Jeyamohan's Blog, page 27

September 14, 2025

அலெக்ஸின் இல்லத்தில்…

அலெக்ஸின் மனைவி, மகன், மனைவியின் தங்கை

நண்பர் எழுத்து பிரசுரம் வெ.அலெக்ஸ் 3 செப்டெம்பர் 2017-ல் மறைந்தார். இப்போது எட்டாண்டுகள் ஆகின்றன. அன்று முதல் அலெக்ஸ் குடும்பத்துடன் நானும் நண்பர்களும் உடனிருக்கிறோம். அலெக்ஸின் மகன் எழில் காஸ்டிரோ சமூகப்பணியியல் முதுகலை முடித்து இப்போது டோய்ச் வங்கியில் பெங்களூரில் பணியாற்றுகிறார். மகள் எழில் இனிமை ஆங்கில இலக்கியம் முதுகலை முடித்து சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். இப்போது வரும் அக்டோபர் 1 அன்று அவருக்குத் திருமணம். நான் அக்டோபரில் ஊரில் இருக்கமாட்டேன். ஆகவே அவர்களின் இல்லத்துக் சென்று வாழ்த்தினேன்.

இன்று விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் உலகளாவச் செயல்படுகிறது. தமிழ்விக்கி ஓர் இயக்கமாக ஆகியுள்ளது. முழுமையறிவு வகுப்புகள் ஆண்டுமுழுக்க எல்லா வார இறுதியிலும் நிகழ்கின்றன. பலர் என்னிடம்  நிர்வாகயியல் பற்றி, அமைப்புத்திறன் பற்றி வியந்து ஆலோசனை கேட்பதுண்டு. நான் இவற்றில் எந்த திறனும் அற்றவன், ஒரு சிறிய செயலை ஒருங்கிணைத்துச் செயலாக்க என்னால் இயலாது என்று நான் சொன்னால் நம்ப மாட்டார்கள். ஆம், இச்செயல்களின் மைய விசை நான், என் கனவுகள். ஆனால் நான் செயல்நிபுணன் அல்ல. என் நண்பர்கள் செயலாற்றல் மிக்கவர்கள், மாபெரும் ஒருங்கிணைப்பாளர்கள். அவர்களை நண்பர்களாகக் கொண்டிருக்கிறேன் என்பதே என் தகுதி.

அந்நண்பர்களை ஈட்டிக்கொள்ளும் ஆற்றல் எனக்கிருக்கிறது என்று வேண்டுமென்றால் சொல்லலாம். அவர்களுக்கு எப்போதும் எந்நிலையிலும் நல்ல நண்பனாக இருக்கும் உளநிலை உள்ளது என்று சேர்த்துக்கொள்ளலாம். அந்த நட்புவட்டமே செயலாற்றல் மிக்க அமைப்பாக ஆகியுள்ளது. அலெக்ஸ் நான் அடைந்த என் மதிப்புமிக்க நண்பர்களுள் ஒருவர். சென்ற எட்டாண்டுகளில் அலெக்ஸ் என் பேச்சுக்களில் எப்போதும் வந்துகொண்டே இருப்பவர். அண்மையில் ஒரு நண்பர் சொன்னார். அலெக்ஸை அவர் பார்த்ததில்லை, அலெக்ஸ் மாண்டபின்னர்தான் அவர் அறிமுகமானார். ஆனால் அலெக்ஸ் உயிருடன் இருப்பதுபோலவே அவருடைய மனப்பதிவு. ஏனென்றால் அலெக்ஸ் என் பேச்சில் வந்துகொண்டே இருப்பவர். “நண்பர்களை இறவாமல் வைத்திருக்கும் ஒரு மனநிலை உங்களிடமிருக்கிறது” என்றார். அதன்பொருட்டு நான் நிறைவடைகிறேன்.

அலெக்ஸ் எனக்கு மதுரை புத்தகவிழாவில் அறிமுகமானார். உலகசினிமாக்களின் சிடிக்களை அவர் அங்கே விற்றுக்கொண்டிருந்தார். அவை அனுமதியற்ற நகல்கள் அல்லவா என நான் அவரிடம் கேட்டேன். ‘திருடியாவது நல்லதை தெரிஞ்சுக்கிடுவோம்’ என்றார். அதன்பின் அவர் வெளியிட்ட எம்.சி.ராஜா பற்றிய நூலுக்கும், ஆல்காட் பற்றிய நூலுக்கும் நான் மதிப்புரை எழுதியபோது ‘நீங்க எழுதியதுதான் ஒரே எதிர்வினை…’ என கடிதம் எழுதினார். அவ்வாறு நாங்கள் அறிமுகமானோம். அந்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் பேசிக்கொண்டிருந்தோம். சேர்ந்து பயணம் செய்தோம். சேர்ந்து சிரித்தோம். இரவுகளை பேசிப்பேசி விடியச்செய்தோம்.

