Jeyamohan's Blog, page 928

August 26, 2021

வாசகன் என்னும் நிலை

அன்புள்ள ஜெ

இந்தக் காணொளி உங்கள் பார்வைக்காக. சிலநாட்களுக்கு முன்பு ஒரு அரைவேக்காட்டுப் பெண் இலக்கியவாதிகளைப் பற்றி நக்கலும் நையாண்டியுமாக தன் அறியாமையை வெளிப்படுத்தியபோது ஊடக உலகமே அதைக் கொண்டாடியது. அப்பெண்ணை பாராட்டியது. ஆனால் இப்பேட்டி காட்டுவது அதற்கு எதிரான பெரும் பயணம் ஒன்றை. அடித்தளத்தில் இருந்து எப்படி இலக்கியம் வழியாக ஒருவர் அறிவார்ந்தும் ஆன்மிகமாகவும் மேலெழுந்து வருகிறார் என்பதை.

இலக்கியம் என்ன செய்யும், அது உண்மையில் எவருக்கானது என்பதற்கான பதில் இது. ஆனால் நம் இணைய அரைகுறைகள் இந்தப்பேட்டியைத்தான் கேலிசெய்வார்கள். ஆனால் இது ஓர் ஆவணம் என நினைக்கிறேன். செந்தில் போன்றவர்கள் என்னைப் போன்றவர்களுக்கு பெரும் அறைகூவலை அளிக்கிறார்கள். தமிழில் முனைவர் பட்டம் பெற்றுவிட்டு வெண்முரசு மொழி கடினமாக இருக்கிறது என்று சொல்பவர்களை, புத்தகம் வாசிக்க முடியவில்லை என்று சொல்பவர்களை நாள்தோறும் பார்ப்பவன் நான்.

செந்தில் போற்றுதலுக்குரியவர். இந்த இலக்கிய உலகின் வம்புவழக்குகள் எதையும் அறியாமல், நூல்களின் அழகிய உலகில் இருந்து கொண்டிருக்கிறார். இந்தப்பேட்டி அவரை வம்புபேசும் கீழ்களின் உலகுக்கு கொண்டு வந்துவிடக்கூடாது. அவர் செல்லவேண்டிய தொலைவு மிக அதிகம். அவருக்கு என் அன்பு வணக்கம்.

எம்.பாஸ்கர்

அன்புள்ள பாஸ்கர்,

இந்த காணொளி மிக அரிதானது. ஆனால் மிகவும் திசைதிருப்பும் தலைப்பு கொண்டது. இன்றைய ஊடக உலகில் பரவலான கவனம்பெற அந்த உத்தி தேவையுமாகலாம். ஆனால் எதையுமே முழுக்கக் கவனிக்காமல், உள்ளே செல்லாமல், வழக்கமான வரிகளைச் சொல்லிவிட்டுச் செல்பவர்களே இங்கு மிகுதி. அவர்களால் திசைதிருப்புதல் நிகழலாம்.

இப்பேட்டியில் அவர் கூறுவது, ஓர் எழுத்தாளன் மீது வாசகனுக்கு உருவாகும் தன்னிணைவு நிலையை. இலக்கியத்தின் ஆட்கொள்ளல் வல்லமையை. வெண்முரசில் இருந்து ஒரு வரியை அதற்கு உருவக உதாரணமாகச் சொல்கிறார். வெண்முரசு உருவாக்கும் உருவகமொழியின் தளத்திற்கு வெளியே நின்றிருக்கும், எதையும் ஆழ்ந்து கவனிக்கும் பழக்கமில்லா பாமரர்களுக்கு அச்சொல்லாட்சி நேரடிப்பொருள் அளிக்கக்கூடும். அவர்கள் ஏதாவது சழக்கு பேசவும் கூடும். ஒன்றும் செய்வதற்கில்லை. அச்சழக்கும் இணைந்ததே அறிவியக்கம். அது ஒரு நிழல்.

உண்மையில் இதில் உள்ளது அறிவினூடாக ஏற்றமும் நிறைவும் பெற்ற ஓர் எளிய மனிதனின் கதை. எழுதும் ஒவ்வொருவரும் எழுத்தெனும் செயல்மேல் நம்பிக்கை கொள்ளச் செய்வது அது. இதைக்காண்கையில், “ஆம், அப்பழுக்கற்ற வாசகன் ஒருவன் எங்கோ இருக்கிறான், அவனுடன் எழுத்து அந்தரங்கமாக உரையாடுகிறது!” என்ற பெருமிதமே இலக்கியத்தின்மேல் ஈடுபாடுள்ள எவருக்கும் உருவாகவேண்டும். தன் செயல்பற்றி, தன் உலகு குறித்து நம்பிக்கை பிறக்கவேண்டும்.

வாசகன் என்னும் நிலை இலக்கியத்தில் மிக உன்னதமான ஒன்று. மொத்த அறிவியக்கமும் அப்படி ஓர் உதாரண வாசகனை நோக்கியே செயல்படுகிறது. தன் நெஞ்சை இலக்கியத்துக்கு அளிப்பவன், இலக்கியத்தினூடாக தன்னை நிகழ்த்திக்கொள்பவன்,  தன் ஆழங்களை அதில் கண்டடைபவன் அவ்வாசகன். அவன் இலக்கியத்தை வாழ்க்கையால், வாழ்க்கையை இலக்கியத்தால் நிறைத்துக் கொள்பவன்.இலக்கியத்துடன் வம்புபேசுபவர்கள், இலக்கியத்துக்கு நேராக தன் அகந்தையை முன்வைப்பவர்கள், இலக்கியத்தை தன் அற்பத்தராசில் நிறுத்துப் பார்ப்பதாக எண்ணிக் கொள்பவர்கள் சென்றடைய முடியாத தளம் அது.

மேலோட்டமாகச் சென்று பாருங்கள், நம் சமூக ஊடகங்களில் இலக்கியம் மற்றும் சிந்தனைகளைப் பற்றி எத்தனை வசைகளும் அவமதிப்புகளும் எள்ளல்களும் குவிந்திருக்கின்றன என்று. தோற்றுப்போன எழுத்தாளர்கள், சில்லறை அரசியல்வாதிகள், அறிவியக்கத்தை அஞ்சும் பாமரர்கள் என மூன்று தரப்பினர் அவ்வாறு வசைகளையும் இளக்காரங்களையும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு இரண்டு வகை பாவனைகள் உண்டு. ஒன்று ‘வாசித்துச் சலித்த’ அறிவுஜீவி போல காட்டிக்கொள்வது. இரண்டு, ‘நேர்மையை எதிர்பார்த்து ஏமாந்த’ அதிநேர்மையாளனாக நடிப்பது. பெரும்பாலும் வாசிப்பென ஏதும் இல்லாதவர்களும், மத-இன-சாதி-அரசியல் சார்புக்கு ஏற்ப பேசுபவர்களும்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே போய் சிரிப்பான் போடுபவர்களும் அவர்களே.

அவர்கள் இங்கே நம்பிக்கையுடன் எழுதுபவர்களை நோக்கிச் சொல்லும் ஒரு கருத்து மீளமீள வந்துகொண்டிருக்கிறது. அது இதுதான். இலக்கியம் என்பது வெட்டிவேலை. அதை வாசிப்பவர் எவருமில்லை. இலக்கியவாதிகள் மட்டுமே மாறிமாறி வாசிக்கிறார்கள், சண்டைபோட்டுக் கொள்கிறார்கள். சரி, இவர்கள் சொல்லும் ’உருப்படியான’ வேலை என்ன? அரசியல்கட்சிக்கோ, சாதிக்கோ, மதத்துக்கோ கட்சிசேர்ந்து கூச்சலிடுவதும் கொடிபிடிப்பதும்தான். இன்னொரு கருத்தும் உண்டு. தீவிர இலக்கியம் எவருடனும் பேசுவதில்லை, அதற்கு இலக்கிய வட்டத்துக்கு வெளியே ஆளில்லை, அது ஒரு கூட்டுப்பாவலா என்பது. இதுவும் நல்லிலக்கியம் எழுத முற்படுபவர்களை தளர்த்தும் பொருட்டு இங்கே திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.

இவ்வாறு எழுத்தாளனை நோக்கி வரும் ஒவ்வொரு ஏளனத்துக்குமான ஆணித்தரமான பதில் இந்த பேட்டி. வாசகன் இருக்கிறான், அவனுடைய வாழ்க்கையுடன் இலக்கியம் உரையாடுகிறது, அவன் இலக்கியம் வழியாக மேலெழுகிறான் என இது காட்டுகிறது. இவர் என் வாசகர், ஒவ்வொரு தீவிர எழுத்தாளனுக்கும் இத்தகைய வாசகர் எங்கோ இருந்து கொண்டிருக்கிறார். வண்ணதாசன் வழியாக தன்னை அறிந்த ஒருவரின் கடிதம் [செல்வராஜ்] நினைவிருக்குமென நினைக்கிறேன். இதோ, விக்ரமாதித்யனுக்கும் அப்படி ஒரு கடிதம். பலர் இப்படி முன்வந்து பேசுவதில்லை, அற்பர்களின் சழக்குகளை அஞ்சி மறைந்து கொள்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இலக்கியம் பொழுதுபோக்கோ மாற்று உலகமோ அல்ல. அது மேலான வாழ்க்கை நோக்கி இட்டுச்செல்லும் ஊர்தி.

நம்புங்கள், உங்கள் சொல்லுக்கு உங்களை அளியுங்கள். அத்தனை எழுத்தாளர்களை நோக்கியும் இந்தப்பேட்டி சொல்வது அதையே. எழுதவருபவர் தலைக்கொள்ள வேண்டிய சொல் இவர் நாவில் எழுவது. இலக்கியத்தை அவர் எங்கே வைத்திருக்கிறார் என்பது முக்கியமான ஒன்று. விடுதலை செய்யும் ஆற்றலாக, தெய்வத்துக்கு நிகரான ஒன்றாக அதைச் சொல்கிறார். எழுதும் ஒவ்வொருவருக்கும் ஒரு மாபெரும் பொறுப்பை அளிக்கிறார்.

எழுத்தறிவில்லாத நிலையில் இருந்து, படக்கதைகளை எழுத்துக்கூட்டி படிக்கும் நிலையில் இருந்து, மொழியைக் கற்று மேலேறி வெண்முரசு தொகுதிகளை வாசிக்கும் நிலைவரை வந்த அவருடைய பரிணாமம் இதில் உள்ளது. நம் நாட்டில் இது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இத்தகைய வாசகர்கள் நூறுபேரையாவது எனக்கு நேரடியாகவே தெரியும். என் இணையதளத்திலேயே வாழ்க்கையின் பல்வேறு அடிநிலைகளில் இருந்து வாசிப்பினூடாக எழுந்துவந்து என்னுடன் உரையாடி, எனக்கு இணையென அமர்ந்திருக்கும் பலரை நீங்கள் காணலாம். இலக்கியத்தின் அந்த ’விடுவிக்கும் பேராற்றலை’யே சரஸ்வதியின் அருள் என செந்தில் சொல்கிறார்.

என்னையும், அவரையும், வாசகர் அனைவரையும் ஒன்றென இணைக்கும் அறிவின் சரடுதான் அவர் சொல்லும் அந்த சரஸ்வதி. அந்தச் சரடு பின்னி உருவாகும் பெரும் கோலத்தில் அவர் ஒரு புள்ளி, நான் இன்னொரு புள்ளி. தல்ஸ்தோயும் ஷேக்ஸ்பியரும், வியாசனும் கம்பனும், பாரதியும் புதுமைப்பித்தனும், சுந்தர ராமசாமியும் தேவதேவனும் வெவ்வேறு புள்ளிகள். ஒவ்வொரு தீவிரவாசகரும் அதில் ஒரு புள்ளி. அவரவரின் பங்களிப்பை ஆற்றுகிறோம். நம்மிலூடாக இந்தக்கோலம் முடிவில்லாது வளர்ந்துகொண்டிருக்கிறது. மானுடம் தழுவி நின்றிருக்கிறது.

நம்மை வந்து ஆட்கொள்கிறது அது. நம்மை தன்னம்பிக்கையும் நிறைவும் கொண்டவர்களாக ஆக்குகிறது. நம் இருப்பின் வெறுமையை, சலிப்பை இல்லாமலாக்குகிறது. நேர்நிலையான ஊக்கத்தால் நம்மை நிறைக்கிறது. அதற்கு நம்மை அளிப்போம். நாம் செய்யக்கூடுவது அதுவே. ‘தலைகொடுத்தல்’ என நான் சொல்வது அந்த முற்றளிப்பைத்தான். செந்தில் உத்தேசிப்பதும் அதையே.

அது ஒருவகை அர்ப்பணிப்பு, சில்லறை அரசியல் கட்சிக்காரர்கள் அல்லது எளிய ரசிகர்கள் சொல்லும் பற்றோ வெறியோ அல்ல. அந்த அர்ப்பணிப்புடன்தான் இங்கே தலைமுறை தலைமுறையாக எழுத்தாளர்களும் வாசகர்களும் உருவாகி வந்திருக்கிறார்கள். சிற்றிதழ்கள் நடத்தியிருக்கிறார்கள். 1985ல் பிரமிள் என்னிடம் கேட்டார் “எழுதுறதுக்காக தேவைன்னா சாக ரெடியா இருப்பியா? ஏன்னா இந்த தேவதை தலைய கேக்குறது” நான் சொன்னேன். “கொல்லவும் சாகவும் ரெடியாத்தான் வந்திருக்கேன்… இது இல்லாம இனி ஒருநாள் கூட வாழ்க்கையில் இல்லை” என் காதைப்பிடித்து உலுக்கி “Do or die” என்று செல்லமாகச் சொன்னார்.

