Jeyamohan's Blog, page 927
August 28, 2021
வாசகர் செந்தில், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
செந்தில்குமாரின் பேட்டியும் அதைப்பற்றிய உங்கள் குறிப்பும் கண்டேன். அதைப்பற்றியே சிந்தனை செய்துகொண்டிருந்தேன். என் 26 வயதுவரை எனக்கு இலக்கிய அறிமுகமே இல்லை. என் குடும்பச்சூழலில் ராணிதான் வரும். அதைக்கூட நான் படித்தது இல்லை. நான் தமிழில் படிக்க ஆரம்பித்ததெல்லாம் கொஞ்சநாள் வட இந்தியாவுக்குச் சென்று தனிமையில் உழன்றபோதுதான். இணையத்தில் அங்கிங்காக வாசித்தேன். ஈழத்தமிழர் பற்றி நீங்கள் சொன்னதாக ஒரு அவதூறு கிளம்பியது. அப்போதுதான் உங்களைப்பற்றி அறிந்தேன். நான் உங்களுக்கு ஒரு வசைக்கடிதம் எழுதினேன். நீங்கள் பதில் சொல்லவில்லை.
அதன் பிறகு இணையத்தில் உங்களைப் பற்றி பலர் பொருமிப்பொருமி வசைபாடியிருப்பதை வாசித்தேன். எல்லாவற்றையும் நம்பி உங்களைப்பற்றி நானும் நிறைய நக்கல் நையாண்டி வசை எல்லாம் எழுதினேன். இப்போது அந்த அக்கவுண்ட் இல்லை. நான் முதலில் படித்த நாவல் இரவு. அதுவும் இணையத்தில் சும்மா கிடைத்தது. அதில் என்னுடைய தனிமையைப்பற்றிய சித்திரம் அப்படியே இருந்தது. அதிர்ச்சி ஆகிவிட்டேன். அரசியல் எல்லாம் ஒன்றுமே இல்லை, மனிதனின் வாழ்க்கையை இலக்கியம் பேசுகிறது, அதை அரசியல்வாதிகளால் புரிந்துகொள்ள முடியாது என்று உணர்ந்துகொண்டேன்.
அது ஒரு தொடக்கம். நான் இப்போது வெண்முரசு வாசிக்கிறேன். இந்த உலகம் எத்தனை நுட்பமானது என்று தெரிந்துகொள்கிறேன். இதிலுள்ள ஆழமும் அழகும் வெளியே வம்பு பேசுபவர்களுக்கு புரியாது என்பதும் புரிகிறது. இது என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிவிட்டது. இன்றைக்கு நான் தீவிரமானவனாகவும் நேர்நிலையான வாழ்க்கைப்பார்வை கொண்டவனாகவும் ஆக இலக்கியம் மிகப்பெரிய பங்கை ஆற்றியிருக்கிறது.
செந்திலைப்போலத்தான் நானும் சரஸ்வதி கடாட்சத்துக்கு வழிதவறி வந்து அடைந்தவன்தான். ஆனால் வழிதவறினாலும் வந்துவிட்டேன். வந்து சேரவிடாமல் தடுக்கும் காழ்ப்புகளும் சிறுமைகளும்தான் நம்மைச்சூழ்ந்து நிறைந்திருக்கின்றன. செந்தில்குமாரின் வாசிப்பும் அவருடைய கள்ளமில்லாத சிரிப்பும் மனசை நிறைக்கின்றன. இதெல்லாம் இங்கே நடந்துகொண்டிருக்கிறது என்பதே மிகப்பெரிய ஒரு வாக்குறுதி
த.அன்பரசு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
செந்தில்குமார் காணொளி பார்த்தேன். பெரும் மகிழ்வை தந்தது அவரின் பேச்சு. கனவில் இருப்பவரை போல மனதில் அவரின் வாசிப்பை மீள் மீள நிகழ்த்திக் கொண்டு பேசுகிறார், கள்ளமற்ற அவரின் கண்களின் பளிச்சிடல் காட்டுகிறது உங்கள் மீதான அவரின் தூய அன்பையும் பெருமதிப்பையும்.
வாசிப்பில் அவரின் அகமொழி மேம்பட்டிருப்பது ’’சங்கறுத்து ரத்தம் கொடுப்பேனென்றல்ல , ’குருதிப்பலி’ என்பதில் தெரிகிறது.. தொடர் வாசிப்பில் நம்மை அறியாமலேயே அகம் கூர் கொண்டு விடும் என்று சில வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்தீர்கள், அதுவே முன்னேறுதல் என்றும். இதோ செந்தில் வந்து நிற்கிறார்.
மிக எளிய குடும்பங்களை சேர்ந்த கிராமத்து மாணவர்கள் கற்கும் எங்கள் கல்லூரியில் முழுக்க ஆங்கிலத்தில் கற்றுக் கொடுத்தால் அவர்களுக்கு துவக்க காலங்களில் எதுவும் புரியாது என்பதால் முதல் இரண்டு வருடங்களில் முதலில் ஆங்கிலத்தில் சொன்ன அதே வரியை தமிழில் சொல்லி மேஜர் சுந்தரராஜன் போல கற்பிக்க வேண்டியிருக்கும். மரபியல் வகுப்புக்களில் ’’குருதி கலப்பு . கொடி வழி’’ என்றெல்லாம் பாடம் நடத்தினேன் என்பதை வகுப்பு முடித்து அறைக்கு திரும்புகையில் தான் எனக்கு நினைவுக்கு வரும்.
பொதுவாக புதிய வாசகர்கள் எழுதும் கடிதம் உங்கள் தளத்தில் வெளிவருகையில் எப்படியும் ஒரு துளி பொறாமை எனக்குள் வந்து விடும் அப்படி அல்லாது இவர் மீது பெரும் பிரியம் உண்டாகி இருக்கிறது. இவரைக் குறித்து நீங்கள் எழுதி இருக்கும் இன்றைய பதிவில் செந்தில் குமார் என்னும் பெயருக்குள்ளே லோகமாதேவி உள்ளிட்ட பல நூறு வாசகர்களின் பெயர்களும் கலந்திருக்கிறது.
சென்னைக்கு போனால் செந்தில் குமாரை பார்க்கனும் என்றல்ல, செந்தில்குமாரை பார்க்க வென்றே சென்னை செல்ல வெண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
அன்புடன்
லோகமாதேவி
சுரேஷ்பிரதீப் பேட்டி
அன்புள்ள ஜெ. வணக்கம்.
சமீபமாக எழுத்தாளர்களின் நேர்காணல்கள் சுருதி.டிவி சார்பாக பதிவு செய்து வருகிறோம். அதன் வரிசையில் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் நேர்காணல் சுட்டியினை இத்துடன் இணைத்துள்ளேன்.கேள்விகளை காளிப்பிரஸாத், சுனில் கிருஷ்ணன், அனோஜன் பாலகிருஷ்ணன் கேட்டுள்ளனர்.
கபிலன்
***
சுரேஷ் பிரதீப் – நேர்காணல்
அன்புள்ள கபிலன்
சுவாரசியமான பேட்டி. பொதுவாக தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் இளம்படைப்பாளிகளின் உரையாடலில் அவர்களின் வழிச்சிக்கல்களும், அதன் விளைவான தத்தளிப்புகளுமே இருக்கும், இருப்பதே சிறப்பு. அதை இங்கும் காண்கிறேன். எழுத்தினூடாக அவர் கடந்துசெல்லட்டும்
ஜெ
அம்பும் நிழலும்
வணக்கம் ஜெயமோகன் சார்,
வெண்முரசின் முதல் நான்கு நாவல்களை, நீலம் வரை வாசித்து முடித்துள்ளேன். நான் காணொலியில் பதிவேற்றுவதை, இரவில் கணவர் வந்ததும் அந்தப் பகுதிகளைப் பற்றி நான் புரிந்து கொண்ட விதங்களை அவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன். இன்று இரவிலும் நான்கு நாவல்களிலும் வரும் பெண்களின் கதாபாத்திரங்களைப் பற்றி கூறிக் கொண்டு இருந்தேன்.
இதில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும், ஆசைப்படும் வாழ்க்கையை இன்னொரு பெண் வாழ்ந்து விடுகிறாள் என்று தோன்றுகிறது. பிரதீபரின் மனைவி சுனந்தை , தன் இளமை முடிந்த பின்னரே திருமணம் செய்து கொள்கிறாள்.இளம் வயதில் அவள் ஆசைப்பட்ட எத்தனை ஆண்கள் இருந்திருப்பார்கள். ஆனால் அவள் வாழ்வில் அது கூடவில்லை. அதே சமயம் குந்தி அவளுக்கான முழு இளமையையும் அவள் விருப்படியே வாழ்ந்திருப்பாள்.
சத்யவதி, அம்பிகையை பார்த்து பொறாமைப் படும் கணம் ஒன்று உள்ளது. விசித்திரவீரியன் இறந்ததும் அம்பிகை கொள்ளும் பெருந்துயரம் , கண்ணீர் இவையெல்லாம் சத்யவதிக்கு நிகழ்ந்ததே இல்லை. சத்யவதி வாழ ஆசைப்படும் வாழ்க்கையை அம்பிகை வாழ்ந்திருப்பாள்.
