இரா. முருகன்'s Blog, page 38

December 31, 2022

2023 புத்தாண்டு தீர்மானங்கள்

என் புத்தாண்டு 2023 தீர்மானங்கள்
———————————————-
1) தலை முடிக்கு இனிச் சாயம் பூச மாட்டேன்

2) வாசிக்க எடுத்த புத்தகங்களில் சிலவற்றையாவது முதலில் இருந்து இறுதி வரை படித்து முடிப்பேன்

3) இலக்கியக் கூட்டங்களில் பார்வையாளனாக மட்டும் இருப்பேன்

4) இப்போதே அப்படித்தான் என்றாலும், உப்பும், உரைப்பும், எண்ணெயும் இன்னும் குறைத்து உண்பேன்

5) போயிருந்த திருமணங்களில் ஓதியிட்டுக் கொடுத்து அலமாரி முழுக்க இடம் அடைக்கும் எட்டு முழ ஜரிகை வேட்டிகளை அடிக்கடி உடுத்திக் கொள்வேன்,

உங்கள் new year resolution என்ன எல்லாம்?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2022 05:35

December 26, 2022

இந்தியில் வந்த நொரநாட்டியம்

நண்பர் திருமதி அனுராதா கிருஷ்ணசாமியின் சரளமான மொழிபெயர்ப்பில் மிளிர்கிறது, ‘கடவுளுக்கென ஒரு மூலை’, சிறுகதைத் தொகுப்பு.

சிறுவாணி வாசகர் மையம் வெளியீடு.

மொத்தம் 14 கதைகள் -பஞ்சாபி, ஹிந்தி, ஒடியா, உருது, டோக்ரா, வங்காளி, குஜராத்தி, கன்னடம் என்று வரும் சிறுகதைகள் அத்தனையும் அந்தந்த மொழியில் பிரபலமான பெண் எழுத்தாளர்கள் எழுதியவை.
ஆங்கில, ஹிந்தி வழியே தமிழுக்கு மொழிபெயர்ப்பானவை.

கடைசிக் கதையான குஜராத்திச் சிறுகதை
’கதவு’ இப்படித் தொடங்குகிறது – ஹிமான்ஷி ஷேலாட் எழுதியது-

//
முட்டாள்ப் பெண்ணே! இப்படியே தொடர்ந்தால் நீ உன் கையாலேயே சாவது நிச்சயம். நான்கு நாள் ஆகிவிட்டதே, உனக்கு வயிறு வலிக்கவில்லையா? அந்தப் பெண்களைப் பார். ஒரு கவலையும் இல்லாமல் எவ்வளவு சந்தோஷமாகக் குந்தியிருந்து விட்டு வருகிறார்கள்! உனக்கு மட்டும் ரொம்பவும்தான் நொரநாட்டியம்
//

கழிவறை இல்லாத கிராமச் சூழ்நிலையில் குந்த வைக்க இடம், நேரம் பார்த்துக் காத்திருக்கும் பெண்கள் பற்றிய கதை.

அனுராதா மேடத்திடம் ‘நொரநாட்டியம்’ இங்கே எப்படி வந்தது என்று கேட்டேன்.

‘ஹிந்தியிலே நக்ரா தான் இங்கே மொழியாக்கமாக வந்திருக்கு”

May your tribe increase!

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2022 05:32

December 22, 2022

வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் என் நூல்கள்

அடுத்து வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் என் பதிப்பாளர்களான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் – எழுத்து வெளியீடாகக் கீழ்க்கண்ட என் நூல்கள் வெளியாகும் –
1)நாவல் ‘தினை’ – அசுர வேகத்தில் இறுதி இருபது அத்தியாயங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முடித்து விடலாம் என்று நம்புகிறோம்

பிறக்க இருக்கும் ஆண்டு 2023 உலகச் சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி நாவல் வெளியீடு இருக்கும்

2)சென்ற புத்தகக் கண்காட்சியின் சி’றப்பு வெளியீடுகளில் ஒன்றான ‘பெருநாவல் மிளகு’

3) புதுப் பதிப்பாக அரசூர் நான்கு நாவல்கள்
அரசூர் வம்சம்’
விஸ்வரூபம்
அச்சுதம் கேசவம்
வாழ்ந்து போதீரே

(நான்கு அரசூர் நாவல்களையும் சேர்த்து வாங்கும் வாசகர்களுக்கு சிறப்பு விலை அறிவிக்க என்பதிப்பாளர்களைக் கோரியுள்ளேன்)

4)புதுப் படைப்புகள் சேர்க்கப்பட்ட இரா.முருகன் குறுநாவல்கள்
மேலும் வர வாய்ப்பு இருக்கிறது, அன்பு நண்பர்கள் வாங்கி வாசித்து வாசக அனுபவம் பகிர வேண்டுகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 22, 2022 04:10

December 15, 2022

பப்பட வெட்டும் கொப்பியளவும் பாரதப் புழை தீரமும்

நினைவுகளின் ஊர்வலம்

பத்திரிகையாளரும், ஆஷியாநெட் தொலைக்காட்சி வைஸ் சேர்மனும் ஆன வி.கே. மாதவன் குட்டியின் ‘ஓர்மகளுடெ விருந்நு’ என்ற மலையாளச் சுயசரிதையை இரண்டாம் முறையாகப் படித்துக் கொண்டிருந்தேன்.

முதல் தடவை படித்தது, ‘கலாகௌமுதி’ பத்திரிகையில் பத்து வருடம் முன்னால் நம்பூத்ரியின் உயிரோட்டமுள்ள கோட்டுச் சித்திரங்களோடு இந்த வாழ்க்கை வரலாறு வெளியான நேரத்தில்.
அப்போது அந்தப் பத்திரிகையே ஓர் ஒளி வட்டத்தில் இருந்தது. கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் வாழ்க்கை வரலாறு, அச்சுத மேனோனின் டயரிக் குறிப்புகள், மாதவிக் குட்டி (கமலாதாஸ் என்ற சுரையா)வின் ‘நீர் மாதளம் பூத்த காலம்’ என்று வரிசையாக அருமையான தொடர்களும், புரபசர் கிருஷ்ணன் நாயரின் ‘சாகித்ய வாரபலனும்’, ஒ.வி.விஜயனின் ‘பிரவாசகண்டெ வழி’ நாவலும் வெளிவந்த காலம் அது. பத்திரிகை ஆசிரியர் ஜனார்த்தனன் நாயரும் வாரபலன்காரரும் ‘மலையாள நாடு’க்குக் குடிபெயர, மற்ற இலக்கியத் தரமான எழுத்துக்களும் இல்லாமல் போய் தற்போது வெளிவரும் கலாகௌமுதி நம் தமிழ்ப் பத்திரிகைகள் பலவும் போலத்தான். போகட்டே.

மாதவன் குட்டி, சுயசரிதம் என்ற பெயரில் சுய தம்பட்டம் அடிக்காமல், அறுபது வருடம் முந்திய பாலக்காட்டுப் பக்க மலையாளக் கிராமத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் பதிவுகளின் தொகுதி ‘ஓர்மகளுடெ விருந்நு’ புத்தகம்.

புத்தகத்திலிருந்து –

பொழுது புலரும்போது ஆண்டிகளும் காக்கைகளோடு விழித்து எழுந்து கிராமத்திலும் அதன் அருகிலும் பிச்சை தேடுவார்கள். காவடிக் காலங்களில் அவர்கள் காவடி எடுப்பதால் வருமானம் கூடும். காவடி எடுத்தால் பழனிக்குப் போகவேண்டும். பழனிக்குப் போனாலும் போகாவிட்டாலும் காவடி எடுப்பார்கள் சிலர். பாவைக்கூத்து (பொம்மலாட்டம்) கலையில் தேர்ச்சி பெற்ற இரண்டு ஆண்டிகள் அங்கே உண்டு. அவர்கள் கம்பராமாயணக் கதைகள் சொல்வார்கள்.

மழை பொய்த்துப்போன வருடங்களில் ஆண்டிப் பெண்கள் வீடு வீடாகப் போய், மழைக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். கையில் ஒரு தீச்சட்டி இருக்கும். சட்டியின் கழுத்தில் பூமாலை சுற்றி இருக்கும். அந்தச் சட்டியை முற்றத்தில் வைத்து திருவாதிரைக்களி போல் அதைச் சுற்றி ஆடியபடியே பாடுவார்கள் :

“மானத்தே மகாதேவா, மழை பெய்தால் ஆகாதோ” என்று ஒருத்தி பாடுவாள்.

“கொப்பியாள..கொப்பியாள..” என்று மற்றவர்கள் இரண்டு கையும் கொட்டி இப்படியும் அப்படியுமாகச் சரிந்து ஆடுவார்கள்.

“மேலத் தெருவில் பெய்த மழை, கீழத் தெருவில் பெய்யாதோ” இன்னொருத்தி பாடுவாள்.

“கொப்பியாள..கொப்பியாள”…
*********
சின்னான் நாயர்களுக்கு மட்டுமே முடிவெட்டுவான். அவனுக்கு இரண்டு தம்பிகள். அவர்களில் கிருஷ்ணன், பட்டன்மாருடைய (பார்ப்பனர்கள்) நாவிதன். பாலன், ஈழவருக்கும் மற்ற தாழ்த்தப் பட்டவருக்கும் நாசுவம் செய்வான். இவர்களில் கிருஷ்ணனுக்கு வருமானம் குறைவு. சுற்றிப் பற்றி மொத்தமே மூன்று பட்டர் குடும்பங்கள் தான். உச்சிக் குடுமி வைத்து இருப்பார்கள் அங்கே. முகச் சவரமும் வாரம் ஒரு முறைதான். கிருஷ்ணன் முகச் சவரத்திற்கான கட்டணத்தை உயர்த்திப் பார்த்தான். பட்டர்கள் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை சவரம் போதும் என்று வைத்து விட்டார்கள்.

கிராமத்தில் ஆட்களைப் பார்த்தால் அவர்களின் ஜாதியைச் சொல்லி விடலாம். நாயர்களுடைய தலை நன்றாக கிராப் செய்யப் பட்டிருக்கும். தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பப்பட வெட்டு தான் (அப்பளத்தைப் பரத்தியது போல தலையில் முடி வெட்டியிருக்கும்). சிலருக்கு எலி பிராண்டியது போல இருக்கும்.

ஒரு தடவை கிருஷ்ணனுக்குப் புத்தி பேதலித்துப் போனது. சாமிநாதய்யருடைய குடுமியைச் சீராக்குவதற்குப் பதில் அவருக்குப் பப்பட வெட்டு நடத்தி விட்டான். செய்து விட்டு, விசுவநாதய்யரைப் பார்த்துச் சிரித்தான். சுப்பாணிக்கு மொட்டையும் அடித்தான். அப்புறம் கிருஷ்ணன் கத்தியோடு வந்தாலே கிலிதான்.
********
ஆப்ரகாம் தபால்காரனாக கிராமத்துக்கு வந்தான். கிராமத்தில் முதல் கிறிஸ்துவன் அவன் தான். சுருட்டை முடியும், கனத்த புருவங்களும், கொஞ்சம் பூனைக் கண்ணுமாக வந்தவனைக் கிராமமே ஆர்வத்தோடு பார்த்தது. ஆப்ரகாம் தொட்டு எடுத்துக் கொடுத்த கடிதங்களை முதலில் நாயர்கள் கையில் வாங்கவில்லை. புரயத்தெ நாராயணன் நாயர், “இவன் தொட்டால் தீட்டில்லை” என்று சொல்லிய பிறகே அவர்கள் ஆப்ரகாம் கையிலிருந்து கடிதம் வாங்கினார்கள். நாராயணன் நாயர் கோட்டயத்தில் உத்தியோகம் பார்க்கும்போது அங்கே கிறிஸ்துவர்களோடு நாயர்கள் பழகுவதைப் பார்த்திருக்கிறாராம். என்றாலும் ஆப்ரகாம் வீட்டிற்குள் வர அவர்கள் அனுமதிக்கவில்லை. தண்ணீரோ சாயாவோ கொடுத்தாலும் தூக்கிக் குடிக்க வேண்டும். ஆனால் அப்புறம் குவளையைக் கவிழ்த்து வைத்துவிட்டுப் போக வேண்டாம் என்று ஒரு சலுகை மாத்திரம் உண்டு.

