இரா. முருகன்'s Blog, page 33
April 27, 2023
தினை அல்லது சஞ்சீவனி நாவல் – ஆங்கில மொழிபெயர்ப்பு
’அரசூர் வம்சம்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான The Ghosts of Arasoor இன்று மறுபதிப்பு கண்டுள்ளது.
Zero Degree Publishing ஆங்கில imprint வெளியீடு இது.
’தினை அல்லது சஞ்சீவனி’ அடுத்து ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்படும்.
தலைப்பு Horse Tail ஆக அநேகமாக இருக்கும்.
   
April 26, 2023
சுடுமண் குவளையில் பழச்சாறும் இஞ்சிச்சாறும் மாந்துக- நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் இருந்து
குயிலி கவனித்தாள் –
‘இந்த ஊரில் சந்தித்த ஐந்து நிமிடத்தில் பகடி சொல்லிப் பழக எப்படி இத்தனை பேர் முற்படுகின்றார்கள் தெரியவில்லை. அல்லது கோகர் மலைபோல் முழுக்கக் கட்டிச் சமைத்த உயிரும் உடலும் ஊடாடும் புனைவு வெளியோ.” குயிலி வானம்பாடியைப் பார்த்தாள்.
“வெள்ளை உள்ளம் எல்லோருக்கும் பொதுச் சொத்தாக இருக்கும்” என்று அவள் மனதிலிருந்து குயிலியின் மனத்தோடு பேசிச் சொன்னாள் வானம்பாடி,
“யார் வேண்டும் சிறுமியரே உமக்கு”
 கிழவியம்மாள் கேட்க, நீங்கள் தான் என்றாள் குயிலி.
“ஆமாம், பசி வயிற்றைக் கிள்ளிப் பாடாகப் படுத்துகிறது” என்று எதுவும் செயற்கை இல்லாமல் பேசி அவள் தோழி ஆமோதித்தாள். 
”மாம்பழச் சாறும், இஞ்சியும் சீனியும் பெய்த நீரில் தேன் கலக்கிய களைப்பு மாற்றும் பானமும் பருகுவீர் முதலில்” என்று அன்போடு அழைத்தாள் முதுபெண். காலலம்பி வீடு புக்கார் இரு கன்னியரும்.
சுடுமண் வெண்குவளை இரண்டில் பழச்சாறும் இன்னுமிரு சிறு கோப்பைகளில் இஞ்சிச் சாறுமாகக் கொடுத்து உபசரித்தாள் கிழவி.
“புட்டு வெந்து கொண்டிருக்கிறது சிறுமியரே பின்கட்டில் கிணற்று நீராடி வந்து பசியாறுங்கள்” என்றாள் அவள்.
அங்ஙனமே பெண்ணிருவரும் நீராடக் கிணற்றடி போக, குளியலறை உண்டா என வானம்பாடி கிழவியம்மாளை வினவினாள்.
“இல்லாமல் என்ன, கிணற்றங்கறையிலிருந்து நீரேற்றும் மண்குழாய் மூலம், குளியலறைக்கு நீர் செலுத்தப்படுகிறது. கொஞ்சம் அதிகம் குளிர்ந்த நீர் என்பதால் கிணற்று நீரின் வெதுவெதுப்பு கருதிச் சொன்னேன் என்றாள் கிழவி.
கிணற்றைச் சுற்றி அண்டை அயலில் ஓங்கி உயர்ந்த மாடங்களில் இருந்து பார்த்தால் இங்கே நீராடும் அழகு எல்லாம் தெரியக் காட்டவேண்டி வரும் எனக் குயிலி நினைத்தது தான் குளியலறை தேடிய அவசியம்.
“நான் முதலில் நீராடி வருகிறேன் நீ கொல்லையில் தோட்டம் கண்டு வா” என்று வானம்பாடியை அனுப்பிக் குளியலறைக் கதவைச் சாத்தி உடை களைந்தாள் குயிலி.
