C. Saravanakarthikeyan's Blog, page 13
October 8, 2017
அம்பேத்கர் யார்?
அம்பேத்கர் யார்? அவரது அடையாளம் என்பது என்ன? முதலில் அவர் இந்திய அரசியல் சாசனத்தின் பிரதானச் சிற்பி. இரண்டாவதாய் அவர் தலித்களின் விடுதலைக்காகச் சிந்தித்தவர், போராடியவர். அதாவது அவரை நவீன இந்தியாவின் பிதாமகர்களுள் ஒருவர் (One of the godfathers of modern India) என்று தான் பார்க்கிறேன்; தலித் தலைவராக மட்டுமல்ல.

அவரைத் தலித் தலைவர் என்று அடையாளப்படுத்தும் முயற்சி இரண்டு தரப்புகளில் நடக்கிறது. முதலாவது சாதி இந்துக்கள் ஒரு தலித்தை இந்தியாவின் முக்கியத் தலைவராகச் சொல்வதா என்ற காழ்ப்பில் அவரது பங்களிப்பைச் சுருக்கிக் காட்ட முயற்சிக்கிறார்கள். அடுத்தது தலித்கள் இந்தியா முழுக்கவுமே அவரைத் தங்கள் விடுதலைக்குப் பாடுபட்ட தலைவராக முன்னிருத்துகிறார்கள். (இந்த இரண்டாவதில் ஓர் உரிமை கொண்டாடல் மட்டுமே இருப்பதால் பிழையில்லை.) ஆனால் உணர்ச்சி வயப்படாது நோக்குங்கால் இன்று 120 கோடி இந்தியர்கள் வாழ்வின் தினசரிகளில் அம்பேத்கர் முன்னின்று உருவாக்கிய அரசியல் சாசனம் செல்வாக்கு செலுத்துவதை வைத்துப் பார்க்கும் போது அவரை நவீன இந்தியாவின் சிற்பி என்ற அடையாளத்துடன் குறிப்பிடுவதே சரி எனப்படுகிறது. அதுவே நியாயம். அதாவது ஒட்டுமொத்த இந்தியாவும் நிலம், சாதி, மதம், இனம், மொழி வித்தியாசமின்றி அவருக்குக் கடன்பட்டிருக்கிறது.
நேற்று மும்பையில் அம்பேத்கரின் சமாதி அமைந்துள்ள சைத்ய பூமிக்குப் போயிருந்தேன். நம்மூர் அண்ணா, எம்ஜிஆர் சமாதிகள் போல் தாதரில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. அங்கே அவர் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஒரு தலைவராக அடையாளங்காணப்பட்டிருப்பார் என்றே எண்ணி இருந்தேன். ஆனால் ஒரு தலித் தலைவராகக் கூட அல்ல, ஒரு பௌத்த மதத் தலைவர் போலத் தான் அவர் முன்னிறுத்தப்படுகிறார் என்பது வருத்தமும் ஏமாற்றமும் அளித்தது. இன்னும் சொல்லப் போனால் அந்த இடத்தையே புத்த யாத்திரைக்கான ஸ்தலமாகவே பாவிக்கிறார்கள்.
அம்பேத்கர் இந்து மதம் சாதியத்தில் கட்டுண்டது என்பதால் பௌத்தத்தை அதற்கு மாற்றாகச் சொன்னதற்குள் நான் போக விரும்பவில்லை. ஏனெனில் அது முழுக்கச் சரியானதா என்பதில் எனக்கு அதில் குழப்பங்கள் இருக்கின்றன. (இப்போதைக்கு என் தனிப்பட்ட கருத்து அவ்வாறான சூழலில் நான் மதமற்றவனாக இருப்பதையே விரும்புவேன்.) ஆனால் அவர் பல ஆண்டுகளாக இந்து மதம் தவிர்த்த பிற மதங்களைப் பரிசீலித்து வந்தாலும், அது பற்றிய தன் சிந்தனைகளை விரிவாய் நூல்களில் பதிவு செய்திருந்தாலும் அவர் அதிகாரப்பூர்வமாக புத்த மதம் மாறியது 1956ல் தான். அதிலிருந்து 50 நாட்கள் கூட முடியாத நிலையில் அவர் மரணமுற்றார். (அவர் வழிகாட்டலில் லட்சக்கணக்கான தலித்கள் பௌத்தத்தில் இணைந்தார்கள் என்பதும் உண்மையே. இன்றும் அம்பேத்கரையும் பௌத்தத்தையும் நெருக்கமாக இணைத்துப் பார்ப்பவர்கள் கணிசம் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். நான் சொல்ல வருவது வேறு.)

அப்படி இருக்க அவரை முழுக்க ஒரு புத்த மதத் தலைவர் என்பதாகச் சித்தரிப்பதை ஏற்கவே முடியவில்லை. அவர் சமாதியில் அவரது உருவத்தருகே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது; ஒரு புத்தத் துறவி அமர்ந்து வருபவர்களுக்கு ஆசி வழங்குகிறார்; நுழைவாயிலில் சாஞ்சி ஸ்தூபி உள்ளது; உள்ளே அசோகர் தூண்; அங்கிருக்கும் கடைகள் முழுக்க புத்தர் சிலைகள் அல்லது படங்கள் அல்லது பிற அடையாளங்கள் விற்கப்படுகின்றன. எல்லாமே பௌத்த அடையாளங்கள். அரசியல் சாசனம் பற்றி ஒரு வரி எங்கும் இல்லை. அவர் சாதியம் பற்றியும் தலித் எழுச்சி பற்றியும் பேசிய ஒன்றும் காணோம். இது மாதிரி அவர் சுருக்கப்பட வேண்டும் என்று தான் அரசும் மக்களும் விரும்புகிறார்களா?
அம்பேத்கர் தலித்களின் நிலை உயர இந்து மதத்தை விட்டு வெளியேறவும் புத்த மதத்தில் இணையவும் வேண்டும் எனக் கருதினார் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அது அவரது ஒரு முகம் மட்டுமே. அதன் மீது நாம் விமர்சனங்கள் வைக்கலாம் அல்லது முழுமையாகவும் ஏற்கலாம். ஆனால் அதை மட்டுமே எடுத்துக் கொண்டு அவரை புத்த மதத்துக்கு மட்டுமே நெருக்கமாக்க முயல்வது சரியானது தானா? அவர் பௌத்தர்களுக்கு மட்டும் தான் சாசனம் செய்தளித்தாரா? அவர் போராடிய தலித்கள் பௌத்தத்துக்குப் பெயர்ந்தவர்கள் மட்டும் தானா? நிச்சயம் அம்பேத்கரின் பௌத்த முகமும் இடம் பெறட்டும். தவறில்லை. ஆனால் அண்ணலின் மற்ற முகங்களை இருட்டடிப்பு செய்வது சரிதானா?

மோடி அரசு அம்பேத்கர் நினைவகம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் இருக்கிறது. இந்துத்துவ அம்பேத்கர் என்று நூல் எழுதியது போல் அவரை இந்து மதத்துக்கு நெருக்கமானவர் என அந்த நினைவகத்தில் திரித்தால் நமக்குக் கோபம் வராதா? அம்பேத்கரின் பௌத்த ஆதரவு முகம் என்பது திரிபு வேலையோ, ஆகாத விஷயமோ இல்லை என்பதைப் புரிந்துள்ளேன். ஆனால் அரை உண்மை என்பதும் பொய்க்குச் சமானம் தான். அதனால் தான் இதை இவ்வளவு ஆதங்கத்துடன் பதிகிறேன்.
அம்பேத்கர் பௌத்த ஆதரவாளராக அல்லது தலித் தலைவராக 'மட்டும்' அவரைச் சார்ந்தவர்களே, அவரை மதித்து விரும்புபவர்களே திரும்பத் திரும்ப முன்வைக்கும் வரை அவரை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கொண்டு சேர்க்க முடியாது. ஏற்கனவே அவரை இட ஒதுக்கீட்டின் மூலம் தலித் அல்லாதோருக்கு துரோகம் செய்தவர் என்று பார்ப்போர் கணிசம். (அது கேணைத்தனமான புரிதல் என்றாலும், அதை மாற்றுவது முக்கியம்.) நாமாக எதையும் இட்டுக்கட்டி வலிந்து அவரைப் பொது ஆகிருதி ஆக்க வேண்டியதில்லை. இருப்பதை உரத்துச் சொன்னாலே போதுமானது.
*
Published on October 08, 2017 12:05
September 30, 2017
கமல் ஹாசனின் அரசியல்
கமல்ஹாசனின் இருபத்தியிரண்டு ஆண்டு தீவிர ரசிகனாகவும் தமிழக அரசியலில் ஆர்வம், அக்கறை கொண்டவனாகவும் கடந்த ஒரு மாதமாக அவரது அரசியல் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். நான் அறிந்த வரை இந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு ஆங்கில மற்றும் தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளுக்கு சிறிதும் பெரிதுமாய் 7 நேர்காணல்கள் அளித்துள்ளார். சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் நீடிக்கும் அந்த நேர்காணல்களின் வழியே துலங்கும் கமல் ஹாசனின் (தற்போதைய) அரசியல் நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்ளும், முயற்சியாகவே இந்தக் கட்டுரையை எழுதிப் பார்க்கிறேன்.

1. கமல் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். அது (இப்போதைக்கேனும்) தேசிய அரசியலை முன்னெடுக்காமல் தமிழக அரசியலில் மட்டும் கவனம் செலுத்துவது. தேவையில்லாமல் பாஜகவைப் பகைத்துக் கொண்டு இங்கே தன் அரசியல் முன்னேற்றங்களுக்குத் தடங்கல்களைச் சந்திக்க அவர் தயாரில்லை. (கமல் ஹாசன் தான் ஒழுங்காக வரிக் கட்டும் நேர்மையான கொம்பன் ஆயிற்றே, பிறகு எதற்கு அவர் மத்திய அரசுக்கு அஞ்ச வேண்டும்? தவறே செய்யாத ஒருவரைப் பிரச்சனையில் சிக்க வைப்பது இந்தியாவில் ஒரு விஷயமா! இங்கே அதிகாரம் என்பது அதிகாரம் மட்டுமல்ல; அதிகார துஷ் பிரயோகமும் கூட.) அதனாலேயே பண மதிப்பிழப்பு, சகிப்பின்மை போன்ற மத்திய அரசு சம்மந்தப்பட்ட எல்லாக் கேள்விகளையும் மழுப்பலாகக் கடக்கிறார். அதனாலேயே மக்களுக்கு அவசியமெனில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் தயக்கமில்லை என்றும் சொல்கிறார். (கேள்வி பாஜகவுடன் கூட்டணி சம்மந்தப்பட்டது என்றாலும் 'இல்லை' என்ற ஒற்றை நேரடி பதிலாக அல்லாமல் நீட்டி முழக்குகிறார்.) அவர் தமிழகத்தை மட்டும் குவிமையமாகக் (focus) கருதுவதில் தவறே இல்லை. அது நிதானமாக எடுத்து வைக்கும் அடியாகவும் தெரிகிறது. ஆனால் அதற்காக இந்த மழுப்பல்கள் எல்லாம் ரொம்பவே ஜாஸ்தி. ஒன்று அக்கேள்விகளைத் தவிர்க்கச் சொல்லி முதலிலேயே சொல்லி விடலாம். அல்லது நேர்காணலின் போதாவது 'நோ கமெண்ட்ஸ்' எனச் சொல்லலாம். அல்லது தைரியமாக "நான் காவிக்கு எதிரானவன், அதனால் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை. ஆனால் மாநில நன்மைக்காக மத்திய அரசிடம் பேசுவதில் தயக்கமில்லை." என்று தெளிவாகவே சொல்லலாம். அவர் இப்படி கொழகொழவெனப் பேசுவது அரசியலில் - அதுவும் பேச்சாலேயே வளர்ந்த தமிழக அரசியலில் - செல்லுபடியாகாது என்பதை விட அவருக்கு எதிராகவும் திரும்பும். (இன்னொரு விஷயம் தமிழக அரசியலில் மட்டுமே கவனம் குவிக்க விரும்புவவர் டைம்ஸ் நவ், இந்தியா டுடே, சிஎன்என், என்டிடிவி, ரிபப்ளிக் எனப் பிரதானமாக வடக்கிந்தியர்களை உத்தேசித்து இயங்கும் தொலைக்காட்சிகளுக்குத் தன் அரசியல் தொடர்பான நேர்காணல்களை அளிக்க வேண்டும்? 1% தமிழர்கள் கூட அவற்றைப் பார்ப்பதில்லை தானே!)
2. கமல் தன் இடதும் அல்ல, வலதும் அல்ல, மய்யத்தில் நிற்கிறேன், மக்களோடு நிற்கிறேன் என்று தெளிவாகச் சொல்லி விட்டார். எப்படி தான் தான் காவிக்கு எதிரானவன் என்பதைப் பல இடங்களில் சொல்லி விட்டாரோ, அதே போல் தான் கம்யூனிஸ்ட் அல்ல என்பதையும் சொல்லி விட்டார். நான் இடது பக்கம் சாயல் உள்ளவன் என்பதால் அவரும் எனக்கு உவப்பாய் அதையே சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம். வலதின் பிரச்சனைகள் பற்றி அவரும் அவர் படங்களும் ஆங்காங்கே சொல்லி விட்டன. அப்படி இடதின் பிரச்சனைகள் என்ன என்பதையும் அவர் சொல்ல முயலலாம். வெறுமனே மக்கள் இடதும் அல்ல, வலதும் அல்ல என்பதால் தானும் அப்படி என்று சொல்வது ஒரு தலைவனுக்குரிய கூறு அல்ல. மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி; மக்கள் வழியில் மன்னன் போவதில்லை.
3. சிந்தாந்தரீதியாக இதுவரை அவர் முழுமையாக ஒப்புக் கொண்டிருப்பது தான் பகுத்தறிவுவாதி என்பதை மட்டும் தான். மற்றபடி கம்யூனிஸம், இந்துத்துவம், திராவிடம், தமிழ் தேசியம், தலித்தியம் என எதையும் தன் இஸமாக அவர் சொல்லவில்லை. அது போக, பெரும்பாலும் காந்தியத்தைச் சொல்கிறார். மார்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா ஆகியோரைக் குறிப்பிடுகிறார். அதே சமயம் காந்தியோடும் வேறுபாடு உண்டு என்கிறார். உண்ணாவிரதம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்கிறார். தனக்குப் பிடித்தமான தலைவர்கள் கம்யூனிஸத்தில் உண்டு என்கிறார். எம்ஜிஆரின் அரசியல் கனவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன் என்கிறார். ஓரிடத்தில் - ஒரே இடத்தில் - அம்பேத்கர் பெயரை உச்சரிக்கிறார். இப்போதைக்கு அவரை கம்யூனிசத்திலும் எம்ஜிஆரிஸத்திலும் (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன!) ஈடுபாடு கொண்ட, பகுத்தறிவு நிறைந்த காந்தியவாதி என்பதாக அடையாளப்படுத்திக் கொள்கிறேன்.
4. "கருப்புக்குள் காவியும் அடக்கம்" என்று கமல் சொன்னதில் எந்த விஷமமும் இல்லை. அதை இயற்பியலில் வரும் ஒளியின் தன்மையாகவே நகைச்சுவையாகச் சொல்கிறார். ஆனால் அதில் சிலேடையும் இருக்கிறது. எந்த நிறத்தை உள்வாங்கினாலும் கருப்பிலிருந்து வெளிப்படுவது கருப்பு மட்டுமே. அதே போல் அவரும் இந்துத்துவச் சிந்தாந்தத்தை உள்வாங்கினாலும் தன்னிடம் வெளிப்படுவது பகுத்தறிவு தான் என்று சொல்கிறார். (இது அவரே ஓரிடத்தில் சொல்லும் விளக்கம் தான்.) இங்கே அவர் பன்னிரண்டு வயது வரை தீவிர ஆத்திகனாக இருந்ததையும் சேர்த்து வைத்துப் பார்க்கலாம். ஆக, அவர் சொன்னதை "கருப்புக்குக் காவியும் அடங்கும்" என்று தான் மொழிபெயர்த்துக் கொள்கிறேன்.
5. தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஊழலற்றது அல்ல, அதனால் தனிக்கட்சி துவங்குவேன் என்கிறார். இது எனக்குப் புரியவில்லை. அதிமுக, திமுக இரண்டும் தான் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இருக்கின்றன. அவற்றின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. காங்கிரஸ் மத்தியில் செய்த ஆட்சிகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் அனேகம். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை எப்படி ஊழல் கட்சிகள் ஆயின? அவர்கள் ஊழல் செய்ய இன்னும் வாய்ப்பே கிடைக்கவில்லையே! தன்னை எவரும் முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டார்கள், அதனால் அக்கட்சிகளில் சேரவில்லை என்று சொல்லலாம். அது நியாயமான காரணம் தான். அவ்வளவு நேர்மை அரசியலுக்கு ஆகாது என நினைத்தால் கொள்கை வேறுபாடுகள் இருக்கின்றன என்றாவது சொல்லலாம். மற்றபடி, தமிழகத்தில் எல்லோருமே ஊழல்காரர்கள் என்று மட்டையடியாகச் சொல்வதில் நியாயம் இல்லை.
6. கேரள முதல்வர் பிணராயி விஜயனை மட்டும் தான் தானே விரும்பிப் போய்ச் சந்தித்தேன் என்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால் அவராகவே சென்னை வந்து தன்னைச் சந்தித்தார் என்கிறார். மம்தா பேனர்ஜியைச் சந்திக்கவிருப்பதாக வரும் செய்திகள் வதந்தி என்கிறார். தலைவர்களைச் சந்திப்பதன் காரணம் அவர்களிடம் அரசியல் பாடம் கற்க என்கிறார். ஓர் உதாரணமாய் கட்சிக்கான பணத்தை மக்களிடமே பெறுவதைப் பற்றிச் சொல்கிறார். ஆக, இந்தச் சந்திப்புகள் முழுக்க எந்த அரசியல் கூட்டணி அல்லது கட்சியில் இணைதல் நோக்கங்களும் இல்லாது கமலுக்கான அரசியல் ஆலோசனைகள் வழங்குவதன் / கேட்டுக் கொள்வதன் பொருட்டே நடந்திருக்கின்றன எனப் புரிந்து கொள்கிறேன்.
7. கலைஞரிடம் தனக்கு நெருக்கம் உண்டு, அவர் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க சுதந்திரம் அளித்தார் என்று சொன்னாலும் ஜெயலலிதா விஸ்வரூபம் வெளீயீடு விஷயத்தில் ஃபாசிஸ்டாக நடந்து கொண்டார் என்று சொன்னாலும் கலைஞர், ஜெயலலிதா இருவருமே ஊழல்வாதிகள் என்று ஒரே இடத்தில் வைக்கிறார். எடப்பாடி சேகுவேரா போன்றவர் என்று யாரோ அதிமுக அமைச்சர் சொல்வதற்கும் இதற்கும் வித்தியாசமில்லை என்று நான் கமலையும் அமைச்சரையும் ஒரே தட்டில் வைத்துச் சொன்னால் கமலுக்குக் கோபம் வராதா! இருவரையும் ஒரே தட்டில் வைப்பது எல்லாம் இன்று, நேற்று இணையத்தில் முளைத்த பச்சாக்களின் கருத்தியல். கமலும் அதையே சொல்வது ஏமாற்றம் தான். கலைஞர் ஜெயலலிதாவை விட எங்கனம் மேலானவர் என்று சொல்லி விட்டே, அவர் ஊழல்வாதி என்ற குற்றச்சாட்டையும் வைக்கலாம், திமுகவிடமிருந்து தள்ளியும் இருக்கலாம். எப்படி ஒருபுறம் பாஜகவைப் பற்றி தவறாக ஏதும் சொல்லாமல் ஜாக்கிரதையாக மழுப்புகிறாரோ, அதே போல் இன்னொருபுறம் கலைஞர் பற்றி நல்லது ஏதும் சொல்லாமல் நழுவுகிறார்.
8. தனிக் கட்சி தான் தொடங்குவேன், அப்போதும் யாருடனும் கூட்டணி இல்லை என்று தான் சொல்கிறார். யாரை உடன் சேர்த்தாலும் கறைபட்ட தரப்பாகி விடும் என்பதே அவரது நிலைப்பாடு என்பதாகப் புரிந்து கொள்கிறேன். (அப்படிக் கூட்டணி வைக்கும் தகுதியில் கட்சிகள் இருந்தால் அவற்றில் சேர்ந்து விட மாட்டேனா என்பது அவரது பதிலாக இருக்கக்கூடும்.) எல்லாம் சரி தான். ஆனால் அப்படி நிற்கும் போது வெற்றியின் நிகழ்தகவு என்ன? இது எவ்வளவு தூரம் கள யதார்த்தத்தில் (ground reality) சாத்தியமாகும் எனப் புரியவில்லை.இது வழக்கமான திமுகவுக்கு அதிமுகவுக்கு மாற்றாக யாரும் வர முடியாது என்ற discouraging வாதம் அல்ல. அப்படி முயன்ற தேமுதிக முதலிய கட்சிகளின் / மநகூ முதலிய கூட்டணிகளின் இன்றைய நிலையைக் கணக்கில் கொண்டு அவரது தொலைநோக்குத் திட்டம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள விழைகிறேன். ஒரு பேச்சுக்கு 2018ல் சட்டமன்றத் தேர்தல் வருகிறது என வைத்துக் கொண்டால் அதில் "குறைந்தபட்சம்" 25 தொகுதிகளாவது வெல்வது நோக்கமாக இருந்தால் நல்லது. அதாவது 10% வாக்கு வங்கியைக் குறி வைப்ப்பது. அது மாதிரியான இலக்குகள் (targets) ஏதும் இருக்கிறதா என இதுவரை தெளிவில்லை. அவர் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லும் roadmap-ல் இதுவும் இருக்கும் எனக் கருதுகிறேன். பார்ப்போம்.
9. கமல் யாருடன் அரசியல் ஆலோசனைகள் செய்கிறார் என்பது தெரியவில்லை. அவருக்கு நட்பாய் பல நல்ல கலைஞர்கள் இருக்கலாம். உறவுகளின் வழி சில திறமையான வழக்கறிஞர்கள் கூட இருக்கலாம். ஆனால் அரசியல், சமூக, பொருளாதார, நிர்வாக வல்லுநர்களை தன் நுழைவு பற்றிய கலந்துரையாடல்களில் இணைத்துக் கொள்வது அவசியம். (எனக்குத் தெரிந்து அப்படியான திறன் கொண்டு அவருக்கு நெருக்கமாக இருப்பவர் பிஏ கிருஷ்ணன் ஒருவர் தான். ஆனால் அவஅவரால் குறிப்பிட்ட எல்லை வரையிலான ஒரு பார்வையை மட்டுமே அளிக்க முடியும். ஒரு திறமையான, கலவையான குழு இருப்பதே நல்லது.) அவர் மகள்களின் அலோசனைப்படி நடக்கிறார் என்றும் சொல்கிறார்கள். ஏழாம் அறிவு படத்தில் ரிசர்வேஷன் நாட்டைக் கெடுத்து விட்டது என்று தன் சொந்த வசனத்தைச் சேர்த்த ஷ்ருதி ஹாசனால் என்ன அரசியல் ஆலோசனை நல்க முடியும் கமலுக்கு எனப் புரியவில்லை. என் கேள்வியை இப்படியும் புரிந்து கொள்ளலாம்: கமல் கட்சியின் கருத்தியல்களின் உருவாக்கத்தில் பங்கு வகிக்கப் போவோர் யார்?
10. தொடர்புடைய இன்னொரு விஷயம். சினிமா ஆக்கத்தில் கமல் இயக்குநராக இல்லாத படங்களில் கூட அவர் தலையீடு எல்லாத் துறைகளிலும் இருக்கும் எனக் கேள்வி. பொதுவாக அவர் யாருடைய ஆலோசனையையும் மதித்துக் கேட்க மாட்டார் என்று ஒரு பிம்பமும் இருக்கிறது. ஓரளவு அதை நான் நம்புகிறேன். ஆனால் அதே மனப்பான்மையைத் தூக்கிக் கொண்டு அரசியலுக்கும் வந்தால் அவரை விட ஆபத்தானவர் யாரும் இல்லை. அது ஒரு சர்வாதிகாரியையே உருவாக்கும். ஜெயலலிதா போல், மோடி போல், இந்திரா போல். (இந்திரா காந்தியின் திறனை வேறு ஒரு நேர்காணலில் சிலாகித்தார், அவசர நிலைப் பிரகடனம் கொண்டு வருமளவு நேருவிடமிருந்து அரசியல் கற்றிருந்தார் என.) துறைசார் வல்லுனர்களின் கருத்துக்கள், அறிவுஜீவிகளின் நிலைப்பாடுகள், களப்பணியாளர்களின் அனுபவங்கள் எல்லாவற்றையும் ஒரு நல்ல தலைவன் கணக்கில் கொள்ள வேண்டும். மக்களாட்சியின் மிகப்பெரிய பலம் அது தான். (ஆலோசனை சொல்லும் இடத்தில் முட்டாள்கள் இருந்து விட்டால் இன்னும் ஆபத்து. அது தான் விஜயகாந்த்துக்கு நடந்தது.) கமலின் மனப்பழக்கம் அதற்கு அனுமதிக்குமா எனத் தெரியவில்லை. (இந்திராவுக்கு நேரு போல் தனக்கு யாரும் இல்லை என்றார். ஆனால் அதை ஆதங்கமாகச் சொன்னாரா சுயம்புவாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் கர்வத்துடனா என ஊகிக்க முடியவில்லை.)
11. கமல் கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் யார்? கட்சியின் முதுகெலும்பாக விளங்கப் போவது அவர்களே. இத்தனை தோல்விக்குப் பிறகும் திமுக வலுவாய் நிற்பதற்கு முக்கியக் காரணம் அதன் இரண்டாம் மட்டத் தலைவர்கள். 27 எம்எல்ஏக்கள் பெற்று சட்டசபையில் எதிர்கட்சித் தலைவராய் உட்கார்ந்தும் தேமுதிக நாசமானதற்குக் காரணம் அத்தகைய தலைவர்கள் அக்கட்சியில் இல்லாததே. இன்னொரு கோணத்தில் நாளை கமலின் கையில் அதிகாரம் வாய்த்தாலும் அவர் மட்டும் நேர்மையாய், தெளிவாய் இருந்தால் போதாது. இரண்டாம் மட்டத் தலைவர்களுக்கும் அவை வேண்டும். கமலின் நேர்காணல்களிலிருந்து இதற்கு இரண்டு விதமான பதில்கள் இந்தக் கேள்விக்குக் கிடைக்கின்றன: (i) மக்கள் நலனில் அக்கறை கொண்ட எவரென்றாலும். (ii) தமிழகமெங்கும் அவரது ரசிகர் நற்பணி மன்றப் பொறுப்புகளில் இருப்பவர்கள். முதலாவது ஓரளவு எடுபடும். ஆம் ஆத்மி கட்சி தில்லியில் அப்படித் தான் (முதல் முறை மட்டும்) உருவாகி எழுந்தது. அவர்ககளுக்குள் சண்டையின்றி மேய்ப்பது பெரிய வேலை என்றாலும் அந்த ரிஸ்க்கை எடுத்துத் தான் ஆக வேண்டும். இரண்டாம் வகையினர் பற்றிக் குழப்பங்கள் இருக்கின்றன. 2000ம் ஆண்டுக்குப் பின் கமல் ஹாசனின் ரசிகர் மன்றங்களில் அவ்வளவாய்ப் புதியவர்கள் இணைந்திருப்பார்களா எனச் சொல்ல முடியவில்லை. ஆக, இன்று அந்தப் பொறுப்புகளில் இருப்போர் பெரும்பாலும் சுகர் பேசண்ட்களாய் இருக்கவே வாய்ப்புண்டு. அவர்கள் நல்லவர்களாகவும், நல்ல ரசனை கொண்டவர்களாகவும் இருக்க நிறைய வாய்ப்புண்டு என்றாலும் அரசியல் புரிதலோ, நிர்வாகத் திறனோ இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அவர்களை விட்டு விடவும் முடியாது. கமல் ஹாசன் கட்சி ஆரம்பிப்பதே பிரதானமாய் அவர்களை நம்பித்தான். அந்த முதலீட்டுக்கு ஏதாவது பிரதிபலன் நிச்சயம் எதிர்பார்ப்பார்கள். கமல் அதைப் பிழை சொல்லவும் முடியாது. அல்லது இந்த இரண்டு பிரிவிலும் பேலன்ஸ் செய்து ஆட்களை வைத்துக் கொள்வாரா!
12. கமல் பெரும்பாலான கேள்விகளுக்கு தான் சந்தித்த சினிமா அனுபவங்களைச் சொல்லியே பதில் அளிக்கிறார். ஒரு கட்டத்தில் அவரது தீவிர ரசிகனான எனக்கே அரசியலை முன்வைத்த உரையாடல்களில் அது அலுப்பூட்டுகிறது, ஏமாற்றமளிக்கிறது. அரசியல் பற்றி அதிகபட்சம் தன் வீட்டுக்கு ராஜாஜியும், காமராஜரும் வந்ததை மட்டுமே சுட்டுகிறார். கமல் வெறும் நடிகராக மட்டும் இருந்த போது அவரது நேர்காணல்களை ரசித்ததன் காரணம் அவர் மற்ற நடிக, நடிகையர் போல் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது என்று அறுத்தெடுக்காமல் சினிமா தாண்டி சுவாரஸ்யமாக, அறிவுப்பூர்வமாகப் பேசினார். அதனால் அவர் அரசியலுக்கு வரும் போது அதையே அரசியலுக்கு நீட்டித்து நாம் எதிர்பார்ப்பது இயல்பே. தவிர, செய்திச் சேனல்கள் பெருவி விட்ட இன்றைய நவயுக ஊடக உலகில் ஒரு வட்டச் செயலாளர் கூட தன் கட்சியின் சார்பில் விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தரவுகளை முன்வைத்து அரசியல் பேச வேண்டி இருக்கிறது எனும் போது கமலின் பேச்சுகளில் அது தொடர்பான போதாமையை உணர்கிறேன். என் தனிப்பட்ட எதிர்ப்பார்ப்பு கமல் சினிமா பற்றிய பேச்சைக் குறைத்துக் கொண்டு அரசியலை முன்வைத்து அறிவுப்பூர்வமாய்ப் பேச வேண்டும் என்பதே.
