Jeyamohan's Blog, page 2239

May 4, 2012

ஓஷோ – கடிதங்கள்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,


நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.


தங்களின் சமீபத்திய ‘முட்டாள்களின் மடாதிபதி’ என்ற கட்டுரையை எனது Facebook-ல் பகிர்ந்து கொண்டேன். நிச்சயமாக உங்களுக்கும் உங்களின் கருத்தை எதிர்த்துப் பல மெயில்கள் வந்திருக்கும். Facebook-ல் எனது நண்பி ஒருவர் அதற்கு பதிலுரைத்து அவரது கருத்தை உங்களிடம் தெரிவிக்குமாறு கோரியிருந்தார். அது கீழே..


உங்களது நேரத்திற்கு மிக்க நன்றி.


அன்புடன்

பாலா


Gayathri Karthik

hmmm….சத்திய உலகில், zen உலகில் உங்களுடைய ஆழமான எந்த ஒரு எண்ணமும் நல்லதோ கெட்டதோ அதை அசைத்துப் பார்ப்பதே ஒரு குருவின் வேலை…..அந்த எண்ண வடிவு உண்மைகளால் ஆனதா பொய்களால் ஆனதா என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்…ஏன் என்றால் அவர்கள் உலகில் எந்த ஒரு எண்ணமும் அகந்தையின், நான் என்னும் மாயையையின் கீழ் வருவதே ஆகும்…ஒரு மாயா அசைக்கப்பட்டு உங்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது என்றால் நீங்கள் அந்த மாயையின் சக மாயா என்று அர்த்தம்….இது தவிர…Osho by his very nature is playful to the core….many has existed like him in zen but not in hinduism…மகேஷ் பட் போன்ற serious மடையர்களுக்கு அந்த spiritual playfulness புரிவது கஷ்டம்…எண்ணங்கள் ஆன உலகில் வாழும் பேர்கள் எழுத்தாளர்கள்….தங்கள் உலகை அசைக்கும் ஒருவனை அவர்கள் வெறுக்கவே செய்வார்கள்…


அன்புள்ள பாலா,


இந்த அம்மணியேகூட ஒரு ஜெஞ்ஞானி [ஜென்+ ஞானி] என்று தோன்றுகிறது.


ஜெ


[image error]


அன்புள்ள ஜெயமோகன்,


எனது கடிதத்திற்கு பதில் சொன்னதற்கு நன்றி. நான் முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். நான் ஒஷோவை குருவாக ஏற்றுக் கொண்டவன் அல்ல. நான் வாசிக்கும் பல ஞானிகளில் அவரும் ஒருவர். அவரைப் பற்றி நீங்கள் சொன்னது உண்மையிலேயே அதிர்ச்சியளிப்பது.


ஓஷோ சேவை செய்யவில்லை என்று கூறுகிறீர்கள். எனக்குத் தெரிந்து சூஃபி, ஜென் குருமார்கள் பெரும்பாலும் சேவை செய்வதில்லை. ஜார்ஜ் குட்ஜிப் என்று ஒரு ஞானி பாரீசில் இருந்தார். அவரிடம் நீங்கள் நான் ஒழுக்கமானவன் என்று சொன்னால் சாராயம் குடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவார். அற ஒழுக்க மரபுகளை எல்லாம் ஞானிகள் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் வெளிப்படையாக இருக்க வேண்டும். அவர் ஒன்றும் வெளியே பிரம்மசரியத்தை போதித்துவிட்டு நடிகையுடன் கூத்து அடிக்கவில்லை. “நான் எத்தனை பேருடன் செக்ஸ் வைத்துள்ளேன் என்று எனக்கே தெரியாது” என்று பேட்டியின் போது கூறியுள்ளார். அவருடைய ஆசிரமத்தில் எய்ட்ஸ் பரிசோதனை வெளிப்படையாகவே நடந்தது என்று நினைக்கிறேன். உங்கள் வரையறைப்படி பார்த்தால் சாய்பாபாவும், கல்கியும்தான் ஞானிகள். ஒருவேளை சி.டி. வெளியாகாமல் இருந்தால் நித்யானந்தாவும் அந்த லிஸ்டில் சேருவார்.


அப்புறம் அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார் என்று கூறுகிறீர்கள். என்ன தவறு? ஆன்மீகம் ஒன்றும் செல்வத்திற்கு எதிரி அல்ல. இதே வரையறயைக் கிருஷ்ணர் மேல் உங்களால் போட முடியுமா? எனக்குத் தெரிந்து அவர் சொந்தமாக ஒரு கார்கூட வைத்திருக்கவில்லை. எல்லாம் சீடர்களுடையது. அவர் சும்மா வாங்கிப் பயன்படுத்திவிட்டுக் கொடுத்துவிடுவார். அப்புறம் ஏழைகளைப் பற்றி மீடியா முன் கண்ணீர்விட அவர் என்ன அரசியல்வாதியா? லட்சக்கணக்கானவர்கள் வறுமையில் வாடும்போது கோடிக்கணக்கில் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டே இருந்தால் திட்டாமல் என்ன செய்வது?அவர் பணக்காரர்களை மிரட்டினார் என்று சொல்கிறீர்கள். இது உண்மையிலேயே மிகக் கடுமையான குற்றச்சாட்டு. இது உண்மையாக இருந்தால் நிச்சயம் அவர் ஞானி கிடையாது என்று தூக்கிப்போட நான் தயார். ஆனால் அவர் யாரை மிரட்டினார் என்று நீங்கள் நிரூபிக்க வேண்டும். எனக்குத் தெரிந்து ஒரு பெரும் பணக்காரர் (பிர்லாவோ அல்லது ரத்தன் டாட்டாவின் தந்தையோ சரியாக நினைவில்லை) ஒரு blank chequeஐக் கொடுத்து இதற்குப் பிரதிபலனாக இந்து மதத்தை உலகம் முழுக்க பிரச்சாரம் செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு ஒஷோ “பணம் இருந்தால் அனைத்தையும் வாங்கிவிட முடியும் என்று நினைக்கிறீர்களா? நான் இந்து மதத்திற்கு எதிராகத்தான் பேசுவேன்” என்று பதில் சொன்னதாக அறிகிறேன். அவரின் ஆசிரமத்தில் பாலியல், அதிகார மோதல்கள் நடந்ததாகக் கூறியுள்ளீர்கள். அது சீடர்களின் தவறு. புத்தரின் சீடன் அதிகாரத்திற்காக அவரையே கொல்ல முயற்சித்ததுதானே வரலாறு? கடைசியாக உங்களிடம் கேட்பது ஒன்றுதான். ஓஷோ உண்மையிலேயே பணக்காரர்களை மிரட்டினாரா? ஆம் எனில் அது பற்றி சற்று விரிவாக எழுதவும். வினோத் மெஹரா ஓஷோ மீது கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து சுருக்கமாகக் கூறவும்.


நன்றி

அன்புடன்,

கார்த்திகேயன்.J


அன்புள்ள கார்த்திகேயன்,


முதலில் ஒரு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முந்தைய பதிலில் தலைப்பில் இருந்த கடுமைக்காக. அதை வேண்டுமென்றேதான் எழுதினேன். ஓஷோவின் எழுத்துக்களை வாசிப்பவர்களில் எத்தனைபேருக்கு ஓஷோவின் மனநிலையை, பாணியை உண்மையிலேயே புரிந்துகொள்ள முடிகிறது என பார்க்க நினைத்தேன். எதிர்வினைகள் நான் எண்ணியபடியே இருக்கின்றன.


நான் எழுதியதை நீங்கள் புரிந்துகொண்டதை வைத்துப்பார்த்தால் உங்களைத் தேவையில்லாமல் புண்படுத்தியிருப்பதாகவே படுகிறது. ஆகவேதான் மன்னிப்பு.


ஓஷோ பற்றிய குற்றச்சாட்டுகளை அறிய உண்மையிலேயே ஆர்வமிருந்தால் அதிகபட்சம் இருபது நிமிடத்தில் இணையத்திலேயே பலவற்றை வாசிக்கலாம். நான் சொன்னவை எவையும் இப்போது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அல்ல. பலநூறு பக்கங்கள் அன்றும் இன்றும் எழுதப்பட்டுவிட்டவை. இங்கே அவற்றைப் புரட்டிப்போட்டு விவாதிக்க நான் விரும்பவில்லை.


மேலும் பிளாங்க் செக் போன்ற தொன்மங்களை நம்பும் இடத்தில் நீங்கள் இருக்கும்போது அதை விவாதிப்பதிலும் பொருள் இல்லை.


நான் எழுதியதற்கும் நீங்கள் புரிந்துகொண்டதற்கும் இடையேயான தொலைவு மிக நீண்டது. அந்தத் தொலைவைத் தாண்டியபின்னரே ஓஷோகூட உங்களுக்குப் பிடிகிடைப்பார்.


ஜெ


ஜெயமோகன்,


ஓஷோ பற்றிய அபத்தமான முட்டாள்தனமான கட்டுரையை வாசித்தேன். ஓஷோ என்றால் யாரென்று நினைத்தீர்கள்? ஓஷோவின் கல்லறையில் என்ன எழுதியிருக்கிறதென்று தெரியுமா? ஓஷோ பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை. ஜென் ஞானிகளுக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை. அவர் அதையெல்லாம் கடந்தவர்.


நீங்கள் வாசிக்கவேண்டிய நிறைய நூல்கள் உள்ளன. குர்ஜீப் எழுதிய ஆன்மீக நூல்களை நீங்கள் வாசிக்கவேண்டும். ஜென்கதைகள் கவிதைகளை வாசிக்கவேண்டும். மிர்தாதின் புத்தகம் ஆகியவற்றை வாசிக்கவேண்டும். அதன்பிறகுதான் நீங்கள் எழுதவேண்டும். கலீல் கிப்ரானைப்போன்ற ஒரு கவிதையை எழுதிவிட்டு ஓஷோவைப்பற்றிப் பேசுங்கள். ஓஷோவைப் புரிந்துகொள்வதற்கு நிறைய அறிவு தேவைப்படும். காதல்கதைகளை எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஓஷோவைப் புரிந்துகொள்ள முடியாது.


ஓஷோ காமத்திலே ஈடுபட்டார் என்று சொல்கிறீர்கள். ஓஷோ எந்தப் பெண்ணிடமும் உறவு வைத்துக்கொண்டதில்லை. அதை அவரே சொல்லியிருக்கிறார். அவர் அவர்களை மன அளவிலே லீலையிலே ஈடுபடுத்தினார். அதையெல்லாம் புரிந்துகொள்ள நீங்கள் நிறைய வாசிக்கவேண்டும். நீங்கள் My way the way of white clouds என்ற நூலை வாசிக்க ஆரம்பிக்கலாம்.


