Jeyamohan's Blog, page 930
August 23, 2021
ஏசியாநெட் பேட்டி
அன்புள்ள ஆசிரியருக்கு
இவ்வளவு அழகியலாக எழில் சூழ்ந்த பின்னணியில் உங்களை பார்ப்பது அவ்வளவு மகிழ்ச்சி.ஓரளவிற்கு நீங்கள் பேசுவது புரிந்தது. இசைக்கோர்ப்பும், காட்சிகள் அடுக்கிய விதமும் ஒரு கம்பீரத்தை தோற்றுவித்தது. உங்களை இப்படி பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும். இன்றும் அவ்வாறே …
நன்றிகள்
குமார் சண்முகம்
***
தமிழ் ஊடகங்களின் வாசகனாக பெரும் அவமானமே எழுகிறது. நியாயப்படி தமிழக ஊடகங்கள் இதை செய்திருக்க வேண்டும். குறைந்தது இந்த தளத்துக்கு என சொல்லும் படியாகவாவது..
மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்க கூடாது என்ற போதும்….
தன்மொழியில் எழுதிக்குவித்த பக்கங்களுக்கு எந்த ஒரு நியாயமும் செய்யாமல் வம்பை மட்டுமே பேசும் தமிழக ஊடகங்களும், ஆளுமைகள் குறித்த எந்தவொரு அறிதலும் இன்றி யாராக இருந்தாலும் தன் அரசியல் புரிதலுக்கு ஏற்ப மட்டுமே கேள்விகள் கேட்கும் தமிழ் ஊடக நிருபர்களும்தான் நினைவுக்கு வருகிறார்கள்..
காளிப்பிரசாத்
***
ஐயா வணக்கம்..!
நான் உதகமண்டலம் வானொலி நிலைய தற்காலிக நிகழ்ச்சி அறிவிப்பாளர் அப்துல் காதர். சற்று முன்பு தான் பசுமைமிகு மலைகள் மற்றும் விவசாய நிலங்களின் பின்னணியில் தங்களின் நேர்முக உரையாடல் ஒன்று ஏஷியாநெட் தொலைக் காட்சியில் பார்த்தேன். மிக நெகிழ்ச்சியாக உணர்ந்தேன். ஏனெனில் ஏதோ ஓரிடத்தில் எங்களது கூடலூர் பந்தலூர் பகுதிகளின் வரலாற்றுப் பின்னணியுடன் அது ஒத்துப் போவதாக இருந்தது.
பல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் விஷ்ணு பிரசாத் மூலமாக அறிமுகமான தங்களை கடந்த உதகை குறும்பட விழாவில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் நடைபெறவில்லை. ஐயாவின் எண் என நினைத்து ‘சொல் புதிது’ எண்ணில் அழைத்தேன். அழைப்பை ஏற்ற நண்பர் மின்னஞ்சல் முகவரி தந்தார். ஐயா பயணத்தில் இருப்பதாக தெரிவித்தார். வரலாறும் புவி அமைப்பும் இலக்கியமும் சமுதாயச் சூழலும் அடிப்படையாக கொண்ட மலையாள நேர்முகம் சிறப்பாக அமைந்தது. ஓணம் வாழ்த்துகள்.
ஐயாவை நேரடியாக தொடர்புகொள்ளும் விதமான கைபேசி எண் கிடைத்தால் மகிழ்ச்சி
நன்றி
அன்புடன்
அப்துல் காதர்
***அன்புள்ள ஜெ
ஆசியாநெட் பேட்டியை பார்த்தேன். பல பேட்டிகள் இணையத்தில் இருக்கின்றன. ஆனால் இது உங்கள் இடத்தில், உங்கள் சூழலில் எடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் உலகத்தை காட்ட முயல்கிறது. உங்கள் புனைவுலகின் பின்னணியாக அமைந்த நிலமும் வாழ்க்கையும் காட்டப்படுகிறது. பேட்டி கண்டவர் உங்களை ஆழமாக வாசித்துவிட்டு வந்திருக்கிறார். இத்தனைக்கும் நீங்கள் மலையாளத்தில் மிகமிகக்குறைவாகவே எழுதியிருக்கிறீர்கள்.
தமிழில் எந்த எழுத்தாளருக்கும் ஊடகங்கள் இந்த மரியாதையைச் செய்ததில்லை. கி.ராவின் இடைச்செவல் ஊடகங்களில் பதிவானதில்லை. வண்ணதாசனின் நெல்லையை அவரைப்பற்றி விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் எடுத்த ஆவணப்படத்தில் மட்டுமே காணமுடிகிறது. மிகவும் ஏக்கமாகவும் வருத்தமாகவும் உள்ளது.
ஆர்.சிவக்குமார்
அன்புள்ள சிவக்குமார் மற்றும் நண்பர்களுக்கு,
தமிழ் ஊடகங்களில் பணியாற்றும் பலரை எனக்கு நேரடியாகவே தெரியும். அவர்களுக்கும் மலையாள ஊடகவியலாளர்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு. உதாரணமாக இந்தப்பேட்டியை எடுத்த எம்.ஜி.அனீஷ் இலக்கியம் படித்து, அதன்பின் ஊடகவியலில் பட்டம் பெற்று, இதழியலாளர் ஆனவர். பலதுறைகளில் பரவலான வாசிப்பு கொண்டவர். பேட்டி காண வந்தபோது அவர் இலக்கியம் பற்றி பேசியவை மிக ஆழமான விமர்சனப் பார்வையை வெளிப்படுத்தின. அனைத்துக்கும் மேலாக அந்த ஊடகம் அவருக்கு அளிக்கும் ஊதியம் என்பது இங்கே ஓர் ஊடகத்தின் தலைவராக இருப்பவர்கூட நினைத்துப் பார்க்க முடியாதது. அந்த ஊதியமே அவருக்கு ஒரு தன்னம்பிக்கையை அளிக்கிறது. ஆகவே அவர் பிணராய் விஜயனையே நிகராக நிறுத்தி கேள்வி கேட்க முடியும்.
மாறாக, தமிழ் ஊடகவியலாளர்களில் முறைப்படி இலக்கியமோ மொழியோ கற்றவர்கள் அரிதினும் அரிதானவர்கள். இதழியலிலும் அனுபவ அறிவு மட்டுமே இருக்கும். மிகப்பெரும்பாலானவர்கள் சினிமாவில் நுழையும் ஆசையுடன், தற்காலிகமாக, இதழியலில் நுழைந்திருப்பவர்கள். சினிமாவில் நுழைந்து சாதித்த சிலர் உண்டு என்றாலும் மிகப்பெரும்பாலானவர்களுக்கு சினிமாவும் எட்டாக்கனிதான். ஆகவே அவர்களின் முதன்மை ஆர்வமே தமிழ் சினிமாதான். அவர்களுக்கு மிகமிகக்குறைவான ஊதியம் அளிக்கப்படுகிறது. அதுவே தன்னம்பிக்கையின்மையை அளித்துவிடும். தன்னை ஒருவகை அடித்தளப் பாமரராகவே வைத்துக் கொள்வார்கள்.
அவர்களில் ஓரிருவர் தவிர எவருக்கும் இலக்கிய அறிமுகமே இருக்காது. கணிசமான தமிழ் இதழியலாளர்களுக்கு நான் சினிமாவுக்கு வெளியே நாவல்கள், கதைகள் எல்லாம் எழுதியிருக்கிறேன் என்பதே தெரியாது என்பதை கவனித்திருக்கிறேன். நான் அதைச் சொல்லி அவர்களைக் குழப்புவதுமில்லை. சமீபமாகச் சிலர் சமூக ஊடகங்களை மட்டும் மேலோட்டமாகத் தொடர்கிறார்கள். ஆகவே எழுத்தாளர்களின் பெயர்கள், வம்புகள் மட்டும் தெரிந்திருக்கும். இங்குள்ள இதழியல் சூழலே வேறு. இங்கே முதிர்ச்சியான இதழியலை எதிர்பார்க்கக் கூடாது.
நாம் எச்சூழலில் இருக்கிறோம் என்பதை உணர்வது அதற்கு எதிரான போராட்டமாக நம் செயல்களை அமைத்துக்கொள்ள மிக உதவியான ஒன்று. விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் அந்த தன்னுணர்வில் இருந்து உருவாகின்றன. ஓர் எழுத்தாளனை எப்படி பதிவுசெய்யவேண்டுமென அவை காட்டுகின்றன. அவற்றை என்றேனும் தமிழ் ஊடகச்சூழல் முன்னுதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் இன்று வாய்ப்பில்லை.
ஓர் உதாரணம் சொல்கிறேன், ஞானக்கூத்தன் மறைவின்போது அவரைப்பற்றிய செய்தி வெளியிட சில ஊடகங்கள் விரும்பின. ஆனால் அவர்களிடம் ஒரு அடிகூட அவரைப்பற்றிய காட்சி இல்லை. எங்கள் ஆவணப்படம் தரமான ஒளிப்பதிவு கொண்டது. ஆகவே அதை அளிக்கமுடியுமா என்று கேட்டனர். இலவசமாகவே அளிக்க முன்வந்தோம். ஆனால் சில துணுக்குகளே வெளியாயின. ஏன் என்று விசாரித்தோம். ஊடகத்தலைமையினர் அதை வெளியிட மறுத்துவிட்டனர் என்று பதில் வந்தது. ஒரு தனிநபரை பற்றி அவ்வாறு ’செய்தி’ வெளியிடவேண்டும் என்றால் அவர்தரப்பில் இருந்து விளம்பரக்கட்டணம் அளிக்கப்படவேண்டும் என்று சொல்லிவிட்டனர். இச்சூழலில் இருந்துகொண்டுதான் நாம் இலக்கிய இயக்கங்களை முன்னெடுக்கிறோம்.
ஜெ
கிரானடா நாவலும் அச்சங்களும்- கொள்ளு நதீம்
இலத்தீன் அமெரிக்க, (ஒரிஜினல்) வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்ரிக்க, ருஷ்ய, சீனம் என்று உலகின் சகல நிலப் பரப்பின் மொழியும், பண்பாடும் இந்திய, தமிழ் செல்வாக்கிற்கு ஒப்புக் கொடுத்துள்ளதை இலக்கிய வரலாற்றோடு பரிச்சயமுள்ள அனைவரும் அறிந்த உண்மை. ஆயிரமாண்டுகால விடுபடாத தொடர்ச்சியுடன் கலந்திருக்கும் முஸ்லிம் வாழ்க்கையானது பிற பகுதியிலுள்ள மக்களுடன் கொண்டிருந்த உறவால் உணவு, உடை, உறைவிடம், மதம், பண்பாடு, மருத்துவம், கல்வி வாழ்வின் அத்தனை துறையிலும் இந்த மண்ணில் இஸ்லாமின் செல்வாக்கு மகத்தானது.
அப்படியிருந்தும் இந்திய, தமிழ் இலக்கிய உலகிற்கு ஏனைய சமூகங்கள் அறிமுகமாகியுள்ளதைப் போல ஏன் அரபு, இஸ்லாமிய வாழ்க்கை தமிழ் நாவலில் பதிவாகவில்லை என்று கேட்கத் தோன்றுகிறது. ஓரான் பாமுக் மட்டும் மூவாயிரம் பக்கங்களுக்கும் மேலாக துருக்கிய வாழ்க்கைச் சித்திரம் தமிழ் இலக்கியமாக வந்து சேர்ந்திருக்கிறாரே என்று கேட்கலாம். அரபுகளை ஓப்பிடும்போது துருக்கிய வாழ்க்கை என்பதே கிட்டத்தட்ட நவீனமானது.
மார்க்கோஸ் கார்சியாவுக்கென்று சிறப்பிதழை வெளியிட்ட சிற்றிதழ்களுக்கோ, இயக்கங்களுக்கோ முஸ்லிம் / அரபு உலகில் இலக்கியமாக எதுவுமே ஈர்க்கவில்லை என்று நம்புவது கடினமாக உள்ளது.
எகிப்திய (பெண்) எழுத்தாளர் Radwa Ashour (1946 – 2011) “கிரானடா” என்கிற முக்கதைகளை 1994-ல் எழுதினார். அரபியிலிருந்தே நேரடியாக தமிழுக்கு வந்துள்ள இதன் முதல் கதையை “சீர்மை பதிப்பகம்” வெளியிட்டுள்ளது. (அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 2003-ஆம் ஆண்டு வந்துள்ளது என்பது தனிச் செய்தி). அமெரிக்க பல்கலைக் கழகமொன்றில் கலாநிதி பட்டம் பெற்ற ரத்வா ஆஷுர் அரபு பெண் கவிஞர்கள் என்கிற கலைக்களஞ்சியத்தையும் தொகுத்துள்ளார். இலக்கியப் பங்களிப்புக்காக அரபு மொழியில் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
அந்த கதைக்குள் போவதற்குள் ஸ்பானிய, போர்சுகீசிய பண்பாடு தமிழ் இலக்கிய உலகில் என்னவாக உள்ளது என்பதை பார்க்கலாம். Gabriel García Márquez (1927 – 2014) “தனிமையின் நூறு ஆண்டுகள்” 2013-ல் காலச்சுவடு பதிப்பகமும்; José Saramago (1922 – 2010) “பார்வையை தொலைத்தவர்கள்” 2016-ல் பாரதி புத்தகாலயமும்; MIGUEL DE CERVANTES 17-ம் நூற்றாண்டில் எழுதிய DON QUIXOTE என்ற நாவல் 2013-ல் சந்தியா பதிப்பகமும் கொண்டு வந்துள்ளது) மார்க்கோஸ்-சும் யோசா சரமாகோவும் நோபல் பரிசு பெற்றவர்கள்.
“கிரானடா” என்கிற சொல்லுக்கு மாதுளம் பழமும் “அல்ஹம்ரா” என்பதற்கு செங்கோட்டை என்றும் பொருள். நபிகள் நாயகத்தின் இறப்புக்குப் பிறகான அடுத்த நூற்றாண்டுக்குள் ஆப்ரிக்காவின் வடபகுதியை தொட்டபிறகு அந்தக்கால கடற் தொழிநுட்பத்தின்படி மூவாயிரம் கி.மீ. அகலம் கொண்ட அட்லாண்டிக் பெருங்கடல் தாண்ட முடியாததாக இருந்தது. எனினும் மத்திய தரைக்கடலை கடந்து ஸ்பெயினில் கி.பி.750 – 1500 வரை ஏறக்குறைய எட்டு நூற்றாண்டுகள் ஆட்சியை நிறுவினர். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் பழைய இந்தியாவின் சிந்துப் பகுதி (இன்றைய கராச்சி நகரம்) வரை கிழக்கு திசையில் இது நீடித்திருந்தது.
மேற்குப் பகுதியில் ஐரோப்பிய மண்ணில் நிலைகொண்டிருந்த அரசு 1492-ஆம் ஆண்டு முழுமையாக துடைத்தெறியப்பட்டது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம் 1400; ஆட்டொமன் பேரரசு (1453 – 1922); முகலாய பேரரசு (1526 – 1857); அறிவொளிகாலம் 1700; அந்த நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி என உலக வரலாற்றின் பெரும்போக்கிற்கு முன்பே இந்த “கிரானடா” வீழ்ந்துவிட்டது. அதுவரை உச்சத்திலிருந்து வந்த ஸ்பெயின் அங்குள்ள உள்நாட்டு பிரச்சனைகளுக்கு காரணம் அரபுகளும், முஸ்லிம்களுமே என்று கூறி மீண்டும் சுதேச(?) ஆட்சியை நிறுவினர். அதன் பிற்பாடு கலை, அரசியல், பொருளாதாரம் என உச்சத்திலிருந்த ஸ்பானிய சமூகம் அன்று முதல் இன்றுவரை மீளெழவில்லை. ஸ்பெயின் ஐரோப்பாவின் நலிவுற்ற நாடுகளில் ஒன்றாகிப் போனதுதான் மிச்சம். எப்படியிருப்பினும் கி.பி.1492-ன் நிகழ்வுகளுடன் தொடங்கி நாவல் முன்னும் பின்னுமாக காலவெளியில் நகர்கிறது.
கிரிக்கெட் போட்டி, ஆப்கானிஸ்தானில் தாலிபான், அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், எங்கேனும் ஒரு தூர நாட்டில் நடக்கும் போர் என ஒவ்வொன்றிலும் – இல்லை எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று கூற வேண்டிய கட்டாயத்துக்கு இங்கு ஏதோவொரு குக்கிராமத்தில் வசிக்கும் சாதாரண முஸ்லிமும் உள்ளாகிறான். “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்கிற முழக்கத்தைப் போல நனவிலி மனதில் முஸ்லிம்களை உலகளாவிய (மதவழிப்பட்ட) பெருந்திரளின் நீட்சியென கருத வைக்கிறது. சிறந்த பொற்காலமும், சின்னாபின்னமான பெருந்துயரின் துர்கனவும் ஒருசேர கொண்ட “கிரானடா” குறித்த ஏக்கம் (nostalgia) குறிப்பாக அரபுகளிடம் உண்டு.