ஆப்ரகாம் கிராமத்துக்கு வந்து சிறிது காலத்தில் போஸ்ட் ஆபீஸ¤க்கு எதிரே ஒரு தோட்டம் விலைக்கு வாங்கினான். அங்கே சின்னதாக ஒரு வீடும் கட்டிக் கொண்டான். கப்பை பயிரிட்டான். அமோக விளைச்சல். ரப்பர் செடி வைத்தான். கோட்டயத்திலிருந்து திரேசம்மையைக் கல்யாணம் கட்டி வந்தான்.

தலமைத் தபால்காரனானான். அவனுக்குக் கீழே பணிபுரிய நியமிக்கப் பட்டவன் ஒரு நாயராக இருந்தான். கிராமத்தில் கிறிஸ்தவக் குடும்பங்களின் எண்ணிக்கை எட்டு ஆனது.

ஆப்ரகாம், அவரச்சன் என்று மரியாதையோடு விளிக்கப்பட்டு இறந்த காலத்தில் கிராமத்தில் கேரள காங்கிரஸ் தலையெடுத்திருக்கவில்லை.

(வி.கே.மாதவன் குட்டியின் “ஓர்மகளுடெ விருந்நு” – டி.சி.புக்ஸ், கோட்டயம் வெளியீடு)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 18:37

December 11, 2022

ஓடப் பாட்டு

கண்ணன் காட்சி ஓடக் கும்மி (நௌகா சரித்திரம்)

சத்குரு தியாகராஜ ஸ்வாமிகள் இயற்றிய நாட்டிய நாடகமான ‘நௌகா சரித்திரம்’ பற்றி நேற்று டாக்டர் பிரமிளா குருமூர்த்தி நடத்திய சொற்பொழிவு-நிகழ்த்திக் காட்டுதலில், எனக்கு இருந்த இரண்டு அடிப்படை சந்தேகங்கள் தீர்ந்தன.

1) நௌகா என்றால் படகு என்று தெரியும். தியாகராஜர், படகு என்று சேர்த்துப் பார்த்து, இது அவருக்குப் பிரியமான ராமபிரானையும் அவனுக்குக் கங்கையில் படகோட்டிய குகனையும் பற்றிய படைப்பு என்று இதுகாறும் நினைத்திருந்தது தவறு.

நௌகா சரித்திரம், யமுனையில் கண்ணன் தோணிகளோட்டி கோபியரோடு விளையாடி வந்த கதை. முத்துக்களைக் கொடுத்து தெருவில் விற்றுப் போகிற இலந்தைப் பழம் வாங்க வருகிற குழந்தைக் கண்ணனை கோபியர் தம்மோடு ஓடத்தில் அழைத்துப் போகிறார்கள். காற்றும் மழையுமாக யமுனை ஓடம் தத்தளிக்க, கண்ணன் அவர்களைக் காத்து ரட்சிக்கிறான். சுருக்கமான கதை இது.

2) நௌகா சரித்திரத்தில் பத்துக்கு மேற்பட்ட ராகங்களில் (13?) கீர்த்தனைகளும் தாருக்களும் உண்டு. நான் நினைத்திருந்தபடி அது தாரு இல்லை, தரு.

தரு ஒரு கதையாடல். ராம கதையோ, கிருஷ்ண கதையோ அதில் ஒரு காட்சியை விவரிப்பது அது. கீர்த்தனை பொதுவாக, அது எந்த தெய்வம் குறித்து அமைந்திருக்கிறதோ, அத் தெய்வத்தின் குண நலன், சிறப்பு எல்லாம் கூறி அருள் செய்ய வேண்டுவதாக வரும். (பாடிப் பரவுதல் இதுதானோ?)
தரு, துருவ என்ற வேர்ச்சொல்லின் அடிப்படையிலானது. துருவ என்பது ஏற்கனவே இருந்த / நிகழ்ந்ததைச் சுட்டுவது.

3) தியாகராஜர் காலத்திலேயே மெலட்டூர் பாகவதமேளா பிரபலமடைந்து இருந்தது. இந்த நிகழ்வுகளில் மனம் பறிகொடுத்து அவர் நௌகா சரித்திரம், பிரஹலாத பக்த விஜயம் ஆகிய நாட்டிய நாடகங்களை இயற்றியிருக்கலாம்.

4) யமுனைக் கரை வர்ணனை, கோபியர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளுதல் (’குழந்தைக் கண்ணன் நிறையத் தங்க நகை அணிந்திருக்கிறான். அவனை ஓடத்தில் நம்மோடு அழைத்துப் போனால் அந்த நகை களவு போய்விடலாம். கூட்டிப் போக வேண்டுமா?’ என்பது இதில் ஒன்று!), கோபிகள் – கண்ணன் சம்வாதம், படகு அசைந்து செல்வது போல் அமைந்த பாட்டு நடை என்று உன்னதமான நாடகப் பாங்கும், இசையுமாக பரிபூரண சரணாகதி தத்துவத்தை விளக்குவது நௌகா சரித்திரம்

5) தெலுங்கு மொழியில் அமைந்த இசை நாடகம் நௌகா சரித்திரம். 1868-ல் இது தமிழில் ‘கண்ணன் காட்சி ஓடக் கும்மி’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

6) பொதுவாக நாட்டிய நாடகங்களில் இடம் பெறும் பாடல்களுக்கு இசை அமைக்கும்போது, ‘ஆதி நாட்டை, அந்தம் சுருட்டி’ (நாட்டை ராகத்தில் தொடங்கி, சுருட்டியில் நிறைவு செய்தல்) பின்பற்றப் படும் என்றாலும், தியாகராஜரின் படைப்புகளில் ஒரே ராகத்தில் தொடக்கமு, நிறைவும் இருக்கும்.

நௌகா சரித்திரம் சுருட்டியில் தொடங்கி, சுருட்டியில் நிறைவுறும்,. பிரஹலாத பக்த விஜயம் மத்யமாவதியில் தொடங்கி, அதே ராகத்தில் (பவமான சுத்துடு பட்டு பாதார விந்தமுலகு – இசைநிகழ்ச்சி நிறைவு செய்யும்போது மங்களம் பாடுவது பெரும்பாலும் இந்தப் பாடலோடு தான்) முடிவு பெறும்.

டாக்டர் பிரமிளாவின் குழுவினர் அவ்வப்போது நௌகா சரித்திரப் பாடல்களை இனிமையாக இசைத்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.

(வாணி மஹால் – 17 டிசம்பர் 2016 10:00 மணி)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 18:55

December 8, 2022

எம்.டி.வாசுதேவன் நாயரும் எம்.டி.ராமநாதனும்

என் மின்நூல் ‘ஏதோஒரு பக்கம்’ புத்தகத்திலிருந்து மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் நேர்காணல் எஞ்சியது

9) நான்: மலையாளத்தின் பாரம்பரிய வரலாற்று புனைவுகளில் கொடியவனாகச் சித்தரிக்கப்படும் ‘சதியன்’ சந்துவைக் கதாநாயகனாக்கி ஏழெட்டு வருஷம் முன்பு, ‘ஒரு வடக்கன் வீரகாதை’ திரைக்கதை உருவாக்கினீர்கள். இப்போது நீங்கள் திரைக்கதை அமைத்த ‘பழசிராஜா’வில் இன்னொரு சந்து வருகிறான். பழையம்வீடன் சந்து. வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்ததாகக் காட்டியிருக்கிறீர்களே இந்தச் சந்துவை? அவனும் வேறு மாதிரி இருந்திருக்கலாம் இல்லையா?

எம்.டி: கொலைக்கும் துணிந்த சதியன் சந்து பணிக்கர் என்ற கற்பிதம் வடக்கு கேரள பிரதேசத்தில் வழங்கும் வடக்கன்பாட்டு கிராமிய இசை வடிவில் இல்லை. மலையாள மண் இன்னும் போற்றிப் புகழும் ஆரோமல் உண்ணி போல் அவனும் வடக்கன் பாட்டுகளின்படி ஒரு வீரன் தான். 50-60களின் மலையாள சினிமா சரித்திரப் புனைவுகளைத் தொட்டுப் பார்க்க முயற்சி செய்த போது சந்து சதிகாரன் என்ற பொய் கட்டிச் சமைக்கப்பட்டது. வடக்கன் வீரகாதை படத்தில் நான் சித்தரித்த சந்து சூழ்நிலையால் குற்றவாளி ஆக்கப்பட்ட ஒரு வீரன். இப்போது பழசிராஜா படத்தில் வரும் பழையம்வீடன் சந்து ஆங்கிலேயருக்குத் துணை போனவன் என்பது தொன்மமில்லை. புனைவுமில்லை. வரலாறு. ஆவணப்படுத்தப்பட்டது.

10) நான்: உங்கள் படமான ‘பரிணயம்’, கேரளத்தில் பரபரப்பு சிருஷ்டித்த ‘குறியேடத்து தாத்ரிகுட்டி’ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது இல்லையா?

ஆமாம். நம்பூத்ரி சமுதாயத்தைச் சேர்ந்த குறியேடத்து தாத்ரிகுட்டியின் வாழ்க்கை சம்பவங்களுடைய பாதிப்பு பரிணயம் படத்தில் உண்டு. போன நூற்றாண்டு தொடக்கத்தில், நம்பூதிரி பிரிவினரை மட்டுமில்லாமல் கேரளத்தில் பொதுவாகப் பெண்ணை ஆணாதிக்க சமுதாயம் நடத்துவதை மறு பரிசீலனை செய்ய வைத்த நிகழ்வு அது. நம்பூத்ரி இனப் பெண் பிறழ்ந்து போக நேர்ந்த சூழ்நிலையைப் கவனமாகப் பரிசீலனை செய்யும் முயற்சி ‘பரிணயம்’.

11) நான்: மாடம்பு குஞ்ஞுகுட்டன் கூட அது குறித்து ப்ரஷ்டு என்ற நாவல் எழுதியிருக்கிறார் இல்லையா? அவருடைய பூர்வீக இல்லமான மாடம்பு மனையின் அடுதிரிப்பாடு தானே தாத்ரிக்குட்டியை ஸ்மார்த்த விசாரம் (சமூக விசாரணை) செய்ய நியமிக்கப்பட்டவர்?

எம்.டி: மாடம்பு மனை அடுதிரிப்பாடு விசாரணைக் கமிஷன் உறுப்பினர். அவ்வளவே.
12) நான்: எப்போதும் உங்கள் கதைகளையே திரைப்படமாக்கும் நீங்கள் ‘செறு புஞ்சிரி’ படத்தை, தெலுங்கு எழுத்தாளர் ஸ்ரிராமன் எழுதிய ‘மிதுனம்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியிருக்கியது ஏன்?

அந்தச் சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. வயதான தம்பதியர் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் ஆழமான காதலை மென்மையாகச் சொல்லும் கதை. அதுபோல் வேறு மொழிக் கதைகள் கிடைத்தால் மலையாளத் திரைப்படமாக்கத் தடையேதும் இல்லை. யார், எந்த மொழி என்பது முக்கியமில்லை, நல்ல கதை எங்கேயும் எப்போதும் நல்ல கதைதான்.

