C. Saravanakarthikeyan's Blog, page 9

September 17, 2018

நவஅரசியல் நடனம்


சிறுஅசம்பாவிதத்தின் பலனாய் இன்று முழுக்க‌ கணிணி தொடாது வீட்டிலிருக்க நேர்ந்ததால் கனமற்ற‌தொரு வாசிப்புக்கு ஏதேனும் வேண்டுமென ஷான் எழுதிய‌ 'வெட்டாட்டம்' நாவலைத் தேர்ந்தெடுத்து ஓரமர்வில் வாசித்து முடித்த கையோடு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். மிகச் சுவாரஸ்யமான நாவல். நாவல் என்று சொல்வதை விட ஷான் இதை ஒரு சினிமாவாகவே எழுதி இருக்கிறார் என்பேன். பெரும்பாலும் காட்சிரூபம் மற்றும் வசன வடிவம் தான். (ஓபனிங்கில் - அதாவது முதல் அத்தியாயத்தில் - உயரக் கட்டிடத்தின் மாடி மதில் மேல் குடித்து விட்டு வருண் மேலேறி நிற்பது முதல் க்ளைமேக்ஸில் - அதாவது இறுதி அத்தியாயத்தில் - வருண் தலைமைச்செயலக வாசலில் அமர்ந்திருப்பது வரை ஏராள உதாரணங்கள்.) சினிமாவாக்கும் ப்ரக்ஞையுடன் நாவலாக எழுதியிருந்தார் என்றால் அதில் பெருவெற்றி கண்டிருக்கிறார்.


தெளிவாக இது ஒரு வெகுஜன நாவல் என்பதால் அந்த அடிப்படையிலேயே நாவல் பற்றிய என் மதிப்பீட்டை முன்வைக்க விரும்புகிறேன். பனாமாலீக்ஸ் சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்டிருக்கும் நவஅரசியல் நாவல் 'வெட்டாட்டம்'. தமிழில் ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை போன்றோர் ஏராள அரசியல் சார்ந்த த்ரில்லர் நாவல்கள் தந்திருக்கிறார்கள். ஆனால் திகில், திருப்பம் ஆகிய அடிப்படைகளில் மட்டுமில்லாமல், கதையின் உயிர்ப்பு, நம்பகத்தன்மை போன்றவற்றையும் கணக்கெடுத்தால் பொருட்படுத்தத் தகுந்த அரசியல் நாவல் என சுஜாதா எழுதிய சிலவற்றைத் தான் குறிப்பிட முடிகிறது (உதா: 24 ரூபாய் தீவு, பதவிக்காக). பா.ராகவன் எழுதிய கொசுவும் இவ்வகையில் வரும். உள்ளடக்கம் வலுவென்றாலும் அவற்றின் சுவாரஸ்யம் தொடர்பாய் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. 'வெட்டாட்டம்' அவ்வகையில் தமிழின் சிறப்பான அரசியல் த்ரில்லர் நாவல் என்பேன். மேற்சொன்னவர்கள் ஜாம்பவான்கள். ஆனால் ஓர் இளம் எழுத்தாளனின் முதல் நாவல் இப்படியொரு அந்தஸ்தைப் பெறுவது என்பது ஆச்சரியமான விஷயம் தான். அதற்காகவே ஷானை நாம் கொண்டாடலாம்.

பல இடங்களில் ஒரு தேர்ந்த திரைப்பட எடிட்டர் அல்லது திரைக்கதை ஆசிரியரின் லாவகத்துடன் ஒரே சமயத்தில் நடக்கும் வெவ்வேறு பாத்திரங்கள் பங்கேற்கும் வெவ்வேறு நிகழ்வுகள் தொடர்பான‌ காட்சிகளை மாறி மாறி சொல்லிச் செல்கிறார். பிரதியின் வாசிப்பின்பத்தை இந்த உத்தி வேறொரு தளத்துக்கு நகர்த்துகிறது. நாவலை சினிமாவாக ஆக்குவதும் அஃதே!

வெகுஜன எழுத்து என்றாலும் ஆங்காங்கே சில மானுட அவதானிப்புகளைத் தெறிப்புகளாக விட்டுச் செல்கிறது நாவல். தொழில்நுட்ப விஷயங்கள் வாசகனுக்குத் தேவையான அளவு, அதுவும் எளிய முறையில் விளக்கப்பட்டிருக்கின்றன. சில reading between the lines இடங்களும் உள்ளன (உதா: வருண் மற்றும் கயல்விழி இடையேயான ஓர் உரையாடலின் முடிவில் கடைசிக் கேள்வியைத் தவிர்த்திருந்தால் இன்னும் சிறிது நேரம் பேசியிருப்பாள் என்று வருணுக்குத் தோன்றும் இடம்.)

எம்ஜிஆர் - கலைஞர், ஜெயலலிதா - அப்போலோ, கூவத்தூர் ரெஸார்ட், லாலு - ராப்ரி, சந்திராசாமி, கண்டெய்னரில் பணம், வாரிசு அரசியல், அன்பழகன் எனப் பல அரசியல் விஷயங்களையும் ஆங்காங்கே வடிவம் எடுத்தாண்டு நினைவூட்டுகிறது.

நாவலிலிருந்து எனக்குப் பிடித்த சில வரிகள்:

படைத்தலில் கடவுளை மனிதன் நெருங்கவே முடியாது. எனவே அழிக்கும் போது தான் மனிதன் கடவுளுக்கு வெகுஅருகில் செல்கிறான்...

எல்லா ஆட்டங்களும் வெற்றி பெறுவதோடு நிறைவு பெற்று விடுவதில்லை. அந்த வெற்றியைத் தக்க வைக்கும் ஆட்டம் உடனே தொடங்கி விடுகிறது.

(வருண்) எவ்வளவு திறமையான ப்ரொகிராமர். அவன் தந்தை அவனை ஒரு சாதாரண முதல் மந்திரியாக்கி விட்டார் என்ற தகவல் வந்த போது மிகவும் வருந்தினான் வாங். ஒரு மாஸ்டர் ப்ரொக்ராமருக்கு அதை விட வாழ்க்கையில் பெரிய தண்டனை என்ன இருந்து விடப் போகிறது? "ட்யூட் ரெஸ்ட் இன் பீஸ்" என்று செய்தி அனுப்பினான்.

ஐடி / பொறியியல் துறையிலிருந்து எழுத வந்தோர் இன்று பலரும் உண்டு. அவர்களில் நான் பெரிதும் மதிப்பவர்கள் என்.சொக்கன் மற்றும் ஷான். காரணம் அவர்கள் பின்புலம் என்பது அவர்களின் எழுத்துக்களில் வெளிப்படும். அதாவது தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களில் அல்ல; எழுத்தின் நேர்த்தியில், தர்க்கத்தன்மையில், அணுகுமுறையில். அது இந்நாவலில் அழுத்தமாய் வெளிப்பட்டிருக்கிறது. சர்வநிச்சயமாய் ஒரு பொறியாளர் எழுதிய நாவல் 'வெட்டாட்டம்'.

குறைகளையும் பட்டியலிட்டு விடுவோம். பல இடங்களில் ராஜேஷ்குமாரின் நடையை நினைவூட்டியது. அதை எதிர்மறை என்பேன். இன்னும் சில இடங்களில் சுஜாதாவை. அது குறையாகப்படவில்லை. ஆனால் ஷான் புனைவில் இன்னும் தனக்கான நடையைக் கண்டடைய வேண்டும் என நினைக்கிறேன். சொன்னதையே திரும்பச் சொல்லுவதும் சில இடங்களில் காண முடிகிறது. அவ்விடங்கள் அலுப்பூட்டுகின்றன. (உதா: பாத்திர விரவணைகள், அவர்களிடையேயான உறவு வர்ணனைகள். குறிப்பாய் நர்மதா, கயல்விழி, சுவாதி பற்றிய இடங்களில் கண்ட நினைவு.) அப்புறம் புத்தகம் நெடுகிலும் ஏகப்பட்ட சந்திப்பிழைகள். (இன்றைய தேதியில் பலர் சந்திப்பிழைகளை பிழைகளாகவே கருதுவதில்லை!)

ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்தில் வரும் பரமபதம் பற்றிய குறிப்புகள் மட்டும் கொஞ்சம் மொக்கையாகப்பட்டன. திணிக்கப்பட்ட தத்துவச்சொருகல் போல். குறிப்பிட்ட அத்தியாயத்தோடு ஏதோவொரு வகையில் தொடர்புடையதோ என எண்ணி முதலிரண்டு அத்தியாயங்கள் வாசித்தவன் பிறகு அப்படியில்லை என்றுணர்ந்து அவற்றைப் படிக்கவில்லை. (ராஜேஷ் குமார், இந்திரா சௌந்தர்ராஜன் அத்தியாயத் துவக்கங்களில் த‌ரும் பொது அறிவு / மாந்திரீகத் தகவல்கள் போல்!)

NOTA படம் இந்நாவலைத் தழுவியதா என்ற கேள்விக்கு ஷான் பதிலளிக்காமல் நழுவியதிலிருந்தே 'ஆம்' என்பது தான் பதில் எனப் புரிந்தாலும் ட்ரெய்லரையும் நாவலையும் ஒப்பிட்டாலே அப்படித்தான் என்பது உறுதியாகிறது. நாவலில் வரும் வசனங்கள் (கேமின் கடைசி லெவலை நேரடியாக ஆடுதல், 20,000 கோடி ரூபாய் பணம்) ட்ரெய்லரில் இருக்கின்றன. நாவல் ஒருவேளை "அப்படியே" படமாக்கப்பட்டால் சந்தேகமே இல்லாமல் சூப்பர் ஹிட்டாக அமையும். கேவி ஆனந்த் - சுபா காம்போ படம் போல் பரபரவென நகர்கிறது நாவல். கிட்டத்தட்ட எந்த இடத்திலுமே தொய்வும் இல்லை, பிசிறும் இல்லை. சில இடங்களில் முதல்வன் படம் நினைவுக்கு வந்தது - குறிப்பாக க்ளைமேக்ஸ் (இதைப் பாராட்டாகவே சொல்கிறேன்).

NOTA படத்தை ஆவலாக எதிர்நோக்குகிறேன். (NOTA என்பதை எப்படி இக்கதையோடு பொருத்தினார்கள் என்றறியவும்!) நாவலில் வரும் வருணாக வந்தால் விஜய் தேவரகொண்டாவைக் கூடப் பிடித்து விடுமோ எனப் பயமாக இருக்கிறது.

சினிமாவில் நுழைய விரும்பும் திரைக்கதையாசிரியர்களுக்கு வெட்டாட்டம் ஒரு பாடம் எனலாம். எப்படி புதிய அலை இயக்குநர்கள் குறும்படம் எடுத்து அதன் வழியே சினிமா வாய்ப்புகள் பெற்றார்களோ, அதே போல் ஒரு நாவலின் வழி சினிமாவில் எழுத்தாளனாய் நுழைய முடியும் என்று ஷான் நிரூபித்திருக்கிறார். திரைக்கதை எழுதி விட்டு சினிமாக் கம்பெனிகள் ஏறி இறங்குவதை விட, சினிமாவுக்கேற்ற நாவல் என்றால் தானாய் சினிமா கதவைத் தட்டும். ஹாலிவுட், மலையாளம் மற்றும் வங்காளத்தில் இது சகஜம் என்றாலும் தமிழ், தெலுங்கு, இந்தியில் அப்படியில்லை. சேத்தன் பகத் தன் ஆங்கில நாவல்களின் மூலமாக‌ பாலிவுட்டில் இதைத்தான் செய்தார். தமிழில் ஷான் துவக்கி வைத்திருக்கிறார்.

தமிழில் உண்மையில் இன்று வெகுஜன எழுத்துக்கான இடம் காலி தான். (கே.என்.சிவராமன் எழுதுகிறார். 'கர்ணனின் கவசம்' மட்டும் வாசித்திருக்கிறேன். ஆனால் அவர் பல விஷயங்களைச் சொல்ல முயன்று நாவல் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்று தோன்றுகிறது.) ஷான் அவ்வெற்றிடத்தைச் சிறப்பாக நிரப்புவார் எனப் படுகிறது. என்னுடன் இணைந்து தான் அவர் இணையப்பிரிவில் சுஜாதா விருது பெற்றார். சட்டென இப்படியொரு முகத்துடன் அசத்துகிறார். கூட இருந்தவர் சட்டென வளர்ந்து நிற்கையில் ஏற்படும் பிரம்மிப்பு! (வெகுஜன எழுத்து என்பது வளர்ச்சியா? அதைப் பார்த்து பிரம்மிக்க வேண்டுமா? எனக் கேட்டால் 'ஆம்' என்று வலுவாகச் சொல்வேன். அதன் சிரமம் எனக்குத் தெரியும். அது சாதனையே. தவிர வெகுஜன எழுத்துக்கும் வாசிப்பில், வாசக வளர்ச்சியில் முக்கியப் பங்கிருக்கிறது என நம்புகிறேன்.)

