Jeyamohan's Blog, page 923
September 4, 2021
ஈழமக்களுக்கு சலுகைகள் – கடிதங்கள்-2
ஈழ அகதிகளுக்குச் சலுகைகள் – நன்றி
தேசமற்றவர்கள்
ஆசிரியருக்கு வணக்கம்,
தேசமற்றவர்கள் கடிதம் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி தளத்தில் கண்ணீர்மல்க வாசித்தவுடன் முத்துராமன் அண்ணாவை அழைத்து அரசாங்கம் தான் ஏதாவது செய்ய வேண்டும்.ஆசான் குறிப்பிட்டுள்ளதை போல் அரசில் காதில் இது எட்டட்டும் என்றேன்.
முத்துராமன் அண்ணாவை உங்கள் மூலம் அறிந்தபின் அவர் ஏழை மாணவர்களின் கல்விக்காக தனது சொந்தப் பணத்திலும்,நண்பர்களிடம் நிதி பெற்றும் தன்னலமில்லா அவர் செய்யும் பணியை நான் அறிவேன். ஒரு அறகட்டளை யில் ட்ரஸ்டியாக இருந்து சில உதவிகள் செய்து வருவதால் நடைமுறையில் உள்ள அனைத்து கஷ்டங்களும் அறிவேன்.நீங்கள் ஒருமுறை சொன்னதுபோல் “உதவி செய்யத்துல டெய்லி ஒருத்தர மன்னிக்கணும் இல்லேன்னா உதவி செய்ய முடியாது”என.
முத்துராமன் ஈழ மற்றும் ஏழை மாணவர்களின் கல்விக்காக தன்னை அர்பணித்து கொண்டார்.அவரின் ஈழ அகதிகள் பற்றிய கடிதமும்,அரசின் செவிகளுக்கு இது போய் எட்ட வேண்டும் எனும் உங்கள் பதிலும் இன்று அரசை ஈழ தமிழர்களுக்காக முதல் அடியை எடுக்க வைத்துள்ளது.உங்கள் தளம் மூலமே அரசின் அறிவிப்பை கண்டேன்.தேசமற்றவர்களின் வாழ்வின் இனியாகிலும் ஒளி பிறந்து,அமைதியாய் பாதுகாப்பை வாழ வேண்டுவதோடு.
அரசின் செவிகளுக்கு கொண்டு சேர்த்த உங்களுக்கும்,முத்துராமனுக்கும் நன்றி.
ஷாகுல் ஹமீது .
முத்துராமன்அன்புள்ள ஜெமோ
நான் உங்கள் அரசியல் கருத்துக்களுடன் கடுமையான முரண்பாடு கொண்டவன். திராவிட இயக்க அரசியலை இந்தியாவின் முக்கியமான எதிர் அரசியல் என நினைக்கிறேன். இன்றைக்கு உலகம் முழுக்க தேவைப்படுவது எதிர் அரசியல்தான். ஏனென்றால் மைய அரசியல் எல்லாமே மக்களை ஒடுக்குவதாகவும் ஏற்கனவே ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கு மேலும் ஆதிக்கம் அளிப்பதாகவுமே உள்ளது.
அது ஒரு பக்கம். ஆனால் ஈழ மக்களுக்காக நீங்கள் தொடர்ந்து எழுதிவருவதும், உங்கள் நண்பர்களின் அறக்கட்டளை செய்துவரும் உதவிகளும் மிகமுக்கியமானவை என நினைக்கிறேன். இத்தனைபேரை உளப்பூர்வமாக பாதிக்கவும் அவர்களைச் செயலில் ஈடுபடுத்தவும் உங்கள் எழுத்துக்களால் முடிகிறது என்பது ஆச்சரியமான விஷயம்தான். எழுத்தை எவ்வகையிலும் உங்கள் சுயமுன்னேற்றத்துக்குப் பயன்படுத்தாமல் பொதுநலத்துக்காக மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். ஆகவே பொதுநலம் நாடி பணியாற்றும் பலருக்கு ஆதர்சமாக இருக்கிறீர்கள். ஆனால் அவர்களைத்தான் நீங்கள் திரும்பத்திரும்ப முன்னிறுத்துகிறீர்கள். இதெல்லாம் வணக்கத்திற்குரிய செயல்கள்.
ஈழமக்களுக்கான உதவிகளைச் செய்ய தமிழக அரசுக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன. மனிதாபிமான அடிப்படையில் ஏதாவது செய்யலாம். ஆனால் இங்கே ஈழ அரசியல் பேசுபவர்கள் பொறுப்பில்லாத சிறு கும்பல். அவர்கள் எந்த நல்ல திட்டத்தையும் ஏற்க மாட்டார்கள். கூடவே வேண்டுமென்றே ஒன்றிய அரசுக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிராக எதையாவது சொல்லிவைப்பார்கள். அவர்களுக்கு இழப்பதற்கு ஒன்றும் கிடையாது. அதனால் வடக்கே உள்ளவர்கள் மொத்த தமிழர்களையும் பிரிவினைவாதிகள் என்றும் வன்முறையாளர்கள் என்றும் நினைப்பார்கள். தமிழக ஆட்சிக்குச் சிக்கல் வரும். என்ன இருந்தாலும் ஒன்றிய அரசின் உதவியுடன் நலத்திட்டங்களைச் செய்யவேண்டிய நிலையில்தான் தமிழக அரசு உள்ளது.
இந்தவகையான சிக்கல்களை வேண்டுமென்றே உருவாக்குகிறார்கள் இங்குள்ள சிறுகுழுக்கள். ஆகவே அரசுகள் கவனமாக இருக்கின்றன. இந்த அரசு இந்த கொசுக்கூட்டத்தை பொருட்படுத்தாமல் ஈழமக்களுக்கு உதவிகளும் நியாயமும் வழங்குவது போற்றற்குரியது.
என்.ஆர்.தியாகராசன்
குரோதம்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
வண்ணக்கடலில் இருக்கிறேன். காளாத்தி குகையில் இடநெறி சிவப்படிவர்கள் பலர் வெறிகொண்டு சூலம் ஏறினர். இளநாகனின் அச்சம் இன்று என்னிடமும் சற்று இருக்கிறது.
”இளைஞரே காமம், குரோதம், மோகம் என்னும் இம்மூன்று இருள்களில் காமம் இன்னொரு ஆன்மாவைச் சார்ந்தது, மோகமோ புறவுலகைச் சாரந்தது. எதையும் சாராமல் தன்னுள் தானென நிரைந்திருப்பது குரோதமேயாகும்”
அனைத்தையும் அவியாக்கி எரிந்தெழும் நெருப்பான அது துரியோதனனைப் பற்றுகிறது. அவனிடம் இருந்து மற்ற கௌரவர்கள் அனைவரிடமும் பற்றுகிறது. விருகோதரனாகிய பீமனை அச்சம் கொள்ளச்செய்கிறது. எதைக்கொண்டு குரோதத்தை எதிர்கொள்வது? அன்பைக் கொண்டு என்பது இங்கு அபத்தம்தான். தர்ம-அர்த்த-காமம் – இன்னொரு ஆன்மாவைச் சார்ந்த காமம், புறவுலகைச் சார்ந்த அர்த்தம் இரண்டும் தவிர்த்து தர்மத்தை குரோதத்தின் எதிர்நிறுத்தும் விளையாட்டு இங்கு துவங்குகிறது. தர்மம் தானும் குரோதம் கொள்ளாமல் குரோதத்தை எதிர்கொள்ள இயலாது. குரோதமும் பொய்யாகவேனும் தனக்கான தர்மத்தைக் கற்பித்துக் கொள்ளாமல் தர்மத்தை எதிர்கொள்ள இயலாது.
இன்றும் பிறவற்றை அழித்து தம் அதிகாரத்தை உலகில் நிறைத்துப்பரவத் துடிக்கும் அரசியல், அடிப்படைவாத வெறி என எல்லாப்பக்கமும் இயக்கும் விசை குரோதம் தானே? எல்லாத் தரப்பிலும் குரோதம் உண்மையாகவே இருக்கிறது ஆனால் எல்லாத் தரப்பின் தர்மத்தின் உண்மைத்தன்மையை யார் உறுதிசெய்வது?
உண்மையுள்ள குரோதங்கள் மோதட்டும் அல்லது கூட்டுத்தற்கொலை செய்துகொள்ளட்டும் உண்மையுள்ள தர்மம் எது என்பதை விண்ணாளும் அப்பேராற்றல் எஞ்ச எடுத்து நிறுத்தட்டும்.
உலக நிகழ்வுகளுக்கு எங்காவது எவ்வாறாவது (அது ஒருபோதும் எவ்வகையிலும் பயன்தரப்போவதில்லை என்றபோதும்) எதிர்வினை ஆற்றவேண்டும் என்ற பொருளற்ற மனத்தவிப்பை விலக்கிநிறுத்தி சாதகம் ஆகிறது வெண்முரசு.
”இருளாகவும் ஒளியாகவும் இருப்பவனை எவ்வழியில் அறிந்தாலும் விடுதலையே என்கிறார்கள் இடநெறியினர்”
மகாகுரோதரூபனிடம் அல்லாமல் யாரிடம் இருந்து மனிதர்கள் குரோதம் பெற்றுக்கொள்ளமுடியும்? எரிச்சலுள்ள தேவனிடம் அல்லாமல் யாரிடம் மனிதர்கள் எரிச்சல் பெற்றுக்கொள்ளமுடியும்?
