இரா. முருகன்'s Blog, page 43
October 3, 2022
பச்சை, சிகப்புக் கொடிகள் அசைக்கும், சமைக்கத் தெரிந்த ஸ்டேஷன் மாஸ்டர்
ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 5 அ
இந்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு சமைக்கவும் தெரிந்திருக்கிறது. கரணை கரணையாகக் கையும் காலும் இருக்கப்பட்ட மனுஷன். மனுஷர். அதை வைத்துக் கொண்டு பச்சைக் கொடியும் சிவப்புக் கொடியும் மாறி மாறிக் காட்டலாம். இப்படி குழம்பு செய்ய புளியை மய்ய மசியக் கரைக்கலாம். படம் எல்லாம் ஒண்ணும் போட வேண்டாம். சர்க்கார் வீட்டில் பெண்டாட்டிக்கு அலமாரியில் புடவை மடித்து வைக்கலாம். காணாமல் போன பவுடர் டப்பா மூடியைய்த் தேடி எடுக்கலாம்.
‘என் ஒய்ஃப் நல்லா சமைப்பா’
ஸ்டேஷன் மாஸ்டர் சொல்ல, ராமச்சந்திரன் விஷய கனமான தகவலை உள்வாங்கிக் கொண்டவன் போல் சிரத்தையாகத் தலையாட்டினான்.
ராமச்சந்திரன் இலைக்கு முன்னால் உட்கார்ந்தான்.
‘ஒண்ணும் அவசரமில்லே.. சாப்பிட்டுட்டு மண்டபம் போகலாம் நீங்க’
‘உங்களுக்கு நல்ல மனசுங்க’
‘அட இதுல்லே என்னங்க..மனுஷனுக்கு மனுஷன் செய்யறது தானே’
இந்த ஸ்டேஷன் மாஸ்டர் தான் எவ்வளவு நல்லவன். சோறும் குழம்புமாக இலையில் பரிமாறிக் கொண்டே பேசுகிறான். ஸ்டேஷன் மாஸ்டர் பேச்சில் சினிமா தியேட்டரில் டிக்கட் கிழிக்கிற டிராயிங் மாஸ்டர்களும், குடுமி வைத்துக் கொண்டிருப்பவர்களும், இந்தி பண்டிதர்களும், தலைவர்களும், தியாகங்களும், தனுஷ்கோடியை விழுங்கி ஒரு ரயிலைக் காணாமல் போக்கிய புயலும், தலைவர்கள் இறப்பதும், விடுமுறையில் எல்லோரும் சந்தொஷமாகத் துக்கம் அனுஷ்டிப்பதும் என்று நிறைய வந்து கொண்டிருக்கிறது. ராமச்சந்திரன் எல்லாவற்றையும் மரியாதை கருதிப் புன்னகையோடு கேட்டுக் கொண்டிருக்கிறான்.
உலகத்தில் எல்லாவிதமான நபர்களும் இருக்கிறார்கள். இறக்கிறார்கள். வீடுகள் சிறிதும் பெரிதுமாக, பளிங்கு பதித்தும், காரை பெயர்ந்தும், கூரை மூடியும், பானை மூடியில் வரைந்த இயற்கைக் காட்சிகள் சுவரி அலங்கரித்தும்… பாதுகாப்பாக, அரணாக, கோட்டையாக, காற்று வராத புறாக் கூண்டுகளாக, வானத்தை விசாரிக்கும் உப்பரிகைகளுடன், படிகளும், உள்ளே… உள்ளே… உள்ளே நீண்டு போகும் கூடங்களும், ஸ்கிரீன் வைத்துத் தடுத்த ஒற்றை அறைகளும், பாத்ரூமில் கரி பிடித்த பாய்லரும், தரையில் பயோரியா பல்பொடி சிந்தியும்…
‘அம்மா நம்ம வீட்டுக்கு எப்பம்மா போகப் போறோம்?’
‘போகலாம்டா… அப்பா வரட்டு..’
‘மாமி ரொம்ப திட்டறாங்களே’
‘நம்ம தலையெழுத்து.. பொறுத்துக்கணும்..’
‘அப்பா எப்போ வ்ருவார்? எனக்கு நம்ம வீடு எப்படி இருக்கும்னே மற்ந்து போச்சு..’
’நீலமா, சுவரெலாம் நீல பெய்ண்ட் அடிச்சு, ஊருக்கு வெளியிலே… வாசல்லே நந்தியாவட்டைச் செடியோட…’
‘அங்கே இப்ப யாரும்மா இருக்காங்க?’
‘தெரியலேடா… அப்பா வந்ததும் போய்ப் பார்க்கலாம்..’
அப்போ யார் வந்தாலும் கொடுத்திடுவாங்களா?’
‘கட்டாயம் கொடுத்திடுவாங்க… அப்பா கேட்டா இல்லைம்பாங்களா?’
‘அப்பா எங்கேம்மா போயிருக்காரு?’
‘அது.. சிங்கப்பூருக்கு..’
‘அன்னிக்கு மலேயான்னு சொன்னியே?’
‘ரெண்டும் பக்கத்துலே பக்கத்துலே தாண்டா’
‘அப்பா ஜெயில்லே இருக்கறதா வெங்கடசாமி சொன்னானே… அவங்க அப்பா சொன்னாராம்..’
‘அவங்க அப்பன் தாண்டாஅ ஜெயிலுக்குப் போக வேண்டிய கேசு. அவனை ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் ..அவன் முகத்துலே காறிப் துப்பப் போறேன்.. நீ பெரியவனானா அவனை நேர்லே கேட்டு அறையிற அரையிலே ஊரே திரும்பிப் பாக்கணும்.. ஏண்டா எங்கம்மா கிட்டே வம்பு பண்றே.. இது என்னா ஆம்பளை இல்லாத வீடுன்னு நினைச்சியான்னு உரக்கக் கேக்கணும்..’
‘அப்பா வந்து அறைய மாட்டாரா?’
‘அந்த மனுஷன் வரும்போது வரட்டும்டா.. நீ இப்பத் தூங்கு..’
சாப்பிடும் போது இப்படிக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வருகிறது. நேற்றைக்குப் பூரா அலைச்சல். அசதி. காலையிலேயே கிளம்பி, சரவணனுடன் போய்… வாசலைத் தாண்டி உள்ளேஎ வரச் சொல்லவில்லை. ‘இவர் தான் மாப்பிள்ளையா? வயசு கொஞ்சம் கூட ஆகியிருக்கும் போல தெரியுது.. பொண்ணுக்குப் பிடிச்சிருக்கும்.. எதுக்கும் கேட்டுடலாமே.. என்னத்துக்கு பிறகு ஏதாவது மனத் தாங்கலாச்சுன்னா.. ஆமா நீங்க தம்பி?…. சிநேகிதரா? பேரு? சரவணன்… நல்ல பேரு … முருகக் கடவுள் …இளைய பெருமாள்னு அருணகிரி சொல்லுவார் திருப்புகழ்லே..சரவணன் தம்பி..உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? நம்ம வகைப் பிள்ளை தானே? பார்த்தாலே தெரியுதே.. ஊர் எல்லாம் எது உங்களுக்கு? என்னங்க… சார் பெரிய ஆர்டிஸ்டா? நல்லதுங்க… ஆனா..சார், ராமநாதனா.. ராமச்சந்திரன் சார்.. உங்க அறிவுக்கு நம்ம பொண்ணு கால் தூசு பெற மாட்டா…(போடா, உன் மூஞ்சிக்கு என் பொண்ணு கேக்குதா? உன் கூட வந்திருக்கற அந்தச் சின்னப் பையன் சரவணன் சரின்னா பாக்கலாம்…) … காப்பி சாப்பிடுங்க.. திண்ணையிலே உட்கார்ந்து பேசலாம்.. காத்து சிலுசிலுன்னு வருது… சரவணன் தம்பி.. கூடப் பொறந்தவங்க எத்தனை பேரு? பேனர் ஆர்ட்டிஸ்டுன்னா மாசம் ஆயிரம் ரெண்டாயிரம் வருமா?..