அந்தப் பித்துதான் நான் பிறருக்குச் சொல்வதும். தன் தீராநோய் பற்றி நீண்ட கடிதம் எழுதிய வானவன்மாதேவியிடம் சொன்னேன். “முழுதாக உன்னைக் கொடு, உன் நோயை நீ கடந்துசெல்வாய்”. பின்னர் அவர் எனக்கு எழுதினார் “நான் என் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டேன்”. இப்போது அவரை நினைத்துக் கொள்கிறேன். எத்தனை பெரிய வாழ்க்கை. அதை வாழச்செய்தது இலக்கியம். மதமோ அரசியலோ அல்ல, தூய இலக்கியம் மட்டுமே. மேலும் எத்தனை முகங்கள் அப்படி! இந்த வட்டத்துக்கு வெளியே உள்ள உலகியலாளர்களுக்கு இது வெறும் பைத்தியக்காரத்தனமாகவே தெரியும். ‘பைசாபெறாத’ உணர்ச்சியாக தோன்றும். அவர்களின் உலகம் வேறு. அது காலந்தோறும் அப்படித்தான் இருந்து வந்துள்ளது.

செந்திலிடம் காணும் இதே சமர்ப்பண நிலையை ஷோபனோவர் வாக்னர் இருவரிடமும் அஜிதன் கொண்டிருப்பதை சில ஆண்டுகளாக காண்கிறேன். இது வாசகன் அல்லது கலைப்பயிலுநன் ஒரு சரடைப் பற்றிக்கொண்டு தன்னை மேலேற்றிக்கொள்ளும் தீவிரமான பயணம் மட்டுமே. இசை, தத்துவம் ஆகியவற்றில் இது மிக மிக அவசியமானதாகவே சொல்லப்படுகிறது. இலக்கியத்திலும் இன்றியமையாதது என்பது என் எண்ணம். ஆழ்ந்தறியாமல் வெறுமே தொட்டுத்தொட்டுச் செல்பவர் எளிய ஆணவத்தை அன்றி எதையும் அடைவதில்லை. இது ஓர் ஆசிரியரிலேயே ஈடுபட்டு அதில் நின்றுவிடுவது அல்ல.  அந்த ஆசிரியரிடம் மானசீகமாக உக்கிரமான உரையாடலில் இருப்பது. அதன் வழியாக தன்னை தகுதிப்படுத்திக்கொண்டு அங்கிருந்து வெளியே பரவுவது.

அவ்வண்ணம் தீவிரமான ஈடுபாட்டுடன், தலைகொடுக்கும் விசையுடன் அணுகினாலொழிய ஓர் ஆசிரியரை முழுதறிய முடியாது. முழுமையாக ஒருவரை அறிவது அனைவரையும் அறிவதற்கான அளவீடுகளை அளித்துவிடும். ஏனென்றால் மொழி, உத்தி, தரிசனம் என இலக்கியத்தின் எல்லா நுட்பங்களையும் அக்கல்வியே அளிக்கும்.

செந்திலின் பேட்டியில் அவர் என் நூல்களில் இருந்து குறிப்பிடுவன ஒவ்வொன்றும் மிகநுட்பமான பகுதிகள் என என் வாசகர்களுக்குத் தெரியும். இங்கே பொதுவெளியில் விமர்சனமும் விவாதமும் புரிபவர்களால் அந்த நுட்பங்களை அறியவே முடிந்ததில்லை என்பதும் தெரியும். முழுமையான ஈடுபாடு என்பது ஒரு பெரும் பயிற்சி. நானும் அவ்வண்ணமே என் ஆசிரியர்களினூடாக மேலே வந்தேன். இன்னும்கூட நித்யசைதன்ய யதியை கற்றுமுடிக்கவில்லை. ஒருநாள்கூட பயிலாமல் கடந்து செல்லவுமில்லை. அர்ப்பணிப்புதான் அறிவதற்கு முன்நிபந்தனை. அறிவதற்கு முன்னரே எழும் தன்முனைப்பு அறியாமை கொள்ளும் அசட்டுப்பாவனை மட்டுமே.

செந்திலின் தேடல், அவருடைய தவம் அவரை மேலும் மேலும் முன்கொண்டு செல்லவேண்டுமென விழைகிறேன். அவரிடம் பேசினேன். நேரில் சந்திப்பேன்.

ஜெ

பிகு :செந்திலின் புத்தக கடை Pycrofts Road, அல்லது பாரதியார் சாலையில், கோஷா ஆஸ்பத்திரி பேருந்துநிலையம் எதிரில் இருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2021 11:34

விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது,கடிதங்கள்-2

அன்புள்ள ஜெ

இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது விக்ரமாதித்யன் அண்ணாச்சிக்கு வழங்கப்படவிருக்கும் செய்தி வாசித்தேன். ஒரு பெரும் மனக்கிளர்ச்சி ஏற்பட்டது. தமிழ்நாட்டிலே கவிதைக்காக எந்த அரசு விருதும் அளிக்கப்படவில்லை. தேவதச்சன், தேவதேவன் எல்லாம் விருதே பெறவில்லை. பிரமிள், ஞானக்கூத்தன் எல்லாம் விருதே பெறாமல் மறைந்தனர். அப்படி இருக்க விக்ரமாதித்யனுக்கு விருது கிடைப்பதெல்லாம் வாய்ப்பே இல்லை. மொத்த அமைப்பே அவரைப் போன்றவர்களைத் தூக்கி வீசிவிட்டது. அவருக்கு விருதளிக்கும் எண்ணம் கொண்டவர்கள் இருக்க வாய்ப்பில்லை. அவருக்கும் எவருடனும் தொடர்பில்லை.

ஆனால் அதெல்லாம் பொருட்டே இல்லை, எங்கள் கவிஞரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என அறிவிப்பதுபோல உள்ளது இந்த விருது. இது தமிழுக்கு எவரும் தேவையில்லை என்று தெளிவுபடுத்தும் விருது. விஷ்ணுபுரம் அமைப்பு என்பது தமிழ் வாசகர்களே. வாசகர்கள் அளிக்கும் விருது இது. இப்படிப்பட்ட விருதுகளால்தான் விக்ரமாதித்யன் போன்ற மக்கள் கவிஞர்கள் உண்மையிலேயே கௌரவிக்கப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.

விக்ரமாதித்யன் அண்ணாச்சியை வணங்குகிறேன்.

கதிர் அருணகிரி

***

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு பாரதியார் பல்கலைக்கழக நூலகத்தில் ‘போய்ச் சேர்ந்தான் புதுமைப்பித்தன், வந்து நின்றான் விக்ரமாதித்யன்’ என்னும் பின்னட்டைக்குறிப்புடன் அவரின் மொத்தத் தொகுப்பைக் கண்டதும், வாசிப்பில் சிரித்துக்கொண்டிருந்ததும் நினைவுக்கு வருகிறது. பெரும்பாலும் குறுங்கவிதைகள் உள்ள அத்தொகுப்பிலிருந்து ஒன்று:

கோவிலில் தெய்வம் 

சுடுகாட்டில் மோகினிப்பிசாசுகள் 

ஊருக்குள் ரெண்டும்கெட்டான்கள் 

இதைப்படித்தும் நினைத்தும் வெகுகாலம் சிரித்துக் கொண்டிருந்தேன். இப்போது ஊழியம் செய்கிறேன்; இப்போது இதயம் நொறுங்காமல் கவிவாக்கே கடைத்தேற்றுகிறது.

சேற்றுக்காக ஒருவன் பிறந்த மண்ணை விட்டு புலம்பெயரத்தான் வேண்டுமா? என்று ஒரு பேட்டியில் அவர் கேட்ட கேள்வியாகத்தான் பெரும்பாலும் நினைவிருக்கிறார். கூடவே நீங்கள் பாதம் தொட்டு பணம் வழங்கும் மூத்தோனாகவும், மனுஷ்யபுத்திரனுடன் தரையிலமர்ந்திருக்கும் பிரியத்தின் சித்திரமாகவும். இவ்விருது அவரை இன்னும் நெருக்கி அறியத்தரும் என் நம்புகிறேன்.

நன்றி,

விஜயகுமார்.

***

அன்பு ஜெயமோகன்,

இவ்வாண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது, கவிஞர் விக்ரமாதியனுக்கு வழங்கப்படும் செய்தியை அறிந்து அதிகம் மகிழ்ந்தேன். நீண்ட வருடங்களாக நான் எதிர்பார்த்திருந்த ஆளுமை அவர்.

விக்ரமாதியன் என்பதை விட அண்ணாச்சி என்றால்தான் அதிகம் பேருக்குத் தெரியும். அவரின் கவிமொழி நவீனக்கவிதைகளுக்கான மிரட்சிப்பாசாங்குகளும் போலிமினுக்குகளும் இல்லாதது. மருளவைக்காத சொல்லாட்சிகள் வழி நெருங்குதற்கு அரிதான தரிசனத்தைச் சாத்தியப்படுத்தி விடும் கைகாரர்.

அன்றாட வாழ்வின் சமூகப்பொருளாதார நெருக்கடிகளால் அதிகம் அலைக்கழிக்கப்பட்டவர் அண்ணாச்சி. ”வியாபாரி அல்ல நான்/வீணாக அலைந்தாலும் கலைஞன்தான்” எனும் வரியே அதற்கான சான்று. அவரின் கவிதைகளில் பொருளாதார வெறுமைகளே பெரிதும் பொங்கி வழியும். வாழ்வின் அர்த்தம் பொருளாதாரப் பெட்டிக்குள் அடைபட்டு விட்ட பொறுமலைத் தொடர்ந்து அவர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். விண்மீன்களைத் தொலைத்து விட்டு பொன்மீன்களைத் தேடும் வானத்தின் தோற்றத்தையே அவர் கவிதைகள் உள்ளுறையாகக் கொண்டிருக்கும்.

அன்றாடச் சமூகவாழ்வுக்கும், தனிமனிதனுக்குமான ஊடாட்டங்களைத் துல்லியமாகச் சொல்லிவிடுபவராக அண்ணாச்சி இருக்கிறார். மேலும் மேலும் என்று ஒரு கவிதை இருக்கிறது. அக்கவிதை மேலும் மேலும் என்ன செய்ய என்று முடியும். ஒருகட்டத்தில், அவர் அன்றாட வாழ்வைத் துளியும் பொருட்படுத்தாத குழந்தையாகவே தன்னைக் காட்டுவார். ”தீப்பெட்டி படம் சேகரித்துக் கொண்டிருக்கிறான் என் மகன் / கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன் நான்” என்பது போன்ற கவிதைகள் நிறைய இருக்கின்றன.

அண்ணாச்சியின் கவிதைகள் சமூகத்தைப் பற்றிப் பேசும்போது மட்டுமே கொந்தளிக்கின்றன; இயற்கை என வந்தவுடன் பழகிய யானையாய் அமைதியாகி விடுகின்றன. மரங்களுக்கு வருவதில்லை மனநோய் எனும் வரியின் தீட்சண்யத்தில் அமைதியான அண்ணாச்சியைக் காண முடியும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை குறித்தும் கவிதைகள் எழுதி இருக்கிறார் அண்ணாச்சி.

நம்பமுடியாத அளவுக்கு வாழ்க்கை என்ற அவரின் கவிதையைத்தான் துவக்கத்தில் வாசித்தேன். ஒரு தத்துவப் புலம்பலாக அல்லது இருத்தலியல் விளக்கமாக அல்லது கையறு நிலையைச் சுட்டி நம்மை அவநம்பிக்கையில் தள்ளுவதாகவே அக்கவிதையை அணுகி இருந்தேன். இப்போது, அக்கவிதை புதிர்த்தளமான வாழ்வின் நெருக்கடிகளில் ஆசுவாச மாயம் தருவதாகத் தொனிக்கிறது.

கவிதையை மாயம் என்பதாகப் பார்த்த கவிஞன் அண்ணாச்சி மட்டுமே. எப்படியான மாயம் எனக்கேட்டால் மொழியில் கட்டப்படும் மாயம் என்பார். நல்ல மாயக்காரனே நல்ல கவிஞனாக இருக்க முடியும் என்பதும் அவர் பார்வை. என்னளவில், அண்ணாச்சி ஒரு நல்ல மாயக்காரனாக முயன்றவர். அம்மாயக்காரனின் கரந்தொட்டு நிறைகிறேன்.

வாழ்த்துக்கள், அண்ணாச்சி!

  சத்திவேல்

கோபிசெட்டிபாளையம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2021 11:32

சந்திப்பு, ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ

முதல்முறையாக உங்களை சந்திக்கலாம் என்று கூறியவர் குருஜி சௌந்தர் தான். அதுவரை உங்களை சந்திப்பது பற்றி என் சிந்தைக்கு தோன்றியதே இல்லை. நானெல்லாம் எப்படி என்று நினைத்து கொள்வேன்.

அதன் பின்னர் என்னோடு உரையாடிய வெண்முரசு வாசிக்க தொடங்குதல், அறிவியக்கவாதியின் உடல் கடிதங்கள் எனது வாசிப்பை பலமடங்கு தீவிரப்படுத்தியிருக்கிறது என்று இன்று உணர்கிறேன். கடைசியாக சென்ற மே மாதம் ஜும்மில் தங்களை சந்தித்தது நினைவில் இனிக்கும் நிகழ்வு. அன்று பேசியதில் நான் கற்றறிய வேண்டிய எல்லைகளும் எனது சில பிழையான பார்வைகளும் அகன்று தெளிவாயின.

