Jeyamohan's Blog, page 2236
May 20, 2012
ஈஸோவாஸ்யம்- முன்னுரை
சமீபத்தில் என் நண்பரான ஜடாயு ஈசாவாஸ்ய உபநிடதத்தைத் தமிழாக்கம் செய்து தமிழ்ஹிந்து என்ற தளத்திலே வெளியிட்டார். அதற்கு வந்த எதிர்வினைகளில் ஒன்றில் இப்படி ஒரு கேள்வி இருந்தது.
’உபநிடதங்கள் பிரம்மா வித்யை என்று அழைக்கப்பட்டன. பிரம்மத்தைத் தேடுபவர்களே கூட முறையாக ஆன்மீகக் கல்வியில் தேர்ச்சி பெற்று, அதிகாரம் பெற்றுத்தான் அணுக முடிந்தது என்று தெரிகிறது. எப்படியாயினும் உபநிடதங்கள் – வேதத்தின் கருத்து முடிவாக, இறுதி உண்மையாகக் கருதப்பட்டன என்பதை மறுப்பதற்கில்லை.
…அதனை நாடி வருகிற ஒருவனை இவ்வாறு ’பிறர் பொருளை விரும்பற்க’ (வடமொழியில் ’மா கஸ்யஸ்வித் தனம்’) என்று கூறுவது ஏன்? பிறர் பொருளுக்கு ஆசைப் படுபவன் உலகியலைத் துறந்து பிரம்மத்தைத் தேடுவானா? பிரம்மத்தை அடைவதே குறிக்கோளாக கொண்டு வருபவனிடம் திருடாதே என்று சொல்வதே கூட ஒரு இன்சல்ட் இல்லையா? இதற்கு இன்னும் வேறு அர்த்தம் ஏதும் இருக்கிறதா?’

நித்ய சைதன்ய யதி
இயல்பாகவே எழக்கூடிய கேள்வி. இந்தக் கேள்விக்கு ஜடாயு ’இங்கு ஒரு சாதாரண நீதிபோதனையாக இது சொல்லப் படுவதில்லை. இதற்கு முன்பு உள்ள வாசகங்களையும் சேர்த்துப் பார்த்தால் அது அளிப்பது ஒரு தரிசனம் – தியாகம்’ என பதிலளித்திருந்தார். சரியான பதில் அது.
சென்ற காலங்களில் உபநிடதத்தைக் கற்றமாணவர்கள் எவருக்கும் இந்த ஐயம் வந்ததில்லை, ஆகவே இப்படி ஒரு விளக்கமும் அளிக்கப்பட்டதில்லை. இப்போது மட்டும் இந்த வினா ஏன் எழுகிறது? இதற்கான தனிச்சூழல் இன்று உருவாகியிருக்கிறதா என்ன? அப்படி உருவாகியிருந்தால் அச்சூழலில் இந்நூலின் ஞானம் எப்படி பொருள்படுகிறது.
முக்கியமான ஒரு மாற்றம் நடந்திருப்பதை நாம் பார்க்கலாம். உபநிடதம் என்ற சொல்லுக்கே அருகமர்தல் என்றுதான் நேர்ப்பொருள். ஒரு குருவின் காலடியில் அமர்ந்து கற்கவேண்டிய நூல்கள் இவை. குரு என்பது இங்கே எப்போதுமே ஒரு நீண்ட குருமரபுதான். ஆகவே ஒரு ஞானவழியில் நின்று கற்கவேண்டிய நூல்களாக இவை இருந்தன.
ஆழ்வார்கள் அல்லது நாயன்மார்களின் பக்திப்பாடல்களை வாசிக்கும்போது அவற்றில் உபநிடதக் கருத்துக்கள் சர்வசாதாரணமாகப் பயின்றுவருவதைக் காணமுடிகிறது. அப்படியென்றால் உபநிடதங்கள் இங்கே தொடர்ந்து பயிலப்பட்டன என்று பொருள்.இருந்தும் ஏன் அவை தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை? இந்தியமொழிகள் எவற்றிலுமே அவை மொழியாக்கம் செய்யப்படவில்லையே?
சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் நமக்கு இருக்கவில்லை. பௌத்தநூல்கள் திபெத்திய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டபோதுதான் நமக்கு அந்த வழக்கம் உருவானது. ஆனாலும் அது அதிகமாகக் கையாளப்படவில்லை. நாம் நூலின் சாராம்சத்தை மறு ஆக்கம்செய்வதையே மரபாக கொண்டிருந்தோம். அவ்வாறு ராமாயணம் மகாபாரதம் புராணங்கள் என பல நூல்களை நாம் மொழியாக்கம் செய்திருக்கிறோம். ஆனால் உபநிடதங்களை நாம் மொழியாக்கம் செய்யவில்லை
அதற்கான காரணம் என்ன என்ற கேள்விக்குப் பதில் ஒன்றே. உபநிடதங்கள் அவ்வாறு நூல்வடிவில் கற்பதற்கானவை அல்ல. அவை குருவழியாகக் கற்கப்பட வேண்டியவை. அவற்றைக் கற்பதற்கான ஒரு முறைமை முன்பு இருந்தது. அந்த முறைமையே அவற்றின் வடிவத்தைக்கூடத் தீர்மானித்தது.
உபநிடதங்கள் உபதேசங்கள் அல்ல. தத்துவ விவாதங்கள் அல்ல. கவிதைகள் அல்ல. இவை எல்லாம்தான் என்று சொல்லமுடியும். ஆனால் அவற்றின் வடிவம் அவற்றை வேறுபடுத்துகிறது. இவை மந்திரங்கள். மந்திரம் என்ற சொல்லுக்கு ரகசியமானது என்று பொருள். மறைந்திருப்பது என்று பொருள். இவ்வரிகள் மந்திர வடிவில் உள்ளன.
மந்திரங்கள் வெறுமே வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் விவாதிப்பதற்கும் உரியவை அல்ல. மந்திரம் என்ற வடிவம் ஒரு ஒட்டுமொத்த ஞானத்தின் மொழியுருவம் என்று சொல்லலாம். ஒரு மெய்ஞான தரிசனத்தை சில சொற்குறிகளில் அடக்கினால் அது மந்திரமாகிறது. அந்த மந்திரத்தில் இருந்து அந்த மெய்ஞான தரிசனத்தை நாம் முழுமையாகவே மீட்டு விரித்து எடுக்கமுடியும். ஒரு பெரிய ஆலமரத்தை திரும்ப விதையாக ஆக்கி வைப்பதைபோல ஞானம் மந்திரமாகிறது.
அதாவது பல்லாயிரம் வருடம் விவாதிக்கப்பட்டு விளக்கப்பட்ட ஒரு மெய்ஞானமே செறிவான சொற்களால் இந்த மந்திரங்களாக ஆக்கப்பட்டுள்ளது. ஒரு ஆயிரம் பக்க நூலை கற்றபின், நினைவுகூர்வதற்காக அதை ஒரு வரியாக சுருக்கி குறித்து வைப்பது போல. அந்த ஒரு வரி மட்டும் கையில் கிடைத்தால் அந்நூலை அறியமுடியாது. ஆனால் உரிய முறையில் கற்பிக்கப்பட்டால் அந்த வரி அந்நூலை நோக்கி நம்மைக் கொண்டுசெல்லும்.
பழங்காலத்தில் இவை எப்படி கற்கப்பட்டன? முதலில் இவை முழுமையாக மனனம் செய்யப்பட்டன. மனப்பாடமான அந்த நூலை குரு மிகவிரிவாக விளக்குவார். சீடனுடன் விவாதிப்பார். மற்ற சீடர்களுடன் விவாதிக்கச்செய்வார். அவ்வாறு அந்த மந்திரத்தின் எல்லா அர்த்தங்களும் வெளிப்படுத்தப்படும். அவ்வாறு கற்பதற்குரிய முறைமை ஒன்று அன்று இருந்தது
அவ்வாறு அம்மந்திரத்தின் அர்த்தங்கள் முழுக்கத் திறந்தபின்னர் அம்மந்திரங்களை தியானம் செய்யச்சொல்வார். திரும்பத்திரும்ப அகத்தில் இச்சொற்களை ஓடவிட்டுக்கொண்டே இருத்தல்தான் அது. மெல்ல மெல்ல சொற்கள் கற்றறிந்த அர்த்தங்கள் நிறைந்த மேல்மனதைக் கடந்து அறியாத அர்த்தங்களால் ஆன ஆழ்மனம் நோக்கிச் செல்லும். ஜாக்ரத்தில் இருந்து ஸ்வப்னத்துக்கும் அங்கிருந்து சுஷுப்திக்கும் செல்லும்.
அச்சொற்கள் மாணவனின் கனவுகளுக்குள் ஒலிக்கும். கனவையும் தாண்டிச்செல்லும் ஆழங்களில் எதிரொலிக்கும். அவ்வாறு அவற்றில் அவன் தன்னுடைய சொந்த அர்த்தங்களைக் கண்டுகொள்வான். அந்நூலில் ஒட்டுமொத்தமான மானுட ஞானத்தையே அவன் கண்டடைய முடியும்.
ஒரு கட்டத்தில் இந்த மந்திரத்தில் எதையேனும் ஒரு வரியை அந்த மாணவனுக்கான ஆப்தவாக்கியமாக -அணுக்க மந்திரமாக- குரு சீடனுக்குச் சொல்லலாம். அல்லது சீடனே அதைக் கண்டடையலாம். அந்த ஒரு வரி அவனுக்கு அனைத்து ஞானங்களையும் தொகுத்தளிக்கக்கூடிய, ஞானப்பெருவெளியில் வழிகாட்டியாக அமையக்கூடிய ஒன்றாக ஆகலாம்.
ஏதோ ஒரு கட்டத்தில் அது அர்த்தத்தை இழந்து வெறும் ஒலியாக ஆகலாம். அவனை அர்த்தமின்மை நிறைந்த முதல்முழுமையில் நிலைகொள்ளச் செய்யலாம். உபநிடதங்கள் அதற்கானவை. அவை ஞானமும் ஞானத்தைக் கடந்து செல்லும் வழியும் ஆனவை.
இன்று நாம் உபநிடதங்களை மொழியாக்கம் செய்கிறோம். மொழியாக்கம் என்பது நூலின் ஒரு வடிவம் மட்டுமே. மலையின் புகைப்படம் போல. உபநிடதங்களை நாம் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு வினியோகம் செய்கிறோம். சாதாரணமாகப் பத்து ரூபாய்க்கு வாங்கிப் பேருந்திலேயே அரைமணி நேரத்தில் வாசித்துவிடுகிறோம். இந்த வேறுபாடுதான் இன்றுள்ளது.
வாசிக்கக்கூடாதென்று சொல்ல வரவில்லை. அந்த வாசிப்பை முழுமையாக உபநிடதத்தை அறிந்துவிட்டோம் என்று எண்ணும் நிலையாக ஆக்கிக்கொள்ளாமல் இருக்கவேண்டும் என்று சொல்கிறேன். அது ஒரு தொடக்கமாக இருந்தால் போதும். அங்கிருந்து மேலும் மேலும் வினாக்களுக்கும் விளக்கங்களுக்கும் சென்றால்போதும். உபநிடத வரிகளை வரையறைகளாகவோ அறிவுரைகளாகவோ கொள்ளாமல் மந்திரங்களாக எடுத்துக்கொண்டால் போதும்.
மேலே சொல்லப்பட்ட ஐயம் அத்தகைய முதல் வாசிப்பில் வருகிறது. அவ்வாசிப்பை மேலும் விவாதங்கள் மூலம் முன்னெடுக்கவேண்டும். அதற்குரிய ஆசிரியர்களைத் தேடிச்செல்லவேண்டும். நேற்றிருந்ததுபோல குருநாதர்களோ அமைப்புகளோ இன்றில்லை. ஆனால் நேற்றை விட அதிகமான நூல்கள் இன்றுள்ளன. குருநாதர்களின் சொற்கள் அழியாமல் கிடைக்கின்றன. அவற்றினூடாகச் செல்லும் வாய்ப்பு நமக்குள்ளது.
உபநிடதங்கள் ஒரு ரகசியத்தன்மையுடன் எப்போதும் பேணப்பட்டன. ஒரு ஞானத்தை அதற்கான தேடலும் அறிவுத்தகுதியும் இல்லாதவர்கள் கற்கலாகாது என்ற எண்ணம் அன்றிருந்தது. ஒருவன் தாகத்துடன் தேடி அலைந்து தன் குருவை கண்டு அவர் வழியாகவே அதைக் கற்கவேண்டும் என்று கொள்ளப்பட்டது. தவறான விளக்கங்கள் வழியாக உபநிடதங்கள் திரிக்கப்படலாகாது என்பதற்காக இவ்வழி கடைப்பிடிக்கப்பட்டது.
உபநிடத ரகசிய ஞானத்துக்குள் கதவுதிறந்து நுழைய இரு சாவிகள் உண்டு. ஒன்று, அவற்றின் தலைப்பு. மாண்டூக்யம், சாந்தோக்யம் என்றெல்லாம் உபநிடதங்களுக்கு இருக்கும் பெயர் அவற்றின் மொத்த ஞானத்தையும் புரிந்துகொள்ள மிக அவசியமான ஒரு குறிப்பு. இரண்டு அந்த உபநிடதங்களில் இருந்து மையத்தரிசனமாக திரண்டு வரும் ஒரு வரி.
அந்த வரி சிலசமயம் சாதாரணமாக நூலுக்குள் இருக்கும். ’பிரக்ஞானம் பிரஹ்ம’ என்பது போல. சிலசமயம் திரும்பத்திரும்ப வரும் ‘தத்வமசி ஸ்வேதகேது’ போல. சிலசமயம் நூலின் முதல்வரியே அதுவாக இருக்கும். ஈஸோவாஸ்ய உபநிடதத்தில் அதன் தலைப்பும் முதல்வரியும் மையவாக்கியமும் ஒன்றே– ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்.
குருநித்யாவின் இந்நூலின் வாசலில் நின்று நான் இதை விளக்குவது அதிகப்பிரசங்கித்தனம். ஆனாலும் முதலில் கேட்கப்பட்ட கேள்விக்கான விளக்கத்தை மட்டும் சொல்லிவிடுகிறேன். உபநிடதத்தைக் கற்கும்போது அந்த மைய வாக்கியத்தைச் சுற்றி அந்நூல் இருப்பதாகவே எண்ணிக்கொள்ளவேண்டும். அதில் உள்ள ஒவ்வொரு வரியுடனும் அந்த மையவாக்கியம் வந்து இணைந்துகொள்வதாக உருவகம் செய்துகொள்ளவேண்டும்
ஈஸோவாஸ்ய உபநிடதத்தின் எல்லா வரியுடனும் ‘இவையனைத்திலும் இறை உறைகிறது’ என்ற வரி இணைகிறது. ’பிறர் பொருளை விரும்பற்க’ என்ற வரியுடன் அவ்வாறு மைய வரி இணையும்போது அது அளிக்கும் அர்த்தமே சரியானது. தனித்து எடுத்தால் ‘திருடாதே’ என்றுதான் பொருள். ஆனால் இந்தப் பிரபஞ்சமே இறைவடிவம், இங்குள்ள அனைத்துமே இறைவன் என்னும்போது பிறர் பொருளை விரும்பாதே என்றால் என்ன அர்த்தம்?
திருட்டு என்பது தனியுடைமையை அங்கீகரிக்கும்போதுதான் உருவாகி வருகிறது. ஒருவன் இப்பூமியில் சிலவற்றை சொந்தம்கொண்டாடுவதை சரியானது என்று அனுமதித்தால்தான் இன்னொருவன் அதை எடுத்துக்கொள்வது திருட்டாகிறது. என்னுடைய மண்ணை அவன் எடுத்துக்கொள்கிறான் என்பது திருட்டாக இன்று கருதப்படுகிறது, என்னுடைய மூச்சுக்காற்றை அவனும் விடுகிறான் என்ற திருட்டுக்குற்றச்சாட்டு இன்னும் உருவாகவில்லை.
