C. Saravanakarthikeyan's Blog, page 12

March 8, 2018

ஆண்டாளும் பத்மாவதியும்


இந்திய யூனியன் என்பது கருத்துரிமை கொண்ட தேசம் என்கிறார்கள். நிஜம் தானா?

சமீபத்தில் வலதுசாரி உதிரி அமைப்புகள் படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரத்துக்குச் சவால் விடும் வகையில் மேற்கொண்டுள்ள அராஜகச் செயல்கள் இந்திய அரசியல் சாசனம் நம் குடிமக்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளையே கேள்விக்கு உட்படுத்துபவை. மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்தில் இருப்பதையும் இந்த அத்துமீறல்களையும் தனித்தனியே பார்க்க முடியவில்லை. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்தியாவில் சமூக மற்றும் கலாசாரச்சகிப்பின்மை வலுத்து வருகிறது.

இரு உதாரணச் சம்பவங்கள். ஒன்று தென்னிந்தியாவில்; மற்றது வட இந்தியாவில்.

*

முதலில் வைரமுத்துவின் 'தமிழை ஆண்டாள்' கட்டுரை. முதலில் ஓர் உரையாக நிகழ்த்தப்பட்டு பின் தினமணி நாளேட்டில் வெளியானது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் என்ற கோதை நாச்சியார் பற்றிய இதில் நாற்பதாண்டுகளுக்கு முன் நாராயணன், கேசவன் என்ற வரலாற்றுப் பேராசிரியர்களால் எழுதப்பட்ட Bakthi Movement in South India என்ற ஆய்வுக் கட்டுரையில் ஆண்டாள் திருவரங்கம் கோயிலில் தேவதாசியாக வாழ்ந்தவர் என்ற குறிப்பு வருவதைச் சுட்டுகிறார் (“Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple”). அதுவே அவர் மீதான கொலைவெறி எதிர்ப்பிற்குப் போதுமானதாகி விடுகிறது. (சுபாஷ் சந்திர மாலிக் என்பவர் தொகுத்த Indian Movements: Some Aspects of Dissent Protest and Reform என்ற நூலில் இடம் பெற்ற இக்கட்டுரை இண்டியானா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது என்கிறார்.)


ஆண்டாள் கட்டுரையின் தொனி உண்மையில் ஆண்டாளின் இறை பக்தியையோ, காதல் ரசத்தையோ தமிழ்ப் புலமையையோ பிரதானப்படுத்தவில்லை. தொடக்கம் முதல் இறுதி வரை அதன் குவியம் ஒரே விஷயம் தான். ஆண்டாளின் மரபுகளின் மீதான அத்துமீறல் எவ்வாறு நிகழ்ந்திருக்க முடியும் என்ற வியப்பு! மணமாகாத கன்னிப் பெண் சமூக வரையறைகளை உடைத்து இவ்வளவு வெளிப்படையாய் எப்படிக் காமத்தை எழுதினார் என்ற கேள்வி அவருக்கு இயல்பாய் எழுகிறது. சுற்றிச் சுற்றி அதே விஷயத்துக்குத் தான் வைரமுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே இண்டியானா பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரை வரிகளை மேற்கோள் காட்டுகிறார். அதையும் அது தான் இறுதி உண்மை என அவர் சொல்லவில்லை. போகிற போக்கில் மேலோட்டமாக அப்படியொரு செய்தியும் இருக்கிறது எனச் சொல்லிச் செல்கிறார்.

அவர் நாத்திகர் என்பதும் இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியது. இது ஒரு தரப்பு. அதற்கான இடம் இந்திய ஜனநாயகத்தில் உண்டு. இந்து சிந்தனை மரபிலும் உண்டு.

பிற்பாடு ஆண்டாளை வணங்கும் பிராமண சமூகத்தினர் இதையொட்டி பிரச்சனை கிளப்பியதும் மன்னிப்புக் கேட்டு விட்டு வெளியிட்ட விளக்கக்குறிப்பில் தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை என்றும் கடவுள் சேவைக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த பெண்களைக் குறிக்க மட்டுமே பயன்பட்டது என்றும் அதே பொருளிலேயே தானும் பயன்படுத்தியதாகச் சொல்கிறார். ஆனால் அது சர்ச்சையிலிருந்து விலக அவர் சொல்லும் பொருள் என்றே எடுத்துக் கொள்கிறேன். காரணம் அவரது கட்டுரையில் “கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்”, “பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” ஆகிய வரிகள் தேவதாசி என்பதைப் பற்றி வருகின்றன. அச்சொல்லை நற்பொருளிலேயே முன்வைத்தால் இச்சொற்றொடர்கள் பயில்வது பொருத்தமில்லை. ஆக, இன்று புரிந்து கொள்ளப்படும் பொருளிலேயே வைரமுத்து தேவதாசி என்ற சொல்லை அக்கட்டுரையில் பிரயோகித்திருக்கிறார் என்பது தெளிவு.

ஆண்டாள் யார்? ஆழ்வார்களுள் ஒருவரான திருவில்லிப்புத்தூர் பெரியாழ்வார் துளசிச் செடியின் கீழ் கண்டெடுத்து வளர்த்த பெண் குழந்தை. சிறுவயது முதலே தந்தையின் வழி பெருமாளின் பெருமைகள் கேட்டு அவர் மீது மிகுந்த பிரியம் கொண்டிருந்தவள் பருவமெய்தியதும் பெருமாளைத் தவிர எவரையும் மணம் புரியேன் என்ற பிடிவாதத்தில் இருந்து இறுதியில் திருவரங்கத்தில் ரங்கநாதருடன் ஐக்கியம் ஆகிறாள். இது தான் வைணவம் நமக்குப் போதிக்கும் ஆண்டாளின் வரலாறு. ஒரு நாத்திக மனதிற்கு இதில் ஆண்டாளின் ஆரம்பத்திலும் முடிவிலும் பகுத்தறிவுக் கேள்விகள் வருவது இயல்பே. அதைத் தான் வைரமுத்து செய்தார். அது கருத்துச் சுதந்திரத்தின் ஒரு பகுதி. அதை இன்னொரு கட்டுரையின் மூலம் விரிவாக ஆழமாகத் தரவுகளின் துணை கொண்டு ஒருவர் மறுத்து எழுதலாம். அது தான் இச்சுதந்திர நாட்டில் எவரும் செய்ய வேண்டிய விஷயம். ஆனால் நடந்தது என்ன?

ஹெச். ராஜா என்ற பிஜேபிகாரர் வைரமுத்துவின் வீட்டுப் பெண்டிரைக் கொச்சைப் படுத்தும் மிகத் தகாத மொழியில் அவரைத் தாக்குகிறார். அதே கட்சியைச் சேர்ந்த இன்னோர் ஆசாமி நயினார் நாகேந்திரன் வைரமுத்துவின் நாவை அறுத்து வந்தால் ரூபாய் பத்து லட்சம் பரிசுத்தொகை என அறிவிக்கிறார். திருவில்லிப்புத்தூர் ஜீயர் வைரமுத்து ஆண்டாள் சந்நதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார். அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற வலதுசாரிக் குரல்கள் வலுக்கின்றன. பிராமண சங்கம் உள்ளிட்ட இந்து / இந்துத்துவ உதிரி அமைப்புகள் போராட்டத்தில் இறங்குகின்றன. சமூக வலைதளங்களில் பார்ப்பனர்களும் நவபார்ப்பனர்களும் விடம் கக்குகிறார்கள். பண்பட்ட சமூகம் எனக் கருதப்படும் ஓர் இனத்தில், ஒரு மதத்தில் ஒரு படைப்பாளியின் கருத்து இப்படித்தான் மிருகத்தனமாய் எதிர்கொள்ளப்படுகிறது.

ஒரு படைப்பை எழுதும் போது அது எந்தச் சமூகத்தைப் புண்படுத்தும் என்று யோசித்து யோசித்து எழுத முடியுமா? ஆண்டாள் என்பவரை லக்ஷ்மி தேவியின் அவதாரமாகப் வைணவ பிராமணர்கள் பார்க்கிறார்கள். அதே போல் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்ன அவசியம்? ஒருவர் அவரை மாபெரும் தமிழ்க்கவியாக மட்டும் காண முடியும். இன்னொருவர் பெருங்காதல் மனங்கொண்ட தேவதையாக மட்டும் பார்க்க முடியும். அப்படியான மற்றொரு பார்வை ஒன்றையே வைரமுத்து முன்வைத்திருக்கிறார். யதார்த்தச் சிக்கல் கருதி வைரமுத்து வேறு பொருள் சொல்லிச் சமாளிக்கவும் மன்னிப்புக் கோரவும் செய்யலாம். அதனால் அவருக்கு இருக்கும் கருத்துரிமையை யாரும் இல்லை என்று சொல்லி விட முடியாது.

ராஜாஜி ஆண்டாள் என்று ஒரு பெண்ணே உண்மையில் கிடையாது, பெரியாழ்வாரின் மனோபுத்ரி அவள், ஆண்டாள் என்ற புனைப்பெயரில் திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் எழுதியதே பெரியாழ்வார்தான் என்று சொல்கிறார். அது ஒரு பார்வை. பா. ராகவன் ஒரு கட்டுரையில் ஆண்டாளின் பாடல்கள் ரசனையான பார்ன் எழுத்து என்கிறார். அது மற்றுமொரு பார்வை. டிகேசி, ஜார்ஜ் ஹார்ட் போன்றோர் ஆண்டாள் குறித்த தம் மாறுபட்ட கோணத்தை முன்வைத்திருக்கின்றனர். நவீன இலக்கியச் சூழலில் தமிழவனும், பிரேமும் ஆண்டாள் குறித்த பின்நவீனத்துவ, அமைப்பியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். அவர்களுக்கு எல்லாம் அந்தக் கருத்துரிமை இருக்கும் போது வைரமுத்துவுக்கு மட்டும் ஏன் இல்லை என்ற கேள்வி எழுகிறது.

“ஓர் ஆய்வுக்கட்டுரையை மேற்கோள் காட்டவே செய்தேன், அது என் கருத்தல்ல” என்று சொல்லி இது சம்மந்தமாய் சென்னை உயிர்நீதிமன்றத்தில் வைரமுத்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எம்எஸ் ரமேஷ், அவரது செய்கையில் பிழை இல்லை என்று சொல்லி வைரமுத்து மீதான சட்ட நடவடிக்கைகளுக்குத் இடைக்காலத் தடை விதித்தார். இது முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்புகிறது.

ஒருவேளை வைரமுத்து இது தன் கருத்து என்று சொல்லி இருந்தால் குற்றமாகுமா என்பதே அது. இந்தத் தீர்ப்பு கருத்துச் சுதந்திரத்திற்கான மறைமுகப் பின்னடைவே.

தமிழ் நாடு அரசின் அதிகாரப்பூர்வ இலச்சினையே ஆண்டாள் உறைந்திருக்கும் திருவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் என்பதும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் அவரைக் கடவுளாகக் கும்பிடுகிறார்கள் என்பதும் உண்மை என்றாலும் புராணங்களை மீள்வாசிப்புச் செய்து கடவுள் பாத்திரங்களையே மீட்டுருவாக்கம் செய்து பார்ப்பது தான் இலக்கிய வழக்கு. அதற்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் அக்கப்போர்களை மக்கள், ஊடகங்கள், அரசு, நீதித்துறை என யார் செய்தாலும் அது கருத்துரிமையின் கழுத்து நெரிப்பாகவே முடியும். அவ்வகையில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆண்டாள் சந்நதிக்குப் போய் “வைரமுத்துவின் கட்டுரையைப் பதிப்பித்துத் தவறு செய்து விட்டேன்” என்று சொல்லி மன்னிப்புக் கேட்டிருப்பது மிக மோசமான முன்னுதாரணம். (ஏற்கனவே தினமணி வலைதளத்தில் வெளியாகி இருந்த ஆண்டாள் கட்டுரை நீக்கப்பட்டு வைரமுத்துவின் மன்னிப்புச் செய்தியை அவ்விடத்தில் போட்டிருந்தார்கள்) அடுத்து எந்த நம்பிக்கையில் இனி படைப்பாளிகள் தினமணியில் எழுதுவார்கள்? அவர் செய்தது தவறு என மனப்பூர்வமாய் அவரே உணர்ந்தாலும் மன்னிப்புக் கேட்க வேண்டிய இடம் தினமணி பத்திரிக்கையிலா திருவில்லிப்புத்தூர் கோயிலிலா? கருத்துரிமையின் குரூரத் தற்கொலை இது.

அவரை மன்னிப்புக் கேட்க வைத்து விட்டு ஜீயர் கொக்கரிப்பது அப்பட்ட ஃபாஸிசம். தமிழகத்திலிருக்கும் செயலற்ற அரசும் மத்திய சர்வாதிகாரியுமே இதற்குப் பொறுப்பு.

சற்று முன் கூட கோயிலின் சடகோப ராமானுஜ ஜீயர் "எங்களாலும் கல்லெறியவும் சோடா பாட்டில் வீசவும் முடியும்" என்று குறிப்பிட்டு ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்புக் கேட்க கெடு விதித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இப்பிரச்சனையில் ஒரே ஆறுதல் வைரமுத்து மீதான தாக்குதல்கள் மிரட்டல்களுக்கு எதிராக சா.கந்தசாமி, பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் கையெழுத்திட்ட தமிழ்ப்படைப்பாளிகளின் கூட்டறிக்கை வெளியானதே.

பெருமாள்முருகனின் மாதொருபாகன் நாவலை எதிர்த்து திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த கொங்கு சாதிச் சங்கங்கள் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் போராட்டங்கள், மிரட்டல்கள் என்று இறங்கிய நிகழ்வோடு இந்தப் பிரச்சனையை ஒப்பு நோக்கலாம்.

எதிர்த்த சாதி தான் வேறு, இரண்டிலுமே தாக்குதலுக்குள்ளானது கருத்துரிமையே!

*

அடுத்து Padmaavat திரைப்படம். 16ம் நூற்றாண்டின் மத்தியில் சூஃபிக் கவிஞர் மாலிக் முகமது ஜயஸி என்பவரால் அவாதி என்ற மொழியில் எழுதப்பட்ட பத்மாவத் என்ற காவியத்தைத் தழுவி சஞ்சய்லீலா பன்ஸாலி இயக்கியுள்ள வரலாற்றுத் திரைப்படம்.


ஆண்டாள் பிரச்சனையாவது வைரமுத்து கட்டுரை வெளியான பிறகு தொடங்கியது. படப்பிடிப்பில் இருக்கும் போதே பத்மாவத் படத்துக்குப் பிரச்சனை தொடங்கி விட்டது.

ஸ்ரீராஜ்புத் கர்னி சேனா என்ற வலதுசாரி உதிரி அமைப்பு படத்தில் ராஜபுதன ராணி பத்மாவதியைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகவும் அது ராஜபுத்திரர்களுக்கு இழுக்கு என்றும் சொல்லி படத்தின் படப்பிடிப்பில் புகுந்து ரகளை செய்தது. அடுத்த நிகழ்வில் படப்பிடிப்பிலிருந்த இயக்குநர் பன்சாலி தாக்கப்பட்டார். மூன்றாம் முறை படத்தில் பத்மாவதிக்கும் அலாவுதீர் கில்ஜிக்கும் நெருக்கமான கனவு டூயட் பாடல் ஒன்று இருப்பதாகக் கிளப்பப்பட்ட வந்ததியை ஒட்டி (உண்மையில் படத்தில் இருவரும் ஒரு ஃப்ரேமில் கூட சேர்ந்து வரவில்லை!) படத்திற்குப் போடப்பட்ட பிரம்மாண்ட செட்கள் மற்றும் விலையுயர்ந்த உடைகளின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி அழித்தார்கள். அப்புறம் படத்தின் முதல் போஸ்டருக்காக 48 மணி நேரம் செலவிட்டுப் போடப்பட்ட பிரம்மாண்ட ரங்கோலிக் கோலத்தைக் கலைத்தார்கள். பத்மாவதியின் அரண்மனை என நம்பப்படும் சுற்றுலா ஸ்தலத்தில் அலாவுதீன் கில்ஜி பத்மாவதியைப் பார்க்கப் பயன்பட்டதாய்ச் சொல்லி வைக்கப்பட்டிருக்கும் நிலைக்கண்ணாடிகளை உடைத்தனர்.

பிஜேபிகாரர்களும் பிரச்சனையில் இணைந்து கொண்டனர். அக்கட்சியின் அகிலேஷ் கந்தெல்வால் பன்சாலியின் மீது செருப்பு வீசுபவர்களுக்குப் பரிசு அறிவித்தார். அதே கட்சியைச் சேர்ந்த ராஜ் புரோகித் என்ற ஆள் ராஜபுதன ராணி எப்படி முக்காடின்றி நடனமாடுவாள்? இது ராஜபுத்திரர்களுக்கான அவமதிப்பு என்று பேசி பொதுமக்களைத் தூண்டி விட்டார். பிஜேபி ஆதரவுடன் கர்னி சேனா பல இடங்களில் போராட்டத்தில் இறங்கியது, படம் வெளியாகும் திரையங்குகளைக் கொளுத்துவோம் என மிரட்டியது.
ஹரியானா பிஜேபியைச் சேர்ந்த சூரஜ் பால் அமு இயக்குநர் பன்சாலி மற்றும் பத்மாவதியாய் நடித்த தீபிகா படுகோன் தலைகளுக்குத் தலா பத்து கோடி விலை வைத்தார். இருவருக்கும் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலையானது.

பிஜேபி ஆளும் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேச மாநில அரசுகள் தம் மாநிலத்தில் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என அறிவித்தன.

இதற்கிடையே படத்திற்கு மத்திய தணிக்கைத் துறை யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.

பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சொல்லியது. 2011ல் நடந்த பிரகாஷ் ஜா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் இந்திய யூனியனுக்கிடையேயான வழக்கை முன்மாதிரியாகக் கொண்டு மாநில அரசின் கடமை என்பது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைக் காப்பதாகும். படம் எங்கே, எப்போது திரையிடப்படுகிறதோ அங்கே போலீஸ் பந்தோபஸ்து உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளின் மூலம் இதைச் செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை; வெளியீட்டைத் தடுப்பதல்ல என்று சொன்னது.

மாநில அரசுகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது இதே தீர்ப்பை உறுதி செய்து புண்படக்கூடியவர்கள் அப்படத்தைப் பார்க்காமல் தவிர்ப்பதே சரியானது என்று சொல்லி இருந்தார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. (அவர் சில வழக்குகளில் மத்திய அரசுக்கு ஆதரவாகப் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் புகாரளித்த சமயம் தான் அது என்றாலும் இவ்வழக்கை நேர்மையாகவே அணுகியிருப்பதாகத் தோன்றுகிறது.)

மாதொருபாகன் வழக்கில் (அப்போதைய) சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அளித்த தீர்ப்பு வரிகளை இதோடு ஒப்பு நோக்கலாம்: “கலை என்பது சில சமயம் ஆத்திரமூட்டக்கூடியது. அது எல்லோருக்குமானதல்ல. அது ஒட்டுமொத்த சமூகத்தையும் பார்க்கக் கட்டாயப்படுத்துவதும் இல்லை. பார்க்க வேண்டுமா என்ற முடிவு பார்வையாளனிடமே இருக்கிறது. குறிப்பிட்ட மக்கள் குழு புண்படுவதால் அவர்களின் எதிர்ப்பை பகையுணர்வுடன் திணிக்கும் உரிமை வந்து விடுவதில்லை. அரசு அதைக் கையாள முடியாததால் அதை ஆதரிக்கக்கூடாது.”

சரி பத்மாவதி யார்? உணர்ச்சிவசப்படாமல் தேடி வாசிக்கும் போது ஆண்டாள் கதையை விடவும் ஆதாரம் மிக மலிந்ததாகவே பத்மாவதியின் கதை இருக்கிறது. பத்மினி அல்லது பத்மாவதி என்ற பெயரிலான ஒரு ராணி இருந்ததற்கு நேரடி வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லை. அலாவுதீன் கில்ஜியின் அரசவையில் இருந்த புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான அமீர் குஷ்ரூ தன் குறிப்புகளில் அப்படி ஒரு பெயரையே உச்சரிக்கவில்லை. 1303ம் ஆண்டு சித்தூர் கோட்டையை அலாவுதீன் கில்ஜி முற்றுகையிட்டு வென்றது உண்மையே என்றாலும் அது பத்மாவதிக்காக என்று எங்கும் குறிப்பில்லை. அதற்கு இருநூற்றுச் சொச்சம் ஆண்டுகளுக்குப் பின் பத்மாவத் காப்பியத்தில் தான் அவள் பிறக்கிறாள். மாலிக் முகமதுவின் கற்பனைப் பாத்திரமாகவே கொள்ள வேண்டி இருக்கிறது. இளங்கோவடிகளின் கண்ணகி போல்.

ரத்தன் சிங் போர்க்களத்தில் மரணமுற்ற பின் அவனது மனைவி பத்மாவதி இன்ன பிற ராஜபுதன பெண்களுடன் நெருப்பில் நுழைந்து உயிரை மாய்த்துக் கொள்தல் அந்தக் காவியத்தின் உச்ச தருணம். சிலப்பதிகாரத்தில் மதுரையைக் கண்ணகி எரிப்பது போல். படத்தில் அத்தருணங்கள் அப்படியே எடுத்தாளப் பட்டிருக்கின்றன.

படம் உண்மையில் ராஜபுத்திரர்களை வானளாவப் புழகவே செய்கிறது. திரையரங்கில் வடக்கத்தியர்கள் பல இடங்களில் உணர்ச்சி மிகுதியில் கரகோஷம் எழுப்புகிறார்கள். ஒருவகையில் ராமாயணத்தின் நேரெதிர் கதை இது. இதில் அடுத்தவன் மனைவி மீது மோகங்கொண்டவன் அவளது கணவனைக் கடத்திச் செல்கிறான். மனைவி போய் அவனை மீட்டு வருகிறாள். பத்மாவதியும் ரத்தன் சிங்கும் இஸ்லாமிய ஆதிக்கத்துக்கு எதிரான இந்து மதத்தின் குறியீடாகவே வரலாறு நெடுக முன்னெடுக்கப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அப்படித்தான் ராஜபுத்திர வம்சத்தினர் மத்தியில் அது பதிய வைக்கப்பட்டுள்ளது. படம் அதை வழிமொழியவே செய்கிறது. மொத்த படத்தையும் தலைகீழாகப் புரிந்து கொண்டு தான் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள் அவர்கள்.

உண்மையில் கில்ஜி சந்ததியர் தான் படத்தை எதிர்த்திருக்க வேண்டும். அலாவுதீன் கில்ஜியை காமாந்தகப் பித்தனாக, இரக்கமற்ற கொடூரனாக, முதுகில் குத்துபவனாக சித்தரித்திருக்கிறார்கள். அலாவுதீன் தன் மாமன் ஜலாலுதீனைக் கொன்று அரியணை ஏறியது உண்மை தான் என்றாலும், மாலிக் கபூர் என்ற நபும்சகனோடு நெருக்கமாய் இருந்தான் என்றாலும் ரத்தன் சிங்கைச் முதுகில் குத்திக் கொன்றதற்கு வரலாற்று ஆதாரமுண்டா எனத் தெரியவில்லை. (கில்ஜியின் சித்தூர் முற்றுகைக்கு முன்பே ரத்தன் சிங் மற்றொரு போரில் கொல்லப்பட்டு விட்டார் என்றும் ஒரு குறிப்புண்டு.)

பத்மாவதிக்கு பிற்போக்கு சக்திகள் இத்தனை எதிர்ப்புக் காட்டிய போது பாலிவுட்டே திரண்டு படக்குழுவுக்கு ஆதரவாய் நின்றது. சல்மான் கான் தொடங்கி அனுராக் கஷ்யப், கரன் ஜோகர், சேகர் கபூர், நானா படேகர், ஹ்ரித்திக் ரோஷன், ரிஷி கபூர், ஷ்யாம் பெனகல், ப்ரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா, கங்கனா ரணாவத், ஷப்னா அஸ்மி, ஜாவித் அக்தர் எனப் பலரும் சமூக வலைதளங்களில் தம் ஆதரவை வெளிப்படுத்தினர். நம்மவர் கமல் ஹாசனும் தன் ஆதரவைப் பதிவு செய்தார்.

வழக்கம் போல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கல்லூளி மங்கனாய் நின்றார். அந்தமௌனம் என்பது கள்ளத்தனமாய் அநியாயத்துக்கு ஆதரவளிப்பதே என்பது தெளிவு.

படம் வெளியாகி பெரும்பாலான இந்திய நகரங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் முதலிய இடங்களில் கர்னி சேனா அமைப்பினர் படத்திற்கு எதிராகப் பொதுச் சொத்துக்களைச் சேதமாக்கிச் செய்யும் அட்டூழியங்கள் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இக்கணம் வரை ஓய்ந்த பாடில்லை. இதன் மூலம் நீதித்துறையையே அசைத்துப் பார்க்க நினைக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அரசியல் சாசனத்தையே தூக்கிலிட முயல்கிறார்கள்.

*

ஆண்டாள், பத்மாவதி இரண்டு பிரச்சனைகளிலுமே சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டுமே வரலாறு முழுமையாய் ஒப்புக் கொள்ளாத ஒரு பெண்ணை முன்வைத்து நிகழ்ந்தவை. இரண்டிலுமே புண்பட்டதாய்ச் சொல்லப்பட்டது குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டுமே. இரண்டிலுமே வலுவற்ற வலதுசாரி உதிரி அமைப்புகள் தம் அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டன. இரண்டிலுமே அரசுகள் படைப்பாளிக்கு எதிராகவே இருந்தன. இரண்டிலுமே நீதித்துறை கலைஞனுக்கு ஆதரவாய்த் தீர்ப்பளித்தது. இரண்டிலும் சக படைப்பாளிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இவற்றுக்கு மேல் இரு நிகழ்விலுமே படைப்பாளியின் கருத்துரிமை மோசமாய் நசுக்கப்பட்டது.

இந்திய அரசியல் சாசனத்தின் மூன்றாம் பகுதி இந்திய குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) பற்றிப் பேசுகிறது. அதில் ஒன்று சுதந்திரத்திற்கான உரிமை (Right to Freedom). 19 (1) (a) பிரிவு பேச்சு மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம் பற்றிப் பேசுகிறது (Freedom of Speech and Expression). இது எல்லையற்ற சுதந்திரம் இல்லை என்பதை பிரிவு 19 (2) சொல்கிறது (நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைபாடு, தேசப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, நீதிமன்ற அவமதிப்பு, மானநஷ்டம், குற்றத்தைத் தூண்டுதல் போன்ற விஷயங்கள் தவிர) என்றாலும் இன்றும் அரசியல் சாசனம் நமக்குத் தந்திருக்கும் கருத்துச் சுதந்திரம் என்பது மிகவும் வலுவானது.

அதை நிலைநாட்ட வேண்டிய மத்திய அரசும் சில மாநில அரசுகளும் அதிலிருந்து வழுவி விட்டன. அதன் விளைவு தான் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாகி ஒவ்வொரு படைப்பையும் ஏதேனும் காரணம் சொல்லி கழுத்தை நெரிக்கிறான்.

பிள்ளைப்பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைத்தது போல் ‘தமிழ்ப் பெண்கள் Vs கேரளப் பெண்கள்’ என்ற தலைப்பிலான விஜய் தொலைக்காட்சியின் நீயா? நானா? நிகழ்ச்சியின் ஒளிபரப்பை எல்லாம் சில பெயர் தெரியாத லெட்டர்பேட் பெண்ணிய அமைப்புகளால் காவல் துறை புகாரைக் காட்டி மிரட்டித் தடை செய்ய முடிகிறது.

நச்சிகேதா வால்ஹேகருக்கும் மத்திய தணிக்கைத் துறைக்குமான வழக்கில் 2017ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் இருக்கும் வரிகள் இவை: “ஒரு படமோ, நாடகமோ, நாவலோ, புத்தகமோ கலைப்படைப்பாகும். ஒரு கலைஞனுக்கு தன் கருத்தை (சட்டத்தால் தடை செய்யப்படாதது) வெளிப்படுத்தும் சுதந்திரம் உண்டு. அந்தத் தடைகள் கூடப் படைப்பு மனத்தைக் கொன்று போடும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. சொற்கள், சொற்றொடர்களைச் சுயமான தேர்வு செய்து தம் கருத்துக்களை வெளிப்படுத்தும் எத்தனையோ எழுத்தாளர்களை மானுட சரித்திரம் பார்த்திருக்கிறது. அவர்களின் கதாபாத்திரங்கள் கூட சாதாரண மனிதர்களின் கற்பனையிலிருந்து மிக வேறானவை. சிந்தனையைத் தூண்டும் ஒரு படமானது நல்லொழுக்கங்களைப் போதிப்பதாகவே இருக்க வேண்டும் எனச் சொல்ல முடியாது. பார்வையாளனின் ப்ரக்ஞை மற்றும் ஆழ்மனதைத் தூண்டுவதாக அது இருக்கலாம். கட்டுப்பாடு என்ற ஒன்று அதற்கு இருக்க வேண்டுமெனில் அது சட்டப்பூர்வமானதாக மட்டுமே இருக்க வேண்டும்.”

வடக்கு, தெற்கு இரு பிரச்சனைகளுமே இன்னும் அடங்கிய பாடில்லை. இனி அவை எத்திசை எடுக்கும் என்று தெரியவில்லை. அப்படைப்புகள் இனி வாழுமோ சாகுமோ!

உலகப் புகழ் பெற்ற ஃப்ரெஞ்சு எழுத்தாளரான வால்டேரின் வாழ்க்கைச் சரிதத்தை (The Friends of Voltaire) S.G. Tallentyre என்ற புனைப்பெயரில் 1906ல் எழுதிய Evelyn Beatrice Hall ஓரிடத்தில் கருத்துச் சுதந்திரம் குறித்த அவரது எண்ணவோட்டமாக இப்படிச் சொல்கிறார்: “I disapprove of what you say, but I will defend to the death your right to say it.”. அதாவது “நீ சொல்லும் ஒரு விஷயத்தை நான் மறுக்கலாம். ஆனால் நீ அதைச் சொல்வதற்கான உரிமையை என்னுடைய உயிரைக் கொடுத்தேனும் காப்பேன்.”

உண்மையில் கருத்துரிமை என்பது அப்படித்தான் இருக்க வேண்டும். எந்த வித விதிவிலக்குகளும் இன்றி கருத்துச் சுதந்திரம் பேணப்பட வேண்டும். ஒரு கருத்து வெளிப்படுத்தப்பட்ட பின் அதை ஏற்பதும், எதிர்ப்பதும், நிராகரிப்பதும் அவரவர் தேர்வு. ஆனால் கருத்து வெளியாக விடாமல் கருவிலேயே கொல்வது அறமற்ற செயல்.

கருத்துரிமை இல்லாத தேசம் ஒருபோதும் முன்னேறாது. மாறாக விரைந்தழியும். இந்துத்துவ அரசுகள் இந்தியத் தேசத்தை, அதன் மாநிலங்களை அரசாளும் வரை இந்த ஆபத்திலுருந்து நமக்கு விடிவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாய் நமது மக்களுக்கு அதைப் பற்றிக் கிஞ்சித்தும் அக்கறை இருப்பதாய்த் தெரியவில்லை.

இனி நாம் எழுதும் ஒவ்வொரு எழுத்தையும், எடுக்கும் ஒவ்வொரு ஃப்ரேமையும் அதிகார அல்லக்கைகளிடம் காட்டி அனுமதி வாங்க வேண்டும் போலிருக்கிறது!

ஆனால் ஒன்றை மறவாதீர் - அழுத்தப்படும் எதுவும் வீரியமாய் வெடித்தெழும்.

***

(உயிர்மை - ஃபிப்ரவரி 2018 இதழில் வெளியானது) 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 08, 2018 23:24

February 26, 2018

E=mc2 [சிறுகதை]


“ஒளியின் வேகத்தை மிஞ்சிவிட்டோம்!”

பூமி கிரகத்தின் ஜனாதிபதியும், இன்ன பிற கேபினெட் மந்திரிகளும் வீற்றிருந்த மகாத்மா காந்தி ஆடிட்டோரியத்தின் மையத் திடலில் நின்று கொண்டு, சர்வதேச விஞ்ஞானக் கழகத்தின் தலைவரும், மூன்று முறை நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் ரே, மிகத் திட்டமாக, மிகத் தீர்க்கமாக அறிவித்த போது, அங்கு குழுமியிருந்த – பெளதீகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட – ஐந்நூற்று சொச்சம் விஞ்ஞானிகளால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

ஒரு கணம் ஆழ்ந்த அமைதிக்குப் பின், அவ்வாசகம் ஏற்படுத்திய அதிர்வுகளும், அதன் ரிப்பிள் எஃபெக்ட் சலசல‌ப்புகளும் அரங்கில் முழுமையாய் விலகாத நிலையில் கடைசி மிடறு நீரை அருந்தி விட்டு டாக்டர் ரே தொடர்ந்தார்.

“ஒளியின் வேகத்தை மிஞ்சுவது என்பது மனித குலத்தின் இருநூறு வருடக் கனவு. 1905ல் ஐன்ஸ்டைனின் "Does the inertia of a body depend upon its energy-content?" என்ற கட்டுரையில் தொடங்குகிறது அது. இப்போது கடைசியாய் அதை அடைந்தே விட்டோம். நாம் வாழும் காலத்தின் மகத்தான சாதனை இது.”


