Jeyamohan's Blog, page 921

September 6, 2021

மாபெரும் கம்பளம் பற்றிய கனவு [சிறுகதை]

பதினாலாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் தேங்காய் நாரினால் பின்னப்பட்ட தரைக்கம்பளங்களுக்கு யவன தேசங்களைச் சேர்ந்த பிரபுக்களிடையே மவுசு ஏற்பட்டதன் விளைவாக குளச்சல் முதல் கொச்சி வரையிலான பகுதிகளில் தொழில் மறுமலர்ச்சி ஏற்பட்டதாகவும், புதிய மாடம்பி வர்க்கமொன்று உருவாகி அதிகாரமும் செல்வமும் பெற்றுத் திருவிதாங்கூர் அரசர்களுக்கு தீராத தொல்லைகள் கொடுத்ததாகவும்  சரித்திரம் கூறுகிறது. கருவிலேயே குழந்தைகளுக்கு கம்பளம் பின்னும் கலை கற்பிக்கப்பட்டது. அரிய மந்திரங்கள் மூலம் அவற்றின் விரல்கள் தேவையானபடி வடிவமைக்கப்படுவதற்கு கணியான் என்ற ஜாதியே நியமிக்கப்பட்டிருந்தது.

குழந்தைகள் வெளிவந்த உடனேயே அவற்றை நார்களில் பிணைத்து விடுவதும் தன்னிச்சையாக அவற்றின் பின்ன ஆரம்பிப்பதும் சகஜமாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. கருப்பை உலகத்து வினோத வண்ணங்கள் கம்பளங்களின் கலைமதிப்பை ஒரே தூக்காகத் தூக்கி பாரீஸ் நகரத்துக் கலை விற்பன்னர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மலைச்சரிவுகளும் நதிகளும் கடலும் கூடி இணைந்த நிலப்பகுதியின் பறவைப்பாடலும் நீர் நெளிவும் வான் நீலமும் நார்களில் பதிந்து உருவான ஏற்றுமதிச் செல்வம் ஒரு கட்டத்தில் குறுமிளகு விற்பனையையே தாண்டியது என்று யவன யாத்ரிகரான ஹிராடடஸ் குறிப்பிடுகிறார்.

அவருடைய பயணக்குறிப்பு நூலில் அவர் குறிப்பிடும் பல நம்ப முடியாத செய்திகளில் ஒன்று பிரம்மாண்டமான கம்பளம் ஒன்றை நெய்யும் வாய்ப்பைப்பெற்ற -கீவ் நகரத்து மையக் கதீட்ரலில் விரிப்பதற்காக இருக்க வேண்டும் இது- ஒரு மாடம்பியின் அதீத உற்சாகத்தைப் பற்றியது. இவன் பெயரை ஹிராடடஸ் ‘யாப்பன்’ என்று குறிப்பிடுவதை அய்யப்பன் என்று திருத்தி வாசிக்க முடியும். அகஸ்தியர்கூட மலைக்கும் அரபிக்கடலுக்கும் இடையேயான நிலப்பகுதியை இவன் ஆண்டிருக்கக் கூடும் என்றும், பிரபலமான அய்யப்பன் மார்த்தாண்டன் என்ற மாடம்பிதான் இவன் என்றும், பிற்பாடு திருவனந்தபுரம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் அச்சுதன் குறுப்பு அவ்வளவாகப் பொருட்படுத்தப்படாத ஆய்வொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

அய்யப்பன் அக்காலத்தில் கலைஞர்களின் செயல்திறனை ஒருங்கிணைத்து கூர்மைப்படுத்தும் வழி முறைகளில் பிரதானமாக விளங்கி வந்த மரபை அடியொற்றி கம்பளம் பின்னும் குழந்தைகளை நடமாடவும் பேசவும் கேட்கவும் முடியாதவர்களாக ஆக்கியதாகவும் அவர்களை விரல்களில் காட்டு இருளுக்குள் அலைந்து திரிந்த மூதாதையரின் ஆவிகளை புள்ளுவப்பாட்டு மூலம் வசீகரித்து பிடித்தடக்கிக் கொண்டு வந்து குடியேற்றியதாகவும் ஐதீகம் குறிப்பிடுகிறது. மூதாதையரின் சன்னதம் கொண்ட குழந்தைகள் அசுர வேகத்தில் பின்னித்தள்ளிய கம்பளம் கடலலை போல சுருண்டு எழுந்ததாக ஒரு நாட்டுப்பாடல் வர்ணிக்கிறது.

பல்லாயிரம் சிறுவிரல்கள் போட்ட முடிச்சுகளில் வினோதமான எழுத்துகள் உருவாகிப் படிக்க முடியாத சொற்றொடர்களை தன்னிச்சையாக உருவாக்கின என்றும் அவை உருக்குலைந்தும் புதிதாகப் பிறந்து மர்மமாகப் பெருகின என்றும் தெரிகிறது. குழந்தைகள் பின்னும் செயலில் ஒன்றிப்போய் ஒரு தருணத்தில் கம்பளத்தின் வண்ணச் சித்திரங்களில் இரண்டறக்கலந்து மறைந்தன. எனவே கம்பளம் தன்னைத் தானே பின்னிக்கொள்ளும் அற்புதம் நிகழ ஆரம்பித்தது. கம்பளம் தேவையான அகலத்துக்கு பின்னப்பட்ட போது அய்யப்பன் மார்த்தாண்டன் உற்பத்தியை நிறுத்த ஆணையிட்டான்.

ஆனால் குழந்தைகளின் விரல்கள் தவிர வேறு உறுப்புகள் அனைத்தும் முழுமையாக இறந்துவிட்டிருந்தன. மந்திரங்கள் மூலம் மூதாதையரின் ஆவிகளைப் பிடித்துத் திரும்ப காடுகளுக்குச் செலுத்த முயன்றபோது அவை கம்பளத்தின் இருண்ட கட்டங்களுக்குள் புகுந்து கொண்டு போக்குக் காட்டின. கோபமும் அச்சமும் கொண்ட மார்த்தாண்டன் பின்னும் விரல்களைத் துண்டித்து குழந்தைகளை அழிக்கும்படி ஆணையிடவே வாளுடன் அலைந்த கிங்கரர்கள் மகத்தான கம்பளத்தின் பல்லாயிரம் பிம்பங்களிடையே கண்மயங்கித் தவித்து இறுதியில் அவற்றினூடே தாங்களும் பிம்பங்களாகச் சிக்கிக்கொண்டார்கள். பிம்பங்கள் கலந்து அலையலையாக முகங்கள் நிறைய கம்பளமானது நாலாதிசைகளிலும் பொங்கி விரிந்து கொண்டிருந்தது.

தரையில் விழுந்த தண்ணீர் பரவுவது போல என்கிறது அந்த நாட்டுப்பாடல் அய்யப்பன் மார்த்தாண்டன் மீதும் கிங்கரர்கள் மீதும் அரண்மனைகள் மீதும் கம்பள வியாபாரிகளின் கடைவீதிகள் மீதும் அனந்த பத்மநாப சாமி ஆலயத்தின் மீதும் கம்பளம் விரிந்து பரவியது. கிழக்கே அரபிக்கடலையும் மேற்கே அகஸ்தியர்கூட மலைகளையும் அடைந்து அது விரிந்து சென்றது. கடலின் ஆழத்தில் நீலநிறப்படுகையின் ஒளியை உள்வாங்கியும் காட்டின் அடர்த்திக்குள் பச்சை இருட்டில் கரைந்தும் கம்பளம் வளர்ந்து செல்வதாக வெகுகாலம் நம்பப்பட்டு வந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் இக்கடற்கரையும் மலைச்சரிவும் முழுமையாக மறக்கடிக்கப்பட்டுவிட்டன.

பிற்காலத்து ரொமான்டிக் கவிஞன் “வானத்து அதீத சக்திகளின் மகத்தான் பாதங்கள் தோய இயற்கை விரித்த மாபெரும் கம்பளம்” என்று இப்பகுதியின் அடர்ந்த காட்டைப்பற்றிப் பாடியிருப்பது மட்டுமே ஒரே இலக்கியக்குறிப்பு எனலாம். கம்பளம் பின்னும் குழந்தைகளின் வெறும் கனவு என்று யதார்த்தவாதிகளினால் இது குறிப்பிடப்படுகிறது என்றாலும் இப்பாடலைப் பாடும்போது கம்பளம் பின்னுவது எளிதாக ஆவதாக  இளம் தொழிலாளிகள் கூறி என் இளம்வயதில்  கேட்டிருக்கிறேன்.

[மூன்று சரித்திரக்கதைகள்-2, சுபமங்களா 1993]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2021 11:35

தமிழக அரசுக்கு வசந்தபாலன் நன்றி

ஏதேனும் ஓர் ஊடகத்தைக் கையாளும்போது உருவாகும் நிறைவுகளில் முக்கியமானது நாம் சுட்டிக்காட்டும் ஒன்றின் வழியாக ஒரு மானுடத்துயர் தீர்வதைக் காணநேர்வது. அங்காடித்தெரு தமிழகத்தின் பெரிய கடைகளில் ஊழியர்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக எழுந்த குரல். அந்த ஊழியர்களின்மேல் சமூகத்தின் கவனம் குவிய அது வழிவகுத்தது. இன்று அரசு இட்டிருக்கும் இந்த ஆணையும் ஒரு வெற்றியே.

தமிழக அரசுக்கு வசந்தபாலன் நன்றி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2021 11:34

பலகுரல்கள், ஒரு கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம், நலமே விரும்புகிறேன். மதுரையில் நடைபெற்ற கல்லெழும் விதை நிகழ்வில் உங்களிடம் நினைவு பரிசு வாங்கியவர்களில் நானும் ஒருவன். வாழ்வின் மகிழ்வான தருணம். இரண்டாவது முறையாக நேரில் உங்கள் உரையை கேட்டேன். உங்களிடம் கேட்பதற்கு நிறைய சந்தேகங்களை மனதளவில் தொகுத்து வைத்திருந்தேன். உங்கள் அருகாமையில் இருந்ததே பெரும்நிறைவு. Idealism மற்றும் Ideology க்கான விளக்க உரையால் தமிழ்நாட்டின் அரசியல் செய்திகளை  கவனிக்க தொடங்கினேன். அப்போது தேர்தல் சமயம் வேறு. எங்கிலும் அரசியல் பேச்சு. தொடர்ந்து காந்தியம் தொடர்பான உங்கள் கட்டுரைகளை வாசித்தும் வருகிறேன்.

என்னளவில் சிறு விளக்கத்திற்காக கேட்கிறேன் ஐயா, தவறிருந்தால் மன்னிக்கவும். உங்களின் ஒரு கட்டுரையில் இலங்கை போன்ற சிறிய நில பரப்பில் சிறிய வாசிப்பு தளத்தில் அதிகமான எண்ணிக்கையில் எழுத்தாளர்கள் இருப்பது ஆபத்தானது என்று வாசித்த ஞாபகம். அதுபோல இந்தியாவின் ஒரு மாநிலம் தமிழ்நாடு. இங்குள்ள Ideology க்களின் எண்ணிக்கை. காந்தியம் அதில் பல பிரிவு அமைப்புகள், காங்கிரஸ் அதில் பல பிரிவு, திராவிடம் அதில் பல பிரிவு அமைப்புகள் கட்சிகள், இந்துத்துவ அதில் பல பிரிவு அமைப்புகள் கட்சிகள், பெரியரியம் அதில் பல அமைப்புகள், அம்பேத்கரியம்(தலித் அரசியல்) அதில் பல அமைப்புகள் கட்சிகள், தமிழ் தேசியம் அதில் பல அமைப்புகள் கட்சிகள்,கம்யூனிசம் அதில் பிரிவுகள், மேலும் பல மத சாதிய அமைப்புகள் வருங்காலத்தில் பல Ideology க்களை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன்.இந்த எண்ணிக்கை ஒன்றுபட்ட இந்தியாவிற்கு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா?மற்ற மாநிலங்களில் இதுதான் நிலமையா? Idealism   சுருங்கி குறைந்ததற்கு இந்த எண்ணிக்கையும் காரணமா? சரியாகத்தான் கேட்டிருக்கிறேனா தெரியவில்லை. தவறிருந்தால் மன்னிக்கவும்.

இப்படிக்கு

மோகன்

***

அன்புள்ள மோகன்,

இலங்கையின் கவிஞர் எண்ணிக்கை பற்றி நான் சொன்னது பகடியாக. கவிஞர், எழுத்தாளர் போன்ற அடையாளங்களை எல்லாம் அத்தனை எளிதாக எவருக்கும் அளித்துவிடலாகாது என்பதையே அப்படிச் சொன்னேன். மதிப்பீடுகள் ஏதுமில்லாமல் அத்தனைபேரையும் உள்ளடக்கிப் பட்டியல் போடும்போது கவிதை என்றால் என்ன என்பதையே கைவிட்டுவிடுகிறோம், கவிதையின் தரம் என்ன என்பதையே எண்ண மறந்துவிடுகிறோம்.

அரசியலிலும் சரி, கருத்துக்களிலும் சரி, பன்மைத்தன்மையே ஜனநாயகத்துக்கு உகந்தது. வெவ்வேறு கருத்துக்கள் கட்சிகளாகப் பிரிந்து விவாதிப்பதும் மோதிக்கொள்வதும் ஜனநாயகத்தில் தவிர்க்கவே முடியாதது. அதன் வழியாகவே சிந்தனை வளர்கிறது. புதிய சிந்தனைகள் பிறக்கின்றன. எதிர்பாராத கோணங்கள் வெளிவருகின்றன. நுட்பமான மாறுபாடுகள்கூட முன்வைக்கப்படுகின்றன.

அவற்றில் எவை தகுதியானவையோ, எவை சரியானவையோ அவை வென்று வாழ்கின்றன. ஒரு கருத்து தனக்கு எதிரான பிற கருத்துக்களுடன் மோதி வெல்லும்போதே தகுதியை அடைகிறது. அதேபோல அக்கருத்துடன் சிறிய முரண்பாடு கொண்டவை கூட தங்கள் முரண்பாடுகளை முன்வைக்கும்போதே அக்கருத்தின் மெய்மை தெரியவருகிறது.