நன்றி


வணக்கம்


அம்ரித்


அன்புள்ள அம்ருத்,


வாசிக்கிறேன்.


நன்றி


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

முட்டாள்களின் மடாதிபதி
தத்துவம், தியானம்-கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2012 11:30

May 3, 2012

யானைப்பலி – கடிதம்

அன்புள்ள ஜெ.மோ,


வணக்கம்.


உங்கள் யானைப்பலி கட்டுரை கண்டேன். மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். அடிக்கடி ‘யானைகள் அட்டகாசம்’ செய்தி வெளியாகும் கோவை மாவட்டத்தில் இருக்கும் எனக்கு, யானைகள் படும் பாடு உங்களைப் போலவே துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.


யானைகள் நடமாடும் வழித்தடங்களை ஆக்கிரமித்து கான்கிரீட் கட்டடங்களையும் வேலிகளையும் அமைத்துவிட்ட நிலையில், யானைகள் தடுமாறுகின்றன. அவை தடம் மாறிக் குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும்போது, “யானைகள் அட்டகாசம்” என்று செய்தி வெளியிட்டு அதுகுறித்து சட்டசபையிலும் நாம் பேசுகிறோம். உண்மையில் அட்டகாசம் செய்வது யார்? யானைகளைக் கண்காணிக்க கருவி மாட்டுவதற்காக மயக்க ஊசி செலுத்தியதில் உயிரிழந்த யானைக்கு பதில் சொல்ல யாருமில்லை. கேட்கவும் நாதியில்லை.


இது குறித்த எனது ‘வென்றவனின் பிரகடனம்’ என்ற கவிதை எனது வலைப்பூவில் 12.07.2011 -ல் எழுதினேன் (http://kuzhalumyazhum.blogspot.in/2011/07/88.html).


யானைகள் நமக்குப் பிரியமானவை. அதே சமயம் நம்மால் அதிகமாகக் கொடுமைப்படுத்தப்படுபவை. அரை வயிறு கூட நிறையாமல், கோவில் வாசலில் நாம் போடும் ஒரு ரூபாய்க் காசுக்காக நமது தலையை வருடப் பயிற்சி அளிக்கப்பட்ட பரிதாப ஜீவன்களாக அவை காட்சி அளிக்கின்றன.


நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு தகவலும் உண்மை. இந்த அடிமைத் தளையை உடைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் தார்மீக ஆவேசம் அனைவரிடத்திலும் பரவ வேண்டும். சூழல் இயக்கங்கள் இதனை ஒரு போராட்டமாகவே முன்னெடுக்க வேண்டும்.


உங்கள் கட்டுரைக்கு மனமார்ந்த நன்றி.


-வ.மு.முரளி


ஜெ ,


யானைப்பலி வாசித்தேன். ஒரு முறை குருவாயூர் சென்றிருந்தபோது யானை அருகில் வெகு நேரம் நின்றிருந்தேன். இரு யானைகள் இருந்தன. ஒரு யானை சிறிது ஆவேசத்துடன் முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருந்தது. அதன் பாகன் அருகில் இல்லை. அமைதியாய் இருந்த யானையின் பாகன் அங்கிருந்தார். நான் அருகில் சென்றபோது என்னைக் கடுமையாகத் திட்டினார், சட்டெனக் கோபம் வரும் எனக்கு அன்று துளிக்கூட வரவில்லை. எனக்கு விஷ்ணுபுரத்தில் பைத்தியமாக அலையும் பாகனை நேரில் காண்பதுபோல் இருந்தது. எனக்கு இருக்கும் அளவுகடந்த யானைப் பிரியத்தின் வேர் அந்தப் பைத்தியப் பாகன்தான்.


ராதாகிருஷ்ணன்


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2012 11:30

அதிர்வு – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,


அண்மையில் வீட்டு விழாவுக்காக இரு இயேசு படங்களை வாங்க நகரின் முக்கிய கிறித்துவ வெளியீடுகளை விற்கும் கடை ஒன்றிற்குச் சென்றேன். ஒரு படம் செபம் செய்யும் இடத்துக்கும் ஒன்று வரவேற்பறையிலும் மாட்ட‌. வரவேற்பறையில் இயேசு குழந்தைகளுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் போன்றோ அல்லது மேய்ப்ப‌ராக‌ இருப்ப‌தைப்போன்றோ ஒரு படம் மாட்டிக்கொள்ள எனக்கு ஆசை. புன்னகைக்கும் இயேசுவின் படம் ஒரு அபாரமான அனுபவத்தை எனக்கு அளிக்கிறது. அது ஞான இயேசு என்று நான் கருதுகிறேன்.


ஆனால் அப்படி ஒரு படம் கிடைக்கவேயில்லை. இப்போது வழிபாட்டு கிறிஸ்து மட்டுமே இருக்கிறார். கிறிஸ்துவ ஞானம் என்பது அறவே அற்றுப் போய்விட்டது என்பதை உணர்ந்தேன். எல்லாக் கோவில்களும் த‌ங்களைப் புதுமை நிகழும் கோவில்களாக விளம்பரப்படுத்திக்கொள்கின்றன. கத்தோலிக்கமும் அற்புத குணமளிக்கும் கூட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. ப‌ல‌ பாதிரியார்க‌ளும் த‌ங்க‌ளை வெறும‌னே ச‌ட‌ங்குகளை ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ளாக‌வும், நிர்வாகிக‌ளாக‌வும் ம‌ட்டுமே மாற்றிக்கொண்டுள்ள‌ன‌ர்.


உங்க‌ள் ‘ஏதோ அதிர்வு இருக்குதுங்க‌’ க‌ட்டுரையைப் ப‌டித்த‌தும் இதுதான் நினைவுக்கு வ‌ந்த‌து.


அன்புட‌ன்,

சிறில்


அன்புள்ள சிறில்,


ஏசுவை இந்திய முகத்துடன் பல கோணங்களில் வரையும் ஓர் இந்திய ஓவியரைப்பற்றி நண்பர் போதகர் காட்சன் ஒருமுறை சொன்னார். அவரது படங்களை சேமித்திருந்தேன். ஒரு கட்டுரை எழுத நினைத்தேன். ஆனால் கணிப்பொறிப்பிரச்சினையால் படங்கள் அழிந்துவிட்டன.


‘பிரார்த்தனை எல்லையற்ற வல்லமை கொண்டது’ என்று ஒரு கட்டுரையில் புலிக்குந்நேல் எழுதுகிறார். ‘ஆனால் சுயநலமில்லாத பிரார்த்தனைகளுக்குத்தான் அந்த வல்லமை கைகூட முடியும்.’ அவர்களைப்பார்த்து மட்டுமே ஏசு புன்னகை செய்கிறார்.


ஜெ


அன்புள்ள ஜெ,


இன்று காலை “ஒரு அதிர்வு இருக்குதுங்க “ கட்டுரை படித்தேன். முக்கால் பகுதி முழுக்க பக்தி, ஞான மற்றும் தாந்திரீக மார்க்கங்கள் பற்றித் தெளிவாகச் சொல்லி மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிப்பூரகம் அனாகதம் பற்றி அந்தக் குறியீடுகளின் அடிப்படைக் காரணங்கள் பற்றி விளக்கியது பெரும் பிரமிப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியது. மிக்க நன்றி. விசுத்தி, ஆக்கினை மற்றும் சகஸ்ஹரம் ஆகிய மற்ற குறியீடுகளுக்கும் விளக்கம் தரமுடியுமா? இவ்வாறு இதைத் தங்களிடமே கேட்பது தவறெனில் மன்னிக்கவும்.


பா.சதிஷ்


அன்புள்ள சதீஷ்,


பார்ப்போம். இவைபற்றி ஒரு கற்பனை இல்லாமல் இவற்றை வெறும் தகவல்களாக அறிந்துகொள்வது மேலும் பிழைகளுக்குக் கொண்டு செல்லலாம். இன்னொன்று, இப்படி எதைப்பேச ஆரம்பித்தாலும் யாரோ சிலர் அதற்கு சொந்த விளக்கங்களுடன் வந்துவிடுகிறார்கள்.


ஜெ


திருமிகு ஜெயமோகன்,


உங்கள் கட்டுரையினை வாசித்தேன். குண்டலினி மார்க்கத்தைப்பற்றி நீங்கள் எழுதியிருந்தீர்கள். அருமையாகச் சொன்னீர்கள். வாசியை அடக்கும் வாசிவித்தை வழியாகவே குண்டலினியைத் தொட முடியும். அதற்கு நாற்பத்தியொன்று மூல மந்திரங்கள் உள்ளன.


குண்டலினி எழுந்தால் மூலாதாரம் எழுபத்திமூவாயிரத்து முந்நூறு முறை சுழலும். அதன் பின் மண்புழு போல லலனை மேலே ஏற ஆரம்பிக்கும். அப்போதுதான் நாம் உலகத்தைத் தெளிவாகப் பார்க்க ஆரம்பிக்கிறோம். திரைபோட்டு மறைத்த விஷயங்களைப் பார்க்க முடியும். மாண்டவர் தெரிவார். முக்காலமும் தெரியும். முக்கண்ணன் அறிவான்.


இதைப்பற்றி உங்களிடம் நிறைய பேச ஆசை. உங்கள் மொபைல் எண்ணை அனுப்பவும்.


ஸத்யநாராயணன்


அன்புள்ள சத்யநாராயணன்,


கிட்டத்தட்ட இருபதுபேர் இதேபோலக் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் பேசி முடிந்ததும் அனுப்புகிறேன். அடுத்த வருடம் வரை நேரமில்லை.


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

ஹனீபா-கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2012 11:30

May 2, 2012

விஷ்ணுபுரத்தின் வாசலில்…

ஜெ,


விஷ்ணுபுரம் நாவலை நான் பத்தாண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அப்போது அது எனக்கு சுவாரசியத்தை அளிப்பதாக இருந்தாலும் நிறைய பக்கங்கள் தேவையில்லாத தகவல்கள் கொண்டதாகவும் தோன்றியது. பக்கங்களைத் தள்ளித்தள்ளித்தான் வாசித்தேன். அந்த அடிபப்டையில் அந்நாவலைப்பற்றி உங்களுக்கு ஒரு கடிதமும் எழுதியிருக்கிறேன். அந்தக்கடிதத்தில் நான் சொல்லியிருந்த குறைகளைப்பற்றி இப்போது யோசிக்கும்போது வெட்கமாக இருக்கிறது. நான் அன்று தமிழிலக்கியத்திலே உள்ள முக்கியமான நாவல்களை எல்லாமே வாசித்திருந்தேன். நல்ல வாசகன் என்ற மமதையும் கொஞ்சம் இருந்தது.