ஷான் ஜெகுஜன எழுத்தைத் தன் வழியாகத் தேர்ந்தெடுத்து விட்டாரா என்பதை அறியேன். தீவிர இலக்கியத்தில் நுழைந்தாலும் அவர் ஜ்வலிப்பார் என நம்புகிறேன். இப்போதைக்கு ஜெகுஜன எழுத்தில் தன்னை நிரூபித்து விட்டார். வெகுஜன எழுத்தென்பது படித்து விட்டு மறந்து போகும் விஷயம் அல்ல என்பதையும் நிறுவியிருக்கிறார். அதனால் வெகுஜன எழுத்து அவரது தேர்வாக இருப்பினும் தவறே இல்லை. ஒருவேளை வருங்காலத்தில் தீவிர இலக்கியத்தின் பால் அவர் திரும்பினாலும் அவ்வப்போது இவ்வகையான நல்ல வெகுஜன எழுத்துக்களையும் அவர் தர வேண்டும் என்பதே ஒரு வாசகனாக‌ என் வேண்டுகோள். (ஜெயமோகன் உலோகம் மற்றும் நான்காவது கொலை எழுதியது போல்.) NOTA தாண்டி மோகன் ராஜா, கேவி ஆனந்த், ஷங்கர் எனப் பல‌ இயக்குநர்கள் அவர் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள வாழ்த்துக்கள்!

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 17, 2018 10:36

September 7, 2018

September 3, 2018

சோஃபியா எனும் வனயட்சி


A voice so thrilling ne'er was heard
In spring-time from the Cuckoo-bird,
Breaking the silence of the seas
Among the farthest Hebrides.

- William Wordsworth (The Solitary Reaper)

இவ்விஷயத்தில் எதிரணி பாஜக என்பதை நீக்கி விட்டு, நிதானமாக யோசித்தாலுமே கூட சோஃபியா செய்தது தவறு இல்லை என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் அது கொண்டாடப்பட வேண்டியது.

எனக்குத் தெரிந்து சோஃபியா என்ற இளம் பெண் விமானத்திலும், விமான நிலையத்திலும் "ஃபாசிஸ பாஜக - ஆர்எஸ்எஸ் அரசு ஒழிக" என்று தமிழிசையைப் பார்த்துக் கோஷம் போட்டிருக்கிறார். மற்றபடி, அவர் மீது உடல்ரீதியான தாக்குதல் ஏதும் தொடுக்கவில்லை. அதற்கான முஸ்தீபுகளிலும் இறங்கவில்லை. அவரை மிரட்டவில்லை. கண்ணியமற்ற சொற்கள் ஏதும் பிரயோகிக்கவில்லை. தான் நம்பும் ஒரு கருத்தை - அதாவது இந்தியாவின் ஃபாசிஸ ஆட்சி நடக்கிறது என்பதை - அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரைப் பார்க்கும் போது பொதுவெளியில் பகிர்கிறார். அரசியல் சாசனச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் படி இதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு ("All citizens shall have the right to freedom of speech and expression").


ஏன் அப்படி கோஷம் போட்டுச் சொல்ல வேண்டும், காதில் ரகசியமாய்ச் சொல்லி இருக்கலாமே என்று நீங்கள் கேட்பீர்கள் என்றால், அப்படி சொல்லி இருந்தால் "மூடிட்டு போடி" என்று தான் அப்பெண்ணிற்குப் பதில் சொல்லி இருப்பார் தமிழிசை (எந்த அரசியல்வாதியாக இருந்தாலுமே அதைத் தான் செய்வார்). அதனால் யதார்த்தச் சாத்தியக்கூறாய் தன் எல்லைக்குள் நின்று தன்னால் சாத்தியமான எதிர்ப்பை அந்தப் பெண் செய்திருக்கிறார். இது ஒரு போராட்ட முறை. இது பொதுமக்களுக்கு இடையூறு என ஒருவர் சொன்னால், ரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும் தலைவர்கள் வரும் போது வாழ்க கோஷம் போடுவதும் அதில் தானே வரும்? அதை ஏன் நாம் கண்டிப்பதில்லை?

இன்னொரு கேள்வி கேட்கிறார்கள். இதுவே ஜெயலலிதா என்றால் இப்படிச் சொல்லும் தைரியம் வந்திருக்குமா? தமிழிசை என்பதாலும் பாஜக என்பதாலும் தானே இந்த இளக்காரம் என்று கேட்கிறார்கள். ஆம், உண்மை தான். ஆனால் இதைச் சொல்ல ஜெயலலிதா தரப்பினர் வெட்கப்பட வேண்டும். எதிர்த்துப் பேசினால் கைது என்பது மட்டும் ஃபாசிஸம் அல்ல‌; எதிர்த்துப் பேசவே பயப்படுமளவு வைத்திருப்பதும் ஃபாசிஸம் தான். இங்கே எதிராளி யார் என்பதெல்லாம் விஷயமே இல்லை. அந்தக் கோஷமிட அவருக்கு உரிமை இருக்கிறதா என்பது தான் விஷயம்.

சோஃபியா கிறிஸ்தவர் என்ற கோணத்தைச் சிலர் முன்வைக்கிறார்கள். நான் அதனால் தான் அவர் கோஷமிட்டார் என நினைக்கவில்லை. ஒரு பேச்சுக்கு அப்படி நம்ப விரும்புபவர்கள் வழியிலேயே சென்று அந்த அடிப்படையில், அவர்களின் பிரதிநிதியாகத் தான் கோஷமிட்டார் என வைத்துக் கொள்வோம். அதிலும் ஒரு செய்தி இருக்கிறது. இந்த ஆட்சியில் சிறுபான்மையினர் நிம்மதியாக இல்லை என்று சொல்கிறார். அதுவும் பொருட்படுத்தத் தகுந்த எதிர்ப்பு தானே? அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் தானே? அவர்களுக்கும் எல்லாம் உரிமைகளும் உண்டு தானே? தவிர, இப்படிச் சொல்பவர்களின் பிரச்சனை அவர் கோஷமிட்டதா அல்லது அவர் எந்தத் தரப்பைச் சார்ந்தவர் என்பதா?

இன்னும் சிலர் அவர் இரு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்தினார் என்கிறார்கள். வழக்கும் அப்படித்தான் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எப்படி? அவர் தன் தரப்புக்கு ஆள் திரட்டினாரா? அவர்களையும் கோஷமிடத் தூண்டினாரா? இந்தக் குற்றச்சாட்டில் அந்த "இரண்டு பிரிவுகள்" என்பது யார்? இந்துக்கள், கிறிஸ்தவர்களா? அவர் ஒரு கட்சியை அல்லது ஆட்சியை எதிர்த்தாரா அல்லது குறிப்பிட்ட மதத்தையா? ஜோடனை என்றாலும் தர்க்கம் வேண்டாமா?

கோஷமிடும் முன்பே ட்வீட் செய்திருக்கிறார் சோஃபியா, அதனால் இது திட்டமிட்டது என்று சொல்கிறார்க‌ள். அடிப்படை அறிவு கொண்டவர்களுக்குக் கூட இது எவ்வளவு பிழையான புரிதல் என்பது தெரியும். திட்டமிட்டுச் செயல்படுபவர் வேலையைச் செய்வதில் முனைப்பாய் இருப்பாரா, அல்லது ட்வீட் போட்டுக் கொண்டிருப்பாரா? ட்வீட் போட்டது, கோஷமிட்டது இரண்டுமே அந்த அரை மணி காலவெளியில் அவர் மனம் கொந்தளித்ததில் செய்த உணர்ச்சிவசப்பட்ட செயல்கள் தாம் என்பதையே இது காட்டுகிறது. தவிர, திட்டமிடுமளவு என்ன பெரிய குற்றம் நடந்து விட்டது?

எழுதப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் காட்டி இச்செயல் குற்றம் என நிரூபிக்க முடியலாம். ஆனால் அறம் என்று ஒன்று இருக்கிறது. எவருக்கும் எதிர்மறைப் பாதிப்பற்ற ஓர் எதிர்ப்புக்கு அவர் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குமளவு அடிப்பது அயோக்கியத்தனம் தான். தமிழிசையின் இடத்தில் முக ஸ்டாலின் இருந்தாலும் இதையே தான் சொல்வேன்.

தமிழிசை என்ற தனி மனுஷிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு என்ன பதில் எனக் கேட்கிறார்கள். தமிழிசை தனி மனுஷி அல்ல; ஒரு கட்சியின் தலைவி. பொது வாழ்க்கையில் இருப்பவர். அப்படி இருப்போருக்கு இம்மாதிரி எதிர்ப்புகள் சகஜம். இதற்குத் தயங்குவோர் பொது வாழ்க்கைக்கே வரக்கூடாது. பெரியாரைப் படித்திருந்தால் இந்த அறிவெல்லாம் இருந்திருக்கும். நோகாமல் நுங்கு தின்ன முடியாது. தவிர, பாஜக மாதிரி ஒரு கட்சியில் இருக்கும் போது இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். பாஜக ஆட்சியில் இல்லாத போது ஏதாவது இப்படி நடந்திருக்கிறதா? இல்லை. எனில் மக்களுக்கு அந்த ஆட்சியின் மீதான அதிருப்தி இருப்பதைத் தானே இச்சம்பவங்கள் காட்டுகின்றன? மற்றபடி சோஃபியாவுக்கும் தமிழிசைக்கும் தனிப்பட்ட முறையில் வாய்க்கால் தகராறா என்ன! இம்மாதிரி சம்பவங்களிலிருந்து ஓர் அசலான அரசியல்வாதி கற்றுக்கொள்ளத்தான் பார்ப்பான். தாம் தூம் என்று குதித்து சேம்சைட் கோல் போடுவது போல் உளறிக் கொண்டிருக்க மாட்டான். பூனை கண்கள் மூடிக் கொண்டால் பூமி இருண்டிடாது. அப்பெண்ணின் வாயை மூடி விட்டால் கள நிலவரமே மாறி விடுமா? நான் தமிழிசையின் இடத்தில் இருந்தால் சோஃபியா மீதான வழக்கை வாபஸ் வாங்கி விட்டு, பாஜக எம்மாதிரியான ஒரு கோமாளித்தன நிலையில் தமிழகத்தில் இருக்கிறது என டெல்லி மேலிடத்துக்கு விரிவாய் அறிக்கை அனுப்பித் தெரியப்படுத்துவேன். அது காது கொடுக்கப்படவில்லை எனில் கட்சியை விலகுவேன்.

"அந்தப் பெண்ணின் பின்புலம் மீது சந்தேகம் வருகிறது, அவர் என் உயிருக்கு ஆபத்து உண்டாக்க முயன்றார்" என்று சொல்வது எல்லாம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பாணி. ஒருவன் உன்னை எதிர்த்தால் அவன் மீது தேசத்துரோகி என முத்திரை குத்து, முடித்தால் தீவிரவாதி என நிரூபி, இறுதியில் வாயில் சுடு என்பது தான் ஃபாசிஸம். இன்றைய பாஜக அரசு அதைத் தான் செய்து வருகிறது. மிகத் துல்லியமாக அதைத் தான் எதிர்த்துக் குரல் கொடுத்தார் சோஃபியா. அவரது மீதே ஃபாசிஸத்தை ஏவி அதை நிரூபிக்கிறார்கள். Ghoul சீரிஸில் சொல்வது போல் எதை எதிர்த்துக் குரல் கொடுத்தார்களோ அதையே அதற்குப் பதிலாகச் சொல்லி அந்த எதிர்ப்பு சரி தான் என அவர்களே ஒப்புக் கொள்ளும் முட்டாள்தனம்.

மறுபடி அழுத்துகிறேன். தமிழிசை மீது அந்தப் பெண் காட்டிய எதிர்ப்பு என்பது எல்லைக்குள் நிற்பதால் மட்டுமே இதை ஆதரிக்கிறேன். அவர் தமிழிசை மீது தாக்குதல் நடத்தி இருந்தாலோ, ஆபாச மொழிகள் பேசி இருந்தாலோ, செருப்பை எறிந்திருந்தாலோ, மை பூசியிருந்தாலோ நிச்சயம் அதை ஆதரிக்க மாட்டேன். ப.சிதம்பரம் மீது, அரவிந்த் கேஜ்ரிவால் மீது செருப்பு வீசியதை நான் ஆதரிக்கவில்லை. அதெல்லாம் எல்லை மீறல். ஆனால் இது குரல்வளையை நெரிக்கும் வேலை. இன்று காந்தி இருந்து இந்த ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தால் கூட கைது செய்திருப்பார்கள் போலிருக்கிறது.

