Jeyamohan's Blog, page 2238

May 9, 2012

பௌத்தம் கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன் சார்


உங்களின் பௌத்தமும் அகிம்சையும் என்கிற அற்புதமான கட்டுரையை படித்து உள்வாங்கினேன். மிகப்பெரிய விவரத்தை இவ்வளவு எளிமையான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி. சமணத்தப்பற்றியும் சொல்லுங்களேன். சமணம் இந்து மத்த்தோடு சேர்த்தியில்லையா? சமணத்தில் வர்க்கப்பிரிவுகள் இல்லையா? தமிழில் சமணர்களின் பங்களிப்பு என்னென்ன? சமண மத்த்தைப்பற்றி நினைக்கையில், பெரியபுராணத்தில் நாயன்மார்கள் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுகளே நிழலாடுகின்றன. யார் சமணர்கள்?


நன்றி சார்


ஸ்ரீவிஜி


மலேசியா.


அன்புள்ள விஜயலட்சுமி


நன்றி


சமணத்தைப்பற்றி முன்னரே கொஞ்சம் எழுதியிருக்கிறேன்


சமணம் வைணவம் குரு-


சமண அறம்


தமிழநாட்டில் சமணதலங்கள்


கல்கியின் சமணம்


சமணம் சாதிகள் -



தீபாவளியும் சமணமும்


தீபாவளி யாருடையது?


தமிழ்ச்சமணம்



சமணார் கழுவேற்றம்


களப்பிரர்


சிந்தாமணி


ஜெயமோகன்,

பெளத்த மதம் பற்றி தங்கள் கட்டுரை அருமை.இரு வேறு பெளத்த நாடுகளில் (தாய்லாந்து,வியட்நாம்) வாழ்ந்த நான் ,முதலில் குழப்பமடைந்தேன்.பிறகு அம்மக்களுடன் பழகி தெளிவடைந்தேன்.எனக்கு ஒரு முழு புத்தகம் எழுத ஆசை.நேரம் கூடி வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

உங்களின் தெளிவும்,படிப்பறிவும்,சமநிலை நோக்கும் என்னை அதிசயிக்க வைக்கிறது.

புத்தர் முதலில் சமண மதத்தை பின்பற்றினார் என்று நான் சொன்ன பொது பலர் மறுத்து பேசினார்.இப்பொழுது உங்கள் கட்டுரை என் கருத்துக்கள் சரிதான் என்று தெளிவாகியுள்ளது.

நான் எந்த மாதிரி எழுத்தாளனாக விரும்பினேனோ அதுவாக நீங்கள் ஆகியுள்ளது எனக்கு பொறாமை இல்லை ,சந்தோஷத்தையே தருகின்றது.


Regards


கோபாலகிருஷ்ணன் சுந்தரராமன்


அன்புள்ள கோபால்


உண்மையில் வடகிழக்குக்குச் செல்லும் எவருக்கும் பௌத்தம் பற்றிய இந்த ஐயம் எழும். வடகிழக்கின் வரலாறு தெரிந்ததுமே அந்த ஐயம் அகலும். வடகிழக்கில் பௌத்தம் சென்ற இடங்களில் மட்டுமே இன்று அமைதி உள்ளது- மிசோரம் பூட்டான் போல. பௌத்தம் அகன்ற இடங்களில் மீண்டும் வன்முறை உருவாகிறது.


நன்றி


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2012 11:30

May 8, 2012

காந்தி காமம் ஓஷோ

ஓஷோ தன் உரைகளில் மனதின் இரட்டை நிலைகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் காந்தியை இழுக்கிறார் என்றே தோன்றுகிறது. மனம் நிச்சயமாக ஒருவழிப்பாதை இல்லை என்று ஏராளமான விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.


இந்தியாவின் பழமைவாத ஒழுக்கம் என்பது எப்பொழுதும் மனதின் ஒருவழிப்பாதையைப் பற்றி மட்டுமே பேசி வந்துள்ளது. ஒரே ஆணை வாழ்நாளெல்லாம் பூஜித்து வருவது, ஒருவனுக்கு ஒருத்தி, எத்தனையோ பொய் சொல்ல வேண்டிய தருணங்களிலும் வற்புறுத்தி உண்மையே பேசுவது, கோபம் பொத்துக்கொண்டு வரும் போதெல்லாம் அதை அடக்கி வைப்பது, சாந்தமாகப் பேச முயற்சி செய்வது. இதன் உச்சநிலையாக இயல்பாகக் கடந்து செல்ல வேண்டிய பாலுணர்வை, அடக்கி, காயப்படுத்தி, ஒரு நோயாளி போல் திரிவது. இந்த ஒருவழிப்பாதையில் மனம் பயணம் செய்தால்தான் வாழ்க்கை ஒரு நேர்கோடு போல சரியாக இருக்கும் என்பது தர்க்க மனதின் ஒரு தேற்றம்.



ஆனால் நிஜத்தில் மனம் இரட்டை நிலையைக் கொண்டுள்ளது. அதற்கு செக்ஸ் தேவைப்படுகிறது. கோபம், பொய், கபடம், வஞ்சம், வன்மம் எல்லாம் அதில் கலந்துள்ளது. ஒன்றின் இருப்பை இன்னொன்று ஞாபகப்படுத்துவது போல், சரியானது எப்பொழுதும் தவறானதை ஞாபகப்படுத்தி விடுகிறது. அதனால் இரட்டை நிலையைப் புரிந்துகொண்டவர்கள் சமன்நோக்கு பற்றி சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள்.


காந்தி தனது சுயசரிதையில் சொல்வதாக எப்பொழும் ஓஷோ குறிப்பிடுவது, தான் 20 ஆண்டுகளாக பிரம்மசரியத்தை கடைப்பிடித்து வந்தாலும் இப்பொழுதும் தூங்குவதற்கு முன்னால் பாலுணர்வு எண்ணங்களில் இருந்து மனதைக் காக்க புத்தகங்களை கண்சொக்கும் வரை படிக்க வேண்டியதிருக்கிறது என்று காந்தி கூறியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார. ஒரு மனிதன் மனதின் இரட்டை நிலையை இத்தனை வருடங்களாகப் புரிந்து கொள்ளாமல் இப்படியா பாலுணர்வை ஒரு குளவிக்கூடு போல ஆக்கிக் கொள்வான் என்கிற ஆதங்க நிலையாகக் கூட இருக்கலாம்.


காந்தி உடலையும், மனதையும் வற்புறுத்துவதில் மட்டுமே தேர்ச்சி பெற்றவர். அவர் நிச்சயமாக ஒரு ஆன்மீக எடுத்துக்காட்டாக இருக்க முடியாது. ஆனால் காந்தி தான் எடுத்துக்கொண்ட ஒரு விஷயத்துக்காக எடுத்துக்கொண்ட நேர்மை அதீதமானது. அந்த அளவுக்கே அவரைக் கொண்டாடலாம்.


தன் பிரியத்திற்குரிய நானி இறந்தபோதுகூட கண்ணீர்விடாத ஓஷோ, காந்தி இறந்தபோது தாரை தாரையாகக் கண்ணீர் விட்டதாகக் கூறியுள்ளார். எதனால் அப்படி என்று தனக்கே விளங்கவில்லை என்று கூறியுள்ளார். காந்தியின் உடலைப் பார்ப்பதற்காக ரயிலேறிச் சென்றதாகக் கூறியுள்ளார். ஓஷோவின் தந்தை இந்தக் காட்சியை எல்லாம் பார்த்துவிட்டு உன்னை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று கூறியதாகக் கூட எழுதியுள்ளார்.


ஓஷோவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியில்,


காந்தி ஏன் தனக்குத் துணையாக இரண்டு பெண்களை அருகில் வைத்துக் கொண்டார், என்று கேட்கப்பட்டது. அதற்கு ஓஷோவின் பதில்,


இது காந்தி பிரம்மசரியத்தில் செய்த மாபெரும் புரட்சி என்று எழுதியுள்ளார்.


அதாவது பிரம்மசரியத்தின் உச்சம் என்பது பெண்கள் மீதான முழுதான காமம் கடந்த நிலை, அந்நிலையில் பெண்களை அருகில் வைத்துக் கொள்வதில் எந்தவிதமான உள்மனக் குத்தலும், தயக்கமும் இல்லாமல் இயல்பாக காந்தியைப் போல் இருக்கமுடியம் என்பதாக அதன் அர்த்தம் என்றே நினைக்கிறேன்.


ஓஷோவின் காந்தி மீதான சில நுண்மையான வாதங்களை அவதானிக்கும்போது, அவருக்கு காந்தியின் நேர்மை மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்ட ஆதங்கம் மட்டுமே விரவலாக அவருடைய பேச்சில் தெரிவதால் காந்தியை வசைபாடுகிற ஓஷோவே பரவலாகக் காணப்படுகிறார்.


காண்டேகரின் யயாதி நாவலில் ஒரு இடத்தில் முகுலிகை (பணிப்பெண்) கூறுவாள், தன்னிடம் வரமாட்டேன் என்று முதல்நாள் கூறிவிட்டுச் சென்ற யயாதி (அரசன்), மறுநாள் அவளிடம் சரசம் செய்வதற்காக வந்து நிற்பான், ஆனால் முகுலிகை அவன் வரவை எதிர்பார்த்து தன்னை தயார்செய்து கொண்டு வாசலிலேயே நிற்பாள். யயாதி கேட்பான்,‘நான்தான் வரமாட்டேன் என்று சொன்னேனே, நீ எப்படி எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாய்”? அதற்கு முகுலிகை கூறுவாள்,


‘ஆண்களைப் பொறுத்தவரை பெண்களிடம் அவர்களின் பதில் வாயிலிருந்து வருவதில்லை கண்களிலிருந்துதான் வருகின்றன, நேற்று நீங்கள் பார்த்த பார்வையில் வருவேன் என்றுதான் கூறினீர்கள்.’


முகுலிகையைப் போல் அவதானிக்கத் தெரிந்தால், ஓஷோவுக்கு காந்தியின் நேர்மை மீதான மதிப்பு வெளிப்படையாகத் தெரியும் என்றே நினைக்கிறேன். அவரின் காந்தி மீதான வசவு, மனதின் இரட்டை நிலை மீதான வசவு என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.


-சூர்யா



அன்புள்ள சூர்யா,


உங்கள் கடிதத்தில் பெரும்பாலும் எனக்கு உடன்பாடே. சில மேலதிகக் குறிப்புகளை மட்டும் கொடுக்க விரும்புகிறேன், நான் முன்பே எழுதியவைதான்.


காந்தி கடைப்பிடித்த காமம் சார்ந்த நோக்கு என்பது இந்தியாவின் பழமைவாத அணுகுமுறை அல்ல. இந்தியாவின் மரபு காமத்தை பார்த்த விதம் மூன்று தளங்களில் இருந்தது எனலாம்.


ஒன்று சாதாரண மனிதர்களுக்கான அன்றாட ஒழுக்க நோக்கு. அது காமத்தை ஒரு பெரும்பாவமாக எண்ணி அதற்கு எதிராக புலன்களை இறுக்கி மனதை நெருக்குவதல்ல. முடிந்தவரை அதைச் சீண்டாமல் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது மட்டுமே. மனதை வேறுவிஷயங்களில் திசைதிருப்புவதும், காமத்தை கலையாக உன்னதப்படுத்திக்கொள்வதும் அதன் உத்திகள்.


இரண்டாவது தளம் துறவிகள் மற்றும் யோகிகளுக்குரியது. அது முழுமையான ஒரு பயிற்சியாக பல படிகளாக இங்கே வளர்ந்திருந்தது. காமத்தை அவதானிப்பது, அதை காமத்தைவிட பெரிய மனநெகிழ்வுகள் மூலம் விலக்குவது, சிந்தனைத்தளத்தில் அதை அற்பமானதாக சுருக்கிக்கொள்வது, அதற்கான உடல்சார்ந்த பயிற்சிகள், அதற்குரிய அக-புறச்சூழல்களை உருவாக்கிக் கொள்வது என பல நடைமுறைவழிகள் அதற்குண்டு.


