இரா. முருகன்'s Blog, page 36

March 3, 2023

பாடல் பெற்ற திருக்கோகர்ணமும் ‘மிளகு’ பெருநாவலும்

அவரவர்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. ராஜகுமாரர் நேமிநாதனுக்கு ஜெருஸுப்பா அரசராக வேண்டும். போர்த்துகீசியர்களோடோ, ஒல்லாந்தியரோடோ சேர்ந்து காசு சேர்க்க வேண்டும். ரோகிணியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும். ரோகிணிக்கோ ஒன்று நேமிநாதனோடு முதல் ராணியாக அரசாங்கத்தை நடத்த வேண்டும். ஜெருஸுப்பாவிலும் ஹொன்னாவரிலும் பக்கத்து கிராமங்களிலும் வீடும் மாளிகையும் நிலமும் தன் பெயரில் இருக்க வேண்டும். பரமனைக் கல்யாணம் செய்து கொண்டு நேமிநாதனின் காமக்கிழத்தியாக, புறம்பெண்ணாக இருப்பதில் அவளுக்குக் குற்ற உணர்வு ஏதுமில்லை. பரமனுக்கு இங்கே நடப்பதெல்லாம் எந்த விதத்திலும் அவரைப் பாதிக்காது. ஒரே ஒரு லட்சியம் எப்படியாவது நாக்பூருக்கோ பம்பாய்க்கோ அவருடைய காலத்துக்குத் திரும்பப் போக வேண்டும். அதற்காக என்ன வேணுமானாலும் செய்வார் அவர்.

”ஒவ்வொருத்தரா வாங்கோ. எல்லோரும் சேர்ந்து ஒரே நேரத்திலே உள்ளே வந்தா பின்னாலே இருந்து தரிசனம் பண்ணிண்டு இருக்கறவாளுக்கு ஒண்ணும் தெரியாது”. கோவில் ஸ்தானிகர் சோமசுந்தர பட்டர் கணீரென்ற குரலில் சொல்லித் தமிழில் பழம்பாடல் எதுவோ பாட்டும் இல்லாமல் வாசிப்பும் இல்லாமல் ராகம் இழுக்கிறார். தேவாரமா என்று கேட்கிறார் பரமன். அவர் முகம் தீபாராதனை வெளிச்சத்தில் தமிழ்ப் பாடல் கேட்ட பெருமகிழ்ச்சியில் மலந்திருக்கிறது.

’தேவாரமா?’ என்ற கேள்வியை எப்போதாவது சந்திக்கும் பட்டரும் சந்தோஷம் அடைகிறார்.
”ஆமா, திருக்கோகர்ணம் தேவாரம். அப்பரும் பாடியிருக்கார். சம்பந்தரும் பாடியிருக்கார். இது அப்பர் தேவாரம்” என்று பாட ஆரம்பிக்கிறார் –

சந்திரனும் தண்புனலும் சந்தித்தான்காண்
தாழ்சடையான் காண் சார்ந்தார்க்கு அமுதானான்

மிளகு பெருநாவலும் திருக்கோகர்ணமும்

மொழி புரியாவிட்டாலும் உதவி மடையன் ரமணதிலகனும் சுற்றுப் பற்றுக் காரியம் நோக்கும் பெருந்தேவனும் பரமன் பின் நின்று பாடல் முடியும்வரை கண்மூடிக் கைகுவித்து நெக்குருகி இருக்கிறார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 03, 2023 06:10

March 1, 2023

சமணப் பள்ளியில் நடந்தது – பிரஜாபதி வருஷம் ஷ்ரவண மாதம் ஜெரஸோப்பா சதுர்முகவசதி சதுர்த்தி