சமீபமாக உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக உள்ளது. எனக்கு உங்களிடம் பேசுவதற்கும் கேட்பதற்கும் திட்டவட்டமாக எதுவுமேயில்லை. ஆனால் பார்க்க வேண்டும் என்று மட்டும் ஆவல் எழுகிறது. அதுவும் என்னில் வலுவான மாற்றத்தை உண்டு பண்ணும் என்ற உணர்வே எழுகிறது. இதற்கு மேல் எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை.

இப்படி கேட்பதற்கு சரியா என்று தெரியவில்லை. தாங்கள் சென்னை வருகையில் சந்திக்க முடியுமா? இவற்றில் ஏதேனும் தவறிருப்பின் மன்னிக்கவும். இதற்கு மேல் சொல்ல முடியாத தயக்கவுணர்வே என்னில் எஞ்சுகிறது.

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள  சக்திவேல்,

நான் சமீபத்தில் அவசர வேலையாகவே சென்னைக்கு வந்திருந்தேன். மீண்டும் வரும்போது நாம் சந்திப்போம். அதிலெல்லாம் எந்த தயக்கமும் தேவையில்லை. உங்கள் வீட்டிலிருந்து கூட்டிவந்து திரும்ப கொண்டுசென்று விட ஏற்பாடு செய்வதொன்றும் பெரிய விஷயம் அல்ல. நாம் பேசுவோம்.

முன்பு தயக்கத்துடன் அறிமுகமான நீங்கள் இன்று தெளிவாகவும், நகைச்சுவையாகவும் பேசுபவராக மாறியிருக்கிறீர்கள். தனித்த கருத்துக்கள் கொண்டிருக்கிறீர்கள். மகிழ்வூட்டும் விஷயம் இது.

ஜெ

***

அன்புள்ள ஜெ

பின் மதியம் தங்கள் பதில் கண்டேன். எனக்க ஆசானே என்ற சொல்லை தவிர வேறு எதுவும் நெஞ்சில் இல்லாது நிமிஷங்கள். அத்தனைக்கும் பிறகு பதில் போட இத்தனை நேரமெதற்கு. தங்கள் பரிசை பெருக்கி கொள்ள ஆசைப்பட்டேன். ஆதலால் மீண்டும் மீண்டும் கடிதத்தை நினைவில் மீட்டியிருந்தேன். நாம் பேசுவோம் இந்த சொல்லில் நான் உணரும் அன்பை சொல்ல இயலவில்லை.

கடிதத்தை வாசித்து உறங்கியெழுகையில் தேவதச்சனின் கவிதை திறப்புக்கான விதையொன்று மனதில் பளீச்சிட்டது. இதற்காக உங்களுக்கு என் நன்றிகள். சில வாரங்களுக்கு முன் தளத்தில் துழாவுகையில் ஏதேச்சையாக கவிஞர் தேவதச்சன் அவர்களின் கவிதை தோகுப்பு ஒன்றை கண்டேன். தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். என் வாசிப்பில் திறந்து கொண்ட கவிதைகளின் மேலான வாசிப்பை எழுதியும் வருகிறேன். மொத்தமாக இருபது கவிதைகளுக்கும் எழுதிய பின்னர் உங்களுக்கு அனுப்ப நினைத்துள்ளேன்.

இன்று முதல் திறப்பை நிகழ்த்திய தேவதச்சனின் கவிதை

பரிசு

என் கையில் இருந்த பரிசை

பிரிக்கவில்லை பிரித்தால்

மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல

இருக்கிறது

என் அருகில் இருந்தவன் அவசரமாய்

அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்

மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க

முடியும்

பரிசு அளித்தவனோடு

விருந்துண்ண அமர்ந்தோம்

உணவுகள் நடுவே

கண்ணாடி டம்ளரில்

ஒரு சொட்டு

தண்ணீரில்

மூழ்கியிருந்தன

ஆயிரம் சொட்டுகள்

சந்திக்க காத்திருக்கும் உங்கள் வாசகன்

அன்புடன்

சக்திவேல்

அறிவியக்கவாதியின் உடல்

வாசகனிடம் அணுக்கம்

இன்று- கடிதங்கள்

வாசகனின் பயிற்சி- தஸ்தயேவ்ஸ்கி- கடிதம்

இளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா?

வாசகனும் எழுத்தாளனும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2021 11:32

ஜன்னல் சிறுமி- லோகமாதேவி

டோட்டோ சான் விக்கிப்பீடியா

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

தளத்தில் மாற்றுக் கல்வி குறித்த பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருந்த  ”டோட்டோ –சான்  ஜன்னலில் சின்னஞ்சிறுமி” புத்தகத்தை வாங்கி  வாசித்தேன்.   

இருபது ஆண்டுகளாக என் ஆசிரியப்பணியில்  வழக்கமான கல்வியின் போதாமைகளை நான் அநேகமாக தினமுமே உணர்கிறேன். சராசரி குடிமகன்களை உருவாக்குவதாக சொல்லப்படும் பொதுக்கல்வியில் எனக்கு நம்பிக்கை அற்றுப்போய் பல வருடங்களாகி விட்டிருக்கிறது. 

பள்ளிக்கல்வியில் மதிப்பெண்கள் வாங்கும்படிமட்டும் தயாரிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் மனனம் செய்யப் பழகி, சுயமாக சிந்திக்கும் திறனை இழந்த, மூளை மழுங்கடிக்கப்பட்ட  மாணவர்களே  அதிகம் கல்லூரிக் கல்விக்கு வருகிறார்கள்.  12 ஆம் வகுப்பில் முதலிடம் இரண்டாமிடம் வந்த மாணவர்கள் கூட கல்லூரியில் வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்டு கேட்கப்படும் கேள்விகளை புரிந்து கொள்ளத் தடுமாறுவதை பார்க்கிறேன். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, தன் வீட்டில் என்ன நடக்கிறது, தன் ஊரில் உலகில் என்ன நடக்கிறது என்பதையெல்லாம் குறித்து எந்த அறிதலும் இல்லாமல்தான் 3 வருடங்களும் படித்துப் பட்டமும் வாங்கி வெளியில் வருகிறார்கள். ஆசிரியர்களும் எந்த மாறுதலும் இல்லாமல் அரைத்த மாவையே அரைக்கிறோம்.  

நான் இளங்கலை தாவரவியல் படித்த அதே துறையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியராக சேர்ந்தபோது நான் படித்த அதே பாடத்திட்டம் எந்த மாறுதலுமின்றி நடைமுறையில் இருந்தது. இன்று 20 வருடங்களாகியும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் அதே பாடத்திட்டத்தை தான் நடத்துகிறோம். நினைத்துப்பாருங்கள் பொள்ளாச்சியை போன்ற பச்சை பிடித்த பல கிராமங்களால் சூழப்பட்டிருக்கும் ஓரிடத்தில்  நான்கு சுவர்களுக்குள் தாவரவியலை நடத்திக் கொண்டிருப்பதென்பது எத்தனை அநியாயமென்பதை.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சைகஸ் என்னும் ஒரு கீழ்நிலைத் தாவர குடும்பத்தை சேர்ந்த மரமொன்றை  குறித்து பாடம் நடத்த வேண்டி இருக்கும் அந்த சைகஸ் பெண் மரமொன்று கல்லூரியில் என் வகுப்பிற்கு பின்புறம் இருக்கிறது. ஆனால் அந்த மரமத்தினருகில் மாணவர்களை அழைத்துச் சென்று மரத்தை அவர்கள் தொட்டு உணர்கையில் பாடம் நடத்த நான் பல படிநிலைகளில் அனுமதி வாங்கவேண்டும். மாணவர்களின் ஒழுங்கு சீர்குலையும் என்றும், வகுப்பில் அமர்ந்திருக்கும் பிற துறை மாணவர்களை அது தொந்தரவுக்குள்ளாக்கும் என்றெல்லாம் எனக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படும் ஆனாலும் நான் ஒவ்வொரு வருடமும் சைகஸ் மரத்தருகில் கூட்டமாக மாணவர்கள் வைத்துக்கொண்டுதான் பாடம் எடுப்பேன். கல்லூரியில் மேலும் பல இடங்களில் சைகஸ் மரங்களை நட்டும் வைத்திருக்கிறேன். இலைகள் செடிகள் கொடிகள் என  கைகளால் எடுத்துக்கொண்டு போக முடிந்த அளவில் வகுப்பிற்கு எடுத்துக்கொண்டுபோய்க் கூடக் கற்பிக்கிறேன் 

அருகம்புல் மண்டிக்கிடக்கும் கல்லூரி வளாகத்தின் ஒரு வகுப்பறைக்குள் அருகை  கரும்பலகையில் படமாக வரைந்து கற்றுக் கொடுக்கும் பொதுக்கல்விமுறை தான் இப்போது அளிக்கப்பட்டு வருகிறது. மாற்றுக் கல்வி குறித்த தயக்கங்களும் அச்சமும் பெற்றோர்களுக்குத்தான் இருக்கிறது. விரும்பும் படியான எந்த முறையில் கற்றலை அளித்தாலும் மாணவர்கள் ஆர்வமாகக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை

நான் 8 ஆவதில் படிக்கையில்தான் எங்களூருக்கு முதன் முதலில் பிரஷர் குக்கர்கள் புழக்கத்தில் வந்தன. அறிவியல் ஆசிரியை துஷ்யகுமாரி வகுப்பிற்கு குக்கரையும், ஊறவைத்த கடலைகளையும் வீட்டிலிருந்து கொண்டுவந்து, எங்கள் முன்பு அதை விளக்கி வேக வைத்து சுண்டல் செய்து  குக்கரின் செயல்பாட்டை  விளக்கிய அந்த பாடம் இன்னும் என் மனதில் அப்படியே நினைவில் இருக்கிறது. 

குறிஞ்சி மலர்ந்திருந்த ஒரு கல்லூரிக்காலத்தில், தாவர வகைப்பாட்டியல் ஆசிரியருடன்  தொட்டபெட்டா சிகரத்தின் உச்சியில் இருந்து மலைச்சரிவெங்கும் நீலக்கம்பளமாய்  மலர்ந்திருந்த  குறிஞ்சி செடிகளை பார்த்ததும், காலடியில் இருந்த சிண்ட்ரெல்லா செருப்பென்னும் ஒரு சிறு மலர்ச்செடியை பார்த்ததும் எனக்கு நினைவில் இன்னும் பசுமையாக  இருக்கிறது. மிக மகிழ்வுடனும், நிறைவுடனும் நான் திரும்ப எண்ணிப்பார்க்கும் கற்றல் என்பது வகுப்பறைக்கு வெளியில்  அரிதாக எனக்கு கற்பிக்கபட்டவைகளையே.

டோபியரி என்னும் தாவர உயிர் சிற்பக்கலையை பூங்காக்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள், கம்பிச்சட்டங்களால் விலங்கு, பறவை உருவங்கள் செய்து, வளரும் சிறு செடி ஒன்றின் மீது இதை பொருத்தி வைத்து விடுவோம். செடி வளருகையில் சட்டத்துக்கு வெளியில் வளரும் இலைகளையும் கிளைகளையும் வெட்டி வெட்டி விரும்பிய வடிவில் உயிருள்ள பசுஞ்செடிகளை உருவாக்கும் இந்த முறைதான் இப்போது பொதுக்கல்வியில் இருக்கிறது. மாணவர்களின் தனித்திறன், அவர்களின் விருப்பம், தேவை, நிறைவு, லட்சியம் இவற்றை குறித்தெல்லாம் எந்த அறிதலும், கவலையும் இல்லாமல்  எங்கோ, யாரோ,  முன்னெப்போதோ முடிவு செய்த பாடத்திட்டங்களை திணித்து, ஒரு சராசரி குடி மகனை உருவாக்கும் முயற்சியில் தான்  நாங்களனைவருமே இருக்கிறோம். 

எனவேதான் எனக்கு டோட்டோ சானின் டோமோயி மாற்றுக்கல்வி பள்ளியை  அத்தனை பிடித்திருந்தது.  முன்பே தீர்மானித்திருக்கும் வடிவிலான ஆளுமைகளாக மாணவர்களை மாற்றும் பணியில் இருக்கும் எனக்கு இந்த பள்ளி அதன் செயல்பாடுகள், அங்கிருக்கும் குழந்தைகள், அவர்களின் மகிழ்ச்சி எல்லாமே பெரும் குதூகலத்தை அளித்தது. கூடவே பெரும் ஏக்கத்தையும்.

இப்படியான கல்விமுறையை எல்லாருக்கும் அளிக்கையில் உருவாகும் ஒரு சமூகத்தை எண்ணி பார்க்கையில் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று ஹோம் ஸ்கூலிங் பற்றி கொஞ்சம் பேச தொடங்கி இருக்கிறார்கள். எனினும் அதன் அடிப்படைகளை அறியாத பெற்றோர்களால் அக்கல்வியை முழுமையாக அளித்துவிட முடியாது. டோமோயி போன்ற   பள்ளிகளே நமக்கு இப்போது தேவையாக இருக்கிறது.

குருவிகளோடு பேசிக்கொண்டிருந்ததற்காகவும், மேசையறையை அடிக்கடி திறந்து மூடியபடி இருந்ததற்கும், வகுப்பு ஜன்னல் வழியே இசைக்கலைஞர்களை வரவழைத்து இசைகேட்டதற்காகவும் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட சிறுமி ஒருத்தி, அந்த மாற்றுக்கல்வி பள்ளியின் உயிருள்ள பசுமையான கதவுகள் திறந்து வரவேற்கப்பட்டு நுழைகிறாள்.