ஜார்ஜ் குர்ட்ஜிப் கூட சொல்கிறாரே “Humanity is the earth’s nerve-endings through which planetary vibrations are received for transmission”
என்னமோ இந்த குரோதம் -அதிகார அரசியல் மதவெறி எல்லாம் மனிதரின் சொந்த திறன் போல ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்? ஆடல்வல்லானுக்குத் தெரியாதா எப்படி ஆட்டத்தை மாற்றுவது என்று? எப்போது ஆட்டத்தை நிறுத்துவது என்று?
அன்புடன்
விக்ரம்
கோவை
September 3, 2021
கேரளப் பெண்வழிச் சமூகமும் சசி தரூரும்
ஆசிரியருக்கு,
நாயர் பெண்களின் உடல் சுதந்திரம் பற்றி ஒரு கேள்வி. பெருமாள் முருகன் வழக்கு போல் கேரளாவிலும் ஒரு வழக்கு. ஆனால் இங்கு நடந்தது போல், ஒரு ஜாதியின் போராட்டம், மிரட்டல், எழுத்தாளரின் பேனாவை தொட மாட்டேன் என்ற சபதம், கருத்து சுதந்திரம் முக்கியம்தான் ஆனாலும்… என்று பிரபலங்களின் பேட்டி, பல வருடங்களுக்கு முன் எழுதப்பட்டிருந்தாலும், திடீரென்று கவனம் பெற்று அந்த வருட புத்தகக் கண்காட்சியில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட புத்தகம், அதன் ஆசிரியர் இந்திய அளவில் விருது பெற தகுதியான தமிழ் எழுத்தாளராக மாறியிருப்பது என்று எந்த அதிரடி திருப்பங்களும் அங்கு நடப்பதாக தெரியவில்லை.
சந்தியா ஸ்ரீகுமார் என்ற நாயர் பெண், சசிதரூர் தனது தி கிரேட் இந்தியன் நாவலில், (The Great Indian Novel) நாயர் பெண்களின் கற்பை, கண்ணியத்தை, ஒழுக்கத்தை இழிவுபடுத்தும் வகையில் எழுதியுள்ளதாக குற்றம் கூறி அவர் மேல் திருவனந்தபுர முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். அவ்வழக்கை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு சசிதரூருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
அவர் வழக்கு தொடுப்பதற்காக கூறும் காரணமே சுவாரசியமானது. அவருக்கு நெருக்கமான ஒருவர் ஒருமுறை, சும்மா இருக்கிறாயா அல்லது வீட்டிற்கு வெளியே ஏதேனும் செருப்பு உள்ளதா என்று கேட்டுள்ளார். பாவம், அப்போது அவர் என்ன கேட்கிறார் என்று புரியவில்லை. தற்போது சசிதரூரின் நாவலை படிக்கையில்தான் அதன் அர்த்தம் புரிந்துள்ளது. நாவலில் இவ்வாறு வருகிறது “In Kerala the men of the Nair community only learn that their wives are free to receive them by seeing if another man’ slippers aren’t outside her door.” நாயர் ஜாதியை சேர்ந்த ஆண்கள், தங்கள் மனைவியிடம் தாங்கள் அணுகலாமா, இல்லையா என்பதை வேறு ஆண்மகனின் செருப்பு வீட்டிற்கு வெளியே உள்ளதா, இல்லையா என்பதின் மூலம் தான் தெரிந்து கொள்வார்கள்.
இதை படித்த சந்தியா ஸ்ரீகுமார் உடனடியாக வெகுண்டு எழுந்து, உண்மைக்கு புறம்பான வகையிலும், நாயர் பெண்களை இழிவு படுத்தவேண்டும் என்ற கீழ் எண்ணத்தோடும் மேற்சொன்ன கருத்தை எழுதிய சசிதரூர்மீது வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கிற்கு எதிராக கேரளா உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளார் சசிதரூர். அதில் அவர், தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிமினல் அவதூறு வழக்கு சட்டப்படி நிலைக்கத் தக்கதல்ல எனவே அதை ரத்து செய்யவேண்டும் என்று வேண்டியுள்ளார்
அதற்காக முன்வைத்த காரணங்கள்,
அந்த நாவல் 1982 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. கால வரம்பு தாண்டி சுமார் 40 ஆண்டுகள் கழித்து இந்தவழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நாவலில் உள்ள புகார்தாரர் கூறும் வாக்கியமானது எனது கற்பனையில் தோன்றிய ஒன்றல்ல. நாயர் பெண்களின் உடலுறவு சார்ந்த சுதந்திரம் நன்கு அறியப்பட்ட ஒன்று மேலும் பல்வேறு வரலாற்று குறிப்புகளைக் கொண்டு பல வரலாற்று ஆய்வாளர்கள் அதை விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார்கள். முக்கியமாக பெரும்வரலாற்று ஆய்வாளர் திரு. ஸ்ரீதர மேனன் அவரது மிகவும் போற்றப்படும் “கேரளா சரித்திரம்” புத்தகத்திலும், மற்றொரு ஆய்வாளரான K.P.பத்மநாப மேனனின் “கொச்சி ராஜ்ஜிய சரித்திரம்” புத்தகத்திலும், 16 மற்றும் 17-ம் நூற்றாண்டில் கேரளாவின் பல்வேறு ஜாதிகளின் சமூக வாழ்வை பற்றி மிக விரிவாக பதிவு செய்துள்ளார்கள். அதை படிக்கும் எந்த ஒரு நபரும், ஹிந்து நாயர் பெண்கள் எந்த அளவு அவர்கள் உடல் மேல் முழு உரிமையும், அவர்கள் உடலுறவு சார்ந்து கட்டுப்பாடற்ற சுதந்திரமும் கொண்டிருந்தார்கள் என்பதை அறியமுடியும்.சுப்ரமணிய சுவாமி எதிர் மத்திய அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்றமானது, ‘ஒருவர் மேல் பழிசொல்வது அல்லது தவறாகச் சித்தரிப்பது மட்டுமே அவதூறு ஆகாது இழிவு செய்யவேண்டும் என்ற உள்நோக்கமும், அவ்வாறு செய்தால் அதன் மூலம் அந்த நபர் பாதிக்கப்படுவார் என்ற அறிதலும் இருக்கவேண்டும்’ என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த நாவலில் வரும் செய்திகள், கருத்துக்கள் வரலாற்று ஆவணங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது மேலும் யாரையும் இழிவு செய்யவேண்டும் என்ற உள்நோக்கம் கிடையாது.இறுதியாக சசிதரூர், நானும் நாயர்தான், என் தாய், சகோதரியும் நாயர் பெண்கள்தான். நான் எப்படி நாயர் பெண்களை தவறாக சித்தரிப்பேன் என்று மன்றாடுகிறார்.
தற்போது கேரள உயர்நீதிமன்றம் சசிதரூருக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கிற்கு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. சசிதரூர் கூறும் வரலாற்று தகவல்களை பற்றி உங்களிடம் கேட்கவேண்டும் என்று விழைவு ஆனால் பின்பு நீங்களும், ‘நானும் நாயர்தான், என் அம்மா, சகோதரி இன்னும் பல சொந்தக்காரர்கள் நாயர்தான்’ என்று நீதிமன்றம் நீதிமன்றமாக ஏற வேண்டி இருக்குமோ என்ற பயமும் இருக்கிறது.
V.S. செந்தில்குமார்
அன்புள்ள செந்தில்குமார்,
இந்த விஷயத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்பும் முதன்மைச் சிக்கல் ‘மானநஷ்ட வழக்கு’ என்ற கருவி. வரவர எழுதும் எவருக்கும் எதிரான ஒரு வாளாக மாறியிருக்கிறது. இதை முதலில் மத அமைப்புக்கள் கையிலெடுத்தன. அதன்பின் சாதியமைப்புக்கள். இப்போது தனிநபர்களும் கையிலெடுக்கிறார்கள்.
இந்தியாவின் சட்டம் குத்துமதிப்பாக ஒரு வரையறையை அளித்துள்ளது. அதன்படி ‘சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நோக்குடன், மாற்றுச் சமூகங்களை அவமதிக்கும் நோக்குடன், மற்ற மனிதர்களை சிறுமை செய்யும் நோக்குடன்’ எழுதப்படும் எல்லாமே குற்றம். இந்த வரையின்படி எதையும் எவரும் குற்றமென சொல்லி வழக்குத் தொடுக்க முடியும். வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படும், ஆனால் அதற்குப் பல ஆண்டுகளாகும். எழுதுபவர் நீதிமன்றம்தோறும் அலையவேண்டும்.
எழுதுபவன் தனியாள், அவனுக்கு எதிராக அமைப்புகள் எழுந்து வருமென்றால் அவன் ஒன்றும் செய்ய முடியாது. சசிதரூர் பெரிய ஆளுமை, பணபலம் கொண்டவர். பெரும்பாலான எழுத்தாளர்கள் இங்கே அன்றாடம் காய்ச்சிகள். பலர் அரசூழியர்கள். நான் அரசூழியனாக நீடித்திருந்தால் என் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை எப்படி எதிர்கொண்டிருக்க முடியும்?
இந்திய அரசியல்சட்டம் வாக்குறுதி அளித்துள்ள பேச்சுரிமைக்கே எதிரானது இந்த சட்டம். அடிப்படையில் ஜனநாயகத்தையே அழிப்பது. இதற்கு முற்றிலும் தடைபோட முடியாது. ஆனால் படைப்பிலக்கியம், கருத்துச்செயல்பாடு ஆகியவற்றைக் காக்கும் பொருட்டு தெளிவான வழிகாட்டு நெறிகள் வழியாக உச்சநீதிமன்றம் கீழ்நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். எவரும் எதையும் எழுத்தாளர் மேல் வழக்காகத் தொடுக்கலாம் என்னும் நிலை வரலாகாது. அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அவ்வழக்கு தொடுக்கப்பட்டிருந்தால் வழக்குத் தொடுத்தவருக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்.
