Jeyamohan's Blog, page 933
August 17, 2021
கல்வி இரு உரைகள், கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
நீங்கள் சென்னை SRM கல்லூரியிலும் பிறகு நாகர்கோயில் UNCNல் உரையாற்றியதையும் இப்போது குத்துமதிப்பாக நூறாவது தடவை பார்க்கிறேன். என்னை மிகவும் பாதித்த உரைகள் அவை. எனது கல்லூரி படிப்பை உண்மையிலே நான் கற்றதில்லை என்ற எண்ணம் படிக்கும்போதே இருந்தது. ஆதலால் ஒரு ஆதங்கத்திற்காக இப்போது கல்லூரிகளில் நடக்கும் கருத்தரங்குகள், கலை நிகழ்வுகளை பார்ப்பது வழக்கம்.
SRM கல்லூரியின் TEDXல் நீங்கள் பேசிய பேச்சில் இருந்துதான் எனக்கு பின் நவீனத்துவம் புரிய ஆரம்பித்தது. அந்த உரையில் நீங்கள் கூறிய இரு துறவறங்கள் எவ்வளவு முக்கியமானது என என் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்துகொண்டு இருக்கிறேன். பிரம்மசரியம் என்பது எந்த துறையை நாம் படிக்க ஆரம்பிக்கிறோமோ அந்த துறையை பிரம்மமாக கண்டு அதை ஆராதித்து விவாதித்து விமர்சித்து அனுபவித்து தொகுத்து அதையே எண்ணி உலகின் எந்த சபலத்திற்கும் ஆளாகாமல் ஒரு கூட்டு புழு பருவம்போல் சிறகை வளர்த்துகொள்வது என்று கூறியதும், கல்வி என்பதும் அறிதல் என்பதும் உண்மையிலே மிகவும் மகிழ்ச்சியை கொடுக்ககூடியது என்று கூறியதும் பெரிய திறப்பாக எனக்கு முதலில் கேட்கும்போது அமைந்தது. இன்றும் வாரத்தில் ஒருமுறையாவது அதை கேட்காமல் இருந்ததில்லை.
UNCNல் நீங்கள் ஆற்றிய உரையில் “கான்செப்டை [ஐடியாக்களை] புரிந்து கொள்வது என்றால் உதாரணத்திற்கு புவி ஈர்ப்புவிசை என்ற கான்செப்ட்டை உண்மையாகவே புரிந்து கொண்டாய் என்றால் புவி ஈர்ப்புவிசை இல்லை என்று ஒரு இருபது நிமிடம் வாதாடு” என்று நீங்கள் கூறிய கான்செப்டே எனக்கு புரிந்துகொள்ள ஒரு மாதம் ஆகியது. விமானம், கப்பல், பறவை, வவ்வால் என்று ஆராய்ந்துவிட்டு ஒன்றும் தேராமல் புரியாமல் கடைசியில் உங்கள் பேச்சில் நீங்கள் சோதனை செய்ததாய் கூறிய படிப்புக்கும் சுகாதாரதிற்குமான சம்பவத்தையே எழுதி எழுதி பார்த்தும் முரணியக்கம் என்ற ஒன்றை உங்கள் கட்டுரைகளில் படித்து உணர்ந்தும்தான் புரிந்துகொண்டேன்.
இப்போதும் என் மனம் எதற்கும் சரியான உவமையை கண்டடைந்ததில்லை. இனி உலகை ஐடியாக்கள்தான் ஆளப்போகின்றன என்பதும்,அந்த ஐடியாக்கள் மனதுக்குள் உருவாக அல்லது கற்பனை செய்ய புனைகதையை வாசித்து புரிந்து கொள்வதும், அதன் விவரிக்கமுடியாத மன எழுச்சியை அல்லது மனம் முட்டி திகைத்து நிற்கும் தருணத்தை அறிந்து கொள்வதும் நல்லது என கூறினீர்கள். இலக்கியம் எதற்கு என்றால் இதுவரைக்கும் இல்லாத ஒரு விஷயத்தை கற்பனையாக கனவு வடிவில் உருவாக்கி கொள்வதற்கு என்று நீங்கள் கூறியதை எல்லாம் இப்போதும் என் மனதிற்குள் விவாதித்துகொண்டு இருக்கிறேன்.
கனவு,கற்பனை,உள்ளுணர்வு மூன்றையும் கொண்டு ஒரு ஐடியாவை உருவாக்கி அதை சுவாராசியமாக மற்றவர்களிடம் விளக்க மொழித்திறன் எவ்வளவு முக்கியம் என்பதையும் அதற்கு இலக்கியம் வாசிப்பது எவ்வளவு முக்கியம் என்றும் உங்களின் உரையில் இருந்துதான் உணர்ந்து கொண்டேன்.
எவ்வளவு வயதானாலும் குழந்தையை தன்னுள் தக்கவைக்கவில்லையென்றால் படைப்பூக்கம் இருக்காது என இதில் கூறியது போலவே சமீபத்தில் கலாட்டா.காம் இன்டர்வியுவிலும் கூறியிருக்கிறீர்கள். அப்படி ஒரு குழந்தை உங்களிடம் இருக்கிறது என்பது அந்த பேட்டியில் தெரிந்தது. உண்மையான உலகமும் சந்தோஷமும் குழந்தைகளுக்குதான்.
நன்றி சார்.
ஸ்டீபன்ராஜ் குலசேகரன்
***
பின்தொடரும் நிழலின் குரல் – கடிதங்கள்
பின் தொடரும் நிழலின் குரல் வாங்க
ஜெ,
இந்த புத்தகத்தின் பக்கம் 139 இல் வரும் அருணாசலத்தின் குரலாக வரும் பகுதி இன்றைய என் அலுவலக வேலையில் மிக கச்சிதமாக பொருந்தி உள்ளது. உண்மையில் இன்று நிறைய சாப்ட்வேர் கம்பெனியின் நடு நிலை ஊழியர்களின் நிலை இதுதான் அவர்கள் வெறும் ஒரு அதிகார பாவனைதான் மேற்கொள்ள முடியுமே தவிர அதிகாரங்கள் இருப்பதில்லை. ஆனால் இது ஒரு மாயவலை இதில் சிக்கி வெளி வரமுடியாமல் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். தொடக்க காலங்களில் நல்ல உபயோகமான வேலை பார்த்து பின் ஒரு மூன்று வருடங்களில் இந்த middle management வேலையில் உட்கார்ந்து பின் ஒரு விதமான உயர் மட்டம் சொல்லும் சில கணக்கு வழக்குகளை செய்வதும் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் சில விசயங்களை மட்டும் செய்ய ஆரம்பித்து ஒரு பத்து வருடங்களில் இதை தவிர வேறு எதுவும் தெரியாதவர்களாய் ஆகிவிடுகிறார்கள்.
அன்புடன்
-திருமலை
அன்புள்ள ஜெ
பின்தொடரும் நிழலின் குரல் நாவலை இன்றுதான் வாசித்து முடித்தேன். மூன்று மாதமாகிறது வாசித்து முடிக்க. என் வாழ்க்கையில் மறுபரிசீலனையும் கொந்தளிப்பும் தனிமையும் துக்கமும் நிறைந்த மூன்று மாதங்கள் இவை. இந்நாவல் என்னைப்போன்ற ஒருவருக்கு என்ன கொடுக்கிறதென்பது மற்றவர்களுக்குப் புரியாது. அவர்களால் என் மனநிலைக்குள்ளேயே வரமுடியாது.
நான் பல ஆண்டுக்காலம் தொழிற்சங்க அரசியலில் இருந்தவன். இடதுசாரி. இடதுசாரியாக இருப்பதென்பது ஒரு போலியான மிதப்பை அளிக்கிறது. நான் ரொம்ப நல்லவன், நான் போராளி, எனக்கு இந்த உலகம் இயங்கும் விதம் தெரியும், எனக்கு மற்றவர்களை திருத்தி வழிநடத்தும் பொறுப்பு இருக்கிறது, நான் தியாகி … இந்தவகையான நம்பிக்கைகள்தான் இடதுசாரியாக இருப்பதன் அடிப்படை. இந்த நம்பிக்கையால் வரும் ஒரு வகையான போலியான தன்னம்பிக்கையோ திமிரோதான் இடதுசாரிகளை செயல்படவைக்கிறது. மனதுக்குள் எப்போதும் ஒரு தென்றல் அடித்துக்கொண்டிருக்கும். எவரையும் எதிர்த்துப்பேசலாம், எவருக்கும் ஆலோசனையும் அறிவுரையும் சொல்லலாம் என்று தோன்றும்,
அந்த மாயை கலையும். கலையக்கலைய இன்னும் கெட்டியாகப்பிடித்துக்கொள்வோம். முற்றிலும் கலைந்தபிறகுதான் ஃபேஸ்புக்கில் கத்த ஆரம்பிப்பதெல்லாம். ஏனென்றால் அதில் இழப்பு இல்லை. பாவனைதான். இடதுசாரியாக இருப்பதாக நம்பிக்கொள்ளலாம். ஆனால் எதையும் செய்யவேண்டியதுமில்லை. ஆனால் களத்திலே செயல்பட நிறைய நம்பிக்கை தேவை.அந்நம்பிக்கையை இடதுசாரி தத்துவம் தருவதில்லை. அதை தருவது கட்சி என்ற இறுக்கமான குழு. அங்கே கூட்டமாக இருப்பதன் தைரியமும் மகிழ்ச்சியும். ஆனால் என்ன ஆகிறதென்றால் எங்கோ ஓரிடத்தில் அந்தக் கட்சியே பெரிய சுமையாக ஆகிவிடுகிறது. பாறாங்கல் மாதிரி நரம்புகளை உடைக்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக கட்சியுடன் முரண்பட ஆரம்பிக்கிறோம். முரண்படும்போதுதான் கட்சி எவ்வளவு கொடூரமானது என்று தெரிகிறது. ஒரு கட்டத்தில் எல்லா நட்பும் அப்படியே பகைமையாக ஆகிவிடுகிறது. நஞ்சு அலையடிக்கிறது. அதன் நடுவே நின்றிருக்கிறோம்.