அங்கே அவள் பல மணி நேரம் தொடர்ந்து பேசுவதெல்லாம் செவிகொடுத்து கேட்க தலைமை ஆசிரியர் இருக்கிறார். அவளால் உடலூனமுற்றவர்களுடனும் உடல் வளர்ச்சி நின்று போனவர்களுடன் அவர்களைப் புரிந்து கொண்டு அன்புடன் இருக்க முடிகிறது, அவர்களுக்கு அவளாலான உதவிகளை மனப்பூர்வமாக செய்யவும் முடிகிறது.

இப்போதைய பெரும்பாலான பெற்றோர்கள் நினைப்பதும் விரும்புவதும் போல முழுக்க முழுக்க பாதுகாப்பை மட்டும் அளிக்கும் பள்ளியாக இல்லாமல் சின்ன சின்ன ஆபத்துக்களையும் அவள் அங்கே சந்திக்க வேண்டி இருக்கிறது.  மிக பத்திரமான, சுத்தமான இடங்களில் மட்டும் அவள் இருப்பதில்லை,  பள்ளியில் கழிவறை குழிக்குள் விழுந்த தொப்பியை அவளாக கம்பியைக் கொண்டு எடுக்க முயற்சிக்கிறாள், உயரமான மரத்தில் ஏணியை கொண்டு, இளம்பிள்ளை வாதத்தால் சூம்பிய காலுடன் இருக்கும் நண்பனுடன் ஏறுகிறாள், செய்தித் தாள் கொண்டு மூடப்பட்டிருக்கும் கழிவுநீர் தொட்டியில் தவறி  விழுகிறாள், கொக்கியில் தானே மாமிசமாக தொங்கி கீழே விழுந்து அடிபடுகிறாள். ஆனால் அவ்வனுபவங்களிலிருந்து அவள் ஆபத்தான சூழல்களை குறித்தும் எப்படி பாதுகாப்பாக இருப்பதென்றும் சுயமாகக் கற்றுக் கொள்கிறாள். 

தங்கள் பிள்ளைகளை மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும், வெயிலில் காய்ந்தால் தலைவலி வரும், பனியில் நின்றால் காய்ச்சல் வருமென்று பொத்தி பொத்தி  வளர்க்கும் பெற்றோர்கள் கட்டாயம் இப்பள்ளியைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பள்ளிக்கு வெளியே சென்று மகரந்தச் சேர்க்கையை, பட்டாம் பூச்சிகளை, எல்லாம் நேரில் பார்த்து தாவரவியல் கற்றுக்கொள்ளும் டோட்டோசான் அருகில் இருக்கும் தோட்ட உரிமையாளர் ஆசிரியராக வந்தபோது விதைக்கவும், களையெடுக்கவும், கற்றுக்கொள்கிறாள்.

அந்த ரயில் பெட்டி வகுப்பறைகளே வெகு கொண்டாட்டமானதாக  இருக்கிறது அவளுக்கு. பள்ளிக்கு வரும் கூடுதல் ரயில் பெட்டி டிரெய்லர்களால் இழுத்து வரப்பட்டு மரப்பாளங்களில் உருட்டி  எடுத்து வைக்கப்படுகையில் இயற்பியலையும், சிறுவர்களனைவரும் நிர்வாணமாக நீச்சல் குளத்தில் குளிக்கையிலே, உடலறவியலையும்,  திறந்தவெளி சமையலின் போதும், தேநீர் விருந்தின்போதும் சமையலையும், விருந்தோம்பலையும்,, சென்காகுஜீ கோயிலுக்கு போகையில் வரலாறையும், பள்ளிப்பாடலை பாடிப்பாடி இசையையும், சபையினர் முன்பு எப்படி அச்சமின்றி பேசுவதென்பதையும், கடலிலிருந்தும் மலையிலிருந்தும் உணவுகளை சாப்பிடுவதால் சரிவிகித சமச்சீர் உணவு கிடைக்கும் என்பதையும், கப்பல் பயணத்தையும், பிறருக்கு உதவி செய்வதையும் இன்னும் பலவற்றையும் கற்றுக்கொண்டே இருக்கிறாள்.

சந்தையில் காய்கறிகள் வாங்கி வணிகத்தை அறிந்து கொள்வது, கூடாரமடித்து தங்குதல், கொதி நீர் ஊற்றுகளில் குளிப்பது. ஆரோக்கிய மரப்பட்டை வாங்குவது, தனந்தனியே ரயிலில் பயணிப்பது என டோட்டோ சானின் பள்ளி வாழ்க்கை ஒவ்வொரு நாளுமே கொண்டாட்டமாக, அற்புதமாக இருக்கிறது. போட்டியில் வென்றவர்களுக்கு கோப்பைகளுக்கு பதிலாக  காய்கறிகள் பரிசாக கொடுக்கப்பட்டு, அவற்றை அக்குழந்தைகளின் குடும்பம் உணவாக்குவதும் குழந்தைகளுக்கு கொடுக்கும் மகிழ்ச்சி அளப்பரியதாயிருக்கிறது.

டோட்டோசானும் பிற குழந்தைகளும் பள்ளி மைதானத்தின் மரங்களின் மீதமர்ந்த படி  கீழே நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி தான் எத்தனை அழகானது. அங்கிருந்து அக்குழந்தைகள் அறிந்துகொள்ளுபவற்றை வெகு நிச்சயமாக வகுப்பறைக்குள் கற்பிக்க முடியாது. 

டோட்டா சான் மஞ்சள்நிறக்கோழி குஞ்சுகளிடமிருந்தும், தன் தோழன் ஒருவனிடமிருந்தும், தன் பிரிய நாயிடமிருந்தும், இழப்பின், மரணத்தின், பிரிவின், துயரையும் கூட அறிந்துகொள்கிறாள்

அவளுக்கென அளிக்கப்பட்ட அடையாள அட்டையும், “நீ மிகவும் நல்ல பெண் தெரியுமா” என அடிக்கடி அவளிடம் சொல்லப்பட்டதும் அவளது ஆளுமையில் உருவாக்கிய மாற்றம் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று. பேய்களைக் கொசு கடிப்பதும்,  இரண்டு பேய்கள் ஒன்றையொன்று முட்டிக்கொண்டு அழுவதும், பயந்துபோன பேய் கண்ணீர் விடுவதுமாக அந்த  தைரிய பரீட்சை வெகு சுவாரஸ்யம். 

அப்பள்ளிக்கு வெளியே போர்ச்சூழல் நிலவுவது குறித்து எந்த அறிதலும், அச்சமும்  இல்லாமல் அக்குழந்தைகள் அங்கு வாழ்வின் இயங்கியலை மகிழ்ந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

குண்டு வீச்சில் அழிந்து போன அந்த பள்ளி அங்கு படித்த அத்தனை மாணவர்களின் மனதிலும், அவர்கள் சொல்லக் கேட்கும் அவர்கள் குடும்பத்தினர் மனதிலும் எந்த சேதாரமும் இல்லாமல் நிரந்தரமாக இருக்கிறது.  தற்போது மிகப் பிரபலமான திரை மற்றும் தொலைக்காட்சி நடிகையாகவும் புகழ்பெற்ற ஜப்பானிய ஆளுமையாகவும் இருக்கும்  டெட்சுகோ குரோயோ நாகி என்னும் டோட்டோ சான்  தன்னுடன் படித்த தோழர்கள் இப்போது என்னவாக இருக்கிறார்கள் என்னும் குறிப்பையும் இதில் தந்திருப்பது மிக சிறப்பானது.

டெட்ஸுக்கோ குரோயானகி

அவர்களின் ஆளுமை உருவாக்கத்தில் மாற்றுக் கல்வி முறையின் நேரடி தாக்கம் இருப்பதை வாசிப்பவர்கள் உணரமுடிகின்றது குறிப்பாக உடல் வளர்ச்சி நின்று போன தாகா ஹாஷி என்னவாயிருக்கிறான் என்பதே அப்பள்ளியின் மாற்றுக்கல்வி முறையின்  வெற்றிக்கு சான்றளிக்கிறது. 

டோமோயி பள்ளியை உருவாக்கிய திரு.கோபயாஷி போல தேர்ந்த கல்வியாளர்களால் மாற்றுக்கல்வி முறை உலகின் பல இடங்களில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும்  நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல மொத்தமாக பொதுக்கல்வி முறையை அப்படியே தலைகீழாக மாற்றிவிட முடியாது. ஆனாலும் மாற்றுக்கல்வியின்,  சில அம்சங்களையாவது பொதுக்கல்வியில் சேர்க்கலாம்.

வகுப்பறைக்கு வெளியேவும் கற்றலை அளிப்பது,  மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் காணும் முறைகளை கல்வித்திட்டங்களில் சேர்ப்பது, மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாக அவர்கள் கருதாமல் இருப்பது போன்றவற்றை நிச்சயமாக  செய்யலாம். தற்காலத்துக்கேற்றபடி பாடத்திட்டங்களை மாற்ற வேண்டியது மிக அவசியமானது.

பெற்றோர்களின் மனநிலையும் வெகுவாக மாற வேண்டி இருக்கிறது. தன் மகள் மருத்துவப்படிப்பு சேரும் அளவிற்கு மதிப்பெண்  வாங்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட  தாயொருத்தியை நானறிவேன். பிற  குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகளை ஒப்பிட்டு  கடிந்துகொள்ளும் பல்லாயிரம் பெற்றோர்கள் இங்கே இருக்கிறார்கள். 

குழந்தைகளின் தேவைகளும், விருப்பங்களும், சிக்கல்களும் என்னவென்று அறியாத, மருத்துவர்களாலும், பொறியாளர்களால் சமைக்கபட்டிருக்கும்  ஒரு பொன்னுலகை குறித்தான  தீவிர நம்பிக்கையுடன் இருக்கும் பெற்றோர்களில் பலருக்கு மாற்றுக்கல்வி உகந்ததல்ல.

என் மகன் பத்தாவது முடித்த பின்னர், 11 படிக்க  பலரால் ஆகச் சிறந்த பள்ளி என பரிந்துரைக்கபட்ட ஹைதராபாதிலிருக்கும் ஒரு பள்ளிக்கு சென்றிருந்தேன். அது ஒரு பள்ளிக்கூடம் கூட அல்ல ஒரு அடுக்ககம். அதன் குளிரூட்டப்பட்ட அறைகளில் அடைத்த ஜன்னல்களுக்கு உள்ளிருந்து பிராய்லர் கோழிகளை காட்டிலும் பாவமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தனர். அந்த கட்டிடத்தில் இருந்து துரத்தப்பட்டவள் போல நான் வேகமாக வெளியேறினேன். டோமோயி பள்ளியில் முள் கம்பிகளுக்கு அடியில் படுத்தும், தவழ்ந்தும் வெளியேறும் விளையாட்டில் தனது ஆடைகள் மட்டுமல்லாது ஜட்டியும் கூட கிழியும்படி விளையாடும் டோட்டோ சானுக்கு கிடைக்கும் அனுபவங்களைக் குறித்து ஏதும் அறியாமல் IIT கனவுகளில் மூழ்கி இப்படி லட்சக்கணக்கான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோவையில்  மகன்கள் படித்த பள்ளியும் பொது கல்வி முறையில் மாற்றுக் கல்வியின் அம்சங்களையும் கலந்த கல்விமுறையை தான் கொண்டிருக்கிறது. படிக்க சொல்லி  அழுத்தமோ கட்டாயமோ அங்கு எப்போதும் இருந்ததில்லை. சேர்க்கையின் போதே உங்கள் மகன் இங்கு படித்து பொறியாளராகவும் மருத்துவராகவும் ஆகவேண்டும் என உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதற்கானது இந்தப்பள்ளி அல்ல என்று சொன்னார்கள்.

மதிய உணவிற்கு பின்னர் பெரும்பாலான நாட்களில் வகுப்பறைக்கு செல்ல வேண்டியதில்லை விடுதி அறையிலேயே இருக்கலாம், இசை கேட்கலாம், மிதிவண்டியில் சுற்றலாம், இசைக்கருவிகள் வாசிக்கலாம், பள்ளி வளாகத்தில் இருக்கும் கோயில்களுக்கோ அல்லது மைதானத்தில் விளையாட்டு பயிற்சிகளுக்கோ செல்லலாம், ஆணும் பெண்ணும் இயல்பாக பார்த்து, பேசிக் கொள்ளலாம்.  இங்கு மட்டும் தான் எனக்கு தெரிந்து   KTPI – Knowledge and traditional practices of India என்னும் ஒரு பாடத்தை 12 ஆம் வகுப்பில் கற்றுக்கொள்ள முடியும். இந்திய தொன்மங்கள், இலக்கியங்கள், இதிகாசங்களை இப்பாடத்தில் கற்பிக்கிறார்கள். இந்திய புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களுக்கும் கோவில்களுக்கும்  சுற்றுலா அழைத்து செல்கிறார்கள்.

இந்த பள்ளியில் மட்டுமே நான் ஆசிரியர்களின்  தோளில் கைகளை போட்டுக்கொண்டு  நடக்கும் மாணவர்களை பார்த்திருக்கிறேன். 