இயற்கை அப்படித்தான் இயங்குகிறது. கோடிக்கணக்கான விதைகள் முளைக்கின்றன. அவற்றில் ஆற்றல்கொண்டவை செடிகளாகி மரங்களாகி வளர்கின்றன. அதில் என்ன தவறு இருக்கிறது? ஏராளமான தரப்புகள் வரக்கூடாது என்று சொல்லி புதிய கருத்துக்களும், கருத்துமாறுபாடுகளும் வருவதை தடுத்துவிடலாமா? அது தேக்கநிலையை அல்லவா உருவாக்கும்? அவ்வாறு தடுப்பது சர்வாதிகாரம் அல்லவா? அப்படி பிற கருத்துக்கள் வரக்கூடாது என்று தடுக்கும் உரிமை எவருக்கு உண்டு?

அதேதான் கவிதையிலும். எல்லாரும் கவிதை எழுதலாம். ஏராளமானவர்கள் எழுதுவது மிகமிக நல்லது. நான் நிறையபேர் எழுதவேண்டும் என்றுதான் சொல்வேன். ஆனால் அத்தனைபேரையும் அங்கீகரிக்கக்கூடாது. தொலைபேசி அட்டவணை போல பட்டியல் போடக்கூடாது. தகுதியானவர்களைக் கண்டடைந்து அவர்களையே முன்வைக்கவேண்டும். அதுதான் இயற்கையான வழி.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2021 11:34

அருண்மொழி, கடிதம்

அன்புநிறை ஜெ,

அருண்மொழி அக்காவின் எழுத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அதில் இந்தவாரம் வெளியான ‘சின்னஞ்சிறு மலர்’ பதிவு மிக அழகானது. ஒரு நுண்மையான உணர்வை சற்றும் மிகை குறையின்றிக் கையாண்டிருக்கிறார்கள். பள்ளி செல்வதற்கும் முந்தைய பால்யத்தில் துவங்கி குழந்தைப் பருவத்து லீலைகளில் குழந்தையின் மனநிலையோடே விளையாடித் திரிந்து, கலை விளையாட்டு முயற்சிகளைக் கதைத்து, எதிர்பாரா தருணத்தில் அந்த சிறு மலரை மலர்விக்கிறார். எழுத்து மேலும் மேலும் தன்னையே கண்டடைய வைக்கிறது என எண்ணிக்கொண்டேன்.

அக்கா இசை ரசனையோடு எழுதும் பதிவுகளுக்கு நான் மிகப் பெரிய ரசிகை என்றாலும், மன ஓட்டமாய் எழுதிச் செல்லும் இளம்பருவத்துக் கதை சொல்லும் பதிவுகளில் இன்னும் மனதுக்கு அணுக்கமாகிவிடுகிறார்கள்.

இதற்கு முன்னர் இரு பகுதிகள் என் மனதுக்கு மிக நெருக்கமானவை. “வானத்தில் நட்சத்திரங்கள்” பதிவை வாசித்து விட்டு வெகுநேரம் மனம்பொங்கி அமர்ந்திருந்தேன். அதில் நாடகத்துக்கு செல்வதற்கான ஆயத்தங்கள், பீஷ்ம அர்ஜுன சண்டையில் பறக்கும் அம்பு, கதைகள், தின்பண்டஙகள் என மகிழ்வாகத் தொடங்கி, ஏசு கதையில் உணர்வுகள் எடை கொண்டு, இறுதியாக தம்பியின் நினைவில் மனதை நெகிழ்த்தும் கணம் ஒன்றில் முடித்திருப்பார்கள். அந்த மூன்று நட்சத்திரங்கள் எத்தனை பேரின் குழந்தைப்பருவத்து சாட்சியாக இருக்கின்றன என என்று எண்ணிப் பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

மற்றொரு பகுதி “மலையில் பிறப்பது” – மிக உணர்வுபூர்வமான ஒரு பதிவு. அதை வாசித்த போது மீனாட்சியின் முன்னிலையில் உணரும் நமக்கும் அவளுக்கும் மட்டுமேயான அந்தரங்கம், பிரகார வெளியின் ஒவ்வொரு துளியையும் நிறைந்து சூழும் நாதஸ்வர இசை, திருவையாற்றின் காற்றிலேயே கலந்திருக்கும் இசை, அந்த மாலைநேர ஆற்றுப்படிக்கட்டில் அமர்ந்திருக்கும் அனுபவம் என அனைத்தையும் அனுபவித்த தருணங்கள் மனதில் நிறைந்தன. இறுதியாக அந்த ‘ஹிமகிரி தனயே’ பாடல். நான் முதல் முறை இமயம் காணச் சென்ற போது மொத்த பயணத்திலும் அந்தப் பாடல்தான் ரீங்கரித்துக் கொண்டே இருந்தது. உடன் பார்வதி நதி உடன்வர இது அவளது நிலமல்லவா என்றேதான் எண்ணிக்கொண்டிருந்தேன்.. மலைமகள் என்ற பெயர் எவ்வளவு கம்பீரமாக அவளுக்குப் பொருந்துகிறது! இந்திரநீலத்தின் முதல் அத்தியாயத்தின் பெயரான மலைமுடித்தனிமை எனக்கு மிகப் பிடித்த தலைப்புகளில் ஒன்று. அதை உலகாளும் அன்னையோடும், விசாலாக்ஷி அம்மாவோடும், எங்கெங்கும் உடன்வரும்  இசையோடும் அகம் இணைத்துக் கொண்டது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.

அந்த உற்சவமும், ஆசை ஆசையாய் கேசட்களைத் தேர்ந்தெடுத்ததும், முதன் முதலில் வாங்கிய டேப்ரிகார்டரும், காட்டன் புடவையும் மல்லிகைச் சரமும், ஆற்றூரின் அன்பும், கான கந்தர்வனின் வருகையும் என வர்ணித்திருந்தாலும் அனைத்திலும் அடிநாதமாக உங்கள் இருவரின் நேசத்தின் அழகு மிளிரும் பதிவு அது.

மேலும் மலரட்டும்.

மிக்க அன்புடன்,

சுபா

https://arunmozhinangaij.wordpress.com/

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2021 11:32

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 8

அன்புள்ள ஜெமோ

வாழ்க வளமுடன்.

விஷ்ணுபுரம் விருது விக்ரமாதித்யனுக்கு அளிக்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். ஆண்டுதோறும் அளிக்கப்படும் இந்த விருதுகள் தகுதியானவர்களைத் தேடித்தேடிச் செல்கின்றன. பலரை இளையதலைமுறை இந்த விருது வழியாகவே அறிமுகம் செய்துகொள்கிறது.

இங்கே நான் ஒன்று சொல்லவேண்டும். இந்த விருது 2010 அறிவிக்கப்பட்டபோது தொடர்ச்சியாக கடுமையாக விமர்சனம் செய்து எழுதியவர்களில் நானும் ஒருவன். நீங்கள் உங்களை முன்னிறுத்திக்கொள்ளவும், உங்களுக்கு முக்கியத்துவத்தை உருவாக்கிக் கொள்ளவும் முன்னோடிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த விருதை அறிவிக்கிறீர்கள் என்று எழுதினேன். மணிரத்னம் அழைக்கப்பட்டபோது சினிமாப் பர்சனாலிட்டிகளுக்கு இலக்கியத்தைக் கூட்டிக்கொடுக்கிறீர்கள் என்று எழுதினேன். அதையெல்லாம் உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்.

ஆனால் இன்றைய என் மனநிலை வேறு. அன்றைக்கு ஏனோ உங்கள்மேல் ஒரு பொறாமை. ஏன் பொறாமை என்று நினைத்தால் எனக்கே சிரிப்புதான். நான் சில முகநூல் குறிப்புகள் தவிர ஒன்றுமே எழுதியதில்லை. ஆனால் என்னை எழுத்தாளன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் வரும், அன்றைக்கு நான் விஸ்வரூபம் எடுப்பேன் என்று நினைத்துக்கொண்டேன். அப்போது ஆபீஸ்வேலை கஷ்டம். அந்த சிறுமையை எல்லாம் அந்தக் கற்பனையால் சமாளித்துக் கொண்டிருந்தேன். அப்படி கற்பனை செய்யும்போது எதிரி நீங்கள்தான். உங்களை ஆவேசமாக வாசிப்பேன். ஆனால் அத்தனை பேரிடமும் வெறுப்பாக உங்களைப் பற்றிப் பேசுவேன். உங்கள்மேல் பொறாமை எனக்கு என்று இன்றைக்கு நினைக்க கசப்பாக இருக்கிறது.

முதல் அட்டாக்குக்குப் பிறகு மனசு மாறிவிட்டது. கொஞ்சம் ஆன்மிகமாக மாறிவிட்டேன். மார்க்ஸியம் தொழிற்சங்கம் எல்லாம் பழையகதையாக ஆகிவிட்டது. என்னை நான் உலகைக்காக்க வந்த தேவனாக நினைத்துக் கொண்டிருந்த அற்பத்தனமெல்லாம் இல்லை. போராளி மோடிலேயே கண்டபடி வசைபாடிக் கொண்டிருந்த காலமும் பழையதாகிவிட்டது. இன்றைக்கு எந்த ஃபேஸ்புக் அக்கவுண்டும் இல்லை. எழுதிய சில குறிப்புகளையும் தூக்கிவீசிவிட்டேன்.

இப்போது பார்க்கும்போது நீங்கள் எல்லாவற்றையும் எத்தனை அற்புதமான கனவுகளோடு, எவ்வளவு தீவிரமாகச் செய்திருக்கிறீர்கள் என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. இதைப்போல ஒன்றை தனியொருவராக ஓர் எழுத்தாளர் செய்வது வேறெந்த மொழியிலாவது நடந்திருக்கிறதா? ஞானக்கூத்தனுக்கெல்லாம் விஷ்ணுபுரம் விருது கிடைக்காவிட்டால் விருதே இல்லாமல் மறைந்திருப்பார். எவ்வளவு எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். எவ்வளவு இலக்கியப்பணிகள் நடந்திருக்கின்றன. இலக்கியமாநாடுகள், ஆவணப்படங்கள், கருத்தரங்குகள், விழாக்கள்.

இதெல்லாம் உங்கள் மனதில் இருந்திருக்கின்றன. ஆனால் அன்றைக்கு என்னைப்போல சிறுமையுடன் உங்களை வசைபாடி, கேலிசெய்தவர் நிறையபேர். அவர்களில் பலர் சின்னச்சின்ன எழுத்தாளர்கள். ரிட்டையர்ட் எழுத்தாளர்கள். இன்றைக்கு அவர்களுக்கு உண்மை தெரியும். அவர்கள் செய்த சின்னத்தனம் தெரியும். ஆனால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நான் சாமானியன், ஆகவே ஒப்புக்கொள்ள எந்த தயக்கமும் இல்லை. நீங்கள் பெரிய கனவுகளுடன் இதை செய்யும்போது உங்களுக்கே தெரிந்திருக்கும் இதெல்லாம் நனவாகும் என்று. ஏனென்றால் நீங்கள் செயல்வீரர், சும்மா சொல்லிக்கொண்டிருப்பவர் அல்ல. அப்படியென்றால் இப்படி கேலிசெய்தவர்களைப்பற்றி மனசுக்குள் என்ன நினைத்திருப்பீர்கள்?

மன்னிப்புகேட்டு ஒரு குறிப்பு எழுதவேண்டுமென்று போன ஆண்டே நினைத்தேன். அப்போது எனக்கு கொரோனா. நிறைய பயந்துவிட்டேன். அப்பா வேறு தவறிவிட்டார். இன்றைக்கு எழுத வாய்த்தது. இன்றைக்கு எழுத இன்னொரு காரணம் விக்ரமாதித்யன். அவரைப்பற்றியும் நான் வசைபாடி எழுதியிருக்கிறேன். நசிவு இலக்கியவாதி, குடிகாரன், பிச்சைக்காரன் என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். ஆணவம், சின்னத்தனம் என்றுதான் சொல்லுவேன். இன்றைக்கு வாசிக்கையில் அவருடைய கவிதைகளில் ஒரு பெரிய ஞான உலகத்தைக் கண்டுகொண்டிருக்கிறேன்.

எவ்வளவு அனுபவம் வந்திருந்தால் இப்படி எழுதமுடியும். எழுதியவை சின்னச்சின்ன வரிகள்தான். ஆனால் அதற்குப்பின்னால் தீயில் உருகிய வாழ்க்கை அனுபவம் உள்ளது.

நீலத்தை சூடிக்கொண்டது வானம்
பச்சையை ஏந்திக்கொண்டது வயல்
கறுப்பை வாங்கிக்கொண்டது கொண்டல்
வெண்மையை வாங்கிக்கொண்டது பருத்தி
மஞ்சளை அப்பிக்கொண்டது சந்தனம்
பழுப்பை அணிந்துகொண்டது மரம்
சிவப்பை வரிந்து கொண்டது ரத்தம்
ஏழு வண்ணங்களிலும் கொஞ்சம் திருடி
எடுத்துக்கொண்டது இந்திர தனுசு
இவனுக்கென்று இல்லாமல் போயிற்று
தனி ஒரு நிறம்.

இந்த வரிகளில் என்ன இருக்கிறது என்று தோன்றும். ஆனால் இந்த வரிகளை சொல்பவன் வாழ்க்கை முழுக்க அலைந்த ஒரு கவிஞன். இங்கே எல்லாவற்றையும் வரையறைசெய்து வைத்திருக்கும் இயற்கை மனித மனசை மட்டும் மேகம்போல அழிந்து அழிந்து உருமாற வைத்திருக்கிறது. அந்த மனசை பிரம்மாண்டமாக ஏந்தியிருக்கும் கவிஞனை அலையவைக்கிறது.

இந்த வரிகளில் உள்ள ஒரு அழகை கொஞ்சநாள் கழித்துத்தான் கண்டுகொண்டேன். இந்திரனின் வில் எல்லா நிறமும் கொண்டது. எல்லாவற்றிலும் இருந்து நிறங்களை எடுத்துக்கொண்டது. அதுவும் அழிந்துகொண்டே இருப்பது. ஆனால் அது தெய்வத்துக்குரியது. இங்கே கவிஞனுக்கு நிறமே இல்லை. எதிலிருந்தும் அவன் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. நிறமே இல்லாத வானவில் போன்றவன் கவிஞன்.

இன்றைக்கு விக்ரமாதித்யனின் துக்கத்தையும் துக்கத்தின் உச்சத்தில் வரும் தர்சனத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவருக்கு விஷ்ணுபுரம் விருது கொடுப்பது கொடுப்பவர் பெறுபவர் இருவரையுமே பெருமைப்படுத்துவது. வாழ்த்துக்கள்.