நக்னையாக ரதிதேவி போல் வனப்பான உடல் பூரித்து நிமிர்ந்திருக்க தண்ணீரைக் கடைகாலில் சேந்தியபோது ஓஒ என்று அலறினாள் அவள். வானம்பாடி உடனே ஓடிக் கதவைத் தட்டித் தள்ள அந்தரங்கம் மறைத்தபடி குயிலி மேல் மறைக்க முடியாமல் நின்று கூரையை நோக்கி மறுபடி அலறினாள்.
தரையில் விழுந்தது ஒரு சிறு தேளாகும். குயிலி வானம்பாடியைப் பயத்தோடு இறுக்கித் தழுவிட, இருவரும் ஒரு நிமிடம் வேறேதோ வெளியில் இருந்தார்கள்.
வானம்பாடி நிலை தெரிந்து மற்றவளிடம் ”தேள் இது கொட்டும் நம் நூற்றாண்டியவர் இல்லை அற்பத் தேள் மூன்றாம் நூற்றாண்டினது” என்றபடி செருப்பணிந்த காலால் அத்தேளை அரைத்துக் கூழாக்கினாள். அப்போது அவள் முகத்தில் அலாதியான நிறைவு நிலவியதைக் குயிலியும் கிழவியம்மாளும் காணத் தவறவில்லை.
அடுத்து இரு பெண்களும் கிணற்றடிக்குப் போக, கிழவியம்மாள் நீரிறைத்து ஊற்ற இருவரும் நீராடிப் புத்தோராயினர். கொண்டு வந்த நல்லுடுப்பு அணிந்து தேவதைகள் போல் அமர்ந்து புட்டு உண்டனர் அவர்கள். கூடவே இட்டவியும் உண்டார்கள்.
இது புதிது, வழிப்போக்கர் யாரோ இட்டவி உண்டாக்கி உண்ண வழி சொன்னார். பெயரை மட்டும் இட்ட எலி என்று எலி, பெருச்சாளி வாடை குமட்டுவதாகச் சொன்னதை இட்டு அவி என மாற்றிக் கொண்டோம் என்று விளக்கிய கிழவியம்மாளின் நாற்பத்தேழு நூற்றாண்டுப் பழமை சட்டென்று உணர்வானது.
புதியதாகக் காலப் பயணம் செய்து வந்துபோன யாரோ இட்டலி அறிமுகப்படுத்திப் போயிருக்கிறார்கள். மகாத் தவறு. மூன்றாம் நூற்றாண்டில் பதினாறாம் நூற்றாண்டு உணவை, உடையை அறிமுகப் படுத்தி காலக்கோட்டில் அங்கங்கே சிதைவு உண்டாக்குவது நயத்தகு நாகரிகமற்ற செயல். குயிலி வானம்பாடியோடு மனதில் பேசினாள்.
“நாம் வந்திருக்கிறது நாகரிகமிக்க செயலா”?
சட்டென்று வானம்பாடியை அருகிலிருந்து பார்த்தாள் குயிலி. அவள் புன்சிரிப்போடு தலையசைத்து உணவு கொள்வதைத் தொடர்ந்தாள்.
   
April 23, 2023
பெருநாவல் மிளகு – சிறு பகுதி
முழு அத்தியாயம் படிக்க இங்கே சொடுக்கவும்
மிளகு பெருநாவலில் இருந்து –
——————————————
”இல்லே நான் அப்படி எல்லாம் கர்ப்பம் தாங்கலே. உங்க தொடுப்பு வெள்ளைக்காரியைக் கேட்டுப் பார்த்தேளோ?”
ஒரு பத்து நிமிஷம் கனமான மௌனம் நிலவும் அங்கே.
”இல்லே, இது அதுக்கெல்லாம் ரொம்ப முன்னாடி.”
“அப்போ தில்ஷித் கவுரை ஃபோன் பண்ணி வரச் சொல்லுங்கோ. கேட்டுண்டு மஞ்சள் குங்குமம் பிளவுஸ் பீஸ் கொடுத்து அனுப்பலாம்”.