ஒரு முறை நான் பள்ளிக்கு சரணுடன்  சென்றிருக்கையில் தூரத்தில் இருசக்கரவாகனத்தில் கணவரின் பின்னால் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்த அப்பள்ளியின் முதல்வர் ”சரண் லவ் யூ சரண்” என்று கூச்சலிட்டபடி காற்றில் ஒரு முத்தத்தை பறக்க விட்டு சென்றார்கள். பள்ளிப்படிப்பை முடித்து சில வருடங்களுக்கு பின் ஒரு விழாவுக்கெனெ மீண்டும் பள்ளிக்கு சென்றிருந்த சரணை “looking handsome man” என்றபடி ஒரு ஆசிரியை இறுக்க அணைத்துக் கொண்டார்கள். அங்கே போலி பணிவும் பவ்யமும் இல்லவே இல்லை. டோமோயி பள்ளியின் மாணவர்கள் தலைமை ஆசிரியரின் மடியிலும், முதுகிலும், தோளிலும் ஏறி தொங்கிக் கொண்டிருப்பதை வாசிக்கையில் நான் அவற்றை நினைவுகூர்ந்தேன்.

நான்  மகன்களின் ஆளுமை உருவாக்கம் குறித்து இந்த பள்ளியில் சேர்த்த பின்னர்  ஒருபோதும் கவலைப்பட்டதே இல்லை. இப்படியான பள்ளியில் கற்றுக்கொள்வது அனைவருக்கும் சாத்தியமில்லை தான். நம் பொதுக் கல்வியில் மாற்றுக்கல்வியின் சாத்தியமான அம்சங்களை சேர்ப்பது குறித்து கல்வியாளர்கள் அரசியலாளர்கள் யோசித்து,  உலகின் பல பகுதிகளில் இருக்கும் மாற்றுக்கல்வி முறைகளை பற்றியெல்லாம் அவர்கள் அறிந்து கொண்டு ஆலோசித்தால், பரிசீலித்தால் மட்டுமே மெல்ல மெல்ல மாற்றம் வரும். 

ஆசிரியர்கள்  நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. இப்புத்தகத்தை நான் மிக மிக நேசிக்கிறேன்.  எனக்கு தெரிந்து வாசிப்பில் ஆர்வம் இருக்கும் பலருக்கும் இதை நான் பரிந்துரைத்தேன், பெற்றோர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று இது. மிகச் சிறிய புத்தகம் ஆனால் இதன் பேசுபொருள் மிக மிக பெரியது.

டோமோயி பள்ளியின்  மாணவியும் இந்நூலின் ஆசிரியருமான டெட்சுகோ குரோயா நாகிக்கு  ஆசிரியராகவும் அன்னையாகவும் எனது பாராட்டுக்களை தெரிவிக்க அவரது முகவரியை தேடிக்கொண்டிருக்கிறேன்.

இந்த நூலை அறிமுகப்படுத்தியதற்கான நன்றிகளுடன்

லோகமாதேவி

 

டோட்டோ சான் – எஸ் ராமகிருஷ்ணன்

மாற்றுக்கல்வி எதுவரை?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2021 11:31

கோவை எட்டாவது வெண்முரசு கூடுகை

ஓவியம்: ஷண்முகவேல்

நண்பர்களுக்கு அன்புகலந்த வணக்கம்.

சொல்முகம் வாசகர் குழுமத்தின் எட்டாவது வெண்முரசு கூடுகை 29-8-21 அன்று கோவையில் நேர்ச்சந்திப்பாக  நிகழவுள்ளது.

இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் மூன்றாவது நாவலான வண்ணக்கடல் – இன் பின்வரும் நிறைவுப்பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.

பகுதி 8 – கதிரெழுநகர்

பகுதி 9 – பொன்னகரம்

பகுதி 10 – மண்நகரம்

வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இக்கூடுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

நாள் : 29-08-21, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 10:00

இடம் : தொண்டாமுத்தூர், கோவை.

தொடர்பிற்கு :

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன்                     – 73390 55954

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2021 01:31

August 25, 2021

புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-2

தர்மபுரி வழியாக குப்பம் சென்று அங்கிருந்து கோலார் சென்றோம். கோலார் என்பது பழைய நுளம்பநாடு. இந்தப்பயணமே முதன்மையாக நுளம்பநாட்டைப் பார்ப்பதற்காகத்தான்.

ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியில் “…வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்ட” என்று வருகிறது. அதில் பேசப்படும் நுளம்பபாடி கர்நாடக மாநிலத்தின் கோலார் பகுதிதான். பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் முதலாம் ராஜராஜ சோழன் நுளம்பபாடியை வென்று நேரடி ஆட்சிக்குக் கீழ் கொண்டுவந்தார்.

நொளம்பர்களைப் பற்றி ஒரு பயணக்குறிப்பை நண்பர்கள் தயார் செய்திருந்தனர். அதிலுள்ள செய்திகள்.

மூன்று நூற்றாண்டு காலம் கர்நாடகத்தை ஆட்சி செய்தவர்கள் நொளம்பர்கள்  [கிபி 750-1055 ] நொளம்ப பல்லவர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள். ராஷ்ட்ரகூடர்கள், கங்கர்கள், சாளுக்கியர்கள் போன்று இவர்களும் பழைய சாதவாகனப் பேரரசின் கீழ் இருந்து கிபி ஐந்தாம் நூற்றாண்டில் தன்னாட்சிபெற்று ஒரு பேரரசாக எழுந்தவர்கள்.

ஆரம்பத்தில் கங்கர்களின் கீழ் நொளம்பலிகே என்ற பகுதியை ஆண்டிருக்கிறார்கள். அது இன்றைய அனந்தப்பூர் (ஆந்திரா), சித்திரதுர்கா, தும்கூர், பெல்லாரி, கோலார் பகுதிகள். கிழக்கே பெண்ணாற்றுக்கும் மேற்கே ஹகரி நதிக்கும்(வேதவதி) நடுவே உள்ள பகுதி. ஆயிரம் ஊர்களை இவர்கள் ஆட்சிசெய்தனர் என்கின்றன கல்வெட்டுகள்.

சோமேஸ்வர் ஆலயம் கோலார்  https://stepstogether.in/2018/01/21/s...

நொளம்பர்களின் தலைநகரம் ஹேமவதி. [ஹெஞ்சேறு] தமிழகத்தில் சேலம் இவர்களின் தெற்கெல்லை.  ஹேமாவதியில் கிடைத்த தூணில் இவர்களது குலவரிசை குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இவர்கள் தங்களை பல்லவர்களின் வழிவந்தவர்கள் என்று சொல்கிறார்கள். த்ரிநயனா என்ற நொளம்பாதிராஜா முதல் மன்னன். சிம்மாபோதா, சாரு பொன்னேறா, மஹேந்திரா, நண்ணிக ஐயப்பதேவ அன்னிகா, திலீபா என்ற நிரை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் த்ரிநயன பல்லவா என்ற அரசன் சாளுக்கிய மன்னன் விஜயாதித்தனால் தோற்கடிக்கப்படுகிறான். (8ஆம் நூற்றாண்டின் முற்பகுதி). சிம்ஹபோதா கங்க மன்னன் சிவமார சாய்கொட்டா-வின் படைத்தளபதி ஆக இருக்கிறான். சிவமாறன் ராஷ்டிரகூடர்களால் வெல்லப்பட்டு சிறைபிடிக்கப்பட்டபோது சிம்ஹபோதாவின் மகனும் பேரனும் ராஷ்டிரகூடர்களின் பாதுகாவலில் செல்கிறார்கள். பின்னர் அவர்கள் நொளம்பாலிகே 1000-ன் ஆட்சியை அடைகிறார்கள்.

இவர்கள் சிறிய நிலப்பகுதியையே ஆண்டாலும், இந்நிலப்பகுதி சோழ, பல்லவர்களின் தமிழ் நிலத்தையும் கீழைச்சாளுக்கியர்கள், மேலை கங்கர்கள், ராஷ்டிரகூடர்கள் ஆண்ட கர்நாடக பகுதிக்கும் இடையே இருந்த காரணத்தால் முக்கியத்துவம் பெறுகிறார்கள். கோலாப்பூர் தகடுகள் குறிப்பிடுவதன் படி நொளம்பர்கள் கும்பகர்ணனின் மகன் நிகும்பா வழி வந்தவர்கள் என்றிருக்கிறது. இது அவர்கள் பாணர்கள் வழி வந்திருக்கலாம் என ஒரு சாத்தியத்தை காட்டுகிறது.

பல்லவர்களைப் போல நொளம்பர்களும் ஆலயங்கள் பல எழுப்பி இருக்கிறார்கள். கம்பதுருவில்  (அனந்தப்பூர் மாவட்டம், ஆந்திரா) உள்ள மல்லிகார்ஜுனா ஆலயமும், நந்தியில் உள்ள போகநந்தீஸ்வரர் ஆலயமும் சிறப்பானவை.

சோழன் ராஜாதிராஜனின் படையெடுப்பில் நொளம்பர்களின் பகுதி முழுவதும் கைப்பற்றப்பட்டு கம்பிலி எரித்தழிக்கப்படுகிறது. முதலில் அவர்களது தலைநகராக இருந்த ஹேமவதி சோழர்களால் வெல்லப்பட்டபோதுதான் அவர்கள் கம்பிலியை தலைநகராக்கி இருக்கிறார்கள்.

இரண்டாம் ராஜேந்திரனின் மணிமங்கலம் கல்வெட்டு நண்ணி நொளம்பா என்னும் மன்னன் களம்பட்டதை குறிப்பிடுகிறது. அவனுக்குப் பிறகு இக்குலம் சாளுக்கியர்களின் படையோடு கலந்திருக்கலாம் எனப்படுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் நொளம்பர்களின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.

கோலார் தங்கவயலுக்கு 1982-ல் சென்றிருக்கிறேன். அப்போதே அது கைவிடப்பட்ட நகர் போல இருந்தது. இப்போது அங்கே தங்க அகழ்வு இல்லை. அகழ்வுச்செலவு எடுக்கும் தங்கத்தின் மதிப்பைவிட மிகுதியாகிவிட்டது. ஆகவே அந்த இடமே ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் தேங்கி நின்றுவிட்டது.

நாங்கள் கோலார் தங்கவயல் பகுதிக்குள் செல்லவில்லை, அவ்வழியாகச் சென்றோம். செல்லும் வழி முழுக்க பழைய பிரிட்டிஷ் பாணி ஓட்டுக் கட்டிடங்கள். பெரும்பாலானவை ஓடு பெயர்ந்தவை. கோலார் தமிழகத்துக்கு வெளியே தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களிலொன்று. ஆனால் அவர்களில் பலர் காலப்போக்கில் கன்னடமொழிக்குள் சென்றுவிட்டார்கள்.

ஒரு காலத்தில் அயோத்திதாசரின் ஒருபைசா தமிழன் இதழ்கள் கோலாரிலிருந்துதான் வெளிவந்தன. அங்கே சென்று அயோத்திதாசரின் நினைவுகள் எஞ்சியிருக்கின்றனவா என ஆராயவேண்டுமென்பது அலெக்ஸின் விருப்பங்களில் ஒன்றாக இருந்தது.

கோலார் சோமேஸ்வரர் ஆலயத்தை நாங்கள் சென்றடைந்தபோது நான்கு மணி. கோயில் நடைதிறக்கவில்லை. ஆலயத்தைச் சுற்றி இஸ்லாமியர் குடியிருப்பு. முகரம் கொண்டாட்டத்தின் பகுதியாக சர்பத் கலக்கிக் கொண்டிருந்தார்கள். சரி, சர்பத் குடிப்போம் என்றால் ஆறுமணிக்கு மேல்தான் தருவோம் என்று சொல்லிவிட்டார்கள்.

சோமேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில்தான் கோலாரம்மாவின் ஆலயம். கோலாரம்மைதான் கோலாரின் அதிதேவதை. துர்க்கையின் உள்ளூர் பெயர் இது. இங்கிருந்த தொன்மையான நாட்டார் அன்னை வழிபாட்டு ஆலயம் சோழர்களால் பத்தாம் நூற்றாண்டில் மையத்தெய்வமாக துர்க்கை நிறுவப்பட்டு பெருந்தெய்வ வழிபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இப்போதுள்ள ஆலயமும் அவர்களால் கட்டப்பட்டது.

நடந்தே கோலாரம்மையின் ஆலயத்திற்குச் சென்றோம். நெரிசலான தெருக்களில் கொரோனா பற்றிய சிந்தனையே எவருக்கும் இல்லை. குழந்தைகள் கூச்சலிட்டு விளையாடிக் கொண்டிருந்தன. சிறிய பழைய வீடுகள். புதிய, அழகற்ற வீடுகள். தெருவெங்கும் குப்பைகள்.

சோமேஸ்வர் ஆலயம்.

கோலாரம்மா ஆலயத்தின் முதன்மைத்தெய்வம் என இருந்தது தேள்வடிவமான செல்லம்மா என்னும் தெய்வம். தேள்கடி முன்பு இங்கே முக்கியமான பிரச்சினையாக இருந்திருக்கிறது, அதிலிருந்து காக்கும் பொருட்டு இத்தெய்வத்தை வழிபட்டிருக்கிறார்கள் என்கிறார்கள் எளிய சுற்றுலாக் குறிப்பாளர்கள்.

ஆனால் உள்ளூர் வழிபாடுகளைக் கொண்டு பார்த்தால் தேள்கடி என்பது எல்லாவகையான நோய்களுக்கும் குறியீடாகவே இருந்திருக்கிறது. அதைவிட தேள் தொன்மையான உலகநாகரீகங்கள் பலவற்றிலும் தெய்வமாக இருக்கிறது. குறிப்பாக சோதிடமரபில் விருச்சிக ராசி முக்கியமானது. மேலை வானியலிலும் தேள் எட்டாவது நிலையாக உள்ளது.

