Jeyamohan's Blog, page 922

September 5, 2021

ஒரு நாளின் டைரி

காலையிலேயே ஒரு அழைப்பு வந்து எழுந்துவிட்டேன். ஒரு நண்பர் ஆசிரியர்தின வணக்கம் சொல்லியிருந்தார். அதன்பின் தொடர்ச்சியாக செய்திகள், மின்னஞ்சல்கள். இத்தனை பேர் ஆசிரியராக எண்ணுவது மகிழ்ச்சிதான். எழுத்தாளன் ஒரு கணக்கில் ஆசிரியன். இந்த வணக்கங்களை என் ஆசிரியர்களை எண்ணி ஏற்றுக்கொள்ளலாம். இது நான் சுந்தர ராமசாமியை, ஆற்றூர் ரவிவர்மாவை, ஞானியை, பி.கே.பாலகிருஷ்ணனை, எம்.கோவிந்தனை எண்ணிக்கொள்ளும் நாள். குருபூர்ணிமாவுக்கு நித்யாவை.

சென்ற பத்துநாளாக ஒரே உளஅலைச்சல். விகடனில் இருந்து நா.கதிர்வேலன் கதை கேட்டிருந்தார். நாலைந்து நாளுக்கு ஒருமுறை நினைவூட்டவும் செய்தார். ஆனால் கதை வரவில்லை. ஐந்து கருக்களை எடுத்து நாலைந்து பத்தி எழுதி அப்பால் வைத்தேன். கருக்களே தோன்றவில்லை. தோன்றி எழுத ஆரம்பித்தால் எழுத எழுத சிறுத்துக்கொண்டே சென்றன. என்னை கொண்டு செல்லாதவற்றை நான் எழுதுவதில்லை. தூக்கி அப்பால் வைத்துவிட்டு சம்பந்தமில்லாமல் வாசித்துக் கொண்டிருந்தேன். H.P.Lovecraft எழுதிய கதைகளை இந்த உலகில் நானன்றி எவராவது வாசிக்கிறார்களா?

H.P.Lovecraft

அதன்பின் கொஞ்சம் மாடஸ்டி பிளெய்ஸ், டின்டின். அதன்பின் கொஞ்சம் மலையாள சினிமா. மலையடிவாரத்தில் சைதன்யாவுடன் நடை. மசால்வடை வாங்கிக்கொண்டு வந்து அதை ரசவடையாக ஊறப்போட்டு சாப்பிடுவது. இப்படியே நாட்கள் செல்கின்றன. தூங்க ஆரம்பித்தால் மனிதனால் பன்னிரண்டு மணிநேரம் தூங்கமுடியும் என்று கண்டடைந்தேன். ஆனால் எழுத முடியவில்லை. ஒரு மாறுதலுக்காக ஒரு கொடூரக்கதைகூட எழுதிப்பார்த்தேன்.

இதே நான் நாளுக்கு ஒரு கதை என மூன்றுமாதம் எழுதியவன். அன்றெல்லாம் கருவே தேவையில்லை. சும்மா அமர்ந்து தட்டச்சிட்டாலே போதும், கதையாகிவிடும். என்ன கதை என்பது எழுதியபிறகுதான் எனக்கே தெரியும். ”ஓ! அதெல்லாம் ஒரு பொற்காலம்’ என்று சொல்லும் நாள் வந்துவிட்டதா? பார்வைக் கோணத்தை மாற்றினால் என்ன? ஒருவேளை முற்போக்காக மாறினால் ஒன்றாம் வகுப்பிலிருந்து மீண்டும் ஆரம்பிக்க முடிந்தாலும் முடியலாம்.

அவ்வளவுதானா? இந்த அச்சமும் பதற்றமும் எத்தனையோ முறை ஏற்பட்டிருக்கின்றன. பெரும் கொண்டாட்டத்துடன், கொந்தளிப்புடன் உடைந்திருக்கின்றன. ஆனாலும் அந்த அச்சம் நீடிக்கிறது. காலையில் எழுந்து அமர்ந்தேன். வழக்கம்போல நினைவுகள் எங்கோ சென்று எதையோ தொட்டுச் சலித்துக் கொண்டிருந்தன. மின்னஞ்சல்களை வாசித்தேன். நாலைந்துநாள் பழைய மின்னஞ்சல்கள்.

நண்பர் ஒருவர் சில சமீபத்தைய காதல்கவிதைகள் சேகரித்து அனுப்பியிருந்தார். ஏற்கனவே பட்டினத்தார் அந்தப்பாணியில் எழுதியிருக்கிறார்.

தோடவிழும் பூங்கோதைத் தோகை உனை இப்போது
தேடினவர் போய்விட்டார் தேறியிரு – நாடி நீ
என்னை நினைத்தால் இடுப்பில் உதைப்பேன் நான்
உன்னை நினைத்தால் உதை.

தமிழின் உச்சகட்ட காதல்கவிதைகளில் ஒன்று இது.

என்னை நினைத்தால்
இடுப்பில் உதைப்பேன்
நான்
உன்னை நினைத்தால்
உதை!

என்ன அற்புதமான புதுக்கவிதை!

சட்டென்று ஓர் எண்ணம். உடனே ஒரு கதை எழுதி பதினொரு மணிக்கு முடித்தேன். நல்ல கதை எழுதி முடித்ததுமே வரும் நிறைவு. மலர்ந்த முகத்துடன் வெளியே கிளம்பினேன். மழைத்தூறல் இருந்தது. ஆகவே மலையடிவாரம் வரை ஒரு நடை சென்றேன். மதியநடை. நடுவே சட்டென்று பளிச்சிடும் வெயில். உடனே கொஞ்சம் மழை. மீண்டும் வெயில்.

பருப்புவடை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தேன். நவரசங்களில் ஒன்பதாவது ரசம் ரசவடை என்பது குமரி மாவட்டத்தினருக்கு தெரியும். ஒருநாள் நிறைவாக முடிந்தது. அதாவது சாப்பிட்டுவிட்டு மதியத்தூக்கம் போட்டால் ஒருநாள். மாலை ஐந்துமணி முதல் இன்னொரு விடியல், இன்னொருநாள். அது வேறு கணக்கு,

ஏன் கதைகள் வரவில்லை? சொல்லத் தெரியவில்லை. ஆனால் எனக்குத் தோன்றிய காரணம் இது. வாழ்க்கையின் துக்கங்கள், கொடுமைகள் பற்றியெல்லாம் எழுதினால் பெரியதாக ஈர்க்கவில்லை. ஏகபட்டது எழுதிவிட்டேன். இன்று மானுட வாழ்க்கையின் மழைவெயிலொளி மட்டுமே இனிதானதாகத் தெரிகிறது. அது மட்டுமே என்னை கொண்டு செல்கிறது.

தன்குறிப்புகள்- கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2021 11:32

September 4, 2021

தியானமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும்

விபாசனா, ஓர் அனுபவம் சில எண்ணங்கள்

அன்புள்ள ஜெ..

பல்வேறு தியான முறைகள் குறித்து உங்களது புனைவுகளிலும் கட்டுரைகளிலும் உரையாடல்களிலும் பார்த்திருக்கிறோம்.

உண்மை என்பதை இது போன்ற பயிற்சிகளால் அணுக இயலாது என்ற தரப்பு குறித்த உங்கள் பார்வையை அறிய விருப்பம்.

Truth is Pathless land என்ற ஜே.கிருஷ்ணமூர்த்தி தரப்பை எப்படி பார்க்கிறீர்கள்? கடவுளை நேருக்கு நேராகப் பார்க்க வைத்தல், சூன்ய நிலையை அடைதல், மகா நிர்வாணா என அனைத்துக்குமே அவற்றுக்குரிய தியான முறைகள் உண்டு. அவற்றைப் பின்பற்றினால், அந்தந்த முறைகள் வகுத்துள்ள இலக்கை அடையலாம் (இறை தரிசனம், தானழிதல், மகாமுக்தி, சித்தியடைதல் போன்றவை). ஆனால் இதற்கும் “உண்மை” என்பதற்கும் சம்பந்தமில்லை, உண்மை என்பது பயிற்சிகள் மூலம் அறுதியாக அடைய வேண்டிய இலக்கு இல்லை. அப்படிப் பயிற்சிகளால் அடைவது அந்தந்த பயிற்சிகளின் விளைவுகள்தானே தவிர உண்மை நிலை ஆகாது என்கிறார் ஜேகே.

எந்த தியான முறைகளுமே அறியாத ஒருவன் இப்படி சொல்லிவிட முடியாது. முதலில் அம்முறைகளைப் பின்பற்றி, அவைதரும் அனுபவங்களை அனுபவித்துப் பார்த்துவிட்டு வந்து பேசு என்று சொல்லி விடுவார்கள்.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் பொருத்தவரை அவரை உலக குரு ஆக்கும் பொருட்டு அனைத்து தியான முறைகளையும் சின்ன வயதிலேயே கற்பித்தனர். அனைத்தையும் பார்த்துவிட்டுதான் அவர் இப்படி சொல்கிறார்.

குருவற்று இரு, தியானப்பயிற்சி என்பது சுயமனோவசியம் என்பதைத் தவிர வேறல்ல போன்ற அவர் கூற்றுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அன்புடன்

பிச்சைக்காரன்

***

அன்புள்ள பிச்சைக்காரன்,

உங்கள் கேள்விக்கு பதிலாக நான் இன்னொன்றைச் சொல்லமுடியும். “உண்மை என ஒன்று இல்லை” என்கிறார் யூஜி கிருஷ்ணமூர்த்தி. என்ன சொல்கிறீர்கள்?

இப்படி ஒருவரை ஒருவர் மறுக்கும் பத்துப்பதினைந்து மெய்ஞானிகள், தத்துவவாதிகளின் வரிகளை எடுத்து வைக்கிறேன்.எதன் அடிப்படையில் மதிப்பிடுவீர்கள்? எப்படி முடிவுக்கு வருவீர்கள்? நம்மிடம் என்ன அளவுகோல்கள் இருக்கின்றன? அவர்களின் மொழிநடையை வைத்தோ, புகழைவைத்தோ, அவர்களைப்பற்றிய கதைகளை வைத்தோ மதிப்பிட்டு முடிவுசெய்யவேண்டுமா என்ன?

நாமே தியானம் செய்து, நாமே அறுதியாக அறிந்துகொண்ட ஞானம் இருந்தால் மட்டுமே நம்மால் அவர்கள் சொல்வது சரியா பிழையா என மதிப்பிட முடியும் இல்லையா? ஆனால் அதற்கு நாம் எவரையாவது ஏற்றுக்கொண்டு, பயின்று தெளிந்திருக்கவேண்டும். இந்த முரண்பாட்டை யோசித்திருக்கிறீர்களா?

அவ்வாறு ஞானம் இல்லாத நிலையில் இவர்கள் சொல்வதில் எது சரி என நாம் விவாதிப்பதென்பது வெறுமே வம்பளப்பு மட்டும்தானே?

*

இதைப்பற்றிய என்னுடைய தெளிவை மட்டும் சொல்கிறேன். மெய்மையின் வழியில் வெவ்வேறு ஆசிரியர்கள் உண்டு. அவர்கள் அடைந்தவையும், காட்டியவையும் உண்டு. அவற்றில் உங்களுக்கு எது ஏற்புள்ளதோ அதைத் தெரிவுசெய்யலாம். அதை நம்பி, கற்று, ஈடுபட்டு வெல்லலாம். ஆனால் எதையோ ஒன்றை பற்றி முன்சென்றே ஆகவேண்டும். செல்லும் வழியிலேயே ஒன்று பயனற்றது எனக் கண்டால் உதறிச் செல்லலாம். உங்கள் வழி உங்களுக்கு. உங்களுக்கு ஊழிருந்தால் அடையலாம், அமையலாம்.

ஆனால் வெவ்வேறு மெய்யாசிரியர்களின் கூற்றுக்கள் மற்றும் அவர்கள் காட்டும் வழிகளை ஒப்பிட்டு எது சரி என்றும் எது சிறந்தது என்றும் விவாதிக்கிறோம் என்றால் நாம் வெறும் அகந்தையைக் கொண்டு விளையாடுகிறோம்.

அவ்வாறு ஞானியரை மதிப்பிட்டு தீர்ப்புசொல்ல முயல்கிறோம் என்றால் நாம் நம்மை வைத்துக்கொள்ளும் இடம் என்ன? அனைத்தையும் அறிந்து அறுதியாக முடிவெடுப்பவராக நம்மை உருவகித்துக் கொள்கிறோம் இல்லையா? அந்தத் தகுதி நமக்கு உண்டா? இருந்தால் நாம் ஏன் இன்னொருவரின் வழிகாட்டலை நாடவேண்டும்?

தொன்மையான மெய்வழிகளிலேயே சங்கரரின் வழியல்ல ராமானுஜருடையது. அவர்களிருவரின் வழி அல்ல மத்வருடையது. ராமானுஜரும் மத்வரும் சங்கரரை கண்டித்த பின்னரே தங்கள் வழிகளை முன்வைக்கின்றனர். இவர்களில் எவரை ஒருவர் ஏற்றுக்கொள்கிறார் என்பது அவருடைய இயல்புக்கும், வாய்ப்புக்கும், அவற்றை உருவாக்கும் ஊழுக்கும் இயைப நிகழ்வது.

நான் சங்கரரின் வழியை ஏற்றுக்கொண்டவன். சங்கர வேதாந்தத்தின் வளர்ச்சிநிலையாகிய நாராயணகுருவின் தரிசனமரபைச் சார்ந்தவன். ஆனால் வழிநிற்பவன் அல்ல, பயணி. ராமானுஜரையும் மத்வரையும் கற்றுக்கொள்வேன். ஆனால் சங்கரருடன் அவர்களை ஒப்பிட்டு யார்சொல்வது ‘உண்மை’ என்று விவாதிக்க மாட்டேன். மத்வரை ஏற்றுக்கொண்ட ஒருவர் சங்கரரைக் கண்டிக்க முற்பட்டால் ஒரு புன்னகைக்கு அப்பால் அவரிடம் ஒரு வார்த்தைகூட உரையாட மாட்டேன்.நான் ஏற்றுக்கொண்ட வழி என்னுடையது. அதை மறுக்கும் எந்த வழியுடனும் எனக்குப் பூசல் இல்லை.

ஏனென்றால் அதனால் எந்தப் பயனுமில்லை. அந்த விவாதம் நம்மை ஆணவமும், அதன்விளைவான அறிவின்மையும் கொண்ட அற்பச்சழக்காளர்களாக ஆக்கிவிடும். என்னுடைய பார்வையில் எனக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி உகந்தவராக இல்லை. அதற்கான காரணங்களைச் சொல்ல முடியும். ஆனால் ஜே.கிருஷ்ணமூர்த்தி சொன்னது சரியா பிழையா என விவாதிக்க மாட்டேன்.