வசந்தி சகஜமான மனநிலைக்கு வந்திருப்பாள்.
“அவள் அப்புறம் முழுசா பத்து வருஷம் கழிச்சுத்தான் ஹோம் மினிஸ்ட்ரியிலே இருந்து டைப்பிஸ்டா ட்ரான்ஸ்பர்லே வந்தா”.
“சரி அப்போ ஏதாவது நடந்திருக்கும்”.
“சே அதெல்லாம் இல்லே. ரிகார்ட் ரூம்லே பழைய ஃபைல் தேடறபோது ஒரு தடவை கரண்ட் போய் இருட்டாச்சா? என்னைக் கட்டிப் பிடிச்சு பச்சுபச்சுன்னு முத்தம் கொடுத்தா”.
கொஞ்ச நேரம் பேசாமல் யோசித்துக் கொண்டிருப்பார் சங்கரன். திரும்பப் பேச ஆரம்பிப்பார்.
”அப்படித்தானா, இல்லே நான் தான் அவளுக்கு கொடுத்தேனா?”
“யார் யாருக்கு கொடுத்தேளோ, போன வருஷம் அவ ரிடையர் ஆனபோது திராட்சைப் பழம் வாங்கிண்டு வந்து கொடுத்து சாதாரணமா பார்த்து பேசிட்டு போனா. நீங்க தான் அலைஞ்சீங்க போல இருக்கு”. 
“அப்படி இருக்க, அவளுக்கு எப்படி கர்ப்பதானம் பண்ணியிருக்க முடியும்?”
“அதான் வெள்ளைக்காரியைக் கேளுங்கோன்னு சொல்றேன்”.
“சொல்லிண்டே இருக்கேனே தெரிசா பழக்கமானது 1970லே. நான் கேக்கறது அதுக்கு பத்து வருஷம் முந்தி 1960லே. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலம்பர தான் பாத்ரூம்லே வென்னீர் வேம்பா பக்கத்துலே நின்னுண்டு கலைஞ்சு போச்சுன்னு அழுதே. ஞாபகம் இருக்கா. நீ சட்டுனு சொல்வேன்னு நினச்சேன்”.
”ஆமா, என்னிக்கு க்ரீடை பண்ணினது, என்னிக்கு சூல் பிடிச்சது, என்னிக்கு கலைஞ்சதுன்னு ஹோ அண்ட் கோ டயரி போட்டு குறிச்சு வச்சுக்கணுமா என்ன? திருக்கல்யாண வைபோக விவரண டயரி. அரசூர் சங்கரய்யர் தர்மபத்னி வசந்தாளோடு ரமித்த விவரங்கள் ஈண்டுக் காணலாம்னு முதல் பக்கத்துலே எழுதி வச்சு”.
சங்கரன் தூங்கியிருந்தார். வசந்தியும் அடுத்த பத்து நிமிஷத்தில் நெருங்கி அடித்துக்கொண்டு அதே கட்டிலில் கிடந்தாள்.
April 21, 2023
நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யும் உலகப் புத்தக தினமும்
நாளை, ஏப்ரல் 23 2023 உலகப் புத்தக தினம். வாசிப்பில் ஈடுபாட்டை மீண்டெடுக்க நல்ல நூல்களை எழுதியும், வெளியிட்டும், படித்தும், புத்தகங்கள் பற்றிப் பேசியும், கேட்டும், வாசக அனுபவத்தைத் தனித்திருந்து நுகர்ந்தும், கூடியிருந்து குழாத்தில் பகிர்ந்தும் புத்தக தினம் சிறக்கட்டும்.
புத்தக தின வெளியீடாக என் அடுத்த நாவல் ’தினை அல்லது சஞ்சீவனி’ வெளிவர உத்தேசித்தது, நேர்த்தியான கெட்டி அட்டையோடு தமிழில் முக்கியமான புத்தகங்களில் ஒன்றாக வெளியிட முடிவு செய்ததால் அதற்கான நேரம் எடுக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் புத்தகம் நம் கைகளில் இருக்கும்.
