இரா. முருகன்'s Blog, page 40

November 13, 2022

போகம் தவிர் – சிறுகதை : நண்டுமரம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து

போகம் தவிர்               

 

பசித்தது.

 

காலையில் சாரங்கன் எழுந்திருக்கும்போது சிறு பொறி போல ஆரம்பித்து, வயிற்றில் அக்னியாக வளர்ந்து உடம்பையே வளைத்து எரிக்க முற்படும் பசி.

 

தட்டு நிறைய இட்லி. பொன் நிறத்தில் வடை. சுருட்டி வைத்த அதே நிற தோசைகள். அரிசிச் சோறு. புளிக் குழம்பு. தேங்காய் அரைத்து விட்ட அவியல். கிண்ணம் நிறைய பால் பாயசம்.  கத்தரி, வெண்டை, கீரைகள், புடல், பாகற்காய் என்று பச்சைக் காய்கறி. ஆப்பிள், மா, பலா, வாழை, திராட்சை என்று பழங்கள்..

 

எப்போதும் மனதில் வரும் காட்சி. எழுந்ததுமே நினைப்பில் ஏறிவிட்டது அது.

 

சாரங்கனுக்கு சந்தோஷமாக இருந்தது. நேற்று ஜிம்-மில் ஒரு மணி நேர உடற்பயிற்சியும், குடியிருப்பு நீச்சல் குளத்தில் ராத்திரி கவியும் போது நீந்தியதும், ஈர உடல் கடல் காற்றில் காய்ந்து வர, ரேணுகாவோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டதும், சாரங்கன் வயிற்றில் நல்ல பசியாகி இருக்கிறது இந்தக் காலையில்.

 

ரேணுகா இன்னும் தூங்குகிறாள். அவளை எழுப்ப வேண்டாம். வீட்டில் இருப்பதைச் சாப்பிட்டு ஆபீஸ் கிளம்பி விட்டால் சுகாதாரமும் சுவையுமாக கேண்டீன் சாப்பாடு இலவசமாகக் கிடைக்கும்.  இன்று வெள்ளிக்கிழமை. ரவா பொங்கல், அவியல், சின்னச் சின்ன அடைகள், கத்திரிக்காய் கடலைக் கூட்டு. சகலத்துக்கும் உற்ற துணையாக இஞ்சிம்புளி. சாரங்கனுக்கு நாக்கு ஊறியது.

 

படுக்கை அறையில் இருந்து வரவேற்பு அறையில் நுழையும்போது தொலைக்காட்சி தானாகவே ஒளி உயிர் பெற்றது. ‘பிரவுன் அண்ட் பில்சன்ஸ் வெண்ணெய் பிஸ்கட்கள்.. எடுத்தால் கை மணக்கும். ஒரு கை அள்ளினால்….’. ஒரு மூதாட்டி அங்கே இங்கே பார்த்தபடி சூப்பர் மார்க்கெட் அலமாரியில் பாதி திறந்திருந்த பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து ஒரு பிஸ்கட்டை உருவி வாயில் வைக்கும் முன், பின்னால் இருந்து பார்க்கும் அழகான கடை சிப்பந்திப் பெண், தொண்டைக் குழியில் இறங்குவது தெரிய எச்சில் முழுங்குகிறாள்.  சாரங்கனுக்கு இப்போது பசி உச்சத்தில். வெண்ணெய் பிஸ்கட் சமையலறையில் இருக்கும் என்று நினைவு சொன்னது. ரேணுகா மாதாந்திர லிஸ்டில் தவறாமல் வாங்குவது.

 

சாரங்கனுக்கு இதே விளம்பரத்தை நேற்றும் பார்த்த நினைவு.  ராத்திரி கடலில் நீராடி வரும்போதும் தொலைக்காட்சியில் இது தான் வந்தது. பிஸ்கட். பெண். அவள் இடுப்புக்கு மேல் உடுத்தாமல் இருந்தாள். ரேணுகாவை நாடியது அதைப் பார்த்த பின் தான். அப்போது வெண்ணெய் பிஸ்கெட் நினைவில் இல்லை.

 

சமையலறை. காப்பிப் பொடியும், உறை பிரிக்காமல் புளியும், சிறிய துணிப் பையில் மிதுக்க வற்றலும் இருந்தது அலமாரியில். இரண்டு கட்டு சின்னதும் பெரிதுமாக உளுந்து அப்பளம். சுட்ட அப்பளத்தில் நாலு சொட்டு நல்லெண்ணெய் ஊற்றி மணக்க மணக்க இடது கையில் பிடித்தபடி, சோற்றில் நையப் பிசைய வற்றல் குழம்பு வேணும். அதைக் கலக்கும்போது கூடவே விழுதாக மசிய அரைத்த பருப்புத் தொகையல். மனதில் சடசடவென்று விரியும் நினைப்புகள் பசியை உக்கிரப்படுத்த, ரேணுகாவை எழுப்பலாம் என்று தோன்றியது.

 

ஒன்றுமே இல்லை. சாப்பிடும் பதத்தில் சமையல் அறையில் ஒன்றுமே இல்லை. தரையில் பார்வை போனது. நாலைந்து பாப் கார்ன் கதிர்ப் பொரி சிந்திக் கிடக்கிறது. டிவி பார்த்தபடி வாளியில் பொரி கொறித்து, காப்பி கலக்க சமையலறை வந்தபோது சிந்தியிருக்கலாம்.  தரையில் காத்திருக்கும் உணவு. சாப்பிட இல்லை. நமத்துப் போனது. ஆனாலும் பசியை இன்னும் தீவிரமாக்கியது.

 

அலுவலகத்தில் இருந்து தொலைபேசினார்கள்.  உடனே வரவேண்டுமாம்.  பசிக்கிறது. வேறே எதுவும் இல்லாவிட்டாலும், ஒரு கோப்பை காப்பி. படுக்கை அறையில் எட்டிப் பார்த்தான். ரேணுகா இழுத்துப் போர்த்திக் கொண்டு நல்ல நித்திரையில் இருக்கிறாள். உடம்பு சரியில்லையா என்ன? பக்கத்தில் போய் நெற்றியில் கை வைத்துத் தொட்டுப் பார்க்கும்போது திரும்ப ஃபோன் சத்தம். போக்குவரத்து அதிகம் என்பதாலும் அலுவலகக் கூட்டம் நேரத்தில் துவங்க வேண்டுமென்பதாலும் ஆபீஸ் கார் அனுப்புகிறார்களாம் கூட்டிப்போக. சாப்பாடு? கேட்க முடியாது. எப்படியாவது சமாளித்துக் கொள்ள வேண்டியதுதான்.

 

ஆபீஸ் காரா இது? வாடகை கார் போல இருந்தது. காரில் இரண்டு பேர் இருந்தார்கள். அவர்களை ஆபீஸில் பார்த்த நினைவு இல்லை சாரங்கனுக்கு.

 

’போகலாம்’. கார்க் கதவை அறைந்து சார்த்திக் கொண்டே சாரங்கன் சொல்ல, டிரைவர் வண்டியைக் கிளப்பினான். சட்டென்று புதிதாக உறை பிரித்த ரொட்டித் துண்டுகளின் இதமான வாடை காருக்குள் சூழ்ந்தது. டிரைவர் ஒரு கையில் சாண்ட்விச்சை எடுத்துக் கடித்தபடி வண்டி ஓட்டிப் போக, சாரங்கன் எச்சில் முழுங்கிக் கொண்டான். ’நடுவிலே புதினா சட்னி வச்சு, மைக்ரோஅவன்லே க்ரில் பண்ணி, ரெண்டே ரெண்டு சாண்ட்விச்’. ரேணுகா கொண்டு வந்து, கூடவே ஒரு பெரிய கோப்பை நிறைய பில்டர் காப்பியும் வைத்து விட்டுப் போனது எப்போது? போன வாரம்? போன மாதம்? எல்லாம் குழம்பிப் போய் இருக்கிறது. பசி மட்டும், இன்னும் இன்னும் திடமாக உருக்கொண்டு உருண்டு மேலெழும்புகிறது.

 

சாரங்கனின் மொபைல் அதிர்ந்தது. ஆபீஸ் தான். வர வேண்டிய முக்கியமான அதிகாரி வந்து சேர இன்னும் இரண்டு மணி நேரமாகுமாம்.  மெல்ல வாங்க.

 

நான் கிளம்பியாச்சு என்றான் சாரங்கன் சிரத்தை இல்லாத குரலில். பதில் இல்லாமல் தொலைபேசி இணைப்பு  துண்டிக்கப் பட்டது.

 

’நேத்து ஆபீஸ் வரலையா?’

 

நீள மீசை வைத்து, தூசி மண்டிய கருப்பு கோட் அணிந்து கொண்டு பக்கத்தில் இருந்தவர் அவருக்கு அடுத்து இருந்த அரைக்கை சட்டைக்காரரிடம் கேட்டார்.

 

‘சகலை அப்பாருக்குக் கருமாதி. போகாம முடியலே.. சாப்பாடு வேறே பிரமாதம்.. செட்டிநாட்டு சமையல் .. குழிப் பணியாரம், வெள்ளையப்பம், சொதி.. ஆஹா’.

 

அவர் நேற்றைய சாப்பாட்டு நினைப்பில் அமிழ, சாரங்கன் அவரை அசூசையுடன் பார்த்தான்.

 

‘செத்தவருக்குப் படைக்க உப்பில்லாத தோசை.. சாப்பிட்டு பாத்துட்டு அந்த ஆத்துமா சே, இந்தச் சாப்பாட்டெளவே வேணாம்டான்னு திரும்பிப் போயிடுமாம்.. இவனுக சுட்டு வச்ச தோசை கூட தாமரைப் பூ மாதிரி மெத்து மெத்துனு.. இப்படி சுட்டு அடுக்கினா ஆத்துமா எப்படி வெலகிப் போகும்? சுத்தி சுத்தி தான் வரும்’.

 

அவன் கேட்டுக் கொண்டே இருக்க, கார் ஜன நடமாட்டம் கூடிய தெருவில் திரும்பியது. ஒன்றிரண்டு சைக்கிள்கள் தவிர வாகனம் ஏதும் கண்ணில் படவில்லை. எல்லோரும் நடந்துதான் போகிறார்கள். நிதானமாக நடக்கிறார்கள்.

 

’எங்கே இருக்கோம்?’ சாரங்கன் டிரைவரைக் கேட்க, ‘தங்கசாலை’ என்றார் கருப்பு கோட் போட்டவர். ‘என்னங்க?’ சாரங்கன் விளங்காமல் கேட்க, ‘ஜார்ஜ் டவுண் தங்கசாலை’ என்றார் அடுத்தவர் அழுத்தம் திருத்தமாக.

 

சாரங்கன் வெளியே பார்க்க,  தரையில் பந்திப் பாய் விரித்து ஏழெட்டு பேர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கட்டிடம் கண்ணில் பட்டது. ‘நிறுத்துப்பா’ அவன் அடக்க மாட்டாமல் கூவ,  மாமிசம் அடைத்த அடுத்த சாண்ட்விச்சை பிரித்துக் கொண்டிருந்தான் டிரைவர். வண்டி நிற்காவிட்டாலும் மெல்ல ஊர்ந்தது.

 

கதவைத் திறந்து இறங்க கால் கொஞ்சம் ஓடி நின்றது. சதா சாப்பிடும் ராட்சசன் போல்  டிரைவர் இறைச்சி சாண்ட்விச்சை மென்று  கொண்டிருந்தது கண்ணில் பட்டது. சாப்பிடும் இடம். இதோ இங்கேதான். சாப்பாட்டு வாசனை காற்றில் பரவி இருக்க, உண்டு முடித்து இலை எடுத்து மறைவாகப் போட்டு விட்டு கை அலம்பி வந்தவரிடம் சாரங்கன் விசாரித்தான் – ’இங்கே சாப்பிட ஏதாவது கிடைக்குமா’.

 

‘ஏன் கிடைக்காமல்? தங்கசாலை காசிப்பாட்டி ஓட்டலாச்சே இது’.

 

அவர் ஓரத்தில் சார்த்தி வைத்த பர்மாக் குடையை எடுத்துக் கொண்டு புன்னகையோடு வெளியே நடக்க, பாயில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த கடுக்கன்காரர் சொன்னார் –

 

‘அவர் திருவாடுதுறை மடத்து வித்துவான். உள்ளூர்க்காரர் இல்லே. என்னைக் கேளுங்கோ.. ஓட்டல்லே இனி சாயந்திரம் தான் பலகாரம் கிட்டும்.  இப்ப சிரத்தைக்கு வேணும்னா, விக்டோரியா ஹால் பக்கம் உடுப்பிக்காரர் பச்சரிசிச் சாப்பாடு போடறாரே அங்கே கிடைக்கலாம்’.

 

சாரங்கன் திரும்ப ஓடி வந்து காரில் ஏறினான்.

 

‘உடுப்பிக்காரன் சாப்பாடு நல்லாத் தான் இருக்கு. பொலபொலன்னு சீரகச் சம்பா. கொதிக்கக் கொதிக்க இலையிலே போட்டு, தாராளமா நெய்யையும் ஊத்தி.. ‘

 

கோட்டுக்காரர் சிலாகிக்க அவரை முறைத்தான். ‘சும்மா இருடா.. எனக்குப் பசிக்குது’ என்று உரக்க அலற வேண்டும் போல் இருந்தது.

 

’அவ்வளவு சூடா சாப்பிட்டா, குடலுக்கு ஆபத்துன்னு வைத்திய சாஸ்திரம் சொல்றதாம்.. இதோ’ அடுத்தவர் எடுத்து நீட்டிய பத்திரிக்கையின்  பின் அட்டையில் ‘அறுபது இனிய கானங்கள் நிறைந்த தமிழ் டாக்கி’ என்று இருந்ததின் அர்த்தம் சாரங்கனுக்குப் புரியவில்லை. சாப்பிட்டால் புரியலாம்.

 

டிரைவர் இருக்கையில் இருந்து ஏதோ வழுக்கிப் பின்னால் விழுந்தது. ஓரத்தில் கடித்த ரொட்டித் துண்டு. கையில் பிடித்து ஓட்டும் போது பிடி வழுக்கியிருக்கலாம்.