13. அவர் ட்வீட்கள் அனாவசியத் திருகலுடன் இருக்கின்றன என்பதை நானே ஒப்புக் கொள்வேன் என்றாலும் கமலின் பேச்சு எனக்குப் பிடிக்கும். மிகப் பிடிக்கும். ஆனால் என் போன்றவர்களுக்கு மட்டும் தான் பிடிக்கும். கொஞ்சம் திமிராகச் சொல்ல வேண்டுமெனில் அறிவுரீதியான எலைட் ஆசாமிகளுக்கு மட்டுமே அவர் பேச்சு உவப்பாக இருக்கும். அவர்கள் மொத்த ஜனத்தொகையில் அதிகபட்சம் 5% இருக்கலாம். மற்றபடி மீதம் எல்லோரும் கமல் பேசுவது புரியவில்லை எனக் கடந்து போய் விடுகிறார்கள். உண்மையில் அவர் பேசுவதில் புரியாமல் போக பெரும்பாலும் ஏதும் இருப்பதில்லை. வேண்டியது கொஞ்சம் சிரத்தையான கவனிப்பு மற்றும் குறைந்தபட்ச சிந்தனைத் திறன். அஃது நம் தேசத்தில் பெரும்பாலானோருக்கு இல்லாததால் தான் இந்தப் பிரச்சனை. கமலின் இன்றைய பேச்சின் வடிவம் பொரு வெகுஜன அரசியல் இயக்கத்துக்கு பொருந்தி வரக்கூடியதில்ல. அதை அவர் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். அவர் இப்படிப் பேசவே கூடாது என்பதல்ல. (அப்புறம் நாங்கள் எங்கே போவதாம்!) ஆனால் நாய் வேடமணிந்தால் குறைத்தாக வேண்டும் என்பதாய் அரசியலுக்கு உரிய பேச்சுக்கலையை அவர் கற்றுக் கொள்வது தவிர்க்க முடியாதது. இதற்கான நல்ல சமகால உதாரணம் திருமாவளவன். நேர்காணல்களில் வெளிப்படும் திருமாவளவன் வேறு, மேடைப்பேச்சுகளில் வெளிப்படும் திருமாவளவன் வேறு. அரசியலுக்கு உரிய தேவை என்ன என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார். கலைஞர் பேச்சினால் மட்டுமே இத்தனை கோடி பேரை ஈர்த்தார். எம்ஜிஆருக்கு பேச்சுத் திறமை தேவைப்படவில்லை. அவர் தன் தோற்றத்தாலும், உடல் மொழியாலுமே மக்களைக் கவர்ந்து விட்டார். கமலுக்குப் புகழ் தந்த ஒரே உடல் மொழி முத்தம் தான் என்பதால் அது அரசியலில் செல்லுபடியாகாது என்பதால் அவர் மக்களை ஈர்க்கும் பேச்சுக்கலையை கற்க வேண்டியதாகிறது. (பிக்பாஸ் நிகழ்ச்சியின் anchor-ஆக கமல் பேசியது ஓரளவு இதற்குப் பக்கத்தில் வருகிறது என்று சொல்லலாம். ஆனால் அது பெரும்பாலும் வழிநடத்தப்பட்ட ஒன்று. ஒரு வட்டத்துக்குள் நின்று விட்ட ஒன்று.)
14. அரசியலில் வெற்றி பெற உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பல இடங்களில் நேர்மை என்ற பதிலையே சொல்கிறார். அது உண்மையில் நேர்மையான பதிலும் கூட. அவர் அதையே தனக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசமென முன்வைக்கிறார் எனப் புரிந்து கொள்கிறேன். ஆனால் அது வித்தியாசம் தானே ஒழியே வெல்லுமா? ஊழல் ஒழிப்பு என்பது முடிந்தவுடன் (ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்) அதற்கான முக்கியத்துவம் போய் விடும். அதன் பிறகு சித்தாந்த பலம் அவசியம். தனக்கான இசங்கள் இல்லை என்று திரும்பத் திரும்பச் சொல்வது அடையாள அரசியலிலிருந்து தான் விலகி இருப்பதை மக்களுக்கு உணர்த்த என அவர் கருதினாலும் ஒருவகையில் பலவீனம் தான். அவரது கட்சிக் கொள்கைகளின் அறிக்கை இவற்றை எல்லாம் தீர்க்கும் என நம்புகிறேன்.
15. கமல் நேர்மையான ஆட்சி தருவார் என ஏன் நம்புகிறேன்? இரண்டு காரணங்கள். ஒன்று அவர் இன்று வரை கருப்புப் பணத்தில் ஈடுபடாமல் நேர்மையாக வருவான வரி கட்டி வருகிறார் என்பது. ஜி படம் பாடாவதி என்றாலும் அதில் சொல்லப்படும் ஒரு விஷயம் எனக்குப் பிடித்தமானது. மக்களுக்கு நல்லது செய்து விட்டு மக்களிடம் போய் ஓட்டுப் போடுங்கள் எனக் கேட்பார்கள். அவ்வகையில் ஏற்கனவே முப்பது ஆண்டுகளாக நேர்மையாக இருக்கும் ஒருவர் ஓட்டுக் கேட்கிறார் என்பதால் புதிதாய் அவர் சம்பாதித்து ஆகப் போவது ஒன்றுமில்லை என்ற அடிப்படையில் அவரை நம்புகிறேன். இரண்டாவது காரணம் எண்பதுகளில் கமலின் முன் இரு பாதைகள் இருந்தன. ரஜினி போல் நோகாமல் சூப்பர் ஸ்டார் ஆவது. நிதி சார்ந்த ரிஸ்க்கள் எடுத்து எல்ல கலைஞன் எனப் பெயர் எடுப்பது. அவர் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார். அந்தத் தேர்வு தான் அவர் அரசியலிலும் சவால் நிறைந்த நேர்மையான பாதையையே எடுப்பார் என நம்பவும் காரணம். அவரே அதை தான் செல்லும் அரசியல் முட்கிரீடம் என இரண்டு மூன்று இடங்களில் சொல்லி ஒப்புக் கொள்கிறார். அதனால் அவர் அரசியலுக்கு வந்தால் "முடிந்த அளவு" நேர்மையாக இருப்பார் என்றே நம்புகிறேன். முடிந்த அளவு என்றால்? ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவாலை விட, கம்யூனிஸ்ட்களை விட என வைத்துக் கொள்ளுங்களேன்.
16. அரசியலுக்கு வந்தால் சினிமாவில் கவனம் செலுத்த மாட்டேன் என்று சொல்வது அவரது திரை வெறியனாக எனக்குக் கடும் கசப்பை அளித்தாலும் அது தான் அவரது அரசியல் பணிகளுக்கு நியாயம் செய்யும் சரியான முடிவாக இருக்கும். அவரே சொல்வது போல் இரட்டைப் படகில் சவாரி செய்தல் சிரமம். இதை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நிதி தவிர்த்த மூன்று துறைகளைக் கவனித்ததால் தான் நிதி நிர்வாகம் பல்லிளிக்கிறது என்று சமீபத்தில் முன்னார் நிதியமைச்சரான யஷ்வந்த் சின்ஹா விமர்சனம் செய்திருப்பதை இதோடு ஒப்பு நோக்கலாம். ஒரு வேலை நேர்த்தியாய் முடிய Quality Time அதற்கு அளிக்கப்பட வேண்டும் என்ற முதிர்ச்சியான புரிதல் கமலுக்கு இருப்பது முக்கியமானது.
17. ஜெயலலிதா மறைந்து, கலைஞர் நலங்குன்றி இருக்கும் சூழலின் வெற்றிடத்தை (அது உண்மையில் வெற்றிடமா என்ன? ஸ்டாலின், திருமா எல்லாம் தொக்கா!) பயன்பட்டுத்திக் கொண்டு அரசியலுக்கு வருகிறீர்களா என்ற கேள்வி திரும்பத் திரும்ப கமலிடம் கேட்கப்படுகிறது. அவர் அதை மறுத்து நான் 30 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன் என்ற சம்மந்தமே இல்லாத பதிலைச் சொல்கிறார். அந்தக் கேள்வியே நேரடி அரசியல் பங்களிப்பைப் பற்றியது எனும் போது எவ்வளவு முறை தான் அதே பதிலைச் சகிப்பது? (முதல் முறை அதை சில வருடங்கள் முன் அவர் சொல்லிக் கேட்ட போது ரசிக்கும் படி நன்றாகவே இருந்தது. ஆனால் தொடர்ந்து விடாமல் எல்லா இடங்களிலும் அதையே சொல்வது எரிச்சலூட்டுகிறது.) தவிர, அங்கே அந்தக் கேள்வியின் நோக்கம், தகவல்பூர்வமான ஒரு பதிலைப் பெறுவது தானே ஒழிய கமலின் புத்திசாலித்தன பதிலைப் பெறுவதல்ல. அதனால் அவர் அதற்கு மழுப்பாமல் நேரடியாகவே பதில் சொல்வதே முறை. என் புரிதல் அவர் இதை வெற்றிடம் என்று எண்ணி, அதை நிரப்பும் உத்தேசத்தில் தான் இப்போது வெளிவருகிறார். அதிமுகவின் மோசமான நிலை அவர் நுழைவை நியாயப்படுத்துகிறது. இத்தனை வெளிப்படையாகச் சொல்லத் தேவையில்லை என்றாலும் அக்கேள்வியை இன்னும் கொஞ்சம் தீவிரமாக எதிர்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் சுட்டுவிரல் மையைச் சுட்டி முப்பதாண்டு என்று சொல்வது சுத்தமாகப் பொருந்தவே இல்லை.
18. ரஜினியின் அரசியல் நுழைவு பற்றி திரும்பத் திரும்ப கமலிடம் (குறிப்பாய் வட இந்திய ஊடகங்கள்) கேட்கப்படுகிறது. அது அவர்கள் டிஆர்பியை உத்தேசித்தது. ரஜினி ஒரு போதும் அரசியலுக்கு வரப் போவதில்லை. அதற்கான திராணியோ திறமையோ அவருக்கு இல்லை. கமல் அக்கேள்வியை நன்றாகவே கையாள்கிறார். நண்பராக அவரிடம் தன் வருகையைத் தெரியப்படுத்தி இருக்கிறேன் என்கிறார். அவர் விரும்பினால் இணைத்துக் கொள்வேன், அவருக்கும் மக்கள் மீது அக்கறை இருக்கிறது என்கிறார். இருவரும் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடு கொண்டவர்கள் என்று ஒப்புக் கொண்டாலும் அவரது காவிச் சாய்வு குறித்த கேள்விக்கு அதைத் தான் சொல்ல முடியாது என விலகுகிறார். ரஜினியின் இருப்பு தன் கட்சியில் தன் ஈகோவைக் காயப்படுத்தாத அளவில் மட்டும் கமல் ரஜினியை வரவேற்பார் எனத் தோன்றுகிறது. அதற்கான காரணம் கூட நீண்டகால நட்பு, மக்கள் நலன் என்பதை எல்லாம் விட ரஜினியின் மார்க்கெட் காரணமாகவே என்றும் எண்ணுகிறேன்.
19. சமீபத்தில் வாக்குரிமை பெற்றோர், விரைவில் ஓட்டுரிமை பெற இருப்போர் என 17 முதல் 20 வயது இளைஞர்களைத் தான் கமல் குறி வைக்கிறார். அதுவும் ஆம் ஆத்மி பாணி தான். அவர்களே ஆர்வக்கோளாறாய் இருப்பார்கள். ஐஐடிகாரர்கள் நின்றாலும் ஆதரிப்பார்கள், மநகூ வந்தாலும் ஆதரிப்பார்கள், கமல் வந்தாலும் ஆதரிப்பார்கள். ஆக, அவர்களைக் கட்சியில் இணைத்துக் கொள்ளவும், அவர்களின் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் அள்ளவும் அவர் உழைப்பார் எனத் தெரிகிறது. இப்போதைக்கு அவரது தேர்தல் அரசியல் யுக்தியாக (strategy) அது மட்டும் வெளிப்பட்டிருக்கிறது.
20. நேர்காணல் செய்வோர் அனைவரும் (குறிப்பாய் வட இந்திய ஊடகங்கள்) மிகுந்த பதற்றத்துடன் கேட்ட கேள்வி எப்போது வருகிறார் என. ஒருவர் 30 நாளா, 60 நாளா, 90 நாளா எனக் கெடு கொடுக்கிறார். இன்னொருவர் 100 நாளில் வருவாய் என எடுத்துக் கொள்ளலாமா எனக் கழுத்தை இருக்கி ஆமாம் என வாங்கி அதைத் தலைப்புச் செய்தியாய்ப் போடுகிறார். நீ கேட்பதற்காக எல்லாம் அந்த நாளில் வர முடியாது என்ற கமலின் பதிலிருந்து அவர் தன் வருகைக்கு அவசரப்படவில்லை எனப் புரிகிறது. அது நியாயமும் கூட. வைகோ ஏன் தோற்றார்? அவர் 1991ம் அல்லாமல் 1996ம் அல்லாமல் இடைப்பட்ட காலத்தில் மதிமுகவைத் தொடங்கி, கொழுந்து விட்டெரிந்து தேர்தல் வருகையில் அணைந்து போயிருந்தார். விஜய்காந்த் ஏன் வென்றார்? அவர் தேமுதிகவை 2006 தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பு தான் தொடங்கினார். அந்தச் சூட்டோடு தேர்தலில் நின்று கிட்டத்தட்ட 10% ஓட்டு வாங்கினார். ஆக, எப்போது கட்சி தொடங்க வேண்டும் என்பதில் ஒரு சூட்சமம் இருக்கிறது. இன்று கமல் எப்போது கட்சி தொடங்க வேண்டும் என்ற கேள்விக்கான பதில் கமலிடம் இல்லை என்றே சொல்வேன். ஆட்சி கலைந்து, ஆறு மாதத்துக்குள் தேர்தல் வந்தால் உடனே தொடங்குவதில் பொருள் இருக்கிறது. அதற்காக முழுக்க ஆறப் போடவும் முடியாது. அந்த சமநிலையைப் பேணுவது ஒரு சவால். அவசரப்படாமல் அணுகுவதிலிருந்து கமல் சரியான பாதையில் தான் இருக்கிறார் என்று சொல்ல முடிகிறது.
21. கமல் தான் இன்று தமிழகத்தில் முதல் பிரச்சனையாகக் கருதுவது ஊழல் தான் எனச் சொல்கிறார். அதாவது அது தான் இருப்பதிலேயே பெரிய பிரச்சனை என்றல்ல. மற்ற பிரச்சனைகளைத் தீர்க்கும் முன் தடையாக இது இருக்கும் என்கிறார். அதில் எனக்குக் குழப்பங்கள் இருந்தாலும் அதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை என நினைக்கிறேன். அல்லது ஆம் ஆத்மி பாணியில் ஊழலையே பெரிய பூதம் எனக் கட்டமைத்து அதற்கு ஆதரவைப் பெருக்கி அதன் மூலம் ஆட்சிக்கு வருவது அவர் திட்டமாய் இருக்கலாம். அதுவும் தவறில்லை. அதற்கு அடுத்த பிரச்சனைகள் விவசாயம், கல்வி, மருத்துவம் ஆகியவற்றைச் சொல்கிறார். (சமூக நீதியைக் குறிப்பிடவில்லை.) எப்படியோ அவர் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லி மட்டும் அரசியல் பேசவில்லை. அதைத் தாண்டி நிறையப் பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறார், அவற்றையும் ஒழிப்பது தன் வேலை எனக் கருதுகிறார் என்பது வரை நல்ல விஷயம் தான்.
22. ஊழல் என்றால் எதைக் குறிப்பிடுகிறார் என்ற கேள்வியும் எழுகிறது. அரசியல்வாதி ஊழல் செய்தால் ஐந்து வருடத்தில் தூக்கி எறிந்து விடலாம், ஆனால் ஐஏஎஸ் அதிகாரி ஊழல் செய்தால் ஆயுளுக்கும் நீடிக்கும் என்கிறார். மக்கள் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதையும் குறிப்பிடுகிறார். ஆக, ஊழலுக்கு அரசியல்வாதிகள் மட்டுமே காரணம் என்ற ஒற்றப்படையான புரிதலுடன் அவர் வரவில்லை. வேர் வரை புரிந்து தான் இருக்கிறது. ஆக, அவரது ஊழல் ஒழிப்பு என்பதை எல்லா மட்டங்களிலும் ஊழலைக் களைவது என்றே புரிந்து கொள்கிறேன். அது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும். அதற்கான செயல் திட்டன் என்னவாய் இருக்கும் என்பதை அறியவும் ஆவல் கொண்டிருக்கிறேன்.
23. மக்கள் ஐயாயிரம் வாங்கிக் கொண்டு ஐந்தாண்டுகளுக்கான தன் வாக்கை விற்பது லாபகரமான வியாபாரமல்ல; மாறாய் நல்ல கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டு அதை விட அதிக பலன் பெறலாம் என்கிறார். அதாவது மக்கள் நலன் கொண்ட கட்சிகள் ஊழல் செய்யாமல் மாநிலத்தின் கட்டுமானத்தை உயர்த்தும், நலத்திட்டங்கள் மூலம் நன்றாகச் சம்பாதிக்கும்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதாய்ப் புரிந்து கொள்கிறேன். ஆனால் மக்களின் மனநிலை நாளைக்குக் கிடைக்கும் பலாக்காயை விட இன்றைக்குக் கிடைக்கும் கலாக்காயே மேல் என்பதாக இருக்கிறது. அதை உடைத்து கோடிக்கணக்கான மக்களின் மனநிலையை எப்படி கமல் மாற்றப் போகிறார் என்பதும் மலைப்பாய் இருக்கிறது.
24. கட்சி நடத்த, குறிப்பாய் தேர்தல் அரசியலில் பங்கேற்க பணம் தேவை என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு மக்களிடம் இருந்தே பெறுவேன் எனச் சொல்கிறார். காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டுக் கொண்டிருந்தவர்களை, காசு வாங்காமல் ஓட்டுப் போடு என்று மாற்றுவதே சிரமம் எனும் போது காசும் கொடு, ஓட்டும் போடு எனக் கேட்டும் model எப்படிச் சாத்தியப்படும்? ஆக, இதைப் பணம் படைத்த உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் இருந்து நிதி பெறுவது எனப் புரிந்து கொள்கிறேன். அதாவது மக்கள் நலன் மட்டுமே நோக்கமாய்க் கொண்டு பிரதிபலன் பாராத நிதி உதவி (ஓரளவு ஆம் ஆத்மி பாணியிலானது). இன்னொரு வகையில் இப்படியான நிதி உதவி சாத்தியப்படும் போது அவ்வாறு கொடுத்தோர் அனைவரும் தவறாமல் கமலுக்கே வாக்களிப்பர் என்பது நிஜமே.
25. கமல் சினிமாவில் தோற்றதால் தான் அரசியலில் இறங்குகிறார் என்ற வாதம் அபத்தமானது. இரண்டு அடிப்படைகளில் இதைப் பார்க்கலாம். ஒன்று கமல் சினிமாவில் ஒழிந்து போகவில்லை. இப்போதும் வருடம் இரண்டு படங்கள், அதுவும் லாபம் தரக்கூடிய படங்கள் என்று அவரால் செய்ய முடியும். அவர் நடித்தாலே வெற்றி என்ற நிலை இல்லை (அது எப்போதும் இல்லை என்றே நினைக்கிறேன்) என்றாலும் அவரை நம்பிப் பணம் போட ஆட்களே இல்லை எனக் கட்டமைக்கப்படும் பிம்பம் பொய். ஆக, அவர் தோற்றுப் போன நடிகர் என்று சொல்வது ஒருவகை வக்கிர விருப்பம் மட்டுமே. அடுத்ததாக கமலை 100 கோடி ரூபாய் பேரத்துடன் ஓர் அரசியல் கட்சி பத்தாண்டுகள் முன்பே இழுக்க முயற்சித்தது. அதற்கு கமல் செவி சாய்த்தாரில்லை. (அப்போது இருந்ததற்கும் இப்போதைக்கும் கமலின் business graph-ல் எந்தப் பெரிய மாற்றமுமில்லை.) தவிர, அவர் வாழும் முறையைப் பார்க்கும் போது அரசியலுக்கு வந்து காசு சம்பாதித்து அதைக் கொண்டு சொத்து சேர்க்கும் திட்டத்தில் இருப்பது போலவும் தெரியவில்லை. அப்படியான திட்டத்தில் இருப்பவர் அதிகம் சிரமம் எடுக்காமல் பாஜக போன்ற புளியங்கொம்பைப் (பண பல அடிப்படையில்) பற்றிக் கொள்ளலாம். நிச்சயம் மாநிலத் தலைமைப் பதவியும் நிறைய தொகையும் தருவார்கள். ஆனால் கமல் அதைச் செய்யவில்லை. தவிர, அரசியல் வந்தாலே வெற்றி என்றில்லை, அதன் நிலையின்மை சினிமாவைக் காட்டிலும் ஜாஸ்தி. யாரோ ஒரு எடப்பாடியை ஒற்றை இரவில் உச்சத்தில் ஏற்றும்; சாணக்கியரான கலைஞரைக் கூட பத்தாண்டுகள் வீட்டில்
Published on September 30, 2017 07:41
September 27, 2017
ஆட்சிக் கலைப்பு அரசியல் ஆயுதமா?
“Power tends to corrupt and absolute power corrupts absolutely. Great men are almost always bad men.”
- Lord Acton
வெகுஜன மக்கள் மத்தியில் கூட இந்திய அரசியல் சாசனத்தின் ஒரு பிரிவின் எண் பழக்கமாகிப் புழக்கத்தில் இருக்கிறதெனில் அது 356ம் பிரிவு தான். மாநில ஆட்சிக் கலைப்பு. தம் மாநிலத்தை ஆள தாம் தேர்ந்தெடுத்த ஓர் அரசு நியாயமான அல்லது அஃதற்ற காரணத்துக்காக பதவியிலிருந்து நீக்கப்படுவதால் அப்பிரிவு அவர்களின் மன உணர்வுகளோடு நேரடித் தொடர்பு ஸ்தானத்தைப் பெற்று விட்டதெனத் தோன்றுகிறது.
ஆட்சி கலைக்கப்பட்டதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மாநிலம் வந்து விடும் என்றாலும் எழுத்துப்பூர்வமாக இந்திய ஜனாதிபதியே அம்மாநில ஆட்சிக்கான பொறுப்பாளர் என்பதால் ஆட்சிக் கலைப்பை ஜனாதிபதி ஆட்சி என்றும் அழைப்பர். (ஜம்மு & காஷ்மீர் மாநிலம் மட்டும் சாசனத்தின் 370ம் பிரிவின் காரணமாக வேறு விதமாகப் பாவிக்கப்படுகிறது என்பதால் அங்கே அதற்குப் பெயர் ஆளுநர் ஆட்சி!)
இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த 68 ஆண்டுகளில் இதுவரை 115 முறைகள் இப்பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்பட்டிருக்கின்றன (தமிழகத்தில் மட்டும் 4 முறைகள் - அதில் கலைஞரின் ஆட்சி 2 முறை). ஒரு முதல்வர் தன் பெரும்பான்மையைச் சட்டசபையில் நிரூபிக்க முடியாது போகையில் (அரசியல் கூட்டணி அல்லது கட்சி உடைகையில்), ஒரு சட்டசபை முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும் போது, சட்டசபைக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்படும் போது பொதுவாய் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் சூழல் உண்டாகிறது.
இதைத் தாண்டிய இன்னொரு முக்கியக் காரணம் ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெடும் போது அதைக் காரணம் காட்டி மாநில ஆட்சியைக் கலைக்கலாம். 356வது பிரிவு மத்திய அரசினால் அரசியல் பழிவாங்கும் கருவியாகப்பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுவதற்குக் காரணம் இதுவே. பாராளுமன்ற இரு அவைகளிலும் தம் கட்சிக்குப் (அல்லது கூட்டணிக்கு) பெரும்பான்மை வாய்த்து விட்டால் தமக்கு ஆகாத ஏதேனும் ஒரு மாநில அரசின் மீது 356ம் பிரிவை துஷ்பிரயோகம் செய்வது மத்திய அரசுகளின் வாடிக்கையாக உள்ளது. உண்மையில் அப்பிரிவு ஓர் அரசியல் ஆயுதமா?
மாநில ஆட்சியைக் கலைத்தல் தொடர்பாய் இந்திய அரசியல் சாசனத்தில் இருக்கும் பிரிவுகள் 356 மற்றும் 357. (ஜம்மு & காஷ்மீர் மாநிலம் இப்பிரிவுகளின் கீழ் வராது. அம்மாநிலத்துக்கென தனி அரசியல் சாசனம் இருக்கிறது. அதில் இருக்கும் 92வது பிரிவு ஆட்சிக் கலைப்பு பற்றிப் பேசுகிறது.) அந்தப் பிரிவுகள் சொல்பவை என்ன?
அரசியல் சாசனத்தின் 356வது பிரிவு அரசியல் சாசனப் பிரிவுகளை மாநிலங்கள் செயல்படுத்த முடியாமல் போகையில் என்ன செய்ய வேண்டும் எனப் பேசுகிறது.
(1) ஆளுநரிடமிருந்து மாநிலத்தின் நிலைமை குறித்து அறிக்கை வரப்பெற்றாலோ அல்லது அரசியல் சாசனப் பிரிவுகளின்படி மாநில அரசு செயல்படவில்லை என ஜனாதிபதி நம்பினாலோ ஒரு பிரகடனம் மூலம் கீழ்க்காணும் விஷயங்களைச் செய்ய முடியும்: (அ) மாநில அரசின் செயல்பாடுகளையும், ஆளுநர் மற்றும் எந்த அமைப்போ அதிகாரயோ (சட்டசபை தவிர) செலுத்த முடிந்த அதிகாரங்களையும் தானே எடுத்துக் கொள்ளலாம். (ஆ) சட்டசபையின் அதிகாரங்கள் பாராளுமன்ற ஆளுகையின் கீழ்தான் செயல்பட வேண்டும் என அறிவிக்கலாம். (இ) (மாநில உயர்நீதிமன்றம் தவிர) பிற அமைப்புகள், அதிகாரிகளின் அரசியல் சாசனம் தொடர்புடைய செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.
(2) இது ஜனாதிபதி ஆட்சிப் பிரகடனம். அப்பிரகடனத்தை அடுத்ததான மற்றொரு பிரகடனத்தின் மூலம் ஜனாதிபதி ரத்து செய்யவோ மாற்றம் செய்யவோ முடிவும்.
(3) இப்படியான பிரகடனங்கள் பாராளுமன்ற இரு அவைகளின் முன் வைக்கப்பட வேண்டும். அங்கு ஒப்புதல் கிட்டவில்லை எனில் (ஜனாதிபதி ஆட்சி ரத்து தவிர) இப்பிரகடனங்களின் செயல்பாடுகள் இரண்டு மாதங்களில் காலாவதியாகி விடும்.
(4) பாராளுமன்ற ஒப்புதல் பெற்ற ஜனாதிபதி ஆட்சிப் பிரகடனம் ஆறு மாதங்களில் காலாவதி ஆகும். பிறகு மறுபடி புதிதாய் பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும். எந்தப் பிரகடனமும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் அமலில் இருக்க முடியாது. (இடையில் மக்களவை கலைக்கப்பட்டு, மாநிலங்களவை மட்டும் ஒப்புதல் தந்தால் அடுத்த மக்களவை அமைந்த 30 நாட்களுக்குள் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.)
(5) (அ) இந்தியாவில் அல்லது அம்மாநிலத்தில் அவசர நிலைப் பிரகடனம் அமலில் இருந்தாலோ (ஆ) தேர்தல் ஆணையம் அம்மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடத்தச் சூழல் இல்லை எனச் சான்றிதழ் அளித்தாலோ ஒழிய ஜனாதிபதி ஆட்சிப் பிரகடனம் செய்யப்பட்ட ஓராண்டுக்குப் பின் அதை நீடிக்க பாராளுமன்றம் ஒப்புதல் தரலாகா. (இக்கட்டுப்பாடு 1978ல் கொண்டு வரப்பட்ட 44வது சட்ட திருத்தத்தின் மூலம் வந்தது.)
இதன் நீட்சியாய் 357வது பிரிவு ஜனாதிபதி ஆட்சியின் போது சட்டம் இயற்றுவது தொடர்பான அதிகாரங்களைப் பேசுகிறது. (1) ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கையில் அம்மாநிலத்தில் ஜனாதிபதியோ, பாராளுமன்றமோ வேறு அதிகாரியோ புதிய சட்டம் இயற்றலாம். (2) அப்படிப் போட்ட சட்டம் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்த பின்பும் அமலில் இருக்கும் (சட்டசபை அதை மாற்றவோ, நீக்கவோ தீர்மானிக்கும் வரை).
சுருங்கச் சொன்னால் ஒரு மாநில அரசு அரசியல் சாசனக்கூறுகளைச் செயல்படுத்த இயலாத சூழலில் மத்திய அரசு ஜனாதிபதி முகமூடியணிந்து அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறது. ஜனாதிபதி ஆளுநரின் மூலமாக ஓய்வு பெற்ற குடிமைப் பணியாளர்கள் முதலிய நிர்வாகிகளைப் பணியில் அமர்த்தி ஆட்சியை நடத்துவார். கவனிக்க வேண்டியது, முதல்வர், அவரது அமைச்சர்கள் அனைவரது பதவியும் பறிக்கப்படும். சட்டசபை ஒத்தி வைக்கப்படும் அல்லது கலைக்கப்படும்.
பொதுவாய் முதல்வரே ஒரு மாநிலத்தின் நடைமுறைத் தலைமை (de facto). ஆளுநர் கௌரவத் தலைமை (de jure). அட்டைக் கத்தி அசல் கத்தியாவதே ஆட்சிக் கலைப்பு!
ஜம்மு & காஷ்மீரில் மேற்சொன்ன சிக்கல்கள் எழுகையில் அம்மாநில அரசியல் சாசனத்தின் 92வது பிரிவின் படி முதலில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படும். இந்திய ஜனாதிபதியின் சம்மதம் பெற்றபின் ஆளுநர் இந்தப் பிரகடனத்தை வெளியிடுவார். ஆறு மாதத்தில் ஆளுநர் ஆட்சியை நீக்குமளவு நிலைமை சீர்படவில்லை எனில் பின் 356வது பிரிவைப் பிரயோகித்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும். இரண்டும் ஒன்று போல் தோன்றினாலும் மெல்லிய நடைமுறை வேறுபாடுகள் உண்டு.
356வது பிரிவின் வேர் உண்மையில் ப்ரிட்டிஷ் இந்தியாவில் தொடங்குகிறது. 1935ல் அவர்கள் இயற்றிய இந்திய அரசுச்சட்டமானது இந்தியாவில் தேர்தல் நடத்தி மக்களே தங்கள் மாகாண அரசுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வழி செய்தது. அதன் 93வது பிரிவு சில சூழல்களில் கவர்னர் (ப்ரிட்டிஷ்காரர்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட அரசை நீக்கி, மாகாண அதிகாரங்களைக் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்கிறது. முதல்முறையாக இந்திய அரசியல் கட்சிகளிடம் அமைச்சரவை அமைத்து ஆளும் அதிகாரத்தை அளிப்பதால் சிக்கல்கள் முளைத்தால் கையாளும் முன்னேற்பாடாக இத்தகைய சட்டத்தை வைத்திருந்தது ப்ரிட்டிஷ் அரசு. சுதந்திரத்திற்குத் தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்த நம்மை அவர்கள் முழுக்க நம்பாதிருந்தது ஆச்சரியமல்ல. கட்டுப்படுத்தப்பட்ட மக்களாட்சியையே ப்ரிட்டிஷார் இந்தியாவில் அனுமதித்தனர்.