அந்த வெறுமை பயங்கரமானது. கே.கே.எம். வீரபத்ரபிள்ளை, அருணாச்சலம் எல்லாருமே அந்த வெறுமையில் நின்றிருக்கிறார்கள். ஒவ்வொருவகையில் அவர்கள் அதிலிருந்து மீள்கிறார்கள். நான் இந்நாவலை அப்படித்தான் வாசித்தேன்.
ஆர்.எம்
***
பின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்
பெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து
ஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்
பின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்
பின் தொடரும் நிழலின் குரல்- கடிதம்
மகத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்
பின் தொடரும் நிழலின் குரல் – அறம்
பின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்
பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்
காடு, பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்
போரும் கண்ணனும்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
“போர் எந்த மெய்ப்பொருளையும் உருவாக்குவதில்லை. உருவாக்கிய அனைத்தையும் அது உடைத்தழிக்கிறது. வெற்றிடம் எனும் மெய்ப்பொருள் மட்டுமே எஞ்சியிருக்கச் செய்கிறது. ”
“ஆகவேதான் காலந்தோறும் மெய்யறிவோர் போரை நாடி வருகிறார்கள். தங்கள் தலையை அறைந்து உடைத்துக்கொள்ள கரும்பாறைச் சுவரைத் தேடி வரும் வலசைப்பறவைகள்போல.”
ஞானாசிரியர்கள் போர்களை உவந்தவர்களே. இணைதலும் பின் பிரிந்து, பிரிவாற்றாமையால் உருகவும் ஏங்கவும் கண்ணீர் கொண்டு நின் கருணை என்று நோக்கியிருக்கவும் செய்யும் பக்தர் போலல்லாமல் அகத்தே அழிய வேண்டியவை அழிய நீ நான் என்றல்ல…. இரண்டல்ல என்னும் அத்வைதி போரை உடன்படுபவனே அல்லது போர் தவிர்த்தாக வேண்டியது என்று கொள்பவன் அல்ல. உடல் சார்ந்த புணர்ச்சி, உள்ளம் சார்ந்த உயர்நிலையில் பக்தியுடன் ஒப்பமைகிறது. உடல்கள் பொருதும் போர் உள்ளத்தளவில் தவத்துடன் ஒப்பமைகிறது. அத்வைதி கருணை அற்றவன் என்று பக்தனும் பக்தன் கோழை என்று அத்வைதியும் காணும் வாய்ப்புள்ளது. தம்வழி பயணிப்பதன் வழியாகவே மற்றதை, அத்வைதியின் கருணையை பக்தனும் பக்தனின் வீரத்தை அத்வைதியும் உணரக்கூடும் அல்லது ஒருவர் மற்றவரிடம் இருந்து பெறவும் ஆகும். என்று எண்ணுகிறேன்.
ஒருவகையில் கர்ணன் அத்வைதியின் அருகமைகிறான். அழியக்கூடிய யாவையும் அழிவிற்கு கொடுக்கப்பட்டுவிட்டது. ஆத்மா அழிவற்றது என்கிறானே? கொடுப்பவன் தானே அத்வைதி. பெறுபவன் தானே பக்தன். சதா இறையே இறையே என்று பிச்சையெடுத்து மெய்மை பெறுபவன்தானே பக்தன். என்னை என்ன நினைத்தாய் இதுவெல்லமா நான்….இந்தா எடுத்துக்கொள் இவையெல்லாம் …நான் ஆன்மா ! அப்படி ஒரு ஆணவம் கொண்டு அது முறிந்துஅழிய அழிந்து மெய்மை எட்டுபவன் தானே அத்வைதி. அர்ஜுனன் கடவுளை தன் பக்கம் வைத்துக் கொண்டுள்ளான். கர்ணன் கடவுளை தன் எதிர்பக்கம் கொண்டுள்ளான்.
அர்ஜுனன் கண்களுக்கு இவன் கொடியவன். இவன் கண்களுக்கு அவன் பேடி. அந்தப்பக்கம் அழித்தும் இந்தப்பக்கம் அருளியும் இரண்டையும் மெய்மை சேர்க்க இடையில் அந்த இடையன் இருக்கிறான். மின்னலுக்கும் கதிருக்கும் மேலான மெய்மையல்லவா அவன்? அவன்தான் என்னையும் எவருடைய எழுத்துக்களை வழிபாட்டு உணர்வுடன் வாசித்து வருகிறேனோ எவருடன் மனதால் எப்போதும் ஒன்றுகிறேனோ, எவருடன் மனதால் பேசிக்கொண்டும் எண்ணிக்கொண்டும் இருக்கிறேனோ வெண்முரசு என்று இறையின் அருளியல் எவர் வழியே என்பால் பாய்கிறதோ அந்த என் ஆசான்பால் இணைக்கவேண்டும். என்னிடம் இருப்பவை என்ன கொஞ்சம் சிறுமை, தாழ்வுணர்ச்சி, நிறைய மடத்தனம். கண்ணன் அறியாததா.
அன்புடன்
விக்ரம்
கோவை
***
August 16, 2021
இலக்கியமும் அமைப்புக்களும்
அன்புள்ள ஜெ..
ஜெயபிரகாஷ் நாராயணன் என ஒருவர் இருந்திராவிட்டால், இந்திய அரசியலின் இன்றைய ஜன நாயக சுதந்திரம் இருந்திருக்காது… ஆனால் அவர் குறித்துப் பேச இன்று ஆள் இல்லை… இந்திரா காந்தியை வீழ்த்த அவருடன் இணைந்து போராடிய பலரும் இன்று காங்கிரஸ் ஆதரவாளர்களாகி விட்டதால் இந்த கொடுமை… அவர்களே இன்று அவரைப்பேசாத நிலையில் காங்கிரசும் பிஜேபியும் அவரைப்பற்றி பேசும் என எதிர்பார்க்க முடியாது
இலக்கியம் என்று பார்த்தால் , கிழக்கு ஜெர்மனி சில ஆண்டுகள்தான் உலகில் தனி நாடாக இருந்தாலும் அந்த தேசத்துக்கு என தனி இலக்கிய அடையாளம் இருந்தது… அந்த கால கட்ட படைப்பாளிகளின் ஆக்கங்கள் தமிழிலும் கம்யூனிச இதழ்களில் வெளி வந்தன… இன்று சோவியத் யூனியன் இல்லாத நிலையில் கிழக்கு ஜெர்மனி இலக்கியம் முழுக்கவே மறக்கப்பட்டு விட்டது…
அதேபோல சோவியத் யுக படைப்பாளிகளும் மறக்கப்பட்டு வருகின்றனர்.
அமைப்பு என ஒன்று இல்லாவிட்டால் எப்பேற்பட்ட ஆளுமைக்கும் உலகின் நினைவுகளில் இடம் இல்லை என்பது வாழ்க்கையின் மீதே அவ நம்பிக்கை கொள்ளச்செய்கிறது
அன்புடன்
பிச்சைக்காரன்
http://www.pichaikaaran.com/2018/12/blog-post_25.html
***
அன்புள்ள பிச்சைக்காரன்,
நீங்கள் சொல்வது ஒருவகையில் உண்மைதான். உலக அளவில் இலக்கியத்தின் பரவலுக்கும் ஏற்புக்கும் அமைப்புக்களின் உதவி தவிர்க்கமுடியாமல் இருக்கிறது. மூன்றுவகையான அமைப்புக்கள்.
ஒன்று, அரசு. ஓரான் பாமுக்கை துருக்கிய அரசே உலகமெங்கும் கொண்டுசெல்கிறது. சீனாவின் படைப்புக்களை சீன அரசு பிரபலப்படுத்துகிறது
இரண்டாவதாக, கட்சிகள், அரசியலமைப்புக்கள். ருஷ்யப்படைப்புக்கள் உலகமெங்கும் செல்ல உலகம் எங்குமிருந்த இடதுசாரி அமைப்புக்கள் காரணமாயின. தகுதியே அற்ற படைப்பாளிகள் கூட உலகமெங்கும் பரவலாக விற்கப்பட்டனர்.உதாரணம் நிகலாய் ஒஸ்திராவ்ஸ்கியின் வீரம் விளைந்தது.
லத்தீனமேரிக்க இலக்கியம் உலகமெங்கும் செல்ல அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடிய அரசியல்சூழலும், அதை கொண்டாடிய இடதுசாரி அரசியல் இயக்கங்களும் முக்கியமான காரணம். மார்க்யூஸ் இடதுசாரிகளால் பரப்பப்பட்டவர்.
மூன்றாவதாக, சிறிய சேவைக்குழுக்கள். அரசு சாரா அமைப்புக்கள். என்.ஜி.ஓக்கள். இவை சில செயல்திட்டங்களை வைத்திருக்கின்றன. அவற்றை முன்னெடுக்கும் பொருட்டு சில எழுத்துக்களை பரவலாக்குகின்றன.
அவ்வாறன்றி இயல்பாக மொழியாக்கம் செய்யப்பட்டு இலக்கியவாசகர் கவனத்துக்கு நூல்கள் சென்றடைய இன்று வாய்ப்பே இல்லை என்பதே உண்மை. அதற்கு உலகமெங்கும் கேட்க பேசிக்கொண்டிருக்கும் இலக்கிய விமர்சகர்கள் தேவை. அழகியலை உணர்ந்து முன்வைப்பவர்கள். அத்தகையவர்கள் இன்று மறைந்துவிட்டனர்.
இலக்கியம் பேசுபவர்களாக இன்றிருப்பவர்கள் இருசாரார். கல்வியாளர்கள் அரசியலாளர்கள். அவர்களால் முன்வைக்கப்படும் நூல்களே உலகமெங்கும் இலக்கியமாகச் சென்றுசேர்கின்றன. பலநூல்கள் சில சிறு சலசலப்புகளுக்குப்பின் மறைந்துவிடுகின்றன.
அத்தகைய இலக்கிய ஆளுமையாக இறுதியாக எஞ்சியவர் ஹரால்ட் ப்ளூம். துரதிருஷ்டவசமாக அவர் ஐரோப்பிய மைய பார்வை கொண்டவர். கீழை நாட்டு இலக்கியங்களை உள்வாங்க அவரால் இயலவில்லை.
