Jeyamohan's Blog, page 929

August 25, 2021

சங்கசித்திரங்கள், மீண்டும்

சங்கசித்திரங்கள், வாங்க

சங்கசித்திரங்கள் நான் விகடனில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுதி. நான் பிரபல ஊடகத்தில் எழுதிய முதல் தொடர். அதன்பின்னர் அச்சு ஊடகத்தில் எழுதிய தொடர்கள் வாழ்விலே ஒரு முறை [தீராநதி], ஆழ்நதியைத்தேடி [உயிர்மை], நத்தையின் பாதை [விகடன் தடம்], இவர்கள் இருந்தார்கள் [மீடியா வாய்ஸ்] தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் [ஜன்னல்] வலசைப்பறவை [சமகாலம்] போன்ற சிலவற்றைச் சொல்லலாம்.  இவற்றில் இரண்டு தவிர பிற அனைத்தும் நூலாகியிருக்கின்றன.

சங்கசித்திரங்களை முதலில் மலையாளத்தில் மாத்யமம் இதழில்தான் எழுதினேன். அப்போது வீடுகட்டிய கடனில் இருந்தேன். அவர்களே கூப்பிட்டு தொடர் எழுதச் சொல்லி பணம் தந்தனர். அன்று அது பேருதவியாக இருந்தது.

தமிழில் நான் உருவாக்க நினைத்தது ஒரு புதியவாசிப்பை. அதை The life criterionஎன்று நான் அழைப்பேன். இலக்கியவாசிப்புக்கு அடிப்படையாக அமையவேண்டியது  இலக்கியத்தை வாழ்க்கையைக் கொண்டு புரிந்துகொள்வதும் அளவிடுவதும்தான். நாம் சமகாலப் படைப்புக்களை வாசிக்கும்போது ஓரளவு நம் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக்கொள்கிறோம்.

ஆனால் செவ்வியல் படைப்புக்களை அவ்வாறு நாம் வாசிப்பதில்லை. சொல்லழகு, செய்திகள், பண்பாட்டுச்சித்தரிப்பு, வடிவ அழகு சார்ந்து மட்டுமே வாசிக்கிறோம். அதிலும் வாழ்க்கையையே பார்க்கவேண்டுமென முன்வைக்க எண்ணினேன். அந்தத் தொடர் அவ்வகையில் ஒரு முன்னோடி. அதில் பண்பாட்டைப்பார்க்கும் ஆவணமாக சங்கப்பாடல்கள் அணுகப்படவில்லை. முழுக்கமுழுக்க கவிதையாகவே அணுகப்பட்டன. அவ்வகை வாசிப்புகள் பின்னர் ஏராளமாக வெளிவந்தன.

அத்துடன் சங்கசித்திரங்கள் ஒரு கவிதை ரசனைநூல் மட்டுமல்ல. அதை நாற்பது சிறுகதைகளாகவும் வாசிக்கமுடியும். அவற்றில் இருபது சிறுகதைகளாவது முக்கியமான இலக்கிய ஆக்கங்களாக தனித்தும் நிற்கத்தக்கவை.

ஒரு முன்னோடியான நூல் சங்கசித்திரங்கள். இன்று புதிய பதிப்பாக அதைப்பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது

[வடிவமைப்பு : கீதா செந்தில்குமார்]

சங்கசித்திரங்கள் -கடிதம்

சங்கசித்திரங்கள்

சங்கசித்திரங்கள்

சங்கசித்திரங்கள்-விமர்சனம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2021 11:31

August 24, 2021

புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-1

வேம்படிதாளம்

புதிர்வழிகள்- இளம்பரிதி

மீண்டும் ஒரு பயணம். உண்மையில் நான் வீட்டை விட்டுக் கிளம்பி மலைமலையாக அலைந்து குளிரில் ஒருமாதிரி வெந்தபக்குவத்தில் ஆகியிருந்தேன். அதன்பின் ஈரோடு கிருஷ்ணன் வகுத்த திட்டப்படி பயணம். சோழர்களால் வெல்லப்பட்ட நொளம்ப பேரரசின் ஆலயங்களைப் பார்ப்பது திட்டம். கர்நாடகத்தின் கோலார் வட்டாரம்.

இம்முறை எண்ணிக்கை மிக அதிகம், பதிநான்குபேர். இரண்டு பேர் பெண்கள். ஆகவே எல்லாவற்றையும் அணுவணுவாக திட்டமிட்டார் கிருஷ்ணன். திட்டம் பல நாட்களாக விரிந்து விரிந்து திட்டமிட்ட கிருஷ்ணனுக்கே சரியாகப்புரியாததுபோல் ஆகியது. ஆனால் ஆகஸ்ட் இருபது அதிகாலையில் திட்டத்தின் முதல் நிரல் மீறப்பட்டது. மீறியவர்  கிருஷ்ணனேதான். அதன்பின் கோலாரம்மையின் அருளால் பயணம் நடந்தேற விடப்பட்டது- வழக்கம்போல.

செல்லும் வழியில் ’எதையாவது’ பார்த்துக்கொண்டே போகலாம் என்று எண்ணி தேடியபோது மிகச் சுவாரசியமான ஒன்று அகப்பட்டது. ‘வட்டச்சுழற்பாதைகள்’. உம்பர்ட்டோ எக்கோ, போர்ஹெ முதல் நான் வரை அனைவருமே வட்டச்சுழற்பாதைகளைப் பற்றி எழுதியிருக்கிறோம். மலையாளத்தில் என்ன காரணத்தாலோ இதை ராவணன் கோட்டை என்கிறார்கள்.

உலகம் முழுக்க இந்தவகையான புதிர்ச்சுற்றுப்பாதைகள் உள்ளன. இவற்றில் பல கோட்டைகள் தொன்மையான கற்காலத்தைச் சேர்ந்தவை. அதன்பின் அவை வழிபாடு சார்ந்தவையாக ஆயின. உள்ளத்தை அவதானிக்கவும், உள்ளத்தை கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்தவும் இவை பயன்படுத்தப்பட்டன. ஜென்பௌத்த ஆலயங்களிலும் கிறிஸ்தவ மடாலயங்களிலும் இவை இருக்கின்றன.

