C. Saravanakarthikeyan's Blog, page 10
July 24, 2018
அன்பின் அனல்மூச்சு
ஓர் அழகான இளம் பெண் செல்ஃபோன் கேமெராவில் தான் வாழ விரும்பாததைத் தன் பெற்றோரிடம் பேசி ஒளிப்பதிவு செய்து விட்டுப் பாலிதீன் கவரை முகத்தைச் சுற்றிக் கொண்டு தற்கொலை செய்வதில் தொடங்குகிறது Breathe சீரிஸ்.
இரண்டேகால் கழுதை வயதாகிறது. ஆனால் நான் வாழ்க்கையில் காணும் முதல் வெப்சீரிஸ் இது தான்.
பிடித்திருந்தது. எட்டு எபிஸோட்கள். சராசரியாய் ஒவ்வொன்றும் 40 நிமிடம். ஆக, ஐந்தரை மணி நேரம் வருகிறது. பெரும்பாலும் தொய்வில்லாமல் கதை நகர்கிறது. ஆனாலும் சீரிஸ் என்பது உண்மையில் சீரியல் தான் என்பதால் ஆங்காங்கே நாடகத்துக்கே உரிய மெல்லிய இழுவைக் காட்சிகள் உண்டு. அதை எல்லாம் கத்தரித்திருந்தால் மூன்றரை மணி நேரத்தில் ஒரு சுவாரஸ்யமான திரைப்படமாக எடுத்திருக்கலாம்.

மேஸ்கரனஸின் (மாதவன்) மகன் உயிர் பிழைக்க அடுத்த சில மாதங்களில் அவனுக்கு நுரையீரல் மாற்று தேவை. அவன் உறுப்பு பெறுபவர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறான். ஆனால் அவனது இரத்த வகை அரிது என்பதால் அவனுக்கு உறுப்பு கிடைக்கும் சாத்தியம் குறைவு. மேஸ்கரனஸ் உறுப்பு தானம் செய்பவர்களின் பட்டியலில் இருப்பவர்களைக் கொலை செய்யத் தீர்மானிக்கிறார். அதை ஒரு போலீஸ் துப்பறியத் தொடங்குகிறான். மேஸ்கரனஸ் மகனைக் காப்பாற்றினானா என்பது கதை. சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.
மேஸ்கரனஸ் பாத்திரத்தின் ஆக்கம் மற்றும் அவனது செயல்களில் ஆங்காங்கே குழப்பங்கள் இருக்கின்றன. ஏன் தானம் கொடுப்பவர்களை மட்டும் கொல்ல வேண்டும்? தானம் பெறுபவர்களைக் கொன்றாலும் அவனது மகன் காத்திருப்புப் பட்டியலில் முன்னேறலாம். தவிர, ஒரு கட்டத்தில் தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அப்பாவிகளையும் கொல்ல / சிக்கலில் மாட்டி விட இறங்குகிறான். தன் கொலைகளுக்கே பெரும் குற்றவுணர்வு கொள்பவன், உறக்கத்தினிடையே பயந்து விழிப்பவன், தன் மனைவியின் கல்லறையில் பாவ மன்னிப்புக் கோருபவன், சிலுவையைக் கழற்றி வைத்து விட்டுக் கொலை செய்பவன் எப்படி அதை எல்லாம் செய்வான்? தன் மகனைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வான் என்ற ஒற்றை வரி விளக்கம் போதுமானதாய் இல்லை. அப்புறம் முதல் கொலையில் ஹெல்மெட்டை ஏன் மீண்டும் வண்டியில் கொண்டு போய் வைக்க வேண்டும்? ஷைனா கதாபாத்திரமும் அவள் காதலனும் கதைக்கு எவ்விதத்தில் உதவி எனப் புரியவில்லை. போலீஸ் மேஸ்கரனஸை அடைவதிலும் பெரிய சிக்கல் இல்லை.
இப்படியான சில்லறைச் சறுக்கல்கள் போக திரைக்கதை பெரும்பாலும் நன்று. அதுவும் நான்காம் எபிஸோடின் முடிவில் கச்சிதமான திருப்பம். இண்டர்வெல் ப்ளாக் போல். நியூட்டனின் இரண்டாம் விதியை வைத்துக் கணக்கிட்டுக் கொலைக்குத் திட்டமிடும் சுவாரஸ்யமான கதாநாயகப் பாத்திரம். ஆனால் சில கொலை முயற்சிகள் ரொம்ப lab condition முயற்சிகள் (உதா: சுயஇதயவலி வரவழைத்தல், பார்வையற்றோர் பள்ளிக்கூடத்தில் பொம்மை செட்டப்) என்றாலும் ஒரு வெகுஜன ஆக்கம் என்ற அளவில் பொறுத்துப் போகலாம். நிறைய இடங்களில் வசனங்கள் அழகாக இருந்தன (உதா: சப்னா தன் காதலனுடன் பேசும் முதல் காட்சியின் வசனங்கள், மாதவன் தன் மகனுடன் பேசும் காட்சிகள்). இன்னொரு விஷயம் வசனங்கள் சில இடங்கள் தவிர்த்து இந்தி சீரிஸின் டப்பிங் என்ற உணர்வு எழவே இல்லை. மொழி அத்தனை இயல்பாக இருந்தது (உதா: பிரகாஷ் பாத்திரத்தின் வசனங்கள்). மொழிபெயர்த்தவருக்குப் பாராட்டு.
Comeback மாதவனின் சிறப்பான பங்களிப்பு வரிசையில் இறுதிச்சுற்று, விக்ரம் - வேதா வரிசையில் இதையும் சேர்க்கலாம். சொல்லப் போனால் இதுவும் விக்ரம் - வேதா போன்ற டாம் அண்ட் ஜெர்ரி கதை தான். ஆனால் இம்முறை மாதவன் டாம் அல்ல; ஜெர்ரி. குறிப்பாக அவர் குற்றவுணர்க்குள்ளாகும் காட்சிகள் எல்லாவற்றிலும் நல்ல நடிப்பு.
துப்பறியும் ஆளுக்கும் ஒரு விரிவான பின்புலம் இருப்பதும் அது கதைக்குத் தொடர்புடையதாய் இருப்பதும் பொதுவாய் ஒரு கொலைக்கதையை மனதுக்கு மிகவும் நெருக்கமானதாய் ஆக்கும். Talaash படத்தை உதாரணமாய்ச் சொல்லலாம். விக்ரம் - வேதாவும் அப்படித்தான். அம்பையின் அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு சிறுகதைத் தொகுப்பிலும் அபிலாஷின் கதை முடிவிற்கு வந்து விட்டீர்கள் நாவலும் இத்தகைய விஷயத்தைக் கொண்டிருப்பவை. Breathe சீரிஸும் அப்படி இன்ஸ்பெக்டருக்கு ஒரு வலுவான பின்புலத்தைக் கொடுக்கிறது. அவ்வகையில் இன்ஸ்பெக்டர் கபீர் சாவாந்தாக வரும் அமித் சத் ஒரு குடிகாரனாகவும் ஒரு தந்தையாகவும் ஒரு கணவனாகவும் ஒரு போலீஸ்காரனாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் மனைவியாக வரும் சப்னா பப்பியும் நளினமான நடிப்பு. இன்ஸ்பெக்டரின் கீழ் பணிபுரியும், 'மெஷின்' வேலை செய்யாத பிரகாஷாக வரும் ரிஷிகேஷ் ஜோஷியும் ரசிக்கத்தகுந்த நடிப்பு.
கதையின் பதற்றத்தைப் பிரதிபலிக்கும் டைட்டில் இசை அற்புதம். மற்ற இடங்களிலும் பின்னணி இசை பரவாயில்லை. Indoor காட்சிகள் தவிர்த்து மற்ற யாவும் நேர்த்தியான ஒளிப்பதிவு. இயக்குநர் மயங்க் ஷர்மாவுக்கு இது முதல் முயற்சி எனத் தெரிகிறது. நல்ல திரைப்படமெடுக்கும் திறமை இருக்கிறது. விரைவில் நிறைவேறட்டும்.
அமேசான் ப்ரைமில் கிடைக்கிறது. தினம் ஒன்று அல்லது இரண்டு வீதம் கூடப் பார்க்கலாம்.
*
Published on July 24, 2018 11:18
July 22, 2018
அழியாக் கோலம் [சிறுகதை]
“பார்த்தவுடனே டெலீட் பண்ணிடனும்.”
“பண்ணிடறேன்டி. ப்ராமிஸ்.”
மௌனம்.
அந்த டிஎம்மின் மௌனம் உடைவதற்குள் அவர்களின் பயோவைப்பார்த்து வரலாம்.
அவள் அப்ஸரா. நிஜப் பெயர் அதுவல்ல; எம். ப்ரியதர்ஷினி. அவள் தலைமுறையில் எல்லா வகுப்புகளிலும், எல்லா அலுவலகங்களிலும், எல்லா வீடுகளிலும் அப்பெயரில் ஒரு பெண் இருப்பாள் என்பதால் ட்விட்டரில் கணக்கு துவக்கியபோது அப்ஸரா என்று பெயர் வைத்துக்கொண்டாள். தவிர, அவள் அப்படித்தான் கருதிக்கொள்கிறாள். உதடுகள் கோணல் என்பதைத் தவிர்த்துப்பார்த்தால் அது ஓரளவு உண்மையும்தான்.
ஏதோ ஓர் ஊரில் ஏதோ ஒரு கல்லூரியில் கணிப்பொறியியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு இன்னும் உருப்படியாய் ஜாவாவில் பேலிண்ட்ரோம் நிரல் எழுதத் தெரியாது; எழுதத்தெரியாது என்பதும் தெரியாது. ஆனால் இன்றைய தேதிக்கு ட்விட்டரில் அவளை இருபதாயிரத்துச் சொச்சம் பேர் தொடர்கிறார்கள். அவள் ட்வீட் நூறு ரீட்வீட் ஆவது சர்வசாதாரணம். அதாவது ப்ரியாவை இருநூறு பேருக்கும், அப்சராவை இருபதாயிரம் பேருக்கும் தெரியும். அதனால் அவளுக்குமே ப்ரியாவை விட அப்ஸராவைப் பிடிக்கும். நிஜத்தைவிட பிம்பங்கள் கொண்டாட்டத்துக்குரியவை!

ட்விட்டர் கணக்கு தொடங்கி, தீபிகா படுகோன் டிபி வைத்து, “நண்பர்களுக்கு உண்டு மரணம், நட்பிற்கில்லை” என்ற ரீதியில் சில தத்துவங்களை அவள் எழுதியபோது அவ்வளவாய் யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு ‘வலைபாயுதே’வில் ஒரு ட்வீட் வந்தபோது புதிதாய் ஆயிரம் பேர் பின்தொடர்ந்தார்கள். ஒரு சுபதினத்தில் சட்டென முடிவெடுத்து தன் நிஜப்புகைப்படத்தை டிபியாய் வைத்தாள். அன்றிலிருந்து தினம் ஐம்பது பேர் புதிதாய் பின்தொடர்கிறார்கள். தன்னுடைய புகைப்படம் பார்த்துத்தான் பின்தொடர்கிறார்கள் என்பது புரிந்தாலும் தன் கருத்தை நோக்கி ஈர்க்கவே புகைப்படம் பயன்படுகிறது, அப்படி வந்தவர்கள் தன் எழுத்துக்காகவே தொடர்கிறார்கள், ரீட்வீட் செய்கிறார்கள், மென்ஷன் இடுகிறார்கள் எனச் சுயசமாதானம் செய்துகொண்டாள்.
இன்னமும் தத்துவங்களைக் கைவிடுவதாய் இல்லை. அதோடு மாதமொரு புது டிபி!
அவன் வருண். ட்விட்டரில் நடிகர் சத்யராஜ் டிபியோடு ‘தகடு தகடு’ என்ற பெயரில் இருக்கிறான். அவ்வளவுதான் அவளுக்கும் தெரியும். ஆறு மாதத்திற்கு முன் அவள் சொந்த டிபி படம் வைத்த மறுநாள் டிஎம்மில் “ஹாய், ஹவ் ஆர் யூ?” என்ற பீடிகை எல்லாம் இல்லாமல் “பேருக்கேத்த படம்” என வருண் ஒற்றை வரி டிஎம் அனுப்பிய போது ப்ரியாவுக்கு ஜிலீர் என்றிருந்தது. அதை எப்படி எதிர்கொள்வதெனப் புரியாமல் தடுமாறிப் பின் வேண்டுமென்றே அரை நாள் தாமதித்து “தேங்க்ஸ்” அனுப்பினாள்.
அவள் பன்னிரண்டாவது வரை படித்தது பெண்கள் பள்ளியில். கல்லூரியில் ஆண்கள் பெண்களோடு பேசத்தடை. மீறினால் பெற்றோர் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டு “இனி இது போல் நடக்காது” என்ற உறுதிமொழியில் கையெழுத்துப் போட வேண்டும்.
இந்தப் பின்புலத்தில்தான் உரிமை எடுத்துக்கொண்ட வருண் அத்தனை இனித்தான்!
வருண் தன் அப்பாவின் பிறந்த நாளன்று அவருடன் இருக்கும் படம் பகிர்ந்தபோது ரீட்வீட் செய்து மனதார வாழ்த்தினாள். அன்று வருண் ஐடி கொஞ்சம் பிரபலமானது!
பிறகு போடும் ட்வீட் குறித்து எப்போதாவது பேசினார்கள். பிறகு தினம் ஒரு முறை ஏதேனும் சாக்கு வைத்துப் பேசினார்கள். பிறகு குட்மார்னிங், குட்நைட், சாப்டாச்சா.
நிறையச் சிரிக்க வைத்தான்; வெட்கப்பட வைத்தான். பரஸ்பரம் தேடிக் கொண்டனர். வாங்க போங்க தேய்ந்து, வா போ என மாறி, பின் வாடா போடி என்றாகி விட்டது.
கல்லூரிப்படிப்பு முடித்தவுடன் பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்து விடுவது அவர்கள் சாதி வழக்கம். அவ்வளவு நம்பிக்கை! ப்ரியதர்ஷினிக்கு அதில் மறுப்பேதும் இருக்கவில்லை. சங்கத்தில் ஜாதகம் கொடுத்து சம்பள எதிர்பார்ப்பு போன்றவற்றை அடிக்கோடிட்டார்கள். ஒரே மகளுக்கு எழுபது பவுன் சேர்த்து வைத்திருந்தார்கள்.
மாப்பிள்ளை பார்ப்பதை தகவலாக மட்டும் அவனிடம் பதிந்து கடந்தாள். வருணும் பெரிதாய்ப் பொருட்படுத்தவில்லை. அன்றுதான் ஊமை மந்திரி ஜோக் சொன்னான்.
ராதிகா ஆப்தேவின் செல்ஃபி கசிந்து பரபரப்பானபோது லிங்க் தேடிக்கிடைக்காமல் வருணிடம் தயங்கித் தயங்கிக் கேட்டு வாங்கிப் பார்த்து விட்டு அங்கலாய்த்தாள்.
“ச்சை, எப்படித்தான் இப்படி எல்லாம் எடுக்கறாளுகளோ!”
“ஏன், நீ எல்லாம் எடுக்க மாட்டியா?”
“டேய், பொறுக்கி. நல்ல குடும்பத்துப் பொண்ணுக இதெல்லாம் செய்வாங்களா?”
“ஏய், இதில் என்ன தப்பு இருக்கு? உன்னை நீ கண்ணாடில பார்க்கறதில்லயா? காலைல குளிச்சி முடிச்சிட்டு வந்து? ஈவ்னிங் வந்து ட்ரஸ் சேஞ்ச் பண்றப்ப?”
“ம்ம்ம்.”
அவ்வப்போது செல்ஃபி பற்றிய பேச்சு வந்தது - சில முறை அவளே தொடங்கியது.
“இதெல்லாம் இன்னும் கொஞ்ச காலம்தான். உன் அழகு உச்சத்திலிருக்கும் கணங்கள் இவை. ஆன்ட்டி ஆகிட்டேன்னா நீயா ஆசைப்பட்டு எடுத்தாலும் பார்க்கச் சகிக்காது!”
“எப்பவும் அதே நெனப்புதான்டா உனக்கு!”
“ஏய், நான் பார்க்கவா எடுக்கச் சொல்றேன். இஷ்டமிருந்தா எடு, இல்லன்னா போ.”
“தப்பில்லையா?”
“ம்ஹூம். எடுக்காம இருக்கறதுதான் தப்பு. உம்மாச்சி கண்ணைக் குத்திரும்.”
எடுத்துப் பார்த்து விட்டு அழித்து விடும்படி ஊக்கப்படுத்தினான். அவன் மூன்றாம் முறை சொன்ன நள்ளரவின் மறுநாள் காலை குளித்து முடித்து வந்த பின் அறைக் கதவைத் தாழிட்டு பூத்துவாலையில் உடம்பீரம் ஒத்தி எடுத்த பின் கண்ணாடியில் ஒத்திகை பார்த்து விட்டு தன் வாழ்வின் முதல் டாப்லெஸ் செல்ஃபியை எடுத்தாள்.
பார்த்து வெட்கப்பட்டாள். சந்தேகமில்லாமல்தான் ஒரு பேரழகி என்று எண்ணம் எழுந்தது. ராதிகா ஆப்தேவைவிடவும் என்று அடுத்துத் தோன்றியபோது மறுபடி வெட்கப்பட்டாள். மறக்காமல் அழித்தாள். மறக்காமல் அவனிடம் சொன்னாள்.
“எனக்குப் பார்க்கனும்னு இல்லப்பா. ஆனா நீயா அனுப்பினா மறுக்க மாட்டேன்.”
கண்ணடிக்கும் ஸ்மைலி அனுப்பினான். அவன் அப்படிக்கேட்டது பிடித்திருந்தது.
அடுத்த இரு மாதங்களுக்கு செல்ஃபி எடுத்தும் அழித்தும் மட்டும் கொண்டிருந்தாள். தவறாமல் அதைப்பற்றி பேச்சுவாக்கில் அவனிடம் சொல்லிச் சீண்டவும் செய்தாள்.
முதலில் விட்டுப்பிடித்தவன் ஒரு கட்டத்தில் கெஞ்சத்தொடங்கி இருந்தான். அதை ரசித்தபடி அவள் நாட்களைக்கடத்திய வேளையில்தான் அடுத்த அஸ்திரம் வந்தது.
“அப்ப என் மேல நம்பிக்கை இல்லையாடி?”
“அப்படி இல்லடா. சொல்லப்போனா என் மேலதான் எனக்கு நம்பிக்கை இல்லை.”
அஸ்திரம் வேலை செய்தது. குற்றவுணர்வு மேலோங்க அவனுக்கு செல்ஃபி அனுப்பத் தீர்மானித்தாள். பார்த்தவுடன் அழித்துவிட வேண்டும் என வெவ்வேறு சொற்களில் இருபது முறைக்கு மேல் சொல்லி விட்டாள். நிற்க. டிஎம் மௌனம் உடைபடுகிறது.
சில நொடிகள் டிஎம்மில் டைப்பிங் சிம்பல் காட்டிய பின் செல்ஃபி வந்து விழுந்தது.
“ப்பா! ரெண்டும் கண்ணைக் குத்துது!”
“டேய்ய்ய்!”
“தினம் பாலில் குளிப்பியாடி?”
“போடா!”
“சான்சே இல்ல!”
“யாருமே என்னை இப்படிப் பார்த்ததில்ல. என் அம்மா கூட. நீதான் முதல்.”
“நான் மட்டும் என்ன? யாரையுமே நானும் இப்படிப் பார்த்ததில்லயாக்கும்.”
“புளுகாதே. தினம் பாக்கற சீன் படத்துல எட்டு கெஜம் புடவை சுத்திட்டா வர்றாளுக?”
