C. Saravanakarthikeyan's Blog, page 11

June 16, 2018

ஓர் அறிவுஜீவியின் குழந்தைத்தனங்கள்


சில அறிவுஜீவிகள் கூட ஏன் காவி நிறம் கொள்கிறார்கள்? என தம்பி ஒருவர் கேட்டார்.

அடிப்படையான விஷயம் வாசிப்பு மட்டுமே ஒருவரைத் தலைகீழாக மாற்றி விடாது. என்ன தான் நாம் வாசிப்பு, சூழல் என நகர்ந்து வந்தாலும் நம் வளர்ப்பு, சூழல் மற்றும் சுற்றத்தின் தாக்கம், சிறுவயது நம்பிக்கைகள், திரும்பத் திரும்ப காட்சி ரூபத்திலோ பேச்சாகவோ முன்வைக்கப்பட்ட கருத்தாக்கங்கள் எனச் சில விஷயங்கள் நம் ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. நாம் பிறவி நடுநிலையாளர்கள் அல்ல. அதற்கு நாம் அடிமைப்பெண் எம்ஜிஆர் மாதிரி பிறந்ததிலிருந்தே சிறையில் இருந்திருந்தால் தான் சாத்தியம். நாம் எல்லோருமே ஏதோ ஒரு சார்போடு தான் இருப்போம்.

இதை ஒரு மாதிரி மரபார்ந்த முன்முடிவு எனலாம். அது சார்ந்த விஷயங்களில் மட்டும் நம்மையறியாமலேயே நம்மை தடுமாறச் செய்யும். அதனால் சிந்தனையைச் சிதறடிக்கும். அதனால் ஒருபக்கச் சார்பெடுக்க வைக்கும். அது தான் இந்த அறிவுஜீவிகளின் காவி நிறச் சார்பில் நிகழ்கிறதென நினைக்கிறேன். நான் மதிக்கும் சில சிந்தனையாளர்கள் எதிர்தரப்பில் இருப்பதை இப்படித் தான் புரிந்து கொள்கிறேன்.

நம் வாசிப்பும் அனுபவங்களும் தர்க்க புத்தியும் தொடந்து அந்த நிலைப்பாட்டோடு சமர் செய்தபடியே இருக்கும். எது வலுவானவோ அது வெல்லும். பொதுவாக அப்படியான ஆழ்மன நிலைப்பாடுகளிலிருந்து நடுநிலைக்கு வருவது மிகச் சிரமம். ஒரு துருவத்திலிருந்து மையம் நோக்கி கொஞ்சம் நகரலாம். ஆனால் மையத்தை அடைவதும், நிஜமாகவே சார்பற்று இயங்கவும் கடும் நேர்மையும், சமரசமற்ற சுயபரிசீலனையும், எதையும் உணர்ச்சிவயமற்று சமநிலையில் அணுகும் நிதானமும் வேண்டும். அது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. நம் மனமுமே நம் நிலைப்பாட்டுக்குச் சாதகமான விஷயங்களையே தேடி வாசிக்கவும், கற்கவும் வைக்கும். அது ஒரு சுயஏமாற்று. நம் நிலைப்பாடு சரியானதே என நம் முதுகை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளை மட்டும் பார்த்துக் கொள்ளும் சிறுபிள்ளைத்தனமே அது. அதுவும் மையம் நோக்கிய‌ நம் நகர்ச்சியைப் பின்னடைய வைக்கும்.

வயதாக வயதாக அந்த நகர்ச்சி மட்டுப்பட்டு நின்று விடும். அதற்கு மேல் படிப்பவை, அனுபவிப்பவை, சிந்திப்பவை எல்லாம் வெறும் தகவல்களாக மட்டும் மூளையில் படியும். தன்னைச் சுயபரிசீலனை செய்ய, அதன் வழி புதுப்பித்துக் கொள்ளல் நடக்காது. ஐம்பது வயதுக்கு மேல் ஒருவர் தன் ஆதார நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டால் ஒன்று அதுவரை அவர் போலியாக இருந்திருக்கிறார் என்று அர்த்தம் அல்லது அந்த மாற்றம் போலியானது என்று பொருள். வயதான பின் வரும் ஆத்திகராகும் நாத்திகர்களை எல்லாம் அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது அந்தப் பக்கம் மட்டுமல்ல. இந்தப் பக்கமும் உண்டு. அதாவது நடுநிலை நோக்கி நகர முயன்று தோற்பது. எல்லோரும் - நான் உட்பட - லேசான சாய்வுகளாவது கொண்ட மனிதர்களே. அதிலிருந்து மேலெழும்பி வருபவனையே காலம் அசல் சிந்தனையாளனாக அடையாளங்காணும்.

ஆனால் அதற்காக இந்த அறிவுஜீவிகளை முழுக்க நாம் நிராகரிக்க வேண்டியதில்லை. உதாரணமாய் அரசியலில் தான் அவர்களின் இந்த உளறல் நிகழ்கிறதெனில் அதில் மட்டும் அவர்களைப் பொருட்படுத்தாமல் நகரலாம். மற்ற விஷயங்களில் அவர்களை கிரகித்துக் கொள்ளலாம். அந்த உளறல்கள் ஓர் அறிவுஜீவியின் குழந்தைத்தனங்கள்.

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2018 04:52

June 10, 2018

மு.க.நூல் - 3


நெஞ்சுக்கு நீதி – 1

5. என்னுடைய அரசியல் அரிச்சுவடி

திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் முதலில் இரண்டாம் படிவப் பரிட்சை எழுதினேன். தேறவில்லை. பிறகு முதல் படிவம். அதிலும் நிராகரித்தார்கள். கிராமத்து ஆசிரியரின் பயிற்சி அப்படி. பள்ளியில் சேராமல் ஊர் போனால் சிரிப்பார்கள். தலைமையாசிரியர் அறைக்குப் போனேன். நடந்தது சொல்லிக்கெஞ்சினேன். அவர் மறுக்க, எதிரே இருந்த தெப்பக்குளத்தில் விழுந்து சாகப் போவதாய்ச் சொன்னேன். அதிர்ந்தார். யோசித்தார். ஏற்கனவே பலரை தெரிந்தும் தெரியாமலும் பலி கொண்ட குளம். என்னை ஐந்தாம் வகுப்பில் எடுத்துக்கொண்டார். கூத்தாடினேன். முதன்மை மதிப்பெண்ணில்தேறினேன்.

ஐந்தாம் வகுப்பில் பனகல் அரசர் பற்றிய சிறுதுணைப்பாட நூல் உண்டு. அதை அப்படியே மனனம் செய்து சொல்வேன். அதுதான் எனக்கு அரசியல் அரிச்சுவடி.

திராவிடர்கள் அரசியல், சமூக இடம்பெற பி தியாகராயர், டிஎம் நாயர், பனகல் அரசர், நடேச முதலியார் 1916ல் தென்னிந்திய நலஉரிமைச்சங்கம் என்ற கட்சி தொடங்கினர். ஜஸ்டில் என்ற ஆங்கில நாளேடு கட்சி சார்பில் வந்து, பின் ஜஸ்டிஸ் கட்சி என்றே பெயரானது. 1917ல் செம்ஸ்ஃபோர்டு, மாண்டேகு பிரபுக்கள் வந்த போது நீதிக்கட்சி திராவிடர் நிலையை - குறிப்பாய் ஒடுக்கப்பட்டோர் - விளக்கி அறிக்கை அளித்தது. பின் என் சிவராஜ், எம்சி ராஜா, இரட்டைமலை சீனிவாசன் போன்ற தாழ்த்தப்பட்டோர் தலைவர்கள் நீதிக்கட்சியுடன் இணைந்து பணிபுரியவந்தனர். 1919ல் நாயர் மறைந்தார்.

1920ல் வந்த மாண்டேகு - செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தப்படி நடந்த இந்தியாவின் முதல் தேர்தலில் நீதிக்கட்சி பங்கேற்றது. அன்னி பெசண்ட்டின் ஹோம்ரூல் இயக்கம் அதை எதிர்த்துப் போட்டியிட்டது. காந்தி சொன்னதால் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்கள் பெற, தியாகராயரை மந்திரி சபை அமைக்குமாறு கவர்னர் வெலிங்டன் பிரபு கேட்டார். ஆனால் அவர் ஏ சுப்பராயலு ரெட்டியாரை முதல்வராக்கினார். பனகல் அரசர் இரண்டாம் மந்திரி. 1921ல் சட்டமன்றம் தொடங்கியது. அவ்வாண்டே சுப்பராயலு மறைய, பனகர்அரசர் முதல்வர் ஆனார். அந்த ஆட்சிக்காலச் சாதனைகளைப் பேசியதே அத்துணைப்பாட நூல்.

அப்போது சென்னையில் நடந்த மில் வேலைநிறுத்தத்தில் 6 தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். தொழிற்சங்கத் தலைவர்கள் திருவிக, பிபி வாடியா, சக்கரைச் செட்டியார், நடேச நாயக்கர், இஎல் அய்யர் ஆகியோரை நாடுகடத்த கவர்னர் உத்தரவிட்டார். தியாகராயர் கொதித்தெழுந்து அதைத் திரும்பப்பெறாவிடில் மந்திரி சபை பதவி விலகும் என அறிவித்தார். அதனால் தோன்றிய கொந்தளிப்பால் ஆணை ரத்தானது.

1923ல் இரண்டாம் பொதுத்தேர்தலிலும் நீதிக்கட்சி வென்று, பனகல் அரசர் முதல்வர் ஆனார். 1925ல் தியாகராயர் மறைந்தார். 1926 மூன்றாம் பொதுத்தேர்தலில் சுயாட்சிக் கட்சி எனும் பெயரில் காங்கிரஸ் நீதிக்கட்சியை எதிர்த்து நின்று வென்றது. ஆனால் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ், பனகல் அரசர் ஆட்சியமைக்க முன்வரவில்லை. சுப்பராயன் முதல்வரானார். மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும் என ஆங்கில அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை பனகல் அரசர் கொண்டு வந்தார். அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் அவருடையதே. 1928ல் பனகல் அரசர் மறைந்தார்.

காங்கிரஸின் தூணாய் இருந்த பெரியார் 1926ல் சுயமரியாதை இயக்கம் கண்டார். குடியரசு இதழ் துவங்கியது. ப.ஜீவானந்தம், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, குத்தூசி குருசாமி, சௌந்திரபாண்டியன், பொன்னம்பலனார், சிங்காரவேலர், கைவல்யசாமி, எஸ் ராமநாதன் உள்ளிட்டோர் சுயமரியாதைக் கருத்துக்களைப் பரப்பினர். 1930ல் சுயமரியாதை இளைஞர் கழகம் தொடங்கப்பட, கல்லூரி மாணவர் அண்ணா அதில் இணைந்து வாரந்தோறும் கருத்துரைகள் வழங்கினார். 1930 பொதுத்தேர்தலில் நீதிக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று திவான் பகதூர் முனுசாமி நாயுடு முதல்வரானார். இச்சமயம் பெரியார் தமிழர்களின் அரசியல் முன்னேற்றத்திற்காக ஒரு திட்டமளிக்க, அதை நீதிக்கட்சி ஒப்புக்கொண்டதும், அதோடு இணைந்து பணிபுரியத் தலைப்பட்டார்.

#NenjukkuNeethi #P1C5

*

6. நீதிக் கட்சியில் பல மாற்றங்கள்

1932ல் முனுசாமி நாயுடு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் பொப்பிலி அரசர் நீதிக்கட்சித் தலைவராகவும் முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முத்தையா செட்டியார், ஏடி பன்னீர்செல்வம் அமைச்சர்களாகினர். சைமன் கமிஷன் சொன்ன சீர்திருத்தங்களுடன் 1936ல் நடந்த தேர்தலில் நீதிக்கட்சி வீழ்ந்தது. அப்போது ஐந்தாம் வகுப்பில் பனகல் அரசரைத் தலைகீழாக ஒப்பித்துக்கொண்டிருந்தேன். 1937ல் காங்கிரஸ் முதன்முதலாக சென்னையில் ஆட்சியமைத்தது. ராஜாஜி முதல்வரானார்.

ராஜாஜி பள்ளிகளில் இந்தியைக்கட்டாயமாக்கினார். மாகாணம் முழுக்க கண்டனங்கள் கிளர்ச்சிகள் எழுந்தன. ராஜாஜி மேலும் பிடிவாதமானார். காங்கிரஸிலே கூட எதிர்ப்பு இருந்தது. சோமசுந்தர பாரதியார் ஓர் உதாரணம். ராஜாஜி சட்டமன்றத்தில் “இந்தியை இருவர் மட்டுமே எதிர்க்கிறார்கள். ஒருவர் ராமசாமி நாயக்கர், மற்றொருவர் பசுமலை பாரதியார்” என்றார். பதிலுக்கு பன்னீர்செல்வம் “அதை ஆதரிப்பவர் நீங்கள் ஒருவரே. ஆக, பெரும்பான்மை எதிர்ப்பு தான்.” என்றார். 1938ல் முக்கியச் சம்பவங்கள் நடந்தன.

இந்தி எதிர்ப்புப் போருக்கு பெரியார் தலைமை தாங்கினார். அண்ணா, சோமசுந்தர பாரதி, கிஆபெ விசுவநாதம், மூவலூர் இராமாமிர்தம் முன்வரிசையில் நின்றனர். இந்தியைக் கட்டாயமாக்கிய பள்ளி வாசல்களில் மறியல் செய்து ஆயிரம் பேருக்கு மேல் சிறையேகினர். தாளமுத்து, நடராசன் என்ற வீரர்கள் சிறையில் இறந்தனர்.

சைதாப்பேட்டை இந்தி எதிர்ப்பு மாநாட்டில் மறைமலையடிகள் தலைமை வகித்தார். காஞ்சிபுரத்தில் கான்பகதூர் கலிபுல்லா இந்தி எதிர்ப்புக்கான கொடியை உயர்த்தினார். பெரியாரும், சோமசுந்தர பாரதியும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் "அரசுப்பணம் இந்திக்காகச் செலவழியக்கூடாது" என்ற தீர்மானத்தை அண்ணா கொண்டு வந்தார். “பெரியாருக்கு இந்தி எதிர்ப்பில் அக்கறையில்லை; காங்கிரஸை ஒழிப்பதற்காகவே இதில் இறங்கியுள்ளார்” என்றார்கள். இந்தி எதிர்ப்புக்குத் தலைமை தாங்கிய போது தமிழர் தலைவராக ஏற்கப்பட்டார். இந்தி எதிர்ப்புப் பிரச்சாரத்தில் அண்ணாத்துரை என்ற பெயர் தமிழகமெங்கும் ஒலித்தது. பாமரர், படித்தவர் அனைவரும் வியந்தனர்.

சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட, நேரு ஓய்வெடுக்க ஐரோப்பா சென்றார். அஹிம்சையில் போஸுக்கும் காந்திக்கும் கடும் முரண்பாடுகள் எழுந்தன. அதே ஆண்டில் பள்ளியில் நான் இரண்டாம் படிவத்துக்கு வந்து விட்டேன்.

#NenjukkuNeethi #P1C6

*

7. தமிழ் காக்கும் போர்முனை

இந்தியை எதிர்க்க அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி திருச்சியிலிருந்து சென்னை நோக்கி தமிழர் படையொன்றை அணுவகுத்தார். மூவலூர் ராமாமிர்தம் படைக்கான உணவுகளை வழிநெடுக கவனித்துக் கொண்டார். நகரதூதன் வார இதழ் ஆசிரியர் மணவை திருமலைசாமி அப்படையின் ஒரு தளபதி. வழியெங்கும் இந்தி எதிர்ப்பாளர்கள் வரவேற்பும், காங்கிரஸ்காரர்களின் கல்வீச்சும், தடியடியும் கிட்டியது.

ஒரு கிராமத்தில் காங்கிரஸார் படைக்கு வரவேற்பாய்ச் செருப்புத் தோரணம் கட்டினர். அழகிரிசாமி அதன் முன் நின்று உரையாற்றத் தொடங்கினார். ஆயிரக்கணக்கானோர் கூடினர். இரண்டு மணி நேரம் தாண்டிய கோடை இடி! “ஆகாயத்தில் பரப்பியதைத் தரையில் வைத்திருந்தாலாவது ஆளுக்கொரு ஜோடி மாட்டிக் கொண்டிருப்போமே!” என்றார். மக்கள் தோரணத்தை வெட்டியெறிய முயல, அழகிரி தடுத்து விட்டார். பின் காங்கிரஸாரே அதை அவிழ்த்து, படைக்குத் தேநீர் விருந்தளித்து அனுப்பினர். இப்படி இருநூறு மைல் தொலைவெங்கும் இந்தி எதிர்ப்புணர்ச்சியை விதைத்துச் சென்றனர்.

பள்ளியில் மாணவர்களை இணைத்துச் சங்கங்கள் அமைத்து வாராந்திரக் கூட்டங்கள் நடந்துவேன். சிறப்புச்சொற்பொழிவு உண்டு. 1938ல் தினம் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு கையில் தமிழ்க்கொடியுடன் திருவாரூர் வீதிகளில் ஊர்வலம் போவேன். உடன் ராஜாஜி கட்டாய இந்திக் கட்டாரியால் தமிழ்த் தாயைக் குத்தும் படங்கொண்ட வண்டி. நானெழுதிய “இந்திப் பேயை விரட்டுவோம்” பாடலை மாணவர்கள் பாடுவர்.

ஒரு நான் எங்கள் இந்தி ஆசிரியர் இதைப்பார்த்து விட்டார். அவரிடமே இந்தி எதிர்ப்பு முழக்கத் துண்டறிக்கையைக் கொடுத்தேன். எனக்கு எந்தப் பயமும் இருக்கவில்லை. ரத்தத்தில் தமிழுணர்வு ஊறிக் கிடக்க, அதைப் புரட்சிச்செயல் என்றே எண்ணினேன். அவர் ஒன்றும் பேசாமல் போய் விட்டார். மறுநாள் வகுப்பில் கரும்பலகையில் சில இந்திச் சொற்களை எழுதி என்னை வாசிக்கச் சொன்னார். எனக்குத் தெரியவில்லை. என் காதைத்திருகிக் கன்னத்தில் அறைந்தார். தலைசுற்றிப் பலகையில் அமர்ந்தேன்.

நான் மாணவர்களைத் திரட்டி கிளர்ச்சி செய்வேன் என நினைத்தார்கள். ஆனால் நான் அப்படிச் சிந்திக்கவில்லை. நான் துண்டறிக்கை கொடுத்ததும் சரி, அவர் அடித்ததும் சரி என என் நெஞ்சு எனக்கு நீதி வழங்கியது. 36 ஆண்டு கழித்து அவர் மயிலையில் நடந்த ஓமியோபதி மாநாட்டுக்கு என்னை அழைத்துச் செல்ல வந்து காத்திருந்தார்.

இச்சமயம் வடக்கில் மதக்கலவரங்கள் மூண்டன. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை முஸ்லிம் லீக் சுட்டியது. தமிழகத்தில் கட்டாய இந்தியை அது எதிர்த்தது. இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் தமிழ்க்கொடியுடன் பச்சைப்பிறைக் கொடியும் பறந்தது.

#NenjukkuNeethi #P1C7

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 10, 2018 20:32

June 8, 2018

கருப்பின் அழகு


காலா சுமார் எனப் பார்த்த முதல் நாளே சொல்லி இருந்தேன். அது எவற்றை ஒட்டி எழுந்தது என்பதைப் பார்ப்போம்.


1) காலாவின் பாத்திர வார்ப்பு (பெரும்பாலும்) இயல்பான‌தாக இருந்தது. ரஜினி படம் என்பதை வைத்துப் பார்க்கும் போது இது அரிதினும் அரிய நிகழ்வு. (மனைவியை மீண்டும் சந்திக்கும் இடம் தவிர கபாலி இயல்பாய்க் கட்டமைக்கப்பட்ட‌ கதாபாத்திரம் அல்ல. ஆனால் அதை நம் மக்கள் யதார்த்தமெனக் கொண்டாடினார்கள். அவ்வளவு பஞ்சம்.) நீரில் ஒன்று, நெருப்பில் ஒன்று என்று வரும் அந்த இரு சண்டைக் காட்சிகளையும் காலாவுக்கு இருக்கும் காரணமற்ற பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கையும் கத்தரித்து விட்டால் எந்த ஹீரோயிசமும் இல்லாத‌ சாதாரணன் காலா. இன்னும் சரியாய்ச் சொன்னால் சாதாரணக் குடும்பஸ்தன். அவனது அறிமுகக் காட்சியே சிறுவர்களுடனான ஸ்ட்ரீட் க்ரிக்கெட்டில் க்ளீன் போல்ட் ஆவது தான். (சூப்பர் ஸ்டார் அந்தஸ்து, அரசியல் பிரவேச முடிவு என்றெல்லாம் கமிட்மெண்ட்கள் உள்ள சூழலில் இப்படிக் காட்சி வைக்கவும் ஒப்புக் கொண்டு நடிக்கவும் அசாத்தியத் திமிர் வேண்டும்.) அவன‌து அன்பு, காதல், நட்பு, பிரியம், பாசம் எல்லாமே மிகையற்ற அழகு. அப்படியான பாத்திரத்தை ரஜினிக்கு உருவாக்கிய ரஞ்சித்தை உச்சி முகரலாம்.

