்திருக்கும் நம் சமூகத்தின் பார்வைச் சிக்கல் அது. திருமணம் செய்யவில்லை, உடலுறவு கொள்ளவில்லை என்றாலும் வேறெந்தப் பெண்ணையும் மனதால் கூட எண்ணவில்லையா? சுயஇன்பம் செய்யவில்லையா? அது இயற்கைக்கே விரோதமாக இருக்கிறது. காதல் தோற்றதற்காக உணவு, மற்ற தேவைகளை, இயற்கை உபாதைகளைத் தவிர்க்கிறோமா? தள்ளிப் போடுகிறோமா? அது போல் தான் காமமும்.
ஆனால் நான் சொல்வது ஒரு Universal கருத்து. தனிப்பட்ட நபர்களுக்கு அது மாறலாம். ஆக, '96' ராம் திருமணம் செய்யாமல் இருந்தது அவனது தனிப்பட்ட முடிவு. அது தவறு என்றோ அது தான் சரி என்றோ முடிவாக ஏதும் நாம் சொல்ல முடியாது.
உதாரணமாய் ஜானு ராம் பிரிந்த பின் மணம் செய்து கொள்கிறாள். இன்னொருவனுடன் கலவி கொள்கிறாள். குழந்தை பெறுகிறாள். அதனால் அவள் காதல் உண்மை இல்லை என்றாகி விடுமா? மநுவே கூட பிற்பாடு திருமணம் செய்து கொண்டாள் என்று அறிகிறேன். ஆனால் இளமையிலேயே இறந்து போனாள். இவ்விரு கதைகளிலுமே அவர்களின் முந்தைய காதல்/ பிரியம் எவ்வகையிலும் குறையவில்லை என்றே சொல்வேன். ஆனால் அதைத் தாண்டி அவர்கள் சூழலின் அழுத்தங்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டி இருக்கிறது. அது தான் திருமணம். காதல் கைகூடாத பெண்களுக்குப் பொதுவாய் அப்படித்தான் நிகழ்கிறது. ஆண்கள் போல் காதலை எண்ணி தாடி வளர்த்து, தண்ணியடித்துத் தனிமையில் அமிழ்தல் சாத்தியப்படுவதில்லை.
என் வரையில் காதல் இல்லை என்று ஆன பிறகும் அதிலேயே தேங்கி நிற்பது ஒரு முட்டாள்தனமான முடிவற்ற காத்திருப்பு மட்டுமே. அதற்கு எந்த உணர்ச்சிகர மதிப்பும் இல்லை. அதனால் யாருக்கும் பயனும் இல்லை. அது ஓர் அர்த்தமற்ற சுயவதை தான். அதிலிருந்து ஒருவர் வெளிவருவதே எல்லோருக்கும் நன்மை பயக்கும் விஷயமாகும்.
பிரச்சனை என்னவென்றால் வயதில் இதைச் சொல்லும் போது புத்திக்கு ஏறாது. மத்திம வயதில் தலையிலடித்துக் கொள்ள வேண்டி இருக்கும். அப்போது தனிமை சகிக்க முடியாததாய் இருக்கும். உங்கள் கதையில் பையனும் மறுத்து விட்டான் என்ற போது அப்போது அவனும் கூட சொல்லளவிலேனும் ஆறுதலாய் அருகிலிருக்கப் போவதில்லை. அதனால் அதிலிருந்து வெளியே வருவதே சரியான முடிவு. எவ்வளவு மனம் அறுபட்டாலும் அதைச் செய்வதே முறை.
'96' ராமைத் திரையில் கொண்டாடினாலும் நடப்பில் அதை ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் அவனைக் கொண்டாவதே அதனால் தான்.
- CSK
***
(பெயர் மாற்றப்பட்டிருக்கிறது)
Published on December 21, 2018 03:36
December 15, 2018
கற்புக்கரசன் - யுவன் சந்திரசேகர்
Published on December 15, 2018 12:11
December 4, 2018
பொச்சு
“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது.

ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல்.
இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்கிருத வேர்ச்சொல்லிலிருந்து வந்தது அது என்று சொல்வோருண்டு (உதா: “புச்சம் ப்ரதிஷ்டா…” - தைத்திரீய உபநிடதம்).
பொதுவாய் புட்டம் என்ற அர்த்ததில்தான் இது மக்களிடையே வழக்கிலிருக்கிறது. குழந்தைகள் மலங்கழித்து விட்டு வருகையில் “பொச்சு கழுவி விடவா?” என்றுதான் கேட்பார்கள் (“குண்டி கழுவுதல்” என்ற பொருளில்). காலையில் துயிலெழத் தாமதமானால் “பொச்சுல வெயிலடிக்கத் தூங்கறான்” என்பார்கள். எள்ளலுக்குரிய அபத்தமான சூழலைப் பற்றிய பேச்சில் “பொச்சுலதான் சிரிக்கனும்” என்பார்கள். திட்டும் போது “பொச்சுலயே போடு”, “பொச்சுல பீ வர மிதி” என்பார்கள். (கவுண்டமணி சில படங்களில் இம்மாதிரி சொற்றொடர்களைப் பயன்படுத்தி இருப்பார். உதா: தாய் மாமன் படத்தில் நிச்சயம் செய்யப் போகும் காட்சியில் “பொச்சைப்புடிச்சு கடிச்சு வெச்சிரும்” என்பார்.) “பொச்சுக்கொழுப்பா?” எனக்கேட்கும் வழக்கமுண்டு, “சூத்துக் கொழுப்பா?” என்ற பொருளில் (உதா: பாண்டியக்கண்ணனின் சலவான் நாவல், பக்கம் 219). “பொச்சு தேச்சுக்குளிக்கனும்”, “பொச்சு மணலைத்தட்டி விடு”, “பொச்சு வணங்காம உக்காந்து திங்கறான்”, “பொச்சு வத்துனா தானாவருவான்” எனப்பலவாறு புழங்குகிறது.
பொறாமை மற்றும் வயிற்றெரிச்சலைக் குறிக்கின்ற பொச்சரிப்பு / பொச்செரிப்பு கூட இதிலிருந்து வந்திருக்கும் எனத்தோன்றுவதுண்டு. (“மொச்சைக்கொட்டை தின்றாலும் பொச்செரிப்பு; மோர் விட்டுச்சாப்பிட்டாலும் பொச்செரிப்பு” என்பது சொலவடை.) போன இடத்தில் கைமறதியாய் ஏதேனும் பொருளை வைத்து விட்டு வருவதைக் கிண்டல் செய்ய “பேண்ட இடத்துல பொச்சை வெச்சிட்டு வந்தானாம்” என்பார்கள். ‘பொச்சு’ என்பது மலங்கழித்தலுடன் தொடர்புடைய பிருஷ்டத்தையே குறிக்கிறது என்பதற்கான மற்றொரு உதாரணம் இது. அதே சமயம் “முட்டையிடும் கோழிக்குத் தான் பொச்சு வலிக்கும்” என்றொரு பழமொழியும் இருக்கிறது. அது முட்டை இடுகையில் பிறப்புறுப்பு வலிப்பதைக்குறிக்கிறதா அல்லது முட்டை மீதமர்ந்து அடைக்காக்கும் போது புட்டம் வலிப்பதைக்குறிக்கிறதா என்பது தெளிவில்லை.
சென்னைப்பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரகராதியில் (பக்கம் 2912) ‘பொச்சு’ என்பதற்கு சொல்லுக்கு பெண்குறி மயிர், பெண்குறி, மலத்துவாரம் ஆகிய பொருள்கள் உள்ளன. மைரன் வின்ஸ்லோ தமிழ்- ஆங்கில அகராதி (பக்கம் 816), ஜேபி ஃபேப்ரிஷியஸ் தமிழ்- ஆங்கில அகராதி (பக்கம் 281), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (6ம் மடலம், 3ம் பாகம், பக்கம் 143), தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தமிழ்- தமிழ் அகரமுதலி, பழநியப்பா பிரதர்ஸ் பால்ஸ் தமிழ்- தமிழ்- ஆங்கில அகராதி (பக்கம் 623) ஆகிய ஐந்திலுமே கிட்டத்தட்ட இதே அர்த்தங்களே தரப்பட்டுள்ளன. ‘பொச்சு’ என்றால் ஐரோப்பிய அகராதி (EUdict) பெண்குறி என்ற பொருளையே அளிக்கிறது. யோனியில் அமைந்துள்ள பூப்பெலும்பை (Pubis) பொச்சு எலும்பு என்றும் குறிப்பார்கள். மக்களின் பயன்பாட்டில் ஒரு பொருள் இருக்க, பண்டிதர்கள் அகராதியில், அதற்கு நேரெதிர் (அல்லது சில மிமீ தூர) பொருள் வந்தது ஆச்சரியத்துக்கும் ஆராய்ச்சிக்கும் உரியதே!