இங்குள்ள எல்லாப் பொருளும் இறைவடிவே என்னும்போது இவற்றை எவர் உரிமை கொண்டாட முடியும்? அப்படியென்றால் திருட்டு எங்கே வருகிறது? இந்த வினாவுடன் இச்சொற்களை யோசிக்கவும் மேலும் விவாதிக்கவும் ஒரு கட்டத்துக்குமேல் தியானிக்கவும் முடிந்தால் இந்த வரி திறந்துகொள்ளும். அவ்வாறு எல்லா வரிகளையும் திறந்துகொள்ளவேண்டும். அதுவே உபநிடத வாசிப்பு.
இந்த வரியை இப்படிப் புரிந்துகொள்ளலாம். இயற்கை என்பதே இறைவன். இறைவனின் கருணை ஒவ்வொருவனுக்கும் உள்ளது. ஆகவே ஒட்டுமொத்த இயற்கையும் எனக்குரியதுதான். அதேசமயம் என் இருத்தலுக்கு தேவையான அளவுக்கே நான் எடுத்துக்கொள்ளவேண்டும். எனக்காக இயற்கை அளித்ததற்கு அப்பால் நான் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொன்றும் பிறர் பொருளே. அதை நான் எடுத்துக் கொள்ளலாகாது– காந்தி இந்தவரியை இப்படித்தான் பொருள்கொண்டார்.
இப்பிரபஞ்சத்தில் எனக்களிக்கப்பட்டவற்றுக்கு அப்பால் ஆசைப்படாமலிருக்கும்போதே நான் என்னை அறிய ஆரம்பிக்கிறேன். என்னைச்சூழ்ந்துள்ள ‘அதை’ அறிய ஆரம்பிக்கிறேன்.பிரம்ம வித்தை என்று சொல்லப்படும் தன்னைஅறிதலின் முதல் படியே இந்தத் தன்னுணர்வுதான். இதையே துறவு என்றனர். அதைச்சொல்லித்தான் நூல் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து வரும் ஒவ்வொரு வரியும் அந்த தரிசனத்தின் நீட்சியாக ஆகிறது.
கற்று ,உய்த்து, ஊழ்கத்திலமர வேண்டியவை உபநிடதங்கள். அதற்கான ஒரு பொன்வாசல் நித்யாவின் இந்தக் கவித்துவமான உரை. பத்தாண்டுகளுக்கு முன் நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க நண்பர் எம். கோபாலகிருஷ்ணன் இதை மொழியாக்கம் செய்தார். இந்த மறுபதிப்பு வெளிவரும்போது நண்பரை அன்புடன் நெஞ்சாரத்தழுவிக்கொள்கிறேன்
இக்கணத்தில் குரு நித்யாவின் பாதங்களை முழுமையாக வணங்கிச்சரணடைகிறேன்
ஜெ
[எம் கோபாலகிருஷ்ணன் மொழியாக்கத்தில் வெளிவரும் நித்ய சைதன்ய யதியின் ஈஸோவாஸ்ய உபநிடத உரை நூல் இரண்டாம் பதிப்புக்கான முன்னுரை]
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
May 19, 2012
வேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப்பிரமையா?
நான்மறை சொல்லினும் மெய்தனை அறி? என்ற தலைப்பில் சிறகு இதழில் பெரியண்ணன் சந்திரசேகரன் எழுதிய கட்டுரையை வாசித்தேன். வேதங்களைப்பற்றிய ஒரு கறாரான கட்டுரை.
வேதங்களைப்பற்றி நம்மிடையே எழுதப்படும் சாதக பாதக விமர்சனங்களில் பெரும்பகுதி வேதங்களைப்பற்றிய பிரமைகளில் இருந்து எழக்கூடியவை. வேதங்களில் இல்லாதது இல்லை, உலக ஞானத்துக்கே அவைதான் அடிப்படை, அவை மாபெரும் தத்துவக் களஞ்சியங்கள் என்றவகையிலே ஒரு தரப்பு எழுதிக்கொண்டிருக்கும். அதற்கு மாறாக வேதங்கள் சாதியவெறுப்பை உருவாக்கும் பார்ப்பனியக்குப்பைகள் என்ற கருத்து சொல்லப்படும்
தமிழில் வேதங்கள் கிடைக்கின்றன. ஜம்புநாதன் மொழியாக்கம்செய்த வேதங்களை ஒரு வாசகன் வாசித்தால் நேரடியாக சம்ஸ்கிருதம் படித்த நிறைவை அடைவான் – ஒன்றும் புரியாது. எழுவாய்பயனிலையைக்கூட கவனத்தில் கொள்ளாத மொழியாக்கம். ‘கண்ராவி’ என்ற சொல்லின் அர்த்தம் எனக்குத் தெரியாது. அச்சொல்லை அம்மொழியாக்கத்துக்குப் பயன்படுத்தலாமென உறுதியாகச் சொல்வேன்.
வேதங்கள் உண்மையில் என்ன வகையான நூல்கள்? வேதங்களைப்பற்றி இந்து மரபில் மூவாயிரம் வருடங்களாக இருந்து வரும் பெருமிதமும் அவற்றுக்கு சுருதிகள் என்ற வகையில் முக்கியத்துவமும் சரியானவைதானா?
பெரியண்ணன் சந்திரசேகரன் வேதங்களுக்கு அளிக்கப்பட்டுவந்த அதீத முக்கியத்துவம் என்பது அவற்றை அவற்றின் ஆதரவாளர்களல்லாதவர்கள் பயில வாய்ப்பில்லாத நிலையில் அவற்றின் தொன்மை காரணமாக உருவான பிரமையே என்று சொல்கிறார்.
வழக்கமாக இவ்வகை நிலைப்பாடு கொள்பவர்கள் சட்டென்று அடுத்த கட்டத்துக்குச் சென்று எல்லாம் பார்ப்பன சதி என்று சொல்லி விடுவார்கள். அதை இவர் செய்வதில்லை என்பதே இக்கட்டுரையின் சமநிலைக்கு ஆதாரம் என நினைக்கிறேன். வேதங்களைத் தொன்மையான பண்பாட்டுக்கருவூலங்கள், தென்னகப்பண்பாட்டின் கூறுகளையும் உள்ளடக்கியவை என்று அவர் சொல்கிறார்.
வேதங்கள் எவ்வகை நூல்கள்? ஏன் அந்த முக்கியத்துவம் அவற்றுக்கு வந்தது? அந்த முக்கியத்துவத்துக்கான அடிப்படை அவற்றில் உண்டா? சுருக்கமாகச் சொன்னால் என்னுடைய விளக்கமாக இப்படிச் சொல்வேன்.
வேதங்கள் இந்து ஞானமரபின் வைதீகத்தரப்புகளுக்கு சுருதிகள். சுருதி என்ற சொல்லை மூலநூல் canon பொருளில் பயன்படுத்துவதே உகந்தது. ஆனால் செவ்விலக்கியம் classic என்ற பொருளிலும் பயன்படுத்தலாம்.
செவ்விலக்கியம் என்பது அந்தப்பண்பாட்டில் பின்னர் உருவான அனைத்து சிந்தனைகளுக்கும் அழகியலுக்கும் தொடக்கப்புள்ளிகள் கொண்ட ஒரு தொன்மையான இலக்கியத்தொகை. அது அந்தப்பண்பாட்டின் விதைநிலம்.
தமிழில் சங்க இலக்கியங்களை செவ்விலக்கியம் என்று சொல்லலாம். இன்றுவரை தமிழில் உருவான எல்லா இலக்கிய எழுச்சிகளுக்கும் அதில் தொடக்கத்தைக் காணமுடியும். தமிழ்ப்புதுக்கவிதைக்குக்கூட சங்க இலக்கியமே தொடக்கம் என்று பிரமிள் எழுத்யிருக்கிறார்.
செவ்விலக்கியம் என்பது இலக்கிய உச்சம் அல்ல. அதன் பெரும்பகுதி இலக்கியரீதியாக பொருட்படுத்தக்கூடியதாக இருப்பதில்லை. அது தொன்மையான பழங்குடிவாழ்க்கையில் இருந்து இலக்கியம் முளைவிட்டபோது உருவான முதல் வடிவம் அவ்வளவுதான்.
ஆகவே பழங்குடி வாழ்க்கையில் உள்ள எல்லாமே அதில் இலக்கியமாக மாறியிருக்கும்.தண்ணீர் பட்டதும் மண்ணில் உள்ள எல்லா விதைகளும் முளைப்பது போல. அதிலிருந்து தேவையானவற்றை மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகள் வளர்த்தெடுத்துக்கொள்கின்றன.
ஒரு வகையில் செவ்விலக்கியத்தை ஒரு பண்பாட்டின் ஆழ்மனம் என்று சொல்லலாம். அங்கே இருப்பவற்றை அவ்வப்போது அப்பண்பாடு கனவுகளாக க்ண்டுகொண்டிருக்கிறது. மறு ஆக்கம்செய்து நனவாக்கிக்கொண்டிருக்கிறது.
வேதங்கள் அத்தகையவை. வேதங்களைப்பற்றிய ஒரு கட்டுரையில் ஷெர்பாட்ஸ்கி அவற்றை தொல்பிரதிகள் [primitive texts] பண்படாபிரதிகள் [savage texts] என்று சொல்வதை வாசித்து அதிர்ந்ததை நினைவுகூர்கிறேன். ஆனால் பின்னர் அந்த விவரணை மிகச்சரியானது என புரிந்துகொண்டேன். அது ஓர் எதிர்மறைக்குறிப்பல்ல.
பண்பாடு என்னும்போது நாம் உத்தேசிப்பது ஒரு மக்கள்தொகுதி காலப்போக்கில் உருவாக்கிக்கொண்டுள்ள ஞானத்தொகுதியைத்தான். பண்படுதல் என்பது அந்த ஞானத்தொகுதியுடன் கொள்ளும் இசைவு மட்டுமே. அந்த ஞானத்தொகுதி உருவாவதற்கு முந்தைய நூல்களையே தொல்பிரதிகள் பண்படாபிரதிகள் என்கிறோம்.
பண்பாட்டில் பொருந்திய மனம் அனைத்தையும் அது பொருந்தியிருக்கும் பண்பாட்டுச்சூழலின் நீட்சியாகவே அணுகுகிறது. வேறு வழியே இல்லை.ஆனால் பண்படாமனம் பிரபஞ்சத்தின் முடிவின்மையையும் இயற்கையின் பேரழகையும் புத்தம்புதிய கண்களுடன் அணுகுகிறது. புத்தம்புதிய தரிசனங்களை நோக்கிச் செல்கிறது.
உலகமெங்குமுள்ள பழங்குடிக்கற்பனைகளில் உள்ள பிரமிப்பூட்டும் கற்பனைவளத்தின் ரகசியம் இதுவே. செவ்வியல் என்பது இந்த ஆதிக்கற்பனைகளின் நாற்றங்கால். ஆனால் பெரும்பாலான பழங்குடிக்கற்பனைகள் இயற்கையை தன்னுடைய வாழ்க்கைக்கு ஏற்ப விளங்கிக்கொள்வதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. இயற்கையை தன்னை நோக்கி இழுத்துக்கொள்கின்றன. தன்னை இயற்கையையும் பிரபஞ்சத்தையும் நோக்கி விரித்துக்கொள்வதில்லை.
வேதங்கள் அதி உக்கிரமாக தங்களை இயற்கைநோக்கி விரித்துக்கொண்டு பிரபஞ்சதரிசனத்தை சென்றடைபவை. எளியபழங்குடிப்பாடல்களாக ஆரம்பிப்பவை தத்துவத்தளம் நோக்கி விரிந்து என்றுமுள ஞானச்சிக்கல்களை தொட்டு விடுகின்றன. அதுவே அவற்றின் சிறப்பு.
வேதங்களில் முதன்மையானதும் மூத்ததுமான ரிக்வேதத்தையே உதாரணமாகக் கொள்ளலாம். அதன் ஆரம்பப்பாடல்கள் மிக எளிமையான பிரார்த்தனைகள். முதலில் அப்பாடல்களில் இயற்கைச்சக்திகள் நேரடியாகவே அடையாளம் காணப்படுகின்றன, அவற்றை நோக்கி பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன
ஆனால் அடுத்தகட்டத்தில் அந்த இயற்கைச்சக்திகள் குறியீடுகளாக ஆகின்றன. ஒரு பருப்பொருளை குறியீடாக ஆக்கிக்கொள்வதன் பரிணாம மாற்றம் என்பது மிகமிக வியப்புக்குரியது. பருப்பொருள் என்பது திட்டவட்டமாக அறியப்படுவது. குறியீடு என்பது நுண்மையானது, பல அர்த்தங்கள் நோக்கி விரியக்கூடியது
தீ என்ற பருப்பொருளை ரிக்வேதம் அறியும் விதத்தை மட்டுமே வைத்து இதைப்புரிந்துகொள்ளலாம். தீ முதலில் பருப்பொருளான ஒன்றாக அறியப்படுகிறது. பின்பு அதன் குணங்களே தீ என குறிக்கப்படுகின்றன. ஒளியும் வெப்பமும் நிறமும் எல்லாம் ஒன்றா ச் வெஇரு என்பது பற்பல நெருப்புகளாக மாறுகிறது. ஒளியும் வெப்பமும் செம்மையும் எல்லாமான ஒன்று என அறியப்படுகிறது
மெல்ல தீ ஒரு ஆற்றலாக அறியப்படுகிறது. பின்பு ஓர் இயல்பாக விரித்தெடுக்கப்படுகிறது. பிரபஞ்சவெளி முழுக்க நிறைந்துள்ள ஒரு பெருவல்லமை அது. நீரிலும் தளிரிலும் அது இருப்பதாக உணர்கிறார்கள் வேதரிஷிகள். சொல்லிலும் எண்ணங்களிலும் அதை காண ஆரம்பிக்கிறார்கள்.
அறிதலின் இந்தப்பயணம் மெல்ல மண்ணில் அறியப்படும் அனைத்தையும் பிரபஞ்ச அளவுக்குக் கொண்டுசென்று புரிந்துகொள்ள அவர்களை தூண்டுகிறது. மண், நீர், காற்று அனைத்துமே பிரபஞ்சமளாவிய பொருளில் ஆராயபப்டுகின்றன. காலம் தூரம் ஆகியவை அவ்வாறு அணுகப்படுகின்றன. பசி, ருசி, மூச்சு எல்லாமே பிரபஞ்ச அர்த்ததில் விளக்கப்படுகின்றன
இந்த தளத்தில் எழும் பிரபஞ்சவினாக்களை நாம் ரிக்வேதத்தின் முதிர்வுப்பகுதியாகிய பத்தாம் காண்டத்தில் தொடர்ச்சியாகப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இன்றைய அறிவியல் பிரபஞ்சம் நோக்கி கேட்கும் கேள்விகள் எல்லாமே அதில் கேட்கப்பட்டுவிட்டன. இன்று நம்மிடம் உள்ள உருவகங்கள் பெரும்பாலும் அங்கேயே உருவாக்கப்பட்டுவிட்டன.
வேதங்கள் பெரும் தொகைநூல்கள். அவற்றின் மிகப்பழைய கவிதையில் இருந்து மிகப்புதிய கவிதை வரைக்குமான காலமென்பது குறைந்தது இரண்டாயிரம் வருடமாக இருக்கலாம். இந்த பெரும் காலவெளியில் மனிதசிந்தனை அடைந்த வளர்ச்சி, தாவல் அவற்றில் பதிவாகி இருக்கிறது. ஆகவேதான் அது எப்போதும் ஆய்வாளர்களை கவர்கிறது
இந்தியமரபில் பின்னர் உருவான சிந்தனைகளைப் பொறுத்தவரை வேதங்கள் அவற்றின் தொடக்கப்ப்புள்ளிகளின் தொகுப்பு. ஆகவே அவற்றை சுருதிகள் என்றார்கள். சுருதி என்ற முக்கியத்துவம் எப்போதும் அந்நூல்தொகைக்கு இந்திய ஞானமரபில் இருந்துகொண்டே இருந்தது.
