எழுத்தாளர்களின் வாழ்க்கை.
சுரா நினைவின் நதியில் நூலை வாசித்தேன். எனக்கு அந்த நூல் மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் ஒரு சிறு வாட்ஸப் குரூப்பில் அந்நூலைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஒருவர் எழுத்தாளர்களின் வாழ்க்கையைப் பற்றி ஏன் எழுதவேண்டும் என்றார். உங்களுக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையேயான உறவும், நட்பும் உங்கள் தனிப்பட்ட விஷயங்கள். அவற்றை வாசகர் ஏன் வாசிக்கவேண்டும்? இலக்கியவாதிகளின் படைப்புகளை வாசிக்கலாம், ஏன் அவர்களின் வாழ்க்கையை அறிந்துகொள்ள வேண்டும்? ஏன் அவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எழுதவேண்டும்? அப்படி பல கேள்விகளைக் கேட்டார். அதற்கு பல பதில்கள் வந்தன.
நான் சொன்னது இதுதான். சுரா நினைவின் நதியில் புத்தகம் படிக்க மிகச்சுவாரசியமாக உள்ளது. சுந்தர ராமசாமி என்று ஒருவர் உண்மையில் வாழவில்லை, இது கற்பனை என்று எடுத்துக்கொண்டால்கூட இது ஒரு நல்ல நாவலாக வாசிக்கலாம். இதில் பல நுணுக்கமான வாழ்க்கைச் சித்திரங்களும், உணர்ச்சிகரமான தருணங்களும் உள்ளன. விவாதங்களில் ஆழமான கருத்துக்கள் உள்ளன. ஆகவே இந்நூல் முக்கியமானது. உங்கள் கருத்து என்ன?
ஜே.ஆர்.ராஜசேகர்.
சு.ரா. நினைவின் நதியில் வாங்கஅன்புள்ள ராஜசேகர்,
உலகம் முழுக்க எழுத்தாளர்களின் வாழ்க்கையைப் பற்றிய நினைவுச்சித்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. உலகப்புகழ்பெற்ற பல வாழ்க்கை வரலாறுகள் உள்ளன. டாக்டர் ஜான்ஸனைப் பற்றி பாஸ்வெல் எழுதிய வாழ்க்கைவரலாறு ஒரு முன்னோடியான படைப்பு என்று அறிந்திருப்பீர்கள். மேலைநாட்டின் எல்லா கலை, இலக்கிய மேதைகளைப் பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. Ludwig Wittgenstein: The Duty of Genius ஒரு பெரிய நாவலைவிட என்னை கவர்ந்த படைப்பு. அலக்ஸாண்டர் ஹம்போல்ட் பற்றிய The Invention of Nature நான் கடைசியாக வாசித்த ஆக்கம்.
தமிழில் உ.வே.சாமிநாதையர் தன் ஆசிரியர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்றி எழுதிய வாழ்க்கை வரலாற்றுநூல்தான் தலைசிறந்தது. அதற்கிணையான இன்னொரு வாழ்க்கைவரலாறு அதன்பின்னரும் எழுதப்படவில்லை. இங்கே வாழ்க்கைவரலாறுகள் எழுதுவது கடினம். காரணம் நமக்கிருக்கும் நீத்தார் வழிபாட்டு மனநிலை. அகவே புகழ்மொழிகளையே எழுதவேண்டியிருக்கும். அந்தப் புகழ்மொழிகளும் ஒரே வகையானவையாகவே இருக்கும். ஆகவே நாம் வாழ்க்கை வரலாறுகளையே எழுதவில்லை.
