பெரியாரும் பிஏ கிருஷ்ணனும்
ஒரு படைப்பிலக்கியவாதியாகவும் (புலிநகக்கொன்றை & கலங்கிய நதி) ஒரு வரலாற்றெழுத்தாளராகவும் (தமிழின் ராமச்சந்திர குஹா என்றே அவரை மதிப்பிடுகிறேன்) என் பெருமரியாதைக்குரியவர் பிஏ கிருஷ்ணன். உயிர்மையில் அரசியல் சாசனத்தை முன்வைத்து நான் எழுதி வரும் தொடர்கட்டுரைகளுக்கு அவர் எழுத்துக்கள் முக்கியத் தூண்டுதல். அவ்வகையில் அவர் என் முன்னோடி. எப்படி ஜெயமோகனுடன் பல கருத்துக்களில் முரண்பட்டு இருந்தாலும் அவரை குரு ஸ்தானத்தில் வைத்திருக்கிறேனோ ஓர் எல்லை வரை பிஏ கிருஷ்ணனும் அப்படித்தான். ஆனால் பெரியார் விஷயத்தில் மட்டும் அவர் தன் சமநிலை துறந்து (அல்லது இழந்து) தொடர்ந்தும், ஆழமாகவும் (அதுவும் குறிப்பாய்ச் சமீப காலங்களில்) வெறுப்பையே வெவ்வேறு விதமாக, பல்வேறு விஷயங்களைச் சாக்கிட்டு எழுதி வருகிறார் என்பது சங்கடத்துக்குரியதே.

பிஏ கிருஷ்ணனின் த வயர் கட்டுரையை (Why Do Dravidian Intellectuals Admire a Man as Prickly as Periyar?) அது வெளியான போதே வாசித்து விட்டேன் என்றாலும் உடனடியாய் எதிர்வினையாற்ற இயலவில்லை. நெடுங்காலமாகவே இதில் அவர் பற்றி எனக்கிருக்கும் கருத்தை இத்தருணத்தில் பதிவு செய்து விடுதல் அவசியம் என்றே கருதுகிறேன்.
அதற்கு முன் என் அரசியல் நிலைப்பாட்டைச் சொல்லி விடுதல் இதைப் பெரியாரிய ஆதரவாக மட்டும் (அவர்) சுருக்கிப் புரிந்து கொள்ளாமல் தவிர்க்க உதவும். அரசியலில் என் ஆசான்களாக ஐந்து பேரைக் கருதுகிறேன்: காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார் மற்றும் மார்க்ஸ். எந்த அரசியல் பிரச்சனையிலும் என் நிலைப்பாடுகளைப் பெரும்பாலும் இவர்களின் சித்தாந்தங்களை ஒட்டியே அமைத்துக் கொள்கிறேன். என் கருத்துக்களுக்கு பிஏ கிருஷ்ணன் பொதுவாய் எதிர்வினை செய்வதில்லை. சிறுவன் அல்லது சிறியன் என்று கருதிக் கடந்திருக்கலாம். அது ஒருவகையில் நியாயமானதும் கூட. ஆனால் அதைஅதைத் தாண்டி அவசியம் எனத் தோன்றும் இடங்களில் அவருக்கு எதிர்வினையாற்றியே வருகிறேன்.
பிஏ கிருஷ்ணன் இதற்கு முன்பு எழுதாத எதையும் புதிதாய் இதில் எழுதி விடவில்லை. தொடர்ந்து அவர் தன் ஃபேஸ்புக் பதிவுகளிலும், சில கட்டுரைகளிலும், உரைகளிலும் சொன்ன விஷயங்களையே வேறு புதிய மேற்கோள்களுடன் ஆங்கிலத்தில் அழுத்தி இருக்கிறார். அவ்வளவு தான். பெரியாரை ஹிட்லருடன் ஒப்பிடுவதும் இங்கே புதிய விஷயம் அல்ல; தமிழக பிராமணர்களை ஜெர்மானிய யூதர்களுடன் ஒப்பிட்ட அசோகமித்திரன் பாணிப் பார்வையின் இன்னொரு கண்ணி தான் இது. ஆனாலும் "Periyar was a street-fighter, and the things he said in anger are largely unprintable" போன்ற வரிகளைப் படிக்கும் போது கோபம் முளைக்கத்தான் செய்கிறது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அப்படியான வரிகளின் நோக்கமே இப்படிக் கோபத்தைக் கிளர்த்துவது தான் எனும் போது அதற்கு ஏன் பலியாக வேண்டும்?