செயற்கை நீரடைத்த‌ ப்ளாஸ்ட்டிக்‌ புட்டியைக் கொண்டு வந்து ஒயிலாய் அருகில் வைத்து நகர்ந்த‌ காரியதரிசி மீராவை சுலபமாய் அலட்சியப்படுத்தி, கூடியிருந்தவர்களைப் பார்த்து ஓர் இடைவெளி விட்டு, மீண்டும் தொடர்ந்தார்.

“மூன்று கட்டங்களாக இந்தப் பரிசோதனையை நடத்த‌த் திட்டமிட்டோம். நிறையற்ற ஃபோட்டான் துகள்களை ஒளியின் வேகத்தை மிஞ்சச்செய்வது முதல் கட்டம். எலெக்ட்ரான் போன்ற நிறையுள்ள பருத்துகள்களை அந்த‌ வேகத்தை கடக்கச்செய்வது இரண்டாம் கட்டம். உயிரின‌ங்களை அந்த வேகத்தில் பயணிக்க‌ வைப்பது மூன்றாவது மற்றும் கடைசிக் கட்டம்.”

*

லீப் வருட ஃபிப்ரவரியின் கசங்கிய மாலைப் பொழுதில், அதுவரை மடிக்கணிணியில் உள்ளீடு செய்ததை Ctrl மற்றும் S விசைகளை அழுத்திச் சேமித்து விட்டு, தலையில் கை வைத்தமர்ந்தார் சுஜாதா என்ற புனைப்பெயர் கொண்ட அந்தப் பிரபல எழுத்தாளர்.

எழுத ஆரம்பிக்கும் போதே இந்தக் கதை வேறு ஜாதி என்று தெரிந்து விட்டது. கொஞ்ச காலமாய்த் தலை காட்டாதிருந்த ஒற்றைத் தலைவலியை – மைக்ரேன் – மீண்டும் தந்தது. உடம்புக்கு வயதாவதை அடிக்கடி இது போன்ற உபாதைகள் ஞாபகப்படுத்தியபடியே இருக்கின்றன. கதையை எழுதி முடிக்க முடியுமா?

*

“முதலிரண்டு கட்ட‌ங்களையும் வெற்றிகரமாய்க்கடந்து தற்போது மூன்றாவது கட்டத்தின் முனையில் நிற்கிறோம். ஏற்கனவே ஆச்சார்யா என்கிற சிம்பன்ஸி குரங்கினை கடந்த மாதம் டாக்கியான்-1 என்ற பிரத்யேகக்கலம் மூலம் ஒளி வேகத்தை மிஞ்சிப் பயணிக்கச்செய்தோம். அதன் தொழில்நுட்ப விவரணைகள், அறிவியல் முறைகள் அடங்கிய வொய்ட் பேப்பர் விரைவில் பிரசுரிக்கப்படும்.

இன்னும் மனிதனை பயணிக்க வைப்பது மட்டும் தான் பாக்கி. இப்போதைய கூட்டம் அதைப்பற்றியது தான். அடுத்து ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் டாக்கியான்-2 என்ற புதிய கலத்தில் அனுப்புவதாகத்திட்டம். இந்தப்பரிசோதனை வெற்றி பெற்றால் பல ஒளி ஆண்டுகள் தூரமிருக்கும் ஆண்ட்ரமீடா போன்ற கேலக்ஸிகளுக்கெல்லாம் சில மாதப் பயணத்தில் மனிதன் சென்று வரலாம்.

இந்தப் பரிசோதனைக்காக‌ ஏற்கனவே நம்மிடம் உள்ள‌ அஸ்ட்ராநாட்களைப் பயன்படுத்தாமல், பொது மக்களிலிருந்தே புதிதாய் இருவரைத் தேர்ந்தெடுத்து, பயிற்சியளித்து, பயன்படுத்த நம் அரசு முடிவு செய்திருக்கிறது. சாமானியனும் சரித்திரத்தில் இடம் பெற இந்த நல்லாட்சி வகுத்த வழிமுறை இது. இப்போது நம் மாண்புமிகு ஜனாதிபதி நூறு கோடி பேரிலிருந்து அந்த இரண்டு அதிர்ஷ்ட சாலிகளைத் தேர்ந்தெடுப்பார்.” அரங்கில் மெல்லிய கைதட்டல்கள் எழுந்தன.

*

லீப் வருட ஃபிப்ரவரியின் கசங்கிய மாலைப் பொழுதில், அதுவரை மடிக்கணிணியில் உள்ளீடு செய்ததை Ctrl மற்றும் S விசைகளை அழுத்திச் சேமித்து விட்டு, தலையில் கை வைத்தமர்ந்தார் சுஜாதா என்ற புனைப்பெயர் கொண்ட அந்தப் பிரபல எழுத்தாளர்.

யோசித்துப்பார்த்தார். ஆத்மாவையும் நித்யாவையும் இதில் பயன்படுத்தலாம். கதையின் தலைப்பை எழுதினார் – “ஆத்மா, நித்யா மற்றும் ஐன்ஸ்டைன்”.

*

இருபத்தியிரண்டாம் நூற்றாண்டின் விளிம்பில் நின்ற அக்கோடை காலையில், மூன்றாம் உலகப்போருக்குத் தப்பிய நூறு கோடி உலக மக்கட்தொகையும் தத்தம் வீட்டிலிருந்தபடி பிரம்மாண்ட முப்பரிமாண ரெட்டினாத்திரையில் நேரடி ஒளி/ஒலி/ருசி/மணப்பரப்பாய் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

அரசாங்கச் செய்திகளை ஒவ்வொரு பிரஜையும் வாரம் ஏழு மணி நேரம் வீதம் கவனிக்க வேண்டும் என்பது அரச கட்டளை. மீறுப‌வர்களுக்கு தண்டனையும் உண்டு. ஆண்களென்றால் ஆசனவாயில் குறைந்த சக்தி லேசர் பாய்ச்சுவார்கள். பெண்களென்றால் தண்டனை வேறு தினுசு. பயந்தே புத்தி வளர்க்கிறார்கள்.

ஜனாதிபதி மெல்லக் கை நீட்டி, தன் எதிரேயிருந்த அந்த ரேண்டம் நம்பர் ஜெனரேட்டரின் விசையை அழுத்த மேடையிலிருந்த Super AMOLED திரையில் பத்து இலக்க எண்கள் அதிவேகமாய் ஓடி இறுதியில் இரண்டு எண்களை தேர்ந்தெடுத்து கடமையுணர்வுடன் ஓர் எலக்ட்ரானிக் குரல் அறிவித்தது.

“பிரஜை எண் 4953690164 – ஆத்மா”
“பிரஜை எண் 5281377948 – நித்யா”

*

லீப் வருட ஃபிப்ரவரியின் கசங்கிய மாலைப் பொழுதில், அதுவரை மடிக்கணிணியில் உள்ளீடு செய்ததை Ctrl மற்றும் S விசைகளை அழுத்திச் சேமித்து விட்டு, தலையில் கை வைத்தமர்ந்தார் சுஜாதா என்ற புனைப்பெயர் கொண்ட அந்தப் பிரபல எழுத்தாளர்.

ப்ளாஸ்க்கிலிருந்த ஏலக்காயிட்ட மிதச்சுடு தேநீரைக் கோப்பையிலூற்றி உறிஞ்சினார்.

அற்புதமானதொரு கருவும், நல்லதொரு துவக்கமும் கிடைத்தும், கதையின் போக்கு சரியாய்ப் பிடிபடவில்லை. இந்த நாற்பது வருட எழுத்து வாழ்வில் இது போன்ற குழப்பங்கள் மிக அரிதாகவே நிகழ்ந்திருக்கின்றன‌. ஒன்று மட்டும் மீண்டும் மீண்டும் சிந்தனையில் வந்து போனது. ஒருவரை இந்தக் கதையின் முடிவில் கொன்று விட வேண்டும் என்பதே அது. ஆத்மா, நித்யா – இருவரில் ஒருவரை.

*

தங்கள் வீட்டிலிருந்த தொலைக்காட்சித் திரையில் பார்த்துக்கொண்டிருந்த ஆத்மாவும் நித்யாவும் பிரம்மித்தார்கள். உற்சாகத்தில், நித்யா கிட்டத்தட்ட சப்தமாய்க் கத்தியே விட்டாள் (“ஹுர்ர்ரேஏஏ!”). என்னவொரு வாய்ப்பு!

சாதாரணர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்பா இது. நித்யா ஐ.ஐ.டி.க்கு விண்ணப்பித்தே கிடைக்கவில்லை - அதுவும் மூன்று முறை. ஆனால் இப்போது அதையெல்லாம் விட பெரிய பாக்கியம் கிடைத்திருக்கிறது.

தேனிலவுக்கு நிலவுக்கு போய் வந்ததோடு சரி. அதற்கு பிறகு ஆத்மா அவளை எங்குமே அழைத்துச் செல்லவில்லை. பணி நிமித்தம் ஒரு முறை ஜூபிடர் வரை போயிருக்கிறாள். அவ்வளவு தான் அவளது சுற்றுலா வரலாறு. இதோ இந்தப் பரிசோதனைப்பயணத்தில் ஆண்ட்ரமீடா வரை போகலாம் என்கிறார்கள்.

இந்த அரசு வாழ்க! இதன் விஞ்ஞானம் வாழ்க! இதன் தொழில்நுட்பம் வாழ்க! குறிப்பாய் அந்த ரேண்டம் நம்பர் ஜெனரேட்டர் வாழ்க! இந்த அரசையா 10G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெரும் ஊழல் செய்தது என்று சில நக்சல்பாரி ஊடகங்கள் குற்றம் சாட்டிப் பதவி விலகக் கோரின! பாவம், முட்டாள்கள்.

ஆத்மாவுக்கு உலகமே தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத்தோன்றியது. அரசாங்கத் தொலைக்காட்சியினர் அதற்குள் வீடு தேடி பேட்டியெடுப்பதற்கு வந்துவிட்டனர். “தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எப்படி உணர்கிறீர்கள்?”, “மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”, “அரசாங்கத்தைப்பற்றி ஓரிரு வார்த்தைகள்?” போன்ற அசட்டு சம்பிரதாயக் கேள்விகளுக்கு உற்சாகமாய்ப் பதிலளித்தார்கள்.

ஜனாதிபதி அந்தரங்கமாகச் சந்திக்க விரும்புவதாக பூமி அரசின் தலைமைச் செயலகத்திலிருந்து அரசாங்க முத்திரையிட்ட குரல் மின் மடல் அழைப்பு வந்தது. அவர்கள் சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தார்கள். அரசாங்கம் வழங்கி யிருந்த‌ ரேஷன் மதுவை அதிகம் குடித்தார்கள். சம்போகத்திற்கு அனுமதியற்ற காலமாதலால் அன்றைய‌ இரவு ஆத்மா நித்யாவை அழுந்த முத்தமிட்டான்.

*

லீப் வருட ஃபிப்ரவரியின் கசங்கிய மாலைப் பொழுதில், அதுவரை மடிக்கணிணியில் உள்ளீடு செய்ததை Ctrl மற்றும் S விசைகளை அழுத்திச் சேமித்து விட்டு, தலையில் கை வைத்தமர்ந்தார் சுஜாதா என்ற புனைப்பெயர் கொண்ட அந்தப் பிரபல எழுத்தாளர்.

மனசு கேட்கவேயில்லை. ஆத்மா நித்யா இருவரில் ஒருவரைக் கொல்வதா, என்ன இது? கிட்டதட்ட ஒரு துரோகம் போல். எத்தனை வருடங்களாக என் புனைவுகளின் பாத்திரங்களாக‌ ஆத்மாவும் நித்யாவும் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை போய்க் கொல்வதாவது. நடக்காது. மீண்டும் மைக்ரேன் சிந்தனையை ஆக்ரமித்தது.

*

பூமியின் ஜனாதிபதியுடனான சந்திப்பு மிகச்சம்பிரதாயமாய், மிகச்சுருக்கமாய் நிகழ்ந்தது. உடன் டாக்டர் ரே இருந்தார். ஜனாதிபதி அரசுத்தொலைக்காட்சியில் பேசும் அதே மின்காந்தம் தோய்ந்த‌ கரகர‌த்த குரலில் துல்லியமாய்ப் பேசினார்.

“நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நிலவுப்பயணத்துக்கு ஆம்ஸ்ட்ராங்,ஆல்ட்ரின் தேர்ந்தெடுக்கப்பட்டது போல், செவ்வாய்க்கு ராமன், அப்துல்லா தேர்வானதைப் பெற்றதைப் போல் நீங்கள் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறீர்கள். சரித்திரம் உங்களை நினைவிற்கொள்ளும். பூமி அரசின் பிரதிநிதியாக உங்களை வாழ்த்துகிறேன்”

நன்றி தெரிவித்து, விடைபெற்று கிளம்புகையில் டாக்டர் ரே புன்னகைத்தார்.

“நாளை உங்கள் பயிற்சி தொடங்குகிறது.”

ஆர்வத்தில் படபடக்கும் அவர்களின் நான்கு கண்களையும் பார்த்து சொன்னார்.

“தயாராகுங்கள், உங்கள் வாழ்நாளின் பொற்கணங்களை அனுபவிக்க.”

*

லீப் வருட ஃபிப்ரவரியின் கசங்கிய மாலைப் பொழுதில், அதுவரை மடிக்கணிணியில் உள்ளீடு செய்ததை Ctrl மற்றும் S விசைகளை அழுத்திச் சேமித்து விட்டு, தலையில் கை வைத்தமர்ந்தார் சுஜாதா என்ற புனைப்பெயர் கொண்ட அந்தப் பிரபல எழுத்தாளர்.

திருமதி சுஜாதா எடுத்துத்தந்த மாத்திரையைப் போட்டுத் தண்ணீர் குடித்தார்.

“என்ன தான் இப்படிப் போட்டு யோசிக்கிறீர்கள்?”

சொல்வதா வேண்டாமா என யோசித்துத் தயங்கிப் பின் சொன்னார்.

“நீங்க ரொம்ப நல்லவர் - உங்க மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தவிர”.

*

ஆத்மாவுக்கும் நித்யாவுக்கும் பயணத்திற்கான பயிற்சி தலைநகரின் தெற்கே ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த சர்வதேச அஸ்ட்ரோநாட் பயிற்சி மையத்தில் தொடங்கியது. ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் வீதம் மிகக்கடுமையான மூன்று மாத காலப்பயிற்சி. (பாதியில் “பேசாமல் ஓடிப் போய் விடலாமா?” என்று ஆத்மாவிடம் நித்யா ரகசியமாய்க் கேட்டாள்.)

முதலில் ஒளியின் வேகம், அதைப்பற்றிய அறிவியல் சித்தாந்தங்கள், அவர்கள் செல்லவிருக்கும் கலம் போன்றவற்றைப்ப‌ற்றி பாடம் எடுத்தார்கள். ஸ்பெஷல் ரிலேட்டிவிட்டி, க்வாண்டம் டன்னலிங், ப்ளாங்க் லெந்த், ஈபிஆர் பாரடாக்ஸ், ஸ்ட்ரிங் தியரி, ஸ்பேஸ் ஒபேரா என்று புரியாத பாஷையில் பேசினார்கள்.

பாதிக்கு மேல் புரியாது; இருந்தாலும் சொல்லித் தர வேண்டியது எங்கள் கடமை என்ற முன்னறிவிப்புடன் தான் ஆரம்பித்தார்கள் பேராசிரியர்கள்.

எழுபத்தைந்து மீட்டர் நீளம் கொண்ட நீச்சல் குளத்தில், விண்வெளிக்கான உடைகளும், டென்னிஸ் ஷூக்களும் அணிந்து கொண்டு, சைடு ஸ்ட்ரோக் முறையில் மூன்று முறை தொடர்ச்சியாக நீந்த வைத்தார்கள். நீருக்குள் பத்து நிமிடம் மூச்சடக்கி இருக்கச்சொன்னார்கள். இருபது நொடிகளுக்கு எடையற்ற சூழ்நிலையில் இருக்க‌ச் செய்தார்கள் – இப்படி ஒரு நாளைக்கு நாற்பது முறை.

*

லீப் வருட ஃபிப்ரவரியின் கசங்கிய மாலைப் பொழுதில், அதுவரை மடிக்கணிணியில் உள்ளீடு செய்ததை Ctrl மற்றும் S விசைகளை அழுத்திச் சேமித்து விட்டு, தலையில் கை வைத்தமர்ந்தார் சுஜாதா என்ற புனைப்பெயர் கொண்ட அந்தப் பிரபல எழுத்தாளர்.

“கணேஷ், வசந்த் இருவரில் ஒருவரை சாகடிக்க வேண்டும் என்றால் கூட சுலபமாகத் தீர்மானித்து விடுவேன் - வசந்த் என்று. ஆனால் இந்த ஆத்மாவும் நித்யாவும் ரொம்பவே படுத்துகிறார்கள்”, என்றார் மோவாயைத் தடவியபடி.

“படுத்துவது ஆத்மாவா? நித்யாவா?”

“இருவருமே.”

*

கடைசியாய் பயணத்தின் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளைப் பற்றியும், அந்தப் பயணத்தின் அறிவியல் முக்கியத்துவம் தவிர்த்து அரசியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் குறித்தும் ஒரு வயதான வழுக்கைத்தலைப் பெண் சிரத்தையாக‌ப்பாடம் நடத்தினாள். கிரக‌ப்பற்று, இறையாண்மை இத்யாதி.

பயிற்சிமுடியும் தறுவாயில் ஆத்மாவும் நித்யாவும் முழு உடற்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். டிஎன்ஏ ப்ளூப்ரிண்ட் எடுத்து பிசிறுள்ள ஜீனோடைப்புகள் ஜெனிட்டிக் ரீஎஞ்சினியரிங்கில் திருத்தி நார்மல் என முத்திரை குத்தினார்கள்.

பயிற்சியிலிருந்த மூன்று மாதங்களில் ஒரு நாள் கூட டாக்டர் ரே கண்ணில் படவில்லை. அவருக்குக்கீழ் நேரடிப்பயிற்சி பெறுவோம் என்று எண்ணியிருந்த‌ இருவருக்கும் அது சற்றே ஏமாற்றமளித்தது. பயணம் பற்றிய எதிர்ப்பார்ப்பும் சந்தோஷமும் எல்லாவற்றையும் மறக்கச் செய்தது. ஆத்மாவும் நித்யாவும் மெல்ல மெல்ல, தட்டுத்தடுமாறி தயாரானார்கள். அந்த மஹாநாளும் வந்தது.

*

லீப் வருட ஃபிப்ரவரியின் கசங்கிய மாலைப் பொழுதில், அதுவரை மடிக்கணிணியில் உள்ளீடு செய்ததை Ctrl மற்றும் S விசைகளை அழுத்திச் சேமித்து விட்டு, தலையில் கை வைத்தமர்ந்தார் சுஜாதா என்ற புனைப்பெயர் கொண்ட அந்தப் பிரபல எழுத்தாளர்.

“பேசாமல் ஆத்மாவைக் கொன்று விடுங்கள்.”

“என்ன‌, ஃபெமினிஸமா?”

“இல்லை. இன்ஃபாக்ட், இது மேல்ஷாவனிஸம்”

“எப்படி?"

“உங்கள் எதிர்கால எழுத்துக்களுக்கு நித்யா என்பதன் கிளுகிளுப்பு தேவைப்படும்.”

அந்த நவீன ஏவுதளத்தைப் போர்த்தியிருந்த அதிகாலைப்பனியை உருக்கியபடி பரிதியின் கதிர்கள் பிரவாகித்துப்பாய்ந்தன. வேலை நிமித்தம் மட்டுமேயான பரபரப்புக் குரல்கள் அவசரம் காட்டின. கிட்டத்தட்ட எல்லோருமே ஒருவித ஆன்மீகம் தடவிய‌ பதற்றத்தில் இருந்தார்கள் – புய‌லுக்குக் காத்திருக்குமொரு கப்பல் மாலுமியின் பதற்றம். நேரம் சத்தமின்றி நழுவிக் கொண்டிருந்தது.

*

ஆத்மாவும் நித்யாவும் டாக்கியான்-2 என்ற அந்த வினோத வடிவுடைய‌, ஒளிர் வெண்ணிற கலத்தில் புறப்படத்தயாராய் அமர்ந்திருந்தார்கள். பதட்டமில்லாமல் ஏதோ பக்கத்திலிருக்கும் செவ்வாய் கிரகத்துக்கு வார இறுதி விடுமுறையைக் கழிக்க‌ கிளம்புபவர்கள் மாதிரி உதட்டில் ஒரு புன்னகை ஒட்டியிருந்தார்கள்.

மிஷன் கவுண்ட் டவுன் தொடங்கியது – 9 8 7 6 5 4 3 2 1 0

அந்தக்கலம் ஏவுதளத்தை விட்டு சீறிப்பாய்ந்தது. அதன் வேகத்தை ஒப்பிட அதற்கு முந்தைய கணம் வரையிலான பூமிச் சரித்திரத்தில் உவமையில்லை. நூற்றாண்டுகளாய் மனித இன‌ம் வாசித்துக் கொண்டிருந்த சித்தாந்தங்களை மாற்ற வல்ல ஒரு பயணம். உலகமே வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தது.

தம் வாழ்நாளின் மறக்க முடியாக்கொண்டாட்டம் ஒன்றிற்கு ஆயத்தமானார்கள் பூமிக்கிரகத்தின் பொதுமக்கள். வரலாற்றாசிரியர்கள் புதிய அத்தியாயம் எழுதத் தயாரானார்கள். விஞ்ஞானிகள் கடவுளை ஒரு கணம் ரத்து செய்தார்கள்.

*

லீப் வருட ஃபிப்ரவரியின் கசங்கிய மாலைப் பொழுதில், அதுவரை மடிக்கணிணியில் உள்ளீடு செய்ததை Ctrl மற்றும் S விசைகளை அழுத்திச் சேமித்து விட்டு, தலையில் கை வைத்தமர்ந்தார் சுஜாதா என்ற புனைப்பெயர் கொண்ட அந்தப் பிரபல எழுத்தாளர்.

“இதில் இவ்வளவு குழம்ப ஏதுமில்லை.”

“…”

“ஒரு கதையில் சாகடித்து விட்டு, அடுத்த‌ கதையில் அதே கதாபாத்திரத்தை உயிருடன் காட்டுவது விஞ்ஞானக் கதைகளுக்கோ, உங்களுக்கோ புதிதில்லை.”

“ஜீனோவைச் சொல்கிறாயா? ப்ரியாவைச் சொல்கிறாயா? அவை வேறு”

“ஆத்மா, நித்யா பாத்திரங்கள் ஒரே ஆட்களை குறிப்பதல்ல. உங்கள் சில அறிவியல் கதைகளில் ஆத்மா, நித்யா என்ற‌ பெயர் கொண்ட‌ பாத்திரங்கள் வருகின்றன. அவ்வளவே. உற்றுப் பார்த்தால் அவை கதைக்குக் கதை வேறுபடுகின்றன. ஆத்மா நித்யா என்பவை ஓர் அடையாளம் மட்டுமே.”

“அதனால் தான் அதை அழிக்க பயப்படுகிறேன்.”

*

ஐசக் நியூட்டன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ், சங்கர் முனியசாமி ஆகியோர் முன்பு அமர்ந்திருந்த கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டியின் கணிதத் துறை லூகாஸியன் பேராசிரியர் நாற்காலியில் அமர்ந்தபடி, மேசையோடு ஒருங்கிணைக்கப்பட்ட‌ தொடுகணிணித்திரையில் டாக்கியான்-2 கிளம்பி நகர்வதையும் அதன் வேகக் கணக்கையும் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் ரேவை அவரது அந்தரங்கக் காரியதரிசி மீராவின் உற்சாகக் கீச்சுக்குரல் பரிசுத்தமாய்க் கலைத்தது.

“கடைசியாய் சாதித்து விட்டீர்கள் டாக்டர் ரே”

அவளை உற்றுப்பார்த்தார் டாக்டர் ரே.

“அதில் உனக்கு இவ்வளவு சந்துஷ்டியா?”

“என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? ஐ லிவ் ஃபார் யூ, டாக்டர் ரே.”

“மீரா! உன் இளமையை என் போன்ற ஒரு கிழவனோடு வீணடித்து விட்டாய்”

“இல்லை ரே. என்ன இது புதிதாய்? நானாய் விரும்பித்தானே எல்லாவற்றுக்கும் ஒத்துழைத்தேன். உங்கள் ஆராய்ச்சிக்காக மணமே செய்யாமல் இருந்தீர்கள். இயற்பியலின் மேல் பற்று கொண்ட இந்தக்கத்துக்குட்டிக்கு அதன் பிதாமகரான நீங்கள் ஆதர்ஷபுருஷன். உங்களுக்கு எப்படியோ, எனக்கு நீங்கள் காதலன்தான். இதை விட மகிழ்ச்சியான வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்க சாத்தியமில்லை”

மூச்சு விடாமல் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியவள் நிதானமாகித் தொடர்ந்தாள்.

“உங்களையும் என்னையும் தொடர்புபடுத்தி என் காதுபட பேசியவர்களின் வார்த்தைகளை நான் ரசிக்கவே செய்தேன். உங்களின் அறிவிக்கப்படாத காதலியாய் இருப்பதில் எனக்கு உள்ளூர ஒரு வித‌ பெருமையே. இருபதாம் நூற்றாண்டிற்கு ஒரு ஐன்ஸ்டைன் போல் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு நீங்கள். இந்த ஆராய்ச்சியின் முடிவில் உலகமே இதைத் தான் சொல்லும்.”

“என்னை இவ்வளவு நேசிக்கிறவளிடம் ஓர் உண்மையை சொல்ல வேண்டும்”

*

லீப் வருட ஃபிப்ரவரியின் கசங்கிய மாலைப் பொழுதில், அதுவரை மடிக்கணிணியில் உள்ளீடு செய்ததை Ctrl மற்றும் S விசைகளை அழுத்திச் சேமித்து விட்டு, தலையில் கை வைத்தமர்ந்தார் சுஜாதா என்ற புனைப்பெயர் கொண்ட அந்தப் பிரபல எழுத்தாளர்.

கடைசியாய் பக்கத்து வீட்டு நாயிடம் கூட கேட்டுப்பார்த்தாயிற்று. “பவ் பவ் பவ்” என சற்று விரோதமாய் அல்லது ஏளனமாய்க் குரைத்து விட்டு படுத்துக்கொண்டது.

“இவனுக்கு வேறு வேலை இல்லை” என்று சொல்லாமல் சொல்வதாய்ப்பட்டது.

*

“இந்த ஆராய்ச்சி வெற்றி இல்லை மீரா. பூமி அரசின் தூண்டுதலின் பேரில் நான் அப்படி சொல்ல வேண்டியதாகிவிட்டது. இன்றைய அரசின் மேல் ஏராள‌மான ஊழல் குற்றச்சாட்டுகள். முக்கியமாய் இந்த 10G ஸ்பெக்ட்ர‌ம் ஒதுக்கீடு. மில்லியன் பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஊழல் நடந்திருக்கிறது என்கிறார்கள். அவர்களுக்கு பொதுமக்களின் கவன‌த்தை திசை திருப்ப ஏதாவது விஷயம் தேவைப்பட்டது. இன்றைய தேதிக்கு விஞ்ஞானம் மட்டும் தான் அத்தகைய ஈர்ப்பினை ஏற்படுத்த வல்லது. அதனாலேயே இந்த ஆராய்ச்சியை முடுக்கிவிட்டார்கள். என்னை இத்திட்டப்பணிக்குத் தலைவராக‌ நியமித்தார்கள்.

ஆரம்பத்தில் நிஜமாகவே முயற்சி செய்து பார்த்தோம். பின் புரிந்து விட்டது. என் நாற்பத்தியிரண்டு வருட கற்றலில் சொல்கிறேன் ஒளியின் வேகத்தை மிஞ்சவே முடியாது. ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு பொய்க்கவே செய்யாது. E=mc2 என்கிற நிறை ஆற்றல் சமன்பாடு தான் சதி செய்கிறது.

பரிசோதனை வெற்றி பெறாது என்பதால் தான் அரசாங்கத்தின் முடிவுப்படி சாதாரணர்களான ஆத்மாவும் நித்யாவும் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் பயணிக்கும் கலம், ஒளியின் வேகத்தைத் தொட முனைகையில் வெளிப்படும் உயர் ஆற்றலின் காரணமாக‌ வெடித்துச்சிதறும். A giant explosion.

ஆத்மாவும் நித்யாவும் பயிற்சியிலிருந்த போது கிடைத்த மூன்று மாத கால அவகாசத்தில் என்னால் ஒரே ஒரு விஷயம் செய்ய முடிந்தது. கலம் வெடித்துச் சிதறுகையில் இருவரில் ஒருவர் உயிர் பிழைக்கும் வகையில் ஒரு சிறிய‌ உபகலத்தை இணைத்திருக்கிறேன். அத்தகைய இரண்டு கலங்களை இணைத்து இரண்டு பேரையுமே காப்பாற்றி விடுவது தான் எனது ஆரம்பத் திட்டம். ஆனால் நேரம் போதாமையால் இரண்டாவது கலத்தை செய்ய‌ முடியாமலே போய் விட்டது. பூமி அரசாங்கத்தை எவ்வளவோ முறை மன்றாடியும் பரிசோதனை தேதியை மாற்றுவதற்கு மறுத்து விட்டார்கள்.

எல்லாம் மக்களை ஏமாற்ற வேண்டி செய்யப்படும் அரசியல். என் மனசாட்சி இப்போது உறுத்துகிறது. இந்தப்பதவியிலிருந்து கொண்டு தெரிந்தே ஓருயிரைப் பலி வாங்க ஒத்துழைத்ததை ஏற்கவே முடியவில்லை. சர்வதேச விஞ்ஞானக் கழகத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்திருக்கிறேன்.”

அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்த மீரா விரக்தியாய்ச் சொன்னாள்.

“உங்கள் ராஜினாமாவால் எந்த உயிரையும் திருப்பித்தர முடியாது டாக்டர் ரே.”

*

லீப் வருட ஃபிப்ரவரியின் கசங்கிய மாலைப் பொழுதில், அதுவரை மடிக்கணிணியில் உள்ளீடு செய்ததை Ctrl மற்றும் S விசைகளை அழுத்திச் சேமித்து விட்டு, தலையில் கை வைத்தமர்ந்தார் சுஜாதா என்ற புனைப்பெயர் கொண்ட அந்தப் பிரபல எழுத்தாளர்.

“ஆத்மா, நித்யா மற்றும் ஐன்ஸ்டைன்” என்ற தலைப்பை அடித்து விட்டு (“ஆத்மா, நித்யா மற்றும் ஐன்ஸ்டைன்” – இப்படி!) “E=mc2” என்று எழுதினார்.

*

வினாடிகளும் அதற்குள்ளிருக்கும் சிறுபிரிவுகளும் வேகமாய்த் தெறித்து ஓடிக்கொண்டிருந்தன. ரே கனத்த‌ மெளனத்துக்குள் ஒளிந்திருந்தார். அந்த அறையில் அவர்கள் இருவர் மட்டும் இருந்தார்கள். அந்த நிசப்தத்தில் அவர்களின் இருதயத்துடிப்பு அவர்களுக்கே மிகத் தெளிவாய்க் கேட்டது.

சகிக்கவொண்ணா மௌனம். மீரா தன் வார்த்தைகளால் அதைத் தகர்த்தாள்.

“கடைசியாய் ஒரே ஒரு கேள்வி டாக்டர் ரே.”

என்ன என்பது போல் பார்த்தார் ரே.

“ஆத்மா நித்யா இருவரில் யார் சாகப்போகிறார்?”

“Survival of the fittest”

பெருமூச்சுடன் சொல்லிவிட்டு அவர் தன் கண்களை மூடிக்கொண்டார்.

*

லீப் வருட ஃபிப்ரவரியின் கசங்கிய மாலைப் பொழுதில், அதுவரை மடிக்கணிணியில் உள்ளீடு செய்ததை Ctrl மற்றும் S விசைகளை அழுத்திச் சேமித்து விட்டு, தலையில் கை வைத்தமர்ந்தார் சுஜாதா என்ற புனைப்பெயர் கொண்ட அந்தப் பிரபல எழுத்தாளர்.

திருமதி சுஜாதா அருகே வந்து நின்று இடுப்பில் கை வைத்துக்கொண்டு கேட்டார்.

“யாரை சாகடிக்கப்போகிறீர்கள்? அல்லது யாரை காப்பற்றப்போகிறீர்கள்?”

“கிட்டத்தட்ட இருவரையுமே காப்பாற்றிவிடுவேன் எனத்தோன்றுகிறது”

“எப்படி?”

சுஜாதா புன்னகைத்தார்.

*

செரன்கோவ், அஸ்கார்யன், காசிமிர், ஸ்கேர்ன்ஹாஸ்ட், ஹார்ட்மான் ஆகிய‌ விளைவுகளை ஏற்படுத்தி விரைந்தது கலம். அதன் நியான் எலெக்ட்ரோ‍-லூமினன்ஸ் பச்சை, வினாடிக்கு மீட்டர்களில் காட்டிய கலத்தின் வேகத்தை ஆத்மாவும் நித்யாவும் கண்ணிமைக்காம‌ல் அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

299792453
299792454
299792455
299792456
299792457

நீங்கள் ஓர் இயற்பியல் மாணவராக இருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் – நூற்றாண்டுகளாய் கண்ணாமூச்சி காட்டி வரும் ஒளியின் வேகம் என்ற அந்த மாய எண்ணை ஆத்மாவும் நித்யாவும் பயணிக்கும் டாக்கியான்-2 முத்தமிட‌ இன்னும் வினாடிக்கு ஒரு மீட்டர் அதிக வேகம் தேவை.

