Jeyamohan's Blog, page 924
September 2, 2021
புகைப்பட முகங்கள் -கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம் !!
சமீபத்தில், தாங்களும், திருச்செந்தாழை அவர்களும் இணைந்திருந்த புகைப்படங்கள் சிலவற்றை கண்டு மகிழ்ந்தேன். சில புகைப்படங்கள் மட்டுமே இப்படி தனித்துவமாய் மிளிர்வதுண்டு. வாஞ்சையான சிரிப்புடன் இருவரும் தழுவும் அப் படம் உள்ளார்ந்த பேரன்பின் அச்சு வடிவமாய் உணர்ந்தேன். படங்களும் பேசும் அல்லவா ?
கேட்பதா வேண்டாமா என்ற சஞ்சலத்துடன், சிறுபிள்ளைத்தனமான கேள்வி ஒன்று என்னிடத்தில் உண்டு. அதனை இன்று கேட்டே விடுவது என்ற முடிவில் கேட்கிறேன். அவர் குறித்தான பதிவுகளில் எல்லாம் நீங்கள் பயன்படுத்தும் புகைப்படம் எனக்கு ஏனோ காண்பதற்கு அயர்ச்சியாய் தோன்றும்.
அவர் முகநூலில் நிறைய நல்ல படங்கள் உண்டு.குறிப்பாக, அய்யப்ப மாதவன் அவர்கள் எடுத்த கருப்பு, வெள்ளை புகைப்படங்கள் மிகவும் நன்றாக இருக்கும். நான் எழுத்தினை குறித்து அல்லவா கவனிக்க சொல்கிறேன், புகைப்படத்தில் என்ன உள்ளது எனவும் உங்களுக்கு தோணலாம். ஆனாலும், அந்த படத்தில் அவர் சோர்வாக, கண்களில் சோகம் ததும்ப உள்ளார்.
இத்துடன் அவரின் சில படங்கள் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன். உங்களுக்கும் பிடித்திருந்தால், இனி இந்த படங்கள் பயன்படுத்தலாமே…அந்த சோகப்படம் வேண்டாமே !!
அன்புடன்
கல்யாணி.
அன்புள்ள கல்யாணி
இந்தத் தளத்தில் புகைப்படங்கள் பயன்படுத்துவது பற்றி சில சொல்லவேண்டியிருக்கிறது. எழுத்தாளர்கள் என்றால் அவர்களைப்பற்றி நான் என்ன எழுதினாலும் கூடவே அவர்களின் புகைப்படம் இருக்கும். ஏனென்றால் அது அவர்களின் சொற்களுக்கு முகம் அளிக்கிறது.
ஆனால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படம் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்குக் காரணம் உண்டு. மலையாள இதழியலாளர் கே.ஸி.நாராயணன் அதைச் சொன்னார். ஓர் இதழில் பல புகைப்படங்கள் வெளியாகின்றன. வாசகர்களின் கவனத்தில் முகங்கள் அவ்வளவு ஆழமாக பதிவதில்லை. ஆனால் ஒரே புகைப்படம் சிலகாலம் பயன்படுத்தப்படும்போது அது நினைவில் நீடிக்கிறது, ஓர் அடையாளம் போல ஆகிவிடுகிறது. சட்டென்று அதற்கு முந்தைய படைப்புகள் அனைத்தையும் மனதில் கொண்டுவந்து சேர்க்கிறது. நாம் சுவரில் மாட்டிவைத்திருக்கும் ஒரு படம் நமக்கு மிக அணுக்கமாக ஆவதுபோல. சமயங்களில் அந்த புகைப்படமுகம் நம்மிடம் பேசவே ஆரம்பித்துவிடும்.ஆகவே ஒரு படத்தையே நானும் திரும்பத்திரும்ப பயன்படுத்துகிறேன். பாஷாபோஷிணியில் அதையே செய்வார்கள்.
ஜெ
சிறுகதைகள்-செந்தில் ஜெகன்னாதன்,திருச்செந்தாழை
விக்ரமாதித்யன், விமர்சனங்கள்
எழுத்தின் மீதான வேட்கையில் சென்னைக்கு வர நினைப்பவர்கள் எவருக்கும் ஆதர்சபிம்பமாக நிற்பது கவிஞர் விக்ரமாதித்யன் உருவமே. காரணம் விக்ரமாதித்யன் கவிஞராக மட்டுமே வாழ்வது என்ற சவாலில் தன்வாழ்வின் பெரும்பகுதியை கழித்து இன்றும் சென்னையில் தனக்கென தனியாக தங்குமிடம் இன்றி கையில் காசின்றி பெருநகரப் பாணனைப் போல தன்வீரியம் குறையாமல் கவிதைகளின் வழியாக மட்டுமே தன் இருப்பை சாத்தியமாக்கி கொண்டு வாழ்ந்து வருகிறார்.
பெருநகரப் பாணன். எஸ்.ராமகிருஷ்ணன்சில நேரங்களில் வாழ்க்கை மிகவும் படுத்தி எடுத்துவிடும். எதையும் சொல்ல முடியாதபடி நெஞ்சடைத்தது போல இருக்கும். நம்ப முடியாத அளவுக்கு வாழ்க்கை என்ற கவிதையை வாசிக்கும்போது நம் மனதில் உள்ளதை அப்படியே எழுதியிருக்கிறாரே என்று தான் தோன்றுகிறது.
விக்ரமாதித்யன் கவிதைகள் -சித்திரவீதிக்காரன்இம்மைக்கு அம்மை, மறுமைக்கு மனைவி, வாழையடி வாழையாக வாழ்ந்து கொய்யாப் பழம் என்னும் செழுமையான வாழ்வைக் கொய்ய தன் கவிதைகள் வழியாகவும் வாழ்வின் வழியாகவும் தொடர்ந்து துடித்துக் கொண்டிருப்பவர்தான் விக்ரமாதித்யன்.
மலைமீது ஓய்வுகொள்ளும் கவிஞன். சங்கரராமசுப்ரமணியன்தமிழில் கவிதை எழுதுபவர்களில் மிக அதிகமாக எழுதுபவரும் மிகச் சரளமாக எழுதுபவரும் மிக இயல்பெழுச்சியோடு எழுதுபவரும் விக்ரமாதித்யன் என்பது இந்த எண்ணிக்கைப் பெருக்கத்திலிருந்து கண்டடைந்த முதல் செய்தி. கவிஞனாகவன்றி தனக்கு வேறொரு பொது அடையாளமில்லை என்பதை இருப்பின் வாயிலாகவும் எழுத்தின் வாயிலாகவும் நிறுவுவது மட்டுமல்லாமல் அதைத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டுமிருக்கிறார் என்பது அடுத்த செய்தி.
விக்ரமாதித்யன் கவிதைகள் பற்றி சுகுமாரன்
இரண்டாமவள்
ஓவியம்: ஷண்முகவேல்”அந்த இரண்டாமவள் யாரென கண்டுகொண்டேன்” என்று ராதாவிடம் சொன்னேன். கொதிக்கும் எண்ணெயில் பூரி சுட்டுக்கொண்டிருந்த அவர் கொஞ்சமும் கொதி நிலை இல்லாமல், ”வெண்முரசில் உங்களுக்கு பிடித்த இரண்டாமவள் என்று சொல்ல வருகிறீர்களா?” என்றார்.
நகுலன் ஆரம்பிக்கும் வாக்கியத்தை, சகதேவன் முடித்து வைப்பதைப் போல், ராதா, நான் மொட்டையாக ஆரம்பிக்கும், எந்த ஒரு வாக்கியத்தையும் சரியான பொருளில் முடித்துவிடுவார்.
“முதல் பெண் அம்பை, இரண்டாவது, திரௌபதியா ? பிரயாகையில் அக்னியில் பிறக்கும் அவளின் சீர் தோள்களைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். சிறு வயதிலேயே , தந்தை துருவனுடன் அரசியல் விஷயங்களைப் பேசுவதையும், அவளுடைய தாயார் அந்த பேச்சில் ஒவ்வாமை கொள்வதையும் ரசித்திருக்கிறோம். ஒவ்வொரு கோவிலாக அவள் செல்ல, மாறுவேடத்தில் இருக்கும் பாண்டவர்களை அவள் பார்ப்பதை உங்களுக்கு நினைவில் மாறாத காட்சிகள் என்று சொல்லியிருக்கிறீர்கள், “ என்றார் ராதா.
“மின்னும் கருப்பு நிறத்தாள்தான், என்னை ஆக்கிரமிக்கவிருக்கும் இரண்டாமவள் என பல நேரங்களில் எண்ணியதுண்டு. ஆனால், அவள் அந்த இடத்தை அடையவே இல்லை,” என்றேன்.
“காண்டீபத்தில், இளையபாண்டவனின் நினைவில் நின்றுவிடும், சுஜயனை சீராட்டி பாராட்டி வளர்க்கும் அந்த செவிலிப்பெண் சுபகையும் உங்கள் நினைவில் உள்ளவள் என்று தெரியும். ஆனால், அவளும் இரண்டாமவள் இல்லை. அப்படித்தானே?” என்றார் ராதா.
“ஆமாம். அவள் இனியவள். என்னுள் பெருவலி ஏற்படுத்திச் செல்லவில்லை என்பதால், நினைத்து நினைத்து நான் மாயவில்லை” என்றேன்.
“ஜெயமோகன், அரசிகள் , இளவரசிகள் என்பதால், எல்லோரையும் பேரழகிகள் என்றெல்லாம் வர்ணிப்பதில்லை என்று சொல்வீர்கள். கர்ணனும், துரியோதனனும், துச்சாதனனும், காசி இளவரசிகளை சிறை எடுத்து வந்த அன்று, பானுமதி பற்றிய வர்ணனையை வாசித்ததும், இவள் எது சொன்னாலும், கேட்கலாம் என்று சொன்னீர்கள். இறந்துவிட்ட அண்ணியின் நினைவு வந்து முகம் சிறுத்துவிட்டது உங்களுக்கு. “
“ஆமாம், பானுமதி , ஒரு அண்ணியாகவே என்னுள்ளும் நின்றுவிட்டார். மரியாதைக்குரியவர். ஆனால், இரண்டாமவள் இல்லை, “ என்றேன்.
