மிஷ்கினின் வல்லுறவு


மிஷ்கின் மேல் எல்லோருக்கும் காண்டு இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் ஓர் அறிவுஜீவி என்பது தான் காரணம். நம்மூரில் புத்திசாலிகளை மக்களுக்குப் பிடிக்காது. போட்டு அடிப்பார்கள். அவர்களுக்கு ரஜினி மாதிரி ஓர் அரைகுறை என்றால் தான் திருப்தி. எட்டு வழிச் சாலையை வைத்துக் கொள், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடாதே என்று நடுவிரலைக் காட்டினாலும் பரவாயில்லை. ஆனால் அறிவாளி வேண்டாம். ஒருவேளை ஒருவன் புத்திசாலியாக இருந்தாலும் அவன் எக்காரணம் கொண்டும் காட்டிக் கொள்ளவே கூடாது. ஒரு பாலியல் நோய் வந்தது போல் மிக ரகசியமாக அதை வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். அவ்வளவு தாழ்வு மனப்பான்மை நம் ஆட்களுக்கு.

சில நூறு பேருக்கு மட்டும் தெரிந்த நான் 'இண்டலெக்சுவல்' என்று சமூக வலைதள பயோ போட்டுக் கொண்டதற்கே பத்தாண்டுகளாக பொச்செரிந்து கொண்டிருப்போர் உண்டு எனும் போது லட்சக்கணக்கானோருக்குத் தெரிந்த மிஷ்கின் இண்டலெக்சுவலாக இருப்பது பொறுக்குமா! அசந்தால் ஆப்படிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். அசராவிடிலும் அசந்ததாய்ச் சொல்லி ஆப்படிப்பார்கள். அப்படியான ஒன்று தான் அவரது மம்மூட்டி ரேப் பேச்சை முன்வைத்து அவரை மொத்தமாக ஒன்றுமே இல்லை என்று நிறுவ முனைவது. எத்தனை நல்ல படம் பார்த்தாலும், எடுத்தாலும் அவன் மனிதனே இல்லை என்று தீர்ப்பெழுதுவது.


முதலில் அவரது பேச்சைப் பார்ப்போம்: "நான் பெண்ணாக இருந்திருந்தால் மம்மூட்டியை ரேப் செய்திருப்பேன்" ("Had I been a girl, would've raped Mammootty") என்று சொல்லி இருக்கிறார் (பேரன்பு திரைப்படம் பார்த்ததை முன்வைத்து அவரது நடிப்பைச் சிலாகிக்கும் முகமாக). இன்று இந்தியாவில் இருக்கும் சமூகச் சிக்கல் ஆண்கள் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வது தான். பெண்கள் ஆண்களை / சிறுவர்களை வல்லுறவு செய்வது பிள்ளைகெடுத்தாள்விளை போல் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கலாம். முதலில் ஆணின் முழுச் சம்மதம் இல்லாமல் பெண்ணால் அவனை வல்லுறவு செய்ய முடியுமா என்றே எனக்குப் புரியவில்லை. அதை நியாயமாக‌ மயக்கி, அல்லது தூண்டிப் புணர்தல் என்று தான் சொல்ல முடியும். உயிரியல்ரீதியான ஒத்துழைப்பின்மை தவிர உடல் வலிமையில் இருக்கும் வித்தியாசமும் ஒரு காரணம். அதையும் தாண்டி பூரண வற்புறுத்தல் என்றால் வாய்ப்புணர்ச்சியை வேண்டுமானால் கணக்கில் கொள்ளலாம். தவிர நம் ஆண்களுக்கு இருக்கும் பாலியல் வறுமைக்கு பொதுவாய் அவர்களை எந்தப் பெண்ணும் வற்புறுத்த வேண்டியும் இருப்பதில்லை. அதாவது நடக்கிறது என்றாலும் அது இன்று நம் சமூகத்தில் பெரும் பிரச்சனை அல்ல என்பதே என் புரிதல். இந்தப் பின்புலத்தில் மிஷ்கின் சொன்னதைக் கவனிக்கலாம். தான் மட்டும் பெண்ணாகப் பிறந்திருந்தால் மம்மூட்டியைப் புணர விழைந்திருபேன் என்கிறார். அதை அப்பாத்திரத்தின் மீதான ஒரு காதலாகவே என்னால் பார்க்க முடிகிறது.