அப்போது…

*

லீப் வருட ஃபிப்ரவரியின் கசங்கிய மாலைப் பொழுதில், அதுவரை மடிக்கணிணியில் உள்ளீடு செய்ததை Ctrl மற்றும் S விசைகளை அழுத்திச் சேமித்து விட்டு, தலையில் கை வைத்தமர்ந்தார் சுஜாதா என்ற புனைப்பெயர் கொண்ட அந்தப் பிரபல எழுத்தாளர்.

அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட இந்த ஒரு வாரத்தில் எதுவுமே எழுதவில்லை. சோர்வு மிகவும் அழுத்தியது. இந்த சூழ்நிலையே கூட ஒருவனை நோயாளியாக்கி விடும். எல்லோரும் விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள். நோயாளிகள் என்றாலே எப்போதும் தனி மரியாதை தான். அதுவும் பிரபல நோயாளிகள் என்றால் கூடுதல்.

இன்றாவது ஆத்மா, நித்யா கதையை எழுதி முடித்து விட‌ வேண்டும். ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைத்து விடலாம். இன்று தேதி என்ன? வெகு சுத்தமான மருத்துவமனைச் சுவரில் அறையப்பட்டிருந்த துருவேறாத இரும்பு ஆணியின் வசம் தொங்கிக் கொண்டிருந்த அந்த தினசரி கிழிபடும் கேல‌ண்டரைப் பார்த்தார்.

அன்று 27 ஃபிப்ரவரி 2008.

***

(ஃபிப்ரவரி 27, 2011 அன்று சுஜாதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தின் போது தமிழ்பேப்பர்.நெட் இணைய தளத்தில் வெளியானது. பா.ராகவன் வெளியிட்டார்.)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2018 20:19

February 7, 2018

பெண்மைப் பஞ்சு


So what would happen if men could menstruate? Clearly, menstruation would become an enviable, worthy, masculine event: Sanitary supplies would be federally funded and free. Of course, some men would still pay for the prestige of commercial brands
- Gloria Steinem, American Journalist

சானிடரி நாப்கின் என்பது பெண்களின் மாதவிலக்கின் போதான ரத்தப் போக்கை உறிஞ்சி சுகாதாரத்தையும், சௌகர்யத்தையும் தரும் பஞ்சுப் பொருள். இது தவிர யோனியில் அறுவை சிகிச்சை, பிரசவத்துக்குப் பிந்தைய நாட்கள், கருக்கலைப்பு என பெண் பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு நிகழ வாய்ப்புள்ள எல்லா சூழல்களிலும் அதைக் கையாளப் பயன்படுகிறது. சானிடரி டவல், சானிடரி பேட் என்று வேறு பெயர்கள் இதற்கு உண்டு - அல்லது பேட் என்று சுருக்கமாய். நம்மூரில் பிரபல ப்ராண்டின் பெயரால் பொதுவாய் இதை விஸ்பர் என்று அழைப்பவரும் உண்டு.

சானிடரி நாப்கின் என்பது உடலுக்கு வெளியே, உள்ளாடையுடன் ஒட்டி வைத்துப் பயன்படுத்துவது. இன்னொரு வகையான டாம்பன் என்பது உடலுக்கு உள்ளே உறுப்புக்குள் வைத்துப் பயன்படுத்துவது. அடுத்து மென்ஸ்டுரல் கப் என்பது உடலின் உள்ளே வைத்து ரத்தப் போக்கை சேகரித்து வெளியூற்றும் கிண்ணம்.

ஏவாள் வாழ்க்கை மரத்தின் (Tree of Life) கனிகளை உண்ட பின் தன் முதல் மாதவிலக்கை அடைந்ததாகச் சொல்கிறார்கள். நிர்வாண ஏவாள் இதை எப்படி எதிர்கொண்டாள்? ஒருவேளை இலை தழைகளைப் பயன்படுத்தி இருக்கலாம்.

பைபிள் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் அதிகாரம் 31ல் (வாசகம் 35) "அவள் தன் தகப்பனை நோக்கி: என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திராததைக் குறித்துக் கோபங்கொள்ள வேண்டாம்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்றாள்" என வருகிறது. ராகேல் தன் தந்தை வரும் போது மாதவிலக்கின் காரணமாக எழவில்லை. எனில் அந்தக் காலத்துப் பெண்கள் அந்நாட்களின் போது சானிடரி நாப்கின் போன்ற எதுவும் அணியாது, எங்கும் வெளியே செல்லாது ஒரே இடத்தில் அமர்ந்து பொழுதைக் கழித்திருக்கின்றனர்.

மகாபாரதத்தில் திகிலுரிக்க முனையும் துச்சாதனனைப் பார்த்து "அச்சா, கேள். மாதவிலக் காதலா லோராடை தன்னி லிருக்கின்றேன். தார்வேந்தர் பொற்சபை முன் என்னை அழைத்த லியல்பில்லை" என்று திரௌபதி சொல்வதாக பாஞ்சாலி சபதத்தில் பாரதி எழுதுகிறார். துவாபர யுகத்திலேயே பரத கண்டத்தில் பெண்கள் மாதவிலக்கின் போது தனி ஆடை தரித்தனர் என்பதாக இதை எடுக்கலாம்.

பண்டைய எகிப்தில் பெண்கள் பேப்பிரஸ் என்ற அடர்த்தியான பேப்பர் சங்கதியை மென்மைப்படுத்தி டாம்பன் ஆகப் பயன்படுத்தி இருக்கின்றனர். கிரேக்கத்தில் சிறு மரத்துண்டுகளைப் பருத்திநார் சுற்றி டாம்பன் ஆகப் பயன்படுத்தினர். பைசன்டைன் என்ற ரோம சாம்ராஜ்யதில் வெண்கம்பளியை மென்மையாக்கி டாம்பன் ஆகப் பயன்படுத்தினர். பண்டைய ஜப்பானில் பேப்பரால் ஆன டாம்பன்களை பேன்டேஜ் சுற்றிப் பயன்படுத்தினர். ஹவாயில் பெண்கள் ஃபெர்ன் என்ற செடியின் நாரைப் டாம்பன் ஆகப் பயன்படுத்தினர். இன்றும் சில ஆப்ரிக்க மற்றும் ஆசிய தேசப் பெண்கள் புல் மற்றும் செடிகளை மாதவிலக்கின் போது பயன்படுத்துகின்றனர்.

சானிடரி நாப்கின் பற்றிய குறிப்பு சூடா என்ற 10ம் நூற்றாண்டின் ரோமானிய என்சைக்ளோபீடியாவில் வருகிறது. 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹைபாஷியா என்ற பெண் தத்துவ ஞானி, தன் பின்னால் சுற்றும் ஒருவனை விரட்ட தான் பயன்படுத்திய சானிடரி நாப்கினை அவன் மீது வீசி எறிந்ததாக அது சொல்கிறது.

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட பெல்ட்
17ம் நூற்றாண்டில் ஐரோப்பியப் பெண்கள் திணிப்புப் பஞ்சு மற்றும் கடற்பஞ்சை நாப்கினாகப் பயன்படுத்தினர். 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் பெண்கள் வீடுகளில் தாமே நாப்கின்கள் செய்து பயன்படுத்தினர்.

1867ல் இண்ட்ரபிட் இன்வென்டர்ஸ் நிறுவனம் மென்ஸ்டுரல் கப்புக்கான முதல் பேடண்டைப் பதிவு செய்தனர். 1870களில் தொங்க விடும் சஸ்பெண்டர்களுடன் கூடிய நாப்கின்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் விற்பனைக்கு வந்தன. 1890களில் சஸ்பெண்டர் மாடலுக்குப் பதில் பெல்ட் வைத்த நாப்கின்கள் வந்தன.

பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் போர்வீரர்களின் துப்பாக்கிக் காயங்களுக்கென செய்த கண்டுபிடிப்பே டிஸ்போஸிபிள் நாப்கின்களுக்கு ஆரம்பப் புள்ளி. டிஸ்போஸிபிள் நாப்கின் என்பது ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடுவது. ஆம். அதுவரை பெண்கள் நாப்கின்களைத் துவைத்து மறுபடிப் பயன்படுத்தி வந்தார்கள்.

1880களில் ஜெர்மனியில் டிஸ்போஸிபிள் நாப்கின்கள் சந்தைக்கு வரத் துவங்கின. அமெரிக்காவில் காம்ஸ்டாக் சட்டத்தின் (1873) காரணமாக பாலியல் பொருட்களின் விளம்பரங்கள் தடை செய்யப் பட்டிருந்ததால் அங்கு அதிகம் பிரபலமாகவில்லை. 1896ல் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் லிஸ்டர்ஸ் டவல்ஸ் என்ற பெயரில் அமெரிக்காவின் முதல் டிஸ்போஸிபிள் நாப்கினை அறிமுகப்படுத்தியது. 1890களில் அமெரிக்கா மற்றும் ப்ரிட்டனில் இது பரவலாகக் கிடைத்தது.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க பெண்கள் ‘பறவையின் கண்கள்’ என்று அழைக்கப்பட்ட, குழந்தைகளின் டயப்பர் செய்யப் பயன்பட்ட காட்டன் வஸ்துவைக் கொண்டு வீட்டிலேயே செய்த நாப்கின்களை உள்ளாடைகளுடன் குத்திப் பயன்படுத்தினர். முதலாம் உலகப் போரின் போது பெண்கள் அதிகமாய் ராணுவத்தில் சேர்ந்ததால் சானிடரி நாப்கின்கள் மிக அதிக அளவில் சந்தைப் படுத்தப்பட்டு பிரபலமானது. அக்காலத்தில் ஃப்ரான்ஸில் நர்ஸ்களாகப் பணி புரிந்தவர்கள் நோயாளிகளுக்குப் பயன்பட்ட செல்லுலோஸ் பேண்டேஜ்களின் ரத்தம் உறிஞ்சும் திறன் கண்டு அதை சானிடரி நாப்கின்களாகப் பயன்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, 1920ல் புகழ்பெற்ற கோடெக்ஸ் செல்லுகாட்டன், செல்லுநாப் போன்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. 1921ல் முதல் சானிடரி நாப்கின் விளம்பரத்தை கோடெக்ஸ் வெளியிட்டது. ஆனால் 1926ல் மான்ட்கோமரி வார்ட் சூப்பர் மார்க்கெட்டின் கேட்லாக்களில் இடம்பெறும் வரை இது புகழ் பெறவில்லை.

அக்காலத்தில் பொதுவாய் பெண்கள் கடைகளில் நாப்கின்களை கேட்டு வாங்க சங்கோஜப்பட்டனர். கிம்பர்லி க்ளார்க் நிறுவனத்தார் கோடெக்ஸ் விற்பனையை அதிகரிக்க ஒரு யுக்தியைக் கையாண்டனர். கடைகளில் பணம் போட ஒரு தனிப் பெட்டி வைக்கப் பட்டிருக்கும். அதில் பணத்தைப் போட்டு விட்டு நாப்கின்களை எடுத்துச் செல்லலாம். கடைக்காரர்களிடம் எதுவும் பேச வேண்டியது இல்லை.

1927ல் மாடெஸ் ப்ராண்டை கோடெக்ஸுக்குப் போட்டியாக இறக்கியது ஜான்சன் & ஜான்சன். அக்காலத்தில் பேண்டேஜ் விற்பனையில் ஈடுபட்டிருந்த நிறுவனங்களில் கணிசமானவை சானிடரி பேட் வியாபாரத்திலும் குதித்திருப்பதைக் கவனியுங்கள்!

1929ன் ஜான்சன் & ஜான்சனின் மாடெஸ் விளம்பரங்கள்
1929ல் டாக்டர் ஏர்லி ஹாஸ் என்பவர் முதல் நவீன டாம்பனை உருவாக்கினார். தன் மனைவி மற்றும் பெண் நோயாளிகள் தடிமனான நாப்கின்களைப் பயன் படுத்தும் சங்கடத்தைப் போக்க இதை உருவாக்கி பேடண்ட் வாங்கினார். 1931ல் இவை அமெரிக்காவில் சந்தைக்கு வந்தன. 1933ல் கெர்ட்ரூட் டென்ரிச் இந்தப் பேடண்ட்டை 32,000 டாலருக்கு வாங்கி டாம்பெக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.

டாம்பன்கள் வந்த புதிதில் அது பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருந்தது. டாம்பன்களை உடலுக்குள் வைப்பதால் அது பாலியல் உணர்வுகளைத் தூண்டும், கன்னித்தன்மையை இழக்கச் செய்யும் எனப் பரவலாகப் பேசினார்கள். டாக்டர் ராபர்ட் டிக்கின்ஸன் நாப்கின்களை விட டாம்பன்கள் பயன்படுத்துவதே சிறந்தது என்று ஒரு கட்டுரை எழுதினார். 1945ல் அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் சான்றளித்த பின்பு தான் பெண்கள் இதை நம்பிப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

1940களில் அச்சு ஊடகங்களில் செய்யப்பட்ட மாடஸ் ப்ராண்டின் விளம்பரங்கள் சானிடரி நாப்கின்களை ஒரு கவர்ச்சிகரமான ஃபேஷன் ஐட்டமாக ஏற்றி வைத்தது. 1950களில் அப்ளிக்கேட்டர் இல்லாத, வழுவழு முனை கொண்ட, பர்செட்ஸ் என்ற டாம்பன்கள் விற்பனைக்கு வந்தன. பெண்கள் டாம்பன் போட்டு தம் பர்ஸ்களில் மறைத்துக் கொள்ள ஏதுவாய் டாம்பன் பெட்டிகளும் விலைக்குக் கிடைத்தன.

1937ல் லெனோவா சால்மெர்ஸ் என்பவர் முதல் மறுபயன்பாடு மென்ஸ்டுரல் கப்புக்கான பேடண்ட்டைப் பதிவு செய்தார். ஆனால் டிஸ்போஸிபள் நாப்கின்கள் வந்து விட்ட காலத்தில் அதைப் பெண்கள் பெரிதாய்க் கண்டுகொள்ளவில்லை. 1959ல் மென்ஸ்டுரல் கப்களை பிரம்மாண்ட விளம்பரத்துடன் டாஸெட் நிறுவனம் மறுஅறிமுகம் செய்தது. இம்முறையும் பெண்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.

1969ல் ஸ்டேஃப்ரீ மினிபேட்கள் விற்பனைக்கு வந்தன. ஒட்டக்கூடிய ஸ்ட்ரிப்கள் வைத்த முதல் நாப்கின் இது. பெல்ட், க்ளிப், பின் பயன்படுத்திய நாப்கின்களுக்கு இது வலுவான சாவு மணி அடித்தது. 1970களில் ஹிப்பி கலாசாரம் காரணமாக சூழலியல் பார்வையுடன் துவைத்துப் பயன்படுத்தும் நாப்கின்கள் மறுபடி வந்தன.

1972ல் கிம்பர்லி க்ளார்க்காரர்களும் ந்யூ ஃப்ரீடம் பேட்களின் மூலம் பெல்ட் இல்லா நாப்கின் டிசைனுள் நுழைந்தனர். அதே ஆண்டில் தேசிய ஒளிபரப்புக் கூட்டமைப்பு டிவிக்களில் நாப்கின் விளம்பரங்களை ஒளிபரப்ப இருந்த தடையை விலக்கியது.

1975ல் ப்ராக்டர் & கேம்பிள் "நாங்கள் கவலைகளைக் கூட உறிஞ்சுவோம்" என்ற விளம்பரத்துடன் ரிலே டாம்பன்களை அறிமுகப்படுத்தியது. 70களின் பிற்பகுதியில் டாம்பன் பயன்படுத்துவதால் டாக்ஸிக் ஷாக் ஸின்ட்ரோம் என்ற நோய்த்தொற்று வருவதாக சொல்லப்பட்டதால் 1980ல் ரிலே டாம்பன் விலக்கிக் கொள்ளப்பட்டது.

1987ல் கீப்பர் என்ற மென்ஸ்டுரல் கப் விற்பனைக்கு வந்தது. இது ஓரளவு வெற்றி பெற்று இப்போது வரையிலும் சந்தையில் இருந்து வருகிறது. 1990களில் ஃப்ரெஷ் & ஃபிட் பேடட்ஸ் என்ற மிகச்சிறிய நாப்கின்கள் அறிமுகம் ஆனது. ஆரம்பத்தில் பெண்களை ஈர்த்ததாகச் சொல்லப் பட்டாலும் பின் காணாமல் போய் விட்டது.

வாஷிங்டன் புறநகர் பகுதியில் மாதவிலக்கு அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. காலந்தோறும் மாதவிலக்குக் காலத்தில் பெண்கள் பயன்படுத்தி வந்த பல்வேறு விதமான சானிடரி நாப்கின், டாம்பன், மென்ஸ்டுரல் கப்களை இங்கே காணலாம்.

இந்தியாவில் கேர்ஃப்ரி, விஸ்பர், ஸ்டேஃப்ரீ, கோடெக்ஸ் ஆகியன பிரபலமான நாப்கின் பிராண்டுகள். டாம்பன் அறிமுகம் இந்தியாவிலும் தோல்வியே கண்டது.

மாதவிலக்கின் போது சுகாதாரமான முறையில் சானிடரி பேட் பயன்படுத்துவதன் மூலம் கர்ப்பப்பை புற்றுநோயைத் தவிர்க்கலாம் என 64% மகப்பேறு மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஆனால் சில மூன்றாம் உலகநாடுகளில் இன்றும் மண்ணையும், சேற்றையும் மாதவிலக்கு உறிஞ்சிகளாகப் பயன்படுத்தும் ஏழைப் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் கையிலிருக்கும் காசுக்கு சுகாதாரம் என்பது எட்டாக்கனி. இதனால் அப்பெண்கள் பல தொற்று நோய்களில் உழல்கிறார்கள்.

சிக்கன நேப்கின்கள் தயாரிக்கும் கோவை முருகானந்தம்
கோவையைச் சேர்ந்த ஏ.முருகானந்தம் என்பவர் மூன்றில் ஒரு பங்கு செலவில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்து பேடண்ட் வாங்கியுள்ளார். இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகமும் சலுகை விலையில் கிராமப்புற இளம் பெண்களுக்கு நாப்கின் வழங்கும் திட்டத்துக்கு ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கடந்த 2011 தமிழக சட்டசபைத் தேர்தலில் பிஜேபி பெண்களுக்கு இலவச நாப்கின் என்பதை தேர்தல் வாக்குறுதியாகக் குறிப்பிட்டது.

மாதவிலக்கு பெண்மையின் கம்பீரம். சானிடரி நாப்கின்கள் அதன் அடையாளம்.

*

Stats சவீதா

• இந்தியாவில் 35.5 கோடி பெண்கள் மாதவிலக்கு சுழற்சியில் உள்ளனர்.
• இவர்களில் 12% பேர் மட்டுமே சானிடரி நாப்கின் பயன்படுத்துகின்றனர்.
• 68% இந்தியப் பெண்கள் சானிடரி நாப்கின் வாங்கும் வசதியுடன் இல்லை.
• 70% இனப்பெருக்க வழி நோய்கள் சுத்தமற்ற மாதவிலக்கினால் வருகிறது.
• 23% இந்தியப் பெண்கள் பூப்படைந்தவுடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.

***

(2012ல் குங்குமம் இதழில் வெளியானது)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 07, 2018 01:58

January 14, 2018

ஞாநி: அஞ்சலி


எழுத்தாளர், பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர் ஞாநி இன்று அதிகாலை மரணமுற்றார். மதிப்பிற்குரியோருக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த முடியாத தொலைவில் தான் லௌகீக வாழ்வ‌ழுத்தங்கள் என்னை வைத்திருக்கின்றன.


சரியாய் மூன்றாண்டுகள் முன் இதே நாளில் தான் - அது ஒரு தைப் பொங்கல் தினம் - பத்திரிக்கையாளர் ஞாநி முதல் இதழை வெளியிட்டு 'தமிழ்' மின்னிதழைத் துவக்கி வைத்தார். அப்போது அது குறித்து "என் மகனை விட ஒரு மாதம் மட்டுமே மூத்தவரான சரவணகார்த்திகேயன் தமிழ் எழுத்துலகில் துடிப்போடும் செறிவாகவும் இயங்கிவருவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. அவரை ஆசிரியராகக் கொண்டிருக்கும் தமிழ் இதழ், மாற்பட்ட கருத்துக்களை ஆழமாகவும் நாகரிகமாகவும் விவாதிக்கும் களமாகவும், வெவ்வேறு ரசனைகளை மதிக்கும் படைப்புக்களுக்கான இடமாகவும் அதே சமயம் தன் வாசகர் யார் என்ற‌ புரிதலோடு அவர்களை நோக்கி இயங்குவதாகவும் செயல்பட்டு வெற்றி காண வாழ்த்துகிறேன்." என்று சொல்லி இருந்தார். பேரன்புடன் எழுதப்பட்ட வரிகளாக அவை என்னை நெகிழ்த்தின.

ஞாநி என் அரசியல் எழுத்துக்களுக்கு ஆசான். லட்சக்கணக்கானோருக்குப் போல் ஆனந்த விகடன் மற்றும் குமுதத்தில் வெளியான‌ 'ஓ பக்கங்கள்' தொடரில் தான் அவர் எனக்கு அறிமுகம். குறைந்தது பதினைந்து வருடங்களாக அவரது வாசகன் நான். சமநிலை குலையாத, அதே சமயம் கறாரான அரசியல் விமர்சனங்கள் எழுதுவது தமிழ்ச் சூழலில் அரிது. ஞாநி சமரசங்கள் ஏதுமின்றி அதைத் தொடர்ச்சியாய்ச் செய்த சாதனைக்காரர். நான் எழுத வந்த ஆரம்ப ஆண்டுகளில் பல அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளில் என் நிலைப்பாடுகளை உருவாக்கிக் கொள்ள அவர் எழுத்துக்கள் உதவிகரமாய் இருந்தன. உதாரணமாய் இன்று நோட்டா எனப் பரவலாய் அறியப்பட்ட விஷயத்தை இரு தசாப்தம் முன்பே 49-ஓ என்ற பெயரில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் அவரே. 2009 பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது அது குறித்து நான் ஓர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பதிவு எழுத அவரே தூண்டுதல். 'ஓ பக்கங்கள்' தொகுதிகளை தமிழின் சிறந்த நூறு புத்தகங்களுள் ஒன்றாகப் பத்தாண்டுகள் முன் குறிப்பிட்டிருந்தேன். தவிப்பு முதலான அவரது புனைவுகளை வாசித்ததில்லை. அய்யா முதலான அவர் அரங்கேற்றிய‌ மேடை நாடகங்களையும் கண்டதில்லை. அறிந்தும் அறியாமலும் போன்ற பிற முயற்சிகளையும் படித்ததில்லை. அதனால் கலாப்பூர்வமாய் என்னால் அவரை மதிப்பிட முடியாது. ஆனால் சில தடுமாற்றங்கள் தாண்டியும் ஓர் அரசியல் விமர்சகராய் அவரது இடம் தமிழகத்தில் அசைக்க முடியாதது.

அவருடைய கருத்துக்களின் வீச்சு விஸ்தாரமானது. பல ஆண்டுகளாக குறிப்பிடத்தகுந்த எல்லா அரசியல் நிகழ்வுகளிலும் தன் நிலைப்பாட்டை வலிமையாகப் பதிவு செய்து வருகிறார். அது ஒரு முக்கியமான சமூகப் பங்களிப்பு. சமகாலத்து அரசியல் விமர்சகர்களில் அவரளவுக்கு வெகுஜனத்தைச் சென்றடைந்த வேறு ஒருவர் இல்லை என்பேன். ஐம்பதுகளில் பிறந்த பிராமணர் என்ற போதிலும் எந்தச் செயலிலும் பார்ப்பனியத்தை வெளிப்படுத்தியவரோ இந்துத்துவத்தை ஆதரித்தவரோ இல்லை. ஆரம்ப காலம் முதல் பிஜேபி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளை விமர்சித்து வருகிறார் என்ற அடிப்படையில் ஓர் ஒரிஜினல் செக்யூலர் ஆசாமியாக அவர் மீது பெருத்த மரியாதை உண்டு. அவரது நிலைப்பாடுகளில் பிசகுகள் இருக்கலாம். ஆனால் ஒருபோதும் அவர் தன் நேர்மையைக் கைவிட்டதில்லை. ஆன்மசுத்தியுடன் தான் நம்பும் சித்தாந்தங்களின் அடிப்படையில் எந்த விஷயத்திலும் தர்க்கரீதியாக சமரசமின்றி தன் கருத்தைப் பதிவு செய்தவர்.

அவருடைய 'ஏன் நான் கலைஞர் கருணாநிதியை எதிர்க்கிறேன்?' என்ற கட்டுரை எனக்குப் பிடித்தமான ஒன்று. 'தீம்தரிகிட' வழியாக அவர் வெளியிட்ட பாரதியின் 'அன்பென்று கொட்டு முரசே!' என்ற கோட்டோவிய சுவரொட்டி நெடுநாட்கள் என் அறையை அலங்கரித்திருந்தது. சென்னை புத்தகக் காட்சிகளில் பலமுறை அவரை நேரில் பார்த்தும் என் தயக்க சுபாவத்தினால் அவருடன் பேசாமல் விலகி நடந்திருக்கிறேன். அவரது ரசனை சார் நிலைப்பாடுகளிலிருந்து orthogonal-ஆக விலகி இருந்தாலும் என் முதல் கவிதைத் தொகுதியான 'பரத்தை கூற்று' வெளியான போது அவருக்கு அனுப்பி இருந்தேன்.

அரசியலிலுமே கூட‌ நான் அவரோடு முரண்படும் புள்ளிகள் உண்டு தான். ஆனாலும் அவற்றில் ஏன் அவர் எதிர்நிலைப்பாடு எடுத்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது முக்கியமானதாய் இருந்தது. அவ்வகையில் ஒரு கட்டத்தில் அவரை ஓர் இணைப் பயணியாகவே பார்க்க முடிந்தது. "என் பார்வைகளை உங்கள் முன் வைப்பது என் உரிமை. அவற்றை நீங்கள் ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமை. ஏற்பு குறித்த மகிழ்ச்சி, நிராகரிப்பு பற்றிய வருத்தம் ஆகிய மன நிலைகளை இப்போது நான் கடந்து விட்டேன். பகிர்தல் மட்டுமே என் இன்றைய மனநிலை." என்று பத்தாண்டுகள் முன் தன் இணையதளத்தைத் துவங்கிய போது சொல்லி இருந்தார். இப்போதும் அத்தகைய மனநிலையை அடைவதே என் இலக்காக இருக்கிறது. அப்படியான ஒரு பத்திரிக்கையாளர் கையால் தான் என் மின்னிதழ் துவக்கப்பட வேண்டும் என்பதால் தான் அவரை முதல் இதழை அவரை வெளியிடக் கேட்டுக் கொண்டேன். என் மகனுக்கு ஞானி எனப் பெயர் சூட்ட அவர் மீதான மதிப்பும் முக்கியக் காரணம். ஒரு கட்டத்தில் என் மனதுக்கு அத்தனை நெருக்கமானவராக அவர் ஆகி விட்டிருந்தார்.

கோலம் திரைப்பட இயக்கத்தை அவர் துவக்கிய போது பணம் செலுத்தி இணைந்தேன். அது குறித்த சில கேள்விகளை எழுப்பினேன். அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. எஸ்ராவின் புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினியின் படம் அவரை விடப் பெரிதாகப் போட்டது, ஷ்ருதி ஹாசன் தோழிகளுடன் மதுவருந்திக் கொண்டிருக்கும் படம் பற்றியது என அவரோடு நிறையச் சந்தர்ப்பங்களில் நீண்ட விவாதங்கள் நிகழ்த்தி இருக்கிறேன். விவாதங்களின் போது சம்மந்தமற்று திசை திருப்புவதோ, தனி மனிதத் தாக்குதல்களில் ஈடுபடுவதோ அவரிடம் காணவே முடியாது. அது மிக முக்கியமான பாடம்.

சிறுநீரகம் பழுதடைந்து டயலாலிசிஸ் செய்து உயிர் வாழத் துவங்கியதிலிருந்து அவர் தன் ஆயுள் பற்றித் தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டே இருந்தார் என்பதை அவரது எழுத்துக்களிலிருந்து உணர்ந்திருந்தேன். சுற்றி நிகழும் அவர் பழகிய, அவர் வயதொத்தவர்களின் மரணத்திற்கு அவர் எதிர்வினையாற்றிய போதெல்லாம் இது குறித்த‌ பதற்றம் அதிகரித்ததாய்ப் பட்டது. அதைத் தன் அதீதத் தன்னம்பிக்கை மூலம் எதிர்கொண்டிருந்தார். எவரது பிறந்த நாள் என்றாலும் "மேலும் வளம், மேலும் மகிழ்ச்சி , மேலும் அமைதி, மேலும் படைப்பாற்றல் பெருகிட வாழ்த்துகள்" என்று தான் வாழ்த்துவார் என்பதை யோசிக்கும் போது அவரது அந்த‌ மனநிலை எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.

2014ல் ஆலந்தூர் சட்டமன்றத் தேர்தலில் அவர் நின்றது கூட அதன் பக்கவிளைவாகவே பார்க்கிறேன். அவருக்குத் தான் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் குறித்து திருப்தியின்மை இருந்ததாகப்படுகிறது. நேரடியாக, அதிகாரம் கொண்ட‌ மக்கள் பணியில் ஈடுபட்டாலாவது ஏதாவது செய்ய முடியுமா என இறங்கிப் பார்த்தார் என்றே புரிந்து கொள்கிறேன். தினமலர் பட்டம் இதழில் பங்கேற்கத் துவங்கியதும் அதையொட்டியே எனக் கருதுகிறேன். அதாவது அரசியல் தெளிவற்ற இந்தத் தலைமுறை போய்த் தொலையட்டும், அடுத்த தலைமுறையையேனும் அது விளையும் போதே வலுவான குடிமக்களாக ஆக்க முடியுமா என விழைந்தார். தன் பணிகளின் வெற்றி குறித்த ஆதங்கம் தொடர்ந்து அவருக்கு இருந்தது.

தேர்தல் நிதியளித்தது போக‌ ஆலந்தூரில் அவரை ஆதரித்து விரிவாய் ஒரு கட்டுரை எழுதினேன். 'என் சாதிக்காரருக்கு ஓட்டு போடுங்கள்!' என்பது அதன் தலைப்பு! ஜெயித்தால் ஞாநியால் தொகுதிக்கான நலப்பணிகளைத் திறம்பட முன்னெடுக்க முடியும் என நினைத்தேன். சட்டமன்றத்தில் அவரது குரல் தனிப்பட்டு ஒலிக்கும், சமூக வலைதளங்களில் முடங்கி விட்ட கலகக் குரல்கள் அரசாங்கத்திடம் கம்பீரமாய் ஒலிக்க இது ஒரு வாய்ப்பு என்பதாக என் எதிர்பார்ப்பு இருந்தது. அக்கட்டுரையை இப்படி முடித்திருந்தேன்: "அவர் தன் உடல் நலத்தில் மிகுந்த அக்கறையோடு இருக்க வேண்டும். தன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதிலும் சமரசம் கூடாது. அரசியலில் ஜெயிப்பது தோற்பது தாண்டி நெடிய ஆயுளோடு பல்லாண்டுகள் அவர் ஓர் எழுத்தாளராக, சமூக அரசியல் விமர்சகராக உற்சாகமாகப் பங்காற்ற வேண்டும்."

எந்தக் கட்சியோடும் அமைப்போடும் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற என் சுயக்கட்டுப்பாடு தாண்டி ஆலந்தூர் தொகுதி பூத்தில் ஞாநியின் போலிங் ஏஜெண்டாக பணி செய்ய விரும்பி அவரைக் கேட்டேன். பூத் ஏஜண்ட்டாக அந்தந்த பூத்தில் வாக்காளர்களாக இருப்போர் மட்டுமே பணி புரியலாம் என்பது தேர்தல் விதி என்று பதிலளித்தார். நான் பூத் ஏஜெண்ட்களுக்கான தேர்தல் ஆணையத்தின் கையேட்டிலிருந்து மேற்கோள் காட்டி அப்படி அவசியமில்லை என்பதைச் சுட்டினேன். ஏனோ அவருக்கு அதைச் செய்ய‌ தயக்கங்கள் இருந்தன. பூத்துக்கு வெளியே 200 மீட்டர் தொலைவில் வேட்பாளர்கள் அமைக்கும் உதவி பூத்களில் யாரும் பணியாற்றலாம் என்று சொல்லி அதைச் சிபாரிசு செய்தார். பிறகு ஏதும் சரிவராததால் நான் போகவில்லை. 2016 தேர்தலில் அவர் மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்தது தான் அவரது இயல்பான நிலைப்பாடு. ஆனால் அதன் பின்னிருந்த வைகோவின் சதியை அவரும் கூட உணராதது தான் வருத்தம்.

