C. Saravanakarthikeyan's Blog, page 14

July 24, 2017

இந்தியா மதச் சார்பற்ற நாடா?


“Hindus, Muslims, Parsis, Christians, all are Indians. Religion is a private matter.”
- Mahatma Gandhi (Delhi in his prayer meeting, July 15, 1947)

2015 குடியரசு தினத்தை ஒட்டி மோடி தலைமையிலான மத்திய அரசின் தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட விளம்பரத்தில் இந்திய அரசியல் சாசன முகப்புரையின் (Preamble) புகைப்படம் இடம் பெற்றது. அதில் ‘Secular’, ‘Socialist’ ஆகிய சொற்களைக் காணவில்லை. இந்தியாவை இந்துத்துவ, முதலாளித்துவ நாடாக முன்வைக்கும் உள்நோக்கோடு தான் அந்த விடுபடலை மத்திய அரசு செய்தது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தியா குடியரசு ஆன போது எழுதப்பட்ட அரசியல் சாசனத்தின் முகப்புரை அது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமாளித்தார்.


ஆனால் அதிலுமே உள்நோக்கு இருந்தது - அதாவது அக்காலத்தே இந்தியா Secular, Socialist நாடு கிடையாது என்கிறார். அக்கூற்று உண்மையா? அதைப் பாதி உண்மை என்று சொல்லலாம். ஆனால் பாதி உண்மை முழுப் பொய்யை விட ஆபத்தானது.

இந்தியா மதச்சார்பற்ற நாடா? என்ற கேள்வி மறைமுகமாக மறுபடி மறுபடி நம் தேசக் குடிமக்களின் மனங்களில் எழுகிறது. அதற்கு விடை தேடும் முயற்சி இது.

*

‘மதச்சார்பின்மை’ என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல்லான ‘Secular’ என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி “Not connected with religious or spiritual matters” என்று பொருள் சொல்கிறது. அதாவது “மதத்துடனோ, ஆன்மீகத்துடனோ தொடர்பற்ற” என்ற அர்த்தம். பொருள்முதல்வாதத்தை ஒட்டிய ‘Saeculum’ என்ற லத்தீன் சொல் தான் இதன் வேர்.

சமகால அரசியல் சூழமைவில் எந்த ஒரு மதத்தோடும், மத நிறுவனத்தோடும் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளாத ஓர் அரசைக் குறிக்க ‘மதச்சார்பற்ற’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இன்று பெரும்பாலான நாடுகள் அதிகாரப்பூர்வமாக ஏதேனும் ஒரு மதத்தைப் பின்பற்றுபவை. காரணம் எளிமையானது அந்நாடுகளில் பெரும்பான்மை அல்லது முழுக்கவே அந்த மதத்தினர் தான் பிரஜைகளாக இருப்பர்.

உதாரணமாய் இங்கிலாந்து முதலான பல அதிகாரப்பூர்வமாக கிறிஸ்துவ நாடுகள். பாகிஸ்தான் உள்ளிட்ட பல அதிகாரப்பூர்வமாக இஸ்லாமிய நாடுகள். கம்போடியா போன்ற சில அதிகாரப்பூர்வமாக புத்த மத நாடுகள். இஸ்ரேல் யூத நாடு. இந்து நாடு என்ற ஒன்று இன்றைய தேதியில் இந்தப் பூமியில் கிடையாது. (2008 வரை நேபாளம் இருந்தது. இப்போது அதுவும் மதச்சார்பற்ற நாடு.) அதைப் போல அதிகாரப்பூர்வமாக எந்த மதச்சார்பும் இல்லாத நாடுகளும் உண்டு. இந்தியா அதில் முதன்மையானது.

மதச்சார்பற்ற நிலைப்பாட்டை “எந்த மதத்தையும் நெருங்காத” என்று வர்ணிப்பதை விட “எல்லா மதங்களையும் அரவணைத்துப் போகக்கூடிய” என்று சொல்வது தான் இன்றைய யதார்த்தத்திற்கு நெருக்கமானது. இந்தியாவும் அப்படி இருக்க வேண்டும் என்பதே நமது அரசியல் சாசனத்தை வகுத்தளித்த முன்னோடிகளின் எண்ணமும்.

“மதச்சார்பற்ற” நிலைப்பாடு குறித்து இந்திய அரசியல் சாசனம் என்ன சொல்கிறது?

நம் இந்திய அரசியல் சாசனத்துக்கு Preamble ஒன்று உண்டு. அதாவது முகப்புரை. சாசனத்தின் சாரமாய் அதைக் கொள்ளலாம். 1973ல் நடந்த கேசவானந்த பாரதிக்கும் கேரள மாநில அரசுக்கும் இடையேயான வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி இந்த முகப்புரையும் சாசனத்தின் பகுதியாகவே கருதப்படுகிறது. 1949ல் முதன் முதலில் இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போது முகப்புரையில் ‘Secular’ என்ற சொல் இடம்பெறவில்லை. அது இந்தியாவை “Sovereign Democratic Republic” என்று வர்ணித்தது. அதாவது இறையாண்மை வாய்ந்த மக்காளாட்சிக் குடியரசு!

சுதந்திரத்தை ஒட்டி இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பொருட்டு அமைக்கப் பட்ட அரசியல் நிர்ணய சபையில் ‘Secular’ என்ற சொல்லை சாசனத்தில் சேர்க்க வேண்டும் எனப் பலரும் பல முறை கோரிக்கை எழுப்பினர். (பதிவு செய்யப்பட்ட சபை விவாதங்களில் ‘Secular’ என்ற சொல் 67 முறை வருகிறது.) ஆனால் அம்பேத்கர் அவற்றை நிராகரித்தார். நேருவும் அதை ஏற்றார். அதற்குக் காரணம் இருந்தது.

அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் போது பீகாரைச் சேர்ந்த பேராசிரியர் கே.டி. ஷா - லண்டனில் பொருளாதாரம் பயின்றவர், பிற்பாடு 1952ம் ஆண்டு ராஜேந்திர பிரசாத்திற்கு எதிராக முதல் ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவர் - மூன்று முறை இதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 15 நவம்பர் 1948 அன்று ‘Secular Federal Socialist’ ஆகிய சொற்களைச் சாசனத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அவர், “நாம் தொடர்ந்து பல காலமாக, பல தளங்களிலும் நம்முடையது மதச்சார்பற்ற அரசு என்று சொல்லி வருகிறோம். அது உண்மை எனில் பிற்காலத்தில் நேரக்கூடிய எந்த ஒரு தவறான புரிதலையும் தவிர்க்கும் பொருட்டு ‘Secular’ என்ற சொல்லை நாம் ஏன் சாசனத்தில் சேர்க்கக்கூடாது?” எனக் கேட்டார்.

அவரது கோரிக்கை அதற்கு ஓராண்டு முன் பிரிவினையின் போது வகுப்புவாதத்தை முன்னிட்டு நடந்த கலவரங்களை ஒட்டிஎழுந்த நியாயமான கவலையின் பாற்பட்டது.

அதை மறுத்துப் பேசிய அம்பேத்கர், ‘Socialist’ என்ற சொல்லை ஏன் சேர்க்கக்கூடாது என்பதற்கான தன் தர்க்கத்தை மட்டும் முன்வைத்து ‘Secular’ என்ற சொல் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து விட்டார். வாக்கெடுப்பில் அத்தீர்மானம் தோல்வியுற்றது.

அம்பேத்கர் அரசியல் சாசனத்தை அரசின் பல்வேறு உறுப்புகள் ஒழுங்காய்ச் செயல் பட வழிகாட்டும் ஒரு கருவியாகவே பார்த்தார். அரசு பின்பற்ற வேண்டிய அரசியல் சித்தாந்தம் என்ன என்பதை சாசனம் சொல்ல வேண்டும் என அவர் கருதவில்லை. அரசின் கொள்கைகள், சமூக, பொருளாதார நிலைப்பாடுகள் எல்லாம் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்றாற் போல் மக்களே தீர்மானிக்க வேண்டும், அவற்றைச் சாசனத்தில் சேர்த்தால் அது மக்களாட்சியை ஒட்டுமொத்தமாக அழித்து விடும் எனக் கருதினார். இன்று சோஷியலிஸம் நல்ல விஷயமாகப்படுவது போல் நாளை முதலாளித்துவம் நல்ல கருத்தியலாக மக்களுக்குத் தோன்றலாம். அப்போது மாறிக் கொண்டு அதைப் பின்பற்றுவதற்கான வசதியை சாசனம் அளிக்க வேண்டும் என அவர் நினைத்தார்.

அதனாலேயே அம்பேத்கர் ‘Socialist’ என்ற சொல்லை சாசனத்தில் சேர்க்க இணங்க வில்லை. அதற்கு இன்னொரு காரணமும் சொன்னார். அது தேவையற்ற மிகை நடவடிக்கை (Superflueous) என நினைத்தார். அதாவது பிரிவு 31 உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் (Fundamental Rights), அரசின் கொள்கைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் (Directive Principles of State Policy) இவற்றின் மூலம் சோஷியலிஸத்தை ஏற்கனவே சாசனத்தில் கொண்டு வந்தாயிற்று. அச்சொல்லை வெளிப்படையாகச் சேர்ப்பதன் மூலமே அவ்வியல்பைக் கொண்டு வர வேண்டும் என்ற அவசியமில்லை எனக் கருதினார். இந்தக் காரணத்தை ‘Secular’ என்பதற்கும் நீட்டித்துப் பார்க்கலாம்.

நேருவுக்கும் ‘Secular’ என்பதைச் சாசனத்தில் சேர்ப்பதில் விருப்பம் இருக்கவில்லை.

ஆகஸ்ட் 12, 1949 அன்று ‘Secular’ என்ற சொல்லைச் சாசனத்தில் சேர்ப்பது பற்றிய விவாதத்தில் சற்று கடுமையாகவே எதிர்வினையாற்றுகிறார் நேரு - “இங்கே ஒரு சொல் பல முறை முன்வைக்கப்படுகிறது. அதற்கு என் பலமான எதிர்ப்பைப் பதிய விரும்புகிறேன். இந்த அவை அச்சொல்லைக் கவனமாக ஆராய வேண்டும். இந்த அரசு பாகிஸ்தானை, இஸ்லாமியர்களை, அதை, இதை என ஆற்றுப்படுத்தப் போகிறதா? அச்சொல்லின் பொருள் என்ன எனத் தெளிவாக அறிய விரும்புகிறேன்.”

தொடர்ந்து “அந்த வார்த்தையை இங்கு அடிக்கடி பயன்படுத்தும் கனவான்களிடம் நான் பணிவுடன் கெஞ்சிக் கேட்பது, அதனைப் பயன்படுத்தும் முன் ஏதாவது ஓர் அகராதியைப் புரட்டிப் பாருங்கள் என்பதே. ஒவ்வொரு கட்டத்திலும் அது தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. எனக்கு அது புரியவில்லை. அதற்குப் பெரும் முக்கியத்துவம் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது (சாசனத்தில்) தொடர்புடைய எல்லா இடங்களிலும் (மறைமுகமாகக்) கொண்டு வரப்பட்டு விட்டது. அதைத் தாண்டி நாம் மதச்சார்பற்ற அரசு என்று (வெளிப்படையாகச்) சொல்லிக் கொள்வதன் மூலம் இந்த உலகிற்கு எதை அளிக்க முயல்கிறோம்?” என்றார்.

அப்படி ஏற்கனவே சாசனத்தில் மதச்சார்பின்மை பயின்று வரும் இடங்கள் எவை?

அரசியல் சாசனத்தின் 15(1), 15(2)வது பிரிவுகள் எந்த விஷயத்திலும் மதரீதியாகப் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்கிறது. 16(2)வது பிரிவு குறிப்பாய் அரசு வேலை வாய்ப்புகளில் மதிரீதிப் பாகுபாடு கூடாது என்கிறது. 23(1)வது பிரிவு கட்டாயப் பொதுச்சேவையில் மக்களை ஈடுபடுத்துவதற்கு அரசுக்கு உரிமை உண்டு என்று சொல்லும் போது அதிலும் மத அடிப்படையிலான பாகுபாடு கூடாது என்கிறது.

தனி மனிதர்களின் மதச் சுதந்திர உரிமைகளை 25(1)வது பிரிவு பேசுகிறது. அதாவது யாரும் எந்த மதத்தையும் நம்பவும், பின்பற்றவும், பரப்பவும் செய்யலாம். எந்த மதமும் தனக்கான அமைப்புகளை ஏற்படுத்துதல், அவற்றுக்கான சொத்துக்களைச் சேர்த்தல், நிர்வகித்தல் போன்றவற்றுக்குச் சுதந்திரத்தை அளிப்பது பிரிவு 26. மதத்தை நிர்வகிக்கும், பரப்பும் செலவுகளுக்கு வரிவிதிப்பு கூடாது எனப் பிரிவு 27 சொல்கிறது.

அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் எந்த மதப் போதனைகளும் நடக்கக்கூடாது என்கிறது 28(1)வது பிரிவு. (மதத்தைப் போதிக்கும் கல்வி நிலையங்களுக்கு அரசுப் பணத்தை செலவழிக்கக்கூடாது என்றும் கொள்ளலாம்.) 28(3)வது பிரிவு அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்வி நிறுவனத்தில் படிக்கும் எவரும் அந்நிறுவனம் நடத்தும் மத வழிபாடுகளில் அல்லது நடவடிக்கைகளில் பங்கெடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்கிறது. அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் இடம் மறுக்கப்படக்கூடாது என்கிறது பிரிவு 29(2). சிறுபான்மையினர் தமக்கான கல்வி நிறுவனங்களை அமைக்கவும், நிர்வகிக்கவும் உரிமை உண்டு என்கிறது பிரிவு 30(1). கல்வி நிறுவனங்களுக்கு உதவி அளிப்பதில் அதை நிர்வகிப்பது சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் பாகுபாடு கூடாது என்கிறது 30(2)வது பிரிவு.

மதங்கள் தாண்டிய இணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பரப்புவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை எனப் பிரிவு 51A(e) வரையறுக்கிறது. சட்டசபை, மக்களவைத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்களில் மத அடிப்படையில் எவரும் விடுபடக்கூடாது என்பது 325வது பிரிவு. இப்படி அரசியல் சாசனம் முழுவதும் மதச் சுந்திரமும், மதச் சமத்துவமும், மதப்பாகுபாடின்மையும் உறுதி செய்யப்படுகிறது.

இவை போக முகப்புரையில் Justice, Liberty, Fraternity, Equality ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது அரசு அனைத்துக் குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி வழங்க வேண்டும்; சிந்தை, வெளிப்பாடு, நம்பிக்கை, வழிபாடு - இவற்றில் சுதந்திரம் தர வேண்டும்; படிநிலையிலும், வாய்ப்பிலும் சமத்துவம் பேண வேண்டும்; (குடிமக்களிடம்) தனிமனித கண்ணியத்தையும், தேச ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உறுதி செய்து சகோதரத்துவத்தைப் பரப்ப வேண்டும்.

ஆக, தனியாய் அச்சொல்லைச் சேர்ப்பது அவசியமற்றது என அம்பேத்ரும் நேருவும் நினைத்தார்கள். அச்சொல்லைச் சேர்க்கத் தயங்க இன்னொரு காரணமும் இருந்தது.

மதச்சார்பின்மையின் அசல் வடிவான ஐரோப்பிய மதச்சார்பின்மையானது இருபுறம் கூரான கத்தி. ஒருவகையில் வறட்டுத்தனமானது. மதம் எப்படி அரசில் நுழையாதோ அப்படியே அரசும் மதத்தில் நுழையாது. இரண்டும் தனித்தனியாகச் செயல்படும் Dichotomy நிலவும். அது தான் அங்கே மதச்சார்பின்மை என்று அழைக்கப்படுகிறது.

அது இந்தியாவுக்குச் சரிபட்டு வராது. இங்கே சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர் ஏராளம். அவர்களது பாதுகாப்பும், சமூக மேலெழுதலும் நமக்கு முக்கியமானது. முற்றான மதச்சார்பின்மை என்பது அதற்கு எதிராக அமையும். அதனால் அம்பேத்கர் ‘Interventionist Secularism’ என்ற வடிவையே விரும்பினார் என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது மத விஷயங்களில் தலையிடும் மதச்சார்பற்ற அரசு.

உதாரணமாய் மதச்சமத்துவத்தைப் பேசினாலும் இட ஒதுக்கீட்டை அரசியல் சாசனம் ஆதரிக்கிறது, சிறுபான்மையினருக்கான சலுகைகளை அளிக்கிறது. சிறுபான்மையினர் நம்பிக்கைகளைப் பாதிக்கும் Uniform Civil Code-ஐ ஆதரிக்கவில்லை. இந்தச் சூழலில் வெளிப்படையாக ‘மதச்சார்பற்ற’ என்று போட்டுக் கொள்ள முடியாத நிலை இருந்தது.

மதச்சார்பற்ற கோரிக்கை போல் இந்து நாடாக்கும் கோரிக்கையும் அன்று இருந்தது. சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன் 5 ஜூன் 1947 அன்று பிரபலத் தொழிலதிபரான ப்ரஜ்மோகன் பிர்லா வல்லபாய் படேலுக்கு எழுதுகிறார், “பிரிவுண்ட பகுதி முஸ்லிம் அரசு. ஹிந்துஸ்தானத்தை நாம் இந்து தேசமாக அறிவித்து இந்து மதத்தை அரசு மதமாக அறிவிக்க இது சரியான நேரம் அல்லவா?”. அதற்கு 10 ஜூன் 1947 அன்று படேல், “நான் அப்படி நினைக்கவில்லை. சிறுபான்மையினரின் பாதுகாப்பு நம் முக்கியப் பொறுப்பு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இந்த அரசு சாதி, மதம் கடந்து எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும்.” என்று பதில் எழுதினார். (அப்படிப் பட்ட படேலைத் தான் இந்துத்துவ முகமாக பாஜககாரர்கள் முன்வைக்கிறார்கள்.)

சாசனத்தின் முகப்புரை “கடவுளின் பெயரால்…” என்று தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை கூட எழுப்பப்பட்டது. ஹெச்வி காமத், “In the name of God, We the People of India….” என முகப்புரையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிர்ணய சபையில் கொண்டு வந்தார். (இஸ்லாமியரான மௌலானா ஹஸ்ரத் மொஹானி கூட அதை ஆதரித்தார் என்பது தான் சுவாரஸ்யம்.) அம்பேத்கரும் ராஜேந்திர பிரசாத்தும் அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளச் சொல்லி அவரை வலியுறுத்தினர். ஆனால் காமத் பிடிவாதமாக இருந்தார். வாக்கெடுப்பில் தீர்மானம் தோற்றது.

(பிற்பாடு ஜனாதிபதி பதவியேற்கும் போது சொல்லப்படும் பிரமாணத்தில் “In the name of God…” எனச் சேர்க்க வேண்டுமென இதே ஹெச்வி காமத் மற்றும் மஹாவீர் தியாகி தீர்மானம் கொண்டு வந்த போது அம்பேத்கர் ஒப்புதலுடனே அது நிறைவேறியது. அது பதவியேற்கும் தனி நபர் விருப்பம் தொடர்புடையது. ஆனால் சாசன முகப்புரையில் கடவுள் என்ற மதச் சித்தாந்தம் நுழையக்கூடாது என்று நினைத்தார் அம்பேத்கர்.