’மிஸ்டர் ராமச்சந்திரன்.. என்ன யோசனை? இலையைப் பார்த்துச் சாப்பிடுங்க.. சாம்பார்லே போட வாழக்காய் தான் இருந்தது.. ஏன் வாழக்கா சாம்பார் வைக்கக் கூடாதா என்ன? எங்க ஊர்லே வாழக்கா குழம்பும் வக்கத்த பொண்ணும்பாங்க… இடம் இருந்தா இங்கே கூட தோட்டம் போடலாம்… வாழை மரம்.. கத்திரி… வெண்டை.. பூசணி.. ஆனந்தா தியேட்டர்னு எங்க ஊர் தியேட்டர்.. அங்கே.. ஏன் கேக்கறீங்க அந்தக் கூத்தை.. தியேட்டர்லே இண்டர்வெல் விடறபோது பசங்க குத்த வைக்கிற எடத்துலே பூசணிக்காய் பயிர் பண்ணினாங்க.. அப்புறம்..’
‘
October 2, 2022
ராத்திரி வண்டி குறுநாவல் ரயில் வராத ராத்திரி
ராத்திரி வண்டி குறுநாவல் பகுதி 4 ஆ
வீட்டைத் துறந்து போட்டுட்டு இவனையும் தனியா விட்டுட்டுப் போகணுமா… கணபதி இருந்தாலாவது.. அட நூறு வயசுய்யா உனக்கு கணபதி…
‘கொஞ்சம் சார் கூடப் பேசிக்கிட்டு இப்படி வாசல்லே இரு கணபதி… நான் இதோ வர்றேன்..’
கணபதிக்கு அந்த சித்திரக்காரனைப் பார்க்கும்போதே சிரிப்பு வந்தது. ஒரு மாதிரிப்பட்ட ஆள். குஷால் பேர்வழி..நாலு பேர் பார்க்கவே மொட்டக் கட்டயாப் பொம்பளை பட போடறவன் இன்னும் என்னவெல்லாம் வரஞ்சு வச்சிருப்பான்..
‘சார்.. அந்தப் படத்தைப் போட்டு முடிச்சுட்டீங்களா?’
‘எந்தப் படத்தை?’
‘ஒரு பொம்பளை.. அட்டகாசமாப் போட்டிருந்தீங்க… எல்லாப் பசங்களும் அசிங்கம் அசிங்கம்னு சொல்லிட்டு அங்கனக்குள்ளே தான் பார்க்கிறான்… இந்த புக்கிங்க் கிளார்க்கு.. அய்யோ அய்யோன்னு அடிச்சுக்கிட்டாரே.. அஞ்சுமணிக் கருக்கல்லே ரயிலுக்கு டிக்கட் வாங்க வந்த பொம்பளையைக் கையைத் தடவிட்டு இருந்தாராம்… நம்ம சுப்பையா பெண்சாதி..தொடுப்பு உண்டுதானாம்… என்ன எளவோ.. நம்ம கண்ணுலே எல்லாம் பட்டுத் தொலைக்குது.. அந்தாளை மட்டும் விட்டா படத்தைத் தரையிலே கிடத்தி மேலே சாஞ்சிருப்பான்.. பொச கெட்ட மனுசன்..’
‘பத்துலே பொண்ணு மட்டும் இல்லியேப்பா.. இன்னும் எத்தனையோ விஷயம் இருக்கே.. அதெல்லாம் மேலே படுமே..’
’அது யாருக்கு வேணும்… நீங்க அந்தப் பொம்பளையைத் தனியா இப்படி விட்டுருக்கக் கூடாது.. பின்னாலேயே ஒரு பய படத்தையும் போட்டு வச்சா விஷயம் அமர்க்களமா இருக்கும்… சாயலுக்கு இந்த புக்கிங் கிளார்க் மாதிரி போடுங்க..’
‘சாரி மிஸ்டர் ராமச்சந்திரன்… இன்னிக்கு வேறே ஒரு டிரெயினும் இனிமே வராது..’
சீவகன் வந்து கொண்டே சொன்னான்.
பெட்ரோலும், குரூட் ஆயிலும் அடைச்ச போகி எல்லாம்… ஜாக்கிரதையா எடுக்கறதுக்கு ராத்திரி பூரா ஆயிடும்..’
(தொடரும்)
September 30, 2022
எல்லாப் படமும் நல்லாத் தான் இருக்கு.. எனக்குத் தான் ரசிக்கத் தெரியலேன்னு தோணுது’
ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 4 அ
சீவகன் எல்லாப் படங்களிலும் பிரம்மாண்டமான கட்டிடங்களைப் பார்த்தான்.
மஞ்ச மசேல்னு, பச்சை மினுக்கிக்கிட்டு… நடுவிலே நடுவிலே கசாப்புக்கடை சுவர் மாதிரி சிவப்பு வேறே தெளிச்சு இருக்கு… சொல்லி வச்சாப்பிலே எல்லாம் இருளோன்னு கிடக்கு.. அப்புறம் எல்லாத்திலேயும் ஓட்டை உடசல் கடியாரம், மரப்பெட்டி, பிரம்பு பிஞ்சு தொங்கற நாற்காலி… ஒண்ணுலே ஒரு பொம்பளை முகத்தைத் தலை முடியாலே மறச்சுக்கிட்டு மாடி ஏறிட்டு இருக்கா. ஜன்னலுக்கு வெளியே ஒருத்தன் தலையிலே மூட்டையைத் தூக்கிட்டு நிக்கறான்… இன்னொரு படத்துலே வழுக்கைத் தலைக்காரன் ஒருத்தன் மாடிப்படியிலே உருண்டு வர்றான்.. இந்தப் படம் இன்னும் விசேசஹ்ம். ஒரு சின்னப் பையன் மேல் படியிலே இருந்து ஒரு பெரிய மேஜையை – மூணு கால் தான் அதுக்கு – கீழே தள்ளி விடறான். கீழே யாரோ முகத்தை சிடுசிடுன்னு வச்சுக்கிட்டு தொங்கிப்போன மாரோட தரையிலே உக்காந்திருக்கா.. மேஜை டிராயர் பாதி திறந்து வழுக்கைத் தலையன் தலை மட்டும் தெரியறது.. இது இன்னிக்குக் காலையிலே போட்டுட்டு இருந்தது மாதிரி இருக்கு.. இந்தப் பொண்ணு சாயல்லே வேறே ஒரு படம் கூட இல்லியே.. மொட்டக்கட்டயா கண்ணாடிக்கு முன்னாடி நின்னு சிரிச்சுக்கிட்டு இருக்கா.. கண்ணாடியிலே தெரியற உருவம்.. நம்ம ஆளுதான்.. மகா கிறுக்கனா இருப்பான் போல இருக்கே…ராசுவாவது அப்புராணி.. இவன் இன்னும் மோசம்…. அப்புராணி என்ன அப்புராணி.. உன்னைப் பார்த்து ஒருத்தியாவது சிரிச்சிருக்காளாடா சீவகா? இவ எகத்தாளமா இல்லே சிரிப்பா…’டாக்டர் கிட்டே காட்டுங்களேன்.. ஜின்செங்குன்னு ஏதோ வேராமே’…
சித்திரக்காரன் தலையில் இருந்து தண்ணீர் சொட்ட, இருமிக் கொண்டே பாத்ரூமிலிருந்து வந்தான்.