கைதை ஏன் எதிர்க்க‌ வேண்டும்? இது கருத்துரிமையைக் கொலை செய்யும் வேலை. பாஜகவை எதிர்ப்போரை நோக்கி பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் செயல். நான் பேசிக் கொண்டிருப்பது இந்துத்துவா ஆட்களுக்கும் சேர்த்துத் தான். நாளை இடதுசாரிகளை, காங்கிரஸை, இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்க்க உங்களுக்கும் குரல் இல்லாமல் செய்வார்கள். அதற்கு இந்த நிகழ்வு உதாரணமாகக் காட்டப்படும். அந்தச் சுரணை கூட இல்லாமல் கைதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

சோஃபியாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? அவரது துணிச்சல் முக்கியமானது. சோஃபியா இளங்கன்று என்பதால் பயமறியாமல் செய்திருக்கலாம் தான். ஆனால் இன்று எத்தனை இளங்கன்றுகள் பயமின்றி இருக்கின்றன? தினமும் கழுநீரும், வைக்கோலும் கிடைத்தால் போதும் என்றே பெரும்பாலான இந்திய இளங்கன்றுகள் இருக்கின்றன. நான் அவ்விடத்தில் இருந்திருந்தாலும் இங்கிதம் அல்லது விளைவுகள் கருதி வாயை மூடிக் கொண்டு தான் இருந்திருப்பேன். ஆனால் சோஃபியா எந்த அச்சமுமின்றி தைரியமாய்த் தான் நம்பும் ஒரு கருத்தைப் பொதுவெளியில் வைத்திருக்கிறார். அவர் பெண் என்பதும், சிறுவயது என்பதும் இச்செயலுக்கான மரியாதையைக் கூட்டுகிறது. கனடாவில் உயர்கல்வி பயின்று வருபவர் என்ற பின்புலத்தை வைத்துப் பார்க்கும் போது இந்த அக்கப்போர்களில் எல்லாம் இறங்காமல் பணத்தால் அலங்கரித்த சொகுசு வாழ்க்கை ஒன்றை மட்டும் அவர் கவனித்திருக்கலாம். ஆனால் அவர் அதை மீறி தன் நாட்டைப் பற்றிக் கவலை கொண்டிருக்கிறார். அவர் இன்றைய தலைமுறைக்கு ஓர் உதாரண ஆளுமை. Youth Icon!

இந்திய அரசியல் சாசனம் சொல்லும் கருத்துரிமை என்பது ஏட்டுச்சுரைக்காய் அல்ல; ஒவ்வொரு குடிமகனின் யதார்த்த உரிமை என்று உண்மையிலேயே நம்பிக்கை கொண்டிருக்குமானால் நீதிமன்றம் அவரை விடுவிக்க வேண்டும்.

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 03, 2018 21:06

September 1, 2018

இரண்டாம் எமர்ஜென்ஸி


ஹாலிவுட்டில் சமீப எதிர்காலம் பற்றிப் பல படங்கள் எடுத்திருப்பார்கள். ஆனால் இந்தியாவைப் பற்றி அப்படியான‌ படம் - அதுவும் Dystopian சமூகமாக வர்ணித்து - ஒன்றை இவ்வளவு சீக்கிரம் பார்ப்பேன் என எதிர்பார்க்கவே இல்லை. Ghoul (Season1) மிகச் சிறப்பான படம். வெப்சீரிஸை ஏன் படம் என்று சொல்கிறேன் என்றால் இந்த சீஸன், 3 எபிஸோட்கள் (Out of the Smokeless Fire, The Nightmares Will Begin மற்றும் Reveal Their Guilt, Eat Their Flesh) மட்டுமே. இறுதி டைட்டில் கார்ட் கழித்தால் இரண்டு மணி நேரத்துக்கு சற்று கூடுதல் நேரம் தான் ஓடுகிறது.
இந்தியாவின் இரண்டாம் எமெர்ஜென்ஸி பற்றிய படம் Ghoul. அதாவது இன்றைய மதச் சகிப்பின்மையற்ற, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஆட்சி நீட்டித்தால் என்ன ஆகும் எனச் சிந்தித்திருக்கிறார்கள். குழந்தைகளின் புத்தகங்களைக் கூடத் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி அவற்றை பிடுங்கி எரிக்கும் ஓர் அரசு. மக்கள் சிந்திப்பதை, எதிர்த்துக் கேள்வி கேட்பதை விரும்பாத அராஜக அரசு. மாட்டுக்கறியை வெறுக்கும் அரசு. ஒரு மதத்தையே எதிரியாகக் கருதும் அரசு. அதை விட முக்கியமாய் அதை எதிர்ப்போர் அனைவரும் தேச விரோதிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள்; அதை அப்படியே பின்பற்றுவதே தேசபக்தி என அதன் அதிகாரிகள் நம்புகிறார்கள். இன்றைய சூழலில் இது மிகத் தைரியமான படம்.
அதை ஓர் அமானுஷ்யப் படமாக்கி இருக்கிறார்கள். கவுல் என்ற பண்டைய அரேபிய நாட்டுபுறப் பேயயை அடிப்படையாக வைத்த கதை. நன்றாக வந்திருக்கிறது. ஹாரர் இல்லாமல் த்ரில்லராக எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது ஒரு பகுத்தறிவாளனாக என் கருத்து என்றாலும் இந்த வடிவும் எனக்கு மிகப் பிடித்திருந்தது. ஒருவகையில் இது உளவியல் த்ரில்லரும் கூட. படம் முழுக்கவே ஒற்றைக் கைதி ஒட்டுமொத்த விசாரணை குழுவுடன் நிகழ்த்தும் உளவியல் விளையாட்டு தான் எனலாம்.
படத்தில் எங்குமே தொய்வில்லை. எல்லாமே கச்சிதமான, அவசியமான காட்சிகள். கூர்மையான, சுருக்கமான வசனங்கள். படத்தின் மையக்கருத்தான விஷயத்தை கூட ஆவேசமாகப் பாடமெடுக்காமல் நான்கைந்து வார்த்தைகளில் கதைக்கு அவசியமான இடத்தில் சொல்லிச் செல்கிறார்கள் ("This is what exactly he is fighting against" என்று ராதிகா இறுதியில் சொல்வது - அதாவது "அவர் போராட்டம் நியாயம் என்று அதை ஒடுக்குவதன் மூலமே நிரூபித்து விட்டீர்கள்" என்ற பொருளில்). படம் சில இடங்களில் The Shape of Water-ஐ நினைவூட்டியது. படத்தின் இறுதியில் இரண்டாம் சீசனுக்கான கொக்கியை அழகாக வைக்கிறார்கள். படத்தின் டீட்டெய்லிங் மலைக்கச் செய்கிறது. இதன் பின் இயக்குநர், திரைக்கதையாசிரியர் பேட்ரிக் க்ரஹாமின் அசுர உழைப்பு இருக்க வேண்டும்.
இந்தியா உண்மையில் அதன் அசலான அமானுஷ்யத் திரைப்பட மொழியைக் கண்டறியவில்லை என்றே சொல்வேன். நாம் எடுக்கும் பெரும்பாலான படங்கள் மேற்கின் பேய்களைப் பிரதிபலிப்பவையே. இன்னும் சரியாகச் சொன்னால் கிறிஸ்துவம் முன்வைக்கும் பேய்களையே நம் சினிமாக்கள் திரும்பத் திரும்பக் காட்டி இருக்கின்றன. நம் பாரம்பரியத்தில் புதைந்திருக்கும் அமானுஷ்யங்களை நாம் அதிகம் கண்டுகொள்ளவில்லை. தமிழில் வந்த சிறந்த பேய்ப் படங்கள் என பீட்ஸாவைவும், டிமான்டி காலனியையும் சொல்வேன். அதில் இரண்டாவது மட்டும் கொஞ்சம் இந்தியத்தனம் கொண்டிருந்தது. மர்மதேசம் விடாது கருப்பு சீரியலையும் இதில் கணக்கு வைக்கலாம். அவ்வகையில் Ghoul கூட இந்தியப் பின்னணியிலான அரேபியப் பேய் தான்.
படத்தின் ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் நாம் ஓர் இந்தியப்படத்தைத் தான் பார்க்கிறோமா என்ற பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. (படம் முழுக்க ஒளி ஊடுருவல் தடுக்கப்பட்ட ஒரு விசாரணை மையத்தில் நடக்கிறது.) சிறப்பு விசாரணைப் பயிற்சி மாணவி நீதா ரஹீமாக நடித்திருக்கும் ராதிகா ஆப்தேவின் நடிப்பை ஒவ்வொரு முறையும் சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நடிகர்களில் கமல் ஹாசன் போல் நடிகைகளில் ராதிகா ஆப்தே எனக்கு! அவ்வளவு தான். கர்னலாக வரும் மானவ் கவுல், லெஃப்டினன்டாக வரும் ரத்னபாலி பட்டாச்சார்ஜி, தீவிரவாதி அலி சையதாக வரும் பால்ராஜ் மஹேஷ், ராதிகா ஆப்தேவின் அப்பாவாக வரும் எஸ்எம் ஜாஹீர் ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினலான Sacred Games-ஐ விடவும் இதுவே நன்றாக இருக்கிறது. தினம் ஓர் எபிஸோட் பார்க்கலாம் என நேற்றிரவு தொடங்கியவன் நிறுத்த முடியாமல் மூன்று எபிஸோட்களையும் பார்த்து முடித்தேன். அவசியம் பாருங்கள்.*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2018 21:45

August 23, 2018

ஒன்பதரை விமர்சனங்கள்


தனிப்பேச்சில் / சாட்டில் பேசியவ‌ற்றைக் கழித்து பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளதை மட்டும் கணக்கில் கொண்டால் 'ஆப்பிளுக்கு முன்' நாவலுக்கு இது வரை ஒன்பதரை விமர்சனங்கள் வந்துள்ளன. தமிழ்ச் சூழலில் இதுவே அதிகபட்சம் என்று திருப்திப்பட முகாந்திரம் உண்டு தான் என்றாலும் இந்நாவல் இன்னும் கொஞ்சம் கூடுதல் வாசக உரையாடலுக்குத் தகுதி பெற்றது என நம்புகிறேன். அதனால் இதைப் பரப்ப விரும்புகிறேன். வேறு எவரும் செய்ய மாட்டார்கள் என்பதால் என் நாவலை நானே சந்தைப்படுத்துவதற்குத் துணிந்து விட்டேன். அது தான் இந்த விமர்சனக் கட்டுரைப் போட்டி அறிவிப்பு.

செல்வத்தை வாரி இரைத்துத் தன்னைப் புகழ்ந்து பாடச் சொல்லும் புரவலன் பிம்பம் வந்து விடக்கூடாது என்ற தயக்கம் இருந்தது. நான் புரவலனும் அல்லன்; என்னிடம் அத்தனை செல்வமும் இல்லை; நான் புகழக் கோரவும் இல்லை. நாவல் பரவலாய் வாசிக்கப்பட்டு அதற்குரிய இடத்தை - அது கீழோ மேலோ - பெற வேண்டும் என்பது தான் என் எளிய அவா.

நண்பரிடம் தயக்கத்தைச் சொன்ன போது தமிழ் எழுத்துச்சூழலில் சுயசந்தைப்படுத்தலுக்கு இது தொடக்கமாக இருக்கலாம் என்றார். பிறகு, இதைச் செய்வதால் இழக்கப் பெரிதாய் ஒன்றுமில்லை என்று உணர்ந்து இறங்கி விடத் தீர்மானித்தேன்.

இப்போட்டிக்கான வெள்ளோட்டமாய் "ஆப்பிளுக்கு முன் நாவலை ஏன் படிக்க விரும்புகிறேன்?" என்று சொல்லும் போட்டி ஒன்றை ஃபேஸ்புக்கில் நடத்திப் பார்த்தேன். சுமார் 30 பேர் கலந்து கொண்டார்கள். அதில் வந்த நான்கைந்து பதிவுகள் உண்மையானதாகவும் பொருட்படுத்தத்தக்கனவாகவும் இருந்தன. இதை நடத்தும் உந்துதலை அதுவே அளித்தது.

"ஏன் படிக்க விரும்புகிறேன்?" போட்டி புத்தகமே வாங்கி இராதவர்களுக்கானது என்றால், இந்தப் போட்டி புத்தகம் வாங்கி வைத்து இன்னும் வாசிக்காமல் இருப்பவர்களுக்கும், வாசித்தும் அதைப் பற்றி எழுத வாய்ப்பு கிட்டாதவர்களுக்குமானது.