ஆனால் விஷ்ணுபுரத்தை ஒரு இடைவெளிக்குப்பின்னர் வாசிக்க ஆரம்பித்தபோது எனக்கு அது முழுக்கமுழுக்கப் புதிய நாவலாக இருந்தது. நான் முந்தைய வாசிப்பிலே வர்ணனைகளை எல்லாம் தள்ளித்தள்ளித்தான் வாசித்தேன். கதையின் தொடர்ச்சியை மட்டும்தான் ஞாபகம் வைத்திருந்தேன். அந்தக் கதையும் சீராக ஞாபகத்திலே இல்லாமலும் இருந்தது. இரண்டாம் வாசிப்பிலே நாவல் எனக்கு எப்படி பிடித்ததாக மாறியது என்று சொல்கிறேன். ஆச்சரியமாக இருக்கும். நான் ஒருநாள் கனவில் விஷ்ணுபுரத்திலே வரும் ஒரு காட்சியை அப்படியே கனவாகக் கண்டேன். கோயிலில் தூசி படிந்து அதிலே நாயின் காலடித்தடம் கிடக்கும் காட்சி அது.



அதன்பிறகு அந்த வர்ணனைகளைக் கூர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். வார்த்தைகள் வழியாக ஒரு உலகத்தை உருவாக்கிக் காட்டுகிறீர்கள் . அந்த உலகம் உங்கள் கனவிலே மட்டுமே இருக்கக்கூடிய உலகம். அதை எங்கள் கனவுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறீர்கள் என்று நினைத்தேன். கனவாக நினைத்து வாசிக்க வாசிக்க விஷ்ணுபுரம் மிகப்பெரிய அனுபவமாக ஆகியது. ஆனால் வாசித்து முடிக்க எட்டுமாதம் ஆகியது.


முடித்ததும் ஒரு மிகப்பெரிய ஏக்கம் வந்தது. முடிக்கவே மனமில்லை. அதனால் உடனே மீண்டும் ஆங்காங்கே வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். விஷ்ணுபுரம் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கனவுகளால் ஆன ஒரு பெரிய கனவு. பிங்கலன் ஏறிச்செல்லக்கூடிய அந்த பெரிய தூபியை மட்டும் நான் பத்துப்பதினைந்துமுறை கனவிலே கண்டிருப்பேன்


ஆனால் இப்போதுகூட இந்த நாவலை நான் புரிந்துகொண்டேன் என்று சொல்லமாட்டேன். என்னால் உள்வாங்கமுடியாத நாவலாகவே இது இருக்கிறது. இந்த நாவலின் தத்துவங்கள் எனக்கு சரியாகப் புரியவில்லை. இது குறியீடுகள் நிறைந்த நாவல் என்று தெரிகிறது. ஆனால் குறியீடுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எப்போதாவது இந்த நாவலை நான் புரிந்துகொள்வேனா என்ற சந்தேகமே ஏற்படுகிறது.


விஷ்ணுபுரம் நாவலைப் புரிந்துகொள்ள நான் என்ன செய்யவேண்டும்? எந்தெந்த நூல்களை வாசிக்கவேண்டும்?


சிவராஜ்


அன்புள்ள சிவராஜ்,


விஷ்ணுபுரம் பற்றிய என்னுடைய அழுத்தமான எண்ணம் ஒன்றுண்டு. அதை ஒரு இலக்கியப்படைப்பாக மட்டுமே வாசிப்பதிலும் விவாதிப்பதிலும் அதன் ஆசிரியனாக எனக்கு எதிர்ப்புண்டு. அதை இலக்கிய அனுபவம் என்ற நிலையில் நின்று பேசுபவர்களுடன் நான் மேலதிகமாக உரையாடுவதில்லை. ஆம் அது இலக்கியம்தான், ஆனால் இலக்கியம் மட்டுமல்ல.அடிப்படையில் அது ஆன்மீகத்தேடலையும் கண்டடைதலையும் பற்றிய நூல். இலக்கியத்தைவிடப் பெரிய, இலக்கியத்தால் தொட முடியாத ஒன்றைச் சொல்லமுயல்கிறது.


அதற்கு நெடுங்காலமாக இந்த மண்ணில் ஆன்மீகத்தேடலைப் புறவயமாகச் சொல்ல முயன்ற ஞானவழிகள் கையாண்ட படிமங்களையும், தத்துவங்களையும் அது பயன்படுத்துகிறது. விஷ்ணுபுரத்தின் கட்டுமானப்பொருட்கள் என்றால் தர்க்கமும் கனவும் என்று சொல்லலாம். தத்துவங்கள் கனவாக உருமாறி உள்ளன அதில். நீங்கள் நினைப்பதுபோலத்தான் அது ஒரு பெரும் கனவு.. முப்பத்தைந்து வருடங்களாக நான் இந்திய ஞானமரபின் அடிப்படைகளைத் தொடர்ந்து கற்று வருகிறேன். தியானித்து வருகிறேன். அந்நாவலில் என் கல்வியும் கனவும் உள்ளது.


ஓர் இளமை உத்வேகமே அந்நாவலைஎழுதச்செய்தது. மனநிலைப்பிறழ்வின் விளிம்பில் நின்று எழுதிய நாவல்.. இன்று வாசிக்கையில் அந்தப் பிறழ்வின் கணங்கள் எனக்கே பீதியூட்டுகின்றன. அதை எழுதியிராவிட்டால் என் தியானச்சோதனைகளின் விளைவான உளச்சிக்கல்களில் இருந்து வெளியே வந்திருக்க மாட்டேன். பசி,காமம் போன்ற எந்த ஆதார உணர்ச்சியை விடவும் உக்கிரமாக ஆன்மீகமான வினாவின் தவிப்பை நான் உணர்ந்த நாட்களின் விளைவு அது.


அந்நாவலின் உத்தேசவாசகன் ஆன்மீகமான அடிப்படை வினாக்களைத் தானும் கொண்டவன் என்றே நான் நினைத்திருக்கிறேன். இந்திய ஞானமரபின் படிமங்களையும் கருத்துக்களையும் தொடர்ந்து கற்று வருபவனாகவே அவன் இருக்கவேண்டும். இந்த இரு இயல்புகளும் இல்லாமல் விஷ்ணுபுரத்தை ஒரு கதையாகவோ கருத்துக்கட்டமைப்பாகவோ வாசிப்பவர்களை நான் அதற்கான வாசகர்களாக நினைத்ததில்லை.


இந்திய ஞானமரபின் படிமங்களும் கருத்துக்களும் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப்பின் தொடர்ச்சியற்றுப்போனவை. பின்னர் ஐரோப்பிய அறிஞர்களால் அரைகுறையாக மீட்கப்பட்டு ஆங்கிலம் வழியாக நம்மவர்களால் கற்கப்பட்டவை. அதிலும் தாந்த்ரீக மரபு நெடுங்காலம் முன்னரே தமிழில் வழக்கொழிந்து விட்ட ஒன்று. கேரளத்தில் அது ஓரளவு வாழ்கிறது. விஷ்ணுபுரம் பெருமளவு கேரள தாந்த்ரீக மரபுகளுடன் சம்பந்தப்பட்டது..


ஆகவே ஒரு சாதாரண தமிழ் வாசகன் எளிதில் விஷ்ணுபுரத்தின் குறியீட்டுத்தளங்களுக்குள் செல்ல முடிவதில்லை. அவன் அதுவரைக்கும் எழுதப்பட்ட இந்திய- தமிழ் நாவல்கள் உருவாக்கிய வாசிப்புத்தளத்தில் நின்றுகொண்டு விஷ்ணுபுரத்தை வாசிப்பானென்றால் அவனால் அதனுள் புக முடியாது. புகுந்தாலும் மிக மேலோட்டமான சில இலக்கியப்படிமங்களை மட்டுமே அடைவான். இன்னும் கீழ்ப்படிநிலையில் உள்ள எளிய வாசகர்கள் அவர்கள் சார்புக்கு ஏற்ப ஒரு அரசியல் கருத்தை உருவிக்கொள்வார்கள்


விஷ்ணுபுரம் வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த பல மதிப்புரைகள் மிக நகைப்புக்குரியவையாக இருந்தன. அதில் ஏதேனும் தகவல்பிழைகளைக் கண்டுகொள்ளமுடியுமா என்று பார்க்கும் முயற்சிகள். தங்கள் எளிய அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டு அதை மதிப்பிடும் யத்தனங்கள். அதன் பெயர் ,அதன் அட்டையின் நிறம், அதன் சிற்சில கதைச்சந்தர்ப்பங்கள் போன்றவையே அவர்களுக்கு இவ்வாசிப்பை நிகழ்த்தப் போதுமானவையாக இருந்தன


கூரிய வாசிப்புகள் நிகழ்ந்தன. விஷ்ணுபுரம் அளவுக்குப் பாராட்டப்பட்ட, பிரமிக்கப்பட்ட, கூர்ந்து வாசிக்கப்பட்ட இன்னொரு நாவல் தமிழில் இல்லை. அந்நாவலின் அமைப்பும் மொழியும் மட்டும் அல்ல அது பேசும் விஷயமும் அதற்கான காரணம். ஒவ்வொரு ஊரிலும் தலைக்குமேல் எழுந்து நிற்கின்றன கோயில்கள். நம் சென்றகாலம். அதன் முடிவில்லாத மர்மம். விஷ்ணுபுரம் அந்த ஆழத்துக்குள், அந்தக் கனவுக்குள் கொண்டுசெல்லும் நாவல்


இன்றுவரை என்மீது முன்வைக்கப்படும் தீவிரமான வெறுப்பும் வன்மமும் இந்நாவல் உருவாக்கிய பாதிப்பைக் கண்டு உருவான காழ்ப்பின் விளைவே என நான் நன்றாகவே அறிவேன். அடிப்படை ரசனை கொண்ட எவருக்கும் அந்தரங்கமாகத் தெரியும், விஷ்ணுபுரம் எந்த எல்லையைத் தாண்டிச் சென்றது , எங்கே நிற்கிறது என. இன்று அந்நாவலை நிராகரிக்கக்கூடிய, இளக்காரம் செய்யக்கூடிய பல இலக்கியவாதிகள் அது வெளிவந்த நாட்களில் அந்தரங்கமாகத் தங்கள் பிரமிப்பை, எழுச்சியை, கொந்தளிப்பை வெளியிட்டவரகள்தான்


விஷ்ணுபுரம் நாவல் மீது ஒருங்கிணைந்த தாக்குதலைக் காலச்சுவடு, அ.மார்க்ஸ் என இரு தரப்பும் சேர்ந்து உருவாக்கினர். இது ஓர் ஆச்சரியம். எல்லா விஷயங்களிலும் எதிரும்புதிருமானவர்கள் ஒரு படைப்பெழுச்சி நிகழும்போது ஒரே மாதிரி மிரட்சி கொள்கிறார்கள். மேலே மண்ணை வாரிப் போட்டு மூட முயல்கிறார்கள். விஷ்ணுபுரத்தை அவர்கள் ஏதாவதுசெய்ய முடிகிறதா பார்ப்போமே என்ற எண்ணம் இருந்தது எனக்கு.