2) அடுத்தது ரஜினி அந்தப் பாத்திரத்தை எப்படிச் செய்திருக்கிறார் என்ற விஷயம். காதல் மற்றும் குடும்பக் காட்சிகளில் ரஜினியின் நடிப்பு அபாரம். நெடுங்காலம் கழித்து ரஜினியின் நடிப்பு நிஜமாகவே இதில் பிடித்திருந்தது. (கபாலியில் அவர் நடிப்பு அதீதமாக அல்லது போலியானதாக இருந்ததாகப் பட்டது.) காலா குடும்பத்திடம் காட்டும் கண்டிப்பான பிரியம், மனைவியிடம் விளையாட்டாய் அஞ்சுவது, பழைய‌ காதலியுடனான தடுமாற்றங்கள் எல்லாவற்றிலுமே இயல்பான ஒரு பின்மத்திம வயது ஆளை (அதாவது முன்கிழவர்) ரத்தமும் சதையுமாய் நம் கண் முன் கொணர்ந்து விடுகிறார் ரஜினி. உதாரணமாய் மின்துண்டிப்பின் போது தன் வீட்டினுள் இருக்கும் குழந்தைகளைப் பயமுறுத்த "பே" என்றபடி நுழைகையில் உள்ளே அமர்ந்திருக்கும் ஹூமாவைப் பார்த்து ரஜினி அதிரும் கணம் ச்சோ ச்வீட்! குடித்து விட்டு வீட்டிலும், காவல் நிலையத்திலும் பேசும் காட்சிகளிலும் அற்புத நடிப்பு. கபாலி நடிப்புக்கே உச்சமடைந்த‌ ரசிகர்கள் இதற்கு என்னாவார்களோ!

3) காலாவின் காதல்கள் - ஹூமா குரேஷியுடனான உறவும் சரி, ஈஸ்வரி ராவுடனான உறவும் சரி - மிக அழகு. காவல் நிலையத்திலிருந்து வெளிவருகையில் ஜரீனா அழுதாள் என்று காலாவிடம் செல்வி பிலாக்கணம் வைக்கும் போது கண்டு கொள்ளாமல் விட்டுப் பின் நிஜமாகவே அழுதாளா என காலா கேட்பது போன்ற காட்சிகளை உதாரணமாய்ச் சொல்லலாம்.

4) காலாவின் மிகையற்ற ஹீரோயிசங்களை மிக ரசித்தேன். ஒன்று இடைவேளைக்கு முந்தைய தாராவி வந்து திரும்பும் நானா படேகரின் நிக்கால் நிக்கால் காட்சி. அடுத்தது காவல்நிலையத்தில் குடித்து விட்டு சாயாஜி ஷிண்டேவுடன் ரஜினி உரையாடல். அப்புறம் நானா படேகரை அவரது வீட்டில் வைத்து ரஜினி சந்தித்துப் பேசும் காட்சி. வழக்கமான, நீர்த்த‌, மேலோட்டமான, ஜிகினாத்தனமான‌, அர்த்தமற்ற‌ ரஜினி பட பஞ்ச் டயலாக்களாக, பில்டப் காட்சிகளாக‌ச் செய்யாமல் தீவிரமான சினிமாப் பார்வையாளர்களும் ரசிக்கும்படி இக்காட்சிகள் இருந்தன. ஒருமாதிரி underplayed super-stardom.

5) படம் நெடுகிலும் சாதி மதம் சார்ந்த‌ இந்துத்துவ / பாஜக அரசியலை, அதன் சகிப்பின்மையை, அதனால் விளையும் சமூக அமைதியின்மையை, மக்கள் மீதான அதன் அக்கறையின்மையை தொங்க விட்டுத் தோலை உரித்திருக்கிறார் ரஞ்சித். "நீ சொல்றதை எதிர்த்தா கொலை செய்வேன்னா அது ஃபாசிஸம்" என்று நேரடியாகவே தாக்கும் வசனம் இருக்கிறது. கடைசியில் கருப்பு, சிவப்பு, நீலம்  மூன்றையும் உள்ளடக்கிய ஓர் அரசியலாலேயே காவியை வீழ்த்த முடியும் என்று சூசகமாகச் சொல்லியிருக்கிறார். அவ்வகையில் இப்படம் வழக்கமான ரஞ்சித் படங்களின் அரசியலிலிருந்து வேறானது. இதில் பிரதானம் தலித் அரசியல் அல்ல; இந்துத்துவ மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு அரசியல். மையக் கதை தவிர்த்து ரஜினி தன் குடும்பத்தினருடன் உறவாடும் காட்சிகளில் தான் தலித் அரசியல் பேசப்பட்டிருக்கிறது. மகன், மருமகள் வீட்டை விட்டுப் போவதாகச் சொல்லும் காட்சியில் ரஜினி பேசும் வசனங்கள் உதாரணம். "நான் கால் மேல் கால் போட்டா உனக்குக் கோபம் வருதுன்னா" என்பது போன்ற கபாலி பேசிய அசட்டு வன்முறை தலித்தியத்தை விட காலா பேசியிருக்கும் ஆக்கப்பூர்வ தலித்தியம் மேலான‌து. (அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களிலும் இதைக் கொஞ்சம் செய்திருக்கிறார்.)

5அ) மும்பை முழுக்க சேரி வாழ் உழைப்பாளிகள் வேலை நிறுத்தத்தில் இறங்குவது குஜராத்தின் ஊனா எழுச்சியைச் சுட்டுகிறது. போராட்டத்தின் நிகழ்வுகள் மெரீனா ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

6) காலா கொண்டிருப்பது பலவீனமான திரைக்கதை. நாம் ஒரு சிறுகதை எழுதும் போதே அத்தனை நுட்பமாய் எல்லா விஷயங்களையும் கவனித்துத் திரும்பத் திரும்ப எழுதிச் சரி செய்கிறோம். தேசத்தின் உச்ச நட்சத்திரத்தினை இயக்கும் வாய்ப்பு, அதுவும் முந்தைய வாய்ப்பில் செய்த பிழைகளைச் சீர் செய்யக் கிடைத்த இரண்டாம் வாய்ப்பு எனும் போது ஒருவர் எத்தனை மென்க்கெட்டுத் திரைக்கதை எழுதியிருக்க வேண்டும்! துரதிர்ஷ்டவசமாய் அந்த உழைப்பு வெளிப்படவே இல்லை. மேலே சொல்லியிருக்கும் விஷயங்களும் ரசிக்கத்தக்கவை என்றாலும் அவை தனித்தனிக் காட்சிகளாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன. காலா ஒரு படமாக ஒட்டுமொத்த உணர்வெழுச்சியைத் தரத் தவறுகிறது. படத்தின் பிரதான‌ச் சறுக்கல் அதுவே. அது போக கணிசமான‌ தர்க்கப் பிழைகள் அல்லது கேள்விகளற்ற பதில்கள் ஆங்காங்கே கிட‌ந்து உறுத்துகின்றன‌.

7) நானா படேகர் படத்தில் ஹரிதேவ் அப்யங்கர் என்ற வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். சித்பவன் பிராமணர். காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்ஸேவும், நாராயண் ஆப்தேவும் இப்பிரிவினரே. அதையும் இந்துத்துவக் குறியீடாகவே வைத்திருக்கிறார் எனப் படுகிறது. மாறாக எதிர்தரப்பில் சாருமதி கெய்க்வாட் போராடுகிறார், போலீசிடம் அடிபடுகிறார், சிவாஜ்ராவ் கெய்க்வாட் என்ற போலீஸ்காரர் "ஜெய்பீம்" என்று போராடும் மக்களிடையே உரக்க, உணர்ச்சிகரமாகப் பேசுகிறார். (தலதளபதி சலூன் மாதிரி இந்துத்துவ அம்பேத்கர் என்ற பொய்யைக் கட்டமைப்போர் கவனத்திற்கு.)

8) ரஜினி ரசிகன் அந்த பிம்ப‌ச் சிறையிலிருந்து வெளிவந்து காலா படத்தை ரசிக்க‌ முடியாமை ஒரு பெரும் பின்னடைவு. ரஜினி சம்பத்தைத் தட்டிக் கேட்க வரும் முதல் காட்சியிலும், க்யாரே செட்டிங்கா காட்சியின் போதும் ஒரு பரபரப்பான ஆக்ஷன் ப்ளாக்கை ரசிக மனம் இயல்பாகவே எதிர்பார்த்து ஏமாறுகிறது. ஒன்று முழு யதார்த்தப்படமாக இருந்திருக்க வேண்டும், அல்லது முழு ஹீரோயிசம். ரஞ்சித் இரண்டுங்கெட்டாய்ச் சிக்கிக் கொண்டு விழிக்கிறார். படம் இரண்டுக்கும் மத்தியில் அடையாளமிழந்து தடுமாறுகிறது. உருப்படியான படைப்பாளி ரஜினியைக் கையாள்வதன் சிக்கல் அது. இது ரஜினி விஷயத்தில்  கடந்த முப்பதாண்டுகளாக நடக்கிறது. பாலு மகேந்திரா, பாரதிராஜா, ஷங்கர் என எல்லோருக்கும் அந்தச் சிக்கல் இருந்தது. மகேந்திரனும் மணிரத்னமும் தான் அதைச் சரியாக எதிர்கொண்டார்கள் எனச் சொல்ல முடியும்.

9) ஈஸ்வரி ராவ் நடிப்பில் பின்னுகிறார். சிலர் அதை மிகைநடிப்பு எனச் சொல்லக் கேட்கிறேன். அப்படியா என்ன! அப்படிப் படபடவெனப் பொரியும் பெண்களைக் கண்டதில்லையா! கடைசியாய் அந்த ஐ லவ் யூவிற்குக் கிறங்கும் காட்சியை ரஞ்சித் எப்படி கன்சீவ் செய்திருப்பார் என வியக்கிறேன். ஹூமா குரேஷியும் சொல்லிக் கொள்ளும் படி நடித்திருக்கிறார்.

10) சமுத்திரக்கனியின் பாத்திரம் சுவாரஸ்யம். அவர் பேசும் வசனம் ஒவ்வொன்றுக்குமே திரையரங்கில் கைதட்டலோ, சிரிப்போ எழுகிறது. நடிப்பிலும் மின்னுகிறார். அவர் வாழ்க்கையில் நிச்சயம் இது ஒரு முக்கியமான படம் தான்.

11) எல்லோரும் சிலாகித்து விட்ட, கலவரத்தில் போலீஸால் புயல் பேண்ட் அவிழ்க்கப்படும் காட்சி வலுவான ஒன்று தான். பெண்கள் உடலை வைத்து அவமதிக்க‌ப்படுதலைத் தடுக்க ஒரே வழி அதை அவமதிப்பு என்று பெண்களும் அடுத்து சமூகமும் புரிந்து கொள்வது தான். சாருமதியாக‌ அஞ்சலி பாட்டீல் துருதுருவெனப் படம் முழுவதும் ஈர்க்கிறார்.

12) நானா படேகர் மோகன்லாலுக்கு இணையான நடிகர் என்பதை இந்தப் படத்தில் உணர முடிகிறது. ஒரு நடிகனின் முகத்தில் உணர்ச்சிகளைக் கண்டு ரசித்தெல்லாம் எத்தனை நாளாகிறது! இதற்கு முன் அவர் நடிப்பை பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் பார்த்திருக்கிறேன். ஆங்காங்கே சில இந்திப் படக் காட்சிகள். அவ்வகையில் அவரை பிரகாஷ்ராஜ் மாதிரியான ஒரு நடிகர் என நினைத்திருந்தேன். ஆனால் அவர் அதற்கும் மேல் என நிரூபிக்கிறார் காலாவில். ரஜினியைத் தாண்டி நிற்கிறார் என்றே சொல்வேன். (இத்தனை தயங்கி இதைச் சொல்லக் காரணம் ரஜினியும் இதில் நல்ல நடிப்பு!)

13) சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் நாடித்துடிப்பு. பாடல்கள் முழுதாக அல்லாமல் தேவைக்கேற்ற அளவு தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரஹ்மான், யுவனுக்குப் பிறகு கதைக்கான இசையமைப்பாளராக உருவாகி வருகிறார். இசைப் பொருத்தப்பாட்டில் நிலமே எங்கள் உரிமை பாடல் எனக்கு மிகப் படித்தது. கண்ணம்மாவும். நானா படேகருக்ருக்கான‌ பின்னணி இசை மிரட்டல். மெல்லிய மின்சாரம் மாதிரி படம் முழுக்க இசை வியாபித்திருக்கிறது.

14) ஆதவன் தீட்சண்யா போன்றவர்களை வசனப்பணியில் ரஞ்சித் பயன்படுத்தி இருப்பது நல்லது. கபாலி போல் வெற்று ஜம்பமாக அல்லாமல் கோட்பாடுகளைப் பேச முடியும். அது ஓரளவு நடந்தேறி இருக்கிறது. (அது சரி, மகிழ்நன் யார்?)

15) இராவண காவியம் நூலை ரஜினியின் மேசையில் வைத்திருப்பது, நானா படேகர் பேத்தியுடன் அவ்வப்போது ராம, ராவண இருமையைப் பேசுவது, கடைசியில் ராம காதையை ஒலிக்க விட்டு ராவண தியாகத்தை (வதம் என்று சொல்லுதல் இங்கு பொருத்தமில்லை) காட்சிப்படுத்தியிருப்பது எல்லாம் நன்று தான். கடைசியில் மீட்பர்களை நம்பியல்ல எந்தப் போராட்டமும், ஒவ்வொருவருமே காலா தான் என்று சொல்லி இருப்பது தான் படம் சொல்ல‌ வரும் முக்கியச் செய்தி.

16) ரஜினி தன்னைத் தானே எதிர்த்து இதில் அரசியல் பேசியிருக்கிறார் என்பது தான் ஆச்சரியமான உண்மை. காவல் நிலையத்தில் ரஜினி "யார் நீ?" என்று சாயஜி ஷிண்டேவிடம் கேட்பது கூடத் தூத்துக்குடி தம்பியை நினைவூட்டியது. இன்னொரு விஷயம் ரஜினி எடுத்திருக்கும் ஆன்மீக அரசியலையும் படம் அவரை வைத்தே கேள்விக்குள்ளாக்குகிறது. ஒரு போராட்டத்தைப் போலீஸ் எப்படிக் கலவரமாகத் திசை திருப்ப முடியும் என்பது படத்திலேயே காட்டப்படுகிறது. படத்துக்குள் போராடும் தரப்பில் ரஜினி. ஆனால் படத்துக்கு வெளியே போலீஸுக்கு வக்காலத்து வாங்கி, போராடினால் நாடு சுடுகாடாகும் எனச் சொல்லும் ரஜினி. நல்லவேளை, ரஜினி தூத்துக்குடிபோய் வந்தார். இல்லை என்றால் காலா தான் ரஜினியின் அரசியல் என உணர்ச்சிவசப்பட்டு மானாவாரியாய் நம்பிச் சில்லறையைச் சிதற விட்டிருப்போம். தான் வேறு, படங்களில் வரும் பிம்பம் வேறு எனத் தெளிவுபடுத்தி இருக்கிறார் ரஜினி. (இதை குசேலன் படத்திலேயே ஒரு வசனமாக வைத்திருப்பார் பி.வாசு.) எம்ஜிஆரும் அப்படித்தான் என்றாலும் இந்த விஷயம் பொதுமக்களிடம் கசியுமளவு வைத்துக் கொள்ளவில்லை என்பதால் தான் ஜெயித்தார். ரஜினிக்கு அந்தக்கூறு கிடையாது என்பதால் தமிழகம் பிழைத்தது.

17) நானா படேகர் மோடியின் உருவகம் தான். இந்து முஸ்லிம் கலவரத்தைத் தூண்டி விட்டு அரசியலில் வளர்வது. ப்யூர் மும்பை - க்ளீன் இந்தியா. மும்பை முழுக்கத் தேர்தலில் வென்று தாராவியில் மட்டும் காவிக் கட்சி தோற்பது என்பது இந்தியா முழுக்க பாஜக வென்று தமிழ்நாட்டில் மட்டும் தோற்றதற்கு இணை. அவ்வகையில் காலா என்ற பாத்திரமே திராவிட அரசியலின் குறியீடு தான் (ஒரு காட்சியில் தாராவியில் பெரியாரின் சிலை காட்டப்படுகிறது). ஆனால் எனக்குச் சில இடங்களில் காலா என்ற பாத்திரம் நேரடியாய்க் கலைஞரைக் குறிப்பதாகக் கூடத் தோன்றிய‌து. (கரிகாலன் - கருணாநிதி; காலா - கலைஞர், கருப்புக் கண்ணாடி, காவிகளை எதிர்ப்பது, காலாவுக்கு நான்கு மகன்கள், பெருங்குடும்பம், ஒரு மகனின் பெயர் ரஷ்ய அதிபருடையது: லெனின் - ஸ்டாலின், இன்னொரு மகனை தளபதி என்று அழைப்பது, மனைவி இருக்கையிலேயே காதலி, காதலிக்கு ஒரு மகள், சமுத்திரக்கனி நடித்த‌ வள்ளியப்பன் பாத்திரம் - அன்பழகன், நள்ளிரவில் வயதான காலத்தில் போலீஸால் கைது செய்யப்படுவது, மக்களைத் திரட்டிப் போராடும் யுக்தி - இந்தி எதிர்ப்புப் போராட்டம், எல்லாவற்றுக்கும் மேல் தாராவி காலாவின் கோட்டை எனச் சொல்லப்படுவது!) ரஞ்சித் வேறு மாதிரி எண்ணியும் இக்காட்சிகளை எடுத்திருக்கலாம் தான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் பார்வையாளன் புரிதலுக்கு அணையேது!

18) காலா தலித் என்பது அம்பாசமுத்திரம், புத்தச் சின்னங்கள் எனப் பலவாறு சொல்லப்படுகிறது. அதையொட்டி நானா படேகர் அவர் வீட்டில் சொம்புத் தண்ணீர் வாங்கிக் குடிக்க மறுப்பது வரை புரிகிறது. ஆனால் பிற்பாடு தன் பேத்தியை காலாவின் காலைத் தொட்டு ஆசி பெறச் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சாதி இந்து அதைச் செய்வாரா?

19) இது கபாலியை விட நன்றாக இருக்கிறதா என்ற கேள்வி பதிலளிக்கச் சிரமமானது. காரணம் இரண்டுமே அதனதன் அளவில் மோசமானவை, போலவே சில நல்ல காட்சிகளைக் கொண்டவை. அதனால் இரண்டையும் சமதளத்தில் தான் வைக்கத் தோன்றுகிறது. ஆனால் ரஜினியை அதை விட இதில் தான் என்னால் நெருக்கமாக உணர முடிந்தது.

20) என்ன கோபம் இருந்தாலும் ஒரு வேண்டுகோள். நாயகன் மாதிரி என்று மட்டும் காலாவைப் பற்றிச் சொல்லாதீர்கள்.(பல இடங்களில் நாயகனின் பாதிப்பு தெரிகிறது என்பது வேறு விஷயம். அதற்காக அப்படிப் பொசுக்கென்று ஒப்பிட்டு விடுவதா!)

பாஜக எதிர்ப்புக்காகவும், ரஜினியின் நடிப்புக்காகவும், காலாவின் அழகான காதல்களுக்காகவும் பார்க்கலாம்!

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 08, 2018 19:52

June 5, 2018

மு.க.நூல் - 2


நெஞ்சுக்கு நீதி – 1

2. பிறந்த ஆண்டு

எல்லா மனிதர்களுக்கும் வரலாறு இருக்கிறது. ஆனால் சிலருக்கு மட்டுமே அதை எழுத வாய்க்கிறது. போலவே எல்லோர் வாழ்க்கையும் சமூக மாற்றங்களுக்குக் காரணமாக இருப்பதில்லை. ஆனால் எல்லோருக்கும் அதில் சிறுபங்கேனும் உண்டு. “பெரிய மனிதர்களுக்குத்தான் வாழ்க்கையும் வரலாறும் சொந்தமா? சின்னவர்கட்குக் கிடையாதா?” - இக்கேள்விதான் என் நெஞ்சுக்கு நீதி வழங்கும் தெம்பைத் தந்தது.

நாம் பிறந்த நாளில் என் குடும்பம் செல்வச் செழிப்பில் இல்லை; வறுமையிலும் வாடவில்லை. நாடும் அப்படித்தான். சுதந்திரம் பெறவில்லையெனினும் அழிவினை நோக்கி ஓடிக் கொண்டிருக்கவில்லை. ஆருடங்களில் எனக்கு நம்பிக்கையில்லை எனினும் நான் பிறந்த 1924ல் உலகம் பல நல்லது கெட்டதுகளை அனுபவித்தது.

ஈவெராவின் வைக்கம் திட்டம் உருவானது. அண்ணா உயர்நிலைப்பள்ளி மாணவன். ஈராண்டாண்டுச் சிறைக்குப் பின் உடல்நிலை காரணமாக காந்தி விடுவிக்கப்பட்டார். காங்கிரஸுக்கு காந்தி அதிகாரப்பூர்வமாகத் தலைமையேற்றார்; பொதுசெயலாளராக நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸின் இன்றைய கொள்கைகட்கு அடித்தளமிட்ட பெல்காம் மாநாடு நடந்தது. சௌரிசௌரா சம்பவம் நடந்தது. லெனின் மறைந்தார்; ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார். பவேரியாச் சிறையில் ஹிட்லர் தன் சுயசரிதையை எழுதிக் கொண்டிருந்தார். மைசூர் சென்னை மாகாணங்களிடையே காவிரி ஒப்பந்தம் ஏற்பட்டது! பிற்பாடு ஒப்பந்தத்தைப் பாதிக்கும் ஹேமாவதி அணையை எதிர்க்கும் மாநில முதலமைச்சர் ஆவேன் என யாருக்குத் தெரியும்! என்னைப் பெற்றவர்கள் கூட அன்று என்னை ராஜா என்று தான் கொஞ்சியிருப்பார்கள்; மந்திரி என்றல்ல!