அம்பிகை விசித்திரவீரியனுடன் இருக்கும் போது அவனுடைய உலகத்தில் அவனை நேசிக்க அவன் உலகிலேயே இருந்து விட எண்ணுவாள். ஆனால் அவளுக்கு அந்த வாழ்க்கை இருக்காது. காந்தாரி கணவனின் உலகத்தை தான் காண வேண்டும் என்று கண்களையே கட்டிக் கொண்டு வாழ்ந்தவள்.அம்பிகை வாழ ஆசைப்படும் வாழ்க்கையை காந்தாரி வாழ்ந்து விடுகிறாள். அம்பாலிகை ஆசைப்படுவது, விசித்திரவீரியனின் வெண்மை நிறத்துடன், அவனின் பலவீனங்களுடன் விளையாட்டு தோழியாக அவளுடன் அவனை ஏற்றுக் கொண்டு வாழ ஆசைப்படுகிறாள், ஆனால் அது நிறைவேறுவதில்லை.
மாத்ரி , பாண்டுவிடம் வாழும் வாழ்க்கை, அவனை முழுதாக ஏற்றுக் கொண்டு, நல்ல விளையாட்டு தோழியாகவும், அவன் அகத்தை பகிர்ந்து கொள்பவளாகவும், இருந்து அவன் இறந்த உடன், அவள் வாழ்வையும் முடித்துக் கொள்கிறாள்.அம்பாலிகையின் வாழ்க்கையை மாத்ரி வாழ்ந்து விடுகிறாள். சத்யவதி, அவள் மகன் சித்ராங்கதனைப் பார்ப்பதும், குந்தி அர்ஜுனனை பார்ப்பதும் அவர்களின் ஆசை நிறைவேறுவதில்லை, நெறி ஒப்புதலும் இல்லை. ஆனால் ராதை, கண்ணனை குழந்தையாக வளர்க்கிறாள், குழந்தையாக கண்ட அதே விழிகளால் காதலனாகவும் காண்கிறாள். குந்தியும் , சத்யவதியும் ஆசைப்படும் வாழ்க்கையை, ராதை வாழ்ந்து விடுகிறாள்.
இதை நான் என் கணவரிடம் சொன்னபோது , ஏன் பெண்களை மட்டுமே பார்க்கிறாய்? ஒரு ஆண் வாழ ஆசைப்படும் வாழ்க்கையை இன்னொரு ஆண் வாழ்ந்திருப்பான் என்றார்.
பீமன் வாழ ஆசைப்படும் வாழ்க்கையை துரியோதனன் வாழ்ந்து கொண்டிருப்பான். பீமனுக்கு கெளரவர்களின் மந்தைகளில் கலந்து விட ஆசை, தலைமைப் பொறுப்பை ஏற்கவும், அவனுடன் அவன் தம்பிகள் உடன் இருக்கவும் ஆசை. அவனை மட்டுமே நேசிக்கும் மனைவி, அவன் பாஞ்சாலியின் அன்பை முழுதும் பெற முடிவதில்லை. ஆனால் துரியோதனனுக்கோ, தம்பிகளின் கூட்டம், அவனையே நேசிக்கும் மனைவி. பீமன் வாழ ஆசைப்படும் வாழ்க்கையை துரியோதனன் வாழ்ந்து விடுகிறான்.
சகுனியோ, செல்வம் கொழிக்கும் நாடு, நல்ல மதியூகி வீரனும் கூட, நாட்டை விரிவாக்கி , நல்ல மாமனாக இருந்து தன் சகோதரியின் மகன்களுக்கு பாரதவர்ஷத்தின் அரசனாக முடிசூட்ட ஆசைப்படுகிறான். ஆனால் சகுனி வாழ ஆசைப்படும் வாழ்க்கையை கிருஷ்ணன் வாழ்ந்து விடுகிறான். யாதவர்களின் பேரரசை நிறுவுகிறான். அத்தையின் மகன்களை பாரதவர்ஷத்தின் அரசனாக முடிசூட்டுகிறான்.
இப்படியாக வெண்முரசில் ஒருவர் வாழ ஆசைப்படும் வாழ்க்கையை இன்னொருவர் வாழ்ந்து முடிக்கும் படியாகவே கதை நகர்கிறது. தங்களின் ஒரு கதையில் வரும் வாக்கியம் தான் நினைவிற்கு வருகிறது. அம்பு நேர்கோட்டில் பயணித்து இலக்கை அடைகிறது, அதன் நிழல் காடு மேடு நதிகளிலும் விழுந்து அம்பு அடையும் இலக்கை தானும் அடைகிறது என்று.
அன்புடன்,
மனோபாரதி விக்னேஷ்வர்.
August 27, 2021
ஈழ அகதிகளுக்குச் சலுகைகள் – நன்றி
தேசமற்றவர்கள்
இவ்வரிகளை எழுதிய சிலநாட்களிலேயே இந்த சட்டமன்றத்திலேயே அறிவிப்பு வெளிவரும் என எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே எதிர்பார்த்திருந்தேன். இந்த அறிவிப்பு நிறைவளிக்கிறது. இது தமிழகத்தின் கடமை. நெடுநாட்கள் புறக்கணிக்கப்பட்ட மக்களின் துயரை செவிகொள்ளும் அரசு அமைந்திருப்பது நல்லூழ்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் அமைச்சரவைக்கும் அதிகாரிகளுக்கும் குடிமகனாக நன்றி, வணக்கம்.
ஆரம்பக்கல்விக்காக ஓர் இயக்கம், நன்றியும் வணக்கமும்புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-4
மலர்வதி, போகநந்தீஸ்வர ஆலய கோபுரமுகப்பு
புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-1
புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-2
புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-3
முதல்நாள் பயணத்தில் சென்ற ஓர் இடத்தைப் பற்றி எழுத விட்டுப்போய்விட்டது. அது இரண்டாம்நாள் என்ற மனப்பதிவு உருவாகியிருந்தது. கோலாரில் அவனி அருகே உள்ள அந்தர கங்கே என்னும் இடம். இது சதசிருங்கம் என்னும் மலையில் உள்ளது. மகாபாரதத்தில் வரும் சதசிருங்கம் குந்தி பாண்டுவுடன் சென்று தங்கிய இடம். அந்நினைவாக இப்பெயர் போடப்பட்டிருக்கலாம். ஆனால் இது ஒரு சிறிய மலை. பெரும்பாலும் ஓங்கிய கருங்கற் பாறைகளாலானது.
இந்த மலைக்குமேல் இயற்கையான குகைகள் சில உள்ளன. அங்கே செல்ல இடுங்கலான பாதைவழியாக ஏறிச்செல்லவேண்டும். மழையில்லாதபோதுதான் அதற்கு வாய்ப்பு. காட்டுக்குள் செல்ல அனுமதியும் பெறவேண்டும். எங்கள் திட்டத்தில் அந்த இடம் இல்லை. விடுதிக்கு ஆறரைக்கே சென்றுவிட்டோம். ஆகவே சென்றுவரலாமே என முடிவெடுத்தோம். இரவு எட்டுமணிவரை திறந்திருக்கும் என்றனர்.
அந்தரகங்கேயை நாங்கள் அடைந்தபோதே ஏழு ஐம்பது. பத்து நிமிடத்தில் என்ன செய்யமுடியும் என்று தோன்றியது. ஆனால் உங்கள் சௌகரியப்படி பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு காவலர் சென்றுவிட்டனர். மேலே குகைகளுக்குக் கூட சென்றிருக்கலாம் – பத்திரமாகத் திரும்பி வருவதைப்பற்றி கற்பனை செய்யாமலிருந்தால்.
அந்தரகங்கை என்று பெயர் இருந்தாலும் இங்கே ஆறு ஏதும் இல்லை. இங்கிருக்கும் ஓர் ஊற்றுக்கு அந்தப்பெயர். இது வெறும் ஊற்று, ஆகவே ஆழத்து கங்கை. [தமிழில் நாம் அந்தர என்பதை வானில் என்னும் பொருளில் பயன்படுத்துகிறோம்] இங்குள்ள ஆலயம் காசிவிஸ்வநாதருக்குரியது. நாங்கள் செல்லும்போதே அதை மூடிவிட்டார்கள். நீர் வெளிவரும் பகுதியே ஒரு சிறு ஆலயம்போலத்தான் இருந்தது. மின்விளக்குகள் போட்டிருந்தனர்.
அகலமான படிகள் வழியாக மேலேறிச்சென்றோம். மயில்கள் இருளுக்குள் இருந்து அகவிக்கொண்டே இருந்தன. சீவிடுகளின் ரீங்காரம். எங்களைத்தவிர மேலே எவருமில்லை. கோயிலை மூடிவிட்டிருந்தனர். குளம் இருந்தது. ஓர் நந்தியின் வாய் வழியாக ஊற்றுநீர் குளத்திற்குள் கொட்டிக்கொண்டிருந்தது.
அந்த இடம் தலைக்காவேரி, மகாபலேஸ்வர் போன்ற இடங்களை நினைவூட்டியது. பாசிபிடித்த நீரின் மணம். இலைகளின் சலசலப்பு. காட்டின் குளிர். அதன் படிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஊரடங்கு காரணமாக அங்கே அதிகம்பேர் வருவதில்லை என நினைக்கிறேன். படிகள் முழுக்க சிறிய அட்டைகள் குவியல்களாக நெளிந்துகொண்டிருந்தன.