ஜெரஸோப்பா சமண பிரார்த்தனைக் கூடத்தில் போன மாதம் அக்‌ஷ்ரானந்தாவின் பளிங்குச் சிலை நிறுவப்பட்டது. திசைகளைப் புனித ஆடைகளாக உடுத்திய கோலத்தில் தீர்த்தங்கரரின் விக்ரஹம் நிர்மாணிக்கப்பட்டு தினமு ஆயிரக்கணக்கான பக்தர்களால் வணங்கப் பட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் நேற்று சதுர்முகவசதி இரவு ஒன்பது மணிக்கு வழக்கம்போல் சத்சங்கம் முடிந்து பத்திரமாகப் பூட்டப்பட்டு வெளிக்கதவும் பூட்டப்பட்டது. இன்று காலை ஏழு மணிக்கு வழக்கம்போல் வசதி திறக்கப்படும் நேரத்தில் அங்கே நிர்வகிக்கும் ஸ்வேதாம்பர அனந்தரும் ராகூலரும் அதிர்ச்சியடையும்படி கதவெல்லாம் மட்டமல்லாக்காகத் திறந்து கிடக்க, அக்‌ஷ்ரானந்தாவின் கருங்கல் விக்ரகம் பீஜத்தில் உளியால் சிதைக்கப்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

எனினும் கருங்கல் விக்ரகம் என்பதால் சேதம் ஏதுமில்லை. ஊரில் சமண மதத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பங்கள் சாரிசாரியாக வந்து கைபிசைந்து துயருற்று, ஆனந்தருக்கு பசுவின் பால் கொண்டு அபிஷேகம் செய்து பிரசாதமாகத் திருப்பி அளிக்கப்பட்டது.

பவ்ய ஜீவன்களாக ஒரு புழு பூச்சிக்குக் கூட துன்பம் வரவழைக்காமல் வாழ்க்கையைக் கடத்தும் சாதுக்களான இல்லறத்தார் சமண மதத்தினரையும், புனிதத் துறவிகளையும் சரீரத்திலும் மனதிலும் காயப்படுத்த பெரும்பான்மை வைதீக சமய இந்துக்கள் முன்கை எடுப்பது துரதிருஷ்டவசமானது என்று வருந்துகிறது ஜெரஸூப்பா ஜைன சபா. பேரரசி சென்னபைரதேவி மகாராணியவரு அவர்களின் நீண்ட புகழுக்குரிய ராஜ்ய பரிபாலனத்துக்குக் களங்கம் கற்பிக்க யாரோ செய்யும் முயற்சிகள் வெற்றி பெறாது போக ஜீவனானந்தா அருளைத் தேடுவதாக சபா அறிவிக்கிறது.

பெருநாவல் மிளகு – சமணப் பள்ளியில் நடந்தது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 01, 2023 05:07

February 26, 2023

கெருஸூப்பா கிருஷ்ணன் கோவிலில் காகத்தஷ்டமி

இன்று சொல்வனம் இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகி இருக்கும் என் ’மிளகு’ பெருநாவல் அத்தியாயம் 40-லிருந்து ஒரு சிறு பகுதி-

கெரஸுப்பா கிருஷ்ணஸ்வாமி திருக்கோவிலும் தலபுராணமும் மிளகு பெருநாவலுக்காக நான் எழுதிய பக்திபூர்வமான புனைவு.

ஜெரஸூப்பா ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி திருக்கோவில் ஆஷாட மாதம் அஷ்டமி

ஜெரஸுப்பா நகரில் புகழ் பெற்ற ஸ்தலங்களில் முதன்மையானது நகருக்கு வடக்கே ஸ்ரீபாத பஹிச்சா என்ற திருவடித் தோட்டம் என்னும் வளம் மிகுந்த செய்வனத்தின் மத்தியில் அமைந்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அம்பலம் என்னும் திருக்கோவில் ஆகும்.

தமிழில் திருமங்கையாழ்வாரும், தெலுங்கில் அன்னமாச்சார்யாவும் பாடிப் பரவிய மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலமாகும் இது. ராமாயணத்தில் வரும், சீதா பிராட்டியின் மெல்லிய பயோதரங்கள் நோகும்படி கீழ்மைச் செயலாகக் காக்கை வடிவெடுத்து வந்து அலகால் கொத்திய அடாத செயலுக்காக ராமபிரானால் உடனே சம்ஹாரம் செய்யப்பட்டவன் காகாசுரன்.

