C. Saravanakarthikeyan's Blog, page 5
October 3, 2020
CSK Diet
இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.)
Disclaimer: இந்த diet எல்லோருக்கும் பொருத்தமானது எனச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு மனித உடலும் தனித்துவமானது. ஆக, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உணவு முறையே பொருந்தும். இது என் வழிமுறை மட்டுமே. (நானுமே தொடர்ந்தோ, முழுமையாகவோ, தீவிரமாகவோ இதைப் பின்பற்றியதில்லை. அவ்வப்போது, இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.) ஆக, அதிகபட்சம் இதை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளலாம். இதைப் பின்பற்றிப் பார்ப்பது பற்றி அவரவர் சுயபுத்தியின் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. நோய்நிலை, அலர்ஜி இருப்போர் மருத்துவர் அல்லது டயட்டீஷியன் ஆலோசனையை நாடுவது நல்லது.
1) இந்த உணவுப் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்:
இனிப்புகள் (தின்பண்டங்கள், சாக்லேட், ஐஸ்க்ரீம் முதலியன)குளிர்பானங்கள் (சோடா கலந்தவை, அடைக்கப்பட்ட ஜூஸ்கள்)பேக்கரி உணவுகள் (ப்ரெட், பிஸ்கெட், குக்கீஸ், கேக் முதலியன)மைதா உணவுகள் (பரோட்டா, பஃப்ஸ், மேகி முதலியன)எண்ணெயில் பொரித்த உணவுகள் (முறுக்கு, பூரி, சிக்கன் 65 முதலியன)எண்ணெய் மிதக்கும் உணவுகள் (பிரியாணி முதலியன)சிவப்பு மாமிசங்கள் (Red Meat - ஆட்டுக் கறி முதலியன)சர்க்கரை மிகுந்த பழங்கள் (மா, பலா, வாழை முதலியன)உலர்கனிகள் (பேரிச்சை, திராட்சை முதலியன)பழச்சாறுகள் (சர்க்கரை போடாவிட்டாலும் கூடாது)அதீத உப்பிட்ட உணவுகள் (அப்பளம், பப்படம், ஊறுகாய் முதலியன)பதப்படுத்தப்பட்ட உணவுகள் (ஜாம், சாஸ்)துரித உணவுகள் (ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் முதலியன) மேற்கு உணவுகள் (பீட்ஸா, பர்கர் முதலியன) தீய கொழுப்பு உணவுகள் (சீஸ் முதலியன)
2) தினம் இவை அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்:பாதாம் / வால்நட் எதேனும் ஒரே ஒரு பழம் (உதா: ஆப்பிள்) / பழக் கிண்ணம்
ஒரு முழு முட்டை அல்லது இரண்டு முட்டை வெள்ளை (அவித்தது)பயறு வகைகள் (சுண்டல், பட்டாணி, பாசிப் பயறு முதலியன - அவித்தோ முளை கட்டியோ)
காய்ச் சாறு (Vegetable Juice - வெள்ளரி, கேரட், பீட்ரூட், தக்காளி முதலியன)மோர்க்ரீன் டீ
3 லிட்டர் தண்ணீர்
3) வாரம் ஒரு முறை இவை அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்:
அரிசி, கோதுமை அல்லாத பிற தானியம் (கம்பு, ராகி, சோளம் முதலியன)
பனீர் / வெண்ணெய் / நெய்
4) தானிய நெறிகள்:
மதிய உணவில் தானியம் 50%க்கு மிகாமல் இருக்க வேண்டும். குறைந்தது 40% காய்கறிகள் இருக்க வேண்டும். மீதத்தைப் பருப்பில் நிரப்பலாம். (மறுசோறு கூடாது.)
காலை உணவில் அரிசியும் கோதுமையும் மாறி மாறி இருக்க வேண்டும்.
5) தூக்க நெறிகள்:
6) நேரத்திற்குச் சாப்பிட வேண்டும் (உதா: 9 AM, 1 PM, 5 PM, 9 PM).
7) ஒரு வாரத்தில் ஒரே வேளை மட்டும் மேற்சொன்ன விதிகளை உடைத்து உணவு எடுக்கலாம் (Cheat Meal). அதாவது 20:1 என்ற கணக்கில் ஏமாற்றுவது. இது ஏன் அவசியம் என்றால் மொத்தமாய் அடைத்து வைத்தால் ஒரு நாள் மொத்தமாய் தடை உடைத்துக் கட்டுக்கடங்காமல் உட்கொள்ள நேரிடும்.
***
August 20, 2020
மீயழகி
கே: உலகின் அழகான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா?
ப: ஆம். 1984ம் ஆண்டு. ஒரு நகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் கடையில் இல்லை. நல்ல உயரமும் திடகாத்திரமான உடல்வாகும் கொண்ட ஓர் இந்துப் பெண் கடைக்குள் நுழைந்தார். அவரிடம் இலத்தீன் அமெரிக்க சாயல் கொஞ்சம் இருந்தது. ஓர் இளவரசிக்கான தோரணையுடன் நடந்துகொண்டார். யார் கண்டது? உண்மையிலேயே இளவரசியாக இருக்கக்கூடும். அவரது தோலில் ஒருவித மினுமினுப்பு இருந்தது. செம்பு நிறம், நீண்ட கூந்தல், மற்ற அங்கங்கள் அத்தனையும் கச்சிதமாக இருந்தன. எல்லா பருவங்களிலும் அழகாக இருக்கக்கூடிய பெண் என நினைத்தேன். ஏதோவொரு அட்டிகையை வாங்கியதாக நினைவு. அதற்கு பில் போடுவதற்கே எனக்கு கூச்சமாக இருந்தது. இளவரசியிடம் பணம் பெறுவதா? அதைப் புரிந்துகொண்டவர் போல புன்னகைத்தார். எனக்குக் கிறக்கமாக இருந்தது. அவரைப் போன்றதொரு அழகியை பிறகெப்போதும் நான் சந்திக்கவில்லை. இப்போது நினைவுகூர்கையில் அவரை மகா காளியின் வடிவுடன் பொருத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், உக்கிரம் தணிந்தவர். இனிமையானவர். நளினமானவர்.
(பொலான்யோ Playboy-க்கு அளித்த பேட்டியிலிருந்து. மொழிபெயர்ப்பு: கோகுல்ப்ரசாத்)

மேற்கண்ட பத்தியை வாசித்த போது உடனே அனு ஸிதாரா தான் நினைவுக்கு வந்தார். (தன் குட்டியைக் கவ்வித் தூக்கிச் செல்லும் பெண் சிங்கத்தின் நாசூக்குடன் அழுத்தாமல் மென்மையாக உச்சரிக்க வேண்டும் அந்தப்பெயரை. அனு ஸிதாரா! த் வராது; சி கூடாது.)
இதைக் கொஞ்சம் தெளிவாக விளங்கிக் கொள்ள முயற்சிக்கலாம் என நினைக்கிறேன்.
கவிதையே இலக்கியத்தின் உச்ச வடிவம் என அவ்வப்போது சொல்லப்படுவதுண்டு. அது போல் கலைக்கு உச்ச வடிவம் எதுவென ஒருவர் கேட்டால் என் பதில் பெண் என்பதுதான்.
ஆம். ஓர் இசைக் கோர்வையை, ஒரு நல்ல நடனத்தை, ஒரு ஓவியத்தை, ஒரு சிற்பத்தை, ஒரு கட்டிடக் கலையின் நுட்பத்தை ரசிப்பது போல் ஒரு பெண்ணையும் கலாப்பூர்வமாக ரசிக்கலாம். இது கலையில் அடங்குமா இயற்கை விஷயம் இல்லையா எனக் கேட்டால் இல்லை என்பதே பதில். பெண்கள் அத்தனை நுட்பமாக இக்கலையைப் பிறவியிலிருந்து பயின்று, பின் மெல்லத் தம் கற்பனை குழைத்துச் செழித்து நுண்மை கொள்கிறார்கள்.
ஆக, இருபதுகளில் இருக்கும் மானிடப் பெண்ணின் தோற்றமும், முகப் பாவனைகளும், குரலும், உடல் மொழியுமே கலையின் உச்ச வடிவம். அதற்கு உதாரணம் அனு ஸிதாரா!
அந்தக் கலையுச்சத்தை ரசித்ததற்கான சிறுநன்றியறிதலே இந்தக் கட்டுரை என்பேன்.
*
அனு ஸிதாராவைக் கடந்த ஓராண்டாகத் தான் எனக்குத் தெரியும். கடந்த செப்டெம்பரில் ஒரு கேரளக் கோயிலின் கொடி மரத்தின் அருகே பச்சை ஓரம் வைத்த ஆரஞ்சுப் புடவை மற்றும் பச்சை ரவிக்கையில் நிற்கும் படத்தில் தான் அறிமுகம். இத்தனைக்கும் அவர் தன் 18 வயதிலிருந்து (அதாவது 2013லிருந்து) நடிக்கிறார்; தமிழிலும் இரண்டு படங்கள் நடித்திருக்கிறார் (வெறி: திமிரு 2 & பொதுநலன் கருதி). ஆனாலும் எப்படியோ சுமார் ஆறாண்டுகளாக என் கண்களில் படாமல் இருந்திருக்கிறார் என்பது ஆச்சரியம் தான்.
ஒருவேளை இப்படி இருக்கலாம்: நான் விரும்பும் ஓர் அழகை அவர் சமீப ஆண்டுகளில் தான் எட்டியிருக்கலாம். (சில பழைய புகைப்படங்களில் வேறு மாதிரி இருக்கிறார்.)
பெண்கள் சார்ந்த என் ரசனை நெடுங்காலம் நீடிக்கும் ஒன்று. உதாரணமாய் ஐஸ்வர்யா ராய் (1994 - 2007), தீபிகா படுகோன் (2008 - 2018). அப்படித் தான் இப்போது அனு ஸிதாரா.
அதன் பொருட்டே சென்ற ஆண்டு இறுதியில் அனு ஸிதாரா ஸ்வீட் சீரிஸ் போட்டேன் - முழுத் தொகுப்பை இங்கே காணலாம்: http://www.writercsk.com/2020/02/blog-post.html. (இப்போதெல்லாம் எங்கேனும் ஏதேனும் புது இனிப்பு வகையைப் பார்த்தால் அதற்குப் பொருத்தமாக அனு ஸிதாராவிடம் ஆடை இருக்குமா என்று தான் எண்ணம் போகிறது!)
ஓர் ஆச்சரியம் உண்டு. 28 ஆண்டுகளுக்கு முன் நான் முதன் முதலாய் அறியாத வயதில் ரசித்த ஸ்ரீஜாவுக்கும் (சேரன் பாண்டியன்) அனு ஸிதாராவுக்கும் வலுவான முக, உடல்வாகு ஒற்றுமை இருக்கிறது. போலவே பிற்பாடு என்னைக் கவர்ந்த சுவலட்சுமியின் சாயலும் அனு ஸிதாராவுக்கு உண்டு. அனு ஸிதாராவின் தனிச்சிறப்பே எல்லாக் கோணங்களிலும் ஏதோவொரு மலையாள அழகியை நினைவூட்டுகிறார் என்பதே (உதா: நயன்தாராவுக்கு அம்மன் வேஷமிட்டால் அனு ஸிதாரா சாயல் வந்து விடுகிறது). அவர் மனோரஞ்சிதம்!
மலையாளப் பெண்கள் அழகாய் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அது அவர்கள் மரபணுவிலேயே இருக்கிறது. அவர்களின் மண் அவ்வழகைப் பாதுக்கிறது. அவர்களின் இயற்கைச் சூழல் அதை மேலும் மெருகூட்டுகிறது. ஆனால் அனு ஸிதாரா அந்த அழகின் மணிமகுடம் எனலாம். என் வரையில் இன்றைக்கு இந்தப் பூமியில் மிக மிக மிக அழகான பெண் அனு ஸிதாரா தான். மீயழகி, பெரும் பேரழகி, உச்சப் பேரழகி, பிரபஞ்சப் பேரழகி!
எவ்வளவு பரிசுத்தமான தோற்றம்! ஒரு பெண் பார்க்க இப்படித்தான் இருக்க வேண்டும் எனப் பேரியற்கைக்கே பாடமெடுப்பது போலொரு பாவனை. ஒரு ராஜாவாக இருந்தால் நம் ராஜ்யத்தில் பாதியை எழுதி வைக்கலாம் எனத் தோன்றச் செய்யும் பேரழகு அவர்!
'அன்பே வா' படம் ரீமேக் செய்யப்பட்டால் சரோஜா தேவி பாத்திரம் அனு ஸிதாராவுக்குத் தான். “நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகியென்பேன்” என்று வேறு எவருக்குப் பாட முடியும்! வாலியை உயிர்த்தெழ வைத்துக் கேட்டால் ஒப்புக் கொள்வார்.
இந்த ரசிப்பு புராணங்கள் வரை பாய்ந்திருக்கிறது. ஒரு முறை இப்படிச் சொன்னேன்: பொண்ணு மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கும் என்பது பிரபலப் பிரயோகம். மஹாலக்ஷ்மி பற்றி என்ன தான் உவமை சொல்வார்கள்? பொண்ணு அனு ஸிதாரா மாதிரி இருக்கும்! மற்றோர் இடத்தில் இப்படி எழுதினேன்: பிரம்மன் படைப்புத் தொழில் புரிகிறார் எனில் அனு ஸிதாராவைப் படைத்ததும் இனி இப்படியோர் உச்சப் பேரழகைப் படைக்கவே கூடாது எனத் தீர்மானித்துத் தன்னிரு கைகளைத் தானே அரிந்து கொண்டிருப்பார்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் ஒரே யக்ஷி தான் இருக்க முடியும். சமகாலத்தில் அது அனு ஸிதாரா. தேர்ந்த ரசிப்பின் விசாலம் நிறைந்த மனதின் மென்மையான மென்னியில் அழகை வைத்தழுத்தி மூச்சுத் திணற வைக்குமொரு யக்ஷி.
*
அனு ஸிதாரா 2013ல் Pottas Bomb படத்தில் அறிமுகம். குழந்தை நட்சத்திரம் என்கிறார்கள். ஆனால் அப்போது அவருக்கு வயது 18. (இப்போதுமே அவர் குழந்தை நட்சத்திரம் என்றால் புன்னகையுடன் நம்பலாம்!) பிறகு 2016ல் Happy Wedding படத்தில் நாயகியாக உயர்கிறார்.
இன்றைய தேதிக் கணக்கில் சிறிதும் பெரிதுமான பாத்திரங்களில் மொத்தம் 25 படங்கள் நடித்திருக்கிறார். இவற்றில் சில பாடல்கள், சில காட்சிகள் தவிர்த்து முழு நீளப்படமாக எதையுமே நான் பார்த்ததில்லை. நான் அவருக்கு ரசிகனானது அவரது புகைப்படங்களை மட்டுமே பார்த்து. கவனித்தவரை அவர் நல்ல நடிகை என்பதும் தெரிகிறது (உதாரணம்: Ramante Edanthottam பட க்ளைமேக்ஸ், And the Oscar Goes To... பட தொலைபேசி உரையாடல்).
மழவில் மனோரமா தொலைக்காட்சியில் D4 Dance Junior v/s Senior என்ற நடன ரியாலிட்டி ஷோவில் நடுவராகச் செயல்பட்டிருக்கிறார். மம்முட்டி அனு ஸிதாராவின் ஆதர்ச நடிகர். மம்முட்டி பற்றி வெளியாகவிருக்கும் Chamayangalude Sultan என்ற ஆவணப்படத்துக்கு அனு ஸிதாரா பின்னணி வர்ணனைக்குக் குரல் (Talkist என்கிறார்கள்) ஈந்திருக்கிறார்.
அனுவின் தந்தை அப்துல் சலாம் (நாடக நடிகர்). தாய் ரேணுகா எனத் தெரிகிறது. இந்து இஸ்லாமியக் கலப்பு எனத் தெரிகிறது. முழுப் பெயர் அனு ஸிதாரா புலிவெட்டி சலாம். கேரளா கலாமண்டலத்தில் நடனம் பயின்றவர். மிகப் பிரமாதமாக ஆடுபவர். Navarasa என்ற பெயரில் நடனப் பள்ளி நடத்துகிறார் (லாக்டவுனில் ஆன்லைன் வகுப்புகள் வேறு).
அவர் சமூக வலைதளங்களில் மிகுந்த ஊக்கத்துடன் செயல்படுகிறார். ஆனால் அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபடும் ஒரு முக்கியப் புள்ளி இருக்கிறது. அவர் desperate-ஆகப் புகைப்படங்களை கொட்டுவதில்லை (பல நடிகைகள் அப்படித்தான்). மிக நிதானமாக ஒவ்வொன்றாக வெளியிடுகிறார். ரசிகர்கள் ஒரு படத்தைப் பார்த்து முடிக்க அவகாசம் அளிக்கிறார். பிறகு காத்திருக்க வைக்கிறார். அப்புறம் தான் அதற்கடுத்த படம் வரும். அப்படிச் செய்வதன் மூலம் ரசிகர்களுக்குத் திகட்டாமல் காட்சியளிக்கிறார். அவர்களை ஒரு எதிர்ப்பார்ப்பிலேயே எப்போதும் வைத்திருக்கிறார். அது அத்தனை வசீகரிக்கிறது.
அவர் இந்த ஊரடங்கு காலத்தில் தொடங்கியிருக்கும் யூட்யூப் சேனலிலும் இப்படித் தான் சீரான இடைவெளியில் எபிஸோட்கள் வெளியிடுகிறார். அவர் ஒரு நடிகை என்பதாக அல்லாமல் இசை, சமையல், நடனம், இயற்கை எனப் பல விஷயங்கள் கலந்து தருகிறார்.
இன்ஸ்டாக்ராம்: https://www.instagram.com/anu_sithara
ஃபேஸ்புக்: https://www.facebook.com/actressanusithara
ட்விட்டர்: https://twitter.com/SitharaAnu
யூட்யூப்: https://www.youtube.com/actressanusithara
இன்று ஆகஸ்ட் 21. அனு ஸிதாராவின் அவதாரத் திருநாள். கால் நூற்றாண்டு ஆயுள் கடக்கிறார். ஒருவேளை இது அவரது உச்ச அழகுத் தருணமாக இருக்கலாம். அல்லது இனி மேல் தான் அது வருமோ என்னவோ! அந்த உச்சத்திற்குப் பின் அவரது அழகு சரியத் தொடங்குவதே உயிரியல் விதி. இரக்கமும் ரசனையுமற்ற காலம் அவரது தோற்றத்தை மாற்றியபடியே தான் இருக்கும். ஒருமுறை ஃபேஸ்ஆப் பயன்படுத்தி இன்ஸ்டாக்ராமில் தன் வயதான தோற்றத்தைப் பகிர்ந்திருந்தார். அக்கற்பனையே வலிமிக்கதாகத் தான் இருக்கிறது. நிஜத்தில் அதைக் கண்டு தாங்கும் திடமில்லை.
அனு இப்படியே இருக்க ஒட்டுமொத்த காலமும் உறைவதாக இருந்தால் ஏற்கலாம் தான்!
*
அனு ஸிதாராவிடம் எது அழகு? யோசனையின்றி அவரது முகம் தான் முதன்மை. முகம் தவிர மற்றதை கவனிக்கத் துவங்கியிராத வயதில் அழகியாகத் தோன்றியவளே அசல் பேரழகி; முகத்தைப் புறக்கணித்து விட்டதொரு வயதிலும் முகத்தை மட்டுமே கவனிக்க வைப்பவளே பெரும் பேரழகி. மாமிசத் துண்டங்கள் தீர்ந்த பின்னும் ரசித்துச் சாப்பிட முடிவதே நல்ல பிரியாணிக்கான அடையாளம். போலவே எந்தப் பெண்ணை ரசிக்க அவளது முகம் தாண்டி வேறேதும் தேவைப்படவில்லையோ அவளே பெரும் பேரழகி.
அனு ஸிதாரா திரைப்படங்களிலும் சரி, புகைப்படங்களிலும் சரி ஒருபோதும் கவர்ச்சி காட்டாதவர். மலையாளத்தில் பல நடிகைகள் இப்படித்தான் என்றாலும் முக அழகில் குறையுடையோர் தான் மற்ற அவயங்களைக் காட்டி ரசிகர்களைச் சேர்க்க வேண்டும் என்கிற எண்ணமும் காரணமாய் இருக்கலாம். பாகுபலி தேவசேனா, 96 ஜானு, கோலமாவு கோகிலா, ப்ரேமம் மலர் எனப் பல பாத்திரங்களுக்கு அனு ஸிதாரா பொருந்தக் கூடியவர்.
அழகு, திறமை, பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் (இன்ஸ்டாக்ராம் ஃபாலோயர்கள் 22 லட்சத்திற்கும் மேல் - இது எந்த மலையாள நடிகையை விடவும் பெரிய எண்ணிக்கை) மூன்றும் இருந்தும் அனு ஸிதாராவுக்கு அதற்குரிய அளவில் நியாயமான பட வாய்ப்புகள் கிட்டவில்லை என்றே சொல்வேன். அவர் பிரதான நாயகியாக நடித்த படங்களை விரல் விட்டெண்ணி விடலாம். பெரும்பாலும் துணைநடிகை பாத்திரங்கள். நாயகியாக நடித்த படங்களும் பெரும் நடிகர்களுடன் அல்ல. அதற்கு முக்கியக் காரணம் அவரது தோற்றம்.
அனு ஸிதாரா தன் வயதுக்கு மீறித் தோன்றுகிறார். பொதுவாகப் பார்க்கும் எல்லோரும் அவர் தன் முப்பதுகளில் இருக்கிறார் என்றே எண்ணுகிறார்கள். (உண்மையில் இன்றைய பிறந்தநாளில் அவருக்கு 25 வயது பூர்த்தியாகிறது.) அதனால் அவருக்கென அமைகின்ற கதாபாத்திரங்கள் கூட திருமணமான, குழந்தை பெற்ற பெண் போன்றவையே. அவர் அதை உணர்ந்தே இருக்கிறார். பாத்திரங்களின் வயது பற்றிய கேள்வி ஒரு நேர்காணலில் சில ஆண்டுகள் முன் எழுப்பப்பட்ட போது அவர் அது ஒரு சவால் என்றே பதிலளித்தார்.
(பாகுபலி தேவசேனா பாத்திரம் நன்கு அனு ஸிதாராவுக்குப் பொருந்தும் என்று நான் ஒரு முறை ஃபேஸுபுக்கில் பதிவிட்ட போது, அதற்கு இளமையாக இருக்க வேண்டுமே என்று பதில் வந்தது. அனுஷ்காவை விடப் பதினான்கு ஆண்டுகள் இளையவர் அனு ஸிதாரா!)
அனு ஸிதாரா குண்டானவர் என்றொரு குற்றச்சாட்டும் பொதுவாய் வைக்கப்படுகிறது. இதில் குழப்பிக் கொள்ளலாகாது. பூசினாற்போல் இருப்பது வேறு, உருண்டு திரண்டு இருப்பது வேறு, குண்டாய் இருப்பது வேறு. அனு ஸிதாரா இதில் இரண்டாம் ரகம் தான்.
இன்னொன்று அவரை ஆன்ட்டி என்று கேலி செய்வது. இதுவும் பொறாமையின் விளைவு தான். ஆன்ட்டி என்பது பெண்களின் அழகைப் புகழும் ஒரு சொல். முக்கியமாகத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் அது வயதைக் குறிக்கும் சொல்லே அல்ல. இந்தியில் பாபி என்ற கலாசாரப் பயன்பாட்டுக்கு இணையான பிரயோகம். It has overloaded meanings. சொல்லப் போனால் அழகில் அது ஒரு மாதிரி படியுயர்வு - அழகி, பேரழகி, ஆன்ட்டி என்ற வரிசை.
திரைப்படத் தொழில் சார்ந்த அனுபவஸ்த நண்பர் ஒருவர் சொல்ல விஷயம் இது: அனு ஸிதாரா வாய்ப்புக்காக ‘அட்ஜஸ்ட்’ செய்ய மாட்டார். அவர் வாய்ப்புகள் மங்குவதற்கு அதுவும் ஒரு வலுவான காரணமாக இருக்கும் என நம்புகிறேன். பல செல்வந்தர்கள் தம் நாற்பதுகளில் பண மூட்டையுடன் படமெடுக்கக் கிளம்புவதன் நோக்கம் இடுப்புக்குக் கீழே இருக்கிறது. அதனால் நடிகைகள் சினிமாவில் மேலெழுவதில் சரமரசங்களுக்கு வாய்ப்பதிகம். இந்த விஷயமும் அவர் பற்றிய ஒரு நல்லபிப்பிராயத்தை அளிக்கிறது.
(கவனிக்கவும்: அனு ஸிதாரா கற்புள்ளவர் என்கிற ஆணாதிக்க / பிற்போக்குத்தனத்தில் வருவதல்ல இந்த மகிழ்ச்சி. அவரது அழகை ரசிக்க அவர் அப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது அவசியமே இல்லை. அவர் விருப்பப்படி அவர் எவருடனும் இருப்பதில் நாம் தலையிட எந்த உரிமையும் தேவையும் இல்லை. ஆனால் இந்த விதந்தோதல் அவரது பிடிவாத குணத்துக்கு. அது அரிதான விஷயம் என்பதால் அவர் பெறும் தனித்துவத்துக்கு.)
தவிர, பொதுவாகவே அனு ஸிதாரா பெரிய அளவிலான ஆசைகளற்றவர் எனப்படுகிறது. சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இருந்தும் அதற்கு வசதியாக கொச்சியில் குடியேற முனையாமல் தன் சொந்த ஊரான வயநாட்டில் தனியாக அழகானதொரு வீடு கட்டிக் கொண்டு தன் கணவருடன் வாழ்கிறார். கணவரா எனச்சிலர் அதிர்ச்சியடையலாம். ஆம்!
அனு ஸிதாராவுக்கு மணமாகி விட்டது. இருபது வயதிலேயே. காதல் திருமணம். கணவர் பெயர் விஷ்ணுபிரஸாத். கல்யாணத்திற்குப் பின் தான் நடிக்கவே தொடங்கி இருக்கிறார். கணவர் புகைப்படக் கலைஞர். அனு ஸிதாராவின் கணிசமான இன்ஸ்டாக்ராம் படங்கள் அவரது கண்கள் வழியாகவே நாம் காணுகிறோம். அந்த வகையில் விஷ்ணுவை அனு ஸிதாராவின் பூசாரி எனலாம். அவர் வழியாகவே நமக்கு அனு தரிசனம் சித்திக்கிறது.
*
அடிக்கடி நான் எதிர்கொள்ளும் ஒரு கேள்வி இருக்கிறது. விஷ்ணுபிரசாத் மீது பொறாமை தானே என. நிச்சயமாய் இல்லை. இங்கே அழகை ரசிப்பதையும் அதை அடைவதையும் ஒன்றாகவே கருதுகிறார்கள். உண்மையில் இரண்டுக்கும் பாரதூர வித்தியாசம் உண்டு.
ஒரு நடிகையின் கணவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அவரால் அந்நடிகையுடன் பேச முடியும், அருகேயிருக்க முடியும், கட்டுப்படுத்த முடியும், நிர்வாணம் காண முடியும், உடல் மென்மையை ஸ்பரிசிக்க முடியும், கலவி செய்ய முடியும், காதலிக்கப்பட முடியும். இந்த விஷயங்களுக்கும் அந்நடிகையின் அழகை ரசிப்பதற்கும் எதாவது தொடர்புண்டா?
இவை எல்லாம் நடிகை மீது ஒருவருக்கு இருக்கும் உரிமை சம்மந்தப்பட்ட விஷயங்கள். இவற்றின் வழி அவர் மீதான பிம்பம் கூடவும் செய்யலாம், சரியவும் செய்யலாம். அந்த நடிகை அழகோ இல்லையோ இந்த உரிமையெல்லாம் ஒருவருக்கோ வெகுசிலருக்கோ இருக்கத் தான் செய்யும். தவிர, இதெல்லாம் அவரை நாம் காதலித்தால் தான் கவலைப் படவேண்டும். சாதாரண ரசிகரான நமக்கு புகைப்படங்களிலும் அசைப்படங்களிலும் அவரைப் பார்ப்பது தானே மகிழ்ச்சியளிக்கும்! அதைத் தாண்டிப் போவது ஒருவகையில் சுமையும் கூட. ஆக, அழகை அடைவதில் உண்மையில் எந்தச் சுவாரஸ்யமும் இல்லை. அது நாமே உருவாக்கிக் கொண்ட, நிலைபெற்று விட்ட வினோத மனோபிம்பம் மட்டுமே.
உதாரணமாக மார்பை உடையுடன் ரசிப்பதே அழகு. அஃதின்றி அது அழகா இல்லையா என்றே தெரியாதெனும் போது அதைக்காண ஆசைப்படுவதில் என்ன தர்க்கமிருக்கிறது!
இன்னும் சொன்னால் அனு ஸிதாராவின் ஏதாவது படத்தைப் பகிர்ந்தால் ‘ஓவர் மேக்கப்’ என யாராவது சொன்னால் “அது அவர் கணவர் கவலைப்பட வேண்டிய விஷயமல்லவா?” என்றே கேட்கிறேன். நமக்கு அந்த ஒப்பனையுடன் அவரழகாய்த் தெரிந்தால் போதாதா? ஒப்பனை கலைத்து எப்படி இருக்கிறார் என்பது அவசியமா? உடைகள் களைவதற்கும் இதையே நீட்டிக்கலாம். அது நமக்கு அவசியமற்ற, ஆர்வம் தேவையற்ற விஷயங்கள்.
ஒருமுறை ஒரு சினேகித விரோதி ஆபாசமாய் மார்ஃப் செய்யப்பட்ட அனு சித்தாராவின் - முகம் மட்டும் அவருடையது - நிழற்படமொன்றைப் பகிர்ந்ததைப் பார்த்துத் தொலைத்து விட்டேன். அதை unlearn செய்ய முடியாமல் - நினைவிலிருந்து ரத்து செய்தல் - நெடுநாள் தவிக்க வேண்டியதாயிற்று. அப்படி ஒருபோதும் அவரை என்னால் பார்க்கவே முடியாது.
அதாவது ஓர் அழகை அடையாமலேயே அதைப் பூரணமாக ரசித்துத் திளைக்க முடியும். அதைத் தான் அனு ஸிதாரா விஷயத்தில் நான் செய்கிறேன். அவரை எவ்விதத்திலும் நெருங்கும் விருப்பமில்லை. சொல்லப் போனால் அவருக்கு இறுதி வரை இப்படியொரு பெருரசிகனின் இருப்பு தெரியாமலேயே போய் விட வேண்டும் என விரும்புகிறேன்.
அனு ஸிதாரா எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னாரா எனக் கேலிகள் வந்த போது “கோடிக்கணக்கான ரசிகர்களுள் ஒவ்வொரு கடைக்கோடி ரசிகனுக்கும் அப்படி அவர் வாழ்த்திக் கொண்டிருக்க முடியுமா!” என்றே அதற்குப் பதிலிறுத்தேன். அது சமாளிப்பு அல்ல; நகைச்சுவை அல்ல; நிஜமாகவே அப்படித்தான் நினைக்கிறேன்; விரும்புகிறேன்.
இதை ஆதி சங்கரர் அம்பாள் மீது கொண்டிருந்த பக்தியோடு ஒப்பிடலாம். 42 முதல் 100 வரையிலான சௌந்தர்ய லஹரி பாடல்களில் (அவை மட்டுமே அவர் இயற்றியது, முதல் 41 பாடல்கள் சிவபெருமான் இயற்றியது என்பது ஐதீகம்) அவர் உச்சி முதல் பாதம் வரை சக்தியின் அழகை, பொலிவை, எழிலை, வனப்பை வர்ணிக்கிறார். அதில் நிரம்பிவழிவது காமமோ காதலோ அல்ல; துதி, உபாசனை, ஒருவித ரசிப்பு மனநிலை. அவ்வளவு தான்.
குறைந்தது மூன்று மணி நேரம் சந்தோஷ் சிவன் மாதிரியான நல்ல ஒளிப்பதிவாளரை வைத்து முழுக்க முழுக்க அனு ஸிதாராவை மட்டும் காட்டி ஒரு படமெடுக்க வேண்டும். படத்தில் வேறு ஆட்கள் யாரும் கூடாது. வசனம் அவசியமில்லை. நளினமான பின்னணி இசை மட்டும் போதும் (of course, இளையராஜா). படம் நெடுக வித விதமான உடைகளில், பின்புலங்களில் அனு ஸிதாராவின் சிரிப்பு, நடை என முக பாவம், உடல் மொழியைத் துல்லியமாய்ப் பதிவு செய்ய வேண்டும். பூமியின் அழகான பெண்ணை ஆராதிக்கும் முயற்சி. சௌந்தர்ய லஹரிக்கு நிகரான ஒரு நவீனப் படைப்பாகக் கொண்டாடப்படும்.
சௌந்தர்ய லஹரி என்றால் ‘அழகின் அலைகள்’ என்று பொருள். சங்கரர் அருளிய முதல் பாடலை (அதாவது 42வது பாடல்) ஒரு குறுங்கவிதையாக எழுதிப் பார்க்க முயன்றேன் -
மலையில் விளைந்தவளே!
வெவ்வேறு பால்வீதிகளின்
கணக்கற்ற சூரியன்களை
நெருக்கிக் கோர்த்ததுபோல்
ரத்னங்கள் ஜ்வலிக்குமுன்
மாசறுபொன் கிரீடத்தை
எழுதப் புகும் ரசிகனுக்கு
விலையற்ற கற்களின்
வண்ண விளையாட்டில்
மினுங்குமதன் பிறை
அழியா வானவில்லாய்
மயக்கங்கள் தராதோ!
மலைசூழ் வயநாட்டில் பிறந்த அனு ஸிதாராவுக்கும் அப்படியே பொருந்துகிறதல்லவா!
***
August 17, 2020
கலி [சிறுகதை]
“அன்புள்ள தபஸ்வி… ஒளிநிறை உடலுறைவோனே… பிறப்பால் என்ன வர்ணம் நீ?”
விரிந்து நின்ற புங்கை விருட்சத்தின் கிளையில் வௌவால் ஒன்றின் அவதாரம் போல் தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்த யாக்கையில் அசைவேதும் இருக்கவில்லை.