உண்மையில் அன்று அரசியல் நிர்ணய சபை மூன்று பிரிவுகளாகப் பிரிந்து கிடந்தது. இந்தியாவை இந்து நாடாக ஆக்கி விட வேண்டும் என்பது முதல் கோஷ்டி; அரசியல் சாசனத்திலேயே இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று சொன்னது அடுத்த கோஷ்டி; இந்தியா மதச்சார்பற்ற நாடுதான், ஆனால் அதை சாசனத்தில் சேர்க்க வேண்டியதில்லை என்ற கடைசிக் கோஷ்டி. அம்பேத்கரும், நேருவும் இந்த மூன்றாவது கோஷ்டியைச் சேர்ந்தவர்கள். அதிர்ஷ்டவசமாக இந்த மூன்றாவது நிலைப்பாட்டுக்கே அன்றைய அரசியல் நிர்ணய சபையில் ஆதரவு அதிகம் இருந்தது.


அதனாலேயே ‘Secular’ என்ற சொல்லைச் சேர்க்காமலேயே அரசியல் சாசனச் சட்டம் 26 நவம்பர் 1949 அன்று வெளியானது. (அதைத் தான் மோடி அரசு விளம்பரத்தில் பயன்படுத்தி இருந்தது.) ஆனால் இன்றைய அரசியல் சாசனத்தில் ‘Secular’, ‘Socialist’ ஆகிய சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவை எப்போது, எப்படி உள்ளே வந்தன?

அதைக்கொண்டு வந்தவர் இந்திரா காந்தி! ஆம். ஜவஹர்லால் நேருவை விட அவரது புத்திரியான இந்திரா காந்தி மதச்சார்பின்மை கொண்டவர் அல்ல என்பது நேற்று வரலாறு வாசிக்கத் துவங்கிய குழந்தை கூட சொல்லி விடும். ஆனாலும் வரலாறு இப்படியான பல வினோதங்களைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு தான் நகர்கிறது.

இந்தியாவில் எமர்ஜென்ஸி என்றழைக்கப்பட்ட அவசர நிலைப் பிரகடனம் அமலில் இருந்த போது கொண்டு வரப்பட்ட 42வது சட்ட திருத்தத்தின் மூலம் ‘Secular’, ‘Socialist’ ஆகிய சொற்கள் அரசியல் சாசனத்தின் முகப்புரையில் நுழைக்கப்பட்டன. இந்திய ஒன்றியம் “SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC” ஆனது. 2 நவம்பர் 1976 அன்று கொண்டு வரப்பட்ட இந்தச் சட்ட திருத்தம் தான் இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 101 சட்ட திருத்தங்களில் மிக அதிகப் பிரிவுகளை மாற்றியதும், மிக சர்ச்சைக்குள்ளானதும் ஆகும். அந்தச் சட்ட திருத்தத்தை ஒரு ‘குட்டி அரசியல் சாசனம்’ என்றே சொல்வார்கள். மத்திய அரசின் பலத்தை உச்ச நீதிமன்றத்தை விட அதிகமாக்குவது, மாநில அரசு அதிகாரங்களைக் குறைப்பது போன்ற நோக்குகளுடன் கொண்டு வரப்பட்ட அந்த மாற்றங்கள் இந்தக் கட்டுரைக்கு அவசியமற்றது என்பதால் நாம் சாசன முகப்புரையில் செய்யப்பட்ட மாற்றத்தைப் பற்றி மட்டும் கவனிக்கலாம்.

இந்திராவுக்கு அப்படி என்ன இதில் அக்கறை? அது ஓர் அரசியல் விளையாட்டு!

இந்தியாவின் வளர்ச்சிக்கு அதன் அதீத மக்கட்தொகை ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது என அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி நம்பினார். அதனால் 1975 எமர்ஜென்ஸியின் போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

சுமார் 62 லட்சம் பேர் அப்படிக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இது ஜெர்மனியில் நாஜிக்கள் யூதர்களுக்குச் செய்ததை விட 15 மடங்கு அதிகம். (சல்மான் ருஷ்டி Midnight’s Children நாவலில் இச்சம்பவத்தைப் பதிவு செய்திருப்பார். சுதந்திர இந்தியாவின் குறியீடான கதை நாயகன் சலீம் சினய் தனக்குக் கட்டாயக் கருத்தடை அறுவை செய்யப்பட்டதும் “No longer connected to history” என்று சொல்வான்.)

தம் நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாய் மருந்து வாங்க வந்த ஏழைகள் பலரையும் கருத்தடை செய்து கொண்டால் தான் மருந்து எனக் கட்டாயப் படுத்தினர். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது இஸ்லாமியர்களே. இஸ்லாமியர்களைக் குறி வைத்தே இத்திட்டத்தை சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் கொண்டு வந்தனர் என்ற வாதமும் உண்டு. அதனால் இந்திரா காந்தி அரசுக்கு முஸ்லிம்களுக்கு எதிரான அரசு என்ற பிம்பம் இருந்தது. அடுத்த தேர்தலுக்கு முன் அதை நீக்கும் பொருட்டு, தான் சிறுபான்மையினர் மீது அக்கறை கொண்டவள் என்றுணர்த்த இந்திரா காந்தி கொண்டு வந்தது தான் ‘Secular’ என்ற சொல்லை சாசன முகப்புரையில் சேர்க்கும் நடவடிக்கை.

‘Socialist’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டதும் அப்படித்தான். இந்திரா அரசு ஏழைகளுக்கு எதிரான அரசு என எதிர்கட்சியான மொரார்ஜி தேசாய் தலைமையிலான நிறுவன காங்கரஸால் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அப்படி இல்லை, தானும் ஏழைப் பங்காளி என்பதைக் காட்டிக் கொள்ள அந்த வார்த்தையைச் சேர்த்தார் இந்திரா காந்தி.

இப்படித் தான் சரியான விஷயம் தவறான காரணத்தை முன்னிட்டு நடந்தேறியது!

*

11 மார்ச் 1994ல் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசுக்கும் எஸ்ஆர் பொம்மைக்கும் நடந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பானது அரசியல் சாசனத்தின் 356வது பிரிவை தவறாய்ப் பிரயோகிப்பதைத் தடுப்பது தொடர்பான மைல்கல் தீர்ப்பு என்றாலும் அது இந்தியாவின் மதச்சார்பின்மை பற்றிய முக்கிய விஷயங்களையும் விவாதிக்கிறது.

கர்நாடகாவில் 1989ல் ஜனதா கட்சி, லோக் தளம் கட்சிகள் இணைந்து ஜனதா தளம் என்ற புதுக் கட்சி உருவானதையொட்டி நடந்த சில குழப்பங்களால் மத்திய அரசு எஸ்ஆர் பொம்மை அரசுக்குப் பெரும்பான்மை இருந்தும் ஆட்சியைக் கலைத்தது. அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடந்த இதே மாதிரியான ஆட்சிக் கலைப்புகளையும் ஒட்டி பொம்மையின் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மாநில ஆட்சிக் கலைப்பு விவகார வழக்கில் எப்படி மதச்சார்பின்மை உள்ளே வந்தது? பாபர் மசூதி இடிப்பை ஒட்டி நாடு முழுக்க கலவரங்கள் வெடித்ததால் பிஜேபி ஆட்சி செய்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் மத்திய அரசு 356வது பிரிவைப் பிரயோகித்து ஜனாதிபதி ஆட்சியைக் கொணர்ந்தது. அதனால் பொம்மை வழக்கில் மதச்சார்பின்மை என்பதும் விவாதப் பொருளானது.

உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் மதச்சார்பின்மை என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்று என்றும் அரசு விவகாரங்களில் மதத்திற்கு எந்த இடமும் இல்லை என்றும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டது. ஒரு குடிமகன் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை உண்டு, ஆனால் ஓர் அரசு தனிமனிதர்களின் அத்தகு மதத் தேர்வைப் பொருட்படுத்தாது எல்லோரையும் சமமாகவே பாவிக்க வேண்டும் என்றது. எந்த மாநில அரசாவது மதச் சார்புக் கொள்கைகள் கொண்டிருந்தாலோ, மத ஆதரவுச் செயல்களில் ஈடுபட்டாலோ அது அரசியல் சாசனத்தை மீறும் காரணத்தால் 356வது பிரிவைப் பிரயோகித்து ஆட்சியைக் கலைக்கலாம் என்றது அந்தத் தீர்ப்பு.

இந்தக் கட்டுப்பாடு அரசுக்குப் பொருந்துவது போல் தேர்தலில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். ஏதேனும் கட்சியோ அமைப்போ மதச்சார்பின்மைக்குக் கேடு செய்வது போன்ற விஷயங்களை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிட்டால் அது அரசியல் சாசனத்துக்கு எதிரான செயலாகவே கருதப்படும் என்று சொன்னது. (இக்கணக்குப்படி பார்த்தால் பாஜக ஒருபோதும் தேர்தலில் போட்டியிட முடியாது!)

ஒன்பது நீதிபதிகள் கொண்ட குழு இந்த வழக்கை விசாரித்தது. அதில் ஏழு பேர் மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் பகுதியாக இருக்கிறது என்று தீர்ப்பெழுதினர். நீதிபதி ஏஎம் அஹமதி மதச்சார்பின்மை 42வது சட்டத் திருத்தத்தின் வழி திடீரென புகுத்தப்பட்டதல்ல, தொடக்கத்திலிருந்தே அது சாசனத்தில் பொதிந்துள்ளது என்றார். சமத்துவச் சமூக ஒழுங்கை அடைய சாசனம் தேர்ந்தெடுத்த வாகனமே மதச்சார்பின்மை என்றார் நீதிபதி கே ராமசாமி.

அரசு விளம்பரத்தில் ‘Secular’, ‘Socialist’ ஆகிய சொற்கள் இல்லாத பழைய சாசனத்தின் முகப்புரை இடம்பெற்றது ஒருவேளை உள்நோக்கமற்ற செயலாகக் கூட இருக்கலாம். ஆனால் பனைமரத்தின் கீழ் அமர்ந்து பால் குடிப்பது ஒரு பொறுப்பான அரசு செய்யும் செயல் அல்ல. ஏற்கனவே அதன் மீது சிறுபான்மைச் சமூகங்கள், தாழ்த்தப்பட்டோர் மீதும் வஞ்சகம் கொண்டிருப்பதான குற்றச்சாட்டுகள் நிலவும் போது இவ்விஷயத்தில் கவனமாய் இருந்திருக்க வேண்டும். என்ன செய்து விடுவார்கள் என்ற தெனாவட்டில் வேண்டுமென்றே தம் நிலைப்பாட்டை அறிவிக்கும் அரசின் அயோக்கியத்தனமாகவே படுகிறது. எப்படி இன்றைய சாசன வடிவத்தைப் பின்பற்றவில்லையோ அப்படியே மோடியின் படம் அல்லாது நேருவின் படத்தை விளம்பரங்களில் அச்சிடுவார்களா?


இவ்விவகாரம் பற்றிப்பேசிய மோடி, 2009ல் அரசியல் சாசனத்தின் 60ம் ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் போது தான் குஜராத் முதலமைமைச்சராக இருந்ததையும், ஒரு யானையின் மீது அரசியல் சாசனத்தின் பிரதியை வைத்து அதன் முன்னால் தான் நடந்ததையும் குறிப்பிட்டு சாசனத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு வலியுறுத்தவே அப்படிச் செய்ததாகக் குறிப்பிட்டார். ஆனால் இம்மாதிரி ஜிகினாக் குறியீடுகளை விட நிஜத்தில் சாசன வரிகளைப் பின்பற்றுவதே அதற்கான உண்மையான மரியாதை.

*

அரசியல் சாசனம் என்பது நம் தேசம் எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லும் திசைகாட்டி. அது இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை உறுதிப்படுத்துகிறது. அதைச் செயல்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது என்றாலும் ஒரு வகையில் அது கோட்பாடு மட்டுமே. நடப்பு எப்படி இருக்கிறது என்பதும் முக்கியம். அப்படிப் பார்த்தால் இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்றழைப்பதில் தயக்கங்கள் உள்ளன.

நாடாளுமன்றத்தில் பெரும்பலம் பெற்று இன்று ஆட்சியிலிருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஓர் இந்துத்துவச் சார்பு அரசு என்பது அதன் கடந்த மூன்றாண்டு செயல்பாடுகளிலிருந்து திரும்பத் திரும்ப நாம் அறிய வரும் செய்தி. சாத்தியமான இடங்களில் எல்லாம் அது மதத்தை நுழைக்க முயல்கிறது. ரம்ஜான் மாதம் தொடங்குவதற்கு முந்தைய தினம் மாட்டுக் கறி விற்பனைக்கு இக்கட்டு ஏற்படுத்தும் சட்டத்தைப் பிறப்பிக்கும் ஒரு மதவாத அரசு இது. “இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் தேசத்திற்கு அந்நியர்கள்” என்ற கருத்துக் கொண்ட ஒருவர் தான் தற்போது அதன் ஜனாதிபதி வேட்பாளர். இந்த ஆட்சியில் இந்து அடிப்படைவாதிகளும் உடன் சாதியவாதிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தமக்கு ஒரு பெரிய வாய்ப்புக் கிட்டியிருப்பதாக எண்ணித் தைரியமாக தம் அராஜகங்களை மேற்கொள்கின்றனர். மாடு காக்க மனித வேட்டையாடும் கோ ரட்சகர் ஆதிக்கத்தில் இன்று வாழ்கிறோம்.

அரசை மட்டும் சொல்லிக் குற்றமில்லை. இன்று இந்தியா முழுக்க மக்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே நீடிக்க வேண்டும் என்று பெரும்பான்மை தீர்ப்பளிக்குமா என்பது சந்தேகம் தான். தேச முன்னேற்றம் என்ற பெயரில் 2014ல் மோடியைப் பாரதப் பிரதமராக ஆட்சியில் அமர்த்தியதன் பின், 2017ல் யோகி ஆதித்யநாத்தை உத்திரப் பிரதேச முதல்வராக ஆட்சியில் அமர்த்தியதன் பின் நம் போல் சாதாரணர்கள் மனதில் ஒளிந்திருக்கும் மித மதவாதம் காரணமில்லையா என நம்மை நாமே கேட்டுச் சுயபரிசீலனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது.

நேரு Discovery of India புத்தகத்தில் “Composite Culture” என்ற விஷயத்தைப் பேசுகிறார். அதாவது தொகுப்புக் கலாசாரம். மேற்கின் மதச்சார்பின்மையிலிருந்து வேறுபட்ட நேருவிய மதச்சார்பின்மையை நாம் அச்சொல்லின் வழியே புரிந்து கொள்ள முயல வேண்டும். 1947ல் பசு வதைப்பிரச்சனை தொடர்பாய் ராஜேந்திர பிரசாத்திற்கு எழுதிய மடலில் இப்படிச் சொல்கிறார்: “பெரும்பான்மை இந்துக்களின் மென்னுணர்ச்சியானது நம் நடவடிக்கைகளை நூறு வழிகளில் பாதிக்கும். ஆனால் நாம் இந்தியாவை ஒரு தொகுப்பாகப் பார்க்கிறோமா இந்து நாடாகவா என்பதே வித்தியாசத்தை ஏற்படுத்தும்.”

“இந்தியா மதச்சார்பற்ற நாடா?” எனக் கேட்டால் ஒற்றைச்சொல் பதில் “ஆம்” என்பதே. ஆனால் அது அப்படியே தொடர்வது நாம் மனசாட்சிப்படி நடப்பதில் தான் இருக்கிறது.

***

(உயிர்மை - ஜூலை 2017 இதழில் வெளியானது)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2017 02:21

June 23, 2017

இந்தி நம் தேசிய மொழியா?


பொது அறிவும் விழிப்புணர்வும் கொண்டவர்கள் நிறைந்ததாகக் கருதப்படும் எங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் அசாத்தியத் திறமை கொண்ட மரியாதைக்குரிய சக ஊழியர்கள் சிலர் - குறிப்பாய் வட இந்தியர்கள் - மிகவும் தீர்மானமாக நம்பும் ஒரு விஷயம் “இந்தி நம் தேசிய மொழி” என்பது. தமிழர்களுக்கு இந்தி தெரியாது என்பதே அவர்களுக்கு பேராச்சரியமாக இருக்கிறது. எனக்கு ஜாவா தெரியாது என்று சொல்லி இருந்தால் கூட அத்தனை அதிசயித்திருக்க மாட்டர் எனத் தோன்றுகிறது.


இத்தனைக்கும் அவர்களில் கணிசமானோரின் தாய்மொழி இந்தி அல்ல. ஆனால் எல்லோருக்கும் இந்தியில் குறைந்தபட்சம் பேச மட்டுமாவது தெரிந்திருக்கிறது. இன்னும் சிலருக்குத் தம் தாய்மொழியைக் காட்டிலும் இந்தியே அதிகப் பரிச்சயம்.

சில சமயம் மீட்டிங் இடையே சரளமாக இந்தியில் பேசத் தொடங்கி விடுவார்கள். பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும் இந்தி சொல்லிக் கொடுத்தார்கள் என்பதால் அடிப்படை இந்திச் சொற்கள் எனக்குப் புரியும். இந்திப் படங்களைப் பார்ப்பதும் புரிந்து கொள்வதும் அப்படித்தான். (அதிலும் காட்சிரூபமாக நகராமல் முழுக்க வசனங்களால் ஆன இந்திப் படம் எனக்கு உகந்ததல்ல. உதாரணமாய் A Wednesday படம் முழுக்கவே துல்லியமாய்ப் புரிந்தது. ஆனால் Bombay Velvet குத்துமதிப்பாய்த் தான் விளங்கியது.)

அப்படி அவர்களின் பேச்சைத் துண்டு துண்டாக ஒட்ட வைத்து இடஞ்சொற்பொருள் (Context) கொள்வேன். சாத்தியப்படாதபட்சத்தில் “சப்டைட்டில் ப்ளீஸ்” என அச்சூழலை மெல்லிய நகைச்சுவையால் எதிர்கொள்வேன். சட்டென உணர்ந்து ஆங்கிலத்துக்குத் தாவுவார்கள். சமயங்களில் எளிமையாகப் புரியும் சாதாரண சிறுவாக்கியங்களை யாராவது இந்தியில் பேசினால் கூட சிலர் என்னைச் சுட்டி அதை ஆங்கிலத்தில் திரும்பச் சொல்லச் செய்வர். அது குத்திக்காட்டலாகத் தோன்றியதும் உண்டு.