தஞ்சை மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து 15 மைல் தொலைவிலிருக்கும் சிற்றூர் திருக்குவளை அல்லது திருக்கோளலி. அங்கு தான் பிறந்தேன். திருக்குளம், சோலை, சிவன், முனியன், ஐயனார் கோயில்கள் என இன்றை விடப் பேரழகாக இருந்த ஊர்.

#NenjukkuNeethi #P1C2

*

3. தந்தையின் துணிவு

அய்யாத்துரையின் மனைவி பெரியநாயகத்தம்மாள் கர்ப்பமானார். குழந்தை பிறந்த ஏழாம் நாள் தாயார் இறக்க, தில்லையம்மாள், மீனாட்சி என்ற இருவர் குழந்தையை நன்கு வளர்த்தனர். மகிழ்ச்சியிலோ சிப்பியின் அழிவுக்குக் காரணமான முத்து என்ற பொருளிலோ முத்துவேல் என்று குழந்தைக்குப் பெயரிட்டனர். அதுதான் என் தந்தை.

அவர் விவசாயி, வித்வான், கவிஞர். யாருக்கும் அஞ்சாமல் உண்மை நிகழ்ச்சிகளைக் கூடப் பாடலாக்கிடுவார். இன்றும் சிலர் அவற்றைப் பாடக் கேட்கலாம். குத்தகைக்கார அய்யர் என்ற பண்ணையாரை எதிர்த்து ஏழைகளின் குரலாய் ஒரு பாடல், ஒழுக்கம் தவறிய பெரிய குடும்பப் பெண்ணொருத்தி குறித்த நீண்ட பாடல் என நிறைய உண்டு. இத்தனைக்கும் அவர் எப்போதும் பட்டையடித்த பழுத்த பக்தர். மருந்தோ மந்திரமோ பூச்சிக்கடி, பெருரணமென அவரிடம் சிகிச்சைக்கு வருவர். காசேதும் வாங்க மாட்டார்.

அப்பாவுக்கு இளமையில் திருமணம் ஆனது. குஞ்சம்மாள் என்ற எம் பெரிய தாயார் சில ஆண்டுகளிலேயே இறந்து போனார். மணமாலையை ஒரு பெட்டியில் நிரப்பி மனைவியைக் குலதெய்வமாக்கினார் தந்தை. இன்றும் அது எங்கள் வீட்டில் உண்டு. இரண்டாவதாய் மணம் செய்த வேதம்மாளையும் விரைவிலேயே இழந்தார். அடுத்து என் தாய் அஞ்சுகம் அவருக்கு மனைவியானார். வயல் வேலைகளில் அப்பாவுக்கு அம்மா உதவியாய் இருந்தார். மீன் பிடித்தல், தேங்காய் பறித்தலிலும் அப்பாவுக்கு ஈடுபாடுண்டு. நெடுநாள் அவர்களுக்குக் குழந்தைப்பேறில்லை. பின் பெரியநாயகம், சண்முகசுந்தரம் என்ற பெண்கள் பிறந்தனர். ஆனாலும் ஆண் மகவு இல்லையே என்ற மனகுறையைப் போக்க வேண்டி திருத்தலங்கள் சென்றனர், தீர்த்தமாடினர்.

1924ம் ஆண்டு சூன் 3 (ரக்தாட்சி ஆண்டு வைகாசி 21) செவ்வாயன்று பிறந்தேன். நான் குழந்தையாக இருந்த போது தந்தை சாகாமலே என் தாய் தாலியிழந்தார். விடியலில் திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்து தாலி உட்பட எல்லாவற்றையும் திருடிச் சென்றனர். பொன்னுக்குப் பாவமில்லை என கருதியிருப்பான் திருடன் என்றாராம் அப்பா. அழுது புலம்பிய அம்மாவுக்கு புதுத்தாலி கட்டினார் அப்பா. மூன்று மனைவி; நான்கு தாலி!

#NenjukkuNeethi #P1C3

*

4. “சிவாய நம! ஓம் நமசிவாய”

குழந்தைக்கான சடங்கனைத்தும் எனக்கு நடந்தேறின. காதணி விழா, வித்யாரம்பம், அப்புறம் நிறைய முறை முடி காணிக்கை. கனியாகுரிச்சி மாரியம்மன் கோயிலுக்கு முடியிறக்க வேண்டிக்கொண்டு, குறித்த நாளில் போக முடியாததால், உள்ளூரிலேயே மொட்டையடியத்து, முடியை ஒரு கலயத்தில் போட்டு, போகும் போது செலுத்தலாம் எனத் தோட்டத்தில் வைத்திருந்தனர். இரண்டாம் முறை வீடு புகுந்த திருடன் எதுவும் கிடைக்காமல் உண்டியல் என நினைத்து அக்கலயத்தைத் தூக்கிச் சென்று விட்டான்.

நான் இசை கற்க தந்தை ஏற்பாடு செய்தார். சட்டை, செருப்பு போட முடியாது; மேல் துண்டை இடுப்பில் கட்ட வேண்டும். சாதி, மத, சாத்திர, சம்பிரதாயப் பெயரால் ஒரு சமூகக்கொடுமை. இசைப்பயிற்சியை வெறுத்தேன். மேல்சாதி, மேட்டுக்குடியிலிருந்து வரும் சமூகக்குரலைவிட ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து எழும் எதிர்ப்புக்குரல் வலிது.

இதையுணர்ந்த தந்தை என் படிப்பைத்தீவிரப்படுத்தினார். கிராமப்பள்ளியின் தலைமை ஆசிரியரைக் கொண்டு தனியாகப் பாடம் போதிக்கப்பட்டது. பத்து வயதில் நாடகங்கள் போட ஆரம்பித்தேன். எங்கள் மாட்டுத் தொழுவமே மேடை. அப்பா சொன்ன கதைகள் கேட்டு அர்ச்சுனன், கிருஷ்ணன் வேஷங்கட்டுவதிலெனக்கு மிகப் பிரியம். நீலப்பொடி பூசிக்கொண்டு நான் நடிப்பதைக் காண ஊர் கூடும். திருக்குவளை கோயில் திருவிழா போல் மாதிரித்திருவிழா ஒன்று என் வீட்டுத் தாழ்வாரத்தில் நடக்கும். வீட்டிலிருந்த வெண்கல ரிஷப வாகனப் பொம்மை மீது மண்ணால் சாமி செய்து வைத்து, வாயில் வாத்தியங்கள் முழங்க ஊர்வலம். நினைவுகளின் இன்பத்துக்கு அளவே கிடையாது.

பேருந்து விட்டிறங்கி கச்சணத்துக் காபி ஓட்டலில் ஓரணாவுக்கு காராபூந்தி வாங்கித் தின்று கொண்டே நாலைந்து மைல் ஊருக்கு நடப்பேன். ஊரிலிருந்து ஒரு மைல் தொலைவிலிருக்கும் காருகுடிக்குத் தயிர் வாங்கி வர காலையில் நண்பர்களுடன் நடப்பேன். வழிநடைக்கு என் தந்தையும் அவர் நண்பர் சரவண சாமியாரும் “சிவாய நம! ஓம் நமசிவாய” என்ற மந்திரம் சொல்லித் தந்தனர். இரவில் தனியே நடக்கும் போது அதுவே துணை. மரங்களடர்ந்த பகுதியில் பட்டாணி என்ற துஷ்டதேவதைக் கோயில் உண்டு. அது ராத்திரியில் வயல்களில் தீவட்டி ஊர்வலம் போகும் என்றனர். வயல் வெடிப்புகளிலிருந்து கிளம்பும் கந்தக வாயுவின் தீச்சுடர் அது என்று அறியாத வயதில் அதைக் கடக்கும் போதெல்லாம் சிவாய மந்திரமே துணை. ஊரில் அம்மை, காலரா பரவினால் முனீஸ்வரன் வீரப்ப வேளாளர் மீது ஆவேசமாக ஆடி ஆறுதல் சொல்லுவார். அப்பாவுக்கு கோழிக்கறி சாப்பிடும் ஆசை வந்தால் அங்காளம்மை கோயில் பூஜைக்கு ஏற்பாடாகும். “அரிநமோத்து சிந்தம்” என விரல் தேய மணலில் எழுதிக் கல்வி கற்ற அறிவுக்கோயில். அதற்கடுத்து வரிசையாய் உறவினர் வீடுகள், சீட்டாடும் அக்ரஹாரத் திண்ணை, தபால் ஆபீசு, நான் தவழ்ந்து விளையாடிய வீடு.

கருடச் சகுனம் பார்க்க நிற்கும் வைத்தியலிங்க மாமா, மண்வெட்டியுடன் உழைக்கும் வைத்தித் தாத்தா, குளத்தங்கரை மரத்தடியில் தூண்டிலோடு மீன் பிடிக்கும் அப்பா, மடியில் கோயில் கொத்துசாவியுடன் இருக்கும் மெய்க்காவல் குப்புசாமித் தாத்தா, திருக்குவளை ஔவையார்கள் தில்லையம்மா, வைரியாத்தா, குளத்தின் அக்கரையில் இருந்தபடி தபால் வந்தால் குரல் கொடுக்கும் போஸ்ட் மாஸ்டர் அய்யர், மருத்துவ நிலையத்தையே மடியில் கட்டி வரும் காருகுடி வைத்தியர், எங்கள் குடும்பத்துக்கு ஆறுதலாய் இருந்த ரத்தினப் படையாச்சி என எல்லோரும் நினைவிலாடுகிறார்கள்.

பன்னிரண்டு வயதில் உயர்நிலைப்பள்ளியில் சேர ஊர் விட்டு திருவாரூர் போனேன். ஆனால் என்னை ஐந்தாம் வகுப்பில் கூடச் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்கள்.

#NenjukkuNeethi #P1C4

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2018 20:02

June 3, 2018

நீலப்படம்


Blue Planet II - குழந்தைகளுக்காகப் போனது. அவர்களை விட எனக்குப் பிடித்திருந்தது. இது உண்மையில் ஒரு தொலைக்காட்சித் தொடர். ஆவணப்படம். ஏழு பகுதிகள் கொண்டது. பிபிசி எர்த் தயாரிப்பு. அதன் முதலிரு பாகங்களை மட்டும் இங்கே திரையரங்குகளில் பிவிஆர்காரர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். One Ocean மற்றும் The Deep ஆகிய முதலிரு பகுதிகள் மட்டும் இதில் இருக்கிறது. மற்றவை பிற்பாடு தனித் திரைப்படங்களாக வரக்கூடும்.


One Ocean பகுதியில் வெப்ப மண்டச் சமுத்திரங்களிலிருந்து துருவக் கடல்கள் வரை வெவ்வேறு மீன்கள் அல்லது கடல்வாழ் உயிரினங்களின் பழக்க வழக்கங்கள் குறித்து ஒவ்வொன்றாகச் சொல்கிறார்கள். நமக்கு நன்கு தெரிந்த போத்தல் மூக்கு டால்ஃபின்கள் முதல் நமக்குப் புதிதான பாதி வாழ்வில் ஆணாய் மாறி விடும் பெண் மீன் வரை காட்டுகிறார்கள். உணவு, வேட்டை, கலவி இன்னும் சில வினோதப் பழக்கங்கள் என அவற்றின் வாழ்வு நம்முன் நீலமாய் விரிகிறது. அற்புதமான ஒளிப்பதிவும் ஒரு கதைசொல்லல் போன்ற அமைப்பும் இப்பகுதியை சுவாரஸ்யம் ஆக்குகிறது. நீரை விட்டு வெளியே துள்ளி எழுந்து பறக்கும் பறவையைக் கவ்வி உண்ணும் மீன் பற்றிய பகுதியில் ஒரு பறவைக்குஞ்சு தப்பிப்பதைக் காட்டும் இடமெல்லாம் மயிர் கூச்செரிகிறது. சில சமயம் அந்த உயிரினங்களை எப்படி அவ்வளவு அருகில் சென்று அவற்றுக்குத் தொந்தரவு தராமல் படம் பிடித்தார்கள் என ஆச்சரியமாய் இருக்கிறது. அதுவும் ஒரே விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் காட்டுகிறார்கள் (உதாரணம்: சிப்பியை உடைத்து உண்ணும் மீன் பற்றிய காட்சிகள்). சிலவற்றுக்குப் பல மணி நேரம் அல்லது நாட்கள் காத்திருந்து எடுத்திருக்க வேண்டும். இப்பகுதியின் கடைசியில் புவி வெப்பமாதல் காரணமாய் சீல்கள் தம் குட்டிகளைப் பனிக்கரடிகளிடமிருந்து காக்கப் போதுமான ஆர்க்டிக் துருவப் பகுதியில் பனிப்பாளங்கள் இல்லாமல் தவிப்பதைக் காட்டுகிறார்கள். நம்மை அறியாமால் நம் முன்னேற்றத்துக்காக நம் சொகுசுக்காக எங்கோ சில உயிர்களைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

The Deep பகுதி முழுக்க அண்டார்க்டிகாவின் ஆழ்கடலுக்குள் (ஐந்து கிமீ ஆழத்துக்கும் மேல்) இருக்கும் உயிரினங்கள் குறித்துக் காட்டுகிறார்கள். சூரிய ஒளி புகாத பிரதேசம்; உயர்ந்தபட்ச தண்ணீர் அழுத்தம்; அதீதமான குளிர்ச்சி கொண்ட நீர்; அப்படியான ஆழச் சூழலிலும் உயிரினங்கள் இருக்கின்றன. அப்படியான சூழல்கள் கொண்ட ஜூபிடரின் நிலாக்களிலும் உயிரினங்கள் வாழக்கூடும் என்ற எண்ணத்தை இவை வலுப்படுத்துவதாகச் சொல்கிறார்கள். வினோத ஒளி உமிழும் உயிரினங்கள், கருப்புத் திரவத்தைத் துப்பும் உயிரினங்கள் என அவை பலவிதம். இறந்த ஒரு பிரம்மாண்ட மீனை சுறா முதல் எட்டுக்கால் பூச்சி போன்ற நண்டு, மிகச்சிறு புழு போன்ற உயிரினங்கள் அந்த ஆழத்தில் வைத்து மாதக்கணக்கில் உண்கின்றன. சில சிற்றுயிர்கள் அதன் எலும்பைக் கூட விடாமல் அமிலம் துப்பி அதனுள் மிஞ்சியிருக்கும் கொழுப்பைத் தின்கின்றன. கடலின் ஆழத்தில் பல கோடிக்கணக்கான ஆண்டுகள் சேர்ந்த மண் / மணல் ஒரு கிமீ உயரத்துக்கு பாறைகளின் மீது படிந்திருக்கிறது. அந்த‌ மணற்பரப்பில் மீத்தேன் வெளிவரும் காட்சிகள் அற்புதம். சில இடங்களில் திரவங்கள் வெளியாகி அங்கே நச்சு ஏரிகள் உருவாகி விடுகின்றன. அதாவது கடலுக்குள் ஏரி. அதற்குள் போகும் பாம்பு மாதிரியான மீன்கள் துடிப்பதைக் காட்டுகிறார்கள். அப்புறம் கடலுக்குள் எரிமலை வெடிப்புகள், வெந்நீர் ஊற்றுகள். மரியானா ட்ரெஞ்ச் பற்றிச் சொல்கிறார்கள். எவரெஸ்ட் சிகரம் கடலுக்குள் இருந்தால் நீருக்கு வெளியே தெரியாது என்கிறார்கள். ஜெல்லி மீன்கள், ஸ்பாஞ்ச்கள், அதற்குள் குடியிருந்து கலவி செய்து குஞ்சு பொரிக்கும் உயிரினங்கள். இன்னும் சிலபல.

டேவிட் அட்டன்பரோ தான் குரல் கொடுத்து விவரிக்கிறார். பொதுவான ஆங்கிலப் படங்கள் போல் அல்லாமல் எல்லாச் சொற்களும் சராசரி இந்தியர்களுக்குப் புரியும் தெளிவான உச்சரிப்பு. ஹான்ஸ் ஸிம்மரின் பின்னணி இசை அபாரம். (குறிப்பாய் முதற்பகுதியில் அந்தப் பின்னணி இசை தான் ஆவணப்படத்துக்கு ஒரு திரைப்பட நாடகீயத்தை வழங்குகிறது!)

பார்க்க வேண்டிய படம். டாகுமெண்டரி, டிவி சீரிஸ் என்றெல்லாம் இளக்காரமாய் நினைக்காமல் ஒரு திரைப்படமாகவே அணுகலாம். நல்ல தரத்தில் எடுத்திருக்கிறார்கள். கடலுக்குள் இத்தனை துல்லிய ஒளிப்பதிவெல்லாம் பேராச்சரியம். குழந்தைகளை அழைத்துப் போய் வாருங்கள். அவர்கள் சுற்றுச்சூழலை ஒட்டியம் தம் தினசரிக் குற்றங்களின் விளைவுகளை அறிய வேண்டியது அவசியம்.

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2018 10:15

June 2, 2018

நெஞ்சுக்கு நீதி (Abridged)


#HBDKalaignar95

இன்று கலைஞருக்கு 95 அகவை பூர்த்தியாகிறது. உடல் நலத்தை முன்னிட்டு அரசியல் களத்தில் செயல்பட முடியாத ஓய்வில் இருக்கிறார். இந்தத் தற்காலிக முடக்கத்திலிருந்து மீண்டு வருவார் என என் போல் நம்பும் கோடிப் பேர் உண்டு.


2016 சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியின் மீதான கடும் அதிருப்தியையும் தாண்டி திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாததற்கு பல விளக்கங்கள் இருக்கலாம். இன்றைய தமிழக இளைஞர்கள் மத்தியில் சமீபத்தில் மறைந்த ஜெயலலிதா பற்றி இருக்கும் நல்லபிப்பிராயம் கூட கலைஞர் பற்றி இல்லை என்கிற கசப்பான உண்மையும் அதிலொன்று. அதற்குக் காரணமாய் விமர்சனத்துக்குரிய சில பிழைகள் கலைஞர் பக்கம் உண்டு என்ற போதிலும் அதை விட அவரது நெடிய அரசியல் வரலாற்றைப் புதியவர்கள் அதிகம் அறிந்து கொள்ளாததே பிரதானப் பிரச்சனை என நினைக்கிறேன்.

இந்தியாவில் இதுகாறும் எழுதப்பட்டதிலேயே ஆக நீளமான சுயசரிதை கலைஞர் மு. கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதியாகவே இருக்கும். ஆறு பாகங்களில் சுமார் 4,000 பக்கங்களில் நீளும் இந்நூற்தொகை 2006 வரையிலான கலைஞரின் வாழ்க்கையைப் பேசுகிறது. அதற்குப் பிறகு நடந்தவைகளை ஏழாம் பாகமாக அவர் எழுதக்கூடும்.

ஆனால் இத்தலைமுறைக்கு பல்லாயிரம் பக்கங்களை வாசித்து ஒரு நூற்றாண்டுச் சகாப்தத்தினை உள்வாங்கும் பொறுமையும் நுண்மையும் இருக்கிறதா என்பதைச் சந்தேகத்தோடவே பார்க்க வேண்டி இருக்கிறது. அதனால் நெஞ்சுக்கு நீதியின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் 50 முதல் 100 சொற்களுக்குள் சுருக்கி அவ்வப்போது ஃபேஸ்புக் பதிவாக வெளியிட உத்தேசித்திருக்கிறேன். எப்படியும் ஈராண்டுகளேனும் ஆகிவிடும். கலைஞரின் மொழிச் செழுமையையும் நடையின் சுவையையும் இதில் கொண்டு வர முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். நூல்களின் உள்ளடக்கத்தைக் கடத்துவது மட்டுமே இந்த முயற்சியின் நோக்கம். குழந்தைகளுக்கு ராமாயணக் கதை சொல்வது போல்! அதில் கம்ப ரசம் அல்ல; கதையின் சாரமே மினுங்கும்.

இது நெஞ்சுக்கு நீதிக்கு மாற்று அல்ல; இதில் தொடங்கி அதற்கு நகரலாம். பள்ளிப் பாடப்புத்தகங்களில் ஆங்கில க்ளாஸிக்களின் Abridged Version தருவார்களே அதுபோல்.

நான் திமுககாரன் அல்லன். கழகத்தோடு மட்டுமல்ல, கலைஞரோடே முரண்பாடுகள் உண்டு. ஆனால் அதெல்லாம் கடந்து அவர் நம் நாட்டின் தவிர்க்க முடியாத, மிகக் கம்பீரமான அரசியல் ஆளுமை. அதைப் பரவலாக்குவது மட்டுமே என் விருப்பம். வதந்திகளை நம்பி எழுப்பப்படும் “திருட்டு ரயிலேறி சென்னை வந்தவருக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது?” போன்ற அசட்டுக் கேள்விகளுக்கு இது பதில் சொல்லும்.

கலைஞர் நூறாண்டு வாழ வேண்டும்; மீண்டும் தமிழகத்தை ஆள வேண்டும்!

*

நெஞ்சுக்கு நீதி – 1

1. தொடக்கம்

அரசுப் பொறுப்புக்கு வந்த பின் அதுவும் முதல்வரான பின் எழுத எப்படி நேரம் கிடைக்கிறது என வியக்கிறார்கள். பணி அழுத்தங்களுக்கு மருந்தே எழுத்து தான். புகை வண்டிப் பயணங்களை எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொள்கிறேன் - இரவு 10 மணிக்கு மேல் துவங்கி அதிகாலை 5 மணி வரை. பின் ஒரு மணி நேரத் தூக்கம்.

