Jeyamohan's Blog, page 2240

April 28, 2012

‘ஒரு அதிர்வு இருக்குதுங்க!’

அன்புள்ள ஜெயமோகன்,


வணக்கம். இந்து மதத்தைப் பற்றிய உங்கள் பல ஆக்கங்கள் என் மதத்தைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ளப் பெரிதும் உதவி இருக்கிறது. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. சில விஷயங்களைப் பற்றி உங்கள் கருத்துகளைத் தெளிவுபடுத்தினால் வசதியாக இருக்கும். உங்கள் இணையதளம் முழுவதும் தேடிப்பார்த்து பதில் கிடைக்கவில்லை என்பதாலேயே இங்கே கேட்கிறேன். நீங்கள் பொதுவாகவே வைதீகம் சம்பந்தப்பட்ட பழக்கங்களைத் தேவையற்றதென ஒதுக்குவதாகவே புரிந்துகொள்கிறேன். கோவில்களை இந்து மதத்தின் குறியீடுகளாக நீங்கள் பார்க்கிறீர்கள். அங்கு நடக்கும் பூசைகளிலேயோ வழிபாட்டு முறைகளிலேயோ எந்தவிதத் திட்டவட்டமான பயன்களும் இல்லை, ஆனால் ‘அவை நம் பண்பாட்டின் நுட்பமான பன்மைத்தன்மையின் சின்னங்கள், அவை தொன்மங்கள், குறியீடுகள், அவை அளிக்கும் ஆழ்மனப்பதிவு முற்றிலும் தனித்தன்மை கொண்டது’ என்பதாகவே நீங்கள் சொல்கிறீர்கள். வீட்டில் சடங்குகளின்போது கடைப்பிடிக்கப்படும் ஆச்சாரங்களைப் பற்றியும் உங்கள் கருத்து இதுவே என நான் நினைக்கிறேன்.


தமிழ்ப் பாரம்பர்ய அறக்கட்டளையில் உங்களுக்கு அடுத்த நாள் பேசிய உமாபதி ஆச்சார்யா பேசும்போது கோவில் கட்டுமானத்தின் அடிப்படை விதிகளின்படி, கோவிலில் எந்த மூலையில் இருக்கும் சக்தி, தரை வழியாகவும், விமானம் மூலமாகவும், நேராக கர்பக்ருஹத்தில் இருக்கும் மூலவருக்கு வருவதாகவும், அதனாலேயே மூலவருக்கு அபிஷேகம் செய்த நீர் விசேஷமானது என்றார். ஜக்கி வாசுதேவின் சில புத்தகங்களில், முன்னாட்களில், கோவிலுக்குப் போன காரணமே, அங்கிருக்கும் சக்தி மூலம் நம்மை recharge செய்து கொள்வதற்கே என்ற தொனியில் எழுதப்பட்டுள்ளது. ரெய்க்கி நிபுணர்கள் இந்த சக்தியைக் கையாள்வதைப் பெரிதும் பிரபலப்படுத்துகின்றனர். கண்ணுக்குத் தெரியாத இந்த சக்தியை பற்றி, positive energy/negative energy என்பதைத் தாண்டிப் புரியவில்லை. ஒரு ரெய்க்கி நிபுணரிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, வீட்டில் நடைமுறையில் இருக்கும் சில ஆச்சார வழக்கங்களும், இந்த சக்தியின் தன்மைகளை அனுசரித்தே அமைக்கப்பெற்றதாகக் கூறினார். உதாரணமாக, எங்கள் வீட்டில் நெய், மற்றும் தயிர்ப்பாத்திரத்தைத் தொடுவதற்கு முன்னரும், தொட்ட பின்னரும், தண்ணீர் விட்டுக் கையைக் கழுவும் வழக்கம் இருந்தது. எந்த ஒரு பயனும் இல்லாத வெற்று ஆச்சாரமாக இது தெரிந்ததால் காலப்போக்கில் இது கை விடப்பட்டது. ஆனால் ஆச்சாரம் என்ற பெயரில் விளக்கம் கூற முடியாத பல பழக்கங்கள் இன்னும் புழக்கத்திலேயே இருக்கிறது. நல்ல நாட்களில் மாவிலை நீர் தெளிப்பது போல.


உங்கள் கருத்துக்கு இவை முரண்பட்டு இருப்பதாகவே தோன்றுகிறது. அல்லது என் புரிதலில்தான் தவறா? சடங்குகள் எல்லாமே மிஞ்சிப்போனால் வெறும் குறியீடுகள் மட்டும்தானா? எவை பயனுள்ள பழக்கங்கள், எவை ஆழ்ந்த குறியீடுகள், எவை இடைச்செருகல்களான வெற்று வைதீக ஆச்சாரங்கள் என்று பிரித்தறியக் குழப்பமாக உள்ளது. தெளிவுபடுத்த முடியுமா ?


நன்றி

கோகுல்



அன்புள்ள கோகுல்,


ஒருமுறை நித்யா கீதை பற்றிய விவாதத்தில் சொன்னதை இங்கே நினைவுகூர்கிறேன். கீதை பல யோகங்களாக வளர்ந்து செல்வது. ‘சாங்கிய யோகம் முன்வைக்கும் உலகியல்சார்ந்த விடுதலைக்குப் பல தளங்களுக்கு மேலே உள்ளது மோட்சசன்யாச யோகம். மோட்ச சன்யாச யோகத்தைத் தனக்கான பாடமாகக் கொள்ளவேண்டிய நிலையில் உள்ள சாதகனுக்கு சாங்கிய யோகத்தால் என்ன பயன்?’ என ஒரு வினா வந்தது.


‘தனிப்பட்ட முறையில் அந்தச்சாதகனுக்கு சாங்கியயோகம் தேவையில்லை. ஆனால் சாங்கிய யோகம் முதல் விரியும் பதினெட்டு நிலைகளையும் ஒன்றின் பதினெட்டு முகங்களாகப் பார்க்க அவனால் முடியவில்லை என்றால் அவனுக்கு மோட்ச சன்யாசயோகமும் புரியப்போவதில்லை’’ என்றார் நித்யா.


என்னுடைய கருத்துக்கள் இருவகையில் வெளிப்படுபவை என நான் சொல்வேன். ஒன்று, அவை என்னுடைய சொந்த வாழ்க்கை, என் சொந்தப்பயணம் சார்ந்தவை. நான் என் ஆன்மீக நம்பிக்கைக்கு, என் வழிகளுக்கு சடங்குகளை நம்பியிருக்கவில்லை. ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதில்லை. எனக்கு பக்திமார்க்கத்தின் சின்னங்களும் குறியீடுகளும் தொன்மங்களும் பக்திமார்க்கம் கூறும் வழியில் தேவையாகவும் இருக்கவில்லை. ஆனால் அவை ஒட்டுமொத்தமாக வகிக்கும் பங்கை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவற்றையும் சேர்த்துத்தான் நான் செல்லும்பாதை உருவாகியிருக்கிறது என உணர முடிகிறது.


ஆகவே நான் ஒரு சந்தர்ப்பத்திலும் அவை ‘தேவையில்லை’ என்றோ ‘பயனில்லாதவை’ என்றோ சொல்வதில்லை. அவ்வாறு நீங்கள் புரிந்துகொண்டிருந்தால் அது பிழை. நேர்மாறாக அவற்றைப்புரிந்துகொள்ளும் கோணத்தில்தான் நிறையவே எழுதியிருக்கிறேன்.


இந்நிலையைப்பற்றி சுவாமி விவேகானந்தர் சொல்லியது நினைவுக்கு வருகிறது ‘நான் உருவ வழிபாடு செய்பவனல்ல. ஆனால் உருவ வழிபாடுசெய்த ஒருவரின் காலடியில் அமர்ந்தே என் ஞானத்தை முழுக்க நான் கற்றுக்கொண்டேன்’ என்றார் அவர்.


நம் மரபில் மாபெரும் ஞானிகளும் யோகிகளும் உருவ வழிபாடு வழியாக, ஆசாரங்கள் தொன்மங்கள் வழியாகவே அந்த நிலையை அடைந்தனர் என்னும்போது அதை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பவனுக்கு என்ன புரிதல் இருக்கமுடியும்? நம்மாழ்வாரையும் நாராயணகுருவையும் விட மேலானவனாக நான் என்னைக் கருதிக்கொண்டால் அதன்பின் எனக்கு என்ன மதிப்பு?


அந்த வழிமுறைகள் என்னுடையவை அல்ல என்பதே என் விளக்கம். ஒருவேளை நான் இன்னொரு காலகட்டத்தில் பிறந்திருந்தால் அவை என்னுடையவை ஆகியிருக்கலாம். இன்னொரு குருமரபை சென்றுசேர்ந்திருந்தால் அப்படி நிகழ்ந்திருக்கலாம். நான் வாழும் சூழலும் வாசிக்கும் நூல்களும் என் அடிப்படை இயல்பும் சார்ந்துதான் இந்த வழிமுறையை என்னுடையதாக ஆக்கியிருக்கிறது.


சடங்குகளும் குறியீடுகளும் தொன்மங்களும் இல்லாமல் எந்த மதமும் இல்லை. சொல்லப்போனால் ஒரு தரிசனமானது ஒரு மதமாக நிறுவப்படுவதே அவற்றின் மூலம்தான். ஒரு மதத்தை நம்புவதென்பது அச்சடங்குகள் குறியீடுகள் தொன்மங்களை நம்புவதுதான். அந்த மதத்தின் உள்ளுறையாக உள்ள தரிசனமும் தத்துவமும் அழகியலும் அவற்றில்தான் உள்ளன.


உதாரணமாக நடராஜர் சிலை இல்லாமல் சைவத்தின் பிரபஞ்ச தரிசனத்தை அல்லது சைவசித்தாந்தத்தை அல்லது சைவ அழகியலை உள்வாங்கிக்கொள்ள முடியுமா என்ன? பழங்குடி உள்ளுணர்வில் முளைவிட்டுப் பல்லாயிரம் வருடங்களாக வளர்ந்து கிளைத்து விழுதுவிட்டு வாழும் அனைத்து மெய்ஞானங்களும் தொன்மங்களாகவும் குறியீடுகளாகவும் சடங்காசாரங்களாகவும்தான் நமக்கு வந்துசேர்கின்றன. ஒருபோதும் அவற்றை நிராகரித்துவிடமுடியாது.



அவற்றை எதிர்கொள்வதில் பல கோணங்கள் உள்ளன. அவற்றை அறிவார்ந்த முறையில் அணுகி ஞானமாக உள்வாங்கிக்கொள்வது ஒரு வழி. அதையே நான் செய்ய முயல்கிறேன். அவற்றை நம்பிக்கையுடன் அணுகி அப்படியே நேரடியாக மனத்துக்குக் கொண்டுசெல்வது இன்னொரு வழி. அதையே பக்திநோக்குள்ளவர்கள் செய்கிறார்கள்.அவற்றை நுண்ணிய சடங்குகள் மூலம் அன்றாடச்செயல்களாக ஆக்கி நேரடியாக ஆழ்மனத்துக்குக் கொண்டு செல்வது தாந்த்ரீகர்களின் வழி.


ஒட்டுமொத்தமாக சடங்குகள் ஆசாரங்கள் தொன்மங்கள் குறியீடுகள் அனைத்தையும் சேர்த்து விக்ரகம் என்று சொல்வது மரபு. இப்படிச்சொல்லலாம். ஞானத்தின் வழி விக்ரகத்தை நம் மனதின் மேல்பகுதியான ஜாக்ரத் தளத்துக்கு கொண்டு செல்கிறது. பக்தியின் வழி அதை அடுத்த தளமாகிய ஸ்வப்னத்துக்கு கொண்டுசெல்கிறது. தாந்த்ரீகர்கள் அதை நேராக சுஷுப்தியுடன் உரையாடச்செய்யமுடியுமா என பார்க்கிறார்கள்.


ஆகவே விக்ரகங்கள் முதன்மையாக தாந்த்ரீகர்களுக்கே உரியவை. நம்முடைய சிலைகளும் வழிபாட்டுச்சடங்குகளும் புராணங்களும் பெரும்பாலும் தாந்த்ரீகத்தால் உருவாக்கப்பட்டவை. நம்முடைய சிற்பமரபுக்கு தாந்த்ரீகத்துடன் நெருக்கமான உறவுண்டு. சிற்பிகளும் தச்சர்களும் இன்றும்கூட பல தாந்த்ரீக மறைச்சடங்குகளைச் செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.


இந்த மூன்று போக்குகளும் ஒன்றுடனொன்று தொடர்பற்றவை அல்ல. சொல்லப்போனால் இந்தப்பிரிவினையே சாத்தியமில்லை என்ற அளவுக்கு அவை ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றை ஒன்று வலுப்படுத்தியிருக்கின்றன. ஞானவழியையும் தாந்திரீகவழியையும் ஓரளவு பிரித்துப்பார்க்க முடியும். பக்திவழி என்பது பிற அனைத்தையும் தன்னுள் இழுத்துத் தனக்கேற்ப மாற்றிக்கொள்ளும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஒருகோணத்தில் பார்த்தால் ஞானமரபின் நூல்களும் தாந்த்ரீக மரபின் சிலைகளும் சடங்குகளும் சேர்ந்துதான் பக்திமரபே உருவாகிவந்திருக்கிறது.


ஞானமரபைப் பொறுத்தவரை தாந்த்ரீகத்தின் சிருஷ்டிகளான விக்ரகங்கள்தான் அவர்களின் ஞானத்தை உள்வாங்குவதற்கும் விவரிப்பதற்குமான குறியீடுகளை அளிக்கின்றன. அவற்றைத் தவிர்த்து ஞானமரபின் எந்த விஷயத்தையும் சொல்லிவிட முடியாது.


சென்ற பதினைந்து நூற்றாண்டுகளாக இந்திய மண்ணில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மதப்பரிணாமம் என்பது பக்திமரபின் வளர்ச்சிதான். பக்திமரபு தாந்த்ரீகத்தை முழுமையாக உள்ளிழுத்துக்கொண்டது. வழிபாட்டுமுறைகளை நெறிப்படுத்தும் ஆகமங்கள், நிகமங்கள் என்னும் வகையான எல்லா நூல்களும் தாந்த்ரீகஞானத்தை பக்திக்குள் பொருத்திக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டவைதான்.


தாந்த்ரீகம் இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் வேறுபடக்கூடியது. பலநூறு உள்போக்குகள் கொண்டது. ஆகவே ஆகமங்கள் பெருகின. அவற்றை ஒன்றாகத் தொகுத்துப் பொதுநூல்களாக ஆக்கிக்கொண்டே இருந்தனர். இவ்வாறாக மைய ஆகமங்களும் துணை ஆகமங்களும் உருவாகின.


தாந்த்ரீக மரபு உருவாக்கிய பல்லாயிரம் குறியீட்டுச்சிலைகளும் ஆசாரங்களும் ஆகமங்கள் வழியாக பக்திமரபுக்குள் வந்தமர்ந்தன. தாந்த்ரீக தெய்வங்கள் பெரும்பாலும் பழங்குடி மரபில் உருவாகி தாந்த்ரீகத்தால் எடுத்துக்கொள்ளப்படுபவையாக இருக்கும்.பழங்குடி வழிபாட்டுமுறையில் இருந்தே தாந்த்ரீகம் முளைத்தது என்பதே அதற்கான காரணம். குமரிமாவட்டத்தில் மலைக்குடிகள்தான் தாந்த்ரீகவழிபாடுகளைச் சென்ற பல நூற்றாண்டுகளாகச் செய்து வருகிறார்கள். அவர்களுடைய குளிகன், மாதி போன்ற மலைத்தெய்வங்கள் சென்ற நூறாண்டுகளில் தாந்த்ரீகம் வழியாக பக்தி மரபுக்குள் வந்துவிட்டன. இன்றுகூட இந்தச்செயல்பாடு நடந்துகொண்டே இருக்கிறது.


இங்கே ஒரு முக்கியமான சிக்கல் ஒன்று நிகழ்கிறது. நீங்கள் கேட்கும் கேள்விக்கு அடிப்படையான நம்பிக்கைகள் பிறக்கும் புள்ளி என்பது இதுவே. தாந்த்ரீக மரபு என்பது மூடுண்டது. அதை நூல்கள் வழியாக அறியமுடியாது. குருமரபாகவே அதன் ஞானம் பகிரப்படுகிறது. மிக நுட்பமான சடங்குச்செயல்பாடுகள் யோகவழிமுறைகள் கொண்டது. எல்லாவற்றையும் குறியீடாக ஆக்கிக்கொள்ளமுயல்வது அதன் வழிமுறை. தாந்த்ரீக மரபை முழுமையாகப் பின்பற்றுபவர்கள் அதற்கான தகுதியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லது அம்மரபிலேயே தலைமுறைகளாக வாழ்பவர்கள் மட்டுமே.


நேர்மாறாக பக்தி மரபு அனைவருக்கும் உரியது. சொல்லப்போனால் பெரும்பாலும் லௌகீகத்துக்கு அப்பால் ஏதுமறியாத எளியமக்களால் ஆனது. தாந்த்ரீக மரபை பக்திமரபு உள்வாங்கிக்கொள்ள முயன்றபோது தாந்த்ரீக மரபின் குறியீடுகளும் நம்பிக்கைகளும் ஆசாரங்களுமெல்லாம் எளிமைப்படுத்தப்பட்டன.பக்தி சார்ந்த விளக்கங்களுக்கு ஆளாயின. லௌகீகமான அர்த்தங்கள் அளிக்கப்பட்டன.



தமிழ்வரலாற்றில் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் தாந்த்ரீகத்தை பக்தியால் விளக்கும் இந்தப் போக்கு நிகழ்ந்து வருகிறது. மிகச்சிறந்த உதாரணம் திருமந்திரம், சித்தர்பாடல்கள் போன்றவற்றுக்கு எழுதப்பட்ட உரைகள். அந்த மூல ஆக்கங்கள் சென்றகால தாந்த்ரீகமரபைச் சேர்ந்தவை. அவற்றின் பெரும்பகுதி எவருக்கும் பொருள்புரியாதபடி மூடுண்டது. திருமந்திரத்தின் இரண்டாம் இருநூறுபாடல்களில் பெரும்பாலானவை மர்மமானவை. சித்தர்பாடல்களில் கம்பிளிச்சட்டைநாயனார் போன்றவர்களின் பாடல்கள் நமக்கு என்னவென்றே தெரியாதவை. அவற்றை எல்லாம் பக்திநோக்கில் மிகமிக எளிமைப்படுத்திப் பொருள்கொண்டு இந்த உரைகள் எழுதப்பட்டுள்ளன.


இவற்றில் மிகச்சிறந்த உரைகள் தாந்த்ரீக விக்ரகங்களைக் குறியீடுகளாகக் கண்டு அக்குறியீடுகளுக்கு பக்தி சார்ந்த பொருளைக் கொடுக்கின்றன. அவற்றைக் கவித்துவமாக விரிக்கின்றன. ஆனால் பெரும்பாலான உரைகள் அற்ப லௌகீக அர்த்தங்களை அந்நூல்களுக்கு மேல் ஏற்றுகின்றன. லௌகீகபக்தியில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு விஷயமும் லௌகீகமாக அர்த்தம் அளித்தாகவேண்டியிருக்கிறது. ஆகவே இது நிகழ்கிறது.


உதாரணமாக, தாந்த்ரீக மரபு பிரபஞ்சத்தின் ஆதாரவிசை எதுவோ அது பிரபஞ்சத்தின் எல்லா அணுவிலும் இருக்கும் என்றது [அண்டத்திலுள்ளது பிண்டத்திலும்]. நாம் அறியக்கூடிய, நாம் கையாளக்கூடிய பிரபஞ்சத்துளி நம் உடல் தான். ஆகவே நம் உடலைப் பிரபஞ்சத்தின் அலகு என எடுத்துக்கொண்டு அதைப் பிரபஞ்சமாக அறிய முயன்றது. நம் உடலை இயக்கும் விசைகளை அது உருவகித்துக்கொண்டது.