இதில் அவர்களைக் குறை சொல்ல ஏதுமில்லை என்றே நினைக்கிறேன். நானறிந்த வரை அவர்கள் ஒருபோதும் மொழி அல்லது இன வெறியை வெளிப்படுத்தியவர்கள் அல்லர். இந்தி தான் நம்முடைய தேசிய மொழி என்ற கருத்து சிறுவயதிலிருந்தே வட இந்தியர்களுக்குத் தொடர்ந்து ஊட்டப்படுகிறது. சில மாதங்கள் முன் ஹயாத் என்ற மும்பையைச் சேர்ந்த நான்கு வயதுப் பெண் குழந்தை இந்தியா மற்றும் அதன் மாநிலங்கள் தொடர்பான பொது அறிவுக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் சுமார் ஐந்து நிமிட நீளக் காணொளி ஒன்று - குழந்தை என்றால் அப்படி இருக்க வேண்டும் என்ற முன்குறிப்புடன் - ஃபேஸ்புக், வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதில் ஒரு கேள்வி “இந்தியாவின் தேசிய மொழி என்ன?”. அந்தப்பெண் சொல்லும் பதில் “இந்தி”. அக்காட்சித்துண்டு எல்லாக்கதையையும் சொல்லிவிடுகிறது!

அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும், இங்கே தமிழகத்திலேயே சிலர் இந்தி தான் தேசிய மொழி என நம்புகின்றனர், மற்றவர்களையும் நம்ப வைக்க முனைகின்றனர். 2015 - 2016 கல்வியாண்டில் தமிழக அரசு பாடநூற்கழகம் வெளியிட்ட எட்டாம் வகுப்பு சமச்சீர்க்கல்வி சமூக அறிவியல் நூலில் “இந்தியாவின் தேசிய மொழி _______ ஆகும்” எனக் கேட்கப்பட்டு ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி இருந்தார்கள். பிறகு அது சுட்டிக்காட்டப்பட்டு பிரச்சனை எழுந்த போது அந்தக் கேள்வி “இந்தியாவின் அலுவல் மொழி _______ ஆகும்” என மாற்றப்பட்டது.

இதில் நுட்பமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று பதின்ம வயது கொண்ட தமிழ் மாணவர்களுக்கு இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று பதிய வைக்கப்படுவது போக, நிராகரிக்க வேண்டிய பதில்களில் ஒன்றாகத் தமிழைப் பட்டியலிடுவதன் மூலம் தமிழ் தேசிய மொழியல்ல என்றும் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.

*

ஒரு நாட்டின் தேசிய மொழி என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாகவோ (De jure) இயல்பாகவே நடப்பில் இருப்பதாகவோ (De facto) இருக்கலாம். அதற்கு நாட்டின் மீப்பெரும்பான்மை மக்கள் அம்மொழி பேசக்கூடியவர்களாக இருத்தல் அவசியம். உத்தேசமாக 80 முதல் 90 விழுக்காடு வரை அப்படி இருந்தால் தான் தேசிய மொழி என்று ஒன்று அமைய முடியும். ஏனென்றால் அப்போது தான் மிகப் பெரும்பான்மை மக்களுக்கு அது பொதுத் தொடர்பு மொழியாக இருக்க முடியும். அப்படி அல்லாமல் வலிந்து திணிக்கப்படும் மொழி அதை அறியாதவர்களால் வெறுப்போடு அணுகப்படும். அது தேச ஒருமைப்பாட்டை பிரஜைகளே உடைக்குமளவு போகவும் சாத்தியமுண்டு.

உதாரணமாய் நேபாளத்தின் தேசிய மொழி நேபாளி, பாகிஸ்தானின் தேசிய மொழி உருது, பங்களாதேஷின் தேசிய மொழி வங்காளம் என்பது போல் இந்தியாவின் தேசிய மொழி இன்னதென எளிமையாகச் சுட்டி விட முடியாது. பல இனங்களும், கலாசாரங்களும், அதன் காரணமாகப் பல மொழிகளும் கொண்டியங்கும் கூட்டியக்கம் இந்தியா. அதில் ஒன்றை உயர்த்தி மற்றவற்றை மறுதலிப்பது துல்லியமுரட்டுத்தனம்.

இந்தியா என்பதை ஒரு மதமாகக் கொண்டால் இந்திய அரசியல் சாசனம் அதன் பைபிள். இந்தியாவில் நிகழும் அனைத்தும் சாசனத்தின் எல்லைகளுக்குள் வந்தாக வேண்டும். ஒரு விஷயத்தில் தன் நிலைப்பாட்டினை அது குறித்து சாசனம் என்ன சொல்லி இருக்கிறது என்பதைக் கொண்டே நமது நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன. சாசனத்தின் ஒளியில் தான் ஒட்டுமொத்த இந்திய தேசமே பொழிந்து கண்டிருக்கிறது.

அப்படியான நம் அரசியல் சாசனம் தேசிய மொழி விவகாரத்தில் என்ன சொல்கிறது?

இந்திய அரசியல் சாசனத்தில் தேசிய மொழி பற்றி மட்டுமல்ல, இன்ன பிற தேசியச் சின்னங்களான அரசு முத்திரை, தேசியக் கொடி, தேசிய கீதம், தேசியப் பண், தேசிய விலங்கு, தேசிய மலர், தேசியப் பறவை, தேசிய மரம், தேசியக் கனி, தேசிய நதி, தேசிய நீர்வாழ் உயிரினம், தேசியப் பணம், தேசிய நுண்ணுயிர் (2012ல் அறிவிக்கப் பட்டது) என எதைப் பற்றியும் எந்தக் குறிப்பும் கிடையாது. பிறகு ஏன் இந்தி தேசிய மொழியா என அரசியல் சாசனத்தில் தேடுகிறோம்? பொதுவாக நாட்டிற்கு தேசிய மொழி என்ற ஒன்று இருந்தால் அது பற்றிய குறிப்பு அதன் அரசியல் சாசனத்தில் இடம்பெறுவது வழக்கு. அந்தப் பழக்கத்தின் அடிப்படையிலேயே நம் சாசனத்தில் தேசிய மொழி பற்றி எக்குறிப்பும் இடம்பெறவில்லை என்பது முக்கியமானதாகிறது.

ஆனால் அரசியல் சாசனம் இந்தியாவின் அலுவல் மொழி பற்றிப்பேசுகிறது. அலுவல் மொழி என்றால் அரசின் ஆவணங்கள், உத்தரவுகள், இன்ன பிற கோப்புகள் யாவும் என்ன மொழியில் இருக்க வேண்டும் என்பதற்கான அதிகாரப்பூர்வ வரையறை.

“The official language of the Union shall be Hindi in Devanagari script.” என்கிறது அரசியல் சாசனத்தின் 343(1)வது பிரிவு. தேவநகரி எழுத்துருவில் எழுதப்படும் இந்தியே இந்தியாவின் அலுவல் மொழி. இதில் கவனித்தால் ஒன்று புரியும். அதாவது அலுவல் மொழி என்ற விஷயமே எழுத்துப்பூர்வ விஷயங்களுக்கு மட்டுமானது. மக்களின் பேச்சு மொழிக்கும் அதற்கும் தொடர்பில்லை. தேசிய மொழி என்ற அந்தஸ்தின் விஸ்தாரம் அலுவல் மொழி என்பதற்குக் கிடையாது. அது அரசு நிர்வாகம் குழப்பமின்றி நடைபெறச் செய்து கொண்ட ஓர் ஏற்பாடு மட்டுமே.

மேலே சொல்லப்பட்ட அரசியல் சாசன விதி மத்திய அரசுக்கு மட்டுமே பொருந்தும். மாநில அரசுகளுக்கும், நீதிமன்றங்களும் வேறு விதிகள். மாநில அரசுகள் தம் சட்டமன்றங்கள் மூலம் ஒன்றோ அதற்கு மேற்பட்ட மொழிகளையோ அலுவல் மொழியாகத் தெரிவு செய்து கொள்ளலாம் [பிரிவு 345]. இரு மாநில அரசுகளுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் மத்திய - மாநில அரசுகளுக்கிடையேயான தொடர்புகளுக்கு தேசிய அலுவல் மொழி (இந்தி / ஆங்கிலம்) பயன்படும். [பிரிவு 346].

உச்ச நீதிமன்றத்திலும் மாநில உயர்நீதிமன்றங்களிலும் அனைத்து விஷயங்களும் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் [பிரிவு 348(1)]. கவர்னர் அனுமதியுடன் ஒரு மாநில உயர்நீதிமன்றம் வழக்கு விஷயங்களை தனக்கு வசதியான மொழியில் மேற்கொண்டாலும் தீர்ப்பு ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் [பிரிவு 348(2)]. மாநில அரசுகள் கொண்டு வரும் சட்டங்கள் அம்மாநில மொழியில் இருந்தாலும் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரசிதழில் வெளியிட வேண்டும் [பிரிவு 348(3)].

அரசியல் சாசனத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் தேசிய மொழியைத் தீர்மானிக்கப் பல கட்டங்களாக மிகத் தீவிர விவாதங்கள் நிகழ்ந்தன.

இந்தியை ஆதரித்து கேஎம் முன்ஷி, புருஷோத்தம் தாஸ் டாண்டன், ரவிஷங்கர் சுக்லா, சேத் கோவிந்த் தாஸ், சம்பூர்ணானந்த், அல்கு ராய் சாஸ்திரி, பாபுநாத் குப்தா, ஹரி விநாயக் படாஸ்கர் ஆகிய வடக்கத்தியர்கள் பேசினர். மாறாக ஆங்கிலத்தைக் கொள்ளலாம் என டிடி கிருஷ்ணமாச்சாசி, ஜி. துர்காபாய், டிஏ ராமலிங்கம் செட்டியார், என். கோபாலஸ்வாமி அய்யங்கார், வி. கிருஷ்ணமூர்த்தி ராவ், என்ஜி ரங்கா ஆகிய தென்னிந்தியர்கள் பேசினார்கள். அம்பேத்கர் சமஸ்கிருதத்தை ஆதரித்தார். நேரு, அபுல் கலாம் ஆசாத், ஆர்வி துலேகர் ஆகியோர் ஹிந்துஸ்தானிக்கு - அதுவும் இந்தியின் இன்னொரு வடிவம் தான் - ஆதரவாக இருந்தனர். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக இருந்த காயில்தே மில்லத் முகமது இஸ்மாயில் தமிழைத் தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்று வாதிட்டார்.

ஒரு கட்டத்தில் இன்றைய ஹெச். ராஜா பாணியில் ஆர்வி துலேகர் “ஹிந்துஸ்தானி அறியாதவர்கள் இந்தியாவில் வசிக்கவே உரிமையற்றவர்கள். அரசியல் சாசனத்தை இயற்ற இந்த அவையில் இருப்பவர்களில் ஹிந்துஸ்தானி தெரியாதவர்கள் அரசியல் நிர்ணயச் சபையில் இருக்கவே தகுதியற்றவர்கள். அவர்கள் வெளியேறுவதே நல்லது" என்று மொழி வெறியை வெளிப்படுத்தினார். மூன்றாண்டுகள் இழுபறியில் போனது.

1949ன் இறுதியில் சபை ஒரு சமரசத்தை எட்டியது. முன்ஷி - அய்யங்கார் கொள்கை என வர்ணிக்கப்படும் இம்முடிவின்படி அரசியல் சாசனத்தில் தேசிய மொழி பற்றிய எந்தக் குறிப்பும் இராது. பதிலாக அலுவல் மொழிகள் பற்றிய விளக்கம் இடம்பெறும்.

இப்படித்தான் தேச ஒற்றுமை கருதி தேசிய மொழி என்ற சொற்பிரயோகத்தையே இந்திய அரசியல் சாசனத்தில் அன்றைய தலைவர்கள் தவிர்த்து விட்டார்கள்.

*

இந்தியாவின் அலுவல் மொழி இந்தி என்பதோடு கதை சுபமாய் முடியவில்லை. அது தொடர்பாய் மேலும் சில விஷயங்களையும் அரசியல் சாசனம் சொல்கிறது. 1) (இந்தி நாடு முழுக்க இருக்கும் மக்களுக்குப் பரிச்சமான ஒன்றில்லை என்பதால்) அரசியல் சாசனம் அமலுக்கு வரும் தேதியிலிருந்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலமே அலுவல் மொழியாக இருக்கும் [பிரிவு 343(2)]. 2) அரசியல் சாசனம் அமலுக்கு வந்த 5 முதல் 10 ஆண்டுகளில் இந்தியின் பயன்பாட்டை அரசு நடைமுறைகளில் அதிகரிக்கவும், ஆங்கிலத்தின் பயன்பாட்டைக் குறைக்கவுமான வழிவகைகளை ஆராய்ந்து சொல்ல அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, தோகிரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 22 மொழிகளிலிருந்து பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஓர் ஆணையத்தை ஜனாதிபதி அமைக்க வேண்டும் [பிரிவு 344(1)]. அது அலுவல் மொழி தொடர்பான எதிர்காலச் சிபாரிசுகளை ஆய்ந்தளிக்கும். 3) தேசத்தின் தொழில், கலாசார மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்களை உத்தேசிக்கும் அதே நேரம் இந்தி பேசாத மாநில மக்களின் அபிப்பிராயத்தையும் இவ்வாணையம் கணக்கில் கொள்ள வேண்டும். [பிரிவு 344(3)].

அரசியல் சாசனக் குழு உறுப்பினர்களின் விருப்பம் இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக ஆக்க வேண்டும் என்பதாக இருந்தது என்பதும் ஆனால் அன்றைய தேதியில் கூட ஆங்கிலமே இந்தியை விடப் பொதுத் தொடர்பு மொழியாக இருக்க அதிக தகுதி பெற்றிருந்தது என்பதையும் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். அரசியல் சாசனமே ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டது என்பது இதற்கு ஓர் உதாரணம்.

இன்னொரு விஷயம் தேவநகரி எழுத்து வடிவிலான இந்தியே ஒப்பீட்டளவில் அப்போது புதிய மொழி தான். 1881ல் தான் பிஹார் மாநிலம் அலுவல் மொழியாக இந்தியைத் தேர்ந்தெடுத்திருந்தது. சாசனம் அமலுக்கு வந்த போது இந்திக்கு என பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஓர் இலக்கணம் இருக்கவில்லை. மத்திய அரசு 1954ல் ஒரு குழு அமைத்து 1958ல் இந்தி இலக்கணத்தை வரையறுத்து அறிக்கை வெளியிட்டது. அது மாதிரி வளர்ந்து கொண்டிருந்த மொழியைத் தான் பல்வேறு மொழிவாரி மாகாணங்களின் கூட்டமைப்பான ஒரு பெருந்தேசத்தின் அலுவல் மொழியாக ஆக்கிட பதினைந்து ஆண்டு கெடுவை அரசியல் சாசனம் விதித்தது!

இச்சூழலை உணர்ந்த ஜவஹர்லால் நேரு 1963ல் அலுவல் மொழிகள் சட்டத்தைக் கொணர்ந்தார். “Notwithstanding the expiration of the period of fifteen years from the commencement of the Constitution, the English language may, as from the appointed day, continue to be used, in addition to Hindi,” என்று அது சொன்னது. அதாவது கெடு முடிந்தாலும் இந்தியுடன் ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடரும். ஆனால் அதிலிருந்த ‘may’ என்ற வார்த்தை ‘தொடரலாம்’ என்று நிச்சயமின்மையைக் குறிப்பதாக இருந்தது என்பதால் அதற்கு எதிர்ப்பு எழுந்தது (குறிப்பாய் தமிழகத்தில் திமுக). அது ‘shall’ என்ற பொருளில் ‘தொடரும்’ என்று கொள்ள வேண்டும் என நேரு தெளிவுபடுத்தினார்.

1965ல் சாசனம் சொன்ன அந்த பதினைந்து ஆண்டு காலம் முடிந்த போது நேரு மறைந்து லால் பகதூர் சாஸ்திரி பாரதப் பிரதமராய் இருந்தார். திட்டமிட்டது போல் இந்தியை அப்போது நாடு முழுமைக்கும் பொதுமொழி ஆக்க முடிந்திருக்கவில்லை. ஆனால் சாஸ்திரியே இந்தி மொழி ஆர்வலர் தான். அவரது அமைச்சரவையிலிருந்த செல்வாக்கு மிக்க மொரார்ஜி தேசாய், குல்சாரிலால் நந்தா ஆகியோரும் இந்தி ஆதரவாளர்கள். அவர்கள் அனைவரும் 1965ம் ஆண்டின் குடியரசு நாளில் இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவித்து விடுவது எனத் தீர்மானித்தனர்.

ஆனால் வெளியிலிருந்து இந்திக்கு வலுத்துக் கொண்டிருந்த எதிர்ப்புகள் போக காங்கிரஸ் கட்சியே இவ்விஷயத்தில் இரண்டாய்ப் பிரிந்து நின்றது. வட இந்தியத் தலைவர்கள் இதற்கு ஆதரவாக இருக்க, தமிழகத்தின் காமராஜர், மைசூர் முதல்வர் நிஜலிங்கப்பா, பெங்கால் காங்கிரஸ் தலைவர் அதுல்யா கோஷ், மத்திய அமைச்சர் சஞ்சீவ ரெட்டி ஆகிய தென்னிந்திய காங்கிரஸ்காரர்கள் இதை எதிர்த்தனர். 1937ல் இந்தியைத் தமிழகப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க அரசாணை பிறப்பித்த ராஜாஜி கூட மனம் மாறி இதனை எதிர்த்தார். ஆனால் சாஸ்திரி விடாப்பிடியாக நின்றார்.

தமிழகத்தில் அண்ணாத்துரை தலைமையிலான திமுக இதைக் கடுமையாக எதிர்த்தது. போராட்டங்கள் தமிழகமெங்கும் வெடித்தன. கல்லூரி மாணவர்கள் தெருவிலிறங்கிப் போராடினர். தமிழகம் பற்றியெரிந்து கொண்டிருந்த போது சாஸ்திரி அவசரமாகப் பாராளுமன்றத்தைக் கூட்டினார். ஆங்கிலம் அல்லாத இந்திய மொழி ஒன்றினை தேசிய மொழி (National Language), அலுவல் மொழி (Official Language), பொதுத் தொடர்பு மொழி (Lingua Franca) ஆகிய மூன்றாகவும் தீர்மானித்து அறிவிக்க வேண்டும் என்பது தான் நோக்கம். இந்தியே அதற்கு அருகில் வரக்கூடிய மொழியாக இருந்தது.

தம் சாத்வீகப் போராட்டங்களுக்குப் பலனில்லை என்பதை உணர்ந்த தமிழக இளைஞர்கள் தம்மைத் தீக்கிரையாக்கிக் கொண்டனர். குடியரசு தினத்தன்றே அம்மாதிரி இருவர் உயிர்த்தியாகம் செய்தனர். நிலைமை இப்படி மோசமாகவும் அப்போது மத்திய அமைச்சரவையிலிருந்த தமிழர்களான சி. சுப்ரமணியமும், ஓவி அழகேசனும் ராஜினாமா செய்தார்கள். பிரதமர் சாஸ்திரிக்கு அழுத்தம் அதிகரித்தது.