இரண்டாம்நாள் தங்குவதற்கு கிருஷ்ணன் கொஞ்சம் தாராளமாகவே செலவுசெய்து இடம்போட்டிருந்தார் நந்திஹில் பகுதியில் ஒரு ‘லக்சுரி ரிசார்ட்’ அவருடைய உள்ளம் போலவே அமைந்தது. அந்த விடுதியை திறந்தே இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும்போல. புழுதி அழுக்கு. மழைவேறு கொட்டிக்கொண்டிருந்தது. அங்கே ஒரே ஒரு வரவேற்புப்பெண்மணி. அவருக்கு ஒன்றுமே தெரியாது.
சரி, வேறு அறைகள் தேடுவோம் என ஒரு கும்பல் கிளம்பிச் சென்றது. அதைவிட மோசமான அறைகள் அதைவிட கூடுதலான விலைக்கு கிடைத்தன. ஆனால் இங்கே அத்தனை பேருக்கும் தங்க இடமில்லை என்பதனால் அவற்றையும் போடவேண்டியிருந்தது. நந்திஹில்ஸ் ஒருகாலத்தில் பெங்களூரின் படுக்கையறை என்பார்கள். கொரோனா காலகட்டத்தால் அப்படியே நமுத்து தரையோடு ஒட்டிக்கிடந்தது.
மதிய உணவை மாலையில் சாப்பிட்டுவிட்டு நந்திஹில் மலைக்கு அருகே இருக்கும் சிக்கபெல்லாபூர் போகநந்தீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றோம். கர்நாடகத்தின் மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்று இது. கர்நாடகத்தின் தொன்மையான ஆலயங்களில் ஒன்றும்கூட. நுளம்பர்களால் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டது இதன் முதல் கட்டுமானம். இங்கே நுளம்பமன்னர் நுளம்பாதிராரஜனின் கல்வெட்டு உள்ளது.
பின்னர் ராஷ்ட்ரகூட சக்கரவர்த்தி மூன்றாம் கோவிந்தனின் கல்வெட்டும் பாண பேரரசின் ஆட்சியாளர் ஜயதேஜர், தைத்தியர் ஆகியோரின் கல்வெட்டுகளும் உள்ளன. இங்குள்ள கல்வெட்டுகளைப் பற்றியே விரிவான ஆய்வுநூல்கள் வெளிவந்துள்ளன. பிற்காலத்தில் கங்கர்களும் ஹொய்சாலர்களும் இந்த ஆலயத்தை விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். கடைசியாக மைசூர் அரசர்களின் முக்கியமான வழிபாட்டிடமாக நீடித்தது
தமிழகத்திற்கு இந்த ஆலயம் மிகமுக்கியமானது. நுளம்பர்களை வென்ற ராஜராஜ சோழன் இந்த ஆலயத்தை பழுதுநோக்கி கொடையளித்து பேணினார். ராஜேந்திரசோழனின் முக்கியமான கல்வெட்டுகள் பல இங்குள்ள தூண்களில் காணப்படுகின்றன. வட்டெழுத்திலும், ஆரம்பகாலத் தமிழ் எழுத்துக்களிலும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
மிகப்பெரிய ஆலயம், உண்மையில் ஆலயவளாகம் என்று சொல்லவேண்டும். இந்த ஆலயத்தின் முகப்பிலுள்ள மிகப்பெரிய பிராகார வளைவு போல நான் எங்குமே கண்டதில்லை. கல்மண்டபங்களால் ஆன திறந்த பிராகாரங்களுக்கு நடுவே பத்தாயிரம்பேர் நிற்குமளவுக்கு பெரிய முற்றம். மண்டபங்களில் சாதாரணமாக இரண்டாயிரம்பேர் தங்கலாம். முன்பு மிகப்பெரிய விழாக்கள் இங்கே நடந்திருக்கவேண்டும்.
இந்த ஆலயம் ‘இரட்டைக்கோயில்’ என்று சொல்லத்தக்கது. வெளியே அறிவிப்புப் பலகையே போக-யோக நந்தீஸ்ரவர் ஆலயம் என்றுதான் சொல்கிறது. ஒரு கருவறையின் தெய்வம் அருணாச்சலேஸ்வரர் என்றும் இன்னொன்று போகநந்தீஸ்வரர் என்றும் வரலாறு சொல்கிறது. இந்த ஆலயமே ஒரு புதிர்வழிப்பாதை போல தோன்றியது. ஒரே இடத்துக்கு திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகத்தை உருவாக்கியது.
தலக்காட்டு கங்கர்களால் அருணாச்சலேஸ்வர் கருவறை கட்டப்பட்டது. போகநந்தீஸ்வரர் கருவறை சோழர்களால். அங்குள்ள ஒரு சிற்பம் ராஜேந்திரசோழனுடையது என்று முன்பு சொல்லப்பட்டது. ஆனால் ஆய்வாளர்களால் ஏற்கப்படவில்லை.
ஆடவல்லான், ஓருருஇங்குள்ள கட்டிடம் அமைப்பு தமிழகத்தின் ஏதோ பேராலயத்தில் நின்றிருக்கும் எண்ணத்தை உருவாக்கியபடியே இருந்தது. கல்முளைத்து எழுந்து சூழ்ந்து ஓங்கி பெருகியதுபோல. மணற்கல்லில் செதுக்கப்பட்ட தூண்கள் இலைதெரியாமல் பூத்த மலைமரங்கள் போல அணிகள் கொண்டவை. சிற்பங்களை முழுமையாகப் பார்த்து முடிக்க பலநாட்களாகலாம்.
இரு கருவறைகள் கொண்ட இரண்டு பெருங்கோயில்கள். நடுவே ஒரு சிறுகோயில் சோமேஸ்வருக்கு. உள்ளே கருவறையில் எழுந்த பெரிய சிவலிங்கம். சிற்பங்களும் செதுக்கணிகளும் செறிந்த கல்யாணமண்டபத்தில் உமாமகேஸ்வரர் சிலை அமைந்திருந்தது.
பிறிதொரு உருசைவ ஆலயமாக இருந்தாலும் சுற்றுச்சுவர்களிலும் கோபுரத்திலும் விஷ்ணுவின் சிலைகளும் இருந்தன. சிறிய அளவுகொண்டவை என்றாலும் அகோர நரசிம்மர் சிலைகளும், கரியுரித்தபெருமான் சிலைகளும், பிட்சாடனர் சிலைகளும் மகிஷாசுரமர்த்தனி சிலைகளும் மிக அழகானவை. சிதைவிலாது நேர்த்தியாகவும் இருந்தன.
பிற்காலச் சிலைகளில் ஹொய்சாளச் சிற்பங்களுக்குரிய இடையணியாகிய சல்லடமும், பல அடுக்கு கொண்ட மணிமுடிகளும் தெரிந்தன. பேரரசுகள் ஒருவரோடொருவர் போரிட்டு வென்றுகொண்டிருக்க கலையும் மதமும் இணைந்து இணைந்து ஒற்றைப்பெருக்காக வளர்ந்துகொண்டிருப்பதை நாம் வரலாற்றில் காணலாம். அதற்கு கண்கூடான உதாரணம் இந்தப்பேராலயம்.
கல்தூண்களிலும் அடித்தளங்களிலும் உள்ள கல்வெட்டுகளுக்கு கூடுலதாக கல்வெட்டுப்பலகைகளும் இங்கே உள்ளன. இந்த ஒரே ஆலயத்திலேயே நுளம்பர், கங்கர்,ஹொய்ச்சாலர், ராஷ்ட்ரகூடர், சோழர், நாயக்கர் காலத்துக் கலையின் பங்களிப்பு உள்ளது. ஆனால் கோகன் சொல்வதுபோல கலையை அரசர்களுடன், பேரரசுகளுடன் இணைக்கவேண்டியதில்லை. நுளம்பர்கலை என்பது இந்நிலப்பகுதியில் இருந்த ஒரு கலைப்பாணி. அதில் பிற நிலத்துக் கலைப்பாணிகள் அவ்வப்போது வந்து கலந்திருக்கின்றன, அவ்வளவுதான்.
கீழே நின்று ஆடவல்லான் சிலைகளை ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டிருந்தேன். நரசிம்மர் சிலையில் இருந்த உக்கிரம். மயிடனின் உடல் மேல் எழுந்த அன்னையின் வெறிநடனம். இச்சிலைகளை விழிகளால் பருகி எவருக்கும் விடாய் தீரப்போவதில்லை.
இங்கே வியப்புக்குரியவை சாளரங்கள். கலை ஆய்வாளர்கள் அவற்றைப் பற்றி நிறையவே எழுதியிருந்தனர். சிற்பங்களின் கைகள் கால்களுக்கு நடுவே துளைகள் இருந்தன. மறுபக்கம் அவை சாளரங்களாக திறந்திருந்தன. நாகங்கள் பின்னி அமைந்ததுபோல கல்லில் செதுக்கப்பட்ட சாளரங்கள், மலர்ச்சாளரங்கள், பூதங்களின் நடனமே பலகணியென்றானவை.
நுளம்ப கலைவிமர்சகரான ஆண்ட்ரூ கோகென் இந்த இரண்டு ஆலயங்களில் அருணாச்சலேஸ்வர ஆலயம் இடிந்து விழுந்து கிடந்தது என்றும், பிற்காலத்தில் விஜயநகர ஆட்சியாளர்களால் அது எடுத்துக்கட்டப்பட்டது என்றும், இடியாத ஆலயத்தின் அதே வடிவில் அதே சிலைகளுடன் அதை அப்படியே கட்டினார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.
