இரா. முருகன்'s Blog, page 37
February 6, 2023
என் புது நாவல் ‘தினை’ – பூர்வாங்கம், அத்தியாயம் ஒன்று
என் புது நாவல் தினை பூர்வாங்கம், முதல் அத்தியாயம் தமிழில் முதல் இணைய இதழ் திண்ணையில் பிரசுரமாகி உள்ளன. தொடர்ந்து வாராவாரம் நாவல் திண்ணையில் பிரசுரமாகும்.
வாசித்து இன்புறுவீர், கருத்துச் சொல்வீர்
தினை – பூர்வாங்கம், அத்தியாயம் ஒன்று
   
   
என் புதிய நாவல் தினை
புது நாவல் – தினை
என் அடுத்த நாவல் ‘தினை’ வரும் வாரத்தில் இருந்து திண்ணை – முதல் தமிழ் இணையப் பத்திரிகையில் பிரசுரமாகிறது.
சில குறிப்புகள்
1) தினை என்பது சிறு தானியம் -foxtail millet. இந்த 2023-ஆம் ஆண்டு உலகச் சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. தினை நாவல் அந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெறும்
2) தினை நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போதே திண்ணையில் பிரசுரமாக இருக்கிறது. நாவல் ஆசிரியர் என்ற முறையில் எனக்கும் வாசகர்களுக்கும் புது அனுபவமாக இது இருக்கலாம்
3)நாவலின் மொழிநடை பண்டிதத் தமிழிலிருந்து பாமர மொழிப் பயன்பாடு வரை பரவியிருக்கும்
4)தினை ஃபாண்டஸி, மாய யதார்த்தம், சர்ரியலிசம், அறிவியல் புனைவு தளங்களில் நிகழும். இது நடக்குமா என்ற கேள்விகளுக்கு இடம் இல்லை. எதுவும் நடக்கக் கூடியது அல்ல. நடக்கலாம் ஒரு நாள்.
5) தினை நாவலிலிருந்து take away ஏதும் கிடைத்தால் நீங்கள் பாக்கியசாலிகள்.
6)இதற்கு முன் என் பெருநாவல்கள் அரசூர் வம்சம், விஸ்வரூபம் ஆகியவை திண்ணையில் பிரசுரமாகி வாசகர் ஆதரவை ஈர்த்தது போல், தினைக்கும் வாசகர் ஆதரவை எதிர்பார்க்கிறேன்,
தினை வருகிறது. வாசிக்க வாருங்கள்
அன்புடன்
இரா.முருகன் 
//
பூர்வாங்கம் 
கோகர் மலை என்பது பரந்து விரிந்த மலையும் மலை சார்ந்த இடமும், கடந்த நூறாண்டுகளில் கவர்ந்தெடுத்த மருத நிலமும், பாலையும் எல்லாம் சேர்ந்த மிகப்பெரிய பூமியாகும். ஆயிரம் மைல் குறுக்குவெட்டில் விரியும் நாடு இது.
கோகர் மலையில் இவை தவிர நிறையக் காணப்படுகிறவை நரித்தண்டிக்கு, என்றால், நரி அளவுக்குப் பெருத்த கரப்புகள் மற்றும் கீரி அளவு பருத்த செந்தேள்கள். இரண்டும் ஒரே தரத்திலான வலிமை கொண்டவை. பேச இயலாவிட்டாலும் மனுஷர்களோடு தொடர்பு ஏற்படுத்திப் பயமுறுத்துகிறவை.
கோகர் மலைநாட்டை ஆட்சி செய்யும் அரசு யந்திரமாக இயங்குவது கரப்புகளும் தேள்களும் சேர்ந்த அமைப்பு தான். மனிதன் அவற்றைக் கண்டு பயந்து, மனம், உடல் ரீதியாக அடிபணிந்து, அவற்றுக்குச் சேவகம் செய்வதில் களி கூர்ந்து, திருப்தி அடைந்து வாழ்ந்து வருவது வழக்கம்.
பறக்கும் செந்தேள்கள். யோசித்துப் பார்க்கவே பயமாக இல்லையா?
கோகர் மலைநாட்டில் இப்படி சிறிதும் பெரியவையுமான விலங்குகள் பறப்பது ஒரு இருநூறு வருடமாக நிகழ்வது. மலையில் பிறப்பெடுத்து இங்கேயே உயிர்க்கின்ற பிராணிகள் மலையை விட்டுப் போகவேண்டி நேர்ந்தால் அப்போது தாற்காலிகமாக இறகுகள் காணாமற் போகும்.
மற்ற குறிஞ்சி நிலப்பரப்பு உயரங்களைவிட இந்தக் குன்றுப் பிரதேசத்தின் உயரம் அதிகம். நூற்று முப்பத்தைந்து அடி மேலேறிப் போகும்போதும் நூற்று முப்பத்தெட்டு அடி கீழே இறங்கும்போதும் அளவு காட்டும் மலை இது. இரண்டும் சரியான அளவுதான்.