சமீப ஆண்டுகளில் என் மீது அவருக்கு அதிருப்தி இருந்தது. குறிப்பாய்ப் பெண்கள் பற்றிய என் சில நிலைத்தகவல்களைக் கண்டித்திருந்தார். அதன் உச்சமாய் "பட்டாசு என்பது காசைக் கரியாக்குவதெனில் உணவு என்பது பணத்தைப் பீயாக்குவது தானே!" என்ற என் நிலைத் தகவலுக்கு "உணவு பணத்தைப் பீயாக்குவது என்று சிந்திக்க ஒரு பீ மனம்வேண்டும். உணவு தான் உயிர்வாழச் செய்கிறது என்ற அடிப்படை அறிவியல் உண்மையை புரிந்துகொள்ளாத மனங்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியில் பட்டினியில் சாகட்டும்." எனக் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தார். உண்ட உணவு மறுதினம் மலமாய்ப் போவதால் போட்ட காசு வீண் என்று நினைப்பதில் அர்த்தமில்லை. இடையில் உடல் அதிலிருந்து சக்தியை உறிஞ்சிக் கொள்கிறது, சுவையை அனுபவிக்கிறது. அது மாதிரி தான் பட்டாசுகள் காசைக் கரியாக்கும் விஷயமும். கரியாகும் முன் பட்டாசு புலன்களை - கண், காது, மனம் - மகிழ்விக்கிறது என்பது தான் நான் உத்தேசித்த பொருள். "பட்டத்திற்கு நன்றி. ஆனால் நான் சொல்வது வேறு. சொல்பவன் மீது அடிப்படையாய் ஒரு நம்பிக்கை இருந்தால் விளக்கமின்றி அவற்றை நீங்களே புரிந்து கொள்ள முடியும். அப்படி இல்லாதவர்களுக்காய் இரு பொழிப்புரைகள் எழுதி உள்ளேன். அப்புறம் புரிதல் அவரவர் விருப்பம் தான்." என்று சொல்லி இருந்தேன். அவரது எதிர்வினை கசப்பூட்டியது என்பது உண்மை தான்.

இரு மாதங்கள் முன் கிண்டிலில் வெளியான 'கமல் ஹாசனின் அரசியல்' என்ற அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு நூலை அவருக்கே சமர்ப்பித்திருந்தேன். அது குறித்து அவருக்கும் தெரியப்படுத்தினேன். அப்போது அவர் உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்தார். அவர் அதற்குப் பதிலளிக்கவில்லை. அது என் மீதான கோபமா அல்லது நிஜமாகவே கவனிக்கவில்லையா என்றறியேன். இனி ஒருபோதும் அறிந்து கொள்ள முடியாது என்பது தான் சோகம்.

சிஎஸ்கே என்ற எழுத்தாளனை, கருத்தாளனை திட்டவும், நிராகரிக்கவும் வெறுக்கவும் ஞாநி அவர்களால் முடியலாம். ஆனால் சி.சரவணகார்த்திகேயன் என்ற‌ அவரது வாசகனை சீடனை அவரால் மறுதலிக்க முடியாது என நம்புகிறேன்.

எல்லாவற்றுக்கும் நன்றி, அய்யா! உங்கள் பணியைத் தொடர உங்கள் மாணாக்கர்கள் முயல்வோம். சென்று வாருங்கள்.

***
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2018 21:18

January 13, 2018

ஆப்பிளுக்கு முன்(னுரை)

அசத்திய சோதனை
முதலிலேயே ஒரு விஷயத்தைத் தெளிவாக, அழுத்தமாகச் சொல்லி விடுகிறேன். இது வரலாற்று நூல் அல்ல; புனைவு. வரலாறு சார்ந்த புனைவு. இதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை, எவ்வளவு இரண்டுக்கும் இடைப்பட்ட குழப்பங்கள் என்பது தொழில் ரகசியம். வரலாற்று ஆர்வமும் வாசிப்புத் திராணியும் கொண்டோர் சம்மந்தப்பட்ட தரவுகளைத் தேடித் தெரிந்து கொள்ளலாம். (அப்படியானவர்களுக்காக குறிப்புதவி நூற்பட்டியல் ஒன்றையும் புத்தகத்தின் கடைசியில் தந்திருக்கிறேன்.)


என் தந்தை வழித் தாத்தா வே. இராசப்பன் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்பு வழக்கில் பெல்லாரி சிறை சென்றவர். குளத்தேரியில் தண்டவாளத்தின் மரையைக் கழற்றி ப்ரிட்டிஷ் சரக்கு ரயிலைக் குளத்தில் கவிழ்த்தவர்களுள் அவரும் ஒருவர். காந்தி இப்போராட்டத்தை ஏற்பாரா தெரியாது, ஆனால் என் தாத்தா காந்தியின் மீது பெரும் பற்றுக்கொண்டவர்.

தாத்தா மாதந்தவறாமல் தியாகிகள் ஓய்வூதியம் பெற்றவர். வருடா வருடம் சுதந்திர தினத்திற்கு வீட்டுக் கூரையில் கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து, பதிலாய் கோவை மாவட்ட ஆட்சியரிடம் பொன்னாடை பெற்றுக் கொண்டிருந்தவர். எல்லாத் தேர்தல்களிலும் மாறாமல் காங்கிரஸுக்கே வாக்களித்தவர். காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ் மரணங்களுக்குக் கண்ணீர் மல்கியவர். என்னிடம் இருக்கும் ‘சத்திய சோதனை’ நூற்பிரதி அவருக்கு ஏதோ ஒரு சுதந்திர தினத்தின் போது அளிக்கப்பட்டது தான்.

காந்தி பற்றிய முதல் சித்திரம் அவர் வழியாகவே என்னை வந்தடைந்தது. ஆனால் அடுத்த தலைமுறையில் திராவிடக் குரல்கள் வலுத்து ஒலித்த எங்கள் குடும்பத்தில் சிறுவனான எனக்கு காந்தி பொருட்படுத்தப்பட வேண்டியவராகத் தோன்றவில்லை.

இந்தியாவின் எந்தவொரு பள்ளி மாணவனையும் போல் பால்யத்தில் காந்தி என்பவர் ஒரு மஹாத்மா என்பதில் தொடங்கி, காந்தி போலியானவர், நேதாஜியே அசலான சுதந்திரப் போராட்டத் தலைவர் என்று எண்ணும் பதின்மங்களைக் கடந்து தான் நானும் வந்தேன். நாஜி வதைமுகாம்கள் பற்றி அறிந்திடாத ஒரு கட்டத்தில் ஹிட்லர் கூட வசீகரித்திருக்கிறார் (அப்போது தமிழ் நாடு மெட்ரிகுலேஷன் பத்தாம் வகுப்புப் பாடத் திட்டத்தில் ஹிட்லர் பற்றி ஒன்றரைப் பக்கச் சுருக்கமான வரலாறு இருந்தது).

பின் கமல் ஹாசனின் ‘ஹே ராம்’ திரைப்படம் ஒரு முக்கியமான திறப்பு. அதைத் தொடர்ந்து தான் காந்தியின் சுயசரிதையான ‘சத்திய சோதனை’ நூலை வாசித்தேன். (‘உண்மைகளுடனான என் பரிசோதனைகளின் கதை’ என்ற தலைப்பே The Story of My Experiments with Truth என்பதற்கான சரியான மொழிபெயர்ப்பு. இந்தி முதலான பிற இந்திய மொழிகளில் அத்தகைய தலைப்பில் தான் அந்நூல் வெளியாகிறது. ஆனால் நம் ஆட்களின் குறுகத் தறிக்கும் சுருக்க வெறி ‘சத்திய சோதனை’ ஆக்கி விட்டது.)

அப்புறம் காலச்சுவடு, தீராநதி, உயிர்மை முதலான இலக்கியச் சிற்றிதழ்களில் வந்த காந்தி குறித்த சில கட்டுரைகளும் விசாலமான பார்வையைப் பெற உதவின. இவை எல்லாவற்றுக்கும் மேல் ஜெயமோகன் காந்தி குறித்து தன் தளத்தில் செய்த தொடர் விவாதங்கள் (பிற்பாடு இவை ‘இன்றைய காந்தி’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டன). காந்தியை நான் முழுக்க மறுஅறிமுகம் செய்து கொண்டது அவற்றின் வழியாகவே.

காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஏற்கனவே நான் அரசல் புரசலாகக் கேள்வியுற்றிருந்தாலும் மேற்சொன்ன விவாதத்தில் இடம்பெற்ற ‘காந்தியும் காமமும்’ என்ற தலைப்பிலான நான்கு கட்டுரைகள் தாம் அது பற்றிய விரிந்த தகவல்களையும் கருத்துக்களையும் அளித்தன. அங்கே இந்நாவலுக்கான விதை முதலில் விழுந்தது.

ஆனால் முளைத்துக் கிளைத்து விருட்சமாக சுமார் எட்டாண்டுகள் பிடித்திருக்கிறது.

காந்தி என்பவர் மஹாத்மா என்ற பிம்பத்தைச் சிதைக்கும் நோக்கில் இந்த நாவல் எழுதப்படவில்லை. இது அதைச் செய்யவும் இல்லை. காந்தியே இவ்விஷயங்களை மறைத்தாரில்லை. அவர் இன்று இருந்திருந்தால் இவற்றைப் பற்றி ஆரோக்கியமான விவாதங்கள் நடக்க வேண்டுமென விரும்பி இருப்பார். ஜெயமோகன் காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகளை அவரது கிறுக்குத்தனத்தில் ஒரு பகுதி என்கிறார். நானும் இவற்றை மஹாத்மாவின் முகங்களில் ஒன்றாகவே பாவிக்கிறேன். அவரே போதித்த சத்தியத்தின் ஒளியில் கண்கள் கூசாமல் இவற்றைப் பார்க்க முயல்கிறேன்.

வரலாறு சொல்லாத எதையும் இதில் நான் எழுதிடவில்லை. அதனால் காந்தியை அவதூறு செய்து விட்டேன் எனக் கோபமாய்க் காந்தியவாதிகளும், காந்தியைத் தோலுரித்து விட்டதாய் மகிழ்வுடன் கோட்ஸேவாதிகளும் கிளம்பாதிருப்பீர்களாக!

காந்தியின் செயல்களுடன், கருத்துக்களுடன் எனக்குக் கணிசமான முரண்பாடுகள் உண்டு. ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி இந்த நாட்டின் பிரஜையாக அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் அவரது பங்கு மகத்தானது. இன்று நாம் நிகழ்த்தும் வாழ்க்கையில் ஆங்காங்கே அவரது கொடை இருக்கிறது. சந்தேகமே இன்றி அவர் நம் தேசப் பிதா தான். குறிப்பாய் இன்றைய சகிப்பின்மை நிறைந்த சூழலில் காந்தி நம் நாட்டிற்கு அவசியப்படும் சிந்தாந்தவாதி.

TIME இதழ் 20ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் என்ற தேர்வில் ஐன்ஸ்டைனுக்கும், ரூஸ்வெல்டிற்கும் பின் மூன்றாவதாக காந்தியைப் பட்டியலிட்டிருந்தது (December 31, 1999). ஆனால் மொத்த உலக வரலாறும் இதுவரை கண்ட மனிதருள் அதிசிறந்தவர் காந்தி என நான் அழுத்தமாக நம்புகிறேன். அதனால் தான் அவர் மஹாத்மா. “My life is my message” என்று இப்பிரபஞ்சத்தில் வேறெந்தக் கொம்பன் சொல்லி விட முடியும்!

*

இது என் முதல் நாவல். நான் நாவல் எழுத வேண்டும் என என் ஆப்தசினேகிதன் இரா. இராஜராஜன் பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அது போக, கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று முக்கியஸ்தர்கள் என்னிடம் நாவல் எழுதுங்கள் என்று சொல்லி விட்டனர். ஓராண்டு முன் ‘இறுதி இரவு’ வெளியீட்டு விழாவில் பேசிக் கொண்டிருக்கையில் “சிறுகதைகள் நல்லது தான். ஆனால் இது நாவல்களின் காலம்” என்று சொல்லி ஹரன் பிரசன்னா எழுதச் சொன்னார். ஆறு மாதங்களுக்கு முன் மனுஷ்ய புத்திரனுடன் தொலைபேசியில் உயிர்மை கட்டுரை ஒன்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது ஆண்டு இறுதிக்குள் ஒரு நாவல் எழுதச் சொன்னார். “மனதில் ஒரு knot இருக்கிறது. எழுதும் மனநிலையும் நேரமும் வாய்க்கவில்லை” என்று சொன்னேன். “அதெல்லாம் சாக்குப்போக்கு, எழுத ஆரம்பித்து விடுங்கள்” என்றார். சுமார் ஒரு மாதம் முன் பா. ராகவன் என் பதிவு எதையோ வாசித்து விட்டு ஃபேஸ்புக் சாட்டில் நாவல் எழுதுமாறு சொன்னார். பின் தொலைபேசியிலும் நீண்ட நேரம் அது பற்றிப் பேசினார். பிறகு அவ்வப்போது விசாரிக்கவும் செய்தார். அவர் அன்று பேசியிராவிடில் இந்நாவல் இப்போது தயாராகி இராது என நினைக்கிறேன்.

என் முதல் நூலை சுஜாதாவுக்கும், முதல் கவிதை நூலை வைரமுத்துவுக்கும், முதல் சிறுகதைத் தொகுதியை சுந்தர ராமசாமிக்கும், அப்புறம் முதல் நாவலை ஜெயமோகனுக்கும் சமர்ப்பணம் செய்வது என பத்தாண்டுகள் முன் எண்ணிக் கொண்டேன். அவற்றில் இப்போது கடைசிக் கடமையையும் ஆற்றி விட்டேன்.

சொன்ன தேதிக்கு ஒரு வாரம் கழித்துத் தந்தாலும் சரியான நேரத்துக்கு நாவலை கொண்டு வரும் மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும், புத்தகத்தை நேர்த்தியாக ஆக்கி வெளியிடும் செல்வி உள்ளிட்ட உயிர்மைக்காரர்களுக்கும் என் அன்பும் நன்றியும்.

சுமார் ஒரு மாதம் பிடித்தது இந்த நாவலை எழுதித் தீர்க்க. இந்தக் காலகட்டத்தில் எனக்குப் பக்கபலமாய் இருந்த என் அம்மா சி. தெய்வாத்தாள், மனைவி ந. பார்வதி யமுனா, மகன்கள் ச. ஞானி மற்றும் ச. போதியை எண்ணிக் கொள்கிறேன். அவர்கள் என்னைச் சகித்து வாழாவிடில் நான் இன்று எழுத்தாளனே ஆகியிருக்க முடியாது.

*

புடவைத் தலைப்புகள் போல் புத்தகத் தலைப்புகளுக்கும் எனக்கும் ஒத்து வராது.

நெடுங்காலமாய் இந்நாவலுக்கு ‘அசத்திய சோதனை’ என்ற தலைப்பு தான் மனதில் இருந்தது – The Story of My Experiments with Lies என்பதைக் குறிக்கும் பொருளில். தன் அந்திமக் காலத்தில் சுயசரிதையின் இரண்டாம் பகுதியை காந்தி எழுதி இருந்தால் காமம் பொய் என்பதால் அப்பெயர் வைத்திருக்கக்கூடும் என்ற தொனியில். அப்புறம் வின்ஸ்டன் சர்ச்சிலின் வன்மக் கேலியையும் (Half-naked & Fakir) அதற்கு காந்தியின் பதிலடிக் கடிதத்தையும் முன்னிட்டு ‘நிர்வாணப் பக்கிரி’ எனத் தலைப்பிட்டேன். பின், ‘நான்கு கால்கள்’ என்ற பொருத்தமான தலைப்பொன்றையும் பரிசீலித்து மீண்டேன்.

பிறகு இறுதியாய் உறுதி செய்தது தான் ‘ஆப்பிளுக்கு முன்’. மானுட வரலாற்றை நாட்காட்டித் தேவைக்காக கிறிஸ்துவுக்கு முன், பின் எனப் பிரித்திருக்கிறோம். உண்மையில் அதை ஆப்பிளுக்கு முன், ஆப்பிளுக்குப் பின் என்று தான் பிரித்திருக்க வேண்டும். என்ன ஒன்று, முதல் பிரிவில் ஒற்றை நாள் மட்டும் தான் இருக்கும். மீத நாட்கள் எல்லாம் அடுத்த பிரிவில் சேரும். அந்த ஒரு நாளில் ஆதாமும் (அப்போது பெயரிடப் படாத) ஏவாளும் தம் நிர்வாணம் பற்றிய ப்ரக்ஞையற்று இருந்தனர். காந்தி தன் பிரம்மச்சரியப் பரிசோதனைகளில் அடைய முயன்றது அந்த நிலையைத் தான்.

மாணவப் பருவத்திருத்திருந்தே ஆங்கிலக் கவிதைகளின் Biblical Allusions வசீகரித்தன (உதாரணமாய் குருத்து ஞாயிறை ஒட்டிய ஜிகே செஸ்டர்டனின் The Donkey கவிதை). இப்போது என் நாவலுக்கே அத்தகைய தலைப்பு அமைந்தது மகிழ்ச்சி. பைபிளில் வருகிற விலக்கப்பட்ட கனி என்பது ஆப்பிள் தானா என்பது உறுதி இல்லை தான். ஆனால் மக்கள் மனதில் அப்பழம் ஆப்பிள் என்பதாகத் தான் ஆழப் பதிந்திருக்கிறது. ஜான் மில்டன் தன் Paradise Lost காவியத்தில் அதை ஆப்பிள் என்றே சொல்கிறார். தவிர, ஆப்பிளைப் புனைவென்று கொண்டாலும் இந்த நாவலும் புனைவு தானே!

*

உண்மையில் என் முதல் நாவலாய் இந்தக் கதையை உத்தேசிக்கவில்லை. அப்படித் தோன்றியவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டுத் தான் இதில் இறங்கினேன். அலுவலகப் பணி நிமித்தம் புது தில்லிக்கும் பூனா நகரத்துக்கும் சமீப காலங்களில் மேற்கொண்ட பயணங்கள் இதை முதலில் எடுத்துக் கொள்ள உந்துதல் ஆயின. இதன் களங்களான ஆகா கான் அரண்மனை, பிர்லா இல்லம் ஆகிய இடங்களில் நடந்த போது காந்தியின் மநுவின் மூச்சுக் காற்று எங்கேனும் ஒளிந்திருக்குமோ எனத் தேடி நின்றிருக்கிறேன்!

ஜெயகாந்தனின் ‘அக்னிப் பிரவேசம்’ சிறுகதை எப்படி அவரது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலுக்கு முன்னோடியோ அதே போல் ஆனந்த விகடனில் சமீபத்தில் வெளியான எனது ‘நான்காம் தோட்டா’ சிறுகதையே இந்த நாவலுக்கு முன்னோடி.

நாவல் என்பது என்ன? “A long, fictional narrative which describes intimate human experiences” என்பதாய் வர்ணிக்கிறது விக்கிபீடியா. ஜெயமோகன் ‘நாவல் கோட்பாடு’ எழுதி தமிழில் வந்த பல நாவல்களே அல்ல என்கிறார். ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலின் முன்னுரையில் சுந்தர ராமசாமி ஒரு சம்பவத்தை எழுதியிருப்பார். அவர் உறவினர் ஒருவர் நாவலைப் பார்த்து விட்டு, “இது தரும் முக்கிய செய்தியை ஒரு வரியில் சொல்லு” எனக் கேட்கிறார். பதிலுக்கு சுரா “முக்கிய செய்தியா? இது நாவல் அல்லவா!” என்கிறார். இதையே நாவலுக்கான அளவுகோலாக எடுத்துக் கொள்கிறேன்.

நாவல் எழுதும் போது தான் அது பற்றி நான் கொண்டிருந்த மாயைகள் உடைந்தன. நான் நாவல் எழுத இத்தனை ஆண்டுகள் சோம்பி, தயங்கிக் கிடந்தது அறிவீனமே. இந்தக் குறுகிய அனுபவத்தில் நாவல் வடிவம் என்பது சிறுகதை போல் சவாலாக எனக்குத் தோன்றவில்லை. உழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம். அவ்வளவு தான்.

ஆனால் இப்படைப்பு என்னளவில் மிக முக்கியமான ஒரு நகர்வு என நம்புகிறேன்.

சி.சரவணகார்த்திகேயன்
பெங்களூரு / டிசம்பர் 18, 2017

***
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2018 23:07

January 8, 2018

உணர்வைச் சுரண்டும் கலை


அருண் பிரபு புருஷோத்தமன் என்ற அறிமுக இயக்குநரின் திரைப்படம் அருவி. மிகச் சிக்கலான, அதே சமயம் மிக மலினமான வெற்றிச்சூத்திர மாயைகள் நிரம்பிய தமிழ் திரைப்பட உலகில் இப்படி ஒரு உள்ளடக்கம் வெல்லும் என்று நம்பிக்கையுடன் களம் புகுந்திருக்கும் அவரை முதலில் எந்த ifs and buts-ம் இன்றி அணைத்துக் கொள்ளலாம்.


Asmaa என்ற எகிப்தில் எடுக்கப்பட்ட, அரேபிய மொழித் திரைப்படத்தைத் தழுவியே அருவி எடுக்கப்பட்டது என்ற வாதப் பிரதிவாதங்களுக்குள் போக விரும்பவில்லை. அதைத் தாண்டி இரண்டு விஷயங்களை எடுத்துக் கொண்டு பேச நினைக்கிறேன். ஒன்று திரைப்படம் பற்றியது; மற்றது நம் திரைப்படப் பார்வையாளர்கள் பற்றியது.

முன்பொரு காலத்தில் - சுமார் இருபதாண்டுகள் முன் - இந்தியாவில் எய்ட்ஸ் பற்றி படைப்பில் பேசுவது என்பது முற்போக்காக, சமூக அவசியமாக இருந்தது. நிறைய எழுத்துக்களும், படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அது பற்றி வந்தன. (ஒரு நகைச்சுவைத் துணுக்கு நன்றாய் நினைவில் உள்ளது: சவரக்கத்தி மூலம் எய்ட்ஸ் பரவும் என்பதால் அதற்கு ஆணுறை போட்டுச் சிரைப்பார் ஒரு நாவிதர்.) அருவியும் அப்போது வந்திருக்க வேண்டிய விழிப்புணர்வுப் படம். இன்று எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நோயாளிகளை ஒதுக்கி வைக்கும் மனப்பான்மை அந்த அளவு மோசமானதாக இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. கொஞ்சம் காலம் முன் எய்ட்ஸ் பற்றி வந்த மிருகம் படம் கூட வரலாற்றுப் பதிவுதான். அதனால் இன்றைய தேதியில் இப்படத்தின் பொருத்தப்பாடு மற்றும் அவசியம் பற்றியே கேள்வி எழுகிறது.

அருவி திரைப்படம் எதைப் பேசுகிறது? இக்கேள்விக்கு ஒற்றைப் பதிலைச் சொல்வது சற்று சிரமமான விஷயம் என நினைக்கிறேன். என் பார்வையில் அருவி மூன்று விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது: 1) குடும்பம் முதல் சமூகம் வரை எல்லோராலும் எயிட்ஸ் நோயாளிகள் தர்க்கமே இன்றி ஒதுக்கப்படுகிறார்கள். 2) சொல்வதெல்லாம் உண்மை போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் டிஆர்பிக்காக மனசாட்சியே இன்றி சாதாரண மனிதர்களின் உணர்வுகளில், உறவுகளில், வாழ்க்கையில் மிக மோசமாக விளையாடுபவை. 3) பெண்களின் பலவீனங்களை, இக்கட்டான சூழல்களைப் பயன் படுத்தி ஆண்கள் அவர்களைப் பாலியல்ரீதியாய்ச் சுரண்டுகிறார்கள். முதலாவதைச் சொல்வதற்காகத் தான் மற்ற இரண்டையும் நுழைத்திருக்கிறார்கள் எனப் புரிந்தாலும் அவை அந்த கிளைத் தேவை என்பதைத் தாண்டி பிரதான விஷயமாகவே படத்துள் உள்ளே நுழைந்து விட்டன. இதன் காரணமாக படத்தின் திரைக்கதை எங்கெங்கோ அலைபாய்கிறது. ரசிப்புக்குத் தடையாகிறது. படத்தின் முக்கியப் பலவீனம் அதுவே.

அடுத்து அருவி என்ன மாதிரியான படம்? பெரும்பாலும் அருவியை ஒரு சீரியஸ் படமாகவே கட்டமைக்க முயல்கிறார்கள் - படத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி. அனால் அதை அப்படியே ஏற்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. உதாரணமாய் சொல்வதெல்லாம் சத்தியம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் சற்றே நகைச்சுவையானவை. அருவி அந்நிகழ்ச்சியின் மொத்த அங்கத்தினரையும் - சுமார் இருபது பேர் இருப்பர் - ஒற்றை ஆளாய்த் துப்பாக்கி முனையில் வைப்பதும் போலீஸ் உடனே எந்தத் தர்க்கமும் இன்றி அல்க்வைதாவோ மாவோயிஸ்டோ என எண்ணி பட்டாலியனை இறக்கும் காட்சிகள் அபத்தமானவை. க்ளைமேக்ஸில் நம் இரக்கதைச் சுரண்டி எடுக்கும் முயற்சியிலான காட்சிகள் மறுபடி படத்தைச் சீரியஸ் ஆக்குகின்றன. ஆனால் இப்படி மாற்றி மாற்றி, என்ன மாதிரி படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றே பார்வையாளனை உணர விடாமல் குழப்புகிறார்கள்.

முதலில் அருவியின் கதாபாத்திரத்தைப் பார்ப்போம். அவர் மிகச் சராசரியான ஒரு நடுத்தர வர்க்கப் பெண்ணாகவே காட்டப்படுகிறார். ஒரு தேவதையாக அல்ல. அந்த மிகையற்ற யதார்த்தம் வசீகரமானதாக இருக்கிறது. தந்தையால் பேரன்பு போர்த்தி வளர்க்கப்படும், குடும்பத்தின் மீது ஒட்டுதலுடன் இருக்கும், அவரது பணிநிமித்தம் இடம் மாறும், பக்கத்து வீட்டில் பாரம்பரிய நடனம் கற்றுக் கொள்ளும், பள்ளியில் சுமார் மாணவியாய் இருக்கும், நடுத்தர வயது ஆண் ஆசிரியரால் ஆங்காங்கே கை வைக்கப்படும், சானிடரி நேப்கின் கடன் கேட்கும் தோழியிடம் மறுக்கும், பார்ட்டியில் குறுகுறுப்புடன் கலந்து கொள்ளும், அங்கே மெல்லிய தயக்கத்துடன் மது ருசிக்கும், தன்னைக் காதலிப்பவனை நிராகரிக்கும், தான் காதலிப்பவனால் நிராகரிக்கப்படும், எந்தக் கவித்துவமும் இன்றி மிகச் சாதாரணமாக - அதை மிக எளிமையாக என்ற சொல்லாலும் அலங்கரிக்கலாம் - ஒரு ப்ரப்போசலை எதிர்பார்க்கும் சாதாரணள்!

படத்தில் முதல் இருபது நிமிடங்களில் வரும் இக்காட்சிகளின் ஆக்கம், அதாவது காட்சியமைப்பு, நடிப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பு ஐந்தும் மிகச் சிறப்பாக வந்துள்ளன. (குறிப்பாக பின்னணி இசை Birdman-ஐ நினைவூட்டியது.) இந்தப் படம் பற்றிய மிகையான ஓர் எதிர்பார்ப்பை இது தோற்றுவித்து விடுகிறது.

பின் ஒழுக்கத்தைக் குற்றஞ்சொல்லி வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறாள் அருவி. இதிலிருந்து தான் படம் தாறுமாறாய்த் தடம் புரள்கிறது. (இடையில் ஒரே சுவாரஸ்ய விஷயம் முதலில் அருவி கர்ப்பவதி என்பது போல் காட்டி, அதனால் தான் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறாள் என்பது போல் சொல்லப்பட்டுப் பின் உண்மையில் அது எய்ட்ஸ் நோய் என்ற விஷயத்தை விடுவித்தது தான்.) ஏகப்பட்ட கேள்விகளைத் தோற்றுவித்துக் கொண்டே போகிறது படம். ஆனால் எவற்றுக்கும் பதில் இல்லை.

*

1) மகளின் மீது மிகப் பாசம் கொண்ட ஒரு தந்தை அவளது எய்ட்ஸ் நோய்க்குக் காரணம் ஒழுக்கமின்மையே என்று பூரணமாக நம்புவது உறுத்தல் தான். அன்புமிக்க, ஆனால் பொது அறிவற்ற ஒரு போன தலைமுறைக்காரர் என்று அவரைப் புரிந்து கொள்கிறேன். அப்படி இருந்தாலும் பெண்ணின் தரப்பை முழுக்கக் கேட்க முனையும் முயற்சி கூட அந்தப் பாசத்தில் இல்லாமலா போகும்? அவள் தாயுமா விசாரணையே இன்றி ஓர் இளம் பெண்ணை வீட்டை விட்டு விரட்டத் துணை நிற்பார்? அருவியின் பெற்ரோர் பாத்திரங்களை இவ்விஷயத்தில் பதின்ம வயதுடைய அவளது தம்பியின் கதாபாத்திரத்தின் அறிவோடே படைத்து வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அதன் நோக்கம் அவர்களை அப்படிக் கெட்டவர்கள் ஆக்கினால் தான் நாயகி அருவியின் போராட்டம் உயர்வு பெறும் என்பதைத் தவிர வேறு இருப்பதாய்த் தெரியவில்லை.

2) வீட்டை விட்டு வெளியேறும் முன் தான் மிக ஒழுக்கம் மிக்கவள் என்பதை நம்புங்கள் எனத் திரும்பத் திரும்பத் தன் குடும்பத்தாரிடம் மன்றாடுகிறாள் அருவி. இது தான் அவளது பாத்திர வார்ப்பு என்பதாகப் பார்வையாளன் மனம் எடுத்துக் கொள்கிறது. ஆனால் வீட்டை விட்டு வெளியேறிய பின் மூன்று ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறாள் அருவி. அது கடும் முரணாகத் தோன்றுகிறது. ஒழுக்கமான ஒரு பெண்ணை ஒழுக்கமற்றவள் என்று நினைத்து வீட்டை விட்டுத் துரத்துவதால் உண்மையாகவே அவள் ஒழுக்கம் கெட்டுப் போகிறாள் என்பது தான் இயக்குநர் சொல்ல வருவதா? (இங்கே ஒழுக்கம் என்று குறிப்பிடுவது சமூகத்தின் பார்வையிலான ஒழுக்கம். என் அளவுகோல் அல்ல.) அப்படி எனில் அது மேலும் கேள்விகளை எழுப்புகிறது. வீட்டை விட்டு வெளியேறிய குறுகிய காலத்தில் அருவி மூன்று ஆண்களிடம் 'பலியாக' முடிகிறது என்றால் அதற்கு முன் அவள் 'ஒழுக்கமாக' இருந்தது வீட்டின் கட்டுப்பாடுகளினால் மட்டும் தானா? எனில் அவள் தான் தவறு செய்யவில்லை என்று வீட்டாரிடம் மன்றாடுவதன் வலு சரிந்து போய் விடுகிறதே!

3) அருவி மூன்று பேரால் ஏமாற்றப்பட்டதாகவும் அதற்காக அவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் சொல்கிறாள். அது என்ன ஏமாற்று? வீட்டை விட்டு வெளியேறியதால் தோழியின் வீட்டில் தங்க நேரும் போது தோழியின் தந்தை அவளோடு உறவு கொள்கிறார். இதில் அருவி மறுக்கவும், எதிர்க்கவும் எல்லாச் சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனாலும் அவள் செய்யவில்லை என்பதைக் கலவியின் மீதான விருப்பம், மதுப் போதை, தோழியின் தந்தை என்ற பயம், சங்கடம், குழப்பம் அல்லது நன்றி என எப்படி வேண்டுமாலும் எடுத்துக் கொள்ளலாம். அதை வல்லுறவு என்று ஏன் சொல்ல முடியவில்லை என்றால் அவருக்கு எய்ட்ஸ் தொற்றி விடலாகா என்று ‘பாதுகாப்பாகவும்’ இருந்திருக்கிறாள். ஆக, ஓரெல்லை வரை அக்கலவி அவள் ப்ரக்ஞையுடன், சம்மதத்துடன் நிகழ்ந்த ஒன்று தான். அதன் பின் அவள் அவரிடம் என்ன எதிர்பார்த்திருக்க முடியும்? திருமணமா? நஷ்ட ஈடா? இவை ஏதும் இல்லை என அவள் பார்த்திர வார்ப்பு சார்ந்து புரிந்து கொள்கிறேன். எனில் அது எப்படி அவர் ஏமாற்றியது என்றானது? அடுத்து கோயில் உபன்யாசம் செய்பவர் கதையும் அதே போன்றது தான். அவரும் அவளை வன்கலவி செய்யவில்லை. அது ஒரு சிகிழ்ச்சை என்பதை நம்பி ஏமாறுமளவு அருவி முட்டாள் என்பதையும் ஏற்க முடியவில்லை. ஆக, அங்கும் இணக்கமான ஓர் உறவே நிகழ்ந்திருக்கிறது. அங்கும் அதன் பிறகு எதிர்பார்க்க ஏதுமில்லை. எனில் எப்படி ஏமாற்று? மூன்றாவது நிறுவன முதலாளி. அருவியின் தந்தையின் மருத்துவச் செலவுக்கு லட்ச ரூபாய் உதவி செய்வதற்குப் பிரதிபலனாய் அருவியுடன் உறவு கொள்கிறார். அதுவும் அவரது ப்ரப்போசல் தான். அவளை வல்லுறவு செய்து விட்டு லட்ச ரூபாயைத் தூக்கி எறியவில்லை. பணம் வேண்டுமானால் உளவு கொள் என்று கார்னர் செய்கிறார். அருவி முன் இரண்டு வாய்ப்புகள் அங்கும் இருந்தன: ஏற்பது, மறுப்பது. அருவி ஏற்கிறாள். பணத்தையும் வாங்குகிறாள். எனில் அதிலும் ஏமாற்று எங்கே வந்தது? அது ஒரு வியாபாரம் தானே? புதுமைப்பித்தனின் பொன்னகரம் நாயகி அம்மாளு செய்வதைப் போன்றது தானே? முதலாளி அருவியின் இக்கட்டைப் பயன்படுத்திக் கொண்டு அவளைப் பாலியல்ரீதியாகப் பயன்படுத்தினான் என வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய அவளை ஏமாற்றி விட்டான் என்பது என்ன தர்க்கம் என்றே புரியவில்லை.