“இன்சல்ட் பண்ணாதே. அதுவும் இதுவும் ஒண்ணாடி? நீ ஃப்ரெஷ் பீஸ் ஆச்சே!”
“ச்சீய்...”
தொடர்ந்தார்கள். தோய்ந்தார்கள். நான்காம் தலைமுறை அலைக்கற்றை நாணியது.
தவறியும் எத்தருணத்திலும் காதல் என்ற சொல் அவர்களுக்குள் இடம்பெறவில்லை. தெளிந்த இத்தலைமுறையின் பிரதிநிதிகளாய்த் தம்மைக் கருதிக் கொண்டார்கள்.
ப்ரியதர்ஷினிக்கு கல்யாணம் நிச்சயமானது. “இனி இதெல்லாம் தப்பு. இதுதான் கடைசி! சரியா?” என்று சொல்லி அதையும் செல்ஃபியுடன்தான் கொண்டாடினர்.
மாப்பிள்ளைக்கு பெங்களூரில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் லட்சம் ரூபாய் மாதச் சம்பளத்தில் வேலை. ரிசப்ஷனில் போட பதினைந்தாயிரம் ரூபாய்க்கு கோட் வாங்கிய பின், எட்டு பவுனில் தாலி செய்ய ஆர்டர் கொடுத்த பின், பரூஃப் பார்த்த பத்திரிக்கை அச்சுக்குப்போன மறுநாள் – கல்யாணத்துக்குச் சரியாய் மூன்று வாரம் இருக்கையில் - எல்லாவற்றையும் நிறுத்துமாறு மாப்பிள்ளை வீட்டில் சொன்னார்கள்.
நெஞ்சைப் பிடித்தபடி ப்ரியாவின் அப்பா காரணம் கேட்டார். வாட்ஸாப் பார்க்கச் சொன்னார்கள். திறந்து பார்த்து கட்டுவிரியன் கொத்தியதுபோல் அதிர்ச்சியுற்றார்.
அது ப்ரியதர்ஷனியின் செல்ஃபி. டாப்லெஸ் செல்ஃபி. மாப்பிள்ளை தன் பள்ளி நண்பர்களுடனான வாட்ஸாப் குழுவில் தான் திருமணம் செய்யப் போகும் பெண் என்று ப்ரியதர்ஷினியின் படத்தைப்பகிர, அவர்களில் ஒருவன் தன் சேமிப்பிலிருந்து அந்தச் செல்ஃபியைப் பகிர்ந்து வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறான். பூகம்பப்புள்ளி!
ப்ரியதர்ஷினியை வீட்டில் நையப்புடைத்தார்கள். காதல், கர்ப்பம் என்று சிக்கலோ எனத் துருவிக் கேட்டார்கள். முதலில் அது தானே இல்லை என்று சாதித்தவள் - அப்படத்தில் வராகம் போல் வாயைக்குவித்து வைத்திருந்ததால் அப்படிச் சொல்ல முகாந்திரம் இருந்தது - அடி தாளாமல் கல்லூரி சினேகதிகளுடன் விளையாட்டாய்ப் பகிர்ந்தது எப்படி வெளியே வந்ததெனத் தெரியவில்லை எனக் கூறிச்சமாளித்தாள்.
வனச்சினத்துடன் வருணிடம் விளக்கம் கேட்டாள். உண்மையாகவே அவன் அதை எவருக்கும் காட்டவோ பகிரவோ இல்லை. அதைச்சத்தியம் செய்தான். அழிக்காமல் வைத்திருந்தது மட்டுமே தன் தவறு என்றான். அவளதை நம்பத்தயாராய் இல்லை.
“யூ பெர்வர்ட், பிட்ரேயர்…” என்று திட்டி அவனை ட்விட்டரில் ப்ளாக் செய்தாள்.
ப்ரியதர்ஷினிக்குச் சத்தமில்லாமல் மீண்டும் ஒரு மாப்பிள்ளை தேடி - வாட்ஸாப் பயன்படுத்தாத மாப்பிள்ளை - அடுத்த மூன்று மாதத்தில் சிறப்பாய்க்கல்யாணம் முடித்தார்கள். சற்றும் மனந்தளராத வருண் அவளை ட்விட்டரில் மென்ஷனிட்டு வாழ்த்தினான். ப்ளாக் செய்திருந்ததால் அவள் அதைப்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
வருணுக்கு இன்னும் புகைப்படம் எப்படி வெளியே போனது எனப்புரியவில்லை. அவனுக்குப் பெரிதாய்க் குற்றவுணர்வு ஏதுமில்லை என்றாலும் தான் செய்யாத பிழைக்குத் தண்டிக்கப்படுவது வருத்தமளித்தது. நண்பனின் வீட்டில் முட்டக்குடித்து மட்டையான இரவில் தன் செல்பேசியைத்திறந்து எவரும் எடுத்திருக்கலாம் அல்லது ஒருமுறை செல்பேசி மழையில் நனைந்து பழுதுபட்டபோது சர்வீஸ் சென்டரில் கொடுத்த அரை மணி இடைவெளியில் திருடப்பட்டிருக்கலாம் எனச்சாத்தியங்களை யோசித்துக்குழம்பினான். அடுத்த முறை ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தான். இப்போது அவன் மோனலிசாவிடம் பேசிக்கொண்டிருக்கிறான்!
ப்ரியதர்ஷினி இப்போது சந்தோஷமாய் இருக்கிறாள். அவள் செல்ஃபியானது வையக விரிவு வலையில் இன்று திரியும் பல்லாயிரங்கோடி ஆபாசப்படங்களில் ஒன்றாகக் கலந்து கரைந்து விட்டது. எப்போது வேண்டுமானாலும் அது வெளிப்பட்டு மீண்டும் தலை வலி தரலாம் என்ற ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. ப்ரியதர்ஷினி தன் ஹேர்ஸ்டைலை மாற்றிக்கொண்டாள். கல்யாணத்துக்குப் பிந்தைய பூரிப்பிலோ என்னவோ சற்றே பெருத்து விட்டாள். இனி அந்தச் செல்ஃபி வெளிவந்தாலும் அது தானில்லை எனச்சாதிக்க அனைத்து முஸ்தீபுகளையும் செய்து தயாராகி விட்டாள்.
வருணின் ஆதார் அட்டையில் பிழைதிருத்தம் செய்ய ஓடிபி கன்ஃபர்மேஷனுக்காக அவன் செல்பேசி வாங்கிச்சென்ற, ஸ்மார்ட்ஃபோன் அவ்வளவாய்ப்பழகாத அவனது தந்தையின் மீது கடைசிவரை அவனுக்குக் கொஞ்சமும் சந்தேகமெழவே இல்லை.
***
[30-3-2018 தேதியிட்ட குங்குமம் வார இதழில் வெளியான கதை]
Published on July 22, 2018 06:10
July 16, 2018
மிஷ்கினின் வல்லுறவு
மிஷ்கின் மேல் எல்லோருக்கும் காண்டு இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் ஓர் அறிவுஜீவி என்பது தான் காரணம். நம்மூரில் புத்திசாலிகளை மக்களுக்குப் பிடிக்காது. போட்டு அடிப்பார்கள். அவர்களுக்கு ரஜினி மாதிரி ஓர் அரைகுறை என்றால் தான் திருப்தி. எட்டு வழிச் சாலையை வைத்துக் கொள், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடாதே என்று நடுவிரலைக் காட்டினாலும் பரவாயில்லை. ஆனால் அறிவாளி வேண்டாம். ஒருவேளை ஒருவன் புத்திசாலியாக இருந்தாலும் அவன் எக்காரணம் கொண்டும் காட்டிக் கொள்ளவே கூடாது. ஒரு பாலியல் நோய் வந்தது போல் மிக ரகசியமாக அதை வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். அவ்வளவு தாழ்வு மனப்பான்மை நம் ஆட்களுக்கு.
சில நூறு பேருக்கு மட்டும் தெரிந்த நான் 'இண்டலெக்சுவல்' என்று சமூக வலைதள பயோ போட்டுக் கொண்டதற்கே பத்தாண்டுகளாக பொச்செரிந்து கொண்டிருப்போர் உண்டு எனும் போது லட்சக்கணக்கானோருக்குத் தெரிந்த மிஷ்கின் இண்டலெக்சுவலாக இருப்பது பொறுக்குமா! அசந்தால் ஆப்படிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். அசராவிடிலும் அசந்ததாய்ச் சொல்லி ஆப்படிப்பார்கள். அப்படியான ஒன்று தான் அவரது மம்மூட்டி ரேப் பேச்சை முன்வைத்து அவரை மொத்தமாக ஒன்றுமே இல்லை என்று நிறுவ முனைவது. எத்தனை நல்ல படம் பார்த்தாலும், எடுத்தாலும் அவன் மனிதனே இல்லை என்று தீர்ப்பெழுதுவது.

முதலில் அவரது பேச்சைப் பார்ப்போம்: "நான் பெண்ணாக இருந்திருந்தால் மம்மூட்டியை ரேப் செய்திருப்பேன்" ("Had I been a girl, would've raped Mammootty") என்று சொல்லி இருக்கிறார் (பேரன்பு திரைப்படம் பார்த்ததை முன்வைத்து அவரது நடிப்பைச் சிலாகிக்கும் முகமாக). இன்று இந்தியாவில் இருக்கும் சமூகச் சிக்கல் ஆண்கள் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வது தான். பெண்கள் ஆண்களை / சிறுவர்களை வல்லுறவு செய்வது பிள்ளைகெடுத்தாள்விளை போல் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கலாம். முதலில் ஆணின் முழுச் சம்மதம் இல்லாமல் பெண்ணால் அவனை வல்லுறவு செய்ய முடியுமா என்றே எனக்குப் புரியவில்லை. அதை நியாயமாக மயக்கி, அல்லது தூண்டிப் புணர்தல் என்று தான் சொல்ல முடியும். உயிரியல்ரீதியான ஒத்துழைப்பின்மை தவிர உடல் வலிமையில் இருக்கும் வித்தியாசமும் ஒரு காரணம். அதையும் தாண்டி பூரண வற்புறுத்தல் என்றால் வாய்ப்புணர்ச்சியை வேண்டுமானால் கணக்கில் கொள்ளலாம். தவிர நம் ஆண்களுக்கு இருக்கும் பாலியல் வறுமைக்கு பொதுவாய் அவர்களை எந்தப் பெண்ணும் வற்புறுத்த வேண்டியும் இருப்பதில்லை. அதாவது நடக்கிறது என்றாலும் அது இன்று நம் சமூகத்தில் பெரும் பிரச்சனை அல்ல என்பதே என் புரிதல். இந்தப் பின்புலத்தில் மிஷ்கின் சொன்னதைக் கவனிக்கலாம். தான் மட்டும் பெண்ணாகப் பிறந்திருந்தால் மம்மூட்டியைப் புணர விழைந்திருபேன் என்கிறார். அதை அப்பாத்திரத்தின் மீதான ஒரு காதலாகவே என்னால் பார்க்க முடிகிறது.
பல ஊடகங்களும் செய்திகளில் அப்படித்தான் போட்டிருக்கிறார்கள். அது இடக்கரடக்கலா அல்லது சரியான புரிதலா என்பது வேறு விஷயம். இடக்கரடக்கல் என்றாலும் சினிமாக்காரன் பேச்சை ஊதிப் பெரிதாக்கத் துடிக்கும் ஊடகங்கள் இதைப் பொருட்படுத்தவில்லை எனும் போது முதல் பார்வையில் இது தவறென்று அவர்களுக்குத் தோன்றவில்லை என்பதைச் சுட்ட விரும்புகிறேன். ஆனால் நம் சமூக வலைதளக்கார நீதிமான்களுக்குத்தான் எல்லாவற்றையும் தோண்டித் துருவித் தூக்கிடுவதில் அலாதி விருப்பமாயிற்றே!
இதையே "மம்மூட்டி பெண்ணாக இருந்திருந்தால் அவரை ரேப் செய்திருப்பேன்" என்று மிஷ்கின் சொல்லி இருந்தால் அது தவறு தான். (அப்போதும் அவரது ஒட்டுமொத்தப் பங்களிப்பை நிராகரிக்கும் அகங்காரத்தைச் செய்ய மாட்டேன். இவ்விஷயத்தில் அவர் பேசியது சமூகக் குற்றம், அதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்வேன்.) அங்கே ரேப் என்ற சொல்லை மேலே சொல்லி இருப்பது போல் காதல் என்று எளிதாக எடுக்க முடியாது. கடக்கவும் முடியாது. ஏனெனில் இது பாலியல் குற்றங்களின் தேசம். இங்கே பெண்கள் ஆண்களால் பாலியல் இச்சை, சாதி, அதிகாரம், ஆணாதிக்கம், வன்முறை, மனச்சிதைவு எனப் பல காரணங்களால் வல்லுறவுக்கு உள்ளாகிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் அப்படிச் சொல்லக்கூடாது. முன்பு சல்மான் கான் Sultan படம் நடித்து முடித்த பின் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அப்படம் கோரிய அதீத உடலுழைப்பைச் சுட்டும் நோக்கில் "ரேப் செய்யப்பட்ட பெண் போல் களைத்திருக்கிறேன்" என்று சொன்ன போது நாமெல்லாம் கண்டித்தது நியாயமே. எதையும் ரேப்போடு ஒப்பிட்டு அக்குற்றத்தின் சமூக இடத்தை அங்கீகரித்ததாகி விடக்கூடாது என்பதால்.
ஓர் எளிய உதாரணம் மூலம் இதை விளக்கலாம். "ஆண்கள் சமையல் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று எழுதினால் அது சாதாரணம் வாழ்வியல் அறிவுரை. ஆனால் அதுவே "பெண்கள் சமையல் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று சொன்னால் அது பெண்ணடிமைத்தனத்தைத் தூண்டும் செயல். ஏனெனில் நம் நாட்டில் பெண்களைச் சமையல்காரிகளாக வைத்திருக்கும் ஆணாதிக்கப் போக்கு நிலவுகிறது. மேற்சொன்ன இரண்டையும் ஒரே அளவுகோலில் வைத்துப் பார்க்க முடியாது. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் உளறுவதை சமூகப் பொறுப்புள்ள ஒருவர் தவிர்ப்பது நலம். அது உண்மையில் புத்தி போதாமையில் செய்யும் ஒரு திரித்தல் வேலை தான்.
குறிப்பிட்ட இவ்விஷயத்தில் அதிகபட்சம் மிஷ்கின் இனி ரேப் என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது கவனமாய் இருக்க வேண்டும் என்று soft advice வேண்டுமானால் செய்யலாம். மற்றதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம்.
இப்பதிவிற்கும் மேற்சொன்ன தாழ்வுமனப்பான்மைக்காரர்கள் வசவும் கேலியும் அளிப்பார்கள். என்ன செய்வது, அவர்களுக்கும் சேர்த்துத் தான் நாங்கள் சிந்திக்க வேண்டி இருக்கிறது!
*
Published on July 16, 2018 20:54
July 5, 2018
ஃப்ரெஞ்ச் கிஸ்
“I thought it was my job to give all the boys their first kiss.”
- Jessica Alba, Hollywood Actress
ஃப்ரெஞ்ச் கிஸ் என்பது பொதுவாய் ஆணும் பெண்ணும் காதலின் / காமத்தின் நிமித்தம் உதட்டோடு உதடு வைத்து பரிமாறிக் கொள்ளும் ஒரு வகை முத்தம். லிப் லாக், மௌத் கிஸ் எனப் பலவாறாக இது அழைக்கப்படுகிறது. உதடுகள் கலப்பது என்பதைத் தாண்டி நாக்குகள் பரஸ்பரம் துழாவிக் கொள்வதும் அதன் நீட்சியாய் எச்சில் பரிமாற்றமும் நிகழும். நெற்றி, கன்னம், புறங்கை பகுதிகளில் முத்தமிடுவதை விட அந்தரங்கமானதாக ஆனந்தரகமானதாக கருதப்படுவது இது!
செசர் லம்ப்ரோஸோ காதலர்களிடையேயான உதட்டு முத்தம் ஆதிகாலத்தில் தாய்க்கும் சேய்க்கும் இடையேயான வாய்வழி உணவு ஊட்டும் பழக்கத்திலிருந்து உருவானதாகச் சொன்னார். எர்னெஸ்ட் க்ராலி பறவைகள் அலகுகளில் கொஞ்சிக் கொள்வதும், பூச்சிகள் உணர்கொம்புகளில் முட்டி விளையாடுவதும் கூட உதட்டு முத்தத்தின் பரிமாணமே என்றார். மனிதக்குரங்குகளில் உதட்டு முத்தம் சகஜம் - சிம்பன்ஸிக்கள் திறந்த வாயுடனும், போனோபோக்கள் நாக்கு தொடுமளவும்.
பொதுவாய் முத்தம் என்பதே பிரத்யேகத் தொடுகை. அதிலும் உதட்டு முத்தம் இன்னமும் ஸ்பெஷல்! காரணம் விரலின் நுனிகளைக் காட்டிலும் நூறு மடங்கு அதிக உணர்ச்சிகரமானவை உதட்டின் இதழ்கள். பாலியல் உறுப்புகளுக்குக் கூட அவ்வளவு துல்லிய உணர்ச்சி கிடையாது. முத்தமிடும் போது 34 முகத்தசைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது - குறிப்பாய் உதட்டிலிருக்கும் ஆர்பிக்யூலரிஸ் ஓரிஸ் தசை. இதை முத்தமிடும் தசை என்று சொல்கிறார்கள்.
பெயர் ஃப்ரெஞ்ச் முத்தம் என்றாலும் இதன் ஆரம்பம் நம் இந்தியாவில் தான். வேதங்களில் (கிமு 1500) உதட்டு முத்தம் பற்றி சொல்லப்படுகிறது. பின் கிபி 1000ம் ஆண்டு வாக்கில் உண்டாக்கப்பட்ட கஜுராஹோ சித்ரகுப்தா கோவிலில் ஆணும் பெண்ணும் உதட்டில் முத்தமிட்டுக் கொள்ளும் சிற்பம் இருக்கிறது. பிற்பாடு கிமு 326ல் அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்த போது கிரேக்கர்கள் நம்மிடமிருந்து உதட்டு முத்தம் பற்றிக் கற்றுக் கொண்டார்கள்.
பல நூற்றாண்டுகளாக நம் தேசம் முழுக்க வாய்மொழிக்கதையாக இருந்து கிபி350ல் எழுத்து வடிவம் பெற்ற மகாபாரதத்தில் உதட்டு முத்தம் காதலின் அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பின் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாத்ஸாயனரின் காமசூத்ரா 30 வகை உதட்டு முத்தங்களை விவரிக்கிறது.

கிமு 200ம் ஆண்டில் லத்தீன் கவிஞர் ப்ளாடஸ் எழுதிய ஒரு படைப்பில் ஓர் அடிமை ஒரு பெண்ணிடம் "என்னை ஒரு சர்ப்பமாக மாற்றி விடு, இரண்டு நாக்குகளையும் கொடு" என்று சொல்வதாக வருகிறது. அது தான் இந்தியா அல்லாத அந்நிய தேசத்திலிருந்து உதட்டு முத்தம் பற்றி வரும் முதல் குறிப்பு.
ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் கதைகளில் கொட்டாவி விடும் காதலனை ஒரு பெண் தன் உதடுகள் கொண்டழுத்தி நாக்கை ஆழச் செலுத்தி நடனமாடி வாயைத் துழாவுவதாக கதைசொல்லியான சேஹெரஸாட் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.
