இரா. முருகன்'s Blog, page 39

November 30, 2022

எழுத்து பிரசுரம் வெளியீடுகளாக என் அனைத்து நூல்களும்

என் அரசூர் நாவல்கள் மறுபதிப்பு கொண்டுள்ளன.
அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே என்ற நான்கு நாவல்கள் அவை.
எழுத்து பிரசுரம் (an imprint of Zero Degree Publishing) நூல்களாக இன்று வெளியாகும் இவற்றைத் தொடர்ந்து என் மற்ற நூல்கள் எழுத்து பிரசுர வெளியீடுகளாக வர இருக்கின்றன. அவை

நாவல்கள்

1) 40, ரெட்டைத் தெரு
2) தியூப்ளே வீதி
3) மூன்று விரல்
4) 1975
5) ராமோஜியம்
மற்றும்
6)மிளகு
7) தினை
8) பீரங்கிப் பாடல்கள் (என்.எஸ்.மாதவனின் மலையாள நாவல் மொழியாக்கம்0

குறுநாவல்கள், சிறுகதைகள்

1) இரா.முருகன் குறுநாவல்கள் (புதியதாக எழுதியவையும் சேர்த்து)
2) இரா.முருகன் கதைகள் (மொத்தச் சிறுகதைகள் -150 இடம் பெறும் தொகுதி)

கட்டுரைகள்

1)லண்டன் டயரி
2) ராயர் காப்பி கிளப்

மற்ற கட்டுரைத் தொகுதிகள் …

நண்பர்கள் வாங்கி வாசித்து ஆதரவு தர வேண்டுகிறேன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2022 18:44

November 29, 2022

பதினெட்டாம் அட்சக்கோடும் ’கோல் தோ’வும்

எழுத்தும் பாதிப்பும்

சில கதைக் கருக்கள் மனதின் ஆழத்தில், கிட்டத்தட்ட பாரம்பரிய நினைவிலிருந்து வருகிற மாதிரி புறப்பட்டும் வரும். அதே கரு பல ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் ஐரோப்பாவிலோ, ஆப்ரிக்காவிலோ, அல்லது இங்கே சென்னை நுங்கம்பாக்கத்திலேயோ இன்னொரு எழுத்தாளருக்கு, வேறொரு காலத்தில் தோன்ற வாய்ப்பு இருக்கிறது.

ஒ.வி.விஜயன் எழுதிய பிரபலமான மலையாளச் சிறுகதை ‘பலி காக்கைகள்’. கட்டுச் சோறு கட்டிக் கொண்டு வெள்ளாயி அப்பன் நகரத்துக்குப் புறப்படுகிறான். அவனுடைய மகனைத் தீவிரவாதி என்று பிடித்துப் போய் தூக்கு தண்டனை விதித்திருக்கிறார்கள். இன்னும் ஒரு நாளில் அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.

சிறைக் கம்பிகள் குறுக்கே நிற்க, மகனும் அப்பனும் கடைசி முறையாகச் சந்தித்துக் கொள்கிறார்கள். ‘நான் தப்பு எதுவும் செய்யலே அப்பா’ என்று சொல்லும் மகனைப் பிரிய மனமே இல்லாமல் பிரிகிறான் அந்தத் தகப்பன். அடுத்த நாள் தூக்குதண்டனை நிறைவேற்றி, சடலத்தை வண்டியில் எடுத்துப் போய் அரசாங்கமே கொள்ளி போட்டு விடுகிறது. இவன் இயலாமையோடு அதைப் பார்த்து விட்டு கடற்கரை போகிறான். கொண்டுவந்த கட்டுச் சோறு பொதியவிழ்ந்து கொள்கிறது.

இறந்தவர்களுக்கு திவசம் தரும்போது பிண்டம் தின்ன வரும் காக்கைகள் அந்தச் சோற்றைத் தின்ன இறங்கி வருகின்றன.

இந்த அருமையான கதையின் சாயலில் ஒரு ஸ்பானிஷ் சிறுகதையைப் படித்ததாக இலக்கிய விமர்சகர் காலம் சென்ற எம்.கிருஷ்ணன் நாயர், தன் ‘சாகித்ய வாரபலம்’ பத்தியில் குறிப்பிட்டிருந்தார். குற்றம் சொல்லி இல்லை, தகவலுக்காக.

கல்கி தீபாவளி மலருக்கு என்னிடம் ஒரு கதை கேட்டபோது நான் ‘சேது’ என்ற சிறுகதை எழுதிக் கொடுத்தேன். ராமேஸ்வரம் பின்னணியில், மனைவியைத் தொலைத்த ஒரு யாத்திரிகனின் பார்வையில் நகரும் கதை. கதை போய்ச் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் கல்கி ஆசிரியர் தொலைபேசினார் –

‘நல்ல கதையா இருக்கு. ஆனா ஒரு சிக்கல். இதே கருவை வைச்சு முப்பது வருஷம் முந்தி கல்கி ஒரு கதை எழுதி இருக்கார். இது ராமேஸ்வரத்தில் நடக்கறதுன்னா அது காசியில் நடப்பது. அதை விட முக்கியமான விஷயம், இந்த வருட தீபாவளி மலரில் கல்கி எழுதின கதை ஒண்ணு போடலாம்னு தேடியபோது அதைத் தான் தேர்ந்தெடுத்து வச்சிருக்கோம்’.

உடனே கதாபாத்திரங்களையும் கருவையும் மாற்றி அதே ராமேஸ்வரம் பின்புலத்தில் ‘சேது’ கதையை படிக்கக் கிடைத்தது. சேது வெர்ஷன் ஒன்றுக்கும் அந்தக் கதைக்கும் பத்து சதவிகித ஒற்றுமை இருந்தால் அதிகம். ஆனாலும் பழைய சேதுவைப் படிக்கும் யாருக்கும், அவர் கல்கி கதையைப் படித்தவராக இருந்தால் கல்கி நினைவு வராமல் போகமாட்டார்.

அசாதாரணமான நிகழ்வுகள் பூகோள எல்லைகளைக் கடந்து இரண்டு படைப்பாளிகளை ஒரே நிகழ்வின் அடிப்படையில் எழுத வைத்திருக்கலாம். எழுதத் தூண்டுகிற சம்பவம் தவிர வேறு எந்த விதமான பொதுத் தன்மையும் கொள்ளாது இவர்கள் இருப்பதால் எழுத்தின் நடையும், வீரியமும், கருவும், உருவும் எல்லாமே இரண்டு படைப்புகளிலும் வேறுபட்டு வரலாம். வரும்.

அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு நாவல் முடிவில் வரும் சம்பவம் மறக்க முடியாதது – கதைசொல்லியான சந்திரசேகரன் 1947-ல் ஹைதராபாத் கலவரங்களின் போது ஒரு விசித்திரமான சூழலில் சந்திக்கிற பெண் பற்றியது. சுய உணர்வே இல்லாமல் யந்திரமாக பைஜாமா நாடாவை அழிக்கிற அந்தப் பெண்ணின் செய்கையில் அவன் நிலைகுலைந்து போய் நிற்பதோடு நாவல் முடியும்.

உருது –இந்தி எழுத்தாளர் சதத் உசைன் மாண்டோவின் ‘கோல்தோ’ (திற) சிறுகதையைப் படித்தபோது உடனடியாக அ.மி நினைவுக்கு வந்தார். சதத் உசைன் கதை அதே 1947-ல் நாட்டைத் துண்டாடிய இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து எழுந்த பாலியல் வன்முறையும் இனப் படுகொலையுமாக இருண்ட காலகட்டத்தைப் பற்றியது. பாலியல் வன்முறைக்கு இலக்கான இளம் பெண் ஒருத்திக்கு அவசர மருத்துவ சிகிச்சை தர ஒரு மருத்துவ மனைக்கு அவள் எடுத்துச் செல்லப்படுவாள். சிகிச்சை அளிக்க வந்த டாக்டர், அறையில் இருட்டு மண்டி இருந்ததால், படுத்த படுக்கையாக இருக்கும் அந்தப் பெண்ணை மருத்துவப் பரிசோதனை செய்ய முடியாமல், ஜன்னல் வெளிச்சத்தை உள்ளே வர அனுமதிக்க, ஜன்னல் திரைப்பக்கம் கைகாட்டி, அதை சற்றே விலக்கச் சொல்வார் –‘கோல்தோ’. பாதி மயக்கத்தில் இருந்த இளம்பெண் இதைக் கேட்டதும் உடனே உடுப்பை உயர்த்துவாள். அ.மி கதை போல் இதுவும் மனதை நெகிழ வைப்பது.

இந்த சம்பவம் அரசியல் கொந்தளிப்பு மிகுந்த 1947-ல் உண்மையாக நடந்து இரண்டு எழுத்தாளர்களையும் பாதித்திருக்க வாய்ப்பு உண்டு. சதத் உசைன் கதையை முந்திப் படித்து பதினெட்டாம் அட்சக் கோட்டை அடுத்து எடுத்திருந்தால் உசைன் நினைவு வந்திருப்பார். இந்தச் சம்பவம் தவிர வேறு எந்த விதத்திலும் ஒற்றுமை இல்லாத படைப்புகள் இந்த இலக்கிய பிரம்மாக்கள் படைத்தவை. வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பது போல் ஒற்றுமையில் வேற்றுமையைக் காண்பதும் சுவாரசியமானதே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2022 18:57

November 27, 2022

நண்டுமரம் சிறுகதைத் தொகுதியிலிருந்து ‘கூப்பிடறாங்க சார்’

கூப்பிடறாங்க சார்

 

நீங்க இதை நம்பப் போறது இல்லேன்னு தெரியும். வருஷம் 2000 ஞாபகம் இருக்கா? அப்போ நான் அமெரிக்கா வாசி. கலிபோர்னியாவிலே இருந்தேன். கால் இல்லாமக் கூட கலிபோர்னியாவிலே இருந்துடலாம். கார் இல்லாம முடியாது. கார் இல்லாதது தானே என் பிரச்சனை.

 

எனக்கு கம்ப்யூட்டர் புரகிராமிங் சுமாரா வரும். தெக்ககத்தி ஆளு. ஏதோ படிச்சு ஏதோ எழுதி பாஸ் செஞ்சு, காரைக்குடி காலேஜ்லே பி.ஈ வாங்கி கையில் எடுத்துக்கிட்டு, கம்ப்யூட்டர் கம்பெனியிலே செருப்புத் தொடைக்க சேர்ந்து ஆச்சு பதினஞ்சு வருஷம். இப்போ அங்கேயே   சாதா புராஜக்ட் மேனேஜர்.

 

கொத்தடிமை வர்க்கம். சென்னை கத்தரி வெய்யில்லே டை கட்டி,, கோட் போட்டுக்கிட்டு நிக்கணும்.  ஜெனரல் மேனேஜர், வைஸ் பிரசிடெண்ட், ஜியோ ஹெட்  இப்படி தெய்வங்களை கொண்டாடணும். அதுங்க வண்டை வண்டையாத் திட்டி முகத்திலே உமிஞ்சாலும் புளகாங்கிததோடு வழிச்சுப் பூசிக்கிட்டு கும்புடணும். தொரை அமெரிக்காவிலே இருந்து வரும்போதெல்லாம் அவனும் சேர்ந்து பட்டையைக் கழட்டுவான். சளைக்காம, இன்னும் திட்டுங்க எசமான்னு சிரிக்கணும். மத்தபடி செஞ்ச பிராஜக்ட் வேலைக்கு கறாரா காசு வாங்கிப் போடணும். லேசுலே தர மாட்டானுங்க.

 

’உன் இங்கிலீஸ் முன்னே பின்னே இருந்தாலும் சரிதான். திட்டத் திட்டத் திண்டுக்கல்லுனு நிக்கறியே அதான் கம்பெனிக்கு வேணும். கலிபோர்னியாவிலே கூப்பிட்டு விட்டு நிக்க வச்சு திட்ட ஆள் கிடைக்குமான்னு கேட்டாங்க. போய்ட்டு வா’ன்னு மேலிட உத்தரவு.

 

பிராஜக்ட் ஏற்கனவே ஒரு வருஷமாப் போய்ட்டு இருக்காம். நம்ம பிள்ளைங்க நூறு பேர் அங்கே குடியும் குடித்தனமுமா செட்டில் ஆகிட்டாங்களாம். நீயும் போய் ஜோதியிலே கலந்துக்கோன்னு விரட்டினாங்க.

 

சின்ன ஊரு. அங்கே சின்னதா ஒரு வீடு. மர வீடு. நமம பையன் ஒருத்தன். ஜெய். அதான் பேரு. அவன் கூட தங்கறதா ஏற்பாடு. ஏர்போர்ட்டுக்கு வந்து கூட்டிப் போனான். எனக்கும் அவனுக்கும் பத்து பதினஞ்சு வ்யசாவது வித்தியாசம் இருக்கும்.  ஜூனியர் சாப்ட்வேர் எஞ்ஜினியர். நம்மூர்லே சுண்டைக்காய் பதவி.  ஆறு மாசத்துக்கு ஒரு தடவை தலையெழுத்தை தீர்மானிக்கறது பிராஜக்ட் மேனேஜர்ங்கறதாலே ரொம்ப மரியாதையா இருப்பாங்க இந்த வர்க்கத்திலே இருக்கற பசங்க. அப்படி குனிஞ்சு வளஞ்சு கும்மியடிச்சுட்டு அமெரிக்கா போய் ஒரேடியா நிமிர்ந்தவன் இந்த ஜெய்.

 

கையைக் குலுக்கினதுமே விருட்டுனு பிடுங்கிக்கிட்டு., ஃபிளைட் மூணு மணி நேரம் லேட் ஆனதுக்கு ரொம்ப சலிச்சுக்கிட்டான். ஏம்பா ஆபீஸ்லே தானே ஏற்பாடு செஞ்சாங்கன்னேன். நீங்க போன் பண்ணியிருக்கலாமே … சுதாரிப்பா இல்லாட்ட இங்கே பிழைக்கறது கஷ்டம்னு முணுமுணுத்தான். என்னமோ அங்கேயே பொறந்து சினிமாவிலே குடும்பப் பாட்டு பாடி முடிக்கறதுக்குள்ளே அங்கேயே சடசட்ன்னு வளர்ந்து நிக்கற மாதிரி. நேரம்.

 

’பெட்டியிலே மூட்டைப் பூச்சி இருக்குமா’?

 

இல்லேன்னு சத்தியம் பண்ணிட்டு நான் அந்த பிரம்மாண்டமான பெட்டியை தேசத் தலைவர் செத்துப் போய் பீரங்கி வண்டியிலே வச்சுத் தள்ளிட்டு ஊர்வலம் போகிற மாதிரி உருட்டிட்டு வந்தேன். தோள்லே ரெண்டு மெகா சைஸ் பை. அதுலே ஒண்ணு லாப் டாப் கம்ப்யூட்டர். மற்றதில் தொழில் சம்பந்தமா புத்தகங்கள்.

 

தூக்க வேண்டியதைத் தூக்கி மாட்ட வேண்டியதை மாட்டி உருட்ட வேண்டியதை உருட்டிக் கிட்டு தடுமாறறேன். நம்மாள்   செக்யூரிடி மாதிரி அமர்த்தலா கூடவே வரான். ஒரு பழைய கார் பக்கம் ஊர்வலம் முடிஞ்சுது.

 

மூட்டையைத் பூட்டுலே வைங்கன்னான ஜெய். தரையிலே வச்ச பெட்டியை அவசரமா  தூக்கிட்டு நின்னேன். பூட்டுலே வைக்கறது அப்படின்னா?

 

பூட்டுனா நாம இங்கே டிக்கின்னு சொல்றோமே அதுவாம். தெரியாதுப்பான்னேன். தெரிஞ்சுக்கணும்-ங்கறான். ஏண்டா நீ ஒரு வருஷம் முன்பு வரை டிக்கின்னு சொல்லிட்டுத் தானே உள்ளூர்க் கடையிலே டீ ஆத்திக்கிட்டிருந்தே? கேட்க முடியாது.  எனக்கு முந்தி இங்கே வந்தவன்.

 

கார் ஓட்டத் தெரியுமான்னு கேட்டான். வெஸ்பா ‘ஸ்கூட்டர்லே ஒரு ஆயுசுக் காலம் கழிஞ்சவன். எதோ கொஞ்ச நாளா இந்த மேனேஜர் உத்தியோகம். கையிலே கொஞ்சம்  காசு. வீட்டுலே கார் வாங்கி நிறுத்தினேன். கத்துக்கிட்டு லைசன்ஸ் வாங்கறதுக்குள்ளே இங்கே தொரத்தி விட்டுட்டானுங்க.

 

சாங்கோபாங்கமா ஆரம்பிச்சேன். என்னது, டிரைவிங் லைசன்ஸ் இல்லியா? ரொம்ப கஷ்டம்னு கட் பண்ணினான். பரவாயில்லே சமாளிச்சுக்கறேன்னேன். கஷடம் உங்களுக்கிலே எனக்குன்னானே பார்க்கலாம்.

 

இப்படித் தான் நான் பிணைத் தொழிலாளியா கலிபோர்னியா வந்ததும், குப்பை கொட்டினதை கூட்டிப் பெருக்கிக் காசு வாங்கினதும். சம்பளமும் முழுசா எனக்கு வராது.  ஐநூறு டாலர் பணத்தை எந்த ராஜா எந்தப் பட்டணத்துக்குப் போனாலும் டாண்ணு ஜெய்க்கு மாசம் பொற்ந்ததும் கொடுத்திடணும்னு ஒப்பந்தம். வாடகையிலே என் பங்காம்.  அதிகம் தான். என்ன செய்ய?  அதைத் தவிர சாப்பாட்டுச் செலவு, மின்சாரம், கேபிள் டிவி, ஃபோன் இப்படி அந்தந்த மாசம் வர்ற தொகையை ரெண்டா வகுத்து தரணும்.

 

வேலை பார்க்கற இடம் இருக்கே, ஏன் கேக்கறீங்க, சடை ஆபீஸ். தைவான் காரனுங்களும் ஜப்பான்காரன்களும் நாள் முழுக்க மீட்டிங் போட்டு நம்மை வாய் பார்க்க வச்சுட்டு மோஷி மோஷின்னு பேசிட்டே இருப்பாங்க. இதுக்கு நடுவுலே அங்கேயே உட்கார்ந்திருக்கற என் லோக்கல் தலைவன் எதுக்குன்னு தெரியாம திட்டறது, மெட்றாஸ்லே இருந்து தொலைபேசி, விடியோ கான்பரன்ஸிலே அங்கத்திய கடவுள் திட்டறது, டோக்கியோவிலே கஸ்டமர் பக்கம் சிநேகிதமா உக்காந்து எங்க சேல்ஸ் நிர்வாகி வயசு வித்தியாசம் பார்க்காம, வாய்யா போய்யான்னு கத்தறது எல்லாம் உண்டு.  நரகம்.

 

வீட்டிலேயா, கேக்கவே வேணாம். கட்டின பொண்டாட்டியை கூட்டிவந்து குடும்பம் நடத்தினாக் கூட இம்புட்டு டார்ச்சர் இருக்காது. வீட்டுலே எப்பவும் இருபது பாக்கெட் உருளைக்கிழங்கு வறுவல், பியர், விஸ்கி இதெல்லாம் இருக்குமே தவிர,  அரிசி, பருப்பு, சக்கரை எதுவும் ஸ்டாக் இருக்காது.

 

ஒரு நாள் வேலை முடிச்சு வந்த போது கன்னா பின்னான்னு பசி. ஏம்ப்பா, சமைக்கலாமான்னு மெதுவா ஆரம்பிச்சேன். கூட்டு கொள்முதல், கூட்டு சமையல் ஆச்சே. டுர்யோன்னு நான் மட்டும் பொங்கித் திங்க முடியுமா?

 

வரும்போது தான் ஆபீஸ்லே கேக்கும் கோக்கும் அடிச்சோமே. அதுக்குள்ளே பசியான்னு ஆச்சரியப்பட்டான் ஜெய்.

 

நான்  எங்கே கொட்டிக்கிட்டேன்? ஜ்பபானிய துரை மீட்டிங்னு ஓலை அனுப்பினான். பேக்டரியில் நட்டு போல்ட் பண்ற மாதிரி துண்டு துணுக்கா ஆயிரம் பத்தாயிரம் சாப்ட்வேர் விள்ளல் செஞ்சு அப்புறம் அதை எல்லாம் இணைச்சு கதையை முடிக்கலாம்ங்கறான் மோஷி மோஷி.   சிவனேன்னு நான கேட்டுட்டு உக்காந்திருந்த நேரத்துலே இவன் கேக் மொசுக்கியிருக்கான்.

 

ஜெய் சமைக்க முடிவெடுக்கட்டும்னு நாலு ரொட்டியை மோரிலே தொட்டுத் தின்னுட்டு கொட்டுக் கொட்டுன்னு தரையிலே உக்காந்திருந்தேன்.

 

நம்ப முடியலியா? எது, மோரா? கலிபோர்னியாவிலே எல்லா சூப்பர் மார்க்கெட்லேயும் பட்டர் மில்க் அட்டைப் பொட்டியிலே அடைச்சு விக்குதுங்க. அப்புறம்? தரையிலே உக்காந்தா?ஆமா, அமெரிக்கான்னு பேரு, வீட்டுலே பேருக்கு ஒரு நாற்காலி, சோபா கிடையாது. ரெண்டு ரக், அதான், மேலே போத்திக்கற மெத்தை. அதை விரிச்சே இடம் அடைச்சுடுத்து. பர்னிசர் வாடகைக்கு எடுத்தா அதை அடுத்த வீட்டுலே தான் போடணும். காசு ஏது?

 

உட்கார்ந்த படியே அசந்து இருக்கற போது உலுக்கி எழுப்பினான் ஜெய். ஆபீஸ்லே உழைச்சிட்டு, பசிக்கு சாப்பிட முடியாம, உருளைக்கிழங்கு வறுவலைத் தின்னு மோர் குடிச்சுட்டுக் கிடக்கறவன் கஷ்டம் தெரியாத பய. என்னாடான்னு கேட்டா, வா எல்லாரோடயும் வந்து பேசுங்கறான். கண்ணு சொருகுது. தலை சுத்துது. அங்கே போனா மொத்த டீமும் தண்ணியடிச்சுட்டு உக்காந்து கெக்கெக்கேன்னு சிரிக்கறானுங்க. ஜப்பான் பேங்குலே கணக்கு எப்படி திற்க்கறதுன்னு இந்த வெள்ளைப் பலகையிலே வரைஞ்சு விளக்கு அப்படீங்கறான், யாரா? சொன்னேனே உள்ளூர்த் தெய்வம்.

 

காலையிலே எழுந்ததும் போடா நீயுமாச்சு உன் சகவாசமுமாச்சுன்னு ஆஃபீஸுக்கு நடந்து போயிட்டேன்.  வீட்டுக்குப் பின்னாடி பெரிய வெட்டவெளி. கம்பி போட்டு வச்சிருக்கும்.   நடுவிலே சின்னதா ஒரு கதவு. அதைக் கடந்து, கம்மாய்க் கரை மாதிரி நீண்டுக்கிட்டே போகும். தண்ணியிலே எதேதோ பற்வைகள் வந்து இறங்கும். ஜிவ்வுனு எவ்விப் பறக்கும். பாத்துக்கிட்டே பத்து நிமிஷம் நடந்து மணல் சரிவு இறங்கினா, ஆபீஸ்.  நடக்க ஆரம்பிச்சுட்டேன்.

 

லேட்டாக ஆபீஸ் போய்ச் சேர்ந்ததுமே இண்டர்காம்லே உள்ளூர் தெய்வம் கூப்பிடறான். அவசரமாம். போனா அங்கே மெட்றாஸ் சாமிகளும், வாஷிங்டன் சாமிகளும். குட்டையா ஒரு ஜப்பானிய தேவதையும் கேவலமாப் பார்க்கறாங்க.

 

ஜப்பானிய தேவதையை ஏதோ கேட்டார் எங்க தெய்வத்தின் தெய்வம். அது வெளியே போனதுமே, உள்ளூர் கடவுள் என்கிட்டே எகிறினான் – ’யோவ், நீ பாட்டுக்கு என்ன தில் இருந்தா இங்கே கெட்ட காரியம் பண்ணிட்டு இருப்பே’. அவன் சொன்ன வார்த்தையை இங்கே போடறது சரியில்லே.  வாய்யா போய்யா கூட நம்ம வாயிலே வராது. அந்த ஃப வார்த்தையையா சொல்வேன்.

 

அவன் காரிலே வந்துட்டு இருக்கற போது பார்த்தானாம். நான் சரிவிலே இறங்கி வந்துட்டிருந்தேனாம். சர்க்கார் சொத்தாம் மதகுக்கரை. அத்துமீறி உள்ளே புகுந்தேன்னு பிடிச்சு கேஸ் போட்டா, கலிபோர்னியா முழுக்க கம்பெனி பெயர் ரிப்பேராகிடுமாம்.

 

அன்னிக்கு பிஸ்ஸா ஆர்டர் பண்ண சொன்னா, இவர் பாட்டுக்கு நைன் லெவனுக்கு போன் அடிச்சிருக்கார். படை பட்டாளமா கிளம்பி வந்துட்டானுங்க.. எல்லோரையும் துருவித் துருவி விசாரிச்சுட்டுப் போனாங்க.

 

ஜெய் போட்டுக் கொடுத்தான். என் தப்பு தான். பாதி நம்பரை காதுலே வாங்கிட்டு 911-க்கு அடிச்சேன். அது போலீஸ் எமர்ஜென்ஸி நம்பராம்.

 

பிராஜக்ட் மானேஜருக்கு இந்த காமன் சென்ஸ் கூடவா இருக்காது? பெருந் தெய்வம் எகிற சும்மா பார்த்துக்கிட்டு நின்னேன். முழிச்சுக்கிட்டு நின்னா எப்படி? கடவுள் மறுபடியும் என்னை கெட்ட காரியம் செய்யச் சொன்னது.

 

எத்தனையோ சீறும் சிறப்புமா நிர்வாகியா இருந்துட்டு இப்போ கண்ட பயலும் இளக்காரம் பண்ணித் திட்டறான்னு தொண்டை கம்மிடுச்சு. கையில் சம்பளம் வந்தாலும் கிளம்பிடலாம். எங்கே கிளம்ப. பேங்க் போக, ப்ளேன் டிக்கட் வாங்க இப்படி எல்லாத்துக்கும் சக குடித்தனக்காரன் உதவி வேண்டியிருக்கு. அடுத்த மாசம் என் கணக்கில் இருந்து வாடகை முதலானதுக்கு என் பங்குப் பணம் ஜெய்யோட கணக்குக்கு நேரடியாகப் போய்ச்சேர அனுமதி கொடுத்திருக்கேன். மிச்சம் இருக்கக் கூடிய பணத்திலே அடுத்த மாசம் பூரா மோர் வாங்கலாம்.

 

சீன்னு போயிடுச்சு. சாயந்திரம் சீக்கிரமே பிச்சுட்டு கிளம்பிட்டேன். கம்மாய்க் கரை வழியாப் போனாத்தானே திட்டறான்? பெரிய பாதையிலே நடந்து போனேன். கூட பதினைந்து நிமிஷம் ஆகும். ஆகட்டும்.

 

பின்னால் விர்ருனு வந்த கார், முன்னாலே சீறிக்கிட்டு பாயற ராட்சச டிரக்குனு பார்த்து பார்த்து ஒதுங்கி போய்ட்டிருக்கேன். பின்னாலே ஹாரன் சத்தம். கலிபோர்னியாவிலேயே அந்த நிமிசத்துலே அந்த ஹாரன் மட்டும் தான் சத்தம் போட்டிருக்கும். அமைதியான இடமாச்சே அது.

 

ஜெய் தான். மன்னிப்பு கேட்க உள்ளூர் தெய்வம் அனுப்பியிருப்பான்.

 

ஏன் சார், நீங்க் பாட்டுக்கு முடி போச்சுன்னு கிளம்பிட்டீங்க. இன்னிக்கு சாய்ந்திரம் உங்களுக்கு முடி வெட்ட அப்பாயிண்ட்மெண்ட் போட்டிருக்கோமே. போன் பண்ணி எகிரறா கொரிய பொம்பளை. என் நம்பர்லே கால் வந்துது.