இந்த வழக்கில் சசிதரூர் எழுதியது வரலாறு. அதற்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு இருப்பது வரலாற்று அறியாமை. எண்ணிப் பாருங்கள், ஓர் எழுத்தாளன் அல்லது ஆய்வாளன் வரலாற்றை எழுதுகிறான். வாசிக்கும் ஒருவருக்கு அவ்வரலாறே தெரியாது, தெரிந்து கொள்ள ஆர்வமும் இல்லை. ஆனால் அவர் வரலாற்றை தன் போக்கில் கற்பனை செய்து வைத்திருக்கிறார். எனவே உண்மையான வரலாற்றை கேள்விப்படும்போது அவர் புண்படுகிறார். தன் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகச் சொல்லி அவர் எழுதியவர் மேல் வழக்கு தொடுக்கிறார். [இயக்குநர் ரஞ்சித் மீதான வழக்கும் இவ்வகையானதுதான்]
இந்தக் கேலிக்கூத்து இங்கே நடந்துகொண்டே இருக்கிறது. முதலில் மதவிஷயங்களில். பின்னர் சாதி சார்ந்த ஆய்வுகளில். இப்போது அனைத்திலும். இங்கே எந்த அடிப்படைகளையும் அறியாதவர்களே மக்களில் 99 விழுக்காடு என்னும்போது எதை நம்பி ஆய்வுகளைச் செய்வது, இலக்கியங்களைப் படைப்பது?
*
கேரளத்தின் பெண்வழிச் சொத்துரிமையை ஆண்வழிச் சொத்துரிமை கொண்ட சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள் புரிந்துகொள்வது கடினம். ஒழுக்கநெறிகள் என்பவை அவரவர் பிறந்து வளர்ந்த சமூகச்சூழலை ஒட்டி உருவாகி மனப்பழக்கமாக நிலைகொள்பவை. நானறிந்த பெரும்பாலான மலையாளிகள் தமிழகத்தில் தாய்மாமன் மருமகளை மணந்து கொள்வதைப் பற்றிக் கேட்டால் திடுக்கிட்டு கைகால்கள் நடுங்கிவிடுவார்கள். அங்கு அது தந்தைக்குச் சமானமான உறவு, தந்தையைவிட ஒருபடி மேலானது.
பிரான்ஸிஸ் புக்கானனன் கேரளப் பெண்வழிச் சொத்துரிமையை புரிந்துகொள்ளாமல் ‘இங்கே எல்லா பெண்களும் விபச்சாரிகள்’ என எழுதியிருக்கிறார். அதற்கு முன் கேரளத்தைக் கைப்பற்றிய திப்பு சுல்தான் அவ்வாறு எண்ணியிருக்கிறார். பிற்காலத்தைய மலையாளிகளல்லாத வரலாற்றாய்வாளர்கள் பலரும் அவ்வாறு எழுதியிருக்கின்றனர். நம் பழங்குடிகள், வடகிழக்கு மாவட்ட மக்கள் பற்றியெல்லாம் இப்படி எழுதப்பட்டிருக்கிறது.
இவர்கள் அனைவருமே செய்யும் பிழை கேரளப் பெண்களின் சுதந்திரத்தை தாங்கள் பிறந்து வளர்ந்த ஆணாதிக்கச் சூழலில் நின்று பார்ப்பதும், மதிப்பிடுவதும்தான். விளைவாக கேரளப் பெண்கள் கட்டுப்பாடில்லாத ஒழுக்கம் கொண்டவர்கள், விலைபோகிறவர்கள் என்றெல்லாம் கற்பனை செய்துகொள்கிறார்கள்.
அதையே ஆணைப்பற்றி கேட்கலாம். ஓர் ஆணாதிக்கச் சமூகத்தில் ஆணின் பாலியல்பு எவரால் கட்டுப்படுத்தப்படுகிறது? ஆகவே அதிலுள்ள ஆண்களை எல்லாம் ஒழுக்கமற்றவர்கள் என்று சொல்லிவிடமுடியுமா? தாசித்தெரு தோறும் அலைந்த சென்ற நூற்றாண்டுத் தமிழகத்து மூதாதையர்களை விபச்சாரர்கள் என்று சொல்லிவிட முடியுமா?
ஆணாதிக்கச் சமூகங்களில் ஓர் ஆணுக்கு உரிமையல்லாதவளாக, அவனால் ஆதிக்கம் செய்யப்படாதவளாக வாழும் பெண்ணை பொதுவாக விபச்சாரிகள் என்றுதான் புரிந்து கொள்கிறார்கள். ஏனென்றால் அங்கே பெண் ஓர் உடைமைப் பொருள். எவருக்கும் உடைமை அல்லாத பொருள் அனைவருக்கும் உரியதுதான் என்பது அவர்களின் எண்ணம்.
ஆகவேதான் ஆணாதிக்கச் சமூகத்தில் கைவிடப்பட்ட பெண்களும் விதவைகளும் அனாதைகளாகி இழிவடைகிறார்கள். அவர்களுக்குச் சொத்துரிமை இல்லை. உழைத்து வாழும் உரிமைகூட இல்லை. அவள் தன்னை ஒடுக்கிக் கொண்டு உடன்பிறந்தாரின் கடும் சுரண்டலுக்கும் உட்படாவிட்டால் விபச்சாரியாகத்தான் ஆகவேண்டும். ஒருவரின் பெண்ணை இன்னொருவர் கவர முயன்றபடியே இருக்கிறார்கள். பெண்களுக்கான போர் ஓய்வதே இல்லை.
சென்ற நூற்றாண்டில் நடந்த பல கதைகள் இன்று எழுத்தில் பதிவாகியிருக்கின்றன. அ.மாதவையாவின் முத்துமீனாட்சி என்னும் நாவலை மட்டுமே வாசித்தால் போதும். பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் உச்சம் நம்மை கூசிச்சுருங்கச் செய்யும்.
சாதாரணமாக அத்தனை தமிழ்க்குடும்பங்களிலும் ஒரு கதை இருக்கும். இளவரசி போல வாழ்ந்த பெண்ணை கொஞ்சம் நகை மட்டும்போட்டு கட்டிக்கொடுப்பார்கள். சென்ற இடத்தில் அப்பெண் வேலைக்காரிக்கும் இழிவான வாழ்க்கையை அடைவாள். அவள் உடன்பிறந்தவர்கள் அத்தனை சொத்துக்களையும் எடுத்துக் கொள்வார்கள்.
அந்தப்பெண் விதவையாகித் திரும்பிவந்தால் அவளை சகோதரர்கள் கீழினும் கீழாக நடத்துவார்கள். அவளுக்கு வாழ வழியே இல்லை என்பதனால் அதுதான் விதி. கொஞ்சம் பணம் இருந்து அவள் தனியாகச் சென்று வாழமுயன்றால் விபச்சாரிப் பட்டம் கிடைக்கும்.
க.நா.சு அவருடைய ஒருநாள் நாவலில் சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரம் பற்றி அளிக்கும் சித்திரம் இது. அந்த தெருவில் பாதிப்பெண்கள் இளம்விதவைகள். அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் ’விபச்சாரிகள்’ என்கிறார். அதாவது அவர்கள் அவ்வாறுதான் வாழமுடியும் என்பதே நிலை. ரகசியமாக ஆண்களுக்கு ஒத்துப்போகாமல் விதவை வாழ்க்கைகூட சாத்தியமல்ல.
கேரளச் சமூகமுறையை நேர் எதிராக உருவகித்துக் கொள்ளலாம். சென்ற நூற்றாண்டில் கேரளத்தில் குடும்பம் என்பதே பெண்தான். சொத்து முழுக்க பெண்களுக்குரியது. மூத்த அன்னைதான் குடும்பத்தலைவி. அங்கே பெண் தன் விருப்பப்படி, தன் தெரிவின்படி ஆண்களை ஏற்றுக்கொள்வாள். ஆண்கள் தங்கள் விருப்பப்படி பெண்களை அடைய முடியாது. பெண்ணுக்கு ஆண் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை.
பெண்வழிச் சொத்துரிமைச் சமூகத்தில் ஆண்கள் ‘கணவர்கள்’ அல்ல. அவர்களுக்குப் பெண்மேல் எந்த ’உரிமையும் ‘ஆதிக்கமும்’ இல்லை. அவர்களால் பெண்களைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் பெண்களுக்கு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. குழந்தை பிறந்தாலோ ஓணத்திற்கோ சில சிறு பரிசுகள் கொடுக்கலாம், அவ்வளவுதான். ஆண்களை நம்பி குழந்தைகளோ பெண்களோ இல்லை.
அரசரே கூட பெண்ணுக்கு கட்டுப்பட்டவர்தான். அரசரை ஏற்கமுடியாதென தவிர்த்த, அரசரை தன்னிச்சையாக உறவுமுறிவு செய்து அனுப்பிய பெண்களின் கதைகள் வரலாற்றில் உள்ளன. மகாராஜா சுவாதித்திருநாள் ராமவர்மா கூட அவர் மனைவியால் ஒதுக்கப்பட்டார். அந்த அம்மையார் இன்னொருவரை ஏற்றுக்கொண்டார். அவர் இளமையில் உளம் சோர்ந்து இறந்தமைக்கு அதுவும் ஒரு காரணம்.