ரோமானிய சாம்ராஜ்யத்தில் மூவகை முத்தம் மிகப்பிரபலமாக இருந்திருக்கிறது. முதல் வகை ஆஸ்குலம் - சாதாரணமாக கன்னத்தில் முத்தமிடுவது. இரண்டாம் வகை பேஸியம் - உதட்டில் ஒரு முறை ஒற்றி எடுப்பது. மூன்றாவது வகையான சேவோலியம் தான் நாக்கு வரை நீளும் நீடிக்கும் அசல் ஃப்ரெஞ்ச் முத்தமாகும். இந்த மூன்றாம் வகை முத்தத்தை உற்றார் உறவினர் நண்பர்கள் முன்னிலையில் கொடுத்துத் தான் ஆணும் பெண்ணும் திருமணம் செய்ததை அறிவிப்பது வழக்கம்.
கிபி 300ல் ரோமில் கணவர்கள் வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய பின் மனைவியரை உதட்டில் முத்தமிடுவதைப் பழக்கமாக வைத்திருந்தனர். அது காதலின் பொருட்டன்று; மது அருந்தியிருக்கின்றனரா என அறியும் நோக்கில்.
1590களில் ஷேக்ஸ்பியரின் ரோமியோ - ஜூலியட் நாடகம் மேடையேற்றப்பட்ட போது ரோமியோ ஓர் உதட்டு முத்தத்துடன் இறந்து போவதாக இருந்த காட்சி நிகழ்த்தப்பட்டது. 1763ல் முத்தத்தை XOXO என்று எழுதும் முறை அறிமுகமானது.
1784ல் இங்கிலாந்தில் நடந்த தேர்தல்களில் ஜார்ஜியானா என்ற அரச குடிப் பெண் தேர்தலில் போட்டியிட்ட நண்பருக்கு ஆதர’வாய்’ப் பிரச்சாரம் போய் ஆட்களுக்கு லஞ்ச உதட்டு முத்தம் தந்ததாக குற்றம் சாட்டப்பட்டது - “kisses for votes” scandal!
உதட்டு முத்தத்திற்கு ஏன் ஃப்ரெஞ்ச் முத்தம் என்று பெயர் வந்தது? ஃப்ரான்ஸுடன் காலனியாதிக்கப் போட்டி உச்சத்தில் இருந்த சமயத்தில் இங்கிலாந்து நாட்டினர் அவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் இந்தச் சொல்லை உருவாக்கினார்கள். ஆங்கிலேயர்களைப் பொறுத்த வரை உதட்டில் முத்தம் தருவது இங்கிதமற்ற செயல். அதனால் அதனை தங்கள் வைரிகளின் பெயரால் கிண்டலாக ஃப்ரெஞ்ச் கிஸ் என்று சொன்னார்கள். 1923ல் இச்சொல் பரவலாய்ப் புழங்கத் தொடங்கியது.
முதல் உலகப் போரில் ஈடுபட்டு ஊர் திரும்பிய பிரிட்டிஷ் சிப்பாய்கள் தம் காதலியர், மனைவியரிடம் ஃப்ரெஞ்ச் முத்தத்தைப் பிரபலமாக்கி விட்டனர்.
1889ல் ஃப்ரெஞ்சுக்காரரான அகஸ்டி ரோடின் ஓர் ஆண் ஒரு பெண்ணை மடியில் இருத்தி உதட்டில் முத்தமிடுவதாய் அமைந்த புகழ்பெற்ற The Kiss சிற்பத்தை வடிவமைத்தார். இன்றும் அதன் மினியேச்சர்கள் உலகெங்கும் விற்கப்படுகின்றன.
1896ம் ஆண்டு The Kiss என்ற படத்தில் ஜான் ரைஸ் - மே இர்வின் இருவரிடையே முதல் முத்தக்காட்சி இடம் பெற்றது. நம் கமல்ஹாசனுக்கெல்லாம் தாத்தா இவர். 1918 ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ‘Private Lindner’s Letters: Censored and uncensored’ என்ற புத்தகத்தில் ஃப்ரெஞ்ச் கிஸ் என்ற சொல் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது.

1937ல் புகழ்பெற்ற ஸ்னோ வைட் என்ற டிஸ்னி கார்ட்டூன் கதையில் உறங்கும் இளவரசியை உதட்டில் முத்தமிட்டு இளவரசன் உயிர்த்தெழச் செய்யும் காட்சி பிரபலமானது. 1945 லைஃப் இதழில் ஒரு மாலுமி ஒரு செவிலியை தெருவில் முத்தமிடும் அட்டைப்படம் இடம்பெற்றது. தலைமுறைகள் தாண்டி இன்றும் ஓர் அபாரமான ரொமான்டிக் சித்திரமாக மக்கள் மனதில் அப்படம் உறைந்திருக்கிறது.
1946ல் ஆல்ஃப்டெட் ஹிட்ச்காக்கின் Notorious படத்தில் இன்க்ரிட் பெர்க்மன், கேரி க்ராண்ட் இடையேயான முத்தம் படங்களில் ஆக செக்ஸியானதாகச் சொல்வர்! Don Juan (1926) படத்தில் ஜான் பேரிமோர், மேரி ஆஸ்டர் இடையே 127 முத்தங்கள் இடம்பெற்றன. 1961ன் Splendor in the Grass திரைப்படத்தில் நடாலி வுட், வாரன் பீட்டி முத்தம் ஹாலிவுட்டின் முதல் ஃப்ரெஞ்ச் கிஸ். 1963ன் ஆண்டி ஆண்டிஹோலின் Kiss படத்தில் மிக நீளமான முத்தக்காட்சி 54 நிமிடங்களுக்கு இடம்பெற்றது.
2002ல் வெளியான ஸ்பைடர்மேன் திரைப்படத்தில் போபே மாகுய்ர், க்ரிஸ்டென் டன்ஸ்ட்க்குத் தரும் மிகப் புகழ்பெற்ற தலைகீழ் உதட்டு முத்தம் இடம்பெற்றது.
2003ல் நடந்த எம்டிவி ம்யூசிக் அவார்ட்ஸ் நிகழ்வில் பிரபல பாப் பாடகிகளான மடோனாவும் ப்ரிட்னி ஸ்பியர்ஸும் மேடையிலேயே முத்தமிட்டுக் கொண்டனர். அவர்கள் வாயடைத்துக் கொண்டதை உலகமே உலகம் வாயடைத்துப் பார்த்தது!

2003ல் நடந்த ஒரு நிகழ்வில் ஹாலிவுட் நடிகை ஷாரன் ஸ்டோன் முத்தத்தை ஏலம் விட்டார். ஜானி ரிம் என்ற அமெரிக்கர் 50,000 டாலர்களுக்கு அந்த ஒற்றை முத்தத்தை ஏலம் எடுத்துப் பெற்றார். அந்தப் பணம் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உணவு வசதி ஏற்பாடு செய்ய ஒரு தொண்டு நிறுவனத்திற்குத் தரப்பட்டது.
எம்டிவி மூவி ஆவார்ட்ஸில் ஆண்டுதோறும் திரைப்படங்களில் இடம்பெற்ற சிறந்த முத்தத்திற்கு விருது வழங்கி வருகிறார்கள். 2009லிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக Twilight சீரிஸில் தவறாது இடம்பெறும் கிரிஸ்டென் ஸ்டீவர்ட் - ராபர்ட் பேட்டின்ஸன் முத்தக்காட்சிகள் இவ்விருதினைப் பெற்று வருகின்றன.
1990ல் மின்னெஸோட்டா மறுமலர்ச்சி திருவிழாவில் ஆல்ஃப்ரெட் வுல்ஃப்ரம் 8001 பேரை எட்டு மணி நேரத்தில் முத்தமிட்டு சாதனை படைத்தார் - நிமிடத்திற்கு 16 உதடுகளுக்கு மேல்! 2012ல் காதலர் தினத்தின் போது தொடர்ந்து 50 மணி நேரம் 25நிமிடம் 1 வினாடி தாய்லாந்தைச் சேர்ந்த நொந்தவாட் சரோன்கேஸொர்ன்ஸின் மற்றும் தனகோர்ன் சித்தியம்தாங் என்ற ஜோடி முத்தமிட்டு சாதனை படைத்தது.
முத்தமிடுவதால் மன அழுத்தம் குறைந்து ஆண் பெண் உறவுகளில் திருப்தியும் நிம்மதியும் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடம்பின் கொலஸ்ட்ரால் குறைவதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள். முத்தமிடும் போது அதீத அட்ரினலின் சுரப்பால் இதயம் வேகமாகத் துடிக்கிறது (நிமிடத்திற்கு 100 வரை). உடற்பயிற்சிக்கு சமானமாய் இது உடம்புக்கு நன்மை பயக்கிறது. அலெக்ஸாண்டர் டீவீஸ் என்பவர் முத்தமிடுவதால் நிமிடத்திற்கு 2 முதல் 3 கலோரி வரை எரிக்கலாம் என்கிறார்.
உதட்டு முத்தத்தால் மோனோந்யூக்ளியோசிஸ், ஹெர்ப்ஸ் சிம்ப்ளெக்ஸ் போன்ற எச்சிலின் வழி பரவும் வியாதிகள் ஏற்படுகின்றன. மிக அரிதாய் எயிட்ஸ் கூடப் பரவும்! 1997ல் அப்படிப்பட்ட ஒரு கேஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட ஆண் பெண் இருவருக்கும் ஓர் ஈறு நோயினால் பாதிக்கப்பட்டிருக்க, உதட்டு முத்தத்தின் போது ரத்தத்தின் சேர்க்கை காரணமாய் ஹெச்ஐவி தொற்றிவிட்டது.
உதட்டு முத்தமிடுகையில் மூன்றில் இரண்டு பங்கினர் தம் தலையை வலது பக்கம் திருப்புவதாக ஓனக் குண்டூர்கம் என்ற ஜெர்மனிய சைக்காலஜிஸ்ட் கண்டுபிடித்திருக்கிறார். இந்த குணம் கருவில் ஆறு மாதக் குழந்தையாக இருக்கும் போதே நிர்ணயிக்கப்பட்டு விடுவதாகவும் சொல்கிறார் இவர்.
முத்தம் தொடர்பாய் மருத்துவ ஆராய்ச்சிகள் புரிந்த மார்ட்டின் மூரியர் என்பவர் உலக ஜனத்தொகையில் பாதிப்பேர் ஃப்ரெஞ்ச் முத்தம் இடுவதாகக் குறிப்பிடுகிறார்.
சில ஆப்ரிக்கப் பழங்குடியினர் உயிர் மூச்சு பரிமாறப்பட்டு விடும் என்ற பயத்தின் காரணமாக உதட்டு முத்தமிட்டுக் கொள்வதில்லை. மொஸாம்பிக்குவைச் சேர்ந்த பிக்மிக்கள், தொங்காக்கள் உதட்டு முத்தம் சுகாதாரமானதல்ல என்றெண்ணுவதால் அதைத் தவிர்க்கின்றனர். மாஞ்சா என்ற ஆப்ரிக்க பழங்குடியினப் பெண்கள் மேல் உதட்டில் துளையிட்டு ஒரு மரவட்டும் இரு கொக்கிகளும் அணிவது வழக்கம். அவர்களுடன் உதட்டு முத்தம் முயற்சிக்கும் ஆண் வாய் கொத்து பரோட்டாவாகி விடும் சாத்தியம் அதிகமுண்டு என்பதால் அவர்களும் அதை முயற்சிப்பதில்லை.
சீனர்கள் ஃப்ரெஞ்ச் முத்தம் ஆபாசமானது என எண்ணுகின்றனர். பொதுவிடத்தில் அதை நிகழ்த்துவது பெரும் அசிங்கமாகக் கருதப்படுகிறது. பாப்பா நியூ கினியா மக்கள் யாராவது உதட்டு முத்தமிடுவதைப் பார்த்து விட்டால் பெரும் சிரிப்புடன் குலவையிடுகின்றனர். பாலித்தீவு மக்கள் உதட்டு முத்தம் இட்டுக்கொள்வதில்லை; பதிலாக ஆணும் பெண்ணும் முகங்களை தம் நெருக்கமாக வைத்துக் கொண்டு முகர்ந்து பார்த்து, தேக வெம்மையை உணர்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர். தகித்தியர்கள் ஆண் பெண் மூக்கில் மூக்கு வைத்துத் தேய்த்துக் கொள்கின்றனர். எஸ்கிமோக்கள் மூக்கை உறுஞ்சிப் பார்த்து நாவுகளை ஒட்டிக் கொள்கின்றனர்.
உலகம் உள்ளளவும் உதட்டு முத்தம் ஏதேனும் வடிவில் இருந்து கொண்டிருக்கும்.
*
Stats சவீதா
• ஒரு மனிதன் தன் ஆயுளில் 2 வாரங்களை முத்தமிடுவதில் கழிக்கிறான்.
• உதட்டு முத்தத்தின் போது 100 கோடி பேக்டீரியாக்கள் பரிமாறப்படுகின்றன.
• 70% பேர் தம் முதல் முத்தத்தை 15 வயதில் அனுபவித்தாக சொல்கின்றனர்.
• ஓர் அமெரிக்கப்பெண் 79 ஆண்களை திருமணத்திற்குமுன் முத்தமிடுகிறாள்.
• 39% பெண்கள் மிலிட்டரி உடை ஆண்களை முத்தமிட விரும்புகின்றனர்.
***
(2012ல் குங்குமம் இதழில் வெளியானது)
Published on July 05, 2018 22:26
டிஜிட்டல் நிர்வாணம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நூறாம் நாளில் பொதுமக்கள் மீது காவல் துறை துப்பாக்கிச்சூடு எனும் கொடூர அரச பயங்கரவாதத்தை நடத்திப் பச்சைப் படுகொலைகள் செய்த பின் ஐந்து நாட்களுக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையச் சேவையை ரத்து செய்துள்ளனர். அதாவது வாட்ஸாப், ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக வலைதளங்களையும் கூகுள் வழியே இதர செய்தி இணையதளங்களையும் பொதுமக்கள் பார்க்க முடியாது.
வதந்திகள் பரப்புவதைத் தடுக்க என அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும் உண்மையில் செய்திகள் பரவுவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு என்பது தெளிவு. முன்பு இம்மாதிரி சூழல்களில் கேபிள் தொலைக்காட்சிகளைத்தான் ப்ளாக்-அவுட் செய்வார்கள். இப்போது இணையத்தையும் சேர்த்து. ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டின் வீச்சும் அதன் மீதான மக்களின் சார்பும் கடந்த பத்தாண்டில் இந்தியாவில் அத்தனை அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது. அதன் இன்னொரு முகத்தை இரும்புத்திரை திரைப்படம் பேசுகிறது.

படம் இப்படித் துவங்குகிறது: ரிச்சி ஸ்ட்ரீட்டில் உட்கார்ந்து கொண்டு செல்பேசி ஒட்டுக்கேட்டல் மூலம் ஓர் ஐடி இளைஞனின் வங்கிக் கணக்குக்குப் பெருந்தொகை வருவதை அறிந்து கொண்டு, பணம் வந்ததும் அவன் வங்கிக் கணக்கை ஹேக் (Hack) செய்து, அதைத் தம் கணக்குக்கு மாற்றி அந்தப் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். இந்தச் சம்பவங்களின் விரிவாக்கம் அல்லது விளக்கம் தான் மீதித் திரைப்படம்.
இரும்புத் திரை படத்தில் செல்ஃபோன் மற்றும் இணையப் பயன்பாடு தொடர்புடைய மூன்று விஷயங்கள் குறித்து எச்சரிக்கிறார்கள்: 1) சமூக வலைதளங்களில் நம்மைப் பற்றிய அதீதத் தகவல்கள் பகிர்வது (உதாரணமாய் நம் குடும்ப உறுப்பினர்கள் யார் யார், அவர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள், எப்போது, எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறோம், நமது உறவுகளுக்குள் பிணக்கு அல்லது நெருக்கம், கார், வீடு உள்ளிட்ட நம் செல்வச் செழிப்பு, நம் நண்பர்கள், நம் நிலைப்பாடுகள் என நிறைய). 2) தேவையற்றவர்களிடம் செல்பேசி, மின்னஞ்சல், வங்கிக் கணக்கு போன்ற தகவல்கள் பகிர்வது (ஏதாவது பரிசு என யாராவது தொலைபேசினால் யோசிக்காமல் அவர்கள் கேட்கும் தகவல்களை எல்லாவற்றையும் பகிர்வோர் உண்டு). 3) செல்ஃபோனில் ஆப் நிறுவுகையில் தரும் அனுமதிகள் (அந்த ஆப் என்னென்ன விஷயங்களை உங்களின் செல்ஃபோனில் செய்யலாம், உதாரணமாய், உங்கள் எஸ்எம்எஸ்ஸை பார்க்கலாமா, அனுப்பவும் செய்யலாமா போன்றவை). இந்த எச்சரிக்கைகள் யாவும் நியாயமானதே. இவற்றில் பொது மக்கள் கவனமாக இருத்தல் அவசியம் தான். அன்றேல் அவர்கள் தகவல்கள் திருடு போகக்கூடும். திருடிய தகவல்கள் திருட்டுக்குத் துணை போகும்.
*
படம் இன்னொரு விஷயத்தையும் சாடுகிறது. ஆதார் (Aadhaar) அட்டை என்ற பெயரில் குடிமக்களின் பெயர், புகைப்படம், முகவரி, பிறந்த நாள், செல்பேசி எண், மின்னஞ்சல், வங்கிக் கணக்குகள், எரிவாயுக் கணக்கு, கைரேகை, கருவிழி ரேகை உள்ளிட்ட பல அதிமுக்கியமான தனிமனிதத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் அரசாங்கம் அதை எத்தனை தூரம் பாதுகாப்பாய் வைத்திருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
அரசில் உயர்பதவி வகிக்கும் கேபினெட் அமைச்சர் மாதிரியான ஒருவர் அவற்றை ஏதேனும் நாசகார கும்பலுக்கு விற்கும் சாத்தியமும் இருக்கிறது என்கிறது படம்.
இது அடிப்படையற்ற சந்தேகம் ஒன்றும் கிடையாது. சில மாதங்கள் முன் மாநில அரசு நடத்தும் இண்டேன் (Indane) என்ற எரிவாயு வழங்கல் நிறுவனத்தின் API-களைப் (Application Programming Interface - தம் இணையச் சேவையைப் பயன்படுத்தி மென்பொருள் உருவாக்குனர்கள் செயலிகள் – app - உருவாக்கும் முகமாய் ஒவ்வொரு நிறுவனமும் அளித்திருக்கும் வசதி இது) பயன்படுத்தி இந்தியாவின் எந்தக் குடிமகனுடைய ஆதார் தகவல்களையும் எடுக்க முடிந்தது. அதாவது மேற்குறிப்பிட்ட எல்லாத் தரவுகளையும்.
எந்தச் சான்றளிப்பும் (Authentication) இன்றி (உதாரணமாய் கடவுச்சொல் அல்லது ஓடிபி) குறியாக்கம் செய்யப்பட்ட (encoded) INDAADHAARSECURESTATUS என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு (Hardcoded Access Token) எவருடைய ஆதார் தகவலையும் எடுக்க முடிந்தது என்பதை தில்லியைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் நிரூபித்திருக்கிறார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுவாய் API பயன்படுத்த Rate Limiting கட்டுப்பாடு வைத்திருப்பர். அதாவது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு செயலியிலிருந்து இத்தனை முறை தான் அழைக்க வேண்டும் என. இதில் அதுவும் கூட இல்லை. எந்தக் கேள்வியும் இன்றி எந்த 12 இலக்க எண்ணை வழங்கினாலும் அப்படி ஓர் ஆதார் எண் இருந்தால் அதன் சம்மந்தப்பட்ட தகவல்களைக் கொட்டி இருக்கிறது.