சுருதி என்றால் முன்னறிவு என்று பொருள். நேர்க்காட்சி [பிரத்யட்சம்] உய்த்தறிவு [அனுமானம்] ஆகிய இரு அறிதல்முறைகளுக்கு நிகரான முக்கியத்துவமுள்ள ஒன்றுதான் முன்னறிவு [சுருதி] வேதங்களை வைதீக மரபுகள் எல்லாம் சுருதி என்று கொண்டன. வேதமறுப்பு சிந்தனைகள் வேதங்களையும் அவற்றைப்போன்ற எல்லா பழைய சிந்தனைகளையும் ஒட்டுமொத்தமாக சுருதி என்றன.
வேதங்களை அணுகுவதில் உள்ள இருவகை பிழைப்போக்குகள் உள்ளன.வேதங்களில் உள்ள எளிய பாடல்களை மட்டுமே எடுத்துக்காட்டி அவை வெறும்பழங்குடிப்பாடல்கள் மட்டுமே என வாதிடுவது ஒன்று. அவற்றில் உள்ள ஞானக்குறிப்புள்ள வரிகளை மட்டுமே சுட்டிக்காட்டி அவற்றை உலகஞானம் அனைத்தும் அடங்கிய பெட்டகங்களாக அணுகுவது.
வேதங்களை இந்தியஞான மரபின் செவ்வியல் பரப்பாக, இவையனைத்தும் உருவாகி வந்த தொடக்கநிலமாக, இந்திய ஞானமரபின் ஆழ்மனமாக , எடுத்துக்கொள்வதே சரியானது.
பெரியண்ணன் சந்திரசேகரன் வேதங்களில் சாபங்கள், அழிவுக்கான பிரார்த்தனைகள் ஆகியவை இல்லை என புறநாநூறு குறிப்பிடுவதைச் சொல்லி, உண்மையில் வேதங்களில் அவை உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். வேதங்கள் மீதான பெருமதிப்பு காரணமாக அவற்றில் இவையெல்லாம் இருக்காது என்னும் பிரமை அக்காலகட்டத்தில் நிலவியது என்கிறார்.
வேதங்கள் அவற்றை பிறர் வாசிக்க வாய்ப்பில்லாத நிலையில் நெடுங்காலமாக இருந்தமையால் இந்த நம்பிக்கை உருவாகி நீடித்திருக்கலாம் என அவர் ஊகிக்கிறார். வேதங்கள் வெறுமே சடங்குகளுக்கான மந்திரங்களாக மட்டுமே நீடித்தன என்றும் ஆகவே அவை நலமளிக்கும் சொற்கள் என்ற அளவிலேயே எண்ணப்பட்டன என்றும் நினைக்கிறார்.
பெரியண்ணன் சந்திரசேகரன் அவர்கள் ‘மக்கள் தத்தம் காலநிலைகளில் நிலவிய கொள்கைகளை நான்மறைகளின்மேல் ஏற்றிப் பேசியுள்ளனர் என்பதனையும் அந்தப் பிழைகளை இனிமேலாவது தவிர்த்து மெய்யினை அறியவேண்டும்’ என்று குறிப்பிடுகிறார். அது உண்மை.
இரு விளக்கங்களை மட்டும் இதைச்சார்ந்து அளிக்க விரும்புகிறேன். ஒன்று, இன்று நாம் வேதங்கள் என்னும்போது உத்தேசிப்பது ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட மனச்சித்திரத்தைத்தான். கீழை ஞான மரபைப்பற்றி பேசும்போது ஐரோப்பியர் வருகைக்கு முன் வருகைக்குப்பின் என பிரித்துக்கொண்டுதான் ஆராயவேண்டும்.
ஒரு கண்ணாடியில் நம்மைப்பார்த்துக்கொள்வதுபோலத்தான் இது. இந்திய ஞானமரபு அதன் தோற்றுவாயில் இருந்து ஐரோப்பியர் வருகை என்ற புள்ளிவரை வந்து அங்கே நின்றுவிடுகிறது. கண்ணாடிப்பிம்பம் கண்ணாடிக்கும் வெகுதூரத்தில் ஆரம்பித்து கண்ணாடிப்பரப்பு வரை வந்து நின்றுவிடுவது போல. நாம் இப்பால் நின்று அதை பார்க்கிறோம். நம் பார்வை நம்மிடம் தொடங்கி அந்த கண்ணாடிப்பரப்பு வரை சென்று தொடுகிறது, அவ்வளவுதான்.
நம்முடைய ஞானமரபுக்குள் நாம் இல்லை. நாம் அதை வெளியே இருந்து பார்ப்பவர்களகாவே இன்று இருந்துகொண்டிருக்கிறோம். அதற்கு அன்னியமானவர்களாகவே இருக்கிறோம். ஆகவே நம்முடையதாக அல்ல ,நம்மால் பார்க்கப்படுவதாகவே அது உள்ளது. நம்முடைய நேர் எதிர் பிம்பமாக , இடவலம் திரும்பியதாக தெரிகிறது.
இந்திய சிந்தனை மரபுக்கு ஒரு பரிணாமத் தொடர்ச்சி இருந்தது. அது அறிந்து நிலைத்து செயலற்றுவிட்டபின் ஐரோப்பியர் அவர்களின் அறிவுக்கருவிகளைக் கொண்டு அவற்றை கண்டுபிடித்து மீட்டு கட்டி எழுப்பினார்கள். அந்த ஐரோப்பிய கட்டுமானத்தையே நாம் இன்று இந்தியசிந்தனை என அறிகிறோம்.
ஆகவே நம்முடைய பண்டை நூல்களை புரிந்துகொள்ள நம்முடைய இன்றைய நோக்கில் அவை எப்படி பொருள் கொள்கின்றன என்பது எப்போதுமே உதவாது. அவை அன்று எப்படி அணுகப்பட்டன என்பதை பல்வேரு ஊகங்கள் மூலம் ஆராயவேண்டியிருக்கிறது
நான்கு வேதங்கள் என நமக்கு இன்று கிடைக்கும் நூல்கள் ஐரோப்பியரால் அச்சுக்குக் கொண்டுவரப்பட்டவை. அவர்களுக்கு நூல்பகுப்புக்கு இருந்துவந்த முறைமைப்படி அவர்கள் அவற்றை பகுத்து அச்சாக்கினார்கள். வேதங்களாக இன்று நாம் நினைப்பவை சம்ஹிதைகளை மட்டுமே. சென்றகாலத்தில் வேதங்கள் இப்படி தனியான நான்கு நூல்களாக இருந்ததில்லை.
வேதம் என்பது ஒரு ஒட்டுமொத்த ஞானத்தொகையாகவே சென்றகாலகட்டத்தில் கருதப்பட்டது. மரபான பார்வையின்படி வேதம் என்பது நான்கு பகுதிகளால் ஆனது. சம்ஹிதை, ஆரய்ணயகம், பிராம்மணம், உபநிடதம். இவற்றை பிரித்துப்பார்க்க்கும் வழக்கம் இருக்கவில்லை.
சம்ஹிதைகளை மட்டுமே வேதங்களாகக் கொள்ளவேண்டும் என வாதிட்டு அதை நிறுவியவர் ஆரிய சமாஜத்தின் தலைவரான சுவாமி தயானந்த சரஸ்வதிதான். அது ஐரோப்பிய அரிதல்முறையை அடியொற்றிய ஒரு நோக்கு. இந்திய ஞானமரபில் ஐரோப்பிய பாணியிலான ஒரு மூலநூல் வாதத்தை உருவாக்க முயன்றவர் அவர்.
எல்லா வேதங்களுக்கு கிருஷ்ண விபாகமும் சுக்ல விபாகமும் உண்டு. அதவாது இருண்ட பகுதி , வெண்மையான பகுதி. ரிக்வேதத்துக்கு நான்கு கிருஷ்ண சுக்ல விபாகங்க இருந்தன. யஜூர்வேதத்துக்கு எட்டு. சாமவேதத்துக்கு பத்து . அதர்வ வேதத்துக்கு பத்து. இப்போது யஜுர்வேதத்தின் விபாகங்கள் மட்டுமே அறியப்படுகின்றன.
வேதங்களுக்கு விளக்கங்கள் வேத சாகைகள் எனப்பட்டன. வேதங்களின் கிளைகள். ரிக்வேதத்துக்கு 21 கிளைகள். யஜூர்வேதத்துக்கு நூறும் சாமவேதத்த்க்கு ஆயிரமும் அதர்வத்துக்கு ஒன்பதும் கிளைகள் இருந்தன என்று சொல்லப்படுகிறது.
இதைத்தவிர ஒவ்வொரு வேதத்துக்கும் வேதாங்கங்களும் உபவேதங்களும் உள்ளன. வேத ஞானம் என்பது வேதவேதாங்கஞானம் என்றே சொல்லப்பட்டது. ரிக்வேதத்துக்கு ஆயுர்வேதம் [மருத்துவம்] உபவேதமாகும்ம். யஜூர்வேதத்துக்கு தனுர்வேதம் [ஆயுதஞானம்]. சாமவேதத்துக்கு கந்தர்வ வேதம் [இசைஞானம்]. அதர்வவேதத்துக்கு ஸ்தாபத்யவேதம்[ சிற்பஞானம்].
ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல வேதங்களின் சம்ஹிதைகள் என்பவை ஒரு தொடடக்கம் மட்டுமே. அவற்றில் இருந்து வெவ்வேறு கோணங்களில் விரித்தெடுக்கப்பட்டும் விளக்கப்பட்டும் வளர்ந்துருவானதே வேதஞானம் என்பது.
வேதங்களை மனு தர்ம நோக்கிலும் பிருஹஸ்பதி அர்த்த நோக்கிலும் நந்தி காமநோக்கிலும் பாதராயணன் மோட்சநோக்கிலும் ஜைமினி சொர்க்கநோக்கிலும் விளக்கினார் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது பலகோணங்களில் விளக்கப்பட்டு வேதத்தொகுதி ஒரு ஞானவழியாக ஆக்கப்பட்டிருக்கிறது
வேதம் எனப்படும் இந்த ஞானத்தொகுதிக்குள்ளேயே வேதங்களைப்பற்றிய விமர்சனங்களும் விலக்கல்களும் ஏற்புகளும் உள்ளன. சாந்தோக்ய உபநிதடம் சாமவேதத்தின் பிராமணமான சாந்தோக்யபிராமணத்தைச் சேர்ந்தது. அது வேதங்களின் சடங்குமரபை மிகக்கடுமையாக விமர்சனம் செய்கிறது. பல உபநிடதங்கள் அதர்வ வேதத்தை முழுமையாக நிராகரிக்கின்றன.
அதாவது வேதம் என்ற சொல்லால் சுட்டப்பட்டது நான்கு சம்ஹிதைகள் மட்டுமல்ல. அந்த சம்ஹிதைகளில் தொடங்கி பல்வேறு நூல்கள் விளக்கங்கள் விவாதங்கள் வழியாக வளர்ந்து திரண்டு வந்த ஒரு ஞானதரிசனத்தையே. வேதங்களை வெறுமே மனனம் செய்து புரோகிதத்துக்கு மட்டும் பயன்படுத்தும் போக்கு பிற்காலத்தில் வந்தது.
எனவே புறநாநூறு வேதங்களைப்பற்றிப் பேசும் காலகட்டத்தில் வேதம் என்ற சொல் நான்கு வேதசம்ஹிதைகளை மட்டும் சுட்டியிருக்காது. இந்த ஒட்டுமொத்தம் ஞானப்பரப்பையும், அதன் சாராம்சத்தையுமே சுட்டியிருக்கும்.
அதாவது புறநாநூறு வேதங்களை ‘தெரியாமல்’ அப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. வேதங்களை நாம் இன்று பார்க்கும் பார்வையில் அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். வேதத்தை ‘தெரியாமல்’ இருப்பது நாமே ஒழிய அவர்கள் அல்ல. நாம் அவற்றிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறோம், காலத்தால்.
வேதக்கல்வி பிராமணரல்லாதவர்களுக்கு மறுக்கப்பட்டது என்ற வாததை நான் ஏற்கவில்லை. அது உண்மையில் ஐரோப்பியரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பிதம். இங்கிருந்த மரபுகள் பெரும்பாலும் அழிந்து விட்ட, தொடர்பிழந்து நின்றுவிட்ட காலகட்டத்தில் ஐரோப்பியர் இங்கே வந்தார்கள். அவர்கள் வேதங்களை பைபிள் போன்று இந்துமதத்துக்கான மையநூலாக கருதினார்கள். அவை பைபிள் போல அனைவருக்கும் ஏன் கற்பிக்கப்படவில்லை என்று வியந்தார்கள். அவ்வாறு கற்பிக்கப்படாமல் பிராமணர் தடுப்பதாக ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொண்டார்கள்.
உண்மையில் பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப்பின் வேதஞானம் ஒரு பொதுவான அறிவுவழியாக இல்லாமலாகிவிட்டிருந்தது. சடங்குக்கான மந்திரமாகவே வேதங்கள் எஞ்சின.மந்திரம் என்ற சொல்லுக்கே ரகசியமானது என்றுதான் பொருள். தமிழில் மறை. ஆகவே அவை ரகசியமான சொற்களாக நீடித்தன. ஆனால் அப்போதும்கூட அவை பிராமணார்களுக்கு மட்டுமானவையாக இருக்கவில்லை.
வேதத்தை வேள்விச் சடங்குகளுக்கான மந்திரங்களாக கற்பதற்கு பிராமணர்களுக்கு மட்டுமே அமைப்புகள் இருந்தன, அவர்கள் மட்டுமே அப்படி கற்றார்கள் அவ்வளவுதான். பிறர் அப்படி கற்பது வேள்விகளின் மறைத்தன்மையை இல்லாமலாக்கிவிடும் என்ற நம்பிக்கை இருந்ததனால் பிறர் அவற்றை கற்பது தடைசெய்யப்பட்டது. ஆனால் மற்ற துறையைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய துறைசார்ந்த தேவைக்கேற்ப அவர்களுக்கான வேதங்களை கற்றிருக்கிறார்கள்.
உதாரணமாக ஆயுர்வேதம் பயில ரிக்வேத மந்திரங்கள் சிலவற்றையேனும் கற்றேயாகவேண்டும். மருந்துகள் அரைக்கும்போது சொல்வதற்கான மந்திரங்கள் பல பதினேழாம் நூற்றாண்டில்கூட இருந்திருக்கின்றன. அவற்றை கற்பிக்க தனி குருமரபும் ஆசாரங்களும் இருந்தன. அவற்றை சூத்திரர்களும் கற்றிருக்கிறார்கள். சிற்ப சாஸ்திரத்தை பொறுத்தவரை சமீபத்தில் கூட அவர்களின் மரபான கல்வியில் அதர்வ வேதத்தின் சில பகுதிகள் கற்பிக்கப்பட்டன.
கேரளத்தில் ஆசாரிகள் சென்ற தலைமுறையில்கூட அதர்வ வேதத்தின் சில மந்திரங்களை தங்கள் சாதிசார்ந்த ஆசாரங்களில் இருந்து கற்றுக்கொண்டு கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள். இங்கே தச்சு கழித்தல் என்ற சடங்கு இருந்தது. காட்டில் முறித்த மரத்தைக்கொண்டு வீடுகட்டும்போது அந்தக்காட்டுமரத்தில் வாழ்ந்த அமானுட சக்திகள் அதிருப்தி அடைகின்றன எனறு நம்பப்பட்டது. அந்த மூர்த்திகளை அகற்றுவதற்கான இச்சடங்கு நள்ளிரவில் மிக ரகசியமாகச் செய்யப்படும். உயிர்ப்பலி உண்டு. சென்றகாலங்களில் நரபலியும்.