 

நிர்கதியாகக் காரில் ஏறினேன். அவன் கோபத்தோடு முறைத்தபடி வண்டியை கிளப்பினான். ’சீட் பெல்ட் போட்டுக்க சொல்லி குழந்தை கிட்டே சொல்ற மாதிரி ஆயிரம் தடவை சொல்லியாச்சு. கேட்க மாட்டீங்களே’னு கடிச்சான். அவசரத்தோட, பயத்தோட பெல்ட் மாட்டிக்கிட்டேன். தலையெழுத்துலே இதுக்கு மட்டும் தனி எழுத்தா இருக்கும்? அதே கோழிக் கிறுக்கல்தான்.

 

அந்த கொரியப் பொம்பளை என்னைப் பார்த்து புருபுருன்னு முணுமுணுத்திட்டிருந்தா. முடி வெட்டி, கலர் போடறேன்னு ஏதோ சாம்பலும், கருப்புமா தடவி, உக்காருன்னுட்டு எங்கேயோ கிளம்பிட்டா.  ஜெய் வாசல்லே கார்லே என்ன பண்றானோன்னு கவலைப் பட்டேன். அவ திரும்பி வந்தா.

 

’உன் மகன் போய்ட்டான். முடிச்சுக்கிட்டு போய்ச் சேரு’.

 

மகனா? ஆமா உன்னைக் கூட்டி வந்தானே அவந்தான்

 

பக்குனு போச்சு. கையிலே ச்ல்லி கிடையாது. இவளுக்குக் காசு தரணும். வீட்டுக்குப் போகணும். வழி? பசி வேறே. அதுவா முக்கியம் இப்போ?

 

’உனக்கு முடி வெட்டிக் கலர் அடிக்க காசு கொடுத்துட்டுத்தான் .போனான். .டிப்ஸ் நீ கொடு’ன்னா கொரியப் பொம்பிளை.

 

அவ கிட்டே பஞ்சப் பாட்டு பாடி பத்து டாலரை வாங்கினேன். நடக்கற போது வெறுங்கையோடு நடந்து, யாராவது அடிச்சா? காசு இல்லாம நடக்கறவன்னு தெரிஞ்சா எரிச்சல்லே கொலையே கூட செஞ்சுடுவான்.

 

திண்டாடி தெருப் பொறுக்கி ராத்திரி பத்து மணிக்குப் போய்ச் சேர்ந்தா, கதவு பூட்டியிருக்கு. உச்சத்திலே பசி. கிறக்கம். இவன் எங்கே தொலைஞ்சான்?

 

ஃபோன் போட்டா எடுக்கற வழியா இல்லை. சட்டுனு நினைவு வந்துது. பையிலே பத்து டாலர் நோட்டு.

 

விழுந்து அடிச்சு காம்பவுண்ட் கடைக்கு ஓடினா எடுத்து வச்சிட்டிருந்தாங்க. ரொம்ப கெஞ்சி, ஒரு பாக்கெட் பிரட் வாங்கினேன். மோர் காலி.

 

ராத்திரி ஒரு மணிக்கு ஜெய் வர்றதுக்குள்ளே கதவுப் பக்கம் நாய்க்குட்டி மாதிரி தரை விரிப்புலே தலை வச்சுத் தூங்கிட்டேன். தூக்கம் பிரியாமலே உள்ளே போய் படுத்து கொஞ்ச நேரத்திலே இவங்க உபத்திரவம்.

 

’சார் சார்’

 

எழுப்பி உட்கார வச்சுட்டான் போடான்னு திட்ட வாய் வருது. திட்ட முடியாத படிக்கு மிச்சத் தூக்கம் வாயை அடைக்குது. துக்கம் வேறே.

 

’சார், எங்க அப்பா சார் ஃபோன்லே’.

 

ஃபோன் மணிச் சத்தம் நின்னு போயிருந்துது. திரும்பக் கொடுத்தேன்.

 

’அஞ்சு நிமிசத்திலே திரும்பக் கூப்பிடுவார் சார். ஒரு மணி நேரமா அதான் செஞ்சுக்கிட்டிருக்காரு’.

 

’என்ன விஷயம்’?

 

’வந்து, ஊர்லே எனக்கு பொண்ணு பார்த்து எங்கப்பா நிச்சயம் செஞ்சிருந்தாரு. பத்திரிகை அடிச்சாச்சு அடுத்த மாசம் அஞ்சாம் தேதி கல்யாணம்’.

 

’நல்ல விஷயம் தானே’?

 

’எங்கே சார்.. பொண்ணு ஓடிப் போய்ட்டா. பாய் பிரண்ட் இருக்கானாம்’.

 

அவன் அழுகையை எப்படி அடக்கினாலும் முகம் கோணிப் போச்சு. ஒரு செகண்டுலே கட்டெல்லாம் தளர்ந்து ஓன்னு அழ ஆரம்பிச்சான் . எனக்கு திடீர்னு நூறு யானை பலம் வந்த மாதிரி இருந்தது.

 

ஃபோன் திரும்ப அடிச்சுது. நான் அவ்ன் கிட்டே இருந்து பிடுங்கினேன்.

 

’கவலைப் படாதீங்க. நான் உங்க தம்பின்னு வச்சுக்குங்களேன்..இந்தப் பொண்ணு இல்லாட்ட இன்னொருத்தி. யார் யாருக்கெல்லாம் இன்விடேஷன் அனுப்பினீங்களோ எல்லோருக்கும் போன்லே காண்டாக்ட் செஞ்சு..’

 

நான் உற்சாகமா சொல்லிட்டிருந்தேன். அவன் பயபக்தியோடு என் முகத்தைப் பார்த்துட்டு நின்னான். ஃபோனுக்கு அந்தப் பக்கமும் மரியாதையோடு என் வாக்குக்குக் கட்டுப்பட்டுக் காத்திருக்காங்க. உள்ளபடிக்கே சுகமான சூழ்நிலை.

 

அனுபவிச்சபடி நிம்மதியாத் தூங்கினேன்.

 

கொஞ்ச நேரம் தான். திரும்ப எழுப்பி விட்டான். தூங்க விடமாட்டியான்னு எகிறினேன். ’சாரி சார். உங்களுக்கு கால். வீட்டுலே இருந்து கூப்பிடறாங்க’.

 

அவச்ரமா அலோ சொன்னேன்.

 

இவ தான். ’என்னங்க.. தூங்கறீங்களா.. உங்க தம்பி… சிநேகிதிப் பொண்ணை ரிஜிஸ்தர் கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.. ஒரே களேபரம் இங்கே.. ஏற்கனவே நிச்சயம் ஆன பொண்ணாம்.. உங்க ஆபீஸ் தானாமே அந்தப் பையன்’.

 

நான் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செஞ்சேன்.

 

காலையில் உலகம் எப்படி வேணுமானாலும் போகட்டும். இந்த நிமிஷம் நான் தெய்வம். எல்லாம் என் கட்டுப்பாட்டில் இருக்கு. சகலமும்.

 

ஃபோனை தலைமாட்டில் வைத்தபடி திரும்பப் படுத்தேன்.

 

(குமுதம் 2015)

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 27, 2022 19:22

November 23, 2022

பரபரப்பான ப்ரஸீல் – ஸ்வீடன் கால்பந்தாட்டப் போட்டி

பந்து

 

கோஷ்பாபு விருந்துக்கு வந்த ராத்திரி தான் ஏலிக்குட்டி பொரித்த மீனும், மிளகூட்டானும், புளி இஞ்சியும் உண்டாக்கியது. உலகக் கோப்பை கால்பந்தாட்ட அரையிறுதிப் போட்டியில் பிரஸில் ஸ்வீடனை கெலித்த கோடைகால ராத்திரி அது.

விளையாட்டு தொடங்கி எண்பதாவது நிமிஷத்தி, வலந்தரையிலிருந்து ஜார்ஜின்ஹோ மடக்கித் திருப்பிவிட்ட பந்தைத் தலையால் தாழ முட்டி, ரொமாரியோ கோல் போஸ்ட்டை அதிரடித்த அந்த உக்ரன் கோலை, லேசில் மறக்க முடியுமா?

ஓராயிரம் தடவை மாப்பு சோதிக்கிறேன். இதுதான் என்னிடத்தில் ஒரு சங்கடம். சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டுக் கால்பந்தைத் துரத்தி ஓடுவது.

”பந்துகளி.. சதா நினைப்பும் பேச்சும் அதல்லாதே வேறே என்ன உண்டு? மரமன் கன்வென்ஷனுக்குப் போக லீவு இல்லை. மரடோனாவோ வல்ல வேறே தெண்டியோ கோல் அடிக்கிறானாம். தெருவிலே போற கிளவன்மாரெ கூட்டி வச்சு சோறும் கறியும் விளம்பிக் கொடுத்துப் பக்கத்தில் இருத்தி, நடு ராத்திரிக்கு டி.வி. காண வேண்டியது. பின்னே நாளெ பகல்லே சுகமாயிட்டு ஒரு உறக்கம். நரகம் தான் உங்களுக்கு. சர்வ நிச்சயமாயிட்டு”.

தீனி மேசையில் வைத்துச் சோறு பரிமாறிக்கொண்டே ஏலிக்குட்டி உதிர்த்ததில் நான் நிறையக் குறைத்து வங்காளியில் கோஷ் பாபுவிடம் சொன்னபோது, அவர் மீன் முள்ளைத் துப்பியபடி கேட்டார்:

“தோமஸே, இந்த மராமன் கன்வென்ஷன் தான் என்ன?”

 

 

 

 

நாங்கள், அதாவது தோமஸ் வர்க்கீஸான நானும், ஏலிக்குட்டி என்ற என் வீட்டுக்காரி எலிசபெத்தும் சுரியானிகள். அதாவது சிரியன் கிறிஸ்துவ மதம். வருஷம் ஒரு தடவை கேரளத்தில் ரானி பக்கம் மராமன்னில் மார்பப்பா என்ற எங்கள் மதகுரு மாநாடு கூட்டி, நாடு வாழவும், ஜனங்கள் கர்த்தரை விசுவசித்து சுபிட்சமாக இருக்கவும் ஆசீர்வதிக்கிற வழக்கம்.

இந்த மாரமன் கன்வென்ஷனுக்கு ஒரு தடவை கூடப் போகாததாலோ என்னவோ எங்களுக்கு இன்னும் புத்திரபாக்கியம் வாய்க்கவில்லை என்று ஏலிக்குட்டியின் அப்பச்சனும் என் பிரியமான மாமனாருமான மத்தாயி என்ற மட்டாஞ்சேரி மாத்யூ அபிப்பிராயப்பட்டாலும், என் தீவிரமான கால்பந்தாட்ட வெறியைப் பற்றி இதுவரை ஒரு குறைச்சலும் பட்டதில்லை.

ஆனால், இந்த ஏலிக்குட்டியின் விஷயம் வேறே..

”பந்து விளையாட்டு பார்க்கறீங்க, சரி. அதுக்கு இப்படி பெங்காலி ஸ்வீட் கடையில் அழுக்குத் துணியில் பால் வடிகட்டித் தொங்கவிட்டு மலாய் எடுக்கற மனுஷரைத்தான் துணைக்குக் கூப்பிடணுமா? வயசும் அந்தஸ்தும் தாண்டியா சிநேகம்?”

கை கழுவப்போனபோது அவள் கேட்க, நான் பதிலாகச் சொன்னது, “மிளகூட்டானில் உப்பு அதிகம்”.

இந்த தில்லி மாநகரில் சலவை இயந்திரமும், கலர் டெலிவிஷனும் மற்றதும் விற்கிறதான கம்பெனியில், சுமாரான சம்பளம் தருகிறார்கள் என்று உள்ளூர் கெல்ட்ரான் உத்தியோகத்தை உதறி, கட்டியவளோடு புறப்பட்டு வந்தவன் நான். எந்தக் காலத்திலோ கல்கத்தாவிலிருந்து கிளம்பி வந்து இங்கே பெங்காலி மார்க்கெட் மிட்டாய்க் கடையில் சகலமுமான எடுபிடியாக இருப்பவர் கோஷ் பாபு என்ற அறுபது வயதைத் தொட்ட ரொபீந்தர் கோஷ்.

இரண்டு பேரையும் ஒரே நேர்கோட்டில் இணைத்தது கால்பந்து.

கன்னாட்பிளேஸ் நடைபாதையில் தூசிதட்டி வாங்கிய, கால் பந்தாட்டம் பற்றிய ஒரு பழைய புத்தகத்தைக் கக்கத்தில் இடுக்கி வைத்துக் கொண்டு ஸ்வீட் ஸ்டால் படியேறிய ஒரு புண்ணிய நிமிஷம், மண் ஜாடியில் ரசகுல்லா நிறைத்துக் கொண்டிருந்த கோஷ் பாபு கண்ணில் நான் பட, ஆரம்பமானது இந்த சிநேகம்.

”பாபு மோஷாய் .. இதென்ன அதிசயமாக பீலே(Pele) படத்தோடு கரிஞ்ச்சா (Garrincha) படமும் இந்தப் புத்தக அட்டையில்? கால் வளைந்தவன் என்றாலும் புள்ளிக்காரன் நல்ல ஓட்டமும் சாட்டமும் ஆனவன் இல்லையோ?”

நான் அவரை உற்றுப் பார்த்தேன். ஒவ்வொரு வங்காளிக்குள்ளும் ஒரு கால்பந்தாட்ட ரசிகன் ப்ளஸ் கால்பந்தாட்ட பக்தன் ப்ளஸ் காளி உபாசகன் ப்ளஸ் ‘ஜொல்புஷ்ப்’, அதாவது தண்ணீர்ப் பூவான மீன் பிரியன் உண்டு. நெடுநெடுவென்று கருத்து மெலிந்து வைக்கம் முகம்மது பஷீர் ஸ்டைல் வழுக்கையும், மீசையும் சிரிப்புமாக விசாரிக்கும் இந்த வயசன் வங்காளியும் விதிவிலக்கு இல்லை.

ரஸகுல்லாவும், சந்தேஷும், மிஷ்டி தஹியும் பிடித்துப் போனது. அப்புறம் கோஷ் பாபுவும். இந்த தோமஸ் வர்க்கீஸ் அடுத்து மிட்டாய்க் கடையில் அடிக்கடி ஆஜர்.

“நான் தான் சதா வருகிறேன். நீங்க ஒரு தடவை வீட்டுக்கு வரணும்”.

விலாசத்தை ஞாபகம் வைத்துக் கொண்டு, உலகக் கோப்பை கால்பந்து ராத்திரியில் பெங்காலி மார்க்கெட்டிலிருந்து   வந்திருந்தார் கோஷ் பாபு.

மேற்படி விவரமெல்லாம் தந்தி பாஷையில் நான் ஏலிக்குட்டியிடம் சொல்லிக் கொண்டிருக்க, அலம்பிய கையை மூலக் கச்ச வேட்டியில் துடைத்துக் கொண்டு முன்னறைக்குப் போன கோஷ் பாபு விநயத்துடன் கேட்டார்  :

“தோமஸே .. தண்ணி வேணும் நிறைய..”. மிளகூட்டான் செய்கிற வேலை. எனக்கே தாகம் தான்.

வெந்நீர் சருவத்தில் பாதி சைஸுக்கு ஏலிக்குட்டி நிறைத்துக் கொடுத்த பித்தளைப் பாத்திரத்தோடு நான் முன்னறைக்குப் போக, ஏலிக்குட்டி படுக்கை அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டாள்.

கோஷ் பாபு குவளை குவளையாகத் தண்ணீர் குடிக்கலானார். நான் படுக்கையறைப் பக்கம் மெல்ல நகர்ந்து போய்த் திரும்பி வந்தபோது, டி.வியில் யாரோ பூரண சோகமாக சாரங்கி வாசிக்கிற காட்சி.

”தோமஸ் என்ன திடீரென்று காணாமல் போனது?”

கோஷ் பாபு டீப்பாயில் கிடந்த ‘கலா கௌமுதி’ பத்திரிகையைத் தலைகீழாகப் பிடித்து விசிறிக் கொண்டே விசாரித்தார்.

எப்படிச் சொல்ல.. நான் குடியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரப் படுபாவி கால்ரா. என்ன ஒரு பெயர்!  இரண்டு பாத்ரூம்களில் ஒன்றில் அவனுடைய பழைய டூத் ப்ரஷ், பெண்டாட்டியின் உள்பாவாடை, மாமியாரின் பல்செட் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் போட்டுப் பூட்டி சாவியை எடுத்துப் போனதால், படுக்கையறைக்கு உள்ளே இருக்கும் பாத்ரூமைத்தான் உபயோகிக்க வேண்டிய கட்டாயம்.

கடியாரத்தைப் பார்த்தேன். விளையாட்டு ஆரம்பிக்க இன்னும் நிறைய நேரம் இருந்தது. கோதுமை அமோக விளைச்சலுக்கு வீரிய வித்து கண்டுபிடித்ததைப் பற்றி டி.வியில் அந்த அகால நேர்த்தில் விவரமான டாக்குமெண்டரி காட்டிக் கொண்டிருக்க, சனியனை அணைத்து விட்டு, ஏர் கூலரை ஆன் செய்து, கோஷ் பாபு பக்கத்தில் உட்கார்ந்தேன்.

”பாபு, உலகக் கோப்பைப் பக்கமெல்லாம், நம்முடைய புண்ணிய பூமி, ஹமாரா தேஷ், அவர் ஓன் இண்டியா எட்டிக்கூடப் பார்க்கவில்லையே, ஏன்?”

கோஷ் பாபு வாயைக் கிண்டினேன். பேசாவிட்டால் தூக்கம் வந்துவிடும்.

“தோமஸே, உமக்குத் தெரியுமோ? ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுலே நம்மூர் டீம் செலக்ட் ஆனது. ஆனா பாரும், நிதி நிலைமை சரியில்லேன்னு அனுப்பலே. ஃபைனல்ஸ்லே பிரேஸிலும் உருகுவேயும் மோதின அந்த வருஷம் தான் நான் மோகன்பாகன் டீமில் செண்டர் ஃபார்வர்டா விளையாடினேன்”.

மறுபடி தண்ணீர் குடித்தபடி படு உற்சாகமாக கோஷ் பாபு சொல்ல, நான் சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

ஒரு வருஷப் பழக்கத்தில் நான் கோஷ் பாபுவிடம் கவனித்த கெட்ட பழக்கம் இதுதான். சந்தடி சாக்கில் இப்படிச் சரடு விடுவது.

தோமஸ் வர்க்கீஸ் சாது. சத்தியவான். கால் பந்தாட்ட பிராந்து பிடித்தவன். வங்காளிகள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவன்.  அது கொண்டு, கோஷ் பாபு சொல்கிற சகலமானதையும் நம்ப முடியாது என்பதையும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறவன். சரிதானே?

“வர்க்கியேட்டா, ஒன்னு வரணும் உள்ளே”.

ஏலிக்குட்டி படுக்கை அறையிலிருந்து அன்பொழுகக் கூப்பிட்டாள். நான் போய் நோக்க, அவள் நல்ல நிறமுள்ள மேக்சிக்கு மாறியிருந்தாள். முந்தின வாரம் தான் கரோல்பாக்கில் வாங்கி வந்தது. நைட்லாம்ப் வெளிச்சத்தில் நல்ல வசீகரமான இருப்பு அது.

மேட்ச் ஆரம்பிக்க ஒரு மணி நேரம் ஆகும். அது வரைக்கும் ஏலிக்குட்டியை மடியில் ஏற்றி வைத்துக் கொண்டு காலதேச வர்த்தமானங்கள் சொல்லி இருந்து … எல்லாம் கூடி வந்தால் அடுத்த மாதம் தபால் அட்டையில் அப்பச்சனுக்கு சந்தோஷ சமாசாரம் எழுதிப் போடலாம்.

வழியில்லை. வெளியே கோஷ் பாபு.

நான் யோசனையில் இருக்க, ஏலிக்குட்டி படு ஸ்டைலாகச் சொன்னாள் : ”மிஸ்டர் தோமஸ் .. என் ப்ரியப்பட்ட ஹஸ்பெண்ட் .. என்ன மேக்ஸி என்று வாங்கி கொடுத்தீர்? பாரும் இதன் லட்சணத்தை ..”

அவள் எழுந்து நிற்க, தொடைப் பக்கம் விபரீதமான கிழிசல்.

“அங்கே என்ன நோட்டம் வேண்டியிருக்கு? ஒரு உடுதுணி வாங்கித் தர யோக்யதை இல்லை. சொல்லத்தான் கூப்பிட்டது. போய் மேட்ச் பாரும். சாயா உண்டாக்கி மேஜையில் வச்சிருக்கேன். தூக்கம் விழித்து, தேச சேவையல்லவோ செய்ய உத்தேசம். ரசகுல்லா மாஸ்டருக்கும் ஊற்றிக் கொடுங்க… போங்க”.

ஏலிக்குட்டியின் தொடையழகை சாவகாசமாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானத்தோடு, பிளாஸ்க்கைத் தோளின் குறுக்கே நம்பூத்ரி பூணூல் போல மாட்டிக்கொண்டு முன்னறையில் மீண்டும் பிரவேசிக்க, ‘ஃபுட்பால் புள்ளிவிவரங்கள்’ புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார் கோஷ் பாபு.

”தோமஸே, ஆஃப் சைட் கோல் offside goal என்று தீர்மானிக்க எத்தனை எதிராளி ஆட்டக் காரர்கள் நிற்க வேண்டும்? இதில் படித்துச் சொல்லும்”. கோஷ் பாபு கேட்க, நான் சாயாவை ஊற்றிக் கொடுத்தேன். எனக்கே சரியாகத் தெரியாத விவகாரம் அது. புத்தகத்தைப் புரட்டப் பொறுமையும் இல்லை.

”ஆப்சைட் கிடக்கட்டும். சேம்சைட் கோல் போட்டவனுக்குக் கொலம்பியாவில் வந்த கதிகேட்டைப் பார்த்தீர்களா?”

பேச்சை மாற்றினேன். பத்து நாள் முன்னால் தான் அமெரிக்காவுக்கு எதிரான மேட்சில் சேம்சைட் கோல் அடித்த கொலம்பியாக்காரன் Escobar எஸ்கோபாரை மெஷின் கன் வைத்து நிதானமாகச் சுட்டுப் பரலோகத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்பியிருந்தார்கள் புண்ணியவான்கள்.

ஸ்லோ மோஷனில் சாயா குடித்தபடி, லத்தீன் அமெரிக்க கால்பந்து விளையாட்டின் கலையம்சங்கள், மாஃபியா, Diego Maradona தோகோ மரடோனாவை, அபினோ வேறே சமாசாரமோ உருட்டி விழுங்கியதாக, விளையாட விடாமல் விரட்டி அடித்தது, எண்பத்தாறாம் வருடம் பிரேஸில்கார மிட் ஃபீல்டரும், கேப்டனுமான சாக்ரட்டீஸ் அடித்த கத்தரிக்கோல் உதை விவரம், இத்தாலிய கோச் அரிகோ சாச்சியின் வியூக அமைப்பு என்று கலந்து கட்டி கோஷ் பாபு பேசிக்கொண்டே போக, எப்போது தூங்கிப் போனேன் என்று தெரியாது.

ஏலிக்குட்டியின் வடிவான தங்கை கிரேசிக்குட்டியோடு கால் பந்து மைதானத்தைச் சுற்றிச் சுற்றி ஓடுவதாகக் கனவு கண்டு சடாரென்று விழித்துக் கொண்டபோது, ஃப்ரீ கிக்கில் Romario ரொமாரியோ இடது காலால் சவட்டிய பந்தை ஸ்வீடன் கோல் கீப்பர் தடியன் செல்லமாகப் பிடித்து இடுப்பிலே குழந்தை போல் இருத்திக் கொண்டிருந்தான்.

“இப்பத்தான் ஆரம்பிச்சது”, கோஷ் பாபு சொல்லியபடி நெளிந்தார்.

“தோமஸே, இங்கே ..”

அவர் தொடர்ந்து ஏதோ சொல்ல வாயெடுக்க, பெபட்டோ வளைத்து அனுப்பிய பந்தை ஜின்ஹோ Ginho என்ற கழுவேறி கோல் அடிக்கிறேன் பேர்வழி என்று கோல் போஸ்டுக்கு அரையடி உயரே தூக்கி அடித்துத் தொலைக்க, நான் ஒரு பச்சை மலையாள வசவை உதிர்த்தேன்.

”அவன் அவசரம் அவனுக்கு..” கோஷ் பாபு சொன்னபடி மறுபடி நெளிந்தார்.

ஆட்டம் தொடங்கி அறுபத்தொண்ணாவது நிமிஷம் என்று டி.வியில் கடியாரம் காட்டிக் கொண்டிருந்தது.  பெனால்டி ஏரியா வெளியே இருந்து, Sinho சின்ஹோவோ வேறே யாரோ உதைத்துக் கடத்திய பந்து, எதிராளி கோல்கீப்பர் Raveli ரவேலியின் நெஞ்சில் பட்டுத் தெறிக்க, என் வீட்டு வாசலில் ஏதோ களேபரமான கூச்சல்.

வாசலுக்கு வந்தேன். தெருக்கோடியில் சின்னதாக ஒரு கூட்டம். என்னவென்று தெரியாவிட்டால் தலை வெடித்து விடும். போனேன்.

கோடி வீட்டு சர்தார்ஜி வாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை யாரோ கிளப்பிக் கொண்டு போகப் பார்த்தானாம். ஒரு உதையில் கிளம்புகிற வண்டியா அது? ஏகதேசம் நூறு தடவையாவது தினசரி சர்தாரும் சர்தாரிணியும் மாறி மாறி உதை காணிக்கை வைத்து. வலுவான கால்கள். .. சர்தாரிணிக்கு.. வேண்டாம்.

“அவளுக்கு கால்வலி. நானும் தூங்கலே. வாசலுக்கு வந்து பார்த்தா..”.

சர்தார்ஜி நீட்டி முழக்கிக் கொண்டிருக்க, நான் சகலரையும் சபித்தபடி திரும்ப நடந்தேன். பிரேஸிலோ.. ஸ்வீடனோ.. யாரானாலும் ஐந்து நிமிடம் கழித்து கோல் அடிக்கட்டும். ஒன்றும் குடி முழுகி விடாது.

முழுகித்தான் விட்டது என்பதுபோல் வீட்டில் படுக்கையறைக் கதவைத் திறந்தபடி நெருப்புப் பார்வையோடு ஏலிக்குட்டி.

சாடி, படுக்கையறைக்குள் போய்க் கதவை மூட, அவள் இரைந்தாள்.

‘எங்கே தொலஞ்சு போனீங்க? நான் கண்ணு முழிச்சுப் பார்த்தா அந்தக் கிளவன் பெட் ரூமுக்குள்ளே வந்துட்டுத் திரும்பிப் போய்ட்டிருக்கான். எத்தனை நேரம் பார்த்தானோ.. எவ்வளவு பார்த்தானோ.. நீங்க வாங்கிக் கொடுத்த மாக்சிக்கு, இலை தழையை இடுப்பைச் சுத்திக் கட்டிக்கறது கூட மேல்..”

சூடேறிப் போனேன். கால் பந்தும், ரொமாரியோவும், ராயும், பெபட்டோவும், எல்லாத் தீவட்டித் தடியன்களும் நாசமாகப் போகட்டும். அடுப்படியில் கிண்டிக் கிளறி அல்வா செய்கிறவன் எல்லாம் நடு ராத்திரியில் தர்ம தரிசனம் பண்ணவா ஏலிக்குட்டியை நான் கட்டியது?

கதவை உதைத்துக் கொண்டு திறந்து வெளியே வந்தேன்.

சோபாவில் சம்மணம் இட்டு உட்கார்ந்து, ஸ்வீடன் கேப்டனை ரெஃப்ரி வெளியே அனுப்புவதைப் பார்த்துக் கொண்டிருந்த கோஷ் பாபு சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.

“என்ன ஆச்சு இங்கே?”

என் குரலின் உஷ்ணம் என் நாக்கையே சுட்டது.

நின்ற கோலத்தில் ஏலிக்குட்டி, வந்த கோலத்தில் நான். கோஷ் பாபு ஏதோ சொல்ல வாயெடுத்து இரண்டு கையையும் எடுத்துக் கும்பிட்டபடி படி இறங்கிப் போனார்.

வீட்டுக்கு மேற்கே திடலோரமாகக் குத்த வைத்து ஐந்து நிமிஷம் போல் அற்ப சங்கை தீர்த்து விட்டுச் சைக்கிளைத் தள்ளியபடி அவர் மெல்ல நடந்துபோக, உள்ளே ரொமாரியோ கோல் போட்ட எண்பதாவது நிமிஷம்.