வரான் பாரு.. உரிச்ச கோழி மாதிரி.. ராசுவும் இப்படித்தான். ராசு என் கையிலே மசில்ஸ் பாத்தியாடா? எக்ஸர்ஸைஸ் பண்ணுடா… கொஞ்சம் உடம்பு போட்டா போலீஸ் உத்தியோகத்துக்கு மனுப் போடலாம்.. இல்லே டீக்கடைக் காரனுக்கு அசிஸ்டெண்டா டீ ஆத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான்…
மசில்ஸ்… சிவப்புக் கொடியும் பச்சைக் கொடியும் மாறி மாறிக் காட்ட..பொண்டாட்டிக்குத் தலை வலிச்சா நீலகிரித் தைலம் தடவிவிட… என்னிக்காவது வர ஆபீசருக்கு சலாம் போட… பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு ஊருக்குப் போனா, கடுதாசி எழுதி வ்ரவழைக்க…மாமனார் வீட்டுப் பரண்லே ஜாதிக்காய்ப் பெட்டியை எடுத்து வைக்க..
‘ரெஸ்ட் எடுத்துக்குங்க மாப்பிள்ளே.. ரொம்பக் களைச்சுட்டீங்க பாவம்… பாப்பாவை டவுண்லே டாக்டர் கிட்டே காமிச்சிட்டு வந்தோம்.. நீங்க தான் வருவேனாங்கறீங்க.. என்னத்தச் சொல்ல… எல்லா டாக்டரும் அவ சரியாத்தான் இருக்காங்கறாங்க… அட வெறும் தரையிலே எதுக்குப் படுக்கணும்… மாப்பிள்ளைக்கு மரியாதை தராத குடும்பம்னு ஊர்லே சொல்லுவாங்களே.. கொஞ்சம் எந்திருங்க..இந்தாம்மா பாப்பா.. மாப்பிள்ளைக்கு பாய் கொண்டாந்து விரி…தரையிலே படுக்காதீங்க மாப்பிள்ளை…(கிழவன் பல்லு வெளக்கறதே இல்லியா..) .. நீத்துப் போகும்.. ஆமா விளையாட்டு இல்லே… அனுபவஸ்தன் சொல்றேன்.. தரைச் சூட்டுலே சுக்கிலம் நீர்த்துடும் .. ‘
தரை சூடு. அப்ப மரம்..பலகை…கட்டில்… பெஞ்ச்… டைப்பு கிளாசிலே சிவன் பிரஸ்காரன் பொண்ணு முடிச்சுட்டு எழுந்த உடனே அவ உட்கார்ந்திருந்த பெஞ்சுலே உடனே உக்கார்ந்து ஏ எஸ் டி எஃப் அடிச்சா… இதமா ஒரு சூடு பாக்கி இருக்குமே… ஒரு வேளை அவளைக் கட்டிக்கிட்டிருந்தா தரையிலேயே படுத்திருக்கலாம்.. ஒழிஞ்ச நேரத்திலே மாமனார் வீட்டுப் பரண்லே எதையும் எடுத்து வைக்க வேணாம்… பூப்புனித நீராட்டு விழா அழைப்பு ஃப்ரூப் பார்க்கலாம் கூடமாட… ரெண்டு டைப் ரைட்டரை வாங்கிப் போட்டு இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்கலாம்…
‘அந்தப் படம் எல்லாம் அவ்வளவு நல்லா இருக்காது.. ஒண்ணு ரெண்டு தான் பேப்பர்லே அக்ரலிக் பெய்ண்ட் உபயோகிச்சுப் போட்டது.. சிலது வாட்டர் கலர்… பெரும்பாலும்.. நான் சொன்னேனே… வெறும் ஸ்கெட்ச் தான்…’
சித்திரக்காரன் மன்னிப்புக் கேட்கும் தோரணையோடு சீவகனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொன்னான். ஈரத் தலையில் துண்டை முக்காடு மாதிரி போட்டுக் கொண்டு முன்னால் நிற்கிறவ்னைப் பார்க்க சீவகனுக்கு சிரிப்பு வரவே அடக்கிக் கொண்டான்.
‘அப்படி இல்லே … எல்லாப் படமும் நல்லாத் தான் இருக்கு.. எனக்குத் தான் ரசிக்கத் தெரியலேன்னு தோணுது’
‘உங்க வீடு நல்லா இருக்கு.. பாத்ரூம் ரொம்ப பெரிசு..’
‘இது கவர்மெண்ட் வீடு..’
‘கவர்மெண்ட் வீட்டுலே ஓட்டை உடசல் வைச்சுக்க விட மாட்டாங்க… இல்லியா…. யாரும் கொண்டு வது போட்டா வெளியே தூக்கி எறிஞ்சிடலாமில்லியா?’
பாரு..திரும்பவும் பயித்தாரன் மாதிரி ஏதோ பினாத்த ஆரம்பிச்சுட்டான். இவனை சீக்கிரம் அனுப்பி வச்சாத்தான் நல்லது… குளிச்சுட்டு அதே அழுக்கு ஜீன்ஸைத் தான் மாட்டிக்கறான்.. வேறே இல்லே போலிருக்கே… பாவம்.. நம்ம பேண்ட் ஒண்ணைக் கொடுத்தா…உயரம் சரியாத்தான் இருக்கும்…
சும்மா டீக்கடையிலே வாய் பாத்துக்கிட்டு உக்கார வெள்ளையும் சள்ளையுமா எதுக்குடா? நான் காலேஜ் போனபோது போட்டுக்கிட்டதை எடுத்து உடுத்திக்க.. எனக்குத் தான் இடுப்பு பெரிசாகி ஒண்ணும் பத்த மாட்டேங்குது.. செகண்ட் ஹேண்ட் பேண்ட் போட்டுக்கற வழக்கமில்லையா.. அடி செருப்பாலே.. செகண்ட் ஹாண்டா இழுத்துக்க்கிட்டு ஓடற பயலுக்கு உடுப்புத் துணி பர்ஸ்ட் ஹேண்ட் கேக்குதோ..துணி கொடுக்கணும் உனக்கு.. அதான் ஹமாரா கர்த்தவ்ய ஹை..
’கிளம்பலாமா? புக்கிங் கிளார்க் நான் போன அப்புறம் தான் வீட்டுக்குப்போய் சாப்பிட்டு வரணும்.. கணபதியும் டவுனுக்குப் போயிருக்கான்..’
‘கணபதி யாரு?’
‘கலாசி… இங்கே அவனன்றி ஓரணுவும் அசையாது’
‘யாரோ உங்களுக்கு அங்கே இருந்து கையைக் காட்டறாங்க’
சித்திரக்காரன் வாசல் பக்கம் கையைக் காட்டினான்.
சீவகன் அவன் காட்டிய திசையில் பார்த்தான். ஸ்டேஷன் வாசலில் நின்று புக்கிங் கிளார்க் அவசரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.
September 29, 2022
ராத்திரி வண்டி
‘வடக்கே எல்லாம் டீத்தூளைஉம் பாலோட சேர்த்துக் கொதிக்க வச்சுத்தான் டீ தயார் பண்ணுவாங்க’.
’நல்லா இருக்குமா என்ன அது?’
ஸ்டேஷன் மாஸ்டர் கவலையோடு கேட்டான்.