என்.பட்டாபிராமன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2021 11:31

‘கல்பொருசிறுநுரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல்தொடரில் 25ஆவது நாவல் ‘கல்பொருசிறுநுரை’. மானுட வாழ்வு நீர்க்குமிழியின் வாழ்வுக்கு ஒப்பாகவே இருக்கிறது. நீர்க்குமிழி மிகச் சிறிய நேரத்தில் தன் மீது நிறப்பிரிகையாக ஏழு வண்ணத்தையும் வானத்தையும் காட்டி, மின்னி, மகிழ்ந்து, மெல்நடனமாடி, மெல்ல நடுங்கி, உலைந்து, உடைந்து சிதறுகிறது. துவாரகையும் அவ்வாறே ஆகிறது.

இந்த உலகில் ஒட்டுமொத்த வாழ்வும் அவ்வாறே, நிலையற்றதாகவே இருக்கிறது. இதனை மனித மனம் அறிந்திருந்தும் அதைப் புறக்கணித்து, ‘தன்னால்தான் எல்லாம்; தனக்குத்தான் எல்லாம்’ என்ற இறுமாப்பில் துள்ளிக் குதிக்கிறது. அந்தத் துள்ளலும் சிறுபொழுதுதான் நீடிக்கும் என்பதையும் மனித மனம் மறந்துவிடுகிறது.

நீர்க்குமிழிக்குத் தெரியாது தான் எப்போது உடைந்து சிதறுவோம் என்பது. ஆனால், மனிதனுக்குத் தெரியும். ஆனால், அவன் அதைப் பொருட்படுத்துவதில்லை. தன்னைத் தானே விரும்பி அழித்துக்கொள்ளும் புதுமையான உயிரினம்தான் ‘மனித இனம்’. அஸ்தினபுரியின் முற்றழிவைப் பார்த்த பின்னரும் துவாரகை மனந்திருந்தவில்லை என்பதைக் கொண்டே, நாம் இதனைப் புரிந்துகொள்ளலாம். மனித மனத்தைப் போல விந்தையான ஒன்றை இந்த உலகில் காணவே முடியாது.

இந்த நாவலுக்கான தலைப்பினை நாம் குறுந்தொகை பாடலில் காணமுடிகிறது.

காமந் தாங்குமதி யென்போர் தாம

தறியலர் கொல்லோ அனைமது கையர்கொல்

யாமெங் காதலர்க் காணே மாயிற்

செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்

கல்பொரு சிறுநுரை போல     

மெல்ல மெல்ல இல்லா குதுமே. ( குறுந்தொகை – 290)

காம நோயைப் பொறுத்து ஆற்றுவாயாக என்று வற்புறுத்துவோர் அக்காமத்தின் தன்மையை அறிந்திலரோ? அத்துணை வன்மை உடையவரோ? யாம்! எம் தலைவரைக் காணேமானால் செறிந்த துயர் மிக்க நெஞ்சத்தோடு மிக்க வெள்ளத்தில் பாறையின் மேல் மோதும்nசிறிய நுரையைப் போல மெல்ல மெல்ல இல்லையாவேம். தலைவரது பிரிவு நீட்டிப்பின் என் உயிர் நீங்கும். கற்பொரு சிறுநுரையென்பது எதுகை நயத்துக்காகக் ‘கல்பொருசிறுநுரை’ எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நுரை கல்லில் மோதுந்தோறும் சிறிது சிறிதாகக் கரைதலைப் போலத் தலைவர் பிரிவை எண்ணுந்தோறும் உயிர் தேய்ந்தொழியும் என்கிறார். இந்த உவமையின் சிறப்பினால் இந்தச் செய்யுளை இயற்றிய நல்லிசைப் புலவர் ‘கல் பொரு சிறுநுரையார்’ என்னும் பெயரைப் பெற்றார்.

 “ஆம், தோரணவாயில் வரைக்கும் இந்நகரின் முழு நிலமும் நீருக்குள் சென்றுவிடும்” என்றார் சுப்ரதீபர். “ஏன்?” என்று ஃபானு கேட்டார். “இது அமைந்திருக்கும் பாறைகள் இரண்டு திசைகளிலாக விலகிவிட்டன. நிலையழிந்து அவை கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. இரண்டு யானைகளின் அம்பாரிகளாக இந்நகரம் அமைந்திருந்தது. யானைகள் இறங்கி ஆழத்தில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. அம்பாரிகள் மட்டும் எவ்வாறு இங்கிருக்க முடியும்?”

‘துவாரகை’ வெறும் அம்பாரிதான். இளைய யாதவர் அமர்ந்திருக்கும் வரை அந்த அம்பாரி நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அவர் இறங்கிச் சென்ற பின்னர், தன் நிலையழியத் தொடங்கிவிட்டது. கல்மீது நிற்கும் சிறு நுரைக்குமிழி போன்ற துவாரகை முற்றிலும் அழிந்துபடுவதை விவரிக்கும் இந்த நாவலுக்குக் ‘கல்பொருசிறுநுரை’ என்று தலைப்பு வைத்திருப்பது முற்றிலும் பொருந்தக் கூடியதே!

இந்த நாவலைக் குறித்து எழுத்தாளர் தன்னுடைய எண்ணப் பதிவை வெளியிட்டுள்ளார். அது இங்கு நமக்குப் புதிய வகையிலான புரிதலை நல்கும் என்று நம்புகிறேன்.

“வெண்முரசின் நாவல் நிரையில் நான் எழுத எண்ணும்போதே தயங்கிப் சொல்பின்னெடுத்த நாவல் இதுதான், கிருஷ்ணனின் மறைவுவரை செல்லும் கல்பொருசிறுநுரை. இந்த இருபத்தைந்தாயிரம் பக்கங்களில் திரட்டி எடுக்கப்பட்ட பேராளுமை. அவன் சொல்லே, இந்நாவலின் சுடர். ஆனால், அவனுடைய குலச்சரிவை, குடியழிவை, நகர்மறைவை, அவன் அகல்வை புராணங்கள் சொல்லத்தான் செய்கின்றன. அது ஊழ் என்பதனால், பிரம்ம வடிவானவனும் அதற்குக் கட்டுப்பட்டவனே என்பதனால். மகாபாரதம் சொல்லும் நெறிகளில் முதன்மையானது என்னவென்றால், ‘இங்குள்ள ஒவ்வொன்றும் ஒரு  துலாத்தட்டில் உள்ளது’ என்பதே. ஒன்று பிறிதொன்றை நிலைநிறுத்துகிறது. ஒன்றின் நிலையழிவு பிறிதொன்றை நிலையழியச் செய்கிறது. மகாபாரதப் பெரும்போரில் மாபெரும் குடியழிவை உருவாக்கியவன் அதற்கான விலையைத் தான் கொடுப்பதன் சித்திரம் இது. கொடுக்கவேண்டுமென அவன் அறிந்திருந்தான், அவனே அதை தரிசனம் என முன்வைத்தவன். ஆகவே, அவன் அதை அளித்தான். அவன் கண்முன் மறைந்தன எல்லாம். அவன் துயருற்றிருப்பானா? துயர் அவனுக்கு உண்டா? இருந்திருக்கலாம், பெருந்தந்தையர் துயர்கொண்டவர்கள். ஆனால், அவன் அதற்கும் அப்பால். துளிகளை, அலையைக் கடலை மட்டுமல்ல புவியை ஒரு துளியெனக் காணும் தொலைவு திகழும் பார்வைகொண்டவன். அவனுக்குக் கல்பொருசிறுநுரைக் குமிழிதான் அவனேகூட. எழுத எண்ணியபோது வந்தமைந்த ‘கல்பொருசிறுநுரை’ என்னும் சொல் என்னை ஊக்கியது. அச்சொல்லைப் பற்றிக்கொண்டே இதை எழுதி முடித்தேன். இதன் முழுமை நிகழ்ந்தபோது வெண்முரசிலிருந்து முற்றிலும் விடுபட்டுவிட்டேன்.”

உண்மையிலேயே எழுத்தாளர் வெண்முரசிலிருந்து விடுபட்டுவிட்டார். ஆனால், வாசகர்கள் ஒருபோதும் இந்த வெண்முரசிலிருந்து விடுபடவே முடியாது. ஆம்! அதுதான் ஊழின் திட்டம். அதுவே, நமக்குக் கொடையும்கூட என்பேன்.

இளைய யாதவருக்கு எட்டு மனைவியர். இளைய யாதவரின் மகன்கள் எண்பதுபேர். அதில் மூன்று மகன்கள் மட்டுமே துவாரகையின் மணிமுடியைச் சூடும் தகுதியைக் கொண்டுள்ளனர். ஆனால், எண்பதுபேரும் துவாரகையை ஆளவே விழைவு கொண்டுள்ளனர். இளைய யாதவரின் மகன்களுள் ஒருவரான முரளி மட்டும் இவர்களை விட்டு விலகி இருக்கிறார். அவர் தன் தந்தையான இளைய யாதவருக்கு இணையாகக் குழலிசைக்கும் மாற்றுத் திறனாளியாகப் பின்னாளில் அறியப்படுகிறார்.

துவாரகை சத்யபாமையின் ஆட்சியிலிருந்தது. பின்னாளில் அது துரியோதனனின் மகள் கிருஷ்ணையின் ஆளுகைக்கு உட்படுகிறது. பின்னர், இளைய யாதவரின் மகன்கள் துவாரகையை முழுதாள எண்ணுகிறார்கள். அவர்களுள் மூத்தவர் ஃபானு. அவரை எதிர்க்கவும் ஆதரிக்கவும் அவரின் தம்பியரும் துவாரகை மக்களும் திரள்கிறார்கள்.  இளைய யாதவரின் மகன்கள் அனைவருமே தன் தந்தையை வெறுக்கிறார்கள். அவரைப் போருக்கு அறைகூவிக் கொல்லவும் ஆயத்தமாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் அஸ்தினபுரியின் முற்றழிவுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்த கணிகர் துவாரகைக்கு வருகிறார். அவரின் எண்ணம், துவாரகையையும் முற்றழித்தலே!

இந்நகரை அழிக்கவேண்டும். அதற்கான வழியை நான் கூறுகிறேன் என்று கணிகர் சொன்னார். அழிப்பதென்றால் ?” என்றேன். இந்நகரின் ஒவ்வொரு அடித்தளமும் நொறுங்க வேண்டும். ஒவ்வொரு மாளிகையும் சரிய வேண்டும். இந்நகர் கடல்கொண்டு மறைய வேண்டும். நான் மூச்சு இறுக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவருடைய இனிய புன்னகை விரிந்தது. ஒரு குமிழியென இது மறைய வேண்டும். கல்பொருசிறுநுரை என என்றார் கணிகர்.

கணிகர் ஒரு நச்சுநிழல். அந்த நிழல் எங்குப் படிந்தாலும் அந்த இடம் பாழ்தான். அந்த நிழல் எவர் மீது படிந்தாலும் அவர் தன்னைச் சுற்றியிருப்பவரையும் அழித்து, தன்னையும் அழித்துக் கொள்வார். எல்லாவற்றையும் அழித்துவிட்டு இறுதியில் கணிகர் இளைய யாதவரின் பாதங்களில் சரணடைகிறார். ஒருவகையில் பார்த்தால் இளைய யாதவர் கணிகரையும் தன்னுடைய படைக்கலமாகவே கையாண்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

கிருதவர்மரும் ருக்மியும் துவாரகைக்கு ஒருவகையில் ஆதரவாகவும் பிறிதொரு வகையில் எதிர்ப்பாகவும் இருக்கிறார்கள். இளைய யாதவரையும் அவரின் மனைவியர் மற்றும் மகன்களையும் ஒன்றிணைக்க சாத்யகி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறார். அவரும் கிருதவர்மரும் இணைந்து துவாரகையின் பிதாமகர் நிலையில் அமர்ந்து, இளைய யாதவரின் மகன்களை ஒன்றிணைக்கின்றனர். அந்த ஒற்றுமை கணிகரின் அதிசூழ்ச்சியால் சிதறுகிறது. இளைய யாதவரின் மகன்கள் ஒருவரையொருவர் அழித்துக்கொள்கின்றனர். துவாரகையில் ஆழிப்பேரலை எழுகிறது. கணிகர் எண்ணியது போலவே அனைத்தும் நிகழ்கின்றன.

இப்போது சீற்றம்கொண்டிருப்பது கடல். கடலை அறிந்தவர்கள் கடலோடிகள். முதிய கடலோடிகள் எழுவரை நான் அழைத்துவரச் சொன்னேன். அவர்கள் எண்ணுவதைக் கேட்டேன். இந்த நிலஅதிர்வு கடலுக்குள் இருந்து வந்திருக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள். ஆகவேதான் நிலம் நடுங்கியபோது அலைகள் பெரிதாக எழவில்லை. ஆகவே , இது முழுமையாகவே கடல்சார் நிகழ்வு என்றார். அவர்கள் சில குறிகளைத் தேர்ந்து சொன்னார்கள். கடல் உள்வாங்கியிருக்கிறது. திறந்த வாய்க்குள் நாக்கு உள்வளைவது போன்றது அது. வாய் விழுங்க வருகிறதென்றே பொருள். நகரிலிருந்து அத்தனை காகங்களும் பறவைகளும் அகன்றுவிட்டன. அதைவிட , கடலோரத்தில் கடற்காகங்கள் ஒன்றுகூட இல்லை. கடலில் இருந்து எதுவோ வரவிருக்கிறது. எதுவென்று சொல்ல எவராலும் முடியாது. அது இங்கு வராமல் திசைமாறிப் போகலாம். ஒன்றும் நிகழாமலும் போகலாம். ஆனால் இது எச்சரிக்கை” என்று கிருஷ்ணை சொன்னார்.

இந்த உரையாடலில்,

கடல் உள்வாங்கியிருக்கிறது. திறந்த வாய்க்குள் நாக்கு உள்வளைவது போன்றது அது. வாய் விழுங்க வருகிறதென்றே பொருள்.

என்ற இந்த வரிகள் மிக முக்கியமானவை என்று கருகிறேன். ‘சுனாமி’ (ஆழிப் பேரலை) பற்றிய நுட்பமான, மிகப் பொருத்தமான உவமையை எழுத்தாளர்  எழுதியிருக்கிறார். இதனை வாசகர்கள் எண்ணி எண்ணி வியக்கலாம்.