சுதந்திரம் கிடைத்த ஆகஸ்ட் 1947 முதல் அரசியல் சாசனம் அமலுக்கு வந்த ஜனவரி 1950 வரையிலான இரண்டரை ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட 93வது சட்டப் பிரிவு அமலிலேயே இல்லை. பிரிவினைக் கலவரங்கள் மற்றும் மாகாண இணைப்புகள் நடந்த அந்தக் காலகட்டத்தில் அது மாதிரியான மாகாணங்கள் மீதான ஓர் உச்ச அதிகாரம் இன்றி மத்திய அரசு தடுமாறி இருக்க வேண்டும். அதனால் அரசியல் சாசனத்தின் வரைவில் 356வது பிரிவு இடம் பெற்றது. அரசியல் நிர்ணயச் சபை விவாதங்களின் போது இப்படியான உச்ச அதிகாரத்தை மத்திய அரசுக்கு அளிப்பது குறித்த அச்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன. அது மத்திய மாநில - அரசுகள் இணங்கி நடத்தும் கூட்டாட்சி அரசு (Federal Government) முறைக்கு எதிரானது என மாநிலக் கட்சிகளும் இடதுசாரிகளும் கவலைப்பட்டனர். ஆனால் அம்பேத்கர் அவற்றை எல்லாம் நிராகரித்தார். அவர் இத்தகு சட்டப் பிரிவுகள் எழுத்தில் இருந்தாலும் ஒருபோதும் செயல்பாட்டுக்கு வராத Dead Letter-ஆகவே இருக்கும் என நம்பினார்.
ஆகஸ்ட் 9, 1949 அன்று ஆட்சிக் கலைப்புச் சட்டம் மீதான விவாதத்தில் அதற்கான வழிகாட்டு முறைமையையும் குறிப்பிட்டார் அம்பேத்கர்: “ஒருவேளை இச்சட்டம் பயன்படுத்தப்பட்டால், ஜனாதிபதி மாகாணங்களின் நிர்வாகத்தை முடக்கும் முன் உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்வார் என நம்புகிறேன். முதலில் ஜனாதிபதி சம்மந்தப்பட்ட மாகாணத்துக்கு அரசியல் சாசனம் சரியாக அமல்படுத்தப்படவில்லை என்பது குறித்த ஓர் எச்சரிக்கை விடுக்க வேண்டும். அது பயனளிக்கவில்லை எனில் அடுத்த நடவடிக்கையாக அந்த மாகாணத்தில் வாக்கெடுப்பின் மூலம் மக்களே தங்களுக்குள் அப்பிரச்சனைக்குத் தீர்வு காண வலியுறுத்த வேண்டும். இவ்விரு முயற்சிகளுமே தோற்றால் மட்டுமே ஆட்சிக் கலைப்பைப் பரிசீலிக்க வேண்டும்.”
இப்படியாகத்தான் அன்று இந்திய அரசியல் சாசனத்தில் 356வது பிரிவு இடம்பெற்றது.
ஆனால் அம்பேத்கரின் நம்பிக்கை பொய்த்தது. நவீன இந்தியாவின் முதற்சிற்பியான நேருவே அதை உடைத்து, தவறான முன்னுதாரணம் ஆனார். 1959ல் கேரளாவில் ஈஎம்எஸ் நம்பூதிரி பாடின் கம்யூனிஸ்ட் அரசு முழுப் பெரும்பான்மை பெற்றிருந்த போதும் அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த தன் மகள் இந்திரா காந்தியின் பேச்சைக் கேட்டு விமோசன சாமாரம் (மலையாளத்தில் ‘சுதந்திரப் போராட்டம்’ - கம்யூனிஸ்ட் அரசு கொண்டு வந்த நில மற்றும் கல்விச் சீர்திருத்தங்களை எதிர்த்து நடந்தது) போராட்டங்களால் சட்டம் ஒழுங்கைக் காரணங்காட்டி ஆட்சியைக் கலைத்தார். துரதிர்ஷ்டவசமாக அதைக் காண அம்பேத்கர் உயிருடன் இல்லை.
அதற்கு முன்பே 1953ல் தேசத்தின் முதல் காங்கிரஸ் அல்லாத ஆட்சியின் கலைப்பு பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநிலங்களின் ஒன்றியத்தின் (PEPSU) மீது 356வது பிரிவு பிரயோகிக்கப்பட்டது. அடுத்த வந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றது.
சுதந்திரம் கிடைத்த முதல் இருபது ஆண்டுகளில் அதாவது நேருவும் லால் பகதூர் சாஸ்திரியும் பிரதமராக இருந்த வரை 9 முறை 356வது பிரிவு பயன்படுத்தப்பட்டது. பிறகு இந்திரா காந்தி பிரதமரானார். ஆட்சியிலிருந்த பத்தாண்டுகளில் 35 முறை இப்பிரிவைப் பயன்படுத்தி ஆட்சிகளைக் கலைத்தார். அரசியல் காரணங்களுக்காக 356வது சட்டப் பிரிவு மிக மிக மோசமாகப் பயன்படுத்தப்பட்டது அப்போது தான்.

எமர்ஜென்ஸிக்குப் பின் ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாயும் (முதல் காங்கிரஸ் அல்லாத மத்திய அரசு) தான் பதவியிலிருந்த வெறும் ஈராண்டுகளில் 16 முறை மாநில அரசுகளைக் கலைத்தார். எல்லாமே காங்கிரஸ் ஆட்சி செய்தவை. அதில் ஒன்று ராஜஸ்தான். ராஜஸ்தான் மாநில அரசு அதை ஏற்காமல் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. ஆட்சிக் கலைப்புகளுக்குப் பின் இருக்கும் அரசியல் காரணங்களை ஆராய மறுத்தது அத்தீர்ப்பு. வழக்கை விசாரித்த சில நீதிபதிகள் 356வது பிரிவை அமல்படுத்துவது என்ற ஜனாதிபதியின் முடிவைக் கேள்வி கேட்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்று வேறு சொன்னார்கள்.
மீண்டும் 80களில் இந்திரா அரியணை ஏறிய போது முந்தைய ஜனதாக் கட்சி அரசைப் பழிவாங்கும் முகமாக 15 முறை ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்தார். (ஆக மொத்தம் இந்திரா காந்தி மட்டும் 50 மாநில அரசுகளைக் கலைத்திருக்கிறார்.) இந்திரா காந்தி ஆட்சியில் ஒரே ஆண்டில் (1977) 12 அரசுகள் கலைக்கப்பட்டன. பின் மீண்டும் அவர் பதவிக்கு வந்த போது ஒரே ஆண்டில் (1980) 9 அரசுகள் கலைக்கப்பட்டன. ஒராண்டில் அதிக முறை 356வது பிரிவைப் பயன்படுத்திய சாதனையாளர்ரும் இந்திரா தான்!
அவர் மறைந்த பின் இச்சட்டப்பிரிவு அவ்வளவு அதீதமாய்ப் பயன்படுத்தப்படவில்லை (ஆனால் நரசிம்ம ராவ் 11 முறை; மன்மோகன் சிங் 12 முறை) என்றாலும் இன்று வரையிலும் கூட இதைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு இருந்து தான் வருகிறது.
மணிப்பூர் (10), உத்திரப் பிரதேசம் (9), பஞ்சாப் (9) மற்றும் பிஹார் (8) ஆகியவை தாம் இதுவரை இச்சட்டத்திற்கு அதிக முறை பலியான மாநிலங்கள். சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தான் இதுகாறும் இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டதில்லை. (தெலுங்கானா ஆந்திரப் பிரதேசத்தின் பகுதியாக இருந்த போது அமல்படுத்தப்பட்டது.)
இதுவரையிலான ஜனாதிபதி ஆட்சிகள் 7 நாட்கள் முதல் 7 ஆண்டுகள் வரையிலும் கூட நடந்திருக்கிறது. ஜம்மு & காஷ்மீரில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஜனாதிபதி ஆட்சி நடந்தது தான் அதிகபட்ச காலம் (1990 - 1996). மேற்கு வங்கத்திலும் (1962), கர்நாடகத்திலும் (1990) வெறும் 7 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி நடந்திருக்கிறது.
ஒருபுறம் எதிரிக் கட்சிகளின் மீது 356வது பிரிவைத் தவறாகப் பயன்படுத்தினார்கள் என்றால் சொந்தக் கட்சியின் மீது அதைப் பயன்படுத்தாமல் தவறு செய்தார்கள் இன்னொரு புறம். பெரும் உதாரணம் 2002 குஜராத் கலவரங்களின் போது மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு இருந்தது. குஜராத்தில் இருந்த மோடியின் பாஜக அரசை 356வது பிரிவைப் பயன்படுத்திக் கலைக்க அத்தனை முகாந்திரம் இருந்தும் வாஜ்பாய் அதைச் செய்யவில்லை. மிகப் புதிய உதாரணம் என்றால் நம் தமிழகம் தான். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினர்களை சொகுசு விடுதியில் அடைத்து குதிரை பேரம் நடந்தது ஊருக்கே தெரியும் என்றாலும் மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசு அதிமுகவைக் கையகப்படுத்தும் நோக்கில் அதைக் கண்டு கொள்ளவில்லை. இன்று வரை தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான காரணங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.
விதிவிலக்காய்ச் சொந்தக் கட்சியின் மாநில அரசையே கலைத்த உதாரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. 1951ல் பஞ்சாபில் காங்கிரஸின் உட்கட்சிச் சிக்கல்களைச் சீரமைக்கும் முகமாக ஆட்சிக் கலைப்பைப் பயன்படுத்தினார் ஜவஹர்லால் நேரு (இந்தியாவில் முதன்முறையாக 356வது பிரிவு பயன்படுத்தப்பட்டது அப்போது தான்). 1983ல் மீண்டும் அதே பஞ்சாபில் இந்திரா காந்தி காங்கிரஸ் அரசையே கலைத்தார். அப்போது தீவிரவாதப் பிரச்சனைகளால் அங்கு சட்டம், ஒழுங்கு சீர் கெட்டிருந்தது. 1973ல் ஆந்திராவில் நரசிம்ம ராவின் அரசும் இதே போல் தான் கலைக்கப்பட்டது.

1984ல் இந்திரா ஆந்திரப் பிரதேச மாநில அரசைக் கலைத்தார். அப்போது அங்கே என்டி ராமாராவ் முதல்வர். என்டிஆர் உடனே தன் கட்சி சட்டசபை உறுப்பினர்களைக் கொத்தாகப் பேருந்திலேற்றி கர்நாடகாவுக்குப் போனார். பிறகு ஜனாதிபதியைச் சந்தித்து அவர் முன் தன் ஆதரவு எம்எல்ஏக்கள் எல்லோரையும் ஆஜர்படுத்தினார். ஆக, இன்றைய கூவத்தூர் அக்கப்போர்களுக்கெல்லாம் முன்னோடி என்டிஆர் தான்.
1985ல் ராஜீவ் காந்தி கட்சித் தாவல் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதன் மூலம் பாராளுமன்ற மற்றும் சட்டசபைகளில் சபாநாயகர்களுக்குக் கட்சித் தாவும் உறுப்பினர்களை நீக்கம் செய்யும் அதிகாரம் கிடைத்தது. 356வது பிரிவைத் தவறாகப் பிரயோகிக்க இந்த அதிகாரத்தையும் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினார். 1992ல் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் (Kihoto Hollohan vs Zachillhu and Others) சபாநாயகர்களின் முடிவு நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டதே எனத் தீர்ப்பளித்தது. இதுவும் 356வது பிரிவின் பயன்பாட்டை நேர்செய்ததில் ஒரு முக்கியமான தீர்ப்பு.
மத்திய - மாநில அரசுகளிடையேயான உறவை ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் 1983ல் சமர்ப்பித்த அறிக்கையில் “அரசியல் சாசனத்தின் 356வது பிரிவு மிகக் குறைவாகவே, தீவிரமான சந்தர்ப்பங்களில் மட்டும், மற்ற அனைத்து வழிகளும் மாநிலத்தின் நிலைமைனைச் சீராக்குவதில் தோல்வியுற்றுவிட்ட போது, மிகக் கடைசி நடவடிக்கையாகவே பயன்படுத்தப்பட வேண்டும்” என்று சொல்கிறது.
11 மார்ச் 1994ல் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசுக்கும் எஸ்ஆர் பொம்மைக்கும் நடந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பானது இந்திய அரசியல் சாசனத்தின் 356வது பிரிவை தவறாய்ப் பிரயோகிப்பதைத் தடுப்பது தொடர்பான மைல்கல் தீர்ப்பாகும்.
கர்நாடகாவில் 1989ல் ஜனதா கட்சி, லோக் தளம் கட்சிகள் இணைந்து ஜனதா தளம் என்ற புதுக் கட்சி உருவானதையொட்டி நடந்த சில குழப்பங்களால் மத்திய அரசு எஸ்ஆர் பொம்மை அரசுக்குப் பெரும்பான்மை இருந்தும் ஆட்சியைக் கலைத்தது. அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடந்த இதே மாதிரியான ஆட்சிக் கலைப்புகளையும் ஒட்டி பொம்மையின் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முன் சில முக்கியமான கேள்விகள் இருந்தன: 1) ஜனாதிபதியின் ஆட்சிக்கலைப்புப் பிரகடனத்தில் நீதித் துறை தலையிட முடியுமா? எனில் எவ்வளவு தூரம்? 2) ஜனாதிபதிக்கு ஆட்சிக் கலைப்பைப் பிரகடனம் செய்வதில் எல்லையற்ற அதிகாரங்கள் இருக்கின்றனவா? 3) ஆட்சிக் கலைப்புப் பிரகடனம் நீதித் துறைப் பரிசீலனை காரணமாக ரத்தானால் கலைக்கப்பட்ட சட்டசபையை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா? 4) ஆட்சிக் கலைப்புக்குப் பாராளுமன்ற அவைகள் ஒப்புதல் அளித்த பின்பும் பிரகடனம் செல்லுபடியாவது பற்றிக் கேள்வி எழுப்ப முடியுமா? 5) ஆட்சிக் கலைப்புப் பிரகடனம் நீதித் துறை விசாரணையில் இருக்கையில் தேர்தல் நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரமுண்டா?
பொம்மை வழக்குத் தீர்ப்பின் முக்கியப் பகுதியாக உச்சநீதிமன்றம் 356வது பிரிவைத் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கச் சில வழிகாட்டி நெறிமுறைகளை அறிவித்தது: 1) ஆளும் மாநில அரசு சட்டசபையில் பெரும்பான்மை பலம் பெற்றிருக்கிறதா என நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். 2) மத்திய அரசு மாநில அரசுக்கு முதலில் ஓர் எச்சரிக்கையும் அதற்குப் பதிலளிக்க ஒரு வார அவகாசமும் தர வேண்டும். 3) மத்திய அரசு ஜனாதிபதிக்கு மாநில நிலைமை குறித்து அளித்த அறிவுரையை நீதி மன்றம் கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஜனாதிபதி அதில் திருப்தி அடைந்தார் எனில் அதற்குப் பின் இருக்கும் காரணங்களைக் கேள்வி கேட்க முடியும். (அ) ஆட்சிக் கலைப்புப் பிரகடனத்துக்குப் பின் ஆதாரம் உள்ளதா? (ஆ) அந்த ஆதாரம் ஏற்குமளவு சரியானதா? (இ) இதில் உள்நோக்கம் ஏதும் இருக்கிறதா? 4) தவறான முறையில் 356வது பிரிவு பயன்படுத்தப்பட்டதாக நீதிமன்றம் கருதினால் உரிய பரிகாரத்தை அளிக்கும். 5) பாராளுமன்ற அவைகள் ஆட்சிக் கலைப்புக்கு ஒப்புதல் அளிக்கும் முன் ஜனாதிபதி சட்டசபையைக் கலைக்க முடியாது. 6) சாசனத்தை அமல்படுத்துவதில் தோற்றிருந்தால் தான் 356வது பிரிவைப் பயன்படுத்தலாம்; மோசமான நிர்வாகத்தின் காரணமாக அல்ல. 7) 356வது பிரிவை அரிதாகவே பிரயோகிக்க வேண்டும். இல்லை எனில் சாசனம் சார்ந்த மத்திய - மாநில உறவுகளை மோசமாய்ச் சிதைத்து விடும்.
பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இந்த முக்கியமான தீர்ப்பிற்குப் பின் 356வது பிரிவைப் பயன்படுத்துவது மட்டுப்பட்டிருக்கிறது. 1994 முதல் இன்று வரை ஆண்டுக்கு அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு மாநில அரசுகள் தாம் கலைக்கப்படுகின்றன. (கடந்த இருபதாண்டுகளாக மத்தியில் பெரும்பாலும் கூட்டணி ஆட்சி நிலவியதால் மாநிலக் கட்சிகளின் கை ஓங்கி இருந்ததையும் இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.)
பொம்மை வழக்கின் தீர்ப்புக்கான நடைமுறைப் பலன் 1997ல் நிகழ்ந்தது. அப்போது மத்தியிலிருந்த ஐக்கிய முன்னணி அரசு (அப்போது பிரதமர் குஜ்ரால்) உத்திரப் பிரதேசத்தில் ஆட்சியைக் கலைக்க ஜனாதிபதி கேஆர் நாராயணனுக்குச் சிபாரிசு செய்த போது அதைத் திருப்பி அனுப்பினார். அதற்கு அடுத்த ஆண்டு வாஜ்பாயின் பாஜக அரசு பிஹாரில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரச் சிபாரிசு செய்த போதும் மறுத்தார். அதற்கு மூன்று காரணங்கள் குறிப்பிட்டார்: 1) அரசியல் சாசனத்தை அமல்படுத்துவதில் அம்மாநிலம் தோற்று விட்டது என்பது ஆளுநரின் அறிக்கையில் தெளிவுபடவில்லை. 2) மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்தல், அவகாசமளித்து விளக்கம் பெறுதல் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. 3) ராப்ரி தேவி அரசு சட்டசபையில் பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது என்பதையும் பொம்மை தீர்ப்பில் வரும் சர்க்காரியா கமிஷன் வரிகளை முன்வைத்துப் பார்க்க வேண்டும்.
2005ல் பிஹார் அரசு கலைக்கப்பட்டதை ஒட்டிய வழக்கிலும் (Rameshwar Prasad & Ors vs Union of India & Anr) எஸ்ஆர் பொம்மை வழக்கின் தீர்ப்பை ஒட்டியே மாநில அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. (ஆனால் தீர்ப்புக்கு முன் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் கலைத்த சட்டசபையை உயிர்ப்பிக்க முடியாது என மறுத்து விட்டது.)
அரசியல் சாசனத்தின் 356வது பிரிவு சொல்லும் ஆட்சிக் கலைப்பு என்பது அரசியல் ஆயுதம் அல்ல. அதை ஆக்கியோர் அப்படி உத்தேசித்து அதை உருவாக்கவில்லை. ஆனால் அந்தப் பிரிவில் இருந்த அதீத அதிகாரக் குவிப்பின் காரணமாக அது சில நல்ல தலைவர்களால் கூடத் தவறாகப் பிரயோகிப்பட்டது. இன்று வரையிலும் அது தொடர்கிறது. மாறாக, தேவைப்படுமிடத்தே தவிர்க்கும் அநியாயமும் நடக்கிறது.
உதாரணமாக, சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தில் பிராண வாயு சிலிண்டர் தொடர்பான அரசு மருத்துவமனை மெத்தனத்தால் 64 குழந்தைகள் மருத்துவமனையில் இறந்ததை ஒட்டி யோகி ஆதித்யநாத்தின் அரசைக்கலைத்திருக்கலாம். போலவே ஹரியானாவில் சில தினம் முன் குர்மீத் ராம் ரஹீமுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்ததை ஒட்டி நடந்த கலவரத்தில் 31 பேர் இறந்ததை முன்னிட்டு மனோகர் லாலின் ஆட்சியைக் கலைத்திருக்கலாம். இரண்டுமே பாஜக அரசுகள் என்பதால் நரேந்திர மோடி அரசு அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் கள்ளமௌனத்தின் துணையுடன் கடக்கிறது!
ஆக, இவ்விஷயத்தில் இரு முனைகளிலுமே தெளிவான ஷரத்துக்களைக் கொண்ட துல்லியத் திருத்தம் கொண்டு வர வேண்டும்: 1) எப்போதெல்லாம் 356வது பிரிவைப் பயன்படுத்தவே கூடாது 2) எப்போதெல்லாம் அந்தப் பிரிவைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இக்கேள்விகளுக்கும் குழப்பமற்ற பதில்கள் தரக்கூடியதாக அத்திருத்தம் இருந்தால் தான் ஓரளவேனும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க முடியும்!
அப்படிச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து அந்த அதிகாரக்குவிப்பைச் சீர் செய்யலாம் தான். ஆனால் கையிலிருக்கும் பிரம்மாஸ்திரத்தை அழிக்க எவருக்கு மனம் வரும்!
***
(உயிர்மை - செப்டெம்பர் 2017 இதழில் வெளியானது)
Published on September 27, 2017 22:25
September 23, 2017
பெரியாரும் பிஏ கிருஷ்ணனும்
ஒரு படைப்பிலக்கியவாதியாகவும் (புலிநகக்கொன்றை & கலங்கிய நதி) ஒரு வரலாற்றெழுத்தாளராகவும் (தமிழின் ராமச்சந்திர குஹா என்றே அவரை மதிப்பிடுகிறேன்) என் பெருமரியாதைக்குரியவர் பிஏ கிருஷ்ணன். உயிர்மையில் அரசியல் சாசனத்தை முன்வைத்து நான் எழுதி வரும் தொடர்கட்டுரைகளுக்கு அவர் எழுத்துக்கள் முக்கியத் தூண்டுதல். அவ்வகையில் அவர் என் முன்னோடி. எப்படி ஜெயமோகனுடன் பல கருத்துக்களில் முரண்பட்டு இருந்தாலும் அவரை குரு ஸ்தானத்தில் வைத்திருக்கிறேனோ ஓர் எல்லை வரை பிஏ கிருஷ்ணனும் அப்படித்தான். ஆனால் பெரியார் விஷயத்தில் மட்டும் அவர் தன் சமநிலை துறந்து (அல்லது இழந்து) தொடர்ந்தும், ஆழமாகவும் (அதுவும் குறிப்பாய்ச் சமீப காலங்களில்) வெறுப்பையே வெவ்வேறு விதமாக, பல்வேறு விஷயங்களைச் சாக்கிட்டு எழுதி வருகிறார் என்பது சங்கடத்துக்குரியதே.

பிஏ கிருஷ்ணனின் த வயர் கட்டுரையை (Why Do Dravidian Intellectuals Admire a Man as Prickly as Periyar?) அது வெளியான போதே வாசித்து விட்டேன் என்றாலும் உடனடியாய் எதிர்வினையாற்ற இயலவில்லை. நெடுங்காலமாகவே இதில் அவர் பற்றி எனக்கிருக்கும் கருத்தை இத்தருணத்தில் பதிவு செய்து விடுதல் அவசியம் என்றே கருதுகிறேன்.
அதற்கு முன் என் அரசியல் நிலைப்பாட்டைச் சொல்லி விடுதல் இதைப் பெரியாரிய ஆதரவாக மட்டும் (அவர்) சுருக்கிப் புரிந்து கொள்ளாமல் தவிர்க்க உதவும். அரசியலில் என் ஆசான்களாக ஐந்து பேரைக் கருதுகிறேன்: காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார் மற்றும் மார்க்ஸ். எந்த அரசியல் பிரச்சனையிலும் என் நிலைப்பாடுகளைப் பெரும்பாலும் இவர்களின் சித்தாந்தங்களை ஒட்டியே அமைத்துக் கொள்கிறேன். என் கருத்துக்களுக்கு பிஏ கிருஷ்ணன் பொதுவாய் எதிர்வினை செய்வதில்லை. சிறுவன் அல்லது சிறியன் என்று கருதிக் கடந்திருக்கலாம். அது ஒருவகையில் நியாயமானதும் கூட. ஆனால் அதைஅதைத் தாண்டி அவசியம் எனத் தோன்றும் இடங்களில் அவருக்கு எதிர்வினையாற்றியே வருகிறேன்.
பிஏ கிருஷ்ணன் இதற்கு முன்பு எழுதாத எதையும் புதிதாய் இதில் எழுதி விடவில்லை. தொடர்ந்து அவர் தன் ஃபேஸ்புக் பதிவுகளிலும், சில கட்டுரைகளிலும், உரைகளிலும் சொன்ன விஷயங்களையே வேறு புதிய மேற்கோள்களுடன் ஆங்கிலத்தில் அழுத்தி இருக்கிறார். அவ்வளவு தான். பெரியாரை ஹிட்லருடன் ஒப்பிடுவதும் இங்கே புதிய விஷயம் அல்ல; தமிழக பிராமணர்களை ஜெர்மானிய யூதர்களுடன் ஒப்பிட்ட அசோகமித்திரன் பாணிப் பார்வையின் இன்னொரு கண்ணி தான் இது. ஆனாலும் "Periyar was a street-fighter, and the things he said in anger are largely unprintable" போன்ற வரிகளைப் படிக்கும் போது கோபம் முளைக்கத்தான் செய்கிறது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அப்படியான வரிகளின் நோக்கமே இப்படிக் கோபத்தைக் கிளர்த்துவது தான் எனும் போது அதற்கு ஏன் பலியாக வேண்டும்?
பிஏ கிருஷ்ணன் சுயசாதிப்பற்றில் பெரியார் வெறுப்பைச் செய்வதாக நான் கருதவில்லை. அவர் தான் பிறந்த சாதியை / சாதியினரை / சாதியத்தை தேவையான இடங்களில் விமர்சிக்கும் நேர்மை கொண்டவர் என்றே நம்புகிறேன்.எப்படி நம்புகிறேன் என்பதை அவரது எழுத்துக்களிலிருந்து ஆதார மேற்கோள்கள் காட்டுவதை விட அவரது ஒட்டுமொத்த செயல்பாடுகளிலிருந்து கிட்டும் பிம்பத்திலிருந்து கிரகித்துக் கொண்டது என்றே சொல்வேன்.
ஆனால் பெரியார் பார்ப்பனர்களை முன்வைத்துப் பேசிய, எழுதிய பலவற்றினாலும் அவர் ஆழமாகப் புண்பட்டிருக்கிறார் எனத் தெரிகிறது. அது அவரையோ அவர் மதிக்கும் அவர் சாதியினரையோ குறிப்பதாக அவர் எடுத்துக் கொள்கிறார். அதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. (காரணம் அவரும் அந்த சிலரும் அப்படியானவர்களாய் அல்லாமல் இருக்கலாம்.) புண்ணைத் திரும்பத் திரும்பக் குத்திக் கொள்வதைப் போல மறுபடி மறுபடி பெரியாரை வாசித்து தன் மனக்காயம் ஆறாமல் பார்த்துக் கொள்கிறார். அது ஒரு விதமான சுயவதை எனும் போதை தான்.
ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இரண்யனுக்கு பெருமாள் போல் பிஏ கிருஷ்ணனுக்குப் பெரியார். எந்தப் பெரியாரிஸ்டை விடவும் அதிகமாய் பெரியாரைப் பற்றியே சதாசர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் பிஏ கிருஷ்ணன்!
சுமார் ஐந்தாண்டுகள் முன் சென்னையில் 'சங்கம் 4' விழாவில் பெரியார் பற்றிய ஓர் உரையில் பிஏ கிருஷ்ணன் இவ்வாறு குறிப்பிட்டார்: "நான் பேசப்போவது பிராமணர்கள் பார்வையில் எனக்குத் தெரிந்த பெரியார். நான் படித்த அளவில் பிராமணர்களால் பார்க்கப்பட்ட பெரியார். நானும் பிராமணன் என மற்றவர்களால் அடையாளம் காணப்படுவதால் என் பார்வையில் பெரியார்." அன்றைய உரையில் மட்டுமல்ல; எப்போதுமே பெரியார் பற்றி இந்தப் பார்வையில் தான் எழுதிக் கொண்டிருக்கிறார். மறுபடியும் இங்கே அழுத்தம் தர விரும்புகிறேன்: அவர் சாதிய உணர்வில் இதைச் செய்யவில்லை. அவர் மனதில் பெரியார் பற்றி அவரது சுற்றத்தால் ஏற்றப்பட்ட ஒரு பிம்பத்துடன் தான் இன்று வரை போராடி வருகிறார்.
"ஒரு விஷயம் உங்களைக் குறிப்பதாகத் தோன்றினால் அது உங்களுக்குமானது தான்" என்று நண்பன் செந்தில்நாதன் சொல்லி இருக்கிறான். பெரியார் பார்ப்பனர் என்று சொல்லித் திட்டுவது ஒருவருக்குக் கோபம் தந்தால் அவ்வசை அவருக்குமானது தான். அப்படிச் சுயமாக வந்து வாங்கிக் கொண்டால் பெரியார் என்ன செய்வார் பாவம்!
பசு.கவுதமனின் பெரியார் தொகுப்பு பற்றிய அறிவிப்பு வந்த போது நிச்சயம் பிஏ கிருஷ்ணன் அதை வாங்கிப் படிப்பார் என உடனடியாய்த் தோன்றியது. அது தவறவில்லை. நான் ஏற்கனவே பல முறை ஃபேஸ்புக்கில் சொன்னதைப் போல் பெரும்பாலான பெரியாரிஸ்ட்களை விடவும் கிருஷ்ணன் பெரியாரை அதிகம் வாசித்திருப்பார். அது அவரது இயல்பு. எதையும் வாசித்தறிந்து கொண்டு பேசும் பண்பு. ஆனால் பெரியார் விஷயத்தில் அதுவே அவரது சிக்கலாகவும் மாறி விடுகிறது என்பது தான் துரதிர்ஷ்டமானது. இனிமேல் பெரியாரை அவரால் ஆக்கப்பூர்வமாக அணுகவே முடியாது என்று தோன்றுகிறது. இன்னும் நூறு கட்டுரைகள், ஆயிரம் மேற்கோள்கள் மூலம் பெரியாரை ஹிட்லர், செங்கிஸ்கான் என்று தான் நிறுவிக் கொண்டே இருப்பார். அதை ஏற்காத எவரையும் அவர் மூடர் என்றே முத்திரை குத்துவார்.
அவர் மேலும் மேலும் பெரியாரை வாசித்து விஷத்தைக் கக்கிக் கொண்டிருப்பதால் பயனே இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. எனக்கு ஜெயலலிதாவைப் பிடிக்காது. ஆனால் அவர் எவ்வளவு மோசமானவர் எனக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். சதா அவர் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்க மாட்டேன். அவரைப் போய் இத்தனை பேர் நம்பிக் கொண்டாடுகிறார்களே என வயிரெறிய மாட்டேன். மாறாய், அப்படியானவர்களை எல்லாம் மதிக்காமல் கடந்து போவேன். அத்தோடு என் எதிர்வினை முடிந்தது. ஏனெனில் இரக்கமற்ற காலம் பிடிக்காத விஷயத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் சொகுசை எவருக்கும் வழங்கவில்லை என நம்புகிறேன். ஆனால் அது என் வழி. என் போலவே எல்லோரும் இருக்க வேண்டும் என்று சொல்வதும் சரியல்ல. அவரவர்க்கு எது விருப்பமோ அதைச் செய்யட்டும்.