அன்று மாலையே சாஸ்திரி ஆல் இந்தியா ரேடியோவில் உரையாற்றினார். நான்கு விஷயங்களை அறிவித்தார்: 1) எல்லா மாநிலங்களும் அவை விரும்பும் மொழியை அலுவல் மொழியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 2) மாநிலங்களுக்கிடையேயான தொடர்புகள் ஆங்கிலத்திலோ ஆங்கில மொழிபெயர்ப்புடனோ நிகழலாம். 3) இந்தி பேசாத மாநிலங்கள் மத்திய அரசுடன் ஆங்கிலத்திலேயே தொடர்பு கொள்ளலாம். 4) மத்திய அரசில் ஆங்கிலத்தின் பயன்பாடு தொடரும். பிற்பாடு இன்னொரு விஷயமும் சேர்த்தார் - அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் ஆங்கிலமும் தொடரும்.

இதையொட்டி 1968ல் அலுவல் மொழித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இப்படியாக இந்திய முழுக்க நிகழவிருந்த இந்தித் திணிப்பைத் தமிழகமே முன்னின்று தடுத்தது.

மொழிச் சிறுபான்மையினரின் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை அவர்களின் தாய்மொழியில் வழங்க வேண்டும் [பிரிவு 350(A)] என்பது வரை அக்கறை காட்டும் அரசியல் சாசனம் கடைசியில் இந்தியை இந்தியாவில் பரவலாக்கம் செய்து பொது மொழி ஆக்க மத்திய அரசு முனைய வேண்டும் என்றும் சொல்கிறது [பிரிவு 351]. இதை முன்னிட்டுத் தான் மத்திய அரசுகள் அன்று முதல் இன்று வரை அவ்வப்போது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிக்க நேரம் பார்த்தபடி இருக்கின்றன.

1968ல் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்திரா காந்தி அரசு இந்தியைத் திணித்த போதும், 1986ல் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ராஜீவ் காந்தி அரசு இந்தியைத் நுழைக்க முயன்ற போதும் 2014ல் நரேந்திர மோடி அரசு நாடு முழுக்கஅரசு ஊழியர்களிடம் இந்தியை வலியுறுத்திய போதும் தமிழகம் வெகுண்டெழுந்தது.

கவனித்துப் பார்த்தால், தமிழகக் கட்சிகள் - குறிப்பாய் திமுக - மத்திய அரசில் பங்கு வகித்திருந்த எப்போதும் இம்மாதிரி இந்தித் திணிப்பு நிகழ்ந்ததில்லை. கடிவாளம் நம்மிடம் இல்லாத போதெல்லாம் குதிரை தறிகெட்டுப் பாய்கிறது என்பதே வரலாறு.

இப்போது இந்தியா - இந்தி - இந்து என்ற கோஷத்துடன் மதத் தேசியவாதத்தின் ஒரு பகுதியாகவும் மத்தியில் ஆளும் பாஜக அரசு இங்கு இந்தித் திணிப்பைச் செய்கிறது.

*

2009ல் சுரேஷ்பாய் பி கச்சாடியா என்பவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் இந்தியாவில் பொருட்களை உற்பத்தி செய்கையில் அவற்றின் விலை, தேதி, உள்ளடக்க விவரம் ஆகியவற்றை தேசிய மொழியான இந்தியில் அச்சிடுவதைக்கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரி இந்திய அரசு மீது பொதுநல வழக்கொன்றைத் தொடுத்தார் (Special Civil Application No. 2896 of 2009). அதை விசாரித்த அப்போதைய குஜராத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்ஜே முகோபாத்யாயா மற்றும் நீதிபதி ஆனந்த் எஸ் தாவ் இருவரும் இந்திய அரசியல் சாசனம் தேசிய மொழி என்று எதையும் குறிக்கவில்லை என்றும் இந்தி, ஆங்கிலம் இரண்டையும் அலுவல் மொழிகளாக மட்டும் சொல்கிறது என்றும் பொட்டலம் செய்து விற்கப்படும் பொருட்களுக்கான 1977ம் ஆண்டின் Standards of Weights and Measures (Packaged Commodities) Rules சட்டத்தின் 9(4), 33(3A) பிரிவுகளும் அதையே சொல்கின்றன என்றும் சுட்டி, இந்தியில் எழுதுவதா ஆங்கிலத்திலா என்பது உற்பத்தியாளர் சுதந்திரம், ஆக இந்தி கட்டாயம் என உத்தரவிட முடியாது என்றும் தீர்ப்பளித்தனர். இந்தி தேசிய மொழியா என்ற விவாதத்தில் இது மைல்கல் தீர்ப்பு.

பெரும்பான்மை இந்தியர்கள் இந்தியைப் பேசவும் எழுதவும் செய்தாலும், தேசிய மொழியாக ஏற்றாலும், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் எதிலும் அப்படிக் குறிப்பிடப் படவில்லை என்கிறது தீர்ப்பு: “Normally, in India, majority of the people have accepted Hindi as a national language and many people speak Hindi and write in Devanagari script but there is nothing on the record to suggest that any provision has been made or order issued declaring Hindi as a national language of the country.” அதாவது பெரும்பான்மையினர் அப்படி நம்புவது சட்டத்திற்கு ஒரு பொருட்டல்ல. பேசுபவர்களின் எண்ணிக்கை தான் பொருட்டு என்றால் உலகப் பொதுமொழியாக ஆங்கிலமல்ல; சைனீஸ் தான் வந்திருக்கும். தேசிய மொழி பற்றிய விவாதத்தில் எண்ணிக்கை தான் கணக்கென்றால் தேசியப் பறவையாக மயில் அல்ல; காக்கையே இருக்க முடியும் என காயிதே மில்லத் சொன்னதாக ஒரு செய்தி உண்டு.

கோரக் பிரசாத் ஜெய்ஸ்வால் (பகுஜன் சமாஜ்), யஸ்பந்த் நாராயன் சிங் லாகுரி (பிஜு ஜனதா தள்) ஆகிய இரண்டு எம்பிக்கள் மக்களவையில் இந்தியைத் தேசிய மொழியாக்க மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா? என்று எழுப்பிய கேள்விக்கு (Unstarred Question No. 6184) மே 4, 2010 அன்று அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் உள்துறை (மாநிலப் பொறுப்பு) அமைச்சராக இருந்த அஜய் மாகென் (காங்கிரஸ்) இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க அரசியல் சாசனத்தில் எந்த வழிவகையும் இல்லை என்று திட்டவட்டமாகப் பதிலளித்தார்.

இந்தியைத் தேசிய மொழி என்று சொல்லிக் கொள்வது “எங்கப்பா எவ்ளோ பலசாலி தெரியுமா” என்பது போன்ற புன்னகைக்குரிய குழந்தைத்தனம் தான். சட்டமெல்லாம் அறிந்த மதிப்பிற்குரிய அறிவுஜீவிகள் கூட இதற்கு விலக்கல்ல. சமீபத்தில் முன்னாள் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு தான் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கையில் சாசனத்தின் 348(1)வது பிரிவை கண்டிப்புடன் பின்பற்றியதில்லை என்றும் இந்தி, ஆங்கிலம் இரண்டையும் பயன்படுத்தியதாகவும் (சமயங்களில் தேவைக்கேற்ப தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பேசியதாகச் சொல்கிறார்) குறிப்பிட்டு பெரும்பான்மை மக்களுக்கு இந்தி தெரியும் என்பதாகச் சுட்டி இந்தியே தேசிய மொழி என்கிறார்.

இது போல் தொடர்ந்து இந்தியைத் தேசிய மொழி ஆக்கும் ஆர்வங்கள், முயற்சிகள் இந்தியாவின் வெவ்வேறு மூலையிலிருந்து எழுந்தவாறு இருக்கின்றன. எல்லா முறையும் அரசியல் சாசனத்தைக் கைகாட்டியே நீதிமன்றங்களும் மத்திய அரசுகளும் பதில் சொல்லி வந்திருக்கின்றன. சாசனம் இறுதி செய்யப்பட்டதல்ல. காலத்திற்கேற்ப மாற வேண்டிய ஒன்றே. ஆனால் அதற்குரிய வலுவான தேவை தென்பட வேண்டும்.

மாறாக, பின்வாசல் வழி நுழைய முற்படுவது அம்மொழிக்குச் செய்யும் அவமதிப்பு.

*

இன்று இந்தியாவில் பரிவர்த்தனைக்கான பொதுமொழி பெரும்பாலும் ஆங்கிலம் தான். அதாவது தாய்மொழியாக இந்தியாவில் எவரும் ஆங்கிலத்தைக் கொள்ள வில்லை என்றாலும் இருவேறு மொழிக்காரர்கள் தொடர்பு கொள்ள முனைகையில் உதவும் மூன்றாம் மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. அதுவும் குறிப்பாய் கார்ப்பரேட் நிறுவனங்கள், உயர்கல்வி, ஆராய்ச்சி, மேலாண்மை போன்றவற்றில் ஆங்கிலத்தின் இன்றியமையாமை அளப்பரியது. இன்னும் சொல்லப் போனால் தமிழர்கள் 1965ல் ஆங்கிலம் அலுவல் மொழியாக நீடிக்க வேண்டும் என்று போராடிய காலகட்டத்தை விட இன்று அம்மொழி மீதான சார்பு பன்மடங்கு அதிகம். உள்நாட்டில் மட்டுமல்லாது முதலாம் உலக நாடுகளுடனான நம் தொடர்பு அனைத்திற்குமே ஆங்கிலம்தான் வழி.


அப்படியான ஆங்கிலத்தை நீக்கி விட்டு அந்த இடத்தில் இந்தியைக் கொண்டு வந்து திணிப்பது என்பது ஓர் அனாவசிய சமூக அறுவை சிகிச்சை. ஒருவனுக்கு ஏற்கனவே நன்றாக இயங்கி வரும் இதயத்தை நீக்கி விட்டு வேறு ஓர் இதயத்தைப் பொருத்திப் பார்க்கும் பரிசோதனை முயற்சி. தற்கொலை முயற்சி என்றும் கூட சொல்லலாம்.

இன்று இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில் 10 மாநிலங்களில் மட்டுமே இந்தி பிரதான அலுவல் மொழியாக உள்ளது. மேலும் 2 மாநிலங்களில் கூடுதல் அலுவல் மொழி. எப்படிப் பார்த்தாலும் மொத்த மக்கட்தொகையில் பாதிக்கும் குறைவான நபர்களுக்கே இந்தி தெரியும். அதனால் அதைத் தொடர்புக்கான பொதுமொழியாகத் தென்னியந்திர்களும், வடகிழக்குக்காரர்களும் ஏற்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அது திணிப்பாகவே கருதப்படும். மாறாக, ஆங்கிலம் இயல்பாகவே இன்று இந்தியர்கள் வாழ்வோடு கலந்து விட்டது. அதை மேலும் சீர்படுத்திச் செம்மை செய்தால் போதும். இதில் ஆங்கிலம் அந்நிய மொழி என்ற பிடிவாதம் அனாவசியம்.

வட இந்தியாவில் இந்தி மட்டுமே அறிந்தவர்கள் இருப்பது போல், தமிழகத்திலும் தமிழ் மட்டுமே அறிந்தவர்கள் உண்டு தான். இங்கும் அவர்கள் ஆங்கிலம் கற்பது சிரமம் தான். ஆனால் தேவை என்று வரும் போது வேறு வழி இல்லை. அதைத் தான் நாம் வடக்கத்தியர்களுக்கும் சொல்கிறோம். அவர்களுக்கு மட்டும் தெரிந்ததை நம் மீது திணிப்பதை விட இருவருக்கும் சமமாகத் தெரிந்த ஒன்றை இருவருமே கற்றுக் கொள்வோம் என்ற சமரசம். இதில் மொழி தொடர்பான அகங்காரத்தைச் சற்றே ஒதுக்கி வைத்து யோசிக்கலாம். அப்போதுதான் எல்லோர் நியாயமும் புரியும்.

இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருப்பதற்கு இடையே Zee News தொலைகாட்சியில் ஏதோ நிகழ்வில் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். கவனித்த 15 நிமிடங்களில் அந்த இந்தி உரையில் பாதிக்குப் பாதி ஆங்கிலச் சொற்கள். Jobs என்பதைக் கூட அப்படியே சொன்னார். அத்தனை தூரம் ஆங்கிலம் சார்ந்து தான் இந்த மொழி இயங்குகிறதா? காலத்திற்கேற்ப கலைச்சொற்கள் உண்டாக்கப்படவில்லையா? அல்லது அப்படி உருவான சொற்களை இந்தி மொழி பயன்படுத்துவதில்லையா?

இந்த இந்தியைத் தான் தேசத்தின் Lingua Franca ஆக்க மத்திய அரசு முயல்கிறது. ஆங்கிலம் கணிசமாய்க் கலந்தது தான் இன்று நடைமுறையிலுள்ள யதார்த்த இந்தி எனில் அதற்கு பதிலாக முழுக்க ஆங்கிலத்தையே பொதுமொழியாகக் கொள்ளலாமே!

தென்னகம் மீது இந்தியைத் திணிக்க முயன்று, தோற்று அரை நூற்றாண்டாகிறது. இந்தியை விலக்கிய இந்த ஐம்பதாண்டு திராவிட ஆட்சியில் முன்னேற்றம் என்ற அடிப்படையில் பார்த்தால் தமிழகம் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது. நாம் இந்தி கற்காமல் போனதால் எதை இழந்தோம் என்பதற்கு அவர்களிடம் பதிலேதும் இல்லை. இந்திக்காரர்களின் வழக்கு பலவீனமாகிக் கொண்டே தான் வருகிறது.

திணிக்கும் எதுவும் துப்பப்படும் - அது உணவோ, மொழியோ, வேறெதுவோ. மத்திய அரசுகள் அதை மட்டும் புரிந்து கொண்டால் சரி. அதற்கான பெரும் உதாரணம் இந்தித் திணிப்பை முனைந்த 1965ல் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. அதற்கு அடுத்து 1967ல் வந்த தேர்தலில் காங்கிரஸ் இங்கு துடைத்தெறியப்பட்டு திமுக அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் தலையெடுக்கவே முடியவில்லை. தேசியக் கட்சிகளுக்கு இது ஒரு பாடம்.

அரசியல் சாசனம் சொல்லும் இந்தி மொழிப் பரவலாக்கம் என்பது கத்தி முனையில் மிரட்டி இந்தி கற்பிப்பது அல்ல. அது ஒரு பாலியல் வல்லுறவுக்குச் சமானம். மாறாக இந்தியைத் தென்னிந்தியர்கள் நாடிப் படிக்குமளவு அதன் லௌகீகத் தேவையை, அந்தஸ்தை அதிகரிக்க வேண்டும். அது தான் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை.

அது நடந்தால் தானாய்த் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்கள் இந்தியைத் தேடிப் படிப்பார்கள். மக்களை இப்படிக் கொஞ்சவும் கெஞ்சவும் மிஞ்சவும் வேண்டியிருக்காது. ஆங்கிலத்தில் தொடங்கி இன்று ஜெர்மன், ஃப்ரெஞ்ச், சைனீஸ், ஜப்பானீஸ், கொரியன் வரையிலும் எல்லாம் அப்படித்தான் தேடிச் சிரமப்பட்டுக் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

இந்தியை ஒரு தமிழன் கற்கவே கூடாதா? அப்படி இல்லை. நிச்சயம் கற்கலாம். ஆனால் இன்று ஒரு தமிழன் இந்தியை கற்றுக் கொள்வதற்கான தேவை என்ன?

கார்பரேட் நிறுவனம் அல்லாமல் வட இந்தியாவில் பொதுமக்களிடம் அல்லது ஆங்கில அறிதலற்ற ஊழியர்களுடன் நேரடியாய்ப் புழங்கி வேலை பார்க்க நேரும் ஒரு தமிழன் இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தி இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட ஒருவர் அல்லது இந்தி மக்களின் வாழ்வியலை ஆராயும் ஒருவர் இந்தி கற்றல் அவசியம். இந்தி பேசும் குடும்பத்துடன் திருமண பந்தம் செய்து கொள்ள முடிவெடுக்கும் ஒரு தமிழன் இந்தி அறிய வேண்டும். இந்தச் சந்தர்ப்பங்களில் அல்லது இவற்றை எதிர்காலத்தில் எதிர்கொள்ளப் போகிறவர்கள் இந்தி படிக்கட்டும்.

இம்மாதிரி சிறுபான்மைக் காரணங்கள் தவிர்த்து தமிழர்கள் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான அத்தியாவசியம் ஏதும் இல்லை என்றே எண்ணுகிறேன்.

இன்று தமிழகத்தில் இந்தி படிக்கத் தடை ஏதுமில்லை. ஆர்வமும் முனைப்பும் இருப்பவர்களுக்குப் பல வழிகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கற்பார்கள். மாறாக அரசுப் பள்ளிகளில் இந்தியைக் கற்பித்தால் தான் ஆயிற்று, அன்றேல் அடுத்த வேளைக்குச் சோறில்லை என்கிற தொனியில் பேசுவதெல்லாம் அயோக்கியத்தனம்.

மற்றபடி, இந்தியில் வெளியானதால் தான் பாகுபலி-2 நாட்டிலேயே அதிகம் வசூல் செய்த படமாயிற்று, அதனால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்று எஸ்வி சேகர் சொல்வதெல்லாம் அவரது நாடக நகைச்சுவைகள் போன்றே சிரித்துக் கடக்கலாம்.

என்னைக் கேட்டால் இந்திக்கு பதிலாக ஜாவா படியுங்கள் என்று தான் சொல்வேன்.

***

(உயிர்மை - ஜூன் 2017 இதழில் வெளியானது)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2017 21:13

May 31, 2017

வெற்றி - வெற்றி


ஒரு சிறுகதையை முன்வைத்து மட்டும் ஒரு கட்டுரை எழுதுவேன் என்று எண்ணியதில்லை. ஆனால் இப்போது அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதையான வெற்றி தான் அது.

பெண்களை மலினப்படுத்தும் கதை என்றும் பிற்போக்குத்தனமான கருத்தாக்கத்தை முன்வைக்கிறது என்றும் சமூக வலைதளைங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி பேசுபொருளாகும் நோக்கம் என்றும் சிலபல வசைகளை இடைப்பட்ட தினங்களில் கண்ட பின் சற்று முன் தான் கதையை வாசித்தேன்.



வெற்றிச் சிறுகதையா எனப் பார்க்கும் முன் வெற்றி சிறுகதையா? தலைப்பு சேர்க்காமல் துல்லியமாய் 7,458 சொற்கள் வருகின்றன. (சொற்களை எண்ணுவது என்பது உண்மையில் அவற்றுக்கிடையேயான இடைவெளியை எண்ணுவது தானே!) பொதுவாய் தமிழில் இன்று 1,000 முதல் 3,000 சொற்களில் இலக்கியச் சிறுகதைகள் எழுதப்படுகின்றன என்ற அவதானிப்பை வைத்துப் பார்க்கும் போது இது மிக மிக நீளம் தான். ஆனந்த விகடன் பத்தாண்டுகள் முன் சுஜாதாவின் நீளமான‌ சிறுகதைகளை 'சற்றே பெரிய சிறுகதை' என வெளியிட்டது. அவற்றை விடவும் இது மூன்று மடங்கு நீளம்.