ஃபானு சினத்துடன் உமது உளப்பதிவென்ன ? அதை சொல்லுங்கள் என்றார். அதன் பின்னரே சுப்ரதீபர் ஃபானுவின் உளநிலையை புரிந்துகொண்டார். அரசே , இந்நகர் அழிந்துகொண்டிருக்கிறது. இனி எத்தனை நாட்கள் என்பதே வினா என்றார். நாட்கள் என்றால் ?” என்றார் ஃபானு. எனது கணிப்பின்படி இன்னும் மூன்று நாட்களில் பெரும்பாலான துவாரகையின் பகுதிகளுக்குள் நீர்புகும். பதினைந்து நாட்களுக்குள் துவாரகையின் அனைத்துக் கட்டடங்களும் நீருக்குள் மூழ்கிச் செல்லும். இன்னும் ஒரு மாதத்திற்குள் துவாரகையின் தோரண வாயில் வரைக்கும் கடல் நீர் சென்று அடிக்கும் என்றார் சுப்ரதீபர்.

இந்த நாவலில் அக்கால சுனாமியை நம்மால் கண்டுணர முடிகிறது. அந்த வகையில் தன்னுடைய சொல்லுளியால் காட்சிகளைத் தொடராகச் செதுக்கி எழுதியுள்ளார் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள்.

பொ.யு.மு. 426 ஆம் ஆண்டிலும் பொ.யு.மு. 365 ஆம் ஆண்டிலும் உலகில் ஏற்பட்ட சுனாமிகள் பற்றிய எழுத்தாதாரங்கள் கிடைக்கின்றன. பொ.யு. 1755, பொ.யு.1883, பொ.யு.1929, பொ.யு.1946, பொ.யு.1950, பொ.யு.1958, பொ.யு.1960, பொ.யு.1964, பொ.யு.1998, பொ.யு.1999, பொ.யு.2001,  ஆகிய ஆண்டுகளில் உலக அளவில் சுனாமிகள் ஏற்பட்டுள்ளன. அவற்றின் பாதிப்பு பற்றிய விரிவான செய்திகளை அறிய முடிகின்றது.

கடலுக்குத் தமிழில் ‘முந்நீர்’ என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் நாற்பது இடங்களில் ‘முந்நீர்’ என்ற சொல் வருகிறது (பார்க்க – புறநானூற்றுப் பாடல் எண்கள் 9, 13, 20, 30, 35, 60, 66, 137, 154).

“நிலத்தைப் படைத்தலும். காத்தலும். அழித்தலுமாகிய மூன்று தொழில்கள் உடைமையின் முந்நீர்”

என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகிறது. ஆகவே, கடலின் அழிவுசக்தி குறித்தும், ‘சுனாமி’ எனப்படும் ராட்ஷதப் பேரலைகள் குறித்தும் தமிழர்களுக்கு முன்பே தெரியும். நிலத்தைப் படைப்பதும் அழிப்பதும் கடல்தான். ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற திருக்குறள் அடியினை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழை வளர்க்க அமைக்கப்பட்ட முதலிரண்டு தமிழ்ச் சங்கங்களையும் கடல் விழுங்கியதால் தற்போதுள்ள மதுரையில் மூன்றாவது தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது.

இந்த ‘சுனாமி’யைக் “கடல்கோள்” என்று பழைய உரைக்காரர்கள் குறிப்பர். தென்மதுரையையும் கபாடபுரத்தையும் கடல் விழுங்கியதால் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இறையனார் களவியலுரையும் அடியார்க்கு நல்லாரின் உரையும் இதைப் பற்றி விளக்கமாகப் பேசுகின்றன. தமிழ் இலக்கியங்களில் உள்ள சில குறிப்புகள் பழந்தமிழகத்தைத் தாக்கிய பெரிய சுனாமி பற்றிக் குறிப்பிட்டுள்ளன.

“மலிதரை யூர்ந்துதன்மண்கடல் வௌவலின்

மெலிவின்றி மேற்சென்றுமேவார் நாடிடம்படப்

புலியோடு வின்னீக்கிப்புகழ்பொறிந்த கிளர்கெண்ட

வலியினான் வணக்கியவாடாச்சீர்த் தென்னவன்”

(கலித்தொகை – 104)

முற்காலத்தில் கடல்பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. அருகிலுள்ள சேர, சோழ நாடுகளை வென்று புலிக்கொடி, வில்கொடியை நீக்கி அவற்றைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான்.

தற்காலத் தமிழர்கள் அறிந்த சுனாமிகள் இரண்டு. ஒன்று, 22.12.1964 ஆம் நாள் தனுஷ்கோடியைத் தாக்கிய சுனாமி (ஆழிப் பேரலை). இரண்டு, 26.12.2004 ஆம் நாள் சென்னை உள்ளிட்ட கடலோரத் தமிழகத்தைத் தாக்கிய சுனாமி. இரண்டும் இப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன. இவற்றை அறிந்தவர்கள் துவாரகையைத் தாக்கிய சுனாமியைப் பற்றியும் அதன் பேரழிவுகளைப் பற்றியும் எளிதில் உய்த்துணர முடியும்.

தகுதிப்படி மணிமுடி சூடப்படவேண்டும் என்று அவர் எண்ணுவது உண்மை என்றால் , மணிமுடியை வெல்லும் திறன்கொண்டவரே சூடும் தகுதிகொண்டவர் என்று அவர் சிசுபாலரின் அவையில் எழுந்து கூறியது அவர் முன்வைக்கும் மெய்மை என்றால் , பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் செய்தொழில் வேற்றுமையால் சிறப்பு அமையும் என்று தன் இறைப்பாடலில் அவர் கூறிய வரி மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டுமென்றால் , நாங்களே இங்கு முடிசூட வேண்டும். எங்கள் மணிமுடியை உறுதி செய்வதனூடாகவே தான் உரைத்த வேதத்தின் சொல்லைத் தன் வாழ்க்கையால் அவர் நிறுவுகிறார். அவரிடம் கூறுக , நோக்கிக் கொண்டிருக்கிறது பாரதவர்ஷம்! அவர் எடுக்கப்போகும் முடிவென்ன என்று அது காத்திருக்கிறது என்று சுமித்ரன் கூவினார்.

இந்த உரையாடலில்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். (திருக்குறள் – 972)

‘பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்’ என்ற திருக்குறள் செய்தி இழையோடியுள்ளது.

இந்த நாவலில் அரச மரபு சார்ந்த ஒரு வழக்காறு சுட்டப்பட்டுள்ளது.  குழந்தைக்கு வீரமரணம் அளிக்கும் நிகழ்வு சார்ந்தது அது.

அந்நகர் அழிய வேண்டுமென்று அரசமுனிவர் வந்து தீச்சொல்லிட்டுச் சென்றார் என்று சூதர்கள் கதை பெருக்கினர். ஊன்தடி பிறக்கும். வாள் போழ்ந்து புதைப்பர். முளைத்தெழுந்து பெருகும். முற்றழித்து செல்லும் என்ற சொல் நிலைகொண்டது.

இந்த வழக்காறினைப் புறநானூற்றில் காணமுடிகிறது. குழந்தை பிறந்து இறந்தாலும் உறுப்பில்லாத சதைப் பிண்டம் பிறந்தாலும் முதுமை எய்தியோ அல்லது நோயுற்றோ இறந்தாலும் நெஞ்சில் வாளால் காயம் செய்து அடக்கம் செய்யும் அரச மரபு இருந்துள்ளது.

குழவி  இறப்பினும்  ஊன்தடி  பிறப்பினும்

ஆள்அன்று  என்று  வாளின்  தப்பார்

தொடர்ப்படு  ஞமலியின்  இடர்ப்படுத்து  இரீஇய

கேளல்  கேளிர்  வேளாண்  சிறுபதம்

மதுகை  இன்றி  வயிற்றுத்தீத்  தணியத்

தாம்இரந்து  உண்ணும்  அளவை

ஈன்மரோ  இவ்  உலகத்  தானே. (புறநானூறு – 74).

குழந்தை பிறந்து இறந்தாலும் இறந்த உறுப்பில்லாத சதைப் பிண்டமாக பிறந்தாலும் அதனையும் ஓர் ஆளாகக் கருதி, வாளினால் காயம் செய்து அடக்கம் செய்யும் மரபில் வந்து; இன்று, பகைவரின் வாள் பட்டு இறக்காமல், சங்கிலியால் கட்டப்பட்ட நாயைப் போல துன்பப்பட்டு, பகைவரின் உதவியால் கிடைக்கும் தண்ணீரை, மனவலிமையின்றி, வயிற்றுப் பசியை தணிக்க, கையேந்தி இரந்து உண்ணும்படி உடையவரை, அத்தகைய அரச மரபினர் பெறுவார்களோ இவ்வுலகத்தில்?  என்று கேட்கிறது இந்தப் பாடல்.

இந்த நாவலில் ஒரு புதுமை உள்ளது. சாத்யகி, பிரதிபானு, சோமன், ஸ்ரீகரர் ஆகியோர் தனித்தனியே இளைய யாதவரைச் சந்தித்து உரையாடுவதன் வழியாகத் துவாரகையில் நடந்தவை அனைத்தும் வாசகருக்குக் காட்சிகளாகக் காட்டப்பட்டுள்ளன. ஒருவகையில் பார்த்தால் இந்த நாவல் முழுக்கவே நீண்ட உரையாடல்களின் தொகுப்புதானோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. இளைய யாதவரை மீண்டும் துவாரகைக்கு எழுந்தருளச் செய்யும் உருக்கமான மன்றாடல்கள். ஆனால், இவற்றுக்கு அப்பால் தன் மனத்தை வைத்திருந்தார் இளைய யாதவர். அவர் யுகத்தின் முடிவில் நின்றுகொண்டிருந்தார்.

இளைய யாதவரின் மகன்களுள் சிலர் துவாரகையின் கருவூலத்தோடு புதிய நிலத்துக்குப் புலம்பெயர்கின்றனர். செல்லும் வழியில் மக்களிடையே கலவரம் எழுகிறது. பலர் இறக்கின்றனர். அவர்கள் பிரபாசக்ஷேத்ரத்திற்கு வருகின்றனர். புதிய நிலத்தில் காலூன்றுகின்றனர். அது எந்த வகையிலும் அவர்களுக்கு வாழ்வளிக்காத நிலமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அதில் வாழ முற்படுகின்றனர் இளவேனில் விழாவைக் கொண்டாடுகின்றனர். கள்மயக்கில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொல்கின்றனர்.

இந்த நாவலில் மீண்டும் ஒரு சூதாட்டம் நிகழ்கிறது. அஸ்தினபுரியில் நடைபெற்ற சூதாட்டத்தில் சகுனி கள்ளாட்டம் ஆடினார். மூத்த யாதவரான பலராமருக்கும் ருக்மிக்கும் இடையே மதுராவில் நடைபெற்ற இந்தச் சூதாட்டத்தில், ஊழே கள்ளாட்டம் ஆடுகிறது. அதன் விளைவாக ருக்மி கொல்லப்படுகிறார்.

‘வெண்முரசு’ நாவல்தொடரில் இந்த நாவல் தனித்ததொரு சரித்திர நாவலாக நிலைகொண்டுள்ளது என்பேன். இந்த நாவலை அப்படியே ஒரு சரித்திரத் திரைப்படமாக எடுக்கலாம். பார்வையாளர்களுக்குத் திகட்ட திகட்டக் கொடுக்கும் அளவுக்குச் சூழ்ச்சிகளும் வஞ்சங்களும் திடீர்த் திருப்பங்களும் இந்த நாவலில் நிறைந்துள்ளன.

முனைவர் . சரவணன், மதுரை

‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்

‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் 

கிராதம் முனைவர்  முனைவர் ப சரவணன் மதுரை

சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2021 11:30

September 5, 2021

ஆசிரியர்கள் என்னும் களப்பலிகள்

அன்புள்ள ஜெ,

வணக்கம். உங்கள் தளத்தில் ஏற்கனவே ஆசிரியர் தேர்வு முறை குறித்த கட்டுரை ஒன்றை பகிரக் கேட்டிருந்தேன், நீங்களும் செய்தீர்கள்: ஆசிரியர் தேர்வு முறை

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் தனியார் கல்வி நிறுவனப் பணியாளர் நிலை பற்றி ஆய்வு செய்த அருண் கண்ணன் மற்றும் கிஷோர்குமார் சூர்ய பிரகாஷ் இணைந்து எழுதிய கட்டுரை, கடந்த ஜூலையில் தி இந்து ஆங்கிலப்பதிப்பில் வெளிவந்தது.

சென்னைப் பல்கலைக்கழகஉறுப்புக்கல்லூரிகளில் பணிபுரிபவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது என்னவென்றால் அவர்களுக்கு எந்த ஒரு அடிப்படைப் பணிப் பாதுகாப்போ, ஊதிய வரம்போ, தொழிலாளர் நலத்திட்ட உதவிகளோ இல்லை என்பதாகும். கோவிட் தொற்றுக்கு முன்பிருந்தே பத்தாயிரத்திற்குக் கீழ் ஊதியம் பெறும் அவலநிலை. கூடவே இணைய வழிப் பயிற்றுவித்தலுக்கென உருவாகும் செலவும், ஊதியக்குறைப்பும் அவர்களில் பலரை கூலித்தொழிலுக்குத் தள்ளியிருக்கிறது.

பனை ஏறும் தொழிலுக்குச் சென்ற ஆசிரியர் ஒருவர் பலியானதுதான் ஆய்வாளர்களை அவர்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. ஒரு மாநிலத்தின் தலை நகரிலேயே, சென்னைப் பல்கலை உறுப்புக் கல்லுரிகளிலேயே இந்நிலை என்றால் மற்ற இடங்களைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. பெரும்பாலான தனியார் பள்ளி/கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்/ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கடும் சுரண்டலுக்கு உள்ளாகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் அந்நிறுவனகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் நெடுங்காலம் புதுப்பிக்கப்படவில்லை என்பதாகும்.

அரசு, தனியார் எனப் பாரபட்சமின்றி உயர் கல்வித்துறைக்கு பல சீர்திருத்தங்கள் அவசியப்படும் காலகட்டம் இது. உங்கள் தளத்தில் இது தொடர்பான விவாதம் துவங்கினால் அதற்கு வழிகோலும் என நம்புகிறேன்.

தி இந்து கட்டுரை:

Weighing down the private unaided college teacher

கட்டுரையின் தமிழ் வடிவம்: கோவிட் பெருந்தொற்றும் தனியார் கல்வி நிறுவனப் பணியாளர் நிலையும்

சத்தியம் தொலைக்காட்சியின் செய்தித்தொகுப்பு: 

நன்றி,

விஜயகுமார்.