இன்று யோசிக்கையில் இரண்டு இயல்புகளை அலெக்ஸிடமிருந்து நான் கற்றுக்கொள்ளவே இல்லை என நினைக்கிறேன். ஒன்று, ஒழுங்கு. நான் அன்றாடச்செயல்களை அரைமறதி நிலையில் செய்பவன். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காதவன். அலெக்ஸ் சொல்லிச் சொல்லிச் சலித்துவிட்டார். என் வீட்டுக்குள் வந்து அவரே ஒவ்வொன்றையும் எடுத்து அடுக்கி வைப்பார். அவர் ஒழுங்கே உருவானவர். இரண்டு, அலெக்ஸ் எந்நிலையிலும் எந்த மனிதரையும் விலக்கக்கூடாது என்னும் கொள்கை கொண்டவர். அவரை சாதிரீதியாக சற்று இழிவுடன் பேசிய ஒருவரை நான் விலக்கினேன். நான் விலக்கியது தவறு என சொல்லி அவரை மீண்டும் இழுத்துவந்தார். “யாரா இருந்தாலும் ஒரு மனுஷன் முக்கியமானவன். அவனை நாம விட்டுடக்கூடாது” என்றார்.

இன்று அலெக்ஸ் இல்லத்தில் அவருடைய குழந்தைகளைச் சந்தித்தபோது நான் பல ஆண்டுகளுக்கு முன்பு அலெக்ஸிடம் கேட்டதும், அவர் சொன்னதும் நினைவுக்கு வந்தது. ‘என்ன செஞ்சா நீங்க என்னை விட்டிருவீங்க அலெக்ஸ்?’ என்று நான் கேட்டேன். ‘அதுக்கு சான்ஸே இல்லை’ என்று சிரித்தார். அவர் என்னை விட்டு நீங்கவே இல்லை.

அலெக்ஸின் மகன் அலெக்ஸிடம் இருந்த மெல்லிய தயக்கம்கூட இல்லாமல் ஒரு நவீன இளைஞனாக, வாசிப்பவனாக, தெளிவாகப் பேசத்தெரிந்தவனாக, உலகைப்புரிந்துகொண்டவனாக இருப்பதை பார்த்தேன். அலெக்ஸ் இருந்தால்  அவருக்கு எழும் அந்த உணர்வு, ஒரு தந்தையின் பெருமிதம் என்னில் எழுந்தது. அலெக்ஸின் மகள் அப்போது சிறிய பெண், அழகி. இன்று மிக அழகி.அலெக்ஸ் ஒரு தந்தையென மட்டுமல்ல, இலக்கியவாசகனாகவும் உணர்ந்தே அவளுக்கு பெயரிட்டிருக்கிறார். அவளும் ஆங்கில இலக்கியம் பயின்று, நல்ல ஆசிரியருக்குரிய அகத்தெளிவுடன், நல்ல மொழியுடன் இருப்பதைக் கண்டேன். மறைந்தாலும் பிள்ளைகளை அலெக்ஸ் அவர் விரும்பியவண்ணமே உருவாக்கியிருக்கிறார் என எண்ணிக்கொண்டேன்.

இந்நாள் இனியது. இப்படிச் சில தருணங்களில் வாழ்ந்தோம் என உணரும் பெருமிதம் நம்மை நிறைக்கிறது.மகள்  எழில் இனிமைக்கு அனைத்து நலன்களும் அமைக.

அலெக்ஸ் -நினைவில்….

அலெக்ஸ் கடிதங்கள்

அலெக்ஸ் கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2025 11:35

கண்மதியன்

கவிஞர். இதழாளர். சென்னைத் துறைமுகத்தில் பணியாற்றினார். ’சென்னைத் துறைமுகம்’ செய்தி ஏட்டின் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

கண்மதியன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2025 11:32

அஞ்சலி, டோனாவன்- லோகமாதேவி.

டொனவன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்,தென்னாப்பிரிக்காவின் கேப் பகுதி பல்லுயிரிய மையத்தில், அழிவின் விளிம்பில் இருக்கும் தாவரங்களைப் பாதுகாக்கும் பணியில் தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டவர் டோன் என்கிற டோனோவன். (Dr. Donovan Kirkwood)

உலகின்   அணுக முடியாத, மிகக்  கடினமான சூழல்களில் வாழும் தாவரங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றை கைகளால் மகரந்தச் சேர்க்கை செய்யவும்,அவற்றை அழிவிலிருந்து பாதுகாக்கவும்,  கடுமையான மற்றும் ஆபத்தான பணிகளைக் தாவரவியலாளர்கள்  மேற்கொள்வது Extreme Botany எனப்படுகிறது.

அழிவின் விளிம்பில் உள்ள தென்னாப்பிரிக்காவின் அரிய தாவர இனங்களைக் மிக ஆபத்தான அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று கண்டறிந்து, சேகரித்து, ex situ conservation எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் அவற்றை வளர்த்து மீண்டும் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களுக்கு மாற்றுவதை பல்லாண்டுகளாக டோன் செய்துவந்தார்.