உலகப் புத்தக தின வாழ்த்துகள்
   
April 18, 2023
வர இருக்கும் நாவல் – தினை அல்லது சஞ்சீவனியில் பொது யுகம் மூன்றாம் நூற்றாண்டு விருந்தோம்பல்
   
தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து
யார் வேண்டும் சிறுமியரே உமக்கு”
 கிழவியம்மாள் கேட்க, நீங்கள் தான் என்றாள் குயிலி.
“ஆமாம், பசி வயிற்றைக் கிள்ளிப் பாடாகப் படுத்துகிறது” என்று எதுவும் செயற்கை இல்லாமல் பேசி அவள் தோழி ஆமோதித்தாள். 
”மாம்பழச் சாறும், இஞ்சியும் சீனியும் பெய்த நீரில் தேன் கலக்கிய களைப்பு மாற்றும் பானமும் பருகுவீர் முதலில்” என்று அன்போடு அழைத்தாள் முதுபெண். காலலம்பி வீடு புக்கார் இரு கன்னியரும்.
சுடுமண் வெண்குவளை இரண்டில் பழச்சாறும் இன்னுமிரு சிறு கோப்பைகளில் இஞ்சிச் சாறுமாகக் கொடுத்து உபசரித்தாள் கிழவி.
“புட்டு வெந்து கொண்டிருக்கிறது சிறுமியரே பின்கட்டில் கிணற்று நீராடி வந்து பசியாறுங்கள்” என்றாள் அவள்.
அங்ஙனமே பெண்ணிருவரும் நீராடக் கிணற்றடி போக, குளியலறை உண்டா என வானம்பாடி கிழவியம்மாளை வினவினாள்.
“இல்லாமல் என்ன, கிணற்றங்கறையிலிருந்து நீரேற்றும் மண்குழாய் மூலம், குளியலறைக்கு நீர் செலுத்தப்படுகிறது. கொஞ்சம் அதிகம் குளிர்ந்த நீர் என்பதால் கிணற்று நீரின் வெதுவெதுப்பு கருதிச் சொன்னேன் என்றாள் கிழவி.
கிணற்றைச் சுற்றி அண்டை அயலில் ஓங்கி உயர்ந்த மாடங்களில் இருந்து பார்த்தால் இங்கே நீராடும் அழகு எல்லாம் தெரியக் காட்டவேண்டி வரும் எனக் குயிலி நினைத்தது தான் குளியலறை தேடிய அவசியம்.
“நான் முதலில் நீராடி வருகிறேன் நீ கொல்லையில் தோட்டம் கண்டு வா” என்று வானம்பாடியை அனுப்பிக் குளியலறைக் கதவைச் சாத்தி உடை களைந்தாள் குயிலி.
நக்னையாக ரதிதேவி போல் வனப்பான உடல் பூரித்து நிமிர்ந்திருக்க தண்ணீரைக் கடைகாலில் சேந்தியபோது ஓஒ என்று அலறினாள் அவள். வானம்பாடி உடனே ஓடிக் கதவைத் தட்டித் தள்ள அந்தரங்கம் மறைத்தபடி குயிலி மேல் மறைக்க முடியாமல் நின்று கூரையை நோக்கி மறுபடி அலறினாள்.
தரையில் விழுந்தது ஒரு சிறு தேளாகும். குயிலி வானம்பாடியைப் பயத்தோடு இறுக்கித் தழுவிட, இருவரும் ஒரு நிமிடம் வேறேதோ வெளியில் இருந்தார்கள்.
வானம்பாடி நிலை தெரிந்து மற்றவளிடம் ”தேள் இது கொட்டும் நம் நூற்றாண்டியவர் இல்லை அற்பத் தேள் மூன்றாம் நூற்றாண்டினது” என்றபடி செருப்பணிந்த காலால் அத்தேளை அரைத்துக் கூழாக்கினாள். அப்போது அவள் முகத்தில் அலாதியான நிறைவு நிலவியதைக் குயிலியும் கிழவியம்மாளும் காணத் தவறவில்லை.