எனக்கு இது தொடர்பாய் ஓர் ஊகம் இருக்கிறது. தன் 'கெட்ட வார்த்தை பேசுவோம்' நூலில் பெருமாள்முருகன் ஒரு முக்கிய விஷயத்தைச் சுட்டுகிறார். தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் “அல்குல் தைவரல்” என்று ஓர் இடத்தில் வருகிறது. காதலனைச் சந்திக்கையில் அவனுடன் கூட விரும்பும் பெண் நாண மிகுதியால் வெளிப்படையாக அதைச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்துகிறாள். அல்குல் என்பது யோனி; தைவரல் என்பது தடவுதல். ஆனால் இதற்கு உரையெழுதிய நாவலர் சோமசுந்தர பாரதி (1942) ‘அல்குல்’ என்றால் பிருஷ்டம் என்று புதுப்பொருள் சொல்கிறார். அங்கே பெண்குறி என்று போட்டால் தமிழ்ப் பெண் பற்றிய பிம்பம் உடைந்து கலாசாரம் கெட்டு விடும் என்று அதைக் காக்கும் நோக்கில் பொருளைத் திரிக்கிறார். பிறப்புறுப்பை இருப்புறுப்பு ஆக்கி விட்டார். கம்பராமாயணம், தனிப்பாடல்கள் எனத் தமிழ் இலக்கியம் நெடுகவும் இந்தக் கத்தரி ஒப்பனை வேலை நடந்திருக்கிறது. இந்த உதாரணத்தை நீட்டித்துப் பார்த்தால், ஓரிடத்தில் எப்படி அல்குல் பிருஷ்டம் ஆனதோ அதேபோல் மற்றோர் இடத்தில் பொச்சு பெண்குறி ஆகி இருக்கலாம் என்பதென் துணிபு. அச்சொல் புரியாத குழப்பத்தில் அல்லது வசையாகப் பயன்படுத்துகையில் அதன் வீரியத்தைப் பெருக்கிக் காட்டும் முனைப்பில் நிகழ்ந்திருக்கலாம். (அல்லது வெளிச்சம் குறைந்த இடத்தில் பெண்ணிடம் பாடம் கேட்ட ஓர் இளங்கவிஞனின் மயக்கமாகவும் இருக்கலாம்!)
ஓர் உளவியல் விஷயம். பெண்கள் பொதுவாய் பெண்குறி தொடர்பான வசைகளைப் பேசுவதைத் தவிர்ப்பதைக்கவனித்திருக்கிறேன். அது சுயஅவமதிப்பு ஆகிவிடும் என்ற ப்ரஞையாக இருக்கலாம். ஆனால் ‘பொச்சு’ என்ற சொல்லைப்பெண்கள் சகஜமாகப் பயன்படுத்துகிறார்கள். அதனாலும் இது ஆசனப்பகுதியையே குறிக்கிறது எனலாம்.
இன்னொரு கருத்து ‘பொச்சு’ என்பது ஆண்குறி, பெண்குறி இரண்டையும் குறிக்கும், ஆனால் பொதுவெளியில் அவற்றுக்குரிய அசல் சொற்களைப் பயன்படுத்தத்தயங்கி இடக்கரடக்கலாக இதைப்பயன்படுத்துகிறார்கள் என்பது. அதனாலேயே பெரும்பாலான அகராதிகளில் பெண்குறியைக் குறிக்கும் சொற்கள் இதற்கு முதன்மைப்பொருளாகக் வருக்கிறது என்ற பார்வை. அடுப்புக்குட்டு என்ற சொல் அடுப்பில் பாத்திரம் பொருத்த இருக்கும் மூன்று குமிழ்களைக் குறிப்பதுபோல் பொச்சுக்குட்டு என்ற சொல் பின்புற மேடுகளைக் குறிக்கிறது என்கிறார் பெருமாள்முருகன் (கெட்ட வார்த்தை பேசுவோம், பக்கம் 82). அங்கே அடுப்பு என்றால் இங்கே யோனிதான் இருக்கிறது. ஆக, பொச்சு யோனியைக் குறிப்பதாகிறது. பொச்சுக்குட்டு என்பதே கூட பரவலான புழக்கத்தில் காலப்போக்கில் சுருங்கி, பொச்சு என்று மட்டும் நிலைத்திருக்கவும் சாத்தியமுண்டு.
வௌவாலுக்கு மலத்துளை கிடையாது என்றொரு கருத்துண்டு. விஞ்ஞானப்பூர்வமாக அப்படி இல்லை என்றாலும் அது நார்ச்சத்து உணவுகளைத்தின்று விட்டு செரிக்காமல் துப்புவதைக் கண்டு அதற்கு ஆசன வாயே கிடையாது என நம் முன்னோர்கள் முடிவு கட்டியிருக்கக்கூடும். ஏன் வௌவாலுக்குப் பொச்சில்லாமல் போனது என்றொரு கதை உண்டு. ஒருமுறை வெளவால் கடவுளிடம் உலக மரங்களின் பழங்களை எல்லாம் தானே தின்று வாழவேண்டுமென வரங்கேட்டதாம். அதற்கு ஏதுவாக செரித்த கழிவை வெளியேற்ற தொன்னூறு பொச்சு வேண்டும் என்றதாம். அதன் பேராசை கண்டு கடவுள் சினமுற்று “உனக்கு ஒரு பொச்சும் கிடையாது. வாயால் தின்று, வாயால் பேண்டு கொள்” எனச்சபித்து விட்டாராம். அதனால்தான் வௌவால் பொச்சு இன்றி வாயிலேயே கழிந்து திரிகிறது என்பதுதான் கதை. (இன்றும் பேச்சுவழக்கில் “ஒரு பொச்சும் கிடையாது” / “ஒரு பொச்சும் வேண்டாம்” போன்ற பிரயோகங்கள் உண்டு.)
‘பொச்சு’ என்ற சொல் பெருவாரியாய்ப் புட்டம் என்ற பொருளிலேயே பயன்படுகிறது என்று தெரிகிறது. இன்னும் சரியாய்ச் சொன்னால் பலரால் அவ்வாறுதான் புரிந்து கொள்ளப்படுகிறது. ஜனநாயகத்தை இந்த விஷயத்திலாவது நாம் மதிக்க வேண்டும்.
நாளை எங்களூர்ப்பக்கம் வருகையில் “பொச்சை மூடு” என்ற குரலைச்சந்திக்க நேர்ந்தால் எதை மூடச்சொல்கிறார்கள் என்ற குழப்பம் வந்திடக்கூடாதல்லவா!
*
(விகடன் தடம் - நவம்பர் 2018 இதழில் 'மெய்ப்பொருள் காண்' தொடரில் எழுதியது.)
Published on December 04, 2018 03:31
November 9, 2018
எரிநட்சத்திரம்
18ம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில் ஃப்ரெஞ்சு ராணுவத் தலைவர் நெப்போலியன் இந்தியாவில் ப்ரிட்டிஷ் பிடித்து வைத்திருக்கும் பகுதிகளைக் கைபற்றும் திட்டத்தை வகுத்தார். ஆங்கில எதிர்ப்பின் காரணமாக தந்தையைப் போலவே திப்பு சுல்தானும் ப்ரெஞ்ச் ஆதரவாளர். இக்கணக்கீடுகள் நான்காம் மைசூர் போருக்கு இட்டுச் சென்றன.
உலகின் இரு பெரும் போர் வீரர்களின் தலைவிதி அந்தப் போரில் கிறுக்கப்பட்டது.

திப்பு சுல்தானுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கும் இடையே நான்காம் மற்றும் கடைசி மைசூர் போர் உச்சமாய் நடந்து கொண்டிருந்த சமயம். ஸ்ரீரங்கப்பட்டினத்தை முற்றுகையிடும் நோக்கில் ப்ரிட்டிஷ் துருப்புக்கள் முன்னேறிக் கொண்டிருந்தன.
ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டைக்கு 1.6 கிமீ முன்பாக மரங்கள் அடர்ந்த சுல்தான்பேட்டை தோப்பு அமைந்திருந்தது. அங்கே திப்பு சுல்தானின் படை ஒன்று முகாமிட்டிருந்தது.
கம்பெனியின் படை ஸ்ரீரங்கப்பட்டினத்தை முற்றுகையிட இவர்களை அப்புறப்படுத்த வேண்டி இருந்தது. கர்னல் ஆர்தர் வெல்லஸ்லி தலைமையிலான ஒரு படையை அந்தக் காரியத்தை முடிக்க அனுப்பி வைத்தார்கள். 5 ஏப்ரல் 1799 அன்று இரவு தன் படையினருடன் தோப்புக்குள் நுழைந்த வெல்லெஸ்லிக்கு ஆப்பு காத்திருந்தது.
காரணம் சுல்தான்பேட்டையில் தங்கி இருந்தது திப்புவின் ராக்கெட் படைப்பிரிவு!
அந்தப் படைக்குத் தலைமையேற்று இருந்தவர் திப்புவின் திவான் பூர்ணய்யா. (இவர் முன்பே முன்றாம் மைசூர் யுத்தத்திலும் ராக்கெட் படைப் பிரிவை நடத்தியவர்.)