அதுவும் ஆதாரிலிருந்து ஒருமுறை மட்டும் பெறப்பட்ட பழைய தகவல்களாக (Static Data) இல்லாமல், ஆதாரில் தகவல்கள் மாறும் போதெல்லாம் (உதாரணம்: முகவரி, புதிய வங்கிக் கணக்குகள்) இதுவும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இண்டேனுக்கு இத்தகவல்களை ஆதாரே நேரடியாய் வழங்குகிறதா என்பது பற்றித் தெரியவில்லை.
இது போல் மேலும் சில சம்பவங்களும் ஆதார் விஷயத்தில் நடந்துள்ளன. ஆந்திர பிரதேச வீட்டு வசதி வாரியத்தின் (Andhra Pradesh Housing Corporation) வலைதளத்தில் சில மாதங்கள் முன் அதன் 1,34,000 பயனர்களின் சாதி, வங்கிக் கணக்கு, முகவரி உள்ளிட்ட ஆதார் தகவல்கள் பொதுவெளியில் பதிப்பிக்கப்பட்டதை என்பதை ஒரு சைபர்செக்யூரிட்டி ஆர்வலர் கண்டுபிடித்தார். யார் வேண்டுமானாலும் பார்க்கலாம், தரவிறக்கலாம், எதற்கும் பயன்படுத்தலாம். இண்டேன் விஷயத்திலாவது API-கள் கொண்டு கணிணி நிரல் எழுதும் திராணி கொண்டோர் மட்டுமே தரவுகளை எடுக்க முடியும். ஆனால் இதிலோ இணையம் பயன்படுத்தத் தெரிந்த எவரும் எடுக்கலாம்.
இம்மாதிரி சிலபல சம்பவங்ளுக்குப் பிறகு தான் ஆதார் தொடர்பாய் தன்னிடம் வந்த பல்வேறு மனுக்களைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு உச்சநீதிமன்றம் ஆதார் அரசியலமைப்புச் சட்டப்படி சரியானதா என்ற கேள்வியை எழுப்பியது. வங்கிக் கணக்குகளிலும், செல்பேசிக் கணக்குகளிலும் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்ற அரசின் முடிவை தற்காலிகமாய் நிராகரித்தது. தகவல்களின் பத்திரத்தன்மையைச் சந்தேகித்தது. ஆதார் எண் சரி பார்க்கும் படலத்தில் கைரேகை எடுப்பது தவறான பயன்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
ஆனால் ஆதாரை நிர்வகிக்கும் UIDAI (Unique Identification Authority of India) இதை மறுத்தது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல், “ஆதார் தகவல்கள் 13 அடி உயரமும் 5 அடி அடர்த்தியும் கொண்ட சுவற்றுக்குப் பின்னால் பாதுகாப்பாக இருக்கிறது” என்று சொன்னது பெரும் நகைச்சுவையாகப் பார்க்கப்பட்டது. (ஆனால் அவர் சொன்னதன் பொருள், ஆதார் டேட்டாபேஸ் எங்கோ ஒரு நாட்டிலிருக்கும் சர்வரில் இல்லை; அது இங்கே இந்தியாவில் நம் கட்டுப்பாட்டில், போதிய புறப்பாதுகாப்பு வசதிகளுடன் இருக்கிறது என்பது தான்.) மீறிக் கேள்வி எழுப்பினால் அதற்கு அளிக்கப்படும் முழுமையான பதிலே அதன் பாதுக்காப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்று சொல்கிறார் UIDAIயின் தலைமை நிர்வாகி அஜய் பூஷண் பாண்டே (Financial Express, May 20, 2018).
தனியார் நிறுவனங்கள் ஆதாரை கையாளும் நடைமுறையே ஆச்சமூட்டுவதாக, கவலைக்குரியதாக இருக்கிறது. ஏர்டெல் உள்ளிட்ட செல்பேசி சேவையாளர்கள், ஹெச்டிஎஃப்சி போன்ற வங்கிகள், பேடிஎம் மாதிரியான ஆன்லைன் வேலட் நிறுவனங்கள் என எல்லோருமே நம் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறார்கள். கடந்த பத்தாண்டுகளாகவே நிதி நிறுவனங்கள் KYC (Know Your Customer) என்ற நுகர்வோரை ஐயந்திரிபற அறியும் முறைமை இருந்து வருகிறது தான். ஆனால் அதில் நம் அடையாள அட்டை அல்லது இருப்பிடச் சான்றின் ஒளிநகல் பெறுவதோடு நிற்கிறது. ஆனால் ஆதார் இணைப்பு அத்தனை நேரடியானது அல்ல. முதலில் நம்மிடம் ஆதார் எண்ணைக் கேட்டுப் பெறுகிறார்கள். பிறகு அதை கணிணியில் உள்ளிட்டு ஓர் இயந்திரத்தில் நம் கைரேகையைப் பதியச் சொல்கிறார்கள். பிறகு எண்ணும் ரேகையும் சரிபார்க்கப்பட்டு இணைப்பு நடக்கிறது. உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டது இந்த முறையைத் தான்.
UIDAI என்ன சொல்கிறது எனில் இதில் கைரேகை அந்தத் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்படுவதில்லை. இயந்திரம் கைரேகை பெற்றவுடன் அது ஆதார் சேவையுடன் நேரடியாகச் சரி பார்க்கப்பட்டு பொருந்துகிறது அல்லது பொருந்தவில்லை என்ற தகவல் மட்டும் தான் தனியார் நிறுவனத்துக்குக் கிடைக்கும் என்கிறார்கள். இது உண்மை என்று கொண்டால் ஓரளவு இம்முறை பாதுகாப்பானது தான். ஆனால் இதில் விடையற்ற கேள்வி அந்த இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்துத் தான்.
நாம் நமது கைரேகையை அளிப்பது ஓர் அதிகாரப்பூர்வ அரசு அலுவலகத்தில் அல்ல. அந்தந்த நிறுவனங்களின் மக்கள் தொடர்புக் கிளைகளில். சில இடங்களில் ப்ளாஸ்டிக் குடைகள் போட்டு சாலையோரமாய்க் கூட அமர்ந்திருக்கிறார்கள். அந்த இயந்திரம் UIDAI சொல்லும் வேலையை மட்டும்தான் செய்கிறது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
அவர்கள் வைத்திருக்கும் இயந்திரம் அரசு வழங்கியதா? அப்படியே இருந்தாலும் அதில் இன்னொருவர் தம் கணிணி அறிவைப் பயன்படுத்தி - ஒரு தொழில்நுட்ப இடைச்செருகல் மூலம் - மக்களிடமிருந்து பெறும் கைரேகைகளை எல்லாம் பிரதி எடுத்து வைத்துக் கொள்ள முடியாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
இன்று இம்மாதிரி ஆயிரக்கணக்கான இயந்திரங்கள் இருக்கக்கூடும். ஆதார் பயன்பாடு பரவலாகையில் இது லட்சக்கணக்கில் உயரும். UIDAI ஒவ்வொரு இடத்திலும் போய் அதன் பயன்பாட்டின் நேர்மைத்தன்மையை உறுதி செய்தல் சாத்தியமே இல்லை.
தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிலிருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய சந்தேகங்கள் எழுப்படும் காலத்தில் இந்த இயந்திரங்களை எப்படி நம்புவது?
என் அலுவலகத்தில் ஒரு தனியார் வங்கி ஸ்டால் போட்டிருக்கிறது. ஆதாரை அழகான ப்ளாஸ்டிக் அட்டைகளில் அச்சிட்டுக் கொடுக்கிறார்கள். அதற்கு ஆதார் எண்ணும் கை ரேகையும் வழங்க வேண்டும். இலவசமாகச் செய்கிறார்கள். ஆனால் அதனால் அந்த வங்கிக்கு என்ன லாபம்? ஏன் வலிய வந்து சேவை செய்கிறார்கள்?
இப்படி ஒவ்வொன்றையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டி இருக்கிறது. (இரும்புத்திரை படத்தில் ஜெராக்ஸ் கடையில் ஆவணங்கள் ஒளிநகல் செய்கையில் தானொரு காப்பி எடுத்து வைத்துக் கொண்டு அவற்றைத் தலா ஒரு ரூபாய்க்கு கால் செண்டர்களுக்கு விற்றுச் சம்பாதிக்கும் காட்சியை இதோடு இணைத்துப் பார்க்கலாம்.)
*
இன்னொருபுறம் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்க ளில் நாம் பகிரும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கருத்துக்களை கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா போன்ற சில தரவு அலசல் (Data Analytics) நிறுவனங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அமெரிக்காவில் ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு இது உதவியிருப்பதாக சமீபத்தில் தகவல் கசிந்திருக்கிறது. சுமார் 8.7 கோடி பேரின் தகவல்கள் (எந்தப் பக்கங்களை லைக் செய்திருக்கிறார்கள், வாழுமிடம், இன்ன பிற ப்ரொஃபைல் தகவல்கள்) ஃபேஸ்புக்கிலிருந்து எடுக்கப்பட்டு அவர்களின் மனநிலை அலசப்பட்டு என்ன மாதிரி விளம்பரம் அல்லது பிரச்சாரம் செய்தால் அவர்களை ஈர்க்கலாம் / மாற்றலாம் என சம்மந்தப்பட்ட கட்சிக்கு / நிறுவனத்துக்கு ஆலோசனை தருகிறார்கள். இந்தியாவில் கூட கேம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா நிறுவனம் 2010 பீஹார் சட்டமன்றத் தேர்தலில் 5.6 லட்சம் ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களின் அடிப்படையில் இத்தகு ஆலோசனைகளை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி இருக்கிறது.
இது அம்பலமான பின் ஃபேஸ்புக் இதற்காகத் தன் பயனர்களிடத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறது. அதாவது கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா விதிமுறைகளை மீறி இப்படியான தகவல் சேகரிப்பை மேற்கொண்டிருக்கிறது எனச் சொல்லி அப்படியான நிறுவனங்களைத் தன் தரப்பிலிருந்து தகவல்கள் எடுக்கத் தடை செய்திருக்கிறது.
நீங்கள் தீவிர இணையப் பயனர் எனில் சமீப காலங்களில் இணையத்தில் உங்களுக்கு நேரும் சில ஆச்சரியமான விஷயங்களைக் கவனித்திருக்கலாம். அமேஸானிலோ, கூகுளிலோ தேடிய நீங்கள் ஒரு பொருளின் விளம்பரம் ஃபேஸ்புக்கில் உங்களுக்குத் தொடர்ச்சியாய்க் காட்டப்படும். நீங்கள் ஜிமெயிலில் தனிப்பட்டு ஒருவருடன் பேசிய ஒரு விஷயத்தின் அடிப்படையில் தொடர்புடைய பொருள் விளம்பரமாய் உங்கள் முன் வந்து நிற்கும். நாம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம். இன்று கூகுளுக்குத் தெரியாமல் நீங்கள் எதுவுமே செய்ய முடியாது என்று கூடச் சொல்லி விடலாம்.
நாம் அறியாமலேயே நம் தகவல் வியாபாரத்துக்கும் அரசியலுக்கும் பயன்படுகிறது. அதன் மூலம் நமது ப்ரக்ஞையின்றியே நம் மனதை ஈர்த்து பொருளை விற்கிறார்கள்; நம் மனதைக் குழப்பி நம் ஓட்டையே மாற்றச் செய்கிறார்கள். அதன் அடுத்தபடியாய் அப்படியான தகவல்கள் கொண்டு நம்மை ஏமாற்றிக் கொள்ளையடிக்கவே முடியும் என்ற ஒரு சாத்தியத்தைத் தான் இரும்புத் திரை திரைப்படம் முன்வைக்கிறது.
*
படத்தின் ஆதாரக் கதைக்கு வருவோம். இரும்புத் திரையில் நடைபெறும் கொள்ளை யாவும் ஹேக்கிங் வழியே தான் நடக்கிறது. ஒருவரது செல்ஃபோனை அல்லது வங்கிக் கணக்கைத் தற்காலிகமாய்க் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து அதன் மூலம் தம் கொள்ளையை நடத்துகிறார்கள். அதாவது படம் பேசும் அரசியலுக்கும் படத்தின் கதைக்கும் நேரடித் தொடர்பில்லை. மெர்சல் ஜிஎஸ்டி பற்றிப் பேசியது போல் தான். ஆனால் இதில் திறமையாய் இரண்டையும் கலந்து நம்மை நம்ப வைக்கிறார்கள்.
என்னவென விளங்கிக் கொள்ள முயல்வோம். படத்தில் நுட்பக் கொள்ளையர்களால் பாதிக்கப்படுபவர்கள் அந்தக் கும்பலிடம் மாட்டுவது மேற்சொன்ன சமூக வலைதளத் தகவல் பகிர்வுகளாலோ ஆதார் தகவல் கசிவினாலோ அல்ல. (அல்லது அவை ஓர் ஆரம்பப் புள்ளி மட்டுமே!) மற்றபடி, கஷ்டத்தினால் / பேராசையினால் ஃபோர்ஜரி செய்து வங்கிக் கடன் பெறும் சாதாரணர்களின் செல்பேசிகளை ஹேக் செய்வதன் மூலமும், அவர்கள் காசோலையில் போடும் கையெழுத்தைப் பயன்படுத்தி அவர்கள் வங்கிக் கணக்குகளைக் கைப்பற்றுவதன் மூலமுமே கொள்ளை அடிக்கிறார்கள்.
இக்கதையில் ஆதார் லீக், ஒரு ரூபாய்க்கு ஜெராக்ஸ் கடைக்காரர் தகவல் விற்பது, கால் சென்டர்களிலிருந்து தகவல் கசிவது, ஃபேஸ்புக் பகிர்வுகளில் கிடைக்கும் தனிப்பட்ட தகவல்கள் என்றெல்லாம் இன்றைய நாட்டு நடப்புக்களை ஊடுபாவாய்ச் சொருகி “மானே தேனே” போட்டபடி அரசியல் பேசி இருக்கிறார்கள். மற்றபடி அவற்றுக்கும் படத்தின் மைய இழைக்கும் நேரடித் தொடர்பில்லை. ஒரு வகையில் கொஞ்சம் அளவுக்கு மீறி பயமுறுத்தி இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
தரம் மற்றும் சுவாரஸ்யத்தின் அடிப்படையில் பார்த்தால் படம் சுமாருக்கும் மேல்.
சமந்தா வாயைத் திறந்து உதட்டில் செந்நிற ஜிபிஎஸ் சிப் காட்டும் போது நிஜமாகவே நிமர்ந்து உட்கார்கிறோம். ரயில் நிலையச் செல்ஃபியில் சிவப்புக்குடையும் கையுமாய் விஷால் பதிவாவது இன்னொன்று. இது போல் சில காட்சிகள் ரசிக்கும் படி இருந்தது.
சப்வே சண்டைக்காட்சியும் நன்று. (மவுண்ட் ரோடில் பழைய சாந்தி தியேட்டர் எதிரே இருக்கும் சப்வே தானே அது! ரிச்சி ஸ்ட்ரீட்டும் லொகேஷன் பொருந்தி வருகிறது.)
தமிழ்ப் படங்களில் ஹேக்கர்களை கடவுள் போல் காட்டுகிறார்கள். அவர்களால் உலகில் எங்கிருக்கும் சிசிடிவி கேமெரா ஃபுட்டேஜையும் எடுக்க முடியும். எந்தத் தொலைபேசியையும் ஓட்டுக் கேட்க முடியும். எந்தக் கணிப்பொறியையும் ஹேக் செய்ய முடியும். எங்கு வேண்டுமானாலும் ஜிபிஎஸ் சிப் வைக்க முடியும். எந்த வங்கிக் கணக்கிலும் கை வைக்க முடியும். இதிலும் வில்லனாய் வரும் அர்ஜுன் அப்படித்தான். போரடிக்கிறது. திரைக்கதை அதனால் தான் சுமாராய் இருக்கிறது.
இந்திய ராணுவத்தில் மேஜர் லெவலில் இருக்கும் ஒருவர் ஆறு லட்சம் ரூபாய்க்கு இவ்வளவு அல்லல்பட வேண்டுமா! அதே சமயம் இன்னொரு இடத்தில் கமிஷனரோ டிஎஸ்பியோ அவரின் மாதச் சம்பளம் இரண்டே கால் லட்சம் ரூபாய் என்கிறார்கள்!
வசனங்கள் சில நன்று (குறிப்பாய் படம் பேச முனைந்திருக்கும் சமூக அக்கறை கொண்ட விஷயங்களான ஆதார் சாடல் முதலியவை). பாடல்களைக் கவனிக்க முடியவில்லை. அர்ஜுனுக்கான பின்னணி இசை சில இடங்களில் பிரமாதம். காதல் காட்சிகளில் யுவனின் இசையில் கொஞ்சம் இளையாராஜா எட்டிப் பார்க்கிறார்.
அர்ஜுனிடம் ‘தனி ஒருவன்’ அரவிந்த்சாமி ரோல் மாதிரி என்று சொல்லி அழைத்து வந்திருப்பார்கள் போல! அது ஆர்யா நடிக்க மறுத்த பாத்திரம் என்று சொல்கிறார்கள். அரவிந்த்சாமி அளவுக்கு இல்லை அர்ஜுன். ஆர்யா நடிக்கவில்லை என்பது ஆறுதல்.
அரசு மனநல மருத்துவர் சமந்தாவிடம் விஷால் சான்றிதழுக்காகப் போகும் ஆரம்பக் காட்சிகள் மாயவன் படத்தை நினைவூட்டின. சமந்தா ரசிக்கும்படி (நடித்தும்) உள்ளார். (ரதி தேவி! என்னவொரு பெயர்!) நெடுநாள் கழித்து டெல்லி கணேஷும் அபார நடிப்பு.
படம் வெளியான போது சங்கிகள் கதறியது தான் இப்படத்துக்கான முக்கியமான ஈர்ப்பு. டிஜிட்டல் இந்தியா என்பதைப் படம் காறி உமிழ்கிறது. அதென்னவோ பாஜகவை, மோடியை யார் அடித்தாலும் காணக் கொண்டாட்டமாய் இருக்கிறது. (அர்ஜுன் குடும்பமற்றவர். பிறகேன் இத்தனை கொள்ளை என அவரே கேட்டுக் கொண்டு அவரே சொல்லும் பதில்: “ஏன்னா என்னால முடியும்.” அந்தக் கணத்தில் அந்தப் பாத்திரம் மோடியை விட ஜெயலலிதாவைத் தான் நினைவூட்டியது!)
இம்மாதிரியான விஷயங்களைத் தன் முதல் படத்திலேயே தைரியமாகப் பேசி இருப்பதற்காகவே அறிமுக இயக்குநர் மித்ரனை வாழ்த்தி வரவேற்க வேண்டும். உணர்ந்து ஆதரித்து இதில் இறங்கித் தயாரித்து நடித்த விஷாலுக்கும் பாராட்டு.
மனுஷ்ய புத்திரன் அவர்கள் இரும்புத் திரை படம் பற்றிக் கட்டுரை எழுதக் கேட்ட போது, நான் தயங்கினேன். உயிர்மை மாதிரி ஓர் இலக்கியப் பத்திரிக்கைக்கு ஒரு வெகுஜன சினிமா பற்றி எழுதுவதா என்ற யோசனை தான் காரணம். அதற்கு அவர் சொன்னார், “எல்லாப் படமுமே வெகுஜனப் படம் தான்.” யோசித்துப் பார்த்தால் அது சரியென்றே தோன்றுகிறது. கலைஞர் திரைக்கதை எழுதிய படங்களை வெகுஜனப் படங்கள் என ஒதுக்க முடியுமா என்ன! இரும்புத் திரையும் அப்படியான ஒன்று தான்!