இங்கே உள்ளே நுழைய, உள்ளிருந்து வெளியே வர சில நியமங்கள் உண்டு.
பறக்கும் விலங்குகளின் மலை என்பதால் இயற்கையைப் பாதுகாக்க இங்கே மனிதர்களும் கரடிகளும் சிகரெட், பீடி, சுருட்டு ஆகிய லாஹிரி வஸ்துக்களைச் சுருட்டிய குழல்களைப் புகைக்கக் கூடாது என்பது விதி.
//
Go
February 2, 2023
மிளகு நாவல் வாசிப்பு அனுபவம் பற்றி நண்பர் ஜெயமோகன் இணைய தளத்தில் இருந்து
நண்பர் ஜெயமோகனின் இணைய தளத்தில் இன்று மின்பதிப்பிக்கப்பட்ட ‘மிளகு’ நாவல் மதிப்பீடு. நண்பர் ஷங்கர் பிரசாத் எழுதிய ‘மிளகு நாவல் வாசிப்பு’ .
நன்றி ஜெயமோகன். நன்றி ஷங்கர் பிரசாத்
//மிளகு நாவல் வாசிக்கையில் கலங்கலான பழைய மாயத்தன்மை கொண்ட காணொலியின் அன்றாடப் படுத்தப்பட்ட வடிவத்தை காணும் அனுபவமே ஏற்பட்டது, நாவலின் விவரணைகள் சமகாலத்தியவை ,கதை சொல்லும் காலத்துக்காக எந்த சமரசமும் இல்லாமல், கதை மனிதர்களையும் சூழல்களையும் சமகால நோக்கிலேயே அணுகுகின்றன, கிட்டத்தட்ட கணிப்பொறியின் செயற்கை அறிவுக்கு மட்டுமே சாத்தியமான பாரபட்சமற்ற கருணையின்மை.//
மிளகு பெருநாவல் வாசிப்பு அனுபவம்
   
January 24, 2023
நடந்தேறிய சென்னை புத்தகக் கண்காட்சி 2023-ல் கிடைத்த அனுபவப் பாடங்கள்
சென்னை புத்தகக் காட்சி 2023 – Takeaway
நடந்தேறிய சென்னை புத்தகக் கண்காட்சி 2023-ல் கிடைத்த அனுபவப் பாடங்கள் –
1)முந்தைய வருடம் 1200 பக்கத்துக்குப் பெருநாவல் எழுதி வெளியிட்டிருந்தாலும், இந்த வருடத்துப் புத்தகக் காட்சிக்குப் புதியதாகக் குறைந்தது இருநூறு பக்கத்துக்கு வருவதாகப் புத்தகம் எழுதி வெளியிடவேண்டும்.
2) 400 பக்கத்துக்கு மேல் புத்தகம் இருந்தால், பாகம் ஒன்று, இரண்டு எனப் பிரித்து வெளியிடுவது நன்று.
நேற்று என் நண்பர் ஆங்கில எழுத்தாளினி சொன்னது – ‘மிளகு நாவலைப் படுத்துக்கொண்டு படிக்க முடியவில்லை. தப்பித் தவறி கைநழுவி விழுந்தா, காலில் அடி பட்டு வலிக்குது’
3) அமெரிக்கா முதல் உலகெங்கணும் வாழும் Diaspora தமிழர்கள் அச்சுப் புத்தகம் படிப்பதை அறவே மறந்து விட்டார்கள்.
‘மிளகு நாவலுக்கு மின்பதிப்பு இல்லாமல் படிக்க முடியலே. சீக்கிரம் கிண்டில் ஈபுக் போடச்சொல்லுங்க”
4) 30 வினாடி நிகழ்வோ, பத்துக்கு மேற்பட்ட நூல்களுக்கானதோ, ஒருவர் கொடுக்க அடுத்தவர் பெற்றுக்கொள்ள மொபைலில் படம் பிடிக்க, புத்தக வெளியீட்டு விழா அவசியம்
5) போன வருடம் புத்தகக் காட்சியில் வாங்கி இன்னும் வாசிக்காது இருக்கும் புத்தகங்கள் பற்றிக் குற்ற போதம் கலந்த பெருமை எல்லோருக்கும் இருக்கிறது.
மறந்தே போனேன் ….
6) புத்தகங்களில் எழுத்துரு (font) சிறியதாக உள்ளது – அதைவிடச் சிறியதாக எழுத்துரு கிடைக்காததே காரணம்
7)பல புத்தகப் பக்கங்களில் வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளி மிகக் குறைவாக இருக்கிறது அல்லது அச்சு தெளிவாக இல்லை அல்லது இரண்டும் தான்
   
January 23, 2023
விஷ்ணுபுரம் அமெரிக்கா நண்பர்களோடு ஒரு கலந்துரையாடல்
நண்பர் ஜெயமோகனின் வழிகாட்டுதற்படி இலக்கிய வீதியில் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்காவாழ் நண்பர்களோடு அண்மையில் (ஜனவரி 21,2023 சனிக்கிழமை) ஒரு நேர்காணலில் பங்கு பெற்றேன். மிக நேர்த்தியாக க.நா.சு உரையாடல் அரங்கு என்ற அவர்களின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நேர்காணல் பற்றி ஜெயமோகனின் இணையத் தளத்தில் அவரும், ஆஸ்டின் சௌந்தரும் எழுதியிருப்பது இங்கே
விஷ்ணுபுரம் இலக்கியச் சந்திப்பு
நண்பர் ஜெயமோகனுக்கு நன்றி. vishnupuramamerica.org – நண்பர்களுக்கும் நன்றி பல.