கிரானடாவின் கடைசி முஸ்லிம் அரசர் போப்டில் சரணடைந்த பிறகு கப்பலேறச் செல்லும் முன் தாம் வாழ்ந்த அரண்மனையை நோக்கி கண்ணீருடன்பார்த்த இடம் Puerto del Suspiro del Moro என்று அழைக்கப்படுகிறது. தன் மனம் போன போக்கில் சல்மான் ருஷ்தி The Moor’s Last Sigh என்ற நாவலை 1995–ல் எழுதியிருந்ததை கேள்விப்பட்டிருக்கலாம். அப்பொழுது உடன் இருந்த அரசனின் அம்மா “அழு!, அழு! நன்றாக அழு! ஒரு ஆண்மகனாக இருந்து தன் ஆட்சியை காப்பாற்ற முடியாத கையாலாகா தனத்துக்காக பெண்ணைப் போல அழு! என்று கூறினாராம். அதில் ஏதோவொரு வகையில் பாபர் மஸ்ஜித் இடிப்பும், 1993-ஆம் ஆண்டில் நடந்த கலவரம், தாவுத் இப்ராஹிம், சிவசேனை என்று மும்பையில் பாதி கதை நிகழ்கிறது.
அவரைவிட இன்னொரு கோணத்தில் Noah Gordon (பிறப்பு 1926) நாவலான The Last Jew கூட இதே ஸ்பெயினிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட யூதர்களின் கதையாக எழுதியிருப்பார். தேவ மைந்தனென இயேசுவை ஏற்க மறுத்த முதல் நாளிலிருந்தே தொடங்கிய முரண், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருந்த ஸ்பானிய நிலத்திலிருந்து அகதியாக துரத்துகிறது. போதகர்களிலிருந்து தொடங்கி பிஷப்கள், கார்டினல்கள், இறுதியில் போப் வரை ஒருவர் விடாமல் திருச்சபையின் முழு இயந்திரமும் வெறுப்புணர்வை ஊதிப் பெருக்கி இன அழித்தொழிப்பில் ஈடுபடுகிறது. Yonah Toledano என்கிற யூதச் சிறுவன் மட்டும் பின்தங்கி விடுகிறான். அவனுடைய தந்தை மிகப் பிரபலமான வெள்ளி நகை செய்யும் ஆச்சாரி. தன் குடும்பத்தை கலவர சூழலில் பிரிந்து விடும் கதைச் சொல்லியுடன் ஒரு கழுதை மட்டும் இருக்கிறது. அதில் பயணித்தபடியே முழு ஸ்பெயினில் அலைந்து திரியும் பயணம் கண்ணீரை வரவழைக்கும்.
அரபுகளையும், யூதர்களையும் ஐரோப்பிய மண்ணிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்கிற Reconquista மதக் குற்ற விசாரணை இயக்கம் நூற்றாண்டுகள் தொடர்ந்தது என்றாலும் அதன் பிரதான இலக்கில் வெற்றி கண்டவர் ஃபெர்டினாண்ட் – இஸபெல்லா அரச தம்பதி. (1499-1526) அதை Shadows of the Pomegranate Tree நாவலில் தாரிக் அலி விவாதித்திருப்பார்.
கிரானடாவில் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த ஸ்பானிய முஸ்லிம்களின் அறிவியல் கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், கலைப் பங்களிப்பு பிற அன்றைய காலத்தில் எவராலும் அருகில் நெருங்க முடியாத சாதனையின் உச்சங்கள். அதுவரை ஐரோப்பிய உலகம் அறிந்து வைத்திராத அறிவியல், மருத்துவ தகவல்கள் அடங்கிய நூலகங்கள் எரிக்கப்படுகின்றன. அரபு மொழி தடை செய்யப்படுகிறது, வானியல் ஆய்வகங்கள் அழிக்கப்படுகின்றன. பண்பாட்டு நினைவுகள், அறிவுக் கருவூலங்கள், வாழ்க்கை எதுவுமே எஞ்சுவதில்லை. அரசுகள் வரலாம், ஆட்சிகள் மாறலாம், அதுவொன்றும் புதியதல்ல, ஆனால் இது போன்ற பைத்தியகாரத்தனத்தை வரலாறு கண்டதில்லை.
டான்குயிக்ஸாட் நாவலின் கதாநாயகன் சாதாரண ஆளாக இருந்தாலும் வீரன். பல்வேறு சாகசங்களுக்கு காரணம் இவன் படித்து வைத்திருக்கும் நூல்களே என்று கருதி திருச்சபை சாமியாரோடு சேர்ந்து அவனை அடித்துப் போட்டு அந்த நூல்களை கொளுத்தி விடுகின்றனர். கிரானடாவில் நிகழ்ந்ததைப் போலத்தான் யாழ்ப்பாண நூலக எரிப்பும் நடந்திருக்க வேண்டும். நூல்களை எரிக்கும் வன்மம், சூன்யக்காரிகள் என பெண்களை வேட்டையாடியவர்களின் குரூர மனதை ஸ்பானிஷ்காரரான டான் குயிக்ஸாட் ஆசிரியர் Miguel de Cervantes (1547 – 1617) நேரில் கண்ட சாட்சிகளுடன் பேசிய தலைமுறையைச் சார்ந்தவர். நுண்ணுணர்வால் தன் கலகக் குரலை மாய எதார்த்தவாத முறையில் எழுதி மீறிச் சென்றிருக்கிறான் என்று கருதமுடிகிறது.
ரத்வா ஆஷுர் இந்த நாவலில் சொல்லியிருப்பதை நான் இங்கு எழுதப் போவதில்லை. அதன் கலை மதிப்பை வாசகர்களே உணர்ந்து கொள்ளட்டும். நவீன உலகத்தை நோக்கி புறப்பட்ட கொலம்பஸ்-சும் (1451 – 1506); வாஸ்கோடகாமாவும் (1460 – 1524) மேற்கில் அமெரிக்க கண்டங்களையும், கிழக்கில் இந்தியாவுக்கான கடல் வழித் தடங்களையும் கண்டறிந்த காலகட்டம் இதுவே. இதனால் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து தரை மார்க்கமாக நீடித்து, பலேறு பழைய துறைமுகங்களைக் கொண்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நான்காயிரம் கி.மீ. நீள பட்டுப்பாதையில் சீனர்கள், இந்தியர்கள், அரபுகள் கொண்டிருந்த மேலாதிக்கம் சட்டென கீழிறங்கியது.
அப்பொழுது ஸ்பெயினில் நிகழ்ந்த காதல், காமம், பிணக்கு என குடும்ப அமைப்பு, சமூக நிலவரம் வாழ்க்கையின் நிலையாமை புரிந்துகொள்ள ஒரு புனைவு சாட்சியம் இந்த நாவல். ஸ்பானிய நீரோட்டத்தில் கலந்து நீர்த்துபோதல், மதமாற்றம், கலகம், புலப்பெயர்வு என வலி கூடிய அந்த நிலக்காட்சி மனதை கரைக்கிறது. எழுநூற்றி ஐம்பதாண்டு பாரம்பரிய தொடர்ச்சியை அறுத்துப் போட்டு போய்விடுவதென்ன அவ்வளவு லேசுபட்ட ஒன்றா என்ன?
கிறிஸ்தவத்துக்குள் சேர்க்கப்பட்ட அரபுகளை Moriscos என்று அழைத்தனர். ஒரு நூறு ஆண்டுகள் அப்படி மதம் மாறி ஸ்பெயின் அரசருக்கு விசுவாசமாக இருந்த இலட்சக் கணக்கானவர்களையும் 1609-ஆம் ஆண்டு நாடு கடத்த உத்தரவிட்டனர். ஒரு நூற்றாண்டு கழிந்த பின்பு அப்பொழுது இஸ்லாம் என்பது ஸ்பெய்னில் எங்குமே இல்லாத நிலையிலும் உள்நாட்டு பாதுகாப்பின் பெயரால் புறந்தள்ளிய கொடுமையெல்லாம் நடக்கிறது. நான்கு வயதுக்கு கீழே இருந்த குழந்தைகள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு நல்லாத்துமாக்களாக மாற்றப்பட்டனர். முரண்டு பிடித்த 16 வயதுள்ள பிள்ளைகள் அடிமைகளாக, உடல் உழைப்புக்கும் பிறகு திருமுழுக்கு / ஞானஸ்நானம் செய்யப்பட்டனர்.
. விவசாய நிலங்கள் தரிசானது, செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த வெற்றிடத்தை அங்கிருந்த மக்களைக் கொண்டு சமாளிக்க முடியவில்லை. ஸ்பெயினிலிருந்த சில மாகாணங்களில் முப்பது சதவிகித மக்கள் வரை ஆப்ரிக்கா நோக்கி போக வைத்த காரணத்தால் முழு நாட்டின் பொருளாதார சங்கிலியே தொடர்பு அறுந்து முடமானது. சமுக கட்டமைப்பு சீர்குலைந்தது. பிரபு குலமும், பண்ணையார்களும் கடனாளிகளாயினர். முழு நாட்டை படுகுழியில் தள்ளியது
பின்னட்டை குறிப்பில் கூறியபடி அசாதாரணமானதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர் சிலரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்வதன் வழி பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய இழப்பையும் வலியையும் வெகுநுட்பமாக நெய்தெடுத்திருக்கிறது கிரானடா. ஸ்பானிய மதக்குற்ற விசாரணைக் காலத்தின் மூச்சடைக்கும் சூழலின் மத்தியில் அரும்பும் அழகிய காதல்கள், அடக்குமுறைக்கு முன் பணிய மறுக்கும் பண்பாடு, பிழைத்து வாழ்ந்து விடுவதற்கான யத்தனங்கள் என வாழ்வின் பல்வேறு வண்ணங்களும் முயங்கி மாயம் நிகழ்த்தும் ஒரு நவீன கிளாசிக் இது. முக்கதைகளில் முதலாவது.
புதிய நிலப்பரப்பை தேடி போன சாகச பயணத்துக்கு இருந்த ஆதரவும், ஏற்பும் கட்டாயப்படுத்தியது உள்நாட்டு சூழலைக் கொண்டா? மதம் என்பதன் முக்கியத்துவம் அல்லது முக்கியத்துவமின்மையை என்பது என்ன? போன்ற கேள்விகள் எழுகின்றன. பெரும் மக்கள் திரளை தேவைக்கு மீறி துருவநிலையாக்கும் போது பேணப்பட்டு வந்த தனி மனித அறம், சமூக விழுமியங்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றனவா? அரசியல் சிந்தனையில் தனி மனிதவாதம் (humanism) செய்யும் குறுக்கீடுகள் என்ன? என பல்வேறு கேள்விகளை இந்த நாவல் விசாரணை செய்கிறது அல்லது அப்படி எனக்கு படுகிறது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் செய்த அட்டூழியத்துக்குப் பிறகு அவ்வளவு விரைவில் எழுந்து நின்றுவிட்ட ஜெர்மனி, உலகை கட்டியாண்ட இங்கிலாந்து, நெப்போலியனைத் தந்த பிரான்ஸ், அறிவியலின் ஊற்றுக்கண்ணாக பலரைத் தந்த இத்தாலியோடு ஒப்பிடும்போது 1500-க்கு பிந்தைய ஸ்பெயினின் இன்றைய நிலை ஏன் அவ்வளவு பாதாளத்தில் கிடக்கிறது? அவர்களை பீடித்திருந்த அரபு சனியன்களை விரட்டியடித்து ஐந்து நூற்றாண்டுகள் கழிந்தும் ஸ்பானிய தேசியவாதிகள் கற்பனை செய்த பெருமிதம் மீட்டெடுக்க முடிந்ததா? இவ்வளவுக்கும் பிறகு ஸ்பெயினில் இன்றைக்கு இரண்டு கோடி முஸ்லிம்கள் எஞ்சியுள்ளனர்.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எகிப்திய (அரபு) எழுத்தாளர் நாகிப் மஹ்பூஸ் (1911 – 2006). ஆங்கிலம் வழியாக அரேபிய இரவுகளும் பகல்களும் என்ற நூல் மொழிபெயர்ப்பை 2014-ஆம் ஆண்டு சா.தேவதாஸ் அவர்களும், அரபு நேரடி மொழிபெயர்ப்பாக நம் சேரிப் பிள்ளைகள் நாவலை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பஷீர் ஜமாலியும் 2019-ஆம் ஆண்டு செய்திருந்தனர் .
1933-ஆம் ஆண்டு வாணியம்பாடியில் பிறந்த அப்துர் ரஹீம் 1957-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் 1964-ஆம் ஆண்டு எகிப்தின் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அரபு (Philology) மொழியியல் கலாநிதி பட்டம் பெற்றார். மதினா பல்கலைக் கழகத்தில் 1969-ஆம் ஆண்டு பேராசிரியராக பணியில் சேர்ந்து 1990-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு இவரின் திறமையை வீணாக்க விரும்பாத சௌதி அரசாங்கம் திருக்குர்ஆன் அச்சக இயக்குனராக நியமித்துள்ளது. ஆக ஐம்பதாண்டுகளாக அரபு மொழியில் டாக்டர் அப்துர் ரஹீம் அவர்களின் பணி மகத்தானது. அவரை நான் எங்கள் சொந்த ஊரிலும், சென்னையிலும், அவர் இப்பொழுதிருக்கும் சௌதி அரேபிய மதினா நகரிலும் பலமுறை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. உள்ளபடியே சொன்னால் அவருடைய வீட்டின் பெயரே “கிரானடா” என்பதாகும்.
தமிழகத்தை ஒப்பிடும்போது கேரள மலையாளி, இலங்கை சோனக முஸ்லிம்கள் (அரபு நூல்களுடன்) அளவிலும், தரத்திலும் மிகைத்திருக்க காரணமென்னவென்று டாக்டர் வி.அப்துர் ரஹீம் அவர்களிடம் கேட்டேன். தமிழக முஸ்லிம்கள் மொழி தெரியாதபட்சத்தில் உருதுவை எப்படியோ மத்ரஸாவில் கற்றுக் கொள்கின்றனர், இதனால் அரபு மொழியை அணுகுவதற்கான முயற்சியில் பின் தங்கிவிடுகின்றனர். கேரள, இலங்கை முஸ்லிம்களுக்கு உருதுவில் கொட்டிக் கிடக்கும் இஸ்லாமிய இலக்கியத்தின் ஊடாகவே அடைய முடியும் என்கிற சமூகச் சூழல் இல்லாதபடியால் நேரடியாகவே சற்று கஷ்டப்பட்டாலும் அரபியை கற்றுக் கொள்கின்றனர் என்றார். அது உண்மைதான் போலிருக்கிறது.
இலங்கையின் இர்பான் நளீமி இப்பணியை செவ்வனே செய்து முடித்திருக்கிறார். பொதுவாக இப்பொழுதெல்லாம் நேரடி படைப்பிலக்கியத்தைத் தவிர (கட்டுரை, புனைவு எதுவாக இருந்தாலும் அதன் ஆங்கில பிரதியை கையில் வைத்துக் கொண்டே) ஏனைய தமிழ் மொழிபெயர்ப்புகளை ஒரு சேர இரண்டு மொழிகளிலும் படிக்கும் பழக்கம் சேர்ந்து கொண்டது. The valley of mask – Tarun Tejpal முன்பு படித்திருந்ததுதான், சென்னைப் புத்தக சந்தை பிப்ரவரியில் நடந்தபோது வாங்கியிருந்தேன். அதன் மொழிபெயர்ப்பான “முகமூடிகளின் பள்ளத்தாக்கு” கொரானா பெருந்தொற்றின் இரண்டாம் பேரலை உண்டாக்கிய வெறுமையின் காரணமாக படிக்காமல் வைத்திருந்ததை சற்று முன்பு படித்தபோது. இரண்டுக்குமே தொடர்புகள் இருப்பதைப் போல உணர்ந்தேன். அப்படியாக இந்த கிரானடாவின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கூட வைத்து படித்தபோது இர்பான் நளீமியின் மொழித்திறனும், சொல்வளமுடனும் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
இன்றிலிருந்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துக்கு பின்னோக்கி பயணிக்கும் இந்த நூலை மொழிபெயர்த்த இர்பான் நளீமி இலங்கையைச் சேர்ந்தவர். அறபு மொழி கற்பித்தல் மற்றும் மொழிபெயர்ப்பியல் துறைகளில் இரு முதுகலைப் பட்டங்களும், பயனாக்க மொழியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். பல்கலைக் கழகம் உட்பட பல்வேறு மட்டங்களில் அறபு மொழி கற்பித்தலில் மட்டுமின்றி, அறபு-தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்புத் துறையிலும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஈடுபாட்டுடன் இயங்கி இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.