*

நீங்கள் சொன்னதனால் இதைப் பேசுகிறேன். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அனைத்து தியான- யோக வழிகளையும் கற்றார் என்பதெல்லாம் நம் சமகாலத்தைய தொன்மம். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வழி என்பதே கூர்மையான அறிவைக்கொண்டு ஆராய்ந்து முன்செல்வது. ஆகவே ஜே.கிருஷ்ணமூர்த்தியையும் அவ்வாறே அணுகியாகவேண்டும்

அவர் தியோசஃபிகல் சொசைட்டியில் வளர்ந்தவர். தியோசஃபிக்கல் சொசைட்டி என்பது இந்திய மெய்யியல் மேல் ஆர்வம் கொண்ட மேடம் பிளவாட்ஸ்கி, ஆல்காட் போன்ற வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்தியாவின் மெய்யியல் மரபுகள் எதனுடனும் அது நேரடியாக தொடர்பு கொண்டிருக்கவில்லை. எந்த உரையாடலையும் நிகழ்த்தவுமில்லை. எதனுடைய தொடர்ச்சியாகவும் அமையவில்லை. அது இங்கே ஒரு தனித்த அமைப்பாகவே நீடித்தது. இன்று செயலற்றுவிட்டது.

மேடம் பிளவாட்ஸ்கி, ஆல்காட் போன்றர்கள் இந்திய மெய்யியல் மேல் பேரார்வம் கொண்டவர்கள், அன்று கிடைத்த இந்திய மதங்களின் நூல்களை ஆழ்ந்து கற்றவர்கள். அவர்களுக்கு இந்திய மெய்யியலை தொகுத்ததில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு உண்டு என்பதை நான் எப்போதுமே சொல்லிவருகிறேன். ஆனால் அவர்களுக்கு இந்தியமதங்களில் எதிலும் குருமரபு என ஏதுமில்லை. தியோசஃபிக்கல் சொசைட்டிக்கு தனக்கென மெய்யியல் பாரம்பரியம் என ஒன்று இல்லை. ஆகவே அதில் ஞானிகள் என எவருமில்லை. அதற்குரிய தியான, யோகப் பயிற்சிகளும் இல்லை.

ஜித்து கிருஷ்ணமூர்த்தி தியோசஃபிகல் சொசைட்டியால் பத்தாண்டுகள் பயிற்றுவிக்கப்பட்டார். தன் 16 ஆவது வயதிலேயே லண்டன் கொண்டு செல்லப்பட்டார். அங்கே ஆன்மிக உரைகளை ஆற்றத்தொடங்கினார். அவருடைய அனுபவங்களெல்லாமே தியோசஃபிக்கல் சொசைட்டி அவருக்கு உருவாக்கித்தந்த சிறுவட்டத்திற்குள்தான். தன் 34 ஆவது வயதில் அவர் தியோசஃபிக்கல் சொசைட்டியை உதறி ‘பாதையற்ற பயணத்தை’ அறிவித்தார்.

ஜித்து கிருஷ்ணமூர்த்தி எந்த இந்திய மெய்ஞான மரபிலும் உள்ளே சென்று பயின்றவரோ, தன்னை முழுதளித்து ஈடுபட்டவரோ அல்ல. அவர் எந்த இந்து மெய்ஞானியையும் ஆசிரியராகக் கொண்டவர் அல்ல. அவருடைய பயணத்திற்கும் இந்து- பௌத்த மரபுகளின் மெய்யியல் கல்வி மற்றும் தியான-யோகப் பயிற்சி முறைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்திய ஞானமரபுகளில் குரு யார், முறைமை எது என்பது அடிப்படையான கேள்வி என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பாதை முற்றிலும் ஐரோப்பியத் தன்மை கொண்டது என்று சொல்லலாம். தத்துவத்தை ஒரு பாடமாக ஆக்கி, அதை உரிய ஆசிரியர்களைக் கொண்டு கற்றுக்கொள்வது அது. உண்மையில் கிறிஸ்தவ மடாலயங்களில் இருந்து தியோசஃபிக்கல் சொசைட்டி பெற்றுக்கொண்ட முறை. இங்குள்ளது முற்றிலும் வேறு கல்விமுறை. இது அறிதல்முறை அல்ல, ஆதல்முறை. அதை ஒரு குருதான் அளிக்க முடியும். அவர் அதை கற்ற அறிஞர் அல்ல, அதன் வழியாக மெய்மையை அறிந்தவர். ஒரு கல்லூரியில் வேதாந்தம் பயில்வதற்கும் ஒரு குருகுலத்தில் சீடனாகி பயில்வதற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடுண்டு.

இந்து, பௌத்த மரபுகளில் ஒரு மெய்ஞானி உருவாகி வருவதன் வழிகளென்ன என்று பாருங்கள். அதற்கு பொதுத்தன்மைகள் பல கொண்ட ஒரு பாதை உண்டு. அந்த மெய்ஞானி இளமையிலேயே அடிப்படை வினாக்களுடன் கல்விகற்றுக் கொண்டிருப்பார். கல்வியின் எல்லையை எங்கோ உணர்வார். மெய்யான கல்விக்காக அலையத் தொடங்குவார். பல ஆசிரியர்களைச் சந்திப்பார், ஒவ்வொருவரிடமும் ஒன்றை கற்பார். அறுதியாக அவருக்கு ஒரு குரு அமைவார். அந்த மெய்யாசிரியருக்கு அவர் தன்னை முற்றளிப்பார். அந்த ஆசிரியரால் உடைத்து உருக்கி திரும்ப வார்த்து எடுக்கப்படுவார். அவரால் ‘மறுபிறப்பு’ எடுக்கச் செய்யப்படுவார்.அது ஒரு மிகப்பெரிய பயணம். பல ஆண்டுகள் தேவைப்படுவது.

அதன்பின் தன்னை முழுமை செய்துகொள்வதற்கான இன்னொரு அலைச்சல் அவருக்கு தொடங்குகிறது. அந்த ஆசிரியரே மாணவரை விலக்கி அந்த அலைச்சலுக்கு அனுப்புவார். ஒரு கட்டத்தில் தன் கனிதலை தானே உணர்ந்தபின் அந்த மெய்ஞானி தன்னை வெளிப்படுத்தத் தொடங்குவார். இங்கே எவரும் ‘சுயம்புகள்’ இல்லை. அனைவரும் ஏதோ ஒரு மரபின் தொடர்ச்சிகள். ஒரு நெருப்பில் இருந்தே இன்னொரு நெருப்பு பற்றிக்கொள்கிறது. அதே சமயம் எந்த ஞானியும் முழுமையாக எதையும் பின்தொடர்பவர் அல்ல. ஒவ்வொருவரும் தனக்கான வழியை, பார்வையை முன்வைப்பவராகவும் இருப்பார்.

ஜித்து கிருஷ்ணமூர்த்தியின் மொழி மேலைநாட்டவருக்கு உரியது. அவருடைய பார்வையும் மேல்நாட்டுப்பார்வையே. இந்தியமெய்ஞானத்தைச் சந்தித்து உரையாடிய மேலைநாட்டு மெய்யியியலின் விளைவாக உருவான ஆளுமை அவர். அவர் அந்த சில மெய்யறிதல்களை முன்வைக்கிறார். அவை அவரால் சொற்பொழிவுகளாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஓஷோ போலவே மரபுவாதத்தில் உறைந்திருந்த இந்திய உள்ளத்தை உடைத்து புதிய வினாக்களை எழுப்பி செயலூக்கம் கொள்ளச் செய்யும் ஆற்றல் அவற்றுக்கு உண்டு. வெறுமே ‘நம்பிக்கை – நம்பிக்கைமறுப்பு’ என இருநிலைகளில் மட்டுமே செயல்படும் மேலைநாட்டு உள்ளங்களுக்கு ஆழத்தைச் சுட்டிக்காட்டவும் அவற்றால் முடியும்.

ஜெ.கிருஷ்ணமூர்த்தி சொல்வதை நான் இவ்வாறுதான் எடுத்துக்கொள்வேன், அவர் முன்வைக்கும் பாதையில் தியானம் யோகம் ஆகியவற்றுக்கு இடமில்லை. அவர் சொற்கள் வழியாக அறிந்துகொள்வதே போதும் என நினைக்கிறார். அவருடைய வழிகள் சிந்தனை சார்ந்தவை, மரபான சிந்தனையை புதியசிந்தனை ஒன்றால் உலுக்கி உகுத்து விடுதலின் விடுதலையை அவர் முன்வைக்கிறார், அவ்வளவுதான்.

உங்கள் பழைய சிந்தனைகளை உலுக்கி உதறி உங்களை முன்னெடுக்க அவர் உதவுகிறார் என்றால் நீங்கள் அவர் காட்டும் வழியில் செல்லலாம். அது உங்களுக்குச் சரியானதே. நீங்கள் உங்கள் நிறைவை கண்டடையலாம். அதன்மேல் எனக்கு மறுப்போ விமர்சனமோ இல்லை. விவாதிக்கவும் வரவில்லை. ஆனால் எந்த ஒரு வழியையும் பின்பற்றுபவர் அதில் முழுமையாக ஈடுபட்டு ஆழ்ந்து கற்கவேண்டும். அதன்பின்னரே அதைப் பரிசீலிக்க முடியும்.ஆரம்பத்திலேயே அதையும் இன்னொன்றையும் ஒப்பிட்டு விவாதிப்பது கல்விக்கு எதிரான செயல்.

*

ஊழ்கம் அல்லது தியானம் அல்லது தவம் என்பது எல்லா மதங்களிலும் பல நூற்றாண்டுகளாக இருந்துவருகிறது. ஊழ்கமும் தியானமும் தவமும் புரிந்த மெய்ஞானிகளின் மிகநீண்ட பட்டியல் வரலாற்றில் உள்ளது. அவர்களின் வாழ்வை, செய்தியை, அவர்கள் சென்றடைந்த வழியை முழுமையாக நிராகரிக்க ஒரு தத்துவவாதியின் மேற்கோளே எனக்குப் போதும் என நான் நினைக்க மாட்டேன்.

மேலும் நான் எதை நிராகரிக்கிறேனோ அதை நானே ஆழமாக அறிந்துகொள்ளவே முயல்வேன். அறிந்தபின் என் அனுபவத்தைக் கொண்டு ஐயமின்றி நிராகரிப்பேன். அப்போதுகூட ‘இது என் அனுபவத்தின் வெளிச்சத்தில் பட்ட எனது கருத்து’ என்றே சொல்வேன். அறுதி உண்மை என்று முன்வைக்க மாட்டேன்.

கொஞ்சம் சிந்திக்கும், கொஞ்சம் உள்ளத்தைக் கவனிக்கும், கொஞ்சம் இலக்கியம் வாசிக்கும் எவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் நம் அறிதல்கள் என்பவை எப்போதும் மிகமிக எல்லைக்குட்பட்டவை என்பது. நம் சூழல், நம் தேவைகள், நம் உணர்வுகள், நம் ஆணவம், நம் நினைவுகள் என எவ்வளவோ விஷயங்களால் அவை தீர்மானிக்கப்படுகின்றன.

நம்முடைய வெளிப்பாடுகளை நாம் கூர்ந்து பார்த்தாலே இதைக் காணலாம். ஒரு தருணத்தில் நாம் எப்படி வெளிப்படுகிறோம்? கருணையானவராக, சீற்றம்கொண்டவராக, பொறுமையானவராக, எரிச்சல்கொண்டவராக, முற்போக்காக, பிற்போக்காக… அந்தந்த கணத்தில் தன்னியல்பாக அந்த வெளிப்பாடு நிகழ்கிறது. அது நிகழ்ந்தபின்னரே நாம் அதை அறிகிறோம்.

அது நிகழ்ந்தபின் அந்த வேடத்தை பெரிதாக்கி ஆடி முடிக்கிறோம். அதுவே நாம் என நிறுவும்பொருட்டு நம் தர்க்கத்தை பயன்படுத்துகிறோம், சொற்களைக் குவிக்கிறோம். ஆனால் அந்தரங்கமாக நாம் அறிவோம், நாம் கொண்ட அந்த வெளிப்பாடு நாம் அல்ல. அப்போது ‘ஏனோ’ அப்படி வெளிப்பட்டுவிட்டோம், அவ்வளவுதான். அந்த வெளிப்பாடு நேர்தலைகீழாகவும் இருந்திருக்கலாம். கொஞ்சம் நம்மை நாமே ஆராய்ந்தால் அதற்கான சில காரணங்களை கண்டடைவோம். பெரும்பாலும் காரணம் நம் அறிதலுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்.

நாம் என நாம் முன்வைக்கும் நம் குணச்சித்திரமே இப்படி தன்னியல்பாக நம்மை மீறி நிகழ்வது என்றால் நாம் வெளியே இருந்து அறிவது எப்படிப் பட்டதாக இருக்கும்? நாம் நமக்கென வகுத்துள்ள இந்த குணச்சித்திரத்தைக் கொண்டுதான் வெளியுலகையே அறிகிறோம். அந்தக் குணச்சித்திரத்துக்குத் தான் வெளியுலகம் எதிர்வினையும் ஆற்றுகிறது. விளைவாக நாமறியும் அனைத்தும் நாம் உருவாக்கிக் கொண்டே இருக்கும் இந்தக் குணச்சித்திரத்திற்கு ஏற்பத் தன்னியல்பாக உருமாறிவிடுகிறது.

இந்நிலையில் ‘கற்று’ அறிந்து மெய்யை அடைவதெல்லாம் இயல்வதே அல்ல. நூல்களை வாசித்தோம், சொற்பொழிவுகளைக் கேட்டோம், அறிந்து தெளிந்துவிட்டோம் என்பதுதான் மிகப்பெரிய பாவனை.

அந்தப் பாவனையை அடைந்ததும் நாம் சில மேற்கோள்களை கற்றுக் கொள்கிறோம். சில நிராகரிப்புகளைச் சொல்ல ஆரம்பிக்கிறோம். நம்மை விடுதலை பெற்றவராகவும், மெய்யுணர்ந்தவராகவும், ஆகவே ஒருபடி மேலானவர்களாகவும் நினைக்க ஆரம்பிக்கிறோம். அது மிகப்பெரிய மாயை. ஆசாரவாதிகள் நியமநிஷ்டைகளை செய்வதனால் அவர்கள் தூயவர்களாக ஆகிவிட்டதாக எண்ணிக் கொள்ளும் பேதமைக்கு இது நிகரானதே.

கல்வியும் அறிவும் நோய் என்ன, நோய்க்கூறுகள் என்ன என அறிய மட்டுமே உதவும். சிகிச்சை என்பது அறிந்தபின் தொடங்கவேண்டியது. அந்த சிகிச்சையே தியானம் என்பது. தியானம் என்பது ஒன்றல்ல. அதன் வழிகள் பல. ஒவ்வொருவருக்கும் ஒன்று. வாழ்க்கையில் தியானத்தை கொஞ்சமேனும் செய்யாதவர், தியானநிலை அமையாதவர் எவரும் இல்லை. ஒரு தருணத்தில் ‘கொஞ்சநேரம் அமைதியா உக்காந்துக்கறேன்’ என நாம் அமர்கிறோமே, அதுவே தியானம்தான். தியானப்பயிற்சி என்பது அதையே முறையாக நிகழ்த்திக் கொள்வது.

மற்ற எல்லா வரையறைகளையும் விடுங்கள், தியானம் என்றால் மிக எளிதாக இப்படி விளக்குகிறேன். அறிதலில் உள்ள திரிபுகளை கூர்ந்த கவனம் வழியாகவும், தொடர்பயிற்சி வழியாகவும் களைதல்”.