அந்த செமி ஃபைனலிலும் அப்புறம் இத்தாலிக்கு எதிரான ஃபைனலிலும் பிரேஸில் தான் கெலித்தது.  சுவாரசியமில்லாத ஃபைனல்.  எக்ஸ்ட்ரா நேரமும் முடிந்து, பெனால்ட்டி கிக் சவட்டலில் வந்த கோல்கள்.

ஏலிக்குட்டியும் சேம்சைட் கோல் போட்டாள்.

“நான் தான் தூக்கக் கலக்கத்திலே ஏதோ சொன்னா, உங்க புத்தி எங்கே போனது? மூத்திரம் ஒழிக்க பாத்ரூம் தேடி அவர் வந்திருக்கலாம் இல்லியா?”

இருக்கலாம் தான். உப்பு கூடிய மிளகூட்டான். டம்ளர் டம்ளராகத் தண்ணீரும், அதே தரத்தில் சாயாவும் மாந்தி, நீர் முட்டிய வயசான மனுஷன்.

வீடு தேடி வந்த விருந்தாளிக்கு, சிறுநீர் கழிக்கிறதான அடிப்படை வசதி தேவைப்படுமா என்று கூட விசாரிக்காது பழியும் சுமத்திய துஷ்டன் தோமஸ் வர்க்கீஸான நான்… அப்புறம் எத்தனை தேடியும் கோஷ் பாபு கண்ணில் படவில்லை.

போன வருஷத்து கன்வென்ஷனுக்கு நானும் ஏலிக்குட்டியும் மரமன் போயிருந்தோம். வழக்கமான பட்டியலோடு கோஷ் பாபு சுகமாகவும், சமாதானமாகவும் ஜீவித்திருக்க பிரார்த்தனை செய்தோம். எங்களை மன்னிக்கச் சொல்லியும்.

கொஞ்ச நாளாக ஏலிக்குட்டி வயிற்றில் ஒரு கால்பந்தாட்டக்காரன் வலுவாக உதைத்தபடி கிடக்கிறான்.

மைதானத்தில் இறங்கும்போது அவன் பெயர் ரொபீந்தர் என்பதாக இருக்கலாம்.

இரா.முருகன்

// கதையின் இந்தப் பகுதி பற்றிய குறிப்புகள்

[ என் ‘பந்து’ சிறுகதை இப்படித் தொடங்குகிறது.FIFA 1994 USA பந்தயங்களில் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் பிரேஸிலுக்கும் ஸ்வீடனுக்கும் இடையே நடந்த நேரம் தான் கதைக்குப் பின்புலம்.

மனதுக்குள் அந்த மேட்சை மறுபடி கண்டு களித்து, சந்தோஷமாக எழுதிய கதை இது. முக்கியமாக ஆட்டம் தொடங்கி எண்பதாவது நிமிடத்தில் பிரேஸில் விளையாட்டு வீரர் ரொமாரியோ தன் சகா ஜார்ஜின்ஹோ கடத்தி விட்ட பந்தைத் தலையில் வாங்கி முட்டி கோல் போட்டு ஜெயித்ததை எப்படி மறக்க முடியும்!

ரொமாரியோ இப்போது பிரேஸிலில் பிரபலமான அரசியல்வாதி. மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் ஜெயித்து, கட்சி மாறி, ரியோ டி ஜெனரோ மாநிலக் கட்சித் தலைவராக இருக்கிறார். மாநில கவர்னர் ஆக வாய்ப்பு உண்டாம்.

ஜார்ஜின்ஹோ ஏழ்மையான பின்னணியிலிருந்து வந்தவர். தான் பிறந்த சேரிப் பகுதியின் முன்னேற்றத்துக்கு சேவை செய்து வருகிறார். பிரேஸிலின் புகழ்பெற்ற வாஸ்கோ ட காமா கால்பந்தாட்ட அணியின் நிர்வாகியாக இருக்கிறார்.

கோஷ்பாபு சாயலில் , மூலக்கச்ச வேட்டி அணிந்த வங்காளிப் பெரியவரை, புதுதில்லி பெங்காலி மார்க்கெட் ஸ்வீட் ஸ்டால் ஒன்றில் ரஸகுல்லாவும் மிஷ்டி தஹியும் வாங்கப் போனபோது பரிச்சயப்படுத்திக் கொண்டேன். அது 1980-களில். முதல்வர் ஜோதிபாசு மேலும், பிலே, கரிஞ்ச்சோ போன்ற கால்பந்தாட்ட லெஜண்ட்கள் மேலும் அன்பும் மதிப்பும் வைத்திருந்தவர் அவர்.

பந்து, குங்குமம் இதழில் வெளியானது. இந்தியா டுடே (மலையாளம்) நண்பர் சுந்தர்தாஸ் இதை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். கலாகௌமுதியில் அல்லது சிந்தாவில் அது வெளியானதாக நினைவு ]

Photo credit of Romario – Wiki
//
’இரா.முருகன் கதைகள்’ (கிழக்கு பதிப்பகம்) பெருந்தொகுப்பில் இடம்பெற்ற கதை இது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2022 19:47

November 22, 2022

வாளி

                  வாளி           

 

குளிகைகளைக் கொண்டுவர மறந்து விட்டிருந்தது.

 

செய்கிற எல்லாக் காரியத்திலும் சாயந்திரம் முதல் இப்படி அபத்தம் பற்றிக் கொண்டிருக்கிறது. நெரிசல் மிகுந்த பேருந்தில் ஏறியபோது போக வேண்டிய இடம் துல்லியமாக மனதில் இருந்தது. வண்டிக்குள்ளே இரைச்சலும், வியர்வையும் பக்கத்தில் நின்றவன் மூச்சில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த பூண்டு நெடியும் அவனைக் குழப்பமடைய வைத்திருந்தன. போதாக்குறைக்கு நடத்துனர்.

 

மீசை மழித்த அவர் முகம் கண்டிப்பையும், எந்த ஒழுங்கீனத்தையும் பொறுத்துக் கொள்ளத் தன்னால் முடியாது என்பதையும் காட்டியபடி இருந்தது. மீசைக்காரர்களிடம் தென்படும் அன்னியோன்னியமும் பரிவும் அதில் இல்லை.

 

காசுகளைச் சரியான எண்ணிக்கையில் தராவிட்டால் இறக்கிவிட நேருமென்றும் போனவாரம் அப்படி இறங்கிய இருவர் அடுத்த நொடியே கால் அம்பாரமாக வீங்கி நிலத்தை விட்டுப் பிரிக்க முடியாமல் நின்ற இடத்திலேயே இன்னும் நின்று கொண்டிருப்பதாகவும் அவர் சொல்லியபடி அரசாங்க முத்திரை பதித்த சீட்டுக்களை விநியோகித்தார். காசுகளை அவர் ஒற்றை ரேகையோடிய உள்ளங்கையைக் குவித்து வாங்கியதும், அவை சென்றடைந்த பிரம்மாண்டமான அரசாங்க இலச்சினை பொறித்த தோல்பையும்  இன்னும் பயத்தை அதிகரிக்க,  அவன் போக வேண்டிய இடத்தை நடத்துனர் விசாரித்தபோது திக்கித் திணறி வார்த்தை வராமல் தவித்தான்.

 

நடத்துனர் அரசு அலுவலர்களை வேலை நேரத்தில் பணி செய்ய விடாமல் தாமதப்படுத்தும், அர்ப்பண உணர்வும் நாட்டுப் பற்றுமில்லாத பயணிகள் பற்றிய கடுங் கண்டனத்தைத் தாழ்வான குரலில் முணுமுணுத்தபடி கொடுத்த சீட்டு இந்த இடம்வரை என்பதும் அவனுக்குத் தெரியாமல் போனது. வண்டி இங்கே இரண்டு நிமிடம் நின்று கிளம்பிய பிறகு அவனைத் தற்செயலாக நோக்கியவர், அசம்பாவிதம் நடந்த பதற்றமும் நிம்மதியின்மையும் முகத்தில் எழுதியிருக்க, குழலை ஒலித்து வண்டியை நிறுத்தி அவனை அவசர அவசரமாக இறங்க வைத்தார். இறங்கிய வினாடியில் ஏற்பட்டது தான் இந்தத் தலைசுற்றலும் ரத்த அழுத்த அதிகரிப்பும்.

 

அரங்கை நோட்டமிட்டான். ஒன்றும் இரண்டுமாகப் பார்வையாளர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.  எல்லோரும் ஏதோ அலுவலக மனமகிழ் மன்றத்தின் உறுப்பினர்கள் என்பது அவர்கள் கடந்து போகும்போது உதிர்க்கும் ஒலித் துணுக்குகளைக் காதில் வாங்கும்போது புரிந்தது. பலரும் பழுப்பேறிய அரைக்கைச் சட்டையும், பச்சை மற்றும் நீல வண்ணக் கால்சராயும் அணிந்தவர்கள். கிட்டத்தட்ட எல்லோர் சட்டைப் பையிலும் மசிப்பேனா வைத்து அது கசிந்து ஏற்பட்ட கருப்பு நிறக் கறை சட்டைப் பையை ஒட்டிக் காணப்பட்டது.

 

அவன் இந்த இடத்தில் படி ஏறும்போதே குழப்பமாக ஏறினான். அவன் உத்தேசித்துக் கிளம்பியதில்லை இது. வந்த காரியமும் இங்கு நடக்க இருப்பது இல்லை.

 

நான் ஒரு இரங்கல் கூட்டத்துக்காக வந்திருக்கிறேன். அந்நிய மொழியொன்றில் பிரபல கவிஞர். நகர வாழ்க்கையின் அபத்தங்களைப் பற்றி எழுதியவர். போன வாரம் இறந்து போனார். பத்திரிகையில் இரங்கல் கூட்டம் நடப்பதைப் பற்றிப் படித்துக் கிளம்பினேன்.

 

வாசலில் ஒரு மர மேஜையும் நாற்காலியும் இட்டு, இலச்சினை பதித்த நிகழ்ச்சிச் சீட்டுக்களைக் கொடுத்துக் கொண்டிருந்தவனிடம் அவன் விளக்க முற்பட்டபோது,   அவன் அனுசரணையோடு தலையை அசைத்தான்.

 

கவிஞர்களும், வறுகடலை மொத்த வியாபாரம் செய்கிறவர்களும், இசைக் கலைஞர்களும் இறந்தபடியே இருக்கிறார்கள். வருடத்தின் எல்லாத் தினங்களிலும், மாதங்களிலும் நடக்கிற காரியம் இது. எங்கள் ஊர்ப் பத்திரிகையில் மரண வார்த்தைகளுக்காகவே தினமும் இரண்டு பக்கங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். நீங்கள் இங்கே நடைபெறப் போகிற நாட்டிய நிகழ்ச்சியை ரசித்தபடியே மறைந்த பிறமொழிக் கவிஞருக்கு அஞ்சலி செய்யலாமே?  இங்கே வசூலாகும் பணத்தில் நாற்பத்தைந்து சதவிகிதம் யானைக்கால் நோய்த் தடுப்புத் திட்டங்களுக்குச் செலவிடப் படும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே?

 

மீசை வைத்த, நேயம் மிக்க அந்த இளைஞன் சமாதானமாகக் கேட்டபோது தட்டமுடியாமல் பணம் கொடுத்து   இலச்சினை பதித்த அனுமதிச் சீட்டு வாங்கினான்.   அந்த இளைஞர் அரசு ஊழியனாக இருக்கலாம். இவர்கள் எல்லோருமே அரசு ஊழியர்களாக இருக்கலாம். அல்லது எல்லோரும் எல்லா நேரமும் சேர்ந்து பணியெடுக்கிற ஏதோ ஒரு தனியார், குழும அலுவலகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். இவர்களில் யாருக்கும் யானைக் கால் நோய் இருக்கும் என்று தோன்றவில்லை. பேருந்தில் நடத்துனர் சுட்டிக் காட்டிய அர்ப்பண உணர்வு மிகுந்தவர்கள் எல்லோரும். இவர்களுக்குப் போகுமிடம் எப்போதும் நினைவில் இருக்கும் என்பதால் நடத்துனரின் நேசமும் நேசமின்மையும் பிரச்சனைக்குரிய விஷயமாக ஒருபோதும் இருக்காது.

 

நீங்கள் நான்காம் வரிசை மூன்றாம் நாற்காலியில் அமருங்கள். சீட்டில் அது குறித்திருக்காது. நான் தான் உங்களை அங்கே உட்காரச் சொன்னேன் என்று யாராவது கேட்டால் சொல்லுங்கள். யாரும் உங்களை உபத்திரவிக்க மாட்டார்கள்.

 

முதுகில் நீலமும் மார்பில் பச்சையும், சிவப்பு மை ஒழுகிய கரை சட்டைப் பையை ஒட்டியும் இருந்த அந்த மீசைக்கார இளைஞனை அடையாளம் சொல்வது அவ்வளவு கடினமானதில்லை என்ற நிம்மதியோடு அவன் நாலாம் வரிசை மூன்றாம் நாற்காலிக்கு நடந்தான்.

 

சுற்றிலும் இருந்தவர்கள் சம்பளம், படிப்பணம், ஓய்வூதியம், வைப்பு நிதி என்று சதா பேசிக் கொண்டிருந்தாலும் இடையிடையே வாளி வந்து விட்டதா, இரும்பு வாளியா இல்லை பிளாஸ்டிக் வாளியா, தாம்புக் கயிறு வாங்க மறக்கவில்லையே என்று கடந்து போகிற யாரையாவது விசாரிப்பது அவர்களைப் பற்றிய ஆசுவாசத்தை அவனுக்கு அளித்தது. இரும்பும் பிளாஸ்டிக்கும் கயிறுமான உலகம்தான் இவர்களுக்கும்.

 

ஆறு மணிக்கு வரவேண்டிய ஆட்டக்காரி ஆறு பதினைந்தாகியும் வரவில்லை. நேரத்தின் முக்கியத்தை இவர்களுக்கு எப்படி உணர்த்துவது என்றே புரியவில்லை.

 

பக்கத்து இருக்கையில் இருந்தவர் அவனைப் பார்த்துச் சினேகமாகச் சிரித்தபடி சொன்னார். பேருந்தில் பக்கத்தில் நின்றவர் இவராகவே இருக்கக் கூடும் என்று யோசிக்க வைக்கும் பூண்டு நெடி அவர் பேசும்போதும் வெளிப்பட்டது. உடல் தளர்ச்சியும், ரத்த அழுத்த மிகுதலும் அப்போது இன்னும் அதிகமானபோது மாத்திரைகளைக் கொண்டு வர மறந்ததற்காகத் தன்னையே இன்னொரு முறை சபித்துக் கொண்டான்.

 

உங்கள் சட்டைப்பை எந்த மசிக் கசிவும் இல்லாமல் இருக்கிறதே. நீங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கவில்லையா, அல்லது புதிதாகப் பணியில் சேர்ந்திருக்கிறீர்களா? அதுவுமில்லையென்றால் விருப்ப ஓய்வு பெற்று நகரில் சீட்டுக் கம்பெனியோ, ஊறுகாய்களும், ஆனையடி அப்பளமும், வத்தல் வடகங்களும் தயாரித்து வீடுகளில் விற்கும் தொழிலைத் தொடங்கியிருக்கிறீர்களா?

 

ஆர்வமாக விசாரித்த அவரிடம் தான் தற்காலிகமான ஒரு வேலையை ஏற்றுக் கொண்டு இங்கே வந்ததாகவும், இன்னும் மூன்று நாட்களில் அது பூர்த்தியடைந்து ஊர் திரும்ப வேண்டியிருக்குமென்றும் அதற்குள் இன்னொரு வேலை கிட்டினால் நலமாக இருக்கும் என்றும் சொல்ல ஏனோ தயக்கமாக இருந்தது.

 

நான் கூட்டம் மாறி வந்திருக்கிறேன். ஒரு பிறமொழிக் கவிஞரின் மரணத்துக்கான அனுதாபக் கூட்டத்துக்காகப் புறப்பட்டேன்.

 

கவிஞர்கள் இன்னும் இருக்கிறார்களா என்ன? யானைக்கால் நோய்த் தடுப்பு பற்றி சமீபத்தில் ஒரு கவிதையையும் படித்த நினைவு இல்லையே.

 

அவர் ஆச்சரியத்தோடு கேட்டபோது வாளி வந்து விட்டது என்று நிறையக் குரல்கள் சந்தோஷமாக ஒலித்தன.  நீல நிறப் பிளாஸ்டிக் வாளியும் அதன் பிடியில் இறுக்கமாகச் சுற்றிய மஞ்சள் பிளாஸ்டிக் தாம்புக் கயிறுமாக மேடைக்குப் பின்னால் கடந்து போனவன் பார்வையில் பெருமிதம் தெரிந்தது.  தான் மட்டும் இல்லாவிட்டால் நிறைய ரோகிகள் வீங்கிய காலை இழுத்துக் கொண்டு பேருந்து வருவதற்காக எல்லா நிறுத்தங்களிலும் காத்திருப்பார்கள் என்று வாளியோடு போனவன் பார்வை சொன்னது.

 

தனக்குப் பிடித்த கவிதை வரிகளை எழுதிய, மறைந்த பிறமொழிக் கவிஞர் பற்றிப் பக்கத்து இருக்கைக்காரரிடம் சொல்லத் தொடங்கியபோது வாசலிலிருந்து ஒரு இளம்பெண் அவசர அவசரமாக  உள்ளே நுழைந்தாள். துணிப்பை ஒன்றைத் தோளில் மாட்டியிருந்த அவள் கையைப் பிடித்தபடி நாலைந்து வயதில் ஒரு சிறுவன்.

 

பஸ் கிளம்ப நேரமாகி விட்டது. கையில் சரியான சில்லறைக் காசுகள் இல்லாதபடியால் நடத்துனர் இறக்கி விட்டார். அரசு ஊழியரான அவர் அப்புறம் என்னைப் பறக்கச் சொன்னார்.   நானும் என் மகனும் உடனே இறக்கை முளைத்தது போல் எழுந்து பறந்தோம். கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் அரசுத் துறை அலுவலர்களின் வேலைநேரக் கரிசனம் மட்டும் இல்லாதிருந்தால் இங்கே நான் இன்னும் தாமதாமாகவே வந்திருப்பேன்.

 

அவள் நன்றி கூர்ந்த அரசு ஊழியரை மக்கள் தலைவர் போல் பெரிய கட்டை மீசை வைத்த வயதான, கூர்மையான விழிகள் கொண்ட மனிதராக அவன் கற்பனை செய்தபோது மாத்திரை சாப்பிடாது உறங்கும் இரவுகளில் தரிசுகளிலூடே தான் பறப்பதாகத் தொடர்ந்து வரும் கனவு நினைவு வந்தது.

 

அரசியல் கட்சிக் கொடிகள் அசையும் கம்பங்களும், கம்பங்களில் வெள்ளைப் புழு அப்பியதுபோல் படர்ந்த குழல் மின் விளக்குகளும்,  செம்மண் தரிசு முழுக்க மூத்திரம் தேங்கியிருப்பதுமான பழக்கப்பட்ட கனவுச் சூழல் அவன் மனதில் திரும்ப எழுந்தபோது அந்தக் குழல் விளக்குகள் ஒரு வினாடி அணைந்தன. அவை மீண்டும் உயிர் பெற்றபோது அரங்கத்தில் அவள் ஆட ஆரம்பித்திருந்தாள்.

 

டேப் ரிக்கார்டரில் ஒலித்த சங்கீதம் அங்கங்கே நின்று நின்று வந்தபடி இருந்தது. அவள் ஆட்டம் மந்தகதியில் இருந்தது. இசை நிற்கிறபோதெல்லாம் அவள் ஒரு வினாடி தயங்கி இலக்கில்லாமல் அசைந்தபடி இருந்தபோது அவளுடைய பார்வை அவன் மேல் மட்டும் நிலைத்த மாதிரி இருந்தது.

 

நீயும் வந்துவிடேன். மேடைக்கு ஒரு எவ்வு எவ்வினால் பறந்து வந்துவிடலாம். அப்புறம் நாம் வெளியே கிளம்பிவிடலாம்.

 

அவள் அழைத்தாள்.

 

பறந்து எங்கே போக?

 

முதலில் அந்தப் பிறமொழிக் கவிஞரின் மரண அஞ்சலிக் கூட்டத்துக்கு. நானும் அவருடைய படைப்புகளில் ஒன்றிரண்டைப் படித்திருக்கிறேன். அவற்றின் தாளத்துக்கு ஒப்ப ஆடியுமிருக்கிறேன். வாயேன், போகலாம்.

 

உன் குழந்தை?

 

வாசலில் புழுதி மண்ணில் மலைகளையும் கோபுரங்களையும் கட்டி விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்புறம் கடைசி பெஞ்சில் படுத்துத் தூங்கி விடுவான். போகும்போது கூடக் கூட்டிப் போக வேண்டும். சாப்பாடு வாங்கித் தர வேண்டும்.

 

என்னிடம் இருப்பிடம் திரும்பிப் போகமட்டும் பணம் வைத்திருக்கிறேன். சரியான சில்லறைக் காசுகளை ஒருதடவைக்கு இரண்டு தடவை எண்ணிப் பார்த்து எடுத்து வைத்தது. போகும்போது பேருந்தில் கடுமையான நடத்துனராக இருந்தால் நான் மண்ணில் பாதம் வீங்கி வீர்த்துப் பதித்தபடி நிற்க வேண்டி நேரும். கம்பங்களும் கொடிகளும் மூத்திர நெடியுமான வெளியில் அப்படித் தேங்கிப் போய் நிற்பது சகிக்கக் கூடியதில்லை.

 

அதற்காகத் தான் பறக்கச் சொன்னேன்.  நீ உடனே நித்திரை போ.

 

அவள் திரும்ப ஆட ஆரம்பித்திருந்தாள்.

 

குளியல், குளியல். குளிக்கும் காட்சி.

 

பார்வையாளர்களிலிருந்து சத்தம் உயர்ந்தது.

 

திரை இறக்கப்பட்டது. இருள் சூழ்ந்த அரங்கத்தில் மேடையிலிருந்து யார்யாரோ வரிசையாக இறங்கிக் கொண்டிருந்ததாக அவனுக்குத் தோன்றியது.

 

வெண்மை மாறாத சட்டைகளில், சட்டைப் பை இல்லாமல், மேலே கருப்புத் துணித் துணுக்கு ஒன்றைக் கைபோன படிக்குக் கத்தரித்துக் குத்தியிருந்தார்கள் எல்லோரும். பிறமொழிக் கவிஞரின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த ஓர்   ஊர்வலமாக அவர்கள் வரிசைகளுக்கு நடுவே புகுந்து நடந்தபோது மதப் பிரார்த்தனைபோல், விரித்துப் பிடித்த கவிதைத் தொகுதிகளிலிருந்து இன்னும் மொழிபெயர்க்கப்படாத வார்த்தைகளை மொணமொண என்று உச்சரித்தபடி போனார்கள்.

 

அந்தப் பழைய புத்தகங்களின் மக்கிய வாடை இறப்பின் மணமாக இருக்குமோ என்று நினைத்தான். அவனுக்கும் போக விருப்பம் தான். ஆனாலும் இந்த நிகழ்ச்சி. யானைக்கால் வியாதித் தடுப்புக்காக அவன் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஒன்று நிகழ்ச்சி முடியும் வரை இருப்பது.

மேடையில் ஒற்றை விளக்கு மட்டும் ஒளிவீச எல்லோரும் மேடையிலேயே கவனமாக இருந்தார்கள். அவனும் அங்கே நோக்கினான். வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ராப்பறவைகளோடு சேர்ந்து கூவியும் சிரித்தும் கொண்டிருந்தது இடைக்கிடைக்குக் கேட்டது.

 

மேடையில் நாட்டியக்காரி அட்டைக் கிணற்றிலிருந்து பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் இறைத்தபடி டேப் ரிக்கார்டரில் ஒலிக்கும் பாடலுக்கு ஏற்றபடி மெல்ல அசைந்து கொண்டிருந்தாள். திருமண மண்டபத்துக்குத் தோழிகள் மணமகளை அழைத்து வரும்போது பாடும் பாட்டு அது. பாதிப்பாட்டு முடிவதற்குள் ஒலிநாடா உள்ளே சிக்கிக் கொள்ளக் குரல் வீறிட்ட போது அவள் தரையில் காலை நீட்டி அமர்ந்தாள்.

 

அவளுடைய உடைகள் நெகிழ்ந்திருந்தன. மறைத்திருந்த உடல் அங்கங்கே வெளியே தெரிய அந்த வாளிக்குள்ளிருந்து குவளையில் நீர் சேந்தி அவள் மேடையில் குளிக்கத் தொடங்கி இருந்தாள். அவள் கால்கள் வீங்கியிருந்ததுபோல் அவனுக்குத் தோன்றியது. இல்லை, குளிகை கழிக்காததால் ஏற்பட்ட தோற்றம் அது. அவள் கால்கள் மெலிந்துதான் இருந்தன. பக்கத்து இருக்கைக்காரரிடம் கேட்டு அதை உறுதிப் படுத்திக் கொண்டான் அவன்.

 

கடலில் மீன்பிடிக்கப் போகிறவர்கள் கூட்டமாகப் பாடும் பாடல் ஒன்று ஒலிக்க ஆரம்பித்து நடுவில் நிற்க,  பனிப் பிரதேசங்களில் காதலர்கள் அலைந்து திரியும் போது பாடும்  புத்தம் புதிய பாட்டு அடுத்து ஒலி நாடாவில். அவள் வாளியிலிருந்து தண்ணீரைச் சேந்திக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே நனைத்தபடி இருந்தாள். மகிழ்ச்சியோடு அந்தப் பாடலைப் பாடுவதுபோலவும் பாடியபடியே குளிப்பது போலவும் அபிநயிக்க முற்பட்டிருந்த அவள் முகத்தில் சிரிப்பு உறைந்து போயிருந்தது.

 

நீங்கள் வேண்டுமென்றால் புறப்படுங்கள். இன்னும் பத்து பதினைந்து நிமிடத்தில்  நிகழ்ச்சி முடிந்து விடும்.

 

பக்கத்து இருக்கைக்காரர் இவனிடம் ஆதரவோடு சொல்லிவிட்டு வாசலை நோக்கிக் கைகாட்டினார். மேடையிலிருந்து கீழே வழிந்த நீரை மிதிக்காமல் அவன் கவனமாக வெளியே நடந்தான்.

 

வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஓடி வந்து அவன் கால்களைக் கட்டிக் கொண்டான்.

 

அம்மா குளித்து முடித்து விட்டாளா?

 

அவன் கேட்டபோது ஒரு வினாடி தயங்கி நின்று, இன்னும் முடிக்கவில்லை என்றான்.

 

அவள் முடித்துத் திரும்பும்போது ஈர உடுப்புக்குள் பணம் வைத்திருப்பாள். சூடான சோறு வாங்கித் தருவாள்.

 

ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொள்வதுபோல் அவனிடம் சொல்லிவிட்டு  சிறுவன் பேருந்து போல் ஒலி எழுப்பியபடி இருளில் ஓடினான்.

 

முன்னால் வந்து நின்ற பேருந்திலிருந்து மீசையில்லாத பஸ் நடத்துனர் தலையை நீட்டி நேரம் தாமதியாமல் ஏறிக் கொள்ளச் சொன்னார்.

 

கட்டிட ஜன்னல் வழியே  உள்ளே நடனக்காரியைப் பார்க்க முயன்றபடி அவன் ஏறிக் கொண்ட பேருந்தில் வேறு பயணிகளே இல்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2022 18:20

November 21, 2022

கருப்பு வெள்ளையில் ஒரு படம் – சிறுகதை (நண்டுமரம் தொகுப்பில் இருந்து)

கருப்பு வெள்ளையில் ஒரு படம்                          

 

நாயர்.

 

யாரோ கூப்பிட்டார்கள். அவனைத்தான்.

 

நாயர் என்று கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கவேண்டும் என்று இந்தப் பட்டணத்தில் குடியேறும் எல்லா மலையாளிகளையும் பழக்கியிருக்கிறார்கள். அல்லது அவரவர்களாகவே வந்த நாலைந்து நாளில் புரிந்து கொள்கிறார்கள்.

 

‘டீ வேணுமா, நாயர்?’

