அஞ்சலி, டோனாவன்- லோகமாதேவி.

டொனவன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்,தென்னாப்பிரிக்காவின் கேப் பகுதி பல்லுயிரிய மையத்தில், அழிவின் விளிம்பில் இருக்கும் தாவரங்களைப் பாதுகாக்கும் பணியில் தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டவர் டோன் என்கிற டோனோவன். (Dr. Donovan Kirkwood)

உலகின்   அணுக முடியாத, மிகக்  கடினமான சூழல்களில் வாழும் தாவரங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றை கைகளால் மகரந்தச் சேர்க்கை செய்யவும்,அவற்றை அழிவிலிருந்து பாதுகாக்கவும்,  கடுமையான மற்றும் ஆபத்தான பணிகளைக் தாவரவியலாளர்கள்  மேற்கொள்வது Extreme Botany எனப்படுகிறது.

அழிவின் விளிம்பில் உள்ள தென்னாப்பிரிக்காவின் அரிய தாவர இனங்களைக் மிக ஆபத்தான அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று கண்டறிந்து, சேகரித்து, ex situ conservation எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் அவற்றை வளர்த்து மீண்டும் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களுக்கு மாற்றுவதை பல்லாண்டுகளாக டோன் செய்துவந்தார்.

தென்னாப்பிரிக்காவின் பழமையான பல்கலைக்கழகம் தாவரவியல் பூங்காவின் ஸ்டெல்லென்போஷ் பூங்காவின் பொறுப்பாளராக 2018-லிருந்து டோன் பணிபுரிந்து வந்தார். இந்தப் பூங்கா தென்னாப்பிரிக்காவின் இயல்  தாவரங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு தாவரங்களின் மிகப்பெரிய தொகுப்பைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக போன்ஸாய் சேகரிப்பு இங்கு மிகப் பிரபலம். ஒரு திறந்தவெளி ஆய்வகமாகவும் செயல்படுகிறது இந்த பூங்கா.

டோன் தேடிச்சென்ற தாவரம்

தென்னாப்பிரிக்காவின் ஓரிடத்தாவரமான Marasmodes undulata என்னும் சூரியகாந்திக் குடும்பம் தாவரமொன்று 1946-க்கு பிறகு 34 ஆண்டுகளாக எங்குமே தென்படவில்லை எனவே அது அழிந்துவிட்ட இனமாக கருதப்பட்டிருந்தது. 1980-ல் 300 தாவரங்கள் மீண்டும் தென்னாப்பிரிக்காவின் மலைக்காடுகளில் கண்டுபிடிக்கபட்டு பின்னர் கவனமாகப் பாதுகாக்கப்பட்டன. எனினும் 2005-ல் அது வெறும் 20 மட்டும் இருந்தது செய்தியான போதுதான் நான் அதைக் குறித்து அறிந்துகொண்டேன்.

2017-ல் 17 ஆக இருந்தன அவை பிறகு அபாயகரமாக 2020ல் உலகில் மூன்றே மூன்று என்னும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஏறக்குறைய அழிந்துவிட்ட நிலையில்தான் டோன் அந்த பூங்காவில் பணியேற்றுக்கொண்டார். உடனடியாக அதைக் காப்பாற்றும் முயற்சியில் டோன் ஈடுபட்டார். மூன்றுதான் இருந்தன என்பதால் இயற்கை வாழிடங்களிலிருந்து அவற்றை எடுப்பது அவற்றின் அழிவுக்கு கரணமாகலாம் எனவே லண்டன் கியூ விதை வங்கியிலிருந்த அதன் 90 விதைகளை தருவித்து அதை பல சவால்களுக்கிடையில் வெற்றிகரமாக நூற்றுக்கணக்கில் வளர்த்து, மீண்டும் அவற்றின் இயற்கையான வாழிடத்தில் அறிமுகப்படுத்தி டோன் அதைக் காப்பாற்றினார். இப்படி ஏராளமான தாவரங்களை டோன் அழிவிலிருந்து பாதுகாத்திருக்கிறார்.