பிஏ கிருஷ்ணனை நான் ஒரே முறை சந்தித்திருக்கிறேன். சுமார் பத்தாண்டுகள் முன் சென்னைப் புத்தகக் காட்சியில்.
அதை முழுக்கச் சந்திப்பு என்று சொல்லி விட முடியாது. காலச்சுவடு அரங்கில் நூல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 'அக்ரஹாரத்தில் பெரியார்' என்ற அவரது நூல் வெளியாகியிருந்த சமயம். (அந்தத் தலைப்பையே எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை மோசமான வன்மம் பெரியார் மீது! 'அக்ரஹாரத்தில் கழுதை' என்ற திரைப்படம் புகழ்பெற்றது - குறைந்தது சிறுபத்திரிக்கை வட்டாரத்தில். அப்படி இருக்க, வேண்டுமென்றே கழுதையை நீக்கி விட்டு பெரியாரைப் போடுகிறார். கேட்டால் பிராமணர்களால் பெரியார் எப்படி எதிர்கொள்ளப்பட்டார் என்ற பொருளிலான கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பு தானே எனச் சாக்குப்போக்கு சொல்லலாம் தான். ஆனால் பெரியார் மீதான வெறுப்பின் வெளிப்பாடு தான் அது.) அரங்கில் அவர் நின்று கொண்டிருந்தார். பொதுவாக எழுத்தாளர்களுடன் பேசுவதற்குக் கூச்சப்படுபவன் நான் - இப்போது வரையிலும் அப்படித்தான். அதனால் அன்று அவருடனும் பேச எத்தனிக்கவில்லை. அப்போது அவரது 'புலிநகக்கொன்றை' நாவலைப் படித்திருந்தேன். அதனால் அவரது ரசிகன். காலச்சுவடில் அவரது கட்டுரைகள் சிலவற்றை வாசித்திருந்தேன். அக்கட்டுரைத் தொகுதியில் நான் வாசித்திராத கட்டுரைகள் கணிசமாய் இருந்தால் அதை வாங்கலாம் என்பது என் எண்ணம்.
அதனால் அந்நூலை எடுத்துப் புரட்டினேன். ஓரிரு நிமிடங்களில் என் அருகே வந்த பிஏ கிருஷ்ணன் "இது பெரியார் பத்தின புத்தகம் இல்ல" என்றார். அது தேடுபவனுக்கு உதவ முனையும் நட்பார்ந்த குரல் அல்ல; அவரது தொனியில் நிச்சயமாய் எள்ளல் இருந்தது. பெரியார் என்ற பெயர் இருந்ததால் அவரைப் போற்றிப் புகழ் பாடும் நூலாக இருக்கும் என்ற முரட்டு ஆர்வத்தில் அதை எடுத்துப் பார்ப்பதாக என் தோற்றத்தைக் கொண்டு அவர் கருதியிருக்க வேண்டும். அவரது நாவலை வாசித்து விட்டு அவர் மீதான பிரேமையால் அவரது அடுத்த நூலை வாங்கும் உத்தேசத்தில் இருப்பவன் என்று கணித்திருக்க வாய்ப்பு குறைவு. அது ஒரு வாசகனாக என்னைக் காயப்படுத்தியது. ஆனால் வரவழைத்துக் கொண்ட ஒரு புன்னகையுடன் அந்த நூலை அப்படியே வைத்து விட்டு நகர்ந்தேன். பிற்பாடு கடந்த பத்தாண்டுகளில் பலமுறை அந்த நூல் என் கண்களில் பட்டும் அந்த அனுபவம் தந்த சங்கடத்தால் அதை வாங்கும் ஆர்வத்தைத் தவிர்த்து விடுவேன்.
மிகச் சுலபமாய் இதை அவரது பார்ப்பனிய குணம் எனப் பொதுமைப்படுத்தி விட முடியும் தான். ஆனால் நான் அப்படிக் கருதவில்லை. அது அவரது முன்முடிவுகளுடன் அணுகும் தனிப்பட்ட ஆளுமைக் குறைபாடு தான். அந்த ஆதார குணத்தின் சமீப நீட்சியாய்த் தான் தான் பெருத்த வாசிப்புப் பின்புலம் கொண்ட பூகொ சரவணன், சரவண குமார் பெருமாள், பூவண்ணன் கணபதி போன்றவர்களைக் கூட உடனடியாய் பெரியாரிய முழுமூடர்கள் என்ற பட்டியலில் இணைத்து விட முடிகிறது.
நான் இதை பிஏ கிருஷ்ணனின் கட்டுரைக்குப் பதில் சொல்லும் முகமாக எழுதவில்லை. அதற்குரிய ஆழமான வாசிப்பும் போதுமான அவகாசமும் எனக்கில்லை. அவர் ஏன் அக்கட்டுரையை, அது போன்ற இன்ன பிற பத்திகளை எழுதுகிறார் என்று மட்டுமே ஆராய முற்பட்டிருக்கிறேன். இதுவரை வந்தவற்றில் பூகொ சரவணனின் எதிர்வினை மட்டுமே ஓரளவு பொருட்படுத்தத்தக்கது. ஆனால் அது உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினை. கிருஷ்ணன் கட்டுரையின் கருத்துக்களை வரிவரியாய் தர்க்கப்பூர்வமாய் நிராகரிக்கும் நிதானம் அதில் இல்லை. அதைப் பெரியாரியத் தரப்பின் போதாமையாகவே பார்க்கிறேன். ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டால், அது அவதூறாகவே இருப்பினும், அதைத் தர்க்கப்பூர்வமாக உடைத்தெறிவது தான் சரியான எதிர்கொள்ளல் முறை. எதிராளியின் மற்ற பலவீனங்களைப் பேசிக் கொண்டிருப்பது சரியல்ல. முன்பு இந்துத்துவ அம்பேத்கர் நூல் வந்த போதும் இதையே தான் சொன்னேன். அதன் ஆசிரியரை, இந்துத்துவர்களை வசை பாடுவதை விட அந்நூலை ஆதாரப்பூர்வமாக எதிர்த்து எழுத வேண்டும். அது மட்டுமே நிற்கும்.
உதாரணமாய், பெரியார் ஏன் ஹிட்லர் அல்ல என விளக்க வேண்டும்; பெரியார் பார்ப்பனிய எதிர்ப்பையே மேற்கொண்டார் என நிறுவ வேண்டும். பெரியாரின் பங்களிப்பு என்ன, இன்று அவரது இடம் என்ன என்பதைப் பட்டியலிட வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமாய் பெரியாரும் சில இடங்களில் சறுக்கி இருக்க வாய்ப்புண்டு என்பதை உணரும், அதை ஒப்புக் கொள்ளும் புரிந்துணர்வு வேண்டும். அதன் வழி பெரியாரில் எதை மட்டுமே நாம் எடுத்துக் கொள்கிறோம், எதை மறுதலித்துக் கடக்கிறோம் என்ற தெளிவு வேண்டும். அப்போது தான் ஒருவர் "பெரியார் இப்படிச் சொல்லி இருக்கிறாரே?" எனக் கொக்கி போடும் போது, "எல்லாம் எங்களுக்கும் தெரியும், நீ மூடு!" என்று நம்பிக்கையாகப் பேச முடியும்.
மேலே நான் சொன்ன ஐந்து ஆசான்களுமே என் வரையில் புனித பிம்பங்கள் அல்ல. அவர்களின் பல கருத்துக்களோடு நான் முரண்படுகிறேன். அது அப்படி இருப்பது தான் இயல்பு. ஒருவரே எல்லாவற்றையும் சரியாகச் சிந்தித்து இருந்தால் அவரே நமக்கு முழுமையான ஆசானாகி இருக்க முடியாதா! எதற்கு ஐந்து பேர்? ஆக, ஒருவர் பெரியாரியர் என்பதால் பெரியாரின் அத்தனை கருத்துக்களுக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. (அவரே அதைத் தான் பகுத்தறிவு என்கிறார்.) ஒருவர் நேருவியன் என்பதால் நேருவின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் ஜால்ரா போட வேண்டும் என்ற அவசியமில்லை. தேவையானதை மட்டும் தேவையான இடங்களில் மட்டும் பொருத்திக் கொள்ளலாம்.
இனியும் பிஏ கிருஷ்ணனின் நல்ல வாசகனாகத் தொடர்வதில் எனக்கு எந்த மனத்தடையும் இல்லை. அவரது எழுத்தில் எனக்கு உவப்பான விஷயங்கள் கணிசம். அவற்றை ஆரத் தழுவிக் கொள்வேன். ஆனால் பெரியார் பற்றிய அவரது எழுத்துக்களை வாசித்து என்னை நானே துன்புறுத்திக் கொள்ள மாட்டேன். அவற்றைப் பொருட்படுத்தவோ எதிர்வினையாற்றவோ ஏதுமில்லை. அது தான் கிருஷ்ணனுக்குமே நான் செய்யும் நன்மையாக இருக்கும்.
சுஜாதாவின் சலவைக் கணக்கைக் குமுதம் இதழ் வெளியிட்டது. ஆனால் அதை வைத்து அவரது எழுத்தாளுமையை அளவிட மாட்டோம் அல்லவா! சுஜாதாவுக்குச் சலவைக் கணக்கு; பிஏ கிருஷ்ணனுக்கு பெரியார். அவ்வளவு தான்.
*
Published on September 23, 2017 14:01
September 16, 2017
களவுப் பெருமை
'துப்பறிவாளன்' படத்தை டவுன்லோட் செய்திருக்கிறேன் என்று பெருமையாகவும், பைரஸி எதிர்ப்பை மோசமான ரசனையுடன் கேவலம் செய்தும் பதிவிட்ட ஒருவரை சற்றுமுன் ஃபேஸ்புக்கில் நட்பு விலக்கம் செய்தேன். இது அவர் டவுன்லோட் செய்து பார்ப்பது பிடிக்காமல் அல்ல; அந்த அடிப்படையில் பார்த்தால் 90% பேரை அநட்பிக்க வேண்டியது தான். பிரச்சனை அதுவல்ல. நான் விலகியதன் காரணம் அது பற்றிய குற்றவுணர்ச்சி சிறிதும் இன்றிப் பெருமிதக் கொழுப்புடன் அதை எழுதியதற்காக. அச்செயல் ஒரு க்ரிமினல் மனப்பான்மை கொண்டவராக, பழக ஆபத்தானவராக அவரை அடையாளப்படுத்துகிறது. நாளை பக்கத்து வீட்டுக் குழந்தையின் கழுத்தைத் திருகிப் போட்டு விட்டு அதையும் பெருமையாக அவர் சொல்லக்கூடும். அதை எல்லாம் காணத் திராணியில்லை.

திருட்டு டிவிடி / டவுன்லோடில் படம் பார்ப்பது குறித்து என் நிலைப்பாடு எளிமையானதல்ல. கூடவே கூடாது என நான் சொல்லவில்லை. இந்தியச் சூழலில் அது சாத்தியமும் இல்லை என்றே நினைக்கிறேன்.
நான் எப்போதெல்லாம் ஒரு படத்தைப் பைரஸியில் பார்க்கிறேன்? 1) நான் பெங்களூரில் வசிக்கிறேன் என்பதால் வியாபார நம்பிக்கையற்ற சில தமிழ்ப் படங்கள் இங்கு வெளியாவதில்லை (அல்லது தாமதமாக வெளியாகும்). அப்படியான படங்களை டவுன்லோட் செய்து பார்த்திருக்கிறேன். 2) சில படங்களை அவை வெளியான போது நேரமின்மை அல்லது அறியாமையால் பாராது விடுத்திருப்பேன். சிலபல மாதங்கள் கழித்து அவற்றைப் பார்க்க விரும்பும் போது (குறிப்பாய் ஆண்டிறுதியில் என் திரைவரிசைப் பட்டியல் மற்றும் திரை விருதுப் பட்டியலுக்குத் தேவைப்படும் போது) அவை திரையரங்கில் ஓடாது. அப்படியான படங்களை டவுன்லோட் செய்து பார்த்திருக்கிறேன்.
அப்படிப் பார்ப்பதைத் திருட்டுத்தனம் என்று உணர்ந்தும் இருக்கிறேன். ஒருவேளை நியாயமான விலையில் அப்படங்களின் அதிகாரப்பூர்வ டிவிடியோ இணைய வடிவமோ கிடைத்தால் நிச்சயம் அவ்வழியையே தேர்ந்தெடுப்பேன். ஆக, வேறு வழியே இல்லை எனும் போது தான் கள்ளப்பிரதியை நாடுகிறேன். காசு செலவாகிறது என்ற காரணத்தால் சல்லிசாக குடும்பத்துடன் ஒரு படத்தை செலவில்லாமல் பார்த்து விடலாம் என்ற காரணத்திற்காக ஒருபோதும் நான் டவுன்லோட் செய்து படங்கள் பார்ப்பதில்லை. ஒருவேளை மல்டிப்ளெக்ஸ்களில் குடும்பத்துடன் போகும் போது மிக மிக அதிகக் காசு செலவாகிறது என்று தோன்றினால் சாதாரணத் திரையரங்குகளுக்கு குறைந்த விலை டிக்கெட்டில் குடும்பத்தை அழைத்துப் போகிறேன். அந்த ஒழுக்கத்தைக் குடும்பத்தினருக்கும் போதித்தே இருக்கிறேன்.
ஆனால் ஒருவேளை இதுவும் சொகுசாக இருக்கலாம் தான். இந்த வசதி எல்லோருக்கும் இராது என ஒப்புக் கொள்கிறேன். அதனால் தான் மேலே "கூடவே கூடாது" எனச் சொல்லவில்லை எனக் குறிப்பிட்டேன். ஒருவர் ஏழ்மையினால் தியேட்டருக்குப் போய்ப் பார்க்க முடியாத சூழலில் எப்போதேனும் டவுன்லோட் செய்தோ, திருட்டு டிவிடியிலோ பார்க்கலாம் தான். ஆனால் பார்க்கும் எல்லாப் படங்களையும் அப்படித் தான் பார்ப்பேன் என்று சொல்வது நியாயமே அல்ல. திருட்டுத்தனமாய்ப் பார்ப்பதற்குப் பிராயச்சித்தமாக தனக்குப் பிடித்த நடிகர் / இயக்குநர் படங்கள் எதையேனும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது தியேட்டரில் குடும்பத்துடன் போய்ப் பார்க்க வேண்டும் என்றே சொல்வேன்.
இன்னும் சில சூழல்களும் உண்டு. சுயசம்பாத்யம் இல்லாதவர்கள், வீட்டிலிருக்கும் பெண்கள் ஆகியோருக்கு வீட்டினரை மீறி திரையரங்கு போய்ப் பார்க்கும் சுதந்திரம் இல்லாமல் இருக்கலாம். அதுவும் நம் மண்ணுக்கே உரிய வினோதக் கேவலம் தான். அவர்களுக்கும் சலுகைகள் தரலாம் தான். ஆனால் மேலே சொன்ன பிராயச்சித்தம் அவர்களுக்கும் பொருந்தும்.
வரும் படங்கள் எல்லாம் மோசமாக இருப்பதாகச் சொல்வது ஒருபோதும் இந்தத் திருட்டுத்தனத்தை நியாயப்படுத்தாது. மோசமான படங்களைத் தடுக்க ஒரே வழி அவற்றைப் பார்க்காமல் தோல்வியுறச் செய்வது தானே ஒழிய, திருட்டுத்தனமாய்ப் பார்ப்பது அல்ல. அப்படிப் பார்ப்பதை முதலில் திருட்டாக உணரும் நுண்ணுணர்வு ஒருவருக்கு வேண்டும். அந்த மனசாட்சி உறுத்தலுடன் தான் படம் பார்க்க வேண்டும். மாறாக டவுன்லோட் செய்து பார்ப்பதையே பெருமையாக ஏதோ சாதனை செய்து விட்டதைப் போல் பேசுவது எவ்வளவு பெரிய தடித்தனம்!
விஷால் எத்தனையோ கேவலமான படங்கள் நடித்திருக்கலாம். அதிகம் சம்பளம் வாங்குபவராய் இருக்கலாம். நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் செய்பவராய் இருக்கலாம். திமிராய்ப் பேசுபவராய் இருக்கலாம். அவற்றை எல்லாம் அந்தந்த பொருத்தமான இடங்களில் எதிர்ப்பது தானே முறை! அவர் கள்ளப்படங்களை எதிர்ப்பது நியாயமான விஷயம் தானே! அங்கே ஏன் அவரைத் தாக்குகிறோம்? அவரின் பொருட்டு ஒரு கலைப்படைப்பை ஏன் பழிவாங்குகிறோம்?
தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் போன்ற தளங்களின் அட்மின்களின் நோக்கம் (மோடிவ்) என்ன என்பதை நான் அறியேன். விரோதம், வியாபாரம் என என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் அதில் ஆராயவோ கருத்துரைக்கவோ ஒன்றும் இல்லை. அதை எதிர்க்கவோ கண்டிக்கவோ இல்லை என்றால் கூட பரவாயில்லை, ஹீரோயிஸமாகத் தூக்கி வைத்துக் கொண்டாடுவது அறமான செயலா? ஒரு குற்றத்தை நகைச்சுவையாக்குவது அதன் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை நீர்க்கச் செய்யும். என் மரியாதைக்குரியவர்கள் சிலர் கூட இதைச் செய்வதைக் காண்கிறேன்.
அப்படி அவர்கள் செய்வதன் நீட்சியாய்த் தான் பைரஸியில் படம் பார்ப்பதும் அதைப் பற்றி மிக இயல்பாய்ப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதும் எந்தப் பிழையும் இல்லை என்றே பொதுப்புத்தியில் ஆழப் பதிந்து விட்டது. இன்னொருபுறம் அப்படி எழுதுவதன் மூலம் நீங்கள் திருடுவது மட்டுமின்றி மற்றவர்களையும் திருடத் தூண்டுகிறீர்கள், அதற்கு வழி சொல்கிறீர்கள்.
சினிமாவும் ஒரு தொழில் தான். அதில் தயாரிப்பாளர்கள் கொள்ளை அடிப்பதும் நடக்கிறது. தகுதிக்கு மீறி நடிகர்கள் சம்பளம் பெறுவதும் நடக்கிறது. தேவையின்றி அதிக பட்ஜெட்டில் படம் எடுப்பதும் நடக்கிறது. விநியோகஸ்தர்களுக்கு இதன் காரணமாக அதிக விலையில் விற்கப்பட்டு அது ப்ளாக் டிக்கெட் வடிவில் நம் தலையில் தான் விடுகிறது. இதில் ஒவ்வொன்றுமே எதிர்க்க வேண்டிய ஒன்று தான். ஆனால் சினிமா உலகம் என்பது இந்த கொழுத்த முதலைகள் மட்டுமன்று; அதை எல்லாம் தாண்டி அந்தத் துறையை நம்பி ஆயிரக்கணக்கான எளியோர் குடும்பங்களும் இருக்கின்றன என்பதை நினைவில் வையுங்கள். குறிப்பிட்ட தொகைக்கு மேல் டிக்கெட் வைத்தால் அதை மறுதலித்து படம் பார்க்காமல் தவிர்க்கலாம். இப்படி எல்லோரும் செய்யும் போது அவர்களே புரிந்து கொண்டு டிக்கெட் விலை குறைக்க வேண்டி வரும். அது கடைசியில் நடிகர்களின் சம்பளத்தில் கை வைப்பதில் முடியும். அப்படித்தான் நம் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டுமே ஒழிய திருட்டுத்தனம் செய்தல்ல. ஒரு டீக்கடையில் டீ நன்றாக இல்லை என்றால் அடுத்த முறை குடிக்காமல் தவிர்ப்போம் மாறாய் அங்கிருந்து டீயைத் திருடிக் குடிப்போமா? நான் தவிர்க்கவியலாத சூழல்களில் பார்க்கலாம் என்று சொல்வது கூட அந்தக் கடையில் யாசகம் செய்து டீ குடிப்பது போன்றது தான். எப்போதுமா பிச்சையெடுப்பது!
எந்த அவசியமும் இன்றி நீங்கள் தொடர்ந்து தரவிருக்கிப் பார்ப்பதன் மூலம் மெல்ல மெல்ல சினிமாவைக் கொல்கிறீர்கள். பத்து ஆண்டுகளில் சினிமாவே இதனால் இல்லாமல் போகலாம். பிறகு எதைத் தரவிறக்கிப் பார்ப்பீர்கள்!
*
Published on September 16, 2017 05:50
September 4, 2017
நீதிக்கதை [சிறுகதை]
நீங்கள் தற்கொலை செய்திருக்கிறீர்களா?
இதை வாசித்துக் கொண்டிருப்பதன் மூலம் இல்லை என்று புரிகிறது. குறைந்தபட்சம் தற்கொலை முயற்சி? புதிய பிளேடு கொண்டு நடுங்காமல் மணிக்கட்டில் வெட்டிக் கொண்டிருக்கிறீர்களா? கை, கால்களைக் கயிற்றால் கட்டிக்கொண்டு ஆழக்கிணற்றில் குதித்திருக்கிறீர்களா? அல்லது ப்ளக் பாயிண்ட் உடைத்து மின்சார வயரைப் பற்களில் கடித்திருக்கிறீர்களா? இவை எல்லாம் அதிர்ஷ்டமிருந்தால் தப்பிக்கச் சாத்தியமுள்ள தற்கொலை முறைகள். மரணத்தைக் கொஞ்சம் கிட்டே ஸ்பரிசித்துத் திரும்பலாம்.
இதுவரை நான் இரு முறை தற்கொலை முயற்சி செய்திருக்கிறேன். முதல் முறை ஈராண்டு முன். ரூப்ராணி என் காதலை மிக அலட்சியமாக மறுத்த போது. அதற்கு அவள் சொன்ன காரணத்தை முன்னிட்டு. சுமாராகத்தான் படிப்பேன் என்பதெல்லாமா நிராகரிக்கக் காரணமாக ஏற்க முடியும்! எங்கள் வகுப்பிலேயே பெரும் பேரழகி அவள். அதை விடக் காரணம் தேவைப்படவில்லை எனக்கு அவளைத் தீவிரமாகக் காதலிக்க.
கதவைத் தாழிட்டு விட்டு ஓட்டை இல்லாத ஒரு பாலிதீன் பையினுள் - முந்தைய நாள் தண்ணீர் நிரப்பிச் சோதித்துக் கொண்டேன் - தலையை நுழைத்து, முகத்தை முழுக்க மூடி, கழுத்து வரை இழுத்து, இறுகக் கட்டினேன். காற்று உள்ளே புகாது, வெளியேறவும் செய்யாது. முதல் நிமிடம் ஒன்றும் தெரியவில்லை. இரண்டாம் நிமிடத்தின் மத்தியில் மூச்சு முட்டி, இருதயம் படபடத்து, கண் பாப்பா விரிந்து, முகம் கோணலாகத் தொடங்கியது. மூன்றாம் நிமிடம் தாங்காமல் கழுத்திலிருந்த முடிச்சை விடுவித்தேன். மூச்சு சீராகி, இதயத் துடிப்பு இயல்பாக முழுதாகப் பத்து நிமிடங்கள் பிடித்தன. அது இதுவரை யாருக்கும் தெரியாது. யோசித்துப் பார்த்தால் அதை ஒரு முயற்சி என்று சொல்வதை விட பயிற்சி என்று அழைப்பதே சரியாது!
இரண்டாம் முறை ஏழு மாதங்கள் முன். மேத்தமேடிக்ஸ் மாக் டெஸ்ட்டில் நூற்றுக்கு ஐம்பத்தைந்து எடுத்ததற்காகப் பெற்றோரைப் பள்ளிக்கு அழைத்திருந்தார்கள். அடுத்த மாக் டெஸ்டில் எண்பதுக்கு மேல் எடுக்கவில்லை எனில் தாராளமாய் வேறு பள்ளி பார்த்துக் கொள்ளலாம் என்று உறுதியாய்ச் சொல்லி விட்டார்கள். வீட்டுக்கு வந்த பின் அப்பா திட்டினார். அம்மா பேசவில்லை. பரமா – தங்கை - கேலி செய்தாள்.
“Mathematics is the queen of the sciences. உனக்கும் ராணிக்கும் ஒத்து வர்றதே இல்லடா.”
அன்று வீட்டில் சமையலறையில் வைத்திருந்த எலி பாஷாணத்தை எடுத்துத் தின்று விட்டு - என்ன ஒரு மோசமான சுவை! அதனைத் தின்று விட்டு எலிகள் செத்துப் போவது விஷத்தன்மையாலா அல்லது சுவையின் அதிர்ச்சியிலா எனக் குழப்பமாய் இருந்தது. - அறையில் போய்ப் படுத்துக் கொண்டேன். இம்முறை அறைக் கதவைத் தாழிடவில்லை. காரணம் என் பெற்றோரைப் பயமுறுத்துவதே நோக்கமாக இருந்தது.
எப்படியும் காப்பாற்றப்படுவேன் எனத் தெரியும். அதனால் தான் எல்லோரும் வீட்டில் இருந்த போது இறங்கினேன். அரை மணி நேரம் கழித்து அம்மா சீரியல் விளம்பர இடைவெளியில் தோசை வார்த்து விட்டு என்னைச் சாப்பிட அழைத்த போது பதில் இல்லாததால் என் அறைக்குள் நுழைந்து பார்த்தவள் நான் வாயில் நுரை தள்ளிக் கிடந்ததைப் பார்த்ததும் கீச்சிடுவதை அரை மயக்கத்தில் என்னால் உணர முடிந்தது.
அப்பா பதற்றமாகி என்னை அள்ளித் தூக்கிச் சென்று, காரின் பின்னிருக்கையில் திணித்து, அருகிருந்த மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தேடி, டாக்டர் பரிசோதித்துச் சிகிச்சையைத் தொடங்கிய போது ஒரு மணி நேரம் ஓடி இருந்தது. கேள்விப்பட்ட அதே பழைய முறை தான். விஷத்தை முறிக்க ஓர் ஊசி போட்டு, வாயில் ஏதோ திரவத்தைச் செலுத்தி வாந்தி எடுக்கச் செய்தார்.
எலி பாஷாணத்தை விடவும் மிகக் கொடூரமான ருசி கொண்டதாய் இருந்தது அது.
அப்பா அதிலிருந்து என்னுடன் சரியாய்ப் பேசுவதில்லை. அதற்கு முன்பு மட்டும் என்ன பேசிக் கிழித்தார்! மதிப்பெண் குறைந்தால் திட்டுவார். நிறைய அறிவுரைகள் சொல்வார். காசு சம்பாதிப்பது எவ்வளவு சிரமம் என வகுப்பெடுப்பார். என் வயதில் அவர் பேருந்தேறி பள்ளிக்குப் போனதைச் சொல்வார். எல்லாவற்றும் மேலாய் பள்ளி வகுப்பு, பக்கத்து வீடு அல்லது பரமாவுடன் என்னை ஒப்பிட்டு மட்டம் தட்டுவார்.
“பரமாவைப் பார்த்தாவது புத்தி வராதா ஜீவா உனக்கு? உனக்குப் போடற அதே சோத்தைத் தானே அவளுக்கும் போடறோம்? அவ எப்படி மாணிக்கமா இருக்கா!”
பள்ளியிலோ அக்கம் பக்கத்திலோ அது பற்றி வீட்டார் யாரும் மூச்சு விடவில்லை. ஓட்டை வாய் பரமா கூட வாய் திறக்கவில்லை என்பது ஆச்சரியம் தான். அவளும் என் பள்ளியில் தான் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறாள். நான் ஒரு வகுப்பு கூடுதல்.
நான் நீதி. அப்படிச் சொன்னால் உங்களுக்குத் தெரியாது. பள்ளி வருகைப்பதிவேட்டில் ஜீவா என்றிருக்கும். மாநகரின் பிரபலப் பள்ளி. எனக்குப் பிடித்தமான நடிகை இதே பள்ளியில் தான் படித்தாள். எனக்கு மன அழுத்தம் இருக்கிறது. இப்படிச் சொல்வது ஏதோ நான் குடித்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதைப் போல் இருக்கிறது. அதெல்லாம் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன! நீதி என்பது புனைப்பெயர் - ரகசியப் புனைப்பெயர் - சரியாய்ச் சொன்னால் அதன் சுருக்கம். நீலத் திமிங்கலம்!

ஆம். நான் ப்ளுவேல் கேம் ஆடிக் கொண்டிருக்கிறேன். இன்று பதினேழாவது நாள்.
இன்று என் க்யூரேட்டர் எனக்குக் கொடுத்திருக்கும் டாஸ்க் நண்பகல் பன்னிரண்டு மணி உச்சி வெயிலில் மிக உயரமான கட்டிடம் ஒன்றின் உச்சியில் பக்கவாட்டுச் சுவரில் ஏறி நின்று கீழே பார்க்க வேண்டும். அப்படியே செல்ஃபி போட வேண்டும்.
முதலில் விளையாட்டாய்த் தான் இதைத் தொடங்கினேன். உண்மையாகவே இது விளையாட்டு தானே! என்ன ஒன்று, எல்லோராலும் விளையாடி விட முடியாது!
வகுப்பில் அது பற்றிப் பேசிக் கொண்டார்கள். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ப்ளூவேல் கேமில் கலந்து கொள்ளும் விருப்பத்தை ஒரு ஹேஷ் டேகாகப் பதிய வேண்டும். ப்ளூவேல் கேமின் க்யூரேட்டர்கள் அதைப் பார்த்து விட்டு அழைப்பார்கள். அப்புறம் நம்மைத் தேர்ந்தெடுப்பார்கள். ஐம்பது நாள் ஐம்பது டாஸ்க். சுலபமாய்த் தொடங்கி போகப் போகக் கஷ்டமாகும். ஐம்பதாவது நாள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். இதுதான் ஆட்டத்தின் வடிவம் என்றார்கள். மற்ற டாஸ்க் என்னென்ன என்று ஒவ்வொருவரிடமும் ஒரு பட்டியல் இருந்தது. “த கேம் லுக்ஸ் வெரி டேன்ஞ்சரஸ் யார்” என்று அழகாய் வாயைப் பிளந்தாள் ரூப்ராணி. (அதென்ன முன்ஜென்மப் பந்தமோ, நானும் அவளும் மட்டும் வகுப்பு மாறுவதே இல்லை!)
ரூப்ராணி மார்வாடிப் பெண் என்றாலும் தொடர்ந்து தமிழ் பிக்பாஸ் பார்ப்பவள். அவளுக்கு ப்ளூவேல் டாஸ்க்கள் பயங்கரமாய்த் தோன்றியதில் ஆச்சரியமில்லை. அவளது பயத்திற்காகவே இதில் கலந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது.
ஃபேஸ்புக்கில் உறவின மூதேவிகள் - கௌரவமாய் கசின்ஸ், அங்கிள்ஸ், ஆன்ட்டீஸ்- எல்லோரும் குத்த வைத்திருக்கிறார்கள். எது எழுதினாலும் பத்து நிமிடத்தில் வீட்டில் பற்ற வைப்பார்கள். ஒருமுறை பாரில் எடுத்த ஃபோட்டோவை ஃபேஸ்புக்கில் போட்டு க்ளாஸ்மேட் டேக் செய்ய பெரும் கலவரமாகி விட்டது. அம்மாவுக்கு நான் குடித்தது பிரச்சனை; அப்பாவுக்கு ஃபோட்டோ வந்தது; பரமாவுக்கோ நான் மட்டும் குடித்தது.