பிஏ கிருஷ்ணன் சுயசாதிப்பற்றில் பெரியார் வெறுப்பைச் செய்வதாக நான் கருதவில்லை. அவர் தான் பிறந்த சாதியை / சாதியினரை / சாதியத்தை தேவையான இடங்களில் விமர்சிக்கும் நேர்மை கொண்டவர் என்றே நம்புகிறேன்.எப்படி நம்புகிறேன் என்பதை அவரது எழுத்துக்களிலிருந்து ஆதார மேற்கோள்கள் காட்டுவதை விட அவரது ஒட்டுமொத்த செயல்பாடுகளிலிருந்து கிட்டும் பிம்பத்திலிருந்து கிரகித்துக் கொண்டது என்றே சொல்வேன்.
ஆனால் பெரியார் பார்ப்பனர்களை முன்வைத்துப் பேசிய, எழுதிய பலவற்றினாலும் அவர் ஆழமாகப் புண்பட்டிருக்கிறார் எனத் தெரிகிறது. அது அவரையோ அவர் மதிக்கும் அவர் சாதியினரையோ குறிப்பதாக அவர் எடுத்துக் கொள்கிறார். அதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. (காரணம் அவரும் அந்த சிலரும் அப்படியானவர்களாய் அல்லாமல் இருக்கலாம்.) புண்ணைத் திரும்பத் திரும்பக் குத்திக் கொள்வதைப் போல மறுபடி மறுபடி பெரியாரை வாசித்து தன் மனக்காயம் ஆறாமல் பார்த்துக் கொள்கிறார். அது ஒரு விதமான சுயவதை எனும் போதை தான்.
ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இரண்யனுக்கு பெருமாள் போல் பிஏ கிருஷ்ணனுக்குப் பெரியார். எந்தப் பெரியாரிஸ்டை விடவும் அதிகமாய் பெரியாரைப் பற்றியே சதாசர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் பிஏ கிருஷ்ணன்!
சுமார் ஐந்தாண்டுகள் முன் சென்னையில் 'சங்கம் 4' விழாவில் பெரியார் பற்றிய ஓர் உரையில் பிஏ கிருஷ்ணன் இவ்வாறு குறிப்பிட்டார்: "நான் பேசப்போவது பிராமணர்கள் பார்வையில் எனக்குத் தெரிந்த பெரியார். நான் படித்த அளவில் பிராமணர்களால் பார்க்கப்பட்ட பெரியார். நானும் பிராமணன் என மற்றவர்களால் அடையாளம் காணப்படுவதால் என் பார்வையில் பெரியார்." அன்றைய உரையில் மட்டுமல்ல; எப்போதுமே பெரியார் பற்றி இந்தப் பார்வையில் தான் எழுதிக் கொண்டிருக்கிறார். மறுபடியும் இங்கே அழுத்தம் தர விரும்புகிறேன்: அவர் சாதிய உணர்வில் இதைச் செய்யவில்லை. அவர் மனதில் பெரியார் பற்றி அவரது சுற்றத்தால் ஏற்றப்பட்ட ஒரு பிம்பத்துடன் தான் இன்று வரை போராடி வருகிறார்.
"ஒரு விஷயம் உங்களைக் குறிப்பதாகத் தோன்றினால் அது உங்களுக்குமானது தான்" என்று நண்பன் செந்தில்நாதன் சொல்லி இருக்கிறான். பெரியார் பார்ப்பனர் என்று சொல்லித் திட்டுவது ஒருவருக்குக் கோபம் தந்தால் அவ்வசை அவருக்குமானது தான். அப்படிச் சுயமாக வந்து வாங்கிக் கொண்டால் பெரியார் என்ன செய்வார் பாவம்!