***
(உயிர்மை ஜுன் 2018 இதழில் வெளியானது)
Published on July 05, 2018 01:40
June 30, 2018
என் புத்தகங்கள்: IAQs
அடிக்கடி இல்லை என்றாலும் எப்போதாவது நான் எதிர்கொள்ளும் கேள்விகள் இவை. IAQs - Infrequently Asked Questions!
1) நீங்கள் புத்தகம் ஏதும் எழுதி இருக்கிறீர்களா?
2) உங்கள் புத்தகங்களை எங்கே, எப்படி வாங்கலாம்?
3) உங்கள் நூல்களை ஆன்லைனில் வாங்க முடியுமா?
4) உங்கள் நூல்கள் மின்னூல்களாகக் கிடைக்கின்றனவா?
5) உங்கள் புத்தக பிடிஎஃப் எங்கே டவுன்லோட் செய்யலாம்?
அவ்வப்போது பதில் சொல்லியும் வந்திருக்கிறேன். வாசகர்கள் மற்றும் என் வசதிக்காக இங்கு தொகுத்துக் கொள்ளலாம்.
1) நீங்கள் புத்தகம் ஏதும் எழுதி இருக்கிறீர்களா?
துரதிர்ஷ்டவசமாக, ஆம். ஒரு நடிகரிடமோ ஓர் இயக்குநரிடமோ போய் ஏதும் படம் செய்திருக்கிறாயா? என்று யாரும் கேட்பதில்லை. ஆனால் ஓர் எழுத்தாளனிடம் மிக எளிதாக என்ன எழுதியிருக்கிறாய் எனக் கேட்டு விட முடியும். மொத்தம் என் 9 நூல்கள் அச்சில் வந்திருக்கின்றன. ஒரு நாவல், ஒரு சிறுகதைத் தொகுதி, இரண்டு கவிதைத் தொகுதிகள், ஒரு கட்டுரைத் தொகுதி, நான்கு அபுனைவு நூல்கள். உயிர்மை, கிழக்கு, சூரியன், சிக்ஸ்த் சென்ஸ், கற்பகம் புத்தகாலயம், அம்ருதா, அகநாழிகை என வெவ்வேறு பதிப்பகங்கள். இது போக மூன்று மின்னூல்களும் வெளியாகி இருக்கின்றன.
என் புத்தகங்களின் மொத்தப் பட்டியலையும் இங்கே காணலாம்: http://www.writercsk.com/p/blog-page_19.html

2) உங்கள் புத்தகங்களை எங்கே, எப்படி வாங்கலாம்?
சென்னையில் நியூ புக்லேண்ட்ஸ், டிஸ்கவரி புக் பேலஸ் கடைகளில் சில நூல்கள் கிடைக்கும். பிற ஊர்களிலும் தமிழ் புத்தகங்கள் விற்கும் பிரபல / பெரிய கடைகளில் கிடைக்கக்கூடும் (உதாரணம் கோவை விஜயா புக்ஸ்). இவை போக, நூல்களை வெளியிட்ட அந்தந்தப் பதிப்பகங்களின் அலுவலகங்கள் / விற்பனை மையங்களில் கிடைக்கும். இப்போது அச்சு நூல்களில் 'பரத்தை கூற்று' தவிர மற்ற எல்லா நூல்களும் கிடைக்கின்றன என்பதே என் புரிதல். ஏதேனும் நூல் எங்கும் கிடைக்கவில்லையெனில் என்னை ஃபேஸ்புக் சாட்டிலோ (https://www.facebook.com/saravanakarthikeyanc) மின்னஞ்சலிலோ (c.saravanakarthikeyan@gmail.com) தொடர்பு கொள்ளலாம். நான் மார்க்கம் காட்ட முடியும். அல்லது அனுப்ப முயல்வேன்.
3) உங்கள் நூல்களை ஆன்லைனில் வாங்க முடியுமா?
ஆம். கிட்டத்தட்ட எல்லாமே ஆன்லைனில் கிடைக்கின்றன. முன்பை விட இப்போது அதிகமான ஆன்லைன் விற்பனைத் தளங்களில் கிடைக்கின்றன. மேற்கண்ட என் புத்தகப் பட்டியல் பக்கத்தில் ஒவ்வொரு நூலும் எந்தெந்தத் தளங்களில் கிடைக்கிறது என்ற சுட்டிகளையும் தந்திருக்கிறேன். அவற்றில் எது உங்களுக்கு வசதியானதோ அதைப் பயன்படுத்தலாம்.
4) உங்கள் நூல்கள் மின்னூல்களாகக் கிடைக்கின்றனவா?
அச்சு நூல்கள் பற்றிச் சொல்லும் போது மின்னூல் உண்டா என்று கேட்பதும், மின்னூல் பற்றிச் சொல்லும் போது அச்சில் கிடைகுமா எனக் கேட்பதும் இப்போது ஒரு ஃபேஷனாகி வருகிறது. மேலே சொன்னது போல் அச்சு நூல்கள் போக எனது 3 மின்னூல்கள் வெளியாகி இருக்கின்றன. அச்சு நூல்களில் பரத்தை கூற்று, தேவதை புராணம், குஜராத் 2002 கலவரம் ஆகிய மூன்றும் வெவ்வேறு தளங்களில் மின்வடிவிலும் கிடைக்கின்றன. ஆக, எனது 6 நூல்கள் மின்னூல் வடிவில் கிட்டுகின்றன. அவற்றை வாங்கும் சுட்டிகளும் மேற்சொன்ன புத்தகப் பட்டியல் பக்கத்திலேயே தரப்பட்டிருக்கிறது. (மேலும் சில நூல்களை அமேஸான் கிண்டிலில் வெளியிடும் முயற்சியில் இருக்கிறேன். வந்த பின் இதே பக்கத்தில் அத்தகவலும் கிட்டும்.)
5) உங்கள் புத்தக பிடிஎஃப் எங்கே டவுன்லோட் செய்யலாம்?
நடிகர் விஷாலிடம் போய் ஒருவர் உங்கள் படத்தின் கள்ளப் பிரதி எங்கே கிடைக்கும் எனக் கேட்டுவிட முடியுமா! ஆனால் எழுத்தாளன் என்றால் எளிதில் சூத்தடிக்கலாம்! அப்படியான ஒரு கேள்வி தான் இது. என் மின்னூல்களில் ஒன்றை (ச்சீய்...) இலவச பிடிஎஃப் ஆக வெளியிட்டிருக்கிறேன். அது போக மற்ற எதுவும் இலவசமாக தரவிறக்க முடியாது. அப்படித் தரவிறக்க முடிகிறதெனில் தயை கூர்ந்து என்னிடம் தெரியப்படுத்தவும். அது தண்டனைக்குரிய குற்றம். தமிழில் பெரும்பாலும் எந்த எழுத்தாளனும் புத்தக ராயல்டியை நம்பி இல்லை. ஆனால் திருட்டுப் பிரதிகள் பதிப்பகங்களை அழிக்கும் வல்லமை வாய்ந்தவை. அதை ஒருபோதும் ஆதரிக்காதீர். (கள்ள பிடிஎஃப் தரவிறக்கம் செய்பவர்கள் ஒருபோதும் அதைப் படிக்கப் போவதில்லை என்பது வேறு விஷயம். ஆனாலும் எதற்கு சில எம்பி டேட்டாவை வீணாக்குவானேன்!)
*
Published on June 30, 2018 09:01
June 29, 2018
சஞ்சாயணம்
படம் சுமாருக்கும் மேல். ஆனால் வழக்கம் போல் பாலிவுட் (அல்லது இந்தியா என்றும் வாசிக்கலாம்) கொண்டாடும். அப்படித்தான் முன்னாபாய், 3 இடியட்ஸ், பிகே என எல்லாச் சுமாருக்கு மேல் ரகப் படைப்புகளையும் கொண்டாடினார்கள்.

ஒருவன் சிறந்தவனாகவே இருக்க வேண்டும் என்பதில்லை, சராசரியாகவும் இருக்கலாம் என்ற கருத்தை அழுந்தச் சொல்லும் போது உலகில் பெரும்பான்மையினராய் இருக்கும் சராசரிகள் (தாம் சராசரி என்று உணர்ந்த சராசரிகள்) தம்மை அவ்விடத்தில் பொருத்திப் பார்த்துப் புளகாங்கிதப்படாமல் இருப்பார்களா! அது தான் சஞ்சுவின் வெற்றி.
ராஜ்குமார் ஹிரானி ஃபார்முலா எப்போதும் ஒன்று தான். சராசரி பார்வையாளனின் பலவீனங்களில் தடவிக்கொடுத்து அதை வெற்றியாக அறுவடை செய்வது. உதாரணமாய் அவனது காதல், அன்பு, நட்பு, இரக்கம், குற்றவுணர்வு போன்ற உணர்ச்சிகரமான புள்ளிகளில் கை வைப்பார். அது மருத்துவம், கல்வி, ஆன்மீகம், சினிமா என அவனை தினம் தொட்டுச் செல்லும் துறைகளில் அவன் அன்றாடும் சந்திக்கும் சம்பவங்களைப் புனிதப்படுத்துவதாக அல்லது கேலி செய்வதாக அமைந்திருக்கும். அதை connecting to the audience என்று சொல்லிக் கொள்கிறார்கள். அவர் திரைக்கதைக்கு அத்தனை உழைக்கிறார். அதாவது நல்ல திரைக்கதைக்காக என்று சொல்ல வரவில்லை; வணிக வெற்றிக்கான திரைக்கதை. இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் வணிக வெற்றி என்றால் ஏதோ தபாங் போல் இது ஒரு மசாலா சினிமா என்று வெற்றியை மட்டும் கொடுத்து விட்டு பார்வையாளன் கடந்து சென்று விட முடியாது. அதை அவன் மனதிற்கு நெருக்கமாகவும் உணர்கிறான். ஏனெனில் இது அவனுக்குத் தெரிந்த விஷயத்தை அவனுக்குப் பிடித்த மாதிரி காட்டுகிற வித்தை. அதனால் தான் பொழுதுபோக்குப் பிரிவில் தேசிய விருதுகளை ஹிரானியின் படங்கள் பெறத் தவறுவதில்ல.
சஞ்சய் தத்தின் வாழ்க்கை என்று மேம்போக்காகச் சொன்னாலும். அப்படியல்ல. அதாவது அவரது வாழ்வின் முழுமையான சித்திரமல்ல. சஞ்சய் தத்தின் மீது இருக்கும் எதிர்மறையான பொதுவெளிப் பிம்பங்களை உடைப்பது தான் படத்தின் நோக்கம். ஆக, எதை எல்லாம் உடைக்க முடியுமோ அந்தப் பிம்பங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாய் சஞ்சய் தத் ஏற்கனவே இரண்டு பெண்களைத் திருமணம் செய்து விகாகரத்து செய்தவர், மாதுரி தீக்ஷித்துடன் காதலில் இருந்தவர். அது பற்றி படம் மூச்சே விடுவதில்லை. தற்போதைய மனைவியான மன்யாதா பாத்திரம் மட்டுமே படத்தில் வருகிறது. நடிகரான அவர் சினிமாத் துறையில் அவர் என்ன செய்தார் என்றும் சொல்லப்படவில்லை. அவ்வகையில் இது இந்தியில் ஓர் நடிகையர் திலகம் தான். தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்மறைத் தரவுகளின் தொகுப்பு.
படம் சஞ்சய் தத் பற்றிய 5 கேள்விகளுக்கு (அல்லது ஊடகங்கள் திரித்த பொய்களுக்கு) பதில் சொல்கிறது. 1) சஞ்சய் தத் ஒரு போதை மருந்து அடிமை. 2) சஞ்சய் தத் ஏகே 56 துப்பாக்கியை வைத்திருந்தார். 3) சஞ்சய் தத் வீட்டில் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து கொண்ட வண்டி இருந்தது. 4) மேற்கண்ட 2 மற்றும் 3ம் காரணங்களை முன்னிட்டு 1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தடா சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 5) சஞ்சய் தத் ஒரு பெண் பித்தர். இவற்றில் கடைசி தவிர மீதம் 4 விஷயங்களையும் படம் பல சம்பவங்களைச் சொல்லி மறுக்கிறது. அதைப் பெரும்பாலும் சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார்கள். ஆங்காங்கே அழகழகான வசனங்கள்.
படத்தில் எனக்குப் பிடித்தமான காட்சி கமலேஷ் ரூபி மற்றும் அவளது கணவனாகப் போகிறவனிடம் போய்ப் பேசுவதும் (ரூபிக்குப் பிடித்த மிருகம் எது என்பது நியூயார்க்கின் அத்தனை நகைக்கடைக்காரர்களுக்கும் தெரியும்) அதற்கு அடுத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் காத்திருந்து விட்டு ரூபி சஞ்சுவைச் சந்திக்க வருவதும் (டாய்லெட் சீட் தாலி). சஞ்சு நண்பனுக்கு ஊற்றிக் கொடுத்து விட்டு அவன் காதலியைப் புணரும் காட்சி ஒரு நல்ல மகுடேசுவரன் கவிதையை (காமக்கடும்புனல் தொகுப்பு) நினைவூட்டியது. ஆனால் சஞ்சு அதைத் திட்டமிடவில்லை என்பது மட்டும் வித்தியாசம்.
ரன்பீர் கபூர் அபாரமான நடிப்பு. நான் இதற்கு முன் அவர் நடித்த பர்ஃபி மற்றும் பாம்பே வெல்ட் மட்டும் பார்த்திருக்கிறேன். பர்ஃபியில் ஓரெல்லை வரை மூன்றாம் பிறை கமலுக்கு இணையான நடிப்பு என்பேன். இதிலும் அப்படியே சஞ்சய் தத்தின் உடல் மொழிகளைப் பிரதி செய்திருக்கிறார். க்ளோஸப்பில் நடிப்பைக் கொட்ட வேண்டிய இடங்களில் பின்னி எடுக்கிறார்.
எழுத்தாளராக வரும் அனுஷ்கா ஷர்மாவும், நர்கீஸ் தத்தாக வரும் மனீஷா கொய்ராலாவும் நல்ல நடிப்பு. (நிஜ வாழ்வில் கேன்சரை வென்ற மனீஷா இதில் கேன்சரில் இறக்கிறார் தியா மிர்ஸா, சோனம் கபூர் என சுந்தர் சி படம் மாதிரி ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம். எடிட்டிங் ஹிரானியே. ஒளிப்பதிவு ரவிவர்மன். இரண்டு பாடல்கள் ரஹ்மான். (ஆனால் Kar Har Maidaan Fateh பாடல் தான் நினைவிலிருக்கிறது. இசை விக்ரம் மாண்ட்ரோஸ். குரல் சுக்வீந்தர் சிங், ஷ்ரேயா கோஷல்.)
ஒட்டுமொத்தமாய் ஊடகங்கள் ப்ரேக்கிங் நியூஸுக்காக முழுப் பொய்யை எழுதுவார்கள் என்றும் காட்டுகிறார்கள். ஒரு நல்ல ஊடகக்காரர் கூடவா நாட்டில் இல்லை, சஞ்சய் தத்தின் உண்மை வெர்ஷனை ஆராய்ந்து எழுத எனக் கேள்வி எழுகிறது. தோல்வியில் துவண்ட ஒரு மனிதன், சிக்கலில் மாட்டிய ஒருவன் மீண்டு வருவதற்கான உத்வேகத்தை இப்படம் அளிப்பதாகப் பார்க்கப்படும். அல்லது ஒரு தந்தை தன் மகனை எப்படிச் சீர்செய்கிறார் என்ற கதையாகக் காணலாம். நட்பு எவ்வளவு ஆழமானதாக, அர்த்தமானதாக இருக்கும் என்று சொல்லும் படமாகவும் பார்க்கலாம். சஞ்சாயணமாகவும்.
என் வரையில் தனக்கு வாழ்க்கை கொடுத்தவர் என்பதற்காக சஞ்சய் தத்துக்கு ராஜ்குமார் ஹிரானி செய்திருக்கும் Image Re-branding நன்றிக்கடன் இது என்று தான் தோன்றுகிறது. (ஹிரானியே சஞ்சய்க்கு முன்னாபாய் மூலம் வாழ்க்கை தந்தவர் என்பது வேறு விஷயம். ஆனால் அது படம் வந்த பின். ஹிரானிக்கு அந்தப் பட வாய்ப்பை வழங்கியதே சஞ்சய் தானே! ஜென்டில்மேன் வாய்ப்புக் கொடுத்ததற்காக ஷங்கர் அர்ஜுனுக்கு முதல்வனை முதல்வனில் நடிக்க வைத்தது போல்!)
ரன்பீர் கபூரின் நடிப்புக்காகவும் சில சுவாரஸ்யமான ஹிரானி ப்ராண்ட் காட்சிகளுக்காகவும் படத்தைப் பார்க்கலாம்.
*
Published on June 29, 2018 09:09
June 27, 2018
மீனம்மாவின் அணங்கு
எனது ' அணங்கு ' சிறுகதைக்கு மீனம்மா கயல் ஒரு மாற்று முடிவு எழுதியிருந்தார்:
தேர்வறை நோக்கி நடந்தவள் சட்டெனத் திரும்பிச்சென்று, கேலிசெய்து சிரித்தவர்கள் கண்களைப் பார்த்தாள்.. அலட்சியப் புன்னகை அரும்ப சுடிதார் டாப்சினை கழட்டினாள்.. அவள் பெருத்த முலைகள் கனம் தாளாது தாழ்ந்திருந்தன.. அவளுக்கு அங்கு வெட்கங்கள் இல்லை யாரையோ பழிவாங்குகிறோம் என்றுபட்டது.. அது ஒரு வெறி, மருத்துவப் படிப்பின் மீதான வெறி.. தன்னை அலைக்கழிப்பவர்கள் மீதான வெறி.. தன்னை ஆய்வு செய்தவர்களை திரும்பிப் பார்த்தாள் அவர்களிடம் ஒரு குற்றஉணர்ச்சியை கண்டாள், மிக மிக ஆழமான குரலில் எல்லாருக்குமாக ஒன்றைச் சொல்லியபடி சுடிதாரை மீண்டும் அணிந்தாள்., ஒரு தேவதைப் போல் தேர்வறை நோக்கி நடந்தாள்.
அவள் சொன்னது ஒரு கேள்வி, ஒரு திறப்பு,
''இந்த உடலைப் பற்றி படிக்கும் ஆசையில்தான் நான் நீங்கள் நாம் பரிக்ஷா தேர்வு எழுதவே வந்திருக்கிறோம் அல்லவா?!''
இந்த முடிவு - நடை தவிர - எனக்குப் பிடித்திருந்தது. அணங்கு கதையின் நோக்கமானது நங்கேலியின் வரலாற்றை எடுத்துக் கொண்டு சமகால மீட்டுருவாக்கம் செய்வதாக மட்டும் இருந்திருந்தால் அவரது முடிவு தான் என்னுடையதை விட இன்றைய தேதிக்குக் கச்சிதம். அதாவது போன முறை நங்கேலி தன் முலையை மறைக்க முடியாத அவமானத்தில் தான் செத்துப் போனாள். அவளது செயல் முலையை மறைப்பது தான் கௌரவம், அதை மற்றவர் பார்ப்பது அவமானம் என்ற அன்றைய காலத்து எண்ணத்திலிருந்து எழுந்தது. ஆனால் இம்முறை அதே போன்றதொரு சூழலில் அந்தக் கருத்தாக்கத்தை மறுதலித்து, அது ஒரு விஷயமே இல்லை என்று நங்கேலி அலட்சியமாய் நடப்பதே நவீன முன்னெடுப்பாக, சமகாலப் பொருத்தப்பாடுடையதாக இருக்க முடியும். அவ்வகையில் கதைக்கு மீனம்மா ஈந்திருக்கும் முடிவு அங்கீகாரத்துக்குரியது.