 

கூப்பிட்ட சின்னப் பையன் கையில் இரும்பு வளையத்தில் தூக்கு மாட்டித் தொங்கிய டீ கிளாசுகளும், அலுமினியத் தட்டில் எண்ணெய் மினுக்கோடு வடையுமாக நின்றான்.

 

‘அப்படிப் போடு. நாயருக்கே டீயா?  நீ திருநெல்வேலிக்கே அல்வா தர்ற ஆளுடா.’

 

முத்துப்பட்டியான்  உரக்கச் சிரித்தான். நாயருக்கும் சிரிப்பு வந்தது.

 

இது கொஞ்சம் விநோதமான கூட்டம். தெற்குத் தமிழ்நாட்டிலிருந்து வந்து சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள், ஆந்திரா மசூலிப்பட்டிணம் கடல் பிரதேசத்திலிருந்து புறப்பட்டு வந்த மீனவர்கள், பீஹாரில் சிங்கரேணி பகுதியில் நிலக்கரிச் சுரஙகத்தில் கரி அள்ளிய அனுபவத்தோடு கிளம்பி வந்தவர்கள் என்று கிட்டத்தட்ட ஐநூறு பேர் இருக்கிறார்கள். எல்லோரும் இங்கே கட்டிடத் தொழிலில் எடுபிடிகளாக சிமிட்டியும் கருங்கல்லும் பளிங்கும் சுமந்துகொண்டு மழையில் நனைந்து உச்சி வெய்யிலில் உலர்ந்து சாரங்களில்  ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். நகரத்தின் வடக்கு வசத்தில் வரிசை வரிசையாக எழுந்து நிற்கும் பிரம்மாண்டமான கட்டிடங்களை  அமைக்கிறவர்கள் இவர்கள்.  எதிரே ரயில் பாதையை ஒட்டி சிதறிக் கிடக்கிற  ஓலைக் குடிசைகள் இவர்களுடையது.

 

‘சேட்டா, கையிலே காசு இல்லே. பர்ஸ் வெள்ளப் பொக்கத்தில் ஒலிச்சுப் போயி.’

 

டீ கொண்டு வந்த பையன் நாயரைப் பார்த்துச் சொன்னான். இது தினசரி நாயர் சொல்வது. எங்கே வெள்ளம், எப்போது வந்து நாயருடைய பர்ஸை அடித்துப் போனது என்றெல்லாம் யாரும் கேட்பது இல்லை. இன்றைக்கு அந்தப் பதில் வராததால் பையனே பூர்த்தி செய்தபடி வடையையும் ஒரு கிளாஸ் டீயையும் நாயரிடம் நீட்டினான்.

 

நாயர் கிளாஸை வாங்கினான். வடையைக் கடித்தபடி பகுதி உருவாகி முன்னால் நிற்கும் கட்டிடங்களை ஒரு வினாடி உற்றுப் பார்த்தான். கம்ப்யூட்டர் தொழில் செய்து கோடி கோடியாக வருமானம் நாட்டுக்கு ஈட்டித் தர சர்வதேச நிறுவனங்களுக்கு அந்தக் கட்டிடங்கள் தேவைப்படுகின்றன.

 

‘சாயந்திரம் வந்து துட்டு வாங்கிக்கறேன்.’  சொல்லியபடி  பையன் நகர்ந்தான். நாயர் பக்கத்தில் வைத்திருந்த மலையாளத் தினசரியை மடக்கி வாசிக்க ஆரம்பித்தான்.

 

நம்பிக்கை தரும் செய்திகள் எல்லாமே. வேகமாக வளர்ந்து வருகிற நாடு. ஒன்பதரை சதவிகிதம்  பொருளாதார வளர்ச்சி. தொழில் நுட்பத்தில் உலகத்துக்கே தலைமை தாங்குகிற வல்லுனர்களின் பூமி.  வெள்ளைக்காரத் துரைகள் முக்கி முனகி வாயில் நுரை தள்ளிச் செய்ய முடியாமல் திணறுகிற வேலை எல்லாம் இங்கே சுளுவாக, சகாயமாக முடித்துத்தரப் பட்டுக் கொண்டிருக்கிறது.

 

‘சீக்கிரம் குளி நாயர். தண்ணி நின்னு போயிடும். உனக்கு அப்புறம் நான் குளிச்சுட்டு வேலைக்குக் கிளம்பணும். வெள்ளைக்காரத் துரை கட்டிடம் எம்புட்டு முடிஞ்சிருக்குன்னு மேற்பார்வை பார்க்க கிளம்பி வந்துட்டு இருக்காங்களாம்’. பக்கத்து குடிசையிலிருந்து எட்டிப் பார்த்து யாரோ முறையிட்டார்கள்.

 

வந்து சேர்கிற துரைகளையும் சீமாட்டிகளையும் இந்தக் கட்டிடங்களும் அவற்றில் ராவும் பகலும் கம்ப்யூட்டர் டெர்மினல்களுக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் இளைஞர் படையும் அவர்களின் தொழில் நேர்த்தியும் பிரமிப்படையச் செய்யும் என்பது நாயருக்குத் தெரியும். . பரம திருப்தி என்ற சுகானுபவத்தை அவர்கள் அடைய இடைஞ்சலாக எதிரே இந்தக் குடிசைகள் இருந்து தொலைக்கின்றன என்பதும்.

 

நாயர் தன் குடிசைக்குள் நுழைந்து சிகப்பு பிளாஸ்டிக் வாளியை எடுத்துக் கொண்டு குளிக்கக் கிளம்பினான். நூறு குடிசைக்கும் சேர்த்து கையாலடிக்கிற நாலே நாலு பம்ப். இறைத்து நிரப்ப, குடிசைவாசிகளே அவசரமக நிறுத்திவைத்த தகர டிரம்கள் பத்து இருபது. பத்து மாடி கட்டிடங்களுக்கு சவால் விட்டபடி  தகர டிரம்மும் அழுக்குத் துணி துவைத்துப்போட்டு உலரும் கயிறுகளோடு குடிசைகளும்.

 

‘இந்த எழவையெல்லாம் பெயர்த்து எடுத்துக் கடாசிவிட்டு, கைநிறையக் காசோடு இங்கே வருகிற துரைகள் கண்ணுக்கு நிறைவாக பூந்தோட்டம் அமைக்கக் கூடாதா?’  நிறுவனங்கள் முறையிட்டதும் நாயர் படிக்கும் பத்திரிகையில் வந்த செய்தி.

 

‘நியாயம் தான்’. நிர்வாக யந்திரம் அனுதாபத்தோடு தலையாட்டியது. ‘இது தற்போது முடியும் காரியமில்லை. வேணுமானால் ஒன்று செய்யலாம்.  பாதை நெடுக ஓரமாக ஒரு தடுப்புச் சுவரை எழுப்பிக் குடிசைகளைக் காணாமல் போக்கி விடலாம். வறுமை ஒழிந்து விட்ட நாடு இது. வளத்தைத் தவிர வேறு எதுவும் காணக் கிடைக்காது’.

 

நிர்வாக யந்திரம் அளித்த தீர்வு நிறுவனங்களுக்குப் பிடித்துப் போனது.

 

நாயர் தடுப்புச் சுவர் பக்கமாக ஒரு டிரம்மை தள்ளிக்கொண்டு வந்து நிறுத்தினான்.  பம்ப்பை இரண்டு கையாலும் பற்றி அடிக்கும்போது சுவரின் அந்தப்பக்கம் இன்றைக்கு வேலை தொடர வேண்டிய பகுதியை நினைவு படுத்த முயற்சி செய்தான்.

 

சீனப் பெருஞ்சுவர் மாதிரி அந்தப் பெருஞ்சாலை ஓரத்துக் குடிசைகளை முழுக்க மறைத்துக்கொண்டு கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரம் நீளும் தடுப்புச் சுவர்தான் நாயருக்கு இப்போது சோறு போட்டுக் கொண்டிருக்கிறது.

 

‘சுவர் மட்டும் கட்டி சிமெண்ட்டும் காரையும் வழி நெடுகத் தெரியற மாதிரி இருந்தா பார்க்கறவங்களுக்கு அலுத்துப் போயிடும். அவங்க கண்ணுலே அழகாப் படற மாதிரி சுவர் முழுக்க நல்ல படங்களை வரைஞ்சு வச்சா புதுமையாக இருக்கும்.’

 

நிறுவனங்களும் நிர்வாக யந்திரமும் யோசித்துப் போட்ட திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த ஆரம்பிக்க, ஓவியம் வரைகிற சிலருக்கு உடனே வேலை கிடைத்தது. சுவருக்குப் பின்னால் அழுக்குக்கும் அசுத்தத்துக்கும் நடுவே இன்னும் சில குடிசைகள் முளைக்க, அவற்றில் குடியேறியவர்கள் தூரிகை பிடித்து பாதையோரத்தை வண்ணமயமாக்கிக் கொண்டிருந்தார்கள். நாயர் அதில் ஒருத்தன்.

 

நாயர் பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் நிறைத்து குவளையால் நாலைந்து முறை தலையில் கவிழ்த்துக் கொண்டான். அவன் கண்கள் மூடியிருந்தன. தலையையும், முதுகையும் பேருக்கு நனைத்து காய்ந்த மண்ணில் விழுந்து உறிஞ்சப்படுகிற மெலிந்த தாரையாக விழுகிற தண்ணீர் இது. இல்லை, இது வெள்ளம். பொங்கிப் பெருகி வழிந்து காயலில் நிறைந்து நுங்கும் நுரையுமாக அலையடித்துப் போகும் வெள்ளம்.

 

நாயர் காயல் கரையில் நிற்கிறான். படகுத் துறை அது. கொல்லத்திலிருந்து ஆலப்புழை போகவேண்டிய அடுத்த படகு கருமாடி கிராமம் கடந்து வந்து இங்கே நிற்க இன்னும் பத்து நிமிடமாவது ஆகும். தூரத்தில் புள்ளி மாதிரி ஊர்ந்து வருவது அதுவாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கக் கூடும்.

 

‘இன்னிக்கு குழந்தையை பள்ளிக்கூடத்திலேருந்து நீ கூட்டிட்டு வந்துடறியா?’

 

நாயர் அம்மிணியைக் கேட்டது எந்த நாள் காலையில்?. காயலில் சின்னப் படகில் ஏறித் துடுப்புப் போட்டுத் துழாவி மகனை கருமாடியில் பள்ளிக்கூடப் பக்கம் பத்திரமாகக் கரை செர்ப்பதும், சாயந்திரம் அதே கொதும்பு வஞ்சியில் குழந்தையைத் திரும்ப அழைத்து வந்து வீடு சேர்ப்பதும் அவன் தான்.  அன்றைக்கு என்ன வந்தது?

 

ரெண்டு ஏக்கர் நெல் விளையும் பூமி, அருகிலேயே கடலிலிருந்து பிறந்து கடலில் கலக்கப் பிரவாகமாகப் பொங்கி அலையடித்து நடக்கும் காயல், கரையில் சிறு தென்னந்தோப்பு. தோப்புக்கு நடுவே குடிசையும் இல்லாமல், ஓட்டுக் கட்டிடமும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக ஒரு வீடு. அதில் மனைவி, ஐந்து வயதுப் பிள்ளை. வயலில் வேலை பார்க்கவும், காயலையும், கரையையும் ஆத்மார்த்தமாக கான்வாஸில் வரையவுமாக நிதானமாகப் போகிற வாழ்க்கை.  எப்போது? எந்த ஜன்மத்தில்?

 

‘கொதும்பு வள்ளம் வேணாம். உன்னால அத்தனை தொலைவு துழைய முடியாது. டிரான்ஸ்போர்ட் போட்டிலே போய்க் குழந்தையைக் கொண்டு விட்டுக் கூட்டி வந்துடு. ‘

 

நாயர் சொன்னதை வீட்டுக்காரி அம்மிணி கேட்கவில்லை. ‘போக ரெண்டு ரூபா, வர ரெண்டு ரூபா. நாலு ரூபாயைச் சேர்த்து வைச்சா ஓணத்துக்குக் குழந்தைக்கு இன்னும் நல்லதா ஒரு சட்டையும் டவுசரும் எடுக்கலாமே.’

 

அவள் சின்னப் படகில் துடுப்புப் போட்டு குழந்தையோடு காயலில் போகிறபோது நல்ல மழை. குழந்தை எழுந்து தனக்கும் அம்மாவுக்குமாகக் குடை பிடித்தபடி படகில் நின்று கையசைத்துப் போனது அந்தக் காலையில்தான். கடைசியான காலைநேரம்.

 

நாயர் தலையில் இன்னொரு குவளை தண்ணீரை ஊற்றிக்கொண்டான். நீர் திடீரென்று மேலே மேலே பிரவாகமாக உயர்ந்தது. சுழித்துப் போகும் வெள்ளம். அது உயர்ந்து பச்சை வாடையோடு சுற்றிலும் கவிகிறது. மழையின் கனமான நீர்க்கம்பிகள் காயலின் குறுக்கே சாட்டையாக அடித்துச் சிதறி கரைபுரளும் வெள்ளத்தில் கலக்கின்றன. படகு திசையறியாது திரும்புகிறது. உள்ளே குழந்தையின் அழுகையும் அம்மிணியின் அலறலும். தண்ணீர் தலைக்கு மேலே உயர்ந்து மூச்சு முட்டுகிறது.

 

நாயர் குவளையை பதற்றத்தோடு எறிந்துவிட்டு குடிசைக்கு ஓடினான். ஈரத்துணியோடு மண் தரையில் குப்புறப் படுத்து விம்மினான். உடல் அதிர்ந்து குரலும் உடைந்து ஒரு நிமிடம் அழுகையாக வெடித்து அப்புறம் மௌனம்.

 

ஒரு மணி நேரம் கழித்து நாயர் சுவர்ப் பக்கம் அவனுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குந்தி இருந்து வண்ணம் குழைத்தான். அவனுக்கு முன்னால் அலையடிக்கிற காயலும் கரையும் அந்திப் பொழுதில் உறைந்த  ஓவியமாக விரிந்து கொண்டிருந்தது.

 

‘என்னய்யா  இது நாலு நாளா இந்த் ஒத்தச் சுவரைக் கட்டி மாரடிச்சுட்டு இருக்கே.  மத்ததிலே எல்லாம் எப்ப பொம்மை போட்டு ரொப்பப் போறே? முழுக்க முடிச்சாத்தான் இந்த வாரக் கூலி. ஆமா, இப்பவே சொல்லிட்டேன்.’

 

மோட்டார் சைக்கிளில் வந்தவன் நாயர் வரைந்து வைத்திருந்த்தை சிரத்தையில்லாமல் பார்த்தான். மோட்டார் சைக்கிளை நிறுத்தாமலேயே அதன் சத்தத்தோடு சேர்ந்து கூவினான்  கூலிப் பணம் பட்டுவாடா செய்ய வந்தவன்.

 

‘உன்னைக் கட்டிக்கிட்டு மாரடிக்கறேனாம் குட்டி. அடிச்சு அழுதாச்சே ஏற்கனவே’.

 

படத்தில்  தூரத்தில் வந்தபடி இருக்கும் படகில் கண்கள் நிலைத்தபடி சொன்னான் நாயர். மோட்டார் சைக்கிள் ஒலி தேய்ந்து மங்கி மறைந்து போனது.

 

கொஞ்ச நேரம் ஏதோ யோசனையில் முழுகி இருந்தான் அவன். அப்புறம் பரபரவென்று அந்தப் படத்தைத் தொடர ஆரம்பித்தான். கால்வாய் வெள்ளத்தில் இப்போது கொப்பும் குழையுமாக மிதந்து போகும் கடல் தாவரங்கள் மெல்ல முளைத்துப் படர்ந்தன. தூரத்தில் வரும் படகு இன்னும் இரண்டு கீற்று வண்ணங்களோடு சாம்பல் பின்புலத்தில் தெளிய, மழையின் வண்ணங்கள் அந்தப் பரப்பை முழுக்க ஆக்கிரமித்தன. தொட்டு முகர்ந்து குளிரக் குளிர உணர்ந்து மேலே கவியும் மழைநீரும் சுற்றி வளைக்கும் காயலின் நீர்மட்டமும் ஜீவனோடு எழுந்து வந்தன.

 

அதிசயமான மழை. ஆனந்தமான வெள்ளம். பயத்தை உண்டாக்கும் மழையும் காயல் நீரும் கலந்த வெளியில் ஒற்றைப் பறவை நனைந்தபடி பறக்கிறது. வரைந்து விட்டு நாயர் கேள்விக்குறியோடு அந்தப் பறவையைப் பார்த்தான்.

 

‘நீ எப்படி வந்தே? இந்த மழையிலே சிறகுகள் நனைய எதுக்கு வந்தே?:’

 

அந்தப் பறவை நாயரைப் பார்த்து நெல்மணிக் கண்ணைச் சிமிட்டியது.

 

‘உன் பிள்ளை அனுப்பினான் என்னை. அம்மணியும் தான் கூடவே இருந்தா. நீயும் வர்றியா? கொண்டு போய் அவங்க கிட்டே சேர்க்கறேன். படகு வேணாம். வெள்ளத்திலே நீச்சல் போட்டு கரை கடக்க வேணாம். படகு கவிழ்ந்து கண்ணுக்கு முன்னாலே உன்னோட உயிர் உருக்குலைஞ்சு நீரோட நீரா, நீர்ப்பாசியா, பச்சை பிடிச்சு ஈரப் பசையோடு பறந்து போறதைப் பார்த்து சடலமாகி நிக்க வேணாம்.’

 

‘சோத்துக்கார அம்மா வந்தாச்சு.’

 

சேர்ந்து ஒலிக்கும் குரல்கள். நாயர் திரும்பிப் பார்த்தான். சோற்றின் வாசனை புழுக்கமான பகலுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தது. கூடையில் சோறும் கறியும் பூவரச இலையும் சுமந்து வந்து இறக்கியவளைச் சுற்றி அந்தக் கூட்டம்.

 

‘நாயர், வந்து குந்து. ஆயா அப்பாலே கறிக்கொளம்பு கலாஸ்னு பிட்டைப் போட்டுடும்.’

 

முத்துப்பட்டியான் நாயரைக் கையசைத்து அருகில் இருந்த வெற்றிடத்தைக் காட்டினான்.  வா வா என்று ஆயா பொக்கைவாயில் புகையிலைக் கட்டையைத் திணித்தபடி பிரியத்தோடு கூப்பிட்டாள். ஆறு மாதப் பழக்கத்தில் எல்லோரும் நெருங்கிய உற்றாரும் உறவினரும் ஆகியிருக்கிறார்கள்.

 

படகு வரவேண்டும். வந்ததும் கண்ணனைக் கையில் பிடித்துப் பத்திரமாக இறக்கிவிட்டு விட்டுப் பின்னால் குடையைத் தாழப் பிடித்தபடி அம்மணி இறங்குவாள். நாயர் அம்மிணியிடம் சொல்வான் – ‘நமுக்கு மதராசியில் ஒருபாடு பெந்துக்கள் உண்டல்லோ அவரெ ஒண்ணு காணான் போயாலோ?’

 

‘வா, வந்து சாப்பிடு நாயர்’. பின்னால் இருந்து குரல்கள் தொடர்ந்து அழைத்தன.

 

‘படகு வந்துடட்டும். அப்புறம் சாப்பிடறேன்’.

 

நாயர் முணுமுணுத்தபடி ஓவியத்தைத் தொடர்ந்தான்.  படகின் சுவர்களும்,  நாலு வரிசையாக உள்ளில் இட்ட மரபெஞ்சுகளும் இப்போது வடிவம் பெற ஆரம்பித்தன.

 

திரும்பவும் மோட்டார் சைக்கிள் ஒலி. தொடர்ந்து சீறி வரும் கார்கள் வரிசையாக வந்து நின்றன. தடதடவென்று யாராரோ இறங்கி முன்னும் பின்னும். ஓடினார்கள்.

 

நாயர் வரைவதை நிறுத்திவிட்டுப் பார்த்தான். தலைகள். சுவருக்கு எதிரே எழுந்து நிற்கும் நிறுவனங்களின் தலைகள். நிர்வாக யந்திரத்தை இயக்கும் தலைகள்.

 

‘ஆறு வழிப் பாதை இதுவரை பூர்த்தி ஆயிடுச்சு. இதுக்கு அப்புறம் நாலு லேன்லே வேலை நடக்குது. அதுவும் அடுத்த மாசம் முடிஞ்சுடும்.’

 

யாரோ பணிவாகச் சொன்னார்கள்.

 

‘அடுத்த மாசம் முடியறது இருக்கட்டும். அடுத்த வாரம் இங்கிலாந்து பிரதமர் இங்கே வரும்போது பார்க்க என்ன இருக்கும்?’

 

கருப்புக் கண்ணாடி போட்ட தலை கேட்டது..

 

‘இந்தக் கட்டிடம் எல்லாம் ரெடியா இருக்கும் சார். லேண்ட்ஸ்கேப்பிங் பண்ணி பாதை ஓரமா புல் வளர ஆரம்பிச்சு, இப்போதைக்கு பூத்தொட்டி வரிசையா நின்னிருக்கும். மெர்க்குரி, சோடியம் விளக்கு வழியெல்லாம் ராத்திரியைப் பகலாக்கிட்டு எரிஞ்சுட்டிருக்கும். சில்க் மாதிரி வழுவழுன்னு ஒரு அப்பழுக்கில்லாம ரோடு போட்டு.’

 

கருப்புக் கண்ணாடி சுவர் பக்கமாக வந்தது.

 

‘வாட் நான்சென்ஸ்? இந்த ஆள் என்ன பண்ணிட்டு இருக்கான்?’

 

நாயர் கையில் பிரஷ்ஷோடு எழுந்து நின்றான். சங்கோஜமாகச் சிரித்தான்.

 

‘படம். வேம்பநாட்டுக் காயல் இது. கேரளத்துலே ஆலப்புழை மாவட்டத்திலே இருக்கு. எங்க ஊர் கருமாடி. காயல் ஓரமா நானும் என் வீடும் புரையிடமும்’

 

நாயர் முடிக்கும் முன் கைகாட்டி நிறுத்தியது இன்னொரு தலை.

 

‘படமாய்யா இது? இது டெக்னாலஜி ஹைவே. பெருஞ்சாலை.  மாடர்னா  கம்ப்யூட்டர், நாகரீகமான பொண்ணுக, பசங்கன்னு யங்க்ஸ்டர்ஸ். அவங்க நிக்கற மாதிரி, நடக்கிற மாதிரி, டான்ஸ் ஆடற போஸ்லே வரைஞ்சு வச்சா போற வரவங்களுக்கு கண்ணுக்கு ரம்மியமா இருக்கும். காயலும் கண்றாவியும் யாருக்கு வேணும்?’

 

கருப்புக் கண்ணாடி ஆதரித்துத் தலையசைத்தது

 

‘நாளைக்குக் காலை வ்ரை டைம். நறுவிசா வரஞ்சு எஞ்ஜினியர் சார் சொன்னபடிக்கு இடத்தை க்ளீனா வைக்கணும். இல்லியா, நீ  இன்னியோட ஏறக்கட்டிட்டு போய்க்கிட்டே இரு.  இங்கே என்னய்யா கூட்டம்? போய் வேலையைப் பாருங்க. இன்னிக்கு எம்மா நேரம் ஆனாலும் முடிச்சுட்டுத்தான் போகணும் எல்லாரும்.’

 

எல்லா காரும் ஜீப்பும் புறப்பட்டுப் போனபிறகு மோட்டார் சைக்கிள்காரன் உத்தரவிட, சுவர் பக்கம் சாப்பிட்டுக் கை கழுவிக் கொண்டிருந்தவர்கள் அவசர அவசரமாக வேலையைத் தொடர ஓடினார்கள்.

 

சாயந்திரம் மங்கி சோடியம் விளக்குகள் எரியத் தொடங்கிய அப்புறமும் வேலையைத் தொடர்ந்தார்கள்.  முடிவு காணாது நீண்ட இரவில் நடுவில் எப்போதோ களைத்து சுவர் அருகில் படுத்து உறங்கிப் போனார்கள் அவர்களில் நிறையப் பேர்.

 

எழுந்து பார்த்தபோது வெயில் ஊர்ந்து மேலேறிக் கொண்டிருந்தது. டீக்காரப் பையன் குவளைகளோடு எழுப்பினான்.

 

‘ராத்திரி ஓவர்டைம் துட்டு கெடைக்குமா அண்ணே?’

 

‘ முடிதான் கிடைக்கும். அதுக்கும் கீளே சொல்ல வாய் வரல்லே விடிகாலையிலே.’

 

முத்துப்பட்டியான் டீக்காரப் பையனிடமிருந்து ஒரு குவளை தண்ணீர் வாங்கி வாய் கொப்புளித்துவிட்டு டீயைக் குடித்தான்.

 

‘இது என்ன அண்ணே?’

 

டீக்காரப் பையன் சுவரைக் காட்டினான்.

 

நாயர் வரைந்து கொண்டிருந்த படம். காயல். பொங்கிப் பெருகி உயரும் வெள்ளம். மேலே கருமேகங்கள். தாரை தாரையாக இறங்கி நீரோடு நீராக அலையடித்துக் கலக்கும் மழை. தூரத்தில் வந்து கொண்டிருக்கும் படகு. படகுத் துறை.

 

படகில் இரண்டு பேர் வந்து இறங்குகிறார்கள். முண்டும் ரவிக்கையும் கையில் குடையுமாக ஒரு பெண். அவள் கையைப் பிடித்தபடி, தோளில் பள்ளிக்கூடப் பையை மாட்டியபடி ஒரு குட்டிப் பையன். கழுத்துக்கு மேல் தலை காணப் படவில்லை இரண்டு பேருக்கும். சின்னதும் பெரிதுமான இரண்டு கம்ப்யூட்டர்கள் அந்த இடங்களை நிறைத்திருந்தன. காயல் பரப்பிலும் கம்ப்யூட்டர்கள் மிதந்து கொண்டிருந்தன. வானத்தில் ஒற்றை கம்ப்யூட்டர் ஈரச் சிறகுகளோடு பறந்து கொண்டிருந்தது.

 

நாயர்? நாயர் எங்கே?

 

படகுத் துறையில் நின்று தூரத்தில் கண்ணை நிலைக்க வைத்து பார்த்தபடி நாயர் நின்றிருந்தான். படத்தில் அவன் தலையும் பாதி கம்ப்யூட்டராகி இருந்தது.

 

(குங்குமம் 2010)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 21, 2022 18:32

November 20, 2022

இன்னொரு குதிரை – சிறுகதை

இன்னொரு குதிரை

 

குப்பன் நகரசபைத் தேர்தலில் நாலாம் வார்ட் வேட்பாளராக நிற்பதாக அறிவிப்பான்.  அஸ்து தேவதைகள் ஆமோதிப்பதாக ராமாமிர்த பாட்டி சொல்வாள்.

 

வாஸ்து தேவதைகளைத் தெரிந்தவர்களுக்குக்கூட அஸ்து தேவதைகளை அவ்வளவாகத் தெரியாது. இதுகள் சதா வானத்தில் சஞ்சரித்தபடி, யாராவது ‘எழவு விழ’, ‘நாசமாகப் போக’, ‘சனியன் பிடிக்க’ போன்ற அசுபமான பிரயோகங்களை உதிர்த்தால் உடனடியாக ஆமோதிப்பு தீர்மானம் நிறைவேற்றி அந்தப்படிக்கு காரியங்கள் நடக்க வைப்பதையே முழுநேரம் வேலையாகக் கொண்டவை.

 

கங்கையூரில் நகரசபை தேர்தல் அறிவித்ததுமே ஒட்டுமொத்தமாக அஸ்து தேவதைகள் இங்கே திரண்டு வந்து விடும். அதில் கொஞ்சம் லேட்டாக வந்து சேர்ந்த ஒன்று குப்பனை சபிக்க, சீனியர் தேவதை லிஸ்டில் முதல் இடம் பெறும் பிரமுகர்களில் சிலர் – டாக்டர் கண்ணுக்கினியான், பெட்டிக்கடை சாமி, முறுக்கு மொத்த சப்ளை முனியாண்டி, மளிகைக்கடை ராவுத்தர், ஸ்தானிஸ்லால் வாத்தியார்.