ஜெ
உண்மை எவ்வாறு உருக்கி வார்க்கப்பட்டது?வெண்முரசு ஆவணப்படம் – டொராண்டோ, கனடா
Woodside Cinema,
1571 Sandhurst Circle
Scarborough ON
M1V TV2 (Finch Ave and McCowan Rd Scarborough (Toronto))
தொடர்புகளுக்கு –
காலம் செல்வம் , kalam@tamilbook.com, Phone – 1-416-731-1752
உஷா மதிவாணன், ushaconsult@gmail.com, Phone – 1-416-495-8186 / 1-647-808-2904
வாசக நண்பர்களை அன்புடன் வரவேற்கிறோம்.விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)***மாற்று ஆன்மிக வரலாறு- கடிதம்
சுவாமி ரமணகிரி- ஒரு முழுமை
தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு
அன்புள்ள ஜெ
சுவாமி ரமணகிரி அவர்கள் பற்றிய கட்டுரையை வாசித்தேன். திரு கதிர்முருகன் அழகாக எழுதியிருக்கிறார். இதேபோன்ற சித்தபுருஷர்கள் தமிழகமெங்கும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். சிலருக்கு நினைவுப்பதிவுகள் உள்ளன. சிலர் அப்படியே மறக்கப்பட்டிருக்கிறார்கள். சிலருடைய அடையாளங்களே இல்லை.
இன்றைய இளைஞர்கள் பலருக்கு ஆன்மிக ஈடுபாடு இருக்கிறது. வரலாற்று ஈடுபாடும் இருக்கிறது. அவர்களில் எவராவது தமிழகத்துச் சித்தபுருஷர்களை ஆவணப்படுத்தி அவர்களின் வாழ்க்கைக்குறிப்பை அகரவரிசைப்படி தொகுத்து ஒரு ஞானக்கலைக்களஞ்சியம் உருவாக்கலாம். ஒரு வாழ்நாள் பெரும்பணி. ஆனால் அதைச் செய்பவர் வரலாற்றில் வாழ்வார். குருவருள் உறுதி. சில நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்தும்கூட அதைச் செய்யலாம்.
ஒரு நூலாகச் செய்வதை விட ஓர் இணையதளமாகச் செய்யலாம். அப்போது செய்யும்பணி உடனடியாக பதிவாகும் வாய்ப்பு உண்டு. அதைப்பார்ப்பவர்கள் மேலதிகத் தகவல்களை அளிப்பார்கள். அவ்வாறு அதை விருத்திசெய்தபடியே செல்லலாம்.
அந்தக் கலைக்களஞ்சியம் தகவல்கள் மட்டுமே அடங்கியதாக இருக்கவேண்டும். அதில் அற்புதங்கள், புகழ்மொழிகள் இருக்கக்கூடாது. ஒருவர்மேல் இன்னொருவர் என்று நாம் அடையாளம் காட்டவும்கூடாது. வாழும் ஆளுமைகளை தவிர்த்துவிடலாம். சிக்கல்கள் வரும். தகவல் அளிப்பதில் ஒரு சீரான டெம்ப்ளேட் இருக்கவேண்டும். கலைக்களஞ்சியம் மாதிரி. விலாசம், மற்ற செய்திகள் இருக்கவேண்டும். ஓர் ஆசிரியர்குழு கூட இருக்கலாம்
அந்த தகவல்களில் இந்து மார்க்கம் என்பது பொதுவான அடையாளமாக இருக்கலாம். அதற்குள் வரும் எல்லா தரப்பு ஞானிகளும் சித்தர்களும் உள்ளடக்கத்தில் இடம்பெறவேண்டும். ஆனால் தெளிவான ஆசிரியர்முடிவு தேவை. அதற்குத்தான் ஆசிரியகுழு தேவை. அதாவது பொய்யான சாமியார்கள், குறிசொல்பவர்கள் போன்றவர்கள் தவிர்க்கப்படவேண்டும். இல்லையேல் வெறும் குப்பைக்குவியலாகவும் ஆகிவிடும்,
மாபெரும் பணி இது. எவராவது செய்யலாம். நான் அதில் ஈடுபடமுடியாதவன். எனக்கு வயது போய்விட்டது. இளைஞர்களுக்குரிய பணி. ஏனென்றால் செவிவழிச்செய்தியை நம்பி எவரையும் சேர்க்கக்கூடாது. ஒருமுறையாவது நேரில்சென்று பார்த்து எழுதவேண்டும்
என்.ஆர்.ஆறுமுகம்
***
வரலாற்றுக்கு முந்தைய காலம்-கடிதங்கள்
தாண்டிக்குடி கல்வட்டங்கள்- ராஜமாணிக்கம்
அன்புள்ள ஜெ
உங்கள் தளத்தில் கதைகள், இலக்கியவிவாதங்கள் அரசியல் கட்டுரைகள் வந்துகொண்டிருக்கின்றன. நான் அனைத்தையும் வாசிப்பவன். ஆனால் என் முக்கியமான ஆர்வமாக இருப்பது தொல்லியல் சார்ந்து வரும் குறிப்புகள்தான். அதிலும் வரலாற்றுக்கு முந்தைய வரலாறு பற்றிய கட்டுரைகள் மிகுந்த ஆர்வமூட்டுகின்றன.
நான் கண்டுகொண்டது உங்கள் தளத்திலேதான்.அதற்கான தனி தளங்களையும் அதற்குப்பிறகு கண்டுபிடித்தேன். இன்று தொடர்ந்து படித்துவருகிறேன். தாண்டிக்குடி கல்வளையங்களைப் பற்றி ராஜமாணிக்கம் அவர்கள் எழுதிய கட்டுரைகளை வாசித்தேன். அற்புதமான ஒரு கனவு அவற்றில் இருக்கிறது.
என் நிலைமை கொஞ்சம் சீரடைந்தபிறகு நானும் வரலாற்றைக் கடந்து கற்கால நினைவுச்சின்னங்கள் வழியாக அலையவேண்டும் என்று கனவுகாண்கிறேன்.
எம்.முத்துக்குமார்
அன்புள்ள ஜெ,
தாண்டிக்குடி கல்வளையங்கள் பற்றிய கட்டுரை ஒரு அற்புதமான மனநிலையை உருவாக்கியது. மனிதர்கள் விட்டுச்சென்ற அந்த அடையாளங்கள் நாம் மனிதப்பண்பாடு என்று சொல்வதெல்லாம் உண்மையில் என்ன என்ற கேள்வியை எழுப்பியது. வாழ்க்கையின் அடிப்படைகளைப்பற்றிய பல கேள்விகள் மிஞ்சி நின்றன. மனிதர்கள் இங்கே நினைவாக விட்டுச்சென்றவை சாவின் அடையாளங்களை மட்டும்தானா என்று நினைத்துக்கொண்டேன்
பிரபா அருணகிரி
ராபர்ட் புரூஸ் ஃபூட்-சிரஞ்சீவியின் கல்லறை– ராஜமாணிக்கம் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்- ராஜமாணிக்கம்குகை, கடிதங்கள்
ஜெ!
குகை (நெடுஞ்)சிறுகதை வாசித்தேன். பல்வேறு வாசிப்புச் சாத்தியங்களைக்கொண்டு சிறுகதை விளங்குகிறது. 1. மனோவியல் சார்ந்த வாசிப்பு, 2. தத்துவம் சார்ந்த வாசிப்பு, 3. வரலாறு மற்றும் பூகோளம் சார்ந்த வாசிப்பு என நான் அவற்றை வகைப்படுத்திப் பார்க்கிறேன்.
மனோவியல் வாசிப்பு: மனநலம் பிறழ்ந்த ஒருவனின் அடக்கப்பட்ட மனம் ஒரு திறப்பினைப் பற்றிக்கொண்டு அதை ஊடகமாகக்கொண்டு திறந்த மனத்துடன் ஒரு கட்டுபாடான ஆனால் கட்டற்ற குகை என்னும் வழியைப் பின்பற்றி உலாவுகிறது; தனக்கான வழியைத் தேடமுயல்கிறது. இறுதியில் அது தான் புறப்பட்ட இடத்திற்கே வந்தடைகிறது.
மனோவியல் தெரிந்தவர்கள் இதனை இன்னும் மிக விரிவாக விளக்கமுடியும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவமாக அமையும். அதாவது ஒரு மனோவியல் பிரச்சனை எப்படி ஜெயமோகனின் கைவண்ணத்தில் ஒரு இலக்கியமாகிறது என்பதையும் அவர்கள் அறிய முற்பட்டால் அவர்களின் வாசிப்பு இன்னும் கூர்மையடையும்.
அவனின் தாய் அவனைப் புரிந்துகொண்டவளாக வருகிறாள்; மருத்துவம் பார்க்கிறாள். எனினும் அவனோடான உடையாடலை; அவனுக்கான உரையாடலைத் தவிர்க்கிறாள். அவன் மனைவியும் அவனோடு எந்த உரையாடலையும் வைத்துக்கொள்வதில்லை. ஒரு தந்தையோ குழந்தையோ இருந்திருந்தால் அவனுக்கான உரையாடல்வெளி திறக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஜெயமோகனின் பாத்திரப்படைப்பு நுட்பமாக இதனைக் கொள்ளலாம்.
எனவே பூட்டப்பட்ட மனம்; ஒவ்வாத பழைய வீட்டுச்சூழல் மற்றும் அவனை எப்போதுமே தூங்க வைக்கும் மருந்து மாத்திரை என எல்லா விசயங்களுமே அவனுக்கான வெளியைக் குறுகடித்துவிட்டிருக்கிறது.
புதிய வீட்டில் அவனுக்கான ஒரு தனியறை கிடைக்கிறது. அவனுடைய மனம் ஒரு திறப்புக்கான வெளியைத் தேடுகிறது; மனத்தைப் பிதுக்கிக்கொண்டு எண்ணம் வெளிப்படுகிறது. அதற்கான ஒரு குறியீடாக குகை அமைகிறது.