அதனால் ட்விட்டர் அக்கவுண்ட்டைத் தூசு தட்டினேன். அங்கே பெரும்பாலும் ஏதும் எழுதுவதில்லை. எப்போதேனும் ரீட்வீட்கள். #F57 என்ற ஹேஷ் டேகைப் போட்டு விட்டு ஒரு வாரம் காத்திருந்தேன். பதில் இல்லை. யாரோ ஒரு ஃபாலோயர் “AK57 விவேகம்னு தெரியும். இது என்ன F57?” என்றிருந்தார். கண்டுகொள்ளவில்லை.
அடுத்து, தேடிப் பிடித்து #BlueWhaleChallenge டேகைப் போட்டேன். தேடிப் பார்த்ததில் என்னைப் போல் நூற்றுக்கணக்கானோர் அந்த டேகில் தினமும் ட்வீட் போட்டபடி இருப்பது தெரிந்தது. அப்படி என்றால் நானெல்லாம் வெயிட்டிங் லிஸ்ட் தானா என ஒருபுறம் ஆயாசம் தோன்றியது. இன்னொருபுறம் உலகில் இத்தனை ஆயிரம் பேரா தற்கொலைக்கு எத்தனிக்கிறார்கள் என்று ஆச்சரியமாகவும் இருந்தது. அதில் கணிசம் பேர் சீன் போடுகிறார்கள், மற்றபடி டைல்ஸ் குளிர்கிறதென வீட்டுக்குள் செருப்புப் போட்டு நடக்கும் சுயபந்தோபஸ்துக்காரர்கள் தாம் என்று நினைத்துக் கொண்டேன்.
பத்து நாள் காத்திருந்து அதற்கும் பதில் வரவில்லை என்ற போது தான் #WakeMeAt42 டேகை நிர்மல் கொடுத்தான். அவனும் என் வகுப்பு தான், ஆனால் வேறு பிரிவு. நான் டகீலாவுக்கு உப்பு நக்கும் படத்தை ஃபேஸ்புக்கில் போட்டு டேக் செய்தது இவன்தான்.
ட்விட்டரில் அந்த டேகைப் போட்ட மூன்றாவது நாள் ஒரு டிஎம் வந்தது. “சீரியஸாக ப்ளூவேல் ஆக விரும்புகிறாயா? அல்லது வெற்று பந்தாவா?” என்பது அதன் சாரம்.
“சீரியஸ் என்று நிரூபிப்பது எப்படி?”
“குட். இந்த வலைதளத்துக்குப் போ. இந்தப் பெயரில், இந்தக் கடவுச் சொல்லுடன் கணக்குத் துவக்கிக் காத்திரு. நாங்களே உன்னை மறுபடி தொடர்பு கொள்வோம்.”
அது ஒரு ரஷ்ய சமூக வலைதளம். கூகுள் ட்ரான்ஸ்லேட் உதவியுடன் தடவித் தடவி அவன் சொன்னபடி ஒரு கணக்குத் துவக்கி லேங்குவேஜ் செட்டிங்க்ஸில் போய் ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்க அரை நாள் பிடித்தது. காத்திருந்தேன்.
இடையே ட்விட்டரில் போய்ப் பார்த்தேன். பேசிய டிஎம்கள் அழிக்கப்பட்டிருந்தன; அந்த ஐடியும் காணவில்லை. யாரோ இடையில் புகுந்து ஏமாற்றுகிறார்களோ என யோசனை ஓடியது. இரண்டாம் நாள் அந்த ரஷ்யத் தளத்தில் ஒரு சாட் வந்தது.
“ஹாய் ஜீவா, வெல்கம் டூ த ப்ளூவேல் சேலஞ்ச். ஐயாம் யுவர் க்யூரேட்டர்.”
பரபரப்பானேன். அதைச் சொன்னேன். புன்னகை வந்தது. முதலில் என்னைப் பற்றிய சின்னச் சின்ன விசாரிப்புகள். அதற்கெல்லாம் பதில் அளித்தேன். கொஞ்சம் நேரம் பதில் இல்லை. பிறகு என் ஆதார் அட்டையைக் கேட்டார். அதெல்லாம் அப்பாவின் கட்டுப்பாட்டில். தேவைப்படும் போது எடுத்துக் கொடுத்து விட்டு மறுபடி வாங்கி வைத்துக் கொள்வார். எங்கே வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அவரிடம் கேட்டால் எதற்கு எனத் துருவுவார். பொய் சொல்வதில் தயக்கமில்லை. ஆனால் அத்தனை ஞாபக சக்தி கிடையாது என்பதால் முடிந்த அளவு பொய் தவிர்க்கும் கொள்கையுடன் இருக்கிறேன். பரமாவிடம் தான் கேட்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் அனுப்புவதாகச் சொல்லிவிட்டு பரமாவின் அறைக்கதவைத் தட்டினேன்.
அவள் எரிச்சலுடன் கதவு திறந்து அட்டை இருக்கும் இடத்தைச் சொல்லியதும் போய்த் தேடி எடுத்து செல்ஃபோனில் படம் பிடித்து அனுப்பி வைத்தேன். பதில் வரவில்லை. மறுபடி காத்திருந்தேன். அன்று முழுக்க பதில் ஏதும் வரவில்லை.
மறுநாள் க்யூரேட்டர் சாட்டில் வந்தார். மறுபடி கேள்விகள். எல்லாமே நான் எத்தனை தீவிரமாய் இதில் ஈடுபட்டிருக்கிறேன் என்பதைச் சுற்றியவை. இறுதியில் கேட்டான்.
“இது ஒருவழிப் பாதை தெரியுமா ஜீவா?”
“தெரியும்.”
“இதில் வெற்றி என்பது சாவது தான்.”
“தெரியும்.”
“பயமாய் இல்லையா?”
“பயம் இருக்கிறது. ஆனால் வாழ அதை விட பயமாய் இருக்கிறது.”
“இந்த கேமுக்கு ஏன் ப்ளூவெல்னு பேரு தெரியுமா?”
“ம்ஹூம்.”
“நீலத் திமிங்கலங்கள் சில சமயம் கரைக்கு வந்துவிடும். அவற்றால் மீண்டும் கடலுக்குள் போக முடியும். ஆனால் அவை போவதில்லை. விஞ்ஞானம் அதற்குக் காரணம் தேடுகிறது. ஆனால் அந்தத் திமிங்கலங்களுக்கு அப்படி நகர்ந்து கடலுக்குள் போவது என்பது சாவதை விட வலி மிக்கதாய், சிரமம் மிக்கதாய் இருக்கலாம். அதனால் அவை அங்கேயே கிடந்து மரிக்கின்றன. அந்த வலியை, சிரமத்தை நம் தர்க்கம் உணரவில்லை என்பதால் அதை வினோதமாய்ப் பார்க்கிறோம். அப்படித்தான் இங்கே இறக்கும் பலரது தற்கொலைக்கான காரணங்களும். அவற்றை மற்றவர்களால் புரிந்து கொள்ளமுடியாது. போயும்போயும் இதற்கா தற்கொலை எனக்குழம்புகின்றனர்.”
“ஃபென்டாஸ்டிக். நான் இதுவரை ஒரே ஒரு தற்கொலையைக் கடந்திருக்கிறேன். முன்பு இருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டு வேணி அக்கா. தன் தாவணியில் தானே தூக்கு மாட்டிக் கொண்டார். வயிற்று வலி என்று சொன்னார்கள். அப்போது புரியாத வயது. ஆனால் இன்றுவரை அதற்கா தற்கொலை என அவ்வப்போது வியப்பதுண்டு.”
“அதே தான். ஸோ?”
“எனக்கு இந்த ஆட்டம் பிடிக்கும் என்றுதான் தோன்றுகிறது. அதனால் என் உறுதியை அளக்கும் முயற்சியில் நேரத்தை வீணாக்காமல் விளையாட்டைத் தொடங்குவோம்.”
“மீண்டும் தொடர்பு கொள்கிறேன்.”
அடுத்த நாள் முதல் டாஸ்குடன் க்யூரேட்டர் வந்தார்.
அதிலிருந்து ஒரு மாதம் கடந்து விட்டது. நான் நினைத்திருந்தது போல் தினம் ஒரு டாஸ்க் அல்ல. விட்டு விட்டுத் தான் தந்தார். சில நாட்களின் டாஸ்க்கள் அன்று தான் தெரிய வரும். சிலவற்றை முன் கூட்டியே சொல்லி விடுவார். அப்படியான டாஸ்க்களுக்குப் பொதுவாய் ஏதேனும் முன்தயாரிப்பு தேவைப்பட்டது. அது தகவல் தேடலாகவோ, பொருட்கள் சேகரிப்பாகவோ, திட்டமிடுதலாகவோ என இருக்கும்.
ஆரம்ப தினங்களின் டாஸ்க்களில் பெரிய கஷ்டம் என்று ஏதும் இருக்கவில்லை. ஒரு வெள்ளைத் தாளில் நீலத் திமிங்கலம் வரைந்து க்யூரேட்டருக்கு அனுப்ப வேண்டும், க்யூரேட்டர் என் பயத்தைச் சோதிப்பார், க்யூரேட்டர் நான் நம்பகமானவன் தானா எனச் சோதிப்பார், ‘நான் ஒரு நீலத் திமிங்கலம்’ என ஒரு வெட்டவெளி மைதானத்தில் போய்க் கதற வேண்டும். நாள் முழுக்கச் சாப்பிடாமல் இருக்க வேண்டும் - இப்படி.
இன்றைய டாஸ்க் காலையில் தான் வந்தது. விடுமுறை நாட்களில் பொதுவாய் பகலில் நிறைவேற்றும் டாஸ்க்கள். எங்கள் அபார்ட்மெண்ட் பத்து மாடிக் கட்டிடம். எங்கள் ஃப்ளாட் மூன்றாம் மாடியில். ஒரே பிரச்சனை மொட்டை மாடியில் இப்போது யாரும் இல்லாமல் இருக்க வேண்டும். அம்மா சமையலறையில் இருந்தாள். அப்பா எங்கோ வெளியே போயிருக்கிறார். பரமா அவளது அறையில் என நினைக்கிறேன்.
யாரிடமும் ஏதும் சொல்லாமல் மெல்லக் கதவைத் திறந்து வெளியே வந்தேன். லிஃப்டை அழுத்திக் காத்திருந்தேன். லிஃப்ட் மேலேறி வந்து, கதவு பிரிந்து, வா என்றழைத்தது. உள்ளே முக்கால் பங்கு கன அளவை அடைத்துக் கொண்டு மேல் வீட்டு ஆன்ட்டி புன்னகைத்தார். பெயர் நினைவில்லை; வாசனை நினைவிருந்தது (பெர்ஃப்யூம்). தயங்கி உள்ளே நுழைந்து மிச்சமிருந்த இடத்தில் என்னை இடுக்கிக் கொண்டு சுட்டுவிரல் நீட்டி ‘10’ என்ற பொத்தானை அழுத்தினேன். ஆன்ட்டி ஐந்தாம் தளத்தில் லிஃப்டுக்கும் எனக்கும் விமோசனம் அளித்தார். லிஃப்ட் பத்தாம் மாடிக்குப் போய் நின்றது. நான் வெளியேறியதும் மற்றோர் அழைப்புக்குக் கீழே இறங்கியது.
மீதமிருந்த படிகளை ஏறி சாத்தியிருந்த கதவை விடுவித்துக் கொண்டு மொட்டை மாடிக்குள் நுழைந்தேன். மேகங்கள் சூழந்திருந்தன. அத்தனை வெயில் இல்லை.
முதலில் நடந்து மாடியை அளந்தேன். யாரும் இல்லை. பல மாதங்களுக்குப் பின் மொட்டை மாடிக்கு வருகிறேன். முன்பு வந்த போது இத்தனை டிடிஹெச் டிஷ்கள் இல்லை என்பதாய் நினைவிருந்தது. ஆங்காங்கே கம்பிக் கொடி கட்டி, துணிகளைக் காயப் போட்டிருந்தார்கள். பெண்களின் உள்ளாடைகளை ஓரக்கண்ணால் கடந்தேன்.
கதவைத் தாழிடலாமா என யோசித்துப் பின் யாரேனும் வந்து திறக்க முற்பட்டுத் தட்டினால் சிக்கலாகும் என்பதால் கைவிட்டேன். கட்டிடத்தின் வடக்கு முனையைத் தேர்ந்தெடுத்தேன். மொட்டை மாடிக் கதவு திறந்து கொண்டு யாராவது வந்தாலும் அங்கிருந்து இங்கே பார்க்க முடியாது. கதவின் ஓசையில் நான் சுதாரிக்க வேண்டும்.
தாராளமாய் ஓர் ஆள் கால் வைத்து நிற்கும் தடிமனில் தான் முனையின் சுவர் இருந்தது. எட்டிப் பார்த்தேன். கீழே அப்பார்ட்மெண்ட் காம்பவுண்டுக்கு வெளியே வாகனங்கள் நெரிசலின்றி விரைந்தன. கொஞ்சம் நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டுச் சட்டென சுவற்றில் இரு கைகளையும் வைத்து கால்களை உந்தித் தாவி ஏறினேன். முதலில் சுவற்றில் குத்த வைத்தமர்ந்து கொண்டு, புலன்கள் சமநிலை பெற்ற பின் மெல்ல மெல்ல எழுந்து நின்றேன். மழைக்கு முந்தைய புழுக்கக் காற்று முகத்தில் விசுவிசுத்தது. இக்கணம் இந்தப் பேட்டையின் உயரமான மனிதன் நான்!
கண்களை மெல்லத் திறந்தேன். வானம் முன்பை விட அருகே வந்து விட்டதாய்த் தோன்றியது. கீழே பார்த்தேன். சீருடையில் வடகிழக்கு முகவெட்டுச் செக்யூரிட்டி கட்டிடத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தான். வெளியே சீரும் வாகனங்கள். The Walk படம் நினைவு வந்தது. அதெல்லாம் வேறு லெவல். ஒப்பிட இது ஒன்றுமே இல்லை.
இப்போது குனிந்து என் கால்களைப் பார்த்தேன். பிறகு மறுபடி பூமியை. நெஞ்சில் திக்கென்றது. எத்தனை உயரம்! இங்கிருந்து கால் தவறி விழுந்தால் மண்டை சிதறும். உடனடி மரணம் உத்திரவாதம். கண நேரத்தில் நிரந்தர விடுதலை. அப்படியே குதித்து விடலாமா! இன்னும் இந்த முப்பத்து மூன்று நாட்கள் என்றெல்லாம் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன! அப்படி நினைத்ததும் கால்கள் நடுங்கத் தொடங்கின. காலின் கீழிருந்த சுவர் நாசூக்காய் வழுக்கி நழுவுவதாய்த் தோன்றியது.
சட்டென அந்த எண்ணத்தைப் பிடிவாதமாய் உதறினேன். இன்று டாஸ்க் அதுவல்ல.
பெர்முடாஸ் பாக்கெட்டில் கையை நுழைத்து செல்ஃபோனை எடுத்தேன். ஸ்க்ரீன் அன்லாக் செய்து, கேமெரா ஆப்பினுள் நுழைந்து, ஃப்ரண்ட் கேமெராவுக்கு மாறி, தலைக்கு மேல் உயர்த்திப் பார்த்தேன். என் முகம் தெரிந்தது. தலை கலைந்திருந்தது, முகம் வேர்த்திருந்தது. டிஷர்ட் காலரில் அழுக்கு. அவற்றைச் சரி செய்யும் சொகுசு தற்போது இல்லை. ஃபோனைக் கோணம் நகர்த்தி தரையையும் சேர்த்து கேமெராவின் ஃப்ரேமிற்குள் கொண்டு வர முயன்றேன். பயத்தைப் புதைத்து விட்டு முகத்தில் ஒரு புன்னகையை ஒட்டிக் கொண்டு க்ளிக் செய்தேன். ஒன்று. இரண்டு. மூன்று. போதும்.
கீழே இறங்கத் தீர்மானித்தேன். எழுந்தது போலவே உட்கார்ந்து அப்படியே இறங்கி விடலாம். அந்தச் சில நிமிட இடைவெளியில் கால்கள் மரக்கத் தொடங்கியிருந்தன. காலை அசைக்க முயன்றேன். அப்போது சமநிலை குலைந்து கால்கள் தடுமாறின.
ஒரு கணம் தான். ஒருபோதும் மறக்க முடியாத கணம். செத்து மீண்டேன். இதயம் வெடித்து விடுவது போல் துடித்தது. முகம் பேயறைந்தது போலானது. ஜட்டிக்குள் கூட வேர்வை குப்பெனப் பிரவாகிப்பதை உணர்ந்தேன். கண்களை மூடிப் பதற்றம் தணியக் காத்திருந்து விட்டு மெல்ல மெல்லச் சுவற்றில் உட்கார்ந்து, ஆசுவாசம் செய்து கொண்டு தடுமாறிக் கீழே இறங்கினேன். சத்தமின்றி வெளியேறிக் கீழறங்கி வீடேகிப் படுக்கையில் விழுந்தேன். இருதயத் துடிப்பு சீராக அரை மணி நேரமானது.
க்யூரேட்டர் இந்த டாஸ்கில் உத்தேசித்தது அந்த ஒரு கணம் தான் எனத் தோன்றியது. அதை வெற்றிகரமாய்க் கடந்து விட்டேன். எனக்கு நானே முதுகு தட்டிக் கொண்டேன்.
செல்ஃபியை கணிணிக்கு மாற்றி க்யூரேட்டருக்கு ரஷ்ய தளச் சாட்டில் அனுப்பினேன்.
“குட். ஒரு கேள்வி.”
“எஸ் ஸார்.”
“குதிக்கனும்னு தோனலையா ஜீவா?”
“தோனுச்சு.”
“ஏன் குதிக்கல?”
“யார்கிட்டயும் சொல்லிக்கலயே!”
*
நீங்கள் கடவுளாகி இருக்கிறீர்களா?
இதை வாசித்துக் கொண்டிருக்கும் சாதாரணரான நீங்கள் நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது. அதற்கு நிறையக்கடந்து வரவேண்டும். கொஞ்சம் ரத்தம் பார்க்கவேண்டும்.
நான் பரமா. டென்த்தில் ஸ்கூல் ஃபர்ஸ்ட்; சென்ற ஆண்டு நடத்தப்பட்ட மேதமேடிகல் ஒலிம்பியாடில் தேசிய அளவில் இருபத்தி ஏழாவது இடம். தற்போது ஐஐடி - ஜேஈஈ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இதை எல்லாம் என் பெருமிதமாகக் கருதவில்லை. என் அடையாளம் என்பது முற்றிலும் வேறு. காதைக் கிட்டே கொண்டு வாருங்கள். எச்சில் தெறிக்காமல் ஒரு ரகசியம் சொல்கிறேன். நான் ப்ளூவேல் க்யூரேட்டர். அப்படிச் சொன்னால் ஏதோ கார்பரேட் நிறுவனப் பதவி போல் ஒலிக்கிறது. அதனால் எனக்குப் பிடித்த மாதிரி சொல்கிறேன். அஹம் ப்ரம்மாஸ்மி!
‘தெய்வம் நீயென்றுணர்’ என்ற பாரதி ஆத்திச்சூடி மிகப் பிடிக்கும். நான் உணர்ந்தேன்.
ஆம். நான் கிட்டத்தட்ட கடவுள். அழிக்கும் கடவுள். அப்படியான பல கடவுள்களுள் ஒருத்தி. இந்த ப்ளூவேல் விளையாட்டின் மூலம் இந்த உலகில் பிரயோஜனப்படாத பிரஜைகளை ரத்து செய்வது தான் எங்கள் வேலை. பூமியில் பிறந்த எல்லோருமே வாழத் தகுதியானவர்கள் அல்லர். சிலர் மட்டுமே இந்த மானுட குலம் பயனுற வாழ்கின்றனர். மற்றவர்கள் அவர்களைத் தொழுது பின் செல்பவர்கள். பூமிக்குப் பாரம். இந்தப் பூமி மேலும் செழிக்க புத்திசாலிகளும் திறமையாளர்களும் தேவை. அவர்களுக்கான வளங்களையும் இந்த பாரங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். அதைச் சரி செய்து இந்த உலகைச் சுத்தம் செய்வதே எங்கள் நோக்கம். இதில் இனம், மதம், மொழி, சாதி, பால் என்ற எந்தப் பாகுபாடும் இல்லை. அவர்களால் பயன் உண்டா இல்லையா என்ற ஒற்றைக் கேள்விக்கான பதிலே தீர்மானிக்கும். அவ்வளவு தான்.
உண்மையில் அவர்களுக்கும் நல்லதே செய்கிறோம். அவர்களை வாழ வைத்துச் சித்திரவதை செய்வதை விட சாவை அளித்து விடுதலை தருகிறோம். மோட்சம்.
இன்று ப்ளூவேல் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஓராண்டு முன்பு இதைப் பற்றி வாசித்த போதே இதில் ஆர்வம் கொண்டேன். இன்று இதில் ஆர்வம் கொள்வோர் எல்லாம் இதை விளையாடும் ஆசையுடன் இதை நோக்கி வருகின்றனர். ஆனால் நான் இதை நடத்தும் ஒரு க்யூரேட்டர் ஆகும் நோக்குடன் இதன் திசையில் ஈர்க்கப்பட்டேன். யாரைப் பிடித்தேன், எப்படிச் சேர்ந்தேன் என்றெல்லாம் பகிர்வது சமூகத்துக்கு நல்லதல்ல. ஒரு கட்டத்தில் என் பொழுதுபோக்காகத் தொடங்கிய இது மெல்ல என் சிந்தையை முழுக்க ஆக்ரமித்துக் கொண்டு விட்டது. ஒரு காதல் போல்.
உங்களுக்கென ஓர் அடிமை. நீங்கள் என்ன சொன்னாலும் செய்வான். உயிரைக் கூட விடுவான் என்ற உணர்வை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா! ஆளும் திமிர்!
இது வரை மூன்று பேரை தற்கொலை செய்ய வைத்திருக்கிறேன். கராச்சியில் ஒன்று; கொல்கத்தாவில் ஒன்று; கோழிக்கோட்டில் ஒன்று. இதில் கொல்கத்தாவில் இறந்தது பெண். ஆனால் ஒரு சாதாரணத் தற்கொலைச் செய்தியாகக் கூட அது வெளியே வரவில்லை. இன்னொருவனுக்கு நாற்பதாம் நாள் பைத்தியம் பிடித்து விட்டது.
இப்படியான மிதப்பில் இருந்த போது தான் எல்லாவற்றையும் நொறுக்கும் விதமாக ஜீவா இதில் ப்ளூவேலாக இறங்கினான். அதற்கு முன்பே வீட்டில் ஒருமுறை எலி மருந்தைக் கடித்திருந்தாலும் அதை ஒரு தற்கொலை முயற்சி என்பதாக அல்லாமல் தற்காப்பு மிரட்டலாகவே எண்ணி இருந்தேன். அதனால் பொருட்படுத்தவே இல்லை.
ஆனால் நீலத் திமிங்கலமாக என் முன் வந்து நின்றான். அவனை ட்விட்டரில் பின் தொடர்வதில்லை. ஃபேஸ்புக்கில் அவன் அத்தனை ஆக்டிவும் இல்லை. தூண்டிலில் மீன் பிடிப்பது போல் நீலத் திமிங்கலங்களையே பிடிக்கவென இருக்கும் எங்கள் லீட் ஜெனரேஷன் குழுவினர் கண்ணில் அவனது சில ப்ளூவேல் ஹேஷ்டேக் ட்வீட்கள் தொடர்ச்சியாய்ப் பட்டுத் தொலைத்தது முதல் தவறு. ஆரம்பகட்ட ஆய்வுக்குப் பின் அவர்கள் வடிகப்பட்டப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு ப்ளூவேலுக்கும் ஒரு க்யூரேட்டர் பொருத்துவார்கள். அதில் ஜீவா எனக்கு அமைந்தது இரண்டாவது தவறு.
முதன் முறை அவனிடம் பேசி அவனது தகவல்களை விசாரித்த போதே அதிர்ந்து மேற்கொண்டு பேச முடியாமல் தவித்தேன். யாரேனும் ஜீவனின் முகமூடியோடு விளயாடுகிறார்களோ என்ற நப்பாசைச் சந்தேகத்தில் அவனது ஆதார் அட்டையைக் கேட்டேன். அதெல்லாம் எங்கள் வழக்கமல்ல. என்னிடமே கதவு தட்டிக் கேட்டான் ஜீவா. அப்போது நான் அடைந்தது வாழ்நாள் அதிர்ச்சி. ஜீரணிக்கவே முடியவில்லை.
அவன் மீது அவ்வளவு பிரியம் இருந்ததையே அன்றைய தினம் தான் உணர்ந்தேன்.
பதில் சொல்லாமல் அன்றைய தினத்தைக் கடத்தினேன். இரவு முழுக்க யோசித்தேன். நான் க்யூரேட்டர் ஆகவில்லை எனில் அடுத்து வேறு யாரிடமாவது போவான். நானே ஒப்புக்கொண்டால் என் கட்டுப்பாட்டில் இருப்பான். எளிதாக அவன் செயல்களைக் கண்காணிக்கவும் ஊகிக்கவும் முடியும். அவனுக்குத் தரும் டாஸ்க்களைத் தடுக்க முடியாது எனினும் திரிக்க முடியும். என்னால் அவன் துன்புறுவான் - மனதாலும் உடலாலும். அது பிரச்சனையில்லை. ஒருவேளை அவனை என்னால் ஏதேனும் சந்தர்ப்பத்தில் காப்பாற்ற முடியாமல் போனால்? நினைக்கவே பயமாய் இருந்தது.
ஆனால் எவ்வளவு யோசித்தும் வேறு மேலான வழி இருப்பதாய்த் தெரியவில்லை. நேரடியாய்ப் பேசினாலும் அவன் திருந்துவான் எனத் தோன்றவில்லை. அப்படிச் சொன்னாலும் முழுக்க நம்புவதற்கில்லை. தற்கொலை மனநிலை கொண்டவர்கள் பலரைப் பார்த்தாயிற்று. ஒருமுறை அந்த எண்ணம் மனதில் வந்து விட்டால் பிறகு அதிலிருந்து மீண்டாலும் எப்போது மீண்டும் தலைதூக்கும் எனச் சொல்ல முடியாது.
அதனால் அவனது க்யூரேட்டர் ஆகி, மிதமான டாஸ்க்கள் கொடுத்து, ஐம்பதாம் நாள் அவனது தற்கொலையை எதேச்சையாக அறிந்தது போல் காப்பாற்றுவது என் திட்டம். இந்த ப்ளூவேல் கேமையே அவன் தற்கொலை எண்ணத்தை அழிக்கும் கருவியாகப் பயன்படுத்தலாம். தற்கொலைத் தூண்டுதலை விட இது சவாலாகத் தோன்றியது. வசீகரித்தது. அதனால் எடுத்துக் கொள்ளத் தீர்மானித்தேன். அது மூன்றாம் தவறு.
ஆனால் நேர்மையாய்ச் சொன்னால் ஜீவா சாக வேண்டியவர்கள் பட்டியலில் தான் இருக்கிறான் என்பதை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அவன் என் அண்ணன். என் ரத்தம். என் ஜீன். அன்பின் முன் எந்தத் தர்க்கமும் செல்லுபடியாகாது.
இந்த ஐம்பது நாட்களை ஜீவா உயிருடனும் சுவாதீனத்துடனும் கடந்து விட்டால் பிறகு அவனது மனதில் தற்கொலை எண்ணமே தோன்றாது என்று நம்புகிறேன்.
ப்ளூவேல் கேமின் இலக்கணங்கள் மீறாமல் ஆனால் டாஸ்க்களை மழுப்புகிறேன்.
இன்று அப்படித்தான். உயரமான இடத்தில் ஏறி நின்று செல்ஃபி எடுத்து அனுப்பும் டாஸ்க் பொதுவாய் நள்ளிரவில் கொடுப்பதே வழக்கம். ஆனால் அதில் ஆபத்து அதிகம். அதனால் அதை நண்பகல் என மாற்றினேன். அவன் பன்னிரண்டு மணிக்குச் சற்று முன் வீட்டை விட்டு வெளியேறியதும் அவனைப் பின்தொடர்ந்தேன். அவன் சுவற்றில் ஏறி செல்ஃபி எடுத்து இறங்கும் வரையிலும் ஒளிந்தபடி பதற்றத்துடன் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன் - ஒரு கணம் அவன் தடுமாறி மீண்டதையும்.
அவனை விட எனக்கு நூறு மடங்கு மன அழுத்தம் வந்து விடும் போலிருக்கிறது.
*
நாள் 20.
இன்றைய டாஸ்க்கை மூன்று நாட்கள் முன்பே தந்து விட்டார் என் க்யூரேட்டர். ஒரு புத்தகத்தை ஒரே நாளில் வாசிக்க வேண்டும். அமேஸானில் வாங்கிக் கொண்டேன். வாசிப்புப் பழக்கமற்ற நான் ஒரு புத்தகத்தை ஒரு மூச்சில் முடிக்க வேண்டும் என்று இறங்குவதே தற்கொலை முயற்சி தான். கொடுக்கப்பட்ட புத்தகம் The Complete Manual of Suicide. சிறிய புத்தகம். 200 பக்கங்கள் கூட இராது. பல தற்கொலை முறைகளைப் பற்றிப் பேசிய ஜப்பானியப் புத்தகம். வாசித்தேன். ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது.
*
ஜீவாவுக்கு ஒரு புத்தகத்தைப் படிக்கப் பரிந்துரைத்திருக்கிறேன். ப்ளூவேல் டாஸ்க் லிஸ்ட்படி உண்மையில் அவனுக்கு நான் தர வேண்டியது Final Exit புத்தகத்தைத் தான். தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று பேசும் நூல். அது பற்றிய குற்றவுணர்வுகளை, தயக்கங்களைக் களைந்து தெளிவைத் தருவது. ஆனால் நான் டாஸ்க்கை அப்படியே வைத்துக் கொண்டு புத்தகத்தை மட்டும் மாற்றி விட்டேன்.
The Complete Manual of Suicide தலைப்பில் தற்கொலை செய்வதற்கு உதவியான நூல் என்பதாய்த் தோன்றினாலும் உண்மையில் அஃது தற்கொலை எண்ணத்தை நீக்கப் பயன்படுவது. காரணம் ஒவ்வொரு தற்கொலை முறையின் வலி, குரூரத்தன்மை, தோல்வி வாய்ப்பு, தோல்வியடைந்தால் அதற்குப் பிந்தைய வாழ்வின் சிக்கல்கள் என தற்கொலை செய்வதற்கான தைரியத்தை முறித்துப்போடும் வண்ணம் எழுதப்பட்டது.
*
நாள் 22
க்யூரேட்டருடன் உரையாடிக் கொண்டிருக்கும் ரஷ்யத் தளத்தில் #i_am_whale என ஸ்டேட்டஸ் போட வேண்டும். வரும் கமெண்ட்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.
