வர இருக்கும் நாவல் – தினை அல்லது சஞ்சீவனியில் பொது யுகம் மூன்றாம் நூற்றாண்டு விருந்தோம்பல்

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

யார் வேண்டும் சிறுமியரே உமக்கு”

கிழவியம்மாள் கேட்க, நீங்கள் தான் என்றாள் குயிலி.
“ஆமாம், பசி வயிற்றைக் கிள்ளிப் பாடாகப் படுத்துகிறது” என்று எதுவும் செயற்கை இல்லாமல் பேசி அவள் தோழி ஆமோதித்தாள்.

”மாம்பழச் சாறும், இஞ்சியும் சீனியும் பெய்த நீரில் தேன் கலக்கிய களைப்பு மாற்றும் பானமும் பருகுவீர் முதலில்” என்று அன்போடு அழைத்தாள் முதுபெண். காலலம்பி வீடு புக்கார் இரு கன்னியரும்.

சுடுமண் வெண்குவளை இரண்டில் பழச்சாறும் இன்னுமிரு சிறு கோப்பைகளில் இஞ்சிச் சாறுமாகக் கொடுத்து உபசரித்தாள் கிழவி.

“புட்டு வெந்து கொண்டிருக்கிறது சிறுமியரே பின்கட்டில் கிணற்று நீராடி வந்து பசியாறுங்கள்” என்றாள் அவள்.

அங்ஙனமே பெண்ணிருவரும் நீராடக் கிணற்றடி போக, குளியலறை உண்டா என வானம்பாடி கிழவியம்மாளை வினவினாள்.

“இல்லாமல் என்ன, கிணற்றங்கறையிலிருந்து நீரேற்றும் மண்குழாய் மூலம், குளியலறைக்கு நீர் செலுத்தப்படுகிறது. கொஞ்சம் அதிகம் குளிர்ந்த நீர் என்பதால் கிணற்று நீரின் வெதுவெதுப்பு கருதிச் சொன்னேன் என்றாள் கிழவி.

கிணற்றைச் சுற்றி அண்டை அயலில் ஓங்கி உயர்ந்த மாடங்களில் இருந்து பார்த்தால் இங்கே நீராடும் அழகு எல்லாம் தெரியக் காட்டவேண்டி வரும் எனக் குயிலி நினைத்தது தான் குளியலறை தேடிய அவசியம்.

“நான் முதலில் நீராடி வருகிறேன் நீ கொல்லையில் தோட்டம் கண்டு வா” என்று வானம்பாடியை அனுப்பிக் குளியலறைக் கதவைச் சாத்தி உடை களைந்தாள் குயிலி.

நக்னையாக ரதிதேவி போல் வனப்பான உடல் பூரித்து நிமிர்ந்திருக்க தண்ணீரைக் கடைகாலில் சேந்தியபோது ஓஒ என்று அலறினாள் அவள். வானம்பாடி உடனே ஓடிக் கதவைத் தட்டித் தள்ள அந்தரங்கம் மறைத்தபடி குயிலி மேல் மறைக்க முடியாமல் நின்று கூரையை நோக்கி மறுபடி அலறினாள்.

தரையில் விழுந்தது ஒரு சிறு தேளாகும். குயிலி வானம்பாடியைப் பயத்தோடு இறுக்கித் தழுவிட, இருவரும் ஒரு நிமிடம் வேறேதோ வெளியில் இருந்தார்கள்.

வானம்பாடி நிலை தெரிந்து மற்றவளிடம் ”தேள் இது கொட்டும் நம் நூற்றாண்டியவர் இல்லை அற்பத் தேள் மூன்றாம் நூற்றாண்டினது” என்றபடி செருப்பணிந்த காலால் அத்தேளை அரைத்துக் கூழாக்கினாள். அப்போது அவள் முகத்தில் அலாதியான நிறைவு நிலவியதைக் குயிலியும் கிழவியம்மாளும் காணத் தவறவில்லை.

அடுத்து இரு பெண்களும் கிணற்றடிக்குப் போக, கிழவியம்மாள் நீரிறைத்து ஊற்ற இருவரும் நீராடிப் புத்தோராயினர். கொண்டு வந்த நல்லுடுப்பு அணிந்து தேவதைகள் போல் அமர்ந்து புட்டு உண்டனர் அவர்கள். கூடவே இட்டவியும் உண்டார்கள்.

இது புதிது, வழிப்போக்கர் யாரோ இட்டவி உண்டாக்கி உண்ண வழி சொன்னார். பெயரை மட்டும் இட்ட எலி என்று எலி, பெருச்சாளி வாடை குமட்டுவதாகச் சொன்னதை இட்டு அவி என மாற்றிக் கொண்டோம் என்று விளக்கிய கிழவியம்மாளின் நாற்பத்தேழு நூற்றாண்டுப் பழமை சட்டென்று உணர்வானது.

புதியதாகக் காலப் பயணம் செய்து வந்துபோன யாரோ இட்டலி அறிமுகப்படுத்திப் போயிருக்கிறார்கள். மகாத் தவறு. மூன்றாம் நூற்றாண்டில் பதினாறாம் நூற்றாண்டு உணவை, உடையை அறிமுகப் படுத்தி காலக்கோட்டில் அங்கங்கே சிதைவு உண்டாக்குவது நயத்தகு நாகரிகமற்ற செயல். குயிலி வானம்பாடியோடு மனதில் பேசினாள்.

“நாம் வந்திருக்கிறது நாகரிகமிக்க செயலா”?

சட்டென்று வானம்பாடியை அருகிலிருந்து பார்த்தாள் குயிலி. அவள் புன்சிரிப்போடு தலையசைத்து உணவு கொள்வதைத் தொடர்ந்தாள்.

தரையில் சிறு பூவேலைப்பாடு செய்த கிடுகுத் தட்டுகள் இட்டு மேலே சம்மணம் கொட்டி இருந்து உண்பது, உணவு சுவையாக இருந்தாலும் கால் மடித்து உட்காரக் கடினமாக இருந்தது.

வானம்பாடி எப்படி சமாளிக்கிறாள்? அவள் குயிலியை விட ஐந்து வயது சிறியவள் என்பதால் ஆற்றல் கூடுதலாக இருக்கலாம்.

“இன்னொரு இட்டவி உண். இன்னுமொரு அகப்பை புட்டுத் தின்னு. மாம்பழச் சாறு மாந்து” என்று விருந்தோம்பலின் அடையாளமாகப் பிடவைத் தலைப்பை இடுப்பில் செருகிக் கொண்டு மூதாட்டி விருந்தோம்பினாள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2023 20:32
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.