இரா. முருகன்'s Blog, page 44
September 22, 2022
விடிவதற்கு வெகு முன்பே அவர்கள் புறப்பட்டார்கள். ஆடிஆடிப் போன காளை வண்டி
மனை பகுதி 8
நடு இரவிலும் உறங்காத மனை.
மற்ற மனைக்காரர்கள் எல்லாம் வந்து பேசியபடி இருக்க, கார்த்தியாயினியின் உடலைப் பழந்துணியால் மூடி இருந்தது. குழந்தை நந்தினி அழுதழுது பகவதியின் மடியில் உறங்கிப் போயிருக்க, சித்ரனுக்காகக் காத்திருந்த பகவதி.
குரல்கள்..அடங்கி ஒலிக்கிற குரல்கள்.
‘புழைக்கு அப்புறத்து மாப்ளாமாரைக் கூப்பிட்டால் அப்புறப்படுத்தி விடலாம்’.
‘உள்ளூர்க்காரர்களே போதும்’.
‘வேண்டாம்… சமயம் கிடைக்கும் போது சொல்லிக் காண்பிப்பார்கள்’.
‘ஏதேது.. சம்பந்தம் வைத்துக் கொள்வது கூட உஷாராகச் செய்ய வேண்டிய காரியம் போலிருக்கே.. பீடைக்கும் எள்ளும் தண்ணீரும் இரைத்தாகணுமோ’.
‘நீலகண்டன் இப்போது சுதாரித்துக் கொண்டு விட்டான். படியிறங்காமலேயே ரெட்டைப் பப்படமும் பிரதமனுமாக நினைத்த போதெல்லாம் விருந்துதான்’.
‘நீரும் தான் கதகளி ஒப்பனைப் பெட்டி வாங்கி வைத்துக் கொண்டு காத்திருக்கிறீர்.. என்ன பிரயோஜனம்? நீரே போய் ஆடினால் தான் உண்டு’.
ஒரே நேரத்தில் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்து, சூழ்நிலை உறைக்க, அங்கே சங்கடமான மௌனம் நிலவியது.
தூரத்தில் கொளுத்திப் பிடித்த திரிகள் தெரிந்தன. யாரோ கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
யார்? கள்ளிக்கோட்டை சாமுத்ரிக்குத் தகவல் போய், என்ன விஷயம் என்று விசாரிக்க ராஜ சேவகர்கள் வருகிறார்களா?
வந்தால் என்ன? நம்பூதிரிகளின் பேச்சை மீறி சாமுத்ரி என்ன செய்ய முடியும்?
இல்லை.. இது ராஜசேவகர்கள் இல்லை. முன்னால் மூலிகை சஞ்சியோடு வருவது சித்ரன் நம்பூதிரி. கொஞ்சம் பின்னால் கதகளி குஞ்ஞுண்ணி. நாணிக் குட்டியின் கணவன். தீ ஜுவாலையில் அவன் முகத்தில் கள் மயக்கம் இல்லை..
குஞ்ஞுண்ணி பின்னால்… குஞ்ஞுண்ணியோடு, உழைத்துக் கருத்த உடல்களோடு வரிசையாக..
மூத்த நம்பூதிரி திருப்தியாகச் சிரித்தார்.
‘நல்லதாகப் போனது.. சித்ரன் விஷயம் தெரிந்து ஆள் படையோடு வந்து விட்டான்.. என்ன இருந்தாலும் மனையின் மானப் பிரச்சனை இல்லையா.. அனாதைச் சவத்தோடு எத்தனை மணி நேரம் காத்துக் கிடப்பது .. ராத்திரி சாப்பிட முடியாமல் போனது. இதெல்லாம் விலகிக் காலையில் சேர்த்துச் சாப்பிட்டுக் கொள்ளலாம். அப்புறம் விசேஷ பூஜைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். துர்மரணம். மனைக்குப் பாவம் பிடிக்காமல் தடுத்து நிறுத்த ஒரு யாகம் கூட வேண்டியது தான்.
‘குஞ்ஞுண்ணி.. இந்தத் தென்னோலையை முடை.. கண்ணாரா.. மற்றதை சித்தம் பண்ணு..’
சித்ரன் பரபரப்பாகக் கட்டளை பிறப்பித்தபடி வந்தான்.
‘சித்ரா..’
மூத்த நம்பூதிரி அவனருகில் வந்து குரல் தாழ்த்தினார்.
‘இந்த சவத்துக்குப் பிறந்ததும் உள்ளே தான் பழியாகக் கிடக்கிறது. உன் வீட்டுக்காரி அதற்குப் பாலும் நெய்யும் ஊட்டி உறஙக வைத்துக் கொண்டிருக்கிறாள், உறங்கட்டும். அப்படியே.. சரி, வேண்டாம்.. சிசு ஹத்தி.. அந்தக் குட்டிப் பிசாசை மெல்ல அப்புறப்படுத்திப் புழையின் அக்கரையில்
கண்காணாத இடத்தில் போட்டு விடச் சொல்லு. பிழைத்துப் போகட்டும்..’
சித்ரன் நிமிர்ந்து பார்க்க, பகவதியும் வாசலில் வந்து நின்றாள்.
‘என் அண்ணியின் சவ சம்ஸ்காரம் முடியட்டும். என் குழந்தையை என்ன செய்ய வேணும் என்று நானும் என் மனைவியும் அப்புறம் முடிவு செய்வோம்’.
கம்பீரமாக ஊரே கேட்க உயர்ந்தது சித்ரன் குரல்.
பகவதிக்குப் புல்லரித்தது. கண்கலங்கி, உதடுகள் துடித்தன.
யட்சி.. அடி யட்சி.. எங்கேயாவது பக்கத்தில் இருக்கிறாயா? இதையெல்லாம் பார்க்கிறாயா? எனக்கு ஒரு துன்பமுமில்ல்லை. மனுஷ இனத்துப் பெண்ணானாலும் நான் துன்பப்பட மாட்டேன். நான் ஒரு திருமேனியை வேளி கழிக்கவில்லை. ஒரு மனிதனைக் கைப்பிடித்திருக்கிறேன். ரத்தமும், சதையும், பண்பும், பாசமும் இழைந்து சேர்ந்த ஒரு மனிதனை.
‘என்னடா வேதாளம் வேஷ்டியோடு வந்ததே என்று பார்த்தேன். உன் கோணல் புத்தி உன்னை விட்டுப் போகுமா,, இந்த அனாதைச் சவம் உனக்கு அண்ணியா? வேதம் உருவிட்ட உன் நாக்கில் சனிதான் புகுந்திருக்கிறது. சனி நாக்கில் இல்லை. உன் கையைப் பிடித்துக் கொண்டு வந்து குடும்பம் நடத்துகிறது. கலி. கலிதான். சம்சயமில்லை’.
மூத்த நம்பூதிரியின் குரல் உணர்ச்சிவசப்பட்டு பிசிறடித்தது.
’கலி தான். நிச்சயம் இது கலிகாலம் தான். இந்தக் கலி முற்றும்போது நீங்கள், யாரோ உழைத்துக் கொட்ட உட்கார்ந்து சாப்பிட முடியாது. நாலும் ஐந்தும் கல்யாணம் செய்து அறியாப் பெண்களை எச்சிலுக்காகச் சண்டை போட வைத்து ரசிக்க முடியாது. பந்தம் புலர்த்துகிறேன் என்று தரவாடுகளில் படுத்து எழுந்து உடுத்த வேட்டியில் மண்ணையும் கூடப் படுத்த பெண்ணையும் சேர்த்து உதறிவிட்டு வர முடியாது. கீழ்ச்சாதி என்று ஒதுக்கி நிறுத்தி, மார்புத் துணியை விலக்கி மரியாதை செய்ய வைத்து ரசிக்க முடியாது. கலி முற்றத்தான் போகிறாது. அப்புறம் மனுஷன் மனுஷனை மதிக்க வேண்டியிருக்கும். தெய்வங்களை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை.’
‘சகோதரத் துரோகி. நீ முதலில் வெளியேறி ஒழி. இன்னும் ஒரு வேளை நீ இங்கே தங்கினால் நான் வெளியே போய் விடுவேன்..’
குரல் நடுங்க உள்ளே நடந்து போனார் மூத்த நம்பூதிரி.
‘எல்லாம் தயார்’.
‘நீலகண்டா.. வா.. அக்னியைக் கையில் வாங்கு. கொலைகாரா..மகாபாவி..வா வெளியே..’
சித்ரன் உள்ளே பார்த்துக் கூப்பிட்டான்.
நீலகண்டன் வரவேயில்லை.
கொளுத்திய பந்தங்கள் உயர்த்திப் பிடித்து வயல் வரப்புகளின் ஊடே அந்த ஊர்வலம் மெல்ல நடந்தது.
சித்ரன் அக்னியோடு முன்னால் நடந்தான்.
மனை பகுதி 9
விடிய ஒரு நாழிகைக்கு முன்னரே அவர்கள் புறப்பட்டார்கள்.
பகவதி குழந்தையைத் தோளில் சுமந்து வந்தாள்.
இருளில் மூழ்கிக் கிடக்கிற மனை. வாசலில் ஒரு கணம் நின்றாள்.
‘யட்சி.. அடி யட்சி.. இருக்கிறாயா?’
‘பேதைப் பெண்ணே. நான் உன் மனதில் கலந்து கரைந்து அடித்தளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறேன். நீ சந்தோஷமாக இருக்கிற கணங்களில் எல்லாம் நான் இறங்கி வருவேன். இடவப்பாதி மழையின் சரங்களில் ஏறி இறங்கி, சாரலில் சிதறிச் சிரிப்பேன். நந்தினியின் சிரிப்பில் எதிரொலிப்பேன். விடியலில் நீ குளித்து உடலும் மனமும் குளிர்ந்து வரும்போது காதில் ரகசியம் பேசுவேன். நீயும் சித்ரனும் திருவனந்தபுரத்தில் தொடங்கப் போகிற வாழ்க்கையும், மேம்படும். காலம் காலமாகப் புகழ் பரவும். விரைவிலேயே எல்லாம் மாறும் இங்கே. எல்லாம் பொய்யாக, பழங்கதையாக.. எல்லாம் மாறும். தெய்வம் நின்று கொல்லும். பெண்கொலை புரிந்த பாவிகளை.’
‘பகவதி, என்ன நின்று விட்டாய்? சீக்கிரம் வா.. நாணிக்குட்டியும் குஞ்ஞுண்ணியும் காத்திருப்பார்கள்’.
‘அவர்களும் நம்மோடு வருகிறார்களா?’