“பூரிசிரவஸுக்காக கவலைப்பட்டு, விட்டால், நீங்களே துச்சளையிடம் உண்மையை சொல்லியிருப்பீர்கள். அவளை ஜயத்ரதனுக்கு கட்டிக்கொடுத்துவிட்டதால், கொஞ்சம் ஒவ்வாமை வந்திருக்கும். அவளும் இல்லை என்று நானே முடிவு செய்துகொள்கிறேன். “ என்றார் ராதா.
“உங்களுக்குப் பொருளாதாரம், வணிகம் , அரசியல் என எல்லாத்துறைகளிலும் தேர்ந்து பேசுபவர்களை பிடிக்கும். நீர்க்கோலம் நூலில், திருமணம் ஆகி வந்ததும் வராததுமாக, தன் நாட்டிற்கு வரும் வண்டிகளையெல்லாம் நிறுத்தி வரி வசூலிக்க சொல்லும் தமயந்தியை உங்களுக்குப் பிடித்திருக்கும். ஆனால், அவள் ஒரு வலியை விட்டுச் சென்றாளா, என்பது கேள்வி.”
“அவளைப் பொறுத்தவரை, வெற்றி தோல்வி, இன்பம், துன்பம், மேடு, பள்ளம் என்று கலந்து வந்த முழு வாழ்வே என எடுத்துக்கொள்கிறேன். அவள் கணவன் , நளன் சூதாடி நாட்டை இழக்க, காடோடி திரிந்தாலும், மீண்டும் கணவனுடனும், குழந்தைகளுடனும் இணைகிறாள்,” என்றேன்.
“தேவயானி ?”
“மணிமுடி சூடியவள் என்றாலும் இவளும் இல்லை. இளமையில் முதுமை எய்திய, குரு குலத்தை நிலை நிறுத்திய ‘புரு’வின் தாய் சர்மிஷ்டையும் இல்லை.” என்றேன்.
“வேறு யாராக இருக்கும்? அசலை ? இவளையும் அண்ணியென்றே சொல்வீர்கள் என நினைக்கிறேன்” சிரித்தார் ராதா.
“சண்டையெல்லாம் முடிந்து, வெண்முரசில் கடைசியில் வரும் நூல்களில், பானுமதியால், அரசு பணியில் நியமிக்கப்பட்டு அந்தக் காவல் மாடத்தில் நிற்கும் சம்வகை ? டாம்பாய் போல் இருக்கும் அவளை எனக்குப் பிடிக்கும்’
“ஆமாம், உங்களைப் போல, நிறைய நண்பர்கள், யானைப் பாகனின் பெண் அரசியாகும் அந்தக் கதையை சொல்லி சிலாகித்துப் பேசுவதுண்டு. சாதித்தவர்களை, ஜெயித்தவர்களைப் பற்றி பேச அவளை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வேன். ஆனால், அவள் தொண்டையில் சிக்கிக்கொண்ட முள்ளா என்றால், இல்லை என்பேன்.”
“நீங்களே சொல்லுங்கள்! “ பொறுமையிழந்தார் ராதா. இந்த வாரம், நீங்கள் இன்னும் அருண்மொழியின் கட்டுரையை வாசிக்கவில்லை என்று நினைவுறுத்தினார்.
“மிகச்சிறிய தாடையும், அழுந்திய கண்ணங்களும், உள்ளங்கை அளவு முகம் கொண்ட அவளை, காந்தாரி , சிட்டு என்று சொல்லி சிரிப்பாள். மிகச்சிறிய உருவில் , வெண்ணிறம் கொண்ட அவளை, ரஜதி என அவள் பிறந்த மச்சர் குடியில் அழைத்தனர். ரஜதி என்றால் வெள்ளிப்பரல் என்று பொருள். இளைய யாதவர், அவளுக்கு தந்தை முறை. ரஜதி, சிறிய மீன் என்றாலும், சர்மாவதி ஆற்றின் பேரொழுக்கிற்கு எதிர் செல்லும் ஆற்றல் உடையது என்று சொல்லி, அவளை இளைய யாதவர் அருகணைத்து கொஞ்சுவார். மச்ச நாட்டுக்காரியிடம் மீன்பற்றி கேட்டால் மணிக் கணக்கில் பேசுவாள். தான் அரசி என்பதை மறந்து, அஸ்தினபுரியின் இடைநாழியில் ஒவ்வொரு தூணையும் தொட்டு தொட்டு, நுனிக்காலில் தாவி தாவிச் செல்வாள்.
திரௌபதிக்கு கொடுமை இழைக்கப்பட்ட அந்த தினத்தில், அறத்தின் வழி நின்று கேள்வி கேட்ட விகர்ணனின் மனைவியெனினும், மற்ற அரசிகளைப் போல காமவிலக்கு நோன்பு கொண்டவள். இளைய யாதவர், முதல்தூது வரும்பொழுது அவரது துணை நின்று அறத்தின் குரலாக ஒலியுங்கள் என்று தனது கணவனை வழி நடத்துபவள்.
கர்ணனின் இடையளவு உயரம் கூட இருக்கமாட்டாள். போரை நிறுத்த அவன் வந்து அவனது தோழனிடம் பேசவேண்டும் என்று கணவனையும், கணவனின் சகோதரனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தூது செல்வாள். அது சமயம் அந்த ஊட்டறையில், அவள் கர்ணனையே மனைவியரின் இடையில் அமர்ந்துதான் சாப்பிடவேண்டும் என்று கட்டளையிடுவாள்.
துரியோதனன், யாருக்கும் தெரியாமல் நடத்தவிருக்கும் கலிதேவனுக்கான சடங்கை தடுத்து நிறுத்த துச்சளையையும், விகர்ணனையும் சுரங்கப்பாதையில் அழைத்து செல்லும் சமயம், அவள் சொல்லும் சூத்திரத்தின் வழியே கதவுகள் திறக்கும். துச்சளையிடம் , நீ அரசுமதியாளர் ஆகவேண்டியவள் என்ற பாராட்டைப் பெறுவாள்.
எல்லோரும் போருக்குச் செல்லும் கணவனை வழியனுப்பி வைக்க, இவள் மட்டும் நான்குமுறை சேடியர் சென்று அழைத்தும் வரவில்லை என்று அசலை, பானுமதியிடம் சொல்வாள்.
“அவைநின்று பழிகொண்ட பெண் சொன்ன சொல் அவ்வண்ணமே நிகழ்ந்தாக வேண்டும். அதுவே இங்கு பெண்ணுக்குக் காவலென தெய்வங்கள் உண்டென்பதற்கான சான்று. தலைமுறை தலைமுறையென பிறந்தெழுந்து வரும் பெண்கள் அனைவருக்கும் நம் மூதாதையர் உரைக்கும் சொல்லுறுதி அது. பிறிதொன்று நிகழாது.” – தாரை சொல்வதாக, செந்நாவேங்கை, அத்தியாயம் 45.
அறம் வழி நின்று, என்ன நடக்கும் என்று உய்த்துணரும் தாரை, விகர்ணனின் மேல் பேரன்பு கொண்டவள்.
கதவைத் தாழிட்டுக்கொண்டு, போய் வா என்று சொல்ல மறுத்தவளின் அன்பின் வலியை நான் அறிவேன். அம்பையை முன்னிறுத்தி அன்னையென்பேன். ரஜதியின் ஆற்றல் கொண்ட தாரையை மகள் என்பேன்.
வாழிய இரண்டாமவள் !
வ. சௌந்தரராஜன்
September 1, 2021
மறைந்த ஆடல்கள்
பழைய மலையாளப் பாடல்களுக்கு ஏன் செல்கிறேன் என என்னையே கேட்டுக்கொள்கிறேன். கடந்தகால ஏக்கமா? இல்லை என சொல்ல முடியாது. ஆனால் அது மட்டுமல்ல. அதற்கப்பால் ஒரு பண்பாட்டுத் தேவையும் உள்ளது. கேரளப்பண்பாட்டின், அதாவது நான் வளர்ந்த சூழலின், நுண்ணிய நினைவுகளை மீட்டும் காட்சிகளும் இசையும் எழுபது எண்பதுகள் வரை சினிமாவில் இருந்தன. அவை எனக்கு இன்றும் தேவையாகின்றன.
என்ன ஆயிற்று எண்பதுகளுக்குப் பிறகு? தொண்ணூறுகளில் சட்டென்று ஒரு பெரும் செய்தித்தொடர்புப் புரட்சி நிகழ்ந்தது. அத்தனை கிராமங்களும் ஒரே தொடர்புப் பரப்பாக இணைந்தன. அந்த செய்தித்தொடர்பு உடனடியாக வணிக மயமாக்கப்பட்டது. முதலில் ஒவ்வொரு ஊருக்கும் இருந்த தனித்தன்மைகள் மறைந்தன. பின்னர் கேரளம், தமிழ்நாடு என்னும் பண்பாட்டுத் தன்மைகள் அழிந்தன. பின்னர் உலகமே ஒற்றைப் பண்பாட்டுப் பரப்பாகியது.
இன்று, நாம் ஆப்ரிக்க இசையை கேட்கிறோம். ஜாஸ் என்றும் ராக் என்றும் செல்கிறோம். ஆனால் இங்கே ஒவ்வொரு சிற்றூரும் நீண்டகாலத் தனிமைத் தவத்தால் உருவாக்கிக்கொண்ட தனித்தன்மை கொண்ட இசையும் பாடல்களும் நடனங்களும் இல்லாமலாகின. இன்று நாம் டோனெட்ஸ் சாப்பிடுகிறோம். பிட்ஸா சாப்பிடுகிறோம். ஆனால் நம் சிற்றூர்களின் தனித்த சுவைகள் இல்லாமலாகிவிட்டன.