***

அன்புள்ள விஜயகுமார்,

உண்மை. என்னுடைய வாசகர்கள், நண்பர்களில் சென்ற கோவிட் காலகட்டத்தில் நிராதரவாக விடப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தனியார்க் கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள்தான். இந்திய வரலாற்றில் பொதுக்கல்வி முறை அறிமுகமான இருநூறாண்டுகளில் இன்றுபோல ஆசிரியர்கள் இத்தனை பரிதாபகரமான நிலையில் எப்போதும் இருந்ததில்லை. உலகில் எந்நாட்டிலும் ஆசிரியர்கள் இத்தனை குறைவான ஊதியத்திற்குப் பணியாற்றும் நிலை இருக்க்காதென்றே நினைக்கிறேன்.

தமிழகத்தின் பொறியியல்கல்வியின் தரவீழ்ச்சி பற்றிப் பேசுகிறார்கள். அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்பது. தரமான ஊதியமே தகுதியான ஆசிரியர்களை அளிக்கிறது. தனியார்க்கல்விநிறுவனங்களை அரசு கட்டுப்படுத்தவேண்டிய காலம் அணுகிவிட்டது. இல்லையேல் இங்கே கல்வி என்பதே இல்லாமலாகிவிடக்கூடும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2021 11:35

விக்ரமாதித்யன், ஒரு மதிப்புரை

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு

வணக்கம். நலம்தானே?

விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட இருப்பது குறித்து மிகவும் மகிழ்கிறேன். பெரும்பாலும் அமைப்புகளால் புறக்கணிக்கப்பட்ட ஆனால் தகுதி வாய்ந்தவர்களுக்குத்தான் விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதின் வெளிச்சம் அவர்கள் மீது விழுந்தபின்னரே ஊடகங்களும் இலக்கிய அமைப்புகளும் அவர்களைத் திரும்பிப் பார்க்கின்றன. அவர்களுக்கு விருதுகளும் வழங்குகின்றன. உதாரணமாக வண்ணதாசன் மற்றும் ஆ.மாதவன் ஆகியோருக்கு இவ்விருதுக்கு அறிவிக்கப்பட்ட பிறகுதான் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

விக்ரமாதித்யன் எனும் நம்பிராஜனை இன்னும் சொல்லப்போனால் அண்ணாச்சி என அனைவரும் பாசத்தோடும் உரிமையோடும் அழைக்கும் கவிஞரை நான் பல ஆண்டுகளாக அறிவேன். எப்படியோ அவர் முகவரி கிடைத்து அவருக்கு நான் நடத்தும் சங்கு இதழை அனுப்பி வைத்தேன். அடுத்த பத்து நாள்கள் கழித்து அவரிடமிருந்து ஓர் உறையில் சங்கிற்காக ஏழெட்டுக் கவிதைகள் வந்தன. ஒவ்வொன்றாய் வெளியிட்டேன்.

கவிஞர் தேவதேவனும் இதுபோலத்தான் எப்பொழுதும் ஆறேழு கவிதைகலை அனுப்பி வைப்பார். கவிதைகள் அனைத்தும் வெளியிட்டான பின் மீண்டும் கவிதை கேட்டு எழுதினால் இருவரும் உடனே அனுப்பி வைப்பார்கள். அண்ணாச்சியின் எழுத்துகள் மிகப்பெரிதாக ஒரு பக்கத்திற்குப் பதினைந்து வரிகள் எழுதும் அளவிற்கு இருக்கும். அவர் எழுத்துகள் அவற்றைப் படித்துப் பழகியவர்க்குத்தான் எளிதில் விளங்கும். சங்கு இதழுக்குக் கவிதைகள் அனுப்புவதோடு கவிதைகள் பற்றிய கட்டுரைகளும் அனுப்புவார். பசுவய்யா, சி.மணி ஆகியோரின் கவிதைகள் பற்றி அவர் எழுதி அனுப்பிய கட்டுரை சங்கு இதழில்  வெளிவந்தது.

அவரின் புதிய நூல் வெளிவந்தவுடனேயே இரண்டு படிகள் எனக்கு அனுப்புவார். நான் அவற்றைப் படித்து அவருக்கே மதிப்புரைகள் எழுதி அனுப்புவேன். அவர் அதைப்படித்து விட்டு இன்ன இதழுக்கு அனுப்புங்கள் எனக் கூறுவார். அது போன்ற மதிப்புரைகள் தீராநதியில்  வெளிவந்தன. சங்கு இதழ் கிடைத்தவுடன் சில சமயம் பேசுவார். அவர் கவிதைகள் குறித்து நானும் லக்ஷ்மி மணிவண்ணனும் சென்னை இலக்கியவேல் ஆசிரியர் சங்கர சுப்பிரமணியனுடன் அலைபேசி வழியில் கலந்துரையாடியது பதிவு செய்யப்பட்டு இலக்கியவேல் இதழில் வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டபின் அவரிடம் அலைபேசியில் பேசிப் பாராட்டினேன். மிகவும் உற்சாகமாகப் பேசினார். “உங்களைப் போன்றோர்க்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். சங்கு போன்ற சிற்றிதழ்கள்தான் எனக்குத்தளம் அமைத்துக் கொடுத்தன” என்று மனம்திறந்து நன்றி கூறினார். ”எப்பொழுதும் வெளியூர்களுக்குப் பயணம் சென்றுகொண்டிருக்கும் என்னால் இன்றைய சூழலில் வீட்டிற்குள் அடைந்திருக்கவே முடியவில்லை” என்று வருத்தப்பட்டார்,

ஆக விஷ்ணுபுரம் விருது மீண்டும் ஒரு தக்கவரை அதுவும் எனக்கு நெருங்கிய தொடர் கொண்டவரைச் சேர்வது குறித்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி,

வளவ. துரையன் அவரின் நூல்களுக்கு நான் எழுதிய மதிப்புரைகளைத் தேடிப் பார்த்ததில் ஒன்றுதான் கிடைத்தது. அதைத் தங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன். நன்றி

ஒரு யோகியின் சுயசரிதை

[விக்ரமாதித்யனின் “காடாறுமாதம் நாடாறுமாதம்” தொகுப்பை முன் வைத்து]

                 வளவ. துரையன்

சுயசரிதை என்பது என்ன? பிறந்தது முதல் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டுப் போவதன்று. வாழ்வின் இன்றியமையாப் பகுதிகளை சுவாரசியமாக ஆங்காங்கே சொல்லிக்கொண்டு போவதே. யோகி என்பவன் யார்? எப்பற்றுமின்றி எவ்வூரும் சொந்த ஊராகக் கருதாது ஊர் சுற்றி மனம் வெளுப்பாக  நல்லதையே நினைப்பவன். அப்படித்தான் விக்ரமாதித்யனின் “காடாறு மாதம் நாடாறு மாதம்” தொகுப்பை அணுக வேண்டி உள்ளது.

இதில் விக்ரமாதித்யன் தன் அனுபவங்களைத் தம் சிறு வயது முதற்கொண்டு தான் பட்ட இன்பதுன்பங்களை எல்லாம் படிக்கும் விதத்தில் சொல்லிக் கொண்டு போகிறார். கிராமம் முதல் பெருநகரம் வரை அவர் வாழ்ந்து கொண்டுள்ளார். அந்த இடங்களில் தான் கண்ட இடங்களையும் தான் சந்தித்த மனிதர்களையும் அவர் விவரித்துக் கூறுவது மிகவும் சுவாரசியமாக உள்ளது.

கொள்ளிட ஆற்றின் கரையோரம் உள்ள சிற்றூரான மாதிரவேளூரில் விக்ரமாதித்யன் ஏழாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார். அது இலவச உணவு விடுதியுடன் இணைந்த பள்ளியாகும். அந்தக்கிராமம் பற்றி விக்ரமாதித்யன் இப்படி வருணிக்கிறார்.

“ஊருக்கே வடக்கே ஆறு; அதற்கும் முன்னதாகவே வாய்க்கால்; கிழக்கே மாதலீஸ்வரர் கோயில்; மேற்கே பெருமாள் பெருமாள் கோயில்; தெற்கே பள்ளிக்கூடம்; சுற்றிச் சூழவும் வயல்; மின்சாரம் கிடையாது; பேருந்து விடவில்லை; வண்டி, சைக்கிள் வரும் போகும்; மழைக்காலத்தில் உளையாக—சேறும் சகதியுமாக—கிடக்கும், போக முடியாது.”

இதைப்படிக்கும்போது. அக்கிராமமும் அங்குள்ள பள்ளியும் நம் கண்முன் வந்து நிற்கின்றன.

விக்ரமாதித்யனிடம் சில  குணங்கள் இயல்பாகவே உள்ளன. அதாவது துணிச்சல். யாருக்கும் அஞ்சாத நேர்மை; மனத்தில் பட்டதை உடனே பட்டென்று சொல்லி விடுவது. சிறு வயது முதற்கொண்டே இது அவரிடம் இருந்ததை ஒரு நிகழ்ச்சி மூலம் அறிய முடிகிறது. விக்ரமாதித்யனின் தந்தை தலைவன்கோட்டை ஜமீனில் செயலாளராகப் பணி ஏற்கிறார். அருகில் உள்ள வாசுதேவ நல்லூரில் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் விக்ரமாதித்யன் சேர்க்கப்படுகிறார். அவரிடம் ஜமீந்தாருக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. கவிதைகள் எல்லாம் எழுதுவதால் அவரை ஜமீன்தார் “புலவரே” என்றுதான் அழைக்கிறார்.

ஒருமுறை ஜமீன்தார் விக்ரமாதித்யன் தந்தையைப் பற்றி அவரிடம் ஏதோ குறை கூறுகிறார். உடனே விக்ரமாதித்யன், “நீங்க இதை அப்பாட்டேயே பேசுங்க” என்று சொல்லி விடுகிறார். இது கேட்ட ஜமீன்தார் கோபம் கொள்ளவில்லையாம். “இந்தத் துணிச்சலும் நேர்மையும் பெரிய விஷயமாகப் பட்டிருக்கிறது ஜமீன் தாருக்கு. அப்பா வந்ததும் பெருமிதப்பட்டுச் சொல்லியிருக்கிறார்” என்று அவர் எழுதுகிறார். இதில் ஜமீன்தாரின் பெருந்தன்மையும் வெளிப்படுகிறது. அதனால்தான் “கிரகயுத்தம்” எனும் தன் ஆறாம் கவிதைத்தொகுப்பை விக்கி ஜமீன்தாருக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார்.

மேலும் அத்தொகுப்பை ஜமீன்தாரிடம் அவர் நேரே கொண்டு போய்க்கொடுத்து அவரின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டாராம். உடனே ஜமீன்தார் கால்களை அவசரமாகப் பின்னுக்கு இழுத்துக்கொண்டாராம். சிறு வயதில் தான் ‘இதிகாசநாயகன்’ என நினைத்த ஜமீன்தாரை மறக்காத கவிஞரின் மனித நேயமும் அதைவிடத் தன்னைப் பெரிதாக எண்ணாத ஜமீந்தாரின் குணமும் இங்கு போட்டி போட்டுக்கொண்டு வெல்ல நினைக்கின்றன.

எப்பொழுதுமே இதுபோன்ற தன்வரலாற்றுக் குறிப்புகளில் சோகத்தைச் சொல்லிவிட்டு சொன்னவர் மறந்திருப்பதைப்போல நாமும் அதை மறக்க ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோட வேண்டும். அதை இந்நூலில் பார்க்க முடிகிறது.

விக்ரமாதித்யனுக்குப் புலவர் தேர்விற்கானப் புகுமுக நுழைவுத் தேர்வு நெருங்குகிறது. ஆனால் அவர் ஐந்து மாதமாக விடுதிக்கட்டணம் கட்டாததால் [இத்தனைக்கும் அறுநூற்றுச் சொச்சம்தான்; அப்போது அது ஒரு பெரிய தொகைதானே] தேர்வு நுழைவுச் சீட்டு பெற முடியவில்லை. அப்போது அங்கே தமிழறிஞர் வ. வே. சுப்பிரமணியம் வந்தார். அவருடைய அப்பா வேலாயுதம் பிள்ளைதாம் கல்லூரித் தாளாளர். விக்ரமாதித்யன் நேரே வ.வே.சுவிடம் போய் நிலைமையைச் சொல்ல வ.வேசு உடனே எழுத்தரை அழைத்து நுழைவுச் சீட்டு தரச் சொல்கிறார். விக்ரமாதித்யனும் தேர்வு எழுதி இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார். ஆறுமாதத்துக்குப் பின்தான் சான்றிதழை வாங்குகிறார்.

இப்போது அச்சான்றிதழ் பற்றி விக்கி இப்படிக் குறிப்பிடுகிறார். “அது என் வாழ்க்கையில் பயன்பட்டதே இல்லை. கற்றுக்கொண்ட தமிழ், கவிதை எழுத உதவியாய் இருக்கிறது.”

விக்ரமாதித்யன் எல்லாவற்றையும் நல்லன என்றல் ரசிக்கும் மனப்பான்மை கொண்டவர். அவரால் டி.ஆர் மகாலிங்கத்தின் “ஸ்ரீ வள்ளித் திருமணம்” நாடகத்தைப் பாராட்ட முடிகிறது. அதே நேரத்தில் மகாலிங்கம் பாடிய “எங்கள் திராவிடப் பொன்னாடே” பாடலையும் கேட்கக் கொடுத்து வைக்கவேண்டும் என்று எழுத முடிகிறது. இதுபோன்ற அனுபவங்கள் அமையுமென்றால் மனிதப் பிறவி மேன்மையானதுதான் என்கிறார் அவர். அவரே “மிகைக்கூற்றாகப் படலாம்; அப்படியல்ல” என்று சொல்லி விட்டு, புலன்களின் ரஸானுபவத்தை விஞ்சி வேறென்ன இருக்கிறது இந்த வாழ்க்கையில்?” என்று கேட்கிறார். உண்மைதானே?

இந்நூலின் தமிழ்நாட்டுத் தலைவர்களைப் பற்றிய ஓர் இடம் வருகிறது. காமராசரைப் பற்றிச் சொல்லும்போது ”அவரது இலவசக்கல்வியும், மதிய உணவுத்திட்டமும் இல்லையென்றல் நான் எப்படி வாழ்ந்திருப்பேனோ” என்கிறார் விக்ரமாதித்யன். அது மட்டுமன்று; அதற்காக நான் ஏழேழு பிறவிக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன் என்றும் எழுதுகிறார். அத்துடன் தம் மனத்தில் உள்ள தலைவர்கள் பற்றித் துணிந்து இப்படி எழுதுகிறார்.