4) ஆக, ஏமாற்றவே படாத ஒருத்தி தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லி மூவரையும் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைக்கிறாள். அதுவும் எதற்கு? அவர்களை அம்பலப்படுத்தி எதிர்காலத்தில் அவள் மாதிரி எவரும் பலியாகி விடக் கூடாது என்ற விழிப்புணர்வுக்கு அல்ல. (ஏனெனில் கோயில் உபன்யாசர் விஷயம் தவிர மற்ற கேஸ்களில் பொதுமக்கள் விழிப்புணர்வுக்கும் ஏதுமில்லை.) அவர்களை அழைப்பது மன்னிப்பு கேட்கச் செய்ய. இவ்விடத்தில் சுஜாதாவின் இருள் வரும் நேரம் மற்றும் அதைத் தழுவி எடுக்கப்பட்ட வானம் வசப்படும் படங்கள் நினைவில் வருகின்றன. அதில் பாலியல் வல்லுறவாக்கப்பட்ட பெண் பிடிபட்ட குற்றவாளிகளைச் சிறையில் சந்திக்கும் போது மன்னிப்புக் கேட்கச் சொல்வாள். Poetic Justice! ஆனால் அங்கே ஒரு குற்றம் தெளிவாய் இருக்கிறது. இங்கே அது அந்தரத்தில் தொங்குகிறது. அதனால் அருவியின் சிந்தனைத் தடம் என்ன என்பதே குழப்பமாய் இருக்கிறது.

5) அடுத்தது சொல்வதெல்லாம் சத்தியம் காட்சிகள். நிச்சயம் நல்ல பகடி. ரசிக்க முடிகிறது. ஆனால் அதற்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்மந்தம்? இது எய்ட்ஸ் நோயாளிகள் ஒதுக்கப்படுவது பற்றிய படமல்லவா? எந்தவொரு பிரதியும் போகிற போக்கில் தன் மைய நோக்கிற்குச் சம்மந்தமில்லாத ஒரு விஷயத்தைக் கேலி செய்து நகரலாம், தவறில்லை. ஆனால் அதைப் படைப்பின் பிரதானப் பகுதிகளுள் ஒன்றாக ஆக்கும் போது பார்வையாளனுக்கு / வாசகனுக்குக் குழப்பம் வந்து விடும். அது தான் அருவியிலும் நடக்கிறது. அந்தக் காட்சிகள் வந்ததும் பார்வையாளன் அதுவரை தான் தயாராகியிருந்த mood-லிருந்து பிடிவாதமாகப் பிடுங்கி வெளியே எடுக்கப்படுகிறான். அதனால் அதை ஏற்க முடியவில்லை. சமீபத்தில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வந்த ரொமான்ஸ் காட்சிகள் போலத் தான் இதுவும். அதனளவில் சுவாரஸ்யம் கொண்டவை என்றாலும் படத்திற்கு அது எந்த அளவில் தேவை என்ற பிரச்சனை தான் இது. அல்லது ஒரு பின்நவீனப் பிரதியில் அப்படியான கட்டுக்கோப்பு அவசியமில்லை என்று ஜல்லியடிப்பதாக இருந்தால் மேலே பேச ஒன்றுமில்லை.

6) அதே போல் தான் டிவி நிகழ்ச்சியில் அருவி பேசும் நீளமான வசனமும். அதில் நாயகியின் நடிப்பும் வசன உச்சரிப்பும் அபாரம் தான். ஆனால் அதற்கும் படத்திற்கும் என்ன தொடர்பு? அதை வியந்து பாராட்டுபவர்களை, வாட்ஸாப்பில் உணர்ச்சிகரமாய்ப் பகிர்பவர்களைக் காண்கையில் பாட்ஷா படக் கடைசி ரீலை குரங்கு தூக்கி ஓடியதும் அருணாச்சலம் க்ளைமேக்ஸை மாற்றி வைத்து வடிவேலு ஓட்டுவதற்குக் கைதட்டிப் போகிறவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள். எய்ட்ஸ் வந்ததால் ஒருவருக்கு இந்த
மாதிரி ஞானோதயம் எல்லாம் வந்துவிடும் என்கிறாரா இயக்குநர்? சம்மந்தமே இன்றி நுகர்வுக் கலாசாரத்தை ஏன் திட்ட வேண்டும் இதில்? அஃது இல்லை என்றால் அருவி போன்ற ஹெச்ஐவிகாரர்கள் சரியாக எதிர்கொள்ளப்பட்டிருப்பார்களா? அவர் சொல்வது மாதிரியான 'சராசரி' வாழ்வை மேற்கொள்வது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? அவர்கள் தம் வேலைகளில் என்ன சாதிக்கிறார்கள் என்பது தானே முக்கியமானது! எல்லாக் காலங்களிலும் Peer Pressure ஒன்று இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது நமக்கு மட்டுமல்ல; அமெரிக்கா முதலான முன்னேறிய நாடுகளிலும் அதே தான் நிலை. அது அபத்தம் என்று தோன்றுகிறவன் அதிலிருந்து வெளியேறலாம். ஆனால் கேவலமான வாழ்வு என்று அதைக் கேலி செய்வது கலைஞர்களின் ஒரு விதமான எலைட் கிறுக்குத்தனம் தான் அல்லவா! அறை என் 305ல் கடவுள் படம் அபத்தமாய்ச் செய்ததைத் தானே இப்படம் இன்னும் கவித்துடத்துடன் செய்கிறது? அருவி பட்டியலிட்ட விஷயங்களைச் செய்து அபத்த வாழ்க்கை வாழும் மக்களே கைதட்டி அருவியைப் பாராட்டுகிறார்கள். அந்தப் பட்டியலில் அருவி மாதிரியான படங்களைக் கண்டு கண்ணீர் மல்க நின்று கைதட்டுவதையும் சேர்க்க வேண்டும்!

7) அடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மொத்தப் பேரையும் ஒற்றைத் துப்பாக்கி கொண்டு சில மணி நேரங்கள் ஒரு பெண் ஆட்டுவிப்பது. (அந்தத் துப்பாக்கியில் மொத்தம் எத்தனை குண்டுகள் தான் இருக்கும்? அருவியின் தாத்தா அதை முழுக்க லோட் பண்ணி வைத்து விட்டுச் செத்துப் போனாரா?) படத்தின் மிக மோசமான இடம் அது தான். அதில் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை. மனிதர்களுடன் பேச, பழக அவள் ஏங்கிக் கிடக்கிறாள் என்றா? தொலைக்காட்சிப் படப்பிடிப்புக்கு அன்று அருவி வந்ததன் நோக்கம் என்ன? மூன்று பேரை மன்னிப்புக் கேட்கச் செய்வதா? எனில் எதற்குத் துப்பாக்கி எடுத்து வந்தாள்? அருவி பாதுகாப்பின் நிமித்தம் நகரில் எப்போதும் துப்பாக்கியுடனே அலைபவளா? அப்படியே வைத்துக் கொண்டாலும் கோபத்தின் கணத்தில் நிகழ்ச்சி இயக்குநரைச் சுடுவது வரை புரிகிறது. பின் அவ்விடத்தை விட்டு ஓடுவதே இயல்பு. மாறாகப் பொறுமையாய் ஏன் எல்லோர் செல்பேசிகளையும் சேகரித்துக் கொண்டிருக்கிறாள்? அதை விடக்கொடூரம் அலுவலக முதலாளியைத் தன்னை அழ வைக்கும் ஒரு கதை சொல் எனக் கேட்பது. அருவி ஒரு பைத்தியமா பார்த்துக் கொண்டிருக்கும் நாமா என்று சந்தேகம் வந்து விடுகிறது.

8) ஸ்டுடியோவிற்குள் அருவி படப்பிடிப்புக் குழுவினரைக் கூட்டி வைத்து பீர் பாட்டில் சுற்றி விட்டு விளையாடிக் கொண்டிருப்பது ஒரு மாதிரியான மண்டைப் பிளவு எனில் அதற்கு வெளியே காவல் துறையும் ஊடகங்களும் செய்யும் கோமாளித்தனம் வேறு மாதிரியானவை. நாலைந்து துப்பாக்கிச் சத்தத்துக்கு நக்ஸல்பாரிகளை ரிமாண்ட் செய்து விசாரிப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு பேசுகிறார் என்எஸ்ஜியில் பயிற்சி பெற்ற அந்தப் போலீஸ் உயரதிகாரி. போலீஸிடம் ஏன் அருவி “கை வைடா பார்ப்போம்” என்றெல்லாம் பஞ்ச் பேசுகிறார்? இவை எல்லாமே எரிச்சலூட்டுபவை.

9) கடைசி இருபது நிமிடங்கள் நம் நெஞ்சைச் சுரண்டி எடுக்கிறார்கள். அக்காட்சிகளில் நாயகியின் நடிப்பு நன்றாக இருக்கிறது என்றாலும் கொஞ்சம் ஓவர்டோஸ் தான். அழ வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது போல் இருக்கிறது. விஷயத்தை ஆழமாய்ச் இதயத்தைக் கனக்கச் செய்வது என்பது வேறு. சேது, பரதேசி போன்ற படங்களின் இறுதிக் காட்சிகள் கச்சிதமாய் அதைச் செய்தவை. அதில் யதார்த்தம் மட்டுமின்றி கலையும் இருந்தது. இதில் யதார்த்தம் மட்டுமே மிஞ்சி ஆவணத்தன்மை புகுந்து விடுகிறது. பிடிவாதமாய்ப் பார்வையாளன் குற்றவுணர்வு கொண்டே ஆக வேண்டும் என்று முடிவு செய்து இறங்கியது போல் படுகிறது. அருவியைச் சந்திக்க அந்த உதவி இயக்குநன் அவளது குடும்பத்தை அழைத்துச் செல்வது வரை நியாயம். ஆனால் சொல்வதெல்லாம் சத்தியம் குழுவும் அவளை 'ஏமாற்றிய' மூன்று பேரும் எதற்கு?

10) அருவி தான் அந்த மூன்று நபர்களுடனான உறவின் போதும் பாதுகாப்பாகத்தான் இருந்ததாகச் சொல்கிறாள். அது என்ன எனச் சரியாகப் புரியவில்லை. அவர்களை ஆணுறை அணியச் செய்தாளா? எனில் அவ்வுறவில் அவளது சம்மதம் இருந்தது என்பது உறுதிப்படுகிறது. ஏமாற்றி விட்டதாகக் குற்றச்சாட்டு வந்ததும் அந்த ஆண்கள் அதைத் தான் முதலில் சொல்லி இருப்பார்கள். அல்லது அருவி தானே பெண்ணுறை அணிந்தாளா? கதைப்படி அலுவலக முதலாளி தவிர மற்ற இருவருடனும் நிகழ்ந்தது எதிர்பாராக் கலவி. அதற்கு எப்படி அவள் தயாராய் இருந்திருக்க முடியும்? எனில் தாத்தாவின் துப்பாக்கி போல் ஆணுறை அல்லது பெண்ணுறையையும் கைப்பையில் சுமந்து கொண்டே சுற்றுகிறாளா அருவி? இந்த இரண்டுமே இல்லை, அவர்களின் விந்தணுவை தனக்குள் பெற்றுக் கொள்ளாமல் தடுத்து விடுவதன் வழி - அதைப் பெண் கண்டறிந்து தீர்மானிக்க முடியாது என்பது வேறு கதை - அவர்கட்கு எய்ட்ஸ் தொற்றாமல் காக்கிறாள் என்று அவள் (இயக்குநரும்) சொல்கிறாள் எனில் அது விஞ்ஞானரீதியாகத் தவறான புரிதல். அப்படிச் செய்தாலும் எய்ட்ஸ் தொற்றும்.

*

சுமாரான படத்தை எடுக்க அருண் பிரபு புருஷோத்தமனுக்கு அத்தனை உரிமையும் சுதந்திரமும் உண்டு. அதை நான் குறையே சொல்ல மாட்டேன். ஆனால் இம்மாதிரி குறைகளும் தெளிவின்மையும் நிறைந்த ஒரு படத்தைப் பெருங்காவியம் என எப்படி மக்கள் கொண்டாடுகிறார்கள்? சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் என்று அழைக்கப் படுவர்கள் கூட விதிவிலக்கில்லை. எல்லோரும் வராது வந்த மாமணி என்றே இந்தப் படத்தைக் கொண்டாடுகிறார்கள். யோசித்தால் மூன்று காரணங்கள் தோன்றுகின்றன:

1) பொதுவாகவே திரைப்படம் என்ற கலை குறித்த எதிர்பார்ப்பு நம் மக்களிடையே – அதுவும் இளம் தலைமுறையிடையே - குறைந்து விட்டது. எம்ஜிஆரும் சிவாஜியும், ரஜினியும் கமலும் கொடுத்து வந்த படங்களின் பத்தில் ஒரு பங்கு தரம் கூட இன்று விஜய், அஜீத் படங்களில் இல்லை. ஆனால் அவற்றைக் கேள்வியே இன்றி மக்கள் வெற்றிப்படங்கள் ஆக்குகிறார்கள். இன்று ஒரு படம் மோசமாய் இல்லாதிருந்தாலே போதும், ஓடி விடும். அத்தனை தூரம் மக்களைக் காய்ந்து போக வைத்து இப்போது காமாசோமாவெனப் படம் எடுத்தாலே காணாததைக் கண்டதைப் போல் புழகாங்கிதப் படுகிறார்கள் மக்கள். காக்கா முட்டை, விசாரணை, அறம் போன்ற ஓரளவு நல்ல படங்களை க்ளாஸிக் என்று தூக்கி வைத்துத் கொண்டாடப்படக் காரணம் இது தான்.

2) ஒரு படம் நல்ல விஷயம் ஒன்றைப் பேசி விட்டால் அதை உயர்த்திப் பிடித்து விடுவது. நல்ல சினிமாவாய் அது வந்திருக்கிறதா என்பது பற்றிய கவலை இல்லை. எய்ட்ஸ் நோயாளிகள் ஒதுக்கப்படுவது பற்றி எடுத்திருக்கிறார்கள், பெண்கள் ஏமாற்றப் படுவது பற்றி எடுத்திருக்கிறார்கள், சராசரி மனிதர்கள் வாழ்வின் அற்பத்தனம் பற்றி எடுத்திருக்கிறார்கள், இவற்றை எல்லாம் நன்றாக இல்லை என்று சொல்லி விட முடியுமா என்ன! அதனால் நன்றாக இருக்கிறது என்றே சொல்லி வைக்கிறார்கள். இது ப்ரக்ஞைப்பூர்வமாக நிகழாமல் ஆழ்மனதிலேயே இப்படி ஓர் அசட்டுத்தனம் ஊறி விடுகிறது நம் மக்கள் மனதில். இது சமீப பத்து, பதினைந்து ஆண்டுகளில் வந்த விஷயம் தான். சொல்கிற விஷயம் மட்டும் தான் முக்கியம் என்றால் ஆவணப்படம் எடுத்து விட்டுப் போய் விடலாமே! எதற்கு முழுநீளத் திரைப்படம்? அல்லது ஒரு புத்தகமாக எழுதி விடலாமே! எதற்கு சக்தி வாய்ந்த காட்சி ஊடகம்? அன்பே சிவம் வந்த போது இம்மாதிரி இருந்திருந்தால் அதையும் ஹிட் செய்திருப்பார்கள் போல!

3) ஓர் உளவியல் விஷயம். இந்தத் தலைமுறை மிக இறுக்கமாக வாழ்கிறது. எந்த ஒரு சாதாரண விஷயத்துக்கும் நெகிழ்ந்தழத் தயாராய் இருக்கிறது. காரணம் நிஜ வாழ்வில் அத்தகைய சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு வாய்ப்பதில்லை. அப்படியான இடங்கள் படத்தில் வருகையில் அவை எவ்வளவு அபத்தமாக, அர்த்தமற்றதாக, தர்க்கமற்றதாக இருந்தாலும் அதைக் கொண்டாடுகிறார்கள். அவர்களின் உச்சபட்ச வெளிப்பாடு என்பதே படங்கள் கண்டு கண்ணீர் சிந்துவது மட்டும் தான் என்றாகி விட்டது. வாசிப்பே இல்லாத நிலை. உரையாடலே இல்லாத நிலை. சமூக வலை தளங்களில் மூழ்கிப் போன நிலை. இன்னும் சொல்லப் போனால் அந்த இறுக்கமான வாழ்வை ஒரு குற்றவுணர்வுடன் தான் வாழ்கிறார்கள். இந்தப் படங்களைக் கண்டு பாராட்டுவதன் மூலம் தம் கடமையை ஆற்றி விட்டதாய்த் தற்காலிகமாய் நிம்மதி கொள்கிறார்கள். ஆக, கலை என்பது கலைக்காக அல்லாமல், அது மனதை எத்தனை தூரம் பாதிக்கிறது என்பதற்காக அல்லாமல், போலியான நிம்மதியை அளிப்பதனால் கொண்டாடப்படுகிறது. உதாரணமாய் அருவி படத்தைப் பார்த்துப் பாராட்டுவதன் மூலமே எய்ட்ஸ் நோயாளிகளுக்குத் தாம் செய்ய வேண்டிய கடமை முடிந்து விட்டதாக நிம்மதி கொள்கிறார்கள். யோசித்தால் இவர்களுக்கும் சீரியல் பார்த்து பதற்றப்படுகிற சராசரிக் குடும்பப் பெண்களுக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை.

*

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மீதும் லக்ஷ்மியின் மீதும் இயக்குநருக்குத் தனிப்பட்ட பகை ஏதும் இருக்குமோ என்று எண்ணுமளவு மிக உள்ளே இறங்கி (கீழே அல்ல; உள்ளே தான்) அடித்திருக்கிறார். அம்மாதிரி விமர்சனங்களுக்குத் தானும் நிகழ்ச்சியும் தகுதியானவர்களே என்பதை லக்ஷ்மி ராமகிருஷ்ணனே தன் பாலக்காடு ப்ராமின் - ஹெச்ஐவி நோயாளி ஒப்பீட்டின் வழி ஒத்துக் கொண்டிருக்கிறார். கவண் மாதிரியான படத்தில் இக்காட்சிகள் இடம் பெற்றிருந்தால் அழகாக உட்கார்ந்திருக்கும். ஆனால் இங்கே தவறான படத்தில் எழுதப்பட்டு விழலுக்கு இறைத்த நீராகிறது.

மேலோட்டமான ஒரு சினிமா வசனம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு ஆபத்தான தகவல் பரவலாக பலரது வாழ்க்கையைப் பாதித்து விடலாம். படத்தில் வெட்டுக் காயம் இருந்து, அதில் ரத்தம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவினால் மட்டுமே எய்ட்ஸ் பரவும், சும்மா உடலுறவு கொண்டால் அல்ல என்பது மாதிரியான ஒரு வசனம் இடம் பெறுகிறது. (உடன் “இயற்கை அத்தனை இரக்கமற்றது அல்ல” என்று கவித்துவக் கருத்து வேறு.) ஆனால் உண்மையில் எய்ட்ஸ் பரவ உடலுறவில் ரத்தமோ வெட்டுக்காயமோ இருந்தாக வேண்டும் என்று அவசியமில்லை. கலவியின் போதான உடற்திரவங்களான விந்து, உச்சத்துக்கு முன் ஆண் குறி வெளியேற்றும் திரவம், யோனித் திரவம், ஆசன வாய்த் திரவம், முலைப் பால் என எதுவாக இருந்தாலும் எதிராளியின் உடலுறவு உறப்புகளான ஆண் குறி, யோனி, ஆசன வாய், வாய், மார்புகள் போன்றவற்றில் லேசான கீறல் அல்லது புண் இருந்தாலும் (அது ஏற்கனவே இருக்க வேண்டும் என்றில்லை, உடலுறவின் போது கூட உண்டாகலாம். தவிர, சில உள்ளுறுப்புக் காயங்களை சம்மந்தப்பட்டவர் உணராமலே இருக்கலாம்.) ஹெச்ஐவி பரவும். ஆனால் படம் பார்ப்பவர்கள் இயற்கையின் இரக்கத்தை நம்பிப் பாதுகாப்பின்றி உடலுறவில் இறங்கி விடக்கூடாது என்பது தான் என் கவலை!

எழுத்தாளர்கள், ஊடகக்காரர்கள், சமூகவலைதளங்களில் தீவிரமாய் இயங்குபவர்களை படத்தின் ப்ரிவ்யூவுக்கு மிக அதிக அளவில் அழைத்த படம் இதுவாகவே இருக்கும் என நினைக்கிறேன். மேற்சொன்ன வகைமைகளில் ஏதோ ஒன்றாகக் கருதி படத்தின் இணை இயக்குநர் பாக்கியராஜ் கோதை என்னையும் ப்ரிவ்யூவுக்கு அழைத்திருந்தார். அது சென்னையில் நடந்ததால் பிற்பாடு பெங்களூரில் ப்ரிவ்யூ வைத்தாலோ, அல்லது படம் இங்கு வெளியான பின்போ பார்த்து விட்டு என் கருத்தை எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தேன். இப்படியான ப்ரிவ்யூக்களிலேயே கணிசமானோர் படத்தைப் பார்த்து விட்டனர். இதில் ஒரு நன்மையும் உண்டு, எதிர்மறை விளைவும் உண்டு. ஒருபுறம் படம் பற்றி சமூக மற்றும் பிரதான ஊடகங்களில் நல்ல பேச்சு உருவாகும். அது நல்லதே. ஆனால் மறுபுறம் தன்னை மதித்து ப்ரிவ்யூவுக்கு அழைத்ததாலேயே படம் பற்றி எப்படி மோசம் சொல்வது எனச் சங்கடப்பட்டு மேம்போக்காக ஓரிரு குறைகளைச் சுட்டிக் காட்டி விட்டு படத்தைப் புகழ்ந்து தள்ளி விடுவார்கள். படம் பற்றி நல்ல பேச்சு உருவாக உதவினாலும் இயக்குநருக்கு மோசமான துரோகமே. படைப்பு பற்றிய அசல் கருத்தை அவர் அறிய முடியாமலே போகும். அருவி படத்துக்கு ஓரெல்லை வரை அந்தச் சிக்கல் நடந்திருப்பதாகவே தோன்றுகிறது. (சச்சின் விஜய் படத்தில் “காலேஜ் ப்யூட்டி அது இதுன்னு ஓவராவே சொல்லிட்டே அய்யாச்சாமி” என்று வடிவேலுவிடம் சொல்வது தான் நினைவுக்கு வருகிறது.)

படத்தின் ட்ரெய்லர் தவறானது என்று ட்ரெய்லருக்கு முன் ப்ரிவ்யூ பார்த்த ஹரன் பிரசன்னா எழுதி இருந்தார். அது மிகச் சரி. நான் ட்ரெய்லர் பார்த்து விட்டு ஏதோ மாவோயிஸ்ட் படம் என்று தான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் படம் முற்றிலும் வேறு விஷயம். அது ஒரு விதமான ஏமாற்று வேலை என்று கூடச் சொல்வேன்.

நாயகி அதிதி பாலன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். தேசிய விருது பெற்றாலும் ஆச்சரியமில்லை. திருநங்கை அஞ்சலி வரதனும் இணையாக நடித்திருக்கிறார். லக்ஷ்மி கோபால்ஸ்வாமி, கவிதா பாரதி உள்ளிட்ட சொல்வதெல்லாம் சத்தியம் நிகழ்ச்சிக் குழுவினர், அருவியின் குடும்பத்தார், அருவியை ஏமாற்றிய மூவர் என எல்லோரும் நல்ல பங்களிப்பு. படத்தின் நேர்த்திக்கு இது ஒரு முக்கியக் காரணம்.

இப்படத்தின் ஒளிப்பதிவு (ஷெல்லி) மிகத் தரமாய் அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் பாடல்களும் (பிந்து மாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜ்) ரசிக்கத்தக்க வித்தியாசமான முயற்சி. திரைக்கதை ஆசிரியராகப் பல இடங்களில் தவறினாலும் இயக்குநராக வலுவான ஆளுமையாக முன் நிற்கிறார் அருண் பிரபு புருஷோத்தமன்.

“எமிலி எப்போதும் எனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டுக் கேட்டுச் செய்வாள், நான் எமிலியிடம் கேட்டதே இல்லை” என்பது போன்ற படத்துடன் நம்மை நெருக்கமாக இணைத்துப் பார்க்கும் நெகிழ்ச்சித் தருணங்கள் எல்லாம் அருவி படத்தில் உண்டு தான். படத்தின் கணிசமான காட்சிகள் ரசிக்க முடிவதாக இருக்கிறது என்பதும் உண்மை தான். ஆனால் அவை துண்டு துண்டாக படத்தின் மைய இழைக்குத் தொடர்பற்று ஆங்காங்கே அந்தரத்தில் நிற்கின்றன. ஒட்டுமொத்தமாக ஒரு படம் அளிக்க வேண்டிய கலாப்பூர்வ அனுபவத்தைப் படம் அளிக்கத் தவறி விடுகிறது. அதனால் அருவி சுமாரான படம் என்று சொல்ல வேண்டிய துர்பார்க்கிய நிலை.

படத்தில் வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் ஒவ்வொரு முறையும் “ரோல்லிங் ஸா...ர்!” என்று வித்தியாசமான முறையில் கேமெராமேன் சொல்வார். அது கேட்க ரசிக்கும்படியும் சிரிக்கும்படியும் இருக்கிறது தான். ஆனால் அதற்காகவே அதைச் சிறப்பானது என்று சொல்லி விட முடியாதல்லவா! படமும் அப்படித்தான்.

***
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2018 07:17

January 5, 2018

நான்காம் தோட்டா [சிறுகதை]


“பாதுகாப்புடன் வாழ விரும்புபவர்கள் உயிர் வாழவே உரிமையற்றவர்கள்.”

பொக்கை வாயவிழ்ந்து புன்னகை உதிர்த்தார் காந்தி. எதிராளியை வாதிட முடியாமற் செய்யும் புன்னகை. துப்பாக்கியுடன் வரும் ஒருவனைத் தயங்கச்செய்யும் புன்னகை.

தில்லி டிஐஜியும் காந்தியின் உதவியாளர் கல்யாணமும் பதிலற்று நின்றிருந்தார்கள்.

நேற்று போலீஸ் சூப்பரின்டென்டண்ட் காந்திக்குப்பாதுகாப்பு வழங்குவதைப் பற்றிப் பேசிச் சென்றிருந்தார். காந்திக்கு அதில் விருப்பமில்லை. இது இரண்டாம் முயற்சி.


ஏற்கனவே அல்புகர்க் சாலையில் அமைந்துள்ள அந்த பிர்லா இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ்காரர்கள் சீருடையின்றி ஆங்காங்கே திரிகிறார்கள் என்பதை காந்தி கவனித்தே இருந்தார். சந்தேகத்துக்கு இடங்கொடுக்கும் நபர்களை நிறுத்தி விசாரிக்கிறார்கள். எல்லாம் உள்துறை அமைச்சர் சர்தார் படேலின் ஏற்பாடு.

சென்ற வாரம் அங்கு பிரார்த்தனையின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்புக்குப் பின்தான் இந்த முன்னெச்சரிக்கை. நல்லவேளையாக உயிர்ச்சேதம் ஏதுமில்லை. சுவர் மட்டும் சேதாரம் கண்டிருந்தது. பஞ்சாபி அகதி ஒருவன் காந்தியின் மீது சினமுற்று அதைச் செய்திருந்தான். போலீஸ் அவனைத் துருவிக்கொண்டிருக்கிறது. காந்தி சொன்னார்-

“அந்தப் பையனைத் துன்புறுத்தக்கூடாது. உண்மையில் நாம் அவன் மீது பரிதாப்பட வேண்டும். அவன் தவறான வழியில் செலுத்தப்பட்டு விட்டான். அவ்வளவுதான்.”

பிர்லா பவனுக்கு வருபவர்களைச் சோதனையிட வேண்டும் என டிஐஜி கோரினார்.

“அதைச் செய்வதற்குப் பதில் பிரார்த்தனைக்கூட்டங்களையே நிறுத்தி விடுவேன்.”

“…”

“என் வாழ்க்கை கடவுளின் கைகளில் இருக்கிறது. நான் சாக வேண்டும் என்றாகி விட்டால் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் என்னைக்காப்பாற்ற முடியாது.”

*

இந்திரா காந்தி விமான நிலையத்தின் 1சி டெர்மினலில் வந்திறங்கிய போது நீண்ட நாள் பிரிந்திருந்த காதலன் போல் புதுதில்லிக் குளிர் சபர்மதியை இறுகத்தழுவியது. சென்னையில் விமானமேறிய வேளை தோழமை காட்டிய ஸ்லீவ்லெஸ் தற்போது துரோகியாகி இருந்தது. மடித்து வைத்திருந்த ஜெர்கினை அணிந்து கொண்டாள்.

யாரோ ஓர் ஆர்வக்கோளாறு ஆசாமி உச்சநீதிமன்றத்தில் அளித்த மனு பத்திரிக்கைக் காரியான அவளை 1760 கிமீ தூரம் இழுத்து வந்திருந்தது. காந்தியின் படுகொலையில் கோட்ஸே தவிர்த்த இன்னொருவன் இருக்கிறான், அதனால் வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்பதுதான் அந்த ஆளின் வாதம். பரந்து விரிந்த இத்தேசத்தின் பெரும்பாலான பிரஜைகள் அதைப்பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் துரதிர்ஷடவசமாய் சமர்பதியின் முதலாளி அதை அத்தனை சுலபமாய் விடவில்லை.

அரசியல்.காம் என்ற செய்தி வலைதளம் அது. ப்ரேக்கிங் ந்யூஸுக்கு அலையாமல் தரமான கட்டுரைகளையும், நேர்காணல்களையும் வெளியிடுகிறார்கள். ஓராண்டில் கணிசமாய் வாசகர்கள் கூட, விளம்பர வருமானம் கொண்டே இயங்க முடிந்தது.

எண்பதுகளின் இறுதியில் அரசியல் செய்திகட்கென தனிப்பத்திரிக்கை துவங்கப்பட்ட போது அதில் சேர்ந்து இதழியில் தொழிலில் நுழைந்தவர் அவள் முதலாளி. பின் பல பத்திரிக்கைகள் மாறி, இப்போது ரிட்டயர்மெண்ட் காலத்தில் இந்த வலைதள முயற்சி.

சபர்மதி விகடன் மாணவ பத்திரிக்கையாளராகப் பயிற்சி பெற்றவள். அதனால் பிடெக் ஐடி முடித்து விட்டு வேலை கிடைக்காமல் இருந்த போது இந்தத்தளத்தில் நிருபர் பணியிடம் இருப்பது கேள்விப்பட்டு விண்ணப்பித்துச் சேர்ந்து விட்டாள். அது பெரிய நிறுவனம் எல்லாம் இல்லை. அவளைப்போல் இன்னும் மூன்று நிருபர்கள், ஒரு லேஅவுட் ஆர்டிஸ்ட், கணக்கு வழக்கு பார்க்க ஒருவர், அலுவலக நிர்வாகத்துக்கு ஒரு பெண், என முதலாளியோடு சேர்த்தே மொத்தம் எட்டு பேர்தான். ஆறு மாதம் முன்தான் தேனாம்பேட்டை கச்சடா சந்து ஒன்றில் அலுவலகம் பிடித்திருந்தார்கள்.

ஐந்திலக்கச் சம்பளம் மாதமொரு முறை பேண்டலூனில் வாங்கவும், க்ரீன்ட்ரென்ட்ஸ் போகவும், ஹிக்கின்பாதம்ஸ் வேட்டைக்கும் சபர்மதிக்குப்போதுமானதாய் இருந்தது.

“மதி, திஸ் இஸ் கெட்டிங் இன்ஸ்ட்ரெஸ்டிங். ரொம்ப நாளா இவுங்க சொல்லிட்டு இருக்கறதுதான். இப்ப அபெக்ஸ் கோர்ட்ல பெட்டிஷன் போட்டு பெருசு பண்றாங்க. காந்தி அசாசினேஷன்ல இன்னொரு ஆளு இருந்தான்னு, அவன் சுட்ட புல்லட்தான் அவரைப் பலி வாங்குச்சுன்னு. இதை விசாரிச்சு ஒரு ஸ்டோரி பண்ணலாம் நீ.”

“செய்யறேன் ஸார். எப்போ வேணும்?”

“அதை நீதான் சொல்லனும்.”