தொண்ணூறுகளின் இறுதியிலேயே அது நிகழத்தொடங்கிவிட்டது. அன்று நம் தனித்தன்மைகள் பழையவையாக, சலிப்பூட்டுவனவாக இருந்தன. வரவுகள் எல்லாமே கிளர்ச்சியூட்டும் புதுமைகளாக இருந்தன. ஆவேசத்துடன் நம் மரபிலிருந்து நாம் வெட்டிக்கொண்டோம். எல்லா புதியவற்றையும் தழுவிக்கொண்டோம். நம் குழந்தைகளுக்கும் அவற்றையே அளித்தோம். இரண்டாயிரத்துக்குப் பின் வந்த தலைமுறைக்கு உள்ளூர்த் தனித்தன்மைகள் என்றால் என்னவென்றே தெரியாது.
இன்று உலகளாவிய பண்பாடு என்பது ஒருவகை மதிப்பீட்டுச் சுரண்டல், அதன் விளைவு மானுடத்திற்கு பேரிழப்பு என உணர்ந்த ஒரு சிறு இளைஞர்வட்டம் அழிந்துவரும் வட்டாரத் தனித்தன்மைகளை நாடிச் செல்கிறது. ஆனால் மிகப் பெரும்பான்மைக்கு அப்படி தனி ருசிகளே இல்லை. உலகளாவ ஒரே ரசனை. ஒரே மனநிலை.
நான் இழந்தவற்றை மீண்டும் மீட்டிக்கொள்ள இந்தப் பாடல்களை தேடுகிறேன். என் இளமையில் திருவாதிரைக் கொண்டாட்டம் மிகமிக முக்கியமான ஒன்று. அது சிவனுக்காக பார்வதி தவமிருந்த நாள். அன்று பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. ஆண்கள் அன்றிரவு வெளியே வரக்கூடாது. ஊரெல்லாம் பெண்கள் ஆடிப்பாடி களியாடுவார்கள். அவர்களுக்கான ஒரு ரகசியக் கொண்டாட்டம்.
இந்தப்பாடல் அதைச் சித்தரிக்கிறது. இப்படி அந்த நாளின் கொண்டாட்டத்தைச் சித்தரிக்கும் பல சினிமாப்பாடல்கள் அன்று இருந்தன. முன்பும்கூட எழுதியிருந்தேன். [பாவைக்களியாட்டம்] இந்தப்பாடலில் ஒலிக்கும் கேரளத்திற்குரிய வாத்தியங்கள், மலையாளியின் செவிக்கு இனிய மெட்டு. சுசீலாவின் நிலவொளியென உருகி ஒளிரும் குரல்.
இரவில், நிலவொளியில் இந்த நடனம் நடைபெறுகிறது. அன்று உச்சகட்டமாக வெளிச்சம் பெய்து அதை தேவையான அளவுக்கு ஃபில்டர் போட்டு குறைத்தே இக்காட்சியை எடுப்பார்கள். பலசமயம் நிலவின் ஒளியே கண்கூசும்படி தெரிவது அதனால்தான். இன்று இந்த காட்சியைப் பார்த்தபோது அன்று இத்தனை குறைந்த ஒளியில் இதை எடுத்த மேதை யார் என்னும் திகைப்பு ஏற்பட்டு, படத்தின் பெயரைப் பார்த்ததுமே “வேறு எவர்!” என்னும் எண்ணம் வந்தது. ஒளிப்பதிவு மேதை ஏ.வின்செண்ட். இயக்குநரும் அவர்தான். மலையாளத்தில் எக்காலத்திற்கும் உரிய சில பெரும்படைப்புகளை உருவாக்கியவர் அவர்.
ஏ.வின்சென்ட்தீர்த்தயாத்ர கூட ஒரு நல்ல படம்தான். கருப்புவெள்ளை படங்களை பார்க்கும் பழக்கம் இருக்கவேண்டும். யதார்த்தமான, மெல்லச்செல்லும் படங்களை பார்க்கும் மனநிலை இருக்கவேண்டும். ஒரு வாழ்க்கையின் வட்டம் மொத்தமாக அறிமுகமாகும் படம் இது. பார்த்ததுமே “நீங்க என்ன சாதி?” என்று கேட்கும் ஒரு காலகட்டத்தின் வாழ்க்கை. முந்தைய யுகம் சரிந்து அடுத்த யுகம் பிறக்கிறது. ஓங்கி நின்றவை சரிகின்றன. அது வரலாற்று நெறி. ஆனால் சிக்கிக்கொண்ட மனிதர்கள் எளிய பலிகள்.
வி.டி.நந்தகுமார்இந்த சினிமாவின் ஆசிரியர் வி.டி.நந்தகுமார் மலையாளத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். கொடுங்கல்லூர் அரசகுடும்பத்தின் ஒரு கிளையில் 1925ல் பிறந்தவர். ஆனால் கடும் வறுமையில் வளர்ந்தார். இதழாளரும் எழுத்தாளருமானார். அவருடைய ரண்டுபெண்குட்டிகள் என்னும் நாவல் லெஸ்பியன் உறவைப் பற்றியது. அது சினிமாவாகியிருக்கிறது. எழுபதுகளில் கமல்ஹாசன் நடித்த சில மலையாளப் படங்களுக்கு எழுதியிருக்கிறார். கமல்ஹாசனின் அக்கால நண்பர்களில் ஒருவர். 2000த்தில் மறைந்தார்.
சந்த்ர கலாதரனு கண்ணுகுளிர்க்கான்- தேவி
பந்தடிச்சாடுந்நு சாஞ்சாடுந்நு
சஞ்சல சரணத்தில் சிலங்ககள் கிலுங்ஙி
கொஞ்சும் தரிவளகள் தாளத்தில் குலுங்ஙி
பர்வத நந்தினி, இந்நு அவள்க்கு அகம்படி
உர்வசி மேனக சுந்தரிமார்
ரம்ப திலோத்தம நர்த்தகிமார்
மதனன் மீட்டுந்நு மணிவீண
நந்திகேசன் மிருதங்கம் முழக்குந்நு
மானஸ சரஸின்னு கரயில் உலஞ்ஞாடும்
மாலேய சுரஃபில மலர்வனியில்
சந்த்ர கிரணங்கள் சாமரம் வீசும்போள்
பந்துர நர்த்தனம் துடரூ நீ துடரூ நீ
ஏ.டி.உம்மர்
இசை ஏ.டி.உம்மர்,
பாடல் பி பாஸ்கரன்
படம் தீர்த்தயாத்திரை. 1978
சந்திரக்கலையை சூடியவனுடைய கண்கள் குளிர தேவி
பந்து அடித்து விளையாடுகிறாள் சாய்ந்தாடுகிறாள்
சஞ்சல சரணத்தில் சதங்கைகள் ஒலித்தன
கொஞ்சும் கொத்துவளையல்கள் தாளத்தில் குலுங்கின
மலைமகள் அவளுக்கு துணையாக
ஊர்வசி மேனகை என சுந்தரிகள்
ரம்பை திலோத்தமை என நர்த்தகிமார்
மன்மதன் மீட்டுகிறான் மணிவீணை
நந்திகேசன் மிருதங்கம் முழக்குகிறான்
மானச சரோவரத்தின் கரையில் ஊசலாடும்
மலர்க்கொடிகள் நிறைந்த பூங்காவில்
சந்திர கதிர்கள் சாமரம் வீசும்போது
காதல் நடனத்தை நீ தொடர்க
பாவைக்களியாட்டம்
விஷ்ணுபுரம் அமைப்பின் அரசியல்
அன்புள்ள ஜெ
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினின் பணிகளைப் பாராட்டி சில பதிவுகளைப் போட்டிருந்தீர்கள். நீங்கள் விழைந்த சில நடவடிக்கைகளை அரசு செய்வதாக எழுதியிருந்தீர்கள். அதையொட்டி உங்கள்மேல் வந்துகொண்டிருக்கும் விமர்சனங்களை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். இந்துத்துவர்கள் நீங்கள் மனசாட்சியை கழற்றிவிட்டு திமுகவுக்கு விலைபோய்விட்டதாக நினைக்கிறார்கள். திமுகவினர் நீங்கள் திமுக தயவை நாடுவதாக பதிவிடுகிறார்கள்.
நான் கேட்க நினைப்பது இதுதான். விஷ்ணுபுரம் அமைப்பின் அரசியல் நிலைபாடு என்ன? விஷ்ணுபுரம் அமைப்பிலுள்ளவர்கள் உங்கள் அரசியலை ஏற்றுக்கொள்கிறார்களா? அவர்கள் உங்கள் கருத்துக்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?
ஆர்.ராஜேஷ்
அன்புள்ள ராஜேஷ்,
நான் இதை முன்பும் எழுதிவிட்டேன். எனினும் காலந்தோறும் வேறுவேறு தலைமுறையினர் இதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே மீண்டும்.
எனக்கு உறுதியான அரசியல் நிலைபாடு அல்லது அரசியல் கொள்கை என ஏதுமில்லை. எழுத்தாளனுக்கு அவ்வாறு இருக்கலாகாது என்றே நான் நினைக்கிறேன். அவ்வாறு இருந்தால் அந்த எழுத்தாளனின் எழுத்தில் அவனுக்கான பார்வையோ, மெய்யான உணர்ச்சிகளோ வெளிப்படாது. அவனுடையது அவன் குரலாகவே இருக்கவேண்டும், அக்குரல் வெளியே இருந்து உள்ளே சென்று எதிரொலிப்பதாக இருக்கலாகாது.
எழுத்தாளன் எந்த அமைப்பிலும் எந்த இயக்கத்திலும் உறுப்பாக இருக்கலாகாது. அதனால் அவனுக்கு பல நன்மைகள் இருக்கலாம். பாதுகாப்பு கிடைக்கலாம். ஆனால் அவன் அந்த சார்புநிலையைத் துறந்தே ஆகவேண்டும். எழுத்தாளனின் உள்ளம் சார்பற்ற நிலை ஒன்றை கொண்டிருக்கவேண்டும், தன்னிச்சையாக அது இயங்கவிடவேண்டும், அதுவே எழுத்தின் சுதந்திரம்.