January 19, 2023
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், அமெரிக்கா ஏற்பாடு செய்யும் இரா.முருகன் இலக்கியச் சந்திப்பு
அன்பு நண்பர் ஜெயமோகனின் இணையதளத்தில் இன்று முதல் தகவலாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது, ‘இரா.முருகன் இணையச் சந்திப்பு’.
அமெரிக்காவாழ் ஜெமோ அன்பர்களின் இலக்கிய அமைப்பு (vishnupuramusa@gmail.com) நாளை (ஜனவரி 21 2023 சனிக்கிழமை) ஏற்பாடு செய்திருக்கும் ஸூம் நிகழ்வுக்கான அழைப்பிதழ் இது.
இலக்கிய அன்பர்களைக் கலந்து கொள்ளும்படி கோருகிறேன்.
நண்பர் ஜெயமோகனுக்கும் அவரது வழிகாட்டலோடு செயல்படும் விஷ்ணுபுரம் அமெரிக்கா இலக்கிய அமைப்புக்கும் என் மனமார்ந்த நன்றி.
தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ!
January 16, 2023
இடாகினிப் பேய்
இடாகினிப் பேய்
இது பகுதியாக முன்னர் வெளியானது. அஃது படியா நின்றோர், கூறியது கூறற்றுயர் நீங்கவே தொடக்கத்தில் சில பத்திகள் கடந்து தொடர வேண்டுகிறேன்.
‘இடாகினிப் பேய்களும்..’ என்ற பெயரில் என் (அண்மையில் காலம் சென்ற) நண்பர் கோபிகிருஷ்ணன் எழுதிய கதைத்தொகுப்பு பற்றிப் படித்தபோது எனக்கு இந்த இடாகினிப் பேயை எங்கேயோ பார்த்த நினைவு.
சிலப்பதிகாரத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது அது வசமாகப் பிடிபட்டது.
மாலதி என்ற பார்ப்பனி, மாற்றாள் மகவுக்குப் பால் தரும்போது பால் விக்கி, அந்தக் குழந்தை மரித்தது. அது கண்டு துயருற்ற அவள் எல்லாக் கடவுள் கோவில்களிலும் ஏறி இறங்கி, குழந்தையை உயிர்ப்பிக்கு படி வேண்டுகிறாள்.
அவள் பாசாண்டச் சாத்தன் கோவிலுக்கு வரும்போது அங்கே இருந்த இடாகினிப் பேய் – இது சக்ரவாளக் கோட்டத்து இடுகாட்டில் பிணங்களை உண்ணுவது – ஒரு பெண் வடிவில் அங்கே வருகிறது. அதுவும், பிறரை எப்போதும் குற்றம் சொல்லும் பெண்ணாக.
மாலதியிடம் ‘நீ தவம் செய்திருக்காவிட்டால் உனக்குத் தெய்வம் வரம் கொடுக்காது’ என்று சொல்லி, அவள் கையில் வைத்திருந்த மகவை எடுத்துப் போய் இருட்டில் வைத்து உண்டு விடுகிறது.
பாசாண்டச் சாத்தன் அந்த மகவாகப் பிறப்பதாகக் கதை நீளுகிறது.
சிலம்பின் ‘கனாத்திறம் உரைத்த காதை’யில் வரும் நிகழ்வு இது.
‘ஐம்பெருங்காப்பியங்களில் இயற்கையிறந்த கூறுகள்’ என்ற பெயரில் முனைவர் மகரிபா எழுதிய புத்தகத்தைப் படிக்க எடுத்ததும் இந்த இடாகினிப் பேய் தூண்டித்தான்.
சிலம்பிலும், மணிமேகலையிலும் காவியச் சுவைக்காகவும், முற்குறிப்பு, பின்னோக்கு உத்தி சார்ந்தும், இன்றைய மாந்திரீக யதார்த்தத்தின் பண்டைத் தமிழ் வெளிப்பாடாகவும் எத்தனையோ தெய்வங்களும், பூதங்களும், வானவர்களும் மனிதர்களோடு ஊடாடிப் போகிறார்கள் – கந்திற்பாவை, நாளங்காடிப் பூதம், சதுக்க பூதம், இடாகினிப் பேய், எரியங்கி வானவன், குரங்குக்கை வானவன், காயசண்டிகை போன்றவர்கள் இவர்கள்.
