ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்.
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. பாண்டிச்சேரியை அவரது எழுத்துக்களில் வாசித்தும் தமிழ் தேசியம் தமிழர் தத்துவம் குறித்தும் உரையாட சென்று அவரது பதில்களால் சற்று குழம்பிப் போனேன். இன்றும் தமிழர் ஆன்மீகம் தத்துவம் குறித்து நான் வாசிக்க தோழர் தியாகு மற்றும் ரமேஷ் பி்ரேதனின் புத்தகங்களை வாசிக்கிறேன். வள்ளலார், மா.அரங்கநாதன் தோழர் தியாகு ரமேஷ் பிரதேன் என ஒரு கோடு இழுக்க முடியுமா என தெரியவில்லை. ஆனால் இந்த வரிசையில் வாசிப்பை நிகழ்த்த எண்ணியிருக்கிறேன். அது அதற்கான ஒரு திறப்பாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன்.
காளி பிரசாத், சென்னை
அன்புள்ள ஜெ
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். அவருடைய முதல் படைப்பாக நான் வாசித்தது நீங்கள் நடத்திய சொல்புதிது அச்சிதழில் வெளிவந்த முன்பொரு காலத்தில் நூற்றெட்டு கிளிகள் இருந்தன என்னும் கதை. வள்ளலாரின் வாழ்க்கையை ஒட்டி சென்ற இன்னொரு கதையையும் வாசித்தேன். அதன்பின்னர் அவருடைய சொல் என்றொரு சொல் நாவலையும் வாசித்துள்ளேன். உழைப்பு கோரும் படைப்புகள் அவை. அவர் வாழும் ஒரு உக்கிரமான, சற்றே திரிபடைந்த உலகத்தைச் சித்தரிக்கும் அப்படைப்புகள் வழியாக துலங்கிவரும் வாழ்க்கைப்பார்வை எனக்கு ஏற்புடையதாக இல்லை என்றாலும் நம் பண்பாட்டின் ஒரு பக்கம் என்னும் வகையில் என்னால் ஒருபோதும் புறக்கணிக்கமுடியாததாகவும் இருந்து வந்துள்ளது. அவருடைய உடல்நிலை சற்று சீரடைந்து அவர் விழாவுக்கு வருவார் என்னும் செய்தியும் மகிழ்ச்சி அளிக்கிறது. என் வாழ்த்துக்கள்.
ஶ்ரீனிவாஸ்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