தென்னாப்பிரிக்காவின் பழமையான பல்கலைக்கழகம் தாவரவியல் பூங்காவின் ஸ்டெல்லென்போஷ் பூங்காவின் பொறுப்பாளராக 2018-லிருந்து டோன் பணிபுரிந்து வந்தார். இந்தப் பூங்கா தென்னாப்பிரிக்காவின் இயல்  தாவரங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு தாவரங்களின் மிகப்பெரிய தொகுப்பைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக போன்ஸாய் சேகரிப்பு இங்கு மிகப் பிரபலம். ஒரு திறந்தவெளி ஆய்வகமாகவும் செயல்படுகிறது இந்த பூங்கா.

டோன் தேடிச்சென்ற தாவரம்

தென்னாப்பிரிக்காவின் ஓரிடத்தாவரமான Marasmodes undulata என்னும் சூரியகாந்திக் குடும்பம் தாவரமொன்று 1946-க்கு பிறகு 34 ஆண்டுகளாக எங்குமே தென்படவில்லை எனவே அது அழிந்துவிட்ட இனமாக கருதப்பட்டிருந்தது. 1980-ல் 300 தாவரங்கள் மீண்டும் தென்னாப்பிரிக்காவின் மலைக்காடுகளில் கண்டுபிடிக்கபட்டு பின்னர் கவனமாகப் பாதுகாக்கப்பட்டன. எனினும் 2005-ல் அது வெறும் 20 மட்டும் இருந்தது செய்தியான போதுதான் நான் அதைக் குறித்து அறிந்துகொண்டேன்.

2017-ல் 17 ஆக இருந்தன அவை பிறகு அபாயகரமாக 2020ல் உலகில் மூன்றே மூன்று என்னும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஏறக்குறைய அழிந்துவிட்ட நிலையில்தான் டோன் அந்த பூங்காவில் பணியேற்றுக்கொண்டார். உடனடியாக அதைக் காப்பாற்றும் முயற்சியில் டோன் ஈடுபட்டார். மூன்றுதான் இருந்தன என்பதால் இயற்கை வாழிடங்களிலிருந்து அவற்றை எடுப்பது அவற்றின் அழிவுக்கு கரணமாகலாம் எனவே லண்டன் கியூ விதை வங்கியிலிருந்த அதன் 90 விதைகளை தருவித்து அதை பல சவால்களுக்கிடையில் வெற்றிகரமாக நூற்றுக்கணக்கில் வளர்த்து, மீண்டும் அவற்றின் இயற்கையான வாழிடத்தில் அறிமுகப்படுத்தி டோன் அதைக் காப்பாற்றினார். இப்படி ஏராளமான தாவரங்களை டோன் அழிவிலிருந்து பாதுகாத்திருக்கிறார்.

இந்த Species recovery என்பது மிக மிகச் சவாலான ஒன்று. ஆனால் டோன் 1.7 ஹெ பரப்பளவு இருக்கும் இந்தச் சிறிய பூங்காவில் தென்னாப்பிரிக்காவின் அழிந்துகொண்டிருக்கிற, அபாயத்தின் விளிம்பிலிருக்கிற சிவப்புப்பட்டியலிடப்பட்ட தாவரங்களில் 40 சதவீதத்தை காப்பாற்றி அந்தப் பூங்காவில் வளர்த்திருதார். கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஒரு சிறு குழுவினருடன் தென்னாப்பிரிக்காவின் மிக ஆபத்தான, செங்குத்தான, கரடுமுரடான ஜோங்கெர்ஷோக் மலைத்தொடரில் தென்னாப்ரிக்கவின் கேப் பகுதிக்கு சொந்தமான, உலகில் ஐம்பதுக்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்த Penaea formosa என்னும் தாவரத்தை தேடி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 51 வயதான டோன், கால் இடறி மலையிலிருந்து விழுந்து இறந்தார்.

இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் வரைக்கும் அவர் உடல் கிடைத்ததாக தகவல்களில்லை. எப்பேர்ப்பட்ட இழப்பு .  He slipped, fell, and did not return. இப்படி வாசித்த போது பெரும் அதிர்ச்சியடைந்தேன். அரிய தாவரங்களின் புகைப்படங்களையும். அவரது களப்பணியையும், அரிய தகவல்களையும் டோன் பகிரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரைப் பின்தொடர்ந்த 1500  பேர்களில் நானும் ஒருத்தி.

பூபதி

டோன் போல ஆபத்துக்களைச் சந்தித்து துணிச்சலாக அழிந்துகொண்டிருக்கும் தாவரங்களை அணுகமுடியாத அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று தேடிக்கண்டடைந்து பாதுகாப்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றனர். அவர்களை அறிந்தவர்கள் அதைவிடக்குறைவு. இவரைப்போலவே 2014-ல் மிக அரிய களப்பணி ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த தென்னிந்திய உயிரியலாளர் ஒருவரும் 51 வயதில் மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.டோன் போல ஆபத்துக்களைச் சந்தித்து துணிச்சலாக அழிந்துகொண்டிருக்கும் தாவரங்களை அணுகமுடியாத அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று தேடிக்கண்டடைந்து பாதுகாப்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றனர். அவர்களை அறிந்தவர்கள் அதைவிடக்குறைவு.