 

சாரங்கன்  அதையே உற்றுப் பார்த்தான்.  பின்சீட் தரை அவ்வளவு ஒன்றும் தூசி மண்டி இல்லை. ஓரமாக இன்னும் கொஞ்சம் பிய்த்து விட்டால் புது ரொட்டி தான்.

 

சாரங்கனோடு கூட இருந்தவர்கள் கண் மூடி உட்கார்ந்திருந்தார்கள். டிரைவர் தெருவே கண்ணாக, வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.

 

மெல்லக் குனிந்து அந்த ரொட்டித் துண்டைக் கையில் எடுத்தான் சாரங்கன். உடல் இந்தக் கணத்தில் வேறேதும் வேண்டாம் என்று போகத்துக்கு ஏங்குவது போல் துடிப்போடு காத்திருக்க, ரொட்டித் துண்டை வாய்க்கு அருகில் கொண்டு போகும் போது, கோட்டுக்காரர் இருமியபடி எழுந்தார். அவன் கையில் இருந்த ரொட்டித் துண்டைப் பறித்தார் அவர்.

 

‘நான் போட்டுடறேன்’ என்றபடி கார் ஜன்னல் வழியாக வெளியே வீச சாரங்கன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டான். பட்டினி நகரம் வெளியே விரிந்து கொண்டிருந்தது. ஏன் ஆபீஸ் இன்னும் வரவில்லை?

 

கண்ணை மூடிக் கொண்டு ஓய்வெடுக்கப் பார்த்தான்.

 

தட்டு நிறைய இட்லி. பொன் நிறத்தில் வடை. சுருட்டி வைத்த அதே நிற தோசைகள். அரிசிச் சோறு. புளிக் குழம்பு. தேங்காய் அரைத்து விட்ட அவியல். கிண்ணம் நிறைய பால் பாயசம்.  கத்தரி, வெண்டை, கீரைகள், புடல், பாகற்காய் என்று பச்சைக் காய்கறி. ஆப்பிள், மா, பலா, வாழை, திராட்சை என்று பழங்கள்..

 

இல்லை, இப்போ வேணாம்.. பசி இல்லாத நேரத்தில், சாவதானமாக..

 

கார் புதிய குடியிருப்புகள் பக்கம் போய்க் கொண்டிருந்தது. இதைத் தவிர தெருவில் தென்பட்ட வேறு கார்கள் எல்லாம் மிகச் சிறியவை. சத்தம் எழுப்பாமல், பூங்காவில் குழந்தைகள் ஓட்டும் விளையாட்டு வண்டிகள் போல ஓடின அவை.

 

‘உணவகம்’ என்று சுருக்கமான பெயர் எழுதிய கட்டிடத்தைக் கடக்கும்போது ‘தயவு செய்து வண்டியை ஒரு நிமிஷம் நிறுத்துங்களேன்’ என்று கெஞ்சினான் சாரங்கன். அந்த டிரைவர் வலிமை மிக்கவன். சாண்ட்விச்கள் அளித்த வலு அது. சாரங்கனைப் போல் பசியோடு இருப்பவனை அடித்து வீழ்த்த முடியும் அவனால்.

 

சாரங்கன் நுழையும்போதே, ‘ஏதாவது கிடைக்குமில்லியா?’ என்று உரக்க விசாரித்தான். முகப்பில், நீள் வட்ட மேஜையின் பின் இருந்த இளம்பெண் அழகாகப் புன்சிரித்தபடி, ‘இங்கே எல்லாமே எப்பவுமே கிடைக்கும்’ என்றாள்.

 

உள்ளே போகும்போது பக்கத்து நுழைவு வாசலில் ஆணும் பெண்ணுமாக நின்ற நீண்ட வரிசையைக் கடந்து போக வேண்டி வந்தது. ‘அறிமுகச் சலுகை – அறுபது சதவிகிதக் கட்டணமே ஓர் ஆண்டுக்கு’ என்று எழுதி வைத்த பலகை கவனத்தை ஈர்த்தது. செல்போனுக்கா இத்தனை பேர் நிற்கிறார்கள்? தெரியவில்லை.

 

குனிந்து வணங்கிய பரிமாறும் பெண்ணிடம் ‘நாலு இட்லி, வடை’ என்றபோது கொஞ்சம் அதிர்ந்து அவள் மேஜையைச் சுட்டிக் காட்டினாள். சாரங்கனுக்கு முன் ஒரு கிண்ணம் நிறைய மெல்லிய சிவப்பு நிறத்தில் என்ன அது?

 

‘மன்னிக்கணும். காலையிலே ரெட் ஒயின் எல்லாம் சாப்பிட்டுப் பழக்கம் இல்லே. ஆபீஸ் வேறே போகணும். சீக்கிரமா ப்ரேக்பாஸ்ட் எடுத்து வந்தா நல்லது’.

 

’காலைச் சாப்பாடா? 48 மணி நேரம் பசிக்காமல் இருக்க அமுதம் போதுமே’

 

அவள் கண்ணால் குவளையைக் காட்டிப் பூவாகச் சிரித்தாள்.

 

‘அமுதமா?’

 

’உணவகத்தில் வேறே என்ன கிடைக்கும்னு வந்தீங்க?’

 

மொபைல் அடித்தது. ரேணுகா.

 

‘ரேணுகா, வேடிக்கையைக் கேளு. நல்ல பசியோட வந்து ஓட்டல்லே இட்லி கேட்டா இவங்க என்ன தர்றாங்க தெரியுமா?’

 

‘இட்லியா, அப்படீன்னா?’

 

ரேணுகா ஆவலாக விசாரிக்க சாரங்கன் குழம்பினான். என்ன ஆச்சு இவளுக்கு?

 

‘நேத்து ஞாயித்துக்கிழமை ப்ரேக்பாஸ்டுக்கு செஞ்சு, மிஞ்சிப் போனதை உதிர்த்து ராத்திரி இஞ்சி மொளகா போட்டு இட்லி உப்புமா பண்ணித் தின்னோமே.. இட்லி’.

 

ரேணுகா உரக்க சிரிக்கும் சத்தம்.

 

‘என்ன ஆச்சு உங்களுக்கு .. எல்லோரும் மூணு வேளை குடிக்கறது அமுதம் தானே. வேறே என்னென்னமோ பெயர் எல்லாம் சொல்றீங்களே இட்டுக் கட்டி’.

 

அவள் ஃபோனை வைத்து விட்டாள்.

 

வேண்டாம். ஆபீஸ் போகிற நேரத்தில் கோபம் கூடாது.  கோரிக்கை விடுக்கும் குரலில் பணிப்பெண்ணைக் கேட்டான் –

 

‘சீக்கிரம் இட்லி கொண்டாங்க.. நேரமாகுது’.

 

‘ என்ன ஆச்சு உங்களுக்கு .. எல்லோரும் மூணு வேளை குடிக்கறது அமுதம் தானே. வேறே என்னென்னமோ பெயர் எல்லாம் சொல்றீங்களே இட்டுக் கட்டி’.

 

ஓட்டல் பணிப்பெண் ரேணுகா குரலில் திரும்பச் சொன்னாள்.

 

அடுத்த வினாடி சாரங்கன் உக்கிரமானான். எல்லா ஆத்திரமும் குவிய மொபைலை ஓங்கி மேஜையில் அடித்துக் கத்தினான்.

 

’என் கிட்டே இந்த வெளையாட்டு எல்லாம் வேணாம்.. சாப்பிட ஆர்டர் கொடுத்ததை கொண்டு வந்து வைங்க. அது போதும். ‘

 

‘அமுதம் குடியுங்க. அமைதியாக இருங்க’ அந்தப் பெண் சொன்னாள். அதை ஏற்று வாங்கி, வாசலில் மேஜை போட்டு உட்கார்ந்திருந்தவள் திரும்பச் சொன்னாள். நீளமான க்யூவில் நின்ற எல்லோரும் சேர்ந்து சொன்னார்கள். திரும்ப மொபைல் அடித்தது.

 

‘அமுதம் குடியுங்க. அமைதியா இருங்க’

 

ரேணுகாவும் சொன்னாள்.

 

சாரங்கன் எழுந்து வெளியே ஓடினான்.  ஆபீஸ் போய்விட்டால் போதும். அங்கே ரொட்டித் துண்டை வாட்டி, ரெண்டு முட்டைகளை அடித்துப் போட்டு ஆம்லட் சுட்டுக் கொடுக்க நேரம் காலம் பார்க்க மாட்டார்கள். மீட்டிங் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

 

பசியோடு இருந்த வயிறு இரைந்தது. சும்மா கிட சனியனே.

 

சாரங்கன் தெருவைக் கடக்கும்போது பெரிய சத்தத்தோடு எதிரே வந்த பிரம்மாண்டமான டிரக் மோத அவன் தூக்கி எறியப்பட்டான்.

 

‘மன்னிக்கணும். அதிர்வு அதிகமா கொடுத்திருக்கு போல’.

 

சாரங்கனின் அதிர்ந்த முகம் உறைந்து போயிருந்த காட்சிப் பெட்டியை அமர்த்தி விட்டு டாக்டர் சிற்பி கைகாட்டினார். உறைபனிப் பேழையின் மேல் அடுக்கில் இருந்து அடுத்த அடுக்கில் விழுந்திருந்த சாம்பல் நிறத் தொகுதியை ஜாக்கிரதையாக அவருடைய உதவியாளரான இளைஞர் எடுத்து மேலே வைத்தார்.

 

‘இது சாரங்கன். இந்த இருபத்தாறாம் நூற்றாண்டுக்கு நானூறு வருடம் முன்பாக,  சரியாகச் சொன்னால், 1953 முதல் 2015 வரை இதே சென்னையில் வாழ்ந்திருந்த சராசரி மனிதனான சாரங்கனின் மூளை, நரம்பு மண்டலம் சார்ந்த அமைப்பு இது. பசி என்பதே அறியாத, அமுதம் பருகிச்  சக்தி பெற்று உலவும் நமக்கு முன்னோரில் ஒருவன். உணவு பற்றி நினைப்பது, உணவுக்காக உழைப்பது, உணவுக்காகக் கூடி இருப்பது, உணவை விதவிதமாக ஆக்கவும், அது பற்றிப் பேசி ரசிக்கவும் நேரத்தைச் செலவழிப்பது, உணவு வாசனையை உன்னதமானதாக அனுபவிப்பது, உண்பதை காமம் போல், அதையும் விட இன்பமும் நிறைவும் தரும் செயலாகக் கருதுவது.. இந்த இயக்கங்களின் தொகுப்பு சாரங்கன். அவனுடைய மூளை இன்னும் உயிரோடு உள்ளதால், அதற்கு இப்படியான உணர்வுகளைத் தூண்டும் மின்சார அதிர்வுகளை அனுப்பிய போது சாரங்கன் கட்டி எழுப்பிய காட்சிகளை காட்சிப் பெட்டியில் நாம் பார்த்தோம்’.

 

‘எல்லாம் நல்லா இருந்துச்சு டாக்டர், ஆனா எதுக்கு?’

 

அமைச்சர் எழுந்தபடி கேட்டார். கூட வந்த உறுப்பினர்களும் அவசரமாக எழுந்து வாசல் பக்கம் போய் நின்றார்கள்.

 

‘சார், அமுதம் உற்பத்தி செய்ய.. ஒப்பந்தக்காரர்கள் வகையில் கையூட்டு புகார்கள்.. மத்திய கணக்குத் தணிக்கையகம்..’

 

டாக்டர் சிற்பி தயங்க, அமைச்சர் அவசரமாகக் கைகாட்டி அவரை நிறுத்தினார்.

 

‘அமுதம் திட்டத்தை மேம்படுத்தி பேரமுது ஆக்க எடுக்கும் நடவடிக்கைன்னு சொல்லுங்க டாக்டர்’.

 

‘ஆமா, அமுதம் திட்டத்தில் சாரங்கன் போல மனிதனுக்கு எழக் கூடிய இயற்கையான உணர்ச்சிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாததால் மனித உரிமை அது இதுன்னு ஒரு சின்ன குழு தொந்தரவு கொடுக்கறாங்க.. மாத்திரை முழுங்கி மருந்து குடிக்க மட்டுமா மனுசன்னு கேக்கறாங்க.. அவங்களையும் கணக்கு தணிக்கையையும் சமாளிக்க, திரவ உருவத்தில் அமுதம் இனி தேவைப்படாது. உற்பத்தி செய்ய, வினியோகிக்க உள்ள சிரமங்களும் இல்லாது போயிடும் இந்த புது பேரமுது திட்டத்தில். அடக்க விலையும் ஆகக் குறைவு’.

 

குளிர்ப் பேழையில் இருந்து அவசர ஒலி கவனிக்கச் சொல்லி ஓலமிட்டது.

 

டாக்டர் சிற்பி தன் உதவியாளரை மேலே பேசும்படி கை காட்டி, சாரங்கனின் மூளைத் தொகுதியில் பதித்திருந்த மின் தகடுகளை லாகவமாக நீக்கத் தொடங்கினார்.

 

‘மனித உடலில் சிலிக்கன் சில்லைப் பதிச்சு, சாப்பிடுவது என்கிறதை உணர்வு பூர்வமாக அந்தச் சில்லில் மின் அதிர்வு கொடுக்கறது மூலம் செய்யப் போறோம். இன்னிக்கு 1905-ம் ஆண்டு சென்னை சூழலை சாரங்கன் அனுபவிக்க வச்சோம். அவனோட மூளைத் தொகுதிக்கு இன்னும் பல தடவை இதே மாநகரத்தின் வெவ்வேறு காலகட்ட சூழ்நிலைகளில் உயிர் கொடுத்து சாப்பாடு பற்றிய விதவிதமான உணர்ச்சிகளுக்குப் பழக்கப்படுத்துவோம். சோதனை முடிச்சு, அந்த அடிப்படை அமைப்பை நம் எல்லோர் உடம்பிலும் இதோ இந்த சில்லு மூலமா கடத்தி விட்டுடுவோம். உடலுக்கு வேண்டிய எல்லா சத்தும் அதோடு வரும்’.

