களவுப் பெருமை


'துப்பறிவாளன்' படத்தை டவுன்லோட் செய்திருக்கிறேன் என்று பெருமையாகவும், பைரஸி எதிர்ப்பை மோசமான ரசனையுடன் கேவலம் செய்தும் பதிவிட்ட ஒருவரை சற்றுமுன் ஃபேஸ்புக்கில் நட்பு விலக்கம் செய்தேன். இது அவர் டவுன்லோட் செய்து பார்ப்பது பிடிக்காமல் அல்ல; அந்த அடிப்படையில் பார்த்தால் 90% பேரை அநட்பிக்க வேண்டியது தான். பிரச்சனை அதுவல்ல. நான் விலகியதன் காரணம் அது பற்றிய குற்றவுணர்ச்சி சிறிதும் இன்றிப் பெருமிதக் கொழுப்புடன் அதை எழுதியதற்காக. அச்செயல் ஒரு க்ரிமினல் மனப்பான்மை கொண்டவராக, பழக ஆபத்தானவராக அவரை அடையாளப்படுத்துகிறது. நாளை பக்கத்து வீட்டுக் குழந்தையின் கழுத்தைத் திருகிப் போட்டு விட்டு அதையும் பெருமையாக அவர் சொல்லக்கூடும். அதை எல்லாம் காணத் திராணியில்லை.


திருட்டு டிவிடி / டவுன்லோடில் படம் பார்ப்பது குறித்து என் நிலைப்பாடு எளிமையானதல்ல. கூடவே கூடாது என நான் சொல்லவில்லை. இந்தியச் சூழலில் அது சாத்தியமும் இல்லை என்றே நினைக்கிறேன்.

நான் எப்போதெல்லாம் ஒரு படத்தைப் பைரஸியில் பார்க்கிறேன்? 1) நான் பெங்களூரில் வசிக்கிறேன் என்பதால் வியாபார நம்பிக்கையற்ற சில தமிழ்ப் படங்கள் இங்கு வெளியாவதில்லை (அல்லது தாமதமாக வெளியாகும்). அப்படியான படங்களை டவுன்லோட் செய்து பார்த்திருக்கிறேன். 2) சில படங்களை அவை வெளியான போது நேரமின்மை அல்லது அறியாமையால் பாராது விடுத்திருப்பேன். சிலபல மாதங்கள் கழித்து அவற்றைப் பார்க்க விரும்பும் போது (குறிப்பாய் ஆண்டிறுதியில் என் திரைவரிசைப் பட்டியல் மற்றும் திரை விருதுப் பட்டியலுக்குத் தேவைப்படும் போது) அவை திரையரங்கில் ஓடாது. அப்படியான படங்களை டவுன்லோட் செய்து பார்த்திருக்கிறேன்.

அப்படிப் பார்ப்பதைத் திருட்டுத்தனம் என்று உணர்ந்தும் இருக்கிறேன். ஒருவேளை நியாயமான விலையில் அப்படங்களின் அதிகாரப்பூர்வ டிவிடியோ இணைய வடிவமோ கிடைத்தால் நிச்சயம் அவ்வழியையே தேர்ந்தெடுப்பேன். ஆக, வேறு வழியே இல்லை எனும் போது தான் கள்ளப்பிரதியை நாடுகிறேன். காசு செலவாகிறது என்ற காரணத்தால் சல்லிசாக குடும்பத்துடன் ஒரு படத்தை செலவில்லாமல் பார்த்து விடலாம் என்ற காரணத்திற்காக ஒருபோதும் நான் டவுன்லோட் செய்து படங்கள் பார்ப்பதில்லை. ஒருவேளை மல்டிப்ளெக்ஸ்களில் குடும்பத்துடன் போகும் போது மிக மிக அதிகக் காசு செலவாகிறது என்று தோன்றினால் சாதாரணத் திரையரங்குகளுக்கு குறைந்த விலை டிக்கெட்டில் குடும்பத்தை அழைத்துப் போகிறேன். அந்த ஒழுக்கத்தைக் குடும்பத்தினருக்கும் போதித்தே இருக்கிறேன்.