ஆனால் மேலும் மேலும் வாசகர்களைப் பெற்றுக்கொண்டே செல்கிறது அந்நாவல். ஒவ்வொரு வருடமும் அதற்கு முந்தைய வருடங்களை விட அதிகம் பேர் வாசித்து அதிகம் விவாதிக்கிறார்கள் அந்நாவலைப்பற்றி. தமிழிலக்கியத்தில் எந்நாவலும் அப்படி வெளிவந்த நாள் முதல் எப்போதும் மையமாக இருந்ததில்லை. என்னுடைய பிறகுவந்த நாவல்களும் அந்த அலையை உருவாக்க முடியவில்லை. கொற்றவைகூட


ஆனாலும் விஷ்ணுபுரம் இன்றும்கூடப் பெரும்பாலான பக்கங்கள் வாசிக்கப்படாத ஒரு ஆக்கமாகவே இருக்கிறது. வந்தபடியே இருக்கும் விமர்சனங்களைப்பார்க்கப் பார்க்க அவ்வெண்ணம் உறுதியாகிறது. அது இயல்புதான் என்றே நினைக்கிறேன். விஷ்ணுபுரம் வாசகனை நோக்கி வரக்கூடிய ஆக்கமல்ல. வாசகன் தன்னை நோக்கி வரவேண்டுமெனக் கட்டாயப்படுத்தும் ஆக்கம்.


பொதுவாக பெரிய , சிக்கலான நாவல்கள் அனைத்துக்கும் இயல்பாக முழுமையான வாசிப்பு நிகழ்வதில்லை. தொடர்ச்சியான கூட்டுவிவாதங்கள் வழியாகவே உலகமெங்கும் இத்தகைய நாவல்கள் முழுமையாக உள்வாங்கப்படுகின்றன. வெவ்வேறு கோணங்களில் வாசிப்புகள் முன்வைக்கப்படும்தோறும் நாவலின் அர்த்த தளங்கள் திறந்துகொள்கின்றன.


விஷ்ணுபுரம் வெளிவந்த அதே காலகட்டத்தில் வெளியான நாவல் ஓரான் பாமுக்கின் மை நேம் இஸ் ரெட். விஷ்ணுபுரம் அதற்கு நிகரான, அல்லது அதைவிட மேலான ஒருநாவல் என எந்த நுண்ணுணர்வுள்ள வாசகனும் சொல்வான். ஓரான் பாமுக்கின் நாவலுக்கு உலகளாவ நிகழ்ந்த கருத்தரங்குகள் விவாதக்கூட்டங்கள் பல்லாயிரம். அந்நூல் பற்றி எழுதப்பட்டவை பல்லாயிரம் பக்கங்கள். அந்த விவாதம் வழியாகவே அந்நூல் உள்வாங்கப்பட்டது.


தமிழ்ச்சூழலில் ஒரு இலக்கியப்படைப்பைப்பற்றி ஓரிரு மதிப்புரை வருவதே வம்புக்கு ஆளாகிறது. அதை விவாதிக்க ஒரு கூட்டம் நடத்தப்படுவதே தூற்றப்படுகிறது. அந்த எதிர்வினைகளைப் பொருட்படுத்தவேண்டியதில்லைதான். ஆனால் ஏதோ ஒருவகையில் அது அந்நாவல் பிரச்சாரம்செய்யப்படுகிறது என்ற எண்ணத்தை உருவாக்குமென்றால் அது அந்நாவலைக் கொச்சைப்படுத்துவதாகும் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. ஆகவே நான் விஷ்ணுபுரத்தைப்பற்றி விவாதிப்பதைப் பெரும்பாலும் தவிர்த்தே வருகிறேன்.


விஷ்ணுபுரத்தை முழுமையாக உள்வாங்க விரிவான கூட்டுவிவாதங்கள் இல்லாமல் சாத்தியமே இல்லை. கிட்டத்தட்ட பதினைந்தாண்டுக்காலம் நான் தேடித்தேடி அறிந்த , குருமுகத்திலிருந்து உணர்ந்த விஷயங்கள் அதில் உள்ளன. இந்திய மரபின் சிற்பம், கட்டிடக்கலை, தொன்மங்கள், ஆசாரங்கள் சார்ந்த தகவல்கள் அதிலுள்ளன. அத்தகவல்கள் எல்லாமே குறியீடுகளாக ஆகி ஒரு பெரிய வலையாகப் பின்னிப்பரவியிருக்கின்றன. பௌத்த இந்து தத்துவங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.


இவை நம் சூழலில் சாதாரணமாக வாசிக்கக் கிடைக்காதவை. கேட்கவும் கிடைக்காதவை.விஷ்ணுபுரத்தைப் புரிந்துகொள்ள நான் ஓரிரு நூல்களைப் பரிந்துரைக்க முடியாது . ஓர் ஒட்டுமொத்த ஞானப்பரப்பையே பரிந்துரைக்க முடியும். பல நூல்களை, பல சிந்தனைமரபுகளை. அவற்றைக் கற்பது மட்டும் உதவாது, கற்றவற்றை விரிவாகத் தொடுத்துத் தொடுத்துப் பின்னிக்கொள்ள வேண்டும். அதற்குப் பலமுனைகளிலான விவாதங்கள் இல்லாமல் சாத்தியமில்லை.


இன்று உருவாகும் ஆர்வத்தைப் பார்த்தால் அத்தகைய விவாதங்களை நிகழ்த்தலாமென்ற எண்ணம் இருக்கிறது. பார்ப்போம்


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

கனவும் வாசிப்பும்
கொற்றவையும் சன்னதமும்
சந்திப்புகள் — சில கடிதங்கள்
நான் கண்ட விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்
மேலான உண்மை — சீனு கடிதம்
அறிதலுக்கு வெளியே-சீனு
விஷ்ணுபுரம்- விமர்சனம்
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
கடிதங்கள்
கதைகளின் வழி
சிற்பச்செய்திகள்
அறிதல்-அறிதலுக்கு அப்பால்
தீராநதி நேர்காணல்- 2006
கடிதங்கள்.
கடிதங்கள்
இரு கடிதங்கள்
கடிதங்கள்
இன்செப்ஷன், நனவுணர்வில் கண்ட கனவு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2012 11:30

கனவும் வாசிப்பும்

அன்புள்ள ஜெ,


உங்கள் வலைத்தளத்தில் சமீபத்திய யானை பற்றிய பதிவான யானைப்பலி வாசித்த பிறகு உறங்கச் சென்றேன். இரவு தோன்றிய (நிகழ்ந்த?) கனவு இது.


போர்க்களம் போல ஒரு விளையாட்டு மைதானம் அல்லது விளையாட்டு மைதானம் போல ஒரு போர்க்களம். ஒரே ஒரு யானை மைதானத்தில்; சுற்றிலும் நிறைய மனிதர்கள், அவர்களில் நானும் ஒருவன். யானை என்னை கவனிக்கிறது; கவனிப்பதை நான் உணர்கிறேன். யானையின் தும்பிக்கையில் ஒரு பெரிய கல்; என்னை நோக்கி வீசுகிறது. பறந்து வரும் கல்லைக் கவனித்தபடி, நான் அதிர்ச்சியில் செயலற்று நிற்கிறேன். இங்கேதான் ஆச்சர்யம். கல் என்னைத் தாக்கவில்லை. மென்மையாக என்னைத் தொட்டபடி கீழே விழுகிறது. நான் அதிசயித்து, யானையின் நோக்கம் என்னைத் தாக்குவது இல்லை என்பதை உணர்ந்து, வேறு எதனால் என்று குழம்பி யோசித்தபடி, அவ்விடத்திலிருந்து நகரத் தொடங்குகிறேன். இப்போது சுற்றிலும் நிற்கும் மனிதர்கள் என்னை நோக்கிக் கற்களை வீசுகிறார்கள், ஒருவர் பின் ஒருவராக. ஆனால், ஒரு கல் கூட என்னைத் தாக்கவில்லை. நான் நடந்து கொண்டிருக்கும் போதே, ஒன்றை உணர்கிறேன்; கற்கள், கால் பந்துகளாக மாறுகிறது. கற்கள் மாறுகிறபோதே மனிதர்களும் மாறுகிறார்கள். வன்மம் விட்டு, கால் பந்து விளையாடுவதில் மும்முரமாகிறார்கள். இப்போது அவர்களுடைய லட்சியம் கால் பந்து மட்டுமே.


காலை எழுந்ததும் இக்கனவை நினைவு கூர்ந்த போது, இரண்டு விஷயங்களைத் தொடர்புறுத்த முடிந்தது. ஒன்று யானை பற்றிய உங்களது பதிவு. இரண்டாவது, ‘ஆழ் நதியைத் தேடி’ கட்டுரைத் தொகுப்பில் நீங்கள் பேசுகிற ‘உன்னதமாக்கல்’ (sublimation). முன்பு போர்க்களங்களில் வெளிப்பட்ட வீரம் இப்போது விளையாட்டு மைதானங்களில் வெளிப்படுவதும், காமம் காதலாக உன்னதமாக்கப்படுவதும் பற்றிய கட்டுரை. கட்டுரையும் யானையும் கலந்து ஒரு கனவு. கட்டுரையை மீண்டும் வாசிக்கத் தோன்றியது; கொண்டுவரவில்லை. சென்னை வந்த பிறகே வாசிக்க வேண்டும்.


‘ஆழ் நதியைத் தேடி’ எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைத் தொகுப்பு. ஆழமும் அழகும் ஒருங்கே கொண்ட கட்டுரைகள், தலைப்பைப் போலவே. அப்புத்தகத்தின் மேல் ஒரு தனிக் காதல் உண்டு எப்போதும்…..கூர்மையும் அழகும் கொண்ட ஓர் இளம் பெண்ணாய் என்னை வசீகரித்த வண்ணமே உள்ளது.