பசு.கவுதமனின் பெரியார் தொகுப்பு பற்றிய அறிவிப்பு வந்த போது நிச்சயம் பிஏ கிருஷ்ணன் அதை வாங்கிப் படிப்பார் என உடனடியாய்த் தோன்றியது. அது தவறவில்லை. நான் ஏற்கனவே பல முறை ஃபேஸ்புக்கில் சொன்னதைப் போல் பெரும்பாலான பெரியாரிஸ்ட்களை விடவும் கிருஷ்ணன் பெரியாரை அதிகம் வாசித்திருப்பார். அது அவரது இயல்பு. எதையும் வாசித்தறிந்து கொண்டு பேசும் பண்பு. ஆனால் பெரியார் விஷயத்தில் அதுவே அவரது சிக்கலாகவும் மாறி விடுகிறது என்பது தான் துரதிர்ஷ்டமானது. இனிமேல் பெரியாரை அவரால் ஆக்கப்பூர்வமாக அணுகவே முடியாது என்று தோன்றுகிறது. இன்னும் நூறு கட்டுரைகள், ஆயிரம் மேற்கோள்கள் மூலம் பெரியாரை ஹிட்லர், செங்கிஸ்கான் என்று தான் நிறுவிக் கொண்டே இருப்பார். அதை ஏற்காத எவரையும் அவர் மூடர் என்றே முத்திரை குத்துவார்.
அவர் மேலும் மேலும் பெரியாரை வாசித்து விஷத்தைக் கக்கிக் கொண்டிருப்பதால் பயனே இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. எனக்கு ஜெயலலிதாவைப் பிடிக்காது. ஆனால் அவர் எவ்வளவு மோசமானவர் எனக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். சதா அவர் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்க மாட்டேன். அவரைப் போய் இத்தனை பேர் நம்பிக் கொண்டாடுகிறார்களே என வயிரெறிய மாட்டேன். மாறாய், அப்படியானவர்களை எல்லாம் மதிக்காமல் கடந்து போவேன். அத்தோடு என் எதிர்வினை முடிந்தது. ஏனெனில் இரக்கமற்ற காலம் பிடிக்காத விஷயத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் சொகுசை எவருக்கும் வழங்கவில்லை என நம்புகிறேன். ஆனால் அது என் வழி. என் போலவே எல்லோரும் இருக்க வேண்டும் என்று சொல்வதும் சரியல்ல. அவரவர்க்கு எது விருப்பமோ அதைச் செய்யட்டும்.
பிஏ கிருஷ்ணனை நான் ஒரே முறை சந்தித்திருக்கிறேன். சுமார் பத்தாண்டுகள் முன் சென்னைப் புத்தகக் காட்சியில்.
அதை முழுக்கச் சந்திப்பு என்று சொல்லி விட முடியாது. காலச்சுவடு அரங்கில் நூல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 'அக்ரஹாரத்தில் பெரியார்' என்ற அவரது நூல் வெளியாகியிருந்த சமயம். (அந்தத் தலைப்பையே எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை மோசமான வன்மம் பெரியார் மீது! 'அக்ரஹாரத்தில் கழுதை' என்ற திரைப்படம் புகழ்பெற்றது - குறைந்தது சிறுபத்திரிக்கை வட்டாரத்தில். அப்படி இருக்க, வேண்டுமென்றே கழுதையை நீக்கி விட்டு பெரியாரைப் போடுகிறார். கேட்டால் பிராமணர்களால் பெரியார் எப்படி எதிர்கொள்ளப்பட்டார் என்ற பொருளிலான கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பு தானே எனச் சாக்குப்போக்கு சொல்லலாம் தான். ஆனால் பெரியார் மீதான வெறுப்பின் வெளிப்பாடு தான் அது.) அரங்கில் அவர் நின்று கொண்டிருந்தார். பொதுவாக எழுத்தாளர்களுடன் பேசுவதற்குக் கூச்சப்படுபவன் நான் - இப்போது வரையிலும் அப்படித்தான். அதனால் அன்று அவருடனும் பேச எத்தனிக்கவில்லை. அப்போது அவரது 'புலிநகக்கொன்றை' நாவலைப் படித்திருந்தேன். அதனால் அவரது ரசிகன். காலச்சுவடில் அவரது கட்டுரைகள் சிலவற்றை வாசித்திருந்தேன். அக்கட்டுரைத் தொகுதியில் நான் வாசித்திராத கட்டுரைகள் கணிசமாய் இருந்தால் அதை வாங்கலாம் என்பது என் எண்ணம்.