போட்டி எளிமையானது. 'ஆப்பிளுக்கு முன்' நாவலை வாசித்து உங்கள் கருத்துக்களை ஒரு விமர்சனக் கட்டுரையாக‌ எழுதுங்கள். வலைப்பதிவாக, ஃபேஸ்புக் பதிவாக, ட்விட்லாங்கராக, மீடியம் போஸ்டாக என எந்தவொரு ரூபத்திலும் இருக்கலாம். குறைந்தபட்சம் 700 சொற்களில்; அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும். அதன் சுட்டியை மட்டும் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்: c.saravanakarthikeyan@gmail.com. சரியாய் ஒரு மாதம் கெடு (23 செப்டெம்பர் வரை). ஏற்கனவே வெளியான‌ பழைய விமர்சனங்கள் கூடாது.மின்னஞ்சலில் பகிரப்படும் சுட்டிகள் மட்டுமே கணக்கு. இங்கே வரும் கமெண்ட்கள் எடுத்துக் கொள்ளப்படாது. ஆக, விமர்சனம் எழுதியதோடு, அதை எனக்கு அனுப்பவும் மறக்காதீர்.

நாவல் மொத்தமே 150 பக்கங்கள் தான். தாரளமாய் ஒரு மாத அவகாசத்தில் வாசித்து ஒரு சிறுவிமர்சனக் கட்டுரை எழுதி விட முடியும். கொஞ்சம் முயன்றால் சரியாக எழுதி விட முடியும். கூடுதலாய் மெனக்கெட்டால் நன்றாகவும் வந்து விடும். (எழுதிய கட்டுரையின் சொற்களை விரல் விட்டெண்ணிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏராளமான ஆன்லைன் சொல் கவுண்டர் உண்டு. பெயர்தான் அப்படியிருக்கிறதே ஒழிய‌, எச்சாதியினரும் பயன்படுத்தலாம். உதா: https://wordcounter.net/.)

போட்டியை நானே நடத்துவதால் பாராட்டித் தான் எழுத வேண்டும் என்பதில்லை. கடுமையாக விமர்சித்தும் எழுதலாம்; நாவல் குப்பை எனத் திட்டலாம். நாவலே இல்லை என நிராகரிக்கலாம். எழுதப்படும் விமர்சனம் நேர்மையானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அளவுகோல். அவ்வளவு தான். பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கப் போவது நான் அல்லன். இரண்டு முக்கியமான படைப்பாளிகள் இப்போட்டிக்கு நடுவராக இருந்து சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கச் சம்மதித்துள்ளனர். ஒருவேளை போட்டிக்கு வரும் பதிவுகளின் எண்ணிக்கை 20க்கு மேல் இருந்தால், அவற்றில் எனக்குச் சிறப்பானதாய்த் தோன்றும் 20 கட்டுரைகளை மட்டும் நடுவர்களுக்கு அனுப்பி வைப்பேன். இறுதித் தீர்ப்பு அவர்களுடையது. அதில் என் தலையீடு இராது. போட்டி முடிவு காந்தி ஜெயந்தி அன்று அறிவிக்கப்படும்.
முதல் பரிசு - ரூ. 3,000 /-இரண்டாம் பரிசு - ரூ. 2,000 /-மூன்றாம் பரிசு - ரூ. 1,000 /-ஆறுதல் பரிசு - இரண்டு பேருக்கு தலா ரூ. 500 /-புத்தகம் வாங்கும் வழிகளைக் கீழே தந்திருக்கிறேன். போட்டியில் பங்கேற்கப் போகிறவர்களுக்கு என் அன்பு. எழுதுக!

அச்சுப் புத்தகம் வாங்க‌
Amazon NHM Common Folks Namma Books  Puthinam BooksMarina Books தொலைபேசி / WhatsApp: 84894 01887 (கதிரேசன்)உயிர்மை பதிப்பகம், புதிய எண்: 79 (பழைய எண்: 39), போயஸ் தோட்டம், இளங்கோ சாலை, ராஜ் டிவி அருகில், தேனாம்பேட்டை, சென்னை - 600018. அலைபேசி: 090032-18208எங்குமே கிடைக்கவில்லை எனில் என்னைத் தொடர்பு கொள்ளவும்.கிண்டில் வடிவில் வாங்க‌
Kindle India Kindle US
இந்தப் பதிவிலேயே போதுமான அளவு தகவல்கள் தந்து விட்டதாக நினைக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் சாட்டிலோ கமெண்ட்டிலோ கேட்க ஏதுமில்லை என நம்புகிறேன். (ஒருவேளை ஏதேனும் இருப்பின் நானே இப்பதிவைப் புதுப்பிப்பேன்.)

*

நூல் பின்னட்டைக் குறிப்பு

 ஏதேன் தோட்டத்து ஆப்பிளைப் புசிப்பதற்கு முந்தைய கணங்களில் ஆதாமும் ஏவாளும் தம் நிர்வாணம் பற்றிய ப்ரக்ஞையற்று இருந்தனர். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தன் ஆயுளின் இறுதியாண்டுகளில் சர்ச்சைக்குரிய‌ பிரம்மச்சரியப் பரிசோதனைகளின் வழி அடைய முயன்றது காமம் துறந்த அந்நிலையைத் தான். உடலை முன்வைத்த அப்பரிசோதனைகளை காந்தி, அதில் பங்கு கொண்ட பெண்டிர் மற்றும் சுற்றத்தார் மனதுள் நின்று முக்கோணத்தில் பார்க்க முயல்கிறது இப்புனைவுப் பிரதி. ஒருவகையில் இதில் காந்தி மேலும் பொலிவுடன் மகாத்மாவாய்த் துலங்குகிறார்.

நூல் முன்னுரை : http://www.writercsk.com/2018/01/blog-post_14.html 

நூல் பற்றி ரமேஷ் வைத்யா உரை: https://www.youtube.com/watch?v=W6EjwFV3RMw

ஆப்பிளுக்கு முன் நாவலுக்கு இது வரை வந்த விமர்சனங்கள்
ஆர். அபிலாஷ் - http://thiruttusavi.blogspot.com/2017/12/blog-post_1.htmlபா. ராகவன் - https://www.facebook.com/raghavan.pa/posts/1959468851047387சுனீல் கிருஷ்ணன் - https://www.facebook.com/suneel.krishnan/posts/10216272951243982சித்துராஜ் பொன்ராஜ் - https://www.facebook.com/photo.php?fbid=468351986933731சித்தார்த்தன் சுந்தரம் - https://www.facebook.com/photo.php?fbid=10214836532412590சுப்ரஜா - https://www.facebook.com/photo.php?fbid=1696856953703285ஹரி ரஹ்மான் - https://www.facebook.com/hariharan.jeg/posts/1779916875399788வித்யா - https://www.facebook.com/permalink.php?story_fbid=475740549490374&id=100011632997124மோகன் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10155656308137108 நந்தாகுமாரன் - https://www.facebook.com/nundhaa/posts/1581795691857448ஆப்பிளுக்கு முன் நாவலை ஏன் படிக்க விரும்புகிறேன்? பதிவுகள்
Vigneswari Suresh - https://www.facebook.com/VignaAchuthan/posts/10212054871108964Ashok Raj - https://www.facebook.com/ashokthegamer/posts/1866315793461896Seyon Mayon - https://www.facebook.com/lemurian.voice/posts/676161356081123Pandian Siva - https://www.facebook.com/manivanna.siva/posts/2053824997982062Rishikesh Raghavendiran - https://www.facebook.com/rishikesh.raghavendiran/posts/2213174698963465***
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2018 21:40

August 19, 2018

கலைஞர் - நீயா நானா: விடுபட்டவை


கலைஞர் சிறப்பு நீயா நானாவில் கலந்து கொண்டு நான் பேசியதில் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது போக, மீதிக் கேள்விகளுக்கு என் மனதில் தோன்றிய பதில்கள் (இவற்றை அன்றிரவே ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தேன்). இவ‌ற்றில் புகைப்படம் பற்றிய கேள்வி மட்டும் பேசி வரவில்லை; மற்றவை பேச வாய்ப்புக் கிடைக்கவில்லை. இவற்றில் முதல் மூன்று கேள்விக்குமான பதில்கள் சொல்ல வாய்ப்புக் கிடைத்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என ஆதங்கம் உண்டு. ஆனால் ஆறு மணி நேர ஷுட்டிங்கைச் சுருக்கி ஒரு மணி நேர நிகழ்வாய்க் காட்டும் நிர்ப்பந்தம் இருப்பதும் புரிகிறது.

கலைஞரிடம் விஞ்சி நிற்பது பண்டைய முகமா நவீனத்தின் முகமா?

சந்தேகமே இல்லாமல் நவீனத்தின் முகம் தான். நாம் கலைஞரின் பண்டைய முகம் எனக் கருதும் குறளோவியமும், சங்கத்தமிழும், தொல்காப்பியப் பூங்காவும் கூட உண்மையில் நவீனத்துவத்தின் முகம் தான். அவர் அந்தப் பழைய விஷயங்களை இன்றைய தலைமுறைக்கு அவர்களுக்குப் புரியும், அவர்கள் ரசிக்கும் நவீன வடிவில் கடத்த முயன்றார். அவர் தமிழகத்துக்குச் செய்த நவீன பங்களிப்புகள் டைடல் பார்க் கட்டியதும் மேம்பாலங்கள் கட்டியதும் மட்டுமல்ல. அவர் பொருளாதார மற்றும் சமூகத் தளங்களிலும் நவீனத்தைப் புகுத்தினார். ஏதொன்றில் பழைய சிக்கல்களை அகற்றும் எளிமைப்படுத்தலைக் கொணர்வதும் நவீனமயமாக்குதலே. இரு உதாரணங்கள் உழவர் சந்தை மற்றும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள். ஒன்றில் இடைத்தரகை அகற்றி விவசாயிகளுக்கு நேரடிப் பலன் கிட்டச் செய்தார். அது ஒரு பொருளாதாரப் புரட்சி. அடுத்ததில் சாதி வேற்றுமை களைந்த ஒரு மாதிரித் தமிழ்ச் சமூகத்தை உண்டாக்கிக் காட்ட முயன்றார். அது ஒரு சமூக மீட்டுருவாக்கம். இப்படி அவர் எல்லா இடங்களிலும் நவீனத்தைப் புகுத்தினார்.

கலைஞரிடம் நீங்கள் வியந்த ஒரு விஷயம் என்றால் எதைச் சொல்வீர்கள்?

அவர் மக்களின் மனதைத் துல்லியமாகப் புரிந்து வைத்திருந்தது. ஜனநாயக அமைப்பில் அது ஒரு தலைவனுக்கு முக்கியப் பண்பு. ஓர் உதாரணம் 2016 தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி காண "பழம் நழுவிப் பாலில் விழும்" என்று சொல்லிக் காத்திருந்தார். முந்தைய ஆட்சி மீதான அதிருப்தி காரணமாய் நிச்சயம் திமுகவே ஆட்சிக்கு வரும் என்று பரவலாய்க் கருத்து இருந்த சமயம் அது. அச்சூழலில் ஒரு பேரியக்கம் ஏன் இப்படி ஒரு காளான் கட்சியிடம் கூட்டணிக்குக் காத்திருக்க வேண்டும் என நண்பர்களிடம் பொருமி இருக்கிறேன். அப்போது பல திமுக அனுதாபிகளுக்கும் அதே கருத்து இருந்திருக்கும். ஆனால் கலைஞர் அப்படி உணர்ச்சிவசப்படாமல் துல்லியமாய்க் கணித்திருக்கிறார் - தேமுதிகவை வெளியே விட்டால் மூன்றாம் அணி அமைந்து வாக்குகளைப் பிரிக்கும், அது திமுகவுக்குப் பாதகமாகும் என. அதனால் தான் அதைத் தவிர்க்க இறங்கிப் போயிருக்கிறார். (அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவர் கூட இல்லை. அதனால் உளவுத்துறை இத்தகவலை அளித்திருக்கும் வாய்ப்பும் குறைவு.) தேர்தல் முடிவுகள் அவர் கணிப்பை உறுதிப்படுத்தின. திமுக தோற்ற கணிசமான தொகுதிகளில் தோற்ற வித்தியாசத்தை விட தேமுதிக / மநகூ வேட்பாளர்கள் அதிக வாக்குப் பெற்றிருந்தார்கள். அவர் கூட்டணிக்குக் காத்திருக்கக் காரணம் அதை முன்பே ஊகித்தது தான்.

கலைஞருக்கு நீங்கள் தனிப்பட்டு நன்றி சொல்ல நினைப்பது எதற்கு?