நன்றி,

வள்ளியப்பன்



அன்புள்ள வள்ளியப்பன்,


எனக்கும் கனவுகள் என்னை ஆழமாகப் புரிந்துகொள்ளும் வழிமுறையாகவே இருந்துள்ளன. என் கனவுகள் பெரும்பாலும் புனைகதைகளாகின்றன. விஷ்ணுபுரம் கொற்றவை ஆகியவற்றில் உள்ள கனவுகளை வாசகர்கள் எளிதில் சென்றடையமுடியும். கனவை மொழியால் அள்ள முயலும் ஆக்கங்கள் அவை என்பேன்.


அபூர்வமாக வாசிக்கும் கட்டுரைகளையே கனவுகளாகக் காண்பதுண்டு. அக்கனவில் அவை தெள்ளத்தெளிவாக புதிய கோணத்தில் புரியவருவதை ஆழ்மனதின் அற்புதம் என்றே சொல்லவேண்டும்.


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

கொற்றவையும் சன்னதமும்
தீராநதி நேர்காணல்- 2006
விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்
விஷ்ணுபுரத்தின் வாசலில்…
சந்திப்புகள் — சில கடிதங்கள்
வாசலில்…
நான் கண்ட விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்
அடுத்தகட்ட வாசிப்பு
வாசிப்பும் சமநிலையும்
மேலான உண்மை — சீனு கடிதம்
அறிதலுக்கு வெளியே-சீனு
விஷ்ணுபுரம்- விமர்சனம்
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
கடிதங்கள்
காந்தி-வாசிப்பு-சுயம்:ஒரு கடிதம்
விவாதத்தின் நெறிமுறைகள்
பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
இறந்தவர்கள்
கடிதங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2012 11:30

May 1, 2012

இணைய இசை

World Space என்ற பெயரில் பல்வேறு உயர் தர உலக சங்கீதம் ஒலி பரப்பிய, பணம் செலுத்தி கேட்கும் ரேடியோ ஸ்டேஷன் ஒன்று சில வருடங்கள் முன்பு இருந்தது. அதில் மிக நேர்த்தியான, தரமான சங்கீதம் எந்த வித விளம்பரத் தொந்தரவும் இல்லாது, இசையில் தேர்ச்சியும், ஆர்வமும் உள்ள நல்ல நடத்துனர்களால் பல நல்ல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட்டது. அந்த நிறுவனம் பல காரணங்களால் சில வருடங்களுக்கு முன் மூடப்பட்டது. அதில் வேலை செய்த சிலரால், கர்னாடக சங்கீதத்திற்கென ஒரு வலை ரேடியோ இப்பொழுது தொடங்கப்பட்டு beta stage ல் உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் ஒரு வாரம் வரை இலவசமாக நிகழ்ச்சிகளைக் கேட்கலாம். அதன் பின் பணம் கட்டிக் கேட்கலாம். குறிப்பாகக் கர்னாடக சங்கீதத்தில் ஆர்வம் உள்ள வெளி நாட்டு வாசிகளுக்குப் பயன் உள்ளது. அதன் விவரங்கள் கீழ் வருமாறு.


அருணா


ரேடியோ வெப்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2012 11:30

ஐரோப்பாக்கள்

ஜெயமோகன்,


பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தைப் பற்றி நம் இந்திய பாரம்பரிய நோக்கில் இருந்து பேசுகையில், ஒரு வித இகழ்ச்சி தொனியுடனேயே அது இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக அது ஒரு நுகர்வு கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் விதமாகவே அது அமைகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இன்றைய நுகர்வு கலாச்சாரத்தை தோற்றுவித்த அதே ஐரோப்பாவே பல ஆக்கபூர்வமான சிந்தனையாளர்களையும் தோற்றுவித்துள்ளது எத்தகைய ஒரு முரண்பாடு? ஐரோப்பாவின் பல கலை சின்னங்களின் முன்னாள் நிற்கும்பொழுது ஏற்படும் மன எழுச்சி எனக்கு எந்த விதத்திலும் இந்தியாவில் உணரும் மன எழுச்சியுடனிருந்து வித்தியாசமாகத் தோன்றுவதில்லை. அவையும் மனித வாழ்க்கையின் ஊற்றுக்கண்ணாகவே நான் காண்கிறேன். நீங்கள் எப்படி மேற்கத்திய கலாசாரத்தை நோக்குகிறீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.


ஓப்லா விஸ்வேஷ்


தல்ஸ்தோய்


அன்புள்ள விஸ்வேஷ்,


மேற்கத்தியக் கலாச்சாரம் என்பது ஒரு பொதுவான சுட்டு வார்த்தை. நாம் பொதுப்பேச்சுகளில் இவ்வார்த்தையைச் சொல்லும்போது அது எதைக்குறிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். வெஸ்டர்ன் கல்ச்சர் என்ற சொல்லின் தமிழாக்கம். பொதுவாக ஐரோப்பியப் பண்பாட்டையும் அதன் நீட்சியான அமெரிக்கப் பண்பாட்டையும் இச்சொல் சுட்டுகிறது.


இதேபோல கீழைக்கலாச்சாரம் என்றும் குறிப்பிடுகிறோம். மேலைக்கலாச்சாரத்தின் மறுபக்கமாக, மாற்றாக அது சுட்டப்படுகிறது. இந்தியா சீனா ஜப்பான் முதலிய ஆசியப் பண்பாடுகளை ஒட்டுமொத்தமாகச் சுட்ட அச்சொல் ஆளப்படுகிறது.


ஆனால் கறாராகப் பார்க்கும்போது இந்தச் சொல்லால் சுட்டப்படுவது ஒரு பெரிய தொகுப்படையாளம் என்பதை உணரலாம். முதல் விஷயம் ஐரோப்பியப்பண்பாடு என்பதும் அமெரிக்கப் பண்பாடும் பல்வேறு உள்வேறுபாடுகள் உள்ளவை. தத்துவம், அரசியல்நோக்குகள் ஆகியவற்றில் பலசமயம் ஐரோப்பியப் பண்பாட்டுக்கு எதிரான போக்குகளை அமெரிக்காவில் காண்கிறோம்.


அதேபோல ஐரோப்பியப்பண்பாடேகூட ஒன்றல்ல. பல கோணங்களில் பற்பல அடுக்குகளை அதில் பார்க்கலாம். மிக முக்கியமாக அதில் உள்ள கிரேக்க, ரோம பண்பாட்டு அம்சம். அதாவது பாகன் பண்பாடு. அதற்கு எதிராக அங்கே வேரூன்றி எழுந்த கிறித்தவப் பண்பாடு அதாவது செமிட்டிக் பண்பாடு. அவ்வாறாக இரண்டு விஷயங்களைச் சுட்டிக்காட்டலாம்.


அப்படியென்றால் நாம் இங்கே மேலைப்பண்பாடு என்று எதைச்சுட்டிக்காட்டுகிறோம்?


அச்சொல் புழக்கத்துக்கு வந்தது பதினெட்டாம் நூற்றாண்டின் பண்பாட்டு விவாதங்களில். ஆசியப்பண்பாட்டுக்கூறுகள் அதிகமாக ஐரோப்பியப் பண்பாட்டுக்கூறுகளைச் சந்திக்க நேர்ந்தபோது ஓர் ஒப்பீடாக இச்சொற்கள் உருவாகி வந்தன.


நடைமுறையில் இச்சொல் அன்றைய ஐரோப்பாவின் பொதுவான, மேலோங்கிய பண்பாட்டையே சுட்டிக்காட்டின. அன்றைய ஐரோப்பியப் பண்பாட்டில் மேலோங்கிய விஷயங்களை இரண்டு அடிப்படை கொண்டவையாகச் சொல்லலாம்.


ஒன்று, பதினாறாம் நூற்றாண்டு ஐரோப்பிய மறுமலர்ச்சியின்போது உருவாகிவந்த ஒட்டுமொத்தமான ஐரோப்பியப் பண்பாட்டு அடையாளம். இரண்டு, தொழிற்புரட்சியை ஒட்டி உருவாகிவந்த ஐரோப்பியப் பண்பாட்டு அடையாளம்.


ஐரோப்பிய மறுமலர்ச்சி ஐரோப்பியசிந்தனையில் உருவான பெரும் கொந்தளிப்பு. அது கிறித்தவமதத்தின் மேலாதிக்கத்துக்கு எதிராக ஐரோப்பா தன்னுடைய கிரேக்க, ரோமானியப் பண்பாட்டு அடிப்படைகளை மறு கண்டுபிடிப்பு செய்வதாக ஆரம்பித்தது.


அந்தப்போக்கு தத்துவத்தில் கலைகளில் இலக்கியத்தில் அரசியலில் மறுமலர்ச்சியை உருவாக்கியது. உலகுக்கே ஜனநாயகம், தனிமனித உரிமை, அறிவியல்சிந்தனை ஆகியவற்றை அளித்த ஒரு பெரும் வரலாற்று நிகழ்வாக நான்கு நூற்றாண்டுக்காலம் நீண்டது.


ஐரோப்பியமறுமலர்ச்சியின் விளைவாக ஐரோப்பாவில் உருவான நிரூபணவாத அறிவியலின் வளர்ச்சி இயந்திரப்புரட்சியை உருவாக்கியது. அது தொழில்புரட்சியை நிகழ்த்தியது. அதன் விளைவாக நவீன தொழில்நுட்ப உலகம் உருவாகிவந்தது.





மார்க்ஸ்


போக்குவரத்து, செய்தித்தொடர்பு, நிர்வாகம், ராணுவம் ஆகியவை நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து பெருவளர்ச்சி அடைந்தன. விளைவாக நவீன முற்றாதிக்க அரசுகள் உருவாயின. பெருமுதலியம் உருவாகியது. உலக ஆதிக்கத்துக்கான முனைப்பும் அதன் விளைவான காலனியாட்சிகளும் பிறந்தன. அதன் விளைவாக பேரழிவு ஆரம்பித்தது.


ஆக, மேலைப்பண்பாடு என்னும்போது இவ்விரண்டையும் சேர்த்தே சுட்டிக்காட்டுகிறோம். ஐரோப்பிய மறுமலர்ச்சி இல்லையேல் இன்றைய உலகம் இல்லை. நாம் இன்று சிந்திக்கும் கருத்துக்களில் மிகப்பெரும்பாலானவை ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில் இன்றைய வடிவம் கொண்டவைதான்.