ஆங்கிலத்தில் சிறுகதையின் நீளம் குறித்துப் பேசும் போது எட்கர் ஆலன் போவின் The Philosophy of Composition (1846) என்ற கட்டுரையை அளவுகோலாகக் கொள்கிறார்கள். (அது குறிப்பாய் சிறுகதை பற்றிய கட்டுரை அல்ல என்பது வேறு விஷயம்.) அதில் "It appears evident, then, that there is a distinct limit, as regards length, to all works of literary art- the limit of a single sitting-..." என்கிறார் அவர். அதாவது சிறுகதை என்பது ஓர் அமர்வில் வாசிக்கத் தகுந்ததாய் இருக்க வேண்டும். இதனடிப்படையில் பொதுவாய் இத்தனை சொற்கள் என்று சொல்லி விட முடியாது. ஏனெனில் ஓர் அமர்வில் எவ்வளவு படிப்பது என்பது வாசகருக்கு வாசகர் மாறுபடும்; படைப்புக்குப் படைப்பும் வேறுபடும். காலகட்டத்திற்கேற்பவும் இது மாறுபடும். இந்தத் தலைமுறை வாசிக்கப் பொறுமையற்ற ஒன்று. A generation of premature ejaculation in reading!

அமெரிக்காவில் ஆங்கில‌ அறிவியல் புனைவுகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நெபுலா விருதுகளில் சிறுகதை என்பதற்கு 7,500 சொற்களுக்குள் இருக்க வேண்டும் என்று வரையறை வைத்திருக்கிறார்கள். (விருது தொடங்கப்பட்ட 1966 முதல் இன்று வரை அது தான் கணக்கு.) ஆனால் அது ஆங்கிலத்துக்கான கணக்கு. ஆங்கிலத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல தமிழை விட அதிக சொற்கள் தேவைப்படும். (உதாரணமாய் "She is very beautiful" என்பதை "அவள் பேரழகு" என முடித்து விடலாம்.) இரண்டுக்குமான இலக்கண வித்தியாசங்கள் அப்படி. இதை எல்லாம் வைத்துப் பார்த்தால் நான் தனிப்பட்ட முறையில் சில அளவுகோள்கள் வைத்திருக்கிறேன். சீரியஸ் சிறுகதை எனில் அதிகபட்சம் 5,000 சொற்கள். வெகுஜன சிறுகதை எனில் அதிகபட்சம் 3,000 சொற்கள். இரண்டிற்குமே குறைந்தபட்சம் 500 சொற்கள். இது தான் என் கோடு. அதன்படி பார்த்தால் ஜெயமோகனின் வெற்றி ஒன்றரை சிறுகதை!

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் ஒரு மணி நேரப் பேருந்துப் பயணத்தில் வாசித்தேன். ஓர் அமர்வில் முடிக்கும் சுவாரஸ்யம் இருந்தது என்றாலும் நீளம் சற்றே ஜாஸ்தி தான்.

*

ஜெயமோகன் இரண்டு வகையான கதைகளை எழுதுகிறார். ஒன்று அடர்கதைகள். அவற்றின் தோற்றம், கருத்து இரண்டுமே அடர்த்தியானவை. இவை தீவிர வாசகர்களுக்கானவை. இவற்றைப் படிக்க ஒரு வாசக முனைப்பு தேவைப்படும். பத்ம வியூகம், மாடன் மோட்சம் போன்றவற்றை இவ்வகையில் சொல்லலாம். மற்றது அலர்கதைகள். அவற்றின் தோற்றம் எளிமையானது; ஆனால் கருத்து அடர்த்தியானது. இவை மத்திம வாசகர்களுக்கானது. கதையைச் சிரமமின்றி வாசித்து முடித்து விட முடியும். ஆனால் அதன் கருத்தைத் தரிசிக்கக் கொஞ்சம் இலக்கியப் பயிற்சி வேண்டி இருக்கும். அறம் தொகுப்பின் கதைகளை இவ்வகைமையில் வைக்கலாம். மற்றபடி அதற்கும் கீழான, எளிய வாசகர்களுக்கான கதைகளை ஜெயமோகன் எழுதுவதில்லை. (படுகை போன்ற அவரது சில‌ கதைகள் இவை இரண்டிலும் அடங்கா.)

வெற்றி இதில் அலர்கதை வகையில் வரும். பெரும்பாலானோர் அங்கலாய்ப்பது போல் வெற்றி ஒரு பிற்போக்குத்தனமான கதையோ ஆணாதிக்கச் சிந்தனையோ அல்ல. எளிமையான தோற்றம் கொண்ட அதில் நுட்பமான விஷயம் பேசப்பட்டிருக்கிறது. ஆம். காசைக் காட்டினால் எந்தப் பெண்ணும் படிவாள் என்பது அந்தக் கதையின் சாரம் அல்ல. அப்படி அதை உள்வாங்கிக் கொண்டவர்கள் மட்டுமே அதைத் திட்டுகிறார்கள்.

(SPOILER ALERT: அடுத்த பத்திகளை வாசித்தால் கதையின் சஸ்பென்ஸ் உடையக்கூடும்.)

லதா என்ற பெண் எவ்வளவுக்கு எவ்வளவு அப்பாவியாக, வலிவற்றவளாக, சுயமற்றவளாக கதை நெடுகிலும் முன்னிறுத்தப்படுகிறாளோ அந்த ஒற்றை இரவுக்குப் பிந்தைய காட்சிகளிலும், இறுதியிலும் அதற்கு நேர் எதிரான ஆளுமையாக உயர்கிறாள். பொதுப்புத்தி அளவுகோளின்படி அவள் சோரம் போகிறாள் என்பது உண்மையே. ஆனால் அவளது சூழலையும் அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். அவளுக்கு தன் மகன் பிழைக்க வேண்டும். அதற்குக் காசு வேண்டும். அது அவள் கணவனிடம் இல்லை. அதனால் பணம் படைத்த ரங்கப்பரிடம் அவள் தன்னை விட்டுக் கொடுக்கத் தயாராகிறாள். ஆனால் அவள் அதற்கு பதிலாய் விலையாய்க் கேட்டது என்ன என்பது தான் இதில் முக்கியமானது. அது அவள் கற்பு. ஆம், கற்பைக் கொடுத்து கற்பைப் பெறுகிறாள் லதா.

லதா முன் இரண்டு வாய்ப்புகள் இருந்தன: 1) ரங்கப்பரின் ப்ரப்போஸலை நிராகரிப்பது. அதன் விளைவு அவள் கற்பு காப்பாற்றப்படும்; ஆனால் மகன் உயிரிழப்பான். 2) ரங்கப்பரின் ப்ரப்போஸலை ஏற்பது. அதன் மூலம் அவள் மகன் காப்பாற்றப்படுவான்; ஆனால் அவள் கற்பிழப்பாள். இந்த இரண்டு வழிகளிலுமே அவளுக்குப் பேரிழப்பு இருக்கிறது. அவள் அதைத் தவிர்க்க நினைக்கிறாள் அல்லது குறைக்க முனைகிறாள். ஆனால் தான் இவ்விரண்டு வழிகளைத் தாண்டி யோசிக்க விரும்புகிறாள். ரங்கப்பருடன் ஒரு புத்திசாலித்தனமான ஒப்பந்தத்தில் இறங்குகிறாள்.

தான் விட்டுக் கொடுத்ததை தன் கணவனோ உலகமோ ஒருபோதும் அறியக்கூடாது என்பது தான் அவள் கேட்ட விலை. மற்றபடி கடைசி வரியில் நமச்சிவாயம் சொல்வது போல் ஐந்து லட்சமல்ல அவள் கேட்டது. அது உண்மையில் ஒரு பக்கவிளைவு தான். லதா அந்த ஐந்து லட்சத்தை ஆசைப்பட்டாளா என்பது திறந்த கேள்வி தான். ஆனால் அன்றைய தருணத்தில் அவள் தன் மகன் பிழைப்பதை மட்டுமே விரும்பி இருப்பாள். தனக்கு அவப்பெயர் கூடாது என்பதையும். அவை இரண்டையும் அவள் சாதித்துக் கொண்டாள். அவள் கேட்ட விலையைத் தர ரங்கப்பர் அவளை அடைய முடியவில்லை எனப் பொதுவில் பொய் சொல்ல வேண்டும். அதற்கு ஒரே வழி போட்டியில் தான் தோற்றதாய் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படித்தான் அன்று அவர் தோல்வியை க்ளப்பில் நமச்சிவாயம் உள்ளிட்ட எல்லோர் முன்னிலையிலும் ஒப்புக் கொண்டதும் ஐந்து லட்சம் பணம் கொடுத்ததும் நடந்தது. லதாவின் நிபந்தனையும் நிர்ப்பந்தமுமே அதைச் சாதித்தது.

லதாவின் ஒட்டுமொத்த செயல்களிலும் பார்த்தால் அவள் ரங்கப்பரிடம் விழத் தயாராகி விட்டது போன்ற தோன்றத்தை ஏற்படுத்துவது அவள் அவர் வாங்கித் தரும் புடவை, கடனாக அளிக்கும் நகையை நமச்சிவாயத்திடம் சொல்லாமல் ஏற்பது மட்டும் தான். அந்தக் காலத்தில் சாமானியர்களுக்கு அலைபேசி வசதி எல்லாம் இராது என்பதால் அவள் எவ்வழி அன்றே தன் கணவனின் அனுமதி பெற்றிருக்க முடியும்? தவிர, அவள் கணவனிடம் சொல்லி விடுவதாக அவள் மதிப்பிற்குரிய‌ ரங்கப்பர் சொல்லி இருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும், அதனால் அவள் எவ்வளவு தூரம் மறுதலித்திருக்க முடியும்?. ஆனால் இக்காரணங்களைத் தாண்டி ஆம், அது அவள் பலவீனம் தான். அதுவும் பெண்களின் இயல்பே. ஆனால் அங்கே தன்னை அவரிடம் ஒப்புவிக்கும் உத்தேசம் அவளுக்கு இருப்பதாய் எடுக்க முடியவில்லை.

உண்மையில் வெற்றி என்ற கதையின் தலைப்பு சுட்டுவது தனிப்பட்ட முறையில் வென்ற ரங்கப்பரின் வெற்றியையோ ஊரின் பார்வையில் வென்ற நமச்சிவாயத்தின் வெற்றியையோ அல்ல; அது லதாவின் வெற்றி தான். நமது சட்டகத்தை ஏற்றி அதை அவளது ஏமாற்று வேலை என்று சொல்வதற்கில்லை. எல்லோரையும் சந்தோஷப்படுத்துவது தான் உண்மை என்பது அவளது நிலைப்பாடாக இருக்கிறது. அவளது நிலையிலிருந்து தான் அதை அணுக வேண்டும். இன்னும் சொன்னால் நீங்கள் அவ்விடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என யோசிக்கலாம்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் ரங்கப்பரின் கோணம். ஒன்று அவரது அறம் மற்றும் நேர்மை. அவர் லதாவிடம் சொன்ன சொல் காப்பாற்றுகிறார். அடுத்தது அவரது வெற்றி. அதாவது அவர் அது வரை கொண்டிருந்த கருத்தாக்கங்களின் வெற்றி. "ஆண்கள் ஒரு இடத்தில் தோற்றுப் போகாமல் இருப்பதற்காக  கொல்லவும் சாகவும்கூடத் தயாராக இருப்பார்கள்." என்கிற அவர் கருத்துப்படி அவர் தன் வெற்றிக்காக தான் வெற்றி பெறவில்லை என்று அறிவிக்கவும் செய்கிறார். (அது சாவு தான். அவரது பிம்பத்தின் மரணம்.) அதாவது பிம்பத்தில் தோற்றாலும் சரி, நிஜத்தில் வெல்வதையே முக்கியம் எனக் கருதுகிறார். பெண்கள் பற்றிய ரங்கப்பரின் கருத்தும் உண்மை என உறுதிப்படுகிறது. "இந்த உலகத்தில் உள்ள பொருட்களுடன் முழுமையாகக் கட்டப்பட்டவர்கள் பெண்கள். அந்தப்பொருள் என்ன, அந்தப்பொருளை நாம் அவர்களுக்குக் கொடுக்க முடியுமா என்பது மட்டும்தான் கேள்வி." லதாவுக்கு தன் மகனின் உயிர் தான் அந்தப் பொருள். "அதை அவர்களுடைய மெல்லிய தன்மானம் புண்படாமல் கொடுக்க வேண்டும். அது ஒரு சின்ன கலை." இதுவும் உண்மையாகிறது. லதாவின் தன்மானம் கீறல்படாமல் பார்த்துக் கொள்ளும் கலை ரங்கப்பருக்குத் தெரிந்திருக்கிறது.

கதை நெடுகிலும் நமச்சிவாயத்தின் மூன்று மாத‌ மனப் போராட்டமே சொல்லப்பட்டது என்றாலும் அது மொத்தமும் ஒரு பொய்யின் மூலம் சாந்தி கொள்கிறது என்பது எத்தனை முரண்! உண்மையில் நாம் தினசரிகளில் எதிர்கொள்ளும் அத்தனை மனப் போராட்டங்களையும் இந்தக் கதை பகடி செய்கிறது. அவற்றை அபத்தம் என்றாக்கி விடுகிறது. ஆனால் அந்தப் பொய்யின் மூலம் அந்த மனச் சிக்கலிலிருந்து விடுபட்டு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு அவர் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் கௌரவமாகவும் தன் மனைவியிடம் பிரியமாகவும் இருந்திருக்கிறார். லதா உத்தேசித்தது அதையே. லதா இறக்கும் போது, அந்த வயதில் அவர் அதை எதிர்கொள்ளும் பக்குவம் பெற்றிருப்பார் என்றே தோன்றுகிறது.

நமச்சிவாயம் அப்படித் தொடர்ந்து தொந்தரவுக்குள்ளாவது தான் லதாவின் முடிவை நியாப்படுத்துகிறது. அவள் தன் கணவனைத் துல்லியமாய் உணர்ந்து வைத்திருக்கிறாள். அவள் தன் செயலைத் தெரியப்படுத்தி இருந்தால் அவன் இறந்து போயிருப்பான். அப்படிப் பார்த்தால் அவள் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது கணவனின் உயிரா குழந்தையின் உயிரா என்பது. அவள் இரண்டையும் காக்கிறாள், தன்னை இழந்து. அன்றைய இரவில் இப்படியான அத்தனை கோணத்திலும் சிந்தித்தே தன் முடிவை எட்டி இருக்கிறாள். நமச்சிவாயத்தின் மூன்று மாத அவஸ்தையை விட இது வலியான‌து.

அந்த நிகழ்விற்குப் பின் அவளை நமச்சிவாயத்தின் பார்வையிலிருந்து ஜெயமோகன் வர்ணிக்கும் இரண்டு இடங்கள் அவரை ஒரு தேர்ந்த புனைவாசிரியர் என ஸ்தாபிக்கின்றன: "அவளுடைய உடலுக்குள் இருந்து இன்னொரு பெண் வெளி வந்து அமர்ந்திருப்பது போல.", "அப்போது மிக அழகாக இருந்தாள். எங்கிருந்தோ ஒரு தனி ஒளி அவள்மேல் விழுந்து கொண்டிருப்பது போலிருந்தது.". அவனது தர்க்க மனமும் மதிப்பீடுகளும் தாண்டி அத்தனை ஆண்டுகளாய் அவள் உடம்பை ஆண்ட ஒரு கணவனின் உள்ளுணர்வில் பொறி தட்டுவதைத் துல்லியமாய் மொழிபெயர்க்கும் வரிகள் அவை. ஆனால் அப்படி இல்லை என க்ளப்பில் தெரிய வரும் கட்டத்தில் ஏமாற்றமாய் உணர்கிறான் என்பதையும் கவனிக்க வேண்டும்.

கற்பு என்பதென்ன? எல்லோருக்கும் கற்போடு இருப்பதாகத் தெரிவது தானே! பெரும்பாலான ஆண்கள் எண்ணிக் கொண்டிருப்பது போல் பெண்கள் சாதாரணர்கள் அல்ல. மேற்பார்வைக்கு அவர்கள் அறிவற்றவர்கள் போல் தோற்றம் கொண்டிருந்தாலும் சில விஷயங்களில் தீர்க்கமான சிந்தனையும் முடிவெடுக்கும் திறனும் வாய்த்தவர்கள்.

இந்தக் கதை உண்மையில் லதா என்னும் பெண்ணாளுமையின் ராஜதந்திரம். அதாவது அவள் செய்தது சரி / தவறு என்ற விவாதத்துக்குள்ளே நான் போகவில்லை. ஆனால் ரங்கப்பருடனான அவளது ஒப்பந்தம் சாதாரண விஷயமல்ல. அதில் அவளை ஒட்டுமொத்த பெண் குலத்தின் பிரதிநிதியாகவே பார்க்கிறேன். சொல்லப் போனால் லதாவிடம் கேட்டுப் பார்த்தால் அவள் அதைச் சோரம் போனதாகவே கருத மாட்டாள் என்றே நினைக்கிறேன். அது அன்றைய தினத்தின் சிரமம் மட்டுமே.

ஏராளமான பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல் இது. அவர்கள் கையாளும் முறைகள் பெரும்பாலும் சமூகம் - குறிப்பாய் இந்தியச் சமூகம் - கொண்டிருக்கும் ஒழுக்கவியல் அளவுகோள்களுக்குள் வராது. அது குறித்த ஓர் உண்மையை தான் ஜெயமோகன் அதன் அசல் முகத்துடன் இந்தக் கதையின் வழியே முன்வைத்திருக்கிறார்.

ஆண்கள் தான் கற்பு எனும் கருத்தாக்கத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். பெண்களும் அப்படி இருக்கத்தான் விரும்புகிறார்கள். ஆனால் யதார்த்தத்தில் அது ஒரு சொகுசு தான். எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. ஒரு கட்டத்தில் பெண்களுக்கு அந்த லேபிள் மட்டுமே போதுமானது என்றாகி விடுகிறது. அதாவது கற்புக்கரசியாய் இருப்பதை விட கற்புக்கரசியாய் அறியப்படுதல். இதை ஒரு கேவலமாகச் சொல்லவில்லை. அவர்களைப் பல்லாயிரம் ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததன் விளைவான சிந்தனைப் போக்கு தான் இது. "ஒன்றை வேண்டாம் என்று சொல்ல வேண்டுமென்றால் அதைவிட பெரிய ஒன்றை அவர்கள் பெற விரும்புகிறார்கள் என்றே அர்த்தம்" என்ற ரங்கப்பரின் வார்த்தைகளை இங்கே யோசிக்கலாம். லதா அதுவரை கற்பில் மாசறு பொன் தான். ஆனால் மகனின் உயிரா கற்பா என்ற கேள்விக்கு அவள் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. லேபிளை மட்டுமேனும் தக்க வைத்துக் கொள்ளத் தீர்மானிக்கிறாள்.