13) நான்: நீங்களோ ஒரு முற்போக்கு இலக்கியவாதி. ஆனாலும் உங்களின் முக்கியப் படைப்புகளான ‘ரெண்டாம் ஊழம்’ (நாவல்), ‘வைசாலி’ (திரைக்கதை), ‘பெருந்தச்சன்’ (திரைக்கதை) போன்றவற்றில் இதிகாசம் மற்றும் தொன்மத்தின் பாதிப்பு இருக்கிறதே.

ரெண்டாம் ஊழம், வைசாலி இந்த இரண்டுமே மகாபாரதம் என்ற இதிகாசத்தை சற்றே மாறுபட்ட பார்வையில் நோக்கிய படைப்புகள். ரெண்டாம் ஊழம் பீமனின் பார்வையில் மகாபாரதம். வைசாலி மகாபாரதத்தில் ஒரு கிளைக்கதையை தற்கால சூழலுக்குப் பொருத்திப் பார்ப்பது. எக்காலத்திலும் பெண்ணை போகப் பொருளாக உபயோகப்படுத்தி விட்டு காரியம் முடிந்ததும் தூக்கி எறிகிற போக்கை கோடிட்டுக் காட்டிய திரைக்கதை அது. பெருந்தச்சன் கர்ண பரம்பரைக் கதை. தச்சுக் கலைத் திறமையில் சொந்த மகனையே முந்தவிடாத கலா கர்வமும் பொறாமையும் கொண்ட வித்தியாசமான அந்தக் கலைஞன் உருவாக்கியதென்று பன்றியூர் அம்பலத்தில் (கோவில்) இன்றைக்கும் ஒரு பெரிய மண்டபத்தைக் காட்டுகிறார்கள். அந்த வாய்வழிச் செய்திக்கு காட்சி உருவம் கொடுத்தது பெருந்தச்சன் திரைக்கதை. புராணத்தில் நம்பிக்கை வைப்பதற்கும் வைக்காததற்கும் இந்தக் கற்பனை நீட்சிகளுக்கும் தொடர்பு இல்லை.

14) நான்: உங்கள் நாலுகெட்டு, ருதுபேதம் (திரைக்கதை) இரண்டுமே நாயர் சமுதாயம் மரபு சார்ந்த கட்டுக்கோப்பில் இருந்து விலகி பெரும் சமூக மாற்றம் ஏற்பட்ட காலகட்டத்தைச் சித்தரிப்பவை. மருக்கத்தாயம் (மகனுக்கு இல்லாமல் மருமகனுக்குப் பரம்பரை சொத்து உரிமையாவது) ஒழிப்பு, விமோசன சமரம் போன்ற சரித்திர நிகழ்வுகள் ஏற்பட்ட போன நூற்றாண்டில், இந்தப் படைப்புகளில் சித்தரிக்கப்படும் பிரச்சனைகள் நடைமுறை வாழ்க்கையோடு ஒத்திசைந்திருக்கலாம். அவை தற்காலத்துக்குப் பொருத்தமானவை என்று சொல்ல முடியாதல்லவா?

சரிதான். அறுபதுக்களின் சமூகத்தில் அந்தப் பழைய கேரளத் தனிமையை ஆத்மார்த்தமாக அனுபவித்த ஏராளமானவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்ட கதைகள் அவை எல்லாம். இப்போதைய தலைமுறைக்கு இது அந்நியமான சங்கதி.

நாலுகெட்டும் எட்டுக் கெட்டும் எல்லாம் இப்போது கேரளத்தில் அபூர்வம். பழைய கட்டிடங்களை இடித்துப் பொளித்து புதுசு புதுசாக ஏதோ கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கூடலூரில் நான் பிறந்த நாலு கெட்டு மனையில் சுற்றுப் பகுதியை இரண்டு புறமும் இடித்துவிட்டு மத்தியப் பகுதியை மட்டும் அப்படியே விட்டுவிட்டு மாற்றியமைத்துக் கட்டிவிட்டார்கள். என்னமோ போல இருக்கிறது. யாரையும் குறை சொல்ல முடியாது. கூட்டுக் குடும்பக் கலாசாரம் இப்போது கேரளத்தில் மட்டுமில்லை. இந்தியா முழுக்கவே மறைந்து வருகிறது. மாறுதல்தானே நியதி?

(நான் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியில் நகரத்தார் சமூக பெரும் இல்லங்கள் இன்னும் அதே பொலிவுடன் இருப்பதைச் சொல்கிறேன். ஓ, அதை எல்லாம் போய்ப் பார்த்திருக்கிறேனே என்கிறார் எம்.டி. தமிழகம் பற்றி அவருக்கு நுணுக்கமாகத் தெரிந்திருக்கிறது. இந்த மண்ணோடு அறுபது வருடப் பழக்கம் இல்லையா!)

15) பழசிராஜா படத்துக்கு கவிஞர் ஒ.என்.வி எழுதிய கானங்கள் உணர்வு பூர்வமான சூழலைப் பிரதிபலிக்கவில்லை என்று இசையமைத்த இளையராஜா சொல்லி இருக்கிறாரே?

எம்.டி:திரைக்கதை ஆசிரியன் என்ற முறையில் படத்தில் எந்தக் காட்சி எப்படி வரவேண்டும் என்றுதான் நான் எழுதுவேனே தவிர பாடல், இசை என்று சகலமானதிலும் தலையிடுவதில்லை. அது திரைக்கதாசிரியருக்கோ வசனகர்த்தாவுக்கோ தேவையில்லாத ஒன்று. எனக்கு ஒ.என்.வி, இளையராஜா இருவர் மேலும் மதிப்பு உண்டு.

16) 1957-ல் மாத்ருபூமி உதவி ஆசிரியராகப் பணி புரிய ஆரம்பித்து, 1999-ல் அந்தப் பத்திரிகை ஆசிரியராக ஓய்வு பெற்றவர் என்ற வகையில் அனுபவம் மிகுந்த பத்திரிகையாளரும் கூட நீங்கள். மலையாள இதழியல் இன்னும் பால பருவத்திலேயே இருப்பதாக எனக்கு ஒரு தோணல்….

இதற்கு சிரிப்பையே பதிலாகத் தருகிறார் எம்.டி. நான் என் கம்ப்யூட்டர் கான்வாஸ் பையில் இருந்து ஒரு மலையாள தினசரியை எடுத்து அதன் நாலாம் பக்கத்தில் ‘குருவாயூரில் குட்டி கொம்பன் மேல் தெங்கு வீணு; கொம்பிளகி’ (குருவாயூரில் குட்டியானை மேல் தேங்காய் விழுந்து கொம்பு முறிவு) செய்தியைப் படிக்கிறேன். சிரிக்கிறார்.

தினசரியை மடக்கி தினசரியின் முதல் பக்கத்து செய்தியைக் காட்டுகிறேன். ‘அடடா, மராட்டி கவிஞர் திலீப் சித்ரே இறந்து போய்ட்டாரா?’ எம்.டி பதற்றத்தோடு பத்திரிகையைக் கையில் வாங்கிப் படிக்கிறார். ‘இங்கிலீஷ் பத்திரிகையிலே கூட வரலியே’ என்று முணுமுணுக்கிறார். ‘தமிழிலும் இதெல்லாம் போட மாட்டாங்க சார்’ என்கிறேன். ‘திலீப் எனக்கு நல்ல நண்பர். அருமையான கவிஞர், எழுத்தாளர், அற்புதமான நண்பர்’.

எம்.டியின் கண்கள் தொலைவில் நோக்குகின்றன. மெல்ல அடுத்த பீடியைக் கட்டில் இருந்து உருவி எடுத்துப் பற்ற வைத்துக் கொள்கிறார். சந்தோஷமோ துக்கமோ அவருக்குத் துணையாக பீடி உண்டு.

17) சார், நீங்கள் கர்னாடக சங்கீதத்தை ரசிக்க மாட்டீர்கள் இல்லையா? இசைமேதை எம்.டி.ராமநாதனைப் பற்றி நீங்கள் சொன்னதாக ஆறேழு மாதம் முன்பு மலையாளப் பத்திரிகையில் வாசித்த நினைவு – ‘எம்.டி.ராமநாதனை ஒரு இசைமேதையாகப் போற்றிப் புகழ்வது ஏன்? அவருக்கும் மற்ற வித்வான்களுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு பாமரனுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியுமோ?’ என்று கேட்டீர்களாமே? M.D யாரென்று இப்போதாவது M.T-க்கு மனசிலாயோ?

எம்.டி: நான் சொன்னதைத் தப்பாகப் புரிந்து கொண்டு செய்தியாக்கியதின் விளைவு இது. எனக்கு சங்கீதம் பிடிக்காது அல்லது எம்.டி.ராமநாதனைப் பிடிக்காது என்றா சொன்னேன்? அவர் பாடியது அற்புதமான சங்கீதம் என்று இங்கே இசை ரசிகர்கள் – கேரளத்தில் நிறையப் பேர் அவருக்கு விசிறிகள் – சொல்கிறார்களே, அதைக் கேட்கும்போது, எந்த மாதிரி வித்தியாசமானது அவர் சங்கீதம் என்று தெரிந்து கொள்கிற ஆர்வத்தில் தான் கேட்டேன். ஆர்வத்தோடு எதையாவது புரிந்து கொள்ள முயலும்போது அட்டாக் செய்கிறதாக ஏன் நினைக்கணும்? நான் இசை, நடனத்துக்கு விரோதியா என்ன?
(எம்.டி தன் குடும்பம் பற்றிச் சொல்கிறார் – அவர் மனைவி நாட்டியம் பயின்று ஆடி வந்தவர். மகள் மகா கவிஞர் வள்ளத்தோல் நிறுவிய கேரள கலாமண்டலத்தில் நாட்டியம் பயின்று ஆடி வருகிறவர்.   அவர் காதலித்துக் கைபிடித்த தமிழர் ஸ்ரீகாந்த், பத்மா சுப்ரமண்யத்தின் நாட்டியக்குழுவில் முதன்மையான ஆட்டக் கலைஞர்)

18) உங்களுக்கு கோழிக்கோடு பல்கலைக் கழகம் 1996-ல் டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறது. 2005-ல் மத்திய அரசின் பத்மபூஷன் விருதும் பெற்றவர் நீங்கள். ஆனாலும் எந்தப் பட்டத்தையும் பெயருக்கு முன்னால் போடாமல் எப்போதும் வெறும் ‘எம்.டி’யாகவே இருக்கிறீர்களே?

விருதுகள் பற்றிச் சொன்ன பதில் தான் இதுக்கும்.
(சிரிக்கிறார். அடுத்த பீடி கட்டில் இருந்து விடுபடுகிறது)

19) பிரபல ஓவியர் எம்.வி.தேவன் கலாகௌமுதி பத்திரிகையில் உங்களைப் பற்றி பேட்டியில் அவமரியாதையாகச் சொல்லியிருந்ததற்காக அவர் மேல் வழக்கு தொடர்ந்தீர்களே. 2002-ல் தானே அது?

எம்.டி (சிரித்தபடி): நேற்று தான் தேவனோடு தொலைபேசிக் கொண்டிருந்தேன்.
20) எம்.டி கூடலூர் ஸ்வதேசி அல்லே. வள்ளுவநாட்டில் ஜனிச்சு நிளாநதியில் குளிச்சொருங்கி கொடிக்குன்னு பகவதியெ தொழுது குமாரநல்லூர் ஸ்கூலிலேக்கு நடக்கும் குட்டி கால ஜீவிதம் திரிச்சு கிட்டியால் சார் அது ஆஸ்வதிக்குமோ?

(நீங்க கூடலூர்காரர் இல்லே? வள்ளுவநாடு பிரதேசத்தில் பிறந்து பாரதப்புழையில் குளித்து, கொடிக்குன்னு பகவதி கோவிலில் தொழுது, குமாரநல்லூர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தப் பருவம் உங்களுக்குத் திரும்பவும் கிடைத்தால்?)