பேரரசர் அவ்ரங்கசேப் (1618 – 1707) காலத்தில் தென்னகம் நிஜாம்களின் ஆளுகையின் கீழிருந்தபோது ஆற்காடு / கர்னாடகா நவாப் பதவியில் இருந்தவர் அன்வருத்தீன் கான் (1672 – 1749); சென்னை ஜானிஜான் கான் தெரு இவரின் நினைவால் வைக்கப்பட்டதே. அதன் பின்னர் அவருடைய மகன் முஹம்மத் அலி வாலாஜா (1717 – 1795) பொறுப்பேற்றார். அண்ணா சாலையிலிருந்து மெரினா கடற்கரையிலுள்ள உழைப்பாளர் சிலையை தொடும் சாலைக்கு இவரின் பெயரே இன்றும் உள்ளது.
ராபர்ட் கிளைவ் (1725 – 1774); மைசூரின் திப்பு சுல்தான் (1751 – 1799); சென்னை பச்சையப்ப முதலியார் (1754 – 1794) ஆகியோர் முகலாய பேரரசு சிதைவுற்ற பிறகு கிழக்கு இந்திய கம்பெனி (1757 – 1858) பின்னணியில் சென்னை வரலாற்றோடு தொடர்புடைய பெயர்கள். நவாப் அன்வர்தீன் கொல்லப்பட்டது எங்கள் ஊரில்தான், மலைக் கோட்டைகளும், பீரங்கியால் சுட்ட வடுக்களுடன் கைவிடப்பட்டிருந்த பழங்கால கட்டிடங்களைச் சுற்றி காட்டுச் செடிகள் வளர்ந்திருக்கின்றன. கொரனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது ஆறு மாதம் எந்த பணியுமின்றி வீட்டில் இருந்தபோது வாரக் கணக்கில் இப்பகுதியை அகழ்வாராய்ச்சிகாரனாக அலைந்து திரிந்திருக்கிறேன்.
இந்த ஆண்டு இரண்டாம் அலையின் போது என் தாயார் மூப்பின் காரணமாக இறந்து போனார். வீட்டிலிருக்கப் பிடிக்கவில்லை, ஜுன் மாதம் சென்னை வந்து திருவல்லிக்கேணியில் தங்கிவிட்டேன். கொரானா கெடுபிடி முடியவில்லை. கடைகள் பத்து மணிக்கு மேல்தான் திறக்கும். பஸ் இல்லை, சாதாரண டீக் கடையில்லை, ஐந்து மணிக்கு தெருவில் இரண்டு சக்கர வாகனத்தில்கூட போக முடியாது. ஒவ்வொரு கி.மீ.-க்கும் போலீஸ் செக் பாயிண்ட். இ.பாஸ் இல்லாமல் எங்குமே போக முடியாத நிலையில் நடமாட்டம் குறைந்த சாலைகளில் வெள்ளை யானை ஐஸ் ஹவுஸ்-சும் எய்டன், ப்ரெண்ணன், காத்தவராயன் என யோசித்தபோது மிர்சா பேட்டை மார்கெட் கடந்து, ரத்னா கஃபே பக்கம் திரும்பி, ஜாம் பஜாருக்குள் நுழைந்து அமீர் மஹால் போகும் வழியில் அப்படியே பார்த்தசாரதி கோயில், பாரதி வீடு என எங்குமே ஆட்களையே பார்க்க முடிந்ததில்லை. ஆரம்பக்கால சென்னை சினிமா வரலாற்றோடு தொடர்புடைய ஸ்டார் டாக்கிஸ்சும், வாலாஜா மசூதியும், ஆதம் மார்க்கெட்டும் வெறிச்சோடிக் கிடந்தது. இப்படியே ஒரு இரண்டு மாதங்கள் ஓடியிருக்கும். அப்படியே அமர்ந்து பின்னோக்கி காலவெளிப் பயணம் செய்தேன்.
கொரானா பெருந்தொற்று அறிவிக்கப்படுவதற்கு முன்பு Citizenship Amendment Act (CAA) National Register of Citizens (NRC) National Population Register (NPR) – சுருக்கமாக தேசிய மக்கள் பதிவேடு குறித்த அச்சம், புரளி சிறுபான்மை சமூகத்தில் பரவியிருந்தபோது மாதக்கணக்கில் ஷாஹின்பாக் போராட்டம் நடந்தது. இங்கு சென்னை வண்ணாரப்பேட்டையில் அப்படியொன்று நடந்ததை கேள்விப்பட்டிருக்கக் கூடும். கடைசியாக பிப்ரவரி 2020-ல் அண்ணாசாலையில் முஸ்லிம்கள் திரண்டிருந்தனர். பொதுவாக எந்தவொரு இடத்திலும் சார்பற்று இருக்கவும், சற்று விலகி நின்று பார்க்கவுமே பழகியிருக்கிறேன். அந்த மக்களின் கல்வி, படிப்பு, தொழில், வர்க்க, பொருளாதார, இனக்குழு பின்னணி அணுகுமுறை என்று துருவிக் கொண்டிருந்தேன். கிரானடாவில் நிகழ்ந்ததைப் போல இல்லாமல் தமிழக முஸ்லிம்கள் நன்கு assimilation ஆகியுள்ளனர். இங்கு, இந்த பண்பாட்டுடன் உட்செறிந்துள்ளனர். இருந்தாலும் இந்த நாவலை படித்த போது சின்னதொரு அச்சம் எழுந்ததை தங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
என் பெற்றோர், முன்னோர், மூதாதைகள் புதைந்த இந்த மண்ணைவிட்டு எங்கு நான் போவேன்? காலம் கடந்து பிறந்து எட்டும், ஐந்திலுமாக இருக்கும் என் பிள்ளைகள் வாழ இவ்வளவு பெரிய நாட்டில் இடமில்லாமல் போகுமா? கொரானா மறைந்து காலம் எல்லோருக்கும் நல்லவிதமாக அமையட்டும்.
கொள்ளு நதீம், ஆம்பூர் – வேலூர் மாவட்டம்
‘நீர்ச்சுடர்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
‘வெண்முரசு’ நாவல்தொடரில் 23ஆவது நாவல் ‘நீர்ச்சுடர்’. நீரை அள்ளி, வான்னோக்கிப் பார்த்து, தன் மனத்தால் அவற்றை இறந்தோருக்குச் சமர்ப்பிப்பது. ஒரு சுடரை ஏற்றி, வான்னோக்கிக் காட்டுவதுபோல இங்கு நீரையே சுடராக்கி வான்னோக்கிக் காட்டுகிறார்கள். அந்த நீர்ச்சுடரின் வெளிச்சத்தின் உதவியால் இறந்தவர்கள் தமக்குரிய மறுவுலகில் நுழையக்கூடும். இறந்தோருக்கும் இழந்தோருக்குமான ஆத்மார்த்தமான உரையாடலாவே இந்த நாவல் உருப்பெற்றுள்ளது. அதன் உச்சம் அபிமன்யூ – சுபத்திரை உரையாடல் எனலாம்.
மரணவீட்டில் எஞ்சியிருப்பது என்ன? இறந்தோரின் நினைவுகள் அவர்களோடு வாழ்ந்தவர்களின் விழிகளின் வழியாகக் கண்ணீராகக் கசிந்து கசிந்து ஆடையில் உப்புப் படலத்தை விரிக்கும். இழந்தோருக்கு ஆறுதல் சொல்லித் தேற்ற இயலாது எனத் தெரிந்தும் ஆறுதல் வார்த்தைகளைப் பொழிந்துகொண்டிருப்பர் உற்றாரும் உறவினரும் நண்பர்களும்.
மரணவீட்டின் நிகழ்வுகளைக் கண்டும் அங்குள்ளோரின் உளநிலையை உய்த்தறிந்தும் எழுதினால் அது மிகப்பெரிய உளவியல் ஆவணமாக உருப்பெறும். காரணம், அதில் இறந்தோரின் வரலாறும் இழந்தோரின் வரலாறும் சம அளவில் கலந்திருக்கும்.
இந்த ‘நீர்ச்சுடர்’ நாவல் ‘மாபெரும் மரண வீட்டின் நினைவுக்குறிப்பு’ என்றுதான் எனக்குப்படுகிறது. பாரதவர்ஷத்தின் பெரும்பகுதிநாட்டைச் சுடுகாடாக்கிவிட்டது குருஷேத்திரப்போர். பாரதவர்ஷத்தின் பெரும்பகுதிநிலமே மாபெரும் மரணவீடாகக் காட்சியளிக்கிறது. இந்த நாவலில் இறந்தோரின் நினைவுகளோடு இழந்தோரின் மனவோட்டங்களும் இணைந்து இணைந்து மாபெரும் துன்பியல்சுவையை வாசகர்களுக்கு வழங்குகிறது.
பாண்டவர், கௌரவர் ஆகிய இரண்டு தரப்புகளிலும் எஞ்சியிருப்போரே இறந்தவர்களைப் பற்றிய அதிரும் நினைவுகளை இழந்தோருக்கு ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். அர்சுணனைப் பார்க்கும்போது அபிமன்யூவின் மரணத்தை நினைவில்கொள்ள நேர்கிறது. அதனைத் தொடர்ந்த லட்சுமணனின் மரணமும் நிழலாகப் படரத் தொடங்குகிறது. போர் மரணங்கள் ஒரு சங்கிலிப் பின்னல்போல ஒன்றைத் தொட்டு ஒன்றென வெவ்வேறு அதிரும் நினைவுகளை எழுப்புகின்றன.
பெரும்பாலும் மரணவீட்டில்தான் மிகப் பல சிக்கல்கள் உருவாக்கப்பட்டு, பேசி பேசி வளர்க்கப்படுகின்றன. அதுபோலவே இங்கு அடுத்த தலைமுறைவாரிசு குறித்த பேச்சு வளர்க்கப்படுகிறது. அதுசார்ந்த மனப்போராட்டங்கள் விவரிக்கப்படுகின்றன. விஜயை தன் மகன் சுகோத்ரனிடம் (சகதேவனின் மகன்), “அஸ்தினபுரியின் மணிமுடிக்குரியவன் நீ” எனக் கூறி அவனை மன்னனாக்க விரும்புகிறாள். ஆனால், அவனோ குடியையும் குலத்தையும் தானே துறந்துவிடுகிறான்.
நாவல் ஓட்டத்தில், ஊடுபாவாகக் குருஷேத்திரப் போரின் பின்விளைவுகளைப் பற்றி விவரிக்கப்படுகிறது. ஒரு பெரும் போர் எவ்வாறெல்லாம் நாட்டைச் சீரழிக்கும் என்பதையும் எளிய குடிகள் தம் மொத்த வாழ்வையும் போரை முன்னிட்டு எவ்வாறு சிலதலைமுறை காலத்துக்கு இழக்கிறார்கள் என்பதையும் விவரித்துள்ளார் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள்.
இறந்தோர் மறுஉலகை அடைவதற்குரிய கடமைகளை இழந்தோர் தன்னைச் சார்ந்தோரின் ஒப்புதலைப் பெற்று நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. நீத்தார் கடன் – மறுவுலகு – இறந்தோருக்கும் இழந்தோருக்குமான மனப்போராட்டம் என இந்த மூன்று தரப்புகளிலும் சுழல்கிறது இந்த நாவல். ஆனால், எந்த நிலையிலும் அது வாசகருக்குச் சலிப்பூட்டவே இல்லை எனலாம். காரணங்கள், எழுத்தாளரின் எழுத்தாற்றலின் தனித்துவமும் சிறப்பும்தான்.
மகாபாரதத்தைப் பற்றி எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு ‘திசைகளின் நடுவே’ என்ற சிறுகதையை எழுதினார். அதன் பின்னர் பத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கதை, குறுநாவல், நாடகம் என்ற வடிவங்களில் மகாபாரதம் சார்ந்து எழுதியிருக்கிறார். அதில் ஒன்று ‘பதுமை’ என்ற நாடகம். இந்த நாடகம் ‘வடக்குமுகம்’ நாடகத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அந்த நாடகத்தின் நீட்சியாகவே இந்த நாவலில் சில பகுதிகள் வருகின்றன. ‘பதுமை’ நாடகத்தைப் படித்தவர்கள் அதில் வரும் சில உளவியல் சார்ந்த செய்திகளை இந்த நாவலில் உய்த்துணர முடியும்.
தன்னிடம் வாழ்த்துப்பெற வந்த பீமனைக் கொல்ல நினைத்த திருதராஷ்டிரர் பீமனுக்குப் பதிலாக இளைய யாதவரால் தன் முன்னிறுத்தப்பட்ட இரும்புப் பாவையை உடைத்தலும் பின்னர் அதைச் சரிசெய்து மீண்டும் அதைப் பாவையாக்கி, அதனைத் தன் மகன் ‘துரியோதனன்’ என நினைத்து, தழுவிக்கொண்டு துயில்தலும், இரவில் அந்தப் பாவை தன்னைக் கொல்ல முற்பட்டது என நினைத்து, அதை உடைத்தெறிதலும், மீண்டும் அதைச் சரிசெய்து அணைத்துக் கொள்ளுதலுமாக இந்த நாவலில் அந்தப் பாவை தொடர்ந்து இடம்பெறுகிறது.
என் பார்வையில் அந்த ‘இரும்புப் பாவை’க்கு உளவியல் அடிப்படையில் மூன்று வடிவங்கள் உண்டு என்பேன். அது பீமன்தான், ஆனால், அது துரியோதனனும்கூட. மிக நுட்பமாக அது விழிகள் உடைய திருதராஷ்டிரர் எனலாம்.
துரியோதனன் அந்தப் பாவையைத் தன் எதிரி பீமனாகவே கருதுகிறான். தன்னுடைய பதின் வயது உயிர்தோழன் பீமனாகவும் அதனைக் கருதுகிறான். தன்னுடைய பிம்பமாகவும்கூட அதனைக் கருதுகிறான். உண்மையில் அவன் அதில் தன்னையே உணர்கிறான், காண்கிறான்.
திருதராஷ்டிரருக்கு அந்தப் பாவை தன் மகன் துரியோதனன்தான். ஒருவகையில் அவரும் துரியோதனனும் ஒருவரையொருவர் வெறுப்பதால்தான் ‘அவன் அந்தப் பாவையின் வடிவில் தன்னைக் கொல்ல வந்ததாக’ அவருக்கு உளமயக்கு ஏற்பட்டிருக்கலாம். ‘தந்தைப் பாசம்’ அவரை இழுப்பதால்தான் அவர் மீண்டும் அந்தப் பாவையைச் செப்பம்செய்து, அணைத்துக்கொள்கிறார். அவர் ‘பெருந்தந்தை’ அல்லவா!
இந்த நாவலில் இடம்பெற்றுள்ள இரண்டு பழஞ்சொற்கள் என் மனத்தை ஈர்த்தன. அவற்றுள் ஒன்று ‘நிரத்தி’, மற்றொன்று ‘கவடி’. அவ்விரண்டு சொற்களும் இந்த நாவலில் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளன.
“நிமித்திகர்கள் கவடி நிரத்தி நோக்கினர்”
“நிமித்திகர் கவடி நிரத்தி மெய்கண்டு உரைக்க”
‘நிரத்தி’, ‘நிரத்துதல்’ என்றால், ‘பரப்பி’, ‘பரப்புதல்’ என்று பொருள். சரி, அது என்ன ‘கவடி’?
இந்தச் சொல்லைச் சிலப்பதிகாரத்தில் காணமுடிகிறது.
“வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக்
கவடி வித்திய கழுதையே ருழவன்
குடவர் கோமான் வந்தான் நாளைப்
படுநுகம் பூணாய் பகடே மன்னர்
அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும் ”
(சிலப்பதிகாரம், நீர்ப்படைக்காதை, 225-229)
வடநாட்டு அரசர்களின் நிலைபெற்ற மதிலை அழித்து. கழுதை பூட்டி ஏரினை உழுது, வெள்வரகை விதைத்தவன் குடவர் (இடையர்) நாட்டு கோமான் வந்தான். நாளை பகையரசர்களின் காற்றறையை நீக்குவதாகிய அரசன் பிறந்த நாடு பெரும்மங்கலமாகும். ஆகலின் பகடே நியும் நுகம்பூண்டு உழுவாய். விழாக்கொண்டு உழும் உழுவர்.