தனிப்பட்டு என்று சொல்வதை விட சித்தாந்தரீதியாக என்று வைத்துக் கொள்ளலாம். திராவிடம் என்ற கருத்தாக்கம் இன்று அவசியமானது என்றும், அது வெல்லக்கூடியது என்றும் கடந்த ஐம்பதாண்டுகளில் நிரூபித்ததற்காக. அதனால் என்னை, எம் தலைமுறையை சரியான பாதையில் திராவிடத்தை நோக்கி ஈர்த்ததற்காக நன்றி சொல்ல வேண்டும். இன்று கம்யூனிஸம் வீழ்ந்து விட்டது என்கிறார்கள். ஏன்? கம்யூனிஸக் கட்சிகள் ஆட்சியை இழந்து விட்டதை, அவர்கள் தவறான ஆட்சி முறையால் மக்கள் அவர்களை வெறுத்து விட்டதையே சித்தாந்தத் தோல்வியாகச் சித்தரிக்கிறார்கள். அந்த ஆபத்து எல்லாச் சித்தாந்தத்துக்கும் உண்டு. திராவிடத்துக்கும் இருந்தது. ஆனால் கலைஞர் அதை நடக்க விடாமல் பார்த்துக் கொண்டார். சமூக நீதி, மொழியுரிமை, மாநில சுயாட்சி என திராவிடம் இன்றும் அவசியமான, வெல்லும் சித்தாந்தம் என்று நிரூபித்துக்காட்டினார். மற்ற திராவிடக் கட்சிகளுக்கும் தானே அதில் பங்குண்டு எனக் கேட்டால் பெயரில் திராவிடம் கொண்டுள்ள கட்சிகள் எல்லாம் திராவிடக் கட்சிகள் என்று ஆகி விட முடியாது. அதையும் மீறி சில பங்களிப்புகளை அவர்கள் தம்மையறியாமல் செய்திருக்கலாம். மறுக்கவில்லை. நான் சொல்வது திட்டமிட்டுச் செய்தது.

உங்களுக்குப் பிடித்த கலைஞரின் புகைப்படம் எது?

எனக்குத் தோன்றிய புகைப்படங்களைச் சொல்லி விட்டார்கள். அதனால் வேறு இரண்டைச் சொல்ல நினைக்கிறேன். ஏதோ ஓர் இதழின் பேட்டியில் லுங்கியும் முண்டா பனியனும் அணிந்திருக்கும் போது எடுத்த புகைப்படம். அதில் ஓர் எழுத்தாளனின் பிம்பம் இருந்தது. அடுத்து அவரது மனைவி ராஜாத்தி அம்மாள் உணவு பரிமாற, அதை அவர் சாப்பிடும் படம். இந்தியா டுடேவில் வந்தது. அவர் ஒரு குடும்பஸ்தராகவும் சிறப்பாகச் செயல்பட்டார் என்ற உணர்வைத் தரும் படம்.

நீங்கள் பார்த்த முதுமைக் கால கலைஞர் வீடியோக்களில் உங்களை நெகிழ வைத்தது எது?

தன்னைச் சந்திக்க வந்த பேராசிரியர் அன்பழகனின் கையைப் பற்றிக் கொண்டு முத்தமிட்ட வீடியோவைச் சொல்வேன். ஒரு பேரரசியல்வாதி கனிந்திளகி பெருந்தோழனாய் மட்டும் நின்ற தருணம். என் மூப்பில் என் நெருங்கிய நண்பர்களை அதே போல் அணுகுவேனோ எனத் தோன்ற வைத்த காட்சி. அதனால் அந்த வீடியோ பிடிக்கும்.

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2018 00:04

August 10, 2018

கலைஞர் சிறப்பிதழ்


'தமிழ்' மின்னிதழின் அடுத்த இதழை கலைஞர் சிறப்பிதழாகக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறேன். ஒரு பத்திரிக்கையாளன் இன்னொரு பத்திரிக்கையாளனுக்குச் செய்ய முடிந்த எளிய அஞ்சலி அதுவே. அனேகமாய் அண்ணாவின் பிறந்த நாளன்றோ பெரியாரின் பிறந்த நாளன்றோ வரும். கலைஞர் தொடர்புடைய‌ படைப்புகளைத் தனிப்பட்ட முறையில் சில நண்பர்களிடம் கேட்டுப் பெறவிருக்கிறேன். பொதுவான மற்ற படைப்புகளை அனுப்ப விரும்புபவர்கள் இம்மாத இறுதிக்குள் இம்மின்னஞ்சலில் அனுப்பலாம்: c.saravanakarthikeyan@gmail.com

படைப்புகள் அனுப்ப‌ விதிமுறைகள் சில உண்டு. எளிமையான, நேரடியான நிபந்தனைகள்:

1. இலவச இதழ் என்பதால் பிரசுரமாகும் எந்தப் படைப்பிற்கும் சன்மானம் தருவதற்கில்லை.

2. படைப்புகள் வேறெந்த அச்சு மற்றும் மின் இதழ்களில் வெளியாகாதவையாக இருக்க வேண்டும்.

3. படைப்புகளுக்கு பக்க வரையறை ஏதுமில்லை. அவசியமெனில் பகுதிகளாகப் பிரித்து வெளியிடுவேன்.

4. படைப்பு கவிதை, கதை, கட்டுரை, பத்தி, நாடகம், திரைக்கதை, மொழிபெயர்ப்பு, ஓவியம், புகைப்படம், கார்ட்டூன் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். இலக்கியம், திரைப்படம், அரசியல், வரலாறு, விஞ்ஞானம், அனுபவம் போல் எந்த வகைமைக்குள்ளும் அமையலாம். சமையல், ஜோதிடம், செக்ஸ் குறிப்புகளுக்கு மட்டும் அனுமதி இல்லை.

5. படைப்பை வெட்டவோ, ஒட்டவோ, திருத்தவோ இதழின் ஆசிரியர் என்ற முறையில் எனக்கு முழு உரிமை உண்டு. பெரிய அளவிலான மாற்றம் எனில் மட்டும் முன்கூட்டியே படைப்பாளிக்குத் தகவல் தெரிவித்து அனுமதி பெறுவேன்.

6. படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டதா எனக் கூடுமானவரை நானே தகவல் அனுப்பி விடுவேன். தேவைப்பட்டால் நினைவுறுத்தல் மடல் அனுப்பி விசாரிக்கலாம். ஒருவேளை, படைப்பை அனுப்பிய பின் வெளியாகும் முதல் இதழில் அது வெளியாகவில்லை, என்னிடமிருந்தும் எந்தத் தகவலும் இல்லை எனில் பிரசுரத்துக்குத் தேர்வாகவில்லை என எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

7. இதழ் வெளியான ஒரு மாத காலத்திற்குப் படைப்பை வலைப்பூ, ஃபேஸ்புக், ட்வீட்லாங்கர் என எதிலும் வெளியிடலாகா. இடையே படைப்பைப் பகிர விரும்பினால் இதழின் சுட்டியைப் பகிர்ந்து படைப்பு வெளியாகி இருக்கும் பக்க எண்ணைக் குறிப்பிடலாம். ஒரு மாதத்திற்குப் பின் எதில் வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளலாம். புத்தகமாக்கல் உள்ளிட்ட எல்லா உரிமையும் படைப்பாளிக்குரியது. ஒரு மாதத் தடை இதழின் முக்கியத்துவம் மங்கக்கூடாது என்பதற்காகவே.

8. இதழ் பெரும்பாலும் என் உழைப்பில் மட்டுமே வெளியாகப் போகிறது என்பதால் லேஅவுட் எளிமையானதாகவே அமையும். படைப்பிற்குப் பொருத்தமான‌ ஓவியம், புகைப்படம் சேர்த்திருக்கலாம் எனக் குறைப்பட வேண்டாம்.

(முந்தைய இதழ்களை இங்கே வாசிக்கலாம்: https://tamizmagazine.blogspot.com/)

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 10, 2018 19:06

August 5, 2018

புத்தரின் இரண்டாம் புன்னகை


We must develop this atomic energy quite apart from war – indeed I think we must develop it for the purpose of using it for peaceful purposes. ... Of course, if we are compelled as a nation to use it for other purposes, possibly no pious sentiments of any of us will stop the nation from using it that way.
-    Jawaharalal Nehru, First Prime Minister of India (1948)

பிஜேபி எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தேசப்பற்று சற்றி அதீதமாகத் தான் நாட்டில் புரண்டோடும் - அது சினிமாவோ விளையாட்டோ யுத்தமோ. சமீபமாக தேசப்பற்றுப் படங்கள், அதுவும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானவை பாலிவுட்டில் நிறைய எடுக்கப்படுகின்றன. Neerja (1986 கராச்சியில் நடந்த விமானக் கடத்தல்), Airlift, (1990 குவைத் இந்தியர்களைக் காப்பாற்றியது) Rustom (1950களின் கப்பல் அதிகாரி) மற்றும் The Ghazi Attack (1971 இந்திய பாகிஸ்தான் போரில் நடந்த நீர்மூழ்கிக்கப்பல் சண்டை) வரிசையில் தற்போது அபிஷேக் ஷர்மா இயக்கியிருக்கும் படம் Parmanu.


சில இடங்கள் தவிர மிக நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் படம் வந்திருக்கிறது.

அதீத, நாடகீய தேசப்பற்றை ஊட்டும் Nationalistic Jingoism வகைப் படம் தான் இதுவும். 1998ல் வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் அமெரிக்க செயற்கைக்கோள்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு இந்தியா பொக்ரானில் எப்படி அணு ஆயுதப்பரிசோதனையை நடத்தியது என்பதுதான் படத்தின் திரைக்கதை. Parmanu என்ற இந்திச்சொல்லுக்கு அணு என்று பொருள். பரமணு எனக் கொள்ளலாம்!

ஆனால் வரலாற்றை அப்படியே எடுக்கவில்லை. நிறைய மசாலா சேர்த்துள்ளார்கள். பொக்ரான்-2 என்பதே ஒரு தனி மனிதனின் - ஐஏஎஸ் அதிகாரி - கனவு என்பதாகவே கதை சொல்லப்படுகிறது. மெத்தனமும் அலட்சியமும் மிக்க அரசு இயந்திரத்தை இதைச் செய்ய எப்படிச் சம்மதிக்க வைக்கிறான். பின் தன் புத்திசாலித்தனமான திட்டத்தின் மூலம் அதை எப்படிச் செயல்படுத்துகிறான் என்பது தான் திரைக்கதை. அதனால் அவன் சொந்த வாழ்வில் சந்திக்கும் இழப்புகளையும் காட்டிப் போகிறது.

பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC), பாதுகாப்பு ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் (DRDO), இந்திய ராணுவம், உளவுத் துறை (IB), விண்வெளித் துறை (அதற்கு மட்டும் ISRO-வைக் குறிக்காமல் Indian Space Agency என்று சொல்கிறார்கள், என்ன சிக்கலோ!) ஆகிய பஞ்சபாண்டவர்களையும் அஷ்வத் ரைனா என்ற ஸ்ரீகிருஷ்ணர் வழிநடுத்தி வெல்லும் பாரதப் போர் தான் பொக்ரான்-2 என்பது புத்திசாலித்தனமான உவமை!

சிறப்பான திரைக்கதை. Neerjaவுக்கு எழுதிய சய்வின் கத்ரஸ் என்பவருடன் இணைந்து இயக்குநர் செதுக்கியிருக்கிறார். உண்மையிலேயே ஒட்டிக் கொள்ள வேண்டும் எனப் பிடிவாதமோ முரண்டோ பிடிக்காமல் சுதந்திரம் எடுத்துக் கொண்டிருப்பதால் அற்புதம் செய்ய முடிந்திருக்கிறது. முக்கியமாய் அமெரிக்க செயற்கைக்கோளை ஏமாற்றி விட்டு தினம் கொஞ்சம் கொஞ்சமாய் வேலை நடக்கும் காட்சிகள் யாவும் அபாரம். அதை ஒரு சிஐஏ மற்றும் ஐஎஸ்ஐ உளவுக் கூட்டணி கண்டறிவதும் சுவாரஸ்யம். கடைசி அரை மணி நேரம் நிஜமாகவே இருக்கை நுனியில் உட்கார வைக்கிறார்கள்!

படம் முழுக்கவும் சீரியஸ் மூடைப் பாதிக்காமல் subtle-ஆன மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது. சிஐஏ ஏஜெண்ட் பானி பூரி தின்பது, பொக்ரான் சைட்டின் பாஸ் கோட்கள், இஸ்ரோ விஞ்ஞானி ப்ரின்ட்டருடன் போராடுவது, டிஆர்டிஓகாரரின் மறதி, அஸ்வத் ஃபோனில் சார்ஜ் இல்லை என்று சொல்வது என்று பல உதாரணங்களைச் சொல்லலாம். நீரஜ் பாண்டே தான் இயக்குநரின் மானசீக குரு என நினைக்கிறேன்.

ஒவ்வொரு துறைக்கும் இடையே இருந்த மெல்லிய உரசல்களையும் ஈகோவையும் படம் காட்டுகிறது. அரிதாய் மிகத் திறமையான, மிக நேர்மையான, மிக அர்ப்பணிப்பு கொண்ட அதிகாரிகளும் இந்திய அரசுகளில் உண்டு என்பதையும் காட்டியுள்ளார்கள்.