அடுத்து இரு பெண்களும் கிணற்றடிக்குப் போக, கிழவியம்மாள் நீரிறைத்து ஊற்ற இருவரும் நீராடிப் புத்தோராயினர். கொண்டு வந்த நல்லுடுப்பு அணிந்து தேவதைகள் போல் அமர்ந்து புட்டு உண்டனர் அவர்கள். கூடவே இட்டவியும் உண்டார்கள்.
இது புதிது, வழிப்போக்கர் யாரோ இட்டவி உண்டாக்கி உண்ண வழி சொன்னார். பெயரை மட்டும் இட்ட எலி என்று எலி, பெருச்சாளி வாடை குமட்டுவதாகச் சொன்னதை இட்டு அவி என மாற்றிக் கொண்டோம் என்று விளக்கிய கிழவியம்மாளின் நாற்பத்தேழு நூற்றாண்டுப் பழமை சட்டென்று உணர்வானது.
புதியதாகக் காலப் பயணம் செய்து வந்துபோன யாரோ இட்டலி அறிமுகப்படுத்திப் போயிருக்கிறார்கள். மகாத் தவறு. மூன்றாம் நூற்றாண்டில் பதினாறாம் நூற்றாண்டு உணவை, உடையை அறிமுகப் படுத்தி காலக்கோட்டில் அங்கங்கே சிதைவு உண்டாக்குவது நயத்தகு நாகரிகமற்ற செயல். குயிலி வானம்பாடியோடு மனதில் பேசினாள்.
“நாம் வந்திருக்கிறது நாகரிகமிக்க செயலா”?
சட்டென்று வானம்பாடியை அருகிலிருந்து பார்த்தாள் குயிலி. அவள் புன்சிரிப்போடு தலையசைத்து உணவு கொள்வதைத் தொடர்ந்தாள்.
தரையில் சிறு பூவேலைப்பாடு செய்த கிடுகுத் தட்டுகள் இட்டு மேலே சம்மணம் கொட்டி இருந்து உண்பது, உணவு சுவையாக இருந்தாலும் கால் மடித்து உட்காரக் கடினமாக இருந்தது.
வானம்பாடி எப்படி சமாளிக்கிறாள்? அவள் குயிலியை விட ஐந்து வயது சிறியவள் என்பதால் ஆற்றல் கூடுதலாக இருக்கலாம்.
“இன்னொரு இட்டவி உண். இன்னுமொரு அகப்பை புட்டுத் தின்னு. மாம்பழச் சாறு மாந்து” என்று விருந்தோம்பலின் அடையாளமாகப் பிடவைத் தலைப்பை இடுப்பில் செருகிக் கொண்டு மூதாட்டி விருந்தோம்பினாள்.
April 17, 2023
நாவல் > தினை அல்லது சஞ்சீவினி – கட்டி உடையக் கவிதை பாடுதல்
April 14, 2023
வெளிவர இருக்கும் என் அடுத்த நாவல் = தினை அல்லது சஞ்சீவனி- மேலட்டை
அடுத்து வர இருக்கும் என் நாவல் தினை அல்லது சஞ்சீவனி-க்கான மேலட்டை இப்படி இருக்கக் கூடும்
   
April 11, 2023
புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் ஒரு நிலவு ராத்திரி
நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி
வீட்டுக்கு வெளியே, நனைந்த மண் பரவிய வாசலில் தடுக்குகள் இட்டு இருந்து, பூவரச இலைகளில் வட்டித்துச் சுடச்சுடப் புளிக் குழம்பும் வழுதணங்காய் எண்ணெய்ப் புரட்டலுமாக, அமர்க்களமாக உண்டு முடிந்தானது. சோறுண்டு வயிறு நிறைந்து, குளிர்ந்த நிலவு ஒளிவீசிய இரவிலெல்லோரும் கூடி இருந்து மகிழ அவன் குழலூதத் தொடங்கினான்.