‘நான் வாரணாசியிலே இருந்தபோது அப்படிக் குடிச்சே பழகிடுத்து’
‘வாரணாசின்னா காசிதானே? பெரிய கோயிலெல்லாம் இருக்கு இல்லே?’
‘நான் அங்கே மசான கட்டத்தைத் தான் வரஞ்சுக்கிட்டிருந்தேன். எரிச்சு எரிச்சு கங்கையிலே விடுவாங்க. படிக்கட்டு எல்லாம் சாவு பூசிக்கிட்டு எப்பவும் வைராக்கியத்தோட கிடக்கும்’.
‘பார்க்க எப்படியோ இருக்குமே..’
‘நல்லா இருக்கும். புகையும் நெருப்பும் அழகுதானே.. ஏகப்பட்ட படிக்கட்டுக்கு நடுவே தண்ணியிலே நானே எரிஞ்சுக்கிட்டே மிதக்கறதா வரஞ்சேன்..’
‘இதிலே இருக்கா?’
ஸ்டேஷன் மாஸ்டர் ஹோல்டாலைக் காட்டிக் கேட்டான்.
‘இல்லை. சப்பாத்திக்கு காசு இல்லேன்னு கடைக்காரன் கிட்டே கொடுத்திட்டேன். அவன் அது பைசா பெறாதுன்னு சொன்னான். அவன் அப்பா படம் வரைஞ்சு தரச் சொல்லி போட்டோ கொண்டு வந்து கொடுத்தான். நான் தனியா எரிவானேன்னு அவன் அப்பாவும் கூடச் சேர்ந்து எரியறதா போட்டுக் கொடுத்தேன்..’
ஸ்டேஷன் மாஸ்டர் ஏன் இத்தனை ஆச்சரியமாகப் பார்க்கிறான் என்று தெரியவில்லை. சுபாவமாகக் கூட தன்னால் பேச முடியவில்லை என்று வருத்தமாக இருந்தது.
‘குளிக்கிறீங்களா? சீக்கிரமா கிளம்பினா மத்தியான சாப்பாட்டுக்கு மண்டபம் போயிடலாம்’
சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல், காட்டிய திசையில் நடந்தான். பின்னால் குரல் வந்தது –
‘துண்டு எடுத்துக்குங்க’.
ஹோல்டாலில் இருந்து ஒரு கட்டு காகிதத்தை உருவிக் கீழெ போட்டான்.
‘ஸ்கெட்ச். கான்வாஸிலே எல்லாம் போடணும். காசுதான் இல்லே.. அது கிடக்கு… பல்பொடி இருக்கா…உமிக்கரி கூட போதும்..’
‘பாத்ரூமிலே பயோரியா பல்பொடி டப்பா இருக்கு..துண்டு வேணுமா..’
அவன் நாக்கைத் துருத்தினான்.
‘எங்கிட்டே குற்றாலத் துண்டு இருக்கு.. போதும்..’
ஹோல்டாலில் இருந்து பழைய துண்டை எடுத்துப் போட்டான். தேசலாக ஒரு சோப்புத் துண்டும் உள்ளே இருந்து விழுந்தது.
‘நீங்க நல்லா டீ உண்டாக்கியிருந்தீங்க.. தாங்க்ஸ்’
‘பாத்ரூம் மக் வெளியிலே இருக்கு. அந்தப் பக்கம் டாய்லெட்’.
‘ரொம்ப தாங்க்ஸ். நீங்க சரவணன் மாதிரி ஹெல்ப் பண்றீங்க’.
‘யாரு அது?’
‘ஆர்ட் காலேஜ்லே சீனியர். பானர் வரையறான் இப்ப’
‘பாத்ரூமிலே கதவு சரியாச் சாத்தாது. கொஞ்சம் அறைஞ்சு சாத்தணும்’.
குவளை குவளையாகத் தண்ணீரை எடுத்து விட்டுக் கொண்டபோது அவன் குற்றாலத்தில் இருந்தான்.
சந்தோஷமாகப் பாடுகிற, அவ்வப்போது பயம் கொள்ள வைக்கிற, கூகூ என்று கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்யும்படி உற்சாகம் பீறிடச் செய்கிற, அரையில் சிறுநீர் பிரியப் பிரியத் தலைமேல் குளிர்ந்த தாரையாகக் கும்மாளம் போட்டு இறங்குகிற, சுற்றிலும் சின்னச் சின்னத் திவலைகளை வீசி, கண்ணுக்கு முன் நீர்க் கண்ணாடி வழியே எதிரே இருக்கிற மலைகள் எல்லாம் குவி ஆடியில் பார்க்கிறது போல எல்லா விகிதமும் மாற்றிக் காண்பிக்கிற் அருவி. ராமச்சந்திரன் குளித்து விட்டு வருகிறான். பென்னிங்க்டன் துரை அரையில் லங்கோட்டோடு குளிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார். பின்னால் டிபுடி தாசில்தார் அய்யங்கார், பெருமாளை எழுந்தருளப் பண்ணி நடந்து வருகிறது போல், குடையைப் பொத்தாம் பொதுவாகப் பிடித்துக் கொண்டு பவ்யமாக வருகிறார். யாரோ ராமச்சந்திரன் கையில் காகிதத்தைத் திணிக்கிறார்கள்.
‘பார்த்துப் பாடு’
’
..’
குரல் உச்சஸ்தாயியில் போகும்போது தலையிலிருந்து வழிந்த தண்ணீர் தொண்டையில் இறங்குகிறது.
துரை தடுமாறுகிற தமிழில், ‘நீர் இன்று ஒரு ராத்திரி இங்கே தங்க வேண்டியிருக்கும். குட்ஸ் தரம் புரண்டு ரயில் ஓடாது. சும்மா இருக்கிற நேரத்தில் நன்றாகப் பாடிப் பழகிக் கொள்ளும். ஓதுவார்கள் இங்கிலீஷ் டியூன் சொல்லித் தருவார்கள்’ என்கிறார்.
மூக்கில் தண்ணீர் ஏற, ராமச்சந்திரன் இருமிக் கொண்டு வெளியே வந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர் அவன் ஹோல்டாலிலிருந்து எடுத்துப் போட்ட படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.
(தொடரும்)
September 28, 2022
ராத்திரி வண்டி குறுநாவல் – ஸ்டேஷன் மாஸ்டரின் தேநீர் உபசாரம்
ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 3
தேசிகர் ஒடுக்கத்தில் இருக்கிறார். வெளியே ஓதுவார்கள் சத்தம் போட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இது வழக்கமான தேவாரப் பண் இல்லை. இங்கிலீஷ் மோஸ்தரில் கட்டிய பாட்டு…
’துங்கஞ்சார் தருதுரைசை யில்வளர் சுப்பிரமணிய தயாநிதியே…’
அலையில் மிதக்கிற படகுபோல, பெங்குவின் பறவைகள் கூட்டமாக அடியெடுத்து வைக்கிறது போல், தோய்த்து உலர்த்திய காவித் துணிகள் காற்றில் பறந்து அலைக்கழிவது போல… காதிலே ஜவ்வந்திப் பூ வைத்து, கூரை வேய்ந்த மண்டபம் அதிரக் குதித்துக் குதித்து ஆடுகிறார்கள். ராமச்சந்திரன் காதில் பென்சிலைச் செருகிக் கொண்டு குற்றாலம் போக நேரமாகிவிட்டது என்று யாரிடமோ சொல்கிறான். ‘ஸ்டேஷன் மாஸ்டர் டீ போட்டு எடுத்து வரட்டும்.. சாப்பிட்டு விட்டுப் போகலாம்..’ என்கிரார் அவர். எல்லோரும் வெளியே வருகிறார்கள், முதலில் தேசிகர், அப்புறம் மகாவித்துவான். இன்னும் பாட்டை நிறுத்தாமலேயே ஓதுவார்கள். ராமச்சந்திரன் கடைசியில் கையில் ‘என் சரித்திர’த்தை இடுக்கிக் கொண்டு வருகிறான்…
ராமச்சந்திரன் கண்ணை மெல்லத் திறந்து பார்த்தான். ஸ்டேஷன் மாஸ்டர் வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது.