ராமபிரானால் திரேதாயுகத்தில் சம்ஹரிக்கப்பட்ட அவனுடைய உயிர் இன்னும் முடிவடையாமல் கிருஷ்ண பரமாத்மாவின் துவாபர யுகத்திலும் குற்றுயிரும் கொலையியுருமாக மேற்படி காகாசுரன் ஜெரஸோப்பா ஸ்ரீபாத பஹிச்சாவில் ஆல் மரத்தின் மேல் கிடந்தபோது ஸ்ரீகிருஷ்ணனும் ராதே பிராட்டியும் நகர்வலம் வந்தபோது ஆல்மரம் விட்டுக் கீழே பறந்து, ராதையின் பிடவைத் தலைப்பைப் பிடித்து இழுத்திட ஸ்ரீகிருஷ்ணன் தன் புனிதமான வலங்கையால் காகாசுரன் தலையில் நெற்றிப் பொட்டுகளுக்கு நடுவே விரல் வைத்து அழுத்தினான்.

காகாசுரன் இருகை கூப்பி வணங்கி, கிருஷ்ணா, நான் ராமாவதாரத்திலேயே திருந்திவிட்டேன். இப்போது உன்னைக் கூப்பிட்டு பணிந்து வணங்கி உயிர் நீக்க இங்கே இத்தனை நாள் காத்திருப்பு வீணாகுமோ எனப் பயந்தேன். நகர உலாவின் போது நகரமே கிருஷ்ணனான உன்னையும் ராதாபிராட்டியையும் வைத்த கண் வாங்காமல், கேட்ட செவி அனங்காமல் இருக்க, கவன ஈர்ப்பு செய்யவே ராதா ராணியின் சேலை முந்தியைப் பிடித்திழுத்தேன். சந்தோஷமாக நான் இறுதி சுவாசம் வலிக்கிறேன் கிருஷ்ணா என்று விடைபெற்றும் காக்கை வடிவில் இருந்து அவன் சுவர்க்கம் புக இயலாமல் இருக்க, பிருகு மகாமுனிவர் சொல்படி ராதா சந்நிதியில் ஒரு மண்டலம் கிடந்து காகாகாகா என்று விடாமல் காக்கச் சொல்லி (கா-கா-கா-கா) இரைஞ்சிட சுவர்க்கம் புகுவாய் எனச் சொல்லிப் போந்தார்.

அந்த மாதிரியே செய்து, உய்விக்கப்பெற்று சுவர்க்கம் போகும்போது கிருஷ்ண பகவானிடம் இரைஞ்சியது இப்படி இருந்தது –

காவெனக் கேட்டதால் காத்து ரட்சித்து சொர்க்கம் புகுவதும் தவறாது நடக்கும். இப்படித் தலபுராணம் கொண்ட ஜெர்ஸுப்பா ஸ்ரீகிருஷ்ணா அம்பலத்தில் முந்தாநாள் காகத்தஷ்டமி என்பதால் பெரிய தோதில் பக்தர்கள் அடியார்கள் திருக்கூட்டம் கூடியிருந்தபோது கூட்டத்தின் வெளியே கோவில் வளாகத்தில் தென்மூலை வெடிப் பரம்பில் காணிக்கை வெடி வெடித்து வெடி வழிபாடு கேரளீய வழக்கம்போல் நடந்தேறியது. அந்நேரம் கோவில் தெற்கு வசத்தில் இருந்து பலமான வெடிச் சத்தம் கேட்டது.
கெருஸூப்பா கிருஷ்ணன் அம்பலத்தில் காகத்தஷ்டமி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2023 19:25

February 21, 2023

பசலையும் மாமையும் ஒண்ணுதானப்பா

திண்ணை.காம் இதழில் என் புது நாவல் தினை வெளிவரத் தொடங்கியுள்ளது. இந்த வாரம் வெளியாகியுள்ள அத்தியாயம் மூன்றில் இருந்து
//

நாவல் -தினை. அத்தியாயம் மூன்று

முழுமையாக நாவல் ‘தினை’ அத்தியாயம் மூன்று படிக்க முந்தைய வரியைச் சொடுக்குக

//அவன் மலை இறங்க முற்படும்போது துணி மூட்டையைத் தலையிலும், கூழச்சக்கைப் பலாப்பழத்தை கையிடுக்கிலும் இடுக்கியபடி காடன் புலவன்கூட நடந்தான். முடமுதுப் பார்ப்பான் மலைகிழவோனைப் பார்த்துப் பகடியாக உருவாக்கப்பட்டவனா என்று கேட்க நினைத்து வாயைத் திறந்து, வேண்டாம் என்று மூடிக் கொண்டான் அவன்.