 

மொத்தம் பனிரெண்டு வார்ட் ஊரில். ரெண்டாம் வார்டில் டாக்டர் கண்ணுக்கினியானும், பெட்டிக் கடைக்கார சாமியும் மோத, நாலாம் வார்டில் குப்பனும் முறுக்கு முனியாண்டியும் போட்டி. வேட்பாளர் பட்டியலில் இடம் பெறும் மற்ற பல பெயர்கள் ஊரளவில் இல்லாவிட்டாலும் தெருவளவிலாவது பிரபலம்.

 

நகரசபை எலக்ஷனுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்குகிறது யாரென்று தெரியவில்லை.  கடியாரம், குதிரை வீரன், மோட்டார் கார், ரயில் இஞ்சின்,  கதவு, ரேடியோ, ரோடு ரோலர், விசிறி, பனைமரம், குடை,  கிணறு, இரும்பு வாளி, டிராக்டர் இப்படி.

 

குப்பனுக்கு குதிரைவீரன் கிடைக்கும். முறுக்குக் காரருக்குக் கிணறு. பெருமாள்கோவில் தெரு, ஒற்றைத் தெருவில் ஐம்பது வீடு, இதுதான் தொகுதியின் அளவு. வீட்டுக்கு வீடு இருக்கப்பட்ட நண்டு சிண்டு நார்த்தங்காய் தள்ளி இருநூறு பெரிசுகள். இவர்கள் தான் ஓட்டுச் சாவடிக்குத் திரண்டு வந்து வாக்களித்து கிணறையோ குதிரையையோ முனிசிபல் ஆபீஸ் படியேற்ற கடமைப்பட்டவர்கள்.

 

மற்ற வார்டுகளிலும் இதே நிலைதான். ஏழாம் வார்ட் மாட்டு ஆஸ்பத்திரி வார்ட் என்ற வெட்டினரி ஹாஸ்பிடல் அமைந்த ஒன்று. அங்கே நாலு கால் பிராணிகளே அதிகம். அவை தவிர மிச்சம் நூறு பேர் வாக்களிக்கத் தேறினால் அதிசயம்.

 

கடைசியாக பத்திரிகை தாக்கல் செய்தாலும் குப்பன் முதல் ஆளாக சூறாவளி  பிரசாரத்தில் இறங்கிவிடுவான்.  அவனுடைய மூணு சீட்டு கோஷ்டி தேர்தல் கமிட்டியாக உருமாறி  இறங்கி பாட்டியின் முதல் வசவுக்குப் பாத்திரமாகும்.

 

‘தடித் தாண்டவராயன்கள். பேசறான், கொட்டிக்கறான், காப்பி எங்கேடி கிழவிங்கறான். இவன்கள் கட்டேலே போற வரைக்கும் யார் நித்யப்படிக்கு வடிச்சு கொட்டி பிண்டம் படைச்சு லோல்படறது?’. பாட்டி உருட்டி விட்டெறிந்த சாம்பார் சாதம் மூளையைச் சூடேற்ற கோஷ்டி முதல் தேர்தல் தந்திரத்தை எட்டும்.

 

நாளைக்கு சாயந்திரம் நாலு மணிக்கு தொகுதியில் இருக்கப்பட்ட எல்லா வீட்டுக்கும் அப்பம் வடை போட்டுவிட்டு வருவது. கூடவே தேங்காய்ப்பால் ஒரு லோட்டா, வடைக்கு புதினா சட்னி என்று பக்கவாத்தியங்கள் இலவச இணைப்பு.

 

‘ஏண்டா தோசி, யாராவது மண்டையைப் போட்டா இல்லே பத்தாம் நாள் காரியம் முடிஞ்சு சாயந்திரம் அண்டை அயல்லே அப்பம் வடை போடற சம்பிரதாயம். இங்கே என்ன எழவு விழுநதுடுத்துன்னு அப்பம் வடை போட அலையறே?’

 

பாட்டியின் பிரம்மாஸ்திரத்தை புன்முறுவலுடன் எதிர்கொண்டு குப்பன் ‘எங்க தாத்தா அதான் உன் வீட்டுக்காரர் போனதுக்கு இப்போ தான் அதைப் போட நேரம் குதிர்ந்திருக்கு’ என்பான். ‘அட எழவே’ என்று பாட்டி வாழ்த்துவாள்.

 

குப்பன் குழு அப்பம் வடை சப்ளையை முத்துப்பட்டி கருமாதி சமையல்கார கோஷ்டியிடம் காண்ட்ராக்ட் விடும். சொன்ன நேரத்துக்கு சரக்கை ரெட்டை மாட்டு வண்டியில் கொண்டு வந்து முத்துப்பட்டி ஆட்கள் இறக்கும்போது வண்டி மாடு ‘ம்ம்மா’ என்று உச்சத்தில் கொடுக்கும் சத்தத்தில் இருந்து உருளும் வண்டிச் சக்கரம் வரை ஒரே சீராகப் பூண்டு வாசனை. இந்தப் பண்டத்தை ஏறிட்டும் பார்க்காத பெருமாள் கோவில் தெரு வீடுகளில் இப்படி  ஒரு நெடியோடு அப்பம் வடையை எப்படிப் போட? தாத்தா கடைசி விருப்பம் என்று சொல்லித் தான்.

 

ஒண்ணு தெரியுமோ?தெருவில் யாரும் பூண்டு விரோதியில்லை. பல தலைமுறையாக வீட்டுச் சமையலில் சேர்க்காத ஒரே காரணத்தால் உள்ளே நுழையாதது அது, யாரோ ஒரு மகானுபாவரின் கடைசி விருப்பம் மூலம் சூடான அப்பம் வடையோடு  ஓசியில் உள்ளே வந்து விழ யாருக்கும் எந்தத் தடையும் இருக்காது.

 

இந்த எதிர்பாராத வரவேற்பால் மலைத்துப் போகும் குப்பன் கோஷ்டி, அவன் ஜெயித்தால் ஒவ்வொரு அமாவாசைக்கும் இதேபோல் மணக்க மணக்க தாத்தா நினைவில் பலகாரம் போடுவதாக வடையோடு தேர்தல் வாக்குறுதியும் தரப்படும்.

 

தொகுதி முழுக்க வினியோகம் செய்துவிட்டு வீடு திரும்ப, ‘பாடையிலே போக. ஊருக்கு தானம் கொடுக்க முந்தி வீட்டுக்கு எடுத்து வைக்கணும்னு இந்த பிரம்மஹத்திக்குத் தெரியாதா’ என்றபடிக்கு முன் ஜாக்கிரதையாகப் பதுக்கி வைத்திருந்த தேர்தல் பிரசார சாதனங்களை பூண்டு சட்னி சகிதமாக கபளீகரம் செய்துகொண்டிருக்கும் ராமாமிர்த பாட்டியைக் காண நேரும். அவர்கள் ஒன்றும் சொல்ல முடியாது. பாட்டியின் ஓட்டும் இதே தொகுதியில் தான் என்பதே காரணம்.

 

நாலாம் வார்ட் இப்படி சாப்பாட்டு வாசனையோடு தேர்தலை எதிர்கொள்ள, ரெண்டாவது வார்டில் டாக்டருக்கும் பெட்டிக்கடை சாமிக்கும் நட்பான மோதல். டாக்டர் தினசரி ராத்திரி அரைக் கவுளி வெற்றிலை மென்றுவிட்டு கோலி சோடா குடிக்க, ஊர் வம்பு பேச வசதியாகத் தேர்ந்தெடுத்திருப்பது சாமி கடையைத்தான்.

 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தன் கடையில் இருந்தபடிக்கே சாமி பிரச்சாரத்தைத்  துவங்கிவிடுவார். அவருக்குத் தேர்தல் சின்னமாக வெற்றிலை வழங்கப்படும். யார் எது வாங்க வந்தாலும் வெற்றிலையில் பேச்சை முடித்து காசு வாங்கிப் போட்டபடி சாமி பிரசாரம் நடத்த, டாக்டருக்கு மகா பெரிய பிரச்சனை.

 

எதிர்த்து நிற்கிற வேட்பாளரின் கடையில் மணிக்கணக்காக வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நின்று எதிரியின் தேர்தல் சின்னமான வெற்றிலையை ரசித்து மென்று தான் பலவீனப்பட்டுப் போவதை டாக்டர் விரும்பமாட்டார். மேலும் அவருக்கு கடியாரச் சின்னம். சாமி தேர்தல் சின்னத்தை பிரசாரத்தோடு விற்றுக் காசாக்குவதுபோல் அவர் கடியாரத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரு பாட்டில் கார்பனேட் மிக்சர் அல்லது இஞ்செக்ஷன் சிரிஞ்ஜ் இப்படி சின்னத்தை அவருக்கு ஒதுக்கி இருந்தால் சௌகரியமாக இருக்கும். அமையாதே.

 

சாமி கடை வாசலில் ராத்திரி வம்பு மடத்தை உடனே நிறுத்திவைக்க டாக்டர் மனசே இல்லாமல் முடிவு செய்வார். அடுத்து பழனியின் குதிரை வண்டி டாக்டர் பிரச்சார சாதனமாக்கப்படும். இது அவருடைய ஆதரவாளர்களான பள்ளிக்கூட ஹெட் மாஸ்டர், பேங்க் ஏஜெண்ட்  ஆகியோர் யோசனைப்படி நடக்கும்.

 

டிஸ்பென்சரிக்கு வரமுடியாத நோயாளிகளுக்கு நேரடியாகக் காட்சியளிக்க அவர் அந்த வாகனத்தைத்தான் அல்லும் பகலும் பயன்படுத்துவது வழக்கம். ஊரில் வேறே குதிரை வண்டிகள் இருந்தாலும் அதில் எல்லாம் ஏறுவதில்லை. குதிரைராசி பார்த்து, அவர் தொழிலுக்கு பழனியின் வண்டி தான் பொருந்தி வந்த ஒன்று.

 

திட்டத்தின் படி குதிரை வண்டி ஓட்டுகிற பழனிக்குப் பின்னால் வழக்கம் போல் வண்டிக்குள் உட்காராமல் பழனி பக்கத்திலேயே டாக்டர் உட்கார்ந்து கருடாழ்வார் போல் ரெண்டு கையையும் கூப்பிக் கொண்டு வரவேண்டும். வண்டியில் ரெண்டு பக்கமும் கடியாரம் படம் எழுதிய படுதா தொங்க விடப்படும்.

 

தொகுதி முழுக்க பிரசார வாகனம் பதினைந்து நிமிடத்தில் சுற்றி வந்துவிடும் என்பதால் அங்கங்கே வண்டியை நிறுத்தி டாக்டர் மினி அரட்டை கச்சேரிகளை அரங்கேற்றிய வண்ணம் பிரசாரத்தில் ஈடுபடுவார். நாலு ரவுண்ட்  இப்படி தொகுதி சுற்றி வருவதற்குள் பெரும்பாலான வாக்காளர்களை சந்தித்து விட முடியும். கூடவே நலம் விசாரித்து, கொஞ்சம் சுகவீனம் என்று புகார் செய்தவர்களை அடுத்த நாள் டிஸ்பென்சரிக்கு வரச்சொல்லி தொழிலுக்கும் வழிவகுக்க முடியும்.

 

இப்படி ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய்களை அடிப்பதில் டாக்டர் வெற்றிபெற, பெட்டிக்கடை சாமி தேர்தல் உத்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டிப் போகும்.

 

‘குப்பா, உன் தொகுதியிலே குதிரை வீரன் தானே உனக்கு சின்னம்’?. சாயந்திரம் பாட்டி கண்ணில் படாமல் ஒரு சிகரெட் பற்றவைக்க வரும் குப்பனை அக்கறையோடு விசாரிப்பார் சாமி. பூரிப்போடு சிரிப்பான் குப்பன்.

 

‘அப்போ எதுக்கு அப்பம் வடைன்னு வீடு வீடா சப்ளை பண்ணிட்டு இருக்கே’?

 

குப்பனும் யோசித்துப் பார்ப்பான். சாமி சொன்னது நியாயமாகப் படும்.

 

‘குதிரை மேலே ராஜபவனி வரணும் நீ’. சாமி அஸ்திரத்தை வீசுவார். ‘அப்பம் வடை சில்வர் தூக்கை எப்படி பிடிச்சுக்கறது?’ இது குப்பனின் சந்தேகம்.

 

‘ரெண்டு நாளைக்கு பலகாரத்தை நிறுத்து. கடிகாரத்தையும் நிறுத்திடலாம்’ சாமி மர்மப் புன்னகை புரிவார். அவருக்கும் குப்பனுக்கும் நல்லது செய்கிற யுக்தியாம். பலகாரத்தை நிறுத்த முடியாது என்று சொல்லி விடுவான் குப்பன். அப்போ எனக்கும் தினசரி ஒரு பிளேட் அனுப்பி வை என்பார் சாமி. குப்பன் உடனடியாகச் சம்மதிக்க, சாமி தரப்பில் யாமிருக்க பயமேன் கொடி உயர்த்தப் படும்.

 

பகல் நேரத்தில் டாக்டர் சின்னத் தூக்கம் போடுவது ஊருக்கே தெரியும் சங்கதி. சாமி பழனியை அந்த நேரத்தில் வரவழைத்து குப்பனையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு உடன்படிக்கை ஏற்படுத்துவார். அதன்படிக்கு இந்த வாரம் முழுக்க சாயந்திரம் ஐந்து முதல் இரண்டு மணி நேரம் பழனியின் குதிரை குப்பன் வீட்டு வாசலில் நிற்க வேண்டும். மிச்சத்தை குப்பனும் குழுவும் பார்த்துக் கொள்வார்கள்.

 

குப்பன் வகையில் சாயந்திர வண்டி வாடகை. டாக்டர் ஏழு மணிக்கு அப்புறம் தான் குதிரைவண்டிப் பிரசாரம் கிளம்புவார் என்பதால் பழனிக்கு அந்த சவாரியும் கிடைக்கும். வருடம் பூரா எலக்ஷென் என்று சட்டம் வந்தால் பழனியும் அவன் குதிரையும் முதலில் வரவேற்பார்கள். சாமியின் திட்டம் உடனே ஏற்கப்படும்.

 

சாமி பழனிக்குச் சொல்லாமல் விடுவது ஒன்று உண்டு. குதிரைக்கு டியூட்டி ரெண்டு மணி நேரம் என்றாலும் நடுவில் ஒரு சிறிய இடைவேளை ஒரு மணி நேரத்துக்கு. ஆக, ராத்திரி டாக்டர் பிரசாரத்துக்குக் கிளம்பும்போது குதிரை வண்டி கிட்டாது.

 

குப்பன் டிராயிங் மாஸ்டர் வேலப்பன் சகாயத்தோடு சாயந்திரம் குதிரை வீரனாக அவதாரம் எடுப்பான். கரி மீசையும் கன்னத்தில் குங்கும வர்ணமும் வரைந்து கொள்வான். அவன் முதுகில் டிராயிங் மாஸ்டரின் ஸ்பெஷல் சித்திரமான முண்டாசுக்கார படகோட்டி, தென்னை மரம் தான் இல்லாது போகும்.

 

அட்வான்ஸ் பணத்தை மடியில் முடித்துக் கொண்டு உடம்பு புஷ்டியாக ஏதோ லேகியத்தை விழுங்கி விட்டு குப்பன் வீட்டுத் திண்ணையில் குப்புறப்படுத்து விடுவான் பழனி. அது அபின் என்று யாரோ சொல்வது  அவனுக்கு தெரியாது.

 

‘சனியன்கள், உசிரை வாங்கறதுக்குன்னே பொறந்து வச்சிருக்கு எல்லா ஜந்துவும்’ என்று பாட்டி குப்பனையும் குதிரையையும் பொதுவாகப் பார்த்துத் திட்டி விட்டு திருஷ்டி படாமல் இருக்க குதிரைக்கு வெகு அருகே கற்பூர ஆரத்தி எடுப்பாள். வெப்பம் தாங்காத குதிரை அவளை ஒரு முட்டு முட்டி தட்டுத் தடுமாறி விழச் செய்யும். ‘பொணமே, உனக்கு எழவு விழாதா?’ என்று குதிரைக்கு இன்னொரு உடனடி வசவு தானம் செய்து விட்டுப் பாட்டி தரையில் விழுந்து மயக்கமாவாள்.

 

அவள் திரும்ப எழுந்து எந்த நிமிடமும் அடுத்த அசுப வார்த்தையை தன்னைப் பார்த்துச் சொல்வாள் என்று எதிர்பார்த்து குப்பன் அதற்குள் குதிரையை விட்டிறங்க நினைப்பான். குதிரை வளைந்து கொடுக்க மாட்டேன் என்று நேரே நிற்பதோடு பெரிய பற்களைக் காட்டிக் கொண்டு வில்லன் போல் கனைக்கும். வேறு வழி  இன்றி குப்பன் குதிரை மேலேயே ஆரோகணித்திருக்க, மணி ஏழரை.

 

குதிரை வண்டிக்குத் தயாராக டாக்டர் வீட்டு வாசலில் காத்திருப்பார். வண்டி தான் அவருக்காகக் காத்திருப்பது வழக்கம். கம்பவுண்டர் வைரவனை அழைத்து என்ன விஷயம் என்று விசாரிக்கலாம் என்று நினைப்பார். ரகசியமாக வெற்றிலையும் சீவலும் வாங்க அவனை சாமி பெட்டிக்கடைக்கு அனுப்பியிருப்பது அப்போதுதான் நினைவு வரும். டாக்டருக்காக இல்லை, அவன் வீட்டில் விசேஷம் என்று தான் வாங்கி வரவேண்டும் என்பது ஹெட்மாஸ்டரின் திட்டத்தின் சிறு பாகம்.

 

வெற்றிலையும் வராமல், குதிரையும் வராமல் டாக்டர் காத்திருக்க, குப்பன் வீட்டில் கூச்சல் குழப்பம். ராமாமிர்தப் பாட்டி கண்ணைத் திறக்காமலேயே ஈன ஸ்வரத்தில் நாட்டு அளவில், மாநில அளவில் இருக்கப்பட்ட பிரபலங்களை  ‘பாடையிலே போற பீடைகளா’ என்று  வைய ஆரம்பிப்பாள். நடுநடுவே குதிரை மாதிரி வேறே கனைக்கவும் செய்வாள். பாட்டிக்குப் பல் இல்லாத ஒன்று தான் குறைச்சல்.

 

டாக்டர் கண்ணுக்கினியான் வந்தால் தான் பாட்டி பிழைப்பாள் என்று தெருவே குப்பன் கணக்கில் பூண்டு வெங்காய வடை தின்ற திருப்தியோடு ஏப்பம் விட்டபடி சொல்லும். அதற்குள் கையில் வெற்றிலைப் பொட்டலத்தோடு வைரவன் தகவல் அறிந்து குதிரையை பறித்துக் கொண்ட விஷயமாக சண்டை பிடிக்க குப்பன் வீட்டுக்குப் போய்ச் சேர்வான்.

 

அவன் பேசவே தேவையில்லாமல் நிலைமை புரிபட்டுப் போகும். வைரவன் குதிரை பக்கம் நெருங்கி குப்பனை இறக்கி விட என்ன செய்யலாம் என்று யோசிக்க வெற்றிலைப் பொட்டலம் இப்போது குதிரை மூக்குக்கு முன்.  டாக்டருக்கு வருடக் கணக்காக சேவகம் செய்து செய்து அந்த வாசனை அதற்குப் பிரியமான ஒன்று.  வெற்றிலை வாசனையை முகர்ந்துகொண்டு குதிரை முன்னால் நகர ஆரம்பிக்கும்.

 

வைரவன் வெற்றிலையைக் காட்டியபடி முன்னால் நடக்க, பின்னால் குப்பன் தாறுமாறாக எந்த நிமிஷமும் விழுந்து விடும் பயத்தோடு குதிரை ஏறி வர அந்த ஊர்வலம் ரெண்டாம் வார்டில் டாக்டர் வீட்டை நோக்கிப் புறப்படும்.

 

டாக்டரையும் குதிரை ஏறச் சொல்வான் குப்பன். எடை மொத்தமும் தாங்காது என்று டாக்டருக்குப் பட அந்த ஊர்வலம் குப்பன் வீட்டுக்கு கால்நடையாகத் திரும்ப நடக்கும். ஊர்வலக் கடைசியில் ஆனந்தமாக வெற்றிலை மென்றபடி டாக்டர் நடப்பார். அவர் கொடுத்த வெற்றிலையைக் குதிரை அசைபோடும்.

 

பாட்டிக்கு ஒன்றும் கேடு வராது. வெறும் மயக்கம். கிரகசாரங்களே என்று டாக்டர் தொடங்கி சகலரையும் சபித்துக் கொண்டு அவள் எழுந்து உட்கார்ந்து விடுவாள். பழனி எழுந்து எல்லாப் பழியையும் குதிரை மேல் போட்டு விட்டு வண்டியில் அதைப் பூட்ட, டாக்டர் குதிரை வண்டி ஏறிப் போவார். அவர் வரும் முன்பே பெட்டிக்கடை சாமி கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்கு சவாரி விட்டு விடுவார்.

 

எல்லோருக்கும் சந்தோஷம் என்றாலும் நாலாம் வார்ட் வாக்காளர்கள் தான் குழம்பிப் போவார்கள். நாலாம் வார்ட் குதிரை வீரன் குப்பனும் ரெண்டாம் வார்ட் கடிகார டாக்டரும் சேர்ந்தது என்ன மாதிரி அவசர கூட்டணி? ஏன் சேரணும்? டாக்டரை எதிர்த்த  வெற்றிலை சின்னம் எதுக்கு நடுவில் வரணும்? யார் யார் பக்கம்? எது எது பக்கம்? அப்பம் வடை தேர்தலுக்கு அப்புறமும் கிடைக்குமா?

 

குப்பன் தோற்றுப் போவான்.

 

‘சவண்டித் தீனி எழவுகள். வாய்க்கு ருஜியாக் கொட்டிக்க தயார். ஓட்டுப் போட வீட்டை விட்டு வரமுடியாதா இந்த சவங்களுக்கு? நாசமாப் போக’.

 

பாட்டியின் வசவை கடன் வாங்கி அவன் ஒலிக்கும்போது ரெண்டாம் வார்டில் டாக்டருடைய வெற்றியின் வேட்டு முழக்கம் கேட்டுக் கொண்டிருக்கும். கொண்டாட்டத்தின் பகுதியாக சாமி கடைக்கு வந்து ஆனந்தமாக வெற்றிலை போட்டுக் கொண்டு குப்பனைப் பற்றிய ஊர்வம்பில் ஆழ்ந்திருப்பார் டாக்டர்.

 

குதிரை வண்டிப் பழனி மேல் ஏழாம் வார்ட் மளிகைக்கடை ராவுத்தருக்கு வருத்தம் வரலாம். ஒரு ஓட்டில் ரிடையர்ட் வாத்தியார் ஸ்டானிஸ்லாசிடம் தோற்றுப் போவார் அவர். பழனிக்கு அந்த வார்டில் தான் வீடு. அவன் ஓட்டு நிச்சயம் அவருக்குக் கிடைத்திருக்கும். தேர்தலுக்கு முதல்நாள் அந்தத் தெரு வெட்டினரி ஆஸ்பத்திரியில் சக வண்டிக் குதிரை ஒன்றுக்கு முரட்டு ஊசியைப் போட்டு வதைத்தது பழனியின் வண்டிக் குதிரையின் பார்வையில் படாமல் இருந்தால் அது தேர்தல் தினத்தில் தெருவை பூரணமாக பகிஷ்கரித்திருக்காது.

 

தேர்தல் வெற்றியை குதிரைகள் நிர்ணயிக்கக் கூடாது என்று சட்டமா என்ன?

 

(கல்கி 2011)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2022 18:24

November 17, 2022

சகர் – சிறுகதை

சகர்

 

எதிர் ஃப்ளாட் என்று அந்தப் பெண் சொல்லி முடிக்கும் முன்பே வாசல் கதவு மூடி விட்டது.  சலிப்பு. ஆபீசுக்குக் கிளம்பும் அவசரம். சமையல்கட்டில் கத்தரிக்காய் வதக்கல் கரிந்து போகிற பயம். இதுவரைக்கும் எத்தனை பேர் கதவைத் தட்டித் திறந்து கருகின வதக்கலை குப்பையில் போட வேண்டி வந்ததோ.

 

எதிர் ஃப்ளாட் வாசலில் வெங்கடாசலபதி பெரிய படம் கதவு முழுக்க வருகிற மாதிரி வரைந்திருந்தது. இந்த ப்ளாட்டிலும் அதே மாதிரி படம் எழுதியிருந்ததால் வருகிறவர்கள் குழப்பமடைகிறதாகத் தெரிகிறது. இதைச் சொல்ல இன்னொரு முறை. வேண்டாம். அந்தப் பெண்ணுக்கு ஆபீஸ் போகமுடியாமல் போய்விடலாம்.

 

குணா எதிர் ப்ளாட்டில் இரண்டு தடவை மணியடித்தான். சத்தம் கேட்டு யாருமே வருகிறது மாதிரி தெரியவில்லை. உள்ளே தயக்கத்தோடு நுழைந்து சார் என்று கூப்பிட்டான். கதவை கார்ச் சாவியால் தட்டினான். மேடம் என்று அடுத்த விளி. பதிலே இல்லை. ஏதோ மெஷின் உள்ளே ஓடுகிற ஹம்ம்ம் சத்தம் மட்டும் விட்டு விட்டு வந்தது. ஆக ஆள் உண்டு. வந்து என்னன்னு கேட்க சோம்பல் படுகிறார்கள்.

 

உள்ளறையை மறைத்துத் தொங்கிக் கொண்டிருந்த துணிப் படுதாவில் உஷ் என்று உதட்டில் விரலை வைத்து எச்சரிக்கும் குழந்தையை ஒதுக்கி குணா எட்டிப் பார்க்க, வரிசையாக அறைகள். வலது பக்கத்தில் ஆறு, இடது பக்கம் இன்னொரு ஆறு.  அடுக்குமாடிக் குடித்தனத்தில் இவ்வளவு பெரிய ப்ளாட் இருப்பது அவனுக்குப் புதுசு. கட்டிடத்தின் கோடி வரை ஒற்றை ப்ளாட் நீளவாக்கில் விரிந்து இருக்கிறது. சாதாரணமாக மூணு தனித்தனிக் குடித்தனங்கள் இருக்கும் இடம்.

 

குணா நீள நடந்தான். என்னமோ தோன்ற விருட்டென்று திரும்ப வாசலுக்கு வந்து செருப்பை அங்கே விட்டு வெறுங்காலோடு மறுபடி உள்ளே போனான். ஜில்லென்று இருந்த தரையில் ஈரப்பசை காலை நனைத்தது. புதுசாக கழுவித் துடைத்தது.

 

ஒவ்வொரு அறையாக மறைத்த துணித் திரையில் சின்ன உயரமும் ஆகிருதியுமாக வெங்கடாசலபதி. வலது பக்கம் மூன்றாம் அறையில் அவர் விலகி இருக்க உள்ளே பெர்மூடா போட்ட கிழவர் ஹிந்திப் பத்திரிகையை மடியில் விரித்தபடி உட்கார்ந்தபடிக்கே தூங்கிக் கொண்டிருந்தார். சாய்வு நாற்காலிக்குப் பக்கத்து டிவியில் சத்தமில்லாமல் ஒரு சாமுராய் வாள் சுழற்றினான். எதிரில் பீங்கான் கிண்ணியில் கொசகொசவென ஆறிப்போன ஏதோ ஆகாரம்.

 

இவரிடம்? வேண்டாம். எழுப்பி சிரமப் படுத்தினாலும் மொழி புரியாது. வேங்கட வரதன். அவர் அகராதியில் அப்படி எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை. இரண்டு வரிசையிலுமாக இன்னும் ஆறு அறை பாக்கி உண்டு. அந்தக் கோடிக்குப் போவதற்குள் யாராவது வந்து நின்று என்ன என்று கேட்கலாம்.

 

வெங்கட வரதன் வேணும். ஒரு சவ சம்ஸ்காரத்துக்குக் கூட்டிப் போய்த் திரும்பக் கொண்டு வந்து விட, குணாவை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஏர் கண்டிஷன் செய்த கார். படுத்துக் கொள்ளக் கூட சவுகரியம் உண்டு. பூ மாதிரி பத்திரமாக ஏறிப் போய் ஒரு மணி நேரமோ இரண்டு மணியோ கழிந்து திரும்பி விடலாம்.