வெல்லஸ்லி அங்கு ராக்கெட் தாக்குதலுக்கு உள்ளானான். அதற்கு முன் ராக்கெட் தாக்குதலை அவன் வாழ்வில் சந்தித்ததில்லை. அதனால் அரண்டு மிரண்டான்.
சுற்றி ராக்கெட்கள் பாய்ந்தன. எங்கு காணினும் வான் நெருப்பு. பலர் கொல்லப் பட்டனர். 12 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். வெல்லஸ்லியும் காயமடைந்தான்.
பதற்றத்தில் செய்வதறியாது யுத்தகளத்தை விட்டு ஓடிப் போனான் வெல்லஸ்லி.
அலெக்ஸான்டர் பீட்ஸன் என்ற வரலாற்றாசிரியர் ‘குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற தொனியில் இதை “சாதகமான சூழல் வாய்க்கும் வரை தாக்குதலை ஒத்திப் போட வேண்டி இருந்தது” என நாசூக்காய்க் குறிப்பிடுகிறார்.
போரில் பங்கேற்ற ஒரு ப்ரிட்டிஷ் வீரர் இந்த ராக்கெட்களின் அழிவு வீரியத்தைக் கண்டஞ்சி “பறக்கும் கொள்ளை நோய்” (Flying Flagues) என்று வர்ணித்திருக்கிறார்.
“இரவு நேரத் தாக்குதல்கள் மிகுந்த மூர்க்கத்துடன் அமைந்தன. சில காட்சிகள் மிகுந்த பிரம்மாணடம் கொண்டவை. தென்மேற்கிலிருந்து குண்டுகளும் ராக்கெட்களும் வந்து விழுந்தவாறிருந்தன. வடக்கு பக்கம் பதுங்கு குழிகளிலிருந்து தாக்கினர். பீரங்கிகள் தீக்கிரையாகின. அவர்கள் முன்னேறுவதற்கான சமிக்ஞையாக அது பயன்படுத்தப் பட்டது.” என்று அந்த இரவினைப் பேசுகிறார் இன்னொரு ப்ரிட்டிஷ் படை வீரர்.
மைசூரின் வெப்பம் வெல்லஸ்லிக்குப் புதிது. தவிர மோசமான குடிநீரின் காரணமாக வயிற்றுப்போக்கு கண்டிருந்தான். சுல்தான்பேட்டை ராணுவரீதியாக ஆய்வு ஏதும் செய்யாமல் களத்தில் இறங்கியது தவறு என்பது வெல்லஸ்லி கற்றுக் கொண்ட முதல் பாடம். பயம் தோல்வி தரும் என்பது அந்த இரவு அளித்த அடுத்த பாடம்.
அடுத்த நாள் சுதாரித்து மீண்ட வெல்லஸ்லி பெரும்படையுடன் மீண்டும் தாக்குதல் நடத்தி ஒரு வீரனைக் கூட இழக்காமல் சுல்தான்பேட்டையை தன் வசமாக்கினான்.
போர்க்களத்திலிருந்து பின்வாங்கி ஓடி வந்ததற்காக சட்டப்படி வெல்லஸ்லி ராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவனது சகோதரன் அப்போது கல்கத்தா கவர்னர் ஜெனரலாக இருந்ததைப் பயன்படுத்தி தப்பித்துக் கொண்டான். அந்நிகழ்வு அவன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது என்கிறார் அவனது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஃபிலிப் க்யூடெல்லா. அதற்கு பின் அவன் எச்சூழலிலும் பயமோ பதற்றமோ கொள்ளலாகா எனத் தீர்மானித்துக் கொண்டான்.
இந்த வெல்லஸ்லி தான் பிற்பாடு வெல்லிங்டனின் முதலாம் ட்யூக் ஆனான். அதன் பிறகு வாட்டர்லூ போரில் உலகம் போற்றிய மாவீரனான நெப்போலியனைச் சந்தித்து அவனுக்கு முடிவுரை எழுதினான். லார்ட் வெல்லிங்டன் என்றும் இரும்பு ட்யூக் என்றும் அழைக்கப்பட்ட வெல்லஸ்லி வார்க்கப்பட்டது சுல்தான்பேட்டையில் தான்.
நெப்போலியனின் அழிவுக்கு அவனே துவக்கி வைத்த நான்காம் மைசூர் யுத்தமே மறைமுகக் காரணம் எனலாம். சுல்தான்பேட்டை இருளில் கர்னல் வெல்லஸ்லியை தெளிந்த அஞ்சான் ஆக்கிய வகையில் மட்டுமல்லாது இன்னுமொரு வழியிலும் அப்போர் நெப்போலியனின் அழிவுக்கு காரணமானது. அதைப் பற்றி பிற்பாடு.
*
பதினான்கு நாட்கள் கழிந்தன. 22 ஏப்ரல் 1799. ஸ்ரீரங்கப்பட்டினத்தை முற்றுகையிட காவிரி நதியின் வடகரையில் காத்திருந்த கர்னல் ஸ்டூவர்ட் தலைமையிலான ப்ரிட்டிஷ் படையின் முகாமை பின்புறத்திலிருந்து திப்புவின் வீரர்கள் தாக்கினர்.
இம்முறையும் ராக்கெட் தாக்குதல். ஒரே நேரத்தில் பெரும் எண்ணிக்கையிலான ராக்கெட்கள் ப்ரிட்டிஷ் கூடாரங்களின் மீது ஏவப்பட்டன. இது உண்மையில் ஒரு சமிக்ஞை. மிர் கோலாம் ஹுஸைன் மற்றும் முகமது ஹுலேன் மிர் மிரான்ஸ் ஆகியோர் தலைமையினான 6,000 வீரர்கள் (இதில் ஒப்பந்த வாடகைக்கு அமர்த்தப் பட்டிருந்த ப்ரெஞ்சுப் படை வீரர்களும் அடக்கம்) தாக்குதலைத் தொடங்கலாம் என்பதற்கான குறிப்பு. சில ராக்கெட்கள் காற்றில் வெடிகுண்டுகள் போல் வெடித்தன இந்த ராக்கெட்கள் சுமார் 1 கிமீ தூர அளவிற்கு வீச்சினைக் கொண்டிருந்தன.
தரை ஏவுகணை (Ground Rocket) என்றழைக்கப்பட்ட ராக்கெட்கள் நிலத்தில் விழுந்த பின் மேலெழுந்து, விசையுள்ள வரை பாம்பு போல் முன்னகர்ந்து பின் வெடித்தன.
ப்ரிட்டிஷ் படைகளின் மீது வந்து விழுந்த ராக்கெட்கள் யாவும் பெருத்த ஓசையுடன் வெடித்தன. இது அவர்களின் குதிரைப் படைகளை சிதறி மிரண்டோடச் செய்தன.
குறிப்பாய் பெரும் எண்ணிக்கையில் ப்ரிட்டிஷ் படைகளுக்குத் துணையாய் வந்து கொன்டிருந்த பிற மாகாண இந்திய வீரர்களை இது எளிமையாய்ப் பயமுறுத்தியது. அவர்கள் பொதுவாய் பிரிட்டிஷாருக்கு இணையாய்ப் பயிற்சி பெற்றவர்கள் அல்லர்.
"நாங்கள் மிக எரிச்சலும் குழப்பமும் அடைந்தோம். அழிவு ராக்கெட்களிடமிருந்து ஆபத்தின்றி தப்பித்து நகர்வது சிரமமானதாக இருந்தது. 20,000 பேர் கொண்ட எதிரிப் படை தொடர்ச்சியாய் ராக்கெட் தாக்குதல் நடத்தின. ஆலங்கட்டி மழை கூட அதை விட அடர்த்தியானதாய் இருக்க முடியாது. நீல ஒளியாய்த் துவங்கிய ஒவ்வொன்றும் ராக்கெட்டாய் வந்து பொழிந்தது. சில தூண்களின் தலையில் குத்தி பின்புறம் வெளி வந்தன. மரணமும், காயமும், வெட்டுகளும் சூழ்ந்தன. 20 - 30 அடி நீளம் கொண்ட மூங்கில் கழிகள் அவற்றில் இணைக்கப்பட்டிருந்தன." என இப்போரில் பங்கேற்ற பெய்லி என்ற இளம் ப்ரிட்டிஷ் அலுவலர் தன் டைரிக் குறிப்பில் எழுதுகிறார்.
2 மே 1799 அன்று ஸ்ரீரங்கப்பட்டினத்தின் மீது தாக்குதல் துவங்கியது. கோட்டைக்குள் வைக்கப்பட்டிருந்த ராக்கெட் தளவாடங்களை ப்ரிட்டிஷார் சுட்டு தாக்குதல் நடத்தினர். அவை வெடித்து பெரும் கரும்புகை மேகத்தை அங்கு ஏற்படுத்தியது. கோட்டைக் கொத்தளத்திலிருந்து அடுக்கடுக்காய் வெடிப்பின் வெண்ணொளி கிளம்பியது.