சிறுவயதில் நூலகம் மட்டுமே அவனுக்கான ஒரு வெளியாக இருந்திருக்கிறது. அவன் அப்போது ஊரையும் நன்கு சுற்றிவந்திருக்கிறான். ஒரு கட்டத்திற்குமேல்தான் மனநலம் இழந்திருக்கிறான். இந்தக் குகை அவன் சிறுவயதில் உல்லாசமாகச் சுற்றிய எண்ணங்கள் மற்றும் நூலகத்தில் படித்த வரலாறு மற்றும் பூகோளம் சார்ந்த அறிவு இரண்டையும் வெளிப்படுத்தும் கருவியாக அமைகிறது.
குகைக்குள் வாழும் வெளிநாட்டவர்கள்கூட வரலாற்று மனிதர்களாகவே – வரலாற்றின் படிவங்களாகவே அமைகின்றனர்.
ஆழ்மனத்திற்கும் காமத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே ஆழ்மன வெளியெங்கும் – குகையெங்கும் காமமும் வஞ்சகமும் அறியவருகின்றன. அவனின் மனநலப்பிறழ்வு அவனின் காமத்தை வெளிப்படுத்தாமல் அடுத்தவர்களின் காமத்தை வெளிப்படுத்துகிறது. மற்றவர்களுக்கு இப்படி ஒரு குகை கிடைத்தால் அவர்களின் காமமே வெளிப்பட்டிருக்கும்.
காமத்தை எழுதுகிறவனின் கையில் இந்தக்கதைக்கரு கிடைத்தால் இந்தக்கதை ஒரு பாலியல் சார்ந்த கதையாக மாறியிருக்கும். ஆனால் ஜெயமோகனின் கைகளில் அது கலையாக வெளிப்படுவதைப்பார்க்கிறோம்.
வெளியெங்கும் அலைந்துவிட்டு அம்மனம் மீண்டும் தன் கூடடைகிறது; இந்தக் குகைவாழ்க்கையைக்கூட அந்த மென்மையான மனத்தால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை என்று தோன்றுகிறது. மனோவியல் தெரிந்தவர்கள் கொஞ்சம் ஜனரஞ்சகமாக விளக்கினால் நன்றாக இருக்கும்.
தத்துவவாசிப்பு: இங்கு பாரதியின் ஞானரதம் நினைவுக்கு வருகிறது. நித்திரையில் பாரதி ஒரு கனவு காண்கிறான். கற்பனைத் தேரில் ஏறி சொர்க்கலோகம் போன்ற ஒன்றைக்காண்கிறான். பாரதியின் கற்பனையின் எல்லையைத் தொட்ட ஒரு படைப்பு அது.
குகையில் ஜெயமோகன் ஒரு ஆழ்மனப்பயணத்தை ஆரம்பித்துவைக்கிறார்.பாரதியின் மனம் திரிவிக்கிரமனாய் விண்ணோக்கிப் பாய்ந்தது. ஜெயமோகன் கூர்மாவதாரமாய் பூமியைத்துழைத்து உள்வழிப்பயணம் மேற்கொள்கிறார்.
பாரதிக்கு அந்தப்பயணத்தில் லௌகீக விசயங்கள் தேவைப்படவில்லை. முழுக்க முழுக்க கற்பனைப்புனைவினாலேயே நடத்துகிறார். ஆனால் ஜெயமோகனுக்கு ஒரு வாழ்க்கை தேவைப்பட்டிருக்கிறது; ஒரு வரலாறு தேவைப்பட்டிருக்கிறது. ஒரு பயணத்தை மேற்கொள்ளப்போதுமான புறக்காரணிகளை அம்மா, மனைவி என்னும் வடிவங்களில் கட்டமைக்கிறார்.
பாரதியின் கற்பனை உலகம் பரவசமானது. ஜெயமோகனின் கற்பனை உலகம் படபடப்பானது. அடிவயிற்றை எக்கிக்கொண்டே வாசிக்கவைப்பது. பாரதின் பயணமும் திரும்பவந்து கூடடைவதில் முற்றுப்பெறுகிறது. குகைப்பயணமும் மீண்டும் கூடடைகிறது.
இக்கதையில் ஒரு ஞானத்தேடல் இருக்கிறதா? உள்மனத்தை அறிய முயற்சிப்பதுதான் ஞானத்தேடல். இந்தக்குகை உள்ளொளியைத்தேடும் பயணம்தான். ஆனால் குறைபட்டமனம்; குறைபட்ட மனத்தினால் ஆன்மீகத்தின் முழுமையை உட்கொள்ளமுடியாதல்லவா. அதனால் அது எந்த வெற்றியையும் பெறாமலேயே திரும்பிவருகிறது. ஆனாலும் உள்ளோளித் தேடல் என்பது ஒரு ஆன்மீகனுக்கு அவசியமானது. இந்தத் தேடல்கள் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும். ஒருநாள் அது வெற்றிபெறும்.
வரலாறு மற்றும் பூகோள வாசிப்பு: ஒரு கதையினைப்படைக்கும்போது நம்பகத்தன்மை மிகமுக்கியம் ஆகும். அதற்கான ஊடுபொருட்களாக- களனாக வரலாறு மற்றும் பூகோளம் சார்ந்த விசயங்களை ஜெயமோகன் அமைத்துள்ளார்.
இந்தக்கதை ஒரு வட இந்திய நகரத்தில் நடக்கிறது. இந்தி பேசும் நகரம் என்பதற்கான ஒரு சிறு குறிப்புவருகிறது.
இந்தக் குகையில் காட்டப்படும் நில அமைப்பு தமிழகத்திலோ அல்லது கேரளத்திலோ இல்லாதது. நம் நிலம் கடினப்பாறைகளால் ஆனது. அவைகளில் சமணர்கள் வாழ்ந்ததைப் போன்று இயற்கைக் குகைகள்தான் உண்டாகும். செயற்கையான ஒரு நகரம் முழுவதையும் இணைக்கும் குகைப்பாதைகளை இணைக்கவே முடியாது. எனவேதாம் ஜெ.மோ. வட இந்திய நகரத்தைத் தேர்ந்தெடுக்கிறார். அவருடைய இந்தியப்பயணம் என்னும் நூல் இதனை விளங்கிக்கொள்ள உதவும்.
நூலகம் வாயிலாக அவர் பிரிட்டிஷ் காலத்து வரலாற்றைப் பின்புலமாக ஆக்குகிறார். கதாநாயகன் நூலகம் செல்லும் வழக்கம் உடையவனாக இருக்கிறான். அதிலும் வரலாறு சார்ந்த நூல்களைப் படிப்பவனாக இருக்கிறான்.
எங்கள் கிராமம் கன்னியாகுமரி திருச்செந்தூர் சாலையில் உள்ளது. இங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான கடற்கரைப்பகுதியில் மங்களா என்று எங்களால் அழைக்கப்படும் ஒரு வித்தியாசமான கட்டட அமைப்பு உள்ளது. முழுவதும் சுதை, செங்கலால் அமைக்கப்பட்டது. மேல்கூரையும் அதே சுதையால் அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட பெட்ரோல் கொண்டுவரும் கண்டெயினர் உருளைபோன்ற அமைப்புடையது.
சன்னல் போன்ற திறப்பின் வழியாக சென்று ஆடு மாடு மேய்ப்பவர்கள் ஓய்வு எடுப்பர். அந்த மங்களா பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால், அதன் மத்தியில் ஒரு ஆழ்துழைக் கிணற்றுக்குப் ‘போர்’ போட்டது போன்ற அமைப்பு இருந்தது. அது பற்றிய வாய்மொழிக்கதை உள்ளது. அது: உள்ளே பொக்கிசம் இருக்கு. ஆனா அதைப் பூதம் காக்கிறது. அதை யாரும் தோண்டிப்பார்க்கக்கூடாது. அவ்வளவுதான். அதையாரும் எந்த முயற்சிக்கும் உட்படுத்தவில்லை.
சில நேரம் சில ஆபீசர்கள் அயல்நாட்டாரோடு வந்து பார்த்துவிட்டுப் போவதைப்பார்த்திருக்கிறோம். அவர்கள் மக்களிடம் எதுவும் பேசியதில்லை. மக்களும் அது என்ன என்று கேட்டதில்லை. ஒரு கட்டத்தில் மங்களா உள்ளே யாரும் போகமுடியாதபடி சிமென்டால் சன்னல்களை அடைத்துவிட்டனர். இதே போன்ற மங்களா ஒன்று கன்னியாகுமரி அகஸ்தீசுவரம் கல்லூரிச்சாலையில் அழிந்துகிடப்பதைக் கல்லூரி செல்லும் நாட்களில் பார்த்திருக்கிறேன்.
கன்னியாகுமரி கோயில், வட்டக்கோட்டை, இந்த இரண்டு மங்களா இவற்றிற்கிடையில் குகை உறவு இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. போர்க்காலங்களில் கோட்டை தாக்கப்படும்போது தப்பிப்பதற்காக அரசர்கள் ஏற்படுத்திய குகை வழிகளாக இருக்கலாமோ?
இது போன்ற கடற்கரை நிலங்களில்மட்டுமே தமிழகத்தில் குகைகள் சாத்தியம். ஒரு நகரம் முழுமைக்கான குகைவழிப்பாதைகள் தமிழகத்தில் சாத்தியமே அல்ல. நமது கருங்கல் பாறைகளைக் குடைவது அத்தனை எளிதல்ல. அது மட்டுமல்ல அவை எளிதில் நொறுங்கக்கூடியவை. மயிலாடியில் சிற்பம் செய்யப் பயன்படுத்தும் பாறைகள் சாதாரணமானப் பாறைகள் அல்ல. அவை நொறுங்காதவை. சுசீந்திரம் சிற்பங்கள் செய்யப்பயன்பட்டுள்ள பாறைகளுக்கும் நமது சாதாரண பாறைகளுக்கும் உறவெதுவும் இல்லை. அவை நிறத்திலும் தரத்திலும் மிக வேறுபட்டவை.