இந்தியாவில் பலநூறு புதிர்வளையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நாட்டார்த்தெய்வங்களின் ஆலயங்களை ஒட்டியே அவை உள்ளன. ஆனால் பெருந்தெய்வ ஆலயங்களிலும் இவை உள்ளன. ஆலயச்சுவர்களிலும் இவை சிற்பங்களாகக் காணக்கிடைக்கின்றன. மகாபாரதத்தில் அபிமன்யூ புகுந்த பத்மவியூகம் அல்லது சக்கரவியூகம் என்பது படைகளால் அமைக்கப்பட்ட ஒரு புதிர்க்கோட்டைதான். பல சிற்பங்களில் இவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

கேரளத்தில் திருவில்வா மலை போன்ற இடங்களில் இயற்கையான மலைக்குகைகளே புதிர்ப்பாதைகளாக உள்ளன. அவற்றினூடாக புகுந்து வெளிவருவது புனர்ஜனி எனப்படுகிறது. பிறப்பிறப்பின் வட்டப்புதிர்ப்பாதையின் வழியாக வந்தால் மறுபிறப்பாகி, பாவங்கள் விலகிவிடுகின்றன என நம்பப்படுகிறது. இன்னும் ஒரு கோணத்தில் நம்முடைய பரமபத விளையாட்டேகூட ஒருவகை புதிர்வழிப்பாதைதான்.

முதலில் தர்மபுரி அருகே உள்ள வேம்படிதாளம் [அல்லது வேம்படி தாவளம்] என்னும் ஊரில் உள்ள புதிர்சுழல்பாதைக்குச் சென்றோம் வேம்படித்தளம் – கோட்டைப்புதுார் என்ற ஊரிலுள்ளது இது. ஏழுசுற்றுக்கோட்டை என்று சொன்னால்தான் ஊரில் தெரியும். 15 மீட்டர் விட்டம், 140 மீட்டர் சுற்றளவு, 700 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த புதிர்நிலை, உலகின் மிகப்பெரிய புதிர்நிலைகளில் ஒன்று என்கிறார்கள்.

இந்தப்புதிர்நிலைக்கு அருகே ஒரு தொன்மையான இடுகாடு உள்ளது. வரலாற்றுக்கு முந்தைய காலம் முதலே அது இடுகாடுதான். அங்கே பெருங்கற்காலத்து நினைவுச்சின்னங்கள் உள்ளன. இங்கே இரண்டு புதிர்நிலைகள் உள்ளன. இவ்விரண்டையும் உள்ளடக்கி பெரிய ஒரு வட்டமும் இருந்திருக்கிறது. இன்று அது கலைந்துள்ளது.

கம்பைநல்லூர்

புதிர்வழியினூடாகச் செல்லும்போது அதை ஒரு கேலியாக, விளையாட்டாக ஆக்கிக்கொள்வது நம் வழக்கம். ஆனால் அதைச் செய்யக்கூடாது. அது உருவாக்கும் எளிய கிளர்ச்சியை ரத்துசெய்து நம் உள்ளம் என்ன செய்கிறது என்பதை கவனித்துக் கொண்டிருக்கவேண்டும். இது ஒரு வகை தியானம்

புதிர்வழிகளில் செல்லும்போது நம் அகம் கணக்கு போட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த பயணத்திற்கான அகவரைபடத்தை உருவாக்கிக் கொள்கிறது. புதிர்வழி உடனே அந்த வரைபடத்தைக் கலைத்துவிடுகிறது. நம் அகம் திடுக்கிட்டு மீண்டும் வரைபடத்தை உருவாக்க ஆரம்பிக்கிறது. நம் உள்ளம் செயல்படும் விதத்தை அறிய, அதை ஒருங்கிணைக்க மிகச்சிறந்த வழி இது.

இரண்டாவது புதிர்வழி தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் உள்ளது. கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டியில் 1,600 சதுர அடி பரப்பளவில் உள்ள இந்த புதிர்வழி வேம்படிதாளம் புதிர்வழியை விட கிட்டத்தட்ட 2000 ஆண்டு பழமையானது, இந்த புதிர்நிலை தான் உலகிலேயே பெரியது என ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது.

சதுரவடிவமான புதிர்வழி இது. செருப்பை கழற்றி வைத்துவிட்டு நடந்தோம். காலில் நெருஞ்சி குத்திக்கொண்டிருந்தது. அணுகியதுமே அகன்று தொடங்கிய இடத்துக்கே வந்து மீண்டும் நெருங்கி சுழன்றுகொண்டிருந்தோம். பத்துபேர் அந்தப் பாதைச்சுழலில் மையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். ஆனால் பொதுப்பார்வையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைநோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். வாழ்க்கையின் விந்தையை கண்ணெதிரே காணும் ஒரு நிலை.

[மேலும்]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2021 11:35

விக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்- லக்ஷ்மி மணிவண்ணன்

விக்ரமாதியனிடம் ஒரு சகாயம் உண்டு அடிப்பொடியில் இருந்து யார் வேண்டுமானாலும் நிகராக நின்று மல்லுக்கட்ட முடியும். மல்லுக்கட்டி கட்டி இலக்கியம் கற்கமுடியும். பிற படைப்பாளிகளிடம் எப்போதும் இந்த சகாயம் கிட்டும் என்று சொல்வதற்கில்லை. ஆரம்பநிலை சந்தேகங்கள் தொடக்கி, ஆழங்கள் வரை செல்லும் மல்யுத்தம் அது. ஜலமயக்கதிற்கு ஒதுங்கிக் கொள்பவர்களுக்கு இந்த வாய்ப்பில்லை.ஜலமின்றி இந்த எந்திரம் ஓடாது. ஓடியதில்லை. ஜலம் தீருமிடத்தில் இலக்கியம் நிற்கும்.

விக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2021 11:34

கைரளி பேட்டி

கைரளி டிவியின் பேட்டி. ஒரு குறும்படம் போல. இது பெரும்பாலும் கேரள வரலாற்றை ஒட்டியே எடுக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய புனைவுலகின் நிலமும் வரலாறும் என்ன என்பதை ஆராய முயன்றிருக்கிறார் இதழாளரான பிஜு முத்தத்தி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2021 11:34

புதிர்நிலைகள் – இளம்பரிதி

சிக்கலான ஒருவழிப் பாதை அமைப்பின் மூலம் மையப்பகுதியை அடையும் முறைக்கு புதிரம் அல்லது புதிர்நிலை என்று பெயர்.

புதிர்நிலைகள் என்பவை பொதுவாக இரண்டு ஆங்கில வார்த்தைகளுடன் தொடர்பு படுத்தப்படுகின்றது, அவை

Labyrinth – (சிக்கல் வழி) இவை மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும்படி அமைந்துள்ள சிக்கல் (puzzle) முட்டும் வழிகளையும் (dead ends), சிக்கலிலிருந்து வெளியேற (exit) முடியாதபடியும், வெளியிலிருந்து மையத்தை நோக்கி உள்ளே நுழைய (to find one’s way) முடியாதபடியும் சுற்றிச் சுற்றி அமைக்கப்பட்ட சிக்கலான ஓரொழுங்குப் பாதை.