ஆடிப்பிம்பம் போலிருந்த இரு ஆலயங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது உற்சாகமான ஒரு விளையாட்டாக இருந்தது. சிறிய வேறுபாடு இருப்பதுபோலவும் அது வெறும் கண்மயக்கு என்றும் தோன்றிக் கொண்டிருந்தது. ஒரு சிலையை அப்படியே எப்படி திரும்பச் செய்ய முடியும்? ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கும். அச்சிலையென எழுவது தன்னை மீண்டும் அப்படியே பிறப்பிக்குமா என்ன?
பிரம்மாண்டமான கோயில் வளாகத்தில் தாயார் சன்னதிகள் இரண்டு இருந்தன. சிற்பங்கள் செறிந்த தூண்கள் கொண்ட மண்டபங்கள். ஓங்கிய கல்கொடிமரம். அந்தியாகிக் கொண்டிருந்தது. அந்திவேளையில் கற்பரப்புகள் வண்ணம் மயங்கி குழைவுறத் தொடங்குகின்றன. கற்சிற்பங்கள் திரைச்சீலை ஓவியங்கள் போல நெகிழ்வு கொள்கின்றன. அந்தியில் ஆலயங்களில் இருப்பதுபோல் இனிது ஒன்றுமில்லை.
விடுதிக்கு திரும்பி வந்தோம். மறுநாள் செல்வேந்திரனின் நாற்பதாவது பிறந்தநாள். நான் களைப்பால் படுத்து உடனே தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் நந்திஹில் மலைமேல் ஒரு சிறிய மலையேற்றம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மலையேற அனுமதி இல்லை என்று சொல்லியிருந்தனர். மீண்டும் ஒருமுறை போகநந்தீஸ்வரர் ஆலயத்தைப் பார்த்துவிட்டு திரும்புவது கடைசியாக எஞ்சிய திட்டம்.
காலையில் இரவில் நடந்தவற்றைச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். சக்தி கிருஷ்ணன் தலைமையில் ஒரு கும்பல் கிளம்பிச் சென்று கதிர்முருகன், நாமக்கல் வரதராஜன், சுபஸ்ரீ, நிகிதா உள்ளிட்டவர்களை உசுப்பி எழுப்பி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நந்திஹில் உச்சியில் செல்வேந்திரனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதாகச் சொல்லி கார்களில் அழைத்துச் சென்றிருக்கிறது.
இரவில் மூன்றுமணிநேரம் விதவிதமாக கதை சொல்லி ஏமாற்றி, வழிகண்டுபிடிப்பதுபோல பாவனை செய்து, நந்திஹில்லையே சுற்றி வந்திருக்கிறார் சக்தி கிருஷ்ணன். திடீர் திருப்பங்கள். திடீர் குழப்பங்கள். சிலர் உண்மையிலேயே வழிதவறிவிட்டதாக நம்பியிருக்கிறார்கள்.
நடுவே கார்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. வழியில் அரைப்போதையில் இருந்த ஒருவரிடம் வழிகாட்டுவதாக கூட்டிக்கொண்டு சுற்றிவந்திருக்கிறார்கள். பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளும்படி அதன்பின் சொல்லியிருக்கிறார் சக்தி கிருஷ்ணன். அவரும் என்ன ஏதென்று அறியாமல் இரவெல்லாம் அப்பகுதியை சுற்றிவந்திருக்கிறார்.
களைத்துச் சலித்து பாதிப்பேர் கோபம் அடைந்து அவரவர் அறைகளில் சென்று கதவை மூடிய பின் மீண்டும் தட்டி எழுப்பி பிறந்தநாள் கொண்டாட்டம் என்று சொல்லி ஒரே ஒரு சாக்லேட்பட்டையை வெட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். அதை 21 துண்டு போட்டு பகிர்ந்து ஊட்டியிருக்கிறார்கள். கேலிக்கூத்தாக ஆரம்பித்தால் சக்தி கிருஷ்ணன் அதன் உச்சத்துக்கே சென்றுவிடுவார்.
காலையில் செல்வேந்திரன் புதுவேட்டி, புதுசட்டை, துண்டு அணிந்து மாப்பிள்ளை போல வந்தார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னேன். காலையில் ஒரே ஒரு டீக்கடையில் நல்ல காபி கிடைத்தது. நந்திஹில் திறக்கப்படாது என்ற செய்தி தெரியாமல் வந்த இளைஞர்களும் இளைஞிகளும் அங்கே கூடி காபிசாப்பிட்டு சலம்பிக்கொண்டிருந்தனர்.
போகநந்தீஸ்வர ஆலயத்துக்குள் ஒரு பெரிய குளம் இருக்கிறது, அது ஒரு ‘காதல்போட்டோ’ எடுக்கும் மையம் என்றனர். அதை நாங்கள் பார்க்கவில்லை. ஆகவே மீண்டும் உள்ளே சென்றோம். கோயிலை ஒட்டி ஒரு அலங்கார மண்டபமும் அதைச்சுற்றி ஒரு வளைப்பும். அதற்கு அப்பால் இருந்தது குளம்.
ஆனால் குளத்தை பூட்டிவிட்டனர். காதலர்களை கட்டுப்படுத்த முடியவில்லையாம். காவலரிடம் கெஞ்சியபோது ஐந்துபேரை மட்டும் உள்ளே சென்று பார்க்க அனுமதித்தார். புகைப்படம் எடுத்துவிட்டு வந்தனர். மிகப்பெரிய சுற்றுப்படிக்கட்டுகளுடன் பிரம்மாண்டமாக இருந்தது.
இளமழை பெய்துகொண்டிருந்தது. அப்படியே பெங்களூருக்குத் திரும்புவதாக திட்டம். மழைக்குள் காரை ஓட்டிச்சென்றோம். வழியில் ஓர் ஏரி. அதன்மேல் மழை திரை என நின்றிருந்தது. இறங்கி நீர்மேல் அறையும் நீர்விரிவை பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம்
மாலை எனக்கு ஓசூரிலிருந்து நாகர்கோயிலுக்கு ரயில். நான்கு மணிக்கே ஓசூர் வந்துவிட்டேன். ஆறுமணிக்கு ரயில் வந்தது. எல்லா பயணங்களிலும் திரும்பும்போது பயணத்தின் காட்சிகள் ஒன்றாகக் கலந்துவிடுவது வழக்கம். சரடு பிரித்து எடுக்க முயலும்போதே தூக்கம் வந்துவிடும்.
புதிர்ப்பாதைகளில் தொடங்கி ஆறு பேரரசுகள் வழியாக சென்று முடிந்த பயணம். நுளம்பர், சோழர், கங்கர், ஹொய்சாலர், ராஷ்டிரகூடர் நாயக்கர்கள். அவர்களின் கலைத்தடையங்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன. வென்றனர், வீழ்ந்தனர். வரலாற்றை ஒரு புதிர்ப்பாதையாக ஒருகணம் உணர்ந்தேன்
[நிறைவு]
நீலஜாடி
நான் மொழிபெயர்க்கலாம் என்று நினைத்ததும் முதலில் நினைவிற்கு வந்தது ஐசக் டெனிசன் எழுதிய “தீ ப்ளூ ஜார்” என்னும் இந்த கதைதான். இந்த ஒரு கதையிலேயே அவர் எனக்கு பிடித்தமான எழுத்தாளராகி இருந்தார். மாய யதார்த்த கதை பாணியில் அமைந்த இந்த fairy-tale கதையை மொழிபெயர்த்ததும் கதையோடு நான் ஒன்றிவிட்டதை உணர்ந்தேன். 1995 மே மாதம் சுபமங்களா இதழில் “நீல ஜாடி” என இந்த சிறுகதை பிரசுரம் கண்டது.
செல்வேந்திரன் பேட்டி
செல்வேந்திரன் ஊடகத்தில் விற்பனைத்துறையில் இருந்ததுவரை அவருக்கு ஓர் எல்லை, ஒரு கடிவாளம் இருந்தது. இப்போது முழு விடுதலை என நினைக்கிறேன். கட்டுரைநூல்கள் எழுதுகிறார். மேடைகளில் பேசுகிறார். பேட்டிகள் அளிக்கிறார். திடமான குரலும் தன்னம்பிக்கையும் அமைந்திருக்கிறது.
விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது, கடிதங்கள் -3
கவிதை எந்த அற்புதத்தையும் நிகழ்த்துவதில்லை.
ஏற்கெனவே நிகழ்ந்துகொண்டிருக்கும்
ஒரு பெரிய அற்புதத்தைக்
கைசூண்டிக் காண்பிக்கிறது
– போகன்
***
அன்பு ஜெ,
கவிஞனுக்கு இவ்விருது வரும் போது சற்று கூடுதல் உற்சாகம் வரும், அதிலும் நம்பி அண்ணாவிற்கு என படித்தவுடன் சில்லென்று உயர பறந்தது ஒரு குருவி.
புதுமைப்பித்தன் பதிப்பக்கம் வெளியிட்ட “விக்ரமாதித்யன் கவிதைகள்” நியூ புக்லேண்டில் 2000 சமயங்களில் வாங்கி படித்தது. அவரின் முகம் அட்டை முழுதும். படித்த பின் மனதிலும்..