முதல்பெரும் விசை, உயிர்க்குலத்தை இயக்கும் ஆதார விசை, உயிரின் நீட்சிதான். அதாவது காமம். அதை மூலாதாரம் என்ற புள்ளியாக உருவகித்துக்கொண்டது. ஒரு பருப்பொருள் இன்னொரு பருப்பொருளை உருவாக்குகிறது. அந்த விந்தையில் உள்ளது பிரபஞ்சவிசையின் முதன்மையான ரகசியம்.


அடுத்த விசை பசி. ஒரு பருப்பொருள் இன்னொரு பருப்பொருளை அழித்துத் தானாக ஆக்கிக்கொள்கிறது. அதில் உள்ளது இரண்டாவது பிரபஞ்ச ரகசியம். அதை சுவாதிஷ்டானம் என்றார்கள்.


பருப்பொருள் நுண்மையான உயிராற்றலால் செயல் வடிவமாக ஆவது இன்னொரு ரகசியம். அதைப் பிராணசக்தி என்றார்கள். அதை மணிபூரகம் என்று அடையாளப்படுத்தினார்கள். பருப்பொருட்கள் எல்லாம் சிந்தனையாக, எண்ணங்களாக மாறுவது அடுத்த ரகசியம். இப்படிப் பல விசைகளை உருவகித்தனர்.


இவ்விசைகள் மையங்களை உடலில் உருவகித்தனர். இந்த உருவகங்களை தாந்த்ரீக மரபு விரிவாக்கிக்கொண்டே சென்றது. அவற்றைத் தாமரைகளாகவும், சக்கரங்களாகவும், சுழிகளாகவும் உருவகித்திருக்கின்றனர். அவற்றை ஆலயங்களாகவும், தெய்வங்களாகவும் உருவகித்திருக்கின்றனர். அவற்றுக்கான நிறங்கள், ஒலிகள் உருவகிக்கப்பட்டன. அவற்றுக்கான சொற்களும் சின்னங்களும் வகுக்கப்பட்டன. அது தனி ஞானப்பரப்பு.


ஆனால் இது ஆயுர்வேதம்போல அல்லது சிற்ப சாஸ்திரம் போல ஒரு புறவயமான அறிவியல் அல்ல. இது குறியீடுகள் மூலம் பரிமாறப்பட்ட ஒரு அகவய ஞானம் மட்டுமே. அதை அக்குறியீடுகள் மூலம் சென்றடைய முடியாது. அதை குருமுகத்தில் இருந்து கற்று கடைப்பிடிக்கப்படும் அனுஷ்டானங்கள் மூலமே அறியமுடியும். அவ்வாறு அறிவதற்கு இந்தக்குறியீடுகள் உதவிசெய்யும் , அவ்வளவுதான்.


ஆனால் இந்த ஞானம் பக்தித் தளத்துக்கு வந்தபோது இதை சர்வசாதாரணமாக எல்லாரும் விளக்க ஆரம்பித்தார்கள். கையால் தொட்டுப்பார்த்து உடலில் இருக்கும் மூலாதாரத் தாமரையை அறிந்தேன் என்று சொன்னவர்களை நான் கண்டிருக்கிறேன். மலச்சிக்கலுக்குக் கூட ஒரு சக்கரத்தை நோக்கி ஒரு மந்திரத்தை ஜெபித்தால்போதும் என்று அறிவுரைகூறுபவர்களைக் காணநேர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக நுட்பமான குறியீடுகளாகவும் தியான உருவகங்களாகவும் சொல்லப்பட்டவை அனைத்தும் அப்படியே நேர்ப்பொருள் கொண்டு புரிந்துகொள்ளப்பட்டன.


தாந்த்ரீக ஞானமரபு அனைவருக்கும் உரியதல்ல. எப்போதும் அப்படி இருந்ததில்லை. அது தன்னுடைய அறிவு மற்றும் அர்ப்பணத்தால் தனக்கான குருவை தேடிக்கொண்டு, அதையே வாழ்க்கையாகக் கொள்ளும் மிகச்சிலருக்கு மட்டுமே உரியது. அவர்களின் இயல்பும் எல்லைகளும் அறிந்து குருவால் கற்பிக்கப்படுவது. ஆனால் இன்று அம்மரபு அனைவருக்கும் உரியதாக பிரம்மாண்டமாகப் பிரச்சாரம் செய்யப்படும்போது அனைவருக்கும் புரியக்கூடிய எளிமையான லௌகீகமான நேர்ப்பொருள் கொடுத்தாகவேண்டியிருக்கிறது.


அதை அரைகுறையாகப் புரிந்துகொள்பவர்கள் மேலும் அதை அரைகுறையாக விளக்குகிறார்கள். ஒரு கட்டத்தில் அபத்தமான ஒரு மூடநம்பிக்கையாக இது எங்கும் காணக்கிடைக்கிறது. இன்று டீக்கடைப்பேச்சில் எல்லாம் குண்டலினி என்றும் மூலாதாரம் என்றும் ஆளாளுக்கு அளந்துகொட்டுகிறார்கள். அதன் சாராம்சமான ஞானத்தேடலைப் பேசவே இடமில்லாமலாகிவிட்டிருக்கிறது.


ஆன்மீகமான அறிதல் என்பது ஓர் அகவய நிகழ்வு. முழுக்க முழுக்க ஆழ்மனம் சார்ந்தது, ஆழ்மனம் கடந்தது. அந்தப் பயணத்தில் குறியீடுகளின் இடமென்பது அளவுகடந்தது. சொல்லப்போனால் குறியீடுகள் வழியாக மட்டுமே சென்றடையக்கூடிய ஒரு நுண்வெளி அது. ஆலய அமைப்புக்கள், சிலைகள், சடங்குகள் போன்றவை எல்லாமே குறியீடுகள்.


இங்கே ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். குறியீடுகள் வேறு, குழூஉக்குறிகள் வேறு. வெறுமே அர்த்தத்தை அறிந்து கொள்ளுவதற்கான அடையாளங்களே குழூஉக்குறிகள். அவை சிந்தனைசார்ந்தவை. குறியீடுகள் அர்த்தங்களால் ஆனவை அல்ல. அவை தலைமுறை தலைமுறையாக அவற்றின் மேல் ஏற்றப்பட்ட அர்த்தங்களும் உணர்ச்சிகளும் உள்ளுணர்வுகளும் எல்லாம் அடங்கியவை. நேராக நம் ஆழ்மனத்துடன், அதாவது ஸ்வப்னத்துடனும் சுஷுப்தியுடனும், உரையாடுபவை.


அந்த அறிதல் முழுக்கமுழுக்க அகவயமானது. அதன் ஆற்றலும் அகவயமானதே. அதை பக்தித் தளத்துக்குக் கொண்டு வந்து அனைவருக்குமாக விளக்கும்போது புறவயமான ஒன்றாக விவரிக்கிறார்கள். அங்கேதான் நீங்கள் சொல்லும் மனக்குழப்பம் நிகழ்கிறது. புறவயமாக அதை நிரூபிக்கவே முடியாது. ஒரு குறியீட்டின் வல்லமையை அந்த மனநிலைக்குள் வர மறுப்பவருக்குக் காட்டிவிட முடியாது. அந்நிலையில் இந்த ஒட்டுமொத்த ஞானப்பரப்பே வெறும் மோசடி அல்லது மூடநம்பிக்கை என முத்திரைகுத்தப்பட வாய்ப்பாகிறது. இன்று நடந்துகொண்டிருப்பது இதுவே.


இன்று ஆலயங்களில் இருக்கும் ‘ஆற்றலை’ ‘அதிர்வுகளை’ எல்லாம் ஏதோ புறவயமான ஒரு விசையாக விளக்குபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்த ஆற்றலை நவீனக்கருவிகளைக் கொண்டு அளவிடலாமென்றுகூட சொல்லி வருகிறார்கள். இதெல்லாமே பெரும்பான்மையினரின் லௌகீக உலகுக்கு அதற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் வந்து சேரும்போது உருவாகும் புரிதல்பிழைகளே.


இதை நாம் அன்றாட வாழ்க்கையில் எங்குமே காணலாம். சாதாரண மனிதர்களுக்கு லௌகீகத்துக்கு அப்பாற்பட்ட எதுவும் புரிவதில்லை. ஒரு கவிதையை எழுதினேன் என்று சொல்லுங்கள், ‘அதுக்கு என்ன குடுப்பான்?’ என்றுதான் கேட்பார்கள். கவிதையை வாசித்தேன் என்று சொல்லுங்கள் ‘நல்லதுதான்…ஜெனரல் நாலெட்ஜ் இருந்தா காம்பட்டிஷன்ஸ்லே நல்ல மார்க் கிடைக்கும்’ என்பார்கள்.


ஞானிகளும் யோகிகளும் இங்குள்ள லௌகீக பக்தியாளர்களால் எப்போதுமே தங்கள் லௌகீக உலகுக்குள் வைத்தே மதிப்பிடப்படுகிறார்கள். ஞானம் என்பதன் முழுமையை அவர்களால் உள்வாங்கவே முடிவதில்லை. ‘அவரு முக்காலமும் உணர்ந்த மகான். முன்னாடி போய் நின்னா பளிச்சுன்னு நம்ம எதிர்காலத்தைச் சொல்லிடுவாரு’ என்பார்கள். தாங்கள் ஞானிகள் என நம்புபவர்களைப்பற்றி அவர்கள் சொல்லும் எல்லா விவரணையும் சோதிடர்களுக்கு அல்லது மந்திரவாதிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக இருக்கும். ஞானம் தங்கள் லௌகீக வாழ்க்கைக்கு எப்படி லாபகரமாக இருக்கிறது என்பதே அவர்களின் அளவுகோல்.


யோகி என்றால் அவர் அமானுடராக இருந்தாகவேண்டும். யோகி சும்மா இருந்தாலும் விடமாட்டார்கள். ‘சாமி தண்ணி மேலே நடக்கும். காத்தைக்குடிச்சு உயிர்வாழும். கூடுவிட்டுக் கூடுபாயும்’ என்றெல்லாம் விளக்க ஆரம்பித்துவிடுவார்கள். பல துறவிகள் என்னிடம் இந்தப் பொதுமனநிலை அளிக்கும் துன்பங்களைப்பற்றிச் சொல்லி சிரித்திருக்கிறார்கள்.


ஞானமரபை, தாந்த்ரீக மரபை சாமானியர்களின் சாமானிய அறிவு அளவிடும் முறைகள் இவை. அறிவதற்கு விரும்புகிறவர்கள் இவற்றைத் தாண்டிச்சென்றாகவேண்டும்.


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

திருமந்திரம் ஒரு கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 28, 2012 11:30

April 27, 2012

எழுத்தாளரைச் சந்திப்பது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே,


வணக்கம். சிலர் தங்களை பல தருணங்களில் சந்திக்க முடியாமல் போனதையும் அவர்களுக்கும் உங்களுக்குமான உறவை அவர்கள் தங்கள் மனதில் உருவாக்கி வைத்திருப்பதை எழுதியிருந்தார்கள்.


ஒரு எழுத்தாளருக்கும் வாசகனுக்குமான உறவு அற்புதமானது விசித்திரமானது. ஏனனில் ஒரு எழுத்தாளனும் ஒரு மனிதனே. ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் நிறை குறைகளை அவரிடமும் நாம் காணலாம். ஆனால் நாம் எழுத்தாளர்களை அப்படிப் பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்பதே சந்தேகம்தான்.


அவ்வப்போது சந்திக்கும் காதலி எதிர்பார்ப்பில் உருவாக்கும் பிம்பங்கள் அவளை எப்போதும் மனைவியாகப் பார்க்கும்போது உடைவது போல எழுத்தாளர்களை சந்திக்கும்போதும் ஏற்படலாம். நம் மனதில் பல சித்திரங்களை உருவாக்கியிருப்போம் எழுத்தாளர்களைப் பற்றி அவர்களின் படைப்புகளால். ஒரு படைப்பு என்பது ஒரு எழுத்தாளனின் முழு உருவத்தில் ஒரு கற்பனை அல்லது நிஜ சிறு மிகசிறு பகுதியே என்பதை நாம் உணரவேண்டும். ஒரு படைப்பைப் படித்தவுடன் நம் மனது ஏற்படுத்தும் உணர்வுகள் எண்ணங்கள் எல்லாமே ஒரு தனி மனித அனுபவமே என்பதையும் நாம் அறியவேண்டும். பல நேரங்களில் ஒரு ஆசிரியரின் நோக்கத்திற்கு எதிர்மறையாகக் கூட நம் உருவாக்கங்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஒரு ஆசிரியரின் எழுத்து வரிகளைக் கொண்டு நம் மனதில் ஒரு வரைக் கலைஞரைப் போல ஒரு கற்பனைச் சித்திரத்தை வரைந்திருப்போம். ஆனால் அப்படிதான் நிஜ எழுத்தாளரும் இருப்பாரா?


இப்போதெல்லாம் நம் நிதர்சன வாழ்வின் இன்றியமையாத பொருளாகக் கணினியும் கைபேசியும் இருக்கையில் பல எழுத்தாளர்களைப் பற்றிப் பல செய்திகளையும் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளையும் நாம் ஆர்வம் ஏற்பட்டவுடனேயே அறிந்துகொள்கிறோம். ஒரு படைப்பைப் படித்தவுடன் அது மனதில் தங்கி கனிந்து ஆர்வ உந்துதலினால் பல ஆராய்ச்சி செய்து அந்தத் தேடல்களினால் முதிர்ச்சி பெற்றுக் கிடைக்கும் ஒரு சில செய்திகளிலிருந்து காலத்தினால் நம் மனமே உருவாக்கும் கற்பனையையும் கலந்து ஒரு எழுத்தாளரைப் பற்றி நாம் உருவாக்கும் உருவகம் அதை நாமே நினைத்து நெகிழும் தருணங்கள் இப்போது இல்லை.


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற நாவலை சென்னையிலிருந்து திருச்சி வருகையில் படித்துமுடித்தேன். அதுவும் அன்று முன்பதிவு இல்லாமல் பதிவில்லா ரயில்பெட்டியில் என் பெருத்த உருவத்தின் ஒரு சிறு பகுதியே அமர இடம் கிடைத்தது. மற்ற எல்லோரும் படுத்து உறங்குகையில் நான் மட்டும் ஒரு தனி உலகத்தில் பயணித்தேன். பல கால்கள் அவ்வப்போது என்னை உதைத்து மலைக்கோட்டை ரயில் பயணத்திற்கு இழுத்தன. இருபதுகளின் மத்தியில் என் வயது அப்போது. திருமணமாகவில்லை. சாதாரணமாக உள்ளுணர்வுகளை எண்ணங்களை அலசுவதை ஆர்வமுடன் படிக்கப் பிடித்த எனக்கு அந்த நாவல் ஒரு தனி அனுபவத்தை அளித்தது. நான் இதே அனுபவத்தை லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘RESURRECTION’ நாவல் படிக்கும் போதும் அனுபவித்தேன். ஆனால் அப்போது நான் கல்லூரி மாணவன்தான்.


அந்தப் பயணத்திற்குப் பிறகு பல ஜெயகாந்தன் கதைகளை நான் தேடித்தேடிப் படித்தேன். அந்தக் காலகட்டத்தில் ஒரு ஆறு மாத காலம் நான் சென்னை திருவேல்லிக்கேணியில் வசிக்கவேண்டியிருந்தது. மாலை நேரங்களில் Big Streetஇலிருந்து மவுன்ட் ரோடு ஹிக்கின்பாதம்ஸ் சென்று பல கதைகளைப் படிப்பதுதான் வழக்கம். அது ஒரு வசந்த காலம்.


பின் ஒரு சந்தர்ப்பத்தில் ஜெயகாந்தன் அவர்களைத் திருச்சியிலும் வேறு ஒரு பயணத்திலும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் சற்று உடல் தளர்ந்தவராக இருந்தார். ஆனால் வித்தியாசப் பார்வை முதிர்ந்த நோக்கு லாவகமாக எதிர் நபரைப் புரியவைக்கும் தன்மை எதிலும் குறைவில்லை. அவரின் முன்னுரைகள் எனக்கு மிகவும் பிடித்தவை.


பின் பெருமளவு திஜா பாலகுமாரன் பாரதி Huxley, MacLean, RK Narayan, etc சிறிதளவு சுஜாதா வைரமுத்து கண்ணதாசன் PG Woodhouse, Forsyth, etc என்று பல எழுத்தாளர்களைக் கடந்து தங்களை அடைந்தேன். நடுவில் நிறைய ஆன்மீக எழுத்துக்களும் அடங்கும். உங்களை எப்படி அறிந்தேன் என்று ஞாபகமில்லை. ஆனால் ஏதோ ஒரு இணைய விமர்சனத்தில்தான் உங்கள் எழுத்துக்கள் பற்றி அறிந்தேன். பின் உங்கள் இணையதளம். நாவல்கள் பிற படைப்புகள். பின் திருச்சி அருண் விடுதியில் சந்திப்பு.


எனக்குத் தங்கள் கருத்து ஒரு பெரும் வித்தியாசமாகவும் புதுவரத்தாகவும் இருந்தது. நான் என் பதினொன்றாம் வகுப்பிலிருந்து சுயதொழில் செய்யும் வரை பிற மாநிலங்களில் படித்து வேலை செய்த படியால் என் விருப்ப எழுத்துகள் மட்டுமே தமிழில் படிக்கமுடிந்தது. சாதாரண வெகுஜன எழுத்துக்கள் அதன் எண்ண ஓட்டங்கள் எண்ண நிலைகள் என்று கணினி இல்லாத காலத்தில் தெரியவாய்பில்லை. தமிழகத்தில் வந்து குடிபுகுந்து பின் இந்த வெகுஜன எண்ணங்களை அதன் பின்புலங்களை அறியக் கிடைத்தபோது சற்று சோர்வே அடைந்தேன். தாங்கள்தான் ஒரு பரந்த இந்திய உணர்வுடனும் பிரிவினையை ஆதரிக்காமலும் எழுதுகிறீர்கள். அதற்கு மேலும் உங்கள் பார்வை மட்டுமே சரி அப்படியில்லாமல் வேறு எண்ணம் கொண்டவர் நிராகரிக்கவேண்டியவர் என்று பாராமல் பல மன நிலைகளையும் பல பார்வைகளையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். வேற்றுப் பார்வையை புரிதலுக்காக எழுதியவரின் தனி வாழ்வைப் பார்க்கலாம் ஆனால் தனி மனித வாழ்வை சாதாரணமாக எண்ணங்களையும் எழுத்துக்களையும் அலசும் போது விமர்சனத்திற்கு உள்ளாக்கக்கூடாது என்ற அடிப்படை எண்ண ஒற்றுமை தங்கள் எழுத்துக்கள் பிடித்தமைக்கு முக்கியமான காரணம்.


நம் சந்திப்பு ஒரு பத்து இருபது நிமிடங்களே வாய்த்தது என்பதனாலும் வேறு பலபேர் இருந்ததாலும் விரிவாகப் பேச முடியாமல் போனது. ஆனால் நான் முன்னே எழுதியது போல உங்களைப் பற்றிப் பெருமளவு இணையத்தில் அறிந்திருந்தபடியால் எந்தத் தயக்கமும் இல்லாமல் சந்திப்பு இருந்தது. சாதாரணமாக ஆதரவாளர்கள் கூட்டம் பிரபல எழுத்தாளர்களை சுற்றிக்கொண்டு சாமான்ய வாசகர்களை சந்திக்கவிடாமல் இருக்கும். முக்கியமாக அது இல்லாமல் தாங்கள் தனிமையில் இருந்தது மகிழ்ச்சி அளித்தது. அதுவும் திரைத்துறையில் கால்பதித்த பின்னும் பகட்டு இல்லாமல் சாதாரணமாக உரையாடியது பெரும் நிறைவைத் தந்தது. உங்கள் எழுத்துக்களிலிருந்து இப்படிதான் எதிர்பார்த்தேன். சென்னை அல்லாத பிரபலங்கள் இப்படித்தான் சாமான்யர்களின் பிரதிபலிப்பாக இருக்கிறார்கள். அந்த சந்திப்பின் காரணமாகத்தான் நீலகிரி சந்திப்பிற்குப் பதிவு செய்தேன். நீண்ட விரிவான எண்ணப் பரிமாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்கிறேன்.


பிறந்த நாள் வாழ்த்துகள்.