கலை இலக்கியம் அறிவியல் என எல்லா துறைகளிலும் ஐரோப்பாவே நவீன உலகுக்கு வழிகாட்டி. அந்த ஐரோப்பாவை நிராகரித்து நவீன சிந்தனை உள்ள எவரும் பேசிவிடமுடியாது. கதே, தல்ஸ்தோய், மொசார்த், பீத்தோவன், வால்டேர், மார்க், டார்வின், ஐன்ஸ்டீன் என அந்த ஐரோப்பியப்பண்பாட்டின் முகங்களே உலகின் நவீன முகங்கள்.


தொழிற்புரட்சியை ஒட்டி உருவான ஐரோப்பியப்பண்பாடு முழுக்க முழுக்க பேராசையின், பெருநுகர்வின், வல்லாதிக்கத்தின் முகம். அதுவே காலனியாதிக்கமாக நாம் அறிந்தது. அந்த வல்லாதிக்கம் உருவாக்கிய செல்வம் அசிங்கமான ஒரு மதிப்பீடுகளற்ற கேளிக்கைசார் வாழ்க்கையை அங்கே உருவாக்கியது.


இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய ஐரோப்பா நேரடியான ராணுவ வல்லாதிக்கத்துக்குப் பதிலாக பொருளியல் வல்லாதிக்கத்தை உலகுமீது சுமத்த எண்ணுகிறது. அதற்கான எல்லா தந்திரங்களையும் அது செய்கிறது.


பொருளியல் வல்லாதிக்கத்துக்கு ஐரோப்பா விரிக்கும் வலை என்பது இருவகை. ஒன்று அரசியல் வலை. அது ஆதிக்கம்செலுத்த விரும்பும் நாடுகளில் அரசியல் நிலையின்மையை உருவாக்குவது அதன் முக்கியமான நோக்கம். அதற்காக அது பிளவுபடுத்தும் அரசியல் கொள்கைகளை ஏற்றுமதி செய்கிறது.


தன்னுடைய கல்விநிறுவனங்கள் மூலம், இதழ்கள் மூலம், சிந்தனையாளர்கள் மற்றும் கலாச்சாரவாதிகள் மூலம் மத, இன, இடம் சார்ந்த, மொழிசார்ந்த பிரிவினைச்சிந்தனைகளை ஐரோப்பா உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறது. அதேசமயம் தன்னுடைய நிலப்பரப்புக்குள் அச்சிந்தனைகளை முழுக்க இல்லாமலாக்கி ஒற்றுமையை மேலும் மேலும் உருவாக்கிக்கொண்டும் இருக்கிறது.


தன் அரசியல் திட்டங்களை ஐரோப்பாவும் அமெரிக்காவும் பல்வேறு நிதியுதவிகள் மூலம் பிறநாடுகளில் கொண்டுசெல்கின்றன. கல்விக்கான நிதிகள், சேவைக்கான நிதிகள் என்ற பேரில் அவை இந்தியா முதலிய நாடுகளுக்கு வருகின்றன. இங்கே கூலிச்சிந்தனையாளர்களையும் கூலி அரசியல்வாதிகளையும் உருவாக்குகின்றன. இந்தியா முதலிய நாடுகளில் உள்ள பிரிவினைப்போக்குகள் அனைத்துக்கும் உள்ளே இந்தக் கூலிப்படையும் அவர்கள் பெறும் நிதியும் உள்ளன.


இரண்டாவது, பண்பாட்டுவலை. தன்னுடைய பொருளியலாதிக்கத்துக்காக கட்டற்ற நுகர்வை ஐரோப்பா உலகப் பண்பாடாக ஆக்க நினைக்கிறது. அதற்காக கேளிக்கைமட்டுமே இன்பம் என்ற விழுமியத்தையே ஐரோப்பியப் பண்பாடாக அது உலகமெங்கும் பரப்புகிறது. இதற்காக கலைகளையும் இலக்கியத்தையும் கருவியாக அது கையாள்கிறது.


ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பொருளியல் வல்லாதிக்க நோக்கு பற்றிய பிரக்ஞை உடையவர்கள் மேலைப்பண்பாட்டை இந்த இரு அடிப்படைகளில் எதிர்த்து நிராகரிக்கிறார்கள். அதாவது அதில் உள்ள ஆக்ரமிப்பு மற்றும் சுரண்டல்நோக்கையே நிராகரிக்கிறார்கள். மிகச்சிறந்த உதாரணம், முதன்மையான தொடக்கப்புள்ளி காந்திதான்.


ஆனால் இந்த நிராகரிப்பு ஐரோப்பாவின் பண்பாட்டை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதல்ல என்ற பிரக்ஞை காந்தியிடம் இருந்தது. காந்தி ஐரோப்பியப்பண்பாட்டின் சிறந்த அம்சங்களை முழுக்க உள்வாங்கிக் கொண்டவர். அவரது முன்னுதாரணங்கள், ஆசிரியர்கள் தோரோவும் தல்ஸ்தோயும்தான்.


சொல்லப்போனால் இந்த இரண்டாவது ஐரோப்பாவை வலுவாக எதிர்க்க மிகச்சிறந்த ஆயுதங்களை அளிப்பது முதல் ஐரோப்பாதான். மார்க்ஸும் தல்ஸ்தோயும் தோரோவும்தான் ஐரோப்பிய வல்லாதிக்கத்துக்கு எதிரான வெற்றிகரமான கருவிகள்.


இன்றைய சூழலில் நாம் இந்தப்பிரிவினையை நிகழ்த்துவது எளிய விஷயம் அல்ல. நுட்பமான பண்பாட்டு ஆய்வும் நேர்மையும் தேவைப்படுகிறது. சுரண்டல் சக்திகளால் பேணி வளர்க்கப்படும் ஐரோப்பிய அறிவுப்புலமானது பிளவுபடுத்தும் சிந்தனைகளை வரலாற்றாய்வு என்றும் பண்பாட்டு பன்மைத்தன்மையை வெளிக்கொணர்தல் என்றும் சொல்லியே முன்வைக்கிறது.


ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பேணுதல் என்றும், சிறுபான்மையினர் பாதுகாப்பு என்றும் இன்னும் பல பெயர்களிலும் இந்தப் பிளவுபடுத்தும் சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன.


அதேபோல பாலியல் சுதந்திரம், பாலியல் சமத்துவம், தனிமனித உரிமை என்றெல்லாம் ஒருவகை இலட்சியவாத முகமூடியுடனேயே கட்டற்ற நுகர்வுக்கோட்பாடுகள் முன்வைக்கப்படும். உடலரசியல் என்றும் பாலியலின் அரசியல் என்றும் சிக்கலான கொள்கைகள் உருவாக்கப்பட்டே அவை முன்வைக்கப்படும். அவற்றை பன்னிப்பன்னி பேச நிதியுதவி பெறும் அறிவுஜீவிகளும் உருவாக்கப்படுவார்கள்.


முதல் ஐரோப்பா மீது நமக்கு இருக்கும் மதிப்பையும் மோகத்தையும்தான் இரண்டாவது ஐரோப்பா பயன்படுத்திக்கொள்கிறது. நமக்கு மார்க்ஸ் மீது மதிப்பிருக்கிறது. ஆகவே பிளவுபடுத்தும் சிந்தனைகள் நவமார்க்ஸிய பூச்சுடன் இங்கே வந்திறங்குகின்றன..நமக்கு ஐரோப்பிய நவீன இலக்கியம் பிரியமானது. ஆகவே கட்டற்ற களியாட்டத்தை பிரச்சாரம்செய்யும் ஆக்கங்கள் நவீன இலக்கியமாக வந்து சேர்கின்றன.


இந்தச் சிக்கலை புரிந்துகொள்ளாதவர்கள் மனதில் இரண்டாவது ஐரோப்பா பற்றிய விமர்சனமும் வெறுப்பும் முதல் ஐரோப்பாவை நிராகரிப்பதாக உருவாகிவிடுகிறது. ஒட்டுமொத்தமாக மேலைப்பண்பாடே இப்படித்தான் என்றவகையிலான முத்திரைகள் குத்தப்படுகின்றன. அதையே நாம் அடிக்கடி காண்கிறோம்.


ஐரோப்பாவின் அனைத்து சுரண்டல்களையும் நுட்பமாகப் புரிந்துகொண்டவர் காந்தி. அதற்கான எதிர்ப்புக்கருத்துக்களையும் ஐரோப்பாவிலேயே கண்டுகொண்டவர். ஐரோப்பாவை எப்போதும் தெள்ளத்தெளிவாக பிரித்துக்காணமுடிந்தவர். ஐரோப்பாவின் இரண்டாம் வடிவை, அதன் சுரண்டலை முழுமையாக நிராகரித்த காந்திக்கே ஐரோப்பிய சீடர்களும் நண்பர்களும் நிறைய இருந்தனர். அவர்களெல்லாம் முதல் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள்.


ஐரோப்பாவை அணுக மிகச்சிறந்த முன்னுதாரணம் காந்தியே.


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

கேள்விகள்
காந்தியின் எதிரிகள்
முட்டாள்களின் மடாதிபதி
வினோபா, ஜெபி, காந்தி
காந்தியின் திமிர்
காந்தி, கிலாஃபத், தேசியம்
சந்திரசேகர சரஸ்வதி
காந்தியும் விதவைகளும்
காந்தியின் சனாதனம் — கடிதங்கள்
காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்
காந்தியின் சனாதனம்-6
காந்தியின் சனாதனம்-5
காந்தியின் சனாதனம்-4
காந்தியின் சனாதனம்-3
காந்தியின் சனாதனம்-2
காந்தியும் சனாதனமும்-1
இந்திய நிர்வாகம் — கடிதம்
அதிகாரமும் கலங்கலும் — கடிதம்
கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] — 3
காந்தியும் கடவுளும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2012 11:30

April 30, 2012

முட்டாள்களின் மடாதிபதி

அன்புள்ள ஜெயமோகன்,


நான் உங்கள் இணைய தளத்தைக் கடந்த 4 வருடமாக வாசிக்கிறேன். நான் ஓஷோவின் தீவிர வாசகன். சமீபத்தில் இணையத்தில் ஓஷோ, காந்தி மற்றும் ஹரிதாஸ் பற்றிப் பேசிய சுட்டியைத் தற்செயலாக வாசிக்க நேர்ந்தது மிக அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் காந்தி, ஹரிதாஸ் பற்றி நீங்கள் எழுதியதற்கு அப்படியே எதிராக இருந்தது. ஓஷோவை ஞானி என்று நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே அவர் நிச்சயமாக அவதூறு செய்ய மாட்டார். காந்தி குடும்பத்துடன் நேரடித் தொடர்புடையவர் அவர். ராம்தாஸ் எனது நண்பர் என்று அவரே கூறி இருக்கிறார். நேருவிடம் ஓஷோ நெருக்கமான தொடர்பில் இருந்தார். எனவே இதுபற்றித் தாங்கள் விளக்க வேண்டும். இது பற்றிய சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்.