காளை வண்டி புறப்பட்டது.
‘ஆமாம். நீலகண்டனின் பாவச் சுமை குறையட்டும். ஒரு நல்ல கதகளி ஆட்டக்காரன் திரும்ப அரங்கேறட்டும்.’
‘எல்லாம்… இதெல்லாம்..’
‘நடக்கும்.. நிச்சயமாக நடக்கும்..இல்லையா, நந்தினி?’
குழந்தை தூக்கத்தில் சிரிக்க, வண்டி நகர்ந்தது.
(நிறைவு)
பின்கதை இழை – சித்ரன் நிறுவிய ஆயுர்வேத மருத்துவ மனை கேரளத்தில் மிகப் பிரபலமானதாகவும் அவருக்குப் பிறகு அவருடைய மகள் நந்தினி தம்ப்ராட்டி அந்த மனையை இன்னும் பிரபலமாக்கியதாகவும் கேள்வி.
September 21, 2022
அந்தத் தளிரை இழுத்துக் கொண்டு ஆடியாடிப் போன நம்பூத்ரி – மனை குறுநாவல் பகுதி 8
குறுநாவல் மனை இரா.முருகன் பாகம் 8
‘வா சனியனே’
அந்தப் பச்சைத் தளிரை இழுத்தபடியே ஆடியாடிப் போகிற மூத்த நம்பூதிரி.
நீலகண்டன் கார்த்தியாயியை எட்டி உதைத்துத் தள்ளினான்.
‘ரான்.. ரான்.. தள்ளாதீர்கள்.. வல்லாத்த ஷீணம்.. நானே போகிறேன்.. குழந்தையையாவது தயவு செய்து..’
‘உன் வம்சத்தின் நாற்றக் காற்றே இங்கே அண்ட வேண்டாம்.. ஒழிந்து போ..’
பலம் கொண்ட மட்டும் தள்ளிய நீலகண்டனின் கைகளும் கால்களும்… மதில் சுவரில் பலமாகத் தலை மோதி கார்த்தியாயினி குழைந்து விழுந்தாள்.
‘நீயும் ஒழி..’
கருங்கல்லில் மோதப் போன குழந்தையை ஒரு வளைக்கரம் பாய்ந்து பிடித்து நிறுத்தியது.
பகவதி.
‘சித்ரன் எங்கே ஒழிந்தான்? அவன் கொண்டு வந்த பிடாரி, ஊர்ப் பிடாரிகளை எல்லாம் கூட்டி வைத்து இழவெடுக்கிறது..’
மூத்த தம்புராட்டியின் சத்தம்..
பகவதி குழந்தையை அணைத்துத் தூக்கியபடி மதில் பக்கம் ஓடினாள். அங்கே, தீனமான ஓலத்தோடு தலையில் இருந்து ரத்தம் பெருகி வழிய, கார்த்தியாயினி.
’ஏ பகவதி.. உனக்கென்ன பயித்தியமா… கண்ட குப்பையை எல்லாம் இடுப்பில் ஏற்றிக் கொண்டு.. இறக்கி எறிந்து விட்டு வா.. குளித்து விட்டு வந்து தொலை.. நம்பூதிரிப் பெண்ணாகப் பிறந்து ஆசாரமே இல்லாமல்.. கலி.. சம்சயமில்லை.. கலியே தான்..’
நடுத் தம்புராட்டி.
‘இந்த அனாசாரக் கழுதையையும் மனையை விட்டு இறக்கா விட்டால் மனையே தீட்டுப் பட்டுவிடும்’
இளைய தம்புராட்டி கீச்சுக் கீச்சென்று அலறினாள்.
‘நீங்கள் ஒரு கிழத்தின் எச்சிலுக்காகச் சண்டை போடுகிறது ஆசாரம்.. மனையின் நம்பூதிரி பிற ஜாதிப் பெண்ணைத் துரத்திப் போய்த் தொட்டுத் தழுவித் தூக்கி வந்து அவள் விரும்பாமலேயே கட்டாயமாக சுகிப்பது ஆசாரம்.. வீட்டு வேலைக்கு வருகிற பாவப்பட்ட பெண்ணை அவள் புருஷன் பார்க்க அனுபவிப்பது ஆசாரம்.. இந்தப் பச்சைக் குழந்தையைத் தொட்டுத் தூக்கினால் அனாசாரம்..’
நாக்கு வரை வந்த வார்த்தைகளை அடக்கிக் கொண்டு பகவதியின் விழிகள் விசாரித்தன. காலம் காலமாக அடக்கி வைத்த எண்ணங்களின் கனல் தெறிக்கும் பார்வை இது.
‘அம்மே.. நான் சாகப் போகிறேன்.. அம்மே..’
கார்த்தியாயினி சக்தி எல்லாம் திரட்டி அழ ஆரம்பித்தாள். இருமலில் சுவாசம் திணறித் திணறி வந்தது.
‘தம்புராட்டி..’, அவள் விம்மினாள். ‘இவர்கள்.. இவர்கள்..என் குழந்தையையும் கொன்று போட்டு விடுவார்கள்.. தம்புராட்டி அடியளுக்கு ஒரு வாக்கு தரணும்..இவளை..’
‘அம்மா.. வா.. நம் குடிசைக்கே போகலாம்..’
குழந்தையும் விம்மியது.
கார்த்தியாயினி குழந்தையின் கையைப் பிடித்து, பகவதியின் கரங்களில் வைத்தாள்.
‘தம்புராட்டி…இவளை உங்கள் மகளாக வளர்க்க வேண்டும்.. செய்வீர்களா?’
பகவதி தன் கைக்குள் வந்த சின்னக் கரங்களைப் பற்றிக் கொண்டு கண்கள் கலங்கித் தலையசைக்க, ஒரு புன்னகையில் கார்த்தியாயினியின் உதடுகளும் பின் இமைகளும் மூடின. திரும்பவும் அவை மீண்டும் திறக்கப் போவதில்லை என்று பகவதிக்குத் தெரியும்.
உப்பு வணிகமும் பழநிக்கு நடைப் பயணமும்- புரவி மாத இதழில் என் பத்தி வாதவூரான் பரிகளிலிருந்து
ஆடு மேய்ச்ச மாதிரியும் இருக்கணும், அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கணும் என்பது தெற்கத்தி சீமையில் பரவலாக உதிர்ந்த பழமொழி. இப்போது பழமொழியின் இடத்தை சினிமா பஞ்ச் டயலாக் அபகரித்துக் கொண்டிருக்கிறது. நிற்க.
இன்னொரு பழைய புத்தகம் படிக்கக் கிடைத்தது. சில நூறு வருடம் முன், என்றால் கிட்டத்தட்ட ஆயிரத்து அறுநூறாம் ஆண்டு முதல் நகரத்தார் என்ற நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தவர் அவ்வப்போது மேற்கொண்ட பக்திப் பயணம் பற்றிப் பேசுவது. அவர்கள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய காலம் அது. முக்கியத் தொழில் வட்டிக்கடை நடத்துதல். வட்டிக்கு விட்டு வருமானம் ஈட்டுவது மட்டும் போதாது என்றுபட நியாயமான மற்ற தொழில் என்ன செய்யலாம் என்று யோசனை. உப்பு விற்றால் என்ன? இதற்கிடையே, குலதெய்வம் பழனி முருகன் சன்னிதிக்கு யாத்திரை போய் தரிசனம் செய்து வர ஒரு நகரத்தார் வீட்டில் ஓயாமல் வற்புறுத்தல். உப்பு விற்பனையும் பழனிக்கு யாத்திரையும் ஒரே கோட்டில் சந்திக்க, அவருக்கு ஒரு யோசனை – கடற்கரையில் இருந்து உப்பை வாங்கிக் கடகங்களில் எடுத்துப்போய் பழனியிலும் சுற்று வட்டாரத்திலும் விற்று வரும் லாபத்தில் சிறு சதவிகிதத்தை காணிக்கையாகப் பழநி முருகனுக்குத் தந்தால் என்ன? காணிக்கை நிறைய வேண்டும் என்று முருகன் விருப்பப் பட்டால் அவன் தான் உப்பு விற்பனையை அதிகமாக்க வேண்டும்.
பழநிக்கு ஒரு சிறு கூட்டமாக பயணம் போக வேண்டியது. நாலு ஆட்களை உப்பு மூட்டை தலையில் சுமக்க வைத்து பழனி அடிவாரத்தில் அதை விற்கக் கடை போட வேண்டியது. கூடவே பழநிக் கோவிலில் சாமி தரிசனம் நடத்தித் தர உள்ள பண்டாரத்தார் வீட்டில் தங்கி எல்லோருக்கும் மூணுவேளை ஆகாரம். தரிசனத்துக்கு அப்புறம் பழநி முருகனுக்கு லாபத்தில் பங்கை உண்டியலில் போட வேண்டியது. பண்டாரத்தாருக்கு காணிக்கை, ஆகாரத்துக்கும் தங்கியதற்குமான தொகை என்று தரவேண்டியது. காலி உப்புச் சாக்கும், கைப்பையில் உப்பு விற்ற காசும், மனதில் முருகனுமாக ஊர் திரும்ப வேண்டியது. இப்படி இந்த நகரத்தார் வர்த்தகர்கள் இரண்டு மூன்று வருடம் செய்ய மற்ற நகரத்தார்களும் அதே மாதிரி உப்போடு புறப்பட்டு விட்டார்கள்.
நிகழ்வுகள் மறுபடி மறுபடி நிகழ்ந்து நாளாவட்டத்தில் சடங்குகளாகும். பழநி யாத்திரைக் குழுக்கள் அதிகமாகி, யாத்திரைக்கு அடுத்து யாத்திரையாகப் போய்வர, கொஞ்சம் கொஞ்சமாக பழனிப் பயண விதிகளும் சடங்குகளும், விற்பனைக்காக உப்பு வாங்குவதில் தொடங்கி, பண்டாரத்தாருக்கு சம்மானம் தருவது, அன்னதானம் வரை விரிவாக ஏற்படுத்தப்பட்டு விட்டன.