மூன்றாவது தளம் தாந்த்ரீகம். காமத்தை குறியீடாக ஆக்கிக்கொள்வது, அக்குறியீட்டுச் செயல்பாடுகள் மூலம் அதைக் கடந்துசெல்வது என அதற்கான வழிகள் இருந்தன.


இம்மூன்று வழிகளுக்குள்ளும் காந்தியின் காமம் சார்ந்த எண்ணங்களும் சோதனைகளும் அடங்காது. காந்தியின் காமம் சார்ந்த மனப்படிமம் அவரது குடும்பத்தின் சமணப்பின்னணியில் இருந்து வந்தது. அவரது ஆரம்பகால குருவான ராஜ் சந்திராவிடமிருந்து கற்றுக்கொண்டது. ஆனால் அவரிடமிருந்து புலனடக்கத்தை ஒரு யோகமாக முழுமையாகக் கற்க காந்திக்கு வாய்க்கவில்லை.


காந்தி இளவயதிலேயே பழகிய மேலைச்சூழலே காமம் சார்ந்த அவரது சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் வடிவமைத்ததில் பெரும்பங்கு வகித்தது. அவர் சமணத்தின் தரிசனத்தை விக்டோரிய ஒழுக்கவியலுடன் கலந்துகொண்டார். பிரம்மசரியம் என்பது யோகம். காந்தி அதை கிறித்தவமரபின் மூர்க்கமான புலனொறுத்தலுடன் இணைத்துக்கொண்டார்.


காந்தியின் பிரம்மசரிய சோதனைகளில் நிகழ்ந்த கொந்தளிப்புகளின் காரணம் இதுவே. ஒரு யோகமாகச் செய்யவேண்டியதை வெறும் பயிற்சியாகச் செய்தார். கடைசி காலத்தில் யோகப்பயிற்சிகளை முறையான குருவழிகாட்டல் இல்லாமல் செய்ய ஆரம்பித்தார்.


ஆனால் ஒன்றுண்டு, காமத்தைப்பற்றிய அறிதலில் காந்தி எந்த அளவுக்குத் தவறான முன்னுதாரணமோ அந்த அளவுக்கு ஓஷோவும் தவறான முன்னுதாரணம்தான். ஓஷோ சொன்னவை எல்லாமே எதிர்வினைகள். அதாவது காமத்தை அஞ்சி ஒடுங்கிய ஆசாரவாத மனதுக்கு அவர் அளித்த எதிர்ப்பு மட்டும்தான் அவை.


ஓஷோ காமம் பற்றிச் சொல்பவை எல்லாமே வெறுமே வாசிக்கவும் அரட்டையடிக்கவும் மட்டுமே உகந்தவை. அதற்கு அப்பால் எவராவது அதை முயற்சி செய்தால் முதல்படியிலேயே படுதோல்வியை உணர்வார். அது அவரை மனச்சிக்கல்களுக்கே கொண்டுவந்து சேர்க்கும்.


அதாவது காந்தி சொன்ன மூர்க்கமான காம ஒடுக்குதல் எந்த அளவுக்கு அபத்தமானதோ அதே அளவுக்கு அபத்தமானது ஓஷோ சொன்ன காமத்தை விடுதலைசெய்து அவதானிக்கும் வழிமுறை. ஓஷோவை வாய்க்கு அவலாக இல்லாமல் உண்மையாக அவதானித்தவர்கள் மிக விரைவிலேயே இதை அறிவார்கள்.


காந்தியின் வழிமுறையை கடைப்பிடித்தவர் இறுக்கமான மனிதராக ஆவார். ஆனால் அவர் அந்த அர்ப்பணம் காரணமாக பல தளங்களில் வெற்றியை சாதிக்க முடியும். ஆன்மீகதளத்திலும் மக்கள்சேவை தளத்திலும். அப்படி சாதித்த பலரை நாம் காணமுடியும்.


ஆனால் ஓஷோ சொல்லும் வழியை கடைப்பிடித்தவர் தன் ஆளுமையை இழப்பார். வெறும் கேளிக்கையாளராக, உணர்வடிமையாக ஆவார். காமத்தால் முற்றாக விழுங்கப்படுவார். ஓஷோவின் மாணவர்களில் ஒருவர் கூட எதையும் அடையவில்லை. மிகப்பெரும்பாலானவர்கள் மிகச்சீக்கிரத்திலேயே அவரை நிராகரித்தனர். மிச்சப்பேர் போலிகளாக ஆனார்கள்.


சொல்லப்போனால் காந்திக்கும் அவருக்கு நெருக்கமான பெண்களுக்கும் இடையேயான உறவை விட ஓஷோவுக்கும் அவரது பெண்களுக்கும் இடையேயான உறவென்பது வன்முறையும் சுரண்டலும் நிறைந்ததாக இருந்தது. ஒரு பெண்ணிடமும் ஓஷோ நல்லுறவை அடையமுடியவில்லை. முதல்முதலாக மா ஆனந்த ஷீலா ஓஷோவைப்பற்றி அளித்த பேட்டி என்னை அதிரச்செய்ததை நினைவுகூர்கிறேன்.


ஏன்? காமம் ஒருபோதும் தனித்துச் செயல்படுவதல்ல. காமம் எப்போதும் அகங்காரத்துடன் கலந்தது. உங்கள் சொந்த அந்தரங்கப் பகற்கனவுகளை மட்டும் கவனியுங்கள் புரியும். காமம் மட்டும் என்றால் அதற்கு ஓர் எல்லை உண்டு. அகங்காரம் அதை எல்லையற்றதாக ஆக்கிவிடுகிறது. ஒரு கண்ணாடி முன் இன்னொரு கண்ணாடியை வைத்தால் இரண்டுமே எல்லையற்றதாக ஆகிவிடுவதுபோல.


காமத்தின் இந்த எல்லையற்ற தன்மையே அதை அபாயகரமானதாக ஆக்குகிறது. ஓஷோ சொன்னார் என வெள்ளந்தியாக காமத்தை அறிவதற்காக அதில் இறங்குபவன் கடலில் இறங்கிய உப்பு பொம்மையாகவே ஆவான்.


காமத்தை அறிவால் அவதானிக்க மனிதனால் முடியாது. அகங்காரத்தால்தான் அவதானிப்பான். காமம் மனித மனத்தின் அகங்காரத்தைச் சீண்டி அதை விதவிதமான பாவனைகள் கொள்ளச்செய்கிறது. காமத்தை வெல்கிறேன், காமத்தை அவதானிக்கிறேன் என்ற பாவனைகளும் அவற்றில் சிலவே.


காமத்தை கடந்துசெல்ல இந்திய மரபு உருவாக்கிய வழிமுறைகள் நூற்றாண்டுகள் பழமையானவை. பல்லாயிரம் பேரால் பல கோணங்களில் பயிலப்பட்டு மேம்படுத்தப்பட்டவை. அவை நூல்வடிவில் இல்லை. கொள்கைகளாக இல்லை. அவை ஆசாரங்களாகவும் பயிற்சிகளாகவும் உள்ளன. ஒரு நேரடிகுரு இன்றி அவற்றுக்குள் எவரும் செல்லமுடியாது.


ஓஷோவின் நூல்களின் சிக்கலே இதுதான். அவை இந்திய தாந்த்ரீக மரபில் மிக நுட்பமாகச் சொல்லப்பட்டவற்றின் மிக எளிமைப்படுத்தப்பட்ட வடிவங்கள். அவற்றை மேலோட்டமாகப் புரிந்துகொண்டு சும்மா பேசிக்கொண்டிருக்கலாம்.


பெரும்பாலானவர்கள் பேசிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதுதான் ஆறுதலானது. பேச்சு பேச்சாக இருக்கும் வரை ஆபத்தில்லை.


ஜெ


காந்தியும் விதவைகளும்



ஆலயங்களில் காமம்


மேலதிக வாசிப்புக்கு முந்தைய கட்டுரைகள்


தேவியர் உடல்கள்


இங்கிருந்து தொடங்குவோம்…


எம்.எஃப்.ஹுஸெய்ன், இந்து தாலிபானியம்


தாந்த்ரீகமும் மேலைநாடுகளும்: கடிதம்


பொம்மையும் சிலையும்


தாந்திரீகம் பற்றி


காந்தியும் காமமும் – 4


காந்தியும் காமமும் – 3


தொடர்புடைய பதிவுகள்

முட்டாள்களின் மடாதிபதி
கிரிமினல் ஞானி
ஓஷோ-கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
ஐரோப்பாக்கள்
வினோபா, ஜெபி, காந்தி
காந்தியின் திமிர்
காந்தி, கிலாஃபத், தேசியம்
சந்திரசேகர சரஸ்வதி
காந்தியும் விதவைகளும்
காந்தியின் சனாதனம் — கடிதங்கள்
காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்
காந்தியின் சனாதனம்-6
காந்தியின் சனாதனம்-5
காந்தியின் சனாதனம்-4
காந்தியின் சனாதனம்-3
காந்தியின் சனாதனம்-2
காந்தியும் சனாதனமும்-1
ஆலயங்களில் காமம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 08, 2012 11:30

கிரிமினல் ஞானி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு…நலமென நம்புகிறேன்.


முட்டாள்களின் மடாதிபதி என்ற தலைப்பை ஓஷோவின் படத்துடன் பார்த்தவுடன் எனக்கு ஒரு உண்மை புரிந்து போயிற்று…எங்கோ யாரையோ தூண்டுகிறீர்கள் என்று. ஏன் என்றால் உங்களின் இந்து ஞான மரபில் ஆறு தத்துவங்கள் படித்தபொழுது அவர் உலக ஞான மரபை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர் என்று எழுதி இருக்கிறீர்கள். அவர் மடத்தில் முட்டாள்கள் இருந்திருக்கலாம், ஆனால் அவர் முட்டாளாக இருக்க வாய்ப்பே இல்லை. இதை அவர் மீது எனக்கு இருக்கும் நன்றி உணர்ச்சியினால் கூறுகிறேன்.


எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.. 24 வயதில் எனக்கு ஓஷோ புக்ஸ் மட்டும் கிடைக்கவில்லை என்றால் நான் இப்பொழுது எல்லோரையும் கடித்துக் கொண்டுதான் இருந்திருப்பேன். என்னுடைய உணர்ச்சி வேகம் அப்படிப்பட்டது. எப்பொழுதும் கொந்தளித்துக்கொண்டே இருக்கும் மனதை சற்று புரிய வைத்து ஓஷோவின் புக்ஸ் மட்டுமே. காரணம் நான் ஒரு மாதிரி மிகவும் கண்டிப்பான சூழலால் வளர்க்கப்பட்டவன். எனக்கு சொல்லிக் கொடுத்த உலகம் ஒரு மாதிரி. ஆனால் கல்லூரி முடித்து வெளிவரும்பொழுது நான் எதிர்கொண்ட உலகம் வேறு மாதிரி இருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள எனக்கு நிறைய காலம் ஆனது. எனக்குத் தோன்றிய முதல் கேள்வியே எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்கும் சூழ்நிலை இருந்தும் அதை ஏன் போராடிப் பெற வேண்டும் என்பதே.. மனிதனுக்கும் இருக்கும் இந்த ஈகோவை என்னால் புரிந்து கொள்ள நிறைய காலம் எடுத்தது.


ஆனால் இதற்கு விடை எங்கெங்கோ தேடினேன். எல்லோரும் எனக்கு “மனிதனாய் பிறந்தால் நிறைய கஷ்டப்பட வேண்டும்; இலக்கு இருக்க வேண்டும்; பொருளால் அனைவரையும் கவர வேண்டும்; சமுதாயத்தில் அப்பொழுதுதான் மதிப்பு இருக்கும்” இப்படியே அறிவுரை கூறி என்னை சாகடித்தார்கள். என்னுடைய சாதாரண சிறுபிள்ளைத்தனமான கேள்வியைப் புரிந்துகொள்ளக் கூட முயலாமல் கேள்வியை முடிக்கும் முன்னரே அறிவுரை ஆரம்பம் ஆகிவிடும். மீறி கேள்வி கேட்டால் இப்படி எல்லாம் யோசிக்கக் கூடாது என்று சுலபமாக முடித்துக் கொள்வார்கள்.