The Ghazi Attack படத்தில் தேவையே இல்லாமல் தப்ஸி பண்ணுவைக் கதைக்குள் (கப்பலுக்குள்) நுழைத்திருப்பார்கள். இரண்டு மணி நேரம் ஃப்ரேம் முழுக்க முழுக்க ஆண்களால் நிரம்பி இருந்தால் திரையரங்கில் கூட்டம் சேராது என்ற புரிதலின்பாற் செய்த திரைக்கதை நகாசு அது. டிக் டிக் டிக் (2018) படத்தில் விண்வெளிக் குழுவில் ஒருவராக வரும் நிவேதா பெத்துராஜும் அப்படித்தான். இந்தப் படத்திலும் டயானா பென்டி அப்படித்தான் இண்டலிஜென்ஸ் ப்யூரோ அதிகாரியாக வருகிறார். ஆனால் வெறும் பதுமை என்பதைத் தாண்டி கதையின் நகர்ச்சியிலும் பங்களித்திருக்கிறார்.

பொமன் இரானி வழக்கம் போல் பொருத்தமான நடிப்பு. தேசப்பிரதமரின் பிரதானக் காரியதரிசி என்பதற்குரிய உடல்மொழி சிறப்பாக வந்திருக்கிறது. இன்னும் பெரிய பாத்திரங்கள் கிடைத்தால் துணை நடிகருக்கான தேசிய விருதில் கை வைப்பார்.

இதில் இஸ்ரோ விஞ்ஞானி தமிழர். நாசா வாய்ப்புகளை உதறித் தள்ளி இங்கே இருப்பவர் என்று சொல்லப்படுகிறது. கலாமுக்கான மரியாதையாக இருக்கலாம்.

மிகச் சிறப்பான ஒளிப்பதிவு (அஸீம் மிஷ்ரா மற்றும் சுபீன் மிஸ்திரி). மிக மிக நம்பகமான கலை இயக்கம். குறிப்பாக பொக்ரான் பரிசோதனைக் களம் தொடர்பான காட்சிகள் மிக நேர்த்தியாக வந்திருக்கின்றன. கிராஃபிக்ஸும் அபாரம். அணுகுண்டு வெடிக்கும் காட்சியும் விண்வெளியில் செயற்கைகோள்களைக் காட்டும் இடங்களும் உண்மைக்கு மிக அருகே வந்திருக்கிறது. (டிக் டிக் டிக் தோல்வியுற்றது இதில் தான்.)

படத்தில் சில இடங்களில் பின்னணி இசையும் நன்றாக இருந்தது (சந்தீப் சௌதா).

படம் சத்தமின்றி சின்னதாய் சில அரசியல்களையும் பேசிச் செல்கிறது. 1995லேயே பொக்ரானில் அணு ஆயுதப் பரிசோதனை நடக்கவிருக்கிறது. அது அமெரிக்க உளவு செயற்கைக்கோளின் கண்ணில் பட்டதால் அமெரிக்காவின் கடும் எச்சரிக்கைக்கு அடங்கி இந்தியா அச்சோதனையைக் கைவிடுகிறது. பிறகு 1998ல் ரகசியமாய் அதைச் செய்து முடிக்கிறது. 1995ல் காங்கிரஸின் ஆட்சி, நரசிம்மராவ் பிரதமர். 1998ல் பாஜக ஆட்சி. வாஜ்பாய் பிரதமர். இவ்விரு கட்சி ஆட்சிக்குமிடையேயான வித்தியாசங்களை பார்வையாளர் மனதில் போகிற போக்கில் பதிய வைக்கிறார்கள்: 1) காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசின் மேல்மட்டம் (அமைச்சர்கள் முதலியோர்) பெரும்பாலும் கோமாளிகளாக இருந்தது. பாஜக ஆட்சியில் அப்படியில்லை. 2) காங்கிரஸ் ஆட்சியில் ஓர் அதிகாரியின் ஐடியாவை மட்டும் வாங்கிக் கொண்டு அவனை இருட்டடிப்பு செய்தார்கள். மாறாக பாஜக ஆட்சியில் அவனைக் கொண்டே அத்திட்டத்தைச் செயல்படுத்தினார்கள். 3) காங்கிரஸ் ஆட்சியில் திட்டத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் திறன் இல்லை. பாஜக ஆட்சியில் திட்டம் நிறைவேறியது. 4) காங்கிரஸ் ஆட்சியில் அமெரிக்கா மிரட்டியதும் பயந்து திட்டத்தைக் கைவிட்டனர். பாஜக ஆட்சியில் அமெரிக்காவுக்குத் தெரியாமல் செய்து முடித்தார்கள். தெரிந்த பின்பும் தைரியமாக மீண்டும் இரண்டு குண்டுகள் வெடித்துப் பரிசோதனை செய்தார்கள்.

இவற்றை இயக்குநர் (அல்லது படத்தை எழுதியவர்கள்) திட்டமிட்டுச் செய்தார்களா எனத் தெரியவில்லை. ஆனால் சங்கிகளின் அட்டகாசம் வலுத்து வரும் நடப்புக் காலகட்டத்தில் வெளிவரும் படத்தை அக்கோணத்தில் பாராதிருக்க முடியவில்லை.

*

பொக்ரானில் இந்தியா ஆணு ஆயுதப் பரிசோதனை நடத்தியதைப் பற்றிப் பார்ப்போம்.

1968ல் அமெரிக்க முதலிய நாடுகள் கொண்டு வந்த NPT என்ற அணுவாயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (Treaty on the Non-Proliferation of Nuclear Weapons) 190 உலக நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், தெற்கு சூடான் மட்டும் இதில் இணையவில்லை. வட கொரியா முதலில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பின் அதை மீறியது. இறுதியில் 2003ல் இதிலிருந்து விலகியது. அணு சக்தியைப் பல நாடுகள் பயன்படுத்தி வந்தாலும் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் சொற்பமே.

அவற்றை மேலோட்டமாக ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்: 1) NPT-படி அணு ஆயுதம் வைத்துக் கொள்ள உரிமை கொண்ட நாடுகள் (அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் மற்றும் சீனா). 2) அனுமதியின்றி அணு ஆயுதம் வைத்திருப்பவை; அதை அதிகாரப்பூர்வமாகச் சோதித்தவை (இந்தியா, வடகொரியா மற்றும் பாகிஸ்தான்). 3) அணு ஆயுதம் வைத்திருப்பதாக வலுவாக நம்பப்படுபவை; சோதித்துக் காட்டாதவை (இஸ்ரேல்). 4) அணு ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் NATO உறுப்பினராக இருப்பதால் வைத்திருக்கும் நாடுகளிடமிருந்து பெற்று பயன்படுத்த முடிந்தவை (பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் துருக்கி) 5) முற்காலத்தில் அணு ஆயுதம் வைத்திருந்த நாடுகள் (பெலாரஸ், கஸகஸ்தான், தென்னாப்ரிக்கா மற்றும் உக்ரைன்).

NPT ஒப்பந்தப்படி அணு ஆயுதம் தயாரிக்க, வைத்திருக்க உலகில் மேற்சொன்ன ஐந்து நாடுகளுக்கு மட்டுமே - ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ளவை - அனுமதி.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஹோமி பாபா தலைமையில் அணுத் திட்டத்தை பிரதமர் நேரு தொடங்கினார். 1948ம் ஆண்டின் அணுசக்திச் சட்டப்படி அணு சக்தியை அமைதியான வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இந்தியா தீர்மானித்தது. இன்னும் சொல்லப் போனால் அணுவாயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தைக் கொண்டு வர இந்தியா மிகவும் முயற்சிகள் எடுத்துக் கொண்டது.

ஆனால் பிற்பாடு இந்தியாவே அதில் இணையவில்லை. அமைதி நடவடிக்கைக்காக (அணு சக்திக்காக மற்றும் தற்காப்புக்காக) அணு ஆயுதம் வைத்துக் கொள்வதை இந்த NPT ஒப்பந்தம் அனாவசியமாகத் தடுக்கிறது என்பது தான் காரணம். உலகிலுள்ள எல்லா நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத வரை இதை ஒப்புக் கொள்வதில் அர்த்தமில்லை என்று இந்தியா உணர்ந்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேல் மிகச் சில முன்னேறிய நாடுகள் மட்டும் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளலாம் என்பதை ஒப்புக் கொண்டால் அது இந்தியா முதலிய பின்காலனிய நாடுகளின் பாதுகாப்பை மறுக்கும் ஒரு நவகாலனியமாகவே அமையும் என்பது இந்தியாவின் பார்வையாக இருந்தது.

1974ம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியின் போது இந்தியா தன் முதல் அணு ஆயுதப் பரிசோதனையை பொக்ரானில் நிகழ்த்தியது. அமைதியான அணுகுண்டு என அதை வர்ணித்தது. அதைக் குறிக்கும் பொருட்டு அச்சோதனையை புன்னகைக்கும் புத்தர் (Smiling Buddha) என்று அழைத்தனர். BARC அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணாவின் தலைமையில் இந்தியா இதைச் சாதித்தது. ஒரே அணு குண்டு. அணுச்சிதைவின் (Nuclear Fission) அடிப்படையானது. இதன் மூலம் அணு ஆயுதத்தை அதிகாரப்பூர்வமாய் நிரூபித்த ஐந்து நாடுகளுக்குப் பின் ஆறாவதாய் ஒரு ரவுடி போல் உலக அரங்கில் நுழைந்தது இந்தியா. எதிர்பார்த்தபடியே பல நாடுகளின் பொருளாதாரத் தடைகள் குவிந்தன. கனடா இந்தியாவுக்கு அளித்து வந்த அணுசக்தி தொடர்பான உதவிகளை நிறுத்திக் கொண்டது. பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்தது.

இதன் விளைவாக 1974க்குப் பின்பும் இந்தியா தன் அணுசக்தி அறிவை அமைதியான வழிகளில் மட்டுமே பயன்படுத்தியது. அணு ஆயுதத் தயாரிப்பில் இறங்கவில்லை. 1980களில் ராஜா ராமண்ணாவின் வழிகாட்டலில் அணுப்பிணைவின் (Nuclear Fusion) அடிப்படையில் இயங்கும் ஹைட்ரஜன் குண்டு தயாரிக்கும் ஆற்றலையும் இந்தியா பெற்றது. பின் 1988 முதல் 1990 வரை ராஜீவ் காந்தி மற்றும் விபி சிங் ஆட்சிகளில் மீண்டும் அணு ஆயுதத் தயாரிப்பில் இறங்கியது இந்தியா. அதைப் பிரயோகித்தத் தேவையான (Nuclear Warhead) ப்ரித்வி ஏவுகணைகளை அப்துல் கலாம் தலைமையில் தயாரித்தது இந்தியா. ஆனால் சர்வதேசத் தடைகளுக்கு அஞ்சி அணுகுண்டுகளைச் சோதிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாகத்தான் 1995ல் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் இந்தியா பொக்ரானில் அணுகுண்டுச் சோதனை நடத்தத் திட்டமிட்டது. அமெரிக்க உளவு செயற்கைக்கோள் அதைக் கண்டுபிடித்ததால் நடத்தவிருந்த கைவிடப்பட்டது.

பின் 1998ல் வாஜ்பாய் ஆட்சிக்கு வந்த பிறகு மிக ரசிகசியமாக பொக்ரானில் அணு ஆயுதச் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஆபரேஷன் சக்தி என்று இதை அழைத்தனர். அணுசக்தித் துறையைச் சேர்ந்த ஆர். சிதம்பரமும் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் இருந்த அப்துல் கலாமும் இதன் பிரதான மூளையாகச் செயல்பட்டனர். மொத்தம் ஐந்து குண்டுகள். ப்ளுடோனியத்தில் செய்யப்பட்டவை. அணுக்கருச்சிதைவு, அணுகரு இணைவு இரண்டு வகையிலும் குண்டுகள் இருந்தன. Parmanu படம் முழுக்கப் பேசியிருப்பது இதை எப்படிச் சாதித்தார்கள் என்பதைத்தான்!

பொக்ரான் என்பது ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடம். இதற்கும் இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கும் வெறும் 230 கிமீ தூரம் தான். பரிசோதனையில் ஏதேனும் அணுக்கசிவு ஏற்பட்டு, காற்றில் பரவி பாகிஸ்தானுக்குப் போனால் இரு நாடுகளுக்கும் போர் மூளும் ஆபத்தும் உண்டு. (படத்திலும் சோதனை நடத்த சில நிமிஷங்கள் இருக்கும் போது காற்று பாகிஸ்தானை நோக்கி அடிக்கும். அப்போது வெடிப்பில் ஏதேனும் கசிவு நேர்ந்து காற்றில் கலந்தால் ஆபத்து என காற்று திசை மாறக் காத்திருப்பார்கள்.)