அன்புடன்


கார்த்திகேயன்.J



அன்புள்ள கார்த்திகேயன்,


நான் ஓஷோவைப் ‘புரிந்துகொண்டவன்’ அல்ல. புரிந்துகொள்ள முயல்பவன். எனக்கு அவரைப்பற்றிய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் திராணி இல்லை.


காந்தியைப்பற்றி ஓஷோ சொன்னவை பெரும்பாலும் எல்லாமே வசைகள், அவதூறுகள், முழுப்பொய்கள். சாதாரணமாக எவருமே அதைத் தெளிவாக நிரூபிக்க முடியும். ஓஷோ பெரும்பாலும் தெரிந்தே அவற்றைச் சொல்லியிருக்கிறார் என்பதே உண்மை. ஓஷோவின் நோக்கம் காந்தி என்ற அடையாளம் மீதான தாக்குதல், அதன்வழியாக இந்திய மனதுக்கு ஓர் அதிர்ச்சி, உடைவு.


ஓஷோவின் உரைகளை வாசித்தால் அதேபோல ஏராளமான விஷயங்களை அவர் தவறாகச் சொல்லியிருப்பதை, வேண்டுமென்றே திரித்திருப்பதை, முரண்பாடாகச் சொல்வதை கவனித்தபடியே செல்லலாம். இதன் மூலம் உருவான எரிச்சலால் அவரை வாசிப்பதை நான் விட்டுவிட்டேன். மீண்டும் ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில் ஓஷோ பெரும் சலிப்பை ஏற்படுத்தினார். அவர் திரும்பத்திரும்பச் சொல்கிறார், ஒரு அளவுக்குமேல் நகரவே இல்லை என அறிந்தேன். அவர் வழியாக நம்மை உடைத்துக்கொள்ளலாம். கண்டடையமுடியாது. அந்த அறிதல் வழியாகவே அவரைக் கடந்துசென்றேன். இன்று எனக்கு ஓஷோ தேவையில்லை.


ஓஷோ மனித மனத்தின் பல இருண்ட ஆழங்களைத் தொட்டுக்காட்டியவர். வழக்கமான விஷயத்தை முற்றிலும் புதிய இடத்தில் திறந்து பார்க்கக்கூடியவர். தத்துவங்களை உடைத்துக்கலக்க முடிந்தவர். ஞானம் என நாம் எதையெல்லாம் சொல்கிறோமோ அவற்றையெல்லாம் மீறிய முற்றிலும் வேறான ஒரு ஞானம் அவரளிப்பது. ஆம், அவரது பணி என்பது கலைப்பதும், குலைப்பதும் மட்டுமாகவே இருந்திருக்கிறது. இந்த அர்த்தத்தில்தான் அவரை இந்திய ஞானிகளில் ஒருவராக எண்ணுகிறேன். இந்நூற்றாண்டில், பக்திமரபில் உறைந்த இந்திய சமூகத்திற்கு, அவரது வருகை தேவையாக இருந்திருக்கிறது, நிகழ்ந்திருக்கிறது.


விருந்தில் அறுசுவை உணவுக்கு முன்னால் அமர்ந்த மன்னன் அருகே மலத்தில் விழுந்த மண்டை ஓட்டுடன் ஒரு பைராகி வந்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான் என்றும், அந்த அதிர்ச்சியில் மன்னன் துறவியானான் என்றும் ஒரு கதை உண்டு காசியில். அகோரிகளின் கதை.


ஓஷோவின் நோக்கம் பெரும்பாலும் உடனடியாக ஓரு சிந்தனை அதிர்ச்சியை உருவாக்கி வழக்கமான பாதையில் செல்லும் நம் எண்ணங்களைக் கலைப்பதாகவே இருக்கிறது. குறிப்பாக இந்திய மரபுமனம் மீது அவருக்கு இருக்கும் எதிர்ப்புணர்வு மிகையானது. காந்தியை அவர் இந்தியாவின் பழமைவாத ஒழுக்க நோக்கின் பிரதிநிதியாக மட்டுமே பார்க்கிறார். காந்தியை உடைக்காமல் இந்திய மனதை உடைக்கமுடியாதென நினைக்கிறார். அவ்வளவுதான்.


ஓஷோ சம்பிரதாயமாகச் சிந்திக்கக்கூடிய ஆரம்பநிலையாளர்களுக்கு முக்கியமானவர். அவர்களை அவர் உடைத்துத் திருப்பக்கூடும். அதன் பின் நம்முள் உள்ள முள்ளை எடுக்க உதவிய அந்த முள்ளையும் வீசிவிட்டே முன்னகர வேண்டும்.


‘அவர் ஞானி, ஆகவே அவர் சொன்னதும் செய்ததும் சரியாகத்தான் இருக்கும்’ என்று சொல்லத்தக்கவர் அல்ல ஓஷோ. அவரது வாழ்க்கை, அவரது பேச்சுக்கள் அனைத்திலும் வழக்கமான அற, ஒழுக்க மரபுகளுக்கு முற்றிலும் ஒவ்வாதவையே நிறைந்துள்ளன.


அவரது ஆசிரமங்களின் உள்ளே நிகழ்ந்த அதிகாரச்சிக்கல்கள், பாலியல் மோதல்கள் போன்றவை ஒருபக்கம். அவரே பணக்காரர்களை உள்ளே இழுக்க வெட்கமில்லாமல் முயற்சி செய்தவர். அதற்காக அவர்களிடம் நயந்தும் ஆசைகாட்டியும் மிரட்டியும் பேசியவர். யார் போனாலும் கழுத்தில் ஒரு மாலையை மாட்டிவிட்டு அவர்களுக்கு சாமியார்த்தனமான பெயரையும் அளித்துப் பணம் கறக்கும் அமைப்பாகவே ஓஷோவின் ஆசிரமம் இருந்தது. வினோத் மெஹ்ரா போன்றவர்கள் அங்கே போனதும் மீண்டதுமெல்லாம் கேலிக்கூத்து.


ஓஷோ பற்றி மகேஷ்பட் உள்ளிட்ட பலர் வெளிப்படையாகவே எழுதியிருக்கிறார்கள். ‘ஓஷோ நீங்கள் பிறரது உள்ளார்ந்த பயத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொண்டவர், நான் அவர்களின் தனிமையைப் பயன்படுத்திக்கொள்கிறேன்’ என மகேஷ்பட் அவரிடம் சொன்னதாக எழுதுகிறார். மிகச்சரியான விவரணை அது.


ஓஷோ உலகின் வறுமையை எள்ளி நகையாடினார். எளிய மக்கள் மீது வெறுப்பைக் கொட்டினார். மனிதநேயத்தை மோசடி என்றார். சேவைகளையும் புரட்சிகளையும் வெறும் அகங்காரம் என்றார். ஓஷோவின் உரைகள் இன்று மிகமிக வெட்டி ‘ஒழுங்குபடுத்தப்பட்டு’ வெளிவருகின்றன. அவற்றிலேயே நாம் ஓஷோவின் இந்தக் குரலைத் தெளிவாகக் காணலாம்.


ஓஷோ நகைகளில், வைரங்களில், கார்களில் பெரும் மோகம் கொண்டிருந்தார் என்பது ரகசியமல்ல. செல்வத்தில் திளைக்க அவர் விரும்பினார். எந்த அற, கல்விப்பணிகளையும் அவர் செய்யவில்லை. தன் பணத்தை முழுக்க தானே அனுபவிக்க முயன்றார். அதைப்பற்றிக் கேட்டபோது ‘ஒரு சாமியார் இதையெல்லாம் செய்யமாட்டார் என நீங்கள் நினைக்கிறீர்கள். ஆகவேதான் செய்கிறேன்’ என்று பதில் சொன்னார்.


ஓஷோ பொய் சொல்வதை மட்டுமல்ல, மோசடி, கற்பழிப்பு, கொலை எதை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். நான் ஆச்சரியப்பட மாட்டேன். இந்த சாத்தியத்தை வைத்துத்தான் அவரை ‘கிரிமினல்’ என்று ஜெ.கிருஷ்ணமூர்த்தி சொன்னார். அறத்தின் குன்றேறி நின்ற ஞானிகள் இருக்கமுடியுமென்றால் ஒரு கிரிமினல்ஞானி ஏன் இருக்கக் கூடாது? இந்தியஞான மரபின் அந்த சாத்தியம்தான் ஒரு துணுக்குறவைக்கும் உண்மை. இன்றும் என்னால் முழுக்க புரிந்துகொள்ளமுடியாத ஒரு மர்மம் அது.


ஆனால் அவரை வாசிக்கும் எளிமையான வாசகர்கள் அவர்களை ஒரு போதகராக எளிமைப்படுத்திக்கொள்கிறார்கள். வாழ்நாள் முழுக்க ஓஷோ வெறுத்த, நிராகரித்த இடம் என்பது ஒரு போதகரின் இடம்தான். ‘ஓஷோ சொல்லியிருக்கார் அத நான் அப்டியே செஞ்சுட்டு வர்ரேன்’ என்று சொல்பவர்களை அடிக்கடி பார்க்கிறேன். ‘ஆனை தூறுதுன்னு ஆடு தூறினா அண்டம் கிளிஞ்சிரும்’ என்ற குட்டப்பனின் பொன்மொழிதான் நினைவுக்கு வருகிறது.


ஓஷோ இறந்தபின் அவரது சீடர்களில் ஒரு பகுதியினரால் அவர் ஒரு மடாதிபதியாக ஆக்கப்பட்டார். எல்லாவற்றையும் உடைக்க முயன்றவரை ஒரு கட்டுமானமாக ஆக்க ஆரம்பித்தனர். அவரது எளிமையான நூல்கள் வழியாக ஆரம்பநிலை வாசகர்களுக்கான முதிரா ஆன்மீகம் பேசும் ஒரு முகமாக அவர் இன்று உருவாகியிருக்கிறார்.


ஓஷோவை வரிக்குவரி வேதமாக எடுத்துக்கொள்வதுபோல ஆபத்தானது ஏதுமில்லை. ஆனால் ஒரு வகையில் இது ஆன்மீகத்தில் எப்போதுமே நிகழ்வதுதான். ஓஷோ இருபதாம் நூற்றாண்டு புத்திசாலி மனிதனின் தர்க்கபுத்தியை சிதறடிக்க முயன்றவர். மெல்ல மெல்ல அவரால் முழுமையாக வெறுக்கப்பட்ட முட்டாள்களின் குருவாக அவரே உருவாகி வந்திருக்கிறார். சிலையுடைப்பாளர் சிலையாகாமல் ஒரு கதைகூட முடிந்ததில்லை மானுட வரலாற்றில்.