வாழ்வின் அலைக்கழிப்புகளில் ஒடுங்கி ஒதுங்கி தொலைந்து விடாமல் எப்போதும் சஞ்சாரத்தில் என ஒரு பேய்க் கவிஞன். அர்த்தமில்லா போக்கையே ஊழ் தன் விதி என கொண்டு செல்லும் பாதைகளில், தன்னை இழுத்துச் செல்ல விட்டபடி வாழ்ந்து கொண்டு இருக்கும் அவரை செலுத்தும் விசை மிக பெரிய பதட்டமும் பயமும் தந்தன – ஏனெனில் என்ன பேசி, எழுதி வாழ்ந்தாலும் ஒரு வட்டத்தில் அல்லது அவர் சொன்னது போல ஒரு சிஸ்டத்தில் அடங்கி கிடப்பாரின் முன், கவிதைகளிலும் தன் சொந்த வாழ்விலும் அவர் செல்லும் தூரம் தரும் கலவரம் என தோன்றுகிறது.
கண்ட கல்கொலுசில், பொற்பாத சித்திரத்தை கற்பனையில் வளர்த்து மறக்க முடியா அவரின் மனம், ஐதீகத்தில் வாழும் தெய்வத்தை பார்ப்பதும், சிவன் இருக்கும் கோவில்களை [கோயிலுக்கு, திருஉத்திரகோசமங்கை] கவிதைகளில் வார்த்து எடுக்கும் கலவையாக ஒருவரின் பக்கங்கள்.
வாழும் தின வாழ்வின் வதைகளில் திணறும் உஷ்ணத்தையும் பதிவு செய்கின்றன இன்னொருவரின் பக்கங்கள் [பொருள்வயின் பிரிவு, காசு பணம் பற்றிய, இருப்பு போன்ற கவிதைகள்]. ஸ்திரஸ்திதி என ஓர் இடத்தில் கால் ஊன்றி வைத்து கொண்டு, பறந்து சென்றபடி மீளும் விதியின்மையை வழி நெடுக காண்கிறோம். குற்றாலம், திருநவேலியின் என இளமையின், இலக்கியத்தின் ஈரம் கொண்ட வாழ்வும், முன் முதிய பருவம் தரும் வதைப்புகளாக பிம்பம் தரும் வாழ்வின் பக்கங்கள் நிரப்பும் ஒருவரும் உண்டு.
இக்கவிதை உள் உலுக்கிய காலம் ஒன்று உண்டு.
“இன்னமும்
இருக்கிறேன் அப்படியேதான்…
எப்படியென்று விளக்கத்தேவையில்லை
இருக்கிற இருப்பு எல்லோருக்கும் தெரிந்ததே
எப்போதவது நினைத்துப்பார்த்திருப்போமோ
இப்படி இருப்போமென்று
எப்படியும் வாழலாமென்று
இருக்கிற ஜாதியுமில்லை இவ்வளக்கும்
இப்படித்தான் வாழவேண்டுமென்ற லட்சியம்
இப்போதும் இருக்கிறது கனவு போல
அப்படியிருந்துமா இப்படியென்று
அவசரப்பட்டுக்கேட்பது சுலபம்
எப்படி எடுத்துச்சொல்லி புரியவைப்பது
தப்படி விழுந்தவிபத்தையும் தட தட வென்ற சரிவையும்
இப்படியிருந்தாலும் எல்லாம் ஒரு நாள்
எப்படியும் நேராகி விடும்
அப்படியெல்லாம் அற்புதங்கள் நிகழாமலும் இல்லை
ஆறுதல் வார்த்தையில்லை இது
தன்னைப்போல குணமாகும் நோய்
தானே சரியாகும் வாழ்வெல்லாம் இல்லையா என்ன
ஏன் இவரை அதிகம் பிடிக்கிறது? அவரால் கவிதைகளில் நம்மின் வேர்களை தொட முடிகிறது. கருப்பசாமியையும் தட்சிணாமூர்த்தியையும், சிதம்பர சிவகாமியை, மரகதலிங்கசாமியை என தெய்வங்களின் பாதைகளை காண வைக்கிறார். வாழ்வின் அனர்த்தங்களை மற்றும் கவிதை எழுதும் கண்ணுக்கு மட்டுமே தெரியும் இயற்கையின் வண்ணஜால மேகங்களையும். சுட்டிகிறார். எப்போதும் போல குடிப்பதன் துயரை நெடுக சொன்னாலும், தலைப்பில்லா கவிதைகளில் தத்துவ பார்வைகளையும். ஒரிடத்தில் இருப்பதின் ஏக்கத்தையும் பரவி நிறையும் வேட்கையையும். காசில்லா சங்கடத்தின் நாட்களையும், கடவுளின் ஈரம் உணர்த்தும் வாழ்வையையும் என அவரின் கை தொடல்கள் பல இடங்களில். விரட்டும் கால ஒட்டத்தில் தமிழின் பல வடிவ கவிதைகளை எழுதி முடித்த பின்னும் எஞ்சுவது அவரின் அந்த திமிறும் வெறி தான்.
தேவதச்சன் விருது வாங்கும் சமயத்தில் ஒரு ஏக்கம் வந்தது – கால நதியின் விளிம்பு நீர் தொடா கிளிஞ்சல் ஆகி போனாரோ என. மதுவின் நஞ்சை நிரப்பியபடி இன்னமும் இருக்கிறாரா என தெரியாது. ஆனால் எழுதிய கவிதைகளால், ஆழ் தொட்டு கவர்ந்த கவிஞன்.
இருக்கும் வரை இருந்துகொண்டே இரு
எப்படியும்
என முடியும் அக்கவிதையின் முகம் அவரே.
நந்தனுக்காக
விலகி நின்றது
நந்தி
நாவுக்கரசனுக்கு
முத்துப்பந்தல் நிழல்
போட்டன சில கணங்கள்
வெள்ளந்திபாண்டியனுக்காய்
வேறுகால் மாற்றி
வெள்ளியம்பலநடராஜன்
தருமனுக்காகவா
பாஞ்சாலிக்காகவா
பார்த்தனுக்காகவா
பரந்தாமன் தேரோட்டியது
பொய்சொன்ன
பிரம்மனுக்கு
கோயிலே இல்லாமல்
போயிற்று
***
வானவெளி
வயல்வெளி
வெட்டவெளி
கடல்வெளி
காற்றுவெளி
சமவெளி
வெளிகளின்நடுவே
வீடுகளும் மனிதர்களும்
***
நெஞ்சு படபடக்கிறது,
நீர்வீழ்ச்சியென்று
அருவியை
யாரவது சொல்லிவிட்டால்
***
திசைகெட்டுப்போனாலும்
திசைகளுக்குள்தான்
***
நம்பிராஜனை தேடியபடியும், கண்டுகொண்டேயும் இருந்த கவிஞர் விக்ரமாதித்யனுக்கு அன்பு வணக்கங்கள்.
அன்புடன்
லிங்கராஜ்
***
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருது விக்ரமாதித்யனுக்கு அளிக்கப்பட்டிருப்பது தமிழில் கவிதையை வாசிக்கும் எவருக்கும் பெரிய நிறைவை அளிக்குமென நினைக்கிறேன். அவர் ஒரு பாலம் போல. நமக்கு நவீனக்கவிதை மொழிபெயர்ப்பு வழியாகவே அறிமுகம். க.நா.சு [மயன்] கவிதைகளே மொழியாக்கக் கவிதைகளின் நெடி கொண்டவை. அங்கிருந்து பசுவய்யா உட்பட எல்லார் கவிதையுமே மொழியாக்க நெடி கொண்டவைதான். தமிழ் மொழியின் அழகு பிரமிள், தேவதேவன் ஆகியோரின் கவிதைகளிலேயே வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களின் கவிதைகளிலேயே எங்கே அவர்களை மீறி தாளம் அமைகிறதோ அதில்தான் அப்படி நடந்தது.
நவீனக்கவிதை சுருக்கமானது. அந்த ரத்தினச்சுருக்கத்தன்மையை அடைந்தபின்னர் அதிலிருந்து மரபின் அழகை அடைவதுதான் இங்கே பெரிய சவால். அதைச் சந்தித்தவர் விக்ரமாதித்யன். மரபுக்கவிதையை சொற்கள் நிறைந்ததாக ஆக்குவது அணிகள். உவமை முதலியன. அவை கொஞ்சம்கூட இல்லாமல் எழுதப்பட்ட கவிதைகள் வழியாகவே விக்ரமாதித்யன் அந்த சுருக்கமான அழகிய கவிதைகளை அடைந்தார். அவை பெரும்பாலும் மரபிலுள்ள வெண்பாக்களின் வடிவத்தை அடைந்தவை.
கண்துயில் கெடுக்கும்
கனவே
என்ன செய்யப்போகிறாய்
இன்றிரவு நீ
என்று விக்ரமாதித்யனின் ஒரு வரி என் நினைவில் உடனடியாக வருகிறது. நூற்றுக்கணக்கான முறை இரவில் என் வாயில் எழுந்த வரி இது. இந்த தமிழின்பத்தையே நான் அவருடைய கொடையாக நினைக்கிறேன்
தமிழ்வேள் குமரன்
***
அன்புள்ள ஜெ
விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது நிறைவை அளிக்கிறது. ஆனால் நான் பார்த்தவரை இத்தருணத்துக்காக அவரை வாழ்த்தும் எழுத்தாளர்கள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் வாசகர்களாகவே வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கியச் சூழலில் வம்புகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் இதைப்போன்ற நிகழ்வுகளுக்கு கொஞ்சம் கூட இல்லை. இந்த சமூக ஊடகங்கள் வந்த பிறகு மொத்த இலக்கியமும் திண்ணைவம்பாக ஆகிவிட்டது.