லதா இரண்டு பெண் புனைவுப் பாத்திரங்களை எனக்கு நினைவூட்டினாள். ஒன்று புதுமைப்பித்தன் எழுதிய பொன்னகரம் சிறுகதையின் அம்மாளு. இன்னொன்று பெருமாள்முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலின் பொன்னா. முதலாவதில் தன் கணவனுக்காக கற்பை இழக்கத் துணியும் பெண். இரண்டாவதில் குழந்தைப்பேறுக்காக வரம்பு மீறத் தயாராகும் பெண்.

கதையில் எனக்குக் குறையாகப் பட்டது ஒரு விஷயம் தான். (நடை தவிர) கதைப் போக்கில் இது ஜெயமோகன் எழுதியது போலவே தோன்றவில்லை. அதை விட மோசம் இது நான் எழுதியது போல் இருந்தது. ஓ.ஹென்றி, சுஜாதா பாணியில் இறுதி வரியில் ட்விஸ்ட் வைக்கும் உத்தியை இன்னமும் நான் ரசித்துச் செய்து வருகிறேன். ஆனால் ஜெயமோகன் பொதுவாய் அப்படிச் செய்பவர் அல்ல. (விசும்பு தொகுப்பில் சில அப்படி இருக்கும்.) ஆனால் இதில் அப்படித் தான் முடித்திருக்கிறார். நமச்சிவாயம் தான் சொல்ல வந்ததை நிறுத்திய இடத்திலேயே அவர் தனக்கு உவப்பில்லாத ஒரு விஷயததைச் சொல்ல வருகிறார் எனப் புரிந்து விடுகிறது. ரங்கப்பர் சவால் விட்ட இடத்திலேயே துடியான வாசகர்கள் கதையின் முடிவை ஊகித்து விடுவார்கள். நான் இன்னும் ஒரு படி மேலே போய் லதா தப்பிக்க இப்படி ஒரு வழி இருக்கிறது என்பதையும் ஊகித்தேன். அதையே முடிவில் பார்த்த போது மெல்லிய‌ சந்தோஷமும் அதை விட மெல்லிய ஏமாற்றமும் இருக்கத்தான் செய்தது. அதனால் தான் நான் எழுதியது போல் இருந்தது என்றேன். ஆனால் கதையின் மையம் அந்த இறுதி வரி அதிர்ச்சி அல்ல; அது கதை நெடுகிலும் வரும் நமச்சிவாயத்தின் மனவோட்டங்களும், ரங்கப்பரின் வாதங்களும், லதாவின் பாத்திரப் படைப்பும் தான். அங்கே தான் ஜெயமோகன் வெற்றி பெறுகிறார்; என்னிலிருந்து வேறுபடுகிறார்.

லதாவுடனான இரவுக்குப் பின் ரங்கப்பர் உப்பரிகையில் நின்று அழுதிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. சற்றே மிரண்டு அவள் குறித்து யோசித்துக் கொண்டு இருந்திருப்பார். கதையை வாசித்து விட்டு இப்போது நான் நின்றிருப்பது போல்.

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2017 10:35

May 18, 2017

கோடி விழிகள்


லென்ஸ். இன்றைய சூழலில் முக்கியமான + அவசியமான‌ படம். 1 மணி 50 நிமிடப் பரபரப்பான‌ திரைக்கதையினூடாக‌ சவாலான‌ ஒரு விஷயத்தை முடிந்தளவு சரியாகப் பேசி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

முதலில் இப்படம் எந்தச் சட்டகத்துக்குள் நின்று பேசுகிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ந‌ம் உடம்பு - குறிப்பாய்ப் பெண்ணுடல் - என்பது மானத்துடன் தொடர்புடையது; உடையோர் (கணவன் / மனைவி / காதலன் / காதலி / இன்ன பிற‌ நெருக்கமானோர்) தவிர்த்த பிறர் அதைப் பார்த்தல் உயிர் விடுமளவு மாபெரும் அவமானம். இந்தக் க‌ருத்தை எந்த விமர்சனமும் இன்றி எடுத்துக் கொள்கிறது படம் (ஏற்றுக் கொள்கிறது என்றும் சொல்வேன்). அதற்குள் இருந்தபடி ஒரு கதையைச் சொல்லி இருக்கிறது. எவன் பார்த்தால் என்ன, வக்கிரத்துடன் பார்ப்பவன் தானே அவமானப்பட வேண்டும் என்று படம் கேட்கவில்லை. இதை ஒரு குறையாகச் சொல்லவில்லை. படத்தின் தரப்பு என்ன என்பதைச் சொல்லி விட்டால் மேற்கொண்டு பேச ஏதுவாக இருக்கும் என்பதே அது. இன்னும் சொல்லப் போனால் இந்தியாவில் 99.99 விழுக்காடு இந்த மனநிலையுடன் இருப்பவர்கள் தாம். அதனால் படம் அவர்களை நோக்கிப் பேசுவது என்பது அவசியமானது தான்.


லென்ஸ் படம் இரண்டு விஷயங்களைப் பேசுகிறது. ஒன்று சமூக வலைதளங்களில் பரஸ்பர சம்மதத்துடன் நிகழும் அத்துமீறிய பாலியல் பரிமாற்றங்கள். அடுத்தது ஒருவரது அந்தரங்கக் கணங்களின் அசைபடத்தை அனுமதியின்றி இணையத்தில் பகிர்வது. இந்த இரண்டையும் செய்யும் ஒற்றை வில்லனைக் கொண்டு கதையைப் பின்னி இருக்கிறார்.

சமூக வலைதளங்கள் வழி அறிமுகமே இல்லாத ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொண்டு - அவர்களுக்கு மணமாகி இருந்தாலும், காதலன் / காதலி இருந்தாலும், குழந்தைகள் இருந்தாலும் - எந்த எல்லைக்கும் சென்று உரையாடிக் கொள்ளும் சாத்தியம் கடந்த பத்தாண்டுகளாகவே இருக்கிறது. இதனால் குடும்பங்கள் சிதைவது ஒருபுறம், தனி நபர் ஆளுமை சிதைவது மற்றொருபுறம். ஒட்டுமொத்தமாய் இது ஒரு சமூகத் தீங்காய் பிரம்மாண்டம் கொண்ட‌படியே இருக்கிறது. ஆண்டுதோறும் இதில் ஈடுபடுவோர் அதிகரித்தபடி தான் இருப்பார்கள். புதியவர்கள், இன்னும் புதியவர்கள், மேலும் மேலும் புதியவர்கள். இது தொடர்பாய் நான் கண்ட, கேட்ட, வாசித்த உதாரணங்களின் எண்ணிக்கை கணிசமானது.

சொல்லப் போனால் ஓரிரு ஆண்டுகள் முன்பு வரை இது எனக்கு ஆர்வத்திற்குரிய ஒரு தலைப்பு. அதற்குக் காரணம் இருக்கிறது. 2014ல் பெங்களூரில் The Times of India நாளேடு நடத்திய Literary Carnivalல் ஆங்கில நாவலாசிரியை ப்ரீத்தி ஷெனாய் Love In The Times Of Google என்ற தலைப்பில் பென்குயின் பதிப்பகத்தின் தலைமை எடிட்டரான வைஷாலி மாத்தூருடன் ஓர் உரையாடலை நிகழ்த்தினார். அப்போது வெளியாகியிருந்த அவரது நாவலான The One You Cannot Have பற்றியது அது. அதில் இன்னொரு பெண்ணுடனான கணவனின் சாட்டை மனைவி வாசித்து விடுவதாக ஒரு காட்சி வரும் என நினைவு. அதை உரையாடலினிடையே வாசித்துக் காட்டினார் ப்ரீத்தி. அது எனக்கு ஒரு மிகப் பெரிய உந்துதலாக இருந்தது. அப்போது விநாயகமுருகனின் ராஜீவ் காந்தி சாலையை பாதி வாசித்திருந்தேன் (இன்னமும் முடிக்கவில்லை.)

அது மாதிரி துறைசார் புனைவு ஒன்று எழுத ஆர்வங்கொண்டிருந்த காலகட்டம். இந்த இரண்டு விஷயங்களும் சேர்ந்து சமூக வலைதளங்களில் ஆண் - பெண் உறவை முன்வைத்து - பாலியல் அதன் பிரதான முகம் - என் முதல் நாவலைத் திட்டமிட்டேன். 'நீலப்பறவை' என அதற்குப் பெயர் கூடத் தேர்ந்திருந்தேன் (ஏனென்று புரிகிறதா!). ஆனால் அதைச் செயல் படுத்தவில்லை. இனி எழுதுவேனா என்றும் தெரியவில்லை. அன்று எழுதி இருந்தால் அது பெரிய விஷயமாகப் பேசப் பட்டிருக்கும். இன்று வெகுஜன ஊடகமான சினிமாவிலேயே லென்ஸ் போன்ற அம்மாதிரி முயற்சிகள் நடந்தேறி விட்டன.

பொதுவாய் வைக்கப்படும் வாதம் ஒன்று. அத்துமீறிய சமூக வலைதள உறவுகள் என்பவை சமூகத்தின் அளவுகோள்களின் படி அத்துமீறியவை என்றாலும் அவர்களுக்குள் அது பரஸ்பர சம்மதத்துடன் தானே நடக்கிறது, அது எப்படிக் குற்றமாகும் என்பது. அது சட்டப்படி தவறாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தர்மப்படி? அப்படிச் செய்யும் ஒரு கணவனுக்கு, தன் மனைவி அப்படிச் செய்தால் சம்மதமா என்ற கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டும். இக்கேள்விக்கு நேர்மையான பதில் அளித்தாலே இவ்வகை உறவுகளில் முக்கால்வாசி வெட்டுப்படும். ஆனால் சிலர் அதற்கும் சம்மதம் என்று சொல்வார்கள். இன்னும் சிலர் அப்படி நடந்தால் அவர்களின் குற்றவுணர்வுக்கு விடுதலையாக அமையும் எனக் கூடக் கருதுவார்கள். (இது தொடர்பான நுட்பமான வசனம் ஒன்றினைப் போகிற போக்கில் வைத்திருக்கிறார் இயக்குநர். அப்போது நிமிர்ந்தமர்ந்தேன்.)

ஒரு குழப்பமும் இது தொடர்பாய் முன்வைக்கப்படுகிறது. ஏன் இப்படி வீடியோ சாட் செய்கிறார்கள்? அதுவும் குடும்பப் பெண்கள் கூட? இதில் என்ன கிடைக்கிறது என? மனிதர்களின் இச்சை நாம் கற்பனை செய்யவியலாத பரிமாணங்களைக் கொண்டது. சிலருக்கு செக்ஸ் வீடியோக்கள் போதும், சிலருக்கு நிர்வாணம் போதும், சிலருக்கு ரகசிய நிர்வாணமாய் இருக்க வேண்டும், சிலருக்கு அந்தரங்கமான‌ தொடுகை மட்டும் போதும், சிலருக்குத் தம் கையால் எதிர்பாலினத்தின் ஆடையைக் களைவதே போதும், சிலருக்கு சிலருக்கு பயன்படுத்திய உள்ளாடைகள் போதும், சிலருக்கு தம் உறுப்பை எதிர்பாலினத்தைப் பார்க்கச் செய்தாலே போதும், சிலருக்கு அடுத்தவர் கலவியைப் பார்த்தால் போதும். இப்படிப் பலப் பல.

இன்றைய இணைய உலகில் அப்படித்தான் சிலருக்கு டெக்ஸ்ட் சாட், சிலருக்கு வாய்ஸ் சாட் (முன்பெல்லாம் - 90களில் - பத்திரிக்கைகளில் கட்டண செக்ஸ் சாட் செய்வதற்கென தொலைபேசி எண்களைப் பகிர்ந்து விளம்பரமெல்லாம் வருமே), சிலருக்கு வீடியோ சாட் போதும், இன்னும் சிலருக்கு நேரிலும் கலவி வேண்டும். இவை மிக மிக ஆபத்தற்ற வடிவங்களில் ஒன்றோ அதற்கு மேற்பட்டோ நம்மிடமும் இருக்கலாம், அது நமக்கான துணையுடன் மட்டும் இருக்கலாம். அளவு அதிகரிக்கும் போது அது வக்கிரமாக உருக்கொள்கிறது. அது அடுத்தவரை பலி வாங்கத் தொடங்குகிறது. அதனால் இதில் என்ன கிடைக்கிறது என்ற கேள்வி நம் தர்க்கத்தை நம் மனப்பாங்கை அவர்கள் மீதேற்றி யோசிக்க முனையும் செயல்.

நம்மால் உணரச் சாத்தியமற்ற ஒரு சந்தோஷம் அவர்களுக்கு அதில் கிட்டுகிறது என்பது வரைக்கும் புரிந்தால் சரி.

இம்மாதிரி சமூக வலைதள உறவுகள் என்றில்லை, நேரடி உறவுகளிலும் அன்னோன்யத்தின் அல்லது அறியாமையின் பலனாய் நிகழும் ஒரு பக்கவிளைவு அப்பொழுதுகளைப் படம் பிடிப்பதும், அதை நெருங்கியவர்களுக்குக் காண்பிப்பதும், அப்பகிர்தலின் உச்சமாய் அவற்றை இணையத்தில் ஏற்றுவதும். முன்னதை விட இது மன்னிக்க முடியாத குற்றம்.

நல்ல ஆண் தனக்கு வரும் அறிந்த / யாரோ ஒரு பெண்ணின் (அவளுக்குத் தெரியாமலே, அவள் விருப்பமும் அனுமதியும் இன்றி பகிரப்படும்) நிர்வாண / கலவிப் புகைப்படத்தை மற்றவர்க்கு அனுப்பிப் பரப்ப மாட்டான் - அது ஒரு நடிகையாகவே இருந்தாலும். இது ஓர் அடிப்படை அறம். அப்படிப் பரப்பும் ஒவ்வொரு முறையும் ஒரு பெண்ணை, அவள் குடும்பத்தைச் சிதைக்கிறோம், மோசமான முடிவை நோக்கி நம் கையால் தள்ளுகிறோம். அதே நிலை நமக்கு வர இந்தத் தொழில்நுட்பம் வேய்ந்த நாகரிக யுகத்தில் நெடுங்காலம் ஆகாது. தனி மனிதர்கள் சுயஒழுக்கத்தின் வழி இவற்றைப் பரப்பாதிருப்பதன் மூலமே இதற்கான சந்தையை மெல்ல மெல்ல ஒழிக்க முடியும். பார்க்க / பரப்ப ஆள் இல்லாத போது இதை முதலில் வெளியிடும் நபருக்கு அதற்கான மோட்டிவேஷன் இல்லாமல் போகும். அப்படியான‌ சமூகக் கூட்டு முயற்சி தான் ஒரே வழி.

நிர்வாணத்தை விற்கவென ப்ரொஃபொஷனல்கள் இருக்கையில் (படம் அதையும் பேசுகிறது) இது அனாவசியம், அநியாயம். காமம் தீர்க்க பாலியல் தொழிலாளிகளை அணுகாமல் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் பலாத்காரம் செய்வதற்குச் சமானம்.

அவள் எதற்கு அப்படி செல்ஃபியை எடுத்தாள் / புகைப்படம் எடுக்க அனுமதித்தாள் என்ற விதண்டாவாதக் கேள்வி ஒருபோதும் இப்படங்களைப் பரப்பும் உரிமையை நமக்குத் தந்து விடாது. அவள் எடுத்தது / எடுக்க அனுமதித்தது அவளது தனி மனித சுதந்திரம். அவள் மட்டும் பார்க்கவோ, நெருங்கியவர்களுக்கு மட்டும் காட்டவோ தான் அதைச் செய்தாள். நீங்களும் நானும் பார்க்க அல்ல. மீறி அறியாமையினால் / துரோகத்தால் அது கசிந்து விட்டது. அது நம்மிடம் வரும் போது அது நமக்கானதல்ல என்ற தெளிவு நமக்கு வேண்டும். அதைப் பகிரும் உரிமை நமக்கு இல்லை என்ற புரிதல் வேண்டும்.

தமிழ் மின் சஞ்சிகையின் இரண்டாம் இதழின் தலையங்கத்தில் இது பற்றிப் பேசி இருக்கிறேன். ('இணையப் பழங்குடிகள்' என்பது தலைப்பு. பழங்குடி வாழ்வியல் பற்றிப்புரிதலற்று அவர்களை அவமதிப்பதாக லீனா மணிமேகலை சாடியிருந்தார்.) 

முன்னெப்போதும் இல்லாதளவு ஒருவருடைய அந்தரங்கத்தைக் கிஞ்சித்தும் மதிக்காமல் வேடிக்கைப் பொருளெனப் பகிரங்கப்படுத்தும் ஓர் இரக்கமற்ற விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது பிரபல நடிகை ராதிகா ஆப்தேயின் செல்ஃபியோ, முகமறியாப் பெண் ராகவியின் செல்பேசி உரையாடலோ, விதிவிலக்கின்றி கணங்களில் உலக‌ச் சுற்றுக்கு விடப்படுகிறது. வாட்ஸாப், ட்விட்டர், ஃபேஸ்புக், யூட்யூப், சவுண்ட்க்ளௌட் என தொழில்நுட்பச் சாத்தியங்கள் அதிகரிக்கையில் தனிமனித வாழ்வுக்குள் எட்டிப்பார்க்கும் வேட்கையும் பெருகியபடியே இருக்கிறது.

உண்மையில் எந்தக் குற்றவுணர்வுமே இன்றி மிக இயல்பாக இந்தப் பகிரல் நடைபெறுகிறது. அனுப்புவர், பெறுபவர் எவருமே அது குறித்து ஆட்சேபனை எழுப்புவதில்லை. மௌனித்திருப்பதும் அதில் பங்கு கொள்வதற்குச் சமானமே.

இவற்றைப் பகிர்தல் அறமா என்கிற தத்துவார்த்தக் கேள்வியைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும் நம் குடும்பத்துப் பெண் அதில் சம்மந்தப்பட்டிருந்தாலும் இதே ஆர்வத்துடன் பகிர்வோமா என்ற நீதிக்கேள்வியை எப்படி உதாசீனம் செய்ய முடியும்? ஒரே காரண‌ம் நம் குடும்பத்துப் பெண்ணுக்கு இதுபோல் நேராது என்ற குருட்டு நம்பிக்கை தான். தவிர, அடிப்படையிலேயே நமக்கு அடுத்தவர் படுக்கையறையின் சாவித்துவாரத்தில் கண் வைக்கும் வெறி உண்டு.

அச்சு, ஒளி, இணைய ஊடகங்கள் தாம் முன்பு இதைச் செய்து கொண்டிருந்தன. இப்போது நவீன வளர்ச்சியின் பயனாய் தனிமனிதர்களே அதைக் கையிலெடுத்துக் கொண்டு விட்டார்கள். மீடியாக்கள் இப்போது இயல்பாய் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு "goes viral" என செய்திச் சாக்கு வைத்துக் கொண்டு அதற்கு வெளிச்சமிடுகிறார்கள்.