பல ஊடகங்களும் செய்திகளில் அப்படித்தான் போட்டிருக்கிறார்கள். அது இடக்கரடக்கலா அல்லது சரியான புரிதலா என்பது வேறு விஷயம். இடக்கரடக்கல் என்றாலும் சினிமாக்காரன் பேச்சை ஊதிப் பெரிதாக்கத் துடிக்கும் ஊடகங்கள் இதைப் பொருட்படுத்தவில்லை எனும் போது முதல் பார்வையில் இது தவறென்று அவர்களுக்குத் தோன்றவில்லை என்பதைச் சுட்ட விரும்புகிறேன். ஆனால் நம் சமூக வலைதளக்கார நீதிமான்களுக்குத்தான் எல்லாவற்றையும் தோண்டித் துருவித் தூக்கிடுவதில் அலாதி விருப்பமாயிற்றே!

இதையே "மம்மூட்டி பெண்ணாக இருந்திருந்தால் அவரை ரேப் செய்திருப்பேன்" என்று மிஷ்கின் சொல்லி இருந்தால் அது தவறு தான். (அப்போதும் அவரது ஒட்டுமொத்தப் பங்களிப்பை நிராகரிக்கும் அகங்காரத்தைச் செய்ய மாட்டேன். இவ்விஷயத்தில் அவர் பேசியது சமூகக் குற்றம், அதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்வேன்.) அங்கே ரேப் என்ற சொல்லை மேலே சொல்லி இருப்பது போல் காதல் என்று எளிதாக எடுக்க முடியாது. கடக்கவும் முடியாது. ஏனெனில் இது பாலியல் குற்றங்களின் தேசம். இங்கே பெண்கள் ஆண்களால் பாலியல் இச்சை, சாதி, அதிகாரம், ஆணாதிக்கம், வன்முறை, மனச்சிதைவு எனப் பல காரணங்களால் வல்லுறவுக்கு உள்ளாகிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் அப்படிச் சொல்லக்கூடாது. முன்பு சல்மான் கான் Sultan படம் நடித்து முடித்த பின் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அப்படம் கோரிய அதீத உடலுழைப்பைச் சுட்டும் நோக்கில் "ரேப் செய்யப்பட்ட பெண் போல் களைத்திருக்கிறேன்" என்று சொன்ன போது நாமெல்லாம் கண்டித்தது நியாயமே. எதையும் ரேப்போடு ஒப்பிட்டு அக்குற்றத்தின் சமூக இடத்தை அங்கீகரித்ததாகி விடக்கூடாது என்பதால்.

ஓர் எளிய உதாரணம் மூலம் இதை விளக்கலாம். "ஆண்கள் சமையல் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று எழுதினால் அது சாதாரணம் வாழ்வியல் அறிவுரை. ஆனால் அதுவே "பெண்கள் சமையல் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று சொன்னால் அது பெண்ணடிமைத்தனத்தைத் தூண்டும் செயல். ஏனெனில் நம் நாட்டில் பெண்களைச் சமையல்காரிகளாக வைத்திருக்கும் ஆணாதிக்கப் போக்கு நிலவுகிறது. மேற்சொன்ன இரண்டையும் ஒரே அளவுகோலில் வைத்துப் பார்க்க முடியாது. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் உளறுவதை சமூகப் பொறுப்புள்ள ஒருவர் தவிர்ப்பது நலம். அது உண்மையில் புத்தி போதாமையில் செய்யும் ஒரு திரித்தல் வேலை தான்.

குறிப்பிட்ட இவ்விஷயத்தில் அதிகபட்சம் மிஷ்கின் இனி ரேப் என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது கவனமாய் இருக்க வேண்டும் என்று soft advice வேண்டுமானால் செய்யலாம். மற்றதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம்.

இப்பதிவிற்கும் மேற்சொன்ன தாழ்வுமனப்பான்மைக்காரர்கள் வசவும் கேலியும் அளிப்பார்கள். என்ன செய்வது, அவர்களுக்கும் சேர்த்துத் தான் நாங்கள் சிந்திக்க வேண்டி இருக்கிறது!

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 16, 2018 20:54
No comments have been added yet.


C. Saravanakarthikeyan's Blog

C. Saravanakarthikeyan
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow C. Saravanakarthikeyan's blog with rss.