அதைப்பற்றிச் சொல்ல நான் பயன்படுத்தும் வார்த்தை ‘காற்றுமானியின் நடுநிலை’ காற்றுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தலே ஒரு காற்றுமானி செய்யவேண்டியது. தன் உள்ளுணர்வின் காற்றுக்கு. தன்னைச் சூழ்ந்து வீசும் வரலாற்றுப் புயலுக்கு. எழுத்தாளனிடம் நாம் காண்பது அவனுடைய சிந்தனையை அல்ல, அவனுடைய உணர்வுகளையும் அல்ல. அவன் அவனைமீறிய விசைகளின் பிரதிநிதி. அவன் ஓர் ‘இண்டிக்கேட்டர்’.
ஆகவே அரசியலில் எழுத்தாளன் ஒரு தரப்பு அல்ல, சாட்சி மட்டுமே. என் அரசியல் கட்டுரைகளுக்குச் சாட்சிமொழி என்று தலைப்பு அளித்தது அதனால்தான். எந்நிலையிலும் என்னை அவ்வாறு வைத்துக்கொள்ளவே முயல்கிறேன். இதில் ஒரே சமயம் ஒரு பாமரத்தனமும் நுண்ணுணர்வும் உள்ளது.
எழுத்தாளன் தன் சொந்த தர்க்கத்தைக் கடந்து, தன் உள்ளுணர்வை எழுதுவதன் வழியாக ஒரு சமூகத்தின் மனசாட்சியாகவும் அந்த வரலாற்றுக் காலகட்டத்தின் பிரதிநிதியாகவும் ஆகிறான். அதை அவன் உணர்ந்தால் அவன் தன்னை வழிநடத்தும் அரசியல்தலைவனாகவோ, பின்தொடரும் தொண்டனாகவோ கருதிக்கொள்ள மாட்டான்.
இது புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி வரை இங்கிருந்த ஒரு மரபு. தன் காலகட்டத்தின் பேரலையாக இருந்த சுதந்திரப்போரில்கூட ஈடுபட மறுத்தவர் புதுமைப்பித்தன். அமைப்புக்கும் எழுத்தாளனுக்குமான முரண்பாட்டைப்பற்றி அறிய ‘ஒரு புளியமரத்தின் கதை’ முதல்பதிப்புக்கு சுரா எழுதிய முன்னுரையை நீங்கள் வாசிக்கலாம். ஜெயகாந்தனின் ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் நூலை வாசிக்கலாம். தமிழில் என்னிடமிருந்து மாறுபட்ட குரலாக ஒலித்தாலும் சாரு நிவேதிதாவின் அரசியலும் இதுவே என்பதை கவனித்திருப்பீர்கள்.
இந்த நிலைபாட்டை பொதுவாக அரசியலாளர்கள் புரிந்துகொள்ள முடியாது. அவர்களைப் பொறுத்தவரை ஒருவர் அவர்களின் தரப்பினராகவோ எதிர்த்தரப்பினராகவோதான் இருக்க முடியும். எவரும் நிகழ்வுகள் சார்ந்து எந்த நிலைபாடும் எடுக்கமுடியாது. ஆதரித்தால் முழு ஆதரவு, எதிர்த்தால் முழு எதிர்ப்பு என்றுதான் செயல்பட முடியும். அதுதான் அவர்களைப் பொறுத்தவரை தெளிவான அரசியல் நிலைபாடு, அதுதான் நேர்மையான நிலைபாடு. அப்படித்தான் அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆகவே அவர்களால் முத்திரை குத்தவே முடியும். அதனடிப்படையில் ஆதரவு என்றால் கொண்டாடவும் எதிர்ப்பு என்றால் வசைபாடவுமே முடியும். அவர்கள் தங்கள் அரசியல்நிலைபாட்டை சுயநலத்தின் அடிப்படையில் ஒரு சதியாகவே எடுத்திருக்கிறார்கள். அல்லது சாதி, இனம், மதம், கருத்தியல் வெறிகளின் அடிப்படையில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் பிறரையும் அப்படியே நினைக்கிறார்கள். எனவே தங்களுக்கு எதிர்தரப்பு என்பது சுயநல நோக்கம் கொண்ட ஓர் அரசியல்சதி அல்லது சாதி மத இன மொழி கருத்தியல் சார்ந்த ரகசியப்பற்று என்று மட்டும்தான் அவர்களால் புரிந்துகொள்ள முடியும். அதற்குமேல் அவர்களால் எழவே முடியாது. அவர்கள் இருக்குமிடம் ஒரு மாபெரும் இருட்சிறை.
இந்த வசைகள் எல்லா எழுத்தாளருக்கும் அளிக்கப்பட்டவையே. இன்று புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் முற்போக்கினரால் கொண்டாடப்படுகின்றனர். ஆனால் புதுமைப்பித்தன் நச்சிலக்கியவாதி என அவர்களால் வசைபாடப்பட்டார். ஜெயகாந்தன் பச்சோந்தி என்று இழிவுசெய்யப்பட்டார். காலந்தோறும் அரசியல்வாதிகள் எழுத்தாளனை தங்களுக்கு கொடிபிடிக்க அழைக்கிறார்கள், வராவிட்டால் வசைபாடுகிறார்கள்.
ஜெயகாந்தனின் கருத்துக்களைக் கவனியுங்கள். அது மிகச்சிறந்த உதாரணம். அவர் இடதுசாரிப்புலம் கொண்டவர். ஆனால் தாயுமானவரையும் விவேகானந்தரையும் இயல்பாக ஏற்றுக்கொண்டவர். தேவையென தோன்றியபோது காங்கிரஸின் மேடைப்பேச்சாளர் ஆனார். ரஷ்யாவை ஆதரித்தவர் கடைசிக்காலத்தில் அமெரிக்கா சென்று அங்கிருந்த மக்கள்நலத் திட்டங்களைக் கண்டபோது அதை எந்த ஜாக்ரதையுணர்வுமில்லாமல் இயல்பாகவே அமெரிக்காவைப் பாராட்டினார். கடைசியாக அவர் பச்சோந்தி என இழிவுசெய்யப்பட்டது அப்போதுதான்.
இப்போது ஸ்டாலினின் அரசை கவனிக்கிறேன். என் சுற்றிலும் நிகழ்வனவற்றில் இருந்து என் உளப்பதிவைச் சொல்கிறேன். எல்லாவற்றிலும் கருத்து சொல்வதில்லை. எனக்கு அக்கறை உள்ள தளங்களில் மட்டும். உண்மையில் எனக்கு இந்த அரசல்ல, எந்த அரசின்மேலும் பெரிய நம்பிக்கை ஏதும் இருப்பதில்லை. அதுவே பொதுவாக இந்தியக் குடிமகனின் மனநிலை. ஆனாலும் ஒவ்வொரு புதிய ஆட்சியாளர்மேலும் ஒரு நம்பிக்கை உருவாவதையும் தவிர்க்கமுடியாது, அது பலசமயம் கடும் ஏமாற்றமாகவே ஆகிறது.
ஸ்டாலின் அரசை சற்றுக் கூடுதல் நம்பிக்கையின்மையுடனேயே அணுகினேன் என நண்பர்களுக்குத் தெரியும். ஆனால் இவ்வரசின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாகவே உள்ளன. அனைத்துத் தளங்களிலும். ஓர் இலட்சிய அரசு என்றெல்லாம் சொல்லமாட்டேன். அப்படி ஓர் அரசு நம் தேர்தல்முறையில் சாத்தியமே இல்லை. ஆனால் நடைமுறைகளில் நேர்மையும், நல்ல நோக்கங்களும், சரியான திட்டங்களும் கொண்ட அரசாக உள்ளது.
இதுவே இன்று தமிழகத்து மக்களின் மனநிலை என்பதை அறிய ஒரு சுற்று உங்கள் அருகே உள்ள முச்சந்தியில் உலவி வந்தாலே போதும். இந்த அரசு மிகமிக நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. உண்மையில் இந்த ஆதரவின் பாதிப்பங்குகூட தேர்தலின்போது திமுகவுக்கு இருந்ததில்லை.
ஏமாற்றம் கொள்ளப்போகிறவர்கள் திமுகவினர்தான். அவர்களில் சுயநல நோக்கம் கொண்டவர்கள் ஏதும் கிடைக்காமல் சீற்றம் அடையலாம். மிகையான நம்பிக்கை கொண்ட முதிராத தொண்டர்கள் நடைமுறையின் எல்லைகளுக்குள் அரசு செயல்படுவதைக் கண்டு ஏமாற்றம் அடையலாம்.
ஆனால் இந்த ஆட்சி இதே விசையுடன் தொடர்ந்தால் சாமானியன் நிறைவையே அடைவான். அவனுக்கு அரசின், அரசியல்வாதிகளின் எல்லைகளும் தெரியும். அதற்குள் நின்று அவர்கள் செய்யும் சாதனைகளையே அவன் எதிர்பார்க்கிறான்
இந்த அரசியல்கும்பல், அதிலும் களஅரசியலே அறியாமல் முகநூலில் வம்பளக்கும் வெட்டிகள் என்ன சொல்வார்களென எனக்கு தெரியும். இவர்கள் எந்த வகையில் எனக்கு ஒரு பொருட்டு? இதுவரை எங்கே இவர்களை கருத்தில்கொண்டிருக்கிறேன்? நாளை ஸ்டாலின் அரசின் ஏதாவது செயல்பாட்டை நான் விமர்சனம் செய்தால் மீண்டும் விலைபோய்விட்டான், பச்சோந்தி என ஆரம்பிப்பார்கள். சிறுமதியர், மிகச்சிறிய மானுடர்.
*
நான் தன்னிச்சையாக அரசியலை கவனிக்கிறேன். இயல்பாக என் உள்ளத்திற்குப் படுவதைச் சொல்கிறேன். வாழ்க்கையின் பிறவிஷயங்களை எப்படி பார்த்து எவ்வண்ணம் வெளிப்படுத்துகிறேனோ அப்படி.
அது பொதுவாக ஒட்டுமொத்தச் சமூகத்தின் எதிர்வினைகளின் போக்கையே கொண்டிருக்கும். எழுத்தாளன் என்பதனால் ஒர் உள்ளுணர்வின் வெளிப்பாட்டையும் கொண்டிருக்கும். ஒட்டுமொத்தச் சமூகத்தின் எண்ணமென்ன என்று அறிய, உள்ளுணர்வின் கண்டடைதலென்ன என்று அறிய அவற்றை கவனிக்கலாம்.