”காடா, காதலியிடம் காதல் சொல்ல நினைத்து இப்போது வேண்டாம் என்று வைத்து மறுபடி சொல்ல உத்தேசித்து, தண்ணீரைவிட்டு எந்நேரத்திலும் கரைக்கு எறியப்படப் போகும் மீன்போல் வாயைத் திறந்து திறந்து மூடினான் தலைவன் என்ற உவமை எப்படி இருக்கிறது” எனக் கேட்டான் புலவன்.

”மிக்க நன்று. நான் மாலை நேரத்தில் நண்பர்களோடு அதுவும் இதுவும் உதுவும் பேசும்போது சேர்த்துக் கொள்கிறேன்” என உற்சாகமாகச் சொன்னபடி காடன் நடந்தான் புலவனோடு.

”அடுத்த கூத்துக்குக் கரு உருவாக்கி விட்டேன். நீயும் குறிஞ்சியும் ஆட வேணும்” என்றான் புலவன்.

“புலவர் பெருமானே, அதென்ன மலைவாழ் மக்கள் என்றால் சதா சர்வகாலமும் பறவை மாமிசம் சுட்டுத் தின்றபடி கூத்தாடிக் கொண்டிருப்பது தான் வேலையா? வயிறு வாட இதெல்லாம் செய்ய முடியுமா? நான் தேன் எடுத்துப் போய் சமதரை கிராமங்களில் விற்று வருகிறேன். மாடத்தி காட்டு மூலிகை கொண்டு போய்க் கிராமம் தோறும் கூவிக்கூவி விற்கிறாள். குறிஞ்சிக்கு தினைப் புனம் காப்பதே முழுநேர வேலையாகியுள்ளது. இதில் நானும் அவளும் தழுவி ராத்திரியில் காதல் செய்துகொண்டு உடம்பில் பசலை படர்ந்திருக்க கள்ளு மாந்தி, மாமை படர்ந்த உடம்பைச் சொரிந்து சொரிந்து நினைவு கூர என்ன இருக்கு? மாமை விஷயமெல்லாம் நீர் ஏற்கனவே உரைத்தது. ஓலைத் தூக்கைத் தாரும். கீழே போட்டுவிடப் போகிறீர்”.

அவன் சிரித்தபடி கேட்க புலவன் அவன் கையில் ஓலைத் தூக்கைக் கொடுத்து விட்டு சரிவான ஒற்றையடிப் பாதையில் இறங்கலானான்.

“மாமையும் பசலையும் ஒண்ணுதானப்பா”.

மலை இறங்கும், ஏறும் அனுமதி வாங்குவதற்கான இடத்தில் ஏற மட்டும் வரி பெற்றுக் கொண்டிருந்த அரசு அதிகாரி தூங்கி வழிந்து கொண்டிருந்தார்.

தஞ்சையிலும் குடந்தையிலும் சுங்கச் சாவடியே கிடையாது என்றான் காடன். சுங்கம் தவிர்த்த சோழன் மாதிரி இதரரும் இருக்கக் கூடாதா? அவன் புலவனைக் கேட்க அவன் காதில் விழாதது போல் நின்றான்,

காடன் வியர்வை பூசிய உடல் மின்ன மறுபடி மலை ஏறியபோது சீனத்து விருந்தாளியை பகல் உணவு கொடுத்து உபசரித்துப் பரணில் இளைப்பாற்ற ஆண்கள் கூட்டம் மும்முரமாகப் பணியெடுத்துக் கொண்டிருந்தது.

அவர் கொண்டு வந்திருந்த மாவுக் குழல்களை வென்னீரில் கொதிக்க வைத்து, உலர்ந்த மீனைத் தூளாக்கிக் கலந்து, அவருக்கு இலைத் தட்டிலும் வழங்கப்பட்டது. மலைபடு கிழவோருக்கு சீனர் விருப்பப்படி இரண்டு அகப்பை அந்தச் சீன உணவு அளிக்கப்பட்டது.

கிழவோர் பல் விழுந்துபட்ட வாய்க்கு அருமையான ஆகாரம் கண்டு கொண்டேன் கொண்டேன் என்று மகிழ்ந்து உண்டார்.