அச்சடங்கு ஒன்றை நானே கண்டிருக்கிறேன். முழுக்க முழுக்க அதர்வ வேத முறைப்படிச் செய்யப்பட்ட அச்சடங்கு கொஞ்சம் கொடூரமானது. அதனுடன் மூத்தாசாரியால் ஓதப்பட்ட மந்திரங்கள் அதர்வவேதத்தைச் சேர்ந்தவை.
இன்னொரு வேடிக்கை உண்டு அந்த அதர்வ வேதச் சடங்கை ஒரு பிராமணன் தவறிப்போய் கேட்டுவிட்டால் அவனுக்கு தீட்டும் விலக்கும் வந்துவிடும். கேரளத்தில் உள்ள வலியதளி என்ற கோயிலைப்பற்றிய கதை உதாரணம். அங்கே நதிக்கரையில் இருந்த இரு சூலாயுதங்களை இரு நம்பூதிரி சிறுவர்கள் பூசை செய்து வந்தார்கள். இளையவன் அப்பகுதியில் உள்ள ஆசாரிகள் செய்யும் ஒரு அதர்வவேதச் சடங்கை ஒருமுறை கவனித்து மந்திரத்தை மனனம் செய்துகொண்டான்
ஒருநாள் பூசை செய்யும்போது ஒரு சூலம் பயங்கரமாக ஆடியது. எந்த மந்திரத்தாலும் ஆட்டத்தை நிறுத்தமுடியவில்லை. இளையவன் ஒரு தேங்காயை எடுத்து அதர்வ வேத மந்திரம் சொல்லி தாந்த்ரீக விதிப்படி அதை உயிர்ப்பலியாக உருவகித்து அந்த சூலத்தில் அடித்து பிளந்தான்.ஆட்டம் நின்றது
ஆனால் அவனுக்கு எப்படி அதர்வம் தெரியும் என்று நம்பூதிரி சபை விசாரித்து கண்டுபிடித்தது. அந்த இளையநம்பூதிரியும் அவன் வம்சத்தில் வருபவர்களும் நிரந்தரமாக சாதிவிலக்கு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒரு உபசாதியாக நீடித்தார்கள். கேரளத்தின் உயிர்ப்பலி இருந்த கோயில்களில் தாந்த்ரீக பூசைகள் செய்பவர்கள் அவர்களே. அவர்கள் இளையது என அழைக்கப்பட்டார்கள்.
இந்தியாவில் வேதங்கள் உட்பட எந்த ஞானமும் துறவிகளுக்கு விலக்கப்படவில்லை. ரிஷிமூலம் பார்க்கப்படலாகாது என்ற நெறி என்றும் இருந்தது. தீண்டப்படாத சாதியைச்சேந்த நாராயண குரு துறவு வாழ்க்கையில் வேதவேதாங்கங்களை ஐயம்திரிபறக் கற்றார் என்பது நம் முன் உள்ள வரலாறு.
வேதம் பிற வர்ணத்தவருக்கு விலக்கப்பட்டது என்றெல்லாம் பொத்தாம்பொதுவாக ஐரோப்பியர் சொல்லி நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை விரிவாக ஆராய்ந்து மறுபரிசீலனை செய்யவேண்டிய காலம் இது. இந்தியாவெங்கும் உள்ள ஆசாரங்கள் சடங்குகளை ஆரய்ந்து நம் வரலாற்றை நாமே எழுதிக்கொள்ளமுடியும். அப்போது பதினெட்டாம் நூற்றாண்டில் அன்றைய குறைவான தகவல்களுடன் ஐரோப்ப்பியர் உருவாக்கிக்கொண்ட பல முன்முடிவுகள் உடையும்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
நித்தியும் நானும்
பொதுவாக என்னைப்பற்றிய வசைகளை நான் புறக்கணிப்பதே வழக்கம். ஆனால் இந்த இணைப்பை எனக்கு அனுப்பிய நண்பர் இந்தக் கட்டுரையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று தனக்குப்புரியவில்லை என்றும் நான் விளக்கமுடியுமா என்றும் கேட்டிருந்தார். உண்மையில் எனக்கும் புரியவில்லை.
நான் நித்யானந்தாவை ஆதரிக்கவேண்டும் என்கிறார்களா? இல்லை காஞ்சி சின்ன சங்கராச்சாரியாரை ஆதரிக்கவேண்டும் என்கிறார்களா? இல்லை பெரிய சங்கராச்சாரியாரையும் இதே வரிசையில் சேர்த்தால் இவர்களுக்கு சௌகரியமாக இருக்குமா?
தொடர்புடைய பதிவுகள்
ரவிசங்கர்,ஜக்கி-கடிதங்கள்
May 18, 2012
நாராயணகுருகுலமும் ’வசவு’ இணையதளமும்
வினவு ஆணித்தரமாக வினவியிருக்கிறது. நல்ல விஷயம். இவர்கள் வினவுவதனால்தான் நாட்டில் இன்னும் கொஞ்சம்பேர் நல்ல சம்பளத்தில் அரசூழியராக வேலைபார்த்து லோன் எடுத்து வீடுகட்டி கூடவே புரட்சிப்பாவலாவுடன் வாழமுடிகிறது.
நித்ய சைதய யதியின் ஊட்டி குருகுலம் இருக்குமிடம் ஊட்டியில் அல்ல, மஞ்சணகெரே என்ற கிராமத்தில். அந்நாளில் இது சாலைவசதி இல்லாத ஒரு காட்டுப்பகுதி. அன்று அந்நிலத்துக்கு விலை என ஏதும் இல்லை.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கொடுமையான பஞ்சங்களால் தமிழகக் கிராமங்கள் சூறையாடப்பட்டன. அதிலிருந்து தப்ப எளியமக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து சென்றனர். பல லட்சம்பேர் இலங்கை ,மலேசியா உள்ளிட்ட அன்னியநாடுகளுக்குச் சென்றனர்.
நம்முடைய மலைகளில் அந்தக்காலகட்டத்தில்தான் மக்கள்குடியேற்றம் நிகழ்ந்தது. மலைகளை வெட்டி வெள்ளையர் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினார்கள். அங்கே வேலை செய்ய வந்த மக்கள் மலைகளில் காட்டை அழித்துக் குடிசை போட்டார்கள். ஊட்டியில் மக்கள் குடியேற ஆரம்பித்த காலம் அது.
உள்காட்டுப்பகுதியாக இருந்த மஞ்சணகெரேயில் 1890 வாக்கில்தான் மக்கள் குடிசை போட ஆரம்பித்தனர். அவர்கள் பெரும்பாலும் தலித்துக்கள். இப்போதும் தலித் மக்களின் குடிசைகள் சூழ்ந்த பகுதியாகவே அது உள்ளது, சுற்றுலா மையமாக அல்ல.
நாராயண குரு தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சாதியான ஈழவர்களிடையே இருந்து உருவாகி வந்தவர். ஆகவே அவரது செயல்திட்டத்தில் எப்போதுமே அடித்தளச்சாதி மக்களின் கல்வி மற்றும் மருத்துவச்சேவைகள் முதலிடம் வகித்தன. நாராயணகுருவின் எல்லா குருகுலங்களும் தலித் மக்களின் குடிசைப்பகுதிகளியே அமைந்துள்ளன.
இன்றேகூட ஊட்டியின் இப்பகுதியில் வாழ்வது கடினம். அன்று கடுங்குளிரும் மழையும் கொண்ட இங்கே குடிசைகளில் எப்படி வாழ்ந்தார்கள் என்பது ஆச்சரியமான விஷயமே. இங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக செத்துக்கொண்டிருந்தனர். காலரா ,வருடம் தோறும் உண்டு. எப்போதும் மலேரியா மரணக்குழி என்றே இப்பகுதி அழைக்கப்பட்டது.
நாராயணகுருவின் கவனத்துக்கு இந்த இடம் கொண்டுவரப்பட்டதற்கு ஒரு பின்னணி உண்டு. யூகலிப்டஸ் மரம் அக்காலகட்டத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. மிக உயரமான அந்த மரத்தில் ஏறி அதன் தழைகளை வெட்டி எண்ணை எடுக்க மரமேறும் தொழிலாளர் தேவைப்பட்டனர். அவ்வாறாகக் கேரளத்திலிருந்து ஈழவர்கள் இங்கே கொண்டுவரப்பட்டனர். கணிசமானவர்கள் கொத்தடிமைகளாகவே வந்தார்கள்
அவர்களில் சிலர் நாராயண குருவிடம் இந்த மரணக்குழியைப்பற்றிச் சொன்னார்கள். நாராயணகுருவால் செய்யமுடிந்தது அவரது மாணவரான சுவாமி போதானந்தரை அனுப்புவது மட்டுமே. போதானந்தர் எந்த வசதியும் இல்லாமல் தனிமனிதனாக வந்து அந்தசேரியிலேயெ குடிசை கட்டி வாழ்ந்து அங்கிருந்த தலித் மக்களுக்கு மருத்துவச்சேவை செய்தார். ஆனால் நோயுற்றமையால் அதைத் தொடர முடியவில்லை. அவர் விரைவிலேயே இறந்தார்.
அங்கே சேவையைத் தொடரும்படி நடராஜ குருவை நாராயணகுரு அனுப்பி வைத்தார். 1922 இல் அங்கே வந்த நடராஜகுரு அங்கே காடருகே ஒரு குடில் கட்டி சேவையை தொடர்ந்தார். அவர் மீது ஈடுபாடு கொண்ட ஒரு தமிழ் வணிகர் இன்று குருகுலமிருக்கும் இடத்தை இலவசமாகக் கொடுத்தார். ஏழு ஏக்கர் காடு அது. அங்கே டீ இலை பதப்படுத்தும் ஒரு கொட்டகை மட்டும் இருந்தது.
அங்கே நடராஜகுரு தன்னுடைய கைகளால் மண் குழைத்து வைத்து ஒரு குடிசை கட்டினார். நடராஜகுருவுக்கு அங்கே கிடைத்த நண்பரான ஆதிவாசி ஒருவரும் உதவினார். [அந்த ஆதிவாசியும் நடராஜகுருவும் மிகமுதிய வயதுவரை நட்புடன் இருந்தனர். இரு கிழவர்களும் சிரித்தபடி மல்யுத்தம்செய்வது போன்ற ஒரு அழகிய புகைப்படம் உண்டு]
பயிற்சியில்லாமல் கட்டப்பட்ட ஒழுங்கில்லாத மண்சுவர்களும் காட்டுமரத்தாலான கூரையும் கொண்ட அந்தக்குடிலில்தான் கடைசிவரை நடராஜகுரு வாழ்ந்தார். அது சென்றவருடம் வரை சமையலறையாகப் பயன்பாட்டில் இருந்தது. இப்போதுதான் கூரையும் தரையும் மாற்றப்பட்டுள்ளன.
1923ல் அந்தக்குடிலில் நாராயணகுருகுலத்தை முறையாக நடராஜகுரு ஆரம்பித்தார். நாராயணகுரு வந்து குருகுலத்தைத் தொடங்கி வைத்தார். நான்கு வருடம் அங்கே நடராஜகுரு சேவை செய்தார். காலரா மற்றும் மலேரியாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான அனாதைவிடுதி ஒன்றும் இலவசப்பள்ளியும் மருத்துவமனையும் அங்கே நடத்தப்பட்டன.
நடராஜகுருவின் அப்பா டாக்டர் பல்பு மைசூர் சமஸ்தானத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர். கேரளத்தில் அடித்தள மக்களின் எழுச்சிக்குக் காரணமாக அமைந்த தலைவர் அவர். தன் செல்வத்தை முழுக்க அக்காலத்தில் அடித்தள மக்கள் வாழ்ந்த பகுதிகளைத் தாக்கிய கொள்ளைநோய்களை எதிர்கொள்ள செலவிட்டவர். நாராயணகுருவின் இயக்கத்தைக் கட்டி எழுப்பியவர் அவரே
நடராஜகுரு தன் அப்பா தன் பங்குக்கெனத் தந்த சிறு பணத்தைச் செலவிட்டுத்தான் குருகுலத்தை அமைத்தார். ஆனால் நான்குவருடங்களுக்குள் 1927இல் குருகுலத்தை மூடவேண்டியிருந்தது. நிர்வாகப்பொறுப்பு அளிக்கப்பட்டவர்கள் நிதியை மோசடிசெய்து குருகுலம் நடக்கமுடியாதபடி செய்ததே காரணம்.
ஆறுமாத காலம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஊட்டி சந்திப்புகளில் நின்று மக்களிடம் பிச்சை எடுத்து குருகுலத்தை நடத்தினார் நடராஜ குரு. தொடர்ந்து நடத்தமுடியாத காரணத்தால் குருகுலம் நின்றது. குழந்தைகள் வற்கலைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள்.
அதன்பின் அந்நிலம் அங்கேயே கிடந்தது. நடராஜகுரு வற்கலைக்குச் சென்று அங்கே ஸ்ரீநாராயண கல்விச்சாலை முதல்வராகப் பணியாற்றினார். ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபையின் கல்விநிலையங்களை உருவாக்குவதில் பெரும்பணியாற்றினார்.அவை கேரள அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் புரட்சிகரமாக மாற்றியமைத்தவை.
அதன்பின் நடராஜகுரு நாராயணகுருவின் ஆணைப்படி ஐரோப்பா சென்றார். ஜெனிவா சென்று ஆசிரியராகப் பணியாற்றினார். சார்போனில் கல்வியியல் தத்துவத்தில் தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸனின் கீழ் முனைவர் பட்டத்துக்காக ஆய்வுசெய்தார்.
1933இல் நடராஜ குரு இந்தியா திரும்பினார். 1928இல் நாராயணகுரு மறைந்தபின் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா மெல்ல மெல்ல ஈழவர்களின் ஒரு சாதியமைப்பாக மாற ஆரம்பித்திருந்தது. கல்வியும் பொருளியல் ஆதிக்கமும் பெற்ற ஈழவர்கள் சாதியாகத் திரண்டு அரசியலதிகாரம் நோக்கிச் செல்ல விரும்பினார்கள்.தலித் மக்களுக்கான சேவைகளை ஈழவத் தலைவர்கள் ஆதரிக்கவில்லை.
அதை எதிர்த்து அவ்வமைப்பில் இருந்து விலகிய நடராஜ குரு இந்தியா முழுக்க இரண்டாண்டுக்காலம் அலைந்து திரிந்தார். 1935இல் அவர் மீண்டும் மஞ்சணகெரே வந்தார். அந்த நிலம் அங்கேயே கைவிடப்பட்டுக் கிடந்தது. அங்கே அந்தக் குடிலை மீண்டும் தன் கைகளால் கட்டி எழுப்பினார். பதினைந்தாண்டுக்காலம் அங்கே தனியாக வாழ்ந்தார்.
இக்காலகட்டத்தில் நடராஜ குருவுடன் சார்போனின் சகமாணவராக விளங்கிய ஜான் ஸ்பியர்ஸ் வந்து அவருடன் சேர்ந்துகொண்டார். இருவரும் சேர்ந்து வேல்யூஸ் என்ற மாத இதழை நடத்தினர். ஜாஸ் ஸ்பியர்ஸின் எழுத்துப்பணியால் வந்த வருமானத்தால்தான் பெங்களூர் சோமனஹள்ளி குருகுலம் ஆரம்பிக்கப்பட்டது.
நடராஜகுரு முழுக்கமுழுக்க பசுமாடு மேய்த்து அந்த வருமானத்தால்தான் அப்போது வாழ்ந்து வந்தார். கணிசமான நாட்கள் பட்டினியும் இருந்தது. காட்டுக்குள் இருந்து விறகு கொண்டு வரவேண்டும். முந்நூறடி ஆழத்தில் இருந்து குடிநீர் கொண்டு வரவேண்டும்.
சென்னை விவேகானந்தா கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராக இருந்த நித்யா அதைத் துறந்து நடராஜகுருவிடம் வந்து சேர்ந்தார். இருவரும் சேர்ந்து தன்னந்தனியாக அந்தக் குடிலில் தங்கி மாடு மேய்த்து வாழ்ந்தார்கள். அப்பகுதியில் கல்வி மருத்துவச்சேவைகள் செய்தார்கள். பயணங்களில் ஈடுபட்டார்கள். நடராஜகுருவின் பிற மாணவர்கள் அதன்பின்னர் வந்தவர்கள்தான்.