அதாவது ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண்கள் பெண்களை எப்படி நடத்தினார்களோ அப்படித்தான் பெண்ணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் ஆண்களை நடத்தியிருக்கிறார்கள். அது அதிகாரத்தின் இயல்பு. அங்கே பரிதாபத்துக்குரியவர்கள் ஆண்கள்தான்.
சொத்துரிமை பெண்களுக்கு அளிக்கும் இந்த தேர்வுரிமையைத்தான் ஆணாதிக்கச் சமூகம் ஒழுக்கமின்மை என புரிந்துகொள்கிறது. உயர்குடிப் பெண்களில் சொத்துக்கள் மீதான நிர்வாகத்தின் தேவைக்கு ஏற்ப, ஒன்றுக்குமேல் ஆண்களை ஒரேசமயம் மணந்து கொள்ளும் முறை இருந்தது. என் வீட்டுக்கு அருகிலேயே என் உறவினர்களிலேயே அப்படி சில குடும்பங்கள் இருந்தன. அந்த ஆண்கள் அப்பெண்களின் அறைக்கு வெளியே எவருடைய செருப்பு உள்ளது என்று பார்த்துத்தான் உள்ளே செல்லமுடியும். சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதையிலேயே இந்த சித்திரம் வருகிறது.
இதே சித்திரம் தமிழகத்தில் ஆண்களை மையமாக்கி இருந்தது. பல மனைவியருடன் வாழும் தமிழகத்து குடும்பத் தலைவர்களில் கணவனுடன் செல்லும் மனைவி தன் கூந்தலில் உள்ள மலரையோ வேறேதாவது அடையாளத்தையோ அறைக்கு வெளியே வைக்க வேண்டுமென்ற வழக்கம் இருந்தது.
ஆண்கள் அப்படி இருந்ததை எண்ணி இன்று எவராவது கூச்சம் அடைகிறார்களா? இல்லை. அதைக் கொஞ்சம் பெருமிதத்துடன் சொல்லிக் கொள்வதே வழக்கம். ஆனால் பெண்கள் அப்படி இருந்தது ஏளனத்திற்குரியதாக ஆகிவிட்டது. ஆணாதிக்க மனநிலை நீடிக்கும் இந்தியப் பெருநிலத்தில் அந்த ஏளனம் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
எப்படி அந்தக்கூச்சம் கேரளத்தில் நிகழ்ந்தது? சென்ற இருநூறாண்டுகளாக கேரளச் சமூக அமைப்பு மெல்ல மெல்ல ஆணாதிக்கச் சமூகமாக ஆகிக்கொண்டே இருந்தது. அதற்குக் காரணம் நவீனக்கல்வி, ஆண்கள் சம்பாதிக்க ஆரம்பித்தது முதல் அவர்கள் தங்களுக்கான ‘ஆணாதிக்கக் குடும்பம்’ ஒன்றை உருவாக்க ஆரம்பித்தனர். அதில் பெண்ணை அடிமையாகக் கொண்டு வந்தனர்.
என் அப்பா செய்தது அதுதான். எங்கள் குடும்பத்தின் வீழ்ச்சிக்குக் காரணமும் அதுதான். அப்பா கொண்டுவந்து அடிமையாக குடிவைத்த பெண், என் அம்மா, ஒரு சராசரி தமிழ்க்குடும்பத்து அடிமைப்பத்தினி அல்ல. பெரும் வாசிப்பும், அரசியல் பிரக்ஞையும், ஆளுமையும் கொண்ட மலையாளப் பெண். அந்த மோதலில் அவர் தானும் அழிந்து அப்பாவையும் அழித்தார்.
நான் இதை விரிவாக எழுதியிருக்கிறேன். ஒழிமுறி இதையெல்லாம் வெளிப்படையாகப் பேசிய படம். அது வெளிவந்தபோது அது கேரளச் சூழலில் எந்த எதிர்ப்பையும் உருவாக்கவில்லை. மாறாக அது பெண்வழிக் கேரளத்தின் வீழ்ச்சியின் சித்திரம் எனக் கொண்டாடப்பட்டது. இன்றும் ஒரு கிளாஸிக் என சொல்லப்படுகிறது.
ஆனால் ஏன் சசிதரூர் தாக்கப்படுகிறார்? ஏனென்றால் அது ஆங்கில நூல். ஆங்கிலம் வழியாக இந்தியா முழுக்க உள்ள ஆணாதிக்கச் சமூகத்திற்கு இங்குள்ள பெண்வழிச் சமூகம் பற்றிய ஒரு அரைகுறைச் சித்திரம் சென்று சேர்கிறது. அவர்கள் அதை தங்கள் கோணத்தில் பிழையாகப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. அது மலையாளிகளுக்கு சங்கடத்தை அளிக்கிறது.
தமிழகத்து பெரியாரியர்கள் மட்டுமல்ல, சில முற்போக்காளர்கள் கூட கேரளப் பெண்வழிச் சமூகத்தைப் பற்றி இழிவாகப் பேசி இளிப்பதை நான் அவ்வப்போது வாசித்திருக்கிறேன். பலருக்கு விரிவான விளக்கங்களை அளித்திருக்கிறேன். கொஞ்சம் மார்க்சியம் வாசித்த, எங்கல்ஸ் பெயர் சொன்னால் தெரிகிற, முற்போக்காளர்களிடம் அதைச் சொல்லிப் புரிந்துகொள்ளச் செய்ய முடியும். பெரியாரியர்கள் பொதுவாக வரலாற்றுணர்வற்ற ஆணாதிக்கவாதிகள்.
கேரள பெண்வழிச் சமூகத்தின் சித்திரத்தை சசிதரூரின் நாவல் அளிக்கவில்லை. த கிரேட் இண்டியன் நாவல் என்பது மகாபாரதம் பற்றிய ஒரு பகடிநாவல். அது எந்த இந்திய ஆங்கில எழுத்துக்களையும் போல ஆங்கில வாசகர்களுக்காக, அவர்களின் கோணத்தில் பேசுவது. அது ஒரு மெல்லிய கேலியுடன் திரௌபதியை சித்தரிக்கையில் நாயர் பெண்களையும் சேர்த்துச் சொல்கிறது.
சசிதரூருக்கே பெண்வழிச் சொத்துரிமை அமைப்பின் மேல் கேலிதான் இருக்கிறது. அதன் வரலாற்று இடம் அவர் அறிந்திராதது. ஆகவே அந்நாவல் இயல்பாக எதிர்மறையாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒழிமுறி அந்த யுகத்தில் பெண்ணுக்கு இருந்த நிமிர்வை, அறத்தை பேசும் படைப்பு. ஆகவே ஒழிமுறிக்கு அந்தச் சிக்கல் வரவில்லை.
இதேபோன்ற எதிர்ப்பு எம்.எஸ்.சத்யூ இயக்கத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையின் கயறு நாவல் சின்னத்திரைத் தொடராக தேசிய ஒளிபரப்பில் வெளிவந்தபோதும் எழுந்தது. தகழி மார்க்ஸிய பார்வையில் எழுதிய நாவலில் பெண்வழிச் சொத்துரிமை அமைப்பின் கடைசிக்காலத்துச் சித்திரத்தை அளிக்கிறார். அதில் ஆண்கள் கிட்டத்தட்ட அனாதைகள். இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ளவர்கள் அதை தவறாகப் புரிந்துகொள்வார்கள், தங்களை கேலிசெய்வார்கள் என கேரளத்துக்கு வெளியே வாழ்ந்த மலையாளிகள் எதிர்க்கவே அத்தொடர் நிறுத்தப்பட்டது.
இந்நூற்றாண்டில் மலையாள இளைய தலைமுறையினருக்கு இந்த வரலாற்றுப் பின்புலம் தெரியாது. அவர்கள் புழங்கும் சூழல் ஆணாதிக்கத் தன்மை கொண்ட இந்தியப் பொதுச்சூழல். பெண்ணைப் பற்றிய ஆணாதிக்கப் பார்வையே சரியான ஒழுக்கம் சார்ந்தது என அவர்கள் மெய்யாக நம்புகிறார்கள்.
இன்று நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்வதும், மிஸிஸ் நாயர் மிஸிஸ் பிள்ளை என்று தங்களை அறிமுகம் செய்துகொள்வதும் உயர்குடி பெண்கள்தான். அவர்களின் பாட்டிகளுக்கு கணவர்கள் என எவரும் இருந்திருக்க மாட்டார்கள். அவர்கள் வெள்ளை வேட்டியும் மேலாடையும்தான் அணிந்திருப்பார்கள். தாலிகட்டுவது, விதவை ஆவது போன்ற வழக்கங்களே இருக்கவில்லை. முதலெழுத்தாக குடும்பப்பெயர்தான் போடப்பட்டது, அப்பா பெயர் அல்ல.
இச்சூழலில் பழையகாலத்தை பற்றிய வரலாற்று உண்மை பேசப்படுகையில் ஆணாதிக்க ஒழுக்கவியல் கொண்ட தங்கள் நண்பர்களின் பார்வையில் தாங்கள் சிறுமைப்பட நேரும் என அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு வரலாறு சரியான பார்வையில் அறிமுகம் செய்யப்படவேண்டும். அதற்கு வரலாற்றுணர்வுடன், சமூகப் பரிணாமத்தைப் பற்றிய தெளிவுடன் பேசவேண்டிய பொறுப்பு எழுத்தாளர்களுக்கு உண்டு.
இந்த ஒட்டுமொத்த விவாதமும் மேல்தட்டு பெண்களைப் பற்றியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் எண்ணிக்கையில் மிகப்பெரும்பான்மையினராக இருக்கும் போர்க்குடிகள், அடித்தள மக்கள், நாடோடிகள், பழங்குடிகள் கொண்டிருக்கும் ஒழுக்கவியலுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.