அடுத்த நாள் திப்பு கோட்டையின் சுவரில் துளையிட்டு உள்ளே ஊடுருவினார்கள். 4 மே 1799 அன்று மதியம் கோட்டையின் மீதான இறுதித் தாக்குதலை ஆரம்பித்தது டேவிட் பேர்ட் தலைமையிலான ப்ரிட்டிஷ் படை. அங்கும் ராக்கெட்கள் வரவேற்றன.
பேர்டுக்கு திப்புவிடம் தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஒன்று பாக்கி இருந்தது.
அதற்கு சுமார் 20 ஆண்டுகள் முன் திப்பு முதன் முதலாய் ராக்கெட் பயன்படுத்திய பொல்லிலூர் யுத்தத்தில் ப்ரிட்டிஷார் தோற்ற போது போர்க் கைதியாய் சிக்குண்டு 44 மாதங்கள் சிறை இருந்தவன். அவனுக்கு திப்பு பற்றித் தெரியும். ராக்கெட்களையும்.
ராக்கெட் தடுப்பாட்டம் அதிக நேரம் உதவவில்லை. இம்முறை வலுவான ப்ரிட்டிஷ் படை ராக்கெட்களை எதிர்கொண்டு முன்னேறியது. ஒரு மணி நேரத்தில் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. திப்பு சுட்டுக் கொல்லப்பட்டார். போர் முடிவுக்கு வந்தது.
ஆம். இப்படி திடுதிப்பென்று தான் திப்புவின் மரணத்தை அறிவிக்க வேண்டியுள்ளது!
திப்புவின் உடல் மீட்கப்பட்ட போது மூன்று பயோனெட் (துப்பாக்கியின் முனையில் இணைக்கப்பட்ட கத்தி) காயங்களும், தலையில் ஒரு குண்டடியும் பட்டிருந்தது.
*
போரில் மட்டுமல்லாது சடங்கு சம்பிரதாயங்களிலும் மைசூரில் ராக்கெட்கள் பயன் படுத்தப்பட்டன. உதாரணமாய் ப்ரெஞ்சுக்காரர்கள் அமைத்த ஜேகோபியன் க்ளப் ஆப் மைசூர் என்ற குடியரசுக்கான புரட்சி அமைப்பு தூதுக்குழு ஒன்றை அனுப்பி மைசூர் வைத்த போது 500 ராக்கெட்கள் வெடித்து மரியாதை செய்தான் திப்பு சுல்தான்.
விர்ஜினியாவிலிருக்கும் நாசாவின் வாலோப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டியில் போர்க் களத்தில் மைசூர் ராக்கெட்களின் சாகஸத்தை விளக்கும் ஓவியம் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. நாஸா தளத்தில் ராக்கெட் இயல் பற்றிய வரலாற்றுக் குறிப்பிலும் திப்புவின் பங்கு பேசப்படுகிறது. நவீன ராக்கெட்களின் துவக்கம் திப்பு சுல்தான் தான்!
திப்புவின் ராக்கெட் நவீன ராக்கெட் இயலுக்கு வலுவான அடித்தளமாய் அமைந்தது. இறுதியில் திப்பு சுல்தான் தோல்வி அடைந்தாலும் அவன் இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கம் வேரூன்ற பெரும் தடையாய் இருந்தான். எந்த தேசத்தையும் தம் படை பலத்தால் எதிர்கொண்டு அடக்கிய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு திப்புவின் ராக்கெட்கள் பிரம்மாண்ட சவாலாய் அமைந்தன. விஞ்ஞானத்துக்கு சாம்ராஜ்யம் அடிபணிந்தது.
திப்பு சுல்தானின் படைகளுக்கும் எதிரி சேனைகளுக்குமான வித்தியாசம் வீரர்களின், குதிரைகளின், யானைகளின் எண்ணிக்கையில் இல்லை; ஆயுதங்களின் எண்ணிக்கை இல்லை. யுத்த கள நிலவியல் அல்ல. போர் வியூகம் கூட அல்ல. அது ராக்கெட்கள்!
ஒன்று மட்டும் நிச்சயம். மொத்த மைசூர் போர்களிலும் ராக்கெட் தாக்குதல் என்பது வெள்ளைக்காரர்கள் எதிர்பாராதது. அது அவர்களிடையே பெரும் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அவர்களுக்கு பலத்த உயிர் மற்றும் பொருட்சேத்ததை விளைவித்தது. அவர்களைப் பின்வாங்கச் செய்தது. சில இடங்களில் தோற்கவும் வைத்தது. அவர்கள் திப்புவின் ராக்கெட்களைக் கண்டு பயந்தனர்; பிரம்மித்தனர். ஆனால் இதை எல்லாம் பாடமாக எடுத்துக் கொண்டார்கள் ப்ரிட்டிஷ்காரர்கள்.
அவர்கள் இன்னொரு முறை ஒரு கிழக்கத்திய நாட்டின் காட்டான்களிடம் இப்படி எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலையத் தயாரில்லை. பிழையிலிருந்து கற்றனர்.
ஸ்ரீரங்கப்பட்டினம் வீழ்ந்த பின் அங்கு கைப்பற்றப்பட்டு 600 ராக்கெட் ஏவும் கருவிகள், பயன்படுத்தப்படும் நிலையிலிருந்த 700 ராக்கெட்கள், 900 ராக்கெட் உதிரி பாகங்கள், 9,000 காலி ராக்கெட்கள் ஆகியவை இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
அவற்றில் இரு ராக்கெட்கள் மட்டும் மிஞ்சி தற்போது லண்டன் ராயல் ஆர்ட்டிலரி ம்யூஸியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 1990களில் ஒருமுறை அப்துல் கலாம் ஐரோப்பிய பயணம் சென்ற போது இவற்றை ஆராய்ந்து மகிழ்ந்திருக்கிறார்.
சரி, மீத ராக்கெட்கள் என்னவாகின? காரணமில்லாமலா வெள்ளைக்காரன் அத்தனை இரும்பையும் கப்பலேற்றுவான்! அதற்கு ஒரு முக்கியமான நோக்கம் இருந்தது.
ஆம்! மைசூரில் இறந்து போனது திப்பு சுல்தான் மட்டும் தான். ராக்கெட் அல்ல.
***
(குங்குமம் இதழில் வெளியான 'ஆகாயம் கனவு அப்துல் கலாம்' தொடரில் ஓர் அத்தியாயம். நூலை வாங்க: https://www.amazon.in/dp/9385118706. இன்று திப்பு ஜெயந்தியை ஒட்டி இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.)
Published on November 09, 2018 23:37
September 22, 2018
கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி
பண்டித ஜவஹர்லால் நேரு நவீன இந்தியாவின் சிற்பியாகக் கருதப்படுகிறார். 1947ல் சுதந்திரம் கிடைத்த போது சிதிலமடைந்து கிடந்த ஒரு பிரம்மாண்ட தேசத்தை அவர் தன் தொலைநோக்குப் பார்வையின் மூலம் - விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை பல்வேறு துறைகளிலும் மேம்பாட்டை ஏற்படுத்தி - புத்துயிர்ப்புடன் நிர்மாணித்தார். அதன் மூலம் சமூக, பொருளாதார வளர்ச்சியை நாடெங்கிலும் சாத்தியப்படுத்தினார். அவர் மறைந்த போது ஒரு நவீன தேசத்தை உருவாக்குவதற்கான மிக வலுவான ஓர் அடித்தளத்தை அமைத்துப் போயிருந்தார். நிதானமாய் யோசித்தால் நேரு அவர்கள் இந்திய நாட்டிற்கு எதைச் செய்தாரோ அதையே தமிழ் நாட்டிற்கு கலைஞர் செய்தார்.

ஆனால் கலைஞரின் நவீனச் சிந்தனை கொஞ்சம் வேறுபட்டது. அது சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Growth) உத்தேசித்தது.
இன்றைய நவீன ஆட்சி என்பதில் இரண்டு விஷயங்களை நோக்கி இருப்பதாகக் கருதுகிறேன். 1) வளர்ச்சி 2) சமத்துவம். அதாவது முரட்டுத்தனமாய் நாடு வளர்கிறது எனப் பொருளாதாரக் குறியீடுகள் மூலம் காட்டுவதோ, குறிப்பிட்ட துறைகளில் மட்டும் பெருவளர்ச்சி காண்பதோ, சமூகத்தில் சில பிரிவினர் மட்டும் செல்வச் செழிப்புறுவதோ அசலான வளர்ச்சி அல்ல. வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒரு நவீனமான நிர்வாகம் அதை நோக்கியே திட்டமிடும். மோடியின் குஜராத் வளர்ச்சி ஏன் அனைவருக்குமானதல்ல; கலைஞரின் தமிழகம் எப்படி அனைவருக்குமான வளர்ச்சி என்பதை ஆராய்ந்தால் இது விளங்கும்.