கோலாரம்மை ஆலயம்

ராசிகளாக நாம் கருதுவன எல்லாமே தொன்மையான தெய்வங்கள்தான். அவை சூரியனை மையமாகக் கொண்ட சௌரமதம் போன்றவற்றில் இருந்து பிற்கால மதங்களுக்கு வந்தமைந்தவை. கோலாரம்மையின் இந்த ஆலயத்தின் வரலாற்றை சோழர்களுக்கும் முன்னால் மேலும் ஆயிரமாண்டுகளுக்குக் கொண்டு செல்லமுடியும்.

புடவை கட்டி, வெள்ளிக்கண்களுடன் அமர்ந்திருக்கும் தேளன்னையை பார்க்க ஒரு அகநடுக்கம் வந்தது. அப்படியொரு அன்னைத் தெய்வத்தை நான் பார்த்ததே இல்லை. நாகம் தெய்வமாகலாமென்றால் ஏன் தேள் ஆகக்கூடாது? தன் குஞ்சுகளை உடல்மேல் ஏற்றிக்கொண்டு செல்லும் அன்னைத் தேளின் ஒரு அகச்சித்திரம் எழுந்தது.

கோலரம்மை ஆலயத்தின் மூன்று சன்னிதிகளில் மையமாக துர்க்கை பெரிய வெள்ளி விழிகளுடன் அமர்ந்திருக்கிறாள். சரிகையாடைகளால் மூடப்பட்ட உடல். மின்விளக்கு ஒளி மின்னி மின்னி அணைவதுபோல் செய்யப்பட்டிருக்கிறது. பெரிய வெள்ளிக்கண்கள் பொருத்தப்பட்டுள்ளன. காகிதமலர்களால் ஆன மாலைகள் அணிவிக்கப்பட்டுள்ளன. ரூபாய்நோட்டுகளும் மாலையாகப் போடப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க நாட்டார் மரபு சார்ந்த வழிபாட்டுமுறை.

துர்க்கையைவிட இங்கே முக்கியமான சன்னிதி என்பது ஏழன்னையர்களுக்குரியது. அவர்களிலும் குறிப்பாக ஜேஷ்டை என்னும் மூத்தாள். அவள் பெரிய கரியவிழிகளுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். நேருக்குநேர் பார்க்கலாகாது, எதிரிலுள்ள கண்ணாடியில் பார்க்கவேண்டும். தவ்வையன்னை இடப்பக்கம் பக்கவாட்டில் இருக்கிறாள், ஆகவே வலப்பக்கம் இருக்கும் ஆடியில் அவளைக் காணலாம்.

சோமேஸ்வர் ஆலய முகப்புச்சிலை. புஷ்பபாலிகை

நான் முதலில் சரியாகப் பார்க்கவில்லை. ஏழன்னையரையும் தெளிவுறப் பார்க்க முடியாதபடி அலங்காரங்கள். மீண்டும் சென்று ஆடியில் பார்த்தேன். ஓர் அகநடுக்குடன் திரும்பி வந்துவிட்டேன். நான் சென்ற ஊரடங்குக் காலத்தில் எழுதிய மூன்று கதைகளில் தவ்வை இடம்பெறுகிறாள் என்பதை வாசகர்கள் நினைவுகொள்ளலாம். இது தவ்வையின் காலகட்டம்.

அந்த ஆலயம் உயரமற்றது. அதன் அடித்தானம் முழுக்க நுணுக்கமான கல்வெட்டுகள் பரவியிருந்தன. ஒரு தொன்மையான மர்மமான நூலைப் பார்ப்பது போலிருந்தது. ஆனால் அங்கிருந்து உடனே சென்றுவிடவேண்டுமென்ற எண்ணமும் உருவானது.

திரும்பி வந்தபோது சோமேஸ்வரர் ஆலயம் திறந்திருந்தது. இதன் முகப்புக்கோபுரம் நாயக்கர் பாணியிலானது. கிபி 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்டது. கோபுரச்சிற்பங்களில் சூரியனையும், பிட்சாடனரையும், ஆடவல்லானையும் காணலாம். சிறிய புடைப்புச் சிற்பங்களாயினும் மிக அழகான முக அமைப்பும் நுணுக்கமான அணிச்செதுக்கும் கொண்டவை.

பெரிய ஆலயம். உள்ளே பழைய நுளம்பர் ஆட்சிக்காலம் முதல் படிப்படியாக ஆலயம் உருவாகி வளர்ந்து வந்ததைக் காட்சியாகவே காணமுடிந்தது. இப்போதுள்ள ஆலயம் பதினொன்றாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டு பின்னர் நாயக்கர் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

தமிழகத்தின் நாயக்கர் கால ஆலயங்களை, குறிப்பாக ஸ்ரீரங்கம் ஆலயத்தை நினைவூட்டிக்கொண்டே இருந்தது இந்த ஆலயம். யாளிமேல் ஏறிய போர்வீரர்களின் சிலைகள் நிரைவகுத்த தூண்களுடன் கூடிய விரிந்த சுற்றம்பலங்கள். யாளியின் காலடியில் மிதிபடும் யானை. மணற்கல்லால் ஆன மெல்லிய தூண்கள் காடெனச் செறிந்த மண்டபங்கள். ஆலயக்கட்டுமானத்தை தாங்கி நின்றிருக்கும் குண்டுக்குள்ளர்கள், சுவர்களிலெங்கும் விழித்தெழுந்த யாளித்தலைகள், மணிமாலைபோல தங்களை நிரைவகுத்துக் கோத்துக்கொண்ட யானைகள்.

மணற்கல்லாலும் சிவப்புக்கல்லாலும் ஆன ஆலயம். அந்தியொளியிலும் தீப ஒளியிலும் பொன்னென மின்னுவது. நுழைவு வாயிலின் மலர்க்கன்னியரும், உள்வாயிலின் இருபக்கமும் வில்லேந்திய வேட்டுவ கன்னியரும் செதுக்கப்பட்டிருந்தனர். நான் பார்த்த வாயிற்சிற்பங்களில் இவையே அழகானவை என்று சொல்லமுடியுமெனத் தோன்றியது.

அந்தியில் ஆலயத்தின் விரிந்த கல்வெளியில் நடந்துகொண்டிருந்தோம். சோழர்களால் கைப்பற்றப்பட்டபோதிலும் நுளம்பநாட்டில் அவர்களால் ஆலயங்கள் ஏதும் இடிக்கப்படவில்லை. மாறாக புதுப்பிக்கப்பட்டும் எடுத்துக்கட்டப்பட்டும் பேணப்பட்டுள்ளன. புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. பிற்காலத்தைய இஸ்லாமியப் படையெடுப்பின்போதும் ஆலயம் பெரும்பாலும் அழியவில்லை. சிற்பங்கள் அழகு குன்றாமலேயே நீடிக்கின்றன.

கல்லால் ஆன நகை என நான் பல ஆலயங்களை நினைப்பதுண்டு. இந்த ஆலயத்தையும் அவ்வாறு சொல்லலாம். சிற்பங்களும் அணிச்செதுக்குகளும் குழைந்து குழைந்து உருவான மண்டபங்கள். ஒரு கணம் நாமிருப்பது தாராசுரத்திலா என ஐயமெழுப்பும் இணைப்பு மண்டபங்கள். அடித்தளங்களில் தமிழ்க் கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எவையெல்லாம் வாசிக்கப்பட்டுள்ளன என்று தெரியவில்லை.

சுவர்களிலுள்ள சிற்பங்களைப் பார்த்துக்கொண்டு சுற்றிவருவது ஓர் இனிய அனுபவம். சிலைகளை அவற்றுக்கான குறிப்புகளைக்கொண்டு அடையாளம் காண்பது ஒருவகையில் நம் பண்பாட்டு நினைவுகளை மீட்டிக்கொள்வதுதான். அழகிய ஆடவல்லான் உருவங்கள் புடைப்பாகச் செதுக்கப்பட்டிருந்தன. தென்றிசை முதல்வன் சிலைகள், கரியுரித்த பெருமான் சிலைகள், காலபைரவர் சிலைகள். ஆனால் மிக அழகிய சிலை கோபுரத்திலும் உள்ளேயும் இருந்த பிட்சாடனர் சிலைதான். மிகச்சிறிய சிலையில்கூட அழகும் முழுமையும் துலங்கின.

கோயில் முகப்பில் மிகப்பெரிய கல்கொடிமரம் நின்றிருந்தது. விஜயநகர ஆட்சியாளர்கள் தங்கள் போர்வெற்றிகளின் நினைவாக இப்படி கல்கொடிமரங்களை வெற்றித்தூண்களாக அமைப்பது வழக்கம். அருகே இப்போது பயன்படுத்தப்படும் மரத்தாலான கொடிமரம். வெற்றித்தூண் இன்று வெறும் கல்வியப்புதான். பேரரசுகள் மறைந்துவிட்டன. கலைமட்டும் மிஞ்சியிருக்கிறது.

[மேலும்]

Someshwara Temple and Kolaramma Temple of Kolar

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2021 11:35

விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது, கடிதங்கள்

அன்புள்ள ஜெ

விக்ரமாதித்யன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட செய்தி பெரும் மனநிறைவை அளித்தது. நான் இதை சென்ற நான்காண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழக அரசு விருதுகளுக்கான அறிவிப்பில் நீங்கள் விக்ரமாதித்யன் பெயரை சொல்லியிருந்ததில் இருந்தே இந்த விருது அவருக்கு அளிக்கப்படும் என்பதை எதிர்பார்த்துமிருந்தேன். இந்த விருதுச்செய்தி இந்த நாளை மகிழ்ச்சியாக ஆக்கிவிட்டது.

நான் கவிதை வாசகனே இல்லை. கவிதையின் நுட்பங்கள் எனக்கு பிடிபடுவதும் இல்லை. ஆனால் இருபதாண்டுகளாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். நாவல்கள், கதைகள் எல்லாம் வாசித்தேன். கவிதைகளில் எனக்கு பிடித்தவை என்று என்னால் எதையும் சொல்லமுடியாது. ஆனால் சினிமாப்பாடல்களில் கண்ணதாசனின் பல வரிகள் எனக்கு ஆழமான உணர்சிகளை அளித்திருக்கின்றன. அவையெல்லாமே வாழ்க்கையை நேரடியாகச் சொல்லும் வரிகள்.

ஒருமுறை ஒரு புத்தகக் கண்காட்சியில் சும்மா விக்ரமாதித்யனின் ஒரு தொகுதியை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தேன். ஒருசில வரிகள் நெஞ்சில் தைத்தன. மற்ற கவிஞர்களைப் போல அல்ல இவர் என்ற எண்ணம் ஏற்பட்டது. எதையும் அலங்காரமாகச் சொல்வதில்லை. எதையும் அழகாக ஆக்குவதில்லை. வாழ்க்கையிலிருந்து வருவதுபோன்ற வரிகளாக இருக்கின்றன. ஆகவே உடனே வாங்கிவிட்டேன். அன்றுமுதல் இன்றுவரை விக்ரமாதித்யன் என்னுடன் இருந்துகொண்டே இருக்கிறார்.

இன்றைக்கு எனக்கு ஏராளமான விக்ரமாதித்யன் கவிதைகள் ஞாபகத்தில் உள்ளன. நான் என் வரையில்  கவிதைக்கான ஒரு வரையறையை வைத்திருக்கிறேன். எனக்கு வாழ்க்கையைச் சுருக்கிச் சொல்லும் வரிகள்தான் கவிதை. ஒரு சூத்திரம் மாதிரி. அல்லது நையாண்டி மாதிரி. அந்தமாதிரி கவிதைகள் நவீனக்கவிதையில் அவ்வளவாக எழுதப்படுவதில்லை. விக்ரமாதித்யன் மாதிரி இன்னொரு கவிஞர் இல்லை. அதுவும் தெரியும்.

விக்ரமாதித்யன் மாதிரி இன்னொருவர் எழுதினால் அந்த வரி செயர்க்கையாகவும் ஆகிவிடும். அவருடைய பெர்சனாலிட்டியில் இருந்துதான் அந்த வரி வந்தாகவேண்டும். அப்போதுதான் அதற்கு ஒரு மதிப்பு உருவாகிறது.அவர் நாடோடி. குடிகாரராக இருந்தவர். அவருக்கு தீராத அலைக்கழிப்பு உள்ளது. அப்படி அவர் வாழ்ந்த வரிகள் அவை.

அவருடைய கவிதைகளை நவீன கவிதை என்று சொல்லிவிட முடியாது. எனக்கு நிறைய நவீனக்கவிதைகள் மொழிபெயர்ப்புகள் என்ற எண்ணம்தான் இருக்கிறது. நேரடி மொழிபெயர்ப்பு என்று சொல்ல வரவில்லை. அவையெல்லாம் எங்கேயோ படித்த வெளிநாட்டுக் கவிதை பலமுறை ரூபம் மாறி வந்தவைபோல உள்ளன. அவற்றிலுள்ள நடையே மொழிபெயர்ப்புபோல ஆங்கில நடை.

ஆனால் விக்ரமாதித்யன் கவிதைவரிகளை ஔவையார் கவிதைகள் மாதிரி அல்லது திருமூலர் கவிதை மாதிரி என்று சொல்லிவிடலாம். அவையெல்லாம் இங்கே இருந்து ஒரு பழைய கவிஞன் எழுதியமாதிரி இருக்கின்றன. அந்தக்கவிதைகளிலுள்ள வரிகளில் யாப்பு கிடையாது, மற்றபடிக்கு எந்த வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை.