நகரத்தார் அறப் பட்டயங்கள் என்ற நூல் 1608-ஆம் ஆண்டு நெட்டெழுத்து கையொப்பமான பட்டயம் தொடங்கி, 1800-கள் வரை தீர்மானிக்கப்பட்ட விதிமுறைகள் பற்றிய புத்தகம். அதன் கிட்டத்தட்ட நானூறு வருடத் தமிழ் சுவாரசியமானது. பேச்சுக்கும் எழுத்துக்கும் அதிக வேற்றுமை இல்லாத பழந்தமிழுக்காகப் படிக்க வேண்டிய நூல் –
பழனிக் கோவிலுக்கு வந்து ஆவணிமூல வீதிக்கும் கீள்புரம் தெய்வநாயக பண்டாரத்து மனையில் வந்து இறங்கி, உப்புக் கடகமும் இறக்கி வைத்து உப்பு மாறி (விற்று) ஒரு பணம் லாபத்திற்கு அரைக்கால் பணம் மகமையெடுத்து தெய்வநாயக பண்டாரத்தின் பெண்சாதி பார்வதியம்மாளிடம் ’எங்களுக்கும் தங்கள் வீட்டிலுள்ளவருக்கும் மூன்று பரதேசிக்கும் சோறு வடித்துப் போடவேணும். பண்டாரத்தையாவை மலைக்கு வரும்படி சொல்லி சுவாமி தெரிசனம் செய்து வைக்கும்படியாகவும் செய்ய வேண்டியது அம்மாள்’ என்று சொல்ல… பண்டாரத்துக்கு ஒரு பணமும், அம்மாளுக்கு ஒரு பணமும் கொடுத்து, ’மருவளி (மறுபடி) வருவோம். உப்பு மாற வருவோம். இனி வந்தால் தங்கள் வீட்டில் தான் வருவோம்’ என்று சொல்லி..
விதிமுறைப் பட்டயம் புரியும் பழைய தமிழில் ஆரம்பிப்பது இப்படித்தான். நகரத்தார் இந்தத் தமிழை இன்னும் திருப்பூட்டுதல் (திருமணம்) மங்கல நிகழ்வில், இசைக் குடிமானம் (திருமண ஒப்பந்தம்) எழுத சரளமாக உபயோகிப்பதைப் பார்த்திருக்கிறேன்.
September 20, 2022
பம்மிப் பம்மி நுழைந்து கொண்டிருந்த இரவு – குறுநாவல் மனை பகுதி
மனை குறுநாவல் இரா.முருகன் பகுதி 7
மனைக்கு உள்ளே அந்தர்ஜனங்களின் நாமஜபத்தை மீறி எழுகிற மூத்த நம்பூதிரியின் குரல்.
‘யார் இந்த தரித்திரம்? எப்படி உள்ளே வந்தது?’
குழந்தை நந்தினி விளையாடியபடி மனையின் உட்புறம் ஓடி, படியேறி வந்து கொண்டிருந்த மூத்த நம்பூதிரியின் பெரிய வயிற்றில் மோதிக் கொண்டு நின்றது.
‘இது யார் குடுமியும் பானை வயிறுமாக? ராட்சசனா? ஏன் என்னைப் பார்த்து உருட்டி விழித்து சத்தம் போடணும்?’
பயத்தில் கையும் காலும் செயல் மறக்க, சிறகு நனைந்த குருவிக் குஞ்ஞாக அப்படியே ஒடுங்கி நின்றது அது.
‘ஏய்.. யாராக்கும் நீ?’
‘நான்.. நான்.. நந்தினி.. அச்சனைப் பார்க்க வந்திருக்கேன்..’
‘எந்தக் கழுவேறி உன் அச்சன்?’
குழந்தை மிரள மிரள விழித்துச் சுற்றிலும் பார்க்க, தோட்டத்திலிருந்து குளித்து ஈர வேட்டியும், வாயில் உரக்கச் சொல்லும் திருநாமமுமாகத் திரும்பிக் கொண்டிருந்த நீலகண்டன் நம்பூதிரி மேல் பார்வை நிலைத்தது.
அச்சன் வந்தாச்சு. தூக்கி வைத்து முத்த மழை பொழிய அச்சன் வந்தாச்சு.
’அச்சா .ஏன் நீ வீட்டுக்கு வரவில்லை? திருநாவாய் அம்பலத் திருவிழாவுக்கு அழைத்துப் போகிறதாகச் சொல்லித் தூங்கப் பண்ணி, விடிந்து பார்த்தால், நீ போயே போய் விட்டாய். உன்னோடு பேச மாட்டேன் போ…அம்மாவும் திருவிழாவுக்குக் கூட்டிப் போகவில்லை. காசு இல்லையாம். சாப்பிடக் கூட ஒன்றும் இல்லையென்று நிறையத் தண்ணீரைத்தான் குடிக்கத் தருகிறாள். வா அச்சா..நம் வீட்டுக்குப் போகலாம்.. எனக்குப் பாவாடை வேண்டும்.. மர பொம்மை வேண்டும்.. மர யானை.. வாங்கித் தா..’
எல்லாம் சொல்ல வேண்டும். மாரில் ஏறி மிதிக்க வேண்டும். காதைக் கடித்துக் கொஞ்ச வேண்டும். தலையில் முட்ட வேண்டும். அச்சா… என் அச்சா..
நீலகண்டன் தன்னைத் தீண்ட வந்த பிஞ்சுக் கரங்களை அவசரமாக விலக்கி விட்டு வெளியே பார்த்து சத்தம் போட்டான்.
‘யாரங்கே.. இந்தப் பிசாசுகளை வெளியே விரட்டு..’
சின்னப் பூமுகம் சுருங்கிப் போனது. நான் பிசாசா? குஞ்சோமனே என்று வாய்க்கு வாய் கொஞ்சுகிற அச்சனா இது? அதே சிவத்த உடம்பு, வெளுத்த உடுப்பு.. கன்னத்தில் மரு..
‘ரான்..’
கார்த்தியாயின் தடுமாறி வந்து நீலகண்டன் காலில் விழுந்தாள்.
தம்பிரான் என்பதின் சுருக்கம் ரான். அடிமை சனங்களுக்கு வலியவர்கள் எல்லோரும் ரான், ஏமான்..
ஏமானே என்று காலைப் பிடிக்கிற போது, அந்த எஜமானன் மிதிக்கலாம்.. காறி உமிழலாம்.. தப்பே இல்லை.. அதுவும் சம்பந்தம் வைத்து பந்தம் அறுத்த பெண்… தீர்க்கமாக ருசித்து அனுபவித்துத் துப்பிய பின் அந்த சக்கை என்னத்துக்கு உபயோகம்?
கார்த்தியாயினியை அசிரத்தையோடு நோக்கிய நீலகண்டனின் கண்கள்.. மனம் இன்னும் நாணிக்குட்டியில் மார்பகங்களிலேயே சிறைப்பட்டிருந்தது.
இந்தக் கார்த்தியாயினியும் ஒரு காலத்தில் அழகாக இருந்தவள் தான்.. ஊரையே கிறங்க வைத்த பேரழகு.. இன்னும் இன்னும் என்று பகலும் இரவும் சுகித்து முடித்தது எல்லாம் இப்போது பழங்கதை. இதோ நிற்கிற ஷயரோகி கார்த்தியாயினி அருவருக்கத் தக்க ஈனப் பிறவி. குத்திருமலும், சளியும், நாறும் உடுப்புமாக இவள் அருகில் வந்ததுமே உமட்டுகிறது… இப்பொழுது உறவு வைத்துக் கொண்டிருக்கிற ராயிரநல்லூர்க்காரியும் இப்படித்தான் ஆவாளோ என்னமோ… அத்தனை தூரம் ராயிரநல்லூருக்கு நடந்து சிரமப்படக் கூடத் தேவை இல்லை.. வாசலுக்கே வருகிற புஷ்ப ரதம்.. நாணிக்குட்டி.. குடிகாரப் புருஷனுக்குக் கள்ளு வாங்கி முட்ட முட்டக் குடிக்க வைத்து வாசலிலே படுக்க வைத்து விட்டு, உள்ளே அவன் வீட்டுக்காரியை அனுபவிப்பதில் இருக்கிற சுகம் வேறு எதில் வரும். பின்னிரவில் திரும்பவும் நாணிக்குட்டியிடம் போக வேண்டியதுதான். அவள் மிரட்சியும், பயமும், கண்ணீருமாக வேண்டாம் வேண்டாம் என்று தடுக்கத் தடுக்க ஏறுகிற வெறி.. முதலில் இந்தப் புழுவைத் தூக்கி எறிய வேண்டும்..
காலில் பிடித்துக் கிடந்த கார்த்தியாயினியைத் தூக்கி நிறுத்திய நீலகண்டன் அவளை ஒரு கணம் பார்த்தான். சுட்டெரிக்கிற அந்தப் பார்வையின் கனம் தாங்காமல் தலையைத் தாழ்த்திக் கொண்டவளின் முடியைக் கொத்தாகப் பற்றித் தரதரவென்று இழுத்துக் கொண்டு வாசலுக்குப் போனான்.
’தாசி முண்டை.. என்ன தைரியத்தில் இங்கே படி ஏறினாய்? பந்தம் முறித்து ஒரு வருஷம் ஆகிறது.. இன்னும் என்ன இழைய வேண்டி இருக்கிறது பிணமே’
‘ரான்.. ரான்.. எனக்கு உங்களைத் தவிர வேறு யாரைத் தெரியும்?..’
மன்றாடி அழுகிற கார்த்தியாயினி. அம்மா.. அம்மா என்று கதறிக் கொண்டு கூடவே ஓடுகிற குழந்தை.
‘நான் என்ன உனக்கு சாசுவதமான புருஷனா? இந்த அழுக்கு உடுதுணியை நீ அவிழ்த்து விரித்தால் உன் ஓட்டைக் குடிசையில் கூட வந்து படுக்க ஒரு குஷ்ட ரோகி கூட இல்லாமலா போனான்?’
‘ரான்..நீங்கள் அப்படி எல்லாம் சொல்லலாமா? நான் உங்களைத் தொல்லைப் படுத்த வரவில்லை.. நிச்சயமாக.. நான் பாதை ஓரத்தில் புழுத்துச் சாகப் போகிறேன்…என்னைப் பற்றிக் கவலையில்லை.. இந்தப் பிஞ்சை.. உங்கள் குழந்தையை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்..’
‘என்னது.. என் குழந்தையை.. உறவு வைக்கிற இடத்தில் பிறந்து விழுகிற குட்டிச் சாத்தான்களை எல்லாம் ஆயுசு பூரா வைத்துக் காப்பாற்ற இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது?’
இதுவரை இதை எல்லாம் பார்த்து ரசித்தபடி நின்ற மூத்த நம்பூதிரி அந்தப் பிஞ்சுக் கரங்களை இறுகப் பற்றி நீலகண்டன் முன்னால் நிறுத்தினார்.
‘நன்றாகச் சொன்னாய் நீலா… இது சிசு இல்லை.. யமன்.. உடனே துரத்து…’
அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் குழந்தை தரையில் விழுந்தது.