“இந்தியா ஒளிர்கிறது” என்ற வாஜ்பாய் அரசின் கோஷமும், “9 சதவிகித வளர்ச்சி” என்ற மன்மோகன் அரசின் கோஷமும், “புதிய இந்தியா பிறந்தது” என்ற இன்றைய மோடி அரசின் கோஷங்களும் இன்று எளிய மக்களிடையே எடுபடாமல் போவதற்குக் காரணம் அவை எல்லாம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அல்ல என்பது தான். கலைஞர் அதை ஆரம்பம் முதலே அறிந்து வைத்திருந்தது நம் அதிர்ஷ்டம்.
கலைஞர் தமிழகத்துக்குச் செய்த நவீன பங்களிப்புகள் டைடல் பார்க் கட்டியதும் மேம்பாலங்கள் கட்டியதும் மட்டுமல்ல. அவை நேரடியாக நம் கண்ணில் தெரியும் நவீனங்கள். உண்மையில் எல்லாத் துறைகளிலும் அவர் நவீனத்தைப் புகுத்தினார். பொருளாதார மற்றும் சமூகத் தளங்களிலும் நவீனமான பார்வையை முன்வைத்தார். ஏதொன்றில் பழைய சிக்கல்களை அகற்றி, எளிமைப்படுத்தலைக் கொண்டு வருவதும் நவீனமயமாக்குதலே. இரு உதாரணங்கள் உழவர் சந்தை மற்றும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள். ஒன்றில் இடைத்தரகை அகற்றி விவசாயிகளுக்கு நேரடிப் பலன் கிட்டச் செய்தார். அது ஒரு பொருளாதாரப் புரட்சி. அடுத்ததில் சாதி வேற்றுமை களைந்த ஒரு மாதிரித் தமிழ்ச் சமூகத்தை உண்டாக்கிக் காட்ட முயன்றார். அது ஒரு சமூக மீட்டுருவாக்கம். இப்படி அவர் எல்லா இடங்களிலும் நவீனத்தைப் புகுத்தினார்.
*
விடுதலைக்குப் பின் நாட்டு வளங்களை நேர்த்தியாகப் பயன்படுத்தவும் (வளங்களைக் கணக்கிடுதல், குறைவான வளங்களைப்பெருக்குதல், சமச்சீர் முறையில் அவற்றைப் பயன்படுத்துதல்), உற்பத்தியைப் பெருக்கவும் (விவசாயம் முதல் தொழிற்சாலைகள் வரை), வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் திட்டக்குழு (Planning Commission) உருவாக்கப்பட்டது. நவீனஇந்தியாவை அடைவதற்கான முதற்படி என அதைச் சொல்லலாம். அதன் வழியே தான் ஐந்தாண்டுத் திட்டங்கள் உருவாகின. பல்வேறு துறைகளிலும் தேசம் தன்னிறைவை அடைந்தது. ஜனங்களின் வாழ்க்கை மேம்பட்டது. அதில் நேரு என்ற பெருந்தலைவரின் தரிசனம் இருந்தது.
அண்ணாவுக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த கலைஞர் 1971ல் மாநிலத் திட்டக் குழுவை (State Planning Commission - SPC) உருவாக்கினார். முதலமைச்சரின் தலைமையில் தமிழ் நாட்டின் முன்னேற்றம் தொடர்புடைய பல்வேறு சிபாரிசுகள் வழங்கும் அலோசனைக் குழு இது. தேசிய அளவிலான திட்டக்குழு போல் இதுவும் ஐந்தாண்டுத் திட்டங்களின் வழி மாநிலத்தின் வளர்ச்சியை மேற்கொண்டது. (i) விவசாயம் (ii) தொழில், மின்சாரம் மற்றும் போக்குவரத்து (iii) நிலப்பயன்பாடு (iv) கல்வி, வேலைவாய்ப்பு (v) சுகாதாரம் மற்றும் சமூக நலன் (vi) மாவட்ட மற்றும் ஊரக வளர்ச்சி (vii) திட்ட ஒருங்கிணைப்பு என ஏழு பிரிவுகளில் சூழலை ஆராய்ந்து சரிவிகித மாநில வளர்ச்சிக்கான நிதி, நிலப் பயன்பாட்டு ஆராய்ச்சிக் குழுமம், சிறப்புப் பகுதிகள் வளர்ச்சித் திட்டம், மாநிலத்தின் புதிய முயற்சிகளுக்கான வைப்பு நிதி எனப் பல பெருந்திட்டங்களை ஆக்கியளித்தது. இதுவரை 12 ஐந்தாண்டுத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.
சிறுதொழில் வளர்ச்சிக்கென தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் (Small Industries Development Corporation Limited - SIDCO) 1970ல் கலைஞரால் உருவாக்கப்பட்டது. தமிழகம் எங்கும் தொழிற்பேட்டைகள் அமைத்தல், பராமரித்தல், அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்கல், தயாரிக்கும் பொருட்களைச் சந்தப்படுத்தல் ஆகியன நோக்கம். இந்த அமைப்பு 59 தொழிற்பேட்டைகளைத் தமிழகத்தில் உருவாக்கியது.
போலவே 1971ல் தொழில் வளர்ச்சி கழகமும் (State Industries Promotion Corporation of Tamil Nadu - SIPCOT) பெருந்தொழில்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த தொழிற்வளர்ச்சிக்கென கலைஞரால் உருவாக்கப்பட்டது. 20 தொழிற்சாலை வளாகங்கள் மற்றும் 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. 1973லும் 1989லும் இராணிப்பேட்டையில் இரு தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டன. போலவே ஓசூரில் 1974லும் 1989லும். (அதாவது 13 ஆண்டு வனவாசத்துக்கு முன்பும் பின்பும்.)
1996 - 2001 ஆட்சிலும் திருப்பெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் சிப்காட் சார்பில் புதிய தொழில் வளாகங்கள் திறக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இவற்றின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றார்கள்.
அரசு நிறுவனங்களை உருவாக்கியும், தனியார் நிறுவனங்களுடன் இணைந்தும் மாநிலத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்கத் தொடங்கப்பட்ட தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (Electronics Corporation of Tamil Nadu - ELCOT) கலைஞர் அரசின் முயற்சியில் தான் 1977ல் தன் பணியைத் துவக்கியது. (அப்போது அரசு கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி. ஆனால் விதை கலைஞர் இட்டது.) தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறையின் விரிவாக்கம் மற்றும் மாநிலத்தின் மின்னணு ஆளுகைப் பரவலாக்கத்துக்கு முதுகெலும்பு இதுவே.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் விரிவான தகவல் தொழில்நுட்பக் கொள்கையை 1997ல் கலைஞர் உருவாக்கினார். மத்திய அரசு கூட 2004ல்தான் தேசிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை அறிவிக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். “மத்திய நிதியமைச்சர் சின்ஹா தமது பட்ஜெட் உரையில் குறிப்பிடத் தவறிவிட்டார். இருந்தபோதிலும் தமிழ்நாட்டின் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் உச்சியில் ஏறி நின்று சென்னையில் நிகழ்ந்து வரும் அமைதியான புரட்சி பற்றி உரக்கச் சொல்லிட வேண்டிய அவசியம் இல்லை. ஓசையில்லாமல் ஏராளமான மென்பொருள் வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரே நகரம் சென்னை தான்.” என்று தில்லியை இடித்து தெற்கைப் புகழ்ந்தது DQ Week என்ற இணைய இதழ் (06.03.2000).
1999ல் அவர் நடத்திய தமிழ் இணைய மாநாடும் ஒரு முக்கியமான சாதனை. 2000ல் முதன் முதலாக சென்னை தரமணியில் தகவல் தொழில்நுட்பப் பூக்கா (Tidel Park) உருவாக்கியதும் கலைஞரே. ஐந்தாண்டு இடைவெளியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது கோவையிலும் அதே போன்ற பிரம்மாண்ட ஐடி பார்க் உருவாக்கப்பட்டது. பன்னாட்டு மூலதனத்தை தமிழ்நாட்டுக்குக் கவர்ந்திட இது மிகவும் உதவியானது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் கொழிக்கும் மூன்று மாநிலங்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் தமிழகம் எழுந்தது இம்மாதிரியான முன்னெடுப்புகளின் மூலமே.
*
கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பு என்றார் காந்தி. விவசாயம் மாநில முதுகெலும்பு என நம்பினார் கலைஞர். அவர் ஆட்சியில் விவசாயம் பெற்ற வளர்ச்சி நிகரற்றது.
1998ல் விவசாய உற்பத்திச் சந்தைப்படுத்துதல் வரி மீளாய்வுக் குழு அமைத்து பிற மாநிலங்களில் விவசாயிகள் எவ்வாறு தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்பதை ஆய்வு செய்யச் சொன்னார் கலைஞர். சண்டிகரில் ‘அப்னே மண்டி’ என்ற பெயரில் உழவர்கள் தம் வண்டிகளில் அமர்ந்து விளைபொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதைப் பற்றி அறிந்தார். உழவர் சந்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 1999 - 2000ல் மாநிலம் முழுவதும் 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. இன்று குறைந்தது 179 உழவர் சந்தைகள் தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இடைத்தரகர்களின் ஆதிக்கக்கொள்ளை களைந்த இத்திட்டத்தால் விவசாயிகளும் லாபம் பெற்றனர், பொதுமக்களும் லாபம் பெற்றனர்.