எனக்கு ஒரே ஒரு வழி புத்தகம் மட்டுமே. அப்படிப் படித்ததால்தான் உங்கள் புத்தகங்கள் வரை வந்து சேர்ந்தேன்.


ஓஷோவின் புத்தகங்கள் வழியாக உலகைப் பார்க்கும்பொழுது தான் முதலில் எனக்கு ஒரு மாற்றுசிந்தனை கிடைத்தது. ஒவ்வொன்றுக்கும் அவர் கொடுத்த அறிவியல் மற்றும் வரலாறு பூர்வமான விளக்கங்கள் தர்க்கங்கள் எனக்கு ஒரு பெரிய relief கொடுத்தது. அதே சமயம் ஒரு 15 புத்தகங்கள் படிக்கும்பொழுது குழப்பமும் ஏற்பட்டது.


ஓஷோவின் மீது ஒரு பெரிய குற்றசாட்டே பாலியல் சம்பந்தமானதுதான். முறையற்ற பாலியல் உறவை ஆதரிக்கிறார் என்றுதான். சில புத்தகங்களில் அப்படியும் உள்ளது. ஆனால் அவருடைய தந்திரா போன்ற உரைகளை வாசிக்கும்பொழுது அவர் கூறுகிறார், ஒரு ஆணுக்கு “ஒரு பெண்” என்பவள் மிக மிக அதிகம் என்று.


பசுவை அம்மா என்று அழைப்பவர்கள் காளை மாட்டை அப்பா என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்று கேட்கிறார் . அதே சமயம் பசுவை நாம் ஏன் அம்மா என்று அழைக்கிறோம் என்ற விளக்கத்தை இன்னொரு உரையில் விளக்குகிறார். ஜோதிடம் ஒரு பெரிய பொய் என்கிறார். அதே சமயம் ஒரு சமயம் ஜெர்மனியில் உள்ள போர் தளபதிகளின் பெரும்பாலான ஜாதகங்களைப் பார்க்கும்பொழுது அவர்களுக்கு செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகக் கூறுகிறார். மகாபாரதம் ஒரு பெரிய playboy நாவல் என்கிறார். அதே சமயம் அவற்றுக்கு அவர் அளித்த உரை ஒரு 25 volume வெளி வந்துள்ளது.


இந்த முரண்பாடு எனக்கு மறுபடியும் மலைப்பை ஏற்படுத்தியது. மேலும் படிக்க ஆரம்பித்தேன். இந்த மாதிரி உலகியல் ரீதியான விஷயங்கள் எல்லாம் மேல்மனதில் உள்ள எண்ணங்களை மோதவிடுவதுதான். குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போன்று. இன்னும் கொஞ்சம் நுண் உணர்வு மிக்கவர்கள் இதை ஈசியாகக் கடந்து விடுவார்கள். இன்னும் கொஞ்சம் ஆழ் மனதிற்குள் நகர ஆரம்பிப்பார்கள். மேம்போக்காகப் படிப்பவர்கள் இதை மட்டுமே வைத்துகொண்டு சமுதாயத்துடன் மோதிக் கொண்டிருப்பார்கள். நான் ஓஷோவின் ரசிகன் என்று மிகவும் திமிருடன் நடப்பவர்களை நேரில் கண்டிருக்கிறேன். இதை ஓஷோவிற்குக் கிடைத்த சாபம் என்றுதான் சொல்ல வேண்டும்.


சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஓஷோ ஒரு கடல். அவர் ஒரு ஒரு சிறிய குழுவுக்கு சொந்தக்காரர் அல்ல. அவர் மிகக் கடுமையான விதிகளுக்கு உட்பட்டு யோகா வழியாக ஞானத்தை அடைபவனுக்குப் பேச வேண்டியதாயிற்று அதே சமயம் எஸ்கிமோ மக்களுக்காகவும் பேச வேண்டியது ஆயிற்று. பதஞ்சலி பற்றியும் விளக்க வேண்டியதாயிற்று அதே சமயம் zorba மனிதனுக்கும் விளக்க வேண்டியதாயிற்று. மொத்தத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள விதையை , ஞானத்திற்கான உரிமையை அதற்கான சந்தர்ப்பங்களை அவர் பேசினார். காலம் அப்படி. இதே புத்தருக்கு இவ்வளவு படிக்க வேண்டிய பேச வேண்டிய நிர்பந்தம் இல்லை. அப்பொழுது இருந்த மக்கள் வேறு. ஆனால் இப்பொழுது இருக்கிற மனங்கள் வேறு. இதற்கு ஒரு phd philosophy படித்த புத்தர் தேவை இருக்கிறது. அதற்கு ஓஷோ தேவைப்படுகிறார். நீங்கள் சொல்வது போல் இது காலத்தின் கட்டாயம் ஆகும்.


மௌனத்தின் அழகைக்கூட வார்த்தையைக் கொண்டே விளக்க வேண்டி இருக்கிறது. ஜக்கி வாசுதேவ் ஒரு உரையில் சொல்வது போல் என்னை பேசாமல் இந்த இடத்தில இருக்க விடுங்கள் நீங்களும் அமைதியாக இருங்கள் இந்தச் சூழ்நிலையை மிகவும் ரம்மியமாக மாற்ற முடியும் என்கிறார். நாம் கேட்போமா என்ன??


யார் ஒருவன் ஓஷோவை தெரிந்து கொள்ள படிக்கிறானோ அவன் கண்டிப்பாக தோல்வியைத்தான் தழுவ இயலும். யார் ஒருவன் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள படிக்கிறானோ அவனுக்குப் பல திறப்புகள் உண்டு. விஷ்ணுபுரத்தில் அவர் ஒரு கதாபாத்திரம் அல்ல….விஷ்ணுபுரம் அவர் பேசியதைப் புரிந்துகொள்ள கிடைத்த ஒரு சின்ன சந்தர்ப்பம்.


நிறையவே சொல்லிக் கொண்டு போகலாம். எனக்கு அதில் விருப்பமும் இல்லை. நான் இதை எழுதினேன் என்றால் நீங்கள் ஒரு தவறான உதாரணத்தை உங்களை படிப்பவர்களுக்குக் கொடுத்து விடக்கூடாது என்பதற்காகவே..


பி.நடராஜன்



அன்புள்ள நடராஜன்,


நான் ஓஷோவைப்பற்றி கேள்விப்பட்டது முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்பு. அப்போது அவர் பகவான் ரஜனீஷ்தான். பெரிய அளவில் பணஆதரவோ புகழோ இல்லாமலிருந்தார். அவர் அன்று பேசப்பட்டது அவரது கடுமையான மட்டையடி தாக்குதல்களுக்காக. காந்தியையும் இந்திராகாந்தியையும் அவர் ஆபாசமாக வசைபாடுவது தொடர்ந்து பிரசுரமாகிக்கொண்டிருந்தது.


அவர் புனாவின் போலீஸ் அதிகாரி ஒருவரை கடுமையாக விமர்சித்துப்பேச அந்த போலீஸ் அதிகாரி அவரது ஆசிரமத்தை சோதனையிட்டார். அச்செய்தியே நான் முதலில் வாசித்தது. அவர் இந்திராகாந்தியை தாக்கியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ஓஷோ அவசரநிலைக் காலகட்டத்தில் ஊடகங்களில் வாய் திறக்கவில்லை.


இல்லஸ்ட்ரேடட் வீக்லி அவரது ஆசிரமம் ஒரு காமப்பரிசோதனைச்சாலை என்ற வகையில் படங்களுடன் செய்தி வெளியிட்டு பெரும்பரபரப்பை உருவாக்கியது. அந்தப்படங்களில் சில தினத்தந்தியில் வெளியாகி அதிர்ச்சியளித்தன. அந்த இதழுக்காக நாங்கள் அலைந்து திரிந்தோம். அதை ஒரு ஆசிரியர் எங்களுக்குக் கொடுத்தார்.


அந்தச் செய்தியும் படங்களும் ஓஷோவாலேயே திட்டமிட்டு அந்த இதழுக்குக் கொடுக்கப்பட்டவை எனப் பின்னர் தெரியவந்தது. அவர் எதிர்மறை பரபரப்பின் மூலமே தன்னை பிரபலப்படுத்திக்கொண்டவர். பாலியல் சோதனைகள் பற்றிய செய்திகளால் அவர் சட்டென்று உலகமெங்கும் பரவலாக அறியப்படலானார். அவரது ஆசிரமத்துக்கு வெள்ளையர் வந்து குவிந்தனர். பணம் வந்து கொட்ட ஆரம்பித்தது. இன்றைய ஓஷோ அவ்வாறு உருவாகி வந்தவர்.


ஓஷோவின் நூல்களை நான் மேலும் இருவருடங்கள் கழித்து ஓர் ஆசிரியர்வழியாக பெற்றுவாசிக்க ஆரம்பித்தேன். அப்போது அவர் உயிருடனிருந்தார். அலைந்து திரிந்த நாட்களில் அவரைச் சந்திக்க புனா சென்றிருக்கிறேன். அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பிவந்த நாட்கள் அவை. அவரைச் சந்திக்க முடியவில்லை.


அதன்பின்னர் ஓஷோவை தொடர்ந்து வாசித்து சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். என்னுடைய கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்படும் மிகச்சிலரில் அவரும் ஒருவர். குறிப்பாக இந்திய தத்துவமரபை புரிந்துகொள்வதற்கு ஓஷோ ஒருவகையில் தவிர்க்கமுடியாதவர் என்பது என் எண்ணம். அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.


ஓஷோ பற்றிப் பேசுபவர்களை நான் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கிறேன். அவர்களிடம் இருக்கும் வெள்ளந்தித்தனம் வருத்தமூட்டுகிறது. ஒருசில நூல்களை வாசித்து அவர்கள் ஓஷோ மீது கொள்ளும் பற்றும் பக்தியும், தாங்கள் மெய்ஞானத்தின் படிகளில் இருப்பதாகக் கொள்ளும் பிரமையும் எல்லாம் பரிதாபகரமானவை.


ஓஷோ வெள்ளந்தியான வாசகர்களுக்கு உரியவர் அல்ல. மூளையில் கத்தியுடன் அணுகக்கூடியவர்களுக்கு உரியவர். பக்தர்களுக்கு மிக அபாயமான வழிகாட்டி அவர், அவருடன் போர் புரிபவர்களுக்கு மட்டுமே ஓஷோ பயன்படுவார்.


அந்தக்குறிப்பை ஓஷோ பக்தர்களைப் புரிந்துகொள்ளவே எழுதினேன். அது ஓஷோ பாணியிலானது என்று சொல்லலாம். சொல்ல வேண்டிய அனைத்துமே அதில் உள்ளன, சீண்டலாகவும் நுட்பமாகவும் சொல்லப்பட்டுள்ளன. அதற்கு வந்த எதிர்வினைகளில் எவருமே அந்தக் கட்டுரையை புரிந்துகொள்ளவில்லை என்பதையே கண்டேன். எந்த ஒரு சாதித்தலைவரை, அரசியல்தலைவரை, மடாதிபதியை விமர்சித்தாலும் வரக்கூடிய அதேவகையான எதிர்வினைகள்.


‘முட்டாள்களின் மடாதிபதி’ என்று எழுதியிருந்தேன். ஆனால் கட்டுரைக்குள் அவர் ஞானி என்று சொல்லியிருந்தேன். அப்படியானால் யாருக்கு ஞானி? இந்தச் சின்ன வினாவுடன் அக்கட்டுரையை வாசித்திருந்தால் நான் சொல்லவந்ததை புரிந்துகொள்ளமுடியும்.


ஓஷோ மடாதிபதி அல்ல. அவரை அப்படிக் காண்பவர்கள் முட்டாள்கள். அவர் ஞானி. அவரை மடாதிபதியாக அணுகாதவர்களுக்கே அவர் ஞானி. ஒரு மடாதிபதியிடம் எதிர்பார்க்கும் எதையும் அவரிடம் எதிர்பார்க்கலாகாது. அவரது அத்துமீறலே அவரை ஞானியாக்குகிறது. ‘கிரிமினல் ஞானி’ என்ற சொல்லாட்சி உருவாக்கும் சீண்டல்தான் ஓஷோவைப் புரிந்துகொள்ள சரியான திறப்பு.