அன்புடன்,


திருச்சி வே, விஜயகிருஷ்ணன்



அன்புள்ள விஜயகிருஷ்ணன்,


எழுத்தாளர்களைச் சந்திப்பது பற்றிப் புதுமைப்பித்தன் சொல்கிறார், ‘இரட்டைப்பெண்கள், சாமியார், ஐந்துகால் பசு போல என்னை சந்திக்க வருபவர்கள் வரவேண்டியதில்லை. உரையாடலுக்கு எப்போதும் தயராக இருக்கிறேன்.’


இது ஒரு முக்கியமான வரி. புதுமைப்பித்தன் உண்மையில் எப்போதும் பிரபலமாக இருந்ததில்லை. ஆனால் அவருக்கே இந்தப்பிரச்சினை இருந்திருக்கிறது. எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பியிருக்கிறார்.


எழுத்தாளர்களை அவர்களின் பிரபலம் கருதி சந்திக்க வருபவர்களே அதிகம். ஊடகம் சமூகத்தின் சுவாசமாக இருக்கும் இன்றைய சூழலில் பிரபலமாக இருப்பது மக்களிடையே முக்கியமான ஒரு மதிப்பைப் பெறுகிறது. அதன்பொருட்டே எழுத்தாளர்களைச் சந்திக்க வருகிறார்கள்.


ஜெயகாந்தனும் சுஜாதாவும் அப்படி வருபவர்களைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அதிக புகழ் இல்லை என்பதனால் அப்படி அதிகம்பேர் வருவதில்லை.


இப்படித் தேடி வருபவர்களில் கணிசமானவர்கள் வேடிக்கை பார்க்கத்தான் வருகிறார்கள். தன்னை வந்து சந்திப்பவர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்குத் தன்னுடைய ஒரு கதையோ கதாபாத்திரமோ நினைவில் இருப்பதில்லை என்று சுஜாதா என்னிடம் ஒருமுறை சொன்னார். குத்துமதிப்பாக ‘உங்க கதையெல்லாம் படிப்பேன் சார் சூப்பரா எழுதறீங்க…’ என்று பாராட்டியபின் ‘நீங்க எப்டி சார் எழுதறீங்க? வீட்ல ஒண்ணும் சொல்றதில்லியா?’ என்று பேச ஆரம்பிப்பார்கள்.


என்னிடமும் சிலர் அப்படி பேசுவதுண்டு. ‘எப்டி சார் அவ்ளவு பக்கம் எழுதறீங்க? நான்லாம் போஸ்ட்கார்டு எளுதவே சோம்பல்படுவேன் சார்’ என்பது போல. ஒன்றும் செய்யமுடியாது, மெல்ல கிளப்பி விடுவதைத்தவிர.


இன்னொரு வகையினர் எழுத்தாளர்களிடம் தங்களை உரசிப்பார்க்க வருபவர்கள். தங்கள் அறிவுத்திறன், வாசிப்பு மட்டுமல்ல தங்கள் சமூகத்தொடர்புகளைக்கூட எழுத்தாளர்கள் மீது போட்டுப்பார்ப்பார்கள். தாங்கள் படித்த ஏதேனும் புத்தகத்தை எழுத்தாளர்களிடம் விலாவாரியாக விவரிப்பது, இலக்கியக் கொள்கைகளை விளக்குவது பலரும் செய்வது.


தங்களை மாபெரும் கொள்கை வீரர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் உண்டு. புரட்சியாளர்களாகவும் சமூக சீர்திருத்தவாதிகளாகவும் தங்களை அக்கணம் அங்கேயே உருவாக்கிக்கொள்வார்கள். பல ஆண்டுகளாக இத்தகைய நாடகங்களைப் புன்னகையுடன் கண்டு வருகிறேன்.


இத்தகைய சந்திப்புகள் எழுத்தாளர்களுக்குப் பெரும் தொல்லை. நேர விரயம் மட்டுமல்ல, சுமுகமான மனநிலையை சட்டென்று இல்லாமலாக்கி எழுத்தாளர்களை எரிச்சலானவர்களாக ஆக்கிவிடுகிறார்கள் இந்த வகை வருகையாளர்கள்.


சென்னையில் வாழும் எழுத்தாளர்களுக்கு இந்த வகை வாசகர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஆகவேதான் அவர்கள் எப்போதும் ஒரு தற்காப்பு மனநிலையுடன், கொஞ்சம் கடுகடுப்புடன் இருக்கிறார்கள். ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுஜாதா போன்றவர்களிடம் அந்தத் தற்காப்பு உறை மிக வலுவானது.


நான் என் புகழின் எல்லையாலும் இருக்கும் ஊரின் தொலைவாலும் அந்தக் கட்டாயங்கள் இல்லாமலிருக்கிறேன், அவ்வளவுதான்.


எனக்கு வாசகர் சந்திப்பில் தவறான அனுபவங்கள் அதிகமில்லை. ஒரு தேதியைச் சொல்லிவிட்டு, அந்த தேதியில் என் வேலைகளை எல்லாம் வீணாக்கிவிட்டு, நாலைந்து நாள் கழித்து, ‘அன்னிக்கு வர முடியலை’ என்று சொல்பவர்கள் சிலரைத் தவிர. அவர்களை நான் மீண்டும் சந்திக்க ஒப்புக்கொள்வதே இல்லை. எந்தக்காரணத்தாலும்.


எதையும் வாசிக்காமல் வருபவர்களும் உண்டுதான். தானே பேச விரும்பி வருபவர்களும் உண்டு. முன்பெல்லாம் இத்தகையோரிடம் சுந்தர ராமசாமி காட்டும் பொறுமை பற்றி எனக்கு ஆச்சரியம் இருந்தது . இன்று நானே அந்தப் பொறுமையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டேன்.



தற்காப்புக்கு அப்பால் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவருமே நல்ல சந்திப்புகளை விரும்பக்கூடியவர்கள். என்னைப்பொறுத்தவரை பொதுவாக அகமுக நோக்குள்ளவர்கள் எனக் கருதப்படும் ஜெயகாந்தன், அசோகமித்திரன், இளையராஜா ஆகியோருடனான எல்லா சந்திப்புகளும் உற்சாகமானவையாக மகத்தானவையாகவே இருந்திருக்கின்றன.


அதற்கு அவர்கள் நம் மீது கொள்ளும் நம்பிக்கை, நமக்கு அளிக்கும் ஏற்பு மிக முக்கியமானது. அதை நாம்தான் ஈட்டிக்கொள்ளவேண்டும். நம்மைத் தவிர்க்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது. வழியை நாமே கண்டடையவேண்டும். காரணம் அதன்மூலம் பலன் பெறுபவர் நாமே.


முக்கியமான கேள்வி என்பது எதற்காக எழுத்தாளர்களைச் சந்திக்கவேண்டும் என்பதே. ஒரு வணிகஎழுத்தாளனை அவன் எழுத்துமீதான ஈர்ப்பின் விளைவாகச் சந்திப்பது பெரும்பாலும் ஏமாற்றத்திலேயே முடியும், ஒரு வணிகனையே அங்கே சந்திக்கமுடியும். அவன் உருவாக்கும் பகற்கனவுகளை அல்ல.


பொதுமேடைக்கெனத் திட்டமிட்டு உருவாக்கிக்கொள்ளும் ஆளுமைகளை நேரில் சந்திப்பது முகப்பூச்சு கலையும் அனுபவமாகவே இருக்கும்.


தன் எழுத்தைத் தன் தேடலுக்காக ஆளும் எழுத்தாளனை, எழுத்தினூடாக நேரடியாக வெளிப்படுபவனை சந்திப்பது அவன் எழுத்தைப்போலவே முக்கியமான அனுபவமாகவே இருந்திருக்கிறது. அது நதியைத் தோற்றுவாயில் சந்திப்பதுபோல. நமக்கு அவை எல்லாமே புனிதத் தலங்கள்தானே.


என் அனுபவத்தில் நான் சந்தித்த எழுத்தாளர்கள் வைக்கம் முகமது பஷீர், ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி, பி.கெ.பாலகிருஷ்ணன், அசோகமித்திரன், ஜெயகாந்தன் என ஒரு நீண்ட வரிசை. சட்டென்று இக்கடிதத்துக்காக நினைக்கையில் எத்தனை பெரும் ஆளுமைகளை நேரில் சந்தித்துப் பழகியிருக்கிறேன் என எனக்கே பெருமிதமாக இருக்கிறது.


ஆற்றூர் ரவிவர்மா


எழுத்தாளன் எழுதியவற்றை நுணுகி வாசித்து அவற்றினூடாக அவன் சென்ற தூரத்தை மேலும் நுட்பமாக அறிவதற்காகவே அவனைச் சந்திக்க வேண்டும். நான் அவர்களை எல்லாம் அவர்களின் மிகச்சிறந்த வாசகனாக, அவர்களிடமிருந்து அறிய விரும்புபவனாக மட்டுமே சென்று பார்த்திருக்கிறேன். அவர்களின் எல்லைகள், வசதிக்குறைவுகள் அனைத்தையும் புரிந்துகொண்டே அவர்களுடனான சந்திப்புகளை அமைத்திருக்கிறேன். நெருக்கம் காரணமாக பின்னர் ஆற்றூர், சுந்தரராமசாமி இருவரிடமும் உரிமைகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான்



எழுதுபவனின் ஆளுமை மிகச்சிக்கலான ஒன்று. அவனுடைய அன்றாட வாழ்க்கையில் அவனுடைய எழுத்தாளுமை செல்லுபடியாவதில்லை. விற்கமுடியாத வைரங்களை வைத்திருக்கும் ஏழை போன்றவன் அவன். ஆகவே அவன் அன்றாடவாழ்க்கைக்காக ஒரு ஆளுமையை உருவாக்கி வைத்திருப்பான். அசோகமித்திரன் சர்வசாதாரணமான ஒரு மைலாப்பூர் மாமா மாதிரித்தான் முதல்பார்வைக்கு தோற்றமளிப்பார். சுந்தர ராமசாமி மேல்தோற்றத்துக்கு ஒரு உயர்குடி வணிகர்தான்.


அந்த புற ஆளுமைக்கும் அவனுடைய படைப்பாளியின் அந்தரங்கத்துக்கும் இடையே ஒரு மோதலும் சமரசமும் இருக்கும். அதன் சிடுக்குளும் அவனிடம் இருக்கும். அவற்றைக் கடந்துசெல்ல நம்மிடம் பொறுமையும் கூர்மையும் இருக்கவேண்டும்.



நூல்கள் ஒருபோதும் மனிதர்களுக்கு மாற்றல்ல. சுந்தர ராமசாமியின் ஆளுமை அல்லது நித்யாவின் ஆளுமையின் சிறு தெறிப்பே அவர்களின் எழுத்தில் உள்ளது. மனிதன் என்பது ஒரு பெரும் முழுமை. சிந்தனை என்பது விளைவுதான். மனிதன் என்பது அச்சிந்தனை நிகழும் களம். சிந்தனைகளை விட சிந்திப்பதே நாம் முக்கியமாக கற்றுக்கொள்ளவேண்டியது. அதற்கு நேரடி உறவு தேவை.


உலகமெங்கும் சிந்தனைகள் நேரடித் தொடர்பு மற்றும் உரையாடல்கள் வழியாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிந்தனைப்பள்ளிகள் என்று சொல்லப்படுபவை அவ்வாறுதான் உருவாகின்றன. நூல்கள் அவற்றை பின் தொடர்ந்து செல்லக்கூடியவையாகவே இருந்திருக்கின்றன. ரஸ்சலின் நூல்களில் இருந்து டி.எஸ்.எலியட் உருவாகி வந்திருக்கமுடியாது. ரஸ்ஸல் யோசிக்கும் விதமே எலியட்டை உருவாக்கியது. இன்னொரு திசையில் எலியட் வளர்ச்சிபெறச்செய்தது .


வெறுமே வேடிக்கைபார்ப்பது , வெறும் அரட்டை, அகங்கார வெளிப்பாடு ஆகியவற்றுக்கு அப்பால் அந்தரங்கமான நீடித்த தொடர்புகள் மூலமே அது சாத்தியம். மிகச்சிறிய அளவிலேனும் இங்கும் அது நடந்தபடியேதான் உள்ளது. என் வாழ்க்கையில் அச்சந்திப்புகளுக்கு பெரும் முக்கியம் உண்டு. அவையே என்னை உருவாக்கின


ஜெ




எழுத்தாளர்களை அணுகுதல்




எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும்


தொடர்புடைய பதிவுகள்

தீராநதி நேர்காணல்- 2006
சென்னை, மூன்று சந்திப்புகள்
அசோகமித்திரன் சந்திப்பு
அடுத்தகட்ட வாசிப்பு
அழியாச்சித்திரங்கள்
சுரா.நினைவின் நதியில்- ஒருபார்வை
நோபல் பரிசு இந்தியருக்கு
இருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு
கடிதங்கள்
தினமணி-சுரா-வினவு
பாரதியின் இன்றைய மதிப்பு
கனவுபூமியும் கால்தளையும்
நகுலனும் சில்லறைப்பூசல்களும்
தமிழில் இலக்கிய விமர்சனம்
இருவகை எழுத்து
ஹனீபா-கடிதம்
அசோகமித்திரன் பேட்டி
எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும்
சுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்
அசோகமித்திரன் என்னைப்பற்றி…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 27, 2012 11:30

April 26, 2012

‘சயன்ஸே சொல்லுது!’

அன்புள்ள ஜெ,


காந்தியின் சனாதனம்-4 இல் சீர்திருத்த அணுகுமுறையின் செயல்பாட்டை அடிப்படை விதிகளாக சுருக்கிச் சொல்லியிருந்தீர்கள்.


ஆனால் மதப்பற்று காரணமாகத் தங்கள் மதம் ஐரோப்பிய சிந்தனையையும் அறிவியலையும் விட ஆழமானதும் உயர்ந்ததுமாகும் என வாதிடுவார்கள். அதற்கான விளக்கங்கள் எல்லாமே ஐரோப்பிய தத்துவத்தையும் அறிவியலையும் அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும்.


‘உருவ வழிபாடு’ திரியில் சுட்டப்பட்ட அரவிந்தன் நீலகண்டனின் ‘சிலை வழிபாடு பிரசெண்டேஷனில்’ நான் கண்டது நீங்கள் மேல் சொன்ன வரிகள்தான் என்று நினைக்கிறேன். மேலும் சிக்கல் என்னவென்றால் சில ஐரோப்பிய விஞ்ஞானிகளே அறிவியலையும் மதத்தையும் இணைத்து ‘அறிவியலுக்கு வெளியே கருத்து’ கூறுகிறார்கள். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கோள் காட்டி மதத்தில் எதையாவது நிறுவ முயல்வது போல் ஆபத்தானது வேறொன்றுமில்லை. அது போல் செய்பவர்கள் மதத்தின் அறிவியலின் அடிப்படைகளை உண்மையில் உணர்ந்தவர்களா என்பது சந்தேகமே.


மதத்துக்கு அறிவியல் விளக்கம், மதம் அறிவியலை விட உயர்ந்தது என வாதிடுதல், (அதேபோல் அறிவியலைக் கொண்டு மதத்தை முற்றிலும் நிராகரித்தல்) முதலிய செயல்பாட்டைச் செய்யாமல் நாம் இந்து மதத்தைக் கண்டுகொள்ளும் ஒரு புள்ளி உண்டு என்று நினைக்கிறேன். அந்தப் புள்ளியில் நின்று ‘நான் ஒரு இந்து’ எனக் கூறிக்கொள்வேன். மேலே செல்ல முயல்வேன்.


பரிணாமவாதமும் இந்திய மதங்களும்’, ‘உருவ வழிபாடு’ திரிகளில் என் விவாதங்களில் ஒலிப்பது இத்தகைய கூறுகளே என்று நினைக்கிறேன். இந்தக் கூறுகளைத் தொட்டு யாரும் எதிர்வினை ஆற்றாததால் உங்களிடம் கேட்கிறேன்.


இது குறித்து உங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.


அன்புடன்,

ராஜா.



அன்புள்ள ஜெ,


நான் முந்தைய கடிதத்தை அவசரமாக எழுதிவிட்டேன். மன்னித்து விடுங்கள். உங்கள் கருத்துக்களை அறிய தளத்திலேயே தேடி இருக்க வேண்டும். இனிமேல் விசேச கவனம் கொள்கிறேன். ஆனால் இன்னொரு நோக்கில் ஓர் எழுத்தாளருக்கு ஒரு வாசகன் தன் தடுமாற்றத்தையும் சிந்தனைகளையும் இயல்பாக எழுத எல்லா உரிமைகளும் உண்டு என்றே நினைக்கிறேன். சரிதானே?


உங்கள் தளத்தில் ‘அறிவியல்’ என்று தேடினேன். முழுமையறிவும் கென் வில்பரும் கண்டவுடன் தாவோ ஆஃப் ஃபிஸிக்ஸ் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். இடையே கேள்வி பதில் பகுதிகளில் கீழ்க்கண்ட வரிகளை வாசித்தேன்.


மதத்தின் உருவகங்களையும் அறிவியலின் ஊகங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளையும் ஒன்றாகக் காண்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஒரு சாரார் உற்சாகம் மீதூற மதம் சொல்வதையெல்லாம் அறிவியல் ஆதரிக்கிறது என்று சொல்கிறார்கள். மறுசாரார் கொதித்தெழுந்து மதம் கூறும் எதையுமே அறிவியல் ஆதரிக்காது என்று ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தைய முதிரா அறிவியல்வாதம் பேசுகிறார்கள். இப்படிச் சொல்ல இவர்கள் மதத்தை அறியவேண்டியதில்லை என்றும் நம்புகிறார்கள். இரு எல்லைகள். இரண்டுமே இருவகைப் பற்றின் மூலம் உருவாகும் மூடத்தனங்கள்.


தாவோ ஆஃப் பிஸிக்ஸ் நூலிருந்து ஒரு கதை. நெப்போலியன் கணித மேதை லேப்லாஸிடம் ‘திருவாளர் லேப்லாஸ், நீங்கள் பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றி ஒரு பெரிய புத்தகம் எழுதியிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அதன் சிருஷ்டிகர்த்தாவைப் பற்றி ஒன்றையும் கூறவில்லையே’ என்று கேட்கிறான். ‘அப்படி ஒரு கருதுகோள் எனக்குத் தேவைப்படவில்லை’ என்று பதிலளிக்கிறார். இது போன்ற பாவனைகளே நவீன அறிவியலின் தொடக்கம்.


மேலும், அணு இயற்பியல் சார்பியல் கொள்கை போன்றவை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘அதிர்ச்சியை’ அளித்தன. நமது புலன்களும் மொழியும் சிந்தனைகளும் தடுமாறின. ஆனால் அந்தத் தடுமாற்றம் ஒரு அழகான விவேகத்தையும் அளித்தது. நம் முன் விரிந்து கிடக்கும் பிரபஞ்சம் ஒரு பெரும் புதிர். நம் புலன்களும் மொழியும் புரிதல்களும் தடுமாறும் இடங்கள் எல்லாம் மிக இயல்பானவை. நன்கு நிறுவப்பட்ட அறிவியல் உண்மைகள் மாற்றம் செய்யப்படலாம். திருத்தப்பட்டுத் துல்லியமாக்கப் படலாம்.


(ஐன்ஸ்டீன் உண்மையாகவே கண்ணீர்த் துளி சிந்த நேர்ந்தால் எந்த அறிவியலாளனும் ‘உண்மையாக’ அதிர்ச்சி அடையப்போவதில்லை. இன்னொரு தளம் திறந்து கொண்டது என்றே இயல்பான பரவசமும் ஆர்வமும் கொள்வான். ஏனெனில் பேரியற்கையின் முன் அவன் அறிவியல் குழந்தைத்தனமானது என்பதை உள்ளூர நன்கு அறிவான்.)


பெருவெளி முன் தன் எளிய முறைமைகளையும் கருவிகளையும் மட்டுமே துணைக்கு வைத்துக்கொண்டு நிற்கும் திராணி கொண்டவனே நவீன அறிவியலாளன். ‘அறிவியல் பொது புத்திக்கு’ சிக்காத சில தளங்கள் திறந்து கொண்டவுடன் மதம் நோக்கி ஓடுவதெல்லாம் நகைப்புக்குரியது. அது சிலருக்கு மிகுந்த பரவசம் அளிக்கிறது. நம் ஞான மரபில் சொல்லப்பட்டதைத்தான் பாவம் நவீன அறிவியல் நிறுவிக்கொண்டிருக்கிறது என்பது போன்ற தொனி.