*
நாள் 25.
கதவைத் தாழிட்டேன்.
இன்று விளையாட்டின் வெள்ளி விழா. பாதி கிணறு கடக்கும் நாள். என்னை நானே வாழ்த்திக் கொண்டேன். க்யூரேட்டர் வாழ்த்துடன் இன்றைய டாஸ்கையும் அளித்தார்.
அவர் அனுப்பும் படத்தைக் கையில் பிளேடால் கீறி வரைந்து கொள்ள வேண்டும். ப்ளூவேல் கேமின் முதல் ரத்தச் சவால். அடுத்து எல்லாம் இப்படித்தான் போல!
வந்த மெஸேஜைத் திறந்தேன். கணிணித் திரையில் நீலத் திமிங்கலம் ஒன்றின் கார்டூன் வடிவம் மின்னியது. என் இடது கையைச் சுத்தமாக ஒரு துண்டு கொண்டு துடைத்தேன். ஒரு திறமையான ஓவியனின் தூரிகைக்குக் காத்திருக்கும் அசட்டு வெண்ணிறக் கித்தான் துணி போல் கையின் உட்புறம் மாநிறம் கம்பீரம் வீசியது.
நீலமசியுறைந்த ஒரு பந்து முனைப் பேனாவை எடுத்தேன். கணிணித்திரை கண்டு அப்படியே வரிவரியாய் நிதானமாய் வரையத் தொடங்கினேன். முழுதாய் ஐந்து நிமிடங்களில் கிட்டத்தட்ட அப்படியே கொண்டு வந்து விட்டேன். திமிங்கலம் நிஜமாகவே நீலமாய் ஜ்வலித்தது. இனி இதைச் செந்திமிங்கலமாக்க வேண்டும்.
அப்பாவின் ஷேவிங் கிட்டிலிருந்து எடுத்து வந்த செவன் ஓ க்ளாக் ப்ளேடை உறை பிரித்தேன். அறையின் மெல்லிய வெளிச்சத்தில் அதன் ஓரங்கள் கூராய்ப்பளபளத்தன.
லேசாய்த் தயங்கினேன். அது ஒரு கணம் தான். அடுத்த கணம் என் முன்னிருப்பது யாரோ ஒருவரின் கை போல, நான் அதில் கலைநயம் படைக்கப் பணிக்கப்பட்டவன் என்றும் தோன்றியது. பிளேடின் ஓரத்தை நீலத் திமிங்கலக் கோட்டோவியத்தின் மீது வைத்தேன். மெல்ல அழுத்தினேன். அதிகமும் முரண்டு பிடிக்காமல் பிளேடின் நுனி உள்ளே இறங்கி, குருதித் துளி ஒன்று பூத்தது. கருஞ்சிவப்பில் மசமசவென இருந்தது.
அப்படியே மெல்ல நீலக்கோட்டின் அடியொற்றி பிளேடை நகர்த்தினேன். வலித்தது. எங்கோ ஆழத்தில் கனவில் வலிப்பது போல் இருந்தது என்பதால் கதறவில்லை.
பூ மிதிப்பவர்கள் விரைந்து நடந்து குண்டத்தைக் கடக்க முனைவது போல் விரல்கள் லாவகமாய்க் கீறி முடித்தன. பேனாவில் வரைய எடுத்ததை விட குறைந்த நேரம் தான் எடு
Published on September 04, 2017 21:41
August 25, 2017
இந்திய ஜனாதிபதி ரப்பர்ஸ்டாம்ப்பா?
மாதச் சம்பளம் ரூபாய் ஒன்றரை லகரம் (7வது சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்ட பிறகு கேபினெட் செக்கரட்டரியின் சம்பளம் இதை விட அதிகமாகிவிட்டது என்பதால் இதை 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு தீர்மானித்து பாராளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கிறது). சம்பளம் போக செலவுக்காக ஆண்டுக்கு 22.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. வசிக்க தில்லியில் உலகிலேயே மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகை. தவிர ஹைதராபாத்திலும் சிம்லாவிலும் ஓய்வெடுக்கும் மாளிகைகள். பயணம் செய்ய மெர்சிடெஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார். இத்தனையும் இந்திய ஜனாதிபதிக்கு மக்கள் வரிப்பணத்தில் அளிக்கப்படுகிறது. ஒரு ரப்பர் ஸ்டாம்ப்புக்கா இத்தனையும்?

எப்போதும் நாம் இந்திய ஜனாதிபதி என்பவரை ஒரு பொம்மையாக அல்லது ஒரு கோமாளியாகவே பார்த்துப் பழகி விட்டோம். கடந்த கால் நூற்றாண்டாக கேஆர் நாராயணன் போன்ற வலுவான ஆளுமை கொண்டோரும், அப்துல் கலாம் போன்ற துறைசார் பிரபலங்களும் வந்த போது மட்டும் அப்பதவியை லேசாய்க் கவனிப்போம். மற்றபடி அதை ஒரு ரப்பர்ஸ்டாம்ப் வேலை என்றே பாவிக்கிறோம். நம் மனதில் இருக்கும் பிம்பம் போல் அது நிஜமாகவே ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி தானா?
உண்மையில் புதையல் காக்கும் பூதம் போல் நம் அரசியல் சாசனத்தின் பிரதானப் பாதுகாவலர் ஜனாதிபதி தான். சாசனத்தின் 60வது பிரிவு ஜனாதிபதி பதிவியேற்கும் போது சொல்ல வேண்டிய பிரமாணத்தைப் பேசுகிறது – “I will faithfully execute the office of President of India and will to the best of my ability preserve, protect and defend the Constitution…”.
அரசியல் சாசனப்படி நம் ஜனாதிபதி நவஅதிகாரங்கள் கொண்டவர். சட்டம், ஆட்சி, நீதி, நிதி, நியமனம், ராணுவம், வெளியுறவு, மன்னிப்பு மற்றும் அவசர நிலை.
ஜனாதிபதி தான் இந்தியாவின் முதல் குடிமகன். இந்திய யூனியனின் உச்ச ஆட்சி அதிகாரம் ஜனாதிபதியிடமே. அவர் தானாக அல்லது தன் பிரதிநிதிகள் மூலமாக அரசியல் சாசன வழிப்படி அதைச் செயல்படுத்த வேண்டும் [பிரிவு 53 (1)]. இந்திய யூனியனின் முப்படைகளின் தளபதி ஜனாதிபதி தான் [பிரிவு 53 (2)]. அந்நிய நாடு ஒன்றுடன் போரைத் துவக்கவும் முடிக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு. போர் தொடர்பான உடன்படிக்கைகள் ஜனாதிபதியின் பெயரிலேயே கையெழுத்தாகும்.
ஜனாதிபதி அனுமதியின்றி எந்த மாநிலப் பிரிவினை, சேர்க்கை அல்லது எல்லை மாற்றத்தைக் கொண்டு வர முடியாது [பிரிவு 3]. பிரதமரும், அவரது அமைச்சர்களும் ஜனாதிபதி சரியான முறையில் கடமையாற்ற உதவவும் அறிவுறுத்தவும் வேண்டும் [பிரிவு 74 (1)]. ஜனாதிபதி ரப்பர் ஸ்டாம்ப் என்று சொல்லப்படுவதன் காரணம் இதுவே.
ஆனால் இதில் கவனிக்க வேண்டியது ஜனாதிபதி தான் எடுக்கும் முடிவுக்குத் தானே முழுப் பொறுப்பு; அமைச்சர்களைக் கைகாட்ட முடியாது. நீதிமன்றங்களும் மத்திய அமைச்சர்களின் ஆலோசனைகளைக் கேள்வி கேட்க முடியாது [பிரிவு 74 (2)].
மத்திய அரசை அமைப்பதில் ஜனாதிபதியின் பங்கு முக்கியமானது. ஒருவரை மத்திய அமைச்சராய் ஆக்குவதை ஆராய்ந்து கேள்வி கேட்க அவருக்கு அதிகாரம் உண்டு. பிரதமரை ஜனாதிபதியே நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைப்படி ஜனாதிபதி அவரது அமைச்சரவையையும் நியமிப்பார் [பிரிவு 75 (1)]. ஜனாதிபதி விரும்பும் வரையிலும் தான் அமைச்சர்கள் தம் பதவியில் நீடிக்க முடியும் [பிரிவு 75 (2)]. ஜனாதிபதி முன் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் [பிரிவு 75 (4)].
மத்திய அரசு அரசியல் சாசனப்படி எல்லா விஷயங்களிலும் நடக்க, முடிவெடுக்க உருவாக்கப்பட்ட பதவியே அட்டர்னி ஜெனரல் என்பது. அவர் மத்திய அரசுக்கு சட்ட ஆலோசனைகள் நல்குவார். திறமையான மற்றும் நேர்மையான ஆசாமி ஒருவர் அப்பதவியில் இருந்தால் அவர் மத்திய அரசை சட்டரீதியாய் நெறிப்படுத்த இயலும். உதாரணமாய் சில மாதங்களுக்கு முன் அதிமுக பிளவு கண்டு தமிழக சட்டசபையில் ஆளும் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, அது எடப்பாடிக்கான Floor Test-ஆ அல்லது எடப்பாடியா ஓபிஎஸ்ஸா என்ற Composite Floor Test-ஆ என்ற குழப்பம் நிலவியது. கவர்னர் அதைத் தீர்க்க வேண்டும். இச்சூழலில் கவர்னர் என்ன செய்ய வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் அரசியல் சாசனம் மற்றும் பிற நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் வழிகாட்டியிருக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரை அட்டர்னி ஜெனரலாக ஜனாதிபதி நியமிப்பார் [பிரிவு 76 (1)]. அட்டர்னி ஜெனரலுக்கு சட்டப் பணிகளை ஜனாதிபதி கொடுக்கலாம் [பிரிவு 76 (2)]. ஜனாதிபதி விரும்பும் வரையிலும் தான் அட்டர்னி ஜெனரல் பதவியில் நீடிக்க முடியும். அவரது சம்பளத்தையும் அவரே தீர்மானிப்பார் [பிரிவு 76 (4)].
மத்திய அரசின் செயலாட்சியிலும் (Executive Functions) ஜனாதிபதி தலையிட முடியும். மத்திய அரசின் அத்தனை செயலாட்சி நடவடிக்கைகளும் ஜனாதிபதி பெயராலேயே எடுக்கப்படும் [பிரிவு 77 (1)]. அரசு எளிதாகச் செயல்படவும் அமைச்சர்களிடையே வேலைகளைப் பிரித்துக் கொள்ளவும் தேவையான விதிகளை ஜனாதிபதி உருவாக்க வேண்டும் [பிரிவு 77 (3)]. தாமாகவும், அவர் கேட்கும் போதும் ஆட்சி முடிவுகளையும், சட்ட முன்வரைவுகளையும் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்த வேண்டிய கடமை பிரதமருடையது [பிரிவு 78 (a) & 78 (b)]. அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் ஒரு அமைச்சரால் தனித்து எடுக்கப்பட்ட முடிவை ஜனாதிபதி கேட்டால், ஒட்டு மொத்த அமைச்சரவையின் பரிசீலனைக்கு பிரதமர் அனுப்பி வைக்க வேண்டும் [பிரிவு 78 (c)].
அவசியமெனக் கருதினால் பாராளுமன்றம் கூடுதலான செயலாட்சி அதிகாரங்களை ஜனாதிபதிக்கு அளிக்க முடியும் [பிரிவு 70]. இதன் நீட்சியாய் ஜனாதிபதி கூடுதலான செயலாட்சி அதிகாரங்களை மாநில ஆளுநருக்கு அளிக்க முடியும் [பிரிவு 160]
பாராளுமன்றத்திலும் கணிசமான அதிகாரம் (Legislative Powers) ஜனாதிபதிக்கு உண்டு. பிரிவு 79 பாராளுமன்றம் என்பதே ஜனாதிபதி, மக்களவை, மாநிலங்களவை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது தான். மாநிலங்களவைக்கு ஜனாதிபதி இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை இவற்றில் சிறந்து விளங்கும் 12 உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் [பிரிவு 80 (1) (a) & 80 (3)]. மக்கட்தொகை கணக்கெடுப்பிற்குப் பின்னான மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு எப்போது அமலுக்கு வருகிறது என்ற தேதியை ஜனாதிபதி அறிவிப்பார் [பிரிவு 82]. பாராளுமன்ற அவைகளைத் தேவையெனக் கருதும் போது கூட்ட ஜனாதிபதிக்கு உரிமை உண்டு [பிரிவு 85 (1)].
பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தொடரை முடித்து வைக்கவும், அவற்றைக் கலைக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு [பிரிவு 85 (2)]. ஜனாதிபதி பாராளுமன்ற இரு அவைகளையும் தனித்தனியாகவோ ஒன்று சேர்த்தோ அழைத்து உரையாற்ற உரிமை உண்டு [பிரிவு 86 (1)]. நிலுவையிலிருக்கும் ஒரு சட்ட வரைவு பற்றிக் கேட்டு பாராளுமன்ற அவைகளுக்கு ஜனாதிபதி தகவல் அனுப்ப முடியும் [பிரிவு 86 (2)]. ஆங்கிலோ இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் போதுமானதாய் இல்லை என ஜனாதிபதி கருதினால் அவர்கள் இரண்டு பேரை அவர் நியமிக்கலாம் [பிரிவு 331].
பொதுத்தேர்தலுக்குப் பிந்தைய முதல் கூட்டத்தின் போதும், ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் போதும் இரு அவைகளையும் கூட்டாக அழைத்து ஜனாதிபதி உரையாற்ற வேண்டும் [பிரிவு 87 (1)]. இது முக்கியமான அதிகாரம். இந்த உரைகள் பொதுவாய் மத்திய அரசின் கொள்கைகளை, பார்வைகளை விளக்குவதாக அமையும். அரசியல் சாசனப் பாதுகாவலரான ஜனாதிபதி வாயால் அது வெளிப்படுகையில் அவை யாவும் சாசனத்திற்கு உட்பட்டுத் தான் இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு (அதன் மூலம் வாக்களித்த பொது மக்களுக்கு) உத்திரவாதம் அளிக்கிறார். அதனால் அதில் தனக்கு மாற்றுக்கருத்து இருந்தால் ஜனாதிபதி மத்திய அரசுக்கு முன்கூட்டியே விரிவாகத் தெரிவித்து எச்சரிக்க முடியும். அதில் மாற்றங்கள் கொண்டு வர முடியும்.
மாநிலங்களவையில் துணை ஜனாதிபதி, துணை சபாநாயகர் இருவரும் இல்லாத போது அவைக்குத் தலைமை தாங்க வேண்டியவரை ஜனாதிபதியே நியமிப்பார் [பிரிவு 91 (1)]. மக்களவையில் சபாநாயகர், துணைசபாநாயகர் இருவரும் இல்லாத போது அவைக்குத் தலைமை தாங்க வேண்டியவரை ஜனாதிபதியே நியமிப்பார் [பிரிவு 95 (1)]. பாராளுமன்ற அவைகளுக்கு செயலக அலுவலர்களை நியமிக்க பாராளுமன்றம் விதிகளை உருவாக்கும் வரை அவ்விதிகளை மக்களவை சபாநாயகர், துணை ஜனாதிபதியுடன் ஆலோசனை செய்து ஜனாதிபதி உருவாக்கலாம் [பிரிவு 98 (3)]. மக்களவை சபாநாயகர், துணை ஜனாதிபதி ஆகியோருடன் ஆலோசித்து பாராளுமன்ற அவைகளைக் கூட்டாக நடத்துவது, அவைகளுக்கிடையேயான தொடர்புகொள்ளல் முறைகள் பற்றிய விதி முறைகளை ஜனாதிபதி உண்டாக்கலாம் [பிரிவு 118 (3)].
பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களும் ஜனாதிபதி முன்னிலையில் தான் பதவிப் பிரமாணம் எடுக்க வேண்டும் [பிரிவு 99]. மக்களவை உறுப்பினராகவும் சட்ட சபை உறுப்பினராகவும் ஒருவர் ஒரே சமயத்தில் இருக்க முடியாது. சமஉ பதவியை அவர் முன்கூட்டியே ராஜினாமா செய்யவில்லை எனில் மக்களவை உறுப்பினர் பதவியை இழப்பார். இது தொடர்பான விதிகளை ஜனாதிபதியே உருவாக்குவார் [பிரிவு 101 (2)]. பாராளுமன்ற அவைகளில் உறுப்பினர் ஒருவர் தகுதிநீக்கம் செய்யப் பட்டால் அதில் ஜனாதிபதியின் முடிவே இறுதியானது. அவர் முடிவெடுக்கும் முன் தேர்தல் ஆணையத்தின் அலோசனையைப் பெற வேண்டும் [பிரிவு 103 (1) & 103 (2)].
பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டவரைவு (Bill) நிறைவேற்றப்படுவதிலும் நிராகரிப்படுதலிலும் ஜனாதிபதியின் பங்கு முக்கியமானது. நிதி சம்மந்தமானது தவிர (Money Bill) ஒரு சட்ட வரைவு பாராளுமன்றத்தின் ஒரு அவையில் அங்கீகரிக்கப்படு இன்னொரு அவையில் நிராகரிப்பட்டால் இரு அவைகளையும் கூட்டாக அழைத்துத் தீர்மானிக்கச் சொல்லும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு [பிரிவு 108 (1) & 108 (3)]. நிதி சம்மந்தமானது தவிர சட்ட வரைவு பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதை அவர் காத்திருப்பில் வைக்கலாம். அல்லது மாற்றங்கள் சிபாரிசு செய்து பாராளுமன்ற மறுபரிசீலனைக்கு அனுப்பலாம் [பிரிவு 111]. அப்படி அனுப்பப்பட்ட சட்ட வரைவு மாற்றங்களோடோ அஃதின்றியோ திரும்ப அவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டால் அதை ஏற்க வேண்டும்.
உதாரணமாய் 2006ல் ஜனாதிபதியாய் இருந்த அப்துல் கலாம் சில அலுவலகங்களில் பதவி வகித்தால் பாராளுமன்ற உறுப்பினராய் இருக்க முடியாது என்ற சட்டத்தைத் தளர்த்தி சில அலுவலகங்களுக்கு விலக்கு அளித்து சட்ட வரைவை மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்தது. அது பாராளுமன்றத்தில் ஒப்புதல்பெற்று கலாமுக்கு அனுப்பப் பட்டது. அவர் அதைத் திருத்தச் சொல்லி திருப்பி அனுப்பினார். ஆனால் மன்மோகன் அரசு திருத்தம் இன்றி மீண்டும் அனுப்பியது. கலாம் அதற்கு ஒப்புதல் அளித்தார்.
இது மேலோட்டமாகக் கள்ள ஆட்டம் போலத் தோன்றினாலும், இரண்டு முக்கியமான அம்சங்களைக் கவனிக்க வேண்டும். மக்களுக்கு நல்லதில்லை என்பதாய்த் தோன்றும் சட்டங்களை நிறைவேற்ற விடாமல் ஜனாதிபதியால் தாமதிக்கமுடியும். இன்னொன்று மறுபரிசீலனைக்குத் திரும்ப அனுப்புவதன் மூலமாய் ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் மீண்டும் அந்த விஷயம் தொடர்பாய் சிந்திக்க வைக்க முடியும்.
அரசை நம்பவில்லை எனில் சட்ட வரைவைத் திருப்பி அனுப்பாமல் ஒப்புதலும் அளிக்காமல் வைத்திருப்பதே சிறந்த வழி. ஜனாதிபதி இத்தனை காலத்துக்குள் பதில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதன் மூலம் சட்ட வரைவை நிறுத்தி வைக்கலாம். இதற்கு Pocket Veto என்று பெயர். உதாரணமாய் 1986ல் ஜெயில் சிங் ஜனாதிபதியாக இருந்தபோது (அப்போது பிரதமர் ராஜீவ் காந்தி) அரசுக்கு கடிதங்களை இடையில் நிறுத்தி பாகுபாடாய் அவற்றைக் கையாள அதிகாரம் அளிக்கும் தபால் துறை தொடர்பான சட்ட வரைவு ஒன்று ஒப்புதலுக்காக அவரிடம் வந்தது. அவருக்கு அது சரியாய்ப்படவில்லை. அதனால் அதற்கு பதிலளிக்காமல் நிறுத்தி வைத்தார்.
ஆனால் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர முன்மொழியப்படும் சட்ட வரைவுகளை (Amemdment Bills) ஜனாதிபதி திருப்பி அனுப்ப முடியாது [பிரிவு 368 (2)]
நிதி தொடர்பான சட்ட வரைவுகளில் தான் ஜனாதிபதிக்கு உரிமை இல்லையே தவிர மத்திய அரசின் பிற முக்கிய நிதி விவகாரங்களில் அவரது கை உண்டு. ஆண்டு தோறும் நிதிநிலை அறிக்கையை (Annual Budget) ஜனாதிபதியே இரு அவைகளிலும் முன்வைக்க வேண்டும் [பிரிவு 112 (1)]. ஜனாதிபதியின் ஒப்புதல் இன்றி மானியக் கோரிக்கை (Demand for Grant) ஏதும் எழுப்ப முடியாது [பிரிவு 113 (3)]. சொல்லப்பட்டதை விட கூடுதல் மானியம் ஒரு நிதியாண்டில் வழங்கப்பட்டிருந்தால் ஜனாதிபதி அதை பாராளுமன்ற அவைகளில் முறையாய்த் தெரியப்படுத்த வேண்டும் [பிரிவு 115 (1)].
நிதி தொடர்பாய் மேலும் சில அதிகாரங்களும் அவருக்கு உண்டு. இந்திய எதிர்கால நிதி (Contingency Fund of India) ஒன்றை உருவாக்கி எதிர்பாராத செலவினங்களுக்கு அதை ஒதுக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு [பிரிவு 267]. பாராளுமன்ற அவைகளில் வரிகளில் மாற்றம் கொண்டு வரும் சட்டவரைவுகள் ஜனாதிபதியின் சிபாரிசுடன்தான் கொணர முடியும் [பிரிவு 274 (1)]. நிதி ஆணையத் (Finance Commission) தலைவரையும் உறுப்பினர்களையும் ஜனாதிபதியே நியமிப்பார் [பிரிவு 280 (1)]. நிதி ஆணையத்தின் சிபாரிசுகளை பாராளுமன்ற அவைகளில் ஜனாதிபதியே முன்வைப்பார் [பிரிவு 281].
அவசரச் சட்டங்கள் (Ordinance) இயற்றுவதிலும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாத போது தேவை இருப்பதாக உணர்ந்தால் ஜனாதிபதி அவசரச் சட்டங்கள் போடலாம் [பிரிவு 123 (1)]. அவசரச் சட்டங்களில் அரசியல் சாசனம் மீறப்படவில்லை என்பதை ஜனாதிபதி பரிசீலித்து உறுதி செய்ய வேண்டும். அதற்கான தார்மீகப் பொறுப்பு அவருடையது. ஆனால் அப்படியான ஜனாதிபதியால் போடப்பட்ட அவசரச் சட்டங்கள் யாவும் மீண்டும் பாராளுமன்றம் கூடிய ஆறு மாதத்துக்குள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவசரச் சட்டங்களை எப்போது வேண்டுமானாலும் ஜனாதிபதி திரும்பப் பெறலாம் [பிரிவு 123 (2) (b)].
இந்தியாவின் நீதித் துறையிலும் (Judiciary) ஜனாதிபதி அதிகாரம் செலுத்த முடியும். உச்சநீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதியே நியமிப்பார் [பிரிவு 124 (2)]. உச்சநீதிமன்ற நீதிபதி தன் ராஜினாமாவைக் கைப்பட ஜனாதிபதிக்கே எழுத வேண்டும் [பிரிவு 124 (2) (a)]. உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் நியமிக்கப்படுவதற்கான தகுதிகளுள் ஒன்று அவரை ஒரு சிறந்த நீதிபதியாக ஜனாதிபதி கருத வேண்டும் [பிரிவு 124 (3) (c)]. உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கும் உத்தரவைப் பாராளுமன்ற அவைகளின் ஒப்புதலுக்குப் பின் ஜனாதிபதியே போட வேண்டும் [பிரிவு 124 (4)]. உச்சநீதிமன்ற நீதிபதி ஜனாதிபதி முன்னால் தான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் [பிரிவு 124 (6)].
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இல்லாத சமயம் ஜனாதிபதி அவரது பணிகளைக் கவனிக்க மற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரை நியமிக்கலாம் [பிரிவு 126]. ஓய்வு பெற்ற உச்சநீதிமற்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு எடுத்துக் கொள்ளச் செய்யலாம். அவர்களது சம்பளத்தையும் அதிகாரங்களையும் அவரே தீர்மானிப்பார் [பிரிவு 128]. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றம் தில்லியில் அல்லது வேறு இடங்களில் நடக்கச் செய்யலாம். அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அவசியம் [பிரிவு 130]. முக்கிய மக்கள் பிரச்சனைகளில் உச்சநீதிமன்றத்தின் கருத்தை ஜனாதிபதி கோரலாம் [பிரிவு 143 (1)]. உச்சநீதிமன்றம் ஜனாதிபதி அனுமதியுடன் நீதிமன்ற நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரலாம் [பிரிவு 145 (1)]. உச்சநீதிமன்ற அலுவர்களின் சம்பளம், விடுமுறைகள் போன்றவற்றில் மாற்றங்கள் கொண்டு வர இந்திய ஜனாதிபதியின் ஒப்புதல் தேவை [பிரிவு 146 (2)].
சிஏஜி (CAG) என்றழைக்கப்படும் கம்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரலானது மத்திய அரசு, மாநில அரசு மற்றும் அரசுகள் நிதியளிக்கும் நிறுவனங்களின் செலவுகளைத் தணிக்கை செய்யும் அதிகாரம் கொண்ட அமைப்பு. 2ஜி ஊழல், கோல்கேட் ஊழல் மாட்டுத் தீவன ஊழல் போன்ற முறைகேடுகளை சிஏஜி தான் கண்டறிந்தார்கள். ஜனாதிபதிக்கு இதன் செயல்களில் பங்குண்டு. சிஏஜியை ஜனாதிபதியே நியமிப்பார் [பிரிவு 148 (1)]. சிஏஜி ஜனாதிபதி முன்னிலையில் தான் பதவிப் பிரமாணம் எடுப்பார் [பிரிவு 148 (2)]. தணிக்கை மற்றும் கணக்குத் துறை அலுவலர்கள் தொடர்பான விதிமுறைகளை ஜனாதிபதி சிஏஜியுடனான ஆலோசனையின் பேரில் உருவாக்க வேண்டும் [பிரிவு 148 (5)]. சிஏஜியின் ஆலோசனைப்படி ஜனாதிபதி எதிர்பார்க்கும் முறைகளில் மத்திய, மாநிலக் கணக்குகள் இருக்க வேண்டும் [பிரிவு 150]. சிஏஜி மத்திய அரசின் கணக்குகளை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் அதைப் பரிசீலித்து, பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் சமர்ப்பிப்பார் [பிரிவு 151 (2)].
மாநில அளவிலும் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் உண்டு. ஆளுநர் அவர் அடியாள் தான். ஜனாதிபதியே மாநிலத்தின் ஆளுநரை நியமிப்பார் [பிரிவு 155]. ஜனாதிபதி விரும்பும் வரையிலும் ஆளுநர் பதவியில் தொடரலாம் [பிரிவு 156 (1)]. ஆளுநர் தன் ராஜினாமாவைக் கைப்பட ஜனாதிபதிக்கு எழுத வேண்டும் [பிரிவு 156 (2)]. ஓர் ஆளுநர் இரண்டு மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்டால், அவருக்கான சம்பளத்தில் அந்த இரு மாநிலங்களின் பங்கு என்ன என்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பார் பிரிவு [158 (3ஏ)].
மக்கட்தொகை கணக்கெடுப்பிற்குப் பின்னான சட்டசபைத் தொகுதிகள் மறுசீரமைப்பு எப்போது அமலுக்கு வருகிறது என்ற தேதியை ஜனாதிபதி அறிவிப்பார் [பிரிவு 170 (3)]. இரு மாநில சட்டசபைகளில் ஒருவர் ஒரேசமயத்தில் உறுப்பினராக இருக்கவியலாது. ஏதேனும் ஒரு சமஉ பதவியை அவர் முன்பே ராஜினாமா செய்யவில்லை எனில் இரு சட்டசபைகளிலும் உறுப்பினர் பதவியை இழப்பார். இது தொடர்பான விதிகளை ஜனாதிபதியே உருவாக்குகிறார் [பிரிவு 190 (2)]. இது பாராளுமன்றம் போன்றதே!
சட்டசபையில் (நிதி தொடர்பில்லாத) ஒரு சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டால் அவர் அதை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் [பிரிவு 200]. ஜனாதிபதி திருத்தங்கள் சொல்லி மீண்டும் சட்டசபைக்கு அதை அனுப்பி வைத்தால் அவர்கள் பரிசீலித்து திருத்தங்களை ஏற்றோ ஏற்காமலோ மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் [பிரிவு 201]. மாநிலங்களுக்கு அவசரச் சட்டங்கள் ஆளுநர் கொண்டு வரும் போது ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும் [பிரிவு 213 (1)].
மாநில அளவிலான நீதித் துறையிலும் ஜனாதிபதிக்குச் செல்வாக்குண்டு. ஒவ்வொரு மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியையும், மற்ற நீதிபதிகளையும் ஜனாதிபதி தான் தீர்மானிப்பார் [பிரிவு 216]. உயர்நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதியே நியமித்து உத்தரவிடுவார் [பிரிவு 217 (1)]. உயர்நீதிமன்ற நீதிபதி தன் ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கே கைப்பட எழுத வேண்டும் [பிரிவு 217 (1) (a)]. உயர்நீதிமன்ற நீதிபதியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய முடியும் [பிரிவு 217 (1) (b)]. உயர்நீதிமன்ற நீதிபதியை ஜனாதிபதி உச்சநீதிமன்றத்துக்கோ பிற உயர்நீதிமன்றங்களுக்கோ இடமாற்றம் செய்ய முடியும் [பிரிவு 217 (1) (c) & 222 (1)]. உயர்நீதிமன்ற நீதிபதியின் வயது தொடர்பாய்க் கேள்விகள் எழுந்தால் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் ஆலோசித்த பின் ஜனாதிபதி முடிவெடுக்கலாம் [பிரிவு 217 (3)]. உயர்நீதிமன்ற நீதிபதி இன்னொரு உயர்நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டால் அவருக்கு அளிக்கப்பட வேண்டிய கூடுதல் சம்பளம் பற்றி ஜனாதிபதி தீர்மானிப்பார் [பிரிவு 222 (2)]. உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இல்லாத சமயம் ஜனாதிபதி அவரது பணிகளைக் கவனிக்க மற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரை நியமிக்கலாம் [பிரிவு 223]. உயர்நீதிமன்றத்தில் நிறைய வழக்குகள் குவிந்தாலோ நிலுவையிலிருக்கும் வழக்குகள் அதிகரித்தாலோ கூடுதல் நீதிபதிகளைத் நியமிப்பது பற்றி ஜனாதிபதி முடிவெடுக்கலாம் [பிரிவு 224 (1)].
உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தம் பணிகளைச் செய்ய முடியாத சூழலில் ஜனாதிபதி அவரது பணிகளைக் கவனிக்க தற்காலிகமாக ஒரு நீதிபதியை நியமிக்கலாம் [பிரிவு 224 (2)]. ஓய்வு பெற்ற அம்மாநில அல்லது வெளிமாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு எடுத்துக் கொள்ளச் செய்யலாம். அவர்களது சம்பளத்தையும் அதிகாரங்களையும் அவரே தீர்மானிப்பார் [பிரிவு 224A].
மாநிலங்கள் மட்டுமின்றி யூனியன் பிரதேசங்களின் மீதும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. யூனியன் பிரதேசங்களை ஜனாதிபதியே ஒரு நிர்வாகியின் மூலம் ஆட்சி செய்ய வேண்டும் [பிரிவு 239 (1)]. ஒரு மாநில கவர்னரை அதன் அருகிருக்கும் ஒரு யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் ஜனாதிபதி நியமிக்கலாம் [பிரிவு 239 (2)].
தில்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கு மட்டும் தனி சட்டசபை உண்டு என்பதால் அதில் ஜனாதிபதியின் அதிகாரங்களைத் தனியாக நம் அரசியல் சாசனம் பேசுகிறது. தில்லி யூனியன் பிரதேசச் சட்டசபையில் இயற்றும் சட்டத்தை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் [பிரிவு 239AA (3) (c)]. தில்லி துணை நிலை ஆளுநருக்கும், அமைச்சரவைக்கும் ஒரு விஷயத்தில் கருத்து ஒற்றுமை இல்லை எனில் ஜனாதிபதியிடம் அதை எடுத்துச் சென்று அவரது வழிகாட்டுதலைக் கோரலாம் [பிரிவு 239AA (4)]. தில்லி முதல்வரை ஜனாதிபதி நியமிப்பார். முதல்வர் ஆலோசனைப் படி அவரது அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார். ஜனாதிபதி விரும்பும் வரை அவர்கள் பதவியில் நீடிக்கலாம் [பிரிவு 239AA (5)]. ஜனாதிபதிக்கு தில்லி யூனியன் பிரதேச அரசு சரியாகச் செயல்படவில்லை எனத் தீர்மானமாக நம்ப இடமிருந்தால் அவர் அந்த அரசின் அதிகாரங்களை நீக்கலாம் [பிரிவு 239AB]. புதுச்சேரி சட்டசபைக் கூட்டத்தொடர் நடக்காத போது ஜனாதிபதி அனுமதியுடன் தற்காலிகச் சட்டம் இயற்றலாம் [பிரிவு 239B (1)]. ஜனாதிபதி உத்தரவின் பேரில் அந்தத் தற்காலிகச் சட்டம் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம் [பிரிவு 239B (2) (b)].
ஜனாதிபதி அந்தமான் & நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, தாத்ரா & நாகர் ஹவேலி, டாமன் & டியூ, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் அமைதி, முன்னேற்றம், நல்லாட்சியை உறுதி செய்ய விதிமுறைகளைக் கொண்டு வரலாம் [பிரிவு 240 (1)]. மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளைத் தீர்க்க அவசியமெனில் மாநிலங்களின் மன்றத்தை (Interstate Council) அமைக்க நமது ஜனாதிபதிக்கு உரிமையுண்டு [பிரிவு 263].
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணியாளர்களையும் மேலும் சில மத்திய அரசு அலுவலர்களையும் தேர்வு செய்யும் பொறுப்பு யூபிஎஸ்சி என்ற மத்திய பொதுப் பணி ஆணையத்தினுடையது (Union Public Service Commission). ஜனாதிபதி அனுமதியுடன் ஆளுநர் கோரிக்கை விடுத்தால் மாநிலத் தேவைகளையும் யூபிஎஸ்சி கவனிக்கலாம். [பிரிவு 315 (4)]. யூபிஎஸ்சியின் தலைவர் உறுப்பினர்களை ஜனாதிபதியே நியமிப்பார் [பிரிவு 316 (1)]. யூபிஎஸ்சியின் தலைவர் இல்லாத போது அவரது பணிகளைக் கவனிக்க உறுப்பினர்களில் ஒருவரை ஜனாதிபதி நியமிக்கலாம் [பிரிவு 316 (1A)]. யூபிஎஸ்சி உறுப்பினர் தன் பதவி விலகலைக் கைப்பட ஜனாதிபதிக்கு எழுத வேண்டும் [பிரிவு 316 (2) (a)]. யூபிஎஸ்சி உறுப்பினரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு [பிரிவு 317 (1)]. யூபிஎஸ்சி உறுப்பினர் எண்ணிக்கை, பணிகளை காலத்திற்கேற்பத் தீர்மானிக்கும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு [பிரிவு 318]. யூபிஎஸ்சி தன் ஆண்டறிக்கையை ஜனாதிபதிக்கு அளிக்க வேண்டும் [பிரிவு 323 (1)].
இந்தியாவின் விதியை நிர்ணயிப்பவை தேர்தல்கள் தாம். அதை நடத்துவது தேர்தல் ஆணையம் (Election Commission). அதிலும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. தலைமைத் தேர்தல் ஆணையரையும் பிற தேர்தல் ஆணையர்களையும் ஜனாதிபதியே நியமிப்பார் [பிரிவு 324 (2)]. மண்டலத் தேர்தல் ஆணையர்களையும் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நியமிப்பார் [பிரிவு 324 (4)]. தேர்தல் ஆணையம் கேட்டால் அலுவலர்களை ஜனாதிபதி ஏற்பாடு செய்ய வேண்டும் [பிரிவு 324 (6).]
பட்டியலின மற்றும் பழங்குடியின நலனைப் பாதுகாக்க தேசிய ஆணையங்கள் உண்டு. அவை ஜனாதிபதியின் நேரடிப் பார்வையில் இயங்குபவை. பட்டியலின ஆணையத்தின் (Scheduled Castes Commission) உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் பணிகளை ஜனாதிபதியே தீர்மானிப்பார் [பிரிவு 338 (2)] பட்டியலின ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஜனாதிபதியே தீர்மானிப்பார். [பிரிவு 338 (3)]. பட்டியலின ஆணையத்தின் செயல்பாடுகளை ஆண்டுதோறும் அறிக்கையாக்கி ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்க வேண்டும் [பிரிவு 338 (5) (d)]. பட்டியலின ஆணையத்தின் அறிக்கையை முன்வைத்து செய்யப்பட்ட நடவடிக்கைகளை பாராளுமன்ற அவைகளின் முன் ஜனாதிபதி வைக்க வேண்டும் [பிரிவு 338 (6)].
பழங்குடியின ஆணையத்தின் (Scheduled Tribes Commission) உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் பணிகளை ஜனாதிபதியே தீர்மானிப்பார் [பிரிவு 338A (2)]. ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஜனாதிபதியே தீர்மானிப்பார் [பிரிவு 338A (3)]. பழங்குடியின ஆணையத்தின் செயல்பாடுகளை ஆண்டுதோறும் அறிக்கையாக்கி ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்க வேண்டும் [பிரிவு 338A (5) (d)]. அந்த அறிக்கையை முன்வைத்து செய்யப்பட்ட நடவடிக்கைகளை பாராளுமன்ற இரண்டு அவைகளின் முன் இந்திய யூனியனின் ஜனாதிபதி வைக்க வேண்டும் [பிரிவு 338A (6)].
சமூக மற்றும் கல்வி அடிப்படையில் பின்தங்கிய மக்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து சிபாரிசு அளிக்கும் ஓர் ஆணையத்தை ஜனாதிபதி அமைக்க முடியும் [பிரிவு 340 (1)]. அந்த அறிக்கையை முன்வைத்து எடுக்கட்ட நடவடிக்கைகளை பாராளுமன்ற அவைகளில் பாரத நாட்டின் ஜனாதிபதி சமர்ப்பிப்பார் [பிரிவு 340 (3)].
ஆளுநரின் ஆலோசனையின் அடிப்படையில் ஒரு மாநிலத்தின் பட்டியலின மற்றும் பழங்குடியினச் சாதிகளை ஜனாதிபதி அறிவிப்பார் [பிரிவு 341 (1) & 342 (1)]. மொழிச் சிறுபான்மையினருக்கான சிறப்பு அலுவலர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார் [பிரிவு 350B (1)]. சீரான இடைவெளிகளின் மொழிச் சிறுபான்மையினர் பிரச்சனைகளை ஜனாதிபதிக்கு இந்தச் சிறப்பு அலுவலர் அறிக்கையாகத் தயாரித்து அளிக்க வேண்டும். ஜனாதிபதி அதை பாராளுமன்ற இரு அவைகளின் முன் வைப்பார் [பிரிவு 350B (2)].
இங்கே அமைப்பு வைத்திருக்கும் இந்தியக் குடிமகனல்லாத எவரும் ஜனாதிபதியின் அனுமதியின்றி வெளிநாட்டு அரசுகளிடமிருந்து எந்தப் பட்டத்தையும் ஏற்கக்கூடாது [பிரிவு 18 (3)]. அவர்கள் ஜனாதிபதியின் ஒப்புதலின்றி அந்நிய அரசுகளிடமிருந்து எந்த வடிவத்திலும் நிதி உதவியும் ஏற்கக்கூடாது [பிரிவு 18 (4)]. தண்டனை பெற்ற ஒரு குற்றவாளியை மன்னிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு [பிரிவு 72 (1)]. உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனை உறுதி செய்யப் பெற்றவர்களையும், ராணுவ நீதிமன்றங்களில் தண்டனை பெற்றவர்களையும் அவர் மன்னித்து விடுவிக்கலாம். இதில் பிரதமர் அல்லது மக்களவை அங்கீகாரம் எல்லாம் தலையிட முடியாது.
அடுத்து வரவிருப்பது தான் ஜனாதிபதியின் பிரம்மாஸ்திரம். ஜனாதிபதியே இந்திய அரசியல் சாசனப்படி அதிகாரத்தின் உச்ச பீடம் என நிரூபிக்கும் பிரிவுகள். தொடர்ந்து பல முறை சர்ச்சைக்குள்ளானதும் பிரச்சனைக்குள்ளானதுமான சில அதிகாரங்கள். இந்தியாவில் அசாதாரணச் சூழல் நிலவுகிறதென ஜனாதிபதி நம்பினால் அவர் தேசம் முழுமைக்கோ குறிப்பிட்ட பகுதிக்கோ அவசர நிலைப் பிரகடனத்தைக் கொண்டு வர முடியும் [பிரிவு 352 (1)]. 1962 சீனாவுடனான யுத்தத்தின் போதும் 1971 பாகிஸ்தான் உடனான போரின் போதும் இந்தியாவில் அவசர நிலை கொண்டு வரப்பட்டது என்றாலும் மிகப் பிரபலமானது 1975ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலைப் பிரகடனம் தான். ஏன் அதை இந்திரா கொண்டு வந்தது என்கிறோம்? ஏன் அன்றைய ஜனாதிபதியான ஃபக்ருதின் அலி அஹமத் கொண்டு வந்தது என சொல்லவில்லை? அன்று அவசர நிலைப்பிரகடனத்தில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஃபக்ருதின் தான். ஆனால் மத்திய கேபினெட்டின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் இருந்தால் தான் ஜனாதிபதி அவசர நிலையைக் கொண்டு வர முடியும் [பிரிவு 352 (3)]. அதனால் இந்திரா கொண்டு வந்த எமர்ஜென்ஸி என்கிறோம்.
கவனிக்க வேண்டியது மத்திய அரசு விரும்பினாலும் ஜனாதிபதி அவசர நிலையைக் கொண்டு வருவதை எதிர்க்க முடியும்; பிரகடனத்தில் கையெழுத்திட மறுக்கலாம். மக்களவையும் அவசர நிலையை ஏற்க வேண்டும். மக்களவை அங்கீகரிக்கவில்லை எனில் அந்தப் பிரகடனத்தை ஜனாதிபதி திருப்பிப் பெற முடியும் [பிரிவு 352 (7)]. அவசர நிலைப் பிரகடனம் அமலில் இருக்கும் போது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகிறது என்பதை ஜனாதிபதி அறிவிக்க வேண்டும். [பிரிவு 359 (1)]. பிரிவு 21 சொல்லும் வாழ்வதற்கான உரிமை (Right to life or personal liberty) மட்டும் மிஞ்சும்.
அவசர நிலையின் போது ஜனாதிபதி மாநிலப் பட்டியலில் 66 விஷயங்களில் (Subjects) சட்டங்கள் கொண்டு வரலாம். நிதி தொடர்புடைய சட்ட வரைவுகளை ஜனாதிபதி அங்கீகரிக்கலாம். மக்களவை பதவி காலத்தை ஓராண்டு வரையிலும் நீட்டிக்கலாம்.
இதைப் போலவே ஜனாதிபதிக்கு இருக்கும் இன்னொரு பெரும் அதிகாரம் மாநில அரசைக் கலைக்கும் உரிமை. ஆளுநர் அறிக்கைப்படி ஒரு மாநிலத்தில் அசாதாரணச் சூழல் நிலவுகிறதென ஜனாதிபதி ஏற்றால் அங்கு சட்டசபையைக் கலைக்கலாம் [பிரிவு 356 (1)]. ஆட்சியைக் கலைத்த பிறகு மாநிலத்தின் அதிகாரத்தை பாராளுமன்ற ஒப்புதலின் படி ஜனாதிபதி எடுத்துக் கொள்ளலாம் [பிரிவு 357 (1)]. அரசியல் சாசன வழிகாட்டலின்படி மத்திய அரசு சொல்லும் திசையில் மாநில அரசு செயல்பட வில்லை என்றால் ஜனாதிபதி ஒரு மாநில அரசைக் கலைக்கலாம் [பிரிவு 365].
நாட்டில் நிதி வசதி அடிப்படையில் ஸ்திரமற்ற தன்மை நிலவினால் ஜனாதிபதி பொருளாதார அவசர நிலைப் பிரகடனத்தைக் கொண்டு வரலாம் [பிரிவு 360 (1)]. உதாரணமாய் சென்ற ஆண்டு பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது நாட்டில் மக்கள் சந்தித்த பொருளாதாரச் சிக்கல்களை முன்வைத்து அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பொருளாதார அவசர நிலையைக் கொண்டு வந்திருக்க முடியும்.
பொருளாதார அவரச நிலைப் பிரகடனம் இதுவரையிலும் அறிவிக்கப்பட்டதில்லை.
ஜனாதிபதிக்கு சில சிறப்பு விலக்குகள் உண்டு. தன் அதிகாரத்தை நிலைநாட்டுவதில், கடமையைச் நிறைவேற்றுவதில் ஜனாதிபதி எந்த நீதிமன்றத்துக்கும் பதில் சொல்ல வேண்டியவர் அல்லர் [பிரிவு 361 (1)]. பதிவியிலிருக்கும் போது ஜனாதிபதியின் மீது கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்த முடியாது [பிரிவு 361 (2)]. பதவியிலிருக்கும் போது ஜனாதிபதியைக் கைது செய்ய முடி
Published on August 25, 2017 23:21
August 13, 2017
மயில், கழுகு மற்றும் புறாக்கள்
(இந்த விமர்சனத்தில் ஸ்பாய்லர் இருக்கிறதா என்றெல்லாம் தெரியவில்லை. அப்படி யோசித்து எழுதுவது என் வேலையும் இல்லை என நினைக்கிறேன். அதனால் பார்க்காதவர்கள் படித்து விட்டு ஸ்பாய்லர் ஸ்பாய்லர் என்று கூவ வேண்டாம்.)
பிரயத்தனம்
கடைசியில்
ஒரு கண்ணாடிக் கோப்பை
கீழே விழுந்து
உடைவதற்குத்தானா
இத்தனை ஆயத்தம்
இத்தனை பதட்டம்
இத்தனை கண்ணீர்?
- மனுஷ்ய புத்திரன்
'இறைவி' போல் மற்றுமொரு ஃபெமினிஸ முயற்சிப் படம். அதை விட நன்றாக இருக்கிறது என்பது மட்டும் ஆறுதல்.
குறிப்பாய் சில வசனங்கள் மற்றும் காட்சிகள். ராமிடம் எப்போதுமே அது உண்டு எனலாம். உதாரணமாய் கற்றது தமிழில் "Touch me if you dare" போல் இதில் "Hope this size fits you". ராமின் சில மனநிலைகள் ரசித்துப் புன்னகைக்க வைக்கின்றன.

முதல் சறுக்கல் பிரபுநாத் பாத்திரம் திருகலாக அமைக்கப்பட்டிருப்பது. முதல் 45 நிமிடம் அந்தப் பாத்திரம் காட்டும் முதிர்ச்சிக்கும் அறத்துக்கும் அடுத்து சட்டெனக் குருட்டுத்தனமான சந்தேகக்காரனாக, அதன் நீட்சியாய் முரட்டுத்தனமான சாடிஸ்டாக மாறுவதற்கும் ஒட்டவேயில்லை. (பாத்திரங்கள் கருப்பு - வெள்ளையாகவே இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் அப்படிச் சொல்லியே எல்லாப் பாத்திர முரண்களையும் கடக்க முடியாது அல்லவா!)
ஆன்ட்ரியாவுக்கு நிச்சயம் இது வாழ்நாள் படம் தான். ஆனால் அவர் பாத்திரமும் கூட ஒரு மாதிரி விசித்திரமானது. ஓர் உறவில் வரும் குழப்பத்தில், சண்டையில் தன் தரப்பை விளக்கவே மாட்டேன், "ஆமாம்டா, நான் அப்படித்தான்" என்றிருப்பது அறிவீனம் தான். திரைக்கதையை இழுக்க இரண்டு இடங்களில் தியா பாத்திரத்தை இப்படி assassinate செய்து விட்டார் ராம் (பாஸின் அழைப்புக் குறுஞ்செயதி மற்றும் தியாவின் ஃபேஸ்புக் அப்லோட்). ஆனால் துரதிட்ஷ்டவசமாய் அதை எல்லாம் பெண்ணியத்தில் சேர்த்து இங்கே கைதட்டுகிறார்கள்! அவர் நடிப்பும் சாதாரணமாகவே இருந்தது!
அபூர்வ சௌம்யா (அஞ்சலி) பாத்திரம் மட்டுமே எதிர்மறை என்றாலும் ஓர்மையுடன் (integrity) எழுதப்பட்டிருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை சுயநலமான சூழ்நிலைக் கைதியாகவே இருந்து விடுகிறார். ஆனால் அழுது கொண்டே இருந்தவள் இப்போது அவள் அழுவதில்லை. அதிகபட்சம் பத்து நிமிடமே வந்தாலும் ஆன்ட்ரியாவை விட அஞ்சலியின் பாத்திரமே அதிகம் யோசிக்க வைத்தது. பிரபுநாத் அவளிடம் சுமூகமாகவே பணம் கேட்காமல் முதலிலேயே ஏன் கூட இருப்பது போல் படமெடுத்து மிரட்டிக் கேட்க வேண்டும் எனப் புரியவில்லை. அவனது திரிபுக்கான லீடாகக் கொள்ளலாம்.
பிரபுநாத் இடையில் பெண்களின் எண்களை எல்லாம் தேடி எடுத்து அவர்களை வலையில் வீழ்த்துவது ஒரு மன்மத சைக்கோத்தனமாகத் தோன்றினாலும் அது மாதிரியான சைக்கோக்கள் சூழத் தான் வாழ்ந்திருக்கிறோம். அவ்வகையில் அது ஒரு முக்கியமான பதிவு. அப்புறம் அதைத் தொடங்கும் முன் அவன் பெண்கள் எல்லாம் இப்படித் தான் என பர்ணபாஸுக்கு நீருபிப்பதாகச் சொல்வான். அவர் எனக்கு எதுக்குலே நீ நிரூபிக்கனும் எனக் கேட்பார். அவன் அதை உணர்ந்து தனக்குத் தானே நிரூபிக்க என்று திருத்திக் கொள்வான். ஆனால் அவன் கடைசியில் அவருக்குத் தான் அதை நிரூபிப்பான். அதே சமயம் அவனும் அதில் புதிதாய் ஒன்றைக் கற்றுக் கொள்வான். அப்படி எல்லோரையும் சொல்ல முடியாது என!
அழகம் பெருமாளுக்கு 'கற்றது தமிழ்' போலவே ஒரு முக்கியமான பாத்திரம் - பர்ணபாஸ். அழகாகச் செய்திருக்கிறார். மீனம்மா தன் பதிவொன்றில் அவரது கடைசிக் காட்சியைச் சிலாகிப்பவர்களைத் திட்டி இருந்தார். எத்தனை பேர் அதன் பொருளை உள்வாங்கிப் பாராட்டுகிறார்கள் என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் அதை மிகைக் காட்சியாக மட்டும் நான் கடக்கவில்லை. பர்ணபாஸ் ஏன் பிரபுநாத்திடம் "நீ அவளுக்கு நல்லது தாம்லே பண்ணி இருக்கே" என்று சொல்கிறார்?
1) அத்தனை வருடம் அவர் மீது பேரன்பு கொண்ட மனைவிக்கு சபலம் வரக்கூடும் என்பது பர்ணபாஸுக்கு ஒரு திறப்பு. அவளுக்குமே. இனி அவளுக்கு மறுபடி அப்படியானதொரு சபலம் வராது. அதுவே அவளுக்கு அவன் செய்த நல்லது. 2) அந்தப் பாடத்தைக் கற்க அவள் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருக்கவில்லை என்பதும் முக்கியமானது. அது பிரபுநாத்தின் நற்குணமே! அதுவும் அவன் அவளுக்குச் செய்த நன்மை. 3) ஒரு சகோதரியோ மகளோ தடம் புரள்கையில் ஆண் கண்டித்துச் சீர்திருத்தவே முற்படுவான், தூக்கியெறிய மாட்டான். ஆனால் அதுவே மனைவி எனில் கொலை அல்லது பிரிவு. அது தவறு என்று இயக்குநர் சுட்டிக் காட்ட முனைகிறார். அத்தருணத்தில் அவள் கணவனும் கூட அவளைத் தவறு செய்யச் சாத்தியமுள்ள சக மானுட ஜீவியாகப் பார்க்கவும், அவள் வாழ்க்கை மீதான அக்கறையுடன் அணுகவும் முற்பட வேண்டும் என்கிறார். அது முக்கியக் கருத்து தான். ஆனால் ஒற்றை வரி வசனம் மூலம் அது சரியாய் convey ஆகவில்லை என நினைக்கிறேன். அப்புரிதல் தனக்கு வர வாய்ப்பளித்த பிரபு அப்படியாய்த் தன் மனைவிக்கு நல்லது செய்திருக்கிறான் என்கிறார் பர்ணபாஸ். 4) "பர்ணபாஸ் வாக்கு பைபிள் வாக்கு" என்கிறார். "உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு" என்ற வாசகம் பைபிளின் புதிய ஏற்பாட்டில் குறைந்தது இரண்டு இடங்களில் வருகிறது. அதாவது "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்" என்கிறார் இயேசு. அந்த அடிப்படையிலும் அறியாமல் தனக்குத் துரோகம் செய்து விட்ட பிரபுநாத்தை மன்னித்து விட்ட பாவனையில் அவன் அவளுக்கு நன்மையே செய்ததாகச் சொல்கிறார். (அதற்கு முந்தைய வசனத்தில் பிரபு அவர் நினைப்பது போல் அவரது செல்பேசியிலிருந்து அவர் மனைவி எண்ணை எடுக்கவில்லை, ரீசார்ஜ் கடையில் எடுத்தது எனத் தெளிவாக்குகிறான். ஆக அது அறியாமல் நிகழ்ந்து விட்ட துரோகமே எனத் தெளிகிறார்.)
போலீஸ்காரர் மனைவியுடனான பகுதிகள் பிரபுநாத்திடம் தியா உன்னை விட அவன் சூப்பர் என்று சொன்னதன் உளவியல் பின்னணியைப் புரிய வைப்பது மட்டும் தான் நோக்கமா? அவர் தரப்பிலிருந்து பார்த்தால் ப்ளாட்டின மோதிரத்தின் மீது அவருக்கு என்ன அக்கறை? அவரது நோக்கம் தான் என்ன? கடைசியில் லூஸு போல் கத்திக் கொண்டு ஏன் தற்கொலை செய்கிறார். கணவன் கொடுமை அன்று மட்டும் எவ்வகையில் மோசமானது. இன்னும் சொல்லப் போனால் அன்று அவனுக்கு அவள் மீது வலுவாய்ச் சந்தேகப்பட அத்தனை முகாந்திரங்களும் இருந்தன. மனைவி தனித்திருக்கையில் வீட்டில் ஒருவன் ஒளிந்திருந்தாலும் அதைக் கேள்விக்குட்படுத்தக்கூடாது என்பது தான் ராம் சொல்ல வரும் பெண்ணியமா?
ஆண் ஓரினச் சேர்க்கையை ஒரு வில்லனிக்காக (வேட்டையாடு விளையாடு & நடுநிசி நாய்கள்) அல்லது காமெடியாக (கொரில்லா செல்) காட்டிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாச் சூழலில் முதன் முறையாய் அது பற்றி பரிவுடன் பதிவாகி இருக்கிறது இப்படத்தில். தியாவின் தியாகம் ட்ராமாடிக் என்றாலும் அதற்குச் சொல்லும் காரணம் யோசிக்க வைக்கிறது.
கார்பரேட் நிறுவனங்களில் பெண்களுக்கு பாஸ்களால் பாதுகாப்பில்லை என்பது படத்தில் அழுத்திச் சொல்லப்படுகிறது. நான் 11 ஆண்டுளாய் ஐடி துறையில் இருக்கிறேன். ஒருமுறை கூட இப்படியான சம்பவங்களைக் கேள்விப்பட்டதில்லை. அதுவும் தற்போதைய நிறுவனத்தில் workplace harassment தொடர்பாய் ஆண்டுதோறும் இருபாலருக்கும் கட்டாயப் பயிலரங்குகளே உண்டு. மேலாளர் தனக்குக் கீழ் பணிபுரியும் எதிர்பாலரிடம் பேசுவதில் reasonable restrictions உண்டு. அத்துமீறல் குறித்துப் புகாரளிக்க பாதுகாப்பான நடைமுறைகள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக, "உங்கள் செயலின் நோக்கம் முக்கியமே இல்லை. அது எவ்விதம் எதிர்பாலினரால் உணர / புரிந்து கொள்ளப்படுகிறது என்பதே முக்கியம்" என்பதைத் தான் இவ்விடயத்தில் thumb-rule ஆக வைத்திருக்கிறார்கள்! பெண் ஊழியைகளுக்கு அத்தனை பாதுகாப்பு கார்பரேட்டில் இருக்கிறது என்பதே என் புரிதல். ராம் சொல்வதெல்லாம் கார்பரேட்டில் பரவலாய் நடக்கிறதா என நண்பர்கள் சொல்லலாம். ஆனால் நான் வேலை பார்த்தது பெரும்பாலும் product based கம்பெனிகளில். ஒருவேளை ஐடி சர்வீஸ் கம்பெனிகளில், கால் சென்டர்களில் இப்படி எல்லாம் நடக்கிறதா? (இப்படி எல்லாம் நடக்கவே இல்லை எனச் சொல்ல வில்லை. ஆனால் ராம் காட்டியது இரண்டே பாஸ்கள். இரண்டுமே பொறுக்கிகள். அது நியாயமா என்று தான் கேட்கிறேன்.)
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் படத்தோடு பார்க்கையில் எனக்குப் பெரிதாய்ப் பிடிபடவில்லை. பின்னணி இசை பிடித்திருந்தது. நா.முத்துக்குமாரின் வரிகளையும் கவனிக்க முடியவில்லை. கடலளவு நேசிக்கிறேன், மலையளவு வெறுக்கிறேன் என்பதெல்லாம் ரொம்பச் சாதாரண வரிகள் தாம். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு வசீகரம். குறிப்பாய் டாப் ஆங்கிள் ட்ரோன் ஷாட்களில் கடல், ஏரி, மேம்பாலம், கான்க்ரீட் வனம் என சென்னை லேஸ்ட்ஸ்கேப்பின் அழகிய பதிவு.
ஆன்ட்ரியாவின் பையனாக நடித்த பையன் நன்றாய்ச் செய்திருந்தான். சர்ச் ஃபாதர், தியாவின் அம்மா, தியாவின் கணவன், போலீஸ்காரர், அவர் மனைவி என எல்லோருமே நல்ல நடிப்பு. ராமின் வாய்ஸ் ஓவரும் ஒரு பாத்திரமாக உற்சாகம்!
புறாவானது 28வது மாடி இருக்கும் உயரத்திற்குப் பறக்குமா என்ன? நான் ஒன்றரை வருடம் 28வது மாடியில் அமர்ந்து பணிபுரிந்திருக்கிறேன். ஒரு புறாவையும் அங்கே கண்டதில்லை என்பதால் கேட்கிறேன். தவிர, புறாக்கள் தாம் முன்பு வசித்த மரத்தைத் தேடி வருவதாகச் சொல்லப்படுகிறது. அவ்விடம் முன்பு காடாக இருந்ததாகவே வைத்துக் கொள்வோம். ஆனால் 28வது மாடிக்கு இணையான உயரம் கொண்ட, அவை முன்பு வசித்த மரம் எது? அல்லது கவித்துவச் சுதந்திரமா!
"வெளிய தெரியறது ஒரு உருவம், ஆனா உள்ளே இருக்கறது பல ரூபங்கள்" என்று வடிவேலு சொல்வது போல் ஓர் அன்பர் "இப்படத்திற்குள் பல கட்டுரைகள் இருக்கின்றன" எனச் சொல்லி இருந்தார். எனக்கு அப்படித் தோன்றவில்லை. நவீன யுகத்தில் ஆண் பெண் உறவு என்ற ஒரே கட்டுரை தான் இதில் இருக்கிறது. அதில் பெண்ணியம் பற்றிய சில சரியான புரிதல்களும், சில அதீதங்களும் இடம் பெற்றிருக்கின்றன. அவ்வளவு தான். மற்றபடி, இணையச் சிலாகிப்புகள் மிகையே!
ராமின் நாயகர்கள் அனைவருமே ஊரோடு ஒத்து வாழாதவர்களாகவே இருக்கிறார்கள். ராமைப் போலவே. இதை அவரைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் சற்றே கவலையுடனுமே குறிப்பிடுகிறேன். ஓவர் வித்தியாசமும் ஒவ்வாமை தரலாம்.
ராமின் சிறந்த படம் இதுவல்ல. இன்னும் சொல்லப் போனால் என் வரையில் மூன்றில் இதற்கே கடைசி இடம். ஆனால் அது இயக்குநர் ராம் கவலைப்பட வேண்டிய பிரச்சனை. நமக்கு இது பார்க்கக்கூடிய, பார்க்க வேண்டிய படம் தான். Watch it!