இந்திரன், பாசாண்டச் சாத்தன், மதுராபதி தெய்வம், மணிமேகலா தெய்வம், தீவதிலகை, சம்பாபதித் தெய்வம் போன்ற தெய்வங்கள் அங்கங்கே தட்டுப்படுகின்றன.
இந்திரனையும், பாசாண்டச் சாத்தனையும் தவிரக் காப்பியங்களில் வரும் தெய்வங்கள் எல்லாம் பெண்களே. இது ஏனென்று யாராவது ஆராயலாம்.
‘சம்பாபதித் தெய்வம் முதியோள், மூதாட்டி என்றெல்லாம் குறிப்பிடப் படுகிறது. தெய்வங்களுக்கு முதுமையுண்டா என்பது தெரியவில்லை’ என்பது போல், தன்னால் அறுதியிட்டு நிறுவ முடியாததை எல்லாம் தெரியவில்லை என்று அடக்கமாகச் சொல்லும் மகரிபா போன்ற முனைவர்கள் அரிதாகவே கண்ணில் படுகிறார்கள். (மகரிபா குறிப்பிட்ட சம்பாபதி, ‘மன்ற அராஅத்த பேஎம் முதிர் கடவுள்’ என்று சங்க இலக்கியத்தில் வருகிற வயசான கடவுளை எனக்கு நினைவுபடுத்துகிறது.)
கண்ணகி மதுரையை எரியூட்டுவதை விவரிக்கும் மதுரைக் காண்டம் – அழற்படு காதையில் அரச பூதம், அந்தண பூதம், வணிக பூதம், வேளாண் பூதம் என்ற நான்கு பூதங்கள் நகர் நீங்குவதாகக் குறிப்பிடப்படுவது இடைச் செருகல் என்கிறார் மகரிபா. இப்பகுதிகள் ‘கந்தியார் போலும் ஒருவரால் பாடி இடைமடுக்கப் பட்டன’ என்கிறார் ந.மு.வெங்கடசாமி நாட்டாரும், தம் சிலப்பதிகார உரையில் (கழகப் பதிப்பு).
பாசாண்டச் சாத்தனைப் பற்றிச் சொல்லும்போது முனைவர் குறிப்பிடுவது –
“(சாத்தன்) சாதாரண மானுடன் போன்றே ஒரு குடும்பத்தில் மகனாக வளர்கிறான். திருமண உறவிலும் ஈடுபடுகிறான். எட்டாண்டு வாழ்க்கை நடத்துகிறான். அதன் பின் அந்த வாழ்க்கையைத் துண்டித்துக் கொண்டு கோயில் கொண்டாலும், அந்தக் கோயிலுக்கு தேவந்தியை (மனைவி) வரச்சொல்லி அவளோடு கொண்ட தொடர்பைத் தொடர்கிறான்.”
‘கோட்டத்து நீ வா எனவுரைத்து நீங்குதலும்’ என்ற அடியைத் தனியே பார்க்காமல், பின்னால் வரும்
‘ஆர்த்த கணவன் அகன்றனன் போயெங்கும்
தீர்த்தத் துறைபடிவே னென்றவளைப் பேர்த்திங்ஙன்
மீட்டுத் தருவா யெனவொன்றன் மேலிட்டுக்
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள்’
என்பதோடு சேர்த்துப் பார்த்தால் தேவந்தி மணவாழ்க்கையைத் தொடரக் கோவிலுக்குப் போகவில்லை என்பது புலனாகும்.
‘ஐம்பெரும் காப்பியங்களில் இயற்கையிறந்த கூறுகள்’ – முனைவர் எஸ்.கே.எம்.மகரிபா – 
January 14, 2023
அபுல் கலாம் ஆசாத்தின் நாவல் ‘போலி’
அண்மையில் படித்த துறை சார்ந்த நாவல்களில் வித்தியாசமானது, நண்பர் அபுல் கலாம் ஆசாத் எழுதிய ‘போலி’ .
சினிமாவில் சண்டைக்காட்சிகளில் வில்லனாக, கதைப் போக்கின் படி கதாநாயகன், நாயகி, பெண்ணாக வேடமிட்ட கதாநாயகன் இப்படி சகலமானவர்களிடமும் உதை வாங்கும் அடியாளாக, மூன்றாம் மாடியிலிருந்து கீழே மோட்டார் பைக்கில் குதித்து (சரித்திரப் படத்தில் குதிரைமேல் குதித்து) ஓட்டிப் போகும் ஹீரோவின் டூப் ஆக உயிரைப் பணயம் வைத்து வெள்ளித்திரையில் தோன்றி மறையும் இந்த சண்டைக்கலைஞர்களின் அசாத்தியமான வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டியது.
அதை பின்புலமாகக் கொண்டு எழுந்த அபூர்வமான தமிழ் நாவல் போலி. நிஜத்தில் ஒரு கீற்று, கற்பனையில் ஒரு கீற்று என்று நேர்த்தியான அனுபவமும் பார்த்து, கேட்டு, பயின்று வந்த தொழில்திறனுமாக புனைவை முடைந்து போகிறார் நாவலாசிரியர் ஆசாத்.