காலையில் வீட்டில் பார்வையாளர்கள். பிறகு கோட்டையிலும். பின் அரசாங்கப் பணி. அதன் சுமையைத் தாண்டி என் மனதை இலகுவாக்குவது கட்சி வேலைகள் தாம்.

என் நோக்கம் எளிய மக்களை மகிழ்ச்சியாக வாழச் செய்வது தான். அதற்காக என்ன செய்திருக்கிறேன் இதுவரை? ஓரளவு செய்திருப்பதாக நினைக்கிறேன். இந்த மாநிலம், மக்கள், அரசியல் குறித்தெல்லாம் ஒரு நெடுங்கட்டுரை எழுத நினைக்கிறேன் - அதன் மையக் கதாபாத்திரமாய் என்னை வைத்துக் கொண்டு. அவனவன் தன் நெஞ்சுக்கு நீதி வழங்கிக் கொள்ள வேண்டும் - நீதிமன்றத் தீர்ப்புகள் போல் அதற்கு அப்பீல் இல்லை.

#NenjukkuNeethi #P1C1

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2018 19:25

May 15, 2018

உள்ளம் கவர் கள்வன்


என் பதின்மம் முழுக்க நிரம்பிக் கிடந்த எழுத்தாளர் பாலகுமாரன். சுஜாதா கூட பிற்பாடு நுழைந்தவர் தான். அந்த இரண்டும் கெட்டான் வயதில் அவரை வாசிப்பது ஒரு கொடுப்பனை என்றே சொல்வேன். கோடை விடுமுறையின் போது கோவையில் தொலைபேசியகத்தில் பணிபுரியும் என் அத்தை அவரது அலுவலக நூலகத்திலிருந்து எடுத்து வந்த நாவல்களின் மூலம் தான் அவரை நிறைய வாசித்தேன். குமுதம், விகடனில் அவரது எழுத்துக்கள் வந்தால் வெட்டிச் சேகரிக்கும் வழக்கம் சில ஆண்டுகள் இருந்தது.


பல்சுவை நாவல் வடிவில் அவரது பெரும்பாலான நூல்கள் என்னிடம் இருக்கின்றன. (நாகர்கோவிலிலிருந்து என் மாமியாரின் தங்கை வாங்கி அனுப்பியது.) அவற்றில் கணிசம் படித்தும் விட்டேன். அவரது நல்ல முன்பனிக்காலம் நாவலைப் போல் என் வாழ்வில் நடக்க வேண்டும் என விரும்பி இருக்கிறேன். இனியெல்லாம் சுகமே தான் அவரது எழுத்துக்களில் எனக்குப் பிடித்த நாவல். சினிமாகவே எடுக்க உகந்த நாவல். யாரும் கண்டுகொள்ளவில்லை. மெர்க்குரிப் பூக்கள் அடுத்தது (அதே தலைப்புப் பாணியில் பிற்பாடு எழுதிய கரையோர முதலைகள், இரும்புக் குதிரைகள், கடலோரக் குருவிகள் ஏதும் அந்தளவுக்கு ஈர்க்கவில்லை). அப்புறம் கல்லூரிப் பூக்கள். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவும் சுவாரஸ்யம். உடையார் நாவலும் குறிப்பிடத்தக்க முயற்சியே. அவரது எழுத்துக்கள் படித்துத் தான் தஞ்சை பெரிய கோயில் காண வேண்டும் என்ற உந்துதல் வந்தது. சிவன் பிட்டுக்கு மண் சுமந்த கதையை அவர் எழுத்தில் வாசித்ததை மறக்கவே முடியாது. அவரது நாவலொன்றில் வரும் "ஜெயிப்பேன், ஜெயிப்பேன், இனி சகல இடங்களிலும் ஜெயிப்பேன்." என்ற வாக்கியத்தை நெடுநாட்கள் என் புத்தகங்களில், நோட்டுக்களில் என‌ ஆங்காங்கே எழுதி வைத்திருந்தேன்.

தூர்தர்ஷனில் அவரது நாவல்கள் சில நாடகங்களாக ஒளிபரப்பாகின: மூக்கணாங்கயிறு, பச்சை வயல் மனது, சேவல் பண்ணை. எதையும் தவறவிடவில்லை. சுஜாதாவுக்குப் பிறகு சினிமாவில் எழுத்தாளராய் அதிகம் சாதித்தது அவர் தான். முகவரி, சிட்டிசன், மன்மதன், சிவசக்தி, ரகசிய போலீஸ் போன்ற படங்களை எல்லாம் அவரது வசனம் என்பதற்காகவே பார்த்தேன்.
யோகி ராம் சுரத்குமார் மீது ஆரம்பம் முதலே அபிமானம் கொண்டவர் என்றாலும் பிற்பாடு அவர் ஆன்மீகத்தில் மிகத் தீவிரமாய் இறங்கியதிலிருந்து அவரிடம் இயல்பாகவே ஒரு மனவிலக்கம் எனக்கு வந்து விட்டது என நினைக்கிறேன். எழுத்துச் சித்தர் வெறும் சித்தராக மாறத் தொடங்கிய புள்ளி அது. என் வாசிப்பின் திசை மாறத் தொடங்கியதும் காரணமாக இருக்கலாம். அடுத்ததாய் சமீப ஆண்டுகளில் ஃபேஸ்புக்கில் அவரது செயல்பாடுகள் மிகுந்த ஏமாற்றம் அளித்தன. எழுத்தாளன் எப்போதும் வாசகர்களிடமிருந்து தள்ளியே இருப்பது நல்லது என்ற என் நெடுநாள் எண்ணத்தை அது மேலும் வலுவாக்கியது.

சென்னைப் புத்தகக்காட்சியில் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். பேசவில்லை. எழுத்துக்கு எழுபது என விசா பதிப்பகம் அவரது எழுபதாவது பிறந்த நாளுக்கு வெளியிட்ட சிறப்பு மலரை கொஞ்ச காலம் முன் பொன்.வாசுதேவன் அனுப்பித் தந்தார். மிக நீர்த்துப் போன தொகுப்பு அது. அவரைப் பற்றி அல்லது அவர் எழுதியதைக் கடைசியாய் வாசித்தது அதுவே.

பாலகுமாரன் நிறைய படித்த‌ நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு ஆதர்சம். அவர் அவர்களுக்கு ஒரு எழுத்தாளராக மட்டுமின்றி மறைமுகமாக ஒரு மனநல மருத்துவராகவும் இருந்தார். (நேரடியாக கேள்வி பதில்களில் அவர் அதைச் செய்து வந்தார் எனினும் அவர் நாவல்கள் மூலமும் அதையே செய்தார்.) இரு திருமணங்கள் செய்து, இரண்டு மனைவியருடனும் ஒரே வீட்டில் சிக்கலின்றி வசித்தது என்ற வஷயம் அவர் மீது ஓர் இனம் புரியாத வசீகரத்தைப் பலருக்கும் - குறிப்பாய்ப் பெண்களுக்கு - அளித்தது என்பதாக உணர்கிறேன். அப்படியான லட்சக்கணக்கான பெண்களுக்கு அவர் உள்ளம் கவர் கள்வன்.

நல்ல எழுத்தாளனாக என்ன செய்ய வேண்டும் என்று அவர் சொன்னதில் இன்னமும் ஒரு விஷயத்தைச் செய்யாமல் ஆனால் செய்ய வேண்டும் என்ற TODO லிஸ்டில் வைத்திருக்கிறேன்: கம்பராமாயணம் வாசிப்பது. "நான் எத்தனையோ பேருக்கு எழுதக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். ஆனால் கற்றுக் கொண்டது ஒரு பாலகுமாரன் தான்" என்று சுஜாதா எங்கோ சொன்னாதாய் அறிந்த போது பாலகுமாரன் மீது நிறையப் பொறாமை எழுந்தது. சுஜாதாவின் வாரிசு பாலகுமாரன், பாலகுமாரனின் வாரிசு நான் என்றெல்லாம் புத்தகங்களில் ஃப்ளோசார்ட் வரைந்து வைத்த நினைவு இருக்கிறது. ஆனால் ஏனோ என் எழுத்தில் அவரது தாக்கம் வரவே இல்லை. அதே சமயம் என் ஆளுமையில் என் சிந்தையில் என் வாழ்வியலில் நிச்சயம் அவரது தாக்கம் இருக்கிறது என உணர்கிறேன்.

அவரை எனக்கு முதலில் அறிமுகப்படுத்திய என் ஒன்பதாம் வகுப்புத் தமிழாசிரியை தனலெட்சுமியை நினைத்துக் கொள்கிறேன். அவர் எங்கேனுமிருந்து இதை வாசித்துக் கொண்டிருந்தால் இத்தருணத்தில் கைகள் பற்றிப் பேச விரும்புகிறேன்.

பாலகுமாரனுக்கு அஞ்சலி!

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2018 02:45

April 5, 2018

பெட்டை [சிறுகதை]


“லொள் லொள் லொள்”

அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் கண்ணாடி பார்த்துக் கண்ணுக்கு மையிட்டிருந்த மாதவியின் காதுகளைக் கிழித்தது வாசலருகே திடீரென எழும்பிய தெருநாய்களின் கூட்டுக் குரைப்பரவம். சினமும் பயமும் அட்ரினலினாய்க் குருதியில் பரவி, கதவைத் திறந்து அவள் வெளியே வர, சக்திவேல் கற்களை எறிந்து விரட்டிக்கொண்டிருந்தான்.

வாசலிலிருந்த மயில்களைக் குதறியிருந்தன நாய்கள். அதாவது கோல மயில்கள். மார்கழிக்குப் போட்ட கோலம். 11 புள்ளி, 4 வரிசை, 5 வரை நேர்ப்புள்ளி என்ற இலக்கணத்தில் போட்டது. அதன் மீது தூவப்பட்ட பச்சை, நீலம், வாடாமல்லி வண்ணப் பொடிகள். வைகறையில் முக்கால் மணி நேரம் குத்த வைத்தமர்ந்து, நைட்டித் துவாரங்கள் வழி ஊடுருவி உடம்பை நடுக்கிய செங்குளிரில் போட்டது.

அத்தனையும் பாழ். ஆறுதல் பரிசாய் நாய்களின் காலடித் தடங்கள் புதுப்புள்ளிகளைக் கோலத்திற்குச் சேர்த்திருந்தன. மனதில் கடும் எரிச்சல் உண்டாயிற்று மாதவிக்கு.



தெருவின் இருபுறமும் திரும்பிப் பார்த்தாள். இடது பக்கம் மங்கயர்கரசி அக்காவின் வீட்டு வாசலிலும் எதிரே சுப்ரியா வீட்டு வாசலிலும் இருந்த கோலங்கள் அப்படியே இருந்தன. வலப்புறம் பரத் அம்மாவின் வீட்டில் கோலம் இல்லை. இன்று ஞாயிற்றுக் கிழமை - பரத்துக்குப் பள்ளி விடுமுறை – அதனால் இன்னும் எழுந்திருக்க மாட்டாள்.

ஓடிக் கொண்டிருந்த நாய்களைப் பற்களை அரைத்தபடி பார்த்த போதுதான் அவளுக்கு விளங்கியது. இரண்டு நாய்கள் பரஸ்பரம் புட்டத்தில் ஓட்டியபடி எதிரெதிர் திசையில் ஓட எத்தனித்தன. சுற்றிலும் ஏழெட்டு நாய்கள். இத்தனை நாய்களை அத்தெருவில் பார்த்ததே இல்லை. இரண்டு, மூன்று திரியும். சில வீடுகளில் சோறு வைப்பார்கள். அவளும் மீந்தது போட்டிருக்கிறாள் - சிலசமயம் மஜ்ஜை உறிஞ்சிய எலும்புத்துண்டு.

சிக்கி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த ஜோடியில் ஒன்றை மாதவிக்கு அடையாளம் தெரிந்தது. வெண்மையும், பழுப்பும் கலந்த நாய், கரேலென்றிருக்கும் வாய். பெட்டை.

சுற்றி நின்ற மற்ற யாவும் ஆண் நாய்கள். அடுத்த தெருவிலிருந்து வந்திருக்கலாம்.

“இப்பத்தான் அந்தப்பொட்டை நாயி பெருசாயிருக்கு போல. நாக்கத் தொங்கப்போட்டு வந்திரிச்சுக எல்லா நாயிகளும். காலங்காத்தால தெருப்பூரா ஏறிக்கிட்டுத் திரியிதுக.”

“பாவந்தேன் அதுவும்.”

“என்னத்த பாவம்? ராத்திரி தூங்கவும் முடியாது. குலைச்சே கொல்லும்.”

சிக்கல் விடுபட்டுப் பெட்டை ஓடியது. மற்றவை விடாமல் துரத்தின.

அவசரமாய் டிஃபன் பாக்ஸில் இட்லிகளை அமுக்கி, டப்பியில் சாம்பார் அடைத்து ஹேண்ட்பேகில் போட்டுக் கிளம்பும் முன் மீண்டும் கண்ணாடி பார்த்துக் கொண்டாள்.

“காலைக்கு இட்லி ஹாட்பேகில் இருக்கு. மதியம் மட்டும் வெளிய சாப்டுக்கங்க.”

“எப்பவும் அதானே! மஹாராணி ராத்திரியும் வெளிய சாப்பிடச் சொல்லிடாதீங்க.”

சுருக்கென்றது மாதவிக்கு. போன வாரம் ஞாயிற்றுக்கிழமை அலுவலகம் சென்ற போது இரவுணவை ஹோட்டலில் உண்ண வேண்டி இருந்தது. மேனேஜரின் பிறந்த நாள் ட்ரீட். அலுவலகத்தில் எல்லோரும் கலந்து கொண்டார்கள். மறுத்தால் நன்றாய் இருக்காது. அவரே வற்புறுத்தியதால் தயக்கமாய் ஒப்புக் கொண்டாள். சாப்பிட்ட பின் கிளம்பப் பத்து மணி ஆகி விட்டது. ஆட்டோ கிடைக்காமல், கிடைத்த ஆட்டோவில் ஃப்ளைட் டிக்கெட் விலை சொன்னதால் அதே ஏரியாவில் வசித்த, உடன் பணிபுரியும் சங்கருடன் டூவீலரில் வந்திறங்கினாள். முன்பே ஃபோன் செய்து வெளியே சாப்பிடச் சொல்லி இருந்தும் கேளாமல் கைகட்டி வீட்டு வாசலில் காத்திருந்தான் சக்திவேல்.

பதறி அவனுக்குச் சம்பா ரவையில் உப்புமா கிளறிப் போட்டு ஏன் தன்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை என திரும்பத் திரும்ப விளக்கிக் கொண்டிருந்தாள். அவன் எதுவுமே சொல்லாமல் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டான். இன்று குத்துகிறான்.

விடுமுறைகளிலும் கூட்டமாய் வரும் அப்பேருந்திலேறி அதிர்ஷ்டவசமாய்க் கிடைத்த இடத்தில் - அதுவும் ஜன்னலோரம் - அமர்ந்து கொண்டாள். லேசாய்த்தலை வலித்தது.

*

மாதவி எல்லோரையும் போல் கல்லூரி போய், எல்லோரையும் போல் காதலித்தவள். அவனுடன் கொஞ்சம் ஊர் சுற்றி இருந்தாள். பைக்கில் மலைக்கோயில், டவுனுக்குப் போய்ச் சினிமா, பராமரிப்பற்ற பெரும்பூங்கா, அப்புறம் சில சிற்றுண்டிச் சாலைகள். கடற்கரையற்ற அவ்வூரில் காதலர்களுக்கு நேர்ந்து விட்ட இடங்கள் அவ்வளவுதாம்.

பலரும் ஊரில் அவர்களைப் பார்த்திருந்தார்கள். வீட்டில் அவளாக எதையும் சொல்ல வேண்டி இருக்கவில்லை. அப்பா கேட்ட போது தலை குனிந்தபடி ஒப்புக் கொண்டாள்.

“அவுங்க என்ன ஆளுக, மாதவி?”

அவள் பதில் சொல்லவில்லை. அவர் புரிந்து கொண்டார். எழுந்து போய் விட்டார். அம்மா தலையில் அடித்துக் கொண்டாள். கல்லூரிக்குப் போனது போதும் என்றாள்.

கோபத்தில் வரும் வசையின் ஒரு பகுதி என்றே மாதவி அதை நினைத்தாள். ஆனால் மறுநாளே அப்பா கல்லூரி போய் இனி வர மாட்டாள் எனக் கடிதம் கொடுத்து வந்து விட்டார். அவனைத் தொடர்பு கொள்ள முயன்றும் நடக்கவில்லை. ஆளுங்கட்சியின் தயவில் சாதி ஓட்டு வாங்கி தன் கட்சிக்கென ஒற்றைச் சட்டமன்ற உறுப்பினராய் இருந்தவரிடம் இந்தப் பிரச்சனையை அவள் அப்பா எடுத்துப் போக, அவர் அவனை அழைத்துக் கடுமையாய் மிரட்டியதாகக் கல்யாணத்துக்குப்பின் தெரிந்து கொண்டாள்.

சக்திவேல் அவளைப் பெண் பார்க்க வந்தபோது குழப்பத்தில் இருந்தாள் மாதவி. அதற்கு முன்பே ஒருவன் வந்து பார்த்து விட்டுச் சம்மதம் சொல்லிய பின் யாரோ அவள் காதலைக் கொச்சையாய்ச் சொல்லப் போக, எல்லாம் நின்றது. அதனால் இம்முறை எல்லாவற்றையும் சொல்லிவிடத் தீர்மானித்திருந்தார் அவள் அப்பா.

சக்திவேல் டவுனில் நல்ல வேலையில் இருந்தாலும் ஒற்றைச் சமஉ கட்சியில் அடையாள அட்டை பெற்ற அடிப்படை உறுப்பினன். கூட்டங்களில் பங்கேற்பான் - “மயக்கிக் கூட்டிட்டுப் போன ஈன சாதிப்பயலுக கிட்ட இருந்து நம்ம புள்ளைகளக் காப்பாத்தற வரைக்கும் நம்மகிட்ட வேகம் இருக்கு. ஆனா அதே புள்ளைக்குத் தாலி கட்ட மட்டும் நம்மாளுகளுக்கு ஏன் மனசு வர மாட்டேங்குது? அதச்செய்யலன்னா காதலைப் பிரிக்கறம்ங்கற கேட்ட பேருதான் நமக்கு நம்ம புள்ளைககிட்ட இருக்கும்.”

மாதவியின் அப்பா பவ்யமாய் சன்னக்குரலில் விஷயத்தைச் சொன்ன போது சக்தி வேலுக்குத் தலைவரின் கம்பீரக் குரல்தான் மனதில் ஒலித்தது. பெற்றோர் தயங்க, அவன் கல்யாணத்துக்கு ஒப்புக் கொண்டான். அவன் சொன்னது ஒரே நிபந்தனை.

“கல்யாணத்துக்குப் பெறகு ஒழுக்கமா இருக்கனும்.”

“ஐயோ மாப்ள, இப்பவும் அப்படித்தான் அவ. ஏதோ புத்தி கெட்டுப் பண்ணிட்டா.”

சொல்லியிருந்ததை விடக்கூட ஒரு பவுன் போட்டுக் கல்யாணம் செய்து கொடுத்தார்.

முதரலிரவில் அவள் மீது விரல்கூடப் படும்முன் அதையே சொன்னான். விழியோர ஈரத்துடன் மௌனமாய்த்தலையாட்டினாள். விளக்கையும் அவளையும் அணைத்தான்.

*

மாதவி இறங்க வேண்டிய நிறுத்தத்தின் பெயரை நடத்துனர் கதறியதும் இறங்கி, வேகநடையில் அலுவலகம் அடைந்து, ஒரு சம்பிரதாயப் புன்னகையை அணிந்தபடி வரவேற்பறையில் அமர்ந்து நிமிர்ந்த போது வாடிக்கையாளர்கள் காத்திருந்தார்கள்.

அது நகைக்கடன் நிறுவனம். அடகு வைக்க, வைத்ததை மீட்க, தவணை செலுத்த, அல்லது விவரங்கள் அறிந்து கொள்ளவோ மக்கள் வந்து போனபடி இருப்பார்கள். மாதவி அங்கே ரிசப்ஷனிஸ்ட். வருபவர்களை விசாரித்து சம்மந்தப்பட்ட மேசைக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகைக்கடன் குறித்த தகவல்கள், செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை இவற்றை எல்லாம் அவளே கண்டு சொல்லவும் கற்றிருந்தாள்.

அந்த நடுத்தர வயதுக்காரர் கடன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யப் பேனா கேட்டார். வாங்கும் போது அவரது விரல் அவள் கைகளில் கூடுதலாய்ப் பட்டதை உணர்ந்தாள். அவளெதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து விண்ணப்பத்தை நிரப்ப முனைந்தார்.

“அங்க போய் உட்கார்ந்து எழுதுங்கண்ணா. அடுத்து கஸ்டமர் வெயிட் பண்றாங்க.”

‘அண்ணா’ என்பதை அழுத்தினாள். திரும்ப வந்து பேனா கொடுத்த போது இன்னும் தாராளமாய்க் கைகளில் தொட்டார். மாதவிக்குப் பழகி விட்டது. வாடிக்கையாளர்கள் என்றில்லை, மேனேஜர் தவிர, உடன் பணிபுரியும் ஆண்கள் எல்லோரும் ஏதேனும் கொடுக்கும் போதோ வாங்கும் போதோ விரல் படாமல் இருப்பதில்லை. மேனேஜர் நல்ல பிள்ளையாய் இருப்பதற்குக் கூட அவரது வயதுதான் காரணமாய் இருக்கும்.