அதனால் அந்நூலை எடுத்துப் புரட்டினேன். ஓரிரு நிமிடங்களில் என் அருகே வந்த பிஏ கிருஷ்ணன் "இது பெரியார் பத்தின புத்தகம் இல்ல" என்றார். அது தேடுபவனுக்கு உதவ முனையும் நட்பார்ந்த குரல் அல்ல; அவரது தொனியில் நிச்சயமாய் எள்ளல் இருந்தது. பெரியார் என்ற பெயர் இருந்ததால் அவரைப் போற்றிப் புகழ் பாடும் நூலாக இருக்கும் என்ற முரட்டு ஆர்வத்தில் அதை எடுத்துப் பார்ப்பதாக என் தோற்றத்தைக் கொண்டு அவர் கருதியிருக்க வேண்டும். அவரது நாவலை வாசித்து விட்டு அவர் மீதான பிரேமையால் அவரது அடுத்த நூலை வாங்கும் உத்தேசத்தில் இருப்பவன் என்று கணித்திருக்க வாய்ப்பு குறைவு. அது ஒரு வாசகனாக என்னைக் காயப்படுத்தியது. ஆனால் வரவழைத்துக் கொண்ட ஒரு புன்னகையுடன் அந்த நூலை அப்படியே வைத்து விட்டு நகர்ந்தேன். பிற்பாடு கடந்த பத்தாண்டுகளில் பலமுறை அந்த நூல் என் கண்களில் பட்டும் அந்த அனுபவம் தந்த சங்கடத்தால் அதை வாங்கும் ஆர்வத்தைத் தவிர்த்து விடுவேன்.
மிகச் சுலபமாய் இதை அவரது பார்ப்பனிய குணம் எனப் பொதுமைப்படுத்தி விட முடியும் தான். ஆனால் நான் அப்படிக் கருதவில்லை. அது அவரது முன்முடிவுகளுடன் அணுகும் தனிப்பட்ட ஆளுமைக் குறைபாடு தான். அந்த ஆதார குணத்தின் சமீப நீட்சியாய்த் தான் தான் பெருத்த வாசிப்புப் பின்புலம் கொண்ட பூகொ சரவணன், சரவண குமார் பெருமாள், பூவண்ணன் கணபதி போன்றவர்களைக் கூட உடனடியாய் பெரியாரிய முழுமூடர்கள் என்ற பட்டியலில் இணைத்து விட முடிகிறது.
நான் இதை பிஏ கிருஷ்ணனின் கட்டுரைக்குப் பதில் சொல்லும் முகமாக எழுதவில்லை. அதற்குரிய ஆழமான வாசிப்பும் போதுமான அவகாசமும் எனக்கில்லை. அவர் ஏன் அக்கட்டுரையை, அது போன்ற இன்ன பிற பத்திகளை எழுதுகிறார் என்று மட்டுமே ஆராய முற்பட்டிருக்கிறேன். இதுவரை வந்தவற்றில் பூகொ சரவணனின் எதிர்வினை மட்டுமே ஓரளவு பொருட்படுத்தத்தக்கது. ஆனால் அது உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினை. கிருஷ்ணன் கட்டுரையின் கருத்துக்களை வரிவரியாய் தர்க்கப்பூர்வமாய் நிராகரிக்கும் நிதானம் அதில் இல்லை. அதைப் பெரியாரியத் தரப்பின் போதாமையாகவே பார்க்கிறேன். ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டால், அது அவதூறாகவே இருப்பினும், அதைத் தர்க்கப்பூர்வமாக உடைத்தெறிவது தான் சரியான எதிர்கொள்ளல் முறை. எதிராளியின் மற்ற பலவீனங்களைப் பேசிக் கொண்டிருப்பது சரியல்ல. முன்பு இந்துத்துவ அம்பேத்கர் நூல் வந்த போதும் இதையே தான் சொன்னேன். அதன் ஆசிரியரை, இந்துத்துவர்களை வசை பாடுவதை விட அந்நூலை ஆதாரப்பூர்வமாக எதிர்த்து எழுத வேண்டும். அது மட்டுமே நிற்கும்.