வெட்டவெளிப் பாலைவனம் என்பதால் செயற்கைக்கோளின் கண்காணிப்பிலிருந்து தப்புவதும் கடினம். இத்தனையும் மீறி அணு ஆயுதப் பரிசோதனை செய்ய இந்தியா வசதியான, பாதுகாப்பான வேறெந்த இடத்தையும் இன்னும் கண்டிபிடிக்கவில்லை.

இம்முறை முன்பைக் காட்டும் கடும் பொருளாதாரத் தடைகள் இந்தியாவின் மீது விதிக்கப்பட்டன. அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இதில் முக்கியமானவை. அதனால் பெரும் பாதிப்புக்குள்ளானது இந்தியா. அதிலிருந்து மீண்டு பழைய நிலைமைக்கு வர சில ஆண்டுகள் பிடித்தது. பாகிஸ்தான் போட்டிக்கு தானும் பதினைந்தே நாட்களில் அணு ஆயுதப் பரிசோதனை நிகழ்த்தியது. சோதனை நடத்தப்பட்ட மே 11ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதில் முக்கியமான விஷயம் முதல் பொக்ரான் பரிசோதனைக்கும் இரண்டாவதற்கும் இடையே கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு கால இடைவெளி. இக்காலத்தில் அணு ஆயுதப் பரவல் தடுப்பு என்பது மிகத் தீவிரமாக அமெரிக்க உள்ளிட்ட முன்னேறிய நாடுகளால் எடுக்கப்பட்டன. ஓர் உதாரணம் அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள் எல்லா நாடுகளின் முக்கியப் பிரதேசங்களையும் கண்காணித்து வந்தது. 1995ல் முதல் முயற்சியின் போதே பெரும் அழுத்தம் வந்ததால் தான் கைவிடப்பட்டது என்பது தெரிந்ததே. அப்போது அணு ஆயுதச்சோதனை நடத்தினால் மோசமான பொருளாதார அடியை இந்தியா பெறும் என்பது அடிப்படை அறிவுள்ளவர்களுக்கே தெரியும்.

ஆனாலும் வாஜ்பாய் அரசு அதைச் செய்தது. அப்போது அதற்கான அத்தியாவசியத் தேவை என்ன என்பது தெளிவில்லை. எல்லையில் நடந்து கொண்டிருந்த இந்தியா - பாகிஸ்தான் உரசல்களைக் காரணமாகச் சொல்ல முடியாது. அது எப்போதும் இருந்து வருவது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சொன்ன பாஜக தன் அரசியல் பலத்தை ஏற்றிக் கொள்ள செய்யப்பட்டதே இப்பரிசோதனை என்ற குற்றச்சாட்டை முழுக்கப் புறந்தள்ள முடியவில்லை. அதற்கேற்ப வாஜ்பாய் அரசு அதற்கடுத்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பெறுவெற்றி பெற்றது. அதற்கு பொக்ரான் சோதனை அளித்த வலுவான தலைமை என்ற பிம்பம் முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

சும்மா இருந்த பாகிஸ்தானையும் சொறிந்து விட்டு அதையும் அணுஆயுத வல்லமை உடைய நாடுகளின் அதிகாரப்பூர்வப்பட்டியலில் இணைவதற்குக் காரணமாக இருந்தது.

2006ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அணு ஆயுதத் தயாரிப்பையும், அணு சக்தி நடவடிக்கைகளையும் இந்தியா தனித்தனியேப் பிரித்து நடத்துமென அறிவித்தது (அதாவது அணுசக்திக்காகப் பிற நாடுகள் அளிக்கும் உதவிகள் அணு ஆயுதத்திற்குப் பயன்படுத்தாது). இதன் தொடர்ச்சியாக இந்தியா அமெரிக்காவிடையே அணுசக்தி தொடர்பான 123 என அழைக்கப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2007ல் கையெழுத்தானது. அதன்படி இந்தியா எந்த அணு ஆயுதப் பரிசோதனையிலும் இறங்கக்கூடாது. செய்தால் அத்தனை உதவிகளையும் அமெரிக்கா ரத்து செய்யும்.

கிட்டத்தட்ட ஒரு நவீன அடிமை சாசனம் தான் இது. இதைத்தான் இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படத்தில் “குசு போட்டுக்கலாமா?” என்று கிண்டல் செய்திருப்பார்கள்.

ஆறுமாதத்திற்கு முந்தைய கணக்குப்படி இந்தியாவிடம் சுமார் 130 அணுகுண்டுகள் இருக்கின்றன. அருகிருக்கும் எதிர்காலத்தில் அவற்றை இந்தியா பரிசோதிக்கும் சாத்தியமோ பிரயோகிக்கும் அழுத்தமோ இருப்பதாய்த் தெரியவில்லை. அதனால் பழைய நினைவுகளைக் கிளறி தேசப்பற்றை வெகுஜனங்களின் மனதில் பொங்கிப் புரண்டோட Parmanu படம் முயற்சி செய்து அதில் பெருவெற்றியும் பெற்றிருக்கிறது.

அது ஒரு வகையில் அவசியமானதும் கூட. புத்தரின் மூன்றாம் புன்னகை அத்தனை அருகில் இல்லை என்பதால் முதலிரு புன்னகைகளை மீளுருவாக்கி ரசிக்கிறோம்.

புத்தர் என்றைக்கடா புன்னகைத்தார்? என்ற கேள்வி தொக்கி நிற்பது வேறு கதை!

***

(உயிர்மை ‍ ஜூலை 2018 இதழில் வெளியானது)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 05, 2018 04:05

July 29, 2018

காமக்கிழத்திகள்


Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women!


முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத்துவம் காண‌ முடியும், திருப்தி கொள்ள முடியும் எனக் கேட்கும் ஒரு நவீனச் சிந்தனையுடைய திருமணமான பெண் கலிந்தி. தான் விரிவுரையாளராக இருக்கும் வகுப்பின் மாணவனுடனே உறவு கொள்கிறாள். கணவன் அருகில் இல்லை என்பதால் ஊர் மேய்கிறாள் என்று இதை எளிமையாகச் சுருக்கிப் பேச முடியும் என்றாலும் தன் செய்கை குறித்து அவளுக்கென ஒரு தர்க்கம் இருக்கிறது, அதை இடையிடையே கேமெரா பார்த்துப் பேசுகிறாள். அந்தப் பகுதிகள் யாவும் ரசனையானவை. அக்காட்சிகளில் ராதிகாவின் நடிப்பு அள்ளுகிறது.

ஆனால் கலிந்தி பேசும் தர்க்கத்திற்கும் அவள் நடந்து கொள்வதற்கும் சம்மந்தமே இருப்பதில்லை. உறவு கொண்டதைக் காரணமாக்கி மாணவன் தன் மீது ஆதிக்கம் செலுத்த முயலக்கூடாது என எதிர்பார்க்கிறாள் (உதாரணம்: அதாவது பிற ஆண்களுடன் அவள் பேசக்கூடாது என்று சொல்வது, மற்ற ஆண்களுடன் அவள் பேசுவதைப் பகிர வேண்டும் என எதிர்பார்ப்பது போன்றவை). ஆனால் உண்மையில் அவள் தான் அதை அவனுக்குச் செய்கிறாள். மாணவனின் வீட்டில் கண்டெடுக்கும் தன் பேண்டீஸையே யாருடையது என அவனைச் சந்தேகப்பட்டு அடிப்பது அதன் உச்சம். ஆனால் அதன் பொருள் மாணவன் மீது அவளுக்குக் காதல் என்பதில்லை. அவள் தன் கணவனை ஏமாற்றுகிறாள் என்பதுமில்லை (எல்லாவற்றையும் அவனிடம் பகிர்ந்து கொள்கிறாள்.) அவள் தன் மணவாழ்க்கையில் நீடிக்கவே விரும்புகிறாள். இப்படியான முரண்பாடுகளின் மூட்டையாக கலிந்தி பாத்திரம் இருக்கிறது ('உன்னாலே உன்னாலே' சதா போல்).

யோசித்துப் பார்த்தால் பெரும்பாலும் பெண்கள் இப்படியானவர்களே எனத் தோன்றுகிறது. தம் சொல்லும் செயலுக்கும் சம்மந்தமில்லாத குழம்பிய மனநிலையில் உள்ள‌வர்கள். குறிப்பாய் ஆண்களுடனான உறவுகளில் இப்படியான விநோத முரண்கள் நிரம்பியிருக்கும். அதை உடைத்துப் பேசுகிறது என்பதால் இதை ஓர் ஆணாதிக்கப் பிரதியாகவும் வாசிக்கலாம். இப்பகுதியின் வசனங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. ராதிகா ஆப்தேவும் அனுராக்குடன் இணைந்து எழுதி இருக்கிறார்!

படத்தில் ராதிகா பேசும் கடைசி வசனம் (பாகல் ஹே க்யா? ஷாதி ஷூதா ஹே மே!) மீனம்மாவின் 'அப்பாற்பட்ட மழை' சிறுகதையின் இறுதிப்பகுதியை நினைவூட்டியது. மதுவும் கலிந்தியும் ஒரே மாதிரி குழப்பம் கொண்ட பெண்கள் தாம்!

ஸோயா அக்தர் இயக்கியிருக்கும் இரண்டாம் பகுதி ஒரு பேச்சிலருக்கும் அவன் அடுக்கக வீட்டில் வேலை செய்யும் சுதா என்ற பெண்ணுக்கும் நடக்கும் உடலுறவில் தொடங்குகிற‌து. அவள் அவளை உடலுறவுக்காக மட்டுமே பயன்படுத்துகிறான், அதைத் தாண்டி அவள் மீது எந்தச் சிறுபிரியமும் கொண்டவன் இல்லை என்பது அடுத்து வரும் காட்சிகளில் தெரிய வருகிறது. ஆனால் அவளுக்கு அது ஜீரணிக்க முடியாததாய் இருக்கிறது. அதைக் கடந்து தன் இயல்பு வாழ்க்கையில் கரைவது தான் கதை. சுதாவாக வரும் பூமி பெட்னேகர் கொஞ்சமும் மிகையின்றி ஒரு பணிப்பெண்ணாக‌ அசத்தலாக நடித்திருக்கிறார். நான்கு படங்களில் எனக்கு மிகப்பிடித்தது இதுவே. காரணம் இதில் தான் வெறும் அறிவுப்பூர்வக்கதை சொல்லலாக மட்டும் எஞ்சாமல் அந்தப் பெண்ணின் உண்மையான மற்றும் நியாயமான உணர்வுகள் நம்பகத்தன்மையுடன் பார்வையாளனுக்குக் கடத்தப்படுகிறது. அளவான வசனங்கள், கச்சிதமான கலவிக்காட்சி என கலாப்பூர்வமாகவும் நிறைவான படம். படத்தின் இயக்குநர் ஒரு பெண் என்பதும் இங்கே நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை.

அடுத்தது திபாகர் பேனர்ஜி இயக்கியிருக்கும் படம். மனீஷா கொய்ராலா நடித்திருக்கிறார். மத்திய வயதுப் பெண் ரீனா தன் கணவனின் நெருங்கிய சினேகிதனுடன் சில ஆண்டுகளாகக் கள்ள உறவில் இருக்கிறாள். கணவன் அவளை ஒரு மனைவியாகப் பொருட்படுத்தாமல் தன் குழந்தைகளின் தாயாக மட்டுமே பார்க்கிறான் என்பதும் அத்திருமணத்தின் பொருட்டு தன் வாழ்வின் லட்சியங்களைத் தியாகம் செய்ய வேண்டியதாகி விட்டது என அவள் கருதுவதே காரணம். ஒரு நாள் அவள் கணவனுக்கு அவள் மீது சந்தேகம் வருகிறது. அதைக் கையாள்வதோடு எப்படி அதைத் தன் எதிர்கால நலனுக்கும் பயன்படுத்திக் கொள்கிறான் என்பது தான் கதை. Shrewd என்பார்கள். அது மாதிரி ஒரு புத்திசாலித்தனம் ரீனாவின் பாத்திரத்தில் வெளிப்படுகிறது படத்தின் பிற்பகுதியில். முற்பகுதி நமக்கு ஏற்படுத்தும் அவள் குழப்பமானவள், பலவீனமானவள், திக்கற்றவள் என்ற பிம்பம் கடைசியில் இவ்வாறு நொறுங்குகிறது. 'வெற்றி' என்ற ஜெயமோகனின் சிறுகதையை இது நினைவூட்டியது. அதன் நாயகி இப்படித்தான் நுட்பச்சதி செய்வாள். அவள் கணவனிடமே திரும்புவதும் அதன் பின்னிருக்கும் உணர்வுகளும் மீனம்மா கயலின் 'அப்பாற்பட்ட மழை' சிறுகதையை ஞாபகப்படுத்தியது.