*
Published on August 13, 2017 19:50
August 1, 2017
மதுமிதா: சில குறிப்புகள் [குறும்படம்]
மதுமிதா: சில குறிப்புகள் நான்கு ஆண்டுகள் முன் சுஜாதா பிறந்த நாளில் தமிழ் பேப்பர் இணைய இதழில் வெளியான சிறுகதை. மருதன் வெளியிட்டார். அது எழுதப்பட்டது அதற்கும் ஈராண்டுகள் முன். 'இறுதி இரவு' தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதை அது. இடைப்பட்ட காலத்தில் பத்து முறையாவது வெவ்வேறு காரணங்களுக்காக அது திருத்தப் பட்டிருக்கும். அதை முதலில் பொன்.வாசுதேவனின் அகநாழிகை இதழுக்குத் தான் எழுதினேன். அப்போது அவ்விதழை வெளிக்கொணர்வதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தார் என்பதால் அதில் வெளியாகவில்லை. பிறகு ஒரு வெகுஜன இதழில் “இது ஹை ரேஞ்சாக இருக்கிறது. எங்கள் வாசகர்களுக்குப் புரியாது” என்று காரணம் சொல்லி நிராகரிக்கப்பட்டது. இன்னொரு பிரபல இதழும் மௌனித்தது. பிறகு தான் பொறுமையிழந்து இணையத்தில் வெளியிடத் தீர்மானித்தேன்.

இறுதி இரவு சிறுகதையைக் குறும்படம் ஆக்குவது பற்றிய பேச்சுகளும் வேலைகளும் கடந்த ஒன்றரை வருடங்களாகவே நடந்து வரும் சூழலில் மதுமிதா முந்திக் கொண்டாள். இவ்வாண்டு சரியாய் அதே சுஜாதா பிறந்த நாளன்று நான் உயிர்மை விருது மேடையில் இருந்த போது தான் மதன்ராஜ் மெய்ஞானம் மதுமிதா கதையைக் குறும்படமாக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தி மின்னஞ்சல் அனுப்பினார். பிறகு சரசரவென வேலைகள் முடிந்து, இதோ படம் வெளியாகி விட்டது.
பெங்களூரு மதுமிதா சான் ஃப்ரான்சிஸ்கோ மதுமிதாவாகி விட்டாள். குறும்படத்தில் எனக்குப் பல இடங்களில் நிறைவும் சில இடங்களில் இன்னும் மேம்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. நான் அச்சிறுகதையைப் படமாக்கி இருந்தால் வேறு மாதிரி தான் திரைக்கதை அமைத்திருப்பேன். உதாரணமாய் அக்கதையின் தனித்துவமாக நான் கருதுவது அதன் கூறுமுறையை - இன்றைய நவீன உலகின் பல்வேறு தொலைத் தொடர்புகளைச் சாத்தியங்களைப் பயன்படுத்திக் கதை சொல்லும் உத்தி. அதன் எளிய கதைச் சரடு இரண்டாம் பட்சமே. அதனால் நான் எழுதி இருந்தால் அந்த உத்தியை ஒட்டியே திரைக்கதை அமைத்திருப்பேன். ஆனால் மதன்ராஜ் தன் திரைக்கதையில் படைப்பின் கதைச் சரடை மட்டும் முக்கியமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு வாசகராக அவரது பார்வை அது என்று தான் அதைப் புரிந்து கொள்கிறேன்.
எழுதிய பின் எழுத்தாளனுக்கு அதன் மீது பாத்யதை ஏதுமில்லை. அதை இப்படி வாசி, அப்படிப் பார் என்று வாசகனுக்குச் சொல்வது அனர்த்தம். அது வாசகச் சுதந்திரம், வாசக உரிமை. ஆக ஒரு கதையை எப்படி அணுகிப் படமாக்கவும் ஓர் இயக்குநருக்கு உரிமை உண்டு என்றே கருதுகிறேன். அது புரிந்தே படமாக்கல்களுக்கு ஒப்புகிறேன். இறுதி இரவும் அப்படியே. இன்னும் சொல்லப் போனால் ஒரு கதையானது பல கோணப் படமாக்கல்களுக்குரிய சாத்தியம் கொண்டது.
என் கதாப்பாத்திரத்தின் தீற்றல்கள் இருந்தாலும் இந்தப் படத்தில் நீங்கள் பிரதானமாய் பார்ப்பது மதன்ராஜின் மதுமிதா. இது ஒரு குறும்படப் போட்டிக்காக எடுக்கப்பட்டது. அதன் விதிகளின்படி படம் ஒரே இடத்தில் (Single Location) நடக்க வேண்டும், காட்சிகள் நடக்கும் காலம் (Timeline) 24 மணி நேரத்திற்குள் இருக்க வேண்டும், குறும்படத்தின் நீளமானது (Running time) 12 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற சட்டகங்களுக்கு உட்பட்டு படம் எடுக்கப்பட்டிருப்பதையும் உணர்கிறேன். தவிர, படத்தில் பங்கேற்ற அனைவரும் அமெரிக்காவில் முழு நேர மென்பொருள் ஆசாமிகள் என்பதையும் அறிகிறேன்.
ஆனால் அதற்குள் நின்று மதன்ராஜ் பயன்படுத்தியிருக்கும் திரைக்கதை உத்தி சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது. கவனித்துப் பாருங்கள். திரைக்கதை தவிர்த்து படத்தில் எனக்குப் பிடித்த இரு விஷயங்கள்: மதுமிதாவாக நடித்த ரம்யா பெரும்பாலும் நன்றாக நடித்திருக்கிறார், அப்புறம் பின்னணி இசை (பென் தாமஸ்). மதன்ராஜுக்கு வாழ்த்துக்கள்!
மதுமிதா பாத்திரத்தை நான் திரையில் காணும் இரண்டாவது முறை இது. முதல் முறை நானே இயக்கிய LIFE OF API என்ற நான் முன்பு பணிபுரிந்த அலுவகம் தொடர்பான குறும்படத்தில் மதுமிதா இருந்தாள். எந்த மதுமிதா பெஸ்ட் என யோசனை!
*
Published on August 01, 2017 21:01
July 28, 2017
நீங்க ஷட்டப் பண்ணுங்க!
1. நீ நீயாக இரு
(பிக்பாஸ் ஓவியாவிடமிருந்து சர்வைவல் டிப்ஸ்)
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை. ஓவியாவுக்கு அறிமுகம் கொடுத்தால் நம் வீட்டில் மாலடோவ் காக்டெய்ல் வீசுவார்கள். அதனால் சம்பிரதாய இன்ட்ரோக்கள் தவிர்த்து நேராய் விஷயத்துக்குப் போய் விடலாம்.
தமிழகத்தின் லேட்டஸ்ட் சென்சேஷன் ‘பிக்பாஸ்’ ஓவியா! அந்நிகழ்வில் பங்குபெறும் மற்ற பதினான்கு பேரை விடவும் அதிக மக்கள் செல்வாக்கு மிக்கவர். மக்கள் செல்வி என்று கூட பட்டம் கொடுத்திருந்தார்கள். #SaveOviya Movement, ஓவியா புரட்சிப் படை, ஓவியா தற்கொலைப் படை, ஓவியா ஆர்மி என்று வர்ச்சுவல் ரசிகர் மன்றங்கள் தூள் பறக்கின்றன. தினம் ஓவியாவை வைத்து நூற்றுக்கணக்கான மீம்கள் உருவாக்கப் படுகின்றன. ஃபேஸ்புக்கில் யாரோ விளையாட்டாய் எழுதி இருந்தார்கள் - “இன்று தமிழகத்தில் ரஜினிக்கு அதிக ரசிகர்களா, ஓவியாவுக்கு அதிக ரசிகர்களா?”. அராஜகம்!
அகம் டிவி வழியாக பிக்பாஸ் இன்மேட்ஸுடன் கமல் ஹாசன் உரையாடும் போது ஓவியா பற்றிய ஒரு விஷயம் பகிரப்பட்டால் கமலே திடுக்கிட்டுப் பார்க்குமளவு அரங்கில் விசில்களும் க்ளாப்ஸ்களும் அள்ளுகின்றன. எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகும் ஒவ்வொரு முறையும் கோடி ஓட்டுகளுடன் ஓவியா காப்பாற்றப்படுகிறார். கமல் வீட்டுக்கு போலீஸ் செக்யூரிட்டி போடப்பட்டால் ஓவியா எவிக்ஷன் என்பதால் எனப் புரளி கிளப்பப்படுகிறது, நம்பப்படுகிறது; சோஷியல் மீடியா கொந்தளிக்கிறது.
நடிகை ஓவியா எல்லோரும் விரும்பும் ஓர் ஐடலாக, உதாரணமாகக் காட்டப்படும் ஓர் ஐகானாகத் தமிழகத்தில் உருவாகி வருகிறார் என்பதையே இது காட்டுகிறது.
குஷ்புவுக்குக் கோவில் கட்டிய உணர்ச்சிவசப்பட்ட கலாசாரம் தான் நம்முடையது என்றாலும் இம்முறை ஒரு பிம்பத்துக்காக அல்லாமல் ஒரு நிஜத்துக்காக, ஒரு நடிகையின் தோற்றத்துக்காக அல்லாமல் அவரது செய்கைகளுக்காக மக்கள் ஒருவரைத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். வெளியே வந்து இத்தனை அன்பையும் மரியாதையையும் பார்த்தால் ஓவியாவே மிரண்டு போவார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் செயல்கள், அணுகுமுறைகள், எதிர்வினைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைக்கான சர்வைவல் டிப்ஸ்களைப் பெற்றுக் கொள்வதே இத்தொடரின் நோக்கம். இது நமக்குப் புதிதில்லை. ரஜினியின் பஞ்ச் டயலாக்களை வைத்தும், வடிவேலுவின் காமெடி டயலாக்களை வைத்தும் மேலாண்மைக் கொள்கைகளைப் பேசி இருக்கிறார்கள். கம்ப ராமாயணத்திலிருந்து மேனேஜ்மெண்ட் டிப்ஸ் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். அம்மாதிரி ஒன்று தான்.
தவிர, நாம் அறிவுரை சொன்னால் எவன் அதை எல்லாம் காது கொடுத்துக் கேட்கப் போகிறான். ஓவியா சொன்னால் கேட்பார்கள். கடைபிடிக்கவும் கூடச் செய்வார்கள்.
*
ஓவியா அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம், “நீ நீயாக இரு, அடுத்தவர்களுக்காக உன்னை மாற்றிக் கொள்ளாதே” என்பதே. இது வரை வந்த பிக்பாஸ் எபிஸோட்கள் எதிலும் ஓவியா போலித்தனம் காட்டவில்லை என்று சொல்லலாம். அவரது அந்தக் குணத்தைப் பார்க்கும் முன் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் புரிந்து கொள்ள முயலலாம்.
ஒரு வீடு. அங்கு நம்மைத் தவிர நாம் முன் பின் அறியாத 14 பேர். வெளியுலகுடன் தொடர்பு கிடையாது. ஸ்மார்ட்ஃபோன் கிடையாது. சுற்றி 30 கேமெராக்கள். கழிவறை, குளியலறையில் செலவழிக்கும் நேரம் தவிர ஒவ்வொரு கணமும் கேமெராவின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். உலகமே நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு எவ்வளவு நாளானாலும் முற்றிலும் அகலாது. அதனால் பொதுவாய் அங்கே உள்ள ஒருவர் தன் பற்றிய பிம்பத்தை நல்ல விதமாய்க் கட்டமைக்க முயல்வார். அப்படி 24 மணி நேரமும் நடிப்பதும் சிரமம். ஒருவரது நிஜத்துக்கும் பிம்ப முயற்சிக்கும் இடையேயான யுத்தம் தான் பிக்பாஸின் அத்தனை நிகழ்வுகளும்.
இந்தப் பின்புலத்தில் தான் ஓவியா தனித்துவம் கொண்டிருக்கிறார். அவர் இத்தனை கேமெராக்கள் மத்தியிலும் நடிக்காமல் உண்மையாக இருக்கிறார். வெளியுலகில் எப்படி இருப்பாரோ, அதாவது அந்த வீட்டில் கேமெராக்கள் இல்லாமல் இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார். மழை பெய்தால் அதில் நனைந்தாடுகிறார்; கோபத்தில் ஆங்கிலக் கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்; சோகமோ கோபமோ கட்டுப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் நாடகமாக்காமல் நாசூக்காய் அழுகிறார்.
நாம் நாமாக இருக்க ஒரே வழி அடுத்தவர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றிய கவலையை அறுத்தல். அது மிகச் சிரமமான விஷயம். ஓவியா பிக் பாஸ் வீட்டுக்கு வந்த ஆரம்பத் தினங்களிலேயே உரையாடல் உவப்பில்லாத திசையில் செல்ல எல்லோரும் இருக்கும் மீட்டிங்கிலிருந்து பாதியில் எழுந்து செல்கிறார் (“நீங்க ஷட்டப் பண்ணுங்க” என்ற பிரபல வசனம் உதிர்க்கப்பட்டது அப்போது தான்). அதற்குப் பிந்தைய உரையாடலில் ஆரவ் ஓவியாவிடம் “இப்படி நீ செய்தால் உன்னை எல்லோரும் தவறாக நினைப்பார்கள்” என்று சொல்கிறான். அதற்கு ஓவியா, “நினைச்சா நினைக்கட்டும், ஐ டோன்ட் கேர். நான் நானாத்தான் இருப்பேன்” என்கிறார். அதிலிருந்து இப்போது வரை அப்படித்தான் இருக்கிறார்.
அவருக்கு நேர்எதிர் குணம் என்று ஜூலியைச் சொல்லலாம். அவர் எல்லோருக்கும் எது பிடிக்குமோ அப்படியாகத் தன்னை முன்வைக்க முயல்கிறார். ஆனால் அப்படி எல்லோரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமே இல்லை. அதனால் போலி என்ற பெயர் கிட்டியது தான் மிச்சம். ஆடியன்ஸிடமும் மோசமான இமேஜ். இறுதியில் மிஞ்சக் கூடிய சுயதிருப்தி, நிம்மதி கூட இயல்பை ஒழித்து நடிப்பதால் இழப்போம்.
ஆனால் ஓவியா ஒரிஜினாலிட்டியுடன் இருந்து மட்டும் என்ன பயன்? பிக்பாஸ் வீட்டில் அவரைப் பலருக்கும் பிடிக்காமல் போவது தான் நடக்கிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகிறார். ஆம். நாம் நாமாக இருப்பது கொஞ்சம் ரிஸ்கான விஷயம் தான். அதனால் நாம் சில பல மனிதர்களை இழக்க வாய்ப்புண்டு. ஆனால் யாரை இழக்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். எவர் நற்குணங்கள் இன்றி இருக்கிறாரோ, எவர் சுயசிந்தனை இல்லாமல் இருக்கிறாரோ, எவர் போலியாய் நடித்துக் கொண்டிருக்கிறாரோ அவர்களுக்கு எல்லாம் ஆகாதவர்கள் ஆவோம். அப்படியானவர்களின் உறவைப் பேணிப் பாதுகாத்து மட்டும் என்ன பயன்?
நாம் நாமாக இருப்பதால் பொருட்படுத்தத் தகுந்தவர் எவரையும் இழக்க மாட்டோம். அதே சமயம் உண்மையாய் இருப்பதன் பொருள் எவரோடும் எதன் பொருட்டும் எதையும் அட்ஜஸ்ட் பண்ணிப் போகக்கூடாது என்பதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதர்களாகிய நாம் எல்லோரும் குறைகளும் பலவீனங்களும் கொண்டவர்களே. அதனால் தேவைப்படுகையில் முன்பின் சமரசங்கள் கொள்வதில் தவறில்லை. அது நம் இயல்பைத் தொலைக்குமளவு போகக்கூடாது. அவ்வளவு தான்.
ஆனால் இதில் ஒரு சூட்சமம் இருக்கிறது. எல்லோருமே உண்மையாய் இருப்பது சாத்தியம் அல்ல; நல்லதும் இல்லை. நம்மிடம் நற்குணம், தீயகுணம் இரண்டும் இருக்கும். நாம் நாமாகவே இருப்பதில் ஒரு பெரும் சிக்கல் தீய குணங்களும் நம்மிடமிருந்து வெளிப்பட்டு விடும் என்பது தான். அதைக் கையாள ஒரே வழி அத்தீய குணங்களை நம்மிடமிருந்து தூர விரட்டுவது தான். மாறாக உண்மையாய் இருக்கிறேன் பேர்வழி என்று அதைக் காட்டத்தொடங்கினால் ரணகொடூரமாகி விடும்.
பிக்பாஸில் ஓவியாவும் போலித்தனமின்றி அவராகவே இருக்கிறார்; காயத்ரியும் அப்படியே இருக்கிறார். ஆனால் காயத்ரியின் எதிர்மறைத் தன்மைகள் காரணமாக அவருக்கு ஒரு மெகாவில்லி இமேஜ் வந்து விடுகிறது. அதை ரசிக்க முடிவதில்லை. அவரை ஏற்றுக் கொள்வது அவரோடு இருப்பவர்கள் மட்டுமே. காரணம், அவர்களிடம் அவர் உவப்பற்ற முகத்தைக் காட்ட வேண்டிய அவசியம் இன்னமும் வரவில்லை. மாறாக பரணி, ஓவியா ஆகியோரிடமும் வெளியிலிருந்து பார்க்கும் நம்மிடமும் அவர் வெறுப்பையே சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். ஆர்த்தியும் அப்படியே. அவரும் கூட நான் நானாக இருக்கிறேன் என்று அடிக்கடி சொன்னவர் தான். மாறாக ஓவியா இயல்பிலேயே good-hearted என்பதால் அவரது உண்மைத்தன்மையை ரசிக்க முடிகிறது.
ஆக, ஓவியா சொல்லும் வாழ்க்கைப் பாடமான “நீ நீயாக இரு!” என்பதற்கு நாம் பின்னொட்டாகச் சேர்த்துக் கொள்ள வேண்டியது “அதற்கு முன் நல்லவனாக இரு!”.
***
(சில தினங்கள் முன் 10 - 12 அத்தியாயங்கள் வருவது போல் ஒரு கட்டுரைத் தொடர் எழுதும் உத்தேசத்தில் உற்சாகத்துடன் இதை எழுதிப் பார்த்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா சொல்லும் செய்யும் ஒன்று அல்லது இரண்டு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதிலிருந்து லைஃப் லெசன்ஸ் / சர்வைவல் டிப்ஸ் எழுதுவது தான் திட்டம். இடைப்பட்ட தினங்களில் சட்டென அந்த வேகம் வடிந்தது போல் இருக்கிறது. இனி இதைத் தொடர்ந்து எழுத முடியும் எனத் தோன்றவில்லை.)
(பிக்பாஸ் ஓவியாவிடமிருந்து சர்வைவல் டிப்ஸ்)
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை. ஓவியாவுக்கு அறிமுகம் கொடுத்தால் நம் வீட்டில் மாலடோவ் காக்டெய்ல் வீசுவார்கள். அதனால் சம்பிரதாய இன்ட்ரோக்கள் தவிர்த்து நேராய் விஷயத்துக்குப் போய் விடலாம்.

தமிழகத்தின் லேட்டஸ்ட் சென்சேஷன் ‘பிக்பாஸ்’ ஓவியா! அந்நிகழ்வில் பங்குபெறும் மற்ற பதினான்கு பேரை விடவும் அதிக மக்கள் செல்வாக்கு மிக்கவர். மக்கள் செல்வி என்று கூட பட்டம் கொடுத்திருந்தார்கள். #SaveOviya Movement, ஓவியா புரட்சிப் படை, ஓவியா தற்கொலைப் படை, ஓவியா ஆர்மி என்று வர்ச்சுவல் ரசிகர் மன்றங்கள் தூள் பறக்கின்றன. தினம் ஓவியாவை வைத்து நூற்றுக்கணக்கான மீம்கள் உருவாக்கப் படுகின்றன. ஃபேஸ்புக்கில் யாரோ விளையாட்டாய் எழுதி இருந்தார்கள் - “இன்று தமிழகத்தில் ரஜினிக்கு அதிக ரசிகர்களா, ஓவியாவுக்கு அதிக ரசிகர்களா?”. அராஜகம்!
அகம் டிவி வழியாக பிக்பாஸ் இன்மேட்ஸுடன் கமல் ஹாசன் உரையாடும் போது ஓவியா பற்றிய ஒரு விஷயம் பகிரப்பட்டால் கமலே திடுக்கிட்டுப் பார்க்குமளவு அரங்கில் விசில்களும் க்ளாப்ஸ்களும் அள்ளுகின்றன. எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகும் ஒவ்வொரு முறையும் கோடி ஓட்டுகளுடன் ஓவியா காப்பாற்றப்படுகிறார். கமல் வீட்டுக்கு போலீஸ் செக்யூரிட்டி போடப்பட்டால் ஓவியா எவிக்ஷன் என்பதால் எனப் புரளி கிளப்பப்படுகிறது, நம்பப்படுகிறது; சோஷியல் மீடியா கொந்தளிக்கிறது.
நடிகை ஓவியா எல்லோரும் விரும்பும் ஓர் ஐடலாக, உதாரணமாகக் காட்டப்படும் ஓர் ஐகானாகத் தமிழகத்தில் உருவாகி வருகிறார் என்பதையே இது காட்டுகிறது.
குஷ்புவுக்குக் கோவில் கட்டிய உணர்ச்சிவசப்பட்ட கலாசாரம் தான் நம்முடையது என்றாலும் இம்முறை ஒரு பிம்பத்துக்காக அல்லாமல் ஒரு நிஜத்துக்காக, ஒரு நடிகையின் தோற்றத்துக்காக அல்லாமல் அவரது செய்கைகளுக்காக மக்கள் ஒருவரைத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். வெளியே வந்து இத்தனை அன்பையும் மரியாதையையும் பார்த்தால் ஓவியாவே மிரண்டு போவார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் செயல்கள், அணுகுமுறைகள், எதிர்வினைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைக்கான சர்வைவல் டிப்ஸ்களைப் பெற்றுக் கொள்வதே இத்தொடரின் நோக்கம். இது நமக்குப் புதிதில்லை. ரஜினியின் பஞ்ச் டயலாக்களை வைத்தும், வடிவேலுவின் காமெடி டயலாக்களை வைத்தும் மேலாண்மைக் கொள்கைகளைப் பேசி இருக்கிறார்கள். கம்ப ராமாயணத்திலிருந்து மேனேஜ்மெண்ட் டிப்ஸ் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். அம்மாதிரி ஒன்று தான்.
தவிர, நாம் அறிவுரை சொன்னால் எவன் அதை எல்லாம் காது கொடுத்துக் கேட்கப் போகிறான். ஓவியா சொன்னால் கேட்பார்கள். கடைபிடிக்கவும் கூடச் செய்வார்கள்.
*
ஓவியா அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம், “நீ நீயாக இரு, அடுத்தவர்களுக்காக உன்னை மாற்றிக் கொள்ளாதே” என்பதே. இது வரை வந்த பிக்பாஸ் எபிஸோட்கள் எதிலும் ஓவியா போலித்தனம் காட்டவில்லை என்று சொல்லலாம். அவரது அந்தக் குணத்தைப் பார்க்கும் முன் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் புரிந்து கொள்ள முயலலாம்.
ஒரு வீடு. அங்கு நம்மைத் தவிர நாம் முன் பின் அறியாத 14 பேர். வெளியுலகுடன் தொடர்பு கிடையாது. ஸ்மார்ட்ஃபோன் கிடையாது. சுற்றி 30 கேமெராக்கள். கழிவறை, குளியலறையில் செலவழிக்கும் நேரம் தவிர ஒவ்வொரு கணமும் கேமெராவின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். உலகமே நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு எவ்வளவு நாளானாலும் முற்றிலும் அகலாது. அதனால் பொதுவாய் அங்கே உள்ள ஒருவர் தன் பற்றிய பிம்பத்தை நல்ல விதமாய்க் கட்டமைக்க முயல்வார். அப்படி 24 மணி நேரமும் நடிப்பதும் சிரமம். ஒருவரது நிஜத்துக்கும் பிம்ப முயற்சிக்கும் இடையேயான யுத்தம் தான் பிக்பாஸின் அத்தனை நிகழ்வுகளும்.
இந்தப் பின்புலத்தில் தான் ஓவியா தனித்துவம் கொண்டிருக்கிறார். அவர் இத்தனை கேமெராக்கள் மத்தியிலும் நடிக்காமல் உண்மையாக இருக்கிறார். வெளியுலகில் எப்படி இருப்பாரோ, அதாவது அந்த வீட்டில் கேமெராக்கள் இல்லாமல் இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார். மழை பெய்தால் அதில் நனைந்தாடுகிறார்; கோபத்தில் ஆங்கிலக் கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்; சோகமோ கோபமோ கட்டுப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் நாடகமாக்காமல் நாசூக்காய் அழுகிறார்.
நாம் நாமாக இருக்க ஒரே வழி அடுத்தவர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றிய கவலையை அறுத்தல். அது மிகச் சிரமமான விஷயம். ஓவியா பிக் பாஸ் வீட்டுக்கு வந்த ஆரம்பத் தினங்களிலேயே உரையாடல் உவப்பில்லாத திசையில் செல்ல எல்லோரும் இருக்கும் மீட்டிங்கிலிருந்து பாதியில் எழுந்து செல்கிறார் (“நீங்க ஷட்டப் பண்ணுங்க” என்ற பிரபல வசனம் உதிர்க்கப்பட்டது அப்போது தான்). அதற்குப் பிந்தைய உரையாடலில் ஆரவ் ஓவியாவிடம் “இப்படி நீ செய்தால் உன்னை எல்லோரும் தவறாக நினைப்பார்கள்” என்று சொல்கிறான். அதற்கு ஓவியா, “நினைச்சா நினைக்கட்டும், ஐ டோன்ட் கேர். நான் நானாத்தான் இருப்பேன்” என்கிறார். அதிலிருந்து இப்போது வரை அப்படித்தான் இருக்கிறார்.
அவருக்கு நேர்எதிர் குணம் என்று ஜூலியைச் சொல்லலாம். அவர் எல்லோருக்கும் எது பிடிக்குமோ அப்படியாகத் தன்னை முன்வைக்க முயல்கிறார். ஆனால் அப்படி எல்லோரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமே இல்லை. அதனால் போலி என்ற பெயர் கிட்டியது தான் மிச்சம். ஆடியன்ஸிடமும் மோசமான இமேஜ். இறுதியில் மிஞ்சக் கூடிய சுயதிருப்தி, நிம்மதி கூட இயல்பை ஒழித்து நடிப்பதால் இழப்போம்.
ஆனால் ஓவியா ஒரிஜினாலிட்டியுடன் இருந்து மட்டும் என்ன பயன்? பிக்பாஸ் வீட்டில் அவரைப் பலருக்கும் பிடிக்காமல் போவது தான் நடக்கிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகிறார். ஆம். நாம் நாமாக இருப்பது கொஞ்சம் ரிஸ்கான விஷயம் தான். அதனால் நாம் சில பல மனிதர்களை இழக்க வாய்ப்புண்டு. ஆனால் யாரை இழக்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். எவர் நற்குணங்கள் இன்றி இருக்கிறாரோ, எவர் சுயசிந்தனை இல்லாமல் இருக்கிறாரோ, எவர் போலியாய் நடித்துக் கொண்டிருக்கிறாரோ அவர்களுக்கு எல்லாம் ஆகாதவர்கள் ஆவோம். அப்படியானவர்களின் உறவைப் பேணிப் பாதுகாத்து மட்டும் என்ன பயன்?
நாம் நாமாக இருப்பதால் பொருட்படுத்தத் தகுந்தவர் எவரையும் இழக்க மாட்டோம். அதே சமயம் உண்மையாய் இருப்பதன் பொருள் எவரோடும் எதன் பொருட்டும் எதையும் அட்ஜஸ்ட் பண்ணிப் போகக்கூடாது என்பதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதர்களாகிய நாம் எல்லோரும் குறைகளும் பலவீனங்களும் கொண்டவர்களே. அதனால் தேவைப்படுகையில் முன்பின் சமரசங்கள் கொள்வதில் தவறில்லை. அது நம் இயல்பைத் தொலைக்குமளவு போகக்கூடாது. அவ்வளவு தான்.
ஆனால் இதில் ஒரு சூட்சமம் இருக்கிறது. எல்லோருமே உண்மையாய் இருப்பது சாத்தியம் அல்ல; நல்லதும் இல்லை. நம்மிடம் நற்குணம், தீயகுணம் இரண்டும் இருக்கும். நாம் நாமாகவே இருப்பதில் ஒரு பெரும் சிக்கல் தீய குணங்களும் நம்மிடமிருந்து வெளிப்பட்டு விடும் என்பது தான். அதைக் கையாள ஒரே வழி அத்தீய குணங்களை நம்மிடமிருந்து தூர விரட்டுவது தான். மாறாக உண்மையாய் இருக்கிறேன் பேர்வழி என்று அதைக் காட்டத்தொடங்கினால் ரணகொடூரமாகி விடும்.
பிக்பாஸில் ஓவியாவும் போலித்தனமின்றி அவராகவே இருக்கிறார்; காயத்ரியும் அப்படியே இருக்கிறார். ஆனால் காயத்ரியின் எதிர்மறைத் தன்மைகள் காரணமாக அவருக்கு ஒரு மெகாவில்லி இமேஜ் வந்து விடுகிறது. அதை ரசிக்க முடிவதில்லை. அவரை ஏற்றுக் கொள்வது அவரோடு இருப்பவர்கள் மட்டுமே. காரணம், அவர்களிடம் அவர் உவப்பற்ற முகத்தைக் காட்ட வேண்டிய அவசியம் இன்னமும் வரவில்லை. மாறாக பரணி, ஓவியா ஆகியோரிடமும் வெளியிலிருந்து பார்க்கும் நம்மிடமும் அவர் வெறுப்பையே சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். ஆர்த்தியும் அப்படியே. அவரும் கூட நான் நானாக இருக்கிறேன் என்று அடிக்கடி சொன்னவர் தான். மாறாக ஓவியா இயல்பிலேயே good-hearted என்பதால் அவரது உண்மைத்தன்மையை ரசிக்க முடிகிறது.
ஆக, ஓவியா சொல்லும் வாழ்க்கைப் பாடமான “நீ நீயாக இரு!” என்பதற்கு நாம் பின்னொட்டாகச் சேர்த்துக் கொள்ள வேண்டியது “அதற்கு முன் நல்லவனாக இரு!”.
***
(சில தினங்கள் முன் 10 - 12 அத்தியாயங்கள் வருவது போல் ஒரு கட்டுரைத் தொடர் எழுதும் உத்தேசத்தில் உற்சாகத்துடன் இதை எழுதிப் பார்த்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா சொல்லும் செய்யும் ஒன்று அல்லது இரண்டு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதிலிருந்து லைஃப் லெசன்ஸ் / சர்வைவல் டிப்ஸ் எழுதுவது தான் திட்டம். இடைப்பட்ட தினங்களில் சட்டென அந்த வேகம் வடிந்தது போல் இருக்கிறது. இனி இதைத் தொடர்ந்து எழுத முடியும் எனத் தோன்றவில்லை.)
Published on July 28, 2017 05:29
C. Saravanakarthikeyan's Blog
- C. Saravanakarthikeyan's profile
- 9 followers
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