சிலப்பதிகாரக் கண்ணகி தன் இடமுலை திருகியெறிந்து தான் மதுரையை எரித்தாள். அணங்கு அவளையே குறிக்கிறது. சேர்த்தலை, திருவிதாங்கூர், நங்கேலி, முலக்கரம், வாழையிலை என்று இந்தக் கதையில் ஆங்காங்கே வருவதெல்லாம் முலையரிதலை நோக்கிய நகர்வுகள் தாம். அந்த வகையில் மீனம்மா தந்திருக்கும் முடிவானது நங்கேலியை அறிந்த ஒரு தேர்ந்த வாசகன் எதிர்பாராதது; அதனாலேயே என்னுடையதை விடவும் சுவாரஸ்யமானது. தவிர, சமூகச் சிக்கல்களை ஒருவர் (அதுவும் பெண்) நேர்மறையாக அணுக வேண்டும் என்ற அடிப்படையிலும் அவமானத்தில் சாவதை விட அதைக் கடந்து வருவது அல்லது எதிர்கொள்வது மேலானது என்ற வகையிலும் மீனம்மாவின் முடிவு கூடுதல் பலம் பெறுகிறது.
ஆனால் அணங்கு கதை நங்கேலி பற்றியது மட்டுமல்ல. அது ஒரு குறியீடு மட்டுமே. பிரதான நரம்பு பரிக்ஷா என்ற கொடுங்கோன்மையை விமர்சிக்கிறது. கதையின் மைய நோக்கு பரிக்ஷா எளிய மனிதர்களுக்கு பலவிதத் தொந்தரவுகளை அளிக்கிறது; இளம் மனங்களின் கனவுகளை உடைக்கிறது; சில சமயம் உயிரிழப்பை கூட அருள்கிறது என்பதை எல்லாம் சொல்வது தான். அவ்வகையில் அணங்கு ஒரு பிரச்சாரக் கதை எனலாம். (தனிப்பட்டு புனைவிலக்கியத்தில் பிரச்சார நெடி வருவதை விரும்பாதவன் நான். ஆனால் இம்முறை இப்படி.) அதனால் தான் இந்தக் கதையில் புனைவைத் தாண்டி ஒரு செய்தித்தன்மை படிந்திருக்கிறது. கதையின் அந்த மனநிலைக்கு (mood) மீனம்மாவின் முடிவை வைத்தால் பரிக்ஷாவை நாம் சவாலாக (நேர்மறையாக) எடுத்துக் கொண்டு, அதை வென்று, அதன் இருப்பை அங்கீகரிப்பதான தொனி வந்து விடுகிறது. கதையின் உத்தேசம் அதுவல்ல என்பதால் அம்முடிவு இந்தக் கதைக்கு உவப்பானதல்ல எனக் கருதுகிறேன்.
சுருங்கச் சொன்னால் கதையின் கலைக்கு, முற்போக்குத்தன்மைக்கு மீனம்மாவுடைய முடிவு பொருத்தமானது, ஆனால் அதன் பேசுபொருளுக்கு, அது குறித்த பிரச்சாரத்துக்கு வேறு ஏதேனும் முடிவு தேவை. அதில் ஒன்று என்னுடையது.
*
Published on June 27, 2018 00:46
June 26, 2018
அணங்கு [சிறுகதை]
தன் கரிய, பெரிய கண்ணைக் கசக்கிக்கொண்டே சிவந்த, சிறுவாயில் கொட்டாவி உதிர்த்தபடி சேர்த்தலை இருப்பூர்தி நிலையத்தில் வலப்பாதம் பதித்தாள் கண்ணகி.
கூரையில் தொங்கிக்கொண்டிருந்த மின்னணு கடிகாரம் 07:35 எனச்செம்மையாய்த் துடித்தது. கண்ணகியின் இருதயம் அதைவிட வேகமாய்த்துடித்து ரத்தந்துப்பியது.
அவள் அப்பா அழுக்கேறிய வெள்ளை வேட்டியை மடித்துக்கட்டியபடி ரீபாக் என்று ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்ட கருப்புப்பையைத் தூக்கிக்கொண்டு பின்னாலேயே அவசரமாக இறங்கித்தடுமாறினார். அங்கு ரயில் ஒரு நிமிடம்தான் நிற்கும் என்றிருந்தார்கள். கண்ணகி அவர் கையைப்பிடித்து ஆசுவாசப்படுத்தினாள்.
ஐந்து மணி நேரம் தாமதமாக ரயில் வந்து சேர்ந்திருப்பதைப்பதிவு செய்யப்பட்ட பெண் குரல் மலையாளத்தில் அறிவித்து அசௌகர்யத்துக்கு வருத்தம் மொழிந்தது. கொஞ்சமும் இங்கிதமின்றி அதைச்சட்டை செய்யாமல் ரயில் நகரத்தொடங்கியது.
“ஒரு நிமிஷம்னா ஒரே நிமிஷமேதான் நிக்கறான், பாப்பா.”
ஆச்சரியமாய் அலுத்துக்கொண்டபடி அப்பா நடந்தார். கண்ணகி புன்னகைத்தாள்.

நேற்று மாலை நான்கு மணிக்கு மதுரையில் ரயிலேறியது. இன்று பத்து மணிக்கு கண்ணகிக்கு ‘பரிக்ஷா’ தேர்வு. இவ்வூரில்தான் தேர்வு மையம் ஒதுக்கியுள்ளார்கள்.
மதுரை டூ சேர்த்தலை தனியார் பேருந்து உண்டு. ஏழரை மணி நேரத்தில் போகலாம். ஆனால் ஓர் இருக்கை ஆயிரம் ரூபாய். அரசுப்பேருந்து எனில் தேனி போய், கம்பம் போய், அங்கிருந்து கோட்டயம் போய், அப்புறம் சேர்த்தலை போக வேண்டும். மிகுந்த நேரம் பிடிக்கும். அதனால்தான் சுற்றுவழி என்றாலும் ரயிலேறத்தீர்மானித்தார்கள்.
முன்பதிவெல்லாம் இல்லை. சென்னையிலிருந்து வரும் வண்டி. சனிக்கிழமைக் கூட்டத்தைச்சமாளித்துப் பொதுப்பெட்டியில் தொற்றிக்கொள்ளத்தான் முடிந்தது.
நின்றவாறே பயணித்து, திருநெல்வேலியில் கொஞ்சம் கூட்டம் இறங்க, கண்ணகிக்கு மட்டும் ஓரமாய் இடித்தபடி உட்கார இருக்கை கிட்டியது. வாங்கிய இட்லியை விண்டு வாயில் போட்டுக்கொண்டாள். தேங்காய்ச்சட்னி கெட்டிருந்தது. வாஞ்சி மணியாச்சி சந்திப்பின் அபாரமான மசால் வடையும் உள்ளே போயிருந்தது. அப்பா கையோடு கொண்டு வந்திருந்த பழைய தினத்தந்தியைக் கீழேவிரித்துப் படுத்துக்கொண்டார்.
பயிற்சி மையத்தில் கொடுத்திருந்த ‘பரிக்ஷா’ தேர்வுக்கான சூத்திரங்களின் தொகுப்புப் புத்தகத்தைப்பையிலிருந்து கையிலெடுத்தாள். நேற்று மதியம் எதில் விட்டோம் என யோசித்து கனிம வேதியியலில் டி-பிராக்ளே அலைநீளத்தில் தொடங்கினாள். λ = h / mv. மீண்டும் ஒருமுறை அதைப்பார்க்காமல் சொல்லிப்பார்த்தாள். இதில் h என்பது பிளாங்க் மாறிலி. அதன் மதிப்பென்ன? கண்மூடி மனதில் சொன்னாள்: 6.626×10-34 Js.
மனம் எண்களால் எழுத்துக்களால் நிரம்பியது. முக்கால் மணி போயிருக்கும். நீண்ட நேரம் நின்றுவந்த களைப்பில் உட்கார்ந்தவாக்கிலேயே உறங்கிப்போனாள் கண்ணகி.
மீண்டும் கண்விழித்துப் பார்த்தபோது வண்டி எங்கோ நின்றிருந்தது. கைக்கடிகாரம் பார்த்தாள். நேரம் நள்ளிரவு தாண்டியிருந்தது. எதிரே அமர்ந்திருந்தவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தது உறைத்ததும் துப்பட்டாவைச் சரிசெய்தபடியே கேட்டாள்.
“அண்ணா, இது எந்த ஸ்டேஷன்?”
அந்த உடனடி ஊமைத்தாக்குதலில் நிலைகுலைந்தவன் தடுமாறிச்சொன்னான்.
"ஸ்டேஷன் இல்ல. இடையில் நிக்குது. இப்பத்தான் ஆரல்வாய்மொழி தாண்டுச்சு."
“சிக்னலுக்கு நிக்குதா?”
“இல்லங்க. ஏதோ தண்டவாளத்துல ரிப்பேர்னாங்க. பதினோரு மணிக்கு நின்னது.”
அதிர்ந்தாள். அப்படியானால் கிட்டத்தட்ட இரண்டுமணி நேரமாகப்போகிறது. போய்ச் சேரத்தாமதமாகும். சீக்கிரம் எடுத்தால் தேவலாம். அப்பாவைத் திரும்பிப்பார்த்தாள்.
உதட்டோரம் சலவாய் ஒழுக்கியபடி மெல்லிய குறட்டையுடன் உறங்கிக்கிடந்தார். பார்க்கப்பாவமாய் இருந்தது. இன்னும் சில வருடங்கள். அப்புறம் நான் அவரைத் தாங்கிக்கொள்ளத் தொடங்கி விடுவேன். அவர் நிம்மதியாய் வீட்டில் இருக்கலாம்.
மீண்டும் வண்டியெடுக்க அதிகாலை நான்கு மணியாகி விட்டது. அதுவரை அவள் நிமிடம் கூடத்தூங்கவில்லை. நகத்தைக் கடித்தபடி பதற்றமாய் அமர்ந்திருந்தாள்.
மறுநாள் காலை ‘பரிக்ஷா’. மருத்துவப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு. கண்ணகியின் வாழ்நாள் கனவுக்கான வாயில். அதற்காகக்கடந்த ஈராண்டுகளாகத்தயாராகிறாள்.
அவள் ஆசை மருத்துவராவது. அதுவும் இதய நிபுணராவது. ஐந்து வயதாய் இருக்கும் போதே பொம்மை ஸ்டெத்தாஸ்கோப்பை காதில் மாட்டிக்கொண்டு அடிக்கடி இருமிக் கொண்டிருக்கும் அம்மாவின் இடது மார்பில் வைத்துக் கேட்டுவிட்டுச் சொல்வாள்.
“ஒண்ணுமில்லம்மா. சரியாகிடும். கொடுத்த மாத்திரைலாம் ஒழுங்கா சாப்பிடுங்க.”
இருமலுக்கிடையே அம்மா பூரிப்பாள். பூரிப்பிடையே ஒருநாள் செத்தும் போனாள். இரண்டுக்குமிடையே மருத்துவராகும் கனவைக்கண்ணகியின் சின்ன மனதில் ஆழ விதைத்திருந்தாள். மகளை விடப்புருஷன் மனதில் வலுவாய் ஊன்றிப்போனாள்.
அம்மாவுக்கு Congestive Heart Failure என்றார்கள். இருதயம் பலகீனமாய் இருந்ததால் நுரையீரலில் சளி கோர்த்துக்கொண்டு வறட்டு இருமல், மூச்சு விடச்சிரமம், கால் வீக்கம், அவ்வப்போது துப்புகிற சளியில் ரத்தத்திட்டுக்கள் என மூன்று ஆண்டுகள் சிரமப்பட்டாள். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைத்துப்பார்த்தார்கள்.
ஒருகட்டத்தில் மருத்துவர்கள் உதடு பிதுக்கி, கடவுளைக் கைகாட்டினார்கள். கடவுளோ எமதர்மனைக் கைகாட்டினார். அவர் தயங்காமல் அபயமளித்தார்.
அதிலிருந்து “பெரியவளாகி என்ன ஆவாய்?” என யார் கேட்டாலும் “நெஞ்சு டாக்டர்” என்றுதான் பதில் சொல்வாள் கண்ணகி. இப்போது பையன்கள் அதைக்கிண்டல் செய்கிறார்கள் – “பெரியவளானதுமே கண்ணகி ஆசையில் பாதி நிறைவேறிடுச்சு!”
உள்ளுக்குள் கடுமையாகப்புண்படுவாள். ஆனால் அதை மாற்றிக்கொள்ளவில்லை. வைராக்கியம். அம்மா அப்படித்தான் சொல்வாள். இதய மருத்துவர், ஹார்ட் டாக்டர், கார்டியாலஜிஸ்ட் - இவை ஏதும் தெரியாமல் அப்படிச் சொல்லிக்கொடுத்திருந்தாள்.
அம்மா இருக்கையிலேயே நன்றாய்ப் படித்திருந்தவள் பிறகு இன்னும் வெறியானாள்.
அம்மா போன ஓராண்டில் கண்ணகியைக்கவனிக்க இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளுமாறு அப்பாவுக்குச்சொந்தங்கள் சொல்லித்தந்தனர். அப்பா பிடிவாதமாய் மறுத்துவிட்டார். ஆசையில்லாமல் இல்லை. ஆனாலும் மறுக்க ஒரே காரணம்தான்.
“பாப்பா டாக்டர் ஆகனும்னு சொல்றா. இதுல இன்னொரு கல்யாணம்னு போனா, குழந்தைங்க அதுஇதுன்னு செலவு வைக்கும். என் வருமானத்துக்குச்சரிப்படாது.”
அப்பா மாட்டுத்தாவணியில் செருப்புத்தைக்கும் கடை வைத்திருந்தார். அம்மா இருந்தவரை வீட்டிலிருந்து பூக்கட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தாள். கண்ணகியைத் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என அப்பாவுக்கு ஆசை. அதற்கு வருமானம் போதவில்லை என்பதால் அரசுப்பள்ளியில் படித்தாள்.
வகுப்பில் முந்தி நின்றாள். வயதின் கண்ணடிப்புகளுக்குச் செவிசாய்க்கவில்லை. லக்ஷ்மியில்லாத அவ்வீட்டில் போகமாட்டேன் என ஒட்டிக்கொண்டாள் சரஸ்வதி.
குருவாயூர் செல்லும் அந்த ரயில் தாமதித்த கணங்களையும் சேர்த்து முந்தும் வெறியுடன் தலைதெறிக்கத் தடதடத்துக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட விடிந்து விட்டது. மனம் விழிப்பு கண்டுவிட்டது. கண்கள் திறக்காமல் அமர்ந்திருந்தாள்.
கண்ணகி எம்பிபிஎஸ். மனதில் சொல்லிப்பார்க்க ஜிலீர் என்றிருந்தது அவளுக்கு.
திடீரென வயிறு இளகிக்கலங்குவதை உணர்ந்தாள். நேற்றைய சட்னி! கழிவறைப் பக்கம் எட்டிப்பார்த்தாள். வாசல்வரை படுத்துக்கிடந்தார்கள். எல்லோரும் ஆண்கள். பெட்டியின் அடுத்தபுறம் பார்த்தாள். அங்கும் அதேதான். குறைந்தது பத்துப்பேரைத் தாண்டிக்கொண்டு போகவேண்டும். அடுத்து வாயிலில் படுத்திருப்பவர்களை எழுப்பி விட்டுத்தான் கழிவறைக்குள்ளே போக முடியும். அவளுக்குச்சங்கடமாய் இருந்தது.
அப்போது ஆலப்புழை நெருங்கவும் ரயில் வேகமிழந்தது. கண்ணகி பரபரப்பானாள்.
அடுத்தது சேர்த்தலை. இன்னும் அரைமணி நேரம்தான். அப்பாவை எழுப்பினாள். திடுக்கிட்டு எழுந்தார். உறக்கத்துக்கும் விழிப்புக்கும் திரிசங்குக்குழறலில் கேட்டார்.
“வந்திருச்சா, பாப்பா?”
“இல்லப்பா. அடுத்த ஸ்டேஷன்.”
சுற்றிப் பார்த்துவிட்டுக் குழப்பமாய்க்கேட்டார்.
“விடிஞ்சிருச்சா அதுக்குள்ள?”
“ட்ரெய்ன் லேட்பா…”
விவரித்தாள். இறங்கியதும் அருகே அறை எடுத்து, குளித்துத்தயாராகித் தேர்வுமையம் போவதுதான் வழி என்றாள் அவர் விளங்கிக்கொள்ள நேரம் பிடித்தது. தனக்கு வயிறு சரியில்லாததை அவர் காதில் கிசுகிசுத்தாள். அவர் எழுந்து வேஷ்டியைச் சீர்செய்து கொண்டு ஒவ்வொரு தலையாய்த்தாண்டி கழிவறையை அடைந்தார். வாயிலில் படுத்திருந்தவர்களை எழுப்பினார். முனகியபடி எழுந்தார்கள். கதவைத்திறந்தார்.
மேற்கத்தியக் கழிவறை. கண்ணகிக்குப் பழக்கமில்லை என்பதால் அதைத் தாழிட்டு விட்டு எதிரே இருந்த கழிவறைமுன் படுத்திருந்தவர்களை எழுப்பினார். கதைவைத் திறந்தால் கழிவறையினுள்ளே கால்வைக்குமிடத்து மலக்குவியல் ஒன்று கிடந்தது.
கடும் துர்நாற்றம் சூழ்ந்தது. மூச்சை அடக்கிக்கொண்டு உள்ளே சென்று தாழிட்டு, யாரோ வள்ளல் விட்டுச்சென்றிருந்த அரை லிட்டர் பெப்ஸி பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கழுவி விட்டார். பத்து, பன்னிரண்டு முறை கழுவிய பின்னர் சுத்தமாகி துர்மணம் அடங்கத்தொடங்கியது. சிறுநீர் கழித்து, எச்சில் துப்பி, குழாயின் கைப்பிடி அழுத்தித்தண்ணீர் பீய்ச்சிவிட்டு வெளியே வந்தார். கண்ணகி இருக்கையிலிருந்து அங்கு எட்டிப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. வரச்சொல்லி சைகை செய்தார்.
கண்ணகி எழுந்து, நடந்து, தாண்டி, வந்தாள். வயிற்றின் அழகு முகத்தில் தெரிந்தது.
“போய்ட்டு வா, பாப்பா. நான் இங்கயே நிக்கறேன்.”
தலையாட்டி விட்டு கதவைத்திறந்து உள்ளே போனாள். பத்து நிமிடங்கள். வெளியே வந்தாள். நெடுங்காலக் கடனடைந்தாற்போல் நிம்மதியில் தெளிந்திருந்தது முகம்.
அதற்குள் அப்பா முகம் கழுவித்தயாராய் இருந்தார். அவளும் வந்து முகம் கழுவிப் பாதரசம் போன கண்ணாடி பார்த்துக்கலைந்திருந்த முடியை ஒதுக்கினாள், சரிந்த பொட்டைத்திருத்தினாள். டாப்ஸை மீறி வலது தோள்பட்டையில் திருட்டுத்தனமாய் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த ப்ரேஸியரைக் கவனித்துப்பதறி உள்ளே தள்ளினாள்.
பைகளைச் சரிபார்த்து எடுத்துக்கொண்டிருக்கையில் சேர்த்தலை வந்துவிட்டது.
கேரளத்தில் எல்லா ரயில் நிலையங்களும் அழகாய் இருக்கின்றன. புதுப்பெண்ணின் சிகையலங்காரம்போல் கூரைகளில் வேலைப்பாடுகள். அதற்குப்பொருத்தமாய் கதவு ஜன்னல்களில் அதே பிரதிமைகள். யாவும் ஒரு மலையாளக்கோவிலின் உணர்வைத் தோற்றுவிக்கின்றன. திருவிதாங்கூர் சமஸ்தான ஞாபகங்களின் எச்சமாகஇருக்கலாம்.