குரலிசைக் கலைஞர்கள் பாடிப் புகழ்பெற்ற சில பாடல்களை குழலில் பகர்த்தியெடுத்து அவன் வெளி நிறைக்க, கீதங்களுக்கு இடையே சில்வண்டுகள் கிறீச்சிட்டுத் துளைக்கும் அமைதியின் அடர்த்தி, இசையனுபவத்தை ஒன்று பலவாக்கி அளித்தது. இடைவெளியும் இசைதானே. குழலோசை இற்றுத் தேய்ந்து நிறைவு பெற்றது.
அவன் சிரித்தபடியே குழலை இடுப்பில் செருகிக் கொண்டான். வினாடியில் அது காணாமல் போனது.
வெளிவட்ட மனிதரிடையே சிறு சலசலப்பு. பாம்பு என்று நசுக்கப்பட்ட ஒன்றிரண்டு குரல்கள் மங்கி ஒலித்தன.
பாம்பு வரட்டும் என்று தலையசைத்தான் குழலூதி வந்தவன். ஓ என்று ஒச்சையிட்டுப் புயல் கடந்து கடலில் இருந்து நிலம் கொண்டது போல் பாறைக் கற்களை இழைந்து சுற்றி முன்னால் வந்து கொண்டிருந்த பாம்பைக் கண்டு அஞ்சி ஒரு பெரிய ஆள்கூட்டமே நடுநடுங்கி தடுக்குகளை விட்டு எழாமல் அமர்ந்திருந்தது.
மலினமும் கீழ்மையுமே வடிவான பாம்பு இனம் இந்தப் பிரதேசத்திலும் மலையிலும் பிரவேசிக்கத் தடையுள்ளதை அறிவீரோ என்று ஒரு வயோதிகன் எழுந்து கைகட்டி நின்று கேட்டான். அவனை நோக்கிப் படம் உயர்த்தி இன்னும் அதிகமாகச் சத்தமிட்டுப் பாம்பு சொன்னது –
”ஓய் சும்மா இரும். நான் குழலனுக்கு சிநேகிதன். அவனை விட்டு நான் இருக்க மாட்டேன். என்னை விட்டு அவன் இருக்க மாட்டான்”.
இறக்கை முளைத்த பாம்பா நீ என்று குடியிருப்புத் தலைவன் கேட்டான். ஏன் சிறகு இருந்தால் என்ன போச்சு இல்லாமல் என்ன ஆச்சு என்று பாம்பு போதையேற்றும் இளம்பெண் குரலில் கேட்க அவர் சொன்ன காரணம் இப்படி இருந்தது –
”நான் இதுவரை றக்கை முளைத்த பாம்பைக் கண்டதே இல்லை. நீர் அப்படியானவரென்றால் கண்டு போக உத்தேசம் கொண்டு தான்”.
அவர் சொல்லி முடிப்பதற்குள் உஸ்ஸ்ஸ் என்று ஏற்றிய பெரும் அடுப்புத் தீயை மழைபொழிந்து அணைப்பது போல் அந்த சத்தம் இருந்தது. கேட்டவர், சற்றே பின்னால் நகர்ந்து, எழுந்து நின்று, ஓடியே போனார்.
அந்த ராத்திரி தான் பாம்பு அதிரூப சுந்தரியாகி அந்தக் குழலனோடு பின்னிப் பிணைந்து கிடந்து நிலவொளியில் கலவி செய்தாள். குழல் ஊதி இசை வழங்கியதற்கு ஈடான காட்சி அனுபவமாக அந்தப் புணர்ச்சி இருந்தது.
குழந்தைகள் உறங்க, வன்முதியோர் உறங்கியதாக பாசாங்கு காட்டிக் கிடக்க, அகவை அறுபது வரையான ஆண்கள், கண்ணுக்குத் தெரியாத காட்சி என்பது போல் பொருட்படுத்தாமல் அதில் ஈடுபட்டு நோக்கியிருக்க, வயதாக வயதாக வனப்புக் கூடும் பெண்கள் கைத்தண்டையிலும் பின்கழுத்திலும் மயிர் சிலிர்க்கக் கண்டு, இணையரோடு வீடு புகுந்து இணை சேர, வீட்டுக்கு வீடு துய்த்த இன்பம் நடுராத்திரிக்கு ஐந்து நாழிகை வரை கோலாகலமாக நீண்டது.