அது ‘தெளிவானதாக’ இருக்கவேண்டும் என்றோ ‘மாறாநிலைபாடு’ கொண்டிருக்கவேண்டும் என்றோ நான் முயல்வதில்லை. அது தன்போக்கில் இருக்கலாம். அதில் குழப்பங்களும் பிழைகளும் இருக்கலாம். உண்மையானதாக இருந்தால் மட்டும் போதும்.
நான் சொல்லும் கருத்துக்கள் தரவுகள் சேகரித்து, ஆராய்ந்து சொல்லும் உண்மைகள் அல்ல. தர்க்கபூர்வமாக முன்வைக்கப்படுவனவும் அல்ல. அவை அரசியல் ஆய்வாளரின் கருத்துக்கள் அல்ல. ஆகவே அவற்றுடன் விவாதிக்க முடியாது. தேவையில்லை என்றால் கடந்துசெல்லலாம், அவ்வளவுதான்.
ஆனால் ஒரு சமூகச் சூழலில் இக்குரல்களுக்கு, இவை எழுத்தாளர்களால் முன்வைக்கப்படுவன என்பதனால், ஒர் இடமுண்டு. உலகமெங்கும் உயர்பண்பாட்டுச் சூழல்களில் இக்குரல்கள் எப்போதுமே கவனிக்கப்படுகின்றன.
நான் என் வாசகர்களுக்குச் சொல்லும் ஒன்று உண்டு, நான் இந்த அரசு அல்லது எந்த அரசு அளிக்கும் எதையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனக்கு எவரும் எதையும் அளிக்கவேண்டியதில்லை. எங்கும் சென்று நிற்கவேண்டிய தேவையும் எனக்கில்லை.என் வாசகர்களிடமே இன்று நான் எதையும் கேட்கமுடியும்.
ஆனால் நான் கேட்டுப் பெறுவதெல்லாமே எனக்காக அல்ல, பிற எழுத்தாளர்களுக்குத்தான். இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டும் லட்சக்கணக்கான ரூபாயை கேட்டுப்பெற்றிருக்கிறேன். நானறிந்து இந்தியாவில் எந்த எழுத்தாளனும் இந்த நிலையில் இல்லை. நான் மேற்கொண்டு எதிர்பார்க்க ஏதுமில்லை.
*
விஷ்ணுபுரம் ஓர் அமைப்பு அல்ல, ஓர் இயக்கம் மட்டுமே. அல்லது ஒரு நண்பர்குழு. எங்களுக்கு ’அமைப்பு’ என ஏதுமில்லை. தலைவர் செயலாளர் என எவரும் இல்லை. ஆகவே இதில் சேர்ந்து செயல்படும் எவரும் இதிலுள்ளவர்களே. இது தன்னிச்சையான ஒரு குழு, அவ்வளவுதான்.
விஷ்ணுபுரம் குழுவை அரசியலுக்கு அப்பாற்பட்டே வைத்திருக்கிறோம். அது தொடக்கம் முதலே உள்ள நெறி. இது கலை- இலக்கிய -பண்பாட்டுக் குழுமம் மட்டுமே. இதில் எல்லா அரசியலியக்கத்தவரும் உள்ளனர். நாம்தமிழர், மக்கள் நீதிமையம், அதிமுகவினர் பலர் உள்ளனர்.பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள்கூட உண்டு. ஆனால் இதற்குள் திமுகவினரும் பாரதிய ஜனதாக் கட்சியினருமே தீவிர அரசியல் பேசுபவர்கள். திமுகவினர் மேற்கோள்காட்டும் பல ஆய்வுக்கட்டுரைகள் என் தளத்தில் நண்பர் பாலா எழுதியவை. வெளியே பாரதியஜனதா, திமுக சார்ந்து விஷ்ணுபுரம் நண்பர்கள் பலர் எழுதிக்குவிக்கிறார்கள். வேறு தளங்களில் விவாதித்துக் கொள்கிறார்கள். அங்கே நான் நுழைவதில்லை.
திமுக -பாரதியஜனதா விவாதம் ஓயாமல் நிகழ்வதனால் எங்கள் குழுமங்கள், கூட்டங்கள் எதிலும் அரசியல் பேசுவதற்கு அனுமதி இல்லை. அரசியல் கூடாது என்பதனால் அல்ல, அதை ஆரம்பித்தால் வேறேதும் பேசமுடியாது என்பதனால். எங்கள் குழுமங்களில் ‘பார்பர்ஷாப் நெறிகள்’ உள்ளன என்ற கேலி பரவலாக உண்டு என நான் அறிவேன். ஆனால் வேறு வழி இல்லை.
ஜெ
இன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி
எழுத்தாளனின் விவாதம் -தடம் கேள்விபதில்
அரசியல்சரிநிலைகள், ராமர் கோயில்
வல்லினம் இளம்படைப்பாளிகள் மலர்
வல்லினம் இணைய இதழ் இம்முறை இளம்படைப்பாளிகளுக்கான மலராக வெளிவந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளுக்குள் எழுத வந்தவர்களை இளம்படைப்பாளிகள் என வரையறை செய்துள்ளனர். எனக்கு கடிதங்கள் எழுதும் வாசகர்களாக அறிமுகமான பலர் இதில் எழுத்தாளர்களாக அறிமுகமாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
வல்லினம் இளம்படைப்பாளிகள் சிறப்பிதழ்
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 6
அன்புள்ள ஜெ
கவிஞர் விக்ரமாதித்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டது மனநிறைவை அளிக்கிறது. நான் அவருடைய கவிதைகளில் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அதாவது அவருடைய தொகுப்புகள் எதையும் நான் வாசித்ததில்லை. இணையத்தில் விக்ரமாதித்தன் என்று தேடி வரக்கூடிய கவிதைகளை வாசிப்பது என் வழக்கம். என்னுடைய டைரியில் எனக்கு பிடித்தமான கவிஞர்களின் வரிகளை எழுதி வைப்பேன். பலருடைய கவிதைகளை நான் எப்பொழுதுமே சேமித்து வைத்திருக்கிறேன் அதில் முக்கியமான கவிதைகள் எல்லாமே விக்கிரமாதித்தன் அவர்கள் எழுதியவை.
விக்ரமாதித்தன் அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. இப்போதும் அந்த ஆசை உள்ளது .விஷ்ணுபுரம் விருது விழா நிகழ்வின் போது அங்கு வந்து அவரை வணங்கி வாழ்த்தும் பெற வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
விக்ரமாதித்யன் அவர்களின் கவிதை எனக்கு இலக்கிய இன்பம் அளிக்கும் கவிதையாக நான் நினைக்கவில்லை .கவிதையில் இருக்கும் இன்பம் என்ன என்பதை எல்லாம் அறிய வழியிருக்கும் ஒரு வாழ்க்கை எனக்கு இதுவரை அமையவில்லை. நான் ஒரு சிறிய தொழில் செய்து கொண்டிருக்கிறேன். இந்த தொழிலில் எனக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. அது பணப் பிரச்சினைகளை உருவாக்குகிறது .அந்த பணப் பிரச்சனைகள் மன பிரச்சினைகள் ஏற்படுகின்றன .பணம் இல்லாமல் இருந்தாலே உறவுகள் பயங்கரமான சிக்கலாக ஆகிவிடுகின்றன. இந்த மாதிரியான தருணங்கள் வாழ்க்கையில் வரும்போது அதைப்பற்றி நான் சிந்திப்பதற்கான ஒரு தொடக்கமாக உள்ளே கவிதை எனக்கு தேவைப்படுகிறது
எனக்கு இலக்கியம் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியாது கவிதை பற்றி பேசுவது கடினமாக ஒரு விஷயம். இருந்தாலும் இதை எழுதுகிறேன். விக்கிரமாதித்தன் அவர்கள் கவிதை பற்றி பேசியிருப்பதை நான் படித்து இருக்கிறேன் இந்த கடிதத்தில் நான் கவிதை எழுதி என்ன நினைக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும் அல்லது கவிதையிலிருந்து எனக்கு என்ன கிடைத்தது என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது .கவிதை பற்றி எல்லாரும் பேசக்கூடிய விஷயங்கள் எனக்கு தெரியவில்லை நான் கவிதையை என்னுடைய வாழ்க்கையை புரிந்து கொள்வதற்கான விஷயமாகவே பார்க்கிறேன் அதற்கு விக்ரமாதித்தன் அவர்களின் கவிதைகள்தான் எனக்கு உதவின. அவை எளிமையாகவும் நேரடியாகவும் இருக்கின்றன. அவற்றை புரிந்துகொள்வது எளிமையாக உள்ளது. அவர் பூடகமாக ஒன்றும் சொல்வதில்லை.
விக்ரமாதித்யன் அவர்கள் வாழ்க்கையின் முக்கியப் பிரச்சினைகளை கவிதையாகப் பேசுகிறார். அவர் எப்பொழுதுமே அந்த பிரச்சினைகளை சுருக்கமாகவும் ஓரிரு வரிகளில் சொல்லும் கவிதைகள் எழுதியிருக்கிறார். அந்த வரிகள் எல்லாமே மிக ஆழமானவை என்று எனக்கு தோன்றும் .நான் அந்த வரிகளை அடிக்கடி யோசித்துக்கொண்டு இருப்பேன். அந்த வரிகளில் இருந்து தனக்கான சிந்தனைகளை உருவாக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்த காலத்துக்குரிய திருக்குறள் வரிகளை அவர் எழுதிக் கொண்டிருக்கிறார்
விக்ரமாதித்தன் கவிதைகளில் துக்கத்தையும் அலைச்சலையும் எழுதுகிறார்.ஆனால் அவருடைய கவிதைகளில் வருத்தம் இருந்தாலும் மனிதன் வாழ்க்கையில் இன்பங்களையும் அழகுகளையும் அவர் பேசுகிறார். இங்கே எப்படியும் மனிதவாழ்க்கை நடந்தேறிவிடும் என்னும் நம்பிக்கையை அளிக்கிறார். என்னைப்போன்றவர்கள் அவர் கவிதைகளை வாசிப்பது அதனால்தான். அவருடைய கவிதைகளில் மனிதர்கள் இருக்கிறார்கள். கடவுள்களும் இருக்கிறார்கள். அவர் பேசும் கடவுள்கள் நம்முடைய வாழ்க்கையுடன் நெருக்கமானவர்களாகவே இருக்கிறார்கள். வேறு எங்கோ வானத்திலே இருப்பவர்களாக இல்லை. கடவுள்களும் திருமணம் செய்துகொள்கிறாகள். கடவுள்களும் சண்டை போடுகிறார்கள். அன்பாக இருக்கிறார்கள்.