 

’கால் செண்டிமீட்டர் நீளம் கூட இருக்காது போலே இருக்கே’

 

அமைச்சர் சில்லு பெட்டகத்தை கிலுகிலுப்பை போல அசைத்துப் பார்த்து விட்டுத் திருப்பிக் கொடுத்தார். சுவரில் மாட்டியிருந்த உணவு வகைகளின் படங்களில் அவர் பார்வை நிலைத்தது. தட்டு நிறைய இட்லி. பொன் நிறத்தில் வடை. சுருட்டி வைத்த அதே நிற தோசைகள். அரிசிச் சோறு. புளிக் குழம்பு. தேங்காய் அரைத்து விட்ட அவியல். கிண்ணம் நிறைய பால் பாயசம்.  கத்தரி, வெண்டை, கீரைகள், புடல், பாகற்காய் என்று பச்சைக் காய்கறி. ஆப்பிள், மா, பலா, வாழை, திராட்சை..

 

‘இது எதுக்கு இங்கே?’

 

‘சாரங்கனுக்கு இதெல்லாம் மறக்கக் கூடாதே.. அதான் எப்பவும் அவன் பார்வையில் படற மாதிரி’.

 

’அவன் இல்லை, அவர். நமக்கு ஐநூறு வருடம் முன்னோர். மூத்தோர் போற்றுதும்’.

 

அமைச்சர் திருத்தியபடி வெளியே நடந்தார்

(தினமலர் 2014).

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 13, 2022 18:38

November 12, 2022

ஜவஹர்லால் நேரு மறைந்த தினத்தில் ஒரு படப்பிடிப்பும பிறகும்

அந்தப் பித்தளைக் குடம் திரும்ப வந்து சேரல்லேன்னு சொக்கலிங்கம் ஆசாரியார் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டுட்டுப் போனார். சகலை புகார் பண்ணியிருக்காராம்.

 

ஆசாரியும் அவர் சகலையும் என்ன விதமான ஆட்கள் என்று  புரியவில்லை. நாடு முழுக்க துக்கம் அனுஷ்டிக்கிற நேரம். இந்த வார்த்தை எடுப்பாக இல்லையா? அனுஷ்டித்தல். ஜாமான் மாதிரி கிடையாது. நாலு பேர் கூடியிருக்கப்பட்ட இடத்துலே கவுரவமாகச் சொல்லலாம். குடத்தோடு பெண்கள் இருந்தாலும் சரிதான்.

 

அது சரி. துக்கம் அனுஷ்டிக்கிற நேரம் என்பதால்  வாடகைக்கு கொடுத்த குடத்தைத் தலை முழுகிவிடலாமா? வேண்டாம்தான். அதுக்காகப் பொழுது ஒரு பக்கம் விடிந்ததுமே ஆனந்தராவ் வந்து இறங்கி தேடச் சொல்லி அவசரப் படுத்த அது தங்கக் குடமா என்ன? தங்கத்திலே குடம் செய்வார்களா? செட்டிநாட்டில் வேணுமானால் கொல்லுப் பட்டறையில், இதுக்கெதுக்கு கொல்லுப் பட்டறை? பத்தர் நகைக்கடையில் செய்து வாங்கி கல்யாணத்துக்கு சீர் பரப்பி இருப்பார்கள். நம்ம படத்தில், ஆந்திராவிலிருந்து புறப்பட்டு வந்த ரெண்டாம் கதாநாயகி கோடம்பாக்கம் ஸ்டூடியோ கிணற்றடி செட்டில் தடவத் தங்கக் குடம் எல்லாம் கட்டுப்ப்படியாகாது.

 

ஆனாலும் எனக்குப் பித்தளைக் குடத்தைத் திருப்பிக் கொடுத்ததாக நினைவு இல்லை. அம்பாசிடர் கார் டிக்கியிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துக் கடையில் பரத்திய பொருளில் ஈரமான தாம்புக்கயிறும் தகர வாளியும் இருந்தது. சட்டையை நனைத்தது அது ரெண்டும்.  குடம் என்ன ஆச்சு?

 

ஸ்டூடியோ லைட்பாய் பாத்தானாம். செகண்ட் ஹீரோயின் குடத்தோட ஆட்டோவிலே ஏறிப் போச்சாம். சொக்கலிங்க ஆசாரி துப்புக் கொடுத்திருக்கார்.

 

ஆனந்தராவ் பாயை மடித்து வைத்தபடி சொன்னான். பஞ்சு வெளியே வந்து சிதற என்னத்துக்காகவோ தலைகாணியை, இதுவும் சரியான வார்த்தை இல்லை, தலையணையை உதைத்தான் அவன். ஒரு காப்பி குடித்தால் சரியான வார்த்தை எல்லாம் சரம் சரமாக வந்து விழும்.

 

கிளம்பு. குடத்தைப் பத்தி விசாரிச்சுட்டு வந்துடலாம்.

 

எங்கே போகவேண்டும் என்று தெரியவில்லை. பஸ் பிடிக்கக் கையில் காசு குறைச்சலாக இருக்கிறது. ரெண்டு டிக்கட் போக வர எடுக்க நிச்சயம் துட்டு கிடையாது. வரும்போது குடத்தை வேறே கட்டித் தூக்கி வர வேண்டும். பஸ் இருக்குமா? நேருவே போய்விட்டார்.

 

பஸ், ரிக்ஷா எல்லாம் எதுக்கு? இப்படியே நேரா வண்டியை விட்டா ராஜாபாதர் தெருவாண்டை சாக்கடைத் தண்ணி சுத்தப்படுத்தற ஆபீஸ் இருக்கு இல்லே? அங்கேதான் எங்கேயோ இருக்குது அந்தப் பொண்ணு. மதமதன்னு நிஜமாவே எடுப்பான ராயலசீமைக்காரி. கொஞ்சம் அனுசரிச்சுப் போனா வெர்சா முன்னுக்கு வந்துடலாம். மாட்டேன்னு முரண்டு பிடிக்குறா. ஹீரோ கூட ஒரு கண்ணு வச்சிருக்கான் தெரியுமில்லே?. போய்யா, முடியாதுன்னாளாம், சொக்கலிங்க ஆசாரி போட்ட கிணத்தடி செட்டிலேயே அவ ஆயுசு பூரா, தலை நரைச்சு நிக்கட்டும்.  நீ கிளம்பு.

 

தொழில் கூப்பிடுகிறது. தொழில் தர்மம் தெரிந்த ஆர்ட் டைரக்டர்கள் பற்றி நிறையக் கேட்டிருக்கிறேன்.  ஷ¥ட்டிங்குக்காகக் கொண்டு வந்த நாலு வாத்துக்களை, வாத்துகளையா வாத்துக்களையா, சரி ஏதோ ஒண்ணு, அதுகளை உடனே திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் வீட்டு முற்றத்தில் நாலைந்து நாள் மேய விட்டிருந்த சுப்பையரைத் தெரியுமோ? வாத்து மேக்கி ஐயர் என்று இன்னும் கூட பழைய கைகள் கூப்பிடுகிறார்கள். ஒரு படத்துக்கு அவரிடம் அசிஸ்டெண்டாக இருந்தேன். இழைப்பு உளியைக் கையில் எடுத்தால் மனுஷர் அற்புதமான தச்சராகி விடுவார். தெலுங்கில் மாயாஜாலப் படங்களில்  மந்திரவாதி குகை செட் போடுவது அவராகத்தான் இருக்கும்.  வில்லன் மந்திரவாதி ஏவி விட்ட பிசாசுகள் எல்லாத் திசையிலும் ஓடிய பிறகு, வில்லி தொடை வரைக்கும் வழித்துக் கொண்டு தொம்தொம் என்று குலுக்கியபடி குதித்து ஆடினாலும் ஒரு ஆணி கூட கழண்டு வராத குகை அதெல்லாம். அவருடைய மூக்குப் பொடி வாடையையும், மூக்குக்கு மேல் சதா வரும் கோபத்தையும் சகித்துக் கொள்ள முடிந்திருந்தால் நானும் ஜருகண்டி என்று தெலுங்கில் நுழைந்து லட்டு லட்டாகப் பணம் எண்ணிக் கொண்டிருப்பேன். இப்படி இட்லி காப்பிக்கு அண்ணாந்து கிடக்க வேணாம்.

 

காப்பி, நாஷ்டாவை எல்லாம் துச்சமாகப் புறக்கணித்து தேசமே துக்கத்தில் மூழ்கிக் கிடக்கிற ஒரு தினத்தில் பித்தளைக் குடத்தைத் தேடி அலைய ஆயத்தமாக ஈரச் சட்டையைக் கொடியிலிருந்து உருவி எடுத்தேன். ஆனந்தராவோடு வாசலுக்கு வந்தபோது தான் அவன் சைக்கிளில் கேரியர் இல்லை என்பது கண்ணில் பட்டது.

 

முன்னால் உட்காருடா, மிதிச்சுடலாம்.

 

அவன் சொன்னபடிக்கு குந்தினேன். சைக்கிள் தறிகெட்டு அலைபாய்ந்து அடுத்த வீட்டுத் தோட்டத்துக்குள் ஓடியது. பூச்செடியில் முட்டி மோதி குடை சாய, உள்ளே இருந்து யாரோ இரைந்தார்கள். பீப் பீப் என்று சத்தத்தோடு ஆகாசவாணி வீட்டுக்குள் செய்தி படிக்க ஆரம்பித்தது கேட்டது. நேருவின் சடலம் தகனமாகிற நாள், நேரம் குறித்த தகவலாக இருக்கும் என்பதால் தோட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் பொருட்படுத்த வேண்டியதாகத் தோன்றியிருக்காது.

 

வண்டியை நிமிர்த்தி எடுத்துக்கொண்டு ராவ் அவசரமாக வெளியேறினான். பின்னால் தட்டிக்கொண்டு நானும் நடந்தேன்.  பசியில் வயிறு ஆகாசவாணி போல் அழுதது.

 

தெருக் கோடியில் சின்னக் கும்பல் ஒன்று இன்னும் அடைக்காத கடைகளை உடனடியாகப் பூட்டச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தது. தெலுங்கு கடையில் கொத்தாகத் தொங்கும் பச்சை வாழைப்பழங்களைப் பார்க்கப பசி அதிகமானது. கடையை அடைக்கும் முன்னால் ஓடினால்  பிய்த்துத் தின்னலாம். துக்கம் அனுஷ்டிக்கவும் பித்தளைக் குடத்தைத் தேடவும் வயிற்றில் தீனி வேண்டும். குடத்தை இடுப்பில் ஏற்றி இறக்க, கதவை அடைக்கக் கூடத்தான்.

 

சைக்கிள் ஓட்டக் கூடாது, தெரியுமில்லே?

 

கூட்டத்தில் இருந்து கெச்சலாக ஒருத்தன் முன்னால் வந்து ஆனந்தராவ் சைக்கிளின் ஹேண்டில்பாரைப் பிடித்து நிறுத்தினான். புசுபுசுவென்று இருந்த அவன் மீசை என் கன்னத்தில் குத்துகிற நெருக்கத்தில் நின்றிருந்தான். மீசையை முறுக்கிவிட்ட படி முறைப்பான் என்று எதிர்பார்த்தபடி கீழே குதித்தேன். வயிற்றைத் தடவிவிட்டுக் கொண்டு அவன்  சொன்னதையே திரும்பச் சொன்னான். முகத்தில் திருப்தி தெரிந்தது. தெலுங்குக்  கடை அடைக்கும் முன்னால் வாழைப்பழம் பிய்த்துத் தின்றுவிட்டுத் துக்கம் அனுஷ்டிக்கிறவனாக இருப்பான். பத்து நிமிடத்தில் வயிற்றில் இருந்து பாரம் இறக்க வசதியாக வீடு இந்தப் பக்கம்தான் எங்கேயாவது இருக்கும். சுகமோ துக்கமோ அதெல்லாம் நடந்தே ஆக வேண்டிய விஷயம்.

 

ஆனந்தராவ் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு கெத்தாக நடக்க ஆரம்பித்தான். அவன் நடைக்குச் சரியாக நடந்தால், சுழன்று வந்த சைக்கிள் பெடல் காலில் இடறியது. கொஞ்சம் பின்னால் நடந்தால் அவனுக்கு சேவகம் செய்கிறதுபோல் தோன்றியது.

 

ராஜாபாதர் தெருக் கோடியில் சீரான சத்தத்தோடு மோட்டார் ஓடிக் கொண்டிருந்தது. பெரிய குழாய் மூலம் தொட்டியில் விழுந்து கொண்டிருந்தது கழிவு நீரா, இல்லை சுத்தப்படுத்தப்பட்ட தண்ணீரா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நேரு காலமானதற்காக இந்த மோட்டாரை நிறுத்த யாருக்கும் தோன்றவில்லை என்பது வருத்தமாக இருந்தது.

 

ஆனந்தராவ் சைக்கிளை நிறுத்தினான். முன்னால் வாய்க்கால் விட்டுப் போகிற மாதிரிப் பிரிந்த சந்துக்குள் இருந்து ஒரு பழைய வீடு எட்டிப் பார்த்தது. குகை வாசல் போல் கதவு பாதி திறந்திருந்தது. ஒற்றை அறை. வாசலை ஒட்டி அடிபம்பில் ஒரு தாடிக்காரன் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்தான். தகர வாளி.

 

அந்த வீட்டுப் பக்கம் நடந்தேன். தண்ணீர் சன்னமாக வாளியில் விழுந்தாலும் அடிபம்பை விடாமல் அடித்துக் கொண்டிருந்தான் அவன். வீட்டுக்குள் இருந்து முட்டை உடைத்த வாடை. காற்றில் மிதந்து வந்து காலில் ஒரு நீளமான முடிக்கற்றை சிக்கியது. எடுத்துப் போட்டுவிட்டு தாடிக்காரனை விசாரித்தேன்.

 

நடிகை வீடுதான் இது. இத்தனை கீகடமான இடத்திலா இருக்கிறாள்? புதுசாக வந்து ஒரு படத்தில் மட்டும் தலைகாட்டியவள். இன்னொரு குடம் இடுப்பில் வைத்தால் ஒன்றும் குடி முழுகிவிடாது என்று ஹீரோவுக்கும் மற்ற தேவையானவர்களுக்கு நிரூபித்தால் சொக்கலிங்க ஆசாரி போட்ட படுக்கையறை செட்டோடு நாலு படம்  கிடைக்கும். நிரூபிக்க வாகாகக் குடம் எங்கே?