பரத கண்டத்தின் தென்னகத்தே சைவஜ மலைச்சாரலில் அடந்திருந்த ஆரண்யத்துள் செழித்திருந்த தனிமையையும் மௌனத்தையும் கண்ணுக்குத் தென்படாத பூச்சிகள் குலைத்துக் கொண்டிருந்தன. சூரியன் அவ்விடத்துள் ஊடுருவத் தயங்கி, கண்டும் காணாமல் நகர்ந்து கொண்டிருந்தான். எங்கோ பாயும் அருவியின் சப்தம் செவியில் தேய்ந்து பாய்ந்தது. மரங்களின் பச்சை வாசனை வனத்தின் கற்பைப் பறைசாற்றியது.

அயோத்திப் பேரரசன் ஸ்ரீராமச்சந்திரன் பொறுமையிழந்து குரலை உயர்த்தினான். அது ஒரு குதிரைக் கனைப்பைப் போல் நாராசமாய் இருந்ததாய் அவனுக்கே தோன்றியது.
“ஏ, முதிராத் துறவியே, முனிவினை புரிபவரே, கண்ணையும் காதையும் திறங்கள்!”
ஆழ்ந்த தவத்துள் தொலைந்து போயிருந்த மனிதரின் காதுகளை அந்த ஆறாச்சினம் தொட்டது போல் தெரியவில்லை. அவர் முகத்தில் சாந்தம் நிறைந்து வழிந்தது. இறுக மூடியிருந்த அவரது விழிகளில் மட்டும் இரண்டு நரம்புகள் மெல்லிசாய் அசைந்தன.
ராமன் இறுதி முயற்சியாய்த் தன் இடையிலிருந்த உடைவாளை உருவ முயன்றான்.
இலங்கை இறுதி யுத்தத்துக்குப் பின்னர் அவன் அதை எடுக்கவே இல்லை. அதனால் துருவேறிக் கிடந்தது. இலங்கையில் கூட பெரும்பாலும் வில்லும் அம்புகளும் மட்டுமே பயன்பட்டன. வாள் சம்பிரதாயத்துக்கு வைத்திருந்ததோடு சரி. சீதை அரண்மனையில் இருந்திருந்தாலாவது கவனித்து எண்ணெய் போட்டு வைத்திருப்பாள். அவளையும் மத தர்மத்தின் படியும் ஊரார் கிசுகிசுக்களின் பொருட்டும் காட்டுக்குத் துரத்தி ஆயிற்று.
சிரமத்துடன் வாளை இழுத்த போது பலத்த சப்தத்துடன் அது வெளியே வந்தது. அவன் அதை வான் நோக்கி உயர்த்திப் பிடித்தான். தன் வீரம் அதிகமானது போல் தோன்றியது.
கைப்பிடிக்கருகே துரு தென்பட்டாலும் முனையில் பழைய கூர் மங்காது பளபளத்தது.
மாமழையில் நனைந்து களைத்திருந்த வன யட்சி சோம்பலாய்ப் புரண்டு படுத்தாள். இரையுண்டு திரும்பி மரங்களில் உறைந்திருந்த பறவைகள் சிறகதிர்ந்து படபடத்தன.
அந்த ஒலியின் கோரத்தில் கவனஞ்சிதறிய தபஸ்வி தன் கண்களை மெல்லத் திறந்தார்.
*
சம்புகா கணக்கிட்டாள். முப்பத்தி ஒன்பது நாட்கள் கடந்து விட்டன. அவளது சுழற்சி இருபத்தி ஒன்பது நாட்கள். லீப் ஆண்டு மாதக் கேலண்டரின் ஃபிப்ரவரித் தாளைக் கிழிப்பது போல் ஊற்றி விடும். முழுதாய்ப் பத்து நாட்கள் தப்பியிருக்கின்றன. நிச்சயம் அது தான். அவள் வெட்கப்பட்டாள். பொறுக்கிப் பயல். கடைசியாய் கல்யாணத்துக்கு இரு வாரம் முன் விலக்கானது. சந்திரன் கொஞ்சம் நேரம் கூட அவளைச் சும்மா இருக்க விட வில்லை. நோண்டிக் கொண்டே இருந்தான். முகர்ந்து கொண்டே தான் கிடந்தான்.
“சம்புகா…”
எதிர்த்த ப்ளாட் அக்காவின் குரல் அவள் எண்ணத்தையும் எண்ணத்தையும் அறுத்தது.
தன் பெயரை எப்போது சொன்னாலும் எதிராளியின் புருவங்கள் உயர்வதை சம்புகா கவனித்திருக்கிறாள். அது பழகி விட்டது. அப்பெயரின் விநோதம் முகத்திலிருக்கும் ஒரு மரு மாதிரி இந்த இருபத்து ஆறு ஆண்டுகளும் அவளோடு ஒட்டிக் கொண்டு விட்டது.
அப்பா தான் அவளுக்கு அப்பெயரை வைத்தார். அவர் கட்சியிலிருந்தார். அவள் பிறந்த அன்று தான் பிரதமர் விபி சிங் பிற்படுத்தப்பட்டோருக்கான இருபத்தி ஏழு சதவிகித இட ஒதுக்கீடுக்கான அரசாணையை வெளியிட்டார். அதையொட்டி கலைஞர் சென்னையில் நடத்திய ஐம்பெரும் விழாவில் பேசிய வசன கவிதையில் சம்புகன் அறிமுகமானான்.
ஆனால் சம்புகன் நான்காம் வர்ணத்தவன் என்பதைத் தவிர வேறு ஏதும் தெரியவில்லை.
மாவட்டச் செயலர் கணியன் பூங்குன்றனிடம் விசாரித்து சம்புகன் கதையைத் தெரிந்து கொண்ட பின் அதைப் பிடித்துக் கொண்டார். சுற்றத்தின் எதிர்ப்பை, கேலியை மீறிப் பிடிவாதமாய் அந்தப் பெயரையே மகளுக்குச் சூட்டினார். சம்புகன் சம்புகா ஆனான்.
“எதற்காகத் திறமை? அது தேவையா? என்று நாம் என்றுமே கேட்டதில்லை.
ஆனால் ஏகலைவன் வித்தை கற்க இந்தச் சாத்திரம் அனுமதிக்கவில்லை.
அவன் வில்லில் விஜயனையும் வெல்வான் என்று
கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றதென்ன நியாயம்?
தவம் செய்தான் சம்புகச் சூத்திரன். தகுதி அவனுக்கு ஏது எனச்சீறி
அவன் தலை வெட்டிச் சாய்த்த கதை ராமபிரான் வரலாறன்றோ?
கட்டை விரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனுங்கேட்டால்
பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்.”
அப்பா அவளது சிறுவயதில் எத்தனையோ முறை அவ்வரிகளைச் சொல்லியிருக்கிறார்.
“வீட்டுக்கு ரெஜிஸ்டர்ட் போஸ்ட் வந்திருக்கு, கீழே போய் வாங்கிக்கோ.”
“சரிக்கா…”
சம்புகா அவசரமாய் துப்பட்டாவை எடுத்து மாரில் சாற்றிக் கொண்டு கதவைத் திறந்து வெளியேறி மின்தூக்கியில் நுழைந்து ‘B’ என்றெழுதிய பொத்தானை அழுத்திக் கீழே தரைத் தளம் வந்து தபால்காரரிடம் கையொப்பமிட்டு காக்கி உறையை வாங்கினாள்.
செவ்வகமான கண்ணாடித் தாளினுள்ளே சந்திரன் பெயரும், வீட்டு முகவரியும் சன்ன எழுத்துக்களில் துல்லிய ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது. உறை மேலே Union Public Service Commission என எழுதியிருந்தது. பிரிக்கும் போதே புரிந்து விட்டது. ஹால் டிக்கெட்!
*
தலைகீழ் மனிதர் கண்களைத் திறந்ததும் ஒத்திகை பார்த்தபடி பேசத் தொடங்கினான்.
“நான் இந்த தேசத்தின் சக்ரவர்த்தி, ஸ்ரீராமன்.”
“மகிழ்ச்சி. வணக்கம் மன்னரே!”
மரத்தில் தொங்கும் நிலையில் பூமியை நோக்கி இரு கரங்களை இறக்கி வணங்கினார். அதற்குப் பதில் வணக்கம் எப்படி வைப்பது என ராமனுக்குக் குழப்பமாய் இருந்தது. பின் தீர்மானித்து வழமை போல் கைகள் இரண்டையும் கூப்பி நின்று நமஸ்காரம் செய்தான்.
“ஏன் என் தவத்தைக் கலைத்தீர்கள்?”
“அதற்கு மன்னிப்புக் கோருகிறேன்.”
“சரி மன்னித்தேன். மேலே சொல்லுங்கள்!”
இங்கிதத்துக்குச் சொல்லுதிர்த்தால் இளக்காரமாகி விட்டோமோ என யோசித்தான்.
“நீங்கள் எதன் நிமித்தம் தவம் செய்கிறீர்கள்?”
“நான் கடவுளாக விரும்புகிறேன். வானில் ஒரு தேவனாக சஞ்சரிக்க நினைக்கிறேன்.”
“நீங்கள் யார்?”
“என் பெயர் சம்புகன்.”
“ராமராஜ்யத்தில் மனிதரின் அடையாளம் பெயரில் அல்ல.”
“வேறு எதில் இருக்கிறது? செயலிலா?”
“அதுவும் இரண்டாம்பட்சம் தான்…”
“பிறகென்ன?”
“…”
“ஓ! பிறப்பிலா?”
“ஆம். நீங்கள் என்ன வர்ணம்?”
“நான் இறைவனின் முகத்திலிருந்து தோன்றியவன் அல்லன்; அவன் கைகளிலிருந்து ஜனித்தவனும் அல்லன்; போலவே அவன் தொடைகளிலிருந்தும் பிறந்தவன் அல்லன்.”
“எனில் பரம்பொருளின் கால் தூசு நீ.”
*
‘ஷெட்யூல்ட் கேஸ்ட்’ என்று சந்திரன் தயங்கியபடி சொன்ன போது திக்கென்று தான் இருந்தது சம்புகாவுக்கு. அவளது சாதி ‘பேக்வேர்ட் க்ளாஸ்’ என்கிற பிரிவில் வருவது. ஆனால் அம்மா ஆண்ட பரம்பரை என்று தான் எப்போதும் சொல்வாள். அதென்னவோ அதைச் சொல்லும் போது அம்மாவுக்கு முகத்தில் அப்படியொரு பூரிப்பு வந்து ஒட்டிக் கொள்ளும் - டிவி விளம்பர புஷ்டிக் குழந்தை வாயில் செரலாக் ஒழுகச் சிரிப்பது போல்.
ஆனால் அக்குழந்தை சம்புகா தன் காதலைச் சொன்ன போது ஒப்புக் கொள்ளவில்லை.
“ஆம்பள இல்லாம இத்தனை வருஷமும் உன்னை வளர்த்திருக்கேன்.”
“…”
“அதுக்குக் கொஞ்சமாவது விசுவாசமா இருக்கனும்னு நினைச்சா இதை மறந்திடு.”
“…”
சம்புகாவுக்கு அவளுடன் வாதிடத் திராணியும் விருப்பமும் இல்லை. மௌனமானாள்.
ஆனால் அது புலியின் பதுங்கல். சம்புகாவுக்கே தான் அத்தனை அழுத்தம் மிக்கவள் என்பது அது நாள் வரை தெரியாது. அது அப்பாவின் வார்ப்பு என்றுதான் தோன்றியது.
உறையை எடுத்துக் கொண்டு லிஃப்ட் ஏறாமல் படியேறித் தன் ஃப்ளாட்டுக்குத் திரும்பி சோஃபாவில் நிறைந்து அதைச் சூடாக்கினாள் சம்புகா. கொஞ்சம் தூங்கினால் நன்றாக இருக்கும் எனத்தோன்றியது. அன்று சனிக்கிழமை. அவளுக்கு அலுவலக விடுமுறை. ஒரு ப்ராஜெக்ட் லாஞ்ச் அடுத்த வாரமிருக்கிறது. அதற்காக வார இறுதியில் அழைக்கப்படும் சாத்தியம் இருந்தது. ஐடியில் தரப்படுகின்ற உயர்சம்பளம் எப்போது வேண்டுமானாலும் அழைக்கப்படவும் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படவும் தானே! சோர்வாகவும் சோம்பலாகவும் இருந்தது. அழைப்பு ஏதும் வரக்கூடாது என வேண்டிக் கொண்டாள்.
சந்திரன் பயிற்சி வகுப்புக்குப் போயிருக்கிறான். திரும்பிச் சுவர்க்கடிகாரம் பார்த்தாள். அவன் வருகிற நேரம் தான். வரும் போது அவனை அணைத்துக் கொள்ள வேண்டும்.
மறுநாள் அவளுக்குப் பிறந்த நாள். பல்லாண்டு கழித்து ஞாயிறன்று வருகிறது. போன முறை வந்த போது அப்பா இருந்தார். வீட்டுக்கு ஜேப்பனீஸ் கேக் வாங்கி வந்து அவளை வெட்ட வைத்து முத்தமிட்டார். ஒருவேளை சந்திரன் பிறந்தநாளையே மறந்து விட்டானா என அவளுக்கு மனதில் ஒரு குறுகுறுப்பு இருந்தது. அவர்கள் அறிமுகமான பின்பான கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு முறையும் அவன் மறந்ததில்லை. தவிர, கல்யாணத்திற்குப் பின்பான அவளது முதல் பிறந்த நாள் இது. ஆனால் இவை மன அழுத்தம் மிக்க நாட்கள்.
*
ஸ்ரீராமன் கண்களில் கங்கெரியும் கோபம் கனன்றெழுந்து சுடுமூச்சாய் வெளியேறியது.
“சூத்திரனுக்குத் தவஞ்செய்ய அனுமதியில்லை எனத் தெரியாதா உனக்கு?”
“தெரியும். ஆனால் யார் செய்த சட்டம் அது? நான் ஏன் மதிக்க வேண்டும்?”
“சனாதன தர்மம் அது. வர்ணாஸ்ரம வழக்கம். சாஸ்திரத்தில் இருக்கிறது.”
“அதை கண்களை மூடிக் கொண்டு கடைபிடிப்பது தான் அரச கடமையா?”
“அதிகப்பிரசங்கித்தனம் வேண்டாம். நீ பழிப்பது வையம் போற்றும் ராமராஜ்யத்தை.”
“சமத்துவ நீதியற்ற ராஜ்யத்தை ராமன் தந்தாலென்ன, ராவணன் தந்தாலென்ன?”
“இப்படிப் பேசுவது தான் உன் பிறவிக் குணம்.”
“ஓ! கடையில் நீங்களும் அங்கே வந்து விட்டீர்களா பிரபு!”
“அதனால் தான் உன் தவப் பலன் உலகிற்குக் கேடாக முடியும் என்கிறார்கள்.”
“இதெல்லாம் ஒரு பாமரத்தனமான பொதுமைப்படுத்தல்.”
“நான் விஸ்வாமித்ரரிடம் குருகுலம் பயின்றவன்”
“சனாதனத்திற்குக் கணிசமாய்ப் பங்களித்தவர், வேறென்ன கற்பித்தித்திருப்பார்!”
“என் ஆசானையா அவமதித்துப் பேசுகிறாய்?”
“எவர் மீதும் எமக்கு வெறுப்பில்லை. ஆனால் உண்மையைச் சமரசம் செய்ய முடியாது.”
“என் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.”
“சரி, நான் தவஞ்செய்வதால் யாருக்கு என்ன தொந்தரவு?”
“நீ ஒரு பிரம்மஹத்தி.”
“நானா?”
“ஆம். தர்மம் மீறிய உன் தவத்தால் ஒரு பிராமணப் பாலகன் அகாலமாய் மரித்தான்.”
*
சம்புகா கண் மூடிப் படுத்த போது ஒரு புதிய உயிரின் வரவை இச்சமயத்தில் சந்திரன் விரும்ப மாட்டானோ என சம்புகாவுக்குத் தோன்றியது. ஹால் டிக்கெட்டைக் கையில் எடுத்தாள். அது சந்திரன் கனவு. அதனால் அவள் கனவாகவும் ஆகிப் போய் விட்ட ஒன்று.
சந்திரன் முதலில் வேண்டாம் என்று தான் சொன்னான். குழந்தை மட்டுமல்ல; கலவியும் கூட. திருமணத்திற்கு முன்பே அதை அவளிடம் விளக்கிச் சம்மதம் வாங்கியிருந்தான்.
ஐஏஎஸ் ஆவது அவன் லட்சியம். சாதிய இழிவு நீங்க அதிகாரத்தைக் கைகொள் என்பது அவனுக்குச் சிறுவயது முதல் சொல்லித் தரப்பட்டிருந்த பாடம். வருமான வரிப் பிடித்தம் போக மாதம் ஒரு லட்சம் இந்திய ரூபாய் சுளையாய்க் கையில் கொட்டும் பன்னாட்டு மென்பொருள் நிறுவன வேலையை இந்நோக்கத்தின் பொருட்டு மிகுந்த யோசனைக்கும் ஆலோசனைக்கும் பின் ராஜினாமா செய்து விட்டு முழுநேரம் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிறான். தனியார் பயிற்சி நிலையம் ஒன்றிற்கு காலையில் மூன்று மணி நேரம் போய் வருவது தவிர மற்ற நேரமெல்லாம் வீட்டில் தான் இருக்கிறான். அதாவது படித்துக் கொண்டிருக்கிறான். அதனால் இதில் இறங்கினால் கவனம் சிதறும் என்பதால் தேர்வு முடிந்த பின் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்பது சந்திரனின் திட்டமாக இருந்தது.
சம்புகாவிற்கு இதில் உவப்பில்லை என்றாலும் அவனைப் புரிந்து கொண்டிருந்தாள்.
அதனால் கட்டுப்பாடாய் இருக்க ஒப்புக் கொண்டாள். ஓடி வந்ததும் அறையெடுத்து அவசரமாய் அவிழ்த்து அதிரப் புணர்பவர்கள் மத்தியில் சந்திரன் இப்படியிருப்பது ஒரு வகையில் அவளுக்குப் பிடித்து தான் இருந்தது. தவிர, என்ன தான் காதலித்து மணம் புரிந்தவர்கள் என்றாலும் வெட்கத்தை விட்டு ‘படுக்க வா’ என்று அவனை அழைக்க அவளுக்குத் தயக்கமாய் இருந்தது. அதனால் அதற்குத் தலையாட்டி வைத்திருந்தாள்.
முதலிரவில் ஒரே ஒரு முத்தம் - அதுவும் போனால் போகிறதென பிச்சையிடுவது போல் சந்திரன் பட்டும்படாமல் அவள் கன்னத்திலிட்டது, அதுவும் முத்தமிட்டானா, மோப்பம் பிடித்தானா எனச் சம்புகாவுக்குக் குழப்பமாய் இருந்தது - அது தவிர மூன்று மணி வரை இருவரும் மல்லாக்கப் படுத்து வெறுமனே சொற்களால் உரையாடிக் கொண்டிருந்தனர்.
ஏழு நாள் கட்டுப்பாடாய்த் தான் இருந்தாள். அலுவலக வேலைப்பளு, வெளியே இரவு உணவு எனச் சோர்வில் படுக்கையில் விழுந்ததும் உறங்கிக் கொண்டு தானிருந்தாள்.
“ஏய்… எதுக்கும் உன் ஆளுக்கு ஏதும் பிரச்சனை இல்லையான்னு செக் பண்ணிக்கடி.”
சிரித்துக் கொண்டே திவ்யா கேலி செய்த போது சம்புகாவுக்கு எரிச்சலாய் இருந்தது.
சரி, ஒரு முறை செய்வதில் என்ன ஆகி விடப் போகிறது என அன்றிரவு நைட்டியின் முதலிரு பட்டன்களை அவிழ்த்து விட்டுக் கொண்டு அவன் மீது காலைப் போட்டாள்.
சந்திரனும் அதற்குக் காத்திருந்தது போல் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.
அனுபவஸ்தனோ எனச் சந்தேகிக்குமளவு நீண்ட, நிதானமான கலவி. சாம்பார், காரக் குழம்பு, கூட்டு, பொரியல், ரசம், தயிர் என ஒவ்வொன்றாய்ப் பரிமாறினான். அவளது எச்சில் வழிந்த அதே தலைவாழையிலையில் தானும் அள்ளியள்ளி உண்டான். வெட்கம், பயம் கொண்டு பூட்டி வைத்திருந்த அவளது ரகசியத்தை மெல்ல மெல்ல நெகிழ்த்தி உடைத்துப் புகுந்தான். உணவுக்கிடையே புடைத்த வயிற்றை இலகுவாக்க இடுப்பின் பட்டையை இளக்கித் தொடர்வது போல் நிறுத்தி பின் மீண்டும் தொடர்ந்து என அவளை முகிழ்த்தி மலர்த்தினான். எத்தனையோ இரவுகளில் கற்பனையில் அவன் அதற்கான முழு ஒத்திகையை நிகழ்த்திப் பார்த்திருக்க வேண்டும் எனப் புரிந்தது சம்புகாவுக்கு.
அவ்விரவில் மட்டும் மூன்று முறை அவன் அவளை எழுப்பினான். நான்காம் முறை அவள் அவனை எழுப்பினாள். புன்னகைத்தபடி அவள் கையோங்க ஒத்துழைத்தான் சந்திரன்.
அதன் பிறகு ரத்தத்தின் கவுச்சி வாடை கண்டு விட்ட மிருகம் போல் இருவரின் உடம்பும் பரஸ்பரம் தேடிக் கொண்டன. பிய்த்துப் பிய்த்துத் தின்றார்கள். அருவருப்பொழித்தனர். ஒருவர் திரவத்தில் மற்றவர் ஊறிக் கிடந்தார்கள். உடம்பெங்கும் உப்புப் பிசுபிசுத்தது. அவரவரின் தனித்துவ வாசனை அழிந்தது. நாள் தவறாமல் கலந்தார்கள். அதுவும் தினம் மூன்று முறை என அட்டவணையிட்டு. மாலையில் சம்புகா அலுவலகம் மீண்டதும் ஒரு முறை, நள்ளிரவில் உறங்கப் போகும் முன் ஒரு முறை, காலை விழித்ததும் ஒரு முறை.
திட்டமிடலின்றி நடந்த அம்முதலிரவு தவிர மற்ற எல்லா முறையும் அவர்களுக்கிடையே ஆணுறை திரையிட்டிருந்தது. எனில் அந்த முதல் முறையிலேயேதான் இது தங்கியிருக்க வேண்டும் என்பது சம்புகாவுக்குத் தெளிவாகப் புரிந்தது. இனி கொஞ்ச நாளைக்கு இந்த ராட்சசனைக் கொஞ்ச அனுமதிக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டாள். அதைச் சொல்லும் போது அவன் முகம் பொக்கென்று போகுமே என்றும் கவலை கொண்டாள்.
அந்த முதல் உச்சம் நினைவுகளில் மேலெழுந்தது. மலைகளில், காடுகளில், குகைகளில், பள்ளத்தாக்குகளில், கொண்டையூசி வளைவுகளில் அவளை நெடுந்தூரம் அழைத்துப் போன பின் அடிவயிற்றில் நெருப்பில் பூ மலர்ந்தது போல் இளஞ்சூடாகத் துடித்த இன்பம்.
*
தொங்கிய தவசி சற்றே அதிர்ச்சியுற்று ஸ்ரீராமனின் கண்களை உற்று நோக்கி உண்மை தேடினார். அவர்கள் உரையாடலை அலட்சியம் செய்து வான் இருண்டு கொண்டிருந்தது.
“என் தவத்தாலா?”
“ஆம். நாரத முனி அப்படித்தான் சொன்னார்.”
“அவர் சொல்வதிருக்கட்டும். உனக்குப் பகுத்தறிவு வேண்டாமா?”
“நாவை அடக்கு, சம்புகனே!”
“மன்னிக்க வேண்டும் மன்னா. விசித்திரமான குற்றச்சாட்டு. அவரவர் நெல் அவரவர்க்கு. நான் தவம் செய்வது எப்படி ஒரு சிறுகுழந்தையின் மரணத்துக்குக்காரணமாக முடியும்?”
“ராஜ்யத்தில் எங்கேனும் சாஸ்திரம் உடைபட்டால் துர்சாவுகள் நடப்பது வழக்கம் தான்.”
“அது உண்மையென்றே வைத்தாலும் என்ன மாதிரியான இரக்கமற்ற சாஸ்திரம் அது?”
“ஆம். குரூரம் தான். ஆனால் அதைக் கேட்க எவருக்கும் உரிமையில்லை. எனக்குமே.”
“சரி, நடந்ததைச் சொல்லுங்கள்.”
“தேகத்தில் எந்த ரோகமுமின்றி, ஓர் அடியும் உடலில் வாங்காமல், எவ்வித அதிர்ச்சியும் எதிர்கொள்ளாமல் ஒரு பிராமண குலக் கொழுந்து திடீரென தனது உயிரை விட்டது.”
“மனதைத் தொந்தரவு செய்யும் நிகழ்வு தான்.”
“அந்த பிராமணர் என் பிரம்மாண்ட அரண்மனை வாயிலில் பதின்மத்தைக் கூட எட்டாத பாலகனின் துவண்ட பிரேதத்துடன் அழுதபடி நிற்கிறார். அவருக்கு நீதி பெறவே நான் திசையெட்டும் தேடி வந்தேன். கடைசியாய்த் தெற்கில் உன்னைக் கண்டு கொண்டேன்.”
“தெற்கு வடக்கிற்கு அடங்காதிருப்பது ஆதிதொட்ட வழக்கம் தான். தொடருங்கள்.”
“அந்த அந்தணர் பிறந்த கணம் முதல் பொய் சொன்னவரில்லை. ஒரு கிருமிக்குக் கூடத் தீங்கு எண்ணியவரில்லை. செல்வத்தின் மீது ஆசை கொண்டவரில்லை. என் போலவே பிறனில் விளைந்தவரில்லை. எனில் வந்திருக்கும் இன்னல் எதனால் என்பதவர் வினா.”
“தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை அறியாதவரா நீங்கள்?”
“அதைத் தான் அவரும் சொல்கிறார். தான் எத்தவறுமே இழைக்காத போதும் இம்மாதிரி துர்மரணங்கள் நிகழ்கிறதென்றால் மன்னன் தீமை புரிந்து விட்டான் அல்லது நீதி வழுவி விட்டான் என்றே பொருள். அதாவது அவனது பரிபாலனத்தின் போதாமையில் தேசத்தில் குற்றங்கள் அதிகரித்து விட்டன என்று அர்த்தம். அதனால் சிறுவன் மரணத்துக்கு நான் பொறுப்பாகிறேன். தாமதமின்றி அதைச் சரி செய்ய வேண்டிய இக்கட்டில் நிற்கிறேன்.”
“வையத்து நிகழ்வுகளை அப்படி எல்லாம் எளிய தர்க்கத்தில் அடக்கி விட முடியாது.
அது ஒரு சிக்கலான பின்னல். கோர்வையோ, காரண காரியமோ கண்டறிய அது ஒன்றும் காலத்தின் சொப்பு விளையாட்டோ, கடவுளின் ஓரங்க நாடகமோ அல்ல.”
“ஓ! இறையையும் மறுப்பவனா நீ? நானே ஓர் அவதாரம் என்பதை அறியாதவனா நீ?”
“நன்கறிவேன். இறையின் தர்க்க லட்சணமே இது தான் என்பது தான் கசக்கிறது.”
“உன் துடுக்கான பேச்சினால் உன் குற்ற எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.”
“ஒருவர் மீதான குற்றங்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி எழுதுவது தண்டனை வழங்குபவர் தனது மனசாட்சியைச் சமாதானம் செய்யக் கையாளும் பழைய உத்தி.”
“நீதி வழங்குபவனுக்கு மனசாட்சி ஏதும் இருக்கக்கூடாது. அது அவனை நிலைதடுமாற வைக்கும். அவன் நீதி நூல்கள் சொல்வனவற்றை அப்படியே பின்பற்றுவதே அறமாகும்.”
“சரி, இப்போது என் மீது சுமத்தப்பட்டிருக்கும் பிரதானக் குற்றம் தான் என்ன?”
*
சம்புகா மருத்துவர் அல்லது பொறியாளர் ஆக வேண்டும் என்பது அப்பாவின் பேரவா. வாரத்துக்கு ஒரு முறையாவது அதை எப்படியேனும் அவளுக்கு நினைவூட்டி விடுவார்.
கலைஞரையும் விபி சிங்கையும் அவள் வாழ்வில் ஒருபோதும் மறக்கக்கூடாது என்று சொல்லியிருந்தார் அப்பா. சரியாய் அவள் பள்ளி இறுதி நாள் தேர்வின் போது அப்பா அவசரமாய்ச் செத்துப் போனார். குடி சற்று அதிகம். நெஞ்சு வலி கண்டு இரு சக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த போதே உழன்று விழுந்து இறந்தார். ஆட்கள் பார்த்து தூக்கிக் கொண்டு போய் ஆம்புலன்ஸ் சொல்லி அதில் ஏற்றும் போதே உயிர் பிரிந்தது.
அவள் பரிட்சை எழுதும் வரை சொல்லாமல் பொத்தி வைத்து வெளிவந்ததும் சொல்லி வீட்டுக்கு அழைத்துப் போனார்கள். அம்மா அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள். யார் யாரோ கட்டிக் கொண்டு மூக்கு சிந்தி ஒப்பாரி வைத்தார்கள். அப்பாவின் மீது கருப்பு சிவப்புக் கொடி போர்த்தி எடுத்துப் போய்க் குழி தோண்டிப் புதைத்துப் பாலூற்றினர்.
சம்புகாவை வெளியே அனுப்பி விட்டு நான்கைந்து பெண்கள் அம்மாவை அறைக்குள் அழைத்துப் போய் தாலியறுத்துப் பசும்பாலில் மிதக்க விட்டார்கள். அப்போது அம்மா இட்ட கதறலை அவளால் மறக்கவே முடியாது. அதுவரை அவள் கேட்காத புதுக்குரல்.
அதன் பிறகு அம்மா மாறித்தான் போனாள். ஓர் ஆண்தன்மை அவள் குரல், உடல்மொழி எல்லாவற்றிலும் வந்தமர்ந்து கொண்டது. அவளை அணுக பயமும் தயக்கமும் புகுந்தது.
அண்ணாப் பல்கலைக்கழக ஒற்றைச் சாளர முறையில் பிற்படுத்தப்படுத்தோருக்கான இட ஒதுக்கீட்டில் கிண்டி பொறியியல் கல்லூரி கணிணி அறிவியல் எடுத்துச் சேர்ந்ததை அப்பா எங்கிருந்தோ சூட்சமரூபத்தில் பார்த்துக் கொண்டிருந்ததாய் சம்புகா நம்பினாள்.
கலைஞர், விபி சிங்குக்கு நன்றி சொன்னாள். கல்லூரியில் சந்திரன் அறிமுகம் ஆனான்.
*
ஸ்ரீராமனுக்குக் கால் வலித்தது. பயணக் களைப்பை விட பேச்சுக் களைப்பு அழுத்தியது.
நீதிமான் என்று வேறு பிம்பம் உண்டாகி விட்டதால் உடனடியாகத் தீர்ப்பெழுத முடியாது. விசாரணை போல் சற்றுப்பேச வேண்டி இருந்தது. பல்லைக் கடித்துப் பதில் சொன்னான்.
“உன் பிறப்பிற்கு அனுமதிக்கப்பட்ட தர்மம் இது இல்லை, சம்புகனே!”
“அது தான் சொன்னீர்களே! நானும் மறுத்து விட்டேனே!”
“உன் மறுப்பிற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. நீ ஓர் உதிரி. காலங்காலமாய் நம்மை வழிநடத்தும் சாஸ்திர விதிகளின் ஆகிருதியின் முன் உன் கருத்து ஒன்றுமே இல்லை.”
“எனக்கு இன்னும் உங்கள் குற்றச்சாட்டு விளங்கவே இல்லை.”
“நீ உன் தகுதிக்கு மீறி தவஞ்செய்யப் புகுந்ததால் தான் அந்த மரணம் நிகழ்ந்தது.”
“சரி அது நிஜமென்றே கொள்வோம். இப்போது என்ன செய்வதாய் உத்தேசம்?”
“வேறென்ன! உன் உயிரை எடுப்பது தான் தீர்வு.”
“ஓ! என்னைக் கொன்றால் அச்சிறுவன் பிழைத்து விடுவானா?”
“அப்படித் தான் நம்புகிறேன்.”
“நம்பிக்கை. ம். எதாவது உறுதியாகத் தெரியுமா உங்களுக்கு?”
“…”
“சிறுவன் இறந்தது என் தவத்தால் என்பது முதல் ஊகம். என்னைக் கொன்றால் அவன் மீண்டு வருவான் என்பது மற்றுமோர் ஊகம். எல்லாமே காற்றில் கட்டப்பட்ட கற்பனை மாளிகைகள். ஆனால் அதைப் பற்றி எந்தவோர் உறுத்தலும் உங்களுக்குக் கிடையாது.”
“பிராமணர்கள் இயற்றியதைக் கேள்வி கேட்க ஷத்ரியனான எனக்கே உரிமையில்லை. ஆனால் சூத்திரனான நீ கொஞ்சமும் லஜ்ஜையின்றிக் கேள்விகளால் துளைக்கிறாய்.”
“காரணம் எனக்கு இழக்க ஏதுமில்லை. அதனால் அச்சமில்லை.”
“இழக்க உயிர் இருக்கிறதல்லவா!”
“நான் கேள்விகளை நிறுத்தினால் மட்டும் உயிர் பிழைக்கவா போகிறேன்?”
*
இன்னும் சில தினம் காத்திருந்து பார்க்க வேண்டுமா அல்லது இப்போதே மருத்துவரிடம் போக வேண்டுமா சம்புகாவுக்குத் தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் இன்னும் சரியாய் யாரும் பழக ஆரம்பிக்கவில்லை. குறிப்பாய் அவளொத்த வயதில் அங்கு எவருமில்லை.
அம்மா இப்போது உடனிருந்தால் நன்றாக இருக்கும் என்று சம்புகாவுக்குத் தோன்றியது. அழ வேண்டும் போலிருந்தது. உடனேயே அழக்கூடாது என்ற வைராக்கியமும் எழுந்தது.
அம்மா இன்னும் என் மீது கோபமாக இருப்பாளோ! எல்லாம் எத்தனை வேகமாக முடிந்து விட்டது! அம்மா தான் எத்தனை பிடிவாதகாரி! நானுமே சமமான பிடிவாதகாரி தானே!