’நான், தவுலத் கான் என்னும் தண்டர் தவுலத்’என்று கம்பீரமாகத் தொடங்கும் நாவல், சிலம்பப் பயிற்சியில் தவுலத் சிறப்பான திறமையோடு மிளிர்கிறது.
தவுலத்தின் சிலம்ப மற்றும் பொதுவான ஸ்டண்ட் அறிவு பற்றிக் கோடி காட்டும் ஒரு சிறு சித்தரிப்பு இது-
//
டெரன்ஸ் ஹில்லும் பட் ஸ்பென்ஸரும் நடித்த ‘ஐ ஆம் ஃபார் ஹிப்பொபொடாமஸ்’, ‘ட்ரினிட்டி இஸ் ஸ்டில் மை நேம்’, டீன் மார்ட்டின் நடித்த ‘த சைலன்ஸர்’ இப்படி சில படங்களைப் பார்த்தேன். பட் ஸ்பென்சர் ஒரே அடியில் எதிராளியை வீழ்த்தும் காட்சிகள் எனக்குப் பிடிக்கும். எம்.ஜி.ஆரின் அலங்காரமான சிலம்பக் காட்சிகளைத் தமிழ்த் திரையில் பார்த்துப் பயிற்சி பெற்று வளர்ந்திருந்தாலும் டெரன்ஸ் ஹில்லின் நகைச்சுவை கலந்த சிலம்ப அடிகள் பிடிக்கும்.
//
1980-களின் தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவின் குறுவரலாறும் கூட இந்த நாவல். பக்கத்துக்குப் பக்கம் கதையோட்டத்தோடு கலந்து அந்தப் பழைய திரைப்படங்கள் பற்றியும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் குறித்தும் சுவாரசியமாகப் பேசிப் போகிறார் ஆசாத். ஜி, அது ஏன் பெண் ஸ்டண்ட் மாஸ்டர் யாரும் இல்லை?
சிலம்பம், செடிகுச்சி சிலம்பம், கராத்தே என்று தவுலத்தோடு நாமும் கம்பு சுழற்றியபடி நடக்கிறோம். ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் எம்.ஜி.ஆர் காட்டிய செடிகுச்சி ஆற்றலை இன்னொரு நடிகரை வைத்து இப்போதும் மறு உருவாக்க முடியாது’ என்று கதையோடு சொல்லும் ஆசாத், சரியா என்று கேட்க, ஆமா வாத்தியாரே என்கிறோம் ப்ரூஸ் லீயோடு.
ராத்திரியில் கதாநாயகனுக்காக அண்ணா சாலையில் மோட்டார் பைக் வேகமாக ஓட்டிப் போகும் டூப் ஆக தவுலத்தை அவன் தந்தை பார்த்து விடுவதில் கதை முக்கியத் திருப்பத்திலாகிறது.
ஸ்டண்ட் மாஸ்டர் கனவுகளை ஏறக்கட்டி வைத்துவிட்டு சவுதிக்கு எலக்ட்ரீஷியனாக, குடும்பத்தைத் தாங்கி நடத்த தவுலத் அரபுநாடு போய் முப்பது வருடத்துக்கு மேலும் அவன் மனதில் ஸ்டண்ட் டூப் பசுமையாக இருக்கிறதை மெல்லிய நகைச்சுவையோடு சொல்லிப் போகிறது நாவல்.
தவுலத்தின் பார்வையில் சொல்லப்படும் போலி-யில் ஒவ்வொரு அத்தியாயமும் அடிமைப் பெண், தனிப்பிறவி என்று எம்.ஜி.ஆர் படங்களின் பெயர்கள். நடுவில் தவுலத்தின் அப்பா சொல்வதாக வரும் இரண்டு அத்தியாயங்கள் படிக்காத மேதை .. ஆமாம், சிவாஜி படப் பெயர் கொண்டவை. வாஹ் உஸ்தாத்!
சவுதி அரேபியாவில் காலடி வைத்தது முதல் போட்டுக் கொண்டிருப்பதுதான் முதல் டூப் என்ற சொற்றொடரைப் படித்து விட்டு நாவலை மூடி வைக்க, feeling of goodness ஏற்படுவது நிஜம்.
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் இலக்கிய விருத் 2022 தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் வரிசையில் short listed அபுல் கலாம் ஆசாத்தின் இந்த நாவல் ‘போலி’யும் உண்டு
0
January 11, 2023
கன்னத்தில் பூத்த ஹைப்ரிட் செவ்வரளி – ஒரு கவிதைத் தொகுதி – சென்னை புத்தகக் காட்சி 2023
நேற்று சென்னை புத்தகக் காட்சி 2023-இல் நண்பர் கவிஞர் பெருந்தேவியின் கவிதைத் தொகுப்பு ‘அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது’ வெளியிடப்பட்டது. நூலில் இருந்து ஓர் அருமையான கவிதை –
நள்ளிரவில் ஃப்ரஞ்ச் ஃப்ரை தின்பவள்
————————————————-
கவிஞர்களுக்கும் பூனைகளுக்கும்
நள்ளிரவில் பசிக்கலாம்
பெண்களுக்கு
நள்ளிரவில் பசிக்கக் கூடாது
ஆனால் சிங்கப்பூரில் இரவு கிடையாது
12.46
மொபில் செயலியில்
ஃப்ரஞ்ச் ஃப்ரை ஆர்டர் செய்கிறாள்
எப்போது வரும்
நேரத்தைப் பார்க்கிறாள்
வரைபடத்தைப் பார்க்கிறாள்
பெயரைப் பார்க்கிறாள்
ஏன் பெண்கள் டெலிவரி வேலைக்கு வருவதில்லை?