புகைப்படங்கள், உரையாடல்கள், வீடியோக்கள் எல்லாம் ஒருவரது தனிப்பட்ட‌ பாத்தியதை. அவரது முறையான அனுமதியில்லாமல் அதைப் பார்ப்பதற்கோ கேட்பதற்கோ நமக்கு உறுத்த வேண்டும். அதில்லை எனினும், அதைப் பகிர்வது சட்டத்துக்குப் புறம்பான செயல். அனுப்புபவர் மட்டுமின்றி பெறுபவருக்கும் இக்குற்றத்தில் பங்குண்டு.

நடிகை என்பது அவரது அந்தரங்கத்தை ஊடுருவ எந்தச் சலுகையையும் நமக்குக் கொடுத்து விடாது. அவர் தான் நடிக்கும் திரைப்படங்களில், விளம்பரங்களில் உடலை முன்வைப்பவராகவே இருந்தாலும் அவரது அனுமதியின்றி எடுக்கப்படும் / பகிரப்படும் விஷயங்கள் பிழையே. நாம் இளக்காரமாய்க்கருதும் நடிகையிடமே இக்கண்ணியத்துடன் நடக்க வேண்டும் எனும் போது யாரோ ஒரு சாதாரணப் பெண்ணிடம் இன்னும் பொறுப்பு கூடத்தானே வேண்டும்!

ஒரு பெண் கெட்டவளா, நல்லவளா, அவளது பின்புலம் என்ன‌ என்பதெல்லாம் இதில் பொருட்டே இல்லை. அவள் தனிமையில் ஒருவரை நம்பிச் செய்த விஷயம் துரோகத்தாலோ, கவனமின்மையாலோ வெளியே கசிந்து விட்டது. நம் எல்லோரையும் போல் தானே அவர்களும் நடந்து கொள்கிறார்கள். தொந்தரவு செய்யாமல் அதை அப்படியே அமைதியாய்க் கடந்து விடலாமே! அஃதல்லாமல் அதை வைத்துப் பொழுதுபோக்க என்ன இருக்கிறது? கலவியில் ஈடுபடும் நாய்களைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தி மகிழும் சேடிஸத்துக்கு சற்றும் குறைந்ததில்லை இது.

ஒரு ஸ்கேண்டலில் சம்மந்தப்பட்டவருக்கு நாம் செய்யும் ஆகச்சிறந்த உபகாரம் அதைப் பரப்பாமல் இருப்பதே. போலவே பெண்களும் கணவன் உள்ளிட்ட‌ யாரையும் நம்பி பிரச்சனைக்குரிய‌ எதையும் பகிராதிருப்பதே நலம். இப்போதைக்கு இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களே என்றாலும் ஆண்களும் சமமாய் அதிர்ச்சியுறும் காலம் தொலைவில் இல்லை (ஏற்கனவே ஓர் அசிஸ்டெண்ட் கமிஷனரின் டெலிஃபோன் உரையாடல் இருக்கிறது).

இணையத்தைப் பொறுத்தவரை நாம் இன்னும் பழங்குடி வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிலும் நாகரீகத்தை நோக்கி நகர முயற்சிக்க வேண்டும். ‘நான்’ என்பது ஒழுங்கானால் ‘நாம்’ என்பது தானாய்ச் சரியாகும்.


பெண்களுக்கு இதில் கற்றுக் கொள்ள ஒன்று உண்டு. கணவன், காதலன், தோழன், சமூக வலைதளச் சாட் வழி அறிமுகம் ஆன‌ மீட்பன் என எவனையும் (எவளையும்) நம்பி உங்கள் நிர்வாண, அரை நிர்வாணங்களைப் பகிராதீர். என்றேனும் அது வைரலாகி ஊரே உங்களை மனதிலிருத்திச் சுய இன்பம் செய்யும். அப்புறம் கேலி செய்யும். அதற்கு மேல் உங்கள் இஷ்டம்!

இவற்றுக்கெல்லாம் orthogonal-ஆக ஒரு பார்வை உண்டு. நிர்வாணத்தை மானத்தோடு இணைத்து அஞ்சுவதாலேயே இத்தகு விபத்துகள் அல்லது சதிகள் பேரிழப்பை உண்டாக்குகின்றன, அதனால் அதை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கடக்க சமூகம் பழக வேண்டும் என்ற பார்வை. மதிப்பிற்குரிய ராஜன்குறை இதை வலியுறுத்தி அவ்வப்போது பேசி வந்திருக்கிறார்:

(1) எனக்கு ஒரு சந்தேகம். கோபிக்காமல் யோசித்துப் பாருங்கள். ஹோட்டல்கள், துணிக்கடைகள் போன்ற இடங்களில் மறைவான இடங்களில் காமிரா வைத்து நிர்வாண உடல்களை பதிவு செய்கிறார்கள்; இப்போது nameo என்ற மென்பொருளை செல்ஃபோனில் தரவிரக்கினால் அது எக்ஸ்ரே போல செயல்பட்டு ஆடையை மட்டும் நீக்கி நிர்வாண உடலை படமெடுக்கும்/காட்டும் என்று சொல்கிறார்கள். இது போன்ற செயதிகளை பகிர்பவர்கள் பெண்களை எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார்கள்; இதை பெரிய ஆபத்து என்கிறார்கள். ஒரு பெண்ணை இப்படி ஒருவர் படம் எடுத்தால் அவமானம் எடுத்தவருக்கு வேண்டுமானால் இருக்கலாம் - அந்த பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ என்ன அவமானம்? ஆடைகளுக்கு உள்ளே எல்லோரும் நிர்வாணமாகத்தான் இருக்கிறோம். அது வெளிப்பட்டுவிட்டால் சம்பந்தப்பட்டவருக்கு அவமானம் என்ற மனப்பான்மையை முதலில் எதிர்க்கவேண்டும். ஆடை அணிவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒருவரது நிர்வாணம் அவமானகரமானது என்பது காரணமாக இருக்கக் கூடாது. படம் எடுத்து நெட்டில் போட்டால் போடட்டும். போடுபவர்களும் பார்ப்பவர்களும் வேண்டுமானால் வெட்கப்படலாமே தவிர அந்த உடலுக்கு உரியவர்கள் வெட்கப்படக்கூடாது. குழந்தைகளை ஆடை அணீய பயிற்றுவிக்க பப்பி ஷேம் சொல்வதை வாழ்நாள் முழுவதும் நம்புவது முதிர்ச்சியின்மை இல்லையா என்ன? இணையவெளியின் நிர்வாண பித்தினால் இந்த நிர்வாணப்பயித்தயம் இன்னம் பத்தாண்டுகளில் ஒழிந்துவிடும் என்று நம்புகிறேன். அதற்கு இந்த அவமானம் குறித்த எண்ணம் முதலில் ஒழியவேண்டும்.

(2) பல்வேறு விஷயங்களில் சமூகம் முதிர்ச்சியடைந்து வருவது போல, பாலுறவு என்பது வாழ்வின் சிறு பகுதி, உணவு அருந்துவதுபோல அன்றாட தேவை கூட கிடையாது, அவ்வப்பொழுதே தேவை, நிர்வாணம், பாலுறவு எனபதெல்லாம் மறைபொருளாகவோ, மானம், மரியாதை தொடர்பானதாகவோ இருக்கவேண்டியதில்லை என்பது போன்ற புரிதல்களும் பெருகும்போது இயல்பாகவே காணொளி துணுக்குகளுக்கும், பீப் ஒலிகளுக்கும் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும். பள்ளிகளில் பாலியல் கல்வியை துவங்குவது அதற்கு ஒரு அடித்தளமாக இருக்கும். கூடவே தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது வழங்கப்படும் பாலியல் ஆலோசனைகளை தடை செய்வதுடன்,  பாலியல் மருத்துவக்கல்வி என்பது உரிய கவனத்துடன் புதிய அடிப்படைகள் கொண்டு உருவாக்கப்படவேண்டும். தொலைக்காட்சிகளில் வழங்கப்படும் முட்டாள்தனமான ஆலோசனைகளை கேட்டால் திகைப்பாக இருக்கிறது. பாலுணர்வு இயல்பாக்கம் என்பதை தகர்த்தெறியாமல் மானுட விடுதலை சாத்தியமில்லை. உடல்களுக்கிடையேயான பாலுறவற்ற அரவணைப்பினையும், ஒளிவு மறைவற்ற போக்கினையும் பரவலாக்கினாலே இது குறித்த தேவையற்ற மன அழுத்தங்கள் குறையும். இது போன்ற விஷயங்களில் வித்தியாசமாக சிந்திப்பவர்களின் குரல்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தரவேண்டும்.

படத்தில் சில புத்திசாலித்தனமான தருணங்கள் உண்டு. மயக்கத்தில் இருக்கும் பெண்ணின் மாஸ்க்கை கழற்றும் காட்சியும் அதை விவரிக்கும் இறுதிக் காட்சியும் உதாரணங்கள். கிடைக்கும் அந்தரங்களை எல்லாம் இணையத்தில் ஏற்ற முனையும் அற்பத்தனம் சுற்றம் நட்பு என என நெருங்கிய அனைவரையும் நம்மை நீங்கச் செய்யும் என்ற கருத்தைத் தான் இறுதிக் காட்சி முன்வைக்கிறது. அதுவே இதில் குற்றத்துக்கான முக்கியமான தண்டனை எனப் பார்க்கிறேன். ஒதுக்கப்படுதல்.
இரண்டாம் பாதியில் வில்லன் மேல் கேஸ் மேலும் மேலும் வலுவாக எழுதப்படுகிறது. அறிமுகமற்ற‌ பெண்களுடன் செக்ஸ் சாட் வீடியோ என்பதில் தொடங்கி அடுத்தவரின் அந்தரங்கமான வீடியோவைப் பார்த்தல் / பகிர்தல் என்று வளர்ந்து இறுதியில் அதை இணையத்தில் ஏற்றியதே அவன் தான் என முடிகிறது. இறுதிக் குற்றத்தை அவன் செய்யவில்லை என்றாலும் முதலிரண்டைச் செய்ததற்காகவே படத்தில் வழங்கப்பட்ட தண்டனை நியாயமானதே எனத் தோன்றுகிறது.

ஏஞ்சலாக நடித்த அஸ்வதி லாலின் நடிப்பு (வீடியோவில் ஒவ்வொரு தாளாகக் காட்டும் காட்சி) கவனிக்கும் படி இருந்தது. யோகனாக நடித்த ஆனந்த் சாமியும் பரவாயில்லை (டூலிப் வீடியோவை எத்தனை முறை அரவிந்த் பார்த்தான் எனப் பட்டியலிடும் காட்சி). மிசா கோஷல் படம் முழுக்க மயக்கத்திலேயே கிடக்கிறார். படத்தை இயக்கியது மட்டுமல்லாது சங்டத்துக்குரிய எதிர்மறைப் பாத்திரத்திலும் (அரவிந்த்) நடித்திருக்கிறார் ஜெயபிரகாஷ். கொஞ்சமாய் அபிஷேக் சாயல். நடிப்பில் முதிர்ச்சியின்மை ஆங்காங்கே தெரிந்தாலும் அதையெல்லாம் கவனிக்க விடாமல் திரைக்கதை தடதடக்கிறது. (சற்று முன் ஜெயபிரகாஷின் ஃபேஸ்புக் பக்கத்திற்குப் போய்ப் பார்த்தேன். சட்டென‌ 'Hi' சொல்லி சாட் செய்யத் தொடங்கி விடுவாரோ என்ற பயம் எழும்பியது. அந்த வகையில் ஓர் இயக்குநராக வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்வேன்.)

நடிகர் தேர்வு, வசன உச்சரிப்பின் போதான லிப் சிங்க் என எல்லாவற்றிலும் மலையாள வாடை தூக்கல். படத்தை இரண்டு மொழிகளிலும் எடுத்தது தான் காரணம். நானறிந்து ரகசிய வீடியோ எடுத்தல் என்ற விஷயத்தை எடுத்துப் பேசி இருக்கும் மூன்றாம் (பொருட்படுத்தத்தக்க) மலையாளப்படம் லென்ஸ். முதலில் திருஷ்யம்; பின்னே சாப்பா குரிஷு; இப்போது இது.

படத்தில் குறைகளே இல்லை என்று சொல்லவில்லை. லோபட்ஜெட் என்பது ஆங்காங்கே தெரிகிறது என்பது தொடங்கி இன்னும் நேர்த்தியான காட்சியமைப்புகளும் கூரான வசனங்களும் சமைத்திருக்க முடியும் என்பது வரை சொல்லலாம்.

எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு என்பது பொதுவாய் எதிர்பார்ப்புக்குரியது. கற்றது தமிழ், சுப்ரமணியபுரம் என அது வேறு லெவல். இப்படத்தில் முழுக்கவே இன்டோர் என்பதால் ஒளிப்பதிவின் வீச்சை உணர முடியவில்லையா எனப் புரியவில்லை. பரதேசி, காக்கா முட்டை, விசாரணையைத் தொடர்ந்து இதிலும் ஜிவி பிரகாஷ் ஏமாற்றி இருக்கிறார் என்றே சொல்வேன்.

தலைப்புக் கூட லென்ஸ் என்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. கேமெராவின் லென்ஸ் என்று சுற்றி வளைக்கிறது. கோடி கண்கள் என்பதை உணர்த்தும் ஏதேனும் சொல் / சொற்றொடர் படத்திற்குத் தலைப்பாய் இருந்திருக்கலாம்.

ஆனால் படத்தைக் கொண்டாட இவை ஏதும் தடையாக இல்லை. அதன் உள்ளடக்கம் அத்தனை வீரியமாய் மிளிர்கிறது.

இப்படம் ஒரு கண்ணாடி. சமூகத்தைப் பிரதிபலிக்கிறது. இடையில் நம்மையும். படம் பேசும் ecosystem-ல் எங்கோ நாம் பொருந்தி இருக்கிறோம். யாரோடோ சாட் செய்பவர்களாக, அல்லது அந்தரங்கத்தைப் படமெடுப்பவர்களாக, அல்லது அதை இணையத்தில் ஏற்றுபவர்களாக, அல்லது அதைப் பகிர்பவர்களாக, அல்லது அதைப் பார்ப்பவர்களாக, அல்லது இவற்றால் பாதிக்கப்படுபவர்களாக‌. யாரெனினும் படம் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. மாற வேண்டுமா என்ற மறுபரிசீலனைக்குத் தூண்டுகிறது. அது பட‌த்தின் முக்கியமான சமூகப் பங்களிப்பு. அக்கோணத்தில் சமீபத்தில் இத்தகைய படம் வேறில்லை.

தட்டத்தின் மறையத்து, ஜேக்கபின்ட சுவர்க்கராஜ்யம் படங்களை இயக்கிய, ஒரு வடக்கன் செல்ஃபி படத்தை எழுதிய வினீத் ஸ்ரீனிவாசன் இப்படத்தைப் பற்றிச் சொல்கையில் "It's relevant, it's gritty, it's honest and it haunts." என்கிறார். ஆம். இந்தப் படம் உங்களைத் துரத்தும். தொந்தரவு செய்யும். கோடி விழிகள் நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பதாய் பிரமை தட்டும்.

வெளியிலுள்ள வெகுஜனம் கண்டுகொள்ளவில்லை என்றாலும் இத்தகு படங்களைக் தூக்கி வைத்துப் பேசுவது சமூக வலைதள வழக்கு. ஆனால் சமூக வலைதளங்களில் கூட ஏன் இப்படம் பற்றி பரவலாகப் பேசப்படவில்லை என நண்பர் கேட்டார். அனேகமாய் பலரும் படம் பார்த்து திருடனுக்குத் தேள் கொட்டிய அதிர்ச்சியில் உட்கார்ந்திருப்பார்கள் என்றேன் விளையாட்டாய். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அது வெறும் விளையாட்டு மட்டும் தானா என வியக்கிறேன்.

இவ்வகைப் படங்களை ஊக்குவிக்கும் வெற்றிமாறனுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள். எப்படிச் சொல்வது? தியேட்டருக்குப் போய் காசு கொடுத்துப் பார்ப்பதன் மூலமும் அதை பற்றி பேசியோ எழுதியோ பரப்புவதன் மூலமும்.

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 18, 2017 11:57

May 14, 2017

நெஞ்சிலேற்றிப் போற்றுகின்றேன்


நேற்றைய நாமக்கல் தமிழிசைக் கச்சேரியில் பெருமாள்முருகன் இயற்றிய பஞ்சபூதக் கீர்த்தனைகள் புத்தகமும், தமிழ் மின்னிதழின் இளவேனில் 2017 டீஸரும் வெளியிடப்பட்டன. பஞ்சபூதக் கீர்த்தனைகள் 20 பக்கம் கொண்ட சிறுநூல். விலை ரூ.10. காலச்சுவடு வெளியீடு. பெருமாள்முருகன் எழுதிய 10 கீர்த்தனைகளையும் 4 விருத்தங்களையும் உள்ளடக்கியது. அதிலிருந்து ஏழெட்டு கீர்த்தனைகளையும் இரண்டு விருத்தங்களையும் டிஎம் கிருஷ்ணா நேற்று மேடையில் பாடினார்.


நிகழ்ச்சியில் நான் கவனித்த பகுதிகள் பற்றி மட்டும் என் அபிப்பிராயத்தை எழுத வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் இன்று ஷ்ருதி டிவி நிகழ்ச்சியின் மொத்த வீடியோவையும் யூட்யூபில் ஏற்றி விட்டார்கள். அதனால் ரசிகர்கள் நேரடியாய் தமக்கான இசைய‌னுபவத்தைப் பெறலாம். கர்நாடக சங்கீதம் பற்றிய என் பாமரக் கருத்து அவசியமில்லை.

பொதுவான சில விஷயங்கள் பற்றி மட்டும் சொல்கிறேன். பக்தி தாண்டிய, வட்டார மொழி தாங்கிய கீர்த்தனைகளும் தியாகராஜ கீர்த்தனைகளோடு ஒரே மேடையில் பாடப் பெற வேண்டும் என்பதே தன் கருத்து என டிஎம் கிருஷ்ணா தன் உரையில் குறிப்பிட்டார். அவர் பாரம்பரியத்தை விலக்கவில்லை; புதுமை மட்டும் போதும் எனச் சொல்லவில்லை. அது முக்கியமான நிலைப்பாடாகத் தோன்றுகிறது. அப்படியான புதிய கீர்த்தனைகளுக்கான ஓர் ஆரம்பமாகவே நேற்றைய கச்சேரி அமைந்தது. (டிஎம் கிருஷ்ணா ஏற்கனவே பெருமாள்முருகன் எழுதிய 3-4 விருத்தங்களை சில மேடைகளில் பாடி இருக்கிறார் - அவை யாவும் மாதொருபாகனே என்று முடிபவை. உதாரணம்: முடியாத துயரில், தப்பென்ன செய்தேன்.)

என் மனைவி சிறுவயதில் கொஞ்சமாகக் கர்நாடக இசை பயின்றவள். அதன் பக்கவிளைவாய் எங்கள் மகன் ஞானி கர்நாடக இசை கற்க வேண்டும் என்ற ஆசையில் அவனை வகுப்புக்கு அழைத்துச் சென்று வருகிறாள். ராகங்களின் பெயர்களில் சில அழகான பெண்களைத் தெரியும் என்பது தாண்டி எனக்கு இந்திய சாஸ்திரிய இசையில் எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை.