Image: Lake Erie Arboretum at Frontier Park

Maze (புதிர்பாதை) – இவை பல்வேறு கிளைவழிகளுடன் கூடிய மிகவும் சிக்கலான வழியாகும் (பல்லொழுங்குப்பாதை).

சிக்கல் வழி (Labyrinth), மற்றும் புதிர்வழி (maze) பொது வழக்கில் ஒரே பொருளில் பேசப்பட்டாலும் இரண்டும் வெவ்வேறானவை. தமிழ் ஊடகங்கள் இந்த அமைப்புகளை ‘புதிர்நிலை’ என்று குறிப்பிடுகின்றன. நாமும் புதிர்நிலை என்ற சொல்லையே கையாளலாம்.

புதிர்நிலைகள் பல வடிவங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: வட்டப்புதிர்வழிகள்,

நீள் வட்டப் புதிர்வழிகள்,

சதுரவடிவப் புதிர்வழிகள்,

செவ்வகப் புதிர்வழிகள்,

முக்கோணப் புதிர்வழிகள்.

இவற்றில் வட்டப்புதிர்வழிகள் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானவை ஆகும்.

தமிழகத்தில் புதிர்நிலைகள்:

பைரேகவுணி – கிருஷ்ணகிரி வட்டம், சின்ன கொத்தூர் (குந்தாணி), பைரேகவுணியில் சுருள் வளைய வடிவ புதிர்நிலை,

காம்மைநல்லூர் – தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூரில் சதுரவடிவ புதிர்நிலை,

கெடிமேட்டி- திருப்பூர் மாவட்டம் தெற்கு பொள்ளாச்சி வட்டம், கெடிமேட்டில் சதுரவடிவ புதிர்நிலை,

ஏணிபெண்டா – அகநள்ளி – கிருஷ்ணகிரி மாவட்டம், குந்துக்கோட்டை அருகே ஏணிபெண்டா என்னும் இடத்தில் 2,500 ஆண்டுகள் பழமையான வட்டப்புதிர் நிலை.

கோட்டைப்புதுார் புதிர்நிலை – சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டம், வேம்படித்தளம் அருகே கோட்டைப்புத்தூரில் வட்டவடிவ ஓரொழுங்கு புதிர்நிலை.

கீரமங்கலம் புதிர்நிலை புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் அருகே வில்வன்னி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள சதுரவடிவ புதிர்நிலை.

வேம்படித்தளம் – கோட்டைப்புதுார் புதிர்நிலை (வட்டப்புதிர்  நிலை.)

15 மீட்டர் விட்டம், 140 மீட்டர் சுற்றளவு, 700 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த புதிர்நிலை, உலகின் மிகப்பெரிய புதிர்நிலைகளில் ஒன்றாகும்.

இது அரிக்கமேடு செல்லும் பெருவழிப்பாதையின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிர்நிலை வழிபாட்டிற்காக பலமுறை, கற்களை கலைத்து கட்டப்பட்டுள்ளதை அறிய முடிகிறது, இதன் அருகில், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சடங்கு மேடு ஒன்று உள்ளது.

இது ஒடிசா மாநிலம், ராணிபூரில் உள்ள, 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ஜஹாரியாவின் சவுன்சாத் புதிர்நிலையை ஒத்துள்ளது என்றாலும், அது, அளவில் சிறியதாகும்.

ஜஹாரியாவின் சவுன்சாத் புதிர்நிலை

காம்மைநல்லூர் (செவ்வக வடிவ புதிர் நிலை)

இது தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டியில் 1,600 சதுர அடி பரப்பளவில் அமைந்து உள்ளது.

இது வேம்படிதாளத்தை விட பழமையானது அதாவது கிட்டத்தட்ட 2000 ஆண்டு பழமையானது, இந்த புதிர்நிலை தான் உலகிலேயே பெரியது என ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது.

இந்த புதிர்நிலை கிரேக்கத்தில் பைலோஸ் என்ற இடத்தில் கிடைத்த சுடுமண் தட்டு ஒன்றில் வரையப்பட்டுள்ள, சதுர புதிர் நிலையை ஒத்து உள்ளது

இங்கே காணப்படும் புதிர்ப்பதை இன்னும் சிதைவடையாமல் நல்ல முறையில் இருப்பதற்கு அங்குள்ள நாட்டார் வழிபாட்டு மரபுடன்  சம்மந்தப்பட்டதால்  இருக்கலாம்.

பைரேகவுணி (சுருள் வடிவில் அமைக்கப்பட்ட ஓரொழுங்குப் பாதை)

கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர் குந்தாணியான சின்ன கொத்தூர் என்ற கொத்தூர் கிராமம், பைரேகவுணியில் அமையப்பெற்ற வட்டப்புதிர் நிலை.

இதுதான் தமிழகத்தில் கண்டறியப்பட்ட முதல் புதிர்நிலை.

இப்பகுதியில் இயல்பாகக் கிடைக்கும் கற்குண்டுகள் இங்கு தரையில் வரிசையாகப் பதிக்கப்பட்டு இப்புதிர்நிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பைரே கௌனி புதிர்வட்டப்பாதையின் விட்டம் 28 அடி (8.5 மீட்டர்) அளவும் பாதை அளவு 1 அடி 261⁄64 இஞ்சுகள் அல்லது 38 செ.மீ. அகலமும் ஆகும்.

இந்தப் புதிர்நிலையின் காலம் இன்னும் துல்லியமாகக் கணிக்கப்படவில்லை. என்றாலும் இது கி.பி. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம். (Caerdroia – Indian Labyriths). இதன் அமைவிடம் பெருங்கற்கால கல்திட்டைகளுக்கு (amidst dolmens) இடையில் என்பது இவருடைய முடிவிற்கு காரணமாயிருக்கலாம்.

[image error]

ஏணிபெண்டாஅகநள்ளி புதிர்ப்பாதை (வட்டப்புதிர்  நிலை)

கிருஷ்ணகிரி மாவட்டம், குந்துக்கோட்டை அருகே ஏணிபெண்டா என்னும் இடத்தில் 2,500 ஆண்டுகள் பழமையான வட்டப்புதிர் நிலை உள்ளது.

இந்தப் புதிர்நிலை ஏழு சுற்றுப்பாதைகள் கொண்ட முட்டை வடிவமாகும்,

இது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழாவது புதிர்நிலையாகும்.

இது பண்டைய கிரேக்கத்தில் ஏழு சுற்றில் அமைக்கப்பட்ட புகழ் பெற்ற புதிர்கோட்டையை அடியொற்றி தமிழகத்தில் இருப்பது.

ஏழு பாதைகள் உள்ளதால், ஏழுசுற்றுக் கோட்டை என இது அழைக்கப்படுகின்றது.