ஆனால் ஒருவேளை இதுவும் சொகுசாக இருக்கலாம் தான். இந்த வசதி எல்லோருக்கும் இராது என ஒப்புக் கொள்கிறேன். அதனால் தான் மேலே "கூடவே கூடாது" எனச் சொல்லவில்லை எனக் குறிப்பிட்டேன். ஒருவர் ஏழ்மையினால் தியேட்டருக்குப் போய்ப் பார்க்க முடியாத சூழலில் எப்போதேனும் டவுன்லோட் செய்தோ, திருட்டு டிவிடியிலோ பார்க்கலாம் தான். ஆனால் பார்க்கும் எல்லாப் படங்களையும் அப்படித் தான் பார்ப்பேன் என்று சொல்வது நியாயமே அல்ல. திருட்டுத்தனமாய்ப் பார்ப்பதற்குப் பிராயச்சித்தமாக தனக்குப் பிடித்த நடிகர் / இயக்குநர் படங்கள் எதையேனும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது தியேட்டரில் குடும்பத்துடன் போய்ப் பார்க்க வேண்டும் என்றே சொல்வேன்.

இன்னும் சில சூழல்களும் உண்டு. சுயசம்பாத்யம் இல்லாதவர்கள், வீட்டிலிருக்கும் பெண்கள் ஆகியோருக்கு வீட்டினரை மீறி திரையரங்கு போய்ப் பார்க்கும் சுதந்திரம் இல்லாமல் இருக்கலாம். அதுவும் நம் மண்ணுக்கே உரிய வினோதக் கேவலம் தான். அவர்களுக்கும் சலுகைகள் தரலாம் தான். ஆனால் மேலே சொன்ன பிராயச்சித்தம் அவர்களுக்கும் பொருந்தும்.

வரும் படங்கள் எல்லாம் மோசமாக இருப்பதாகச் சொல்வது ‍ஒருபோதும் இந்தத் திருட்டுத்தனத்தை நியாயப்படுத்தாது. மோசமான படங்களைத் தடுக்க ஒரே வழி அவற்றைப் பார்க்காமல் தோல்வியுறச் செய்வது தானே ஒழிய, திருட்டுத்தனமாய்ப் பார்ப்பது அல்ல. அப்படிப் பார்ப்பதை முதலில் திருட்டாக உணரும் நுண்ணுணர்வு ஒருவருக்கு வேண்டும். அந்த மனசாட்சி உறுத்தலுடன் தான் படம் பார்க்க வேண்டும். மாறாக டவுன்லோட் செய்து பார்ப்பதையே பெருமையாக ஏதோ சாதனை செய்து விட்டதைப் போல் பேசுவது எவ்வளவு பெரிய தடித்தனம்!

விஷால் எத்தனையோ கேவலமான படங்கள் நடித்திருக்கலாம். அதிகம் சம்பளம் வாங்குபவராய் இருக்கலாம். நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் செய்பவராய் இருக்கலாம். திமிராய்ப் பேசுபவராய் இருக்கலாம். அவற்றை எல்லாம் அந்தந்த பொருத்தமான இடங்களில் எதிர்ப்பது தானே முறை! அவர் கள்ளப்படங்களை எதிர்ப்பது நியாயமான விஷயம் தானே! அங்கே ஏன் அவரைத் தாக்குகிறோம்? அவரின் பொருட்டு ஒரு கலைப்படைப்பை ஏன் பழிவாங்குகிறோம்?

தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் போன்ற தளங்களின் அட்மின்களின் நோக்கம் (மோடிவ்) என்ன என்பதை நான் அறியேன். விரோதம், வியாபாரம் என என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் அதில் ஆராயவோ கருத்துரைக்கவோ ஒன்றும் இல்லை. அதை எதிர்க்கவோ கண்டிக்கவோ இல்லை என்றால் கூட பரவாயில்லை, ஹீரோயிஸமாகத் தூக்கி வைத்துக் கொண்டாடுவது அறமான செயலா? ஒரு குற்றத்தை நகைச்சுவையாக்குவது அதன் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை நீர்க்கச் செய்யும். என் மரியாதைக்குரியவர்கள் சிலர் கூட‌ இதைச் செய்வதைக் காண்கிறேன்.

அப்படி அவர்கள் செய்வதன் நீட்சியாய்த் தான் பைரஸியில் படம் பார்ப்பதும் அதைப் பற்றி மிக இயல்பாய்ப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதும் எந்தப் பிழையும் இல்லை என்றே பொதுப்புத்தியில் ஆழப் பதிந்து விட்டது. இன்னொருபுறம் அப்படி எழுதுவதன் மூலம் நீங்கள் திருடுவது மட்டுமின்றி மற்றவர்களையும் திருடத் தூண்டுகிறீர்கள், அதற்கு வழி சொல்கிறீர்கள்.

சினிமாவும் ஒரு தொழில் தான். அதில் தயாரிப்பாளர்கள் கொள்ளை அடிப்பதும் நடக்கிறது. தகுதிக்கு மீறி நடிகர்கள் சம்பளம் பெறுவதும் நடக்கிறது. தேவையின்றி அதிக பட்ஜெட்டில் படம் எடுப்பதும் நடக்கிறது. விநியோகஸ்தர்களுக்கு இதன் காரணமாக அதிக விலையில் விற்கப்பட்டு அது ப்ளாக் டிக்கெட் வடிவில் நம் தலையில் தான் விடுகிறது. இதில் ஒவ்வொன்றுமே எதிர்க்க வேண்டிய ஒன்று தான். ஆனால் சினிமா உலகம் என்பது இந்த கொழுத்த முதலைகள் மட்டுமன்று; அதை எல்லாம் தாண்டி அந்தத் துறையை நம்பி ஆயிரக்கணக்கான எளியோர் குடும்பங்களும் இருக்கின்றன என்பதை நினைவில் வையுங்கள். குறிப்பிட்ட தொகைக்கு மேல் டிக்கெட் வைத்தால் அதை மறுதலித்து படம் பார்க்காமல் தவிர்க்கலாம். இப்படி எல்லோரும் செய்யும் போது அவர்களே புரிந்து கொண்டு டிக்கெட் விலை குறைக்க வேண்டி வரும். அது கடைசியில் நடிகர்களின் சம்பளத்தில் கை வைப்பதில் முடியும். அப்படித்தான் நம் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டுமே ஒழிய திருட்டுத்தனம் செய்தல்ல. ஒரு டீக்கடையில் டீ நன்றாக இல்லை என்றால் அடுத்த முறை குடிக்காமல் தவிர்ப்போம் மாறாய் அங்கிருந்து டீயைத் திருடிக் குடிப்போமா? நான் தவிர்க்கவியலாத சூழல்களில் பார்க்கலாம் என்று சொல்வது கூட அந்தக் கடையில் யாசகம் செய்து டீ குடிப்பது போன்றது தான். எப்போதுமா பிச்சையெடுப்பது!

எந்த அவசியமும் இன்றி நீங்கள் தொடர்ந்து தரவிருக்கிப் பார்ப்பதன் மூலம் மெல்ல மெல்ல சினிமாவைக் கொல்கிறீர்கள். பத்து ஆண்டுகளில் சினிமாவே இதனால் இல்லாமல் போகலாம். பிறகு எதைத் தரவிறக்கிப் பார்ப்பீர்கள்!

*
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2017 05:50
No comments have been added yet.


C. Saravanakarthikeyan's Blog

C. Saravanakarthikeyan
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow C. Saravanakarthikeyan's blog with rss.