இந்த Species recovery என்பது மிக மிகச் சவாலான ஒன்று. ஆனால் டோன் 1.7 ஹெ பரப்பளவு இருக்கும் இந்தச் சிறிய பூங்காவில் தென்னாப்பிரிக்காவின் அழிந்துகொண்டிருக்கிற, அபாயத்தின் விளிம்பிலிருக்கிற சிவப்புப்பட்டியலிடப்பட்ட தாவரங்களில் 40 சதவீதத்தை காப்பாற்றி அந்தப் பூங்காவில் வளர்த்திருதார். கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஒரு சிறு குழுவினருடன் தென்னாப்பிரிக்காவின் மிக ஆபத்தான, செங்குத்தான, கரடுமுரடான ஜோங்கெர்ஷோக் மலைத்தொடரில் தென்னாப்ரிக்கவின் கேப் பகுதிக்கு சொந்தமான, உலகில் ஐம்பதுக்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்த Penaea formosa என்னும் தாவரத்தை தேடி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 51 வயதான டோன், கால் இடறி மலையிலிருந்து விழுந்து இறந்தார்.

இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் வரைக்கும் அவர் உடல் கிடைத்ததாக தகவல்களில்லை. எப்பேர்ப்பட்ட இழப்பு .  He slipped, fell, and did not return. இப்படி வாசித்த போது பெரும் அதிர்ச்சியடைந்தேன். அரிய தாவரங்களின் புகைப்படங்களையும். அவரது களப்பணியையும், அரிய தகவல்களையும் டோன் பகிரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரைப் பின்தொடர்ந்த 1500  பேர்களில் நானும் ஒருத்தி.

பூபதி

டோன் போல ஆபத்துக்களைச் சந்தித்து துணிச்சலாக அழிந்துகொண்டிருக்கும் தாவரங்களை அணுகமுடியாத அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று தேடிக்கண்டடைந்து பாதுகாப்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றனர். அவர்களை அறிந்தவர்கள் அதைவிடக்குறைவு. இவரைப்போலவே 2014-ல் மிக அரிய களப்பணி ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த தென்னிந்திய உயிரியலாளர் ஒருவரும் 51 வயதில் மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.டோன் போல ஆபத்துக்களைச் சந்தித்து துணிச்சலாக அழிந்துகொண்டிருக்கும் தாவரங்களை அணுகமுடியாத அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று தேடிக்கண்டடைந்து பாதுகாப்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றனர். அவர்களை அறிந்தவர்கள் அதைவிடக்குறைவு.

இவரைப்போலவே 2014-ல் மிக அரிய களப்பணி ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த தென்னிந்திய உயிரியலாளர் ஒருவரும் 51 வயதில் மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.டோனும் பூபதியும் எதை மிக முக்கியமானது எனக் கருதினார்களோ அதைச் செய்து கொண்டிருக்கையிலேயே உயிரிழந்தார்கள். இப்படித் தீவிரமான அர்ப்பணிப்புடன் உயிரினங்களை நேசிப்பவர்கள் உயிருடன் இருக்கும் போது உலகம் அவர்களை அறிந்து கொள்வதே இல்லை. டோனோவனின் இறப்பை செய்திகளில் அறிந்துகொண்ட அன்று நான் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருக்கும் தாவரவியல் துறை மாணவர்களிடம் அவரைப்பற்றி கேட்ட்டேன். ஒருவருக்கும் அவரைத் தெரியவில்லை. அவர் இருந்ததும் இறந்ததும் யாருக்குமே தெரியவில்லை.

டோன் தான் நேசித்த தென்னாப்பிரிக்க மண்ணில், அழிந்துகொண்டிருந்த ஒரு தாவரத்திற்கான தேடலில் மறைந்திருக்கிறார்.  தென்னாப்பிரிக்காவின் தாவரச் செல்வத்தின் எதிர்காலம், ஒவ்வொரு சிறு விதையாக, ஒவ்வொரு அங்குல மண்ணாக, இப்படித்தான்  பாதுகாக்கப்படவேண்டும் என அவர் திடமாக நம்பினார்

 டோனோவன் இந்தப் பூங்காவின் பொறுப்பேற்றுக்கொண்ட போது   இப்படிச் சொன்னார். 

“Most of all, I just want to get people to fall hopelessly in love with plants and nature.”

அவர் வாழ்நாளெல்லாம் செய்து கொண்டிருந்ததைத்தான் செய்தியாகச் சொல்லிச்சென்றிருக்கிறார்.

டோனோவனுக்கும் பூபதிக்கும் எனது அஞ்சலிகள்

 அன்புடன்

லோகமாதேவி

லோகமாதேவி- தமிழ் விக்கி அதழ் – லோகமாதேவி இணையப்பக்கம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.