ஈராண்டுகள் முன் தமிழ் மின்னிதழ் நேர்காணலுக்காக யுவன் சந்திரசேகருடன் பேசிய பிறகு கிட்டிய உந்துதலில் தான் இந்திய சாஸ்திரிய சங்கீதம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணமே வந்தது. 2015ம் ஆண்டில் ஒரு முயற்சியாய் முதலில் கர்நாடக சங்கீதத்தில் தொடங்கலாம் என நினைத்து ரஞ்சனி - காயத்ரி கச்சேரி ஒன்றுக்கும், சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரி ஒன்றுக்கும் போய் வந்தேன். சஞ்சய் கச்சேரி பிடித்தது. அவரிடம் ஒரு மயக்கம் இயல்பாகவே வருகிறது. அதற்கு அவரது புற ஆகிருதியும் ஒரு காரணமாய் இருக்குமோ எனத் தோன்றுகிறது. ரஞ்சனி - காயத்ரியின் ஒருங்கிணைப்பு (co-ordination) வசீகரமாய் இருந்தது என்று மட்டும் சொல்ல முடிகிறது. ஆனால் பொதுவாகவே என்னால் கர்நாடக‌ இசையினுள் ஆழ்ந்து உட்புக முடியவில்லை. இளையராஜாவைத் தோய்ந்து கேட்பது போல் இதனுள் செல்ல முடியவில்லை. இசை நுட்பங்கள் தெரியாது என்பதை இதற்குக் காரணமாக ஏற்க முடியவில்லை. சினிமா இசை நுட்பமும் எனக்கு ஏதும் தெரியாதே?

பொதுவாக கச்கேரிக்கு வந்தவர்கள் பாடுகையில் obviously / explicitly சிரமமான பகுதிகளில் - உதாரணமாய் மூச்சு விடாமல் பாடும் நீண்ட ஆலாபனை, எதிர்பாராத ஏற்ற இறக்கங்கள், குரலில் பரிசோதனை முயற்சி போன்றவை, கருவியும் குரலும் நிகழ்த்தும் சில விளையாட்டுக்கள் - கைதட்டுகிறார்கள். ஆனால் அது தான் இசையில் பிரதானமா என்ன? அவை சிக்கலான, பயிற்சி தேவைப்படும் இடங்கள் என எனக்கே புரிகிறதே! சினிமா இசையில் நான் மிக மிக ரசிக்கும் இடங்கள் அவை சிரமமான வித்தை என்பதால் அல்ல. அவை என்னை அந்த உணர்வோடு பிணைக்கும் இடங்கள். அது போல் என்னால் கர்நாடக இசையில் இடங்களைக் கண்டறியவில்லை. முதலில் கச்சேரியில் அதைத் தேடுவதே வினோதமாய்ப் படுகிறது!

அப்போது யுவனுக்கு எழுதிய மின்னஞ்சலில் "இசை என்பது தனிமையில் கேட்டு அனுபவிக்கும் விஷயம்! முற்காலத்தில் அதற்கு வசதி இல்லை என்பதால் கச்சேரி என்னும் வடிவம் உருவெடுத்தது. இன்று அதன் அவசியம் பற்றிய குழப்பங்கள் இருக்கின்றன." என்று குறிப்பிட்டிருந்தேன். அது இப்போதும் நீடிக்கிறது. சில சமயம் கச்சேரியில் புலனுணர்வு தாண்டிய‌ கூட்டு ரசிப்புத்தன்மை ஒன்று உருப்பெற்று, ஒரு பொது அனுபவத்தை அளிப்பதாகவும் தோன்றுகிறது - ரஜினி படத்தை நண்பர்களோடு முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது போல். இது தான் 'கர்நாடக இசையும் நானும்' முன்கதைச் சுருக்கம்.


நேற்றைய கச்சேரியிலும் இந்தக் கலவையான உணர்வுகள் எழுந்தன என்றாலும் மேற்சொன்ன கச்சேரிகளைக் காட்டிலும் மனதுக்கு நெருக்கமாய் உணர்ந்தேன். முக்கியமான காரணம் மொழி. இவை யாவும் தமிழ்க் கீர்த்தனைகள் அல்லது விருத்தங்கள். அதுவும் எனக்கு அணுக்கமான பெருமாள்முருகனின் வசீகர எழுத்து. குறிப்பாய் அறிமுகமான சொற்கள். (நிகழ்வைத் தொகுத்து வழங்கிய பெண் "கொங்குநாடு பெருமாள்முருகன் உடைத்து" என்று சொன்னார். எத்தனை அழகு!)

எனக்கு கச்சேரியில் குறிப்பாய் ஒரு கீர்த்தனையும் ஒரு விருத்தமும் பிடித்தன. மேட்டாங்காடு என்ற கீர்த்தனையில் ஒரு நாட்டுப்புறப் பாடலும் கர்நாடக இசையும் இணையும் அற்புதம் நிகழ்ந்தது. இரு வகை இசைகள் இணைவதை Fusion எனக் குறிப்பார்கள். ஒரு வகை வரியும் மற்றொரு வகை இசையும் கலப்பதை அப்படிச் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. இதே போல் முன்பு பொறம்போக்கு என்று ஒரு பாடல் பாடி இருக்கிறார் டிஎம் கிருஷ்ணா. எனக்கு மிகப் பிடித்த அப்பாடலை இந்தப் பாடல் நினைவுபடுத்தியது. இன்றைய தமிழக விவசாயிகள் துயரை ஒரு கர்நாடக இசைக் கச்சேரி பிரதிபலிக்க முடியும் என்று நாம் கனவிலும் யோசித்திருப்போமா! டிஎம் கிருஷ்ணாவும் பெருமாள்முருகனும் சாதித்திருக்கிறார்கள்.

மேட்டுக்குடியின் இசை மேட்டாங்காட்டைப் பாடும் இணைவு. அந்தக் கீர்த்தனையின் சரணத்தை உதாரணம் தருகிறேன்.

வேலியெல்லாம் கருகிருச்சு - அதுமேல‌
ஓடிக் கிடந்த கொடிகளுமே சருகாச்சு
வேலிக்கொடி மேலெ தலதூக்கி ஆள‌ப் பாக்கும்
ஒடக்காங்கூடச் செத்திருச்சு
மழ வருமா மண்மணம் தருமா


அடுத்தது தாயுமில்லை தந்தையில்லை என்று தொடங்கும் விருத்தம். தனக்கு யாருமில்லை என்றாகிவிட்டது நீயும் இல்லையா என மாதொருபாகனிடம் முறையிடும் பாடல். (பெருமாள்முருகன் ஒதுங்கி இருந்த போது எழுதியது.)

தாயுமில்லை தந்தையில்லை தோள்தந்து நிற்கும்
    தமையனும் இல்லை தாங்கிட வளர்ந்த
சேயுமில்லை கண்ணீர் துடைக்கக் கரம்தரும்
    சொந்தமில்லை பலம்கொண்டு பற்றும் நட்புத்
தீயுமில்லை ஆதரவு காட்டி அணைத்திடத்
    தகுமோர் ஆளுமில்லை இந்நிலையில் எனக்கு
நீயுமில்லை என்றாற்பின் நானேது செய்வேன்
    நானெங்கு செல்வேன் மாதொரு பாகனே.


இதைப் பாடும் போது டிஎம் கிருஷ்ணாவின் குரலில், பாவத்தில் "எனக்கு யாருமில்லை" என்ற கையறு நிலையைச் சொல்லி சுயபச்சாதாபத்தில் அரற்றும் தொனி வந்து உட்கார்ந்து கொண்டது. அதை உண்மையிலேயே வியக்க வேண்டி இருக்கிறது. இசை ஒரு mood-ஐத் துல்லியமாய் உணர்த்துவதை இளையராஜாவின் சில பின்னணி இசைகளில் தான் கண்டிருக்கிறேன். அதையே ஒரு கர்நாடக இசையில் உணர்ந்து போது சில முன்முடிவுகள் உடைபட்டதில் சற்று jerk-ஆகித் தான் போனேன்.

இதழ் டீஸர் வெளியீட்டின் பொருட்டு இந்த‌ நிகழ்ச்சிக்கு தஞ்சையிலிருந்து வந்திருந்த நண்பன் இரா.இராஜராஜன் கச்சேரி மொக்கை போட்டால் இடையில் கிளம்பி விடுவேன் எனச் சொல்லித்தான் வந்திருந்தான். ஆனால் அவன் இடையில் எப்போதும் கிளம்ப எத்தனிக்க‌வில்லை என்பது தாண்டி நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு பெருங்கலைஞனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி டிஎம் கிருஷ்ணாவுடன் படமெடுத்துக் கொண்டான். பெருமாள்முருகன் கீர்த்தனை ஒன்றுக்கு (நெஞ்சமே-2) மெட்டமைத்த சங்கீதா சிவகுமாரிடம் கர்நாடக சங்கீதத்தில் தமிழ்க் கீர்த்தனைகளைப் பாடுவதன் வரலாறு குறித்து ஆர்வமாய்க் கேட்டறிந்து கொண்டான். இதைக் கச்சேரியின் வெற்றியாகவே பார்க்கிறேன்.

என் போல், என் நண்பன் போல் ஏளாரமான கர்நாடக இசை agnostic ஆட்களை உள்ளே இழுக்க இந்த கலப்பு முயற்சி உதவும் என நம்புகிறேன். கலையில் சமூகப் பொறுப்பு என்ற வகையில் இம்மாதிரி முயற்சிகளின் முக்கியத்துவம் அளப்பரியது.


டிஎம் கிருஷ்ணாவை கர்நாடக இசைப் பாடகர் என்பது தாண்டி சமூகச் செயற்பாட்டாளராகவும் பார்க்கிறேன். அவர் நடப்பு ஆட்சியின் சகிப்பின்மை பற்றிக் கண்டித்ததெல்லாம் முக்கியமான விஷயம். கர்நாடக சங்கீதத்தை பிராமண சாதிக்கானது அல்லது மேட்டுக்குடிக்கானது என்ற பிம்பத்தை உடைத்து அதை எல்லோரும் கேட்க வேண்டும், கற்க வேண்டும் என்று முயற்சிகள் செய்து வருவது தலித் கோயில் நுழைவுப் போராட்டங்களுக்கு ஒப்பான பங்களிப்பு என்றே கருதுகிறேன்.

அவர் மாதிரி இடத்தில் இருந்து கொண்டு ஆட்சியாளர்களைப் பகைத்துக் கொள்பவர்கள் மிக அரிது. கிடைக்க வேண்டிய பத்ம விருதுகளோ, அரச பதவிகளோ, பிற சலுகைகளோ தடைபடும். அவ்வகையில் தைரியமான, தெளிவான பார்வையை முன்வைக்கும் அவரது கட்டுரைகள் கொண்டாடப்பட வேண்டியவை. மகசேசே போன்ற விருதுக்கு அவர் தகுதியானவரே.

அதைப் பற்றி ஜெயமோகன் சில மாதங்கள் முன் டிஎம் கிருஷ்ணா களப்பணி ஆற்றவில்லை என்றும் அவரது முயற்சிகள் மேம்போக்கானவை என்றும் குறைத்து எழுதியிருந்தார். நான் அப்படிக் கருதவில்லை. அவர் தன் துறையில் சாதியத்தை எதிர்க்கிறார். அவர் பொதுவாய் பெரியார் போல் சமூகக் களப்பணியில் இறங்கி இதைச் செய்யவில்லை; ஒரு கலைஞனாய் தன் துறையில் இருக்கும் சாதியக் கசடுகளை மட்டும் களைய நினைக்கிறார். அது நியாயமானதும், அவசியமானதும் தான்!

சாதியத்தை எதிர்க்க வேண்டுமெனில் கலப்பு மணம் செய்து வை, தெருவில் இறங்கிப் போராடு, அது தான் உண்மையான சாதி எதிர்ப்பு என்று நாம் சொல்வது எப்படிச் சரியாகும்? எல்லோரும் ஒரே முறையிலே போராடுவது சாத்தியமில்லை, அது அவரவர் தேர்வு. இங்கு முக்கியமானவை அவரது நோக்கு மற்றும் ஓர் எல்லைக்குட்பட்ட அப்போரட்டத்தின் விளைவு.

கர்நாடக சங்கீதம் பிராமணர்களுக்கு மட்டுமே கைவரும் என்ற பொதுப்புத்தி நம்பிக்கையை உடைத்து எவரும் கற்கலாம் என்று சொல்கிறார் டிஎம் கிருஷ்ணா. அதற்கு இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும்: 1) பிராமணர் தவிர்த்த பிறர் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க வேண்டும், பின் ஆர்வமாய்க் கற்க வேண்டும். 2) நல்ல வித்வான்கள் பிராமணர் தவிர்த்த மற்றவர்கட்கு கர்நாடக இசையைப் பயிற்றுவிக்க வேண்டும். இவற்றைத் தான் அவர் செய்கிறார். இது பொதுவாய் பிராமணர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மற்றவர்களும் விமர்சிப்பது தான் ஆச்சரியம்!

தலித்கள் கர்நாடக இசையைக் கற்கச் சொல்வது மேலும் அதன் புனித பிம்பத்தை உறுதி செய்வதாகவே ஆகும் என்ற கருத்தும் வைக்கப்படுகிறது. அப்படி இல்லை. நூற்றாண்டுகளுக்கு முன் ஏட்டுக்கல்வி பிராமணர்களுக்கு மட்டுமே உரியது என நம்பப்பட்டது. பின் மற்ற சாதியினருக்கும் (கடைசியாய் தலித்களுக்கும்) வந்து சேர்ந்தது. அதைப் போலத் தான் இதுவும். மற்ற சாதிக்காரர்களுக்குப் பூணூல் போட்டு விடுவதையும் இசை சொல்லித் தருவதையும் ஒன்றாக்க முடியாது.

கபாலி கோட் போடுவதும், தலித்கள் கர்நாடக இசை கற்பதும் ஒன்று தான். அதை முன்னெடுக்கும் டிஎம் கிருஷ்ணாவின் பணி மரியாதைக்குரியதே. அப்படிப்பட்டவரின் சமூகப் பங்களிப்பின் இன்னொரு பரிமாணமே தமிழ்க் கீர்த்தனைகள்.

*

கச்சேரி பற்றிச் சொல்லி டிஎம் கிருஷ்ணாவைக் கொண்டு இதழை வெளியிடலாம் என பெருமாள்முருகன் யோசனை சொன்ன போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் குறுகிய இடைவெளியில் முழு இதழும் தயாராகவில்லை. அதனால் பரவாயில்லை, பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம், கச்சேரிக்கு வாருங்கள் என்று பெருமாள்முருகன் அழைத்தார். நான் கிடைத்த சந்தர்ப்பத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதனால் இதழுக்கான டீஸர் ஒன்றைத் தயாரித்து அந்நிகழ்வில் வெளியிடலாமா என்று கேட்டேன். அப்படித்தான் இது முடிவானது. அட்டைப்படம், பெருமாள்முருகன் நேர்காணலிலிருந்து சில பகுதிகள், மற்றவர்களின் படைப்புகளிலிருந்து சில வரிகள் ஆகிவற்றைக் கொண்ட 9 பக்க பிடிஎஃப் டீஸர் இது. எதை யார் எழுதி இருப்பார்கள் என யூகிக்க முயல்வது சுவாரஸ்ய விளையாட்டாக இருக்கும். அட்டைப்படம் என்ன என்பதையும்.



'முருகு' என்ற சொல்லின் மீது அப்படியென்ன பிரேமையோ பெருமாள்முருகனுக்கு, (மேட்டாங்காடு தவிர‌) எல்லாக் கீர்த்தனைகளின் 2ம் சரணத்திலும் அப்பதம் வந்து விடுகிறது! (தமிழ் நேர்காணலில் இச்சொல் பற்றிப் பேசி இருக்கிறார்.)

கச்சேரியில் எனக்கு இரு விஷயங்கள் உறுத்தின. ஒன்று குறிலை இசைக்கு ஏற்ப நெடிலாக உச்சரிப்பது (அயர்ச்சி தரினும் என்பது ஆயர்ச்சி தரினும் ஆனது). இன்னொன்று சந்தத்தை உத்தேசித்துச் சந்திகளை விட்டு விடுவது (பாளைகளைச் சீவி என்பது பாளைகளை சீவி ஆகி விட்டது). இது ஒருவகையில் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டோரின் இசை பாடல் வரிகளை அமுக்கி விடுவதைப் போன்றது. கச்சேரி நெடுகவும் இதற்கான உதாரணங்கள் வந்தபடியே இருந்தது சங்கடமாக இருந்தது.

கச்சேரி முடிந்து பேசிக் கொண்டிருக்கையில் கமலா ராமசாமி அவர்கள் (சுந்தர ராமசாமியின் மனைவி) கிருஷ்ணாவிடமே இதைக் கேட்டார் (முதல் விஷயத்தை மட்டும்).  அதற்கு அவரது விளக்கத்தின் சாராம்சம் இது (சொற்கள் என்னுடையவை): இது தெரிந்தே நடப்பது தான். இசைக்காகச் செய்வது. இதற்கு அனுமதி உண்டு. சில இடங்களில் குறிலைக் குறிலாகவே உச்சரித்தால் இசையோடு ஒன்றி வராமல் துருத்திக் கொண்டிருக்கும். ஆனால் நெடிலைக் குறிலை உச்சரிக்கக்கூடாது.

சென்னை அல்லாத ஓரிடத்தில் நடந்தேறிய ஒரு நிகழ்வுக்கு கமலா ராமசாமி, சுகுமாரன், ஸ்டாலின் ராஜாங்கம், பியூஷ் மனுஷ், காலச்சுவடு கண்ணன், இசை, க.மோகனரங்கன், மு.ஹரிகிருஷ்ணன், சீனிவாசன் நடராஜன், கே.என்.செந்தில், ஜெ.பாலசுப்பிரமணியம் எனப் பல இலக்கியர்களும் வந்திருந்தது பெருமாள்முருகனைக் கௌரவிப்பதாக இருந்தது.

பாரதிக்குப் பின் ஒரு தமிழ் இலக்கியவாதி கர்நாடக இசைக்குக் கீர்த்தனைகள் எழுதிப் பங்களிப்பு செய்வது என்பது நூறாண்டுக்குப் பின் இப்போது தான் நிகழ்கிறது என நினைக்கிறேன். "இது ஆரம்பம் தான், தொடர வேண்டும்" என பெருமாள்முருகனுக்கு நிகழ்வில் அன்புக் கட்டளை இட்டார் டிஎம் கிருஷ்ணா. யாம் அதை வழிமொழிகிறோம்.

பஞ்சபூதத்தில் நிலம் பற்றிய பெருமாள்முருகன் கீர்த்தனையின் பல்லவியோடு முடித்தால் சரியாய் இருக்கும் -

நெஞ்சிலேற்றிப் போற்றுகின்றேன்
நெற்றிபட வணங்குகின்றேன்

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2017 11:30

C. Saravanakarthikeyan's Blog

C. Saravanakarthikeyan
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow C. Saravanakarthikeyan's blog with rss.