மன அழுத்தங்கள் மிகைப்படும்போது பயணங்கள் மிக அவசியமானவை. மிக அழுத்தப்பட்ட மனம் ஒன்றின் பயணத்துக்கான புறவழிகள் அடைக்கப்படும்போது யாரும் அறியாதபடி அகவழியை அம்மனம் பயணத்துக்கான வெளியாகக்கொள்ளும். அந்தப் பயணம் பற்றிய கற்பனையை ஆங்கிலேய ஆட்சிப்பின்னணி மற்றும் இந்தியப் பயணத்தில் தான் பார்த்த நில அமைப்பு ஆகியவற்றைத் துணையன்களாகக்கொண்டு ஜெயமோகன் ஒரு அற்புதமான ‘குகை’யை வடிவமைத்துள்ளார். கதைக்கூறுகளின் கலவை மிக நேர்த்தியானது. கணவனுக்கும் மனைவிக்குமான உறவிடைவெளி மட்டும் போதுமான அளவிற்கு வெளிப்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். கணவன் மீதான மனைவியின் அத்தனை ஒதுக்கத்திற்கான காரணம் யாது? அது வெளிப்படுத்தப்பட்டிருந்தால் இந்தக் குகைப்பயணத்திற்கான தேவை இன்னும் அழுத்தமடைந்திருக்கும் என்று தோன்றுகிறது.
இந்தப் பதிவு எனது முதல் வாசிப்பில் எழுதப்பட்டது. ஒரு வாசிப்போடு நிறுத்தப்படமுடியாத படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் வாசிக்கிறேன்; எழுதுகிறேன்.
நன்றி ஜெ.
முனைவர் தி.இராஜரெத்தினம்
***
அன்புள்ள ஜெ
கொஞ்சம் தாமதமாக வாசித்த கதை குகை. கிண்டிலில் இலவசம் என்பதனால் கையில் வந்தது. ஒருமணி நேரமாகியது வாசிக்க. இப்போதும் ஒரு பதற்றமாக, கலக்கமாக அந்தக்கதை நினைவிலிருக்கிறது. அது இந்தக்காலகட்டத்தின் வாழ்க்கையை ஒருவாறாக உருவகம் செய்து காட்டுகிறது. நமக்கெல்லாமே ஒரு வகையான உளவியல் அழுத்தம் உள்ளது. அந்த அழுத்தத்தால் நாம் ரகசிய உலகங்களை உருவாக்கிக்கொள்கிறோம். அந்த இருண்ட ரகசியப் பாதைகளைப்பற்றிய கதை.
அர்விந்த்
‘தீயின் எடை’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்,
‘வெண்முரசு’ நாவல்தொடரில் 22-ஆவது நாவல் ‘தீயின் எடை’. தீயைப் போலவே தீமைக்கும் எடை இல்லை. அளக்கவியலாத அறமீறல்கள், எடையிட முடியாத மானுடக் கீழ்மைகள் ஆகியவற்றை அறத்தராசில் நிறுத்தி அளக்கவும் எடையிடவும் முயற்சிசெய்யும் மானுடத்தின் அறிவிலி மனத்துக்கு அறிவுரையைப் பகர்கிறது இந்த நாவல்.
‘முற்றழிவே போர்’ என்றால், ‘வெற்றி’ என்பதற்குப் பொருள்தான் என்ன?’ என்று நம்மைச் சிந்திக்க வைக்கிறது இந்த நாவல். இளைய யாதவரின் வழக்கமான புன்னகையைத்தான் நாம் இந்தக் கேள்விக்குப் பதிலாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
குருஷேத்திரத்தில் நிகழ்த்தப்பட்ட ‘முற்றழிவு’ குறித்துத் துயருறும் யுதிஷ்டிரரிடம் இளைய யாதவர் கூறும் பதில், மானுட வாழ்வியல் யதார்த்தத்தை மேலும் மேலும் நிறுவி, உறுதிப்படுத்துகிறது.
இளைய யாதவர் புன்னகையுடன் , “ எல்லாக் களங்களும் மண்மூடும் … இன்னும் பதினாறு நாட்களில் நினைவு என ஆகும். நாற்பத்தொரு நாட்களில் கடந்தகாலம் என உருக்கொள்ளும். ஓராண்டில் வெறும் சடங்கென்று நின்றிருக்கும் ” என்றார்.
இந்த ‘முற்றழிவு’ ஏன் நிகழ்த்தப்பட்டது? ஒரு பிழை. அதற்கு நிகரீடு செய்வதற்காகச் செய்யப்பட்ட மற்றொரு பிழை. அந்தப் பிழைக்கு நிகரீடு செய்ய பிறிதொரு பிழை எனப் பிழைகளின் தொடர்சங்கிலி இரு திசையிலும் நீண்டதால், இறுதியில் இருதரப்பினராலும் முற்றழிவு நிகழ்த்தப்பட்டது.
இந்திரப்பிரஸ்தத்தில் துரியோதனன் கவனக்குறைவாகத் தடுமாறி விழுந்ததும் அதன் பின்விளைவாக நிகழ்ந்தனவற்றைச் சரியான புரிதலின்றி அவன் உணர்ந்து கொண்டனவும் ‘ஊழின் பிழை’ எனக் கொள்ளலாம்.
அவன் வாணரவதத்தில் அரக்குமாளிகையை எரித்து, பாண்டவர்களைக் கொல்லத்துணிந்தமையும் பன்னிருபடைக்களத்தில் சகுனியால் கள்ளப்பகடையைக் கொண்டு சூதில் வென்றமையும் திரௌபதியைச் சிறுமைசெய்தமையும் அவன் செய்த முப்பிழைகள்.
அந்த முப்பிழைக்கும் நிகரீடு செய்யவே பாண்டவர்களால், குறிப்பாக இளைய யாதவரால் குருஷேத்திரப் போர்க்களம் முன்னெடுக்கப்பட்டது. கௌரவர்களின் தரப்பில் போரறங்கள் மீறப்பட்டன. குறிப்பாக அபிமன்யூ படுகொலை. அதற்கு இணையாகவே பாண்டவர்களின் தரப்பிலும் போரறங்கள் எல்லைகடந்து மீறப்பட்டன. பிதாமகர் பீஷ்மர், துரோணர், பூரிஸ்சிரவஸ் ஆகியோர் வீழ்த்தப்பட்ட முறைகள் அனைத்துமே பாண்டவர்களின் தொடர் பிழைகள்தான். அவை ஆகப் பெரிய போரற மீறல்களே!
இந்தப் போர்க்களத்தில் போரறத்தைத் தன்னளவில் இறுதிவரை மீறாதவர்கள் துரியோதனனும் அஸ்வத்தாமனும்தான். துரியோதனன் பலமுறை பீமனைக் கொல்ல நேர்கிறது. ‘ஆயுதம் இழந்து நிற்கும் ஒருவனைக் கொல்லக் கூடாது’ என்ற போரறத்தைப் பேணி, அவனைக் கொல்லாமல் விட்டுவிடுகிறான்.
“நான் அவனைக் களத்தில் சந்தித்தேன். அவனைக் கொன்றாகவேண்டும் என்றே போரிட்டேன். உயிரின் விசையாலும் அதையும் விஞ்சும் வஞ்சத்தின் விசையாலும் அவன் எனக்கு நிகராகவும் அவ்வப்போது என்னைக் கடந்து எழுந்தும் போரிட்டான். என் தாக்குதலில் இருந்து தப்ப அவன் கள எல்லையைக் கடந்து காட்டுக்குள் புகுந்தான். அவன் குரங்கின் முலையுண்டவன், காட்டுமரக் கிளைகளின்மேல் தாவும் கலை அறிந்தவன். அது தெரிந்திருந்தும் அவனைக் கொன்றேயாகவேண்டும் என்பதனால் நான் அவனைத் துரத்திச் சென்றேன். என்னால் அவன் ஏறிய மரங்கள்மேல் ஏற இயலவில்லை. ஆகவே, அந்த மரங்களை என் கதையால் அறைந்து உடைத்தேன். கதையை வீசி எறிந்து அவனை நிலத்தில் வீழ்த்தித் தாக்கினேன். வென்றிருப்பேன், ஆனால், அவன் கதை உடைந்து தெறித்தது. படைக்கலமில்லாமல் அவன் என் முன் கிடந்தான். என்னால் அவனைக் கொல்ல இயலவில்லை.” என்றான் துரியோதனன்.
இறுதியில், சுனைநீருள் பேரூழ்கத்தில் ஆழ்ந்து தன் பிறவியைக் கடக்க முயற்சிசெய்யும் துரியோதனனைப் பீமனும் இளைய யாதவரும் இணைந்து, அவனின் தவத்தைக் கெடுக்க முயற்சிசெய்கின்றனர்.
பின்னர், கதாயுதப் போரின் ஆகப்பெரிய பிழையினைத் துணிந்துசெய்து, துரியோதனனை வீழ்த்துகிறான் பீமன். பீமன் செய்த அந்த மாபெரும் பிழையினைத் தலைவணங்கி ஏற்பதுபோலவே துரியோதனன் எந்த விதமான சலனமும் இல்லாமல் தன் உயிரை ஒரு சுடரை அணைப்பதுபோல அணைத்து, தன்னை இந்த உலகிலிருந்து நீக்கிக் கொள்கிறான்.
உண்மையிலேயே ‘பேரறத்தான்’ என்று நாம் இந்த வெண்முரசு நாவல்தொடரில் ஒருவரைக் குறிப்பிட வேண்டுமென்றால், துரியோதனனைத்தான் நாம் அவ்வாறு அழைக்க வேண்டும். அஸ்தினபுரியின் மீது பெரும்பற்றுக் கொண்டவர்கள் இருவர். ஒருவர் பிதாமகர் பீஷ்மர். மற்றொருவர் துரியோதனன். இதனை அம்புப்படுக்கையில் இருக்கும் பீஷ்மரின் சொற்களின் வழியாகவும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது. அந்தப் பெரும்பற்றால்தான் துரியோதனன் பாண்டவர்களை 12 ஆண்டுகள் காடோடிகளாகவும் ஓராண்டு முகமிலிகளாகவும் மாற்றிவிட்டு, அஸ்தினபுரியைச் சீரும் சிறப்புமாக ஆட்சிசெய்ய முடிந்தது. தருமருக்கு நிகராக ஆட்சிசெய்தவன் துரியோதனனே என்று துணிந்து சொல்லலாம்.