கவடி – வெள்வரகு. இது ‘உண்ணாவரகு’ எனவும் கூறப்படும். பகைவர் அரணையழித்துக் கழுதையேரால் உழுவித்து வெள்ளை வரகும் கொள்ளும் வித்திடுவர். இது வென்ற மன்னர் தோற்ற மன்னரின் நிலத்தை அமங்கலம் செய்யக்கூடிய செயலில் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கவடியைத்தான் நிமித்திகர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இந்த நாவலில்தான் யுயுத்ஸு பேருருக்கொள்கிறார். கௌரவர்களுள் மிக இளையவரான இவர் விதுரரைப் போலவும் கர்ணனைப் போலவும் பிறப்பால் ஓரடி விலக்கித் தள்ளியே எல்லோராலும் பார்க்கப்பட்டவர். கர்ணனைப் போலவே தன் மனைவியால் புறக்கணிக்கப்பட்டவர் யுயுத்ஸு. கௌரவர்களின் முற்றழிவில் விடிவெள்ளியாய் நின்று அஸ்தினபுரிக்கு நம்பிக்கை ஒளியாய் இருப்பவர் இவர் ஒருவரே. அவரிடமே பெரும்பொறுப்புகளைக் கையளிக்கிறார் தர்மர். அவரிடம் தர்மர் கூறுகிறார்,
“ விந்தை இதுதான். இன்று அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் உனது ஆட்சியிலிருக்கிறது. கௌரவ நூற்றுவரையும் வென்று இளைய கௌரவனாகிய உன்னிடம் மண்ணை ஒப்படைத்திருக்கிறோம். இதோ , என் ஊழையும் உன்னிடமே அளித்திருக்கிறேன் ” என்றார்.
யுயுத்ஸு , “ அதுவும் நன்றே. மண்ணுக்கான அனைத்து ப் போர்களும் மண்ணில் எப்பற்றும் இல்லாதவரிடமே அதைக் கொண்டுவந்து சேர்க்கின்றன ” என்றான்.
போர் நிறைவுற்றது இனி நீர்க்கடனுக்குப் பின்னர் இயல்புவாழ்வு திரும்பும் என்று அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த பொழுதில், அஸ்வத்தாமனின் நுதல்விழியைக் கொண்டுவந்தால்தான் போர் முடிவுக்கு வரும் என்று திரௌபதி ஆணையிடுகிறாள். அர்சுணன் தயங்குகிறான். ஆனால், உடனே, அந்த ஆணைக்கு அடிபணிந்து, பீமன் புறப்படுகிறான்.
முன்பு திரௌபதியின் அகவிருப்பத்திற்காக அகத்தால் மட்டுமே நுகர்ந்தறியும் மெய்மையின் மலர் வடிவமான ‘கல்யாண சௌந்திகம்’ என்ற மலரைத் தேடிச் சென்றான் பீமன். அந்தத் தேடல் பயணம்தான் வெண்முரசு நாவல் வரிசையில் ‘மாமலர்’ என்ற நாவல். இப்போது அஸ்வத்தாமனின் நுதல்விழியைக் கொய்துவரச் செல்கிறான்.
தன் மனைவியின் கனவினை நிறைவேற்றுபவனே சிறந்த கணவன். அவனே அவளுக்கு வாழ்நாள் காதலனாகவும் இருக்கத் தகுதியுடையவன். பெண்ணின் ஆசைகளையும் விருப்பங்களையும் மட்டுமல்ல கனவினையும் நிறைவேற்றுபவனே அந்தப் பெண்ணுக்குக் கணவனாகவும் வாழ்நாள் காதலனாகவும் இருக்க வல்லவன். அத்தகையவனைப் பெண்கள் பெறுவது அரிது.
திரௌபதிக்கு ஐந்து கணவன்கள். ஆனால், அதில் பீமன் மட்டுமே கணவனாகவும் வாழ்நாள் காதலனாகவும் இருக்கத் தகுதியுடையவன். பீமனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் போர்நிகழ்ந்தால் பீமன் அழிவது உறுதி என்பதை உணர்ந்த அர்சுணன், பீமனைக் காப்பதற்காகவே தான் அஸ்வத்தாமனுடன் போரிடுகிறான். போர் நிகர்நிலையை அடைகிறது. அஸ்வத்தாமன் தன்னுடைய நுதல்விழியைத் தானே அர்சுணனுக்கு அளிக்க முனைகிறான். அர்சுணன் அதனைப் பெறத் தயங்குகிறான். ஆனால், அதைப் பீமன் பெற்றுக் கொள்கிறான்.
இந்த நாவலில் ‘நிமித்தவியல்’ பற்றிய நீண்ட உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனாலும் கணிக்க முடியாததாகவே இருக்கிறது மானுடப் பெருவாழ்வு.
நீர்க்கடன் நிகழ்வின் போது பேரரசி குந்தி தேவி வருகிறார். பெண்கள் அங்கு வருவது முறையல்ல எனினும் அங்கு வந்து ஒரு வரலாற்று உண்மையை உரைத்துச் செல்கிறார். கர்ணனைத் தன் மூத்த மகன் என்று உரைத்து, தர்மரிடம், ‘அவனுக்கும் சேர்த்து நீர்க்கடன் செய்’ என ஆணையிடுகிறார். ‘காலங்கடந்து அறிவிக்கப்படும் எச்செய்திக்கும் எப்பொருளும் இல்லை’ என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.
திருதராஷ்டிரர் சஞ்சயனை முற்றாக விலக்கிவிடுகிறார். அவரின் மனநிலையைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அப்போது சஞ்சயனின் புன்னகை, இளைய யாதவரின் புன்னகையைப் போலவே இருக்கிறது. தெய்வம் மானுட உருவில் வருவதும் வாழ்வதும் உண்மைதான் போலும்.
இந்த நாவலில் மட்டுமல்ல ‘வெண்முரசு’ நாவல்வரிசை முழுக்கவே அதாவது, தர்மரின் பதின்பருவத்திலிருந்தே அவரிடம் ஓர் உளப்போராட்டம் இருக்கிறது. அவரின் மனம் எல்லாவற்றுக்கும் அறத்தராசினைத் தூக்கிப்பிடித்து, இல்லாத பொருளுக்கு எடையிட்டுக்கொண்டே இருக்கிறது. சமனற்ற தராசுத் தட்டுகளைப் போலவே அவரின் உள்ளம் எப்போதும் இரண்டு தரப்பாகப் பிரிந்து, அலையாடிக் கொண்டிருக்கிறது. அவரின் உள்ளத்தைச் சமன்படுத்த வல்லவர்கள் இருவர்தான். ஒருவர் இளைய யாதவர். மற்றொருவர் சகதேவன்.
பாண்டவர்கள் ஐவரில் நால்வர் புறத்தில் அலையாடுகின்றனர். தருமர் மட்டும் அகத்தில் வாழ்நாள் முழுவதும் அலையாடுகிறார். அவர் அடையும் உளப்பதற்றத்தைப் பார்த்தால், ‘ஒருவேளை அவர் தவறுதலாகத் தனக்குத் தானே நீர்க்கடன் செய்துகொள்வாரோ?’ என்று கூட எனக்கு எண்ணத் தோன்றுகிறது. அவர்பெற்ற அறமெய்மையில் அதற்கு இடமிருந்தால், அதையும் செய்யக் கூடியவர்தான் தர்மர்.
இந்த நாவல் குருஷேத்திரப் போரை வாசகரின் மனத்திற்குள் மீண்டும் நிகழ்த்தி, அதன் பின்விளைவுகளை வாசகரின் கண்களுக்கு முன்பாகவே கணக்கிட்டு, இறுதியில் கிடைப்பது இந்த ‘வெறுமை’ என்று முடிவாகச் சொல்லிவிடுகிறது. ‘ஆம்! வெறுமைதான் எல்லாம். நாம் செய்யும் எல்லாமே இந்த வெறுமைக்காகத்தான்’ என்பதை அறுதியிட்டு உரைக்கிறது இந்த நாவல்’ என்றே நான் கருதுகிறேன்.
– முனைவர் ப. சரவணன், மதுரை
இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்
‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்
கிராதம் முனைவர் முனைவர் ப சரவணன் மதுரை
சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை
‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை
‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்
‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,
‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை
‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை
‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
August 22, 2021
கவிதையை அறிதல்
நான் இயற்கையாகவே அறிவியல் சார்ந்து சிந்திக்கும் மனம் கொண்டவன். ஆயினும் கலை மனம் கொண்டவர்கள் இந்த உலகை எவ்வாறு பார்க்கிறார்கள், உணர்கிறார்கள் என்பதை அறியும் ஆவல் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக ஓவியம், கவிதை.
கவிதைகளில் உள்ள மீமொழி, படிமம் போன்றவற்றை கண்டுகொண்டு அக்கவிதைகளை மேலும் விரித்தெடுக்கும் கலை இன்னும் கைகூடவில்லை. சிறுகதைகளிலும் எனக்கு இந்த பிரச்சினை உள்ளது. அதை நான் அவ்வப்போது உங்களிடம் கேட்ட எளிய கேள்விகளிலிருந்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். சிறுகதைகளை பற்றி நீங்கள் மற்றும் பல வாசகர்கள் எழுதுவதை படித்து மெல்ல மெல்ல அவற்றை அணுகும் முறையை அறிந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது. கவிதையை அங்ஙனம் தெரிந்துகொள்ள முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் மீமொழி, படிமம் போன்றவற்றை வழிகாட்டுதலின்றி எப்படி அடையாளம் காண்பது? சில நேரங்களில் அவ்வாறு கவிதையை பற்றி எழுதப்பட்டதை பல முறை படித்த பின்னரும் எனக்கு குழப்பம் தீருவதில்லை. எடுத்துக்காட்டாக, தேவதச்சனின் “காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை” என்ற கவிதையை பற்றி எழுதும்போது, அதில் அலைக்கழிப்பை காட்டும் இரு படிமங்களும், அசைவின்மையை காட்டும் ஒரு படிமமும் உள்ளது என்று கூறிவிட்டு
மூன்றாவது படிமம் நிலைத்தகாட்சியை, அசைவின்மையை காட்டுகிறது. ஆட்டிடையன் ஒருவன் அசையும், விரையும் முகில்களையும் வண்டிகளையும் ஆடுகளையும் அசைவின்றி நின்று நோக்கிக் கொண்டிருக்கிறான். இக்கவிதையில் அசையாதது, அலையாதது ஒன்றே. அது என்ன என்று தொட்டுவிட்டால் நீங்கள் கவிஞர். கவிஞர்களே கவிதையை வாசிக்கமுடியும். [தேவதச்சன் கவிதை பற்றி]
என்று கூறியிருந்தீர்கள். அசையாத அந்த ஒன்று ஆட்டிடையனா, அவன் மனமா, வெட்டவெளியா என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!
உங்கள் தளத்தில் வந்த போகனின் கவிதைகளில் உள்ள குருவி ஒரு படிமமா? அது மூச்சை, உயிரை குறிக்கிறது என்று எனக்கு தோன்றியது. அது சரியென்றால்
ஞானி
மூச்சு
ஒரு குருவியைப் போல
மனிதர்களுள்ளே
போய்ப் போய் வருவதைப் பார்க்கிறார்.
கூட்டிற்கு
குருவி சொந்தமில்லை
என்பதை
அவர்கள் அறிந்திராதையும்
என்ற கவிதை நிலையாமையை பற்றி பேசுகிறது என்று பொருள்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. அதற்கு அடுத்த கவிதையும் (“ஜென் ஒழுங்குற மறுப்பது”), தும்பியை பற்றிய கவிதையும் அதையே குறிக்கின்றன என்றும் தோன்றுகிறது. ஆனால் அதே நேரம் இவ்வளவு தெளிவாகவா கவிஞர் கூறுவார் என்ற ஐயமும் எழுகிறது. கவிஞனின் ஒருநாள்
கவிதைகள் படிக்கும்போது சில வரிகள் என்னை கவரும்.
“வெட்டவெளியின் விரிவெலாம் நான்” (பாரதி)“காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை” (தேவதச்சன்)“காற்றென வந்தது கவிதைதான்” (போகன்)“ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்” (சுந்தர ராமசாமி)“எனக்கு யாருமில்லை நான் கூட” (நகுலன்)ஆனால் சுஜாதா இது ஒரு கண நேர பிரமிப்பு மட்டும்தானே ஒழிய ஒரு முழு புரிதல் இல்லை என்று எழுதியதாக நினைவு. முழு புரிதல் அல்லது புரிதல் போன்ற சொற்களை கவிதைக்கு பயன்படுத்தலாமா என்று தெரியவில்லை. “வெட்டவெளியின் விரிவெல்லாம் நான்” என்ற வரியை படிக்கும்போது ஏற்படும் உணர்வு அந்த கவிதையின் மற்ற வரிகளை படிக்கும்போது எனக்கு ஏற்படுவதில்லை. மற்ற எல்லா வரிகளையும் தன்னுள் இவ்வரி கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது.
மின்னஞ்சல் நீண்டுவிட்டது. மன்னிக்கவும். நான் கேட்க வந்தவை :
அ). கவிதைகளை படித்து, அவற்றின் மீமொழி, படிமம் முதலியவற்றை புரிந்து கொண்டு கவிதையை மனதில் விரித்தெடுக்கும் முறையைக் கற்பதெப்படி? கவிதைகளை படித்துக்கொண்டே இருந்தால் இது கைகூடிவிடுமா?
ஆ). இந்த மாய உலகின் வாசலில் நிற்கும் என் போன்றோர்க்கு, ஒரு தொடக்க வழி காட்டுதல் இருந்தால் நன்றாக இருக்கும். கவிதைரசனை முகாம் ஒன்று உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். பல வகைப்பட்ட கவிதைகளை எடுத்துக் கொண்டு அவற்றில்உள்ள நுட்பங்களை சுட்டிக்காட்டினால் நன்மையாக இருக்கும். சில பயிற்சிக் கவிதைகளும் இருக்கலாம்.
சிறுகதை ரசனை அரங்கு முடிந்த பிறகு, மதிய உணவு சாப்பிட்டுகை கழுவ வந்த கிருஷ்ணனை வழி மறித்து, அவர் காதிலும் போட்டுவைத்திருக்கிறேன். பார்ப்போம்!
சில ஆண்டுகளாகவே எழுதவேண்டும் என்று நினத்திருந்த மின்னஞ்சல் இது. போகனின் கவிதைகளைக் கண்ட பிறகே எழுத முடிந்தது.
நன்றி
டி.கார்த்திகே யன்
அன்புள்ள கார்த்திகேயன்,
கவிதை என்பது மீமொழியால் ஆனது. மொழிக்குள் ’செயல்படும்’ தனிமொழி. கவனியுங்கள், மொழிக்குள் ’அமைந்த’ தனிமொழி அல்ல. மொழிக்குள் அந்த தனிமொழி செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. தன்னை கணந்தோறும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. ஆகவே அதற்கு இலக்கணமோ அகராதியோ போடமுடியாது. அதை அறிய ஒரே வழி அதை தொடர்ந்து பயில்வதுதான். அதில் இருந்துகொண்டே இருப்பதுதான்.
மீமொழி என நாம் சொல்வது வழக்கமான பொருளில் அல்லாமல் கூடுதல் பொருளில் சொற்கள் பயன்படுத்தப்படுவதைத்தான். ‘நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்’ எனும் பாரதியின் வரியை அதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டுவது வழக்கம். பூக்களுக்கு நெஞ்சு உண்டா? அந்நெஞ்சில் கனல் இருக்க முடியுமா? அந்தக்கனல் மணக்குமா? அப்படியென்றால் அந்த வரி இன்னொரு பொருளைச் சுட்டுகிறது. அந்த இன்னொரு பொருளைத்தான் மீமொழி என்கிறோம். தமிழை அகராதி வழியாக அறிந்தவர்களால் அந்த இன்னொரு பொருளை அறியமுடியாது. கவிச்சூழலை அறிய அறிய அந்த இன்னொரு மொழி தெளிவடையும்.
கவிதைகளை வாசித்தல், நெருக்கமான சூழலில் கவிதையைப் பற்றிப் பேசுதல், கவிதைக் கொள்கைகளை தெரிந்துகொள்ளுதல் ஆகியவற்றின் வழியாக நாம் கவிதை செயல்படும் ஒரு சிறு உள்வட்டத்திற்குள் நுழைகிறோம். அவ்வாறுதான் கவிதையை உணரமுடியும். அதற்கு வகுப்புகள் முழுக்க உதவாது. ஆனால் கவிதைப்பட்டறைகள் ஓரளவு உதவும். தொடக்ககட்ட ஐயங்களைத் தீர்க்கும். பொதுவான அடிப்படைகளை கற்பிக்கும். அதைவிட, அங்கே பல்வேறு கவிதைகளை பலர் தொடர்ச்சியாக வாசித்துப் பொருள் கொள்வதைக் காண்கையில் நம் அணுகுமுறை கூர்மையடையும். நாங்கள் பல கவிதைப் பட்டறைகள் நடத்தியிருக்கிறோம். இப்போது காவிய முகாமில் கவிதை அமர்வுகள் சில நிகழ்வதுண்டு. ஆனால் இனி இந்தச் சிக்கல்களெல்லாம் முடிந்தபிறகே யோசிக்கமுடியும்.