1969 இல் நித்ய சைதன்யயதி ஆஸ்திரேலியாவுக்கும் பின்னர் அமெரிக்காவுக்கும் சென்றார். அங்கே பல்வேறு பல்கலைகளில் ஆசிரியராகப் பணியாற்றியபின் இந்தியா திரும்பினார். 1973இல் நடராஜ குருவின் மறைவுக்குப்பின் ஊட்டி குருகுலத்திலேயே தங்கியிருந்தார்.
ஊட்டியின் இன்றைய குருகுலம் நித்ய சைதன்ய யதியால் எண்பதுகளில் விரிவாக்கிக் கட்டப்பட்டது.பெரும்பாலும் அவரது நூல்களின் வருமானத்தால். முதலில் மையக்கட்டிடம். அதன்பின்னர் பத்தாண்டுகள் கழித்து வருகையாளர் தங்கும் அறைகள். கடைசியில் 1997 ல்தான் நூலகக் கட்டிடம் கட்டப்பட்டது
இக்கட்டிடங்கள் எவையுமே ஆடம்பரமானவை அல்ல. எல்லாமே உயரமற்ற தகரக்கொட்டகைகள்தான்.மிகமிகக் குறைவான செலவில் ஆசிரமவாசிகளின் உழைப்பில் உருவானவை. ஆகவே ஊட்டி கூட்டத்துக்கு வருபவர்களிடம் வசதிகளை எதிர்பார்க்கவேண்டாம் என்று சொல்லி அழைக்கிறோம்.
இக்கட்டிடங்களைக் கட்டுவதில் ஐரோப்பியர் நேரடியாக அளித்த உடலுழைப்பே பெரும்பங்கு. நித்யாவின் மாணவர்களும் நண்பர்களுமாக எப்போதும் ஏராளமான ஐரோப்பியர் அங்கே இருப்பதுண்டு. அவர்களில் பலர் மிகக்கடுமையான உழைப்பாளிகள். அவர்களே அந்த நிலத்தைப் பண்படுத்தி விளைநிலமாக்கி விவசாயம்செய்தவர்கள்.
ஐரோப்பியர்கள் தச்சு , கொத்துவேலை உட்பட எல்லாவற்றையுமே செய்வதை கவனித்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் தத்துவ ஆய்வாளர்கள், உளவியல் ஆய்வாளர்கள். நான்கு பேர் ஒரு மாதத்தில் எந்த வெளி உதவியும் இல்லாமல் ஒரு கட்டிடத்தைக் கட்டி முடித்ததை நான் கண்டிருக்கிறேன். இன்றைய குருகுலம் அப்படி உருவானதே.
எப்போதுமே நாராயணகுருகுலம் என்பது பொருள்வலிமை கொண்ட அமைப்பு அல்ல. இன்றும் அது அன்றன்றைய வருமானத்தில் தள்ளாடி நடக்கும் அமைப்புதான். அந்தந்த இடத்திலுள்ள துறவிகள் அவர்களே தங்கள் நிதியாதாரத்தை சம்பாதித்துக்கொள்ளவேண்டுமென்பதே விதி.
நித்யா 1999இல் சமாதியானபோது எந்த நிதியும் மிச்சம் வைக்காமல்தான் சென்றார். நிரந்தர நிதி வழியாக நிலையான அமைப்பை உருவாக்கக் கூடாது என்பது அவரது கொள்கை. ஓர் அமைப்பு மக்களால் நடத்தப்படவேண்டும், மக்களுக்குத் தேவையில்லாமலாகும்போது இயல்பாக அழியவேண்டும் என்பது அவரது கூற்று.
இன்று ஊட்டி குருகுலத்தில் மிகச்சிலரே நிரந்தரமாக உள்ளனர். சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] ஒரு அலோபதி மருத்துவர், ஆயுர்வேத ஆய்வாளர். அவரது சொந்தப் பணத்தாலும் எங்களைப்போன்றவர்களின் சிறு நன்கொடைகளாலும்தான் குருகுலம் பராமரிக்கப்படுகிறது. நித்ய சைதன்ய யதி ஆங்கிலத்திலும் மலையாளத்திலுமாக முந்நூறு நூல்களை எழுதியவர். அந்நூல்களின் உரிமைத்தொகை குருகுலத்தின் பொதுவருமானமாக உள்ளது.
இதெல்லாம் நானே இந்தத் தளத்தில் பலமுறை சொன்னவை. சாதாரணமாக விக்கிப்பீடியாவை பார்த்தாலே தெரிந்துகொள்ளக்கூடியவை. ஆனால் வசவு தளத்துக்கு அதில் எல்லாம் என்ன அக்கறை? ஆளைப்பார்த்தா வசைபாட முடியும், தொழில் என்று வந்துவிட்டால் செய்யவேண்டியதுதானே?
தொடர்புடைய பதிவுகள்
ஞானியர், இரு கேள்விகள்
அருகர்களின் பாதை 28 — சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்
நித்ய சைதன்ய யதி- காணொளி
ஆன்மீகம் தேவையா?
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-2
புரட்சிகரம் எனும் ரகசிய ஊற்று — ‘அன்னை’ மாக்ஸிம் கார்க்கி
கல்வாழை [ நாத்திகவாதம் தமிழகத்திலும் கேரளத்திலும்] 2
கீழ்ப்படிதல்,முரண்படுதல் பற்றி…
இயந்திரமும் இயற்கையும்
அந்த தாடியும் காவியும்…
விவாதங்களின் எல்லை…
கலைஞர்களை வழிபடலாமா?
இரண்டு காதலியர்
ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்
நித்ய சைதன்ய யதி
தன்னை விலக்கி அறியும் கலை
May 17, 2012
காந்தியும் மடாதிபதிகளும்
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு
காந்தியின் சனாதனம் – 6 கட்டுரையில் நீங்கள் எழுதிய கீழ்க்கண்ட வரிகளைப் படித்தேன்.
பரமஹம்ஸ யோகானந்தா எழுதிய “துறவியின் சுயசரிதம்” என்ற நூலில் மகாத்மா காந்தியை சந்தித்தது பற்றி ஒரு முழு அத்தியாயமே எழுதியிருக்கிறார். அத்தியாயம் 44. இதில் யோகானந்தா ஒரிரு நாட்கள் காந்தியடிகளின் வார்தா ஆசிரமத்தில் தங்கியிருந்து நடத்திய உரையாடல்கள் பற்றி விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. யோகானந்தா ராஞ்சியில் நடத்திக்கொண்டிருந்த பள்ளிக்கு மகாத்மா விஜயம் செய்தாரென்றும் இந்நூல் சொல்லுகிறது.
காந்தியடிகளும் பரமஹம்ஸ யோகானந்தாவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இத்துடன் அனுப்பி இருக்கிறேன்.
அன்புடன்
கணேஷ்
அன்புள்ள கணேஷ்
காந்தி அவரது சுயசரிதையிலேயே சில துறவிகளை, யோகிகளைச் சந்தித்திருப்பதாகச் சொல்கிறார். அவரது கடைசிக்காலத்தில் சில யோகவழிகளை கற்பித்த யோகிகளைப்பற்றி நான் எழுதியிருக்கிறேன். அவருக்கு ஆன்மசோதனைகளில் எப்போதும் ஆர்வம் இருந்தது
நான் உத்தேசித்தது காந்தி எந்த மடாதிபதியையும், மத அதிகாரம் கொண்ட துறவியையும் சந்தித்ததில்லை என்றுதான்.
இந்த தகவல் நானறியாதது. நன்றி
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் எழுதியதை வாசித்தேன்.
காந்தி எந்த மடாதிபதியையும் சந்தித்ததில்லை, ஆசி வாங்கியதில்லை. அவர் சந்தித்த இந்துத் துறவியர் இருவர். சகோதரி நிவேதிதா மற்றும் நாராயணகுரு. அவர் மதித்த துறவி நாராயணகுரு மட்டுமே.
…….
இந்த விசயத்தில் தகவல் முழுமைக்காக: ஸ்ரீ அரவிந்தர் மடாதிபதி இல்லை என்றாலும் ஆன்மீகத் தலைவர் என்று கொள்ளலாம். கீழே பார்க்கவும்.
அன்புடன்,
சிவா.
………………..
காந்திஜி ஸ்ரீ. அரபிந்தோவை சந்திக்க பலமுறை முயன்றும் அதற்கு ஸ்ரீ அரவிந்தர் அனுமதி அளிக்க வில்லை. அவர் சில காலம் அரசியல் சம்பந்தமான யாரையும் புதிதாகப் பார்ப்பது இல்லை என்று ஆன்மிகக் காரணங்களால் முடிவு எடுத்திருந்தார்.
சந்திப்பிற்கு முயன்று மகாத்மா ஸ்ரீ. அரவிந்தருக்கு எழுதிய கடிதமும், அதற்கு ஸ்ரீ. அரவிந்தர் அளித்த பதிலும்.
http://overmanfoundation.wordpress.com/2011/03/10/sri-aurobindo%E2%80%99s-letter-to-mahatma-gandhi/
Not many people are aware of the fact Mahatma Gandhi had visited Pondicherry on 17 February 1934. Ever since his return to India from South Africa in 1915, he was desirous to meet Sri Aurobindo. For the purpose of arranging a meeting with Sri Aurobindo, the Mahatma had written to Govindbhai Patel, a follower of Sri Aurobindo who was initially associated with him. But when the permission for an interview was refused by Sri Aurobindo, the Mahatma wrote directly to Sri Aurobindo on 2 January 1934.
Today we take the opportunity of sharing with you a portion of the letter Mahatma Gandhi had written to Sri Aurobindo and Sri Aurobindo’s reply to him dated 7 January 1934.
With warm regards,
Anurag Banerjee
Chairman,
Overman Foundation.
*
Mahatma Gandhi’s letter to Sri Aurobindo
…Perhaps you know that ever since my return to India I have been anxious to meet you face to face. Not being able to do that, I sent my son to you. Now that it is almost certain that I am to be in Pondicherry, will you spare me a few minutes & see me! I know how reluctant you are to see anybody. But if you are under no positive vow of abstinence, I hope you will give me a few minutes of your time…
Sri Aurobindo’s reply to Mahatma Gandhi
Dear Mahatmaji,
It is true that I have made no vow, for I never make one, but my retirement is not less binding on me so long as it—and the reason for it—lasts. I think you will understand that it is not a personal or mental choice but something impersonal from a deeper source for the inner necessity of work and sadhana. It prevents me from receiving you but I cannot do otherwise than keep to the rule I have adhered to for some years past.
Sri Aurobindo
அன்புள்ள சிவா
காந்தி அன்றைய சுதந்திரப்போராட்ட வீரர்கள் அனைவரையும் சென்று சந்தித்திருக்கிறார். துறவியாக ஆன சுப்ரமணியம் சிவாவைக்கூட அவர் சந்திக்க முயன்றார் என்று வாசித்திருக்கிறேன்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
காந்தி காமம் ஓஷோ
ஐரோப்பாக்கள்
முட்டாள்களின் மடாதிபதி
வினோபா, ஜெபி, காந்தி
காந்தியின் திமிர்
காந்தி, கிலாஃபத், தேசியம்
சந்திரசேகர சரஸ்வதி
காந்தியும் விதவைகளும்
காந்தியின் சனாதனம் — கடிதங்கள்
காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்
காந்தியின் சனாதனம்-6
காந்தியின் சனாதனம்-5
காந்தியின் சனாதனம்-4
காந்தியின் சனாதனம்-3
காந்தியின் சனாதனம்-2
காந்தியும் சனாதனமும்-1
இந்திய நிர்வாகம் — கடிதம்
அதிகாரமும் கலங்கலும் — கடிதம்
கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] — 3
காந்தியும் கடவுளும்
May 16, 2012
இந்திய அமைதிப்படை -ஷோபா சக்தி
இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்ற நல்வாய்ப்பை நாங்கள் தவறவிட்டுவிட்டோம். அன்று நாங்கள் நிராகரித்த அதே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரியே (பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல் செய்வது ) இப்போது தமிழர் தரப்புகள் போராடிக்கொண்டிருக்கின்றன என்பதுதான் இன்றைய அரசியல் எதார்த்தமாயிருக்கிறது. ஆனால் இந்த எதார்த்தம் எந்த வகையிலும் இலங்கையில் இந்திய இராணுவம் நடத்திய போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் அராஜகங்களையும் நியாயப்படுத்திவிடாது.
காலக் கொடுமை
தொடர்புடைய பதிவுகள்
அமைதிப்படை- திருமாவளவன் கடிதம்
கற்பழித்ததா இந்திய ராணுவம்?
இலங்கையில் இருந்து ஒரு கடிதம்
ஹனீபா-கடிதம்
ஏன் இருண்மையை வாசிக்கவேண்டும்?
மதிப்புமிகு ஜெயமோகன் அவர்களுக்கு.
நான் இது இரண்டாவது முறை எழுதும் கடிதம். எனது முந்தைய கடிதமும் ஏறக்குறைய இதை ஒட்டியதே. இதற்கும் விளக்கம் கிடைக்காவிட்டால் இனி நான் இலக்கியம் வாசிப்பது வீண் என்றே நினைக்கிறேன். இந்தக் கேள்வியை நான் உங்களிடம் கேட்கக் காரணம் உங்கள் அறம் சிறுகதைத் தொகுப்புதான். மானுடத்தின் மீதான நம்பிகையை அது கூட்டுகிறது. அதுவே நான் இலக்கியமாக நம்பி வாசிக்கும் வடிவம்.
இந்நிலையில் ‘பாலமுருகனின் நாவல்‘ எனும் தலைப்பில் தாங்கள் இணைத்த கட்டுரையில் ஷோபா சக்தியின் ‘ம்’ நாவல் குறித்த தகவல் வருகிறது. நான் வாசிந்து நொந்த நாவல் அது. அதன் ஆசிரியர் ஷோபா தகப்பனால் ஒரு குழந்தை கர்ப்பபமானதற்கு வக்காலத்து வாங்கியிருப்பார். நவீன் என்பவரின் கட்டுரையும் ‘அது சரிதான்’ என்பது போல அமைகிறது. இவர்களுக்கெல்லாம் என்ன மனநோயா? இதைத்தான் இலக்கியம் கொடுக்க வேண்டுமா?நம்பிக்கையின்மையையும் சிதைவையும் புகுத்துவதுதான் இலக்கியமா?
பாலமுருகன் என்பரின் ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் ‘ நாவலையும் நான் வாசிக்கவில்லை. அவரின் சோளகர் தொட்டியை மட்டுமே வாசித்துள்லேன். அது முக்கியமானது. ஆனால், குழந்தைகளை விட்டு ஓடும் ஒரு தகப்பனின் நிலைதான் வாழ்க்கை என்றால் அந்த வாழ்வைச் சொல்லும் இலக்கியம் எதற்கு. நான் எதற்கு வாசிக்க வேண்டும்?
மருது.
அன்புள்ள மருது,
நமக்கு இலக்கியம் பள்ளிப்பாடம் வழியாக அறிமுகமாகிறது. அது நல்லுரைகள் மற்றும் நற்கருத்துக்களால் ஆனது அதுவே அப்போது தேவையானதாக உள்ளது. அது ஒரு காலகட்டம்.
அதன்பின்னர் நாம் வெளியே வந்து வாழ்க்கையை நேரடியாகச் சந்திக்க ஆரம்பிக்கிறோம். அப்போது நாம் சந்திப்பது வாழ்க்கையின் இரக்கமற்ற தன்மையை. மனித மனங்களுக்குள் இருக்கும் இருட்டை. நம் மனத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகளை. நாம் தொடர்ந்து அதிர்ச்சியும் மனக்குழப்பமும் அடைகிறோம். பள்ளிப்பாடங்கள் எல்லாமே பொய்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இந்தப் புதிய உண்மையை அறியவும் புரிந்துகொள்ளவும் நாம் முயல்கிறோம்.