ஆனால் சிங்கப்பூரில் பயம் கிடையாது
பைக் கிளம்பி விட்டது
1:01
வாசற்கதவுக்கு நேராக
மேஜையில் இருந்த
ஒயின் பாட்டில்களை
வேகமாக அகற்றுகிறாள்
நள்ளிரவில் ஆர்டர் செய்திருக்கக் கூடாது
பெல் அடிக்கிறது
1:34
நள்ளிரவில் ஆர்டர் செய்திருக்கக் கூடாது
பாதிக் கதவைத் திறக்கிறாள்
வாங்கிக் கொள்கிறாள்
‘ப்ரோ சாப்பாடு வந்துவிட்டது”
வீட்டுக்குள் வேறொரு திசையைப்
பார்த்துச் சொல்கிறாள்
சில்லறையை
அவசரமாக வாங்கிக் கொள்கிறாள்
நள்ளிரவில் ஆர்டர் செய்திருக்கக் கூடாது
கதவை அடைக்கிறாள்
இல்லாத சகோதரனுக்கு
ஸ்தோத்ரம் சொல்லிவிட்டுத்
தின்னும்போது
ஃப்ரஞ்ச் ஃப்ரை
அவள் ஆன்மாவையும்
சேர்த்து ரட்சிக்கிறது.
(பெருந்தேவி)
இது கவிதையாக எழுதப்பட்ட சிறுகதை என்று எனக்குத் தோன்றுகிறது. நள்ளிரவில் பசியோடு உணவு ஆர்டர் செய்யும் பெண்ணின் பதட்டம் மூன்று முறை ‘நள்ளிரவில் ஆர்டர் செய்திருக்கக் கூடாது’ என்று திரும்பத் திரும்ப வருவதில் நுணுக்கமான சித்தரிப்பாகிறது.
தனக்குத்தானே ‘சிங்கப்பூரில் பயம் கிடையாது’ என்று சமாதானம், சிங்கப்பூரில் பெண்கள் டெலிவரிக்கு வருவதில்லை என்று ஆச்சரியம் – இப்படி நினைவோட்டம்
‘ப்ரோ சாப்பாடு வந்துவிட்டது’ என்று உள்ளே போய் வேறு திசையில் பார்த்துச் சொல்கிறாள் அந்தப் பெண் – அங்கே எந்த சகோதரனும் இல்லை என்பதில் கச்சிதமாக இந்தக் கதை – கவிதை முடிகிறது.
சிறு சந்தேகங்கள் –
————————
1) கவிஞர்களுக்கும் பூனைகளுக்கும் நள்ளிரவில் பசிக்கலாம் ஆனால் பெண்களுக்குப் பசிக்கக் கூடாது – பெண் கவிஞர்கள், பசித்த மானுடர் category-யில் வரமாட்டார்களா?
2)ஃப்ரஞ்ச் ஃப்ரை உப உணவு ஆச்சே. பிட்ஸா, பர்கர் அதோடு கூட கிடையாதா?
3)தனியாக நள்ளிரவில் ஒயின் தான் குடிக்க வேணுமா? அது பகல் உணவோடு அருந்தும் திரவமாச்சே?
கவிஞர் பெருந்தேவியின் கவிதைத் தொகுப்பு
‘அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது’
Zero Degree Publishing ZDP
Chennai Book Fair 2023a
Stall F19
   
   
January 5, 2023
ஷராவதி போற்றுதும் – நடந்தாய் வாழி ஷராவதி
பெருநாவல் மிளகு – ஒரு சிறு பகுதி
———————————————–
காவேரி நதியும், கோதாவரியும் கிழக்கு நோக்கிப் பெருகிப் போக, ஷராவதி நதியோ மேற்குத் திசையில் பிரவகித்து ஹொன்னாவரில் அரபிக் கடலில் கலக்கும்.