இது ஒரு ஹைபாதெட்டிகல் கேள்வி ஆச்சே. அந்தக் காலம் போனது போனதுதான். இனி ஒரிக்கலும் திரிச்சு வரான் போகுன்னில்ல.

21) முடிக்கும் முன்னால் ஒரு சம்பிரதாயமான கேள்வி. தமிழ் இலக்கியத்தை மலையாள மண்ணில் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள்?

தமிழ் வாசகர்களுக்குத் தமிழ் எழுத்தாளர்களைத் தெரிந்த அளவுக்கு மலையாள இலக்கிய ரசிகர்களுக்குத் தமிழ்ப் படைப்புகள் பரிச்சயம் உண்டு என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

(ஒரு பீடி புகைத்தபடி நானும் அதேபடி தமிழ் இலக்கிய அன்பர்களுக்கு உள்ள மலையாள இலக்கியப் பரிச்சயம் பற்றிச் சொல்வதாகக் கற்பனை செய்தபடி விடைபெறுகிறேன். எம்.டியின் சிரிப்பும் பீடிப் புகையும் வாசல் வரை வந்து வழி அனுப்புகின்றன).

December 11, 2009

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2022 20:22

December 7, 2022

எம்.டி.வாசுதேவன் நாயர் நேர்காணல் – என் ‘ஏதோ ஒரு பக்கம்’ மின்நூலில் இருந்து – தொடர்ச்சி

நான்: நீங்கள் மலையாள மகாகவி துஞ்சன் நம்பியாரின் மரபு இலக்கியத்தோடு தொடர்பு உள்ள நவீன இலக்கியவாதி. துஞ்சன் பற்றி சொல்லுங்களேன். அவர் தான் மலையாளத்தில் முதல்முதலாக 51 எழுத்து மலையாள எழுத்துமுறையைக் கொண்டு வந்தாராமே? அதற்கு முன் 30 அட்சர வட்டெழுத்து லிபிதான் எழுதப் பயன்படுத்தப்பட்டது என்கிறார்களே?

எம்.டி: துஞ்சன் ஸ்மாரகம் (நினைவு இயக்கம்) தலைமைப் பொறுப்பில் நான் இருக்கிறேன். மலையாள இலக்கியத்தை மக்கள் இலக்கியம் ஆக்கிய முதல் படைப்பாளி துஞ்சன். அதுதான்  முக்கியமே தவிர அவர் வட்டெழுத்தில் எழுதினாரா, மலையாள லிபியில் முதல்முறையாகக் காவியம் எழுதினாரா என்பதில்லை. பண்டிதர்கள் மட்டும் படித்து அனுபவிக்கும் கடினமான நடையில் அமைந்தது துஞ்சன் காலத்துக்கு முற்பட்ட அந்த்யந்த ராமாயணம். அதை யார் எழுதியது என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொழி கடினமாக இருந்தாலும் இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் குழந்தை பிராயத்தில் இருந்து அறிந்து அனுபவித்து ஆழ்ந்த ராமாயணக் கதையை மக்கள் இலக்கிய வடிவமான கிளிப்பாட்டு உருவில் படைத்தார் துஞ்சன். வால்மீகியையும் அத்யந்த ராமாயணத்தையும் ஆழ்ந்து கற்ற அவர் அவற்றின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டார். மலையாள மண்ணுக்கே உரிய மணத்தோடும் வனப்போடும் இங்கே முழங்கிய இசை வடிவாக  ராமாயணத்தை எழுதினார் அவர். வால்மீகியை விட்டு நிறையவே விலகிப் போயிருக்கிறார் துஞ்சன். ஆனால் என்ன, மகா காவியத்தை காவியச் சுவை கெடாமல் மேலும் மெருகிட்டு மக்கள் காவியமாக்கும் முயற்சி இல்லையா அது? மகாபாரதத்தையும் கிளிப்பாட்டு ஆக்கியிருக்கிற மகாகவி அவர். கிளிப்பாட்டு கேட்டிருக்கிறீர்களா? கும்மி மாதிரி.

(பாடிக் காட்டுகிறார். 76 வயதிலும் நடுங்காத குரல். நாலு வரி பாடி முடித்ததும் ஏதோ கணக்கு வைத்துக் கொண்டது போல் சட்டென்று நிறுத்தி இன்னொரு பீடி பற்ற வைத்துக் கொள்கிறார்.

கும்மி தமிழாச்சே? ‘கும்மியடி பெண்ணே, தமிழ்நாடு முழுதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி’ நான் பாரதியின் விடுதலைக் கும்மியைப் பாட முயற்சி செய்ய ‘அதேதான், கொடுந்தமிழ் தானே மலையாளம். அங்கேயும் கும்மி கும்மி தான்’ என்றபடி பீடிப்புகையை இழுத்து ஒரு வினாடி அந்த சுகத்தை அனுபவிக்கிறார்).

பதினைந்தாம் நூற்றாண்டில் வடமொழியாக்கம் மலையாள மொழியை வெகுவாகப் பாதித்திருக்கலாம். ஆனால், துஞ்சன் போன்ற மக்கள் கவிஞர்கள் மொழியை மீட்டெடுத்து வந்து அதைப் பேசிப் பழகும் பொது மக்களின் நாவிலும் மனதிலும் திரும்ப இருத்தியவர்கள். காலப் போக்கில் மொழிவளர்ச்சியில் இது போன்று பாதிப்புகள் ஏற்பட்டு விலகுவதும் மொழி செம்மைப் படுவதும் இயல்பானதுதான்.

நான் : சார், கொஞ்சம் சினிமா பற்றி சம்சாரிக்கலாம். 1964-ல் வெளியான மலையாளப்படமான ‘முறைப்பெண்ணு’வில் நீங்கள் திரைக்கதை-வசனகர்த்தாவாக திரையுலகில் அடியெடுத்து வைத்தீர்கள். சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போடும் பழசிராஜா வரை கிட்டத்தட்ட அறுபது படங்களுக்கு கதை, வசனம் எழுதியதோடு சிலவற்றை இயக்கியும் இருக்கிறீர்கள். இந்த 45 வருஷத்தில் மலையாள சினிமாவில் ஏற்பட்ட முன்னேற்றம், பின்னடைவு என்று ஏதாவது உங்களுக்கு மனதில் படுகிறதா?

 

எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியலே. அந்தக் காலத்தில் எழுதியது போல் கதையைக் காட்சிகளாக முழு உருவத்தை மனதில் வரைந்து கொண்டு அதை மெல்ல விரிவாக்கி நகர்த்திப் போகிற திரைக்கதை அமைப்பைத்தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன். எல்லாப் படைப்புக்குமே அடிப்படை அது குறித்த ஆய்வும், அறிவுத் தேடலும். எந்தக் காலத்திலும் இது தேவையில்லாமல் போகாது.

 

மலையாளப் படங்கள் தொடக்க காலத்தில் அந்தக் காலத் தமிழ்ப் படங்களைப் பின்பற்றி எடுக்கப்பட்டவை. இசையும் உரையாடலுமான பாணி அது. பார்சி நாடக மேடை தமிழ் நாடகமாகி அதன் பின் தமிழ்ப் படங்களில்  புகுந்ததன் பாதிப்பு மலையாளத்திலும் தூக்கலாக இருந்தது. அப்புறம் பழைய திரைப்படங்களில் பக்கம் பக்கமாக வசனம் பேசித் தள்ளினார்கள். ஆனால் நான் முறைப்பெண்ணு திரைக்கதை எழுதும் காலகட்டத்தில் மலையாள சினிமா தமிழ் சினிமா பாதிப்பில் இருந்து விலகி, மெல்ல மெல்ல மலையாள மண்ணின் கலைவடிவமாகிக் கொண்டிருந்தது.   சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் மலையாள சினிமா திரைக்கதை அமைப்பில் உரையாடல் இயல்பாக, குறைச்சலாகத்தான் இருக்கும். இது இன்று புதுசாக ஏற்பட்டதில்லை.

நான்: 1973-ல் நீங்கள் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்று பரவலாகப் பேசப்பட்ட ‘நிர்மால்யம்’ திரைப்படத்தை இயக்கினீர்கள். ‘பள்ளிவாளும் கால்சலங்கையும்’ என்ற நீண்ட கதையை எழுதிய எம்.டியும், அதன் அடிப்படையில் ‘நிர்மால்யத்தை’ இயக்கிய எம்.டியும் மனதளவில் ஒருவர்தானா?

 

‘பள்ளிவாளும் கால்சிலங்கையும்’ எழுதிய எம்.டி. கிராமத்து மனிதன். கிராமத்து மனிதர்களை, கிராம தேவதைகளை, கோவில்களை, கோவில் பணிக்காரனான வெளிச்சப்பாட்டை (சாமியாடி) பார்த்துப் பழகியவன். சாமியாடியை கோவில் உற்சவ காலத்தில் மட்டும் உயர்ந்த பீடத்தில் இருத்தி ஊரே வழிபடும். வருடத்தில் நாலு நாள் இப்படிக் கும்பிட்டு விழுந்து வணங்கி காணிக்கை கொடுத்து விட்டு மற்ற நாட்களில் அவனை ஏறெடுத்தும் கூடப் பார்க்காது போவது வழக்கம். இருந்தானா, செத்தானா, அவனுடைய குடும்பம் வறுமையில் வாடியதா, குழந்தைகளின் பசியைப் போக்க அந்த அப்பாவி என்ன செய்கிறான் என்பவற்றைப் பற்றிக் கவலைப்பட தேவி பகவதி இருக்கிறாளே. ஊர் மக்களுக்கு ஆயிரம் கவலை. இதுவும் கூடி என்னத்துக்கு அவர்களுக்கு? அப்படித்தான் பொதுவான மனநிலை.

சாமியாடியும் கடவுளை மனசார நம்புகிறவன். பகவதியை தனக்காக வழிபடுவதை விட ஊருக்காக வழிபடுகிறவன். விரதம் இருந்து சந்நதம் வந்து வாள் எடுத்துக் கையில் பிடித்துச் சலங்கை ஒலிக்க ஆடி, நாடும் வீடும் சிறக்க, தோஷம் தீரப் பரிகாரம் சொல்வான். அதில் நிறைய சந்தோஷமும் காணிக்கையாகக் கொஞ்சம் வருமானமும் பெறுகிறவன் அவன். வெளிச்சப்பாட்டின் வாழ்க்கை நசித்துப் போகிறபோது அவன் நம்பி வணங்கி வாழ்த்திப் பாடிய பகவதி அம்மை மேல் அவனுக்குக் கோபம் வருகிறது. இது தான் எம்.டி என்ற எழுத்தாளன் எழுதியது. அதை இயக்கிய எம்.டி என்ற திரைப்பட இயக்குனர் அந்த சாமியாடியைத் தேடி அலைந்து அற்புதமான நடிகரான பி.ஜே.ஆண்டனியில் அவனைக் கண்டார். கவியூர் பொன்னம்மா வெளிச்சப்பாட்டின் மனைவியாக, குழந்தைகளின் பட்டினியைக் காணச் சகிக்காமல் நெறி தவறி அவர்களின் பசி போக்குகிற அன்னையாக நடிக்க வந்தார். எம்.டி எழுதிய படிக்கு, எம்.டி பார்த்த படிக்கு, கற்பனை செய்தபடிக்கு நிர்மால்யம் அமைய அந்த அற்புதமான நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் முக்கிய காரணம். எழுத்தின் நீட்சியாக அதன் திரையாக்கம் அமைந்ததாகவே எனக்குப் படுகிறது.