‘ஒய்ஃப் அம்மா வீட்டுக்குப் போயிருக்காங்க.’
ஸ்டேஷன் மாஸ்டர் டீ போட்டு எடுத்து வந்தான்.
‘குளிச்சிட்டுக் கிளம்பினா, ஒரு கால் அவர்லே டவுனுக்குப் போயிடலாம். ஜட்கா வண்டி இருக்கு. அங்கே ஓட்டல்லே சாப்பிட்டு, மண்டபம் போற பஸ்ஸைப் பிடிச்சா சாயந்திரத்துக்குள்ளே ராமேஸ்வரம் போய்ச் சேர்ந்துடலாம்..’
ராமேஸ்வரத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று இந்த ஸ்டேஷன் மாஸ்டர் தன்னைப் போகச் சொல்கிறான் என்று புரியவில்லை. அரசாங்கக் கட்டடத்தில் படம் வரைந்தது குற்றமென்று நேற்று ராத்திரி அவசரச் சட்டம் ஏதும் பிறப்பிக்கப்பட்டு, யாராவது பிடிவாரண்டோடு வருகிறார்களோ என்னமோ.
‘டீ குடியுங்க’
ஸ்டேஷன் மாஸ்டர் மேஜைப் பக்கம் கை காட்டினான்.
‘இன்னிக்குப் பால்காரன் வரலை. பால்பொடியிலே தான் போட்டேன். ஏதோ ஒண்ணு.. சூடா இருக்கணும்.. அவ்வளவுதான்..’
‘ஆமா, சூடா இல்லாட்ட வெளிக்குப் போக முடியாது’
ராமச்சந்திரன் சுபாவமாகப் பதில் சொல்லி விட்டு ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்த்து சிநேகிதமாகச் சிரித்தான். சகஜமான உரையாடலுக் கு இது போதாதோ என்னமோ. கொஞ்சம் யோசித்து விட்டுச் சொன்னான் –
‘வடக்கே எல்லாம் டீத்தூளைஉம் பாலோட சேர்த்துக் கொதிக்க வச்சுத்தான் டீ தயார் பண்ணுவாங்க’.
’நல்லா இருக்குமா என்ன அது?’
ஸ்டேஷன் மாஸ்டர் கவலையோடு கேட்டான்.
‘நான் வாரணாசியிலே இருந்தபோது அப்படிக் குடிச்சே பழகிடுத்து’
September 27, 2022
எம் எஃப் உசைன், பெந்த்ரெ, அர்ப்பணா கவுர், கீவ் படேல் .. ராமச்சந்திரன் இந்த வரிசையிலே இல்லே
ராத்திரி வண்டி குறுநாவல் பகுதி 2 இ
ராசுப்பய ஓடினதுக்கு அப்புறம் கோயில் சுவர்லே எவனோ வடைன்னு ஆரம்பிச்சு எழுதியிருந்தான். பக்கத்திலே பொம்பளை படம். டிராயிங் மாஸ்டர் கிட்டே படிச்ச பயதான்… பொம்பளைக்கு எப்படி புறா சாயல் வரும்?
இந்தா வரையறானே இந்தப் பொம்பளைக்கு … பொம்பளையா, மோகினியா… இடுப்பிலே ஏதாவது முண்டு மாதிரி சுத்தியிருந்தா நல்லா இருக்கும்… மறைச்சாத் தானே பார்க்கத் தோணும்..அது என்ன.. கதையிலே வருமே.. இன்ப ஊகங்களுக்கு இடமளித்தது… யட்சிக்கு ரவிக்கை போட்டா? சிவகாசி காலண்டர்லே எட்டுக்கையோட வர்ற உருவம் கூட ரவிக்கை போட்டு, மாரு எடுப்பா இருக்கும்… தையக்காரன் எப்படி தைப்பான்? எப்படிப் போட்டுக்கறது?
சித்திரக்காரன் படத்தைச் சுருட்டி வைத்தான். சோம்பல் முறித்தான்.
‘நீங்க ஊர் மாறி இறங்கிட்டீங்கன்னு நெனைக்கறேன். இங்கே பக்கத்துலே பார்க்க வேண்டிய இடம்னு ஒண்ணும் கிடையாது.’
‘ராமேஸ்வரம் வரைக்கும் டிக்கெட் வாங்கியிருக்கேன்’
‘ராமேஸ்வரம் வண்டி இனிமே நாளைக்குக் காலையிலேதான் வரும்’.
‘அப்படியா?’
‘ஆமா, அதுக்கு வேறெ டிக்கட் வாங்கணும்’
‘சரி’
‘இங்கே சாயந்திரம் வரைக்கும் ஒரு வண்டி கூட வராது. சாயந்திரம் ஆறரைக்கு ராமேஸ்வரத்திலேருந்து திரும்பற வண்டி வரும். அவ்வளவு தான். இங்கே தங்கக்கூட ஓட்டல் அது இதுன்னு எதுவும் கிடையாது.’
‘நீங்க தண்ணி கொடுக்க மாட்டீங்களா? வாரணாசியிலே ஒரு சாமியார் தண்ணியக் குடிச்சு மூணு மாசம் விரதம் இருந்தாராம்.. எனக்கு காப்பி போதும்.. என் மூஞ்சி பிடிக்காம வாசல்லே நிக்க வச்சுப் பேசினாலும், திண்ணையிலே இருக்கச் சொல்லி காப்பி கொடுப்பாங்க..’
என்ன மனுசன் இவன்? கிறுக்கனா? சாமியாரா? சாமியார் ஏன் துணி இல்லாத படம் போடறான்?
இது ரயில்வே சொத்து. அத்துமீறி உள்ளே வந்து தங்கறது தப்புன்னு கறாராச் சொல்லிடலாமா? பாரு, பய திரும்பவும் நாக்கைத் துருத்திக்கிட்டு பரிதாபமா நிக்கறான்.. ராசு.. உன்னைப் பார்த்து பரிதாபப்பட்டுத்தான் அவ வந்தாளாடா? பின்னே அவன்? அந்த டீக்கடைக்காரன்? சாரமில்லேன்னு புதுசா பாய்லர் வாங்கி வேறே எங்கேயாவது கடை போட்டிருப்பான்…
பெஞ்சிலிருந்து ஒரு பெரிய ஹோல்டால் மாதிரி ஏதோ சரிந்து விழ உள்ளே நிறையப் படங்கள்.. ஒரு புத்தகம்..
சீவகன் புத்தகத்தைக் குனிந்து எடுத்தான்.
’என் சரித்திரம்’
சித்திரக்காரன் சந்தோஷமாகச் சொன்னான்.
’என்னுதுன்னா.. என்னோடது இல்ல… உ.வே.சாமிநாத அய்யரோடது..’
சீவகன் புத்தகத்தைப் புரட்ட, உத்தமதானபுரம், பண்டார சந்நிதிகள், ஆறுமுகத்தா பிள்ளை வரவு, இந்திர இழவூர் எடுத்த காதை என்று துண்டு துணுக்காகப் பார்வையில் தெரிந்து மறைந்தன.