இதன் வாய்ப்பகுதி5 மீ. உள்ள சமபக்க முக்கோணம் என்பதே இதன் சிறப்பாகும், இதன் நுழைவாயில் கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.

இதன் விட்டம் 9 மீட்டர். அதுமட்டுமல்ல, 99 சதுரடிப் பரப்பு கொண்டது.

1,3,5,7 ஆகிய பாதைகள் 75 செ.மீ. அகலத்திலும், 2,4,6 ஆகிய பாதைகள் 50 செ.மீ. அகலத்திலும் உள்ளன.

சுற்றுப்பாதையின் கற்கள் சில விலகியிருப்பதால், அவ்விடங்களின் அளவு மாறுபடுகின்றது.

இதன் மையப் பகுதியானது, சிறு பலகைக்கற்கள் கொண்டு மூடுபலகை கொண்ட சிறு கல்திட்டை அல்லது அறை போன்ற அமைப்பு கொண்டதாக விளங்குகிறது.

அகல்விளக்குகள் வைத்து வழிபட இந்த அமைப்பு அமைக்கப்பட்டதாக இருக்கலாம்.

இச்சின்னம் அமைந்துள்ள பகுதிக்கு 1 கி.மீ தொலைவில், கல்வட்டம் மற்றும் கல்குவி, கல்வட்ட வகை பெருங் கற்படைச் சின்னங்கள் அமைந்துள்ளதும் கவனிக்கத்தக்கதாகும்.

நன்றி : ராஜமாணிக்கம், விஷ்ணு

உதவிய இணைப்புகள்

https://www.tagavalaatruppadai.in/stone-age-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZle

https://agharam.wordpress.com/2017/10/21/%E0%AE%AA%E0%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%E0%AE%E0%AE%B3%E0%AF%8D-labyrinths-mazes/

தமிழக புதிர்நிலைகள் கல்திட்டைகள் கல்வட்டங்கள் முகநூல் பக்கம்

https://jeanlouisbourgeois.com/

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2021 11:33

அர்ச்சகர் சட்டம் – காளிப்பிரசாத்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது. இதற்குள் திமுகவின் அரசியல் இருக்கிறது என்பதையும் அது மக்களை திசை திருப்புகிறது என்பதையும் விவாதத்திற்கு அப்பால் வைத்து விட்டு யோசிக்கிறேன். இந்த வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது. நாளை என்ன நிகழும் என தெரியாது. இதன் சமூக ஏற்பும்  எப்படியிருக்கும் என  தெரியாது. இதுவே தொடரலாம். மாற்றமடையலாம். ஆனால் அவ்வாறு  மாற்றமடைகையில்  அதில் அரசு தடை இருக்காது என்று சட்ட ரீதியாக சொல்லியிருக்கிறது என்கிற கோணத்தில் பார்த்தாலும் இது ஏற்கத்தக்கது.

அர்ச்சகர் சட்டம் – எனது எண்ணங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2021 11:33

வெண்முரசை வாசித்தல், கடிதம்

 அன்பு ஜெயமோகன்,

வெண்முரசு முதற்கனல் குறித்த இராஜகோபால் அவர்களின் உரையையும், அவருடனான வாசகர்களின் உரையாடலையும் பல அமர்வுகளில் செவிமடுத்தேன். இதிகாசம் துவங்கி நவீன இலக்கியம் வரையிலான பின்புலத்தெளிவைச் சான்றுகளுடன் அளிக்க அவர் தொடர்ந்து முயன்றார்; அம்முயற்சி போற்றுதலுக்குரியது.

விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், கொற்றவை, வெண்முரசு போன்றவை நவீன இலக்கியங்கள்தாம். எனினும், அவற்றை வாசிக்க சில அடிப்படைத் தகுதிகள் அவசியம். அவை இல்லாமல் அவற்றை வாசிக்க முற்படுதல் வாசகனுக்குப் பெருந்துன்பத்தையே அளிக்கும்.

ஒரு படைப்பாளனுக்கு இருப்பது போன்றே வாசகனுக்கும் தகுதிகள் இருக்கின்றன. படைப்பை வழங்கப் படைப்பாளி மெனக்கெடுவதைப் போல, வாசகனின் மெனக்கெடலும் முக்கியம். மம்மதுவைத் தேடி மலை வராது, மம்மதுதான் மலையைத் தேடிப்போக வேண்டும். ஆக, வாசகன் படைப்பை வாசிப்பதற்கான தகுதிகளை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்; அவற்றை நடைமுறை வாழ்வில் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு, அவற்றைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியத்தத்துவ அடிப்படை தெரியாத ஒருவர் விஷ்ணுபுரத்தை நெருங்கவே முடியாது. சிலப்பதிகாரப் பின்புலத்தை உள்வாங்காத ஒருவருக்கு கொற்றவை தனித்தமிழ்ச் சொற்சேர்க்கைகளாகவே புலப்படும். மார்க்சிய இயங்கியல் மற்றும் தொழிற்சங்க நடைமுறைகள் தொடர்பான குறைந்தபட்ச அறிமுகம் இல்லாதவர்க்கு பின் தொடரும் நிழலின் குரலின் ஆன்மா சென்று சேராது. அதைப் போன்றே வெண்முரசு நாவல்களை வாசிக்க நிச்சயம் மகாபாரதக் கதைச்சுருக்கமாகவாவது தெரிந்திருக்க வேண்டும்.

நவீன இலக்கியம் குறித்து அழுத்தமான விளக்கங்களை இராஜகோபால் அளித்தார். அவ்விளக்கங்களைத் திரும்பத் திரும்பச் சிலமுறைகளாவது கேட்காமல் அவற்றைப் புரிந்து கொள்வது சிரமமே. வாசகர்கள் அவரோடு உரையாடும்போது முன்வைத்த கேள்விகளில் அத்தடுமாற்றத்தைக் காண முடிந்தது. வெண்முரசு என்றில்லை.. எந்த ஒரு இலக்கியப்படைப்பையும் வாசிப்பதற்கான குறைந்தபட்சத் தகுதியைத் தெளிவாகவே அவர் சுட்டிக்காட்டி இருந்தார். ஆக, அவ்வுரையை வெண்முரசுக்கானது மட்டும் என நான் கருதவில்லை. தவறவிட்டவர்கள் அவ்வுரையைச் சென்று கேளுங்கள்.

மகாபாரதக் கதைமாந்தர்கள் யதார்த்த வாழ்வில் உதாரணங்களாய்க் காட்டப்படும் போது புராணத்தன்மையிலேயே இருக்கின்றனர்; இலக்கியத்தளத்திலேயே அவர்கள் காப்பியத்தன்மை பெறுகின்றனர். இராஜகோபாலின் இக்கூற்று கூர்ந்து கவனிக்கவும், மேலதிகமாய் யோசிக்கவும் தூண்டுவது.