மற்ற வழிமுறைகள் என்ன சொல்கின்றன என எனக்கு தெரியாது. வேதாந்த மரபில் தியானம் என்பது நாம் நம் சூழல் வழியாகவும் நம் ஆணவம் வழியாகவும் உருவாக்கிக் கொள்ளும் பாவனைகள் மற்றும் பொய்யுணர்வுகளைக் களைந்து தூய அறிவு நோக்கி படிப்படியாகச் செல்வதுதான். அடுத்தபடியில் நாம் நம் இருத்தல் வழியாக இயல்பாகவே உருவாகிவந்த திரிபுகளைக் களைகிறோம். இத்திரிபுகளையே மாயை என்கிறோம்.

தியானம் என்பது ஒருவகை கல்வி. நூல்வழியாக அடையப்படுவது புறக்கல்வி என்றால் தியானம் என்பது அகக்கல்வி. எந்தக் கல்வியும் அறியாமையிலிருந்து விடுதலையை அளிப்பதை அதன் ஒவ்வொரு நிலையிலும் உணரலாம். தியானத்தின் விளைவு என்பது ‘கடைசியாக’ சென்றடையும் இடம் அல்ல. அதன் எல்லா படிகளிலும் நாம் அந்த அளவுக்கான விடுதலையை அடைந்தபடித்தான் இருப்போம்.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 04, 2021 11:35

வருகைகள்- கடிதம்

வாசகர்கள்- ஒரு கடிதம் ஒரு தொடக்கம், அதன் பரவல்

அன்புள்ள ஜெ

சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய கடிதத்தைப் பார்த்தேன். விஷ்ணுபுரம்  இலக்கிய வட்டத்திலும் தங்கள் நட்புவட்டத்திலும் இருந்து பலர் இன்றைக்கு தீவிரமாக எழுத வந்திருக்கிறார்கள். சமீபத்தில் அப்படி சிலரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அவர்களை ஒரு பட்டியல் போட்டோம்.

அவர்களில் பலரை விஷ்ணுபுரம் நிகழ்வுகளில் ஓடியாடுபவர்களாகத்தான் பார்த்திருக்கிறேன். அவர்கள் இப்படி ஆழமான மொழித்திறமையுடன் வெளிப்படுவார்கள் என்று எண்ணியதே இல்லை. அவர்கள் மெல்ல மெல்ல கனிந்து கொண்டிருந்தார்கள் என்று நினைக்க வேண்டியதுதான். சிலரை உங்கள் தளம் வழியாகத்தான் அறிமுகம். நீங்கள் சொன்னதுபோல இவர்களின் படங்களை தொடர்ந்து வெளியிடுவது இவர்களை நினைவுகொள்ள மிக உதவியாக உள்ளது.

மீனாம்பிகை, கதிர்முருகன், சுபா ஆகியோரைப் பற்றி சிவா கிருஷ்ண மூர்த்தி எழுதியிருந்தார். அவர்கள் சமீபகாலமாக வெளிப்பட்டவர்கள். சுனீல் கிருஷ்ணன், சுரேஷ் பிரதீப், விஷால் ராஜா, பாலசுப்ரமணியம் முத்துசாமி, செல்வேந்திரன் ஆகியோரை நான் உங்கள் தளம் வழியாகவே அறிமுகம் செய்துகொண்டேன். அவர்கள் தொடக்க வாசகர்களாக இந்த தளத்தில் எழுதிய கடிதங்களை வாசித்திருக்கிறேன். விஷ்ணுபுரம் விழாவில் சிலரை நேரில் சந்தித்துமிருக்கிறேன். அவர்கள் இன்றைக்கு அறியப்பட்ட எழுத்தாளர்களும், முக்கியமான ஆளுமைகளுமாக ஆகிவிட்டார்கள்.

பத்துநூல்கள் வெளியீட்டில் கிரிதரன் ராஜகோபாலன், சுசித்ரா, ராம்குமார் போன்றவர்களை அறிமுகம் செய்துகொண்டேன். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்ட மொழியும் எழுத்துமுறையும் உடையவர்கள். வருங்காலத்தில் முக்கியமான படைப்புக்களை எழுதப்போகிறவர்கள்.

இன்றைக்கு தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் காளிப்பிரசாத், சுஷீல்குமார், ஜி.எஸ்.எஸ்வி.நவீன், ஆனந்த்குமார், லோகமாதேவி ஆகியவர்களையும் இந்த தளத்திலேதான் அறிமுகம் செய்துகொண்டேன். இந்த தளத்தில் கடிதங்களை எழுதிய பாலாஜி பிருத்விராஜ், பிரதீப் கென்னடி ஆகியோரும் இலக்கியவாதிகளாக அறிமுகமாகியிருக்கிறார்கள்.

உங்கள் தளத்தில் அந்தியூர் மணி எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. அவருடைய கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கருத்துக்களை அவர் தர்க்கபூர்வமாகத் தொகுத்து முன்வைக்கும் முறையும், புதிய வரலாற்றுப் பார்வையும் சிறப்பாக இருந்தன.

வெவ்வேறு சட்டங்களைப் பற்றி செந்தில்குமார் எழுதிய கடிதங்கள் அவர் நல்ல கட்டுரைகளை எழுதுபவர் என்பதை காட்டின. சமீபத்தில் இரம்யா எழுதும் கட்டுரைகளும் கவனிக்கத் தக்கவையாக உள்ளன.

மிகச்சிறந்த மொழியாக்கங்களைச் செய்யும் ஓர் அணியே உங்கள் தளம் வழியாக வந்திருக்கிறது. விஜயராகவன், ஆனந்த் ஸ்ரீனிவாசன், அருணாச்சலம் மகாராஜன் போன்ற சீனியர்களுடன் நரேந்திரன் [நரேன்], பாரி, தாமரைக்கண்ணன், அழகியமணவாளன் என்று ஓர் இளைஞர் வரிசையும் உள்ளது.

இவர்கள் எல்லாம் ஒரே கருத்து கொண்டவர்களோ ஒரே முகாமைச் சேர்ந்தவர்களோ இல்லை. ஒவ்வொருவரும் தனியான சிந்தனைகள் கொண்டவர்கள். ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடும் இருக்கலாம். ஆனால் இந்த பொதுத்தளம் அவர்களைச் செயல்படச் செய்கிறது. அவர்களை அறிமுகம் செய்கிறது. முன்பு எழுத்து, கசடதபற போன்ற இதழ்கள் செய்த பணி இது.

பல பெயர்களை நான் விட்டிருக்கலாம். ஆனால் இத்தனை பேர் இத்தனை தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பது ஒரு சாதனை. அத்துடன் அவர்களெல்லாம் அன்றாட அரசியல் சண்டைகள், முகநூல் வம்புகள் எதிலுமே ஈடுபடாமல் இலக்கியம் மீதான நம்பிக்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பது தமிழில் எப்போதுமே நிகழாத ஒரு அரிய விஷயம். வாழ்த்துக்கள்.

ஸ்ரீனிவாஸ்

அழகியமணவாளன்

கதகளி அனுபவம்

நாவலும் மறைபிரதியும் – பி.கே.பாலகிருஷ்ணன்

நாவலின் பேசுபொருள் -பி.கே.பாலகிருஷ்ணன்

நேரு-வாழ்க்கை வரலாற்றெழுத்திற்கு ஒரு சவால்-பி.கே.பாலகிருஷ்ணன்

ஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி?- [சிறுகதை] மதுபால்

அண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்

தாமரைக்கண்ணன்

சிவ நடனம் – ஆனந்த குமாரசாமி

இந்திய கலையின் நோக்கங்கள்

நரேந்திரன், நரேன்

ஊட்டி இருகதைகளின் முன்னுரை -நரேன்

தாகூரின் கோரா – தேசம், தேசியம், மனிதம்! – நரேன்

ஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்

நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்

டி.ஏ.பாரி

நிலவின் தொலைவு

’மறுசந்திப்பு’ ஐசக் பாஷவிஸ் சிங்கர்- தமிழாக்கம் டி.ஏ.பாரி

நாகரிகத்திலிருந்து தப்பித்தல்- ஐசக் பாஷவிஸ் சிங்கர்

முட்டாள் கிம்பெல்: ஐசக் பாஷவிஸ் சிங்கர்

அஸ்பெஸ்டாஸ் மனிதன்-ஸ்டீபன் லீகாக்

தக்கவைக்கும் இயந்திரம்-பிலிப் கே டிக்

முழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி

பிரபஞ்ச மெளனம்- டெட் சியாங்

அந்தியூர் மணி

மனு ஒரு கடிதம்- அந்தியூர் மணி

இந்து என உணர்தல் – மறுப்பு

 மல்லைப் பேரியாற்றில் அலைவுறும் புணை- அந்தியூர் மணி

திசை தேர் வெள்ளம்-ஊழின் பெரு நடனம்- அந்தியூர் மணி

ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

மரணக்குழி- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

மோட்சம்- சிறுகதை

யாயும் ஞாயும் [சிறுகதை]- ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்

பாலாஜி பிருதிவிராஜ்

அனல் அவிதல் 

நம்முள் இறப்பவை : நிகோலாய் கோகலின் இறந்த ஆன்மாக்கள்-பாலாஜி பிருதிவிராஜ்

விண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம்

டாக்டர் ஷிவாகோ – பாலாஜி பிருத்விராஜ்

தாமஸ் மன்னின் புடன்புரூக்ஸ்

ஓநாயின் தனிமை

லோகமாதேவி

வரவிருக்கும் எழுத்து

நஞ்சின் அழகு- லோகமாதேவி

ஓர் இலை, ஒரு வரலாறு- லோகமாதேவி

மூங்கில் மிகைமலர்வு – லோகமாதேவி

கி.ரா, கஞ்சிக்கிழங்கு- லோகமாதேவி

ஜன்னல் சிறுமி- லோகமாதேவி

வெண்முரசில் மகரந்தம் -லோகமாதேவி

சிவமணியன்

ஒப்புரவு

ஊட்டி நாவல் அரங்கு -சிவ மணியன்

நவீன நாவல் -சிவமணியன் எதிர்வினை

எனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்- சிவமணியன்

பிரதீப் கென்னடி

உயிர்மரம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 04, 2021 11:34

ஆகாயத்தின் நிறம் – சக்திவேல்

அன்புள்ள ஜெ

விக்ரமாதித்யன் என்ற கவிஞரை விஷ்ணுபுரம் விருது இவ்வாண்டு அறிவிக்கப்படவில்லை என்றால் எப்போது கண்டடைந்திருப்பேன் என தெரியாது. இதுவரை அவரது மூன்று கவிதை தொகுப்புகளை வாசித்துள்ளேன். உள்ளத்திற்கு மிக நெருக்கமான கவிஞரை ஒருவரை அறிமுகப்படுத்தியமைக்காக உங்களுக்கு என் நன்றியும் மகிழ்வும்.

இந்த கவிதை தொகுப்புகளில் அவரது முதல் கவிதை தொகுப்பான ஆகாசம் நீலநிறம் நூலில் அடங்கியுள்ள கவிதைகளின் மேலான என் வாசிப்புகளை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இத்தொகுப்பின் அவரது கவிதைகளில் கவிஞனின் கைவிடப்பட்ட நிலை, மனுகுலத்தின் மேல் அவன் கொள்ளும் கனிவு, வாழ்க்கை தரிசனங்கள் பல வெளிப்படுகின்றன. குறிப்பாக எந்த இடத்திலும் கசப்புகளே இல்லை. அவர் குறித்து தளத்தில் வரும் கடிதங்களை வாசிக்கையில் தவறாமல் அவரது குடிக்கும் இயல்பு குறிப்பிடப்படுகிறது. இந்த கவிதைகளில் வழியே நான் கண்டடைந்த விக்ரமாதித்யன் உங்களுடைய மாயப்பொன் கதையில் வரும் நேசையனை போல. கனிந்தவர்.

அவரது கவிதைகளின் பாடுப்பொருட்கள், எல்லைகள் என விமர்சன நோக்கில் கூறுமளவு இன்னும் நான் வளரவில்லை. ஆனால் இங்கு வேறு ஒன்றை கூற வேண்டும். அவரது கவிதை பற்றி உரையாடுகையில் ஒரு சொல் எழுந்தது. அவரது காலக்கட்டத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று. அது அவசியமான கூறுகளில் ஒன்றெனினும் முக்கியமானதாக படவில்லை. ஒருவேளை ஒரு இலக்கிய வரலாற்றாசிரியனுக்கும் சமூகவியல் ஆய்வாளனும் அவை முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் அழகியல் ரசனையுடன் வாசிப்பவனுக்கு எந்த கவிதையும் தன் காலத்தை விட்டு மேலெழுதாலேயே முக்கியமாகிறது.

சங்க கவிதைகளை நோக்கி போக துடிக்கும் என்னை போன்றவன் வெறுமனே அக்காலத்தை அறிய செல்லவில்லை. என்றுமுள மானுட வாழ்க்கையின் தொன்மையான அழகியலையும் தரிசனத்தையும் அறியவே செல்கிறான்.

விக்ரமாதித்யன் அவர்களை நம் பண்பாட்டின் கவிஞன் என்றே குறிப்பிட தோன்றுகிறது. ஏனெனில் அவரது கவிதைளில் ஆழ்ந்து செல்ல இந்திய தமிழ் பண்பாட்டின் வாழ்க்கை புலத்தில் வாழ வேண்டியுள்ளது. இன்றைய உலகளாவிய நுகர்வின் அடிப்படையிலான பொது ரசனைக்கு முன் நம் கவிஞர் என பெருமிதமாக விகர்மாதித்யனை முன்வைக்கலாம்.

விக்ரமாதித்யன் அவர்களுக்கு விருது பெறுவதற்காக அன்பு கொண்ட வாசனாக வாழ்த்து கூறுகையிலேயே அவரது பாதம் பணிந்து ஆசியும் வேண்டுபவன் நான்.

ஆகாசம் நீலநிறம் தொகுப்பில் உள்ள ஏராளமாக கவிதைகள் எனக்கு பிடித்திருந்தாலும் எழுதுமளவுக்கு நெருங்கி அமைந்த கவிதைகளின் மேலான என் வாசிப்பை பகிர்கிறேன். இவை முழுக்க சரியானவையா என்பதில் எனக்கு சற்று ஐயமும் உள்ளது.

இவையே நிறைய கவிதைகள் என்பதில் ஐயமில்லை. அதற்காக பொறுத்து கொள்ளவும். இறுதியாக கடல் என்ற தலைப்பின் கீழ் உள்ள குறுங்கவிதைகளை குறித்து சில எண்ணங்கள்.

இந்த கவிதைகளை வெவ்வேறு புகைப்படங்களை இணைத்து புதிய காட்சிகளை உருவாக்குவது போல வாசிக்க முடிகிறது. தனித்தனியாகவும் சேர்த்தும் வாசிக்கையில் புதுப்புது வாசிப்புகள் கிடைக்கின்றன.

இந்தியக் குழந்தைகள்

குழந்தைகள் சினிமா

குழந்தைகள் இலக்கியம்

குழந்தைகள் தினமெல்லாம்

எந்தக் குழந்தைகளுக்கு ?