விக்ரமாதித்யன் கடவுள்களிடம் பிரார்த்தனை செய்வது கிடையாது. கடவுள் மனிதனுக்கு உதவி செய்வார் என்று அவர் நினைக்கவில்லை. அவ எழுதிய கடவுள்கள் மனிதர்களுடன் சேர்ந்து இங்கேயே இயல்பாக வாழ்கிறார்கள். நான் கோவிலுக்கு செல்லும் போதும் கடவுளே என்னைக் காப்பாற்று என்று வேண்டிக்கொள்வதில்லை. கடவுள்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். மனிதர்கள் தங்களைப் பார்த்து தங்களுடைய உயர்ந்த வடிவமாக கடவுள்களை உருவாக்கினார்கள். அந்த தெய்வங்களை பார்த்து நாம் நம்முடைய மனதை உயர்த்திக் கொள்ள வேண்டியதுதான். விக்ரமாதித்யனின் கவிதைகளை வாசித்தபிறகுதான் நான் கோயிலுக்கு போக ஆரம்பித்தேன். அதற்கு முன் நான் நாத்திகன். அந்த அர்த்தத்தில் விக்கிரமாதித்தன் அவர்களைத்தான் இன்றைய பக்திக் கவிஞர் என நினைக்கிறேன் .
வேட்டுவ வள்ளியின்
விழிப்பார்வைக்கும் எச்சில் முத்தத்துக்கும்
யாசித்து நிற்கும் வடிவேலன்
என்றுதான் அவர் முருகனைப் பற்றி எழுதுகிறார். புட்டார்த்தி அம்மனாவது புரிந்துகொண்டால் சரி என்ற வரியை நான் நூறுமுறை சொல்லிக் கொண்டிருக்கிறேன். சாமிக்கே அந்த வேண்டுதல்தான் இருக்கிறது.
பிரம்மஹத்தி தோஷம் பிடித்த
சிவனைப் போல
அலைந்து கொண்டிருக்கிறான் இவனும்
அன்னபூரணியின் திருக்கை பார்த்து
இருக்கட்டும்
பக்தி என்பது இப்படித்தான் இருக்க முடியும் .கடவுள் நமது தலைக்கு மேலே இருக்கிறார் என்றும் நாமெல்லாம் அவளை கும்பிட்டு அருள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்லுவது பழைய நம்பிக்கை. நமக்கு சிலசமயம் அதெல்லாம் தேவைபப்டு. ஆனால் நாம் அனைவரும் உயரமாக நினைக்கக்கூடிய ஓரிடத்தில் கடவுள் என்று சில உருவங்கள் இருப்பது நம்மை உயர்ந்த விஷயங்களை நோக்கி போகவைக்கிறது. கடவுள் நமக்கு ஒரு வீட்டில் பெரியவர்களை நாம் முன்னுதாரணமாக நினைப்பதுபோல அல்லது ஒரு பெரியமனிதர்போல. விக்ரமாதித்யன் எழுதும்போது தெய்வங்கள் அப்படி ஆகிவிடுகின்றன. அவர்களும் சாமானியர்களாக ஆகிவிடுகிறார்கள்
சாமானியர் என்றால் சாதாரணமானவர்கள் அல்ல. அவருடைய கவிதைகளில் இருக்கும் மனிதர்களையும் தெய்வங்களையும் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். சாமானியர்கள் என்றால் அது ஒரு பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். நெடுங்காலமாக கவிதையின் விளக்கம் எல்லாம் வாழ்க்கையில் உயர்ந்த விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். மாபெரும் மனிதர்களைப் பற்றி பேசுகிறார்கள். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்று கூட நான் பள்ளிக்கூடத்தில் படித்து இருக்கிறேன் ஆனால் சாமானியர்களால்தான் இந்த உலகம் இயங்குகிறது. சாமானியர்கள் சாதாரணமாக இருக்கலாம். ஒவ்வொருவரும் தனித்தனியாக பெரிய இடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக இந்த உலகமே சாமானியர்களால் தான் உருவாக்கப்படுகிறது. மணல் மாதிரி. மணல் சாதாரணமானது. ஆனால் அதெல்லாம் சேர்ந்துதான் மண். அதுதான் இந்த பூமியே
தமிழ் இலக்கியத்தில் எப்போதுமே ஒரு மேட்டிமைத்தனம்தான் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் எந்த மேட்டிமைதனம் தேவைப்படுகிறது. ஆகவேதான் எழுதுவது. அதற்காக தான் படிக்கிறார்கள். யாரும் தன்னை குறைவாக நினைக்ககூடாது என்றுதான் கவிதை படிக்கிறார்கள். ஆனால் விக்ரமாதித்யன் அவர்கள் சாமானியர்களில் சாமானியராக வாழ்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். சாமானியர்களின் மனசையும் துக்கத்தையும் எழுதிக்கொண்டிருக்கிறார். அவருக்கு விருது கொடுப்பதில் மகிழ்ச்சி
இரா. மாணிக்கம்
வாசகர் செந்தில்,கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ஓராண்டுக்கு முன்பு செந்திலின் பேட்டியை நான் வாசித்திருந்தால் சிலரைப்போல நையாண்டியாகச் சிரித்திருப்பேன். நான் ரொம்ப முற்றிப்போன அறிவுஜீவி என நினைத்துக்கொண்டிருப்பேன். ஆனால் கொரோனாக்காலம் என்னை உண்மையில் யார் என்று காட்டிவிட்டது. பலவகையான சிக்கல்கள். இழப்புகள். தூக்கமே இல்லாத இரவுகள். நான் முகநூலில் நெகெட்டிவாகவே எழுதிவந்தவன். எல்லாவற்றையும் நையாண்டி செய்வேன். அப்போதுதான் நமக்கு ஒரு பிம்பம் உருவாகிறது. அது ஒரு குறுக்குவழி.
ஆனால் உண்மையில் உள்ளூர நான் நம்பிக்கையும் பிடிப்பும் கொண்டிருந்தேன். ஏனென்றால் நல்ல வேலை, நல்ல சம்பளம். அந்த நெகெட்டிவிட்டி ஒரு நடிப்புதான். உண்மையாகவே உள்ளூர நெகட்டிவாக இருப்பது என்றால் என்ன என்று எனக்கு காட்டியது தூக்கமே இல்லை. அப்போதுதான் நூறுகதைகளை வாசித்தேன். பலகதைகளை ஏழெட்டுமுறை வாசித்தேன். வாழ்க்கை என்பது எத்தனை நுட்பங்களும் அழகுகளும் கொண்டது என்று அறிந்துகொண்டேன். மதுரம் என்ற சிறுகதையை மட்டும் இருபது முறை படித்தேன். இன்றைக்கு மீண்டுவந்துவிட்டேன்.
அந்தக்கதைகளில் உள்ளது கருத்து அல்ல. பார்வை அல்ல. ஒரு wisdom. அது வாழ்ந்து அறிபவர்களுக்குத்தான் வந்து சேரும். அதைத்தான் இன்றைக்கு வெண்முரசிலும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இலக்கியத்தைப் பார்த்து வாசகர்கள் வருவது அதற்காகவே. அந்த wisdom கிடைக்காதவர்களுக்கு இலக்கியமென்றால் என்ன, அதன் பயன் என்ன என்று சொன்னாலும் புரியாது.
ரா.கார்த்திக்
அன்பு ஜெயமோகன்,
காந்தம் வலைக்காட்சியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செந்தில்குமார் என்பவரின் நேர்காணலைப் பார்த்தே ஆக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். காரணம், நேர்காணலுக்கு அவர்கள் கொடுத்திருந்த தலைப்பு. “ஜெயமோகனுக்காக கழுத்து அறுத்து குருதிப்பலி கொடுப்பேன்” எனும் தலைப்பால் கடுப்பாகித்தான் காணொலிக்குள் நுழைந்தேன்.
கடுப்பு என்றால் உலக மகா கடுப்பு. உங்களை வைத்து ஜல்லி அடிக்கும் சமூகவலைக்கும்பலோ எனும் கடுப்புதான். இன்னொரு புறம், உங்களைப் ‘புனிதப்படுத்தும்’ முயற்சிகள் ஆரம்பமாகி விட்டனவோ என்றும் அச்சம். காணொலியில் அகரமுதல்வன் பெயரைக் கண்ட பிறகே நிதானமானேன். தொடர்ந்து நேர்காணலைக் காணவும் முடிவு செய்தேன்.
திருவல்லிக்கேணி செந்தில்குமார் என்பவரின் நேர்காணல் அது. அப்பகுதியில் பழைய புத்தகக்கடை நடத்தி வருகிறார். வழக்கமாக அதுபோன்ற கடைகள் நடத்தும் நபர்கள், பெரும்பாலும் பிழைப்புக்கான வழியாகவே அதைக் கருதுவர். இலக்கிய நூல்களைத் தேடி வருபவர்களைக் கண்டால் எரிச்சல் படுவர். அவர்களையும் குறைசொல்லிட முடியாது. அவர்கள் வளர்ந்த சூழல் அப்படி. இப்படியான சூழலில் ஒரு வாசகன் கிடைத்து விட மாட்டானா என ஏங்கி இருக்கிறேன். ஏக்கத்தைப் போக்கியதோடு, என்னைக் குற்றவுணர்வுக்குள்ளும் தள்ளி விட்டான் செந்தில்.