ஒருவேளை அப்பா இல்லாததால் தான் அம்மா தனக்கு அவப்பெயர் வந்து விடக்கூடாது என்று இப்படிப் பிடிவாதம் காட்டினாளோ! சாதி என்பது ஒரு கூடுதல் காரணம் தானா?
“ஏன்டி, குடும்ப மானத்தைக் கெடுக்கற?”
கல்லூரி படித்துக் கொண்டிருந்த, மீசை சரியாய் முளைக்காத தம்பிக்கு எப்படி திடீரென குடும்ப மானம் பற்றிய அக்கறை வந்தது என்று சம்புகாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
ஊர் வாட்ஸாப் க்ரூப்பில் "பொண்ணைக் கட்டினா வெட்டுவோம்” என அவன் அனுப்பிக் கொண்டிருந்த ஃபார்வேர்ட்கள் எல்லாம் பகடிகள் அல்ல என்பது அதிர்ச்சியாக இருந்தது.
அப்பா இருந்திருந்தால் இதெல்லாம் நடக்க விட்டிருப்பாரா? அவர் என் காதலைப் புரிந்து கொண்டிருக்க மாட்டாரா? அப்பா இந்த மாதிரி குறுகிய அடையாளங்களைக் கடந்தவர்.
அப்பா கட்சிக் கொள்கைகளில் ஊறியவர். அவர் எவரிடமும் உயர்வு தாழ்வு பாராட்டிப் பார்த்ததில்லை. அம்மா அப்படி இல்லை என்பதோடு அவரையும் கடிந்து கொள்வாள்.
“சுத்தபத்தம் பார்க்காம எல்லாத்தையும் புழங்கவிட்டா எப்படி?”
அவளுக்கு ஏதேனும் அவர் கடுமையாகப் பதிலளிக்க வேண்டும் எனச் சிறுவயதிலேயே தோன்றியது சம்புகாவுக்கு நினைவிருக்கிறது. அப்பா அதற்குப் பதில் சொல்ல மாட்டார்.
ஆனால் அப்பா ஏன் வேறு சாதியில் பெண்ணெடுக்கவில்லை? அவருக்குக் காதல் என்ற ஒன்றே வந்திருக்காதா? அல்லது அவர் என் போல் அவசரப்படவில்லையோ? அம்மாவின் வார்த்தைகளில் சொன்னால் அவர் அரிப்பெடுத்துத் திரியவில்லையோ! பலவீனத்தைக் காதல் என்றெண்ணி நான் நிஜமாகவே குடும்ப மானத்தைக் குலைத்து விட்டேனோ?
சம்புகா அந்த எண்ணத்தைப் பிடிவாதமாகப் பிடுங்கியெறிய முயன்றாள். ஆனாலும் திரும்பத் திரும்பத் தான் ஓடி வந்து கல்யாணம் செய்திருக்கக்கூடாது என அவளுக்குத் தோன்றியது. அந்த எண்ணம் குற்றவுணர்வாக அவள் மனதில் விஸ்வரூபம் கொண்டது.
மண்டைக்குள் ஈசல்கள் பறந்து கொண்டிருந்த சமயம் வாயில் அழைப்பு மணி அடித்தது.
*
தவத்தின் ஆழ்நிலையிலிருந்து விழித்து அதிக நேரமாகவில்லை என்பதால் சம்புகனின் கண்களில் கனிவு ஒட்டியிருந்தது. அது ஸ்ரீராமனுக்கு ஓர் உறுத்தலாக நின்று எரிந்தது.
“வானத்தில் உலவும் தேவர்களுக்கு ஒப்பான, அவர்களையும் மிஞ்சிய மார்க்கண்டேயர், மௌடகஜயர், வாமதேவர், காஷ்யபர், காத்யாயனர், ஜாபாலி, கௌதமர், நாரதர் ஆகிய எட்டு ரிஷிகளும் என் அவையில் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு மனதாய்ச் சொன்ன விஷயம் இது. அனைத்தும் அறிந்த முனிகள். இதில் எனக்குச் சந்தேகிக்க ஏதுமில்லை.”
“எனக்கும் அவர்களுமான தூரம் இந்தத் தவம் தான் ஸ்ரீராமரே. அதைத் தான் கலைத்துப் போட நீங்கள் வந்திருக்கிறீர்கள். எத்தனை காலம் தான் நான் அவர்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியும்? நானும் அவர்களில் ஒருவனாக வேண்டாமா?”
“அதற்கு உனக்குப் பிறப்பிலேயே தகுதியில்லை, சம்புகனே!”
“தகுதி எப்படி பிறப்பிலேயே வரும்? அது சிந்தையிலும் செயலிலும் வருவதல்லவா!”
“இல்லை. பிறப்பிற்கென ஒரு மதிப்பிருக்கிறது. அது மிக முக்கிய முத்திரை.”
“மச்சம் மாதிரியா?”
“அப்படித் தான் வைத்துக் கொள்ளேன்.”
“மச்சம் கூட பிறப்பில் தான் வரும் என்றில்லை. இடையே உருவாவதுண்டு.”
“பிறப்பில் வருவதே நிலைக்கும். முயற்சி எல்லாம் சுயசமாதானத்திற்குத் தான்.”
“ராவணன் பிராமணன். நீங்கள் ஷத்ரியர். எனில் அவன் உங்களை விட உசத்தியா?”
“நிச்சயம் உயர்வு தான். ஆனால் அவன் விதி வேறு மாதிரி சமைக்கப்பட்டிருந்தது.”
“ஓ!”
“ஆம். என்ன தான் அறத்தை நிலைநாட்ட நான் ராவணனை வதம் புரிந்திருந்தாலும் பிராமணனனைக் கொன்ற பாவம் என்னைப் பிடித்துக் கொள்ளவே செய்தது. நான் கடவுள் என்பது கூட என்னைக் காக்கவில்லையே! பரிகாரம் தான் வேண்டியிருந்தது. அதுவும் எனக்கு மேலிருக்கும் பிராமணர்கள் ஆய்ந்து வகுத்துக் கொடுத்த முறை.”
“பரிதாபகரமான நிலைமை தான்.”
“மதிப்பிற்குரிய விதிகளைக் கொச்சைப்படுத்தாதே, சம்புகனே!”
“சரி, மரணத்துக்குப் பதில் இன்னொரு மரணம் என்பது எப்படி நீதியாகும்?”
“இரண்டாம் மரணம் முதல் மரணத்தை ரத்து செய்கிறதென்றால் நீதியாகும்.”
“ஆனாலும் எப்படியும் ஓர் உயிர் போகத் தானே செய்கிறது?”
“ஆனால் போவது சூத்திர உயிர். பிழைப்பது பிராமண உயிர். வித்தியாசம் உண்டே!”
“ஒரு சமூகத்துக்கு உரிமையளித்து இன்னொரு சமூகத்தை அடக்குவது தான் நீதியா?”
“ஆம். எல்லா உயிரும் ஒன்றல்ல. எறும்பு சாவதற்கும் யானை மரிப்பதற்கும் வேறுபாடு உண்டு. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு மதிப்பு உண்டு. அப்படித் தான் இயங்க முடியும்.”
ராமராஜ நாயகன் அதை மனப்பூர்வமாகத்தான் சொல்கிறானா என அவன் முகத்தை உற்றுப் பார்த்தார் சம்புகன். ஸ்ரீராமன் அவரது விழிகளைச் சந்திப்பதைத் தவிர்த்தான்.
*
சந்திரன் வந்து கை, கால், முகம் கழுவி விட்டு வந்தமர்ந்து டிவி ரிமோட்டைப் பற்றினான்.
ஓர் அலைவரிசையில் தொல். திருமாவளவன் நேர்காணல் ஓட ஆர்வமாய்க் கவனிக்கத் தொடங்கினான். அடுத்த சில தினங்களில் வரும் அவரது பிறந்த நாளை ஒட்டிய ஏற்பாடு.
கேள்விகள் மக்கள் நலக்கூட்டணி படுதோல்வி கண்டிருந்ததைச் சுற்றி இருந்தன. அவரே காட்டுமன்னார்கோயிலில் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை இழந்திருந்தார்.
“திருமாவளவன் தலித்களுக்கான தலைவரா? அல்லது தமிழர்களுக்கான தலைவரா?”
“அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி என்பதிலிருந்து வெகுதூரம் விலகி வந்து விட்டோம். இப்போது நாங்கள் முன்னெடுப்பது எல்லோரையும் உள்ளடக்கிய ஓர் அரசியல். ஒடுக்கப்பட்டோருக்கு மட்டுமின்றி எல்லோருக்குமான மைய நீரோட்டத்தில் கலக்க முனைகிறோம். உரையாடல் வழியே தான் சமத்துவத்தை அடைய முடியும்.”
“அப்படி என்றால் நீங்கள் தமிழகத்தின் முதல்வராக முடியும் என நினைக்கிறீர்களா?”
திருமாவளவன் புன்னகைத்தார். சந்திரன் அவர் பதிலுக்கு ஆர்வமாய்க் காத்திருந்தான்.
சம்புகாவுக்கு நாள் தள்ளிப் போவதைச் சொல்லத் தயக்கமாக இருந்தது. பயமாகவும்.
நான்கு வருடங்களாய் பெங்களூரில் வசித்தாலும் வீட்டை விட்டு வெளியேறி அவனைத் திருமணம் செய்து கொண்டு சின்னதாக
July 20, 2020
யமி [சிறுகதை]
திறமையான திரைப்பட எடிட்டர் செய்த ஹிப்ஹாப் மான்டேஜ் போல் கலவையான காட்சிகள் தோன்றின: இளஞ்சிவப்புக் கோடுகள், மெரீனா பீச், ராபியா ஆன்ட்டி, ரிக் வேதம், அம்மாவின் பிணம், டார்க் சாக்லேட், டிவி ரிமோட் அப்புறம் நவீனின் முகம்…

லோக்கல் அனஸ்தெடிக் செலுத்திக் கொண்டு உடல் மரத்துப் போகக் காத்திருந்தாள். மெல்ல வலது காலைத் தூக்கிப் பார்த்தாள். தூக்க முடிந்தது. அப்புறம் இடது காலை. பாதி வரை முடிந்தது. அப்புறம் இரண்டு கால்களையுமே அசைக்க முடியவில்லை.
தட்டுத் தடுமாறித் துருவற்று மின்னிய கத்தியைக் கையிலெடுத்து நடுக்கத்துடன் தனது வயிற்றில் வைத்தாள். மானசீகமாய் நீள அகலம் கணித்து விரிவுற்றிருந்த தொப்புளுக்கு மூன்று அங்குலம் கீழே கீறினாள். புதிய ரத்தம் அவசரமாய் எட்டிப் பார்த்தது. முகத்தைச் சுழித்து, பல்லைக் கடித்து வலியை அடக்கிக் கோடிழுத்தாள்.
அவள் படுத்திருந்த கட்டிலினருகே குனிந்து நின்று அவள் கைகளைப் பற்றியிருந்த நவீன் கண்களை மூடிக் கொண்டான். விடியல் விழிகளைத் திறக்கத் தொடங்கியது.
*
மொத்த நட்சத்திரங்களையும் உதிர்த்துப் பூரண நிர்வாணம் காட்டியது வானம். துகில் உரித்த பெண்ணின் கொலுசுகள் போல் திட்டுத்திட்டாய் மேகங்கள் சிணுங்கின. நிலா பிறந்தமேனியின் வனப்பில் மறுநாள் வளர்பிறையா தேய்பிறையா எனக் குழம்பியது.
சற்றே வெக்கையேறிய துவர்ப்புக் காற்று மெரீனாவின் மணற்பரப்பில் அம்மணமாய்ப் படுத்திருந்த நூதனாவையும் நவீனையும் தீண்டியும் தடவியும் தழுவியும் நகர்ந்தது.
நூதனாவின் வீங்கித் திரண்டிருந்த வயிற்றில் கைவைத்தான் நவீன். உள்ளே ரகசியம் கொண்டிருந்த சிசுவின் அசைவுகளை மொழிபெயர்க்க முயன்றான். அவன் கை மீது தன் கையை எடுத்து வைத்துக் கொண்டாள் நூதனா. மூன்று துடிப்புகள் ஒற்றைப் புள்ளியில் சங்கமித்தன. அவற்றின் வெம்மையில் பிரபஞ்சம் மெல்லத் தடுமாறியது.
“பையன் தானே?”
மெல்லக்கேட்ட நவீனின் கையைச் சட்டென வயிற்றிலிருந்து தட்டிவிட்டாள் நூதனா.
“இல்ல. பெண்.”
“பார்ப்போம்.”
“ம்.”
ஒருவேளை ஆணும் பெண்ணுமாய் இரட்டைகளாய் வந்து பிறந்து விடுமோ என்கிற எண்ணமெழுந்தது நூதனாவுக்கு. மனசு திடுக்கிட்டது. பேச்சை மாற்ற விரும்பினாள்.
“இன்னிக்குத் தேதி என்ன?”
“யாருக்குத் தெரியும்!”
“இப்ப ஏழாவது மாசம் நடக்குதுன்னு நினைக்கிறேன்.”
“வரும் போது வரட்டும். கணக்கு எதுக்கு?”
“ஒண்ணும் பிரச்சனை ஆகிடாதே?”
“ஏதும் ஆகாது. சும்மா குழப்பிக்காதே.”
“ம்.”
“தூக்கம் வருது எனக்கு. நீயும் தூங்கு.”
சொல்லி விட்டு அவளை நுட்பமான மென்மையுடன் அணைத்துக்கொண்டான். புலி ஒன்று அதன் குட்டியைக் கவ்விச் செல்வது போலிருந்த பக்குவம் அந்த முரட்டுச் சிறுபயலுக்கு எப்படிச் சாத்தியப்பட்டது என வியந்தாள். சூழலுக்குத் தகவமைத்தல்!
அப்படித் தன்னை மாற்றிக் கொள்ளும் உயிர்கள் மட்டுமே பிழைத்துக் கிடக்கின்றன.
“என்னால குழந்தையைப் பார்க்க முடியாதுல்ல.”
நவீனிடமிருந்து பதில் வரவில்லை. அவன் உறங்கிப் போயிருந்தான். அன்றைய பகல் முழுக்க அவன் தண்ணீர் தேடியலைந்து வந்திருந்த களைப்பு. நூதனா தன் கைகளால் அவன் முகத்தைத் தொட்டுத் தடவினாள். நெற்றி, கண்கள், மூக்கு, வாய். வாயை அகலத் திறந்து கொண்டு ஒரு குழந்தையைப்போல் அவன் தூங்குவதை உணர்ந்தாள்.
அது என்ன ஆண்டு என யோசித்தாள். உத்தேசக் கணக்கில் 2025 எனத் தோன்றியது. குழந்தையின் பிறந்த தேதி எல்லாம் எப்படிக் கண்டுபிடிப்பது எனக் கவலைப்பட்டாள்.
நூதனா நெடுநேரம் யோசனையாய் விழித்திருந்தாள். இருண்டிருந்த அவள் கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டே இருந்தது. தன்னைப் போல முன்னொரு காலத்தில் கரையருகே கிடந்தழுத ஒருத்தியின் கண்ணீர் தான் கடலெனத் திரண்டதோ என்று நினைத்தாள். கடலலைகளின் ரீங்காரம் அவளைத் தொந்தரவு செய்தபடியே இருந்தது.
கண்ணயரும் சமயம் அதே மணலில் நிகழ்ந்த அவர்களின் முதற்கலவி நினைவுக்கு வந்தது. வானம் பார்த்துக் கண் திறந்திருந்த யோனி சிலிர்த்தது. புரண்டு படுத்தாள்.
*
பழைய செய்தித் தாள் பரப்பி மலங்கழித்து, டிஷ்யூவில் குதந்துடைத்து, அத்தாளைச் சுருட்டி, வீட்டிற்கு வெளியே சற்றுத் தொலைவில் துர்நாறிக் கிடந்த குப்பை மேட்டில் எறிந்து விட்டு வந்தாள் நூதனா. இருளைப் போல் அந்த வாடையும் பழகி விட்டது.
கிடைக்கும் தண்ணீர் என்பது குடிப்பதற்கு மட்டுமென்றாகி விட்டது. கை கழுவ, கால் கழுவ நீரைப் பயன்படுத்துவது எப்போதேனும் சாத்தியப்படும் சொகுசு. நீரை விடவும் காகிதங்கள் ஏராளம் கிடைக்கின்றன - செய்தித் தாள், கணிப்பொறி அச்சிட்ட தாள்கள், எவரோ கைப்பட எழுதிய தாள்கள், எதுவுமற்ற தூயவெள்ளைத் தாள்கள், பணம் என.
குளிப்பதென்றால் உலர்குளியல் தான். முதிர்காலை மிதவெயிலில் சுமார் கால் மணி நேரம் உட லின் எல்லாப் பகுதிகளிலும் வெளிச்சம், வெப்பம் நன்கு படுவது போல் வெவ்வேறு நிலைகளில் நிற்க, அமர வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாய் வியர்வை உடம்பெங்கும் ஊற்றெடுக்கத் துவங்கும். அழுக்குகளும், கிருமிகளும் அதில் அடித்து வரப்படும். பின்னர் ஈரிழைத் துண்டு கொண்டு அழுத்தம் திருத்தமாக உடம்பெல்லாம் பொறுமையாய்த் துடைத்தெடுக்க வேண்டும். ஒருமுறை ஆஃப்ரிக்க தேசத்திலிருந்து இறக்குமதியான கிருமிநாசினி ஜெல் ஒன்று ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் கிடைத்தது. சூரிய ஒளிக்குப் பதிலாக அதைச் சில தினங்கள் பயன்படுத்தினார்கள்.
ஓராண்டில் வீடும், வீட்டைச் சுற்றிய அவசியமானதோர் எல்லையும் விரல் நுனிக்கு வந்து விட்டது நூதனாவுக்கு. அதைத் தாண்டிச் செல்ல நவீனின் கைகள் வேண்டும்.
மூன்றாமவர் எவரேனும் பார்த்தால் அவளைப் பார்வையற்றவள் என்று சொல்லவே முடியாது. மூன்றாமவர் என்று எவரும் இப்பூமியில் இல்லை என்பது வேறு விஷயம்.
“நவீன், நாள் தள்ளிப் போகுதுடா.”
சன்னல்வழி வந்துவிழுந்த சூரிய வெளிச்சத்தில் லயித்திருந்தவன் காதுகளில் துண்டு துண்டாய் அச்சொற்கள் விழுந்து மூளைக்கு நகர்ந்து புரிபட சற்று அவகாசமெடுத்தது.
“ஏய், நிஜமாவாடி?”
அவன் கேள்வியில் அர்த்தமில்லை தான். ஆனால் எல்லாச் சமயங்களிலும் ஒருவர் அர்த்தம் பொதிந்தே பேசிக் கொண்டிருக்க முடியுமா! அதுவும் உணர்ச்சிகள் கமழும் தருணங்களில் உளறல்களே உடன் வருகின்றன. உளறல் அர்த்தம் பெறும் கணங்கள்.
நூதனா அவன் முகத்தில் மிளிரும் மகிழ்ச்சியைக் கற்பனை செய்து புன்னகைத்தாள். அதைத் தன் முகத்தில் பிரதியெடுக்க முயன்றாள். அவ்வளவு நன்கறிவாள் அவனை.
“தேதிலாம் தெரியல. ஆனால் நிச்சயம் ஒரு மாசம் மேல ஆகுது.
“எப்படி உறுதியாச் சொல்ற?”
“முந்தின அமாவாசையில் அம்மாவுக்குப் படையல் வெச்சு சாமி கும்பிட்ட அன்னிக்கு தான் பீரியட்ஸ் ஆனேன். அதுக்கு அப்புறமும் ஒரு முறை அமாவாசை வந்து போயி ரெண்டு வாரமாவது இருக்குமே. எப்படிக் கணக்குப் பார்த்தாலும் நாற்பது நாள் ஆகுது. இவ்ளோ நாளெல்லாம் தள்ளிப் போனதில்ல. மணியடிச்ச மாதிரி டான்னு வந்திடும்.”
“வாவ்.”
நூதனாவை அணைத்துக் கொண்டான் நவீன். அதில் ஒரு பெருமிதம் மினுங்கியது. ஆடையற்ற அவனிடமிருந்து ஆடையற்ற அவளுக்கு அது சட்டெனத் தொற்றியது.
அன்று உணவு தேடப் போகும் போது சிதிலமுற்றிருந்த க்ரீம்ஸ் ரோடு அப்போல்லோ கிளையை உடைத்து நுழைந்து நூதனா தாளில் கிறுக்கிக் கொடுத்திருந்த மருத்துவச் சாதனங்கள் எல்லாவற்றையும் கவனமாக எடுத்து மூட்டை கட்டிக்கொண்டான் நவீன்.
மருந்துகள், பரிசோதனைக் கருவிகள் முதல் அறுவைக்கான உபகரணங்கள் வரை அதிலிருந்தன. நூதனாவுக்கு நான்காமாண்டு மருத்துவப் பாடங்கள் நினைவிலாடின.
மறுநாள் காலை எழுந்ததும் நூதனா அவற்றிலிருந்து தடவிப் பார்த்து ப்ரக்னன்ஸி டெஸ்ட் கிட்டை எடுத்து நவீனிடம் கொடுத்தாள். பிறகு அவன் தோளைப் பற்றிக் கொண்டு ஒற்றைக் காலைத் தூக்கி நாற்காலியில் வைத்து ஒரு நெகிழிக் குப்பியில் சிறுநீர் பெய்தாள். அதை நளினமாய் நவீனிடம் கையளித்துக் காலைக் கீழிறக்கினாள்.
“இதில் ஒரு ட்ராப் எடுத்து…”
“தெரியும்.”
பாக்கெட் பிரித்து சிகரெட் எடுக்கும் லாவகத்துடன் நவீன் அந்தக் கருவியை வெளியே எடுத்து அவளது சிறுநீரிலிருந்து ட்ராப்பரில் மூன்று துளியெடுத்து அதில் வைத்தான்.
சில நொடிகளில் அதில் ‘C’ என்பதற்கு நேராக ஓர் இளஞ்சிவப்புக் கோடு தோன்றியது.
“ஒண்ணு…”
நவீன் அடுத்து உச்சரிக்கவுள்ள சொல்லுக்காகப் பதற்றத்துடன் காத்திருந்தாள் நூதனா. கலைடாஸ்கோப் அருவ உருவங்கள் போல் அவளது முகத்தில் உணர்ச்சிகள் மாறின.
அடுத்து ‘T’ என்ற எழுத்துக்கும் நேராக மற்றொரு இளஞ்சிவப்புக் கோடு தோன்றியது.
“ரெண்டு!”
“ஹேய்ய்ய்…”
இருவரும் கத்திக் கொண்டு கட்டிக் கொண்டார்கள். நூதனாவின் கண்களின் ஈரம் நவீனின் மார்பில் பிசுபிசுத்தது. அவன் இதயத் துடிப்பு அவள் கன்னத்தில் அதிர்ந்தது.
“அம்மா இருந்திருந்தா நல்லா இருக்கும்.”
நூதனாவின் குரலை உள்வாங்கித் தடுமாறி யோசித்து விட்டுச் சொன்னான் நவீன் -
“இப்ப உலகத்தில் ஒரே அம்மா நீ தான்.”
“கடைசி அம்மாவா?”
“ஒருவகையில் முதல் அம்மா!”
ரசித்துச் சிரித்தாள் நூதனா. எத்தனை ஆண்டுகள் அவளுக்கு எரிச்சலூட்டிய குரல். சட்டென சில காலத்தில் எல்லாம் தலைகீழாய் மாறி விட்டது பேரதிசயம் தான்.
அவளை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு அவன் வெளியே கிளம்பினான். குளிக்கச் சோம்பலாக இருந்தது அவளுக்கு. நெடுநேரம் ப்ரக்னன்ஸி டெஸ்ட் கிட்டில் அந்த இரண்டு இளஞ்சிவப்புக் கோடுகளை ஆசையாய்த் தடவியபடியே படுத்திருந்தாள்.
*
நள்ளிரவில் உறக்கம் கலைந்த நூதனா நிதானமாய் எழுந்து சென்று வழக்கமான இடத்தில் வைத்திருந்த சொம்பை எடுத்துத் தண்ணீர் பருகினாள். முழுச் சொம்பு நீர் தீர்ந்த போதும் தாகம் அடங்கவே இல்லை என உணர்ந்து போது கவனமாய்த் தன் உடலைக் கவனித்தாள். உடம்பு பிடிவாதமாய்க் கோருவது நீரையல்ல எனப் புரிந்தது.
குளிர் உடம்பில் ஊடுருவி ஓர் ஊக்கி போல் மாயச் சமிக்ஞை தந்து கொண்டிருந்தது. மெல்ல நடந்து கட்டிலுக்கு வந்து நவீனின் வெற்றுமார்பில் கைவைத்து எழுப்பினாள்.
அன்றைய கலவி இரு மிருகங்களுடையது போல் மிக மூர்க்கமாக இருந்தது. அந்தக் கசப்பான இருளிலும் கண்ணாடித் துல்லியம் போல் நவீனை அங்குலம் அங்குலமாய் அளந்தலைந்தாள். தன் குற்றவுணர்வைத் தன் அகங்காரத்தால் எதிர்கொண்டாளோ என்பதாய் நவீனுக்குத் தோன்றியது. அன்று ஆட்டத்தில் அவள் கை ஓங்கியிருந்தது.
நவீன் நிறைந்த, நீடித்த புன்னகையுடன் அடிமை போல் அவளது இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து கட்டளைகளுக்குத் தாள்பணிந்து கீழ்படிந்தான். அதற்கு முன்பு அவளது அப்படியொரு முகத்தை அவன் கண்டதே இல்லை. கலவி தீர்ந்ததும் தனது கழுத்தைக் கடித்து ரத்தம் குடிப்பாளோ என எண்ணிக் கொண்டான். உச்சம் நிகழ்ந்து கொண்டிருந்த கணத்தில் அவன் பின்னந்தலை முடியைப் பற்றியிழுத்து உயிரற்றுத் துடித்த தன் கண்களில் முத்தமிடச் செய்தாள். அவன் உதடுகளில் உப்புக் கரித்தது.
“ஏய், ஏன்டி அழற?”
“ஒண்ணுமில்லடா. பேசாமப் படு.”
“சொல்லு. என்ன ஆச்சு?”
“டேய், எல்லா அழுகையும் துயரிலிருந்து எழுவதில்லை.”
“ம்.”
“சரி, என் கால் விரல்களுக்குச் சொடுக்கெடு.”
அவன் சட்டென எழுந்து அமர்ந்து கொண்டு அவளது பரிசுத்த நிர்வாணத்தின் மீது போர்வையை வீசி விட்டு அவள் இடது காலை எடுத்துத் தன் மார்பில் வைத்துக் கொண்டு சொடுக்கெடுக்கத் தொடங்கினான். அவள் கண்களை மூடிக் கொண்டாள். அக்கணம் தன்னை ராணியாக உணர்ந்தாள். மொத்த பூமிக்கும் மஹாராணியாக.
நிச்சயம் தன் வயிற்றில் அன்று கரு தங்கி விடும் எனத் தோன்றியது நூதனாவுக்கு.
*
ஒரு தேர்ந்த அறுவை நிபுணரின் நுட்பத்துடன் நூதனாவின் கால் விரல் நகங்களுக்கு நீல நிறப் பூச்சிட்டுக் கொண்டிருந்தான் நவீன். அவள் புன்னகையுடன் பார்த்திருந்தாள்.
“என் மீது உனக்குச் சந்தேகமே வராதுல்லடா.”
“ஏன்?”
“உன்னைத் தவிர இந்தப் பூமியில் தான் வேற ஆம்பிளை யாருமே இல்லையே!”
“குழந்தை ஒண்ணு பிறந்தா அதைத் தான் கொஞ்சுவே.”
“எனக்கு நீ போதும்.”
“மனுஷ இனம் மறுபடி தழைக்க வேண்டாமா?”
“ம்.”
“இப்ப நாம வரலாற்றின் முக்கியத் தருணத்தில் நிக்கறோம். கிட்டத்தட்ட ஆதாம், ஏவாள் போல. மீண்டும் மானுடம் பிழைக்குமா இல்லையா என்பது நம் கையில் தான் இருக்கு. அதை நாம கொஞ்சம் பொறுப்பாகச் செய்யனும்னு தோனுதுடி.”
“பொம்பளைக்குக் குடும்பம் தான் உலகம். அதுக்காக என்ன வேணா செய்வா!”
“ஒரு டாக்டர் நீ. இப்படிப் பேசறயே!”
“கோர்ஸே முடிக்கலயே!”
“சரி, அரை டாக்டர்!”
“பிரதமர்னாலும் பொம்பள இப்படித்தான்.”
“சரி, பொம்பளயா ஆம்பிள சொல்றத லட்சணமாக் கேளு.”
“என்ன?”
“ஒரு குழந்தை பெத்துக்குவோம்.”
“சரி. அப்புறம்?”
“அப்புறமென்ன! வேலை முடிஞ்சுது. காலை ஆட்டாம வை கொஞ்சம் நேரம்.”
*
அன்று இரவு உணவு சூடுபடுத்திய ஓட்ஸும், மீன் ஊறுகாயும். ருசி என்பது மறந்து ஆண்டுகளாகிறது. இப்போது உணவு என்பது தவிர்க்கவியலா ஒரு கடமை மட்டுமே.
“நாம தப்புப் பண்றோமா, நூதனா?”
“சரி, தப்பு எல்லாம் விடு. வேற வழி இருக்கா?”
“இந்த உடலைக் கையாளவே முடியலைல?”
“எத்தனை ஞானிக்கு விளையாட்டுக் காட்டியது! சும்மா சிக்கிடுமா?
“புத்தர், காந்தி மாதிரியா?”
“ஆமா. ஆனா அவர்களும் கூட சில காலம் இருந்துட்டு தானே வெளியேறினாங்க.”
“இதைக் கொன்று புதைக்க மாத்திரை இல்லையா?”
“இருக்கு. ஆனா எதுக்கு?”
“ம். சில சமயம் உறுத்துது. உடம்பு ஒரு சுமை.”
“அப்படி இல்ல. காமம் என்பதே மனதில் விளையாட்டு தான். உடல் வெறும் கருவி.”
“அப்படியா சொல்ற?”
“யோசித்துப்பார். உண்மையில் கலவியின் போதான முன்விளையாட்டுகளில் பாதிக்கு மேல் எந்த உடற்கிளர்ச்சியும் தருவதில்லை. அது எதிர்ப்பாலின உடலின் மீதான தன் அதிகாரத்தை உறுதி செய்வதன் போதை தான். அதன் மீது தனக்குள்ள உரிமையைப் பிரஸ்தாபிக்கும் பெருமிதம் மட்டுமே. உதாரணமாக என் மார்பை நீ சுவைக்கும்போது எனக்கு உணர்நரம்புகள் தூண்டப்படும், ஆனால் உனக்கு அப்படி எந்த நேரடிச் சுகமும் கிடையாது. ஆனால் அதை மிகுந்த ஆர்வத்துடன் செய்கிறாய். காரணம் என்னை, என் அந்தரங்கத்தை வெற்றி கொண்டு விட்ட நிறைவு தான். அப்புறம் என்னை இன்பத்தை நோக்கி அழைத்துப் போகும் கர்வமாக இருக்கலாம். அதைச் செய்கிற மிதப்பு. எப்படிப் பார்த்தாலும் பாலியல் திருப்தியில் பெரும்பான்மை ஈகோதான். அதனால்தான் காமம் மண்டைக்குள் உள்ளது என்கிறார்கள். இடுப்புக்குக் கீழே இருப்பது வெறும் ஸ்விட்ச்.”
“இப்படி ஏதாவது சுயசமாதானத்துக்குச் சாக்கு சொல்லிக்க வேண்டியது தான்.”
“டேய், எதையாவது குழப்பிக்காதே.”
“ம்.”
“சிவனுக்குக் கண்ணப்ப நாயனார் கண் ரெண்டையும் கொடுத்தாப்ல, இதுக்காக நான் கொடுத்திருக்கேன். அதுக்காவது மதிப்புக் கொடுத்து கொஞ்சம் நோண்டாம இருடா.”
“ஸாரி.”
“ஆஊன்னா இதொண்ணைச் சொல்லிடு.”
“ம்.”
“கொன்றால் பாவம் தின்றால் போச்சு. தின்னாம இருந்தாத்தான் தப்பாகிடும்.”
தினம் ஏதாவது சந்தர்ப்பத்தில் உரையாடல் அங்கே போய்க் கொண்டு தான் இருந்தது.
போலவே தினம் தவறாமல் கொன்ற பாவத்தைத் தின்று தீர்த்துக் கொண்டிருந்தார்கள்.
*
நவீன் அவள் மீதிருந்து எழுந்த போது நூதனாவுக்கு அம்மாவின் நினைவு வந்தது. மானசீகமாய் மன்னிப்புக் கோரினாள். விழியோரம் நீர் கசிந்து மணலை ஈரமாக்கியது.
நவீன் தன் ஆடைகளைப் பொறுக்கி எடுத்து, தட்டி அணிய முற்படுவதை உணர்ந்தாள்.
“நவீன்…”
“சொல்லு.”
“ட்ரெஸ் போடாதே.”
“மறுபடியுமா?”
“அடச்சீ… இல்ல.”
“அப்புறம்?”
“இனிமேல் நாம ட்ரெஸ் போட வேண்டாம்.”
“ஆ!”
“இந்த உலகில் இப்ப யாருமே இல்லை. உன்னையும் என்னையும் தவிர. ஆக, இது வரை நாம ட்ரெஸ் போட்டுட்டு இருக்க ஒரே காரணம் உன்கிட்ட என் உடம்பையும் என்கிட்ட உன் உடம்பையும் மறைச்சுக்கத் தான். இனி அதுக்கும் அவசியமில்லைல.”
“வாவ். ஆமா.”
தன் உடைகளைத் தூக்கிப் போட்டு விட்டு வந்து அவளை அணைத்து முத்தமிட்டான்.
நிகழ்ந்த கலவிக்கு நினைவாய் கழற்றிய உடைகளை மணலிலேயே விட்டு விட்டு நிர்வாணமாகவே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். குளிருக்கு உடல் பழகக் கொஞ்சம் நேரமெடுத்தது. நூதனா நவீனின் தோள் மீது சாய்ந்து கொண்டே வந்தாள். அவன் கரங்கள் அவள் இடையைச் சுற்றி வளைத்திருந்தன. அதில் உரிமையிருந்தது.
கடலலைகள் அவர்களின் உடைகளைத் தொடத்தொடர்ந்து முயன்று கொண்டிருந்தன.