 

இவன் பார்த்த குழந்தைகளுக்கு

நேற்றைய வாழ்க்கைதான்

இன்றைக்கும் நாளைக்கும்

 

எதிர்காலத்தில் மட்டும்

என்ன அற்புதம் நிகழ்ந்துவிடும் ?

 

ஓட்டுப்போட மட்டும்

உரிமை கிடைத்திருக்கும்

இவனைப் போல

 

அப்போதும்

அவர்கள் கனவில் வருகிறதெல்லாம்

வண்ணத்துப்பூச்சிகளாக அல்லாமல்

சோற்றுப்பருக்கைகளாகத்தான் இருக்கும் .

நம் குழந்தைகளுக்கு என்றாவது சோறின் அருமை புரிந்திருக்குமா என்ற கேள்விக்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. பள்ளியில் செங்கல்சூளையில் இருந்து வரும் பிள்ளைகள் மட்டுமே பெரும்பாலும் அந்த மதிய உணவை முழுதாக உண்பர். அவர்களுக்கு தெரியும் உணவென்றால் என்னவென்று.

இந்த கவிதையை வாசிக்கையில் இணையாகவே உங்கள் கட்டுரை ஒன்றில் வாசித்த தேவதேவனின் யாரோ என்று எப்படி சொல்வேன் என்ற வரி நினைவில் எழுந்தது ஜெ. கவிஞன் மானுட அறத்திற்கு எழுந்த உயர் தருணம். ஓட்டுப்போட மட்டும் எத்தனை கூர்மையான சொற்கள். நாம் ஒரு தேசமாக அந்த குழந்தைகளின் வண்ணத்துப்பூச்சிகளை என்றென்றைக்குமாக நசுக்கியவர்கள். சினிமா, இலக்கியம், தினம் இவையெல்லாம் யாருக்காக ? இது நம் மனசாட்சியை துளைக்கும் வாள். எதிர்காலத்தில் மட்டும் என்ன அற்புதம் நிகழ்ந்துவிடும்? கையறு நிலையில் கண்ணீரோடு நிற்கிறேன்.

எதிர்பார்ப்பு

நாய் மட்டும் வாலாட்டாவிட்டால்

நாமதற்கு

ரொட்டித்துண்டு போடுவோமா  ?

விக்ரமாதித்யனின் கவிதைகள் நெருஞ்சி முள் போல குத்தும் போது பெரிதாக வலிப்பதில்லை. ஆனால் நெடுநாட்கள் நமக்குள் இருந்து ஊமை வலி தருபவை என்று வாசகர்களில் ஒருவர் கூறியிருந்தார். அது எனக்கு இக்கவிதையில் நிகழ்ந்தது.

நாம் தான் எத்தனை கயமைவாதிகள். எதையாவது எதிர்ப்பார்ப்பில்லாது செய்ய முடியுமா நம்மால் ? அது உலகியலோ, ஆன்மீகமோ எங்கும் நமக்கு ஏதோ ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. எதிர்ப்பார்ப்பில்லாமல் ஆவதும் மனிதன் உருவாக்கி கொண்ட இலட்சிய எதிர்ப்பார்ப்பு. அந்த இலட்சியம் எத்தனை அருகாமையிலும் தொலைவிலும் உள்ளதென்றால் தெருவில் இறங்கி நாய்களை பார்த்தால் போதும். பழகி விட்டுசென்று பலநாள் கழித்து வருகையிலும் நாய்களின் நேசத்தை காணலாம். அது எதற்காவும் அல்ல, நாமிருக்கிறோம் நண்பா என்பதாக.

பார்வை

தன்னின் சிகரெட் நுனி

விரல்களில் சுட

எதிர்நிற்கும் சிநேகிதனின்

முக்கால் சிகரெட்

விழிகளில் பட

காலத்தில் இருந்து வெட்டியெடுத்தவை காலமின்மையை, அதன் வடிவான முடிவின்மையை கொண்டு விடுகின்றன இந்த கவிதை போல். ஒரு எளிய வாசிப்புக்கு பொறாமை என்று தோன்றலாம்.

ஆனால் செயல் என்று இயற்றும் அத்தனையும் எவ்வகையிலோ புகையும் சிகரெட்டுகள் தான். என்றோ ஒரு நாள் காற்றில் கரைபவை. உடன் நம்மையும் கரைப்பவை நம்முடையவை தீரும்போது  நேசத்திற்குரியவருடைதை வாங்கி வாழ விழைவு கொள்கிறோமோ!

வாழ்க்கை

பறத்தல்

சந்தோஷமானது

ஆனால்

பட்டுப் பூச்சிகள்

மல்பரி இலைகளில் தூங்கும் .

வாழ்க்கை என்ற தலைப்பிட்ட கவிதை அதை குறித்த கூற்று போல் உள்ளது. இந்த வரிகளை சாமனியனும் சாதனையாளனும் என்று விரித்தால் எல்லோருக்குள்ளும் பறக்கும் விழைவு உள்ளது, சிலரில் வெளிப்படுகிறது என உணர்த்துகிறது.

அல்லது இப்படியும் வாசித்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. நம் ஆழத்து நிறைவேறா விழைவுகளுக்கும் அதற்கு மாறாக அமைந்த இயல்புகளுக்கும் ஆன முரணோ என்று.

சிதைவுகள்

நண்பா ,

என்னைக் காயப்படுத்தாதவர்கள்

இங்கே யார்தான் இருக்கிறார்கள் ?

 

குழிமுயல் மீது

கல்லெறிந்து விளையாடாத

சிறுவர்கள் எங்கே இருக்கிறார்கள் ?

 

வண்ணத்துப் பூச்சியின்

இறக்கைகளைப் பிய்த்து

வேடிக்கை பார்க்காமல்

வளர்ந்த மனிதன் எங்கேயிருக்கிறான் ?

 

மரமேறி

பறவை முட்டைகளைத் திருடியெடுத்து

விளையாடுவது

சிறுபிராயத்து சந்தோஷங்கள் இல்லையா ?

 

நண்பா ,

எனது கவிதைக் கனவுகளைத் தீய்த்தவர்களை

நான் என்ன செய்ய முடியும் ?

 

லௌகிக வாழ்க்கை நெருக்கடியில்

மனசின் பாஷையை

யார் புரிந்துகொள்ளப் போகிறார்கள் ?

 

மருந்துக்காக

இறகுகளுக்காக

மயில்களைக் கொல்பவர்கள்தாம் எப்போதும்

மண்ணில் ஜெயிக்கிறார்கள் இல்லையா ?

 

என்ன செய்யலாம் ?

வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள

ஆத்மாவை தொலைத்துவிடலாமா ?

 

ஞானமும் கல்வியும் தேவையில்லாத

இந்த மிலேச்ச தேசத்தில்

எப்படித்தான் வாழ்வதாம் ?

நண்பா ,

இனிமேல்

எந்த சூரியசந்திரன்

என்னைப் பூக்கவைக்கும் ?

 

எனக்கில்லை

என் சந்ததிக்கேனும்

தப்பித்தல் அல்லாமல்

விடுதலை எப்போது பூக்கும் ?

கவிஞனின் துயரம் என்பது ஒரு பண்பாட்டின் ஆதாரமான நுண்ணுள்ளத்தின் துயரம். அவன் வாழ்வு சரியில்லை என்பது இங்குள்ள வாழ்வில் சிறப்பில்லை என காட்டுவது. எங்கோ அது நம் ஆழத்து துயரமும் கூட. நம் துயர்கள் நமக்கு தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லை. சாமனிய இந்தியனின் வாழ்வில் நிறைவை காண்பதில்லை. எங்கோ அவனுக்கு அளிக்கப்பட வேண்டிய பண்பாட்டு கல்வி இல்லை. இந்த கவிதை ஏதோ ஒருவகையில் இதே தொகுப்பின் முதல் கவிதையான சுதந்திர இந்தியாவை நினைவூட்டுகிறது.

குழிமுயலை அடித்தல், வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கையை பிய்த்தல், பறவை மூட்டைகளை திருடுதல் முந்தைய தலைமுறைகளின் சிறுவர்களில் பெரும்பாலனோர் செய்தவை. நானே கூட அவற்றை கண்டவன், சிலதை செய்தவன். அறியாமையின் பருவத்தில் செய்யும் மூன்றையும் கூறி தன் கனவுகளை தீய்த்தவர்களை அவர்களுக்கு ஒப்பு காட்டுகையில் ஒரே வீச்சில் கவிஞனின் துயரம் கனிவும் வந்து முகத்திலறைகிறது. அடுத்த வரிகளில் மயில் சுடுபவனை சுட்டி அதற்கடுத்தே அத்மாவை தொலைத்துவிடவாகல்வியும் ஞானமும் தேவையில்லாத இந்த மிலேச்ச தேசத்தில்வரும் வரிகளில் அவன் கோபமும் எந்த சூரிசந்திரன் என்னை பூக்கவைக்கும்என்ற கையறு நிலையும் சோகம் எனக்கில்லை என் சந்ததிக்கேனும் என்ற வரிகளில் கனிந்த பெருந்தந்தையின் சோகத்தையும் ஆவலையும் மனதில் ஏற்றிவிடுகிறது.

நண்பா எனும் விளியில் நம் உளத்திற்கு அருகமர்ந்து தன் சோகத்தை சொல்லும் கவிதை இறுதியில் தன் நிலத்தின் பெருஞ்சோகத்தை அடைந்துவிடுகிறது.

வெறுமை

தேரோடும் வீதியிலே

தினம் தினமும்

நாய்களும் பன்றிகளும்

எருமை மாடுகளும்

மொட்டை வண்டிகளும்

இரவு வேளையில்

தடிக் கழுதைகளும்

எப்பவுமே

ரசனைகெட்ட மனிதர்களும்

போவது வருவதை

பார்த்துச் சலித்துப்

பல வருஷமாச்சு

அந்த தேர் வீதியில் இருந்த நாய்களும் பன்றிகளும் எருமை மாடுகளும் தடிக் கழுதைகளும் அங்கு வாழ்ந்த மனித ஜாதிகளாக கூட இருக்கலாம்.

ஆனால் அவைகளை அவைகளாக கற்பித்து கொண்டாலும் நன்றாய் இருக்கிறது. இந்த கவிதை இயக்கமின்மையை தான் நாம் வெறுமை என்று உணர்கிறோமா என எண்ணச் செய்கிறது. வீடுகளோ, தேரோ, அது நிற்கும் கோயிலோ அல்ல, அங்கு நிகழும் வாழ்வியக்கம் தான் வெறுமையை நிரப்புகிறது என தோன்றுகிறது.

சுவடுகள்

போனவருஷச் சாரலுக்கு

குற்றாலம் போய்

கை ( ப் பேனா மறந்து

கால் ( ச் செருப்பு தொலைந்து

வரும் வழியில்

கண்டெடுத்த

கல் வெள்ளிக்

கொலுசு ஒண்ணு

கற்பனையில் வரைந்த

பொற்பாத சித்திரத்தை

கலைக்க முடியலியே இன்னும்

குற்றாலநாதன் கூற்றனை சுட்டெரித்த புராணகதையை உடனழைத்து கொண்டு இந்த கவிதையை வாசித்தால் வித்தியாசமான ஒரு பொருள் வருகிறது. கைப்பேனா மனமென்று கால் செருப்பு உடலென்றும் இரண்டும் வழி மறந்து சென்ற வழியில் தான் காலத்தை கடந்த கல் வெள்ளி கொலுசு ஒண்ணை இட்டாடும் அம்மையப்பனின் பொற்பாதம் கண்டேன். கலைக்க முடியலியே இன்னும் என்று உக்கிரம் தாளாது தவிக்கிறேன்.

நிலை

பொய்யொன்றும் இல்லை

பிராண சிநேகம்தான்

 

என்றாலும்

வேறு வேறு

முளைக்குச்சிகளில்

கட்டப்பட்டிருக்கிறது

நம் வாழ்க்கை

 

உன்

மேய்ச்சல் நிலத்தில்

நானும்

என் மேய்ச்சல் நிலத்தில்

நீயும்

எப்படி முடியும்

மேய

 

உனக்கென்று

வொரு துரும்பை

நான் தூக்கிப்போட்டாலும்

எனக்கென்று

வொரு துரும்பை

நீ தூக்கிப்போட்டாலும்

நமது

விரல்கள் ஒடிந்து போம்

விலா எலும்புகள் முறிந்து போம்

 

மலையேறும் வாழ்க்கையில்

மஹா உன்னதம் தேடியென்ன லாபம் ?

 

சாரமற்ற வாழ்க்கையை

சுமந்து திரியலானது

யாரிட்ட சாபம்

 

ஸரிகமபதநி

மாறாத ஸ்வரம்

 

என்றாலும்

தும்புகளை அறுத்தெறிய

துணிச்சலில்லை

தொழுவங்களை விட்டால்

புகலிடமுமில்லை

 

கொஞ்சம் கனவுகள்

கொஞ்சம் கவிதைகள்

கொஞ்சம் முலைகள்

கொஞ்சம் சித்தாந்தம்

இவற்றுக்கு மேல் பறக்க

யாருக்குச் சிறகுகள் இருக்கு .

ஒருவாசிப்பில் கவிஞனின் உண்மையும் சாமனியரின் உண்மையும் மோதிக்கொள்கையில் வரும் வலியையும் இரண்டு முளைக்குச்சிகளில் கட்டப்பட்ட மாடுகளை போல சேரவியலா நிலையை காட்டுகிறது.

இந்த கவிதையின் இறுதி பத்தியை சற்று அகலே வைத்துவிட்டு வாசித்தால் பெரும்பாலும் வெவ்வேறு வகையான ஒரு சேரவியலா வாழ்க்கை அம்சத்தை நாமனைவருமே கொண்டுள்ளோம் என தோன்றுகிறது.

அப்புறம் தும்புகளை அறுத்தெரிய துணிச்சலில்லை என்கையில் நாம் பயந்து சேராமல் போகிறோம் என்கிறது. இல்லாவிட்டால் இங்குள்ள மாபெரும் ஒத்திசைவு எப்படி நிகழ்ந்து கொண்டு இருக்கிறது?

  ஆகாசம்   நீலநிறம்

கிழக்கு வந்து

கூப்பிட்டுப் போகும்

சிந்திச் சீரழித்ததை

சேர்த்து விடலாமென்று

நம்பிக்கை தரும்

நல்ல புத்தி சொல்லும்

 

மேற்கு

கொஞ்சம் ஆறுதலாக

காத்திருக்கச் சொல்லும்

முடியாதென்றால்

போய்த் தொலை வென்று கோபிக்கும்

 

தெற்கு

மனத்துக்குள் நினைக்கும்

வர வேண்டிய இடம் தப்பி

போவதுதான் முடியுமோ இனி யென்று

நிச்சத்துடன் எதிர்பார்த்திருக்கும்

 

வடக்கு

திரும்பத்திரும்ப அழைத்து

தொந்தரவு செய்யும்

இப்போதைக்கு

என்னிடம்  வந்து இரு   வென்று

கட்டாயப்படுத்தும்

 

திசைமுடிவுக்குத் தெரிவதெல்லாம்

ஆகாசம்

நீலநிறம்

நாம் திசைகளை அறிவது ஒளிமுதல்வோனை கண்டு. அவன் எழுச்சியின் மறைவின் நிலைநிற்றலின் இல்லாதாதலின் என திசைகளுக்கு பொருள் நோக்கி திறந்தது கவிதை. இன்னொரு முறை வாசிக்கையில் இந்திரனும் வருணனும் யமனும் குபேரனும் திசைகளுடன் இணைந்தனர். இரண்டில் எதுவானலும் திசைமுடிவுக்குத் தெரிவதெல்லாம் ஆகாசம் நீலநிறம் என்ற ஈற்றுவரி பொன் மகுடமே.

அகன்ற நீல பெருவானின் கீழ் அமர்கையில் உணர்வது மகத்தான ஓன்றை. அது முடிவின்மையாக, பேராழமாக, ஏதுமில்லாமையாக, யாவும் உள்ளதாக இருக்கிறது.

தக்ஷ்ணாமூர்த்தியான

மாமிசம் தின்னாமல்

சுருட்டுப் பிடிக்காமல்

பட்டை யடிக்காமல்

படையல் கேட்காமல்

உக்ரம் கொண்டு

சன்னதம் வந்தாடும்

துடியான கருப்பசாமி

இடையில் நெடுங்காலம்

கொடை வராதது பொறாமல்

பதினெட்டாம்படி விட்டிறங்கி

ஊர்ஊராகச் சுற்றியலைந்து

மனிதரும் வாழ்க்கையும்

உலகமும் கண்டு தேறி

அமைதி கவிய

திரும்பி வந்தமரும்

கடந்தகால கைத்த நினைவுகள் வருத்தவும்

எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்

ஒரு கவிதையை இப்படி வாசிக்கலாம் என்பது சரியாவென்று தெரியவில்லை. கீழிருந்து மேலாக திறந்தேன். மனிதரும் வாழ்க்கையும் உலகமும் கண்டு தேறி அமைதி கவிய அமர்கையில் தக்ஷ்ணாமூர்த்தி. கடந்தகால கைத்த நினைவுகள் வருத்தவும் எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும் செய்கையில் வாழ்வு நோக்கி எழும் துடியான கருப்பசாமி.

கடல்

வாழ்க்கை

தேவடியாளின் வசீகரத்துடன்

இருத்தி வைத்திருக்கிறது .

விக்ரமாதித்யனில் உள்ள குடிகாரன் சொன்னது போல் உள்ளது இக்கவிதை. எத்தனை அல்லல்பட்டாலும் அஞ்சு நிமிஷ சுகத்துக்கு தகும். வாழ்க்கை முழுக்க உச்சகண சந்தோஷங்களுக்காக நாம் அல்லல்படுவதில் நட்டமில்லை.

நேத்து ராத்திரி

பார்த்த கும்பக்காரி

உதயத்துக்கு முன்ஜாமம்

படுக்கையில் சர்ப்பம்

முந்தைய கவிதையில் வந்த குடிகார கவிஞர் இங்கும் தொடர்கிறார். இதை வாசிக்கையில் அந்த பாடல் நினைவில் வருவது தவிர்க்க முடியவில்லை. ஆனால் காமம் ஒருவனை விழுங்கும் கணத்தை கண்ணெதிரே நிற்க வைக்கிறது,.

*

இன்மைகள்

இன்மைகள்தாம்

இவனை

குழப்பமிக்க கலைஞானக்கிற்று

 

தன்னிலும் தன்னை சுற்றியும் இன்மையை உணராதவன் கலைஞானவதில்லை. குழப்பம் அதன் உபவிளைவு. உயிர்நாடியும் கூட.

குழப்பம்

ஞானம் வளர்க்கும்

 

தெளிவாக எற்றுகொள்பவர்களுக்கு ஞானம் கிடைப்பதில்லை. குழப்பத்தில் ஆழ்ந்து வாழ்க்கையை குடைபவர்களுக்கு கிடைப்பது அது.

*

சிதைவும்

சீரழிவும்

கலைஞனுக்கில்லை

 

கலை திகழும் கணத்தில் இருப்பவன் கலைஞன். காலத்தை கடப்பதே கலை. காலமோ அரிப்பவற்றால் ஆனது. அதற்கப்பால் கலைஞன்.

*

வார்த்தைகள்

புழங்கித் தேய்ந்த

ஏனங்கள் போல

 

வார்த்தைகளில்

நம்பிக்கையிழந்த

அவன்

கவிஞன்

 

இந்த இருகவிதைகளையும் சேர்த்தே வாசித்தேன். புழங்கிய ஏனங்கள் புதுப்பொருளை ஏற்காதவை அல்லது நாம் அப்படி செய்வதில்லை. கவிஞர்கள் அந்த வார்த்தை எனும் ஏனத்திற்கு ஈயம் பூசி புதிதாக்கி தருகிறார்கள்.

*

இந்த்ர சபை

ராஜ சபை

கனக சபை

தாம்ர சபை

சித்ர சபை

பஞ்ச சபைகள்

கண்ட துண்டு

கலந்த தில்லை

இக்கவிதையை இரு பொருள் சாத்தியங்களை கொண்டு வாசித்தேன். ஐஞ்சபைகளைகளில் அவன் ஆடும் ஐவகை பிரபஞ்ச நடனங்களை தன் கலை உச்சத்தில் கண்டு ஏங்கி கலக்க முடியாத ஏக்கமாக. அல்லது கலந்த தில்லை என்பதில் நேராக தில்லை என எடுத்து தானும் மறைகையில் அவனில் கலக்கிறான் என. சைவம் அறிந்தவருக்கு இன்னும் விரிவாக பொருளாவது இக்கவிதை.

*

கனி வெறுத்து

காய் வெறுத்து

பூவும் வெறுத்து

போகக் கூடாதென்றான்

பூர்ணன்

கனியில் தொடங்கி பூ வரை செல்வது பூர்ண பயணம். முழுவதையும் வெறுத்துவிட்டால் முழுமை ஏது

அன்புடன்

சக்திவேல்.   

பறக்கும் வெயில்- சக்திவேல்

அறிவியக்கவாதியின் உடல் சக்திவேல்

சந்திப்பு, ஒரு கடிதம் சக்திவேல்

வாசகனிடம் அணுக்கம் சக்திவேல்

சீவகசிந்தாமணி, உரையாடல் சக்திவேல்

இளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா? சக்திவேல்

வாசகனும் எழுத்தாளனும் சக்திவேல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 04, 2021 11:33

ஈழமக்களுக்கு சலுகைகள் – கடிதங்கள்-2

ஈழ அகதிகளுக்குச் சலுகைகள் – நன்றி தேசமற்றவர்கள்

ஆசிரியருக்கு வணக்கம்,

தேசமற்றவர்கள் கடிதம் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி தளத்தில் கண்ணீர்மல்க வாசித்தவுடன் முத்துராமன் அண்ணாவை அழைத்து அரசாங்கம் தான் ஏதாவது செய்ய வேண்டும்.ஆசான் குறிப்பிட்டுள்ளதை போல் அரசில் காதில் இது எட்டட்டும் என்றேன்.

முத்துராமன் அண்ணாவை உங்கள் மூலம் அறிந்தபின் அவர் ஏழை மாணவர்களின் கல்விக்காக தனது சொந்தப் பணத்திலும்,நண்பர்களிடம் நிதி பெற்றும் தன்னலமில்லா அவர் செய்யும் பணியை நான் அறிவேன். ஒரு அறகட்டளை யில் ட்ரஸ்டியாக இருந்து சில உதவிகள் செய்து வருவதால் நடைமுறையில் உள்ள அனைத்து கஷ்டங்களும் அறிவேன்.நீங்கள் ஒருமுறை சொன்னதுபோல் “உதவி செய்யத்துல டெய்லி ஒருத்தர மன்னிக்கணும் இல்லேன்னா உதவி செய்ய முடியாது”என.

முத்துராமன் ஈழ மற்றும் ஏழை மாணவர்களின் கல்விக்காக தன்னை அர்பணித்து கொண்டார்.அவரின் ஈழ அகதிகள் பற்றிய கடிதமும்,அரசின் செவிகளுக்கு இது போய் எட்ட வேண்டும் எனும் உங்கள் பதிலும் இன்று அரசை ஈழ தமிழர்களுக்காக முதல் அடியை எடுக்க வைத்துள்ளது.உங்கள் தளம் மூலமே அரசின் அறிவிப்பை கண்டேன்.தேசமற்றவர்களின் வாழ்வின் இனியாகிலும் ஒளி பிறந்து,அமைதியாய் பாதுகாப்பை வாழ வேண்டுவதோடு.

அரசின் செவிகளுக்கு கொண்டு சேர்த்த உங்களுக்கும்,முத்துராமனுக்கும் நன்றி.

ஷாகுல் ஹமீது .

முத்துராமன் முத்துராமன்

அன்புள்ள ஜெமோ

நான் உங்கள் அரசியல் கருத்துக்களுடன் கடுமையான முரண்பாடு கொண்டவன். திராவிட இயக்க அரசியலை இந்தியாவின் முக்கியமான எதிர் அரசியல் என நினைக்கிறேன். இன்றைக்கு உலகம் முழுக்க தேவைப்படுவது எதிர் அரசியல்தான். ஏனென்றால் மைய அரசியல் எல்லாமே மக்களை ஒடுக்குவதாகவும் ஏற்கனவே ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கு மேலும் ஆதிக்கம் அளிப்பதாகவுமே உள்ளது.

அது ஒரு பக்கம். ஆனால் ஈழ மக்களுக்காக நீங்கள் தொடர்ந்து எழுதிவருவதும், உங்கள் நண்பர்களின் அறக்கட்டளை செய்துவரும் உதவிகளும் மிகமுக்கியமானவை என நினைக்கிறேன். இத்தனைபேரை உளப்பூர்வமாக பாதிக்கவும் அவர்களைச் செயலில் ஈடுபடுத்தவும் உங்கள் எழுத்துக்களால் முடிகிறது என்பது ஆச்சரியமான விஷயம்தான். எழுத்தை எவ்வகையிலும் உங்கள் சுயமுன்னேற்றத்துக்குப் பயன்படுத்தாமல் பொதுநலத்துக்காக மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். ஆகவே பொதுநலம் நாடி பணியாற்றும் பலருக்கு ஆதர்சமாக இருக்கிறீர்கள். ஆனால் அவர்களைத்தான் நீங்கள் திரும்பத்திரும்ப முன்னிறுத்துகிறீர்கள். இதெல்லாம் வணக்கத்திற்குரிய செயல்கள்.

ஈழமக்களுக்கான உதவிகளைச் செய்ய தமிழக அரசுக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன. மனிதாபிமான அடிப்படையில் ஏதாவது செய்யலாம். ஆனால் இங்கே ஈழ அரசியல் பேசுபவர்கள் பொறுப்பில்லாத சிறு கும்பல். அவர்கள் எந்த நல்ல திட்டத்தையும் ஏற்க மாட்டார்கள். கூடவே வேண்டுமென்றே ஒன்றிய அரசுக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிராக எதையாவது சொல்லிவைப்பார்கள். அவர்களுக்கு இழப்பதற்கு ஒன்றும் கிடையாது. அதனால் வடக்கே உள்ளவர்கள் மொத்த தமிழர்களையும் பிரிவினைவாதிகள் என்றும் வன்முறையாளர்கள் என்றும் நினைப்பார்கள். தமிழக ஆட்சிக்குச் சிக்கல் வரும். என்ன இருந்தாலும் ஒன்றிய அரசின் உதவியுடன் நலத்திட்டங்களைச் செய்யவேண்டிய நிலையில்தான் தமிழக அரசு உள்ளது.

இந்தவகையான சிக்கல்களை வேண்டுமென்றே உருவாக்குகிறார்கள் இங்குள்ள சிறுகுழுக்கள். ஆகவே அரசுகள் கவனமாக இருக்கின்றன. இந்த அரசு இந்த கொசுக்கூட்டத்தை பொருட்படுத்தாமல் ஈழமக்களுக்கு உதவிகளும் நியாயமும் வழங்குவது போற்றற்குரியது.

என்.ஆர்.தியாகராசன்

ஒரு வாழ்வுரிமைக்கோரிக்கை

ஈழ மாணவர்களுக்கு உதவி

இலங்கை அகதிகள் குடியுரிமை – எதிர்வினைகள்

முந்நூறில் ஒருவர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 04, 2021 11:31

குரோதம்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

வண்ணக்கடலில் இருக்கிறேன்.  காளாத்தி குகையில் இடநெறி சிவப்படிவர்கள் பலர் வெறிகொண்டு சூலம் ஏறினர்.  இளநாகனின் அச்சம் இன்று என்னிடமும் சற்று இருக்கிறது.

”இளைஞரே காமம், குரோதம், மோகம் என்னும் இம்மூன்று இருள்களில் காமம் இன்னொரு ஆன்மாவைச் சார்ந்தது,   மோகமோ புறவுலகைச் சாரந்தது. எதையும் சாராமல் தன்னுள் தானென நிரைந்திருப்பது குரோதமேயாகும்”

அனைத்தையும் அவியாக்கி எரிந்தெழும் நெருப்பான அது துரியோதனனைப் பற்றுகிறது.  அவனிடம் இருந்து மற்ற கௌரவர்கள் அனைவரிடமும் பற்றுகிறது.  விருகோதரனாகிய பீமனை அச்சம் கொள்ளச்செய்கிறது.  எதைக்கொண்டு குரோதத்தை எதிர்கொள்வது? அன்பைக் கொண்டு என்பது இங்கு அபத்தம்தான்.  தர்ம-அர்த்த-காமம் – இன்னொரு ஆன்மாவைச் சார்ந்த காமம், புறவுலகைச் சார்ந்த அர்த்தம் இரண்டும் தவிர்த்து தர்மத்தை குரோதத்தின் எதிர்நிறுத்தும் விளையாட்டு இங்கு துவங்குகிறது.  தர்மம் தானும் குரோதம் கொள்ளாமல் குரோதத்தை எதிர்கொள்ள இயலாது.  குரோதமும் பொய்யாகவேனும் தனக்கான தர்மத்தைக் கற்பித்துக் கொள்ளாமல் தர்மத்தை எதிர்கொள்ள இயலாது.

இன்றும் பிறவற்றை அழித்து தம் அதிகாரத்தை உலகில் நிறைத்துப்பரவத் துடிக்கும் அரசியல், அடிப்படைவாத வெறி என எல்லாப்பக்கமும் இயக்கும் விசை குரோதம் தானே? எல்லாத் தரப்பிலும் குரோதம் உண்மையாகவே இருக்கிறது ஆனால் எல்லாத் தரப்பின் தர்மத்தின் உண்மைத்தன்மையை யார் உறுதிசெய்வது?

உண்மையுள்ள குரோதங்கள் மோதட்டும் அல்லது கூட்டுத்தற்கொலை செய்துகொள்ளட்டும் உண்மையுள்ள தர்மம் எது என்பதை விண்ணாளும் அப்பேராற்றல் எஞ்ச எடுத்து நிறுத்தட்டும்.