சரிதான், இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப்பேசுகிறேன்.


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

காந்தி காமம் ஓஷோ
ஓஷோ-கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
முட்டாள்களின் மடாதிபதி
தத்துவம், தியானம்-கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 08, 2012 11:30

May 7, 2012

காந்தியின் திமிர் பற்றிய குறிப்புகள்

எனக்கு கடந்த 35 வருடங்களாக இந்த இழவு விஷயம் புரியவே மாட்டேன் என்கிறது – அது என்னவென்றால் – கை நிறையச் சம்பாதிப்பவர்கள், இலக்கியங்களை, தரமானவற்றை நோக்கிச் செல்ல விரும்புபவர்கள் – புத்தங்களைக் கடன் வாங்கி மட்டுமே படிப்போம் என்று பிடிவாதம் பிடிப்பது! நாம் ஏதோ புத்தக அறிமுகம் செய்கிறோமா? ஒரு புத்தக ஆர்வமுடைய ஆனால் வசதி இல்லாத இளைஞருக்கு உதவி புரிய நினைக்கிறோமா?

[image error]




ஜெயமோகன்: ’காந்தியின் திமிர்’ பற்றிய குறிப்புகள்


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2012 11:30

எறும்புகளின் உழைப்பு – பிரகாஷ்

எறும்புக் கூட்டங்களின் அதிகார அடுக்குகளில் எல்லா எறும்புகளும் வேலைத் திறனில் சமம்தான் என்று இதுநாள் வரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் இது உண்மையில்லை என்றும், ‘விஷயமறிந்த’ தனிப்பட்ட சில எறும்புகளின் தீர்மானங்களே மொத்தக் கூட்டத்தையும் புதிய வாழ்விடங்களை நோக்கி வழி நடத்துகின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்டல் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பற்றிய சுட்டி இங்கே… http://www.wired.com/wiredscience/2011/08/experienced-ants/


விஷயம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த அறிவியல் தகவலை நாம் நன்கு அறிந்த சிலர் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தால்…


1 . ‘வசவு புகழ்’ சகா.செம்பட்டை :



“மார்க்சியம் என்றும் அறிவியல் பூர்வமாகவும், வரலாற்றின் இயங்கியல்படியும் தான் இயங்கும் என்பதை அறியாத வலதுசாரி, பாசிச வெறி பிடித்த, முதலாளிகளின் கைக்கூலியான, தொழிலாளர் வர்க்க எதிரிகளான, ஆன, ஆன, ஆன கயவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் நவீன அறிவியல் நமது மூத்த தோழர் மார்க்ஸ் சொன்னது உண்மை என்று நிரூபித்து விட்டது. உழைப்பாளர் வர்க்கமாகிய வேலைக்கார எறும்புகளை வழிநடத்தி தோழர் மார்க்ஸ் வகுத்த செம்புரட்சிப் பாதையில், சமத்துவ சமூகத்துக்கான புரட்சியை ப்ரோலட்டேரியன் எறும்புகளே முன்னின்று நடத்துகின்றன என்பதை செவ்வெறும்புகளை வைத்து விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளார்கள். இதை அறியாத வலதுசாரி, பாசிச வெறி பிடித்த, முதலாளிகளின் கைகூலியான, தொழிலாளர் வர்க்க எதிரிகளான, ஆன, ஆன, ஆன………


2 . ‘காசிரங்கா புகழ்’ ஹரிராம்ஜி தீனதயாள்ஜி அக்னிஹோத்ரிஜி மகாராஜ்:


‘ப்ராஹ்மநோஸ்ய முகமாசீத்’ என்ற வாக்யத்தால் முகத்தில் தோன்றிய பிராமணனே பிரம்மத்தை உணர்ந்தவன் என்று சொல்கிறது ஸ்ரேஷ்டமான வேதம். ஆர்யனாகிய பிராமணனே லோகக்ஷேமத்திற்காகவும், இதர வர்ணங்களின் உஜ்ஜீவனத்திற்காவும் பிரம்மவித்யையை அனுஷ்டானம் பண்ணி சகலஜனங்களையும் மோக்ஷ சாம்ராஜ்யத்திற்கு உத்தாரணம் பண்ணுகிறான்ங்கிறதை இப்போ விக்ஞான சாஸ்த்ரகாராளே பிபீலிக சமூஹத்தை வச்சு சம்சோதனம் பண்ணி நிரூபணம் பண்ணிவிட்டார்கள். ஆகையினாலே ஸ்ரேஷ்டமான வேதம் சொல்கிறாற்படி அவரவர்கள்…


3 . பேரா.முனைவர். அற்புதப் பாண்டியன்:


ஆதிமந்திவமிசத்தாரே லெமூரியக் கண்டத்து மூத்த தமிழ்க் குடிகள், என்று நாட்டுப்புறவியலை அடிப்படையாக வைத்து குரங்கிலிருந்து பரிணமித்த ஆதிமனிதன் செந்தமிழனே என்று நான் நிரூபித்தபோது எள்ளிநகையாடி எக்காளமிட்ட ஆரிய சதிகாரர்கள் மீண்டும் கைபர்கணவாய் வழியாக ஓடும்படி ஒரு வெள்ளைத் தமிழன் (ஆரிய திராவிட கலப்பு சதியில் நிறம்மாற்றப்பட்ட அப்பாவி ஆதிதமிழன்) கரிய எறும்பு இனங்களை வைத்து அறிவியல் ஆராய்ச்சிசெய்து நிரூபித்துள்ளான். கரிய எறும்புகள் திராவிட இனம் என்பது சொல்லத் தேவை இல்லை. தங்கள் வாழ்விடம் அழிந்தபோது அவை வடக்கு நோக்கி நகர்ந்து இன்னொரு வாழ்விடத்தைக் கண்டுகொண்டு மற்ற திராவிடத் தமிழ்ச் சகோதர்களையும் வழிநடத்திச் சென்றதை நாம் லெமூரிய கண்டத்து ஆதிமந்தி மக்கள் கடல்கோளின் போது வடக்கு நகர்ந்து குமரிகண்டம் வந்ததுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். அனால் இந்த ஆரியச் சதியாளர்கள்…


4 . பிரபல தோமாகிறித்தவ ஆய்வாளரும் அதன் நிறுவனருமான முனைவர். ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள்:


ஆவிக்குப் பிரியமானவர்களே.. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்” (யாத்திராகமம் 33:14) என்றபடியாலே, மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவே குஞ்சாடுகளை தன் பிதாவினிடத்தில் கொண்டுசெல்லுகிறார் என்பதை பரிசுத்த வேதாகமத்தில் தேவவசனங்கள் சொல்லுகிறபடிக்கு தேவனுடைய கிருபையாலே..ப்ரைஸ் தி லார்ட்… நமது அன்பிற்குரிய சயன்டிஸ்ட் சகோதரர்கள் கர்த்தருடைய படைப்பிலே கீழ்மையான எறும்புக் கூட்டங்களை வைத்து விஞ்ஞான ஆராய்ச்சி செய்து தேவனுடைய சத்திய வாக்குகளின் மகிமையை நிரூபித்து, ப்ரைஸ் தி லார்ட்… சேசுவுக்கு சாட்சியம் தந்துள்ளார்கள். பாவிகளாகிய மற்ற எறும்புகளை மீட்டு பரலோகத்திற்கு பரமபிதாவினிடத்திலே அழைத்துச் செல்லுபவை சுவிசேஷகர்களாகிய புனித எறும்புகளே என்பதையும் கர்த்தருடைய வல்லமையினாலே நிரூபித்துள்ளனர். சகோ.பேரா. முனைவர். அற்புதப் பாண்டியன் சொன்னது போலே தேவன் தம்முடைய மெய்யான வாக்குத்தத்தத்தின் படி மெய்யாகவே மெய்யாகவே புனித தோமையர் மூலம் பாவிகளாகிய ஆதிமந்தி வமிசத்தாரை தேவனுடைய இராஜாங்கத்துக்கு அழைத்துச் சென்றார் என்பதையும் இங்கே பிரசங்கிக்கிறேன். ப்ரைஸ் தி லார்ட்… அல்லேலூயா…யா..யா..


5 . ‘நான்காவது கொலை புகழ்’ மிஸ்டர் ஷெர்லக் ஹோம்ஸ்:


பிரிட்டிஷ் பாரம்பரியப்படி மோவாயைத் தூக்கிக் கொண்டு நடந்து வந்து, “மிஸ்டர். வாட்சன், மேன்மை தாங்கிய மகாராணியாரின் மேன்மைதங்கிய அரசாட்சியில் உங்களுக்கு இந்த நாள் இனிமையாக அமையவேண்டுமென்று வாழ்த்த விரும்புகிறேன் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்”. “அபாரம் மிஸ்டர் ஹோம்ஸ்” என்றார் மிஸ்டர்.வாட்சன். “சூரியன் மறையாத நமது பிரிட்டிஷ் அரசாட்சியில், நமது மேன்மை தாங்கிய மகாராணியாரின் தலைமையில் பிரிட்டிஷ் கனவான்களே உலகை வழிநடத்துகிறார்கள் என்பதை என் துப்பறிவில் கண்டுபிடுத்துள்ளேன் என்பதை பிரிட்டிஷ் தன்னடக்கத்துடன் உங்களிடம் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்பதைத் தெரியப்படுத்த விரும்புவதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்பலாமா மிஸ்டர் வாட்சன்?” பைப் புகையை வானத்தை நோக்கி விட்டபடி கண்ணடித்தார் மிஸ்டர் ஹோம்ஸ்.

“அபாரம் மிஸ்டர்.ஹோம்ஸ், நீங்கள் அந்த எறும்புகளின் பின்னால் இரவில் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே ஊர்ந்து செல்லும்போதே நான் ஊகித்திருக்க வேண்டும். காளைச் சாணம்… ஓ..என் தெய்வமே… பிரிட்டிஷ் மரபை மீறி காளைச் சாணம் என்ற வார்த்தையை பிரயோகப்..ஆ..என் தெய்வமே மறுபடியும் சொல்லிவிட்டேன்….நீங்கள் பிரிட்டிஷ் மரபு அனுமதித்தால் என்னை மன்னித்துவிட்டீர்கள் என்று நான் நம்பலாமா என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்பதை மகாராணியாரின் மீதுள்ள விசுவாசத்தின் பேரில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்பதை சொல்லக் கடமைப்பட்டுளேன் என்று……. “


6.மார்க்க அறிஞர், விஞ்ஞான பேச்சாளர் ஹாஜி பாதுஷா பின் குலாப் ஷா ஹுசைன் அல் ஜாகிர் கல் நாயக்:




 “மனிதர்களை கொஞ்சம் தூசி, கொஞ்சம் திரவம் எல்லாம் கலந்து நான் படைத்தேன் (35 : 11). இந்த எறும்பு சமாச்சாரத்தை எல்லாம் விட அற்புதமான கண்டுபிடிப்புகளை 1400 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லியாச்சு. எம்பிரியாலாஜி (2:222, 2:233, 33:4, 40:67, 76:2), அஸ்ட்ராணமி (32:5, 10:5, 78:12-13, 27:40) இன்னும் ராக்கெட் தயாரிக்கிறது, சேட்டிலைட் தயாரிக்கிறது, அணுகுண்டு தொழில்நுட்பம், க்ளோனிங் பண்றது எல்லாமே ஏக இறைவனின் வார்த்தைகளில் இருக்கு பிரதர்ஸ். இனிமே கண்டுபிடிக்கப்போற அறிவியல் எல்லாம் இருக்கு பிரதர்ஸ். அதெல்லாம் யாராவது கண்டுபிடிச்சப்புறம் இறைவாக்கில இருந்து நாங்க கண்டுபிடிச்சு ஒன்னொன்னா உங்களுக்கு சொல்வோம் பிரதர்ஸ்.