மழைபொழிவதும் மண்ணில் விளைவதும் மக்களுக்கே என்று ஒரு வரி. நான் கோயில்பட்டி தாண்டி போகும்போது மழைபெய்து நல்ல பச்சை நிறம். அந்த வரியை நினைத்துக்கொண்டபோது கண்ணீர் வந்தது. என் ஊர்ப்பக்கமெல்லாம் கரடுதான். இந்தமாதிரியான வரிகள் வந்துகொண்டே இருக்கின்றன.

வெயில் காயும்
மழை புரட்டிப் போடும்
அல்பப்புழுக்களும் வாழ்ந்து
கொண்டிருக்காமல் இல்லை

என்ற வரிதான் விக்ரமாதித்யன் அவர்களின் கவிதை. இப்போது மொத்தமாக படிக்கும்போது ரொம்ப ஆச்சரியமான ஒரு விஷயம் இருக்கிறது. தமிழில் அவரை மாதிரி அலைக்கழிந்த ஆத்மா கிடையாது. ஆனால் அவர் வாழ்க்கையை பற்றிய நம்பிக்கையை உருவாக்குகிற மாதிரித்தான் எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டையே ஆசீர்வாதம் பண்ணுகிற மாதிரித்தான் எழுதியிருக்கிறார்.

இவ்வடுப்புகள்
இன்றெரியாது போயினும்
எங்கெங்கோ அடுப்புகளில் தீ

என்றுதான் அவருடைய கவிதை கண்டுபிடிக்கிறது. ஒரு பெரிய கவிஞருக்கு நாம் வறுமையை அளிக்கிறோம். அவர் நமக்கு ஆசீர்வாதத்தை மட்டும்தான் திருப்பி அளிக்கிறார்.

ஆர். ஆனந்த்ராஜ்

***

அன்புள்ள ஜெ

விக்ரமாதித்யன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படுவது மிகுந்த மனமகிழ்ச்சியை அளிக்கிறது. அற்புதமான கவிஞர் அவர். எளிமையான கவிதைகள். அவருடைய கவிதையெல்லாம் சின்ன முள் மாதிரி. குத்தும்போது தெரியாது. ஊமைவலியாக மாசக்கணக்கில் இருந்துகொண்டே இருக்கும். நான் ஆழமான வாசிப்பு உடையவன் அல்ல. ஆனாலும் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். நான் கஷ்டப்பட்டவன். பலவேலைகள் செய்தவன். எனக்கு காதல், பூக்கள் போன்ற கவிதைகளில் ஈடுபாடில்லை. மனித உணர்ச்சிகளிலுள்ள நெகிழ்ச்சிகளும் பெரிசாகத் தெரியவில்லை. தத்துவக் கவிதைகளிலும் ஈடுபாடில்லை.

திருடிப் பிழைத்ததில்லை நான் எனினும் திருடிப் பிழைப்பவர்களிடம் யாசகம் வாங்கி வாழ நேர்கிறது எனக்கு என்பது போன்ற வரிகளில்தான் எனக்கு கவிதையனுபவம் நிகழ்கிறது. அவைதான் ஞாபகத்தில் இருந்து வலி தந்துகொண்டிருக்கின்றன.

கண்ணன்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2021 11:34

கரமசோவ் சகோதரர்கள், அருண்மொழி நங்கை

அன்புள்ள ஜெ

கடந்த ஞாயிறு அன்று எழுத்தாளர் அருண்மொழிநங்கை அவர்களின் கரம்சோவ் சகோதரர்கள் உரை தமிழில் தாஸ்தோவ்ஸ்கி நாவல்கள் மேல் நடந்த உரைகளில் தனித்துவமானது.

தாஸ்தோவ்ஸ்கி பற்றிய பிற உரைகளில் இருந்து இது தனித்து நிற்பது என உரையின் தொடக்கத்திலேயே அவர் சொல்லி விடுகிறார். தாஸ்தோவ்ஸ்கி என்றாலே மனித மனத்தின் ஆழத்தை பேசக்கூடியவர், அதன் இருண்மையை சொல்லக் கூடியவர் என்ற விமர்சனக் கருத்தே பரவலாக முன் வைக்கப்படுகிறது. அதிலிருந்து தன் வாசிப்பு அனுபவம் எப்படி முன் நகர்கிறது அல்லது வேறுபடுகிறது என ஆராய்கிறார்.

இப்படி தனித்த வாசிப்பனுபவத்தை முன் வைக்கும் போது நிகழும் சிக்கலும் அவர்களது உரையில் இல்லை. என் சொத்த வாசிப்பனுபவம் என்ற உடன் நம் சிறு வாழ்வில் பெரிய உரைநடையை பொருத்திப் பார்ப்போம். ஆனால் அருண்மொழி மேடம் இன் தனி வாசிப்பில் இருந்து இந்த உரை தொடங்குகிறது. கல்லூரி விடுதி அறையில் தனிமையில் வாசித்த அனுபவத்தில் தொடங்கி வரலாற்றுக்கு தாவுகிறார்கள். வரலாற்று நெடுக நிகழ்ந்து வந்த பரிணாமத்தையும் கரம்சோவ் சகோதரர்கள் நாவலையும் ஒப்பிட்டு செல்கிறார். அங்கிருந்து சமகால பிரச்சனைக்கு என ஒரு அடிக்கு அடுத்த அடி பெருந்தாவல்கள் இந்த உரையில் நிகழ்கிறது.

பிறகு மார்க்சிய அறிஞர் அண்டோனியோ  கிராம்ஷியின் ஆதிக்க கருத்தாண்மை என்ற கருதுகோளை ஓரிரு நிமிடங்களில் அவர் விளக்கி செல்லும் விரைவு என்னை வியக்க வைத்தது. பிறகு அவர் குறிப்பிடும் மொழியியல் அறிஞர் நாம் சாம்ஸ்கிக்கும் ஃபூக்கோவுக்கும் நிகழ்ந்த அடிப்படை மனித இயல்பு குறித்த அந்த உரையாடலை நான் காணொளியில் சென்று பார்த்தேன். கிட்டத்தட்ட ஒன்றேகால் மணிநேர அந்த  விவாதத்தை இரண்டு மூன்று நிமிடங்களில் அதன் சாரத்தை உணர்த்தும் விதமாக அவ்ர் கூறிய விதம் மிக துல்லியமாக இருந்தது. கடைசியில் அவர் சாம்ஸ்கியின் மனிதன் இயல்பாகவே நீதி உணர்வை கொண்டிருக்கிறான் என்ற அந்த வாதத்தை மாபெரும் விசாரணையாளனின் முடிவில் அந்த ஸ்பானிய விசாரணைப் படுகொலைகளின் முடிவில் வைத்தபோது அதன் பரிமாணமும் பொருளின்மையும் முகத்தில் அறைந்தது. மனித மனம் இறுதியில் விடைகளின்றி முட்டிக் கொள்ளும் இடமல்லவா அது?

அவர்களது பேச்சின் தனியம்சம் டால்ஸ்தோய், தாஸ்தோவ்ஸ்கி இருவருக்குமான ஒற்றுமையை என எழுந்த புதிய பார்வை. இருவருக்குமான சமூக பார்வை, இருவரும் கொண்டிருக்கும் மரபார்ந்த கிறிஸ்துவத்தின் மேலான விமர்சனமும், அதிருப்தியும். வாழ்வியல் மீதான இருவரின் பார்வையும் எந்த புள்ளியில் சந்தித்துக் கொள்கிறது எனத் தொடங்கி அவர்களின் நாவல்களுள் அவை எப்படி பயின்று வந்திருக்கின்றன என யோசிக்க வைக்கிறார். இந்த உரையின் இன்னொரு சிறப்பம்சம் என நான் கருதுவது, அவர் அறுதியிட்டு ஒவ்வொன்றையும் விளக்கிச் செல்லவில்லை. ஒவ்வொன்றிலும் சிறிதளவு தொட்டு காட்டு அதிலிருந்து நம்மை யோசிக்கத் தூண்டுகிறார்.

கரம்சோவ் நாவலைப் பற்றி பேசும் போது கூட கதையை சொல்லி அதிலிருந்து அவர் தன் கருத்திற்கு முன் நகரவில்லை. எத்தனை குறைவாக ஒரு விஷயத்தை சொல்லி தெளிவாக கடத்த முடியுமோ அத்தனை தெளிவாக செய்கிறார்.

திமித்ரி, இவான், அல்யோஷா மூவரின் குனாதிசியங்களையும் தனி துருவமாக நிறுத்தி அங்கிருந்து ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எப்படி முயங்குகின்றனர். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உரைந்திருக்கும் அந்த கிரே நிறம் எந்த இடத்தில் வெளிப்படுகிறது என்பதை தொட்டுக் காட்டுகிறார். அதிலிருந்து அவர் முன் சொன்ன தத்துவவாத, எழுத்தாளர்களுக்கான பன்பை பற்றிய குறிப்பை நான் ஒப்பிட்டு பார்த்தேன். அவர் முதலில் சொன்ன ஒரு கிளாசிக் நாவல் எந்த இடத்தில் அதன் முழுமையை அடைகிறது. ஒரு பிரச்சனையின் அனைத்து பக்கங்களையும் எப்படி தத்துவ விசாரம் செய்கிறது என்பதிலிருந்து கரம்சோவ் சகோதரர்களில் வரும் மூன்று மைய கதாபாத்திரமும் அந்த கிளாசிக் தன்மை எப்படி தொடுகின்றன என யோசித்துப் பார்க்கிறேன்.

நாவலில் உள்ள சின்ன விஷயங்களைக் கூட வரலாற்றில் தான் அறிந்த பெரிய மனிதர்களில் வாழ்வில் பொருத்தி பார்க்கிறார். உதாரணமாக, திமித்ரியின் குரூசென்கா மீதான காதலை, கவிஞர் கீட்ஸ் காதலுடன், கூல்டிரிஜ், கெம்மிங்வே வாழ்வில் ஏற்பட்ட காதல் நிகழ்வுகள் என நாவலை தான் அறிந்த மனிதர்களோடு, வரலாற்றோடு ஒப்பிட்டு பேசும் இடங்கள் ஒரு நாவலை நம் மனம் எத்தனை சாத்தியத்திற்கு விரித்தெடுக்கும் என்பதை காட்டுகிறது. அங்கே நிறுத்தாமல் ஒரு இந்திய மனம் அந்த நாவலை எப்படி எடுத்துக் கொள்ளும் என்பதையும் சுட்டுகிறார். தந்தை கொலை என்ற குறியீடு எப்படி தன் வாசிப்பை பிம்பீசாரா, அஜாத சத்ருவுடன் இணைக்கிறது என்பதை பார்க்கிறார். சியாத் வாதம் எப்படி தாஸ்தோவ்ஸ்கியின் சிந்தனையில் ஊடுருவுகிறது என்பதை பற்றி சிந்திக்கிறார்.

இதனை ஒரு உரை என்று சொல்வதை விட கேட்பவரோடு நிகழ்த்தும் உரையாடல் என்ற இதனை சொல்வேன். அவரது ஒரு கட்டுரையின் தலைப்பு “பறக்கும் புரவியின் குளம்போசை” இந்த உரையும் அப்படி தான் சிறு தயக்கத்துடன் பொடி நடையிட்டு நடக்கும் புரவி எத்தருணத்தில் வேகம் கொண்டு சீறிப் பாய்கிறது அதன் பின் அது எப்படி தன் இலக்கை அடைகிறது என இந்த உரையை முழுதும் கேட்டால் புரியும். இந்த உரையின் உச்சம் என்பது முத்தாய்ப்பாய் அமைத்த மரண வாக்குமூலம் பற்றிய பார்வை. அந்த கடைசி நிமிடங்கள் தான் ஒட்டுமொத்த உரையும் சென்று குவியும் மையமாக அமைந்தது. கிட்டத்தட்ட முப்பது பக்கம் தமிழில் வரக்கூடிய அந்த மாபெரும் விசாரணையாளனை  எட்டு நிமிடங்களில் ஒரு உணர்ச்சிகர நாடகம் போலவே நிகழ்த்திக் காட்டினார்.  அது இந்த உரைக்கு ஒரு சிகரம். கடைசியில் கி.பி. 2000 ஆண்டில் போப் ஜான் பால் மன்னிப்பு கேட்டதை  இப்போது தான் கேள்விப் படுகிறேன்.

ஒரு உரையில் ஒரு நாவலைப் பற்றி தனி ரசனைப் பார்வை, வரலாற்றுப் பார்வை, சமூகப் பார்வை, வாழ்வியல் பார்வை அந்த நாவல் முன் வைக்கும் தத்துவ பார்வை என அனைத்தையும் தொகுத்து பேசியதே இந்த உரையின் சிறப்பு என சொல்வேன்.

அவருக்கு என் வணக்கங்கள்.

நன்றி,

கவுதம் குமார்.

***

அன்புள்ள கௌதம் குமார்,

கரமசோவ் சகோதரர்கள் நாவல் பற்றி அருண்மொழியின் உரை ஒரு நல்ல முயற்சி. கதையைச் சொல்வதே பொதுவாக இங்கே நூல்பற்றிய பேச்சாக இருக்கிறது. நாவலில் உள்ள அடிப்படையான சில தத்துவக் கேள்விகளை மட்டும் விவாதிக்கிறாள். குற்றவுணர்வுக்கும் குற்றத்துக்குமான உறவு, குணங்களுக்கும் குற்றத்துக்குமான உறவு, தந்தையை கொல்லுதல் என்னும் அடிப்படை இச்சை என நீள்கிறது. தமிழில் பெரும்பாலும் பேசப்படாத ஓர் இடம் கரமசோவ் சகோதரர்களில் வரும் கிரேட் இன்குவிசிஷன். அதைப்பற்றியும் பேசுகிறாள்.