மதிய உணவு முதலில் மற்றவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டாள். இரட்டை அர்த்தப் பேச்சுக்கள் அவ்வப்போது துருத்தவும் தனியே தாமதமாகப் போகத் தொடங்கினாள். அக்காரணத்தாலேயே அலுவலக வாட்ஸாப் குழுமத்திலிருந்தும் வெளியேறினாள்.

ஒருமுறை அவள் சீட்டில் இருக்கும் தொலைபேசிக்கு ஃபோன் செய்து “கொஞ்சம் நேரம் ஜாலியாப் பேசிட்டு இருக்கலாமா?” என்று எவனோ கேட்டான். யாரென்று சொல்வது? வரும் வாடிக்கையாளர் வரை எல்லோருக்கும் அந்த எண் தெரியும்.

அது ஆண்களின் உலகம். தான் அங்கு ஒரு நுகர்வுப்பொருளென உணர்ந்திருந்தாள்.

வேலை மிக அதிகமாய் இருந்தது. சனி, ஞாயிறுகள் அப்படித்தான். வேலை முடித்துக் கிளம்பிப் பேருந்தேறிப் பார்க்கையில் மணி ஆறே முக்கால். உட்கார இடமில்லை.

*

சக்திவேல் அவளை நன்றாகவே பார்த்துக் கொண்டான். மாதவி ஒருபோதும் பழைய காதலைத் தேடத் துணியவில்லை. அவனும் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை.

டவுனில் வீடு பார்த்துக்குடியேறிய பின் மெல்லத்தனிமையை உணரத்தொடங்கினாள்.

சீரியல் பார்க்கும் பழக்கமில்லை. பக்கத்து வீடுகளில் எப்போதுமா அரட்டை அடிக்க முடியும்! வேலைக்குப் போக நினைத்தாள். எதிர்வீட்டு சுப்ரியா போகிறாள். டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை. ஆனால் சக்திவேலிடம் கேட்கத் தயக்கமாய் இருந்தது.

நெகிழ்வான ஒரு பின்னிரவுத் தருணத்தில் அவனிடம் கிசுகிசுப்பாய்க் கேட்டாள்.

“ஏங்க, நான் வேலைக்குப் போகவா?”

“என்ன திடீர்னு? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.”

திரும்பிப் படுத்துக் கொண்டான். பிறகு அவள் அந்தப் பேச்செடுக்கவில்லை.

எழுந்த போது ஒருவேளை தான் வேலைக்குப் போய்ச் சிரமப்பட வேண்டாம் என்று நினைக்கிறானோ எனத்தோன்றியது. அவன் மீது பிரியமும் கிறக்கமும் கலந்தூறியது.

அவனுக்குப் பிடித்தம் போக, மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளம் வருகிறது. அது அவர்கள் இருவருக்கும் அந்த டவுனில் வாழப் போதுமானதாய் இருக்கிறதுதான். ஆனால் சக்திவேலுக்கு வீடு வாங்க வேண்டும் என்ற கனவிருந்தது. டவுன் எனினும் சிறுநகரமாக விரிந்துகொண்டிருந்தது என்பதால் எழெட்டு லட்சமாவது தேவைப்படும். ஒன்றே முக்கால் லட்சம் சேர்த்து வைத்திருந்தான். மீதிக்கு வங்கிக்கடன் முயலலாம்.

குழந்தை இப்போதைக்கு வேண்டாமென ஒத்திப் போட்டிருந்தார்கள். சொந்த வீட்டில் தான் தன் குழந்தை தவழ வேண்டும் என வைராக்கியம் கொண்டிருந்தான். ‘ஏதாவது விசேஷமா?’ என்று அவ்வப்போது கேட்டவர்களைச் சமாளிக்கப் பழகிவிட்டார்கள்.

பிறகு அவனே ஒருமுறை கேட்டான், “மாதவி, வீட்ல இருக்க போர் அடிக்குதா?”

என்ன சொல்வதென அவளுக்குக் குழப்பமிருந்தது. ஆமோதிப்பாய்த் தலையசைத்தாள்.

“நாம ஒரு வீடு வாங்கனும் மாதவி. நீ வேலைக்குப் போனா அது வேகமா நடக்கும்.”

“அதை ஏன் இப்படி உம்முன்னு மூஞ்சிய வெச்சுட்டு சொல்றீங்க? நான் போக ரெடி.”

“நீ வேலைக்குப் போறது பெரிய விஷயம் இல்லை. ஆனா பத்திரமா இருக்கனும்.”

அவள் புரியாது பார்க்க, தொடர்ந்தான், “எல்லா ஆம்பிளைகளும் ஒரே மாதிரி இல்ல.”

அவள் அழுத்தமாய்ச் சொன்னாள், “எல்லாப் பொம்பளைகளும் ஒரே மாதிரி இல்ல.”

*

பிகாம் டிஸ்கன்டின்யூட் என்ற தகுதியுடன் கரிகுலம் விட்டே அடித்து வேலைக்கு விண்ணப்பித்த போது முதல் ஐந்து நிறுவனங்களில் எந்த பதிலும் கிட்டவில்லை.

சுப்ரியாவிடம் போய்ப்புலம்பினாள். அவள் இரு உதவிகள் செய்தாள். ஒன்று தனக்குப் பழக்கமானவர்கள் வழி இரண்டு, மூன்று நிறுவனங்களில் காலியிடங்கள் இருப்பதை அறிந்து விண்ணப்பிக்கச்சொன்னாள். அடுத்து ஒரு முக்கிய அலோசனை சொன்னாள்.

“ஒரு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ இருந்தா அதை ரெஸ்யூம்ல சேருங்களேன்.”

சேர்த்தாள். இரண்டாவது நிறுவனத்தில் நேர்முகத் தேர்வுக்கு வரச் சொன்னார்கள். மூன்றாவதில் வேலை கிடைத்தது. ஆனால் அவள் விண்ணப்பித்தது அக்கவுண்டன்ட் வேலைக்கு. கிடைத்தது ரிசப்சனிஸ்ட் பணி. மறுபடி சுப்ரியாவிடம் தஞ்சமடைந்தாள்.

“முதலில் இதில் சேருங்க. அதில் இருந்துட்டே வேற வேலைக்கு முயற்சிப்போம். அல்லது அங்கயே கூட கொஞ்சம் வேலை கத்துக்கிட்ட பின் கேட்டுப் பார்க்கலாம்.”

மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள்தான் புரிந்தது, தினம் வந்து கூட்டிப் பெருக்கி, கழிவறை கழுவிப் போகும் ஆயா தவிர அங்கே பணி செய்யும் ஒரே பெண் அவள்தான். ஆயா கழுவிப் போகும் கழிவறை கூட ஒன்றுதான்.

காலை ஒன்பது மணிக்கு அலுவலகம் வர வேண்டும். ஒன்பதரை மணி நேர வேலை. அதில் அரை மணி மதிய உணவுக்கு. சனி, ஞாயிறு வேலை நாள். புதன் விடுமுறை. சக்திவேலுக்கு ஞாயிறு லீவ் நாள். இருவரும் வெளியே போவதே குறைந்துவிட்டது.

வேலைக்குப் போய் வந்த முதல் நாளிரவு சக்திவேல் கேட்டான்.

“ஆஃபீஸ்ல எத்தனை ஆம்பிளைங்க வேலை செய்யறாங்க?”

*

பெண்களுக்கெனத் தனிக் கழிவறை கிடையாது என்பதால் பயன்படுத்திய சானிடரி நேப்கினை அதன் பச்சை உறைக்குள் போட்டு அதை பாலிதீன் பையிலிட்டுச் சுற்றிக் கைப்பையிலேயே வைத்தெடுத்து வந்து வீடு திரும்பும் வழியில் குப்பையிலெறிவாள்.

கழிவறைக்கு ரிசப்ஷனிலிருந்து எல்லோரும் வேலை பார்த்திருக்கும் மேசைகளைத் தாண்டித்தான் போக வேண்டும். கைப்பையுடன் கழிவறை நோக்கி அவள் நடக்கும் போது மேசைகளிலிருக்கும் கண்கள் என்ன வேலையிலிருந்தாலும் தன்னை நோக்கி ஒருமுறை பார்த்துப்பின் தங்களுக்குள் பார்த்துச் சிரித்துக் கொள்வதை அறிவாள்.

மாதவி பொதுவாய் அலுவலகத்தில் கழிவறை செல்வதைத் தவிர்த்தே வந்தாள். சிறுநீரைக் கூட அடக்கி வைத்திருந்து வீட்டுக்கு வந்துதான் போவாள். அதனால் இடையில் தண்ணீர் குடிப்பதையும் குறைத்துக் கொண்டாள். ஒருமுறை யூரினரி இன்ஃபெக்ஷன் வந்து டாக்டரிடம் போன போது “ஒண்ணுக்கு வந்தா அடக்குவீங்களா?” என நேரடியாய்க் கேட்டாள். அலுவலத்தில் ஓரளவு சுத்தமாகத்தான் பராமரித்தார்கள். பிரச்சனை அதுவல்ல. அவள் பார்த்திருந்த எத்தனையோ பெண்கள் கழிவறைகளை விட அது மிக மேலானதாகவே இருந்தது. அவள் தவிர்த்தலின் காரணம் அதுவன்று.

ஒரு முறை கழிவறையில் ஆபாசப்படம் வரைந்து, பாகம் குறித்து, கீழே ‘மாது’ என எழுதப்பட்டிருந்தது. பார்த்து அங்கேயே அழுது, யோசித்து, கண் துடத்து வெளியே வந்து மேனேஜரிடம் சொன்னாள். அவர் யோசித்து விட்டு, இதைப் பெரிதுபடுத்தினால் அலுவலகம் முழுக்கக் கேலிப் பொருளாவாள் என்று சொல்லி, வரைந்திருந்ததை அழிக்க ஆயாவை வைத்து ஏற்பாடு செய்வதாகவும், அடுத்த முறை இப்படி நடந்தால் எல்லோரையும் கூப்பிட்டு எச்சரிக்கலாம் என்றும் சொன்னார். அவளுக்குச் சங்கடம் எனில் இனிமேல் தன் கழிவறையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சொன்னார்.

அவருக்கு அலுவலகத்தில் தனியறை. அதனுள் சிறிய கழிவறை. அதைப் பயன்படுத்த ஒவ்வொரு முறையும் அவர் அறைக்குச் செல்ல வேண்டும். சரி வராது. அவளையும் மேனேஜரையும் இணைத்துப் பேசுவார்கள். அனாவசியமாக அவருக்கும் தன்னால் கெட்ட பெயர் வரும். தவிர, அவளுக்கு அப்படிப் போய்வரச் சங்கோஜமாய் இருந்தது.

“பரவாயில்ல சார். நான் பார்த்துக்கறேன். அடுத்த முறை நடந்தா யோசிக்கலாம்.”

*

ப்ரோக்கரிடம் சொல்லி வைத்திருந்து அவர் காட்டிய வீடுகள் ஏதும் ஒத்து வரல்லை. ஒன்று விலை அதிகம். அல்லது வீடு பிடிக்கவில்லை. அல்லது சுற்றம் சரி இல்லை.

ஒரு மாதம் முன் ப்ரோக்கர் காட்டிய வீடு மிகவும் பிடித்துப் போனது சக்திவேலுக்கு. மாதவியை அழைத்துப் போய்க் காட்டி வந்தான். அமைப்பான கார்னர் சைட். கிழக்குப் பார்த்த வீடு. கட்டி பதினைந்து வருடமாகியிருப்பினும் நன்றாகப் பராமரித்திருந்ததால் அத்தனை பழையதாகத் தோன்றவில்லை. வீட்டு உரிமையாளர் விலை பத்து லகரம் சொன்னார். பேரம் பேசி கடைசிக்கு ஒன்பதே காலுக்கு இறங்கி வந்தார். அவருக்கு அவசரத்தேவை இருந்தது. சக்திவேல் வங்கிக்கடன் வேலையை முடுக்கி விட்டான்.

“அவ்வளவு லோன் எலிஜிபிலிட்டி இல்லங்க. மேக்ஸிமம் அஞ்சரை லட்சம் வரும்.”

போதாது. பத்திரச் செலவு, சார்பதிவாளர் லஞ்சம், மராமத்து வேலைகள் சேர்த்தால் எப்படியும் எட்டு லட்சம் கடன் தேவை. அதைத்தான் கேட்டிருந்தான். இப்போது இப்படிச் சொல்கிறார்கள். இரண்டரை லட்சம் வித்தியாசம். மாமனாரிடம் கேட்டால் இன்னும் ஒரு எழுபத்தைந்தாயிரம் கிடைக்கக்கூடும். எப்படிப் பார்த்தாலும் போதாது.

“என் வைஃப் சேலரியும் சேர்த்து ஜாயிண்ட் லோன் போட முடியுமா?”

“அவுங்க சம்பளம் எவ்வளவு?”

“ஆறாயிரம்.”

“பத்தாதுங்க. பதினஞ்சாயிரம் இருந்தா ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.”

*

வேர்வை கசகசக்க மாதவி பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு நடந்தாள். தெருவில் நுழைந்ததும் இன்னமும் நாய்கள் உற்சாகமாய்ச் சுற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அவள் உள்ளே நுழைய சக்திவேல் கண்கள் தானாய் சுவர்க்கடிகாரத்துக்குப் போயின. மாதவி அதைப்பொருட்படுத்தாது கேட்டாள். “தோசை சுடறேன், சாம்பார் இருக்குல்ல.”

பக்கத்து வீட்டு கதிரேசன் - மங்கையர்கரசி அக்கா வீட்டுக்காரர் - குரல் கொடுத்தார்.

“ஸார், ஃப்ரியா இருந்தா வாங்க. இந்த நாய்க தொல்லை பத்திப் பேசிடலாம். ஸ்ட்ரீட் ஆளுங்கள வரச் சொல்லி இருக்கோம். முருகேசன் சார்கிட்டயும் சொல்லிடுங்க.”

சட்டை அணிந்து மாதவியிடம் சொல்லிக் கிளம்பினான். பேசிக் கொண்டிருந்தார்கள்.

“ரொம்பத் தொல்லையா இருக்குங்க.”

“ராத்திரி தூங்க முடியறதில்ல.”

“ஹாஃபேர்லி எக்ஸாம் நடக்கற நேரம். பசங்க படிக்கறதுக்கும் பிரச்சனை ஆகுது.”

“தெரு பூரா அசிங்கம் பண்ணியும் வெச்சிடுதுங்க.”

பல விஷயங்கள் யோசித்துப் பின் விஏஓ அலுவலகத்தில் பணிபுரியும் முருகேசன் மறுநாள் காலை முன்சிபாலிட்டி அலுவலகத்தில் புகார் எழுதிக் கொடுப்பது என்றும் உடன் கதிரேசன் போவது என்றும் முடிவாயிற்று. நாய் பிடிக்கும் வண்டி வந்தால் அவர்களுக்கு வீட்டுக்கு ஐம்பது வீதம் போட்டு நானூறு கொடுப்பதென முடிவானது. (தெருவில் பத்து வீடுகள், ஒரு வீடு காலி, செல்வராஜ் வீட்டில் தர மாட்டார்கள்.)

சக்திவேல் வந்து சொன்ன போது மாதவிக்குச் சிரிப்பு வந்தது. நாய் பிடிப்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஏதோ சினிமாவில் காட்டியதும் நினைவிருக்கிறது. ஆனால் நேரில் எல்லாம் பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. எப்படிப் பிடிப்பார்கள்? ஒருவேளை நாய்களைத் துன்புறுத்துவார்களோ என அச்சம் எழுந்தது.

*

எந்தப் பெண்ணும் நகையை அடகு வைக்க வந்து பார்த்ததில்லை. போலவே எந்த ஆணும் வந்து நகையை மீட்டுப் பார்த்ததில்லை. சில சமயங்களில் நகையின் அசல் விலையை விட ஒன்றரை மடங்கு கொடுத்து மீட்டுச் சென்றோர் உண்டு. அவர்கள் மண்டையில் கொட்டி என்ன பைத்தியகாரத்தனம் எனக் கேட்கத் தோன்றும். அதை யோசித்துக் கொண்டிருக்கையில் மேனேஜர் தொலைபேசியில் அறைக்கு அழைத்தார்.

“சௌந்தர் இடம் காலியாகுது மாதவி. தெரிஞ்சிருக்கும் இந்நேரம் உனக்கு.”

“ஆமா ஸார். பேசிக்கிட்டாங்க, அக்கவுண்டன்ட் போஸ்ட் வேகன்ட் ஆகுதுனு.”

“எவ்ளோ நாள் தான் ரிசப்ஷன்லயே உட்கார்வே? உள்ள வர வேண்டாமா?”

“நிச்சயம் வரனும் ஸார். எனக்கும் அதுதான் இன்ட்ரஸ்ட். அப்ளை பண்றேன்.”

“நீ வெளியாள் மாதிரி அப்ளிகேஷன் போடனுமா? மாணவன் தயாரானா குரு தானா அமைவான். அது மாதிரிதான். நான் கவனிச்சிட்டுதான் இருக்கேன். நீ கஸ்டமர்கள் கிட்ட பேசற விதம், நம்ம எம்ப்ளாயீஸ் இல்லாதப்ப பெரும்பாலான விஷயங்களை உன்னால கவனிச்சுக்க முடியுது. நீ அக்கவுண்டன்ட் வேலைக்குத் தயாராகிட்ட பின் நான் கொடுக்காம இருக்க முடியுமா? தடுக்கலாமா? உன் திறமை உன் வளர்ச்சி.”

“என்ன சொல்றதுனு தெரியல. உங்க நம்பிக்கையக் காப்பாத்துவேன், ஸார்.”

“சாலரி மன்த்லி 13,350. ஓவர்டைம் பார்க்கறது தனி. சனி, ஞாயிறு லீவ்.”

“சந்தோஷம் ஸார்.”

“நாந்தான் ரிஸ்க் எடுக்கறேன். இந்த போஸ்டுக்கு பிகாம் மினிமம் க்வாலிஃபிகேஷன். நீ இன்னும் கம்ப்ளீட் பண்ணலைல? ஏதும் தப்பாப் பண்ணி பிரச்சனை வந்தா பிகாம் இல்லாதவள ஏன் ரெக்ரூட் பண்ணினன்னு என் தலையத்தான் மேல உருட்டுவாங்க.”

“நான் சின்சியரா வொர்க் பண்ணுவேன் ஸார். ரொம்ப தேங்க்ஸ்.”

“அவ்ளோ தானா! புரிஞ்சிக்கவே மாட்டேங்கறியே, மாது!”

‘மாது’ என்றதும் திடுக்கிட்டாள். அவளுக்குப் புரிந்தது. கண்களில் நீர் திரண்டது. அவர் கேட்ட விஷயத்தை விட அவரும் அப்படித்தான் என்ற அதிர்ச்சி அவளை நடுக்கியது.

ஏதும் பேசாமல் வெளியே வந்தாள். பின்னால் மேனேஜரின் குரல் பாய்ந்து தேய்ந்தது.

“அவசரமில்ல. யோசிச்சு சொல்லு. ஆனா எதுனாலும் நமக்குள்ள இருக்கனும்.”

*

இரண்டாம் இரவாய் நாய்களை உத்தேசித்துத் தெருக்கார ஆண்கள் கூடியிருந்தார்கள். சக்திவேல் போன போது முருகேசன் முன்சிபாலிட்டி படலத்தை விவரித்திருந்தான்.

“இன்னும் ஒரு வாரம் பத்து நாள் ஆகுமாம். நம்ம முன்சிபாலிட்டிக்குனு தனியா நாய் புடிக்கற வண்டி கிடையாது. கார்ப்பரேஷன்ல இருந்து அவுங்க ஃப்ரியா இருக்கற நாள் தான் அனுப்பி வைப்பாங்க. அது எப்பன்னு சொல்ல முடியாது. முன்னபின்ன ஆகும். இவுனுகளே பத்து நாள்னா, ரெண்டு வாரமாச்சும் ஆக்கிடுவாங்க. அது ஆகறதில்ல.”

“இப்படித் திரிஞ்சிட்டு இருந்தா பொண்டு புள்ளைக தெருவில் நடமாட வேண்டாமா?”

“ஆமா ஸார், நேத்து எம்பையன் நாயிக என்னப்பா பண்ணுதுனு கேக்கறான்.”

“டிக்கிலோனா விளையாடுதுகன்னு சொல்ல வேண்டியதுதானே ஸார்!” சிரித்தார்கள்.

“முன்சிபாலிட்டிகாரன் வர மாட்டேன்னுட்டான். இப்ப நாமளா நாய் புடிக்க முடியும்?”

“எனக்கு ஒரு யோசனை இருக்கு.”

*

சக்திவேல் வீட்டுக்குள் நுழைந்தான். குளியலறையில் சோப்பிட்டுக் கை கழுவினான்.

”செம டயர்ட். பசிக்குது. இன்னிக்கு என்ன?”

“அடைங்க, ரெடிதான். வந்து சாப்பிடுங்க.”

அடையை விண்டு உண்டு கொண்டிருக்கும் போது பேசத் தொடங்கினாள்.

“நான் வேலையை விடப் போறேங்க.”

சாப்பிடுவதை நிறுத்தித் தலையை நிமிர்த்தி, “என்ன திடீர்னு?” எனக் கேட்டான்.

“எல்லாமே தப்பா இருக்குங்க. இன்னிக்கு மேனேஜர் பேசினார். ரிசப்ஷனிலிருந்து அக்கவுண்டன்ட் வேலை ப்ரமோஷன். ஆனா அவருக்கு அட்ஜஸ்ட் பண்ணனும்.”