புராணத்தன்மையில் ஒரு கதைமாந்தரின் படைப்பு ஒற்றைத்தன்மையில் நிறுவபபட்டிருக்கும். அதாவது அவர் நல்லவர் அல்லது கெட்டவர். காப்பியத்தன்மையில் கதைமாந்தர் நல்லவரா அல்லது கெட்டவரா எனத் தடுமாற வேண்டி இருக்கும். புராணத்தன்மை கொண்ட ஆக்கங்களைப் புராணங்கள்    என்றும், காப்பியத்தன்மை உள்ளடங்கி இருக்கும் படைப்புகளைக் காப்பியங்கள் என்றும் கொள்ளலாம். இப்படி ஒரு விளக்கத்தை இராஜகோபால் அளிக்கிறார் அல்லது அப்படியாக நான் புரிந்து கொண்டேன். அப்புரிதலில் இருந்து மேலதிகமாய்ச் சிந்திக்கவும் நினைக்கிறேன்.

கந்தபுராணத்தை எடுத்துக் கொள்வோம். சூரபன்மன் கெட்டவன் மட்டுமே எனக் கொள்வதற்கான சாத்தியங்கள் இல்லை. புராணத்துவக்கமே தந்தை காஷ்யப முனிவர் சூரபன்மன் உள்ளிட்டோருக்கு அறம் போதிப்பதிலேதான் துவங்குகிறது. தாய் மாயை அறத்தை விட அதிகாரமும் செல்வமும் முக்கியம் என அவர்களைத் திசைதிருப்பி விடுகிறாள். இங்கு சூரபன்மனின் பங்கு குறித்து யோசித்துப் பார்த்தால் அவன் பாத்திரப்படைப்பின் தன்மை நுட்பமாகும் அல்லது காப்பியத்தன்மை பெற்றிருப்பது தெரிய வரும்.     பெரியபுராண மனுநீதிச் சோழன் கதையும் அவ்வாறே. பெரும்பாலான பிற புராணங்களின் மாந்தர்களுக்கும் அதைப் பொருத்திப் பார்க்கலாம்.

நடைமுறை வாழ்வில் புராணங்களைப் பிரசங்கம் செய்பவர்களால் அப்படியான தொனி உருவாகிறது. அதைக் கொண்டே புராணத்தன்மை என நாம் சொல்கிறோம். உண்மையில், ஒரு இலக்கியப்படைப்பு புராணத்தன்மையைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. அது சொல்லப்படுபவர்களாலேயே அப்படியான தொனியைப் பெறுகிறது. சமீபமாய்ப் பெருகி இருக்கும் கதைசொல்லிகளால் இலக்கியப்படைப்புகள் புராணத்தன்மை பெற்றிருப்பதை நாம் எளிதாய்க் கண்டுகொள்ள முடியும்.

ஒரு பிரசங்கி அல்லது கதைசொல்லி வாசிப்புச் சாத்தியங்களை விரிவடையச் செய்யாமல் சுருங்கச் செய்து விடுகிறார். ஒரு நல்ல விமர்சகரே வாசிப்பின் விசாலத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். சமீபத்தில் புதுமைப்பித்தனின் சில்பியின் நகரம் சிறுகதையை ஒலிவடிவில் கதையாடலாகச் செவிமடுத்தேன். பிறகு, அதே கதை பற்றிய பிரமிளின் விமர்சனக்கட்டுரை ஒன்றையும் வாசித்தேன். கதைசொல்லி அக்கதையின் ஆன்மாவைத் தட்டையாக்கி இருக்க, பிரமிளோ அதை அலாதி நுட்பமாக்கி இருப்பார்.

என்னளவில், ஒரு தேர்ந்த படைப்பு அதன் இயல்புத்தன்மையில் புராணத்தன்மையோடு இருப்பதில்லை. அது வெளிப்படுத்தப்படும் முறையிலேயே புராணத்தன்மை கொள்கிறது. அப்புராணத்தன்மை அப்படைப்பைப் பெரும்பாலும் அதன் ஆன்மாவில் இருந்து பிரித்து விடுகிறது. அதனாலேயே, இலக்கிய ஆக்கங்கள் ஒலிவடிவில் தங்கள் சுயத்தை இழந்தவை ஆகின்றன.

ஒலிவடிவில் இணையத்தில் உலவும் சிறுகதைகளை பல்லாயிரக்கணக்கானவர்கள் கேட்கின்றனர். என்றாலும், அவர்களால் அப்படைப்பின் ஆன்மாவை நெருங்க இயலவில்லை. இலக்கிய ஆக்கங்களால் உந்தப்படும் ஒருவர் அது குறித்த தனது வாசிப்பனுபவத்தை அல்லது விமர்சனத்தைப் பகிர்ந்து கொள்தலே இணக்கமானதாக இருக்கும்.

தத்துவத்தில் அறிவைச் சாமானிய அறிவு, விசேஷ அறிவு எனப்பிரிப்பார்கள். அப்படி பிரிப்பதாலேயே இரண்டு அறிவு இருப்பதாக புரிந்து கொண்டால் குழப்பம்தான். அறிவின் புற மற்றும் அக வடிவங்களாக அவ்விரண்டையும் சொல்லலாம். சாமானிய அறிவு எதிர் விசேஷ அறிவு என்றில்லாமல் சாமானிய அறிவு > விசேஷ அறிவு என்பதாக நாம் அணுக வேண்டும். கொஞ்சம் எளிமையாக்கப் பார்க்கலாம். சூரியன் உதிக்கிறான் மறைகிறான் என்பது சாமானிய அறிவு; சூரியன் அவ்வாறில்லை, அவை தோற்றங்களே என்பது விசேஷ அறிவு. சாமானிய அறிவின் வழியாகவே விசேஷ அறிவை வந்தடைய இயலும். சாமானிய அறிவு திரிபடைந்து விட்டால் அது சாத்தியமே இல்லை. சாமானிய அறிவு என்பதைப் சமூகத்தளத்திலான அறிதல் என்பதாகவும், விசேஷ அறிவைத் தனிமனித அளவிலான புரிதல் என்பதாகவும் கொள்ளலாம். சமூகப்புரிதல் தட்டையாகிவிடும்போது, அது தனிமனிதனைத் தவிக்க வைத்து விடுகிறது. அதுவே தனிமனிதனான வாசகனை அ;ல்லாடச் செய்வதாகவும் ஆகிறது.

