இரண்டாமவள்

ஓவியம்: ஷண்முகவேல்

”அந்த இரண்டாமவள் யாரென கண்டுகொண்டேன்” என்று ராதாவிடம் சொன்னேன். கொதிக்கும் எண்ணெயில் பூரி சுட்டுக்கொண்டிருந்த அவர் கொஞ்சமும் கொதி நிலை இல்லாமல், ”வெண்முரசில் உங்களுக்கு பிடித்த இரண்டாமவள் என்று சொல்ல வருகிறீர்களா?” என்றார்.

நகுலன் ஆரம்பிக்கும் வாக்கியத்தை, சகதேவன் முடித்து வைப்பதைப் போல், ராதா, நான் மொட்டையாக ஆரம்பிக்கும், எந்த ஒரு வாக்கியத்தையும் சரியான பொருளில் முடித்துவிடுவார்.

“முதல் பெண் அம்பை, இரண்டாவது, திரௌபதியா ? பிரயாகையில் அக்னியில் பிறக்கும் அவளின் சீர் தோள்களைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். சிறு வயதிலேயே , தந்தை துருவனுடன் அரசியல் விஷயங்களைப் பேசுவதையும், அவளுடைய தாயார் அந்த பேச்சில் ஒவ்வாமை கொள்வதையும் ரசித்திருக்கிறோம். ஒவ்வொரு கோவிலாக அவள் செல்ல, மாறுவேடத்தில் இருக்கும் பாண்டவர்களை அவள் பார்ப்பதை உங்களுக்கு நினைவில் மாறாத காட்சிகள் என்று சொல்லியிருக்கிறீர்கள், “ என்றார் ராதா.

“மின்னும் கருப்பு நிறத்தாள்தான், என்னை ஆக்கிரமிக்கவிருக்கும் இரண்டாமவள் என பல நேரங்களில் எண்ணியதுண்டு. ஆனால், அவள் அந்த இடத்தை அடையவே இல்லை,” என்றேன்.

“காண்டீபத்தில், இளையபாண்டவனின் நினைவில் நின்றுவிடும், சுஜயனை சீராட்டி பாராட்டி வளர்க்கும் அந்த செவிலிப்பெண் சுபகையும் உங்கள் நினைவில் உள்ளவள் என்று தெரியும். ஆனால், அவளும் இரண்டாமவள் இல்லை. அப்படித்தானே?” என்றார் ராதா.

“ஆமாம். அவள் இனியவள். என்னுள் பெருவலி ஏற்படுத்திச் செல்லவில்லை என்பதால், நினைத்து நினைத்து நான் மாயவில்லை” என்றேன்.

“ஜெயமோகன், அரசிகள் , இளவரசிகள் என்பதால், எல்லோரையும் பேரழகிகள் என்றெல்லாம் வர்ணிப்பதில்லை என்று சொல்வீர்கள். கர்ணனும், துரியோதனனும், துச்சாதனனும், காசி இளவரசிகளை சிறை எடுத்து வந்த அன்று, பானுமதி பற்றிய வர்ணனையை வாசித்ததும், இவள் எது சொன்னாலும், கேட்கலாம் என்று சொன்னீர்கள். இறந்துவிட்ட அண்ணியின் நினைவு வந்து முகம் சிறுத்துவிட்டது உங்களுக்கு. “

“ஆமாம், பானுமதி , ஒரு அண்ணியாகவே என்னுள்ளும் நின்றுவிட்டார். மரியாதைக்குரியவர். ஆனால், இரண்டாமவள் இல்லை, “ என்றேன்.

“பூரிசிரவஸுக்காக கவலைப்பட்டு, விட்டால், நீங்களே துச்சளையிடம் உண்மையை சொல்லியிருப்பீர்கள். அவளை ஜயத்ரதனுக்கு கட்டிக்கொடுத்துவிட்டதால், கொஞ்சம் ஒவ்வாமை வந்திருக்கும். அவளும் இல்லை என்று நானே முடிவு செய்துகொள்கிறேன். “ என்றார் ராதா.

“உங்களுக்குப் பொருளாதாரம், வணிகம் , அரசியல் என எல்லாத்துறைகளிலும் தேர்ந்து பேசுபவர்களை பிடிக்கும். நீர்க்கோலம் நூலில், திருமணம் ஆகி வந்ததும் வராததுமாக, தன் நாட்டிற்கு வரும் வண்டிகளையெல்லாம் நிறுத்தி வரி வசூலிக்க சொல்லும் தமயந்தியை உங்களுக்குப் பிடித்திருக்கும். ஆனால், அவள் ஒரு வலியை விட்டுச் சென்றாளா, என்பது கேள்வி.”

“அவளைப் பொறுத்தவரை, வெற்றி தோல்வி, இன்பம், துன்பம், மேடு, பள்ளம் என்று கலந்து வந்த முழு வாழ்வே என எடுத்துக்கொள்கிறேன். அவள் கணவன் , நளன் சூதாடி நாட்டை இழக்க, காடோடி திரிந்தாலும், மீண்டும் கணவனுடனும், குழந்தைகளுடனும் இணைகிறாள்,” என்றேன்.

“தேவயானி ?”

“மணிமுடி சூடியவள் என்றாலும் இவளும் இல்லை. இளமையில் முதுமை எய்திய, குரு குலத்தை நிலை நிறுத்திய ‘புரு’வின் தாய் சர்மிஷ்டையும் இல்லை.” என்றேன்.

“வேறு யாராக இருக்கும்? அசலை ? இவளையும் அண்ணியென்றே சொல்வீர்கள் என நினைக்கிறேன்” சிரித்தார் ராதா.