விக்ரமாதித்யன் ஒரு சாதனையாளர். பெரியவர். இன்றைக்கு இருக்கும் சூழலில் அவருக்கு இன்னொரு விருது கிடைக்குமா என்பதுகூட சந்தேகம்தான். இன்றைய சந்தர்ப்பத்தில் அவரை வாழ்த்துவதென்பது நாம் இலக்கியத்தை வாழ்த்துவதுதான். இலக்கியத்தின் மீதான நமது நம்பிக்கையை உறுதிசெய்துகொள்கிறோம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நான் 1990ல் அண்ணாச்சியை முதலில் சந்தித்ததை ஞாபகப்படுத்திக்கொள்கிறேன். அன்றைக்கு நான் மாணவன். அண்ணாச்சியின் தோற்றம் அப்படி இருந்தது. நாடோடி, கவிஞன். நான் அவரால் ஈர்க்கப்பட்டுதான் வாசிக்க ஆரம்பித்தேன். அன்றைக்கு நான் ஆராதித்த விஐபிக்கள் எல்லாம் தலைக்குமேலே இருந்தனர். அண்ணாச்சி என்னுடனேயே இருந்தார்.
‘நொம்பலப்பட்ட மனுஷன்’ என அவர் ஒரு கவிதையில் தன்னைப்பற்றிச் சொல்கிறார். அதை நான் ஒரு பெரிய வார்த்தையாக எழுத்துக்கொண்டேன். அண்ணாச்சியின் நொம்பலம் சாமானியரின் துக்கம். அதை எழுதிய அண்ணாச்சி சாமானியரில் கடவுள் அருள் பெற்றவர். அவருக்கு வணக்கம்
அ.ராமர்
***
காந்தியப் பயணிகள்
கடந்த ஆகஸ்ட் 15 அன்று சென்னிமலை நூற்புகைத்தறி கூடத்தில் இருந்து ஒரு தம்பதியினர் நடைபயணமாக புதுச்சேரி வரை செல்கின்றார்கள். அத்தம்பதியினரின் பெயர் கருப்பையா -சித்ரா. அவர்கள் இருவரும் 31 வருடங்களாக பாதையாத்திரையாக நடைபயணம் செல்கிறார்கள்.
‘உலக அமைதி’யை பிரதான நோக்கமாக மனமேந்தி, சமூகநோக்கத்திற்கான சிறுசிறு கோரிக்கைகளைத் தங்கள் பரப்புரையாக மேற்கொண்டு ஒருவித பிரார்த்தனைச் செயல்பாடாகத் தங்களையும் தங்கள் வாழ்வையும் இச்சேவையில் கரைத்திருக்கிறார்கள்.
இதுவரைக்கும் அவர்கள் நடந்து கடந்த தொலைவு என்பது மொத்தம் 95,000 கிலோமீட்டர் தூரம்! தொண்ணூற்று ஐயாயிரம் கிலோமீட்டர்கள் என்பதை ஒருசில நொடிக்குள் நம்மால் உச்சரித்துவிட முடிகிறது. ஆனால், யதார்த்தத்தில் அவர்கள் இந்த தூரத்தை ஒவ்வொரு அடியாகத்தான் கடந்திருப்பார்கள் என்கிற பேருண்மையை விளங்க முற்படுகையில் வியப்பெழுகிறது.
பாலைவனத்தில் கையில் தேசியக்கொடியோடு அவர்கள் நடந்துசெல்லும் காட்சிப்படம் அது! அந்தக் காட்சிதந்த அகநிறைவுக் கண்ணீரானது இதற்குமுன் எனக்குள் நிகழாதவொன்று.
நிகழ்வின் போது நடந்த ஒரு சம்பவம் :
காந்தி தன் கையில் உப்பு அள்ளும் புகைப்படச் சட்டகத்தை பார்த்த பின் “சித்ரா அம்மா இந்த படத்தைப் பார்த்ததும் ஏதாவது தெரியுதுங்களா?” என்று பார்வையாளர்களைப் பார்த்துக் கேட்டார். பிறகு பேச ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சி 1930 ஏப்ரல் 6 தேதி உப்புசத்தியாகிரத்துக்காக நடந்து வந்தபோது எடுத்தது. இது ரொம்ப சிறப்பானது. வெள்ளைகாரங்க வந்து இங்க இப்படி சட்டம் போடும்போது நாம உணவுக்கு போட்டு சாப்பிடற உப்புக்கும் வரி போட்டுட்டாங்க. அதை எதிர்த்துத் தொடங்கின போராட்டம் தான் தண்டியாத்திரை. ஒவ்வொரு கிராமத்துக்கும் காந்தி போயி அங்கிருந்த பெண்கள் கிட்ட தான் கேட்கிறார். ஒரு மாசத்துக்கு எவ்ளோ உப்பு உங்களுக்கு தேவைப்படும்? இத்தனை படி உபயோகிப்போம் என்று அவங்களும் சொல்றாங்க அப்போ நீங்க எல்லோரும் வந்து இந்த போராட்டத்துல கலந்துக்கணும், வரி விதிப்பு வேண்டாம்னு சொல்லணும் அப்படீன்னு சொல்றார். அப்போதான் உப்பு நாம எப்பவும் போல பயன்படுத்த முடியும்னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிக்கிறார்.
அதன் பிறகு அந்த கிராமத்துப் பெண்கள் அவருடன் நடக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படிதான் அந்த போராட்டம் தொடங்கியது. முதலில் 78 மனிதர்களுடன் ஆரம்பித்தது. 160 கிலோமீட்டர். ஒரு மாதம் நடந்த பயணம். செல்லும் கிராமத்தில் எல்லாம் மக்கள் சந்திப்பு.அந்த மக்கள் அவருடன் இணைகிறார்கள். கடைசியாக தண்டி இடத்தில் உப்பு அள்ளி கையில் எடுக்கிறார். அள்ளிய உப்பை சரோஜினி நாயுடு அம்மா கையில் கொடுக்கிறார். இப்படிக்கூட வச்சுக்கலாம். ஒரு பெண்ணுக்கு உப்பை நல்லா பயன்படுத்த தெரியும்னு நினைச்சு கொடுத்திட்டார். அப்போ அந்த ஒரு பிடிஉப்பை ஒரு பதினோரு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற கிராமத்திற்கு வந்து அதை ஏலம்விடறாங்க.. 2600 ரூபாய்க்கு ஏலம் போச்சு… அப்போ அது பெரியதொகை.
உப்பிற்காக போராடிய அந்த போராட்டம் ரொம்ப மகத்துவம் வாய்ந்தது… இந்த முப்பத்தியோரு வருட காலத்தில், என்னென்ன காலச்சூழலில், எந்தெந்த நிலப்பரப்புகளில், எத்தகைய உளநிலைகளில் அவர்கள் அகவலு அகலாமல் நடந்திருப்பார்கள் என்பதை நினைத்தால் பிரமிப்பே எஞ்சுகிறது. நடந்தே அலைந்து வாழ்வைக் கழிக்கிற இவர்களது இச்செயலைப் புறப்பார்வையால் நோக்குபவர்களுக்கு, அது முட்டாள்தனமாகவும் பைத்தியக்காரத்தனமாகவும் தெரியலாம்.
ஆனால், அந்த இரு காந்தியர்களின் மனதில் திரண்டெழுந்து பேருரு கொண்டிருக்கும் ஆத்மார்த்தமான நம்பிக்கை என்பது உயிர்த்துடிப்புக்கு நிகரான விசை அல்லது விழைவு என்றே சொல்லத் தோன்றுகிறது.
சிவராஜ்.
August 26, 2021
புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-3
கோலாரில் ஒரு விடுதியில் தங்கினோம். இது ஊரடங்குக் காலமென்பதனால் குறைவான செலவில் தங்கமுடிந்தது. பொதுவாகவே சுற்றுலாத்துறை சார்ந்த எல்லா தொழில்களும் அப்படியே உறைந்துவிட்டிருக்கின்றன. கட்டிட உரிமையாளர்களுக்கு முதலீட்டில் நஷ்டமில்லை. ஆனால் குத்தகைக்குக் கட்டிடங்களை எடுத்து நடத்துபவர்களும், ஊழியர்களும் வாழ்க்கையின் பெரும் நெருக்கடிகள் வழியாகச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
அந்த கட்டணத்திலும் நாங்கள் விடுதியில் அறைக்கு நான்குபேர் என தங்கினோம். இரண்டுபேருக்கு கட்டில், இரண்டுபேருக்கு தரை. ஆகவே தலைக்கு முந்நூறு ரூபாய்தான் ஆகும். கார்ச்செலவு, சாப்பாடு உட்பட மொத்த பயணச்செலவே மூவாயிரம் ரூபாய்தான். ஆடம்பரம் எங்கள் பயணமுறைக்கு எதிரானது. ஆடம்பரச் செலவுக்கான பணமிருந்தால் இன்னொரு பயணம் செய்யலாமே என்பது கொள்கை.
காலையில் கோலார் அருகே உள்ள அவனி என்னும் ஊருக்குச் சென்றோம். இந்தப் பயணத்திற்காக அமைக்கப்பட்ட வாட்ஸப் குழுமத்தின் பெயரே ’அவனிபவனி’தான். செல்வேந்திரனின் சொல்வண்ணம் என நினைக்கிறேன். காலை ஏழுமணிக்கே சென்றமையால் சிலர் டீ கூட குடிக்கவில்லை. நான் காலையிலேயே வெந்நீருக்காகக் காத்திருக்காமல் குளித்துவிட்டேன். ஆடைமாற்றி வந்தபோது ஒரு கும்பல் ஒரு திசைக்கும் இன்னொரு கும்பல் எதிர்திசைக்கும் காலை தேநீர் தேடிச் சென்றிருந்தது. நாங்கள் சென்ற திசையில் நல்ல டீ கிடைத்தது.