உண்மையில் பெரும்பாலானவர்களுக்கு இலக்கியத்தின் வீச்சும் விரிவும் புரிவது இந்த இரண்டாம்நிலையில்தான். இந்தப் பருவத்தில் ‘அப்பட்டமான உண்மை’ மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அதற்கான இலக்கியங்களை நாம் தேடுகிறோம். இதை வாசிப்பின் இரண்டாம்நிலை என்று சொல்லலாம்
இலக்கியம் வாசிப்பின் எல்லா நிலைகளில் உள்ளவர்களுக்காகவும் எழுதப்படுகிறது. அது ஒரு பாடத்திட்டம் என்று வையுங்கள். ஒன்றாம் வகுப்புப் பாடம் மட்டுமே போதும் என்று சொல்லமுடியுமா? இல்லை இரண்டாம் வகுப்புப் பாடமே போதும் ஒன்றாம் வகுப்பு தேவையில்லை என்று சொல்லமுடியுமா?
இலக்கியம் வாழ்க்கையை ஆராய்ந்து அதன் சாரம் நோக்கிச் செல்லக்கூடியது. ஆகவே வாழ்க்கைக்குள் நிகழக்கூடிய அனைத்துமே அதற்கு முக்கியமானதுதான். அது ஆராயக்கூடாத விஷயம் என எதுவுமே இல்லை. வாழ்க்கையின் குரூரமும் அபத்தமும் அசிங்கமும் இலக்கியத்தின் ஆழ்ந்த கவனத்துக்குரியனவாக எப்போதுமே இருந்து வந்துள்ளன.
இப்போதல்ல, புராதன செவ்விலக்கியங்களில் கூட அவை உள்ளன. பண்டை இலக்கியங்களில் உள்ள நவ ரசங்களில் அருவருப்பும் ஒரு ரசம்தான்.
அப்படி அல்லாமல் ‘தகாத’ விஷயங்களை இலக்கியம் பேசக்கூடாது என்று தவிர்த்தால் இலக்கியம் மனித மனத்தின் பெரும்பகுதியைப் பேசாமலாகிவிடும் இல்லையா? அதன் பின் அது பேசும் விஷயங்களுக்கு உண்மையின் மதிப்பு உண்டா என்ன?
இலக்கியத்துக்கு என்று ஒரு விதியோ வழியோ கிடையாது. அதற்கான வடிவமும் இல்லை. அது காடு போல. எங்கே ஈரமிருக்கிறதோ எங்கே வெளிச்சமிருக்கிறதோ அங்கெல்லாம் காடு வளரும். எல்லா விதைகளும் முளைக்கும். முளைத்தவை ஒன்றோடொன்று போராடி எது மேலோங்குகிறதோ அது நீடிக்கும்.
இலக்கியத்தை எல்லாரும் எழுதலாம். தங்களுக்குத் தோன்றியபடி எழுதலாம். தங்கள் வாழ்க்கையும் சிந்தனையும் எதைக் காட்டுகிறதோ அந்தக் கோணத்தைப் பதிவுசெய்யலாம். எந்த விதியும் இல்லை. அப்படைப்புகள் அனைத்தும் வாசகன் முன் வருகின்றன. எது வாசகர்களைக் கவர்கிறதோ, எது வாசக சமூகத்தில் நீடித்த பாதிப்பை உருவாக்குகிறதோ அவை நீடிக்கின்றன. தேர்வு வாசகன் கையில் உள்ளது.
பொதுவாக நம்முடைய சமூகச்சூழல் ஆசாரமானது. நாம் பள்ளிக்கூடத்தில் ‘நல்ல விஷயங்களை’ மட்டுமே சொல்லிக்கொடுக்கிறோம். பிள்ளைகளைப் பொத்திப்பொத்தி வளர்க்கிறோம். ஆகவே வளார்ச்சியின் ஒரு கட்டத்தில் தாங்கள் வாழும் வட்டத்துக்கு வெளியே உள்ளவற்றின் மீது நமக்கு பெரும் ஈர்ப்பு ஏற்படுகிறது.
நம் இளம் வாசகர்கள் ஒருகட்டத்தில் பாலியல் மீறல்கள் போன்றவற்றில் பயங்கரமான மனக்கிளர்ச்சியை அடைகிறார்கள். அதுவரை நம்பிய அனைத்தையும் உடைத்துத் தூக்கிவீசுவதைப்பற்றிப் பேசும் சிந்தனைகள் மீது ஆர்வம் கொள்கிறார்கள். இது வாசிப்பில் ஒரு கட்டம், அவ்வளவுதான்.
வாழ்க்கையைக் கூர்ந்து அவதானிக்கும் போக்கில் ஒருகட்டத்தில் மனிதமனதிலும் வரலாற்றிலும் உள்ள இருட்டையும் அழுக்கையும் புரிந்துகொண்டு அவையும் உண்மைகளே என ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறோம். அவற்றைப்பற்றி வாசிக்கையில் பெரிய ஆச்சரியமோ பரபரப்போ ஏற்படுவதில்லை. இது வளர்ச்சியின் அடுத்த கட்டம்
நற்கருத்துக்கள் மட்டுமே இலக்கியம் என்று நினைப்பது எப்படி ஒருபக்கம்சார்ந்த ஆரம்பகட்டப் பார்வையோ அதேபோலத்தான் மனிதமனதின் இருட்டு மட்டும்தான் வாழ்க்கையின் உண்மை என்று சொல்வதும் என்று நினைக்க ஆரம்பிக்கிறோம். ஒருபக்கச்சார்புள்ள முதிராத பார்வைகளைத் தவிர்த்து ஒட்டுமொத்தமான முழுமையான சமநிலையான பார்வைக்காகத் தேடுகிறோம். நான் வாசிப்பு முதிரும் நிலை என இதையே சொல்வேன்.
இந்த முதிர்ந்த வாசிப்பு என்பது மொழிசார்ந்த சுவாரசியங்கள், வடிவ சோதனைகள் ஆகியவற்றைப் பெரிதாகப் பொருட்படுத்தாது. இலக்கியத்தில் உள்ள ஒற்றைப்படையான வேகத்தை நிராகரிக்கும். வாழ்க்கை பற்றிய சமநிலையான அணுகுமுறையையே பெரிதாக நினைக்கும்.
அறம் வரிசையில் உள்ள கதைகள் எவையும் வாசிப்பின் முதல் இரு படிகளைச் சேர்ந்தவை அல்ல. நான் ஓர் எழுத்தாளனாக மனிதமனத்தின் இருட்டையும் அழுக்கையுமே அதிகமும் எழுதியிருக்கிறேன் என்பதை மறுக்கவில்லை. எந்த மருத்துவனும் நோயைத்தான் அதிகமாகக் கவனிப்பான். அந்த இருட்டைக் கணக்கில் கொண்டு, அதைத்தாண்டி உள்ள ஒளிக்கான தேடலைப் பதிவுசெய்பவை அறம் வரிசை கதைகள்.
அவை நல்ல கருத்துக்களைச் சொல்லவில்லை, நல் வழி காட்டவில்லை. மாறாக ‘இத்தனைக்கும் அப்பால் என்ன இருக்கமுடியும்?’ என்று தேடுகின்றன.அவற்றின் அமைப்புக்குள் மனித மனதின் தீமையை அவை நுட்பமாகப் பேசியிருக்கின்றன. அவற்றை இலட்சியவாதம் தாண்டிச்செல்லும் சில அபூர்வமான தருணங்களை மட்டும் கணக்கில் கொள்கின்றன, அவ்வளவுதான்.
ஒரு வாசகனாக நீங்கள் மனித மனத்தின் இருட்டை, வரலாற்றின் அபத்தத்தைக் கருத்தில் கொண்டுதான் ஆகவேண்டும். அவற்றை நோக்கிக் கண்களை மூடிக்கொண்டு உங்களுக்கு சௌகரியமானதை மட்டும் வாசிப்பதென்பது சுய ஏமாற்றுதான். அது போலியான ஒரு பகற்கனவு உலகில் உங்களை வாழச்செய்யும்.
அந்த இருட்டை அறிந்தபின் அதைத் தாண்டிச்செல்லும் ஒளியை நோக்கித் தேடுங்கள். அதுவே பயனுள்ளது
ஷோபா சக்தி வரலாற்றின் அபத்தமான பெருக்கெடுப்பை, மனித மனதின் இருட்டை சித்தரிக்கும் கலைஞர். அவரைப் புறக்கணிப்பது கொல்லைப்பக்க சாக்கடையைத் தவிர்க்க சன்னலை மூடி வைப்பது போன்றது.
என்னுடைய கதைகளிலேயே ஷோபா சக்தி எழுதியவற்றை விடத் தீவிரமான எதிர்மறை தரிசனம் கொண்ட பல கதைகள் உள்ளன. அவற்றையும் வாசியுங்கள்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
பாலமுருகனின் நாவல்
நூறுநாற்காலிகளும் நானும்
அறம்-எஸ்.கெ.பி.கருணா
கடிதங்கள்
கடிதங்கள்
பின்தொடரும் நிழலின்குரலும் அறமும்
அறம் விழா
இரு கலைஞர்கள்
அறம் — சிறுகதைத் தொகுப்பு கிடைக்குமிடங்கள்
எதற்காக அடுத்த தலைமுறை?
அறம் வாழும்-கடிதம்
மண்ணாப்பேடி
உங்கள் கதைகள்-கடிதம்
அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?
அமைதிப்படை- திருமாவளவன் கடிதம்
அன்புடன் ஜெயமோகன்,
கற்பழித்ததா இந்திய ராணுவம்? என்ற குறிப்புப் படித்தேன். உங்கள் பதிலிலும் இது மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரம் என்பதுபோன்ற மயக்கம் இருக்கிறது. என் கவிதைகளூடாக என் அரசியல் கருத்தை அறிவீர்கள். புலிகளுக்கோ அல்லது அரசுக்கோ ஆதரவான கருத்துக் கொண்டவன் அல்ல. இந்திய ராணுவம் இருந்த காலப்பகுதியில் அதற்குள் வாழ்ந்தவன். இந்திய ராணுவத்தின் பாலியல் வதைக்கு உள்ளாகாத பெண்கள் இருக்கமுடியாது என்று சொல்லுமளவுக்கு இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் இருந்தது. அது பகிடிவதைகள் பாலியல் நோக்கோடு தொடுதல் தடவுதல் என்பவற்றிலிருந்து பாலியல் வல்லுறவு வரை இருந்தது.
ஈழப் போராட்டத்தில் முழு ஈழ மக்களின் ஆதரவும் புலிகளுக்கு அல்லது போருக்கு ஆதரவாகவோ இருந்ததெனச் சொல்ல முடியாது. ஆனால் இந்திய ராணுவம் வந்த ஒரிருமாதங்களுக் குள்ளேயே ஈழமக்களின் முழு எதிர்ப்பும் இந்தியராணுவத்திற்குக் கிட்டியதற்கு முக்கிய காரணம் இந்திய ராணுவத்தின் பாலியல் வதைகள்தான். உங்களுக்கு நிறையவே ஈழத்து நண்பர்கள் உண்டு. நிச்சயமாக உங்களுக்கு உண்மையும் தெரியும். இதற்கு மேல் மழுப்பல் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
நன்றி.
திருமாவளவன். (கனடா)
அன்புள்ள திருமாவளவன்,
உங்கள் கடிதம் கண்டேன். ஏதேனும் ஒரு தரப்பை எடுத்துக்கொண்டு அதை அதிதீவிரமாக பொதுவெளியில் பேசுவதனூடாக தங்கள் பிம்பத்தை கட்டமைக்கும் போலிக்குரல்களையே நான் ஈழப்போர் விஷயத்தில் இந்தியாவில் அதிகம் கேட்கிறேன். அவற்றின் மீது ஆழமான அவநம்பிக்கை எனக்குண்டு.
ஆனால் நீங்களும் சரி, ஷோபா சக்தியும் சரி என்னுடைய ஆழமான மதிப்பிற்குரியவர்கள். உங்கள் படைப்புத்திறன் மீது மட்டுமல்ல நேர்மை மீதும் பெருமதிப்பு கொண்டவன் என அறிவீர்கள்.
என்ன பிரச்சினை என்றால் கடிதம் எழுதிய ஜாஸ் டயஸ் அவர்களும் என் நெடுநாள் வாசகர். உங்களைப்போல என் பெருமதிப்புக்குரியவர். அவரது அதே தரப்பைக் கூறக்கூடிய இந்திய ராணுவத்தினர் ,இதழாளர்கள் பலர் எனக்கு வாசகர்களாக, நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.
நான் அமைதிப்படை அங்கே போர்க்கொடுமைகளைச் செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை. எந்த ராணுவமும் ஆக்கிரமிக்கும் மண்ணில் மட்டுமல்ல சொந்த மண்ணிலேயே கொடுமைகளைச் செய்யும் என்றே நான் நினைக்கிறேன். போர் என்பதே அழிவுதான். அந்தக் கூற்றுக்கே ஜாஸ் பதில் சொல்லியிருக்கிறார்.
இந்திய அமைதிப்படையின் தரப்பாக எப்போதும் சொல்லப்படுவது அவர்கள் கைகள் கட்டப்பட்டுப் போரில் ஈடுபடுத்தப்பட்டார்கள், அவர்களின் மரண எண்ணிக்கை ஒருபோதும் எவராலும் கணக்கில் கொள்ளப்படவில்லை என்பதே. அவர்கள் போரில் நிகழ்ந்த அழிவுகள் ஒருபக்கச்சார்புடன் மிகைப்படுத்தப்படுகின்றன என்றே திடமாகச் சொல்கிறார்கள்.
ஜாஸ் டயஸின் கடிதம் உண்மையில் எனக்குப் பெரும் சங்கடத்தை உருவாக்கியது. அது வந்து நான்கு மாதமாகியும் அந்தக் கடிதத்துக்கு நான் பதிலளிக்கவில்லை.அந்தத் தரப்பைக் கருத்தில் கொள்ளாமல் இருந்திருக்கிறேனா என்ற எண்ணத்தை அடைந்தேன். எனக்கு நேரடியாகத் தெரியாத ஒரு விஷயத்தில் கிடைத்த தகவல்களைக்கொண்டு கருத்துநிலைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறேனோ என ஐயம் கொண்டேன்.
நீங்கள் சொல்வதுபோல எனக்கு நிறைய ஈழ நண்பர்கள் எப்போதும் உண்டு. அவர்கள் அளித்த தீவிரமான சித்திரங்கள்தான் என்னுள் இருப்பவை. ஆனால் இப்போது இக்கடிதம் எனக்கு ஒரு சஞ்சலத்தைக்கொடுத்தது. அன்றைய கருத்துக்களில் போருக்காக மிகைப்படுத்தப்பட்ட பல விஷயங்கள் உள்ளன . நானே அப்படி நிறைய எழுதியிருக்கிறேன்.
ஆனால் போர்ச்சூழலில் உருவாக்கப்பட்ட அதிதீவிர பிரச்சாரங்களைப் பின்னராவது மறுபரிசீலனை செய்யவேண்டுமென ஆசைப்படுகிறேன். அந்த மனநிலைகள் இந்தியாவில் பிரிவினைநோக்கையும் அழிவையும் உருவாக்குபவர்களால்தான் இன்று பயன்படுத்தப்படுகின்றன என்னும்போது அது முக்கியமானதாக ஆகிறது.
இலங்கையிலேயேகூட சராசரி சிங்கள மக்களைப்பற்றிய மனச்சித்திரங்கள் மறுபரிசீலனை செய்யப்படவேண்டும். இன்று ஈழக்குழுக்கள் தங்களுக்கிடையேயான மனப்பிளவுகளை மறுபரிசீலனை செய்கிறார்கள் என்பதனால் அதுவும் சாத்தியம்தான்.