“சண்டையெல்லாம் முடிந்து, வெண்முரசில் கடைசியில் வரும் நூல்களில், பானுமதியால், அரசு பணியில் நியமிக்கப்பட்டு அந்தக் காவல் மாடத்தில் நிற்கும் சம்வகை ? டாம்பாய் போல் இருக்கும் அவளை எனக்குப் பிடிக்கும்’

“ஆமாம், உங்களைப் போல, நிறைய நண்பர்கள், யானைப் பாகனின் பெண் அரசியாகும் அந்தக் கதையை சொல்லி சிலாகித்துப் பேசுவதுண்டு. சாதித்தவர்களை, ஜெயித்தவர்களைப் பற்றி பேச அவளை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வேன். ஆனால், அவள் தொண்டையில் சிக்கிக்கொண்ட முள்ளா என்றால், இல்லை என்பேன்.”

“நீங்களே சொல்லுங்கள்! “ பொறுமையிழந்தார் ராதா. இந்த வாரம், நீங்கள் இன்னும் அருண்மொழியின் கட்டுரையை வாசிக்கவில்லை என்று நினைவுறுத்தினார்.

“மிகச்சிறிய தாடையும், அழுந்திய கண்ணங்களும், உள்ளங்கை அளவு முகம் கொண்ட அவளை, காந்தாரி , சிட்டு என்று சொல்லி சிரிப்பாள். மிகச்சிறிய உருவில் , வெண்ணிறம் கொண்ட அவளை, ரஜதி என அவள் பிறந்த மச்சர் குடியில் அழைத்தனர். ரஜதி என்றால் வெள்ளிப்பரல் என்று பொருள். இளைய யாதவர், அவளுக்கு தந்தை முறை. ரஜதி, சிறிய மீன் என்றாலும், சர்மாவதி ஆற்றின் பேரொழுக்கிற்கு எதிர் செல்லும் ஆற்றல் உடையது என்று சொல்லி, அவளை இளைய யாதவர் அருகணைத்து கொஞ்சுவார். மச்ச நாட்டுக்காரியிடம் மீன்பற்றி கேட்டால் மணிக் கணக்கில் பேசுவாள். தான் அரசி என்பதை மறந்து, அஸ்தினபுரியின் இடைநாழியில் ஒவ்வொரு தூணையும் தொட்டு தொட்டு, நுனிக்காலில் தாவி தாவிச் செல்வாள்.

திரௌபதிக்கு கொடுமை இழைக்கப்பட்ட அந்த தினத்தில், அறத்தின் வழி நின்று கேள்வி கேட்ட விகர்ணனின் மனைவியெனினும், மற்ற அரசிகளைப் போல காமவிலக்கு நோன்பு கொண்டவள். இளைய யாதவர், முதல்தூது வரும்பொழுது அவரது துணை நின்று அறத்தின் குரலாக ஒலியுங்கள் என்று தனது கணவனை வழி நடத்துபவள்.

கர்ணனின் இடையளவு உயரம் கூட இருக்கமாட்டாள். போரை நிறுத்த அவன் வந்து அவனது தோழனிடம் பேசவேண்டும் என்று கணவனையும், கணவனின் சகோதரனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தூது செல்வாள். அது சமயம் அந்த ஊட்டறையில், அவள் கர்ணனையே மனைவியரின் இடையில் அமர்ந்துதான் சாப்பிடவேண்டும் என்று கட்டளையிடுவாள்.

துரியோதனன், யாருக்கும் தெரியாமல் நடத்தவிருக்கும் கலிதேவனுக்கான சடங்கை தடுத்து நிறுத்த துச்சளையையும், விகர்ணனையும் சுரங்கப்பாதையில் அழைத்து செல்லும் சமயம், அவள் சொல்லும் சூத்திரத்தின் வழியே கதவுகள் திறக்கும். துச்சளையிடம் , நீ அரசுமதியாளர் ஆகவேண்டியவள் என்ற பாராட்டைப் பெறுவாள்.

எல்லோரும் போருக்குச் செல்லும் கணவனை வழியனுப்பி வைக்க, இவள் மட்டும் நான்குமுறை சேடியர் சென்று அழைத்தும் வரவில்லை என்று அசலை, பானுமதியிடம் சொல்வாள்.

“அவைநின்று பழிகொண்ட பெண் சொன்ன சொல் அவ்வண்ணமே நிகழ்ந்தாக வேண்டும். அதுவே இங்கு பெண்ணுக்குக் காவலென தெய்வங்கள் உண்டென்பதற்கான சான்று. தலைமுறை தலைமுறையென பிறந்தெழுந்து வரும் பெண்கள் அனைவருக்கும் நம் மூதாதையர் உரைக்கும் சொல்லுறுதி அது. பிறிதொன்று நிகழாது.” – தாரை சொல்வதாக, செந்நாவேங்கை, அத்தியாயம் 45.

அறம் வழி நின்று, என்ன நடக்கும் என்று உய்த்துணரும் தாரை, விகர்ணனின் மேல் பேரன்பு கொண்டவள்.

கதவைத் தாழிட்டுக்கொண்டு, போய் வா என்று சொல்ல மறுத்தவளின் அன்பின் வலியை நான் அறிவேன். அம்பையை முன்னிறுத்தி அன்னையென்பேன். ரஜதியின் ஆற்றல் கொண்ட தாரையை மகள் என்பேன்.

வாழிய இரண்டாமவள் !

வ. சௌந்தரராஜன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2021 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.