இவரைப்போலவே 2014-ல் மிக அரிய களப்பணி ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த தென்னிந்திய உயிரியலாளர் ஒருவரும் 51 வயதில் மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.டோனும் பூபதியும் எதை மிக முக்கியமானது எனக் கருதினார்களோ அதைச் செய்து கொண்டிருக்கையிலேயே உயிரிழந்தார்கள். இப்படித் தீவிரமான அர்ப்பணிப்புடன் உயிரினங்களை நேசிப்பவர்கள் உயிருடன் இருக்கும் போது உலகம் அவர்களை அறிந்து கொள்வதே இல்லை. டோனோவனின் இறப்பை செய்திகளில் அறிந்துகொண்ட அன்று நான் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருக்கும் தாவரவியல் துறை மாணவர்களிடம் அவரைப்பற்றி கேட்ட்டேன். ஒருவருக்கும் அவரைத் தெரியவில்லை. அவர் இருந்ததும் இறந்ததும் யாருக்குமே தெரியவில்லை.

டோன் தான் நேசித்த தென்னாப்பிரிக்க மண்ணில், அழிந்துகொண்டிருந்த ஒரு தாவரத்திற்கான தேடலில் மறைந்திருக்கிறார்.  தென்னாப்பிரிக்காவின் தாவரச் செல்வத்தின் எதிர்காலம், ஒவ்வொரு சிறு விதையாக, ஒவ்வொரு அங்குல மண்ணாக, இப்படித்தான்  பாதுகாக்கப்படவேண்டும் என அவர் திடமாக நம்பினார்

 டோனோவன் இந்தப் பூங்காவின் பொறுப்பேற்றுக்கொண்ட போது   இப்படிச் சொன்னார். 

“Most of all, I just want to get people to fall hopelessly in love with plants and nature.”

அவர் வாழ்நாளெல்லாம் செய்து கொண்டிருந்ததைத்தான் செய்தியாகச் சொல்லிச்சென்றிருக்கிறார்.

டோனோவனுக்கும் பூபதிக்கும் எனது அஞ்சலிகள்

 அன்புடன்

லோகமாதேவி

லோகமாதேவி- தமிழ் விக்கி அதழ் – லோகமாதேவி இணையப்பக்கம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2025 11:31

ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்.

ஆசிரியருக்கு,

ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. பாண்டிச்சேரியை அவரது எழுத்துக்களில் வாசித்தும் தமிழ் தேசியம் தமிழர் தத்துவம் குறித்தும் உரையாட சென்று அவரது பதில்களால் சற்று குழம்பிப் போனேன். இன்றும் தமிழர் ஆன்மீகம் தத்துவம் குறித்து நான் வாசிக்க தோழர் தியாகு மற்றும் ரமேஷ் பி்ரேதனின் புத்தகங்களை வாசிக்கிறேன். வள்ளலார், மா.அரங்கநாதன் தோழர் தியாகு ரமேஷ் பிரதேன் என ஒரு கோடு இழுக்க முடியுமா என தெரியவில்லை. ஆனால் இந்த வரிசையில் வாசிப்பை நிகழ்த்த எண்ணியிருக்கிறேன். அது அதற்கான ஒரு திறப்பாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன்.

காளி பிரசாத், சென்னை

அன்புள்ள ஜெ

ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். அவருடைய முதல் படைப்பாக நான் வாசித்தது நீங்கள் நடத்திய சொல்புதிது அச்சிதழில் வெளிவந்த முன்பொரு காலத்தில் நூற்றெட்டு கிளிகள் இருந்தன என்னும் கதை. வள்ளலாரின் வாழ்க்கையை ஒட்டி சென்ற இன்னொரு கதையையும் வாசித்தேன். அதன்பின்னர் அவருடைய சொல் என்றொரு சொல் நாவலையும் வாசித்துள்ளேன். உழைப்பு கோரும் படைப்புகள் அவை. அவர் வாழும் ஒரு உக்கிரமான, சற்றே திரிபடைந்த உலகத்தைச் சித்தரிக்கும் அப்படைப்புகள் வழியாக துலங்கிவரும் வாழ்க்கைப்பார்வை எனக்கு ஏற்புடையதாக இல்லை என்றாலும் நம் பண்பாட்டின் ஒரு பக்கம் என்னும் வகையில் என்னால் ஒருபோதும் புறக்கணிக்கமுடியாததாகவும் இருந்து வந்துள்ளது. அவருடைய உடல்நிலை சற்று சீரடைந்து அவர் விழாவுக்கு வருவார் என்னும் செய்தியும் மகிழ்ச்சி அளிக்கிறது. என் வாழ்த்துக்கள்.