நான் 1984 வாக்கில் நான் பாடும் பாடல் என ஒரு படம் பார்த்தேன். அதில் விதவையான பெண் கணவன் விருப்பப்படி பொட்டு வைத்துக் கொள்கிறாள். அதைக்கண்டு அவளை மணமாகாதவள் என நம்பி ஒருவன் திருமணம் செய்யட்டுமா என்று கேட்டுவிடுகிறான். கொதித்து எழுந்த அவள் கொள்ளிக்கட்டையால் தன் நெற்றியைச் சுட்டுக்கொள்கிறாள்.
அன்று எனக்கு தமிழ்ச்சூழல் அவ்வளவாக தெரியாது. எங்களூரில் மறுமணம் மிகச்சாதாரணம். என் நண்பனின் அம்மாவே இரண்டாம் திருமணம் செய்துகொண்டவர்தான். தமிழ்நாட்டில் இப்படி மூர்க்கமாக இருப்பார்கள் போல என நினைத்துக் கொண்டேன்.
பல ஆண்டுகள் கழித்து சின்னத்தம்பி என்று ஒரு படம் பார்த்தேன். விதவையான ஒரு முதியபெண்ணை உச்சகட்ட அவமானத்துக்கு ஆளாக்கும் பொருட்டு அவளைக் கட்டிவைத்து அவள் வெள்ளைப்புடவைமேல் சாயம் பூசுகிறார்கள்.
ஆனால் அன்று எனக்கு தமிழக சமூகச்சூழல் தெரிந்துவிட்டிருந்தது. தமிழக மக்களில் மிகப்பெரும்பான்மையினர் விவாகரத்து, மறுமணம் செய்யும் வழக்கம் கொண்டவர்கள். அப்படியென்றால் சினிமா முன்வைப்பது எவருடைய மதிப்பீட்டை? எப்படி இங்குள்ள பெரும்பான்மை மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? சினிமா முன்வைப்பது இங்கே நிலவுடைமை கொண்டிருந்த உயர்சாதியினரின் ஆணாதிக்க மதிப்பீட்டைத்தான். மற்றவர்கள் அது உயர்ந்தது என நம்புகிறார்கள், தங்கள் மரபைப்பற்றி தாழ்வுணர்ச்சி கொண்டிருக்கிறார்கள்.
சசிதரூர் மேல் வழக்கு தொடுத்த அந்தப் பெண் உயர்நிலை ஒழுக்கம் என நினைத்துக் கொண்டிருப்பது ஆணாதிக்க உயர்குடி ஒழுக்கத்தைத்தான். அவருக்குத் தேவையாக இருப்பது ஒரு வரலாற்றுப்புரிதல். துரதிர்ஷ்டவசமாக இங்கே பொதுக்கல்வியில், அரசியல்கல்வியில் முற்றிலும் இல்லாமலிருப்பது அதுதான்.
ஒழுக்கநெறிகள் காலந்தோறும் மாறுபடுபவை. நூறாண்டுகளுக்குள் நிலைபெயர்பவை. விவாகரத்து செய்து மறுமணம் செய்த பெண்ணை விபச்சாரி என்று சொல்லும் கிழவாடிகள் இன்னமும்கூட நம்முடன் வாழத்தான் செய்கிறார்கள். ஆகவே வரலாற்றில் இன்றைய ஒழுக்க முறைகளைத் தேடமுடியாது. அதை அப்பெண்ணுக்கு நாம் சொல்லியாகவேண்டும்.
நேற்றைய வாழ்க்கைக்கு நாம் பொறுப்பல்ல. அதில் இன்றைய நம் பார்வையில் ஒழுக்கமீறல்கள் என தோன்றுவன இருந்தாலும் நாம் அதற்காக நாண வேண்டியதில்லை. நாணவேண்டியது நேற்று நம் முன்னோர் இழைத்த மானுட ஒடுக்குமுறைக்காக. தீண்டாமை, சாதிக் கொடுமைகளுக்காக. சாதிப்பெருமை மற்றும் மேட்டிமைத் தனத்துக்காக. அதற்கு நாணுபவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.
ஜெ
***
அரசி
தெரிந்த மனிதர்களை இன்னொருவர் எழுத்தில் காண்பது ஓர் அரிய அனுபவம். நான் அருண்மொழியின் பாட்டி ராஜம்மாவை மண்புழு என கேலியாகச் சொன்னதுண்டு. எந்த புத்தகத்தை எடுத்தாலும் ஒரே மூச்சில் வாசித்து ‘உப்பக்கம்’ கண்டுவிடுவார்கள். ‘நல்லாருக்கு’ என்பதுதான் பொதுக்கருத்து. புத்தகம் எப்படி நன்றாக இல்லாமலிருக்க முடியும்?
அரசி- அருண்மொழி நங்கைஆபரணம், கடிதங்கள்
ஆபரணம், பா.திருச்செந்தாழை
அன்புள்ள ஜெ சார்,
திரு பா. திருச்செந்தாழை அவர்களின் ஆபரணம் மிகவும் நுட்பமான கதை. பெண்ணுக்கு உண்மையான ஆபரணம் எதுவென்று மெல்லிய கோடுகளால் குறிப்புணர்த்தும் கதை. இதை படித்ததும் நினைவுக்கு வந்தது நமது கதைத் திருவிழாவின் ‘நகை’. நகை என்பதில் புன்னகை அல்லது ஆபரணம் என்னும் பொருளில், பெண்ணுக்கு நகையாவது முக அழகை விட அவளது வெற்றியும் தன்னம்பிக்கையுமே என்று குறிப்புணர்த்துவது. அவ்வகையில் இந்த இரு கதைகளும் ஒரே தளத்தின் இரு வேறு வகைமைகளாகவும், ஒன்றன் வாசிப்பை மற்றோன்று மெருகேற்றுவதாகவும் தோன்றியது.
அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.
***
அன்புள்ள ஜெ
பா.திருச்செந்தாழையின் கதையை வாசிக்கையில் எனக்கும் நீங்கள் சொன்ன அந்தச் சிக்கல் இருந்தது. கொஞ்சம் கவனமாக பாதிவரை வாசிக்காவிட்டால் கதைக்குள் செல்லமுடியாது. பெரும்பாலும் நாம் சிறுகதைகள் முதல்வரியில் தொடங்குவதைத்தான் கண்டிருக்கிறோம். அதுதான் சிறுகதைக்கான கிளாஸிக்கல் இலக்கணம். உங்களுடைய எல்லா கதைகளுமே முதல்வரியில் சரியாகத் தொடங்கிவிடுகின்றன. சூழலைச் சொல்லி மெல்ல விரிவது நாவலுக்கான இயல்பு. இவருடைய சிறுகதைகள் நாவலின் அத்தியாயம் போல் இருக்கின்றன.
இதை இவர் ஏன் செய்கிறார் என்றால் கதை, கதைமாந்தரின் தன்மைகள் ஆகியவற்றை ஆசிரியரே சொல்வதுபோல வந்துவிடவேண்டாம் என்பதற்காக. அவர்களில் ஒருவரின் மனம் வெளிப்படுவதுபோல கதையைச் சொல்கிறார். ஆனால் இதற்கு பல உத்திகள் உள்ளன. இவ்வாறுதான் அமையவேண்டும் என்பதில்லை. ஆகவே இதை ஒரு சிறப்பாகவோ குறைவாகவோ கொள்ள வேண்டியதில்லை. இவருடைய இயல்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் கதை முடியும்போது மனிதனை மீறிய ஒரு வாழ்க்கைத்தருணம் சொல்லப்பட்டுள்ளது. இலக்கியத்தின் டிராஜடி என்பதே மனிதனை துளியாக ஆக்கும் ஒரு விதியின் தருணத்தைச் சொல்லிவிடுவதுதான். அதைச் சொல்லியிருக்கிறார். அழகான கதை. பாராட்டுக்கள்.
ஸ்ரீனிவாஸ்
***
அன்புள்ள ஜெ
பா.திருச்செந்தாழை உங்கள் தளம் வழியாக என் கவனத்திற்கு வந்தவர். சில ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருந்தாலும் சமீபகாலமாக அதிகமாகக் கவனிக்கப்படுகிறார் என நினைக்கிறேன். முக்கியமான எழுத்து. இப்போது பலர் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்.
கதையை வாழ்க்கையில் இருந்து எடுக்க ஆரம்பித்தாலே அதற்கு ஒரு நம்பகத்தன்மையும் கலைமதிப்பும் அமைந்துவிடுகிறது. கதையை வாழ்க்கையில் இருந்து எடுப்பதற்காக வாழ்க்கையை பார்க்கும்படி அகக்கண்ணை திறந்து வைத்திருக்கவேண்டும். அதுதான் எழுத்தாளனின் தகுதி. அரசியல் சர்ச்சைகள், இலக்கிய வம்புகளில் திளைக்கும் எழுத்தாளர்களுக்கு அந்த கண் இருப்பதில்லை. ஏதாவது எழுதுவதற்கு இருந்தாலும் எழுதும்போது அது திரிந்து விடுகிறது
திருச்செந்தாழையின் கதைகள் சொல்லப்படாத ஓர் உலகைச் சொல்கின்றன. ஒவ்வொரு உலகும் அதற்கான நெறிகளையும் வேல்யூஸையும் கொண்டிருக்கிறது. அவற்றைப் பற்றிப் பேசுகின்றன. வலியது வாழும் என்ற நெறி உள்ள ஓர் உலகம். வியாபார உலகம். ஆனால் வலியது என்றால் என்ன? எதன்முன் வலியது? எறும்புகளில் வலியது சிறியதை வெல்லும். ஆனால் அங்கே புயல் அடிக்குமென்றால்? வலிமை என்பதே ஒரு மாயைதான்
சாரங்கன்
***
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 7
அன்புள்ள ஜெ
நலம்தானே? ‘ செய்தி வாசித்தேன். இதென்ன, கவிஞனைப் பற்றி சென்சிபிளாக எழுதுமளவுக்கு தமிழக ஆங்கில ஊடகங்களும் இதழாளர்களும் தேறிவிட்டார்களா என்று திகைத்துவிட்டேன். அதன்பின் வாசித்தால் எம்.டி.சாஜு. மலையாளி. சரிதான். நன்றாகவே தயாரித்து பலரிடம் விசாரித்து எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். சிறப்பு. விக்ரமாதித்யனைப்பற்றி ஆங்கிலத்தில் வெளிவரும் முதல் குறிப்பு என்றும் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.