சேர்த்தலை ரயில் நிலையம் அத்தனை பெரியதில்லை. ரயில் நிற்கும் நேரமானது ரயில் நிலையத்தின் அளவுக்கு நேர்த்தகவில் இருக்குமோ எனக்கண்ணகிக்குத் தோன்றியது. எனில் விகித மாறிலி என்னவாய் இருக்கும்! எல்லாவற்றையுமே சூத்திரங்களாய்ப் பார்க்கத்தொடங்கியது உறைத்தது. புன்னகைத்துக்கொண்டாள்.
மலையாளத்திலும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் சேர்த்தலை என நடைமேடையில் பெரிதாய் எழுதி வைத்திருந்தார்கள். மதுரை ரயில் சந்திப்பில் இதை விடப்பெரிதாய் இருக்கும். தமிழிலும் இந்தியிலும் ஆங்கிலத்திலும். இந்தியானது இந்தியாவில் சாமி போல் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறது. ‘பரிக்ஷா’வில்கூட இந்தி உள்ளது!
வெளியே வந்தார்கள். வாயிலின் இடப்புறம் இருசக்கர வாகனங்கள் அந்நேரத்திற்கே வரிசை கட்டியிருந்தன. வலதில் பாரத ஸ்டேட் வங்கியின் தானியங்கி பணமருளும் மையம் இருந்தது. சுற்றிப்படந்திருந்த பச்சை அது தமிழகமில்லை என அறிவித்தது.
ஆங்காங்கே கதிர் அரிவாள் சின்னமிட்ட செங்கொடிகள் காற்றுக்குக்காத்திருந்தன.
ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவற்றில் நிறைய மோகன்லால் போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன. சில விஜய் போஸ்டர்களும். அஜீத் போஸ்டர் ஏதேனும் இருக்கிறதா எனப்பார்த்தாள். இல்லை. தமிழ்செல்வியிடம் சொல்லவேண்டும். அவள் ஆள் பற்றி இங்கே யாரும் கவலைப்படுவதில்லையென. விஜய் போஸ்டரை இன்னொரு முறை பார்த்துக்கொண்டாள். வெயில் மிதமாய்க்கொளுத்தியது. சவாரிக்குக்காத்திருந்த ஆட்டோக்காரர்களிடம் சகாயவிலையில் விடுதிவிசாரித்துப் போய்நின்றார்கள்.
ஒருமாதிரி பார்த்தார்கள். என்ன உறவென விசாரித்தார்கள். சுருக்கென நிமிர்ந்து பார்த்து விட்டு தன் மகள் என்று அப்பா சொன்னார். பெயர், முகவரி எழுதி வாங்கிக் கொண்டு, அடையாள அட்டை கேட்டார்கள். நல்லவேளையாக ‘பரிக்ஷா’வுக்காக ஆதார் அட்டை எடுத்து வந்திருந்தாள் கண்ணகி. அதை வாங்கி ஒளிநகல் செய்து கொண்டு திருப்பித்தந்தார்கள். சிறுவனா இளைஞனா என்று சொல்ல முடியாத ஒரு பூனைமீசைப் பையனின் வழிகாட்டுதலில் அறைக்கு வந்தார்கள். என்ன கேள்வி கேட்டாலும் கண்ணகியின் மார்பில்தான் பதில் எழுதியிருக்கிறது என்பது மாதிரி
பார்த்துக்கொண்டு ஒப்பித்தான். ஒற்றைப்படுக்கை கொண்ட அறைதான். குளித்து முடித்துக் கிளம்ப ஒரு மணிநேரம் என்று சொல்லித்தான் வாங்கியிருந்தார்கள்.
அதற்கே ஐந்நூறு ரூபாய் வாடகை கேட்டார்கள். பொதுவாய் இருநூறு, முன்னூறு ரூபாய்தான் வாடகையாம். கண்ணகியைப்போல் பலரும் தமிழகத்திலிருந்து அங்கே ‘பரிக்ஷா’ எழுதவந்திருந்தார்கள். அதனால் லாட்ஜ்களுக்கு மவுசு கூடித்தற்காலிகமாய் வாடகையை ஏற்றியிருந்தார்கள். அது பிரபலமான லாட்ஜ் இல்லை என்பதால் சில அறைகள் காலியாக இருந்தன. பொதுவாய்த்தேர்வெழுத வந்தவர்கள் அனைவரும் முன்பதிவு செய்துதான் வந்திருந்தார்கள். எல்லாம் ஆட்டோக்காரர்கள் சொன்னது.
முதலில் அப்பா தயாரானார். கண்ணகி குளித்து முடித்து வெளியே எட்டிப்பார்க்கவும் அப்பா வெளியேபோய் நின்றுகொண்டார். உடை மாற்றியபின் உள்ளே அழைத்தாள்.
நுழைவுச்சீட்டு, ஆதார், பேனா (2), பென்சில் (2), அழிப்பான் எடுத்துக்கொண்டாள்.
மறக்காமல் கைக்குட்டையை எடுத்து வைத்தாள். மின்விசிறி சுற்றினாலும் நிறைய வியர்க்கும் அவளுக்கு. எப்போதும் பெரிய கைக்குட்டை வேண்டும். சிறிய துண்டோ எனப் பார்ப்போர் சந்தேகப்படுவது மாதிரி தடித்த கைக்குட்டைகளை வைத்திருப்பாள்.
“போன ஜென்மத்துல லண்டன்ல பொறந்திருப்பா போல!”
அம்மா பெருமிதத்துடன் கேலிசெய்வாள். அப்பாவும் விடாமல் பதில் கொடுப்பார்.
“அட, விக்டோரியா மஹாராணியே உம்மவதானாம்.”
“ஏன், இருக்காதா? அத்தனை லட்சணமா இருக்காளே!”
அம்மா பீற்றுவாள். கண்ணகி வெட்கப்படுவாள். எட்டு வயதுகூட இராது அப்போது.
கண்ணகி கடைசியாய் ஒருமுறை கண்ணாடி பார்த்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வருகையில் அடிவயிறு வலித்தது. அதீதமாய் அதிர்ந்தாள். ஐயோ! இது நாள் இல்லையே! இன்னும் முழுதாய் ஒருவாரம் இருக்கிறது. எப்படி இப்போதே?
மணியைப்பார்த்தாள். எட்டு நாற்பது. பதற்றமானாள். மேலும் வயிறு வலித்தது.
கண்ணகிக்கு மாதவிலக்கு தப்பியதே இல்லை. மாதமானால் அரசாங்கச்சம்பளம் மாதிரி குறித்த தேதியில் தவறாமல் வந்துவிடும். தமிழ்செல்விதான் இப்படி ஒரு வாரம் முன்பே வருவதாய் அல்லது தள்ளிப்போவதாய்ப் புலம்புவாள். அவளுக்கு இதுதான் முதல்முறை இப்படி நடக்கிறது. சானிடரி நேப்கின் எடுத்து வரவில்லை. வீடாக இருந்திருந்தால் எப்போதும் ஒன்றிரண்டு இருக்கும். கழிவறைக்கு ஓடினாள்.
ஐந்து நிமிடத்தில் வெளியேவந்து அப்பாவிடம் நேப்கின் வாங்கி வரச்சொன்னாள்.
“என்ன பாப்பா இப்படிப்பண்ற? இதெல்லாம் முன்னமே வெச்சுக்கறதில்லையா?”
அப்போது அப்பாவின் முகத்தில் ஒரு கணம் – ஒரே ஒரு கணம் - மெல்லியதொரு சலிப்பின் சாயை தென்பட்டதை உணர்ந்தாள். ஆண்பிள்ளையாய்ப் பிறந்திருந்தால் இம்மாதிரி தொல்லைக்கெல்லாம் அவசியம் இருந்திருக்காது என நினைத்தாரோ!
“ம். இல்லப்பா. எதிர்பார்க்கல.”
“சரி. கதவத்தாழ் போட்டுக்கோ. பத்திரம். நான் குரல் கொடுத்தா மட்டும் திற.”
கண்களில் உப்புநீர் முட்டியது. அப்பா அதைக்கவனிக்க நேரமின்றிக்கிளம்பினார்.
அவருக்கு இது ஓர் அனாவசியச்சங்கடம். இங்கும் கருப்பு பாலிதீன் கவர் சுற்றிக் கொடுப்பார்களா என யோசித்தாள். மண் மாறினாலும் சடங்குகள் மாறுவதில்லை.
பயமாய் இருந்தது. பூனைமீசைப் பொறுக்கி ஏதாவது சாக்கு சொல்லிக்கொண்டு வந்து கதவு தட்டினால் என்னசெய்ய? இன்னும் கால்மணியில் கிளம்பினால் நேரத்திற்குப் போய்விடலாம். பத்து நிமிடங்கள் கழித்து அப்பா கதவைத்தட்டி “பாப்பா!” என்றார்.
கண்ணகி கதவு திறந்து பார்த்தபோது அவர் கைகளில் ஒன்றும் இருக்கவில்லை.
நெற்றி சுருக்கினாள். அப்பாவின் முகத்தில் கடுமையான குற்றவுணர்வு தெரிந்தது. பெரிதாய் மூச்சு வாங்கினார். அவரை அமைதிப்படுத்தினாள். வெள்ளம் பருகினார்.
“எங்கயுமே கிடைக்கல பாப்பா.”
“மருந்துக்கடைல கேட்டீங்களாப்பா?”
“இங்க ஹோட்டல்காரங்கிட்ட மருந்துக்கடை கேட்டுக்கிட்டுத்தான் போனேன். அங்க கடை பூட்டியிருக்கு. ஞாயித்துக்கிழமைங்கறதால முன்னபின்ன தொறப்பானாம்.”
“வேற கடைங்க ஏதுமில்லையா?”
“இல்லம்மா. சுத்தி நடந்து பார்த்துட்டேன். நாலஞ்சு பேருகிட்ட கேட்கவும் செஞ்சிட்டேன். ஒண்ணுரெண்டு பொட்டிக்கடைங்கதான். அங்கலாம் இல்ல.”
“…”
“பரிட்சைக்கும் நேரமாச்சுங்கறதால என்ன பண்றதுன்னு புரியாம வந்துட்டேன்.”
அப்பாவின் சமர்த்து அவ்வளவுதான். இன்னும் சற்று நேரம் போனால் அழுது விடுவார் போலிருந்தது. அவர்மீது பரிதாபமும் பிரியமும் ஒருசேர எழுந்தது.
“சரிப்பா. விடுங்க.”
“என்ன பாப்பா பண்றது இப்ப?”
பையைத் துழாவிப்பார்த்தாள். பயன்படுத்தத்தோதான துணியேதும் இருக்கவில்லை.
கண்ணகி யோசித்தாள். ஒருபக்கமாய்த்தலை வலித்தது. சட்டென அந்த யோசனை தோன்றியது. தன் கைக்குட்டையை எடுத்து விரித்தும் திரும்ப மடித்தும் பார்த்தாள். பிறகு திருப்தியடைந்தவள்போல் அதை எடுத்துக்கொண்டு கழிவறை போனாள்.
ஐந்து நிமிடத்தில் திரும்பினாள். அவள் முகத்தில் சொல்லவொண்ணா நிம்மதி!
“கிளம்பலாம்பா.”
துணி பயன்படுத்துவது கண்ணகிக்குப்புதிதில்லை. அவள் வயதுக்கு வந்தபோது அம்மா இருக்கவில்லை. ஆரம்ப நாட்களில் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. துணைக்கிருக்க வந்த அப்பா வழிக்கிழவி ஒருத்திதான் துணி வைக்கவும், பின் துவைத்து, பத்திரப்படுத்தவும் கற்றுக்கொடுத்தாள். முதல் நான்கைந்து மாதங்கள் அப்படித்தான். பிறகுதான் அத்தை - அப்பாவின் தங்கை - ஒருமுறை வீட்டுக்கு வந்தவள், துணி பயன்படுத்துவதைப் பார்த்துவிட்டு சானிடரி நேப்கின் அதைவிட எளிமையானது, சுகாதாரமானது என்று சொல்லித்தந்தாள். ஆனால் கைக்குட்டை இதுதான் முதல். எப்படியும் நான்கைந்து மணி நேரம் தாங்கும் எனக்கணித்தாள்.
கிளம்பினார்கள். விடுதி வரவேற்பறையில் சாவியை ஒப்படைத்து தேர்வுமையம் சொல்லி எப்படிப்போவது என விசாரித்து வெளியே வந்தார்கள். ஆட்டோவிலும் போகலாம். ஐந்து நிமிட நடையில் பேருந்து நிறுத்தம்; பத்து நிமிடத்துக்கொரு பேருந்து உண்டு; பதினைந்து நிமிடப்பயணம் என்று சொல்லியிருந்தார்கள். மணி ஒன்பது ஐந்துதான். அப்பாவுக்கு அனாவசியச்செலவு வைக்க விரும்பவில்லை.
"அப்பா, பஸ்லயே போயிடலாம். நேரமிருக்கு."
“சாப்படனுமே?”
அப்போதுதான் இன்னும் சாப்பிடவில்லை என்றுறைத்தது கண்ணகிக்கு. பசித்தது.
காலையில் வேறு ரயிலில் தண்ணீர் தண்ணீராய்ப்போனது. இப்போது சாப்பிட்டு மீண்டும் வயிற்றுக்கோளாறாகித் தேர்வுக்கேதும் தொந்தரவாகி விடக்கூடாது.
“எனக்குப்பசிக்கலப்பா. எக்ஸாம் முடிச்சிட்டு வந்து சாப்பிட்டுக்கறேன். நான் உள்ள போனதும் நீங்க அங்க செண்டருக்குப்பக்கத்துல போய் ஏதாவது சாப்பிட்டுக்கங்க.”
“சாப்பிடாமப்போய் பரிட்சை எழுத முடியுமா, பாப்பா? மயக்கம் வந்திராது?”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.”
நிறுத்தத்தில் நின்றவுடன் பேருந்து கிடைத்தது. ஏறிக்கொண்டார்கள். கூட்டமில்லை. இருவருக்கும் அமர தனித்தனியே இடம் கிடைத்தது. கண்ணகிக்கு ஜன்னலோரம். ஜன்னலோர இருக்கை எப்போதும் அவளுக்கு அம்மாவின் மடியை நினைவுபடுத்தும் - முகத்தை வருடும் தென்றல், இருக்கை தரும் அரவணைப்பு, காட்சிகளின் கதகதப்பு!
அம்மா இல்லை என்றால் அவள் இங்கே, இந்தக்கணம், இந்தப்பேருந்தில் போய்க் கொண்டிருக்க மாட்டாள். அம்மாவின் தாலி ஒரு பவுன். அதை அடகு வைத்ததில் பதினைந்தாயிரம் கிடைத்தது. அதில்தான் கண்ணகி ‘பரிக்ஷா’ கோச்சிங் சேர்ந்தாள்.
ஈராண்டுகள் முன்பு வரை ‘பரிக்ஷா’ இல்லை. பன்னிரண்டாவது மதிப்பெண் வைத்து மருத்துவச்சேர்க்கை நடந்தது. சென்ற ஆண்டுதான் ‘பரிக்ஷா’ வந்தது. எல்லோரும் எதிர்த்துப்பார்த்தார்கள். பலனில்லை. ‘பரிக்ஷா’ கோச்சிங் செண்டர்கள் முளைத்தன.
தமிழ் வழியில் ‘பரிக்ஷா’ பாடம் நடத்தும் மையங்களே குறைவாய்த்தான் இருந்தன. விலை விசாரித்ததில் இருபதாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை சொன்னார்கள். கண்ணகி இருபதாயிரம் ரூபாய்க்கு ஓரிடத்தில் சேர்ந்தாள். ஆறு மாதகாலப்பயிற்சி வகுப்பு. சனி, ஞாயிறுகளில் மட்டும். அது மிகச்சுமாரான கோச்சிங் செண்டர். பாடம் நடத்துபவர்களுக்கே பல குழப்பங்கள் இருந்தன. கேள்வி கேட்டால் பெரும்பாலும் மழுப்பினார்கள் அல்லது ஏற்கனவே சொன்னதையே திரும்பச்சொன்னார்கள், இதில் எங்கேனும் உனக்கான பதில் தென்பட்டால் பிடித்துக்கொள் என்பது மாதிரி. கண்ணகி அவர்களை நம்பினால் வேலைக்காகாது என ஒரு மாதத்திலேயே புரிந்துகொண்டாள்.
ஆனால் அதிர்ஷ்டவசமாய் அவர்கள் அளித்த புத்தகங்களும் தேர்வுத்தாள்களும் தரமானவையாக இருந்தன. அவற்றை மட்டும் ஏதோ ஓர் உருப்படியான குழுவிடம் கொடுத்துப்பெற்றிருந்தார்கள். முதலில் தன் பள்ளி ஆசிரியர்களிடம் உதவிகேட்டுப் பார்த்தாள். அவர்கள் ஒன்று அறியாமையில் எரிந்து விழுந்தார்கள் அல்லது தப்பும் தவறுமாகச் சொல்லிக்கொடுத்தார்கள். கண்ணகி தானே மண்டையை உடைத்துக் கொண்டு வாசித்தாள். சந்தேகம் வந்தால் உடன் படிப்பவர்களுடன் விவாதித்தாள். அவர்களே அவர்களுக்குள் கைகொடுத்துத் தூக்கிவிட்டுக்கொள்ள முயன்றார்கள்.
அவளது பள்ளிப்பாடங்களுக்கும் ‘பரிக்ஷா’வின் பாடங்களுக்கும் நிறைய இடைவெளி இருந்தன. மிகவும் சிரமப்பட்டாள். பள்ளித்தேர்வுகளில் எல்லாம் நேரடிக்கேள்விகள். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு பாடத்தின் பின்னும் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளே பெரும்பாலும் கேட்கப்படும். அதற்குத்தான் அவள் தயாராகியிருந்தாள்.
இப்போதும் அதில் நூற்றுக்கு நூறு வாங்கும் நம்பிக்கையுண்டு. ஆனால் ‘பரிக்ஷா’வில் தலைகீழ். யாவும் சுற்றிவளைத்த கேள்விகள். பாடங்களை அடியொற்றிய கணக்குகள். குழப்பமூட்டும் நான்கு விடைகளிலிருந்து ஒன்றைத்தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும். “சொரசொரப்பான அகப்பிளாச வலைப்பின்னலில் எது நிகழ்வதில்லை?” எனக்கேட்பர். அதற்கு விடையளிக்க என்னவெல்லாம் நிகழ்கின்றன எனத்தெரிந்திருக்க வேண்டும்.
பல விஷயங்கள் பிடிபடவில்லை. சிலவற்றை மனனம் செய்தாள். தடுமாறினாள். முழு நம்பிக்கை வரவில்லை. தேர்வு நாளான இன்றைய தேதியிலும் பயம்தான்.
இன்னொரு புறம் பள்ளிப்பாடத்தையும் விட்டுவிட முடியவில்லை. மருத்துவச் சேர்க்கை ‘பரிக்ஷா’ மூலம் கூடாது என இவ்வாண்டும் போராடினார்கள். வழக்குத் தொடுத்தார்கள். அத்தனை எளிதாய் ‘பரிக்ஷா’வை அழிக்க விட்டுவிட மாட்டார்கள் தான். ஆனாலும் ஏதேனும் அதிசயம் நடந்து பள்ளிப்பாடத் தேர்வுகளில் வாங்கும் மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவச்சேர்க்கை என்று சொல்லிவிட்டால்?