எந்தக் கருத்தையும் அறிவியல் சோதனைகளின் மூலமே பரிசோதிக்க இயலும். அது திட்டவட்டமாக வகுத்துக் கொண்ட வழி. அதன் தவறுகளும் திருத்தங்களும் தடுமாற்றங்களும் வளர்ச்சியும் பிரபஞ்ச தரிசனமும் அதன் உள்ளே இருந்தே வர இயலும். வேறு எதையும் அது ‘துணைக்கு’ அழைக்க முடியாது.


தூய அறிவியல்வாதம் செய்வது மூடத்தனம் அல்ல. அவர்கள் மதத்தை அறியவேண்டியதில்லை என்ற நம்பிக்கையைப் பற்றிக்கொண்டுதான் நிற்கிறார்கள். நீ மதத்தையும் அறிய வேண்டும் என்று சொல்வது அவர்கள் கருவிகளைப் பிடுங்குவதற்குச் சமம்.


காப்ரா முடிவுரையில் எவ்வளவுதான் நவீன அறிவியல் பார்வையும் கிழக்குப் பார்வையும் ஒன்றுபோல இருந்தாலும் பெரும்பாலான அறிவியலாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார். மிக நல்ல விஷயம்.


நித்ய சைதன்ய யதி தாவோ ஆஃப் ஃபிஸிக்ஸ் நூலை நிராகரித்து முக்கியமான கடிதங்கள் எழுதியிருக்கிறார் என்று கூறியுள்ளீர்கள். அவை வாசிக்கக் கிடைக்குமா?


அன்புடன்,

ராஜா.



அன்புள்ள இளையராஜா,


நீண்டகடிதம், ஆகையால் நேரமெடுத்துக் கொஞ்சம் தாமதமாக பதிலளிக்கிறேன்.


இன்று ஆன்மீகத்தையோ மதத்தையோ பண்பாட்டையோ பேசுபவர்கள் அறிவியலை இழுத்துக்கொள்கிறார்கள். மூன்றுவகைகளில்.


ஒன்று, அறிவியலின் உதாரணங்களைப் பயன்படுத்துகிறார்கள். அறிவியலைப் படிமங்களாகக் கொண்டு ஆன்மீகத்தையும் மதத்தையும் பண்பாட்டையும் விளக்குகிறார்கள்.


உதாரணமாக, எளியமுறையில் இறைவனை மின்சாரத்துடன் ஒப்பிடுவதையே சொல்லலாம். மின்சாரம் கண்ணால்பார்க்கமுடியாதது, ஆனால் செயல்களாக வெளியாவது. ஆண்டவன் அதைப்போலத்தான் என்கிறார்கள்.


இரண்டாவதாக, அறிவியலின் கொள்கைகள் தங்கள் நம்பிக்கைகளையும் மரபுகளையும் ஆதரிக்கின்றன என்று கண்டுபிடிக்கிறார்கள். பொதுவான இடங்களைத் தேடி எடுத்து முன்வைக்கிறார்கள். உயர்ந்த அறிவுநுட்பத்துடனும் இது செய்யப்படுகிறது, அசட்டுத்தனமாகவும் செய்யப்படுகிறது.


விபூதி பூசினால் சளிபிடிக்காது என்றவகையிலான ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ பாணி விளக்கங்களைச் சுட்டிக்காட்டலாம். அவை இன்று வைரஸ் போலப் பெருகி நாட்டை வலம் வருகின்றன.


மூன்றாவதாக, அறிவியலின் உச்சநுனியில் ஒரு புதிர் அல்லது எல்லை தட்டுப்படுமென்றால் அதை அறிவியலின் தோல்வி என்று கொண்டாடுகிறார்கள். அந்தத் தோல்வி நிகழும் இடத்தில் தங்களிடம் விடை உள்ளது என முன்வைக்கிறார்கள்.


உதாரணமாக, மீண்டும் மீண்டும் உயிர் என்பது என்ன என்ற வினாவை சிலர் எழுப்பிக்கொள்வதைக் காணலாம்.


ஆனால் இதெல்லாம் இந்து மதத்தைச்சேர்ந்தவர்கள் செய்யும்போதுதான் நம்மூரில் முற்போக்கினர் பொங்குவார்கள். இந்தப்போக்கு உலகளாவியது. திட்டவட்டமான அறிவியல் மறுப்புத்தன்மைகொண்ட கிறிஸ்தவக் குறுங்குழுக்களும், அடிப்படைவாத இஸ்லாமியரும் இன்னும் தீவிரமாக இதையே செய்கிறார்கள்.


தமிழகத்தில் உள்ள எல்லா கிறிஸ்தவப் பிரச்சாரக்கூட்டங்களிலும் உலக அறிவியலே கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்து உருவாக்கியதுதான் என்று சொல்லப்படும். தொடர்ந்து, ரயில், செல்பேசி முதலிய அறிவியல் கருவிகளை உவமையாகக்கொண்டு கிறித்தவம் விளக்கப்படும்.


ஆச்சரியம் என்னவென்றால் அமெரிக்க மதப்பிரச்சாரகர்கள் அங்கும் இதைத்தான் செய்கிறார்கள் என்பதே.


அறிவியல் கொள்கைகளை மதத்துக்கு ஏற்பத் திரிப்பது மேலை அறிவுலகுடன் ஒப்பிட்டால் இங்கே ஒன்றுமே இல்லை. அங்கே அறிவியலாளர்களை வாடகைக்கு எடுத்து, பிரம்மாண்டமான நிதி மற்றும் அமைப்பு பலத்துடன், திட்டமிட்டு மதம்சார் போலி அறிவியல் வளர்த்தெடுக்கப்படுகிறது.


உதாரணமாக டார்வினுக்கு எதிராகப் படைப்புவாத [Creationism] நோக்கை அறிவியல் கொள்கையாகக் காட்டுவதற்காக எழுதிக்குவிக்கப்படும் நூல்களைச் சொல்லலாம்.


இன்றுவரை கிறித்தவ உலகம் அறிவியலாளர்களிடம் பெருவெடிப்புக்கு முன்னால் என்ன இருந்தது என்று சொல்லாமலிருந்தால் நாம் ஒத்துப்போகலாமே என்று மன்றாடிக்கொண்டிருக்கிறது. அந்த மர்மத்தையே தங்கள் இடமாக அது கொண்டாடுகிறது.


இந்த விஷயத்தைப்பற்றிக் கடந்த நாலைந்தாண்டுகளில் மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறேன். இப்போது யோசிக்கையில் இதை நாம் ஏன் செய்கிறோம் என்ற வினா எழுகிறது. அந்தக்கோணத்திலேயே யோசிக்கிறேன்.


உலகமெங்கும் இன்று கல்வி என அளிக்கப்படுவது அறிவியல்கல்வி மட்டுமே. மெல்லமெல்ல மற்ற கல்விகள் அனைத்துமே பயனற்றவை எனப் புறந்தள்ளப்பட்டுவிட்டன. மேலைநாடுகளாவது இலக்கியம், சிந்தனை போன்றவற்றுக்கு ஆரம்பநிலையில் ஒரு முக்கியத்துவத்தை அளிக்கின்றன. கீழைநாடுகள் ‘முன்னேற்ற வெறி’ யில் அறிவியலை அனைத்து நோய்களுக்கும் மருந்தான சஞ்சீவி போலத் தழுவிக்கொண்டுவிட்டன.


மதம்சார்ந்த கல்வி இன்றில்லை. பண்பாட்டுக்கல்வி இல்லை. இலக்கியம், கலைகள், வரலாறு, தத்துவம் எதுவுமே முக்கியமல்லாமலாகிவிட்டிருக்கின்றன. சென்ற முப்பதாண்டுகளில் இந்தியப்பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட எல்லா மாற்றங்களும் அறிவியல்தவிர்த்த கல்விகளைப் படிப்படியாகக் குறைப்பனவாக மட்டுமே இருப்பதைக் காணலாம்.


உண்மையில் இது அறிவியல்கல்விகூட அல்ல. அறிவியல் அதன் விரிந்த தளத்தில் தத்துவத்தையும் பண்பாட்டையும் எல்லாம் தொட்டுச்செல்வது. இங்குள்ளது வெறும் தொழில்நுட்பக்கல்வி மட்டுமே.


இப்படித் தொழில்நுட்பத்தையும், அடிப்படை அறிவியலையும் தவிர வேறு எதையுமே அறியாத ஒரு தலைமுறை உருவாகி வந்தபின் அவர்களிடம் மதத்தையோ தத்துவத்தையோ பண்பாட்டையோ பற்றிப்பேசுவதற்கு வேறு வழியே இல்லை என ஆகிவிட்டிருக்கிறது.


அறிவியலின் குறியீடுகள் வழியாகப்பேசினால்தான் அவர்களுக்குப் புரிகிறது. அறிவியல் ஒன்றை ஆதரிக்கிறது என்றால் மட்டுமே அவர்கள் அதை மதிக்கிறார்கள். அறிவியலை விடப் பெரியது என்று சொன்னால் மட்டுமே அதை வியக்கிறார்கள்.


ஆகவேதான் மதம், பண்பாடு, இலக்கியம், கலை அனைத்துமே வெகுஜனத்தளத்தில் பேசமுற்படுகையில் அறிவியலைக்கொண்டு பேசுகின்றன.


அறிவியல் மானுட அறிதலின் ஒரு கோணம் மட்டுமே. அந்த உணர்தல் நம் சமூகத்தில் இருந்தால் இந்த நிலைக்கான தேவையே இருந்திருக்காது.



மதத்தின் தரப்போ பண்பாட்டின் தரப்போ அறிவியலை சாட்சிக்கு இழுக்கும்போது அதை ஏளனமாகப் பார்க்கும் அறிவியல்தரப்பினர் முதலில் யோசிக்கவேண்டியது அறிவியல் மட்டுமே மானுட அறிதலின் ஒரே வழி என நிறுவப்பட்டுள்ள இன்றைய சூழலின் மூர்க்கமான ஒற்றைப்படைத் தன்மையைப்பற்றித்தான் . அது உருவாக்கும் அழிவுகளைப்பற்றித்தான்.


பெரும்பாலும் தங்களை நவீனமானவர்களாக காட்டிக்கொள்ளவே நம்மவர்கள் இந்த விஷ்யத்தில் ‘தூய’ அறிவியலின் தரப்பை எடுக்கிறார்கள். அவர்களுக்கு அறிவியலின் தரப்புக்கு அப்பால் எதுவும் தெரியாதென்பதும் அறிவியலை ஒரு நவீன மதமாக கண்மூடித்தனமாக நம்புகிறார்கள் என்பதும் மேலதிக காரணங்கள்.


அறிவியலின் உலகளாவிய மேலாதிக்கத்தை முன்வைத்த காலகட்டத்தை நவீனத்துவ யுகம் என்று அடையாளப்படுத்துகிறார்கள். அதன் அழிவுப்போக்கை, அதன் எல்லைகளை உணர்ந்து அதற்கு மாற்றாகவும் மேலாகவும் உள்ள அறிதல்முறைகளை நோக்கி கவனம் குவித்ததன்மூலமே பின்நவீனத்துவம் உருவாகியது.


நவீனஅறிவியலை ஐயப்படுவதும் நிராகரிப்பதும் பின் நவீனத்துவச் சிந்தனைகளின் அடிப்படையான கூறாகவே இருந்துகொண்டிருக்கிறது. அது இன்றைய உலகநோக்கில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.


ஆகவே உங்கள் கடிதத்தில் உள்ள அறிவியல்வழிபாட்டு நோக்கைப்பற்றி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வேன்.



அறிவியல்நோக்கு மையமானது, முதன்மையானது என்ற எண்ணத்தை நீங்கள் தவிர்த்துப்பார்த்தீர்கள் என்றால் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கமுடியும். மனிதனின் அடிப்படைக் கேள்விகள், அவற்றின் பதில்களைப்பற்றிய முன்ஊகங்கள் ஆகிய இரண்டும் அறிவியல், தத்துவம்,கலை ஆகிய அனைத்துக்குமே பொதுவானவைதான். அவற்றின் அறிதல்முறையும் நிரூபணமுறையும்தான் வேறுவேறானவை.


அறிவியல் தன்னுடைய வினாக்களையும் முன்ஊகங்களையும் அறிவியல் என சொல்லப்படும் ஒரு தர்க்கச்சூழலுக்குள் இருந்து மட்டுமே எடுத்துக்கொள்ளுமென்று எவரும் சொல்லமுடியாது. அவை அறிவியலாளனின் ஆழ்மனத்தில் இருந்து பிறக்கக்கூடியவை. அவற்றின் வேர்கள் மானுடத்தின் கூட்டுமனத்தில், பண்பாட்டுக்குறியீடுகளில் உறைகின்றன. அந்த ஆழத்தில் அறிவியலும் தத்துவமும் கலையும் எல்லாம் ஒன்றே.


ஆகவே ஒரே வினாவுக்கு இவை அளிக்கும் பதில்களை ஒப்பிடுவதோ, அல்லது ஒரு துறையின் பார்வையை இன்னொன்றைக்கொண்டு புரிந்துகொள்ளமுயல்வதோ ஒன்றும் பெரும்பிழை அல்ல. ஓர் அறிவியல் கண்டுபிடிப்பின் பண்பாட்டுவேரை தேடிச்செல்வதோ அல்லது ஒரு பண்பாட்டுக்கூறின் அறிவியல்நீட்சியை ஆராய்வதோ மிக மிக அடிப்படையான விஷயம். அது அறிவியலின் ‘புனிதமான உண்மையை’ பிற துறைகள் ‘திருடிக்கொள்ளும்’ முயற்சி அல்ல.


உதாரணமாக ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம் இன்றும் அறிவியல் பிரபஞ்ச ஆய்வாளர்கள் வினவும் அடிப்படை வினாக்களை தானும் எழுப்பிக்கொள்கிறது. இன்றைய பிரபஞ்சவியல் சென்று முட்டிநிற்கும் திகைப்பை தானும் பதிவு செய்கிறது.


ஓர் ஆய்வாளன் ரிக்வேதத்தின் அந்தப்பாடலை இன்றைய பிரபஞ்சவியலுடன் ஒப்பிட்டு ஓர் ஆய்வைச்செய்தானென்றால் உடனே அதை மதத்தையும் அறிவியலையும் கலந்துகட்டி அடிப்பது என்று சொல்வதென்பது அறியாமை மட்டுமே.


இந்த அறியாமைக்கூற்றுக்கள் நம்மிடையே உருவாவதற்கான முக்கியமான காரணம் நாம் அறிவியலை உள்ளூர தொழில்நுட்பம் என்று புரிந்து வைத்திருப்பதே. அறிவியலுக்கு கலையிலும் தத்துவத்திலும் மானுடப்பண்பாட்டின் எல்லா தளங்களிலும் வேர் உண்டு. எல்லா இடங்களிலிருந்தும் அது தன் வேர்நீரை எடுத்துக்கொள்கிறது.


ப்ரிஜோ காப்ரா அவரது நூலில் கீழைநாட்டு மதங்களில் உள்ள பிரபஞ்சவியலை நவீன அறிவியலின் பிரபஞ்சவியலுடன் மேலோட்டமாக ஒப்பிடுகிறார். அதற்காக கீழைஞானங்களின் பிரபஞ்சவியலை அறிவியல் கொள்கைகளுக்கேற்ப எளிமைப்படுத்திவிடுகிறார் என்பதே நித்யாவின் குற்றச்சாட்டு. அவரது தொகைநூல்களில் அக்கடிதங்கள் உள்ளன.


அப்படி ‘எல்லாமே இங்கே இருக்கிறதுதான்’ என்றோ ‘அன்னைக்கே நம்மாள் சொல்லிட்டான்’ என்றோ எளிமைப்படுத்தி அணுகாமல் இந்திய மெய்ஞானமரபின் அடிப்படை கருதுகோள்களை அறிவியல் கருதுகோள்களைக்கொண்டு புறவயமாக ஆராய்வது அவசியமான ஒரு விஷயம்தான்.


உதாரணமாக, நவீன உளவியல் கருதுகோள்களைக் கொண்டு இந்திய சிற்பங்களை ஆராய்வது பல உள்வெளிச்சங்களை அளிக்கும் என்பதை நானே உணர்ந்திருக்கிறேன். நம் தாந்த்ரீக மதத்தின் சடங்குகளையும் குறியீடுகளையும் உளவியல் கருதுகோள்களைக்கொண்டு பொதுவான தளத்தில் எளிதில் விளக்கமுடிகிறது.


ஆனால் மெய்யியல் மற்றும் கலைமரபின் கொள்கைகளை அறிவியல் ஆதரிக்கிறது அல்லது நிரூபிக்கிறது என்று வாதாடுவது கூடாது. அது ஒரு தாழ்வுமனப்பான்மையை மட்டுமே காட்டுகிறது. அது உண்மையில் மெய்யியலையும் கலையையும் சிறுமைப்படுத்துவதுதான்.


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

சந்திரசேகரர் — கடைசியாக சில கடிதங்கள்
ஒளியை விட வேகமானது — விளம்பரம்
கயா — கடிதங்கள்
புதிய பிரபஞ்சம் பற்றி
இந்தியா ஒன்றா?
சைவ வெறுப்பா?
அறிவியலுக்கென்ன குறை?
வேதம் இந்துஞானத்தின் முதல்நூலா?
ஹூசெய்ன், ஒரு கடிதம்
மெய்ஞானம் சில்லறை விற்பனை
இரு இணைப்புகள்
சிலுவையின் பெயரால்: ஒரு கடிதம்
தூய அறிவு
மனிதாபிமான வணிகம்
மனிதராகி வந்த பரம்பொருள் 3
மனிதனாகி வந்த பரம்பொருள் 2
மனிதராகி வந்த பரம்பொருள்!!
சாமியார்
இந்துமதமும் தரப்படுத்தலும்
கடவுளின் மைந்தன்–ஜெயமோகன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2012 11:30

April 25, 2012

நிதீஷ்

அன்பின் ஜெ..


நிதிஷ் குமார் என்னும் அரசியல் தலைவரை ஒரு 15 வருடங்களாகக் கவனித்து வந்திருக்கிறேன் (தொலைவில் இருந்து தான்).


முதலில், மத்திய வேளாண் அமைச்சராக.. குறைந்த விலையில் பாமாயில் வேண்டும், எனவே சுங்க வரிகளைக் குறைக்க வேண்டும் என்னும் வேண்டுகோளோடு, ஒரு தொழில் கட்டமைப்பில் இருந்து பார்க்கச் சென்றது முதல் முறை. மிகத் தெளிவாக, பாமாயில் மீதுள்ள சுங்க வரி குறைக்கப் பட்டால், இந்திய விவசாயிகள் எவ்வாறு பாதிக்கப் படுவார்கள் என்று புள்ளி விவரங்களோடு பேசிய அவர் – எனக்கு முதல் வேலை இந்திய விவசாயிகளைப் பார்த்துக் கொள்வதுதான். பின்னர் நுகர்வோர், அதன் பின் தான் நீங்கள் என்று தயவு தாட்சண்யமில்லாமல் பிஹாரி ஆங்கிலத்தில் சொன்ன அந்தக் கறார்த்தன்மை மிகப் பிடித்திருந்தது.


அதன் பின், மத்திய ரயில் மந்திரியாக – இந்திய ரயில்வே ஒரு deadwood என்று சொல்லி, அதை 7 ஆகப் பிரித்துத் தனியார் மயமாக்க வேண்டும் என்று ராகேஷ் மோகன் கமிட்டியை வழிமொழிந்து அவர் பேசிய போது பிடிக்காமல் போனது.


[image error]

நிதீஷ் குமார்


ஆனால், பிஹாரின் முதல்வராக அவர் ஆனது, இந்திய அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கும் செயல் என்றே தோன்றியது. முதல் ஐந்து வருடங்கள் அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைச் சரி செய்யவே தேவைப் படும். அதைச் சரியாகச் செய்தார் என்றே தோன்றியது.