ஒரு கதையைச் சொல்பவர்கள் அக்கதையைப் புராணத்தன்மை கொள்ளச் செய்கிறார்கள்; அது தவறில்லை, ஆனால், அப்புராணத்தன்மையிலேயே அக்கதையை உறைய வைக்கும்படியான அபத்தமே பெரிதும் நிகழ்கிறது. கேட்பவர்கள் தன்னளவிலான வாசிப்புக்கு நகர்ந்தால் மட்டுமே கதைசொல்லியின் பங்கு போற்றுதலுக்குரியது. அப்படி இன்றி, கேட்டலிலேயே தேங்கி விடும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரிப்பது படைப்பின் ஆன்மாவைத் தேய வைத்து மழுங்கடித்து விடும். என்னளவில், கதைசொல்லிகள் தங்களைக் கதைவிமர்சகர்களாகக் கொள்ள வேண்டும்.

இராஜகோபால் வெண்முரசின் முதற்கனலை விமர்சனம் செய்தார்; கதையாடலாக எடுத்து வரவில்லை. அருண்மொழி நங்கை அக்காவும்(வெண்முரசு அறிமுக உரைகளில்) வெண்முரசு நாவல்களின் கதைகளைச் சொல்லவில்லை; அவற்றைக் குறித்த விமர்சனங்கள் அல்லது தனது அனுபவங்களையே பகிர்ந்து கொண்டார்.

ஒரு படைப்பின் புராணத்தன்மை வழியாக காப்பியத்தன்மையை வந்தடையும் ஒருவன், அப்படைப்பை ஒருமுறை வாசிப்பதோடு நிற்க மாட்டான். வாய்ப்பு அமையும்போதெல்லாம் வாசிப்பான். ஒவ்வொரு வாசிப்பின்போதும் அவனில் படைப்பின் புதிர்த்தன்மை மேலும் ஒளிர்ந்தது என்றால் அது செம்படைப்பு; அவ்வாசிப்பு நல்வாசிப்பு. அது நாட்டார் அல்லது செவ்வியல் என எவ்வடிவில் இருந்தாலும் படைப்பின் ஆன்மாவே அதன் சாரம்.

படைப்பிலக்கியத்தை நவீன ஆய்வுப்புலத்தில் கோட்பாடுகளாக்கிக் கூறுபோடும் கசாப்புகடைக்காரர்கள் மிகுந்திருக்கும் காலம் இது. இலக்கியம் சமூகத்துக்காகவே என்று சொல்லிக்கொள்ளும் கோட்பாட்டாளர்களே பெரும்பாலும் கதைசொல்லிகளாக நம்மிடம் வருகிறார்கள். ஒரு வாசகன் வெகு கவனத்தோடு இருக்க வேண்டிய இடம் இது. இலக்கியம் சமூகத்துக்காக இல்லையா என வினவினால்.. சமூகத்துக்காகவும்தான், அதற்காக சமூகத்துக்காக மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கோட்பாட்டாளர்கள் சமூகத்தை வரையரைகளால் சுருக்கி தனிமனிதனை அழுத்தத்தில் தள்ள, படைப்பாளர்களோ சமூகத்தின் பன்முக விசாலத்தை அவனுக்கு அறிமுகப்படுத்துகின்றனர்.

பலமாய்ச் சொல்கிறேன், வாசகர்கள் வெகுகவனமாக இருக்க வேண்டிய சமயம் இது. சமூக ஊடகங்கள் மிகுந்திருக்கும் சூழலில் கதைசொல்லிகள் பெருகி இருக்கின்றனர். ஒரு கதையை ஒரேவித புராணத்தன்மையோடு பல கதைசொல்லிகளும் சொல்லும்போது அக்கதை உயிர்ப்பற்று விடுகிறது. வாசகனுக்கு அதன் எலும்புக்கூட்டின் அறிமுகம் மட்டுமே வாய்க்கிறது. அதனால்தான் சொல்கிறேன், வாசகர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2021 11:30

August 23, 2021

விஷ்ணுபுரம் விருது, விக்ரமாதித்யனுக்கு.

2021 ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. நம்பிராஜன் என்னும் பெயர்கொண்ட விக்ரமாதித்யன் எனக்கு 1986 ஆம் ஆண்டு முதல் அறிமுகம். முப்பத்தைந்தாண்டுகளாக. 1986ல் அவரைப் பற்றி நான் ஒரு ரசனைக்குறிப்பு எழுதினேன். அப்போது பயணத்தில் இருந்த அவர் காசர்கோடு வந்து என்னுடன் சிலநாட்கள் தங்கியிருந்தார்.

விக்ரமாதித்யனின் தனிவாழ்க்கைப் பயணங்கள் நானறியாத திசைவழிகள் கொண்டவை. ஆகவே அவருடன் கவிதைவழியாகவே அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தேன். முப்பத்தைந்தாண்டுகளில் அவரைப் பற்றி எழுதிக்கொண்டே இருந்திருக்கிறேன். அனேகமாக எல்லா நூல்களுக்கும் திறனாய்வு எழுதியிருக்கிறேன். முழுமையான மதிப்பீட்டுக் கட்டுரையும் எழுதியிருக்கிறேன். அவர் என் உள்ளத்திற்கு என்றும் இனிய கவிஞர். என்னுடன் இந்த ஆண்டுகளிலெல்லாம் ஊடாடிக்கொண்டே இருந்தவர்.

விக்கி அண்ணாச்சிக்கு இவ்விருதை வழங்குவதில் பெருமை கொள்கிறோம்

ஜெயமோகன்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்

விக்ரமாதித்யன் விக்கி பதிவு

விக்ரமாதித்யன் கவிதைகள் சில

விக்ரமாதித்யன் நூல்கள்

விக்ரமாதித்யன் இணையப்பக்கம்

தட்சிணாமூர்த்தியும் கருப்பசாமியும்

நம்பியின் சொல்

விக்ரமாதித்தன் அமேஸானில்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2021 20:49

அறிவியல்புனைகதைகளின் உண்மை

விசும்பு அறிவியல் சிறுகதைகள் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

‘விசும்பு’ தொகுப்பு வாசித்தேன். அதி அற்புதம். இதற்கு மேலான வாரத்தைகளில், விமர்சன ரீதியாகவவோ இல்லை விளக்க ரீதியாகவோ என்னால் சொல்ல முடியாது, சொல்ல தெரியாது.