‘வா சனியனே’
அந்தப் பச்சைத் தளிரை இழுத்தபடியே ஆடியாடிப் போகிற மூத்த நம்பூதிரி.
நீலகண்டன் கார்த்தியாயியை எட்டி உதைத்துத் தள்ளினான்.
‘ரான்.. ரான்.. தள்ளாதீர்கள்.. வல்லாத்த ஷீணம்.. நானே போகிறேன்.. குழந்தையையாவது தயவு செய்து..’
‘உன் வம்சத்தின் நாற்றக் காற்றே இங்கே அண்ட வேண்டாம்.. ஒழிந்து போ..’
பலம் கொண்ட மட்டும் தள்ளிய நீலகண்டனின் கைகளும் கால்களும்… மதில் சுவரில் பலமாகத் தலை மோதி கார்த்தியாயினி குழைந்து விழுந்தாள்.
‘நீயும் ஒழி..’
கருங்கல்லில் மோதப் போன குழந்தையை ஒரு வளைக்கரம் பாய்ந்து பிடித்து நிறுத்தியது.
பகவதி.
September 19, 2022
அந்தி சூழ சர்ப்பக்காவில் ஏற்றிய விளக்கு
மனை குறுநாவல் இரா.முருகன் பகுதி 6
இரவு மனையில் பம்மிப் பம்மி நுழைந்து கொண்டிருந்தது.
சர்ப்பக்காவில் விளக்கு வைத்துவிட்டுப் பகவதி திரும்பிக் கொண்டிருந்தாள்.
‘யாரது, வாசலில் இருட்டில் நின்றுகொண்டு?’
இருமல் பதிலாக வந்தது. அப்புறம் தீனமான குரல்…
‘திருமேனியைப் பார்க்கணும்’.
சோகைச் சிவப்பில் ஓர் இளம்பெண். தீப வெளிச்சத்தில் வெளிறித் தெரிந்த அவளுக்குப் பகவதி வயது காணும். தாடை எலும்பின் மேல் விடாப்பிடியாகப் பற்றியிருந்த தசை. குழி விழுந்த கண்களில், ஏதோ பழைய பொற்காலத்தின் மிச்சமாகக் கொஞ்சம் வெளிச்சம்.
அவள் கூட நிற்கிற பெண் குழந்தை ஒரு பழைய முண்டின் கிழிசலை உடுத்தி அவளோடு ஒண்டியபடி அந்தப் பெரிய மனையைப் பயத்தோடும், பிரமிப்போடும் பார்த்துக் கொண்டிருந்தது.
‘திருமேனி மனையில் இருக்கிறாரா தம்புராட்டி?’
அவள் திரும்ப வினயத்துடன் கேட்டாள்.
‘காழ்ச்சை வைக்க வந்திருக்கிறாயா?’
வலிய நம்பூதிரிக்குக் காணிக்கை வைக்கப் பகல் நேரங்களில் யாராவது வருவதுண்டு. திருச்சிவப்பேரூரிலிருந்தும், மண்ணார்க்காட்டில் இருந்தும், பாரதப் புழையின் கரையோர கிராமங்களில் இருந்தும் வருகிறவர்கள். இந்த மனையின் நம்பூதிரிகளை ஈசுவர சொரூபமாக மதிக்கிறவர்கள்.
வீட்டுக் குளத்தில் குளித்து ஈரன் முண்டு உடுத்து, பாக்கும் வெற்றிலையும், தேங்காயும், பணமுமாக இலையில் வைத்து வலிய நம்பூதிரியின் நல்ல வார்த்தையை எதிர்பார்த்து நிற்கிற அவர்கள் மனசு திறந்து எல்லா சஞ்சலத்தையும் கொட்டுவார்கள். வலிய தம்புரான் கேட்பது வராக மூர்த்தி கேட்கிறது போல.
ஆனாலும், காழ்ச்ச வைக்கப் பெண்கள் தனியாக வருவதில்லை. அதுவும் அந்தி சாயும் நேரத்தில்.
அந்தப் பெண்ணின் கண்கள் நிறைந்தன.
‘நான்..நான் …. அவரைப் பார்க்க வேண்டும்.. மூத்தவருக்கு அடுத்தவரை..’
அடிவயிற்றில் எழும்பி வந்த இருமலோடு போராடித் தொடரும் குரல்.
‘என்ன விஷயமோ?’
பகவதி அனுதாபத்தோடு பின்னும் விசாரித்தாள்.
நாணிக்குட்டி தோட்டத்தில் மேற்கு மூலையில் சாரைப் பாம்பு போல நடந்து போவது அவள் பார்வையில் பட்டது.
வந்துவிட்டாள். உடம்புக்கு ஒன்றுமில்லை போல.
‘எய்.. நான் விளக்கு வைத்தாகி விட்டது’.
சத்தம் கூட்ட நினைத்து அடக்கிக் கொண்டாள். பெண்கள் குரல் உயர்வது நல்லதில்லை.
சர்ப்பக்காவுப் பக்கம் வேறே ஏதோ காலடிச் சத்தம் கேட்டது. பிரமையோ?
போய்ப் பார்த்தால் தெரிந்து விடும். அதற்குள் இந்தப் பெண்ணின் வர்த்தமானத்தைக் கேட்டு வார்த்தை சொல்லி அனுப்பி விட்டு.. இவள் யார், வந்த காரியம் என்ன என்று முதலில் மனசிலாக்கிக் கொள்ள வேணும்.
‘இது .. இது..’
அந்தப் பெண் வார்த்தை வராமல் தடுமாறியபடியே, கூட நின்ற பெண் குழந்தையை இழுத்து அணைத்துக் கொண்டாள்.
‘இவள்.. திருமேனிக்கு.. இவள் .. அவருக்குப் பிறந்தவள்..’
பகவதி அந்தப் பெண்ணை ஆச்சரியத்தோடு உற்றுப் பார்த்தாள்.
யார்? நீலகண்டன் நம்பூதிரி சம்பந்தம் வைத்திருந்த மலமக்காவு கார்த்தியாயினியா முன்னால் நிற்பது?
‘நைஷ்டிக பிரம்மச்சாரியையும் நிமிர்ந்து பார்த்துக் கண் கிறங்க வைக்கிற வனப்புள்ள தேவதை’ என்று பாரதப் புழையின் இக்கரையிலும் அக்கரையிலும் பரப்ரப்பாக, லயிப்போடு பேசப்பட்ட கார்த்தியா இது?
செல்லரித்த கவிதையின் ஏட்டுப் பிரதி போல் முன்னால் கட்டி நிறுத்திய இந்த எலும்பு உருவம் தான் கார்த்தி என்றால், பாரதப் புழையும் திசை மாறி வடக்கே பாய்ந்து இலக்கின்றிப் போகட்டும்..
‘பசிக்குதம்மா’
குழந்தை அம்மாவின் இடுப்புத் துணியைப் பறி இழுத்தது.
‘போய்ச் சாப்பிடலாம் மோளே..’
அவள் பகவதியின் பார்வையைத் தவிர்த்தபடி சொன்னாள்.
‘அப்பா வீட்டில் பெரிய இலை விரித்து, நிறைய நெய் ஊற்றி, பப்படமும், பிரதமனும், சோறும், காயுமாகச் சாப்பிடலாம் என்றாயே அம்மா?’
செப்பு வாயைக் குவித்துக் கேட்கிற மழலை.
‘ரொம்பப் பசிக்குதம்மா.. காலையில் கோயிலில் கொடுத்த நேந்திரம்பழத்தை நீ சொன்னபடி கொஞ்சம் கொஞ்சமாகப் பகல் வரை சாப்பிட்டு, அப்புறம் தோலையும் தின்று விட்டேன்..’
பகவதிக்கு வயிற்றைப் பிசைந்தது. இந்தப் பச்சை மண் வெறும் வயிற்றோடு வாடிப் போய் நடந்திருக்கிறது. எப்போது புறப்பட்டோ…எத்தனை கல் தூரத்தில் இருந்தோ… கட்டி வைத்த கிழட்டு யானைக்குக் கூட இருநூறும் முன்னூறுமாகச் செவ்வாழைப் பழங்களை அள்ளித் தருகிற இந்த மனையின் ஒரே வாரிசு, யாரோ எங்கேயோ கொடுத்த ஒற்றைப் பழத்தைக் கிள்ளித் தின்றபடி, குடல் கருக நடந்து.. கடவுளே.. கடவுளே.. உனக்குக் கண் அவிந்து போனதா.. பாரதப் புழை வெள்ளத்தில் உன்னையும் அடித்துப் போக..
‘உள்ளே வா கார்த்தி..’
பகவதி விடுவிடுவென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே நடந்தாள். பின்னால் தயங்கி நின்றவளைப் பார்த்துச் சொன்னாள் –
‘உன்னைத் தான் கார்த்தியாயினி.. இந்த வாசல், மனையில் எங்கள் பகுதிக்குப் போகிறது.. நீ என் வீட்டுக்கு வருவதை யாரும் ஏனென்று கேட்க முடியாது..புரிகிறதா?’
சுவ்ரைப் பிடித்துத் தடுமாறி மெல்லக் கார்த்தியாயின் உள்ளே வருவதற்குள் வட்டிலில் குழந்தைக்குச் சோறு பரிமாறி இருந்தாள் பகவதி.
தரையெல்லாம் சிதறி இரைத்துக் கொண்டு அவசர அவசரமாகச் சாப்பிடும் குழந்தை.
‘மெல்ல.. மெல்ல.. என் கண்ணே.. உன் பெயர் தான் என்ன?’
‘நந்தினி..அச்சன் நந்துக்குட்டி என்று விளிக்கும்…என் அச்சன் எங்கே ஓப்போளே?’
‘நான் அக்கா இல்லையடி என் செல்லமே.. உன் சித்தியாக்கும்.. இரு உன் அச்சனைக் கூப்பிடுகிறேன்..நீ சாப்பிட்டு முடித்தால் தான் அது.. உன் அம்மாவும் சாப்பிடணும்.. இரு.. பரம்பில் ஒரு வாழையிலை அரிந்து வரேன்.’
கார்த்தியாயினி சுவரில் தலை சாய்த்து இருமத் தொடங்க, பகவதி தோட்டத்துக்கு ஓடினாள். சோறு தான் இப்போது இவளுக்கு மருந்து.
சர்ப்பக்காவில் சலசலப்பு கேட்டது.
யட்சியா? பாம்பா?
பகவதி காற்றில் அலையும் விளக்கொளியில் கண்ணை இடுக்கிப் பார்த்தாள்.