ஶ்ரீனிவாஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2025 11:31

Vairamuthu and the caste issue

 

The discussion about Vairamuthu and Rama is important. The ones who further spread that slander are Brahmins. They claim that they are the only people who are entitled to talk about Rama all the time.

Vairamuthu and the caste issue

 

புத்தருக்கான நிலம் ஓர் அழகான சிறிய உரை. புத்தர் இமைய மலைகளில் இருந்து இறங்கி மலைகளுக்கே திரும்பிய ஓர் அலை என்னும் வரி என்னை திகைக்கச் செய்தது. நூற்றுக்கணக்கான உரைகளை கேட்கிறோம், இருந்தும் உங்களிடம் சொல்ல முற்றிலும் புதிதாக ஏதோ இருந்துகொண்டேதான் உள்ளது.

புத்தர் பற்றி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2025 11:30

September 13, 2025

பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?

பொழுதுபோக்கு நூல்களை உயர் இலக்கியம் என்று நினைத்த ஒரு காலகட்டம் 1990 வரை தமிழ்ச்சூழலில் இருந்தது. அன்று இலக்கியம் என்பதை முன்வைக்கும்பொருட்டு இலக்கிய முன்னோடிகள் பொழுதுபோக்கு எழுத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்தனர். ஆனால் இன்று வாசிப்பு என்பதே அருகிவருகிறது. பிற கேளிக்கைகள் வாசிப்பை அழிக்கின்றன. ஒரு பயிற்சியாக நாம் வாசிப்பை நிகழ்த்திக்கொண்டே இருந்தாகவேண்டியுள்ளது. இன்றைக்கு பொழுதுபோக்கு எழுத்து அப்பயிற்சியை நிகழ்த்துவதற்கு அவசியமான ஒன்றாக உள்ளது.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2025 11:36

எழுத்தாளர்களின் வாழ்க்கை.

அன்புள்ள ஜெ

சுரா நினைவின் நதியில் நூலை வாசித்தேன். எனக்கு அந்த நூல் மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் ஒரு சிறு வாட்ஸப் குரூப்பில் அந்நூலைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.  ஒருவர் எழுத்தாளர்களின் வாழ்க்கையைப் பற்றி ஏன் எழுதவேண்டும் என்றார். உங்களுக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையேயான உறவும், நட்பும் உங்கள் தனிப்பட்ட விஷயங்கள். அவற்றை வாசகர் ஏன் வாசிக்கவேண்டும்? இலக்கியவாதிகளின் படைப்புகளை வாசிக்கலாம், ஏன் அவர்களின் வாழ்க்கையை அறிந்துகொள்ள வேண்டும்? ஏன் அவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எழுதவேண்டும்? அப்படி பல கேள்விகளைக் கேட்டார்.  அதற்கு பல பதில்கள் வந்தன. 

நான் சொன்னது இதுதான். சுரா நினைவின் நதியில் புத்தகம் படிக்க மிகச்சுவாரசியமாக உள்ளது. சுந்தர ராமசாமி என்று ஒருவர் உண்மையில் வாழவில்லை, இது கற்பனை என்று எடுத்துக்கொண்டால்கூட இது ஒரு நல்ல நாவலாக வாசிக்கலாம். இதில் பல நுணுக்கமான வாழ்க்கைச் சித்திரங்களும், உணர்ச்சிகரமான தருணங்களும் உள்ளன. விவாதங்களில் ஆழமான கருத்துக்கள் உள்ளன. ஆகவே இந்நூல் முக்கியமானது. உங்கள் கருத்து என்ன?

ஜே.ஆர்.ராஜசேகர்.

சு.ரா. நினைவின் நதியில் வாங்க

அன்புள்ள ராஜசேகர்,

உலகம் முழுக்க எழுத்தாளர்களின் வாழ்க்கையைப் பற்றிய நினைவுச்சித்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. உலகப்புகழ்பெற்ற பல வாழ்க்கை வரலாறுகள் உள்ளன. டாக்டர் ஜான்ஸனைப் பற்றி பாஸ்வெல் எழுதிய வாழ்க்கைவரலாறு ஒரு முன்னோடியான படைப்பு என்று அறிந்திருப்பீர்கள். மேலைநாட்டின் எல்லா கலை, இலக்கிய மேதைகளைப் பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. Ludwig Wittgenstein: The Duty of Genius ஒரு பெரிய நாவலைவிட என்னை கவர்ந்த படைப்பு. அலக்ஸாண்டர் ஹம்போல்ட் பற்றிய The Invention of Nature நான் கடைசியாக வாசித்த ஆக்கம்.

தமிழில் உ.வே.சாமிநாதையர் தன் ஆசிரியர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்றி எழுதிய வாழ்க்கை வரலாற்றுநூல்தான் தலைசிறந்தது. அதற்கிணையான இன்னொரு வாழ்க்கைவரலாறு அதன்பின்னரும் எழுதப்படவில்லை. இங்கே வாழ்க்கைவரலாறுகள் எழுதுவது கடினம். காரணம் நமக்கிருக்கும் நீத்தார் வழிபாட்டு மனநிலை. அகவே புகழ்மொழிகளையே எழுதவேண்டியிருக்கும். அந்தப் புகழ்மொழிகளும் ஒரே வகையானவையாகவே இருக்கும். ஆகவே நாம் வாழ்க்கை வரலாறுகளையே எழுதவில்லை.