நான்: நிர்மால்யம் படத்தின் கடைசிக் காட்சியில் வெளிச்சப்பாடு நடனமாடியபடி தன்னையே வாளால் குத்திக் கொண்டு வாயில் கொப்பளித்து ஊறும் ரத்தத்தை தேவி விக்கிரகத்தின் முகத்தில் உமிழ்ந்து உயிரை விடும் காட்சி வருகிறதே. இறக்கும்போது வெளிச்சப்பாடு தெய்வத்தை நம்பாத நாத்திகனாக மாறியதாக இதைக் கொள்ளலாமா?

 

எம்.டி: அப்படி இல்லை. தான் மலை போல நம்பிய ஒருத்தர் தன்னைக் கைவிட்ட கோபம் அது. எங்கள் ஊரில் ஒரு சாமியாடி இருந்ததாகச் சொன்னேனே. அவன் சாதாரணமாகப் பேசும்போது ‘ஆத்தா கிட்டே கேட்டேன் வாசு. அவளுக்குக் கோபம் போல இருக்கு. எதுக்கும் நீ அந்தப் பக்கம் போனா அந்தப் பொம்பளைக்கு ஒரு கும்பிடு போட்டுட்டுப் போ. பாவம் அதுக்கும் யாரு இருக்கா?’ என்று என்னிடம் சொல்லியிருக்கிறான். பகவதி அம்மன் பெயரைச் சொல்லி ஒரு கைப்பிடி நீரை மேலே அள்ளித் தெளித்தால் நோய் எல்லாம் போய்விடும் என்று உள்ளபடிக்கே நம்பியவன் அவன். சக மனிதர்கள் போல தினசரி நெருங்கி உறவாடி உரையாடும் பகவதி அம்மையும் அவனுக்கு வாழ்க்கையில் ஒரு அம்சம். தெய்வாம்சம் எல்லாம் அதுக்கு அப்புறம்.

தொடரும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 07, 2022 18:32

December 6, 2022

நேர்காணல் – எம்.டி : மலையாள எழுத்தாளர்களும் விருதுகளும்

எம்.டி.வாசுதேவன் நாயரோடு ஒரு நேர்காணல்

எம்.டி.வாசுதேவன் நாயர். மலையாளிகளின் மனம் கவர்ந்த கதைக்காரர். நீட்டி முழக்கி அவர் பெயரை முழுமையாகச் சொல்லாமல் சும்மா, ‘எம்.டி’ என்று சுருக்கி அவர்கள் விளிப்பதில் அபிமானமும், ‘எங்க ஆளாக்கும்’ என்ற பெருமையும் புரியும்.  ஐம்பது வருடமாக நாவல், நாடகம், சிறுகதை என எழுதி மலையாள இலக்கியத்தில் முக்கிய ஆளுமையாகத் திகழ்கிறவர். திரைக்கதை என்ற கலை – இலக்கிய வடிவத்தில் இவர் அளவு தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகிறவர்கள் இல்லை. மத்திய, மாநில சாகித்ய அகாதமி, ஞானபீடம், இன்னும் மலையாள மண்ணின் முக்கியமான இலக்கிய விருதுகள் அனைத்தையும் பெற்ற இலக்கியவாதி. இத்தனை சிறப்போடு, மாத்ருபூமி என்ற பாரம்பரியம் மிக்க தினசரியின் ஆசிரியராக இருந்த ஆற்றல் மிக்க பத்திரிகையாளரும் கூட. எம்.டி என்ற ஆளுமையின் பன்முகப் பரிமாணம் பிரமிக்க வைக்கிற ஒன்று.

எம்.டி. அண்மையில் பாரதி விருது பெற சென்னை வந்திருந்தார். ‘தி.நகரில் இருக்கேன்’ என்று தொலைபேசியில் விலாசம் சொன்னபோது ஒரு அற்ப சந்தோஷம். எங்க பேட்டை ஆளாக்கும்! பொடிநடையாக எம்.டி இருந்த குப்புசாமி தெருவுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அடுக்குமாடிக் கட்டிடம். அடுத்த வீட்டுக்காரர் பெயரே தெரியாத கான்கிரீட் காடுகளில் ஒன்று. அடுத்த மாநில எழுத்தாளரை இங்கே எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்?

வாசலில் மர ஸ்டூலில் ஆரோகணித்திருந்த காவல் தெய்வத்திடம் அடையாளங்களைக் குறிப்பிட்டு விலாவாரியாக விசாரிக்க ஆரம்பிக்கும் முன் ‘வாசுதேவன் நாயர் சாரா?’ என்று பளிச்சென்று கேட்டார் அவர். ஆச்சரியம் அடங்கும் முன், வாசலுக்கு வந்த ஓர் இளைஞரைக் காட்டி ‘இவங்க மாமனாரு தான்’ என்று குறு அறிமுகம் வேறே செய்து வைத்தார்.

நான் மலையாளத்தில் அந்த இளைஞரிடம் குலமுறை கிளர்த்தி, வந்த காரியத்தைத் தெரியப்படுத்தியபோது அவர் கொஞ்சம் மிரண்டார். ‘சார், நான் தமிழ்தான். வீட்டுலே அவங்க தான் மலையாளம்’ என்றார் சிரித்தபடி.

மடிக் கணினியைப் பிரித்து எடுத்து வைத்துக் கொண்டு அறையை நோட்டமிட்டேன். தமிழ் மத்தியதர வர்க்க வீட்டு வரவேற்பரை. இல்லை, இது வித்தியாசமானது என்று அடுத்த வினாடி புரிந்தது. திரை விலக, பலமாகக் கவிந்த பீடிப்புகையோடு, உள்ளே இருந்து மெல்ல நடந்து வந்தார் எம்.டி. நெடிய உருவம். டபிள் முண்டு (எட்டு முழ வேட்டி), ஸ்லாக் ஷர்ட், பட்டை ப்ரேம் மூக்குக்கண்ணாடி. கேரள அரசியல்வாதிகளையும், எழுத்தாளர்களையும் ஒரேபடிக்குச் சேர்த்து நான் மனதில் வைத்திருக்கும் ஒற்றை பிம்பத்துக்குக் கொஞ்சம் நெருங்கிய பெர்சனாலிடி.

எம்.டி பீடிக்கட்டை மேஜை மேல் வைத்தார். ‘அப்புறம்?’ என்று விசாரிக்கிற  பார்வை. நான் விட்ட இடத்திலிருந்து பேச்சை ஆரம்பிக்கிறது போல் சுபாவமாக ஆரம்பித்தேன். அந்த நேர்காணல் இதோ –

(எம்.டி எழுதிய முதல் நாவல் ‘நாலு கெட்டு’. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முந்திய காலகட்டத்தில் கேரளத்தின் பசுமை கொழிக்கும் வள்ளுவநாட்டுப் பகுதியில் ஒரு பழைய நாலு கெட்டு மனையின் – நாலு பிரிவு கொண்ட வீடு –  நிகழும் கதை அது. வயதான நம்பூத்ரிக்கு வாழ்க்கைப்பட்டு அந்த நாலுகட்டு வீட்டில் வாழப் புகுந்த யசோதராவின் கதையைச் சொல்கிற நாவலில் அப்புண்ணி ஒரு முக்கிய கதாபாத்திரம். அப்புண்ணியின் பார்வையில்தான் கதை நகர்கிறது.)

நான்: எம்.டி.சார். முதல் கேள்வியை நான் கேட்கலே. மலையாள எழுத்தாளர் வி.கே.ஸ்ரீராமன் உங்கள் நாலுகெட்டு கதாநாயகி யசோதராவை பேட்டி கண்டு ‘வேரிட்ட காழ்ச்சகள்’ புத்தகத்தில் எழுதியிருக்கிறாரே, அதில் அவர் சொல்கிறார் -– ‘எம்.டியை சந்தித்தால் நான் கேட்க விரும்பும் கேள்வி என்ன என்றால், ஏன் நாலு கெட்டு நாவலில் யசோதரா பெயரை அப்படியே பயன்படுத்திக் கொண்டு உங்கள் பெயரை மட்டும் அப்புண்ணி என்று மாற்றிவிட்டீர்கள்’?

 

எம்.டி: அது உண்மையில்லை. அவர் எந்த யசோதராவை சந்தித்தார் என்று தெரியவில்லை. நாலு கெட்டு ஒரு நாவல். நான் பிறந்த வள்ளுவநாட்டுப் பிரதேசத்தின், என் வீட்டுச் சூழலின், என் இளமைப் பிராயத்தின் நினைவுகளைத் தொட்டுத் தொடர்ந்து செல்லும் புதினம். அதில் எல்லா பாத்திரமாகவும் நான் என்னை உணர்கிறேன். அப்புண்ணியும் நான் தான்.  யசோதராவும் நான் தான். மற்றவர்கள் எல்லாரும் கூட நான் தான். அவர்கள் யாருமே நான் இல்லை என்பதும் உண்மைதான். நிறையக் கற்பனையும் ஓர் இழை நிஜமும், இழை பிரித்து அறிய முடியாதபடி பின்னிப் பிணைந்த  அற்புத உலகம் இல்லையா கதையும் காவியமும்?

 

நான்: யசோதரா இத்தனை காலம் அந்தப் பழைய மனையில் தனியாக வசித்துவிட்டு இனியும் அதில் இருக்க முடியாத சிதிலமடைந்த நிலையில் வெளியே ஒரு சிறிய வீட்டுக்குக் குடிபெயர்ந்ததாக சில மாதங்கள் முன்னால் மாத்ருபூமி தினசரியில் செய்தி வந்திருந்ததே. படிச்சீங்களா சார்?

 

எம்.டி: அப்படியா? பார்த்த நினைவு இல்லையே. வந்திருந்தாலும் அது சரியான வார்த்தை இல்லை. யசோதரா என் மற்ற கதாபாத்திரங்களைப் போல் அந்தக் கதையில் மட்டும் உலவிப் போன ஒரு பெண்மணி. அவள் வயதான நம்பூதிரியை மணந்து இளம் பெண்ணாக அடி எடுத்து வைத்த வீட்டில் இத்தனை வருடம் தனியாக இருந்தாள், இடிந்து சிதிலமடைந்து இனியும் இருக்கத் தகுதியில்லை என்ற நிலை ஏற்பட்டதும் அந்தப் பழைய மனையை விட்டுக் குடி பெயர்ந்தாள் என்பதெல்லாம் எனக்கு சுவாரசியம் தரும் செய்திகள் இல்லை. நாலுகெட்டு கதாபாத்திரங்களை ஆழமாக நேசிக்கிறவர்கள் இன்னும்  இருப்பதாகவே நான் இதிலிருந்து புரிந்து கொள்கிறேன்.

நான் : மலையாள மொழியில் சிறுகதை, நாவல், நாடகம் என்று ஏகப்பட்ட விருதுகள் ஆண்டு தோறும் படைப்பாளிகளுக்கு அளிக்கப்படுகின்றன. யாராவது எழுத்தாளர் காலம் சென்றால் உடனே அவர் பெயரில் ஒரு நினைவுப் பரிசு ஏற்படுத்தப்பட்டு விடுவது சர்வ சாதாராணமாக நிகழும் ஒன்றாகும். ‘இனிமேல் எந்த மலையாள எழுத்தாளரும் ஒரு பரிசு கூட வாங்க முடியாமல் இறக்க முடியாது’ என்று கூட சமீபத்தில் ஒரு மலையாள விமர்சகர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இலக்கியத்துக்கு அங்கீகாரம் வேண்டியதுதான். அதுக்காக இப்படியா?

 

எம்.டி: மலையாள மொழியில் சிறுகதை, நாவல், நாடகம் என்று ஏகப்பட்ட விருதுகள் ஆண்டு தோறும் படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. நவீன இலக்கியத்துக்கான நிறைய விருதுகள் கேரளத்தில் இருக்கின்றன என்பது உண்மைதான். எழுத்தை ஊக்குவிக்க அங்கங்கே தனித்தும் குழுவாக அமைத்தும் செய்யப்படும் முயற்சிகள் இவை. ஒவ்வொரு விருதும் ஒவ்வொரு மாதிரி.

நானே மூன்று முறை கேரள சாகித்ய அகாதமி விருது வாங்கியிருக்கிறேன்.  ஆனாலும் ஒவ்வொரு விதமான இலக்கியப் படைப்பாக்கத்துக்காக என்பதை மகிழ்ச்சியோடு திரும்பிப் பார்க்கிறேன். பரிசு பெற்ற ‘நாலுகெட்டு’ நாவல். ‘சுவர்க்கம் துறக்குன்னு’ சிறுகதைத் தொகுப்பு. அதேபோல, இன்னொரு சாகித்ய அகாதமி பரிசு பெற்ற ‘ கோபுர நடையில்’, நான் எழுதிய நாடகம்.

இதில் நாலுகெட்டு எனக்கு விசேஷமானது. கிட்டத்தட்ட ஐம்பது வருடம் முன்னால் எழுதிய என் முதல் நாவல். முதல் படைப்புக்கு அங்கீகாரம் கிடைத்த ஆரம்ப எழுத்தாளனுக்கு ஏற்படும் மகிழ்ச்சிதான் எனக்கும் அப்போது.  அந்த விருது கிடைத்திருக்காவிட்டாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டே தான் இருந்திருப்பேன். மத்திய சாகித்ய அகாதமி, ஞானபீடம் என்று எல்லா விருதுகளையும் பற்றியும் என் நிலைபாடு இதுதான்.

விருதுக்காக எந்த எழுத்தாளரும் எழுதுவதும் இல்லை. எழுதப் போவதுமில்லை. ஆனால் நல்ல இலக்கியம் என்று இனம் கண்டு பாராட்டப்படும் போது ஏற்படும் மகிழ்ச்சி தனியானது. பொருளாதார ரீதியில் இல்லாமல் எழுத்தை இன்னொரு தளத்தில் கௌரவிக்கும் இம்மாதிரி முயற்சிகளை தாராளமாக வரவேற்கலாமே.

நான்: சாதாரணமாக எல்லா மொழியிலும் கவிதை எழுத ஆரம்பித்து உரைநடைக்குப் போகிறதுதான் சாதாரணமாக நடப்பது. ஆனால், நீங்கள் நேரடியாக உரைநடைக்கு வந்து விட்டீர்களே?

 

எம்.டி: அதென்ன அப்படிக் கேட்டுட்டீங்க? கவிதை எழுதாமல் உரைநடைக்குள் ரைட் ராயலாக நுழைந்த ஒரு எழுத்தாளன் உண்டா இந்த உலகத்தில்? நானும் கவிதை எழுதிப் பழகிவிட்டுத்தான் கதை சொல்ல வந்தவன். என்ன, கல்லூரியில் படிக்கும்போதே எனக்குள் இருந்த கவிஞன் விடைபெற்றுப் போய்விட்டான், அவ்வளவே.

 

(தொடரும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2022 19:26

December 4, 2022

முன்கூட்டியே எழுதப்பட்ட ஆபிசுவரி

இது ஆபீசுவரி இல்லை. நாளது தேதிவரை மொத்தமே ரெண்டு ஆபிசுவரி தான் எழுதியிருக்கிறேன். முதலாவது, தோழர் ஈ.கே.நாயனாருக்கு. கண்ணூர் பய்யாம்பலம் மாயானத்திலிருந்து பெங்களூர் வந்து இறங்கியதும் மிச்சக் கண்ணீர் பார்வையை மறைக்க மாத்ருபூமி ஸ்டைல் இரங்கல் நடையில் எழுதியது. திண்ணைக்கு அனுப்பும் முன்பு ஒரு தடவை படித்தேன். ‘நல்லா வந்திருக்கு’ என்று மனம் நிறைய ஆனந்தம். ஆபிசுவரிக்கு இதைவிட அவமானம் கிடையாது. டெலிட் செய்துவிட்டு பய்யாம்பலம் பயணக் கட்டுரையாக்கி அனுப்பி வைத்தேன்.

 

ஆர்தர் சி கிளார்க் இறந்தபோது மனுஷ்யபுத்ரன் ஒரு சாயந்திரம் கூப்பிட்டு விடிகாலைக்குள் எழுதி அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அது என் கல்யாண வெள்ளிவிழா நாள். ராத்தூக்கம் விழித்து மாஞ்சுமாஞ்சு எழுதி – அதைவிட முக்கியமாக வெள்ளிவிழா ராத்திரியில் கொண்டாட வேறே என்ன இருக்கு?- அனுப்பி வைத்தேன். சொன்ன சொல் காப்பாற்றிய நிம்மதி தான் அப்போது. ஆபிசுவரிக்கு ஒத்து வராத உணர்வு இந்த நிம்மதியும்.

 

இனிமேல் நானே போனால் கூட ஆபிசுவரி எழுத மாட்டேன் என்று சத்தியம் செய்தேன். சுஜாதா இறந்து போனார். மலர் வளையத்தோடு அஞ்சலி செலுத்தப்போய் சீனியர், ஜூனியர், சக எழுத்தாளர்களோடு சுஜாதா நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தபோது பக்கத்தில் கனிமொழி அழுதபடி நின்றிருந்தார். அவரைப் பாதித்த துக்கம் என்னை பாதிக்காதபடிக்கு குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து கூப்பிட்டு ‘ஃபாரம் ரெடி பண்ணனும். அனுப்புங்க’ என்று அடிக்கடி விரட்டிக் கொண்டிருக்க, சுஜாதா பற்றி உடனடி கட்டுரை எழுதி அனுப்பினேன். நினைவுக் கூட்டத்திலும் சொன்னேன் – சுஜாதா வாழ்க்கையைக் கொண்டாடும் கூட்டம் இது. Celebrating life  is  better than mourning  a death.

 

இந்த வாரம் புதன்கிழமை விடிந்தபோது இன்னொரு இழப்பு.

 

காலை ஐந்தரை மணிக்கு கஸ்தூரி ரங்கன் காலமாகி விட்டார்.

 

இந்திரா பார்த்தசாரதி மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். தொடர்ந்து திருப்பூர் கிருஷ்ணனின் இ-மெயில். பிரமை பிடித்தமாதிரி ஒரு நிமிடம் இருந்தது.

 

அப்பாவோ பெரியப்பாவோ இறந்து போன துக்கத்தின் déjà vu நிழலிட்டது. கல்யாணச் சாவு. மனதைத் தேற்றிக் கொள்ளலாம். இது கணையாழிச் சாவு ஆச்சே. எல்லா சாவுச் செய்தியும், பேசி முடித்து வெதுவெதுவென்று வென்னீரில் குளித்து விட்டு சூடாக ரெண்டு தோசை சாப்பிட்டு  ஆபீஸ் கிளம்புகிற அன்றாட நிகழ்வில் கிளைக்கதையாவது போல் இது இல்லை. ரெண்டு வரி ட்விட்டரீல் கீச்சு பதிவது மாதிரி அவ்வப்போது நமநமவென்று நினைவில் வந்து கொண்டே இருப்பது. வந்தது

 

சென்னைக்கு 75-ல் பேங்கு கிளார்க் வேலைக்கு வந்தேன். தி.நகர் ராமநாதன் தெரு கட்டைப் பிரம்மச்சாரி மடத்தில் நிழல்கள் ரவி இருந்ததற்கு ரெண்டு அறை தள்ளி ரூம் கிடைத்தது. அன்றைக்கு சாயந்திரம் கணையாழி ஆபீசுக்கு முதலில் போகணும் என்று மனசில் முடிபோட்டு வைத்துக் கொண்டு அப்புறம் தான் பக்கத்து வீட்டு ஜன்னலில் நடிகை கவிதாவை நோட்டமிட்டேன். அந்தப் பொண்ணு நடித்த காற்றினிலே வரும் கீதம் கலர்ப் படம் வெளியாகியிருந்த நேரம் அது.

 

சாயந்திரம் சீக்கிரம் திரும்பிய  மற்ற பிரம்மசாரிகள் இன்னும் ஜன்னலே கதியாக தய்யர தய்யா என்று கவிதா தரிசனத்துக்குக் காத்து நின்றார்கள். நான் பஸ் பிடித்துப்போய் கணையாழி ஆபீஸ் என்று அனுமானம் செய்த, காலம் உறைந்து போன ஒரு கட்டிடத்தில் படியேறினேன். மவுண்ட் ரோடு ஈசானிய மூலையில் தர்பார் ரெஸ்டாரண்டை ஒட்டி நல்லதம்பி செட்டி தெருவில் இருந்த கட்டிடம்.

 

அது தீபம் பத்திரிகை ஆபீஸ். கணையாழியும் அங்கேதான் பிரசுரமாவதாக சொந்த ஊரில் நண்பர்கள் சொன்னதால் தீபம் நா.பாவிடம் கணையாழி சந்தா கட்ட முயன்று தோற்றேன். ஆனால் தீபம் சந்தாவும் நா.பா பரிச்சயமும் கிடைத்தது.

 

இதுக்கு இடையில் தான் எப்போதோ கவிதை எழுத ஆரம்பித்தேன். எண்பதுகளில் கணையாழி அலுவலகம் சென்னைக்கு மாறிய பிறகும் நான் கணையாழி, தீபத்தில் புதுக்கவிதையைத் தாண்டி வெளியே கால் வைக்கவில்லை.

 

பெல்ஸ் ரோடில் கணையாழி அலுவலகத்தில் ஒரு ராத்திரி உள்ளே நுழைந்தபோது எளிமையாக உடுத்திய வயசர் ஒருத்தர் வாசல் அறையில் டெலிபோனில் மென்மையாகப் பேசிக் கொண்டிருந்தார். உள்ளே கம்பாசிட்டர் தாத்தா தமிழ் இலக்கியத்தின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய எழுத்துகளை படு வேகமாக, எழுத்துப்பிழை பற்றிய கவலையே இல்லாமல் ‘ஈசனை ஈசலாக்கி’, ‘காகித சேதி’ யை ‘காகித சோதி’யாக்கி எழுத்து அடுக்கி பாரம் தயார் செய்து கொண்டிருந்தார்.

 

அவர் சொன்னபோது தான் நான் வாசலில் கடந்து வந்த பெரியவர் கணையாழி ஆசிரியர் கி.கஸ்தூரிரங்கன் என்று தெரிந்தது. ஆசிரியரிடமே அற்பமாக அறுபது சில்லரை ரூபாய் சந்தாவைக் கட்டலாமா? அவரை அவமதித்ததாக எடுத்துக்கொண்டு எழுந்து போய்விட்டால், 1960-களில் இருந்து (அப்போது) இருபத்தைந்து வருடமாக நிற்காமல் மாதாமாதம் வெளியாகிற இலக்கியப் பத்திரிகையை முடக்கிய காரணத்துக்காக, ‘தமிழ் இலக்கியத்தில் சிறு பத்திரிகைகளின் ஓசோன் அடுக்கு ஓட்டை அடைப்பு பற்றிய பங்களிப்பு’ போன்ற தலைப்புகளில் டாக்டர் பட்டத்துக்கு பதிவு செய்து மெனக்கெடுகிறவர்கள்  எனக்கு ஒரு foot note போட்டு நாதுராம் கோட்ஸே ஆக சித்தரித்து விடுவார்கள்.

 

கி.க நான் கட்டிய சந்தாவை மௌனமாக வாங்கிக் கொண்டு ரசீதும் பொறுமையாக எழுதிக் கொடுத்தார். அடுத்து நான் மனதில் பல தடவை ஒத்திகை பார்த்து வைத்திருந்த கேள்விகள், தகவல்கள். ‘சார், நானும் கணையாழியிலே கவிதை எழுதறேன். போன மாசம் ‘சமாதியில் இருந்து கோவில் வரைக்கும்’னு.