இறுதியில் யாரும் பார்க்காத ஒரு ஷணத்தில் அந்தப் பாம்புப் பெண் குழலானாள். ஏதும் நடக்காதது போல் குழலை அவன் மடியிருத்தினான்.
 
April 10, 2023
என் வெளிவர இருக்கும் அடுத்த நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் இருந்து
அத்தியாயம் 9 முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்
அடிவாரத் தரிசு பூமி.
எல்லோரும் தினம் புழங்கினாலும் யாருக்கும் நினைவு இல்லை.
கருங்கல் ஒற்றைச் சிற்பமாக நிற்கும் மலையின் கீழே ஒரு காலத்தில் சூரிய வெளிச்சம் உள்ளே வராமல் மறைத்த அடர்ந்த பெருமரத் தோப்புகளும் பரந்து பந்தலித்த கொடிகளும், மூலிகைச் செடிகளும் வளர்ந்து செழித்திருந்ததை யாரும் நினைவு கொள்வதில்லை. கேட்டால், அறுதப் பழசுக் கதை என்பார்கள். நடப்பில் இருக்கும் காலத்துக்கு ஆயிரம் வருடம் முற்பட்டது என நம்பிக்கை.
மலையின் செழிப்பை எடுத்தோதிக் கொண்டு தினம் மாலை நேரத்தில் அடர்த்தியான மேகங்கள் மலைமுகட்டில் சேர்ந்து குவிந்து குறிஞ்சி நிலத்தை ஒரு மாசு, தூசு இன்றித் தூய்மைப் படுத்தும் வானத் திரவமாக நிறுத்தாமல் பொழிந்து கொண்டிருக்கும்.
மலைமேலே மழை பெய்தால் மலையடிக்கும் வாராதோ / மழைவெள்ளம் பெருகி வந்தால் மலையடியில் நதியாமோ என்று அடிவாரத்துப் பெண்கள் தினசரி மலையில் மழைபெய்யும்போது அடிவாரத்தில் வட்டமிட்டு நின்று கைகொட்டிப் பாடுவார்கள்.
மழையின் கீற்றுகள் தரைக்கு இறங்கும்போது அவர்கள் அந்தத் தாரைகளில் சொட்டச்சொட்ட நனைந்து ஆடத் தொடங்குவார்கள். இப்படி மலை வாசனை அடிக்கும், மழை மணக்கும் ஒரு நாள்.
அன்றைய தினத்துக்கு மழை ஓய்ந்த பின் அந்தி சாயும் பொழுதாக இருட்டு மெல்லக் கவிந்து வந்தபோது மானுடர் இருப்புப் பெருவெளியின் ஊடாக ஓர் இளைஞன் இடுப்பில் வேட்டி மட்டும் அணிந்தவனாகக் கடந்து வந்தான்.
பசியால் குழிந்த கண்களும் மரத்துப் போய்க் குழைந்து தடுமாறும் கால்களுமாக அவன் தன் தலைக்கு மேல் இருகையும் வைத்துக் கும்பிட்டபடியே வந்தான். மழைப்பாட்டு ஓய்ந்து வீடு திரும்பும் மகளிரிடம் ஒரு கைப்பிடி சோறு யாசித்தபடியே நடந்து வந்தவன் மழை நீர் தேங்கிய பாதையில் கால் சற்றே வழுக்க, அம்மவோ அம்மவோ என்று கூவியபடி நடந்தான்.
”வழிப்போக்கனே, நீ உண்ண இன்னும் இரண்டு மணிக்கூறாவது ஆகுமே! சோறாக்கிக் குழந்தைகளுக்கு பாலும் சீனியும் பெய்து ஆறவைத்த பால்சோறை ஊட்டி முடித்து, அடுத்து முதியவர்கள் ஆகாரம் செய்து, வளர்ந்த எம் அன்பு மக்களும், நாங்களும் எம் துணைவரும் உண்ணும் நேரம் உனக்கும் சோறுண்டு. இரண்டு மணி நேரம் பசி பொறுத்து ஊர் வனப்பும் மலை அழகும் கண்டு வா உண்டு போகலாம்”.