 

இடது கோடி கடைசி அறையிலிருந்து கையில் சிந்தாமல் சிதறாமல் பெட்-பான் ஒன்றைத் தூக்கி வந்த பெண்ணிடம் இதைத்தான் சொன்னான்.

 

விசிட்டர் எல்லாம் வெளியே உக்காரணும். வாசல்லே அறிவிப்பு பார்க்கலியா?

 

வெள்ளை அப்ரன் அணிந்திருந்த அவள் இவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. பார்த்தால் கவனம் தவறி, பாத்திரத்தில் வடிந்திருந்த கழிவு நீர் உடுப்பையும் கையையும் நனைத்துவிடலாம். எதிர் ப்ளாட் பெண்ணுக்கு கத்திரிக்காய் வதக்கல் தீய்ந்து போகிற மாதிரி இங்கேயும் அசம்பாவிதம் நிகழ நிறைய சாத்தியம். இவளுக்கு சம்பளம் கிடைக்கக் கூடும். கத்திரிக்காய் கறி வைக்க யாரும் வீட்டுப் பெண்களுக்கு காசு தருவதில்லை.

 

குணா வாசலுக்கு மறுபடி நடந்தபோது அங்கே சீரான வெள்ளை சேலையும், கருப்பு நிற முழுக்கை ரவிக்கையும் அணிந்த ஒரு பெண் மொபைல் தொலைபேசியில் பேசியபடி வந்து கொண்டிருந்தாள். அவள் எந்த நிமிடத்திலும் பறக்கத் தயாராக விமானப் பணிப்பெண் போல் தலை சீவி முடிந்திருந்தாள்.

 

பகவான் ஜெரியார்டிக் கேர். யா, யா, யூ ஆர் ரைட் இன் அ வே. ஜெரியார்டிக் கேர் அவுட்ஸோர்ஸிங். அல்லது, சமூக சேவை. ஓகே, விநோதமில்லாத கலவை.

 

அவள் அடக்கிச் சிரித்தபோது அசம்பாவிதமாக குணா முன்னால் போய் நின்றான்.

 

யார் வேணும்?

 

சட்டென்று தொலைபேசியில் பேசுவதைத் துண்டித்தபடி கேட்டாள்.

 

வெங்கட வரதன்.

 

காலையிலே ஆறு மணிக்கே வருவீங்கன்னு சொன்னாங்களே?

 

லேட் ஆயிடுச்சு. ஹெர்சே கிடைக்காம கொஞ்சம் அலைஞ்சு.

 

என்ன கிடைக்காமே?

 

அமரர் ஊர்தி.

 

சரி, இப்படி உக்காருங்க. நர்ஸ் கூட்டி வருவா. பிரேக்பாஸ்ட் முடிச்சாச்சு. எதுவும் சாப்பிடத் தர வேணாம். காபி டீ கூட.  மெடிகேஷன்லே இருக்காரு. போன ரெண்டு மணி நேரத்துலே திரும்ப கொண்டு வந்து விட்டுடணும். புரியறதா?

 

வெங்கட வரதன் எப்படி இருப்பார் என்று கூட குணாவுக்குத் தெரியாது. அவரை இரண்டு மணி நேரத்துக்கு மேல் தன் கூட வைத்துக் கொள்ள முடியாது. அது மட்டும் இப்போது தெரிய வந்துள்ளது. வைத்துக் கொண்டு என்ன செய்ய?

 

ஹெர்ஸ் பக்கம் கூட்டிப் போகாம இருந்தா நல்லது. சட்டுனு இன்ஃபெக்ட் ஆகிடும்.

 

பறக்கத் தயாரான பெண் மேஜை அருகே ஒரு மணியை அழுத்த அப்ரன்காரி உள்ளே இருந்து வந்தாள். அவள் கையில் அல்லது அப்ரனில் டெட்டால் வாடை கடந்து போகும்போது குணாவில் மூக்கைக் குத்தியது.

 

எப்படி மரணம்?

 

மொபைலை திரும்ப எடுத்த பெண் குணாவைக் கேட்டாள்.

 

அவனுக்குத் தெரியவில்லை.

 

நேற்றைக்கு சாயந்திரம் யாரோ வந்து ஏற்பாடு செஞ்சு.

 

ஓ, இதுவும் அவுட் சோர்ஸிங் தானா?

 

அவள் குரலில் ஏதோ நிம்மதி தெரிந்த மாதிரி இருந்தது குணாவுக்கு.

 

நேராப் பார்த்து நடங்க தாத்தா.

 

அப்ரன் பெண் கைப்பிடியில் தாங்கலாக வயசான ஒருத்தரைக் உள்ளே இருந்து கூட்டி வந்தாள். எழுபது வயது அல்லது அதுக்கும் மேல் காணும். நீலக் கட்டம் பதித்த தொளதொள பைஜாமா, குர்த்தா அணிந்த ஒடிசலான தேகவாகுள்ள மனுஷ்யர். உசரம் அஞ்சரை அடிக்கும் கீழே தான் இருக்கும்.

 

ஹரிவராசனம் பாடுகிற சின்ன டேப் ரிக்கார்டரை கையில் தூக்கிக் கொண்டு தட்டுத்தடுமாறி வந்தார் அவர். குணா எழுந்து நின்றான். அவர் குணாவிடம் டேப் ரிக்கார்டரை நீட்டினார்.

 

கேக்க மாட்டேங்கறது. இதை எடுத்துப் போய்.

 

அவர் சொல்லி முடிப்பதற்கு முன் அப்ரன் பெண் அதை வாங்கினாள்.

 

கேக்குது தாத்தா.

 

ஒலியை அதிகமாக்கினாள்.

 

ஏசுதாஸின் குரல் மட்டும் இழைந்து கொண்டிருந்த உலகத்தில் அவர்கள் எல்லோரும்  சம்பந்தமே இல்லாமல் விளிம்பில் மிதந்து கொண்டிருந்தார்கள்.

 

கேக்கலே.

 

பெரியவர் குணாவிடம் திரும்ப சொல்ல, டேப் ரிக்கார்டரை ஸ்விட்ச் ஆஃப் செய்து அப்ரன் பெண் கையில் வைத்துக் கொண்டாள்.

 

வேறே புதுசா வாங்கணும். ராஜா பணம் அனுப்பியிருக்கான்.

 

தாத்தா, இவரோட போய்ட்டு வந்துடுங்கோ. பக்கத்திலே தான்.

 

அப்ரன் பெண் வாசலுக்கு பெரியவரை அழைத்துப் போகும்போது சொன்னாள்.

 

கடை திறந்திருக்குமா?

 

அவர் குணாவை விசாரித்தார். தலையசைத்தான் அவன். கார்க் கதவைத் திறந்து அவர் பின் சீட்டில் ஏறக் காத்துக் கொண்டிருந்தான்.

 

உக்காருங்கோ தாத்தா.

 

அப்ரன் பெண் கார் உள்ளே கையைக் காட்டினாள்.  அவர் உள்ளே குனிந்து பார்த்தார். பெரிய சத்தத்தோடு வாயு பிரிந்தார்.

 

அப்ரன் பெண் சிரிப்பை அடக்கியபடி குணாவைப் பார்க்காமல் அவரை மெல்ல சீட்டில் அமர்த்தினாள்.

 

ரெண்டு மணி நேரம் தான். மேடம் சொல்லியிருப்பாங்களே. பத்திரம்.

 

குணா ஏதும் பேசாமல் வண்டியைக் கிளப்பினான். கார் முன்னால் ஊர்ந்து தெருத் திரும்பி போக்குவரத்து நெரிசலில் கலந்தது.

 

ஹரிவராசனம் போடு.

 

பின்னாலே இருந்து பெரியவர் குரல்.

 

ஆடியோ சிஸ்டம் இல்லே.

 

என்ன இல்லே?

 

ப்ளேயர். பாட்டு.

 

ராஜா வாங்கி வச்சானே? ப்ளூபங்கெட். ரிச்சி ஸ்ட்ரீட்லே. தேதி டிசம்பர் டெண்த்.

 

ரிச்சி ஸ்ட்ரீட்? குணாவுக்குத் தெரிந்து இந்த ஊரில் அப்படி ஒரு தெரு இல்லை.

 

நானும் போயிருந்தேன் வாங்கறதுக்கு. அவனை ஒரு இடத்துக்கும் தனியா அனுப்ப முடியாது. அனுபவம் போறாது. பச்சைக் குழந்தை மாதிரி.

 

ஏசி அதிகமா இருக்கா?

 

குணா கேட்டான். ஏதாவது பேச வேண்டி இருக்கிறது.

 

என்ன அதிகமா இருக்கா?

 

ஏசி. குளிர்.

 

ஊட்டியிலே குளிராம என்ன பண்ணும்?

 

இது ஊட்டியில்லை என்பதும் அவருக்குத் தேவையில்லாத தகவல்.

 

சிக்னலில் சிவப்பு விழ கார் நின்றது.

 

ராஜா பிள்ளை ப்ரைமரி ஸ்கூல் எக்ஸ்கர்ஷன்னு இங்கே வந்துட்டான்.  ஸ்வெட்டர் எடுத்து வைக்காம அவன் அம்மா அனுப்பிச்சுட்டா. என்னமோ கைமறதி பாவம்.

 

பின்னால் இருந்த கார் ஹாரன் அடித்தது. சிக்னல் விழுந்திருந்தது. குணா பொறுக்கச் சொல்லி கைகாட்டி விட்டு காரை முன்னால் நகர்த்தினான்.

 

ஆபீசுக்கு லீவு சொன்னான். கான்வாஸ் பையிலே ஸ்வெட்டரும் மப்ளருமா எடுத்துண்டான். இவனும் எக்ஸ்பிரஸ் பஸ்ஸிலே ராத்திரியே ஊட்டிக்குக் அடிச்சுப் பிடிச்சுக் கிளம்பிட்டான். இப்படியுமா ஒரு பிள்ளைப் பைத்தியம்.

 

அவர் சிரித்தார்.

 

ஞாபகம் இருக்கா? நீயும் நானும் இந்தக் கார்லே தானே ராஜா பின்னாலேயே ஊட்டிக்கு ஓடினது.

 

இந்தக் கார்? போன வருடம் தான் குணா ஓட்ட ஆரம்பித்தது. அவ்வப்போது பழுது வந்தாலும் பெரிசாகத் தொந்தரவு தராத வண்டி.

 

நீங்க ஏன் அப்பா வந்தீங்கன்னு கேக்கறான் அசடு. அவனுக்கு அவன் குழந்தை முக்கியம். எனக்கு என் பிள்ளை முக்கியம். என்ன சொல்றே? மங்கி கேப்பை மாட்டி விட்டா குரங்குக் குட்டி மாதிரி சிரிக்கறான் படவா.

 

குரங்குக் குட்டி எப்படி சிரிக்கும்?

 

சட்டென்று கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான் குணா.

 

குரங்கு இல்லே. ராஜா. என் பிள்ளை.

 

பெரியவர் சட்டென்று பேச்சை நிறுத்தினார். அவருக்கு கோபம் என்று குரல் சொன்னது. அப்புறம் பின் சீட்டில் இருந்து பேச்சு சத்தம் கேட்கவில்லை.

 

அப்பார்ட்மெண்ட் வாசலில் கார் நின்றபோது அவர் சீட்டில் குறுக்கிப் படுத்து தூங்கிப் போயிருந்தார். எழுப்பி அவரைக் கைத்தாங்கலாக குணா அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான். லிப்ட் மேலே போயிருந்தது.

 

மேலே போனதும் கதவை அடைக்கணும்னு தெரியாதா?

 

யாரோ மாடியைப் பார்த்து உத்தேசமாக சத்தம் போட லிப்ட் திரும்ப கீழே வந்தது.

 

ஸ்வெட்டர் கடையா? காஷ்மிலான் இருக்கும்.  ராஜா நெக் சைஸ் தேர்ட்டி நைன்.

 

குணாவோடு பெரியவர் லிப்டில்  போகும்போது சொல்லிக் கொண்டே வந்தார்.

 

ஏழாவது மாடி. ப்ளாட் வாசல். வாசலில் எதிர் ப்ளாட் கதவு வரை அடைத்தபடி செருப்பும் ஷூவுமாகக் குவிந்து கிடந்தது.

 

ரொம்பக் கூட்டமா இருக்கு, இன்னொரு நாளைக்கு வந்து வாங்கிக்கலாம்.

 

பெரியவர் சொன்னபோது அவருக்கு வழி விட்டு நாலைந்து பேர் சைகையில் ஏதோ பேசிக் கொண்டதை குணா கவனித்தான்.

 

தாத்தா, ஆமா, இவர் இருக்க இவன் போய். கஷ்டம். விதிங்கறது இதான்.

 

கூடத்தில் ஐஸ் கட்டி மேல் படுக்க வைத்திருந்தார்கள். ஐஸ் உருகி கூடத்தில் தண்ணீர் வடிந்து கொண்டிருந்ததை வைர மூக்குத்தி போட்ட ஒரு மத்திய வயசுக்காரி துணியில் ஒற்றி பக்கெட்டில் பிழிந்து கொண்டிருந்தாள். கூடவே இன்னொரு மாமி வெற்று பக்கெட்டோடு நின்றாள்.

 

குணா படுத்திருந்தவனைப் பார்த்தான். அவனை விட சின்ன வயசு. காலேஜ் படிக்கிற பிள்ளை மாதிரி இருந்தான். முகம் கோணலாக பாதி வரைக்கும் துணியால் மூடி இருந்தது.

 

மோட்டார் சைக்கிள் வேணும்னு அப்படி ஒரு அடம். தேவகி என்ன சொல்லியும் கேக்க மாட்டேனுட்டான். இப்படி புது பைக் வாங்கி ஒரேயடியாப் போய்ச் சேரணும்னு இருந்தா அவ தான் என்ன செய்வா, யார் தான் என்ன செய்ய முடியும்?

 

பக்கெட் மாமி மற்றவளிடம் சொல்லியபடி ஈரத் துணியைக் கொடுத்து இன்னொரு உலர்ந்த துணி உள்ளே இருந்து தேடிப் பார்த்துக் கொண்டு வரச் சொன்னாள்.

 

தேவகியை பெட் ரூம்லே கதவைச் சாத்தி வச்சிருக்கோம்.

 

ஈரத்துணி மாமி எதிரே பார்த்தபடி சொன்னாள். அங்கே இரண்டு சோபா நிறைய யாராரோ உட்கார்ந்து காப்பி குடித்துக் கொண்டு குணாவையும் பெரியவரையும் பார்த்தபடி இருந்தார்கள். சுவர் ஓரமாக ஏழெட்டு பேர் நின்றிருந்தார்கள்.

 

தாத்தா வந்திருக்கார். எழுப்பிடலாமே. ஒரு நிமிஷம் தான். இவ்வளவு தூரம் வந்துட்டு.

 

செடேட்டிவ் கொடுத்து தூங்க வச்சிருக்கு.

 

பரவாயில்லே, எழுப்புங்கோ.

 

சோபாவிலிருந்து இரண்டு பேர் காப்பித் தம்ளரைத் தரையில் வைத்து விட்டு உள்ளே போனார்கள்.

 

காப்பி இருக்கா?

 

பெரியவர் குணாவைக் கேட்டார்.

 

ஒரு காப்பி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று குணா நினைத்தான். இவருக்கு எதுவும் தரக்கூடாது என்று ஏர் ஹோஸ்டஸ் பெண் கண்டிப்பாகச் சொல்லி அனுப்பினது நினைவு வந்தது.

 

தாத்தாவை சோபாவிலே உக்காரச் சொல்லுங்கோ.

 

குணா அவரை மெல்லக் கைபிடித்து சோபா மத்தியில் உட்கார்த்தினான். அவர் தரையில் வைத்திருந்த காபித் தம்ளரை பார்த்தபடி இருந்தார். உள்ளே இருந்து கேவி அழுதபடி யாரோ வரும் சத்தம். தூக்கத்தில் நடக்கிறது போல ஒரு பெண்.

 

அழுது வீர்த்த முகத்தோடு இருந்தவளை நாலைந்து பேர் கைத்தாங்கலாகக் கூட்டி வந்தார்கள். அவள் விம்மியபடி பெரியவர் காலில் தொட்டுக் கும்பிட்டாள்.  பெரியவர் அவளையே பார்த்தபடி இருந்தார். அப்புறம் வலது கையை நீட்டினார்.

 

நேத்திக்கு இடது கையிலே போட்டாச்சு. இன்னிக்கு வலது. ஊசி புதுசு தானே?

 

அவர் கேட்க அந்தப் பெண் அடக்க மாட்டாமல் பெரிய குரல் எடுத்து அழுதாள்.

 

மாமா, கொழந்தையைப் பார்த்தேளா? அப்பா மாதிரி இவனும் விட்டுட்டுப் போய்ட்டானே. என்ன பாவம் பண்ணினேன். பாருங்கோ இவனை.  மாமா.

 

மிசஸ் ராஜா, காம் யுவர்செல்ப். நீங்க தைரியமா இருக்க வேண்டிய நேரம் இது.

 

பக்கத்து ப்ளாட்காரர் என்று தோன்றிய ஒரு பருமனான மனிதர் சோபாவில் இருந்து எழுந்து நின்று சொன்னார். அவர் குஜராத்தி அல்லது வங்காளியாக இருப்பார் என்று உச்சரிப்பில் இருந்து குணாவுக்குத் தோன்றியது. அழுது கொண்டிருந்த பெண் குழைந்து தரையில் சாய யாரோ ஏந்திக் கொண்டார்கள்.

 

செடேடிவ் எபெக்ட். இட் இஸ் வெரி மைல்ட். தட்ஸ் வாட் தி டாக்டர் டோல்ட்.

 

குஜராத்தி பக்கத்தில் நின்ற தாடிக்காரர் சொன்னார்.

 

மைல்டா இருந்தாலும் மெண்டல் ஸ்டேடஸ். அதோட ஏஜ் ஃபாக்டர் வேறே. பிஃப்ட்டி இருக்குமா?

 

நோ, நால்பத்தைஞ்சு. ராஜாவே இன்னிக்கு இருந்தா நாப்பத்தெட்டு தான் ஆகியிருக்கும்.

 

தாடிக்காரர் காலடியில் இருந்த காப்பி தம்ளரை நகர்த்தி விட்டு சோபாவில் உட்கார்ந்தார்.

 

டெத் சர்ட்டிபிகேட் வாங்கியாச்சு.  எடுக்க சடசடன்னு ஏற்பாடு பண்ணலாம்.

 

பெரிய பெல்ட்டும் உடம்பெல்லாம் வியர்வையுமாக உள்ளே வந்தவன் அறிவித்தான்.

 

எலக்ட்ரிக் க்ரிமேட்டோரியம் தானே? போனோமா வந்தோமான்னு முடிஞ்சுடும்.

 

கரெண்ட் கட்டாம். வெறகு தான். வாங்கி வைக்க ஆள் போயிருக்கு.

 

பதில் சொல்லியபடி திரும்ப வெளியே போனவன் குணா கூட வேலை பார்க்கிறவன். வாசலில் இருந்தபடிக்கு உள்ளே எட்டிப் பார்த்து, செருப்பை கழற்றி பிளாஸ்டிக் பையில் வைத்துக் கொள்கிற புரோகிதரும் கூட அவன் கூட்டம் தான்.

 

தாத்தாவுக்கு ஒரு தடவை முகத்தைக் காட்டிடுங்கோ. அவர் கையிலே பவித்ரம் கொடுத்து யாராவது காரியம் பண்றதுக்கு வாங்கிக்கலாம்.

 

புரோகிதர் உள்ளே வந்தபடி சொன்னார். பெரியவரை ஐஸ் பாளம் பக்கம் கூட்டிப் போனார் தாடிக்காரரும் இன்னொருத்தரும்.

 

காப்பி இருக்கா?

 

பெரியவர் திரும்பக் கேட்டார். பதில் கிடைக்கவில்லை.

 

யாரோ படுத்துண்டிருக்கா. ஸ்வெட்டர் போட்டுக்கக் கூடாதா? குளிர்றதே.

 

அவர் குணாவோடு லிப்டில் இறங்கும்போது முணுமுணுத்தார்.

 

காரைக் கிளப்பும்போது தாடிக்காரர் ஓடி வந்தார். இங்கே திரும்பி கொண்டு வந்து விட்டுடுவே இல்லே என்று குணாவைக் கேட்டு உறுதி செய்து கொண்டு அவரும் பக்கத்து சீட்டில் ஏறிக் கொண்டார். குணா வந்த வழியில் போகாமல் பக்கத்துத் தெருவில் காரைச் செலுத்தினான்.

 

இப்படியே போயிடலாமே?

 

தாடிக்காரர் ஒரு திருப்பத்தில் எதிர்த் தெருவைச் சுட்டிக் கேட்டார்.

 

அது ஒன்வே.

 

ஒன்வேயா? மத்த வண்டி எல்லாம் போறதே?

 

ராஜா நடு ராத்திரியா இருந்தாலும் ஒன்வேன்னா நுழைய மாட்டான். ரெட் விழுந்தா சட்டமா நின்னுடுவான்.

 

பெரியவர் கண் முழித்துப் பார்த்துச் சொன்னார்.

 

நடுராத்திரிக்கு ரெட் லைட்டுலே வெயிட் பண்றபோது தான் லாரி அடிச்சுடுத்து.

 

தாடிக்காரர் பின்னால் திரும்பி தகவல் தெரிவித்தார்.

 

யாரை லாரி அடிச்சுடுத்து?

 

உங்க பேரன். ராஜாவோட பிள்ளை.

 

குணா வண்டியை நிறுத்தினான். கைக்கடியாரத்தைப் பார்த்தான். இரண்டு மணி நேரம் முடிய இன்னும் பதினைந்து நிமிடம் பாக்கி இருந்தது.

 

உள்ளே ஏர் ஹோஸ்டஸ் பெண் இன்னும் மொபைலில் பேசிக் கொண்டிருந்தாள். இது வேறே அழைப்பாக இருக்கும். அவள் கொண்டை போட்டிருந்ததை அவிழ்த்து தோளெங்கும் பரந்திருந்த தலை முடியை அவ்வப்போது கண்ணை மறைக்காமல் எடுத்து மேலே விட்டுக் கொண்டிருந்தாள்.

 

ஒண்ணும் சாப்பிடத் தரலியே?

 

அவள் மொபைலை மடித்து வைத்தபடி குணாவைக் கேட்டாள்.

 

இல்லே, அங்கே வான்னு சொல்லக்கூட முடியாத சூழ்நிலை.

 

தாடிக்காரர் தெரியப்படுத்தினார்.

 

அப்ரன் பெண் உள்ளே இருந்து வந்து பெரியவரை அழைத்துப் போனாள்.

 

பை தி வே, நான் தேவகியோட  கசின்.

 

யூ மீன், இவரோட மருமகள் மிசஸ் தேவகி ராஜாராமன்?

 

ஆமா. பாவம் தேவகி. ஹஸ்பெண்ட்டோட அமெரிக்கா போறபோது இவரை இங்கே விட்டுட்டுப் போக வேண்டிய சூழ்நிலை.

 

தெரியும் என்றாள் அந்தப் பெண்.

 

ராஜா ப்ளைட் க்ராஷ்லே போய் தேவகி இங்கே திரும்பி வந்தும் கூட இவருக்கு சிஷ்ருஷை பண்ண முடியாம பிள்ளை படிப்பு. உத்தியோகம். டூ பெட் ரூம் ப்ளாட்.

 

மாசா மாசம் பணம் டாண்ணு அனுப்பிடுவாங்க.

 

அமெரிக்கா திரும்ப போனாலும் அது பாட்டுக்கு வந்துடும்.

 

யார் அமெரிக்க போறது?

 

ஏர் ஹோஸ்டஸ் கேட்டாள்.

 

தேவகி தான். பிள்ளையும் இப்படி அகாலமாப் போய்ச் சேர்ந்து அவ மட்டும் இங்கே என்ன பண்ணப் போறா? பொண்ணு கூட இருக்க நெவெடா கிளம்பிண்டு இருக்கா. வாலண்டரி ரிட்டயர்மெண்ட் எடுக்கச் சொல்லி இருக்கேன்.

 

அடுத்த மாசம் மெய்ண்டெனன்ஸ் சார்ஜ் பத்தாயிரமா உயர்த்தப் போறோம்.

 

நோ ப்ராப்ளம். ஊருக்குப் போறபோது எக்ஸ்ட்ரா தொகைக்கு பேங்க்லே டைரக்ட் டெபிட் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திடச் சொல்றேன்.

 

அவள் அடுத்த மொபைல் அழைப்புக்கு பதில் அளிக்க ஆரம்பித்தாள். குணா வாசலுக்கு வந்தபோது உள்ளே இருந்து பெரியவர் கைதட்டிக் கூப்பிட்டார்.

 

உப்பு பிஸ்கெட் வாங்கிண்டு வந்துடு.

 

குணா எதுவும் சொல்லாமல்  கையை அசைத்து விட்டு நடந்தான்.

 

பத்து அன்னிக்கு எள்ளுருண்டை கொண்டு வரேன். சாப்பிட்டுட்டு சௌக்கியமா செஞ்சுரி போடுங்கோ.

 

தாடிக்காரர் உரக்கச் சொல்ல எதிர் ப்ளாட் பெண் கதவை மூடுகிற சத்தம். அவள் தோளில் பையோடு அவசரமாகப் படி இறங்கிக் கொண்டிருந்தாள்.

 

உப்பு பிஸ்கட். மறந்துடாதே. ராஜாவுக்கு பிடிக்காது. அவன் பிள்ளைக்கு இஷ்டம்.

 

குணா திரும்பிப் பார்க்க எல்லாக் கதவும் அடைத்திருந்தது.

 

(வார்த்தை ஆண்டு மலர் 2010) நண்டுமரம் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2022 19:27

November 16, 2022

இன்னொரு சிறுகதை – நண்டுமரம் தொகுப்பில் இருந்து

ரங்கா சேட்

 

‘இதென்னடா நாய் வண்டி மாதிரி இருக்கு?’

 

பஸ்ஸில் ஏறினதும் ரங்கா சேட் கேட்டார்.

 

மகா தப்பு. அவர் சேட் இல்லை. தமிழ்தான். அப்புறம், அவராக பஸ்ஸில் ஏறவில்லை. திடகாத்திரமான நாலு இளவயசுப் பிள்ளைகள் பித்தளை கூஜா, கான்வாஸ் பை சகிதம் அவரை அலாக்காகத் தூக்கி பஸ் உள்ளே போட்டார்கள்.

 

‘எதுக்கு மாமா கூஜாவும் மண்ணாங்கட்டியும்?’

 

முந்திரிக்காய் கூஜா மூடி லூசாகி வென்னீர் காலில்  சிந்தின அவஸ்தையைப் பொறுக்க முடியாமல் நந்து கேட்டான். ஆறே கால் அடி ஜாம்பவான். நித்தியப்படிக்கு நாலு சிகரெட் ஒளிந்து நின்று ஊதித் தள்ளுகிறதைத் தவிர ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. முதலாவது விடிகாலை கொல்லைக்குப் போக, அடுத்த மூணும் அந்தந்த வேளை ஆகாரம் முடிந்த அப்புறம்.

 

ரங்கா சேட்டின் ஒரே தங்கை நாச்சியார் கிழங்கு கிழங்காக நாலு பிள்ளைகளைப் பெற்று நல்லெண்ணெய் முழுக்காட்டி வளர்த்து நிறுத்தி வைத்திருக்கிறாள். பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த நேரத்தில் அவளுக்குக் கல்யாணம் செய்தபோது சீராகக் கொடுத்த கிழங்கு மாதிரியான முந்திரிக்காய் கூஜாவை மட்டும் இத்தனை வருஷம் போனபிறகு கழித்துக் கட்டிவிட்டாள்.

 

‘இதை எடுத்துண்டு போய் புழங்கிக்கோடா அண்ணா’

 

நாச்சியார் களிம்பேறிய அந்தக் கூஜாவை காலையில் விசேஷம் எல்லாம் முடிந்ததும் ரங்கா சேட்டிடம் கொடுத்தாள். நேற்று சாயந்திரம் தேங்காய் நாரை வைத்து தேய்க்கிறேன் என்று பெயர் பண்ணி முனிசிபல் குழாய்த் தண்ணீரில் அலம்பி, சுத்த ஜலம் என்று கொதிக்கக் கொதிக்க ஊற்றி வேறே  கொடுத்தாள்.