 

வீட்டு நடையில் சுவரில் சாய்ந்து இருந்த வயதானவள் என்னைக் கவனிக்காமல் இருமலோடு தெலுங்கில் யாரிடமோ நைச்சியமாகப் பேசிக்கொண்டிருந்தாள். ஒரு நடுவயசுக்காரர் மடித்துக் கட்டிய வேட்டியோடு நாற்காலியில் வந்து உட்கார்ந்து தரையில் சிதறிக் கிடந்த முட்டை ஓட்டைத் தர்மசங்கடமாகப் பார்த்தார். மேல் சட்டை மட்டும் அணிந்த ஒரு சின்னப் பையன் வாசலை நனைத்து விட்டுத் திரும்ப வீட்டுக்குள் ஓடினான். செகண்ட் ஹீரோயினுக்கு இவர்கள் எல்லாம் என்ன உறவு? எல்லாரும் காலையில் முட்டை சாப்பிட்டார்களா? ரேடியோ கேட்டார்களா?

 

உள்ளே இருந்து தலைப்பா கட்டிய இன்னொருத்தர் கிழவிக்குக் கடுமையாகப் பதில் சொல்லியபடி வேகவேகமாக வெளியே வந்தார். ‘’சாயந்திரம் டாக்சி கிடைச்சா எடுத்துக்கிட்டு’ அவர் சொன்னதை முழுசாகக் கேட்க விடாமல் வீட்டுக்குள் இருந்து ரேடியோவில் நேருவுக்காக திருவாசகம் படிக்கிற சத்தம். வீட்டுச் சுவரில் சாய்த்து வைத்திருந்த சைக்கிளை நிமிர்த்தியபோது என்னைப் பார்த்து  முறைத்தார்.

 

இவர் கடன் வசூல் செய்ய வந்திருப்பார். முட்டை சாப்பிடக் காசு இருக்கிறது, கடனை அடைக்க முடியாதோ என்று கேட்டிருப்பார். பாக்கிக்கு ஈடாக ஜாமான் செட்டைத் தூக்குவேன் என்று  மிரட்டியிருப்பார். எடுத்துப் போக நேரு இறந்த துக்க நாள் சரிப்படாது போயிருக்கலாம். நேருவுக்காகத் துக்கம் கொண்டாடாத டாக்சி டிரைவர் அகப்படும் பட்சத்தில் அவர் சாயந்திரம் டாக்சி எடுத்து வருவார். அனுசரித்து நடந்தால் இனி துக்க நாள் ஏதும் இருக்காது. முக்கியமாக, கவுரவமான பெண்கள். ஹீரோவின் கண்பட்டவர்கள்.  குகைகளில் வசிக்கிற, ஆடுகிற பெண்கள்.

 

வாசலில் சிறுநீரை மிதிக்காமல் திரும்பினேன். உடம்பு சூட்டில் சட்டை உலர்ந்திருந்தது. ராவ் தூரத்தில் இருந்தபடிக்கே குடம் கிடைச்சுதா என்று ஜாடையில் விசாரித்தான். இல்லை என்று தலையசைத்தேன். அது உள்ளே இப்போதைக்கு பத்திரமாக இருக்கும். இன்னொரு தடவை வந்தால் யாராவது கைப்பற்றிக் கொண்டு போயிருப்பார்கள். தெரு திரும்பும்போது ரேடியோவில் நேரு மரணம் பற்றி அடுத்த செய்தி வாசிப்பது கேட்டது. காலையிலிருந்து கேட்கும் அதே தழுதழுத்த குரல்தான். அவர் சாப்பிட்டாரா என்று தெரியவில்லை.

 

(புதிய பார்வை 2008)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2022 17:51

November 11, 2022

குடம் – சிறுகதை நண்டுமரம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து

குடம்

 

ஆகாசவாணியில் ஜவஹர்லால் நேரு இறந்து போன செய்தி படித்துக் கொண்டிருந்தபோது ஆனந்தராவ் சைக்கிளில் வந்து இறங்கினான். ஊர் முழுக்க கடையடைப்பும் அங்கங்கே வரப் போகவிடாமல் சைக்கிளை, கட்டை வண்டியை, பிளஷர் காரை எல்லாம் வழிமறிக்கிறதாகவும் தகவல் வந்துகொண்டேயிருக்க, இவன்  சைக்கிளில் எப்படித்தான் வந்தானோ.

 

எனக்கும் நேரு இஷ்டம்தான். ஆனாலும் அவர் இப்படித் திடீர் என்று போய்ச் சேருவார் என்று எதிர்பார்க்கவில்லை. எழுபத்து நாலு எல்லாம் ஒரு வயசா என்ன? சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி பிறந்தநாள் என்றால் இனிமேல் தில்லியிலிருந்து யார் அறிக்கை விடப் போகிறார்கள்? கொடி ஏற்றுகிறது போல், சமாதானப் புறா பறக்க விடுகிற மாதிரியெல்லாம் பத்திரிகை முதல் பக்கத்தில் போட வேறு யாருடைய படம் தோதாக இருக்கும்? அதற்கெல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு அவர் போயிருக்கலாம். குறைந்த பட்சம் சக்ரபாணி ஓட்டலை அடைக்காமல் அங்கே வழக்கம்போல் இட்லியும் காப்பியும் கிடைக்கவாவது வழி செய்திருந்தால், குளித்து, நாஷ்டா பண்ணிவிட்டு வேலைக்குக் கிளம்பி இருக்கலாம். வேலை  இன்று நடக்கும் என்று தோன்றவில்லை. ஆனாலும் பசியாறாமல் முடியுமா?

 

போனவாரம் பார்த்தபோது சொன்னேனே, நாங்கள் ஒரு சினிமாப் படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்ப் படம். தேவகோட்டை அனாருனா தான் பைனான்சியர். கண்டமங்கலம் பையன் ஒருத்தன் கெச்சலாக நம்ம ராமநாதன் சார் கூடத் திரிந்து கொண்டிருப்பான் இல்லே, அவன் தான் டைரக்டர். ராமநாதன் சார் டைரக்ட் செய்து போன மாதம் வந்த படத்தில் உதவியாளர்கள் பெயர் அடங்கிய டைட்டில் கார்டில் கீழாக துணை வசனம் என்று போட்டு அவன் பெயரும் வந்திருந்தது, பார்த்திருப்பீர்கள். அந்தப் படம் சரியாக ஓடவில்லைதான். டவுணுக்கு வெளியே எங்கேயாவது  கீற்றுக் கொட்டகையிலாவது அது தட்டுப்படாமல் போகாது. கிடைத்தால் அவசியம் பாருங்கள். இன்றைக்கு வேண்டாம். கொட்டகை எல்லாம் அடைத்திருக்கும்.

 

ராமநாதன் சாரும் கண்டமங்கலம் பையனும் ஜவஹர்லால் நேருவும் கிடக்கட்டும். ஆனந்தராவ் என்னத்துக்கு வந்திருக்கிறான்? சட்டையில் கருப்புத் துணி குத்திவிடவா? அதற்கும் வழி இல்லாமல் சட்டையைத் துவைத்துப் போட்டிருக்கிறேன். ஆனந்தராவ் போல அசிஸ்டெண்ட் டைரக்டராக நான் இருந்தால் ரெண்டு சட்டையாவது கைவசம் இருக்கும். ஆர்ட் டைரக்டருக்கு எடுபிடி. கொஞ்சம் மேலே வந்து என் பெயரும் டைட்டில் கார்டில் போடுவதற்குள் நேருவுக்குப் பத்து இருபது திதி திவசம் நடந்திருக்கும். அதுவரை இந்தச் சட்டை கிழியாமல் இருக்குமா?

 

வாய்யா ஜேம்சு. ஷூட்டிங் லேது. நேரு மர்கயா. சரியா?

 

நான் புஷ் டிரான்சிஸ்டரை மேன்ஷன் வாசல்படியில் வைத்துவிட்டு ஆனந்தராவை விசாரித்தேன். என்னுடையதில்லை. கூடத் தங்கியிருக்கிற  காமரா அசிஸ்டெண்டுடையது. எனக்கான டைட்டில் கார்ட் போட்டதும் நானும் வாங்குவேன். வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு டிரான்சிஸ்டரில் மங்கல இசை, ஒலிச் சித்திரம், ஆகாசவாணி செய்திகள், சோக கீதம் என்று கேட்க சுகமாக இருக்கும்.

 

ராவ் சைக்கிளை ஸ்டாண்ட் போடாமல் சுவரில் அதை சார்த்தி வைத்துவிட்டு அரக்கப் பரக்கப் படி ஏறினான். அவன் காலடியில் டிரான்சிஸ்டரில் ஒற்றை வயலின் புலம்பியது. கிட்டத்தட்ட இதே டியூனில் தான் ஒரு பேத்தாஸ் பாட்டு போன மாதம் படத்துக்காக ரிக்கார்ட் செய்தோம். ரேப் சீனுக்கு அடுத்த காட்சி. நேரு உயிரோடு இருந்த நேரம்.

 

பல்லு வெளக்கிட்டியா? சட்டையைப் போட்டுக்கிட்டு வா.

 

ஆனந்தராவ் சொன்னான். நான் பல்லு வெளக்கியிருந்தால் உடனே சட்டையை மாட்டி விட்டுச் சாப்பாடு போடக் கையோடு கூட்டி வரும்படி யாரோ சொல்லி அனுப்பியதுபோல் இருந்தது. துக்கம் இல்லாமல் மங்கல இசை கேட்கிற யாரோ.

 

எங்கே போகணும் சொல்லு. காலையிலே இருந்து காப்பி கூட இல்லாம உக்காந்திருக்கேன். நேரு இப்படி திடீர்னு அவுட்டாகி.

 

அதுக்கு  சாவகாசமா உக்காந்து கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுதுடலாம் மவனே..

 

ரூம் உள்ளே அவன் வந்தபோது ராத்திரி படுத்துக் கிடந்த பாயைக் கூடச் சுருட்டி வைக்காதது ஞாபகத்துக்கு வந்தது. ஆனந்தராவ் பாயில் காலைப் பரப்பி உட்கார்ந்தான். பாய் ஓரமாகப் பிரிந்து இருந்த கோரையைப் பிய்த்தான்.

 

முந்தாநாள் பாட்டு ஷூட் பண்ணிணோம் இல்லே.

 

அவன் கோரைத் துரும்பால் காது குடைந்தபடி சாவகாசமாக ஆரம்பித்தான். போன வருடம் கல்யாணம் முடிந்து ஸ்டோர் வீட்டில் குடித்தனம் நடத்துகிற சம்சாரி. தாம்பத்தியத்தில் வேறே ஏது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் காலையில் ஒரு டம்ளர் நீர்க்கவாவது காப்பி கிடைக்கும். குடித்துவிட்டுக் காது குடைந்து கொண்டு உட்காரலாம். நேரு சாவுச் செய்தி திடீரென்று வந்து எல்லாம் இதை மாற்றாது.

 

நான் சும்மா வாய் பார்த்துக் கொண்டு நிற்க ஆனந்தராவ் தொடர்ந்தான்.

 

முடிச்சு பேக் அப் பண்ணி செட் ப்ராப்பர்டி எல்லாம் திருப்பிக் கொடுத்தாச்சோ?

 

பின்னே? உதவி-ன்னு டைட்டில் கார்ட் போடாவிட்டாலும் என் பொறுப்பில் இருக்கப்பட்ட காரியம் இல்லையா அது எல்லாம்? கிணத்தங்கரையிலே ஹீரோயின் தண்ணீர் இரைத்தபடி செகண்ட் ஹீரோயினோடு பாடுகிற காட்சி. கிணற்றுப் பக்கம் துளசி மாடம், அவசரமாகக் கட்டி வைத்த செங்கல், மேலே கவிழ்த்து நிறுத்தின ப-வடிவ மரச் சட்டம், நடுவில் ராட்டினம், தாம்புக் கயிறு, தகர வாளி இப்படி ஒரு ஜாமானையும். வேண்டாம். அது கெட்ட வார்த்தையாகிக் கொண்டிருக்கிறது இப்போது பட்டணத்தில். ஒரு பொருள் விடாமல். இது நல்ல வார்த்தை. ஒரு பொருள் விடாமல் ஜாப்தா படி எடுத்துப் போய் வாடகைக்கு எடுத்த கடைகளில் கொடுக்க வேண்டும். ஹீரோயினின் பஞ்சு அடைத்த உள்பாடி முதற்கொண்டு என் பொறுப்பில் தான் விடப்படுகிறது. அதுக்கு ஒரு வாடை உண்டு.

 

கிணற்றுப் பாட்டுக்காக தகரவாளியில் ஸ்டூடியோ கழிப்பறையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பியது நான் தான்.  எடுத்து முடிந்து ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்துப் போய் சொக்கலிங்க ஆசாரியாரின் சகலபாடியின் கடையில் கொடுத்துவிட்டு வர ப்ரொடக்ஷன் யூனிட் காரில் போனேன். அப்போதும் நேரு மூச்சு விட்டுக்கொண்டு இருந்தார். அன்றைக்கு டேராடூனில் இருந்தார் அவர். மகள் இந்திராவோடு பூந்தோட்டத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்ததாக சகலபாடி  கடையில் அப்போது ஆகாசவாணி செய்தி அறிக்கை படித்தது துல்லியமாக நினைவில் இருக்கிறது.

 

கிணத்துக் கைப்பிடிச் சுவர் மேலே ஒரு பித்தளைக் குடம் இருந்துதே. இன்னொரு குடம் வச்சா இடுப்பு உடையாதான்னு கதாநாயகி பாடும். அப்ப இந்த செகண்ட் ஹீரோயின் பொண்ணு குடத்தைத் தூக்கி இடுப்புலே வச்சுக்கும்.  அதை அப்படியே அணைச்சுப் பிடிச்சுக்கிட்டுச் சைட் ப்ரொபைல்லே  ரெண்டு மாரும் அலுக்கிக் குலுக்கிக்கிட்டு ஒய்யாரமா நடக்கும். காமிராவிலே மூணு குடம் தெரியும். சரியா?