ஆனால் பீஹாரின் களப்பணியில் இருக்கும் என் கல்லூரியில் படித்த சிலர், இன்னும் சட்டம் ஒழுங்கு மிக அதிகம் மாறி விடவில்லை என்றே சொல்கின்றனர். அண்மையில் நண்பர் ஒருவரின் போலேரோ வண்டி எவ்வாறு ஒரு லோக்கல் எம்.எல்.சியின் ஆட்களால் கடத்தப் பட்டு, அதற்கான பேரங்கள் எவ்வாறு நடந்தன என்று ஒரு சினிமா போல் விவரித்த மெயில் வந்திருந்தது. இறுதியில் வண்டி கிடைக்க வில்லை.


பிஹாரில் எங்கள் வணிக அணுகுமுறையும் மிக ஜாக்கிரதையான ஒன்றாகவே இன்னும் உள்ளது. மிக அதிகம் மாறிவிடவில்லை.


நிதிஷ் குமாராலும் பிஹாரை மாற்ற முடியவில்லை என்றால் அது ஒரு பெரும் சரித்திர சோகமாக ஆகும். வருத்தமாக உள்ளது.


அன்புடன்


பாலா



நிதீஷ் ஒரு கட்டுரை


அன்புள்ள பாலா,


திடீரென்று காமராஜர் தமிழக முதல்வராக வந்தார் என நினைத்துக்கொள்ளுங்கள். தமிழகத்தில் இருந்து ஊழலை அவரால் எளிதில் ஒழித்துவிட முடியுமா என்ன?


இன்று தமிழகத்தில் ஊழல் என்பது சாதாரண மக்களின் அன்றாட ஒழுக்கமாக ஆகிவிட்டிருக்கிறது. ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் தமிழகத்து மக்கள் குறுக்குவழியையே நாடுகிறார்கள். எந்த விதியையும் மீறுவதற்கே முயல்கிறார்கள். அதற்கு என்ன செய்யவேண்டும் என்றே யோசிக்கிறார்கள். லஞ்சம் என்பது ‘சம்பாத்தியம்’ என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. சாதாரணமாக டீக்கடைப்பேச்சுகளிலேயே எதற்கு எப்படி லஞ்சம் கொடுப்பது என்றே பேசப்படுகிறது. லஞ்சம் ஒரு குற்றம் என்றோ தவறு என்றோ எவரும் கருதுவதில்லை.


இதற்கு எதிராக ஒரு தர்மாவேசத்துடன் சின்னக்குழு ஒன்று பேசிக்கொண்டிருக்கிறது. அவர்களைப் பொதுவாக இதழாளர்கள் என சுட்டலாம். ஆனால் இன்று இதழாளர்களில் பெரும்பாலானவர்கள் அதிகாரத் தரகர்கள், வணிகத்தரகர்கள், ஊழலுக்கான மடைகள். இந்த இணையதளத்தைப்பாருங்கள். நம் இதழாளர்களின் லட்சணம் புரியும்


சிற்றிதழ்களின் தலையங்கங்கள் ஊழலுக்கு எதிராகக் கொந்தளிக்கின்றன. ஆனால் நானறிந்த முக்கியமான சிற்றிதழ் ஆசிரியர்கள் சென்ற ஆட்சியில் அவர்களுக்கு ஒரு சாதாரணமான அதிகார வர்க்கத் தொடர்பு கிடைக்கும் என்ற சாத்தியம் கண்ணுக்குப் பட்டதும் எப்படியெல்லாம் பல்லிளித்துக் கும்பிட்டுப் பரிதவித்தார்கள், எப்படித் தங்கள் பக்கங்களை உலகின் மிகப்பெரிய ஊழலாளர்களுக்குத் திறந்து போட்டார்கள், எப்படி விழாக்களில் தங்கள் தலைமை இடத்தில் வைத்து அழகுபார்த்தார்கள் என்பது வரலாறு.


சிற்றிதழ்த் தரப்பில் இருந்து அரசியலுக்குச் சென்ற இரு எழுத்தாளர்கள் சென்ற ஆட்சியின் முக்கியமான ஊழல்முகங்களாக மாறினார்கள் என செய்திகள் காட்டின. ஊழல்பணத்துக்கான பினாமி ஆக, நிலத்தரகரகர்களாக மாறியதே அவர்களின் அரசியல் சாதனை.


ஏன்? காரணம் இதுதான். ஊழல் என்பது மேலே தொடங்குகிறது. கீழிறங்க இறங்க அது ஒரு சமூக நடைமுறையாகவே மாறிவிடுகிறது. அதற்குப் பல ஆண்டுகள் ஆகும். ஒரு கட்டத்தில் கீழ்மட்டம் மேல் மட்டத்தை விட ஊழல் மிக்கதாக ஆகிறது


எந்த ஆட்சியிலும் ஊழல் ஒரு சரடாக ஓடிக்கொண்டே இருக்கும். அதிகாரம் ஊழலின்றி சாத்தியமில்லை. ஆனால் தமிழகத்தில் ஊழலை ஒரு அப்பட்டமான அரசியல்செயல்பாடாக முன்னிறுத்தியது மு.கருணாநிதி அவர்கள் 1969 ல் நடத்திய ஆட்சியே. அன்று மக்கள் அந்த ஊழலால் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் மெல்ல மெல்ல ஊழல் இங்கே மேல்மட்டத்தின் அன்றாட நடவடிக்கையாக ஆகியது. அடுத்த இருபதாண்டுகளில் மக்களின் ஆசாரமாக மாறியது.


இனிமேல் மாற்றம் வேண்டுமென்றால் ஊழலுக்கு எதிரான திட்டவட்டமான ஒரு தலைமை வேண்டும். மேல்மட்டத்தில் தெளிவான மாற்றம் தேவை. அந்த மாற்றம் நிகழ்ந்து மேல்மட்டம் அரசமைப்பு மீதும் சாதாரண மக்கள் மீதும் வலுவான கண்காணிப்பை செலுத்தவேண்டும். அப்படி ஒரு இருபது வருடங்கள் சென்றால்தான் ஊழல் இல்லாமலாவதை நாம் கீழ் மட்டத்தில் உணர முடியும்


நான் பிகாருக்கு எண்பதுகளில் சென்றிருக்கிறேன். அன்றே பிகார் அழிய ஆரம்பித்தது. பிகாரின் அழிவைப்பற்றி நான் தனியாகவே எழுதவேண்டும்.


சுருக்கமான என் மனச்சித்திரம் இதுதான். இது ஒருவகையில் நேரடிச்சித்திரம். பிகார் மிக வளமான மண். ஆகவே வேளாண்மை பெருகி வலுவான நிலப்பிரபுத்துவம் உருவாகியிருந்தது. இந்திய சுதந்திரப்போராட்டத்துக்குப்பின் மற்ற பகுதிகளில் நிகழ்ந்தது போல அந்த நிலப்பிரபுத்துவ அமைப்பு மெல்ல மெல்ல அடிவாங்க ஆரம்பித்தது.


ஒருகாலகட்டத்தில் பிகார் நல்லாட்சி நிகழும் பகுதியாக விளங்கியது. கிருஷ்ண சின்ஹா, அனுக்ரஹ் நாராயணன் சின்கா போன்றவர்கள் பிகாரின் இலட்சிய ஆட்சியாளர்களாகக் கருதப்படுகிறார்கள். அந்தப் போக்கு தொடர்ந்திருந்தால் இந்தியாவின் மிகச்சிறப்பான ஒரு மாநிலமாக பிகார் ஆகியிருக்கும்


என்னைப்பொறுத்தவரை தமிழகத்துக்குக் கருணாநிதி என்ன செய்தாரோ அதை இந்தியாவுக்கு செய்தவர் இந்திரா காந்தி. வெறும் ஏவலடிமைகளை அவர் பிகார் முதல்வர்களாக நியமிக்க ஆரம்பித்ததும் நிலைமை மாறியது. அதிகாரம் அடுக்களைச்சதிகள் மூலம் நிகழ ஆரம்பித்தது. அதில் ஊடுருவிய பழைய நிலப்பிரபுத்துவ ஆசாமிகள் ஜனநாயகம் வந்ததும் தளர ஆரம்பித்த பிடிகளை மீண்டும் இறுக்கிக்கொண்டார்கள். அவர்களே பிகாரின் நவமுதலாளிகளாக ஆனார்கள்.


அந்த நவீன நிலப்பிரபுத்துவ முதலாளித்துவத்துக்கு எதிரான எளிய மக்களின் பொறுமையின்மை இடதுசாரி எழுச்சியாக ஆகியது. எழுபதுகளில் பிகாரை உலுக்கிய நக்ஸலைட் போராட்டத்தை அடக்க இந்திரா பிகார் அரசையும் அதிகார வர்க்கத்தையும் மேலும் மேலும் மூர்க்கமானதாக ஆக்கினார். மக்கள் உரிமைக்கான எல்லா சட்டங்களும் மெல்லமெல்ல இல்லாமலாயின.


லல்லு பிரசாத் யாதவ்


பிகாரின் முக்கியமான பிரச்சினை போலீஸ்தான். இன்றைய போலீஸ் மனநிலைகள் எல்லாமே அன்று உருவானவை. பிகாரின் போலீஸ்துறை உச்சநீதிமன்றம் ஒருமுறை குறிப்பிட்டதுபோல ‘இந்தியாவிலேயே பெரிய சீருடை அணிந்த குற்றவாளிக்கும்பல்’ ஆக மாறியது அப்போதுதான். அதற்குக் கட்டற்ற அதிகாரம் அளிக்கப்பட்டது. அது என்ன செய்தாலும் தண்டிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.பிகாரின் ஆட்சியராக இருந்த மலையாள எழுத்தாளர் ஒருவர் ஒருமுறை இச்சித்திரத்தைத் தனிப்பட்ட உரையாடலில் விரிவாகப் பேசியதைக் கேட்டிருக்கிறேன்.


பிகாரின் போலீஸ்ராஜ்ஜியத்துக்கு அப்பட்டமான உதாரணமாகவும் குறியீடாகவும் பேசப்பட்டது பாகல்பூர் குடுடாக்கல் நிகழ்ச்சி. போலீஸார் எந்த தயக்கமும் இல்லாமல் தெருவில் சென்றவர்களைப் பிடித்துக் கொள்ளையர் எனக் குற்றம்சாட்டிக் கண்களை குருடாக்கித் தெருவில் நிறுத்தினார்கள். அச்செய்தி அன்று இந்தியாவை உலுக்கியது.


சமூகக் கிளர்ச்சியின் வன்முறைக்கு எதிராகப் போராடும் அரசாங்கம் சர்வாதிகாரம் கொள்வதை, கொடிய அடக்குமுறை அமைப்பாக ஆவதை உலகமெங்கும் காணலாம். அந்தக் குரூரமான அரசுக்கு எதிராகப் போராடும் சமூக சக்திகள் அப்போரில் தாங்களும் குரூரமானவையாக ஆகிவிடுகின்றன. ஒருகட்டத்தில் இரு குரூர அமைப்புகள் நடுவே சிக்கிய மக்களை அவை மிதித்து அழிக்கின்றன. அதுவே பிகாரிலும் நடந்தது


பிகார் நக்சலைட் அமைப்புகள் முதலில் முதலாளிகளைக் கொள்ளையிட்டன. நிதி போதாமலானபோது சாமானியர்களைக் கொள்ளையிட ஆரம்பித்தன. அவர்களை வேட்டையாடிய போலீஸும் அதே சாமானிய மக்களை சூறையாடியது. நான் எண்பதுகளில் கயா வரை அலைந்த நாட்களில் அச்சூழலைக் கண்டிருக்கிறேன்.


அந்தக்கொள்ளைக்கு எதிராக அம்மக்கள் சாதியக்குழுக்களாகத் திரண்டனர். ஏனென்றால் அதுதான் அவர்கள் அறிந்த ஒரே வழி. சாதியக்குழுக்கள் ஆயுதமேந்தின. பிகார் கிராமங்களில் சாமானிய மக்கள் கைகளில் ரைஃபிள்களுடன் அலைவதை எண்பதுகளில் கண்டேன். ஆச்சரியமென்னவென்றால் 2008ல் நாங்கள் இந்தியப்பயணம் போனபோதும் அதைக் கண்டோம். நண்பர்கள் அடைந்த பீதி நினைவிருக்கிறது.


அவ்வாறாக எழுபதுகள் முதல் படிப்படியாக பிகாரின் கிராமங்களில் அரசில்லாத நிலை உருவாகிவிட்டது. சாதியத்தலைமை கொண்ட ஆயுதமேந்திய ரவுடிகள் கிராமங்களை ஆண்டனர். அதைச் சீரமைப்பதற்குப்பதிலாக அந்த அரசின்மைச்சூழலில் பல்வேறு அடாவடித்தரப்புகள் நடுவே ஒரு சமரசத்தை உருவாக்கி மேலே இருந்து ஆட்சி செய்யவே எல்லா அரசுகளும் முயன்றன. பிகாரின் அழுகிப்போன போலீஸைத் தொட எவரும் துணியவில்லை.


சாதிய ரவுடிகளுடன் அரசு சமரசம்செய்துகொண்டபோது அவர்கள் அரசியலுக்குள் நுழைந்து அரசியல்வாதிகளாக ஆனார்கள். ஒரு கட்டத்தில் அரசியலும் அரசும் அவர்களுடையதாக ஆகியது.


பிகாரில் சாதிய அமைப்புகள் கிராமங்களில் தேசியநெடுஞ்சாலைகளில் சோதனைச்சாவடிகளை உருவாக்கி வாகனங்களிடம் கட்டாய வசூல் செய்வது சர்வ சாதாரணம். சென்றமுறை இந்தியப்பயணம் சென்றபோதுகூடப் பல இடங்களில் நாங்கள் கப்பம் கொடுக்க நேர்ந்தது. அந்த வசூல் ஒரு கொள்ளை என்ற நிலையைத் தாண்டி ஒரு ஆசாரமாகவே அங்கே மாறிவிட்டிருக்கிறது.


பிகாரில் அரசமைப்பின் வீழ்ச்சி லல்லுவின் காலகட்டத்தில் அதன் உச்சிக்குச் சென்றது. லாலுவின் அரசியல்சூத்திரம் எளியது. காங்கிரஸ் என்பது நிலப்பிரபுக்களினால் ஆன அதிகார அமைப்பு. லல்லு அதற்கு எதிரான சாதிய ரவுடிகளை திரட்டி ஒரு மாற்று அதிகாரத்தை உருவாக்கினார். அதைக்கொண்டு அவர் உருவாக்கிய அதிகாரம் அப்பட்டமான ரவுடியரசியல்.முன்பெல்லாம் அரசு என்ற பாவனையாவது இருந்தது. லாலு நேரடியாக நிர்வாகமே இல்லாத நிலையை நிறுவினார்


ஒட்டுமொத்த விளைவாக பிகார் பஞ்சப்பரதேசி நாடாக ஆகியது. இன்று பிகாரிகள் இந்தியாவெங்கும் கூலியடிமைகளாக வாழும் நிலை உருவாகியது. இங்கே வரும் பிகாரிகளை வைத்து பிகாரை மனதில் உருவகித்து வைத்திருந்த என் நண்பர்கள் 2008இல் கண் தொடும் இடமெல்லாம் பசுமைநிறைந்த சொர்க்கபூமியாகிய பிகாரை நேரில்கண்டபோது அடைந்த அதிர்ச்சியை நினைவுகூர்கிறேன்.


நிதீஷ் போராடுவது முப்பபதாண்டுகளாக மெல்லமெல்ல உருவாகி வந்த ஒரு ஒட்டுமொத்த சமூக அமைப்பை மாற்றுவதற்காக என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அது அத்தனை எளிய விஷயம் அல்ல.


நிதீஷ் அதிகாரத்தில் இருப்பது பிகாரில் உருவாகி வந்த மூன்றாவது அதிகார சக்தியால். அது நடுத்தரவர்க்கத்தாலும், வணிகர்களாலும் ஆனது. தொடர்ந்த ரவுடி-போலீஸ் ஆட்சியால் வணிகம் சீரழிந்து, தொழில்கள் அழிந்து, உருவான தேக்கநிலையால் பொறுமை இழந்த ஒரு வட்டத்தால் அவர் மீண்டும் மீண்டும் பதவிக்கு வருகிறார். அவரால் மீண்டும் பிகாரில் சட்டத்தின் ஆட்சியை உருவாக்க முடிந்தால் தொழிலும் வணிகமும் பெருகி, பிகார் மற்ற இந்திய மாநிலங்களில் நிகழும் பொருளியல் வளர்ச்சியைத் தானும் அடைய முடியும்.


நிதீஷ்குமாரின் நோக்கமும் அவரது நேர்மையும் ஐயத்துக்கிடமற்றவை. அவர் தீவிரமாகச் செயல்படுகிறார். மேல்மட்டத்தில் கணிசமான மாறுதல்களை அவரால் உருவாக்க முடிந்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாகவே பிகாரில் ஓர் அரசு உருவாகியிருப்பதை உணர முடிகிறது. அதன் செயல்பாடுகளை கீழ்மட்டம் வரை காணமுடிகிறது. இதுவே ஒரு பேரற்புதம்


உண்மையான மாற்றங்கள் கீழ்மட்டத்தில் உருவாக இன்னும் பத்தாண்டுகள்கூட ஆகலாம். அதுவரை நிதீஷோ அவரைப்போன்றவர்களோ நீடிக்கவேண்டும். மீண்டும் ஒரு ‘நல்லாட்சி’யை லல்லுவோ காங்கிரஸோ அமைத்துவிடக்கூடாது


அதைவிட முக்கியமாக பிகாரின் சாமானிய மக்கள் தற்காப்புக்காக உருவாக்கிக்கொண்ட சாதிய ரவுடி அமைப்புகள் அவற்றின் இறுக்கத்தைக் கைவிட்டுக் கரைந்தழிய வேண்டும். வரலாறு ஒன்றும் வேதியியல்நிகழ்வு இல்லை. ஒரு வேதிப்பொருளை செலுத்தினால் அது உறுதியான குறிப்பிட்ட விளைவை உருவாக்க வேண்டும் என்பதில்லை. வரலாற்றில் விதிகளே இல்லை. எதுவும் நிகழலாம்


நிதீஷ் முயல்கிறார் என்பதே மகத்தான விஷயம். அவரால் இதுவரை நிகழ்ந்த மாற்றங்களே அற்புதமான நிகழ்வு. அவ்வளவுதான் சொல்ல முடியும்


ஜெ


முந்தையவை


ஜோதிபாசு

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2012 11:30

அறமெனப்படுவது – கடிதங்கள்

அன்பின் ஜெயமோகன் ,


மானுட அறமே மேலான அறம் என்ற உங்கள் கட்டுரை அருமை, அறுதியிட்டுக் கூறுவதே அறம் எனப்பட்டதா? குடும்ப அறம் காக்க முயலாமல், குல அறமும் காக்க முயலாமல், மானுட அறத்தைக் காத்ததினாலேயே கண்ணகி தெய்வம் ஆகி நின்றாளோ ??


நன்றி


சிவகுமார்


அன்புள்ள சிவகுமார்,


ஆம், அதனால்தான் கண்ணகி அறச்செல்வி என்று ஆசிரியராலேயே சுட்டப்படுகிறாள்.


ஜெ


[image error]

துபாய் ஜெயகாந்தன் இல்லம்


அன்புள்ள ஜெ,


உங்கள் துபாய் உரை மிகச்சிறப்பாக இருந்தது. பொதுவாக உங்கள் கட்டுரைகளை விட உரைகள் கவித்துவமாகவும் கூர்மையாகவும் ஆகியபடியே உள்ளன. சமீபத்தில் வந்த எல்லா உரைகளுமே சிறப்பானவை. நீங்கள் தொடர்ந்து உரைகள் ஆற்றவேண்டும் எனக் கோருகிறேன்.