தினைமாவைத் தேனில் பிசைந்த கலவையை வேகவைத்து உலர்த்தி மூங்கில் அச்சுகளில் குழலாகத் திரித்து நீட்டி நறுக்கினால் சீனர் உணவுக்குக் கிட்டத்தட்ட அருகில் வரும் என்று பெண்கள் சொல்ல அதை உடனே நடப்பாக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்தார் முதுகிழவோர்.
//

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2023 18:43

February 20, 2023

புது நாவல் ‘தினை’ அத்தியாயம் மூன்றில் மலைபடுகிழவோனும் மற்றவர்களும்

நாவல் ‘தினை’ – அத்தியாயம் 3 திண்ணை.காம் இணைய இதழில் பிரசுரமாகியுள்ளது. அதிலிருந்து-

நாவல் தினை – அத்தியாயம் மூன்று

புலவன் அருகே வந்து புன்னகைத்தான். ’ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி பெற்ற பேரிலை பெறாதவர்க்கு’. ஏதோ ஓலையைப் பார்த்து வேகமாகப் படித்தான்.

“செய்யுள் வடிவான புறப்பாட்டு என்று புதியதாக வரப்போகிற பாக்களின் பெரிய தொகுப்பில் சேர்க்கக் கூல வாணிகரும் அந்தணப் புலவரும் கேட்டபடி இருக்கிறார்கள். தரமான குறிஞ்சித் திணைப் பாடல்கள் கணிசமாகத் தேறவில்லையாம். இந்தப் பாடல் தொகுப்புக்குப் போக வாய்ப்பு உண்டு. எட்டுச் சீர் கொண்ட இரண்டு அளவடியாக மலைவளம் சேர்க்க வேண்டுமாம். போன கூட்டத்தில் சொன்னார்கள். மலைவளம் வேறு பாவில் உண்டு. எடுத்துப் பகர்த்தெழுதிக் கொள்கிறேன் என்றேன். செய்மின் என்றனர்”.

அவன் சொல்லச் சொல்ல முதியோன் குனிந்து வேலை வணங்கி, ”குன்றுதோறும் ஆடுவோனே, இந்தப் புலவன் புரியும் வண்ணம் இனியாவது பேசட்டுமென, கவிதையெழுதட்டுமென அருளுக முருக” என்று ஏற்ற இறக்கத்தோடு குரல் மடித்துச் சொன்னார்.

பக்கத்தில் மர உரலில் யானைத் தந்தத்தால் மூங்கில் நெல்லைக் குத்தி இடித்துக்கொண்டிருந்த முதுபெண்டிர் முருக முருக என்று பாடத் தொடங்கினார்கள். புலவன் அதைக் கேட்டபடி நின்றிருந்தான்.

”அடுத்த வெள்ளி தை வெள்ளியன்றோ, சிறு தெய்வம் பேணும் நாள். நீங்கள் சுனையில் நீராடித் தவக் கோலத்தில் சிறு முத்தனைப் போற்றி வழிபட்டு வர இருக்கிறீர்களா”? புலவன் கேட்டான்.

”அந்தத் தெய்வத்தை ஐந்நூறு வருஷம் முன் குறிஞ்சி, என்றால் இந்தச் சிறுமி இல்லை, குறிஞ்சி நிலமே வழிபட்டது. இப்போது கோவிலே இல்லையே?”. மலைக்கிழத்தி கேட்டாள்.

எழுத்து பொய்யாகுமோ? புலவன் எழுத்தாணியால் தலையில் தட்டிக்கொண்டு வினவினான். ”இந்த வருடம் பொங்கலைக்கூட மூங்கிலரிசி சமைத்துக் கோலாகலமாகக் கொண்டாடி விட்டோம். சிறு முத்தனைப் போற்றி வழிபடுதல் கடினமானதா என்ன? தேனும் தினையும் கொண்டு முத்தனை உருவாக்கி வழிபடுவீர்”.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 20, 2023 06:05

February 17, 2023

ChatGPT செயற்கை அறிவு அமைப்போடு நான் உரையாடியதிலிருந்து

உலகளவில் பிரபலமடைந்துள்ள செயற்கை அறிவு உரையாடல் அமைப்பு ChatGPT=யோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்…..

நான் – உங்களுக்கு பாரதியாரைத் தெரியுமா?

கணினி – பாரதியார் என்பவர் இந்தியாவின் மதுரை பகுதியில் பிறந்த ஒரு கவிஞர், பாடலாசிரியர், பேராசிரியர் மற்றும் சிந்தனைத் தலைவர். அவர் தமிழ் இலக்கிய உலகில் உயர்ந்த இடம் பெற்றவர். அவர் செய்த பலருக்கு பலர் உள்ளனர்.