 

படிச்சேன் என்றார் கி.க. எப்படி இருந்தது சார்? முகவாய்க்கட்டையைத் தடவிக் கொண்டு யோசித்து விட்டு ‘தொடர்ந்து எழுதுங்க’ என்றார். படிக்கலை போல.

 

அப்போது அவர் தினமணி ஆசிரியரும் கூட. அவருக்கு முன்னால் தினமணி கதிரில் ஆசிரியராக இருந்து விலகிய நா.பா தினமணி சூழலைக் கிண்டல் செய்து இன்னொரு பத்திரிகையில் தொடர்கதை எழுதினார். தினமணி சிவராமனில் இருந்து, ‘மேட்டூர் நீர்மட்டம்’ வருஷம் பூரா எழுதி சம்பளம் வாங்குகிற ஒரு செல்லப் பிள்ளை உதவி ஆசிரியர் வரை விலாவாரியாக நா.பா எழுதிய கதையில் உண்டு. பரிமளரங்கனாக கஸ்தூரி ரங்கனையும் அதில்  நடமாட விட்டிருந்தார்.

 

‘என்ன சார் இப்படி?’ என்று வம்பு விசாரிக்க, ‘why don’t you ignore him?’ என்று ப்ரூப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னார் கி.க.  அடுத்து விசாரிக்க மனதில் அடுக்கி இருந்த இலக்கிய வம்புகளை ஓரம் கட்டி விட்டு சொல்லிக் கொண்டு கிளம்பினேன். ஆனாலும் கணையாழியிலும் தீபத்திலும் எங்கேயோ இருக்கிற யாரோ ஒரு வாசகனுக்காக (நான் தான்) கவிதை, மேலும் கவிதை நெய்தேன். ஆமா, ஏழெட்டு வருடம் அப்படி கவிதைத் தவம் செய்யாமல் உரைநடையில் புகுந்திருந்தால் இந்நேரம் சாகித்ய அகாடமி வாங்கியிருப்பேன், போங்கப்பா.

 

கரோல்பாக் நடராஜன் மெஸ் பக்கத்து தமிழ்க் கடை. சிவகங்கை சின்னிகிருஷ்ணன் (தபால்காரர்). ‘விநாயகர் விசர்ஜன ஊர்வலம். தர்மகர்த்தா வரதராஜ முதலியார்’ என்று நாயகன் வரதாபாய் பற்றிய சாதுவான நோட்டீஸ் ஒட்டிய மும்பை மாதுங்கா ஸ்டேஷன் வாசல் கடை. மற்றும் சந்தா கட்டினாலும் கவிதை வந்ததை உறுதி செய்ய அட்வான்ஸ் காப்பியாக வாங்க தி.நகர் நாதன்ஸ் கபே அருகே நாயர் கடை. இங்கெல்லாம் கணையாழியைத் தேடி என்னை அலைய வைத்தது என் கவிதை மட்டும் இல்லை. சுஜாதா வார்த்தையில் ‘கணையாழியில் எழுதுகிற எல்லோரும் பத்திரிகைக்குள் அவரவர் கணையாழியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்’ என்ற சத்தியமான வார்த்தையும் தான். எழுதுகிறவர்களுக்கும் வாசிக்கிறவர்களுக்கும் சந்தோஷம் தரும் சுதந்திரம் அது.

 

தொண்ணூறுகளில் கணையாழி ஆழ்வார்ப்பேட்டை அம்புஜம்மாள் தெருவுக்குக் குடி பெயர்ந்தபோது அந்தத் தெரு குண்டு குழிகளையும் கடந்து இலக்கிய வீதியாகி விட்டிருந்தது. முப்பத்தைந்து வருடத்துக்கு மேலாக இலக்கியச் சிந்தனை மாதாந்திரக் கூட்டம் மாதம் தவறாமல் நடக்கிற சீனுவாச காந்தி நிலையத்தின் எதிரே சரவணா அபார்ட்மெண்டில் சுஜாதா வீடு. எதிரே இ.பா இல்லம். தெருக்கோடியில் காந்தி சிலையும், காந்தி பாதம் பதித்த சுவட்டை ஏந்திய பீடமுமாக இருந்த இடம்தான் கி.க வீடு. கீழே வசிக்குமிடம். மாடியில் கணையாழி, ஸ்வசித் என்று அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைகளின் அலுவலகங்கள்.

 

மாதாந்திர இலக்கியக் கூட்டம் கணையாழி அலுவலகத்திலும் சில சாயந்திரங்களில் நடக்கும். முந்தின மாதக் கணையாழியை யாராவது விமர்சித்துப் பேச விமர்சனத்துக்கு விமர்சனம், வி.வி.விமர்சனம், வி.வி.வி.வி என்று போய்க் கொண்டே இருக்கும் விவாதத்தை முடித்து ‘வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுங்க’ என்று அனுப்பி விட்டு அடுத்த இதழ் ப்ரூப் பார்க்க உட்கார்வார் கி.க. அவர் மேஜையில் ஒரு பெரிய பூதக்கண்ணாடியும் இருக்கும். பார்வைக் குறைவை பகீரதப் பிரயத்தனமாக  ஈடு கட்டிக் கொண்டு கணையாழிக்கும் தமிழுக்கும் கி.க செய்த சேவை இது. இதைவிட பெரிசு, முப்பத்தைந்து வருடத்துக்கு மேலாக கணையாழியை தொடர்ந்து நடத்தினாரே அதுக்கே அவரை வழிபடலாம்.

 

கணையாழி வாசகன், கணையாழி கவிஞன், கணையாழி சிறுகதை எழுத்தாளன், கணையாழி குறுநாவல் எழுத்தாளன் என்று கொஞ்சம் கொஞ்சமாக எனக்கும், கொஞ்சம் போல் வித்தியாசம் இருந்தாலும் என்னோடு எழுத வந்த மற்ற புத்திளைஞர்களான பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றோருக்கும் களம் அமைத்துக் கொடுத்ததில் கி.க கணையாழிக்கு முக்கியப் பங்கு உண்டு.

 

முக்கியமாக கணையாழிக் குறுநாவல். அந்த மூணு நாள் குறும் டெஸ்ட் மேட்ச் இலக்கிய வடிவமே அருகிப் போய்க் கொண்டிருக்கும் இந்த ட்வண்டி-20 அரைப்பக்கக் கதை காலகட்டத்தில் பழசை ஊன்றிப் படித்தால், கி.க கணையாழி அளித்த நிழற்குடை-கொடையின் அருமை புரியும்.

 

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை சிறப்பு நிருபராக இருந்து கற்றதையும் பெற்றதையும் கி.க குடும்பத்துக்குப் பயன்படுத்தியதை விட கணையாழிக்கு செலவழித்தது நிச்சயம் பத்து சதவிகிதமாவது அதிகமாக இருந்திருக்கும். இ.பா தினமணி கட்டுரையில் சொல்கிறது போல், இங்கிலீஷ் நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் என்பதை விட தமிழ்க் கணையாழி ஆசிரியர் என்ற பொறுப்பு தான் அவருக்கு ஆத்மார்த்தமானதாக இருந்திருக்கும்.

 

தொண்ணூறுகளின் மத்தியில் அவர் கணையாழி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுபட்டு ஒரு வருடம் ராம்ஜி கணையாழி ஆசிரியராக இருந்தபோது பின்னணியில் நானும் தீவிரமாகச் செயல்பட நேர்ந்தது. கி.கவை அவ்வப்போது சந்திப்பது வழக்கம். சுஜாதா, இ.பா சந்திப்பு அடிக்கடி நிகழும்போது ‘கணையாழி கவிதை முந்தைய தரத்தில் இல்லை’ என்ற சாகாவரம் பெற்ற வரியோடு ஒரு போஸ்ட் கார்ட் நிச்சயம் வந்திருக்கும். அதைக் காட்டி சுஜாதா என்னை குறுக்கு விசாரணை செய்வார். ‘ஏம்பா போன மாசம் ஒரு கவிதைகூட தேறலியாமே?’

 

முதல் கட்ட கவிதைத் தேர்வாளன் என்ற முறையில் நான் அடுத்த கட்டத் தேர்வாளர் ஞானக்கூத்தனைக் கைகாட்டி, சுஜாதாவின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய கி.க பாராட்டிய கவிதைகளையும் மறக்காமல் குறிப்பிடுவேன். இக்கட்டான சந்தர்ப்பம் ஏற்பட்டால் சிலாகிக்க எப்போதும் பசுமையாக கி.க எழுதிய கவிதையே துணை – கடவுளையும் சர்க்காரையும் பழிக்காதே. பழித்தால் உனக்குக் கிடைப்பது இன்னொரு சர்க்கார்’. நான் சொல்வது ‘கடவுளையும் கவிதையையும் பழிக்காதே. பழித்தால் உனக்குக் கிடைப்பது ஓராயிரம் கவிதை’.

 

கி.க கவிதையை யார் எழுதியது என்று தெரிந்தோ தெரியாமலோ இன்னும் மேற்கோள் காட்டுகிறார்கள். நான் கலந்து கொண்ட ஒரு ப்ராஜக்ட் ரிவ்யூ மீட்டிங்கில் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் செய்த இலக்கிய ரசிகரான (அப்போ நிச்சயம் கவிஞரும் தான்) பிராஜக்ட் மேனேஜர் கூட இதில் உண்டு. கி.கவுக்கும் சுஜாதாவுக்கும் சொல்ல விட்டுப்போன தகவல் இது.

 

கி.க சொல்லி நான் முடிக்காமல் போன ரெண்டு காரியம் உண்டு. முதலாவது கணையாழித் தொகுப்புகளாக நல்ல படைப்புகளைத் தேர்ந்தெடுத்து புத்தகமாக வெளியிட என்னை தொகுப்பாசிரியனாக இருக்கச் சொன்னார். கூடவே ரெண்டு கள்ளியம்பெட்டி நிறைய பழைய கணையாழி இதழ்களையும் பொறுப்பாகக் கொடுத்து அனுப்பினார். ஒவ்வொரு கணையாழியாக எடுத்து நான் வரிவரியாகப் படித்து சிலாகிப்பதற்குள் பிரிட்டன் அழைத்து விட்டதால் கள்ளியம்பெட்டிகளை கி.கவின் கொட்டிவாக்கம் வீட்டில் திருப்பிக் கொடுத்து விட்டுப் பறந்து விட்டேன். வெ.சபாநாயகம் பொறுமையின் திலகமாக அப்புறம் செய்து முடித்த அருஞ்செயல் அது.

 

சுஜாதா நினைவுக் கூட்டத்தில் பின்னரங்கில் உட்கார்ந்திருந்த கி.க சொன்னார் – ‘யுகமாயினி பத்திரிகையில் சுஜாதா படைப்புகள் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் எழுதேன்’. நான் எழுதவில்லை என்றாலும் தேவகோட்டை மூர்த்தி சிரத்தையாக எழுதி வந்தார். யுகமாயினி தான் நின்று போய்விட்டது.

 

சுஜாதா நினைவுக்காக இலக்கியச் சிந்தனை நடத்திய கூட்டத்தில் பேசும்போது கி.க சொன்னார் –‘என்னை விட வயசிலே சின்னவன்(ர்). அவர் போனதுக்குப் பதில் நான் போயிருக்கலாம்.’. பத்திரிகை ஆசிரியர்கள் கண்கலங்க வைப்பதில்லை. கி.க விதிவிலக்கு. அவர் வாழ்க்கையை என்னைப் போல் மற்ற நண்பர்களும் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் என்ற நினைப்பே இதமாக இருக்கிறது.