 

ஆனந்தராவ் மாரைத் தள்ளிக் கொண்டு அசைந்தபடி பாடிக் காட்டினான். துணைக்கு ரேடியோவில் துக்கமான சங்கீதம். அது என்னமோ சாவு  என்றால்  யாரையாவது பிடித்து வந்து ஆகாசவாணியில் அழ வைத்து விடுகிறார்கள். வீட்டிலிருந்து சப்பாத்தி கட்டி எடுத்துக்கொண்டு அவர்கள் வேலைக்கு வந்திருப்பார்கள் போல.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2022 17:29

November 10, 2022

Here comes The Crown Season 5

ஆவலோடு எதிர்பார்த்த The Crown Season 5 – நெட்ஃப்ளிக்ஸில்
பத்து எபிஸோட்களில் கிட்டத்தட்ட ஐந்து இரண்டு நாளில் பார்த்தாகி விட்டது.

sort of binge watching.

பழைய ப்ரிட்டீஷ் பிரதமர் ஜான் மேஜர், காதலுக்காக முடிதுறந்த மன்னர் எட்வர்டின் நெருங்கிய நண்பன் போன்ற சேவகன் சிட்னி, ஹாரட்ஸ் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் அல் ஃபயத், அவர் தந்தை என்று எலிசபெத் மகாராணி கதாபாத்திரத்தை விட மற்றவர்களைச் சுற்றிச் சுழலும் கதைப் போக்கு….

நாவல் தினை ஒரு பக்கம் தான் எழுத முடிந்தது இன்று…

 

 

 

pic ack  Netflix

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 10, 2022 18:01

November 7, 2022

விரல் – புதிய சிறுகதை

விரல் – சிறுகதை

                                 இரா.முருகன்

சந்தன் என்ற சந்தான கோபாலன் அரங்கத்துக்குள் நுழைந்த போது,  ’மாதே மலயத்வ பாண்டிய சம்ஜாதே’ கம்பீரமாக ஒலித்துக் கொண்டிருந்தது.  கமாஸ் வர்ணம். மத்ய ஸ்தாயியில் ஜலஜலவென்று ஒன்றுக்கு இரண்டு சிட்டை ஸ்வரமாகப் பாடும்போது நர்மதை நதிப் பாலத்தில் நவஜீவன் எக்ஸ்பிரஸ் முன்னேறிக் கொண்டிருப்பது போல் பிரவாகம்.  அதுவும் ராஜாராமன் பாடினால். பாடிக் கொண்டிருக்கிறார்.

 

முதலிலிருந்து கேட்கக் கொடுத்து வைக்கவில்லை சந்தனுக்கு. வர்ணத்தில் கச்சேரி ஆரம்பித்திருப்பாரா அல்லது வாதாபி கணபதியிலா? ஹம்ஸத்வனியை துக்கடாக்களுக்கு அடுத்து கடைசியாகப் பாடி கச்சேரியை முடித்து வைக்கவும் கூடியவர் ராஜாராமன். அந்தக் குரல் கச்சேரியை எங்கே எப்படி தொடங்கினாலும், முடித்தாலும் அபூர்வமாக அந்தரத்தில் நிறுத்தி விட்டுப் போனாலும், ரசிகர்களைக் கட்டிப் போட்டுவிடும்.

 

இந்தக் கச்சேரி நடப்பதாக போன வாரமே தெரியும் சந்தனுக்கு. ஆபீஸ் விடுமுறை என்பதால் அரை மணி நேரம் முன்னதாகவே வந்துவிட உத்தேசித்திருந்தான். ட்ராஃபிக்கில் ஊர்ந்து வர வேண்டிப் போனது.

 

எல்லா சபாவிலும் மேடை நிர்வாகம், ரிசர்வேஷன் என்று முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள், நீண்ட காலமாக கச்சேரி போய்ப்போய் சந்தனுக்கு நல்ல நண்பர்களாகி இருக்கிறார்கள். சில சபாக்களில்  நிர்வாக கமிட்டி உறுப்பினராக செயல்பட அழைப்பு.

 

அதெல்லாம் சரிப்படாது சந்தனுக்கு. வந்தோமா, சபா கேண்டீனில் காப்பி குடித்தோமா, உட்கார்ந்து கச்சேரி கேட்டோமா, கச்சேரி முடிந்து,  பக்கவாத்தியக் காரர்களோடும், பிகு பண்ணிக் கொள்ளாத  பிரதான வித்வானோடும் சின்னதாக அரட்டை போட்டோமா, ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டோமா– ’பிரமாதம் சார், இன்னிக்கு ராத்திரி தூக்கத்திலே உங்க மோகனம் தான் வந்து ஏன் பள்ளி கொண்டீரய்யான்னு எழுப்பப் போறது’ – அது போதும்.

 

இங்கே இப்போது பாடிக் கொண்டிருக்கும் ராஜாராமனோடு பேச ஒவ்வொரு கீர்த்தனை பற்றியும் ஒருபாடு விஷயம் உண்டு சந்தனுக்கு. சொல்லப் போனால் அவரோடு பேசுவதை விட ராஜாராமன் மனைவியோடு பேச சந்தர்ப்பத்தை இரண்டு மாதமாக   எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன். இன்னும் எதேஷ்டமாக சௌந்தர்யம் குடிகொண்டிருக்கும் அந்த நாற்பது வயது சுந்தரிப் பெண் மேல் தகாத ஈர்ப்பு எல்லாம் எதுவும் இல்லைதான். இன்று சீக்கிரம் வந்திருந்தால்?

 

வந்திருந்தால் பல்லடம் சித்தப்பா சமீபத்தில் சொன்ன தகவலை சரி பார்த்திருக்கலாம். பல்லடம் சித்தப்பா வாயில் மூணு வரிசையாகப் பல். அதிகப் பல்லனும் அதிகப் பால் தரும் பசுவும் அதிர்ஷ்ட அடையாளம் என்று சித்தப்பா சொல்லியிருந்தார்.. இதைப் பசுவிடம் சோதிக்க முடியாது. எதை? பிரபல கர்னாடக சங்கீத வித்துவான் ராஜாராமன்  பெண்டாட்டி நம்மூர் பல்லடத்துப் பெண்தான் என்பதை.

 

சொன்னாரே சித்தப்பா. நம்ம போர்ட் ஹைஸ்கூலில் படித்தவள். ஆண்பிள்ளைகளும் பெண்களும் சேர்ந்து படிக்கும் அந்த ஸ்கூலில் படித்தவன் தான் சந்தனும்.

 

பெயர் என்னவாம்? கஜலட்சுமி. என்னது கஜலட்சுமியா. கஜலட்சுமியே தான். யாரு, சந்தனை ஆறு விரல் அழுக்கு பையா என்று  கிண்டல் செய்தபடி பாண்டி விளையாட கோடுதாண்டிக் குதிக்கும் புஷ்டியான பெண். சந்தனின் இடதுகை ஆறாம் விரலும் அவள் கூடவே குதிக்கும்.

 

’கஜம்னா ஆனைக்குட்டி. நீ போடி சித்தானக்குட்டி’ என்று சண்டை இழுத்த ஆறுவிரல் சந்தன் அவன். வேலைக்கு வந்து சியாட்டில் அமெரிக்கா போகும் முன்பு ஏதோ தோன்ற ஆப்பரேஷன் செய்து ஆறாம் விரலைக் களைந்து விட்டான்.

 

இது சந்தனின் ஆறாம் விரல் பற்றி இல்லை, கஜலட்சுமி பற்றி.  பல்லடம் சித்தப்பா சொன்ன தகவலை சரிபார்ப்பதே முக்கிய காரியமாகப் போனது. பாட்டுக்காரரான வீட்டுக்காரருக்குப் பின்னால் இருந்து தம்பூரா மீட்டும் பெண். அந்த ஸ்தூல சரீர ஸ்த்ரி தனியாவர்த்தனத்தின் போது தம்பூராவை வீட்டுக்காரர் முதுகில் சாய்த்து வைத்துவிட்டு, புடவைத் தலைப்பை இழுத்துச் செருகிக் கொண்டு மேடையில் கோடு இழுத்து ஆறு விரல் அழுக்குப் பையா என்று கிண்டல் செய்து ஆடினால்? ஆடினால் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். அவள் கஜலட்சுமி தானா?

 

கச்சேரி தொடங்கும் முன் தடார் என்று மேடைக்குப் போய் அரங்கத்துக்கு முதுகு காட்டி நின்று, ’எக்ஸ்யூஸ் மீ நான் சந்தன். பல்லடம் சந்தன், நீங்க கஜலட்சுமியா’ என்று கேட்கலாமா? ரொம்ப முரட்டுத்தனமா இருக்குமே. சரி, ”இன்னிக்கு மத்தியானம் வெய்யில் ஜாஸ்தி; நான் பல்லடம் சந்தன்; நீங்க கஜலட்சுமியா?” என்று வித்யாசமாகக் கேட்கலாமா? இன்னிக்கு வெய்யிலே இல்லாமல் இதமாக அல்லவா இருந்தது.

 

எதோ எப்படியோ பேசணும். சந்தன் மும்முரமாக தன் பள்ளித் தோழியை அடையாளம் காண வழி தேடிக் கொண்டிருக்கிறான்.

 

இன்றைக்கு சீக்கிரம் வந்திருந்தால்? வந்திருந்தால் மேடைக்குப் பின்னால் திரை விட்ட க்ரீன் ரூம் இத்யாதி பகுதிக்குப் போயிருப்பான். போன மாதம் ஒரு ராஜாராமன் கச்சேரிக்கு இப்படித்தான் தும்புரு கான சபையில் மேடைக்குப் பின் மைக் டெஸ்ட் பண்ணிக் கொண்டிருந்த அந்த அம்மணியிடம், இப்போதைக்கு கஜலட்சுமியாகவே இருக்கட்டும்,   பேசப் போனபோது ராஜாராமன் குறுக்கே வந்து சேர்ந்தார்.

 

”சுக்கு மிளகு பொடிச்ச இருமல் சூர்ணம் வென்னீரோட எனக்குத்தான் சார். அவளுக்கு அதெல்லாம் தேவையே இல்லை. என் ஒய்ப்பை சொல்றேன் என்று அபிநயம் பிடித்த ராஜாராமன் காத்திருந்த மாத்திரை விவகாரத்தில் தான் பங்கெடுக்கவில்லை என்றான் சந்தன்

 

ராஜாராமன் உடனே தன் மனைவியைப் பற்றி ஒரு வார்த்தை நல்லதாகச் சொல்ல உத்தேசித்து, ”இவ தம்பூரா மீட்டி ஸ்ருதி தராட்ட நான் சுஸ்வரமாக பாடின மாதிரி தான். ஒண்ணு இல்லே ரெண்டு இல்லே நூறு கச்சேரியிலே தம்புரா போட்டிருக்கா சார் இன்னமும் தம்புரா ஆர்டிஸ்ட் தான்; பின்பாட்டு கூட சிஷ்யைகளை பாட வச்சுடுவேன்” என்று தன்னைத்தானே மெச்சிக்கொண்டார்,

 

”காப்பி நாக்கு பொளிகிற சூடாப் போடலியே? அப்புறம் ராஜமுந்திரி கச்சேரி மாதிரி ஆயிடும்?” பிரம்மாண்டமான ப்ளாஸ்கைச் சுட்டிக் காட்டிக் கேட்டபோது அவர் மனைவி ஏழு நாரைகள் சேர்ந்திசை எழுப்பும் குரலில் ”நான் ஒண்ணுக்கு மூணுதடவை செக் பண்ணிட்டேன்” என்றாள் சந்தனைப் பார்த்துக் கொண்டு. ராஜமுந்திரியில் என்ன ஆச்சு கஜலட்சுமி என்று உரையாடலை ஆரம்பிக்கலாமா? வேண்டாம். துஷ்டா துன்மார்க்கா என்று வைது தீர்க்கலாம் உரிமை எடுத்துக் கொண்டு பெயர் சொல்லிக் கூப்பிடுகிறவனை. காலம் கெட்டுக்கிடக்கு.

 

”பயப்பட வேணாம், அவளுக்கு தொண்டைக்கட்டு. அது வேறே ஒண்ணுமில்லே. எனக்கு எலுமிச்சம்பழம் பிழிஞ்சு உருளைக்கிழங்கு மசியல் உசிரு. ஆனால், சாப்பிட்டா தொண்டை கட்டி பாட முடியாமல் போயிடும். அதனாலே நான் கறிவேப்பிலைப் பொடி சாதம் சாப்பிடறபோது டைனிங் டேபிள்லே எதிர்லே உட்கார்ந்து மிசிஸ்ஸை எலுமிச்சை பிழிஞ்சு உருளை பொடிமாஸ் சாப்பிடச் சொன்னேன்”.

 

அட கிராதகரே, நீர் ரீதிகௌளையிலே ’தத்வமறிய தரமா’ன்னு நெகிழ்ச்சியா ஏங்க, என் பள்ளித்தோழியான்னு தெரியலே, யாரோ இந்தப் பெண்ணரசி, தொண்டை கட்டச் சாப்பிடணுமா?

 

பேச்சு வளராமல் சபா செக்ரட்டரி வந்து ”படுதா தூக்கிடலாமா சார்?” என்று கேட்க, ”தூக்க வேண்டியதுதான்; கச்சேரி முடிச்சு    சங்கீத நாடக அகாதமி கமிட்டி மெம்பர் ஜனாப் தில்ஷித் கானுக்கு என் வீட்டிலே விருந்து” என்றார் ராஜாராமன். நான் எப்படிப்பட்ட ஆள், என்ன மாதிரி தொடர்பு‌ எல்லாம் ஏற்பட்டவன் என்று சந்தனிடம் சொல்லாமல் சொல்லி எழுந்தபோது, அவர் வீட்டம்மா காதில் ஏதோ சொல்ல, ’அதெல்லாம் கச்சேரி நடுவிலே சொல்லிடலாம்’ என்றார் ராஜாராமன். என்ன என்று புரியவில்லை சந்தனுக்கும் சபா செக்ரட்டரிக்கும்.

 

”அது ஒண்ணுமில்லே சார், என் கார் இன்னிக்கு ஒர்க்‌ஷாப் போயிருக்கு, திரும்ப வீட்டுக்கு கொண்டுபோய் விட   டாக்சி ஏற்பாடு பண்ணி ராகம் தானம் பல்லவி முடிஞ்ச உடனே காதுலே போட்டா போதும். காகித சீட்டுலே எழுதி அனுப்பிடாதீங்க.   நான் பேப்பர்லே எழுதினதை பாடினாலும் பாடிடுவேன்”. சிரித்தபடி,  பேச்சு வளர்க்காமல் சந்தன் அரங்கத்துக்குப் போனான்.