“ஐடி ரெய்ட்ஸ் பத்தி ஆர்ட்டிகிள் பண்ணிட்டு இருக்கேன். அது முடிஞ்சதும் தர்றேன்.”

புன்னகைத்தார்.

“மதி, நான் சொல்றது இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸம். தில்லி போய் விசாரிச்சு, தகவல்கள் சேகரிச்சு எழுதனும்.”

சபர்மதிக்கு சிரிப்பு வந்து விட்டது. மரியாதை நிமித்தம் கட்டுப்படுத்திக் கொண்டு,

“ஸார், காந்தி செத்து எழுபது வருஷமாச்சு. இப்பப்போய் அங்கே என்ன கேட்கறது? எங்கன்னு பார்க்கறது? யாரை விசாரிக்கறது? அப்ப விசாரிச்சவங்களும், தீர்ப்புக் கொடுத்தவங்களும் கூட இப்ப உயிரோட இருக்காங்களான்னு உறுதியில்ல.”

“பத்திரிக்கையாளன் நினைச்சா எல்லாத்தையும் தோண்டலாம்.”

“போலீஸை விடவா?”

“நிச்சயமா. காரணம் பத்திரிக்கைக்காரன்கிட்ட முக்கியமா இருக்கும் ஒரு விஷயம் போலீஸ்காரன்கிட்ட இல்ல. க்யூரியாஸிட்டி.”

“ஆனா இந்த விஷயத்தில் இது வெட்டிவேலை, ஸார்.”

“எப்பவாவது நான் சொல்றதக் கேட்ருக்கியா நீ”

“சேச்சே, அப்படியில்லை ஸார். இது இண்டர்நெட் யுகம். எல்லாத்தகவல்களும் விரல் நுனியில் வந்து விழுது. அதை வெச்சே கனமான கட்டுரை ஒண்ணு எழுதிட முடியும். ஏற்கனவே நிறைய செஞ்சிட்டாங்க. நான் புதுசா என்ன கண்டுபிடிக்கப் போறேன்!”

“காந்தி கொலையைப் பற்றி காந்தியே எழுதி இருக்க முடியாது. அப்படி அவரே எழுதி இருந்தா வேணா அதை ஆதாரமா எடுக்கலாம். தேடிப்பார்க்கறயா இண்டர்நெட்ல?”

“ஸார், டெல்லி போனா மட்டும் என்ன காந்தியேவா என்கிட்ட பேசிடப்போறார்?”

“இந்த ஜெனரேஷனே டெஸ்க்டாப் ஜர்னலிஸத்தில் சுகங்கண்டுருச்சு. டேபிள்லயே எல்லாம் முடியனும். ஃபீல்ட்ல இறங்கவே முடை. நோகாம நுங்கு திங்கனும்.”

சபர்மதி ஏதும் பேசவில்லை. பேசித்தீரும் முரண் எதுவுமில்லை; வளரவே செய்யும்.

“சரி, நாளைக் காலைக்குள் உன் டெசிஷனைச் சொல்லு. போக வர ஃப்ளைட் டிக்கெட் உண்டு, ஸ்டார் ஹோட்டலில் ரெண்டு நைட்டுக்கு ஸ்டே ஏற்பாடு பண்றேன். உனக்கு இன்ட்ரஸ்ட் இல்லன்னா பதிலா ஜோசஃப்பையோ செந்திலையோ அனுப்புவேன். நீ கொஞ்சம் சென்சிபிள்னு நினைச்சுதான் உன்னை இதுக்கு செலக்ட் பண்ணினேன்.”

சபர்மதிக்கு உண்மையில் இதில் விருப்பமே இல்லை. அவர் சொல்லும் விஷயங்கள் எல்லாமே இன்று இணையத்தில் அல்லது புத்தகங்களில் தேடி எடுத்து விடலாம். அல்லது சம்மந்தப்பட்டவர்களை தொலைபேசியில், மின்னஞ்சலில், தேவைப்பட்டால் ஸ்கைப்பில் பிடித்துக்கேட்டு விடலாம். இதற்காக ஓர் ஆள் தில்லி வரை செல்வது சிறுபிள்ளைத்தனம். அந்நேரத்தில் உருப்படியான வேறு வேலைகள் செய்யலாம்.

எல்லாவற்றுக்கு மேல் காந்தி அவள் அரசியலுக்கு ரொம்ப வேண்டியவரும் அல்ல.

தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி – கோவை சூலூர் விமான தளத்துக்குத் தீ வைத்த வழக்கில் பெல்லாரி சிறை சென்றவர் - என்பதால் காந்தியின் மீதான அபிமானத்தில் பேத்தி பிறந்த போது சபர்மதி எனப்பெயரிட்டது தவிர காந்தியுடன் எந்தப் ப்ராப்தமும் அற்ற அவள் ராவெல்லாம் யோசித்துச்சம்மதம் சொன்னாள்.

ஃப்ளைட் டிக்கெட்டும், ஸ்டார் ஹோட்டலும் ஆசை காட்டின என்பது வேறு விஷயம்.

*

ஜனவரி 30, 1948.

காந்தி அன்று மூன்றரை மணிக்கே துயிலெழுந்தார். வழக்கத்தை விட அது சீக்கிரம்.

சஞ்சலமுற்றவராகக் காணப்பட்டார். பிரிவினையின் ஓலங்கள், உட்கட்சி உரசல்கள் எனக் காரணங்கள் இருந்தன. அசந்துறங்கிக் கொண்டிருந்த ஆபா தவிர எல்லோரும் அவசரமாய்ப் பிரார்த்தனைக்குத்தயாரானார்கள். பகவத் கீதை ஸ்லோகங்களை மனு வாசித்தாள். பின் தனக்குப் பிடித்த குஜராத்தி பஜன் ஒன்றை பாடச்சொன்னார் காந்தி.

“சோர்வடைகிறாயோ இல்லையோ, ஓ மனிதா! ஓய்வெடுக்காதே, நிறுத்தாதே. உன் போராட்டத்தை நீ தனியொருவனாய் நிகழ்த்துகிறாய் எனில் அது தொடரட்டும்…”

மனு கண்கள் மூடி முதிராமல் கனிந்த தன் பதின்மக்குரலில் பஜனை இசைத்தாள்.

அதன் பின் வெந்நீரில் தேனும் எலுமிச்சைச்சாறும் கலந்து காந்திக்குக்கொடுத்தாள் மனு. அப்போது வரையிலும் ஆபா எழுந்திருத்திருக்கவில்லை. காந்தி சொன்னார்-

“நெருங்கியவர்கள் மீதான என் செல்வாக்கே சரிந்து வருகிறது. இவற்றை எல்லாம் காண நெடுங்காலம் கடவுள் என்னை இங்கு விட்டுவைக்க மாட்டாரென நம்புகிறேன்.”

*

சபர்மதி முதலில் போனது தேசிய காந்தி அருங்காட்சியகத்திற்கு. ராஜ்காட்டிலிருந்து - காந்தி சமாதி – கூப்பிடு தூரத்தில் இருந்தது. அருங்காட்சியக இயக்குநரைப் பார்க்க வேண்டும் எனக் கேட்ட போது காத்திருக்கச்சொன்னார்கள். அது அரசு அலுவலகம் என்பது நினைவு வர, ம்யூஸியத்தைச் சுற்றிப்பார்த்து விடுவோம் எனக்கிளம்பினாள்.

ராட்டைகள், ஆசிரமங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், காந்தியும் கஸ்தூர்பாவும் பயப்படுத்திய பொருட்கள் எனத் தனித்தனியாகப் பிரித்துக்காட்சிப்படுத்தியிருந்தனர்.

காந்தியின் உரைகளை அவர் குரலிலேயே இந்தியில்/ ஆங்கிலத்தில் ஒலிக்கும் ஆறு தொலைபேசிகள் இருந்தன. அவற்றில் இரண்டு வேலை செய்யவில்லை என்பதைத் தவிர அருங்காட்சியகம் முழுக்கப்பொதுவாக ஒரு நேர்த்தி இருந்தது. காந்தியம்!

மார்டிர்டம் கேலரி என்ற பெயரில் அவரது படுகொலை தொடர்பான விஷயங்களை ஆவணப்படுத்தி இருந்தார்கள். குருதி தோய்ந்த அவரது வேட்டி, சால்வை, அவரைச் சுட்ட தோட்டா, அவர் அஸ்தியைப்பல இந்திய நதிகளில் கரைக்க எடுத்துச்சென்ற கலசங்கள் இருந்தன. 9 மிமீ விட்டம் கொண்ட அந்தத்தோட்டா ஒரு நூற்றாண்டின் சிறந்த மனிதனின் உயிரைப்பருகியதற்கான சுவடின்றி சமத்காரம் காட்டியது.


மேலும் காத்திருப்புக்குப்பின் வந்த தாட்டியான ஆள் தன்னை ம்யூஸியம் டிரக்டர் என அறிமுகம் செய்து கொண்டார். வாயில் ஏதோ மென்று கொண்டிருந்தார். எந்த நொடி வேண்டுமானாலும் எதிராளி மீது தெறிக்கலாம் என்பது மாதிரியான குதப்பல்.

சமர்மதிதான் வந்த வேலையைச் சொன்னாள். நேர்காணல் போல் எடுத்துக்கொண்டு பின் அத்தகவல்களைக்கட்டுரைக்குப் பயன்படுத்திக்கொள்வதாய்த் தெரிவித்தாள்.

“காந்தியைச் சுட்ட புல்லட் எல்லாம் இங்கதான் வெச்சிருக்கீங்க, இல்லையா?”

“ஆமா.”

“மொத்தம் எத்தனை?”

“மூணு.”

“ஆனா இங்க காட்சிக்கு ஒண்ணுதான் இருக்கு?”

“ஆமா, மீதி ரெண்டை பத்திரப்படுத்தி இருக்கோம். அது ம்யூஸியத்தோட ப்ராப்பர்ட்டி தான். ஹிஸ்டாரியன்ஸ், உங்கள மாதிரி மீடியா பீபுள் வந்து கேட்டா காட்டறோம்.”

“நாலாவது புல்லட்னு ஒண்ணு இல்லவே இல்லையா?”

“எனக்குத்தெரிஞ்சு இல்ல.”

“ஆனா மனு தன் டைரில காந்தியின் உடலைக் குளிப்பாட்ட அவரது வேட்டியைக் களைந்த போது அதிலிருந்து தோட்டா ஒண்ணு விழுந்துச்சுனு எழுதி இருக்காங்க.”

“அது இந்த மூணுல ஒண்ணுதான்.”

“எப்படி?”

“பிர்லா ஹவுஸ்ல காந்தி சுடப்பட்ட இடத்துக்குப்பின் பூஞ்செடிகளில் போலீஸால் கண்டெடுக்கப்பட்டது முதல் தோட்டா. காந்தியை எரியூட்டிய சாம்பலிலிருந்து கண்டெடுக்கப்பட்டது ரெண்டாவது தோட்டா. நீ சொல்ற தோட்டா மூணாவது.”

“அப்ப நிச்சயமா கோட்ஸே சுட்டதுலதான் காந்தி செத்தாரா?”

“ரெண்டடி தூரத்துல நின்னு மூணு முறை சுட்டும் 78 வயசுக் கிழவர் சாகலைன்னு நம்பறதே முட்டாள்தனம். மூணும் நெஞ்சைச்சுத்தி மூணு இஞ்ச் தூரத்துக்குள்ள.”

“காந்தியோட பாடில எத்தனை குண்டுக்காயம் இருந்துச்சு?”

“மொத்தம் அஞ்சு. மூணு காயம் குண்டு பாய்ஞ்சதால, குண்டு வெளிய வந்ததால ரெண்டு. ஒரு குண்டு உள்ளயே தங்கிடுச்சு. அதுதான் அவர் அஸ்தியில எடுத்தது.”

“பாடியை ஏன் போஸ்ட்மார்டம் செய்யல?”

“காந்தியின் குடும்பம் அதை விரும்பல.”

“ஆச்சரியமா இருக்கு ஸார்.”

“வேற ஏதும் கேள்வி இருக்கா?”

நன்றி சொல்லி விடைபெற்றாள். அவர் வாய்க்குதப்பலைத் துப்பிய சப்தம் துரத்தியது.

*

தினப்படி காலை உணவான ஒரு கோப்பை ஆரஞ்சுப்பழச்சாற்றை அருந்தியபின் களைப்பில் உறங்கிப்போன காந்தி, தானாக எழுந்து கழிவறை நோக்கி நடந்தார்.

“மிக வினோதம், பாபுஜி!”

“ஏன் மனு?”

“சமீப நாட்களில் நானன்றித்தனியாய் எங்கும் நீங்கள் நகர்ந்ததே இல்லை.”

“அது நல்லதல்லவா! தாகூர் சொல்லி இருக்கிறார்- தனியே நட, தனியே நட…”

மனுவுக்கு முந்தைய நாள் பிற்பகலில் நிகழ்ந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

பிரிவினையை ஒட்டிய மதக்கலவரங்களால் வீடிழந்த சில கிராம மக்கள் காந்தியைச் சந்திக்க வந்திருந்தார்கள். காந்தி அவர்களை ஆற்றுப்படுத்தினார். பழிதீர்ப்போம் என்று சொன்ன ஓர் இளைஞனை அதட்டி அடக்கினார்-

“பழிவாங்கலுக்கு முடிவே இல்லை, மகனே. கண்ணுக்குக்கண் என்பது உலகையே குருடாக்கும். ஒருவரது தவறுக்கு வேறு யாரையோ தண்டித்தல் என்ன நியாயம்?”

சட்டென வெகுண்ட அந்த இளைஞன் வெடித்துப் பேசினான்-

“இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் எங்கள் கைகளைக் கட்டிப்போட்டீர்கள். இப்படித் தான் எங்களை முழுமையாக அழித்தொழித்து விட்டீர்கள். இந்த தேசத்தை, இதன் அரசியலை விட்டு விட்டு எங்கேனும் இமயமலைப்பக்கம் போய் விடுங்களேன்…”

உடன் வந்திருந்தவர்கள் அவனை அடக்கி, அமைதிப்படுத்தி அழைத்துப்போனார்கள்.

மனு அச்சொற்களில் அதிர்ந்திருந்தாள். காந்தி நெடுநேரம் பேசாமல் யோசனையாக இருந்தார். அன்று இரவு உறங்கப்போகும் முன் மனுவிடம் காந்தி சொன்னார்-

“இவர்களின் அழுகுரல் கடவுளின் ஆணை போன்றது. இது எனக்கான மரண ஓலை!”

*

“புல்ஷிட்.”

சொன்ன சௌரப் மிஸ்ரா ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் பேராசிரியர். நவீன இந்திய வரலாறு அவரது ஆர்வம். முதலாளிக்கு நண்பர் என்ற வகையில் சபர்மதிக்கு நேரம் ஒதுக்கி இருந்தார். வார இறுதி என்பதால் பல்கலைக்கழகத்தில் அல்லாமல் அவரது வீட்டிற்கே வரச் சொல்லி இருந்தார்.

“காந்தியைச்சுட்ட துப்பாக்கி எம்1934 பெரெட்டா. செமிஆட்டோமேட்டிக் மாடல். அதன் சீரியல் நம்பர் 606824. அதே சீரியல் நம்பரில் இன்னொரு துப்பாக்கியும் இருக்குன்னு காந்தி கேஸை ரிஓப்பன் பண்ணக்கேட்கற ஆள் சுப்ரீம் கோர்ட் மனுவில் சொல்லி இருக்கார். அது பத்திச்சொல்லுங்க.” என்ற கேள்விக்குத்தான் அப்படிச்சொன்னார்.

“அது ஒண்ணும் நாட்டுத்துப்பாக்கி இல்ல. இட்டாலியன் மேட். ராணுவத்துக்கு ஆயுதம் செய்யறவங்க. சீரியல் நம்பர் ட்யூப்ளிகேட் ஆக வாய்ப்பே இல்லை.”

“அப்புறம் இப்படி ஒரு தியரி எப்படி வந்திருக்கும்?”

“606824 சீரியல் நம்பர் கொண்ட துப்பாக்கி ஒண்ணுதான். காந்தியைச் சுட்ட அன்னிக்கு கோட்ஸே கிட்ட இருந்து அதை சீஸ் பண்ணினாங்க. விசாரணை முடிஞ்சு தீர்ப்பு வந்ததும் நேஷனல் காந்தி மியூசியத்துக்கு அதைக்கொடுத்துட்டாங்க. அங்க அதுக்கு ட்யூப்ளிகேட் தயார் பண்ணி காட்சிக்கு வெச்சிருக்காங்க. ஒரிஜினலைப்பத்திரப்படுத்தி இருக்காங்க. அந்தவகைல வேணும்னா ரெண்டு துப்பாக்கின்னு சொல்லலாம்.”

“கோட்ஸேவுக்கு எப்படி அந்தத்துப்பாக்கி கிடைச்சுது?”

“காந்தி கொலைக்கு ரெண்டு நாள் முன்ன வரை கோட்ஸே க்ரூப்புக்குக்கிடைச்ச துப்பாக்கி ஏதுமே சரியா வேலை செய்யல. அதனாலதான் ஜனவரி 20 அன்னிக்குக் கையில் துப்பாக்கி இருந்தும் அவுங்களால அவரைக்கொல்ல முடியல. நல்லதா ஒரு துப்பாக்கி தேடிட்டு இருந்தாங்க. தத்தாத்ரேயா பார்ச்சூர்னு ஒரு டாக்டர். குவாலியர்ல ரைட் விங் பாலிடிக்ஸ்ல பெரிய கை. அவர்கிட்ட பெரெட்டா துப்பாக்கி இருக்குன்னு கேள்விப்பட்டு கோட்ஸே க்ரூப் அவர் வீட்டுக்குப்போனாங்க. தன் துப்பாக்கியை அவர் கொடுக்கல. கங்காதர் தண்டவதேன்னு ஒருத்தன் கிட்ட துப்பாக்கி ஏற்பாடு பண்ணச் சொன்னார். கடைசியில் ஜகதீஷ் பிரசாத் கோயல்னு ஒரு கள்ளத்துப்பாக்கி வியாபாரி மூலமா இந்த பெரெட்டா கிடைச்சுது. ஐந்நூறு ரூபாய் கொடுத்து வாங்கியிருக்காங்க.”

“பார்ச்சூர் வெச்சிருந்த பெரெட்டாவுக்கும் காந்தி கொலைக்கும் சம்மந்தமில்லையா?”

“இல்லை. காந்தி கொலைக்கு அப்புறம் பார்ச்சூரை விசாரிக்கப் போன போலீஸ் அவர் வீட்டுல இருந்த பெரெட்டாவைக் கைப்பற்றினாங்க. அதோட சீரியல் நம்பர் 719791.”

“அப்படின்னா நாலாவது தோட்டா அப்படிங்கறதே இல்லையா?”

“இருக்கு. குவாலியர்ல பார்ச்சூர் வீட்டுத்தோட்டத்துல சுடப்பட்ட ஒரு தோட்டாவைப் போலீஸ் எடுத்தாங்க. தண்டவதே கோட்ஸேவுக்கு முதலில் வேற துப்பாக்கிதான் ஏற்பாடு செஞ்சு, அதைத் தோட்டத்தில் வெச்சுச் சுட்டு டெமோ காட்டி இருக்கான். அடுத்து கோட்ஸே ட்ரை பண்ணினப்ப அது ஒழுங்காச்சுடல. அதனாலதான் தண்டவதே துப்பாக்கி தேடி அடுத்து ஜகதீஷ் பிரசாத் கோயல்கிட்ட போனான்.”

“அதாவது அந்தத் தோட்டாவுக்கும் காந்தி கொலைக்கும் சம்மந்தம் இல்லை?”

“ஆமா!”

“இன்னொரு விஷயம் நியூஸ்பேப்பர் ஆதாரங்கள். டைம்ஸ் ஆஃப் இந்தியா, The Dawn, லோக்சட்டா மாதிரி சில பத்திரிக்கைகள் நாலு குண்டுன்னு சொல்லி இருக்காங்க.”

“அதே சமயம் நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், த டெய்லி டெலகிராஃப் மாதிரி நிறைய பத்திரிக்கைகள் மூணு குண்டுனும் எழுதினாங்க. வரலாறுங்கறது அங்கும் இங்கும் கிறுக்கப்பட்ட சில வரிகளை ஆதாரமா வெச்சு எழுதப்படறதில்ல.”

“தி இந்து பத்திரிக்கை காந்தி படுகொலைக்கு அடுத்தநாள் வெளியிட்ட புகைப்படம் ஒண்ணு இருக்கு. அதில் நான்கு குண்டுக்காயங்கள் காந்தி நெஞ்சுல தெரியுதே.”

“சரியாப்பாருங்க, அதில் மூணுதான் குண்டுக்காயம். இன்னொண்ணு ரத்தக்கறை. பக்கத்துல இன்னொரு சின்ன ரத்தக்கறையும் தெரியும். அஞ்சாவது தோட்டாவா!”

“சரி, இத்தாலித் துப்பாக்கி எப்படி இந்தியா வந்துச்சு?”

“அந்த மாடல் முசோலினியோட ஆர்மிக்காக பெரெட்டா கம்பெனி தயாரிக்கறது. வடக்கு ஆஃப்ரிக்கா அபிசினியாவில் இத்தாலியப் படைகள், ப்ரிட்டிஷ் படையோட - ஃபோர்த் க்வாலியர் இன்ஃபான்ட்ரி - மோதுனப்பத் தோத்து சரண்டர் ஆனாங்க. அதுக்கு அடையாளமா இத்துப்பாக்கியை லெஃப்டினன்ட் கர்னல் ஜோஷிகிட்ட கொடுத்தாங்க. போர் முடிஞ்சு அவர் க்வாலியர் திரும்பினார். அப்படித்தான் துப்பாகி இங்க வந்துச்சு.”

“ஆனா அது எப்படி கள்ளமார்க்கெட் போச்சு?”

“தெரியல.”

“தண்டவதேவைப்பிடிச்சு விசாரிச்சாங்களா?”

“அவன் போலீஸில் கடைசி வரை சிக்கவே இல்லை.”

“பார்ச்சூர்?”

“அவர் அப்ப ப்ரிட்டிஷ் சிட்டிசன். அதனால அவரை ஒண்ணும் பண்ண முடியல.”

“அப்ப ஜகதீஷ் பிரசாத் கோயல்?”

“அவனை இந்தக் கேஸ்ல அக்யூஸ்டாவே போலீஸ் சேர்க்கல.”

“ஏன்?”

“தெரியாது.”

“அந்த பெரெட்டா துப்பாக்கியில எத்தனை குண்டு போட முடியும்?”

“மொத்தம் ஏழு ரவுண்ட் சுடலாம்.”

“கோட்ஸே துப்பாக்கி வாங்கின போது எத்தனை குண்டு இருந்துச்சு?”

“முழுக்க லோட் பண்ணித்தான் கொடுத்திருக்காங்க. பார்ச்சூர் சாட்சி இருக்கு.”

“கொலைக்குப்பின் துப்பாக்கியைக் கைப்பற்றினப்போ?”

“நாலு குண்டு இருந்துச்சு.”

“அப்ப மூணு தடவ சுட்டான்ங்கற கணக்கு சரியா வருது.”

“ஆமா. எனக்கு அதில் எப்பவும் சந்தேகம் இல்லை.”

“ஸ்பாட்ல கோட்ஸேகிட்ட இருந்து துப்பாக்கியைக் கைப்பற்றினது யாரு?”

“ஹெர்பெர்ட் டாம் ரீனர் அப்படின்னு யூஎஸ் எம்பஸி அதிகாரி ஒருத்தர்.”

“அவர் வாக்குமூலம் இருக்கா?”

“அவர் இந்தக் கேஸ்ல விட்னஸே இல்லை.”

“ஏன்?”

“தெரியல.”

“சுருக்கமா இந்த விஷயத்தில் உங்க ஸ்டேண்ட் என்ன?”

“கபூர் கமிஷன் மூணு வருஷம் உழைச்சுச்சொன்ன முடிவுகளை நம்பறேன்.”

“ஃபைன், கேஸோட எஃப்ஐஆர், சார்ஜ்ஷீட் எல்லாம் பார்க்கனுமே நான்.”

“துக்ளக் ரோட் போலீஸ் ஸ்டேஷன்லதான் கேஸ் பதிவாச்சு. அங்க போனா கிடைக்கலாம். ஆனா அதில் புதுசா என்ன கிடைக்கப் போகுது? ஃபன்னி.”

“தெரியல. ஆனா பார்க்கனும். தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம்.”

*

உண்ணாநோன்பின் உபபலனாக காந்திக்கு இருமல் மோசமாகி இருந்தது. பெனிசிலின் போன்ற மேற்கத்திய வைத்திய முறைகளை அவர் நம்புவதில்லை. அதற்குப்பதிலாக, பனை வெல்லத்துடன் பொடித்த கிராம்பு சேர்த்து எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். அன்று காலை கிராம்புப்பொடி தீர்ந்து போயிருந்தது. அதனால் மனு அவருடன் காலை நடைக்குச்செல்லாமல் அதைச்செய்யும் வேலையில் ஈடுபட்டாள்.

“இரவு விழும் முன் என்ன நடக்கும் என யாருக்குத்தெரியும், மனு? நான் உயிருடன் இருப்பேனோ என்னவோ! ஒருவேளை இருப்பின் செய்துகொள்ளலாம். இப்போது வா!”

காந்தியின் சொற்கள் சுட, மனு அவசரமாய் வந்து அவரை அணைத்தபடி நடந்தாள்.

*

ப்ரிட்டிஷ் காலத்துக் கட்டிடம் என்பது துக்ளக் சாலை காவல் நிலையத்தில் நுழையும் போதே புலப்பட்டது. ப்யூட்டி பார்லரிலிருந்து வெளியே வரும் கிழவி போல் காலம் ஈந்திருந்த சிதிலங்களை சமகாலப்பயன்பாட்டுக்குச் சீர் செய்ய முயன்றிருந்தார்கள்.

இந்திரா காந்தி கொலை வழக்கையும் கூட அங்கேதான் விசாரித்தார்கள் என அதன் செஞ்சுவற்றில் பதிக்கப்பட்ட வெண்கல்லில் பொறிக்கப்பட்ட குறுவரலாறு சொன்னது.

பத்திரிக்கையாளர் என்று அறிமுகம் செய்து கொண்டவுடன் இந்திரா காந்தி பற்றிய ஆவணங்கள் வேண்டுமா மஹாத்மாவுடையதா என ஆர்வம் காட்டினார் ஸ்டேஷன் ரைட்டர். அது ஒரு குட்டி சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது எனப்புரிந்தது.

எஃப்ஐஆர் காப்பி கேட்டாள். 68 என்ற எண் கொண்ட காந்தி படுகொலையின் முதல் தகவலறிக்கை உருது மொழியில் எழுதப்பட்டிருந்தது. உதட்டைப்பிதுக்கியபடி அதை வாசிக்க ரைட்டரின் உதவியைக்கோரினாள். ஆங்கிலத்தில் பெயர்த்துச்சொன்னார்-

“… Narayan Vinayak Godse, stepped closer and fired three shots from a pistol at the Mahatma from barely 2 / 3 feet distance which hit the Mahatma in his stomach and chest and blood started flowing.”

மூன்று முறை சுட்டதாகத்தான் இதிலும் பதிவாகி இருக்கிறது. நிகழ்வை நேரில் கண்ட சாட்சியான நந்த்லால் மேத்தா என்ற குஜராத்தியின் வாக்குமூலம் அது.

“கோட்ஸே தவிர அன்னிக்கு காந்தியை வேற யாரும் சுட்டிருக்க வாய்ப்பு உண்டா?”

“அன்னிக்கு பிர்லா ஹவுஸ்ல ப்ரேயர்ல முன்னூறு பேருக்கு மேல இருந்திருக்காங்க. இன்னொருத்தன் சுட்டுட்டு அவுங்களை மீறித்தப்பிச்சிட்டான்ங்கறத நம்ப முடியல.”

“கொலையில் பங்கேற்ற நாராயண் ஆப்தேவும், விஷ்ணு கார்கரேவும் அன்னிக்கு அங்க வந்துட்டு தப்பிச்சாங்க இல்லையா? பிற்பாடுதானே பிடிக்க முடிஞ்சுது?”

“இல்ல, அவுங்க நேரடியா கொலையில் பங்கேற்கல தானே? அவுங்க கோட்ஸே கூட வந்தாங்க, அவ்வளவுதான். சுட்டது கோட்ஸேதான். அவனைப பிடிச்சிட்டாங்க. அதே மாதிரி இன்னும் ஒருத்தன் சுட்டிருந்தா அவனையும் பிடிச்சிருப்பாங்கனு சொல்றேன்.”

“கோட்ஸேவைப் பிடிச்சது யாரு?”

“ரகு நாயக்னு பிர்லா ஹவுஸ்ல தோட்டக்காரனா இருந்தவன்.”

“அவனைப் பத்தி கூடுதல் தகவல் ஏதும் இருக்கா?”

“அவன்தான் காந்தியின் அறையைப்பராமரிச்சு வந்தவன். அவருக்கு ஆட்டுப்பால் கொடுத்துட்டு இருந்ததும் அவன்தான். அதுக்கு மேல வேற ஏதும் தகவல் இல்ல.”

“இப்ப உயிரோட இருக்கானா?”

“இல்ல, செத்துட்டான். 1983லயே.”

“காந்தியோட பாடிகார்ட்னு யாருமே இல்லையா?”

“இருந்தார். ஏ.என். பாட்டியான்னு ஒரு போலீஸ்காரரர் மஃப்டியில் எப்பவும் காந்தி கூடவே இருந்தார். ஜனவரி 20 குண்டுவெடிப்புக்குப்பின் எடுத்த நடவடிக்கை இது.”

“அவரை மீறியா கோட்ஸே சுட்டான்?”

“இல்ல. அன்னிக்கு அவர் அங்க இல்லை. வேற இடத்தில் ட்யூட்டி.”

“ஏன் அப்படி? யார் இதை முடிவெடுத்தது?”

“தெரியாது.”

“நிறைய ‘தெரியாது’ இருக்குதே ஒரு முக்கியமான கேஸ்ல!”

ரைட்டர் மண்டையைச்சொறிந்தார். அவருடைய எல்லை அவ்வளவுதான்.

“காந்தி சடலத்தின் வேட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட குண்டு பத்தி சொல்லுங்க.”

“காந்தியின் கடைசி மகன் தேவ்தாஸ் காந்திதான் இங்க வந்து அந்த மூணாவது புல்லட்டைக்கொடுத்தார். மனு காந்தி அதை அவர்கிட்ட கொடுத்திருக்காங்க.”

“இங்கன்னா இந்த ஸ்டேஷனா?”

“ஆமா. அப்ப கோட்ஸேவை அரெஸ்ட் பண்ணி துக்ளக் ரோட் ஸ்டேஷன்லதான் வெச்சிருந்திருக்காங்க. தேவ்தாஸ் வந்தப்பா அவரைப்பார்க்கனும்னு கலாட்டா பண்ணிருக்கான் கோட்ஸே. ஆனா போலீஸ் விடல. என்ன பேச நினைச்சானோ!”

கேஸ் சார்ஜ்ஷீட் பார்க்க வேண்டும் எனக்கேட்ட போது எல்லாக்கோப்புகளையும் தேசிய ஆவணக்காப்பகத்தில் முன்பே ஒப்படைத்து விட்டதாகச்சொன்னார்கள்.

*

மதியம் லைஃப் சஞ்சிகையின் பிரபலப் புகைப்படக்கலைஞரான மார்க்கரெட் வைட் காந்தியை நேர்காணல் செய்ய வந்திருந்தார்: “நீங்கள் 125 வயது வரை வாழ்வேன் என எப்போதும் சொல்லி வந்திருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையைத்தருவது எது?”

“அந்த நம்பிக்கை இப்போது இல்லை.”

“ஏன்?”

“உலகின் பயங்கர நிகழ்வுகள் காண்கையில் இந்த இருளில் வாழ விரும்பவில்லை.”

*

ஜன்பத் மற்றும் ராஜ்பத் சாலைகள் இணையும் புள்ளியில் நேஷனல் ஆர்க்கைவ்ஸ் ஆஃப் இந்தியா அமைந்திருந்தது. காந்தி கொலை வழக்கு தொடர்பான சில அரசு ஆவணங்களை அங்கே பார்த்தாள் சபர்மதி. தில்லி போலீஸ் வழக்கு விசாரணையை முடித்த பின் எழுதிய ஃபைனல் சார்ஜ்ஷீட்டைக்கேட்டாள். அடுத்து கோட்ஸேவுக்குத் தூக்கு தண்டனை வழங்கிய வடக்கு தில்லி செங்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவைப் பார்க்க வேண்டும் எனக்கேட்டாள். இரண்டுமே அங்கே இருக்கவில்லை.

அங்கே பொறுப்பிலிருந்த அழகான ஆனால் மீசையற்ற இளைஞனிடம் கேட்டாள்-

“அப்ப இரண்டாம் துப்பாக்கி, நான்காம் தோட்டா இதெல்லாமே பொய் தானா?”

“எல்லாம் கற்பனை. அப்படி எல்லாம் சொல்வதன் பின் தனிமனித கவன ஈர்ப்போ அரசியல் உள்நோக்கங்களோதான் இருக்கின்றன. பட் ப்ளீஸ் டோன்ட் க்வோட் மீ.”