 

அன்னை அணிந்தாள் அனுமன் சுமந்திட்டான்

பின்னையும் யார்க்கோ கிட்டியதாம் – என்னாபோ

அஸ்கா இனிப்பாய் கணையாழி என்றதுமே

கஸ்தூரி ரங்கன் நினைப்பு

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 04, 2022 18:58

December 2, 2022

பாதல் சர்க்கார் – இதுவும் அதுவும் உதுவும் என் மின்நூலில் இருந்து

பாதல் சர்க்கார் இறந்து போய்விட்டார். ஆறு வருடம் முன் லண்டன் வால்த்தம்ஸ்டோவில் நண்பர் அம்ஷன்குமார் பாதல் சர்க்கார் பற்றி எழுதி இயக்கிய ஆவணப் படம் பார்த்த கதையை ஆர்வமுள்ளவர்கள் பழைய ‘திண்ணை’யில் பொறுமையாகத் தேடிப் படித்துக் கொள்ளவும்.

 

பாதலுக்காக நினைவுக் கூட்டம் நடத்தி அந்தப் படத்தைத் திரையிடலாமே என்றேன் அம்ஷனிடம். பிரளயன் ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னதோடு கரிசனமாக அழைப்பும் அனுப்பி வைத்திருந்தார்.

 

சர்க்கார் எனக்கு முதலில் கோ.ராஜாராம் மொழிபெயர்த்து என் ஆசிரியர் கவிஞர் மீராவின் அன்னம் வெளியீடாக வந்த ‘மற்றொரு இந்திரஜித்’ மூலமாகத்தான் அறிமுகமானவர். அவருடைய நாடகங்களை ஜெயந்தனின் நாடகங்கள் போல் படிப்பது எனக்கு ரசனைக்குரியதாகத் தெரிகிறது. நாடகமாக நடத்தும்போது அறிவுஜீவிதச் செயற்கை தெரிகிறதாகச் சொன்னால் ஞாநி ஆட்சேபிப்பார்.

 

மூன்று பக்கம் திரை வைத்து மூடி நான்காம் பக்கம் பார்வையாளர்களைப் பார்த்துத் திறந்து அவர்களிடமிருந்து கொஞ்சம் போல் விலகி எல்லோரும் பார்க்கிற உயரத்தில் அமைந்திருக்கிற மரபு சார்ந்த ப்ரொசீனியம் அரங்கை பாதல் சர்க்கார் ஒதுக்கி வீதிக்கு வந்ததுக்குக் காரணம் அவர் நாடகத்தை மக்களுக்கு நெருக்கமாக எடுத்துப் போக மரபு அரங்கம் போதாமல் இருந்தது என்கிறார்கள்.

 

பாதலின் உடல்மொழி அரங்கம் (பாடி தியேட்டர்) ஏகமாக சிலாகிக்கப்படுகிறது. அதீத உடல்மொழிதான் இந்த உடல்மொழி அரங்கத்தின் உச்சமாக எனக்கு மனதில், கண்ணில் பட்டது. ஆவணப் படம் மூலம் நாடகக் காட்சிகளைப் பார்த்ததால் ஏற்பட்ட உணர்ச்சியாகவும் அது இருக்கலாம். பாதலின் நிறுவன எதிர்ப்புக்கு இந்த அதீதம் எந்த விதத்தில் துணை போனதோ தெரியாது.

 

ஆட்டத்தோடு கூடிய நாட்டுப் பாடல், கால் இடுக்கில் கொட்டு வைத்து வாசித்துக்கொண்டு பிரவேசம், கைக்குட்டையை சுழற்றி ஊய் ஊய் என்று சத்தம் போட்டு ஹெலிகாப்டரை உருவகப்படுத்துவதான (கிட்டத்தட்ட) டம்ப் ஷாரட், ஒரே வசனத்தை ஏழெட்டு தடவை எல்லோரும் ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல் உச்சரிப்பது, பைஜாமா ஜிப்பாவோடு நாடக ஆசிரியர் திடீரென்று குறுக்கே புகுந்து, ஊர்வலம் வந்துட்டு இருக்கு என்று சொல்லிவிட்டுப் போவது என்று இந்த பாடி தியேட்டரும் நாடக ரசிகனை நாடக வெளிக்கு உள்ளே வர ஒட்டாமல் தடுத்துவிடும் அபாயம் இருக்கிறது.

 

பாதல் நாடகத்தில் பாட்டு இருக்கிறது. உண்மைதான். ஆனால் அவரே சொல்கிறார் – எங்கள் நாடகங்களை விரும்பிக் கூப்பிட்ட கிராம மக்கள் பாட்டுகள் அமைந்த நாடகங்களோடு வரச் சொன்னார்கள். பாட்டுக்காக நாடகம் என்பது எழுதியவருக்கு உடன்பாடு இல்லை. ஆனால் பார்வையாளரை அதுதான் இழுக்கிறது.  சோதனை நாடகம் பழகிய பாதைக்குத் திரும்பப் பயணிக்க பார்வையாளர்களின் பிரதியாக்கம் காரணமாகிறது என்று இண்டலெக்சுவல் கல்குவாரி உடைத்து ஒரு லோடு அடிக்க நான் தயார்.

 

உத்தியில் இல்லை நாடகம்,  மனதில் இருக்கிறது என்று தோன்றுகிறது. மக்கள் கலைஞர் கத்தாரின் இசை நிகழ்ச்சிகளுக்கும் பாதல் சர்க்காரின் பாட்டோடு கூடிய பரீட்சார்த்த நாடகங்களுக்கும் என்ன வேற்றுமை? கத்தார் இப்படி அறிவு ஜீவிதத் தன்மையோடு அரங்கில் நடித்தது இல்லை என்பது தவிர. சண்டை பிடிக்க வருகிறவர்கள் கத்தாரின் ‘பத்ரம் கொடுகோ’ பாடலைக் கேட்டுவிட்டு வரலாம்.

 

உடல்மொழி அரங்கத்தோடு எனக்கு எந்த விரோதமும் இல்லை. ப்ரோசினியம் தியேட்டரின் சாத்தியக்கூறுகளை இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது அதை விட அல்லது அதே தரத்தில் முக்கியமானதாகத் தோன்றுகிறது. சாம்யுவெல் பெக்கட்டின் ‘கோடாவுக்காக காத்திருந்தல்’. டென்னசி வில்லியம்ஸின் ‘பல்லி ராத்திரி – நைட் ஆப் தி இகுவானா’, ஹெரால்ட் பிண்டரின் ‘பிறந்த நாள்’ போன்ற ஆங்கில நாடகங்களைத் தொடர்ந்து பார்க்கக் கிடைத்த அனுபவம் என்னை ப்ரோசீனியம் தியேட்டர் பக்கமாகத்தான் மேலும் நகர்த்துகிறது.

 

பாதலுக்கு அஞ்சலி செலுத்த இந்தச் சிந்தனைகள் எதுவும் குறுக்கே நிற்காது.

 

 

ஸ்காட்லாந்தில் நாடக மேடையில் மொட்டைக் கட்டையாக ஒரு காட்சியிலோ நாடகம் முழுவதுமோ வந்தால் தப்பே இல்லை. நியூட் தியேட்டர் ரசனையைப் பொறுத்த ஒன்று. ஆனால் மேடையில் விண்ஸ்டன் சர்ச்சிலாகத் தோன்றி சுருட்டுப் பற்ற வைத்தால் ஓரமாகக் காத்திருக்கும் போலீஸ்காரர்கள் பிடித்துப் போய் வழக்குப் போட்டு விடுவார்கள். மேடையில் புகைபிடிப்பது மாபெரும் குற்றம்.

 

இந்தியாவில் சுருட்டோ சிகரெட்டோ மேடையில் பிடிக்கத் தடை ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. முப்பது வருடம் முன்னால் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகள் நடுவே ஒரு இடைவேளை அறிவித்து விட்டு, வடக்கே இருந்து வரும் உஸ்தாத்கள் நடுமேடையில் ஹூக்கா பற்ற வைத்து லயத்தோடு புகை வலிப்பார்கள். நம் வித்வான்கள் லாகிரி வஸ்து பக்கமே – மேடையில் இருக்கும்போது மட்டுமாவது- போவதில்லை என்று பொதுவான கருத்து. அதிலும் சம்பிரதாயமாகப் பாடுகிற சிலர் வெள்ளி கூஜாவில் நாலு மடக்கு விஸ்கியோ பிராந்தியோ எடுத்துப் போய் தம்புரா போடுகிற சிஷ்யன் எவர்சில்வர் டம்ளரில் வார்த்துக் கொடுக்க, அங்கவஸ்திரத்தால் முகத்தை மூடி ஒரே கல்பில் குடித்து முடித்துவிட்டு நிதிசால சுகமா கீர்த்தனை பாட ஆரம்பிப்பார்கள் என்று இன்னும் சுழன்று கொண்டிருக்கும் வதந்திகள் உண்டு. நம்ப முடியாவிட்டாலும் ரசமானவையே அவையெல்லாம்.

 

நாடக மேடையில் புகைவலி, லாகிரி வஸ்து உபயோகிப்பது, நக்னம் இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். பார்வையாளர்களைப் பற்றி யாராவது யோசித்ததுண்டா?

 

போன மாதம் கனடா றொறொண்றோவில் (என்ன செய்ய, இப்படி எழுதினால் தான் எனக்கே புரிகிறது) ‘இஷ்டப்பட்டால் உடுத்தி வரலாம்’ சலுகையோடு மோண்ட்பார்ன்ஸே என்ற பிரஞ்சு நாடகம் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. முக்கிய பாத்திரங்கள் கிட்டத்தட்ட நாடகம் முழுக்க பிறந்த வண்ணம் தோன்றி ஓவிய மேதைகளான பிக்காசோவாகவும், பாஸ்கினாகவும், மார்க் சகால் ஆகவும் நடித்த நாடகம் இது. இவங்க எப்போ பிறந்த மேனிக்கு இருந்தாங்க என்று கேட்க வேணாம் – ஸ்பெயின், பிரஞ்சுக்காரர்களாக இருந்தாலும், வாழ்க்கையில் ஒரு தடவையாவது குளித்திருக்க மாட்டார்களா என்ன?

 

கதாபாத்திரங்களே காற்றோட்டமாக வரும்போது பார்வையாளர்களும் அப்படியே வந்தால் என்ன என்று யோசித்து பேஸ்புக்கில் குழு ஆரம்பித்து ஆதரவு திரட்டினார்கள். ‘பிரிட்டீஷ் புது மணப்பெண் இளவரசி கேட் மிடில்டனின் தங்கை பிப்பா மிடில்டன் பிருஷ்ட ரசிகர் சங்கம்’  போன்ற அமைப்புகள் நிறைந்த பேஸ்புக்கில் இவர்களுக்கு ஆதரவுக்கு என்ன பஞ்சம்?

 

நாடகம் அவை நிறைந்து பாஸ் முராலே அரங்கில் நடத்தப்பட்டதாகத் தகவல். நாடகம் பார்க்க வந்தவர்கள் தவறாமல் ஆளுக்கொரு துண்டோடு வந்தார்களாம். உடுத்துக் கொண்டு இல்லை. ஆசனத்தில், சரி, இருக்கையில் விரித்து அதன் மேல் இருந்து நாடகம் பார்த்து ரசிக்க. நாடகம் முடிந்ததும் எல்லா இருக்கையையும் சுத்தமாக அலம்பி விட எவ்வளவு தண்ணீர் செலவழித்தார்களோ தெரியவில்லை.  ப்ரோசீனியம் தியேட்டரில் இதுவும் ஒரு நன்மை பாருங்கள்.

 

 

ஆடலும் பாடலும் அன்றே முடிந்தது

கூடலும்  சீக்கிரம் காணலாம் – மேடையில்

தேடல் தொடரும் திரையுயர நக்னமாய்

நாடகம் பார்க்கநீ வா

 

இரா.முருகன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 02, 2022 19:05

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.