‘இதெல்லாம் நல்ல விலைக்குப் போகுமா?’
சீவகன் படத்தைக் காட்டிக் கேட்டான்.
‘உசைன்… பெந்த்ரே.. விவியன் சுந்தரம்.. பூபேன் கக்கர்.. கீவ் பட்டேல்.. அர்ப்பணா கவுர்.. ‘
ஒரு எழவும் புரியலேடா.
‘ராமச்சந்திரன் இந்த வரிசையிலே இல்லே’
‘அது யாரு?’
’நான் தான்.. எனக்கு குளிக்க மட்டும் ஏதாவது இடம் கிடைக்குமா? குளிச்சுட்டுக் கிளம்பிடறேன்..’
‘வாங்க போகலாம்..கணபதி, புக்கிங் கிளார்க்கை கொஞ்சம் பார்த்துக்கச் சொல்லு.. வீடு வரைக்கும் போய்ட்டு இதோ வந்துடறேன்..’
சீவகன் நடக்க ஆரம்பித்தான். பின்னாலேயே சித்திரக்காரனும்.
September 26, 2022
புறா வரையக் கற்றுக் கொடுத்தவரும் பூசணி சாகுபடியும்
குறுநாவல் ராத்திரி வண்டி 2 ஆ
சீவகன் பெஞ்ச் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டான். படத்தையும் வரைகிறவனையும் மாறிமாறிப் பார்த்தான்.
ஒரு பெரிய மண்டபம். சுருள் சுருளாக இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி நிறம் காட்ட, வளைந்து போகும் மாடிப் படிகள். அந்த மாய லோகத்தில் ஒரு பக்கம் ஓட்டை உடசல் நாற்காலி, பழைய கடியாரம், பெடஸ்டல் ஃபேன் என்று அம்பாரமாகக் குவிந்திருக்கிறது. உடம்பில் துணி இல்லாமல், ஒரு இளம்பெண் படிக்கட்டு அருகே தரையில் கால் பாவாமல் மிதந்து கொண்டிருக்கிறாள். கையில் கோல் விளக்கோடு அந்தரத்தில் அலைகிற யட்சி.
சுட்டெரிக்க ஆரம்பிக்கிற வெய்யில். ஸ்டேஷனுக்கு வெளியே சரளைக்கல் பரப்பில் பையன்கள் சைக்கிள் படித்துக் கொண்டிருந்தார்கள்.
ஸ்கூல் லீவ் விட்டா வீட்டுலே உக்காந்து புத்தகம் படிக்கறது.. படம் போடறது.. புறா.. பானை மூடியிலே மலை.. படகு..
சாயந்திரம் அஞ்சு மணிக்கு ஒரு ரயில், காலம்பற ஏழுக்கு ஒண்ணு.. இதுக்காக கோட்டை மாட்டிக்கிட்டு கொட்டக் கொட்ட உட்காந்திருக்கணும்.. இந்தப் படம்.. இத்தனையுமா இங்கே உக்காந்து வரைஞ்சிருப்பான்? பாதி வரஞ்சு எடுத்திட்டு வந்திருப்பானா இருக்கும்.. இதெல்லாம் வெலை போகுமா? எம்புட்டு பெறும்?
டிராயிங் மாஸ்டர் பானை மூடியில் ஓட்டை போட்டு … எப்படித் தான் போடுவாரோ … இயற்கைக் காட்சி வரஞ்சு தருவார்….மஞ்சப் பிள்ளையார் புடிச்சு வச்ச மாதிரி ரெண்டு மலை, தண்ணி, தலப்பா கட்டிக்கிட்டு ஓடத்திலே போறவன்.. எல்லாம் ஒரு ரூபாய்க்கு.
ஆனா.. ஸ்கூல்லே டிராயிங் கிளாஸ்லே புறா மட்டும் தான் வரைவார். அது என்னமோ, வருஷம் பூரா புறா வரஞ்சே ஒப்பேத்திட்டு, தினசரி சாயந்திரம் ஆனந்தா டாக்கீஸிலே டிக்கட் கிழிக்கப் போயிடுவார்.
சீவகன் மணலில் வலது கால் பெருவிரலால் புறா வரைய முயற்சி செய்தான். சரளைக்கல் பரவிய மண் உம்மென்று கிடந்தது.
இந்த மண்ணுலே காலைத் தேச்சா தோல் உரிஞ்சு ரத்தம் தான் வரும். நாகநாதர் கோயில் சுவரா என்ன, எம்மேலே எழுது எழுதுன்னு கூப்பிட? இந்தி ஒழிகன்னு எழுதி, புறா மண்டை வரைஞ்சு, அதிலேயிருந்து குல்லா வச்ச தலை வரஞ்சு… அந்த மாதிரி ஆசாமிங்கதான் திண்டு தலைகாணியிலே சாஞ்சுக்கிட்டு இந்தி வளர்க்க காரியக் கமிட்டி அது இதுன்னு கூட்டுவாங்க.. தமிழ்ப் பத்திரிகையிலே பாதி கருப்பா போட்டோ எல்லாம் வரும்… குல்லா வச்சுக்கிட்டு.. திண்டு தலைகாணியிலே சாஞ்சுக்கிட்டு… கீழே இந்தி ஒழிக எழுதி…பக்கத்திலே ஒத்தை மயிர்க் குடுமியோட இந்திப் பண்டிட்டும் வரஞ்சு.. அதுங்கீழே இந்திப் பண்டிட்டும் ஒழிக…
டிராயிங் மாஸ்டர் பார்த்தா சிரிச்சிருப்பார்.. போர்டைப் பார்த்து ரெட்டைப் புறா வரைங்கடா… கதையா? என்ன கதை? பூசணிக்காய் கதையா? போன வாரம் தானேடா சொன்னேன்.. சரி சொல்றேன்… ஆனந்தா தியேட்டர்லே இண்டர்வெல்லுலே ஊர்ப்பய எல்லாம் குத்த வச்சு மூத்தரம் போற மண்ணுலே பூசணிக்கா கொடி போட்டாங்க… என்னமா காச்சது தெரியுமா? இந்த மாதிரி..இப்படி.. இப்படி…அவன் அவன் எனக்கு உனக்குன்னு தூக்கிட்டுப் போனான்…இவன் பாரு தலையிலே தூக்கிட்டு ஓடுறான்.. இவன்.. சைக்கிள் காரியர்லே..கவுறு போட்டுக் கட்டி.. இவன் அறுத்து கோணிச் சாக்கிலே அடைச்சுக்கிட்டு… எல்லாப் பயபுள்ளையும் வீட்டுலே பூசணிக்கா சாம்பார் வச்சுச் சாப்பிட்டானுங்க.. சாப்பிடறான் பாரு.. மொழங்கையிலேருந்து நக்கிக்கிட்டு.. அப்பறம் என்ன ஆச்சு? என்ன ஆச்சுன்னா.. இதான் ஆச்சு.. சொரி.. உலக மகா சொரி.. எத்தனை கிலோ யூரியா.. சொரியறான் பாரு.. முதுகிலே இழுத்து இழுத்து.. குடுமியா.. போட்டுட்டாப் போச்சு..
குடுமி வைத்தவர்களையும் குல்லா போட்டவர்களையும் தாராளமாகக் கிண்டல் செய்யலாம். இந்தி பண்டிட்களையும். அப்புறம் பெண்டாட்டியைத் தொலைத்த டீக்கடைக்காரர்கள்…\
September 25, 2022
ரயில்வே ஸ்டேஷனில் ஓவியன் – சர்ரியலிச ஓவியம்
ராத்திரி வண்டி குறுநாவல் இரா.முருகன் பகுதி – 2 அ
’அசிங்கமாப் படம் போட்டிட்டிருக்கார் சார்.. இங்கே கொஞ்சம் வாங்க..’