உலக நிகழ்வுகளுக்கு எங்காவது எவ்வாறாவது (அது ஒருபோதும் எவ்வகையிலும் பயன்தரப்போவதில்லை என்றபோதும்) எதிர்வினை ஆற்றவேண்டும் என்ற பொருளற்ற மனத்தவிப்பை விலக்கிநிறுத்தி சாதகம் ஆகிறது வெண்முரசு.

”இருளாகவும் ஒளியாகவும் இருப்பவனை எவ்வழியில் அறிந்தாலும் விடுதலையே என்கிறார்கள் இடநெறியினர்”

மகாகுரோதரூபனிடம் அல்லாமல் யாரிடம் இருந்து மனிதர்கள் குரோதம் பெற்றுக்கொள்ளமுடியும்? எரிச்சலுள்ள தேவனிடம் அல்லாமல் யாரிடம் மனிதர்கள் எரிச்சல் பெற்றுக்கொள்ளமுடியும்?

ஜார்ஜ் குர்ட்ஜிப் கூட சொல்கிறாரே “Humanity is the earth’s nerve-endings through which planetary vibrations are received for transmission”

என்னமோ இந்த குரோதம் -அதிகார அரசியல் மதவெறி எல்லாம் மனிதரின் சொந்த திறன் போல ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்? ஆடல்வல்லானுக்குத் தெரியாதா எப்படி ஆட்டத்தை மாற்றுவது என்று? எப்போது ஆட்டத்தை நிறுத்துவது என்று?

அன்புடன்

விக்ரம்

கோவை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 04, 2021 11:30

September 3, 2021

கேரளப் பெண்வழிச் சமூகமும் சசி தரூரும்

ஆசிரியருக்கு,

நாயர் பெண்களின் உடல் சுதந்திரம் பற்றி ஒரு கேள்வி. பெருமாள் முருகன் வழக்கு போல் கேரளாவிலும் ஒரு வழக்கு. ஆனால் இங்கு நடந்தது போல், ஒரு ஜாதியின் போராட்டம், மிரட்டல், எழுத்தாளரின் பேனாவை தொட மாட்டேன் என்ற சபதம், கருத்து சுதந்திரம் முக்கியம்தான் ஆனாலும்… என்று பிரபலங்களின் பேட்டி, பல வருடங்களுக்கு முன் எழுதப்பட்டிருந்தாலும், திடீரென்று கவனம் பெற்று அந்த வருட புத்தகக் கண்காட்சியில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட புத்தகம், அதன் ஆசிரியர் இந்திய அளவில் விருது பெற தகுதியான தமிழ் எழுத்தாளராக மாறியிருப்பது என்று எந்த அதிரடி திருப்பங்களும் அங்கு நடப்பதாக தெரியவில்லை.

சந்தியா ஸ்ரீகுமார் என்ற நாயர் பெண், சசிதரூர் தனது தி கிரேட் இந்தியன் நாவலில், (The Great Indian Novel) நாயர் பெண்களின் கற்பை, கண்ணியத்தை, ஒழுக்கத்தை இழிவுபடுத்தும் வகையில் எழுதியுள்ளதாக குற்றம் கூறி அவர் மேல் திருவனந்தபுர முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். அவ்வழக்கை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு சசிதரூருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

அவர் வழக்கு தொடுப்பதற்காக கூறும் காரணமே சுவாரசியமானது. அவருக்கு நெருக்கமான ஒருவர் ஒருமுறை, சும்மா இருக்கிறாயா அல்லது வீட்டிற்கு வெளியே ஏதேனும் செருப்பு உள்ளதா என்று கேட்டுள்ளார். பாவம், அப்போது அவர் என்ன கேட்கிறார் என்று புரியவில்லை. தற்போது சசிதரூரின் நாவலை படிக்கையில்தான் அதன் அர்த்தம் புரிந்துள்ளது. நாவலில் இவ்வாறு வருகிறது “In Kerala the men of the Nair community only learn that their wives are free to receive them by seeing if another man’ slippers aren’t outside her door.” நாயர் ஜாதியை சேர்ந்த ஆண்கள், தங்கள் மனைவியிடம் தாங்கள் அணுகலாமா, இல்லையா என்பதை வேறு ஆண்மகனின் செருப்பு வீட்டிற்கு வெளியே உள்ளதா, இல்லையா என்பதின் மூலம் தான் தெரிந்து கொள்வார்கள்.

இதை படித்த சந்தியா ஸ்ரீகுமார் உடனடியாக வெகுண்டு எழுந்து, உண்மைக்கு புறம்பான வகையிலும், நாயர் பெண்களை இழிவு படுத்தவேண்டும் என்ற கீழ் எண்ணத்தோடும் மேற்சொன்ன கருத்தை எழுதிய சசிதரூர்மீது வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கிற்கு எதிராக கேரளா உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளார் சசிதரூர். அதில் அவர், தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிமினல் அவதூறு வழக்கு சட்டப்படி நிலைக்கத் தக்கதல்ல எனவே அதை ரத்து செய்யவேண்டும் என்று வேண்டியுள்ளார்

அதற்காக முன்வைத்த காரணங்கள்,

அந்த நாவல் 1982 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. கால வரம்பு தாண்டி சுமார் 40 ஆண்டுகள் கழித்து இந்தவழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நாவலில் உள்ள புகார்தாரர் கூறும் வாக்கியமானது எனது கற்பனையில் தோன்றிய ஒன்றல்ல. நாயர் பெண்களின் உடலுறவு சார்ந்த சுதந்திரம் நன்கு அறியப்பட்ட ஒன்று மேலும் பல்வேறு வரலாற்று குறிப்புகளைக் கொண்டு பல வரலாற்று ஆய்வாளர்கள் அதை விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார்கள். முக்கியமாக பெரும்வரலாற்று ஆய்வாளர் திரு. ஸ்ரீதர மேனன் அவரது மிகவும் போற்றப்படும் “கேரளா சரித்திரம்” புத்தகத்திலும், மற்றொரு ஆய்வாளரான K.P.பத்மநாப மேனனின் “கொச்சி ராஜ்ஜிய சரித்திரம்” புத்தகத்திலும், 16 மற்றும் 17-ம் நூற்றாண்டில் கேரளாவின் பல்வேறு ஜாதிகளின் சமூக வாழ்வை பற்றி மிக விரிவாக பதிவு செய்துள்ளார்கள். அதை படிக்கும் எந்த ஒரு நபரும், ஹிந்து நாயர் பெண்கள் எந்த அளவு அவர்கள் உடல் மேல் முழு உரிமையும், அவர்கள் உடலுறவு சார்ந்து கட்டுப்பாடற்ற சுதந்திரமும் கொண்டிருந்தார்கள் என்பதை அறியமுடியும்.சுப்ரமணிய சுவாமி எதிர் மத்திய அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்றமானது, ‘ஒருவர் மேல் பழிசொல்வது அல்லது தவறாகச் சித்தரிப்பது மட்டுமே அவதூறு ஆகாது இழிவு செய்யவேண்டும் என்ற உள்நோக்கமும், அவ்வாறு செய்தால் அதன் மூலம் அந்த நபர் பாதிக்கப்படுவார் என்ற அறிதலும் இருக்கவேண்டும்’ என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த நாவலில் வரும் செய்திகள், கருத்துக்கள் வரலாற்று ஆவணங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது மேலும் யாரையும் இழிவு செய்யவேண்டும் என்ற உள்நோக்கம் கிடையாது.

இறுதியாக சசிதரூர், நானும் நாயர்தான், என் தாய், சகோதரியும் நாயர் பெண்கள்தான். நான் எப்படி நாயர் பெண்களை தவறாக சித்தரிப்பேன் என்று மன்றாடுகிறார்.

தற்போது கேரள உயர்நீதிமன்றம் சசிதரூருக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கிற்கு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. சசிதரூர் கூறும் வரலாற்று தகவல்களை பற்றி உங்களிடம் கேட்கவேண்டும் என்று விழைவு ஆனால் பின்பு நீங்களும், ‘நானும் நாயர்தான், என் அம்மா, சகோதரி இன்னும் பல சொந்தக்காரர்கள் நாயர்தான்’ என்று நீதிமன்றம் நீதிமன்றமாக ஏற வேண்டி இருக்குமோ என்ற பயமும் இருக்கிறது.

V.S. செந்தில்குமார்

அன்புள்ள செந்தில்குமார்,

இந்த விஷயத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்பும் முதன்மைச் சிக்கல் ‘மானநஷ்ட வழக்கு’ என்ற கருவி. வரவர எழுதும் எவருக்கும் எதிரான ஒரு வாளாக மாறியிருக்கிறது. இதை முதலில் மத அமைப்புக்கள் கையிலெடுத்தன. அதன்பின் சாதியமைப்புக்கள். இப்போது தனிநபர்களும் கையிலெடுக்கிறார்கள்.

இந்தியாவின் சட்டம் குத்துமதிப்பாக ஒரு வரையறையை அளித்துள்ளது. அதன்படி ‘சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நோக்குடன், மாற்றுச் சமூகங்களை அவமதிக்கும் நோக்குடன், மற்ற மனிதர்களை சிறுமை செய்யும் நோக்குடன்’ எழுதப்படும் எல்லாமே குற்றம். இந்த வரையின்படி எதையும் எவரும் குற்றமென சொல்லி வழக்குத் தொடுக்க முடியும். வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படும், ஆனால் அதற்குப் பல ஆண்டுகளாகும். எழுதுபவர் நீதிமன்றம்தோறும் அலையவேண்டும்.

எழுதுபவன் தனியாள், அவனுக்கு எதிராக அமைப்புகள் எழுந்து வருமென்றால் அவன் ஒன்றும் செய்ய முடியாது. சசிதரூர் பெரிய ஆளுமை, பணபலம் கொண்டவர். பெரும்பாலான எழுத்தாளர்கள் இங்கே அன்றாடம் காய்ச்சிகள். பலர் அரசூழியர்கள். நான் அரசூழியனாக நீடித்திருந்தால் என் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை எப்படி எதிர்கொண்டிருக்க முடியும்?

இந்திய அரசியல்சட்டம் வாக்குறுதி அளித்துள்ள பேச்சுரிமைக்கே எதிரானது இந்த சட்டம். அடிப்படையில் ஜனநாயகத்தையே அழிப்பது. இதற்கு முற்றிலும் தடைபோட முடியாது. ஆனால் படைப்பிலக்கியம், கருத்துச்செயல்பாடு ஆகியவற்றைக் காக்கும் பொருட்டு தெளிவான வழிகாட்டு நெறிகள் வழியாக உச்சநீதிமன்றம் கீழ்நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். எவரும் எதையும் எழுத்தாளர் மேல் வழக்காகத் தொடுக்கலாம் என்னும் நிலை வரலாகாது. அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அவ்வழக்கு தொடுக்கப்பட்டிருந்தால் வழக்குத் தொடுத்தவருக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்.

இந்த வழக்கில் சசிதரூர் எழுதியது வரலாறு. அதற்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு இருப்பது வரலாற்று அறியாமை. எண்ணிப் பாருங்கள், ஓர் எழுத்தாளன் அல்லது ஆய்வாளன் வரலாற்றை எழுதுகிறான். வாசிக்கும் ஒருவருக்கு அவ்வரலாறே தெரியாது, தெரிந்து கொள்ள ஆர்வமும் இல்லை. ஆனால் அவர் வரலாற்றை தன் போக்கில் கற்பனை செய்து வைத்திருக்கிறார். எனவே உண்மையான வரலாற்றை கேள்விப்படும்போது அவர் புண்படுகிறார். தன் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகச் சொல்லி அவர் எழுதியவர் மேல் வழக்கு தொடுக்கிறார். [இயக்குநர் ரஞ்சித் மீதான வழக்கும் இவ்வகையானதுதான்]

இந்தக் கேலிக்கூத்து இங்கே நடந்துகொண்டே இருக்கிறது. முதலில் மதவிஷயங்களில். பின்னர் சாதி சார்ந்த ஆய்வுகளில். இப்போது அனைத்திலும். இங்கே எந்த அடிப்படைகளையும் அறியாதவர்களே மக்களில் 99 விழுக்காடு என்னும்போது எதை நம்பி ஆய்வுகளைச் செய்வது, இலக்கியங்களைப் படைப்பது?

*

கேரளத்தின் பெண்வழிச் சொத்துரிமையை ஆண்வழிச் சொத்துரிமை கொண்ட சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள் புரிந்துகொள்வது கடினம். ஒழுக்கநெறிகள் என்பவை அவரவர் பிறந்து வளர்ந்த சமூகச்சூழலை ஒட்டி உருவாகி மனப்பழக்கமாக நிலைகொள்பவை. நானறிந்த பெரும்பாலான மலையாளிகள் தமிழகத்தில் தாய்மாமன் மருமகளை மணந்து கொள்வதைப் பற்றிக் கேட்டால் திடுக்கிட்டு கைகால்கள் நடுங்கிவிடுவார்கள். அங்கு அது தந்தைக்குச் சமானமான உறவு, தந்தையைவிட ஒருபடி மேலானது.

பிரான்ஸிஸ் புக்கானனன் கேரளப் பெண்வழிச் சொத்துரிமையை புரிந்துகொள்ளாமல் ‘இங்கே எல்லா பெண்களும் விபச்சாரிகள்’ என எழுதியிருக்கிறார். அதற்கு முன் கேரளத்தைக் கைப்பற்றிய திப்பு சுல்தான் அவ்வாறு எண்ணியிருக்கிறார். பிற்காலத்தைய மலையாளிகளல்லாத வரலாற்றாய்வாளர்கள் பலரும் அவ்வாறு எழுதியிருக்கின்றனர். நம் பழங்குடிகள், வடகிழக்கு மாவட்ட மக்கள் பற்றியெல்லாம் இப்படி எழுதப்பட்டிருக்கிறது.

இவர்கள் அனைவருமே செய்யும் பிழை கேரளப் பெண்களின் சுதந்திரத்தை தாங்கள் பிறந்து வளர்ந்த ஆணாதிக்கச் சூழலில் நின்று பார்ப்பதும், மதிப்பிடுவதும்தான். விளைவாக கேரளப் பெண்கள் கட்டுப்பாடில்லாத ஒழுக்கம் கொண்டவர்கள், விலைபோகிறவர்கள் என்றெல்லாம் கற்பனை செய்துகொள்கிறார்கள்.

அதையே ஆணைப்பற்றி கேட்கலாம். ஓர் ஆணாதிக்கச் சமூகத்தில் ஆணின் பாலியல்பு எவரால் கட்டுப்படுத்தப்படுகிறது? ஆகவே அதிலுள்ள ஆண்களை எல்லாம் ஒழுக்கமற்றவர்கள் என்று சொல்லிவிடமுடியுமா? தாசித்தெரு தோறும் அலைந்த சென்ற நூற்றாண்டுத் தமிழகத்து மூதாதையர்களை விபச்சாரர்கள் என்று சொல்லிவிட முடியுமா?