*
அன்று தன்னை மெரீனா கடற்கரைக்குப் அழைத்துப் போகச் சொன்னாள் நூதனா.
நவீனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. சுமார் ஓராண்டு முந்தைய கசந்த சம்பவத்துக்குப் பின் அவர்கள் மெரீனா செல்வதே இல்லை. அதை நினைவுபடுத்த வேண்டாம் என்று நவீனும் அதைப் பற்றிப் பேச்செடுப்பதில்லை. ஆனால் இன்று அவளே கேட்கிறாள்.
வீட்டிலிருந்து நடந்து கண்ணகி சிலை சேர்ந்த போது இருட்டத் தொடங்கி இருந்தது.
இடையில் அவளுக்குக் கால் வலிக்கிறதென்றதும் சற்றும் யோசிக்காமல் அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தான். கடந்த ஆறு மாதங்களாய் - அவள் பார்வை இழந்ததில் இருந்து - அப்படித்தான். அவள் ‘ம்’ என்றாலே அவள் தேவையைப் புரிந்து கொண்டு அவளை உள்ளங்கையில் தாங்குகிறான். சில சமயங்களில் அவள் சொல்லாமலும்.
சிறுவயதிலிருந்து நூதனாவுக்கு மெரீனா தான் இஷ்டம்; நவீனுக்கு பெசன்ட் நகர். பெசன்ட் நகர் மெரீனாவை விட ஜனநெரிசல் குறைந்தும் ஒப்பிட்டால் மேலதிகச் சுத்தமாகவும் இருப்பதாகத் தோன்றும் நவீனுக்கு. மாறாக அந்தக் கூட்டம் தான் நூதனாவுக்குப் பிடிக்கும். மகிழ்ச்சி, துக்கம், கவலை, காமம் என்று விதவிதமான உணர்வுகள் ஒளிரும் முகங்கள். ஒரே முகத்தில் கணப்பொழுதில் ஒன்றிலிருந்து மற்றதற்குத் தாவும் வினோதமும் நிகழும். கடலும் அலையும் ரெண்டாம்பட்சம்.
இன்று மனிதர்களும் இல்லை; அவர்களைப் பார்ப்பதற்குக் கண்களும் இல்லை.
மனிதர்கள் மீதான அப்பிடிப்பு இல்லையென்றால் அவள் மருத்துவம் எடுத்திருக்க மாட்டாள். நூதனாவுக்கு கிண்டி பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியலும் சென்னை மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்தது. அவள் இரண்டாவதைத் தேர்ந்தாள். இறுதியாண்டு நுழையும் தருவாயில் தான் உலகம் சிதறிப் போனது.
அலைகள் அன்று சீற்றம் அதிகரித்துக் காணப்பட்டன. அதன் வீச்சு அவள் காதுகளை அச்சுறுத்தியது. அல்லது மனதின் சஞ்சலத்தால் நூதனாவுக்கு அப்படித் தோன்றியது.
அவள் நவீனின் கை பற்றிக் கொண்டு கடலில் கால் நனைத்தாள். முதல் அலையில் ஒரு ஜில்லிட்ட விரோதமும் அடுத்த அலையில் ஒரு ரகசிய அழைப்பும் இருந்தன.
அவள் தவறாமல் அந்த அலையின் அழைப்பை நவீனின் உள்ளங்கையில் அழுத்தித் தெரியப்படுத்தினாள். திடுக்கிட்டு நவீன் அவளைத் திரும்பி உற்றுப் பார்த்தாள். அவன் அப்படித் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து சின்னப் புன்னகையுடன் - அதில் அசலானவெட்கம் தடவியிருந்தது - லேசாய்க் தலையைக் குனிந்தாள். இத்தனை ஆண்டுகளில் நூதனா வெட்கப்பட்டு அன்று தான் பார்க்கிறான். நிலவொளியில் நூதனாவின் முகம் ஒரு தேவதைத்தனம் நிரம்பியதாய்த் தோன்றியது. குலதெய்வம் நினைவுக்கு வந்தது.
“ஆர் யூ ஷ்யூர்?”
“ம்.”
நவீன் சட்டென அவளை அள்ளியெடுத்துக் கொண்டு கரைக்கு வந்து கிடத்தினான். கடலும், நிலவும், காற்றும், வானும் அவர்களின் நிர்வாணத்துக்குச் சாட்சிகளாகின.
உலகின் கடைசி இரண்டு மனிதர்கள் மிக முதன் முறையாக அன்று கலந்தார்கள்.
*
நூதனா மெல்ல இருட்டுக்குப் பழகினாள். கால் நூற்றாண்டு காலமாய்ப் பழகிவிட்ட வெளிச்சத்தைக் கைவிடுவது அத்தனை சுலபமானதாய் இல்லை. நவீன் அவளுக்கு உதவினான். ஒவ்வொன்றாய்ச் சொல்லிக் கொடுத்தான். அவ்வப்போது எங்கேனும் இடித்துக் கொண்டாள். தடுமாறி விழுந்தாள். தளராமல் மீண்டெழுத்து முயன்றாள்.
ஆறு மாதங்களில் தனியே அவ்வீட்டுக்குள் உலவவும் தன் தினக்கடன்களைத் தானே பிசகின்றி முடிக்கவும் கற்றாள். நவீனின் மனநிலையைக்கூட அவன் அசையும் சப்தம் மற்றும் குரல் கொண்டே அறியப் பழகினாள். ஒருவகையில் அத்தனை ஆண்டுகளில் அல்லாது அவனது புதிய பக்கங்கள் அவளுக்குத் திறந்து கொண்டன. அதை மிகவும் ரசித்தாள். பார்வை என்பதே ஒருவகையில் கவனச் சிதறல் தான் எனத் தோன்றியது.
தன் அந்தரங்க மயிர்களைச் சிரைப்பது தவிர நூதனாவுக்கு அனைத்தும் வசப்பட்டது.
*
நவீன் கண் விழித்த போது சூரியன் உச்சிக்குப் போயிருந்ததை வீட்டுக்குள் நுழைந்த வெளிச்சத்தின் மூலம் உணர்ந்தான். முந்தைய நாள் மதுவின் நினைவில் இன்னும் தலை வலித்தது. கடைசியாய்த் தடுமாறித் தரையில் விழுந்தது நினைவுக்கு வந்தது. அவனது வாந்தியின் துர்நெடி நெடுநேரம் நாசியைத் தாக்கிக் கொண்டே இருந்தது.
இப்போது அவனறையின் கட்டிலில் கிடந்தான். எழுந்து வீட்டின் வரவேற்பறைக்கு வந்தான். தரை சுத்தப்படுத்தப்பட்டிருந்தது. அவனது உடைகளும் மாறியிருந்தன.
குற்றவுணர்வும் வெட்கமும் ஆக்ரமித்தன. பத்து வயது தாண்டி அவன் தாய் கூட அவனது நிர்வாணம் கண்டதில்லை. இப்போது நூதனா அவனுக்கு உடை மாற்றி இருக்கிறாள். சட்டென நூதனாவும் அதைப் பார்த்திருக்க முடியாதென உறைத்தது.
“குட்மார்னிங்.”
நூதனாவின் குரல் கேட்டுத் திரும்பினான். குளித்து முடித்துப் பளிச்சென்றிருந்தாள்.
“ம். ஸாரி.”
அவள் ஏதும் பேசவில்லை. இன்னும் அறையில் வாந்தியின் மணம் மிச்சமிருந்தது. நவீன் நடந்து போய் அறையின் ஜன்னல்கள் அத்தனையையும் திறந்து விட்டான்.
“நவீன்.”
“ம்.”
“இங்கே வா!”
அவளருகே போனான். மண்டியிட்டு அமர்ந்தான். அவன் தலையைக் கோதினாள்.
“எனக்கு உன்னோட கில்டி புரியுது நவீன். ஆனா அதுக்கு அவசியமே இல்ல.”
“ம்.”
“இது முழுக்க ரொம்ப கன்ஸ்ட்ரக்டிவான என் முடிவு. ரொம்ப யோசிச்சு எடுத்தது.”
“எதுக்காக?”
“உனக்காக, எனக்காக, நமக்காகத் தான்டா.”
“புரியல.”
“என்னால் ஒருபோதும் உன்னைப் பார்த்து…”
“…”
“அதனால் தான் கண்ணே வேண்டாம்னு.”
“கண்ணைக் கட்டிக் கொள்ளலாம் அல்லவா?”
“அது ஒரு சுயஏமாற்றாகத்தான் இருக்கும்.”
“ம்.”
“திருதராஷ்டிரனின் குருடும் காந்தாரி கண்ணைக் கட்டிக் கொண்டதும் ஒன்றா?”
“ம்.”
“எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடு. காயம் ஆறட்டும். மனமும்.”
“எந்த அவசரமும் இல்ல. நடக்கலனாலும் தப்பில்ல.”
“கண்ணெல்லாம் புடுங்கிட்டு ரிஸ்க் எடுத்திருக்கேன்டா. இப்ப வேண்டாம்ங்கற?”
கபடமின்றிச் சிரித்தாள். அவனால் சிரிக்க முடியவில்லை. முயன்றான். புன்னகை மன்னன் கமல் நினைவு வந்தது. திடீரென யோசனை வந்தவனாய்க் கேட்டான் -
“ஆனால் நான் இப்படி எல்லாம் குற்றவுணர்வு கொள்ளவில்லையே!”
“நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் நவீன்.”
*
சுத்தமாய் ஒரு மண்டலத்தில் நூதனாவின் கண் பார்வை முழுக்கப் பறிபோனது.
கொஞ்சம் கொஞ்சமாய் அவள் பார்வையை இழப்பதைக் கையாலாகாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு மாற்று மருந்து சொன்னால் எப்பாடு பட்டேனும் எடுத்து வருவதாக எத்தனையோ முறை அந்த நாட்களில் கெஞ்சிப் பார்த்தான். அவள் ஒரு புன்னகையை மட்டுமே தந்தாள். அது அவனை மேலும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது.
அவள் தன்னைத் தண்டிப்பதற்கு பதில் அவளை வதைத்துக் கொள்கிறாளோ என்று நினைத்தான் நவீன். குழப்பத்திலும் குற்றவுணர்விலும் சிக்கிக் கொண்டு தவித்தான்.
அவள் ஏதேனும் பொருளை எடுக்கத் தடவித் தடவி நகர்வதைப் பார்க்கும் போது கதவிடுக்கில் சுண்டுவிரல் சிக்கிக் கொண்டது போல் உயிர் வலித்தது நவீனுக்கு.
ஓரிரவு நவீன் ஏதோ ஒரு டாஸ்மாக் கடையை உடைத்துக் குடித்து விட்டு வந்தான்.
அவன் வீட்டுக்குள் நுழைந்ததுமே வாடை சூழ்ந்ததில் புரிந்து விட்டது நூதனாவுக்கு. இத்தனை ஆண்டுகளில் அவள் அறிந்து ஒருபோதும் நவீன் குடித்ததில்லை. லிக்கர் சாக்லேட் கூடத் தொட மாட்டான். வைன் சேர்த்த கேக் ஆகாது. அவ்வளவு ஆச்சாரம். அவனை அவளுக்கு முழுக்கப் புரிந்ததால் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்தாள்.
நூதனாவின் அமைதி மேலும் அவனை ஆத்திரப்படுத்தியது. கத்தத் தொடங்கினான்.
“உன்னால தான்டி நாயே எல்லாம்…”
“…”
“எதையாவது வாயைத் திறந்து சொல்லித் தொலை.”
“…”
“இந்த உலகத்துல இருக்கறது நீயும் நானும் தான். இல்லன்னா போயும் போயும் உன் கிட்டலாம் மானங்கெட்டுப் போய் கெஞ்சிட்டு நிப்பேனா? எல்லாம் என் தலை விதி.”
“…”
“நீ மருந்து குடிச்சு கண்ணை அவிச்சுக்கிட்டதுக்கு பதிலா எனக்கு விசம் கொடுத்து கொன்னுருக்கலாம்லடி நாயே. அப்ப ரெண்டு பேருக்குமே நிம்மதி ஆயிருக்கும்ல?”
“…”
“தேவடியா நாயே…”
அதுவரை அவன் பேசுவதைக் கேட்காதது போல் கண்டுகொள்ளாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்த நூதனா சட்டெனத் தலையைத் தூக்கி அவனைப் பார்த்தாள். அவளால் தன்னைப் பார்க்க முடியாது என்பதை அறிவான். ஆனால் அவள் கண்கள் தன்னைத் துளைப்பதைப் போல் உணர்ந்தான். ஏறி ஆட்டிய அத்தனை போதையும் இறங்கியது.
அதற்குத் தலைகீழ் விகிதத்தில் அவன் குடலிலிருந்து மேலேற, வாந்தி எடுத்தான்.
என்ன நடந்தது என்று புரிவதற்குள் அவனுக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. தானெடுத்துப் பரவியிருந்த வாந்திக்கு மிகமிக அருகில் குப்புற விழுந்து மயங்கினான்.
*
நூதனா அன்று சானிடரி நேப்கின்களோடு சில மருந்துகள் எடுத்து வரச் சொன்னாள்.
அவை என்ன மருந்துகள், அவளுக்கு என்ன பிரச்சனை எனக் கேட்க எண்ணினான் நவீன். ஆனால் கேட்கவில்லை. அவள் மீண்டும் வீடு திரும்பியதிலிருந்து அவளிடம் எதையும் கேட்கவே அஞ்சினான். மறுபடி எங்கேனும் சொல்லாது போய் விடுவாளோ என நினைத்தான். திரும்பவும் அவளற்ற தனிமையை எதிர்கொள்ளத் தயாரில்லை.
மாறாக அவளைத் தொந்தரவு செய்யாமல் இருந்து விடலாம். அதனால் அவளது விஷயத்தில் ஓர் ஊமைச் சேவகன் போலவே நடந்து கொள்ளத் தொடங்கினான்.
அதுவும் இந்த மாதிரி மருந்து விஷயங்களில் படிப்பை முடிக்காவிடிலும் அவளே ஒரு மருத்துவர் தான் என்பதால் அவன் தலையிடுவதோ தயங்குவதோ இல்லை.
அன்று நவீன் ஏழு கடைகளில் தேடியும் கிடைக்காமல் கடைசியில் ஆயிரம் விளக்கு பகுதியிலிருந்த ஒரு கடையிலிருந்து அவள் சொன்னவற்றைத் தேடிஎடுத்து வந்தான்.
“ஆனா நூதனா…”
“என்ன?”
“இது எல்லாமே எக்ஸ்பயரி முடிஞ்சது.”
“ரொம்ப நல்லதாப் போச்சு.”
தொன்னூறு நாட்கள் அந்த மாத்திரைகளைக் கவனமாக முறை வைத்து சாப்பிட்டாள். இரு வாரங்களுக்கொரு முறை கணக்கு எழுதி வைத்து ஊசிகள் குத்திக் கொண்டாள்.
அது முடிந்த பதினைந்தாவது நாள் நூதனாவின் கண் பார்வை மங்கத் தொடங்கியது.
*
மொத்த பூமியியிலும் தனித்திருந்த அந்த இரு மனித உயிர்களின் பொருட்டு இரவு சிருங்கார இசையைச் சூட்சம ரூபத்தில் அந்தப் பிரதேசத்தில் உலவ விட்டிருந்தது.
நவீன் வீட்டிலிருந்த அனாவசியங்களை ஒழித்துக் கொண்டிருப்பதை நூதனா பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது புஜங்களின் திரட்சியில் வியர்வை அரும்பி மினுங்கியது.
மனதுள் ஓர் ஒத்திகை நிகழ்த்திப் பார்த்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள் நூதனா -
“நவீன், நான் இங்கே திரும்பி வந்தது வெறும் உணவின் பொருட்டு மட்டுமில்லை.”
வேலையை அப்படியே நிறுத்தி விட்டு அவளைத் திரும்பிப் பார்த்துச் சொன்னான் -
“அன்புள்ள ரோஷக்காரியே, நீ அத்தனை பலகீனமானவள் இல்லை என்றறிவேன்.”
“வீட்டை விட்டு வெளியேறி நகரத்தில் திரிந்த நாட்களில் நானொரு பெண் என்பதை என்னுடல் உணர்த்திக் கொண்டே இருந்தது. உடல் என்றால் முழு உடல் கூட அல்ல. வெறும் பாதி. மற்ற பாதியைத் தேடிப் போ என உத்தரவிட்டுக் கொண்டே இருந்தது.”
“…”
“நான் ஆரம்பத்தில் அதை உதாசீனம் செய்தேன். பிறகும் அதிகரிக்கவே போராடிப் பார்த்தேன். பின் தோற்றேன். அதனிடம் சரணடைந்தேன். குறிப்பாய் விலக்காகும் நாட்களில் தாங்கவே முடியவில்லை. இறுதியில் வீடு திரும்ப முடிவெடுத்தேன்.”
“…”
“வாடா!”
நவீன் சற்று யோசித்தான். பிறகு கையிலிருந்த பொருட்களை அப்படியே போட்டு விட்டு வந்து தயக்கம் தோய்ந்ததொரு உடல் மொழியுடன் அவள் மீது பரவினான்.
நூதனா கண்களை மூடிக் கொண்டாள். மீண்டும் மீண்டும் அவள் பெயர் சொல்லி அழைக்கவே மெல்லக் கண்களைத் திறந்து அவனது முகத்தை உற்றுப் பார்த்தாள்.
சட்டென நினைவு வந்தது போல் நெஞ்சில் கைவைத்து அவனைத் தள்ளி விட்டாள்.
நவீனுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்றவன் பின் அமைதியாய் எழுந்து, சட்டையணிந்து வீட்டை விட்டு வெளியேறி நடந்தான்.
நூதனா கட்டிலில் உட்கார்ந்து கொண்டு ரொம்ப நேரம் அழுது கொண்டே இருந்தாள்.
*
அன்று நவீன் வீடு வந்த போது நூதனா இருந்தாள். அதாவது வீட்டிற்குத் திரும்பி வந்திருந்தாள். அவள் முன்பை விட மிக இளைத்திருந்தது தெளிவாய்த் தெரிந்தது.
கொஞ்சம் நேரம் நின்றவன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அவள் பதிலுக்குப் லேசாய்ச் சிரித்தாள். அவன் பேசட்டும் என்பது போல் அமைதியாய்க் காத்திருந்தாள்.
“எங்கே போனாய் நூதனா?”
“இங்கேயே தான்டா. சிட்டிக்குள்ளயே தான் சுத்தினேன்.”
“ம். ஏன் போனாய்?”
“இங்கே இருந்தால் உன்னைச் சுரண்டி விடுவேனோ என்ற பயம் தான்.”
“அப்புறம் ஏன் வந்தாய்?”
“பசி.”
அந்தப் பதிலில் அதிர்ந்தவன் அவசரமாய் ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டு அன்று அவனுக்குக் கிட்டியதை எல்லாம் அவள் முன் எடுத்து வைத்தான். பவ்யமாய் பயபக்தியுடன் கைகட்டிக் கடவுளுக்
July 13, 2020
ஜலப் பிரவேசம் [சிறுகதை]
காவல் ஆய்வாளர் மஞ்சுநாத்தின் செல்பேசி சிணுங்கிய போது அவரது மனைவியும் சிணுங்கத் தொடங்கியிருந்தாள். அவர் உதாசீனம் செய்யத் தீர்மானித்தாலும் அதன் அதீத ஒலியினால் எரிச்சலுற்று அவரது நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விட்டாள்.
மஞ்சுநாத் எழுந்து தன் லுங்கியைச் சீரமைத்துக் கொண்டு செல்பேசியைப் பற்றினார்.
பாகமண்டலா காவல் நிலையத்திலிருந்து தலைமைக் காவலர் பசவப்பா பேசினார். தன் குரலில் மரியாதையையும் அவசரத்தையும் சரிவிகிதம் கலந்தளிக்க முயன்றார். ஆனால் அதை எல்லாம் மீறிக் கொண்டு தார்வாட் கன்னடம் தான் நிரம்பி வழிந்தது.

“ஸார், ஒரு மிஸ்ஸிங் கேஸ். கன்ட்ரோல் ரூம்ல இருந்து தகவல்.”
“போய்ப் பார்த்துட்டு எஃப்ஐஆர் போட்டு வைங்க. காலைல பார்க்கிறேன்.”
“ஸார். லேடி…”
“வாரமொரு பொம்பள காணாமப் போகுதுய்யா கூர்க் மாவட்டத்துல.”
“இல்ல ஸார். அது வந்து…”
“அட, என்னய்யா?”
அந்தக் கடுப்பு பசவப்பாவிற்கானதா அல்லது ஜாக்கெட் ஹூக் சரி செய்து கொண்டு திரும்பிப் படுத்து விட்ட தன் பெண்டாட்டிக்கானதா என அவருக்கே தெளிவில்லை.
“ஹை ப்ரோஃபைல் கேஸ் ஸார். எப்படியும் மீடியா சீக்கிரம் வந்துடும்.”
“யாரு?”
“ஷ்யாமளா. தமிழ் ரைட்டர்.”
“போன வருஷம் பேங்களூர்ல இவர் மூஞ்சில ப்ளாக் இங்க் வீசினாங்களே?”
“அந்தம்மாவே தான்.”
“அவுங்க மதராஸ் தானே? எப்ப கொடகு வந்தாங்க?”
“தெரியல ஸார். இனிமே தான் விசாரிக்கனும்.”
“எந்த இடத்துல இருந்து மிஸ்ஸிங்?”
“தல காவேரி.”
“சரி, நான் ஒரு மணி நேரத்துல வந்திடறேன். நீங்க இப்பப் போய் ப்ரிலிமினரி என்கொய்ரி ஆரம்பிங்க. ஸ்டேஷன்ல ஆள் இருக்குல்ல? நைட் ட்யூட்டி யார்?”
பதிலுக்கு அக்கறைப்படாமல் தொடர்பைத் துண்டித்து அவசரமாய்க் குறுங்குளியல் இட்டுச் சீருடைக்கு மாறினார். மனைவியிடம் சொல்லிக் கிளம்பலாம் என அவள் புறம் திரும்பிய போது மெல்லிய குறட்டை ஒலி வெளிப்பட்டது. எதிர்ப்புறம் இருந்த சுவர்க் கடிகாரம் உறுத்தார். ஐந்து நிமிடங்கள் விரைந்து ஓடும் அதன் சிறிய முள் பத்திலும் பெரிய முள் பன்னிரண்டிலும் என நின்றன. வீட்டுச் சாவி தேடி எடுத்துக் கொண்டு வெளியே பூட்டிக் கிளம்பினார். குளிரும் இருளும் முகத்தில் அறைந்தன.
மஞ்சுநாத் தல காவேரி கோயில் வாயிலை அடைந்த போது ஏற்கனவே இரண்டு தேசிய தொலைக்காட்சிகளின் தொகுப்பாளினிகள் ஆங்கிலத்தில் மூச்சு விடாமல் கேமெரா முன் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கையிலிருந்த மைக்கும் அவர்கள் வாயசைவும் அந்த நேரத்தில் அவருக்கு வேறொன்றை நினைவூட்டின.
அவரது சீருடையைக் கண்டதும் அவசரமாய் மைக்கை நீட்டிக் கேட்கத் துவங்கினர். ஊடகங்களும் அதை விட அதிகமாய் ஆங்கிலமும் மஞ்சுநாத்துக்கு ஒவ்வாமை என்பதால் தெரிந்த, சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்த சம்பிரதாய பதிலை – “வீ ஆர் இன்வெஸ்டிகேட்டிங். வீ வில் சால்வ் இட் சூன்” - உதிர்த்து அவசரமாய் நகர்ந்தார்.
“இது சுற்றுலாத்தலம் அல்ல; புனிதத்தலம்” எனக் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எச்சரித்து போர்ட் வைக்கப்பட்டிருந்தது. இப்போது இது க்ரைம் சீன் என எண்ணிக் கொண்டார். இரண்டிரண்டாய்ப் படிகள் ஏறிப் போய் இடதுபுற ஓரமாய் ஷூக்களை கழற்றி விட்டார். படியெல்லாம் நனைந்திருந்து பெய்த மழையை நினைவூட்டின.
அங்கே பசவப்பாவுடன் வேஷ்டி சட்டை அணிந்து ஓர் ஆள் நின்று கொண்டிருந்தார். அவரைக் கொத்தாய்ப் பிடிக்க வேண்டும் எனில் கழுத்தை அல்ல, இடுப்பைத் தான் பிடிக்க வேண்டும் என்பது போல் இருந்தார். மஞ்சுநாத்தைப் பார்த்ததும் கும்பிட்டார்.
பசவப்பா அந்த அசந்தர்ப்பத்திலும் ப்ரோட்டோகால் தவறாமல் சல்யூட் வைத்தார்.
“ஸார். இவர் ராஜேந்திரன். ஷ்யாமளாவின் கணவர்.”
“அவுங்களுக்கு என்ன வயசு?”
“நாற்பத்தஞ்சு ஸார்.”
“எப்படி நடந்துச்சு?”
குளிரினாலோ பதற்றத்தினாலோ நடுங்கிக் கொண்டிருந்தவர் பேசத் தொடங்கினார்.
திடீரென முந்திய இரவு தான் ஷ்யாமளா உடனே தல காவேரி போக வேண்டுமென அவரிடம் கேட்டிருக்கிறாள். அவ்வளவு அவசரமாய்க் கிளம்புவதில் ராஜேந்திரனுக்கு விருப்பமில்லை என்றாலும் அவளை மறுத்துப் பேசுவது அவர்கள் தாம்பத்யத்தின் இருபத்தைந்து ஆண்டுகளில் வழக்கமில்லை என்பதால் அரைமனதாய் ட்ராவல்ஸில் கார் சொல்லி சென்னையிலிருந்து அதிகாலை கிளம்பி மடிகேரி வந்திருக்கின்றனர்.
மாலை வந்து சேர்ந்ததும் ஒரு ஹோட்டலில் அறையெடுத்துத் தங்கிச் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு நேராய்த் தல காவேரி கோயிலுக்குக் கிளம்பி வந்திருக்கின்றனர்.
*
காவிரி நதியின் ஊற்றென நம்பப்படும் அந்த நீர்நிலை, அதற்குத் தொடர்பின்றி ஒரு சொகுசு விடுதியின் நீச்சல் குளம் போல் அலட்டல் இன்றித் தளும்பாமல் கிடந்தது.
ஷ்யாமளா புதிதாய் ருதுவான பெண்ணின் தயக்கத்துடன் அடி மேல் அடி வைத்து தல காவேரி குளத்தைச் சுற்றி வந்தாள். அவள் ஆழ யோசனையில் இருக்கிறாள் எனத் தோன்றியது. அதனால் ராஜேந்திரனும் மௌனமாய் அவளின் பின் நடந்தார்.
குளத்தின் மறுபுறத்தில் நகரின் செழித்த அடுக்ககத்துள் இருக்கும் பூஜையறை போல் சன்னப் பரிமாணங்களில் ஒரு கோயில். அதில் பச்சைப் பட்டணிந்த காவேரம்மாவின் சிலை ஒளிர்ந்தது. அதன் முன்னால் ஒன்றரைக்கு ஒன்றரை அடியில் சதுரத்தில் ஒரு சிறியகுளம் “DO NOT TOUCH HOLY WATER” என்ற எச்சரிக்கை வாசகத்துடன் மிளிர்ந்தது.
அதில் தான் காவிரி நதியின் ஊற்று இருக்கிறது என்பது ஐதீகம். அதுவே தல காவிரி குளத்தையும் நிரப்புகிறது. பின்னர் பூமிக்குள் புகுந்து, மலைப் பாறைகளைப் பிளந்து ஊடுருவி சற்றுத் தள்ளி எங்கோ காவிரி என்கிற பேராறாகப் பெருகுகிறது. நதிமூலம்!
பகற்பொழுதில் கோயிலுக்கு மேல் கூரை வேயும் பணிகள் நடந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. செம்மை பீடித்த இரும்புச்சட்டகங்கள் எலும்புக்கூடு போல் நிறுவப்பட்டிருந்தன. மழைத்துளிகள் சிவப்பு ஆக்ஸைடின் சினேகத்திற்கு முயன்றன.
கடவுளுக்கான சமாச்சாரம் என்றாலும் மனித வேகத்தில் தானே வேலை நடக்கும்!
தல காவேரி குளத்தில் ஷ்யாமளா வலக் கால் வைக்கும் போது மணி எட்டே கால் இருக்கும். தென்மேற்குப் பருவக் காற்று மெல்லிசாய்த் தூறிக் கொண்டிருந்தது. நீரின் தட்பத்தை, பாதம் பட்ட கணம் நிகழ்ந்த ஷ்யாமளாவின் தோள்பட்டைச் சிலிர்ப்பிலே கண்டு கொண்ட ராஜேந்திரன் சளிப் பிடிக்குமென்றஞ்சி குளத்துக்கு வெளியே நின்று கொண்டார். இன்னொரு காரணமும் இருந்தது - நீரிழிவுப் போராளியான அவருக்கு சிறுநீர் முட்டிக் கொண்டிருந்தது. ஹோட்டல் அறையிலிருந்து கிளம்பி ஒரு மணி நேரம் தான் ஆகியிருக்கும் என்றாலும் அவ்வூரின் குளிர் அவரைப் பிதுக்கியிருந்தது. அப்புனிதக் குளத்தை அசுத்தப்படுத்த விரும்பாமல் அங்கேயே நிற்கத் தீர்மானித்தார்.
கார்மேகக் களியாட்டின் காரணமாக நிலா தட்டுப்படவில்லை. அந்நேரம் குளத்திலோ, அதைச் சுற்றியோ எவருமே இல்லை. பத்தாண்டுகளுக்கு முன் வந்த போது அச்சிறு கோயிலின் இடப்புறத்தில் ஒரு சட்டையற்ற பிராமணர் அமர்ந்து கொண்டு ஐம்பொன் தேக்கரண்டியில் காவிரித் தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார். அவரையும் காணோம்.
கண்ணுக்குப் புலப்படாத காற்று மட்டும் பெய்ய முயன்று கொண்டிருந்த மழையின் கழுத்தைத் திருகும் கவித்துவ ஆவேசத்துடன் அப்பிரதேசம் முழுக்கவும் சுழன்றது.
தூறல் சாரலாகிக் கொண்டிருக்க, கலங்காமல் தெள்ளியதாய்த் தேங்கியிருந்த நீருள் ஷ்யாமளா மெல்ல ஒவ்வொரு அடியாய் வைத்துக் குளத்தின் மத்தி வரை போனாள்.
“எதுக்கு அவ்வளவு தூரம் போறே ஷ்யாமளா? இங்கருந்தே முழுக்கு போடலாம்ல?”
ஷ்யாமளா அவரைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள். அவள் இப்போது குளத்தின் நடுவே நின்று கொண்டிருந்தாள். நடுவே என்றால் குளத்தினிரு எதிர்முனைகளுக்குக் கோடிழுத்தால் அவளை வெட்டிச் செல்லுமளவு துல்லியம். இப்போது ஷ்யாமளா தனது முடி முதல் அடி வரை முழு உடலும் நனையும்படி நீரில் முங்கி மீண்டாள்.
அகல் விளக்குகள் மட்டும் ஆங்காங்கே புள்ளிபுள்ளியாய் ஒளியூட்டிக் கொண்டிருந்த அவ்விரவில் கோயிலைப் பார்த்தபடி அவருக்குப் பின்புறத்தைக் காட்டி நின்றிருந்த அவளது உருவம் உருகும் பொன் போல் மினுங்கி அவருக்குக் கிளர்ச்சியூட்டியது. இருபத்தைந்து ஆண்டுகளாய் அவர் அங்குலம் அங்குலமாய்க் கண்ட உடல் தான் எனினும் ஏதேனும் கோணத்தில், ஒளியில், அசைவில் சிலிர்க்கத் தவறுவதில்லை.
அதே நேரம் கருவறையில் நின்றிருக்கும் அம்மன் சிலையின் பின்புறம் போலவும் தோற்றமளித்தது. குற்றவுணர்வு எழ காவேரம்மாவை நோக்கிக் கைகள் கூப்பினார்.
ஷ்யாமளா இரண்டாம் முறையும் நீரில் மூழ்கி எழுந்து நின்றாள். இப்போது அவளது உடல் சிறிதும் நடுங்கவில்லை என்பதை ராஜேந்திரன் மனதில் குறித்துக் கொண்டார். முதல் முறையை விடவும் சற்றுக் கூடுதல் நேரம் அவள் நீருக்குள் இருந்ததையும்.
ஷ்யாமளா மூன்றாம் முறை தண்ணீருக்குள் சென்றாள். அவள் தலை வெளியே வரக் காத்திருந்தார் ராஜேந்திரன். முழுதாய் ஒரு நிமிடம் ஒழிந்திருக்கும். அவள் வெளியே வரவில்லை. சற்றுப் பதற்றத்துடன் அவள் நின்று கொண்டிருந்த இடத்தை உற்றுப் பார்த்தார். அந்த இடத்தைச் சுற்றியுள்ள நீரில் பார்த்தார். குளம் முழுக்கப் பார்த்தார். குளத்தின் கரைகளிலும் பார்த்தார். அவளைக் காணவில்லை. எங்கும் தெரியவில்லை.
“ஷ்யாமளா!”
“ஷ்யாமளாஆ…”
பதில் இல்லை. இப்போது குளத்தைச் சுற்றிவந்தார். குளத்தில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே காணோம். சிறு அசைவு கூட இன்றி குளம் சமர்த்தாய்ப் புன்னகைத்தது.
ராஜேந்திரன் உரத்த குரலில் உதவி கேட்டபடி படியேறி மேலே ஓடினார். கோயிலின் பூசாரி போலிருந்தவர் அவசரமாய் ஓடி வந்தார். பிறகு கழிவறைகள் உட்பட கோயில் வளாகம் முழுக்கத் தேடியும், வாசலில் நின்ற, அவர்கள் வந்த டாக்ஸியில் பார்த்தும், வெளியிலிருந்த பூசைச் சாமான் கடையில் விசாரித்தும் எந்தத் துப்பும் கிட்டவில்லை என்றதும் தான் கோயில் அர்ச்சகர் நூறுக்குத் தொலைபேசி விஷயத்தைச் சொன்னார்.
*
இத்தனையும் கோர்வையாய் ராஜேந்திரன் சொல்லி முடித்து மூச்சு வாங்கியது. அவர் முகத்தில் சோகமிருந்ததா இல்லையா என மஞ்சுநாத்துக்கு இருளில்புலப்படவில்லை.