அவனி என்னும் தொன்மையான நகரம் நுளம்பர்களின் நாட்டின் பண்பாட்டு மையமாக இருந்தது. இன்று ஒரு சிற்றூர். கிபி நான்காம் நூற்றாண்டு முதல் இந்நகரம் முக்கியமான ஆட்சிமையமாக இருந்து வந்தமைக்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. பிற்கால கல்வெட்டுகளில் இது தென்னகத்தின் கயா என்று அழைக்கப்படுகிறது. கயா போலவே நீத்தார் சடங்குகளுக்கு முக்கியத்துவம் உடைய இடமாக இருந்திருக்கலாம்.
இங்குள்ள தலபுராணப்படி இது வால்மீகி தவம்செய்த இடம். இங்கே ராமன் வால்மீகியைச் சந்திக்க வந்தார். லவனும் குசனும் வாழ்ந்ததும் இங்குதான். இத்தகைய தொன்மங்களின் சமூகவரலாற்றுப் புலம் என்ன என்று ஆராயவேண்டும் என்று தோன்றியது. வால்மீகி சமூகத்துடன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் ஒரு குலம் இங்கே கிபி நான்காம் நூற்றாண்டுக்கு முன் இருந்திருக்கிறதா?
அவனியில் உள்ள அங்குள்ள ராமலிங்கேஸ்வரர் ஆலயத்துக்குக் காலையிலேயே சென்றோம். பசித்ததனால் வழியிலிருந்த குட்டிக்கடையில் இருந்து கடலைமிட்டாய் வாங்கிக்கொண்டோம். உடன்வந்த இளம்பரிதி கடலைமிட்டாய் ஜாடியையே மொத்த விலைக்கு வாங்கிவிட்டார். அதுதான் பசி தாங்க உதவியது.
ராமலிங்கேஸ்வரர் ஆலயம் கிபி நான்காம் நூற்றாண்டு முதல் அங்கே இருந்திருக்கிறது. அது ஓர் ஆலயத்தொகை. ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன் ஆகியோரின் பெயரால் இங்குள்ள நான்கு முதன்மை ஆலயங்களும் அழைக்கப்படுகின்றன. வாலி, சுக்ரீவன் பெயரால் இரு சிற்றாலயங்கள் உள்ளன. ஆலயங்களெல்லாம் சிவனுக்குரியவை. ராமேஸ்வரம் போல ராமன் வழிபட்ட சிவலிங்கங்கள் இவை. இவற்றில் சத்ருக்னலிங்கேஸ்வரர் ஆலயம் காலத்தில் பழைமையானது என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
நுளம்பர்களால் கட்டப்பட்ட ஆலயங்களை பின்னர் சோழர்கள் எடுத்துக் கட்டியிருக்கிறார்கள். நாயக்கர் காலகட்டத்தில் மேலும் மண்டபங்கள் கட்டப்பட்டன. விஜயாலயசோழீச்சரம் என்னும் நார்த்தாமலை ஆலயத்தொகையை நினைவூட்டிக்கொண்டே இருந்தது இந்த இடம்.
கருவறைக்கு மேலேயே திராவிடபாணி கோபுரம் கொண்ட சிறிய ஆலயங்கள். தேர்போல தோன்றுபவை. சிற்பங்கள் அதிகமில்லை, ஆனால் இருப்பவை அழகானவை. உமாமகேஸ்வரர், தாண்டவர், பிட்சாடனர் சிலைகளை உலோகமோ என மயங்கவைத்தது காலையின் ஒளி. சிற்பங்களை காலையொளியில் பார்க்கையில் கல் ஒரு மெல்லிய பட்டுத்திரை என்று ஆக, அப்பாலிருந்து, காலவெளியின் பிறிதொரு களத்திலிருந்து, புடைத்து எழுந்து வந்தவை அவை என பிரமை எழுந்தது.
பொதுவாக பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய கோயில்கள் மணற்பாறையால் ஆனவை. அவை சிற்பங்களுக்கு நெகிழ்ந்து கொடுக்கின்றன. மென்மையான பொன்வண்ணமும் கொண்டிருக்கின்றன. அங்கிருந்த ஒரே ஆலயத்தில் மட்டும் கோயிலும் சிலைகளும் பளிங்குப்படிகம் போன்ற கல்லில் செதுக்கப்பட்டிருந்தன. குழைவில்லாத மொத்தையான சிலைகள் அவை.
இங்குள்ள ஆலயங்களில் மிக அழகான சிற்பங்கள் முகமண்டபங்களில் கூரைக்குடைவின் அடியில் செதுக்கப்பட்டிருக்கும் எண்திசைக் காவலர்களின் சிலைகள். மிகநேர்த்தியான, நுட்பமான கலைவடிவங்கள்கள் அவை. நுளம்பர்களின் கட்டிடக்கலையின் ஒரு சிறப்பம்சமாகவே அவற்றைச் சொல்லலாம்.
பிற்காலத்தில் கல்யாணி சாளுக்கியர், கங்கர்கள், ஹொய்ச்சாலர்களின் கட்டிடக்கலையின் முகப்படையாளமாக ஆன உருண்டைத் தூண்களுக்குமேல் தாமரைக்கவிதல் கொண்ட அழகிய மண்டபங்களும் இங்கே உள்ளன. கரிய சலவைக்கல்லில் செதுக்கப்பட்டு ததும்பும் நீர்த்துளிபோல் ஒளிவிடும் நந்தி அமர்ந்த மண்டபங்கள்.
இங்கே லட்சுமணேஸ்வரா ஆலயத்தின் சுவரில் உருத்திராக்கம் அணிந்து கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவர் பத்தாம் நூற்றாண்டின் சைவ குருநாதராகிய திரிபுவனகர்த்தா என்று சொல்லப்படுகிறது.
மையக்கோயில் திறக்கப்படவில்லை. சிறிய ஆலயங்களின் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டு காலையில் மெல்ல மெல்ல விழிப்படைந்துகொண்டிருந்த உள்ளத்துடன் நடப்பது இனிதாக இருந்தது. இப்படி அதிகாலையில் பார்த்த ஆலயங்களின் நினைவுகள் எழுந்து ஒன்றோடொன்று கலந்துவிடுகின்றன.
ஆலயத்தை ஒட்டி ஒரு தொன்மையான குளத்தை தொல்லியல்துறை தோண்டி எடுத்துக் கொண்டிருந்தது. ராமலிங்கேஸ்வரர் ஆலயம் உட்பட பழைய ஆலயங்களுக்கு வருகையாளர் பொதுவாகக் குறைவு. அருகே மலைமேல் ஒரு புதிய ஆலயம் கட்டப்பட்டிருந்தது. அங்கே பக்தர்கள் வருகிறார்கள் என்று தோன்றியது.
சாலைவழியாகச் சுற்றிக்கொண்டு மலைச்சரிவில் ஏறிச்சென்றோம். மிகப்பெரிய உருளைக்கிழங்குக் குவியல்போன்ற மலை. செந்நிறப்பாறைகள் உருண்டும், தயங்கியும்,நீர்த்துளி எனத் ததும்பியும் நின்றிருந்தன. ஒரு பாறையின் அடியில் அமர்வதற்குரிய குகைபோன்ற சரிவு இருந்தது. அங்கே அமர்ந்து சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
அடுத்தபடியாக அருகேயுள்ள முல்பகல் விருபாட்சர் ஆலயத்திற்குச் சென்றோம். பகுலமுகி அன்னை இங்குள்ள சிறப்புத்தெய்வம், முல்பகல் அப்பெயரின் மருவு என தோன்றியது. ஆனால் முலபகிலு, மேற்குவாசல், என்னும் சொல்லின் திரிபு என்கிறார்கள்.
நுளம்பர்களைப் பற்றி வாசித்தபோது கண்டடைந்த ஆய்வாளர் கலைவிமர்சகரான ஆண்ட்ரூ கோகென் [Andrew Cohen]. கர்நாடக சிற்பக்கலை ஆராய்ச்சியில் ஹொய்ச்சால கட்டிடக்கலைக்கு ஜெரார்ட் புக்கேமா [Gerard Foekema]போல நுளம்பர்களின் கலைக்கு இவர் முக்கியமானவர். நுளம்பர் காலகட்டக் கலையை ஆய்வுநோக்கில் தொகுத்து அதன் அடிப்படைகளை வரையறை செய்தவர்.
கோகென் சொல்லும் ஒரு முக்கியமான கருத்தை கிருஷ்ணன் சொல்லிக்கொண்டிருந்தார். கட்டிடக்கலையை சோழர்கலை, நுளம்பர் கலை, நாயக்கர் கலை என பிரிப்பது பிழையானது. உண்மையில் ஆட்சியாளர்களுக்கு கலையிலுள்ள பங்கு என்பது மிகமிகக் குறைவானதே. கலையை வட்டாரம் சார்ந்தே பிரிக்கவேண்டும். காலகட்டம் சார்ந்து அடுத்த பிரிவினையைச் செய்யலாம். ஒரு கலைமரபு ஒரு சிற்பியர் குலத்தைச் சார்ந்தே உருவாகி வருகிறது. அதற்கு திரிபுவன்கர்த்தா போல ஒரு ஆன்மிக- தத்துவ வழிகாட்டி இருக்கலாம். அதில் நிகழும் மாற்றங்கள் தத்துவம் வழியாக, சிற்பக்கலைக்கு வந்து மிகமெல்லவே உருவாகின்றன
விருபாட்சர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளிபடி இந்த ஆலயம் நுளம்பர்களால் கட்டப்பட்டு சோழர்களால் விரிவாக்கப்பட்டது. முலுவை மாகாணத்தைச் சேர்ந்த லக்கண தண்டேசா என்னும் படைத்தலைவன் பதின்நான்காம் நூற்றாண்டில் இதை எடுத்து கட்டினான்.
இரு கருவறைகள் கொண்டது இந்த ஆலயம். இரு சிவலிங்கங்கள். ஒன்று அத்ரி முனிவரால் நிறுவப்பட்டது, இன்னொன்று சுயம்பு என்று தொன்மம் சொல்கிறது. சற்று தாழ்வான கூரைகொண்டவையும் உருண்ட தூண்களால் ஆனவையுமான மண்டபங்களுக்கு அப்பால் கருவறைகளில் எழுந்த சிவம். கோயில்களில் நாங்கள் மட்டுமே அன்று வணங்க வந்தவர்கள்.
இந்த ஆலயத்தில் பகுலமுகி என்னும் தேவியின் ஆலயம் தனி இணைப்பாக உள்ளது. பழைய காலத்தில் தட்சிணமகாவித்யை எனப்படும் தாந்த்ரீக பூஜைக்குரிய தேவி இவள். ஆலயப்பூசகர் அவரே வந்து ஆலயத்தை திறந்து எங்களுக்குக் காட்டினார். த்ரிசக்தி வடிவம். முன்பக்கம் விஷ்ணுதுர்க்கை வடிவம் போல துர்க்கையும் நாராயணியும் கலந்த தோற்றம். பின்பக்கம் வீணை ஏந்திய சரஸ்வதி. சிற்பத்தின் நிழல் துணுக்குறசெய்யும்படி விசித்திரமான ஒரு விழிக்குழப்பத்தை அளித்தது. இந்த தெய்வத்தை இப்போதுகூட மைசூர் அரசகுடியினர் வந்து வணங்கி சில பூசைகள் செய்துவிட்டு செல்கிறார்கள்.
இவ்வாறு பல ஆலயங்களை ஒரே நோக்கில் பார்ப்பதனால் என்ன பயன் என்னும் எண்ணம் சிலபோது எழுவதுண்டு. ஒவ்வொரு சிற்பத்தைப் பற்றியும் தனித்தனியாக ஆராய்வதும் ரசிப்பதுமே உகந்தது. நான் அத்தனை சிற்பங்களையும் சொல்லிவிடவேண்டுமென நினைப்பேன். ஆனால் அது இயந்திரத்தனமாக ஆகிவிடுமா என்னும் ஐயமும் எழும்.
இத்தகைய பயணங்களின் சிறப்பு நம்மை இவை ஒரே உச்சஉளநிலையில் பலநாட்கள் நிறுத்தி வைக்கின்றன என்பதுதான். இது ஒரு வகை விழிப்புநிலைக் கனவு. சிற்பங்களை நாம் தனித்தனியாகப் பார்த்தாலும் ஒற்றை அனுபவம்தான். நம் ஆழத்தில் எங்கோ அத்தனை சிற்பங்களும் இணைந்த ஒரு பெரும் படலம் உருவாகிறது.
இத்தகைய ஆலயங்களில் பெரும்பாலான சிற்பங்கள் திரும்பத்திரும்ப வந்தபடியே இருக்கின்றன. ஆடவல்லான், மயிடசெற்றகொற்றவை, கரியுரித்தபெருமான்… செவ்வியல் கலையின் இயல்பு அவ்வண்ணம் திரும்பத் திரும்ப வருவதுதான். இசையில் ஒரே பாடல், ஒரே ஸ்வரங்கள் மீளமீள வருவதுபோல. நாம் ரசிக்கவேண்டியது அவ்வாறு அவை திரும்பத்திரும்ப வருவதிலுள்ள கனவுத்தன்மையை. கனவுகளும் திரும்ப நிகழ்பவை. கூர்ந்தால் அவை நுண்ணிய மாறுபாடுகளை அடைந்திருப்பதையும் காணலாம். ஒரு சிற்பம் அல்ல இன்னொன்று.
காலையுணவு தவறிவிட்டது. கடலைமிட்டாயின் பலத்தில் தாக்குப்பிடிக்க முடிந்தது. முல்பகலின் பிரசாத் ஓட்டல் நன்று என்று நண்பர்கள் விசாரித்து அறிந்திருந்தனர். கட்டுக்கட்டாக வெற்றிலையும் பாக்கும் விற்கும் ஒரு சிறு சந்தைக்குள் சென்று அங்கிருந்து சந்துக்குள் நுழைந்து அந்த ஓட்டலைக் கண்டுபிடித்தோம்.
ஐந்துபேர் அமர்ந்து சாப்பிட வசதியுள்ள ஓட்டல். ஆனால் அந்தப்பகுதியெங்கும் மூடியகடைகளின் வாசல்களிலெல்லாம் அமர்ந்தும் நின்றும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஓட்டலுக்கு பின்புறம் மேலே குடியிருக்கும் உரிமையாளரின் வீட்டுக்குச்செல்லும் மாடிப்படிக்கு கீழே நிற்க இடம் கிடைத்தது. தட்டு இட்லி, தோசை, புளியோதரை என வந்துகொண்டே இருந்தது. மதியத்திற்கும் சேர்த்தே சாப்பிட்டேன். ஓட்டலின் புகழுக்குக் காரணம் தெரிந்தது, நல்ல உணவுதான்.
உணவுக்குப்பின் குருடுமலே என்னும் இடத்தில் இருந்த சோமேஸ்வர் ஆலயத்திற்குச் சென்றோம். முல்பகலில் இருந்து பத்து கிமீ தொலைவில் இருக்கும் இந்த ஊர் பழைய நுளம்பர்களின் நகரம். இங்குள்ள சோமேஸ்வர் ஆலயம் சோழர்களால் கட்டப்பட்டது. ஆனால் உள்ளூர் நம்பிக்கையின்படி புகழ்பெற்ற ஹொய்சாலர் கால சிற்பிகளான ஜனகாச்சாரி, மற்றும் அவர் மகன் தங்கணாச்சாரி இருவராலும் இந்த ஆலயம் கட்டப்பட்டது. இந்நம்பிக்கைக்கு ஆதாரமில்லை.
கவிழ்தாமரை வடிவிலான கோபுரம் கொண்ட சிறிய ஆலயம் இது. உள்ளே கருவறையில் சிவலிங்கம். ஆனால் மிக முக்கியமானது அருகில் எங்கோ இருந்த பழைய பெருமாள் ஆலயத்தில் இருந்து கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்கும் பெருமாள் சிலை. ஆறடி உயரத்தில் மண்மகள், திருமகள் இருபுறமும் துணைக்க பூசைகள் ஏதுமில்லாமல், காகிதமாலை அணிந்து நின்றிருக்கும் பெருமாள்சிலை நான் பார்த்த பெருமாள்சிலைகளிலேயே பேரழகு மிக்கது.
அருகே நம்மாழ்வார், ராமானுஜர் இருவருக்கும் சிலைகள் உள்ளன. ராமானுஜர் அங்கே வந்திருந்தார் என்றும், அவருடைய ஆணைப்படி கட்டப்பட்டது அந்த பெருமாள் ஆலயம் என்றும் அர்ச்சகர் சொன்னார்.
அச்சிலைகளை பார்த்துப்பார்த்து விழி அசைக்கமுடியவில்லை. கம்பீரமும் கருணையும், குழைவும் உறுதியும் கலந்த முகம். கல்திறந்து தெய்வம் எழும் தருணம் தெய்வமுகம் கல்லில்தான் எழக்கூடும். பேரழகுமிக்க அன்னையர். பூசையின்றி வெறும் பாவை என நிற்பதுவும்கூட அவனுடைய விருப்பத்தால்தான் என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதான்.
கர்நாடகத்தில் பல மகத்தான சிலைகளைக் கண்டிருக்கிறேன். நினைவில் அவை ஒவ்வொன்றும் ஒன்றுடனொன்று ஒப்பிடமுடியாத அழகு கொண்டவை. ஆயினும் உடனே நினைவிலெழுந்த சிலை பெலவாடியின் வீரராகவப் பெருமாள் திருவுருதான். அதற்கிணையான பேரழகு கொண்டவை இவை.
சோமேஸ்வர் ஆலயத்தின் அருகே உள்ள குருடுமலை பிள்ளையார் கோயில்தான் மக்களிடையே பெரும்புகழ்பெற்றது. கிட்டத்தட்ட பதினான்கு அடி உயரமான மாபெரும் பிள்ளையார் உயரமான கருவறைக்குள் வீற்றிருக்கிறார். யானைகளே திகைக்கும் பேருருவம். கல் தன் உச்சகட்ட சாத்தியத்தை அடைவது யானையென்றாகும் போதுதான் போல. யானைத்தெய்வமே அதற்குரிய வடிவம்.
[மேலும்]
Art Historian Andrew Cohen Gave Nolamba Art Its Place Under the Sun
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