யட்சி போல நாணிக்குட்டி. மேலே பற்றிப் படர்ந்த பாம்பாக நீலகண்டன் நம்பூதிரி.
September 18, 2022
யானைக்காரனான திருமாந்தாங்குன்னு வைத்தியனோடு ஒரு பகல்
மனை குறுநாவல் இரா.முருகன் பகுதி 5
பகவதி குளித்திருந்தாள்.
’அந்தி சாயப் போகிற நேரத்தில் ஸ்திரியோடு பேசுவது பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?’
ஈரக்கால்களை நடையில் ஒற்றி உள்ளே வர, சித்ரன் தரையில் அமர்ந்து சரிகைத் துணியை மடித்து வைத்துக் கொண்டிருந்தான். காலோடு நடக்கிற கண்கள்.
‘ஆயுர்வேதம் என்ன சொல்கிறதென்றா கேட்டாய்? அது இன்னொரு தடவை பேசச் சொல்கிறது.. இப்படி ஆரம்பித்து..’
ஈரமும் மஞ்சளும் மணத்த அவளுடைய இரு பாதங்களிலும் முத்தமிட்டான்.
‘எய்.. இன்னும் எத்தனை தடவை குளிப்பது..ஒரேயடியாக ராத்திரி சாப்பிடலாம் என்று சொன்னீர்களே’
சத்தம் எழாமல் குலுங்கிச் சிரிக்கிற பகவதி.. அவன் பக்கத்தில் மெல்ல அமர்ந்தாள். அவள் தோளில் தலை வைத்து, வாசனைப் பொடி மணக்கும் ஈரத் தலை முடியை இழை பிரித்துத் தன் முகத்தில் படிய விட்டுக் கொண்டு சொன்னான் சித்ரன்.
‘ராத்திரி ஆகி விட்டது.. கருமை அடர்ந்த இருளில் இருக்கிறேனாக்கும்.. சாப்பிடலாம்’.
‘ஆளை விடுங்கள்.. ஏகமாக வேலை இருக்கிறது.. மதியம் நீங்கள் உண்ட பாத்திரங்கள் அலம்ப வேண்டும். சர்ப்பக் காவில் விளக்கு வைக்க வேண்டும்.. ‘
பகவதி விலகி அமர்ந்தாள்.
‘நாணிக்குட்டி என்ன ஆனாள்? இதெல்லாம் அவள் தானே பதிவாகச் செய்வாள்?’
‘குளித்து விட்டு வரும்போது அவள் வீட்டுக்காரன் குஞ்ஞுண்ணியைப் பார்த்தேன்.. உடம்பு திடீரென்று சுகமில்லாமல் போய் வீட்டில் படுத்திருக்கிறாள் என்று காசு கேட்டான்’.
‘குஞ்ஞுண்ணி சொல்வதை எல்லாம் அப்படியே நம்பி விட்டாயா? கள்ளுக் குடிக்கப் போகிற போக்கில், ஏதாவது இங்கே காசு பெயருமா என்று வந்திருப்பான். இந்த பாழாய்ப் போன கள்ளு… மனுஷ்யனை எப்படியெல்லாம் தான் ஒடித்துப் போட்டு விடுகிறது.. நானே குஞ்ஞுண்ணியை எத்தனை தடவை கேட்டிருப்பேன்.. உனக்கு வெட்கமாக இல்லையா குஞ்ஞுண்ணி? திருநல்லூரில் ஐந்து வருடம் கதகளி படித்து விட்டு இப்படி பெண்டாட்டி கொண்டு வரும் காசை நம்பி குடியும் உறக்கமுமாய்க் கிடக்கிறாயே என்று..’
‘மூத்தவர் கூட ஏதோ கதகளி ஒப்பனைப் பெட்டி குஞ்ஞுண்ணிக்கு வாங்கிக் கொடுத்ததாகச் சொன்னீர்களே..’
‘மூத்தவர் இல்லை அது.. அடுத்த அண்ணன் நீலகண்டன்.. குஞ்ஞுண்னி கதை கிடக்கட்டும்.. இந்த நாலு நாளில் இங்கே வேறே வர்த்தமானங்கள் என்ன?’
‘உங்களுக்கு ஈசுவர கிருபையால் இன்னும் கூடி ஒரு அண்ணி வரப் போகிறாள். அநேகமாக உங்களையும், என்னையும் விட இளையவளாக் இருப்பாள்..’
‘சிவசிவ.. பெரியவருக்கு ஏன் இப்படி புத்தி போகிறது? நிச்சயம் கேட்கத்தான் போகிறேன்’
‘வேண்டாம்.. சபித்து விடுவார்.. அவர் பேச்சைக் கேட்காமல் நீங்கள் என்னைக் கல்யாணம் கழித்து வந்ததால், நமக்கு சந்ததி இல்லாமல் போகிறதாம். மனையின் தம்புராட்டிகள் என் காதுபட ஜாடைமாடையாக எத்தனையோ பேசுகிறார்கள்..’
‘நீ அவர்கள் வழிக்கே போவதில்லையே’
‘அது கூட வம்பு வளர்க்க ஒரு காரணமில்லையா.. மனைக்குள்ளே மனையாக நாம் ஒதுங்கி இருப்பதில் பொறாமை.. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை.. பூஜைக்குப் பூ எடுத்துத் தருவதிலும், சமைப்பதிலும், எச்சில் இலைக்குச் சண்டை போடுவதிலும் தவிர அவர்கள் ஜீவிக்கிற நிமிஷங்கள் எத்தனை… நம்பூதிரிப் பெண்.. நம்பூதிரி அந்தர்ஜனம்.. உள்ளே இருக்கப்பட்டவள்.. உள்ளேயே இருந்து மக்கி மடிந்து போகிறவள்.. இதெல்லாம் எப்போது மாறுமோ?’
பகவதியின் கண்ணில் சோகம் இழை விரித்து இமைகள் தாழ்ந்தன. அவற்றில் மெல்ல இதழ் பதித்து சித்ரன் சொன்னான் –
’இந்த நம்பூதிரி சமுதாயமே பிரளயம் வந்தது போல் அழியப் போகிறது.. எல்லாம் ஒரு அந்தர்ஜனம்தான் காரணம்.. தெரியுமா உனக்கு?’
‘சொன்னால் தானே தெரியும்?’
‘தாழமங்கலத்தில் பூகம்பம் வெடிக்கப் போகிறது. ஒரு நம்பூதிரிப் பெண் மேல் ஸ்மார்த்த விசாரணை தொடங்கி விட்டது..’
‘என்ன செய்தாள் அவள்? வேளி கழித்துக் கூட்டி வந்த நம்பூதிரியைக் கழுத்தை நெறித்துக் கொன்றாளா?’
‘அப்படி இருந்தால் ஒரே ஒரு மனைக்கு மட்டுமில்லையா நல்ல காலம் என்று வைத்துக் கொள்ள?’
‘பின்னே தாழமங்கலத்துப் பெண் என்ன தான் செய்தாள்?’
‘தாழமஙகலத்து அந்தர்ஜனம் தாசியானாள்’
‘எய்.. அதெல்லாம் பொய்யாக இருக்கும்.. அந்தர்ஜனமாவது.. தாசியாவதாவது.. நுணை..க்ட்டுக் கதை .. ’
‘அவளே உண்மை என்றால்?’
‘சொல்ல வைத்திருப்பார்களோ என்னமோ’
‘ஒரு வன்மத்தோடு செயல் பட்டிருக்கிறாள். .சுற்று வட்டாரத்தில் எல்லா கிராமத்தில் இருந்தும் மனைக்கு ஒருத்தராக, தரவாட்டுக்கு ஒருத்தராக மயக்கி இருக்கிறாள்..கொட்டாரத்து அரச குலமும் வந்து போனவரில் உண்டாம்.. கூட இருந்தவர்களின் அங்க லட்சணங்களையும், வந்து போன நாள், நட்சத்திரம், நாழிகையையும் கிரமமாகக் குறித்து வைத்திருக்கிறாளாம். அழகென்றால் பேரழகி அவள்.. உன்னைப் போல..கொஞ்சம் தாழ்வு..அவ்வளவு தான்… ‘
‘சரி சரி மேலே சொல்லலாம்.. இங்கே மேலே இல்லை.. தீபம் வைக்கப் போகணும்’
‘உத்தரவு தம்புராட்டி.. அந்த தாழமங்கலக்காரி அழகுக்கு தீபத்தில் விழுகிற விட்டில் பூச்சி போல விழுந்திருக்கிறார்கள் பிரதேசத்து ஆண்கள் எல்லாம்’.
‘குருவாயூரப்பா.. இதென்ன கொடுமை..’
பகவதியின் தேகம் நடுங்கியது.
‘கோழிக்கோடு சாமுத்ரி மகராஜா ஆக்ஞைப்படி வேத விற்பன்னர்கள் நீதி மன்றம் அமைத்து விசாரிக்கப் போகிறார்களாம்.. மாடம்பு மனையின் அடுதிரிப்பாடு தான் முக்கிய நீதிபதி..’
‘எப்போது தொடங்கப் போகிறதாம்?’
‘அடுத்த வாரம்..’
‘அடுத்த வாரம்.. கொல்லம் ஆயிரத்து எண்பது நம்பூதிரி சமுதாயத்துக்கு கொள்ளிதான் வைக்கும் போலிருக்கிறது. அந்தப் பெண் யார் பெயரை எல்லாம் சொல்வாளோ.. இந்த மனைக்காரர்களும் உண்டோ அதில்?’
‘நீ உண்டா என்று நேரடியாகவே கேளேன் பகவதி..’
‘இந்த யானைக்காரன் பழகிய யானையை விட்டு வேறே எங்கும் போக மாட்டான் என்று தெரியும்’
இறுகத் தழுவி மார்பில் முகம் பதித்த பகவதி..
‘திருமேனி … வந்து ரட்சிக்கணுமே.. தெக்கே பரம்பில் ராமப் பணிக்கருக்குப் பாம்பு கடித்தது’.
வெளியே பதற்றமான குரல்கள். சித்ரன் மூலிகை சஞ்சியோடு வெளியே ஓடினான்.
‘குளித்து விட்டுப் போங்கள் திருமேனி.. ஓ..என் யானைக்காரத் திருமேனி’..
September 17, 2022
முகபடாம் வாங்கி வந்த ஆனைக்காரன் – குறுநாவல் மனை
மனை குறுநாவல் இரா.முருகன் பகுதி 4
பிற்பகல். இன்றைக்கு இனிமேல் சித்ரன் வருவான் என்று தோன்றவில்லை.