“மக்களுக்கு நன்மை செய்பவன்தான் தலைவன்; அய்யா பெரியாரும், காமராஜரும், சிலம்புச் செல்வர் ம.பொ.சியும் அப்படிப்பட்ட தலைவர்கள்; அண்ணா நீண்டகாலம் வாழ்ந்திருந்தால் இப்படிச் சொல்ல வாய்ப்பிருந்திருக்கும்”

விக்ரமாதித்யன் ‘அஸ்வினி’ இதழில் வேலை  பார்த்ததைத் தனியாக ஓர் அத்தியாயமே எழுதிச் சொல்கிறார். அது எண்பதுகளில் இந்துமதியை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த மாதமிரு இதழாகும். 250 ரூபாய் மாதச் சம்பளத்தில் வேலை பார்த்த அந்த நாள்கள் அருமையானவை என்று அவர் கருதுகிறார். அத்துடன் அப்பொழுது இதழுக்காக வந்த கீசகவதம் கூத்தின் அழைப்பினால் சென்று அக்கூத்தைப் பார்க்க முடிந்ததை அழியாச் சித்திரமாக எழுதுகிறார். புரிசை கண்ணப்ப தம்பிரானின் மற்ற கூத்துகளையும் அதற்குப் பிறகு அவரால் பார்க்க இயலவில்லை. அதற்காக அவர் வருத்தப்படவுமில்லை; அதுத்கான் விக்ரமாதித்யன். அவர் எழுதுகிறார்.

“அதனாலென்ன? அமிழ்தத்தைக் குவளை குவளையாகப் பருகவேண்டும் என்பது இல்லையே! உள்ளங்கையளவு கிட்டியதே! போதாதா?”

விக்ரமாதித்யன் கண்ணகி கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கு கண்ணகி விக்கிரகம் உடைபட்டு இருப்பதைப்பார்த்து அவர் மனம் வெறுமையாகிறது. அங்கிருக்கும் இயற்கை கூட அவரை இருத்தி வைக்கவில்லை. உடன் கிளம்பி விடுகிறார்.  ”நமது தலைவர்கள் எல்லாருமே இன உணர்வும் மொழியுணர்வும் கொண்tடவர்கள்தாம்; ஆனாலும் கண்ணகி மூளியாகவே நிற்கிறாளே? எந்தக் காலத்தில் நிவர்த்தியாகும் இது” என்று வருத்தப்பட்டு இவ்வாறு எழுதுகிறார்.

தெய்வம் கோரைப்பட்டு இருக்கலாமா

தேசத்துக்கு ஆகுமா இது?

கங்கை வற்றிவிடவில்லை

காவிரிதான் வறண்டு வருகிறது”

நா. காமராசனின் “சோதனை இதழில் பணியில் சேர்ந்த விக்ரமாதித்யன் அவ்விதழ்பற்றி விவரமாகவே எழுதி உள்ளார். அதிலும் காமராசன் பற்றியே மிகுதி. இரண்டு இதழ்களே வந்து அது நின்றுவிட்டது. விக்ரமாதித்யன் அந்த இதழ் தொடர்ந்து நடைபெற்றிருந்தால் காமராசன் வாழ்வு இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் என்று நம்புகிறார். இதுபோன்ற பதிவுகள்தாம் தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானவை. ’சோதனை’ இதழ்களில் உள்ளவற்றை யாரேனும் இப்போது தேடிக் கண்டுபிடித்து வெளியிட்டால் நாம் மிகவும் நன்றி உடையவர்களாக இருப்போம். ஏனெனில் அது பற்றி இப்படி அவர் எழுதுகிறார்.

”பத்திரிகை நீடித்திருக்குமெனில், நா. காமராசனின் இலக்கிய வாழ்க்கை இன்னும் பொருள் பொதிந்ததாகத் துலங்கியிருக்கும்; “மாநிலம் பயனுற வாழுதற்கே” கவிஞன் கனவு காண்கிறான்; சூழல் அனுசரணையாக இருந்து, காலம் அனுகூலமாக அமைகையில் அது சாத்தியமாகிறது. கவிஞனுக்கென்ன; சமூகத்துக்குத்தான் இழப்பு, உண்மையிலேயே.”

யாரும் இதுவரை அறிந்திராத [அதுவும் நானறியாதது என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்] ஒரு செய்தி இந்நூலில் பார்க்க  முடிகிறது. அதுதான் இசையரசு எம். எம். தண்டபாணி தேசிகர் அவர்களின் மனைவி  விக்ரமாதித்யனின் அத்தை என்பது. அவருடன் சிலகாலம் விக்கி தங்கி இருந்திருக்கிறார். அக்காலத்தை மிகவும் பாக்கியமாகக் கருதுகிறார். தண்டபாணிதேசிகர் பற்றி ஆவணப்படம் ஒன்று வெளிவரவேண்டும் எனவும்  ஆசைப்படுகிறார். தன் இளைய மகன் சந்தோஷை விட்டு எடுக்கச் சொல்ல வேண்டும் என நினைக்கிறார். அதுதான் அந்த அத்தைக்கும் மாமாவுக்கும் தான் செய்யும் கைம்மாறு என்று கருதுகிறார். அதை வழக்கம் போல் இப்படி முடிக்கிறார். “காலத்தின் ஆசிர்வாதம் இருக்குமெனில் எல்லாம் கைகூடும்”

ஆன்மிகவாதியாக இருந்தாலும் ஜோதிடம் எல்லாம் கற்றுத் தேர்ந்திருந்தாலும் விக்ரமாதித்யன் தன் உள்ளம் விரும்புவதை எல்லாம் கையில் எடுத்துக் கொள்கிறார். காரணம் அவர் ஓர் உணர்வு வழிப்பட்ட கவிஞன். அதனால்தான் தந்தை பெரியார் பற்றி இப்படி எழுதுகிறார்.

”இன்றைய தமிழ்ச் சமூகத்தில் அய்யா அவர்கள் இல்லாத வெற்றிடம் வெளியரங்கமாகவே புலப்படுகிறது. அந்த நேர்மை, அந்த உண்மை, அந்த ரௌத்ரம் அந்த கலகக்குணம் கொண்ட தலைமை இப்பொழுது இந்த இனத்திற்கு வெகுவாக வேண்டியிருக்கிறது.

விக்ரமாதித்யனின் அக்காவின் கணவர் கல்கத்தாவில் இருந்தார். ஒருமுறை அக்காவைக் கொண்டு போய்விட அவரும் கல்கத்தா போயிருக்கிறார். அப்பொழுது அங்கு காளிபூஜா வந்திருக்கிறது நம்மூர் விநாயக சதுர்த்தி போல தெருவுக்குத் தெரு காளியின் வெவ்வேறு உருவங்களை வைத்திருக்கிறார்கள்.

காளியை வருணிக்கும் விக்ரமாதித்யனின் உரைநடை ஒன்றின் ஒன்றாக எழுதினால் கவிதை போலவே இருக்கும்; பாருங்கள்;

”களி மண்ணாலான பதுமை; ரௌத்ர வடிவம்; கருநீல வண்ணம்; கழுத்தில் கபால மாலை; துடிகொண்ட முகம்; சினம் கொண்ட விழிகள்; துருத்திய நாக்கு; குருதி சொட்டும் சிரம்-ஒரு கரத்தில்; அரிவாள், இன்னொரு கரத்தில்; இருபதிலே உயர்வு, சிவனின் நெஞ்சில் ஒரு கால் பதித்து நிற்கும் காளிதான்; களப்பலி முடித்துவிட்டுத்தான் அமர்வாள் போல; கணக்குத் தீர்த்துவிட்டுத்தான் ஓய்வாள்போல; பக்தியில் பயம் மறைந்துவிடுமோ”

விக்ரமாதித்யன் இந்த நூலை மதிப்புரைக்காக என்று குறிப்பிட்டு அனுப்பியிருந்தார். ஆனல் இக்கட்டுரை ஒரு மதிப்புரையன்று. இந்நூலைப் படிக்கும்போது என்னைக் கவர்ந்த என்னை அழுத்தத்துக்குள்ளாக்கிய சில பகுதிகளைக் காட்டும் கட்டுரையே. ஒரு கவிஞன் வாழ்வு எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்பட்டுள்ளது என்பதை ஓரளவு இதன்வழி புரிந்து கொள்ளலாம். இக்கட்டுரையை விக்ரமாதித்யன் தன்னைப்பற்றி எழுதுவதைக் காட்டியே முடிக்கிறேன்.

”கவிஞனான பிறகு கவிதையைத் தவிர்த்து  வேறே எதிலும் சிந்தை செலுத்த முடிவதில்லை; ஒரு நல்ல சிறுகதை எழுதுவதைவிடவும்-இருபத்தைந்து வரிகளுக்கு மிகாது- ஒரு சிறந்த கவிதை செய்வதுதான் சந்தோஷம் கொண்டு வருகிறது. இரண்டாயிரம் வருஷ நீண்ட நெடிய தமிழ்க்கவிதை மரபில் ஒருவனாக இருக்கவே உள்ளம் விருப்பப்படுகிறது. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போக அச்சமாயிருக்கிறது, அப்படியெல்லாம் போனால், கவிதை கைவிட்டுப் போய்விடுமா என்று கலக்கம். தவிரவும், பிழைப்புக்காகச் செய்த தொழில்கள் வேறு காலத்தில் பெரும்பகுதியை பறித்தெடுத்து விட்டன”

[காடாறு மாதம் நாடாறு மாதம்—-தன் வரலாற்றுக் கட்டுரைகள்—விக்ரமாதித்யன்; நக்கீரன் வெளியீடு; 105, ஜானி ஜஹான்கான் ரோடு; ராயப்பேட்டை; சென்னை—14; பக்; 144; விலை; ரு90]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2021 11:33

கோவை சொல்முகம் கூட்டத்தில் செந்தில்

இம்மாத கோவை சொல்முகம் கூடுகையில்  வாசகர் செந்திலை சந்தித்தேன். காலையில் ஆனந்தாஸ் முன் நண்பர்கள் நின்று கொண்டிருந்தனர். என்னைக் கொஞ்ச தூரத்திலேயே பார்த்துவிட்ட கிருஷ்ணன் கையசைத்தார். அருகில் நெருங்கியதும் அறிந்தவர்கள் என்றாலும் அதிகம் தொடர்பில் இல்லாத நண்பர்கள் நின்றிருந்தனர்.

கிருஷ்ணன் “சிறப்பு விருந்தினர் செந்திலை அறிமுகப்படுத்திக்கோங்க” என்றார். முதல் கணம் தயங்கி “வாங்க நான் மீனாம்பிகை” என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். “வணக்கம்” என்றார். தொப்பியும் கண்ணாடியும் அணிந்து டூரிஸ்ட் போல தோற்றமளித்தார். கூடுகைக்கு வரமுடியாத க்விஸ் செந்தில் சார் அங்கேயே அனைவரையும் சந்தித்துவிட்டிருந்தார். பிறகு அனைவரும் நிகழ்வு நடக்கும் இடத்துக்குச் சென்றோம்.

இம்மாதத்தின் பேசுபொருள் வண்ணக்கடலின் மூன்று பகுதிகள். எப்போதும் போர்ஷனை படித்து முடித்து விட்டு படிக்காமல் வருகிறவர்களை விரட்டும் கிருஷ்ணன், இம்முறை மூன்று பகுதிகள் என்றாலும், 250 பக்கங்கள். மீள் வாசிப்பு செய்ய நேரம் போதவில்லை என்று காரில் சொல்லிக்கொண்டு வந்தது கேட்க சந்தோஷமாக இருந்தது.

முதலில் புதிதாக வந்தவர்களின் அறிமுகம். பிறகு வெண்முரசு HOD என்று நண்பர்கள் பிரியமாய் அழைக்கும் பூபதி முதற்கனலிலிருந்து வண்ணக்கடல் வரை நிகழ்வுகளைத் தொகுத்துச் சொன்னார். முதற்கனலில் துவங்கும் காமக்குரோதமோகங்கள் எப்படி வண்ணக்கடலில் கூர்கொள்கின்றன என்று விளக்கினார். முதற்கனலில் சொல்லப்படுவது அம்பையின் சாபம் போல இருந்தாலும் வண்ணக்கடல் வருவதற்குள்ளேயே இறுதியில் நிகழும் போருக்கான களங்கள் அமைந்துவிடுகின்றன. மிக நீண்ட தொகுப்பு. முழுவதையும் இங்கு பகிரவில்லை. தொடர்ந்து நரேன், நவின், விக்ரம், மணவாளன் பேசினர். தெற்கிலிருந்து துவங்கும் நாவலில் நிலக்காட்சிகளின் அமைப்பு மாறுவது அன்றிருந்த பெருமதங்கள், சிறுதெய்வ வழிபாடுகள், புறநடையாளர்கள், வணிக முறைகள் என பலவகையான பார்வைகளும் இடம் பெற்றன.

கோவை நவீன் வண்ணக்கடலில் துரோணர், கர்ணன், ஏகலைவன் மூவருடைய கதை சந்தர்ப்பங்கள் இறுதிப்போருக்குக் களம் அமைப்பதை விரிவாகச் சொன்னார். நரேன் அன்னையரிடமிருந்து தந்தையருக்கு கடத்தப்பட்ட நாடாளும் வேட்கை ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படுவதைத் தொடங்கி, நாவல் முழுக்க இழையோடும் காவியத்தன்மை வரலாற்றுத்தன்மை புராணத்தன்மை பற்றியும் அதனூடாக இழைந்து வரும் பகடி பற்றியும் சொன்னார்.

வெண்முரசின் கதாபாத்திரங்கள் விலங்குகளுடன் அடையாளப் படுத்தப்படுவதும், நெருக்கடியான நேரங்களில் விலங்குகளால் வழிநடத்தப்படுவதும், ஒரு தனித்தளமாக வாசிக்கலாம் என்றும் பேசப்பட்டது. நரேன் புல்லின் தழல் ஸ்தூல வடிவமான புழுவாக உருக்கொள்வது போல, புழு முதுகெலும்பு கொண்டு எழுவது போல வண்ணக்கடலின் நாயகர்கள் எழுந்து வருகிறார்கள். பீஷ்மர் தந்தையை முழுதேற்றவர். அவருக்காக அரசு துறக்கிறார். ஷத்ரியனாக இருந்தும் உரிமை மறுக்கப்பட்டவர். துரோணர் தந்தையால் குருவால் கைவிடப்பட்டவர். ஏகலைவன் குருவால் கைவிடப்பட்டவர் என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னார். இம்மூன்று கதாபாத்திரங்களின் எழுச்சி வெவ்வேறு கோணங்களில் பேசப்பட்டது.