சக்திவேல் மேஜேனரின் தாயின் ஒழுக்கத்தை அவமதிக்கும் வசைச்சொல் ஒன்றை உதிர்த்தபடி தட்டை அப்படியே வைத்து விட்டுச் சமையலறையில் கைகழுவினான்.

“ஐய்யய்யோ, என்னங்க பாதிலயே எழுந்திட்டீங்க. பசின்னு வேற சொன்னீங்க.”

அவன் ஏதும் பேசாமல் படுக்கைக்குப் போனான்.

“நான் ஒரு கிறுக்கி. சாப்பிட்ட பிறகு இதெல்லாம் பேசி இருக்கனும். டயர்ட்னு சொன்னீங்க, சீக்கிரம் தூங்கிடுவீங்களோன்னுதான் இப்பவே சொல்லிடலாம்னு.”

பாத்திரங்களை அவசரமாய் அப்புறப்படுத்தி விட்டு அவளும் போனாள்.

அவனைக் கட்டி அழ வேண்டும் போல் தோன்றியது. இப்போது பேசினால் அவன் எரிந்து விழக்கூடும் என்றும் தோன்றியது. அதனால் விளைக்கை அணைத்து விட்டு அமைதியாய் அவனருகே பட்டும் படாமல் வந்து படுத்துக் கொண்டாள். வெகுநேரம் அவன் ஏதும் பேசவே இல்லை. கண்களை மூடிப் படுத்திருந்தான். யோசிக்கிறானா தூங்கி விட்டானா என்பதும் அவளுக்குப் புரியவில்லை. காத்திருந்து காத்திருந்து கிட்டத்தட்டத் தூங்க ஆரம்பித்தாள். சட்டென அவனது குரல் அவளைக் கலைத்தது.

“அக்கவுண்டன்ட் பரமோஷன் கிடைச்சா எவ்ளோ சம்பளம் வரும்?”

“பதிமூனாயிரம் சில்லறை வரும். ஓடீ பார்த்தா கூட ரெண்டு, மூனாயிரம்.”

“ம்ம்ம். உங்க மேனேஜர் என்ன ஆளுக மாதவி?”

“என்ன கேட்டீங்க?”

“வனத்தோட போனாலும் இனத்தோட சேரனும்னு சொல்வாங்க.”

அவள் திடுக்கெனத் திரும்பி அவன் முகம் பார்த்தாள். அவன் மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்த்திருந்தான். இருளில் அவன் முகம் தெளிவாய்த் தெரியவில்லை.

“ரெண்டு வருஷமா பாக்கறோம் கிடைச்ச வீடும் கைநழுவிடுச்சு.” பெருமூச்செறிந்தான்.

“அதுக்காக என்ன வேணா செய்யறதாங்க?”

“இவ்ளோ நாள் ஒண்ணுமே பண்ணலயா என்ன?”

பேரதிர்ச்சியுற்றாள். கண்களில் இருந்து கசிந்த நீர் இருபுறப்பக்கவாட்டிலும் ஓடியது.

*

மாதவி காலையில் எழுந்தபோது உறக்கமில்லாததால் தலை ஒருபுறமாய் வலிக்க, முகங்கழுவி, சக்திவேல் சொன்னதன் அர்த்தம் விளங்கமுயன்றபடி காஃபி போட்டதில் இன்னொருபுறமும் தலை வலிக்கத் தொடங்கியது. போய்க் கதவைத் திறந்தாள்.

கலைந்த முந்தாநாள் கோலத்தின் மீது படுத்திருந்தது நாய். அதே வெண்மை பழுப்புப் பெட்டை நாய். எவ்வளவு கொழுப்பு இருந்தால் வாசலில் ஒய்யாரமாய்த் தூங்கும்!

“சனியனே! ச்சூ. ச்சூ. ஓடு.” கோபமாய் அதை முடுக்கினாள்.

நகரவே இல்லை. சிறுகல்லெடுத்து அதன் மீதெறிந்தாள். அப்போதும் அசையவில்லை. சந்தேகம் எழ, மெல்ல அருகே சென்று பார்த்தாள். விறைத்துக்கிடந்தது. மூச்சு விடும் அறிகுறியே இல்லை. சுற்றி வந்து பார்த்தாள். வாயில் நுரை தள்ளி இருந்தது. ஈக்கள் மொய்த்தன. திக்கென்றது. வாசலருகே இலையில் பிரியாணி குதறப்பட்டுக் கிடந்தது.

“ஏங்க, வாசலில் நாய் பேச்சுமூச்சில்லாமப் படுத்திருக்குது.” என்று குரல் கொடுத்தாள்.

திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தவன் நாயைப் பார்த்தபடி, “உள்ள போ நீ.” என்று சொல்லிக்கொண்டே தலையணையின் கீழிருந்த செல்ஃபோனைத் துழாவி எடுத்தான்.

“கதிரேசன் ஸார், அந்தப் பொட்டை நாயி போயிருச்சு.”

“எங்க வீட்டு முன்னாடிதான் கெடக்குது. பாதி பிரியாணியத் தின்னுடுச்சு.”

”ஆமா, எடுத்து வெச்சிடறேன். வேற நாய்க ஏதும் வந்து தின்னு வெச்சா பிரச்சனை. பக்கத்துல சொல்லிடுங்க, ஆளுக வந்தா விடியறதுக்குள்ள போய்ப் பொதச்சிறலாம்.”

துண்டித்து விட்டு மீதமிருந்த பிரியாணியை இலையுடன் கவனமாய் எடுத்து ஒரு பாலிதீன் கவரில் போட்டு வீட்டுக்குள் கொணர்ந்தான். “வெசம் போட்டது. குப்பைல எறிஞ்சறாதே. நாய் பூனைன்னு தின்னுறப்போகுது. அப்புறம் தீ வெச்சு எரிச்சிடலாம்.”

“கொன்னுட்டீங்களா அந்த நாயை?”

“ஏய், வேறென்ன செய்ய? மாசம் பூரா இந்தத் தெரு மனுசங்க தூங்க வேண்டாமா?”

“இந்த நாய் என்ன பண்ணுச்சு? பின்னாடி மோந்து திரிஞ்சதுகளத்தானே கொல்லனும்?”

“அதுக எத்தனையக் கொல்ல? இது ஒண்ணைத் தூக்கினா மத்தது பூரா அடங்கிரும்.”

வெளியே காலடிகள் கேட்டன. சக்திவேல் சட்டையணிந்து கிளம்பினான். நாயை இழுக்கும், பேசிக்கொண்டே தூக்கும், சாக்குப்பைக்குள் போடும் ஓசைகள் மிதந்தன.

மாதவி நெடுநேரம் அப்படியே நின்று கொண்டே இருந்தாள். கதவைத் தாளிட்டாள். நைட்டியை அவிழ்த்துவிட்டுச் சுடிதார் அணிந்தாள். கண்ணாடி பார்த்துக்கொண்டாள்.

கவரைப் பிரித்து நாய் மிச்சம் வைத்திருந்த பிரியாணியைத் தின்னத் தொடங்கினாள்.

***

(தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. 18.03.2018 தினமணி கதிர் இணைப்பிதழில் வெளியானது.)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 05, 2018 22:34

March 30, 2018

மோகினியாட்டம் [சிறுகதை]


“பொம்பளைன்னா நாணிக் கோணனும். போத்திக்கிட்டு நிக்கனும். பொத்திக்கிட்டு இருக்கனும். அதானே? யூ மேல்ஷாவனிஸ்ட் பிக்!”

ஃபேஸ்புக் மெஸெஞ்சரில் அனற்பொறி பறக்காத குறையாகக் கோபப்பட்டாள் சுஜா.

“திட்டு எதுக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு வாங்கினா ஆறுதலா இருக்கும்!”

ரமணியின் வாக்கியத்தில் மிதந்த கேலி அவளை மேலும் ரௌத்திரமாக்கியது.

“உலகமயமாக்கலில் காணாமல் போனவர்கள் வெட்கப்படும் பெண்டிரும் வேதனைப்படும் ஆண்களும். - இது என்னடா ஸ்டேட்டஸ்?”

“உண்மைதானே!”

“கையில் பால்சொம்போட தலை குனிஞ்சுக்கிட்டே பெண்கள் ஃபேஸ்புக் வரனுமோ!”

“ஏய், அந்த ஸ்டேட்டஸில் ஆம்பிளைகளையும்தானே கேலி பண்ணி இருக்கேன்!”

“பொய். ஆம்பிளை எப்போ வேதனைப்படுவான்? பொம்பளை ஏமாத்தினா. ஆனா இப்ப இருக்கறவனுக அதைக் கடந்துடறாங்கன்னு பாஸிடிவ்வாச் சொல்றே.”

“பொம்பளைக இப்பலாம் அப்படி ஏமாத்தறதில்லன்னும் எடுத்துக்கலாம்ல?”

“ஒரு தறுதலை எப்படி யோசிப்பான்னு தெரியாதா!”

“:-)))”

“என்ன இளிப்பு?”

“நீ ஆம்பிளையாப் பொறந்திருக்கனும்னு நினைச்சேன்.”

“பொறந்திருக்கலாம்தான். நீ பொம்பளையாப் பொறந்திருந்தா!”

“என்ன மேடம் சட்டுனு ரொமான்டிக் ஆயிட்டீங்க!”

“ஆனா பால் சொம்பு கொண்டு வருவேன்னு மட்டும் நினைச்சுக்காதே!”

அதற்கு மேல் அவர்கள் சாட்டை எட்டிப் பார்க்க வேண்டாம். அவர்களின் பெர்சனல்.


சுஜா ஃபேஸ்புக் பிரபலம். அவள் புகைப்படம் பகிராமலேயே பத்தாயிரம் பேர் ஃபாலோ செய்கிறார்கள். ஃபீல்குட் ஃபேரி. காதல், மென்காமப் பதிவுகள் வழி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறாள். ப்ரப்போசல்கள் வரத்து சகஜம்.

ரமணி அத்தனை பிரபலமல்ல. அதற்கு அவன் ஆண் என்பது ஒரு காரணம்; ஆண் - பெண் உறவுப் பாசாங்குகள் குறித்த முகத்திலடிக்கும் பதிவுகள் மற்றொரு காரணம்.

சுஜாவும் ரமணியும் கடந்த ஆறேழு மாதங்களாகச் சாட்டில் பேசிக் கொள்கிறார்கள். சாதாரண விசாரிப்புகளாய்த் தொடங்கியது மெல்லப் பற்றிக் கொண்டது. இப்போது ரமணியின் மாதச் சம்பளம் அவளுக்குத் தெரியும். சுஜாவின் மாதாந்திரத் தேதிகள் அவனுக்குத் தெரியும். எழுதும் பதிவுகளில் பரஸ்பரம் ஒரு கமெண்ட் உத்திரவாதம்.

என்ன பேசுவார்கள்? எல்லாம். ஆம், ‘எல்லாம்’. முதலில் சுஜா தயங்கினாள். ரமணி வில்லங்கமாய் ஏதேனும் பேசினால் “ம்ம்ம்” என்பாள் அல்லது குறிப்பிட்ட சாட்டுக்கு பதில் சொல்லாமல் கடப்பாள். ஆனால் உரையாடலை வெட்டியதில்லை; பேச்சை மாற்றியதில்லை; விருப்பமின்மையை வெளிப்படுத்தியதில்லை. அவளது “ம்ம்ம்” என்பதை “எனக்குப் பேச முடியவில்லை, ஆனால் நீ பேசுவதை மௌனமாய்க் கேட்க விரும்புகிறேன், பேசு” என்பதாய்க் கச்சிதமாய் மொழிபெயர்த்துக் கொண்டான் ரமணி.

ரமணி எல்லை மீறுகையில் சுஜாவின் அம்மா அவளை அழைப்பாள் அல்லது அவள் வீட்டில் காலிங்பெல் அடிக்கும் அல்லது மழை பெய்யத் தொடங்க, உலர்த்திய துணி எடுக்க மாடிக்கு ஓடி விடுவாள். இதெல்லாம் ஆரம்பத்தில். இப்போதெல்லாம் அம்மா, காலிங்பெல், மழை என எதுவும் அவர்களின் சாட்டைத் தொந்தரவு செய்வதில்லை.

ரமணிக்கு அவளைப் பிடித்திருந்தது. இம்மாதிரி வேறிரண்டு பெண்களுடனும் பேசி இருக்கிறான் என்றாலும் இவள் வேறு மாதிரி. வெறும் லிப்ஸ்டிக் அழகியல்ல; அந்த உதடுகளைக் கொண்டு அழகாய் உரையாடவும் அதில் விளையாடவும் தெரிந்தவள்.

இவளோடு சலியாது பேசிக் கொண்டே இருக்கலாம். அத்தனை சுகம்! விரல்கட்கும் கண்களுக்கும் மனதுக்கும் இடையே பெரும் போதையென அவ்வரட்டைகள் திரண்டு எழுந்து ஆட்கொண்டதை மிக அனுபவித்தான். அவள் மீது காதல் பெருக்கெடுத்தது.

அவளது பிறந்த நாளின் போது தீர்மானித்துத் தன் மனதை வெளிப்படுத்தினான்.

“எப்பவும் சொல்லிக்கறது தானே!”

“இல்லடி, இது நிஜ 'ஐ லவ் யூ'.”

“என்னைப் பத்தி என்ன தெரியும் ரமணி உனக்கு?”

“என்ன தெரியனும்?”

“நான் கருப்பா சிவப்பா, உயரமா குட்டையா, அழகா குரூரமா ஏதாவது தெரியுமா?”

“இதெல்லாம் அவசியமா?”

“சரி, நான் ஒழுக்கமான்னு தெரியுமா? எனக்கு கல்யாணம் ஆகலைன்னு தெரியுமா? குழந்தை பொறக்குமான்னு தெரியுமா? எய்ட்ஸ் இல்லைனு தெரியுமா? சென்னைனு போட்டிருந்தா உண்மையா? ரியல் எஸ்டேட்ல ஸ்டெனோகிராஃபர்னா நம்பிடுவியா?”

“ஏய்…”

“என் நிஜ வயசு தெரியுமா? மெனோபாஸ் முடிஞ்ச கிழவின்னா என்ன செய்வே?”

“இந்த மாதிரி ஏமாறதெல்லாம் நிஜ வாழ்க்கைல வர்ற காதல்ல கூட நடக்கும்!”

“ஆனா இங்கே ரிஸ்க் ஜாஸ்தி இல்லையா? இங்க வடிகட்டப்பட்ட முகத்தைத்தான் காட்டறோம். எல்லாத்துக்கும் மேல இங்க ஒருத்தரைப் பத்தி விசாரிக்க முடியுமா?”

“நான் எடுக்கறது ரிஸ்க்னு தெரியும். ஆனா வேற வழி இல்ல. இப்ப இதைச் செய்யலைன்னா பின்னாடி நினைச்சு வருந்துவேன்.”

“தவிர, இதே கேள்விகள் எனக்கும் இருக்கும்ல? உன்னைப் பத்தி எதுவுமே தெரியாது - ஓர் இதமான ஸ்பரிசம் மாதிரி ரொம்பச் சுகமா இருக்கு உன் பேச்சுங்கறதத்தாண்டி.”

“ம்.”

“சரி, எனக்கு அவகாசம் கொடு. ஆனா இதை நம்பிக்கை கொடுக்கறதா எடுத்துக்காதே.”

“எடுத்துக்கோ, எவ்ளோ வேணும்னாலும் எடுத்துக்கோ. வேண்டாம்னு சொல்லவும் உனக்கு உரிமை இருக்குதான். ஆனா அது ஏன்னு சொல்ற கடமையும் இருக்கு.”

ஆர்வமும் ஆசையும் நம்பிக்கையும் பயமுமாய் விடியல்கள் விரைந்தன. ஒன்றரை மாதம் கழித்து அவன் பிறந்த நாளில் ஃபேஸ்புக் டைம்லைனில் பட்டாசு வெடித்து வாழ்த்தி விட்டு சாட் வந்தவள், அவனுக்கான பரிசைத் தரப்போவதாகச் சொன்னாள்.

நகங்கடித்துக் காத்திருக்க, சாட் விண்டோவில் ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வந்து விழுந்தது. அவர்களிடையே சில மாதங்கள் முன் நிகழ்ந்த ஓர் அந்தரங்கச் சம்பாஷணைத்துண்டு.

“இதுக்கென்ன? நாம எப்பவும் பேசறது தானே!”

“இதுதான் என் பரிசு.”

“புரியல.”

“முதலில் நீ ஒரு அதிர்ச்சிக்குத் தயாராகனும் ரமணி. குதிக்காம நான் சொல்றதக் கேட்கனும். எல்லாத்துக்கும் மேல உனக்கு வேற வழியும் இல்லை.”

“ம்.”

“நான் பெண் இல்ல. ஆண்.”

“என்ன சொல்ற?”

“புரியற மாதிரி சொன்னா நான் ஒரு ஃபேக் ஐடி.”

“ஏய்…”

“உன் பலூனில் ஊசி குத்தியாச்சு. எல்லாம் முடிஞ்சுது.”

பதில் இல்லை. அதிர்ச்சி. பேரதிர்ச்சி. ரமணி பதற்றமாகி யோசிக்கத் தவித்தான்.

“இப்ப ஸ்க்ரீன்ஷாட்டை மறுபடி பாரு. பரிசு புரியும்.”

பரபரப்புடன் அவசரமாய் மெசஞ்சரில் மேலே ஸ்க்ரோல் செய்து அதைப் பார்த்தான்.

மனதில் பகீர் என்றது ரமணிக்கு. அத்தனை திறமையாய் கட்டமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதியை மட்டும் படிப்பவர்களுக்கு ரமணி சுஜாவிடம் வலிந்து ஆபாசமாய்ப் பேசியது போலவும் அவள் சங்கடத்தில் தவித்தபடி நெளிவது போலவும் தோன்றும்.

“நம்பிக்கை துரோகம். யூ ஆர் சீப்.”

“அஃப்கோர்ஸ். ஐயாம்!”

“யார் நீ?”

“அது உனக்குத் தேவையில்லை, ரமணி. உன் மேல மதிப்பு இருக்கு. கருத்துக்களின் மீதும் தனிப்பட்டும். இதுவரைக்கும் என்கிட்ட நீ ஃபோன் நம்பரோ, ஃபோட்டோவோ கேட்கல. வந்து பேசறவனெல்லாம் எண்ணி நாலாம் நாள் அதைத்தான் கேட்கிறான்.”

“இப்ப மட்டும் என்ன? ஏமாத்த வேண்டாம்னு ஞானோதயமா?”

“ஆமா, நீ இதை இதுக்கு மேல சீரியஸா எடுத்துக்கறது நல்லதில்லனு தோனுச்சு.”

“ஓ!”

“தவிர, இதுவரை ஏழு பேர் கிட்ட பேசி இருக்கேன், எதுவும் இவ்ளோ நாள் நீடிக்கல. ஒரு கட்டத்தில் எனக்கே இந்த உறவு நல்லதில்லன்னு தோன ஆரம்பிச்சிடுச்சு.”

“இதெல்லாம் ஏன்?”

“இதை ஒரு ஃபன்னாத்தான் தொடங்கினேன். இங்கே அத்தனை வறட்சி. பெண் லேசா கண்காட்டினா மெசஞ்சர்ல தவங்கிடக்கறாங்க. விடியவிடிய, வடியவடியப் பேசறாங்க. பெண்ணை வீழ்த்த என்ன வேணும்னாலும் பொய் சொல்றாங்க. இறங்கிப் போறாங்க. அவுங்க சொல்ற பொய்ல நான் சொல்றதெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு ஆயிடுது.”

“…”

“அந்த விஷயத்துல நீ அவ்வளவு கெட்டவன் இல்லை ரமணி.”

“ம்.”

“அவுங்களுக்கு நான் ஃபேக்னு தெரிஞ்சதும் குறுக்கால கைகட்டி ஜட்டியோட போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார்ந்திருக்கும் கைதி மாதிரி ஒரு பாவனை வந்திடும் பாரு, ப்ளிஸ்!”

“நீ ஒரு சாடிஸ்ட். சைக்கோ.”

“எல்லோரும்தான்.”

“வாட் நௌ?”

“இது வெளியே போனா உன் இமேஜ் என்னாகும்னு நான் சொல்ல வேண்டியதில்லை. இதை வெச்சு நான் உன் கிட்ட என்ன வேணும்னாலும் கேட்கலாம். நிறைய அப்படி நடக்குது. லட்சங்களில் பணம் கறந்திருக்காங்க. பலவீனத்துக்கு விலை. ஆனா ஏதும் கேட்கப் போறதில்ல. எனக்கு எதுவும் வேண்டாம். ஏன்னா அதுக்கு இதைச் செய்யல.”

“அப்புறம்?”

“நான் ஃபேக் ஐடினு காட்டிக் கொடுக்கக்கூடாது.”

“என்னைப் போலவே இன்னும் நூறு பேரை, ஆயிரம் பேரை ஏமாத்துவே…”

“ஆமான்னு சொன்னாலும் எதிர்க்க, மறுக்க, கோபப்பட முடியுமா உன்னால?”

மஹாமோசமான கெட்ட வார்த்தை ஒன்றை வேகமாய் டைப் செய்து, ஒரு கணம் யோசித்து, பின் தடதடதடவென பேக்ஸ்பேஸை அமுக்கி அதையழித்தான் ரமணி.

“நாம அன்ஃப்ரண்ட் பண்ணிக்கலாம்.”

“குட் ரமணி. அதே. நாம இதுக்கு மேல பேச ஏதுமில்ல.”

“பை.”