 

முந்திரிக்காய் கூஜாவை எப்படிப் புழங்குவது என்று சேட்டுக்குப் புரியவில்லை. உசிர் இருக்கப்பட்ட மனுஷ ஜீவன் என்றாலும் வர, போக, பார்க்க, நாலு வார்த்தை பிரியமாகப் பேச, தலைவலி, கைகால் குடைச்சல் வந்தால் அலுப்பு மருந்து வாங்கி வந்து கொடுத்து, ‘நாளைக்கு சரியாப் போயிடும். ரஸ்க் சாப்பிட்டுத் தூங்கு’ என்று ஆறுதல் சொல்லிவிட்டு வர என்று பழக முடியும். கூஜாவோடு எப்படி உறவாட?

 

“எஞ்ஜாய் மாமா, தூங்கிட்டே சென்னை”.  நந்து உற்சாகமாகச் சொன்னான்.

 

சேட் திகிலோடு பஸ் உள்ளே பார்த்தார். ரெண்டு வரிசையாகப் படுக்கை. ரயிலில் ஸ்லீப்பர் கம்பார்ட்மெண்டில் ஏறின மாதிரி. ஆனால் இங்கே சுத்தமான பஸ் வாடை, வெளியே அகாலத்தில் பலாச்சுளை விற்கிறவன் குரல், முன்னால் ஸ்டியரிங்கைப் பிடித்து ஆரோகணித்த டிரைவர், மற்றும் கண்டக்டர்.

 

“இந்த கூஜாவை வேணும்னா உங்க அம்மா கிட்டேயே பத்திரமா”.

 

ரங்கா சேட் ஜன்னல் வழியே கூஜாவின் முந்திரித் தலையை மட்டும் நுழைத்து மிச்சம் நுழையாத ஏக்கத்தோடு கேட்டபோது பஸ் நகர்ந்திருந்தது.

 

காக்கி நிஜார் மாட்டிய கண்டக்டர் படுக்கை படுக்கையாக டிக்கெட் விவரம் விசாரித்துக் கொண்டு வந்தான். ரங்கா சேட் எங்கே இருக்கணும்?

 

“டிக்கட் கொடு சார்”.

 

அவர் பவ்யமாக கான்வாஸ் பையைத் திறந்து நாமக்கட்டிக்கும் தலைவலி மாத்திரைக்கும் நடுவே வைத்திருந்த டிக்கட்டை எடுத்து நீட்டினார்.

 

‘சேட்டுன்னு போட்டிருக்கே. யாருக்கு எடுத்தது?’

 

படுபாவி நந்து. ஊரில் பெயர் புழங்குகிற படிக்கே டிக்கட் எடுத்து விட்டான். முந்திரிக்கா கூஜா என்று புழங்கியிருந்தாலோ?

 

“உங்க பேரு என்ன”?

 

முந்திரி. அவசரமாக வார்த்தையை முழுங்கியபடி ரங்கநாதன் என்றார்.

 

“அப்புறம் ஏன் சேட்டுன்னு வடக்கத்தியாருங்க பேரு”?

 

பாவ மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம்.

 

“அது ஒண்ணும் இல்லேப்பா. நாள் முழுக்க ஜர்தாபான் வாயிலே அடக்கிண்டே இருப்பேனா, மார்வாடிப் பெயர் வச்சுட்டாங்க சிநேகிதங்க எல்லாரும்”.

 

பக்கத்து படுக்கை கொஞ்சம் அசைந்து அதில் பத்து சதவிகிதம் தூக்கத்தில் இருந்தவன் ஒதுங்கிப் படுத்தான். அவன் மேலே ரங்கா சேட் புகையிலை அபிஷேகம் நடத்துவார் என்று தூக்கத்தை மீறின ஜாக்கிரதை உணர்ச்சி.

 

“பஸ்ஸுக்குள்ளே ஜர்தா குர்தா எல்லாம் போடக்கூடாதுன்னு சொல்லு கபாலி”

 

டிரைவர் இரைந்தது தன்னைப் பற்றித்தான் என்று ரங்கா சேட்டுக்குப் புரிந்தது.

 

“நான் ஜர்தா போடறதை விட்டு ஒரு மாமாங்கம் ஆகப் போறது. நீ ஏன் வெட்டியா கவலைப் படறே”.

 

அவர் குரல் எழுவதற்குள் பஸ் ஹாரன் பெரிசாக முழங்கி அதை விழுங்கிவிட்டது.

 

“என் சீட் எது”?

 

ரங்கா சேட் நகர முற்பட்ட கண்டக்டரை அவசரமாகக் கையைப் பிடித்து இழுத்து நிறுத்திக் கேட்டார்.

 

“அந்தக் கோடி சேட்டு. கடைசிப் படுக்கை. ஏணியிலே ஏறி மேலே போய்ப் படுத்துடு. துப்பிடாதே. சொம்புலே தண்ணி இருந்தா இப்பவே குடிச்சுட்டு”.

 

“குடிச்சுட்டு”?

 

“அதையும் உமிஞ்சிடாதே.  கபால்னு முளுங்கிடு”.

 

கபாலி அறிவுரை அருளிய ஒளி முகத்தில் வீச ஞானஸ்தனாக முன்னே நடந்தான்.

 

கான்வாஸ் பை தோளில் கனக்க, கையில் வென்னீர் கூஜா குலுங்க தேகம் முழுக்க ஆடியபடி ரங்கா சேட் பஸ்ஸின் ஈசான மூலையை நோக்கிப் போனபோது யாரோ விடலைப் பசங்களைப் போல் விசில் அடித்தார்கள்.

 

பஸ் கம்பத்தைப் பிடித்தபடி மூச்சு வாங்கத் திரும்பிப் பார்த்தார். பஸ் வீடியோ உயிர் பெற்று பெருஞ்சத்தத்தோடு இயங்க ஆரம்பித்திருந்தது. ஒரு சுந்தரிப் பெண்ணை பரட்டைத் தலைப் பையன் பையப் பதறாமல் கொட்டு முழக்கோடு கேலி செய்து பாடிக் கொண்டு போன பாட்டு.

 

இன்னிக்கு வைகுண்ட ஏகாதசிதான். இந்த இரைச்சலில்.

 

அவர் மனசு சொல்ல அதை அடக்கினார். முதல்லே எங்கே முடங்கறதுன்னு பாரு.

 

தனக்குத்தானே உத்தரவிட்டபடி பஸ் கோடிக்கு வந்து விட்டார்.

 

இருட்டில் கீழ் பெர்த். இங்கேயும் பெர்த்னு தான் பெயர் புழங்குகிறதா? இல்லை வேறே ஏதாவது டெர்மினாலஜியா?

 

ஏதோ ஒண்ணு. கீழே புளிமூட்டை மாதிரி அடைந்து கிடந்தவன் கொஞ்சம் போல் உட்கார்ந்து எந்த சீட் என்றான்.

 

“மேலே போகணும்”.

 

தத்துவார்த்தமாக தான் சொன்னதை தானே ரசித்தார் ஒரு வினாடி.

 

“செருப்பை இப்படி கீழே விட்டுட்டு ஏணியைப் பிடிச்சு ஏறுங்க”.

 

கீழே பாதி அறுந்து கிடந்த அவனுடைய ரப்பர் ஸ்லிப்பரை பத்திரமாக ஓரத்தில் நகர்த்தி வைத்தான். அப்புறம் என்னமோ தோன்ற அதைத் தலைமாட்டில் வைத்து செய்தித்தாளுக்குள் பொட்டலம் கட்டிப் பத்திரப்படுத்தினான்.

 

உலகத்தை, அறுந்து போன ஸ்லிப்பர் மதிப்புக்குக்கூட அவன் நம்பத் தயாராக இல்லை என்று உறைக்க, சேட் மேலே போகிற வழியை அண்ணாந்து பார்த்தார்.

 

“இப்படி மலைச்சுப் போய் நின்னா, ராத்திரி முழுக்க நின்னுக்கிட்டே கிடக்க வேண்டியதுதான். ஏறு சார் சரசரன்னு”.

 

பின்னால் கண்டக்டர் குரல். அவன் ரங்கா சேட்டின் தோள்பையைப் பறித்து மேலே வீசினான். கூஜாவைப் பிடுங்கி ஒரு எம்பு எம்பி இருட்டுக் குகைக்குள் வைத்தான். அப்புறம் ரங்கா சேட்டின் இடுப்பில் கைகொடுத்து ஒரு தள்ளு தள்ளி இரும்பு ஏணியில் ஏற்ற, சேட் மேலே சயனப் பொந்தில் அலக்க மலக்க விழுந்தார்.

 

“ஏம்ப்பா, இங்கே சௌகரியம் எல்லாம்”.

 

அவர் சரிந்தபடி கேட்டபோது கண்டக்டர் நிமிர்ந்து பார்த்தான்.

 

“என்ன சௌகரியம் வேணும்? ஏசி போட்டு வைச்சிருக்கு. இப்போ ஜிலுஜிலுன்னு ஆயிடும். ஃபேன் இருக்கு. சைடுலே கையை விட்டுத் துளாவினா சுவிட்ச் கிடைக்கும். பிளேட்லே கையை விட்டுக்காம பத்திரமா சுவிட்ச் போடணும்”.

 

“அது இல்லேப்பா வேறே சௌகரியங்கள்”.

 

“கம்பளிப் போர்வை இருக்கு. போர்த்திக்கிட்டு தூங்கு. இறங்கும்போது என் கையிலே ஒப்படைச்சுட்டுப் போகணும்.”

 

“போர்வை கிடக்கட்டும். பாத்ரூம் சங்கதி”.

 

“அதுக்கெல்லாம் இடம் எங்கே இருக்கு? வண்டி நிக்கும்போது ஓரமாப் போய்”.

 

அவன் முடிப்பதற்குள் வீடியோ பாட்டு முடிந்து வசனம் ஆரம்பித்திருந்ததால் படுத்தபடி சினிமா பார்க்கிற யாரோ இடைஞ்சலாக இருப்பதாக ஆட்சேபிக்க, அவசரமாக நகர்ந்தான்.

 

ரங்காசேட் இருட்டுக்குள் பீதியோடு உற்றுப் பார்த்தார். அந்த கூஜா இங்கேதான் புழங்கிக் கொண்டிருக்கிறது. அதற்குள் சுத்த ஜலம். குடித்தால் ஒரு மணி நேரத்தில் பாத்ரூம் போக வேண்டி வரும்.

 

பஸ் வேகமாக நகர்கிறது. எப்போ நிற்கும்? எதுக்கு நிற்கணும்? இறங்கணுமா? இல்லே பாத்ரூம்.

 

வருதா? இப்போ வரல்லே.

 

அப்போ தூங்கு.

 

அவர் தூங்குகிற மாதிரி பாவனை செய்தார். குளிர் அதிகமாக இருந்தது. கம்பளிப் போர்வை என்று சொன்னானே?

 

தலைமாட்டில் ஹேர் ஆயில் வாசனையும் புளிப்பு மிட்டாய் வாடையுமாகக் கிடந்த பழந்துணிதானா அது?

 

அதுதான் போலிருக்கு. உட்கார்ந்து அதை பரிசோதிக்க நினைத்தார்.

 

எங்கே உட்கார? கொஞ்சம் நிமிர்ந்தால் தலை மேல் கூரையில் முட்டுகிறது. கிடப்பதைத் தவிர வழி இல்லை. சென்னை போகிற வரைக்குமா?

 

தூங்கினால் இதோ வேகமாக விடிந்து சென்னைதான். தூக்கம் எங்கே வருது?

 

காலையில் இருந்தே வித்தியாசமாக விடிந்தது சேட்டுக்கு.

 

அசை போட்டபடி கிடக்க, வீடியோவில் யாரோ செத்துப்போய் மூக்கில் பஞ்சு அடைத்து எடுத்துப் போனது பாதியில் நின்று ஜிகினா ஜிகினாவாக வெளிச்சம்.

 

“அமர்த்திடுங்க தூங்கணும்”,

 

யாரோ ஆணையிட அந்த வெளிச்சமும் போய் முழு அந்தகாரம்.

 

நேற்று வந்து இறங்கினதுமே நாச்சியார் சுவாதீனமாக வேலை ஒப்பித்தாள்.

 

“தோ பாருடா அண்ணா, நீ தனிக்கட்டை. ரெண்டு நாள் முந்தியே வந்திருக்கலாமில்லே. புது வீட்டுக்கு தரை பாலீஷ் போடறதுக்கும், கரண்ட் சப்ளைக்கும் அலைய ஒத்தாசையா இருந்திருக்கும். என்னமோ போ”.

 

கல்யாணம், பெண்டாட்டி, பிள்ளை குட்டி தேவை இல்லாமலேயே தாலுக்கா ஆபீசில் சீனியர் அசிஸ்டெண்டாக, அசிஸ்டெண்ட் என்ன, அவர் சேர்ந்தபோதே எழுத்தர்னு கூப்பிட ஆரம்பித்திருந்தார்கள். அப்புறம் முதுநிலை எழுத்தர்.

 

கிழ எழுத்தராக அவர் ரிடையர் ஆனபோது வட்டாட்சியர் அலுவலகத்திலும் கம்ப்யூட்டர் வந்துவிட்டது. அதுக்குப் பக்கத்தில் நிறுத்தி பிரிவுபசார போட்டோ எடுத்தபோது ஏனோ பெருமையாக இருந்தது. நாச்சியாரிடமும் அவள் பிள்ளைகளிடமும் காட்ட அதை எடுத்து வந்திருந்தார். யாருக்கு அவர் கொண்டு வந்ததைப் பார்க்க நேரம் இருக்கு? வேலை சொல்ல மட்டும் அது உண்டு போல.

 

நேற்று ராத்திரியே நாச்சியார் கட்டிய புதுவீட்டில் போய்ப் படுத்துக் கொள்ள வேண்டி வந்தது. வீடு இல்லை. ரெண்டாவது மாடியில் எழுநூறு சதுர மீட்டர் ப்ளாட்.  காலையில் கிரகப் பிரவேசம். வீடெல்லாம் தண்ணீரை அடித்துக் கழுவி, அது காயாமல் பாதி ராத்திரி வரை ஒத்தி ஒத்தி எடுத்து ஈரத் துணியைப் பிழிந்து ஒரு மாதிரி பொழுது போய்விட்டது.

 

காலையில் வந்து சேர்ந்த எல்லாரும் அவரை லட்சியம் செய்யாமல் புரோகிதருக்கு பிளாஸ்கில் இருந்து காப்பி ஊற்றிக் கொடுத்து உட்கார வைத்தார்கள்.

 

“பிரமாதமான காப்பி டிபன் கேடரிங்லே  சொல்லியிருக்கு. இப்போ வந்துடும்”.

 

ரங்கா சேட் தேற்றப்பட்டார். ஏழு மணி வரை கேட்டரிங் பற்றிக் கேட்டும் பயனில்லை. காப்பியை யாரும் கண்ணில் காட்டவில்லை. பசுமாடு வந்தாச்சா என்று ஆளுக்கு ஆள் பரபரத்துக் கொண்டிருந்தார்கள்.

 

“மாமா, இங்கே தெருக்கோடிதான். இப்படியே நடந்து வலதுகைப் பக்கம் திரும்பி அரை கிலோமீட்டர் போனா, அஞ்சனா பண்ணைன்னு போர்ட் தெரியும். யாரைக் கேட்டாலும் சொல்வாங்க. வாயிலே இருக்கு வழி”.

 

நந்து அவரைக் கிளப்பி விட்டான்.

 

“நீயும் வாயேன். உன் மோட்டார் பைக்கிலே போய்ட்டு வந்துடலாம்”.

 

யார்யாரையோ புதுமனை புகுவிழாவுக்கு விருந்தாளியாகக் கொண்டு சேர்க்க அந்த வண்டியை அவன் விடிந்ததிலிருந்து உபயோகித்துக் கொண்டிருக்கிறான்.

 

அவன் போயிருந்தான். மற்ற மருமகன்களும் கேடரிங் காண்ட்ராக்டர், புரோகிதருடைய உதவியாளர், யாரோ ஒரு மகாலட்சுமி மாமி,  சிடியில் விஷ்ணு சகஸ்ரநாமம் முடிந்து பாவயாமி ரகுராமம் என்று சுற்றிக் கொண்டிருந்ததால் அஞ்சனா பண்ணைக்கு அவர் தனியாக நடக்க வேண்டி வந்தது.

 

அரை கிலோமீட்டர் என்பது மூணரை கிலோமீட்டராக வாய்வழியாக நீண்டு அஞ்சனா பண்ணையில் நுழைந்தபோது, முழுத் தொகையும் அட்வான்ஸாகத் தராத காரணத்தால் பசுமாடு வராது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள்.

 

அட்வான்ஸ் கொடுத்திருந்த நூறு போக, சிறப்புக் கட்டணமாக ரங்கா சேட் பாக்கெட்டில் இருந்து இன்னொரு இருநூறை வெட்டினார். ஒரு கட்டு மஸ்தான ஆளோடு மாட்டை முன்னும் பின்னும் இழுத்து தட்டி தாஜா செய்து நகர்த்தி ப்ளாட் வந்தபோது எட்டு மணி. கேடரிங் முடிந்து வேன் கிளம்பிக் கொண்டிருந்தது.

 

“மதியச் சாப்பாடு சீக்கிரமே வச்சுக்கலாம் மாமா”.

 

“காப்பி?”

 

பிளாஸ்கைக் கவிழ்த்து ஆறி அவலாகிப் போன அரைக்கப் காப்பியை வாயில் ஊற்றியதும் புத்துணர்வு பெற்றார் சேட்.

 

“ரெண்டாம் மாடிக்கெல்லாம் மாடு ஓட்டிப் போக முடியாது. க்ரூயல்டி டு அனிமல்”.

 

அசோசியேஷன் செக்ரட்டரி கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். கட்டு மஸ்தான ஆசாமியும் ஆமோதித்தான். மாடு கூட அதேபடிக்குத் தலையை ஆட்டியது.

 

நந்து ஒரு நல்ல வழி சொன்னான்.

 

“பசுமாடு மாடிப்படி பக்கமா நிக்கட்டும். என் ஹேண்டிகாம் வீடியோ காமிராவிலே அதைப் படம் எடுத்துக்கலாம். கேமராவை அப்படியே பிடிச்சுட்டு படியேறி வீட்டுக்குள்ளே போனா, சம்பிரதாயம் நடந்து முடிஞ்ச மாதிரி தானே”.

 

ரங்காசேட் தான் இதுக்கும் அழைக்கப்பட்டார். பசுமாட்டை சிரத்தையாக எடுத்த ஹேண்டிகாமை கையில் பிடித்தபடி அவர் மாடிப்படி ஏற வேண்டிப் போனது. “மெல்ல”, “ஓடாமப் போங்க” என்று அங்கங்கே சகலரும் அறிவுரைத்தார்கள்.

 

நாலு படி ஏறுவதற்குள் ரங்கா சேட் தானே பசுமாடானதாக உணர்ந்தார். காலை எடுத்து முன்னால் வைக்கவே கஷ்டமாக இருந்தது. பாத்ரூம் போனால் தேவலை என்று ஒரு தோணல்.

 

சட்டென்று நினைவுச் சங்கிலி அறுபட்டது. பாத்ரூம். போகணும். போனால் தேவலை. இப்போதும்.

 

சும்மா கிட. அப்படி ஒண்ணும் இல்லே. வேறே எதையாவது நினை.

 

மனதுக்குக் கட்டளை இட்டது நாச்சியார் குரலில் இருந்தது தப்பாகி விட்டது. “முந்திரிக்காய் கூஜாவைப் புழங்க வச்சுக்கோடா அண்ணா”.

 

அது நிறைய வென்னீர். இங்கே தான் பக்கத்தில் இருட்டில் எங்கேயோ. பாத்ரூம் போயே ஆகணும்.

 

தூங்கு. இப்போ இல்லே. அப்புறம் ஒரு மணி நேரம் கழித்து உட்காரலாம்.

 

தூக்கமா விழிப்பா என்று தெரியாத நிலை. வயிறு மட்டும் படியேறாத பசுமாடு போல அடம் பிடித்தது.

 

கீழ் பெர்த்காரன் மேலே நிமிர்ந்து பார்த்தான்.

 

அவனுக்கு ஒரு குரலை கற்பனை செய்யலாம். நாச்சியார் குரல் வேணாம்.

 

முப்பது வருடம் முன்னால் அவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜுனியர் அசிஸ்டெண்ட் ஆகச் சேர்ந்தபோது ஆகாசவாணியில் செய்தி வாசித்த குரல்.

 

சக வருஷம் .. செய்திகள் வாசிப்பது. கடவுள்.

 

கீழே படுத்திருந்த லுங்கி கட்டிய ஆசாமி சிரித்தான்.

 

“என்ன வேணும் கேளு ரங்கா. இந்த செருப்பை மட்டும் கேட்காதே”.

 

செய்தித்தாள் பார்சலில் இருந்து செருப்பை எடுத்து கால் பக்கம் நகர்த்தியபடி ரங்கா சேட்டைப் பார்த்தான்.

 

கடவுள் தானா? படுத்துக்கொண்டே பயணம் போகிற பஸ்ஸிலா?

 

ரங்கா சேட்டுக்கு எழுந்து உட்காரணும் போல் இருந்தது.  கீழ் பர்த் கடவுள்காரன் ஒரு மாதிரி முதுகு வளைத்து உட்கார்ந்தான். செருப்பைக் கீழே போட்டான்.

 

பக்கத்தில் ஒரு நசுங்கின ப்ளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் இருந்து களக் களக் என்று சத்தம் எழ தண்ணீர் முழுவதையும் குடித்துத் தீர்த்தான். அத்தனை நீரும் ரங்கா சேட் வயிற்றில் இறங்கின மாதிரி இருந்தது.

 

சேட்டுக்கு இனியும் பாத்ரூம் போகாமல் முடியாது.

 

உட்காரவும் வழியில்லை. இறங்கி, டிரைவரை நிறுத்தச் சொல்லலாமா?

 

நகரும் இருட்டுப் பொதிக்குள் அவன் எங்கே இருப்பான் என்று தெரியவில்லை.

 

பாத்ரூம் போகணும்.

 

சத்தம் போடலாமா?

 

மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்ட நாக்கு. பஸ் நகர்கிற இரைச்சலும், ஏணியில் ஏதோ சங்கிலி உரசி உரசி வருகிற ஓசையும் தவிர வேறே சத்தம் இல்லை.

 

கீழ் சீட்காரன் திரும்ப மேலே பார்த்தான். கடவுள் பேசின மாதிரி  இருந்தது.

 

“சொல்லு ரங்கா. என்ன வரம் வேணும்? என்ன வேணும்னாலும் கேளு, தரேன்”.

 

“பாத்ரூம் போகணும்”.

 

அவன் தலையை ஆட்டிக் கொண்டான்.

 

“கண்டக்டர் நிறுத்துங்க ப்ளீஸ்.”

 

அவன் இரைந்து அரை நிமிஷம் கழித்து பஸ் நின்றது.

 

“இறங்கிக்கறேன். திரும்ப ஊருக்குப் போக வேண்டிய அவசரம்”.

 

மொபைல் போனை சட்டைப் பையில் போட்டுக் கொண்டான்.

 

“இங்கே இறங்கினா வண்டி கிடைக்காது. யாரும் நிறுத்த மாட்டாங்க”.

 

கண்டக்டர் சொன்னபோது ரங்கா சேட் கான்வாஸ் பைகூட இல்லாமல் தனியாக ஏணியைப் பிடித்து இறங்கிக் கொண்டிருந்தார்.

 

“பரவாயில்லே. ரொம்ப அவசரம்”.

 

கீழ் பெர்த் கடவுள்காரன் செருப்பில் கால் நுழைத்துக்கொண்டபோது ரங்கா சேட் அவன் பக்கத்தில் நின்றார்.

 

“நீங்களும் இறங்கணுமா?”

 

கண்டக்டர் கேட்டான். தலையாட்டியபடி லுங்கிக்காரக் கடவுளைத் தொடர்ந்தார் ரங்கா சேட். பசுமாடு மாடிப்படி ஏறுகிற படபடப்பு அவர் நடையில்.

 

“இதை விட்டுட்டுப் போறீங்களே”.

 

கான்வாஸ் பையையும், முந்திரிக்காய் கூஜாவையும் நீட்டினான் கண்டக்டர்.

 

லுங்கிக் காரனும் பின்னால் ரங்காசேட்டும் இறங்கினார்கள்.

 

சேட் முகத்தில் அலாதி நிம்மதி. இருட்டில் ஓரமாக நின்று கூஜாவை கான்வாஸ் பையில் திணித்துக் கொண்டார். பாத்ரூம் என்றது மனம். இருடா ரங்கா என்றார்.

 

ஐந்து நிமிடம் கழித்து அவர் புறப்பட்டபோது லுங்கிக்காரன் போன தடம் தெரியவில்லை. இது வந்த வழியா, போக வேண்டியதா?

 

இருட்டில் எதுவும் புலப்படவில்லை. கடந்து போகிற பஸ் வெளிச்சத்தில் பாதை மட்டும் விட்டு விட்டுத் தெரிந்தது.

 

முந்திரிக்காய் கூஜாவில் இருந்து தண்ணீர் குடித்தார். அது திறக்கவும், மூடவும் சகஜமாக கைக்குப் பிடித்த பிடிக்கு வந்தது. பழகி விட்டது.

 

நடக்க ஆரம்பித்தார்.

 

(கல்கி தீபாவளி மலர் 2010)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2022 19:07

November 14, 2022

ஆழ்வார் – சிறுகதை

அந்த முன்னிரவுச் சூழ்நிலை கொஞ்சம் அபத்தமாக இருந்தது. குண்டும் குழியுமாகக் கிடந்த தெருவில் பள்ளத்தில் இறங்கிய சைக்கிள் செயின் கழன்று போய் மாட்டிக் கொண்டிருந்தவன் யாரையென்று இல்லாமல் திட்டிக் கொண்டு நடுத் தெருவில் குனிந்து உட்கார்ந்திருந்தான். எதிரே பழைய கட்டிடம். கீழ்ப்பகுதியில் எல்லாம் கடைகள். ஒரு மாவு மெஷினும் உண்டு. கடைகளை அடைத்துவிட்டுக் கிளம்பிப் போயிருக்க, மாவு மெஷினிலிருந்து ஏதோ கரகரவென்று பொடியாகப் பிளாஸ்டிக் வாளியில் சுமந்து கொண்டுவந்து தெருவில் கொட்டி, நான்கைந்து பேர் கர்மசிரத்தையாகக் கையளைந்து தேடிக் கொண்டிருந்தார்கள். மேல் மாடியில் பிரம்மச்சாரிக் குடியிருப்புகளில் மங்கிய பல்ப் வெளிச்சத்தில் களைத்துப் போன மின்விசிறிகள் சுற்றுவது ஜன்னல் வழியே தெரிந்தது. கீழே சிதறியிருந்த மாவிலிருது பரபரப்பாக ஓடிய கரப்பான் பூச்சிகள் ஏறாமல் கால் மாற்றிக் கொண்டு ஒரு ஸ்தூல சரீர வைஷ்ணவர் மேலே பார்த்து, ‘சடகோபா .. சடகோபா.. ‘ என்று தொடர்ந்து பெருஞ்சத்தத்துடன் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

ராஜுவும் மேலே பார்த்தான். அவன் தேடி வந்தவர் அங்கே இருக்கக் கூடும், அவசியம் அவரைப் பார்த்துவிட்டு வரும்படி கடையில் சொல்லியிருந்தார்கள்.

‘கெச்சலாக, கண்ணாடி போட்டுக் கொண்டு .. கருப்பையா என்று பெயர் .. மதுரைப் ப் பக்கத்திலிருந்து பிரசவலேகியமும், மூங்கில் குருத்து ஊறுகாயும், பாட்டிலில் அடைத்து எடுத்து வந்து இங்கே இருக்கிற பெரிய மளிகைக் கடைக்கெல்லாம் சப்ளை செய்கிறவர். ஐம்பது வயது இருக்கும் .. இங்கே வரும்போது ஏதோ பிரம்மச்சாரி குடியிருப்பில் சொந்தக்காரப் பிள்ளையாண்டன் அறையில் தங்குகிற வழக்கம் .. கொஞ்சம் காது மந்தம் ‘ ..

இந்தத் தகவல் எந்த அளவு போதுமென்று தெரியவில்லை. எதற்கும் மேலே போய்க் கேட்டுப் பார்க்கலாமென்றால் இருட்டில் மாடிப் படியைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது.