சந்திரசேகர்
அன்புள்ள ஜெ,
விக்ரமாதித்யன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி வெளிவரும் கடிதங்களும் மகிழ்ச்சி அளிக்கின்றன. அவரைப்பற்றி பலரும் பேசியிருந்தாலும் வாசகர்களுக்கு அவரைப்பற்றி எதையாவது சொல்வதற்கான ஒரு தருணமாக இருக்கிறது இது என்று நினைக்கிறேன். நான் ஆன்மிகமான வாசிப்பு உள்ளவன். பல ஆண்டுகளுக்கு முன் பாம்பன் சுவாமிகளின் வழி வந்த ஒருவரிடம் தீட்சையும் பெற்றுக்கொண்டேன். நவீன இலக்கியமெல்லாம் அதிகம் வாசிப்பதில்லை. ஆனால் எப்படியோ விக்ரமாதித்யன் அறிமுகமானார். அவருடைய கவிதைகளிலுள்ள சைவம் எனக்கு பிடித்தமானது.
விக்ரமாதித்யன் அவர்களுடையது சித்தர்மரபு வந்த சைவம் என்று சொல்லவேண்டும். அதில் ஈசனுடன் ஒரு சகஜஸ்திதி உள்ளது. நாயன்மார்களிலே இதைக் காணமுடியாது. சித்தர்களில் இதைக் காணலாம். அவர்களும் சிவனைப்போலவே வேண்டுதல் வேண்டாமை இலாதவர்கள்தான். விக்ரமாதித்யனுக்கு சிவனுடன் இருக்கும் அணுக்கமும் உறவும்தான் முக்கியமானவை.
அவரை காலம் ஒரு சித்தகவிஞர் என்று அடையாளப்படுத்தும். இன்றைக்கு அவருடைய கவிதைகளிலுள்ள இந்த ஆன்மிகமான ஆழத்தை அறியாத நவீன இலக்கியவாதிகளும் குடிகாரர்களும்தான் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள். அவர் அவர்களுக்கு அப்பாற்பட்டவர். அவரை எவர் படிக்கவேண்டுமோ, அவரை எவர் படித்தால் அவர்களுக்கு புரியுமோ அவர்கள் அவரை இன்னமும் படிக்கவில்லை. அவ்வாறு படிக்க ஆரம்பிக்கும்போதுதான் அவரை அவர்கள் கண்டடைவார்கள். நவபாஷாணம் என்ற கவிதைதான் தமிழ் கவிதையிலே இந்த நூற்றாண்டிலே பாரதிக்குப்பிறகு எழுதப்பட்ட மிகச்சிறந்த கவிதை.
செல்வ ராஜகணபதி
***
அன்புள்ள ஜெ
விக்ரமாதித்யன் கவிதைகளை பலகாலமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். என் பிரிய கவிக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சூழலில் இருக்கும் மௌனம் வருத்தம் அளிக்கவுமில்லை. என்றைக்குமே நாம் கவிஞர்களைப் பொருட்படுத்தியவர்கள் அல்ல. கவிஞர்களுக்கு எந்தச் சிறப்பும் செய்தவர்கள் அல்ல. ஆனால் எங்கோ கவிஞனை அவன் வாசகன் கொண்டாடிக்கொண்டேதான் இருக்கிறான்.
அவ்வாறு வாசகன் நினைவில் நின்றிருக்கும் சில வரிகள் இருக்கும். அவற்றின் வழியாகவே கவிஞன் சரித்திரத்தில் வாழ்கிறான். விக்ரமாதித்யன் அண்ணாச்சியின் கவிதைகளில் எனக்கு பிடித்தமான கவிதை ஒன்று உண்டு. அது எனக்கே எனக்கான கவிதை. அதை ஒரு தமிழ்க்கவிஞன் மட்டும்தான் எழுதமுடியும். காதல்கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் இந்தக்கவிதையிலுள்ள துக்கம் புரியாது. இது ஒன்றும் வெற்றுத்தத்துவமோ அரசியலோ இல்லை. இது வாழ்க்கை. இந்த கவிதையை வாசிக்கவும் ரசிக்கவும் வாழ்ந்து அறிந்த உண்மை ஒன்று நமக்கு இருக்கவேண்டும்
எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு
முதன் முதலில்
கோழிதான் கேட்டது
கஷ்டப்படுத்தவில்லை வேறே
பிறகு பிறகு
கடாய் வெட்ட சொல்லியது
குறைவைக்கவில்லை அதையும்
இப்பொழுது
என்னையே பலியிட வேண்டும் என்கிறது
எங்கே ஒளிந்துகொள்ள .
என்னுடைய தெய்வமும் தன்னையே பலியிடும்படிச் சொல்லியது. பலிகொடுப்பேனா என்று தெரியவில்லை. என் தெய்வம் எனக்கு பின்னாலேயே இருக்கிறது. என் அப்பன் பாட்டன் பூட்டனை எல்லாம் பலிகேட்ட தெய்வம்தான் அது. ஏகப்பட்ட மண்டையோடுகளை அது மாலையாகச் சூட்டியிருக்கிறது. விக்ரமாதித்யனுக்கு அந்த தெய்வம் என்ன என்று தெரியாது. எனக்கு அது என்ன என்று தெரியும். நிழல் மாதிரி பின்னாடியே இருந்துகொண்டிருக்கிறது
எஸ்.கதிரேசன்
நீலம்- குரலில்
அன்புநிறை ஜெ,
ஆவணி மாதத்து எட்டாம் கருநிலவு நாள் வருகிறது. நீலனின் பிறந்தநாள். இன்று காலை எழுந்ததுமே நிறைநிலவு கண்ட கடல் போல நீலம் உள்ளே அலையடித்தது.
நீலம் நாவலின் சில பகுதிகளை வாசித்து ஒலிப்பதிவு செய்தேன். உள்ளம் இனித்திருக்கிறது.
மிக்க அன்புடன்,
சுபா
***
அன்புள்ள சுபா,
நான் எழுதும்போது நீலம் என் மனதுக்குள் செய்யுள் போல இசையுடன் ஓடிக்கொண்டிருந்தது. அது என்னைப் பொறுத்தவரை ஒரு நீண்ட பாடல்.
பிறர் அதைச் சொல்லிக் கேட்கையில் என் உள்ளத்திற்கு அது விலக்கம் அளிக்கும் என நினைத்திருந்தேன். ஆகவே பலவற்றைக் கேட்டதே இல்லை. ஆனால் நீங்கள் நிகழ்த்திய ஒற்றை நடிப்பு நிகழ்வை கண்டபோது அதே சொற்கள் இன்னொரு வகையில் உணர்வேற்றம் கொண்டன.
இப்போது நீலத்தை ஒலிவடிவில் எவர் சொல்லிக் கேட்டாலும் அந்த சொற்றொடர்கள் ஆழ்ந்த உணர்வுகளை அளிக்கின்றன. என்ன ஆச்சரியமென்றால் அவை வேறு எவரோ எழுதியவையாகத் தோன்றுகின்றன
ஜெ
***
முதல்மூன்று அத்தியாயங்கள்:
September 2, 2021
ஏரகன்
குக்கே சுப்ரமணியா கோயில், ஏரகத்துக் குகன்வணக்கம் ஐயா!
Google இல் ஏரகன் என்ற பெயரிற்கு அர்த்தம் தேடும் போது உங்களுடைய கதை ஒன்றை வாசித்தேன், நன்றாக இருந்தது. அதிலிருந்து தான் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியையும் பெற்றுக் கொண்டேன்.
என்னுடைய சிறிய சந்தேகம் என்ன வென்றால் முருகனுக்கு ஏரகன் என்ற மறுபெயர் உண்டா ஐயா?
தெய்வேந்திரன் ஏரகன்
***
அன்புள்ள தெய்வேந்திரன்,
ஏரகன் என்றால் முருகனின் பெயர்தான். ஏரகநாடு என்றால் இன்றைய உடுப்பி. ஏரகத்துறை என பழைய நூல்களில் சொல்லப்படுகிறது. அது முருகனுக்கு உரியது எனப்படுகிறது. திருவேரகம் என்றும் சொல்லப்படுவதுண்டு. அதிலிருந்து ஏரகன் என்னும் சொல் முருகனுக்குரியதாகியது.