ஜெ
***
தன் உருவத்தில் இருந்து மேலெழுதல்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தன்மீட்சி நூல் வாசிக்க கிடைத்தது. தங்களுடனான உரையாடலுக்குப் பிறகு அந்த நூலை வாசித்தேன். இந்த கடிதத்தை என்னை தொகுத்துக்கொள்ள எழுதுகிறேன்.
தன்மீட்சி ஒரு தலைப்பின் கீழ் நடைபெற்ற விவாதத்தின் கேள்வி பதில் தொகுப்பு நூல். இந்த நூலில் பல அடிப்படை சிக்கல்களும் அதற்கான விடையும் உள்ளன. கேள்விகள் அனைத்தும் தற்கால அடிப்படை ஐயங்களைப் பற்றியும் சிக்கல்களை பற்றியும் இருந்தன, அதற்கு நீங்கள் தங்கள் மரபில் நின்று அளித்த பதில்களின் தொகுதி இந்த நூல்.
இந்த நூல் எந்த ஒரு கேள்விக்கு அல்லது ஐயதிற்கோ அறுதியான conclusive ஆன பதில்கள் தரவில்லை. நீங்கள் உங்கள் மரபில் இருந்தோ அல்லது தங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து ஒரு பார்வையை, ஒரு திறப்பையோ காட்டுகிறீர்கள். அந்த திறப்பு ஒரு பார்வை, ஒரு கோணம். இந்த நூலை படிப்பவர்கள் அதை மறுக்கலாம் அல்லது அதை ஏற்கலாம்.
நீங்கள் உங்கள் பதில் மூலமாக ஒரு உரையாடலைத் தேடலை தொடங்கி வைக்கிறீர்கள். வாசகனின் தேடல் பொருத்து அவன் அடைவது மாறும்.
இந்த நூலின் சிறப்பு அதுவே.
நாம் வாழும் சூழல் பல சமயம் நம் பார்வையைக் குறுக்கி நம்மை செயலாற்றாது செய்துவிடுகிறது. எதை விடுவது எதை தேர்வு செய்வது என்ற அடிப்படை ஐயம் அனைவரிடமும் உண்டு. அவரவரின் தன்னறம் எதுவோ அதை நோக்கி முழு விசையுடன் செயல் புரிதல் வேண்டும்.
ஒருவனின் தன்னறம் – அவன் ஆற்ற வேண்டிய கடமை, அதை அவனே தேடி கண்டடைய வேண்டும். அவன் மீட்சி அதில் உள்ளது. தன்னை பகுத்து முடிந்த வரை தன் செயலை ஆற்ற வேண்டும. அவனுக்கு அனைத்தும் முக்கியம் எதை பொருத்தும் எதையும் இழக்கக் கூடாது.
இன்று “தட்சிணாமூர்த்தியும் கருப்பசாமியும்”, “ஆண்மையின் தனிமை” ஆகிய பதிவுகளை படித்தேன். அந்த இருபதிவுகளும் என்னை சற்று அலைக்கழித்தன. ஏன்? நான் என்னை கேட்டேன், ஒரு அச்சம் என்னுள் படர்ந்தது. – இரண்டு பதிவும் என்னை தன் மீட்சிக்கு கொண்டு சென்றது. அந்த இரு ஆளுமைகளும் தங்களை இழந்த தருணம் எது, அவர்களை கட்டற்றவர்களாக ஆக்கியது எது? அவர்களை நிலை கொள்ளாமல் செய்தது எது? அவர்கள் அடைந்திருக்க வேண்டிய நிலையில இருந்து விலக்கியது எது?
என் வாழ்விலும் சில மனிதர்கள் உள்ளனர். என் தந்தை வழி பாட்டனார், தாத்தா மற்றும் அப்பா. அவர்களின் சொல்லும் செயலும் என் வாழ்வை இந்தக் கணம் வரை தீர்மானிக்கிறது. என் பாட்டனார், பெரிய வணிகர், பெரிய முருக பக்தர் அதே அளவு கோபமும் சொல் மீதோ குணத்தின் மீதோ கட்டுப்பாடுகள் அற்றவர், கட்டற்றவர். பெண் தொடர்புகள் பல உண்டு. ஏதோ வாய்ச் சண்டையில் பாட்டி தற்கொலை செய்து கொண்டார். படிப்படியாக வணிகம் முற்றும் நின்றது.
அவரது மகன் (என் தாத்தா) தாயற்றவராக, கட்டற்று வளர்ந்தார், வருடம் ஒரு பள்ளி, ஒரு கல்லூரி என படித்தார், மிகுந்த ஆடம்பரமாக இருந்தார், இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்துள்ளார். அவர் வக்கீலாக இருந்தார். மிகவும் அறிவாளி, குண்டூசி முதல் குதுப்மினார் வரை எதைப் பற்றியும் உரை நிகழ்த்துவார். சட்டத்தை நன்கு கற்றவர். தீவிர வாசகர். அவரது கட்டற்ற தன்மை இல்லறத்தில் பல சிக்கல்களை உண்டாக்கியது. பல முடிவுகளை தகுந்த நேரத்தில் எடுக்கத் தவறிவிட்டார்.
என் தந்தையும் வக்கீலே. பல கடமைகள் இளமையிலேயே அவர் மீது வந்தது, நேர்நிலையில நின்று குடும்பத்தை வழிநடத்தினார். சுயம்பு.
நான் பிறந்த பிறகு, எனக்காகக் குடும்பத்தை எதிர்த்து வந்தார். மேலும் பல இன்னல்கள் என்னால் ஏற்பட்டுள்ளது, என் செயலால் அல்ல என் பிறப்பால். அவரின் மொத்த உழைப்பும் வாழ்வும், நானே, என் முகமே. அவருக்கு ஒரு துளியும் ஐயம் இல்லை, தவற விட்டதை எண்ணவில்லை.
நான் சிறுவயது முதல் தனியாக வளர்ந்தவன், தம்பி வரும்வரை. கேலி, கிண்டல், சீண்டல், வலி, என நினைவு தெரிந்த முதல் என் வாழ்வு உள்ளது. பிறர் என்னை பார்த்த பார்வையில், ஒரு எச்சரிக்கை உணர்வு, ஏளனம், இரக்கம் இருக்கும். சக மனிதனாக அந்த விழிகள் பார்க்காது. பல இரவுகள் தருணங்கள் அழுது கழித்துள்ளேன்.
ஒருவரின் உருவம் பேச்சு பிறப்பு அவர் சார்ந்ததல்ல, ஆனால், அந்த ஒரு காரணம் அவரையும் அவரை நேசிக்கும் உள்ளங்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றுவது என்று தெரிந்தால நிகழ்வது யாது? சுயவதை, எதைத் தொட்டாலும் தன் மீதே குற்றம் சுமத்துதல் என நீளும். என்னுடைய early Teenage அத்தகையது.
ஒரு கட்டத்தில் ஒன்றை உணர்ந்தேன் பிறப்பு தன்னை சார்ந்தது அல்ல என்று. முதல் முதலாக நான் என்னை மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தேன். எனக்காக உலகை எதிர்க்கும் ஒருவர் உள்ளார், அன்பை பகிர உள்ளங்கள் உள்ளன. என் உலகம் விரிவானது, இலக்கியம், ஓவியம் கல்வி என என்னை நானே பகுத்துக் கொண்டு செயல் ஆற்றினேன், ஆற்றுகிறேன்.
என் பாட்டரும், தாத்தாவும் தவறவிட்டது அவர்களது தன்னறத்தை. என் தந்தை அவரது தன்னறத்தை ஆற்றினார். அவரால் ஆற்றப்பட வேண்டிய, ஆற்றக்கூடிய, தன் ஆற்றலை மீறி ஆற்றுகிறார். ஏன் ஆற்ற வேண்டும், தன்னலமாக இருக்கலாமே என்ற கேள்வி அவரிடம் எழுத்திருக்கலாம், ஆம் எழுந்து இருக்கும், அதை அந்த ஒரு கணத்தை கடந்து வந்து தான் அனைதையும் செய்திருப்பார்.
என் சுதர்மம் நேர்பட எழுவதும், சிந்திப்பதும் மட்டுமே, ஆம் அது மட்டுமே. என் பாட்டரும் தாத்தாவும் கருப்பண்ணசாமியாக சந்நதம் கொண்டு ஆடிவிட்டனர். என் தந்தை தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து உள்ளார். நான் அவரின் கருப்பண்ணசாமி ரூபம்.
இந்த எண்ணம் ஒரு புறம் ஊக்கமளித்தாலும், மறுபுறம் ஐயம் கொள்ள செய்கிறது. தன்மீட்சி, இந்த ஐயத்திற்கான ஒரு திறவுகோலை எனக்கு அளித்துள்ளது, பகுத்து, விடுத்து, எல்லைக்கு உட்பட்டு செயல்படுதல் வேண்டும். அந்தந்த பாத்திரத்திற்கான செயலை செய்ய வேண்டும். தன்மீட்சி constructive thought and action பற்றி விவரிக்கிறது. இப்பொழுது நான் மாணவன், கல்வி கற்பது என் செயல். அதில் நான் தெளிவாக இருக்கவேண்டும். இனிவரும் காலங்களில் வாழ்வின் அடுத்த அடுத்த நிலைகளில் எனக்குழப்பங்கள், ஐயங்கள் வரலாம், அப்பொழுது தன்மீட்சி எனக்கு துணை நிற்கும். அதில் எந்த ஐயமும் இல்லை.
கடிதம் சற்று நீண்டு விட்டது, மன்னிக்கவும். இந்த கேள்விகள் நான் வளர வளர என்னுடன் வளர்கிறது. முடிந்த வரை தொகுத்துக்கொள்ள முயன்றுள்ளேன். நான் என்னுடைய வாசிப்பை தேடலை இதை ஒட்டி ஆரம்பித்து தன்மீட்சி வரை வந்துள்ளேன். என் புரிதலில் தவறு இருப்பின் சுட்டிகாட்டவும் திருத்திக் கொள்கிறேன்.
இப்படிக்கு
சோழராஜா
***
அன்புள்ள சோழராஜா,
இதற்கெல்ல்லாம் அப்பால் உள்ளது ஊழ். ஒருவரின் பிறப்பை தீர்மானிப்பது அது. உங்கள் மூதாதையரின் செயல்களால் அவ்வாறு அமைந்தது என்று எளிமையாகச் சொல்வார்கள். நான் அது அவ்வளவும் நேர்கோடு என நினைக்கவில்லை. ஆனால் அடிப்படைகள் நம் தெரிவில் இல்லை என்றே நினைக்கிறேன்.
நேற்று ஒரு மருத்துவ நண்பர் சொன்னார். இந்தியாவில் பிறந்த ஒருவர் இயல்பாகவே காசநோய் தொற்றுக்கு ஆளாகிறார். இங்குள்ள துப்பும் பழக்கம் காரணம். விளைவாக இளம்பிள்ளைக் காசம் வருகிறது. அதற்கான தடுப்புமருந்துகள் அளிக்கப்படுகின்றன. அவருடைய முதுமையின் பல உடல்நிலைச் சிக்கல்களை அவை உருவாக்கிவிடுகின்றன. தப்பவே முடியாது. இந்தியாவில் பிறப்பது நம் கையில் இல்லை அல்லவா?
உருவம் அளிக்கும் சவால்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அவை அறிவார்ந்த செயல்கள் வழியாக, அதில்நிகழும் சாதனைகள் வழியாக கடந்து செல்லத்தக்கவை. ஒருவன் தன்னை பயனுள்ளவனாக, வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவனாக உண்மையாக உணர்ந்தானென்றால் அவன் உலகை வென்றவனே. அவனுக்கு பிறர் பொருட்டே அல்ல. அதற்கான எல்லா வாய்ப்புகளும் உங்களுக்கு உள்ளன. அவ்வகையில் நீங்கள் நல்லூழ் கொண்டவர். அவ்வண்ணம் வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் அமைந்தவர்.
அதற்கும் அப்பால் ஒன்றுண்டு, உங்கள் நாற்பது அகவைக்குமேல் ஆன்மிகமான இன்னொரு தளத்தை அடைவீர்கள். அங்கே இதெல்லாமே அபத்தமான சிறுவிஷயங்களாக தோன்றும். இன்னும் பல்லாண்டுகள் இருக்கின்றன.
உங்கள் தந்தைக்கு வணக்கம்
ஜெ
ஆயுர்வேதம் அறிய
சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சித்தர் மரபு, தத்துவ மரபு, என சில நேரங்களில் இந்நூல் பேசுபொருளுக்கு வெளியே சென்று, ஆயுர்வேதத்திற்கான சான்றுகள் ஏதேனும் இருக்கிறதா என ஆராய்கிறது. ஒருசில குறிப்புகள் கிடைக்கின்றன அவ்வளவுதான். அதற்காக இவ்வளவு தேடல் தேவையா என்கிற கேள்வியும் உருவாகிறது.
ஆயுர்வேதம் அறிய ஒரு ராஜபாட்டை:திரிதோஷ மெய்ஞான தத்துவ விளக்கம் – டாக்டர் இல .மகாதேவன்
உச்சிக்கிழான் எழில் – கடலூர் சீனு
இனிய ஜெயம்
கடந்த ஞாயிறு காலை நடுவீரப்பட்டு நண்பர்களுடன் கோயில் பண்பாட்டில் துலங்கும் சௌரத்தின் தடங்கள் சிலவற்றை கண்டு வருவோம் என முடிவு செய்து கும்பகோணம் நோக்கிக் கிளம்பினேன்.
ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டில் ஷண்மத சங்கிரஹ அடிப்படையில் சங்கரர் ஒருங்கிணைத்த ஆறு மதங்களின் தமிழ்நாட்டுக் கலை வெளிப்பாட்டினை, அதில் சௌரத்தின் முதற்கடவுளை, அதே ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டில் எழுந்த திருச்சி மலைக்கோட்டை பல்லவர் குடைவரையில் பார்க்கலாம். தமிழ்நாட்டின் ஒரே மிகப்பெரிய நின்ற திருக்கோல ஆதவன் சிலையை அந்தக் குடைவரையில் காண்கிறோம்.
அதன் பிறகு மெல்ல மெல்ல சிவசூரியர் வழியே சைவத்தாலும் சூர்ய நாராயணர் வழியே வைணவத்தாலும் உட்செறிக்கப்பட்டு அவற்றின் ‘உள் மெய்’ கட்டமைப்பில் சௌரம் சென்றமைய, திருக்காட்டுப் பள்ளி போன்ற சில சிவாலயங்களில் சூரியன் தனி சந்நிதி கொண்டு எழுந்தருளக் காண்கிறோம். அத்தகு சில சௌரத் தடங்களைக் கண்டு வருவோம் எனப் புறப்பட்டோம்.
முதல் நிறுத்தம் வீராணம் ஏரி. தமிழ்நாட்டின் பெருமிதங்களில் ஒன்றான சிரஞ்சீவியான சோழக் கொடை. இன்னும் சில தினங்களில் ஆடிப்பெருக்கு. இவ்வேரிக்கு நீர் வந்து நிறைக்கும் தடமெலாம் மங்கலம் திகழும். வந்தியத்தேவன் குதிரை செலுத்திய தடத்தில் பொலிரோவில் மெல்ல ஊர்ந்தபடி வலது பக்கம் வேடிக்கை பார்த்தபடியே சென்றோம். காலை 8 மணி, சாம்பல் மேகம் போர்த்திய ஊமை வெயிலில் வெள்ளி மின்னும் பரப்புடன் ஏரி. கரைகளில் அங்காங்கே உறைந்து நிற்கும் படகுகளைக் கடந்து அக்கரை நோக்கிப் பறக்கும் கொக்குகள். எதிர்க்கரைப் பசுமை விரிவு. பார்க்கப் பார்க்க அகம் விரியவைக்கும் விரிவு. சற்று நேரம் இறங்கி நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, அடுத்து அருகே இருக்கும் அவ்வளவாக வெளியே தெரியாத, மிக அழகிய சோழக்கலை மேன்மைகளில் ஒன்றான 1110 இல் குலோத்துங்க சோழனால் எழுப்பப்பட்ட மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் சென்றடைந்தோம்.
தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில். அப்போதுதான் அர்ச்சகர் வந்து கோயிலைத் திறந்தார். மிகச்சிறிய மிக அழகிய தேர்வடிவக் கோயில். தமிழ் நிலத்தில் விமானம் கருவறை ஆதிட்டானம் உள்ளிட்ட மொத்த அமைப்பும், சக்கரங்கள் பூட்டி குதிரைகள் இழுக்கும் தேர் வடிவில் அமைந்த (கரக் கோயில்) ஒரே கோயில் இது மட்டுமே. விமான வடிவம், பஞ்சாரக் கூடுகள், யாளி வரிசை, போதிகை, கபோதங்களின் சிற்ப வரிசை, இவை எல்லாமே அமைந்த விதம் பிற சோழக் கோயில்கள் போலல்லாது, கிட்டதட்ட கர்நாடகா இத்தகி மகாதேவர் கோவில் விமானம் போன்ற அமைப்பு. அங்கே சோப் ஸ்டோன் கல்லில் வடித்த வடிவங்களை இங்கே கருங்கல்லில் முயன்று பார்த்ததை போல ஒரு வகைமை.
விஷ்ணு, அவரின் கீழே கருடன், கங்காதரர், (மிக அழகான இந்தப் படிமையில், கலைஞன் சிவ சக்தியின் காதல் நாடகம் ஒன்றை வடித்திருக்கிறான். நாதன் தலையில் வந்து சேரும் கங்கை கண்டு, நாதனுடன் ஊடல் கொண்டு உமை அத் திருவிளையாடலுக்கு பாராமுகம் காட்டி நிற்கிறார்) ஆலிங்கன மூர்த்தி என ஒவ்வொரு சிற்பமும் பேரழகு. அருகே தேவேந்திரன். இந்திரன் வந்து ஈசனை வணங்கிய தலம். மூலவர் அமிர்த கடேஸ்வரர், அன்னை மின்னல் நாயகி. சங்க காலத்தில் புகழ் கொண்டு விளங்கிய இந்திர வழிபாடு, மெல்ல சைவத்துள் சென்று கரையும் தடம் என இக்கோவிலை அணுகலாம். இந்திரனின் அமுதமும் மின்படையும் சிவமும் உமையும் என்றாகும் தலம். மெல்லக் கோவிலைச் சுற்றி வருகையில் கண்டேன். ஜேஷ்டா தேவிக்கு ப்ரகாரத்தில் சிலை. முற்றிலும் சேலை சுற்றி. முகத்தை மட்டும் ஏன் விட்டு வைத்தார்களோ. அவ்வாறே தக்ஷிணாமூர்த்தி, மகிஷாசுர மர்த்தினி. எல்லா அழகிய மேன்மைகளும் முகம் மட்டும் காட்டி துணிப் பொதிவுக்குள் பதுங்கிக் கிடந்தன. ஒவ்வொரு பிரதிமையாக பார்த்துவிட்டு, சிவ சக்தி இணையை தரிசித்துவிட்டு, எங்களின் அடுத்த இலக்கான சூரியனார் கோயில் மற்றும் திரு நாகேஸ்வரம் கோயில் நோக்கி நகர்ந்தோம்.
இந்த இரண்டு கோயில்களில் முதற் கோயிலான சூரியனார் கோயில் முந்தைய கோயிலுக்கு இணையாகவே கிபி 1110 வாக்கில் குலோத்துங்க சோழனால் எழுப்பப்பட்ட ஒன்று. மூலவராக சூரியன் சாயா மாயா தேவியுடன் அருள்பாலிக்க இன்றும் வழிபாட்டில் இருக்கும் இந்தியாவின் அபூர்வ சூரியனார் கோயில்களில் ஒன்று. கொனார்க் முதல் இந்த சூரியனார் கோயில் வரை ஒரே ஐதீக கதைதான். ரிஷியோ அரசரோ குஷ்டம் போன்ற தனது நோய் நீங்க சூரியனை வழிபட்டு நலம் பெற்ற கதை. இக்கோயிலில் மற்றொரு சுவாரஸ்யம் உண்டு. தமிழ் நிலத்தில் முதல் நவக்கிரக சந்நிதி எழுப்பப்பட்ட கோயில் இதுதான். தில்லை தெற்கு கோபுரத்தின் முதல் நிலையில் அமைக்கப்பட்ட நவக்கிரக மூர்த்தி வடிவங்களே இந்த வரிசையின் முதல் மூர்த்தங்கள் என்கிறார் ஆசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன். இந்த சூரியனார் கோயிலில் சூரியன் கருவறையை சுற்றி உப மூர்த்திகளாக பிற கிரகங்களின் சன்னிதி, கிருஷ்ணதேவ ராயர் காலத்தில்தான் எழுப்பப்படுகிறது. அதன் பிறகே பிற சிவாலயங்களில் நவக்கிரக சந்நிதி வழிபாடு என்பது பரிணமித்து வளர்ச்சி கொள்கிறது.
அடுத்த கோயிலான திருநாகேஸ்வரர் கோயில் ஒரு பேராலயம். சைவ மரபின் அத்தனை ஓடைகளுக்குமான கலை வடிவங்களையும் இங்கே காணலாம். இக்கோயிலில் வட கிழக்கில் சூரியனுக்கு தனி சந்நிதி உண்டு. பிரபஞ்சத் தேரில் ஏறி நடராஜன் ஆடும் நடனம் என தனித்துவமான கான்செப்டில் அமைந்த சந்நிதி. தேர் சக்கரங்களில் பன்னிரு ஆரக்கால்களிலும் பன்னிரு ஆதித்யர்கள், தேவ கோஷ்டங்களில் பாஸ்கரன், பானு மூர்த்தி என சூர்ய வடிவங்கள் கொண்ட மொத்த சந்நிதியும் குதிரைகள் இழுக்கும் தேர் போல அமைந்த கோயில்.
ஆனால் நிகர் அனுபவத்தில் இந்த இரண்டு கோயிலையும் இன்று சென்று கண்ட அனுபவத்தை, இனி வரும் காலங்களிலும் துர்க்கனவு ஒன்றாகவே நினைவில் கொள்ள முடியும். திருநாகேஸ்வரர் கோயில் புனருத்தாரண பணிகள் நடந்து வருகிறது. ராஜ கோபுரம் முதல் கருவறை வரை எங்கெங்கும் பச்சைத் தட்டி கொண்டு மறைத்து சாரம் கட்டி பெயின்ட் வேலைகள் நடைபெற்று வருகிறது. கோயிலுள் எங்கும் கால் ஊன்றி நிற்க இடமே இன்றி, தரையெங்கும் ப்பாக்கள், கட்டுமான தட்டுமுட்டு சாமான்கள். அடித்த சிமின்ட் மேல் பொழிந்த நீர் அருவிகளின் சிற்றோடைகள்
மொத்த வளாகமும் ஒரு சின்ன இடைவெளி கூட இன்றி உள்ளும் புறமும் அகப்பட்ட தூண்கள் சிற்பங்கள் எல்லாவற்றையும் ஆப்பாக்கி சாரம் கட்டப்பட்டு, குறுக்கே மின்சார ஒயர்கள் இழுத்தபடி ஏதேதோ மோட்டார் ஓட, வெளிப் பிரகாரம் மொத்தமும் இனி கோயிலை நிறைத்து மூடப்போகும் பக்தாள் நிழலுக்கான தகரத் தட்டிகள், கூண்டுப் பாதைகள், எவர்சில்வர் தடுப்புகள் என எங்கும் கால் வைக்க இடமின்றி ஏதேதோ குவிந்து கிடக்க, நாயக்கர் மண்டப ஓரத்தில் ஜல்லி மணல் பொதியையும் நிரப்பி வைத்திருந்தார்கள். இவற்றுக்கு எல்லாம் மேலே வெல்லத்தின் மேலே மொய்க்கும் எறும்புகள் போல பக்தர்கள்.
ஆதீன நிர்வாகத்தில் உள்ள சூரியனார் கோயிலோ ஒரு மாபெரும் நரகக் குழியன்றி வேறில்லை. மூன்றடுக்கு ராஜ கோபுரத்தைக் காணவே வகையற்று மூடி நிற்கும் மாபெரும் தகர மற்றும் நீல வண்ண பிளாஸ்டிக் கூரை மண்டபம். இரு புறமும் நேர்ச்சைக்கான தொட்டில்கள் வண்ண வண்ணக் கயிறுகள் இதர குப்பைகளை விற்கும் கடைகள். டைனோசர்கள் போல அதற்குள்ளிருந்து கிளம்பி வந்து நம்மை மோதி மிதித்து ஒரு எட்டு கூட எடுத்து வைக்க விடாமல் கடித்துப் பிழியும் வியாபாரிகள், கடந்து ராஜ கோபுரம் கடந்தால் உள்ளிருந்தும் எதையுமே காண முடியா வண்ணம், முற்றிலும் தட்டி போட்டு மூடிய உள் பிரகாரம்.
கண்படும் எல்லை எங்கெங்கும் தடுப்பு வேலிகள் வழியே சந்நிதிகள் நோக்கி உருவாக்கிய புதிர் வழிகள், அசட்டு நீலத்தில் சுவர்களுக்கும் பீ மஞ்சளில் விமானங்களும் வண்ணங்கள் பூசிய சந்நிதிகள், மையத்தில் சூரியனார் கருவறை. வெள்ளை யானை நாவலில் ஏய்டன் சாரட் வண்டியை சுற்றி குவிந்து நெருக்கும் பஞ்சப்பராரிகள் போல, கருவறையை குவிந்து நெருக்கி பரிகாரம் செய்ய வந்த பாவிகள். சுற்றுப்புற பிரகார மண்டபம் முழுக்க ஆயுஷ் ஹோமம் போன்ற ஹோமங்கள் வரிசை, புரோகித கூப்பாடு, பரிகாரம் செய்ய வந்த பாவிகளின் கூச்சல், நெருப்பு வரிசை, கரி படிந்த விதானங்கள், பேரோலம்… என நெருப்புக் குழி கண்விழித்த நரகத்தைக் கண் முன் கண்டேன்.
இவர்கள் எவரும் பக்தர்கள் இல்லை. இவர்களை பக்தர்கள் என்று சொன்னால் ஆழ்வார்கள் நாயன்மார்கள் அனைவர் தலையிலும் சென்று சூட்டும் அவமானம் அது. இவர்கள் எல்லாம் ஜோதிடர் சொல் கேட்டு வந்த செய்த வரப்போகும் பாவம் நீக்க வந்த பாவிகள். இவர்களுக்கு கடவுளோ, பக்தியோ, ஆத்மீகமோ, வரலாறோ பண்பாடோ ஒரு பொருட்டே இல்லை. நாளையே ஒரு முட்டாள் ஜோதிடன் சூரியனார் கோயில் மொத்தத்தையும் தீயிட்டு கொளுத்தி விடு நீ வழக்கில் வெல்வாய் என்று இவர்களில் ஒருவனுக்கு பரிகாரம் சொன்னால் இவர்கள் நிச்சயம் கோயிலை கொளுத்திவிடுவார்கள். இன்றைய இந்துமதத்தின் பண்பாட்டில் படிந்த நச்சு, பிரிவினைவாத இந்துத்துவ அரசியல் என்றால், எழுந்த கேன்சர் கட்டி இந்த ஜோதிடர்களும், அவர்களால் வந்து குமிந்து கோயில் பண்பாட்டை நாசமாக்கும் இந்தப் பாவிகள் கூட்டமும்.
ஒரு பண்பாடு எப்போது ‘எழும்’ எனில் அது தனது மேன்மைகள் மீது கொண்ட அறிதலில், அதில் விளைந்த காதலில், அதில் எழுந்த பெருமிதத்தில், அதன் முகமான தன்னம்பிக்கையை கைக்கொள்ளுகையில். ஒரு பண்பாடு எப்போது வீழும் என்றால் அப் பண்பாடு பேசும் கலை, தத்துவம், மெய்யியல் எது குறித்தும் எந்த போதமின்றி, மனிதர்களை கொன்றுண்ணும் ஜோம்பிகள் போன்று, ‘சராசரிகளால்’ அப்பண்பாடு பண்பாடு என்பதை ‘பயன்பாடு’ என்று மட்டுமே கண்டு, நுகர்வு, பேராசை, எதிர்பார்ப்பு என்பதை மட்டுமே இலக்காக கொண்டு கொன்று உண்ணப்படும் போதே. இந்த இரு கோயில்களும் இவற்றின் வாழும் சாட்சியங்கள். ஆலயங்கள் எவருடையவை? விவாதத்தில் நீங்கள் சுட்டிக்காட்டிய ஒவ்வொரு எதிர்நிலைக் கூறுகளும் களிநடனம் புரியும் களம். நிற்க.
வெளியேறி, நேரம் உச்சிப்பொழுது கடந்துபோனதால், கார்போன போக்கில், கைகாட்டிப் பலகை சுட்டிய திக்கில் எல்லாம் பயணித்து பல்வேறு கோயில்களின் ராஜகோபுரங்களை தரிசித்தபடியே சென்றோம். நண்பர் மோகமுள் காவிரில குளிப்போமா என்று துவங்கிவைக்க, வழியில் ஒருவரிடம் காவிரியில் குளிக்க அருமையான இடம் ஏதும் உண்டா என்று கேட்டோம். அவர் ஜல ஜலன்னு தண்ணி ஓடுது என்று வழி காட்டிய இடத்தில், தேடிச்சென்று கண்டவிடத்து குடமுருட்டி கும் மென்ற அமைதியில் வில்வப் பச்சையில் தேங்கி நின்றிருந்தது. கும்பகோணத்துல ஜல ஜலன்னா இதுதான் போலசார் என்றார் நண்பர் சோகத்துடன். பேசாம யமுனாவை தேடிருக்கலாம் என்றார் மற்றொரு நண்பர்.
அதில் துவங்கி திஜாவை எந்த எல்லைவரை ‘கும்மோண’ எழுத்தாளர் என்று சொல்லலாம் என்ற வகையில் உரையாடல் வளர்ந்தது. நான் முன்வைத்த எளிய வரையறை திஜா படைப்புகள் கையாளும் அகத்துறை ஜல ஜலாக்களில் எந்த எல்லைவரை கும்பகோணத்தின் வரலாறும் பண்பாடும் தொழில்படுகிறது என்பதைக்கொண்டே அதை மதிப்பிட முடியும் என்றேன். அப்படிப்பார்த்தால் திஜா கும்மோண ஜலஜலாவெல்லாம் இல்லை வெறும் ஜலஜலாதான். இப்படியே சென்று அங்கேயே சற்று நேரம் இலக்கியத்தை குடமுருட்டியில் நனைந்து பிழிந்து காயப்போட்டுவிட்டு கிளம்பி, பழைய பாலக்கரையில் ஸ்ரீ மடம் கும்பகோணம் டிகிரி காப்பி ஸ்டால் கடை கண்டு பொலிரோவை ஓரம் கட்டினோம். கும்பகோண ஜலஜலா போலன்றி நன்றாகவே இருந்தது காப்பி. முடித்து அங்கிருந்து தாராசுரம் சென்றோம்.
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் சுற்றி சௌரம் உருவாக்கிய சமூக வாழ்வின் தடத்தை இன்றும் காண முடியும். தேவிக் கோட்டம் இருக்கும் தெருவில் இன்னமும் பட்டுநூல்காரங்க என்று விளிக்கப்படும் சௌராஷ்டிரா சமூக குடும்பம் சில உண்டு. தேடிச் சென்றால் இன்றும் அருமையான நேர்த்தியான பட்டுப்புடவைகளை அடக்க விலையில் அவர்கள் வீட்டில் வைத்தே விற்பதைக் காணலாம். சோழர் காலம் தொட்டு அவ்வப்போது புலம்பெயர்ந்து இங்கே அமைந்த இந்த சமூகத்தின் எஞ்சிய இவர்கள் இப்போது இங்கே செய்யும் இவ்வணிகத்தில் மோசடி இல்லை இடைத்தரகு இல்லை. வணிகத்துக்காக அன்றி மெய்யாகவே உளப்பூர்வமான உபசாரம் செய்யக் கூடியவர்கள். வெளியே ஒரு சுற்று சுற்றிவிட்டு கோவிலுக்கு சென்றோம். ஐராவதேஸ்வரர். பெயரிலேயே இந்திரனின் வாகனம் சிவ வடிவில் ஐக்கியம் கொள்ளும் தடத்தைக் காணலாம். ஆதித்த சோழன், ராஜேந்திர சோழன் என சூரியன் இந்திரன் இவர்கள் ஏதோ வகையில் சோழ மரபில் ஆழப் பிணைந்தே இருப்பதைக் காண்கிறோம்.