ஆனால் இளம் வாசகன் என்ற முறையில் விசும்பு தொகுப்பை  வாசிக்கும் போது சிறு குழப்பம் அடைந்தேன். என்னவென்றால்  கற்பனையும் யதார்த்தமும் கலக்கும் இடம் அளிக்கும் குழப்பம். உதாரணத்திற்கு முதல் கதையான ஐந்தாவது மருந்து என்ற கதையில் நீங்கள் சித்த மருந்துகளை பற்றியும் , சித்த முறைகளை பற்றியும் விரிவாக எழுதியிருப்பது, பாதி கற்பனை பாதி யதார்த்தம். ஆனால் முதல் தவணை வாசித்ததும் , நான் இந்த கதையில் சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் நிஜமாகவே நடைமுறையில் இருந்தது இல்லை இருப்பது என்றே மனதில் பதித்து கொண்டேன்.

பின்பு ஒருமுறை உங்களது தீவிர வாசகன் ஒருவரிடம் இக்கதைகளை பற்றி விவாதித்து கொண்டு இருக்கும் போது தான் தெரிந்தது , இதில் பாதியும் கற்பனையாக ஜோடிக்கப்பட்டிருக்கிறது என்று. சற்று அதிரவே செய்தேன். இந்த குழப்பம் உங்களது மற்ற புத்தகங்களில் உள்ள கதைகளில் வரவில்லை. காரணம் விசும்பில் உள்ள அனைத்து கதைகளும் அறிவியல் கதை என்பது மட்டுமல்லாமல் நமது கலாச்சார சூழலில் நடக்கும் கதை என்பதால் என் மனம் conscious ஆக அதை அவதானித்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

இந்த குழப்பம் நான் இளம் வாசகன் என்ற முறையில் நான் அடைந்ததா? இல்லை நீங்கள் இந்த அறிவியல் கதைகளை நாம் இது வரை வாசித்து வந்த அறிவியல் கதைகளில் இருந்து பெரிதும் மாறுப்பட்டு நமக்கு பரிச்சயமான இந்திய , தமிழ் சூழலில் இக்கதைகளை Place செய்ததா? நன்றி ஜெ, உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தருண் வாசுதேவ்

அன்புள்ள தருண்,

இலக்கியத்தில் உள்ள கற்பனை என்பது எப்போதுமே நீட்சிகொண்ட யதார்த்தம் [extended reality] தான்.  ஏனென்றால் யதார்த்தத்தில் மெய்வெளிப்பாடு [expressed truth] இல்லை. யதார்த்தத்தில் உண்மை உள்ளது. ஆனால் வேறு உண்மைகளுடன் கலந்து, மற்றவற்றால் மறைக்கப்பட்டு அமைந்துள்ளது. இலக்கியப்படைப்பு அவற்றில் ஓர் உண்மையை முன்வைக்க விரும்புகிறது. ஆகவே அது யதார்த்ததை சற்று நீட்டி ஆசிரியன் புனைவின்போது கண்டடைந்த உண்மை வரை கொண்டுசெல்கிறது.

இது நீங்கள் அன்றாடவாழ்க்கை என நினைக்கும் புனைவுகளுக்கும் பொருந்தும். அவையும் நேரடியாக யதார்த்தத்தைச் சொல்லவில்லை, யதார்த்தத்தை புனைவினூடாக வளர்த்திருக்கின்றன. மிகுபுனைவு [Fantasy] கதைகளும் அவ்வாறே. அறிவியல் புனைவு என்பது மிகப்பெரும்பாலும் மிகுபுனைவுதான். அவை உண்மையை புனைவினூடாகச் சென்றடைகின்றன.

அறிவியல்புனைவுக்குச் சில விதிகள் உள்ளன. ஐசக் அஸிமோவ் சொன்னவை இவை

ஒன்று, அறிவியல்புனைகதை அறிவியல் சார்ந்ததாக இருக்கவேண்டும். அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட விஷயத்தை அது சொல்லவேண்டியதில்லை. ஆனால் அறிவியல்பூர்வமாக ஊகிக்கத்தக்க ஒன்றை அது சொல்லவேண்டும். அந்த ஊகத்திற்கு ஓர் அறிவியல் சாத்தியக்கூறு இருக்கவேண்டும்

இரண்டு, அந்த அறிவியலடிப்படையை அது வாசகன் நம்பும்படி முன்வைக்கவேண்டும். அந்நம்பிக்கையே வாசகனை அறிவியல்சார்ந்த ஒரு களத்திற்குள் கொண்டுசெல்கிறது. அவ்வாறு நம்பவைப்பதற்கான எல்லா உண்மையான தரவுகளையும் தர்க்கங்களையும் அறிவியல்புனைகதை அளிக்கவேண்டும். அதாவது கூடுமானவரை உண்மையான அறிவியல்செய்திகளையும் அறிவியல்கொள்கைகளையும் சொல்லிச்சென்று அவற்றின்மேல்தான் தன் புனைவை அறிவியல்புனைகதை கட்டியெழுப்பியிருக்கவேண்டும்

மூன்று, அறிவியல்புனைகதை அறிவியலை முன்வைக்கவில்லை. அது முன்வைப்பது வாழ்க்கைச்சிக்கல்களையும் தத்துவ ஆன்மிக வினாக்களையும்தான். யதார்த்தப் புனைகதை யதார்த்தவாழ்க்கையைச் சொல்லி அந்த வாழ்க்கைச்சிக்கல்களையும் தத்துவ ஆன்மிக வினாக்களையும் முன்வைக்கிறது. வரலாற்றுப்புனைகதை வரலாற்றைச் சொல்லி அந்த வாழ்க்கைச்சிக்கல்களையும் தத்துவ ஆன்மிக வினாக்களையும் முன்வைக்கிறது.  அவ்வளவுதான் வேறுபாடு.

அதாவது அறிவியல்புனைகதையில் அறிவியல் என்பது குறியீடாக, படிமமாக, உருவகமாகவே கையாளப்படுகிறது. அவற்றை நேரடியான அறிவியல்செய்திகளாகவோ அறிவியல்கொள்கைகளாகவோ எடுத்துக்கொள்ளலாகாது.

இது செவ்வியல் அறிவியல்புனைகதைக்கான வரையறை. இன்றைய அறிவியல்புனைவுகள் இந்த எல்லையை கடந்துவிட்டன. வெறும் உணர்வுப்பதிவுகள், மொழிவிளையாடல்களாகவே வரும் அறிவியல்புனைகதைகளும் இன்று முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

விசும்பு கதையில் ஐந்தாவது மருந்து என்னும் கதையைப் பற்றிப் பேசுகிறீர்கள். அது வைரஸ்களின் உருமாற்றம் பற்றிப் பேசுகிறது. ஆனால் அது வைரஸ் பற்றிய செய்திகளை, கொள்கைகளைச் சொல்லும் கதை அல்ல. அது இயற்கையின் பேராற்றலுக்கும் மானுடனுக்குமான போரைச் சொல்லும் கதை. இயற்கையின் நுண்வடிவமாகவே வைரஸ் சொல்லப்படுகிறது. வைரஸுக்கு பதில் எதை வேண்டுமென்றாலும் அங்கே வைத்துக்கொள்ளலாம். கரையானாகக்கூட இருக்கலாம்.