அதனால் அதையும் சமமான முக்கியத்துவத்துடன் படிக்க வேண்டும். இரு மடங்கு பாரம் சுமக்கும் வண்டி மாடுபோல்தான் கண்ணகி அந்த ஆறு மாதங்கள் இருந்தாள். அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மட்டுமே தூங்கினாள். கணிசமாய் எடையிழந்தாள். அத்தை சொல்லி இரும்புச்சத்து மீட்க பேரிச்சை சிரப் குடித்தாள். (“மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்கல” என்று பள்ளியில் எவனோ சொன்னான்.)
கடைசியில் எதிர்ப்பு வழக்கேதும் எடுபடவில்லை. ‘பரிக்ஷா’ நடப்பது உறுதியானது.
‘பரிக்ஷா’வுக்கு இரு வாரங்களிருக்கையில் நுழைவுச்சீட்டு சேர்த்தலை என்று போட்டு வந்தது. அது கேரளத்தில் எங்கோ இருக்கிறது என்பது புரியவே அரைநாள் பிடித்தது.
அப்போதும் அது ஏதோ கணிணிப்பிழை என்றே நினைத்தாள். காரணம் அவள் ‘பரிக்ஷா’ விண்ணப்பப்படிவத்தில் மதுரை, திருச்சி, திண்டுக்கல்தான் தேர்வு மைய விருப்பங்களாகக்கொடுத்திருந்தாள். பிறகெஎப்படி வேறெங்கோ போட முடியும்?
விசாரித்தபோது சிலருக்கு ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் எல்லாம் போட்டிருந்தனர். அருகிலேயே கேரளத்தில் மையம் கிட்டியதற்கு அவளை அதிர்ஷ்டசாலி என்றார்கள்.
‘பரிக்ஷா’வே கூடாது என்று சொன்ன வாயாலேயே இங்கேதான் ‘பரிக்ஷா’ நடத்த வேண்டும் என்று சொல்லவேண்டியதாயிற்று. வெளிமாநிலங்களில் தேர்வு மையம் போட்டதை எதிர்த்துத்தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அவர்கட்கு இங்கேயே மையம் ஒதுக்கவேண்டும் என்று ‘பரிக்ஷா’வை நடத்தும் அமைப்புக்கு உத்தரவிட்டது.
‘பரிக்ஷா’ விஷயத்தில் முதல் வெற்றி. கொண்டாடினார்கள். கண்ணகி நிம்மதியுடன் மதுரையிலேயே எழுதமுடியும் என்று நம்பி சேர்த்தலைக்குப் போவதற்கான எந்த ஏற்பாடுகளிலும் அப்பாவை ஈடுபடக்கேளாமல் மீண்டும் படிப்பில் மும்முரமானாள்.
நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும். உச்சநீதிமன்றமும் தெய்வமே.
‘பரிக்ஷா’ நடத்தும் அமைப்பு, மாறுதல் ஏற்பாடுகள் மேற்கொள்ள போதிய அவகாசம் இல்லை என்று சொன்னதை ஏற்றுக்கொண்டு தேர்வு மையங்களில் மாற்றமில்லை எனத் தேர்வுக்கு மூன்று நாட்களிருக்கையில் உச்சநீதிமன்றம் தீர்ப்புச்சொன்னது.
அந்த இடியைத் தாங்கிக்கொண்டு, அவசரமாய்ப் பிரயாணத்தைத்திட்டமிட்டார்கள்.
பேருந்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள் கண்ணகி. இந்த இடங்களை எல்லாம் முன்பே பார்த்திருப்பதுபோல் அவளுக்குத்தோன்றியது. இதோ இந்தக் குளக்கரையில் குளித்திருக்கிறேன். இந்தப் பச்சைவயல் நடுவே நடந்திருக்கிறேன். இந்த ஒற்றையடிப்பாதை இரவின் ஒளியில் எப்படி மினுங்கும் என்று அறிவேன்.
எல்லாம் பிரமை. பக்தியை உத்தேசித்த யாத்திரைகள், தொல்லியல் நோக்கிலான சுற்றுலாக்கள் என்று அவள் திருச்சி, தஞ்சை, நெல்லை, குமரி தாண்டியதில்லை.
“நங்கேலி!”
யாரோ யாரையோ அழைத்தது “கண்ணகி” எனக்காதில் விழ, திரும்பிப்பார்த்தாள். தலை வாழையிலை முழுக்க ரத்தங்கிடக்கும் காட்சி கணம் தோன்றிமறைந்தது.
திடுக்கிட்டாள். தலையை உதறிக்கொண்டாள். சிந்தனையைத்திருப்ப விரும்பினாள்.
கால்பிட் அலையியற்றியின் சுற்றுவரைபடத்தை யோசித்தாள். அதில் அலைவுகளின் அதிர்வெண் பற்றிய ஒரு கணக்கு இன்று வினாத்தாளில் இருக்குமெனத்தோன்றியது.
பேருந்து விட்டிறங்கி மனோரமா ஹைஸ்கூலைக்கேட்டு நடந்து அந்தத்தனியார் பள்ளி வாசலை அடைகையில் மணி சரியாய் ஒன்பதரை. வாயிலில் நீண்டவரிசை காத்திருந்தது. அவசரமாய் அதன் வாலில் போய்த்தன்னை இணைத்துக்கொண்டாள்.
அலைச்சலும் அட்ரினலினும் சேர்ந்து வியர்வையைத்துப்பி உள்ளாடை நனைத்தது. கைக்குட்டையும் கிடையாது என்று நினைவு வர, குருதி கசிவதுபோல் தோன்றியது.
மேலும் பதற்றமானாள். தேர்வு முடிந்து திரும்பும்வரை தாங்க வேண்டும். பிறகு இங்கே எங்கேனும் நேப்கின் வாங்கிக்கொள்ளலாம். அப்பா நிஜமாகவே சலித்துக் கொண்டாரா அல்லது தனக்குத்தான் அப்படித்தோன்றியதா என யோசித்தாள்.
திரும்பி அவரைப்பார்த்தாள். இப்போது அவர் முகத்தில் சலனமேதும் இல்லை.
“இவ்ளோ பேரு நிக்கறாங்க, பாப்பா?”
“செக்கிங்பா. அதான் லேட்டாகுது.”
ஒரு சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புப்பரிசோதனைக்கு இணையாக இருந்தது அது. முதலில் நுழைவுச்சீட்டைச் சரிபார்த்தார்கள். அப்புறம் ஆதார் ஆட்டையைச்சோதித்தார்கள். அடுத்ததாய், பார்வையால் வருடி மாணவர்களின் உடைகள் ‘பரிக்ஷா’ விதிமுறைகளுக்கு உட்பட்டவையா எனப்பரிசோதித்தார்கள்.
கடைசியாய் மெட்டல் டிடெக்டர் கொண்டு அங்குலம் அங்குலமாய் உடலைத் தடவிப்பரிசோதித்தார்கள். அதிலும் சிக்கலில்லையென உறுதியான பிறகுதான் தேர்வறைக்குள் அனுமதி. இதற்காக ஐவர் கொண்ட குழு வேலை பார்த்தது.
பெண்களுக்கென தனிப்பரிசோதகர்கள் இல்லை என்பதை கண்ணகி கவனித்தாள்.
நீண்ட கை வைத்த அங்கிகள் கூடாது. எந்த நகையும் அணிந்திருக்கக்கூடாது. ஷூக்கள் கூடா. முழுக்கை சட்டை அணிந்திருந்த ஆண்கள் அவசர அவசரமாய் உடன் வந்திருந்த பெற்றோர் சுமந்து கொண்டிருந்த துணிப்பை துழாவி அரைக்கை சட்டை அணிந்து கொண்டார்கள். பெண்கள் மாற்று உடையுடன் கழிவறை தேடி ஓடினார்கள். அப்படி எந்தப்பொருத்தமான உடையும் கைவசம் இல்லாதவர்களின் சட்டையின் கைகளைத்தயாராய் வைத்திருந்த பெரிய கத்திரிக்கோல் கொண்டு கலைநயத்துடன் வெட்டியெறிந்தார்கள். விட்டால் கைகளையும் சேர்த்து வெட்டி விடுவார்கள் போலிருந்தது. எத்தனை துணிகள் தின்றும் பசியாறாமல் கோரப் பற்களுடன் அந்தக்கத்தரிக்கோல் புன்னகைத்தது போலிருந்தது கண்ணகிக்கு.
“ஸார். இது என் லக்கி ஷர்ட். எல்லா முக்கியமான எக்ஸாமுக்கும் இதுதான் போடுவேன். ஹாஃப்ஹேண்ட் ஷர்ட் மாதிரியே மடிச்சு விட்டுக்கறேன் ஸார்.”
“தம்பி, அதுக்குத்தான் ‘பரிக்ஷா’ ரூல்ஸ்ல எல்லாம் தெளிவாப்போட்ருக்காங்க. அதையே ஒழுங்காப்படிக்காம வந்து நீ டாக்டராகி என்னப்பா பண்ணப்போற?”
அவன் கண்ணீர் மல்கியபடி நிற்க, அந
Published on June 26, 2018 04:33
June 16, 2018
காலா - மேலும் சில
A) காலா என்ற சொல்லுக்குத் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்! 1) கரிகாலன் என்பதன் சுருக்க விளி 2) ஒரு குலதெய்வப் பெயர் 3) தமிழில் எமன் 4) இந்தியில் கருப்பு 5) தமிழிலும் சமஸ்கிருதத்திலும் காலம். (கடைசி தவிர) இவற்றில் எல்லாமே "எது வேணுமோ எடுத்துகோ" என்பது மாதிரி படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது தான் ஆச்சரியம்!
B) 90 ஃபீட்டில் விஷ்ணு பாயிடம் காலா பேசும் போது (தாய் சொல்றது தான்.. என்ற வசனத்துக்கு முன்) மாரி தனுஷ் தெரிந்தார். போலீஸ் ஸ்டேஷனில் காலா ஹரி தாதாவைப் பார்த்ததும் பேசும் போது (ஆவோ ஆவோ.. என்ற வசனத்துக்குப் பின்) பாபா ரஜினி தெரிந்தார். சமுத்திரக்கனி செல்ஃபோனைக் காட்டி எட்டு வருஷமா ஒரே மெசேஜை ஃபார்வார்ட் பண்ணிட்டு இருக்கானுக மச்சான் என்று சொல்லும் - கதைக்குத் தொடர்பற்ற எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் - காட்சியில் கூட - அதைப் பார்த்தும் கொண்டு ஆனால் அதில் பெரிதாய் ஆர்வங்காட்டாதது போன்ற - ரஜினியின் நடிப்பு அபாரம் என்பது தான் ஆச்சரியம்.
C) மணிரத்னம் பம்பாய் படத்தில் ஒரு முஸ்லிமான நாசரை தீவிர இந்துவாகவும் ஒரு இந்துவான கிட்டியை தீவிர முஸ்லிமாகவும் நடிக்க வைத்திருப்பார். ரஞ்சித்தும் காலாவில் அதே போல் பிஜேபி ஆதரவு முகம் கொண்ட ரஜினியை அதற்கு எதிரானவராகவும் பிஜேபியை விரும்பாத நானா படேகரை இந்துத்துவத்தைப் பயன்படுத்தி முன்னேறுபவராகவும் நடிக்க வைத்திருக்கிறார்.
D) காலாவின் ஜீனியஸ் காட்சிகளில் ஒன்று ஜரீனாவை எப்படி கரிகாலன் முதல்முறை பார்த்தானோ அதே புறச்சூழலில் - மின்சாரமற்ற விளக்கு வெளிச்சம் - முப்பது ஆண்டுகள் கழித்து காலாவாய் மீண்டும் பார்க்கிறான். அதே போல் பிரம்மிக்கிறான். அது காலமே திரும்புவது போலத்தான்! அக்காட்சியை இன்னும் உயரச் செய்வது ரஜினியின் அபார முகபாவனை!
E) சேரி என்று சொன்னதும் ரஜினி தன் மகனை ஓங்கிக் கன்னத்தில் அறைவார். காயத்ரி ரகுராமுக்கு செருப்பால் அடித்தது போல் இருந்திருக்கும் தானே!

1) காலாவும் கபாலியும் ஒரே லெவல் என்று சொல்லி இருந்தேன். இப்போது காலா ஒரு படி மேலே எனத் தோன்றுகிறது. "செஞ்ச தப்பை சரி பண்ணிக்க இன்னொரு வாய்ப்பு வரும்" என நானா படேகர் படத்தில் ஓரிடத்தில் சொல்வார். ரஞ்சித் ஓரளவு அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்றே சொல்வேன்.
2) ஜரீனா - காலா காதலில் நெருப்பு ஒரு பாத்திரமாகவே வருகிறது. 70களில் இருளில் விளக்கொளியில் முதல் முறை ஜரீனாவின் முகத்தைப் பார்த்தது போலவே இப்போது "இரண்டாம்" முதல் முறையும் பார்க்கிறான் காலா என்பதை முன்பே சொல்லி இருந்தேன். அதே போல் முதல் முறை அவர்களைப் பிரிப்பதும் நெருப்பு தான். இரண்டாம் முறையும் அதே தான்.
3) பெரியார் தாராவியில் சிலையாக, க்ளைமேக்ஸில் கருப்புப் பொடியாக வந்ததை நாம் அறிந்ததே. அது போக அறிமுகக் காட்சியில் "எங்களுக்குச் சட்டத்தை மதிக்கவும் தெரியும், தேவையில்லைன்னா எரிக்கவும் தெரியும்" என்று ரஜினி சொல்வார். (எரிக்கவும் என்ற சொல் சென்ஸாரில் ம்யூட் ஆகியுள்ளது.) அரசியல் சாசனத்தை எரித்தது பெரியார் தான்.
4) ரஜினியின் சிறந்த 5 நடிப்புப் பங்களிப்புகளில் காலாவும் ஒன்று. (கவனிக்கவும், அவரது சிறந்த படங்களல்ல; சிறந்த நடிப்பு மட்டும்.) ஜரீனா, செல்வி, குடும்பக் காட்சிகளிலும் தண்ணியடித்த காட்சிகளிலும் செம்மை நடிப்பு. விபத்துக்குப் பின் ரஜினி கைதாங்கலாக நிற்கும் காட்சி எல்லாம் அற்புதம்!
5) சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை பின்னுகிறது. நானா படேகர் தீம் ம்யூஸிக், காலா சண்டை தீம் ம்யூஸிக் இரண்டிலும் அசத்தல். நிலமே எங்கள் உரிமை, போராடுவோம் - பாடலுக்குள் பாடல்!
6) "எதிர்த்துப் பேசினால் கொலை என்பது ஃபாஸிசம்" என்கிறாள் ஜரீனா ஒரு காட்சியில். கெளரி லங்கேஷ்! ஜரீனா ஹரிதாதா காலில் விழுந்தாளா என்பதைக் காட்டாமல் விட்டதிலும் ஒரு புத்திசாலித்தனம் இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
7) எந்த நிலவியலை எடுக்கிறாரோ அங்கு புழக்கத்தில் இருக்கும் சொல் ஒன்றைப் படத்தில் ஆங்காங்கே சொருகி விடுகிறார் ரஞ்சித். கபாலியில் பொன்னை என்ற மலேஷியச் சொல் அப்படி வருமென ஞாபகம் (மிக அதிகம் என்ற பொருளில்). அது மாதிரி காலாவில் மச்மச் என்ற மும்பைச் சொல் ஆங்காங்கே வருகிறது (பிரச்சனை என்ற பொருளில்).
8 ) இந்தித் திணிப்பு மறுப்பு கூட உண்டு. நானா படேகர் கிளம்ப இந்தியில் அனுமதி கேட்பார். ரஜினியிடம் பதில் இராது. அப்புறம் தமிழில் கேட்பார். சமுத்திரக்கனியும் ஓரிடத்தில் இந்தியைக் கேலி செய்வார்.
9) நாயகன் படத்தின் வலுவான பாதிப்பு இருக்கிறது படத்தில். பீம்ஜி கொலை, என்னைச் சுடு என மக்கள் ஒவ்வொருவராக போலீஸ் முன் வருவது, காலாவை ஒருவன் சுடுவது எல்லாம்.
10) கபாலியில் ரஞ்சித் மீது அடைந்த ஏமாற்றம் இதில் சரியாகி இருக்கிறது. இரண்டாம் பாதி வழக்கமான பழிவாங்கல் (விபத்து ஏற்படுத்துவது, வீட்டை எரிப்பது, கடைசியில் அடியாட்களை இறக்கி தாராவியை அடிப்பது) என்பது தான் திரைக்கதையை டொங்கலாக்கி விடுகிறது. அதில் கவனம் செலுத்தியிருந்தால் படம் பட்டாசாகி இருக்கும். எல்லாம் மீறி ரஞ்சித் ஒரு கலைஞனாகப் பல இடங்களில் மிளிர்கிறார்.
11) இடைவேளைக்குச் சற்று முன் தான் நானா படேகர் முகத்தைப் பார்க்கிறோம். ஆனால் அதை நாம் உணர்வதே இல்லை. காரணம் தொடர்ந்து அவர் முகம் பேனர்கள் வழி பார்வையாளனுக்குப் பதிய வைக்கப்பட்டு விடுகிறது. மோடியும் அப்படித்தானே! ஊதிப் பெருக்கப்பட்ட ஊடக மாயை. (ஊடகங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என பாடம் எடுத்திருக்கிறார்கள் நியூஸ் 18 நிருபர் பாத்திரம் மூலம்.)
12) ரஜினி க்ளீன் போல்ட் ஆகும் அறிமுகக் காட்சியிலேயே காலாவில் ஹீரோயிசம் எந்த அளவு இருக்கும் எனக் கோடி காட்டி விடுகிறார் ரஞ்சித். (அது முக்கியமான திரைக்கதை மூவ். சினிமாத் தெரியாதவர்கள் இதெல்லாம் ஒரு இண்ட்ரோவா எனக் கேட்பதில் ஆச்சரியமில்லை.) விஷ்ணுபாய் கொலை தவிர ரஜினியின் நேரடி ஹீரோயிஸம் எங்குமே வெளிப்படவில்லை. எல்லா இடங்களிலும் தோற்கிறார் அல்லது அடிவாங்குகிறார். ஜெயிக்கும் பிற இடங்களும் மக்கள் செல்வாக்கினால் தான். கடைசியில் முடிவு கூட ஒவ்வொருவரும் காலா தான் என்பதே.
13) டிஜிட்டல் மும்பை, க்ளீன் மும்பை, தேசபக்தன் Vs தேசத்துரோகி கட்டமைப்பு எனப் பல விதங்களில் மிக அதீதமாக மோடியையும் இந்துத்துவத்தையும் செருப்பால் அடித்திருக்கிறார் ரஞ்சித். அதற்காகவே அவரைக் கட்டி முத்தமிடலாம். மீண்டும் அவர் ரஜினியை இயக்க வேண்டும்.
14) ரஜினிக்கு இதுவே அசலான அடுத்த கட்ட நகர்வு. கபாலி அல்ல. இதைப் பிடித்து அப்படியே போனால் ஒன்றிரண்டு தேசிய விருதுகள் வாங்கலாம். உங்களுக்கு ஏபிசிடி கூட தெரியாத அரசியலைத் தூக்கிப் போட்டு வாருங்கள், ரஜினி. சிங்கம் போல் சினிமாவில் ஜெயிக்கலாம்!
15) படம் சுமார் அல்ல; சுமாருக்கும் மேல். (இன்னொரு முறை பார்த்தால் சூப்பர் என்று சொல்லி விடுவீர்களா என அசட்டுத்தனமாய்க் கேட்க வேண்டாம்.)
*
Published on June 16, 2018 19:57
C. Saravanakarthikeyan's Blog
- C. Saravanakarthikeyan's profile
- 9 followers
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