தமிழில் பாரதிக்குக் கூட ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு இன்னமும் இல்லை. வ.ரா, செல்லம்மாள் பாரதி, கனலிங்கம், யதுகிரி அம்மாள் போன்றவர்களின் நினைவுக்குறிப்புகளே உள்ளன. புதுமைப்பித்தன் பற்றி ரகுநாதன் எழுதியது ஒரு நினைவுக்குறிப்பு மட்டுமே. ஒரு நல்ல வரலாறு இனிமேல்தான் எழுதப்படவேண்டும். பிரமிள், அசோகமித்திரன் போன்றவர்களைப் பற்றி பொருட்படுத்தும்படியான நினைவுப்பதிவுகள்கூட ஒன்றிரண்டுதான். புகழ்மொழிகள் மட்டுமே இருந்தன என்றாலும் கல்கி பற்றி சுந்தா எழுதிய வாழ்க்கை வரலாறு குறிப்பிடத்தக்க ஒன்றுதான். அப்படி ஒரு வாழ்க்கை வரலாறு எந்த நவீன இலக்கியவாதிக்கும் அமையவில்லை.
எழுத்தாளர்களின் வாழ்க்கையை ஏன் எழுதவேண்டும்? ஒன்று, அவர்களின் வாழ்க்கை என்பது ஒரு காலகட்டத்தின் சிந்தனைச்சூழலின் சித்தரிப்புதான். ஒரு காலகட்டத்தின் சிந்தனைச் சூழலின் மையமாகத் திகழும் ஒரு பெரும்படைப்பாளியின் வாழ்க்கையை எழுதுவது அக்காலகட்டச் சிந்தனையையே எழுதுவதுதான். சிந்தனைகளை மட்டும் அட்டவணையிட்டு தொகுத்து எழுதிவிடமுடியும்தான். ஆனால் அது கல்வித்துறை பணி, ஆய்வாளரின் உலகம். அடுத்தகட்டச் சிந்தனையாளனுக்கு அவை உதவாது. அவனுக்குச் சிந்தனைகள் முளைத்தெழும் சூழல், அதிலுள்ள தயக்கங்கள், சிக்கல்கள், இடறல்கள் தேவை. உணர்வுநிலைகள் தேவை. விவாதக்களம் தேவை. அவை உருவான உள்ளங்களின் சித்திரம் தேவை. அவற்றை அளிப்பவை வாழ்க்கைவரலாறுகள். இன்னும் ஒருபடி மேலாக நாவல்கள்.
நான் ஜெர்மானியச் சிந்தனைச்சூழல் உருவாகி வந்த வரலாற்றை தகவல்களாக பல நூல்களில் இப்போது நான் ஹம்போல்ட்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தேன். ஜெர்மானிய இயற்கைவாதம் உருவாகி வந்த சூழலை அறிந்தேன். ஆனால் தாமஸ் மன்னின் மேஜிக் மௌண்டைன் நாவலில் ஜனநாயகவாதச் சிந்தனைகள் உருவாகி வந்த சூழலில் நான் சென்று வாழ்ந்தேன். அந்த வேறுபாடு முக்கியமானது. ஒருவேளை கதைபடிக்கும் சாமானியர்களுக்கு அது உதவாமலிருக்கலாம். ஆனால் தீவிரவாசகர்கள், சிந்தனையில் ஈடுபாடுள்ளவர்களுக்கு மிகமிக அவசியம்
சுந்தர ராமசாமி பற்றிய என் நூல் அந்தக் காலகட்டத்தின் எண்ண ஓட்டத்தை அவருடைய தனிப்பட்ட சிந்தனைகள் வழியாகச் சித்தரிக்கிறது. மார்க்ஸியம், இருத்தலியல், ஜே. கிருஷ்ணமூர்த்தி, காந்தி என அவருடைய பயணம் அக்காலகட்டத்து அறிவியக்கத்தின் திசைவழியும்கூட. நான் கோவை ஞானி பற்றி எழுதிய ஞானி என்னும் நூலிலும் சரி, அந்த ஆளுமை அக்கால அறிவியக்கத்தின் ஒட்டுமொத்தச் சித்திரத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. இந்த தேவைக்காகவே முதன்மையாக எழுத்தாளர்களின் வாழ்க்கை எழுதப்படுகிறது.