கோவிலுக்குள் நுழைந்தால், இடதுபுறம் ராஜகம்பீரன் திருமண்டபத்தின் சுற்றுச்சுவர் மூலையில் இந்தியாவின் ஒரே ஒரு சிற்பமான அபூர்வமான சிவ வடிவைக் காணலாம். அர்தனாரி சிவ சூரியன். அருகிலேயே அரவு ஆட்ட வல்லான். பிக்ஷாடன மூர்த்தியாக வந்து தாருகா வனத்தின் ரிஷி பத்தினிகளை சிவன் கவர்ந்து செல்ல, ரிஷிகள் யாகம் வளர்த்து, நஞ்சு கக்கும் பாம்புகளை எழுப்பி சிவன் மீது ஏவுகிறார்கள். அந்த அரவங்களை அணியாகப் பூண்டு அரன் ஆடும் நடனம். யோக நோக்கில் அவர் உடல் தழுவும் ஒவ்வொரு நாகங்களையும் குண்டலினியின் ஒவ்வொரு நிலையாகக் கொண்டு, இச்சிலையை யோக நிலை ஒன்றின் கலை வெளிப்பாடாக விளக்குவோரும் உண்டு.
நடந்து சில படிகள் உயர்ந்தால், சரபேஸ்வரர் சந்நிதி. உலகில் முதலில் கிடைக்கப்பெற்ற ஆளரி சிற்பம் ஜெர்மனியில் ஒரு குகையில் கண்டெடுக்கப் பட்டது. மம்மோத் தந்தத்தில் செய்யப்பட்ட ஆளரி. மானுடத்தின் ஒட்டுமொத்த ஆழ் உள்ளத்தின் பிரதிமை இந்த ஆளரி. மேற்குலகு அபிரகாமிய மதங்களின் எழுச்சி வழியே இத்தகு ஆழுள்ளத் தொன்மங்களை இழந்தது.
அத்தகு மானுடப் பொதுவான ஒட்டு மொத்த மானுட ஆழ் மனதின் தொன்மங்களின் பரிணாம வளர்ச்சி என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ள, இன்று மானுடத்துக்கு இருக்கும் ஒரே வாயில் இந்தியா மட்டுமே. மிகச் சிறிய கோயில்களில் கூட நரசிம்மர் வழிபாடு உண்டு, சிற்பக்கலை முதல், உபாசனை வழியிலான ஆத்மீக சாதகம் வரை இன்று இங்கே நரசிம்மர் உயிரோட்டமான செயல்பாட்டில் உள்ளவர். இதோ இந்த சரபேஸ்வரர், கர்வம் கொண்ட நரசிம்ம அவதாரத்தின் கர்வத்தை அடக்க வந்த சிவனின் தோற்றம்.
சரபேஸ்வரர் சந்நிதியில் நின்று பார்த்தால், ராஜகம்பீரன் திருமண்டபத்தின் குதிரைகள் தேரை இழுக்கும் உத்வேகத்தில் அந்த மண்டபம் உயிர்கொள்ளத் துவங்குவது போல உளமயக்கு அளிக்கும். சோழர் கலையின் உன்னதங்களில் ஒன்று இந்தத் தேர் மண்டபம். கட்டப்பட்ட காலம் சூழல் துவங்கி பின்னோக்கி சென்றால், கொனார்க் வரை இந்த தேர் வடிவம் எனும் கரக்கோயில் கான்செப்ட் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்தே வடக்கு நோக்கி சென்றிருக்க வாய்ப்பு மிகுதி என்று சொல்ல முடியும்.
திருமண்டபத்தில் சொல்லிச் சொல்லி வியந்து, பார்த்துப் பார்த்து மாய வேண்டிய அழகிய படிமைகள் குறித்த அனைத்தையும், கங்கை அன்னை படிமை முதல், நாயன்மார்கள் கதைச் சிற்ப வரிசை வரை தனது ‘தாராசுரம் ஐராவதேஸ்வரர்’ நூலில் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் விரிவாக விளக்கியிருக்கிறார்கள். அந்நூல் குடவாயிலின் பல நூல்கள் போலவே இன்று ஒரு பொக்கிஷம். மாலை மயங்கும் வரை ஐராவதேஸ்வரர் அருள் வளாகத்தில் திரிந்திருந்துவிட்டு, வேறொரு நாள், வேறொரு பயணத்துக்கான கனவுகளை விவாதித்தபடியே மெல்லிய மழையில் இரவு அனைவரும் இல்லம் மீண்டோம்.
கடலூர் சீனு
அன்னை என்பது…
என் சமர்ப்பணங்கள்.
மிக பெரிய தயக்கத்திற்குப்பிறகு நான் எழுதும் முதல் பதிவு இது.
என் தாயிடம் கொண்ட வேற்றுமையால், அந்த உறவை முழுவதும் மிச்சமின்றி வெறுத்த பின் மறுபடியும் அன்னை எனும் மரபை நான் உங்கள் வழியாகத் தேடி உணர்ந்தவற்றை இங்கு தொகுத்துக்கொள்ள இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
உளம் கொதித்த நாட்களின் என் மனச்சித்திரம் இந்த பதிவின் நோக்கத்தை கூர்மையாக்கும். இந்த உலகமும் அதன் சமூகமும் சில உறவுகளையும், அதன் மேல் கொள்ளும் உணர்வுகளையும் பொய்யான அதன் களிப்பிற்காக வளர்த்து எடுக்கிறது. அதன் உச்சம் தாய்மை. இந்த தாய்மையை கவிஞரும், எழுத்தாளனும் காலம் காலமாக வளர்த்து எடுக்கின்றனர் எனும் எண்ணம் மேலோங்கி இருந்த தருணம். பரிமாணத்தில் மிருகமாகவே நீடிக்கும் மனிதனின் மிக பெரிய சுய ஏமாற்று அது.
நீலியும், யக்ஷியும், குந்தியும், திரிந்து அலையும் உங்கள் எழுத்தினுடே பயணித்து இருப்பினும் எனக்கு என் வாழ்வின் சில நிகழ்வுகள் மேலும் சில கசப்புகளை தாய்மை மேல் ஏற்றியது.
இராஜைபளையம் என் ஊர் என்பதால் நாயுடன் என் உறவு மிக நீண்டது. முன்னர் நாங்கள் வளர்த்த Bobby தான் ஈன்ற நான்கில் ஒரு குட்டியை உண்டதை நான் என் சிறுவயதில் கண்டதை மிக ஒவ்வாமையுடன் நினைவு கொண்டேன். பிள்ளை தின்னும் தாய். இது நாய்கள் மட்டும் இல்லாமல் சிங்கம், நீர்யானை, மீன்கள் என நீள்கிறது. அதை Filial Cannibalism என அறிவியல் அழைக்கிறது. Bobby மிச்சம் இருந்த குட்டிகளை நான் அருகில் செல்லும் பொழுது என்னை பார்த்து உறுமியும், என்னைக் கடிக்க வந்தும் பாதுகாத்து கொண்டது. புரியாத ஒரு உளநிலை.
அதன் பொருட்டு தாய்மை குறித்துத் தேடித் தேடி படித்த பொழுது கிடைத்தவை எல்லாம் தாய் என்னும் ஒரு மரபின் அடையாளங்கள் மட்டுமே என முடிவு செய்தேன்.
இதை பற்றிய தேடலில் Matriphagy எனும் மற்றொரு இயற்கையின் தாய்மை அடையாளத்தை கண்டேன். பாலை நிலத்தில் வாழும் சில சிலந்திகள் (Stegodyphus Lineatus, Amarobius Ferox), சில புழுக்கள் இந்தப் புரிந்து கொள்ள முடியாத தாய்மையின் மறுமுக செயலில் ஈடுபடுகின்றன. வலைகளை பின்னித் தன் நூற்றுகணக்கான முட்டைகளை இட்டு காத்திருக்கும் இந்த உயிர்கள், அவை பொரித்து வெளி வந்தவுடன் அவை உண்பதற்காக பல பால் முட்டைகளை இடுகின்றன. குட்டிகள் அதை உண்டு வளர்கின்றன. முதல் தோல் உதிர்வு காலத்தை அவை தாண்டியவுடன் அந்த குட்டிகளுக்கு மேலும் அதிக ஊட்டம் தேவை என்பதை அறிந்து கொள்கிறது தாய். பொதுவாக உடலுறவிற்கு பிறகு ஆண் இறந்து விடும். பாலையின் வெண் கொடுமை, உணவின் பற்றாக்குறை, தாயின் பலவீன உடல்-மேல் தேவையான உணவை அந்த குட்டிகளுக்கு கிடைக்க விடுவதில்லை. அப்பொழுது அந்த தாயின் மரபணுவில் எங்கோ கிறுக்கப்பட்ட ஓர் உணர்வால் அந்த தாய் தன்னை அந்த குட்டிகளின் ஊடே அழுத்தி அமர்த்திக் கொண்டு தன்னை வாழ்வெனும் வேள்விக்கு அவி அளிக்கின்றது. அந்த பாலை நிலத்தின் புதிய வேட்டை உயிர்களுக்கு முதல் எளிய வேட்டை உணவாகத் தன்னைத் தியாகம் செய்கிறது. அந்தத் தாயின் கடைசி நேர உணர்வுகள், தன் பிள்ளைகளின் கொடுக்குகளின் ஊடே தான் உணவாக மாறும் அந்த கடைசி நிமிடங்கள்…. தாய்மையின் ஒரு பெரும் தருணம்.
ஆனால் இதுவும் என் காழ்ப்பின் கசப்பினையே ஏற்றியது. நான் கண்ட தாய்மையின் முகம் அது அல்லவே. வெண்முரசு, காடு, விஷ்ணுபுரம் என என் வாசிப்பு நீண்டாலும் ஒரு சிறு தயக்கம் மனதில் இருந்து கொண்டே இருந்தது. நான் எதையோ புரிந்துகொள்ளவில்லை. சமூகங்கள், இராஜாங்கங்கள் உருவாகும் முன்னரே ஆதி அம்மையும், அப்பனும் படிமங்களாக தந்த மரபின் பார்வை எனக்குக் கிடைக்கவில்லை. அதை உணர்தல் அத்மாவின் நடுவே நடந்தால் ஒழிய எண்ணில் குடிகொள்ளும் இந்த சலனம் நிறைவதும் இல்லை என எண்ணினேன்.
அந்தத் தருணம், அந்த தரிசனம் நான் மேல் கூறிய சிலந்திகள் வாழும் நிலத்தை கவுந்தியும் ( நீலி), கண்ணகியும் கொற்றவையில் வந்து சேர்த்த பொழுது கண்டேன்.
நான் அத்தருணத்தில் சென்ற உளப்பயணம் மிக அரிது. மானுடம் அறியும் ஒரு மின்னல் வெட்டும் தருணம்.
எயினர் எழுப்பிய பாழ் ஆலயத்தில் ஒரு செந்நாய் அதன் குட்டிகளை பாதுகாக்க உறுமி இவர்களை அருகில் வரத்தடுக்கிறது. கண்ணகியின் ஆவலுக்காக அந்த தாய் நாய் அகற்றப்பட்டு, குட்டிகளை கண்ணீர் மல்க கண்ணகி கொஞ்சி மகிழ்கிறாள். ஒரு உயிரின் மீதான மனிதத் தாய்மையின் நீட்சி. இலக்கியத்தின், எழுத்தாளனின் தாய்மைக் கொண்டாட்டம். இந்த குட்டிகள் இந்த பாலையில் எப்படி உயிர் வாழ்கின்றன என்பதற்கு நீலி அது கொற்றவையின் நிலம் எனவும் அவை அந்த அன்னையின் அறம் எனவும் பதிலுரைக்கிறாள்.
அன்னையின் அறம் எது?
பின்னிரவில் கண்ணகி மறுபடியும் கொற்றவையின் ஓவியத்தின் முன் பாலை காற்றில் கூந்தல் பறக்க, நிலவின் கீழ் நிற்கும் பொழுது தன்னை கொற்றவை என உணர்கிறாள். மறுபடி உறுமல் கேட்க கண்ணகி அந்த இருட்டில் கீழே பார்க்கிறாள். Bobby தன் குட்டியில் ஒன்றை கிழித்து, வாய் முழுதும் உதிரம் வழியத் தின்று கொண்டு இருக்கிறது. அது கொற்றவை அன்னையை நோக்கி மண்ணில் வால் உரச ஆட்டுகிறது. அன்னை அதை நோக்கிப் புன்னகை செய்கிறாள்.
ஆசானே! அந்த தருணம் இப்பொழுது நினைத்தாலும் என்னுள் ஒரு அதிர்வை நிறைக்கிறது. காலையில் அவள் கண்ணீர் மல்க கொஞ்சிய குட்டியாக அது இருந்தால். அந்த புன்னகை…? என்ன அறம் இது? என் மொத்த கசப்பும் என் காழ்பும் மறுபடி என் அகம் முழுதும் குடி கொண்டு கசந்தது. அந்தத் தாய் நாய் கிழித்து உண்ணும் குட்டி நான். அது என் உதிரம். உலகின் மொத்த அருவருப்பும் என்னை வந்து சேர்த்து கொண்டது. அந்தப் புன்னகை?
ஆனால் மறுகணம் என் பிரஞ்ஞை மற்றொன்றில் நிலைப்பதை உணர்த்தேன். அது மற்றொரு பார்வை. நிலத்தின் மட்டத்தில் இருந்து வானை நோக்கும் ஒரு நிமிடம். நிலவின் கீழே அலை அலையாய் கூந்தல் பறக்க, என்னை நோக்கும் அன்னை, அவள் புன்னகை. நான் என் குட்டியை உண்ணும் நாயாக உணர்த்த தருணம்.
எந்த ஒரு விவாதமும் இன்றி, தருக்கதின், தத்துவத்தின் எல்லை மீறி என் மனதின் அத்துணை இருளும், துயரும், காழ்ப்பும்,சுய இரகங்களும் உருகி வழிந்தோடியது. என் உணர்வினை, என் உணர்தலை இங்கு நான் எழுத்துக்களாய் உணர்த்த தோல்வி அடைகிறேன். ஒரு தரிசனம் அது.
ஒரு சொல் பேசபடாமல் அன்னையின் அறம் உணரப்பட்டது. அந்த அறம்….. கொற்றவையின் புன்னகையே.
நன்றிகள் பல.
என்றும் உங்கள்
அ.
***
அன்புள்ள அ
வாழ்க்கையின் ஒரு பகுதியை தீவிரமாகக் காட்டும் படைப்புக்கள் உண்டு. நான் எப்போதுமே செவ்வியலை நோக்கிச் செல்ல முயல்பவன். காரணம், வாழ்க்கையின் முழுமையை அவை காட்டவேண்டுமென நினைக்கிறேன். வாழ்க்கையின் முழுமைத்தரிசனம் சிறுமைகளை கண்டு சலிப்புறுவதில்லை. அவையும் இந்த பெரும் நெசவின் இழைகளே என உணர்ந்திருக்கும் ஒருமையையே நாடுகிறேன்.
கொற்றவையில் அன்னையின் பெருந்தோற்றம் உண்டு. கைவிடப்பட்ட அன்னையரின் துயர்மிக்க, கொடிய சித்திரங்களும் உண்டு. அந்த ஒத்திசைவுதான் வாழ்க்கையை அறிந்துகொள்வதன் மூலம் நாம் சென்றடையும் தரிசனம்.
ஜெ
***
August 21, 2021
கனவில் நிறைந்திருப்பவை…
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
நான் தங்களது இளம் வாசகன். தாங்கள் எழுதிய சிறுகதைகளில் கையளவு, முதற்கனல் இரு பகுதிகள், நீலம் கொஞ்சம், விஷ்ணுபுரம் கொஞ்சம் வாசித்திருக்கிறேன்.
மற்றபடி நான் அதிகம் வாசித்தது தங்கள் கட்டுரைகளைத் தான். இலக்கிய புனைவுக்கு இன்னும் பழகிக்கொண்டிருக்கிறேன். இலக்கியம், நாவல் குறித்த தங்கள் பார்வைகள், வாதங்கள் ஓர் அளவுக்கேனும் புரிந்திருக்கிறது.