வழிப்போக்கனை அந்த மலைக்கு ஆற்றுப் படுத்தினது இன்று நடந்தது போல் தான் உள்ளது. அதற்குள் ஒரு ஆண்டு கடந்து போய்விட்டது.
அடிவாரக் குமரன் கோவில் வாசலில் கல் ஆசனத்தில் அமர்ந்தபடி இடுப்பில் வேட்டியைப் பிரி முறுக்கிச் செருகி இருந்த குழலை எடுத்து ஊதத் தொடங்கினான் அவன். மனையக ஆண்கள் பாட்டு கேட்டுத் தாளம் கைத்தாளமாகப் போட்டபடி அவனை அணுகினர். அவரெல்லாம் இசை ரசிகர்கள்.
”அய்யரீர், இசை நன்று. குரல் நன்று. சுவரம், கமகம், பிர்க்கா, ராகம், தானம், ஆலாபனை என எல்லாமே நன்று கண்டீர். எனில் காணீரோ, குழந்தைகளும் முதுமக்களும் இசை கேட்டு உறங்கத் துவங்கினர் மாதோ. அவர்க்குப் பொங்கிய சோறும் சமைத்த வாழைக் கறியும், வள்ளிக்கிழங்கைச் சுட்டதும் வீணாகி விடும் அந்தோ. எனவே குழல் வாசிக்காமல், பாடாமல் தாளம் தட்டாமல் இருப்பீராகின் அது நன்று. உண்டு முடித்து மனம் இருந்தால் எங்களுக்காக ஆடும். எமக்குப் பாடும். எம் உழைத்த களைப்பு நீங்கக் குழலூதுக”.
அந்த சம்சாரிகள் வேண்டியபடியே அவன் மறுபடி இடுப்பில் குழலைச் செருகியபடி சோறு கிடைக்கக் காத்திருந்தான். அன்றைக்கு நெருப்பு நீரோடு சிநேகம் அதிகம் கொள்ள, நெல்லுச்சோறு சடசடவென்று விரைவாகப் பொங்கி முடித்தது எல்லா வீடுகளிலும். அந்த வேகத்தைக் கொடுத்தவன் அந்த வழிப்போக்கன் என்பது யாருக்கும் தெரியாது.
   
April 8, 2023
Blurb at wrapper – நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’
blurb– வெளிவர இருக்கும் என் அடுத்த நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ பின் அட்டையில் இடம் பெறுகிறது
ஜன்னல் வழியே நிலவு ஒளி ஓசைப்படாமல் இறங்க காலடியில் ஒரு வெங்கலப் பானை எழும்பி எழும்பிக் குதித்துக் கொண்டிருந்தது. 
செம்புக்குள் மறைந்து என்னை வம்புக்கு இழுக்கும் நீ யார் புழுவே.
நான் தினை. குவித்து, மலர் மாலை சார்த்தி வைத்த புராதன வம்சாவளி செப்புக் குடத்தில் பெய்த மூன்று கைப்பிடி தினையரிசி .
தினையும் தேனுமெல்லாம் பேசுவது எந்த மதுசாலையில் நேரம் போக்க யார் ஏற்படுத்திய குறும்பு?
அவன் காலில் சத்தமில்லாமல் விழுந்தது அந்தச் செம்பு. வலி உயிர் போக வேண்டியது குழலனுக்கு.
ஆனால் அவன் கால்கள் இருந்த இடத்தில் அதிகக் கால்களும் தலையில் கொடுக்குமாக அவனது பிம்பம் ஜன்னல் வழியே கசிந்த நிலவொளியில் ஒரு நொடி மாறித் தெரிந்து பின்னர் தெளிந்தது.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers