Jeyamohan's Blog, page 926
August 30, 2021
ஏற்கனவே ‘டியூன்’ செய்யப்பட்டவர்கள்– இரம்யா
26,000 பக்கங்கள், 26 நாவல்கள், ஏழு ஆண்டுகள் என மலைப்பான ஒரு பயணத்தை மேற்கொண்டு, ‘வெண்முரசு’ எனும் நாவல் தொடரை எழுதி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஓர் அசாத்தியத்தைச் சாத்தியமாக்கியுள்ளார்.
எண்ணிலடங்கா கதாப்பாத்திரங்கள், கதைக் களங்கள், இடங்கள், நிகழ்வுகள் தத்துவங்கள், அழகியல், கவிதைகள், உவமைகள், உணர்வுகள், அறிதல்கள் என ஓர் புனைவுலகப் பிரபஞ்சத்தையே ‘வெண்முரசு’ நாவல் தொடர் வாசக நெஞ்சங்களில் கட்டியெழுப்பியிருக்கிறது.
வாசிக்கும் ஒவ்வொருவரும் புதிதாகப் பிறந்து தான் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையை, மக்களைப் புதிதாகப் பார்க்கும் ஒரு நிலையை அடைந்து படுவார்கள் என்பது உறுதி. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் 2014 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத்தியாயம் வீதம் எழுதிக் கொண்டிருந்த காலத்தினின்று அவருடனேயே பயணம் செய்து ஏழு வருடங்களாக வாசித்த முந்நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் இருக்கின்றனர். வாசித்ததோடல்லாமல் ‘வெண்முரசு டிஸ்கஷன்ஸ்’ என்ற தளத்தில் உரையாடி வாசகப் பார்வையை விரித்துக் கொண்டனர்.
ஜெயமோகனின் ‘வெண்முரசு’ நாவல் நிரை நிறைவு பெற்ற 2020 ஆம் ஆண்டு தொடங்கி, சித்திரை பௌர்ணமி நாளில் வெண்முரசைப் பிற வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கவும் தாங்கள் கடந்து வந்த பாதையை நினைவு கூரவுமென அந்நாளைக் குருபூர்ணிமையாகக் கொண்டாடி வருகின்றனர்.
அந்நாளில் தன் எழுத்துக்களால் வாழ்வை மாற்றிய ஜெயமோகனுடன் உரையாடி மகிழ்கின்றனர். இத்தகைய வாசகப் பரப்பைப் பார்த்து மலைத்து சாத்தியமல்லாத வாசிப்புப் பயணமாக வெண்முரசு அமையுமோ என்று ஐயப்படுபவர்கள் இருக்கக் கூடும். அவர்களுக்கெல்லாம் நம்பிக்கையளிப்பவர்களாக அவர் எழுதி முடித்த பின் படிக்க ஆரம்பித்து நிறைவு செய்த வாசகர்கள் அமையப் பெறுகிறார்கள்.
அவர்களில் ஒருவராக, நம்பிக்கையின் முகமாக முனைவர் ப. சரவணன் திகழ்கிறார். வெண்முரசின் ஒவ்வொரு நாவலின் முடிவிலும் ‘இனிமேலும் என்ன சொல்லிவிட முடியும்!’ என்ற மலைப்புடனேயே 26 நாவல்களையும் கடந்ததாகச் சரவணன் கூறுவார். தன் தீவிரமான வாசிப்பனுபவத்தால் தொடர்ந்து பத்து மாதங்களாகப் படித்து ஒவ்வொரு நாவலின் முடிவிலும் அதையொட்டித் தன் வாசிப்பனுபவத்தை ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார்.
“கல்லெழும் விதை” என்ற ஜெயமோகனின் உரைக்காக 2021 ஆம் ஆண்டின் தமிழ்ப் புத்தாண்டு அன்று மதுரைக்குச் சென்றிருந்தேன். பதின்மூன்று நாட்களாக ஜெயமோகனின் தளத்தில் வெளிவந்த “அந்த முகில் இந்த முகில்” என்ற கதை நிறைவடைந்த அடுத்த நாளில் நிகழ்ந்த விழா அது. பிரேமையின் உச்சியில் திழைத்திருந்த நாட்களும் கூட.
நிகழ்ச்சி முடிந்ததும் வாசகர்களிடம் ஜெயமோகன் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு அது ஜெயமோகனுடனான இரண்டாவது சந்திப்பு. நியாயமாக நானும் சென்று முண்டியடித்துக் கொண்டு அவரைப் பார்க்க முற்பட்டிருக்க வேண்டும். ஆனால், நான் ஏதோ முதிர்ந்த வாசகர் போல, ‘புதியவர்கள் சந்திக்கட்டும்’ என்று தூரத்தில் நின்று அவர்களையும் ஜெயமோகனையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
திடீரென ஒரு குரல் ‘நீங்க ரம்யா தானே’ என்று என்னை வந்து சேர்ந்தது. ஜெ வைப் பார்க்க முடியாமல் இன்னொருவருடன் பேச வேண்டுமென்பதே தவிப்பாய் இருந்தாலும் அவர் முனைவர் ப. சரவணன் என்று தெரிந்ததும் மகிழ்ந்தேன்.
ஏற்கனவே நண்பர்கள் சகிதம் அவரின் விரைவான வாசிப்புத் தன்மையைப் பற்றி சிலாகித்திருக்கிறோம். ‘உங்க வெண்முரசு கட்டுரைகள் எல்லாமே படித்திருக்கிறேன்’ என்றேன். ‘இவ்ளோ வாஞ்சையா ஜெ வை என்னைப் போலவே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே. அதான் உங்க கிட்ட பேசலாம்னு கூப்பிட்டேன்’ என்றார். ‘என்னைப் போலவே’ என்று அவர் சொன்னது ஒரு திறப்பைத் தந்தது எனக்கு. அங்கு இருந்த ஒவ்வொருவர் முகத்திலும் அந்த வாஞ்சையை நான் கவனிக்கலானேன். நானும் கரைந்து நாங்களெல்லாம் ஜெயமோகன் முன்பு ஒன்றெனக் கண்டேன்.
இசைஞானி இளையராஜா அவர்களிடம் அவரின் இசை பலராலும் விரும்பப்படுவதை சிலாகித்தவரிடம்,
“ அது அப்படியல்ல. நீங்களெல்லாம் என் இசையை விரும்ப ஏற்கனவே டியூன் செய்யப்பட்டிருக்கிறீர்கள் ”
என்றார். அதற்கான சான்றாக அவர் ‘அல்ஃபாரிதம்’ பற்றிச் சொன்னார்.
“பியானோவின் ஒரு அல்ஃபாரிதத்திற்கு வயலினை டியூன் செய்து விட்டு அந்த ரிதத்தை பியானோவில் வாசிக்க , வயலினின் ஸ்டிரிங் அதிர்வதைக் கண்டிருக்கிறேன். என் முதல் படம் அன்னக்கிளி வந்தபோது யாரையும் அந்த பாட்டை விரும்ப நான் வ ற் புறுத்தவில்லையே. அந்தப் படம் வெளிவந்த போது எப்போதும் போல் மாலை மெரினாவில் நடைப்பயிற்சிக்காகச் சென்றேன். அப்போதெல்லாம் டேப் கிடையாது. ஆல் இந்தியா ரேடியோவில் தான் மக்கள் பாட்டு கேட்பார்கள். அடுத்த பாடல் ‘அன்னக்கிளி’ என்ற அறிவிப்பு வந்தது. நான் கடந்து செல்ல செல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஆரவாரத்தோடே அந்தப் பாட்டை டியூன் செய்து கேட்பதைக் கவனித்தேன். நான் கடற்கரையை நெருங்கும்போது கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் அந்தப் பாட்டுதான். அப்போது என்னுள் அந்தக் கேள்வி எழுந்தது. எது எல்லோரையும் என் பாட்டை நோக்கி ஈர்த்தது ? என்று. பின்னாளில் ‘அல்ஃபாரிதம்’ பற்றி நான் தெரிந்து கொண்டபோதுதான் அதற்கான விடையைக் கண்டடைந்தேன். நானல்ல. நீங்கள் எல்லோருமே என் பாட்டை விரும்ப ஏற்கனவே டியூன் செய்து அனுப்பப்பட்டிருக்கிறீர்கள். என் பாடலில் நீங்கள் கண்டடைவது உங்களைத் தான்.”
ஆம்! நாங்களெல்லாம் எழுத்துலக ஞானியான ஜெயமோகனை நோக்கி ஏற்கனவே டியூன் செய்யப்பட்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். அப்படி ஒரு சக வாசகராகவே சரவணன் அவர்களை முதலில் தெரிந்து கொண்டேன். அதன் பின் அவருடைய வெண்முரசின் தீவிர வாசிப்பை ஒரு நண்பராகக் கண்டு பிரமித்திருந்தேன்.
காலையும் மாலையுமென வெண்முரசிலேயே அவர் உழல்வதைக் கண்டிருக்கிறேன். ஜெயமோகனின் மற்றெந்த ஆக்கங்களையும் சிறுகதைகளையும் பற்றி அவரிடம் விவாதிக்க முடியாதளவு வெண்முரசிலேயே மூழ்கியிருந்தார். வெண்முரசை அவரைப் போல வாசிக்க என்னையும் பல நண்பர்களையும் ஊக்குவித்திருக்கிறார். அவர் அளவுக்கான தீவிரத்தைக் கடைபிடிக்க முடியாதளவு திணறி என் வாசிப்பு இலக்கை சற்று இலகுவாக்கியிருக்கிறேன்.
ஒவ்வொரு நாவல் முடித்த அன்றும் அந்த நாவலைத் தன் நண்பர் ஒருவருக்கு ஒரு மணி நேரத்திற்குள் கதை சொல்லியாக மாறி, சுருக்கிச் சொல்வதும் உடனேயே அதைக் கட்டுரையாக வடித்து ஜெயமோகனுக்கு அனுப்புவதுமென தீவிர செயலில் இருந்தார் சரவணன்.
சென்றடைந்து விடக்கூடிய ஓர் இலக்கை தீவிரத்தன்மையோடு ‘செயல்! செயல்!’ என விரைந்து கொண்டிருந்தார். ஒன்றிலேயே செயலைச் செலுத்திக் கொண்டிருப்பவன் அதில் விரைவும் கைத்தேர்ச்சியும் பெற்றுவிடுவதைப் போல அவரின் கட்டுரைகள் ஜெயமோகனின் தளத்தில் வெளிவந்து கொண்டிருந்தன.
நாவலைப் படிக்கும் விதத்தைப் பற்றி ஜெயமோகன் சொல்லும் போது அவர் கூறுவதும் இந்தத் தீவிரத்தன்மையைத் தான். சிறு இடைவெளி விடுவதால் அந்தப் பேரொழுக்கிலிருந்து விடுபட்டு வழிமாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஒரு நாவலைக் கைக் கொண்டுவிட்டால் வேறெந்த சிந்தையுமின்றி முழு மூச்சாக வாசிப்பதையே `வாசிப்பு’ என ஜெயமோகன் கூறுவர். தன்னை முழுதளித்து வாசிக்கும் அத்தகைய வாசிப்பைச் சாத்தியமாக்கிக் காட்டி நமக்கு ஒரு முன்னோடி வாசகராக முனைவர் சரவணன் அவர்கள் திகழ்கிறார் .
‘வெண்முரசு’ வாசக நண்பர் ஒருவருடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த போது அவர் சரவணன் அவர்களின் கட்டுரை தனக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை விவரித்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே வாசித்த நாவல்களை அசைபோடுவதற்கு ஏதுவாக உள்ளதென்றும் வாசிக்காதவற்றின் போக்கை உய்த்துணரவும் உதவுகிறது என்றார்.
உள்ளபடியே சரவணன் அவர்கள் நாவலின் பொதுவான சுருக்கத்தை முதல் பத்தியில் கூறுகிறார். அது நாவலைப் பற்றிய ஒட்டுமொத்த சித்திரமாக அவர் புரிந்து வைத்திருப்பதை நமக்குக் காட்டுகிறது. அதன் பின் நாவலில் பிடித்த வரிகள், கதைமாந்தர்கள் செல்லும் போக்கு, அதை அவர் கண்ணோக்கும் விதமென எடுத்துக் கூறுவார். ஒவ்வொரு நாவலுக்கும் அவர் அடிக்கோடிட்டு காட்டும் வரிகள் அந்த நாவலில் அவர் கண்டு வியந்ததை நாமும் காண வழிவகை செய்கிறது. தமிழிலக்கியத்தில் அந்த நாவலின் இடம், ஜெயமோகனை எந்தெந்த இடங்களிலெல்லாம் வியந்தார் என்ற பெருமையையும் ஒவ்வொரு கட்டுரையிலும் சொல்லிக்கொண்டு வருகிறார்.
வெண்முரசை குறைந்தபட்சமாக ஆறு மாதத்தில் வாசித்த வாசகர்கள் இருக்கிறார்கள். ஆனால், சென்ற ஆண்டு நவம்பர் தொடங்கி பத்து மாதத்தில் ஒரே மூச்சாக வாசித்ததோடல்லாமல் ஒவ்வொரு நாவலைப் பற்றியும் ஒரு கட்டுரை வீதம் எழுதியிருப்பது அளப்பரிய செயல்.
“நல்ல வாசகர் எழுதாத எழுத்தாளர். அவர் நாளைய எழுத்தாளராக ஆகலாம். வாசகராகவே இருந்தும்விடலாம். ஆனால், வாசிக்கையில் அவர் எழுத்தாளருடன் சேர்ந்தே தானும் மொழியில் பயணம் செய்கிறார்.” என்று ஜெயமோகன் நல்ல வாசகரைப் பற்றிக் கூறுவார்.
எழுத முடியாத எழுதத் தெரியாத வாசகர்களுக்கும் சேர்த்தே ஒரு வாசகர் அவர்கள் சார்பில் கடிதம் எழுதுவதாகத் தோன்றுமெனக்கு. ஒட்டுமொத்த வாசகப் பெருக்கிலிருந்து ஒரு துளி எழுதி, தன்னை நிறுவிக் கொள்கிறது. வாசகரின் கடிதங்களில் பிற வாசகர் உணர்ச்சிகரமாவதைப் பார்க்கலாம். முதலில் சிறு பொறாமை பின் ஆரத்தழுவி அது நானும் தான் என்ற உணர்தல். வெண்முரசைப் பற்றி வாசகராக எழுதும் ஒவ்வொருவரும் அது எழுதப்பட்ட காலத்தினின்று இனிவரும் காலப் பேரொழுக்கின் வாசகர்களுக்காகவும் சேர்த்தே எழுதுகிறான்.
கனடா அ. முத்துலிங்கம் அவர்கள், “கதையைப் படித்துவிட்டு ஒரு வரியேனும் அந்த கதை ஏன் பிடித்திருக்கிறது என்று ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதிப் போடுங்கள். அதுவே அவன் உவப்பது” என்பார்.
தமிழ் இலக்கியம் பயின்று, இருபது ஆண்டுகளாக வாசகராய்த் தமிழிலக்கியத்தில் உழன்று, அ. முத்துலிங்கம் ஐயாவின் சிறுகதைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற சரவணன் அவர்கள் இவ்வாறு எழுதுவதில் ஆச்சரியமில்லைதான். எனினும் ‘வெண்முரசு’ எனும் பேரொழுக்கை நோக்கி ஒரு வாசகராக அமைந்து, ஜெயமோகன் எனும் ஆசிரியரை வியந்து வியந்து எழுதிய கட்டுரைகளாக இவை விளங்குகின்றன. ஒவ்வொரு வகை வாசிப்பனுபவமும் வாசகருக்கு ஆசிரியரை அணுகும் ஒவ்வொரு விதமான வாசல் எனலாம்.
வெண்முரசு வாசிப்பிற்கான ஒரு வாசலாக இந்தக் கட்டுரைகள் அமைந்தொழுகும் என்பதில் ஐயமில்லை. இங்கு வாசகர்கள் கண்டடையப் போவது தங்களைப் போலவே வாஞ்சையான இன்னொரு வாசகரைத்தான். ஏற்கனவே வாசித்தவர்கள் தங்களைத் தொகுத்துக் கொள்ளவும் இனிமேல் ‘வெண்முரசு’ எனும் தொடர் நாவல் வரிசையைத் தொடங்குபவர்களுக்கு ஒரு வாசலாகவும் இந்தக் கட்டுரைகள் அமைந்தொழுகும்.
இரம்யா
‘முதலாவிண்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘கல்பொருசிறுநுரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்
‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்
கிராதம் முனைவர் முனைவர் ப சரவணன் மதுரை
சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை
‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை
‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்
‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,
‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை
‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை
‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
கோணங்கிக்கு கிரா விருது.
விஜயா பதிப்பகமும், சக்தி மசாலா நிறுவனமும் இணைந்து வழங்கும் ‘கிரா விருது’ இந்த ஆண்டு எழுத்தாளர் கோணங்கி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகையாக ரூபாய் 5 லட்சமும் வழங்கப்படுகிறது.
கோணங்கிக்கு வாழ்த்துக்கள்.
August 29, 2021
விபாசனா, ஓர் அனுபவம் சில எண்ணங்கள்
அன்புள்ள ஜெ வணக்கம்…
கடந்த ஆகஸ்ட் 4 முதல் 15ஆம் தேதி வரை திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் நிகழ்ந்த விபாசனா தியானமுகாமில் கலந்து கொண்டேன்.
பத்தாண்டுகளுக்கு முன்பு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் இதேபோல் ஒரு பத்து நாள் விபாசனா தியான முகாமில் சென்னையில் கலந்துகொண்டார். முகாம் பற்றிய நூலொன்றை எனக்கு பரிசளித்து என்னையும் கலந்து கொள்ள சொன்னார்.
ஓஷோ தன்னுடைய உரையில் நிறைய இடங்களில் விபாசனா பற்றி விரிவாகப் பேசியுள்ளார். பூனாவில் ஓஷோ அவர்களின் சமாதி அமைந்துள்ள இடத்தில் விபாசனா தியானம் கற்றுத்தரப்படும். ஓஷோ சமாதியில் முதல் முறை செய்தேன்.
அதன் பின்பு கொடைக்கானல் பெருமாள் மலையில் அமைந்துள்ள போதி ஜென்டோ என்ற ஜப்பானிய ஜென் மரபில் வந்த பவுத்தமடாலயத்தில் இரண்டாம் முறை கலந்து கொண்டேன். தாய்லாந்து பின்னணி கொண்ட அமைப்பில் மூன்றாம் முறை செய்திருக்கிறேன்.
மேற்கண்டவற்றில் இருந்தெல்லாம் முற்றிலும் மாறுபட்டது மரியாதைக்குரிய அமரர் திரு சத்யநாராயண கோயங்கா அவர்களால் உலகெங்கும் நூற்றுக்கும் மேலான நாடுகளில் பல நூறு மையங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் விருப்ப நன்கொடையின் அடிப்படையில் மிக தர்மமான முறையில் நடைபெற்றுவரும் விபாசனா தியானம்.
திரு ச நா கோயங்கா அவர்கள் பர்மாவின் பெரும் செல்வாக்கு பெற்ற ஹிந்து மதத்தின் மேல் பெரும் பற்றுக் கொண்ட தொழிலதிபர் குடும்பத்தில் 1924ல் பிறந்தவர். பர்மாவில் ஒரு இந்தியர் வகிக்க சாத்தியமான அனைத்து உயர் பதவிகளும் வகித்தவர்.
கோயங்காமூன்று விஷயங்களுக்காக தான் பெரிதும் அதிர்ஷ்டம் செய்தவன் என்று அவர் ஒரு உரையில் குறிப்பிடுகிறார்.
அ. வெற்றிகரமான தொழிலதிபராக செல்வத்தில் திளைத்தது.
ஆ. உலகின் அனைத்து முன்னணி நாடுகளிலும் உள்ள பெரிய மருத்துவமனைகளில் புகழ்பெற்ற மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் தனக்கு குணமாகாத ஒற்றை தலைவலி.
இ. தம்மப்பாதை மற்றும் தன்னுடைய குரு சாயாஜீ ஊ ப கின் அவர்களை கண்டு கொண்டது.
பெரும்பணம் ஈட்டுவதன் மூலம் வெற்றிகளின் மூலம் புகழும் அதிகாரமும் அடைவதன் மூலம் மகிழ்ச்சியாக துன்பமின்றி இருக்க முடியும் என்று பெரும்பாலோனோர் நம்புகிறார்கள். அவ்வாறான எத்தனையோ பேரை தன் வாழ்வில் அனுதினமும் சந்திக்க நேர்ந்ததோடு தானும் அவ்வாறான ஒருவன் என்பதாலும் அவற்றால் துக்கநிவர்த்திக்கு வழி இல்லை என்பதை திட்டவட்டமாக கண்டுகொண்டதாக கூறுகிறார்.
ஜெர்மன், அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, இந்தியா, இங்கிலாந்து, பர்மா என பல்வேறு நாடுகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாத தலைவலியே எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலைய வைத்து ஒரு நண்பரின் ஆலோசனையின் பேரில் அவரின் குருவை சந்திக்க உந்தித் தள்ளி இருக்கிறது.
அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் இந்தியாவிலிருந்து உலகெங்கிலும் அனுப்பப்பட்ட புத்த துறவிகளில் இருவர் மூலமாக பர்மாவில் புத்த மதம் வேரூன்றிய தாக கூறப்படுகிறது. அந்த குரு மரபின் தொடர்ச்சியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த புகழ்பெற்ற பர்மிய துறவி லேடி ஸாயாதாவ்(ledi sayadaw) அவர்களின் மாணவர்களில் ஒருவர் ஸாயா யூ தேட் இவரின் மாணவர் ஸாயா ஊ தேட் இவரின் மாணவர் தான் திரு கோயங்கா அவர்களின் ஆசிரியர் ஸாயாஜி ஊ பி கின் (sayagyi u ba khin) நெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் பாலி மொழி சுவடிகளிலிருந்து தொன்மை மாறாத இந்த விபாசனா தியான பயிற்சி முறைகள் அவர் குரு மூலமாக அவருக்கு கற்றுத் தரப்பட்டுள்ளது.
கோயங்கா அவர்களின் குரு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற ஒருங்கிணைந்த பர்மாவின் முதல் தலைமை கணக்காளராக இருந்திருக்கிறார். ஊழல் மலிந்து இருந்த அவருடைய அலுவலகத்தில் ஊழலை முற்றிலுமாக ஒழித்து அலுவலகத்திலேயே தியான கூடத்தை நிறுவி சக பணியாளர்கள் அனைவரையும் தியானிகளாக மாற்றி உள்ளார்.
அவரின் தூய்மை மற்றும் செயல் திறனால் கவரப்பெற்ற பர்மாவின் பிரதமர் பிற நான்கு துறைகளை அவரே தலைமை ஏற்று நடத்துமாறு கூறியிருக்கிறார். நீங்கள் ஆத்மானந்தர் பற்றி எழுதியவற்றை நினைத்துக் கொண்டேன்.
ச நா கோயங்கா அவர்களும் ஒருபோதும் தன்னை அரஹந்தராகவோ குருவாகவோ முன்வைத்ததில்லை. தியானம் கற்பிக்கும் ஆசிரியராகவே தன்னைப் பற்றிக் கூறிக் கொள்வார். மனைவியோடு வந்திருந்தே முகாம்களை நடத்துவார். முதன்மையான பௌத்த நாடுகளின் தலைமை குருக்களாக இருக்கும் பல பௌத்த பிக்குகளுக்கு தியானம் கற்பித்து உள்ளார்.
பல ஆயிரம் ஆசிரியர்களை உருவாக்கி கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த பாதையை திறந்து வைத்துள்ளார்.
கற்க வரும் மாணவர் முற்றிலும் இலவசமாகவே இதை கற்க வேண்டும் என்ற கொள்கையில் இன்றுவரை மாறாது நடக்கின்றன இவரின் அமைப்புகள். வேண்டுமானால் நன்கொடை வழங்கலாம் அது அடுத்து வரும் முகாம்கள் நடத்த பயன்படுத்தப்படும். விலைமதிப்பற்ற தம்மத்திற்கு எந்த விலையும் நிர்ணயம் செய்யக் கூடாது என்பது கோயங்கா அவர்களின் எண்ணம்.
பயிற்சி முகாம் பற்றிய சில குறிப்புகள்.
முதல் நாள் தொடங்கி நிறைவு நாள் வரை முழு மௌனம்.
காலை 4 மணிக்கு பலமாக மணி அடித்து எழுப்பி விடுவார்கள் பின்பு இரவு 9 மணி வரை சிறு சிறு இடைவெளிகளுடன் கூடிய இரண்டு மணி நேரம் வரை நீளும் அமர்வுகள்.
மிக எளிய தென்னிந்திய சைவ உணவு வகைகள் மசாலாக்கள் காரம் எண்ணெய் என எதுவுமே இருக்காது. இரவுணவு மாலை 5 மணிக்கே வழங்கப்பட்டுவிடும்.
முழு முகாமிலும் பேச எழுத படிக்க மந்திர உச்சாடனங்கள் உடற்பயிற்சிகள் ஆசனங்கள் நடைப்பயிற்சி என எதற்குமே அனுமதி இல்லை.
கண்களை மூடி முதுகு கழுத்து வளையாமல் கைகால்களை அசைக்காமல் நாளொன்றுக்கு 10 மணி நேரங்கள் அமர்ந்திருக்க வேண்டும் முதல் மூன்றரை நாட்கள் மூச்சையும் அதன் பின்பு உடல் உணர்ச்சிகளையும் கவனிக்க வேண்டும்.
மனம் அசைந்தால் உடல் அசையும் உடல் அசைந்தால் மனம் அசையும் இரண்டில் எது அசைந்தாலும் மூச்சு சலனத்திற்குள்ளாகும். மூச்சினை தொடர்ந்து கவனிக்க கவனிக்க சலனம் குறைந்து ஸ்திரப்படும். மனது எவ்வளவு உறுதி பெறுகிறதோ அவ்வளவு தூய்மையடையும் எவ்வளவு தூய்மை அடைகிறதோ அவ்வளவு விடுதலையும் பெரும் இதுதான் இத்தியானத்தின் அடிப்படை.
2015 ல் வயநாட்டு ஆசிரம வாழ்க்கையில் இருந்து வெளியேறிய பின் அதிதீவிர சாதகங்கள் தொடர் மௌனங்கள் என எதிலுமே நான் பெரிதாக ஈடுபட்டிருக்கவில்லை. மாறாக நிறைய வாசித்தல் குறைந்த இடைவெளிகளில் தொடர் பயணங்கள் மலையேற்றங்கள் கூடவே கட்டற்ற சமூக ஊடக பயன்பாடு ஓடிடியில் கொட்டிக்கிடக்கும் படங்கள் வெப்சீரிஸ்கள் என வேறுவிதமாக சென்று கொண்டிருக்கும் எனக்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.
பத்து நாட்களில் ஒரு நாள் கூட மொபைல் குறித்து எண்ணவில்லை ஏங்கவில்லை. அமர்வுகள் எனக்கு மிகச் சிறப்பாக சென்றன. எவ்வித புதிய சம்ஸ்காரங்களயும் தோற்றுவிக்காமல் அசைவின்றி அமர்ந்திருக்கும் பொழுது உடலின் பழக்க பதிவுகள் மனதில் அழுத்தி வைக்கப்பட்ட பதிவுகள் மேல் மனதிற்கு வருகின்றன. இன்பமானவை துன்பமானவை இன்பதுன்பமற்றவை முழு அமைதி என அவரவரின் முந்தைய கர்மங்களுக்கு ஏற்றவாறு சுருளவிழ்தல் நிகழ்கிறது.
எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது…
என் அகம் எந்த அளவு உங்கள் சொற்களால் நிரம்பி உள்ளது என்பதைக் கண்டு கொண்டேன். திடீரென வெண்முரசில் இருந்து ஒரு வரி இடையிடையே புனைவு களியாட்டு கதைகளில் இருந்து எழுந்து வரும் பாத்திரங்கள். பின்தொடரும் நிழலின்குரல் காடு விஷ்ணுபுரம் என உங்களின் மகத்தான நாவல்களிலிருந்து நினைவுக்கு வரும் சம்பவங்கள். உங்களுடனான நேர் சந்திப்புகளின் போது அந்தத் தருணத்தில் நீங்கள் நிகழ்த்தும் நீண்ட உரையாடல்களில் எனக்குள் எஞ்சியவைகள் என ஒரு மறு கண்டுபிடிப்பு தான் எனக்கு இந்த நாட்கள்.
அடுத்து நான் சொல்லப் போவது மிகையாகத் தோன்றலாம் பலரால் நம்ப முடியாமலும் இருக்கலாம் ஆனால் உண்மையை தான் கூறுகிறேன்… என் மனைவி குழந்தையை விடவும் அதிகமாக என் மனோ விஞ்ஞானமய கோசங்ககளை உங்கள் சொற்கள் நிரம்பியிருக்கின்றன. தியான அறையில் இருந்து வெளிவந்தவுடன் என்னுடைய முதல் செயல் ஒரு சில நிமிடங்கள் நின்று சிறுமலையை பார்ப்பது.
உடனே வெண்முரசில் இருந்து ஒருவரி மின்னிச் செல்லும்
மலை உச்சியின் ஒற்றை மரத்தில் கூடும் தனிமை
இந்த பத்து நாட்கள் குறியீட்டு ரீதியான துறவறத்தில் சிக்கல் வரும் போதெல்லாம். உங்கள் மூன்றாண்டு கால தேசாந்திர வாழ்க்கையை எண்ணிக்கொள்வேன்.
நீங்கள் எந்த ஒரு உணவையும் பழித்து நான் பார்த்ததே இல்லை. எந்த ஒரு தட்பவெப்ப நிலையையும் குறை கூற மாட்டீர்கள். (ஒரே ஒருமுறை திருநெல்வேலி வெயிலை தாள முடியவில்லை என்று எழுதி இருந்தீர்கள்) பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாம் சென்ற மகாராஷ்டிரா மலர்ப் பள்ளத்தாக்கு பயணத்தில் கிருஷ்ணனும் ராஜமாணிக்கமும் அவர்கள் எதிர்பார்த்தது போல் இல்லை என்று அவ்விடத்தை மாறி மாறி குறை கூறிய உடன். ஒரு செண்டி மீட்டருக்குக் குறைவான மிகச் சிறிய பல வண்ண மலர்கள் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் நிறைந்து இருப்பதை சுட்டிக்காட்டி எந்த இடத்திலும் ஒரு அழகு இருக்கும் எதிர்மறை அம்சங்களும் இருக்கும் நாம் சரியானதையே பார்க்க வேண்டும் என்று சுட்டிக் காட்டினீர்கள். ஒரு பாடல் எப்படி நன்றாக இல்லாமல் இருக்க முடியும் பாடல் பாடல் தான் என்று கூறியிருக்கிறீர்கள். உடையின் பொருட்டோ உணவு பழக்கத்தின் பொருட்டோ ஒருவர் பின்பற்றும் பண்பாட்டின் பொருட்டோ எதன் பொருட்டும் ஒரு மனிதனிடம் உயர்வு தாழ்வு காணக்கூடாது என்று கற்பித்து இருக்கிறீர்கள். மிக சமீபத்தில் எந்த ஒரு மனிதனிடம் இருந்து வரும் மனித வாசனையும் நன்றாகத்தான் இருக்கும் என்று கூறினீர்கள். உங்கள் ஆசிரியர்கள் உங்கள் தனிப்பட்ட வாசிப்பு தேடல் மூன்றாண்டு துறவு வாழ்க்கை என எங்கெங்கெல்லாம் நீங்கள் மேற்கண்டவற்றை பெற்றுக் கொண்டீர்கள் என்பதை எனக்கு அங்கே உணர முடிந்தது.
மேலும் மேலும் நுணுகி நுணுகி செல்ல செல்ல ஏன் உங்கள் சொற்கள் இவ்வாறு எனதாழத்தை தைத்துள்ளது என்பது சற்று விளங்கியது. ஒரு தருணத்தை ஒரு காட்சியை ஒரு மனிதரை ஒரு மனநிலையை உங்களுடையது எதையும் கலக்காமல் உள்ளது உள்ளபடி உங்களால் பார்க்க முடிகிறது. துல்லியமாக நிகழும் அந்த பதிவினை ஆகச்சிறந்த சொற்களைக் கொண்டு இனிய சந்தம் நிரம்பிய சொற்றொடர்களாக ஆக்குகிறீர்கள். கவித்துவமும் அழகியலும் சேர்த்து வரலாற்றுணர்வுடன் தத்துவ சாற்றில் நனைத்து நவீன அறிவியல் கண்கொண்டு நகைச்சுவையை நிரப்பி கூர்மையாக உங்கள் அனைத்து செயல்பாடுகளிலும் உங்களால் சீரோடு தீவிரமாக கொண்டுவர முடிகிறது.
மீண்டும் வெண்முரசின் வரிதான்…
ஒன்றுக்காக மறுபிறப்பு கொள்ளும் மானுடர்கள் அதற்காக மட்டுமே வாழ்கிறார்கள் அவர்கள் வில்லில் இருந்து கிளம்பி விட்ட அம்புகள்
தேனி மதுரை திண்டுக்கல் மாவட்டங்களுக்கென சில பிரத்தியேக குணங்களை கவனித்துள்ளேன்.
போஸ்டர் பிளக்ஸ் கலாச்சாரம் அரசியல்வாதிகளுக்கு நடிகர்களுக்கு என்று மட்டுமல்ல சாதாரணன் கூட தனக்குத்தானே நிறைய போஸ்டர்களை அடித்து ஊரெங்கும் ஒட்டிக் கொள்வான். அவற்றில் ஒன்று ஸ்பீக்கர் கலாச்சாரம்.
செட்டியப்பட்டி என்ற சிறு கிராமத்தில் இருந்து மலையடிவாரத்திற்கு அருகில் அக்கம் பக்கம் ஒரு சில வீடுகளே உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் தியானகூடம் அமைந்துள்ளது.
காலை ஐந்து மணிக்கு பெரும் சத்தத்தோடு ஸ்பீக்கர்களில் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும். எல் ஆர் ஈஸ்வரி சீர்காழி கோவிந்தராஜன் டிஎம்எஸ் என ஆறு ஆறரை வரை பலவிதமான பக்தி பாடல்கள்.
அதன் பின்பு எண்பது தொண்ணூறுகளில் ஒரு குறிப்பிட்ட ரகமான பாடல்களாக கேசட்டில் பதிவு செய்வார்கள். நிலவு என தொடங்கும் பாடல்கள் ஒரே நடிகரின் பாடல்கள் ஒரு தலை காதல் பாடல்கள் சோகப் பாடல்கள் என. அதேபோன்ற வரிசைக்கிரமமாக பல மணி நேரங்கள் பாடல்கள் நீளும்.
அதிகாலை மற்றும் காலை நேரம் என்ற வார்த்தையில் தொடங்கும் இத்தனை பாடல்கள் தமிழில் உள்ளதா என்பதையே அங்குதான் நான் கண்டு கொண்டேன்.
அதிலும் ஒரு கண்டடைதல் எனக்கு நிகழ்ந்தது.
தமிழ்நாட்டில் எத்தனையோ மகத்தான இசையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள். இங்கே வகைதொகையின்றி நாள்தோறும் பல மணி நேரம் ஒலிபரப்பப்பட்ட பாடல்களில் சில பாடல்கள் பிடிக்கும் சில பிடிக்காது சில பாடல்கள் பற்றி கருத்து இல்லை சில பாடல்கள் என் கவனத்திற்கு வராமல் முதல் முறை அன்று கேட்டதாக இருக்கும்.
ஆனால் இசைஞானி இளையராஜா அவர்களின் இசைக் கோர்வைகள் என் உச்சி முதல் பாதம் வரை நாடி நரம்புகளில் எல்லாம் நிறைந்து இருப்பதை கண்டு கொண்டேன். கிட்டத்தட்ட அவரின் எந்த ஒரு பாடலின் இடையில் அடுத்தடுத்து வரும் ஒரு சிறு இசைக்கருவியின் இசை துணுக்கும் எனக்கு தெரிந்திருக்காமல் இருக்க வில்லை. அதை நான் ரசிக்கிறேன் விரும்புகிறேன் என்பதை எல்லாம் கடந்து என் அகமாக என் அகத்தின் இசை மொழியாக அவரின் இசை இருக்கிறது. இசைஞானியின் இசை எனக்கு மகிழ்ச்சியை தருவதோ ஆசுவாசம் தருவதோ இல்லை என் இருப்பின் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது இத்தனை ஆண்டுகளில். இனி மீதமிருக்கும் வாழ்க்கையில் ஒரு முறைகூட அவரின் பாடலை இசையை கேட்கவில்லை என்றாலும் எனக்கு ஒரு குறையும் இல்லை எனக்குள்ளேயே அனைத்தையும் என் மீண்டும் மீண்டும் மீட்டிக்கொள்ள முடியும்…
உங்கள் வாசகர்களுக்கு உங்கள் சொல் எப்படியோ பெரும்பான்மை தமிழர்களுக்கு அவரின் இசை அப்படி…
7,8 நாட்களுக்கு பின்பு 70 80 மணி நேர தொடர் அமர்வுகள் கடந்தபின் ஒரு விதமான முயற்சியற்ற முயற்சியில் தியானம் தானாக நிகழ தொடங்கியது… எவ்வித இறுக்கமும் இன்றி எல்லாவற்றிலும் கவனத்தோடு செயல்பட முடிந்தது.
ஒன்பது பத்தாம் நாளில் எல்லாம் மேலும் துலக்கமாக இருந்தது.
தம்மப் பாதை சத்யநாராயண கோயங்கா மற்றும் அவர்களின் குரு மரபு உத்தேசிப்பது எதை நம்மிடம் கேட்பது எதை நான் செய்ய வேண்டியது எது செய்து கொண்டிருப்பது எது அதெல்லாம் மேலும் விளங்கியது.
புத்தரால் அநித்யம் துக்கம் அநாத்மா போன்ற பேசு பேசுபொருட்களை வைத்து எழுதப்பட்ட காவியத்தின் பெயர்தான் தம்மமோ… என்ற எண்ணம் வந்தவுடன் அகம்மலர்ந்து சிரித்தேன்.
உடனே நிழல் காகம் கதையிலிருந்து இவ்வரி மின்னியது
நாங்கள் அந்த விசித்திரமான கதையால் வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆளாகியிருந்தோம். அசிதர் சொன்னார் “கலை என்பது ஒரு நடிப்புதானே? அதிலுள்ளவை எதுவும் மெய் அல்ல. நிழல்நாய் கடிப்பதில்லை. ஆனால் அதனுடன் விளையாடலாம்.”
அப்பால் அமர்ந்திருந்த சிதானந்த சாமி “ஆம், துறவு என்பதும் வாழ்க்கையை வேறு ஒருவகையில் நடிப்பதுதான்” என்றபின் எழுந்து சென்று டீ கொதித்த அடுப்பில் இன்னொரு பீடியை பற்ற வைத்துக்கொண்டார்.
நித்யா சொல்லி முடித்தார் “பித்ருகடன்கள் இல்லாத ஒரு துறவியிடம் காகம் என்ன சொல்லும் என்று அன்று நான் அசிதரிடம் கேட்டேன். ’நான் பித்ருவே அல்ல, இவர்கள் நம்புகிறார்கள் ஆகவே சும்மா நடிக்கிறேன்’ என்று சொல்லும் என்று சிரித்தார்.
காவியகர்த்தர்களின் உணர்வால் உணரப்படுவது இவ்வுலகு… காவியகர்த்தர் களின் கண்களால் பார்க்கப்படுவது காட்சிகள்… காவியகர்த்தர்களின் சொற்களால் பேசப்படுபவை எளிய மாந்தரின் உரையாடல்கள்…
இங்கே புத்தரின் சிலை கூட கிடையாது எவ்வித படங்களும் கிடையாது. ஆசிரியர் சத்யநாராயண கோயங்கா அவர்களின் படங்களுமே எங்குமில்லை. தத்துவம் கூட மிக விரிவாக பேசப்படுவதில்லை. பயிற்சி பயிற்சி பயிற்சி மட்டுமே.
ஆசிரியர் கோயங்கா ஜி மிக நன்றாக பேசக்கூடியவர் அவருடைய உரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார். தன்னுடைய குருவை சந்திக்கும் வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் தத்துவ ஆன்மீக உரைகளை ஆற்றியதாகவும். அதில் மெய்யான எந்த அறிதலும் இல்லாமல் ஆன்மா பற்றியும் ஸ்திதபிரஞ்ஞை பற்றியுமெல்லாம் பேசியுள்ளேன்.
நம்முடைய உடல் மன எல்லைக்குள் அனுபவமாகாத எந்த ஒன்றையும் நம்ப வேண்டாம் என்கிறார்.
பேசாதே செய்து அதுவாகிவிடுஎன்பதை. ஒரு தொழிலதிபருக்கே உரிய கராரான கூரிய மொழியில் குறைந்த சொற்களில் தீவிரமாக மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருப்பார் பயிற்சியின்போது.
கோயங்கா அவர்களின் குரல் மிகவும் தாழ்ந்த ஸ்ருதி கொண்டது கனமானது பேசுகையில் கம்பீரமாக இருக்கும் அவர் குரல் தம்மபத கீர்த்தனைகளை பாடும்போது முற்றிலும் வேறு ஒரு அனுபவத்தை தரும்.
புத்தர் துவக்கி வைத்த தர்மசக்கரம் தொடர்ந்து சுழல்கிறது இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப திரு சத்திய நாராயண கோயங்காஜீ
அவர்களும் சுழலச் செய்கிறார்.
என்னால் ஒன்றை மிக உறுதியாக கூற முடியும் தன்னுடைய தகுதியை விடவும் குறைவான புகழும் அங்கீகாரமும் பெற்றவர் கோயங்கா அவர்கள்.வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தின் பாரதப்பெருநிலத்தின் ஒளிமிகுந்த நட்சத்திரங்களில் ஒருவர் கோயங்கா…
செயல் வீரர் செய்தும் வாழ்ந்தும் காட்டிய மாமனிதர் அவர் பாதங்களுக்கு என் வணக்கங்கள்.
பயிற்சி நாட்களில் உணவு சார்ந்து கடும் துன்பத்திற்கு உள்ளானேன். அப்பா நெடுங்காலம் உணவகம் வைத்திருந்தார் விதவிதமாக விரும்பிய நேரத்தில் உண்டு பழகியவன் நான். பத்தாண்டுகளுக்கு மேல் மூன்று இயற்கை அங்காடிகளை நான் நடத்தி வந்தேன் ஒரு தருணத்திலும் தரமான சுவையான உணவிற்கு பஞ்சமே இருந்ததில்லை.அதிலும் கடந்த 4 ஆண்டுகளாக முதல்தர புரதமும் உயர்தர கொழுப்பும் நிரம்பிய உணவுகளை நன்கு மசாலா சேர்த்து ருசியாக சாப்பிட்டு வருகிறேன்.
முகாமில் இரண்டாம் நாளும் ஆறாம் நாளும் மிக முக்கியமான சவால் நிறைந்த நாட்கள் என்று கூறினார்கள். இவ்விரண்டு கண்டத்தை தாண்டிவிட்டால் எல்லாம் சுகமாக அமையும்.
முகாம் துவங்குவதற்கு சற்றுமுன்பு இந்த ராணுவ விதிகளைக் கண்டு அஞ்சி ஒருவர் சென்று விட்டார், இரண்டாம் நாள் இன்னொருவர் சென்றுவிட்டார் ஆறாம் நாள் மேலும் சிலர் சென்றனர்.. சுவர் தாண்டி குதித்து செல்லும் எல்லைவரை ஒரு பெண் சென்றார்.
வழங்கப்படும் உணவில் ஓரளவு எனக்குப் பிடித்தவற்றை ஏதோ உண்டு சமாளித்து வந்தேன் ஆறாம் நாள் நன்றாக உண்ண வேண்டும் என்ற ஆர்வம் உடல் முழுவதும் நிரம்பி இருந்தது மாலை 5 மணிக்கு ஆர்வத்தோடு உணவுக் கூடம் சென்றேன் ஆறு நாட்களில் வழங்கப்பட்டதிலேயே மிக மிக சுமாரான காரம் உப்பு அற்ற ஒரு உணவு கிட்டத்தட்ட மிகசுமாராண வெறும் இட்லி என்று சொல்லலாம். கொஞ்சமாக தட்டில் எடுத்து வந்து எப்படியாவது சமாளித்து உண்டு விட முயன்றேன். தாங்கமுடியாத உணர்ச்சியில் உணவு பரிமாறுபவர் இடம் சென்று சிறிது ஊறுகாய் கேட்டேன் மதியத்திற்கு மட்டுமே ஊறுகாய் இப்போது கிடையாது என சற்று அலட்சியமாக பதில் கூறினார் ஒரு நொடி நிதானத்தால் கையிலிருந்த தட்டைக் கொண்டு அவர் மண்டையை உடைக்காமல் தவிர்த்தேன். எந்த வன்முறையிலும் இறங்கவில்லை எனினும் கடும் நிலைகொள்ளாமை இருந்தது. காரணமற்ற எரிச்சல் நடுக்கம் கூடிக்கொண்டே சென்றது. உண்மையில் என் இயல்பில் நான் வன்முறையாளனோ இது போன்று செயல்படும் ஆளோ இல்லை என் இயல்புக்கு முற்றிலும் மாறான வெளிப்பாடிது.
இந்த முகாமை நடத்திய பூனாவை சேர்ந்த இளம் ஆசிரியர் திரு ஜிதேந்திரா அவர்களிடம் சென்று நடந்ததை என் உணர்வுகளை உள்ளபடியே தெரிவித்தேன். உன்னை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வருகிறேன் உனக்கு இந்த முறை நன்றாக வேலை செய்கிறது. கொஞ்சம் பொறுத்துக்கொள் இது தூய்மையாக்கத்தின் ஒரு பகுதிதான் என்று கூறினார்.மறுநாள் அனைத்தும் சரியானது.
நிகழ்வு முடிந்து வீடு வருகையில் எதையோ சாதித்த உணர்வை விடவும் எல்லாம் நல்லபடியாக நிறைவு செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி இருந்தது.
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
மு.கதிர் முருகன்
கோவை
[கதிர்முருகன் திருப்பூரைச் சேர்ந்தவர். கோவையில் வாழ்கிறார். சென்ற பல ஆண்டுகளாக ஆன்மிகப்பாதையில் பலவகையான பயிற்சிகள் வழியாகச் சென்றுகொண்டிருப்பவர். தியானப்பயிற்சியாளர்.
தொடர்புக்கு : bodhiyogaandhealingcenter@gmail.com, 9442306633 ]

அன்புள்ள கதிர்,
இந்த விபாசனா பயிற்சியைப்பற்றியும் திரு கோயங்கா அவர்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். விபாசனாவை உலகமெங்கும் கொண்டுசென்று சேர்த்தது அவர்களின் அமைப்புதான்.
விபாசனா பௌத்த முறை. ஆனால் அதன் வேறுவடிவங்கள் அத்வைத மரபிலும் உள்ளன. பிற மரபுகளில் அவை இருக்கமுடியாது, கொள்கையளவில் அவை விபாசனாவுக்கு எதிரானவை. ’அகம்’ என தன்னில் குவியும் தரிசனத்தின் செயல்வடிவமே விபாசனா. அங்கே ‘கடவுள்’ உடனிருந்தால் விபாசனா இயல்வது அல்ல.
இந்தப் பயிற்சிமுறை பலருக்கும் உதவியாக இருந்திருப்பதைச் சொல்லிக்கேட்டிருக்கிறேன். நீங்கள் எழுதியிருப்பதை வைத்து நானறிந்த முறைமையில் உள்ள சில வேறுபாடுகளை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
அ. தத்துவப் பயிற்சி
விபாசனா என்பது முதன்மையாகக் தன்னைக் கவனிப்பது, தன்னில் குவிவது. பிற தியானமுறைகள் தனக்கு அப்பால் ஒன்றில் குவிவதையே கற்பிக்கின்றன. தனக்கு வெளியே உள்ள ‘அது’ அந்த தியான முறையில் மந்திரமாக, ஒளிப்புள்ளியாக, சிலையுருவமாக, அடையாள எழுத்தாக இருக்கலாம். விபாசனாவில் அப்படி ஏதும் இல்லை.
அவ்வண்ணம் தன்னில் குவியும் பயிற்சி தனக்கும் தன் பிரக்ஞைக்கும் நடுவே ஒரு பூதக்கண்ணாடியை வைப்பதுபோல. பலரை அது அதிர்ச்சி அடையச் செய்யலாம், குழப்பலாம். சிலருக்கு மிக எதிர்மறையான விளைவுகளையும் உருவாக்கலாம்.
ஆகவே முன்னரே முறையான தத்துவக் கல்வியின் வழியாக தன் உள்ளத்தின் ஆழங்கள் பற்றியும், அவை செயல்படும் விதம் பற்றியும் ஒரு புரிதலை அடைந்தவர்களே விபாசனாவைச் செய்யமுடியும். அது அனைவருக்கும் உரியது அல்ல. அவ்வாறு எங்கும் இருந்தது இல்லை. அது பிக்ஷுக்களுக்கும் ஆசிரம வாழ்க்கையில் வேதாந்தக்கல்வி பெற்றவர்களுக்கும் மட்டுமே கற்பிக்கப்பட்டது முன்பெல்லாம்.
அகம் என்பதன் படிநிலைகளை பௌத்தமோ, வேதாந்தமோ முறையாகச் சொல்லிக்கொடுத்தபின் நிகழவேண்டியது விபாசனா. நவீன உளவியலையும் நவீன இலக்கியத்தையும் அதற்குப் பயன்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன். நவீன ராக் இசையைக்கூட அதைப்பற்றிய அறிதலுக்காக பயன்படுத்தலாம். அந்த சாதகர் அந்தக் கல்வியை உள்வாங்கியிருக்கிறாரா என அவருடைய ஆசிரியர் கண்காணிக்கவும் வேண்டும்.
ஆ.உடல்நிலைக் கண்காணிப்பு
விபாசனா செய்பவரின் உடல்நிலையை அவரும் அவருக்கு வழிகாட்டுபவரும் முன்னரே கண்காணிக்கவேண்டும். உணவுப்பழக்கத்தை முரட்டுத்தனமாக மாற்றக்கூடாது. ஓரிரு நாட்களுக்கு முன்னரே மெல்ல அந்த மாற்றம் நிகழவேண்டும். உண்ணாவிரதத்திற்கு அளிப்பது போல இனிமா அளிக்கப்படுவதையும் கண்டிருக்கிறேன்.
விபாசனா செய்பவருக்கு குடற்புண், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதிப்பார்கள். அவற்றின் அடிப்படையிலேயே உணவும் உணவின் நேரமும் வகுக்கப்படும். அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே உணவு அல்ல. விபாசனா செய்பவர் தன் உணவை தானே தயாரித்துக்கொள்வதே பொதுவாக உகந்ததாக சொல்லப்படுகிறது. அவ்வாறு தயாரிப்பது உணவின்மீதான ஒவ்வாமை, மிகையார்வம் ஆகிய இரண்டையும் இல்லாமலாக்குகிறது என்பது நடைமுறை உண்மை.
உணவை பல அலகுகளாக, குறைந்த அளவில் உண்பது விபாசனாவில் வழக்கம். விபாசனாவில் பசி என்பதற்கே இடமில்லை. பசி இருந்தால் பசி தவிர எதையுமே நினைக்க முடியாது. உணவைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்போம். அது விபாசனா அல்ல.
உடல் இளைப்பது போன்ற இயற்கை மருத்துவ முறைகளிலேயே உடலைப் பட்டினிபோட்டு வருத்துவது உள்ளது. செரிப்பதற்கு கடினமான உணவும் உள்ளத்தை எடுத்துக்கொள்ளும், பசியும் உள்ளத்தை எடுத்துக் கொள்ளும். விபாசனாவின் உணவுக்கட்டுப்பாடு என்பது உடலை முற்றிலும் மறந்து உள்ளத்தில் ஆழ்ந்திருப்பதற்காகவே.
களைப்படையவைக்கும் அளவுக்கு உடலுழைப்பும் அதன் விளைவான நல்ல தூக்கமும் விபாசனாவில் இன்றியமையாதவை. ஏனென்றால் அரைத்தூக்க நிலை விபாசனா அல்ல. அது முழுவிழிப்பு நிலை.
மொத்தத்தில், உடலை வருத்திக்கொண்டு செய்யும் ஒன்றல்ல விபாசனா. அதில் கட்டாயமே இருக்கலாகாது. நாமேகூட கட்டாயப்படுத்தலாகாது. அப்படி நாமே நிபந்தனை விதித்துக்கொண்டால் அதை முடிப்பதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்போம். அது விபாசனா அல்ல. முடித்தபின் எதையும் அடையமாட்டோம், முடிந்துவிட்டது என்னும் நிம்மதியை தவிர.
ஆகவே முடியவில்லை எனத் தோன்றிய கணமே தானாகவே நிறுத்திவிடவேண்டும். அப்படி நிறுத்திக்கொள்ளலாம் என்னும் நினைப்பே ஒரு விடுதலை. நிறுத்த முடியாது என்னும் தன்னுணர்வு இருந்தால் அதுவே அகப்பதற்றத்தை அளித்துவிடும். அதுவே விபாசனாவை குலைக்கும்.
நானறிந்து எட்டு முறைக்கு மேல் விபாசனாவை நாலைந்து நாட்களில் நிறுத்தியவர்கள் உண்டு. அதெல்லாம் பிழையே அல்ல, இயல்பு. அது பயிற்சியின் படிநிலைதான். ஒருவகையில் விபாசனா என்பது ஒரு பரமபதம்போல. ஏறியிறங்குவது இயல்பானது. பௌத்த நூல்களிலேயே இந்த உவமை உண்டு.
இ. உள்ளப்பயிற்சிகள்
விபாசனாவுக்கான உள்ளப்பயிற்சிகள் பல உண்டு. அவை முன்னரே அளிக்கப்பட வேண்டும். நூல்களை பயில்வது, எழுதுவது, தியானம் செய்வது என பல அதிலுண்டு. அவை அமைப்புகளுக்கு ஏற்ப மாறுபடுபவை. பொதுவாக கொந்தளிப்பும் உளச்சோர்வும் அளிக்கும் எவையும் செய்யப்படலாகாது என்பது நெறி
ஆனால் இரண்டு விஷயங்களைக் கவனிப்பார்கள். விபாசனா செய்பவர் சோர்வுநோய்க் கூறுகள் [ஹைப்பர் டிப்ரஷன்] மற்றும் உளப்பிளவுக்கூறுகள் [ஸ்கிஸோஃப்ரினியா] கொண்டிருக்கலாகாது.
தனக்கு அவை இருப்பது விபாசனாவில் இருக்கும் சாதகனுக்கு தெரியாது. அவனைக் கூர்ந்து கவனிக்கும் ஆசிரியருக்குத்தான் தெரியவரும். ஆகவே அவ்வாறு கூர்ந்து கவனிப்பவர் அங்கே இருக்கவேண்டும்.
பொதுவாக ஒருவர் விபாசனா தொடங்கியதுமே ஆழ்ந்து தனிமையில் மூழ்கிவிட்டால் அவர் உளச்சோர்வு நோயின் கூறுகொண்டவர். மிகையான செயல்பாடுகளும் மிகையான உணர்வுகளும் வெளிப்பட்டால் உளப்பிளவுக்கூறுகள் கொண்டவர். அவர்களுக்கு உரியதல்ல விபாசனா.
விபாசனா ஒருபோதும் இரைச்சலான, நெரிசலான நகர்ப்புறங்களில் நிகழலாகாது. புறம் அகத்தை ஊடுருவிச் சிதைத்துக்கொண்டே இருக்கும். கடற்கரைகள் உகந்தவை அல்ல. அலைகள் மிக எதிர்மறையான விளைவை அளிப்பவை. மிகைக்குளிரும் மிகைவெப்பமும் இல்லாத மலைப்பகுதிகளே உகந்தவை, சிறுமலை நல்ல இடம்.
*
சாதாரணமாக, நம் தியானப்பள்ளிகள் கற்பிக்கும் தியானமுறைகள் எளியவை. உள்ளத்தை அடங்கச்செய்யும் பொருட்டு சும்மா இருப்பதுதான் அவை. ஆனால் விபாசனா அப்படி அல்ல. அது கூர்மையான குவிதல் முறை. தியானம் என்பது சமநிலத்து நடை. விபாசனா மலையேற்றம். மலையேற்றத்திற்கு பயிற்சி தேவை வழிகாட்டியும் தேவை.
ஜெ
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது- பாவண்ணன்
அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம். விஷ்ணுபுரம் விருதுக்குரியவராக நம் கவிஞர் விக்கிரமாதித்யன் அண்ணாச்சிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் செய்தியைப் படித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருநாள் புதுவையில் தொழிற்சங்க ஈடுபாடுடைய நண்பர் ஞானப்பிரகாசம் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அஞ்சலில் வந்திருந்த புத்தகக்கட்டை அவர் பிரித்துக்கொண்டிருந்தார். அன்னம் நவகவிதை வரிசையில் வெளிவந்த கவிதைத்தொகுதிகள் அக்கட்டில் இருந்தன. எல்லாமே கையடக்கமான புத்தகங்கள். உடனே படிக்கவேண்டும் என்ற ஆசையில் மனம் பரபரத்தது. வெளிப்படையாகக் கேட்கவோ நா எழவில்லை. தொட்டுத்தொட்டுப் பார்க்கும் என் தவிப்பைப் பார்த்துவிட்டு, அவரே “எடுத்துட்டும்போயி படிச்சிட்டு கொண்டுவாங்க” என்று எல்லாத் தொகுதிகளையும் என்னிடம் கொடுத்துவிட்டார். அப்போதுதான் விக்கிரமாதித்யன் என்னும் பெயரை முதன்முதலாகப் பார்த்தேன்.
அவருடைய கவிதைகளை அன்று மிகவும் விரும்பிப் படித்தேன். அன்று அன்னம் முன்வைத்த கவிஞர்களில் ஓரிருவர் தவிர அனைவருமே இன்றுவரை தனித்துவத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே ஏதோ ஒரு வகையில் கவிதைத்துறையில் முத்திரை பதித்தவர்கள். அன்றுமுதல் அவருடைய கவிதைகளையும் கட்டுரைகளையும் தொடர்ந்து படித்துவருகிறேன். எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் அவருடைய கவிதை வெளிவந்திருக்கும் கவிதையை முதலில் படித்துவிடுவேன். நம் தோளிலேயே அமர்ந்திருக்கும் ஒரு கிளி சட்டென சிறகசைத்து வானை நோக்கித் தாவிச் செல்வதைப்போல, எதார்த்தச்சித்தரிப்பென தோற்றமளிக்கும் சில கவிதைகள் சட்டென மேல்நோக்கித் தாவிச் சென்றுவிடும். அந்தத் தாவலே விக்கிரமாதித்யனின் தனிச்சிறப்பு. தமிழ் அமைப்புகள் அளிக்கக்கூடிய எல்லா விருதுகளுக்கும் அவர் தகுதியுள்ளவர். அவருக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்து, அவருக்கு இன்னும் மாநில, தேசிய அளவிலான பல விருதுகள் வந்து சேரட்டும் என வாழ்த்துகிறேன்.
அவரை நினைக்கும்போதெல்லாம் குற்றாலம் கவிதைப்பட்டறையில் முதன்முதலாக சந்தித்த நினைவும் வந்துபோவது வழக்கம். திவான் பங்களா வாசலில் மரத்தடியிலும் மணற்குவியலுக்கு அருகிலும் அவர் நின்ற கோலமும் கவிதை சொன்ன கோலமும் மறக்கமுடியாத சித்திரங்கள். சபரிமலைக்கு நடைப்பயணம் செல்லும் பக்தர்களைப்போல நாம் அனைவரும் கூட்டம் கூட்டமாக தேனருவிக்குச் சென்ற பயணத்தையும் நினைத்துக்கொள்கிறேன். நம் கண்ணில் அவர் தென்படும்போதெல்லாம் அவர் நமக்கு முன்னால் யாரோ ஒருவருடன் நடந்துகொண்டிருந்தார். அல்லது பின்னால் வந்துகொண்டிருந்தார். அந்த யாரோ ஒருவராக பயண வழி நெடுக யார்யாரோ மாறிமாறி வந்துகொண்டிருந்தார்கள் என்பதுதான் புரியாத புதிர். இன்றும் அவர் நடைவழியில் அவருக்குத் துணையாக யாரோ ஒருவர் சென்றுகொண்டிருக்கக்கூடும்.
விக்ரமாதித்யன் அண்ணாச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் வணக்கங்களும். அண்ணாச்சியை கெளரவிக்கும் உங்களுக்கும் விஷ்ணுபுரம் அமைப்பினருக்கும் வாழ்த்துகள்.
அன்புடன்
பாவண்ணன்
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது-கல்யாண்ஜி கடிதம்
விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது, கடிதங்கள் -3
விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது,கடிதங்கள்-2
விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது, கடிதங்கள்
விக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்- லக்ஷ்மி மணிவண்ணன்
ஈழ அகதிகளுக்கான சலுகைகள், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நேற்றுக் காலை அரசறிவிப்பு குறித்துக் கேட்ட போது நிம்மதியாக அழுதேன்.2002 இல் தக்கலை அலுவலகத்தில் மதிய நேரம் உங்கள் படைப்புகளை வாசிக்கத் துவங்கியிருந்த எளிய வாசகனாக மிகுந்தத் தயக்கத்துடன் சந்தித்தேன்.அச்சந்திப்பிலேயே தடையின்றி உங்களிடம் யாவற்றையும் பகிர்ந்துக் கொள்ளலாம் என்பதை உணர்ந்தேன். யாவற்றையும் பகிர்ந்துக் கொண்டுமிருக்கிறேன். அவ்விதமே 2014 இல் ஏதிலியர் குறித்தும் பகிர்ந்துக் கொண்டேன்.
நீங்கள் எழுதி அறிமுகமான சேகர் எனும் நண்பன் பின்பு இளைய சகோதரனாக மாறி மிகக் குறுகிய காலத்தில் புதையுண்டாலும் அவரது உணர்வுகளும் அர்ப்பணிப்புணர்வும் என் உடல் சாம்பலாக மிஞ்சுவது வரையிலும் நீடித்திருக்க வேண்டும் என்று மட்டுமே 9 மே 2015 அன்று கோட்டவிளையில் ‘பிரயாகை’ பிரதி பிரிக்கப்படாமல் அவருடன் புதைக்கப்பட்டு நீங்களும் செல்வேந்திரனும் மவுனமாகக் கிளம்பி, நான் என் தம்பியுடன் திரும்பும் போது உணர்ந்தேன். உணர்ந்தேன் என்பது மட்டுமே உண்மை.
திரும்பும் போது தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணமிருந்தன. அத்தனை நண்பர்களும் ஈழ மாணாக்கர்க்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்கள்.சில நண்பர்கள் ஒரு முறை, மேலும் சில நண்பர்கள் மேலும் சிலமுறை,.சில நண்பர்கள் இன்று வரை உதவிக்கொண்டிருக்கிறார்கள். சேகர் குறித்த உங்கள் கட்டுரை சேகரின் அர்ப்பணிப்புணர்வை முன்னெடுத்து ஈழ மாணாக்கர்க்கு உதவ வேண்டும் என்பதாகவே இருந்தது.
மாணாக்கர், கல்வி என்பதற்கப்பால் அவர்கள் வாழ்வியல் குறித்து என் மகள் அகல்யாவை சந்தித்துத் திரும்பும் போது உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேயாக வேண்டும் எனும் தவிப்பு உருவானது.நேற்று உங்களால் சாத்தியப்பட்டது.ஒரு எளிய வாசக மனத்தில் யாவற்றையும் பகிர்ந்துக் கொள்ளும் நம்பிக்கையை உருவாக்கிய சந்திரசேகர். உடனே அழைத்து உதவிய நண்பர்கள, மின்னஞ்சல் வழி தொடர்புக் கொண்டு உதவிய யுகாந்தர், அருண், சுப்ரமணியம், நரேந்திரன்,மேகலா, ஜெயஸ்ரீ, மதுசூதனன் சம்பத், பாலசுப்ரமணியம் என்ற பாலு ,இன்று வரையிலும் உதவிக் கொண்டிருக்கும் குணசேகரன், அகிலன், சாரதி, சிவா வேலாயுதம், விஜய் சுப்ரமணியம், விசுவநாதன் மகாலிஙகம், கௌதம், தியாகராஜன், சந்திரகுமார், விஜயா வாசகம் மேடம், ப்ரவீன்,முழுமதி அறக்கட்டளை, ஷாகுல், எளிய ஒரு வாட்ஸாப் குழு வழி நிர்வகித்து செயல்படுத்தும் சிவக்குமார், சிவசஙகர், ராமகிருஷணன், சதீஷ் குமார், வினோத் அனைவருக்கும் நன்றி.
முத்துராமன்சேகர் நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயசூரியன், ப்ரசாத், ராதா கிருஷ்ணன், சீனு,அவ்வறக்கட்டளைக்குப் பங்களித்த நண்பர்கள்,அவ்வறக்கட்டளையை செயல்பாடுகளில் அர்ப்பணிப்புடன் பங்கேற்ற தங்கை ரேணுகா,காளி ப்ரசாத், முழுமதியுடன் இணைந்தும் தனிப்பட்ட முறையிலும் பங்களித்துக் கொண்டிருக்கும் செந்தில் ( டோக்யோ) சிறில் அலெக்ஸ், விஜயராகவன், ஈரோடு கிருஷ்ணன்,ஆனந்த் ( பாலாஜி ), சரண் ஆகியோருக்கும் நன்றிகள். சந்திரகுமார் வழி அறிமுகமாகிய வடிவேல்,தேசமற்றவர்கள் கட்டுரை வாசித்து. அறிமுகமான ப்ரபு, அதியமான், கணேஷ், சகுந்தலா,அகல்யாவின் எதிர்கால பணி மற்றும் வாழ்வு குறித்த அக்கறையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் டாக்டர் மல்லிகா ஆகியோருக்கும் நன்றி.
சில நண்பர்கள் பெயர்கள் விடுபட்டுருக்கலாம்,என ஒவ்வொருவரும் உங்கள் உணர்வுகள் சார்ந்து ஈழ மாணக்கர்களுக்கு பங்களித்தவர்கள்,மானசீகமாக அவர்கள் ஒவ்வொருவர் கரங்களைப் பற்றிக் கொள்கிறேன்.இன்று உங்கள் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளித்திருக்கிறது.இது முதல் அடி தான்,மேலும் பகிர்ந்துக் கொள்கிறேன். இந்தக் கணம் உங்களையும்நம் நண்பர்கள் அனைவரையும் நினைத்து வணங்குவதற்கானது.
எக்கணத்துளியிலும்
அன்புடனும் நன்றியுடனும்
முத்துராமன்
சந்திரசேகர்அன்புள்ள ஜெ
ஈழ அகதிகளுக்கு அரசு அறிவித்துள்ள சலுகைகளை பற்றிய செய்திகளை பார்த்தேன்.ஏற்கனவே இதை பலமுறை நாங்கள் நண்பர் வட்டாரத்தில் பேசியிருக்கிறோம் .அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் பொறுப்பு .இன்றைய மத்திய அரசு தமிழகத்தையும் தன் வாழ்க்கையில் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை .அவர்கள் நம்மை எதிரிகளாகவே நினைக்கிறார்கள் ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு பொதுவாகவே தமிழர் அனைவரும் தீவிரவாதிகள் என்ற எண்ணம் இருக்கிறது நகாலாந்து காஷ்மீர் மக்களைப் போலவே தமிழர்களை நினைக்கிறார்கள். அந்த நினைப்பை காங்கிரஸ் பிஜேபி ஏற்றுக்கொள்வதனால் அவர்கள் எதையும் சாதகமாகச் செய்ய வாய்ப்பில்லை.
ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் இதை திரும்பத் திரும்ப சட்டசபையில் எழுப்ப வில்லை என்பது ஆச்சரியமானது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், திமுக போன்ற ஈழத்தமிழர்களின் துயரங்களை அறிந்த கட்சிகள் இருக்கின்றன இவர்கள் சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் தொடர்ந்து இந்த கோரிக்கை எழுப்பி கொண்டே இருந்தால் ஏதோ ஒரு கட்டத்தில் எதையாவது செய்தே ஆக வேண்டிய நிலைமை ஏற்படும் .
இந்தச் சூழ்நிலையில் நாம் செய்யக்கூடியது உடனடியாக அந்த மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்படியான சலுகைகளை அளிப்பது. அதற்கான செலவை மாநில அரசு அறிவிக்கலாம் என்ற எண்ணம் எங்களுக்கும் உண்டானது உண்டு. ஏனென்றால் அவர்கள் இன்றைக்கு மிகவும் சுரண்டப்படுகிறார்கள். தமிழர்களால்தான் சுரண்டப்படுகிறார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை என்பதை பயன்படுத்திக்கொண்டு பாதி ஊதியத்திற்கு அவர்கள் வேலை கொடுத்து சுரண்டுகிறார்கள். கந்துவட்டி கொடுமைக்கு அவர்களை ஆளாக்குகிறார்கள்.
இன்றைக்கு ஈழ மக்களிலே உறவினர்கள் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்ப கூடிய நிலைமையில் இருப்பவர்கள் மட்டும்தான் கொஞ்சமாவது நல்ல நிலையில் இருக்கிறார்கள். மற்றவர்கள் கடன் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நம் அனைவருக்கும் எதிர்காலம் பற்றிய கனவு இருக்கிறது நாம் கஷ்டப்பட்டு பிள்ளைகளை ஒரு நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று நினைக்கிறோம். அந்த நம்பிக்கைதான் நம்மை வாழச்செய்கிறது. இன்றைய கஷ்டங்களை பொறுத்துக்கொள்ள வைக்கிறது. ஆனால் அவர்களைப் பொறுத்தவரை அந்த கனவே இல்லை. அதுவே அவர்களை சோர்வடையச் செய்கிறது. அவர்களிடம் நம்பிக்கை ஊட்டுவது அவசியம். அவர்களின் நலனை கருத்தில் கொள்ளும் ஓர் அரசு இருக்கிறது என்ற எண்ணம் அவர்களுக்குத் தேவை .அவர்களுக்கு இங்கே வாக்குரிமை இல்லை .அதனால்தான் இங்கே உள்ள கட்சிகள் அவர்களை கண்டு கொள்வதில்லை. தமிழ் உணர்வுடன் மானுடநேயத்துடன் அவர்களுக்கான சலுகைகளை அறிவித்த அரசும் முதல்வரும் நன்றிக்குரியவர்கள்.
ஆனந்த்குமார்
ஓநாய்குலச் சின்னம், கடிதம்
ஓநாய்குலச்சின்னம்
அன்புள்ள ஜெ,
உங்களைத் தொடர்ந்து பல்லாண்டுகளாக வாசித்து வந்த போதும், இதுவரை கடிதம் எதுவும் எழுதத் துணியவில்லை. தற்போது படித்து முடித்த ஓநாய் குலச்சின்னம் நாவலைப் பற்றிய எனது வாசிப்பனுபவம் இது. எனது தயக்கத்தைக் கடந்து முன்செல்வதற்கு மட்டுமேயாக இதை முயற்சிக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் வெண்முரசைத் தொடர்ந்து வாசித்து அது முடிந்த பின் ஏற்பட்ட பெரியதொரு வெற்றிடத்தை இன்னுமும் கூட நிரப்ப முடியவில்லை. வேறு சில நூல்களை வாசிக்க முற்பட்டு, அந்த தட்டையான மொழி நடையைத் தொடர முடியாது இருந்த நிலையில், நமது தளத்தில் வந்த வாசகர் கடிதங்களின் பரிந்துரைப்பில், சென்ற ஆண்டு இந்தியாவிற்குச் சென்ற போது ஓநாய் குலச்சின்னம் நாவலை வாங்கி வந்தேன்.
வெண்முரசு, அதன் பின்னான நூறு கதைகள் மற்றும் குமரித்துறைவி போன்ற எழுத்திற்கு பழகிப்போன மனத்திற்கு, முற்றிலும் வேறுவகை எழுத்தை வாசிக்க மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது. ஆயினும், நாவலின் முதல் பக்கத்திலேயே வந்து விடும் ஓலோன்புலாக்கின் ஓநாய்களும், அவற்றின் தீராப் பசியும் அடங்கா வெறியும், சகுனிக்கு பிரியமான ஜரன் ஓநாயின் தொடர்ச்சியாக அமைந்து இந்த நாவலைத் தொடர்ந்து வாசிக்கச் செய்தன.
இருபத்தோரு வயதேயான ஜென் சென், கலாச்சாரப் புரட்சியின் கட்டாயத்தின் பேரில், பழங்குடி மக்களோடு சேர்ந்து வாழ்ந்து அவர்களின் பழைய கொள்கைகளை அகற்றி, ‘புரட்சியைப் பூரணமாக்கிட’, மற்ற மாணவர்களோடு சேர்ந்து ஓலோன்புலாக் புல்வெளிப் பகுதிக்கு வந்து சேர்கிறான். மேற்கத்திய செவ்வியல் படைப்புகளோடு வந்து சேரும் ஜென் சென், நாடோடி இனக்குழுத் தலைவரான முதியவர் பில்ஜியிடம் தனது குருவைக் கண்டு கொண்டு, அவர் மூலம் மங்கோலிய மக்களின் வரலாறு, நாடோடி மக்களின் கலாச்சாரம், அவர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்கிறான். ஓநாய்களைப் பற்றிய பயம் தங்களது எலும்பிலேயே உறைந்திருக்கும் சீனனாக இருந்த போதும், பில்ஜியின் வழிகாட்டுதல் அவனை மேய்ச்சல் நில ஓநாய்களின் மேல் தீவிர வேட்கை கொள்ளச் செய்கிறது. அதன் விளைவாக, ஒரு ஓநாய்க்குட்டியைத் தானே எடுத்து வளர்த்து, ஓநாய்களைப் பற்றிய நேரடி அறிவையும், அனுபவத்தையும் பெறுகிறான். சீனாவின் ஹேன் இனக்குழுவின் மேலாதிக்கம் மற்றும் அதன் ராணுவ ஆட்சியானது, மேய்ச்சல் நிலத்தின் குலச்சின்னமாக இருக்கும், டெஞ்ஞர் என்ற சொர்க்கத்திற்குப் பிரியமான ஓநாய்களைக் கொன்றொழிப்பதின் மூலம் மேய்ச்சல் நில ஆன்மாவையும், அதைச் சார்ந்து வாழும் நாடோடி மக்களையும் சிதைக்கும் கதையை ஜென் சென் தனது பார்வையில் கூறிச்செல்கிறான்.
நாவலின் தொடக்கத்தில் இருந்து மீளமீளச் சொல்லப்படும் ஓநாய் மற்றும் மேய்ச்சல் நிலம் பற்றிய வர்ணனைகளும் விவரங்களும் ஒரு கட்டத்தில் படிப்பதற்கு சலிப்பை ஏற்படுத்திய பொழுது, “ஓர் இலக்கியப்படைப்பு கதை சுவராசியத்துக்காக எழுதப்படுவதில்லை” என்று கூறும் தங்களது இலக்கிய வாசகனின் பயிற்சி கட்டுரை, இந்த நாவலை வாசித்துத் தொகுத்துக்கொள்ள மிகவும் உதவியது.
‘மனிதனே பிரதானமானவன்’ என்ற மாவோவின் கொள்கை, ‘மேய்ச்சல் நிலமே பிரதான உயிர்; மனிதன் உள்ளிட்ட மற்ற யாவும், அதை ஒட்டி வாழும் சிற்றுயிர்களே’ என்று இயற்கையோடிசைந்து வாழும் நாடோடி மக்கள் கலாச்சாரத்தை அழித்து முன்செல்வதே நாவலின் மையம் எனத் தோன்றுகிறது. மற்றொரு பார்வையில், ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ்ந்து மிகையான நுகர்வினால் அவ்விடத்தின் வளங்களை எல்லாம் சுரண்டும் வேளாண் மக்களின் ஆதிக்கம், எத்தனை கடின வாழ்க்கைச்சூழலிலும் மேய்ச்சல் நிலத்தையும் அதன் புல்வெளியையும் பாதுகாக்க ஒவ்வொரு பருவகாலத்திற்கும் தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருக்கும் நாடோடி மக்களை வென்று அடிமைப்படுத்துவதைக் காட்டிச் செல்கிறது.
நாவல் நெடுகிலுமாகக் கூறப்படும் பல தகவல்கள் நேரிடையான பொருளைத் தாண்டி, குறிப்பால் வேறு பலவற்றை உணர்த்தும் படிமங்களாக வந்து கொண்டே இருக்கின்றன. நாவல் முழுதும் வாசித்து முடிந்த பின்னர் இத்தகைய படிமங்களே நினைவில் நீடித்து நிற்கின்றன. மேய்ச்சல் நிலத்தில் ஓநாய்கள் குறைந்து விட்டதும், திருடர்களாக இருந்த எலிகள் கொள்ளையர்களாக மாறி, மங்கோலியக் குதிரைகளையே கடிக்கும் துணிவு பெறுவது எந்தக் கலாச்சாரத்துக்கும், எக்காலத்துக்கும் பொருந்துவது. யான் கீயின் மனதைக் கொள்ளை கொண்ட அன்னப்பறவைகள் நீந்தும் ஏரி, வேளாண் மக்களின் குடியேற்றத்திற்குப் பின் காட்டு வாத்துக்களின் குட்டையாக மாறிப்போவது அதிநுகர்வின் விளைவையே காட்டுகிறது. ”அளவுக்கு மீறிய மக்கள் தொகை கொண்ட ஒரு இனத்தின் மிக முக்கியமான பிரச்சினை, உயிர் வாழ்ந்திருப்பதுதான். அழகியல் அணுக்களுக்கு உணவூட்டக்கூடிய சத்துக்கள் ஏதும் அங்கு மிச்சமிருப்பதில்லை” என்று ஜென் சென் சொல்வது ஹேன் இனத்தைப் பற்றி மட்டுமல்ல.
ஓலோன்புலாக்கின் ஓநாய்களுக்கு எதிரான போராட்டமே, மேய்ச்சல் நிலத்தை உயிர்த்துடிப்புடன் பல்லாயிரம் வருடங்களாக நிலைநிறுத்தியது. அதீத நுகர்வின் வெறியினால், நவீன ஆயுதங்களைத் துணைகொண்டு ஓநாய்களை அழித்தபின்னர், மேய்ச்சல் நிலத்தின் பசுமை, மங்கோலிய குதிரைகளின் போர்த்திறம் எல்லாம் தரம் குறைந்து போவது மட்டுமன்றி நாடோடி மக்களும் பெரும்பாலும் குடிக்கு அடிமையாகிவிட்டிருப்பது, புல்லை தவிர மற்ற யாவும் சிற்றுயிரே என்ற உண்மையை நிதர்சனமாக்குகிறது. நாவலின் தொடக்கத்தில் முதியவர் பில்ஜி, “அமைதியாகவும் நிம்மதியாகவும் தூங்க விரும்பும் மக்களால், மோசமான போர்வீரர்களையே உருவாக்க முடியும். ஓநாயுடன் போரிட வேண்டுமென்றால் நீயும் அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று ஜென் சென்னிடம் சொல்வது எவ்வளவு தீர்க்கதரிசனமான கூற்று. முதியவர் பில்ஜி மறைந்து இருபது வருடங்களுக்குள்ளாகவே, அழகிய அந்த மஞ்சள்நிற மேய்ச்சல் புல்வெளி அழிந்து, மஞ்சள்-டிராகன் புழுதிப்புயல் எழுந்து பீஜிங் முழுதும் மூடி மூச்சைத் திணறடிப்பது, தன் அழிவைத் தானே தேடிக்கொள்ளும் மனிதனின் அடங்கா விழைவின் சித்திரம் எனத்தோன்றுகிறது.
பில்ஜியின் வழிகாட்டுதலில் ஓநாய்களின் மேல் தீவிர வேட்கை கொள்ளும் ஜென் சென், தானே ஒரு ஓநாயை எடுத்து வந்து வளர்ப்பது, எத்தனை இடர்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது? தன் தந்தைக்கு நிகரான, குருவுமான பில்ஜி அத்தனை கோபம் கொண்டு தடுத்தபோதும், குழுமம் முழுதும் எதிர்த்த போதும் விடாப்பிடியாக அந்த குட்டி ஓநாயை வளர்ப்பது எதன் பொருட்டு, அதன் மூலம் எதனை அடைய நினைக்கிறான் ஜென் சென் என்று மனம் கேட்டுக்கொண்டே இருந்தது. இறுதியில் ஜென் சென் தன் பிரியத்துக்குரிய குட்டி ஓநாயைத் தானே அடித்துக்கொல்வது, வெண்முரசில் சகுனி தன் மானசீகக்குருவான ஜரன் ஓநாயை, தானே கொல்வதை நினைவுபடுத்தியது.
மேய்ச்சல் நிலப்புல்வெளியின், ஓநாய்களின், நாடோடி மக்கள் கலாச்சாரத்தின் அழிவை முற்றுணர்ந்த நிலையில், முதியவர் பில்ஜி வேதனையுடன் பாடும் இந்தப் பாடல், ஓநாய் குலச்சின்னம் நாவலின் சாரமாக என்றும் நினைவிலிருக்கும்.
“வானம்பாடிகள் கீதமிசைக்கின்றன, இளவேனிற்காலம் இங்கிருக்கிறது;
மர்மோட்டுகள் கீச்சிடுகின்றன, வண்ணப்பூக்கள் மலர்கின்றன;
சாம்பல் கொக்குகள் அழைக்கின்றன,மழை இங்கு பெய்கிறது;
ஒநாய்க்குட்டிகள் ஊளையிடுகின்றன, நிலா வானில் எழுகிறது.”
-சாரதி
Mountains’ Dialogue
அன்புள்ள ஜெ,
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ப்ரொமிதியஸ் ட்ரீமிங் என்ற கலை இலக்கிய இதழ் மலைகளின் உரையாடல் மொழியாக்கத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
அதனுடைய கண்ணி கீழே,
https://www.prometheusdreaming.com/mountains-dialogue
இக்கதையை நான் வாசித்தபோது இதிலிருந்த மாயத்தன்மை என்னைக் கவர்ந்தது. ஸ்ருதி என்று வேதம் அழைக்கப்படுகிறது. ஸ்ருதி என்ற சம்ஸ்கிருதச் சொல் கேட்கப்பட்டது என்ற பொருள் தரும். எங்கிருந்து கேட்கப்பட்டது. யார் அதைச் சொன்னார்கள் என்ற கேள்விகளின் நீட்சியாக அக்கதை அமைந்திருந்ததைக் கண்டேன்.
உங்களது சில கதைகளை மொழியாக்க வேண்டும் என்ற ஆவல் உந்தியபோது, இக்கதை இயல்பாகவே அவ்வரிசையில் அமைந்து விட்டது. இக்கதையை நான் எழுதியபிறகு என் மனைவி அனுவிடமும், நண்பர் பாலாஜி ராஜூவிடமும் காண்பித்துக் கருத்துக் கேட்டேன். என் மொழிபெயர்ப்பு முயற்சியில் இந்த இருவரின் பங்கும் இன்றியமையாது.
மொழியாக்கவும், வெளியிடவும் அனுமதி தந்தமைக்கு என் நன்றிகள்.
அன்புடன்
ஜெகதீஷ்குமார் கேசவன்
வெண்முரசில் மகரந்தம் -லோகமாதேவி
பொன்முத்தம்அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வெண்முரசு மீள் வாசிப்பிலிருக்கிறேன். எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிய திறப்புக்கள், புதிய அறிதல்கள் என்று தீராமாலே இருந்துகொண்டிருக்கிறது வெண்முரசு. இம்முறை வேர்களை, இலைகளை மகரந்தங்களை, மரங்களை எல்லாம் குறிப்பாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். முதற்கனலிலிருந்து துவங்கி முதலாவிண் வரையிலுமே பயணிக்கும் மகரந்தங்கள் மிக மிக முக்கியமான நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
முதற்கனலில் எட்டுவகை ஸ்ரீதேவியராக அறியப்படுகிற , விதைகளுக்குள் வாழும் தேவியான விருஷ்டி, வேர்களையும் மகரந்தங்களையும் தானே ஆள்பவள் என்கிறாள். வியாசருக்கு சுவர்ணவனத்தின் பறவை குடும்பத்தின் சிறு குஞ்சொன்று பூவின் மகரந்தத் தொகை போல இருக்கிறது
முதலாவிண்ணில் அழும் சிறுமதலையை மெல்ல தட்டியபடி அன்னை ‘ சிறு கரிச்சான் பைதலே, பாடுக குழலிசையின் இனிமையை. அவன் நீலமலர்க் காலடி படிந்த பூம்பொடிப் பொன்பரப்பே கூறுக, நீ கொண்ட மெய்விதிர்ப்பின் குளிரை’’என்று தாலாட்டுகிறாள்.
மென்முகில் சேக்கையில் துயிலும் சித்ரசேனனை சுற்றி அவன் தேவி சந்தியை பூத்த காட்டிலிருந்து மலர்மணத்தையும் மகரந்தங்களையும் அள்ளிக்கொண்டு வந்து பரப்பி அவன் துயிலுக்குள் இளம் இனிய கனவுகளை எழுப்புகிறாள்..
கிராதத்திலேயே மழையீரத்தில் கொன்றைகளுக்குக் கீழே உருவான கால் குழித் தடங்களில் பொன் பொடி என மகரந்தம் உதிர்ந்து கிடக்கிறது.
வண்ணக்கடலில் ஸ்தூனகர்ணன் ஆலய சுனை நீரை அள்ளி வீசி தன் உடலிலிருந்து மகரந்தப் பொடிகளையும் தேன் துளி களையும் களையும் துரியோதனன் முன்புதான் ஸ்தூனகர்ணன் தோன்றுகிறான்.
இமைக்கணத்தில் அத்ரிமலை முடி நோக்கிய பாதையில் சென்று கொண்டிருந்த சுகரின் முன்னால் எழுந்த விண்ணுரு நூறாயிரம் கோடி இடிகளென எழுந்த பெருங்குரலில் “நானே மாபெரும் அரசமரம். வானில் வேர் விரித்து மண்ணில் கிளையும் விழுதும் இலையும் தளிரும் மலரும் மகரந்தமும் பரப்பி நின்றிருக்கிறேன்” என்று முழங்குகிறது.
.இளைய யாதவனின் விழிகளினூடாக தாமரை இதழ்களுக்குள் வண்டு என.நுழைந்த யமி அதன் மகரந்த மையத்தை அடைகிறாள்.
இளைய யாதவர் விதுரரிடம் அஸ்வதந்த அருமணியை கொண்டு வரச்சொல்லுகையில் விதுரர் செல்லும் அந்த வைப்பறையின் காற்றில் வேப்பிலைச்சருகின் நாற்றமும் தாழம்பூம்பொடியின் மணமும், இருளின் மணமும் கலந்திருக்கிறது.
மாமலரில் முண்டன். மரத்தில் மலர்ந்த அசோகசுந்தரியை பற்றிச் சொல்லும்போது பாற்கடலை விண்ணவரும் ஆழுலகோரும் சேர்ந்து கடைந்தபோது எழுந்த கல்பமரத்தின் அலை வளைவு தண்டாக, நுரைகள் தளிரென்றாக, துமிகள் மகரந்தம் என்று மாற உருக்கொண்டெழுந்ததென்கிறான்
வெண்முகில் நகரத்தில் கிருஷ்ணனுடன் பகடை ஆடி சலிக்கும் சகுனி கற்பனையில் அலையிலெழும் குதிரையில் ஏறி வருகிறது ஐந்து கைகள் கொண்ட ஒரு மலர். அம்மலர் வட்டம் சிலந்திவலை ஆகி, சிலந்தி எட்டு கைகளுடன் நச்சுக்கொடுக்குகளுடன் எழுந்து, புல்லிவட்டமாக சிதர் விரித்து மகரந்தம் காட்டுகிறது
மகரந்தம்நீர்ச்சுடரில் மகனிடம் எப்படியும் ஒருமுறை பேசத்துடிக்கும் சுபத்ரையின் கண்களில் தெரியும் இரட்டை வெண்புழுக்களில் ஒன்றாக அபிமன்யூ நெளிவது ஒரு தாமரை மலரின் மகரந்த பீடத்தில்தான்
தன்மேல் பெருங்காதல் கொண்ட சச்சியைக்காண சிட்டுக்குருவியென அவளிடம் வந்துகொண்டிருந்த இந்திரன் மீது மணந்ததும் மகரந்தம் தான்
கல்பொருசிறு நுரையில் மலையன் தயை என்னும் சிறுமியுடன் இளையாயாதவரை தேடி மந்தரம் எனும் ஆயர்சிற்றூரை அடைகையில் கடக்கும் காட்டின் தரையையே பொன்னிற விரிப்பாக காட்டுவதும் உதிர்ந்த பூம்பொடிகள் தான்
களிற்றுயானை நிரையில் பாஞ்சாலியின் அறையின் மலர்கள் இதழ்கள் விரித்து, பூம்பொடி நிறைத்து காத்திருந்த ஓவிய மலர் வெளியில் யுயுத்ஸு சிறகு முளைத்த சிறுவண்டென பறந்தலைகிறான்
தீயின் எடையில் அன்னை முறை கொண்டவளை புணர்ந்த ஸ்தூனகர்ணனிடம், ஸ்தூனன் ’’கிருதயுகத்தில் மானுடர் பூம்பொடி படர்ந்திருந்தாலும் மென்சேறு பூசப்பட்டிருந்தாலும் அசையாத பாறைகள் போலிருந்தனர்’’ என்கிறான்.
பைன் மகரந்தப்பொடிவெய்யோனில் இந்திரபிரஸ்தத்திற்கு வந்த கர்ணன் அரண்மனைக்கு செல்லுகையில் அவைபுகும் வழியில் காணும் வெண்புரவியின் மென்மயிர் பரப்பில் வெயிலின் செம்மை பூம்பொடி உதிர்ந்தது போல பரவியிருந்தது என்னும் வெகு நுட்பமான இந்த விவரணை கற்பனை செய்து பார்க்கையில் பேரழகாக இருந்தது.
இருட்கனியில் இறந்த வெய்யோனை வணங்கும் அஜர் உரையிடைப்படும் பாட்டில் வரும் துயர் கொண்டிருக்கும் நீலத்தாமரைமலர்.’’என் இதழ்களுக்கு ஒளியாகிறீர்கள். என் பூம்பொடியில் நறுமணம் நிறைக்கிறீர்கள். என் அகக்குமிழில் தேன் என கனிகிறீர்கள்’’ என்கிறது கதிரவனிடம்.
இப்படி பல முக்கியமான தருணங்களில் மகரந்தங்கள் வெண்முரசில் குறிப்பிட பட்டிருக்கிறது.
வீட்டில் ஒரு கத்தி சவுக்கு மரம் இப்போதுதான் மலரத் தொடங்கி இருக்கிறது. இலைகளே தெரியாமல் மரம் முழுவதும் பூத்திருக்கும் மஞ்சள் மஞ்சரிகளிலிருந்து நுண் மலர்களும்,மகரந்த பூம்பொடியும் மழைபோல பொழிந்து வீடும் வாசலும் மஞ்சள் குளித்து கொண்டிருக்கிறது. ’மஞ்சுளா’ என்று மரத்திற்கு பெயரும் வைத்தாயிற்று. ஒரு மரத்திற்கு இத்தனை மகரந்தம் ஏராளம்தான் ஆனாலும் அடுத்த சந்ததிகளை உறுதிசெய்ய, காற்றில் நீரில் பரவும் போது, வீணாய் போகவிருக்கும் மகரந்தங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தேவைக்கும் அதிகமாக, இப்படி ஏராளமாக மகரந்தங்களை உருவாகுகின்றன தாவரங்கள்.
தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை என்பது காதல் செய்வதுதான். பிற உயிர்களை போல தன் இணையை தேடி செல்ல முடியாமல், வேர்களால் நிலத்துடன் பிணைக்கப்பட்டு இருப்பதால் தாவரங்களில் இணையைத் தேடி காதலுடன் பயணிப்பது மகரந்தங்களே. ஆண் மரங்களிலிருந்து மகரந்தம் பெண் மரங்களின் மலர்களை தேடி அதிகபட்சமாக 20 கிலோ மீட்டர்கள் வரை பயணிப்பதும், அப்போது பெண் மலர்கள் கருவுறுதலுக்கு தயாராக இருந்து மகரந்தத்தை வாங்கிக்கொள்ளுவதும். காற்றில் கலந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பிற தாவரங்களின் மகரந்தங்களினால் பெண்மலர்கள் சூல் கொள்ளாமலிருக்க தேவையான தடுப்பு ஏற்பாடுகளை செய்துகொள்வதும், பலவீனமான மகரந்தங்கள் வந்துசேர்கையில் அவற்றை முளைக்க விடாமல் பெண்மலர்களே அழித்துவிடுவதுமாய் கருவுறுதலின் ஏற்பாடுகளை மலர்கள் அதீத கவனத்துடன், புத்திசாலித்தனமாக மேற்கொள்கின்றன. ’’Pollination Romance’’ என்றுதான் நான் கற்பிக்கையில் குறிப்பிடுவேன்.
[image error]நுண்ணோக்கியில் மகரந்தங்கள்தாவரங்களிலும் தென்னையை போல ஒரே பாளையில் ஆண் பெண் மலர்கள் தனித்தனியாகவும், செம்பருத்தியைப்போல ஒரே தாவரத்தில் இருபால் மலர்களும், பப்பாளி, ஜாதிக்காய் மரங்களைப் போல ஆண்பெண்மரங்கள் தனிதனியே இருப்பதும் பலருக்கு தெரிவதில்லை.
மலர்கள் கொண்டிருக்கும் மரங்களனைத்தும் கனிதரும் என்று நினைக்கிறார்கள் அப்படி கனி தராதவை மலட்டு மரமென்று வெட்டப்படுகின்றன.
பலர் வீடுகளில் பப்பாளியின் ஆண் மரங்களை அது காய்க்காத மரம் என்று வெட்டி விடுகிறார்கள். ஒரே ஒரு ஆண் மரமாவது, எங்கோ ஓரிடத்தில் இருந்தால் தால் அதன் மகரந்தங்கள் தேடிச்சென்று காதல் கொண்டபின், அந்த ஊரின் அனைத்து பப்பாளி மரங்களும் கனி கொடுக்கும். இங்கு வீட்டில் இருந்த ஆண் மரமொன்றை வெட்டிவிட சொல்லி, தோட்டத்தை சுத்தப்படுத்த உதவும் லக்ஷ்மி சொன்னபோது நான் அவளிடம் இந்த ஆண் பெண் காதல் கதையை விளக்கினேன். முகவாயில் கைவைத்துக்கொண்டு ’’மனுஷங்க மாதிரியே இதிலயும் ஆம்பளை, பொம்பளை இருக்குதுங்களே’’ என்று வியந்தாள்.
உலகின் பூக்கும் தாவரங்களில் 330,000 தாவரங்களுக்கு பாலினப்பெருக்கம் செய்ய மகரந்த சேர்க்கை அவசியமாக இருக்கின்றது. இதன் பொருட்டு மகரந்தங்கள் மிகச் சரியான பருவத்தில் வெளியாகி, அவற்றின் இணையை தேடி பயணிப்பதும், அவற்றை அடையாளம் கண்டுகொள்வதும் , மிக ஆச்சர்யம் அளிப்பவை .இந்த காதலுக்கு நீரும், காற்றும், பறவைகளும் ,தேனீக்களும், குளவிகளும், வண்டுகளும், எறும்புகளும், விலங்குகளும் துணை செய்கின்றன.
காற்றினால் நிகழும் மகரந்த சேர்க்கையும் வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கிறது. கிராதத்தில் அர்ஜுனனிடம் காளன் ’’அலை அலையென எழுந்துவரும் முடிவிலா காற்றே, பருவங்களைச் சமைத்து, மலர்களை முகிழவிழச் செய்து. மகரந்தங்களால் சூலுறச்செய்து காயும் கனியும் ஆக்குகிறது என்கிறான்
பூச்சிகளால் நிகழும் மகரந்த சேர்க்கையும் ஒரு அழகிய கவிதையை போல சொல்லப்பட்டிருக்கிறது
இளைய யாதவர். ப்த்ரரிடம் ” “மெல்லிய சிறுவண்டுகளே மரத்தைக் காப்பவை, “ஆகவேதான் யானை உண்ணும் கிளையிலும் மான் உண்ணும் இலைகளிலும் பறவைகள் உண்ணும் கனிகளிலும் தன் சாறை மட்டும் வைத்திருக்கும் மரம் வண்டுகள் நாடிவரும் மகரந்தத்தில் தன் கனவை வைத்திருக்கிறது. தான் செல்ல விரும்பும் திசை நோக்கி கைநீட்டி மலர்க்குவளைகளில் மகரந்தப்பொடி ஏந்தி நின்றிருக்கும் பெருமரங்களை காண்பீர்கள்!”என்கிறார்,
[image error]சூல்முடியில் முளைவிடும் மகரந்தங்கள்தன் மகரந்த சேர்க்கைக்கான எல்லா வசதிகளும் இருக்கையில், மலர்களின் மெல்லிய அசைவிலேயே மகரந்தம் பெண் மலர்களின் மீது பொழியும் என்றாலும் வீரியமிக்க சந்ததிகளை இம்முறையில் உண்டாக்க முடியாதென்பதை அறிந்து, அயல்மகரந்த சேர்க்கையை விரும்பும் தாவரங்களின் அறிவை என்னவென்று சொல்வது?. இருபால் மலரான செங்காந்தளை பார்த்தால் தெரியும் தன் சூலக முடியில் தனது மகரந்தங்கள் விழுந்துவிடக்கூடாதென்பதற்காக, ஆண் பகுதியிலிருந்து, சூலக முடியினை முடிந்த வரையிலும் தள்ளி அமைத்திருக்கும்
ஆண் பகுதியிலிருந்து மகரந்தம் எளிதில் வெளிவராத சில குறிப்பிட்ட வகை குழல் மலர்களில், வண்டுகள் தங்களது உடலை மலர்களில் வேகமாக உரசி மகரந்தத்தை வெளிவர செய்து தங்கள் உடம்பில் எடுத்துக்கொண்டு போகும் Buzz pollination என்பதுவும் தாவரவியலின் ஆச்சர்யங்களில் ஒன்று. இந்த உரசலின் அலைவரிசை மிகத்துல்லியமாக இருந்தால் மட்டுமே இம் மலர்களிலிருந்து மகரந்தம் வெளியே வரும். உலகின் 9 சதவீத மலர்களில் இந்த உரசல் தேவையாக இருக்கிறது.உரசலின்போது மகரந்தம் வண்டுகளின் உடலின் அடிப்பாகங்களிலும், கால்களுக்கு இடையிலும் பீய்ச்சி அடிக்கப்படுகின்றது, மகரந்த பொடி பூசிய இவ்வண்டுகள் பிற மலர்களில் அமரும்போது எளிதாக காதல் நடக்கின்றது. இந்த பீய்ச்சியடிக்கும் வேகமானது புவி ஈர்ப்பின் வேகத்தைவிட 30 மடங்கு அதிகமென கணக்கிடப்பட்டிருக்கிறது.
இவ்வண்டுகள் அமர்ந்து சென்ற மலர்களின் மீது அடர் மஞ்சள் மகரந்த துணுக்குகள் பொன்முத்தங்களென அமைந்திருக்கும்.நம் கண்ணுக்கு தெரியாத இந்த காதலின் போது ஆண் பெண் தாவரங்கள் தங்களுக்கிடையே சரியான இணையை தேடுவதும், சமிஞ்சை அளிப்பதையும், பின்னர் பிழையின்றி அதே இனத்தின் பெண் மலரை கண்டடைவதையும் குறித்த பல ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
பிற உயிரினங்களில் நடப்பது போலவே ஒன்றுக்கும் மேற்பட்ட மகரந்தங்கள் பெண் மலரில் விழுந்து,அனைத்துமே முளைத்து ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு பெண் முட்டையை அடைந்து விதிக்கப்பட்ட ஒன்றே ஒன்றின் குழல் வெடித்து விந்து வெளியேறி, இணைந்து கருவுறுதல் நிகழ்கின்றது.
மகரந்தம்மழைப்பாடலில் கர்ணனை கருக்கொண்டிருக்கும் பிருதை அனகையிடம் . நான் குந்தியல்ல, யாதவப்பெண்ணான பிருதை. நான் விழைந்த ஆணின் கருவை ஏந்தியிருக்கிறேன். மலர்கள் மகரந்தங்களை ஏந்துவது போன்றது மங்கையரின் கரு என இளமையிலேயே கேட்டு வளர்ந்தவள் நான். எதற்காக நான் அஞ்சவேண்டும்? எனக்கேட்கிறாள்.
பாலையின் மகரந்தச்சேர்க்கை மற்ற நிலப்பரப்புக்களை விட சிறப்பானதாயிருக்கும். அங்கு வரும் பூச்சிக்களின் எண்ணிக்கை குறைவென்பதால் வரும் பூச்சிகளுக்கு பரிசாக இனிப்புக்களையும் எண்ணெய்த்துளிகளையும் அமினோ அமிலங்களையும் மலர்கள் மகரந்தக்குவையின் மீதே வைத்திருக்கும்.
பாலைப்பெருமலர்வு ( Desert super bloom ) எனப்படும் அரிய தாவரவியல் நிகழ்வில் வழக்கத்துக்கு மாறான மிக அதிக மழைப்பொழிவு இருக்கும் போது, முந்தைய மழையில் உருவாகி பாலை மணலில் புதைந்திருக்கும் விதைகள் முளைத்து மிக அதிக அளவில் பாலைத் தாவரங்கள் ஒரே சமயத்தில் மலர்ந்து, மகரந்தம் பரப்பி, சூல்கொண்டு, மீண்டும் ஏராளமான விதைகளை உருவாக்கும். கலிஃபோர்னியா பாலைகளில் பத்து ஆண்டுகளுக்கொருமுறை இம்மலர்வு நிகழும். 1990களுக்கு பிறகே பாலை பெருமலர்வென்னும் இந்த சொல் புழக்கத்தில் வந்தது
எழுதழலில் சந்திரசூடருடன் அரண்மனைக்கு செல்லும் வழியில் தான் இளைய யாதவரின் மைந்தர்களுடன் வளர்ந்ததை நினைவுகூறும் அபிமன்யூ “அவருக்கு எத்தனை மைந்தர்?” என்று கேட்கும் பிரலம்பனிடம் // “ஏராளம்… அவர் பாலையில் மகரந்தம் விரிந்த மரம். காற்றெல்லாம் பரவினார் என்கிறார்கள் சூதர்கள்”// பாலைமரத்தின் மகரந்தம் காற்றில் சென்று இலைகளிலும் பாறைகளிலும்கூட படிந்திருக்கும். அடுத்த காற்றில் எழுந்து பரவும். அழிவதே இல்லை. அந்த மரம் அழிந்தபின்னரும்கூட காற்றிலிருக்கும் அதன் மகரந்தம் மலர்களை கருவுறச்செய்யும்.” என்கிறான்
இளையயதவரின் காதல்களுக்கு மகரந்தத்தை ஒப்புமையாக்கி அவரை உளத்தலைவராக ஏற்றிருக்கும் பல்லாயிரம் பெண்களையும், அவரின் பதினாறாயிரத்தெட்டு மனைவியரையும், அவர்களின் லட்சம் மைந்தர்களியும் குறிக்கும் இந்த வரி எத்தனை அழகானது!
மகரந்தக்குளியல்கார்கடலில் போர் சூழ்கையொன்றை குறித்த விவாதத்தில் கர புஷ்பம் என்றொரு தாமரை சூழ்கையை அஸ்வத்தாமன் இப்படி விவரிக்கிறான் ’’தேன் நாடி வண்டுகள் தாமரைக்குள் வருகின்றன. மையத்திலுள்ள மகரந்தத் தாள்களுக்கு அடியில் வந்தாலொழிய அவற்றால் தேனருந்த இயலாது. அங்கிருந்து அவை எளிதில் பறந்தெழ இயலாமல் தேனும் பூம்பொடியும் தடுக்கும். இதழ்கள் ஒன்றுடன் ஒன்றுகூடி குவிந்து வண்டை சிறைப்படுத்தும். நாம் வகுக்கும் சூழ்கையில் அர்ஜுனன் அல்லது பீமன் விழ வேண்டும்//என்கிறான். மலர்பொறி சூழ்கை அது. தாமரையினுள்ளிருக்கும் மலரமுதை அருந்தி, அங்கிருக்கும், மித வெப்பத்தில் மதிமயங்கி, வண்டுகள் உள்ளேயே இரவெல்லாம் சிறைபட்டு பின்னர் காலையில் வெளியே வருவதை பல பழந்தமிழ்பாடல்கள் குறிப்பிட்டிருக்கின்றன.
இயற்கையிலேயே Trap blossoms எனப்படும் மலர்ப்பொறிகள் தாமரையல்லாத மலர்களிலும் உண்டு. சில கொடித்தாவரங்கள் நெருக்கமாக ஒன்றையொன்று தழுவி கொண்டிருக்கும் மலர் மஞ்சரிகளை கொண்டிருக்கும், அவற்றை தேடி வரும் பூச்சிகளை அந்த மஞ்சரிகளுக்குள்ளேயே சிறிது நேரம் வெளியேற முடியாத வகையில் பிடித்து வைத்துக் கொண்டு, பின்னர் மகரந்தம் அவற்றின் உடல் முழுக்க பூசப்பட்ட பின்னர் அவற்றை விடுவிக்கும்
மலர்களிலிருந்து மலரமுதினை (Nectar) மட்டுமல்லாது மகரந்தங்களையும் பல பூச்சிகள் உண்ணும். சொல்வளர் காட்டில் இளைய யாதவர் பத்ரரிடம் ’’மலர்கொண்டு நிற்கும் மரத்திலிருந்து மகரந்தத்தை கொண்டு செல்கிறது சிறுவண்டு. வேரும் கிளைகளும் இலைகளும் மலர்களும் கொண்ட அந்த மரத்தை அது மறுக்கவில்லை. அம்மரத்தின் நுண் சாரத்தையே அது கொண்டு செல்கிறது, அந்த மரத்தை அது அழிவற்றதாக்குகிறது. என்பார்.
ஒரு மரத்தின் நுண்சாரமான மகரந்தத்தில் அபரிமிதமான சத்துக்கள் அடங்கி இருப்பதால் பல நாடுகளில் தேனைப்போலவே மகரந்தங்களும் சேகரிக்கப்பட்டு, மனிதர்களுக்கு உணவாகின்றது. பைனஸ் மகரந்தங்கள் இவற்றில் மிக பிரபலமானது. கொரிய புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஆண்டுக்கொன்றென நீள ஸ்கேல் போன்ற அட்டையில் பொதிந்திருக்கும் Dasik சிறப்பு பிஸ்கட்டுகள் பைன் மகரந்தங்களை கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது.
பூச்சிகளும் மலரமுதுடன் மகரந்தங்களையும் உண்ணும், அவற்றை சேகரித்து கூடுகளுக்கு எடுத்துச்செல்லும். மகரந்தத்தை சேகரிக்கும் கூடை போன்ற அமைப்பினை ( pollen Basket ) பல வண்டுகளும் தேனீக்களும் பின்னங்கால்களில் கொண்டிருக்கின்றன. இன்னும் சில பூச்சி இனங்கள் மகரந்தத்தை சேகரிக்க உடலின் பின் பகுதியில் அடர்ந்த முடி அமைப்பை கொண்டிருக்கும். மகரந்தங்களை உண்ணும் உயிர்கள் Palynivore எனப்படுகின்றன.
மகரந்தக்கூடைதேனீக்களை வளர்த்து தேன் சேகரிப்பவர்கள் தேன் கூடுகளின் பின்புறம் தேனீக்கள் நுழைகையில் அவற்றின் உடலில் இருந்து மகரந்தங்களை மட்டும் பிரித்தெடுக்கும் சல்லடைப் பொறிகளை வைத்திருப்பார்கள்.வளர்ந்த நாடுகளில் பழப்பண்ணை களில் தேவைப்படும் தேனீக்களை பண்ணைக்குள்ளேயே ஆயிரக்கணக்கில் கூடுகளில் வளர்க்கும் கட்டுப்படுத்தப்பட்ட மகரந்த சேர்க்கை நடத்தவென சிறப்பு தொழிநுட்பங்களும் தற்போது கடைப்பிடிக்கப்படுகின்றன.
மலருயிரியல் எனப்படும் Floral biology யின் துணை அறிவியலான Anthecology, என்பது மகரந்த சேர்க்கையை, அதற்கு துணைபோகும் உயிரினங்களை, இவற்றிற்கிடையேயான தொடர்புகளை, புரிதல்களை பற்றிய அறிவியல். மகரந்த துகள்களை பற்றிய பிரத்யேக அறிவியல் palynology எனப்படுகிறது.
மகரந்த சேர்க்கையின் முக்கியதுவமறிந்த பல நாடுகளில் இந்த பூச்சிகளின் வழித்தடங்கள் பாதுகாப்படுகிறது முதன் முதலில் மகரந்த வழித்தடங்கள் (pollinator corridors ) என்னும் சொல்லை சூழலியலாளர் ஃப்ளெமிங் (Ted Fleming ) 1993’ல் உருவாக்கினார். வலசை செல்லும் சிறு பறவைகளும் பூச்சி இனங்களும் மகரந்த சேர்க்கை செய்தபின்னர் திரும்பி செல்லும் பயணவழியில் சோர்வடையாமல் இருக்க மகரந்தம் கொண்டிருக்கும் மலர்கள் அவற்றிற்கு கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றை முன்னரே சேமித்து வைத்திருந்து அளிக்கின்றன. காலநிலை மாற்றங்களினால் இந்த மகரந்த வழித்தடங்களில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் மாற்றம் அல்லது சேதம் பல தாவரங்களின் இனப்பெருக்கத்தை நேரடியாக பதிகின்றது.இவ்வழித்தடங்களில் இருக்கும் தாவரங்களும் அவற்றில் அடுத்தடுத்து மகரந்த சேர்க்கையும்,கருவுறுதலும் நிகழும் காலங்களும், அவற்றிற்கு உதவும் பூச்சி இனங்களும் குறித்த ஆய்வுகள் மிக முக்கியமானவை.
இவ் வழித்தடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் ஆக்கிரமிப்பு தாவரங்களினாலும், பல தாவரங்களின் பருவம் தவறிய மலர்தலினாலும் பல வழித்தடங்கள் நிரந்தரமாக அழிந்துவிட்டதை காட்டுகின்றன. மகரந்த சேர்க்கை இல்லையெனில் கருவுறுதலும், விதை உருவாதலும், அடுத்த சந்ததியும் இல்லாமல் போகிறது.
மகரந்த சேர்க்கைக்குதவும் உயிரினங்கள் மற்றும் மகரந்த வழித்தடங்களின் அழிவு மனிதர்களின் உணவு பாதுகாப்பை கேள்விக்குறியாகும் காலம் வெகு சமீபத்தில் தான் இருக்கிறது என்கிறார்கள் சூழலியலாளர்கள்
பல அமெரிக்க பழங்குடியினர்களில் பலிச் சடங்குகளில் பலி விலங்கின் மீது நாம் மஞ்சள் நீர் ஊற்றுவது போல மகரந்தப்பொடியை தூவும் வழக்கம் இருக்கிறது. அரிஸோனா மற்றும் மெக்ஸிகோ பழங்குடியினர் மகரந்தத்தால் பூசப்படுகையில் உடல் புனிமடைவதாக நம்புகின்றனர்.
பெரும்பாலான பூச்சியினங்களுக்கு மஞ்சள் நிறம்மட்டுமே கண்ணுக்கு புலப்படும் என்பதால்தான் மகரந்தங்கள் பொதுவாக மஞ்சளில் உருவாக்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட வகை பூச்சியினங்ளுக்காக இளநீலம் வெள்ளை பச்சை. சிவப்பு உள்ளிட்ட பல நிறங்களிலும் மகரந்தங்கள் உருவாகின்றன.
பிற உயிரினங்களில் ஆண் பெண்ணை கவர பிரத்யேகமான அழகும், இறகும் ,அலங்காரங்களும், நிறங்களும் கொண்டிருப்பது போலவே, மனிதனின் கண்ணுக்கே தெரியாத மின்னணு நுண்ணோக்கியில் மட்டுமே காணக்கிடைக்கும் மகரந்தங்களும், அவற்றின் மேற்புறத்தில் இருக்கும் அழகிய சிற்பங்களின் நுண் செதுக்கல்களை போன்ற வடிவங்களும், நிறங்களும் இருக்கின்றன. நுண்ணோக்கிகள் கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால் நம்மால் பார்க்க முடியாமல் போயிருக்கும் மகரந்தங்களின் இப்பேரழகை குறித்து சமீபத்தில் நீங்கள் பாலுறவின் ஆன்மீகத்தில் சொல்லியவற்றை வாசிக்கையில் நினைத்துக்கொண்டேன்,
// நீங்கள் ‘பார்ப்பதற்காக’ அல்ல. ஒட்டுமொத்தமாக ஒரு மெய்மையைச் சிற்பமாக்கும் பொருட்டு அவை அங்கே செதுக்கப்பட்டுள்ளன. எவருமே பார்க்கவில்லை என்றாலும் ஆலயம் குறைவுபடுவதில்லை. பாருங்கள், எவருமே பார்க்கமுடியாத இடங்களிலெல்லாம்கூட சிற்பங்கள் நிறைந்திருக்கும். சில ஆலயங்களில் மண்ணுக்கு அடியில்கூட சிற்பங்கள் புதைக்கப்பட்டிருக்கும். அவை அந்த ஆலயத்தின் இயல்பான நுண்கூறுகள், அவ்வளவுதான்.அங்கே அவை இருப்பது மனிதனின் தேர்வு அல்ல. மனிதன் விலக்கக்கூடுவதும் அல்ல. அது படைப்பின் பகுதி. இயற்கையின் பகுதி. நன்று தீது என்பதற்கு அப்பாலுள்ளது// எனக்கு மகரந்தங்களின் அழகை காண்கையில் தெய்வ தரிசனமாகவேதான் தோன்றுகிறது.
(மகரந்தங்களின் பல அழகிய புகைப்படங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்-Awesome Microscope Images of Pollen Grains (17 pics) – Izismile.com )
அன்புடன்
லோகமாதேவி
August 28, 2021
சவக்கோட்டை மர்மம் – சிறுகதை
நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் தக்கலை என்ற ஊர் இருக்கிறது. இதற்கருகே உள்ள பத்மநாபபுரம் கோட்டையையும் அரண்மனையையும் தமிழ்த்திரைப்படங்களில் பலர் பார்த்திருக்கலாம். அங்கிருந்து திருவட்டாறு போகும் பாதையில் குமாரபுரம் என்ற கிராமத்தின் அருகே ஒரு குன்றின்மீது இன்னொரு கோட்டையையும் முற்றிலும் அழிந்துபோன ஒரு அரண்மனையின் இடிபாடுகளையும் இன்றும் நாம் காணலாம். இது ‘சவக்கோட்டை’ என்று கூறப்படுகிறது. நாற்புறமும் ரப்பர்க் காடுகள் மண்டி, அமைதியில் விழுந்து கிடக்கிறது. திருவிதாங்கூர் கொட்டாரம் பண்டிதர் ‘அச்சு மூத்தது’ அவர்களின் ஒழுங்கற்ற குறிப்புகள் – சரித்திரமும் ஐதீகமும் இக்காலகட்டத்தில் வேறுவேறாகக் கருதப்படவில்லை – இக்கோட்டையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
மார்த்தாண்டவர்மா மகாராஜா (1729) வின் காலகட்டத்திற்கு முன் திருவிதாங்கூரின் பலபகுதிகளில் சுதந்திரமான மாடம்பிகள் பலர் தங்களை மன்னர்களாக பிரகடனப்படுத்தி பலகாலம் ஆட்சி செய்திருந்தார்கள். அவர்களில் ஒருவரான குமாரபுரம் கரைமாடம்பி பாறைக்கல் உதயன்தம்பி (தன்னை இவர் அவிட்டம் திருநாள் பாலராமவர்மா மகாராஜா என்று அழைத்துக் கொண்டதாகத் தெரிகிறது) இதைக் கட்டினார் என்று தெரிகிறது. அழகிய பூமுகம், கொட்டியம்பலம், சபாமண்டபம் மற்றும் களியரங்கு ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும்: சுத்தமான வெண்தேக்கு, ஈட்டி சந்தன மரங்களினால் அபூர்வமான சிற்ப வேலைப்பாடுகள் நிரம்ப அமைக்கப்பட்டதாகவும் இந்த அரண்மனை இருந்திருக்கிறது. இதைக்கட்ட பொன்னுமங்கலத்தைச் சேர்ந்த மூத்தாசாரி கொச்சுச்சாத்தன் தலைமையில் பன்னிரண்டாண்டுகால உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது.
‘குமாரபுரம் அம்மவீடு’ என்று இது அப்போது அழைக்கப்பட்டிருக்கிறது. பொன்மனை தெற்கு மனையிலிருந்து இரண்டு கன்னிகைகளை தானமாகப் பெற்றுக்கொண்டு பாலராமவர்மா மகாராஜா இந்த அரண்மனையில் ஒரு ஆவணிமாதம் (சிங்ங மாதம்) முதல் தேதி குடியேறியதாக செவிவழிச் செய்தி சொல்கிறது. காலம் உத்தேசமாக மார்த்தாண்டவர்மா மகாராஜாவிற்கு முன்னூறு வருடங்கள் முன்பாக இருக்கலாம். காலக்கணக்கெல்லாம் இப்போதைய விஷயம். அன்றெல்லாம் காலம் தேங்கிக்கிடந்தது.
ஐதீகக் கதைகளின்படி இரவு தேவியருடன் பள்ளிநித்திரை கொண்டிருந்த மகாராஜா வினோதமான குரல் ஒன்று தன்னிடம் பேச முயற்சிப்பதை உணர்ந்து பதறியதாகவும், தேவியரும் அக்குரலைக்கேட்டு பயந்து அலறியதாகவும், இது பெரிய பதற்றத்திற்கு காரணமாக அமைந்ததாகவும் அறிகிறோம். அந்தக் குரல் சிலசமயம் உணர்ச்சி வசப்பட்டுக் கூவுவதாகவும், சிலசமயம் அரற்றலாகவும், சிலசமயம் மௌனமான மந்திர உச்சாடனமாகவும் இருந்தது. அது ஆண்குரலோ பெண்குரலோ அல்ல. மனிதத் தொண்டையிலிருந்து வரும் குரலாகவே இருக்கவில்லை என்று திட்டவட்டமாக குறிப்பிடப்படுகிறது. பிரசனம் வைத்துப் பார்த்த அனந்த நாராயணன் போற்றி அரண்மனையில் துஷ்ட ஆவிகளின் இருப்பு உள்ளதாகக் கண்டுபிடித்தார்.
வயலில் வேலை செய்யும்போது விழுந்து இறந்த புலையர்களின் ஆவிகளுக்கு பலி தரும் இடமாக இக்குறிப்பிட்ட குன்று இருந்து வந்ததாகவும், பலி ஏற்க வந்து ஏமாந்த ஆவிகளின் குரலே அது என்றும் ஜோசியர்கள் குறிப்பிட்டார்கள். விரிவான யாகங்களும் மாந்திரிக தாந்திரிக கர்மங்களும் நடத்தப்பட்டன. பித்ரு பூஜை, குலதெய்வ பூஜை, துஷ்ட நிக்ரக பூஜை, சாத்தன் பூஜை ஆகியவையும் நிகழ்த்தப்பட்டன. ஆனால் அந்தக்குரல் தொடர்ந்து பள்ளியறையில் கேட்டபடியேதான் இருந்தது. கொச்சு சாத்தன் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டான். அவன் அரண்மனைக்கு இடம் பார்த்ததன் கோளாறுதான் அது என்று குற்றம் சாட்டப்பட்டான். தேவாசுர சக்திகளில் எதுவோ நடமாடும் சூக்குமமான பாதை அக்கட்டிடத்தால் முறிக்கப்பட்டுவிட்டதாகக் கணிக்கப்பட்டது.முன்பு காயங்குளம் அருகே ஒரு மன்னனுக்கு இப்படி ஆனதனால் அவன் வம்சமே அழிந்தது என்று நினைவு கூரப்பட்டது. கழுவில் ஏற்றப்பட விதிக்கப்பட்டு சக்கரக்கல்லில் கட்டிவைக்கப்பட்டிருந்த கொச்சு சாத்தன் ஒரு நாள் அவகாசம் கோரினான். அதற்குள் பிழையைக் கண்டுபிடித்துத் திருத்திவிடுவதாகக் குறிப்பிட்டான். அவனை விட்டால் கட்டிட சூக்குமம் அறிந்த எவருமில்லை என்பதால் அனுமதி தரப்பட்டது.
இரவெல்லாம் கட்டிடத்தில் அலைந்த கொச்சு சாத்தன் விடிகாலையில் கூச்சலுடன் சூக்குமத்தைக் கண்டடைந்தான். பிற்பாடு அவன் சுவடியில் எழுதி வைத்த குறிப்புகள் மற்றும் கணக்குகளின்படி (இவை ‘பத்மநாப சில்ப ரத்னாவளி என்ற பெயரில் பிற்பாடு இவன் வம்சத்தை சேர்ந்த ‘அனந்தன் மூத்தாசாரி’யால் வடமொழியில் நூல் வடிவம் தரப்பட்டு, திருவனந்தபுரம் மகாராஜா சுவாதி திருநாளின் அரச சபையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நூலின் ஏட்டுப்பிரதி ஸ்ரீ சுவாதி மியூசியத்தில் இன்றும் உள்ளது) நிகழ்ந்தது இதுதான் என்று தெரிகிறது.
குமாரபுரம் குன்றைச் சுற்றி இருபது கிராமங்களும் வயல்வெளிகளும் சந்தைகளும் எண்ணற்ற சேரிகளும் உள்ளன. இங்கிருந்து எழும் ஒலிகள் பாறைகள் மற்றும் கோட்டை சுவர்கள் வழியாக எதிரொலித்தும் மறுஎதிரொலித்தும் அரண்மனையின் பிரதான வளாகத்தில் திரண்டு பள்ளியறைக்குள் அதிர்கின்றன. பள்ளியறையின் கூரை முகடு உட்குழிந்து கிண்ண வடிவாக இருப்பதால் இவ்வதிர்வுகள் குவிந்து தெளிவான ஒலியாகவும் சிலசமயம் சொற்களாகவும் கூட மாற்றப்படுகின்றன. அதை நிறுத்துமாறு மகாராஜா உடனே ஆணையிட சாத்தனின் திட்டப்படி கோட்டைக்குள் வரும்வழி இரண்டு இடத்தில் வளைக்கப்பட்டு சுவர் எழுப்பப்பட்டது. ஒலியும் இல்லாமல் ஆயிற்று. மகாராஜா மகிழ்ந்து ’தச்சுமூத்தது’ பட்டமும், வீராளிப்பட்டும், வளையலும் பரிசளித்து சாத்தனை கவுரவித்தார்.
ஆனால் சில நாட்கள் கழித்து களியரங்கில் நளதமயந்தி ஆட்டத்தின் சிருங்கார ரசத்தில் மெய்மறந்திருந்த மகாராஜா பாடலின் ஊடாகப் புகுந்து நாதத்தைச் சிதறடித்த ஒலியை மீண்டும் கேட்டார். துடித்துப்போய் மீண்டும் சாத்தனை வரவழைத்து அதை அகற்றும்படி ஆணையிட்டார். அரண்மனையும் கோட்டையும் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டன. இதனால் அரண்மனைக்குள் வருவதும் போவதும் சிரமமாக இருப்பதாகவும் பலசமயம் வழிதவறிவிடுவதாகவும் மந்திரிகளும் பிராமண பூஜ்யர்களும் முனங்கிக்கொண்ட போதிலும் எவரும் அதுபற்றி மகாராஜாவிடம் கூற முயலவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக மகாராஜா அரண்மனையை விட்டு வெளியே வருவதே இல்லை.
நிலப்பகுதியின் விசித்திரமோ அல்லது கோட்டையின் விசித்திரமோ தொடர்ந்து மாற்றி மாற்றி எங்காவது அந்த அமங்கல ஒலி கேட்டுக்கொண்டுதான் இருந்தது. எனவே கோட்டை 888 முறை மாற்றியமைக்கப்பட்டது. (இது ஒருவித நாட்டுப்புறக்கணக்கு என்பதை மறுப்பதற்கு இல்லை. 888 என்பது ஐதீகங்கள் குறிப்பிடும் ஒரு அமங்கல எண் அன்றி வேறல்ல). கோட்டைக்கு வரும் வழி இவ்வாறாகப் பலவிதமாக சிக்கலாக மாறி ,அவிழ்க்க முடியாத புதிராக ஆயிற்று. உள்ளே வருவதும் வெளியே போவதும் வெறும் அதிர்ஷ்டமன்றி வேறல்ல என்று ஆயிற்று. அதை மேலும் மோசமாக்கும்படி மூத்தாசாரி பித்து முற்றிய நிலையில் தனக்குள் சிரித்தபடி சுவர்களைத் தொடர்ந்து மாற்றி மாற்றிக் கட்டிக்கொண்டிருந்தான்.
தன் அமாத்யர்களும் அரைப்பைத்தியமாக ஆகி, சிரித்தபடியும் அழுதபடியும் திசை தெரியாமல் சுற்றி வருவதை மகாராஜா மிகவும் தாமதமாகவே உணர்ந்தார். பீதியுடன் வெளியே வர அவர் முயன்றபோது தான் அது எவ்வளவு பெரிய காரியம் என்று புரிந்ததாம். வெளியேறும் வழிக்கான ஒரே வெளியுலக அடையாளமாக அப்போது இருந்தது அப்பால் ஊரிலிருந்து வரும் அந்த ஒலி மட்டுமே. ஆனால் அதை மூத்தாசாரி கண்டபடி சிதறடித்திருந்ததனால் அதை அடையாளம் வைத்து புறப்பட்டு, பலநாட்கள் நடந்து, உடல் ஓய்ந்து விழுந்து கிடக்கும்போது, நேர் எதிர்திசையில் அது கேட்க ஆரம்பிக்கும் நிலை இருந்தது.
காற்றுவழிச் சந்துகளில் அவ்வப்போது அவரைப்போலவே அரைப்பித்து நிலையில் அலைந்து கொண்டிருக்கும் ஏதாவது மந்திரியையோ சேவகனையோ காண்பது தவிர்த்தால் இடைவெளியற்ற அந்த பயணம் எதையும் அடையாததாகவும் எங்கும் சேராததாகவும் தொடர்ந்துகொண்டே இருந்தது. மகாராஜாவைத் தேடி வாரிசுகளும் தளபதிகளும் வந்தனர். அனைவரும் கோட்டைக்குள் நுழைந்து அகப்பட்டுக்கொண்டனர். மகாராஜாவின் இறுதிச்சடங்குகளுக்கு அவர் அஸ்தி கிடைக்காமையினாலும், அதைத் தேடிச்சென்ற எவரும் திரும்பாமையினாலும், இறுதிச்சடங்கு செய்து மூதாதையை கரையேற்றாமல் சாஸ்திரப்படி வாரிசு உரிமை செல்லாது என்பதனாலும், நீண்டநாள் அராஜக நிலைமை நிலவியது.
பிறகு பிராமண சபையின் முடிவுப்படி குமாரபுரம் அம்மவீட்டுக் கோட்டையையே ஒரு அஸ்திக்கலசமாக சங்கல்பம் செய்து முறைப்படி சடங்குகள் நடத்தி முடிக்கப்பட்டன. அத்துடன் கோட்டை புனிதமான குலச்சின்னமாக ஆயிற்று. குமாரபுரம் மன்னர்கள் தங்கள் மரணத்தை அதற்குள் தான் நிகழ்த்திக்கொள்ள வேண்டும் என்று மரபு உருவாயிற்று. ஐதீகங்கள் பெருகி இக்கோட்டையின் மையத்தில் மனித வாழ்வின் நான்கு புருஷார்த்தங்களின் சாரம் குடிகொள்வதாகவும், மன்னர்கள் தங்கள் மூதாதையரைப் பின்பற்றி இதற்குள் நுழைந்து அந்த கணிதப்பாதைகளின் ஊடே பயணம் செய்து மூதாதையர் சென்றடைந்த மையத்தை அடைந்து முக்தி பெற வேண்டும் என்றும் வகுக்கப்பட்டது.
தலைமுறை தலைமுறையாக இவ்வம்சத்து மன்னர்கள் வாரிசுகளை ஆட்சிக்கு அமர்த்திவிட்டு வானப்பிரஸ்தம் பூண்டு இந்த மாபெரும் அஸ்திகலசத்தின் உள்ளே சென்று மறைந்து கொண்டிருந்தனர். பற்பல தலைமுறைகளுக்குப் பிறகு ஒரு மகாராஜா மையம் நோக்கி மனம் தளராமல் சென்று கொண்டிருந்த போது வெளியேறும் வழியைத் தேடிக் கொண்டிருந்த தன்னைப்போன்றே இருந்த ஒருவரைச் சந்திக்க நேர்ந்ததாகவும் அறிமுகத்துக்குப் பிறகு இருவரும் திடீரென்று உடைந்து விலாதெறிக்க சிரிக்க ஆரம்பித்ததாகவும் பிரபல அங்கத கவிஞரான மாணி நாராயண சாக்கியாரின் கூத்துப்பாடலில் குறிப்பிடப்படுகிறது.
1750-ல் திருவிதாங்கூர் தேசத்தை ஒருங்கிணைத்து ஒருகுடைக்கீழ் கொண்டுவந்த மார்த்தாண்ட வர்மா குலசேகரப் பெருமாள் மகாராஜா குமாரபுரம் மாடம்பி வம்சத்தை பூரணமாக அழித்து கோட்டையையும் தகர்த்து அனைத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்ததாக அச்சு மூத்தது குறிப்பிடுகிறார். சவக்கோட்டை என்று இன்று வழங்கும் பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை அந்தக் கோட்டையின் இடிபாடுகளுக்குள் மண்டிக்கிடந்த எலும்புக்கூடுகளின் காரணமாக இருக்கலாம்.
[மூன்று சரித்திரக்கதைகள்-1, சுபமங்களா 1992. ஜெயமோகன் சிறுகதைகள் நூலில் இருந்து]
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது-கல்யாண்ஜி கடிதம்
ரொம்பப் பிந்தி,மத்தியானத்துக்கு மேல் தான் தெரியும். எனக்கு ரொம்ப சந்தோஷம். போன தடவை சுரேஷ் குமாருக்குக் கொடுத்த போதும் சந்தோஷப்பட்டேன். இரண்டு பேருமே எனக்கு ரொம்பப் பிடித்த படைப்பாளிகள். ரொம்பப்பிடித்த மனிதர்களும் கூட.
நம்பி பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் படிக்கும் போது தான், சுப்பு அரங்கநாதனோடு தீபத்தில் ‘வேர்கள்’ கதையைப் படித்த கையோடு வந்தார். அவர் தான் என்னைப்பார்க்க வந்த முதல் வாசகர்.
இன்றைக்கு வரைக்கும் அவர் மனம் அந்தப் பாபநாசம் ஆற்றுத் தண்ணீர் மாதிரி ஸ்படிகம் தான். காணும் காணாததற்குக் குற்றாலம் அருவித்தண்ணீரும் சேர்ந்து கொண்டது பகவதி வந்தபிறகு. எனக்கு என்னவோ பகவதி தான் அவருடைய அருவி, குழல்வாய்மொழி அம்மன் என்று தோன்றுகிறது. உச்சியில் தோளில் விழுந்து சிதறி வழிந்து, நம்பியை இப்படி. உருப்பளிங்கு ஆகவே வைத்திருக்கிறவள் பகவதி தான்.
சாயுந்தரத்தில் இருந்தே அவரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. முகநூலில் கண்ணில் படுகிற அவர் படங்களை எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தேன். கணபதி , சேர்மாதேவி சிவன் கோவிலில் வைத்து நம்பியை எடுத்த கருப்பு வெள்ளைப் படம் ஒன்று அவ்வளவு அம்சமாக இருக்கும்.அதைத் தரவிறக்கி வைத்தேன்
சமயவேல் எழுதிய சில வரிகளும், லக்ஷ்மி மணிவண்ணனின் நீண்ட பதிவும் முகநூலில் இருந்து நேரே நம்பியைப். பார்க்கப் புறப்படச் சொல்லியது.
பகவதி நம்பர் தான் என்னிடம் உண்டு. அதில் தான் கூப்பிட்டேன். நம்பியே எடுத்தார். பெயர் பதிவில் இருந்தது போல. அடுக்கடுக்காக ஓங்கூர்சாமியார் மாதிரிச் சிரித்தார். வாழ்க, வாழ்க என்றார். அப்புறம் தான் ‘சொல்லுங்க கல்யாணி’ என்றார்.
வாழ்த்துச் சொன்னேன். என் சமீபத்திய உடல் நலிவைத் தெரிந்திருப்பார் போல. எடுத்த உடனேயே ‘என்ன நட்சத்திரம், என்ன ராசி கல்யாணி?’ என்று கேட்டார். அப்படியே போயிற்று பேச்சு. பட்டீஸ்வரம் துர்க்கை, மதுரை மீனாட்சி, பழனி மலை, நெல்லையப்பர் கோவில் என்று அவர் பின்னால் போனேன். குற்றால நாதர் கோவில் சித்தேஸ்வரி, அணைக்கரைத் தெருப் பக்கம் இருக்கும் எக்காள தேவி என்ற விஷ்ணு துர்க்கை வரை வந்து நின்றது.
விஷ்ணுதுர்க்கை இருக்கும் இடம் அனேகமாக விஷ்ணுபுரம் ஆகத்தானே இருக்கும். சரிதான்.விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் சார்ந்து உங்களுக்கும், விக்ரமாதித்யன் ஆகிய நம்பிக்கும் என் மனப்பூர்வமான மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.
அடுத்த வார வாக்கில் ,வசதிப்படும் போது ஒரு நாள்போய் அவரைப் பார்க்க வேண்டும். ‘ வாங்க கல்யாணி. நான் இங்கேயே தான் இருப்பேன். ஒரு பக்கமும் போகலை’. என்றார்.
ஒரு பக்கமும் போகாத நம்பி எவ்வளவு பெரிய அபூர்வம்!
கல்யாணி.சி
வண்ணதாசன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