நாவல் என்பது கதையளக்கும் பகல் கனவாகவும் இல்லாமல், தகவல்களின் ஆவணத் தொகுப்பாகவும் இல்லாமல் நிகர் ஆவணமாக வரலாற்றுடன் பிணைந்த புனைவாக இருக்கவேண்டும் என புனைவில் வரலாற்றின் முக்கியத்துவத்தை சொல்லி இருக்கிறீர்கள். (தாங்கள் ஒரு இடத்தில் சொன்னவற்றை நான் புரிந்துகொண்டவாறு)
புனைவில் வரலாறை பின்புலமாக கொண்டிருக்கும் தல்ஸ்தோயின் “போரும் அமைதியும்”, தஸ்தயேவஸ்கியின் “கரமசோவ் சகோதரர்கள்” இவற்றை, உதாரணத்திற்குரிய சிறந்த நாவல்களாக (பிரபலமானவை) குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
High fantasy, epic fantasy போன்ற வகைகளில் இருக்கும் நாவல்கள் பலவற்றை அறிந்திருப்பீர்கள். அதன் உதாரணங்களாக ஜெ கே ரௌலிங்-இன் “ஹார்ரி பாட்டர்” தொடர், ஜே ஆர் ஆர் டோல்கியின்-இன் “லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்” தொடர். ஹார்ரி பாட்டர் epic low fantasy. நிகழ் உலகோடு தொடர்புடைய கற்பனை உலகில் நடைபெறும் பெரும் புனைவு.
‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ epic and high fantasy. முற்றிலும் கற்பனையால் எழுப்பப்பட்ட வேறு ஒரு உலகில் நடைபெறும் பெரும்புனைவு .
இந்த படைப்பு டோல்கியின்- இன் பிரம்மாண்ட பகல்கனவு. வெண்முரசு போல் காலம் காலமாய் இயங்கிய தொன்மத்தின் வரலாற்றின் பின்புலமும் கிடையாது.
‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ வரலாறு என எதுவும் இல்லாதது. ஆயினும் பிரிட்டன், அதன் அரசியல், வரலாறு, கிறித்தவ மதம், நிலஅமைப்பு ஆகியவை கனவுருமாறி- ‘அதிகார மோகம்’ எனும் அதன் கதைக்கருவில் கலந்து, உச்சக்கட்ட கற்பனை எழுவித்த மாபெரும் உலகமாக, அதன் யுத்தமாக வெளிப்பட்டிருக்கும். வரலாற்றை முற்றாக அது துறக்கவில்லை. அதிகாரமோகத்தின் படிமமாக அந்த கதையை நகர்த்தும் ஒரு மோதிரம் அமைந்திருக்கும். நாவலுக்குரிய அம்சங்கள் நிறைய அதில் அமைந்திருக்கும்.(நினைக்கிறேன்)
அதேபோல்,
உர்சுலா கே ல கென் (Ursula K le Guin)
-இன் “எ விஸார்ட் ஆஃப் எர்த்ஸீ” சமநிலை, தாஓயிச தத்துவங்களை கருவாக கொண்டிருக்கும் ஒரு high fantasy புனைவு. இதிலும் வரலாறு விடுபடுகிறது. எனக்குப்பட்டவரைக்கும் நாவல்-இன் பல அம்சங்களையும் இது கொண்டிருக்கிறது.
முடிவாக,
தாங்கள் நாவல் குறித்து கூறிய “வாழ்க்கையை தொகுத்துக் காட்டி பார்வையை அளித்தலை”, கற்பனை எழுவித்த இரண்டாம் உலகத்தில் டிராகன்கள், கோட்டைகள், குள்ளர்கள், மந்திரவாதிகள், மாயசக்திகள், மாயகாடுகள்- இவை மூலம் செய்யலாமா? அது மேலைப்படிமங்கள் என்றால் நம் கலாச்சார படிமங்களைக் கொண்டு படைக்கலாமா?அது எந்த அளவுக்கு realist நாவல்கள் செய்யும் தாக்கத்தை ஏற்படுத்தும்? முழு கற்பனை என்பதால் படைப்பாக்கம் மற்றும் கற்பனையாலான படிமங்களின் சாத்தியங்கள் அதிகமாகுமா?
அன்புடன்,
சஃபீர் ஜாசிம்
***
அன்புள்ள சஃபீர்
முதல் கேள்வி மிகுபுனைவு [Fantasy] எதற்காக எழுதப்படுகிறது? முன்னரே இதைப்பற்றி எழுதியிருக்கிறேன். உலக இலக்கியத்தில் நமக்கு கிடைக்கும் படைப்புகளில் பெரும்பகுதி மிகுபுனைவுகளே. யதார்த்தவாதம் என்பது வெறும் இருநூறாண்டுகள் வரலாறுள்ள ஒரு குறிப்பிட்ட வகையான அழகியல் மட்டும்தான்.
யதார்த்தவாதம் ஏன் உருவானது? அது நவீன ஜனநாயகத்துடன் சேர்ந்தே தோன்றியது. இதுதான் வாழ்க்கை என்று அது காட்ட விரும்பியது. அன்றாடத்தை, அதை இயக்கும் விசைகளை தொகுத்து முன்வைக்க முயன்றது. ஆகவே ‘உள்ளது உள்ளபடி’ என்னும் பாவனையில் அது புனைவை அமைக்கலாயிற்று.
அதற்கு முன்னும் பின்னும் மிகுபுனைவுகள் ஏன் எழுதப்பட்டன? அவற்றுக்கு இதுதான் வாழ்க்கை என்று காட்டும் நோக்கம் இல்லை. மாறாக இதுதான் வாழ்க்கையின் சாரம் என்று காட்ட அவை விரும்பின. விழுமியங்களை, தரிசனங்களை இலக்கியம் வழியாக முன்வைக்க முயன்றன. அதற்குத் தேவை அன்றாடச் சித்திரம் அல்ல. குறியீடுகள், படிமங்கள். அவற்றை உருவாக்கும் ஒரு களமாகவே அவை மிகுகற்பனையைக் கண்டன.
மிகுகற்பனை வாழ்க்கையை குறியீடாக்குவதனூடாக உருவாவது. வாழ்க்கையின் காட்சிகள், நிகழ்வுகள், ஆளுமைகள் மேல் உணர்ச்சிகளையும், கருத்துக்களையும் ஏற்றிவைக்கும்போது அவை குறியீடாக ஆகின்றன. அவ்வாறு அர்த்தமேற்றப்பட்ட அடையாளங்களையே நாம் படிமங்கள் என்கிறோம்.
மிகுகற்பனை பலவகை. மிகுகற்பனை இயல்பாகச் செல்லுபடியாகக் கூடியது சென்றகாலக் கதைகளில்தான். ஆகவேதான் வரலாறு மிகுகற்பனைகளால் ஆனதாக மாறியது. அதில் தொன்மங்கள் விளைந்தன. மாறாக அன்றாடத்தையே மிகுகற்பனையாக ஆக்குவதை நாம் மாயயதார்த்தம் என்கிறோம்.
மிகுகற்பனை பலவகை. தொன்மங்களில் இருந்து உருவாக்கப்படும் மிகுகற்பனைகளையே நாம் பெரும்பாலும் காண்கிறோம். விஷ்ணுபுரம், வெண்முரசு போன்றவை அத்தகையவை. அன்றாடத்தில் இருந்து உருவாக்கப்படுபவை மாயயதார்த்தம் எனப்படுகின்றன. அறிவியல் புனைகதைகளில் அறிவியலின் சாத்தியங்களைக் கொண்டு மிகுகற்பனைகள் உருவாக்கப்படுகின்றன. அறிவியல் புனைகதைகளில் ஒரு பகுதியாகிய எதிர்காலத்தன்மை கொண்ட கதைகளும் ஊகக்கதைகளும்கூட மிகுகற்பனைகளே.
நவீன இலக்கியம் தோன்றியபோதே இவை அனைத்துக்கும் முன்மாதிரிகள் உருவாகிவிட்டன. ராபின்ஸன் குரூசோ [ டானியல் டீஃபோ] பிராங்கன்ஸ்டைன்[மேரி ஷெல்லி] நிலவுக்குப் பயணம் [ஜூல்ஸ் வெர்ன்] போன்றவை வெவ்வேறு வகையான அறிவியல் மிகுபுனைவுகளை உருவாக்கின. கலிவரின் பயணங்கள் [ஜோனத்தன் ஸ்விப்ட்] ஆலிஸின் அற்புத உலகம் [லூயி கரோல்] போன்றவை மிகுகற்பனை புனைவுகளின் முன்மாதிரிகள்.
இவற்றில் நவீன இலக்கியம் உருவாக்கிய மிகைக்கற்பனைக் கதைகளை நவீனப்புராணங்கள் எனலாம். அவற்றில் முன்னோடியானது பிராம் ஸ்டாக்கரின் ‘டிராக்குலா’. அதிலிருந்து தொடங்கி ஏராளமான மிகுபுனைவுகள் மேலை இலக்கியத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுக்குள்ளேயே பல உட்பிரிவுகளும், காலகட்டங்களும் உண்டு. அந்த வகையில் உருவானவையே லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஹாரி போட்டர் போன்றவை.
அவை நாம் நவீனப் புராணங்கள். நாம் எண்ணுவதுபோல அவை வேரற்றவை அல்ல. அவை அந்தரத்திலும் உருவாகவில்லை. அவற்றுக்கு ஐரோப்பிய நிலத்தில் பண்பாட்டு முன்வடிவங்கள் உண்டு. அவை உருமாற்றப்பட்ட தொன்மங்கள்தான்.
ஐரோப்பியநிலம் ஒரு காலத்தில் செழிப்பான ‘பாகன்’ பண்பாடு கொண்டதாக இருந்தது. பாகன் பண்பாடு என்பது பழிக்கும் கோணத்தில் கிறிஸ்தவம் இட்ட பெயர். உண்மையில் அது ஒன்றல்ல. தத்துவச்செழுமை கொண்ட கிரேக்கமதம் முதல் நாட்டார் மதங்கள் வரை அதில் பல நிலைகள் உண்டு.
வரலாற்றை நோக்கினால் பாகன் பண்பாடு கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்குள் ஐரோப்பாவில் முழுமையாக அழிக்கப்பட்டது. ஆனால் எந்தப் பண்பாடும் முழுமையாக அழியாது. பாகன் பண்பாட்டின் ஒருபகுதி உருமாறி கிறிஸ்தவத்திற்குள் குறியீடுகளாக சடங்குகளாக விழாக்களாக நீடித்தது. இன்னொரு பகுதி ரகசியமாக நீடித்தது.
அந்த ஒளிந்திருந்த பாகன் பண்பாட்டிற்கு எதிராக ஐரோப்பியக் கிறிஸ்தவம் நிகழ்த்திய கொடிய ஒடுக்குமுறை மானுடகுலத்தின் இருண்ட பக்கங்களில் ஒன்று. சூனியக்காரிகளை கொல்வது, மதவிசாரணைகள் பல நூற்றாண்டுகள் அந்த வன்முறை நீடித்தது. அந்த மறைந்திருந்த பாகன் பண்பாடு கொடிய பேய்களின் உலகமாக சித்தரிக்கப்பட்டது.
பதினேழாம் நூற்றாண்டின் இறுதி முதல் பாகன் பண்பாட்டை பேய்களின், மந்திரங்களின் உலகமாகக் காட்டி எழுதப்பட்ட இலக்கியங்கள் உருவாயின. பொதுவாக அவை கோதிக் இலக்கியம் எனப்பட்டன. அவற்றின் மிகச்சிறந்த உதாரணம் பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலா. டிராக்குலா பிரபு உண்மையில் ஒரு பாகன் தெய்வத்தின் கொடிதாக்கப்பட்ட வடிவம்தான். அதைப்பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கிறிஸ்தவத்தின் வரலாற்றில் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் உருவான சீர்திருத்தவாத கிறிஸ்தவம் ஒரு திருப்பு முனை. கடவுளின் புவிசார் உருவமாகவே திகழ்ந்த திருச்சபை என்னும் அமைப்பின் அதிகாரம் இல்லாமலாக்கப்பட்டது. அதேபோல இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு உருவான அறச்சிக்கல்கள் இரண்டாவது திருப்புமுனை. யூதப் படுகொலைகளுக்குப் பின் கிறிஸ்தவ மதிப்பீடுகள் என்பவை பொய் என ஐரோப்பியர்களில் கணிசமானோர் உணரத் தலைப்பட்டனர்.
அவர்கள் கிறிஸ்தவத்தால் ஒடுக்கப்பட்ட பாகன் பண்பாடுகளை தேடிச்சென்றனர். ஏற்கனவே சீர்திருத்தவாதக் கிறிஸ்தவத்தின் எழுச்சியின்போது கிரேக்க, ரோமானிய பண்பாடுகள் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டன. ஐம்பதுகளுக்குப் பின் ஐரோப்பாவின் பிற பாகன் பண்பாடுகள் மேல் தீவிரமான ஈடுபாடு உருவானது.
அந்த ஈடுபாட்டின் விளைவே லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஹாரிபாட்டர் போன்றவை. அவற்றுக்கு வெவ்வேறு பாகன் தொன்மங்களுடனான உறவு நிறைய எழுதப்பட்டுள்ளது. ஹாரிபாட்டர் தெளிவாகவே ஒரு ‘புதைந்த’ உலகுக்கு கூட்டிச் செல்கிறது. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ஒரு இணைப்புராணத்தை உருவாக்கிக் காட்டுகிறது. அவை ஐரோப்பா தன் நனவிலிக்குள் தள்ளிவிட்ட மறைந்த காலத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள்தான். இன்று திரைப்படங்களில் அந்த உலகம் வந்துகொண்டே இருக்கிறது. அவை அம்மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.
நாமும் அவ்வாறு மீட்டெடுக்க, மறு அமைப்பு செய்துகொள்ள ஏராளமாக உள்ளன. நாம் தொன்மங்களில் இருந்து நமக்கான ஆழ்படிமங்களைக் கண்டடைய முடியும். நமக்கான தனி குறியீட்டுலகை உருவாக்கிக் கொள்ள முடியும். வெண்முரசு மகாபாரதத்தில் உள்ள தொன்மங்களை நவீனக்குறியீடுகளாக ஆக்கிக்கொள்கிறது.
நாமும் பலவற்றைப் புதைத்து வைத்திருக்கிறோம். பலவற்றை நனவிலியில் செலுத்திவிட்டோம். அவை நம் கனவில் உள்ளன. நம் புனைவிலும் வெளிப்படலாம். கனவுகள் மிகைபுனைவுகளாக மட்டுமே வெளிப்படமுடியும்.
உதாரணமாக, வண்ணக்கடல் நாவலில் அசுரர்களின் உலகம் எப்படி உயிர்கொண்டு எழுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுவேன். அந்நாவலின் இறுதியிலுள்ள மாபெரும் சேற்றுக்களியாட்டை ஒரு மறுஆக்கத்தின் சாத்தியங்கள் என்ன என்பதற்கானச் சான்றாகச் சொல்வேன்.
எழுதுவதற்கான ஒரு பெரும் உலகம் புதைந்து கிடக்கிறது. மண்ணில். நினைவில், மொழியில், மதத்தில்.
ஜெ
என்ன இந்த உறவு, எதன் தொடர்வு?
’நன்னு தோச்சுகொந்துவதே’ நான் அடிக்கடிக் கேட்கும் பாடல். என் பிரியமான பீம்பளாஸி ராகம் என்பது ஒன்று. அதைவிட அந்தரங்கமான ஒன்று உண்டு. கதைநாயகி ஜமுனாவின் எல்லா படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அவருக்கு அருண்மொழியின் சாயல் தெளிவாகவே உண்டு. குறிப்பாகக் கண்கள். பழைய மிஸியம்மா படத்தில் சின்னவயசு அருண்மொழி போலவே இருப்பார்.


கண்டசாலாவின் குரல்மேல் பெரும் மோகம் எனக்கு உண்டு. அவருடைய பாடல்களை பிறர் பாடும்போது பாடல் மிகக்கீழே இறங்குவதை உணர்வேன். ரஃபி போல, ஜேசுதாஸின் மலையாளப் பாடல்களைப்போல, உள்ளுணர்ந்து பாடுபவர். ஏனாதிதோ மன பந்தம், எருகரானி அனுபந்தம் என்னும் வரியில் இருக்கும் மெய்யான உணர்ச்சி பாடல்களில் மிக அரிதான ஒன்று.
என்னை திருடிக்கொள்ளப்போகிறாயா அரசி?
என் கண்களில் அல்லவா
ஒளிந்துகொண்டீர்கள் அரசே?
நன்னு தோச்சு கொந்துவதே- பாடல் தெலுங்கிலும் ஆங்கிலத்திலும். பொருளுடன்
https://www.lyricspulp.com/2021/05/nannu-dochukunduvate-lyrics-gulebakavali-katha.html
படம் குலேபகாவலி கதா
பாடியவர்கள் கண்டசாலா, பி.சுசீலா
இசை ஜோசப்-விஜயகிருஷ்ணமூர்த்தி
பாடல் சி.நாராயணரெட்டி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