7 . “ஆபிரகாமிய ஆப்பு”, “நம்பக்கூடிய அறிவியல்” புகழ் ‘அநீ’தி அறியாத அநீ:


இந்துத் தொன்மங்களைக் குறித்து ‘கோட்டி அறிவியல்’ கோட்பாடுகளைப் பரப்பும் முடை நாற்றமெடுக்கும் பழமைவாத   அஃறினைகளைச் சாடியும், போன வருடம் வெளிவந்த இந்த எறும்புகளைப் பற்றிய ஆராய்ச்சியைப் பற்றி விளக்கி நான்கு வருடம் முன்பே ‘திண்ணை’ தமிழ் இணைய இதழில் எழுதியிருந்த அறிமுகக் கட்டுரையையும் மீண்டும் தமிழில் மொழிபெயர்க்க நாக்கில் சுளுக்கு பிடிக்காமல் இருக்க அயோடெக்ஸ் தடவிக்கொண்டு ஒரு குழுவே கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறது . விரைவில் வெளிவரலாம்…

8 . பார்வதிபுரம் B 12 ஸ்டேஷன் ரைட்டர் ஜெயமோகன்:


இயற்கையில் எல்லாமே சமம் இல்லை. உலகை வழிநடத்துபவர்கள் தங்கள் செயலூக்கத்தினால் முன்செல்லும் தேர்வு செய்யப்பட்ட சிலரே. அவர்களை விதிசமைப்பவர்கள் என்று நித்யா ஒருமுறை என்னிடம் சொல்லியுள்ளார். இதையே இன்றைய நவீன நடத்தையியல் அறிவியல் துறையில் எறும்புகளின் சமூக வாழ்வியலை உன்னிப்பாகக் கவனித்துச் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சாங்கிய தரிசனத்தில் இதையே ‘பிபீலிக மார்க்கம்’ என்று விளக்கபட்டிருக்கிறது. நான் பேசும் தளம் வேறு. சாதாரண இணைய வம்புகளை மேயும் ஒருவரால் நான் சொல்லும் கருத்தின் ஆழத்தைப் புரிந்து கொள்ளமுடியாது என்பதை நான் நன்கு அறிவேன். இதனைப் பன்னிப்பன்னி பெரிதாக்கி அவதூறு செய்ய முயலும் ஒருவரின் மனச்சிறுமையை எண்ணி இப்போதெல்லாம் மெல்ல நகைத்துக் கொள்ளப் பழகிவிட்டேன்.


9 . ஒருவாசகரின் கடிதம்:


அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகனுக்கு,


தேர்வு செய்யப்பட்டவர்கள் கட்டுரை படித்தேன். நீங்கள் நித்யா என்று சொல்லியிருப்பது நித்தியைத் தானே? அவர் ஆதீன பீடாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து உங்களின் நுண்ணரசியல் கருத்துக்களை வழக்கம் போல நுழைத்துவிட்டீர்கள். அவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர் எழுதிய ‘கதவைத் திற, வாயை மூடு’ என்கிற புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். இன்னும் நிறைய இருக்கிறது சொல்ல, உங்கள் போன் நம்பர் அனுப்புங்கள்.


-இப்படிக்கு, ம்ருத்வி.


***************************************


-பிரகாஷ்


http://www.jyeshtan.blogspot.in/


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2012 11:30

May 6, 2012

ஓஷோ-கடிதங்கள்

வியாபாரத்தைக் கணக்கில் கொண்டு ஓஷோவை சிலர் அதீதமாக பிரமாண்டப்படுத்திக் காட்டுகிறார்கள் ( இலக்கியத்தில் சுஜாதாவுக்கு நடப்பது போல ) . இந்தச் சூழ் நிலையில் , ஓஷோவைப் பற்றிய ஜெயமோகன் கட்டுரை முக்கியமான ஒன்று.


டீக்கடை ஆன்மீக வாதிகளின் ஆன்மீக விவாதம் குறித்துக் கவலைப்படவேண்டியதில்லை என்றாலும் , ஓஷோவே சொல்லி விட்டார் என காந்தியைப் புரிந்துகொள்வதில் சிலருக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.


அந்தக் கட்டுரையில் ஜெயமோகனின் ஒரு கருத்தில் மட்டும் எனக்கு உடன்பாடுஇல்லை.


“ காந்தியை அவர் இந்தியாவின் பழமைவாத ஒழுக்க நோக்கின் பிரதிநிதியாகமட்டுமே பார்க்கிறார்.காந்தியை உடைக்காமல் இந்திய மனதை உடைக்கமுடியாதென

நினைக்கிறார்.


என எழுதுகிறார் ஜெ.



ஆனால் இத்தகைய நோக்கத்துடன் ஓஷோ காந்தியை விமர்சிக்கவில்லை என்பது ஓஷோநூல்களைப் படித்தவர்களுக்குத் தெரியும். இது குறித்துத் தன் கடைசி காலத்தில்ஓஷோ எழுதி இருக்கிறார். கிட்டத்தட்ட வாழ்க்கை வரலாறு போன்ற நூலில் இதைச் சொல்லும்போது, முட்டாள் இந்திய மக்களிடம் சுலபமாகப் பிரபலமாகும் வழி ,ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்களை மனம்போன போக்கில் அவதூறு செய்வதுதான் எனத் தான் கண்டு கொண்டதாகக் குறிப்பிடுகிறார். பிரபலமாகவும் , ஆபத்து இல்லாதசாஃப்ட் டார்கெட்டாகவும் இருந்த காந்தி இதற்கு சரியான நபர் எனத் தீர்மானித்து , அவரை விமர்சிக்கத் தொடங்கியதாகவும் எழுதி இருக்கிறார்.


இப்படி எல்லாம் புத்திசாலித்தனமாக செயல்பட்ட அந்த ஞானி தன் கூடஇருந்தவர்களால் ஏமாற்றப்பட்டு , முட்டாள் ஆனது வரலாறு.


ஏழைகளையும் , இந்தியாவையும் மனம் போன போக்கினால் திட்டினார். ஏதோ வெளிநாட்டிலேயே பிறந்தவர் போல நடந்து கொண்டார். கடைசியில் வெளி நாட்டினர்இவரைக் கை விட்டதும் , அவரால் அது வரை விமர்சிக்கப்பட்ட இந்தியாதான்அவருக்குத் தஞ்சம் அளித்தது.


எஸ் எஸ் பாண்டியன்


அன்புள்ள ஜெ,


ஓஷோ என்று அழைக்கப்படும் ரஜ்னீஷ் பற்றி ஒரு நல்ல மதிப்பீட்டை அளித்துள்ளீர்கள். சமீபகாலத்திலே இப்படி ஒரு சமநிலையான மதிப்பீட்டை வாசித்ததில்லை. அவரை ஒரு செக்ஸ் சாமியார், போலிச்சாமியார் என்ற ரீதியிலே ஏராளமானவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவருடைய பணவெறி, காமவெறி ஆகியவற்றைப்பற்றி நிறைய வாசிக்கக் கிடைக்கிறது. இன்னொரு பக்கம் அவரை இன்னொரு கடவுளாக ஆக்கும் பக்தர்கூட்டம்.


இன்றைக்கு ஓஷோ ஒரு பிராண்ட். இந்த பிராண்ட் அவர் இறந்துபோனபிறகு அவரது ஆசிரமத்தால் மிகத்திறமையாக உருவாக்கி வளர்க்கப்படுகிறது. இங்கே ஓஷோவைப்பற்றி இன்றைக்கு அதிகமாகப் புளகாங்கிதம் அடைபவர்கள் எல்லாருமே ஓஷோ என்ற இந்த பிராண்ட்டை மட்டும்தான் அறிவார்கள்.


நான் இருபதாண்டுகளுக்கும் மேலாக ஓஷோவைத் தீவிரமாக வாசித்தேன். பலமுறை புனாவிலே தங்கியிருக்கிறேன். பிறகு எனக்கு அவர் தேவைப்படவில்லை. ஓஷோவின் எல்லா எழுத்துக்களையும் வாசித்த எனக்கு இன்றைக்கு இளைஞர்கள் அவரைப்பற்றிப் பேசுவதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.


ஓஷோ என்ற இந்த பிராண்ட் எப்படி எல்லாம் உருவாக்கப்படுகிறது என்பதை ஓஷோ இருந்தபோது அவரது எழுத்துக்களும் அவரும் எப்படி வெளிப்பட்டார்கள் இப்போது எப்படி வெளிப்படுகிறார்கள் என்பதை ஒப்பிட்டுப்பார்த்தால் தெரியும்.


ஓஷோ இந்தியாவில் உள்ள எந்த ஒரு மனிதக்கடவுள்களையும்போலத் தன்னை பகவான் என்று சொல்லிக்கொண்டார். அதை நெடுங்காலம் அவரும் ஆசிரமும் முன்வைத்தன. அவரது மரணத்துக்குக் கொஞ்சநாள் முன்னர்தான் அவர் ஓஷோ என்ற பெயரும் அடையாளமும் அவருக்குப் போடப்பட்டன. அதை அவரே தனக்குச் சூட்டிக்கொண்டார். அந்த அடையாளத்தை ஒட்டி அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்ட ஆரம்பித்தார்கள்.


ஓஷோ பெரும்பாலும் இந்துமரபுக்குள் நின்று யோசித்தவர். அதற்கான Space இந்து மதத்தில் மட்டுமே உள்ளது என்பதும் அவருக்குத் தெரியும். அதை அவருக்கு அமெரிக்கா கற்றுக்கொடுக்கவும் செய்தது. கடைசிக்காலத்தில் அவர் அதைச் சொல்லவும் செய்தார். உபநிடதங்களைப்பற்றி, கீதையைப்பற்றி ஓஷோ ஏராளமாகப் பேசியிருக்கிறார். இந்துமதத்தின் ஒரு பிரிவாகிய தந்த்ராதான் தன் வழி என்று சொல்லியிருக்கிறார்.


ஆனால் அவரை ஒரு இந்திய ஜென் குருவாகக் கட்டமைக்கக் கடந்த முப்பதாண்டுகளாகத் திட்டமிட்டு முயற்சி செய்கிறார்கள். ஓஷோவுக்கு ஜென் மீது ஈடுபாடிருந்தது. ஆனால் அவரை ஜென் குரு என்று சொல்வது பெரிய காமெடி. ஓஷோவிடம் ஒருபோதும் ஜென்னில் உள்ள மர்மமும் களங்கமற்ற விளையாட்டும் இருந்ததில்லை.


ஓஷோ இந்துமதத்தை எதிர்த்தார் என்று சமீபகாலமாகக் கட்டமைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கான நோக்கங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. அதாவது தந்த்ரா இந்துமதம் இல்லையாம். கீதை இந்துமதம் இல்லையாம்.


இன்றைக்கு அவரது மீறல்களை எல்லாம் ஜென் வழி என்று சொல்லி நியாயப்படுத்த முயல்கிறார்கள். அதோடு ஜென்னுக்கு உலகம் முழுக்க உள்ள பிராபல்யத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். .


இன்றைக்கு அதிகமாக வாசிக்கும் வழக்கம் இல்லாத, மேலோட்டமான , அரைகுறை ஆன்மீக ஈடுபாடுள்ள ஒரு கும்பலுக்கு பிரியமான பிராண்ட் ஆக அவரை ஆக்கிவிட்டார்கள். அவர்களுக்கு ஓஷோ பெரிய தன்னம்பிக்கையைக் கொடுக்கிறார். எதைப்பற்றியும் தெரிந்துகொள்ளாமல் எங்கேயும் போய் ஆன்மீகமும் தத்துவமும் பேசக்கூடியவர்களாக அவர்கள் மாறிவிடுகிறார்கள்.


ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய முட்டாள்கூட்டத்தை ஒரு சின்ன வியாபாரிக்குழு ஓட்டிச்செல்ல உதவக்கூடிய ஒரு சர்வதேச பிராண்ட்தான் இன்றைக்கு ஓஷோ


ராமகிருஷ்ணன்.கெ.ஆர்


தத்துவத்தைக் கண்காணித்தல்

தொடர்புடைய பதிவுகள்

ஓஷோ — கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
முட்டாள்களின் மடாதிபதி
தத்துவம், தியானம்-கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2012 11:30

பௌத்தமும் அகிம்சையும்

‘ஒரு அதிர்வு இருக்குதுங்க!’ என்ற கட்டுரையில் தாங்கள் புத்தர் மிருக பலி இல்லாமல் வைதீக சடங்கு செய்யச் சொன்னது பற்றிக் குறிப்பிட்டீர்கள் . ஆனால் புத்த மதம் உண்மையிலே கொல்லாமையை வலியுறுத்துகிறதா? புத்தம் தழைத்துள்ள திபெத் , மியான்மர் , இலங்கை , தாய்லாந்து போன்ற நாடுகளில் அசைவம் சாப்பிடுகின்றனர் . அதைக் காட்டிலும் இலங்கையில் புத்த பிட்சுகள் பலரே சிங்கள இனவாதத்தைத் தூண்டுபவர்களாகவும் இருகின்றனர் . இப்படி இருக்கையில் ஏன் வைதீகச் சடங்கின் உயிர்க்கொலையை மட்டும் புத்தர் மறுக்க வேண்டும் . உணவிற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கொல்லாம் ஆனால் வேதச் சடங்கிற்காக கொல்லக் கூடாது. இதில் என்ன நியாயம் இருக்கிறது


நன்றி,


ராம்குமரன்



அன்புள்ள ராம்குமரன்


இன்றைய இளம் வாசகர்களின் மனநிலையைக் காட்டும் ஒரு கடிதம் இது. உங்களுக்கு செவிவழியாக ஒரு தகவல் கிடைக்கிறது. உடனே அதை நண்பர் குழுக்களில் விவாதிக்கிறீர்கள். அதை ஒரு கேள்வியாகக் கேட்கிறீர்கள். ஆனால் செய்யவேண்டிய ஒன்றைச் செய்யவில்லை. புத்தர்பற்றிய விக்கிப்பீடியா குறிப்பில்கூட அவரது வாழ்க்கையை வாசிக்கவில்லை. ஏதேனும் ஒருநூலை அதற்காகப் பரிசீலிக்கவில்லை.


நீங்கள் கேட்டது மிக எளிய கேள்வி. பதில் இதுதான். புத்தர் முழுமையான கொல்லாமையை வலியுறுத்தினார். வேதவேள்விகளுக்கு மட்டும் உயிர்க்கொலை கூடாது என்று சொல்லவில்லை. அவரது கொள்கைகளில் அகிம்சையே முதலிடம் கொள்கிறது. அது முழுமையான கொலைமறுத்தல், முழுமையான வன்முறை விலக்கம்தான்.


புத்தர் சமண மதத்தில்தான் முதலில் சேர்ந்தார். சமணர்களுடன் இணைந்துதவம்செய்தார். சமணர்களுக்கு மூன்று கொள்கைகள் முக்கியமானவை சமநிலை பிரபஞ்சநோக்கு [ ஸம்யக்-தர்சனம்] சமநிலை ஞானம் [ஸம்யக்-ஞானம்] மற்றும் சமநிலை ஒழுக்கம்[ஸம்யக்-சரித்திரம்] .


அதற்கு ஐந்து நெறிகள் முக்கியமானவை. அவை வன்முறை தவிர்த்தல் (அகிம்சை), வாய்மை (சத்தியம்) பொருள்விழையாமை (அஸ்தேயம்) துறவு (பிரமச்சரியம்), பற்றற்றிருத்தல் (அபாரிகிருகம்) . இந்த நெறிகள் அனைத்தும் புத்தரும் ஏற்றுக்கொண்டவையே.


புத்தமதம் பின்னர் பல நிலைகளில் வளர்ந்தும் விரிந்தும் சென்றது. பல நாடுகளுக்கும் பற்பல பண்பாடுகளுக்கும் பௌத்தம் சென்று சேர்ந்தபோது அங்குள்ள பண்பாடுகளுடனும் மதசிந்தனைகளுடனும் அது உரையாடியது. அதன் விளைவாகப் பலவகையான மாற்றங்களை அது அடைந்தது.


இந்தப்பரிணாமத்தில் பௌத்தம் மாமிச உணவு உண்பதை ஏற்றுக்கொண்டது. இன்று பெரும்பாலான பௌத்தநாடுகளில் பௌத்தர்கள் அசைவ உணவுண்பவர்களே.பௌத்த ஆசாரங்கள், வழிபாட்டுமுறைகள் மட்டுமல்ல புத்தரின் வடிவமே கூட இவ்வாறு பலவகையான மாறுதல்களுக்கு ஆளாகியது.


பௌத்த மதம் என்பது ஒன்றல்ல. புத்தர் இறந்த சிலவருடங்களிலேயே அது மகாயானம் , ஹீனயானம் என இரு பிரிவுகளாக ஆகியது. அதன்பின் பல திசைகளில் பிரிந்து கிளைவிட்டு வளர்ந்துகொண்டே இருந்தது. அந்தப்பிரிவுகளுக்கிடையே பலநூற்றாண்டுக்காலம் பிரம்மாண்டமான ஞானவிவாதங்கள் நடந்துள்ளன.


பௌத்தம் வன்முறை மறுத்தலை வலியுறுத்தியது. ஆனால் அது பலநாடுகளில் பலவகையான சூழல்களில் செயல்பட்டபோது அதற்குள் நியுத்தா எனப்பதும் ஆயுதமில்லாத போர்க்கலைகள் குடியேறின. அவை கராத்தே, குங் ஃபு என்றெல்லாம் வளர்ச்சி அடைந்தன. இன்று அவை பௌத்த ஞானச்செயல்பாடுகளாகவே மாற்றம் கொண்டுள்ளன.


இந்தப் பரிணாமத்தை நாம் நின்றுகொண்டிருக்கும் சிறுவட்டத்தில் வைத்துப் புரிந்துகொள்ள, மதிப்பிட்டுத் தீர்ப்புக் கூற முனையக்கூடாது. பௌத்தத்தின் ஈராயிரம் வருடத்து வரலாற்றை, அது சென்ற இடங்களின் பண்பாட்டுச்சூழலை, அங்கெல்லாம் பௌத்தம் அளித்த பங்களிப்பைக் கருத்தில் கொண்டுதான் புரிந்துகொள்ள வேண்டும்.


புத்தர் சமணர்களிடமிருந்து பிரிந்து சென்ற இடம் முக்கியமானது. சமணர்கள் உடலை உருக்கும் கொடும்தவங்களில் ஈடுபடுவதை அவதானித்து அது பயனற்றது என உணர்ந்து புத்தர் அவர்களிடமிருந்து விலகிச்சென்றார். உடலை வளர்ப்பது எப்படி உடல்மையச்சிந்தனையை உருவாக்குகிறதோ அதே போல உடலை நிராகரிப்பதும் உடலையே நினைத்திருக்கச் செய்கிறது என எண்ணினார்.


ஆகவே இரு எல்லைகளுக்கும் செல்லாமல் நடுவே செல்லும் பாதையே சிறந்தது என்று அவர் வகுத்தார். அதை மத்திம மார்க்கம் என பௌத்தம் சொல்கிறது. ஏதேனும் ஒரு திசையில் அதிதீவிரமாகச் செல்லும்போது அதற்கு எதிரான விசையும் அதே அளவுக்கு வலுவாகிறது. அதன்பின்னர் அந்த எதிர்விசையை சமாளிக்கவே நம் ஆற்றல் முழுக்கமுழுக்கச் செலவாகிவிடுகிறது.


இந்த அம்சம்தான் பௌத்தத்துக்கும் சமணத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு. சமணம் அதன் ஆசாரங்களில் , நடைமுறைகளில் எந்தச் சமரசத்துக்கும் தயாராகவில்லை. ஆகவே அதனால் இந்திய எல்லையைத் தாண்டவே முடியவில்லை. மாறுபட்ட பண்பாடுகளை, வெவ்வேறு இனத்தவரை அதனால் உள்ளிழுக்க முடியவில்லை. விளைவாக மெல்லமெல்ல அது தேங்க ஆரம்பித்து ஒரு சிறு குழுவினரின் திட்டவட்டமான நம்பிக்கையாக மட்டுமே நீடிக்கிறது.


கொல்லாமையையே எடுத்துக்கொள்வோம். சமணர்கள் அதில் சமரசமற்றவர்கள். அதி தீவிரநிலையில் அவர்கள் கொல்லாமையை , சைவ உணவை வலியுறுத்துகிறார்கள். அதுவே அவர்களுக்கு பெரிய கட்டுக்கயிறாக ஆகியது


ஒரு கட்டுரையில் மானுடவியலாளர் மெர்வின் ஹாரீஸ் சொல்கிறார், அன்றைய சூழலில் இந்தியாபோன்ற பூமத்தியரேகைப்பகுதி நிலங்களிலேயே தூய தாவர உணவுப்பழக்கம் சாத்தியமாகியிருக்கும், ஆகவேதான் இங்கே சைவ உணவு என்ற கருதுகோள் உருவாகியது என்று. ஒரு சமூகத்துக்கு ஒட்டுமொத்தமாகப் புரதமும் கொழுப்பும் மிக்க உணவை அளிக்கத்தேவையான அளவுக்கு தாவரங்கள் இங்கேதான் வளரமுடியும். அதற்கான மழையும் வெயிலும் இங்கேதான் அதிகம். புரதமும் கொழுப்பும் உள்ள உணவை அளிக்கும் தாவரங்களும் இங்குதான் வளரும்.


பூமத்தியரேகைப்பகுதிகளில் வருடம் முழுக்க சாதகமான பருவநிலை நிலவுவதனால் உணவைப் பாதுகாத்து வைக்கவேண்டியதில்லை. சென்றகாலங்களில் புரதமுள்ள உணவு மிக அபூர்வமானது. அதைப் பாதுகாப்பதென்பது மிகக்கடினம். எல்லாக் காலத்திலும் எங்கும் கொண்டுசெல்லக்கூடிய, பேணக்கூடிய புரத உணவு விலங்குகளே.



ஆகவே ஒரு பருவத்தில் மட்டுமே பயிர் செய்யக்கூடிய, அல்லது விவசாயமே செய்யமுடியாத நிலங்களான பாலைவனங்களும் ,மலைப்பிராந்தியங்களும் ,பனிப்பாலைகளும் அசைவ உணவைத் தவிர்க்கும் நிலையில் அக்காலத்தில் இருக்கவில்லை. சென்ற காலங்களில் உலகமெங்கும் விவசாயத்தை விடப் பெரிய தொழிலாக இருந்தது மேய்ச்சலே. காரணம் நீர்வளமற்ற நிலங்களில் மேய்ச்சலே சாத்தியமானது. மேய்ச்சல் உருவாக்குவது அசைவ உணவைத்தான்.


நிலையான அரசுகள் உருவாகி, அந்த அரசுகளிடம் நிதி சேர்ந்து, அந்நிதியைக்கொண்டு அவை விளைநிலங்களையும் நீர்ப்பாசன வசதிகளையும் உருவாக்குகின்றன. அவ்வாறு நிலவளம் பெருகப்பெருகத்தான் வேளாண்மை அதிகரிக்கிறது. அதுவரைக்கும் பெரும்பகுதி நிலம் மேய்ச்சல்நிலமாகவே நீடிக்கும்


வேளாண்மைமயமாக்கம் பலநூற்றாண்டுக்காலம் முன்னரே ஆரம்பித்தாலும் மிகச்சமீபத்தில்தான் அது வேகமாக நிகழ்ந்திருக்கிறது என்பதைக்காண நம்மைச்சுற்றியிருக்கும் வேளாண்மை நிலங்கள் எப்போது உருவாயின என்று பார்த்தாலே போதும். நம் கிராமத்தில் கடந்த ஐம்பதாண்டுகளில் மேய்ச்சல் இல்லாமலாகி விவசாயம் அதிகரித்திருக்கும்.


இந்தியா பூமத்தியரேகைப்பகுதி நாடு. அதிலும் தென்னிந்தியா பூமத்தியரேகைப்பகுதியை மிக நெருங்கியது. அகவே இங்கே விவசாயம் நெடுங்காலம் முன்னரே வளர்ந்தது. தாவரப்பெருக்கம் சாத்தியமாகியது. சமணம் தென்னிந்தியாவில் பெற்ற வெற்றியை அன்று வட இந்தியாவில் பெறவில்லை என்பதை இதனுடன் இணைத்துப்பார்க்கவேண்டும். சமணத்தால் மலைப்பகுதிகளுக்குச் செல்லவே முடியவில்லை.