கடைசியாய் கரண் ஜோகர் இயக்கியிருக்கும் படம். திருமணமான ஒரு பெண் கலவியில் ஈடுபடுவதன் நோக்கம் குழந்தை பெறுவது மட்டுமல்ல, அவள் உடலின்பத்துக்கும் தான் என்ற கருத்தைச் சொல்கிறது. சந்தோஷம் குழந்தை நான்கு இயக்குநர்களில் இவர் மட்டுமே வெகுஜனக் கதை சொல்லி என்பதால் இது மிக நேரடியான கதையாய் இருக்கிறது. அதுவும் வழக்கமான பாலிவுட் கதைகூறல் மொழி. இதில் பார்வையாளன் யோசிக்கவென்று ஏதும் இல்லை. உதாரணமாய் மேலே படம் என்ன சொல்கிறது என்று குறித்திருக்கிறேனோ அதையே நாயகி வசனமாய்ப் படத்தின் இறுதியில் பேசி விடுகிறாள். அத்தனை வெளிப்படையான படம்! வீட்டில் பார்த்து வைத்து திருமணம் செய்து கொள்ளும் பள்ளி ஆசிரியை மேகாவுக்குக் கணவனுடனான கலவி எப்போதும் ஐந்து விநாடிகள் தான் நீடிக்கிறது. அவள் உச்சம் என்பதை அடைவதே இல்லை. பின் தோழியின் (நேகா தூபியா) அறிவுரைப்படி மின்னணு வைப்ரேட்டரை நாடுகிறாள் (அனேகமாய் வைப்ரேட்டரைத் திரையில் காட்டிய முதல் இந்தியத் திரைப்படம் இதுவென நினைக்கிறேன்). அதன் விளைவுகள் என்ன என்பது மீதிக்கதை. மேகாவாக நடித்திருக்கும் கியாரா அத்வானி பேரழகி. நடிப்பும் வருகிறது. குறிப்பாய் கிழவி டிவி ரிமோட் இயக்கும் காட்சியில்!

அனுராக் காஷ்யப் - ஓக்கே | ஸோயா அக்தர் - நன்று | திபாகர் பேனர்ஜி - சுமார் | கரண் ஜோகர் - சுமார் | Overall - ஓக்கே

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2018 05:21

July 27, 2018

புனித ஆட்டம்


Sacred Games சீரிஸ் பார்த்தேன். நன்று. ஆனால் பலரும் - ரசனையில் முந்தியிருக்கும் நண்பர்கள், போகன் சங்கர் முதலிய எழுத்தாளர்கள் - தூக்கி வைத்துக் கொண்டாடுவது போல் அத்தனை சிறப்பான ஆக்கமாக‌ எனக்குத் தோன்றவில்லை. அவ்வகையில் எளிமையான, நேரடியான‌ மசாலா கதை என்றாலும் Breathe சீரிஸ் இதை விடக் கவர்வதாக இருந்தது.


8 எபிஸோட்கள். சராசரியாய் 50 நிமிடங்கள். சுமார் ஆறரை மணி நேரம் ஓடுகிறது. இந்திய சினிமாவைப் பொறுத்தவரை இரு பெரும்படங்களின் நீளம் என உத்தேசமாய்ச் சொல்லலாம். உள்ளடக்கத்தை எடுத்துப் பார்த்தாலும் இரண்டு படங்களாகத் தான் இருக்கின்றன. சமகாலத்தில் 25 நாட்களில் மும்பையை அழிக்கும் ஒரு தீவிரவாதத் திட்டத்தை முறியடிக்க சர்தஜ் சிங் என்ற மும்பை போலீஸ் இன்ஸ்பெக்டரும் (சைஃப் அலி கான்), அஞ்சலி மாதூர் என்ற ரா உளவாளியும் (ராதிகா ஆப்தே) ஓடுகிறார்கள். இதனிடையே 80களிலும் 90களிலும் கணேஷ் கய்டொண்டே என்பவன் (நவாஸுதீன் சித்திக்கி) மும்பையில் டானாக‌ உருவாகும் கதை சொல்லப்படுகிறது. இரண்டும் எவ்வகையில் தொடர்புறுகிறது என்பது தான் கதை. ராஜேஷ்குமார் க்ரைம் நாவல்களின் அதே டெம்ப்ளேட் தான் என்றாலும் கொஞ்சம் நுட்பமாகக் கையாளப்பட்டிருக்கிறது. இன்றைய தேதியில் ஆள் அறிமுகமானதும் ஃப்ளாஷ்பேக்கிலும் அந்த ஆள் பற்றி வருகிறது. இந்த சீரிஸுக்கு இரண்டு இயக்குநர்கள். இவ்விரு பகுதிகளின் ஆக்கத்தைக் கொண்டு ஃப்ளாஷ்பேக் பகுதிகளை அனுராக் காஷ்யப் இயக்கியிருப்பார் என்றும் சமகாலப் பகுதிகளை விக்ரமாதித்யா எடுத்திருப்பார் என்றும் நினைத்துக் கொண்டேன். இப்போது தேடிப் பார்த்தால் கிட்டத்தட்ட அப்படித்தான் பிரித்துக் கொண்டு எடுத்திருக்கிறார்கள்.

சீரிஸின் ஒட்டுமொத்த ஆக்கம் சிறப்பானதாய் இருக்கிறது. எந்தவொரு சமகால உயர்நடுத்தர பட்ஜெட் பாலிவுட் படத்தின் தரத்தோடும் போட்டி போடக்கூடியது. நடிப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் மூன்றும் மிக அற்புதமாக இருந்தன - ஒரு சினிமாவை விடவும் சிறப்பாக. ஆனால் திரைக்கதையில் தான் போதுமான சுவாரஸ்யம் இல்லை. யதார்த்தமான நிகழ்ச்சிகள், சமூக வரலாற்று விவாதங்கள், உறவுகளின் தெறிப்புகள், மானுட அவதானிப்புகள், தத்துவ விசாரங்கள் ஆங்காங்கே இருந்தாலும் அவை தனித்தனிக் காட்சிகளாக மட்டுமே எஞ்சுகிறதே ஒழிய ஒரு முழுப் படமாக மனதில் நிலைக்கவில்லை. முக்கியமாக ஒவ்வொரு முடிச்சாக அவிழும் போது பெரும்பாலும் நமக்கு அதிர்ச்சியே இருப்பதில்லை. 'ஓ! அப்படியா?' என்று கேட்டுக் கொள்கிறோம். முக்கியமாக 25 நாட்களில் மும்பையே தரைமட்டமாகப் போகிறது என்று பில்டப் ஏற்றிக் கொண்டே போய், இது தானா என்று சப்பென்றாகி விடுகிறது. அடிப்படையில் விக்ரம் சந்திராவின் Sacred Games நாவலிலேயே இப்பிரச்சனை இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. (அதைக் குலைக்காமல் பெரும்பாலும் அப்படியே எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.)

போகிற போக்கில் இந்திய அரசியலை, பம்பாயின் கதையைச் சொல்கிறார்கள். மதத்தின் மீதான வெறியாக அல்லாமல், வாழ்வின் ('பணத்தின்' என வாசிக்கவும்) மீதான வெறி கூட மத அரசியலுக்குத் துணைப்போவதைக் காட்டுகிறார்கள். தலைப்பில் குறிப்பிடப்படும் 'புனித ஆட்டம்' உண்மையில் இந்துத்துவமா அல்லது வஹாபியத்தின் ஜிஹாத்தா என இருதரப்பாகவும் வாசிக்க இடமுண்டு. ராஜீவ் காந்தியின் அரசியல் பிழைகளை ஆங்காங்கே குத்துகிறார்கள். அது கணேஷ் பாத்திரத்தின் குரல் தான், இயக்குநர்களுடையதல்ல என்பதையும் அவன் மதத்தின் அரசியல் சார்ந்து தன்னை ஒரு டானாக வளர்த்துக் கொள்கிறான் என்பதையும் வைத்துப் பார்க்கையில் அதை அப்படித்தான் காட்ட முடியும் எனத் தோன்றுகிறது.

நவாஸுதீன் பிரித்து மேய்ந்திருக்கிறார். அவருக்கே செய்து வைத்தது போன்ற பார்த்திரம். புதுப்பேட்டை, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களையும் அனுராக்கே இயக்கி, நவாஸுதீனே நடித்த‌ Gangs of Wasseypur - 2, Raman Raghav 2.0 படங்களையும் Sacred Games நினைவூட்டியது. இந்த சீரிஸைப் பார்க்க ஒரே ஒரு காரணம் சொல் என யாராவது என்னைக் கேட்டால் நவாஸுதீனைத் தான் சொல்வேன். இன்னொரு பக்கம் ராதிகா ஆப்தே! (இருவரும் ஒரே ஃப்ரேமில் வரும் காட்சி ஏதுமில்லை.) நான் பார்த்த வரையில் ராதிகாவின் சிறப்பான நடிப்பு இதுவே. அவரது உடலை அல்லது காமத்தை முன்வைக்காத முதல் படமும் இதுவே என நினைக்கிறேன். அவ்வளவு ஏன், ஒரு பெண் உளவு ஏஜெண்ட்டை அழகுப் பதுமையாகக் காட்டாத முதல் படமும் இது தான். (Parmanu கூட லேசாய் இதில் சறுக்கி இருக்கிறது என்று தான் சொல்வேன்.) கணிப்பொறியைப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகளில் கூட அவர் முகம் துல்லியமாய் நடிக்கிறது. சயீஃப் அலி கானும் நன்றாகவே பங்களித்திருக்கிறார். கொஞ்சம் பிசகினாலும் 'த்ஸோ த்ஸோ' என்று இரக்கம் காட்டியிருப்போம். ஆனால் அப்பாத்திரத்தைக் கம்பீரமாகக் கையாள்கிறார். மூன்று பேருமே ஒரு பரிசோதனை முயற்சியாகத் தான் இந்த சீரிஸில் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். படத்தை மூவரும் வலுவாய்த் தாங்கி நிற்கிறார்கள்.

கான்ஸ்டபிள் காடேகராக வரும் ஜிதேந்திரா ஜோஷியும் நன்றாக நடித்திருக்கிறார். மற்ற நடிகர்களில் மனதில் நிற்பவர்கள் ஐவர்: திருநங்கை குக்கூவாக வரும் குப்ரா சைத் (அவர் உண்மையில் ஒரு பெண்!), கணேஷின் மனைவி சுபத்ராவாக வரும் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே (சீரிஸில் அவரது டாப்லெஸ் காட்சி எனக்கே அனாவசியமாகத் தெரிகிறது!) மற்றும் கான்ஸ்டபிள் காடேகரின் மனைவி ஷாலினியாக நடித்திருக்கும் பெண் (லக்ஷ்மி குறும்படத்தின் கலவியை நினைவூட்டியது!), பாலிவுட் நடிகை ஸோயா மிர்ஸாவாக வரும் இரானிய நடிகை எல்னாஸ் நோரௌஸி (என்னவொரு தேஜஸ்!), காந்தா பாயாக வரும் ஷாலினி வஸ்தா மற்றும் நயனிகாவாக வரும் கீதாஞ்சலி தாப்பா. (என்ன ஆச்சரியம்! எல்லோரும் நடிகைகள்!)

சில இடங்களில் பின்னணி இசை கதைப்போக்கின் tension-ஐக் காட்டுவதாக அமைந்திருந்தது. கலை இயக்கமும் அபாரம். இந்த சீரிஸில் மாதர்சோத் என்ற சொல் எத்தனை முறை வருகிறது எனக் கண்டிபிடிப்போருக்குப் பரிசறிவிக்கலாம்.

இன்னும் கொஞ்சம் நாட்களில் சீரிஸ்கள் இந்தியர்கள் வாழ்வை ஆக்ரமிக்கும் எனத் தோன்றுகிறது. திரைப்படங்களை விட விலை குறைவாகவும், டிவி தொடர்களை விட தரம் அதிகமாகவும் இருக்கிறது என்பதால் படித்த‌, மத்திய‌ வர்க்கம் இதை வாரி அணைத்துக் கொள்ளும். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் பார்க்கும் வசதியுண்டு என்பது கூடுதல் வசீகரம். இயக்குநர்களுக்கும் குத்துப்பாட்டு, காமெடிக்காட்சி, பஞ்ச் டயலாக், ஆக்ஷன் ப்ளாக், பாடல்கள், நீளக்கட்டுப்பாடு, சென்சார் பிரச்சனை என எந்தச் சமரசமும் இல்லாமல் படமெடுக்க ஒரு வாய்ப்பு இது! இந்திய சீரிஸ்கள் இனிப் படையெடுக்கும்.

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2018 09:43

C. Saravanakarthikeyan's Blog

C. Saravanakarthikeyan
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow C. Saravanakarthikeyan's blog with rss.