பகவதி, உலர்ந்து கொண்டிருந்த சோற்றுப் பாத்திரத்தைப் பார்த்தாள். சித்ரனுக்குப் பிடித்த மிளகூட்டான். இதுவும் இன்று குப்பைக்குத் தான்.
ஒரு பெருமூச்சோடு பகவதியின் கை பாத்திரத்தை எடுக்க நீண்டபோது, பின்னாலிருந்து ஒரு வலுவான கரம் இணைந்தது.
‘எனக்கு இல்லையா?’
சித்ரன் குரல்.
சட்டென்று இறங்கிய மழை போல பகவதிக்கு உடல் சிலிர்த்தது.
‘ஒன்றும் இல்லை போங்கள். எதுவும் மிச்சம் இல்லை’
‘அப்படியா.. பார்க்கிறேனே’
கதவை மூடி விட்டு வந்தான் சித்ரன்.
’இதோ .இருக்கே.’
’எய்.. அதெல்லாம் சாப்பிடுவதற்கில்லை’
மார்பு விம்மித் தணிய உதடுகளை மனமே இல்ல்லாமல் விடுவித்துக் கொண்டாள் பகவதி. பொய்க் கோபம். இது கூட சந்தோஷமானதுதான்.
‘சரி வேண்டாம்.. பின்னே இவை?’
பச்சிலை மணக்கும் கரங்கள் உடலெங்கும் ஊறப் பகவதிக்குக் காலம் மறந்து போனது. திரும்பத் திரும்ப மழையில் நனைகிற சிலிர்ப்பு. மேடச் சூட்டைத் தணித்து பூமியைக் குளிரச் குளிர ஆலிங்கனம் செய்கிற வலிய மழைக் கரங்கள்.
’இப்போதுதான் இதெல்லாம் நினைவு வந்ததா?’
கண்கிறங்கி இருக்க வாய் தன் பாட்டில் கேட்டது.
‘திருவேகப்புரையில்… திருமாந்தான்குன்னில்..கடம்பழிபுரத்தில்… திருநாவாயில்.. திருச்சிவப்பேரூரில்… எங்கே போனாலும் உன் நினைவுதான்.. அப்புறம் திருச்சூர் வடக்கும்நாத க்ஷேத்ரத்தில்…’
‘கோயிலில் பகவான் நினைவு இல்லையா வரவேண்டும்? பகவதிக்கு அங்கே என்ன?’
‘வடக்கும்நாத க்ஷேத்ரத்தில் புதிதாக ரெண்டு யானை வாங்கி இருக்கிறார்கள்’
காதருகில் இழையும் குரல். உரசி இழைந்து அக்னிக்கோடு போடும் உதடுகள்.
‘ரெட்டை யானைகள்,,, அழகான சித்திர வேலைப்பாடு செய்த முகபடாம் அணிந்து அருகருகே மெல்ல அசைந்து நிற்கிற இணை. நடுவே ஒரு நூல் நுழையவும் இடம் இல்லை. சருகு போல மெலிந்த பாகன் இப்படி இடம் கண்டு..’
பகவதி அந்த நடுவிரலை எடுத்துக் கடித்தாள்.
‘நானும் தமிழ்ப் பிரதேசத்திலிருந்து வந்த வணிகனிடம் ஒரு முகபடாம் வாங்கினேன்’.
சித்ரன் கையில் எடுத்த சஞ்சியை உதற வேர்கள், பச்சிலைகள், ஒரு துணிச்சுருள்..
‘ஐயே.. இதென்ன.. ஆண் பிள்ளைகள் இதை எல்லாம் எடுத்து வந்து///’
அந்த சரிகைத் துணி, வைத்த கண்ணை எடுக்க முடியாத அழகு.. தமிழ்நாட்டில் பெண்கள் அணிகிறதுதான் எத்தனை வனப்பாக.. உடலை முழுக்க மூடுகிறாதாக..
‘பகவதி.. உடுத்திக் கொள்ளேன்.. பார்க்க வேண்டும்..’
‘சாப்பிட வேண்டாமா?’
பகவதியின் குரல் அவளுக்கே அந்நியமாக, சுவரம் தாழ்ந்து ஒலித்தது.
‘ஐந்து நாளாகச் சாப்பிடவில்லை… பசி.. ஆனைப் பசி..’
‘இருங்கள்.. சோறு வட்டித்துவிட்டு..’
‘அதற்குள் யானைக் கதை சொல்லி முடித்து விடுகிறேன்..’
‘ஓ…நீங்கள் ஒரு பொல்லாத யானைப் பாகன்..’
கைப்பிடியில் புதுத் துணி கசங்க, உடுத்தியிருந்தது நிலத்தில் சரிந்து சிரிக்க, காலம் விரைந்து, அங்கே மட்டும் உறைந்தது.
( 
September 16, 2022
வல்லே என்று சொல்லி வந்து பார்த்து எழுதிய பயணி – வாதவூரன் பரிகள் பத்தி – புரவி இலக்கிய இதழ்
வாதவூரான் பரிகள் 2 இரா.முருகன்
பயணம் செய்யத் தயாராவது பயணத்தைப்போல் சுவாரசியமான விஷயமாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. விரிவாகத் திட்டமிட்டு, எல்லா நூற்றாண்டுகளிலும் சீனா, அரேபியா, போர்ச்சுகல், இத்தாலி, இங்கிலாந்து என்று பல நாடுகளிலிருந்து உலகம் சுற்றக் கிளம்பி வந்து, பயணத்தில் முக்கியப் பகுதியாக தென்னிந்தியாவில் பயணிகள் ஆர்வத்தோடு அலைந்திருக்கிறார்கள்.
இபன் பதூதா, பாஹியான், மார்க்கோ போலோ, யுவான் சுவாங் என்று கிட்டத்தட்ட எல்லாப் பயணிகளும் பயணம் முடித்து ஊர் திரும்பி, உடுப்பைத் துவைக்கப் போட்டுவிட்டு வீட்டுச் சமையலை ருசித்தபடி, மற்றவகை விருந்துக்குக் காத்திருக்கும் நேரத்தில் பயணக் கதை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்.
இவர்களில், போய்ப் பார்த்த இடங்கள், சந்தித்தவர்கள் பற்றி விரிவாகக் குறிப்பு எடுத்து வந்து அவற்றை எல்லாம் கொட்டிக் கிளறி அடுக்கி நாள்வாரியாக பயணக் குறிப்பு எழுதியவர்கள் பலரும். ஞாபகம் கலைந்துபோய், கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் நிஜம் என்று எழுதியவர்களும் உண்டு. மார்க்கோ போலோ பயணக் குறிப்புகள் இப்படிப்பட்டவை – சுவாரசியம். எனில், முழுக்க நம்ப முடியவில்லை.-
பதினேழாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவுக்கு வந்த இத்தாலியப் பயணி வல்லே Pietro Della Valle உலகம் சுற்றவே அவதாரம் எடுத்தவர். தாயகத்துக்கு திரும்பப் போய் இதயம் பேசாமல் அங்கங்கே பார்த்தது கேட்டது அனுபவப்பட்டதை சோம்பலின்றி உடனே கடிதங்களாக எழுதி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். கூரியர் சர்வீஸும் அஞ்சலும் இல்லாத அந்தக் காலத்தில் வல்லே எழுதி அனுப்பியதெல்லாம் வரல்லே என்று தொலைந்து போகாமல், சரியாகப் போய்ச் சேர்ந்தனபோல. அவர் ஊர்போய் உடனே அதையெல்லாம் எடுத்து அடுக்கி புத்தகமாக்கி வெளியிட்டிருக்கிறார் அது மட்டுமல்ல, இத்தாலிய மொழியில் அமைந்த இந்த நூலை இங்கிலீஷில் உடனுக்குடன் மொழிபெயர்த்து ஆங்கிலம் கூறும் நல்லுலகில் பரப்பப்பட்டது. The Travels of Pietro Della Valle in India என்று 1624-ல் வெளியான இந்த நூலை 1800களில் மறுபிரசுரம் செய்திருக்கிறார்கள். படிக்க வேண்டிய புத்தகம்.
கர்னாடகத்தில் வடக்கு கன்னட பிரதேசத்திலும், கோவாவிலும், கோழிக்கோடு, கண்ணூரிலும் பாதம் பதித்துப் போயிருக்கிறார் வல்லே. இப்போது குக்கிராமமாகத் தேய்ந்து போன, அந்தக்கால நகரமான கெருஸொப்பா, உள்ளால், ஹொன்னாவர் என்று வந்திருந்து தங்கிப் போயிருக்கிறார். அவர் சொல்வது- அந்தப் பிரதேசத்தில் ஆண்களும் பெண்களும் காது மடல்களில் பெரிய ஓட்டை போட்டு நகை அணிந்திருக்கிறார்கள். காது தோள்வரை தொங்க, மடலைக் கிழித்திருந்தார்கள் அவர்கள். இதை அப்படியே கொடுத்து விட்டு பதிப்பாசிரியர் அடிக்குறிப்பாக எழுதிச் சேர்க்கிறார் – பர்மாவில் காது ஓட்டைக்குள் பாதி பிடித்த சுருட்டைச் செருகி வைத்துக் கொள்கிறார்கள். வல்லே சுற்றிவந்து அனுபவித்ததின் அடிப்படையில் கன்னடத்தில் அப்பா என்றால் தந்தை, அம்மா என்றால் தாய் என்று சொல்ல, பதிப்பாசிரியர் அவசரமாக அடிக்குறிப்புக்குப் பிடித்து இழுத்து துளு மொழியில் அப்பா என்றால் தாய், அம்மா என்றால் அப்பா என்று புதுப்புது அர்த்தங்களைச் சொல்கிறார். இதெல்லாம் இருந்தாலும் புத்தகம் திரட்டித் தரும் தகவல்களால் சிறப்பாகிறது.