துடிப்பான உள்ளூர் இளைஞர்கள் இருவர் வரவழைக்கப்பட்டு அரை மணி நேரமாய் அக்குளம் துப்புரவாய்ச் சலிக்கப்பட்டது. காலியான பெப்ஸி டின் ஒன்றும் ஓர் இற்றுப் போன அரைஞாண் கொடியும் பாலிதீன் உறைகளும் தவிர வேறேதும் சிக்கவில்லை.
மஞ்சுநாத் தல காவேரி கோயில் பிராமணரை விசாரித்தார். சம்பவம் நடந்த சமயம் தான் குளத்தின் அருகே இல்லை என்றும் அருகிலுள்ள அகத்தீஸ்வரர் சன்னதிக்கு நடை சாத்துவதற்கு முந்தைய அர்த்த யாம பூஜை செய்யப் போயிருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அக்குளத்தில் ஐந்தாறு ஆண்டுகளாய்ப் புழங்குகிறவர் என்ற அடிப்படையில் பொதுவான சில விஷயங்களைத் தன் அவதானிப்பாகச் சொன்னார்.
“இந்த ஸ்தலம் ஓர் அடையாளம் மட்டுமே. குளத்தின் அதிகபட்ச ஆழமே ஐந்தடிக்கு மேல் இல்லை. இதிலிருந்து தண்ணீர் சில துவாரங்கள் வழி பூமிக்குள் ஊடுருவுவது நிஜமே. ஆனால் ஒரு மனுஷி அதற்குள் போவது சாத்தியமில்லை. தமிழ் நாட்டின் கோயில்களில் காணப்படுவது மாதிரி பெரிய தெப்பக்குளம் இல்லை இது. ஒருவரின் கண் பார்வைக்குள் அடங்கி விடும் சிறிய குளம். இங்கே எப்படி ஒருவர் மூழ்கிப் போக முடியும்? அதுவும் அவரது உடல் கூடக் கிடைக்கவில்லை. இருட்டு என்பதால் அவர் குளத்தின் அந்தப் பக்கத்தில் மேலே ஏறிப் போனது தெரியாமல் இருக்கலாம். தொடர்ந்து தூறலாய் மழை பெய்து கொண்டிருந்ததால் காலடித்தடமும் இருக்காது.”
கடல் மட்டத்திலிருந்து நாலாயிரத்துச் சொச்சம் அடிகள் மேலேறி வந்து ஒருத்தி காணாமல் போயிருப்பதை மஞ்சுநாத் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தார்.
*
ஷ்யாமளா ஜெயமஹால் பேலஸ் மைதானத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாக்காரர்கள் அமைத்திருந்த தற்காலிக அரங்குக்குள் நுழைந்த போது பெங்களூர் மாநகரம் அவள் எதிர்பார்த்த அளவுக்குக் குளிராய் இல்லை. எதிர்ப்பட்ட புத்தகக் கடையில் மரியாதை நிமித்தம் நின்று ஓரிரு புத்தகங்களை எடுத்துப் பார்த்து விட்டு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நேரமாயிற்று என நினைவூட்டியதும் கிளம்பி, புல்வெளிகளைக் கூச்சத்துடன் மிதித்து நடந்து நிகழ்ச்சி நடக்கும் அரங்கை நோக்கி நடக்கத் தொடங்கினாள். நாற்பத்தி நான்கு வயது என்று அவளே ஒப்புக்கொண்டாலோ விக்கிபீடியாவில் தேடியறிந்தாலோ ஒழிய எவரும் அவளைப் பார்த்து மட்டும் சொல்லி விட முடியாது என்ற மாதிரியான நடை.
நான்கு புகைப்படக்காரர்கள் அவளுக்குப் பின்னிருந்து முன்னால் ஓடி வந்து அவளது பிம்பத்தை மைக்ரோ எஸ்டி கார்டில் சேமித்துக் கொண்டார்கள். அவர்களோடே ஓடி வந்த ஒருவன் தன் கையில் மறைத்திருந்த திரவத்தை அவளது முகத்தில் எறிந்தான்.
ஷ்யாமளா அதிர்ந்து அவ்விடத்திலேயே முகத்தைக் கைகளால் பொத்திக் கொண்டு நின்று விட்டாள். திராவகம் என்றே எண்ணினாள். முதலில் அவளது கவலை தன் கண்களுக்கு ஏதும் ஆகிடக்கூடாது என்பதாகவே இருந்தது. அவை எரிந்து அவளது அச்சத்தைக் கூட்டின. பிறகு முகத்தில் வேறெங்கும் வலியோ எரிச்சலோ இல்லை என்பதை உணர்ந்தாள். அவளது நாசியில் நுழைந்த அதன் மணத்தைப் பிரித்தறிய முனைந்தாள். பேனா மசி. முகம் மூடிய கைகளிரண்டையும் விரித்துப் பார்த்தாள்.
முகத்தில் வீசிய மசி கைகளிலும் பிரதியாகி இருந்தது. அடர்த்தியான கருப்பு நிறம்!
அதற்குள் அவள் மீது மசி வீசியவனை அங்கிருந்த ஓர் ஆணும் இரு பெண்களும் மடக்கிப் பிடித்து வைத்திருந்தனர். அவன் திமிறிக் கொண்டு கோஷம் எழுப்பினான்.
“ஜெய் ஸ்ரீராம். ஹிந்துஸ்தான் ஸிந்தாபாத். பாரத் மாத்தா கீ ஜே!”
அப்போது அங்கே பாதுகாப்புக்கு வந்திருந்த காவலர் ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டார். அங்கிருந்தோர் ஷ்யாமளாவைச் சூழ்ந்து கொண்டு நலன் விசாரித்தனர்.
“மேடம், நேரா நடந்தா ரெஸ்ட் ரூம். அங்கே போய் க்ளீன் பண்ணிட்டு வந்திடலாம்.”
ஷ்யாமளா தன் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி, துரிதமாய்த் துடிக்கும் இருதயம் இயல்புக்குத் திரும்பக் காத்திருந்து, தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு யோசித்தாள்.
இதற்குச் சில நிமிடங்கள் பிடித்தன. அதற்குள் யாரோ தண்ணீர் அடைத்த புதிய நெழிகிக் குடுவை ஒன்றைப் பிரித்து நீட்டினார்கள். அதை வாங்கி அருந்தி விட்டு, அங்கேயே வாயைக் கொப்பளித்து விட்டுப் பின் உறுதியான குரலில் சொன்னாள்.
“நான் இப்படியே, இதே முகத்தோடே நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.”
“மேடம்…”
“எஸ். லெட்ஸ் கோ.”
சொன்னது போல அப்படியே போய் மேடையேறினாள் ஷ்யாமளா. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை இந்தி, இந்து என்கிற ஒற்றை மொழி, ஒற்றை மதத்தின் வழி எப்படி இன்றைய ஆட்சியாளர்கள் தட்டையாக ஆக்குகிறார்கள் என்று அன்று அவள் அற்புதமான ஓர் உரை நிகழ்த்தினாள். ட்விட்டர், ஃபேஸ்புக்கில் #WeStandWithShyamala என்ற டேக் இரு தினங்கள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது.
பாரத மாதாவின் செழிப்பை அழித்து மலடி ஆக்குகிறார்கள் என்று அவள் சொன்ன வாக்கியம் கார்டூன்களாகப் பரிணமித்தது. கருப்பு மசி காய்ந்துறைந்த முகத்துடன் ஆவேசமாய் விரல் நீட்டியபடி ஷ்யாமளா பேசும் புகைப்படம் டைம் இதழின் ஆசியப் பதிப்பின் அட்டைப் படத்தில் இடம் பெற்றது. ஷ்யாமளா ஒரே நாளில் சர்வதேச அளவில் புகழடைந்தாள். இயல்பாகவே அவளை வெறுப்போரும் கூடிப் போனார்கள்.
*
ஷ்யாமளா காணாமல் போன போது அணிந்திருந்த உடுப்புகள் பற்றிய விவரத்தையும் அவளது தெளிவான, சமீபத்திய, அதிதுல்லியப் புகைப்படங்களென நான்கைந்தையும் ராஜேந்திரனிடமிருந்து வாட்ஸாப்பில் பசவப்பா வாங்கிக் கொண்டார். அன்றைய மாலை தல காவேரியின் நுழைவாயில் தூணருகே நின்று அவள் தனியே எடுத்துக் கொண்ட நிழற்படமே இருந்தது. கொடகு மாவட்டம் முழுக்க அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் நெடுஞ்சாலை சோதனைச் சாவடிகளுக்கும் அனுப்பப்பட்டன.
மறுநாள் காலை சிவந்த கண்களுடன் மஞ்சுநாத் காவல் நிலையத்திற்கு வந்த போது சாதகமான எந்தத் தகவலும் கிடைத்திருக்கவில்லை. தலை வலித்தது. டீ சொன்னார்.
டிஎஸ்பி நாகே கௌடா மஞ்சுநாத்தை அழைத்து ஒவ்வொன்றாக விசாரித்தறிந்தார்.
“ஸார், தல காவேரி குளத்திலிருந்து நீர் காவிரி நதிக்குச் செல்வது உண்மை தான் என்றாலும் அதில் ஓர் மனித உடல் நழுவிச் செல்வது சாத்தியமில்லை. அதனால் ரெண்டு விஷயம் தான் சாத்தியம். ஒன்று ஷ்யாமளாவே குளத்திலிருந்து வெளியேறி எங்கோ போயிருக்க வேண்டும். அல்லது யாரோ அவரைக் கடத்திச் சென்றிருக்க வேண்டும். இருட்டு அதிகம் என்பதால் ராஜேந்திரனுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது அவர் நம்மிடம் பொய் சொல்கிறார். இனிமேல் தான் விசாரிக்க வேண்டும்.”
“தல காவேரியின் துவாரங்களில் உடல்போகாது, ஆனால் ஆன்மா போகுமில்லையா?”
டிஎஸ்பி நகைச்சுவை செய்கிறாரா அல்லது தீவிரமாய்ச்சொல்கிறாரா என்பது சரியாக புரியாததால் மஞ்சுநாத் மழுப்பலாகச் சிரித்து வைத்தார். பேசி விட்டுத் தொடர்பைத் துண்டித்ததும் ஆறிக் கொண்டிருந்த தேநீர்க் குவளையை எடுத்து உதட்டில் வைத்தார்.
மீண்டும் ஒருமுறை பகல் வெளிச்சத்தில் போய் தல காவேரி குளத்தை ஆராய்ந்தார். உருப்படியாய் ஏதும் சிக்கவில்லை. அப்பிராந்தியத்தைச் சுற்றிலும் வனம். அதற்குள் நுழைந்திருந்தால் அல்லது நுழைந்து வெளியேறி இருந்தால் எப்படிக் கண்டுபிடிப்பது?
*
‘கொங்குதேர்’ – தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும் மனோரஞ்சிதம் வார இதழில் ஐந்தாண்டுகளாய் ஷ்யாமளா எழுதும் தொடர்கதை அது. ஆண்டுகொன்றாய் மொத்தம் ஐந்து பாகங்கள். ஒவ்வொரு வாரமும் மிகப் பிரபல ஓவியர் வரைந்த ஓவியத்துடன் வெளியானது. அது வாசகர் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற தொடர்.
ஆரம்பித்த இரண்டு மாதங்களில் பத்திரிக்கையின் விற்பனை இரண்டு மடங்கானது. அதனால் வாரம் நான்காயிரம் ரூபாய் என ஆரம்பிக்கப்பட்ட எழுத்தாளர் சன்மானம் ஆறே மாதங்களில் பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அது சமகாலத் தமிழ்ப் பத்திரிக்கை உலகில் எந்த எழுத்தாளரும் எந்தப் பத்திரிக்கையிலும் பெறாத தொகை.
ஷ்யாமளா தொடரை எழுத வரும் போது இரண்டு நிபந்தனைகள் விதித்தாள். தான் எழுதி அனுப்புவதில் ஒரு சொல் கூட மாற்றக்கூடாது, பிழை திருத்தம் செய்வதாய் இருந்தாலும் அவளிடம் கேட்டு அனுமதி பெற்ற பிறகே செய்ய வேண்டும் என்பது முதலாவது. இரண்டாவது தொடரைக் குறுக்கவோ நீட்டிக்கவோ வற்புறுத்தக் கூடாது, ஒருவேளை இடையில் வாசகர் கருத்துப்படி தொடர் வெளியிடும் பத்துப் பக்கங்களில் வேறு விஷயம் வந்தால் வியாபாரத்துக்கு நல்லது எனத் தோன்றினாலோ ஏதேனும் எதிர்ப்புகள், மிரட்டல்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என எண்ணினாலோ தாராளமாய்த் தொடரை நிறுத்திக் கொள்ளலாம், ஷ்யாமளா தனது வலைதளத்தில் மீதித் தொடரை வெளியிட்டுக் கொள்வார் - இது இரண்டாவது நிபந்தனை. அனுபவம் மிக்க அதன் தலைமை ஆசிரியர் மார்த்தாண்டம் இரண்டையுமே ஏற்றுக் கொண்டார்.
இரண்டிலுமே மீறும் சந்தர்ப்பம் ஒருமுறை கூட ஐந்தாண்டுகளில் நடக்கவில்லை. சிறிய எழுத்து மற்றும் தகவற்பிழைகளை மட்டும் அவளிடம் கேட்டுச் சரி செய்து கொண்டார்கள். ஒரு வாரம் கூட தொடர் தடைபட்டதில்லை. ஷ்யாமளா உடல் நலம் குன்றியிருந்த போது கூட தவறாமல் அத்தியாயத்தை அனுப்பி விடுவாள். இடையில் கலைஞர் மறைவின் போது அவரை நினைவு கூரும் வகையில் சிறப்பிதழாக அதே விலையில் ஆனால் கூடுதல் பக்கங்களுடன் முழு வண்ணத்தில் மனோரஞ்சிதம் வெளியானது. அதில் வாரத் தொடர்களாய் வந்து கொண்டிருந்த எந்த விஷயமும் இடம் பெறவில்லை, ஷ்யாமளாவின் தொடர் தவிர. மார்த்தாண்டத்திடம் ஷ்யாமளா கொண்டிருந்த செல்வாக்கு என்றுமதைக் கொச்சையாய்த் திரித்துக் கிசுகிசுத்தார்கள்.
அது பொதுவிடத்தில் பட்டப் பகலில் நிகழும் ஒரு சாதி ஆணவக் கொலை பற்றிய கதை. அதில் சம்மந்தப்பட்ட அத்தனை பேரின் எண்ணங்களும் செயல்களும் விரியும் நாவல். இறந்தவன், அவன் மனைவி, இருவரின் பெற்றோர், உறவினர்கள், சாதிக் காரர்கள், போலீஸ்காரர்கள், இரு சாதியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள், ஊடகங்கள், வழக்குரைஞர்கள், நீதிமன்றம், கொன்ற கூலிப் படையினர், கொலையை வேடிக்கை பார்த்தோர் என எல்லோரின் உளவியலும் நியாய தர்மமும் துல்லியமாய்ப் பேசப் பட்டிருக்கும். கிட்டத்தட்ட அது ஒரு சமூகவியல் ஆய்வாகவே அமைந்தது. நாவலின் முதல் பாகத்துக்காக சாஹித்ய அகாதமி விருது பெற்றாள் ஷ்யாமளா. ஒரு தனியார் பல்கலைக்கழகம் அந்நாவலுக்காக அவளுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் அத்தனை எல்லா ஆணவக் கொலைகளையும் ஆராய்ந்தே ஷ்யாமளா அதை எழுதினாள். தருமபுரி இளவரசன் மரணம் நடந்த போது தான் ஆரம்பிக்கப்பட்ட தொடர். இடையே, தொடரை அவள் எழுதிக் கொண்டிருக்கும் போதே நாமக்கல் கோகுல்ராஜ், உடுமலைப்பேட்டை சங்கர் என ஆணவக் கொலைகள் நடந்தன. அந்த எல்லாவற்றின் சாயலையுமே அவர் நாவலுக்குள் கொண்டு வந்தாள். எந்த அச்சமுமின்றி நாவலில் சாதிப் பெயர்களை நேரடியாகப் பயன்படுத்தி இருந்தாள்.
அவை எல்லாம் சேர்ந்து கொண்டு நாவலுக்கு ஒரு காவியத்தன்மையை அளித்தது. அதன் கதாபாத்திரங்கள் வாசக மனங்களில் அமரத்துவம் எய்தினர். குழந்தைகளுக்கு கொங்குதேர் நாயகன் நாயகி பாத்திரப் பெயர்கள் சூட்டுமளவு வாசகர்கள் போனார்கள்.
சமூக அவலங்களைப் பிரச்சாரத் தொனியின்றி எளிமையான வெகுஜன மொழியில் எழுதியதே ஷ்யாமளாவின் சிறப்பாக இருந்தது. அவள் கதைகளில் ஆழமான தத்துவ தரிசனங்கள் இருந்தன. அதே சமயம் கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத சுவாரஸ்யத்தையும் தாங்கியிருந்தது. அவரவர்க்கு வேண்டியதை அவரவர் எடுத்துக் கொண்டார்கள். சில விமர்சகர்கள் அவளைப் ‘பெண் ஜெயகாந்தன்’ என்றழைத்தார்கள். (ஜெயகாந்தன் ஞானபீடம் வென்ற, 70, 80களின் தமிழின் ஜாம்பவான் படைப்பாளி.)
ஷ்யாமளா தன் எழுத்தின் மூலம் நிகழ்த்தியது ஒரு சமூக யுத்தம். பல எதிர்ப்புகளை மீறி மனோரஞ்சிதம் பத்திரிக்கை அவளுக்குத் துணைநின்றது. இந்த யுத்தத்தில் அவள் தன் சொந்தச் சாதியையும் பகைத்துக் கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் சாதிய எதிர்ப்புக் குரல்கள் ஆதிக்க சாதிகளுக்குள் இருந்து தான் வர வேண்டியது இன்றைய தேவை என நம்பினாள். இவ்விஷயத்தில் கணவருடன் கூட அவளுக்கு மனஸ்தாபம் இருந்ததாக ஒரு பேச்சு இருந்தது. அவள் உயிருக்கு எப்போதுமே ஆபத்து இருந்தது.
அவள் வீட்டில் கல் எறிந்தார்கள். தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார்கள். வழக்குப் போட்டு நீதிமன்றம் இழுத்தடித்தார்கள். வாக்கு வங்கியைக் குறி வைத்த மாநில அரசு அவளுக்கு ஆதரவாய் நிற்கவில்லை. சாதி வெறி அமைப்புகள், இந்துத்துவ உதிரி அமைப்புகளுடன் கைகோர்த்துக் கொண்டன. போலீஸ் பந்தோபஸ்த் கேட்ட அவளது விண்ணப்பத்தை நிராகரித்தார்கள். எல்லாவற்றையும் கையாண்டாள் ஷ்யாமளா.
‘கொங்குதேர்’ எழுதும் போது அவள் வேறேதும் எழுதவில்லை. ஒரு கவிதை, ஒரு சிறுகதை, ஒரு கட்டுரை, இலக்கியத்தில் நீத்தோர்க்கு ஒரு சிறுஅஞ்சலிக்குறிப்பு கூட எழுதவில்லை. ஆனால் சில போராட்டங்களில் மரியாதை நிமித்தம் தேர்ந்தெடுத்துக் கலந்து கொண்டாள். இலக்கிய விழாக்களில் பேசினாள். நேர்காணல்கள் தந்தாள்.
நாவலின் பாகங்கள் தமிழில் வெளிவந்த சில மாதங்களிலேயே ஆங்கிலத்திலும் கூட வெளிவந்தன. நாடெங்கும் கொங்குதேர் சாதிய, மதவாத எதிர்ப்பின் அடையாளமாகிப் போனது. அதனால் இந்திய அளவிலேயே வேரூன்றி வந்த வலதுசாரி அரசியலுக்கு ஓர் அச்சுறுத்தலாக ஷ்யாமளா பார்க்கப்பட்டாள். அதன் சிறு எதிர்வினையாகத்தான் பெங்களூரில் நடந்த இலக்கிய விழாவில் இந்துத்துவ உதிரி அமைப்பின் அடியாள் அவள் முகத்தில் கருப்பு மசி வீசினான். அந்த முகத்தோடே அவளாற்றிய உரையின் இறுதி வரி பிரபலமானது. திரும்பத் திரும்ப விமர்சகர்களால் நினைவு கூரப்படுவது.
“என் முகத்தில் வழியும் கருப்பில் தொனிக்கும் அவலட்சணம் என்னுடையதா என்ன!”
*
ஷ்யாமளா காணாமல் போய் முழுதாக 24 மணி நேரம் ஓடி விட்டது. அவள் பற்றி ஆங்கிலத்தில் கிடைக்கும் குறிப்புகளை சேகரித்துத் தர பசவப்பாவிடம் கேட்டிருந்தார் மஞ்சுநாத். சில மாதம் முன்பு டெக்கான் க்ரோனிக்கிள் இதழின் ஞாயிறு இணைப்பான சன்டே க்ரோனிக்கிளில் ஷ்யாமளா பற்றி வந்த ஒரு கட்டுரையைத் தான் மஞ்சுநாத் வாசித்து முடித்திருந்தார். (ஆங்கிலத்தில் ‘She’ என்ற பிரயோகத்திற்கு ‘அவள்’ எனப் போட்டுக் கொண்டிருந்தார்.) ராஜேந்திரனை மீண்டும் விசாரணைக்கு அழைத்திருந்தார்.
அவரது ஒற்றை நாடித் தேகம் கூடுதலாய் ஒரு சுற்று இளைத்திருந்ததாகப் பட்டது. அன்றைய காலை சவரம் செய்யாத முகத்தில் வெள்ளி ரோமங்கள் எட்டிப் பார்த்தன.
“என்ன ஆகியிருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க மிஸ்டர் ராஜேந்திரன்?”
“ரைட் விங்னால கொல்லப்பட்டவங்க, மிரட்டப்பட்டவங்க கடந்த அஞ்சு வருசத்துல நிறையப் பேர். ஷ்யாமளாவுக்கும் அப்படி ஏதும் ஆகியிருக்குமோன்னு தான் பயம்.”
“ஆமாவா?”
“அப்படித்தான் தோனுது. அதுவும் இந்த ஸ்டேட்ல நடந்திருக்கறது இன்னும் அதிகமா அப்படி நினைக்கத் தூண்டுது. இங்கே முன்பு அப்படி நிறைய நடந்திருக்குங்கறது தான் காரணம். ஷ்யாமளாவை வெறுக்கறவங்க ரொம்ப அதிகம். அவள் எழுதாம இருந்தா சந்தோஷப்படறவங்க நிறையப் பேர். ஷ்யாமளா உண்மையில் பலருக்கு உறுத்தல். கண்ல விழுந்த தூசு மாதிரி. அவளை யாராவது கடத்திப் போயிருக்கலாம் அல்லது…”
“அல்லது?”
“யூ நோ வாட். அதை ஏன் என் வாயால சொல்லனும்?”
“ஓக்கே. ரிலாக்ஸ். சில ரொட்டீன் பெர்சனல் கொஷின்ஸ்.”
“ப்ரொசீட்.”
“ஷ்யாமளாவுக்கு ஹெல்த் எப்படி?”
“அதெல்லாம் ஏதுமில்ல. சுகர், பிபி இருந்தது. ஆனா ரெண்டுமே கன்ட்ரோலில் தான் இருந்துச்சு. உடம்புக்கு ரொம்ப முக்கியத்துவம் தருவா. தினம் ரெண்டு வேளை நடை. உணவுகளில் கறாரான கட்டுப்பாடு. வருஷமொரு தரம் தனக்கும் எனக்கும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் ஏற்பாடு பண்ணிடுவா. அவளைப் பார்த்து யாரும் வயசைச் சொல்ல முடியாது. நாங்க சேர்ந்து நடந்தாலே ஷ்யாமளா என் வைஃப்னு சொல்ல முடியாது.”
“பீரியட்ஸ் பிரச்சனை, வயித்து வலி ஏதாவது?”
“நாலு மாசம் முன்பு தான் அவளுக்கு மெனோபாஸ் ஆச்சு. அதுக்கு முன்பு எப்பவும் ரெகுலர் தான். கொஞ்சம் சோர்வா இருப்பா. மத்தபடி பெரிய அலட்டல் இருந்ததில்ல. சொல்லப் போனா எரிஞ்சு விழக் கூட மாட்டா. She just isolate herself during those days.”
“உங்களுக்குள் ஏதாவது சண்டை?”
“குறிப்பிடும்படியா ஏதும் இல்ல.”
“குறிப்பிடாதபடி ஏதாவது இருந்தாலும் சொல்லுங்க.”
“புரியல.”
“உங்களுக்குள் சமீபமாய் ஏதாவது வாக்குவாதம்? சண்டைகள்?”
“இல்லை. அப்படி ஏதும் இல்லை.”
“சின்னதாக இருந்தாலும் சரி.”
“சின்ன சச்சரவுகள் இருக்கத் தான் செய்தன. அது எந்த கணவன் மனைவிக்குள்ளும் இருக்கக்கூடியவை. அதைப் பொருட்டாக எடுத்தால் உலகில் எல்லா மனைவிகளும் காணாமல் போய்க்கொண்டிருக்க வேண்டும். I believe it is not worthy to mention here.”
“சின்னது பெருசுங்கறதுல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோடு.”
“அது உண்மை தான்.”
“சரி. சின்ன சண்டைக்கு ஓர் உதாரணம் சொல்லுங்க.”
“ஒரு முறை எங்க வீட்டில் கல் எறிஞ்சாங்க. கொங்குதேர் எழுதினதுக்காக. வாரம் ஒரு முறையாவது ஃபோன்ல மிரட்டல் வரும். அசிங்கமாப் பேசுவாங்க. ஒரே முறை அவ கிட்ட நமக்கு இதெல்லாம் தேவையான்னு கொஞ்சம் கடுமையாக் கேட்டேன். ஆனா அதைக் கூட அவ பொறுமையாத் தான் எடுத்துக்கிட்டு எனக்கு விளக்கினா.”
“அந்த நாவல் படிச்சீங்களா? உங்களுக்கு நியாயமாப் படுதா அவுங்க எழுதினது?”
“இதுவரை ஷ்யாமளாவோட ஒரு சொல் கூடப் படிச்சதில்ல. இனியும் படிக்கறதா இல்ல. ஆர்வமும் நேரமும் இல்லங்கறது முதல் காரணம். கார்மெண்ட் பிசினஸ் என்னோட மொத்த நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சிடுச்சு. இரண்டாவது காரணம் எங்கள் நிம்மதியான வாழ்க்கைக்கு அவள் எழுத்துக்களைத் தவிர்ப்பது தேவைன்னு கல்யாணமான புதுசுலயே எனக்குத் தோனிடுச்சு. அதனால அப்படியே இருந்துட்டேன்.”
“சோ அவர் ரைட்டிங் பத்தி ஒண்ணும் பேசினதே இல்ல அவர்கிட்ட?”
“கல்யாணமான புதுசுல ஷ்யாமளா கிட்ட கேட்டிருக்கேன் பெண் எழுத்தாளர்கள் எல்லாம் தங்கள் பேருக்குப் பின்னால் புருஷன் பேரைப் போட்டுக்கறாங்களே, நீ அதெல்லாம் செய்ய மாட்டியா அப்படினு. நானென்ன குடும்ப நாவலா எழுதறேன், அப்படின்னு பதிலுக்குக் கேட்டா. எனக்கு அது புரியல. இப்ப வரைக்கும் கூட.”
“ரைட்டரா ஷ்யாமளாவுக்கு ஒரு பிம்பம் இருக்கு. பெர்சனல் லைஃப்ல எப்படி?”
“ஷ்யாமளா நல்ல மனைவியா, நல்லா அம்மாவா, மிக நல்ல குடும்பத் தலைவியா இருந்தா. இதுக்கெல்லாம் அப்புறம் தான் எழுத்துக்கு நேரம் ஒதுக்கினா. இதை நான் சொல்லாமல் அவளே செஞ்சா. அவள் கல்லூரி முடிச்ச மறுவருஷமே எங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. அப்பவே அவ நிறைய எழுதிட்டு இருந்தா. மீடியாவில் அவள் முகம் பிரபலம் தான். அடுத்த வருஷமே ஆதிரா பிறந்துட்டா. ஆதிராவை வளர்த்த பெருமை முழுக்க ஷ்யாமளாவுக்குத் தான். ஸ்கூலில் பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் முதல் எஞ்சினியரிங் கல்லூரியில் சீட் வாங்கியது வரை அவளோட வேலை தான்.”
“ஆதிரா இப்போ?”
“கல்யாணமாகிடுச்சு. ஆஸ்திரேலியாவில் செட்டில்ட். வாரமொருமுறை பேசுவோம்.”
“அரேஞ்ட் மேரேஜ்?”
“ஆம். அவர் ஷ்யாமளாவின் நெடுநாள் வாசகர்.”
“ஓ! இண்டர்கேஸ்ட் மேரேஜ்?”
“ஆம்.”
“அதில் ஏதும் சிக்கல் இல்லையா?”
“நெ
July 5, 2020
நவகண்டம் [சிறுகதை]
“ருத்ரா…”
அவளது செந்தேகத்தில் சிதறிக் கிடந்த ருத்ரன் சிரமுயர்த்தி அவள் முகம் பார்த்தான்.
“குலப்பெண்டிர் புருஷனைப் பெயர் சொல்லி அழைப்பதிங்கு வழக்கமில்லை, தேவி.”
“கட்டிலில் கட்டுப்பாடுகள் செல்லாது. விளக்கணைத்தபின் விதிகளுக்கென்ன வேலை?”
ருத்ரனின் பின்னந்தலை மயிர் பற்றியிழுத்து அவன் வாயைக் கவ்விக் கொண்டாள்.
முத்தம் தீர்ந்து களைத்த போது ருத்ரன் அவளது பின்னங்கழுத்தின் கூந்தலில் முகம் புதைத்தான். அடர்ந்து செழித்த மயிர்க்காட்டிலிருந்து மனோரஞ்சித மணம் எழுந்தது.
மூச்சை நன்றாக இழுத்து தன் நெஞ்சுக்கூடு முழுக்க அந்த நறுமணத்தை நிரப்பிக் கொண்டு அவள் காது மடல்களை மெல்லக் கடித்தபடியே கிசுகிசுத்தான் ருத்ரன்.
“கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே.”
“ஓஹோ! நீங்களும் பல மலரை ருசி கண்ட தும்பி தானோ?”
“இந்தக் குறிஞ்சிப் பூவை அளந்தவனுக்கு மற்றதெல்லாம் நெருஞ்சியல்லவா!”
தேனில் நீந்தும் வண்டின் கிறக்கத்துடன் கொற்றவை புன்னகைத்தாள். அக்கணத்தில் உலகமே பேரழகாகத் தோன்றியது ருத்ரனுக்கு. இந்த உலகில் மிக மகிழ்ச்சிகரமான மனிதர்கள் தாங்கள் என்றும். மேலே ஒரு விண்மீன் பளபளத்து அதை ஆமோதித்தது.

பற்குறி பதிந்த உதட்டுக்கடி வலி தலைக்கேற சட்டென நினைவு மீண்டான் ருத்ரன். உண்மையில் அவன் சுண்டுவிரலில் போட்டிருந்த சிறுகட்டு தான் லேசாய் எரிந்தது.
ராஜபாட்டையைக் கடக்கும் நத்தைபோல் யாமம் ஊரின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. காற்று மரங்களில் புகுந்து இலைகளுடன் புணர்ந்து சலசலத்தது. அது சோழ நாட்டின் பகுதி. பொன்னமராவதி என்பது அதன் பெயர். அந்நிலத்தின் கீழ் பல போர்க்கதைகள் தகித்திருந்தன. ஆனால் அவ்விடம் நீரில் அமிழ்த்தியது போல் சில்லிட்டுக் கிடந்தது.
கூதிர் காலத்தில் போருக்குப் புறப்படும் அரச கட்டளை பிழையோ என யோசித்தான்.
சுற்றிப் பார்த்தான். படை வீரர்கள் பொறுக்கிய சுள்ளிகளைக் குவித்து நெருப்பேற்றிக் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆரவாரமாய்ப் பாண்டிய மன்னனின் வெற்றியைப் பறைசாற்றுமொரு நாட்டுப்பாடலை தாள ராகம் பற்றிய கவலையற்று இசைத்துக்கொண்டிருந்தனர். இடையே சிரித்தும் பேசியும் ஆடியும் என அவ்விடத்தில் உற்சாகம் மூண்டிருந்தது. ஆனால் அவர்களில் எவரின் நாவிலும் ஒரு துளி மதுவும் இறங்கியிருக்கவில்லை என்பதை ருத்ரன் அறிந்திருந்தான். அது யுத்த வெறி. ரத்த வெறி. வெற்றிக்கான வெறி. அவர்கள் மூட்டியிருந்த தீ ஜ்வாலைகளின் அசைவைப் போலவே ஒழுங்கற்று ஆனால் பற்றியெரியும் அடர்த்தியான வன்மத்துடன் இருந்தது அவர்களின் நடனமும். அதைக் கண்டரண்டு நிலவு காணாமலாகிக் கொண்டிருந்தது.
ருத்ரனுக்கும் குளிர் உடைகளை ஊடுருவி உள்ளே பாய்ந்தது. ஆனால் அந்நேரத்தில் அவன் அவர்களுடன் சேர்ந்து கொள்ள விரும்பவில்லை. இரண்டு காரணங்கள். அவன் அவர்களின் தளபதி. அவன் முன் அவர்கள் அமர்வது கூட மரபல்ல. அவன் அங்கே சென்றால் மரியாதை என்ற போர்வையில் அவர்கள் தம் இயல்பைப் புதைப்பார்கள். அவன் பொருட்டு சொல்லிலும், செயலிலும் பாசாங்கு நுழையும். கொண்டாட்டங்கள் குறையும். அதை அவன் கிஞ்சித்தும் விரும்பவில்லை. அவர்கள் தமது பிரியப்படி இன்று இருந்தால் தான் நாளை வேண்டிய மூர்க்கத்துடன் போரில் ஈடுபடுவார்கள்.
போரில் எப்போதும் படைக்குப் பக்கமிருக்கும் தலைவன் மற்ற நேரங்களில் சற்றுத் தள்ளியிருப்பதே அவர்களுக்கு நல்லது, தலைவனுக்கும் நல்லது. இத்தனையாண்டு அனுபவத்தில் ருத்ரன் கற்றது இது. அவன் அங்கு போகாமைக்கு முதற்காரணம் இது.