உதாரணமாய், பெரியார் ஏன் ஹிட்லர் அல்ல என விளக்க வேண்டும்; பெரியார் பார்ப்பனிய எதிர்ப்பையே மேற்கொண்டார் என நிறுவ வேண்டும். பெரியாரின் பங்களிப்பு என்ன, இன்று அவரது இடம் என்ன என்பதைப் பட்டியலிட வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமாய் பெரியாரும் சில இடங்களில் சறுக்கி இருக்க வாய்ப்புண்டு என்பதை உணரும், அதை ஒப்புக் கொள்ளும் புரிந்துணர்வு வேண்டும். அதன் வழி பெரியாரில் எதை மட்டுமே நாம் எடுத்துக் கொள்கிறோம், எதை மறுதலித்துக் கடக்கிறோம் என்ற தெளிவு வேண்டும். அப்போது தான் ஒருவர் "பெரியார் இப்படிச் சொல்லி இருக்கிறாரே?" எனக் கொக்கி போடும் போது, "எல்லாம் எங்களுக்கும் தெரியும், நீ மூடு!" என்று நம்பிக்கையாகப் பேச முடியும்.
மேலே நான் சொன்ன ஐந்து ஆசான்களுமே என் வரையில் புனித பிம்பங்கள் அல்ல. அவர்களின் பல கருத்துக்களோடு நான் முரண்படுகிறேன். அது அப்படி இருப்பது தான் இயல்பு. ஒருவரே எல்லாவற்றையும் சரியாகச் சிந்தித்து இருந்தால் அவரே நமக்கு முழுமையான ஆசானாகி இருக்க முடியாதா! எதற்கு ஐந்து பேர்? ஆக, ஒருவர் பெரியாரியர் என்பதால் பெரியாரின் அத்தனை கருத்துக்களுக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. (அவரே அதைத் தான் பகுத்தறிவு என்கிறார்.) ஒருவர் நேருவியன் என்பதால் நேருவின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் ஜால்ரா போட வேண்டும் என்ற அவசியமில்லை. தேவையானதை மட்டும் தேவையான இடங்களில் மட்டும் பொருத்திக் கொள்ளலாம்.
இனியும் பிஏ கிருஷ்ணனின் நல்ல வாசகனாகத் தொடர்வதில் எனக்கு எந்த மனத்தடையும் இல்லை. அவரது எழுத்தில் எனக்கு உவப்பான விஷயங்கள் கணிசம். அவற்றை ஆரத் தழுவிக் கொள்வேன். ஆனால் பெரியார் பற்றிய அவரது எழுத்துக்களை வாசித்து என்னை நானே துன்புறுத்திக் கொள்ள மாட்டேன். அவற்றைப் பொருட்படுத்தவோ எதிர்வினையாற்றவோ ஏதுமில்லை. அது தான் கிருஷ்ணனுக்குமே நான் செய்யும் நன்மையாக இருக்கும்.
சுஜாதாவின் சலவைக் கணக்கைக் குமுதம் இதழ் வெளியிட்டது. ஆனால் அதை வைத்து அவரது எழுத்தாளுமையை அளவிட மாட்டோம் அல்லவா! சுஜாதாவுக்குச் சலவைக் கணக்கு; பிஏ கிருஷ்ணனுக்கு பெரியார். அவ்வளவு தான்.
*
Published on September 23, 2017 14:01
No comments have been added yet.
C. Saravanakarthikeyan's Blog
- C. Saravanakarthikeyan's profile
- 9 followers
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