வல்லே பயணம் வந்த ஊரில் ஒரு வாத்தியக்கார் இறந்துபட, அவருடைய மூன்றாம் மனைவி தானும் உயிர் நீப்பேன் என்று அறிவிக்கிறாள். கணவரின் உடலை எரியூட்டும்போது கூடவே எரிவது இல்லை இது. ஒரு மாதம் தினசரி சாயந்திரம் நாலு தெரு சுற்றி ஊர்வலமாக வருகிறாள். கையில் முகம் பார்க்கும் கண்ணாடியில் அடிக்கடி முகம் பார்த்தபடி மற்ற கையில் வைத்த எலுமிச்சம் பழத்தை முகர்ந்தபடி இருக்கிறாள் அவள். கண்ணாடி சிற்றின்பத்தை விலக்கப் போவதையும் எலுமிச்சை, தீ தீண்டப்போகும் உடலாலும் மனதாலும் அவள் பரிசுத்தமாவதையும் காட்டுகிறதாம். அந்தப் பெண்ணோடு மொழிபெயர்ப்பாளர் மூலம் உரையாடி அவளை உயிர்த் தியாகம் செய்துகொள்ளாமல் தடுக்க வல்லே அவள் வீட்டுக்குப் போகிறார். அடுத்த வாரம் சதிமாதாவாக அக்னியில் உயிர்விட நாள் குறிக்கப்பட்ட அந்தப் பெண் அதைப் பற்றிய கவலையே இல்லாமல் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க வல்லே போய்ச் சேருகிறார். ஏழு வயதிலும் எட்டு வயதிலும் இரண்டு சிறு குழந்தைகள் அவளுக்கு. ‘உனக்காக இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்காக நீ வாழ வேண்டாமா’ என்று அவர் கேட்டதை அந்தப் பெண் லட்சியம் செய்வதில்லை. ‘என் சக்களத்திகள் அதுகளை வளர்ப்பாங்க’ என்று ஒரு வரி பதில் வேறு தருகிறாள். வல்லே திரும்பும்போது அவள் சொல்கிறாள் ‘நாளை உங்களை சந்திக்க நீங்க இருக்கற இடத்துக்கு வருவேன்’. வருகிறாள். வல்லேவிடம் பிச்சை கேட்கிறாள் – அடுத்த வாரம் என்னை எரிக்கப் போறோம். அதுக்கு விறகு வாங்கணும், நெய் வாங்கணும். சாவுச்சடங்கு செய்யணும். ஏழைப்பட்ட குடும்பம் எங்களோடது. உங்களுக்கு புண்ணியமாகட்டும் முடிஞ்ச காணிக்கை கொடுங்க ஐயா.
இந்த ஒரு சித்தரிப்புக்காகவே வல்லேவுக்கு வணக்கம்.
September 15, 2022
தலையில் பலாப்பழம் சுமந்து வெய்யிலில் நடக்கும் ஒருவர் – மனை குறுநாவல்
மனை குறுநாவல் இரா.முருகன் பகுதி 3
(இரா.முருகன் குறுநாவல்கள் நூலில் இருந்து)
———————————————————————————
மனை மத்தியான உறக்கத்தில் கிடந்தது. மூத்தவருக்கும், சித்ரன் நம்பூதிரிக்கும் இடைப்பட்ட நீலகண்டன் நம்பூதிரி, ராமச்ச விசிறியைத் தலை மாட்டில் வைத்துக் கொண்டு, முகப்பில், பளிங்குத் தரையின் குளிர்ச்சியில் நித்திரை போயிருந்தார். நாற்பது வயதில் இப்போது ஒரு மாதமாகப் புதிய உறவு வைத்துக்கொண்டு வாராவாரம் திருச்சிவப்பேரூர் போய்த் திரும்புகிற களைப்பு…
இளசாக ஒரு பெண் கிடைக்கிறாள் என்றால் ஓணம் கேராத மூலையில் ஒரு குக்கிராமமாக இருந்தாலும், வெள்ளை வேட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடுகிறபோது வராத ஆயாசம் இது.
பகவதி வெளியில் வந்தாள். சித்ரன் பயணம் போய் நான்கு நாளாகிறது. இன்னும் திரும்பக் காணோம்.
அவன் கையால் சிகிச்சை செய்து கொள்ள எங்கே இருந்தெல்லாம் வந்து அழைத்துப் போகிறார்கள்..
கைராசி வைத்தியர்.. அதற்காக கைப்பிடித்துக் கூட்டி வந்தவளை இப்படிக் தனியாக விட்டுவிட்டு..
நல்ல வேளை.. இருப்பும் சமையலும் எல்லாம் தனியென்று ஆனது. இல்லாவிட்டால் மனையில் உயரும் இந்தக் கூச்சலுக்கும் சண்டைக்கும் நடுவே பிராணன் போயிருக்கும்..
உள்கட்டு அமைதியாகக் கிடந்தது. எச்சில் சண்டை எப்படி முடிந்தது என்று தெரியவில்லை. சொர்க்கம் புகுவது பற்றிய சிந்தனைகளை இன்னும் ஒரு மத்தியானம் தள்ளிப் போட்டுவிட்டுத் தம்புராட்டிகளும் உறங்கி இருந்தார்கள்.
இனிமேல் சாயந்திரம் மறுபடி குளியலும், நாமஜபமும், மரக்குடை பிடித்துக் கொண்டு ‘அம்மே நாராயணா .. தேவி நாராயணா’ என்று ஜபித்து உருவிட்டபடி கோயில் போய் வருவதும், நிலவிளக்கேற்ற்றி ‘தீபம் தீபம்’ என்று சத்தமிட்டபடி முகப்பில் வைக்கிறதுமாக இன்றைய பொழுது போய்விடும்.
வேலை பார்க்கிற நாணிக்குட்டி என்ற நாராயணிக்குட்டி கூட வீட்டுக்குப் போயிருந்தாள். அவளுக்கும் வீடு இருக்கிறது. ராத்திரியும் பகலும் குடித்துக் கொண்டே இருக்கிற கணவன் இருக்கிறான். அவனுக்குச் சோறு எடுத்துப் போக வேண்டிய கடமை இருக்கிறது.
பகவதி பின்கதவைத் திறந்தாள். தோட்டத்துக்கு நீள்கிற பாதை…
‘யட்சி.. அடி யட்சி.. நீயும் உறங்கி விட்டாயோ?’
வாகை மரத்தில் துளையிட்டுக் கொண்டிருந்த மரங்கொத்தி மெல்லத் திரும்பிப் பார்த்தது.
‘யட்சி தானே… பார்த்தால் நீ தேடியதாகச் சொல்லுவேன். நீ உள்ளே போய் உறங்கேன் பகவதி. உச்சி வெய்யிலில் ஏன் அலைந்து திரியணும்?’
இன்றைக்குள் இந்த மரத்தைத் துளைத்துச் சாய்த்துவிட வேண்டும் என்று யாரோ இட்ட கட்டளையை நடப்பாக்கிக் கொண்டிருக்கிறது போல அதன் அலகு சாய்ந்து மரத்தில் இழைந்தது.
பகவதி மாமரச் சுவட்டில் நின்றாள்.
அவள் பிறந்த செவ்வரம் கிராமத்தில் இதுபோல மரங்கள் அடர்ந்த தோட்டத் தரை இல்லை. மனையே இல்லை. நசித்துக் கொண்டிருந்த ஒரு பழைய நாலுகட்டு. வெயில் உக்ரமாகப் பற்றி இறங்கும் அனல் சூட்டில், உடல் முழுவதும் படுக்கைப் புண்களோடு பக்கவாதம் பிடித்துப் படுத்திருந்த பகவதியின் அச்சன் பரமேஸ்வரன் நம்பூதிரி…
‘காவுங்கல் குளக்கரை மனை சித்ரன் நம்பூதிரி கை வைத்தாலொழிய ரோகம் மாறுமென்று தோன்றவில்லை..’
யார்யாரோ சொன்னார்கள். பேசி வைத்துக் கொண்டு சொன்ன மாதிரி ஒரே பெயர் தான் அவர்கள் நினைவிலும் நாவிலும் கடந்து வந்தது – சித்ரன் நம்பூதிரி.
மூலிகை சஞ்சியோடு படியேறி வந்த சித்ரன் நம்பூதிரியை பகவதி முதல்முதலாகப் பார்த்த, ஐந்து வருஷம் முந்திய அந்தக் கோடை காலப் பகல்…
சுற்றி எரிந்து படரும் பாலைத் தீயின் நடுவே ஓர் இதமான மலைச்சாரல் காற்றாக… தூவித் தெறிக்கும் மழைத்துளிகளாகச் சித்திரனின் பார்வை..
மாதக் கணக்கில் தைலமும், இலையும், விழுதும், மேலே எண்ணெய் புரட்டியும், குடிக்கக் கொடுத்தும் வைத்தியம் பார்த்த சித்ரன் ஒரு சக்கரம் கூட வைத்தியக் கூலியாக வாங்க மாட்டேன் என்று மறுத்த பிடிவாதம்…
பரமேஸ்வரன் நம்பூதிரியின் இறுதி சுவாசததை வாங்கிக் கொண்டு ஊருக்கு விடிந்த மிதுன மாதத்துக் காலைப் பொழுது… இடிந்து கொண்டிருக்கும் நாலுகட்டின் சுவர்களுக்கு நடுவே ஓர் அழகான யுவதி..
ஐந்தாம் தாரமும், ஆறாம் தாரமும் ஆக்கிக் கொள்ள ஆர்வம் காட்டித் தூது அனுப்பியவர்கள்… நெருக்கிய கடன்காரர்கள்..
மிதுனம் முடிந்து கர்க்கடகம் பிறந்ததும் சித்ரன் வந்து நின்றது ஒரு புலர்காலைப் பொழுதில்…
‘பகவதி, என்னோடு வா..’
திருமாந்தாங்குன்னு கோயிலில் வைத்து பகவதி கழுத்தில் திருமாங்கலியம் அணிவித்து மனைவி என்று ஊரறியச் சொல்லி இங்கே அழைத்து வந்து ஐந்து வருடம் உருண்டு போய் விட்டது
பழைய நினைவுகளில் மனம் அலையடித்துக் கொண்டிருக்க, பச்சை பூத்துக் கிடந்த வெளியில் பகவதியின் பார்வை நிலைத்தது.
வெற்றிலைப் பச்சைக்குக் குறுக்கில் வெள்ளை நரம்பாக ஓடுகிற ஒற்றையடிப் பாதையில் யாரோ வந்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது. தலையில் வைத்துக் கை உயர்த்திப் பிடித்த வாழைக்குலையோடு தள்ளாடி வருகிற அந்த வயதான மனிதரைப் பகவதிக்குத் தெரியும்..
ஆற்றிங்கல் மாதவன் எம்பிராந்திரி.
அச்சன் இருக்கும்போதும் அப்புறமும் யார் யாரோ பல்லுப் போன கிழவர்களின் பெண்டாட்டியாக்கப் பகவதியின் ஜாதகம் கேட்டு வந்தவர் இவர்.
பன்றியூரில் சின மனைக்காரர்களுக்கு இப்படி இணை சேர்ப்பதே தொழிலும் பொழுது போக்கும்… அவர்களை அண்டி சேவகம் பார்க்கிற ஏழை பிராமணக் கிழவர் இவர்.