சுவாமி


அன்புள்ள சுவாமி,


உரைகள் ஆற்றுவதில் நான் எனக்கென சில நிபந்தனைகளை வைத்திருக்கிறேன். உரைகளை உடனே வெளியிட்டுவிடுவேன். அந்நிலையில் என்னால் உரைகளை மீண்டும் மீண்டும் செய்ய முடியாமலாகும். பெரும்பாலான பேச்சாளர்கள் வருடத்துக்கு இரண்டு உரைகளையே நிகழ்த்துகிறார்கள். அதைத் திரும்பத்திரும்பச் செய்கிறார்கள். அவர்களிடமிருக்கும் சரளம் அப்படி வந்ததுதான். நான் அதை விரும்பவில்லை.


இரண்டாவதாக உரைகள் வெற்றிகரமாக அமைய அவற்றைக் கொஞ்சம் நீளமாக, நீட்டிமுழக்கிச் சொல்லவேண்டும். நான் என் உரைகள் செறிவாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன். ஆகவே உரைகளை எழுதிக்கொள்கிறேன்.


இந்த உரைகளை உரைகள் என்று சொல்லமுடியாது. இவை குறுங்கட்டுரைகள். ஆங்கிலத்தில் essay என்று சொல்லப்படும் வகை, கவித்துவம், நகைச்சுவை கலந்தவை. கொஞ்சம் புனைவுக்கு இடம்கொடுப்பவை. நான் எழுதும் கட்டுரைகள் பெரும்பாலானவை நீள்கட்டுரைகள். Article எனலாம். அவற்றின் அமைப்பு வேறு. அவை சொல்பவை அல்ல, விவாதிப்பவை.


என் உரைகள் குறுங்கட்டுரைகளாக எழுதப்பட்டு நினைவிலிருந்து நிகழ்த்தப்படுபவை. நல்ல உரைகள் மேடையில் நிகழக்கூடியவை. அவற்றை எழுதினால் அவை கொஞ்சம் வளவளவென்று, கொஞ்சம் சுற்றிச் சுற்றி வருவதாகத்தான் இருக்கும்.


இந்த சுயநிபந்தனைகளால் நான் அதிக உரைகளை நிகழ்த்த முடியாது. வருடத்தில் 5 உரைகள் என்றாலே அதிகம்.


ஜெ


அன்புள்ள ஜெ,


தேவையேற்பட்டாலொழிய அதிகம் பேசுபவன் அல்லன். நாலாயிர திவ்ய ப்ரபந்தமும், சங்கப்பாடல்களும், கம்பராமாயணமும்,திருக்குறளும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். அதிகமும் கவனிப்பவன். உங்களின் “காடு” நாவல் கூட மிளைப்பெருங்கந்தனாரின் பாடல் பார்த்துதான் உள்ளே நுழைந்தேன், பெருங்கந்தனாரின் பேய் உங்களையெழுத வைத்திருந்ததெனச் சொல்வேன். அப்படியானால் கொற்றவை? என நீங்கள் சிரிப்பது எனக்குக் கேட்கிறது. அன்று கூட நீங்கள் “தாள்தோய் தடக்கை” எனச் சொன்னதும் எனக்கு சாத்தனாரின்


“ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்


தாள்தோய் தடக்கை, தகை மாண் வழுதி”


என்கிற பாடல் நினைவில் எழுந்தது. அதன் முடிவு இன்னும் அற்புதமானது.


“ஞாயிறு அனையை, நின் பகைவர்க்கு


திங்கள் அனையை, எம்மனோர்க்கே.”


முதல் நாளன்று உங்கள் அறிமுகத்தின்போது பாலை நிலம் பற்றிப் பேசும்போது ஒளவையின் வரிகள் “நாடாகொன்றோ”பாடலில் இருந்து


“எவ்வழி நல்லவர் ஆடவர்


அவ்வழி நல்லை, வாழிய நிலனே”.


யெனப் பேசினோம்.


கம்பராமாயணம் போன்ற இதிகாசங்களை “பூனை பாற்கடலை நக்கிக் குடிக்க முயலுவது போலவே அவ்வப்போது சிறிது குடிக்கிறேன்”. அன்றும் திரு. நா. நாடன் பேசுகையில் “வாலி வதைப் படலத்தின்” பாடல்களின் போது கண்கலங்கித் தழுதழுத்தேன். இறுதியாக அவரிடம் விடை பெறும் போது சொன்னது “களம் புகல் ஓம்புமின்” எனும் ஒளவையின் பாடல் “மறம்” சார்ந்து சொல்வதற்கு நல்ல தேர்வு. (அவரிடம் சொல்லாதது).


அதே ஒளவையின் மற்றொரு பாடல்


“கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண்,


வெந்து வாய் மடித்து வேல் தலைப் பெயரி,


தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின்


வரு படை போழ்ந்து வாய்ப் பட விலங்கி,


இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய,


சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி


வாடு முலை ஊறிச் சுரந்தன


ஒடாப் பூட்கை விடலை தாய்க்கே” (புறநானூறு)

திணை : உவகைக் கலுழ்ச்சி


இத்திணையில் போரில் மகன் வீரப்போரிட்டு இறந்த நிலை கண்ட தாயின் உவகையைக் காட்டும் அதேநேரம் மகனின் மறம் குறித்தும் ஒளவை சிறப்பாகப் பேசுகிறார். கம்பன், ஆழ்வார்கள், சங்கப்புலவர்கள் போன்றவர்களை வாசிப்பதே பிறவிப் பெரும்பயன்.


மரபை விமர்சிப்பது, குற்றம், குறை சொல்வது, மீற முயற்சிப்பது அனைத்தும் மரபைக் குறித்த அறியாமையிலிருந்து எழுமானால் அது எப்போதும் பொருட்படுத்தத் தக்கதல்ல. மாறாக அதே மரபைத் தேர்ந்து அதிலிருந்து மரபை மீறுவதோ, புதிய மரபுகளைப் படைப்பதோ (படைக்க முற்படுவதோ), விமர்சிப்பதோ நிகழுமானால் அதுவே ஆரோக்கியமானது, மறுமலர்ச்சியும் கூட.


(திரு.ஜெயகாந்தன் எப்போதோ சொன்னதன் சாரம்)


நானும் இப்போது அதைத்தான் செய்ய முயலுகிறேன். பழந்தமிழ் இலக்கியங்கள் சொன்ன மிக நல்ல விஷயங்கள் பாடல்கள் படித்து விட்டுத்தான், இதில் நான் புதிதாக என்ன சொல்ல வருகிறேன் என என்னைக் கேள்விக்குட்படுத்துகிறேன். ஏனெனில் எனக்கு முன்பு பிரமாதமான கவிஞர்கள் (சங்க காலத்தில்,பிரபந்தத்தில்,கம்பன்,திருவள்ளுவர்,பாரதி,பிரமிள்,தேவதேவன், ஆத்மாநாம்,பிரம்மராஜன் என) இதில் எனக்கு ஒரு perception , நாம் ஏன் கவிதையில் அறிவியலைப் பற்றிப் பேசக் கூடாது? புதிதாக ஒரு பரப்பை உருவாக்க விழையும் வேட்கை.


கான முயலெய்த அம்பினில் என்ற குறள் கூறும் பொருள் போல இம்முயற்சியில் நான் தோற்றாலும் யானை பிழைத்த வேல் ஏந்துவதையே விரும்புகிறேன் (அப்பாடா! யானை பிழைத்து விட்டது, பெரும் சந்தோஷம்).


மிக்க நன்றி, நீங்களும் வீட்டில் அனைவரும் நலம் வாழ ப்ரார்த்தனைகள்.


அவசியம் சந்திப்போம்.


(பாம்பாட்டிச்சித்தன்)


குவைத் புகைப்படங்கள்


துபாய் புகைப்படங்கள்

தொடர்புடைய பதிவுகள்

குவைத்-கடிதங்கள்
அறமெனப்படுவது யாதெனின்…
வளைகுடாவில்… 4
வளைகுடாவில்… 3
துபாயில்-கடிதம்
வளைகுடாவில்… 2
வளைகுடாவில்… 1
வளைகுடா பயணம்
விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை
வாழும் கணங்கள்
எஸ்.பொ
ஓர் உரை
உரை — வெசா நிகழ்ச்சி
அந்தக்குயில்
பத்து சட்டைகள்
புதியநாவல்
விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.
வேதசகாயகுமார் விழா
பின் தொடரும் நிழலின் குரல் -அருணகிரி
மூதாதையர் குரல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2012 11:30

அறமெனப்படுவது-கடிதங்கள்

அன்பின் ஜெயமோகன் ,


மானுட அறமே மேலான அறம் என்ற உங்கள் கட்டுரை அருமை , அறுதியிட்டுக் கூறுவதே அறம் எனப் பட்டதோ குடும்ப அறம் காக்க முயலாமல், குல அறமும் காக்க முயலாமல் , மானுட அறத்தைக் காத்ததினாலேயே கண்ணகி தெய்வம் ஆகி நின்றாளோ ??


நன்றி


சிவகுமார்


அன்புள்ள சிவகுமார்


ஆம், அதனால்தான் கண்ணகி அறச்செல்வி என்று ஆசிரியராலேயே சுட்டப்படுகிறாள்


ஜெ


[image error]

துபாய் ஜெயகாந்தன் இல்லம்


அன்புள்ள ஜெ


உங்கள் துபாய் உரை மிகச்சிறப்பாக இருந்தது. பொதுவாக உங்கள் கட்டுரைகளை விட உரைகள் கவித்துவமாகவும் கூர்மையாகவும் ஆகியபடியே உள்ளன. சமீபத்தில் வந்த எல்லா உரைகளுமே சிறப்பானவை. நீங்கள் தொடர்ந்து உரைகள் ஆற்றவேண்டும் எனக் கோருகிறேன்


சுவாமி


அன்புள்ள சுவாமி


உரைகள் ஆற்றுவதில் நான் எனக்கென சில நிபந்தனைகளை வைத்திருக்கிறேன். உரைகளை உடனே வெளியிட்டுவிடுவேன். அந்நிலையில் என்னால் உரைகளை மீண்டும் மீண்டும் செய்ய முடியாமலாகும். பெரும்பாலான பேச்சாளர்கள் வருடத்துக்கு இரண்டு உரைகளையே நிகழ்த்துகிறார்கள். அதைத் திரும்பத்திரும்பச் செய்கிறார்கள். அவர்களிடமிருக்கும் சரளம் அப்படி வந்ததுதான். நான் அதை விரும்பவில்லை


இரண்டாவதாக உரைகள் வெற்றிகரமாக அமைய அவற்றைக் கொஞ்சம் நீளமாக, நீட்டிமுழக்கிச் சொல்லவேண்டும்.நான் என் உரைகள் செறிவாக இருகக்வேண்டும் என நினைக்கிறேன். ஆகவே உரைகளை எழுதிக்கொள்கிறேன்.


இந்த உரைகளை உரைகள் என்று சொல்லமுடியாது.இவை குறுங்கட்டுரைகள். ஆங்கிலத்தில் essay என்று சொல்லப்படும் வகை, கவித்துவம்,நகைச்சுவை கலந்தது. கொஞ்சம் புனைவுக்கு இடம்கொடுப்பது. நான் எழுதும் கட்டுரைகள் பெரும்பாலானவை நீள்கட்டுரைகள். article எனலாம். அவற்றின் அமைப்பு வேறு. அவை சொல்பவை அல்ல விவாதிப்பவை.


என் உரைகள் குறுங்கட்டுரைகளாக எழுதப்பட்டு நினைவிலிருந்து நிகழ்த்தப்படுபவை. நல்ல உரைகள் மேடையில் நிகழக்கூடியவை. அவற்றை எழுதினால் அவை கொஞ்சம் வளவளவென்று, கொஞ்சம் சுற்றிச் சுற்றி வருவதாகத்தான் இருக்கும்


இந்த சுயநிபந்தனைகளால் நான் அதிக உரைகளை நிகழ்த்த முடியாது.வருடத்தில் 5 உரைகள் என்றாலே அதிகம்


8


அன்புடன் ஜெ


தேவையேற்பட்டாலொழிய அதிகம் பேசுபவன் அல்லன், நாலாயிர திவ்ய ப்ரபந்தமும், சங்கப்பாடல்களும், கம்பராமாயணமும்,திருக்குறளும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். அதிகமும் கவனிப்பவன். உங்களின் “காடு” நாவல் கூட மிளைப்பெருங்கந்தனாரின் பாடல் பார்த்துதான் உள்ளே நுழைந்தேன், பெருங்கந்தனாரின் பேய் உங்களையெழுத வைத்திருந்ததெனச் சொல்வேன். அப்படியானால் கொற்றவை? என நீங்கள் சிரிப்பது எனக்குக் கேட்கிறது. அன்று கூட நீங்கள் ”தாள்தோய் தடக்கை” என சொன்னதும் எனக்கு சாத்தனாரின்


“ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்


தாள்தோய் தடக்கை, தகை மாண் வழுதி”


என்கிற பாடல் அதன் முடிவு இன்னும் அற்புதமாக


”ஞாயிறு அனையை,நின் பகைவர்க்கு


திங்கள் அனையை,எம்மனோர்க்கே.”


முதல் நாளன்று உங்கள் அறிமுகத்தின் போது பாலை நிலம் பற்றிப் பேசும்போது


ஒளவையின் வரிகள் “நாடாகொன்றோ”பாடலில் இருந்து


”எவ்வழி நல்லவர் ஆடவர்


அவ்வழி நல்லை, வாழிய நிலனே”.


யெனப் பேசினோம்.


கம்பராமாயணம் போன்ற இதிகாசங்களை “பூனை பாற்கடலை நக்கி குடிக்க முயலுவது


போலவே அவ்வப்போது சிறிது குடிக்கிறேன்”. அன்றும் திரு.நா.நாடன் பேசுகையில் ”வாலி


வதைப் படலத்தின்” பாடல்களின் போது கண்கலங்கித் தழுதழுத்தேன். இறுதியாக அவரிடம் விடை


பெறும் போது சொன்னது “களம் புகல் ஓம்புமின்” எனும் ஒளவையின் பாடல் “மறம்” சார்ந்து


சொல்வதற்கு நல்ல தேர்வு. (அவரிடம் சொல்லாதது).


அதே ஒளவையின் மற்றொரு பாடல்


”கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண்,


வெந்து வாய் மடித்து வேல் தலைப் பெயரி,


தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின்


வரு படை போழ்ந்து வாய்ப் பட விலங்கி,


இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய,


சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி


வாடு முலை ஊறிச் சுரந்தன


ஒடாப் பூட்கை விடலை தாய்க்கே” (புறநானூறு)

திணை : உவகைக் கலுழ்ச்சி


இத்திணையில் போரில் மகன் வீரப்போரிட்டு இறந்த நிலை கண்ட தாயின் உவகையைக் காட்டும் அதேநேரம் மகனின் மறம் குறித்தும் ஒளவை சிறப்பாகப் பேசுகிறார். கம்பன், ஆழ்வார்கள், சங்கப்புலவர்கள் போன்றவர்களை வாசிப்பதே பிறவிப் பெரும்பயன்.


மரபை விமர்சிப்பது, குற்றம், குறை சொல்வது, மீற முயற்சிப்பது அனைத்தும் மரபைக் குறித்த அறியாமையிலிருந்து எழுமானால் அது எப்போதும் பொருட்படுத்தத் தக்கதல்ல. மாறாக அதே மரபைத் தேர்ந்து அதிலிருந்து மரபை மீறுவதோ, புதிய மரபுகளைப் படைப்பதோ (படைக்க முற்படுவதோ), விமர்சிப்பதோ நிகழுமானால் அதுவே ஆரோக்கியமானது, மறுமலர்ச்சியும் கூட.


(திரு.ஜெயகாந்தன் எப்போதோ சொன்னதன் சாரம்)


நானும் இப்போது அதைத்தான் செய்ய முயலுகிறேன். பழந்தமிழ் இலக்கியங்கள் சொன்ன மிக நல்ல விஷயங்கள் பாடல்கள் படித்து விட்டுத்தான், இதில் நான் புதிதாக என்ன சொல்ல வருகிறேன் என என்னைக் கேள்விக்குட்படுத்துகிறேன். ஏனெனில் எனக்கு முன்பு பிரமாதமான கவிஞர்கள் (சங்க காலத்தில்,பிரபந்தத்தில்,கம்பன்,திருவள்ளுவர்,பாரதி,பிரமிள்,தேவதேவன், ஆத்மாநாம்,பிரம்மராஜன் யென) இதில் எனக்கு ஒரு perception , நாம் ஏன் கவிதையில் அறிவியலைப் பற்றிப் பேசக் கூடாது? புதிதாக ஒரு பரப்பை உருவாக்க விழையும் வேட்கை.


கான முயலெய்த அம்பினில் என்ற குறள் கூறும் பொருள் போல இம்முயற்சியில் நான் தோற்றாலும் யானை பிழைத்த வேல் ஏந்துவதையே விரும்புகிறேன்(அப்பாடா! யானை பிழைத்து விட்டது,பெரும் சந்தோஷம்).


மிக்க நன்றி,நீங்களும் வீட்டில் அனைவரும் நலம் வாழ ப்ரார்த்தனைகள்


அவசியம் சந்திப்போம்


(பாம்பாட்டிச்சித்தன்)


குவைத் புகைப்படங்கள்


துபாய் புகைப்படங்கள்

தொடர்புடைய பதிவுகள்

குவைத்-கடிதங்கள்
அறமெனப்படுவது யாதெனின்…
வளைகுடாவில்… 4
வளைகுடாவில்… 3
துபாயில்-கடிதம்
வளைகுடாவில்… 2
வளைகுடாவில்… 1
வளைகுடா பயணம்
விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை
வாழும் கணங்கள்
எஸ்.பொ
ஓர் உரை
உரை — வெசா நிகழ்ச்சி
அந்தக்குயில்
பத்து சட்டைகள்
புதியநாவல்
விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.
வேதசகாயகுமார் விழா
பின் தொடரும் நிழலின் குரல் -அருணகிரி
மூதாதையர் குரல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2012 11:30

April 24, 2012

வினோபா, ஜெபி, காந்தி

வணக்கம் சார்.


உங்களிடம் நான் துபாயில் இந்தக் கேள்வியைக் கேட்க நினைதேன், ஆனால் முடியவில்லை. அதனால் தான் கடிதம்.


எமர்ஜென்சியின் பொது ஜேபி ஏன் வினோபா பாவே போல் அல்லாமல், அரசை எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்தார், வினோபாபாவே மேல் ஜேபி மரியாதை வைத்திருந்தார், இருவருமே காந்தியவாதிகள், இருந்தும் ஏன் இந்த முரண். வினோபா பாவே எமர்ஜென்சியை மக்களின் ஒழுக்கத்தைக் கடைபிடிக்கச்செய்யும் வழியாகப் பார்க்கிறாரா. அல்லது அவர் பசுவதையை அரசு எதிர்த்து சட்டம் கொண்டுவரும் என எண்ணி அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாரா? அதைப் போல் மார்க்சியர்கள் காந்தியவாதியான ஜேபியை தங்கள் முன்னோடியாகக் கொள்கின்றனர், ஆனால் காந்தியை அப்படிச் சொல்லுவது இல்லை. இது ஏன் சார்?


உங்கள் வரலாற்று நாயகன் கட்டுரையிலும் இவர்களின் முரண் தெளிவாக இல்லை. நேரம் கிடைத்தால் பதில் அளியுங்கள்.


நன்றி

கார்த்திகேயன்





வினோபா பாவே


அன்புள்ள கார்த்தி,


நான் கல்லூரியில் படித்த காலகட்டத்தில் வினோபா, ஜெபி இருவருமே உயிருடனிருந்தனர். அரசியலார்வம் கொண்ட அக்காலகட்டத்தில் இருவரையுமே கூர்ந்து கவனித்திருக்கிறேன். அன்று உருவான மனப்பதிவு இன்றும் அப்படியே நீடிக்கிறது.


காந்தியை நாம் மிக நுணுக்கமாக இணைக்கப்பட்ட இருவேறு பண்புநலன்களின் கலவை என்று சொல்லலாம். ஒன்று காந்தியின் புரட்சிகரம். இன்னொன்று காந்தியின் ஆன்மீகம். சுவாமி விவேகானந்தர், நாராயணகுரு ஆகியோரிலும் இந்த இரு அம்சங்களையும் காணலாம். இவற்றின் நடுவே உள்ள முரணியக்கமே அவர்களின் ஆளுமையை உருவாக்கியது.