பக்திமரபை உடைக்க வந்த ஓஷோ பக்தர்கள் நடுவே பீடத்தில் வந்து கொலுவீற்றிருக்கும் அழகை நினைக்கையில் அவரை விஷ்ணுபுரத்தின் ஒரு கதாபாத்திரமாகவே நினைக்கத் தோன்றுகிறது.


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

வினோபா, ஜெபி, காந்தி
காந்தியின் திமிர்
காந்தி, கிலாஃபத், தேசியம்
சந்திரசேகர சரஸ்வதி
காந்தியும் விதவைகளும்
காந்தியின் சனாதனம் — கடிதங்கள்
காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்
காந்தியின் சனாதனம்-6
காந்தியின் சனாதனம்-5
காந்தியின் சனாதனம்-4
காந்தியின் சனாதனம்-3
காந்தியின் சனாதனம்-2
காந்தியும் சனாதனமும்-1
இந்திய நிர்வாகம் — கடிதம்
அதிகாரமும் கலங்கலும் — கடிதம்
கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] — 3
காந்தியும் கடவுளும்
காந்தியும் லோகியாவும்
கடிதங்கள்
பாரதி விவாதம் 8 — விமர்சனம் எதற்காக ?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 30, 2012 11:30

April 29, 2012

கொற்றவையும் சன்னதமும்

அன்புள்ள ஜெயமோகன்,


நான் தங்களின் மூன்று வருட வாசகன். உங்களை கோவைப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்துப் பேசியது நினைவிருக்கலாம். “பண்படுதல்” பற்றியும் “டி.டி கோசம்பி” ஆவணப் படத்தைப் பற்றியும் என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். என்னுடைய இலக்கிய, சமூக, அரசியல் தளங்களில் உருவாகி வந்தக் கருத்துக்கள் அனைத்திலும் உங்களின் தாக்கம் மிக அதிகம். உங்களின் விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் நாவல்களை முடித்து விட்டு இப்பொழுது “கொற்றவை” படித்துக் கொண்டிருக்கிறேன். சுமார் 400 பக்கங்கள் கடந்த நிலையில் கிட்டத்தட்ட கிறங்கிய நிலையில் இருக்கிறேன். விஷ்ணுபுரம் கூட இவ்வளவு தாக்கத்தை உண்டாக்கவில்லை. முக்கியமாக மூன்றாம் அத்தியாயத்தில் உள்ள “குலக்கதை சொன்னது” பகுதிகள் என் வாழ்வில் என்றென்றும் இருக்கப் போகிறவை. உங்களுக்கு இந்தக் கடிதம் எழுத நேற்று இரவு நடந்தவையே காரணம்.



நாவலில் “சேரன் மலையாற்றூர் சென்று தாங்கும் முதல் இரவு” பகுதியைப் படித்து முடித்து விட்டு இனம் புரியாத ஏக்கத்தில் தூங்கச் சென்றேன். மனம் மிக விழிப்பு நிலையில் இருக்க நாவலில் இதுவரைப் படித்ததை மனதில் ஓட்டிப்பார்த்தேன்.இப்படிச் செய்கையில் முதலில் நினைவிற்கு வரும் விஷயம் எனக்கு மிக முக்கியமாகப் படும். அதிலிருந்தே நாவலைப் பற்றிய என் கருத்துக்களைத் தொகுக்கத் துவங்குவேன். அப்படி என் நினைவில் எழுந்த காட்சியைக் கண்டு ஒரு நிமிடம் துணுக்குற்றேன். ஏனென யோசிக்கையில் எனக்கு என் சிறு வயது சம்பவம் நினைவிற்கு வந்தது.


அப்போது எனக்கு பதினொன்று, பன்னிரண்டு வயது இருக்கும். மாலை பள்ளி முடித்து சோர்வாக வீடு திரும்பி இருந்தேன். பொதுவாக காய்ச்சலுக்கு முந்தைய நாள் வரும் வெப்ப மூச்சுக்காற்றும் உடல் வலியும் வந்துவிட்டிருந்தன. எப்போதும் போல் முகம் கழுவி உடை மாற்றிக் கட்டிலில் அமர்ந்தேன். ஏதேதோ யோசித்துக் கடைசியில் யோசிப்பதையே விட்டுவிட்டு “வெற்றாக” இருக்க, திடீரென “அப்படியா” என்ற அம்மாவின் குரல் எனக்கு எட்டியது.. சட்டென திரும்பிப் பார்க்கையில் அம்மா பக்கத்துக்கு வீட்டக்காளுடன் பேசிக்கொண்டு இருந்தாள். என்னவென அறிவதற்குள் என்னை எழுப்பி வீட்டை சாத்தி சாவியைப் பக்கத்துக்கு வீட்டாரிடம் கொடுத்துவிட்டு நடந்தாள். அவள் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் கிட்டத்தட்ட அவள் பின்னால் ஓடிக்கொண்டிருந்தேன். அக்காட்சி இன்றும் நன்றாக என் நினைவில் உள்ளது. என் அன்னையின் கைபிடித்துக் கொண்டு அவள் பார்வை நேரே இருக்க நானோ தரையையேப் பார்த்து நடக்க என் கால்கள் எனக்கு முன்னே செல்வதைக் கண்டு கொண்டிருந்தேன். சிமென்ட் ரோடு, தார் ரோடு, மண் ரோடு மீண்டும் சிமென்ட் ரோடென நடந்து கடைசித் தெருவுக்குள் நுழைந்த போது தெரிந்துகொண்டேன் பெரியம்மா வீட்டுக்கு செல்கிறோமென.


அப்போது என் பெரியம்மாவிற்கு மாடிப்படியில் தவறி விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. காலை நகர்த்தவே முடியாமல் பெரியம்மா எப்போதும் படுத்துக் கொண்டே இருந்தார்கள்.


கடைசித் தெருவில் நுழைந்து வீட்டு முன் கதவைத் திறந்து பெரியம்மா விழுந்த மாடிப் படிகளில் ஏறி வீட்டிற்குள் நுழைந்து வலப் பக்கம் திரும்பியவுடன் நான் பார்த்தது நிமிர்த்த முதுகுடன் கால்களை சம்மணமிட்டு உக்கிரமாக அமர்ந்திருக்கும் என் பெரியன்னையை. அகன்ற விழிகளுடன், சிறிய உறுமல் சத்தத்துடன், மெல்லிய இட வல அசைவுடன் அமர்ந்திருந்தாள். ஒரு கணத்தில் மனதில் பல்வேறு உணர்ச்சிகள் நாலாப்புறமும் எழுந்து அடங்கியது. பிறகு மனது வெறுமையுடன் அந்தக் காட்சியை மட்டும் உள்வாங்கிக் கொண்டிருந்தது. நான் அவளின் கட்டுப் போட்டிருந்த காலையே கவனித்துக் கொண்டிருந்தேன். கால்களில் எவ்வித அசைவும் இன்றி உறைந்திருந்தன.



அதற்குள் என் பெரியம்மாவின் மகளும் வந்திருந்தார்கள். என் மனதில் அங்கு நடக்கும் எதுவும் மனதில் ஏறவில்லை. என் மனமெல்லாம் அக்கால்களே நிறைந்திருந்தன. ஓர் மனவெழுச்சி உடல் வலிகளைக் கடந்து சென்றிருப்பதை முதன் முறையாகக் கண்டுகொண்டிருந்தேன். நடு நடுவில் சுய நினைவிற்குத் திரும்பிய போது என் அம்மாவும், அக்காவும் தன் வருங்காலத்தைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அனைத்திற்கும் ஓரிரு சொற்களில் பதில் வந்து கொண்டிருந்தது. பின்பு என் பெரியம்மாவிற்கு தீபாராதனை காட்டி, அவர்களிடம் ஆசி பெற்று, விபூதியும் நெற்றியில் வாங்கிக் கொண்டு அங்கிருந்து வந்தோம். வீட்டிற்கு வந்ததும்தான் நினைவிற்கு வந்தது உடல் வலி பறந்திருப்பது.


ஆம்! கொற்றவையில் முதலில் என் மனதில் பதிந்தவை பல்வேறு மக்கள் “சன்னதம்” கொள்ளும் பகுதிகள் தான். அதைக் குறியீடாகக் கொண்டு நீங்கள் உணர்த்தி இருக்கும் ஆதி மனிதனின் குரலை! பிரபஞ்ச மனதின் ஒரு துளியை! மொழிக்குள் சிக்காத பொருளை! முடிவிலியின் ஒரு முனையை!


நாவலை இருமுறையாவது முழுவதுமாக வாசித்து விட்டு அதைப் பற்றிய என் பார்வையை விரிவாக எழுதுகிறேன்!


மிக்க நன்றி ஜெ!!! அனைத்திற்கும்….


அன்புடன்,

பாலாஜி

கோவை



அன்புள்ள பாலாஜி


விஷ்ணுபுரத்தை அதன் தியானமனநிலைகளில் மொழி கொள்ளும் தர்க்கமற்ற ஓட்டத்தையும் கட்டற்ற படிமங்களையும் உள்வாங்காத ஒருவர் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. கொற்றவையை அதில் உள்ள விதவிதமான சன்னதங்களைப் புரிந்துகொள்ளாமல் உள்வாங்கமுடியாது.


இருவேறு உச்சநிலைகள். இருவேறு பிரபஞ்சஉணர்ச்சிகள். முந்தையது அறிவின் கோலால் எப்போதும் கலக்கப்படுகிறது . பிந்தையது ஒரு கட்டத்தில் பைத்தியம் ஆடையைக் கழற்றி வீசுவதுபோலப் பிரக்ஞையைத் துறந்து முன்செல்கிறது.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தீராநதி நேர்காணல்- 2006
விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்
சந்திப்புகள் — சில கடிதங்கள்
நான் கண்ட விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்
மேலான உண்மை — சீனு கடிதம்
அறிதலுக்கு வெளியே-சீனு
விஷ்ணுபுரம்- விமர்சனம்
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
கடிதங்கள்
பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
கடிதங்கள்
கதைகளின் வழி
கொற்றவை- கரு. ஆறுமுகத் தமிழன்
சிற்பச்செய்திகள்
அயோத்தி தாசர்-கடிதங்கள்
அறிதல்-அறிதலுக்கு அப்பால்
கொற்றவை,கடிதங்கள்
கொற்றவை கடிதம்
கொற்றவை-கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 29, 2012 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.