ஆற்றிங்கல் மாதவன் எம்பிராந்திரி என்ற தன் பெயரை இவர் கூட மறந்திருக்கலாம். ‘ஊட்டுப்புரை எலி’ … அது இவருக்குப் பழகிப்போன பெயர்.
‘ஊட்டுப்புரை எலி..’
சின்னப் பையன்கள் பின்னால் இருந்து விளையாட்டாகக் கத்தி விட்டு ஓடினால் மட்டும் நல்ல மலையாளத்தில் நாலு வசவு உதிர்ப்பார். மற்றபடி பேசுவதே அபூர்வம்.
ஊட்டுப்புரை எலி… கோவிலில் இலவசமாகக் கிடைக்கும் சோற்றை நம்பி ஒரு வாழ்க்கை. எல்லாப் பரிகாசத்தோடும் இலையில் விழுகிற சோறு…
உச்சி வெய்யிலில் வாழைக் குலையைத் தலையில் ஏற்றி அனுப்பியிருக்கிறார்கள்.
யாசக வாழ்க்கை. இருந்தாலும் பிறப்பால் மேல் சாதி.
பகவதியின் கண்கள் மாதவன் எம்பிராந்திரியைக் கடந்து தூரத்தில் விரியும் பசுமையில் வெறித்தன.
இந்தக் கிழவர் வரும் வழியில் எதிர்ப்பட்ட ஈழவன் எட்டு அடி பின்னால் ஓடி ஒதுங்கி நின்றிருப்பான். வயலில் உழைக்கும் அவன் மனைவி மார்பு மறைத்த துணி முழுவதுமாகக் கையில் உருவி எடுத்துக் கொண்டு தலைமுறை தலைமுறையாக அனுபவிக்கப்படும் அவமானம் கண்ணில் நீர்த்துக் கலங்க, கூனிக் குறுகித் தலை குனிந்து நின்றிருப்பாள்.
மேல் குடியினர் முன், தாழ்ந்த சாதிப் பெண்கள் விலங்கு மாதிரி வெட்கத்தை விட்டு உடுதுணி விலக்கி நிற்பதே மரியாதை என்று கற்பித்த அல்ப ஜந்துக்கள் அழுகியும் புழுத்தும் செத்திருக்க மாட்டார்களா?
இந்த மரியாதையை இன்னும் எதிர்பார்க்கிற இந்தத் தம்புரான்கள் எத்தனை மணி நேரம் பூஜை செய்தால் என்ன.. அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருந்தால், நிச்சயம் நரகல் தின்னும் அழுக்குப் பன்றிகளாகப் பிறந்து சேற்றில் கிடப்பார்கள்…
ஆனால் இந்த மாதவன் எம்பிராந்திரி.. இவர் ஒரு பாவப்பட்ட மனுஷர்… ஒரு பசுவாகப் பிறந்தாலே போதும். ஊட்டுப்புரைப் பசு.. பால் மரத்துப் போனது..
அப்புறம் இந்த மனையின் மூத்த நம்பூதிரி… அவர் ஒரு கரடியாகப் பிறவி எடுக்கட்டும்… அடுத்தவரான நீலகண்டன் நம்பூதிரி … ஒரு மண்புழு.. பந்தம் புலர்த்த மண்ணில் உருண்டு போகிற புழு..படி ஏறும் முன் சுருண்டு மண்ணோடு மண்ணாகி இன்னொரு ஜன்மம் அதேபடி மண்புழுவாக..
சித்ரன் நம்பூதிரி.. சித்ரன் ஒரு கொம்பன் யானையாவான்… பகவதி பிடியானையாவாள்.. கம்பீரமாக இணை விழைந்து சேர்கிற யானைகள்…
பகவதிக்குச் சிரிப்பு வந்தது. ஒரு பத்து நிமிடம் போலக் கடவுளாக இருந்த சந்தோஷம்.
மாதவன் எம்பிராந்திரி ‘குருவாயூரப்பா.. ரக்ஷிக்கணே’ என்று உரக்கச் சத்தமிட்டபடி வாழைக்குலையைத் தரையில் கிடத்தினார். வீட்டுக் குளத்தில் கைகால் கழுவி வந்தார்.
படுத்துக் கிடந்த நீலகண்டன் நம்பூதிரியின் தலைமாட்டுப் பக்கம் நின்று, ‘நீலண்டா.. நீலண்டா..’ என்று விளிக்க ஆரம்பிக்க, பகவதி உள்ளே போனாள்.
ஒரு வினாடி பின்னால் திரும்பிப் பார்க்க, மாதவன் எம்பிராந்திரி இடுப்பிலிருந்து எடுத்துக் கொண்டிருந்த ஓலை நறுக்கு கண்ணில் பட்டது.
பெண் ஜாதகமாக இருக்கும்.
மூத்த நம்பூதிரிக்கு அடுத்த கல்யாண யோகம்.
எச்சில் இலை யுத்தம் இன்னும் உக்கிரமடையக் கூடிய சாத்தியக் கூறுகள்.
(தொடரும்)
September 14, 2022
இலை மகா யுத்தம் – குறுநாவல் மனை
மனை குறுநாவல் இரா.முருகன் பகுதி 2
‘நானாக்கும் இன்று..’
‘நீ போடி தெம்மாடி.. இலையைத் தொடாதே..’
‘நீ என்ன மோகினி என்று நினைப்போ.. கண்ணாடியில் உன் குரங்கு முகத்தைப் பார்த்ததே இல்லையா?’
‘என் முகத்துக்கு என்னடி கிழவி? எனக்கு இன்னும் முப்பது வயது கூடத் திகையவில்லை… உன் மாதிரி தொங்கிப்போன மாரோடு திரிகிறேனா என்ன?’
‘ஊருக்கெல்லாம் மாரைத் திறந்து போட்டு எடுக்கஞ்சேரி மனையிலிருந்து சவிட்டி இறக்கிய நாயில்லையா நீ…. கிழம் மூன்றாம் தாரமாகக் கொண்டு வந்த நாய்.. எனக்கில்லாத உரிமை உனக்கேதடி கழுவேறி..’
‘ராத்திரி அவர் என் எச்சிலுக்காக என் காலடியில் கிடக்கிறார்.. பகலில் நான் அவருடைய எச்சில் இலையில் கை நனைக்கிறேன்… உனக்கு என்ன போச்சு கிழப்பட்டி?’
ஏகக் களேபரமாக மனைக்குள் சத்தம் உயர்ந்து கொண்டிருந்தது. சுற்றுக் காரியம் பார்க்கிற நாணிக்குட்டி உம்மரத்திலிருந்து பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
‘என்ன நாணிக்குட்டி?’
பகவதி கேட்டாள்.
‘சண்டை தம்புராட்டி… இன்றைக்கு மூத்த நம்பூதிரி குளியும் தேவாரமும் முடிந்து சீக்கிரமே கிளம்பி, பன்றியூர் அம்பலத்தில் உற்சவக் கொடியேற்று என்று போய் விட்டார்…இவர்களும் சீக்கிரமே ஆரம்பித்து விட்டார்கள்..’
பகவதி ஜன்னல் வழியாக உள்ளே பார்க்க ஐம்பது வயசுக்கு மேலே ஆன தலை நரைத்த மூத்த தம்புராட்டியும், பகவதி இங்கே வந்ததற்கு முதல் வருஷம் நம்பூதிரி வேளி கழித்துக் கூட்டி வந்த இளைய தம்புராட்டியும் ஆக்ரோஷமாகச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
மானப் பிரச்சனை இது. உரிமைப் பிரச்சனை. ஆதிக்கத்தை நிலைநாட்ட உயரும் குரல்கள். இனி கைகளும், நகங்களும், பல்லும் கூட ஆயுதமாகப் பாய்ந்து வரும் நிமிஷங்கள் அதிக தூரத்தில் இல்லை.
எல்லாம் ஒரு இலைக்காக. ஒரு எச்சில் இலைக்காக.
மூத்த நம்பூதிரி திருப்தியாகச் சோறும், எரிசேரியும், அவியலும், பப்படமும், உண்ணி மாங்காய் ஊறுகாயும், தயிரும் உண்ட இலை. எச்சில் இலையில் சாப்பிடப் போட்டி போடுகிற மூத்த தம்புராட்டிக்கும், ஆக இளையவளும்.
மொத்தம் மூணு தம்புராட்டி ஆச்சே மூத்த நம்பூதிரிக்கு. நடுத் தம்புராட்டி கல்யாணி அந்தர்ஜனம் எங்கே?
எப்போதும் விலகாது கவிந்திருக்கும் உள்கட்டின் இருளில் பகவதியின் கண்கள் துழாவின.
கல்யாணி அந்த இலைக்கே நேரே உட்கார்ந்து அவசரமாக அதில் சோறை வட்டித்துக் கொண்டு, அள்ளி அள்ளி வாயில் அடைத்துக் கொண்டிருந்ததைப் பார்க்கப் பகவதிக்குச் சிரிப்பாக இருந்தது. துக்கமாக இருந்தது.
ஆகக்கூடி இந்தக் கல்யாணி சொர்க்கம் போக மற்றவர்களை விட சாத்தியம் அதிகம். புருஷன் சாப்பிட்ட இலையிலேயே சாப்பிடுகிற பெண்களுக்காக சுவர்க்கத்தில் தனியாக ஒரு வாயில் திறந்து வைத்திருக்கிறது. உள்ளே போகிற வழியெல்லாம் வாழையிலை விரித்து வைத்திருக்கிறது…
‘பரமேஸ்வரன் நம்பூதிரிக்குப் பெண்ணாகப் பிறக்காது போயிருந்தால், நீயும் கூட இப்படித்தான் இருந்திருப்பாய்’.
பகவதியின் மனசு சொன்னது.
சொத்து சுகம் இல்லாவிட்டாலும் ஒரே மகளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த அச்சன்… அறியாப் பருவத்தில் அம்மா இறந்தபோது வேறு கல்யாணம் செய்து கொள்ளாமல்… கோயில் உத்தியோகஸ்தனுக்கு ஒரு வேளியே அதிகம்…
திருநாவாயூர் அம்பலத்தில் சோபான சங்கீத சேவை செய்த கோவிந்த மாராரிடம் சங்கீத சிட்சைக்கு அனுப்பி வைத்தவரும் அவர்தான்.
‘மகளே..உனக்கு ஒரு பிரகாசமான ஜீவிதம் இருப்பு உண்டு..’
பகவதியின் காதில் அச்சனின் குரல் ஒலிக்கிறது.
‘அதற்குள் இந்த மனையின் சுவர்கள் என்னை விழுங்கி விடுமோ, அச்சா?’
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