இரண்டாம் காரணம் ருத்ரனுக்குக் கொஞ்சம் தனிமை வேண்டியிருந்தது. அவனும் அவன் சிந்தனைகளும் மட்டும் தொந்தரவற்றிருக்கும் தனிமை. நினைவுகளைத் தடை இன்றி அசைபோட உதவும் தனிமை. சுயவெறியேற்றிக் கொள்ள உதவும் தனிமை.
“நிஜமாகவா சொல்கிறீர்கள்?”
நெய் மணந்த ஊன்பொதிசோற்றை ருத்ரன் தட்டில் எடுத்து வைத்தபடி கேட்டாள்.
“ஆம், கொற்றவை.”
“குலோத்துங்கன் மதுரை மீது படையெடுத்து வருவதாகத் தான் கேள்விப்படுகிறேன். தகவல் உறுதியில்லை. ஆனால் அரண்மனையில் கிசுகிசுக்கிறார்கள். தளவாடங்கள் அவசரமாய்த் தயார்நிலைக்குப் போவதை நானே கண்கூடாகப் பார்க்கிறேன். போரை எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கான அத்தனை சமிக்ஞைகளும் இங்கு தென்படுகின்றன.”
“ஆச்சரியம். அந்தப்புரத்தில் அதற்கான அறிகுறிகளே இல்லையே!”
“உலகமே அழியவிருந்தாலும் அந்தப்புரம் தான் அதில் கடைசி.”
“ம். ஆனால் நான் பாண்டிமாதேவியின் பிரதான அலங்காரப் பொறுப்பு. தினமும் அவர் வனப்பும் வாசனையும் பூரணமாய் என் தீர்மானம். மஹாராணி அறிந்த யாவும் நான் அறிவேன். முந்தைய இரவு குலசேகர மன்னர் அவரைத் தீண்டினாரா என்பது வரை.”
“பட்டத்தரசிக்கே இவ்விஷயம் தெரிந்திருந்தால் தானே!”
“ஓ!”
“ஆம். மிகத்தாமதமாகவே நம் ஒற்றர்களுக்கு செய்தி தெரிய வந்திருக்கிறது போலும்.”
“ஆக, அந்தப்புரக்காரிகளை விட அரசுக் கணக்காளருக்கு அதிகம் தகவல் தெரிகிறது.”
“எனக்கு மட்டும் என்ன தெரியும்! எல்லாம் நம் ஆயுதக் கிடங்கு கந்தன் சொன்னது.”
“ஓ!”
“தவிர, அரசியல், ராஜாங்கம் என்பதெல்லாம் ஆண்களுக்கானது, தேவி.”
“ஆம், பெண்கள் எப்போதும் அதில் பகடைக் காய்கள் தாம்.”
“நிஜம் தான். சொல்லப்போனால் சரியும் கூடத் தான். அது ஒரு சொகுசு அல்லவா!”
“ம். ஏன் நம் மீது போர் தொடுக்கிறார்கள்?”
“போர்கள் முதலில் நடக்கும். பிறகு தான் காரணங்கள் கண்டுபிடித்து எழுதுவார்கள்.”
“ம். எப்போது சோழப் படை நம் நகரில் நுழையும்?”
“அனேகமாய் நாளை காலை என்கிறார்கள். அதிகபட்சம் நண்பகல்.”
மறுநாள் அமாவாஸ்யை. அதைத் தான் தாக்குதலுக்குரிய நாளாகத் தேர்ந்திருந்தான் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியன். ராஜகுருவின் ஆலோசனை அது.
சுந்தர பாண்டியன் முடிசூடிக் கொள்கையில் செய்த சபதம் நாடெங்கும் பிரசித்தம்.
“இந்தப் பாண்டிய நாடு கொண்ட அவமானத்திற்குப் பதிலீடாகச் சோழ நாட்டின் மீது படையெடுத்து அதை வீழ்த்தியே தீருவேன். இன்றிலிருந்து ஆறு திங்களுக்குள் இதை நிறைவேற்றி சோழ கிரீடம் சூடுவேன். அப்படி ஒருவேளை செய்து முடிக்காவிடில் காளிக்கு என்னை நவகண்டம் தருவேன். இது மீன்கொடி பறக்க விட்ட என் பாண்டியமுன்னோர்கள் அத்தனை பேர் மீதும் ஆணை. என் தமையன் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் மீது ஆணை. பாண்டிய ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த மன்னன் குலசேகரப் பாண்டியன் மீது ஆணை. பாண்டவர்களுக்குத் தோள் கொடுத்து குருஷேத்ர யுத்தம் கண்ட மன்னன் மலையத்வஜ பாண்டியன் மீது ஆணை. அவனது புத்திரியும், மதுரை திருக்கோயிலில் உறைந்திருப்பவளுமான அரசி அன்னை மீனாக்ஷியின் மீது ஆணை.”
மதுரை மாநகர் முழுக்க அச்சபதம் இளைஞர்கள் மத்தியில் பாவனை செய்யப்பட்டது. அப்படி இருந்தும் அது சோழர் தேசத்தை எட்டாதிருந்தது ஆச்சரியம் தான். அவர்கள் பாண்டிய நாட்டை வென்றும் பெரிதாய் ஏதும் ஆதிக்கம் செலுத்தவில்லை. வரி வந்து சேர்ந்தால் போதும் என்று இருந்து விட்டார்கள். அவர்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கும் அளவுக்குக் கூடப்போகவில்லை. அது நம்பிக்கை அல்ல; அலட்சியம்.
மன்னரின் கூடாரத்தைத் திரும்பிப் பார்த்தான் ருத்ரன். உச்சியில் பறந்த இரட்டைக் கயல் கொடி அதை எளிதில் அடையாளங் காண உதவியது. அப்படிச் சுலபமாய்ப் பிரித்தறிய முடிவது பாதுகாப்பானதல்ல என்கிற முணுமுணுப்புக்கள் படையினர் மத்தியில் இருக்கத்தான் செய்தது. கூடாரத்தில் விளக்கெரிந்தது. மன்னர் இன்னும் விழித்திருக்கிறார் என்று பொருள். இரண்டாம் ஜாமம் முடிய இன்னும் ஒரு நாழிகை தான் இருக்கும். அவர் உறங்கப் போக வேண்டிய நேரம். வைகறையில் துயிலெழ வேண்டும். அனேகமாய் நாளை உச்சிவெயில் வேளையில் யுத்தம் துவங்கி இருக்கும்.
மஞ்சத்தில் துயில வேண்டிய சுந்தர பாண்டியன் இங்கே கொசுக் கடியில் புரண்டிருக்க ஒரே காரணம் தான். மானம். அதன் பொருட்டு அவன் மீது எப்போதுமே ருத்ரனுக்கு மதிப்பு உண்டு. ஆனால் மானம் என்பது ஒரு கற்பிதம் தானே என்றும் தோன்றியது.
கொற்றவையும் ருத்ரனும் பரஸ்பரம் கண் பார்த்தபடி ஒருக்களித்துப் படுத்திருந்தனர். இருவரின் கரங்களும் ஒருவர் மீது ஒருவர் படர்ந்திருந்தன. ஒருவர் பேச மற்றவர் காத்திருந்தது இருவருக்குமே புரிந்தது. இறுக்கம் அவர்களிடையே விரவிக் கிடந்தது.
ஈராண்டு மண வாழ்வில் அது புதிது. இறுதியில் கொற்றவையே மௌனமுடைத்தாள்.
“போர் குறித்து அஞ்சுகிறீர்களா?”
“ம்.”
“நீங்கள் கவலைப்படாதீர்கள். நாடு நிற்கும். எத்தனையோ போர்கள் கண்ட மண் இது.”
“அதில்லை…”
“நம் மன்னரின் வீரம் குறித்து உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?”
“உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?”
“ம். இல்லை. அவர் திறமையான நிர்வாகி மட்டுமே. போருக்குரியவர் அல்லர். சாது.”
“அதே தான்.”
“ஆனால் நம் கையில் என்ன இருக்கிறது? நாம் கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது? பாண்டிய நாடு அடிமையானால் ஆகட்டும். எல்லோருக்கும் ஆனது தானே நமக்கும்!”
“என் கவலை நாட்டைப் பற்றியதல்ல…”
“சொத்துக்களை இழக்க நேரிடும் என்பது பற்றியா?”
“அதுவும் இல்லை. அதை மீண்டும் சம்பாதிக்கும் சாமர்த்தியம் உண்டு எனக்கு.”
“பின் என்ன தான் மனக்கிலேசம் உங்களுக்கு?”
“தேவி, போர் வெறியில் மதுரையில் காலடி எடுத்து வைக்கும் சோழர்களின் நோக்கம் நாடும் நிலமும் பொன்னும் பொருளும் மட்டுமல்ல. பாண்டியதேசப் பெண்களும்தான்.”
“இதுதானா உங்கள் கவலை! அப்படி ஏதும் நடந்தால் உயிரை மாய்த்துக் கொள்வேன்.”
ருத்ரன் பதறி அவள் வாயைப் பொத்தினான். அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
“இல்லை தேவி. அப்படிச் சொல்லாதே. அதெல்லாம் நடக்காது. ஆனாலும் பேச்சுக்குச் சொல்கிறேன். அம்மாதிரி ஏதும் நிகழ்ந்தாலும் அவர்களால் அதிகபட்சமாய்த் தீண்ட முடிந்தது உன் உடலை மட்டும் தான். உன் மனதில் இடம் பிடித்து விட முடியுமா? அதில் என்னைத் தவிர எவரும் நுழைய முடியுமா? பெண்ணுடல் மீதான அத்துமீறல் என்பது உடையில் நேரும் சிறுகறை போன்றதே. அதற்காக எவரேனும் உடையையே எரிப்பார்களா? அதனால் ஒருபோதும் நீ அந்த முடிவுக்கு வரக்கூடாது. இது என் மீது ஆணை. இதை உன்னிடம் அழுந்தச் சொல்லத் தான் இத்தனை நேரம் தயங்கினேன்.”
“இன்னொருவன் கைபட்ட பின் நான் ஒரு நடைபிணமாகி விடுவேனே. உங்களுக்கு மட்டுமே படைத்த உடலை எவனோ ஒருவன் கொத்தியுண்ணக் கண்டிருக்குமோ என் ஆன்மா? அக்கணமே மாயாதோ? மிஞ்சினாலும் அவன் எழும் நேரம் தெறிக்காதோ?”
“இல்லை. இல்லவே இல்லை. கூடாது. இன்னொன்றும் சொல்கிறேன். ஒருவேளை அவர்கள் உன்னைப் பலவந்தமாய் சோழ நாட்டுக்குத் தூக்கிச் செல்லவும் கூடும். நீ அப்போதும் கூட இம்மாதிரி மரணத்தைக் கைகொள்ளும் முடிவில் இறங்கக்கூடாது.”
“ஓ! எனில் தஞ்சை மாநகரில் நானொரு பரத்தையாகக் காலம் கழிக்க வேண்டுமா?”
கொற்றவையின் கேள்வியில் சினம் இருந்தது. அவள் கண்கள் சிவந்திருந்தன. அவை கழிவிரக்கத்தில் எந்நேரமும் உடைந்து கசிந்துருகத் தயாரான நிலையில் இருந்தன.
“கோபப்படாதே கொற்றவை. நான் மிகத் தீவிர யோசனைக்குப் பின்பே சொல்கிறேன்.”
“பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு,
உடன் உயிர் போகுகதில்ல - கடன் அறிந்து,
இருவேம் ஆகிய உலகத்து,
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.”
“…”
“ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே பாடி வைத்திருக்கிறான் நம் பாட்டன்.”
“ம்.”
“அன்றில் பறவை ஜோடிக்கு இடையே மலரொன்று நுழைந்தாலும் ஒரு கணப் பிரிவு தாளாது. அது போல் பிரிவில் இறப்பேன் என்கிறாள். நான் மட்டும் சளைத்தவளா?”
“எனில் என்னையும் அப்படி இறக்கச் சொல்கிறாயா தேவி? உயிரை விடுவது தான் காதலின் அளவுகோலா? அப்படிச் செய்தால் தான் என் காதல் நிரூபணம் ஆகுமா?”
“ஐயோ…!”
அலறியபடி அவன் வாயைப் பொத்தினாள் கொற்றவை. கண்கள் நீரை உதிர்த்தன.
“அப்படி இல்லை. உங்கள் வாயால் அப்படிச் சொல்லாதீர்கள். நெஞ்சு வெடிக்கிறது.”
“எனில் நான் சொல்வதைக் கேள். ஒருவேளை நீ சோழர் படையால் இங்கிருந்து தூக்கிச் செல்லப்பட்டால், உன் உடலை அவர்கள் சேதாரம் செய்தாலும் கூட நீ ஒருபோதும் சாவைத் தேடக்கூடாது. நான் உன்னை மீட்டுச் செல்ல வருவேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எங்கே இருந்தாலும் வருவேன். நீ காத்திரு.”
“நீங்களா? ஆனால் நீங்கள் போர் வீரர் அல்லவே? அப்பாவிக் கணக்காளர் தானே?”
“ஆனால் நான் காதலன். ஒரு போர் வீரனாக மாறினால் தான் உன்னை வந்து மீட்க முடியும் என்றால் அதுவாக ஆவேன். அரசனாக ஆக வேண்டுமெனில் அதுவாகவும்.”
“…”
“ஆம், தேவி. நானே ராமன், நானே அனுமன், நானே வருவேன், நானே மீட்பேன்.”
அவள் ருத்ரனை அணைத்துக் கொண்டாள். அவள் வெம்மை அவனைத் தொற்றியது.
அன்றைய புணர்ச்சியில் இருவரும் மலர் நுழைய அனுமதியாத அன்றில் பறவைகள் ஆகிப் போயினர். அந்தக்கலவி முழுக்க ஓர் அச்சம் இருந்தது. ஒருவித நிலையாமை ஒட்டிக் கொண்டிருந்தது. கொஞ்சம் குற்றவுணர்வும் பிசுபிசுத்தது. நீண்ட நெடியதொரு சம்போகத்துக்குப் பின்பு பூத்த உச்சத்தினூடே கொற்றவையின் விழியோரம் வழிந்த நீரை முத்தமிட்டான் ருத்ரன். அது தான் கடைசிப் புணர்ச்சியோ என அக்கணத்தில் அவனுக்கு ஓர் எண்ணமெழுந்தது. அதை மறைக்கத் தன் முகத்தைக் கொற்றவையின் கூந்தலில் புதைத்தான். அவள் குழலின் சுகந்தம் அவன் நாசியிலேறி மண்டையைத் தாக்கியது. அது மாரிக்காலத்தில் வைகைப் படுகையில் கிட்டும் வினோதத் தாவரம் ஒன்றைக் கொண்டு கொற்றவையே தயாரித்த பிரத்யேகத் தைலம். அரசிக்குக் கூட இந்நாள் வரையிலும் அவள் அதைச் செய்து கொடுத்ததில்லை. தந்திருந்தால் பெரும் பரிசுகள் கிட்டும் என்பதை அறிவாள். ஆனால் அது அவளுக்கு மட்டுமே. ருத்ரனின் சுவாசக் குழல்களுக்கு மட்டுமே. அதை மற்ற எவருக்கும் பங்கிடத் தயாரில்லை.
அவர்கள் இன்பத்தின் உச்சத்துக்கு மௌன சாட்சியாய்ப் பௌர்ணமி ஜ்வலித்தது.
மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு மட்டுமல்ல, படைத்தளபதி ருத்ரனுக்கும் அது பதினோராண்டுக் காத்திருப்பு. முழுதாய் நூற்று முப்பத்திரண்டு பௌர்ணமிகள் கொற்றவையின் வெம்மை இல்லாமல் தான் கழிந்திருக்கிறது. மீண்டும் அவளைக் காணப் போகும் எதிர்பார்ப்பு ருத்ரனுக்கு இனம்புரியாத ஓர் உணர்வை மேனியெங்கும் பரவச் செய்தது. அதை மகிழ்ச்சி என்றும் சொல்ல முடியவில்லை, துக்கம் என்றும் அடையாளப்படுத்த இயலாது. ஆனால் ஒருவித பரபரப்பு ஒட்டிக் கொண்டிருந்தது.
மதுரை மாநகரிலிருந்து அன்றைய விடியலில் புறப்பட்டது. புரவிகளும் யானைகளும் தேர்களும் காலாட்படையும் என முழுப் போருக்குரிய முஸ்தீபுகளுடன் பாண்டிய சேனையின் தஞ்சை நோக்கிய பயணம். அது உண்மையில் பாண்டிய மன்னனுக்கு வாழ்வா சாவா என்ற பிரச்சனை தான். ஆனால் பாண்டிய தேசத்தைச் சுதந்திர பூமியாக்க அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. துணிந்து இறங்கி இருந்தான்.
இரவு பொன்னமராவதியில் தங்கிச் செல்லலாம் என்பது சுந்தர பாண்டியன் யோசனை தான். எப்படியும் இந்நேரம் கிழட்டு குலோத்துங்கனுக்கு சோழ ஒற்றர் மூலம் செய்தி போயிருக்கும். அவனுக்கு நாளைய பகற்பொழுது அவகாசம் இருக்கிறது படைகளைத் தயார் செய்வதற்கு. ஆனால் அது போதாது என்பது பாண்டியனுக்கு நன்கு தெரியும்.
இத்தனை ஆண்டு வெஞ்சினமும், இரண்டு நாழிகைத் தயாரிப்பும் ஒன்றா? அடிமைத் தளையிலிருந்து மீளுகிற வேட்கையும், அவசரத் தற்காப்பும் ஒரே மாதிரியானதா?
தன்மானம் இழந்த வலியும் அதனால் காத்திருக்கும் பகையும் வேறு விதமானது. அதை எதிர்கொள்ள வெறும் சேனை பலம் போதாது. அடிபட்ட புலிக்கிணை களிறு கூடக் கிடையாது. இதெல்லாம் மூன்றாம் குலோத்துங்கச் சோழனுக்கும் தெரியும்.
மூன்றாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறான் என்ற தகவல் கண்ணகி வைத்த நெருப்பு போல் மதுரை நகரெங்கும் துரிதமாய்ப் பரவியது.
“கொற்றவை, இன்று நீ அந்தப்புரத்துக்குப் பணிக்குச் செல்ல வேண்டாம். விடுப்பெடு.”
“அரண்மனை அந்தப்புரத்தை விடவா இங்கு நம் இல்லத்தில் மேலதிகப் பாதுகாப்பு என நினைக்கிறீர்கள்? பேரரரசிக்கு ஆனது எனக்கும். நான் அங்கிருப்பதே நல்லது.”
“அதிக பாதுக்கப்பானதே அதிகம் தாக்கப்படும். அதனால் அங்கே போக வேண்டாம்.”
“ம்”
“ஆம் தேவி. நானும் இன்று அரண்மனை செல்லவில்லை. வீட்டிலேயே இருப்போம்.”
“ம்”
“வீட்டின் கதவை வெளியே பூட்டி விட்டு பின்புறக் கதவின் வழியே வீட்டுக்குள் வந்து விடுகிறேன். விளக்கெல்லாம் அணைத்து விட்டு ஊசி விழும் சப்தம் கூட இல்லாமல் உள்ளே இருப்போம். சோழர் படை நகரை கபளீகரம் செய்யத் துவங்கினாலும் பூட்டிய வீட்டைச் சந்தேகிக்க மாட்டார்கள். போர் எல்லாம் ஓய்ந்த பின் வெளியே வருவோம்.”
கொற்றவை அதற்கு ஒன்றும் பதில் சொல்லாமல் காலை உணவைச் சமைக்கத் துவங்கினாள். அவள் மனம் மிகுந்த சஞ்சலத்தில் இருந்தது. பயம் பீடித்திருந்தது.
ருத்ரன் தன் கூடாரத்துக்குத் திரும்பி சணலும் கம்பளியும் அடர்ந்திருந்த விரிப்பைத் தரையில் பரப்பி கண்கள் மூடிப் படுத்துக் கொண்டான். நித்திரை அவன் அழைப்புக்கு இணங்க மறுத்தது. இந்தப் போரைக் குறித்து யோசித்தான். அவனுக்கு அதன் வெற்றி தோல்வி குறித்தெல்லாம் உண்மையில் எந்த அக்கறையும் இல்லை. போர் அவனுக்கு கொற்றவையை அடையும் ஒரு பாலம் மட்டுமே. அதன் பொருட்டு விசுவாசமாகப் போரிடுவான். இது வெளியே தெரிந்தால் அவன் தன் பதவியில் இருக்க முடியாது.
ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் மரணித்த பின்னர் மாறவர்மன் சுந்தர பாண்டியன் அரியணை ஏறிய முதல் நாள் அறிவித்த முதல் ஆணை சோழ தேசத்தின் மீது போர் தொடுப்பது. சொல்லப் போனால் புத்திர பாக்யம் இல்லாத குலசேகரன் தன் இளவல் சுந்தர பாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியிருந்தாலும் ஆட்சிக்கு வர விடாமல் தாமதம் செய்ததற்கு சுந்தர பாண்டியனின் பழி தீர்க்கும் வேட்கை தான் காரணம். அது பாண்டிய நாட்டுக்கு மோசமான அழிவை ஏற்படுத்தும் எனக் குலசேகரன் அஞ்சினான்.
ஆம், இப்போது பாண்டிய நாடு சோழ தேசத்துக்குக் கப்பம் கட்டி வருகிறது தான். ஆனால் அது போக வேறு எந்தத் தொந்தரவும் கிடையாது. சோழ ஒற்றர்கள் கூட அவ்வளவாய் இந்தப் பக்கம் வருவதில்லை. ராஜ்ஜியம் இயல்பாகவே நடக்கிறது.
பதினோரு ஆண்டுகள் முன் மூன்றாம் குலோத்துங்க சோழன் படையெடுத்து வந்த போது மதுரையைத் துவம்சம் செய்தன அவனது சேனைகள். பாண்டிய தேசத்தின் பிரதானத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். கணக்கிலடங்காத அந்தப்புரப் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். செல்வங்கள் சூறையாடப்பட்டன. மாட மாளிகைகள் தரைமட்டமாக்கப்பட்டன. மாநகர் மரண ஓலங்களாலும் ஒப்பாரிகளாலும் நிரம்பி வழிந்தது. அனைத்திற்கும் மேல் மதுரை முடிசூட்டு மண்டபம் தீக்கிரையாக்கப்பட்டது.
அத்தீயின் மிச்சமிருந்த கதிர்கள் சுந்தர பாண்டியனின் நெஞ்சிலும் பற்றிக்கொண்டது.
சோழர் படையினர் பூட்டியிருந்த ருத்ரன் வீட்டின் கதவை உடைத்து நுழைந்தார்கள்.
எல்லோருக்கும் முன்பாய் மிகு எடை கொண்ட ஒரு மனிதர். அவர் ஒரு தளபதியாக இருக்க வேண்டும் என்பது அவரது உடுப்புகளிலிருந்தே புலப்பட்டது. நெற்றியில் வெட்டுக்காயம். முகமெங்கும் மேய்ந்திருந்த முரட்டு மீசை. வெறி மிகுந்த கண்கள்.
அவர் தன் கரத்தில் பற்றியிருந்த வாளில் புதுக் குருதி சொட்டிக் கொண்டிருந்தது.
“இதென்ன வெளியே வீட்டைப் பூட்டிக் கொண்டு சிறுபிள்ளைச் சொப்பு விளையாட்டு!”
“…”
“ஆனால் புகைப்போக்கி இல்லாத வீட்டில் அல்லவா இதை ஆட வேண்டும். அல்லது சாப்பிடாமல் பட்டினி கிடக்கவாவது தெரிந்திருக்க வேண்டும். ஆழ்ந்த இரங்கல்கள்.”
“ஐயா, எங்களை விட்டு விடுங்கள். எங்கள் பணம், நகையை எடுத்துக் கொள்ளுங்கள்.”
ருத்ரன் தன் முன் மண்டியிட்டுக் கெஞ்சியதைக் கண்டு அத்தளபதி உரக்கச் சிரித்தார்.
“முட்டாள்! இங்கிருப்பதிலேயே ஆகச் சிறந்த சொத்து இந்தப் பிரபஞ்சப் பேரழகி தான்.”
கொற்றவை அலறி வீட்டுக்குள் ஓடத் துவங்க ஒரே பாய்ச்சலில் அவளது கரம் பற்றி வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று புரவியில் ஏற்றினார் அத்தளபதி. அவர் உடன் வந்திருந்த வீரர்கள் ருத்ரனை மாறி மாறி அறைந்தார்கள். முகத்தில் ரத்தம் வழிந்தது.
அதைப் பொருட்படுத்தாமல் தளபதியின் புரவிக்குப் பின்னாலேயே ஆவேசமாய் ஓடி வந்த ருத்ரனின் விலாவில் சோழ வீரன் ஒருவன் எறிந்த குறுவாள் பாய்ந்து குருதி கொப்பளித்தது. தடுமாறிக் கீழே விழுந்தான். புரவியிலிருந்து சிரமப்பட்டுத் தலை திருப்பிப் பார்த்த கொற்றவை கதறி மூர்ச்சையுற்று தளபதியின் மார்பில் சரிந்தாள்.
ருத்ரன் தன் விலாவிலிருந்த தழும்பைத் தடவிக் கொண்டான். தன்னை மீண்டும் சந்திக்கும் போது கொற்றவை அத்தழும்பில் முத்தமிடுவாள் எனத் தோன்றியது.
ருத்ரன் சிரித்துக் கொண்டான். அந்த நினைப்பே சுகமாய் இருந்தது. இவ்வளவு ஆண்டுகளும் அவன் வேறொருத்தியைத் தீண்டினான் இல்லை. அதற்கு ஏராளச் சந்தர்ப்பங்கள் வாய்த்தன. ஆனால் அவள் நினைவுகளையே நிதமிரவு புணர்ந்து கொண்டிருந்தான். இன்றைய பொழுதோடு அது எல்லாவற்றிக்கும் முற்றுப்புள்ளி.
மரணப் படுக்கையில் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் இருந்த போது தன் தம்பி மாறவர்மன் சுந்தர பாண்டியனை அழைத்து சத்தியம் கேட்டான். அவன் அரியணை ஏறிய பிறகு சோழ தேசம் மீது வம்படியாய்ப் போரில் இறங்க மாட்டேன் என உறுதி தருமாறு. அது முடியாது என்றும் பதிலாகத் தான் அரியணை ஏறாமலேயே இருந்து விடுவேன் என்கிற உறுதியை வேண்டுமானால் தர முடியும் எனச் சொன்னான் சுந்தர பாண்டியன். தான் அரசனாக விரும்புவதே சோழனைப் பழி தீர்க்கத்தான் அஃதில்லை எனும் போது அந்த அதிகாரமும் பதவியும் தனக்கெதற்கு எனக் கேள்வி எழுப்பினான்.
குலசேகரனிடம் அதற்குப் பதில் இல்லை. ஒருபோதும் சுந்தர பாண்டியனைத் தவிர வேறொருவரை மன்னனாக்கவே முடியாது. அவனுக்கு இணையான வீரர்கள் அன்று பாண்டிய தேசத்தில் எவருமில்லை. போக, அவன் கல்வியிலும் சிறந்தவன். அவனை நிராகரிக்கக் காரணங்கள் இல்லை. நாட்டு மக்களே அப்படியொரு முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சொல்லப் போனால் எப்போது குலசேகரன் மரிப்பான், சுந்தர பாண்டியன் அரியணை ஏறுவான் என ஒரு சாரார் உள்ளூர ஓர் ஆர்வத்துடன் தான் காத்திருக்கிறார்கள். வெளியில் பேசினால் ராஜதுரோகம் ஆகிவிடும் என அமைதி காக்கிறார்கள். சுந்தர பாண்டியனுக்கு இப்படியான குயுக்தி எண்ணங்கள் இல்லை என்றாலும் வேறொருவருக்கு முடி சூட எத்தனித்தால் உள்நாட்டுக் குழப்பங்கள் விளையும். அது நிலைமையை மேலும் மோசமாக்கும். இதற்கு மாற்றுவழியேதும் தென்படவும் இல்லை. மன சஞ்சலத்தோட செத்துப் போனான் குலசேகர பாண்டியன்.
தீக்கிரையான முடிசூட்டு மண்டபத்தில் கிரீடம் சூடிக் கொண்டான் சுந்தர பாண்டியன்.
பாண்டிய நாடு சோழ நாட்டுக்குத் திறை செலுத்தும் அடிமை ஆட்சியாக மாறியது.
விலாவில் சொருகிய வாள் நான்கு நெல் தள்ளிக் குத்தியிருந்தால் குடலைக் கிழித்து, ரத்தப் போக்கை அதிகரித்து அவனது உயிரைக் குடித்திருக்கும் என வயிற்றில் பச்சிலைச்சாறு வைத்துக் கட்டிக் கொண்டே சொன்னார் அரண்மனை வைத்தியர்.
தான் உயிர் பிழைத்திருக்கக் காரணம் உண்டே என எண்ணிக் கொண்டான் ருத்ரன்.
கணக்காளர் பணியை விடுத்து மிகுந்த பிரயாசைக்குப் பின் ஒரு சாதாரணப் போர் வீரனாய் வாழ்வைப் புணரமைப்பு செய்து கொண்டான் ருத்ரன். அது அவன் முன்பு வாங்கிய ஊதியத்தில் நான்கில் ஒரு பங்கு தான். ராணுவத்துக்கு பணம் நிறையச் செலவளிக்கும் நிலையும் மனமும் குலசேகர பாண்டியனுக்கு இல்லை. சொல்லப் போனால் அரசரின் இளவலும் தலைமைத் தளபதியுமான சுந்தர பாண்டியனின் பிடிவாதத்தில் தான் படைக்குத் தொடர்ந்து ஆளெடுக்கும் வேலை நடந்து வந்தது.
ருத்ரன் படை வீரர் தேர்வுக்குச் சென்ற போது சந்தேகத்துடன் விசாரித்தார்கள் -
“முட்டாளா நீ? நல்ல வேலையை விட்டு ஏன் படையில் குறைந்த சம்பளத்துக்குச் சேர நினைக்கிறாய்? அதுவும் ஆபத்தும் மன அழுத்தமும் நிறைந்ததொரு சேவை, மரியாதை குறைந்த பணி. மாறாக கணக்காளராகத் தொடர்ந்தால் ஒரு நாள் ஏதேனும் ஒரு அமைச்சருக்கு ஆலோசகராகக் கூட உயர்ந்து விடலாம் என்பதை அறிவாயா நீ?”
“நன்கறிவேன். சோழர் படை என் மனைவியைக் கவர்ந்து சென்று விட்டார்கள். நான் அதற்குப் பழி தீர்க்க வேண்டும். என்றேனும் நாம் சோழர்கள் மீது படையெடுப்போம் என நம்புகிறேன். அப்போது நான் போர்க்களத்தில் முன்வரிசையிலிருக்க வேண்டும்.”
உண்மையில் அவனுக்கு உள்ளே கனன்று கொண்டிருந்த இச்சை பழிவாங்கல் அல்ல; கொற்றவையை மீட்டழைத்து வருவது தான். அதை இவ்வாறு புனைந்து சொன்னான்.
மேற்கேள்வி ஏதும் கேட்காமல் அவனை அடுத்த கட்டத் தேர்விற்கு நகர்த்தினார்கள். வலிமையும் வளையும் திராணியும் தேவைப்பட்ட தேர்வுகளில் தோற்றுத் தோற்றுத் தேறினான். புத்திகூர்மை சம்மந்தப்பட்ட இடங்களில் பெரிய சிக்கல் இருக்கவில்லை.
இறுதியில் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டான் ருத்ரன். கூர்மதி மற்றும் துரிதமாய் எதையும் கற்றுக்கொள்ளும் திறன் காரணமாய் அதிவேகமாய்ப் பதவிகளில் ஏறினான். பத்தாண்டுகளில் படைத் தளபதி எனும் இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டான். இன்று பாண்டிய நாட்டின் புரவிப் படையின் ஐந்து பிரதானத் தளபதிகளுள் ஒருவன் ருத்ரன்.
மாறவர்மன் சுந்தர பாண்டியன் அரியணையேறிய சமயம் மூன்றாம் குலோத்துங்க சோழன் வயோதிகம் எட்டி இருந்தான். அவனது மகன் மூன்றாம் ராஜராஜ சோழன் மன்னனாக முடி சூட அத்தனை ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. அவனது நாமத்தில் ஒட்டிக் கொண்டிருந்த அசல் ராஜராஜ சோழன் அருண்மொழி வர்மன் அளவுக்கோ அவனது தந்தை மூன்றாம் குலோத்துங்கன் அளவுக்கோ கூட வீரமோ, மதியூகமோ, சமத்காரமோ கொண்டவன் அல்லன் என்பதாகவே சுந்தர பாண்டியன் கேள்விப்பட்டிருந்தான். அது அவனது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி இருந்தது.
பின்னிரவில் உறங்கப் போன படை வீரர்கள் அனைவரும் அவசரமாக அதிகாலையில் துயிலெழுந்து தயாரானார்கள். நீராடி வந்து நிதானமாகப் போர்க்கோலம் பூண்டான் ருத்ரன். சுந்தர பாண்டியன் பொன்னமராவதியில் இரண்டாம் ராஜராஜ சோழன் கட்டிய ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயத்துக்குத் தன் படைகளுடன் சென்று வழிபட்டான்.
தஞ்சையை வென்று முடி சூட்டினால் அங்கிருந்து நேராய் வேதங்களில் பாண்டித்யம் பெற்ற பிராமணர்கள் வாழும் புலியூர் என்றும் சிதம்பரம் என்றும் அழைக்கப்படும் புண்ணிய நகரில் சிவகாம சுந்தரி அம்மன் சகிதம் வீற்றிருக்கும் ஆனந்தத் தாண்டவக் கோல நடராசப் பெருமானின் பாதங்களில் வணங்குவதாக வேண்டிக் கொண்டான்.
அங்கே வீரர்களை அழைத்து, கொடி மரத்தின் முன் வைத்து வீரவுரை நிகழ்த்தினான்.
“சோழர்களிடம் பாண்டியர்கள் பட்ட அவமதிப்பைத்துடைத்தெறிய நமக்குக் கிட்டியுள்ள பொன்னான வாய்ப்பு இது. உயிர் தந்தேனும் நமது நாட்டு மானம் மீட்போம். ஆனால் ஒவ்வொருவர் உயிரும் முக்கியம். நம் தரப்பில் சேதமின்றி வெற்றியை எட்டுவோம்.”