நேர் மாறாக அரவிந்தரிடம் ஆரம்பத்தில் புரட்சிகரம் இருந்தது. அதை முழுமையாகக் கைவிட்டு அவர் ஆன்மீகம் பக்கமாகச் சென்றார்.


விவேகானந்தர், நாராயணகுரு, காந்தி போன்றவர்களைப் பின்தொடர்பவர்கள் தங்கள் இயல்புக்கு ஏற்ப அவர்களிடமிருக்கும் இரு அம்சங்களில் ஒன்றை மட்டுமே தங்களுக்கென எடுத்துக்கொள்கிறார்கள். சிலர் இன்னொரு அம்சத்தை நிராகரிக்கக்கூட செய்கிறார்கள்.


வினோபாவை காந்தியின் ஆன்மீகத்தின் வாரிசு எனலாம். ஜெபியையும் ராம் மனோகர் லோகியாவையும் ஜெ.சி.குமரப்பாவையும் காந்தியின் புரட்சிகரத்தின் வாரிசுகள் எனலாம்.


காந்தி முதன்முதலாக தனிநபர் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தபோது அவர் அதற்காக வினோபாவையே தேர்ந்தெடுத்தார். முதல் தனிநபர் சத்தியாக்கிரகியாக தேசத்தின் முன் நிற்க சஞ்சலமற்ற ஆன்மீக வல்லமை தேவை. அது வினோபாவிடம் உண்டு என காந்தி நினைத்தார்


ஆனால் அந்த ஆன்மீக வல்லமை தனிநபரின் கடைத்தேற்றத்துக்காகப் பயன்படக்கூடாது, தேச சேவைக்காக, மக்களுக்காகப் பயன்படவேண்டும் என காந்தி நினைத்தார். ஆகவேதான் எல்லாவகையிலும் ஒரு யோகியும் துறவியுமான வினோபாவை அரசியல்போராட்டத்தில் முன்னிறுத்தினார்.




[image error]
ஜெயப்பிரகாஷ் நாராயணன்


அந்தப் பாடத்தை வினோபா கற்றுக்கொண்டார். ஆகவேதான் அவர் பூதான இயக்கத்தை ஆரம்பித்தார். அதன் அத்தனை குறைபாடுகளுடனும் அது ஒரு மகத்தான இயக்கம்தான். அதன் சாதனைகளுக்கு நிகராக வேறெந்தத் திட்டமும் சாதிக்கவில்லை, அரசாங்கத்தின் நிலச்சீர்திருத்த திட்டங்களோ இடதுசாரிகளின் நிலமீட்புப் போராட்டங்களோகூட!


ஆனால் இந்திய அரசின், குறிப்பாக நேரு மற்றும் பட்டேலின், ஒத்துழையாமையால் பூதான இயக்கம் வீழ்ச்சி அடைந்தது. தானமாக வழங்கப்பட்ட நிலங்களை பதிவுசெய்துகொடுக்கக்கூட அரசு ஆர்வம் காட்டவில்லை. அரசூழியர்களின் ஆணவம் மெல்லமெல்ல அவ்வியக்கத்தை செயலிழக்கச்செய்தது.


ஆன்மீகமான எழுச்சியால் இயக்கத்தை ஆரம்பித்த வினோபா மிகச்சீக்கிரத்திலேயே அதிலிருந்து மன விலக்கம் கொண்டார். அவர் தொடர்ந்து போராடியிருக்கவேண்டும். வழங்கப்பட்ட நிலங்கள் பதிவுசெய்து அளிக்கப்படும்வரை உறுதியாக நின்றிருக்கவேண்டும். காந்தி அதைத்தான் செய்திருப்பார்.


வினோபாவின் அந்த மன விலக்கம் அவர் போராளியோ புரட்சியாளரோ அல்ல என்பதிலிருந்து வந்தது. புரட்சியாளர்களுக்குத் தணியாத ஒரு நன்னம்பிக்கை இருக்கும். மானுட இருளும், வரலாற்றின் வல்லமையும் தெரிந்தாலும் அந்த நம்பிக்கை அணையாமல் கூடவே இருக்கும்.





இந்திரா


எத்தனை சோர்வூட்டும் தோல்வியையும் அவர்கள் அந்த நம்பிக்கையால் தாண்டுவார்கள். எத்தனை பெரிய சவாலையும் துணிவுடன் சந்திப்பார்கள். அவர்களின் மொத்த ஊக்கமும் அந்தத் நன்னம்பிக்கையின் ஒளியாலானதுதான்.


புரட்சியாளர்கள் தோல்வி அடைவதே இல்லை. அவர்கள் ஒருவகையில் குருடர்கள், உண்மையின் ஒருபக்கத்தை மட்டுமே பார்க்கக் கற்றவர்கள். ஆனால் அந்தப் புனிதமான அப்பாவித்தனமே மானுடத்தை வாழவைக்கிறது.


காந்தியிடமிருந்த அந்தப் புரட்சிகரம் ஜெ.பி.க்கும் இருந்தது. ஜெ.பி.யின் வாழ்க்கையில் அவரது எல்லா கனவுகளும் கலைந்திருக்கின்றன. ஆனால் அவர் சாகும் கணம் வரை போராடிக்கொண்டே இருந்தார். நம்பிக்கையைக் கடைசிக்கணம் வரை தக்கவைத்திருந்தார்.


சோர்ந்து குளிர்ந்து கிடந்த இந்தியாவில், சுயநலமே பேரறமாகத் திகழ்ந்த இந்தியாவில், வாழ்ந்துகொண்டு ஜெ.பி. முழுப்புரட்சி பற்றி கனவுகண்டார் என்றால் அவர் எவ்வளவு பெரிய அசடாக இருந்திருக்கவேண்டும். காந்தியின் அளவுக்கே ஆழமான அசட்டுத்தனம் அல்லவா அது?


வினோபா பொதுவாழ்க்கையில் இறங்கிய கொஞ்சநாளிலேயே சலித்துச் சோர்ந்து ஒதுங்கிவிட்டார். ஆசிரம வாழ்க்கையில் அடங்கித் தனக்குள் சுருண்டுகொண்டார். அத்தகைய மனிதர் எப்போதும் ஆட்சியாளர்களுக்கு சாதகமானவர். ஏனென்றால் அவர் ஒரு பிம்பம் மட்டுமே. அப்பிம்பத்தை சரியாகப் பயன்படுத்த ஆட்சியாளர்களுக்குத் தெரியும்.


இந்திரா மிக நுட்பமாக வினோபாவைப் பயன்படுத்திக்கொண்டார். பவ்னாரில் இருந்த வினோபாவின் ஆசிரமத்துக்கு அவர் சென்று வினோபாவின் காலடி பணிவார். அது தேசமளாவிய செய்தியாக ஆகும். வினோபாவுக்கு நாட்டில் நடப்பதென்ன என்று தெரியாது. அவர் தூக்கி வளர்த்த பெண் இந்திரா. ஆகவே அவர் இந்திராவுக்கு ஆசியளிப்பவராகவே இருந்தார்.


மாறாக, கடைசிவரை கொந்தளித்துக்கொண்டே இருந்தார் ஜெ.பி. புரட்சிகரமனநிலையை இழக்கவே இல்லை. ஆன்மீகமான எதிலும் அவரால் அமர முடியவில்லை. கடைசிவரை அவர் அணையவில்லை. ஆகவேதான் தன் தந்தையிடம் பெருமதிப்புக் கொண்ட குடும்பநண்பராக இருந்தாலும் ஜெ.பி.யை இந்திரா சிறையிலடைத்தார். சிறுநீரகக் கோளாறு கொண்டிருந்த ஜெ.பி. சிறையில் சாகவேண்டும் என ஆசைப்பட்டார்.


ஜெ.பி. அவரது கொந்தளிக்கும் புரட்சிகரத்தன்மையால் எப்போதும் கனவுகாண்பவராக இருந்தார். நிதானமற்றவராக, ஒட்டுமொத்தப்பார்வை அற்றவராக வாழ்ந்தார். காந்தியிடமும் நாராயணகுருவிடமும் இருந்த ஆழத்து அமைதி, ஆழத்து மன விலக்கம் அவரிடம் அமையவே இல்லை.


வினோபா, ஜெ.பி. இருவர் நடுவே உள்ள வேறுபாடு இதுதான். முக்கியமான வேறுபாடு இது. அவர்களின் அடிப்படை இயல்புகள் சார்ந்தது.


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

காந்தியின் திமிர்
காந்தி, கிலாஃபத், தேசியம்
சந்திரசேகர சரஸ்வதி
காந்தியும் விதவைகளும்
காந்தியின் சனாதனம் — கடிதங்கள்
காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்
காந்தியின் சனாதனம்-6
காந்தியின் சனாதனம்-5
காந்தியின் சனாதனம்-4
காந்தியின் சனாதனம்-3
காந்தியின் சனாதனம்-2
காந்தியும் சனாதனமும்-1
இந்திய நிர்வாகம் — கடிதம்
அதிகாரமும் கலங்கலும் — கடிதம்
கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] — 3
காந்தியும் கடவுளும்
காந்தியும் லோகியாவும்
கடிதங்கள்
பாரதி விவாதம் 8 — விமர்சனம் எதற்காக ?
காந்தி-சுபாஷ் , கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2012 11:30

சந்திப்புகள் – சில கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்!


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


ஏறத்தாழ பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னதாக உங்களோடு பயணிக்கத் தொடங்கினேன் – உங்கள் படைப்புகளின் ஊடாக. என் தந்தை வழியாகத்தான் உங்களை வந்தடைந்தேன். வீட்டில் எங்கு திரும்பினாலும் புத்தகங்கள் என்ற சூழலில் வளர்ந்தேன். அலுவல் முடிந்து மிகத் தாமதமாக படுக்கையில் விழுந்த ஓர் இரவில், விஷ்ணுபுரம் (அகரம் வெளியீடு) புத்தகத்தைக் கையில் எடுத்தேன். தொடர்ச்சியாகப் பல இரவுகள் அந்தப் புத்தகத்தோடு பயணித்தேன். கொந்தளிப்பான இரவுகள் அவை. அன்று உங்களோடு ஆரம்பித்த விவாதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. விஷ்ணுபுரம் படித்த அந்த நாட்கள் மன எழுச்சிகொண்டவை. மிக அந்தரங்கமாக உணர்ந்த இரவுகள் அவை. படித்து முடித்த ஓர் அதிகாலையில், உங்களுக்கு ஓர் மின்னஞ்சல் அனுப்பினேன். விஷ்ணுபுரம் படித்து நான் அடைந்த பேரனுபவத்திற்கு நன்றி தெரிவித்து. நான் மீண்டும் மீண்டும் படிக்கும் புத்தகமாக விஷ்ணுபுரமும் காடும் ஆகிவிட்டன.


நான் படிக்காமல் இருப்பது உங்கள் கொற்றவை மட்டும் தான். அதையும் இன்று படிக்க ஆரம்பிக்கிறேன். இதுவே நான் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடும் முறை.


அலுவல் சூழலில் சிக்கிப் புத்தகமே படிக்காத நாட்களில் உங்களது ‘ஊமைச்செந்நாய்’ என்னை மீண்டும் இலக்கிய உலகத்திற்குள் இழுத்துக்கொண்டது. ‘மாடன் மோட்சமும்’ , ‘ஊமைச்செந்நாய்’ புதினமும் உலகின் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளில் என்றும் இடம் பெறக்கூடியவை.


‘அறம்’ தொகுப்பு நான் விஷ்ணுபுரம் படித்த நாட்களில் அடைந்த மனவெழுச்சியை மீண்டும் என்னுள் ஏற்படுத்தியது. என் அடுத்த தலைமுறையினருக்கு இன்று ‘அறம்’ நூலையே பரிசாக அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறேன்.


சுனாமி காலத்தில் உங்களோடு ஓர் கடித உரையாடல் நடந்தது. நீங்கள் அந்த நேரத்தில் எழுதிய ‘இந்தியா’ பற்றிய மன எழுச்சியை விவாதத்திற்கு உட்படுத்தி இருந்தேன். உங்கள் பதில் மிக சுருக்கமாக இருந்தது – ‘இது மேலோட்டமாக போகிற போக்கில் பேசக்கூடிய விஷயமல்ல. ஆழமாக விவாதிக்க வேண்டிய ஒன்று’ என்று கூறி இருந்தீர்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும் இணைக்கும் கூறு என்ன என்பதைப் பின்னாட்களில் மெதுவாக உணரத்தொடங்கிய பொழுது நீங்கள் சுனாமி காலத்தில் எழுதிய கட்டுரையின் முழு வீச்சும் புரிந்தது.


உங்கள் இலக்கியப் படைப்பாகட்டும், கட்டுரை ஆகட்டும் அல்லது தனிப்பட்ட மின்னஞ்சல் ஆகட்டும். அனைத்திலும் நீங்கள் எதிர்த்தரப்பினர் விவாதிக்கத் தேவையான வெளியைக் (Space) கொடுக்கிறீர்கள். அதுவே எனக்கு உங்களிடம் மிகவும் நெருக்கமானவனாக உணரவும் செய்கிறது. விவாதங்களின் மூலமாகவே நான் முன்னேறிச் செல்கிறேன்.


இன்றைய தமிழ்ச்சூழலில் தவிர்க்கமுடியாத ஆளுமை நீங்கள். A top intellect. மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


அன்புடன்,


பழநிவேல்


“Conformity Leads to Mediocrity.”


அன்புள்ள பழனிவேல்,


நலம்தானே? வாழ்த்துக்கு நன்றி. சிறுவனாக இருந்த காலத்தைத் தவிர்த்தால் நேற்றுதான் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம். சென்னையில் இருந்தேன், சிறில் அலெக்ஸ் வீட்டு கிருகப்பிரவேசத்துக்குச் சென்று அங்கே ஒரு விடுதியில். கூட மற்ற நண்பர்கள் இருந்தார்கள். அரங்கா, சிறில் போன்றவர்கள். எல்லாருமாகச் சேர்ந்து திடீரென்று கேக்கெல்லாம் வெட்டிக் கொண்டாடினோம். வேடிக்கையாக இருந்தது.


அலுவலகச்சூழல் பெரும்பாலானவர்களுக்கு அந்தரங்கமான கலை, ஆன்மீக உலகில் வாழமுடியாத அளவுக்கு நெருக்கடி மிக்கதாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால் அப்படி வாழ முடியாவிட்டால் அது பெரும் இழப்பே. பாறையைப் பிளந்து இதழ் விரிக்கும் சிறுசெடி போல நேரத்தைக் கண்டுகொள்ளத்தான் வேண்டும்.


உங்கள் தனிப்பட்ட உலகின் விரிவுக்கு என் எழுத்துக்களின் பங்கு ஒன்று இருப்பது நிறைவளிக்கிறது. எழுதுங்கள்.


ஜெ


அன்புள்ள ஜெயமோகன்,


சனிக்கிழமை மாலை உங்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. ஆனால், உங்களுடன் என்னால் சாதாரணமாக உரையாட முடியவேயில்லை. ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்றால் உங்கள் அண்மை ஏதோ செய்தது :). இயல்பாக இருக்கவே முடியவில்லை. இதை நீங்கள் உணர்ந்தீர்களா தெரியாது.


நான் இதுவரை என் ஆதர்சங்களாகக் கொண்டவர்களுடன் அதிகம் உரையாடியது கிடையாது, என் பெரியப்பாவைத்தவிர. என் மனைவி சொன்னாள், “you are in awe of him”. அது உண்மைதான். இதையும் மீறி, வரும் வாழ்வில் (நாட்களோ, மாதங்களோ, வருடங்களோ தெரியாது) ஒரு அர்த்தமுள்ள நட்பு சாத்தியமாகும் என்று நம்புகிறேன் (இதை எழுதும் போது அந்த நம்பிக்கை மிகக் குறைவே:) ). என்ன ஆகிறதென்று பார்ப்போம்.


இந்தக் கடிதத்தை முதலாகக்கொண்டு உங்களுடன் உரையாட முயல்கிறேன்.


அன்புடன்,


ஸ்கந்த நாராயணன்


அன்புள்ள ஸ்கந்த நாராயணன்,


நாம் இதுவரை இருமுறை நேரில் சந்தித்திருக்கிறோம். இருந்தும் பேசமுடியவில்லை என்பது கொஞ்சம் ஆச்சரியம்தான். நான் எப்போதுமே புதிய நண்பர்களிடம் அந்த வேறுபாடு எழக்கூடாது என்பதில் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்வேன்.


ஆனால் ஒன்றுண்டு, ஆழமான அந்தரங்கப்பகிர்வு ஒன்று உண்டு. அது ஒரு பொதுச்சந்திப்பில் சாதாரணமாக நிகழாது. அதற்கான தருணம் ஒன்றுண்டு. அதற்காகக் காத்திருக்கவே வேண்டும்.


ஜெ


அன்புள்ள ஜெ. மோ.,


சற்று முன்தான் ‘ஏழாம் உலகம்’ வாசித்து முடித்தேன். என் மனம் தற்பொழுது சமநிலையில் இல்லை.


என் வாழ்க்கையில், எனது அசட்டுத்தனங்களால் பலமுறை விளைந்த தவறுகளை, நான் ‘ஏதோ நடந்துவிட்டது, இனி மாற்ற இயலாது’ என்று சுலபமாகத் தாண்டிச் சென்று இருக்கின்றேன். ஆனால், 2009-ஆம் ஆண்டு தங்களின் அமெரிக்கப் பயணத்தினூடே சாக்ரமெண்டோஅருகே Folsom Intel-இல் நடந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ள ஆசைப்பட்டு அந்த அறை வாசல் வரை வந்து நின்று விட்டு பிறகு ஏனோ ஒரு அர்த்தமற்ற தயக்கத்தினால் திரும்பிச் சென்ற தவறை மறந்து, கடந்து செல்ல இயலாமல் இப்பொழுது தவிக்கின்றேன்.


என் மனக்கொந்தளிப்பு அடங்கிய பின்னர் இந்நாவலைப் பற்றிய எனது புரிதலை விரிவாக எழுத ஆசை. என்னால் முடியுமா, எனக்கு அந்தத் தகுதி இருக்கின்றதா என்று தெரியவில்லை.


எனக்கு தற்பொழுது சொல்லத் தோன்றும் ஒன்றே ஒன்று – “என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ஐயா”.


அன்புடன்,

-பாலாஜி.


அன்புள்ள பாலாஜி,


அன்று சந்தித்திருக்கலாம். ஆனால் சந்திக்காமல் போனதிலும் இழப்பு ஏதும் இல்லை. இன்னும் பொருத்தமான ஒரு தருணத்துக்காக அந்தச் சந்திப்பு ஒத்திப்போயிருக்கலாம். சந்தித்தே ஆகவேண்டுமென்ற நிலை உருவாகும்போதுதான் பலசமயம் முக்கியமான சந்திப்புகள் நிகழ்கின்றன.


ஏழாம் உலகம் நாவலைப்பற்றி எழுதுங்கள். நாவலைக் கடந்துசெல்ல, உள்வாங்கிக்கொள்ள அது நல்ல வழி.


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

கதைகளின் வழி
கடிதங்கள்
காடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்
நான் கண்ட விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்
ஏழாம் உலகம் — ஒரு கடிதம்
வாசிப்பு — கடிதம்
மேலான உண்மை — சீனு கடிதம்
கடிதங்கள்
அறிதலுக்கு வெளியே-சீனு
பெருங்காடும் நான் மேய்ந்த நுனிப்புல்லும் — சீனு
ஏழாம் உலகம் — விமர்சனம்
ஏழாம் உலகம்- விமர்சனம்
விஷ்ணுபுரம்- விமர்சனம்
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
காதல் ஒரு கடிதம்
கடிதங்கள்
ஏழாம் உலகம்-கடிதம்
சிற்பச்செய்திகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2012 11:30

April 23, 2012

இரு கடிதங்கள்

ஈரோட்டில் ஒரு சந்திப்பு – கிருஷ்ணன் படித்தேன். ஜெயா தொலைக்காட்சியின் மார்கழி மஹோத்ஸவத்திற்காக காயத்ரி வெங்கடராகவனுக்கு வாசித்த போது, சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா எனும் இப்பாடலை (5 or 6 minutes) மிகவும் நிதானமான காலப்ரமாணத்தில் அனுபவித்தது நினைவிற்கு வந்தது. நேரமிருப்பின் ஒரு முறை கேளுங்கள்.