இலக்கியவாசகனுக்கு இலக்கியம் என்பது ‘கதை’ அல்ல. ‘கருத்து’ அல்ல. அது அவனுக்கு வாழ்க்கைதான். வாழ்க்கைக்கு நிகரான இன்னொரு வாழ்க்கை. வாழ்க்கையை விடச் செறிவான வாழ்க்கை. அவ்வாழ்க்கையை நிகழ்த்துபவன் எழுத்தாளன். அவன் அகமே அவ்வாழ்க்கை நிகழும் களம். ஆகவே அந்த எழுத்தாளனைப் பற்றி அறிய எழுத்தாளன் ஆர்வம் கொள்கிறான். நல்ல எழுத்தாளனின் எழுத்து அவனுடைய கற்பனையில் இருந்து உருவாவது, ஒருபோதும் அவன் வாழ்க்கையின் நேரடிப் பிரதிபலிப்பு அல்ல. சொல்லப்போனால் தன் எழுத்தை தன் வாழ்க்கையின் நேரடிப்பதிவாக அல்லாமலாக்குவதே புனைவு என்பதன் முதன்மைச் சவால்.
தன்னை திட்டமிட்டு தன் புனைவிலிருந்து அகற்றிக்கொள்கிறான் எழுத்தாளன். புனைவின் சிக்கலான பின்னல்களுக்குள் தன்னை அவன் மறைத்துக்கொள்கிறான். ஆனாலும் அவனேதான் அப்புனைவில் திகழ்பவன். ஒரு புனைவிலுள்ள எல்லா கதைமாந்தரும் அப்புனைவெழுத்தாளனின் ஆளுமைக்கூறு கொண்டவர்களே. ஜானகிராமனின் பெண்கள் அனைவரிலும் ஜானகிராமனே வெளிப்படுவதை வாசகன் உணரமுடியும்.
ஆகவே எழுத்தாளனின் வாழ்க்கை வாசகனுக்கு முக்கியமாகிறது. கதை படிக்க அல்ல. கருத்தை தெரிவிக்க அல்ல. புனைவெனும் வாழ்க்கையின் ஆழத்தை அறிய. அதன் மெய்மையை உணர. நல்ல இலக்கியவாசகன் அப்புனைவெழுத்தாளனுடன் மானசீகமான உரையாடலில் இருந்துகொண்டே இருக்கிறான். நான் டால்ஸ்டாயுடன் இக்கணம் வரை உரையாடிக்கொண்டே இருக்கிறேன். ஆகவே அவருடைய எல்லா வாழ்க்கை வரலாறுகளையும் தேடித்தேடிப் படிக்கிறேன். எனக்கு அவர் சென்றநூற்றாண்டு ஆளுமை அல்ல. வெறும் கதை எழுதியவர் அல்ல. என்னுடன் வாழ்பவர். இடைவிடாமல் பேசிக்கொண்டிருப்பவர்.
எழுத்தாளர்களின் வாழ்க்கை அதன்பொருட்டே எழுதப்படுகிறது. நினைவுகள் பதிவுசெய்யப்படுகின்றன. அந்நினைவுகள் எந்த அளவுக்கு நுணுக்கமாகின்றனவோ அந்த அளவுக்குச் சிறிய தகவல்கள் கொண்டவையாக இருக்கும். அந்த எழுத்தாளனின் அகத்தையும் புறத்தையும் அவன் சூழலையும் வாசகன் நேரில் சென்று வாழ்ந்து அறிவதுபோலக் காட்டக்கூடியவையாக இருக்கும். வாழ்க்கை வரலாறுகள் அந்த நினைவுப்பதிவுகளை ஒட்டியே விரித்தெழுதப்படுகின்றன.
ஜெ
சுரா.நினைவின் நதியில்- ஒருபார்வை ஓர் ஒளிர்விண்மீன் சு.ரா – கடிதம் நினைவுகளால் அள்ளப்படுவது
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