அமைதியான, பரந்த வெள்ளப்பெருக்காக நிலம் தொட்டு, பிரம்மாண்டமான ஜோகு அருவியாகப் பொங்கி, உயரம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை அணைத்துக் கீழே ஆவேசமாகப் பொழிந்து, குறுகிய நதிதீரங்களுக்கு இடையே சுழித்துச் சுருண்டு, உயர்ந்து, அலையடித்துக் கடந்து சென்று, கடல் தீரத்தில் நுழைந்து, சதா இரைந்து பாடும் அலைகளோடு கைகோர்த்து விளையாடி, கொஞ்சம் கொஞ்சமாக சமுத்திரத்தின் மகா இயக்கத்தில் கலந்து தனதான அடையாளம் இழந்து, ஆற்று மணலின் மெல்லிய இனிப்புச் சுவையும், தண்ணீர்த் தாவரங்கள் கொண்டுதரும் நீர்ச் சுவையும், நதிவாசனையும் துறந்து உப்புச் சுவை மீதுர கடல்வாடை கொண்டு, ஷராவதி காணாமல் போவாள்.
நதி கடலோடு கலக்கும் கழிமுகத்துக்கு முன்னால் மடைமாற்றி வேகத்தைக் கட்டுப்படுத்தி, நீராடவும், படிகளில் அமர்ந்து கால்தொட ஆறு நனைத்துப் போகவும் நேரம் செலவிட, தண்ணீர்த்துறைகள் சந்தடி மிகுந்து பரபரப்பாக இயங்கும் நிலாநாள் காலை.
இருபத்தைந்து வருடமாக காசிரை இந்த நதி நீராடலுக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் அவளோடு பாடிக் கொண்டும், சிறுபறை கொட்டிக் கொண்டும், கலகலவென்று சிரித்துக் கொண்டும் வருகிற கன்யகைகளில் சிலர் கல்யாணமாகிக் காணாமல் போகிறார்கள். புதிதாக சின்னப்பெண்கள் சிலர் சேர்ந்து கொள்கிறார்கள். அவளை வாடி போடி என்று உரிமையோடு அழைத்தபடி கூட வந்த பெண்கள், வயதுக்கு முன் வந்து சேரும் இளம் முதுமையோடு, அவர்களின் பனிரெண்டு வயது மகளை நதிநீராட காசிரையோடு அனுப்பிவைக்கிறார்கள்.
‘அடியே காசிரை’ விளிகள் ‘அக்கா காசிரை’ ஆயின. அவை ’அத்தை காசிரை’யாகி, அதுவும் போய் ’காசிரை அம்மாளாக’, ‘காசிரை முத்தச்சி’யாகத் தேய இன்னும் நிறைய வருடங்கள் மீதி இல்லை என்பதை காசிரை அறிவாள்.
கூட வந்தவர்கள் தொலைந்து போன அந்த சோகத்தை நினைத்தால் எதற்கு நதிநீராட்டு நாளை எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர்களுக்காக இல்லை, காசிரை தனக்காகப் போகிறாள். இனியும்
”அக்கா தண்ணீர்த் துறை வந்தாச்சு. மஞ்சள்பொடியும் வாசனைப் பொடியும் எடுத்துக்கிட்டு உங்க ரதம் வந்து சேர்ந்ததும் நீராட்டு தொடங்க வேண்டியது தான்”.
ஒடிசலான பொற்கொடி போன்ற இளம்பெண் ஒருத்தி வெண்பல் ஒளிரக் கேட்டாள். காசிரை அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டாள்.
“வந்துக்கிட்டிருக்குடா தங்கம்”.
காசிரையின் புன்முறுவலும் அழகிய பெரிய விழிகளும் அதிகாலை வெளிச்சத்தில் அழகாகத் தெரிய கோச் வண்டி தண்ணீர்த் துறைக்கு வந்து நின்றது. தேரோட்டி வந்த அருகமகாவீரன் குதித்து இறங்கினான்.
”காசக்கா, நீங்க சொன்னபடி வெளிச்செண்ணெய், அரப்புப் பொடி, வாசனைப்பொடி, மல்லிகைப் பூ, கருந்துளசி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் பிரம்பு கடகத்துலே தனித்தனியாகப் போட்டுக் கொண்டு வந்திட்டேன். சரியா இருக்கா பாருங்க” என்றான் அவன்.
”சரி நான் பார்த்துக்கறேன். நல்ல காரியம் செய்திருக்கே. உன்னை அருகதேவரும் மகாவீரரும் சேர்ந்து ஒரு மாசம் மதுசாலைக்கு போகாமல் பார்த்துக்கொள்ளட்டும். இப்போ கிளம்பு. ஆண்கள் இன்றைக்கு பகல் வரை வரமுடியாத பிரதேசம் இது”.
அருகமகாவீரன் கண்ணை அகல விரித்து காணாதன கண்டது போல் நாலு திசையும் திரும்பித் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்ததை உடனடியாகத் தடுத்து அவனை ஆட்கொண்டு அனுப்பிவைத்தாள் காசிரை.
மிங்கு எங்கே காணோம்? அவள் வரக் காத்திருக்கலாமா? அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது ரத சாரதி அருக மகாவீரன் திரும்ப படித்துறை நோக்கி வந்தான். ஊஊஊ என்று சத்தமிட்டு அவனைப் பெண்கள் விரட்ட, காசிரையிடம் அவசரமாகச் சொன்னான் அவன் –
மிங்கு அக்கா வரமுடியலியாம். சொல்லச் சொன்னாங்க. மறந்துட்டேன்”.