 

அது போன கச்சேரி. இந்த வாரம் இந்த சபா. கச்சேரி மட்டும் கேட்டுவிட்டு எழுந்து வர வேண்டியதுதான். கச்சேரி முடிந்து சின்ன அரட்டை நடத்த முடியுமோ தெரியவில்லை. வித்துவான் ராஜாராமன் கார் இல்லாமல் இருந்தால் நல்லது. சந்தனுடைய காரில் கொண்டுபோய் விடுவான். வீட்டில் போய் ரொம்ப தேங்க்ஸ் என்பார் ராஜாராமன். மற்றும் கஜலட்சுமி. ”ஒரு வாய் காப்பி குடிச்சுட்டுத்தான் போகணும்”. ”காப்பி சாப்பிட ஏது நேரம் காலம்?” சூடாக காபி வரும்போது ஆரம்பிக்கலாம், ”பை தி பை நீங்க பல்லடமா?”.

 

அரங்கத்தில் ஒன்றிரண்டாக எரிந்த விளக்குகள் மங்கலாக ஒளி பரத்தின. ’கானமூர்த்தே”  குரல் மேடையில் இருந்து சீராக ஒலித்தது சட்டென்று பிசிறியது. அமைதியான அரங்கில்  ஹிப்நாடிஸ அனுபவம்   சிருஷ்டிக்கும் கானமூர்த்தி ராகம் நடுவில் நின்று ராஜாராமன் பத்து வினாடி இருமி, அவசரமாக ப்ளாஸ்க் திறந்து டம்ளரில் காப்பி ஊற்றிக் கொடுத்தாள் கஜலட்சுமி போல பெயர் கொண்ட பெண்மணி.

 

தொடர்ந்து கரகரப்ரியா ஆலாபனை. சக்கனி ராஜாவா, இல்லை, ராம நீ சமானமெவருவா அல்லது பக்கல நிலபடியா? ராஜாராமன் ஒரு சிரிப்போடு ’நடசி நடசி’ ஆரம்பித்தார். எடுத்தது தான் தெரியும் குழைந்து மேடையிலேயே சரிந்து விழுந்து விட்டார். திரை இறக்கப்பட, சந்தன்   மேடைக்கு ஓடினான்.

 

அந்த நிமிடத்தில் அவன் சகலமானதற்கும் பொறுப்பு எடுத்துக் கொண்டான். இப்போதைக்கு கஜலட்சுமி என்று பெயர் வைத்த ராஜாராமனின் மனைவி அவசரமாக, பாதி சாப்பிட்ட சபா கேண்டீன் நெய் ஜாங்கிரியை இலையோடு குப்பையில் எறிந்தாள். எனக்காக சாப்பிடவில்லை என்ற முகபாவம்.

 

சபாவுக்கு ஒரு கிலோமீட்டருக்குள் தான் ராஜாராமனின் சிறப்பு மற்றும் குடும்ப டாக்டர் இருப்பதாக ராஜாராமன் மனைவி பதட்டத்தோடு சொல்ல, கைத்தாங்கலாக சந்தன் காரில் அவரை ஏற்றி கிளினிக் கூட்டிப் போனான், ராஜாராமன் மனைவி பின்சீட்டில் அவரை மடியில் படுக்க வைத்தபடி விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டு வந்தாள். இன்னிக்குன்னு கார் வேறே இல்லே என்று நடுவில் சந்தனிடம் கரகரத்த குரலில் சொன்னாள். நிச்சயம் கஜலட்சுமி இல்லை அவள். கீச்சிடும் குரலோடு தான் நினைவில் இருக்கிறாள் சந்தனுக்கு.

 

ராஜாராமனுக்கு ஒன்றுமில்லை என்று ஒரு இன்செக்‌ஷன் போட்டு டாக்டர் எழுந்தார். எதுக்கும் இதை வச்சுக்குங்க என்று கொடுத்தது டானிக் ரகமாகத் தெரிந்தது. ராஜாராமன் மனைவி முகத்தில் தெளிவு.

 

அண்ணாமலைபுரத்தில் ராஜாராமன் வீட்டில் கொண்டு போய் அவரையும் மனைவியையும் இறக்கி விட்டான் சந்தன். ரொம்ப நன்றி சொன்னாள் அவர் மனைவி. கிளம்பும்போது மொபைல் எண் கொடுத்து ஏதாவது அவசரம் என்றால் கூப்பிடச் சொன்னான் சந்தன்.

 

ஹாலில் இருந்து முன்னறைக்கு வந்தபோது அவளை, ”நீங்க பல்லடம் தானே, நான் சந்தன் என் கிளாஸ்மேட்டா நீங்க?” என்று கேட்க நினைத்தான்.

 

ஆறாம் விரல் எங்கே? அது இல்லாமல் நீ சந்தன் என்று எப்படி நம்புவது? கேட்பாள். வேண்டாம். வேறு எப்போதாவது சந்தர்ப்பம் வந்தால் பேசலாம். சந்தனா கஜலட்சுமியா ஆறாம் விரலா, அது முக்கியமில்லை. தேவையான நேரத்தில் கரம் நீட்ட முடிந்தாலே போதும்.

 

சந்தன் வாசலுக்குப் போகும்போது வீட்டு முகப்பிலிருந்து குரல் – ”சாவகாசமாக ஒய்ப்பை கூட்டிட்டு வந்து போ சந்தான கோபாலா”.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 07, 2022 17:43

November 3, 2022

புது நாவல் ‘தினை’

‘தினை’ நாவல் கிட்டத்தட்டப் பாதி எழுதப்பட்டிருக்கிறது. ஜனவரியில் நிறைவடையும்.

எடிட்டிங்க் நிறையத் தேவைப்படும் புதினம் இது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2022 19:27

November 2, 2022

(நிறைவு பெறாத) தமிழ்ப் படம் -முத்தம்மா டீச்சர் பார்க்க முயன்றது – குறுநாவல் பகுதி

கடற்கரை.

 

சென்னை கடற்கரை உலகிலேயே இரண்டாவது பெரிய, அழகிய கடற்கரை. நாங்கள் சென்னைக்கு இன்பச் சுற்றுலா சென்றபோது, கடற்கரை, திருவல்லிக்கேணி, அண்ணா சமாதி என்று பல இடங்களுக்குப் போனோம். கலங்கரை விளக்கம் என்பது கப்பல்களை வழிப்படுத்தும் விளக்கு அமைந்த, கடற்கரையில் உயர்ந்து நிற்கும் கட்டிடமாகும். அங்கே யாரும் குடியிருக்க முடியாது. வாசலில் எருமை மாடு கட்டிப் பால் கறக்க முடியாது.

 

முத்தம்மா டீச்சர் காம்போசிஷன் நோட்டை மூடி வைத்துவிட்டுக் கடற்கரை மணலில் நடக்கிறாள். கையில் குடை,

 

நாயனா வேலைக்கான உத்தரவை பட்டுவாடா செய்ததும், தொப்பை வைத்த, சிவந்த உப்பிய உதடும், பூனை மயிர் மீசையும் உடைய கதாநாயகன் இங்கே வருவான்.

 

டீச்சர் மணலில் உட்கார்கிறாள்.

 

‘ப்பீப் .. ப்பீப்..’

 

விசில் ஊதிக்கொண்டு காக்கி டிராயரும், தொளதொளப்பான காக்கி சட்டையும் அணிந்த போலீஸ்காரன் மணலில் கால் புதைய நடந்து வருகிறான்.

 

‘யாரும்மா இங்கே தனியா உக்காந்துக்கிட்டு.. வீட்டுக்குப் போ..’

 

ஜோதி அக்கா வீட்டுக்காரன் அவன்.

 

‘வீடு இல்லையே.. உங்க கூட வந்துடட்டா..ரிடையர் ஆகி வ்ர்ற பணம்.. வீடு வித்ததுலே வர்ற பங்கு எல்லாம் கொண்டாறேன்.. ஒரு ஓரமா முடங்கிப்பேன்.. ஜோதி மகளுக்குப் புள்ளை பொறந்தா, பீ தொடப்பேன்.. மூத்திரம் அலம்பி வுடுவேன்.. வாய்ப்பாடு சொல்லித் தருவேன்.. தோசை சுடுவேன்.. கவாப்பு பண்ணுவேன்..’

 

போதும்பொண்ணு மாதிரி மணலில் இரண்டு கையையும் ஊன்றி அளைந்தபடி அவன் முகத்தைப் பார்க்கிறாள் டீச்சர்.

 

‘உனக்கு விசயமே தெரியாதா.. உங்கக்கா எனக்குச் சொல்லியிருக்காளே.. நீ ஒரு மாதிரிப்பட்டவளாம்… படி ஏத்தக் கூடாதாம்.. பணத்தை மட்டும் அப்பப்ப வாங்கிக்கிட்டு போஸ்ட் கார்டுலே நாங்க சுகம்.. நீ சுகமாவோட நிறுத்திடணுமாம்.. இல்லாட்ட நான் எப்பவோ கூட்டிப் போயிருப்பேனே.. இந்த மாப்பிள்ளப் பய ஆரம்பிச்சு வச்சான்.. வாத்தி மேல்கொண்டு போனான்.. நான் காதும் காதும் வச்ச மாதிரி முடிச்சிருப்பேனே..’

 

ஜோதி அக்கா வீட்டுக்காரன் லாத்தியைச் சுழற்றிக் கொண்டே சிரிக்கிறான்.

 

‘நான் அப்படிப் பட்டவ இல்லே..நாயனா கிட்டே கேட்டுப் பாருங்க..’

 

முத்தம்மா அழுகிறாள். அவன் சும்மா சிரிக்கிறான்.

 

‘பிரதமர் கிட்டே கேட்டுப் பாருஙக்.. போலந்து போய்ட்டு வந்திருப்பாரு.. ‘

 

அவன் லாத்தியை வீசியபடி நடந்து போகிறான்.

 

‘நான் அப்படிப் பட்டவ இல்லே’

 

முத்தம்மா டீச்சர் பெருங்குரலெடுத்துக் கத்துகிறாள்.

 

அவளுடைய சத்தம் கடல் இரைச்சலில் கரைந்து ஒன்றுமில்லாமல் போக, ஜோதி வீட்டுக்காரன் ஒரு வினாடி திரும்பிப் பார்த்து விட்டு விலகி நடக்கிறான்.

 

முத்தம்மா டீச்சர் திரையில் படகுப் பக்கம் உட்கார்ந்து கொண்டு நாற்காலி வரிசையைப் பார்க்கிறாள்.

 

கையில் மெழுகுதிரிகளோடு தெரசாள் வீட்டுக்காரர் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிறார்.

 

‘உங்க நாயனா இறந்துட்டாரு.. இறங்கி வந்து உன் நாற்காலியிலே உக்காரு.. சடகோப மாமா கூட்டிப் போக வ்ரப் போறார் இப்ப.. கவலைப்படாதே.. தேவனை விசுவாசி.. ரெபக்காளை அழைத்து இந்த மனுஷ்யன் கூடப் போகிறாயா என்று கேட்டார்.. அவளும் சரியென்று சொல்லி..’

 

கணீரென்று தொடரும் குரலை அமுக்கி, ‘பாம் பாம்’ என்று கார் சத்தம்.

 

‘வா.. தேவன் அழைக்கிறார்’.

 

தெரசாள் வீட்டுக்காரர் மெழுகுதிரியைக் கொளுத்திப் பிடித்தபடி தலையசைக்கிறார்,

 

‘பாட்டொன்று பாடலாமா பாடிட்டு வந்துடறேன்..’

 

முத்தம்மா காம்போசிஷன் நோட்டை கடற்கரை மணலில் பரத்தி வைத்து திருத்த ஆரம்பிக்கிறாள்.

 

கடல் ஆழமானது. கடல் பீதியளிக்கக் கூடியது. பெரிய கண்டங்களைக் கடல் கொண்டுள்ளது. லெமூரியாவும் அவற்றில் ஒன்று. எருமைக்காரன் தெருவையும் கடல் கொள்ளும்.

 

முத்தம்மா எழுந்து நிற்கிறாள். கதாநாயகியும் தோழிகளும் படகை நெருங்கி அவள் பக்கம் வருகிறார்கள். கடல் பின்னால் இரைகிறது. அலையடிக்கிறது.

 

’என்ன பண்றே முத்தம்மா?’

 

கதாநாயகி பிரியத்தோடு விசாரித்தபடி அவளுடைய மூக்குக் கண்ணாடியை உருவுகிறாள். தோழிகள் சிரித்தபடி ஆடுகிறார்கள்.

 

இருங்கடி… கவாப்பு மூஞ்சிக்காரன் வந்து பாட்டுப் படிச்ச பின்னாடி தான் ஆடணும்’

 

கதாநாயகி கண்டித்தபடி தூரத்தில் மோட்டார் சைக்கிள் வருகிறதா என்று பார்க்கிறாள்.

 

முத்தம்மா காம்போசிஷன் நோட்டுகளை படகுக்குப் பின்னால் ஒளித்து வைக்கிறாள்.

கடல் ஆழமானது. கடல் பீதியளிக்கக் கூடியது. பெரிய கண்டங்களைக் கடல் கொண்டுள்ளது. லெமூரியாவும் அவற்றில் ஒன்று. எருமைக்காரன் தெருவையும் கடல் கொள்ளும்.

முத்தம்மா எழுந்து நிற்கிறாள். கதாநாயகியும் தோழிகளும் படகை நெருங்கி அவள் பக்கம் வருகிறார்கள். கடல் பின்னால் இரைகிறது. அலையடிக்கிறது.

’என்ன பண்றே முத்தம்மா?’

கதாநாயகி பிரியத்தோடு விசாரித்தபடி அவளுடைய மூக்குக் கண்ணாடியை உருவுகிறாள். தோழிகள் சிரித்தபடி ஆடுகிறார்கள்.

இருங்கடி… கவாப்பு மூஞ்சிக்காரன் வந்து பாட்டுப் படிச்ச பின்னாடி தான் ஆடணும்’

கதாநாயகி கண்டித்தபடி தூரத்தில் மோட்டார் சைக்கிள் வருகிறதா என்று பார்க்கிறாள்.