கிருஷ்ணன் வண்ணக்கடல் எப்படி பெரு மன்னர்களை பெருந்தெய்வங்களை பெரு மதங்களை பகடிசெய்து தொடங்குகிறது என்று சொன்னார். மொத்த நாவலே முழுமை மீதுள்ள பகடி போலத் தன்னளவில் முழுமையுறவில்லை என்றும் சொன்னார். இளநாகன் சென்று சேரும் அஸ்தினபுரி உண்மையில் அஸ்தினபுரி அல்ல, அது வேறு. எனில் உண்மையில் அஸ்தினபுரி எது போன்ற தத்துவப் பார்வைகளும் இடம் பெற்றன.

அனைவரும் பேசி முடித்ததும் கிருஷ்ணன் ஒரு விவாதத்தைத் துவங்கினார். கர்ணன் தன் அகத்தில் தான் சூதனல்ல ஷத்ரியன் என்று அறிந்தவன்.  தான் சூதனல்ல என்று தனக்கே தெரிந்த போதும் மற்றவர்கள் இழிவுபடுத்தும்போது கர்ணன் ஏன் துயருறவேண்டும்? அந்த அக நெருக்கடியை அவரால் ஏன் கடக்க முடியவில்லை? அதற்கான குறைபாடாக ஆன்மிகமின்மையைத் தேடலின்மையை காரணமாகக் கொள்ளலாமா? என்று கேட்டார்.

வாசகர் செந்தில் மனிதன் தன்னுடைய நேர்மையை நிரூபிக்க முடியாததன் நெருக்கடியைத் தாண்டமுடியாது என்று தன்னுடைய அனுபவத்தை சொன்னார். இந்தக் கருத்து வாழ்நாளில் தாண்ட முடியாத துயரல்ல என்று கிருஷ்ணனால்  நிராகரிக்கப்பட்டது.

கர்ணன் அடையக்கூடிய அனைத்து அவமானங்களையும் அர்ஜுனன் ஒரே நாளில் ஆடை வரை அவிழ்க்கப்பட்டு அவமானப் படுத்தப்படுகிறான். அவனால் அந்த நெருக்கடியைக் கடக்க முடிந்தது ஆன்மிகத்தேடலாலா அல்லது அதன் சாத்தியங்கள் என்னவாக இருக்கலாம் என்று கிருஷ்ணன் கேட்டார்.

வெண்முரசு இத்தகைய காவிய நாயகர்களை உன்னதப்படுத்துவதனால் அதை நாம் அவ்வாறே ஏற்கவேண்டியதில்லை. அவர்களுடைய சரிவுகளையும் கருத்தில் கொண்டே வாசிக்க வேண்டும். மேலும் தன்னளவில் உன்னதமான நாயகர்களான நேமிநாதர், தீர்க்கசியாமர், போன்றவர்களின் வாழ்க்கையை இதே முக்கியத்துவத்துடன் வாசிக்க வேண்டும் என்றும் சொன்னார்.

ஏகலைவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அறம் கிடைக்கவில்லை ஏன் என்று நவீன் கேட்டார். இறுதியில் பேசும்போது கிருஷ்ணன் மகாபாரதக் கதை மானுட முயற்சியால் நிகழ்வதா, அறத்தின் பொருட்டு நிகழ்வதா அல்லது ஊழா என்ற கேள்வியைக் கேட்டு, துவாரகையின் அழிவைக் குறிப்பிட்டு ஊழே என்று முடித்தார். இவ்விவாதத்தில் அந்தியூர் மணி, விக்ரம் புதிய வாசகர் செந்தில் உட்பட அனைவரும் பங்களித்தனர்.

செந்தில் ஒவ்வொரு விவாதத்தின் போதும் தயக்கமில்லாமல் கலந்துகொண்டார் தன்னுடைய அறிதலில் போதாமையிருப்பின் கவனித்துக்கொண்டும் இருந்தார்.

இன்று தொகுத்துக் கொள்கையில் அன்று பேசுபொருளாக இருந்த பகுதிகளுக்கு அப்பால் விவாதமாக வைக்கப்பட்டவையே நினைவில் நிற்கின்றன. நுண்மையான அவதானிப்புகள் மறைந்துவிட்டிருக்கின்றன. நண்பர்களும் அதையே உணர்ந்ததாக நரேன் சொன்னார். நம்முடைய கூடுகைகளில் கலந்துரையாடலில் விவாதத்தை தவிர்த்துக் கொள்வது எப்படி என்றும் நாம் கற்கவேண்டும்போல.

இடைவேளையில் இன்று புதிதாக வந்திருந்த விஜயகுமார் ஏற்கனவே வாசகர் சந்திப்பில் அறிமுகமானவர் என்றும் “ஒன் மொமண்ட் ப்ளீஸ்” என்ற கதையை எழுதிப் பகிர்ந்திருந்தார் என்றும் கிருஷ்ணன் சொன்னார். கதைச் சுருக்கத்தைச் சொல்லி “மிக நல்ல கதை. நானே பல நண்பர்களுக்கு படிக்கும்படி பரிந்துரைத்தேன்” என்று கிருஷ்ணன் சொன்னபோது விஜயகுமார் நெகிழ்ந்து துள்ளி செந்திலின் பின்னால் மறைந்தார்.

இடைவேளை முடிந்து கார்லோஸ் புயந்தஸ் எழுதிய ஸ்பானிஷ் நாவலான ஆர்தேமியா க்ரூஸின் மரணம் நாவல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முதலில் மெக்சிகோவின் அரசியல் நிலைமை, சர்வாதிகாரம், அதற்கு எதிராக எழுந்த புரட்சியாளர்கள், அவர்களின் அரசியல் வெற்றி, அதன் விளைவுகள், அதன் அபத்தங்கள் பற்றி விரிவாக நரேன் சொன்னார்.

கதைக்கூறு முறையில் narrative pattern வகைமையில் புதிதாக எழுத வந்த லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் நால்வர். கொத்தசார் – அர்ஜெண்டினா, கப்ரியேல் கார்சியா மார்க்யுஸ் – கொலம்பியா, லோசா – பெரு, கார்லோஸ் புயந்தஸ் – மெக்சிகோ இவர்களின் கதைக்கூறுமுறை, அதன் அடிப்படை, ஏன் இவர்களை படிக்கவேண்டும் என்று அதன் பின்னணியையும் நரேன் விளக்கினார்.

புரட்சியாளனின் நனவோடையாக காலத்தால் முன்னும் பின்னும் நகருவதாக சித்தரிக்கப்பட்ட நாவல். கதாசிரியரே மூன்று வெவ்வேறு ஆளுமைகள் போல நாவலுக்குள் ஒருவரை ஒருவர் குறிப்பிட்டுக் கொள்வது ஏற்படுத்தும் புரிதல் தடை. எதிர்வெளியீடாக ஸ்ரீதர் ரங்கராஜ் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் இந்நாவல் ஆங்கிலத்தில் ஒப்பிட அபத்தமான மொழிபெயர்ப்பு என்று சொன்னார். அபத்தமான மொழிபெயர்ப்புகள் வாசிப்பில் ஏற்படுத்தும் தடை பற்றியும் பேசப்பட்டது.

சொல்முகத்தின் கூடுகைக்கு வருபவர்கள் அனைவருமே நாவலைப்படித்திருக்க வேண்டும் என்பது முக்கியமான விதி.  நரேன் படிப்பதில் தடை இருக்கிறதா என்று அடுத்த நாளிலிருந்தே விசாரிக்க தொடங்கிவிடுவார். இம்முறை நாவலைப் புரிந்துகொள்ள முடியாத அளவு மொழிபெயர்ப்பு ஏற்படுத்திய தடையே பெரிதாக இருந்ததாகவும். ஆங்கிலத்திலும் படித்ததாகவும் நண்பர்கள் சொன்னார்கள். கூடுகைக்கு வரும் நண்பர்கள் அனைவருமே தங்கள்  வாசிப்பனுபவத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் இது ஒரு பயிற்சியாகவே கருதி பேச வேண்டும் என்பதும் கடைபிடிக்கப்படுகிறது. ஆரம்ப நிலை உரையாடலைத் தொடங்குபவர்களுக்கு  இது ஒரு நல்வாய்ப்பு.

சந்திப்பு முடிந்து நண்பர்கள் சேர்ந்து சாப்பிட்டபின் வாசகர் செந்திலையும் என்னையும் ஈஷாவில் இறக்கிவிட நரேன் வந்தார். வழிபாட்டு தலங்களின் விடுமுறை பற்றி அறியாதிருந்ததனால் மீண்டும் பேரூர் வரை அவருடனே வந்துவிட்டோம். செந்தில் வருத்தப்பட்டதனால் பேரூர் நொய்யல் ஆற்றருகே சற்று நேரம் நின்று பேசிக்கொண்டிருந்துவிட்டு என் வீட்டுக்கு வந்தோம். வீட்டிற்குள் நுழையும் முன்னே புத்தக அலமாரியைப் பார்த்து உற்சாகமாகி அதிலிருந்த புத்தகங்களை பார்த்துக்கொண்டு வெகுநேரம் நின்றிருந்தார். தன்னிடம் இல்லாத உங்கள் புத்தகங்களை எடுத்துப்பார்த்துக் கொண்டிருந்தார்.

அன்றைய நாள் முழுக்க ”நான் நிறைய நேரத்தை இழந்துவிட்டேன். படிப்பதை இப்படி தொகுத்துக்கொள்ளவோ பேசி விரிவாக்க்கிக் கொள்ளவோ இதுவரை அறிந்துகொள்ளாமல் இருந்துவிட்டேன்” என்றபடி இருந்தார். இனிமேல் வரும் கலந்துரையாடல்கள் அனைத்திற்கும் வருவதாக சொன்னார். சென்னையில் நிகழும் கலந்துரையாடல்கள் பற்றிச் சொன்னேன். போனில் தளத்தை எப்படி திறந்து படிப்பது என்பது அவருக்குத் தெரியவில்லை.  எனவே கலந்துரையாடல்கள் நிகழும் நாட்கள் அவருக்குத் தெரியாது என்றார். போனில் எப்படிப் பார்க்க வேண்டும் என்று கேட்டு தெரிந்துகொண்டார்.

முதல்நாள் அவர் கொடுத்த பேட்டி பற்றி சொன்னார். பின்னர் நாஞ்சில் சாரின் சாலப்பரிந்து கதையை அவருக்குத் தெரியாமல் சினிமாவாக எடுக்கப்பட்டது பற்றி வருத்தப்பட்டார். நாஞ்சில் சாரை அழைத்து ஒரு வாசகர் இப்படி வருத்தப்படுகிறார் பாருங்கள் என்று போனைக் கொடுத்தேன்.  அன்று நாஞ்சில் சாருக்கு 42-வது மணநாள். குடும்பத்துடன் பயணத்தில் இருந்தார். அலைபேசி விட்டு விட்டுக்கேட்டது. பின்னர் பேட்டி கொடுத்த செந்தில் என்று சொன்னதும் கொடுங்க கொடுங்க என்று ஆவலாக பேசினார். நாஞ்சில் சாரிடம் அவரது கதைகள் பற்றி, படித்தது பற்றியும் செந்தில் பேசினார்.

செந்தில் பேசும்போது பெரும்பாலான புத்தகங்கள் பெயரையும் கதைத்தருணத்தையும் நினைவிலிருந்து சொல்கிறார். பலமுறை படித்தாலும் இவ்வளவு துல்லியமாக சாதாரண கதைத்தருணங்கள் நினைவில் நிற்பதில்லை என்று நினைத்துக் கொண்டேன். அவரது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் எப்படி கதைகளில் பொருந்திப்போயின என்று சொன்னார். அப்படி இலக்கியத்தை வாழ்க்கையுடன் இணைத்துப் பார்ப்பதே நல்ல அறிதல். குறைந்தபட்சம் அதன் துயரங்களிலிருந்து விடுபடல் எளிது.

வாசிப்பு ஒருவரது சிந்தனையை எப்படி செறிவாக்க முடியும் என்பதற்கு நிறைய உதாரணங்களை அன்று பார்த்தேன். ஒன்று கிருஷ்ணன் பேசும்போது சொன்னது. செந்திலிடம் ஒருவர் திருக்குறள் பெண்களுக்கான படைப்பு, அதை பொதுமறை என்று சொல்வது தவறு, அது பெண்களை முன் வைக்கிறது என்றும் ஒரு குறளை மேற்கோள் காட்டி சொல்லியிருக்கிறார். அக்குறள்

”ஈன்ற பொழுதின் பெருதுவக்கும் தன் மகனை

சான்றோன் எனக்கேட்ட தாய்”

இதில் தாயை முன்னிலைப்படுத்தி தானே சொல்லியிருக்கிறது என்று கேட்டிருக்கிறார். செந்தில் உடனே சான்றோன் என்று மகனைத்தானே குறிப்பிட்டிருக்கிறது மகளை அல்லவே என்று திருப்பிக் கேட்டிருக்கிறார். அன்று சென்றவர் ஐந்து வருடங்களாக கடைப்பக்கம் வரவில்லை என்று சொன்னார்.

அன்றைய முழுநாளும் நிறையப்பேரை பார்த்தது, நிறைய பேரை நேரில் சந்தித்தது, நாஞ்சில் சாரிடம், உங்களிடம் போனில் பேசியது என நெகிழ்ந்திருந்தார். புத்தகங்கள் பற்றி வாசிப்பு பற்றி அதன் வகைமைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். நான் தங்கப்புத்தகம் கதை சொல்லத்தொடங்கி முடிப்பதற்குள் அவருக்கான வண்டி வந்துவிட்டிருந்தது. மறுநாள் சென்னையில் சந்திக்கும் வாக்குறுதியுடன் கிளம்பிச்சென்றார். அடுத்தமாதம் சொல்முகம் கூடுகையில் கண்டிப்பாக வந்து கலந்து கொள்வதாக சொல்லிச் சென்றார்.