ஆணாதிக்கச் சமூகங்களில் ஓர் ஆணுக்கு உரிமையல்லாதவளாக, அவனால் ஆதிக்கம் செய்யப்படாதவளாக வாழும் பெண்ணை பொதுவாக விபச்சாரிகள் என்றுதான் புரிந்து கொள்கிறார்கள். ஏனென்றால் அங்கே பெண் ஓர் உடைமைப் பொருள். எவருக்கும் உடைமை அல்லாத பொருள் அனைவருக்கும் உரியதுதான் என்பது அவர்களின் எண்ணம்.

ஆகவேதான் ஆணாதிக்கச் சமூகத்தில் கைவிடப்பட்ட பெண்களும் விதவைகளும் அனாதைகளாகி இழிவடைகிறார்கள். அவர்களுக்குச் சொத்துரிமை இல்லை. உழைத்து வாழும் உரிமைகூட இல்லை. அவள் தன்னை ஒடுக்கிக் கொண்டு உடன்பிறந்தாரின் கடும் சுரண்டலுக்கும் உட்படாவிட்டால் விபச்சாரியாகத்தான் ஆகவேண்டும். ஒருவரின் பெண்ணை இன்னொருவர் கவர முயன்றபடியே இருக்கிறார்கள். பெண்களுக்கான போர் ஓய்வதே இல்லை.

சென்ற நூற்றாண்டில் நடந்த பல கதைகள் இன்று எழுத்தில் பதிவாகியிருக்கின்றன. அ.மாதவையாவின் முத்துமீனாட்சி என்னும் நாவலை மட்டுமே வாசித்தால் போதும். பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் உச்சம் நம்மை கூசிச்சுருங்கச் செய்யும்.

சாதாரணமாக அத்தனை தமிழ்க்குடும்பங்களிலும் ஒரு கதை இருக்கும். இளவரசி போல வாழ்ந்த பெண்ணை கொஞ்சம் நகை மட்டும்போட்டு கட்டிக்கொடுப்பார்கள். சென்ற இடத்தில் அப்பெண் வேலைக்காரிக்கும் இழிவான வாழ்க்கையை அடைவாள். அவள் உடன்பிறந்தவர்கள் அத்தனை சொத்துக்களையும் எடுத்துக் கொள்வார்கள்.

அந்தப்பெண் விதவையாகித் திரும்பிவந்தால் அவளை சகோதரர்கள் கீழினும் கீழாக நடத்துவார்கள். அவளுக்கு வாழ வழியே இல்லை என்பதனால் அதுதான் விதி. கொஞ்சம் பணம் இருந்து அவள் தனியாகச் சென்று வாழமுயன்றால் விபச்சாரிப் பட்டம் கிடைக்கும்.

க.நா.சு அவருடைய ஒருநாள் நாவலில் சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரம் பற்றி அளிக்கும் சித்திரம் இது. அந்த தெருவில் பாதிப்பெண்கள் இளம்விதவைகள். அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் ’விபச்சாரிகள்’ என்கிறார். அதாவது அவர்கள் அவ்வாறுதான் வாழமுடியும் என்பதே நிலை. ரகசியமாக ஆண்களுக்கு ஒத்துப்போகாமல் விதவை வாழ்க்கைகூட சாத்தியமல்ல.

கேரளச் சமூகமுறையை நேர் எதிராக உருவகித்துக் கொள்ளலாம். சென்ற நூற்றாண்டில் கேரளத்தில் குடும்பம் என்பதே பெண்தான். சொத்து முழுக்க பெண்களுக்குரியது. மூத்த அன்னைதான் குடும்பத்தலைவி. அங்கே பெண் தன் விருப்பப்படி, தன் தெரிவின்படி ஆண்களை ஏற்றுக்கொள்வாள். ஆண்கள் தங்கள் விருப்பப்படி பெண்களை அடைய முடியாது. பெண்ணுக்கு ஆண் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை.

பெண்வழிச் சொத்துரிமைச் சமூகத்தில் ஆண்கள் ‘கணவர்கள்’ அல்ல. அவர்களுக்குப் பெண்மேல் எந்த ’உரிமையும் ‘ஆதிக்கமும்’ இல்லை. அவர்களால் பெண்களைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் பெண்களுக்கு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. குழந்தை பிறந்தாலோ ஓணத்திற்கோ சில சிறு பரிசுகள் கொடுக்கலாம், அவ்வளவுதான். ஆண்களை நம்பி குழந்தைகளோ பெண்களோ இல்லை.

அரசரே கூட பெண்ணுக்கு கட்டுப்பட்டவர்தான். அரசரை ஏற்கமுடியாதென தவிர்த்த, அரசரை தன்னிச்சையாக உறவுமுறிவு செய்து அனுப்பிய பெண்களின் கதைகள் வரலாற்றில் உள்ளன. மகாராஜா சுவாதித்திருநாள் ராமவர்மா கூட அவர் மனைவியால் ஒதுக்கப்பட்டார். அந்த அம்மையார் இன்னொருவரை ஏற்றுக்கொண்டார். அவர் இளமையில் உளம் சோர்ந்து இறந்தமைக்கு அதுவும் ஒரு காரணம்.

அதாவது ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண்கள் பெண்களை எப்படி நடத்தினார்களோ அப்படித்தான் பெண்ணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் ஆண்களை நடத்தியிருக்கிறார்கள். அது அதிகாரத்தின் இயல்பு. அங்கே பரிதாபத்துக்குரியவர்கள் ஆண்கள்தான்.

சொத்துரிமை பெண்களுக்கு அளிக்கும் இந்த தேர்வுரிமையைத்தான் ஆணாதிக்கச் சமூகம் ஒழுக்கமின்மை என புரிந்துகொள்கிறது. உயர்குடிப் பெண்களில் சொத்துக்கள் மீதான நிர்வாகத்தின் தேவைக்கு ஏற்ப, ஒன்றுக்குமேல் ஆண்களை ஒரேசமயம் மணந்து கொள்ளும் முறை இருந்தது. என் வீட்டுக்கு அருகிலேயே என் உறவினர்களிலேயே அப்படி சில குடும்பங்கள் இருந்தன. அந்த ஆண்கள் அப்பெண்களின் அறைக்கு வெளியே எவருடைய செருப்பு உள்ளது என்று பார்த்துத்தான் உள்ளே செல்லமுடியும். சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதையிலேயே இந்த சித்திரம் வருகிறது.

இதே சித்திரம் தமிழகத்தில் ஆண்களை மையமாக்கி இருந்தது. பல மனைவியருடன் வாழும் தமிழகத்து குடும்பத் தலைவர்களில் கணவனுடன் செல்லும் மனைவி தன் கூந்தலில் உள்ள மலரையோ வேறேதாவது அடையாளத்தையோ அறைக்கு வெளியே வைக்க வேண்டுமென்ற வழக்கம் இருந்தது.

ஆண்கள் அப்படி இருந்ததை எண்ணி இன்று எவராவது கூச்சம் அடைகிறார்களா? இல்லை. அதைக் கொஞ்சம் பெருமிதத்துடன் சொல்லிக் கொள்வதே வழக்கம். ஆனால் பெண்கள் அப்படி இருந்தது ஏளனத்திற்குரியதாக ஆகிவிட்டது. ஆணாதிக்க மனநிலை நீடிக்கும் இந்தியப் பெருநிலத்தில் அந்த ஏளனம் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

எப்படி அந்தக்கூச்சம் கேரளத்தில் நிகழ்ந்தது? சென்ற இருநூறாண்டுகளாக கேரளச் சமூக அமைப்பு மெல்ல மெல்ல ஆணாதிக்கச் சமூகமாக ஆகிக்கொண்டே இருந்தது. அதற்குக் காரணம் நவீனக்கல்வி, ஆண்கள் சம்பாதிக்க ஆரம்பித்தது முதல் அவர்கள் தங்களுக்கான ‘ஆணாதிக்கக் குடும்பம்’ ஒன்றை உருவாக்க ஆரம்பித்தனர். அதில் பெண்ணை அடிமையாகக் கொண்டு வந்தனர்.

என் அப்பா செய்தது அதுதான். எங்கள் குடும்பத்தின் வீழ்ச்சிக்குக் காரணமும் அதுதான். அப்பா கொண்டுவந்து அடிமையாக குடிவைத்த பெண், என் அம்மா, ஒரு சராசரி தமிழ்க்குடும்பத்து அடிமைப்பத்தினி அல்ல. பெரும் வாசிப்பும், அரசியல் பிரக்ஞையும், ஆளுமையும் கொண்ட மலையாளப் பெண். அந்த மோதலில் அவர் தானும் அழிந்து அப்பாவையும் அழித்தார்.

நான் இதை விரிவாக எழுதியிருக்கிறேன். ஒழிமுறி இதையெல்லாம் வெளிப்படையாகப் பேசிய படம். அது வெளிவந்தபோது அது கேரளச் சூழலில் எந்த எதிர்ப்பையும் உருவாக்கவில்லை. மாறாக அது பெண்வழிக் கேரளத்தின் வீழ்ச்சியின் சித்திரம் எனக் கொண்டாடப்பட்டது. இன்றும் ஒரு கிளாஸிக் என சொல்லப்படுகிறது.

ஆனால் ஏன் சசிதரூர் தாக்கப்படுகிறார்? ஏனென்றால் அது ஆங்கில நூல். ஆங்கிலம் வழியாக இந்தியா முழுக்க உள்ள ஆணாதிக்கச் சமூகத்திற்கு இங்குள்ள பெண்வழிச் சமூகம் பற்றிய ஒரு அரைகுறைச் சித்திரம் சென்று சேர்கிறது. அவர்கள் அதை தங்கள் கோணத்தில் பிழையாகப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. அது மலையாளிகளுக்கு சங்கடத்தை அளிக்கிறது.

தமிழகத்து பெரியாரியர்கள் மட்டுமல்ல, சில முற்போக்காளர்கள் கூட கேரளப் பெண்வழிச் சமூகத்தைப் பற்றி இழிவாகப் பேசி இளிப்பதை நான் அவ்வப்போது வாசித்திருக்கிறேன். பலருக்கு விரிவான விளக்கங்களை அளித்திருக்கிறேன். கொஞ்சம் மார்க்சியம் வாசித்த, எங்கல்ஸ் பெயர் சொன்னால் தெரிகிற, முற்போக்காளர்களிடம் அதைச் சொல்லிப் புரிந்துகொள்ளச் செய்ய முடியும். பெரியாரியர்கள் பொதுவாக வரலாற்றுணர்வற்ற ஆணாதிக்கவாதிகள்.

கேரள பெண்வழிச் சமூகத்தின் சித்திரத்தை சசிதரூரின் நாவல் அளிக்கவில்லை. த கிரேட் இண்டியன் நாவல் என்பது மகாபாரதம் பற்றிய ஒரு பகடிநாவல். அது எந்த இந்திய ஆங்கில எழுத்துக்களையும் போல ஆங்கில வாசகர்களுக்காக, அவர்களின் கோணத்தில் பேசுவது. அது ஒரு மெல்லிய கேலியுடன் திரௌபதியை சித்தரிக்கையில் நாயர் பெண்களையும் சேர்த்துச் சொல்கிறது.

சசிதரூருக்கே பெண்வழிச் சொத்துரிமை அமைப்பின் மேல் கேலிதான் இருக்கிறது. அதன் வரலாற்று இடம் அவர் அறிந்திராதது. ஆகவே அந்நாவல் இயல்பாக எதிர்மறையாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒழிமுறி அந்த யுகத்தில் பெண்ணுக்கு இருந்த நிமிர்வை, அறத்தை பேசும் படைப்பு. ஆகவே ஒழிமுறிக்கு அந்தச் சிக்கல் வரவில்லை.

இதேபோன்ற எதிர்ப்பு எம்.எஸ்.சத்யூ இயக்கத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையின் கயறு நாவல் சின்னத்திரைத் தொடராக தேசிய ஒளிபரப்பில் வெளிவந்தபோதும் எழுந்தது. தகழி மார்க்ஸிய பார்வையில் எழுதிய நாவலில் பெண்வழிச் சொத்துரிமை அமைப்பின் கடைசிக்காலத்துச் சித்திரத்தை அளிக்கிறார். அதில் ஆண்கள் கிட்டத்தட்ட அனாதைகள். இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ளவர்கள் அதை தவறாகப் புரிந்துகொள்வார்கள், தங்களை கேலிசெய்வார்கள் என கேரளத்துக்கு வெளியே வாழ்ந்த மலையாளிகள் எதிர்க்கவே அத்தொடர் நிறுத்தப்பட்டது.

இந்நூற்றாண்டில் மலையாள இளைய தலைமுறையினருக்கு இந்த வரலாற்றுப் பின்புலம் தெரியாது. அவர்கள் புழங்கும் சூழல் ஆணாதிக்கத் தன்மை கொண்ட இந்தியப் பொதுச்சூழல். பெண்ணைப் பற்றிய ஆணாதிக்கப் பார்வையே சரியான ஒழுக்கம் சார்ந்தது என அவர்கள் மெய்யாக நம்புகிறார்கள்.

இன்று நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்வதும், மிஸிஸ் நாயர் மிஸிஸ் பிள்ளை என்று தங்களை அறிமுகம் செய்துகொள்வதும் உயர்குடி பெண்கள்தான். அவர்களின் பாட்டிகளுக்கு கணவர்கள் என எவரும் இருந்திருக்க மாட்டார்கள். அவர்கள் வெள்ளை வேட்டியும் மேலாடையும்தான் அணிந்திருப்பார்கள். தாலிகட்டுவது, விதவை ஆவது போன்ற வழக்கங்களே இருக்கவில்லை. முதலெழுத்தாக குடும்பப்பெயர்தான் போடப்பட்டது, அப்பா பெயர் அல்ல.

இச்சூழலில் பழையகாலத்தை பற்றிய வரலாற்று உண்மை பேசப்படுகையில் ஆணாதிக்க ஒழுக்கவியல் கொண்ட தங்கள் நண்பர்களின் பார்வையில் தாங்கள் சிறுமைப்பட நேரும் என அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு வரலாறு சரியான பார்வையில் அறிமுகம் செய்யப்படவேண்டும். அதற்கு வரலாற்றுணர்வுடன், சமூகப் பரிணாமத்தைப் பற்றிய தெளிவுடன் பேசவேண்டிய பொறுப்பு எழுத்தாளர்களுக்கு உண்டு.

இந்த ஒட்டுமொத்த விவாதமும் மேல்தட்டு பெண்களைப் பற்றியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் எண்ணிக்கையில் மிகப்பெரும்பான்மையினராக இருக்கும் போர்க்குடிகள், அடித்தள மக்கள், நாடோடிகள், பழங்குடிகள் கொண்டிருக்கும் ஒழுக்கவியலுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.

நான் 1984 வாக்கில் நான் பாடும் பாடல் என ஒரு படம் பார்த்தேன். அதில் விதவையான பெண் கணவன் விருப்பப்படி பொட்டு வைத்துக் கொள்கிறாள். அதைக்கண்டு அவளை மணமாகாதவள் என நம்பி ஒருவன் திருமணம் செய்யட்டுமா என்று கேட்டுவிடுகிறான். கொதித்து எழுந்த அவள் கொள்ளிக்கட்டையால் தன் நெற்றியைச் சுட்டுக்கொள்கிறாள்.