“கடைசியா ரெண்டு விஷயங்களை மறுபடி அண்டர்லைன் பண்ண நினைக்கறேன். ஒண்ணு தெரியாத பெண்ணோடு இனிமேல் தேவை இல்லாமல் பேசாதே. ரெண்டு ஸ்க்ரீன்ஷாட் நினைவிருக்கட்டும். அது வெறும் சாம்பிள். இன்னும் நூறு இருக்கு.”

“நிஜமாகவே நீ பொண்ணு இல்லையா சுஜா?”

“நான் சுஜாவே இல்ல.”

ரமணி உடனே அந்த ஃபேக் ஐடியை அன்ஃப்ரண்ட் செய்தான். அப்போதும் திருப்தி இல்லாமல் ப்ளாக் செய்தான். பின் கொஞ்சம் நேரம் யோசித்தபடி அமர்ந்திருந்தான்.

எல்லாமே பொய்யா! சுஜா ஓர் ஆணா! நம்பவே முடியவில்லை. அந்த மென்மையும், குழைவும், சுகந்தமும் ஓர் ஆணுக்குப் பொருந்துமா என்ன! எவ்வளவு திறமையான நடிகனாய் இருந்திருக்கிறான்! அல்லது எத்தனை பலவீனமாய் இருந்திருக்கிறேன்!

பழி தீர்த்தாக வேண்டும் என்ற வன்மம் நெஞ்சில் கனன்றெழுந்த அடுத்த வினாடியே “எல்லாமே சும்மா விளையாட்டுடா” என ஓடி வந்து சுஜா சொல்லி விட மாட்டாளா என்ற நப்பாசை ஒரு கணம் தோன்றி மறைந்தது. கசப்பாய்ச் சிரித்துக் கொண்டான்.

சுஜா பெண் இல்லை என ரமணி கடைசி வரை யாரிடமும் வெளிப்படுத்தவில்லை.

போலவே, தான் பெண் என்பதையும் ரமணி எவரிடமும் சொல்லவில்லை. பிறப்பால் பெண்ணாக இருந்தாலும் ஏதோவொரு புள்ளியில் மனரீதியாகத் தன்னை ஓர் ஆணாக உணரத் தொடங்கியதால்தான் ஆண் பெயரில் ஃபேஸ்புக் ஐடி திறந்திருந்தாள் ரமணி.

சுஜாவை ரமணியால் மறக்கவே முடியவில்லை. வெளிவரும் யுக்தியறியாத ஒரு பத்மவியூகத்துள் மனம் சிக்கிக் கொண்டது. தான் ஆணாக உணர ஆரம்பித்தது சரிதானா என யோசித்தாள். அது இயற்கையின் தீர்மானமா அல்லது தன் பிரமை தானா எனக் குழம்பினாள். போய்ப் போய் சுஜாவின் ஃபேஸ்புக் சுவர் பார்த்தாள்.

சிரமங்களுக்குப் பின் சுஜாவின் ஒரிஜினல் ஐடியைக் கண்டுபிடித்து விட்டாள் ரமணி. சுஜா ஆணாக இருந்தால்தான் என்ன என்று தோன்றியது. புதிதாய் வெட்கப்பட்டாள்!

***

(காமதேனு 18-மார்ச்-2018 இதழில் வெளியானது)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2018 05:04

March 19, 2018

காமத் தாழி [சிறுகதை]


சாகஸ ராத்திரி!

அந்தப் பெயரே ஜிலீர் என்றிருந்தது சில்வியாவுக்கு. ADVENTURE NIGHT என்று காப்பர் ப்ளேட் கோத்திக் எழுத்துருவில் அச்சிடப் பெற்ற அந்த நுழைவுச் சீட்டை எடுத்தாள். முகமூடி, மதுக்கோப்பை, வாண வேடிக்கைக்கிடையே Happy New Year’s Eve – 2018. ₹ 1,00,000 என்றிருந்த பொன்ஜிகினாப் புடைப்பை விரல்களால் ஆதூரமாய்த் தடவினாள்.

பார்த்திபன் முதலில் அதைச் சொன்ன போது விளையாடுகிறான் என்றே நினைத்தாள்.

“ச்சீய்… போடா பொறுக்கி!”

அவன் எப்போதும் அப்படித்தான். ஆபாசமாய்ப் பேசிச்சிரிக்க வைப்பதில் அசகாயசூரன்.


சில்வியா திருமணமாகி இவ்வூருக்கு வந்து இரண்டரையாண்டுகள் ஆகின்றன. மொழி தெரியாத மிலேச்சர்கள் சூழ வாழும் அந்த அந்நியப் பிரதேசத்தில் ஒவ்வொரு பகலும் ஒவ்வொரு ராத்திரியும் அத்தனை அனுபவித்து, அத்தனை ரசித்து நகர்த்த முடிகிறது அவளுக்கு. சண்டைகள் ஏராளம். அதன் பின்பான கொஞ்சல்கள் அதினினும் தாராளம்.

பார்த்திபனுக்கு எல்லாமே த்ரில்தான். பெய்யும் மாமழையில் நனைந்தபடி சில்ட் பியர் அருந்துவதாகட்டும், கோடைக்கானல் ‘குணா’ பாறையினுள் அவள் கையை இறுகப் பற்றியபடி இறங்குவதாகட்டும், தேசிய நெடுஞ்சாலையில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காரை விரட்டுவதாகட்டும், அதே காரை அதே தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாய் நிறுத்தி பின்னிருக்கையில் வைத்து அவளைப் புணர்வதாகட்டும், யாவுமே த்ரில்! முதலில் திக்கென்றிருந்தாலும் சில்வியாவும் சளைக்காமல் ஈடுகொடுத்தாள்.

“ஒரு நைட் மட்டும் உனக்கு வேற புருஷன், எனக்கு வேற பொண்டாட்டி! ஓக்கேவா?”

சில்வியா அது பற்றி முன்பே கேள்விப்பட்டிருக்கிறாள். ஃபேஸ்புக்கில் யாரோ எழுதி இருந்தார்கள். ஆற்றுப்படுகையை ஒட்டிய உல்லாசவிடுதியில் ரகசியமாய் நடப்பதாய்.

குலுக்கல் முறையில் தம்பதிகள் ஜோடி மாற்றிக்கொள்கிறார்கள். ஒற்றை இரவுக்கு.

பார்த்திபனுக்கு வாழ்க்கை பற்றிய தத்துவம் எளிதானது. இளமை இருக்கும் போதே வாழ்ந்து பார்த்துவிட வேண்டும். நினைத்தாலே இனிக்கும் ‘சிவசம்போ’ பாடலில் வரும் ரஜினி மாதிரி. பிரசித்தி பெற்ற அயல் மதுவகையோ (ஸ்பிரிடஸ்), புதிதாகச் சந்தைக்கு வந்திருக்கும் மின்னணு உபகரணமோ (எக்கோ), அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலமோ (குண்டிமனே), இன்ன பிற விஷயங்களோ (தாய் மசாஜ்) சகலமும் அனுபவித்துவிட வேண்டும். அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாம்.

மற்றபடி, காசை வங்கியில் போட்டு வைப்பதோ, சொத்து வாங்குவதோ, நகைகளாய் ஆக்குவதோ அவனுக்கு விருப்பமில்லை. யாவற்றிலும் - தங்கம் தவிர – சில்வியா ஒத்துப்போனாள். ஆர்வமாய் ஒரு நாய்க்குட்டிபோல் அவனைப் பற்றிக் கொண்டாள்.

பார்த்திபனுக்கு முப்பத்தியிரண்டு வயதாகிறது. சில்வியா மூன்று வயது இளையவள். அவனுக்கு ஒரு தசாப்த ஐடி அனுபவம். துரித வளர்ச்சியில் தற்போது சாஃப்ட்வேர் ஆர்க்கிடெக்ட். மாத வருமான வரி ஆறு இலக்கத்தில் கட்டுகிறான். சில்வியா ஐடி கன்சல்டன்ஸி ஒன்றில் டெஸ்ட் லீட். மேனேஜர் ப்ரமோஷனுக்கு முயற்சிக்கிறாள்.

அவர்களைச் சுற்றி இருக்கும் தம்பதிகள் யாவரும் அடுக்ககம் வாங்கி விட்டனர். அவனுக்கு அதில் ஆர்வமில்லை. டெட் இன்வெஸ்ட்மென்ட் என்பான். ஸ்விம்மிங் பூல், ரெக்ரியேஷன் க்ளப், பார்ட்டி ஹால் உள்ளிட்ட சகல வசதியும் நிறைந்த பிரபல சொஸைட்டியில் 2பிஹெச்கே அப்பார்ட்மெண்ட் வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். இருவருக்கும் மூன்று கிமீ ஆரத்தில் அலுவலகம். சொந்தமாய் வாங்க ஒன்றரை கோடி ரூபாய் ஆகும். அனாவசியம். இப்போது உள்ளவரை அனுபவித்து நகரலாம்.

காரையே மிகுந்த யோசனைக்குப் பின்தான் வாங்கினான். அதுவும் அவனது அனுபவ வேட்டைக்குத் தேவை என்பதால். அதுவும் அவள் வந்த பின். அதுவரை பைக் தான்.

இப்போதைக்குக் குழந்தை வேண்டாம் என்று பார்த்திபன் சொல்லி விட்டான். அது அந்த வாழ்க்கை முறைக்குத் தொந்தரவாயிருக்கும் என நம்பினான். சில்வியாவின் பெற்றோர் இரண்டு, மூன்று முறை சொல்லிப் பார்த்து ஓய்ந்து விட்டார்கள். அந்த ஒத்திப்போடல் அவளுக்கு உவப்பாகவே இருந்தது. குழந்தை வளர்க்கும் பொறுப்பு குறித்த தயக்கம் ஒருபக்கம்; பேறுகால விடுப்பு பதவி உயர்வுக்குத் தடையாவது பற்றிய பயம் மற்றொருபுறம் எனக் குழம்பினாள். அவ்வப்போது யாரேனும் அவள் முப்பதை நெருங்குவதை நினைவூட்டிக் கர்ப்பம் சிக்கலாகுமெனப் பயமுறுத்தினர்.

இது எதைப்பற்றியும் கவலைப்படாமல் பார்த்திபன் மும்முரமாய் ஆறு பகல், ஏழு இரவு ஐரோப்பியப் பயணமொன்றை பொங்கல் விடுமுறையில் திட்டமிடுகிறான்.

பார்த்திபனிடம் சில்வியாவுக்குப் பிடித்ததே அவன் அளித்திருக்கும் சுதந்திரம்தான்.

வீட்டு வேலைகளுக்கு ஆள் வைத்திருக்கிறார்கள். அவளது செலவுகளில் அவன் தலையிடுவதில்லை. அலுவலகப் பார்ட்டி, சினேகிதிகளுடன் கெட்டுகதர் எதிலும் மாற்றமில்லை. இரவுகளில் தாமதமாகித் திரும்புவதைக் கேள்வி கேட்டதில்லை.

திருமணத்துக்கு முன் சொந்த ஊரில் வேலையிலிருந்த காலத்துக்கும் இன்றைக்கும் அவளுக்குப்பெரிய வேறுபாடு தெரியவில்லை. அதே சமயம் அவள் அச்சுதந்திரத்தை
ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்ததில்லை. அவனும் அப்படி இருப்பதாக நம்பினாள்.

வார இறுதிகள் மட்டும் ஒன்றாகச் செலவழிப்பது – நேரத்தை, பணத்தை. பிரியத்தை - என்பது அவர்களுக்குள் எழுதப்படா ஒப்பந்தம். அவள் அவனை நிறையக்காதலித்தாள்.

*

விவேக் மல்ஹோத்ராவிடம் தான் பார்த்திபன் அந்த நுழைவுச்சீட்டை வாங்கினான். உண்மையில் விவேக் தனக்காக வாங்கியது அது. அவன் இவனது அலுவலகச் சகா.
இன்னும் நெருங்கிச் சொன்னால் போட்டியாளன். அனுபவத்தில் இவனுக்கும் மூப்பு.

அந்த ரெஸார்ட்டில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை இப்படித் திட்டமிடுகிறார்கள். டிக்கெட் விலை ஜோடிக்கு லட்ச ரூபாய். முன்கூட்டியே பணம் செலுத்தி வாங்கிக் கொள்ள வேண்டும். விற்பனை மிக ரகசியமாக ஓர் ஏஜெண்ட்டின் மூலம் நடந்தது. வாங்கியது வாங்கியது தான். ரத்து, பணம் வாபஸ் என்ற பேச்சிற்கு இடமில்லை.

நூறு வகை மாமிச, அமாமிச உணவுகள், அளவில்லாத வெளிநாட்டு மது வகைகள், ஐந்து நட்சத்திர தரத்திலான அறையில் இரவு தங்கல் எல்லாவற்றுக்கும் சேர்த்து அத்தொகை. மொத்தம் நூறு ஜோடிகள். குலுக்கல் முறையில் தங்கள் இணைகளை மாற்றிக் கொள்ளலாம். இதில் பங்கேற்பவர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பது ரெஸார்ட் பொறுப்பு. கலந்து கொள்ள ஒரே நிபந்தனை கார் வைத்திருக்க வேண்டும்.

“சாக்ஷிக்கு உடம்பு முடியல, பார்த்தி. கடைசி நேரம். அதான் உன்னைக் கேட்கிறேன்.”

“ஆனா ஒரு லட்சம் அதிகம், விவேக்.”

“அந்த ரெஸார்ட்ல சாதாரணமா ஒருநாள் சூட் ரூமுக்கு இருபதாயிரம் ரூபா. ரெண்டு பேருக்கு டின்னர் சேர்த்தா கால் லட்சம். நியூ இயர்க்கு அதை டபுள் பண்ணுவாங்க. அரை லட்சம். எல்லாம் தாண்டி இது வேற விஷயம். ஸோ, லட்சம் நியாயம்தான்.”

“ஆனா இதுக்கெல்லாமா ஆள் வர்றாங்க!”

“ஸாலா, என்ன இப்படிக்கேட்டுட்டே! இதுக்கு அடிதடி. வெயிட்டிங் லிஸ்ட் இருக்கு.”

“ம்ம்ம்.”

“டிக்கெட் விக்கறது ஈஸி. ஆனா நான் இதை வாங்கின விஷயம் வெளிய போகும். அதான் க்ளோஸ் சர்க்கிள் உள்ளயே முடிச்சுக்கலாம்னு. நாளைக்குள்ள சொல்லு. இல்லன்னா வேற ஆள் பார்க்கனும். நீ சொன்ன பிறகுதான் ட்ரை பண்ணுவேன்.”

“சரி, சில்வியாகிட்ட பேசிட்டு சொல்றேன்.”

சில்வியாவிடம் வந்து எல்லாவற்றையும் ஒப்பித்தபோது கண்ணடித்துச் சொன்னாள்.

“இதுல கலந்துக்க முடியாத மாதிரின்னா சாக்ஷிக்கு ஒரே உடம்புப் பிரச்சனைதான்!”

“ஓ!”

“தப்பில்லையா, பார்த்தி?

“எது சந்தோஷமோ அதுவே தர்மம், சில்வி.”

புன்னகைத்தாள்.

“விட்டுட்டுப் போயிடுவேன்ங்கற பயம் இல்லதானே!”

“சேச்சே. ஸ்டுப்பிட் கொஸின், பார்த்தி.”

“எனக்கும் இல்ல. அவ்வளவுதான். பிறகென்ன?”

“ம்ம்ம்.”

“இது, ஒருநாள் ரெஸ்டாரண்ட்டில் சாப்பிடற மாதிரி. ஒருநாள் ஹோட்டலில் தங்கற மாதிரி. ஒருநாள் ஸூம்கார் வாடகைக்கு எடுக்கற மாதிரி. புது ருசி. புது அனுபவம்.”

“லவ் யூ, பார்த்தி!”

“மீ டூ, சில்வி!”

அவனைக் கட்டிக் கொண்டாள். அவளுக்கும் அந்தத் திட்டம் குறுகுறுப்பாய் இருந்தது.

அவளுக்கு விதிகளை உடைக்கச் சொல்லித்தந்ததும் கைபிடித்து அழைத்துப்போனதும் பார்த்திபன்தான். முதல்முறை அவன் ஊற்றிக் கொடுத்துத்தான் குடித்தாள். மது எப்படி இருக்கும் என்றறிவது அவளது நெடுநாள் ஆர்வம்தான். ஆனாலும் ஏதோ தயக்கத்தில் தவிர்த்து வந்தாள். அப்பாவுக்குத்தெரிந்தால் நையப்புடைத்து விடுவார் என்பது மட்டும் காரணமாய்த் தோன்றவில்லை. தெரியாமல் குடித்திருக்க முடியும். அவளது ஊரில் பணியிலிருக்கையில் அவள் சுதந்திரப்பறவைதான். ஆனாலும் பார்த்திபன் வரும்வரை மதுவின் எரிப்புச்சுவையைத் தீண்ட அவள் நா காத்திருக்க வேண்டியிருந்தது. பிறகு சில முறை இருமியபடி சிகரெட். இருமுறை ஹுக்கா. அப்புறம் ஒரு முறை டோப்!

அதை எல்லாம் விட உடைகள். சொந்த ஊரிலிருந்த வரை லெக்கிங்ஸும், ஜீன்ஸ் பேண்ட்டும் தான் சில்வியா எடுத்துக் கொண்ட அதிகபட்ச சுதந்திரம். ஸ்லீவ்லெஸ் கூட அணிந்ததில்லை. சில்வியா ப்ளாத் படித்த, நூறாண்டுப் புராதனம் மிக்க கலைக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராய் இருக்கும் அம்மா “நாமளே வாடா வாடானு கூப்பிடக்கூடாதுடி” என்பாள். பார்த்திபன் திருமணத்துக்குப் பின் வந்த அவளது முதல் பிறந்தநாளுக்கு மினி ஸ்கர்ட் வாங்கித் தந்தான். “எல்லாரும் ஒருமாதிரி பார்ப்பாங்க” என்று அவள் தயங்க, “பார்க்கட்டும், வயிறெரியட்டும். அப்புறம் எதுக்கு இவ்ளோ அழகாப் பொண்டாட்டி கட்டினேனாம்! வீட்ல ஒளிச்சு வைக்கவா?” என்று சொல்லி உற்சாகமூட்டினான். இப்போது இன்னுமொரு பெரிய விதிமீறலுக்கு அழைக்கிறான்.

அதை உற்று நோக்க முயன்றாள். தன்னைத்தானே கேள்விகள் கேட்டுக்கொண்டாள்.

‘என் பாட்டி, அம்மா, அக்கா எல்லோரும் நம்பிய கற்பு என்ற சித்தாந்தத்திலிருந்து விலகுகிறேனா? அவர்கள் எல்லோரும் தாம் நம்பியது போலவே நடந்தார்களா?’

‘கல்யாணத்துக்கு முன் பழைய அலுவலகத்தில் ஒருவனுடன் டேட்டிங் செய்ததுண்டு. சுமார் ஒரு மாதம். முத்தமிட்டுக்கொண்டிருக்கிறோம். திரையரங்க இருட்டில் லேசாய் அத்துமீறி இருக்கிறோம். பிறகு ஒத்துவராது என்று புரிந்தபோது பரஸ்பரம் வாழ்த்துச் சொல்லிக்கொண்டு பிரிந்துவிட்டோம். அதைக் காதல் என்றுகூட குறிப்பிட முடியாது. அதனால் பொருட்படுத்தி பார்த்தியிடம் சொன்னதில்லை. அவனுக்கும் அப்படியானது இருந்திருக்கலாம். ஆனாலவை முக்கியமில்லை என்பதால் கேட்டுக்கொண்டதில்லை.’

‘பார்த்தி மேல் எனக்கு பொசஸிவ்னஸ் இல்லையா என்ன? இல்லையே, இப்போதும் அலுவலகத்தில் புதிதாக எவளேனும் சேர்ந்து, அவள் பெயர் என் வீட்டு ஹால்வரை வந்துவிட்டால் நான் கொஞ்சம் தவிப்பாய் இறங்கி உளவறியத் தவறுவதில்லையே!’

‘பார்த்திக்கும் என் மேல் அப்படியான உடமையுணர்வு இல்லாமலா இருக்கிறது! தேனிலவுக்கு குமரகம் படகு வீட்டில் தங்கியபோது பக்கத்துப் படகில் இருந்த இளைஞர்கள் கைநிறைய வளையல்கள் அணிந்து நின்ற என்னைப் பார்த்து ஆபாசச் சைகை காட்டியதற்காய் சட்டென உப்பங்கழியில் குதித்து நீந்திப் படகேறி அவர்கள் சட்டையைக் கொத்தாய்ப் பிடித்தவன் அல்லவா! அது எனக்கு எத்தனை இன்பமாய் இருந்தது! அவன் தந்த உச்சங்களைவிட இனித்ததே! அன்று இரவு பார்த்தி மீது வாஞ்சை கூடியிருந்ததை அணைப்பில் கூடுதல் இறுக்கமேற்றிக் காட்டினேனே!’

‘அவனும் அதே விசுவாசத்தை எனக்குக் காட்டினானே! பட்டாயா போனபோது அவன் சோரம்போக அத்தனை வாய்ப்புகளும் இருந்தன. தவிர்த்து என்னை அணைத்தானே!’

‘ஒருவேளை எனக்கு பார்த்தியின் உடம்பு மீது அப்படி பொசஸிவ்னஸ் இல்லையோ! அவன் மனசில் மட்டும் பூரணமாய் நான் இருந்தால்போதும் என்று நினைக்கிறேனா? அப்படியும் இல்லை எனத் தோன்றியது. மனசில் ஆசை வராமல் உடம்பு மட்டும் ஒருத்தியைத்தேடுமா என்ன? அப்புறம் எப்படி இதை ஒப்புக்கொள்ள மனம் வந்தது?’