முத்தம்மா காம்போசிஷன் நோட்டுகளை படகுக்குப் பின்னால் ஒளித்து வைக்கிறாள். கதாநாயகியும் தோழிகளும் விடாமல் தேடிப் பிடித்து ஒவ்வொரு காகிதமாகக் கிழித்துக் கப்பல் செய்து விளையாடுகிறார்கள். முத்தம்மாவும் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

மோட்டார் பைக் சத்தம்.

முத்தம்மா டீச்சர் இருதயம் ஒரு வினாடி நின்று போகிறது. அப்புறம் சந்தோஷத்தில் திக்குமுக்காடுகிறது.

‘பாட்டொன்று பாடலாமா..’

இழைந்து வருகிற குரல்.

கதாநாயகி ஓட ஆரம்பிக்கிறாள். தோழிகளும் ஓடுகிறார்கள். வரிசைக் கடைசியில் குடையைத் தூக்கிக்கொண்டு முத்தம்மாவும் ஓடுகிறாள்.

அவன் துரத்திக் கொண்டு வருகிறான். பவுடர் அப்பிய முகம் மட்டன் கவாப்பு போல ஊதிக் கிடக்கிறது.

கதாநாயகி வளைந்து நெளிந்து அவன் கையில் பிடிபடாமல் ஓட, முத்தம்மாவும் மற்றவர்களும் தாளத்துக்குத் தகுந்தபடி தொம்தொம் என்று குதித்துக் கொண்டு, மார்பைக் குலுக்கி ஓடுகிறார்கள்.

‘பருவச் சிட்டே.. எங்கே நீ போனாலும்..’

கதாநாயகியின் கையைப் பிடித்து இழுக்கப் போகிறான். அப்புறம் அவள் அவனுடைய மார்பில் சாய வேண்டும். கண்ணை மூடி சந்தோஷத்தை அவள் அனுபவிப்பாள்.

‘தேன் உண்ட வண்டாக..’

வேண்டாம் .. அவளுக்கு இதெல்லாம் கிடைக்க வேண்டாம்..’

முத்தம்மா பணம் கொடுத்திருக்கிறாள். அவள் ‘ஆடு’ என்றால் எல்லோரும் ஆட வேண்டும். ‘பாடு’ என்றால் பாட வேண்டும். கர்ணம் அடிக்கச் சொன்னால், கர்ணம் அடித்து வேடிக்கை காட்ட வேண்டும்.

‘போடி.. போய்த் தரையிலே விழுந்து புரளு.. தட்டுவாணிச் சிறுக்கி..’

முத்தம்மா குடையால் கதாநாயகி விலாவில் இடித்துத் தரையில் தள்ளிவிட, அவள் ஈர மண்ணில் புரள்கிறாள்.

முகம் சுருக்கம் தட்டி, முலை வற்றி, தலை நரைத்துக் கிடக்கும் கதாநாயகி. கண்ணாடி போட்டவள். புறங்கையில் சாக்பீஸ் பொடி அப்பியிருப்பவள்.

உருண்டு திரண்ட உடம்போடு, முகம் பளபளவென்று முத்தம்மா.

அவளுக்கு இருபது வயது. காலேஜில் படிக்கிறாள். காரில் கடற்கரைக்கு வந்திருக்கிறாள்.

முத்தம்மா டீச்சர் திரையிலிருந்து பால்கனியைப் பார்க்க, மாப்பிள்ளையைக் காணோம். கதிரேசனையும். அப்புறம் அம்மா, நாயனா, பினாங்கிலிருந்து வந்த தம்பி, எலிசபெத், மரியஜெகம்…

வேறு யாரும் இல்லாத நாற்காலி வரிசையில் கடையில் உட்கார்ந்து தலையைப் பிடித்தபடி முத்தம்மா டீச்சர் மட்டும்..

‘பாட்டொன்று பாடலாமா.. பக்கம் வந்து பேசலாமா..’

(நிறைவு)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2022 19:02

November 1, 2022

தமிழ்ப் படம் பார்த்து முடிக்காத முத்தம்மா டீச்சர் பகுதி 7அ

ராவுத்தர் பேக்கரி ஸ்லைட்.

 

தம்பிக்கு ராவுத்தர் பேக்கரி பன்ரொட்டி ரொம்பப் பிடிக்கும்.

 

முத்தம்மா டீச்சர் முதல் மாதச் சம்பளத்தில் அவனுக்குப் பன்னும் கேக்கும் வாங்கிப் போனாள். எடுத்துச் சாப்பிடச் சாப்பிடப் பரிவோடு பார்த்துக் கொண்டு..

 

‘அக்கா.. பன்னு சாப்பிடறியா?’

 

பின் வரிசையிலிருந்து தம்பி குரல்.

 

‘சும்மா இருக்க மாட்டீங்களா.. பிள்ளைக்குன்னு வாங்கியாந்திருக்கேன்.. அக்கா அக்கான்னு உசிரை விடறீங்களே.. எங்கே…நம்ம புள்ளைக்கு அரை பவுன்லே மோந்திரம் பண்ணிப் போடச் சொல்லுங்க பார்ப்போம் உங்க அக்காளை..’

 

எலிசபெத் குரல் கீச்சு கீச்சென்று பின்னால் இருந்து வருகிறது. அவளும் அங்கே தான் இருக்கிறாளா..

 

‘ப்ராவிடண்ட் லோன் போட்டுப் பணம் வந்ததும்..’

 

முத்தம்மா டீச்சர் சொல்லிக் கொண்டிருக்க, ‘வீடு வாங்க, விற்க..’ ஸ்லைட்.

 

’வீடு விக்கப் போறோம்.. படம் பார்த்துட்டு அப்படியே எளுந்து போயிடு.. என்ன தெரியுதா?..’

 

எலிசபெத் மிரட்டுகிறாள். அவள் பிள்ளை அழுகிறது. பன்னு வேணாம்… மோதிரம் போடு..

 

நியூஸ் ரீல் ஆரம்பமாகிறது.

 

மூணு நாள் நல்லெண்ண விஜயமாக போலந்து போகிறார் பிரதமர்.

 

வரிசை வரிசையாகக் கொடி பறக்க நகர்கிற கார்கள்.

 

போலந்தின் தலைநகரம் வார்சா. முத்தம்மா எட்டாம் வகுப்புக்குப் பாடம் எடுத்திருக்கிறாள்.

 

பிரதமரின் கார் ஊர்ந்து வர, அவள் கையசைக்கிறாள். அவர் கனிவாகச் சிரிக்கிறார்.

 

‘நானும் உங்க கூட வார்சா வந்துடட்டுமா.. வீட்டை விட்டுப் போகச் சொல்றாங்க..’

 

டீச்சர் மன்றாடுகிறாள். பிரதமர் சிரித்தபடி போகிறார்.

 

‘வார்சா எல்லாம் போக வேணாம்.. பள்ளிக்கூடத்திலேயே தங்கிக்கலாம்..’

 

கதிரேசன் வாத்தியார் காதில் கிசுகிசுக்கிற சத்தம்.

 

‘ஆமாமா.. நாலு பலகையை இளுத்துப் போட்டா படுக்கை..’

 

மாப்பிள்ளை சிரித்தபடி முத்தம்மா தோளில் கை வைக்கிறார்.

 

’படத்தைப் பாக்காம வளவளன்னு என்ன பேச்சு..’

 

பின்னால் இருந்து அலமேலம்மாக் கிழவி சத்தம் போடுகிறாள்.

 

படம்.

 

ஆரம்பமாகி விட்டது.

 

முத்தம்மா டீச்சர் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டு பால்கனியில் சுற்றிலும் பார்க்க, அவள் மட்டும்தான் அங்கே.

 

திரையில் பெயர்கள் நகர்ந்து போகின்றன.

 

திரை வெளிறி, சிகப்பும் பச்சையுமாக அங்கங்கே கீறல் விழுந்த பெரிய பங்களா.

 

கால்சராய் போட்டுக் கொண்டு காரில் ஏறும் கதாநாயகி.

 

‘முத்தம்மா.. நீயும் வாயேன்.. கடற்கரைக்குப் போறோம்..’

 

அவள் கூப்பிடுகிறாள்.

 

‘காம்போசிஷன் நோட்டு திருத்தணுமே..’

 

‘அந்த கவாப்பு மூஞ்சி தடியன் வந்து பாட்டொன்று பாடலாமான்னு ஆடுவானே.. உனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டாச்சே முத்தம்மா..’

 

யாரோ காலை விந்தி விந்தி நடந்து வந்தார்கள். நாயனா.

 

‘நாயனா, பீச்சுக்குப் போயிட்டு வரட்டா.. நாலணா கொடுங்க.. பொரிகடலை வாங்கணும்..’

 

முத்தம்மா நாயனா தோளில் தொங்கியபடி கேட்கிறாள்.

 

‘சும்மா சத்தம் போடாதேடி.. தம்பிக்காரன் வந்திருக்கான்.. ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வீட்டுலே பால் வாங்கிட்டு வந்து ஒரு வாய் காப்பித்தண்ணி வச்சுக் கொடேன்.. வீட்டு வாசல்லே பாக்கியலச்சுமி வந்து நின்னப்போ பிடிச்சுக் கறந்திருக்கலாமில்லே.. பொழைக்கத் தெரியாதவளே..’

 

அம்மாவும் பின்னால் தான் உட்கார்ந்திருக்கிறாள்.

 

‘நாயனா.. நான் பீச்சுலே கவாப்பு மூஞ்சிக்காரனோட பாடிட்டுத் திரும்பி வர்றதுக்குள்ளே தம்பி வீட்டை வித்துட்டான்னா நான் எங்கே போறது?’

 

நாயனா அவள் சொல்வதைக் கவனிக்காமல் தோளில் மாட்டிய பையில் இருந்து கத்தை கத்தையாகக் கடிதங்களை வெளியே எடுக்கிறார்.

 

‘அம்மா.. இண்டர்வ்யூவிலே நல்லா செஞ்சிருக்கேன்.. கட்டாயம் வேலைக்கு ஆர்டர் வந்துடும் பாரு.. அப்புறம் உன்னை கண் கலங்க விட மாட்டேன்..’

 

திரையில் கதாநாயகன் வெள்ளைச் சேலை கட்டிய அம்மா கையைப் பிடித்தபடி சொல்கிறான்.

 

நாயனா ஒரு கடிதத்தை எடுத்து பால்கனியில் மங்கிய வெளிச்சத்தில் கண்ணைக் கவிந்து கொண்டு படிக்கிறார்.

 

‘ராஜசேகர்னு போட்டிருக்கு..யாருக்கு வந்த கடுதாசின்னு தெரியலியே..’

 

‘அவர்தான் நாய்னா.. வேலைக்கு ஆர்டர்.. சொன்னாரில்லே.. பாட்டொன்று பாடலாமான்னு பீச்சுலே ஓடியாறப் போறாரு.. நானும் போகணும்.. காசு வேணும்..’

 

முத்தம்மா நாயனா தோளைப் பிடித்தபடி சிணுங்குகிறாள்.

 

‘பி.எப் பணம் வந்ததும் போயேன்..’

 

நாயனா காலை இழுத்துக் கொண்டு சைக்கிள் பக்கம் போகிறார்.

 

கடற்கரை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2022 19:17

October 31, 2022

Appa Ramesh’s Morning Marvels கட்டுரைத் தொகுப்பு வெளியீடு

லண்டன் மாநகரில் இருக்கும் போது பணிக்குப் போக வேண்டாத ஞாயிற்றுக்கிழமை மகிழ்ச்சியான நிகழ்ச்சி நிரல் போட்டுக் கொள்வேன். அதன் கண்ணிகள் ட்யூப் என்ற பாதாள ரயில் சேவை சார்ந்தவை.

 

கார்டியன் தினசரிப் பத்திரிகை வராத தினம் என்பதால், சண்டே அப்சர்வரை மேய்ந்து விட்டு கென்சிங்க்டன் கார்டனில் காலாற நடந்து,  எர்ல்ஸ் கோர்ட்டில் வண்டி ஏறி, ஸ்ட்ராண்டிலும் கோவண்ட் கார்டனிலும் சுற்றி அலைந்து, ஈஸ்ட் ஹாம்  சரவண பவனில் தென்னிந்திய உணவு உண்டு, பிக்கடலி வீதி வந்து க்ரீன் பார்க் கடந்து ஹைட் பார்க்கில் நுழைந்து வடகிழக்கு மூலையில் ஒரு பழைய பெஞ்சை நோக்கி நடப்பது வழக்கம்.

 

அங்கே ஒவ்வொரு ஞாயிறும் பிற்பகல் இரண்டு மணியில் இருந்து பெஞ்ச் ஏறி நின்று சட்ட விரோதமில்லாமல் எதைப் பற்றியும் யாரும் பேசலாம். விரும்பினால் யாரும் கேட்கலாம். மாலை ஆறு மணி வரை  அங்கே அரங்கேறுகிறவர்கள் பிரிட்டீஷ் அரசியல் தொடங்கி, கால் பந்து விளையாட்டுக் குழு மேன்செஸ்டர் யுனைடெட்டின் அண்மைக்கால விளையாட்டுத் திறன் பற்றி வரை பேசலாம். கிட்டத்தட்ட  நூற்றைம்பது வருடமாக பிரிட்டீஷ் குடிமக்களுக்கு பேச்சு சுதந்திரம் அந்த ஹைட் பார்க் பெஞ்சில் வழங்கப்படுகிறது.

 

நமக்கு, இந்தியாவில் ஹைட் பார்க் இல்லை, ஹைட் பார்க் ஸ்பீக்கர்ஸ் கார்னர் பெஞ்சு இல்லை. விதவிதமான தலைப்புகளில் பேசும் பேச்சாளர்கள் இல்லை.

 

ஆனாலும் எனக்கு தி.நகர் நடேசன் பூங்கா உண்டு. காலை நடைப் பயிற்சியில் கூட வரும் நண்பர் கிரேசி க்ரியேஷன்ஸ் அப்பா ரமேஷ் உண்டு.  (அன்பு நண்பர் மறைந்த கிரேசி மோகன் மூலம் கிரேசி கிரியேஷன்ஸில் அத்தனை பேரும் நல்ல நண்பர்கள் தான்).