கண்ணகி வடிவமான நாச்சியம்மன் ஆலயத்தில் சூல் பலியிட்டுப் பூசை நடத்தினான்.
அர்ஜுனன் கொண்ட குறிக்குள் அடைபட்ட கிளிக் கண்கள் போல், சுயம் மறந்து தவம் செய்யும் விஸ்வாமித்திர முனிபோல் ருத்ரன் இலக்கெல்லாம் ஒன்றாகவே இருந்தது.
கொற்றவை…! கொற்றவை…! கொற்றவை…! கொற்றவை…! கொற்றவை…! கொற்றவை…!
பத்தாயிரம் வீரர்களைக் கொண்ட பாண்டிய சேனை தஞ்சை மாநகரில் கால் பதித்தது.
ஐந்தாறு ஆண்டுகள் முன் ருத்ரனின் நெருங்கிய நண்பனும், அவன் வாழ்க்கையை முழுக்க அறிந்தவனுமான கந்தன் மதுக் கோப்பைச் சிணுங்கல்களினூடே கேட்டான் –
“கொற்றவை இன்னும் உயிரோடு இருப்பதாக நீ எப்படி நம்புகிறாய்? அவள் அன்று கடத்தப்பட்ட போதே பாண்டிய எல்லை தாண்டும் முன்பே கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது அங்கு போய்ச் சேர்ந்த பின். அல்லது தற்கொலை கூடச் செய்திருக்கலாம். அப்போதே இல்லை என்றாலும் பின் எப்போதேனும். ஏனெனில் அவள் உன் மீது கொண்டிருந்த காதலை அறிவேன். சற்று உணர்ச்சிவசப்படாமல் யோசி, ருத்ரா.”
“என்னிடம் இதற்கு எந்த தர்க்கப்பூர்வ பதிலும் இல்லை கந்தா. ஆனால் என் மனம் அப்படித்தான் சொல்கிறது. கொற்றவை உயிருடன் இருக்கிறாள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. என் வாழ்க்கையைச் செலுத்துவது அந்த நம்பிக்கை மட்டுமே.”
“உனக்கு இன்னும் வயதிருக்கிறது ருத்ரா. ஏன் இதன் பின்னால் ஓடுகிறாய்? இன்று நீ இருக்கும் நிலைக்கு கண்ணசைத்தால் நல்ல குடும்பப் பேரழகிகள் வரிசை கட்டுவர்.”
“ஆனால் அவர்களில் எவரும் என்னுடைய கொற்றவை இல்லையே, தோழா!”
“என
June 30, 2020
சிஎஸ்கே அட்டென்ஷன் சீக்கிங் செய்கிறானா?
அவர்கள் தங்களைக் கொண்டோ அல்லது இப்படிச் செய்யும் மற்றவர்களைக் கொண்டோ என்னையும் எடை போட முயல்வதால் நிகழும் புரிதற்பிழையே இது. நான் இதுவரை ஒரு பதிவு கூட, ஒரு வாக்கியம் கூட, ஏன் ஒரு சொல் கூட கவன ஈர்ப்புக்காக எழுதியதில்லை. இதை நான் ஆயிரம் முறையாவது சொல்லி இருப்பேன். எனக்கு என்ன இயல்பாக தோன்றுகிறதோ அதை மட்டுமே நான் எழுதுகிறேன். அதைத் தாண்டி வேறில்லை. ஆனால் ஒரு விஷயம், நான் மற்றவர்களை விட ஒப்பீட்டளவில் குறைந்த அளவு தணிக்கை செய்யலாம். அல்லது மற்றவர்களை விட முகத்திலடித்தாற் போல் நேரடியாக எழுதலாம். அது கவன ஈர்ப்புக்காக இல்லை. அது அப்படி இருப்பது தான் சரி என நம்புகிறேன்.
அப்படி நான் எழுதும் எல்லாமே என் மனதில் தோன்றியவை. எதுவுமே மொண்ணை பிளேட் வைத்துச் சுரண்டுவது போல் யாரையோ ஈர்க்கத் தேடிப் பிடித்ததில்லை. எழுதும் போது இதற்கு இத்தனை லைக் விழும், இந்த சர்ச்சையை உண்டாக்கும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. தனி மனிதத் தாக்குதல் செய்யக்கூடாது, சட்டத்திற்கு புறம்பாக எழுதக்கூடாது என்ற இரண்டே கோடுகள் மட்டுமே நான் வைத்துக் கொள்கிறேன். இதை எழுதினால் அவன் கொண்டாடுவானா, இவன் திட்டுவானா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பதில்லை. அது திருகல் வேலை. இப்படி இருப்பதே வசதியாய், எளிதாய் இருக்கிறது. இவ்விஷயத்தில் இப்படியே தொடர்வேன் என்றே நினைக்கிறேன்.
இன்னொரு விஷயம். என் கருத்து தவறு என்றோ முட்டாள்தனம் என்றோ சுவாரஸ்யமாய் இல்லை என்றோ சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் கவன ஈர்ப்புக்காக அதை எழுதினேன் என்று சொல்வது அவதூறு. கேரக்டர் அசாசினேஷன். கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் அதைப் போகிற போக்கில் சொல்கிறார்கள். என்ன ஆதாரத்தை ஒருவர் இதற்குத் தர முடியும்? அவர்கள் முன்பு கண்ட உதாரணங்களின் நீட்சியான அவர்களின் சொந்தக் கற்பனை (அல்லது விருப்பம்) என்பதைத் தவிர. "இவன் என்ன இப்படிப் பேசுகிறான், இவற்றில் சிலதெல்லாம் நமக்கும் தோன்றி இருக்கிறது என்றாலும் நாம் வெளியே பேசியதில்லையே, ஆக இவன் கவன ஈர்ப்புக்காகவே இதைப் பேசுகிறான்" என்று நம்பிக் கொண்டால் அதில் ஓர் ஆறுதல் கிடைக்கிறதல்லவா! அதை அப்படியே தீர்ப்பாக எழுதி விடுகிறார்கள். இன்னொரு தரப்பும் உண்டு. தங்களுக்கு ஒவ்வாத கருத்தைப் பேசினாலே அட்டென்ஷன் சீக்கிங் தான். அதன் அர்த்தம் தெரிந்து தான் அச்சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்களா என்றே சந்தேகமாக இருக்கிறது. சரி, அது கிடக்கட்டும். அந்தக் குற்றச்சாட்டுக்கு வருவோம்.
இங்கே கவனம் ஈர்த்து எனக்கு என்ன லாபம்? இது மிக மிக முக்கியமான கேள்வி அல்லவா? இதற்கு என்ன பதில் இருக்கிறது அவர்களிடம்? உண்மையில் இங்கே பெரும்பான்மைக்கு (குறிப்பாகப் பெண்களுக்கு) பிடித்த மாதிரி எழுதுவது வெகு சுலபம். அது ஒரு நடுவாந்தர எழுத்து (mediocre). அதைப் பலரும் செய்கிறார்கள். சிலரது உயரமே அது தான், சிலர் வேண்டுமென்றே குறி வைத்து எழுதுகிறார்கள். அப்படி எழுதினால் இதை விட இன்னும் 10 மடங்கு லைக் வரும். அதை எழுதுவது சுலபமும் கூட. ஆனால் நான் அதைச் செய்யாமல் எனக்குத் தோன்றுவதையே (unfortunately, பெரும்பான்மையைக் கோபப்படுத்தும், எரிச்சலூட்டும் கருத்துக்கள்) எழுதுகிறேன். இது கிட்டத்தட்ட தற்கொலைக்குச் சமானம். இதனால் எத்தனையோ நண்பர்களை (குறிப்பாகப் பெண்களை) இழந்திருக்கிறேன். ஆனால் அது பொருட்டல்ல. என் கருத்துக்குப் புண்பட்டால் விலகுவதே நியாயம். நீங்கள் விலகுவீர்கள் எனப் பயந்து உங்களுக்கு நீவி விடுவது மாதிரி நான் எழுத முடியாது.
சரி, ஓர் எழுத்தாளனாகவாவது இதனால் எனக்கு ஏதும் பிரயோஜனம் உண்டா? பூஜ்யம். இங்கே கவனம் ஈர்ப்பதால் ஒரு புத்தகம் கூட கூடுதலாய் விற்காது எனக்கு. இன்னும் சொல்லப் போனால் இதனால் மோசமான ஒரு பிம்பம் தான் இலக்கிய உலகில் எனக்கு வருகிறது. வாசகர்கள் மத்தியில் இன்னும் மோசம். பேஸ்புக்கில் இப்படி எழுதுகிற ஆள் என்ன இலக்கியம் எழுதி விடப் போகிறான் என்று என்னை வாசிக்காமல் நிராகரிப்பவர்கள் ஏராளம் என்பதை அறிவேன். இதை என்னிடம் நேரடியாகச் சொன்னோர் உண்டு. நண்பர்கள் மூலம் இத்தகைய கருத்துக்கள் என்னை வந்தடைந்திருக்கின்றன. இப்படி நான் இழந்து கொண்டிருக்கும் வாசகர்களும் கணிசம். இப்படி இருப்பது என் புத்தகங்கள் விற்க இடைஞ்சல். என் பதிப்பாளருக்கே கூட என் மீது வருத்தங்கள் இருக்கலாம். சில எழுத்தாளர்கள், சில நண்பர்கள் இதெல்லாம் தேவையா என அங்கலாய்த்து என்னை மாறச் சொல்லி அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். நான் மாறாததால் அலுத்துப் போய் அறிவுரையைக் கை விட்டவர்கள் உண்டு. இப்படியான அத்தனை நஷ்டங்களையும் தாண்டி எனக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதாலேயே தோன்றுவதை மட்டும் எழுதுகிறேன். அத்தனை நஷ்டத்துக்குப் பின்பும் கவன ஈர்ப்புக் குற்றச்சாட்டு.
இத்தனையும் இருக்கும் போது, இதெல்லாம் எனக்கு நன்கு தெரிந்திருக்கும் போது நான் வெறும் அட்டென்ஷன் சீக்கிங் என்ற வெற்று அரிப்புக்காக எப்படி ஒன்றை எழுதுவேன்? நான் ஒரு பைத்தியகாரனாக இருந்தால் ஒழிய வேண்டுமென்றே இப்படி எழுத மாட்டேன். ஆக, நான் எழுதுவது கவன ஈர்ப்புக்காக இல்லை. புத்தகம் விற்கவில்லை என்றாலும் சரி, என்னை வெறுப்பவர்கள் அதிகரித்தாலும் சரி, இலக்கிய உலகில் எனக்கு வேறு மாதிரி முத்திரை விழுகிறது என்றாலும் சரி, பரவாயில்லை. மனதிலிருப்பதை எழுதி விட்டோம் என்ற நிம்மதி போதும் என்பதாலேயே. அதை மறைத்து, எழுத்தில் சமரசம் செய்து கொண்டு, மேற்சொன்னவற்றை அடைவது தான் சில்லறைத்தனம் என நம்புகிறேன். அது என்னை நானே அவமதித்துக் கொள்ளும் செயல்.
நான் மிக எளிய மனிதன். தினம் காலையில் கண்ணாடி பார்த்தால் நம்மை நாமே துப்பிக் கொள்ளத் தோன்றும் வாழ்க்கையை வாழக்கூடாது என்பதே என் சித்தாந்தம். அதற்கு முதல் தேவை நேர்மையாய் இருப்பது. நான் என் தொழிலான எழுத்தில் அப்படி இருக்க முயல்கிறேன். அவ்வளவு தான். அது உங்களுக்கு கவன ஈர்ப்பாகத் தோன்றினால் அது என் பிரச்சனையா, சொல்லுங்கள், நண்பர்களே?
June 28, 2020
காலத்தின் கலைஞன் - உயிர்மை.காம் தொடர்

முழுத் தொகுப்பு:
https://uyirmmai.com/series/column-on-director-christopher-nolan-by-saravanakarthikeyan-c/
June 27, 2020
இரண்டாம் காதல் [சிறுகதை]
‘தேவடியா…’
அவளைப் பார்த்ததும் சாவித்ரி மனதில் எழுந்த முதல்ச் சொல் அது தான். முழுக்க ஜீரணிக்காத மாமிசத்துணுக்கு வயிற்றின் அமிலத்தோடு எதுக்களித்து தொண்டைக்குக் காரமாய் ஏறுவது போல் அந்த வார்த்தையை உதடுகளுக்கு இடையே உருட்டினாள்.

“டோக்கன் நம்பர் 36…”
செவிலியின் குரல் சாவித்ரியின் உச்சாடனத்தை அறுத்தது. சாவித்ரி தன் உள்ளங்கை வியர்வையில் பொதித்திருந்த டோக்கனைப் பார்த்தாள். 39. அதற்குள் 36ம் எண்காரி வயிற்றைச் சாய்த்துக் கொண்டு எழுந்து மருத்துவர் அறை நோக்கி மெல்லப் பூனை நடை பயின்றாள். கைகளில் கோப்புடன் அவன் - கணவனாக இருக்க வேண்டும் - அவளை மிகுந்த நாடகீயத்துடன் வழிநடத்தினான். இன்னும் எப்படியும் கால் மணி நேரமாவது ஆகும். பெருமூச்செறிந்து அவளை மீண்டும் கவனிக்கத் துவங்கினாள்.
அவளுடன் வந்திருந்த ஒருவனுடன் மிகையாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். அந்தச் சிரிப்பு அவளது குழந்தைப் பருவத்தை வசீகரமாய் நினைவூட்டக்கூடியதாய் இருந்தது. சந்தேகமில்லாமல் பேரழகி. என்னை விடவும். இந்த மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் பதின்மூன்றாவது தளத்தின் Obstetrics and Gynecology Department-ல் அமர்ந்து, நின்று, நடந்து கொண்டிருக்கும் எவளை விடவும். அப்படி இல்லையெனில் மருதனை என்னிடமிருந்து அவ்வளவு சுலபமாய்ப் பறித்துச் சென்றிருக்க முடியுமா!
சாவித்ரி மேடிட்டிருந்த வயிற்றின் மீது துப்பட்டாவை இழுத்து விட்டுக் கொண்டாள்.
ஐந்தாம் மாதம் நடக்கிறது. ரொட்டீன் செக்கப். டாக்டர் சொன்னால் ஸ்கேனோ, ரத்தப் பரிசோதனையோ எடுக்க வேண்டி இருக்கும். சென்ற முறை வந்தபோது க்ளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் எழுதினாள். கீர்த்திக்குக் கோடை விடுமுறை தொடங்கி விட்டது என்பதால் மருதனை வீட்டிலிருந்து அவனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு – “கீர்த்திக்கு மத்தியானம் நேரத்துக்கு லஞ்ச் கொடுக்கனும். கூட இருந்து பார்க்கனும். இல்லன்னா வெஜிடபிள் சாப்பிடாம ஏமாத்திடுவான். டிவி பார்த்துட்டு, செல்ஃபோனை நோண்டிட்டு கோட்டை விட்டுடாதீங்க.” - அவள் நான்ஸியுடன் கிளம்பி வந்திருந்தாள்.
நான்ஸி ஆறாம் வகுப்பிலிருந்து சினேகிதி. ஒன்றாக வேலை கிடைத்து பெங்களூர் வந்தவர்கள். கிட்டத்தட்ட ஒரே காலத்தில் கல்யாணமானவர்கள், அதுவும் ஒரே மாதிரி இருவருமே சாதிக்குள்ளேயே காதலித்துக் கல்யாணம், கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் பிள்ளை பெற்றவர்கள். அதுவும் ஒரே மாதிரியாக சிஸேரியன். ஒரே வித்தியாசம் நான்ஸி மட்டும் புத்திசாலித்தனமாய் அப்போதே கருத்தடை அறுவை செய்து கொண்டாள் - “ஒவ்வொரு தடவையும் பயந்துட்டே பண்ண முடியுமாடி?”.
“ஏன் காண்டம் போட வேண்டியது தானே? என்று கேட்டால் "புருஷனை ஒரு ரப்பர் கிட்ட விட்டுக் கொடுக்க முடியாது” என்பாள். தலையிலடித்துக் கொள்வாள் சாவித்ரி.
நான்ஸியும் இப்போது அவளைக் கவனித்து விட்டாள். சாவித்ரியிடம் திரும்பிக் கண்ணைக் காட்டினாள். அவளது காதருகே சென்று கிசுகிசுப்பாய்ச் சொன்னாள்.
“அவ வந்திருக்கா பாரு. மருதன் ஃப்ரெண்ட்.”
ஃப்ரெண்ட் என்று சொன்னதில் ஒரு கேலி இருந்ததோ! சரியாய்த் தெரியவில்லை.
“ம்ம்ம்.”
“அவளும் ப்ரெக்ணன்ட்டா?”
திரும்பி மீண்டும் அவளைப் பார்த்தாள் சாவித்ரி. வயிற்றைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. இங்கே பிள்ளைத்தாய்ச்சிக்காரிகள் மட்டுமா வருகிறார்கள்! மாத விலக்கில் பிரச்சனை உடையோர், பிறப்புறுப்பில் தொற்றுக் கொண்டோர், நாளச் சுரப்பிகளில் சிக்கல்கள் இருப்போர், கர்ப்பம் உண்டாவதில் தடையுள்ளோர் என விதவிதமான காரணங்களுக்காக இத்துறைக்கு வைத்தியம் பார்க்க வருகிறார்கள்.
இந்நினைப்பு தான் எத்தனை தூரம் வக்கிரமானது என்றும் அவளுக்குத் தோன்றியது. அது அவள் மீதான வெறுப்பின் கசப்பிலிருந்து உருவாவது. என் இயல்பு இதுவல்ல. ஆனால் எத்தனை மனிதர்கள் நம்மை நம் இயல்போடே வாழ அனுமதிக்கிறார்கள்!
ஆனால் இவள் மீது மட்டும் தான் தவறா என்ன? மருதன் ஒத்துழைக்காமல் இது நடந்திருக்குமா? அம்மா எப்போதுமே சொல்வது போல் ஊசி இடங்கொடுக்காமல் நூல் நுழையாது தான். ஆனால் நூலொன்றும் அத்தனை அப்பாவி இல்லையே!
முதல் முறையாக மருதனுக்கும் இவளுக்கும் வரம்பு மீறிய ஓர் உறவு உண்டெனத் தெரிய வந்த கணம் அடிவயிற்றில் உண்டான அதிர்ச்சி இன்னமும் நினைவிருக்கிறது. இப்போது கரு சுமந்து கொண்டிருக்கும் இந்நேரத்திலும் மெல்லிசாய் அந்த மின்சாரம் உணர முடிகிறது. நம்பிக்கைத் துரோகத்தின் கருகும் மணத்தை நாசி உறிஞ்சியதை, கழிவிரக்கத்தின் எரியும் ருசியை நாவு சுவைத்ததை எளிதில் மறக்கவியலுமா!
எப்போதும் மருதனின் செலபேசியைத் தொடாதவள் அன்றைக்குத் தன் செல்பேசியில் பிரச்சனை என்பதால் அவசரமாக தன் மின்னஞ்லைப் பார்க்கும் பதற்றத்தில் அதை எடுத்துத் திறந்த போது அவன் கழிவறையில் இருந்தான். தலை நீட்டிய மெசஞ்சரில் ப்ரியா முத்தமிட்டதைப் பார்த்துப் புரிந்து கொள்ள கொஞ்சம் சமயம் பிடித்தது.
கால் கழுவி, கை கழுவி, கால் மிதியில் பாதம் துடைத்து, பூத்துவாலையில் கை துடைத்து, மருதன் திரும்பி வந்து சாவித்ரி கையில் இருந்த செல்பேசி பார்த்துப் பதற்றமாகி, அதை வந்து பிடுங்கும் முன், உடலில் இருக்கும் புண்ணை நோண்டிப் பார்ப்பது போல் முந்தைய இரு நாள் உரையாடல் முழுக்கப் படித்து முடித்திருந்தாள்.
இருவரும் அது பற்றி பேசிக் கொள்ளவில்லை. அது பற்றி மட்டுமல்ல, எது பற்றியும் பிறகு பேசிக் கொள்ளவில்லை. இரண்டரை வயது கீர்த்தியின் அர்த்தமற்ற சொற்கள் தவிர்த்து அந்த வீட்டில் மௌனமே வியாபித்தது. சிரிப்பு முற்றிலும் நின்று போனது.
“டோக்கன் நம்பர் 37…”
யாரோ பதின்மச் சிறுமி தன் அம்மாவின் கரம் பற்றி டாக்டர் அறைக்கு நடந்தாள்.
முழுதாய் மூன்று மாதங்கள் இந்த ஆட்டம் தொடர்ந்தது. பிறகு நான்ஸியிடம் மெல்ல விஷயத்தைச் சொன்னாள் சாவித்ரி. அது வரை தன் அம்மாவிடம் கூட இதைச் சொல்லவில்லை. அதையே அவமானமாகக் கருதினாள். அல்லது “வீட்டில் பார்க்கறது வேண்டாம்னு நீயே புருஷன் கட்டினியே, இப்ப நல்லா அனுபவி” என்ற குத்தல் பேச்சுக்கு அஞ்சினாள். அம்மாவோ மகளோ பெண்ணுக்குப் பெண் போட்டி தான், அவர்களுக்குள்ளான பிரியமெல்லாம் பாசாங்கே என அவளுக்குத் தோன்றும்.
சில நாட்கள் குளியலறையில் அழுதாள். சில தினங்கள் மருதனை மானசீகமாகத் திட்டினாள். ஒரு நாள் சமைக்கவில்லை. (மருதன் ஸ்ரீ கிருஷ்ணா கஃபேயில் பார்சல் உணவு வாங்கி வந்து வைத்துப் போனான்.) இன்னொரு நாள் கீர்த்தியை அழைத்துக் கொண்டு ஃபோரம் மால் ஷாப்பிங் போய் விட்டு வேண்டுமென்றே மிகத் தாமதமாக வந்தாள். மருதன் வந்து பார்த்து விட்டுப் பதறட்டும் என்ற எதிர்பார்ப்பில். ஆனால் அன்று அவன் அவளை விடத் தாமதமாக அலுவலகத்திலிருந்து திரும்பி அவளைக் கடுப்பாக்கினான். ஒரு நாள் தற்கொலை எண்ணம் வந்தது. யோசித்து விஷ பாட்டிலே சாத்வீகமான முறை எனத் தீர்மானித்தாள். கீர்த்தியின் சத்தம் அதைக் கலைத்தது.
மருதன் யாரிடமும் பிரச்சனையைச் சொன்னானா எனத் தெரியவில்லை. இன்னமும் அவன் ப்ரியாவுடன் பழகிக் கொண்டிருக்கிறானா என்பதும் தெரியவில்லை. ஒரு நாள் இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்தான். இதற்கு முன் அவளறிந்து அவன் குடித்ததே இல்லை. நடு இரவில் கழிவறை சென்று வாந்தியெடுத்து, அத்தனை போதையிலும் அவனே சுத்தம் செய்தான். அந்த மூன்று மாதங்களில் அன்று தான் அவன் மீது பாவமாய் இருந்தது அவளுக்கு. மறுநாள் காலை தான் நான்ஸிக்கு அழைத்தாள்.
“அந்த ப்ரியா யாருன்னு தெரிஞ்சுதா?”
“அவரோட ஆஃபீஸ்ல கூட வேலை செய்யறவ. இவர் அவளுக்கு மெண்டர்.”
“அழகா இருக்காளா?”
“ஓரளவு.”
“அப்ப நிறையவே அழகுன்னு தெரியுது. புருஷனுக்குப் பொண்டாட்டி தவிர எல்லாப் பொம்பளையும் அழகு தான். பொண்டாட்டிக்குப் புருஷன் அழகுனு சொல்ற எல்லாப் பொம்பளையும் சுமார்தான். ஓரளவுன்னு சொல்றேன்னா அழகியாத்தான் இருக்கனும்.”
“போடி, நீயும் உன் மயிரு லாஜிக்கும்.”
“சரி சரி. கோவிச்சுக்காதே. மேலே சொல்லு.”
“மேலே என்ன சொல்றது. வயறு எரியுது.”
“ம். ஃபிசிகல் ரிலேசன்ஷிப் இருக்கா?”
“எனக்குச் சொல்லத் தெரியல. ஆனா இருந்தாலும் இல்லனாலும் என்ன வித்தியாசம்? மனசுல இன்னொருத்தி வந்ததே மோசம் இல்லையா? அதையே தாங்க முடியலயே.”
“அது சரி தான்டி. நாளைக்கு அவ அதை வெச்சு பிரச்சனை பண்ணக்கூடாதுல்ல. அதுக்காகத் தான் கேட்டேன். Intercourse is an important milestone in a relationship. தவிர…”
“தவிர?”
“மருதன் இதுல எவ்வளவு தூரம் இதில் இறங்கி இருக்கார்னும் புரிஞ்சுக்க.”
“ம்.”
“ஸாரிடி. ஆனா எல்லாம் யோசிச்சு தானே ஆகனும்.”
“நடந்திருக்கும்னு தான் தோனுது.”
“ஓ! எப்படிச் சொல்ற?”
“அந்த சாட். அதிலிருந்த உரிமை. பச்சையான நிர்வாணப் பேச்சு. வெட்கங்கெட்டவ. உண்மையைச் சொன்னா நான் கூட இதுவரை அவர் கிட்ட அப்படிப் பேசினதில்ல.”
“அது தான் காரணமோ என்னவோ!”
சொல்லி விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள் நான்ஸி என்பதை சாவித்ரியால் உணர முடிந்தது. கண்களின் ஓரமாய் நீர் திரண்டு நின்றது. மெல்ல விசும்பினாள்.
“ஏய், ஸாரி ஸாரி ஸாரி. வழக்கமாப் பேசறாப்லயே பேசிட்டேன். அழாதே. இரு.”
“…”
“ஈவினிங் நான் வீட்டுக்கு வர்றேன். பேசலாம்.”
“வீட்ல வேண்டாம். மருதன் வந்திடுவார். டின்னர்க்கு எங்கயாவது மீட் பண்ணலாம்.”
“ஃபைன். கோஸ்ட் டூ கோஸ்ட்?”
“ம்.”
மாலை அந்த உணவகத்தின் மங்க விளக்கொளியில் கீ சிக்கன் ரோஸ்ட் கடித்தபடி பேசினார்கள். கை கழுவி வந்தமர்ந்து பில்லுக்குக் கடனட்டை நீட்டி, ரசீதில் சாவித்ரி கையெழுத்திட்ட போது பிர்ச் குச்சியில் பல் குத்திக் கொண்டே நான்ஸி சொன்னாள் -
“நான் பேசறேன் மருதன் கிட்ட. அப்புறம் அவசியப்பட்டா அந்த ப்ரியா கிட்டயும்.”
“ம்.”
“ஒண்ணு புரிஞ்சுக்க. சண்டைப் போடறதோ, பேசாம இருக்கறதோ இதுக்குத் தீர்வு இல்ல. சொல்லப் போனா அது ரெண்டுமே நிலைமையை மோசம் ஆக்கும். சண்டைப் போட்டா ஆமா அப்படித்தான், என்ன செய்வேன்னு கேட்டுட்டு செய்வாங்க. பேசாம விட்டா நிம்மதியா இந்த வேலையைத் தொடர்வாங்க. அதனால் பேசினாத்தான் தீர்வு.”
“…”
“என்ன சொல்றே?”
“ஏன் அவ கிட்ட போனான்னு எனக்குக் கேட்கனும். எதில் குறை வெச்சேன்?”
“தப்புடி. சிலதெல்லாம் கடக்கனும். வெச்சுக் குடையக் கூடாது. அது நல்லதில்ல.”
“ம்.”
“உனக்குத் தேவை சொல்யூஷனா ஆன்சரா? பதிலை வெச்சு என்ன பண்ணுவே?”
“ம்.”
“எல்லோரும் தப்புப் பண்ணிட்டுத் தான் இருக்கோம். அளவு தான் வேற வேற. இப்ப உன்னையே எடுப்போம். மருதன் தவிர யாரையும் மனசுல நினைச்சதே இல்லையா நீ? மனசைத் தொட்டுச் சொல்லு. அப்ப டீனேஜ் டைம்ல யாரை நினைச்சு விரல்…”
“ஏய் அதுவும் இதுவும் ஒண்ணா?”
“ஒண்ணு இல்ல. மருதன் எல்லை மீறிட்டார் தான். ஆனா எல்லாமே நாம போடற கோடு தான்னு சொல்றேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கோடு. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு கோடு. நமக்கு ஒரு கோடு, அடுத்தவருக்கு வேற கோடு.”
“ம்.”
“ஸோ, அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கலாம். இதிலிருந்து எப்படி வெளிய வர்றதுன்னு. இன்னும் சொல்லப் போனா நமக்கு வேற ஏதும் சாய்ஸும் இல்ல.”
“…”
“And I believe that divorce is definitely not one of the options that you are considering right now.”
“அதிர்ச்சியாய் நிமிர்ந்து அவளைப் பார்த்தாள் சாவித்ரி.”
“ஏய்…. நோ. இல்லவே இல்ல.”
அவளது கையைப் பற்றிக் கொண்டு சொன்னாள் –
“கவலைப்படாதே. சரி பண்ணிடலாம்.”
“சரி.”
“வர்ற சாட்டர்டே டின்னர்க்கு உங்க ரெண்டு பேரையும் இன்வைட் பண்றேன் எங்க வீட்டுக்கு. மருதனுக்கு நானே ஃபோன் அடிச்சிடறேன். வாங்க. நாம பேசிக்கலாம்.”
சனியிரவு நான்ஸி வீட்டில் குழந்தைகள் இருவரும் விளையாட்டெனும் பெயரில் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்த பின்னணி ஒலியில் நான்ஸி மருதனிடம் மெல்லப் பேசினாள். முதலில் இறுக்கமாக இருந்தவனை எதையெதையோ பேசி சுற்றி வளைத்து, பனிக்கட்டியுடைத்து விஷயத்துக்குக் கூட்டி வர வேண்டியிருந்தது.
மூன்று விஷயங்கள் நான்ஸிக்குப் புரிந்தன. ஒன்று தற்போதைய சூழல் அவனுக்கும் பிடிக்கவில்லை, அதனால் அதிலிருந்து சீக்கிரம் வெளிவர விரும்பினான். இரண்டு அவன் ஒருபோதும் சாவித்ரியைப் பிரியும் எண்ணத்தில் இல்லை. ஆனால் அதற்குக் குழந்தை கீர்த்தி மட்டும் காரணமல்ல. மூன்று ப்ரியாவை நீங்குவதில் அவனுக்குத் தயக்கங்கள் இருந்தன. அது அவள் மீதான மயக்கம் கிடையாது. மாறாக அது ஒரு துரோகமாகி விடக்கூடாதென அஞ்சினான். சரியாய்ச் சொன்னால் அவளே விரும்பி நீங்கினால் அல்லது அதுவாக நடந்தால் ஏற்பதில் அவனுக்குச் சிக்கல் கிடையாது.
நான்ஸி நிதானமாகத் திட்டமிட்டாள். பின் வந்த நாட்களில் ப்ரியாவைச் சந்தித்துப் பேசினாள். மீண்டும் மருதனிடம் பேசினாள். பிறகு இருவரையும் வைத்துப் பேசினாள்.
சில வாரங்கள் இதில் கரைந்தன. கவனமாய் இந்தச் சந்திப்புகள் எவற்றிலுமே அவள் சாவித்ரியைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஒருமுறை அவள் தானும் வருவதாய்த் தயங்கிச் சொன்ன போது உறுதியாய்ச் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டாள் நான்ஸி.
“இல்லைடி. அது சரி வராது. எல்லாத்தையும் கெடுத்துடும். பொறுமையா இரு.”
ப்ரியாவிடம் பேசியதிலிருந்து அவளை அணுகியது மருதன் தான் என்பது புரிந்தது. அவள் அலுவலகத்திலேயே ஒருவனைக் காதலித்துப் பிறகு பிணக்காகி முறிவு நேர்ந்திருந்தது. மருதன் அவளது முன்னாள் மெண்டர் என்பதால் இந்தச் சிக்கலைப் பகிர்ந்திருக்கிறாள். மருதன் தனும் அவளது தனிமையைப் போக்கப் பேசத் தொடங்கி இருக்கிறான். ஆறுதல் சொல்லி இருக்கிறான். வலிகள், வடுக்கள், வருத்தம், இத்யாதி.
பிறகு இயல்பாகவே அவ்வுறவு அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்திருக்கிறது. ப்ரியாவுக்கு அவன் திருமணமானவன் என்பதும் குழந்தை ஒன்றுண்டு என்பதும் மிக நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் அதை அவள் பெரிதாய்ப் பொருட்படுத்தவில்லை. அதை இதோடு குழப்பிக் கொள்ளவில்லை. அதே சமயம் ஒருபோதும் மருதன் அவளிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிக்கவில்லை. அவளும் திருமணம் பற்றி ஏதும் அவனிடம் கேட்டதில்லை. அது பற்றிய எதிர்பார்ப்பும் அவளுக்கு இல்லை.
ஆனால் அதே சமயம் அவளுக்கு மருதன் மீது மிகுந்த பிரியம் இருந்தது. நான்ஸி அவளிடம் மிக நட்பாகவே வேண்டுகோள் வைத்தாள். அது ப்ரியாவுக்கு ஒரு மிரட்டலாகத் தொனித்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனங்காட்டினாள்.
“நான் சுத்தி வளைக்காம நேராவே சொல்றேன் ப்ரியா. நீங்க ரொம்ப நாள் இப்படி இருக்க முடியாதில்லையா? மருதனுக்குக் குடும்பம் இருக்கு. முக்கியமாக் குழந்தை. இதில் உங்க ரெண்டு பேரு தப்பும் இல்லை. இயல்பா நிகழ்ந்துட்ட ஒரு விஷயம் தான்ங்கறது எனக்கு நல்லாப் புரியுது. ஆனா நீ எப்படியும் யாரையாவது கல்யாணம் பண்ணியாகனும். அது மருதனா இருக்க முடியாது. ஏன்னா ப்ராக்டிகல் டிஃபிகல்டீஸ் இருக்கு. சேதாரம் நிறைய இருக்கும். அதில் பெருசா யாருக்கும் லாபமில்ல. மாறா நீ இன்னொருத்தரைத் தேடலாம். கல்யாணம் செஞ்சுக்கலாம். இந்த ரிலேசன்ஷிப்லயே இருந்தா அப்படிச் செய்ய உனக்குத் தோனாது. ஒரு கட்டத்தில் உனக்கு அப்படித் தோனும் போது வயசு அதிகமாகி இருக்கும். ஆள் கிடைக்காமல் போகலாம். யோசி.”