தமிழில் பாரதிக்குக் கூட ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு இன்னமும் இல்லை. வ.ரா, செல்லம்மாள் பாரதி, கனலிங்கம், யதுகிரி அம்மாள் போன்றவர்களின் நினைவுக்குறிப்புகளே உள்ளன. புதுமைப்பித்தன் பற்றி ரகுநாதன் எழுதியது ஒரு நினைவுக்குறிப்பு மட்டுமே. ஒரு நல்ல வரலாறு இனிமேல்தான் எழுதப்படவேண்டும். பிரமிள், அசோகமித்திரன் போன்றவர்களைப் பற்றி பொருட்படுத்தும்படியான நினைவுப்பதிவுகள்கூட ஒன்றிரண்டுதான். புகழ்மொழிகள் மட்டுமே இருந்தன என்றாலும் கல்கி பற்றி சுந்தா எழுதிய வாழ்க்கை வரலாறு குறிப்பிடத்தக்க ஒன்றுதான். அப்படி ஒரு வாழ்க்கை வரலாறு எந்த நவீன இலக்கியவாதிக்கும் அமையவில்லை.

எழுத்தாளர்களின் வாழ்க்கையை ஏன் எழுதவேண்டும்? ஒன்று, அவர்களின் வாழ்க்கை என்பது ஒரு காலகட்டத்தின் சிந்தனைச்சூழலின் சித்தரிப்புதான். ஒரு காலகட்டத்தின் சிந்தனைச் சூழலின் மையமாகத் திகழும் ஒரு பெரும்படைப்பாளியின் வாழ்க்கையை எழுதுவது அக்காலகட்டச் சிந்தனையையே எழுதுவதுதான். சிந்தனைகளை மட்டும் அட்டவணையிட்டு தொகுத்து எழுதிவிடமுடியும்தான். ஆனால் அது கல்வித்துறை பணி, ஆய்வாளரின் உலகம். அடுத்தகட்டச் சிந்தனையாளனுக்கு அவை உதவாது. அவனுக்குச் சிந்தனைகள் முளைத்தெழும் சூழல், அதிலுள்ள தயக்கங்கள், சிக்கல்கள், இடறல்கள் தேவை. உணர்வுநிலைகள் தேவை. விவாதக்களம் தேவை. அவை உருவான உள்ளங்களின் சித்திரம் தேவை. அவற்றை அளிப்பவை வாழ்க்கைவரலாறுகள். இன்னும் ஒருபடி மேலாக நாவல்கள்.

நான் ஜெர்மானியச் சிந்தனைச்சூழல் உருவாகி வந்த வரலாற்றை தகவல்களாக பல நூல்களில் இப்போது நான் ஹம்போல்ட்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தேன். ஜெர்மானிய இயற்கைவாதம் உருவாகி வந்த சூழலை அறிந்தேன். ஆனால் தாமஸ் மன்னின் மேஜிக் மௌண்டைன் நாவலில் ஜனநாயகவாதச் சிந்தனைகள் உருவாகி வந்த சூழலில் நான் சென்று வாழ்ந்தேன். அந்த வேறுபாடு முக்கியமானது. ஒருவேளை கதைபடிக்கும் சாமானியர்களுக்கு அது உதவாமலிருக்கலாம். ஆனால் தீவிரவாசகர்கள், சிந்தனையில் ஈடுபாடுள்ளவர்களுக்கு மிகமிக அவசியம்

சுந்தர ராமசாமி பற்றிய என் நூல் அந்தக் காலகட்டத்தின் எண்ண ஓட்டத்தை அவருடைய தனிப்பட்ட சிந்தனைகள் வழியாகச் சித்தரிக்கிறது. மார்க்ஸியம், இருத்தலியல், ஜே. கிருஷ்ணமூர்த்தி, காந்தி என அவருடைய பயணம் அக்காலகட்டத்து அறிவியக்கத்தின் திசைவழியும்கூட. நான் கோவை ஞானி பற்றி எழுதிய ஞானி என்னும் நூலிலும் சரி, அந்த ஆளுமை அக்கால அறிவியக்கத்தின் ஒட்டுமொத்தச் சித்திரத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. இந்த தேவைக்காகவே முதன்மையாக எழுத்தாளர்களின் வாழ்க்கை எழுதப்படுகிறது.