அந்தக்கதையை நம்பகமாகச் சொல்லும்பொருட்டே சரியான ஆயுர்வேத-சித்தமருத்துவச் செய்திகள் கதையில் சொல்லப்படுகின்றன. அவற்றை இணைப்பது கற்பனை. முடிவை நோக்கிச் செல்வது புனைவு. அந்த முடிவுதான் கதையின் உண்மை, அதை நோக்கி அறிவியல் யதார்த்தம் இழுக்கப்பட்டுள்ளது

ஜெ

அறிவியல்புனைவு,நீளும் எல்லைகள்

அறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்- சுசித்ரா ராமச்சந்திரன்

அறிவியல் புனைகதைகள் பற்றி…

விசும்பின் மூன்று கதைகள்- கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2021 11:35

கேள்விகள், விடைகள்

அன்புள்ள ஜெ

நீங்கள் கேள்விகளுக்கு எழுதும் பதில்களில் ஒரு பேட்டர்ன் இருப்பதைப் பார்க்கிறேன். ஒரு வாசகர் வாழ்க்கையின் அடிப்படைச்சிக்கல், புதிர் பற்றிக் கேள்வி கேட்டால் அதற்கு விரிவான பதிலைச் சொல்கிறீர்கள். அந்த பதில் இரண்டு அடிப்படைகள் கொண்டதாக இருக்கிறது. ஒருபக்கம் அது மரபில் அந்த சிக்கல், கேள்வி எப்படி அணுகப்பட்டுள்ளது என்று பார்க்கிறது. இன்னொரு பக்கம் நீங்கள் உங்கள் அனுபவத்தில் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்று விளக்குகிறீர்கள்.

ஆனால் ஓர் எழுத்தாளர் அந்தக்கேள்வியை கேட்டிருந்தால் நீங்கள் சொல்லும் பதில் வேறாக இருக்கிறது. அந்தக்கேள்வி ஆத்மார்த்தமானதா அல்லது ஏதாவது பாவனையா என்று மட்டும் பார்க்கிறீர்கள். இலக்கியவாதி , தத்துவவாதி என்ற பாவனைகளைக் கடந்து அந்தப்பிரச்சினையை அவர் உண்மையாக எதிர்கொள்ளவேண்டும் என்கிறீர்கள். அதன்பின் அதை அவர் இலக்கியமாக ஆக்கவேண்டும் என்று மட்டுமே சொல்கிறீர்கள். எந்த பதிலையும் உண்மையில் சொல்லவில்லை. எழுதுவது மட்டுமே தீர்வு என்கிறீர்கள்.

சமீபத்தில் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு நீங்கள் எழுதிய ஆடை களைதல் என்னும் பதிலில் அதையே கண்டேன். என் நண்பர்களிடம் பேசும்போது நான் சொன்னேன். “ஜெமோ சொல்ற பதில் இதுதான். முடிஞ்சா எழுதிப்பாரு. லக் இருந்தா போய்ச்சேரு. இல்லேன்னா உன் தலைவிதி”

ஒரு பிரச்சினைக்கு இப்படி இரண்டு முகம் இருக்க முடியுமா? இரண்டு பதில்களைச் சொல்ல முடியுமா? தத்துவசிந்தனையாளர்களோ ஆன்மீகவாதிகளோ இப்படிச் சொல்வதுண்டா?

ஆர்.எம்.குமார்

***

அன்புள்ள குமார்,

நான் பெரும் கொந்தளிப்புகளுடன் நித்ய சைதன்ய யதியை தேடிச்சென்றேன். அவர் எனக்கு எந்த அறுதியான விடையையும் அளிக்கவில்லை. விடைகளை தேடுவதன் வழிமுறைகளைச் சொல்லித்தந்தார். சொல்லிக்கூட தரவில்லை, அவர் எப்படி சிந்திக்கிறார் என அருகிருந்து நோக்க அனுமதித்தார். நான் என் விடைகளை விஷ்ணுபுரம் முதல் வெண்முரசு வரை எழுதித்தான் அடைந்தேன்.

அதைத்தான் நான் இன்னொரு எழுத்தாளருக்குச் சொல்லமுடியும். ஓர் எழுத்தாளனிடம் அடிப்படை வினாக்கள் எழுவதென்பது அவன் எழுதுவதற்காகத்தான். அவன் எழுதுவதே அதன் தீர்வு. அவன் இன்னொருவரின் விடையை ஏற்று எழுதாமலானால் அவனுக்கோ மொழிக்கோ சிந்தனைக்கோ நன்மை இல்லை. அதை நான் சொல்லமுடியாது. ஒவ்வொரு எழுத்தாளனும் செல்லும் பாதை, அடையும் இடம் வேறுவேறானது. இந்த பன்மைத்தன்மையே இலக்கியம், தத்துவம் ஆகியவற்றால் முன்வைக்கப்படுவது.

ஆனால், இலக்கியவாதியோ தத்துவவாதியோ அல்லாத ஒருவர் அவ்வினாவைக் கேட்டால் அதற்கு இயன்றவரை தெளிவான விடையைச் சொல்வதே முறை. மரபு, தனியனுபவம் என இரு தளங்களில் இருந்தும் அவ்விடையைச் சொல்லுவதே என் வழக்கம்.

அப்போதுகூட அந்த விடையை அவர் அவ்வண்ணமே எடுத்துக்கொள்ளப்போவதில்லை. அவ்விடை அவர் அதுவரை வந்தடைந்த சிந்தனையின் தொடர்ச்சியாகச் சென்றடைகிறது. அங்கே அது பொருந்துமென்றால்தான் அவர் ஏற்றுக்கொள்வார். அவருடைய அனுபவதளத்தைக்கொண்டு அதைப் பரிசீலிப்பார். ஏற்க இயலுமென்றால் மட்டுமே ஏற்பார்.

நான் சொல்வது ‘உபதேசங்கள்’ அல்ல. சிந்தனைகள். அவை கேட்பவரின் சிந்தனைகளுடன் உரையாடுகின்றன. அவரை மேலும் சிந்திக்கச் செய்கின்றன. அச்சிந்தனைகளை தொகுத்துக்கொள்ளவும் தெளிவாக முன்னெடுக்கவும் உதவுகின்றன. உண்மையில் அவருக்கான விடை என்பது அவரே கண்டடைவதுதான்.

ஜெ

ஆடை களைதல் சதீஷ்குமார் சீனிவாசன் – உதிர்வதன் படிநிலைகள் இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன் பிறிதொன்று கூறல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2021 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.