1970ல் கலைஞர் ஆட்சியில் நில உச்ச வரம்பு சட்டத்தைத் திருத்தி 15 ஏக்கர் என்று நிர்ணயித்தார் (அது வரை 30 ஏக்கர் என்று இருந்தது). இதன் படி 5 பேர் கொண்ட குடும்பம் அதிகபட்சம் 15 ஏக்கர் நிலம் மட்டுமே சொந்தமாக வைத்திருக்க முடியும். கூடுதல் உறுப்பினர்களுக்கு தலா 5 ஏக்கர்; மொத்த உச்ச வரம்பு 30 ஏக்கர். அவரது ஆட்சியில் தமிழகம் முழுக்க இச்சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு, சுமார் 1,78,880 ஏக்கர் உபரி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அவை சுமார் 1,37,236 நிலமற்ற விவசாய மக்களுக்குப் பிரித்து ஒப்படைக்கப்பட்டது. இன்றும் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்நிலங்களை 'கலைஞர் பட்டா' என்றே மக்கள் அழைக்கிறார்கள்.
40,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.7000 கோடி கூட்டுறவு விவசாயக்கடனைத் தள்ளுபடி செய்தார் கலைஞர். (2006ல் முதல்வராகப் பதவியேற்ற நிகழ்ச்சியின் மேடையிலேயே இதை அறிவித்தார்.) ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் “அப்படிச் செய்திருக்காவிட்டால் பல விவசாயிகள் தற்கொலை செய்திருப்பர்” என்றார் காங்கேயம் காளைகள் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் கார்த்திகேய சிவசேனாபதி.
இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாய பாசனத்துக்கெனப் பயன்படுத்தப்படும் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்க 1990ல் உத்தரவிட்டார் கலைஞர். இதனால் 16 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்தனர். விவசாயம் குறிப்பிச்ச பருவ காலங்களில் மட்டுமே நடக்கும் என்பதால் ஆண்டின் 12 மாதமும் அவர்களின் பம்ப் செட் பயன்பாட்டில் இருக்காது என்பதைப் புரிந்து கொண்டு அவர் எடுத்த தர்க்கப்பூர்வ முடிவு அது. 1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இதை மேலும் விரிவுபடுத்தினார்.
1996 ஆட்சியில் இயற்கைச் சீற்றத்தால் இறந்த ஆடுகளுக்கு ரூ. 1000ம், மாடுகளுக்கு ரூ. 5,000ம், கன்றுக்கு ரூ. 3,000ம் நிவாரணத் தொகை வழங்கினார். 1997 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் குறுகிய காலக்கடன்கள் மத்திய காலக் கடன்களாக, மத்திய காலக் கடன்கள் நீண்ட காலக் கடன்களாக கலைஞரால் மாற்றப்பட்டன. 2006ல் பயிர்க் காப்பீடு திட்டத்தில் 50 சதவிகிதம் காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாகக் கொடுத்து ஒரு லட்சம் விவசாயிகளைப் பயனடைய வைத்தார். அவர்களுக்குக் குறைந்த வட்டியிலான வங்கிக்கடன்களை சாத்தியப்படுத்தினார். விஞ்ஞானிகள் உதவியுடன் சிக்கனப் பாசனத் திட்டங்களை அறிமுகம் செய்தார்.
“விவசாயி கிணறு வெட்ட அரசிடம் கடன் வாங்கி கிணறும் வெட்டி, கிணற்றில் தண்ணீர் வராமல் வாங்கிய கடனையும், வட்டியையும் கட்ட சொந்த நிலத்தையும், கடனில் வெட்டிய கிணற்றையும் விற்று கூலிவிவசாயியாக இழிந்து போவதிலிருந்து என்றைக்கு மாற்றம் ஏற்படுமோ?” என ஆதங்கப்பட்டார் கி.ராஜநாராயணன். கலைஞர் அதற்கு தன் ஆட்சிகளில் பதிலளித்தார். தமிழக விவசாயி தன் மனைவி தாலியை அடகு வைப்பதும் கையறு நிலையில் தாம்புக் கயிற்றில் தொங்குவதும் நின்றது.
விவசாயிகளைக் காப்பது மட்டுமல்ல, விவாசாயம் என்ற துறை விஞ்ஞானப்பூர்வமாக உயர வேண்டும், நவீன முகம் கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார். 1989ல் ஆசியாவிலேயே முதன்முதலாக சென்னை மாதவரத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தார். 1972ல் தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவையில் விவசாயப் பொறியியல் ஆராய்ச்சிக் கல்லூரி திறந்தார்.
*
மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கினார். பணியிலிருக்கையில் இறக்கும் அரசு ஊழியருக்கு உதவித் தொகை வழங்க உத்தரவிட்டார். அரசு ஊழியர்களைப் பழிவாங்கப் பயன்பட்ட இரகசியக் குறிப்பேட்டை ஒழித்தார். மாநிய சுயாட்சி என்பதை சுதந்திர தினத்தில் முதல்வர் கொடியேற்றும், தேவையான சட்டங்களை இயற்றும் அதிகாரம் வரை என்பதாக மட்டுமின்றி அரசின் வேர் நுனி, இலை நுனி வரை அதன் சாதகங்களைப் பரவச் செய்யும் எண்ணமே இது. இங்கு தான் அவர் ஒரே கையெழுத்தில் ஒரே நொடியில் லட்சம் அரசு ஊழியர்களை வீட்டு அனுப்பிய மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்.
மத்தியில் ஆளுங்கட்சி மக்களுக்கு உதவும் முன்னெடுப்பைச் செய்யும் போதெல்லாம் கட்சி வேறுபாடுகள் தாண்டி ஆதரவளித்தார். வங்கிகளை நாட்டுடமையாக்கவும், மன்னர் மானிய ஒழிப்புக்கும் இந்திரா காந்தி அரசுக்கு அவ்வகையில் துணையாக நின்றார் கலைஞர். (சொல்லப் போனால் தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் வங்கிகளை நாட்டுடமை ஆக்கும் யோசனையை முன்வைத்தவரே கலைஞர் தான்.) பேரம் பேசியும் சாதித்தார். 1969ல் நான்காம் ஐந்தாண்டுத் திட்ட இறுதிவடிவம் முடிவாகி விட்டது. தமிழகம் கோரியிருந்த சேலம் இருப்பாலை அதில் இடம் பெறவில்லை. கொஞ்ச நாளில் காங்கிரஸ் பிளவு கண்டு இந்திரா ஆட்சிக்கு ஆபத்து வர அவர் திமுகவின் 24 எம்பிக்கள் ஆதரவை நாடினார். கலைஞர் சேலம் இருப்பாலை கேட்டார். நான்காம் ஐந்தாண்டுத் திட்டத்திலேயே அது சேர்க்கப்பட்டது. போலவே 2006 ஆட்சியில் 11வது ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்ட போது அதில் சேது சமுத்திரம் திட்டத்தைச் சேர்த்து 37 ஆண்டுகளுக்குப் பின் அதற்கு உயிரளித்தார்.
கலைஞரின் கல்வி தொடர்பான சீர்திருத்தங்களும் மிக முக்கியமானவை. கல்வியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் அதன் விளைவான மாணவர்களின் தர வேறுபாடு மற்றும் போட்டியிட இயலாமை ஆகியவற்றைக் களையும் நோக்கில் 2010ல் தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டத்தை இயற்றினார் கலைஞர். முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழுவின் ஆய்வறிக்கை மற்றும் கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் இதைக் கொண்டு வந்தார். 2006ல் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகளில் பயிற்சி மையங்களில் சேர்ந்து எழுதும் வாய்ப்பமைந்த பணம் படைத்த / நகர்ப்புற மாணவர்களே அதிகம் தேர்ச்சி பெறுவதை அறிந்து எல்லாத் தரப்பினரும் பலனடைய வேண்டும் என்ற நோக்கில் நுழைவுத் தேர்வை ரத்து செய்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்க உத்தரவிட்டார். உயர்குடியினர் எதிர்ப்பை மீறி அவர்கள் வெறுப்பைச் சம்பாதித்தால் பரவாயில்லை என்ற துணிச்சலுடன் இம்முடிவினை அமல்படுத்தினார் கலைஞர்.
பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களிலிருந்து வரும் 100 மாணவ, மாணவியர்களுக்கு இலவச தொழிற் கல்வி வழங்கினார். கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீடு வழங்கினார்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்தியாவிலேயே குறைந்த கட்டணம் (ஆண்டுக்கு ரூ. 8000). பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து அனுமதியை பன்னிரண்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தார். ஏற்கனவே காமராஜரும், எம்ஜிஆரும் செயல்படுத்தியமுன்னெடுத்திருந்த பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் முட்டை சேர்த்தார். முந்தைய மாற்றுக்கட்சி ஆட்சி கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள் உண்மையிலேயே நன்மை பயப்பதாக இருந்தால் அதை மேலும் ஊக்குவிக்கவோ விரிவுபடுத்தவோ தான் செய்தார். திட்டத்தின் கழுத்தில் கத்தி சொருகும் அற்பத்தனம் அவரிடமில்லை என்பதுமே ஒருவகையில் முன்னேற்றம் நோக்கிய நவீனச்சிந்தனை.
பள்ளிகளின் எண்ணிகையை அதிகரித்தார். பல புதிய கல்லூரிகள் திறந்தார். தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையத்தை சென்னைக்கு கொண்டு வந்தார். இங்கு கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்கச் செய்தார். சுகாதாரத்திலும், கல்வியிலும், பிற அடிப்படை வசதிகளிலும் தமிழகம் முன்னணியில் இன்று நிற்க அவரே மிக முக்கியக் காரணம்.
*
திக மற்றும் திமுகவை வளர்க்கத் தமிழகம் முழக்க நடந்தே அலைந்து திரிந்ததாலோ என்னவோ இங்கே போக்குவரத்து வசதிகளின்றி மக்கள் எத்தனை சிரமப்படுகிறார்கள் எனப் புரிந்து வைத்திருந்தார். தமிழத்தின் சாலைகளை மேம்படுத்தியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. தமிழத்தின் எந்நகரத்தின் மேம்பாலங்களை எடுத்துக்கொண்டாலும் அதில் கலைஞருக்குப் பங்கிருக்கும். சாலைகள் இட்டது போட்டமின்றி எளியோர் போக்குவரத்துக்கு கிராமங்கள் வரை பேருந்துகள் விட்டார். 1996 ஆட்சின் போது நகரங்களை குக்கிராமங்களுடன் இணைத்திட சிற்றுந்து திட்டம் கொண்டு வந்தார்.
மாநில உள்கட்டமைப்பை மேம்படுத்தியதில் அவருக்கு இணையாக எந்த மாநில முதல்வரையேனும் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. சாலைகளை மட்டும் எடுத்தால் ஒருவகையில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு 2000-ங்களின் துவங்கத்தில் செய்த தேசிய அளவிலான பங்களிப்புக்கு இணையானது அது.
மின் இணைப்பு, குடிநீர் வழங்கல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினார். இன்றும் பாரதப் பிரதமர் எல்லோருக்கும் மின் இணைப்பு வழங்குவதை ஒரு லட்சியமாகப் பேசிக் கொண்டிருக்கையில் இருபதாண்டுகள் முன்பே அதைச் சாத்தியமாக்கியவர். அவரது ஆட்சிக்காலங்களில் அரசு மருத்துவமனைகள் பெருகின. கிராமந்தோறும் சுகாதார மையங்கள் அமைத்தார். அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டமும், சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்குமும் திட்டம் கொண்டு வந்தார்.
2006ல் கிராம ஊராட்சிகளின் நிதி ஆதாரங்களை ஒருமுகப்படுத்தி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் கொண்டு வந்தார் கலைஞர். 12,500 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு பல அடிப்படை வசதிகளைச் செய்து தருவது தான் பிரதான நோக்கம். இந்த வசதிகளில் விளையாட்டு மைதானம் அமைப்பது, சுடுகாடு கட்டித்தருவது, நூலகம் கட்டித் தந்து ஆகியவை அடங்கும். கூட்டுறவு, தற்சார்பு உணர்வை வளர்க்க நமக்கு நாமே திட்டம் கொண்டு வந்தார்.
முதலில் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வெள்ளோட்டம் பார்த்த கலைஞர் பின் பொதுமக்களுக்கும் அதை விரிவுபடுத்தினார். 2009ல் தமிழக ஏழை மக்கள் உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ஒரு லட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்யும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தார். வெளிநாடுகள் கூட இத்திட்டத்தின் சமூக, பொருளாதார அடிப்படைகள் குறித்து ஆய்வு செய்தார்கள். இன்றும் திட்டம் செயல்படுகிறது. ஏழைகள் பன்முனை மருத்துவப் பரிசோதனை செய்யும் வருமுன் காப்போம் திட்டத்தை அறிவித்தார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டமும் கலைஞர் முன்னெடுத்த முன்னோடித் திட்டம். 1970லேயே அதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது. பிறகு 2006ல் ஆட்சிக்கு வந்த போது "பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கும் பொருட்டு" மீண்டும் அச்சட்டத்தைக் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து சுமார் பிராமணர் அல்லாத 200 பேர் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பயிற்சி பெற்றனர். அவர் மறைவதற்கு ஒரு வாரம் முன் அப்படிப் பயிற்சி பெற்ற ஒருவர் மதுரைக் கோவில் ஒன்றில் அர்ச்சகராக அதிகாரப்பூர்வமாகப் பணியமர்த்தப்பட்டார். பிறப்பின் அடிப்படையில் அல்ல, கற்றலில் வருவதே எந்தப் பணியின் திறமையும் என்ற நவீனச் சிந்தனையின் வெளிப்பாடு இது.
கலைஞர் வாக்கரசியலுக்காக இலவசங்களை வாரி வழங்கினார் என்பது அவர் மீது வைக்கப்படும் பரவலான குற்றச்சாட்டு. அவரைப் புகழும் பொருளாதார நிபுணர்களே இவ்விஷயத்தில் அவரைக் குறை கூறுகிறார்கள். அவர் தேர்தல் வெற்றிக்காக அதைச் செய்திருக்கலாம். ஆனால் அதில் நாட்டு நலன் ஏதும் பாதிப்படையவில்லை. அது போக, அப்படியான இலவச அறிவிப்புகளுக்குப் பின் தொலைநோக்கு இருந்ததாகவே படுகிறது. உதாரணமாக கலைஞர் டிவி என்று மக்களால் குறிப்பிடப்படப்படும் இலவச வண்ணத் தொலைக்காட்சி அறிவிப்புகளைச் சொல்லலாம். தொலைக்காட்சி வசதி வந்து விட்ட இடங்களில் விழிப்புணர்வு அதிகமாக இருப்பதாகவும் அதனால் குற்றச் செயல்கள் குறைவாக இருப்பதாகவும் ஓர் ஆய்வு சொல்கிறது. அது போக, மின் இணைப்பே இல்லாத சில இடங்களில் தொலைக்காட்சி வழங்கப்பட்டதாலேயே மின் இணைப்பும் வழங்கப்பட வேண்டியதாக இருந்தது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜன் என்ற வழக்கறிஞர், ஊராட்சித் தலைவர், மலைவாழ் மக்கள் நலனுக்காகப் பணியாற்றுபவர் தொலைக்காட்சி தம் மக்களுக்கு இப்படித் தான் உலகம் இருக்கிறது என்ற புரிதல் வந்தது, உலகத்தை எங்களோடு இணைத்த திட்டம் அது என்கிறார்.
*
கலைஞர் எப்படி மாநிலத்தின் வளர்ச்சியை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆக்கினார்? தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் உள்ளிட்ட சமூகத்தில் நலிந்த நிலையில் இருந்த அனைவருக்கும் கருப்புக் கண்ணாடி தாண்டிய கடைக்கண் பார்வையை அளித்தார். வளர்ச்சி என்பது அவர்களின் புன்னகையே என நினைத்தார்.
மனிதர்களை மனிதனே இழுத்துச் செல்லும் வகையிலான கைரிக்ஷாக்கள் அன்று அதிகப் புழக்கத்தில் இருந்தன. பராசக்தி படத்தில் அதை ஒழிக்கும் கனவைக் கலைஞர் வெளிப்படுத்தி இருப்பார். சுமார் இருபதாண்டுகளுக்குப் பின் தான் ஆட்சிக்கு வந்ததும் "மனிதனை மனிதனே மாடு போல இழுத்துச்செல்வது சுயமரியாதைக்கு இழுக்கு" என்று சொல்லி கை ரிக்ஷாக்கள் ஒழித்து, அவற்றிற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கினார். தான் எழுதிய வசனத்தை அதிகாரம் கைக்கு வந்ததும் மெய்ப்படுத்தினார். இந்திய தேசத்துக்கே முன்னோடியான நடவடிக்கை அது.
1971ம் ஆண்டின் தமிழ்நாடு குடிசை பகுதிகள் (மேம்படுத்தல் மற்றும் இசைவு) சட்டத்தின் மூலம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்து தமிழ்நாட்டில் சேரிகளை அகற்றி, அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் வழங்கினார். குடிசைகளிலும், நடைபாதைகளிலும், சாலை மருங்கிலும் வாழ்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களைக் கான்க்ரீட் கூரைக்குள் கொணர்ந்தார்.