ஈழத்தில் இந்திய அமைதிப்படை செய்ததாக சொல்லப்பட்ட கொடுமைகள் போர்ச்சூழலில் ஓர் உத்தியாக மிகைப்படுத்தப்பட்டவை என்றால் அதை வெளிப்படுத்தி, உண்மையான சித்திரம் நோக்கி நகர்வதன் மூலம் இந்தியா மீது இன்று இருக்கும் கசப்புகளை இலங்கைத்தமிழ் மக்கள் தாண்ட முடியும் என்றும் நினைத்தேன்.
இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் புலிகள் செய்த உக்கிரமான பிரச்சாரம் ஒருகட்டத்தில் இந்திய வெறுப்பாளர்களாக அவர்களைக் கட்டமைத்தது. அது நடைமுறையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரானதாகவே ஆகியது . அதை இந்தியாவில் , ஏன் தமிழகத்தில் அரசியல்சாராத எளிய மக்களிடையே பேசிப்பார்த்தால் புரியும்.
இலங்கையில் நிகழ்ந்த கடைசிப்போரின்போது சராசரித் தமிழர்கள் காட்டிய அக்கறையின்மையை நான் கண்கூடாகவே கண்டேன். எண்பத்திமூன்றில் எழுந்த ஆதரவு அலைக்கும் அதற்கும் கொஞ்சமும் தொடர்பில்லை. அந்த மனநிலையை உருவாக்கியது அத்தகைய பிரச்சாரமே.
இன்று இங்கே இந்திய எதிர்ப்புக்காக ஈழத்து அரசியலைக் கையாள்பவர்கள் ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவுக்குமான தூரத்தை அதிகரிக்கிறார்கள்.
ஆனால் உங்களுடைய கடிதம் , அது எத்தனை சுருக்கமானதாக இருந்தாலும் அது கவிஞனின் குரல். அது ஒரு நிலையான ஆவணம்தான். என்னைப்பொறுத்தவரை அதுவே போதும். அது என்னைத் தீவிரமான தர்மசங்கடத்தில் நிறுத்துகிறது.
ஒரு சாமானிய இந்தியனின் நிலையில் , முற்றிலும் குழம்பியவனாக , சொல்ல ஏதுமற்றவனாக உணர்கிறேன். ஒரு இந்தியனாக ஒரு மௌனமான ஒரு மன்னிப்புக் கோரலையே சொல்லமுடியும். ஜாஸ் டயஸ் அவர்களையும் உங்கள் கடிதம் இப்படித்தான் உணரச்செய்யும் என நினைக்கிறேன்
மனிதனைப்பற்றி, இன்றைய இந்தியாவைப்பற்றி மேலும் சங்கடமும் அவமானமும் கொள்பவனாக ஆக்குகிறது உங்கள் கடிதம்.ஆனாலும் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவை நெருங்கிவரவேண்டும் என்றே சொல்வேன்.
அத்தனை ரத்தத்தையும் மறந்து மெல்லமெல்ல அவர்கள் இந்தியாவை மன்னிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். ஏனென்றால் இனிமேலும் வரலாற்றில் வேறு வழியே இல்லை. இந்தியாவின் அதிகாரபீடமோ ராணுவமோ அல்ல இந்தியா.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
இந்திய அமைதிப்படை -ஷோபா சக்தி
கற்பழித்ததா இந்திய ராணுவம்?
இலங்கையில் இருந்து ஒரு கடிதம்
ஹனீபா-கடிதம்
May 15, 2012
கற்பழித்ததா இந்திய ராணுவம்?
அன்புள்ள ஜெ,
நான் இந்திய ராணுவத்தில் 28 வருடங்களாக கர்னலாக பணியாற்றி ஓய்வுபெற்றவன். பல்வேறு விவாதத்துக்குரிய விஷயங்களில் உங்கள் நன்கு சமன்செய்யப்பட்ட கருத்துக்களை வியந்து கவனித்து வருபவன்
சமீபத்தில் உங்கள் கட்டுரைகளில் ராணுவங்கள் கூட்டான பெரும் கொள்ளை மற்றும் கற்பழிப்புகளில் ஈடுபடுவதைப்பற்றி நீங்கள் எழுதியிருப்பதை வாசித்தேன். அதெல்லாம் கடந்தகாலத்தில் உண்மையாக நிகழ்ந்திருக்கலாம், ஆனால் அவை இப்போது அவ்வளவு சாதாரணம் அல்ல. நவீன ராணுவங்கள் எல்லாம் முப்பதுபேர் கொண்ட பிளாட்டூன் எனப்படும் அடிப்படை சிறுகுழுக்களால் வலுவாகக் கட்டப்பட்டவை. லெஃப்டினெண்ட் தரத்தில் உள்ள இளம் அதிகாரிகளால் அவை நடத்தப்படும். இந்த இளைஞர்கள் பெரும்பாலும் கொள்கைப்பிடிப்பும் அதற்கான களங்கமின்மையும் கொண்டவர்களாகவும் இலட்சியவாதத்தை இழக்காதவர்களாகவுமே இருப்பார்கள். ரோந்து சுற்றுதல், கண்காணித்தல் போன்ற வேலைகளை ஈடுபாட்டுடனேயே செய்வார்கள். அவர்கள் இதைப்போன்ற கீழ்த்தரமான செயல்களைத் தங்கள் வீரர்கள் செய்ய ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். இதைப் பலமுறை நான் நேரில் கவனித்து உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறேன். இந்த ராணுவ வீரர்கள் ஒரு அராஜகச்சூழலில் பிறந்துவளர்ந்தவர்கள் அல்ல. நாங்களும் மனிதர்களே. எங்களுக்கும் மனைவி குழந்தைகள் சகோதரிகள் அன்னையர் உண்டு. நாங்களும் அவர்களை நேசிப்பவர்கள்தான். நாங்களும் குடிமை மனசாட்சி கொண்டவர்களே.
நான் ஜம்மு காஷ்மீரில் பல்லாண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றியவன். என் அனுபவத்தில் நான் ஒருமுறைகூட உண்மையிலேயே கற்பழிப்பு நடந்த ஒரு நிகழ்ச்சியைக்கூடக் கேள்விப்படவோ சந்திக்கவோ இல்லை. பரஸ்பர ஒப்புதல் மூலம் உறவு நடப்பதுண்டு. ஏழைப்பெண்களை அவர்களின் வறுமையைப்பயன்படுத்தி சிலர் பாலியலுக்கு பயன்படுத்திக்கொள்வதுண்டு. பணம், ரேஷன் பொருட்களை இதற்காகப் பயன்படுத்திக்கொள்வார்கள். அதுகூட மிக அபூர்வம். அதன் அபாயம் மிக அதிகம். மற்றபடி கற்பழிப்பு என்பதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. அப்படி சில குற்றச்சாட்டுகள் மிக அபூர்வமாக வரும், விசாரித்தால் அவை தவறென தெரியும்
உண்மையில் நான் இன்று தமிழக ஊடகங்கள் திட்டமிட்டு இலங்கை சென்ற இந்திய அமைதிப்படைக்கு எதிராக செய்து வரும் அவதூறுப்பிரச்சாரத்தால் மிக மனம் வருந்துகிறேன். இலங்கையில் இந்திய ராணுவம் தமிழ்ப்பெண்களைக் கூட்டுக்கற்பழிப்பு செய்தது என்று இங்கே எழுதுகிறார்கள், மேடையிலே பேசுகிறார்கள். மொத்தத் தமிழ்நாடே மெல்லமெல்ல இந்தத் திட்டமிட்ட அவதூறை நம்புகிறது. உங்கள் எழுத்துக்களைப்பார்க்கையில் அதை நீங்களும் நம்புவதாகவே தெரிகிறது. நீங்கள் இவ்விஷயத்தின் மறுபக்கத்தைச் சொல்லவில்லை என்பதனால் நான் இதை எழுதுகிறேன்.
நான் இவ்விஷயத்தை முன்னாள் ராணுவத்தினருக்கான பல தளங்களிலும் இதழ்களிலும் விவாதித்திருக்கி இதைப்பற்றிக் கேட்டபோது நான் பெற்ற பதில்களை இணைத்திருக்கிறேன். இந்த அதிகாரிகள் எல்லாருமே ஓய்வுபெற்றவர்கள். இந்திய அமைதிப்படையில் வேலைபார்த்தவர்கள். அவர்கள் பொய் ஏதும் சொல்லவேண்டிய தேவை இல்லை
ஜாஸ் டயஸ்
*
indianexservicemen@yahoogroups.com – தளத்தில் ஜாஸ் டயஸ் எழுதியது
அன்புள்ள மூத்த வீரர்களே
நான் தமிழ் இதழ்கலில் இந்திய ராணுவம் ஆபரேஷன் பவன் நடவடிக்கையின்போது ஏராளமான தமிழ்ப்பெண்களை கற்பழித்தது என்ற செய்திகளை வாசிக்கிறேன். இது இன்று திட்ட்மைட்டு பரப்பட்டு பெரும்பாலானவர்களால் நம்பவும் படுகிறது. என்னுடைய நோக்கில் இது மிகமிக அபத்தமான ஒரு குற்றச்சாட்டு. ஏனென்றால் நான் பணியாற்றிய எந்த ராணுவ மையத்திலும் இந்தவகையான செயல்பாடுகளுக்கான வாய்ப்பே கிடையாது.
நான் எதையாவது கவனிக்காமல் விட்டுவிட்டேனா? அக்காலத்தில் இலங்கையில் பணியாற்றிய ஏதாவது மூத்த ராணுவ வீரர் என்னுடைய ஐயத்தை தீர்க்கமுடியுமா? நாம் ஏன் இந்த அப்பட்டமான அவதூறுகளை தீர்க்க எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை?
ஜாஸ்
indianexservicemen@yahoogroups.com தளத்தில் ramantn sarma
எழுதியது
அன்புள்ள மூத்த வீரர்களே
ஜாஸ் டயஸின் மின்னஞ்சலை ஒட்டி இதை எழுதுகிறேன்.
நான் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த மொத்த நாட்களிலும் அங்கே சி.சி. பீரங்கிப்படையில் பணியாற்றினேன். 1990ல் படைகள் அந்தத் தீவை விட்டு விலகுவது வரை அங்கிருந்தேன். கர்னல் ஹரிஹரன் அப்போது என்னுடைய தலைவராக அங்கே இருந்தார்
பாயிண்ட் பெட்ரோ மற்றும் பட்டிகொலாவ் இடங்களில் விடுதலைப்புலிகளை அரசு உத்தரவின்படி வைத்திருந்த தடுப்புக்காவல் நிலையங்கள் இந்திய ராணுவத்தினரால் காவல்காக்கப்பட்டன. நான் என் பணியின் பகுதியாக நான் அவற்றைப் பார்வையிடச் செல்வதுண்டு. ஒருமுறை நான் பாயிண்ட் பெட்ரோ மையத்துக்குச் சென்றபோது எல்.டி.டி.இ யின் ஒரு செய்தித் தொடர்பாளர் என்னிடம் இந்திய அமைதிப்படையால் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் அங்கே இருப்பதாகச் சொன்னார்.
ஆகவே நான் அந்தப்பெண்ணைப் போய்ப் பார்த்தேன். தமிழ் ஊடகவியலாளர்களின் முன்னால் அந்தப்பெண்ணை விசாரித்தேன். அந்தப்பெண்மணிக்கு எண்பது வயதிருக்கும். அவர் மிகுந்த அமைதியுடன் இருப்பதாகவே தோன்றியது. இந்திய அமைதிப்படையின் முகாம் ஊழியர்கள் அவரை நன்றாகவே கவனித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்
விடுதலைப்புலிகளின் பேச்சாளர் அவளிடம் அவளை இந்திய அமைதிப்படை கற்பழித்த நிகழ்ச்சியைப்பற்றி சொல்லும்படி தூண்டினார். அவள் விழித்தாள். அவரிடம் ’யார் கற்பழித்தது, யாரை?’ என்று கேட்டாள்
கொஞ்சநாள் கழித்து நான் செனைக்கு வந்தேன். விமானநிலையத்தில் இருந்து இந்திய அமைதிப்படை தலைமையகத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது நான் பேருந்துகளில் இந்திய அமைதிப்படையை அவமதித்து ஒட்டப்பட்டிருந்த பல சுவரொட்டிகளைப் பார்த்தேன். இந்திய அமைதிப்படை கற்பழிப்புகளில் ஈடுபட்டது என்று அவை குற்றம் சாட்டின. விளம்பரப்பலகைகளில் ஒட்டப்பட்டிருந்த வண்ணச்சுவரொட்டிகளில் பாயிண்ட் பெட்ரோவில் நான் பார்த்த அதே வயதான பெண்மணியின் படமிருந்தது. இம்முறை அவர் செத்துப்போன இளைஞன் ஒருவனின் படத்தை தாங்கிக்கொண்டிருந்தார். அது அவரது மகன் என்று அந்த போஸ்டர் சொல்லியது
இன்றுகூட பல தமிழ் இதழ்கள் இந்த அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானவை ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் என்னும் இரண்டு இதழ்கள். இந்திய ராணுவம் வெளிப்படையாக இதைப்பற்றி விவாதிக்கமுடியாது என்பதனால் இந்த அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரச்சாரங்கள் உண்மையாக ஆகின்றன. நான் அச்சு ஊடகங்களில் பல கடிதங்களை எழுதியிருக்கிறேன்.
முக்கியமான வினா என்னவென்றால் தமிழர்கள் இந்த எதிர்மறைப் பிரச்சாரத்தை நம்புகிறார்களா என்பதுதான் . என் பதில் இல்லை என்பதே. ஏனென்றால் விடுதலைப்புலிகளுக்காக இந்த பொய்ப்பிரச்சாரத்தை முன்னெடுத்த எந்தத் தலைவரும் எந்த தேர்தலிலும் வென்றதில்லை. வை கோபாலசாமி, ராமதாஸ் ஆகியோரைச் சுட்டிக்காட்டுவேன். பெரிய கட்சிகளுடன் உடன்பாடுகொண்டு சில இருக்கைகளை அவர்களால் வெல்ல முடிகிறது அவ்வளவுதான்.
afvoachennai@yahoogroups.com தளத்தில் Col N Viswanathanஎழுதுகிறார்
அன்புள்ள மூத்த வீரர்களே
நான் இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் இருந்த இறுதி ஒரு வருடம் டெபுடி டவுன் கமாண்டண்ட் ஆகப் பணியாற்றும் அதிருஷ்டம் கொண்டிருந்தேன். எங்கள் அமைப்பு யாழ்ப்பாணத்தில் இருந்த மக்களை மீள்குடியமர்த்துவது அவர்களுக்கான தங்குமிடம் ஆரோக்கியம் போன்ற நலப்பணிகளைச் செய்வது கட்டுமானங்களை அமைப்பது போன்றவற்றை மட்டுமே செய்துவந்தது. என்னுடைய பணிக்காலத்தில் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார்களுடன் தொடர்ந்து எங்கள் அலுவலகத்துக்கு வந்துகொண்டே இருந்த ஏராளமான சாதாரண தமிழர்களுடன் பழக நேர்ந்தது. நான் உறுதியாகவே சொல்கிறேன், ஒரேஒரு கற்பழிப்புச்செய்தியைக்கூட நான் கேள்விப்படவில்லை. இவையெல்லாம் அன்று புலிகள் அமைப்பு அவர்களுடைய அரசியல் ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து திட்டமிட்டு செய்த பிரச்சாரம் மட்டுமே
விஸ்வநாதன்
******
அன்புள்ள ஜாஸ்,
உங்கள் கடிதம் கொஞ்சநாளாகவே என்னை நிம்மதியிழக்கச் செய்கிறது. இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். மிக முக்கியமான சிலரிடம் நானும் இதைப்பற்றிக் கடிதம் மூலம் விசாரித்தேன்.
நான் ஆயுதப்படைகளை அதிகம் சந்தித்ததில்லை. என்னுடைய கருத்து பெரும்பாலும் வரலாற்று வாசிப்பு வழியாக வந்தது. ஒரே ஒரு விதிவிலக்கு, நான் வாச்சாத்திக்குச் சென்று அங்கே இருந்த மக்களைச் சந்தித்திருக்கிறேன்.