சொல்முகம் கூடுகையில் செப்டம்பர் மாதத்திற்கான வாசிப்பில் இருந்தது முருகவேளின் எரியும் பனிக்காடும், வெண்முரசு வாசிப்பில் நீலமும். நீலத்தின் நாவல் அடர்த்தியும், கடலூர் சீனு நாவல் குறித்து உரையாற்றுவதற்கான நேரம் கருதியும் நீலம் மட்டும் இந்த மாதத்திற்கான புத்தகமாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. தற்செயலாக வாசிக்கத் துவங்கும் மறுநாள் கோகுலாஷ்டமியாக அமைந்திருந்தது! இது நீலத்துக்கான மாதம் போலும்.

மீனாம்பிகை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2021 11:32

 சின்ன வாக் போலாமா? – இரம்யா

அன்று ஓர் அழகிய நாள். காலையிலிருந்தே ஜெ எங்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். புதிய வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டவர்களின் கதை கட்டுரைகளை விவாதித்துக் கொண்டிருந்தோம். அந்த அழகிய  மாலையில் “சின்ன வாக் போய்ட்டு வந்து மீண்டும் தொடரலாம் என்று கதிர் அண்ணா சொன்னார்… “

சின்ன வாக் என்றால் அந்த கேம்ப் ஃபார்மின் நுழைவாயில் வரை என்று துள்ளி குதித்து நடந்து கொண்டிருந்தேன்.

கேட்டை தாண்டி நடந்தார்கள்.. சரி ஏதோ இன்னும் ஒரு ஐந்து நிமிடங்கள் என்று நினைத்தேன். எப்படியாவது ஜெ வின் பக்கத்தில் நடக்கலாம் என்று நினைத்து வேகமாக நடந்தேன். மன்னிக்கவும். ஓடினேன் என்று செல்ல வேண்டும்.. இந்த விக்கிக்கும் ஸ்ரீநிக்கு இன்னொரு சுருள் மண்டை பையனுக்கும் இதே எண்ணம் இருந்திருக்க வேண்டும்.. அவர்கள் என்னை ஜெ வை நெருங்க விடாமல் பாடி கார்டு போல அவருடன் நடந்து கொண்டிருந்தார்கள். இதில் கிஷ்ணன் சார் வேறு…  அவர்கள் நடுவில் நுழைந்து ஆசானை நெருங்க நினைத்தபோது விக்கி திரும்பி “இது என்ன ஜென்மம்” என்பது போல் பார்த்தார்.. “ஜெ பேசறது கேக்கல அதான்” என்று சொல்லி சிரித்து வைத்தேன்.

நதி கரை புரண்டு ஓடுவது போல நீண்ட சாலையில் ஜெ நடக்கும் பாவனையில் ஓடிக் கொண்டிருந்தார்.. எனக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. மூன்றாவது ரோ சென்றேன். பார்கவி சின்ன செடி கொடி பூச்சிகளை  ஃபோட்டா எடுப்பதில் மும்முரமாயிருந்தார். “என்ன ரம்யா டயர்டா.. அவர பிடிக்க முடியாது. ரொம்ப ஃபார்ஸ்டா போனா டயர்டு ஆகிடுவோம்” என்றார். மூன்றாவது வரிசைக்காரர்களின் மனநிலையில் அங்கு கொஞ்ச நேரம் இருந்தேன். சாலை முடியவே இல்லை.

மேலும் பிந்தி நான்காவது வரிசை தில்லை சாருடன் பேச்சுக் கொடுத்தேன்.. அவர் வாசிப்பு புத்தகம் பற்றி பேசினேன்.. “முடியவில்லை… சார் இப்படினு தெரிஞ்சா ஒரு தண்ணி பாட்டில் எடுத்து வந்திருப்பேன்” என்றேன். “இடைல கடை வந்தா வாங்குவோம்” னார்.. “சார் இங்க கடை இருக்க மாதிரியே தெரில” என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே கடை வந்தது… தண்ணீர் வாங்கி மண்டும் போதே முன்னால் சென்று கொண்டிருந்த கதிர் அண்ணா ஓடி வந்து “ஆசானுக்கு தண்ணி பாட்டல் ஒன்னு” என்றார். “அப்ப ஜெ க்கும் தண்ணி தவிக்குது. அவரும் மனிதப்பிறவி தான்” என்றேன். “அப்படியில்லை.. அவர் தண்ணிய குடுத்தா தான் குடிப்பார்… இல்லைனா மறந்திடுவார். நாமலே குடுத்தா தான் உண்டுன்னு” சொல்லிவிட்டு அங்கு நாங்கள் வாங்கிக் கொண்டிருந்த மாங்காயில் இரண்டை அபேஸ் செய்துவிட்டு அதுவும் ஆசானுக்கே என்று ஓட்டமாக ஓடிவிட்டார்… ‘இவரெல்லாம் மனுஷனா சார்’ என்றேன். கடையில் கூட்டமாக தண்ணீர் மண்டிவிட்டு.. ஒரு மாங்காயை முழுவதுமாக வழிநெடுக தின்று கொண்டே பிற நண்பர்களுடன் பேசிக் கொண்டே சென்றேன். மேலும் நடக்க முடியாது திரும்பி பார்த்தேன்.. பின்னால் நவீனும் நிகிதாவும் வந்தனர். நமக்கு பின்னாடியும் இரண்டு பேரா…ஆஹா… என்று நினைத்து.. ‘நடக்க முடியலைலல’ என்றேன்…

“அப்படியில்ல. எங்களுக்கெல்லாம் இது சாதாரணம். பாவம் பின்னாடி யாரும் தொலைந்து போகக்கூடாதே என்று வருகிறோம்” என்றனர்.

“ரோடு முடிஞ்சு போச்சு… இதுக்கும் மேல எங்க போறாங்க” என்று கேட்டேன்.

“அங்க மலைல ஒரு கோவில் இருக்கு அங்க தான்” என்றார்.

“சும்மா வெளையாடாதீங்க” என்றேன்.

“உண்மையாத் தான்” என்று சொன்ன நவீன்.. “நாங்க முன்னாடி போறோம் கோவிலுக்குள்ள ஆசான் பக்கத்துல இருக்கனும்”னு  சொல்லிவிட்டு சட்டுனு ஓடிவிட்டார். நிகிதாவும் அவருடன் ஓடிவிட்டார்.

பின்னாடி சரவணன் மற்றும் பாலாஜி இருந்தார்கள். அவர்களுடன் தான் இறுதியாக இணைந்து பயணத்தைக் கடந்தேன். இருவரும் “என்னங்க ஆரம்பத்துல ஆசான் பின்னாடி ஓடிட்டு இருந்தீங்க… ” என்று நக்கலடித்தனர்.

“சார் நமக்கெல்லாம் வயசாகிடுச்சோ.. மூச்சு வாங்குது” என்றேன்.

“அதுவும் உண்மை தான். 90s கிட்ஸ் னதும் கிட்ஸ்னே இன்னும் நினைக்கக் கூடாது” என்றார்.

“ஆமாம் நமக்கு வயசாகிடுச்சு” என்று ஒரு சாக்கு மண்டைக்குள் வந்து சேர்ந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை. ஏதோ ஓர் கொண்டை ஊசி வலைவில் திரும்பி ஜெ எங்களைப் பார்த்தார். கையில் மாங்காய் வைத்திருந்தார். அது தான் நான் கடைசியாக அவரைப் பார்த்தது… அதற்குப் பிறகு எல்லா படத்தையும் ஃபோட்டோவில் தான் பார்த்தேன்.

அதுவரை திரும்பிப் போவதைப் பற்றிச் சிந்தித்து வந்திருந்தேன். அதன் பிறகு அது என்றோ வாய்ப்பிருக்கும் என்று நினைத்து நடக்கலானேன். போகும் வழியில் ஒரு கொண்டை ஊசி வளைவில் இரண்டு பேர் மல்லாக்க படுத்து மூச்சு வாங்கிக் கொண்டிருந்தனர். வரல. நீங்க போங்க என்ற சொன்ன அவர்களுக்கு ஆறுதல் கூறி தண்ணீர் கொடுத்து உடன் அழைத்துச் சென்றோம்.

ஒரு வழியாக கோவிலை அடைந்தோம். ஜெ ஏற்கனவே வழிபட்டு சென்றுவிட்ட கோவில்… பார்த்து ரசித்தவிட்டுச் சென்ற இயற்கை எழிலையும் ரசித்தோம். இறுதியாகச் சென்ற அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்…

திரும்பும் வழியில் இருட்டு கவ்வி விட்டது. ஏங்க இங்கல்லாம் பேய் இருக்குமாம்னு ஒருத்தர். அதான் ரம்யா இருக்காங்கல்ல பேய் பயந்து ஓடிரும்னு இன்னொருத்தர்… ஒரு பயத்துலயே ஒன்பது மணிக்கு ஃபார்ம் வந்து பார்த்தால்.. வந்த கையோடு மீண்டும் ஜெ உரையாற்றத் தொடங்கி விட்டார்… ஐஞ்சு மணிக்கு டீ பிரேக்குல ஒரு சின்ன வாக்னு சொன்ன கதிரின் முகம் நினைவிற்கு வந்தது மங்கலாக…

வியர்த்து நனைந்து அதிலேயே குளித்து மீண்டும் அவர் முன் உட்கார்ந்தால் களைப்பு நீங்கிவிட்டது… நடு ராத்திரி தூங்கப் போகும் போது ஜெ பேய்க் கதை சொல்லி அனுப்பி வைத்தார்… போகும் போது என்னை அழைத்து “எங்க தூங்கற” என்று கேட்டார்.

“ஜெ மாடில இடம் எங்களுக்கு ஒதுக்கியிருக்காங்க” என்றேன்.

‘சரி அங்க பேய் நடமாட்டம் இருக்கும்’ என்று வித்தியாசமான குரலில் சொன்னார். நான் ‘ஐயோ’ என்றேன்.

‘நீ கவல படாத. இப்ப பாடுனியே அந்தப் பாட்ட பாடு. அது ஓடிடும்’ என்று அறிவுரை கூறினார். அதுவே உகந்த வழி என்பது போன்ற பாவனையில் ‘சரிங்க ஜெ. அப்படியே செய்றேன். குட் நைட்’ என்று சொல்லிவிட்டு தைரியமாக கிளம்பினேன்.

சரி.. தூங்கலாம்னு போனா.. இந்த பார்கவி வந்து ‘ஜெ இன்னும் பசங்க கூட பேசுறார்.. நாமலும் போவமா’ என்றார். அங்க பனில மாடிப்படில திருட்டுத்தனமா உட்கார்ந்து அவரைக் கேட்டோம். அப்பவும் இந்த விக்கி எங்களைக் கண்டு கொண்டு விசித்ர ஜந்துகள் என்பது போல பார்த்தார். ஜெ இரண்டு மணி வரை பேசிக் கொண்டிருந்தார்…

காலையில் எழுந்து பார்த்தால் மீண்டும் இந்த பார்கவி எழுந்து இயற்கையை ஃபோட்டா எடுக்க கிளம்பிக் கொண்டிருந்தார்.. ஆறு மணிக்கு ஜெ எழுந்திரித்திருப்பார் என்று நினைத்து கீழே போய் பார்த்தேன். ஜெ மட்டும் முழுப் போர்வையும் கண் வரை மூடி படுத்திருந்தார். சரி.. அவர் லைட்டா மனிதப் பிறவி தான் என்று ஆறுதல் கொண்டேன். அந்தப் பக்கம் கிஷ்ணன் நாலு பேரோடு பேசிக் கொண்டிருந்தார். நம்மை சேர்த்துக் கொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது. சரி வெ. மா. சூ. சொ இலக்கியத்தில் எதற்கு என்று அங்கு சென்று ஐக்கியமானேன். கிஷ்ணனிடம் ‘ஜெ காலைல டீ குடிக்க நடந்து போவாறாமே’ என்றேன்.

‘இப்ப நாமெல்லாம் ஜெ எழுந்திரிக்கறதுக்குள்ள பக்கத்துல டீ குடிச்சிட்டு வந்திடுவோம் என்றார்..

‘சரி ஜெ எந்திரிக்கறதுக்குள்ள வந்திடலாம்ல’ என்றேன். கதிரும்.. கிஷ்ணனும் சிரித்துக் கொண்டனர். ‘வந்துடலாம் வாங்க.. ‘ ‘என்ன புத்தகம் படிக்கிறீங்க.. நீங்க வாசிக்கறத விட அதிகமா எழுதுவீங்களோ’ என்று கலாய்த்துக் கொண்டே டீ க்கடையை நோக்கி நடந்தனர். நாம தேவையில்லாம அதிகமா எழுதுறோம் போல கொஞ்சம் குறைச்சிக்கனும் என்று நினைத்தேன். அவர்கள் கலாய்த்தார்கள் என்றே பின்னர் தான் தெரிந்தது. டீக்கடை நல்லவேளையாக மூன்று கிலோ மீட்ருக்குள் வந்துவிட்டது. கிஷ்ணனுக்கு அது நிமித்தமாக வருத்தம் இருந்திருக்க வேண்டும். ‘என்னவாம் குறை பட்டுக்கிறாரே’ என்று சரவணனிடம் கேட்டேன்.. ‘சீக்கிரமா கடை வந்திடுச்சாம் அதான்’ என்று சொல்லி சிரித்தார்..

அட கொல காரப் பாவிகளா!!! என்று நினைத்தேன். திரும்பி வந்து பார்த்தால் ஜெ டிஷ்கஷன் ஆரம்பித்துவிட்டார். இப்ப டீ ரொம்ப அவசியமோனு அவர் திட்டுவது போல இருந்தது அவரின் பார்வை..

ஓட்டமும் நடையுமாக இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை… போகும் போது அனைவர் முகத்திலும் வாட்டத்தைக் கண்டேன். பார்கவி தொட்டாலே உடைந்து அழுது விடுவார் என்று நினைத்தேன்.. எனக்கும் அழுகையாய் வந்தது.. அடக்க வேண்டியிருந்தது.. தவிப்போடே ஜெ கிளம்பும் வரை நின்றிருந்தேன்…

இரண்டு நாட்களாக அவரின் குரலில் வார்த்தைகள் காதை நிறைத்திருந்தது..

என் ஆசிரியரை நான் கண்டு கொண்டேன் என்று நினைத்தேன். அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சியோடே அதே மனநிலையில் இருந்தனர்…

ஐந்து மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. அதற்குள் நீண்ட பொழுதுகள் ஆகிவிட்டது போல இருக்கிறது.

அன்பு ஆசிரியருக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

பிரேமையுடன்

இரம்யா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2021 11:32

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.