கொண்ட கொள்கையில், எடுத்துக்கொண்ட பணியில் இறுதிவரை நின்று போராடியவர்கள் மூவர்தான். ஒருவர் துரியோதனன். மற்றொருவர் பீமன். பிறிதொருவர் துச்சாதனன். இறுதிவரை குருஷேத்திரப் போரை நடத்தியவர் துரியோதனன். திரௌபதிக்காக வஞ்சினம் உரைத்து, அதை நிறைவேற்றியவர் பீமன். தன் தாய் காந்தாரியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தன் வாழ்நாள் முழுவதும் தன் அண்ணனுக்குக் காவலாகவும் நிழலாகவும் இருந்தவன் துச்சாதனன். அவர்களின் பாதை சரியா? தவறா? என்ற ஆராய்ச்சியைத் தாண்டி, அவற்றைப் புறக்கணித்து, ஒட்டுமொத்தத்தில் ‘செயல்வீரர்கள்’ என்று நான் இந்த மூவரை மட்டுமே கூறுவேன். இம்மூவர் செய்ததும் ‘கர்மயோகமே’ என்பேன்!
சுனைநீருள் பேரூழ்கத்தில் ஆழ்ந்திருக்கும் துரியோதனனால் வேடன் ஜல்பனைப் பொறுத்தருள (மன்னிக்க) முடிகிறது. ஆம், இறுதிவரை மாபெரும் உளவிரிவுடன் இருந்தவர் துரியோதனனே!
எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வாசகர்கள் கடிதம் எழுதுவது உண்டு. அந்தக் கடிதங்களுள் சிலவற்றை எழுத்தாளர் தன்னுடைய வலைத்தளத்தில் பதிவிடுவதும் உண்டு. அந்த வகையில், ஐக்கிய ராஜ்ஜியம் மான்செஸ்டரிலிருந்து வெங்கடேஷ் அவர்கள் எழுத்தாளருக்கு எழுதிய கடிதம் 8.8.2021 அன்று எழுத்தாளரின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அந்தக் கடிதத்தின் இறுதி வரி பின்வருமாறு அமைந்துள்ளது.
‘என் தமிழில் உள்ள பிழையை ஜல்பனைத் துரியோதனன் நடத்தியது போல் தயை கூர்ந்து மன்னிக்கவும்.”
காவியங்களில் இடம்பெறும் காவியமாந்தர்களும் நிகழ்வுகளும் அறச்சிந்தனைகளும் ஏதாவது ஒருவகையில் எளிய மக்களின் பொதுவெளிப் பயன்பாட்டில் வெளிப்படும்போதுதான் அந்தக் காவியம் தன்னைப் பொதுவெளியில் காலந்தாண்டி நிலைப்புக்கொள்ளச் செய்ய முடியும். நாம் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் கம்பராமாயணத்தையும் அவ்வாறுதான் பொதுவெளிப் பயன்பாட்டில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் அவை பெருந்திரள் மத்தியில் உயிர்ப்புத் தன்மையையும் நிலைப்புத் தன்மையையும் கொண்டுள்ளன. அந்த வகையில், ‘வெண்முரசு’ நாவல்தொடர்களும் உயிர்ப்புக்கொள்ளும் நிலைப்புக் கொள்ளும் என்பதற்கு மேற்கொண்ட கடித வரியும் ஒரு சான்று என்பேன்.
துரியோதனனின் மரணத்தால் நிலைகுலைந்த அஸ்வத்தாமன் அதற்கு நிகரீடு செய்யவே இரவில், ஆயுதமின்றி, மருத்துவ முகாமில் புண்பட்டு வீழ்ந்திருக்கும் பாண்டவர்களின் புதல்வர்களைக் கொன்றுகுவிக்கிறான். இந்தப் போர்க்களத்தில் அதிசக்தியுடைய ஆயுதங்களைப் பயன்படுத்தாதவன் அஸ்வத்தாமனே என்பதை நாம் இங்கு நினைவுகூர வேண்டும். அதனை ஒரு நோன்பாகவே கொண்டிருந்தான் அஸ்வத்தாமன். உச்சமான மனநிலையழிவின் போது மானுடர்கள் எந்தக் கீழ்மைக்கும் இறங்குவார்கள் என்பதற்கு அஸ்வத்தாமன் ஒரு சான்றாகிவிட்டான்.
பீமனின் உருவில் இரும்புப் பொம்மையைச் செய்த துரியோதனன் அதனோடு பல ஆண்டுகளாகப் போரிட்டு வந்தான். அதனைக் குருஷேத்திரப் போர்க்களத்துக்குக் கொண்டு வந்திருந்தான். அது எரிந்து சிதைந்த செய்தியை ஏவலன் கூறும்போது, ‘எரிபரந்தெடுத்தல்’ என்ற சொல்லினைப் பயன்படுத்துகிறான்.
ஏவலன் , “ அரசரின் தனிக்குடிலுக்குள் இருந்தது. சற்று முன்னர்தான் அவர் இதைத் தேடிக்கொண்டுவரும்படிச் சொன்னார். எரிபரந்தெடுத்தலால் பாடிவீடு எரிந்து சரிந்தபோது , இது உள்ளே சிக்கிக்கொண்டது. சாம்பலுக்குள் கண்டெடுத்தோம் ” என்றான்.
அது என்ன எரிபரந்தெடுத்தல்?
“இயங்குபடை அரவம் எரிபரந்து எடுத்தல்
வயங்கல் எய்திய பெருமை யானும்
கொடுத்தல் எய்திய கொடைமை யானும்
அடுத்தூர்ந்து அட்ட கொற்றத் தானும்
மாராயம் பெற்ற நெடுமொழி யானும்
பொருள் இன்று உய்த்த பேராண் பக்கமும்
வருவிசைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை யானும்
பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும்
வென்றோர் விளக்கமுந் தோற்றோர் தேய்வும்
குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும்
அழிபடை தட்டோர் தழிஞ்யொடூ தொகைஇக்
கழிபெருஞ் சிறப்பின் துறைபதின் மூன்றே.
இது , வஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. ”
( தொல்காப்பியம் , புறத்திணையியல் , நூற்பா எண் – 65 )
‘எரிபரந்தெடுத்தல்’ என்பது, வஞ்சித்திணையில் இடம்பெறும் 13 துறைகளுள் ஒன்று. அதன் பொருள் தீக்கிரையாக்குதல் ஆகும். வீடு, ஊர், நாடு, நகரம் போன்றவற்றைத் தீக்கிரையாக்கும் நிகழ்ச்சி இன்றும் வெறுப்பின் காரணமாக நடைபெறுவதைக் காணலாம் என்கிறார் ம. மயில் இளந்திரையன். (ம. மயில் இளந்திரையன், தொல்காப்பிய பொருளிலக்கணதத்தில் வீரம் – ஓர் ஆய்வு’, பாரதியார் பல்கலைக்கழகம், 2010).
இவரைப் போலவே தமிழறிஞர்கள் பலரும் ‘எரிபரந்தெடுத்தல்’ என்பதற்கு இதே விளக்கத்தைப் பல்வேறு முறைகளில் தெரிவித்துள்ள நிலையில், வாணி அறிவாளன் அவர்கள் ‘செந்தமிழ்ச்செல்வி’ இலக்கிய இதழில் (ஏப்ரல் 2014) இக்கருத்தை மறுத்து ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையின் கருத்துகளைப் பல்வேறு சான்றாதாரங்களுடன் மறுத்து, ‘எரிபரந்தெடுத்தல் – மறுசிந்தனை’ என்ற தலைப்பில் ‘செந்தமிழ்’ இலக்கிய இதழில் (அக்டோபர் 2014) புதுச்சேரியைச் சார்ந்த தெ. முருகசாமி அவர்கள் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் அவர், ‘எரிபரந்தெடுத்தல்’ என்பது, ‘எரியூட்டலே’ என்று நிறுவியுள்ளார்.
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங்கண்ணனார் பாடிய புறநானூற்றுப் பாடலை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.
“வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்பூட்டி
மனைமரம் விறகாகக்
கடுதுறைநீர்க் களிறுபடீஇ
எல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்
புலங்கெட இறுக்கும் வரம்பில் தானைத்
துணைவேண்டாச் செருவென்றிப்
புலவுவாட் புலர்சாந்தின்
முருகற் சீற்றத் துருகெழு குருசில்
மயங்கு வள்ளை மலர் ஆம்பல்
பனிப்பகன்றைக் கனிப்பாகல்
கரும்பல்லது காடறியாப்
பெருந்தண்பணை பாழாக
ஏம நன்னாடு ஒள்எரி ஊட்டினை 1
நாம நல்லமர் செய்ய
ஓராங்கு மலைந்தன பெருமநின் களிறே”.
(புறநானூறு, 16)
“புலவர் மன்னர் பெருங்கிள்ளியைப் பார்த்து, ‘முருகன் போலும் குருசில் நீ, பகைவர் நாட்டுள் புகுந்து அவர் ஊர் சுட்ட தீயினது ஒளி செல்சுடர் ஞாயிற்றுச் செக்கர் போலத் தோன்றுகிறது. இவ்வாறு தீயிட்டுக் கொழுத்திய அந்நாடு ‘கரும்பல்லது நாடறியாப் பெருந்தண் பணை’ பொருந்திய நன்னாடு. ஆனால், நீ எரியூட்டிச் செய்த போரில் உன் களிறுகளும் உன் கருத்துக்கு ஒப்பப் போர் மலைந்தன’ என்று கூறுகின்றார். சிவந்த கதிரவன் காண மக்கள் குடியிருக்கும் ஊர்களை அழிக்க இடப்பட்ட தீயின் உயர்ந்து ஓங்கிய நெருப்பின் ஒளி நெருப்புச் சுடர்க் கதிர்களைப் பரப்பும் கதிரவனின் செவ்வானம் போலத் தோன்றியது. பகைவரது நாட்டை அழிக்கச் செய்யும் எல்லையில்லாத படையினையும் உதவிக்கு வேறு துணைப்படை வேண்டாத போர் வெற்றியினையும் பெற்றாய்!” (நன்றி – வ.க.கன்னியப்பன்)
எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் உவமைகளைக் கையாள்வதில் வல்லவர். ‘வெண்முரசு’ நாவல்தொடரில், எண்ணற்ற உவமைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைத் தொகுத்தால், தனியாக ஒரு புத்தகமாகவே வெளியிடலாம். இந்த நாவலில் என்னை ஈர்த்த ஓர் உவமை –
வானின் காற்று அடுக்குகளில் நிகழ்வனவற்றை நிழல் தரையில் எளிய வரைபடம் என நிகழ்த்திக் காட்டியது.