ஆனால் ஒவ்வொரு விவாதத்தையும் நாவலின் அழுத்தமான ஒரு நிகழ்வைச் சொல்லி தொடங்கியிருந்தால் நாவலை வாசிக்காதவர்களுக்கும் உதவியாக இருந்திருக்குமென கேட்கும்போது தோன்றியது. ஓர் உரையைத் தொடங்குமிடம் முக்கியமானது. தேர்ந்த பேச்சாளர்கள் அல்லாதவர்களிடம் நடுக்கம் இருக்கும். மெல்ல மெல்லத்தான் அவர்களால் உரைக்குள் செல்லமுடியும். பத்துப்பதினைந்து நிமிடம் சென்றபிறகுதான் அருண்மொழியால் உரையின் சாராம்சத்திற்குள் செல்லமுடிகிறது. அதைவெல்ல ஒரு அழுத்தமான கதைத்தருணத்தை யோசித்து அதைச் சொல்லியபடி தொடங்கியிருக்கலாம். இதெல்லாம் என் வழிமுறைகள், ஆனால் அருண்மொழி அவற்றை கேட்கலாகாது என உறுதியுடனிருக்கிறாள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2021 11:34

ஏசியாநெட் பேட்டி, கடிதங்கள்

அழகான குறும்படம். நல்ல கேமரா கோணங்கள், பின்னணி இசையோடு பச்சை நிறம் மனதை அள்ளுகிறது. நெல்லை எங்களுக்கு எல்லை. குமரி எங்களுக்கு தொல்லை என்று மு.க திமுகவை குறித்து சொன்னது பழமொழியாகி விட்டதா !

செந்தில்

டோக்யோ

***

அன்புள்ள ஜெ

ஆசியாநெட் பேட்டி பார்த்தேன். இன்னும் கைரளி செய்திப்படம் பார்க்கவில்லை. அது ஒரு படி மேல் என்று சொன்னார்கள். இங்கே ஊடகங்கள் உங்களை காட்டியது ஒரே ஒரு சந்தர்ப்பத்தில்தான். நீங்கள் ஒரு குண்டரால் தாக்கப்பட்டபோது. அதுவும் உங்களை இழிவுசெய்யும்படியாக. தமிழன் என நினைக்கையில்…

ஆனால் எந்த எழுத்தாளரையுமே இவர்கள் காட்டியதில்லையே என நினைத்தால் கொஞ்சம் ஆறுதல்தான். காட்டாமலிருக்கும் வரை நல்லது என்ற எண்ணமும் எழாமல் இல்லை.

ஆ.முருகேசன்

***

ஐந்திணைகளில் பாலை தவிர நான்கும் நிறைந்த மண், கேரளத்தின் பித்ரு நிலம், இரு பண்பாடுகளின் கூடலில் கிடக்கும் நிலத்தில் வந்த முக்கிய ஆளுமைகள் என இந்த நிலத்தை அதன் வரலாற்றைப்  பதிவு செய்த முக்கியமான பேட்டி. மிக அழகாக வேணாட்டையும் ஆசானையும் பதிவு செய்திருக்கிறார்கள்

சுபா

***

அன்புள்ள ஜெ

ஆசியாநெட் பேட்டி கண்டேன். கைரளி டிவி இன்னும் யூடியூபில் வெளிவரவில்லை. மிகச்சிறப்பான பேட்டி. இருபத்தைந்து நிமிடம். ஆனால் ஓணம் அன்று பிரைம் டைமில் இரண்டு முறை. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

எம்.ராஜேந்திரன்

***

அன்புள்ள நண்பர்களுக்கு,

சென்ற ஆண்டு மும்பையில் ஓர் ஊடகவியலாளரைக் கண்டேன். ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னார்.

ஊடகங்கள் தங்கள் பேசுபொருளை தாங்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும். வெவ்வேறு தளங்களில் பேசுபொருட்களையும், ஆளுமைகளையும் அவர்கள் அறிமுகம் செய்யவேண்டும். அவற்றை பார்வையாளர் ரசனைக்கு கொண்டு செல்லவேண்டும். ஆளுமைகளைப் பற்றிப் பேசிப் பேசி அவர்களை முக்கியமானவர்களாக ஆக்கவேண்டும்.

அவ்வாறன்றி, ஏற்கனவே பார்வையாளர்களால்  ரசிக்கப்படும் விஷயங்களைப் பற்றி மட்டும் பேசினால், அவர்களுக்குத் தெரிந்த பிரபலங்களையே முன்வைத்தால் மிக விரைவில் பேசுபொருள் தீர்ந்துவிடும். ஆளுமைகள் சலிப்பூட்டுவார்கள்.

பழைய அச்சு ஊடகங்கள் தொடர்ச்சியாக பேசுபொருட்களை கண்டுபிடித்தன, ஆளுமைகளை உருவாக்கி முன்னிறுத்தின. ஆகவே அவை அரை நூற்றாண்டுக்காலம் ஆர்வம் குறையாதவையாக நீடித்தன. காட்சியூடகம் ஆரம்பத்திலேயே வணிகநோக்குக்கு ஆட்பட்டுவிட்டது. நிகழ்ச்சி அதிகபட்ச லாபம் சம்பாதிக்கவேண்டும், அதற்கு புரவலர்கள் வேண்டும் என்னும் கட்டாயம் உள்ளது. காட்சியூடகத்தில் ஊடகத்தை அறிந்த பொதுவான ’ஆசிரியர்கள்’ இல்லை. தொகுப்பு நிர்வாகிகளே உள்ளனர். விளைவாக காட்சியூடகம் உருவான இருபதாண்டுகளிலேயே பெரும் சலிப்பை உருவாக்கிவிட்டது.

காட்சியூடகம் திரும்பத் திரும்ப ஒரு சில வட்டங்களில், ஒரு சில ஆளுமைகளில் சுற்றிவருகிறது. பெரும்பாலும் வணிக சினிமா, கொஞ்சம் அரசியல். வெளியே போனால் மக்களுக்குப் பிடிக்குமா என்னும் ஐயம் அதை ஆட்டிப் படைக்கிறது. அது உண்மையும்கூட, ஏனென்றால் மக்களுக்கு அவர்கள் எதையும் அறிமுகம் செய்யவில்லை. ரசனையைப் பழக்கவுமில்லை. ஆகவே மக்கள் ஒரு சிக்கலான இடத்தில் இருக்கிறார்கள். புதிய எவையும் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. அவர்களுக்கு தெரிந்த அனைத்தும் சலிப்பூட்டுகின்றன.

ஒருமுறை எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசைநிகழ்ச்சி ஒன்று டிவியில் வந்தது. எனக்குத் தெரிந்த ஒருவர் பாய்ந்து டிவியை அணைத்துவிட்டு சலிப்புடன் ஏதோ சொன்னார். “ஏன் எஸ்பிபி பிடிக்காதா?” என்று நான் கேட்டேன். “நான் எஸ்பிபி ரசிகன். ஆனால் அவருடைய பாட்டை, நடிப்பை, சிரிப்பை எத்தனை முறைதான் பார்ப்பது? அவர் பாடும் பாடல்களை எத்தனை தடவை கேட்பது? இருபதாண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு நாற்பது வயதாகிறது” என்றார்.

தமிழ் காட்சியூடகம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. கிராமப்புற ரசிகர்கள், வயதானவர்கள் மட்டுமே டிவி பார்க்கிறார்கள். அதிலும் ஓடிடி தளங்கள் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் கிராமங்களில் ஊடுருவிவிட்டன. இன்று தொலைக்காட்சி காலாவதியான ஊடகமாக ஆகிவிட்டது. ஆனால் இன்னமும்கூட தொலைக்காட்சிகளில் இருக்கும் ஊடகவியலாளர்களுக்கு இந்த விஷயம் சென்று சேரவில்லை. அவர்கள் மூழ்கும் கப்பலில் எலிகள் போல அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2021 11:33

காந்திய நிறுவனங்களை அரசு கையகப்படுத்துவதைத் தடுக்க!

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இத்தகவலை உங்கள் வலைதளத்தில் வெளியிட்டால் மிக்க உதவியாக இருக்கும்.

தற்போதைய அரசாங்கம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை  மீட்டெடுத்து 54 ஏக்கர் பரப்பளவில் ‘உலகத் தரம் வாய்ந்த’ சுற்றுலாத் தலமாக மாற்றத் தயாராக உள்ளது. காந்தி ஆசிரம நினைவு மற்றும் சுற்றுப்புற மேம்பாட்டுத் திட்டத்துக்கு ₹.1200/- கோடி நிதித்திட்டத்தை அறிவித்துள்ளது. செய்தித்தாள் அறிக்கையின்படி புதிதாக உருவாக்கப்படும் ‘உலகத்தரம் வாய்ந்த’ நினைவுச்சின்னத்தில் புதிய அருங்காட்சியகங்கள், ஒரு திறந்தவெளி அரங்கம், மிகவும் முக்கியமான நபர்களுக்கான ஓய்விடம், கடைகள், உணவகங்கள் ஆகியவை இருக்கும்.

இந்தத் திட்டம் பிரதமர் மற்றும் முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இது நாட்டின் அனைத்து காந்திய நிறுவனங்களையும் வணிகமயமாக்க தற்போதைய அரசாங்கத்தின் உத்தியாக உள்ளது. இதற்கு மோசமான உதாரணத்தை சேவாகிராமில் காணலாம், ஆனால் இதைவிட மிகவும் பயமுறுத்தும் அம்சம் அனைத்து காந்திய காப்பகங்களின் மீதான அரசாங்க கட்டுப்பாடாகும். மகாத்மா காந்தியின் படுகொலைக்கு பின்புலத்திலுள்ள சித்தாந்தம் இந்தியாவில் அதிகாரத்தில் இருக்கும் சிலரை இன்னும் ஊக்குவிப்பதால், இந்த ஆபத்தை எளிதில் கடந்து செல்ல முடியாது.

ஆக இதன் அர்த்தம் என்ன?- முன்மொழியப்பட்ட திட்டம் இன்றைய ஆசிரமத்தின் புனிதத்தையும் முக்கியத்துவத்தையும் முக்கியமாக ஹிருதய் குஞ்ச், சுற்றியுள்ள கட்டிடங்கள் மற்றும் அருங்காட்சியகத்தை கடுமையாக பாதிக்கிறது- ₹ 1200 கோடி திட்டத்தில் ஆசிரமத்தின் எளிமை முற்றிலும் இழக்கப்படும்.- ஹிருதய் குஞ்ச், மற்ற வரலாற்று கட்டிடங்கள் மற்றும் தற்போதைய அருங்காட்சியகங்கள மாற்றப்படாமல் இருந்தாலும், இனி அவைகள் மையமாக இருக்காது ஆனால் புதிய அருங்காட்சியகம், திறந்தவெளி அரங்கம், கடைகள், உணவகங்கள் போன்றவற்றால் ஒரு மூலையில் தள்ளப்படும்.- கடந்து செல்லும் சாலை மூடப்படுவதால், ஹிருதய் குஞ்ச் மற்றும் தற்போதைய அருங்காட்சியகத்திற்கு எளிதாக செல்வது தடைசெய்யப்படும். புதிய நுழைவாயிலில் குறைந்தபட்சம் ஒரு முக்கியமான நபர்களுக்கான ஓய்விடம் மற்றும் ஹிருதய் குஞ்சிற்கு மற்றும் தற்போதைய அருங்காட்சியகம் முன்பு ஒரு புதிய அருங்காட்சியகம் இருக்கும்

– சபர்மதி ஆசிரமத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் வருகிறார்கள். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இந்த இடத்திற்கு ஒருபோதும் ‘உலகத்தரம் வாய்ந்த’ மேல்பூச்சு தேவையில்லை. காந்தியின் கவர்ச்சியும் அந்த இடத்தின் நம்பகத்தன்மையும் எளிமையும் போதுமானதாக இருக்கிறது.

– முன்மொழியப்பட்ட திட்டம் ஒரு சிறந்த ‘காந்தி கேளிக்கை பூங்கா’ மற்றும் மோசமான ‘இரண்டாவது படுகொலை’.

– சுருக்கமாக, இந்த திட்டம் நிறைவேறினால், காந்தியின் மிக உண்மையான நினைவுச்சின்னம் மற்றும் நமது சுதந்திரப் போராட்டம் என்றென்றும் வீண் பகட்டு மற்றும் வணிகமயமாக்கலுக்கு இழக்கப்படும்.

இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற காந்தியவாதிகள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் காப்பக நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, அத்தகைய நிறுவனங்களின் முறையான பராமரிப்பு மற்றும் பராமரிப்பிற்காக அரசாங்கம் தொடர்ந்து பொதுப் பணத்தை பயன்படுத்துவதை உறுதிசெய்து, காந்திய நிறுவனங்களை அரசு கைப்பற்றுவதை நாம் கூட்டாக எதிர்க்க வேண்டும்.

இதற்காக இதுவரை 200+ கல்வியாளர்கள், ஆர்வலர்கள், கலைஞர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள் மற்றும் அக்கறையுடைய குடிமக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.மேலும் தங்கள் பெயரை இந்த அறிக்கையில் சேர்க்க விரும்பும் வாசகர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல்: mstempom@gmail.com

நன்றி.

மாணிக்க சுந்தரம்

https://sabrangindia.in/article/prevent-government-takeover-gandhian-institutions-activists

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2021 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.