பாலகுமார வெறியனாய் இருந்தபோது, அவரின் நாவல்களை வாங்குவதற்கு பழைய புத்தகக் கடைகளையே அதிகம் நாடுவேன். கோபிசெட்டிபாளைய பேருந்து நிலையத்தில் ஒருவர் பழைய புத்தகக்கடை வைத்திருந்தார் (தள்ளுவண்டியில்). அவரிடமே பாலகுமாரன் நாவல்களை (மலிவுப் பதிப்பு) அதிக எண்ணிக்கையில் வாங்கி இருக்கிறேன். அவரும் சலிக்காமல் சேகரித்துத் தருவார். ஒருகட்டத்தில் பாலகுமாரன் நாவல் கிடைக்கும்போது எனக்காக அதைத் தனியே எடுத்து வைத்து விடுவார். நான் மறுத்த பிறகே மற்றவர்களுக்குக் கொடுப்பார். இன்றைக்கும் அக்கடை இருக்கிறது என்றாலும் முன்புபோல ஓட்டம் இல்லை.
செந்தில்குமாரின் உரையாடலில் ஒரு வாசகனின் அசகாய உடல்மொழியைத் தொடர்ந்து கண்டேன். குறிப்பாக, அவரின் கண்ணசைவுகள். வியாச விருந்து எனச் சொல்ல வராமல் வியாச விருது எனக் குறிப்பிட்டார்; அவ்வளவு அழகு. இராஜாஜியையும் சாண்டில்யனையும் வாலியையும் கொண்டாடித் தீர்த்த பிறகு உங்களிடம் வந்தார். கொற்றவை புரியவில்லை எனச் சொல்லவில்லை. எனக்கு அதை வாசிக்கும் அளவிலான பக்குவம் வரவிலை எனப் பணிவுடன் குறிபிட்டார். அது போலிப்பணிவு அல்ல. இது ஒரு வாசகனுக்கு மிக அவசியமான தகுதி.
இவ்விடத்தில், ஒன்றை வலியுறுத்திச் சொல்கிறேன். ஒரு வாசகன் ஒரு எழுத்தாளரின் அனைத்து இலக்கியப் படைப்புகளையும் வாசித்தாக வேண்டும் என்று அவசியமில்லை. தங்கள் வாசிப்புக்கு இணக்கமான படைப்பை முதலில் அடையாளம் கண்டு வாசிக்க வேண்டும். மெல்ல மெல்ல வாசிக்க மேலதிக உழைப்பைக் கோரும் ஆக்கங்களுக்குச் செல்ல வேண்டும். ஒரு படைப்பை வாசிப்பதற்கான முன்தயாரிப்பைச் சில ஆக்கங்கள் இயல்பாகவே வேண்டி நிற்கும். வாசகன் அதற்குத் தயாராகமால், அப்படைப்புகளுக்குள் நுழையவே கூடாது.
வணிக இலக்கியப் பொழுதுபோக்கை வாசிப்பு என நம்பிக்கொண்டிருப்பது அபாயகரமானது. நேரம் போக்க உதவும் எதுவும் படைப்பாகா; பண்டம் மட்டுமே. ஒரு வாசகன் வாசிப்பதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியது. எது படைப்பு (இலக்கியம்) என்பதைத்தான். ஆக, வாசகன் எழுத்தாளனை விட விழிப்புணர்வுள்ளவனாக இருக்க வேண்டி இருக்கிறது. இன்றைய வாசகர்களுக்கு இன்னும் அதிக விழிப்புணர்வு முக்கியம்.
புத்தகத்தின் வாசனை இல்லாத வாசிப்பு தனக்குச் சாத்தியபட்டு வராது என்பதில் செந்தில்குமாரிடம் இருக்கும் உறுதி என்னிடமும் இருக்கிறது. அது முரண்டு பிடிப்பதல்ல. ஒரு வாசகன் வாசிக்கும்போதான நெருக்கமான அனுபவத்தை அச்சுநூல்களே அளிக்கின்றன. மின்நூல்கள் வெறும் காட்சியனுபவமாகவே எஞ்சி நிற்கின்றன. உங்களின் கட்டுரைகளை தளத்தில் வாசிக்கும்போது அந்நியத் தன்மையையே உணர்கிறேன். பண்படுதல் துவங்கி தன்மீட்சி வரையிலான கட்டுரைத் தொகுப்புகளை அச்சுவடிவிலேயே அதிகம் நெருங்க முடிந்தது. ஆயிரக்கணக்கான மின்நூல்கள் கைவசம் இருக்கின்றன. எனினும், அவற்றைக் குறித்த நிறைவில்லை. நூற்றுக்கணக்கான அச்சுநூல்கள் என் சேகரிப்பில் இன்று இருக்கின்றன. அவை இலட்சக்கணக்கானவையாக மாற வேண்டும் என்பதே எப்போதும் என் கனவு.
உங்களைச் சந்திக்க வேண்டும் எனச் செந்தில்குமார் விரும்புகிறார். அவரைச் சந்திக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். பார்ப்போம், எது முதலில் சாத்தியப்படுகிறதென்று.
சத்திவேல்
கோபிசெட்டிபாளையம்.
இன்னொரு பேட்டி
***
பிகு :செந்திலின் புத்தக கடை Pycrofts Road, அல்லது பாரதியார் சாலையில், கோஷா ஆஸ்பத்திரி பேருந்துநிலையம் எதிரில் இருக்கிறது.
வெண்முரசும் கிருஷ்ணஜெயந்தியும்.
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் தங்களுக்கும், அண்ணிக்கும், குழந்தைகளுக்கும். சொல்முகத்தின் வரும் மாதத்திற்கான வெண்முரசு – நீலம் வாசிப்பு இன்று தொடங்குகிறது. இம்முறையும் வெண்முரசு கலந்துரையாடல் இனிதாகச் சென்றது. சென்னையிலிருந்து வந்திருந்த அன்பிற்குரிய இளையோன் செந்திலை அறிந்து கொள்ள முடிந்தது.
ஈரோட்டிலிருந்து அன்பிற்குரிய கிருஷ்ணனும் அந்தியூர் மணியும் இளையோன் மணவாளனும் வந்திருந்தனர். தங்களுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. அறிவியலில் ராமன் எபெக்ட் என்பதைப் போலவே இலக்கியத்தில் கிருஷ்ணன் பினாமினன் என்று ஒன்று இருப்பது. இம்முறையும் அவர் பினாமினன் தவறவில்லை. மாமலர் வந்துகொண்டிருந்தபோது அதில் சுக்கிரரின் குருநிலையைச் சேர்ந்த கிருதர் – அவரை எண்ணும்போது அன்று குறுந்தாடியுடன் இருந்த நம் நரேனை கிருதர் என்று எண்ணிக்கொள்வேன்.
சொல்முகத்தின் திறன் மிகுந்த நல்ல கேப்டன் அவர். முதலில் வாசிக்க வேண்டும், தொடர்ந்து வாசிக்க வேண்டும், சரியானதைத் தேர்ந்தெடுத்து வாசிக்கவேண்டும், அவ்வகையில் சொல்முகம் ஒரு நல்லூழ். குவிஸ் செந்தில் அண்ணன், நரேன். செல்வேந்திரன், மீனாம்பிகை, சுஷில்குமார், பாலாஜி பிருதிவிராஜ், வெண்முரசு பூபதி, கதிர்முருகன், காளீஸ்வரன், நவீன் எனப்பல அன்புமிகுந்த, அறிவார்ந்த, கலகலப்பான, ஆன்மிக சாதகர்களான (நம் இனிய கதிர் இன்னும் இங்குள்ள பெந்தேகொஸ் தேவைத்தான் மேற்கொள்ளவில்லை. ஹட யோகியைப்போல் இருக்கிறார். இளைத்திருக்கிறார் – சற்றுப் பொறாமைதான்) நல்ல நண்பர்களை எனக்கு அளித்தீர்கள். என்றும் தங்களுக்கு நன்றி.
அன்புடன்
விக்ரம்
கோவை
***
அன்புள்ள விக்ரம்,
நலம்தானே?
வெண்முரசு எழுதி முடிந்தபின் மீண்டும் ஒரு வாசிப்பின் அலை எழுந்துள்ளது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிப்பது. புதியதாக வாசிக்கும் இளைய தலைமுறை வந்திருக்கிறது. அவர்களுக்கான தனி விவாத அரங்குகள் நடைபெறுகின்றன. புதியவாசகர்கள் மொத்தமாகவே வாசிக்க முடிகிறது என்பதனால் மிக விரைவில் முடித்துவிடுகிறார்கள். தொடராக வாசித்தவர்களுக்கு இல்லாத பல தெளிவுகள் அவர்களுக்கு எளிதில் அமைகின்றன.
கோவை வெண்முரசு கூட்டம் மிகச்சிறப்பாக நடந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். வெண்முரசின் ‘முதன்மை வாசகர்’ என தன்னை அறிவித்துக்கொண்ட இளவல் செந்தில் [ வாசகன் என்னும் நிலை ] சென்னையில் இருந்து வந்திருந்ததை நண்பர்கள் கொண்டாட்டத்துடன் சொன்னார்கள். அவருடைய விரிவான கூரிய வாசிப்பும், அதை வெளிப்படுத்தும்படி மொழி அமைந்திருந்ததும் பலரையும் வியப்படையச் செய்திருந்தது. நம் நண்பர்களுக்கு அவருடன் உருவான நட்பு என்னையும் மகிழச்செய்தது.
இந்த கிருஷ்ணஜெயந்தி நாளில் சுவாரசியமான ஒரு விஷயத்தைக் கவனித்தேன். சென்ற ஆண்டே தொடங்கியது, என்றாலும் இப்போது பேசிப்பேசி வலுப்பெற்றிருக்கிறது. பலர் அன்று நீலம் நாவலின் சில பகுதிகளைப் படிப்பதை ஒரு புதிய சடங்காகக் கொண்டிருக்கிறார்கள். அதிலுள்ள ஒலிநயம் மிக்க பகுதிகளை வாசித்து அதை ஒலிப்பதிவு செய்து அனுப்பியிருந்தனர். சிலர் பூஜையிலேயே நீலம் நாவலை வைத்திருந்தனர்.