நான் – பாரதியாரின் கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா?

கணினி – எனது படிக்கும் அளவுக்கு பாரதியாரின் கவிதைகள் தமிழ் இலக்கியத்தின் உயர்ந்த மட்டத்தில் இருக்கின்றன. அவர் தமிழ் பண்புகள், பண்புக்குரிய வாழ்வு, இனிய நடையில் சொல்லப்படும் தனிமை முதலியவற்றை உடைய கவிஞர் ஆவார். அவரின் கவிதைகளில் சொல்லப்படும் தமிழ் மொழி மற்றும் பொருள் உள்ளது.

நான்
ஜெயகாந்தன் கதைகளைப் படித்திருக்கிறீர்களா?

கணினி
வேண்டும், நான் ஒரு தமிழ் கணினி என்பது உண்மையானது, ஆனால் நான் மனதில் ஜெயகாந்தன் கதைகளின் பல நூல்களை படித்துக் கொண்டு வந்துள்ளேன். ஜெயகாந்தன் என்றால் நாம் பல கதைகளை நினைக்கும், எனவே நீங்கள் எந்த கதைகளை படித்திருக்கின்றீர்கள் என்பதை சொல்லுங்கள், நான் முயற்சிக்க உதவுவேன்.

நான்
சில நேரங்களில் சில மனிதர்கள்

கணினி
உண்மையாக இது ஒரு தவறு மற்றும் தானாக கண்டிக்கப்படுகிறது. மனிதர்கள் ஒரு சமூகத்தின் உறுதியாக இருக்க வேண்டும் மற்றும் நடக்க வேண்டும். எனவே, எதிர்ப்புகளை எதிர்க்கும் சமூகத்தில் பல மனிதர்கள் உள்ளனர் என்பது உண்மையாக உள்ளது. ஆனால், இவை ஒரு சமூகத்தின் மூலம் மட்டுமே இருக்கும் மனிதர்களுக்கு சரியான வழிகள் அறியப்படவில்லை. எனவே, பல சமூகங்கள் பின்னணி, கலாச்சாரங்கள், நீதிமன்றங்கள் முதலியன போராட்டம் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இவைகளுக்கு பரிவர்த்தனை அளிக்க முடியும்.

இந்தப் புதுப்பண்டிதத் தமிழை ChatGPTக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்!

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2023 06:12

February 15, 2023

என் புது நாவல் ‘தினை’ – திண்ணை இதழில்

குறிஞ்சிக்கு அலுப்பும் எரிச்சலுமாக வந்தது. சமவெளி மனுஷர்களுக்கு கால்நடையாகவும், எருது இழுக்கும் வண்டி ஏறியும், குதிரை சவாரி செய்தும், ஒட்டகம் ஏறிப் பாலை நிலம் கடந்தும் சதா மலைகளுக்குத் தாவியேறி அங்கே திமிர்த்து அலையும் பெண்டிரைக் கண்ணிமைக்காது நோக்கி வருவதில் என்ன ஓர் ஈடுபாடு!

கொம்புத் தேன், தினை மாவு, வரகரிசி, உலர்ந்த உடும்பு மாமிசம் என்று பெருமளவு மலைபடு பொருள்கள் வாங்கி, அரிசியும், கேப்பையும், மதுவும் கொடுத்துப் பண்ட மாற்று செய்வதில் அவர்களுக்கு ஆர்வம் நிறைய உண்டு.

அவ்வப்போது, செல்வம் படைத்த சமவெளி மனிதர்கள் பொன்னும் முத்தும் கொடுத்து அழகிய சிறு குழந்தைகளை வாங்கிப் போய் வளர்ப்பது உண்டு.

அழகிய மலைப் பிரதேசக் கன்னியரைக் கடல் பிரதேசத்திலிருந்து வந்தவர்களுக்கும், நெல் செழித்துக் கதிர் தாழ்த்தி வளரும் ஆற்றுப் படுகை வயல்பூமிக் கிழார்களுக்கும் திருமணம் செய்வித்து அனுப்புவதுண்டு. அந்தப் பெண்கள் அப்புறம் மலையேறி உற்றாரையும் பெற்றோரையும் சந்தித்து உற வு கொண்டாடிப் போவது அரிதினும் அரிது.