*

முந்தைய தினம் நிகழ்ந்த சம்பவம் ஒன்று மனுவின் மனதிலோடியது. இந்திரா தன் நான்கு வயது மகன் ராஜீவுடன் காந்தியைப் பார்க்க வந்தார். கொணர்ந்த மலர்களை காந்தியின் கால்களில் வைத்தான் சிறுவன். தீன்மூர்த்தி பவனின் நந்தவனத்தில் அவனே பறித்துச்சேகரித்தது. காந்தி அவனை மடியில் அள்ளியமர்த்திக்கொண்டு-

“நீ இதைச்செய்யக்கூடாது. இறந்தவர்களின் கால்களில்தான் ஒருவர் பூ வைப்பார்.”

*

அறைக்குத் திரும்பிய போது சபர்மதி மிகக்களைத்திருந்தாள். ஒருபுறமாய்த் தலை விண்ணெனத் தெறித்தது. மிதச்சூட்டில் நீர் வழியவிட்டு நெடுநேரம் ஜக்கூஸியில் கிடந்தாள். மதிய உணவுக்குப்பின் ஹோட்டலை செக்கவுட் செய்தாள். இரவு பத்து மணிக்குத்தான் ஃப்ளைட். அதுவரை என்ன செய்வது என யோசித்த போது காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தைப்பார்க்கவே இல்லை என்று உறைத்தது.

*

மாலை வல்லபாய் படேல் தன் மகள் மணியுடன் காந்தியைச்சந்திக்க வந்தார். அரசில் நேருவுக்கும் அவருக்குமான முரண்கள் முற்றியிருந்தன. 5 மணிக்கு சந்திப்பு முடிந்து படேல் கிளம்ப வேண்டியது. ஆனால் 5:10 ஆகியும் உரையாடல் நீடித்திருந்தது.

பிரார்த்தனைக்கு நேரமாகி விட்டது என்பதை ஆபா சைகையில் காட்டியதை காந்தி கவனிக்கவில்லை. மனு மணியிடம் கண்கள் காட்டித்தாமதமாகி விட்டதென்றாள். புரிந்து கொண்ட மணி படேலிடம் அதைக்கிசுகிசுக்க, அவர் விடை பெற்றெழுந்தார்.

காந்தியைச்சந்திக்க கதியவாரிலிருந்து முக்கியத் தலைவர்களான யூஎன் தேபரும் ராசிக்லால் பரேக்கும் காத்திருந்தனர். மனு அதை காந்திக்குத்தெரியப்படுத்தினாள்.

“பிரார்த்தனைக் கூட்டத்துக்குப்பின் பார்க்கிறேன் என அவர்களிடம் சொல். அதுவும் நான் உயிரோடு இருந்தால்…”

மனுவுக்குத் திக்கென்றது. இரும்பு மனிதரான படேலே அச்சொற்களில் ஆடிப்போனார்.

*

தில்லியின் பெண்மைமிக்க குளிர் செந்தரையில் பரவிப்பிரதிபலித்துப் பாதங்களில் சில்லிட்டது. காந்தி இறுதியாய் நடந்த பாதையில் பாத அடையாளங்கள் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். பரதன் வாங்கிச்சென்ற ராமனின் பாதரட்சை போல் அவை ஒவ்வொன்றும் காட்சியளித்தன. சபர்மதி அதை அடியொற்றி நடந்து சிலிர்த்தாள்.

பிர்லா ஹவுஸ் காந்தி ஸ்ம்ரிதி ஆகிவிட்டது. அச்சாலையின் பெயரே இப்போது தீஸ் ஜனவரி மார்க் தான். தோட்டத்தில் காந்தி சுடப்பட்ட இடத்தில் சிறுமண்டபம் எழுப்பி இருந்தார்கள். அந்த ஞாயிறு மாலையிலும் அங்கே கூட்டமே இல்லை. சென்னை காந்தி மண்டபம்போல் ஆகாத வரை சந்தோஷம்தான் என எண்ணிக்கொண்டாள்.

முக்கால் காற்சட்டை அணிந்து தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தவர் காலணியைக் கழற்றி விட்டுப் போ என்று சைகையால் சொன்னார். தன் முகத்தைப்பார்த்து இந்தி தெரியாதவள் என்று தீர்மானித்திருக்க வேண்டும். செருப்பைப்பிரிந்து நடந்தாள்.

மண்டபத்தின் முன் ஒரு மூதாட்டி மண்டியிட்டுக்கண்கள் மூடி இருந்தாள். அழுது கொண்டிருக்கிறாளோ எனத்தோன்றியது. எப்படியும் எண்பது வயதிருக்கும். அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் மெல்ல அடியெடுத்து வைத்து மண்டபத்தைச்சுற்றி வந்தாள். சற்று நேரம் நின்று பார்த்தாள். கிழவி கண் திறப்பதாய்த்தெரியவில்லை.

பொறுமை இழந்து நகர எத்தனித்த போது, “எனக்காகக்காத்திருக்கிறாயா பெண்ணே?”

திடுக்கிட்ட சபர்மதி சன்னமாய்ச்சங்கடப்பட்டாள். இன்னுமவள் கண் திறக்கவில்லை.

“இல்ல… சும்மாதான்…”

இப்போது கண் திறந்து இவள் பக்கம் திரும்பிப்புன்னகைத்தாள். எழுந்து கொண்டாள்.

“குடும்பத்துடன் தில்லிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ராஜ்காட்டுக்குச்செல்வார்கள், ஐம்பது ரூபாய் கொடுத்து இன்ஸ்டண்ட் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள், இந்தப் பக்கம் வர மாட்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2018 20:02

December 22, 2017

சேர நன்னாட்டிளம் பெண்கள்


முதலில் சில Disclaimer-களைச் சொல்லி விடுகிறேன். 1) இதில் நான் பேசப் போவது முழுக்க முழுக்கப் புறத்தோற்றத்தை அடிப்படையாக வைத்தே. பெண்களின் தனி ஆளுமை, குணநலன்கள் போன்றவற்றை எல்லாம் இதில் கணக்கில் கொள்ள வில்லை. 2) நான் முன்வைப்பது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையை (Fact) அல்ல; ஒரு தமிழ் ஆணாக என் பார்வையை (Perception) மட்டுமே. அதனால் இதில் சிலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். அதில் வியப்பில்லை.


"மலையாளப் பெண்கள் பிரபஞ்சம் காணாத பேரழகிகள்" என்பது நம் தமிழ் மண்ணில் நிலவும் ஒரு பிரபலக் கருத்தாக்கம்.

கவனித்துப் பார்த்தால் தமிழ் ஆண்களுக்கு கேரளப் பெண்களின் மீது ஓர் Obsession இருக்கிறது. அதாவது பித்து. நம்முடைய உயிரியல் விழைவு - Biological urge - அது என்றே சொல்ல வேண்டும். தமிழகத்தில் காலங்காலமாய்க் கோலோச்சி வரும் மலையாள நடிகைகளே இதற்குப் பெரும்சாட்சி. தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் எந்த‌ ரயிலை மறித்தாலும் நமக்கு நூறு கதாநாயகிகள் உத்திரவாதமாய்க் கிடைப்பார்கள். இது ஏதோ இன்று நேற்று நமக்கு வந்த திடீர் உணர்வல்ல; நூற்றாண்டுக்கும் மேலாய் நம்மிடையே நிலவி வரும் பாரம்பரியம் தான்! பாரதியார் பாரத தேசம் என்று ஒரு கவிதை எழுதுகிறார். வங்கத்தின் நீர் வளம், கங்கையின் செழிப்பு, தென்கடலின் முத்துக்கள், தெலுங்கு மொழிவளம், கன்னடத் தங்கம், மராட்டியர் கவிதை, ராஜபுத்திரர் வீரம், காசிப் புலவர்கள் என இந்தியாவின் ஒவ்வொரு பிரதேசத்தையும் அதில் வர்ணிக்கும் பாரதி இடையே 'சேர நன்னாட்டிளம் பெண்கள்' என்கிறார். ஒட்டுமொத்தக் கவிதையிலும் அவர் பெண்கள் பற்றிப் பேசுமிடம் அது ஒன்று தான். ஆக, பாரதி காலத்திலிருந்தே மலையாளப் பெண்கள் மீது ஓர் ஈர்ப்பு இருந்திருக்கிறது.

இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு. இந்திப் பெண்கள் Fair; கன்னடப் பெண்கள் Cute; தெலுங்குப் பெண்கள் Attractive; தமிழ்ப் பெண்கள் Beautiful; இவை அனைத்தையும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள் மலையாளப் பெண்கள்!

அப்படி என்ன அவர்களிடம் நமக்கு ஈர்ப்பு? யோசித்துப் பார்த்தால் ஏழெட்டு விஷயங்களைப் பட்டியலிடத் தோன்றுகிறது!

1) நிறம்: மலையாளப் பெண்கள் பொன்னிறம் கொண்டவர்கள். அவர்களிடம் இயற்கையிலேயே தோலில் ஒரு மினுமினுப்பு இருக்கிறது. எண்ணெய் தவிர்த்த, காரம் குறைத்த, தேங்காய் நிறைந்த‌ அவர்களின் உணவுப் பழக்கமும் கேரளத்தின் தட்ப வெப்பமும் நிலவியலும், ஒருவகையில் அவர்களின் கலாசாரமும் கூட‌ அதற்குக் காரணமாக இருக்கலாம். வட இந்தியப் பெண்களுக்குப் பொதுவாய் வெள்ளைத் தோல். நம்மவர்களுக்கு அவ்வளவு வெள்ளை பிடித்தமில்லை. அதனால் தான் இடைப்பட்ட பொன்னிறத்தைக் கொண்டாடுகிறார்கள். "உன் தங்க நிறத்துக்குத் தான் தமிழ் நாட்டை எழுதித் தரட்டுமா?" என்ற ரீதியிலேயே மலையாள நடிகைகளைத் தொடர்ச்சியாய் நாம் வெற்றி பெற வைத்துக் கொண்டிருக்கிறோம்.

2) தோற்றம்: மலையாளப் பெண்களின் தோற்றத்திற்கு ஒரு தனித்துவம் இருக்கிறது. குறிப்பாய் அவர்களின் கண்கள் மற்றும் கூந்தல். அப்படியே ஆளைத் தின்று விடும் கண்களும், அடர்த்தியும் நீளமும் ஒருசேரப் பெற்ற கூந்தலும்.

3) உடல்வாகு: தமிழர்களுக்கு ஒல்லியான பெண்களும் ஆகாது, குண்டான பெண்களும் பிடிக்காது. அவர்கள் விரும்புவது இரண்டுக்கும் மத்தியில் ஒன்று. பூசினாற்போல் இருக்க வேண்டும். தமிழகத்தில் வெற்றி பெற்ற நடிகைகளான குஷ்பு, நயன்தாரா, ஹன்சிகா எல்லோரும் அப்படியான உடல்வாகு கொண்டவர்கள் தாம். சமீபத்தில் பரபரப்பான ஜிமிக்கி கம்மல் ஷெரில் கூட அப்படிப்பட்டவர் தான். மலையாளப் பெண்கள் பொதுவாய் இப்படியான உடல்வாகு கொண்டவர்களே.

4) மொழி: தமிழில் வலுவான சமஸ்கிருதக் கலப்பு நேர்ந்ததில் உருவானது மலையாளம். அம்மொழிக்கு இயற்கையிலேயே ஒரு லயம் (ஓசை நயம்) இருக்கிறது. அதை எழுதினால் Poetic; பேசினால் Musical. நம் தமிழில் எழுத்தின் ஒலி அளவை மாத்திரைகளால் அளவிடுவது போல் மலையாளத்தை மிட்டாய்களால் அளவிடுவார்கள் போலிருக்கிறது. அதனால் தான் மலையாளத்தை யார் பேசினாலும் அழகாக இருக்கிறது; மலையாளப் பெண்கள் என்ன‌ பேசினாலும் அழகாக இருக்கிறது.

5) உடல் மொழி: மலையாளப் பெண்டுகளுக்கு ஒரு பிரத்யேக‌ உடல் மொழி வாய்த்திருக்கிறது. மலையாளப் பெண்கள் சிறப்பாக நடனமாடக் கூடியவர்கள் அல்லர். சமீபத்தில் வைரலான ஜிமிக்கி கம்மல் பாடலில் கூட நடனம் அத்தனை சிறப்பானதோ சிரமமானதோ அல்ல. அதில் ஒரு குழந்தைத்தனம் தான் இருக்கிறது. இடுப்பில் செட்டு ஸாரியைச் இறுகச் செருகிய இளம் பெண்களிடம் அந்தக் குழந்தைத்தனம் வெளிப்படும் போது ஆட்டமே வசீகரமானதாய் மாறி விடுகிறது. It's a magic! 'அழகிய சூடான பூவே' பாடலில் வரும் கீர்த்தி சுரேஷின் நடன அசைவுகளையும் இதோடு ஒப்பு நோக்கலாம்.

6) முகபாவனை: மலையாளப் பெண்களின் முகபாவனைகள் - அதாவது Facial Expressions - பேரழகானவை. உதாரணமாய் அவர்கள் ஆச்சரியப்படுகையில் "அய்யடா!" எனப் பாவனை காட்டுவார்கள். அது அத்தனை அழகாய் இருக்கும். அதற்கு வீழாத தமிழனே இருக்க முடியாது. மலையாள மாந்த்ரீகம் என்று சொல்லப்படுவது கூட அது தானோ எனத் தோன்றும்.

7) அலங்காரம்: கண்களும் கூந்தலும் ஒட்டுமொத்த‌ மலையாளப் பெண்களின் அழகியல் தனித்துவம் எனச் சொன்னேன். அந்த இரண்டுக்கும் அவர்கள் பார்க்கும் பாங்கு அலாதியானது. கண்ணுக்கு மையிடாத, கூந்தலில் மலர் சூடாமல் வெளியே வரும் மலையாளப் பெண்களைக் காண்பதரிது. எப்போதும் தம்மை அழகாக வெளிப்படுத்தும் தன்முனைப்பு ஒன்று அவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். சிறுவயது முதலே அவர்கள் கேட்கும் யட்சி கதைகள் அதற்குக் காரணமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. மலையாளப் பெண்கள் உள்ளூரத் தங்களை ஒரு யட்சியாகக் கருதிக் கொள்கிறார்கள். தாம் அழகாக வெளிப்பட விரும்புகிறார்கள். அதற்கு உறுத்தாத அலங்காரத்தைக் கைகொள்கிறார்கள். தமக்குச் சரியாய்ப் பொருந்துவது எது என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆடைத் தேர்வுகளிலும் இது புலனாகிறது.

8) சகஜத்தன்மை: இது நேரடியாய் அழகு தொடர்புடையதல்ல என்றாலும் மலையாளப் பெண்டிரின் மீதான ஈர்ப்புக்கு ஒரு முக்கியக் காரணியாக இருப்பதாகக் கருதுவதால் இதையும் பட்டியலில் சேர்க்கிறேன். மலையாளப் பெண்கள் அணுக எளிதானவர்கள். நேரம் கேட்டால் முறைத்துப் போகிறவர்கள் அல்ல. மேலோட்டமாகவேனும் வெளிப்படையானவர்கள். தவிர, உற்சாகமானவர்கள். அவர்களிடம் ஒரு தமிழ் ஆண் எளிதில் பேச, பழக, ஒன்ற முடிகிறது. அந்த நட்பார்ந்த உணர்வு அவர்களைப் பார்க்கையில் இயல்பாகவே வந்து விடுகிறது. ஓவியாவைப் பொருத்தமான உதாரணமாகச் சொல்லலாம்.

ஏன் அப்படித் தமிழ் ஆண்கள் கேரளப் பெண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள்? முதல் காரணம் Geographical Vicinity. தமிழகத்துக்கு அருகில் இருக்கும் மாநிலம் கேரளம் தான். அதனால் அவர்களைப் பார்த்து 'அக்கரைப் பச்சை' என்ற எண்ணம் நமக்கு வர வாய்ப்பதிகம். நம் முறைப்பெண்ணை விட பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுப் பெண்கள் எப்போதும் வசீகரமானவர்களே!

அடுத்து கேரளாவின் பால் விகிதம் (Sex Ratio). அங்கே 1000 ஆண்களுக்கு 1084 பெண்கள். பரவலாக ஒருவனுக்கு ஒருத்தி என்பது நடைமுறையில் இருக்கிறது என்றும், கல்யாணம் செய்யாதவர்கள், பலதார மணம் செய்தவர்கள் இரண்டும் ஒன்றை ஒன்று சமன் செய்து விட்டது என்றும் வைத்துக் கொண்டால் ஆயிரத்துக்கு சுமார் 10% கேரளப் பெண்கள் வேளி மாநில ஆண்களைத் தான் திருமணம் செய்ய வேண்டும். ஆக, தமிழகத்தில் இருக்கும் கேரளப் பெண்கள் ஒருவகையில் Potential Brides என நம்மவர்கள் பார்க்கும் சாத்தியமுண்டு. அது உள்ளூர ஒரு கிளுகிளுப்பை ஊட்டி ஈர்ப்பையளிக்கும்.

மூன்றாவது காரணம் வரலாற்றுப்பூர்வமானது; உளவியல்ரீதியானது. மலையாளப் பெண்கள் சுமார் இருநூறு ஆண்டுகளாக தமிழகம் முழுக்கப் பரவலாக செவிலிகளாகப் (Nurses) பணிபுரிகிறார்கள். அவர்கள் மீது தாய்மைத்தன்மை பொருந்திய பிம்பத்தை அது தமிழர்கள் மத்தியில் ஊட்டி இருக்கும். ஆழ்மனதில் இருக்கும் அப்பிம்பத்தின் காரணமாக அவர்கள் மீது இயல்பாகவே ஒரு பிரேமை நமக்கு வந்து விடும். விநாயகர் தன் தாய்  பார்வதி போலவே தான் மனைவி எதிர்பார்த்தார் என்பதால் தான் பிரம்மச்சாரியாகவே இருக்கிறார் என்றொரு கதை நம்மூரில் உண்டு என்பதை இணைத்துப் பார்க்கலாம்.

இன்னொரு விஷயம் தமிழர்கள் மட்டுமே கேரளப் பெண்களே பேரழகு என நம்புவதாய்த் தோன்றுகிறது. இந்திய அளவில் அல்லது மற்ற மாநிலங்களில் அப்படி ஒரு நம்பிக்கை இருப்பதாய்த் தெரியவில்லை. விதிவிலக்குகள் தவிர்த்து பாலிவுட் சினிமாவில் மலையாள நடிகைகள் ஆதிக்கம் செலுத்தாததை ஆதாரமாகச் சொல்லலாம். ஆக, இது தமிழ் ரசனை மட்டுமே.

இறுதியாக, கேரளத்தை God's Own Country என்கிறார்கள். கடவுளின் தேசத்தில் தேவதைகள் திரிவது என்பது இயல்பு தானே!

***
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 22, 2017 01:37

November 11, 2017

கூற்றை வெல்லும் அறம்


முதலில் திரையுலகின் சுரண்டல்களையும் முதுகு குத்தல்களையும் தாண்டி காலம் தாழ்ந்தேனும் மேலேறி வரும் இயக்குநர் கோபி நயினாருக்கு வாழ்த்துக்கள்; மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவது என்ற முக்கியப் பிரச்சனையில் அரசை விமர்சிக்கும் ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்த நயன்தாராவுக்குப் பாராட்டுக்கள்.


இதை மசாலா படமாக அல்லாமல் யதார்த்தப் படமாகவே அணுகினேன். அந்த அடிப்படையிலேயே என் பார்வையை எழுதுகிறேன். நல்ல ப்ளாட் என்றாலும் படம் ஒட்டுமொத்தமாய் எபவ் ஆவரேஜ் தான். காரணம் திரைக்கதை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. முதல் இருபது நிமிடங்கள் நம்பிக்கையே இன்றித்தான் நகர்ந்தன. பின் குழந்தை குழியில் விழுந்தது முதல் இடைவேளை வரை படம் பெரும்பாலும் அசத்தல். இரண்டாம் பாதியில் பேரிடர் மீட்புக் குழு வந்து முயன்று தோற்பது வரையிலும் கூடத் தொய்வில்லை. இறுதி அரை மணியில் மாவட்ட‌ ஆட்சியர் செய்யும் முயற்சிகள் முழுக்க உணர்ச்சிகரமாகவே மாறி விடுவதால் ஒரு நல்ல த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படம் தடுமாறுகிறது.

பையன் நீச்சலில் சூரன் என்பது போக மற்ற யாவும் திணிக்கப்பட்டது அல்லவா! அந்தக் கிராமத்துக்குத் தண்ணீர் பஞ்சம் என்பதும், அதற்கு தண்ணீர் பாட்டில் நிறுவனங்கள் காரணம் என்பதும், அதனால் சிறுவனுக்கு காது கேளாமை ஏற்படுகிறது என்பதும் படத்திற்கு எந்த வகையில் தேவையானவை? (தண்ணீர் பஞ்சம் என்பதால் தான் ஆழ்குழாயில் தண்ணீர் வரவில்லை, மூடாமல் வைத்திருந்தார்கள் என்று சொன்னால் சிரிப்பேன். படம் எங்கெல்லாம் அரசியல் பேச முயன்றதோ, அங்கே எல்லாம் துருத்திக் கொண்டு நிற்கிறது. காரணம் அவை எல்லா இடங்களும் செயற்கையாகப் பட்டன.

படம் நெடுக வரும், படத்தின் மையக் கருத்தை முன்வைக்கும் கிட்டியும் நயன்தாராவும் பேசிக் கொள்ளும் வசனங்கள் இயற்கையாகவே இல்லை. அதை இன்னும் கூர்மையாக, அதே சமயம் எதார்த்தமாக அமைத்திருக்க முடியும் என நம்புகிறேன். இப்போது அது "மக்களுக்காக, மக்களுக்காக" என்று ஓர் அரசு அதிகாரி பேசும் செயற்கையான பஞ்ச் டயலாக்களாகவே எஞ்சுகின்றன. இந்த இடத்தில் குருதிப்புனலில் கமலும் நாசரும் பேசிக் கொள்ளும் பல காட்சிகள் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன. அதற்கு இணையாய் வந்திருக்க வேண்டியவை இவை. போலவே நயன்தாரா மக்களைச் சமாதானப்படுத்தும் காட்சிகள் (தண்ணீர் கேட்டுப் போராட்டம், போலீஸ் கல்வீச்சுக்குப் பின்), ஊடகங்களைச் சமாதனப்படுத்தும் காட்சிகள் எதிலுமே உயிர்ப்பும் தர்க்கமும் இல்லை. "என் பிள்ளையை எடுத்துக்கொள்" என்று பெண்கள் எல்லோரும் முன்வரும் காட்சியில் மயிர் கூச்செரிய வைக்கும் முயற்சியில் சிரிப்பு வந்து விடுவது அசம்பாவிதம் தான்.

நயன்தாரா பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆவது போல் காட்டுவதும் ஒரு மிகை தான்.

நியூஸ் 18 விவாதத்தைக் காட்டுவது எல்லாம் சரி தான். ஆனால் அதை இத்தனை நீளமாக இடம் பெறச் செய்யும் போது ஆவணத்தன்மை வந்து சேர்ந்து வந்து விடுகிறது. இத்தனைக்கும் அவை எல்லாமே கருத்தாழம் மிக்க வாதங்கள் என்றும் சொல்லி விட முடியாது. (அதிலும் அ. முத்துகிருஷ்ணன் பேச்சு வார்த்தைஜாலமாகவே இருந்ததாய்ப்பட்டது.)

கவுன்சிலர் கைது எப்படி என்றெல்லாம் காட்டப்படவில்லை. அதற்கு முன் அது கூடாது என மிரட்டும் எம்எல்ஏ அதற்கடுத்த காட்சியில் அது பற்றி ஒரு வார்த்தையும் பேசாது, சிறுவனைக் குழிக்குள் இறக்கக்கூடாது என்று மட்டும் சொல்கிறார்.

நயன்தாராவின் நடிப்பு எனக்கு எப்போதும் ஒரே மாதிரி தான் இருப்பது போல் தோன்றும். இதிலும் நயக்க ஏதுமில்லை.

படம் பேசும் அரசியல் தான் என்ன? அரசு அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட முடிவதில்லை; நகர மக்களின் உயிரளவு கிராம மக்களின் உயிர் மதிக்கப்படுவதில்லை. அடிப்படையான மக்கள் பிரச்சனைகளைக்கு அரசு காசு செலவு செய்வதில்லை. அரசு அதிகாரிகள் பெரும்பாலானோர் அலட்சியம் மிக்கவர்கள். தண்ணீரை சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் உறுஞ்சுகின்றன. இவை எல்லாமே பேசப்பட வேண்டிய விஷயங்களே. அதுவும் "Democracy is not merely a form of Government... It is essentially an attitude of respect and reverence towards fellowmen." என்றெல்லாம் அம்பேத்கரின் Annihilation of Caste நூலின் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசும் ஓர் அழகான கம்பீரமான இளம் பெண் மாவட்ட ஆட்சியரைப் பார்த்தால் மெய்யோடு சேர்ந்து மனமும் சிலிர்க்கத்தான் செய்கிறது. மெர்சல் போன்ற படங்கள் போகிற போக்கில் பேசிய ஓரிரு வரிகளைப் பேசாமல் இந்தப் படம் ஆன்மசுத்தியோடு அரசியல் பேச முயன்றிருப்பது நம் வணக்கத்துக்குரியதே.

என் வரையில் இறுதியில் படம் வைக்கும் தீர்வு ஆபத்தானதே. மக்கள் பிரச்சனைகளுக்கு அரசு உதவாது என்று சொல்ல வருவது போல் இருக்கிறது. அதாவது மக்களே தான் அவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் முனையும் போது அரசு அதிகாரிகள் அதைத் தடுக்கக்கூடாது அல்லது ஊக்குவிக்க வேண்டும் என்ற தொனி. மிக எதிர்மறையான பரப்புரை இது. அதை ஒரு நக்சல் மனோபாவம் என்றே பார்க்கிறேன். மக்களே சட்டத்தைக் கையிலெடுப்பது தான் ஜனநாயகமா என்ன? அதை ஒரு அரைகுறை அரசியல் பாடமாகவே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

மாறாக பெரும்பாலான‌ அரசு அதிகாரிகள் திறமையற்றவர்களாக‌ அல்லது பொறுப்பற்றவர்களாக இருக்கும் போது ஓர் அரசு அதிகாரி தன் திறமையால், அர்ப்பணிப்பால் மீட்கிறாள் (உதாரணமாய் அந்த ரோபோ ஆளை வரவழைத்து அவரது கருவியைப் பயன்படுத்த வைத்தல் அல்லது வேறு க்ரியேட்டிவ் மார்க்கங்கள் ஏதேனும்) என்பது மாதிரி இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும் எனத்தோன்றுகிறது. அப்படியான அதிகாரிகள் இன்றைய தேதியிலும் இருக்கத்தான் செய்கின்றனர்.

விண்வெளி ராக்கெட்டிற்கு பல கோடிகள் செலவு செய்யும் அரசு மக்களின் தேவைகளைக் கண்டுகொள்வதில்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ராக்கெட்டை இழுக்காமலேயே இதைச் சொல்லலாம் என்றே நினைக்கிறேன். செயற்கைகோள்கள் கிராம மக்களுக்குப் பயன்படும் வகையில் செயல்படுத்தப்படுவதில்லை என்றொரு விமர்சனமும் படத்தில் இருக்கிறது. (அது உண்மை எனும்பட்சத்தில் களையப்பட வேண்டியதே.) அதை நிறுத்தித் தான் மக்கள் பிரச்சனைகள் சரி செய்யப்பட வேண்டும்  என்ற நிலையில் இந்தியா இல்லை. மக்கள் பிரச்சனைகள் கவனிக்கப்படவில்லை என்பது அரசியல் பிரச்சனை. அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளின் பிரச்சனை. அது தாண்டி அதிகாரிகளின் அலட்சியம் சம்மந்தப்பட்டது. லஞ்சம் மற்றும் ஊழலோடு நெருங்கிய தொடர்புடையது. இன்னும் இன்னும் இறங்கினால் மக்கள் வாக்குரிமையைச் சரியாய்ப் பயன்படுத்துவதில்லை என்ற இடத்தில் வந்து நிற்கும். அனைத்து மட்டங்களிலும் சரி செய்யப்பட வேண்டிய விஷயம். அதை எல்லாம் தாண்டி மிக எலிமெண்டரியாக‌ அரசியலையும் அறிவியலையும் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.

இவற்றைச் சரி செய்திருந்தால் இந்தியன் பனோரமாவில் ஆஸ்கர் விருதுக்குக் கூட இப்படம் அனுப்பப்பட்டிருக்கக்கூடும்.

எடுத்துக் கொண்ட கரு, பிடிவாதமும் புத்திசாலித்தனமும் மனிதநேயமும் கொண்ட மாவட்ட ஆட்சியர் பாத்திரம், பல்வேறு அரசு அதிகாரிகள் குறித்த ய‌தார்த்தமான சித்தரிப்பு, ராக்கெட் விடுவது எதற்கு என்றே தெரியாத கிராம மக்கள், ஆனாலும் நாட்டுக்குப் பெருமை என்பதால் மிட்டாய் கொடுப்போம் என்று சொல்லும் பெண், க்ளைமேக்ஸில் எல்லாம் முடிந்த பின் ராக்கெட் சீறிப் பாயும் காட்சி, கபடி கபடி ரொமான்ஸ் காட்சி, குழந்தையை மீட்க முயலும் முற்பாதிக் காட்சிகளின் நம்பகத்தன்மை, வேல. ராமமூர்த்தியின் நடிப்பு, குழந்தைகளின் தாய் - தந்தையாய் நடித்திருக்கும் ராமச்சந்திரன் துரைராஜ், சுனுலக்ஷ்மியின் உணர்ச்சிகரம் எனப் பாராட்ட பல விஷயங்கள் படத்தில் உண்டு என்பதையும் குறிக்க விரும்புகிறேன்.

நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு கலைப்படைப்பாக இப்படம் அதற்குரிய இடத்தில் மட்டும் வைத்துப் பார்க்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். மீண்டெழும் இயக்குநரை வரவேற்கும் உணர்ச்சிவயத்தில் கூடுதல் மதிப்பெண் வழங்கத் தேவையில்லை. அது தான் அவருக்கும் உதவிகரமாய் இருக்கும்.

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2017 08:25

November 2, 2017

மாநில சுயாட்சி என்பது மாயையா?


“The Federation is a Union because it is indestructible.” - B.R. Ambedkar

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதா தற்கொலை தொடர்பான பேச்சிடையே நீட் தேர்வை முன்வைத்து கல்வி தொடர்பான சட்டங்களை இயற்றும் உரிமை மாநிலங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிட்டார் கமல். மாநில சுயாட்சிக் கோரிக்கை தொடர்பான நெடிய வரலாற்றில் ஒரு சிறுகுரல் தான் அது. சொல்லப் போனால் கமல் கேட்ட உரிமை ஏற்கனவே மாநில அரசுகளுக்கு உண்டு - ஆனால் ஏட்டளவில் மட்டும்.


அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என வர்ணிக்கிறது (“India, that is Bharat, shall be a Union of States.” - பிரிவு 1) என்றாலும் அதில் நம் நாட்டின் அரசமைப்பைச் சுட்ட கூட்டாட்சி (Federal), கூட்டமைப்பு (Federation) போன்ற சொற்கள் எங்குமே நேரடியாய்ப் பயன்படுத்தவில்லை எனினும் இந்திய அரசியலைப்புச் சட்டம் கூட்டாட்சித்தத்துவத்தையே முன்வைப்பதாக நம்பப்படுகிறது. காதல் என்ற சொல்லை எங்குமே பயன்படுத்தாமல் இல்லாமல் திருக்குறள் காதலைச் சொல்லவில்லையா!

கூட்டாட்சி என்றால் என்ன? அது கூட்டணி ஆட்சி (Coaliation) அல்ல. மாநிலங்களை ஒன்றிணைத்த ஒரு தேசிய அரசுக்கும் (Central) அந்த மாநில அரசுகளுக்குமான (States) அதிகாரப் பகிர்வைக் குறிப்பது. இதற்கான சிறந்த உதாரணம் அமெரிக்கா தான். அது ஐக்கிய மாகாணங்களின் (United States) தொகுப்பே. அந்த மாகாணங்களுக்குப் பல அதிகாரங்கள் உண்டு. அமெரிக்க அரசுக்கு வேறு சில அதிகாரங்கள். இரண்டும் மோதும் இடங்களில் புரிந்துணர்வுடன் முடிவெடுக்க கூட்டாட்சி முறை உதவும்.

இதற்கு நேர் எதிரான நிலை என ஒற்றை அரசு முறையைச் (Unitary) சொல்லலாம். Federal முறை Federation-ஐ உருவாக்கும்; போலவே Unitary முறை Union-ஐ உருவாக்கும். இங்கிலாந்து ஓர் உதாரணம். அங்கே பிராந்தியங்களுக்கென தனிப் பிரதிநிதித்துவம் ஏதும் கிடையாது. மொத்தச் சிந்தனையும் தேசிய அளவில் மட்டும் தான். சீனா, ஜப்பான், ஃப்ரான்ஸ், இத்தாலி போன்றவையும் இவ்வகை அரசு கொண்ட நாடுகளே!