 

காலை நடையின்போது அப்பா ரமேஷ் ஏதாவது பேசிக்கொண்டு வருவார். நான் கேட்டுக் கொண்டு வருவேன்.

 

ரமேஷ் பேச எடுக்கும் தலைப்புகள் வகைவகையானவை. Role of USA in a unipolar world, work-home life – stage life balancing, அவருடைய தாத்தாவான பிரபல anthropologist திரு.ஜகதீச அய்யர் எழுதிய தென்னிந்தியக் கோவில்கள், அவற்றின் அமைப்பு, வழிபாடுகள், விழாக்கள் இன்னோரன்னவை,  ஆனந்த ஜோதி (1960களில் வெளியான தமிழ்ப் படம்) திரைப்படத்தில் கதாநாயகன் எம் ஜி ஆர் ‘ஒரு தாய் மக்கள் நாமென்போம்’ என்று பாடி வர, சிறுவர்களாக அப்பா ரமேஷும், கமல் சாரும் லெப்ட் ரைட் போட்டு வருவது என்று பலபட்டறையாக சுவாரசியமாகப் பேசி வருவார் ரமேஷ். நான் ‘I can’t chew gum and walk at the same time வகையினன் என்பதால் கேட்டபடி வருவேன்.

 

தி நகரில் ஐந்து வருடம் இப்படிக் காலை நடை நடந்துவிட்டு நானும் அப்பா ரமேஷும் அஷோக் நகருக்கும், பிஷப் கார்டனுக்கும் குடிபெயர்ந்து விட்டோம்; என்றாலும் அப்பா ரமேஷ் நட்பு இன்னும் அதிகமானதே தவிரக் குறையவில்லை.

 

தினசரி காலையில் வாட்ஸ் அப் திறந்தால் அப்பா ரமேஷ் Hi My Well Wishers என்று தொடங்கிச் சற்று நீளமான கட்டுரை தினசரி எழுதியிருப்பார்.  விதம் விதமான விஷயங்கள் தொடர்பான உரை அது. Nothing பற்றிக் கூட இரண்டு பக்கம் வரும் கட்டுரை எழுதியிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

அந்தக் கட்டுரைகளின் முதல் தொகுதி நண்பர் மாது பாலாஜி  முன்கை எடுத்து பிரசுரம் காண வைக்க, அலையன்ஸ் கம்பெனி பதிப்பகம் மூலம் சென்ற சனிக்கிழமை வெளியானது. Morning Marvels என்ற அழகான புத்தகம் இது.  அட்டை ஓவியமாக நண்பர் (தி ஹிந்து கார்ட்டூனிஸ்ட் ) கேஷவ் வரைந்த கிரேசி மோகன், அப்பா ரமேஷ் ஓவியம் காணக் கண்கோடி வேண்டும்.

 

Morning Marvels புத்தகத்தை வெளியிட்டுப் பேசியவர் தொண்ணூற்று நான்கு வயதிலும் சுறுசுறுப்பாகத் தன் மருத்துவ மனையில் நோயாளர்களை பரிசோதித்துக் குணப்படுத்தும் என் மதிப்புக்குரிய டாக்டர் ஹெச்.வி.ஹண்டே அவர்கள். அரசியலிலும் முத்திரை பதித்து இரண்டு அமைச்சரவைகளில் அமைச்சராகப் பணியாற்றிய அவருக்கு ஓர் இலக்கிய முகமும் உண்டு என்பது பலருக்குத் தெரியாது. கன்னடம் தாய்மொழியான திரு ஹண்டே தமிழ் எழுதப் படிக்கக் கற்று எட்டாண்டு உழைப்பில் சாதித்தது – கம்பராமாயணம் முழு நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது.

 

புத்தகத்தின் முதல் பிரதியை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டவர் இரா.முருகன்.

 

பெரியவர்கள், சாதனையாளர்கள், அப்பா ரமேஷ் நண்பர்கள் என்று பலரும் சுருக்கமாகப் பேசி விழாவைச் சிறக்க வைத்தார்கள். நண்பர் காந்தன் தொகுத்தளிக்க, நண்பர் மாது பாலாஜி நன்றி நவின்றார்.

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2022 19:26

October 30, 2022

ஒரு மழைநாளில் முத்தம்மா டீச்சர் பார்க்கப் போன தமிழ்ப் படம்

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம்                  இரா.முருகன்

 

அத்தியாயம் 6

 

கடைசி ஒத்திகைக்கான ஞாயிற்றுக் கிழமை,

 

காலையிலிருந்தே ஜோதி அக்கா அழுது கொண்டிருந்தாள்.

 

புகுந்த வீட்டிலிருந்து பிரசவத்துக்கு வந்து ஒரு மாதமாகிறது. வீட்டுக்காரனோ வேறு யாருமோ வந்து பார்க்கவில்லையாம்.

 

சீர் செனத்தியில் குறைச்சலாம்..

 

‘பொம்பளைப் புள்ளே… சின்னவ இவ தலையெடுத்து எல்லாம் செய்ய வேண்டியிருக்கு..கொஞ்சம் அப்படி இப்படி இருந்தா பொறுத்துக்குங்க சம்பந்தி.. அடுத்த மாசம் லோன் போடப் போறா..’

 

போட்டு வைத்திருக்கிறது. ஒரு பவுனில் மோதிரம் வாங்க வேண்டும். முதல் ஆடிக்கு அழைத்தபோது கொடுக்க விட்டுப் போனது.

 

நாலு தடவை எஸ்.எஸ்.எல்.சி தவறிவிட்டுச் சும்மா சுற்றி வருகிற தம்பி… சைக்கிள் கடை வைக்கப் பணம் கேட்கிறவன்..

 

தோசைக்கடை வைத்து சிறுவாடு சேர்க்கலாம் என்று சதா நச்சரிக்கிற அம்மா..

 

எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படுகிறது. நிறையவே.

 

முத்தம்மா டீச்சருக்கு ஒரு மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும். இருபத்து மூணு வயசில் வெள்ளெழுத்து வருமா என்ன?

 

ஆனாலும் முத்தம்மா டீச்சர் அழகு தான். இல்லாவிட்டால் கதிரேசன் டீச்சர்…டீச்சர் என்று சுற்றிச் சுற்றி வருவானா..

 

வரச் சொல்லிக் கூப்பிட்டிருக்கிறான். தட்ட முடியவில்லை.

 

முத்தம்மா டீச்சர் பள்ளிக்கூடம் போய்ச் சேர்ந்தபோது பகல் மூன்று மணி.

 

‘என்ன டீச்சர் தூங்கிட்டீங்களா?’

 

கதிரேசன் விசாரித்துக் கொண்டு சைக்கிளில் வந்திறங்க, மழையும் ஆர்ப்பாட்டமாக வந்து இறங்கியது.

 

வராந்தா பக்கம் ஓடினான் கதிரேசன்.

 

‘கொஞ்சம் இருங்க.. படம் எழுதின தட்டியை எல்லாம் உள்ளே வச்சுடறேன்.. நேத்து ராத்திரி பத்து மணியாச்சு எல்லாம் வரஞ்சு முடிக்க..’

 

ஆண்டு விழா மேடைக்கு இரண்டு புறமும் நிறுத்தி வைக்க நீள நீளமாகப் பேப்பர் ஒட்டி, மேலே படம் வரைந்த தட்டிகள்.

 

ஒன்றில் லட்சுமி. அடுத்தது சரஸ்வதி.

 

இரண்டு முகமும் முத்தம்மா டீச்சர் ஜாடையில்.

 

‘லட்சுமிக்குக் கைவிரல் ஏன் புளியங்காய் மாதிரித் தொங்குது?’

 

முத்தம்மா டீச்சர் கதிரேசனைக் கேட்டாள்.

 

‘எனக்குக் கை போட வராது டீச்சர்’

 

தட்டியை ஓரமாக வைத்துவிட்டுக் கதிரேசன் சொன்னான்.

 

பொய்க் கோபத்தோடு முறைத்து விட்டு முத்தம்மா டீச்சர் வாசலைப் பார்க்க அடர்ந்து இறங்கிய மழை.

 

’பசங்க எப்படி வருவாங்க சார்.. இப்படிக் கொட்டுதே..’

 

‘வந்துடுவாங்க..’

 

கதிரேசன் ஈரச் சட்டையோடு நெருக்கமாக நின்று வாசலைப் பார்த்தான்.

 

‘ரேணுகாவுக்குச் சரியாவே ஆட வரலியே சார்… அவளைப் பின்னுக்கு நிப்பாட்டிட்டு, ஆரோக்கியமேரியை முன்னுக்கு வச்சுடலாமா?’

 

முத்தம்மா கேட்டாள்.

 

‘அய்யே.. அவ கொக்கு மாதிரி உசரம்..பின்னாடி நிக்கற பிள்ளைங்களை எல்லாம் மறைச்சுடுவா.. நீங்க கவலையே படாதீங்க டீச்சர்.. இன்னிக்கு ரேணுகாவுக்கு நான் ஸ்பெஷலா கோச் பண்றேன்..’

 

‘ஏன் சார், ஆண்டுவிழாவுக்கு எஸ்.கே.சி ஆர்டர் கொடுத்தச்சா?’

 

வானம் மெல்ல இடிக்கிறது. நிற்காத மழை. நின்று, பிள்ளைகள் வர வேண்டும்.

 

‘எஸ் கே சி.. இங்கத்திய வார்த்தையாச்சே.. ஸ்வீட் காரம் காப்பி.. ரைட்டா டீச்சர்..’

 

‘சார் சொன்னா தப்பாகுமா?’

 

முத்தம்மா அவன் கண்ணை பார்த்துச் சிரித்தாள். சாரல் மேலே விழாமல் கதிரேசன் இன்னும் நெருக்கமாக நின்றான்.

 

‘எஸ்கேசி சொல்லியாச்சு டீச்சர்.. ஆனந்த பவன்லே .. ஐநூறு லட்டு.. பஜ்ஜி.. காப்பி.. காப்பி வேணாம்னுட்டாரு எச்.எம்.. டீ தான் எல்லாத்துக்கும்.. ஆமா, இப்படி மழை பெஞ்சா நாளைக்கு எங்கிட்டு ஆண்டுவிழா நடத்தறதாம்?’

 

கதிரேசன் கொண்டு வந்த பிளாஸ்கைத் திறந்து காப்பி எடுத்து பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றி முத்தம்மா டீச்சரிடம் நீட்டினான்.

 

‘சாப்பிடுங்க டீச்சர்.. மழைக்கு இதமா இருக்கும்..’

 

‘அய்யோ இம்புட்டுமா?’

 

முத்தம்மா கண்ணை அகல விரித்தாள்.

 

‘மீதி இருந்தா வச்சிடுங்க.. நான் சாப்பிட்டுக்கறேன்..’

 

மழை இன்னும் வலுக்க, நான்காம் வகுப்பு ஆ பிரிவு மூலையிலிருந்து ஒழுக ஆரம்பித்தது. சில்லென்று குளிர்ச்சியோடு உள்ளே வந்த காற்றில், சுவரில் இந்தியா மேப்பும், சாலை விதிகள் படமும் பேயாட்டம் போட்டன.

 

‘ஒரு தடவை பாடிப் பாத்துடலாமா டீச்சர்?’

 

நெருங்கி வந்த கதிரேசன் குரல்.

 

‘சேவை நாமும் செய்யலாமா?’

 

முத்தம்மா டீச்சர் கள்ளக் குரலில் பாடினாள்.

 

‘பாட்டொன்று பாடலாமா.. பக்கம் வந்து பேசலாமா..’

 

இப்போதுதான் ஆரம்பமாகிறது.

 

தரையில் வரிசையாகப் பலகைகள். பிள்ளைகள் குந்தியிருந்து பாடம் கேட்க அதெல்லாம்.

 

‘சார், சாரல்லே பலகையெல்லாம் ஈரமாகுது.. நகர்த்தி வச்சுடலாம்.. ஒரு கை பிடிக்கறீங்களா?’

 

கதிரேசன் கையைப் பிடித்தான்

 

மழை மணமும், சாக்பீஸ் வாடையும் கவிந்த, வரிசையாகப் பலகை விரித்துக் கிடந்த நாலாம் வகுப்பு ஆ பிரிவில், பலகைகளுக்கு மேலே கதிரேசன் முத்தம்மாவைச் சாய்த்த போது, மழையும் மனதும் தொடர்ந்து பாடின.

 

பாட்டொன்று பாடலாமா.. பக்கம் வந்து பேசலாமா..

 

முத்தம்மாவின் கண்கள் செருகி, இமைகள் சிப்பியாகத் திறந்து குவிந்தன. முகத்தில் இதமாகப் படியும் மழை ஈரம். உள்ளங்காலில் முத்தமிடும் உதடுகள். உடம்பெல்லாம் நனைக்கும் சாரல். ஈர உதடுகள். உடையை அலைக்கழித்து நெகிழ்த்திய மழைக்காற்று. வலிமையான கரங்கள். ஈர வாடை. ஆண் வாடை.

 

வண்டாக நானும் தேன் உண்ணலாமா ..

 

கன்னத்தில் ஈரம். ஈர இறக்கையை முகத்தில் வீசுகிறது ஏதோ ஒரு பறவை.  கருப்பும் ஈரமுமாக முகத்தில் அறையும் இறக்கைகள் குத்திப் பிராண்டுகின்றன.

 

முத்தம்மா டீச்சர் அரைக் கண்ணைத் திறந்து பார்த்தாள்.

 

ஈரக் குடையால் முத்தம்மா டீச்சர் முகத்தில் தொடர்ந்து அடித்தபடி கதிரேசன் வாத்தியார் சம்சாரம் விசாலாட்சி டீச்சர் கத்தினாள்.

 

‘தட்டுவாணிச் சிறுக்கி..’

 

மழையில் நனைந்தபடி முத்தம்மா வெளியே ஓடினாள்.

 

ஜோதி அக்காவுக்கு இடுப்பு வலி எடுத்து, அம்மா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருந்தாள். திறந்து கிடந்தது வீடு.

 

தம்பியைக் காணோம். பணத்தையும்.

 

குடையைப் பள்ளிக்குடத்திலேயே மறந்து விட்டு ஓடி வந்த அந்த நாளின் மிச்சம் மழையில் கரைந்தது.

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2022 19:35

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.