காலந்தோறும் கிருஷ்ணன் வெவ்வேறு வகைகளில் கண்டுபிடிக்கப்படுவதாகவே அதை நான் காண்கிறேன். நிறைவூட்டும் ஒர் எண்ணம் அது.
ஜெ
August 31, 2021
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 5
விக்ரமாதித்தன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். இந்த கடிதத்தை என்னுடைய மகிழ்ச்சியை தெரிவிப்பதற்காக எழுதுகிறேன். நான் அவருடைய கவிதைகளை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவரை இரண்டு மூன்று முறை நேரில் சந்தித்து இருக்கிறேன். அவர் என்னுடைய உள்ளத்திற்கு மிகவும் உகந்த கவிஞர்.
ஏன் அவரை நான் முக்கியமாக நினைக்கிறேன் என்று கேட்டுக் கொள்வதற்காக இந்த கடிதத்தை எழுதும்போது முயற்சி செய்கிறேன். அவர் எந்த தோரணையும் இல்லாத கவிஞர். கவிஞர் என்ற எண்ணம் அவருக்கு உண்டு. அதை அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவருடைய கவிதையில் அந்த தோரணையே கிடையாது. அவருடன் பேசிக்கொண்டே திருநெல்வேலி நகரத்தில் ஒரு தெருவில் சென்று கொண்டிருப்பது போல அவருடைய கவிதைகள் படிக்கும்போது தோன்றும். எனக்கு அவருடைய எல்லா கவிதைகளும் உரையாடலாகவே தோன்றுகின்றன
என்னைப் பொறுத்தவரை நல்ல கவிதை என்பது அந்த உரையாடல் குரலை தன்னிடம் கொண்டிருக்க வேண்டும் . அதாவது. நம்மிடம் அது ஒரு தோழனின் போல பேச வேண்டும். நான் சொல்கிறேன், நீ கேள் என்ற தோரணை இருக்கக்கூடாது .ஒருவேளை இது என்னுடைய பிரச்சினையாக இருக்கலாம். நான் வாழ்க்கையில் யார் பேச்சையும் கேட்டவன் கிடையாது. கெட்டுக்குட்டிச்சுவரானாலும் சரி நான் நினைப்பதைச் செய்தவன். ஆகவே உபதேசம் செய்யக்கூடிய கவிதைகள் மேல் எனக்கு பெரிய மதிப்பில்லை. அதேபோல இயற்கை வர்ணனைகள் அல்லது மிகப்பெரிய தத்துவ சிந்தனைகளை உலகிற்கு அளிக்கும் கவிதைகளையும் என்னால் ரசிக்க முடியவில்லை. என்னுடைய மனம் வேறு வழியே செல்கிறது. எனக்கு என்னுடன் உரையாடுகிற கவிதைதான் தேவை
முன்பு நான் நிறைய குடித்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை குடிப்பழக்கத்தினால் தான் விக்கிரமாதித்தன் கவிதைகள் எனக்கு பிடிக்கிறதோ என்னவோ. அவருடன் நான் இருந்து பேசிக்கொண்டே கவிதைகளை கேட்டேன் என்று நினைத்துக்கொள்வேன். நிறைய சந்தர்ப்பங்களில் அவரும் நானும் ஒரு பாரில் அமர்ந்து பேசும் போது அவரது கவிதைகளை சொல்வது போல நான் கற்பனை செய்து கொண்டிருக்கிறேன். அவருடைய கவிதைகள் நேரடியாகவே ஞாபகத்தில் இருக்கின்றன .நிறைய கவிதைகளை அவர் சும்மா போகிற போக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது .அவை கவிதைதானா என்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் கவிதைதான் எனக்கு எப்படி உறுதி ஆயிற்று என்றால் நான் நீண்ட காலத்துக்குப் பிறகு இதையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறேன் என்பதனால்தான். நானே சொல்லிச்சொல்லி ஞாபகம் வைத்திருக்கிறேன்.
அவருடைய கவிதைகள் மனசாட்சி பேசுவது போல இருக்கின்றன. ஆகவே யாரோ நமக்கு உள்ளே இருந்து பேசுவது போல நினைத்துக் கொள்ள முடிகிறது. அவர் கவிதைகள் தனியாக இருந்து யோசிப்பதில்லை. நமது வாழ்க்கையில் நம்மைச் சுற்றி இங்கு நடப்பவை எல்லாவற்றுக்கும் அவர் எதிர்வினை ஆற்றுவது போல தோன்றுகிறது. விக்ரமாதித்தன் எல்லா கவிதைகளையும் ஒட்டுமொத்தமாக எதிர்வினைகள் என்று சொல்லலாம் அவர் ஒரு குடிகாரர் போல ஒரு பக்கமாக நின்று கொண்டு எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் .குடிகாரர்களுக்கு அந்த பழக்கம் உண்டு. பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு அங்கே மற்றவர்கள் பேசக்கூடிய எல்லாவற்றுக்கும் அவர்கள் விளக்கமாக பதில் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அல்லது ஒரு சித்தர் போல அந்த பதிலை சொல்லுகிறார்
விக்ரமாதித்தன் அவர்கள்தான் தமிழில் எல்லாவற்றுக்கும் கவிஞனாக எதிர்வினையாற்றுபவர் என்று தோன்றியது. அவ்வாறு எதிர்வினையாற்றுகிற பலபேர் வெறும் அரசியல் எதிர்வினைகள் ஆற்றினார்கள். விக்ரமாதித்தன் ஒரு கவிஞனுடைய எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கிறார் அது ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் என்று நினைக்கிறேன். ஒரு கவிஞன் நாம் பேசக்கூடிய ஒவ்வொன்றுக்கும் என்ன எதிர்வினை கொடுப்பார் என்பதை அவர் கவிதையைக் கொண்டுதான் தெரிந்துகொள்ள முடிகிறது . அவர் எதற்கு எதிர்வினை புரிந்தார் என்று தெரியாதபோது பல கவிதைகளை கவிதைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு இந்தக்குரல் வந்துகொண்டே இருப்பது முக்கியமானது என்று நினைக்கிறேன்
என்னால் சரியாகத் தொகுத்துச் சொல்ல முடியவில்லை. விக்ரமாதித்யன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
துரை அண்ணாமலை
அன்புள்ள ஜெ
விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டது எனக்கு தனிப்பட்டமுறையில் கிடைத்த விருதுபோலவே உணர்ந்தேன். ஏனென்றால் அவர் என்னுடைய கவிஞர். தமிழகத்தில் எங்கோ அவரைப்போன்ற ஒருவர், அவருடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒருவர் இருப்பார். அவருடைய கவிதைகள் அத்தகையவை
1993 வாக்கில் நான் குடிகாரன். அன்றைக்கு குடிக்கொண்டாட்டத்தில் எவரோ
“போதையில் தலைசுற்றித் திரிகையில்
ஓர் உண்மை தெரிந்தது
உழைத்துக்குடிப்பதே உத்தமம்”
அன்றைக்கு கடுமையான சிரிப்பு. ஆனால் அதன் வழியாக நான் என்னுடைய கவிஞனை அடையாளம் கண்டுகொண்டேன். அவ்வப்போது அவர் கவிதைகளை வாசிப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை மாறியது. நான் வேறொருவனாக ஆனேன். அப்போது அவர் கவிதைகளும் உருமாறி என்னுடன் இருந்தன
அவருடைய கவிதைகள் வலிகளைப் பேசுபவை. அதிலும் அலைந்து திரிவதன் வலிகளை அவை சொல்கின்றன. அலைந்து திரிபவன் கவிஞன் மட்டுமல்ல. என்னைப்போன்ற வியாபாரியும்கூடத்தான். எல்லாருக்கும்தான் அலைதல். மனசுக்குள் அலைவது இன்னொரு கணக்கு. எல்லாம் எங்கோ இருக்கிறது என்று சொல்லி தேடி அலையும் அலைச்சல். இருந்த இடத்திலே இருக்க முடியாத அலைச்சல். சருகு சுழல்காற்றில் சிக்கிக் கொண்டதுபோலத்தான்
அலைச்சலின் துக்கத்தை அவரைப்போல எழுதியவர் யாருமில்லை
கிளிகள்
குறிப்பிட்ட தூரம் தாண்டா
குயில்கள் பக்கத்துப் பக்கத்திலேயே
கூவிக்கொண்டிருக்கின்றன
ஆடும் மயில்கள்
அங்கிட்டு இங்கிட்டு போக வேண்டாதவை
புலிகளே கூட
காடுவிட்டு காடுசெல்ல நினையாதவை
காக்கைகளுக்கும் கழுகுகளுக்கும்
வரையறுக்கப்பெற்ற தொலைவுதான்
ஓடும் நதியென்றாலும்
மீன்களும் சிற்றெல்லைகளுக்குள்தாம்
மான்கள்
ஒருவகையில் பாவம்
பாம்புகள் புழுக்கள்
தத்தம் பகுதிக்குள்தாம்
உயர்திணையென
உயர்த்திச் சொல்லிவிட்டால் போதுமா
நதிக்கரை விட்டு
பட்டணக்கரை
நாடுவிட்டு
நாடு
கண்டம் தாண்டி
கண்டம்
மனுஷர்களுக்குத்தாம்
கொடுமையெல்லாம்
பொருள்வயின் பிரிவு என ஒரு கவிதை எழுதியிருப்பார். அந்தக்கவிதையை எல்லா பஸ் பிரயாணங்களிலும் நான் நினைத்துக்கொள்வதுண்டு.
பொருள்வயின் பிரிவு
அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்தது வந்து கொண்டிருந்தேன்
மனசுகிடந்து அடித்துக்கொள்ள
எல்லா ஆண்களும் இந்த துயரத்தை உணர்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன். எங்கே செல்கிறேன் என்ற திகைப்பும், வேறுவழியில்லையே என்ற துக்கமும் மனசை நிறைக்கும் இடம் இது.
விக்ரமாதித்யனுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்
கணபதி குமார்
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்-4
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது- பாவண்ணன்
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது-கல்யாண்ஜி கடிதம்
விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது, கடிதங்கள் -3
விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது,கடிதங்கள்-2
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