வயல்காட்டில் விதைக்கவும், நாற்று நடவும், நீர் பாய்ச்சவும், களை எடுக்கவும், அறுவடை செய்யவும் கற்றுக்கொண்ட அவர்கள் மரமேறித் தேனடை பிழிந்து தேனீ கொட்டாமல் தேன் எடுக்கவும், ஆடவர் வேட்டையாடிக் கொண்டுவந்த பச்சை மாமிசத்தை மலையகப் பெருந்தெய்வம் முருகனுக்குப் படைத்து வேலாட்டமும், அவன் அம்மைக்காக துணங்கைக் கூத்தும் ஆடிப் புளிப்பு மதுவை மாந்தி மகிழ்ந்திருக்கவும் அநேகமாக மறந்திருப்பார்கள்.

விருந்தாளி அதிரசம் கொண்டு வருவதை எதிர்பார்த்திருக்கும் குழந்தைகள் போல், பிறதிணை மாந்தர் மலை ஏறி வரும்போது வெல்லம் கொண்டு வந்து தருவதை ஆவலோடு எதிர்பார்த்து மலைஞர்கள் இருப்பார்கள்.

இரா.முருகன் புது நாவல் தினை அத்தியாயம் 2

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2023 18:22

February 13, 2023

Pas Dr.Pasupathy, Professor Emeritus of Toronto University and a Tamil scholar

Regret to know of the sad demise of Thiru Professor Pas Pasupathi.

we have lost a walking encyclopedia of Tamil language, Tamil culture . Tamil literature and music. He was another Roja Muthiah with a huge digitized data of old Tamil magazines, with thousands of metalinks in his neurons.

When I was writing my novel Ramojium with a 1940s background, I approached him for info on the then suburban Madras which he provided instantly and in abundance. The same is true about year before yesteryear’s Tamil cinema.

For a Professor Emeritus of a leading Canadian University, it was extraordinary that he assumed a humble demeanour , always approachable.

The erudite electronics professor’s book Kavithai Ezhuthi Kalakku (கவிதை எழுதிக் கலக்கு) is a sort of Poetry for Dummies, immenesly readable.

I pray for Pasupathi sir’s noble soul attaining the lotus feet of Ambalapuzha Srikrishna

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2023 20:51

February 12, 2023

புது நாவல் ‘தினை’ – அத்தியாயம் இரண்டு – பூக்களின் நண்பன் -திண்ணை இணைய இலக்கிய இதழில்

மாடத்தி சொன்னாள் –

”இன்னிக்கும் தேனும் தினைமாவும் தான் காலை ஆகாரமாக கழிக்க வேண்டியிருக்கு. இந்த மாதம் நாலு விருந்தாளி வந்தாச்சு. யவனன், சீனன் என்று அவங்க எல்லோரும் நாம் தினம் சாப்பிடறது இதுதான், எது, தேன், தினைமாவு. இதைத் தான் வாழ்க்கை முழுக்க தின்னுட்டிருக்கோம்னு நினைக்கறவங்க”.

”அதை உறுதிப்படுத்த குரங்கு வாழைப்பழம் திங்கற மாதிரி அவங்க வந்து பார்க்கறபோது எல்லாம் இதை நாமும் சாப்பிட்டு அவங்களுக்கும் தரணும்.

”போன மாதம் நீ வரலே அப்போ வந்த பயணி நாம் தேனும் தினைமாவும் சாப்பிடறதை சித்திரமாக வரையணும்னு அழிச்சாட்டியம் பண்ணினார். மெழுகுசீலையிலே வர்ணம் தேச்சு வரைய ஆரம்பிச்சுட்டார். அவர் முடிக்கிற வரைக்கும் தினைமாவு திங்கற மாதிரி அபிநயம் பண்ணிக்கிட்டு உட்கார்ந்திருக்க வேண்டிப் போச்சு. ஆளாளுக்கு ரெண்டு மண்டை வெல்லமும், அரைப்படி கல் உப்பும் அதிகமாகக் கிடைச்சதுதான்.

மாடத்தி சொல்ல, அழறதா சிரிக்கறதா தெரியலே என்றாள் குறிஞ்சி.