“ஆனா…”
“அவசரமில்ல. யோசி. மருதன் கிட்டயும் பேசு. வேணும்னா என் கிட்டயும்.”
ஒரு வாரம் கழித்து செல்பேசியில் நான்ஸிக்கு அழைப்பு வந்தது. பேசியது ப்ரியா அல்ல; மருதனும் அல்ல. சாவித்ரி. அவள் குரலில் ஓர் உற்சாகம் நிரம்பி வழிந்தது.
“ஏய் நான்ஸி, என்ன மேஜிக் பண்ணினே?”
“என்னாச்சுடி?”
“மருதன் நேத்து நைட் என்கிட்ட பேசினார். He bought a gift. மியா மோதிரம் ஒண்ணு. ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். And then, we had sex.”
“அது பத்தி வேண்டாம். பேசினதை மட்டும் சொல்லு. மோதிரம் ஃபோட்டோ அனுப்பு.”
“அடச்சீ. பொறுக்கி நாயே.”
“சரி, சரி, சிலுத்துக்காதே. சொல்லுடி.”
“ப்ரியா கூட ப்ரேக்கப் பண்ணிட்டதா சொன்னார். அவளும் புரிஞ்சு ஒப்புக்கிட்டதாவும்.”
“குட்.”
“ஆனா அந்த ஆஃபீஸ்லயே இருந்தா தினம் அவளைப் பார்க்க வேண்டி இருக்கும். அது சரிப்படாது அப்படிங்கறதால வேலை மாறிடறதாவும் சொன்னார். நேத்து என் முன்னாலயே லேப்டாப்ல லாகின் பண்ணி நௌக்ரி ப்ரொஃபைல் அப்டேச் செஞ்சார்.”
“வெரி குட்.”
“இது நிஜமா, நிரந்தரமானு எல்லாம் தெரியல. ஆனா இப்ப சந்தோஷமா இருக்கேன்.”
“வெரி வெரி குட்.”
“ஆனா எப்படி திடீர் ஞானோதயம்னு தெரியல. அதான் உன் கிட்ட கேட்கலாம்னு.”
“பேட்.”
“என்ன பேட்? அப்புறம் ஏன் போனார்னும்.”
“அக்லி.”
“என்னடி?”
“நான் தான் சொன்னேனே. கேள்விகள் எல்லாம் கேட்காதே. தாண்டி வா. இனி நடக்க வேண்டியதைப் பாரு. அவ்ளோ தான் சொல்வேன். இல்லனா இன்னும் மோசமாகும்”
“அப்ப இஷ்டத்துக்குப் போவான், இஷ்டத்துக்கு திரும்புவான். ஏன் போனேன்னும் கேட்கக் கூடாது, ஏன் வந்தேன்னும் கேட்கக் கூடாதா? Bull-shit. என்ன கொம்பா?”
“இல்ல. இதைச் செஞ்சது நீயா இருந்தாலும் மருதன் கிட்ட இதே தான் சொல்வேன்.”
“நான் ஏன் இப்படி ஊர் மேயப் போறேன்? நான் ஒண்ணும் ப்ரியா இல்ல.”
“அப்படியெல்லாம் சொல்லிக்க முடியாது. எல்லோருக்கும் ஒரு நியாயம் இருக்கு.”
“அடுத்தவ புருஷனை ஆட்டையப் போடறதுல என்ன புடலங்காய் நியாயம் இருக்கு.”
“இருக்கு. மனுஷன் தப்பு செய்வான் என்பது தான் அந்த நியாயம்.”
“போடி.”
“ட்ரூ, ஸ்வீ ட் ஹார்ட்.”
“சரி, இனிமேல் நான் அவர்கிட்ட ஏதாவது ஸ்பெஷலா நடந்துக்கனுமா?”
“இல்லவே இல்ல. இயல்பா இரு. அதுவே போதும்.”
“அப்படித்தானே இருந்தேன். ஆனாலும் வெளியே போனாரே.”
“ஆமா. நீ ஸ்பெஷலா இருந்தாலும் போவார். அது தான் ஆம்பிளை குணம். போறதுக்கு வலுவான காரணம் எல்லாம் தேவையில்ல. ஏதாவது காரணம் உருவாக்கிக்குவாங்க. குடிக்கறதுக்குச் சந்தர்ப்பம் தேடற மாதிரி தான் இதுவும்.”
“என்னடி குழப்பற?”
“அப்படினா ஒரு அட்வைஸ் சொல்றேன். அனுபவப் பாடம். ஆம்பிளைக்கு நிஜத்துல அழகெல்லாம் ரெண்டாம்பட்சம் தான். எல்லாப் பொம்பளையும் ஒண்ணு தான். அவ வாசம் வேணும். அவ சூடு வேண்டும். அவ பக்கத்துல இருக்கும். அதுவும் தேவைப் படும் போது மட்டும் தான் இருக்கனும். மத்த நேரம் தொந்தரவு செய்யக்கூடாது. குளிர் காயற நெருப்பு மாதிரி இருக்கனும்னு நினைப்பான். ரொம்பத் தள்ளிப் போய் நடுங்க விட்றவும் கூடாது, ரொம்பக் கிட்டே போய் பொசுக்கிடவும் கூடாது. அவ அவனுக்கு எல்லாமா இருக்கனும். அனுசரிச்சுப் போகனும். அவ்ளோ தான். இதைச் சரியாச் செஞ்சாலே பொதுவா ஆம்பிளை விட்டுப் போக மாட்டான். ஆம்பிளை தன் கூட பேசிட்டே இருக்கனும்னு நினைக்கற பொம்பளையும், ஆம்பிளைய கவனிக்காம விடற பொம்பளையும் தான் சிக்கலில் மாட்டிக்கறா. எல்லாத்துக்கும் விதிவிலக்கு இருக்கு. மோசமான ஆம்பிளைகளும் உண்டு தான். ஆனா மருதன் அவ்வளவு மோசமில்ல. சராசரி. அதனால் கையாளறது எளிது. அவ்ளோ தான் விஷயம்.”
“அப்ப பொம்பளைக எல்லாம் என்ன ஆம்பிளைகளுக்கு அடிமையா?”
“உண்மையைச் சொன்னா ஆமா. குடும்ப அமைப்புக்குள் அதுவும், குழந்தை பிறந்த பின் பெண் அடிமை தான். ஒண்ணு இதுக்கு வெளிய சுதந்திரமா இருக்கலாம். அல்லது இதுக்குள் அடிமையா இருக்கலாம். உள்ளேயே கலகம் செய்யறதுல உபயோகம் இல்ல. அதிகபட்சம் நம்மை மதிச்சு நடக்கற மாதிரி நடிக்கற புருஷன் கிடைச்சா சந்தோஷப்படலாம். நாமும் உரிமை இருக்கற மாதிரி நடிச்சுக்கலாம்.”
“என் மாமியாரை விட நீ மோசம்.”
“சரி. உனக்குப் புரிய வைக்க முடியாது.”
“புரியவே வேண்டாம்.”
நான்ஸியின் பெருமூச்சு செல்பேசியின் டால்பி அட்மாஸ் வழியே வெளிப்பட்டது.
“சரி. அது கிடக்கட்டும். பேசி ஆகறதில்ல. ஒண்ணே ஒண்ணு மட்டும் எனக்கு ப்ராமிஸ் பண்ணு. இது நான் இதில் செஞ்ச உதவிக்குப் பரிசான்னு வெச்சுக்க.”
“ம். சொல்லு.”
“என் கிட்ட கேட்ட ரெண்டு கேள்விகளையும் ஒருபோதும் மருதன் கிட்ட கேட்காதே. நேரடியா மட்டுமில்ல மறைமுகமாக் கூட. கேள்விகள் ஒருவித அரிப்பு மட்டும் தான். நிம்மதியைத் தர முடியாத பதில்கள் எல்லாமே அனாவசியச் சுமைகள் மட்டுமே.”
“ஏய்..”
“நான் முடிச்சாச்சு. கேட்டது கிடைக்குமா?”
மௌனமானாள் சாவித்ரி. அவளுக்கு அவகாசமளித்துக் காத்திருந்தாள் நான்ஸி.
“சரி. பண்ணித் தொலையறேன். சனியனே.”
“மச் பெட்டர். தேங்கஸ்.”
“நான் தான் தேங்க்ஸ் சொல்லனும். ஆனா சொல்ல மாட்டேன்.”
“சொன்னாலும் உன் தேங்க்ஸ் வேண்டாம். ஒழுங்கா குடும்பம் நடத்து போதும்.”
“லவ் யூ, பிசாசே!”
இங்கே நான்ஸி புன்னகைத்தாள். அவ்விடம் சாவித்ரி புன்னகைப்பதை உணர்ந்தாள்.
அதன் பிறகு நான்ஸி ப்ரியாவைச் சந்திக்கவே இல்லை. இன்னும் சொன்னால் அந்தப் பெயரைக் கேட்கக் கூட இல்லை. மருதனோ, சாவித்ரியோ அப்படி ஒன்று நடக்காதது போலவே அதைப் பற்றி அவளிடம் பேசவே இல்லை. இடையே மருதன் வேறு ஒரு நிறுவனத்துக்கு வேலை மாறியதாக மட்டும் சாவித்ரி சொன்னாள். மனிதர்களின் கவனமான மறதிகள் எப்போதுமே நான்ஸிக்கு மிக ஆச்சரியமளிக்கும். அவளும் அப்படியே விட்டு விட்டாள் - எப்படியோ பிரச்சனை இல்லாவிடில் சரி தான் என்று.
“டோக்கன் நம்பர் 38…”
சலசலப்பு எழுந்தது. யாரும் உள்ளே போக எழாததால் மீண்டும் அதே எண்ணை அறிவித்தார்கள். எல்லோரும் அங்கே சுற்றி இருந்தோரைப் பார்த்தார்கள். இடையே ஏதாவது எண்ணுக்கு உரியோர் வராதிருந்தால் சின்ன மகிழ்ச்சி, நமக்கான அழைப்பு துரிதமாகும் என்ற நப்பாசையும் ஆர்வமும் எல்லோர் கண்களிலும் மின்னியது. ஒரு இளம் பெண் அருகிருந்த சிறுகடையில் காஃபி குடித்துக் கொண்டிருந்தவள் அதைப் பாதியில் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு (“ஷிட்!”) அவசரமாய் நடந்து வந்தாள். அவளது ஜீன்ஸ் பேண்ட் மிக மிக ஆபத்தான இறக்கத்தில் அவளைக் கவ்வியிருந்தது.
ப்ரியா இருவரையும் பார்த்து விட்டாள். தன்னுடன் வந்திருந்தவனிடம் காதில் ஏதோ சொல்லி விட்டு எழுந்து நடந்து வந்தாள். முன்பை விட இன்னும் இளமையாக, இன்னும் அழகாக இருப்பதாக நான்ஸிக்குத் தோன்றியது. உடனடியாக மெல்லிய பொறாமை எழுந்தது. அந்த அங்கீகாரத்தைப் புன்னகையாக அவளுக்கு அளித்தாள்.
ஓரக்கண்களில் சாவித்ரி இறுகிய முகத்துடன் இருப்பதையும் கவனித்தாள். பட்டும் படாமல் பேசி, சீக்கிரம் அவளை அனுப்பி வைத்து விட வேண்டும் எனப் புரிந்தது.
எழுந்து நின்றாள் நான்ஸி. நேராகவந்த ப்ரியா அவளை மென்மையாக அணைத்தாள். அவளது பெர்ஃப்யூம் வாசனை எந்த ப்ராண்ட் என நினைவில் தேடினாள் நான்ஸி.
“ஹாய் நான்ஸி. பார்த்து ரெண்டு மூணு வருஷம் இருக்குமா? ஹவ் ஆர் யூ?”
“இருக்கும். ஐ யாம் ஃபைன். ஹவ் அபவுட் யூ?”
“ரொம்ப நல்லா இருக்கேன்.”
இப்போது சாவித்ரியிடம் திரும்பினாள் ப்ரியா. அவள் எழவே இல்லை. முகம் திருப்பி அமர்ந்திருந்தாள். நான்ஸிக்குச் சங்கடமாய் இருந்தது. லேசாய்ப் பதற்றமாகவும். ஏதும் அசம்பாவிதம் இங்கே நடந்து விடக்கூடாது எனக் கர்த்தரை அவசரமாய் ஜெபித்தாள்.
ஆனால் ப்ரியா அதைப் பொருட்படுத்தாததுபோல் சாவித்ரியிடம் சிரித்தபடி கேட்டாள்.
“கீர்த்தி அம்மா! எப்படி இருக்கீங்க? எத்தனை மாசம்? மருதன் நல்லா இருக்காரா?”
வேறு வழியின்றி சிரமப்பட்டு சாவித்ரி புன்னகைத்தாள். அவளது தீவிர ஆத்திரத்தை இங்கிதம் தடுத்தது. உண்மையில் மருதனுக்கும் அவளுக்குமான உறவு தெரிய வந்த பின் இப்போது தான் அவளை முதல்முறையாகப் பார்க்கிறாள். முன்பு ஒரு முறை அவர்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஃபேமிலி அவுட்டிங்கில் பார்த்திருக்கிறாள்.
“எனக்குத் தெரியும் நீங்க என் மீது கோபமா இருப்பீங்கன்னு. அது நியாயமும் கூட.”
“…”
“ஆனா என் பக்கம் என்ன கதைனு கேட்காமலே எதையும் முடிவு பண்ணாதீங்க.”
அட்ரினலின் குப்பென ரத்தத்தில் பாய நான்ஸி அவசரமாய் அவளை இடைமறித்தாள்.
“ஹே ப்ரியா இப்ப அதெல்லாம் எதுக்கு. எல்லாம் முடிஞ்சு நல்லாத்தானே இருக்கு.”
“எக்ஸாக்ட்லி. அதனால தானே நான் இப்ப உங்களப் பார்த்ததும் பேசவே வந்தேன்.”
“ம்.”
“நான் எதையும் நியாயப்படுத்தல. ஆனா இந்த ரிலேசன்ஷிப்ல என்னோட கோணம் என்னனு தெரியாமலே ஒருவர் காரணமின்றி என்னை வெறுக்கக் கூடாதில்லையா!”
“சரி தான். ஆனா…”
“இருங்க. நான் பேசடறேன். எனக்குமே இதில் வலி இருக்கு. ஆனால் அது தாண்டி எல்லோருக்கும் நல்லது என்னனு யோசிச்சு தான் நான் விலகச் சம்மதிச்சேன்.”
“…”
“கீர்த்தி அம்மா! ப்ளீஸ் லிசன். ஜஸ்ட் டூ மினிட்ஸ்.”
“ம். சொல்லு…”
“எங்கம்மா அடிக்கடி ஒண்ணு சொல்வாங்க. ஆத்தோரம் இருக்கற மாமரத்துல பழம் பழுத்தா கீழே தண்ணில விழும். அப்போ ஆத்துல நீந்திட்டு இருக்கற மீன் அதைச் சாப்பிடத்தான் செய்யும். மீனால் மரமேற முடியாது. மீனோட பிரியமான உணவு மாம்பழமும் இல்ல. ஆனால் அதுக்குனு தானா வந்து விழும் பழத்தைச் சாப்பிடாம இருக்காது மீன். நமக்கு வாழ்க்கைல கிடைக்கற வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கத் தவறக் கூடாதுன்னு உணர்த்தறதுக்காக இதைச் சொல்வாங்க. A brilliant analogy.”
“….”
“நான் மருதனைத் தேடிப் போகல. I have great respect on him as my mentor. அவராத்தான் எனக்கு ப்ரேக்கப் ஆனது தெரிஞ்சு விசாரிச்சார். In fact, I was not very much down. மாறா அவர் தான் வருத்தத்தில் தான் இருந்தார். ஆறுதல் தேடினார். ஆறுதல் கொடுத்தார்.”
“…”
“அப்பத் தான் கீர்த்தி பிறந்து ஆறு மாசம் ஆகியிருக்கும். அவன் பிறந்ததுல இருந்து நீங்க மருதனை முழுக்க மறந்துட்டு குழந்தையை மட்டும் தான் கவனிக்கறதாச் சொன்னார். அதை உங்களுக்குப் பல விதத்தில் சொல்லிக் காமிச்சிருக்கார். ஆனா நீங்க பொருட்படுத்தல. அல்லது புரிஞ்சுக்கல. இது இயல்பு தான்னும் அவர் கிட்ட நான் சொன்னேன். ஆனா அவர் ஏத்துக்கல. அது ஒரு வித பொசஸிவ்னஸ். தன் சொந்தக் குழந்தையாலேயே உங்க மீது வந்த பொசஸிவ்னஸ். உண்மையில் அது ஒரு குழந்தைத்தனம் தான். அப்படி அவர் உங்களுக்கு இடையே இருந்ததா நம்பின வெற்றிடத்தை நான் நிரப்பினேன். செக்ஸ் எல்லாம் இதில் பிற்பாடு சேர்ந்தது தான்.”
“…”
“ஒருவகையில் நானும் அவர் மீது கோபப்படலாம். என்னைப் பயன்படுத்திக்கிட்டார். என்னை மணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லாமல் என்னுடன் நெருக்கமா இருந்திருக்கார். அது தவறில்லையா? ஒரு வகையில் என் வாழ்க்கையை ஒழித்தார் அப்படினு சொல்லலாமல்லவா. எனக்கும் அவரை மணம் செய்வதில் ஆர்வமில்லை. அதனால் பிரச்சனை சுலபமா முடிஞ்சுது. இல்லன்னா it would have been a disaster, right?”
“…”
“என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும்னு தான் நினைக்கிறேன். அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்கறதா எப்பவும் சொன்னதில்ல தான். ஆனால் பல முறை என்னைப் பிரியவே மாட்டேன்னு சொல்லி இருக்கார். என்கூட இருந்த வரைக்கும் என் தோற்றத்தை, என் புரிதலைப் புகழ்ந்துட்டே இருந்தார். அதெல்லாம் உண்மைனு தான் நம்பறேன். அதே போல் அப்படிச் சொல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் எப்படி உங்களோடு சந்தோஷமா இல்லன்னும் தவறாமச் சொல்லி இருக்கார். இதில் நம்ம ரெண்டு பேருக்குமே ஒரு முக்கியமான செய்தி இருக்குனுதான் நினைக்கிறேன்.”
“…”
“ஆனா இப்ப உங்க கிட்ட விசுவாசமாத்தான் இருப்பார்னு தெரியும். கண்ணாடி பிம்பம் கைகால் அசையறதுக்கேற்ப மாறுகிற மாதிரி உங்கள் சொல்லை அப்படியே கேட்பார். அதுவும் நல்லாத் தெரியும். ஏன்னா ஆண்கள் எல்லாம் அப்படித் தான். இதை நான் அவர் மீதான கோபத்தில் சொல்லல. ஃபேக்ட். அவர் மீது எப்பவும் மரியாதை உண்டு.”
“…”
“சரி. வாழ்த்துக்கள், கீர்த்தி அம்மா! உடம்பைப் பார்த்துக்கோங்க. நான் கிளம்பறேன்.”
“ஒரு நிமிஷம், ப்ரியா.”
சாவித்ரி இப்போது எழுந்து நின்றாள். ப்ரியாவின் கையைப் பற்றிக் குலுக்கினாள்.
“I am doing good. அஞ்சாவது மாசம் நடக்குது. மருதன் நல்லா இருக்கார். Very supportive.”
ப்ரியா ஆச்சரியமாய் அகலமாய்ப் புன்னகைத்தாள். கையை நன்கு பற்றிக்கொண்டாள்.
“நீங்களும் சந்தோஷமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.”
தொலைவில் அமர்ந்து கொண்டு இவர்கள் பேசுவதை ஆர்வமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவுடன் வந்திருந்தவனைப் பார்த்தபடியே சொன்னாள் சாவித்ரி.
“அஃப் கோர்ஸ்.”
“யூ ஆல்சோ டேக் கேர்.”
“தேங்க்யூ.”
“கடைசியா ஒண்ணு.”
தன் தலைமுடியைக் கோதிக் கொண்டே என்ன என சாவித்ரியைப் பார்த்தாள் ப்ரியா.
“கீர்த்தி அம்மா, கீர்த்தி அம்மான்னு சொல்றதுலயே வயசாகிடுச்சுனு மறைமுகமாச் சொல்ற மாதிரி இருக்கு. ஒவ்வொரு முறையும் அதை ஞாபகப்படுத்தற மாதிரியே தோனுது. Uncomfortable. இன்னும் எனக்கு அவ்வளவு வயசாகலன்னு நினைக்கிறேன்.”
“Oops! ஸாரி. நான் அப்படி மீன் பண்ணல. நான் மருதன் கிட்ட பேசும் போதெல்லாம் உங்களை அப்படியே குறிப்பிட்டுப் பழகிடுச்சு. அப்படி நேச்சுரலா வந்தது தான் இது.”
“அவருக்குமே அச்சொல்லில் தான் என் மீதான மனவிலக்கம் வந்ததோ என்னவோ!”
“…”
“Whatever, என்னை கீர்த்தி அம்மான்னு கூப்பிடாதீங்க இனி. நான் மிசஸ். மருதன்.”
“டன்…”
சூழலை மீட்க நான்ஸி அந்த ஆபத்தான உரையாடலை இயல்பாக்க விரும்பினாள்.
“கல்யாணமாகிடுச்சா, ப்ரியா?”
“ம்ஹூம். இல்ல.”
உதட்டைப் பிதுக்கினாள் ப்ரியா. சட்டென அடக்க முடியாமல் சாவித்ரி கேட்டாள்.
“அவருக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?”
ப்ரியா சிரித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினாள். அதில் ஒரு பதில் இருந்தது. இல்லாமலும் இருந்தது. ஏதோ பதில் இருந்ததாகவே நம்ப விரும்பினாள் சாவித்ரி.
“டோக்கன் நம்பர் 39…”
***
June 26, 2020
நான் ஏன் அரக்கன் அல்லன்
என் சிற்றறிவிற்கு எட்டிய ஒன்றைச் சொல்ல விழைகிறேன். மனங்கோணும் நண்பர்கள் பொருத்தருள்க. இது ஒரு நெடுநாள் உறுத்தல்.
அரக்கர், அசுரர் என்பதெல்லாம் நேர்மறைச் சொற்கள் அல்ல. தீமை என்பதன் உருவகமாக இந்துப் புராணங்கள் சொல்பவை. அவர்கள் எல்லோரும் பிறப்பால் பிராமணர்கள் அல்லாதோரும் அல்ல. ஆரியர்களின் புராண நாயகர்களான ராமனை மறுதலிக்கும் நோக்கில் திராவிடக் கருத்தியல் கொண்ட எழுத்தாளர்களும் தலைவர்களும் அதற்கு எதிரான ராவணனை அக்கதையின் நாயகனாக்கி எழுதினர், பேசினர். அது பிராமணியத்தை எதிர்க்கும் ஒரு குறியீட்டு எதிர்ப்பு. அது ஓர் அடையாளக் கலகச் செயல் மட்டுமே. அதன் நோக்கம் ஓர் அதிர்ச்சி மதிப்பீடு. அதன் வழியாக அவர்கள் புனிதமாகக் கருதும் விஷயங்களைக் கலைத்துப் போடுவது.
கவனியுங்கள். அவர்களின் நோக்கம் ராமாயணம் என்னும் புராணத்தை, அதன் மீதான மரியாதையை, பயபக்தியை உடைத்தெறிவது தானே ஒழிய அரக்கர்களைப் புனிதப்படுத்துவது இல்லை. அந்தக் காலகட்டத்தின் பின்புலத்தை எடுத்துப் பார்த்தால் இது எளிதில் விளங்கும். அப்போது கடவுள் நம்பிக்கையைத் தகர்க்க வேண்டிய அவசியம் திராவிட இயக்கத்துக்கு இருந்தது. ஏனெனில் சாதியத்தின் வேர் இந்து மதம், அதன் ஆதாரம் தெய்வ நம்பிக்கை, அதன் ஆணி வேர் புராணங்கள். அவை தாம் தம் நாயகர்களை மக்கள் மத்தியில் (குறிப்பாக திராவிடர்கள்) கடவுள் ஆக்கி வைத்திருந்தன. அதனால் அந்தப் புராண நம்பிக்கைகளையும், குறிப்பாக நாயக பிம்பத்தையும் நொறுக்க வேண்டிய தேவை இருந்தது. அதனால் அவற்றில் இருந்த வில்லன்களை (ராவணன், நரகாசுரன், மஹாபலி, சூரமத்மன், மகிஷாருரன், பஸ்மாசுரன் போன்றோர்) வேண்டுமென்றே நாயகர்கள் ஆக்கினார்கள்.
புராணங்களில் சொல்லப்பட்ட நாயகர்களின் வீரதீர, மாயாஜாலச் செயல்களைக் கேலிக்குள்ளாக்கினார்கள். தர்க்கம் மீறிய புராணங்களை மானாவாரியாகப் பகடி செய்தார்கள். அதன் கடவுளர்களை நகைச்சுவைச் சித்திரமாக்கி விட்டார்கள். அவற்றில் சொல்லப்பட்டிருந்த சமூக விதி தாண்டிய கடவுளர் உறவுகளைக் கொச்சையாக விமர்சித்தார்கள். அது அந்தப் புராணங்களுக்கு, அவற்றின் பால் கொண்டிருந்த வெகுஜன நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட சவால். இங்கே அடித்தால் அங்கே வலிக்கும் என்ற கணக்கீடு அது. பிராமணர்கள் சீண்டப்பட்டார்கள். அது ஒரு அரசியல் போராட்ட வடிவம். அது ஓரளவு பலனளித்தது. அவற்றால் பாதிப்புற்று கணிசமான மக்கள் விழிப்புணர்வு பெற்றார்கள். முழு நாத்திகர்கள் ஆகவில்லை என்றாலும், பகுத்தறிவுடன் மூட நம்பிக்கைகளைக் கேள்வி கேட்டார்கள்.
இது தான் பின்புலம். அரக்கர்களை தமிழர்களுக்கோ, திராவிடர்களுக்கோ உருவகம் ஆக்குவது அவர்களின் நோக்கமல்ல. இலங்கையிலிருந்து வந்ததாலேயே ராவணன் தமிழனாய், திராவிடனாய் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. (குறைந்தது அவர்களுக்கு அடையாளமாக ஆக வேண்டிய தேவை இல்லை.) அதே சமயம் ராவணன் பிராமணன் என்பதையும் கவனிக்க வேண்டும். அவனைக் கொன்றதால் ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது (ராமன் பிராமணன் அல்ல, ஷத்ரியன் என்பதைக் கவனியுங்கள்). ஆக, ஒரு பிராமணனை, பிராமணன் அல்லாதவன் வீழ்த்திய கதை தான் ராமாயணம். இது இது திராவிடர்களுக்குச் சாதகமான புராணம் அல்லவா? ஏன் எதிர்க்க வேண்டும்? காரணம் ராமன் என்பவன் கடவுளாக்கப்பட்டு விட்டான். மதக் குறியீடு ஆகி விட்டான். ராமன் என்ற கற்பிதம் ஆரியர்களுடையது என்பதால் தான் திராவிடப் பெரியவர்கள் ராவணனை நாயகனாக்கினார்கள். அதன் அர்த்தம் ராவணன் திராவிடன் என்பதல்ல; ஒடுக்கப்பட்டவன் என்பதல்ல.
மற்றபடி, அசுரன், அரக்கன் என்பதெல்லாம் தலித்களை, பிற்படுத்தப்பட்டவர்களைக் குறிப்பதல்ல. அது கெட்ட குணமுடையோரையே குறித்தது. அவர்களில் பிராமணர் உள்ளிட்ட எல்லாச் சாதியினரும் இருந்தனர். இன்னும் சொன்னால்அசுரர்களும் தேவர்களும் ஒரே தந்தைக்குப் பிறந்தவர்கள். காசியப முனிவர்! தாய் தான் இரு குலத்துக்கும் வேறு. ஆனால் அவர்களுமே கூட சகோதரிகள் தாம் - முறையே திதியும், அதிதியும். ஆக, ஒரே வழியில் தோன்றியவர்களை எப்படி இரு வேறு பிரிவினராகப் பிரிப்பீர்கள்? சாதி என்பது பிறப்புடன் தொடர்புடையது என்று நம்புவது தான் பார்ப்பனியப் பார்வை என்பதை நினைவிற்கொள்க.
இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். புராணங்கள் எழுதப்பட்ட காலத்தில் தலித்களை அல்லது பிற்படுத்தப்பட்டோரை எதிர்களாகச் சித்தரித்து அவர்களை பிராமணர் வீழ்த்துவதாகக் கட்டமைக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. ஏனெனில் அப்போது தலித்களும் பிற்படுத்தப்பட்டோரும் அடிமைகளாகவே இருந்தனர். ஆக அவர்களைப் பொருட்படுத்தி தம் கதையில் எதிர்மறைப் பாத்திரங்களாகச் சித்தரிக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் அதிகபட்சம் துணைப் பாத்திரங்களாக வந்தனர். நாயகர்களுக்கு விசுவாசம் கொண்ட அடிமைகளாக. அதனால் தான் சொல்கிறேன், அன்று புராணம் எழுதியோரின் உத்தேசம் திராவிடர்களைத் தீயவர்களாக, ஒழுக்கமற்றோராகச் சித்தரிப்பது அல்ல. நாமாக இன்றைய சூழலில் வலிந்து அந்தப் பார்வையைத் திணிக்கிறோம்.
அதுவே கடந்த நூறாண்டுகளில் இந்தப் புராணங்கள் எழுதப்பட்டிருந்தால் பிராமணர்கள் அப்படிச் செய்திருப்பார்கள். ஏனெனில் இப்போது திராவிட, தலித் இயக்கங்களின் எழுச்சி காரணமாக பிராமணர்களுக்குக் குடைச்சல் கொடுக்கும் சமமான எதிரிகளாக உருவாகி விட்டிருக்கிறார்கள். அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றி இருக்கிறார்கள். பார்ப்பனச் சித்தாந்தங்களை நகைச்சுவைகளாக ஆக்கி விட்டார்கள். ஆனால் அன்றைய நிலை அதுவல்ல. அதனால் தலித்களை பிற்படுத்தப்பட்டோரை இழித்துச் சித்தரிக்க அவசியமும் இல்லை. சொல்லப் போனால் அவர்களைப் பொருட்படுத்தத் தகுந்தவர்களாக எண்ணியே இருக்க மாட்டார்கள். தொந்தரவில்லாமல் தனக்குக் கீழே இருப்பவர்களைத் தனக்குச் சமமனான எதிரியாகக் கற்பனை செய்வார்களா என்ன! எளிய உளவியல்.
ஆக, நானறிந்தவரை புராணங்கள் நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான சமர் தானே ஒழிய பிராமணர்கள் அபிராமணர்கள் இடையேயானதல்ல. தேவர் மகன் திரைப்படம் எப்படி இரு தேவர்களுக்குமான சண்டையோ அப்படி. ஆனால் இப்போது நாம், அசுரர், அரக்கர் என்ற கற்பிதங்களைத் திரித்து அதைத் திராவிடர்களுக்கான அடையாளம் ஆக்கிக் கொண்டிருக்கிறோம். இதில் இரண்டு தர்க்கப் பிரச்சனைகள் இருக்கின்றன. ஒன்று வீம்பாக கெட்ட குணமுடைய ஓர் அடையாளத்துக்கு திராவிடர்களை ஒப்புக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு புராணங்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டவர்களாகி விடுகிறோம். ஒன்றை எதிர்ப்பது என்பது அதைக் கடப்பதில் தான் இருக்கிறது; அதற்கு நேர் எதிரான திசையில் செல்வதில் இல்லை. எனில் நம் செயலை அவர்களே தீர்மானிக்கிறார்கள் என்பதாகிறது. இன்று ஒரு புராண ஆதரவாளர் திராவிடர்களுக்கும் நாங்களே அடையாளம் இருக்கிறோம் என்று நமுட்டுச் சிரிப்புடன் சொல்ல வாய்ப்புண்டு அல்லவா!
ஒருவர் எதிர்தரப்பின் நாயகனுக்கு எதிரி என்பதாலேயே அவன் நம் தரப்பாக வேண்டும் என்பதில்லை. அவர் நம் தரப்பே இல்லை எனும் போது நம் ஆதர்சமாகவோ அடையாளமாகவோ எப்படி ஆக முடியும்? நம் திசையை நாம் தான் தீர்மானிக்க வேண்டும், எதிரியல்ல. ஆக, தர்க்கப்பூர்வமாகப் பார்த்தால் ஒருவர் அசுரர், அரக்கர் என்று சொல்லிக் கொள்வதில் எந்தப் பெருமையும் இல்லை. விரும்பாத பெண்ணைத் தூக்கி வருவதும், உலக மக்களைத் தொந்தரவு செய்வதும் தான் நம் அடையாளமா என்ன? அதனால் அசுரர், அரக்கர் போன்ற சொற்களை வீம்பிற்குப் பயன்படுத்துவது, திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு, தலித்களுக்கு, பிற்படுத்தப்பட்டோருக்கு அடையாளம் ஆக்குவது அசட்டுத்தனமானது என்பதே என் தாழ்மையான எண்ணம். அந்தப் பயன்பாட்டில் ஒரு வசீகரம் இருக்கிறது தான். ஆனால் அர்த்தமில்லை.
அசுரன் படத்துக்கு அப்பெயர் வைத்ததற்குப் பின் தீயதாக ஆக்கப்பட்டு விட்ட சொல் ஒன்றை நல்லதாக ஆக்கும் நல்லெண்ணம் இருக்கலாம் இயக்குநருக்கு. ஆனால் உண்மையில் அந்த முயற்சி இறுதியில் நல்ல விஷயம் ஒன்றுக்குத் தீய அடையாளம் தந்து விட்டதாகவே முடிந்தது என எனக்குப் பட்டது. சினிமா பரவாயில்லை. எதிர்மறைகளையும் கொண்டாடுவது நம் வழக்கம். ஆனால் அரசியலில், சமூகச் செயல்பாட்டில் இது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும், சாதாரண மக்களிடம் மனவிலக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
நான் திராவிடன் தான். ஆனால் அசுரனோ, அரக்கனோ அல்ல. முழு நல்லவனாக விழையும், முனையும் அரைகுறை நல்லவன்.
*
C. Saravanakarthikeyan's Blog
- C. Saravanakarthikeyan's profile
- 9 followers