ஒரு கதவு திறந்தது. திறந்த போது வெளிச்சத்தில் ஓரமாக சுவரை ஒட்டி மாடிப்படிகள் தெரிந்தன. லுங்கி கட்டிக் கொண்டு ஒருவன் வாயில் புகையும் சிகரெட்டோடு கீழே பார்த்தான்.

ராஜு மேலே போய்ச் சேர்ந்த பொழுது லுங்கிக்காரன் அறைக்கு உள்ளே போய்க் கதவை முக்காலுக்குச் சாத்திவிட்டுத் தரையில் உட்கார்ந்திருந்தான். சீட்டுக்களை விரித்துக் கொண்டு இன்னும் மூன்று பேரும் உண்டு. அறை முழுவதும் புகை மண்டலம்.

மதுரைக்காரர் இவர்களோடு தங்கியிருக்கக் கூடும். பிரசவ லேகியத்தையும், ஊறுகாய் பாட்டில்களையும் ஓர் ஓரமாக வைத்துவிட்டு, மின்சார பல்ப் வெளிச்சமும், சிகரெட் புகையும் முகத்தில் படாமல் கைப்பையையோ, மேல் துண்டையோ அணையாக வைத்தபடிக்குத் தூங்க முயற்சி செய்து கொண்டு ..

இங்கே அவரைக் காணோம் .. அடுத்த ரூம் ? அதற்கும் அடுத்தது ?

‘எஸ் பிளீஸ் .. ‘

சிவப்பு லுங்கிக்காரன் திரும்பவும் கொஞ்சம் சலிப்போடு எழுந்து வந்தான். இவன் சொன்னதைக் கடமை கருதிக் கேட்டான்.

‘நீங்க சொல்றபடி இங்கே யாரும் வர்றதே இல்லையே .. எங்க மாமா ஒருத்தர் சிவகாசிப் பக்கம் இருந்து எப்பவாவது வருவார். நீங்க சொல்ற அடையாளம் அவருக்குக் கொஞ்சம் பொருந்தும். ஆனா அவர் லேகியம் சப்ளை பண்றவர் இல்லே .. காலண்டர் ஆர்டர் புக் பண்றாவர் .. ‘

அவர் இல்லை என்று ராஜு தலையசைத்தான்.

‘இந்தப் பக்கம் இதுபோல் பேச்சலர் அப்பார்ட்மெண்ட் வேறே இருக்கா ? ‘

‘இங்கே இது ஒண்ணுதான். பக்கத்துத் தெருவிலே ஒண்ணு இருக்கு .. ஆந்திரா மெஸ் மாடியிலே .. ‘

ராஜு நன்றி தெரிவித்துவிட்டுக் கீழே இறங்கும் போது மேலேயிருந்து சிரிப்புச் சத்தம்.

‘லேகியம் சப்ளையா ? உள்ளே கூப்புட வேண்டியதுதானே .. ‘

‘இவர் இல்லேடா .. தேடிவந்தவர். அதுவும் பிரசவ லேகியம். வேணும்னா சொல்லு, வாங்கித் தரேன் .. ‘

திரும்பவும் சிரிப்பு.

வாசலில் ஒரே அமைதியாக இருந்தது. மாவுமெஷினில் விளக்கு அணைத்துப் பையன்கள் காணமல் போயிருந்தார்கள்.

‘சடகோபன் உள்ளே தூங்கிண்டு இருக்கானா ? இத்தனை கூப்பிட்டும் எழுந்திருக்கக் காணோமே ? ‘

ராஜு சற்று நின்றான். விளக்குக் கம்பத்துக்குக் கீழே இருந்து வந்த குரல் அவனைத்தான் விசாரிக்கிறது. அந்த நாமக்காரப் பெரியவர் அப்போதிலிருந்து அங்கேயே தான் பழியாக நின்று கொண்டிருக்கிறார்.

இவருக்கு என்ன பதில் சொல்வது ?

‘வந்து .. நான் .. ‘

‘நீ சடகோபன் ஆபீஸ் தானே ? ‘

‘நான் இங்கே .. ‘ – வேண்டாம். இவருக்கு அந்தத் தகவல்களால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

‘நான் இங்கே இருக்கறவன் இல்லை சார். ஒரு ஜோலியா வந்தேன். பார்க்க வந்தவர் இல்லை. ‘

‘சடகோபன் இப்படித்தான் வரச் சொல்லிட்டு எங்கேயாவது போயிடுவான். எத்தனை தடவை தான் நடையா நடக்கிறாது ? போன விசை பெளர்ணமி பூஜைக்குத் தரேன்னான். அப்புறம் ஆளையே காணோம். ரங்கனாதன்கிட்டே .. அதான்ப்பா.. முன்சீப் கோர்ட் நாசரா இருந்தானே, உதடு வெளுத்து .. அவன் கிட்டே வாங்கிப் போட்டு … என்னத்தைச் கொடுத்தான் போ . . மூணு ரூபாயும் சில்லறையும் சட்டைப்பையிலே இருந்ததுன்னு பொடிமட்டை வாசனையோட .. அவனும் பாவம்தான் .. கோர்ட் உத்யோகத்திலே ரிடையரானதுக்கு அப்புறம் சட்டைப் பையிலே சில்லறை இருந்தாலே ஜாஸ்தி .. சட்டையே ஜாஸ்திங்கறியோ .. அது சரி .. எதோ போட்டு ஒப்பேத்தினேன் .. நாம பொறுத்துக்கலாம் .. அனுமார் பொறுத்துப்பாரோ ? ‘

தலைகால் புரியவில்லை. வழியில் அடைத்தமாதிரி நின்றுகொண்டு அவர் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போகிறார். கையில் இருக்கிற குடையால், ராஜுவுக்கு முன்னால் மாவுகொட்டிய மண்ணில் கோடு இழுத்துக் கொண்டே பேசுகிறார். லட்சுமணரேகையைத் தாண்டுவது மரியாதையாகப்படவில்லை. அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.

‘ஆழ்வார் திருநகரிக்குப் போயிருப்பான். சொந்த ஊரு அதுதான். பூர்வீகம் திருப்புல்லாணியாக்கும். வைஷ்ணவன்.. திருமண் இட்டுண்டு ஆபீஸ் போனா என்னன்னா, வந்து இட்டுண்டாப் போச்சுங்கறான். பேண்ட், சட்டையும் நெத்தியிலே திருமண்ணும் சரியா வராதோ ? சப்கோர்ட் சிரஸ்தார் கிருஷ்ணசாமி ஐயங்கார் கோட்டும் சூட்டுமா வர்றபோதே நெத்தியிலே நாமம் டாலடிக்கும்.. வடகலையார். அது அந்தக் காலம் .. வா .. நடந்துண்டே பேசலாம். நான் நீலகண்டன் தெருவரைக்கும் போக வேண்டியிருக்கு. நீயும் அந்தப் பக்கம் தானே ? அங்கே பேச்சலர்ஸ் குவர்ட்டர்ஸ்லே தானே ஜாகை ? கிருஷ்ணா கபேயிலே சாப்பிட்டுப் போன வாரம் ஒருநாள் இந்த நேரம் நடந்து வந்துண்டு இருந்தியே .. பக்கத்திலே யாரோ சிகரெட்டைக் கொளுத்தி, குச்சியை அணைக்காமல் போட்டு .. என் காலடியிலே விழுந்தது .. நீ இல்லே தெரியும் .. சடகோபனும் அப்படித்தான் .. பீடி சிகரெட் .. தொடமாட்டான் .. ‘

‘சார் நான் இந்தப் பக்கமே இல்லே .. திருவல்லிக்கேணியிலேருந்து வர்றேன் .. ‘

சடாரென்று நின்றார். இப்போது அடையாளம் கண்டுகொண்டது சரியாக இருக்கும் என்பது போலக் குடையால் உள்ளங்கையில் மெதுவகத் தட்டிக் கொண்டார்.

‘அதானே பார்த்தேன் .. ரங்காச்சாரி தம்பி பிள்ளை ஆராவமுதன் இருக்கானே சிங்காரவேலன் தெருவிலே … அந்த வீட்டு மாடியில்தானே ரூம் ? கூட ரெண்டு திருக்கோஷ்டியூர் பிள்ளைகள் உண்டோ இல்லையோ ? லெதர் பாக்டரியிலே வேலையா இருக்கிற பிள்ளைகள். நான் அங்கே வந்திருக்கேன். தொடர்ந்து நாலுவாரம் அனுமார் ஆராதனையை ரெண்டு புள்ளாண்டானும் சேர்ந்து நடத்தி வச்சது .. நீ கூட எங்கியோ, மதுரைக்கோ என்னமோ கேம்ப் போகப் போறதாச் சொல்லிக் கிளம்பிப் போனே .. பிரசாதம் கொண்டு போனபோது கூடத் திரும்பி வந்திருக்கலை .. ‘

மெல்ல ஒரு பிம்பம் உருவாகிக் கொண்டிருந்தது. அனுமார் பூஜை. லாட்ஜுகளில் இருக்கிறவர்களிடம் அதற்கான வசூல்.. தெரிந்த முகங்களை மனதில் சுருட்டி எடுத்து வந்து இந்த ஜனசமுத்திரத்தில் எதிர்ப்படுகிறவர்கள் மேல் ஒட்டவைத்துப் பார்க்கிறபோது, அது உதிர உதிரப் பொருட்படுத்தாது வேறு வேறு அடையாளங்களைத் தேடி ..

‘எனக்கு ஒட்டவில்லை ‘ என்று சொல்லலமா ? வேண்டாம். அடுத்த முகம் கைவசம் இருக்கக் கூடும்.

‘உங்க அப்பா கூடத் தென்காசிப் பக்கம் வக்கீல் இல்லையோ ? ‘

இன்னும் தெளிவடைகிற பிம்பம். கோர்ட் சூழ்நிலை வேறு இவர் இருப்பிலும் நினைப்பிலும் ஆழமாகப் பதிந்திருக்கிறது. முன்சீப், நாசர், சிரஸ்தார் என்று வினோதமான பதவிப் பெயர்களுடன், சகலவிதமான கோர்ட் உத்யோகஸ்தர்களும் பேச்சில் வந்து போகிறார்கள்.

‘சார் கோர்ட் வேலையோ ? ‘

என்னமோ அவரிடம் ஒரு பரிவு தோன்றக் கேட்டான். இன்னும் கொஞ்சதூரம் நடந்தால் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் வந்துவிடும். அதுவரைக்குமாவது இவருக்கு ஏதாவது வகையில் ஆசுவாசத்தைத் தர வேண்டும் என்று தோன்றியது.

‘டக்குனு கண்டுபிடிச்சுட்டியேப்பா .. உன் அடையாளம் தான் சட்டுனு புரிபடாம மனசுலேயெ நின்னது .. தொண்டையிலே எலுமிச்சம்பழ மிட்டாய் மாதிரி மாட்டிண்டு .. ‘

‘எந்தக் கோவில்லே பூஜை செய்யறீங்க சார் ? ‘

‘கோயில் இல்லேப்பா .. எல்லாம் நம்மத்துலே தான். பூர்வீகத்திலே திருக்கோளூர்லேயிருந்து ஒரு மகான் கொடுத்துட்டுப் போனது .. திருக்கோளூர் கேட்டிருப்பியே ..உண்ணும் சோறும், பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும்னு பாசுரம் .. சடகோபனுக்கு எப்பவும் முதலடிதான் ஞாபகம் வரும் .. நான்தான் பூர்த்தி பண்ணுவேன் .. திருக்கோளூர்லெருந்து வந்த ரூபம் .. சரபோஜி காலத்துது… மெழுகு சீலை மாதிரிப் பட்டுத்துணி .. இன்னிக்குப் பூராப் பாத்துண்டே இருக்கலாம் .. சதுர்புஜ அனுமார். ..அனுமார்னா பட்டாபிஷேகத்துலே பவ்யமா, ஒரு ஓரமாச் சேவிச்சுண்டு நிக்கறவர் இலே .. கம்பீரமான ரூபம் .. காலை இப்படிப் பரப்பி .. இந்த உலகமே தூசுங்கற பார்வையோட கையக் கட்டிண்டு இப்படி .. ‘

திடாரென்று நடுத்தெருவில் குடையை ஊன்றிக் கால்பரப்பி நிற்க எத்தனித்து, இடுப்பிலிருந்து நழுவுகிற வேஷ்டியைச் சரிசெய்ய வேண்டி சமநிலைக்கு வந்தார்.

‘ரொம்ப நாள் பூஜை ஒண்ணும் பண்ணலை .. கோர்ட் அமீனாவுக்கு ஜப்திக்குப் போய் நிக்கவே நேரம் சரியா இருக்கும் போது, பூஜை புனஸ்காரத்துக்கு ஏது நேரம் ? நாராயணசாமி முதலியார்னு சப் ஜட்ஜ் இருந்தார் தெரியுமா ? புலியூர்க் குறிச்சிக்காரர் .. உங்க ஊர்ப்பக்கம்தன் ‘

ஊரும் பெயரும் அடையாளமும் திடமாகக் கொடுத்து அவனை இன்னொருத்தனாக ஸ்தாபிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் வலுவடைந்து கொண்டிருப்பதாகப்பட்டது.

‘கோர்ட் வெகேஷன்லே இருக்கிறபோது, சாயந்திரம் தவறாமே கிளப்பிலே பாட்மிண்டன் விளையாடப் போவார் .. மனுஷர் உல்லாசப் பிரியர் .. சங்கீதம்னா உசிரு .. விஷய ஞானம் அபாரம் .. கமகப் பிரியாவை சமத்துக்கு அரை இடம் தள்ளி எடுத்தார்னு வித்வானோட சண்டைக்கே போய்ட்டார்னாப் பாத்துக்கோயேன் .. வக்கீல் ராகவாச்சாரி தமையனர்தான் வித்வான் .. ராகவாசாரி இவருக்கு ஆப்தர்தான் .. ஆனா என்ன ? கால் எடம் முந்தி எடுக்கறதை அரை எடம் தள்ளி எடுத்தாத் தப்பு தப்புதானே ? ‘

யாரோ எதையோ முன்னே பின்னே எடுத்துவிட்டுப் போகட்டும். பஸ் ஸ்டாப் எப்போது வரும் ?

‘நானே தானே பேசிண்டு வேஎன் .. கேக்கறியோ ? சடகோபன் இப்படித்தான் பேசாம வருவான். கடைசியிலே விஷயம் என்னனு என்னையே திரும்பக் கேட்பான். அவனுக்கு என்னோட கூட வீட்டுக்கு வரணும்.. அனுமாருக்கு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணிட்டு, வைதேகி கூடப் பேசணும் .. அவ்வளவுதான் . எனக்கு மட்டும் இஷ்டம் இல்லையா என்ன ? பகவான் அவனை மாப்பிள்ளை ஆக்கிக்கறதுக்குக் கண் காட்டலியே … ‘

சடகோபன் கொஞ்சம் நெருங்கி வ்ந்துகொண்டிருந்தான்.

‘நான் வந்து .. அவசரமாப் போகணும் .. ‘

‘நான் மட்டும் என்ன இங்கே உலாத்திண்டா இருக்கப் போறேன் ? பனி விழறதே ? ‘

விடுகிற மாதிரி இல்லை.

‘பாதியிலே விட்டேனே … சாயந்திரம் கிளப்புக்குப் போறபோது வீட்டு வாசல்லே வச்சு கார் நின்னு போச்சு .. யாருக்கு .. ? ‘

‘கிருஷ்ணசாமி முதலியார்.. ‘

‘கிருஷ்ணசாமி இல்லேப்பா .. நாராயணசாமி முதலியார். கேஎன் அப்படான்னு இனிஷியல்லேதான் பிரபலம். நான் வாசல்லே வேஷ்டியைத் திரிச்சு மூக்கிலே விட்டுத் தும்மிண்டிருந்தேன் .. தலையிலே ஒரே கொடச்சல் .. வந்த மனுஷர் அரைக் கட்டுலே நிஜாரும், கையிலே பந்து மட்டையுமா முன்னாலே நிற்கறார் .. எனக்குக் கையும் ஓடலை .. காலும் ஓடலை .. வாங்கோன்னு சொல்றதுக்கு முன்னாடி தடதடன்னு உள்ளே நுழைஞ்சவர் கண்லே கூடத்துலே மாட்டியிருந்த அனுமார்தான் பட்டார் .. எப்பேர்க்கொத்த ரூபம் ஓய் .. இப்படிப் புழுதி அடைய விட்டிருக்கீரே .. பூஜை ஏதாவது பண்ணறீரான்னார். என் ஜீ ஓ வருமானத்துலே வயத்தக் கழுவறதே உம்பாடு எம்பாடு .. பூஜைக்கு எங்கே ஸ்வாமி போவேன்னேன். நான் தர்றேன்யா.. வாரா வாரம் சனிக்கிழமை பண்ணு .. தேங்காய், பழம், அன்னம் நேவித்தியம் போறும்ன்னார். சரின்னு அப்ப ஆரம்பிச்சதுதான் .. விட முடியலே .. நடுவிலே ஒய்ப் உடம்பு முடியாமப் போனபோது ரெண்டு மாசம் நிறுத்தி வச்சிருந்தேன். இருமி இருமிப் பாவம் உசிர விட்டா .. இந்த ஆராதனையிலே இத்தணுண்டு எனக்குப் புண்ணியம்னு விதிச்சிருந்தாலும் அதெல்லாம் அவளைப் பகவான் கிட்டே நல்லபடியாச் சேத்துடும் .. இன்னமும் நான் பூஜை பண்ணிண்டு இருக்கேன் .. வைதேகியும் காத்திண்டு இருக்கா .. சினிமாகூடப் பேர்வச்சு எடுத்துட்டான் பாத்தியோ .. சடகோபன் தான் சொல்வான் .. பகவான் இன்னும் தான் மனசு வைக்கப் போறான்.. ‘

அவர் குரல் உடைந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் மெளனமாக வந்தார். தான் சம்பந்தப்படாத சோகம் கூடத் தன்னைப் பாதிப்பதாகப் பட அவனும் மெளனமாக வந்தான்.

‘இப்ப எனக்கு எல்லாம் இந்த அனுமார் ஆராதனை தான். தினம் ஒருத்தராவது உபயதாரர் வேணும்னு அலைஞ்சு திரிஞ்சு எங்கேயெல்லாமோ ஏறி இறங்கி .. யார் யாரையோ பார்த்து .. பகவானைப் பட்டினி போட முடியுமா ? ‘

‘முடியதுதான்.. ‘ அவன் குரல் அவனுக்கே ஆச்சரியமாக ஒலித்தது. இன்னும் பத்து அடி நடந்தால் பஸ் நிறுத்தம் தான்.

திடாரென்று அவன் கையை இறுகப் பற்றிக் கொண்டார். கையை விடுவித்துக் கொள்ள அவன் செய்த பலகீனமான முயற்சிகளை லட்சியம் செய்யவில்லை.

‘இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்கு வராட்ட எப்படி ? ‘

‘இல்லே சார் .. அப்புறமா ஒரு நாள் வரேன் .. இப்பப் பஸ் போயிடும்.. ‘

‘அஞ்சே நிமிஷம் தான். வந்தா மனசு சந்தோஷப்படும் எனக்கு. ‘

கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக்கொண்டு பக்கத்தில் ஒரு இருட்டுச் சந்தில் நுழைந்தார்.

‘இங்கேதான் .. வலப்பக்கம் மூணாவது வீடு .. ‘

வாசலில் பாதி இடத்தை அடைத்துக் கொண்டு கடைபோட்டு ஒரு தையல்காரர் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் தைத்துக் கொண்டிருந்தார்.

‘இந்த ஓரமா இருக்கு வாசக் கதவு … பாத்து வாப்பா .. கரண்ட் ஃபியூஸைப் பிடுங்கிண்டு போய் நாலு மாசமாறது .. ‘

யாரோ அவசரமாக எழுந்திருக்கிற சத்தம். உள்ளே அரிக்கேன் வெளிச்சம் பெரிதாக, சுவரில் புகை படிந்து கோடு கிளப்புகிறது.

அந்தப் பெண்ணுக்கு முப்பது வயது இருக்கும். இந்த நிமிடத்தில் எப்படிச் செயல்படுவது என்று நிச்சயம் இல்லாதவளாக நின்றாள்.

‘வைதேகி .. சார் ஆழ்வார் திருநகரிக்காரர். சடகோபனுக்கு ஆப்தர். ரொம்ப நாள் கழிச்சுக் கண்ணுலே பட்டார். ஒரு நடை வந்துட்டுப் போகலாமேன்னு கூட்டிண்டு வந்தேன். சொம்பிலே தண்ணி எடுத்துண்டு வாம்மா .. கொஞ்சம் போதும். .. ரெண்டு பேரும் அட்ஜஸ்ட் பண்ணிக் கால் அலம்பிக்கறோம் .. சுவாமிக்கு வெத்தலை மாலை போட்டியோ ? பாட்டு வாத்தியார் பொண்ணு கொண்டு வந்து தந்தாளோ மத்யானம் ? ‘

அந்தப் பெண் தண்ணீர் கொண்டு வந்தாள்.

‘சாமிகளே.. ‘

வாசலிலிருந்து சத்தம்.

‘டெய்லர் கூப்பிடறான். நீ அலம்பிக்கோ .. இதோ வர்றேன் .. ‘

வாசலுக்குப் போனார்.

‘சடகோபனுக்கு நீங்க வேண்டியவரா ? ‘

அந்தப் பெண் இவனை நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள். அரிக்கேன் விளக்கை ஜன்னல் பக்கம் மாட்டும்போது அங்கங்கே வெள்ளி மின்னிய முடிக்கற்றைகள்.

‘வந்து .. நான் இங்கே ஒருத்தரைப் பார்க்க வந்தேன். இவர் சொல்லச் சொல்லக் கேட்காம .. ‘

‘நெனச்சேன் .. ரெண்டு வருஷமா இப்படித்தான் ஆறது. திடார்னு யாரையாவது கூட்டிண்டு வந்து நிறுத்திடறார். எல்லோரும் சடகோபனுக்கு வேண்டியவான்னு திடமான நம்பிக்கை .. பாவம் உங்களுக்கும் கஷ்டம். பெரியவர் கூப்பிடறாரேன்னு தட்ட முடியாமே உங்க மாதிரி வர்றாவா நிறையப் பேர் .. சிலர் திட்டிட்டுப் போறதும் உண்டு. இவருக்கு எதுவுமே மனசுலே நிக்கறதே இல்லை. அனுமார் ஆராதனை .. அதான் முக்கியம். யாராவது எப்பவாவது ஏதாவது கொடுப்பா.. நீங்க ஏதாவது கொடுத்தேளா ? ஏமாத்து வேலைன்னோ கவுரவப் பிச்சைன்னோ நினைக்க வேண்டம். பூஜை பண்ணி, அந்தப் பிரசாதம் மட்டும் சிலநாள் ஆகாரமாறது உண்டு ‘

அவள் குரலில் ஒரு சோகத்தை உணர்ந்து தாங்கிக் கொண்ட, அதை அந்நியர் முன் வெளிப்படுத்தத் தயங்காத தொனி.

‘நான் போறேம்மா .. அவர் வர்றதுக்குள்ளே கிளம்பறேன் .. ‘

‘வரவர ஞாபகம் அதிகமாத் தவறிப் போறது. பென்ஷன் வாங்கிண்டு வரேன்னு கிளம்பி மணிக்கணக்கா அந்த மாவுமில் வாசல்லேயே நின்னுண்டு இருந்தாராம். சடகோபன் போய்ப் பத்து வருஷம் ஆறது .. இன்னும் அங்கேயே இருக்கறதா நினைப்பு .. டெய்லர் தான் பார்த்துக் கூட்டிண்டு வந்தார் .. ‘

‘இப்பக்கூட அங்கேதான் என்னைப் பார்த்தார் ‘

‘நீங்க அந்த லாட்ஜிலே இருக்கப் பட்டவரா ? ‘

‘இல்லே, வேறே எடம். இங்கே இல்லை. ‘

அறையை நோட்டம் இட்டான். வடகம் பிழிந்து உலர்த்திய பிளாஸ்டிக் ஷீட்டுகள் ஒரு மூலையில் அடுக்கியிருந்தது கண்ணில் பட்டது.

‘இதெல்லாம் வீட்டு உபயோகத்துக்காகவா ? ‘

‘விலைக்குக் கொடுக்கறதுக்குத் தான். ஒருத்தர் மூலமா பேங்கிலே லோன் கெடச்சது. என்னமோ நம்பிக்கையிலே ஆரம்பிச்சேன்.. போன மாசம்தான் ..இன்னும் பைசா அடைக்கலே … கரண்ட்காரன் ஃப்யூஸைப் பிடுங்கிண்டு போனமாதிரி பேங்க்லே வடாத்தை எடுத்துண்டு போவாளோ என்னமோ… ‘

‘எங்க கடையிலே தொடர்ந்து சப்ளை செய்ய முடியுமா ? ‘

அவள் இதை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது முகத்தில் சின்ன சந்தோஷமாகப் பிரதிபலித்தது.

‘கடை அட்ரஸைக் கொடுங்கோ … எப்போ வரணும் .. ‘

விலாசம் சொன்னான். ‘நாளைக்குக் காலையிலே வாங்க .. ‘

‘வைதேகி.. ‘

அவர்தான்.

‘சடகோபன் பிரண்ட் முலமா பகவான் நாளைக்கு ஆராதனைக்கு வழி பண்ணுங்கிறார். நோட்புக்கிலே பேர் வாங்கிக்கோம்மா. சங்கோஜப்படாம உள்ளே வாப்பா .. வந்து தரிசனம் பண்ணிக்கோ .. ‘

அவரே ஜன்னலுக்கு மேலே இருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து வந்தார். விளக்குப் பக்கமாக நின்று பக்கத்தைப் புரட்டிக் கையில் கொடுத்தார்.

நாலு மாதத்துக்கு முந்திய தேதியில் யாரோ எழுதி இருந்தார்கள்.

‘ரொம்ப பேர் கொடுத்துட்டு எழுதறதே இல்லை .. ஆனாலும் நான் தேடிண்டு போய்ப் பிரசாதம் கொடுத்துடுவேன் .. ‘

‘சாமிகளே.. ‘

திரும்பவும் வாசலில் சத்தம்.

‘டெய்லர்தான். விளக்கு வச்சதுக்கு அப்புறம் வாடகைப் பணத்தைத் தரலாமான்னான். ஆபத்துக்குத் தோஷம் இல்லை .. எனக்கு எப்பவும் ஆபத்துதான்.. கொடுன்னேன். வீட்டிலே போய் எடுத்துண்டு வர்றேன்னான். வீடு பின் தெருவிலேதான். .. இவனாவது, போய்த் திரும்பி வர்றதாவதுன்னு நினைச்சேன் .. கொண்டே வந்துட்டான் .. பாரு .. மனுஷாளுக்கு எவ்வளவு சீக்கிரம் நினைக்கிறது பிசகாயிடறது .. நீ எழுதுப்பா .. நான் இதோ வர்றேன் .. ‘

இருட்டில் மெல்ல வாசலுக்குப் போனார்.

அந்தப் பெண் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர் போகும்வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து அந்தப் புத்தகத்தில் வைத்து மூடி அவளிடம் கொடுத்து விட்டுக் கிளம்பினான். பஸ் இருக்கும் என்று தோன்றவில்லை. நிறைய நடக்க வேண்டி இருக்கலாம். இந்தப் பெண் நாளை கடைக்கு வர வேண்டும். லேகியக்காரரும் தான். இந்த அலைச்சலுக்கு ஒரு அர்த்தம் ஏற்பட வேண்டும் ..

‘பேர் எழுதலியே.. ‘

‘எழுதிக்குங்க.. ‘

‘என்னன்னு ? ‘

‘சடகோபன்னே எழுதிக்குங்களேன்.. ‘ என்றான் ராஜு என்ற டேவிட் ஆனந்தராஜ்.

( ‘ஆதம்பூர்க்காரர்கள் ‘ தொகுப்பிலிருந்து –)

ஆழ்வார் மேடை நாடகமாக ஷ்ரத்தா தியேட்டர்ஸ் குழுவினரால் அரங்கேற்றப்பட்டது.

நாடகத்தில் ஆழ்வாராக ஒப்பற்ற மேடை நாடகக் கலைஞர் திரு டி,டிஎஸ் T D சுந்தரராஜன்  அவர்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2022 18:56

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.