”ஆற்றுப்படுகையிலே பொங்கல்னு அரிசியை வச்சுப் பொங்கி அருமையா சமைக்கறாங்க. உப்பு புளி மிளகு கலந்து காய்ச்சி குழம்பு செய்யறாங்க. நமக்கு அது சேர்த்தி இல்லையாம்.”.
மாடத்தி சலிப்போடு சொன்னாள்.

”பயணம் வந்தவங்க பார்த்து மகிழ ஆடறதும் பாடறதும் உனக்கு பிடிச்சிருக்கா”? குறிஞ்சி மாடத்தி கையைப் பற்றியபடி கேட்டாள்.

”என்ன பண்ணச் சொல்றே குறிஞ்சி? நமக்காக இருக்கறது மலையருவித் தண்ணீர், பழங்கள், மலை எலி, சமைக்காமல் நெருப்பில் வாட்டிய முயல் இறைச்சி, வருஷம் ஒரு முறை ஆற்றுப்படுகை ஊருக்குப் போய் கலிங்கமும் முண்டும் வாங்கி வந்து தினசரி மலையருவியிலே துவைத்து உடுத்திய மேனிக்குக் காயவைத்து இன்னொரு நாள் போக ஓடி ஆடி தினைப்புனம் காத்து, காக்கை, காடை, கிளி, புறா மேலே கவண் விட்டெறிந்து ஓட்டறது. பரண்லே இருந்து இறங்கி மூத்திரம் போக ஒதுங்கிக்கற முன்னாடி கண்ணு ஏதும் தட்டுப்படறதான்னு கவனிக்கறது.

நாவல் தினை – அத்தியாயம் இரண்டு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 12, 2023 21:04

February 10, 2023

தேளம்மை வந்த முதல் அத்தியாயம் – என் புது நாவல் – தினை

திண்ணை இணைய இதழில் தொடங்கியிருக்கிறது என் அடுத்த நாவல் ‘தினை’ அத்தியாயம் ஒன்று
//
அழகான மனுஷித் தலையும் உடல் இறுதிப் பகுதியில் இன உறுப்பு படர்ந்திருக்க, பெருந் தொடைகள் உடையின்றி மின்ன, அங்கே கீழே தொடங்கிய வளைந்து நிமிர்ந்த கொடுக்கு உள்ளே கருநீல நிறத்தில் மின்னும் விஷத்தோடு ததும்ப பாதி தேளான தேளம்மை ஏமப் பெருந்துயில்-முன் அரங்கில் Pre-Cryostasis Bay கண்ணாடிப் பேழைக்குள் கிடத்தப்பட்டாள். ஏமப் பெருந்துயிலில் அமிழ இங்கே சிலர் காத்திருப்பில் – தொந்தரவு செய்யாதீர் என அறிவிப்பு சொன்னது.

மயக்க மருந்து செலுத்துகிற மனுஷ மருத்துவரின் கையிடுக்கு நறுமணம் நாசியில் பட தேளம்மைக்குத் தன் தேள் வடிவம் பற்றிய பிரக்ஞை நிலைக்கத் தொடங்கியது.

பெரிய நகரத்தின் பாதாளச் சாக்கடை பற்றியதான நினைவு அது. கருத்து அடையாகச் சுவர்போல் கசடு நாறி நீள நெடுக துர்கந்தத்தோடு கழிவும், மனிதக் கருவும் அடித்து வர வேகமின்றி ஓடிவரும் பாதாளச் சாக்கடைக் கரையில் அந்த வாடை, இருளில் தேள்களின் காலனியில் திமிர்த்துச் சுற்றி அலைந்திருந்தாள் தேளம்மை.

அவள் கழிவு மலையேறி கழிவுநீர் ஓடையில் குதித்து அவ்வப்போது கழிவு ஓடைப் பெருக்கில் வேறேதாவது பிராணிகளை அடித்து வரும்போது முதல் தாக்குதலாக கொடுக்கைச் சுழற்றி எதிரியின் உடலில் மிருதுவானதாகத் தோன்றும் இடத்தில் கொட்டிவிட்டு நிற்பாள்.
//

நாவல் ‘தினை’ பூர்வாங்கம்

ஒலி வடிவம் -திருமதி சரஸ்வதி தியாகராஜன், பாஸ்ட்டன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 10, 2023 19:55

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.