புக்கிங் கிளார்க் ராமசாமி குரல் முன்னால் வந்தது. அப்புறம் சங்கடமாகச் சிரித்துக் கொண்டே கலாசி கணபதி.
பெஞ்சில் யாரது?
அவன் கொஞ்சம் வித்யாசமாகத் தெரிந்தான். பிடிவாதம் பிடிக்கும் குழந்தையைப் போல் நாக்கைத் துருத்திக்கொண்டு சிமெண்ட் பெஞ்சின் விளிம்பில் தொக்கினாற்போல் உட்கார்ந்திருந்தான். முன்னால் விரித்து வைத்த பலகை. ஒரு முப்பது வயது. அழுக்கு கதர் ஜிப்பா. தலை காடு. பெஞ்ச் பக்கத்தில் ஒரு ஹவாய் செருப்பும் பாதியும்.
சுற்றி இருந்தவர்கள் சும்மா லாந்தி விட்டுப் போக வந்தவர்கள். இப்படியே ஸ்டேஷன் வழியாக நடந்து கொஞ்சம் தள்ளி மதகடியில் குத்த வைத்துவிட்டு, காலைக்கடன் முடித்த தேஜஸோடு திரும்பி உலகை எதிர்கொள்ளப் புறப்பட்டவர்கள்.
‘ஊர் உலகம் கெட்டுப் போச்சுவே.. படத்தைப் பாத்தீரா? நட்ட நடுவிலே அவன் பாட்டுக்கு பலகையை நிறுத்தி வச்சுக்கிட்டு எளுதறான்….துணிக்கடைக்கு இருக்குமோ…கட்டினா எங்க சேலையைக் கட்டு.. இல்லே…இப்படி முண்டக்கட்டையா தரையிலே கால் பாவாம நில்லு..’
அவன் யாரையும் லட்சியம் செய்யாமல் படம் போட்டுக் கொண்டிருந்தான்.
‘கோன் ஹை பாய்?’
இந்திக்காரன் மாதிரி தெரியலியே. நல்ல கறுப்பா இருக்கான் பய.
‘யாருப்பா அது?’
முகத்தை நிமிர்த்தி அவன் பார்த்தான்.
ராசு.. ராசுப்பய இல்லே…?
அதே உயரம்.. மலங்க மலங்க முழிக்கறது.. நாக்கை வேறே துருத்திக்கிட்டு.. ராசு. தம்பி.. ஸ்டேஷன் மாஸ்டர் வேலையிலே சேர ஒரு நாள் இருக்கும்போது காணாமப் போனானே.. அவனே தான்… அவனா?
‘அப்பாவிப் பய.. தம்பிக்கு ஒரு வழி பண்ணுப்பா.. நீ நல்லா இருப்பே.. உன் உத்தியோகம் மேலே மேலே வரும்.. ராசு இங்கே வாடா.. அண்ணன் வேலையிலே சேரப் போறான்.. உடுப்பை இஸ்திரி போட்டு வாங்கிட்டு வாடா.. போய் டீக்கடையிலே உக்கார்ந்திடாதே… அண்ணன் ஊருக்குப் போகணும்..’
அப்பாவிப் பய டீக்கடைக்காரன் பொண்டாட்டியோட ஓடியே போனான்.
இங்கே எப்படி வந்தான்? நான் இருக்கறது தெரிஞ்சிருக்குமோ? மூணு வருஷத்துலே படம் போடக் கத்துக்க முடியுமா என்ன? அந்தப் பொம்பளையை வச்சுப் பழகிக்கிட்டானா? ஒரு சாயலுக்கு.. சாயல் என்ன, எப்படிப் பார்த்தாலும் என்னமா இருப்பா…
இல்லே.. இது ராசு இல்லே.. ராசுன்னா எழுந்து வது கட்டிக்க மாட்டானா என்ன? இவன் சிரிக்க மட்டும் சிரிக்கறான்.
’இதோ முடிச்சுட்டேன். ஃபைவ் மினிட்ஸ்.. கொஞ்சம் காயணும்..’
சிநேகமாகச் சொன்னான்.
டீசண்டான ஆள் தான். கேக்கற தோரணையே சொல்றதே.. என்ன தோணினதோ.. இங்கே எறங்கி வரைஞ்சுக்கிட்டிருக்கான்.. திடீர்னு மூடு வந்திருக்கும்.
‘நீங்க எல்லாரும் போங்க.. நான் பாத்துக்கறேன்.. ஆர்ட்டிஸ்ட்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க.. அவங்க கண்ணுலே அசிங்கம் கிடையாது.. மனசும் அப்படித்தான்..’
நமக்குக் கூட இப்படியெல்லாம் பேச வருதே. சொசைட்டி எலக்சனுக்கு நிக்க வேண்டியதுதான்.
September 24, 2022
ராத்திரி வண்டி – குறுநாவல்
ராத்திரி வண்டி – குறுநாவல்
’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, ஜுன் 1992-ல் பிரசுரமானது. அட்சரா பதிப்பகம் வெளியிட்ட என் முதல் குறுநாவல் தொகுப்பான ‘தகவல்காரர்’ நூலில் இடம் பெற்றது.
இந்தக் குறுநாவலின் கதையாடல் பற்றிக் குறிப்பிட வேண்டும். நனவோடை சற்றே மாற்றமடைந்து கதைப் போக்கில் அவ்வப்போது முன்னால் வந்து வந்து போகும் இந்தக் கதையாடல், இதற்கு அப்புறம் எழுந்த என் அரசூர் நாவல்களுக்கான நடையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது, காலமும் ஒரு தூலமான பரிமாணமாகக் கதையில் முன்னும் பின்னும் நகர்ந்து சதா இயங்கிக் கொண்டே இருக்கிறது.
என்னை வெகுவாக பாதித்த உ.வே.சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ இந்தக் குறுநாவலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை, அதன் காலத்துக்கு நூறு ஆண்டுகள் பிற்பட்ட கதைக்களன் கொண்ட ஒரு புனைகதைக்குள் இழைந்து வரச் செய்யும் சோதனை முயற்சியில் நான் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். இது தமிழில் முதல் முயற்சியாக இருக்கும் பட்சத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
உள்ளடக்கத்துக்காகவும், கதை சொல்லும் உத்திக்காகவும் கவனிக்கப்பட்ட படைப்பு இது. முக்கியமாக மறைந்த திரு நகுலன் போன்ற தமிழின் உன்னத படைப்பாளிகளால் பேசப்பட்டது.
நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
——————————————————————-
ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 1
ஏ ஹமாரா கர்த்தவ்ய ஹை கி இஸ் தேஷ் கி உன்னதி கே லியே…!
அப்புறம் மறந்து போச்சு. படிச்சுப் பதினஞ்சு வருஷம் கழிச்சு அதெல்லாம் ஏது ஞாபகம்?
இந்தி பண்டிட்டா அவன்? படவா, மாட்டடி அடிச்சான்.
‘என்னடா சீவகப் பாண்டியா.. லக்னோக்காரன் கணக்கா கடகடன்னு இந்தி படிக்கிறே… புத்தகத்தைக் கொண்டா பார்ப்போம்..’