இலக்கியவாசகனுக்கு இலக்கியம் என்பது ‘கதை’ அல்ல. ‘கருத்து’ அல்ல. அது அவனுக்கு வாழ்க்கைதான். வாழ்க்கைக்கு நிகரான இன்னொரு வாழ்க்கை. வாழ்க்கையை விடச் செறிவான வாழ்க்கை. அவ்வாழ்க்கையை நிகழ்த்துபவன் எழுத்தாளன். அவன் அகமே அவ்வாழ்க்கை நிகழும் களம். ஆகவே அந்த எழுத்தாளனைப் பற்றி அறிய எழுத்தாளன் ஆர்வம் கொள்கிறான். நல்ல எழுத்தாளனின் எழுத்து அவனுடைய கற்பனையில் இருந்து உருவாவது, ஒருபோதும் அவன் வாழ்க்கையின் நேரடிப் பிரதிபலிப்பு அல்ல. சொல்லப்போனால் தன் எழுத்தை தன் வாழ்க்கையின் நேரடிப்பதிவாக அல்லாமலாக்குவதே புனைவு என்பதன் முதன்மைச் சவால்.

தன்னை திட்டமிட்டு தன் புனைவிலிருந்து அகற்றிக்கொள்கிறான் எழுத்தாளன். புனைவின் சிக்கலான பின்னல்களுக்குள் தன்னை அவன் மறைத்துக்கொள்கிறான். ஆனாலும் அவனேதான் அப்புனைவில் திகழ்பவன். ஒரு புனைவிலுள்ள எல்லா கதைமாந்தரும் அப்புனைவெழுத்தாளனின் ஆளுமைக்கூறு கொண்டவர்களே. ஜானகிராமனின் பெண்கள் அனைவரிலும் ஜானகிராமனே வெளிப்படுவதை வாசகன் உணரமுடியும்.

ஆகவே எழுத்தாளனின் வாழ்க்கை வாசகனுக்கு முக்கியமாகிறது. கதை படிக்க அல்ல. கருத்தை தெரிவிக்க அல்ல. புனைவெனும் வாழ்க்கையின் ஆழத்தை அறிய. அதன் மெய்மையை உணர. நல்ல இலக்கியவாசகன் அப்புனைவெழுத்தாளனுடன் மானசீகமான உரையாடலில் இருந்துகொண்டே இருக்கிறான். நான் டால்ஸ்டாயுடன் இக்கணம் வரை உரையாடிக்கொண்டே இருக்கிறேன். ஆகவே அவருடைய எல்லா வாழ்க்கை வரலாறுகளையும் தேடித்தேடிப் படிக்கிறேன். எனக்கு அவர் சென்றநூற்றாண்டு ஆளுமை அல்ல. வெறும் கதை எழுதியவர் அல்ல. என்னுடன் வாழ்பவர். இடைவிடாமல் பேசிக்கொண்டிருப்பவர்.

எழுத்தாளர்களின் வாழ்க்கை அதன்பொருட்டே எழுதப்படுகிறது. நினைவுகள் பதிவுசெய்யப்படுகின்றன. அந்நினைவுகள் எந்த அளவுக்கு நுணுக்கமாகின்றனவோ அந்த அளவுக்குச் சிறிய தகவல்கள் கொண்டவையாக இருக்கும். அந்த எழுத்தாளனின் அகத்தையும் புறத்தையும் அவன் சூழலையும் வாசகன் நேரில் சென்று வாழ்ந்து அறிவதுபோலக் காட்டக்கூடியவையாக இருக்கும். வாழ்க்கை வரலாறுகள் அந்த நினைவுப்பதிவுகளை ஒட்டியே விரித்தெழுதப்படுகின்றன.

ஜெ

 

சுரா.நினைவின் நதியில்- ஒருபார்வை ஓர் ஒளிர்விண்மீன் சு.ரா – கடிதம் நினைவுகளால் அள்ளப்படுவது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2025 11:35

இவான் கார்த்திக்

இவான் கார்த்திக்கின் முதல் படைப்பான கடுவா சிறுகதை 2020-ல் பதாகை மின்னிதழில் வெளியானது. இவருடைய பிற சிறுகதைகள் சொல்வனம், வனம் போன்ற மின்னிதழ்களில் வெளியாகியுள்ளன. முதல் நாவல் பவதுக்கம் 2022-ல் வெளியானது.

இவான் கார்த்திக்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2025 11:33

மெய்ஞானமும் இன்றைய ஞானமும்

அன்புள்ள ஜெ,

என் வாழ்க்கையின் மொத்தப்பார்வையையும் மாற்றியமைத்தது நீங்கள் ஆற்றிய கீதை உரை. அதை இப்போது நூலாகவும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். என்னை மீட்டமைத்த புத்தகம் அது.

என் வாழ்க்கையில் பல சிக்கல்கள். தொழில்வீழ்ச்சி. அதையொட்டி குடும்பச்சிக்கல்கள். மனம் சோர்ந்து எதிலும் பிடிமானமில்லாமல் இருந்தேன். எனக்கு மரபான மதம், பக்தி எதுவுமே ஒத்து வரவில்லை. அவையெல்லாமே வெறும் சடங்குகளாகப் பட்டன. என் தர்க்கபுத்தியை அவை சீரமைக்கவில்லை. என் வாழ்க்கைக்கான பொறுப்பை ஏதோ ஒரு கண்காணா சக்தியிடம் ஒப்படைத்துவிட்டுச் சும்மா இருப்பதும் சரியாகப்படவில்லை.