பெயரிலேயே ஒன்றியம் என்று இருந்தாலும் இந்தியாவை ஏன் கூட்டமைப்பாய்ப் பார்க்கிறோம்? மிக முக்கியமான ஆறு காரணங்கள்: 1) இங்கே இரண்டு அரசுகள் உண்டு: மத்திய அரசு, மாநில அரசுகள். 2) இவ்விரு அரசுகளுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 3) ஈரவை முறை (ராஜ்யசபா & லோக்சபா, சில மாநிலச் சட்டமன்றங்களிலும் கீழவை உண்டு. 4) அரசியல் சாசனத்தின் உச்ச ஆதிக்கம். 5) அரசியல் சாசனத்தின் பகுதி உறுதித்தன்மை. 6) சுதந்திரமான நீதிபரிபாலனம்.

இந்தியா கூட்டாச்சி அல்ல என்று சொல்லத்தக்க அம்சங்களும் உண்டு. 1) ஒற்றை அரசியல் சாசனம் (காஷ்மீர் விதிவிலக்கு). 2) ஒற்றைக் குரியுரிமை (கூட்டாட்சியில் பொதுவாய் மாநிலத்துக்கு ஒரு குடியுரிமை, தேசத்துக்கு ஒரு குடியுரிமை இருக்கும். அமெரிக்காவில் அப்படித்தான்.) 3) அரசியல் சாசனத்தின் நெகிழ்தன்மை (சாசனத்தில் திருத்தங்கள் கொண்டு வர பொதுவாய் மாநிலச் சட்டசபைகளின் ஒப்புதல் தேவை இல்லை. ஆனால் அமெரிக்காவில் நான்கில் மூன்று பங்கு மாகாணங்களின் ஒப்புதல் தேவை.) 4) ஒருங்கிணைந்த நீதியமைப்பு. 5) மத்திய அரசின் நியமன முறை. 6) அகில இந்தியப் பணிகள். 7) அவசரநிலை அதிகாரங்கள். 8. சமமற்ற மாநிலப்பிரதிநிதித்துவம் (பாராளுமன்ற மேலவையான ராஜ்யசபாவின் அங்கத்தினர் மாநிலச் சட்டசபையால் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றாலும் அதில் எல்லா மாநிலங்களுக்கும் சம பலம் கிடையாது. உதாரணமாய் உத்திரப்பிரதேசத்திற்கு அதிக உறுப்பினர்கள், சிக்கிம் மாநிலத்திற்குக் குறைவு). 9. மாநில அரசுகள் மீதான மத்திய அரசின் செல்வாக்கு (மாநில அரசின் உச்ச பதவியான ஆளுநரையே மத்திய அரசு தான் நியமிக்கிறது). 10. மாநிலங்களுக்கு இருக்கும் மிகக் குறைவான நிதி தொடர்புடைய அதிகாரங்கள்.

இந்தியா அதன் தனி பாணியிலான கூட்டாட்சி முறையைப் (Federalism Sui Generis) பின்பற்றுகிறது எனப் பூசி மெழுவோர் உண்டு. Quasi-Federal என்று சொல்வோரும் உண்டு. அரைகுறைக் கூட்டாட்சி. பல வகைகளில் அது உண்மை என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. இந்தியக் கூட்டாட்சி என்பது ஒருவித அரசியல் பாசாங்கே!

*

கூட்டாட்சி என்ற தத்துவமானது 1919ல் ப்ரிட்டிஷார் கொண்டு வந்த இந்திய அரசுச் சட்டம் (Government of India Act) வழியே தான் இந்தியாவுக்கு அறிமுகமானது. அதில் சட்டம், நிர்வாகம், நிதியைக் கையாள மத்திய மற்றும் மாநிலப் பட்டியல் இருந்தது.

மே 1930ல் வெளியான சைமன் கமிஷன் அறிக்கை மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்கும் கூட்டாட்சி அரசு முறையைத் தான் சிபாரிசு செய்தது. மோதிலால் நேரு தலைமையேற்று ஆய்ந்து வெளியிட்ட நேரு அறிக்கையும் இதையே சொன்னது. 1935ல் கொண்டு வரப்பட்ட இந்திய அரசுச் சட்டத்திலும் இதன் கூறுகள் இடம் பெற்றன. அதன் கூட்டாட்சி தொடர்புடைய பல்வேறு விஷயங்களை அரசியல் நிர்ணய சபை அரசியல் சாசனம் எழுதும் போது எடுத்தும், விடுத்தும் கொண்டது.

சுதந்திரத்துக்கு முந்தைய ப்ரிட்டிஷ் அரசின் க்ரிப்ஸ் ப்ரப்போஸல் (1942), கேபினெட் மிஷன் (1946) மற்றும் இரண்டுமே வலுவற்ற ஒரு மத்திய அரசையே முன்வைத்தன. அத்திட்டத்தில் வெளியுறவு, பாதுகாப்பு போன்ற சில விஷயஙகளில் தான் மத்திய அரசுக்கு அதிகாரம் இருந்தது. மற்ற அதிகாரங்கள் மாகாணங்களுக்கு. இரு பெரும் கட்சிகளான காங்கிரஸ், முஸ்லிம் லீக் இரண்டுமே இதை நிராகரித்தன. அதையும் மீறி அரசியல் நிர்ணயச் சபையின் முதல் அறிக்கை கூட்டாட்சிக் கொள்கைகளை ஒட்டியே அமைந்திருந்தது. அப்போது சபையின் தலைவரான நேரு “வலிவற்ற மைய அரசு என்பது தேச நலனுக்கு ஆபத்தானது, ஆனால் அதே சமயம் மாகாணங்களுக்கு பல விஷயங்களில் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதால் ஒற்றை அரசு முறை அரசியல்ரீதியாகவும் நிர்வாகரீதியாகவும் பின்னுக்கு இழுக்கும் நடவடிக்கையாக முடியும்.” என்றார். பிறகு ப்ரிட்டிஷ் அரசு கொண்டு வந்த இந்திய சுதந்திரச் சட்டத்தில் (India Independence Act, 1947) தான் இப்பார்வை எதிர்திசையில் பயணிக்கத் தொடங்கியது.

மகாத்மா காந்தி கிராம சுயராஜ்யத்தை முன்வைத்ததால் அதன் நீட்சியாக அதிகாரப் பரவலாக்கத்தை உறுதி செய்யும் கூட்டாட்சி வடிவத்துக்கே ஆதரவாக இருந்தார். மாகாணங்களை இந்தியாவுடன் இரும்புக் கரம் கொண்டு இணைப்பதில் முனைப்புக் காட்டுபவராய் இருந்தாலும் உள்துறை அமைச்சரான சர்தார் படேலும் கூட்டாட்சி ஆதரவுக் கருத்துக்கள் கொண்டிருந்தார். ஆனால் நேருவும் அம்பேத்கரும் நேர் எதிராய் ஒன்றிய அமைப்பு முறையை ஆதரித்தனர். பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு தான் குழப்பமான கூட்டாட்சி முறையை இந்தியா சுவீகரித்துக் கொண்டது.

இந்திய அரசியல் சாசனச் சிற்பியான பிஆர் அம்பேத்கர், “இந்தியா யுத்தம், இயற்கைச் சீற்றங்கள் முதலிய அசாதாரணக் காலங்களில் ஒற்றை அரசு முறையாகவும், மற்ற சாதாரணச் சூழ்நிலைகளில் கூட்டாட்சி முறையிலும் செயல்படும்.” என்று சொன்னார்.

*

மத்திய, மாநில அரசுகள் இடையேயான சட்ட மற்றும் நிர்வாக அதிகாரப் பகிர்வுகளை நம் அரசியல் சாசனத்தின் 11ம் பகுதி (Part XI) விவரிக்கிறது. எந்தெந்த விஷயங்களில் மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றலாம் என்பதை ஏழாவது அட்டவணை (Seventh Schedule) விவரிக்கிறது. மொத்தம் மூன்று பட்டியல்கள் உண்டு - மத்தியப் பட்டியல் (Union List), மாநிலப் பட்டியல் (State List) மற்றும் பொதுப் பட்டியல் (Concurrent List).

பாராளுமன்றம் மொத்த நாட்டுக்கோ ஒரு பகுதிக்கோ சட்டங்கள் இயற்ற முடியும். போலவே மாநிலச் சட்டசபை தன் மாநிலத்துக்கோ ஒரு பகுதிக்கோ சட்டங்கள் இயற்ற முடியும் [பிரிவு 245 (1)]. மத்தியப் பட்டியலில் இருக்கும் விஷயங்களில் சட்டமியற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரமுண்டு [பிரிவு 246 (1)]. பொதுப் பட்டியலில் இருக்கும் விஷயங்களில் சட்டமியற்ற பாராளுமன்றத்திற்கும் சட்டசபைகளுக்கும் அதிகாரமுண்டு [பிரிவு 246 (2)]. மாநிலப் பட்டியலில் இருக்கும் விஷயங்களில் தம் மாநிலத்தில் சட்டமியற்ற மாநிலச் சட்டசபைகளுக்கு அதிகாரமுண்டு [பிரிவு 246 (3)]. மாநிலங்கள் தவிர்த்த பிற பகுதிகளில் (உதா: யூனியன் பிரதேசம்) மாநிலப் பட்டியல் விஷயங்களில் சட்டமியற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரமுண்டு [பிரிவு 246 (4)].

இது வரை எல்லாம் சரியாகத் தான் இருப்பது போல் தோன்றும். ஆனால் இத்தோடு முடியவில்லை. அரசியல் சாசனம் மேலும் சில சிறப்பு அதிகாரங்களை மத்திய அரசுக்கு வழங்குகிறது. மாநிலப் பட்டியலிலும், பொதுப் பட்டியலிலும் இடம் பெறாத விஷயங்களில் சட்டம் இயற்றவும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு [பிரிவு 248 (1)]. இதை Residuary Powers என்கிறார்கள். தேச நலனை முன்வைத்து இரண்டில் மூன்று பங்கு உறுப்பினர் பங்கேற்பில் வாக்களிப்பு மூலம் ராஜ்யசபா மாநிலப் பட்டியலில் இருக்கும் விஷயம் பற்றித் தீர்மானம் நிறைவேற்றினால் பாராளுமன்றம் அதைச் சட்டமாக்கலாம் [பிரிவு 249 (1)]. அவசர நிலைப் பிரகடம் அமலில் இருக்கும் போது மாநிலப் பட்டியல் விஷயத்தில் பாராளுமன்றம் சட்டம் இயற்றலாம். [பிரிவு 250 (1)].

ஆக, ஒரே விஷயத்திற்கு பாராளுமன்றமும் சட்டசபையும் சட்டங்கள் இயற்றும் சாத்தியமுண்டு. அவை முரண்பட்டால் என்ன ஆகும்? மாநிலச் சட்டசபை இயற்றிய ஒரு சட்டம் (பிரிவுகள் 249 மற்றும் 250-ஐப் பயன்படுத்தி) பாராளுமன்றம் அதற்கு முன்போ பின்போ இயற்றிய சட்டத்திற்கு முரண்பட்டால் பாராளுமன்றம் இயற்றிய சட்டமே செல்லுபடியாகும் [பிரிவு 251]. பொதுப் பட்டியலில் மாநிலச் சட்டசபை இயற்றிய சட்டம் பாராளுமன்றம் அதற்கு முன்போ பின்போ இயற்றிய சட்டத்திற்கு முரண்பட்டால் பாராளுமன்றம் இயற்றிய சட்டமே செல்லுபடியாகும் [பிரிவு 254 (1)].

இவ்விஷயத்தில் போனால் போகிறதென மாநில அரசுகளுக்கு ஆறுதல் பரிசளிக்கிறது அரசியல் சாசனம். பொதுப் பட்டியலில் மாநிலச் சட்டசபை இயற்றிய ஒரு சட்டம் பாராளுமன்றம் அதற்கு முன்போ பின்போ இயற்றிய சட்டத்திற்கு முரணானதாக இருந்தால், ஜனாதிபதியிடம் அனுப்பி ஒப்புதல் பெறுவதன் மூலம் அந்த மாநிலத்தில் அச்சட்டத்தை அமல்படுத்த முடியும். ஆனால் பாராளுமன்றம் அதே விஷயத்தில் சட்டத்தைச் சேர்க்கவோ மாற்றவோ நீக்கவோ தடையில்லை [பிரிவு 254 (2)].

பாராளுமன்றம் தலையிட முடியாத விஷயங்களில் (பிரிவுகள் 249 மற்றும் 250-ஐப் பயன்படுத்தவியலாத சமயங்களில்) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் அவற்றின் சட்டசபைகளில் (மேல்சபையிலும் கீழ்சபை இருந்தால் அதிலும்) தீர்மானம் நிறைவேற்றினால் பாராளுமன்றம் அதை அந்த மாநிலங்களுக்குச் சட்டமாக்கலாம் [பிரிவு 252 (1)]. அச்சட்டங்களை பாராளுமன்றமே திருத்தவோ திரும்பப் பெறவோ முடியும், அந்த மாநிலச் சட்டசபைகளுக்கு அதில் உரிமை இல்லை [பிரிவு 252 (2)].

மாநில அரசுகள் சட்டங்களை அமல்படுத்த நிர்வாக அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும், இவ்விஷயத்தில் மத்திய அரசு அவர்களை வழிநடத்தலாம் [பிரிவு 256]. மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களைப் பாதிக்காத வண்ணமே மாநில அரசுகள் நிர்வாக அதிகாரத்தைச் செயல்படுத்த வேண்டும். இவ்விஷயத்திலும் மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தலாம் [பிரிவு 257 (1)]. தேசிய நெடுஞ்சாலைகள், நீர்வழிப் போக்குவரத்துக் கட்டுமானத்திலும் இருப்புப் பாதைகள் நிர்வாகத்திலும் மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசு வழிகாட்டலாம் [பிரிவு 257 (2) & (3)].

மாநில அரசின் சம்மதத்துடன் ஜனாதிபதி அந்த அரசுக்கோ, அதன் அதிகாரிகளுக்கோ சில மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களை நிபந்தனையுடன் அல்லது அஃதற்று அளித்து அவர்களைச் செயல்படப் பணிக்கலாம் [பிரிவு 258 (1)]. மத்திய அரசின் சம்மதத்துடன் மாநில ஆளுநர் அந்த மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களை நிபந்தனையுடன் அல்லது அஃதற்று மத்திய அரசுக்கு அளிக்க முடியும் [பிரிவு 258A].

மாநிலங்களுக்கிடையேயான நீர்ப் பங்கீட்டுப் பிரச்சனைகளை சட்டத்தின் மூலம் பாராளுமன்றம் தலையிட்டு த் தீர்க்க முடியும் [பிரிவு 262 (1)]. உச்ச நீதிமன்றமோ, பிற நீதிமன்றங்களோ குறிப்பிட்ட மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப் பிரச்சனையில் தீர்ப்பளிக்க முடியாது என்றும் பாராளுமன்றம் சட்டமியற்ற முடியும் [பிரிவு 262 (2)].

மாநிலங்களுக்கு இடையேயான சிக்கல்களைத் தீர்க்க ஜனாதிபதி மாநிலங்களுக்கு இடையேயான ஒரு குழுவை அமைக்க முடியும் என்று சொல்கிறது 263வது பிரிவு.

*

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு என்ற விஷயம் கல்வி என்ற தலைப்பின் கீழ் வரும். கல்வி என்ற விஷயம் அரசியல் சாசனத்தின் பொதுப்பட்டியலில் உள்ளது. அதாவது மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுமே அதில் சட்டம் இயற்றலாம். ஆனால் மத்திய அரசு பாராளுமன்றத்தில் நீட் சட்டம் இயற்றி விட்டதால் தமிழக அரசு சட்டசபையில் அதை மறுதலித்துச் சட்டம் இயற்றினாலும் அதை அமல்படுத்த ஜனாதிபதி ஒப்புதல் தேவை என்றாகிறது. ஆர்எஸ்எஸ்காரரும் ஆளும் பாஜகவின் கைப்பாவை எனக் கருதப்படுபவருமான நம் ஜனாதிபதி ஒருபோதும் அதைச் செய்ய மாட்டார். (அவர் செய்ய மாட்டார் என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் அதற்கான சிறுமுயற்சியைக் கூட செய்யவில்லை இங்கே ஆட்சியிலிருக்கும் பொம்மை அரசு.)

இன்று மத்தியப் பட்டியலில் ராணுவம், அந்நிய விவகாரம், அணுசக்தி, குடியுரிமை, வங்கிகள், ரயில்வே, துறைமுகம், நெடுஞ்சாலை என 100 விஷயங்கள் இருக்கின்றன. மாநிலப் பட்டியலில் சட்டம் ஒழுங்கு, சிறை, சுடுகாடு, மீன்வளம், நூலகங்கள், விவசாயம் என 61 விஷயங்கள் இருக்கின்றன. பொதுப்பட்டியலில் குற்றவியல் சட்டம், திருமணம், விவாகரத்து, மின்சாரம், அச்சு ஊடகங்கள் என 52 விஷயங்கள் உள்ளன. முன்பு மாநிலப்பட்டியலில் 66ம் பொதுப் பட்டியலில் 47ம் இருந்தன. பிறகு 5 விஷயங்கள் மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அதில் கல்வியும் ஒன்று. வனத் துறை, எடை மற்றும் அளவைகள், வன விலங்கு மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதித் துறை நிர்வாகம் ஆகியவை மற்ற நான்கு.

இந்த அரசியல் சாசன மாற்றம் இந்திரா காந்தியால் 1976ல் – எமர்ஜென்ஸி காலம் - கொண்டு வரப்பட்டது. புகழ் பெற்ற 42வது சட்ட திருத்தம்! அவசர நிலையின் போது மாநிலங்களுக்கான அதிகாரங்களைப் பறிக்கும் வண்ணம் நுழைக்கப்பட்ட இந்த மாற்றமானது அப்படியே சாசனத்தில் நிலைத்து விட்டது. இன்று பொதுப் பட்டியலில் உள்ள 25வது விஷயம் - Education, including technical education, medical education and universities, subject to the provisions of entries 63, 64, 65 and 66 of List I; vocational and technical training of labour (உயர்கல்வி உட்பட கல்வி அனைத்தும்). இப்படித் தான் அனிதாவின் தலை விதியை அன்றைய இந்திராவும் இன்றைய மோடியும் இணைந்து கிறுக்கினர்!

*

கூட்டாட்சி என்பதன் தர்க்கப்பூர்வ நீட்சியே மாநில சுயாட்சி (State Autonomy) எனலாம். அல்லது மாநில சுயாட்சியே கூட்டாட்சிக்கு வித்திடும் என்றும் இதனைப் பார்க்கலாம். மாநில சுயாட்சி விஷயத்தில் தமிழகமே மற்ற இந்திய மாநிலங்களுக்கு முன்னோடி.

அரசியல் சாசனச் சட்டம் அமலுக்கு வந்த பின் 1956ல் மொழிவாரி மாகாணங்களின் உருவாக்கம் தான் இந்தியாவின் கூட்டாட்சிக்கு அடித்தளம். பிராந்தியங்களின் பலம் மத்திய அரசின் விருப்பத்தை மீறி நடைமுறை மாற்றமாக உருப்பெற்ற நிகழ்வு அது.

அதற்கு அடுத்த ஆண்டே அறிஞர் அண்ணா தமிழக சட்டசபையில் மத்தியிலிருந்து மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் பெறுவதைப் பற்றிப் பேசி இருக்கிறார் (மே 6). 1969ல் பொங்கலை ஒட்டி அண்ணா தம்பிக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் கூட “மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரங்களைப் பெறத்தக்க விதத்தில் இந்திய அரசியல் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்” என்பதைக் குறிப்பிடுகிறார்.

அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த கலைஞர் அதே ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் சீரான மத்திய மாநிய அரசுகளின் உறவுக்கு மத்தியிலிருந்து மாநிலங்களுக்கு மாற்ற வேண்டிய அதிகாரங்களைப் பரிந்துரைக்க பிவி ராஜமன்னார், ஏஎல் முதலியார், பி சந்திரா ரெட்டி ஆகியோரைக் கொண்ட நிபுணர் கமிட்டி ஒன்றை அமைத்தார். 1970ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் தான் இன்று வரையிலும் மிகப் பிரபலமான “மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி” என்ற முழுக்கத்தை அறிவித்தார்.

செப்டெம்பர் 1970ல் மாநில சுயாட்சி மாநாடு ஒன்றை சென்னை அண்ணா நகரில் திமுக நடத்தியது. கலைஞர் தலைமையிலான அந்நிகழ்வில் தந்தை பெரியார், காயிதே மில்லத், அப்போதைய மேற்கு வங்க முதல்வர் அஜய் முகர்ஜி, எஸ்எம் கிருஷ்ணா, ப்ரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கு வங்க முதல்வர் பிணராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் ஸ்டாலின், கி. வீரமணி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை அழைத்து நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டுக்கு அதுவே தூண்டுதலாக இருக்கக்கூடும். (தலைமையேற்றுப் பேசிய தொல். திருமாவளவன் மாநில சுயாட்சிக் கோரிக்கைக்கு கலைஞரே முன்னோடி எனக் குறிப்பிட்டார்.)

1971ல் தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சி என்பதை முன்னிலைப்படுத்தியது திமுக. ராஜமன்னார் கமிட்டியின் அறிக்கை மே 1971ல் வந்த பின் ஏப்ரல் 1974ல் தமிழக சட்டப்பேரவையில் அவ்வறிக்கையை முன்வைத்து அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1974ல் மாநில சுயாட்சி என்ற முக்கிய அய்வு நூலை முரசொலி மாறன் எழுதி வெளியிட்டார்.

1973ல் பஞ்சாபில் ஷிரோமணி அகாலி தள் கட்சி அனந்தபூர் சாஹிப் தீர்மானத்தை இயற்றியது 1979ல் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு மத்திய மாநில உறவு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மத்திய மாநில உறவுகளை ஆராய 1983ல் சர்க்காரியா ஆணையமும் 2007ல் நீதிபதி பூஞ்சி ஆணையமும் அப்போதிருந்த காங்கிரஸ் மத்திய அரசுகளால் அமைக்கப்பட்டன. ஆனால் அந்த ஆணையங்கள் அளித்த பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன.

1989ல் திமுக உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகளை உள்ளடக்கிய முதல் மத்திய அரசு விபி சிங் அமைந்தது. வெறும் 11 மாதங்களே பதவியில் இருந்த அவ்வரசு குறுகிய இடைவெளியில் கூட்டாட்சித் தத்துவத்தை வலுவாக்கும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. சர்க்காரியா கமிஷன் பரிந்துரையின் படி சாசனப் பிரிவின் 263வது பிரிவைப் பயன்படுத்தி 1990ல் சர்வமாநிலக் குழு (Inter-State Council) அமைத்தது அதில் முக்கியமானது. பின் 1996 முதல் 2014 வரை மத்திய அரசுகளில் பிராந்தியக் கட்சிகள் இடம் பெற்று கூட்டணி ஆட்சியே அமைந்ததால் ஓரளவு ஆரோக்கியமான கூட்டாட்சி முறை நடைபெற்றது எனலாம். இதில் இடதுசாரிகளின் பங்கும் முக்கியமானது.

தெற்காசிய அரசியல் விமர்சகரான கொல்கத்தாவைச் சேர்ந்த கார்கா சேட்டர்ஜி தன் கட்டுரை ஒன்றில் “இன்று மேற்க வங்க மாநில அரசுக்கு சில அதிகாரங்கள் உள்ளன என்றால் அது கலைஞர் தமிழ் மக்களுக்காக தில்லியை எதிர்த்துப் போராடியதால் தான்.” என்கிறார். 1974ல் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றலாம் என்ற உரிமையை இந்திரா காந்தியிடம் பேசிப் பெற்றவர் கலைஞர் தான்.

*

ஜேசி ஜோஹரி தன் The Constitution of India: A Political and Legal Study நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “முதலில் நம் கூட்டாட்சி முறையில் உள்ள மாநிலங்கள் அமெரிக்க மாகாணங்களைப் போலவோ சுவிட்சர்லாந்து கான்ட்டன்களைப் போலவோ பலம் வாய்ந்தவை அல்ல. அடுத்தது இங்கே மத்தியிலும் மாநிலங்களிலும் பாராளுமன்ற முறையிலான அரசுகளே அமைந்திருக்கின்றன. இந்தியாவை ஒரு கூட்டாட்சி நாடு என்று சொல்லலாம் தான். ஆனால் இதன் உறுப்பு மாநிலங்கள் முன்பு சுந்ததிர நாடுகளாய் இருந்து தற்போது இந்தியக் கூட்டமைப்பிற்குள் தம்மை இணைத்துக் கொண்டவை அல்ல. இந்த மாநிலங்கள் எல்லாம் வெறும் புவியியல் துண்டுகள். அவற்றின் அளவுகள் மத்திய அரசால் கூட்டவோ குறைக்கவோ பட முடிந்தவை.”

ஆக, தெளிவாய் நெடுங்காலமாய் இந்திய அரசியல் சாசனத்தின் நடைமுறை அமல்படுத்தலில் மத்திய அரசின் கையே ஓங்கி இருக்கிறது. இதை சமச்சீரற்ற கூட்டாட்சி (Asymmetric Fedaralism) என்று சொல்லலாம். இந்தியா வடிவில் கூட்டாட்சி நாடு; ஆனால் சாரத்தில் ஒற்றையாட்சி நாடு என்றும் இதனைப் பார்க்கலாம்.

ஆனால் ஒரு விஷயம் - தற்போதிருக்கும் கட்டுப்படுத்தப்பட்ட கூட்டாட்சியையேனும் பாதுகாக்கும் வகையில் தான் நம் அரசியல் சாசனம் எழுதப்பட்டுள்ளது. சாசனத்தின் 368வது பிரிவு அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யும் முறையைப் பேசுகிறது. மேலே நாம் பார்த்த சாசனத்தின் 11ம் பாகம் (அத்தியாயம் ஒன்று மட்டும்), ஏழாம் அட்டவணை ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வர வேண்டுமென்றால் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான மாநிலச் சட்டசபைகளின் ஒப்புதல் பெற வேண்டும். இதன் வழி கணிசமான மாநிலங்களும் ஒப்புதல் தந்தால் ஒழிய குறிப்பிட்ட சாசனத் திருத்தத்தை நிறைவேற்ற இயலாது. (பொதுவாய் 368(2)வது பிரிவில் குறிப்பிடப்படாத மற்ற திருத்தங்களுக்கு பராளுமன்ற இரு அவைகளின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் போதும். மாநிலச் சட்டசபைகளின் அங்கீகாரம் தேவையில்லை.)

பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் இன்று அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புப் கூறுகளில் (Basic Structure) பாராளுமன்றம் மாற்றம் செய்ய முனைந்தால் அதற்கு உச்சநீதிமன்றத்தின் சம்மதமும் பெற வேண்டும். அப்படியான கூறுகளில் கூட்டாட்சியும் ஒன்று என 1973ல் வேசவானந்த பாரதி மற்றும் கேரள அரசு இடையிலான வழக்கில் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

1984ல் ப்ரதீப் ஜெயின் - இந்திய யூனியன் வழக்கில் இந்தியா பாரம்பரியக் கூட்டாட்சி முறையில் செயல்படவில்லை எனத் தீர்ப்பளித்த அதே உச்சநீதிமன்றம் 2001ல் கங்கா ராம் மூல்ச்சாந்தனிக்கும் ராஜஸ்தான் மாநிலத்துக்குமான வழக்கில் இந்திய அரசியல் சாசனம் கூட்டாட்சியின் பாரம்பரியச் சாயைகள் கொண்டதே எனத் தீர்ப்பளித்தது.

அவ்வப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் நமது கூட்டாட்சி முறை எளிதானதல்ல என்ற விஷயம் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்துக்கும் இந்திய யூனியனுக்குமான வழக்கின் தீர்ப்பில் (1963) நம் அரசியல் சாசனம் பாரம்பரிய கூட்டாட்சி முறையில் அமைந்ததல்ல எனச் சுட்டிக்காட்டப்பட்டது. 1974ல் ஷம்செர் சிங்குக்கும் பஞ்சாப் மாநிலத்துக்கும் இடையேயான வழக்கின் தீர்ப்பு இந்திய அரசியல் சாசனத்தை “more unitary than federal” எனக் குறிப்பிடப்பட்டது. 1977ல் ராஜஸ்தானுக்கும் இந்திய யூனியனுக்குமான வழக்கின் தீர்ப்பில் கூட்டாட்சியை முன்வைத்து அரசியல் சாசனத்தைக் குறிக்க “amphibian” என்ற சொல்லை நீதியரசர் பெக் பயன்படுத்தினார். 1994ல் எஸ்ஆர் பொம்மை - இந்திய யூனியன் வழக்கில் “pragmatic federalism” என்ற சொல்லை நீதிபதி அஹமதி பயன்படுத்தினார். 2002ல் ஹரியானா மாநிலத்துக்கும் பஞ்சாப் மாநிலத்துக்குமான வழக்கில் “semi-federal” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

*

இன்று மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக அரசு தொடர்ச்சியாய் அரசியல் குவிப்பு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. ஜிஎஸ்டி கூட மாநிலங்களுக்கான வரிவிதிப்பு உரிமைகளைப் பிடுங்கும் நடவடிக்கை தான். முழுமையான ஒற்றை ஆட்சியைச் செயல்படுத்தும் அதிபர் ஆட்சி முறையைக் கொணரும் சட்டத் திருத்தத்தையும் மோடி கொண்டு வரக்கூடும் என நடுநிலை அரசியல் நோக்கர்கள் அஞ்சுகிறார்கள்.

இந்தியா முழுமைக்கும் - பாராளுமன்றத்துக்கும் மாநிலச் சட்டமன்றங்களுக்கும் - ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் பாஜகவின் திட்டம் கூட கூட்டாட்சியை அழித்து ஒழிக்கும் நோக்கில் தான். அப்படி நடக்கையில் மக்கள் தேசியப் பிரச்சனைகளுக்கே முக்கியத்துவம் தந்து வாக்களிக்க வாய்ப்பதிகம் (உதாரணமாய் 1999 முதல் 2014 வரை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து 16 சட்டமன்றங்களுக்குத் தேர்தல் நடந்ததில் வாக்களித்த 77 சதவீதம் பேர் நாடாளுமன்றம் சட்டமன்றம் ஆகிய இரண்டுக்கும் ஒரே கட்சிக்கே வாக்களித்துள்ளனர்.) மாநில அரசுக்கு ஒரு மாதிரி, மத்திய அரசுக்கு ஒரு மாதிரி என்று பிரிந்த்துணர்ந்து வாக்களிக்கும் தெளிவு நம் மக்களிடம் இல்லை என்ற பலவீனத்தைப் பயன்படுத்தி இதைச் செயல்படுத்தப் பார்க்கிறார்கள் ஃபாசிஸ்ட்கள்.

இந்தித் திணிப்பு, உணவுப் பழக்கத் திணிப்பு, நீட் திணிப்பு, ஜிஎஸ்டி திணிப்பு, ஆதார் திணிப்பு என பாஜக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒற்றை இந்தியா என்ற கூட்டாட்சிக்கு எதிரான கருத்துருவாக்கத்தை நோக்கிய நகர்வாகவே இருக்கிறது. இந்த நடவடிக்கைகள் இதுவரை அமைதி காத்த மாநிலங்களிலும்கூட உரிமைக்கான வேட்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. கர்நாடகத்தில் இந்தி எழுத்துகள் தார்பூசி அழிக்கப்படுகின்றன; கேரளத்தில் திராவிட நாடு கோரிக்கை எழுப்பப்படுகிறது.

இச்சூழலில்தான் விசிக நடத்திய மாநில சுயாட்சி மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன: 1) மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்ய ஆணையம் அமைத்திட வேண்டும். 2) இந்தியாவில் அதிபர் ஆட்சிமுறையைத் திணிக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும். 3) ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும். 4) அரசியலமைப்புச் சட்டத்தில் (மாநில அதிகாரங்கள் தொடர்பாய்) திருத்தம் வேண்டும். 5) ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர் பதவிகள் ஒழிக்கப்படவேண்டும். 6) மாநிலங்களுக்குப் பொருளாதார தற்சார்புநிலையை உருவாக்க வேண்டும். 7) ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ரத்து செய்ய வேண்டும். 8) மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். 9) நீதி நிர்வாக அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். 10) தேசியப் புலனாய்வு முகமையை (என்ஐஏ) கலைக்க வேண்டும். 11) கல்வி தொடர்பான அதிகாரங்களை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்த்திட வேண்டும். 12) இந்தி மற்றும் சமற்கிருதத் திணிப்பைக் கைவிட்டு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.

மேற்கு வங்க வழக்கறிஞரும் ராஜ்யசபா உறுப்பினருமான பிஎன் பேனர்ஜி ஒருமுறை “சாதாரண நேரங்களில் இந்தியா கூட்டமைப்பாகவும், அவசர நிலைப் பிரகடனத்தின் போது ஒன்றியமாகவும் இயங்குகிறது” என்றார். இன்று மோடியின் மத்திய அரசு மாநில அரசின் அதிகாரங்களையும் உரிமைகளையும் நசுக்கி ஓர் ஒன்றியமாகத்தான் இந்தியாவை வைத்திருக்கிறது. எனில் நாம் இன்று அவசர நிலையில் இருக்கிறோமா!

***

(உயிர்மை - அக்டோபர் 2017 இதழில் வெளியானது) 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2017 03:07

C. Saravanakarthikeyan's Blog

C. Saravanakarthikeyan
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow C. Saravanakarthikeyan's blog with rss.