அருகன் மிங்குவை எங்கே பார்த்தானோ.
ஸ்னான கட்டத்திற்குள் காசிரை நுழைந்தபோது ஒரே சிரிப்பும் கலகலப்பான பேச்சுமாக ஒரு நூறு பெண்கள் அங்கே களித்திருந்தார்கள். நீண்டு வளைந்து குளம் போல் பாத்தி கட்டி, ஷராவதியை நடை மாற்றி, கிழக்கு திசையில் கொஞ்ச தூரம் வேகமின்றி மெல்ல அசைந்தாடிப் போகவைத்திருக்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் அரபிக் கடலின் முதல் அலைகள் நிலம் தொட்டுப் போக, குளியல் மண்டபம் விடிந்து கொண்டிருக்கும் பொழுதில் வெளிச்சம் பூசி நின்றது.
ஆணில்லாத பெண் ராஜ்யம் என்ற நிலைமை துணிச்சலை ஏற்படுத்த, நீராட்டு கட்டத்தின் படிகளில் மேல்துணி துறந்த பெண்டிர் ஒருத்திக்கு ஒருத்தி முதுகு தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தார்கள். விளையாட்டாக முதுகில் இருந்து முன்னால் படர்ந்த கைகள் குவிந்து பற்ற, சிரிப்பும் கூச்சலும் ஒவ்வொரு வினாடியும் மிகுந்து, அடங்கி, மீண்டும் அதிகரித்துக்கொண்டிருந்தன.
“அக்கா, முதுகு தேய்ச்சு விடவா?” என்று காசிரையிடம் உரிமையோடு ஏழெட்டு சிறுமியர் அவள் அமர்ந்த கல்படிக்கு அடுத்த மேற்படியில் இருந்து, முதுகில் தொட்டு மெல்ல அடித்துச் சிரித்தார்கள். இன்னும் கீழிருந்த படியில் அமர்ந்திருந்த தமிழ்ப் பெண்கள் நான்கு பேர் ரம்மியமாகப் பாட ஆரம்பித்திருந்தார்கள். அந்தப் பாட்டின் தாளமும் இசையும் மனம் கவர தண்ணீர்த்துறையே கூடச் சேர்ந்து பாடியது. எண்ணெய் பூசிய தொடைகள் மின்னி தாளம் கொண்டு சிலிர்த்தன –
கும்மியடி பொன்னூர் பூமி முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி.
நம்மை சூழ்ந்து நன்மை பெருகுது
உண்மை இதுவென்று கும்மியடி.
காசிரை எண்ணெய்க் காப்பு கொள்ள நிறைய நேரம் பிடித்தது. சிறுமிகளின் தலையில் எண்ணெய் வைத்து வாழ்த்த நிறையப்பேர் காசிரையைக் கோரினார்கள்.
கொஞ்சம் பெரிய பெண்கள் அவள் கையால் எண்ணெய் வாங்கி நெற்றியிலும் பின் கழுத்திலும் உச்சந்தலையிலும் விரலால் தொட்டுக்கொண்டு ஷராவதி தாயை வணங்கி விரைவில் மணநாள் காண அருளும்படி கண்மூடி பிரார்த்தித்து, நதியில் நீராடி வந்தார்கள்.
இவர்களுக்கும் பிறகு, எப்படி மேகம் போல் அடர்ந்து கருத்த கூந்தலைப் பராமரிப்பது, உதடுகள் வெடிக்காமல் மிருதுவாக காட்சியளிக்க என்ன செய்யணும், இன்னும், பலருக்கும் தேவையான, தொய்வு இல்லாமல் திண்ணென்று பெரியவையாக எப்போதும் திகழ என்ன செய்ய வேண்டும் என்று அழகுக் குறிப்புகளை காசிரையிடம் கேட்டுத் தெளிவு பெற ஒரு கன்னியர் கூட்டம் நின்றது.
காசிரையின் முதுகையும், உருண்ட தோள்களையும் தடவி மெய்மறந்து பாராட்டவும் சில பெண்கள் காத்திருந்தார்கள். அந்த வழுவழுத்த உடல் எப்படிக் கிடைக்கும் என்ற கேள்விக்கு அவள் சொல்கிற ஒரே பதில் – பயத்தம்பருப்பு மாவைத் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்துக் குளி.
ஹொன்னாவர் பெண்கள் வந்தாலே பசுநெய் ஊற்றிப் பிடித்த மாவுருண்டை நடந்துவருவது போல் வாடை தீர்க்கமாக அடிக்க பயத்தம்பருப்பு கவசம் முக்கியக் காரணமானது. கையும் காலும் முடி நீங்கி வழுவழுத்துப் போனதாக காசிரைக்கு நன்றி சொன்னவர்கள் அநேகம்.
ஸீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ் – எழுத்து பிரசுரம் வெளியீடு 2022
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers
 