குழம்பினாள். தூக்கம் பிடிக்காமல் புரண்டாள். பக்கத்தில் படுத்திருந்த பார்த்தியின் தோளை இறுகப் பிடித்துக்கொண்டாள். எப்போதோ எப்படியோ தூங்கிப் போனாள்.

மறுநாள் காலை மனம் தெளிந்தது போல் தோன்றியது. தூக்கமே சர்வசஞ்சீவினி!

‘நிச்சயம் எனக்கு பார்த்தியின் உடம்பின் மீதும் பொசஸிவ்னஸ் உண்டு. ஆனால் இது ஒரு விளையாட்டு மட்டுமே. இதில் பிரதானம் அந்தக் கணங்களின் த்ரில் அனுபவம் தானே ஒழிய, உடல்கள் கலப்பதல்ல. பெண் மருத்துவரிடம் அல்லது செவிலியிடம் பார்த்தி தன் உடம்பைக்காட்ட வேண்டியிருத்தல் போன்றதுதான் இது. இரண்டிலுமே நோக்கம் உடம்பு அல்ல. ஆனால் நாளையே பார்த்தி ஒரு பாலியல் தொழிலாளியிடம் போகிறேன் என்றால் செருப்பால் அடிப்பேன். அது என் காதல். பார்த்திக்கும் என் மீது இதே பொசஸிவ்னஸ் உண்டு. இப்புரிதலுடன்தான் இவ்விஷயத்தில் இறங்குகிறோம்.’

புன்னகைத்தபடி பார்த்திபன் பேரம் பேசியதில் ரூ.85,000க்கு ஒப்புக்கொண்டான் விவேக்.

“நீ எப்படியும் இந்த விலைக்கு இறங்கி வருவேன்னு தெரியும், விவேக்.”

“அது பெரிய விஷயமில்ல. நீ எப்படியும் டிக்கெட்டை வாங்கிக்குவேன்னு தெரியும்.”

திடுக்கிட்டான். அது தன் பற்றிய மதிப்பீடா சில்வியா பற்றியதா என யோசித்தான்.

அந்த இரவுக்கு நேர்த்தியாய்த் தயாரானாள் சில்வியா. உடம்பெல்லாம் சுயநாவிதம் செய்து பளபளத்தாள். போதாக்குறைக்குப் பத்தாயிரம் ரூபாய் செலவழித்து சிலபல நடிகைகள் வரும் பார்லர் போய் வந்தாள். முதலிரவுக்கே இப்படித் தயாரானோமா என யோசித்து வெட்கப்பட்டாள். பார்த்திபன் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.

*

முன்னிரவு ஏதோ ஓர் அந்தரங்க ரகசியத்தை தன்னிருளில் ஒளித்து வைத்திருந்த நமுட்டுச் சிரிப்புடன் நட்சத்திரக் கண்ணடித்துக் கொண்டிருக்க, பார்த்திபன் காரைச் சீராக ஐந்தாம் கியரில் செலுத்திக் கொண்டிருந்தான். இடப்புற முன்னிருக்கையில் வாசனையாய் நிறைந்திருந்த சில்வியா ஏதும் பேசாமல் யோசனையிலிருந்தாள்.

Dying
Is an art, like everything else.
I do it exceptionally well.

பாவாடை சட்டையில் பிரம்மாண்ட நீலத்தாமரை காருள் பூத்தது போலிருந்தாள். ஓரக்கண்ணால் பார்க்கையில் பார்த்திபனுக்கே புத்தம் புதியதாய்த் தோன்றினாள்!

புறநகர்ச் சாலையில் அமைந்திருந்தது கோல்ட் சிட்டி ரெஸார்ட். கோட்டைக்குள் நுழையும் பிரமையை அளிக்கும் பிரம்மாண்ட நுழைவாயில். புத்தாண்டுப்பிறப்பை வரவேற்கும் ஒளியும் ஒலியும் சன்னமாய் வாசல்வரை வழிந்து கொண்டிருந்தது.

அவர்களுக்கு முன் பைக்கில் வந்திருந்த இரு இளைஞர்கள் உள்ளே விடச்சொல்லி சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். நுழைவுச்சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று விளக்கிக் கொண்டிருந்த காவலாளி சாம, தான அணுகுமுறை பயனளிக்கா விட்டால் பேத, தண்ட முறைகளைப் பிரயோகிக்க ஆயத்தமானான்.

வாசலிலேயே வைத்து பார்த்திபனிடம் நுழைவுச்சீட்டைக் கேட்டுச் சரி பார்த்தனர். டிக்கியைத் திறக்கச்சொல்லித் தடவிப் பரிசோதித்த பின் உள்ளே அனுப்பினார்கள்.

கார் மெல்ல ஊர்ந்து முன்னேற, வலப்புறம் பெருங்குடையினடியில் இரு சிப்பந்திகள் அமர்ந்திருந்தது புலப்பட்டது. டிக்கெட்டின் பார்கோட் ஒளிவருடப்பட்டு அவர்களின் வருகை உறுதிபடுத்தப்பட்டது. பார்த்திபன், சில்வியாவின் ஆதார் அட்டைகளைப் பரிசோதித்தனர். அவர்களின் திருமணச் சான்றிதழோ, கல்யாணப் புகைப்படமோ கேட்டனர். விவேக் எல்லாம் விளக்கியிருந்ததால் தயாராய்க் கொணர்ந்திருந்தான்.

“புல்ஷிட்! விட்டா ஹெச்ஐவி டெஸ்ட்லாம் எடுத்துட்டு வரச் சொல்வாங்க போல!”

“இல்ல. ஆனா காண்டம் யூஸ் பண்றது பெஸ்ட் ப்ராக்டீசஸ்ல சொல்லி இருக்காங்க.”

விவேக்கின் அசரீரி ஒலிக்க, பேண்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தான். சில்வியா தனது பழுப்பு நிறக் கைப்பையை எடுத்திருக்கிறாளா என்றும் பார்த்துக் கொண்டான்.

35 வயதுக்குட்பட்டோருக்கு மட்டுமே அனுமதி. மணமானோர் மட்டுமே ஆட்டத்தில் சேர்த்தி. போன முறை காதலி எனச்சொல்லி பாலியல் தொழிலாளிகளைச் சிலர் அழைத்து வந்துவிட்டதால் இந்தக் கட்டுப்பாடுகள். அடுத்து என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று நல்ல ஆங்கிலத்தில் பொறுமையாய் விளக்கினார்கள்.

பின் இருவரின் புறங்கையிலும் ரெசார்ட் முத்திரையின் ரப்பர்ஸ்டாம்ப் குத்தப்பட்டது. முகமூடிகள் வழங்கப்பட்டன. அணிந்து கொண்டார்கள். Eyes Wide Shut படம் நினைவு வந்தது சில்வியாவுக்கு. காரின் நம்பர் ப்ளேட்டில் கறுப்பு டேப் ஒட்டி மறைத்தனர்.

அந்தக் கணத்தில் அந்த ஸ்தலத்தில் அவர்கள் அடையாளமிலி ஆகிப் போனார்கள்.

அறைக்குள் இருக்கும் நேரம் தவிர ரெஸார்ட்டில் இருக்கும் வரை முடிந்த அளவு முகமூடியோடு இருப்பது அவர்கள் ப்ரைவஸிக்கு நல்லது என அறிவுறுத்தப்பட்டது. சொல்லப்பட்ட விதிகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கச் சொன்னார்கள்.

“வெல்கம் போத் ஆஃப் யூ. ஹோப் யூ வில் எஞ்சாய் திஸ் ப்யூட்டிஃபுல் நைட்.”

பார்த்திபன் காரை பார்க்கிங் பகுதியில் கொண்டு நிறுத்தினான். ஏற்கனவே அங்கே நாற்பது, ஐம்பது கார்கள் நின்று கொண்டிருந்தன. எல்லாக் காரிலும் முகமூடியுடன் ஒருத்தி அமர்ந்திருந்தாள். பார்த்திபன் சில்வியாவைப் பார்த்தான். புன்னகைத்தாள்.

“ஆர் யூ நெர்வஸ், சில்வி?”

“அஃப்கோர்ஸ், பார்த்தி!”

“டோன்ட் பேனிக். நல்லது கெட்டது யோசிச்சு தானே வந்திருக்கோம்!”

“என்னவோ பயமா இருக்கு.”

“ஒண்ணுமில்ல. கீப் யுவர் ஸ்பிரிட்ஸ் அப்.”

“ம்.”

“நாளை காலை பார்ப்போம். லவ் யூ. டேக் கேர். ஏதும்னா உடனே கால் பண்ணு.”

சில்வியா முகமூடியோடே ஒத்தியெடுத்தாற்போல் முத்தமிட்டு விடைகொடுத்தாள்.

The nose, the eye pits, the full set of teeth?
The sour breath
Will vanish in a day.

அவள் பக்கத்துக்கண்ணாடியை மட்டும் விடுத்து மற்ற கண்ணாடிகளை ஏற்றிவிட்டு சாவியை எடுத்துக் கொண்டு காரை விட்டிறங்கித் தொலைபூட்டினான் பார்த்திபன்.

நூறு மீட்டர் தொலைவிலிருந்த ரெஸார்ட்டின் பார்ட்டி ஹால் நோக்கி நடந்தான்.

ஐம்பது ஏக்கர் பரப்பு, ஐந்நூறு தென்னை மரங்கள் சுத்தம் செய்தனுப்பும் ஆக்ஸிஜன், நூறு காட்டேஜ்கள். ஒவ்வொன்றின் பின்பும் ஜக்கூஸியுடன் கூடிய ஸ்விம்மிங் பூல்.

புறங்கை ஊதா முத்திரை சரிபார்த்து ஹாலினுள் அனுமதித்தனர். கூட்டம் இருந்தது. எல்லோரும் ஆண்கள். எல்லோருக்கும் முகமூடி. பார்த்திபனுக்கு மயிர் கூச்செறிந்தது.

தர்பூசணிச்சாற்றில் வோட்கா கலந்து நீட்டினர். சில்வியாவுக்கு வோட்கா பிடிக்கும். அவளுக்கும் கொடுப்பார்களா! அதை உறிஞ்சியபடி நடப்பனவற்றைக் கவனித்தான்.

விஸ்தாரமான ஹாலின் நடுவில் பெரிய கண்ணாடிக் குடுவை வைத்திருந்தார்கள். ‘பெரிய’ என்றால் ஓர் ஆளை உள்ளே போட்டு வைக்குமளவு பெரியது! பார்த்திபனுக்கு ஈமத் தாழி நினைவுக்கு வந்தது. புராதனத் தமிழகத்தில் நீத்தார் பூதவுடலைப் பொத்தி வைத்து மண்ணில் புதைக்கப்பயன்படுத்தப்பட்ட கலன்கள். சென்ற ஆண்டு ஆரோவில் போயிருந்த போது தமிழ் ஹெரிடேஜ் செண்டரில் பார்த்தது! இறந்த கணவனுடன் தன்னையும் சேர்த்துப் புதைக்குமளவு பெரிய தாழி செய்யக் குயவனைக் கேட்பவள் சங்கப்பாடலில் உண்டு. நான் இறந்து போனால் சில்வியா அப்படிக் கேட்பாளா? அவளுக்கும் எனக்கும் அந்தக் கண்ணாடித் தாழி போதுமா? சிரித்துக் கொண்டான்.

நினைவை உதறினான். தாழியினுள் ஏற்கனவே பாதி உயரத்துக்குக் கார் சாவிகள் குவிந்திருந்தன. விதவிதமான சாவிகள். பெரும்பாலும் கார் ப்ராண்டை வலிய அறிவிப்பவை. ஹோண்டா, ஃபோர்ட், ஃபியட், டொயோட்டா, வோல்க்ஸ்வேகன், ஜாகுவார், ஆடி, பிஎம்டபிள்யூ, இன்னும் இன்னும். பார்த்திபன் தயக்கமாய்த் தன் ரெனால்ட் க்விட் சாவியை அங்கே சீருடையிலிருந்த சிப்பந்தியிடம் கொடுத்தான்.

அவன் வாங்கி கார் சாவியுடன் அறைச்சாவியைக் கோர்த்துத் தாழியுள் போட்டான். பார்த்திபன் விலகிவந்து கூட்டத்தோடு நின்றுகொண்டான். அடுத்த அரை மணியில் சுமார் நூறு பேர் வந்து சேர்ந்திருக்க, தாழிக்குள் சாவி போடும் சடங்கு நிறைந்தது.

வந்ததிலிருந்து அங்கே யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை என உறைத்தது. பார்த்திபன் மணி பார்த்தான். ஒன்பதுக்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்தன.

இப்போது சாவி போட்ட அதே வரிசையில் வந்து தாழிக்குள் கைவிட்டு ஆளுக்கொரு சாவியைப் பொறுக்கிக் கொள்ளச் சொன்னார்கள். கூட்டம் பரபரப்பானது. முதலில் ஒருவர் போய் சாவியை எடுத்துக் கொண்டு, பார்க்கிங் போய், கீலெஸ் என்ட்ரியில் காரைத் திறக்க வேண்டும். சாவிக்குரிய கார் பீப் ஒலி துப்பித் திறக்க, அதை வைத்து காரை அடையாளங்கண்டு, அதிலிருக்கும் பெண்ணை அழைத்துக் கொண்டு, கார் சாவியில் இணைக்கப்பட்டிருக்கும் அறைச் சாவிக்குரிய காட்டேஜ் தேடிப்போகலாம். அவ்வளவுதான் சம்பிரதாயம். அதன் பின் அடுத்த ஆள் சாவி எடுக்க வேண்டும்.

பார்த்திபன் போய் சிறுநீர் கழித்து வந்தான். சில்வியாவுக்குப் போக வேண்டுமெனில் என்ன செய்வாள் என யோசித்தான். நல்ல கழிவறையற்ற இடங்களில் முழுநாள் கூட அடக்கி வைத்துக் கொள்வாள். பார்க்கிங் பின்புறம் டாய்லெட் போர்ட் கண்ட ஞாபகம் என்று சமாதானம் கொண்டான். அவன் முறை வரும்போது மணி பத்தை நெருங்கியிருந்தது. அவன் கையில் அகப்பட்டது ஒரு வோல்க்ஸ்வேகன் சாவி!

*

பார்த்திபன் கிளம்பிப் போனதும் சில்வியா One Part Woman-ஐப் படிக்க எடுத்தவள் கடைசிக்கு முந்தைய அத்தியாயத்தில் இருக்கையில் அவர்களின் கார் பீப் ஒலி வெளியிட்டுத் திறந்து கொண்டது. சில நொடிகளில் அவன் நடந்து காரை நோக்கி வந்தான். கண்கள் விரிய அவனைப்பார்த்தாள். உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டாள்.

கார்க் கதவைத் திறந்து அவளை நோக்கிக் கை நீட்டினான். அதிலொரு நாடகீயம் இருந்தது. அவனைக்கவனித்தாள். பார்த்திபனைவிட உயரம். பார்த்திபனைவிட ஃபிட். முகமூடி மீறிக் கொண்டு மின்னிய புன்னகையில் பார்த்திபனை விடச்சீரான பற்கள்!

அதே மாதிரி அவன் தன்னில் எதை எல்லாம் பார்ப்பான், அவன் மனைவியுடன் தன்னை ஒப்பிடுவானா என யோசனை ஓடியதும் உடலும் மனமும் நெளிந்தாள்.

கைப்பையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு காரிலிருந்து இறங்கி அவனிடம் தயக்கமாய்க் கைகொடுத்தாள். மிக மென்மையாய்ப் பற்றிக் கொண்டான். பின் அவள் அமர்ந்திருந்த புறத்துக் கதவின் கண்ணாடியை ஏற்றி, காரைப் பூட்டி, கார் சாவியுடன் இணைந்திருந்த அறைச்சாவியை நிதானமாய் ஆராய்ந்து, அவளை வழிநடத்தினான்.

I am your opus,
I am your valuable,
The pure gold baby

ஒரு ராஜகுமாரி மாதிரி உணர்ந்தாள் சில்வியா. குளிர்வளி தழுவியதில் சிலிர்த்தாள்.

“பேரழகு தேவதையே! உன் பெயர் என்ன?”

“சொல்ல மாட்டேன்! ரதின்னு வெச்சுக்கோ.”

“ஓ! பரவால்ல, அப்ப என் பெயர் மதன்.”

“பெரிய மன்மதக் குஞ்சுனு நினைப்பு!”

“பார்க்கத்தானே போற!”

அதன் இரண்டாம் பொருளறிந்து சுரந்த வெட்கம் சிவப்பாகவும் சிரிப்பாகவும் அவள் முகத்தில் வழிந்தது. பார்த்திபனே வந்து விட்டானோ என ஒரு கணம் தோன்றியது.

ம்ஹூம். இது அவன் குரல் அல்ல. இன்னும் அவள் கையை அவன் விடவில்லை. இது அவன் விரலும் அல்ல. யோசனை புகையாய் அலைந்திருக்க, அறை வந்தது.

என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று திடீரென மனதில் எழுந்த கேள்வியை ஹீல்ஸுடன் சேர்த்துக் கழற்றி எறிந்தாள். இந்த மனசாட்சி ஒரு மஹாதொந்தரவு!

அறைக்குள் நுழைந்ததும் முகமூடி களைந்தார்கள். முத்தமிட்டார்கள். பேசினார்கள். சிரித்தார்கள். நீந்தினார்கள். குடித்தார்கள். சாப்பிட்டார்கள். வான்நிலா பார்த்தார்கள். புத்தாண்டு கொண்டாடினார்கள். உடல் கனிந்தர்கள். உடுக்கை இழந்தனர். அப்புறம்…

எல்லாச் சம்மதத்திற்கு முன்பும் சில்வியா தயங்கினாள். பின் மெல்ல இளகினாள்.

ஓர் ஆரஞ்சுப்பழத்தை உரித்து அதன் சுளைகளை ஒவ்வொன்றாய்ச் சுவைப்பது போல் நிதானமாய் அவளைக் கையாண்டான். அவன் கசக்கவில்லை; அதனால் இனித்தான்.

பின்னிரவு அவன் அவளை எழுப்பினான். வைகறை அவள் அவனை எழுப்பினாள்.

சில்வியா கண்விழித்து செல்ஃபோன் தேடியெடுத்து மணி பார்த்தாள். காலை எட்டு.

உடம்பெல்லாம் வலித்தது. சிறுநீர் முட்டியது. பக்கத்தில் திரும்பிப் பார்த்தாள். அவன் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தான். சிரித்துக் கொண்டாள். முதல் வேலையாய் பார்த்திபனுக்கு “Happy New Year – 2018” என்று வாட்ஸாப் செய்தாள். அவனும் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருப்பான். செல்ஃபோனுடன் எழுந்து பாத்ரூமுக்கு நடந்தாள்.

சில்வியா உடம்பில் பொட்டுத்துணி இல்லை, உள்ளாடைகளை இனி தேட வேண்டும்.

சிறுநீர் பெய்து முடித்ததும் முகத்தில் நிம்மதி அரும்பியது. ஃப்ளஷ் செய்து விட்டு டாய்லெட் சீட்டில் அமர்ந்தபடி செல்பேசித்திரையில் தடவி, நின்று, தாவி, குதித்தாள்.

அப்போது அந்தச் செய்தியில் அவள் கண்கள் குத்தி நின்றன: City’s Night of Shame.

அந்நகரத்தில் புத்தாண்டு நள்ளிரவுக் கொண்டாட்டத்திற்குப் பெயர் போன சாலையில் முந்தைய இரவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்திப் பெண்களுக்குச் சில ஆண்கள் கும்பலாகப் பாலியல் தொந்தரவு அளித்திருந்தார்கள். ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், பென்சில் ஸ்கர்ட்டில் ஒருத்தி விரிகூந்தல் சகிதம் பெண் போலீஸின் தோள் மீது சாய்ந்தழும் புகைப்படம் வெளியாகி இருந்தது. உடன் அப்பெண்ணின் விசும்பல் பேட்டியொன்றும்.

மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? வன்முறையில் காமத்தை உணர முடியுமா!

ஒரு பெண், நூறு ஆண் கைகள், மேலே, கீழே, முன்னே, பின்னே, உள்ளே, வெளியே தொட்டு, அமுக்கி, கிள்ளி விலகும் காட்சி மனதிலெழுந்தது. பார்த்தி அவ்விடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பான்? நான் அவ்விடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? சில்வியாவுக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் முடியக் கூசியது.

இம்மாதிரி சூழல்களைப் பெரும்பாலான பெண்கள் மௌனமாய்க் கடப்பதே வழக்கம். காரணம் நீ ஏன் நள்ளிரவில் நடமாடினாய் என்பார்கள். உன் ஆடை தான் தூண்டுதல் என்பார்கள். குடித்திருந்தாயா எனக் கேட்பார்கள். எங்கே தொட்டான், என்ன செய்தான் எனக் குடைவார்கள். மீறிப் பேசியிருக்கும் அப்பெண்ணைப் பிடித்திருந்தது அவளுக்கு.

Out of the ash
I rise with my red hair
And I eat men like air.

முகமற்ற அப்பெண்ணுக்கு, இன்னும் இத்தேசத்தின் கோடிக்கணக்கான பெண்களுக்குத் தாம் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்களை எதிர்த்துப் புகாரளிக்கும் உரிமை உண்டு.

திடுக்கிட்டாள். அவசியமின்றி மீண்டும் நீரை ஃப்ளஷ் செய்தாள். அழத்தொடங்கினாள்.

***
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2018 22:54

C. Saravanakarthikeyan's Blog

C. Saravanakarthikeyan
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow C. Saravanakarthikeyan's blog with rss.