அங்கெல்லாம் சென்றது பௌத்தம். அப்பகுதிகளில் அது அசைவ உணவை வலியுறுத்தியிருந்தால் அம்மக்களுக்கு அது கடைப்பிடிக்கவே முடியாத மதமாகவே ஆகியிருக்கும். மாறாக பௌத்தம் நடைமுறைச் சமரசங்களைச் செய்துகொண்டே இருந்தது. அதில் முக்கியமானது அசைவ உணவு.


எல்லா மதங்களும் இத்தகைய சமரசங்களைச் செய்துகொண்டுதான் விரிவடைகின்றன. கருவறைக்குள் செருப்புடன் நிற்கும் நேபாளத்துப் பூசாரியைத் தென்னிந்திய இந்துக்ககள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள்.


உணவையே எடுத்துக்கொள்வோம், வங்கப்பிராமணர்களுக்கு மீன் ஆசார உணவுதான். அன்றைய வங்கத்தில் வருடத்தில் சில மாதங்களில் மட்டுமே வயல் நீருக்கு வெளியே இருக்கும். விவசாயம் மிகக்குறைவு. ஆனால் மீன் மிக அதிகம். ஆகவே அவ்வுணவுப்பழக்கம் அங்கீகரிக்கப்பட்டது.


பௌத்தம் நடுப்பாதையை முன்வைப்பது. ஆகவே அது எதையுமே அதிதீவிர ஆசாரமாகக் கொள்ளவேண்டியதில்லை. அதன் மையமான தத்துவங்களே அதற்கு முக்கியம், சடங்குகளும் ஆசாரங்களும் அல்ல.


பௌத்தம் சென்ற நிலப்பகுதிகள் என்பவை பெரும்பாலும் அடர்ந்தகாடுகள் அல்லது உயர்ந்த மலைமடிப்புகள். இத்தகைய நிலங்களில் மக்கள் சிறுசிறு சமூகக்குழுக்களாக ஒருவரோடொருவர் தொடர்பற்று வாழ்வார்கள். காரணம் பயணம் மிக அரிதானதாக இருப்பதே. வெளித்தொடர்பு குறைகையில் சமூகம் தேங்கி அவர்கள் பழங்குடிகளாகவே நீடிப்பார்கள். ஒவ்வொரு பழங்குடிக்கும் ஒவ்வொரு மதம்,ஆசாரம்,அடையாளம் இருக்கும்.


காலப்போக்கில் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வளங்களுக்கான போட்டிகள் உருவாகும்போது அவர்களுக்குள் தீவிரமான சண்டைகள் நிகழும். பழங்குடிகளின் அன்னியர்மீதான வெறுப்பு உக்கிரமானது. ஏனென்றால் அவர்களுக்குள் தொடர்புகள் இருப்பதில்லை. ஆகவே வன்முறைகளும் மிக மூர்க்கமானவை.


அத்தகைய நிலப்பகுதிகளுக்குச் சென்ற பௌத்தம் அந்தப்பழங்குடிகள் நடுவே ஒரு பிரம்மாண்டமான தொடர்புவலையை உருவாக்கியது. அவர்கள் நடுவே ஒரு சமரச சித்தாந்தமாக அது உருவம் கொண்டது. மெல்ல மெல்ல அம்மக்களை இணைத்து ஒரே சமூகமாக, நாடுகளாக ஆக்கியது. அவ்வகையில் இன்றைய கீழையுலக நாகரீகத்தின் உருவாக்கத்திற்கு பௌத்ததின் பங்களிப்பு மகத்தானது.


இன்றுகூட வடகிழக்கு மாகாணங்களில் பழங்குடிமதங்கள் நடைமுறை ஆசாரமாக இருக்கின்றன. பௌத்தம் உயர்நிலை மதமாக இருக்கிறது. இரண்டையும் மக்கள் ஒரேசமயம் கடைப்பிடிக்கிறார்கள். ஜப்பானில் ஒருவர் அன்றாடவாழ்க்கைக்கு ஷிண்டோ மதத்தையும் அறிவார்ந்த பயணத்துக்கு பௌத்த மதத்தையும் கடைப்பிடிக்கலாம்.


இரண்டாயிரம் வருடம் முன்பு தமிழகத்திலும் இதேபோன்றுதான் பௌத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. பௌத்தத்தின் பங்களிப்பு அதுதான். மானுடவரலாற்றில் மதம் குலச்சடங்குகள், ஆசாரங்கள், நம்பிக்கைகளின் தொகையாகவே உருவாகிவந்தது. பௌத்தம் அவற்றின்மீது விரிந்த தத்துவஞானத்தின் ஒளி.


பௌத்தம் குறுங்குழு மதங்கள் நடுவே ஒரு மாபெரும் தொடர்புப்பின்னலை உருவாக்கியது. மாறுபட்ட ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் உரையாடச்செய்தது, இணைத்தது. அந்தப்பணியில் ஒவ்வொரு இடத்திலும் பௌத்தம் மக்களால் தங்கள் வாழ்க்கைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது. அந்த அனைத்து பௌத்த மதங்களுக்கும் நடுவே பௌத்தமெய்ஞானம் நிலைகொண்டது.


பௌத்தம் சைவ உணவைக் கைவிட்டது ஒரு சமரசம். ஆனால் அதன் விளைவாக அது பிரம்மாண்டமான ஒரு வன்முறை ஒழிப்பை நிகழ்த்திக்காட்டியது. அதுவே பௌத்தத்தின் வழி.


ஆஸ்திரேலியாவிலும் தென்னமெரிக்காவிலும் மானுட அழிவுகளை உருவாக்கிய கிறித்தவம் போல, எகிப்திலும் ஈரானிலும் மாபெரும் பண்பாட்டு அழிப்புகளை நிகழ்த்திய இஸ்லாமைப்போல ஒரு வரலாறு பௌத்தத்துக்குக் கிடையாது.


ஏனென்றால் பௌத்ததின் வழி சமன்வயம் . அதாவது சமரசம். பிற நம்பிக்கைகளை முற்றாக மறுத்து, அவற்றை அழித்து தன்னை நிலைநாட்டிக்கொள்ளக்கூடியதல்ல அது. பிறிதுடன் உரையாடி அதைத் தன்னுள் இழுத்துக்கொள்வது. பிறிதில் உள்ள பல விஷயங்களைத் தான் எடுத்துக்கொண்டு தன்னை மாற்றிக்கொள்வது. ஆகவேதான் அது சென்ற இடங்களில் அழிவை உருவாக்கவில்லை.


கடைசியாக, மதங்களின் மெய்ஞானம் ஒரு பெரும் பிரவாகமாக மக்களை இணைத்துக்கொண்டு முன்செல்கிறது. மதங்களின் அமைப்புகள் அதிகாரவர்க்கத்தால் தங்களுக்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. நான் இரண்டையும் பிரித்தே பார்ப்பேன். மதங்களை அதிகாரக்கருவிகளாகக் கையாள்பவர்களை வைத்து அம்மமதங்களை மதிப்பிட மாட்டேன்.


நாஜி கொலைமுகாம்களை நிகழ்த்தியவர்களைக் கொண்டு கிறித்தவ மதத்தை அளக்க மாட்டேன். இஸ்லாமிய தீவிரவாதிகளைக்கொண்டு இஸ்லாமை மதிப்பிட மாட்டேன். மதக்கலவரங்களை நிகழ்த்தும் இந்து மதவெறியர்களைக்கொண்டு இந்து மதத்தைப் புரிந்துகொள்ள மாட்டேன். என் நோக்கில் அதே வழிமுறைதான் பௌத்ததுக்கும்.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

நவீனகுருக்கள்,மிஷனரிகள்
கல்கியின் சமணம்
அயோத்தி தாசர்-கடிதங்கள்
கயாவும் இந்துக்களும்
சமண அறம்
தமிழகமும் பௌத்த கட்டிடக்கலையும்
சமணம் வைணவம் குரு — கடிதங்கள்
தமிழ்நாட்டில் சமணத்தலங்கள்
அருகர்களின் பாதை 1 — கனககிரி, சிரவண பெலகொலா
சமணம்,சாதிகள்-கடிதம்
துயரம்
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-5
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-4
மதங்களின் தொகுப்புத்தன்மை
கடிதங்கள்
தீபாவளியும் சமணமும்:கடிதம்
சமணம்,பிரமிள்: கடிதங்கள்
தமிழ்ச் சமணம்
சமணம் ஒரு கடிதம்
நீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2012 11:30

May 5, 2012

ஓஷோ – கடிதங்கள்

அன்பின் ஜெ,


ஓஷோவிற்கு இன்னொரு முகமும் உண்டு.


உலகின் மிக முக்கியமான சிந்தனையாளர்களையும், மதங்களையும், உண்மையான ஞானிகளையும் தரம் பிரித்து, மிக எளிதான முறையில் அவர்களை அவர் முன்னிறுத்தியது.


ஜென் பத்து மாடுகள் பற்றிய அவர் உரை – songs of ecstasy என்னும் பெயரில் பஜ கோவிந்தம் பற்றி அவர் ஆற்றிய உரை, சூஃபி ஞானிகள் பற்றிய – wisdom of sands, zorba பற்றிய அவர் அறிமுகம், மஹாவீர் வாணி – இந்தி உரை.. ஒரு தேர்ந்த ஹிப்னாடிஸ்ட் போன்ற ஒரு குரலில், அவரின் இவ்வுரைகள் மனதை ஒருமுகப்படுத்தி, ஒரு தளத்தில் மிதக்க உதவுகின்றன.


அவரின் ஆசிரம வாயில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பெயரால் அழைக்கப் படுகிறது. ஆசிரமத்தின் பிரமிட் பாணியில் அமைக்கப் பட்டிருக்கும் தியான மண்டபம் மிக அழகானது. தியானம் செய்ய மிக ஏற்ற இடம்.



மிக அபத்தமான, செக்ஸ் ஜோக்குகள் மட்டுமே நிரம்பிய உரைகளும் உண்டு. அவரின் மிக அதிகம் பாப்புலரான “fuck” என்னும் வார்த்தைக்கான பாஷ்யம் போன்ற அபத்தங்களும் உலவுகின்றன. நீங்கள் சொன்ன மாதிரி அவரை நிச்சயம் தாண்டித்தான் செல்ல வேண்டும். காந்தி பற்றிய உளறல்கள் படிக்கவே மிக அருவெறுப்பாக இருக்கின்றன.


புனே ஆசிரமம் – அதன் நிர்வாகம் எல்லாம், வெளியில் இருந்து பார்க்கும், ஓஷோ என்ன சொன்னார் என்று மட்டுமே பார்க்கும் மனிதருக்கு, மிக நன்றாகவே நடப்பதாகவே தோன்றும். அங்கும் அரசியலும், கீழ்மைகளும் உண்டு. சங்கர மடங்களிலும், சைவப் பண்டார மடங்களில் உள்ளது போலவே. ஓஷோவின் சிந்தனைகளை சேமித்து, பிற்காலச் சந்ததிகளுக்குக் கொண்டு செல்லும் ‘நிலைச் சக்தி’ என்றும் பார்க்கலாம்.


தலைப்பு உறுத்துகிறது ஜெ..


அன்புடன்,


பாலா


அன்புள்ள ஜெ.,


அறத்தின் குன்றேறி நின்ற ஞானிகள் இருக்கமுடியுமென்றால் ஒரு கிரிமினல்ஞானி ஏன் இருக்கக் கூடாது? இந்தியஞான மரபின் அந்த சாத்தியம்தான் ஒரு துணுக்குறவைக்கும் உண்மை. இன்றும் என்னால் முழுக்க புரிந்துகொள்ளமுடியாத ஒரு மர்மம் அது.”


முற்றிலும் உண்மை. அவரைக் கிரிமினல் என்று சொன்ன ஜெ.கே.வைக் கூட ஓஷோ மூலம் தான் அறிந்து கொண்டேன். இந்தியாவின் ஆன்மீகம், தத்துவம் அனைத்தையும் ஓஷோ இல்லாமல் என்னால் இவ்வளவு தூரமேனும் புரிந்து கொண்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே..