சுட்டி இங்கே: http://www.youtube.com/watch?v=TEuMKSXbxoE&feature=relmfu


நன்றி,


ஈரோடு நாகராஜன்.


திரு ஜெ அவர்களுக்கு,


தங்களின் ஆதிச்சநல்லூர் பற்றிய பதிவை வாசித்தேன். கீழே இணைத்துள்ளதில் திருநெல்வேலி அருங்காட்சியகம் முகவரியுடன் உள்ளது. திருநெல்வேலி வரும் சமயத்தில் சென்று பார்த்தால் மேலும் தகவல்கள் தங்களுக்கு கிடைக்கலாம்.


அன்புடன்

சேது வேலுமணி

செக்ந்திராபாத்


Bronze Icons

15th-19th Century AD.


GOVERNMENT MUSEUM, TIRUNELVELI


Address:


Curator,

Government Museum,

St. Mark’s Road,

Near the office of the Superintendent of Police,

Tirunelveli – 627 002.


தொடர்புடைய பதிவுகள்

அதிரம்பாக்கம் — ஒரு தொல்லியல் புரட்சி
ஆதிச்சநல்லூர்:கடிதங்கள் மேலும்
ஆதிச்சநல்லூர்:மேலும் கடிதங்கள்
ஆதிச்சநல்லூர்:கடிதங்கள்
ஆதிச்சநல்லூர் சிதம்பரம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2012 11:30

யானைப்பலி

திருவிழாவில் யானை மிரள்வது என்பது கேரளத்தின் முக்கியமான கேளிக்கை நிகழ்ச்சி. எந்தத் திருவிழாவையும் யாரோ ஒருவர் ‘அய்யோ, ஆனை வெரெண்டே’ என்ற ஒற்றைவரிக் கூச்சலைக்கொண்டு கலக்கிவிடலாம். நானெல்லாம் சின்னவயதில் குறைந்தது நான்குமுறையாவது அப்படி குடல்பதறி ஓடிவந்ததுண்டு. ஒரேஒருமுறை உண்மையிலேயே யானை மிரண்டது.



மஞ்சாலுமூடு பகவதியம்மன் கோயிலில். முதுகில் சாமியுடன் சென்றுகொண்டிருந்த பாறசால கேசவன் சட்டென்று நின்றுவிட்டது. பாகன் என்ன செய்தாலும் நகரமாட்டான். பாகன் சட்டென்று துரட்டியை எடுத்து அதன் காதில் செருகி இழுத்தான். கேசவன் பாகனை துதிக்கையால் லேசாக தட்டியதுபோல் இருந்தது. பாகன் கயிறுகட்டி தூக்கி எடுத்தது போல காற்றில் எம்பி விழுந்தான். யானை தலையைக் குலுக்கி பிளிறியபடி திரும்பியது. யானை தலைகுலுக்குவதென்பது மிகமிக அபாயகரமான ஒரு சைகை.


மொத்தகூட்டமும் எதிர்ப்பக்கமாக ஓட, யானை வேகமாகப் பக்கவாட்டில் சென்று, ஒரு மண்சரிவில் உடல் குறுக்கி இறங்கியது. குடைபிடித்தவர் கீழே குதித்துவிட்டார். போற்றி மட்டும் பீதியில் பிதுங்கிய முகத்துடன் மேலேயே அசைந்தாடிக்கொண்டிருந்தார். ஒரு மரத்தை நோக்கி யானை போகும்போது மேலே இருந்த போற்றி கீழே உருண்டார். அடி ஏதுமில்லை. பதறியபடி அவர் ஓடுவதை யானை திரும்பிப்பார்த்து ஒரு காலடி எடுத்து வைத்தபின் சரி வேண்டாம் என்று மரத்தடியில் சென்று நின்றுகொண்டது


பாகன் கையில் கம்புடன் பின்னாலேயே சென்று யானையை அதட்டினார். வயதான பாகன். இளம்வயது உதவியாளன் கூட்டத்தில் மறைந்துவிட்டான். யானை பாகனை நோக்கித் தலை குலுக்கி முன்னால் வந்தது. பின் மீண்டும் மரத்தடிக்கே சென்றது. யானை திரும்பித் தன்னை நோக்கி வரும்போது பாகன் பின்னால் ஓடினால் யானை மசியாது. அந்தக் கணத்தில் அப்படியே நின்று கூர்ந்து நோக்கி திடமான குரலில் கட்டளைபோடுவதில்தான் பாகனின் வெற்றி இருக்கிறது.


அதற்கு வெறும் தைரியம் மட்டும் போதாது. கட்டளைத்திறன் வேண்டும். யானையை மிக நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். அனைத்தையும் விட மேலாக யானைக்கும் தனக்குமான தூரம், அது திரும்பிவரும் வேகம், அந்த நிலஅமைப்பு அனைத்தைப்பற்றியும் கணக்குப் போடத் தெரிந்திருக்கவேண்டும். நிர்வாகவியலில் ஒரு முக்கியமான படிமமாகவே இதை வைக்கலாம்.


மூன்றுமுறை கொம்புகுலுக்கிய யானை பின் மெல்ல அமைதியாகியது. ஒவ்வொருமுறையும் பாகனின் அதட்டல் அதிகரித்துக்கொண்டே சென்றது. நான்காம் முறை அவர் யானைக்கு மிக அருகே சென்றார். அந்தக்கணம் மூவாயிரம் ஜோடிக் கண்கள் நிலைகுத்தி அந்த பாகன் மேல் பதிந்திருந்தன. மூச்சடக்கப்பட்ட அமைதி நிலவியது. அதுவும் ஒரு மாபெரும் நிர்வாகவியல் படிமம். அத்தனை பேர் தன்னைக் கவனிக்கு அதி உச்ச கணத்தில் கைநடுங்காமல் இருப்பதும் சரி மிகையாக எதையாவது செய்யாமலிருப்பதும் சரி அபாரமான மனக்கட்டுப்பாட்டால்தான் சாத்தியம்.


யானை மசிந்தது. பாகன் அதன் காலடியில் குனிந்து இழுபட்டு பொடிமண்ணில் மூழ்கி கிடந்த சங்கிலியை எடுத்து மறுகால் சங்கிலியுடன் தளைத்தார். மொத்த கூட்டமும் ஆராவாரம்செய்தது. காட்டில் காற்றுநுழைந்தது போல ஒரு இயல்பான வியப்பொலி.


இந்த அனுபவத்தை எல்லாம் நான் ஒரு கதையாக ஆக்கினேன். காட்டில் தன்னந்தனியாக யானையை அடக்கப்போகும் ஒரு பாகனின் கதை. யானை ஏன் அடங்கிப்போகிறது என்பது மிகப்பெரிய வினா. அந்த வினாவுக்கான என் பதில் அது.


ஆனால் சிலசமயம் பாகன் தோற்றுவிடுவதுண்டு. பெரும்பாலும் முதல்பலி பாகனேதான். யானைப்பாகனுக்கு கொம்பிலே யமன் என்று சொல்லாட்சி உண்டு. தலைமுறை தலைமுறையாகப் பாகன்கள் யானையால் பாகன்கள் கொல்லப்பட்டாலும் வாரிசுகள் மீண்டும் பாகன்களாக வந்தபடியேதான் இருப்பார்கள். ’என் சோறும் வாய்க்கரிசியும் இதுதான்’ என ஒரு பாகன் தன்னுடைய யானையைச் சுட்டிக்காட்டி சொன்னது நினைவிருக்கிறது.



தீராத குழந்தைத்தன்மையுடன் தன்னருகே செவியாட்டி நிற்கும் கரிய உருவம் காலரூபம் என்று தெரிந்தேதான் பாகன் அதைப் பராமரிக்கிறார். குளிப்பாட்டி உணவூட்டி கொஞ்சிக் குலவிக் கூட வாழ்கிறார். கட்டிலில் படுப்பதுபோல யானைமேல் படுத்து இரவுறங்கும் பாகனைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொருநாளும் மரணத்தைக் குலவிக்கொண்டிருப்பதென்பது ஒரு பேறு. எல்லாமே புல்லுக்கு நிகராகிவிடுகிறது. பெரும்பாலான பாகன்கள் குடிகாரர்கள், பொறுப்பற்றவர்கள், எதையும் பொருட்படுத்தாதவர்கள்.


யானையைக் கோயிலில் அலங்கார மிருகமாக வளர்க்கக் கூடாது என்று கோரி அரசுக்கு மனுகொடுக்கவும், நீதிமன்றத் தடைபெறவும் போராடிவரும் சூழியல் குழுக்களுடன் நானும் சேர்ந்து செயல்படுகிறேன். அதேபோல யானையை சுமை இழுக்க, காடுகளில் மரம் வெட்டப் பயன்படுத்துவதை முழுமையாகவே கைவிடவேண்டும். இதற்குப் பெரும் மரவியாபாரிகளின் எதிர்ப்பு உள்ளது. முக்கியமாக இம்முயற்சிகளுக்கு இந்துத்துவ அரசியல்வாதிகளால் மதச்சாயம்பூசப்படுகிறது. அதைத் தீவிரமாக எதிர்த்து எழுதி வருகிறேன்.


இங்கே குறிப்பிடப்படவேண்டிய இன்னொரு விஷயமும் உண்டு. நம் நாட்டில் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் காளைகளைப் பயன்படுத்துவது குறைந்தபோது படிப்படியாக நம்முடைய அற்புதமான காளை இனங்களே அழிந்து வருகின்றன. காங்கேயம் காளைகள் அடுத்த தலைமுறையில் இருக்குமா என்றே சிலர் சொல்கிறார்கள். யானையும் அப்படி அழிய விடக்கூடாது. யானையின் வாழ்விடமான காடு கடுமையான சட்டதிட்டங்களுடன் காக்கப்பட்டாகவேண்டும்.


யானைமீது கேரளத்தில் பெரிய பிரியம் உண்டு. கேரளத்தின் தனித்தன்மையே யானைதான் என்று நம்புகிறார்கள். பெரும்பாலான கோயில் விழாக்கள் உண்மையில் யானை விழாக்களே. யானையைக் கோயிலுக்குப் பயன்படுத்துவதை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கோயில்களில் விழாநிர்வாகப்பொறுப்பில் இருப்பவர்கள். அவர்களுக்குக் காலத்தைப் பின்னால்கொண்டுசெல்லலாம் என எண்ணமிருக்கிறது. ஜல்லிக்கட்டைத் தடைசெய்வதற்கு எதிராகத் தமிழகத்தில் எழும் அதே பண்பாட்டுப் போர்க்குரல்தான்.



சமீபத்தில் கேரளத்தில் நடந்த பல நிகழ்வுகள் அந்த மதநம்பிக்கையாளர்களையும் யோசிக்கச்செய்திருக்கின்றன. தொடர்ச்சியாகத் திருவிழாக்களில் யானைகள் மிரண்டு உயிர்ப்பலி நிகழ்கிறது. இவ்வளவு அடிக்கடி இது முன்னால் நிகழ்ந்ததில்லை. பலிகளும் இவ்வளவு இல்லை. இது ஏன் நிகழ்கிறது என்பது சிக்கலான வினா. விழாவில் யானைகளைப் பயன்படுத்துவது சென்ற காலங்களில் சாதாரணமாக நடந்து வந்த விஷயம்தானே?


பழையகாலமே வேறு. கேரளத்தின் மிகப்பெரிய திருவிழாவான திரிச்சூர் பூரத்துக்கே இரண்டாயிரம் பேர் வந்தால் அதிகம் என்ற நிலை முப்பதுகள் வரை நிலவியது. போக்குவரத்து வசதிகள் குறைவு. பல சாதிகள் பயணம் பண்ணவே அனுமதிக்கப்பட்டதில்லை. இன்று ஒரு லட்சம்பேர் வரை வருகிறார்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவதே பெரும் சவாலாக உள்ளது. யானைமிரண்டால் வரும் கலவரம் எல்லா ஒழுங்குகளையும் சிதறடித்துப் பெரும் அழிவை உருவாக்குகிறது. வெறும் கொள்ளை நோக்குடன் கலவரத்தை உருவாக்குவதற்காகத் திட்டமிட்டு யானையை மிரளச்செய்யும் வழக்கமும் உள்ளது என்கிறார்கள்.



இரண்டாவதாக இன்று நாம் ஊரெங்கும் போட்டு வைத்திருக்கும் தார்ச்சாலைகள் சிமிண்ட் தளங்கள் யானைகளின் கால்களுக்கு மிகமிக அசௌகரியமானவை. சமீபத்தில் யானை மிரண்ட இடங்களில் எல்லாமே யானை கொதிக்கும் தார்ச்சாலையில் மிதித்ததே காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். காட்டில் ஈரமான தரையில் புல்மேட்டிலும் சேற்றிலும் நடக்கும் நம்மூர் யானைகளால் மேமாத சாலையின் சூட்டைத் தாங்க முடிவதில்லை.


இன்று வாகனப்போக்குவரத்தும் ஒலிப்பெருக்கிகளும் அதிகரித்து உருவாகியிருக்கும் ஓசைப்பெருக்கம் யானைக்கு தாங்கமுடிவதாக இல்லை. யானையின் காது மிகமிக நுட்பமானது. நம்மைப் போலப் பலமடங்கு அதிகமான ஒலிகளைக் கேட்கும் யானை திருவிழாக்கள் அல்லது நகரத்துச் சந்திப்புகளில் எழும் நம்மாலேயே தாங்கமுடியாத ஓசையை எப்படித் தாங்குகிறது என்பதே ஆச்சரியம். அதேபோல யானையின் நாசியும் மிக நுட்பமானது. நாம் இன்று சூழலில் அள்ளி வீசும் ரசாயனங்களின் வீச்சம் யானையை நிலைகுலையச் செய்கிறது.



கடைசியாக, இன்றைய நெரிசலான சாலையில் நிலைகுலைந்த யானை புகுவதென்பது மிக அபாயகரமானது. யானைக்கும் மக்களுக்கும். இன்றைய யானைகள் பெரும்பாலும் போதிய உணவு கொடுக்கப்படாதவை. தென்னையின் நாடான கேரளத்திலேயே யானைகளுக்குத் தேவையான பச்சையுணவு கிடைப்பதில்லை என்னும்போது தமிழகத்தில் வறண்ட சூழலில் கோயில் கல்மண்டபத்தில் வளர்க்கப்படும் யானையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஒருமுறை ஒரு கோயில்யானைக்குப் பழைய தாள்களை உணவாகப் போட்டிருப்பதை, அது மென்று தின்றுகொண்டிருப்பதைப் பார்த்துக் கண்ணீர் விட்டிருக்கிறேன்.


காலம் மாறிவிட்டிருக்கிறது. எத்தனையோ ஆசாரங்களை நாம் கைவிட்டிருக்கிறோம். மாற்றியிருக்கிறோம். இந்து மதம் என்பது இந்தச் சடங்குகளைச் சார்ந்து செயல்பட்டாகவேண்டிய ஒன்றல்ல. அதன் சாராம்சம் ஆன்மீகமானது, தத்துவம் சார்ந்தது. இவையெல்லாம் வெளிப்பாடுகளே. இவற்றைப் பிடிவாதமாகத் தக்கவைத்துக்கொள்ள எண்ணுவதென்பது கண்மூடித்தனம். முன்பு உடன்கட்டை ஏறுதலையும் பொட்டுக்கட்டுதலையும் தீண்டாமையையும் எல்லாம் ஆதரித்த அதே மனநிலை.



இன்றைய சூழலில் அலங்காரமிருகமாக யானையை வளர்ப்பதை முழுமையாகத் தடைசெய்யவேண்டும். ஆலயங்களில் யானையை வளர்ப்பதும் ஊர்வலங்களுக்குக் கொண்டுசெல்வதும் நிறுத்தப்படவேண்டும். யானை தளைக்கப்பட்டு வளர்க்கப்படவேகூடாது. அதன் இயற்கையான சூழல்களில் மட்டுமே அது வாழவேண்டும். இன்றைய நாகரீகத்துக்கு நாம் யானைகளை பலிகொடுக்கக் கூடாது.


யானை என்ற இந்த மகத்தான உயிரினத்தை நாம் பிரம்மசொரூபமாகவே எண்ணி வந்திருக்கிறோம். உயிரின் பெருவல்லமை வெளிப்படும் ஊற்றுமுகம் அது, ஆலமரம் போல , கடலாமை போல. உயிராக வெளிப்படுவது பிரபஞ்ச சக்தியேதான். அவ்வாறு நாம் யானையை வழிபடுவது ஆத்மார்த்தமானது என்றால் வெற்றுச்சடங்குகளுக்காக யானையை அழிக்கலாகாது. அதன் கண்ணீர் மீது நம்முடைய ஆலய மணியோசை முழங்கலாகாது.



கீழே கொடுத்திருக்கும் இரு சுட்டிகளும் என்னை மிகவும் கொந்தளிக்கச்செய்தன. ஒன்று கேரள ஆலயமொன்றில் யானை மிரளும் காட்சி. அதில் உயிர்ப்பலி நிகழும் விதம், அந்தப் பாகனின் பரிதாபமான மரண அலறல். எனக்கு அந்தக்காட்சியிலும் யானைமீதே பரிதாபம் வந்தது. தன்னால் புரிந்துகொள்ளவே முடியாத நவீனநாகரீகம் என்ற பேய்க்கு எதிராகத்தான் அந்த வனஉயிர் கொந்தளித்து மூர்க்கமாக எதிர்வினையாற்றுகிறது.


http://www.youtube.com/watch?v=XWmToj9Xy6s&feature=related


இரண்டாவது சுட்டியில் சத்தீஸ்கர் மாநிலத்தில் வனக்காவலர்களால் காட்டுயானை அடித்தே கொல்லப்படுகிறது. காரணம் ஊருக்குள் வந்துவிட்டதாம். இப்படி அடித்துக்கொல்ல அரசாணையே துணை புரிகிறது. யானைகளைப் ‘பிடிக்க’ அரசு உத்தரவிடுகிறது. கல்லையும் கம்பையும் கொண்டு பிடிக்க முயல்கிறார்கள். கொல்கிறார்கள். பதினான்கு யானைகள் இப்படி ஒரேகாட்டில் ஒரே வருடம் அடித்துக்கொல்லப்பட்டன.


அதை இதழாளர் மைக் பாண்டே ஆவணப்படம் எடுத்து உலகமெங்கும் கொண்டு சென்று காட்டியபின் இந்திய அரசு ஒப்புக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்தது. ஆனால் யானைகள் இன்றும் காடுகளில் பலவழிகளில் கொல்லப்படுகின்றன.அந்த ஆவணப்படம் கிரீன் ஆஸ்கார் எனப்படும் பண்டா விருது பெற்றது.


அந்தக் காணொளியில் யானை சாவதற்குள் வெண்குருதி கொட்ட யானையின் கொம்பை வனக்காவலர்கள் வெட்டி எடுக்கும் காட்சியே குரூரத்தின் உச்சம். அது எந்தப் பிரமுகர் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும் என்று சொல்லமுடியாது.


எப்படிக் கோயில்யானைகளை வதைப்பதை பக்தர்கள் ஆதரிக்கிறார்களோ அப்படிக் காட்டுயானைகளைக் கொல்வதை விவசாயிகள் ஆதரிக்கிறார்கள். தடியும் தீயுமாக யானையைக்கொல்ல உற்சாகமாகக் கிளம்பிச்செல்லும் அந்த மக்களைப் பாருங்கள். செத்த யானையைப் புதைக்கும்போது ஒரு மாலை குழியில் வீசப்படுகிறது – அது கணேசன் அல்லவா?


யானை கோயிலில் சிறையிருக்கவேண்டும், காடுகளில் கொன்றழிக்கப்படவேண்டும். இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோமா? நாம் நாகரீக மக்கள்தானா?


http://www.youtube.com/watch?v=8bG103hHkUU&feature=related


பார்க்க


http://www.walkthroughindia.com/wildlife/killing-incidents-of-wild-animals-in-india/


தொடர்புடைய பதிவுகள்

நயினார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2012 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.