வாழ்நாள் முழுவதும் சமத்துவத்துக்காகப் போராடிய தந்தை பெரியார் நினைவாக அவரது பெயரிலேயே 1997ல் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தை கலைஞர் அறிமுகம் செய்தார். “பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம்” என்றார் பெரியார் (குடியரசு, 11-11-1944). மிகத்துல்லியமாக அந்த வாசகம் உயிர்பெற்றெழுந்தால் அது சமத்துவபுரம். அந்த வளாகத்தில் நூறு வீடுகள் இருக்கும். ஒவ்வொரு வீடும் ஐந்து செண்ட் அளவு. சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், பூங்கா, தேவைப்பட்ட இடங்களில் பள்ளிக்கூடம் எனப் பல்வேறு அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய அங்கே தந்தை பெரியார் சிலையும் இருக்கும். பொது மயானமும் கூட அமைந்த அவ்விடத்தே எந்த மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத் தலமும் இருக்காது (அவரவர் வீட்டுக்குள் சாமி கும்பிடுவது பிரச்சனையில்லை.) வீடுகள் ஒதுக்குவதில் சமூக நீதி பின்பற்றப்பட்டது: தாழ்த்தப்பட்டோருக்கு 40%, பிற்படுத்தப்பட்டோருக்கு 25%, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 25%, பிராமணகள் உள்ளிட்ட மற்றவர்களுக்கு 10%. 1996 ஆட்சி காலத்தில் 145 சமத்துவபுரங்களும், 2006 ஆட்சியில் 95 சமத்துவபுரங்களும் தமிழகமெங்கும் திறந்தார். இந்தியாவில் யாருக்கும் தோன்றியிராத இத்திட்டத்தை கலைஞர் இங்கே செய்தது ஒரு மகத்தான சமூகப் பரிசோதனை. அது ஒரு மிக நவீனமான முன்னெடுப்பு. ஒருவகையில் மொத்த தமிழகத்தையே சமூக நீதி திகழும் சமத்துவபுரமாக்க கலைஞர் கண்ட பெருங்கனவின் சிறுதுளி தான் அத்திட்டம்.
தாழ்த்தப்பட்டோருக்கு, பிற்படுத்தப்பட்டோரைக் கைதூக்கிவிட கலைஞர் செய்த உதவி அளப்பரியது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கென தனி துறை அமைத்தார். சமூக நலத்திற்காகத் தனி அமைச்சகம் ஏற்படுத்தினார். மொத்த இட ஒதுக்கீட்டை 49 சதவிகிதம் என்று உயர்த்தி இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் ஒரு மிக முக்கியமான தைரியமான நகர்வை முன்னெடுத்தவர் கலைஞரே. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பிற்பாடு செய்த உயர்த்தல்கள் அதன் அடியொற்றியே சட்டநாதன் ஆணையம் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை 25லிருந்து 31 சதவிகிதம் ஆக்கினார்; தாழ்த்தப்பட்டோருக்கு 16லிருந்து 18 சதவிகிதம் ஆக்கினார். அருந்ததியர் உள் ஒதுக்கீடு கொணர்ந்தார். உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். இஸ்லாமியர்களுக்கு 3.5 உள் ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனியாக 20% ஒட ஒதுக்கீடு கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்டோருக்கு, பிற்படுத்தப்பட்டோருக்கு பட்டப் படிப்பு வரை கட்டணம் ரத்து செய்தார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கிப் படிக்க பல நூறு விடுதிகள் அமைத்தார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி முகாம் தொடங்கினார். யோசித்தால் இந்தியாவின் சமூக நீதிக் காவலர் விபி சிங் என்பது போல் தமிழகத்தின் சமூக நீதிக் காவலர் கலைஞர்!
1989 -1991 ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாகப் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். மக்கட்தொகையில் பாதிக்கு மேல் இருக்கும் ஆண்களின் எதிர்ப்பைச்சம்பாதிக்க வேண்டி இருக்கும் என்று தெரிந்திருந்தும் இதைச்செய்தார். அதன் பிறகே மத்தியஅரசு பெண்கள் சொத்துரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. மாநில அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கினார். ஏழைப்பெண்டிருக்கு மூவலூர் இராமாமிருதம் திருமண உதவித் திட்டம், விதவைகளுக்கான மறுமண உதவித் திட்டம், விதவைப் பெண்கள் தொழில் தொடங்க உதவி, பெண்களுக்கு இலவசப் பட்டப்படிப்பு, கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் வரை மாதந்தோறும் நிதியுதவி முதலான அவரது பிற திட்டங்களும் பெண்களுக்கு உதவிகரமாக அமைந்தன. 1989ல் தர்மபுரியில் மகளிர் சுயஉதவிக் குழு தொடங்கி வைக்கப்பட்டது. பெண்கள் ஒருங்கிணைந்து சுயதொழில் வாய்ப்பைப் பெருக்கும் இத்திட்டம் இன்று மாநிலம் முழுவதும் பெரும் வளர்ச்சி கண்டு பெண்களை தற்சார்பு கொண்டவர்களாக மாற்றியுள்ளது. பெண்களுக்கு என தனியே கருப்பூர், வாளவந்தான் கோட்டை, திருமுல்லைவாயில், திருமுடிவாக்கம், கப்பலுர் ஆகிய 5 இடங்களில் பெண்கள் தொழிற்பூங்காக்களை 2009ல் உருவாக்கி பெண் தொழிற்முனைவோரை ஊக்குவித்தார். இன்று தமிழ்பெண்கள் பல துறைகளில் கம்பீரமாகக் கோலோச்ச கலைஞரே பிரதானக் காரணம் என்றால் அது மிகையல்ல.
Unorganised Workers எனப்படும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக - ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, காப்பீட்டு திட்டம், பணிக்காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்ளிட்ட பலன்கள் - விவசாயத் தொழிலாளர், மீனவர், கட்டுமானத் தொழிலாளர், சீர்மரபினர், பழங்குடியினர், ஆட்டோரிக்க்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர், பனைமரத் தொழிலாளர், காலணித் தொழிலாளர், ஊனமுற்றோர், அரவாணிகள், வண்ணார், முடி திருத்துவோர், தையல் தொழிலாளர், ஓவியர், கைத்தறி மற்றும் கைத்தறி நெசவு தொழிலாளர்கள், தூய்மைப் பணிபுரிவோர், நரிக்குறவர், உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள், கிராமக் கோவில் பூசாரிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், அருந்ததியர், கட்டட தொழிலாளர்கள், புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர், அச்சக தொழிலாளர், கேபிள் டிவி ஆபரேட்டர்கள், வணிகர்கள், வீட்டுப் பணியாளர், பொற்கொல்லர், திரைத் தொழிலாளர் உள்ளிட்ட மொத்தம் 35 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களை 2006 முதல் 2011 ஆட்சிக் காலத்தில் உருவாக்கிச் செயல்பட வைத்தார் கலைஞர். ஒரு சமூகப் புரட்சி என்றே சொல்லலாம் இதை.
தமிழறிஞர்களின் பிள்ளைகளுக்கு பொறியியல், மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீடு வழங்கினார். மொழிப்போர் தியாகிகளுக்கு ஒய்வூதியம் வழங்கினார்.
பார்வையற்றோருக்குக் கண்ணொளி வழங்கும் திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் நல்வாழ்வுத் திட்டங்கள், தொழுநோயாளிகளுக்கு மறுவாழ்வு இல்லம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு, சுடுகாடு, இடுகாட்டில் பணி செய்தோருக்கு அரசு வேலை, மீனவர்களுக்கு இலவச வீடு, கோயில்களில் அனாதைக் குழந்தைகள் தங்கிப் படிக்க கருணை இல்லம், இலவச சமையல் எரிவாயு அடுப்பு, ஏழைகளுக்கு இலவச வீடு என அவர் விளிம்பு நிலை மனிதர்களுக்குச் செய்த உபகாரம் ஏராளம்.
தேர்தல் வாக்குறுதிப்படி 2006ல் கிலோ அரிசி 2 ரூபாய்க்குக் கொடுத்தவர் இரண்டே ஆண்டுகளில் அதைப் பாதியாகக் குறைத்தார். 2008 முதல் கிலோ அரிசி 1 ரூபாய் விலையில் மாதம் 20 கிலோ அரிசி நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக, பட்டினிச்சாவுகளே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
*
நாம் கலைஞரின் பண்டைய முகம் எனக் கருதும் குறளோவியமும், சங்கத்தமிழும், தொல்காப்பியப் பூங்காவும் கூட உண்மையில் நவீனத்துவத்தின் முகம் தான். அவர் அந்தப் பழைய விஷயங்களை இன்றைய தலைமுறைக்கு அவர்களுக்குப் புரியும், அவர்கள் ரசிக்கும் நவீன வடிவில் கடத்த முயன்றார். அவற்றைக் கற்றறிந்தவனாக அது தன் கடமை என் நம்பினார். கட்
Published on September 22, 2018 19:11
C. Saravanakarthikeyan's Blog
- C. Saravanakarthikeyan's profile
- 9 followers
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