உடுப்பி பகுதியிலுள்ள குக்கே சுப்ரமணியா ஆலயம் தென்னகத்தின் மிகமுக்கியமான முருகன் கோயில். ஆய்வாளர்கள் தமிழகத்தின் எந்த முருகன் கோயிலை விடவும் தொன்மையானது என்று சொல்கிறார்கள். அங்கே ஓடும் ஆற்றுக்கே குமாரதாரா என்றுதான் பெயர். மலையடிவாரத்தில் அமைந்த அற்புதமான ஊர். அங்கே ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் பேருக்கு உணவு அளிக்கப்படுவதனால் அன்னதான க்ஷேத்ரம் என்றும் பெயருண்டு.
பரசுராமர் உருவாக்கிய ஏழு முருகன் கோயில்களில் குக்கே சுப்ரமணியா கோயிலே தென்னாட்டில் உள்ள ஒரே கோயில் என்கிறார்கள் அங்குள்ளோர். முக்கியமான விஷயம் என்னவென்றால் அது நாகங்களுக்கான கோயில். அந்த ஊரின் அதிபன் நாகதேவனாகிய வாசுகி. வாசுகிமேல் நின்ற கோலத்தில்தான் முருகன் தோற்றமளிக்கிறார். உடுப்பி முழுக்க முருகன் நாகத்தின்மேல் நிற்பவனாகவே தோன்றுகிறான்.
தமிழ்நாட்டிலும் முருகனுடன் எப்போதுமே நாகம் உண்டு, ஆனால் நமது முருக வழிபாட்டில் மயில்தான் முக்கியம். நாகம் பேசப்படுவதில்லை. நாகம் ஏன் முருகனுடன் இருக்கிறது என்பதற்கு குக்கே சுப்ரமணியா சென்றால் விடை கிடைக்கும். அங்கே முருகன் நாகமைந்தன் எனப்படுகிறான்.
திருமுருகாற்றுப்படை ‘ஏரகத்துறைதலுமுரியன்’ என்று முருகனைச் சொல்கிறது என வையாபுரிப்பிள்ளை அகராதி சொல்கிறது. [ஆவினன்குடி அணைதலுமுரியன்; அதுவன்றி ஏரகத்துறைதலுமுரியன்] கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலைதான் ஏரகம் என்று இங்கே சொல்லப்படுவதுண்டு.
புகழ்பெற்ற இரட்டுறமொழிதல் பாடலிலும் முருகன் ஏரகத்தான் என்று சொல்லப்பட்டதுண்டு.
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்
இங்கு ஆர் சுமப்பார் இச்சரக்கை? – மங்காத
சீரகத்தைத் தந்திரேல் வேண்டேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே.
[வெம்மை மிக்க இந்த உடல் இறந்து உலர்ந்தால் இதனுள் உள்ள உள்ள உயிரால் என்ன பயன்? இந்த வெறும் சரக்கை யார் சுமப்பார்? மங்காத சீரான அகத்தை தந்தீர் என்றால் இந்த பெரும் உடலை நான் விரும்ப மாட்டேன், ஏரகத் தலத்து உறையும் முருகா]
ஜெ
ஆலயம், கடிதங்கள்
திரு ஜெ அவர்களுக்கு,
தங்கள் தளத்தில் ஆலயம் பற்றி எழுதி வருவதை தொடர்ந்து வாசித்து வருகிறேன். HVAC Engineer ஆக என் அனுபவங்களை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சென்னையில் வேலை பார்க்கும் அலுவலக திருப்பதி கிளையில் இருந்து திருமலை கோவிலில் மூலவர் மற்றும் மடை பள்ளிக்கு Ventilation சரியாக இல்லை வந்து பார்க்கவும் என அழைப்பு. Aadhar card அனுப்பி பதிவு செய்தவுடன், வரும்போது வேட்டி, துண்டுடன் வரவும் என சொல்லி இருந்தார்கள்.
அந்த குறிப்பிட்ட நாளில் நானும் என் மேனஜரும் சென்றவுடன் நேரடியாக மூலவர் இருக்கும் முன் அறை வரை அழைத்து சென்றார்கள். மின் விளக்கு இல்லை. நெய் விளக்கு பெரிய திரிகளில் எரிந்து கொண்டு இருந்தது. அவ் வெளிச்சத்தில் தான் பக்தர்கள் தரிசனம் மூன்றாவது அறைக்குப்பின். மூலவர் அறையில் விளக்கில் இருந்து வரும் விளக்கு புகை செல்ல duct வழியாக 50 மீட்டர் தொலைவில் வெளியே சென்று fan இல் இணைத்து வெளியேறும் இடத்தில் இருந்த கோபுரம் முழுக்க கரிப்புகை.
மூலவர் அறையை தினமும் இரவில் மூடி விடுவதால் duct இணைப்பு துண்டிக்கப்பட்டு பின் காலை கதவு திறக்கும் போது தானாகவே இணைப்பது மாதிரி இருந்தது. மூலவர் அறையில் இருந்த பூசகர் எப்படியாவது சரி பண்ணுங்கள் என்று வேண்டிக் கொண்டார். வீட்டிற்கு சென்று washing basin ல் துப்பினால் 2, 3 முறை கரியாக வருகிறது என்றும் மூன்று தலை முறையாக பெருமாளுக்கு சேவகம் என்று கூறினார்.
நல்ல வேளையாக தற்போது கற்பூர ஆரத்திக்கு பதில் நெய் விளக்கில் தூபம் காட்டுகிறார்கள். பின் வலது புறம் இருக்கும் மடப்பள்ளி கல் கட்டடம் இயற்கையாகவே புதிய காற்று உள்ளே வரவும் சமையல் செய்யும் போது உள்ள வெப்ப காற்று வெளியேற எதிர் திசையில் திறப்பு இருக்கிறது. ஆனால் தற்சமயம் அது போதாமையால் forced ventilation முறையில் புதிய காற்று உள்ளே வரவும் மற்றும் வெப்ப காற்று வெளியேற தனி யாக fan, duct design செய்து கொடுத்து வந்தோம்.
தற்போது எல்லா பெரிய கோவில்களிலும் (திருசெந்தூர் முருகன் கோவில் உட்பட) AC மற்றும் Ventilation duct செல்வதை பார்க்கலாம். கோவில் கட்டப்பட்ட காலத்தில் உள்ள மக்கள் தொகையையும், தற்போது உள்ள மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டால் சுகாதாரம் கருதி இந்த வசதி தேவைப் படுகிறது.
அன்புடன்
சேது வேலுமணி சென்னை
***
அன்புள்ள சேது வேலுமணி,
ஆலயங்களில் பெருகிவரும் கூட்டத்தைக் கண்டால் வருங்காலத்தில் ஆலயங்களில் மேலும் பல வெளியேற்ற வழிகளையும், ஆபத்துகால வெளியேற்ற வழிகளையும் உருவாக்க வேண்டியிருக்கும். ஆலயங்களுக்குள்ளேயே கழிப்பறைகளை உருவாக்க வேண்டியிருக்கும். இப்போதே சிறப்புநாட்களில் நாலைந்து மணிநேரம் உள்ளே வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது.
ஜெ
***
அன்புள்ள ஜெ
ஆலயம் பற்றிய உங்கள் விவாதம் முதலில் கொஞ்சம் சீண்டும்படி இருந்தது. என்னது இது ஆலயங்களுக்குள் போக கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் என்று சொல்கிறார் என்று தோன்றியது. ஆனால் கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் இருந்தால் ஆலயத்தில் வழிபடுவதே கொடுமையானதாக ஆகிவிடும் என்று தெரிந்தது. ஆலயம் செல்வதே பெரிய துன்பமாக, ஆபத்தானதாக ஆகிவிடும். ஆலயமும் அழிந்துவிடும். ஆகவே நீங்கள் சொன்னவற்றைச் செய்வதே நல்லது என்று படுகிறது.
அரங்க ராமநாதன்
ஆலயம் – எஞ்சும் கடிதங்கள் ஜெயமோகன் நூல்கள் வாங்க
வடிவமைப்பு, கீதா செந்தில்குமார்
வடிவமைப்பு கீதா செந்தில்குமார்
வாசகர்கள்- ஒரு கடிதம்
அன்புள்ள ஜெமோ,
வணக்கம். நலம்தானே?
வருடம் 2015 விஷ்ணுபுர விழாவில் பல வாசக நண்பர்களை முதன்முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு வாய்த்தது. அதில் ஒருவர் வாசகர் மீனாம்பிகை. அதிகபட்சம் சற்று சிரிப்பார் அவ்வளவுதான் என்று தோன்றியது. விழா நேரத்தில், வழக்கமான, கடைசி நேரத்தில் மறந்துவிட்ட பொருட்களை வாங்க/தேடி அதிரடியாக செல்வேந்திரன் பின் இருக்கையில் ஒட்டிக்கொள்ள ஸ்கூட்டரை முறுக்கியபடி பறந்தது நினைவிருக்கிறது. அவ்வளவுதான் தெரியும். அவர் எழுதி வாசித்ததாக எதுவும் நினைவில்லை (வெ.மு தளத்தில் எழுதியிருக்கலாம், தெரியவில்லை). பின், சமீபத்தில் ஞானியைப் பற்றிய கடிதம்.
மீனாம்பிகைஎனவேதான் “மெய்யாசிரியனுடன் ஒரு நாள்” என்ற கட்டுரையை வாசித்தவுடன் ஆச்சரியம் எழுந்தது. ஏதோ, மனக்குழப்பத்துடன் ஊட்டி ஆசிரமத்திற்குச் செல்கிறார். அந்த நாளைப்பற்றிய பதிவு – நிதானமாக காலை 5:30 மணிக்கு பஸ் பிடிப்பதிலிருந்து ஆரம்பித்து, அந்த பஸ் மலைப்பாதையில் மெல்ல ஊர்ந்து மேலேறுவது போன்ற ஒரு நாள் பயணம்- புறவிஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கையில் அவர் வாசித்த, உணர்ந்த அக விஷயங்களையும் குறிப்பிட்டுகொண்டே போகிறார்.