சல்லியரை வெல்லும் வழியினை இளைய யாதவர் உரைக்கும் பகுதியில் இந்த உவமை இடம்பெற்றுள்ளது.
“ அவருடைய நச்சு அம்புகளைத் தவிர்க்க ஒரே வழிதான் உள்ளது , விழிகளைத் தூக்காதே. நிழல்நோக்கிப் போரிடு ” என்றார் இளைய யாதவர். சல்யர் போரிட்டுச்சென்ற வழியெங்கும் வெவ்வேறு வகையில் இளித்தும் வலித்தும் கிடந்த படைவீரர்களின் உடல்களை அவன் கண்டான். பெரும்பாலானவர்களின் கண்களுக்குள் அம்புகள் நுழைந்துவிட்டிருந்தன. அவன் அவரை அதன்பின் நேர் நோக்கவேயில்லை. நிழல்நோக்கிப் போரிடுவது மேலும் எளிதென்றும் கண்டுகொண்டான். வானின் காற்று அடுக்குகளில் நிகழ்வனவற்றை நிழல் தரையில் எளிய வரைபடம் என நிகழ்த்திக் காட்டியது.
‘வெண்முரசு’ நாவல்தொடரில் இந்த நாவலில்தான் சகுனியின் அகவாழ்க்கை பற்றிய வரிவான செய்திகள் இடம்பெற்றுள்ளன. சகுனிக்கும் அவரின் மகனுக்குமான மனப்போராட்டங்களைக் கூர்மையாக வெளிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர். சகுனிக்குள் நிறைந்திருக்கும் பேரன்பு வெளிப்படும் இடம் இது.
அவன் செல்வதை நோக்கிக்கொண்டிருந்தார். அவருடைய அதே உடல். அதே அசைவுகள். ஆனால் அவன் அவர் அல்ல. ஒருகணம் அவன்மேல் எழுந்த வெறுப்பைக் கண்டு அவருடைய அகம் அஞ்சியது. உடனே , அவன்மேல் பேரன்பு எழுந்து மூடிக்கொண்டது. அவனை அருகே அழைத்து நெஞ்சோடு தழுவிக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. அவன் சென்று மறைந்தபின் அவன் காலடி பட்ட தரை எனத் தன் நெஞ்சை உணர்ந்தார்.
‘வெண்முரசு’ நாவல்தொடரில் அர்சுணனின் ‘காண்டீபம்’ என்ற வில் பற்றியும் கர்ணனின் ‘விஜயம்’ என்ற வில் பற்றியும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. இந்த நாவலில்தான் தர்மரின் ‘தயை’ என்ற வில் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. படைக்களத்துக்குப் பெயர் ‘தயை’யா? என்ற இளிவரலுடன் அறிமுகமாகும் இந்த வில், எல்லா விற்களைக்காட்டிலும் அதிசிறந்தது என்பதை அறியமுடிகிறது. காரணம் இது தெய்வங்கள் கையாளும் வில். இது அறத்தின் சீற்றம். தன்னிலக்கைத் தானே தேரும் அம்புகளை எய்யும் வில் இது. எல்லாவற்றுக்கும் மேலாக இது தர்மனின் கையில் இருக்க வேண்டிய வில். அதை உணர்ந்ததால்தான், துரியோதனன் இதனைத் தான் வைத்துக்கொள்ளாமல் தர்மனிடமே கொடுத்துவிடுகிறான்.
எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ‘வெண்முரசு’ தொடர் நாவல்களில் பல இடங்களில் உவமைக்காகக் ‘கவந்தன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
நடுவே கவந்தனின் வாய் எனத் திறந்திருந்த இருட்குகை ஒன்றுக்குள் இருந்து அவ்வொலி எழுந்துகொண்டிருந்தது. ஆயுதங்களுடன் உள்ளே முதலில் நுழைந்த உக்ரசேனன் விதிர்த்து பின்னடைந்தான். (முதற்கனல்)
பெரும் பிலம் என்று எண்ணுகிறேன். இருபுறத்திலிருந்தும் நீர்ப்பரப்பு பெருகிவந்து மடிந்து அதிலிறங்கி மறைந்துகொண்டிருக்கிறது. மானுட உயிர்கொள்ளத் திறந்த கவந்தனின் வாய். (செந்நா வேங்கை)
இருபுறமும் இரு மடைப்பள்ளியர் நின்று உணவை அள்ளிப்பரிமாற இருகைகளாலும் கவந்தன் போல் பேருருளையை உருட்டி வாயிலிட்டு பற்கள் அரைபட மூச்சிரைக்க உண்டு கொண்டிருந்த திருதராஷ்டிரர் (பன்னிரு படைக்களம்)
களிற்றுயானை நிரைபோல கரிய கோட்டை கொண்டது. கவந்தனின் வாய்போல அருகணைபவரெல்லாம் அதன் வாயிலினூடாக உள்ளே சென்று மறைகிறார்கள். எத்தனை நீர் பெய்தாலும் நிறையாத கலம்போல. (நீர்க்கோலம்)
நகுலன் “கவந்தனின் வாய்க்குள் என உடல்கள்” என்றான். சகதேவன் வெறுமனே நோக்கிவிட்டு நடந்தான். (தீயின் எடை)
யார் அந்தக் கவந்தன்? ‘கம்பராமாயணம்’ ஆரணிய காண்டத்தில் கவந்தன் இடம்பெறுகிறான்.
ராமனும் லக்குவனும் சீதையைத் தேடிப் புறப்பட்டனர். ஏறத்தாழ 500 மைல் தொலைவுக்குக் காட்டுப் பகுதியில் நடந்தனர். அந்தக் காட்டுப் பகுதியில் இருந்த கொடிய பூதமான கவந்தனிடம் சிக்கிக் கொண்டனர்.
கவந்தனுக்குத் தலை இல்லை. அவனது வயிற்றிலேயே வாய், கண் முதலியன இருந்தன. அவன் கைகள் மட்டும் சில மைல் தொலைவுவரை நீண்டிருந்தன. அவன் தன் கைக்குக் கிடைத்த அனைத்து உயிர்களையும் வளைத்துப் பிடித்துத் தன் வயிற்றுக்குள் போட்டுக் கொ(ல்)ள்வான். ஐந்து பாவங்களும் ஒன்று சேர்ந்ததுபோல அவன் இருந்தான்.
அந்தப் பூதத்தைப் பார்த்த ராமன் மனம் தளர்ந்தான். “எல்லாம் இழந்துவிட்டேன். இனி, நான் எப்படி அயோத்திக்குத் திரும்பிச் செல்வேன்?. எப்படி என்னால் இனி மிதிலைக்குச் செல்ல முடியும்? நான் இந்தப் பூதத்திற்கு உணவாகிவிடுகிறேன்” என்றான்.
“உங்களுக்குத் துணையாக வனத்திற்கு வந்த நான், தங்களையும் இழந்துவிட்டுத் தனியனாக எப்படிச் செல்லமுடியும்? தங்களுக்கு ஓர் அழிவு ஏற்படும் என்றால், அது என்னைத் தாண்டித்தான் நிகழவேண்டும்” என்றான் லக்குவன். ராமன் செயலற்று இருந்தான்.
“நமது வாளால் இந்தப் பூதத்தைக் கொல்வோம்” என்றான் லக்குவன். முன்னேறிச் சென்றான். அவனைத் தடுத்த ராமன், “நானே இப் பூதத்தைக் கொல்வேன்” என்று கூறி முன்னே சென்றான். லக்குவன் அவனை முந்திச் சென்றான்.
இதைக் கண்ட அந்தப் பூதம், “என் முன் நிற்க அனைவரும் அஞ்சுவர். நீங்கள் என் முன் வீரமாக நின்று, என்னை அவமதித்து விட்டீர்கள். நான் உங்களை விழுங்குவேன்” என்றது.
இருவரும் சேர்ந்து அந்தப் பூதத்தின் தோள்களைத் தம் வாளால் வெட்டி வீழ்ந்தினர். உடனே கவந்தன் புதிய உருவில் தோன்றி, இருவரையும் வணங்கினான்.
லக்குவன், “நீ யார்?” என்று அவனிடம் கேட்டான்.
“நான் தனு (விசுவாவசு). நான் ஒரு கந்தர்வன். முனிவரின் சாபத்தால் தலையற்ற பூதமாகத் திரிந்தேன். உங்களால் நான் இன்று சாபவிடுதலை பெற்றேன்” என்றான்.
“நீங்கள் நல்லவர் சிலரின் துணைகொண்டு சீதையைத் தேடிச் செல்லுங்கள் என்றான்” தனு.
“நீங்கள் இங்கிருந்து சென்று, தவப்பெண் சவரி என்பவளைச் சந்தியுங்கள். இரலைமலை மீது ஏறிச் சுக்கிரீவனை நட்புகொண்டு, சீதையைத் தேடுங்கள்” என்றான். பின்னர் அவன் வானத்தை அடைந்தான்.
தனு என்ற கந்தர்வன்தான் பூதவடிவில் இருந்த ‘கவந்தன்’.
இளைய யாதவரும் பாண்டவர்களும் துரியோதனனைத் தேடிச் செல்லும் போது அவர்களுக்குள் நிகழும் ஓர் உரையாடலில், தொல்காப்பியர் வந்துவிடுகிறார்.
நெடுந்தொலைவுக்குப் பின்னர்தான் யுதிஷ்டிரன் முதல்முறையாகச் செல்திசையை எண்ணினார். இளைய யாதவரை அணுகி “ நாம் எங்குச் செல்கிறோம் ?” என்று கேட்டபடி தொடர்ந்தார். “ நான் அந்த இடத்தைச் சொற்களாகவே அறிந்திருக்கிறேன். சொல்லில் இருந்து அந்நிலத்தை மீட்டெடுத்துக்கொள்கிறேன் …” என்றார் இளைய யாதவர்.