அந்த சின்ன ரயில்வே ஸ்டேஷன் அமளிப் பட்டுக் கொண்டிருந்தது. விடிந்ததும் வர வேண்டிய ராமேஸ்வரம் பாசஞ்சர் சரியான நேரத்துக்கு வந்து அரைமணி நேரமாக நிற்கிறது. சரக்கு ரயில் கிராஸிங்க். வண்டி வருகிற வழியாக இல்லை. நூறு இருநூறு பேர் திமுதிமுவென்று ஸ்டேஷன் மாஸ்டர் சீவகப் பாண்டியன் மேஜைக்கு வந்து டீ கேட்கிறார்கள். வடக்கே எங்கோ கிராமப் பிரதேசங்களிலிருந்து கூட்டமாகப் புறப்பட்டு ராமேஸ்வரம் யாத்திரை போகிறவர்கள். விடியற்காலையில் வென்னீர் கூடக் கிடைக்காமல் என்ன பிழைப்பு? கம்பார்ட்மெண்ட் குழாயிலும் தண்ணீர் இல்லை. இந்த ரயிலுக்கு என்ன கேடு? கிளம்புகிற உத்தேசமே இல்லையா? போகட்டும், ஒரு தேநீர்க்கடை கூடவா இங்கே இல்லை?
‘ஏ ஹமாரா கர்த்தவ்ய ஹை கி சாயா கடை இல்லேய்யா.. வண்டியிலே உட்காரு.. கிளம்பப் போறது..’
புயல் கடந்த, மொழி புரியாத பூமியில் குறைகளைக் கேட்டுக் கொண்டு நடக்கிற பிரமுகராக, பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தனியாக அனுப்பப்பட்ட கான்ஸ்டபிளாக, சலோ சலோ என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொல்கிற கோமாளியாகத் தன்னை சீவகன் உணர்ந்து கொண்டிருந்தான்.
ஒழுங்கா இந்தி படிச்சிருந்தா இவனுகளை என்னமா சமாளிச்சிருக்கலாம்.. ‘கழுதே.. புத்தகத்திலே ஓரமா தமிழிலே எழுதி வச்சுக்கிட்டா படிக்கறே படவா? யார்டா எழுதிக் கொடுத்தது? பக்கத்து வீட்டு அக்கா… என்னடா வயசு? பாவாடை தாவணியா? கையைப் பிடிச்சு மடியிலே உக்கார வச்சுக்கிட்டு சொல்லிக் கொடுத்தாளா? தொட்டியா? சும்மா சொல்லுடா.. எங்கேல்லாம் தொட்டே? இந்தக் கைதானே தொட்டுது.. கொஞ்சம் நீட்டுடா..கொடுத்து வச்ச கைடா..’
’சார் சார்… அடிக்காதீங்க சார்..’
சீவகன் கையில் சுருட்டி வைத்திருந்த பச்சைக் கொடியால் இந்திப் பண்டிட்டைத் திருப்பி அடித்தான்.
போய்யா..யாருக்கு வேணும் உன் இந்தி? புஸ்தகத்தை எரிச்சாச்சு. இந்தி வாத்தியார் எல்லாம் ஆறாம் கிளாஸுக்கு சயன்ஸ் எடுக்கப் போனாங்க.. ஏ ஹமாரா கர்த்தவ்ய ஹை கி நீ பசுவின் ஜீரண உறுப்புகளைப் படம் வரைந்து பாகங்களைக் குறி.. பக்கத்து வீட்டு அக்காவை நான் பார்த்துக்கறேன். பாவாடை தாவணியா? உமக்கு ஏன்யா பொறாமை? பாவாடையும் இல்லை, தாவணியும் இல்லை…முண்டு ப்ளவுஸ்.. ராசுப்பய கூட்டிட்டு ஓடினானே, அந்த டீக்கடைக்காரன் பொண்டாட்டி மாதிரி.. கையப் பிடிச்சேனா? எங்கே தொட்டேனா? அது உமக்கு அனாவசியம்.. வண்டி கிளம்பப் போறது.. போய் ஏறிக்குங்க..
பாசஞ்சர் கிளம்பி ஊர்ந்த பொழுது சீவகனுக்குத் திரும்பவும் பதினைந்து வயது கூடியிருந்தது. அவன் சந்திக்கத் தயாராக இரண்டாவது அமளி ஆரம்பித்திருந்தது.
அது ஸ்டேஷன் சிமெண்ட் பெஞ்சில்.
நைஜீரிய உபசாரம்
உடைப்பு Things Fall Apart நாவல் கிடைத்தது.
நைஜீரிய எழுத்தாளரான நோபல் பரிசு பெற்ற சினுவா அச்பெ எழுதிய இந்த நூல் சின்னச்சின்ன சம்பவங்கள் மூலம் நகரும் கதையமைப்பு கொண்டது.
அவ்வப்போது நைஜீரியர்கள் பயணம் வைத்து நண்பர்களையும், உறவினர்களையும் சந்திக்கும்போது கோக்கோ கொட்டைகளைத் தின்னக் கொடுத்து உபசரிப்பது நாவலில் சீராக நடக்கிறது. ’காப்பி சாப்பிடுங்க’ மாதிரி ’கோக்கோகொட்டை தின்னுங்க’ உபசாரம் அங்கே பரவலானது.
ஃபூ-ஃபூ என்ற வாழைக்காய்ப்பொடி கரைத்துச் சமைத்த பண்டத்தையும், சர்க்கரை வள்ளிக்கிழங்கு கூட்டையும் பரிமாறி உபசரிக்கிறார்கள். விருந்தினருக்கு உணவாகப் பரிமாறவே வீட்டுக்கு வீடு வள்ளிக்கிழங்கு சாகுபடியாகிறது.
விருந்தாளி தலை தட்டுப்பட்டதும் மரக் கலுவங்களில் மேற்படி கிழங்கும் வாழைக்காய்ப்பொடிச் சத்துமாவும் வேகவைக்க மண் அடுப்பில் ஏறுகின்றன.
கடலுக்கு வெகு தொலைவில் இருக்கும் பிரதேசம் என்பதால் அபூர்வமான பொருளான உப்புக்கட்டிகளைப் பார்த்துப் பார்த்து இட்டுக் கிண்டிக் கிளறி மரவைகளில் நிரப்பி எடுத்து வந்து வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் சாப்பிடுகிறார்கள்.
நைஜீரியாவில் உண்ண நிரப்பும் மரவை, கர்னாடகத்தில் அகழ்வாராய்ச்சி செய்யும்போது கிடைத்த புராதனப் பொருட்களில் ஒன்றை நினைவு படுத்துகின்றது. கருங்கல் சாப்பாட்டுத் தட்டு தான் அது. விஜயநகரப் பேரரசின் பதினாறாம் நூற்றாண்டு காலத்தானது.
கருங்கல்லில் குழித்து பெரிய நீள்சதுரக் குழியில் சோறும் அடுத்திருக்கும் சிறு வட்டக் குழிகளில் வியஞ்சனமும், புளிக்குழம்பும் வைத்து விளம்பிய கல் தட்டு. தட்டின் தாராளமான நீள அகலம் மற்றும் ஆழம் பார்க்கும்போது வயிறு நிறைய, தற்போதைய மூன்று சராசரி ஆட்கள் உண்ணும் ஆகாரத்தை அந்தக்கால மனுஷர் ஒருத்தரே உண்டதாகத் தெரிகிறது. அவர் யாரென்று கேட்கவேண்டாம். It appears a plateful of food was consumed by a single person .
இந்த வரலாறு படைத்த கல் தட்டு – கற்றட்டுக்கு என் ‘மிளகு’ பெருநாவலில் ஓர் இடம் கொடுத்தேன். நம்மாலானது.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