ஆனால் ஒன்று… ஒரு ஞானி கிரிமினலாகவும் இருக்க முடியும் என்ற சாத்தியக்கூறை உணராமல், நம்மால் எந்த ஞானியையும் அணுக முடியாது என்று நினைக்கிறேன்… ஞானிக்கான அளவுகோல் நம் மனதில் இருக்கும் வரை, நம் மனம் அவர்களை அளந்துகொண்டுதான் இருக்கும் – இதுவும் ஓஷோ மூலம் வந்த தெளிவுதான்… கடந்த பத்து வருடங்களாக அவரை நான் படித்ததில்லை.. கடந்துவிட்டேன் என்று சொல்ல முடியவில்லை; ஆனால் நீங்கள் சொன்னதுபோல புதிதாக ஏதும் அறிவதற்கில்லை… ஞானம் என்பது புத்தகம் மூலம் வராது என்று தெளியவைத்தவர் அவர்தான்; தெளிந்தபின் அவர் புத்தகம் தேவைப்படவில்லை.


நன்றி

ரத்தன்


அன்புள்ள ஜெ,


ஓஷோ – கடிதங்கள்.. அம்ருத் என்பவரின் கடிதமும் உங்கள் பதிலும் பார்த்து வெடித்துச் சிரித்துவிட்டேன்.


நன்றி,

வள்ளியப்பன்

தொடர்புடைய பதிவுகள்

ஓஷோ — கடிதங்கள்
முட்டாள்களின் மடாதிபதி
தத்துவம், தியானம்-கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 05, 2012 11:30

விளாங்காடு விச்சூர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


சமீபத்தில் சென்னை வாழ் சமணர்களுடன், சென்னையைச் சுற்றி உள்ள சமணக் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.


விளாங்காடுபாக்கம், சென்னை புழல் தாலுகாவில் உள்ள சிறு கிராமம். இங்குள்ள சமணக் கோவிலில், இந்த ஊருக்கு அருகில் உள்ள ஊர்களில் (பெரவள்ளூர், மெதவாயில், வல்லூர்) கிடைத்த பழங்கால சமணச் சிலைகள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. சம்பத் ஐயர் என்ற சமணரின் முயற்சியால், 1934 ஆம் ஆண்டு, இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் உள்ள மூலவரின் சிலையும் இந்த ஊரிலே கண்டெடுக்கப்பட்டதுதான் .


விச்சூர், பொன்னேரி தாலுகாவில் உள்ள சிறு கிராமம். இங்கு தற்போது புதிதாகக் கட்டப்பட்ட ஆதிநாதர் கோவில் ஒன்று உள்ளது. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்த, எண்ணெய் வணிகர்களால் முதலில் கட்டப்பட்டுள்ளது. பிறகு அவர்கள் இடம்பெயர்ந்து, வேறிடம் சென்றதும், இக்கோவில் கைவிடப்பட்டு, அருகில் உள்ள ஹிந்துக்களால் “எம்மான் சாமி” என்று வழிபாடு செய்யப்பட்டு வந்துள்ளது. தற்போது 2004-ல், ராஜஸ்தானை சேர்ந்த திகம்பர சமணர்களால் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது. நான் போயிருந்தபோது, பூஜை நடந்து கொண்டிருந்தது. நானும் சென்று அமர்ந்தேன். எனக்கு அவர்கள் வேறு மதத்தவர் என்ற எண்ணமே எழவில்லை.


சின்னம்பேடு, பொன்னேரி தாலுகாவில் அமைந்துள்ள ஊர். சிரவணம்பேடு சின்னம்பேடு ஆக மருவியுள்ளது. பழமையான பார்சுவநாதர் கோவில், அகஸ்தீஸ்வரர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், முருகன் கோவில் ஆகிய கோவில்கள் இங்கு அமைந்துள்ளன. இங்குள்ள முருகன் கோவில் புகழால், தற்போது சிறுவாபுரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பார்சுவநாதர் கோவில் கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பார்சுவநாதரின் இடப்பக்கம் சங்கும், வலப்பக்கம் தாமரையும் காணப்படுவது இங்கு மட்டுமே உள்ள சிறப்பு. முன்பு பெரிய கோவிலாக இருந்துள்ளது. இடையில், கைவிடப்பட்டதால், இங்குள்ள் தூண்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, அருகிலுள்ள, வரதராஜ பெருமாள் கோவிலில் மண்டபம் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் பெருமாள் கோவிலில், சமண உருவங்களுடன், அந்தத் தூண்கள் இருக்கின்றன.


பெருவயல், பொன்னேரி தாலுகாவில் அமைந்துள்ள ஊர். இங்குள்ள ஏரிக்கு அருகில் மகாவீரர் சிலை காணப்படுகிறது. தற்போது ஒரு பீடத்தில் சிலை வைக்கப்பட்டு, சிமெண்ட் கூரை போடப்பட்டுள்ளது. இந்த மகாவீரர் சிலை, ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த முதல் சிலை என்று ஒரு சமண நண்பர் கூறினார்.


இந்த ஊர்கள் அனைத்திலும் ஒவ்வொரு ஏரி அமைந்திருக்கிறது.


இவை குறித்து இணையத்தில் பதிவு செய்தவை


யு டியூப் காணொளிகள்


விளாங்காடுபாக்கம்


1) http://www.youtube.com/watch?v=ucvH2ojI0IA&feature=plcp


2) http://www.youtube.com/watch?v=0zrGlqz95kk&feature=relmfu


விச்சூர்


1) http://www.youtube.com/watch?v=9wPBCQu7FBI&feature=relmfu


சின்னம்பேடு


1) http://www.youtube.com/watch?v=jBWbClm58fc&feature=relmfu


பெருவயல்


1) http://www.youtube.com/watch?v=6HeJ7HYMNkA&feature=relmfu


விக்கிமப்பியா இணைப்பு சுட்டி


1) விச்சூர் ஆதிநாதர் கோவில்


2) சின்னம்பேடு பார்சுவநாதர் கோவில்


3) பெருவயல் மகாவீரர் சிலை


நன்றி,

தங்கள் அன்புள்ள,

சரவணக்குமார்.


தொடர்புடைய பதிவுகள்

இனிமேலும் ஆரிய-திராவிட வாதம் பேசலாமா?
அருகர்களின் பாதை — டைம்ஸ் ஆப் இண்டியாவில்
பயணம் — கடிதங்கள்
அருகர்களின் பாதை — ஓர் அனுபவம்
திருப்பான்மலை, ஊரணித்தாங்கல், நெகநூர்ப்பட்டி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 05, 2012 11:30

May 4, 2012

டார்த்தீனியம் – கடிதம்

இங்கு சிவராமன் வெங்கட்ராமன் டார்த்தீனியம் படித்ததும் The Fall of the House of Usher நினைவுக்கு வந்ததாக சொன்ன பிறகுதான் கவிதா பதிப்பித்த மண் கதைத் தொகுப்பு வாங்கி நானும் படித்தேன். நிழல்வெளிக் கதைகளையும் Poeவையும் சேர்த்து மெதுவாக படித்துக் கொண்டிருந்தேன். Usher கதை “இமையோன்” கதையுடன் ஒப்புமை உடையது என்ற எண்னம் முன்னர் ஏற்பட்டிருந்தது.


டார்த்தீனியம் என்னை அமைதியிழக்க வைத்த கதை. அது நடப்பட்டதிலிருந்து வளர்ந்து மெதுவே ராஜூவின் அப்பா மீது முழுவதுமாய் படர்ந்து ஆட்கொள்ளும் வரை கதையின் நகர்வு இனம் புரியாத தீவிரத்தன்மையுடன் இருந்தது. டார்த்தீனியம் கறுப்பு என்று சொல்லியும் தொடக்கம் முதலே ராஜூ மற்றும் ஆனந்தம் ஆகியோரின் மனதில் எதிர்மறை மனக்காட்சிகளையே எழுப்பியும் எதிர்மறைகளின் தீமையின் குறியீடாகவே அமைந்திருப்பது, நன்மையின் ஒரு சிறிய கூறு கூட இல்லாமல் அமைந்திருப்பது என்னவோ புரியாத ஒரு பெரிய ஏமாற்றத்தை அளித்தது.


படித்து முடித்த பிறகு டார்த்தீனியம் ஒரு நல்ல விஷயமாக இருந்திருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கியபடியே இருந்தது. இரண்டாம் வாசிப்பில் அந்த ஏமாற்றத்தின் காரணமாக கருநாகம் வரும் காட்சிகளில் கூட திகில் உணர்வு குறைந்தே இருந்தது. ஆழமான, தீவிரமான, காரணமற்ற, பிரதிபலன் எதிர்பார்க்காத மனதின் அடி ஆழத்திலிருந்து இச்சை ஒன்றன்மீது எழுமானால் அது தீமையானதாக இருக்கலாகாதே, தீமையில் கொண்டுபோய் முடியக்கூடாதே என்று மனம் சொல்லியபடியே இருந்தது. இம்முறை படிக்கும்பொழுது கதையை எப்படியாவது நிராகரிக்க வேண்டும் என்று மனம் திரிந்துகொண்டே இருந்தது. குறைந்தபட்சம் ஏதாவது நொள்ளநொட்டாவது சொல்லி இந்த ஏமாற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தது.


நமக்குள் இருக்கும் பேய் ஒன்று எப்பொழுது வேண்டுமானாலும் நம்மையே விழுங்கிவிடும் என்ற கருத்துடைய இக்கதையில், தொடக்கம் முதலே ராஜுவின் அப்பா உணவு, அப்பளம், வெற்றிலை என்று சுக போகங்களில் இயல்பாகவே ஈடுபடுபவர் என்று சித்தரிக்கப்படுகிறார். குரங்கு முகம் சிவந்திருப்பதை பார்த்து கூட “ருதுவாயிருக்கு” என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது. இயற்கையில் ஒரு vulnerability இருப்பதாக சொல்லியிருப்பதால் கதையில் உண்மை இருந்தாலும் அது முழுமையான உண்மையாகாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். Vulenrabilityயெல்லாம் பெரிதாக எதுவும் இல்லாமல் யுத்தத்தில் த்ரிஷ்டனாகவும் தர்மனாகவும் இருப்பவனும் சொக்கட்டான் ஆடத் தொடங்கி நாடு, மனைவி வரை அனைத்தையும் இழக்கும் கதைதான் இந்தக் கருத்தை முழுமையாக சித்தரிக்கக் கூடிய கதை என்று சொல்லிக்கொண்டேன். நாய், பசு, கன்று என்ற மூன்று பிராணிகள் கதையில் வந்தாலும் நாயைப் பற்றிய சித்தரிப்புகளே பசுவைப் பற்றிய சித்தரிப்புகளை விடவும் நுண்மையாகவும் அழகாகவும் அமைந்துள்ளன. ஆகையால் இக்கதையை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்றெல்லாம் கூட சொல்லிக்கொண்டேன்! மனம் சாந்தியடையவே இல்லை.


இந்த மன நிலையிலேயே இருந்ததாலோ என்னவோ ந. பிச்சமுர்த்தியின் இந்தக் கவிதை கண்ணில் தென்பட்டது.


தீக்குளி


அட கதையே!

விளக்குப் பூச்சியா மாய்வதற்கு உதாரணம்?

இதோ ஒரு சிறகு பொசுங்குகிறது,

போகட்டும் என்று சுற்றுகிறது.

இதோ மற்றொன்றும்.

விடேன் என்ற சங்கற்பம்,

தீயில் குளிபேன் என்ற உயிராசை

சக்தி தூண்ட, துணிவு பொங்க,

நகர்ந்தேனும் சுடரண்டை செல்லுகிறது.

அதோ சென்று விட்டது!

அதுதான் உருமாற்றும் தெய்வமுயற்சி -

அத்வைத சாதனை

ஜோதியின் அகண்டம் ஜீவாணுவை அழைக்கிறது.

லயம்!

விட்டிலின் உடல் சாம்பலாகி விட்டது.

விட்டிலா மாய்வதற்கு உதாரணம்?


இதனை நாலைந்து முறை படித்து என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்!


விஜயராகவன் சுந்தரவரதன்


தொடர்புடைய பதிவுகள்

கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2012 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.