ஊட்டி ஆசிரமத்திற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு இன்னும் வாய்க்கவில்லை. ஆனால் அந்த அனுபவங்களை நண்பர்கள் பலர் கூறக்கேட்டிருக்கிறேன். “ஜன்னலில் மழை அறைந்து கொண்டிருந்ததை” நீங்கள் எப்போதோ எழுதியது – இவை அனைத்தும் சேர்ந்து ஆசிரமத்தை, அதன் சுற்றத்தைப் பற்றிய சித்திரம் மனதில் பதிந்திருக்கிறது. மீனாம்பிகை கடிதத்தில் அது இன்னும் விரிவானது.
கடிதம், முன்னர் சொன்னது போல் மலைப்பாதை பஸ் போலவே எவ்வித அவசரமுமின்றி (12-12:30 ‘x’ meeting; 14:00-15:30 ‘y’ workshop; 17:00-17:30 daily status report!) மிக நிதானமாக போகிறது. அவருடைய கேள்வியை வெளிப்படையாக கேட்காமலேயே ஆசிகள், உபதேசங்கள், சிறு உரையாடல்கள் வழியாக, நினைவு கூறல் வழியாக பதிலைக் கண்டடைகிறார். அடுத்த நாளை, எதிர்காலத்தை தெளிவாக சந்திக்கப்போகிறார் என்று பட்டது.
“எஸ் ஆல் க்ளியர்” என்று சிரித்தபடி சொன்னேன்.
கதிர்அடுத்த கடிதம், நண்பர் கதிர்முருகனிடமிருந்து. இவரை இதுவரை நேரில் சந்திக்கவில்லை, நவீன “அறிதல்” முறைகளின் ஒன்றான வாட்ஸப் வழியேதான் இதுவரை பழக்கம்(!)
விபாஸனா தியான முறையை சொந்த அனுபவத்திலிருந்து நிதானமாகவும் தெளிவாகவும் விவரிக்கிறார். இத்தகைய வாசகர்கள் தங்களுடன் தொடர் தொடர்பில் இருக்கிறார்கள்; முடிந்தவரை பயணத்தில் பங்கு கொள்கிறார்கள். கூட இருக்க, இருக்க, பயணிக்க பயணிக்க, அவர்களது சிந்தனை போக்குகள் துலங்குவதைத் தாண்டி தங்கள் சொல்லவருவதை தெளிவாகவும் எழுதுவது தெளிவாக தெரிகிறது.
நானும் கிரிதரனும் இதைப்பற்றி அடிக்கடி பேசிக்கொள்வோம்- இப்படி அமைவது ஒருவிதத்தில் கொடுப்பினைதான். எல்லாருக்கும் எல்லாம் அமைந்துவிடுவதில்லை. எங்களுக்கு அமையவில்லை; இவர்கள் வாய்ப்பதை முழுதாக அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள்.
செந்தில்இப்படி நினைத்துக் கொண்டிருக்கையில்தான் வாசகர் செந்திலின் யுடியுப் பேச்சைக் கேட்டேன், கண்டேன்!
பள்ளிப்படிப்பு படிக்காத, இன்னும் எழுதத் தெரியாத ஒருவர், உங்களைச் சந்திக்காத, எந்த தொடர்பும் இல்லாத ஒரு வாசகரின் பேட்டி! நேரில் சந்திப்பு, தொடர்பில் இருப்பது பயணங்களில் இடம் பெறல் போன்ற எதுவுமே தேவையில்லை என்று படீரென அடித்துச் சொன்ன பேட்டி..! (கண்களிருந்தும் குருடர்கள் போல எழுத படிக்கத்தெரிந்தும் நான் இன்னும் எத்தனை வாசிக்கவில்லை… சற்று வெட்கித் தலைகுனிந்தேன்).
வாசகரின் தொடர் சங்கிலியின் உறுதிக்கு உதாரணம். பல நண்பர்கள் ஜெமோ எழுத்துகளை வாசிக்க கடினம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கு அருமையான பதிலை செந்தில் சொல்லாமல் சொல்லிவிட்டார்!
“அறம்” தொடர் வந்தபோதுதான் தங்களை, கடிதங்கள் எழுதித் தொடர ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன். இத்தனை வருடங்களில் எத்தனையோ வாசகர்கள் -வயது, படிப்பு, தொழில் என்று பல விஷயங்களில் வித்தியாசப்பட்டிருந்தாலும் வாசித்துக்கொண்டும் தொடர்பிலும் இருக்கிறார்கள். சிலர், வழியில் தொடர்பிலிருந்து விலகி, மறைந்து, முறித்துக்கொண்டு… சிலர் எழுத ஆரம்பித்து சில காலத்திற்குப்பின் தொய்வு ( எத்தனையோ காரணங்கள், என்னைப்போல்!)
இதுபோலவே மேலும் மேலும் புது வாசகர்கள் தோன்றி, அல்லது இப்போதுதான் தெரியவந்து, எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். யார்க்கு கொடுப்பினை அதிகம் (எழுத்தாளருக்கா, வாசகர்களுக்கா!) என்று சட்டென சொல்லத் தெரியவில்லை!
வாசகர்களை வெண்முரசுக்கு முன் மற்றும் பின் என்றும் பிரிக்கலாம் என்று தோன்றுகிறது. அது ஏற்படுத்திருக்கிற வாசக சலனம், தீவிரம் – சிந்திப்பில், தம் சிந்தனையை எழுத்தில் கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியிருக்கிறது என்று உறுதியாக தெரிகிறது. இதற்கு இவ்வாசகர்களின் எழுத்துகளே சாட்சி.
ஒவ்வொருத்தரின் பாதையும் தேடலும் தனிதான்; வெண்முரசு ஒரு கலங்கரை விளக்கம் போல் அவரவருக்கான வழியை காட்டிக்கொண்டிருக்கிறது- இதன் பாதிப்பு, தீவிரம் இன்னும் வரும் வருடங்களில் மேலும் அருமையாக வெளிவரும் என நம்புகிறேன்.
சிறுவயதில் கார்த்திகை நாட்களில் வீடுகளில் திருவிளக்குகள் ஏற்றுவது ஓர் உற்சாகமான விஷயம். ஒரு விளக்கைக் கொண்டு எத்தனை விளக்குகளை ஏற்றுவது என்பது குறித்து எங்களுடையே போட்டியே நிலவும்.
வெண்முரசு திருவிளக்கின் வாயிலாக எத்தனை எத்தனை விளக்குகள் சுடர் விடுகின்றன…
மாரிராஜ்இரு நாட்களுக்கு முன் நண்பர் மருத்துவர் மாரிராஜிடம் பயணச்செய்திகளை விசாரித்துக் கொண்டிருந்தேன். உணவு பற்றிய பேச்சு வந்ததுமே நீர்க்கோலம், கொன்றதும், உண்டி அளித்ததுமான பீமனது கைகள் என்று உற்சாகமாக பேசத்துவங்கிவிட்டார்! வெண்முரசை வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலிருந்தும் ஒரே ஒரு அடி தூரத்திலிருந்து அணுகிவிடுகிறார்கள் வாசகர்கள்!
அதே சமயம், மாரிராஜ், இன்னொன்றும் சொன்னார்: ஒரு குறள்.
“தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது”
தவத்தை அடைவதற்கும், முன்பு தவம் செய்திருக்கவேண்டும் என்றார். இல்லையா பின்ன!
சுபாபின் குறிப்பு: இக்கடிதத்தை எழுதி அனுப்பும் முன் ஒரு முறை படித்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது நண்பர் சுபா அவர்களின் மொழிபெயர்ப்பைப் பற்றிய பதிவைக் கண்டேன்! இவர், இன்னொரு பெரிய வாசகி, பின்னாளில் மேலும் பெரிய இடங்களை அடையப்போகிற தீவிரம், இன்றைய எழுத்துகளிலேயே தெரிகிறது…
சிவா கிருஷ்ணமூர்த்தி
சிவா கிருஷ்ணமூர்த்திஅன்புள்ள சிவா,
இப்பட்டியலில் நான் சேர்க்கும் மேலும் பலர் உள்ளனர். பலர் சென்ற ஓராண்டுக்குள் வந்தவர்கள். மிகுந்த விசையுடன் எழுதத் தொடங்கியிருப்பவர்கள். அவர்களை நேரில் உங்களுக்கு அறிமுகமில்லாமல் இருக்கலாம். இன்று எவர் எங்கே ஒரு சிற்றிதழை வெளியிட்டாலும் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என என் வாசக நண்பர்களில் இருந்து வந்தவர்களே மிகப்பெரும்பாலானவர்களாக இருப்பார்கள்.
நான் அனைவவரிடமும் கையளிக்க முயல்வது தீவிரத்தை மட்டுமே. நாம் சோர்வு, சலிப்பு, உளச்சிக்கல்கள் என சிதைவுறுவதெல்லாம் தீவிரமின்மையால்தான். உளம்குவிந்த செயல்தீவிரம் எதுவானாலும் அது யோகம். இங்கே அனைத்திலிருந்தும் நம்மை மீட்பது அது மட்டுமே.
ஜெ
விபாசனா, ஓர் அனுபவம் சில எண்ணங்கள் – கதிர்முருகன் ஒரு பேரிலக்கியத்தின் வருகை – சுபா மெய்யாசிரியனுடன் ஒரு நாள் – மீனாம்பிகைJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