அப்போதுதான் கீதையுரையைக் கேட்க நேர்ந்தது. எங்கே என் கடமை இருக்கிறது, அதன் எல்லை என்ன, எங்கே நான் பிரபஞ்ச சக்தியிடம் என்னை அளிப்பது என்ற கோடு அந்த உரையிலேதான் தெளிவடைந்தது. என்னை நம்பவேண்டும், ஆனால் என்னை மட்டுமே நம்பி அகங்காரம் கொள்ளவும் கூடாது. நீங்கள் ஓரிடத்திலே சொல்வதுபோல வாளை இறுகப்பிடிக்கவேண்டும், அது கையை விட்டு நழுவிவிடக்கூடாது, ஆனால் மிக இறுக்கமாகவும் பிடிக்கக்கூடாது, அடி கையிலேயே விழும்.

அந்த ஞானம் என்னை மீட்டது. என் வேலையை முழுவேகத்துடன் செய்ய ஆரம்பித்தேன். அதிலே சலிப்பு இல்லாமல், சோர்வு இல்லாமல், செய்யவேண்டியதைச் செய்தேயாகவேண்டும் என்னும் பிடிவாதத்துடன் செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சரியாகிவிட்டது. இன்றைக்கு மீண்டு வந்துவிட்டேன். ஆனால் இன்று எல்லாம் என் சாதனை என்ற திமிர் இல்லாமல் இருக்கிறேன்.

இங்கே வாழ்வதற்கு நமக்கு லௌகீகம் தேவை. உலகவெற்றி தேவை. ஆனால் அது மட்டுமே வாழ்க்கை அல்ல. அதற்கப்பால் நாம் யார் என்பதும் நமக்கு முக்கியம். இங்குள்ள மிகப்பெரிய ஒரு பிரவாஹத்திலே நாம் எங்கே உள்ளோம் என்ற ஒரு புரிதலும் முக்கியம்.

நீங்கள் நாவலாசிரியர். நிறைய எழுதுகிறீர்கள். ஆனால் இந்த ஆன்மிக நூல்கள் நீங்கள் அளிக்கும் மிகப்பெரிய கொடை. இதை எத்தனைபேர் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று உண்மையில் தெரியவில்லை. பலர் இவற்றைப் படிப்பதே இல்லை. நீங்கள் எழுத்தாளர் என்ற நிலையில் நின்று இவற்றை எழுதுவதனால் உங்களை எழுத்தாளராக மட்டுமே பார்க்கிறார்கள். இவற்றை நீங்கள் ஒரு காவியை கட்டிக்கொண்டு, தாடி வளர்த்துக்கொண்டு சொல்லியிருந்தால் மாபெரும் மெய்ஞானமாகக் கொண்டாடியிருப்பார்கள்.

நம் ஆன்மிக குருக்கள் எல்லாம் மகத்தானவர்கள்தான். ஆனால் அவர்களுக்கெல்லாம் பல எல்லைகள் உள்ளன. அவர்களால் நம் அன்றாடவாழ்க்கையை அமைத்துள்ள அறிவியல் மற்றும் சிந்தனைகளை எதிர்கொள்ள முடியவில்லை. அவர்கள் சொல்வது வேறொரு உலகிலுள்ளது. நீங்கள் அறிவியலும் நவீனச்சிந்தனையும் கற்ற ஒருவனின் தர்க்கத்துக்கு உகந்த் முறையின் நம்முடைய தொன்மையான மெய்ஞானத்தைச் சொல்கிறீர்கள்.

உங்களுக்கு என் வணக்கம்.

ஆர். ராமநாதன்

அன்புள்ள ராமநாதன்,

உண்மையில் தாடி– காவி எல்லாம் உண்டு. எனக்கல்ல, என் ஆசிரியருக்கு. நான் அவர் குரல்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2025 11:31

ரவி மோகனின் பிரோ கோட். ஒரு கடிதம்

ரவி மோகன் நடிக்கும் ஒரு படத்தின் டீசர் காணொளியை அண்மையில் பார்த்தேன். என் வாழ்க்கையின் சித்திரம் போலவே இருந்தது. திருமணம் என நான் ஒரு டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் சிக்கிக்கொண்டேன். நான் ஒரு மனிதன். 29 வயது வரை சுதந்திரமாக வாழ்ந்தவன். எனக்கான சிந்தனை, உணர்வு எல்லாம் உண்டு என்றே என்னுடைய மனைவியால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ரவி மோகனின் பிரோ கோட். ஒரு கடிதம்

The speech on the Vairamuthu debate is intriguing and inspiring. We are baiting a person if we find him against our faith. However, we do not perceive anything negative when a person shares our faith, even if they trivialize our books and philosophy.

Vairamuthu and trivializing

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2025 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.