ராத்திரி வண்டி – குறுநாவல்

ராத்திரி வண்டி  –  குறுநாவல்

 

 

’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, ஜுன் 1992-ல் பிரசுரமானது.  அட்சரா பதிப்பகம் வெளியிட்ட என் முதல் குறுநாவல் தொகுப்பான ‘தகவல்காரர்’ நூலில் இடம் பெற்றது.

 

இந்தக் குறுநாவலின் கதையாடல் பற்றிக் குறிப்பிட வேண்டும். நனவோடை சற்றே மாற்றமடைந்து கதைப் போக்கில் அவ்வப்போது முன்னால் வந்து வந்து போகும் இந்தக் கதையாடல், இதற்கு அப்புறம் எழுந்த என் அரசூர் நாவல்களுக்கான நடையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது, காலமும் ஒரு தூலமான பரிமாணமாகக் கதையில் முன்னும் பின்னும் நகர்ந்து சதா இயங்கிக் கொண்டே இருக்கிறது.

 

என்னை வெகுவாக பாதித்த உ.வே.சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ இந்தக் குறுநாவலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை, அதன் காலத்துக்கு நூறு ஆண்டுகள் பிற்பட்ட கதைக்களன் கொண்ட ஒரு புனைகதைக்குள் இழைந்து வரச் செய்யும் சோதனை முயற்சியில் நான் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். இது தமிழில் முதல் முயற்சியாக இருக்கும் பட்சத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

உள்ளடக்கத்துக்காகவும், கதை சொல்லும் உத்திக்காகவும் கவனிக்கப்பட்ட படைப்பு இது.  முக்கியமாக மறைந்த திரு நகுலன் போன்ற தமிழின் உன்னத படைப்பாளிகளால் பேசப்பட்டது.

 

நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

——————————————————————-

 

ராத்திரி வண்டி                  இரா.முருகன்  பகுதி – 1

 

ஏ ஹமாரா கர்த்தவ்ய ஹை கி இஸ் தேஷ் கி உன்னதி கே லியே…!

 

அப்புறம் மறந்து போச்சு. படிச்சுப் பதினஞ்சு வருஷம் கழிச்சு அதெல்லாம் ஏது ஞாபகம்?

 

இந்தி பண்டிட்டா அவன்? படவா, மாட்டடி அடிச்சான்.

 

‘என்னடா சீவகப் பாண்டியா.. லக்னோக்காரன் கணக்கா கடகடன்னு இந்தி படிக்கிறே… புத்தகத்தைக் கொண்டா பார்ப்போம்..’

 

அந்த சின்ன ரயில்வே ஸ்டேஷன் அமளிப் பட்டுக் கொண்டிருந்தது. விடிந்ததும் வர வேண்டிய ராமேஸ்வரம் பாசஞ்சர் சரியான நேரத்துக்கு வந்து அரைமணி நேரமாக நிற்கிறது. சரக்கு ரயில் கிராஸிங்க். வண்டி வருகிற வழியாக இல்லை. நூறு இருநூறு பேர் திமுதிமுவென்று ஸ்டேஷன் மாஸ்டர் சீவகப் பாண்டியன் மேஜைக்கு வந்து டீ கேட்கிறார்கள். வடக்கே எங்கோ கிராமப் பிரதேசங்களிலிருந்து கூட்டமாகப் புறப்பட்டு ராமேஸ்வரம் யாத்திரை போகிறவர்கள். விடியற்காலையில் வென்னீர் கூடக் கிடைக்காமல் என்ன பிழைப்பு? கம்பார்ட்மெண்ட் குழாயிலும் தண்ணீர் இல்லை. இந்த ரயிலுக்கு என்ன கேடு? கிளம்புகிற உத்தேசமே இல்லையா? போகட்டும், ஒரு தேநீர்க்கடை கூடவா இங்கே இல்லை?

 

‘ஏ ஹமாரா கர்த்தவ்ய ஹை கி சாயா கடை இல்லேய்யா.. வண்டியிலே உட்காரு.. கிளம்பப் போறது..’

 

புயல் கடந்த, மொழி புரியாத பூமியில் குறைகளைக் கேட்டுக் கொண்டு நடக்கிற பிரமுகராக, பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தனியாக அனுப்பப்பட்ட கான்ஸ்டபிளாக, சலோ சலோ என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொல்கிற கோமாளியாகத் தன்னை சீவகன் உணர்ந்து கொண்டிருந்தான்.

 

ஒழுங்கா இந்தி படிச்சிருந்தா இவனுகளை என்னமா சமாளிச்சிருக்கலாம்.. ‘கழுதே.. புத்தகத்திலே ஓரமா தமிழிலே எழுதி வச்சுக்கிட்டா படிக்கறே படவா? யார்டா எழுதிக் கொடுத்தது? பக்கத்து வீட்டு அக்கா… என்னடா வயசு? பாவாடை தாவணியா? கையைப் பிடிச்சு மடியிலே உக்கார வச்சுக்கிட்டு சொல்லிக் கொடுத்தாளா? தொட்டியா? சும்மா சொல்லுடா.. எங்கேல்லாம் தொட்டே? இந்தக் கைதானே தொட்டுது.. கொஞ்சம் நீட்டுடா..கொடுத்து வச்ச கைடா..’

 

’சார் சார்… அடிக்காதீங்க சார்..’

 

சீவகன் கையில் சுருட்டி வைத்திருந்த  பச்சைக் கொடியால் இந்திப் பண்டிட்டைத் திருப்பி அடித்தான்.

 

போய்யா..யாருக்கு வேணும் உன் இந்தி? புஸ்தகத்தை எரிச்சாச்சு. இந்தி வாத்தியார் எல்லாம் ஆறாம் கிளாஸுக்கு சயன்ஸ் எடுக்கப் போனாங்க.. ஏ ஹமாரா கர்த்தவ்ய ஹை கி நீ பசுவின் ஜீரண உறுப்புகளைப் படம் வரைந்து பாகங்களைக் குறி.. பக்கத்து வீட்டு அக்காவை நான் பார்த்துக்கறேன். பாவாடை தாவணியா? உமக்கு ஏன்யா பொறாமை? பாவாடையும் இல்லை, தாவணியும் இல்லை…முண்டு ப்ளவுஸ்.. ராசுப்பய கூட்டிட்டு ஓடினானே, அந்த டீக்கடைக்காரன் பொண்டாட்டி மாதிரி.. கையப் பிடிச்சேனா? எங்கே தொட்டேனா? அது உமக்கு அனாவசியம்.. வண்டி கிளம்பப் போறது.. போய் ஏறிக்குங்க..

 

பாசஞ்சர் கிளம்பி ஊர்ந்த பொழுது சீவகனுக்குத் திரும்பவும் பதினைந்து வயது கூடியிருந்தது. அவன் சந்திக்கத் தயாராக இரண்டாவது அமளி ஆரம்பித்திருந்தது.

 

அது ஸ்டேஷன் சிமெண்ட் பெஞ்சில்.

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 24, 2022 19:22
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.