வாச்சாத்தியில் காவலர் அக்கிராமத்து மக்களைக் கற்பழித்தார்கள் என்பது உண்மை, நானே இரு பெண்கள் அதைப்பற்றி சொல்வதை நேரில் கேட்டேன். அவர்களின் கண்களை நினைவுகூர்கிறேன். ஆகவே என் எண்ணம் உறுதிப்பட்டது.
இலங்கைக்குச் சென்ற அமைதிப்படையின் நடவடிக்கைகளைப்பற்றி நான் என்னுடைய கருத்து என எதையும் சொன்னதில்லை, காரணம் எனக்கு உறுதியாக ஏதும் தெரியாது. நான் பொதுவாக உலக வரலாற்றில் உள்ள ராணுவம் பற்றிய என் மனப்பதிவை மட்டுமே சொன்னேன்.
ஆனால் இதை ஒட்டி சிலவற்றை நினைவுகூர்கிறேன். இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்ற நாட்களில் அ.ஏசுராசா அவர்கள் காலச்சுவடு இதழில் நா.அமுதசாகரன் என்ற பெயரில் ‘சிங்கத்தின் கால்களும் அசோகச்சக்கரமும்’ என்ற கட்டுரையை எழுதினார்.
மிகவும் கசப்புடன் ஒற்றைப்படையான வேகத்துடன் எழுதப்பட்ட கட்டுரை அது என இப்போது நினைக்கிறேன். அக்கட்டுரை இந்தியஅமைதிப்படையைத் தமிழர்களுக்கு எதிரியாகக் கட்டமைக்க முயன்றது. அதை நான் மலையாளத்தில் மொழியாக்கம் செய்தேன்[ எம்.காளீஸ்வரன் என்ற பேரில்] விரிவான குறிப்புகளுடன் ஜயகேரளம் என்ற இதழில் வெளிவந்தது. மேலும் பலகட்டுரைகளை நான் அவ்விஷயம் பற்றி மலையாளத்திலும் தமிழிலும் எழுதினேன்.
அக்கட்டுரையில்கூட இந்திய அமைதிப்படை குண்டுதேடும் சாக்கில் பெண்களை மரியாதையில்லாமல் சோதனை செய்கிறார்கள், முன்னறிவிப்பில்லாமல் வீடுகளுக்குள் நுழைந்து சோதனயிடுகிறார்கள் என்ற வகையிலான குற்றச்சாட்டுகளே இருந்தன.
இந்திய அமைதிப்படை பற்றிய பெருமளவில் கற்பழிப்புக்குற்றச்சாட்டுகள் உருவானது பிரேமதாசாவுக்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வுக்குப் பின்னர்தான். இந்தியாமீதான கடும் வெறுப்பை உருவாக்குவது சிங்கள தேசியத்தின் தேவை. அதை உருவாக்க புலிகளை பிரேமதாசா பயன்படுத்திக்கொண்டார்.
இன்றுகூட இந்திய அமைதிப்ப்டை அதிகாரிகளுக்கு அன்றைய அரசியல் சுழற்சிகள் புரியவில்லை. ராஜீவ்காந்தி கொலைக்குப்பின்னர்தான் அப்பிரச்சாரம் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. புலிகளின் அரசியல் உத்திகளை ஒட்டி இப்பிரச்சாரங்கள் வடிவமைக்கப்பட்டன.
இதைப்பற்றிப் புலிகளில் சில முக்கியமானவர்களிடம் பேசியிருக்கிறேன். ’போராட்டம் என்பது பிரச்சாரக்களத்தில்தான் முதலில் வென்றெடுக்கப்படும்’ என்று சொல்வாகள். ’போரில் வெற்றி மட்டுமே எல்லாவற்றையும் நியாயப்படுத்தும்’ என்பார்கள். ‘தோல்வி வந்தால்?’ என்று கேட்டால் ‘அதைப்பற்றி யோசிக்கவே கூடாது, கண்டிப்பாக வெற்றிதான்’ என்பார்கள்.
போர் என்று வந்தபின், மரணவெளி கண்முன் திறந்தபின், எல்லாமே நியாயமாகிவிடுகிறதென்பது ஒருவகையில் உண்மையே. அதைப்பற்றி இன்று பேசிப்பயனில்லை.
ஆனால் புலிகளின் இந்தப்பிரச்சாரத்தை தமிழகத்தில் முன்னெடுத்தவர்கள் தமிழ்த்தேசியம் பேசும் ஃபாசிஸ்டுகள். அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் இந்தியவிரோத அன்னிய அமைப்புகள். இந்த உச்சகட்ட பிரச்சாரத்தை இந்திய ராணுவமோ இந்திய அரசோ எதிர்கொள்ளவே இல்லை. ஆனால் அவர்கள் தாங்களே மிகையாக நாடகத்தனமாகப் பேசி அவற்றை சாயம்வெளுக்கச்செய்தனர்
இந்தப் பிரச்சாரத்தின் முக்கியமான எதிர்விளைவு என்பது உண்மையிலேயே தமிழர்களுக்குப் பேரழிவு வந்து அதைத் தமிழ் ஊடகங்கள் உலகம் முன் கூவிச்சொன்னபோது அதையும் வழக்கமான மிகை, பொய்ப்பிரச்சாரம் என்றே அனைவரும் எடுத்துக்கொண்டார்கள் என்பதே
இந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான் பின்னர் பேரழிவின் கடைசிக்கணங்களில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்குக் காரணம். வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
ஓஷோ-கடிதங்கள்
சமீபத்தில் எதையும் படித்து இவ்வளவு நெகிழ்ச்சியாக உணர்ந்தது இல்லை. ஒன்றை அறிந்துகொள்ளுதல் ஒரு உயர்வான அனுபவம் , அறிந்தவற்றைப் புரிந்து கொள்ளுதல் இன்னும் மேலான அனுபவம், ஆனால் அறிந்தவற்றையும் அதைப் புரிந்தவற்றையும் உணர்ந்துகொள்ளுதல் ஒரு உன்னதமான அனுபவம் , மிக அபூர்வமாகவே அது கைகூடும், மேலும் இந்த வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமும் நமக்கு மிக அரிதாகவே வாய்க்கும். இந்த வரிகள் அத்தகைய மின்னலெனத் தெறிக்கும் ஒற்றை வரிகள் நிறைய நமக்கு அறிமுகமானவை தான், நம் ஒவ்வொருவர் கைவசமும் அவ்வாறு ஒரு பட்டியல் இருக்கும், ஆனால் மேலுள்ளது போன்ற ஒரு உவமையும் படிமமும் நம்மை ஒரு மானுட உச்ச அனுபவத்திற்கு இட்டுச் செல்கிறது . இது போன்ற வரிகளுக்காக மேலும் ஏங்க வைக்கிறது .
சிறுகதை, நாவல்கள் நமக்களிப்பது ஒரு மலையேறும் இலக்கிய அனுபவம், திருப்பங்கள் தோறும் புதிய காட்சிகள், ஏற ஏற அடி பரந்துகொண்டே செல்லும் நமது எடையும் கூடிக் கொண்டே செல்லும். கவிதைகள் நமக்களிப்பது ஒரு மின் தூக்கியில் மேல் உயர்வது போன்றது நமக்கு சாத்தியப்படுத்துவது கவிதைக் கணங்களை, எடையை உணர்ந்து கொண்டே சொகுசாக உயரும் அமோக அனுபவம். ஆனால் வாழ்வில் சிலமுறைகள் மட்டுமே நமக்கு ஆன்மிக அனுபவம் வாயக்கப் பெறும், அது ஒரு நேரடி நிகழ்வாகவோ அல்லது ஒரு கலையினூடாகவோ இருக்கலாம். ஒரு சருகாக எடையின்மையை நாம் உணர்ந்து காற்றில் மிதந்து கோபுரக் கலசத்தின் மீது எழுந்து தன்மையாக அமர்தல். மனிதப் பிறவிக்கு சாத்தியமான அதிகபட்ச அனுபவம் இதுவென்றே எண்ணுகிறேன், இதை இவ்வரிகளைப் படிக்கிறபோது அடைந்தேன்.
ஓஷோ என்ற போதே எனக்கு ஒரு முகச் சுளிப்பு, கல்லூரிப் பருவம் முதல் நாளெல்லாம் இவரின் கையாலாகாத வாசகர்களை , தன்னை ஆன்ம சாதகன் என விளம்பிக் கொள்ளும் துணுக்கு ஞானிகளை நிறைய சந்தித்து அவர்கள் மேலுள்ள வெறுப்பு நாளடைவில் எப்படியோ ஓஷோ மீது படிந்து விட்டது. அவரின் ஒன்றிரண்டு நூல்களையே படித்துள்ளேன், ஏற்காத மனச் சாய்விலேயே படித்ததால் எளிதில் புறக்கணித்து விட்டேன்.
தற்பொழுது இந்தத் தலைப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியூட்டியது, இந்த சோப்பளாங்கி ஆன்ம வேடதாரிகளைக் கிழிக்கப் போகிறார் என்ற எண்ணம். முதல் பகுதியும் எனக்கு உவப்பாகவே பட்டது, ஆனால் ஒரு மர்மக் கதை போலக் கட்டுரை நகர்ந்து நகர்ந்து அவரை உடைப்பது அசல் ஓஷோவைக் காண்பதற்கே என்று முடித்தது ஒரு பெரும் திருப்பம் , ஆம் ஒரு கிலுகிலுப்பைப் பாம்பு மடிந்து திரும்புவது போல.
dynamite வைத்துக் கட்டிடங்களை வெடித்து அது சீராக சரியும் காணொளிக் காட்சிகள் பார்பதற்கு மிக அழகாக இருக்கும், சரிந்தபின் கட்டிடம் பார்த்தவர் மனதில் மட்டும். அதுபோன்றது இந்த மூன்று கட்டுரைகள் உடைந்து விழும் அழகியல்.
கிருஷ்ணன்
அன்புள்ள ஜெ ,
என்னை முதலில் உடைத்த ஒரு மனிதர் ஓஷோ , ஓஷோ புத்தகத்தில் ஒரு உரையில் கிருஷ்ணமூர்த்தி பற்றிய விமர்சனம் இருக்கும் , கிருஷ்ணமூர்த்தி ஒரு ஞானி இல்லை என்று , எது என்னை ஓஷோ பக்கம் வசீகரித்ததோ அதுவே அவரின் ஊடாக கிருஷ்ணமுர்த்தி பக்கமும் வசீகரித்தது,இவர் யார் அவரை ஞானி இல்ல என்று கூறுவது என்று எடுத்தேன் கிருஷ்ணமூர்த்தி புத்தகத்தை ,ஓஷோவின் புத்தகத்தை மடத்தனமாக ஒப்புகொண்டிருந்தால் கிருஷ்ணமூர்த்தி கிடைத்திருக்கமட்டார் , ஒரு இரண்டு வருடம் ஓஷோ தேவைப்பட்டார்,அது ஒரு பரிமாண வளர்ச்சி என்றே சொல்லுவேன் ,ஒரு வயதுவரைக்கும் தாய்ப்பால் தேவை அப்புறம் அது தேவை இல்லை,ஒரு ஒரு கட்டத்திலும் தூண்டுதல்கள், அப்புறம் அவரைப் படிப்பதில்லை அவரை நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை, அவர்மேல் கோபம் கண்டிப்பாகக் கிடையாது ,அவர் கொடுத்த திறப்புகள் இன்னமும் உள்ளன ,அன்றாடக் காலகட்டத்துக்கு ஏற்றவாறு தேவைப்பட்ட இயற்கையின் ஒரு மலர்ச்சி என்றே ஓஷோவை நான் கூறுவேன் , உள்வாங்கினேன் , முரணியக்கக் கேள்விகளால் கண்ட தரிசனங்கள் ஏராளம் இழந்ததும் ஏராளம் , யுங் சொல்லுவது போல ” There’s no coming to consciousness without pain ” , அதையே ஜெ கிருஷ்ணமூர்த்திக்கும் சொல்லுவேன் , ஆனால் நான் சிலருக்கு ஜெ கிருஷ்ணமூர்த்தியைப் பரிந்துரைத்துள்ளேன் , ஓஷோவை ஒரு சமநிலை இல்லாத இளைங்கன்றுக்குப் பரிந்துரைப்பது மாதிரி முட்டாள்தனம் எதுவும் இல்லை .
கண்டிப்பாக அவர் சொன்ன செக்ஸ் வலைக்குள் , போதை வலைக்குள் மாட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு , அதை நான் ஓஷோவின் முட்டாள்தனம் என்று சொல்லமாட்டேன் , அதை முட்டாள்தனமாகப் பிரசுரித்த அவர்களது பக்தர்களை சொல்ல்வேன். விமர்சனத்திற்கு இல்லாத ஞானம் என்பது உண்டா இவ்வுலகில் , இதை நான் கூறினால் ஓஷோவின் பக்தர்கள் உடனடியாக “ego” என்ற அரைகுறைப் புரிதலை வைத்து எடை போட ஆரம்பிப்பார்கள் , ஓஷோ என்பவரின் ஆளுமையை , கிருஷ்ணமுர்த்தி என்பவரின் ஆளுமையை கண்டிப்பாக செயல்பாட்டில் போட்டுத்தான் பார்க்கவேண்டும் , அதுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் மிகபெரிய நன்றிக்கடன் . அதுவே முறையானது .
ஓஷோவைப் பின்பற்றும் இளைஞர்களுக்கு உங்களால் ஒரு மணிநேரம் தியானத்தில் அமரமுடியும் என்றால் நீங்கள் அவரைப் பரிசோதிக்கலாம் , இல்லையென்றால் கண்டிப்பாக நீங்கள் செல்லும் வழி போதை அல்லது சுய ஏமாற்று தான் . “while sipping a cup of tea or cigar you can become enlightened ” அவர் சொன்னது ஞானத்தைப் பற்றி, நம் உணர்வில் இல்லாத ஒரு விஷயம் ஞானம் ,ஆனால் நாம் எளிதில் பார்த்த கேள்விப்பட்ட “cigar” (சிகிரட்டை) நம் மனதின் குரங்கு எடுத்து ஊத ஆரம்பிக்கும் அதுதான் சமநிலை இல்லாத மனம் தனக்கு தெரிந்த விஷத்தை வைத்து ஞானத்தை எடைபோடும் . கிருஷ்ணமூர்த்தியும் conscious என்ற வார்த்தைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதுபோலத்தான், அவர்களின் ஆளுமை ஈடு இணையில்லாத விசயம்தான் ஆனால் , வார்த்தைகளில் மாட்டிக் கொள்ளாமல் ஞானத்தை அடைந்தவர்கள் இல்லை என்றுதான் நினைக்கிறேன்,அது ஒரு stage என்றுதான் படுகிறது . அதனால் ஒரு வலைக்குள் மாட்டிகொண்டு ஞானம் அடைந்துவிட்டதாக நினைக்க வாய்ப்புகள் அதிகம் . அதுவே ஞானத்தின் கதவு மூடப்படும் அறிகுறிகள் . “openess ” இல்லையென்றால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது என்று நான் அறிந்த சில பாடங்கள் . இதையே அனைவருக்கும், உங்களுக்கும் அளவுகோலாகப் பயன்படுத்துவேன் , நான் உட்பட இதில் உண்டு , “how will one understand the ego by nurturing it,one has to put the ego images of OSHO we have created in us to test” .
வணக்கம்
லட்சின் என்கிற லக்ஷ்மி நரசிம்ஹன்
தொடர்புடைய பதிவுகள்
ஓஷோ-கடிதங்கள்
ஓஷோ — உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் — 3
ஓஷோ — உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் — 2
ஓஷோ — உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் — 1
காந்தி காமம் ஓஷோ
கிரிமினல் ஞானி
ஓஷோ-கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
முட்டாள்களின் மடாதிபதி
தத்துவம், தியானம்-கடிதம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