யுதிஷ்டிரன் “ இவ்வண்ணம் நடந்து சென்று அந்நிலம் அமைந்த சொல்வெளிக்குள் நுழைந்துவிட்டால் நன்று ” என்றார். “ சொற்கள் பொருள்கொண்டவை. எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே என்று சொன்ன மூதாதை மானுடனுக்கு அளித்த ஆறுதலையும் நம்பிக்கையையும் தெய்வங்களும் அருளியதில்லை. ”
இங்கு எழுத்தாளர் குறிப்பிடும் மூதாதை தொல்காப்பியர்தான்.
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.”
(தொல்காப்பியம், நூற்பா எண் – 642.)
பாண்டவர்கள் தன் தந்தையைப் போரறம் மீறிக் கொன்ற பின்னர் அவரைச் சிறுமை செய்த திருஷ்டத்யும்னன் மீது அஸ்வத்தாமன் பெருஞ்சினத்தில் இருந்தான். அந்தச் சினத்தை அவன் தணித்துக்கொண்ட விதம் பற்றி விவரிக்கும் போது எழுத்தாளர் பின்வரும் பத்தியை எழுதியுள்ளார்.
அஸ்வத்தாமன் திருஷ்டத்யும்னனை மாறிமாறி வெறியுடன் மிதித்தான். அவன் உடலின் அனைத்து உறுப்புகளையும் மிதித்தே சிதைத்தான். திருஷ்டத்யும்னனின் உடலில் இருந்து பிரிந்த உயிர் குரல்கொண்டதுபோல அவன் கதறல் வேறெங்கிருந்தோ என எழுந்தது “ ஆசிரியரே! ஆசிரியரே! ஆசிரியரே! ” என்னும் ஓலத்துடன் திருஷ்டத்யும்னன் நிலத்தில் கிடந்து நெளிந்தான். “ ஆசிரியரே! ஷத்ரியன் , ஆசிரியரே. நான் ஷத்ரியன் , ஆசிரியரே! ” என்று அவன் குரல் குழைந்தது. அக்குரல் மேலேயே மிதிகள் விழுவதுபோலிருந்தது. அக்குரல் நெளிந்து சிதைந்து உருவழிந்தது. “ ஷத்ரியன் , ஆசிரியரே! ” சொற்கள் துணுக்குகளாகி இருளில் பரவின. ஓய்ந்து அவை அமைதியாக மாறிய பின்னரும் அஸ்வத்தாமன் உதைத்துக்கொண்டே இருந்தான்.
பெருஞ்சினங்கள் எளிதில் தணிவதில்லை. அவை உள்ளத்திலும் உடலிலும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். இலக்கை அடைந்த பின்னரும் தன்னுடைய தொடக்க விசையால் உந்தப்பட்டு அம்பு மேலும் மேலும் முன்னகர்வதைப் போல. அதனால்தான், திருஷ்டத்யும்னன் இறந்த பின்னரும் அஸ்வத்தாமனின் கால் அவனுடலை உதைத்துக்கொண்டே இருக்கிறது.
போர்க்களச் செய்திகளைப் பெண்கள் அறிந்து எதிர்கொள்ளும் மனப்பாங்கினை எழுத்தாளர் வெவ்வேறு வகையாகச் சித்தரித்துள்ளார். குந்தியும் திரௌபதியும் காந்தாரியும் பானுமதியும் வெவ்வேறு முறைகளில் அவற்றை எதிர்கொண்டு எதிர்வினையாற்றுகின்றனர்.
குந்தி அழிக்கப்பட்டவர்களைவிட அழிபடாமல் தப்பித்தவர்களைப் பற்றியே சிந்திக்க்கிறார். திரௌபதியின் உள்ளத்தில் எழுந்த மாயை அழிக்கப்பட்டவர்களின் குருதியை உண்டு செரிக்கிறார். பானுமதிக்குத் தன் கணவன் துரியோதனனின் மரணம் முன்னமே தன்னுள் பலமுறை எதிர்பார்க்கப்பட்டது போலத்தான் இருக்கிறது. காந்தாரிக்கு யாருடைய அழிவும் பெரிதாகத் தெரியவில்லை. பாண்டவ புதல்வர்களின் படுகொலை சார்ந்த ஒற்றுச் செய்திதான் அவரைக் கதறச் செய்கிறது.
ஒருவகையில் காந்தாரி அறச்செல்வியாகத் திகழ்கிறார் என்றுதான் தோன்றுகிறது. முன்பே அவர் போருக்குச் செல்லும் தன் மைந்தர்களை வாழ்த்தும்போது, ‘அறம் வெற்றிபெறட்டும்’ என்ற பொருளில்தான் வாழ்த்தினார். அவர் அறச்செல்விதான்.
அஸ்தினபுரியைத் துரியோதனன் ஆட்சிசெய்தாலும் அவனின் நிழலாக இருந்து ஆண்டவர் துரியோதனனின் முதல் மனைவி பானுமதிதான். துரியோதனன் குருஷேத்திரப் போருக்குப் புறப்பட்டதும் அஸ்தினபுரியின் ஒட்டுமொத்த ஆட்சிப் பொறுப்பும் பானுமதியிடம் வந்துவிடுகிறது. அவள் தன்னளவில் திரௌபதியாகவே மாறிவிடுகிறாள்.
ஒவ்வொரு நாளும் குறைந்துகொண்டிருந்த படைகளைக் கொண்டு ஒவ்வொரு நாளும் பெருகி வந்த எதிர்ப்புகளை வெற்றியுடன் எதிர்கொண்டு அஸ்தினபுரியை உறுதியுடன் பானுமதி நிலைநிறுத்தினாள். “ பத்து த் துரியோதனர்களுக்கு நிகரானவர் அரசி ” என்று முதுமக்கள் சொல்லிக் கொண்டார்கள். “ ஆண்கள் கைபதறும் பொழுதுகளில் பெண்கள் பதினாறு கைகளுடன் எழுகிறார்கள் ” என்றனர் சூதர். கனகர் “ அரசர் துரியோதனன் ஆயிரம் கண்கள் கொண்டவர். அரசியோ இந்நிலத்தின் அனைத்து மணற்பருக்களையும் விழிகளாக ஆக்கிக்கொண்டவர் ” என்றார்.
குருஷேத்திரத்தில் பாண்டவர்கள் வென்ற செய்தியை நகுலன் முறைப்படி அஸ்தினபுரிக்கு அறிவிக்க வருகிறான். அப்போது, அஸ்தினபுரி எவ்வாறெல்லாம் பெண்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை எழுத்தாளர் விவரிக்கிறார். அதனைப் படிக்கும்போது, “ஆண்கள் கைபதறும் பொழுதுகளில் பெண்கள் பதினாறு கைகளுடன் எழுகிறார்கள்” என்ற கருத்து வாசகரின் மனத்துக்குள் உறுதிப்படும். சிறுமியென்றும் கன்னியென்றும் மனைவியென்றும் அன்னையென்றும் பேரன்னையென்றும் பெண்கள் பதினாறு கைகள் கொண்ட கொற்றவையாகவே எழட்டும். அதுவே, காலத்தின் தேவையும்கூட. ஆம்! அவ்வாறே ஆகுக.
– முனைவர் ப. சரவணன், மதுரை
இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்
‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்
கிராதம் முனைவர் முனைவர் ப சரவணன் மதுரை
சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை
‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை
‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்
‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,
‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை
‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை
‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
August 15, 2021
கடலைமொழிகள்
”ரொம்ப நல்லா எல்லாம் பண்ணிட்டிருந்தேன் . அதுக்குள்ள முழிப்பு வந்திட்டுது”சார்ல்ஸ் ஷூல்ஸ் [Charles M. Schulz] வரைந்த பீனட்ஸ் [நிலக்கடலைகள்] என்னும் காமிக்ஸ் பட்டை இந்து நாளிதழில் முன்பு வெளியாகிக்கொண்டிருந்தது. தமிழ்ச்சூழலில் அதன் நுணுக்கமான பகடிகளைப் புரிந்துகொள்வது கடினம், அமெரிக்க வாழ்க்கை சார்ந்தவை அவை. ஆனால் நீண்ட காலம் கழித்தும் அவற்றின் பல வரிகள் நினைவில் நிற்பதை பிற்பாடு உணர்ந்தேன்.
பகடி என்றால் கேலி அல்ல. மெல்லிய தன்னுரைத்தல்கள். சிறிய இடக்குகள். கொஞ்சம் உளச்சோர்வும் தனிமையிரக்கமும் கொண்டவனாகிய சார்லி பிரவுன் அதன் நாயகன். அவனுடைய நாய் ஸ்னூப்பி ஓர் அறிவுஜீவி. ஒருமுறை அது வானைப்பார்த்தபடி சிந்தனைத் தெறிப்பொன்றை அடைகிறது. “முற்றிலும் அர்த்தமில்லாதவனாக உணரும்போது என் இருப்பு நியாயப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்” நான் அடிக்கடி புன்னகையுடன் நினைவுகூரும் வரி அது.
ஷூல்ஸ்
”நான் உன்னை வெறுக்கலை. நீ என்னை வெறுக்கிறதா நினைக்கலை. இதைப்பத்தித்தான் நெறைய யோசிச்சிட்டிருக்கேன்”
”வாழ்க்கையோட ரகசியம் இதான். ஒரு கவலையை இன்னொரு கவலையாலே தள்ளிவைச்சுகிடறது”
”அடாடா, தூங்கறது எப்டீன்னே மறந்திட்டுதே”
”எந்த பிரச்சினையும் நாம அப்டியே ஓடிப்போயிட முடியாத அளவுக்கு பெரிசோ சிக்கலானதோ கெடையாது”
”காலையிலே எந்திரிக்கிறத விட நல்லா ஒரு நாளை தொடங்குறதுக்கு வேற வழிகள் கண்டிப்பா இருக்கணும்”
”என்னோட அடுத்த வித்தையை செய்யாமலேயே உங்களுக்கு கண்டிப்பா ஏமாற்றத்தை குடுக்கறேன்”
”எனக்கு எதிரிங்க இல்ல. ஆனா நண்பர்களுக்கு என்னைய புடிக்கலை”
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