அன்று எனக்கு தமிழ்ச்சூழல் அவ்வளவாக தெரியாது. எங்களூரில் மறுமணம் மிகச்சாதாரணம். என் நண்பனின் அம்மாவே இரண்டாம் திருமணம் செய்துகொண்டவர்தான். தமிழ்நாட்டில் இப்படி மூர்க்கமாக இருப்பார்கள் போல என நினைத்துக் கொண்டேன்.

பல ஆண்டுகள் கழித்து சின்னத்தம்பி என்று ஒரு படம் பார்த்தேன். விதவையான ஒரு முதியபெண்ணை உச்சகட்ட அவமானத்துக்கு ஆளாக்கும் பொருட்டு அவளைக் கட்டிவைத்து அவள் வெள்ளைப்புடவைமேல் சாயம் பூசுகிறார்கள்.

ஆனால் அன்று எனக்கு தமிழக சமூகச்சூழல் தெரிந்துவிட்டிருந்தது. தமிழக மக்களில் மிகப்பெரும்பான்மையினர் விவாகரத்து, மறுமணம் செய்யும் வழக்கம் கொண்டவர்கள். அப்படியென்றால் சினிமா முன்வைப்பது எவருடைய மதிப்பீட்டை? எப்படி இங்குள்ள பெரும்பான்மை மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? சினிமா முன்வைப்பது இங்கே நிலவுடைமை கொண்டிருந்த உயர்சாதியினரின் ஆணாதிக்க மதிப்பீட்டைத்தான். மற்றவர்கள் அது உயர்ந்தது என நம்புகிறார்கள், தங்கள் மரபைப்பற்றி தாழ்வுணர்ச்சி கொண்டிருக்கிறார்கள்.

சசிதரூர் மேல் வழக்கு தொடுத்த அந்தப் பெண் உயர்நிலை ஒழுக்கம் என நினைத்துக் கொண்டிருப்பது ஆணாதிக்க உயர்குடி ஒழுக்கத்தைத்தான். அவருக்குத் தேவையாக இருப்பது ஒரு வரலாற்றுப்புரிதல். துரதிர்ஷ்டவசமாக இங்கே பொதுக்கல்வியில், அரசியல்கல்வியில் முற்றிலும் இல்லாமலிருப்பது அதுதான்.

ஒழுக்கநெறிகள் காலந்தோறும் மாறுபடுபவை. நூறாண்டுகளுக்குள் நிலைபெயர்பவை. விவாகரத்து செய்து மறுமணம் செய்த பெண்ணை விபச்சாரி என்று சொல்லும் கிழவாடிகள் இன்னமும்கூட நம்முடன் வாழத்தான் செய்கிறார்கள். ஆகவே வரலாற்றில் இன்றைய ஒழுக்க முறைகளைத் தேடமுடியாது. அதை அப்பெண்ணுக்கு நாம் சொல்லியாகவேண்டும்.

நேற்றைய வாழ்க்கைக்கு நாம் பொறுப்பல்ல. அதில் இன்றைய நம் பார்வையில் ஒழுக்கமீறல்கள் என தோன்றுவன இருந்தாலும் நாம் அதற்காக நாண வேண்டியதில்லை. நாணவேண்டியது நேற்று நம் முன்னோர் இழைத்த மானுட ஒடுக்குமுறைக்காக. தீண்டாமை, சாதிக் கொடுமைகளுக்காக. சாதிப்பெருமை மற்றும் மேட்டிமைத் தனத்துக்காக. அதற்கு நாணுபவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 03, 2021 11:35

அரசி

தெரிந்த மனிதர்களை இன்னொருவர் எழுத்தில் காண்பது ஓர் அரிய அனுபவம். நான் அருண்மொழியின் பாட்டி ராஜம்மாவை மண்புழு என கேலியாகச் சொன்னதுண்டு. எந்த புத்தகத்தை எடுத்தாலும் ஒரே மூச்சில் வாசித்து ‘உப்பக்கம்’ கண்டுவிடுவார்கள். ‘நல்லாருக்கு’  என்பதுதான் பொதுக்கருத்து. புத்தகம் எப்படி நன்றாக இல்லாமலிருக்க முடியும்?

அரசி- அருண்மொழி நங்கை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 03, 2021 11:34

ஆபரணம், கடிதங்கள்

ஆபரணம், பா.திருச்செந்தாழை

அன்புள்ள ஜெ சார்,

திரு பா. திருச்செந்தாழை அவர்களின் ஆபரணம் மிகவும் நுட்பமான கதை. பெண்ணுக்கு உண்மையான ஆபரணம் எதுவென்று மெல்லிய கோடுகளால் குறிப்புணர்த்தும் கதை. இதை படித்ததும் நினைவுக்கு வந்தது நமது கதைத் திருவிழாவின் ‘நகை’. நகை என்பதில் புன்னகை அல்லது ஆபரணம் என்னும் பொருளில், பெண்ணுக்கு நகையாவது முக அழகை விட அவளது வெற்றியும் தன்னம்பிக்கையுமே என்று குறிப்புணர்த்துவது. அவ்வகையில் இந்த இரு கதைகளும் ஒரே தளத்தின் இரு வேறு வகைமைகளாகவும், ஒன்றன் வாசிப்பை மற்றோன்று மெருகேற்றுவதாகவும் தோன்றியது.

அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.

***

அன்புள்ள ஜெ

பா.திருச்செந்தாழையின் கதையை வாசிக்கையில் எனக்கும் நீங்கள் சொன்ன அந்தச் சிக்கல் இருந்தது. கொஞ்சம் கவனமாக பாதிவரை வாசிக்காவிட்டால் கதைக்குள் செல்லமுடியாது. பெரும்பாலும் நாம் சிறுகதைகள் முதல்வரியில் தொடங்குவதைத்தான் கண்டிருக்கிறோம். அதுதான் சிறுகதைக்கான கிளாஸிக்கல் இலக்கணம். உங்களுடைய எல்லா கதைகளுமே முதல்வரியில் சரியாகத் தொடங்கிவிடுகின்றன. சூழலைச் சொல்லி மெல்ல விரிவது நாவலுக்கான இயல்பு. இவருடைய சிறுகதைகள் நாவலின் அத்தியாயம் போல் இருக்கின்றன.

இதை இவர் ஏன் செய்கிறார் என்றால் கதை, கதைமாந்தரின் தன்மைகள் ஆகியவற்றை ஆசிரியரே சொல்வதுபோல வந்துவிடவேண்டாம் என்பதற்காக. அவர்களில் ஒருவரின் மனம் வெளிப்படுவதுபோல கதையைச் சொல்கிறார். ஆனால் இதற்கு பல உத்திகள் உள்ளன. இவ்வாறுதான் அமையவேண்டும் என்பதில்லை. ஆகவே இதை ஒரு சிறப்பாகவோ குறைவாகவோ கொள்ள வேண்டியதில்லை. இவருடைய இயல்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் கதை முடியும்போது மனிதனை மீறிய ஒரு வாழ்க்கைத்தருணம் சொல்லப்பட்டுள்ளது. இலக்கியத்தின் டிராஜடி என்பதே மனிதனை துளியாக ஆக்கும் ஒரு விதியின் தருணத்தைச் சொல்லிவிடுவதுதான். அதைச் சொல்லியிருக்கிறார். அழகான கதை. பாராட்டுக்கள்.

ஸ்ரீனிவாஸ்

***

அன்புள்ள ஜெ

பா.திருச்செந்தாழை உங்கள் தளம் வழியாக என் கவனத்திற்கு வந்தவர். சில ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருந்தாலும் சமீபகாலமாக அதிகமாகக் கவனிக்கப்படுகிறார் என நினைக்கிறேன். முக்கியமான எழுத்து. இப்போது பலர் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்.

கதையை வாழ்க்கையில் இருந்து எடுக்க ஆரம்பித்தாலே அதற்கு ஒரு நம்பகத்தன்மையும் கலைமதிப்பும் அமைந்துவிடுகிறது. கதையை வாழ்க்கையில் இருந்து எடுப்பதற்காக வாழ்க்கையை பார்க்கும்படி அகக்கண்ணை திறந்து வைத்திருக்கவேண்டும். அதுதான் எழுத்தாளனின் தகுதி. அரசியல் சர்ச்சைகள், இலக்கிய வம்புகளில் திளைக்கும் எழுத்தாளர்களுக்கு அந்த கண் இருப்பதில்லை. ஏதாவது எழுதுவதற்கு இருந்தாலும் எழுதும்போது அது திரிந்து விடுகிறது

திருச்செந்தாழையின் கதைகள் சொல்லப்படாத ஓர் உலகைச் சொல்கின்றன. ஒவ்வொரு உலகும் அதற்கான நெறிகளையும் வேல்யூஸையும் கொண்டிருக்கிறது. அவற்றைப் பற்றிப் பேசுகின்றன. வலியது வாழும் என்ற நெறி உள்ள ஓர் உலகம். வியாபார உலகம். ஆனால் வலியது என்றால் என்ன? எதன்முன் வலியது? எறும்புகளில் வலியது சிறியதை வெல்லும். ஆனால் அங்கே புயல் அடிக்குமென்றால்? வலிமை என்பதே ஒரு மாயைதான்

சாரங்கன்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 03, 2021 11:33

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 7

அன்புள்ள ஜெ

நலம்தானே? ‘ செய்தி வாசித்தேன். இதென்ன, கவிஞனைப் பற்றி சென்சிபிளாக எழுதுமளவுக்கு தமிழக ஆங்கில ஊடகங்களும் இதழாளர்களும் தேறிவிட்டார்களா என்று திகைத்துவிட்டேன். அதன்பின் வாசித்தால் எம்.டி.சாஜு. மலையாளி. சரிதான். நன்றாகவே தயாரித்து பலரிடம் விசாரித்து எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். சிறப்பு. விக்ரமாதித்யனைப்பற்றி ஆங்கிலத்தில் வெளிவரும் முதல் குறிப்பு என்றும் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.

சந்திரசேகர்

அன்புள்ள ஜெ,

விக்ரமாதித்யன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி வெளிவரும் கடிதங்களும் மகிழ்ச்சி அளிக்கின்றன. அவரைப்பற்றி பலரும் பேசியிருந்தாலும் வாசகர்களுக்கு அவரைப்பற்றி எதையாவது சொல்வதற்கான ஒரு தருணமாக இருக்கிறது இது என்று நினைக்கிறேன். நான் ஆன்மிகமான வாசிப்பு உள்ளவன். பல ஆண்டுகளுக்கு முன் பாம்பன் சுவாமிகளின் வழி வந்த ஒருவரிடம் தீட்சையும் பெற்றுக்கொண்டேன். நவீன இலக்கியமெல்லாம் அதிகம் வாசிப்பதில்லை. ஆனால் எப்படியோ விக்ரமாதித்யன் அறிமுகமானார். அவருடைய கவிதைகளிலுள்ள சைவம் எனக்கு பிடித்தமானது.

விக்ரமாதித்யன் அவர்களுடையது சித்தர்மரபு வந்த சைவம் என்று சொல்லவேண்டும். அதில் ஈசனுடன் ஒரு சகஜஸ்திதி உள்ளது. நாயன்மார்களிலே இதைக் காணமுடியாது. சித்தர்களில் இதைக் காணலாம். அவர்களும் சிவனைப்போலவே வேண்டுதல் வேண்டாமை இலாதவர்கள்தான். விக்ரமாதித்யனுக்கு சிவனுடன் இருக்கும் அணுக்கமும் உறவும்தான் முக்கியமானவை.

அவரை காலம் ஒரு சித்தகவிஞர் என்று அடையாளப்படுத்தும். இன்றைக்கு அவருடைய கவிதைகளிலுள்ள இந்த ஆன்மிகமான ஆழத்தை அறியாத நவீன இலக்கியவாதிகளும் குடிகாரர்களும்தான் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள். அவர் அவர்களுக்கு அப்பாற்பட்டவர். அவரை எவர் படிக்கவேண்டுமோ, அவரை எவர் படித்தால் அவர்களுக்கு புரியுமோ அவர்கள் அவரை இன்னமும் படிக்கவில்லை. அவ்வாறு படிக்க ஆரம்பிக்கும்போதுதான் அவரை அவர்கள் கண்டடைவார்கள். நவபாஷாணம் என்ற கவிதைதான் தமிழ் கவிதையிலே இந்த நூற்றாண்டிலே பாரதிக்குப்பிறகு எழுதப்பட்ட மிகச்சிறந்த கவிதை.

செல்வ ராஜகணபதி

***

அன்புள்ள ஜெ

விக்ரமாதித்யன் கவிதைகளை பலகாலமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். என் பிரிய கவிக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சூழலில் இருக்கும் மௌனம் வருத்தம் அளிக்கவுமில்லை. என்றைக்குமே நாம் கவிஞர்களைப் பொருட்படுத்தியவர்கள் அல்ல. கவிஞர்களுக்கு எந்தச் சிறப்பும் செய்தவர்கள் அல்ல. ஆனால் எங்கோ கவிஞனை அவன் வாசகன் கொண்டாடிக்கொண்டேதான் இருக்கிறான்.

அவ்வாறு வாசகன் நினைவில் நின்றிருக்கும் சில வரிகள் இருக்கும். அவற்றின் வழியாகவே கவிஞன் சரித்திரத்தில் வாழ்கிறான். விக்ரமாதித்யன் அண்ணாச்சியின் கவிதைகளில் எனக்கு பிடித்தமான கவிதை ஒன்று உண்டு. அது எனக்கே எனக்கான கவிதை. அதை ஒரு தமிழ்க்கவிஞன் மட்டும்தான் எழுதமுடியும். காதல்கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் இந்தக்கவிதையிலுள்ள துக்கம் புரியாது. இது ஒன்றும் வெற்றுத்தத்துவமோ அரசியலோ இல்லை. இது வாழ்க்கை. இந்த கவிதையை வாசிக்கவும் ரசிக்கவும் வாழ்ந்து அறிந்த உண்மை ஒன்று நமக்கு இருக்கவேண்டும்

எனக்கும் என்   தெய்வத்துக்குமிடையேயான வழக்கு  

முதன் முதலில்
கோழிதான் கேட்டது
கஷ்டப்படுத்தவில்லை வேறே
பிறகு பிறகு
கடாய் வெட்ட  சொல்லியது
குறைவைக்கவில்லை  அதையும்
இப்பொழுது
என்னையே பலியிட வேண்டும் என்கிறது
எங்கே ஒளிந்துகொள்ள .

என்னுடைய தெய்வமும் தன்னையே பலியிடும்படிச் சொல்லியது. பலிகொடுப்பேனா என்று தெரியவில்லை. என் தெய்வம் எனக்கு பின்னாலேயே இருக்கிறது. என் அப்பன் பாட்டன் பூட்டனை எல்லாம் பலிகேட்ட தெய்வம்தான் அது. ஏகப்பட்ட மண்டையோடுகளை அது மாலையாகச் சூட்டியிருக்கிறது. விக்ரமாதித்யனுக்கு அந்த தெய்வம் என்ன என்று தெரியாது. எனக்கு அது என்ன என்று தெரியும். நிழல் மாதிரி பின்னாடியே இருந்துகொண்டிருக்கிறது

எஸ்.கதிரேசன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 03, 2021 11:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.